அன்பு செய், பலனை எதிர் பாராதே !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

கைக்குள் அடங்கும் கடின சித்தம்

விஸ்வ சிலா பாறைகள் வைரத்தை மிஞ்சும் கடினத் தன்மை உடையன என்று சொல்லும்போது அதனால் மனிதர்களுக்கு என்ன பயன் என்று எண்ணத் தோன்றுகிறது அல்லவா ?
ஊக்கமும் உறுதியும் உள்ள மனிதனே எதையும் சாதிக்க முடியும். மனதில் உறுதிப்பாடு இல்லாமல் நமது குருநாதர் பாணியில், ”மெதுபக்கடாவாக” இருக்கும் மனிதனால் எந்த நல்ல காரியத்தையும் ஆன்மீகச் சாதனைகளையும் நிறைவேற்ற முடியாது. எந்த நற்காரியமாக இருந்தாலும், ஆன்மீகப் பணியாக இருந்தாலும் அதில தடைகள் ஏற்படுவது இயற்கையே. எனவே தடைகளை மீறி, எதிர்ப்புகளை சமாளித்து எடுத்த நற்காரியத்தை வெற்றியுடன் நிறைவேற்றுவதற்கான மன உறுதியைத் தருபவையே விஸ்வ சிலா பாறைகள்.
இதற்கு சான்றாக அமைவதே பீஷ்ம பிதாமகரின் வாழ்க்கை. அஞ்சா நெஞ்சமும், மலை போன்ற மன உறுதி, இறைவன் மீது தளராத நம்பிக்கை, வழுவாத பிரம்மசர்ய விரதத்தையும் சாதித்தவரே பீஷ்மர்.
பீஷ்மர் மூன்றாண்டு காலம் துருவ சக்தி பர்வதம் என முற்காலத்தில் விளங்கிய ராச்சாண்டார் திருமலையில் ஒற்றைக் காலில் நின்று தவம் இயற்றியதன் பலனாகவே எவரும் வியக்கும் நைஷ்டிக பிரம்மசாரியாக விளங்கினார். தேவவிரதன் என்ற பெயருக்கேற்ப புகழையும் பெற்றார்.
அது மட்டுமல்லாமல் கிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வரூப தரிசனத்தையும் பெற்றார். இவை அனைத்தையும் அவர் சாதித்தது விஸ்வ சிலா பாறைகளின் அனுகிரகத்தால்தான். அக்காரணம் பற்றியே விஷ்ணு சகஸ்ரநாமத்தை “விஸ்வம்” என்று தொடங்கி பெருமாளை துதி பாடினார்.
அதே போல பீஷ்மர் மட்டுமல்லாது யசோதை, அர்ச்சுனன், அக்ரூரர் என கிருஷ்ண பகவானின் விஸ்வரூப தரிசனத்தைப் பெற்ற அனைவருமே ஒரு பிறவியில் இந்த துருவ சகதி பர்வதத்தில் தவம் இயற்றியவர்களே.
முருகப் பெருமானின் விஸ்வரூப தரிசனம் பெற்ற சூரபத்மனும் சிவனை நோக்கி சாகா வரம் பெறுவதற்கு தவம் இயற்றும் முன் இந்த துருவ சக்தி பர்வதத்தில் ஒரு யுக காலத்திற்கு தோடக முகூர்த்த தவம் இயற்றி பன்னெடுங் காலம் உணவு கூட இல்லாமல், நீர் அருந்தாமல், தூக்கத்தையும் மறந்து தவம் இயற்றும் மன உறுதியைப் பெற்றான்.

தோடக முகூர்த்தம்

ஆதி சங்கரரின் முதன்மைச் சீடரான தோடகச்காரியார் தன் குருவின் ஆணையை ஏற்று இத்தலத்தில் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்த விந்தை ஓர் அற்புத ஆன்மீக இரகசியமாகும்.
ஸ்ரீ என்பதற்கு செல்வம் என்று சாதாரண வழக்கில் பொருள் கொண்டாலும் ஸ்ரீ என்ற சொல் ஆயிரமாயிரம் ஆன்மீக உண்மைகளைக் குறிக்கும். ஸ்ரீ என்பதற்கு என்றும் நீங்காமல் நிலையான துணையாக இறுதி வரை நின்று அருள்புரியும் துணைவன் என்ற பொருளும் உண்டு. இங்கு ஸ்ரீவிராச்சிலை ஈசன் என்றால் இறுதி வரை என்றும் நிலையாக நின்று பக்தர்களுக்கு துணையாய் அவர்களைக் காக்கும் தலைவன் என்று பொருள். இதைக் குறிப்பதே கடுசிலையான் என்ற பதம்.
இத்தகைய அற்புத தலத்தில் ஸ்ரீசக்கரத்தை பதிப்பதற்காக தன்னுடைய அருமைச் சீடரை ஆதிசங்கர பகவத்பாதாள் அனுப்புகிறார் என்றால் அந்தச் சீடன் வெறும் செல்வத்தை மட்டும் வழங்கும் ஸ்ரீசக்கரத்தையா பிரதிஷ்டை செய்திருப்பார் ?
ஸ்ரீசக்கரத்தில் எத்தனையோ இரகசியங்கள் உண்டு. ஆதிசங்கரர் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தில் நிர்மாணித்த ஸ்ரீசக்கரம் பவசாகர ஸ்ரீசக்கரம் எனப்படும். மக்கள் மீண்டும் மீண்டும் இப்பூமியில் பிறப்பெடுத்து துன்பப்படாமல் அவர்களை ஆபத் பாந்தவனாய் இறைவன் கை தூக்கி காக்கும் ஸ்ரீசக்கரத்தை இங்கு ஆதிசங்கரர் ஏற்படுத்தி உள்ளார். அற்புத நோய் நிவாரண சக்திகளைக் கொண்டது.

ஸ்ரீவிராச்சிலை ஈசன்
ராச்சாண்டார் திருமலை

சர்க்கரை நோயின் தாக்கத்தால் இறப்பின் எல்லைக்கே சென்று “செத்துப் பிழைத்த” அரசியல் பிரமுகர் ஒருவர் ஸ்ரீபார்த்தசாரதி திருக்கோயில் தெப்பக் குளத்தை தூர்வாரி பலனடைந்தது நீங்கள் அறிந்ததே.
ஆதிசங்கரரின் குருநாதர் ஆதிசேஷனின் அவதாரமான கோவிந்த பகவத் பாதாள். தன்னுடைய குருநாதரை மறவாத செய்நன்றி தொண்டாக ஆதிசேஷன் சிவபெருமானின் திருநாட்டிய தரிசனம் பெற்ற சிதம்பரத்தில் ஆதிசேஷ ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்து உள்ளார். குருவையும் நிந்திக்கும் தகாத செயலைச் செய்தவர்களுக்கு பிராய சித்த வழிமுறைகளை சுட்டிக் காட்டக் கூடியதே இந்த ஸ்ரீசக்கரத்தின் மகத்துவமாகும்.
செய்நன்றி மறந்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து திருந்தி வாழ வழி காட்டும் அற்புத சக்கரம் இதுவே. ஆதிசேஷ அருட் கொடை என்ற இனிய நாமத்துடன் திகழ்வதே சிதம்பர நடராஜ கோயில் ஸ்ரீசக்கரமாகும்.
எத்தனையோ பெண்கள் திருமண வயதைத் தாண்டியும் திருமணமாகாமல் வேதனை கடலில் மூழ்கி உள்ளார்கள். திருமணமான பெண்களும் புகுந்த  வீட்டு உறவு முறைகளாலும், சந்தேகம், நோய் போன்ற தாக்கங்களாலும் பலவிதமான மன, உடல் வேதனைகளை சுமந்து வாழ்கிறார்கள். இவர்கள் வேதனைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் அன்புமயமான திருமண வாழ்க்கையை உருவாக்கவும் ஆதிசங்கர பகவான் திருவிடை மருதூர் திருத்தலத்தில் மேரு ஸ்ரீசக்கரத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். இது ஜீவ ஐக்ய மங்கள ஸ்ரீசக்கரம் என்று வழங்கப்படும்.
நவீன காலப் பெண்கள் முடிந்த மட்டும் திருமண வாழ்வை தள்ளிப் போடவும் முடிந்தால் அதை முற்றிலுமாக தவிர்க்கவும் எண்ணுகிறார்கள். அவ்வாறு திருமணம் நிறைவேறினாலும் குழந்தை பிறப்பை அவர்கள் விரும்புவதில்லை. அதையும் மீறி குழந்தைகள் தோன்றி விட்டாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்ட தயங்குகிறார்கள். இவ்வாறு கலியில் தோன்றிய சீர்கேடான நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்றும் சேவையாக தாயுமான சுகசித்தர் மணப்பாறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயத்தில் தன ஸ்ரீசக்கரத்தை நிர்மாணித்துள்ளார்.
மணப்பாறையிலிருந்து உலக உருண்டையின் மறு பக்கத்திற்கு சென்றால் நீங்கள் அடையக் கூடியது அமெரிக்காவில் உள்ள ஓரிகான் ஏரிப் பகுதி. இங்கும் ஓர் அற்புத ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்டுள்ளது. வராஹ பிருத்வி ஸ்ரீசக்கரம் என்றழைக்கப்படும் இந்தச் சக்கரம் எத்தனையோ வாஸ்து தோஷங்களை நிவர்த்தி செய்யும் வாஸ்து சக்திகளுடன் பொலிகின்றது.

அதே போல ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் இரவு பகல் என்றில்லாமல் எந்நேரமும் நீராடக் கூடிய கடற் கரைப் பகுதியில் மேதாவி மகரிஷி மேரு ஜ்வாலா என்ற அற்புத ஸ்ரீசக்கரத்தை நிர்மாணித்துள்ளார். கோடிக் கணக்கான மக்கள் இது வரை ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராடி இருந்தாலும் இன்றும் இங்கு நீராடும் மக்கள் உடல் மன உற்சாகத்தையும் ஆன்மீகப் புத்துணர்ச்சியையும் பெறுவதற்குக் காரணம் இந்த மேரு ஜ்வாலா சக்கரத்தின் ஆன்மீக அருட் சுடர்களே.  

இவ்வாறு எத்தனையோ திருத்தலங்களில் அற்புதமாக ஸ்ரீசக்கரங்களை பிரதிஷ்டை செய்த ஆதிசங்கரர் தன்து உத்தம சீடரை அனுப்பி ராச்சாண்டார் மலையில் ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்தார் என்றால் அதன் பின்னால் உள்ள ஆன்மீக இரகசியம் மிகவும் சுவையாகத்தானே இருக்கும் ?
தோடகச்சாரியார் இத்தலத்தில் நிதம்ப நிஷ்கண்ட ஸ்ரீசக்கரத்தை சூட்சுமமாகப் பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த சூட்சும சக்கரத்தை தரிசனம் செய்யும் ஆன்மீக சக்தியைப் பெற்றவர்கள் வெகு சிலரே. அதில் ஒருவரே சேஷாத்ரி சுவாமிகள் ஆவார். இன்றைய உலகில் இதன் சக்தியைக் காணும் பெருமையை உடைய நாம் அறிந்த ஒரே ஞானி அமிர்தானந்தா மயி அன்னை ஆவார்.
இந்த அற்புத ஸ்ரீசக்கரத்தை தோடகச்சாரியர் பிரதிஷ்டை செய்வதற்காக இரண்டு வருட காலம் இத்தல விஸ்வ சிலா பாறைகளின் மீது தோடக முகூர்த்த காலத்தில் ஒரே காலில் நின்று தவமியற்றினார்.
அபிஜித் முகூர்த்தம் என்பது நீங்கள் அறிந்த்தே. நண்பகல் நேரமே அபிஜித் முகூர்த்தம் எனப்படும். சந்திர பலம், பிரம்ம முகூர்த்தம், கோதூளி முகூர்த்தம் போன்று எவ்வித கால தோஷங்களும் அற்ற புனிதமான நேரமே அபிஜித் நேரமாகும்.

அபிஜித் நேரத்தை சரியாகக் கணக்கிடுவது அவசியம். பொதுவாக நண்பகல் என்று கூறினாலும் அதை துல்லியமாகக் கணக்கிட வேண்டும். உதாரணமாக ஒரு நாள் சூரிய உதயம் காலை 7 மணி, அன்றைய சூரிய அஸ்தமனம் மாலை 6 மணி என்று கொண்டால் அன்றைய பகல் பொழுது 11 மணி நேரத்திற்கு நிரவி உள்ளது. பகல் பொழுதை பாதியாக்கினால் ஐந்தரை மணி நேரம் வரும். இந்த 5 மணி 30 நிமிடத்தை சூரிய உதய காலமான 7 மணியுடன் கூட்டினால் அது 12 மணி 30 நிமிடம் என வரும. எனவே அந்த நாளில் அபிஜித் நேரம், அபிஜித் முகூர்த்தம் என்பது 12 மணி 30 நிமிடம் ஆகும்.
இந்த அபிஜித் நேரத்திற்கு முன்னுள்ள ஒரு மணி 30 நிமிடங்களும் அபிஜித் நேரத்திற்குப் பின் வரும் ஒரு மணி 30 நிமிடங்களுமான ஆக மொத்தம் மூன்று மணி நேரமே தோடக முகூர்த்தமாகும். மிகவும் புனிதமான முகூர்த்த நேரம்.
இந்த தோடக முகூர்த்த நேரத்தில் வளர் பிறை நாட்களில் வலது காலில் நின்றும் தேய் பிறை நாட்களில் இடது காலில் நின்றும் இரண்டு வருடங்கள் இயற்றி அந்த தவப் பலனாய் நிதம்ப நிஷ்கண்ட ஸ்ரீசக்கரத்தை நிர்மாணித்தார் தோடகச்சாரியார்.
எதற்காக ?

தட்சிண காமாக்யா எங்கே ?

மிகவும் சக்தி வாய்ந்த சக்தி பீடமான அஸ்ஸாமிலுள்ள காமாக்யா என்னும் திருத்தலம் தென்னிந்திய மக்களின் வழிபாட்டிலிருந்து எதிர்காலத்தில் மறைந்து விடும் என்றுணர்ந்த ஆதி சங்கரர் மக்களின் மேலுள்ள பேரன்பால் தனது உத்தம சீடரை அனுப்பி தென்னிந்திய காமாக்யாவாகாத் திகழும் ராச்சாண்டார் மலைத் திருத்தலத்தில் காமாக்யா சக்தி பீடத்திற்கு இணையான ஸ்ரீபுர சக்திகளை நிதம்ப நிஷ்கண்ட ஸ்ரீசக்கரத்தின் மூலம் இத்திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்தார்.
பல யுகங்களாக துருவ சக்தி பர்வதமாகத் திகழும் அற்புத சக்தி தலம் காமாக்யா ஸ்ரீபுர சக்திகளுடன் திகழ்வதில் வியப்பொன்றும் இல்லையே ? துருவ சக்தி நாயகி என்று இத்தனை யுகங்களாக வழிபட்ட சக்தி தேவியே கலியுகத்தில் பெரிய நாயகி அம்மன் என்ற திருநாமத்துடன் துலங்குகின்றாள்.
இனியாவது இவ்வன்னையின் அருமை பெருமைகளை உணர்ந்து தேவியை வழிபட்டு அனைத்து நலன்களையும் பெற்று வாழுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பூவாய் மதுரம்

ஒவ்வொரு தெய்வமும் தன்னுடைய சக்திகளை ஒவ்வொரு சிறப்பான முறையில் பக்தர்களுக்கு அனுகிரக சக்திகளாக அளிக்கும் அல்லவா ?
உதாரணமாக, திருஅண்ணாமலையார் தன்னுடைய அனுகிரக சக்திகளை மலைகிரிவலம் வரும் அடியார்களுக்கு முகடு தரிசனப் பலன்களாக அளிக்கிறார். சபரி மலை ஐயப்ப சுவாமியோ இருமுடி கட்டி 48 நாட்கள் விரதம் இயற்றி பெரிய பாதை வழியாக நடந்து வந்து வழிபடும் அடியவர்களுக்கு 18 படி ஸ்பர்ச பலன்களாகவும் மகர ஜோதி தரிசன பலன்களாகவும் அருள்கிறார். ராமேஸ்வர ராமஸ்வாமியோ திருத்தல தீர்த்தங்கள் மூலம் தன்னுடைய அனுகிரக சக்திகளை பக்தர்களுக்கு அளிக்கிறார்.
இம்முறையில் ராச்சாண்டார் திருமலையில் எழுந்தருளியுள்ள அம்பாள் “பூவாய் மதுரம்” என்ற தெய்வீக சுனையின் மூலம் தன்னுடைய எல்லையில்லா அனுகிரக சக்திகளை வாரி வழங்குகிறாள். அம்மன் சன்னதிக்கு வலப்புறம் உள்ள தீர்த்தமே பூவாய் மதுரம் என்னும் அற்புத தீர்த்தமாகும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரும் எத்தகைய இரகசிய நோய்களையும் தீர்க்கும் மூலிகைத் தீர்த்தம் இதுவாகும். பக்தர்களின் தாம்பத்ய வாழ்வில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு நல்க வல்லதே இங்கு அன்னை தரும் அருமருந்தாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள், நோய்கள் போன்ற அனைத்திற்கும் நிவாரணம் அளிக்க்க் கூடிய அற்புத தேவ தீர்த்தமே பூவாய் மதுரமாகும்.

