அழைத்தவுடன் வருவது ஈசன், நினைத்தவுடன் உதவுவது ஆசான் !

குச்சி தந்த பாடம்

கோவணாண்டிப் பெரியவரோடு எப்போது எங்கே சென்றாலும் நம் அரை டிராயர் சிறுவனுக்குக் கிடைப்பதென்னவோ புதுப்புது அனுபவங்கள்தான். ஒவ்வொரு முறையும் படித்த பாடத்தைப் புரிந்து, அவன் தன் மூளைக்குள் ஏற்றி முடிப்பதற்குள்ளாகவே பெரியவர் அடுத்த பாடத்தைச் சொல்லிக் கொடுத்து விடுவார் ! இப்படித்தான் ஒரு முறை நம் அரை டிராயர் சிறுவனைப் பெரியவர் எங்கோ அவசரம் அவசரமாக அழைத்துச் சென்றார். ஏதேதோ பஸ்களில் மாறிமாறி ஏறி, இறங்கி... கற்களும் முட்களும் நிறைந்த குறுக்குப் பாதைகளில் நடந்து... இடைவிடாத பயணமாகப் போனார்கள்.

போகின்ற பாதையெல்லாம் வயல் வெளிகளாகவே இருந்ததால், என்ன ஊர், என்ன பெயர் என்று தெரியாமலே அவர் பின்னாலேயே சென்றான் சிறுவன். வழியெல்லாம் எதுவும் பேசாமலே விறுவிறு என்று நடந்தார் பெரியவர். இடைஇடையே சிறுவன் ஏதாவது பேச்சுக் கொடுத்துப் பார்த்தாலும் பதில் சொல்லவே இல்லை. கடைசியாக ஒரு பழமையான கிராமம் அருகே வந்து சேர்ந்தனர். அங்கும் இங்குமாக கிராமத்துக் கூரை வீடுகள். ஊருக்கு நடுவே ஒரு பெரிய குளம். அதில் நீர் நிறைந்து காணப்பட்டது. சற்றுத் தொலைவில் ஒரு பெரிய கோயில் கோபுரமும் கண்ணில் தென்பட்டது.

சிறுநீரகக் கல், இடுப்புப் பகுதியில் புற்றுநோய், ரகசிய நோய்கள் போன்றவற்றால் வருந்துவோர் ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று நெல்லைப் பரப்பி அதன் மேல் ஆறு மொந்தன் பழங்களை வைத்து தர்ப்பணம் அளிக்கவும். பின்னர் இந்த வாழைப் பழங்களை பசுவிற்குத் தானமாக அளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து தர்ப்பணம் அளித்து வர நோய் நிவாரண வழி பிறக்கும்.

முன்னால் வேகவேகமாக நடந்து கொண்டிருந்த பெரியவர் சடாரென நின்றார். ‘அப்பாடா. ஒரு வழியா வந்து சேந்துட்டோம் போல’ எனச் சிறுவன் நிம்மதியானான்.
“என்னடா? திடீர்னு எங்கேந்தோ ‘கொய்ங் கொய்ங்’னு சத்தம் கேக்குது?” பெரியவர் சிறுவனைப் பார்த்துக் கேட்க, அவனோ வழக்கம்போல விழித்தான். நன்றாகக் காதுகளைத் தீட்டிக் கொண்டு கவனித்த போதுதான் அவனுக்கே ஏதோ சப்தம் கேட்பதுபோலத் தோன்றியது. இருந்தாலும் அவனால் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

சிறுவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. “என்னா சத்தம் வாத்யாரே? என்னோட காதுல எதுவுமே கேக்கலையே? நம்ம ஊர்லல்லாம் ஆம்புலன்ஸுதான ‘கொய்ங் கொய்ங்’ அப்டீன்னு சத்தம் போட்டுகிட்டு வரும்?”

“தெய்வீகத்துல இருக்கறவங்க எப்பவுமே ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும்டா. ‘சுத்தி என்னா நடக்குது, யாரு என்னா பண்றாங்க’ அப்டீன்னு கண் கொத்திப் பாம்பாட்டம் நோட்டம் வுட்டுகிட்டே இருக்கணும். ஏன்னா, தீய சக்திங்க எப்ப வேணுமின்னாலும் உள்ள பூந்து அதோடவேலையக் காட்டிடும்.”
“ஏதாச்சும் புதுசா நடந்துச்சுன்னா, அத அப்டீயே வுட்டுடக் கூடாது. ஏன் அது மாதிரி நடக்குதுன்னு ஆத்ம விசாரம் செஞ்சு பாக்கணும். எது எப்டீயோ நடக்கட்டும்னு பேசாம இருந்தா, ஒனக்கும் மத்தவங்களுக்கும் என்னடா வித்தியாசம்? இப்டீ களிமண்ணு மாதிரி இருக்கறதுக்கா, ஒன்ன இவ்ளோ தூரம் தயார் பண்றேன்?’'

பொதுவாக தென் கிழக்கு மூலையான அக்னி மூலையில் சமையலறை அமைவதே சிறப்பு. ஆனால், தற்போதைய நிலையில் நாம் நினைத்த வண்ணம் வீடுகள் நமக்கு வாய்ப்பதில்லை. இத்தகைய வாஸ்து தோஷங்கள் ஓரளவு சீர்பெற கார்த்திகை மாத அமாவாசை தினத்தன்று தினையைப் பரப்பி அதன் மேல் தர்பைச் சட்டம் வைத்து தர்ப்பணம் அளித்து மயில்களுக்கு உணவிட்டு வரவும். தொடர்ந்த வழிபாடு சிறந்த பலன்களை நல்கும்.

சிறுவனால் பதில் பேசவே முடியவில்லை. “சரி சரி. என் பின்னாலயே வா.” என்றபடி சுற்றுமுற்றும் பார்த்தார் பெரியவர். இப்போது சிறுவனுக்கும் அந்தச் சத்தம் மிக அருகிலேயே கேட்டது. “ஆமா. நம்ம வாத்யாரு சொன்ன மாதிரியே என்னமோ சத்தம் கேட்குதே?”

சிறுவன் யோசித்துக் கொண்டிருக்கும்போதே, பெரியவர் சடாரெனத் திரும்பி பக்கத்தில் தென்பட்ட தென்னந்தோப்புக்குள் வேகமாக நடந்தார். சிறுவனும் அவர் பின்னால் ஓடினான். அங்கே ஒரு மரத்தில் சாய்ந்தபடி, ஏறக்குறைய படுத்த நிலையில் ஒரு வயதான கிழவர் உட்கார்ந்திருந்தார். அவரை நெருங்க நெருங்க அந்தச் சத்தம் அதிகரிக்க ஆரம்பித்தது. சிறுவன் சுற்றுமுற்றும் பார்த்தான். வேறு யாரையும் காணவில்லை!
“ஒஹோ, இந்தக் கெழவனாருக்குத்தான் ஒடம்பு கெடம்பு சரியில்ல போல. இங்கதான யாருக்கோ மூச்சுத் தெணர்றது மாதிரி சத்தம் கேக்குது?” சிறுவன் விழித்துக் கொண்டிருக்க, அந்த முதியவர் ஏதோ பேச ஆரம்பித்தார்.

“வா நைனா வா. சுருக்கா வந்துடுவன்னு பாத்தேன். இம்மா நேரமா என்னைத் திண்டாட வுட்டுட்டியே?”
மூச்சுத் திணறலுக்கிடையே திக்கித் திக்கி அவர் பேசுவதைப் பார்த்த சிறுவன் என்ன செய்வதென அறியாமல் திகைத்தான். ஆனால் அதற்குப் பெரியவர் சொன்ன பதிலைக் கேட்டதும் பயமே வந்து விட்டது.

“என்னா இவ்ளோ அலுத்துக்கற? அதான் நீ கொரலு கொடுத்ததுமே, எல்லா வேலையயும் அப்டீயே போட்டுட்டு, நீ குந்திகினு இருக்கற எடத்துக்கே ஓடியாந்துட்டேன். அப்றம் என்னா? ரொம்பத்தான் அல்ட்டிக்காத. அதான் வந்தாச்சுல்ல. அடுத்து நடக்க வேண்டியதப் பாரு.”

பெரியவர் பேசப் பேச, சிறுவனின் பயம் அதிகரித்துக் கொண்டே போனது. ‘இந்தக் கெழவனாரு யாரு? நாம முன்ன பின்ன பாத்த மாதிரியும் தெரியல. நம்ம வாத்யாரு ஏன் இப்டீப் பேசுறாரு? கொஞ்சமாச்சும் பணிவாப் பேச வேண்டியதுதான. யாராச்சும் பெரிய மகானு, ரிஷியா இருந்து, கோவத்துல ஏடாகூடமா சபிச்சுட்டாருன்னா...’

பெரியவர் இவ்வாறு எடுத்தெறிந்ததுபோலப் பேசினாலும், அந்த முதியவரின் முகத்திலோ கோபக் குறிகளே தென்படவில்லை. மாறாகப் பெரும் நிம்மதிதான் தெரிந்தது. பெரியவரைப் பார்த்துத் தன் பொக்கை வாய் விரியச் சிரித்தபடியே இருந்தார்.

இப்போது சிறுவனின் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. ‘சரி சரி. நமக்குத்தான் தெரியலயே தவிர, நம்ம வாத்யாருக்கு ஏற்கனவே தெரிஞ்ச ஆளுதான் போல. அதான் இவ்ளோ உரிமையோடப் பேசுறாரு. அது கெடக்கட்டும். நாம எதுக்காக இங்க வந்தோம்?’