ஸ்ரீபெரிய நாயகி அம்மன்
ராச்சாண்டார் திருமலை

ஒவ்வொரு மூல நட்சத்திர தினத்தன்றும் பொற்றாளம் பூவாய் சித்தர் கொல்லி மலையில் ஆகாச கங்கை நிரம்பி வழியும் அமிர்த புட்குழியில் வளரும் மேகலை பத்ம்ம் என்ற அற்புத மூலிகை சக்திகளை பூவாய் மதுர சுனையில் நிரவிச் செல்கிறார். கொல்லி மலையைத் தவிர வேறெங்கும் காண இயலாத இந்த மேகலை பத்ம மூலிகையின் மகத்துவத்தை வார்த்தைகளால் வடிக்க இயலாது. இந்த மூலிகையைப் பார்த்தாலோ, இந்த மூலிகையின் அருகில் 12 அடிக்குள் நின்று இந்த மூலிகையின் நறுமணத்தை முகர்ந்தாலோ ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரக் கூடிய அனைத்து இரகசிய நோய்களும் தீரும் என்றால் இதன் நோய் தீர்க்கும் மகத்துவத்தை என்னவென்று உரைப்பது ?
ஆண்களும் பெண்களும் மூல நட்சத்திர தினத்தன்று இத்தலத்தை கிரிவலம் வந்து வழிபடுவதால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். உண்மையில் பூவாய் மதுர தீர்த்தத்தை கண்களால் காணாதிருப்பதே பக்தர்களுக்கு நன்மை அளிக்கக் கூடியது. அதன் மகிமையை கிரிவலம் வந்து தேவியை வழிபட்டோ அல்லது அன்னைக்கு ஸ்வர்ண மேகலை புஷ்பங்களை அளிப்பதன் மூலம் பெறுவதே உத்தமம் என்று சித்தர்கள் அன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள். இதன் ஆன்மீக நுணுக்கம் பற்றி அறிய வேண்டுமானால் இந்தத் தீர்த்தத்திற்கு சித்தர்கள் அளித்துள்ள பூவாய் மதுரம் என்ற திருநாமத்தைக் குறித்து தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வாருங்கள்.
இவ்வாறு பக்தர்கள் பூவாய் மதுர தீர்த்தத்தைக கண்களால் காணாமல் அம்பாளின் தரிசனப் பலனாய் இறை அனுகிரகத்தைப் பெறவே தோடகச்சாரியார் நிதம்ப நிஷ்கண்ட ஸ்ரீசக்கரத்தை பூவாய் மதுர தீர்த்தத்தில் பிரதிஷ்டை செய்துள்ளார். ஆம், இந்த அற்புத ஸ்ரீபுர யோகினி சக்கரமான நிதம்ப நிஷ்கண்ட ஸ்ரீசக்கரம் திகழும் சுனைதான் பூவாய் மதுரம்.
பூவாய் மதுர தீர்த்தத்தின் மூலிகை தெய்வீக சக்திகளை அம்பாள் தரிசனம் மூலம் நாம் பெற வகை செய்வதே அம்பாளுக்கு அளிக்கும் மேகலை புஷ்பங்களாகும். தங்கத்தால் செய்த ஒட்டியானத்தில் நடுவில் ஒன்பது வைரக் கற்களை பதித்து அதன் நடுவில் நீல ரத்தினத்தைப் பதித்து அம்பாளுக்கு அணிவித்தால் அதுவே மேகலை புஷ்பம் எனப்படும். இதுவே பூவாய் மதுர தீர்த்தத்தின் மூலிகை சக்திகளை, தேவ அனுகிரகத்தை, நோய் நிவாரண சக்திகளை, ஸ்ரீபுர யோகினி ஸ்பரிசத்தை, ஸ்ரீசக்கர விநியோகச் சுடர்களை மனிதர்கள் பெறும் சரியான முறை என சித்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
வசதியுள்ள பக்தர்களும், தனவந்தர்களும் உலகப் பொது சேவையாக மனித சமுதாய நலனுக்காக இந்த மேகலை புஷ்பத்தை அணிவிக்கலாம். ஆனால், சாதாரண பொருளாதர வசதியுள்ள மக்கள் என் செய்வது ? அதற்கும் வழிகாட்டாமல் இருப்பாளா எம் அன்னை ?

பக்கத்திற்கு ஆறு வெண் தாமரை புஷ்பங்களை வைத்து இந்த 12 வெண் தாமரைகளுக்கு நடுவில் நீலோத்பல மலரை வைத்து மலர் ஒட்டியானம் செய்து அம்பாளுக்கு சார்த்தினால் அதையும் அன்னை தங்க ஒட்டியானமாக, ஸ்வர்ண மேகலையாக ஏற்றுக் கொண்டு பக்தர்களுக்கு அருள் வழங்க முன் வருகிறாள். அன்னையின் பெருங் கருணைக்கு ஈடேது ?
எனவே மூல நட்சத்திர நாட்களில் மேற்கூறிய முறையில் அம்பாளுக்கு மேகலை புஷ்பங்களைச் சார்த்தி திருத்தலத்தை கிரிவலம் வந்து இறை மூர்த்திகளின் தரிசனம் பெற்றால் அனைத்து நலன்களையும் பெறலாம்.
ராச்சாண்டார் திருமலையில் உள்ள விஸ்வ சிலை பாறைகளில் ஒற்றை காலில் மட்டும் நின்று அந்த யோக நிலையில் இறைவனை குறிப்பாக தோடக முகூர்த்தத்தில் வழிபடுவதை தோடக முகூர்த்த வழிபாடு என்று அழைக்கிறோம். அவ்வழிபாடுகள் குறித்த சில முக்கிய விளக்கங்களை அளிக்கிறோம்.

 1. துர்கா சரண ஆசன முறைப்படி அதாவது ஒரு காலை மடித்து ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றிய நிலையில் இம்மலையில் எந்தப் பாறைப் பகுதியில் வேண்டுமானாலும் நின்று இந்த வழிபாட்டைச் செய்யலாம்.
 2. குறைந்தது ஒரு நாழிகையேனும் (24 நிமிடங்கள்) இவ்வழிபாட்டை கால் மாற்றாமல் ஒரே காலில் நிறைவேற்றுதலே சிறப்பு.
 3. வழிபாட்டின் போது கால்களை மாற்றிக் கொள்ளலாம் என்றாலும் கால அம்சங்களுக்கான பலன்களையும் கருத்தில் கொள்வது நலம். அதாவது வளர்பிறையில் வளர்ந்து பெருக வேண்டிய அம்சங்களான ஆயுள், ஆரோக்யம், செல்வம், புகழ், குரு நம்பிக்கை, கடவுள் பக்தி, நல்லறிவு போன்றவைகளுக்காகவும், தேய்பிறையில் தேய்ந்து குறைய வேண்டிய அம்சங்களான நோய், கடன், வறுமை, தீய வழக்கங்கள் போன்றவைகளுக்காகவும் இவ்வழிபாட்டை முறையாக இயற்றுதல் நலம்.
 4. கடவுள் நம்பிக்கையையும், குரு பக்தியையும் வளர்க்கக் கூடிய அற்புத வழிபாடு இது. பர்வதம் அதாவது மலை போன்ற அசல பக்தியை வளர்க்க துணை நிற்பவையே இங்குள்ள விஸ்வ சிலா பாறைகள்.
 5. எத்தகைய கொடுமையான காமக் குற்றங்களையும் களைய வல்ல அற்புத் தவப் பயிற்சி இது. ஆனால், மனமார தவறுகளுக்காக வருந்தி மீண்டும் அத்தவறுகளை செய்வதில்லை என்ற மன உறுதி பூண்டவர்களுக்கே பிராயசித்த வழிமுறைகள் காட்டப்பெறும்.
 6. உண்ணா நோன்பு, சபரி மலை யாத்திரை, கைலாய யாத்திரை போன்ற கடினமான விரத, நியமங்களைக் கொண்ட இறை வழிபாடுகளை நிறைவேற்றுதற்கான மன உறுதியைப் பெற்றுத் தரும் வழிபாடு இது.

ஹரிச்சந்திர மகாராஜா சத்யோஜாத விரதத்தை இயற்றி சத்தியத்தையே பேசி அழியாப் புகழ் பெற அவருக்கு உறுதுணையாய் நின்றது இத்தல தோடக முகூர்த்த வழிபாடே ஆகும்.

கையை மூடினால் அந்தரங்கம்

மகான்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதற்குப் பின்னால் ஆயிரமாயிரம் காரண காரியங்கள் இருக்கும். இத்திருத்தலத்திற்கு எதற்காக ஆதிசங்கரர் தோடகச்சாரியாரை அனுப்பி வைத்தார் ?
தோடகம் என்றால் தாமரை என்று மேலோட்டமாக பொருள் கொண்டாலும் தோடகம் என்பதற்கு புனிதமான சொற்களை மட்டுமே, புனிதமான ஒலிகளை மட்டுமே ஏற்று புனிதமாக, புனிதத்தால் உருவானவன் என்று பொருள்.
மிக மிக புனிதமான உள்ளத்தை உடையவர்களே சக்தி தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வகையில் புனிதமான காமாக்யா தலத்தில் வழிபாடுகள் இயற்றிய தோடகாச்சாரியார் புனிதமான தட்சிண காமாக்யாவில் புனிதமான சக்தி தத்துவங்களை நிரவினார். காம க்யா அதாவது காமம் என்றால் என்ன என்று காமத்தை முழுமையாகப் புரிந்து கொண்டவர்களே சிவ தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று கூறுவதன் தாத்பர்யம் இதுவே.

தோடகச்சாரியார் என்பது அவருடைய காரணப் பெயரே, அத்வைத பாரம்பரிய நாமமே. கிரி என்பதே அவருடைய இயற் பெயர். அதனால்தான் அவர் காமகிரியான கவுஹத்தியில் நிலவிய அம்மனின் சக்தி தத்துவத்தை கிரகித்து நிதம்ப நிஷ்கண்ட ஸ்ரீசக்கரத்தில் பதிக்க முடிந்தது.
அந்தரங்கமும் அத்வைத தத்துவமும் வேறு வேறு கிடையாது. அந்தரங்கமே அத்வைதம், அத்வைதமே அந்தரங்கம். சிவ சக்தி தத்துவத்தைப் போல நாணயத்தின் இரு பக்கங்களே இவை. ஒன்றின்றி மற்றொன்று கிடையாது. இதைத்தான் பெரியோர்கள், “கையை மூடினால் அந்தரங்கம், கையை விரித்தால் வெட்ட வெளிச்சம் (அத்வைதம்),” என்றும், “பட்டப் பகலில் வெட்ட வெளிச்சம்” என்றும் அத்வைத தத்துவத்தை எளிமைப்படுத்திக் கூறினார்கள்.
அந்தரங்க ஞானம் பெறும்போதுதான் அத்வைத ஞானம் பூரணத்துவத்தை அடையும் என்று மக்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக மண்டனமிச்ரருடன் ஏற்பட்ட வாதத்தில் அவருடைய மனைவி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக மன்னன் ஒருவருடைய உடலில் பரகாய பிரவேசம் செய்து அந்தரங்க ஞானம் பெற்றதாக ஒரு நாடகத்தையும் ஆதிசங்கரர் அரங்கேற்றிய வரலாறு நீங்கள் அறிந்ததே.
முறையான இல்லற தர்மமே அந்தரங்க ஞானத்தையும் அத்வைத ஞானத்தையும் பெறும் ஆன்மீக வழிமுறையாகும் என்று தொன்று தொட்டே வசிஷ்டர் அருந்ததி, அகத்தியர் லோபாமுத்ரா, வள்ளுவர் வாசுகி போன்ற உத்தம தம்பதியர் தங்கள் வாழ்க்கை மூலம் மக்களுக்குப் பாடமாக வழங்கி வந்துள்ளனர்.
அதோடு மட்டுமல்லாது தெய்வீகத்தில் நாம் பெறும் பாடங்களும் அனுபவங்களும் தொடர்ந்து நம்மை மேலும் மேலும் உயர்ந்த நிலைக்கே கொண்டு செல்லும் என்பதற்கு தோடகச்சாரியாரின் வாழ்க்கை ஒரு நிதர்சன உண்மையாகும்.
காமாக்யாவில் சக்தி வழிபாட்டை மேற்கொண்ட உத்தம தம்பதியருக்கு கிரியாக தோன்றிய அவர் ஆதிசங்கரரிடம் அத்வைத பாடங்களைக் கசடறக் கற்று காமாக்யா சக்தி தத்துவங்களை துருவ சக்தி பர்வதத்தில் நிலைநாட்டினார். அவருடைய அடுத்த பிறவியில் மகாராஷ்ட்ராவில் உள்ள சக்தி பீடத்தை வழிபட்டு ரஜ்னீஷ் என்னும் அத்வைதியாக மல்ர்ந்தார் என்பது வெகு சிலரே அறிந்த ஆன்மீக உண்மையாகும். குரு பக்தியில் ஊறித் திளைத்த அத்வைதியே ரஜ்னீஷ் ஆவார்.

இரத்தப் புனிதம்

ஒரு முறை கோவணாண்டிப் பெரியவர் சிறுவன் வெங்கடராமனை காமாக்யா திருத்தலத்திற்கு அழைத்துச் சென்றார். அது வாகன வசதிகள் எதுவும் இல்லாத காலம். எங்கும் அடர்ந்த காடுகள், கொடிய வன விலங்குகளின் நடமாட்டம் அதிகம். அங்கு வசித்த மக்களும் எந்த வித நாகரீகத்தையும் அறியாத பழங்குடியினர்.
நடந்தே சிறுவனை அழைத்துச் சென்று கொண்டிருந்த பெரியவர் ஒரு ஆலமரத்தின் அடியில் சென்று நின்றார். “ராஜா, இங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்டா,” என்றதும் சிறுவனுக்கு அந்தச் சொற்கள் காதில் அமிர்தமாய்ப் பாய்ந்தன.
காரணம் காலையிலிருந்து சுமார் நாலைந்து மணி நேரமாக இருவரும் நடந்து கொண்டிருக்கிறார்கள். நடுவில் சாப்பாடு தண்ணீர் எதுவும் கிடையாது. இந்த நாலைந்து மணி நேரத்தில் ஒரு பெட்டி கடையையோ டீ கடையையோ கூட சிறுவன் காண முடியவில்லை. ஒரு பழ மரத்தையோ காய் மரத்தையோ கூட காண முடியவில்லை. இந்நிலையில் சாப்பாடு தண்ணீர் எங்கிருந்து வரும் ? அதோடு சேர்ந்து கொண்டு பெரியவரும் ஓரிடத்தில் கூட சிறுவனை உட்கார விடாமல் விரட்டிக் கொண்டே வந்தார்.
ஆனால் இதில் சந்தோஷப் படக் கூடிய விஷயம் என்னெவென்றால் எப்போதும் மண்டை பிளக்கும் வெயிலில் நடந்து பழகிய சிறுவனுக்கு வெயில் என்னவென்றே தெரியாமல் குளிர் காற்று உடலில் தவழ நடந்து வந்தது ஒரு புதிய அனுபவமாக இருந்தது.
ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்த நிம்மதியில் வாத்யார் காட்டிய ஆலமரத்தடியில் இருவரும் அமர்ந்தனர். சிறுவனின் நிம்மதி சில நொடிகள் கூட நீடிக்க வில்லை.
அதற்குக் காரணம் …
எதையோ பார்த்தவறாக திடீரென்று எழுந்து நின்றார் பெரியவர். அவரின் சப்த நாடிகளும் அடங்கி விட்டன. சிறுவனுக்கும் அதே நிலைதான் சாவி கொடுத்த பொம்மை போல பெரியவர் எழுந்த வேகத்தைப் பார்த்து சிறுவனும் அதே வேகத்தில் எழுந்து நின்று அவர் அருகில் நின்று கொண்டான்.
அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகே சுமார் பத்தடி தூரத்தில் ஒரு காட்டுவாசி அவர்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். பரட்டைத் தலை அதுவும் சிக்கு பிடித்து பல இடங்களில் சடையாகிக் கிடந்தது. காதுகளில் மரத்தாலான பெரிய வளையங்கள் தொங்கின. தண்ணீரையே பார்த்திராத உடம்பு. ஆங்காங்கே அழுக்கு திட்டு திட்டாக படிந்திருந்தது. கழுத்தில் ஏகப்பட்ட எலும்பு மாலைகள்.