பெரியவர் மடியில் இளைப்பாறும்
முதியவரும் கால்மாட்டைப்
பற்றிய சிறுவனும்

இப்போது அந்த முதியவரின் மூச்சிரைப்பு அதிகரித்து ரொம்பவே திணற ஆரம்பித்து விட்டார். பெரியவர் வேகவேகமாகப் போய் அந்த முதியவரின் அருகே உட்கார்ந்தார். மூச்சு இரைக்க இரைக்கக் கிடந்த அந்த முதியவரின் தலையை மெல்ல எடுத்து, அவர் தன் மடியில் வைத்த உடனே...முதியவரின் கண்கள் மூடிக்கொண்டன ! தலை சாய்ந்து ஒருபக்கமாகத் தொங்கி விட்டது !

அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிறுவனுக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. ‘ஆஹா. வந்த எடத்துல புதுசா வம்ப வெலைக்கு வாங்கிட்டாரே நம்ம வாத்யாரு! வசமா மாட்டிகிட்டமே.’
ஆனால் பெரியவரிடம் எந்தவிதமான மாறுதலும் இல்லை. எதுவுமே பேசாமல் அந்த முதியவரின் தலையைத் தடவிக் கொடுத்தபடியே உட்கார்ந்திருந்தார். சிறுவன் இப்போது கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அருகே போய் அந்த முதியவரைப் பார்த்தான்.

நல்ல தேஜஸ் நிறைந்த முகம்! அந்த நிலையிலும் அவர் முகத்தில் இருந்த சிரிப்பு மாறவே இல்லை. மிக மிக அமைதியான தோற்றத்தோடு, சாதாரணமாக உறங்குவதுபோல பெரியவரின் மடியில் அவர் படுத்திருந்தது சிறுவனுக்கு எதையோ உணர்த்தியது.
‘இந்தக் கெழவனாரைப் பாத்தா சாதாரண ஆளு மாதிரித் தெரியலயே. யாரோ பெரிய சித்தரோ, மகானோ போல...’ இவ்வாறு எண்ண ஆரம்பித்ததுமே சிறுவனின் மனதில் வடபாதி செஞ்சி மலை அனுபவங்கள் நினைவுக்கு வந்தன.

பெரியவர் தன் உடலைக் கிடத்தி விட்டுப் பரகாய ப்ரவேச முறையில் வெவ்வேறு லோகங்களுக்குப் போய் வந்தது... அவர் உடலைப் பாதுகாப்பதற்காக அவன் பட்ட கஷ்டங்கள்... எல்லாம் சிறுவனின் கண் முன்னால் ஓடின. ‘ஓஹோ. என்னமோ ஆஸ்ட்ரல் சமாச்சாரம் நடக்குது போல. தன்னோட ஒடம்ப நம்ம வாத்யாரு பொறுப்புல ஒப்படைச்சுட்டு, இவரு வேற எங்கயோ போயிட்டாரு. திரும்பி வர்ற வரைக்கும் நல்லபடியா காவல் காத்துகிட்டு இருந்து, ஒப்படைக்கணும். இல்லன்னா ஏதாச்சும் கெட்ட ஆவிங்க உள்ளாற பூந்து, அட்டகாசம் பண்ணிடும்...’ இவ்வாறு ஆத்ம விசாரம் பண்ணியதும், சிறுவனின் மனதில் சற்று தைரியம் வந்தது. மிக அருகில் போய் அந்த முதியவரின் காலடியில் உட்கார்ந்து கொண்டான்.

பூ, கல்வி, வேதம், தண்ணீர் இவற்றை காசுக்காக விற்கக் கூடாது என்பது தெய்வீகச் சட்டம். அறிந்தோ அறியாமலோ கல்வியை காசுக்காக விற்றவர்கள், விற்றுக் கொண்டு இருப்பவர்கள் மனம் திருந்தி இத்தகைய தோஷத்திலிருந்து விடுபட விரும்பவது உண்டு. அத்தகையோர் மார்கழி மாத அமாவாசை தினத்தன்று நெல் அல்லது அரிசியைப் பரப்பி அதன் மேல் ஆறு செவ்வாழைப் பழங்களை வைத்து தர்ப்பணம் அளிக்கவும். பின்னர் அந்த செவ்வாழைப் பழங்களுடன் தேன் சேர்த்து ஏழைக் குழந்தைகளுக்கு தானமாக அளித்து வர செய்த தவறுகளுக்கு பிராய சித்தம் பெற வழி பிறக்கும்.

தலை மாட்டில் பெரியவர். காலடியில் சிறுவன்! “படே கில்லாடிடா நீ! புத்திசாலித்தனமா கால்மாட்டுல எடம் புடிச்சுட்டியே!” பெரியவர் சிரித்தார். சிறுவன் சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, மெல்ல அந்த முதியவரின் உடலைத் தொட்டுப் பார்த்தான். குளிர்ச்சி என்றால் அப்படியொரு குளிர்ச்சி! ஐஸ் கட்டியின்மேல் கை வைப்பது போலிருந்தது. கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றில்தான் அப்படிப்பட்ட ஜில்லிப்பைச் சிறுவன் உணர்ந்திருக்கின்றான்.

இவ்வாறு சிறுவன் ஏதேதோ யோசனையில் ஆழ்ந்திருக்கும்போது, திடீரென சுமார் இருபது அடி தொலைவில் பளிச்சென ஏதோ தோன்றியது. நிமிர்ந்து பார்த்தால் ஒரு வெள்ளை உருவம் அந்தரத்தில் ஆடிக் கொண்டிருந்தது!
மெல்லிய புகை போன்ற அந்த உருவத்திடமிருந்து கர்ணகடூரமான சப்தம் எழுந்தது! “ஏய்! ஒனக்கு இங்க என்னா வேலை? இது என்னோட எடம். சட்டுபுட்டுன்னு ஓடிப் போயிடு. இந்த ஒடம்புல நானு பூந்துக்கணும்...”

சிறுவனுக்கு பயத்தில் கை, காலெல்லாம் உதற ஆரம்பித்து விட்டது. குப்பென்று வேர்த்து சட்டை, டிராயரெல்லாம் நனைந்து விட்டது. பெரியவரோ எதுவுமே நடக்காததுபோல உட்கார்ந்து கொண்டிருந்தார்!
அதோடு மட்டுமா? அந்த உருவத்தைப் பார்த்துப் பேச வேறு ஆரம்பித்து விட்டார். “ஏன் ஒனக்கு இந்த வேண்டாத வேல? ஒனக்கு மனுஷ ஒடம்பு வேணுமின்னா, கடவுள்கிட்டப் போயி வேண்டு. இல்லன்னா என்னைக் கேளு. அதுக்கான பூஜைங்க இருக்கு. சொல்லித் தாரேன். எதுக்காக அடுத்தவங்க ஒடம்பத் திருடப் பாக்குற?”

“இந்த ஒடம்புக்கு சொந்தக்காரரு என்ன சாதாரணமானவருன்னு நெனச்சியா? ரொம்பப் பெரிய மகானு. இதுமாதிரி உத்தமருங்க எல்லாம் பூமில வாழ்றதுனாலத்தான், தெனத்துக்கும் சூரியன் கெழக்குல உதிக்கிறாரு. இவருகிட்ட உன்னோட வேலயக் காட்டலாம்னு நெனைக்காத. போ! போ! எங்கனாச்சும் ஓடிப் போயி தப்பிச்சுக்கப் பாரு!”

‘என்னடா இது! இந்தப் பிசாசு நம்மள மெரட்டுதேன்னு பாத்தா, நம்ம வாத்யாரு கொஞ்சங்கூட பயப்புடாம அத வெரட்டுறாரே.’ சிறுவன் குழம்பினான். இருந்தாலும் அவன் உடலில் நடுக்கம் தீரவில்லை.
பெரியவரின் வார்த்தைக்கெல்லாம் மதிப்பு கொடுக்காமல் அந்த துர்ஆவி மேலும் நெருங்கி வர ஆரம்பித்தது. பெரியவர் உடனே தன் கண்களை மூடியபடி, ஏதேதோ வேத மந்திரங்களை ஓத ஆரம்பித்தார். அடுத்த கணமே அந்தக் கெட்ட ஆவியானது காற்றோடு காற்றாக மறைந்து விட்டது!

சிறுவனுக்கோ இன்னமும் நடுக்கம் தீரவே இல்லை. அவன் பயத்தில் நடுங்குவதைப் பார்த்துப் பெரியவர் அட்டகாசமாகச் சிரித்துக் கொண்டே சொன்னார். “ஏண்டா ஒடம்பு இப்டீ நடுங்குது? தம்மாத்துண்டு பேயைப் பாத்ததுக்கே இப்டீ ஆடிப் போயிட்டியே. இதெல்லாம் சும்மா வெத்துவேட்டு கேஸுங்க. மந்திரத்தை ஆரம்பிச்சதுமே தலை தெறிக்க ஓடிடுச்சு பாத்தியா?’

முதியவரின் தூய உடலைப்
பறிக்க வந்த தீய ஆவி

“சரி சரி. பயம் தெளியறதுக்கு இந்த மந்திரத்தைச் சொல்லிகிட்டே இரு.” என மந்திரங்கள் சிலவற்றைப் பெரியவர் சிறுவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். சிறுவனும் பெரியவர் தந்த மந்திரங்களை விடாமல் உச்சரிக்க, உச்சரிக்க அவன் உடல் நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக நீங்கியது.