பூவாய் மதுரம்
ராச்சாண்டார் திருமலை

பெரியவராவது இடையில் ஒரு கோவணத்துடன் இருந்தார். அவனிடம் அதுவும் இல்லை. அவதூத கோலம். கை கால் விரல்களில் நீளமாக நகங்கள் வளர்ந்திருந்தன. முழங்கால் வரை நீண்ட கைகள். இந்த அழுக்குக் கோலம் எதற்கும் சம்பந்தமில்லாமல் அவனுடைய கண்கள் பிரகாசமாக பளிச்சென்று மின்னின.
சிறுவன் அந்த காட்டுவாசியை அதிசயத்துடன்  பார்த்துக் கொண்டே இருக்கும்போது அவன் அவர்கள் அருகில் வந்து விட்டான். அவ்வளவுதான் சிறுவனுக்கு குடலையே பிடுங்குவது போன்று இருந்தது அந்த காட்டுவாசியிடமிருந்து வந்த மாமிச வாடை.
அஸ்ஸாமில் வாழும் மலைவாழ் மக்கள் எவரும சமைப்பதே கிடையாது. காட்டு விலங்குகளை வேட்டையாடி அவற்றின் தோலை உரித்து அப்படியே வீட்டின் ஒரு பகுதியில் தொங்க விட்டு விடுவார்கள். அவ்வப்போது அந்த பச்சைக் கறியின் ஒரு பகுதியை பிடுங்கித் தின்று விடுவார்கள். அவர்கள் வைத்திருக்கும் கறி புழு புழுத்துப் போவதும் கிடையாது. எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் உண்ணக் கூடிய நிலையிலேயே இருப்பது ஒரு அதிசயமே.
அதனால் அத்தகைய மக்கள் அருகில் வந்தாலே மாமிச வாடை குடலைப் புரட்டும். இது அந்தப் பகுதியை அடைந்த ஓரிரு நாட்களிலேயே சிறுவன் புரிந்து கொண்டாலும் இப்படி ஒரு கொடுமையான துர்நாற்றத்தை அவன் அனுபவித்ததில்லை. எனவே மூக்கையும் வாயையும் மூடிக் கொண்டு சற்று தள்ளி நின்று கொண்டான்.
பெரியவரோ இந்த நாற்றம் எதைப் பற்றியும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. அவர் அந்த காட்டுவாசியுடன் சந்தோஷமாக ஆனால் மிகவும் பயபக்தியுடன் பேசிக் கொண்டிருப்பது போல் தோன்றியது. அவர்கள் பேசும் பாஷையில் ஒரு வார்த்தை கூட சிறுவனுக்குப் புரியவில்லை. ஆனால், அந்த காட்டுவாசியின் பேச்சில் தொனித்த இனிமை சிறுவனுக்கு ஒரு எல்லையில்லாத ஆனந்தத்தைக் கொடுப்பதாக உணர்ந்தான்.
அந்த காட்டுவாசியின் பற்கள் எல்லாமே காவி படிந்து விகாரமாகத் தோற்றமளித்தன. ஆனால் அவனிடமிருந்து வந்த வார்த்தைகளுக்கு மட்டும் எப்படி அந்த இனிமை வந்தது என்று சிறுவனுக்குப் புரியவில்லை. 
இருவரும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். சிறுவனுக்கோ தொடர்ந்த நடையின் களைப்பால் கால்கள் வலித்தன. மறுபுறம் பசி வயிற்றைக் கிள்ளியது.
ஒன்றும் புரியாத நிலையில் வைத்த கண் வாங்காமல் சிறுவன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது பார்த்து ஒரு கட்டெறும்பு அவன் காலைப் பதம் பார்ககவே துள்ளிக் குதித்து சட்டென்று குனிந்து அதை உதறி விட்டு விட்டு காலைத் தடவிக் கொடுத்து விட்டு சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து பார்த்தான்.
அங்கே பெரியவரிடம் பேசிக் கொண்டிருநத காட்டுவாசியைக் காணவில்லை. பெரியவர் அப்போதுதான் சிறுவன் முதன் முறையாகப் பார்ப்பது போல் பார்த்து, “எங்கேடா நைனா போய்ட்ட. வா வா வந்து இந்த புது பாண்ட் சொக்கலாம் போட்டுக்க,” என்றார்.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெரியவர் கையில் ஒரு செட் புது பாண்ட், முழுக்கை சட்டை, பெல்ட், சாக்ஸ், நீண்ட குழாய் வைத்த பூட்ஸ், ரேபன் கண்ணாடி, தொப்பி என அனைத்தும் இருந்தன. அவனுடைய சோர்வு, பசி அனைத்தும் ஒரு நொடியில் மாயமாய் மறைந்து போயின. அந்த ஆடைகள் அனைத்தும் அவ்வளவு புத்தம் புதிதாய் கண்ணைக் கவரும் அழகுடன் திகழ்ந்தன.

பூசுர ஜோதி வில்வம்
ராச்சாண்டார் திருமலை

டார்க் நீல வண்ண பாண்ட், ரோஸ் வண்ணத்தில் முழுக் கை சட்டை அதில் ஆங்காங்கே சிவப்பு வண்ண பூக்கள். வெண் கற்கள் பதித்த பெல்ட். நீல வண்ண தொப்பி. சிறுவனுக்கு எல்லையில்லா ஆனந்தம்.
ஆனால், மறு கணமே பயமும் வந்து விட்டது. இந்த ஆடைகள் எல்லாம் எங்கிருந்து வந்தன என்று சிறுவனுக்குப் புரியவில்லை. அந்த ஆடைகளை அப்போது அங்கு கொடுக்கக் கூடிய ஒரே நபர் அங்கு வந்த காட்டுவாசிதான். அவனோ ஒரு கோவணம் கூட இல்லாத அவதூது. அவனும் கூட இப்போது எங்கு மறைந்தான் என்று தெரியவில்லை.
“இந்த ஆடைகள் எங்கிருந்து எப்படி வந்தன ? ஒரு வேளை பெரிய வாத்யார் ஏதாவது சித்தி எதுவும் செய்து அதன் மூலம் இந்த ஆடைகளை உருவாக்கி நம்மை மாட்டி விடப் பார்க்கிறாரா ?” என்றெல்லாம் சந்தேகங்கள் சிறுவன் மூளையில் முளைக்க ஆரம்பித்தன.
மறுவிநாடியே, “சீச்சீ, என்ன இது ? கேவலம் ஒரு புது ட்ரெஸ்ஸைப் பார்த்த மாயையிலேயே குருவைப் பற்றி தவறாக எண்ண ஆரம்பித்து விட்டோமே,” என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் சிறுவன்.
இடை மறித்தார் பெரியவர். “நைனா, யோசிக்க எல்லாம் நேரம் இல்லடா. இருட்டிட்டா காட்டு மிருங்கங்கள் எல்லா வந்துடும். சீக்கிரம் இதெல்லாம் மாட்டிக் கிட்டு பொறப்படு,” என்று சிறுவனைத் துரிதப்படுத்தினார்.
சிறுவன் வருவது வரட்டும் என்று மளமளவென்று அனைத்தையும் மாட்டிக் கொண்டான். “சூப்பர் ஸ்டாராக” பெரியவரைப் பின் தொடர்ந்தான்.
நாலடி வைத்தவுடன் பெரியவர், “ஆஹா மறந்தே போய்ட்டேன் பாத்தியா ?” என்று சொல்லி கோவணத்திலிருந்து ஒரு சிறிய இலை பொட்டலத்தை எடுத்தார்.
அதை சிறுவனிடம் கொடுத்து, “சாப்பிடு”, என்றார்.
சிறுவன் இலை பொட்டலத்தை வாங்கி பிரித்துப் பார்த்தான்.
அது ஏதோ மர இலையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறு பொரி உருண்டை. கோலி குண்டை விட சற்றுப் பெரிய அளவு. ஒரு புறம் வாத்யார் சரியான நேரத்தில் தின்பண்டம் கொடுத்தது பற்றி ஆனந்தம் அடைந்தாலும், மறு புறம் யானைப் பசிக்கு சோளப் பொரி என்பது போல் அல்லவா இது இருக்கிறது என்று நினைத்து அந்தப் பொரி உருண்டையை கையில் எடுத்துக் கொண்டு இலையை கீழே போடப் போனான்.
பெரியவர் உடனே சிறுவன் கையிலிருந்து அந்த இலையை வாங்கி கண்ணில் ஒற்றிக் கொண்டு தன் கோவணத்தின் அருகே கொண்டு சென்றார். அவ்வளவுதான். இலையைக் காணவில்லை. அது எங்கே சென்று மறைந்ததோ ? ஆனால், சிறுவன் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை.
சிறுவன் யோசித்தான். இது நாம் நினைப்பது போல் சாதாரண பொரி உருண்டை போல் தெரியவில்லை. இது இருந்த இலையையே பெரியவர் கண்ணில் ஒற்றிக் கொள்கிறார் என்றால் இதில் ஏதோ மகத்துவம் இருக்கிறது. ஆனால், அதைப் பற்றி பிறகு கேட்டுக் கொள்ளலாம். முதலில் பந்திக்கு முந்துவோம் என்ற எண்ணத்துடன் பொரி உருண்டையை சுவைக்கத் தொடங்கினான்.
சிறுவனின் எண்ணம் சரியாகவே இருந்தது. சிறுவன் அதற்கு முன்போ அதன் பின்போ அத்தகைய ஒரு சுவையான உணவு பதார்த்தத்தை சுவைத்ததே கிடையாது. உடல், மனம், உள்ளத்தை ஊடுருவி நின்ற அந்த சுவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாததாக இருந்தது. உண்மையில் பாற்கடலில் தோன்றிய தேவாமிர்தம் கூட இவ்வளவு சுவையுடன் இருக்குமா என்பது சந்தேகமே.
பொரி உருண்டையின் சுவையில் ஊறி இன்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த சிறுவனை பெரியரின் குரல் தட்டி எழுப்பியது.
“ராஜா ட்ரெஸ்ஸெல்லாம் அவுத்துடுடா….”
சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் உடம்பில் புது பாண்ட், சட்டை இருப்பது அப்போதுதான் சிறுவனுக்கு நினைவுக்கு வந்தது. அந்த புது ட்ரெஸ்ஸை அனுபவித்துப் பார்ப்பதற்குள் அந்த ட்ரெஸ்ஸை அவிழ்க்கச் செர்ல்கிறாரே ? என்று எண்ணி சிறுவன் பெரியவர் மேல் ஆத்திரத்துடன் எதற்காக ஆடைய கழற்றச் சொல்கிறார் என்று பார்த்தால் ….
அங்கே ஒரு சிறு சுனை இருந்த்து. தண்ணீர் கண்ணாடி போல் தெள்ளத் தெளிவாக இருந்தது.
சிறுவன் குஷியானான். தன்னையும் அறியாமல் மளமள வென்று ஆடைகள் அனைத்தையும் கழற்றி விட்டு பெரியவரின் உத்தரவுக்காக காத்திருந்தான்.
பெரியவர் கண் சாடை காட்டவே, தனக்குத் தெரிந்த நீராடல் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே குளிர்ந்த நீரில் வருண பிரவேசம் செய்தான் சிறுவன்.
ஆஹா …. சொர்க்கம் நேரில் வந்தது போல் இருந்தது சிறுவனுக்கு. களைப்பு போன இடம் தெரியவில்லை. அப்பர் பெருமானின், “மாசில் வீணையும் … மூசு வண்டறை பொய்கை ….” வரிகள் மனதில் குளிர்ச்சியைப் பொழிந்தன.
ஐந்து நிமிடங்கள் கூட ஆகி இருக்காது.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
ராச்சாண்டார் திருமலை

மீண்டும் பெரியவரின் குரல்.