அதன் பிறகு ஆஸ்ட்ரல் பயணம், ஆவிகளின் நிலைகள் போன்ற பல விளக்கங்களைப் பெரியவர் சிறுவனுக்கு போதித்தார். இவ்வாறு சில மணி நேரம் சென்றதும், வயோதிகரின் உடலில் சற்று அசைவு தெரிந்தது.மெல்லக் கண் விழித்த அந்த முதியவர் எழுந்து உட்கார்ந்தபடி சொன்னார். “ரொம்ப சந்தோஷம் நைனா! இந்தக் காலத்துல கூப்பிட்ட கொரலுக்கு ஒடனே வந்து ஒதவுனதே பெரிசுப்பா. ஏதோ உங்க உபகாரத்துனால இன்னைக்கு ஒரு நல்ல காரியம் செய்ய அடியேனுக்கு ஒரு வாய்ப்பு கெடச்சுச்சு.”

“வாடா கண்ணு. கௌம்பலாம். நாம வந்த வேல அவ்ளோதான்.” என்று சிறுவனைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே எழுந்த பெரியவரிடம் ஒரு சிறு குச்சியை நீட்டினார் அந்த முதியவர்.

“நீங்க செஞ்ச உதவிக்கு ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உபகாரம்.” என்றபடி அந்த முதியவர் நீட்டிய அந்தக் குச்சியைப் பெரியவர் மிகவும் பவ்யமாகக் குனிந்து வாங்கிக் கொண்டார். சிறுவன் ஆச்சரியமாகப் பார்த்தான். ‘நம்ம வாத்தியாரு யாரு எதக் கொடுத்தாலும் சட்டுன்னு வாங்கிட மாட்டாரே? இன்னைக்கு என்னாச்சு?”
முதியவர் தந்த குச்சியை மிகவும் கவனமாகத் தன் இடுப்பில் செருகிக் கொண்ட பெரியவர் சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து முதியவரை நமஸ்கரித்தார். அதைப் பார்த்த சிறுவனும் சடாரெனக் கீழே விழுந்து வணங்கினான்.

“ராஜா. நாம வந்த காரியம் நல்லபடியா முடிஞ்சு போச்சுடா . வா போகலாம்.”எனச் சிறுவனை இழுத்துக் கொண்டு பெரியவர் நடந்தார். சிறுவனின் மனமெல்லாம் இப்போது அந்த முதியவர் தந்த குச்சியிலேயே இருந்தது.

‘பாக்க என்னமோ சாதாரணக் குச்சி மாதிரித்தான இருந்துச்சு. அதைப் போயி ஏன் நம்ம வாத்தியாரு வாங்கி வச்சுகிட்டாரு? இவுரு காரணமில்லாம எதுவுமே செய்ய மாட்டாரே?’ எனத் தன் மண்டையைப் போட்டு குழப்பிக் கொண்டான். ‘சரி. அந்தக் குச்சியப் பத்தி ஏதாச்சும் சொல்றாரான்னு பாப்போம்.’ என மெல்ல ஆரம்பித்தான்.

கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்கள் தொடர்ந்து தீய கதிர்களின் தாக்கத்திற்கு ஆளாவதால் அவர்களுடைய கண்களும் சிறு மூளையும் அதிகம் பாதிப்படையும் வாய்ப்புகள் ஏற்படுகிறது. இத்தகையோர் தை மாத அமாவாசை தினத்தன்று நெற்கதிர்களைக் கொத்தாக வைத்து அதன் மேல் தர்ப்பைச் சட்டம் வைத்து தர்ப்பணம் அளிக்கவும். சர்க்கரைப் பொங்கலில் பசு நெய் சேர்த்து ஏழைகளுக்கு, சிறப்பாக சிவந்த மேனி உடையவர்களுக்கு அன்னதானம் செய்து வருதல் சிறப்பு.

“வாத்தியாரே. அந்தத் தாத்தா என்னமோ நல்ல காரியம் செஞ்சுட்டு வந்தேன்னு சொன்னாரே. அது என்னா?”
“ஓ! அதுவாடா! பாத்தியா ஒங்கிட்ட சொல்லணும் நெனச்சுகிட்டே இருந்தேன். நீயே ஞாபகப்படுத்திட்ட. ஒரு உத்தம அடியாரு... ரொம்ப நாளா சிவனுக்குத் தொண்டு செய்யறவரு. கேதார்நாத், பத்ரிநாத் எல்லாம் போயி தரிசனம் பண்ணிட்டு வரலாமேன்னு போனவரு, திடீர்னு பனிப்பாறைங்க சரிஞ்சு, அதுக்கு நடுவுல மாட்டிகிட்டாரு.”

“போதாக்குறைக்கு குளிருக் காத்து வேற அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. பனி மலைல காத்துன்னா சும்மாவா? அவருக்கு ஏற்கனவே மூச்சுத் திணறலு வேற. ஒடம்பே வெறச்சுப் போயி... ஆளு பொழைப்பானா இல்ல அங்கயே புட்டுக்குவானாங்கற நெலம...”

“என்னா செய்றது? நம்ம சிவனுக்கு உண்மையான ஈடுபாட்டோட தொண்டு பண்றவன். அவனோட உசிரக் காப்பாத்தற வேலய மெத்த மேலேந்து இந்த சித்தருகிட்ட கொடுத்திட்டாங்க. வேற வேலைன்னா பொறுக்க ப்ளான் பண்ணிச் செய்யலாம். எமர்ஜென்ஸி கேசு. லேட் பண்ணுனா கத கந்தலாயிடுமே!”

“ஒடனே நம்மள காண்டாக்ட் பண்ணி ஒதவிக்கு அழைச்சாரு. அதான் அவ்ளோ அவசரமா ஓடியாந்தது. மகான்களோட ஒடம்புன்னா சும்மாவா? எவ்ளோ கோடிகோடியா மந்திரம் சொல்லியிருப்பாங்க! எத்தனை நல்ல காரியம் செஞ்சுருப்பாங்க! எவ்ளோ தான, தர்மம்-... எவ்ளோ மகான்கள் தரிசனம்...”

“முழுக்க முழுக்க தெய்வீகம் நெறஞ்சு வழியுற அவங்க ஒடம்பு மட்டும் மந்திரவாதிங்க, கெட்ட ஆவிங்க கைல கெடச்சுச்சுன்னா அப்டீயே லபக்னு கொத்திகிட்டுப் போயிடுங்க. அதுனாலத்தான் நம்மள காவலுக்கு வச்சுட்டு சூட்சுமமாப் போயி, ‘டக்’குன்னு காரியத்த முடிச்சுட்டு திரும்பிட்டாரு.”

சிறுவனுக்கோ பெரியவர் பேசுவதில் பாதி கவனம்தான் இருந்தது. அவன் மனமெல்லாம் அந்தக் குச்சியில்தான்! பெரியவரின் வலது பக்கமாக நடந்து கொண்டிருந்தவன்- இப்போது நைஸாக அவரது இடது பக்கமாக மாறி நடக்க ஆரம்பித்தான். ஏனென்றால், அந்தக் குச்சியைப் பெரியவர் அவரது இடுப்பில் இடது பக்கத்தில்தான் செருகி வைத்திருந்தார்!

பெரியவருக்கா தெரியாது சிறுவனின் எண்ண ஓட்டங்கள்! எதைஎதையோ பேசிக்கொண்டே அந்தக் குச்சியை எடுத்துத் தன் வலது பக்கமாகச் சொருகிக் கொண்டார். சிறுவன் ‘திருதிரு’ என விழித்தான்.
‘ இப்ப என்னா செய்றது? பேசாம திரும்பவும் அந்தப் பக்கமாப் போயிப் பாக்கலாமா?’ என யோசித்த சிறுவனின் காதைப் பிடித்துத் திருகினார் பெரியவர். “ஏண்டா அங்கயும் இங்கயும் கொரங்கு மாதிரித் தாவறியே. இந்தக் குச்சியப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னுதான, இந்தப் பாடு படற.’'

புனிதமான மேஷ லக்னம், மேஷ ராசி புத ஹோரை நேரத்தில் அவதாரம் கொண்டவரே ஜடாயு பகவான். மைக்ரோ பயாலஜி, கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் போன்ற நுண்துறையியல் பயிலும் மாணவர்கள் புதன் கிழமைகளில் இராமாயணத்தில் ஜடாயு மோட்சப் பகுதியைப் பாராயணம் செய்து முந்திரி கலந்த புளியோதரையை அன்னதானமாக அளித்து வந்தால் தங்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

“ஹி...ஹி...” என அசட்டுச் சிரிப்பு சிரித்தான் சிறுவன். “இந்தாடா. நல்லாப் பாத்துக்க.” எனப் பெரியவர் அந்தக் குச்சியை எடுத்துச் சிறுவனின் முகத்துக்கு நேரே நீட்டினார். சிறுவனும் அதை உற்றுப் பார்த்தான்.
“பாக்க சாதாரணக் குச்சிமாதிரித்தான இருக்குன்னு நெனைக்காத. ரொம்ப விசேஷமான தேவலோகத்துச் சரக்கு. இதுனால ஒரு கல்லத் தொட்டா, ஒடனே அது சோத்து உருண்டையா மாறிடும்டா.”