“போதும்டா, ராஜா, வெளிய வா. சீக்கிரம் போய் அம்பாள தரிசனம் பன்னனும்.”
மனசே இல்லாமல் சுனையிலிருந்து வெளியே வந்து பாண்ட்டை மாட்டினான். சரியாக பாண்ட் பட்டன்களைக் கூட போட வில்லை.
பெரியவர், “ஏண்டா ஒரு பாண்ட் சட்டை போட இம்மா நேரமா எடுத்துப்ப. ஓடியா ஓடியா,” என்று சொல்லி அவன் கையை பிடித்து தரதர வென்று இழுத்துக் கொண்டே காட்டுப் பாதையில் ஓட ஆரம்பித்தார்.
சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
வாத்யாரே, “சட்டை, சட்டை …. ” என்று வேகமாக குரல் கொடுத்தான்.
பெரியவர் அவனை கண்டு கொள்ளவே இல்லை. சிறுவனின் கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு காட்டுப் பாதையில் வேகத்தைக் குறைக்காமல் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.
சிறுவனுக்கு கண்கள் குளமாகி விட்டன. அழகான சட்டை, பூட்ஸ், பெல்ட், வாழ்நாளில் முதன் முதலாக அணிந்த ரேபான் கூலிங் கிளாஸ் இவை அனைத்தையும் மனதில் எண்ணி எண்ணிப் பார்த்தான்.
ஏன்தான் எதையுமே முழுமையாக அனுபவிக்க விடாமல் இந்தப் பெரியவர் நம்மைப் படுத்துகிறார் என்று மனதிற்குள்ளே அங்காலாய்த்தான் சிறுவன். மனதில் இருப்பதைக் கூட கப்பென்று பிடித்து விடுவாரே என்ற பயம் வந்தவுடன் தன் மன எண்ண ஓட்டங்களை நிறுத்தி விட்டு பெரியவரின் நடை வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மெதுவாக அவர் பின்னால் ஓடி வர ஆரம்பித்தான்.
பெரியவரும் அவனது கையை விட்டு விட்டு தன்னுடைய வேகத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்.
சுமார் அரை மணி நேரம் நடந்த பின் அவர்கள் செல்லும் பாதை குறுகலாகச் செல்ல ஆரம்பித்தது. அருகில் மர செடிக் கிளைகள் எல்லாம் சிறுவன் மீது உராய ஆரம்பித்தான். அப்போது தற்செயலாக ஷூக்கள் இல்லாத தன்னுடைய காலைக் கண்டு திடுக்கிட்டான்.
ஏகப்பட்ட அட்டைப் பூச்சிகள் சிறுவன் காலில் தொற்றிக் கொண்டு அவனுடன் வந்து கொண்டிருந்தன.
சிறுவன் உச்ச ஸ்தாயில், “வாத்யாரே, அட்டைப் பூச்சி, அட்டைப் பூச்சி …. ” என்று கத்திக் கொண்டு அவைகளைத் தட்டி விட முயற்சி செய்தான்.
பெரியவர் ஒன்றும் அறியாதவர் போல் அவன் கால்களைப் பார்த்து, “ஏண்டா இத்தனை அட்டைப் பூச்சி ஒட்டற வரைக்கும் என்னடா பண்ணிக் கிட்டு இருந்த. இந்த காட்டுல அட்ட பூச்சிங்க நெறயா இருக்கும் அப்படீன்னு சொல்லித்தான் ஒனக்கு பெரிய பூட்சு வாங்கிக் கொடுத்தா பொறுப்பில்லாம இப்படி சுனைய பாத்த குஷில அங்கேயே போட்டுட்டு வந்து இப்ப அட்ட அட்டனு கூச்சல் போட்டா நான் என்னடா செய்யறது ?” என்று சிறுவனிடம் கேட்டார்.
சிறுவன் என்ன செய்வான் ? பெரியவரின் பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடும் லீலையை எத்தனையோ முறை அனுபவித்தவன் அல்லவா சிறுவன் ?
எனவே எதையோ கேட்க நினைத்த சிறுவன் மௌணமே நன்று என நினைத்து பேசாமல் அட்டைகளுடன் போராட ஆரம்பித்தான்.
சிறுவன் என்ன செய்தாலும் அட்டைகள் சிறுவனை விடுவதாக இல்லை. ஒரு இம்மி கூட அவைகள் அவன் காலை விட்டு அசையவே இல்லை. பெரியவர் உடனே தன் கைகளால் அட்டைகளைத் தட்டி விட ஆரம்பித்தார்.
பெரியவர் கை பட்ட உடனேயே அந்த அட்டைகள் அனைத்தும் எங்கோ சென்று மறைந்து விட்டன.
அப்பாடா என்று சந்தோஷமாக பெருமூச்சு விட்டபடியே நிமிர்ந்தான் சிறுவன். ஆனால், அடுத்த விநாடி அவன் உடம்பெங்கும் அட்டைகள் தொற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
மீண்டும் வாத்யாரை நோக்கி அபயக் குரல் கொடுக்க ஆரம்பித்தான். பயத்தால் அவன் உடம்பு நடுங்க ஆரம்பித்தது. கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருகி கன்னங்களில் வழிய ஆரம்பித்தது.
பெரியவர் ஆதரவாக, “என்னடா நைனா இந்த துக்கினியோண்டு அட்டப் பூச்சிக்கெல்லாம் பயந்தா நீ எப்படிடா நாளக்கி ஒங்கிட்ட வர்ற புலி யானை சிங்கம் காண்டாமிருகம் குள்ளநரி போன்ற மிருக்ங்களை சமாளிப்ப ?” என்று கேட்டுக் கொண்டே சிறுவன் மீதிருந்த அட்டைப் பூச்சிகளையும் தன் கையால் தட்டி விட்டுக் கொண்டே வந்தார் பெரியவர்.
பெரியவர் புலி, சிங்கம் என்று குறிப்பிட்டது அந்த குணமுடைய மக்கள் என்பதை பின்னாளில் புரிந்து கொண்டான் சிறுவன் வெங்கடராமன்.
இவ்வாறு அட்டைப் பூச்சிகள் சூழ்ந்த அந்த அடர்ந்த காட்டுப் பகுதியை கடப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது. அட்டைப் பூச்சிகளிடமிருந்து தப்பிப்பதற்காக குனிந்து நிமிர்ந்து நெளிந்து வளைந்து யோக சூத்திரங்கள் குறிப்பிடும் அனைத்து ஆசனங்களையும் செய்து விட்டான் சிறுவன்.
அப்போது ஒரு ஆச்சரியத்தை சிறுவன் கவனித்தான். பாண்ட் போட்டிருந்த சிறுவனை அத்தனை அட்டைப் பூச்சிகள் பதம் பார்த்து விட்டன. உடம்பெல்லாம் வீங்கிப் போய் ஆங்காங்கே இரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது. ஆனால், அது உடம்பில் ஒன்றுமில்லாமல் வெறும் கோவணத்துடன் நடமாடிய பெரியவரை ஒரு அட்டைப் பூச்சி கூட தீண்டயாகத் தெரியவில்லை.
அது பற்றி பெரியவரிடம் வாய் விட்டு கேட்டே விட்டான்.
அதற்குப் பெரியவர் சிரித்துக் கொண்டே. “அது ஒண்ணுமில்லடா, ராஜா. நீ சின்னப் பையன். எள ரத்தம். அதுனால அட்டக்கெல்லாம் ரொம்ப பிடிச்சிருக்கு. இந்த கௌவனோட ரத்தம் எதுக்கும் பிடிக்காது. அதுதான் காரணம். ”
சிறுவன் மனது பெரியவர் கூறிய பதிலால் சமாதானம் அடையாவிட்டாலும் மேற்கொண்டு அது பற்றி கேட்காமல் சிறுவன் அமைதியாகி விட்டான்.
சூரியன் மறைவதற்குள் காமாக்யா திருக்கோயிலை அடைந்தனர் பெரியவரும் சிறுவனும்.
அனைத்து தேவி திருவுருவங்களையும் தரிசித்து விட்டு அன்றைய இரவுப் பொழுதை அங்கேயே பெரியவருடன் கழிக்கும் மகா பாக்யத்தைப் பெற்றான் சிறுவன்.
பொதுவாக, யாத்திரைகளின் போது பெரியவர் திருத்தலங்களில் சிறுவனை நன்றாக ஓய்வெடுத்துக் கொள்ள அனுமதிப்பார். அப்போதுதான் மறுநாள் விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே தங்கள் யாத்திரையை தொடர ஏதுவாக இருக்கும்.

சக்தி விளம்பித வில்வம்
ராச்சாண்டார் திருமலை

ஆனால், காமாக்யா திருத்தலத்தில் பெரியவர் தொடர்ந்து தேவி மகிமைகளைப் பற்றி விரிவாக எடுத்தரைக்க ஆரம்பித்தார். விடிய விடிய இந்த மகிமைகளை சிறுவனுக்கு விளக்கிய பெரியவர் கணவன் மனைவி தாம்பத்ய உறவுகளைப் பற்றிய இரகசியங்களைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.
ஒன்பது வயது சிறுவன் வெங்கட்ராமனுக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன வாத்யாரே நீ சொல்லும் எதுவும் எனக்கு புரியவில்லை, துளியும் விளங்கவில்லையே,” என்று அப்பாவித்தனமாக கேட்டான்.
அதற்கு பெரியவர், “இப்போ இது எதுவுமே ஒனக்கு புரிய வேண்டாம். காலம் வரும்போது எல்லாம் கனியும். எதிர்காலத்துல ஒன்ன நம்பி ஆயிரக் கணக்கானோர் தங்களுடைய அந்தரங்க பிரச்னைகளைப் பத்தி சொல்றப்ப இதெல்லாம் ரொம்ப ஒதவியா இருக்கும். அது மட்டுமல்ல எத்தனையோ ஜோடி பேரை கல்யாயணம் செஞ்சி இணைக்கப் போற. அப்ப இந்த அடிப்படை விஷயம் தெரியாம பேந்த பேந்த முழிக்க கூடாதுன்னுதான் இம்மா கஷ்டப்பட்டு இவ்ளோ தூரம் கூட்டியாந்து ஒங்கிட்ட விஷயத்தை ஒப்படைக்கிறேன்.”

“எத எங்க எப்ப சொல்லனும்னு எங்களுக்குதான தெரியும். அத பத்தி நீ கவலைப்படாதே.”
பெரியவர் கூறியது போல எதிர்காலத்தில் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளை நாடி கற்பனை கூட செய்து பார்க்க முடியாத எத்தனையோ தாம்பத்ய உறவு பிரச்னைகளுக்கு விமோசன்ம் பெற்று குடும்ப ஒற்றுமையைப் பேணி அதன் மூலம் சமுதாயத்திலும் அமைதியை ஏற்படுத்தியவர்கள் கணக்கற்றோர்.
இந்த காமாக்யா யாத்திரையின்போது பெரியவர் வெளியிட்ட அற்புத ஆன்மீகப் பொக்கிஷங்களையே இப்போது நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தேவி தரிசனத்திற்குப் பின் மீண்டும் நடந்தே ஊர் திரும்பினார்கள் பெரியவரும் சிறுவனும். வழியில் மீண்டும் எப்படி அந்த அட்டைகளுடன் போராடப் போகிறோம் என்று வழி நெடுகிலும் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான் சிறுவன்.
ஆனால், என்ன ஆச்சரியம் ஒரு அட்டைப் பூச்சியைக் கூட சிறுவன் பார்க்க முடியவில்லை. இது பற்றி பெரியவரிடம் கேட்டபோது, “எங்கேடா அட்ட பூச்சி வந்திச்சி, எங்கேடா அட்ட பூச்சி போச்சி,” என்று திரும்பிக் கேட்டார்.
இது புரிய வெங்கடராம சுவாமிகளுக்கே பல மாதங்கள் எடுத்துக் கொண்டதாம்.
உங்களுக்கு … ?

அட்டைப் பூச்சிகள் இனி வராது என்று நிம்மதியுடன் சிறுவன் பெரியவருடன் நடந்து கொண்டிருந்தான். அப்போது அவர்களை நோக்கி ஒரு இளம் காட்டுவாசிப் பெண் வந்து கொண்டிருப்பதை சிறுவன் கண்டான். அந்தப் பெண்ணிற்கு சுமார் இருபது வயது இருக்கும். மேலாடை எதுவும் இல்லை. இடுப்பில் ஏதோ இலை தழைகளைக் கட்டிக் கொண்டிருந்தாள்.
அந்த ஊர் மக்களுக்கே உண்டான அழுக்கான உடம்பு. ஆனால், கூந்தலைத் திருத்தமாக முடித்து கொண்டைபோட்டு அதில் ஒரு மரக் குச்சியை செருகி இருந்தாள். கழுத்தில் நிறைய பாசி மாலைகள். நெற்றியில் செந்நிற திலகம். சட்டென பார்ப்பதற்கு காளியைப் போன்ற உருவம். கைகளின் மேற்புறத்தில் மர வளையல்கள்.
பெரியவர் அவளைப் பார்த்தவுடன் ”ஓம்” என்று கூறி வணக்கம் கூறினார். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பதிலுக்கு அந்தப் பெண் ஒன்றும் கூறாது வெறுமனே பெரியவரை நோக்கி ஒரு புன்னகையை உதிர்த்தாள். சிறுவன் அவள் பற்களின் அழகைப் பார்த்து அசந்தே போய் விட்டான். அவ்வளவு அழுக்கான உடம்பில் பற்கள் மட்டும் எப்படி அப்படி முத்துப் போல் பிரகாசித்தன என்று அவனுக்குப் புதிராக இருந்தது.
புன்னகையுடன் அந்தப் பெண் பெரியவரிடம் ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள். ஆனால், சிறுவனுக்கு அவள் பேசிய வார்த்தைகளோ அவளுக்கு பதில் கூறிய வண்ணம் பெரியவர் பேசிய வார்த்தைகளோ ஒன்றும் புரியவில்லை.

மேகலைப் புஷ்பத்தில் மிளிரும்
அம்மன், ராச்சாண்டார் திருமலை

ஆனால், அவ்வப்போது அந்தப் பெண் சிறுவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருப்பதை சிறுவன் கவனித்தான். சிறுவனுக்கு பயம் தோன்றி விட்டது. காட்டுவாசிகள் நிறைய மந்திர வேலை செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோமே ? அது போல் இந்தப் பெண்ணும் ஒரு மந்திரவாதியோ என்னவோ ? ஆனால் அவள் சிரிப்பு தெய்வீகமாக முல்லைப் பூக்களை உதிர்த்தது போல் அல்லவா இருக்கிறது. அப்படியானால் இவள் ஏதோ ஒரு தேவ மங்கைதான்.
எது எப்படியானாலும் நம் பெரியவர் இருக்கும் வரை நம்மை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்ற தைரியம் வழக்கம் போல் கடைசியாக வந்து தன்னை அரவணைத்தது கண்டு தனக்குள்ளே சிரித்துக் கொண்டான் சிறுவன்.
இதற்கிடையே பெரியவர் சிறுவனிடம் கண் சாடை காட்டவே அந்தப் பெண்ணின் அருகில் சென்றான். அந்தப் பெண் தரையில் அமர்ந்து கொண்டு சிறுவனை தன் அருகில் அமரும்படி சைகை செய்தாள். சிறுவனும் அந்தப் பெண் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஆனால், என்ன ஆச்சரியம் ?
பொதுவாக, அஸ்ஸாம் காட்டுவாசிகளின் அருகில் சென்றால் வயிற்றைப் புரட்டும் அழுகிய மாமிச வாடை வரும். ஆனால், அந்தப் பெண்ணின் அருகில் சென்ற உடனேயே பல தெய்வீக மலர்களின் சுகந்த வாசனை காற்றில் மிதந்து வந்து தென்றலாய் வீசியது போன்ற ஒரு பேரின்பம் சிறுவனுக்கு ஏற்பட்டது.
அந்தப் பெண் சிறுவனின் வலது கையை எடுத்து தன் மடி மேல் வைத்துக் கொண்டு அவன் உள்ளங்கையை விரித்து உற்றுப் பார்த்து அதை இதமாக தடவிக் கொடுக்க  ஆரம்பித்தாள்.
அவ்வளவுதான் சிறுவனின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து அவன் உடலெங்கும் பெருகி ஓடியது.
சிறுவன் அழுகைக்கு காரணம் என்ன ?
அந்தக் காட்டுவாசிப் பெண்ணின் கரம் தன் உள்ளங்கையில் பட்டதுமே சிறுவனுக்குத் தன் தாயின் ஞாபகம் வந்ததுதான் சிறுவன் அழுகைக்கு காரணம்.
பல சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்த பெரிய குடும்பம் ஸ்ரீசுவாமிகளுடையது. சுவாமிகளின் இந்த அனுபவத்தை அவர் வார்த்தைகளின் மூலம் கேட்பதே ஆனந்தமாகும்.
“ராத்திரி ஆயிடுச்சுனா எல்லோரும் எங்க அம்மாவைச் சுற்றி உட்கார்ந்து கொள்வோம். எங்க அம்மாவும் ஒரு பாத்திரத்துல சோற்றைப் போட்டு ரசத்தை ஊற்றி ஒவ்வொருத்தர் கையிலேயும் ஒரு உருண்டையைக் கொடுப்பார்கள். தொட்டுக் கொள்ள பருப்பு துவையல். எங்கம்மா கை மணம் இதுவரை அடியேன் எங்கேயும் அனுபவித்தது கிடையாது.”
“கடவுள் அருளால் அடியேன் சுத்தாத நாடு கிடையாது, போகாத ஊர் கிடையாது, சாப்பிடாத ஹோட்டல் கிடையாது. பைவ் ஸ்டார், செவன் ஸ்டார் அப்படீன்னு எல்லா ஸ்டார் ஓட்டல்லேயும் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால் எங்க அம்மா அன்று அடியேனுக்கு கொடுத்த அந்த பருப்பு சாதத்தின் சுவையை எந்த நாட்டு உணவிலும் இன்று வரை சுவைக்க முடியவில்லை. ”
“எங்க அம்மாவும் உருட்டி உருட்டி வரிசையாக எல்லோர் கையிலும் ஒவ்வொரு உருண்டையாக வைத்துக் கொண்டே வருவார்கள். நாங்களும் சாப்பிட்டுக் கொண்டே இருப்போம். அந்த சாதம் உங்களுக்குக் கிடைத்தால் சர்வ சாதாரணமாக ஒரு படி சாதம் உள்ளே போகும் என்றால் அந்த சாப்பாட்டு ருசி எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.”
“பாத்திரத்தில் உள்ள சாதம் தீர்ந்த பிறகுதான் நாங்கள் சாப்பிடுவதை நிறுத்துவோம். ஒரு நாள் யதேச்சையாக ஒரு விஷயத்தைக் கவனித்தேன். நமக்கு எல்லாம் சாப்பாடு உருட்டி உருட்டி கொடுத்து விடுகிறார்களே, ஆனால், நம்ப அம்மா சாப்பிட்ட மாதிரி தெரியவில்லையே என்று யோசித்து ஒரு நாள் சாப்பாடு முடிந்து எல்லோரும் கை கழுவ கொல்லைப் புறம் சென்றபின், அம்மா எங்களுக்கு எல்லாத்தையும் உருட்டி உருட்டி கொடுத்தாயே உனக்கு எங்கே சாப்பாடு என்று கேட்டபோது, ஊம் ,,, அது இருக்கு அப்பா வந்த பின் அப்புறமா சாப்பிட்டுக் கொள்வேன். இந்த கேள்வி எல்லாம் உனக்கு வேண்டாம நீ போய் பேசாம படு, என்று அதட்டினார்கள். அடியேன் விடுவதாக இல்லை.”
“அம்மா, அதெல்லாம் அப்புறம். முதலில் உனக்கு வைத்திருக்கும் சாப்பாட்டைக் காட்டினால்தான் நான் தூங்கப் போவேன் என்று அடம் பிடிக்கவே வேறு வழியின்றி அம்மா சாப்பாடு பாத்திரத்தை திறந்து காட்டினார்கள். உள்ளே ஒன்றும் மீதியில்லை. இதுதான் அம்மாவின் தியாகம். எங்க அம்மாவை கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதேன். அடியேன் சின்ன பிள்ளை அப்போது. அடியேனால் வேறு என்ன செய்ய முடியும் ?”
சுவாமிகள் இந்த வார்த்தைகளைக் கூறியபோது அவர் கண்கள் பனித்தன. இந்த அற்புதமான அன்பு பரிமாற்றத்தைக் கேட்டுக் கொண்டிருந்த அடியார்களின் கண்கள் குளமாயின.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?
இவ்வாறு அற்புதமான கை மணம் உள்ள மீனாட்சி அன்னையின் தெய்வக் குழந்தையான ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பிற்காலத்தில் மணமுள்ள வகை வகையான உணவுப் பதார்த்தங்களை தானமாக அளித்ததில் வியப்பில்லையே.
இதில் இன்னும் பல இரகசியங்கள் உண்டு. அதைப் பின்னர் காண்போம்.
… …  …
சிறுவனின் உள்ளங்கையை சற்று நேரம் உற்றுப் பார்த்த அந்த காட்டுவாசிப் பெண் தன்னுடைய இடுப்பிலிருந்து ஒரு நீண்ட ஊசியையும் இரண்டு மூன்று பச்சிலைகளையும் எடுத்துக் கொண்டாள். அந்த கூர்மையான ஊசியைப் பச்சிலைகளின் மேல் தேய்த்து தேய்த்து சிறுவனின் உடம்பில் குத்தி கன்னி, தேள், புலி போன்ற பல உருவங்களை வரைந்தாள்.
சிறுவனுக்கு மிகவும் சந்தோஷம். பச்சை பசேலன தோன்றிய அந்த உருவங்கள் கண்ணைப் பறிக்கும் அழகுடன் மின்னின. எல்லா உருவங்களையும் வரைந்த பின்னர் பெரியவரிடம் வழக்கம்போல் ஏதோ புரியாத பாஷையில் ஓரிரு வார்த்தைகளை உதிர்த்து விட்டு அங்கிருந்து எங்கோ சென்று மறைந்தாள் அந்த காட்டுவாசிப் பெண்.
சிறுவன் பெரியவரிடம் குதூகலத்துடன், “வாத்யாரே யார் இந்தப் பெண் ? இவ்வளவு அழகாக காசு கூட வாங்கிக் கொள்ளாமல் எனக்கு பச்சை குத்தி விட்டுப் போனாளே ?” என்று கேட்க பெரியவரோ, “ஆமாண்டா, நீ கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லியே நான் டயர்டா போய்டுவேன் போலருக்கு. நமக்கு நெறய ஜோளி இருக்கு அத மொதல பார்ப்போம், வா …”, என்று நறுக்கென்று பதில் சொல்லி விட்டு வேகவேகமாக காட்டுப் பாதையில் தொடர்ந்து நடக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீவிராச்சிலை ஈசன்
ராச்சாண்டார் திருமலை

அட்டைப் பூச்சிகளின் தொந்தரவு இல்லாததால் விரைவில் சிறுவன் புத்தாடைகள் பெற்ற ஆலமரத்தருகே வந்து சேர்ந்தனர். சிறுவனுக்கு ஒரு நப்பாசை. ஒரு வேளை மீண்டும் அந்த சட்டை, ஷூக்களை எல்லாம் வாத்யார் நமக்குத் தருவாரா என்று ஏக்கத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தான்.
உள்ளதும் போச்சு.
பெரியவர், “நைனா அந்தப் பேண்ட்ட கழட்டி குடுத்துடுடா,” என்று சொல்லி சிறுவன் ஏற்கனவே அணிந்திருந்த அரை டிராயரையும் பழைய சட்டையையும் ஆலமரக் கிளையிலிருந்து எடுத்து சிறுவனிடம்  கொடுத்தார்.
இவை எல்லாம் இது வரை எங்கிருந்தன ? எப்படி இவை பெரியவர் கைக்கு வந்தன ?
வழக்கம் போல் விடை பெற முடியாத வினாக்கள்.
சிறுவன் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது இதுதானோ என்று எண்ணிக் கொண்டே அரை மனதுடன் அந்த அருமையான பாண்ட்டை கழட்டி பெரியவரிடம் கொடுத்தான்.
பெரியவர், “வளர வேண்டிய புள்ளாண்டான் நீ. இப்படி சிவன் சொத்துக்கு ஆசப்படலாமா ?” என்று சொல்லி புன்முறுவல் பூத்தார்.
“இங்க எங்க வாத்யாரே சிவன் சொத்து வந்தது ?” என்று சிறுவன் கேட்க, பெரியவர், “ஆமா நைனா. இது எல்லாம் யார் ஒனக்கு கொடுத்தா, நல்லா ஒன்னோட குருவி மூளையை கசக்கிப் பாரு. அன்னக்கி வந்தானே ஒரு காட்டு வாசி. அவன் யாருன்னு நெனச்ச. சாட்சாத் சிவன்தாண்டா அவன்.”
ஆம், சிறுவனுக்கு இப்போது எல்லாம் விளங்கி விட்டது. சர்வ லோகமும் பெரியவரைப் பார்த்தால் அடங்கிப் போய் விடும். பெரிய பெரிய அறிவாளிகள் எல்லாம் வாய் மூடி மௌணம் பூண்டு விடுவார்கள். அப்படிப்பட்ட பெரியவரே அந்த காட்டுவாசியைப் பார்த்து சப்தநாடிகளும் அடங்கி ஒடுங்கி நின்றாரே. அப்படியானால் அது அந்த வேதநாயகனைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் ?
“இந்த சின்ன விஷயத்தைக் கூட தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் என்னுடைய மூளை நிச்சயமாக பெரியவர் சொல்வது போல குருவி மூளைதான் சந்தேகமே இல்லை,” என்று நினைத்துக் கொண்டிருந்தான் சிறுவன்.
அவன் எண்ண அலைகளை கிரகித்த பெரியவர், “சரியா நெனச்சடா. அவன் வேதநாயகன்தான். அவன் என் கையில வேதம்தான் ஓதினான். நீ என்னவோ பேசிக் கொண்டிருக்கான்னு நெனச்சா அது யார் குத்தம் ?”
சிறுவனுக்கு பெரியவர் சிவனைப் பற்றி தன்னிடம் ஏன் சொன்னவில்லை என்று ஒரு புறம் நினைத்து வேதனைப்பட்டாலும் மறுபுறம் அந்தப் பரம்பொருள் சிவபெருமானே தனக்கு ஷூ சாக்ஸ் உட்பட அனைத்தையும் வழங்கிய கருணையை நினைத்த மறு விநாடி கண்கள் தாரை தாரையாக கண்ணீரை உகுத்தன.
பெரியவர், “ரொம்ப சீன் காட்டாத நைனா, வேல நெறயா இருக்கு வா பாக்குனும்,” என்று சிறுவனைச் சீண்டினார்.
சிறுவன் தன்னைத் தேற்றிக் கொண்டான். இப்போது சிவனுக்கு செல்லப் பிள்ளையாகி விட்டான் அல்லவா ? எனவே கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக கொண்டு பெரியவரிடம், “வாத்யாரே, அந்த தேவாமிர்தம் போன்ற பொரி உருண்டையைப் பற்றி ஒன்றுமே புரியவில்லையே …..” என்று இழுத்தான்.
“ஆமாண்டா, எல்கேஜிலேருந்து காலேஜ் படிப்பு வரைக்கும் நாந்தாண்டா ஒனக்கு வாத்யார்,” என்று ஒரு பொய்க் கோபத்தை வரவழைத்துக் கொண்டு தொடர்ந்தார்.
“அது ஒண்ணுமில்லை நைனா. சோமாசி மாறனார் யாகத்துக்கு சாமி ஆத்தாவோட (அங்காளி தேவி) என்னையும் இட்டுக்குனு போனார். அப்போ சாமி கிட்ட அடியேன்தான் சாமி நம்ம புள்ளாண்டான் ஒருத்தன் இருக்கான். என்னையே நம்பிகிட்ட இருக்கான். அவனுக்கு ஓங்கையால ஒரு பிரசாதம் கெடச்சா நல்லா இருக்கும் என்று அசடு வழிய சிரிச்சேன்,” என்று அவ்வாறு அசடு வழிய நின்ற ஸ்டைலில் நின்று காட்டினார் பெரியவர்.
சிறுவனுக்கு அந்தக் காட்சியைப் பார்த்து சிரிப்பை அடக்கவே முடியவில்லை, வாய் விட்டு சிரித்தான். நினைத்து நினைத்து சிரித்தான்.
“சாமியும், சரி சரி, சிஷ்யனுக்காக ரொம்ப பாடுபடுகிறாய். ஆனால், உன் பெயரை அவன் காப்பாற்றுவானா என்று தெரியாது, இருந்தாலும் பரவாயில்லை. உனக்காக உன் சீடனுக்கும் பிரசாதம் தருகிறேன் என்று அந்த சோமாசி யாக பிரசாதத்தில் ஒரு பொரி உருண்டையை எங்கையில கொடுத்தார். அதுதான் ஒனக்கு கொடுத்த பிரசாதம்,” என்று சோமாசி திருவிளையாடலை எடுத்துரைத்தார் பெரியவர்.
தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாது அனைத்தையும், தன் இன்னுயிர் உட்பட, பிறர் நலனுக்காக அர்ப்பணித்த ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் மேற்கண்ட இறைப் பொக்கிஷங்களை எப்படி சமுதாய நலனுக்காக அர்ப்பணித்தார் என்று அறிவதும் குருவின் நம்பிக்கையை வளர்க்கும் சாதனமாகும்.
பெரியவர் சிவபெருமானை காமாக்யா யாத்திரையின் போது சந்தித்தார் அல்லவா ? அப்போது சிவபெருமான் காட்டுவாசி உருவில் பெரியவரிடம் வேதம் ஓதியதாகக் கூறினார் அல்லவா ? அந்த வேதமே சாம வேதத்தின் பார்கவ சாகையாக உருவெடுத்துள்ளது.
சிறுவனான வெங்கடராமன் அந்த பார்கவ வேதத்தை அப்போது உணர முடியவில்லை. ஆனால் பல்லாண்டுகள் கழித்து ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமத்தில் ஈஸ்வர வருடம் நிகழ்ந்த கார்த்திகை தீப அன்னதான வைபவத்தின்போது அனைத்து இறைக் காரியங்களிலும் இந்த பார்கவ வேத கீதங்களை நமது வெங்கடராம சுவாமிகள் ஓதி ஈஸ்வரனின் சாம வேத சகதிகளை அந்த வருடத்தில் திருஅண்ணாமலையை வலம் வந்த அடியார்கள் அனைவரும் அன்னதானம் மூலம் பெறும் வண்ணம் அற்புத சேவை ஆற்றினார்கள் என்பது வியக்க வைக்கும் ஆன்மீக உண்மையாகும்.

சுவாமிகள் மட்டும் அல்லாது அந்த வருடம் அன்னதான வைபவத்தில் பங்கு பெற்ற அனைத்து அடியார்களும் பயன் பெறும் வகையில் ஒரு நாள் காலை ஆறு மணி முதல் இரவு எட்டு மணி வரை பார்கவ வேத சக்திகளை எளிமையான காயத்ரீ சந்தங்களில் அமைத்து கடைமட்ட அடியார்களையும் சாம வேதம் ஓத வைத்த பெருமை சுவாமிகளையே சேரும்.
சாம வேதம் முறையாகக் கற்ற அடியார்களும் அந்த சந்தங்களைக் கேட்டு பிரமிப்படைந்தனர்.
அட்டைப் பூச்சி என்றாலே அருவருப்பை அல்லது பயத்தை ஏற்படுத்தும் ஒரு பூச்சியாகவே அதைக் கருதுகின்றோம். பார்கவ வேதிகள் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இந்தப் பூச்சிகள் வேத பீஜாட்சர சக்திகளை ஈர்த்து கொள்வதில் திறமை வாய்ந்தவை. பார்கவ மகரிஷியின் மகளான பார்கவிதானே திருமாலின் திருமார்பில் வாசம் செய்கிறாள். அதனால்தான் திருமாலின் ஔஷத சக்தி அவதாரமான தன்வந்த்ரீ மூர்த்தி அட்டைப் பூச்சியுடன் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் காட்சி அளிக்கிறார்.
இந்த தெய்வீக ஆச்சரியங்கள் ஒரு புறமிருக்க, ஆலய கும்பாபிஷேக மகத்துவத்தைப் பற்றி சற்று ஆராய்வோம். கும்பாபிஷேகம் என்றால் என்ன ?
ஒரு திருத்தலத்தில் சிவலிங்க மூர்த்தியை எவ்வாறு பிரதிஷ்டை செய்கிறார்கள் ? ஒவ்வொரு இறை மூர்த்தியின் விக்ரஹத்தின் கீழும் ஒரு சக்கரம் அல்லது யந்திரம் இருக்கும். அந்த யந்திரத்தில் உள்ள அட்சர சக்திகளை எவராவது சித்தி செய்து தாரை வார்த்து அளித்திருக்க வேண்டும்.
பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை அந்த யந்திரங்களை எடுத்து விட்டு புதிய சக்கரங்களை வைக்க வேண்டும். ஆனால், ஒரு அட்சரத்தை சித்தி செய்யும் தகுதியே இன்றைய நிலையில் யாருக்கும் இல்லை என்றால் ஒரு யந்திரத்தை உருவாக்குவது எப்படி ? எனவே ஆலய கும்பாபிஷேகம் என்பது இன்றைய நிலையில் இறை சக்தியை புதுப்பித்தல் என்றில்லாது வெறுமனே கோபுரத்திற்கும் சுவர்களுக்கும் பெயிண்ட் அடித்து கோயிலை துப்புரவு செய்தல் என்றுதானே அமைந்து விடுகிறது.
இத்தகைய சூழ்நிலை எதிர்காலத்தில் உருவாகும் என்பதை ஞானிகளும் சித்தர்களும் அறிவார்கள் அல்லவா ? எனவே திருஞான சம்பந்தர், அப்பர் பெருமான் போன்ற மகான்கள் நீண்ட தவங்கள் யோகங்கள் இயற்றி தங்கள் தவப் பலனை கோயிலில் உள்ள யந்திரங்களுக்கு தாரை வார்த்து அளித்து இறை சத்தியை புதுப்பிக்கிறார்கள். இதையே ஆலய புணருத்தாரணம் என்று அழைக்கிறார்கள்.
எனவேதான் அப்பர், சுந்தரர் போன்ற மகான்களின் காலடி பட்ட தலங்களில் இறை சக்தி குறைந்தது 1000 வருடங்களுக்கு புதுப்பிக்கப்படுகிறது என்று சித்தர்கள் தெளிவு படுத்துகிறார்கள். திருஞான சம்பந்த மூர்த்தி, அப்பர் பெருமான், ஆழ்வார் மூர்த்திகள் இவர்களின் பாடல் பெற்ற தலங்கள் விசேஷ சக்திகளுடன் திகழ்கின்றன. அதனால்தான் பாடல் பெற்ற தலங்கள், மங்கள சாசன தலங்களில் இயற்றப்படும் வழிபாடுகள் மிகவும் பலன் தரக் கூடியவையாய் அமைந்துள்ளன.
மேற்கூறிய விஷயங்களை துளசி மணியாய்க் கோர்த்து மாலையாக்கினால், இவ்வாறு திருத்தலங்களில் இறை சக்திகளை புணருத்தாரணம் செய்து ஆலயங்களில் இறை சக்திகள் பல மடங்கு சிறப்புடன் துலங்கச் செய்ய இடியாப்ப சித்தர் வழங்கிய அருட்கொடையே ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் என்பது பளிச்சென விளங்குகிறது அல்லவா ?
இடியாப்ப சித்த ஈசரின் அருட்பாங்கை இன்னும் சற்று விளக்குவோம். சோமாசி மாறனார் யாகத்தில் சிவபெருமானே பிரசாதம் வழங்கினார் அல்லவா ? அது மனித உடலில் சதையாகவும் இரத்தமாகவும் உருவெடுக்கும். சதை தூல அருட் சக்தியையும் இரத்தம் சூட்சும அருள் சக்தியையும் கிரகிக்கும்.
பிரம்ம மூர்த்தியின் தந்தையான விஷ்ணு மூர்த்தியே பித்ருக்களுக்கு தலைவராகிறார். பித்ருக்களோ இரத்த சம்பந்தம் உடையவர்களால் அளிக்கப்படும் திவச, படையல்களையே ஏற்றுக் கொள்கிறார்கள். அதன் மூலம் தங்கள் வழித் தோன்றல்களை புனிதப்படுத்தி இறை நெறியில் திளைக்கச் செய்கின்றனர்.
இதிலிருந்து என்ன தெரிகிறது ? இரத்தம்தான் உறவின் அடிப்படை. உறவுதான் தூய்மையை வளர்க்கும், பலப்படுத்தும். இதை உணர்த்தவும் தன்வந்த்ரீ மூர்த்தி அட்டைப் பூச்சியை கையில் ஏந்தி அருள்பாலிக்கிறார்.
எனவே சிவபெருமான் சோமாசி மாற பிரசாதமாக அளித்த பார்கவ வேத சக்திகளை சிறுவன் வெங்கடராமனின் உடலில் நிலை நிறுத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள உதவியவையே காமாக்யா அட்டைப் பூச்சிகள். அவைகளை இடியாப்ப சித்த ஈசன் தன் திருக்கரங்களால் மேலும் தூய்மை செய்தார். சிவபெருமானால் அளிக்கப்பட்ட பார்கவ யோக சக்திகள் காமாக்யா தேவியின் அனுகிரக சக்திகளுடன் சேர்ந்து பூரணம் பெற்றன.
இந்த சிவ, சக்தி, குரு, அடிமை தத்துவ வேத சக்திகளையே ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தன்னுடைய உழவாரத் திருப்பணிகளின் போது அந்தந்த ஆலயங்களில் உள்ள எந்திரங்களில் சூட்சுமமாக பிரதிஷ்டை செய்தார் என்பதே விண்ணவரையும் வியக்க வைக்கும் ஆன்மீக அதிசய பேருண்மையாகும்.
இத்தகைய அபாரமான வேத சக்திகளை உடைய ஆலயங்கள் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் புனிதத் தன்மையுடன் விளங்கும் என்பதை எவராவது கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா ? இந்த ஆன்மீக புரட்சிக்கு ஈடான தெய்வ காரியம் இந்த பிரஞ்சத்தில் எங்காவது காணத்தான் முடியுமா ?