சிறுவனால் நம்பவே முடியவில்லை. ‘என்னடா இது கேக்கவே ஆச்சரியமா இருக்கே? குச்சியப் பாத்தா ஒண்ணுமே தெரியல. இத வச்சு கல்லையெல்லாம் சோறா மாத்திடலாம்னு சொல்றாரு... வாத்யாரு சொல்றது உண்மையா இருந்துச்சின்னா... இந்தக் குச்சிய வச்சே எவ்வளவோ அன்ன தானம் பண்ணிடலாமே...’
சிறுவன் யோசிப்பதைப் பார்த்ததும் பெரியவர் “ராஜா. நீ முழிக்கறதப் பாத்தா, எனக்கே சந்தேகம் வருதுடா. எதுக்கும் ஓடிப் போயி ஒரு கல்ல எடுத்துட்டு வந்துடேன். அது மாறுதா, இல்லயான்னு கையோட டெஸ்ட்டு பண்ணிப் பாத்துடலாம்.” என்றார்.

பெரியவர் சொல்லி முடிக்கக்கூட இல்லை. சிறுவன் சடாரென ஓடி, பெரிய கல் ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டு திரும்ப ஓடி வந்தான். வெறும் சாதாரணக் கல் எப்படி சாதமாக மாறும் எனப் பார்ப்பதில் இருந்த ஆவல்தான்! எடுத்து வந்த கல்லைப் பெரியவர் முன்னால் வைத்து விட்டு நிமிர்ந்து பார்த்த சிறுவனுக்கு ஒரே அதிர்ச்சி! பெரியவர் தன் இரண்டு கைகளையும் வானத்தை நோக்கி நீட்டியபடி நின்றார். அவர் கையில் இருந்த குச்சியைக் காணவில்லை!! “வாத்யாரே! அந்தக் குச்சி...” என ஏதோ கேட்க ஆரம்பித்த சிறுவனைத் திரும்பிக் கோபமாகப் பார்த்தார் பெரியவர்.

“அதெல்லாம் போக வேண்டிய எடத்துக்கு அப்பவே போய் சேந்துருச்சு.” பெரியவர் இவ்வாறு சொன்னதும் சிறுவனுக்கு ஒரே குழப்பம்!
“ஏண்டா அறிவு கெட்டவனே! ஒரு பெரிய மகான் தந்த குச்சி. அதப் பாக்கறதுக்கே நீ எத்தனையோ ஜென்மமா தவம் பண்ணியிருக்கணும். அத நெனச்சுப் பெருமைப்படறத வுட்டுட்டு, டெஸ்ட்டு பண்ணிப் பாக்கணுமின்னு கல்லத் தேடி ஓடறியே.”

“தெய்வீகத்துல அவரு எவ்ளோ பெரிய ஆளுன்னு ஒனக்குக் காமிக்கத்தான் அவ்ளோ அவசரமா ஓடியாந்தேன். இருந்த எடத்துலயே ஒடம்ப வுட்டுட்டு, சூட்சுமமாப் போயி எங்கயோ இருக்கறவனோட உயிரக் காப்பாத்தற சக்தி படைச்சவரு. உன்னோட கண்ணாலப் பாத்தும், அவரு மேல நம்பிக்க வரல பாத்தியா?”

‘என்னாச்சு நம்ம வாத்யாருக்கு? அவருதான “ஓடிப் போயி கல்ல எடுத்துகிட்டு வாடா”ன்னாரு. இப்ப அப்டீயே பொரட்டிப் பேசுறாரே!’ சிறுவன் விழித்தான்.

“நீதான வாத்யாரே...” என ஏதோ சொல்ல ஆரம்பித்த சிறுவனை மேற்கொண்டு பேசவே விடவில்லை. “ஆமாண்டா. நாந்தான் ஒன்னப் போயி கல்ல எடுத்துகிட்டு வரச் சொன்னேன். எதுக்காக? நீ என்ன செய்றன்னு பாக்கத்தான். நீ என்னா பதில் சொல்லியிருக்கணும்? ‘டெஸ்ட்டு எல்லாம் ஒண்ணும் வேணாம் வாத்யாரே. நீ சொன்னா கரெக்டாத்தான் இருக்கும்’னுதான. அத வுட்டுட்டு ஒடனே கல்லத் தேடி ஓடறியே.”

“ஆன்மீகத்துல இந்த சந்தேக புத்திதாண்டா முதல் எதிரி. சந்தேகம் இருக்கற வரைக்கும் ஒரு மனுஷனால தெய்வீகத்துல எதையுமே சாதிக்க முடியாதுடா. அதுவும் குரு பக்கத்துல இருந்து ஒரு விஷயத்தக் கத்துக் கொடுக்கறப்பயே... இவ்ளோ சந்தேகம் வருதுன்னா... என்னாத்த சொல்றது?”

சிலர் சதாசர்வ காலமும் தன்னைப் பற்றியும், தான் செய்த சாதாரண காரியங்களைப் பெரிய சாதனைகளாக வர்ணித்துக் கொண்டிருப்பது உண்டு. இவ்வாறு தன்னப் பற்றியே பேசுபவர்களுக்கு அடுத்து கிடைப்பது சொறி நாய் பிறவி என்பது சித்தர்கள் வாக்கு. எனவே இத்தகைய மனக் குற்றங்களுக்கு ஆட்பட்டவர்கள் இப்பிறவியிலேயே பரிகாரம் பெற முயல்வதே புத்திசாலித்தனம் அல்லவா? இத்தகையோர் தேய்பிறை அஷ்டமி திதிகளில் கால பைரவருக்கு முழு முந்திரிகளால் மாலை சார்த்தி ஏழைகளுக்குத் தானம் அளித்து வர தக்க நிவாரண வழிகள் பிறக்கும்.

“தெய்வீகத்துக்கு அஸ்திவாரமே நம்பிக்கைதான்டா. உன்னோட மனசுல அத உருவாக்கத்தான் இந்தப் பாடுபடறேன். இந்த வயசான காலத்துல, உன்ன இழுத்துக்கிட்டு காட்டுலயும் மேட்டுலயும் அலையணும்னு எனக்கென்னா வேண்டுதலா? உன்னோட மனசுல உள்ள தெய்வ நம்பிக்கைய வலுப்படுத்தறதுக்குத்தான. ஆனா நீ இன்னும் தேறவே மாட்டேங்கறியே?”

சிறுவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் வாயடைத்துப் போய் நின்றான். பெரியவர் தொடர்ந்தார். “நம்பிக்கைங்கறது வெறும் வெளையாட்டு இல்லடா. தெய்வீகத்துல நம்பிக்கை மட்டும் வந்துருச்சுன்னு வச்சுக்க. நீ வாழ்க்கைல எத வேணுமின்னாலும் சாதிச்சுடலாம். ஆனா... நம்பிக்கை ஏற்படறதுங்கறது அவ்ளோ சுலபமில்ல. அதுக்காகத்தான் விதவிதமான அனுபவங்களத் தந்து உன்னத் தயார் பண்றது...”

“வாத்யாரே! நம்பிக்கை வளர்றதுக்கு நானு என்னா பண்ணணும்?” என்றான் சிறுவன். பலமாகச் சிரித்தார் பெரியவர். “நம்பிக்கைங்கறது என்னா செடியா? தண்ணி ஊத்தி, உரத்தப் போட்டு வளர்க்கறதுக்கு. Surrender தாண்டா ஒரே வழி. குருசொன்னா கண்மூடித்தனமா நம்பணும். ‘ஏன்? எதுக்கு?’ன்னு கேள்வியே கேக்காம சொன்னதச் செய்யணும். அது ஒண்ணே போதும் இந்த ஜென்மத்துலயே கடைத்தேர்றதுக்கு. இதைத்தான் பெரியவங்க “கண்மூடி வந்தவர் மண் மூடிப் போகார்!”னு அந்த காலத்துலயே சொல்லி வச்சாங்க.”

‘அந்த விசேஷமான தேவலோகத்துக் குச்சிய வுட்டுட்டமே.’ சிறுவனின் ஏக்கம் தணிந்த பாடில்லை. “சரி வாத்யாரே. அந்தக் குச்சிய வச்சு எத்தனையோ பேருக்கு அன்ன தானம் பண்ணியிருக்கலாமில்ல...” என இழுத்தான். சடாரென பதில் கொடுத்தார் பெரியவர்.

“வெறும் குச்சி அன்ன தானம் பண்ணாதுடா. உன்னோட நம்பிக்கைதான் அதைச் செய்ய வைக்கும். நீ பாத்துகிட்டே இரேன். பிற்காலத்துல அண்ணாமலைல எத்தனையோ லட்சக்கணக்கான அடியாருங்களுக்கு அன்ன தானம் பண்ற பாக்கியம் ஒனக்குக் கெடைக்கும். கைல காசு இருக்கோ, இல்லயோ... உடம்புல தெம்பு இருக்கோ, இல்லயோ...கூட யாரும் இருக்காங்களோ, இல்லயோ... அன்ன தானத்த மட்டும் வுடாம நடத்திகிட்டே இருப்ப. அப்ப இதயெல்லாம் நெனச்சுப் பாப்படா. ஆனா நாந்தான் உன்னோட இருக்க மாட்டேன்.”

சிறுவனுக்கு பகீரென்றது. “என்னா வாத்யாரே? என்னை ‘அம்போ’ன்னு வுட்டுட்டுப் போவப் போறியா? ஏன் இப்டீ சொல்ற?”