இத்தகைய இரத்தப் புனித கைங்கர்யத்தை நேரிடையாகவும் நிறைவேற்றி பக்தர்களை வியக்க வைத்தவரே நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார். கோயம்பேடு திருத்தலத்தில்தான் முதன் முதலில் பூவுலகில் பிரதோஷ வழிபாடு நிறைவேற்றப்பட்டது. அத்திருத்தல பிரகாரத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பிரதோஷ நாயனாரை தன்னுடைய தோளில் தாங்கி பல்வேறு நடனக் கூத்தால் சுவாமியை மகிழ்வித்தார்கள்.
புனருத்தாரண திருப்பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அப்போது பிரகாரம் முழுவதும் சரளைக் கற்கள் நிறைந்திருந்தன. அதனால் சுவாமிகள் மண்டியிட்டு சுவாமியை தோளில் சுமந்து நடனமாடி வலம் வந்தபோது முழங்கால் தேய்ந்து இரத்தம் வழிய ஆரம்பித்தது. ஆனால், சுவாமிகள் அதைப் பற்றி சிறிதும் சிந்தை கொள்ளாமல் தனது நடனத்தை பூரணமாக நிறைவேற்றினார்கள் என்பது மெய் சிலிர்க்க வைக்கும் ஆன்மீக விந்தையாகும்.
சோமாசி யாக பிரசாதத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவின் போது கிரிவலம் வரும் அடியார்களுக்கு பெரிய பெரிய பொரி உருண்டைகளை ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் வழங்கி வந்தது நீங்கள் அறிந்த ஒன்றுதானே.

சுவாமிகளின் எதிர்கால அன்னதான கைங்கர்யத்திற்காக பெரியவர் சிறுவனுக்கு ஏற்படுத்திக் கொடுத்த தெய்வீக லீலைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. சோமாசிப் பிரசாதமான பொரி உருண்டையை வாங்கிக் கொடுத்த பெரியவர் சிறுவனின் எதிர்காலத்தில நிறைவேற்றப் போகும் அன்னதானத்தில் சுவையை ஏற்படுத்துவதற்காக அவர் ஆடிய நாடகத்தில் ஒன்றே பச்சைக் குத்தும் படலமாகும்.

பச்சை குத்திய படலம்

ஆம், காமாக்யா யாத்திரையின்போது ஒரு காட்டுவாசிப் பெண் சிறுவனுக்கு பச்சை குத்தி விட்டாள் அல்லவா ? அதைப் பற்றி சிறுவனிடம் அப்போது சிறுவனிடம் ஒன்றும் கூறவில்லை. ஆனால், ஒரு முறை பெரியவர் சிறுவனிடம் ஒரு நல்ல ஜட்டி வாங்கித் தரும்படிக் கேட்டார்.
சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “வாத்யாரே, நீ எப்பவும் கோவணம்தானே கட்டிக்குவ. இப்ப எதுக்கு ஜட்டி கேக்குற”, என்று கேட்டபோது, “நான் என்னடா பண்றது. உனக்குனா சிவன் வந்து ட்ரெஸ் வாங்கித் தர்றார், வள்ளி வந்து பச்சை குத்தி உடுறா, இந்த கெழவன எவன் கண்டுக்குறான், அதுனால எனக்கு புது ஜட்டி ஒன்றும் வேண்டாம். பழைய ஜட்டி எங்காவது கிடைத்தால் கூட போதும்,” என்றார்.
சிறுவனுக்கு அப்போதுதான் மின்னல்போல் காமாக்யா யாத்திரை நினைவுகள் பளிச்சிட்டன.
“ஆஹா, பச்சைக் குத்தி விட்டது வள்ளியா ?” சிறுவனுக்கு அந்த முத்துப் பற்களின் இரகசியம் இப்போது தெரிந்து விட்டது. சாட்சாத் முருகப் பெருமானின் தேவியைத் தவிர வேறு எவருக்கும் அவ்வளவு தெய்வீகமான பல் வரிசை அமைய முடியாது என்று நினைத்து பெரியவரின் கருணையை மீண்டும் மீண்டும் நினைத்து பேரானந்தம் அடைந்தான் சிறுவன்.
அது மட்டுமல்லாமல் வள்ளியம்மை தனக்கு அளித்த தேவ அனுகிரக சக்திகளையும் அப்போது பெரியவரிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொண்டான் சிறுவன்.
காட்டுவாசியாக வந்த வள்ளி சிறுவனின் உள்ளங்கையை உற்றுப் பார்த்தாள் அல்லவா ? அதன் தெய்வீக தாத்பார்யம் என்ன ?
கைரேகைகளில் பல இரகசியங்கள் உண்டு. உள்ளங்கை ரேகைகளில் தன ரேகை என்று ஒன்று உண்டு. உள்ளங்கையின் அடிப் பகுதியிலிருந்து மேல் நோக்கிச் சென்று சூரிய மேட்டில் முடிவடைவதே தன ரேகையாகும். பொதுவாக, தன ரேகைகள் அமையப் பெற்றவர்கள் நில புல சொத்துக்களுடன் எல்லா சுகங்களும் பெற்று வாழ்வார்கள்.
அவர்கள் கையால் பொருட்கள், பணம் பெற்றால் அவை வளரும். துரியோதனனுக்கு தன ரேகை இருந்ததால்தான் தர்ம புத்திரர் நிறைவேற்றிய யாகத்தில் துரியோதனனைக் கொண்டு தான தர்மங்கள் பல நிறைவேற்றச் செய்தார்.
பாண்டவர்களின் கஜானாவே காலியாகும் அளவிற்கு செல்வங்களை வாரி வாரி அளித்தான் துரியோதனன். பின்னர் அது பற்றி சகுனியிடம், “மாமா, இந்த தர்ம புத்திரன் சரியான முட்டாள். கஜானாவில் இருந்த செல்வங்களை எல்லாம் அள்ளித் தரும்படி என்னிடம் சொன்னான். நான் அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்து கஜானாவையே காலி பண்ணி விட்டேன்,” என்று சொல்லிப் பெருமை பட்டுக் கொண்டான்.
அதைக் கேட்ட சகுனி கேலியாக சிரித்து, “துரியோதனா, முட்டாள் தரும புத்திரன் அல்ல. நீதான் வடிகட்டின முட்டாள். உன்னை விட்டு தானம் அளிக்கும்படிக் கூறியவன் கிருஷ்ணன். அதன் காரணம் என்ன ? கிருஷ்ணன் ஒரு காரியம் செய்கிறான் என்றால் அதற்கு ஆயிரம் ஆயிரம் காரணம் இருக்கும் என்று நீ ஏன் யோசிக்கவில்லை ? உன் கையில் தன ரேகை இருக்கிறது. அதனால் நீ எவ்வளவு கொடுக்கிறாயோ அது போல் ஆயிரம் மடங்கு செல்வம் இனி பாண்டவர்களுக்கு பெருகி விடும். இப்போது சொல், யார் முட்டாள் ?” என்று கேட்டானாம்.
தன ரேகைகளில் பல சூட்சும இரகசியங்கள் உண்டு. தன ரேகைகள் சூரிய மேட்டில் நிற்கும் தன்மையைக் கொண்டுதான் அதை நிர்ணயிக்க முடியும். இவ்வகையில் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் கையில் அமைந்துள்ளது பாலா தனரேகை ஆகும்.
பாலா தனரேகை உள்ளவர்கள் கையால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் மிகவும் சுவையுடன் விளங்கும். அவர்கள் கையால் பெறப்படும் தனம், பொருட்கள் நற்காரிய விருத்திக்கு மட்டுமே பயன்படும் என அனுகிரக சக்திகள் உண்டு.
இந்த பாலா தனரேகை சக்திகளை சூட்சுமமாக அமைத்ததே வள்ளியம்மையின் திருவிளையாடலாகும்.

தனரேகை இரகசியம்

மேலும் தன ரேகையில் மாலா தனரேகை என்ற ஒரு தனரேகையும் உண்டு. மாலா தனரேகையுடன் துலங்கியவரே சேஷாத்ரி சுவாமிகள் ஆவார்கள்.
இத்தகையோர் எதை எடுத்துக் கொடுத்தாலும் அப்பொருட்களில் செல்வ சக்திகள் பெருகும். ஆனால், அந்த தெய்வ சக்திகளை நிந்தித்தால் அதனால் பல விபரீத விளைவுகளும் ஏற்படும்.
உதாரணமாக, சேஷாத்ரி சுவாமிகள் ஒரு வெங்காய மண்டிக்கு சென்று அங்கிருக்கும் வெங்காயங்களை அள்ளி தெருவில் வீசுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்த வெங்காயங்கள் பலவும் மிதி பட்டு, வண்டிச் சக்கரங்களில் மாட்டி வீணாகி விடும் அல்லவா ? ஆனால், அதைப் பற்றிக் கண்டு கொள்ளாமல் அந்த வெங்காய மண்டியின் முதலாளி பேசாமல் இருந்து விட்டால், அவருடைய வியாபாரம் பிரமாதமாக முன்னேறி அவர் விரைவில் பெரும் பணக்காரராகி விடுவார். ஆனால், அதே சமயத்தில் அந்த வெங்காயத்தை சேஷாத்ரி சுவாமிகளிடம் இருந்து பிடுங்கி போட்டு அவரை அவமதித்தால் அந்த மண்டியில் உள்ள வெங்காயம் அனைத்துமே வீணாகி விடுவதோடு மட்டுமல்லாமல் அந்த மண்டியின் உரிமையாளரும் பல வேதனைகளைச் சந்திக்க வேண்டி வரும்.
இந்த அனுபங்களை எல்லாம் நேரில் பார்த்து அனுபவித்தோர் ஏராளம். இதுவே மாலா தனரேகையின் அனுகிரக சக்தியாகும். இந்த மாலா தன ரேகை குறிப்பிட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாகும்.
ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜாதகத்தை கவனித்தால் இந்த உண்மை புரியும். பொதுவாக, லக்னம், இரண்டு, ஐந்து, ஒன்பது, பதினோராம் இடங்களின் வலிமையைக் கொண்டு தன யோகங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. சுவாமிகளின் ஜாதகத்தில் லக்னாதிபதியான குரு செல்வத்திற்கு அதிபதியாக அமைந்து ஐந்தில் அமர்ந்து, ஐந்தாம் அதிபதியான செவ்வாய் இரண்டில் உச்சம் பெற்று, இரண்டாம் அதிபதியான சனீஸ்வர பகவான் லக்னத்தில் அமர்ந்து, பதினோராம் அதிபதியான சுக்ரன் உபசய மூன்றில் அமர்ந்து அது ராசிக்கும் உபசய ஆறாக அமைவதும், தர்ம கர்ம ராஜ யோக அதிபதிகள் ஒன்றாய் தன ஸ்தானத்தில் கூடியிருப்பதும் மிகவும் சக்தி வாய்ந்த தன யோகத்தைக் குறிப்பதாகும்.

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜாதகம்

மேலும் இந்த தன யோகத்துடன் ராஜ யோகங்கள் சேர்ந்திருப்பதும், பாரிஜாத யோகமும் இந்த தன யோகத்திற்கு பலம் கூட்டுவது மிகவும் அற்புதமான தெய்வீக அமைப்பாகும்.
தன யோகம் என்பது வெறும் செல்வத்தை மட்டும் தருவது என்று கிடையாது. ஒழுக்கமில்லாதவனுக்கு ஒழுக்கத்தைத் தருவதும், தூக்கம் இல்லாதவனுக்கு உறக்கத்தை அளிப்பதும் சிறப்பான தன யோக அனுகிரகம் அல்லவா ?
ஒருமுறை சேஷாத்ரி சுவாமிகள் திருஅண்ணாமலையை சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருக்கும்போது ஒரு விலைமகளைக் காண நேரிட்டது. பூர்வ ஜன்ம வினைகளால் அந்த மாது அந்நிலையை அடைந்திருந்தாலும் அவளுடைய எதிர்கால தெய்வீக சாதனைகளை தனது ஞான திருஷ்டியால் உணர்ந்த சேஷாத்ரி சுவாமிகள் அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டார். அதன் பலனாக அடுத்த நாளே அந்தப் பெண்ணை ஒரு ஜமீன்தார் திருமணம் செய்து கொண்டு போய் விட்டார். அந்தப் பெண்ணும் திருந்தி சிறந்த பக்தையாக மலர்ந்தாள். இது பலரும் அறிந்த புதுமையே.
இதன் பின்னணியில் நிகழ்ந்த ஆன்மீக விந்தைகளை சித்தர்கள் மட்டுமே அறிவர்.
சேஷாத்ரி சுவாமிகள் ஒரு பெண்ணை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார் என்று படிக்கும் போது பலருக்கும் பலவிதமான வெளியே சொல்ல முடியாத எத்தனையோ எண்ணங்கள் தோன்றலாம். ஆனால், சுவாமிகள் அந்த பெண்ணின் தோளில் கை வைக்கும்போது சுவாமிகளின் கையில் உள்ள மாலா தன ரேகைகள் அதில் பதிவதால் அந்தப் பெண் இதுவரை செய்த பாவச் செயல்களிலிருந்து விடுபடுகிறாள்.
வினை விதைத்தவன் வினையை அனுபவித்துதான் ஆக வேண்டும் என்றால் அந்தப் பெண் செய்த பாவங்களுக்கு யார் பதில் சொல்வது ? இங்குதான் மாலா தன ரேகைகளின் பணி ஆரம்பமாகிறது. சேஷாத்ரி சுவாமிகள் அந்தப் பெண்ணை முத்தமிடும்போது அவள் இதுவரை செய்த பாவத்தின் கொடிய வினைகள் மாலா தன ரேகைகளால் ஈர்க்கப்பட்டு சுவாமிகளை அடைகிறது. அப்போது அந்த வினைகளின் தாக்கங்களை சுவாமிகள் ஏற்றாக வேண்டும். எப்படி ?
சுருக்கமாகக் கூறினால் நன்றாக உலையில் காய்ந்து கொதித்துக் கொண்டிருக்கும் ஈயத்தை முகத்தில் ஊற்றியது போலிருக்கும் அந்த சில நொடிகளில் சுவாமிகள் அடையும் வேதனை. அந்த வேதனையை ஏற்றுக் கொள்ள முன் வருபவர்களுக்கே மாலா தன ரேகைகள் அமையும்.
இந்த கர்ம வினை நிவாரண இரகசியத்தை விவரித்த ஸ்ரீவெங்கடராம சுவாமிகள், “சார், பார்த்தீர்களா, ஞானி, மகான், குரு என்ற போஸ்ட் (பதவி) எல்லாம் வெளியிலிருந்து பார்ப்பதற்கு சுவையாகத்தான் இருக்கும். நீங்கள் உள்ளே புகுந்து பார்த்தால்தான். ஒவ்வொரு ஞானியும் என்ன வேதனையை, துன்பத்தை அடைந்து மக்களுக்கு நல்வழி காட்டுகிறார்கள் என்பது புரிய வரும்.”
சேஷாத்ரி சுவாமிகளின் ஒப்புயர்வற்ற தியாக மனப்பான்மையை பாராட்டி ஒரு முறை ரமண மகரிஷி கூறியதை இங்கு நினைவு கூர்வோம்.
ரமணாஸ்ரமத்தில் அவருக்காக ஒரு புதிய சோபா வாங்கி அதில் அவரை அமரச் சொன்னார்கள். ஆனால், ரமண மகரிஷியோ வெகு நேரம் அந்த சோபாவைப் பார்த்துக் கொண்டே நின்றாரே தவிர அதில் அமரவில்லை. அப்போது அடியார் ஒருவர், “சுவாமி, நீங்களும் சேஷாத்ரி சுவாமிகள் போல் எதுவும் பேசாமல் நின்று கொண்டே இருக்கிறீர்களே,” என்று கேட்டாராம்.

ஸ்ரீவராகி அம்மன்
சுவாமிமலை

அதற்கு ரமண மகரிஷி, “தன்னிலை மறந்தவன் சேஷாத்ரி, அந்நிலை எனக்கு இன்னும் வரவில்லையே என்று நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறேன்,” என்றாராம்.
இவ்வாறு தன்னிலை மறந்து மற்றவர்களுக்காகவே தன்னுடைய வாழ்வை தியாக மயமாக ஆக்கிக் கொண்ட பெருந்தகையே சேஷாத்ரி சுவாமிகள் ஆவார்கள்.
ரமண மகரிஷி தொடர்ந்து, “சேஷாத்ரி சுவாமிகளிடம் இன்னுமோர் அபூர்வ விசேஷ சக்தி உண்டு. அவர் வராஹி மூர்த்தியாய் அமரக் கூடியவர். அந்த தகுதி அவருக்கு மட்டுமே உண்டு. அதை எப்படியாவது அடியேனால் நிறைவேற்ற முடியுமா என்றுதான் தற்போது யோசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.
சேஷாத்ரி சுவாமிகளுக்கு மட்டுமே இந்த வராஹி யோகத்தில் அமர்ந்து அனுகிரகம் அளிக்கும் சக்தி உண்டு. அதற்குக் காரணம் என்ன ? சுவாமிகள் மகர புத்திரனாய் அவதாரம் கொண்டதே அதற்கு பின்னணியாய் அமைந்த தபோ சக்தியாகும்.
இரண்டாமிடத்தில் பூமிக்கு அதிபதியான செவ்வாய் மகர உச்சனாய் அமர்ந்து கேது பகவானுடன் கூடி எட்டாமிட அதிபதியான சந்திரன் கர்ம ஸ்தானமான பத்தில் அமர்ந்து வராஹி யோகம் கொண்டதால் பிறர் கர்மங்களை ஏற்றுப் புனிதப்படுத்தும் தியாக உள்ளத்துடன் திகழ்ந்தார் சேஷாத்ரி சுவாமிகள்.
ரமண மகரிஷி சேஷாத்ரி சுவாமிகளைப் புகழ்ந்து கூறினாலும் அவருடைய தியாகமும் ஈடு இணையற்றதே.
கோவணாண்டிப் பெரியவர் ரமண மகரிஷியைப் பற்றி ஒருமுறை நம் சற்குருவான சிறுவனிடம் ஒரு நாள், “நம்ம அகஸ்தியரு என்னை கூப்பிட்டு அனுப்பிச்சாரு. என்னான்னு போய் கேட்டாக்க, அதுக்கு அவரு, நைனா நம்ம பசங்களை (தேவர்களை) அனுப்பி ராமனுக்கு (அகத்தியர் ரமண மகரிஷியை ராமன் என்றுதான் அழைப்பாராம்) கோமணம் கட்டி உடுங்கடான்னு சொன்னா சரி சாமி அப்படீன்னு போய்ட்டு போய்ட்டு பதினெட்டு வருஷமா வர்றானுங்க. ஆனா அவன் கோமணம் கட்டின மாதிரி தெரியல.”
“என்னா விஷயம்னு நீ போய் அதை கொஞ்சம் கவனிச்சுட்டு வா, அப்படீன்னு அனுப்பிச்சாருடா.”
“நானும் போய் ராமனை (ரமணரை) பாத்து அவனக்கு கோமணம் எப்படி கட்டணும் அப்படீன்னு சொல்லிட்டு வந்தேன்.”
“இப்ப பாரு ஷோக்கா அதைக் (சித்தர்கள் பாணியில்) கட்டிக்கினுதான் ஒக்காந்திருக்கான்.”
“நடந்ததை அப்படியே அகத்தியரு கிட்டே சொன்னேன். ஒண்ணுமில்ல சாமி. நம்ம பசங்க (தேவ லோக தூதுவர்கள்) கோமணம் சரியாத்தான் கட்டி உட்டானுங்க, ஆனா அதுல கழுத காது வக்கல. நான் போய் கழுத காது வச்சி கட்டி உட்டுட்டேன். விஷயம் முடிஞ்சுச்சு,” என்றாராம்.
பெரியவர் தொடர்ந்து, “அதைக் கேட்ட ஒடனேயே அகத்தியரு ரொம்ப சந்தோஷப்பட்டு. நல்ல காரியம் செஞ்சிருக்க. இந்தா இத அடியேனோட காணிக்கையா வச்சுக்க அப்படீன்னு சொல்லி ஒரு தும்பைப் பூ போல கோமணத்தை குடுத்தாரு. ”
“அத அப்படியே கண்ணுல ஒத்திக்கிட்டு கொண்டு வந்துட்டேன், இந்தா இத வச்சுக்க. நீதான் கண்ணு நெறய நல்ல காரியம் செய்யப் போற. இந்த கெழவன் எம்மா தூரம்,” என்று சொல்லி பெரியவர் சிறுவனான வெங்கடராமனிடம் அந்தக் கோவணத்தைக் கொடுத்து விட்டார்.

ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பெரியவர் கொடுத்த அந்த கோவணத்துடன்தான் பிற்காலத்தில் நடந்த அனைத்து அன்னதான வைபவங்களையும் நிறைவேற்றினார் என்பது பலருக்கும் தெரியாத ஆன்மீக இரகசியம்.

கழுதைக் காது கூறும் கர்மநிலை

கழுதைக் காது என்றால் என்ன ?
இவ்வுலகில் மனிதர்கள் பிறவி எடுப்பதற்குக் காரணமே அவர்கள் முற்பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள கர்ம வினைகளே என்பது பொதுவான ஒரு காரணமாகும். இவ்வாறு ஒரு மனிதனின் கர்ம வினைகள் பிறருக்கு எத்தனையோ காரணங்களால் தொற்றி விடுகின்றன.
உதாரணமாக, ஒருவர் புகை பிடிக்கிறார் என்றால் அதனால் அவர் ஒரு வருட காலத்திற்கு ஒரு நோயை அனுபவிக்க வேண்டியிருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்நிலையில் அவருடைய நண்பர் ஒருவர் அவரிடமிருந்து இலவசமாக ஒரு காபியை பெற்று அருந்தினால் புகை பிடித்தவருடைய கர்ம வினை காபி அருந்திய நண்பருக்கு போய்ச் சேரும் என்பது விதி, இறை நியதி.
கர்மத்தின் கொடுமையைப் பொறுத்து காபி அருந்திய நண்பர் ஒரு நாளைக்கோ அல்லது ஒரு வருடத்திற்கோ கூட தன்னுடைய நண்பர் அனுபவிக்க வேண்டிய நோயை தானும் அனுபவிக்க வேண்டும். இவ்வாறுதான் கர்ம வினைகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குத் தொற்றிக் கொள்கின்றன.
இவ்வாறு கர்ம வினைகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாறுவதற்கு ஆயிரமாயிரம் கருவிகள் இருந்தாலும் இதில் எளிதாய் இருப்பது தொடும் வினையே. அதாவது ஒருவரையொருவர் தொட்டுக் கொள்வதால் மிகவும் எளிதாய் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கர்ம வினைகள் பரவி விடுகின்றன. இதை விவரித்தால் மக்கள் சமுதாயத்தில் குழப்பம் அதிகரிக்கும் என்பதால் பெரியவர்களும் மகான்களும் இதைப் பற்றிய ஏனைய விளக்கங்களை அளிப்பது கிடையாது.

கழுதைக் காது கோவணத்துடன்
திகழும் ரமண மகரிஷி

தொடு கர்மத்திற்கு அடுத்தபடியாக மக்கள் அணியும் ஆடைகள் மூலம் கர்ம வினை மக்களிடையே பரவுகிறது. இந்த கர்மத்தின் தன்மையை, கர்மத்தால் வரும் வேதனையை முழுமையாக உணர்ந்த ஜீவன்களே கழுதைகளாகும். எனவே மனிதர்களின் கர்ம வினைகளை ஏற்பதற்காக இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன்களே கழுதைகளாகும்.
ஒரு கழுதை ஏற்கும் கர்மச் சுமைகளை எந்த மனிதனாலும் ஏற்க முடியாது. இந்த விஷயம் சலவைத் தொழிலாளர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் எந்த சலவைத் தொழிலாளியும் முடிந்த மட்டும் அழுக்குத் துணிகளை தான் சுமந்து செல்வது கிடையாது.
அழுக்குத் துணிகளை கழுதைகளின் மேல் ஏற்றிச் சென்று ஆறு, குளங்களை அடைந்த பின்னர் அந்த அழுக்குத் துணிகளை அப்படியே நீருக்குள் தள்ளி விடுவார்கள். அழுக்குத் துணிகள் முற்றிலுமாக நீரில் நனைந்த பின்தான் அதை எடுத்து துவைக்க ஆரம்பிப்பார்கள்.
தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தாங்களே அந்த அழுக்குத் துணிகளை சுமந்து செல்ல வேண்டி வந்தால் அதனால் பல நாட்களுக்கு அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு விடும். அவ்வாறு உடல் நலம் குன்றி வாடும் தொழிலாளர்களைக் கண்டு கழுதை தனக்குள் சிரித்துக் கொள்ளுமாம.
“பார், ஒரு நாள் கர்மத்தை இவனால் தாங்க முடியவில்லை. நானோ எவ்வளவோ பேருடைய கர்மாவை வருடக் கணக்கில் சுமந்து செல்கிறேன்,” என்று நினைத்து பெருமிதத்துடன் தன்னுடைய காதுகளை நிமிர்த்திக் கொள்ளுமாம்.
அவ்வாறு பெருமிதத்தில் நிமிர்ந்து நிற்கும் காதுகளைத்தான் சித்தர்கள் கழுதைக் காது என்று அழைக்கிறார்கள்.
ரமண மகரிஷி பத்தாயிரம் முறைக்குக் குறையாமல் திருஅண்ணாமலையை மானசீகமாக கிரிவலம் வந்து தட்சிணா மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்றார் அல்லவா ? ஆனால், மகான்கள் தாங்கள் பெற்ற இறை அனுகிரகங்களை தாங்களே வைத்துக் கொள்வதில்லை. அதை மற்றவர்களுக்கும் பங்கிட்டு அளிப்பதுதானே முறை. அவ்வாறு மற்றவர்களுக்கு பங்கிட்டு அளிக்கும்போது அவர்களுடைய கர்ம வினைகள் மகான்களுக்கு வந்து விடுகின்றன. அந்த கர்ம வினைகளையே மகான்கள் புற்று நோய், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்கள் மூலம் ஏற்று அனுபவித்து மக்கள் சமுதாயத்திற்கு தொண்டாற்றி வருகின்றனர்.
இவ்வாறு மற்றவர்களின் கர்ம வினைகளை ஏற்பதற்கு ஒரு சாதனமாய் கோவணத்தில் கழுதைக் காதை அமைத்துக் கொள்ளும் முறையைத்தான் கோவணாண்டிப் பெரியவர் ரமண மகரிஷிக்கு விளக்கினார். இந்த கர்ம வினைப் பாங்கை ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு விதத்தில் நிறைவேற்றுவார்கள். காஞ்சிப் பெரியவாளின் தண்டமும், விசிறி சுவாமிகளின் விசிறியும், கசவனம்பட்டி சித்தரின் பீடியும், வெங்கடராம சுவாமிகளின் வரிசை மடிப்பும் நீங்கள் அறிந்த சில மகான்களின் கழுதைக் காதுகளாகும்.

காமாக்யா திருத்தலம்

பெரியவர் தனக்கு காமாக்யா யாத்திரையில் காட்டுவாசியாய் வந்த சிவபெருமானை அடையாளம் காட்டாமல் போனது குறித்து சிறுவனுக்கு வருத்தம் பெருகிக் கொண்டே வந்தது. பெரியவரிடம் இதை வாய் விட்டுக் கேட்காமல் போனாலும் இந்த மனக் குறை சிறுவனை வாட்டிக் கொண்டே வந்தது.
பெரியவரிடம் இருந்த கோபத்தை விட இவ்வளவு திருக்கோயில்களை தரிசனம் செய்தும், எவ்வளவோ திருப்பணிகள், விரதங்களை நிறைவேற்றியும், பல அற்புத தீர்த்தங்களில் நீராடியும், கால்கள் தேயும் அளவிற்கு திருஅண்ணாமலையாரை கிரிவலம் வந்தும் நாம் ஏன் இன்னும் மக்கு மன்னாராகவே இருக்கிறோம் என்ற இயலாமையே சிறுவனின் வருத்தத்தை பன்மடங்காக்கியது.
சிறுவனின் ஏக்கத்தை அறியாதவரா இடியாப்ப ஈசன் ?

ஒரு நாள் திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் பெரியவருடன் சென்று கொண்டிருந்த சிறுவனை கிரிவலப் பாதையிலிருந்து விலக்கி மலையின் மறுபுறத்திற்கு கூட்டிச் சென்றார்.
சிறுவன் குஷியானான். கிரிவலப் பாதையிலிருந்து விலகிப் பெரியவர் போனாலே அதில் ஏதோ ஆன்மீக இரகசியம் இருக்கிறது என்பதை பல முறை அறிந்து அனுபவித்திருக்கிறான் சிறுவன்.
வழக்கமாக கரடு, முரடான, முட்கள் நிறைந்த பாதையில் அழைத்துச் செல்லும் பெரியவர் தற்போது சமதளமான வயல் வெளியில் அழைத்துச் சென்றதுதான் சிறுவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சற்று தூரத்திலேயே சிறுவனை பெரியவர் நிற்கும்படிக் கூறி ஆடைகளை களையும்படிச் சொன்னார். சிறுவன் அனைத்தையும் கழற்றி அவதூத கோலத்தில் நின்றான்.