பலமாகச் சிரித்தார் பெரியவர் “ஆமாண்டா. ஒன்னோட நம்பிக்கை பரிபூரணமானப்பறம் எனக்கென்னா இங்க வேல? நாங்க வந்ததே அதுக்குத்தான. வந்த காரியம் முடிஞ்சுடுச்சுன்னா, ஒடனே எடத்தக் காலி பண்ணிடுவோம். சரி சரி வா. இப்ப போயி அடுத்து நடக்க வேண்டியதப் பாக்கலாம்.”

சொல்லிவிட்டுப் பெரியவர் வேகமாக நடக்க, சிறுவனும் நடந்தவற்றை அசை போட்டவாறே அவர் பின்னால் தொடர்ந்தான்.

கடவுளைக் காணலாம்

கோவணாண்டிப் பெரியவரோடு சிறுவன் எவ்வளவோ திருத்தலங்களுக்குச் சென்றாலும், அவனுக்கு மிகவும் பிடித்த இடம் என்றால் அது திருஅண்ணாமலைதான். அதேபோல, பெரியவரும் திருஅண்ணாமலைக்குப் போனாலே ரொம்பவும் குஷியாகி விடுவார். சதா சர்வ காலமும் தெய்வீக விஷயங்களை மடை திறந்த வெள்ளம்போலக் கொட்டிக் கொண்டே இருப்பார்.

இப்படித்தான் ஒரு முறை... சித்திரை மாதத்தில் ஓர் நாள்... அக்னி நட்சத்திரம் தகிக்கும் உச்சி வெயில் நேரம்... இருவரும் திருஅண்ணாமலையில் கிரிவலம் போய்க் கொண்டிருந்தனர். வழக்கமாக ‘அங்கொரு கால் இங்கொரு கால்’ என வைத்து ‘விறுவிறு’என நடக்கும் பெரியவர், அன்றைக்கு என்னவோ ரொம்பவும் மெதுவாகவே நடந்து கொண்டிருந்தார்.

சிறுவனுக்கோ காலைக் கீழே வைக்கவே முடியவில்லை. அவ்வளவு சூடு! வலது, இடது கால்களை மாறி மாறிக் கீழே வைத்து, ஏதோ புதுவித நடனம் ஆடுபவன்போல, அங்குமிங்கும் தாவித் தாவிப் போய்க் கொண்டிருந்தான். சூடு போதாதென்று, அங்கங்கே குத்தும் முட்கள் வேறு. பெரியவரோ சிறுவன் படும் அவஸ்தையெல்லாம் பற்றி கவலையே படாமல், திருஅண்ணாமலையின் சிறப்பைச் சொல்லிக் கொண்டே மெல்ல நடந்தார்.

சிறு வயதிலிருந்தோ அல்லது திடீரென்றோ திக்கு வாய்ப் பழக்கத்திற்கு ஆளாவனவர்கள் உண்டு. இதற்கு எளிமையான நிவாரண முறையை சித்தர்கள் அருளியுள்ளார்கள். சுத்தமாகத் தயார் செய்த விபூதியில் சிறிது நீர் விட்டுக் குழைத்து அதை உடலில் 36 பட்டைகளாக இட்டுக் கொண்டு திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய வேயுறு தோளி பங்கன்... என்று தொடங்கும் பதிகத்தை 11 முறை ஓதி வரவும். தொடர்ந்து இவ்வாறு வழிபட்டு வர திக்கு வாய் குணமாகும். எமது ஆஸ்ரமத்திலும், சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலாயாவிலும் சுத்தமான விபூதியைப் பெறலாம்.

“அண்ணாமலை என்னமோ ‘பாக்கறதுக்கு சாதாரண கல்லு மலை மாதிரி இருக்கே’ன்னு தப்புக் கணக்கு போட்டுடாதடா. ஒரு யுகத்துல இது மாணிக்க மலையா இருந்திச்சு. வேற ஒரு யுகத்துல இது ரத்தின மலை. போன யுகத்துல இது தங்க மலையா இருந்துச்சு...”

பெரியவர் பேசுவதையா கவனித்தான் நம் சிறுவன்? அவன் கவனமெல்லாம் காலைச் சுட்டுப் பொசுக்கும் வெயிலின்மேல்தான். ‘ஆமா. நானே இங்க சூட்டுல பொசுங்கிப் போயி, காஞ்ச கருவாடு மாதிரி ஆயிட்டேன். இந்த வாத்யாரு என்னடான்னா, நெலா வெளிச்சத்துல உலாவுறது மாதிரி, அன்ன நடை போட்டுகிட்டு... இதுல ‘தங்க மலை, வெள்ளி மலை’ன்னு லெக்சரு வேற. யாரு இப்ப இந்தக் கதையெல்லாம் கேக்கற நெலைமைல இருக்கா?’

இதற்குள் இருவரும் கிரிவலப் பாதையில் நடந்து நடந்து வெகு தூரம் வந்து விட்டனர். ஒரு பெரிய வேப்ப மரத்தின் அருகே வந்தவுடன், பெரியவர் அதன் நிழலில் சற்றே நின்றார். சிறுவனும் “அப்பாடா!” என பெருமூச்சு விட்டபடி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். அங்கிருந்து பார்த்தால் சற்று தூரத்தில் தென்பட்ட மலை அடிவாரத்தில் ஒரே மாதிரியாக சைஸ் பார்த்துப் பொறுக்கிக் கொட்டி வைத்ததுபோல, உருண்டை உருண்டையாக கற்கள் கிடந்தன. சிறுவன் அவற்றையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு நின்றான்.

காலப்போக்கில் பலப்பல புதிய கட்டிடங்கள் உருவாகி, சாலை அமைப்புகளும் மாறி விட்டதால், அடையாளமே கண்டுபிடிக்க முடியாதபடி மாறி விட்ட அந்தப் பகுதியில் தற்போது பச்சையம்மன் கோயில் அமைந்துள்ளது.
“ஏண்டா, கிரிக்கட்டெல்லாம் வெளையாடுவியா நீ?” என்று கேட்டார் பெரியவர்.
“என்னா ‘திடீர்’னு வாத்யாரு சம்மந்தா சம்மந்தமில்லாம கிரிக்கட்டைப் பத்திப் பேசறாரு’ என வியந்து கொண்டே பதில் சொன்னான் சிறுவன். “ஓ! ஸ்கூல்ல பசங்களோட வெளையாடுவனே.”
“அப்டீயா? சரி. நீ என்னா பாட்ஸ்மேனா, பௌலரா?”
“ரெண்டுந்தான் வாத்யாரே. ஆனா, நானு பந்து போட்டேன்னு வச்சுக்க. ஒரு பய நிக்க முடியாது.”

சிறுவனை மேலும் கீழும் பார்த்தபடி ஏளனமாகச் சிரித்தார் பெரியவர். “ஏண்டா, தம்மாத்தூண்டு இருக்க. உன்னால அவ்ளோ வேகமா பந்து போட முடியுமா? யார் கிட்டடா கத வுடற?”
சிறுவனுக்கு ரோஷம் வந்துவிட்டது. “நம்பலைன்னா ஒரு நாளைக்கு ஸ்கூலுக்கு வந்து பாரேன்.”
“அதுக்கு ஏண்டா ஸ்கூலுக்கு வரணும்? எங்க, அதோ கெடக்குதே. அந்தக் கல்லுங்கள்ல ஒண்ண எடுத்து எறிஞ்சு காட்டு. பாக்கலாம் உன்னோட தெறமைய.”

சிறுவன் ஒடிப் போய் அந்தக் கற்களில் தேடி , நல்ல உருண்டையான கல்லாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்தான். கிட்டத்தட்ட ஒரு பந்து போன்ற அமைப்பில் இருந்த அதைக் கையில் எடுத்துக் கொண்டு கொஞ்ச தூரம் பின்னால் நடந்து சென்றான்.
பெரியவரை ஓரக்கண்ணால் பார்த்தவாறே சிறுவன் கல்லைக் கீழே வைத்து விட்டு--, தன் அரை டிராயரை இழுத்து இறுக்கக் கட்டிக் கொண்டான். ‘ஓடுறப்ப அவுந்து வுழுந்துருச்சுன்னா...’ பெரியவர் மரத்தில் சாய்ந்தபடி நின்று கொண்டு, சிறுவனின் செய்கைகளைப் புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தார்.

மீண்டும் கல்லைக் கையில் எடுத்துக் கொண்டு, வேகவேகமாக ஓடி வந்து கையைச் சுழற்றி, தன் முழு பலத்தையும் பயன்படுத்தித் தூக்கி எறிந்தான். அந்தக் கல் கண்ணுக்கெட்டாத தூரத்தில் போய் விழுந்தது!
பெருமை தாங்கவில்லை நம் சிறுவனுக்கு. தலையை நிமிர்த்தியபடி ஸ்டைலாக நடை போட்டுக் கொண்டு பெரியவர் முன்னால் போய் நின்றான். ‘என்னா வாத்யாரே! இப்ப என்னா சொல்ற?’ என்ற கேள்வி, வாயைத் திறந்து கேட்காவிட்டாலும் அவன் கண்களில் தெரிந்தது.

பெரியவரிடமே தன் திறமையைக்
காட்ட கல் எறியும் சிறுவன்

“ஏண்டா! அவசரக் குடுக்கை!! நீ எடுத்த அந்தக் கல்ல ஒரு தபா பாக்கணும்னு நெனச்சேன். நான் வாயத் தொறந்து சொல்றதுக்குள்ளாற தூக்கி எறிஞ்சுட்டியே. சரி சரி. சட்டுன்னு ஓடிப் போயி அந்தக் கல்ல எடுத்துட்டு வா.”
“வாத்யாரே, அது எங்க போய் வுழுந்துச்சோ, யாருக்குத் தெரியும்? சரி. ஒனக்குக் கல்லுதான வேணும். அதான் அவ்ளோ கல்லுங்க கெடக்குதே. வா. ரெண்டு பேருமே போயி எந்தக் கல்லு வேணுமோ, பாத்து எடுத்துக்கலாம்.”
“அதெல்லாமில்லடா. நீ தூக்கி எறிஞ்ச பாரு. அந்தக் கல்லுதான் வேணும். தேடி எடுத்துட்டு வந்துடு. ”
சிறுவனுக்குப் புரிந்து விட்டது. ‘சரி. வாத்யாரு நம்மள டீல்ல வுட்டுட்டாரு. இன்னைக்கு நாம காலி!’ மெல்ல மெல்லத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, கல் விழுந்த பக்கமாக நடந்தான்.

“ராஜா. சுருக்கா எடுத்துட்டு வந்து சேர்ந்துடு. நானு மெதுவா கிரிவலம் போயிகிட்டே இருக்கேன்.” பெரியவரின் குரல் கேட்டதும் நாலுகால் பாய்ச்சலில் ஒடிப்போய் கல்லைத் தேட ஆரம்பித்தான்.
ஜன நடமாட்டம் அதிகமில்லாத அன்றைய காலத்தில் திருஅண்ணாமலையைச் சுற்றி வர, ஒரு ஒற்றையடி மண் பாதையைத்தான் கிரிவலம் செல்பவர்கள் பயன்படுத்தினர். மற்ற இடங்களில் எல்லாம் செடி, கொடி, மரங்கள்தான். --அதிலும் மலை அடிவாரப் பகுதியில் எங்கு பார்த்தாலும் புதர்கள் மண்டி, அடர்ந்த காட்டுப் பகுதியாகத்தான் காட்சி அளித்தது.

அதற்கு நடுவில்தான் சிறுவன் விட்டெறிந்த கல் போய் விழுந்திருந்தது. அருகில் சென்று பார்த்ததும் மலைத்துப் போய் நின்று விட்டான். ‘இவ்ளோ அடர்த்தியா இருக்கற செடிங்களுக்கு நடுவுல கெடக்கற கல்ல எப்டீ தேடி... எப்பக் கண்டுபுடிச்சு...’ சிறுவனுக்கு நம்பிக்கையே இல்லை.
இருந்தாலும் என்ன செய்வது? பெரியவரோ கல்லைத் தேடி எடுத்துவரச் சொல்லி விட்டு முன்னால் போய் விட்டார். சிறுவன் ஒவ்வொரு புதராக விலக்கி விலக்கிப் பார்த்துத் தேட ஆரம்பித்தான்.
குனிந்து குனிந்து தேடியதில் சிறுவனின் முதுகு வலி எடுத்ததுதான் மிச்சம். கல்லோ கிடைத்தபாடில்லை. நேரமோ கடந்து கொண்டிருந்தது.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஆன பின்னர் ஒரு செடி மறைவில் ஏதோ ‘பளபள’வென மின்னுவதைச் சிறுவன் கண்டான். என்னஏதென்று பக்கத்தில் போய், செடிகளை விலக்கிப் பார்த்தால் சிறுவன் தூக்கி எறிந்த அதே கல்!
‘அப்பாடா! ஒரு வழியா கல்லக் கண்டு புடிச்சாச்சுடா சாமி.’ என நிம்மதியாக மூச்சு விட்டபடி அதை எடுத்தான். கையில் எடுத்துப் பார்த்தபோது, அந்தக் கல் இன்னும் ‘பளிச்’சென இருந்தது. நன்றாக உற்றுப் பார்த்தால், மஞ்சள் நிறத்தில் தகதகவென அந்தக் கல் மின்னியது! முழுத் தங்கம்!!

சிறுவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. ‘என்னடா இது அதிசயம்! சாதாக் கருங்கல்லத்தான நாம தூக்கி எறிஞ்சோம். இங்க வந்து பாத்தா தங்கக் கல்லாக் கெடக்குது. சரி சரி. எடுத்துகிட்டுப் போயி நம்ம வாத்யாருகிட்ட காமிப்போம்.’
யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக, கல்லை எடுத்துத் தன் டிராயரினுள் மறைத்து வைத்துக் கொண்டு, ஒரு கையால் இறுக்கப் பிடித்தபடி சிறுவன் வேகவேகமாக ஓடினான். தங்கக் கல்லைக் கண்டெடுத்த ஆச்சரியத்தில் சிறுவனுக்கு இதுவரை தேடி அலைந்ததில் ஏற்பட்ட களைப்பெல்லாம் பறந்தோடி விட்டது.

ஸ்ரீமகாவிஷ்ணுவின் பற்பல அவதாரங்களுள் சாதாரண மனித அளவில் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமானதாக அமைந்ததே ஸ்ரீகிருஷ்ணாவதாரம். பகவானின் ராச லீலை, காளிங்க நர்த்தனம், கோவர்த்தன கிரிலீலை, குசேலருடன் நட்பு போன்ற அனைத்து லீலைகளும் ஜீவாத்மா பரமாத்மா ஐக்கியம் என்னும் உயரிய ஞான நிலையை வெவ்வெறு கோணத்திலிருந்து பிரதிபலிப்பவை ஆகும். அத்தகைய ஞான நிலையை எட்டியவர்களுக்கே ஸ்ரீபகவானின் அவதார லீலைகளின் தெய்வீக தாத்பர்யம் புரிய வரும்.

பெரியவரைத் தேடியபடியே சிறுவன் கிரிவலப் பாதையில் ஓடினான். ரொம்ப நேரம் ஓடிய பின்னர், தூரத்தில் பெரியவர் நடந்து போய்க் கொண்டிருப்பது அவன் கண்களில் தென்பட்டது. அவரைப் பார்த்த சந்தோஷத்தில் சிறுவனின் ஓட்டம் இன்னும் சூடு பிடித்தது.
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி தன் முன்னால் வந்து நிற்கும் சிறுவனை வினோதமாகப் பார்த்தார் பெரியவர். “என்னடா கண்ணு. என்னாச்சு ஒனக்கு? ஏதோ காணாததைக் கண்ட மாதிரி இந்த ஓட்டம் ஒடியாற?”
ஓடி வந்த அசதியில் சிறுவனுக்குச் சரிவர பேச்சே வரவில்லை. மூச்சு வாங்கியதில் வார்த்தைகள் தடுமாறின. “ஹஹ... ஆமா... வாத்யாரே... ஹஹஹ...அந்தக் கல்லு...தங்கக் கல்லு...ஹஹஹ.”

இவ்வாறு ஏதேதோ உளறியபடியே சிறுவன் தன் டிராயருக்குள் மறைத்து, இறுக்கப் பிடித்திருந்த அந்தக் கல்லை எடுத்துப் பெரியவர் முன்னால் நீட்டினான். சிறுவனின் விரிந்த கைகளில் ‘பளபள’வென அந்தத் தங்கக் கல் மின்னியது.
“என்னடா, தங்கம் மாதிரி இருக்குது. எங்கேந்துடா தூக்கியாந்த?” பெரியவர் அந்தக் கல்லைத் தொடாமலே எட்ட நின்று பார்த்தார்.
“வாத்யாரே. நீதான ‘தூக்கிப் போட்ட கல்ல எடுத்துட்டு வாடா’ன்னு சொன்ன. இம்மா நேரம் படாத பாடுபட்டுத் தேடி எடுத்தாந்தா, இப்ப இதுமாதிரிக் கேக்கறியே? ஏன் எப்பப் பாத்தாலும் மாத்தி மாத்திப் பேசியே பேஜார் பண்ற?”

இப்போது பெரியவர் சிறுவனின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்தார். “ஏண்டா. திருஅண்ணாமலை முன்னாடி தங்க மலையா, மரகத மலையா, மாணிக்க மலையா இருந்துச்சுன்னு சொன்னப்ப என்னா நெனச்ச? ‘வழக்கம்போல இந்தக் கெழவன் என்னமோ புருடா வுடறான்’னுதான. அதுக்காகத்தான் ஒரு கல்லத் தூக்கிப் போட வச்சு, உன்னையே அத எடுத்துகிட்டு வரச் சொன்னேன்.”

எல்லையில்லா சந்தோஷத்துடன்
பெரியவரிடம் கல்லக் காட்டும் சிறுவன்

சிறுவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பெரியவர் மேலும் தொடர்ந்தார். “இதாண்டா கலியுகத்தோட கோலம். கடவுளே முன்னாடி வந்து நின்னு ‘நாந்தாண்டா நீ கும்புடற சாமி’ன்னு சொன்னாக்கூட மனுஷன் நம்ப மாட்டான். ‘எவனாச்சும் காசு புடுங்கறதுக்காக வேஷம் போட்டுகிட்டு வந்து நிக்கறானோ’ன்னுதான் சந்தேகப்படுவான். அதுனாலத்தாண்டா இந்தக் காலத்துல யாரு கண்ணுக்கும் சாமி தெரியறதில்ல.”