“பூநூலையும் கழட்டிடுடா …” என பெரியவர் கூறவே, பூநூலையும் கழற்றி ஆடைகளின் மேல் வைத்து விட்டான் சிறுவன்.
அவதூத கோலம் முழுமை அடைந்தது .
பெரியவர் குனிந்து ஏதோ மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே தன் சனி விரலால் தரையில் கீறினார். அடுத்த விநாடி ஆர்டீசியன் ஊற்று போல தரையிலிருந்து தண்ணீர் பீறிட்டுக் கிளம்பி சிறுவன் மேல் பொழிந்தது.
சிறுவன் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய் விட்டான்.
பூமியிலிருந்து தீர்த்தம் பெருகியது ஆச்சரியம் என்றால் அதை விட சிறுவன் அனுபவித்த ஆச்சரியம் என்னவென்றால் அந்த ஊற்று நீர் கைலாய மலையில் உள்ள மானசரோவர் தீர்த்தம் போல் குளிர்ச்சியாக இருந்ததுதான்.
பெரியவர் சிறுவனை கைலாய யாத்திரைக்கு அழைத்துச் சென்றபோது மானசரோவர் தீர்த்தத்தையும் காட்டினார். சுமார் 250 அடிக்கு மேல் ஆழமுடைய அக்குளத்தின் அடியில் இருந்த கூழாங் கற்கள் கையால் தொடும் அளவுக்கு மிக அருகாமையில் இருப்பது போல் தோன்றின. அந்த அளவிற்கு மானசரோவர் தீர்த்தம் தூய்மையாக இருந்தது.
அப்போது ஆச்சரியத்துடன் சிறுவன் தன்னையும் அறியாமல் அந்த தீர்த்தத்திலிருந்து சிறிது எடுத்து தன் வாயில் வைத்தான். மறு விநாடி வாய், உதடு, நாக்கு, முகம் எல்லாம் விறைத்துக் கொண்டன. பல் ஈறுகளில் விண் விண் என்று முகமே வெடித்து விடும் அளவிற்கு வலி. பற்கள் எல்லாமே கொட்டி விடுமோ என்பது போன்ற பிரமை.
சிறுவனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. பெரியவரிடம் முறையிடலாம் என்று பார்த்தால் வாயைத் திறக்கவே முடியவில்லை. வெகு நேரம் கழித்தே சகஜ நிலைக்கு திரும்பினான் சிறுவன்.
அப்போது பெரியவர் சிறுவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “ஏன்டா அவசரக் குடுக்கை. ஒன்ன தீர்த்தத்த பாருன்னுதானே சொன்னே. அத எதுக்கு தொட்டே,” என்று செல்லமாக கடிந்து கொண்டார்.
மலரும் நினைவுகளால் மலர்ந்த சிறுவன் அந்த மானசரோவர் தீர்த்த குளிர்ச்சியுடன் விளங்கிய இந்த தீர்த்தம் தன்னை ஏதும் பாதிக்கவில்லையே என்று நினைத்தபோது, எதையும் குருவருளால் நிறைவேற்றினால் அதன் மகத்துவமே தனி என்ற பழைய பாடத்தை மீண்டும் புதிதாக நினைவு கூர்ந்தான்.
பெரியவர் கையை அசைத்தார். தீர்த்தம் மறைந்தது.
சற்று முன்னால் அழைத்து வந்து ஓரிடத்தில் பத்மாசனம் இட்டு சிறுவனை அமரச் சொன்னார். கண்களை மூடிக் கொள்ளும்படியும் கூறினார். அதைக் கேட்டு சிறுவனுக்கு உள்ளூர சிரிப்பு வந்தது.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
திடியன்மலை

அதற்குக் காரணம் மீண்டும் மலரும் நினைவுகள்தான் ….
ஒருமுறை ஒரு சிவாலயப் பிரகாரத்தில் சிறுவன் பெரியவருடன் சென்று கொண்டிருந்தான். அங்கு தட்சிணா மூர்த்தி சுவாமி எதிரே கண்ணை மூடிக் கொண்டு மூன்று நான்கு பேர் அமர்ந்திருந்தனர். அதைப் பார்த்தவுடன் சிறுவன் மனதில், “நமக்கு ஏன் வாத்யார் தியானமே சொல்லித் தர மாட்டேன் என்கிறார். எப்போது பார்த்தாலும் கொளுத்தும் வெயிலில் நடப்பது, சோறு தண்ணீர் இல்லாமல் எல்லா திருத்தலங்களைப் பார்க்க அலைய விடுவது, வௌவால் எச்சங்களை கூடை கூடையாக கூட்டி அள்ளுவது, எந்த வசதியுமே இல்லாத இடத்தில் சட்டி பானைகளை வைத்துக் கொண்டு அன்னதானம் செய்வது, இப்படி எல்லாம் கஷ்டமான வேலையைத்தானே தலையில் கட்டுகிறார்.”
“ஒரு முறையாவது இது போல் அமைதியாக ஓரிடத்தில் தட்சிணா மூர்த்தி சுவாமி முன்னால் அமர்ந்து தியானம் செய்யும் வித்தையை சொல்லிக் கொடுக்க மாட்டேன் என்கிறாரே,” என்று நினைக்க ஆரம்பித்தான்.
சிறுவனின் மன ஓட்ட நீரோட்டத்தை கிரகித்த பெரியவர், “நைனா, அவுங்க என்ன தியானம் செய்றாங்கன்னு ஒனக்கு சொல்றேன். அது ஒனக்கு புடிச்சா சொல்லு. ஒனக்கும் அது போலவே சொல்லித் தர்றேன். இப்படி உக்காரு….” என்று சொல்லி சற்று தூரத்தில் சிறுவனுடன் தானும் அமர்ந்து கொண்டார் பெரியவர்.
“அதோ பார் அங்கே கடைசிலே ஜிப்பா போட்டுக் கிட்ட ஒக்காந்திருக்கானே … அவன் எந்த ஹோட்டல்ல மசால் தோச நல்லா இருக்கும் அப்படீன்னு யோசிச்சிக்கிட்டிருக்கான்.”
“அவன் பக்கத்துல கழுத்து நெறய ருத்ராட்ச மாலையோட இருக்கான் பாத்தியா. அவன் நேத்து பாத்த புது சினிமா படத்த மனசுல ஓட்டிக்கிட்டு இருக்கான்.”
“அவனுக்குப் பக்கத்துல ஒடம்பு பூரா விபூதி பட்டையோட இருக்கான் பாரு, அவன் எவன் பெண்டாட்டியையோ துயிலுரிஞ்சுகிட்டு இருக்கான்,” என்றார்.
“இதெல்லாம் கத்துக்குனுமா ?”
சிறுவன் என்ன பதில் கூறியிருப்பான் என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.
“இங்க பாருடா, தியானம் செய்யனும் சொல்லி கண்ண மூடிக் கிட்டா, கண்ணு, உள்ள என்ன தெரியுது. வெறும் இருட்டுதான தெரியுது. அதுல என்ன பிரயோசனம். அதுக்கு கண்ண நல்லா தெறந்து பாரு. எதுருல ஒரு ஏழை இருக்கான். அவன் வயித்த பாரு. அது காலியா இருக்கு. ஒரு ரெண்டு பொட்டலம் இட்லி வாங்கி குடு. அவன் வயிறு நெரம்பும்.”
“பக்கத்துல சோர்ந்து போய் படுத்திருக்கிற நாய பாரு. அது சாப்பிட்டு ரெண்டு நாளு ஆச்சு. அதுக்கு நாலு பொறய வாங்கிப் போடு. சந்தோஷப்படும்.”
“அதுனால தியானம் செய்யறேன்னு சொல்லிட்டு கண்ண மூடிக்கிட்டு தூங்கறத விட கண்ண தொறந்து கிட்டு நாலு பேருக்கு நல்ல காரியம் செய்யேன்.”
பெரியவரின் இடியாப்ப உபநிஷத் வாக்கியங்கள், கௌஸ்துப வேதப் பரல்கள் சிறுவனின் நெஞ்சில் பசு மரத்தாணியாய்ப் பதிந்தன.
பெரியவர் தொடர்ந்தார். “இதத்தாண்டா ரிஷிகேஷ் சிவானந்தாவும் சொன்னாரு. கடவுள் படச்ச எல்லாம் அதது காரியத்தை கரீட்டா (சரியாக) செய்யுது. விசிறி காத்து குடுக்குது. லைட்டு வெளிச்சத்த குடுக்குது. ஆனா மனுஷன்தான் என்ன செய்யனும்னு தெரியாம சோம்பறியா திரியிறான்.”
... ... ...
திருஅண்ணாமலையில் பத்மாசனம் இட்டு அமர்ந்திருந்த சிறுவனின் அருகில் சென்று பெரியவர் தன்னுடைய இடது உள்ளங்கையை சிறுவனின் மார்பிலும் வலது உள்ளங்கையை அவன் முதுகுத் தண்டின் கீழ்ப் பகுதியிலும் வைத்துக் கொண்டு சிறுவனிடம்,
“நெஞ்சில ஆத்தாள நெனச்சுக்கோ
நெஞ்சில ஆத்தாள நெனச்சுக்கோ
நெஞ்சில ஆத்தாள நெனச்சுக்கோ”
என்று மூன்று முறை மெதுவாக தெளிவாகக் கூறினார். பெரியவரின் கைகள் சிறுவனின் உடலில் சற்றே அழுந்திய நிலையில் இருந்தன.
சிறுவன் தினமும் ஆயிரம் முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்கிய ராயபுரம் கல்மண்டபம் அங்காள பரமேஸ்வரி தேவியின் திருஉருவத்தை கண் முன் கொண்டு வந்து வணங்கினான். மறு விநாடி தேவியின் திருஉருவம் மின்னல் வேகத்தில் மின்னல் கீற்றாய் அவன் நெஞ்சில் நிறைந்து பிரகாசித்து மறைந்தது.
சிறிது நேரத்தில் பெரியவர் சிறுவனின் முதுகைப் பற்றிய இடத்தில் ஒரு சிறு குறுகுறுப்பு உணர்வை சிறுவன் பெற்றான். அத்துடன் உடல் வெப்பமும் சிறிது சிறிதாக அதிகரிப்பதை உணர்ந்தான்.
இங்கு மிகவும் முக்கியமான விஷயத்தை இறை அடியார்களுக்கும் ஆன்மீக அன்பர்களுக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம். பெரியவர் சிறுவனின் உடல் மீது கை வைத்த பின் அவன் பெற்ற அனுபவங்கள் எல்லாமே மனம், வார்த்தைகளைக் கடந்த மெய் ஞான அனுபவங்கள். அந்த அனுபவங்களை வார்த்தைகளால் விளக்க இயலாது.
அதே சமயத்தில் இந்த மெய் ஞான அனுபவங்களை மற்றவர்களின் நலனுக்காக அர்ப்பணித்தே ஆக வேண்டும் என்று ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பெரு விருப்பம் கொண்டுள்ளதால் ஆன்மீகத்தில் முன்னேறிச் செல்லும் இறை அன்பர்களுக்கு இந்த விளக்கங்கள் கலங்கரை விளக்கமாக, வழிகாட்டியாக இருக்கட்டும் என்பதாலேயே, “சிறுவன் பார்த்தான், கேட்டான்” என்றெல்லாம் கூறி விஷயங்களை அளிக்கிறோம்.
இவற்றை அடியார்கள் ஒரு முறைக்குப் பலமுறை ஊன்றிப் படித்து அச்சடித்த வார்த்தைக்குப் பின்னால் உள்ள மெய்ப் பொருளை கிரகித்துக் கொள்ளுமாறு மீண்டும் மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
முதுகுத் தண்டிலிருந்து ஒரு வித உணர்வு மேலெழுவதை சிறுவன் உணர்ந்தான். இனம் புரியாத பேரானந்தம் உடலை, மனத்தை, உள்ளத்தை வியாபித்தது.
கண் முன்னால் அருமையான தின்பண்டங்கள், பல்வேறு உணவுப் பொருட்கள், விதவிதமான பழ ரசங்கள் தோன்றின. அவற்றை எல்லாம் அப்படியே விழுங்க வேண்டும் என்ற பேராவல் சிறுவன் மனதில் எழுந்தது.
அங்கே பெரியவர் குரல் ஒலித்தது. “அமைதி, அமைதி, அமைதி.”
அந்த உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றாக சிறுவனின் மனக் கண்ணிலிருந்து மறைந்து போயின.
முதுகுத் தண்டில் தோன்றிய அந்த உணர்வே குண்டலினி சக்தி என்பதை சிறுவன் பின்னர் உணர்ந்தான்.
இப்போது குண்டலினி சக்தி மெதுவாக ஊர்ந்து சென்று ஸ்வதிஸ்தான சக்கரத்தை அடைந்தது.
சிறுவன் இதுவரை நேரில் பார்த்திருந்த பல பெண்களும், இதற்கு முன் பார்த்திராத பல அழகிய பெண்களும். அவன் கண் முன் அணிவகுத்து நின்றனர். அவர்களை எல்லாம் கட்டித் தழுவி ஆனந்திக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் பேரலைகளாய்த் தோன்றி புயலாய் உருவெடுத்தது.

பெரியவர் ஆராய்ச்சி மணியை அடித்தார். “அமைதி அமைதி அமைதி.”
அந்தப் பெண்களின் உருவங்கள் காற்றில் கரைந்து மறைந்தன.
அடுத்து குண்டலினி சக்தி மணிபூரக சக்கரத்தை அடைந்தது. தனது உடல் பலம் அசாத்தியமாக பெருகுவதை உணர்ந்தான் சிறுவன். ஆயிரம் யானைகளை வாயால் ஊதித் தள்ளலாம் போலிருக்கிறதே என்ற உத்வேகம் மனதினுள் ஆர்ப்பரித்தது.
பெரியவர் எச்சரிக்கை விடுத்தார். “அமைதி, அமைதி, அமைதி.”
சிறுவனின் உடலில் எழுந்த பலம் மெழுகாய் உருகி மறைந்தது.
அடுத்து குண்டலினி சக்தி அனாஹத சக்கரத்தை அடைந்தது.
தன்னைச் சுற்றி எங்கும் வேத ஒலிகள் ஒலிக்கக் கண்டான் சிறுவன். நாலா பக்கமும் இறை நாம ஒலிகள் எதிரொலித்தன. இந்த ஒலிகள் எண்ணற்ற காயத்ரீ மந்திரங்களில் லயம் அடைந்து இவை அனைத்தும் ஓங்காரத்தில் லயம் பெற்றன. ஓங்காரமே எங்கும் நிரவியது. சற்று நேரத்தில் அதுவும் மறைந்தது போல் தோன்றியது.
இதற்குப் பின் விஷுத்தி, ஆக்ஞா சக்கரத்தில் சிறுவன் பெற்ற அனுபவங்களை விவரிக்க இயலாது. ஆனால், தான் யார் என்ற ஆத்ம ஞானமும் அதைத் தொடர்ந்த ஆன்மீக நிலைகள் பற்றிய ஞானத்தையும் சிறுவன் பெற்றான்.
ஆக்ஞா சக்கரத்தை குண்டலினி அடைந்தபோது பெரியவரின் தூல உருவ தரிசனமும் அவருடைய சூட்சும உருவ தரிசனங்களும் தோன்றி அவை தட்சிணா மூர்த்தியின் திருஉருவத்தில் ஐக்கியம் பெற்றன. கல்லாலின் மரத்தையும், சனகாதி முனிவர்களின் தரிசனத்தையும், தட்சிணா மூர்த்தியின் பௌதீக உருவ தரிசனத்தையும் பெற்ற சிறுவன் கண்கள் முன்னால் திடீரென அனைத்தும் மறைந்து போயின.
எங்கும் ஒளி, எங்கும் வெளிச்சம், பேரொளி வெள்ளமே.
“பெரியவரின் குரல் தொடர்ந்தது. இதுதான்டா கடுவெளியைக் கடந்த அகண்ட சச்சிதானந்த பெருவெளி.”
“இப்ப சாமியோட தரிசனத்தைப் பாருடா.”
“சாமி கால் விரலை மட்டும் பாரு. ”
“தெரியுதா ? ”
“அவரோட வலது விரலைப் பாரு.”
“தெரியுதா ?”

“இப்ப பக்கத்துல போய் பாரு. தெரியுதா ?”
“இன்னும் பக்கத்துல போய் பாரு. இன்னும் பக்கத்துல போய் பாரு. இன்னும் பக்கத்துல போய் பாரு.”
சிறுவன் பார்த்தான், பார்த்தான், பார்த்துக் கொண்டே இருந்தான்.
காவிரி கங்கை மணலைக் கூட எண்ணி விடலாம். ஆனால், இதுவரை எம்பெருமான் திருவருளால் தோன்றிய பிரம்ம மூர்த்திகளை