“இந்தக் கல்லப் பாத்தியாடா. ஒரிஜினல் அபராஜிதத் தங்கம். அதாவது 24 காரட்டுங்கறாங்களே, அதையெல்லாம்விட சுத்தமான தங்கம். ஒரு யுகத்துல திருஅண்ணாமலையாரு முழுசுமே இப்டீத்தான் காட்சி கொடுத்தாரு. அந்த காலத்து ஜனங்களும் தங்க மலையத்தான் தெய்வமா நெனச்சு கிரிவலம் வந்து கும்புட்டாங்க.”
“இன்னைக்கெல்லாம் அதுமாதிரி தங்க மலையா இருந்தாருன்னா, இந்த காலத்துப் பசங்க ‘சாமியாச்சே’ன்னு சும்மா வுட்டு வைப்பானுங்களா? அதான் கோயில் சிலைங்க, நெலம், உண்டியல் காசு... எதையுமே சிவன் சொத்துன்னு பாக்காம வேட்டு வுடறானுங்களே. அதுனாலத்தான் அண்ணாமலையாரு கல்லு மலையாவே காட்சி தர்றாரு.”

“சரி சரி. வா. மீதி கிரிவலத்த முடிக்கலாம்.” எனப் பெரியவர் கிளம்பினார். சிறுவன் கையில் தங்கக் கல்லை வைத்துக் கொண்டு முழித்தான். “வாத்யாரே. என்னோட டிராயரு பாக்கெட்டுதான் ஓட்டையாச்சே. நீ வாங்கி பத்திரமா வச்சுக்கயேன்.”
“எதுக்குடா?” என அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டார் பெரியவர். “என்னா வாத்யாரே எதுக்குன்னு கேக்கற? நாமதான் அடிக்கடி அன்னதானம் பண்றமில்ல. காசுக்காக அங்கயும் இங்கயும் அலையாம, அப்பப்ப இதக் கொஞ்சம்கொஞ்சமா வித்து அன்னதானம் பண்லாமே.”

“போடா முட்டாள். சாட்சாத் சிவபெருமானே திருஅண்ணாமலையாக் காட்சி தர்றாருன்னு இப்பதான சொன்னேன். அதுக்கு என்னா அர்த்தம்? இங்க கெடக்கற கல்லு, மண்ணு எல்லாமே சிவன் சொத்துடா. அதுலேந்து எதையுமே எடுத்துட்டுப் போற உரிமை யாருக்குமே கெடையாது. நல்லா ஞாபகம் வச்சுக்க.”
“அப்ப இத என்னதான் செய்றது?” சிறுவன் குழம்பி விட்டான். “பேசாமத் தூக்கி எறிஞ்சுட்டு வா. போயிகிட்டே இருக்கலாம்.” எனச் சொல்லி விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமல் பெரியவர் நடக்க ஆரம்பித்து விட்டார்.
கையில் பளபளவென மின்னும் அந்தத் தங்கக் கல்லைத் தூக்கி எறிய சிறுவனுக்கு மனமே வரவில்லை. ‘என்னா வாத்யாரு புரியாமப் பேசறாரு? இந்தத் தங்கக் கல்லு நம்ம கைல இருந்தா அவசர ஆத்திரத்துக்கு உபயோகப்படுமில்ல.’

இருந்தாலும் சிறுவனுக்குப் பெரியவரின் வார்த்தைகளை மீறுவதற்கு பயமாக இருந்தது. காரணம், அவர் கொடுக்கும் தண்டனைகள்! சற்று நேரம் யோசித்தபடி நின்ற சிறுவன் ‘சொன்னதச் செய்யாட்டீ, பெண்டக் கழட்டிருவாரே’ என நினைத்துக் கொண்டே அரைகுறை மனதோடு அந்தக் கல்லைத் தூக்கி எறிந்தான்.
அதுவும் எப்படி? ஏற்கனவே எறிந்ததுபோல இல்லை! சுற்றுமுற்றும் பார்த்தபடி, பக்கத்திலேயே இருந்த ஒரு மரமாகப் பார்த்து, மெதுவாக அதன் வேர்ப்பகுதியில் இருந்த அடர்ந்த புதருக்குள் எறிந்தான். ஒரு முறை சுற்றி வந்து அந்த மரத்தை நன்றாக அடையாளம் பார்த்து வைத்துக் கொண்டான். எதற்கு?

‘பின்னாடி தேவைப்பட்டுச்சுன்னா? யாரு இந்த அத்துவானக் காட்டுக்குள்ளாற வந்து கண்டுபுடிக்கப் போறாங்க? வாத்யாரு அன்னதானம் பண்றப்ப, இங்க வந்து எடுத்துக்கலாமில்ல.’
அதற்குள் பெரியவர் வெகுதூரம் நடந்து போய் விட்டார். சிறுவன் வேகவேகமாக ஒடிப் போய் அவரைப் பிடித்தான். எதுவுமே நடக்காததுபோல அவருடன் சேர்ந்து மௌனமாக நடக்க ஆரம்பித்தான். பெரியவரும் அவனுடன் ஒரு வார்த்தைகூட பேசவே இல்லை. ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலேயே நடந்தார்.

கிட்டத்தட்ட இரண்டு மைல் போனதும், சிறுவனைப் பார்த்துச் சொன்னார். “நீ சொன்னத நல்லா யோசிச்சுப் பாத்தேண்டா. நம்ம கைல அந்தத் தங்கக் கல்லு இருந்தா, இன்னம் நெறையா அன்னதானம் பண்லாமே.”
சிறுவன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டான். “ஆமா வாத்யாரே. அதுக்குத்தான் அப்பவே சொன்னேன். கேட்டியா? நான் சொல்றத, என்னைக்கு நீ காதுல போட்டுகிட்ட?”

தங்கக் கல்லைப் புதர்
மறைவில் தேடும் சிறுவன்

“கரெக்டுடா. என்னா பண்றது? அப்பப்ப ஒன்னோட மூளையும் நல்லாத்தான் வேலை செய்யுது.” பெரியவர் சிரித்தார். “சரி. சடார்னு ஓடிப்போயி அந்தக் கல்லத் திரும்பவும் எடுத்தாந்துடு.”
சிறுவனுக்கு இந்த தடவை எந்தப் பிரச்னையும் இல்லை. வேகவேகமாக ஓடினான். இடையில் எங்குமே நிற்காமல் ஓடிப்போய், தான் அடையாளம் வைத்திருந்த மரத்துக்கு அருகே போய் நின்றான். யாரும் கவனிக்கிறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணுக்கு எட்டிய வரையில் ஜன நடமாட்டமே தென்படவில்லை. மாலை நேரம் முடிந்து லேசாக இருட்டவும் ஆரம்பித்து விட்டது.

குனிந்து மெதுவாக அந்தப் புதருக்குள் கையை விட்டுப் பார்த்தான். கையில் கல் தென்பட்டதும், ‘அப்பாடா’ என நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி சடாரென அதை எடுத்துத் தன் டிராயர் பாக்கட்டுக்குள் வைத்து மறைத்துக் கொண்டான்.

எதுவுமே நடக்காததுபோல மெல்ல எழுந்து நடந்த சிறுவன் சற்று தூரம் வந்ததும் ஓட ஆரம்பித்தான். பெரியவர் பக்கத்தில் வந்ததும்தான் தன் வேகத்தைக் குறைத்தான். “என்னடா கண்ணு. கல்லு பத்ரமா இருந்திச்சா? யாரும் கௌப்பிட்டுப் போயிடலயே?”
சிறுவனுக்குப் பெருமை தாளவில்லை. “அதெல்லாம் அவ்ளோ ஈஸியா யாரும் கண்டுபுடிச்சு எடுக்க முடியாது. வாத்யாரே. செடிகொடிங்க நெறையா இருக்கற எடமாப் பாத்துதான கல்லத் தூக்கிப் போட்டேன்.”
“அது சரி. நீ மட்டும் எப்டீ ஒடனே எடுத்தாந்த?”

சிறுவன் இன்னமும் குஷியாகி விட்டான். “கரெக்டா எங்க போட்டமின்னு பாத்து வச்சுகிட்டனுல்ல. ஒரு மரத்த அடையாளம் வச்சுத்தான் தூக்கியே போட்டேன். பின்னாடி என்னைக்காச்சும் நிச்சயம் தேவைப்படும்னு எனக்குத் தெரியாதா?”
“படே கில்லாடிடா நீ. சரி சரி. வெளில எடுத்துராத. யாரு கண்ணுலயும் படாம பத்ரமா வச்சுக்க!” எனச் சொல்லிவிட்டுப் பெரியவர் கிரிவலத்தைத் தொடர, சிறுவனும் தன் டிராயர் பாக்கட்டை இறுக்கப் பிடித்தவாறே அவர் பின்னால் நடந்தான்.

நடந்து நடந்து இருவரும் ஒரு மண்டபம் அருகே வந்ததும் பெரியவர் சற்றே நின்றார். “ராஜா. அந்தத் தங்கக் கல்ல எடு. வித்தா எவ்ளோ தேறும்னு ஒரு கணக்கு பாக்கலாம்.” என்றபடி எதிரே இருந்த ஒரு மேட்டில் அமர்ந்தார்.
இதற்குத்தானே சிறுவன் இவ்வளவு நேரம் காத்திருந்தான்? ஏதோ பெரிய ரகசியத்தை வெளியிடுபவன்போல டிராயர் பாக்கட்டுக்குள் கையை விட்டு, மெதுவாக எடுத்தான். கைவிரல்களை இறுக்க மூடியவாறே பெரியவர் முன்னால் நீட்டி, பின்னர் மெல்ல விரல்களை விரித்துக் காட்டினான்.

“அட, ஒரு அரை கிலோ தேறும் போல இருக்கே.” என்றபடி குனிந்து பார்த்த பெரியவர் சிரித்தார். “என்னடா. எதையோ கருங்கல்லத் தூக்கிகிட்டு வந்து நிக்கற?”
சிறுவனுக்கு ஒரே அதிர்ச்சி! “என்ன வாத்யாரே சொல்ற?” கையில் இருந்த கல்லைக் குனிந்து பார்த்தான். அது பார்ப்பதற்கு சாதாரணக் கல்லைப் போலத்தான் இருந்தது.

‘நாமதான் அவசரத்துல வேற ஏதாச்சும் கல்ல எடுத்துட்டு வந்துட்டமோ?’ சிறுவன் குழப்பத்தோடு அந்தக் கல்லை நன்றாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். கொஞ்சம்கூட பளபளப்பையே காணவில்லை.
“வாத்யாரே. எதுக்கும் நானு ஒரு தடவ போயி நல்லாப் பாத்து எடுத்துட்டு வந்துர்றேன்.” எனச் சிறுவன் கிளம்பினான். புறப்பட்ட சிறுவனைப் பெரியவரின் பலத்த சிரிப்பு தடுத்து நிறுத்தியது.
ஆம்! கோவணாண்டிப் பெரியவர் சிறுவனைப் பார்த்துக் கையை நீட்டியபடி, வயிறு குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தார். “ஏண்டா. கைக்குக் கெடச்ச தங்கக் கல்ல எங்கயோ கோட்டை விட்டுட்டு வந்து நிக்கிறியே? உன்ன மாதிரி மடையனப் பாத்ததே இல்லடா.”

பொதுவாக சிவன் கோயில்களில் கோஷ்ட மூர்த்தியாய் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி இருந்தால் அது பிரம்மா விஷ்ணு சிவபெருமானின் அடிமுடி தேடிய புராண வைபவத்திற்கு முந்தையது என்றும், கோஷ்ட மூர்த்தியாய் லிங்கோத்பவர் எழுந்தருளி இருந்தால் அக்கோயில் திருஅண்ணாமலை வைபவத்திற்குப் பின்னால் தோன்றியது என்றும் கொள்ளலாம். இவ்வகையில் திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானவர் சன்னதியில் கோஷ்ட மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் பிஷாடன மூர்த்தி லிங்கோத்பவருக்கே மூத்தவர் என்றால் இந்த மூர்த்தியின் தொன்மையை என்னவென்று புகழ முடியும்? அபூர்வமான இந்த பிக்ஷாடன மூர்த்தியை வணங்கி அக்ரூட் பருப்பு கலந்த பால் பாயசம் தானம் அளித்து வந்தால் கபால சம்பந்தமான நோய்கள் அகல வழி பிறக்கும்.

சிறுவன் குழப்பத்தோடு பதில் சொன்னான். “ என்னா நடந்துச்சுன்னே புரியல வாத்யாரே. கரெக்டா வச்ச எடத்துலேந்துதான் எடுத்தாந்தேன். எப்டீ மாறிப் போச்சுன்னே தெரியல.”
“அது வேற ஒண்ணுமில்லடா. உன்னோட நம்பிக்கை மாறிப் போச்சுல்ல. அதுனால கல்லும் மாறிப் போச்சு.” பெரியவரின் சிரிப்பு இன்னும் அதிகரித்தது.
“நம்பிக்கையா? அதுக்கும் கல்லுக்கும் என்னா சம்பந்தம்?”

“ஆமா ராஜா. ‘இது தங்க மலைடா’ன்னு சொன்னப்ப நீ நம்பாம ‘வெறும் கல்லுதான’ன்னு நெனச்ச. அண்ணாமலையாரு தன்னைத் தங்கமாக் காட்டுனாரு. நீ ‘தங்கம்’னு நெனச்சு எடுத்தாந்தப்ப அதையே சாதாரணக் கல்லாக் காட்டுறாரு. அவ்ளோதான்... இத வச்சே உன்னோட குரு நம்பிக்கை என்னான்னு புரிஞ்சுக்க.
“வாத்யாரே...” எனச் சிறுவன் இழுத்தான். அவனைப் பேச விடாமல் பெரியவர் மேலும் தொடர்ந்தார். “என்னைக்கு வாழ்க்கைல ஒருத்தர வழிகாட்டின்னு ஏத்துக்கிட்டியோ, அதுக்கப்பறம்- அவரு சொல்றத முழுசா நம்பணும். செய்யணும். அதுதாண்டா தெய்வீகத்துல கடைத்தேற ஒரே வழி. அத வுட்டுட்டு இது மாதிரி அரைகுறையா அலைஞ்சா... என்னாத்த செய்றது?”

“நல்லவழி காட்ட ஒருத்தரு ரத்தமும், சதையுமா உடம்பெடுத்து கூடவே இருக்கறப்பவே இப்டீ இருந்தீன்னா... உனக்கெல்லாம் எப்டீடா கடவுள் காட்சி தருவாரு?”
சிறுவனுக்கு ஆவல் பிறந்து விட்டது. “வாத்யாரே. கடவுளப் பாக்கறதுன்னா என்னா? அது எப்டீ இருக்கும்?”
“கடவுள் காட்சிங்கறது யாராலயுமே வார்த்தையால சொல்ல முடியாத ஒரு அனுபவம்டா. அனுபவிச்சவங்களாலத்தான் அத முழுசா உணர முடியும். எவ்ளோதான் சொன்னாலும் புரியாதுடா.”
“கொஞ்சம் புரியற மாதிரித்தான் சொல்லேன்.” சிறுவன் கெஞ்சினான்.

“கோடிக்கணக்கான ஜீவனுங்கள்ல சாமியப் பாக்கறதுக்காக வாசல் வரைக்கும் போற தகுதி பத்து பேருக்குத்தான் கெடைக்குது. அந்தப் பத்து பேர்லயும் வாசலத் தாண்டி உள்ள போறவனுங்க அஞ்சே அஞ்சு பேருதான். அந்த அஞ்சு பேர்லயும் அதுக்கப்பறம் உள்ள போறவனுங்க ரெண்டு பேருதான். அந்த ரெண்டுலயும் ஒருத்தருதான் கருவறைக்குள்ளாற போறாரு.”
“மத்தவங்க ஏன் உள்ளாற போவல. வாத்யாரே?”
“அவங்களுக்கு அதுவரைக்கும் போகத்தாண்டா தகுதியே. போதாதா? அந்த நெலம வர்றதுக்கே என்னா பாடுபடணும்?”

“சரி வாத்யாரே. கடைசியா ஒருத்தரு உள்ளாற போனாரே. அவரு என்னா ஆனாரு? அவராச்சும் கடவுளப் பாத்தாரா?” சிறுவன் கேள்விக்கு மேல் கேள்விகளாக அடுக்கினான்.
“யாருக்குடா தெரியும்? உள்ளாறப் போன ஆளுதான் வெளியவே வரலயே. ஆண்டவனுக்குத்தான் தெரியும். அதுனாலத்தான் “சாமி அறிவாரடி. அதை சாமி அறிவாரடி”ன்னு பாடி வச்சாங்க பெரியவங்க.”
“ஒண்ணுமே புரியலயே. வாத்யாரே. எனக்குப் புரியற மாதிரி ஏதாச்சும் சொல்லேன்.” சிறுவன் கெஞ்சினான்.
“சரிடா. கேட்டுக்க. நாம சுத்தி வர்றமே. இந்த அண்ணாமலையாரு அடிமுடி காண முடியாத ஜோதிப் பிழம்பா ... அப்றம் தங்க மலையா, மரகத மலையா எல்லாம் காட்சி தந்தவரு. என்னைக்கு அதெல்லாம் தானாவே ஒனக்குத் தெரியுதோ, அன்னைக்குக் கடவுளப் பாக்கற தகுதி வந்துடுச்சுன்னு புரிஞ்சுக்க. ஏன், கடவுளப் பாத்ததாவே வச்சுக்கலாம்.”

“வாத்யாரே, எப்ப எனக்கு அந்த நெலம வரும்?”
“அதுவா? என்னைக்குக் கல்லு, மண்ணு, தங்கம், வைரம், நல்லது, கெட்டது எல்லாத்தையும் ஒண்ணாப் பாக்கற மன நிலை வருதோ, அன்னைக்குத் தானாவே வரும்.” என்ற பெரியவர் சற்று நிறுத்தி, சிறுவனை உற்றுப் பார்த்தார்.

“ஏண்டா, இம்மா துண்டு தங்கத்தப் பாத்ததுமே, மனசு எப்டீ எப்டீயெல்லாமோ மாறுதே. நாமல்லாம் என்னைக்குடா கடவுளப் பாக்கப் போறோம்?” பெரியவரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறினான் சிறுவன்.

“சரி சரி. கைல இருக்கறத தூக்கிப் போட்டுட்டு வா. ஆரம்பிச்ச கிரிவலத்தையாச்சும் ஒழுங்கா முடிக்கலாம்.” என முன்னால் நடந்த பெரியவர் பின்னால் பேசாமல் நடந்தான் சிறுவன்.

தொடரும் ஆனந்தம்...

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam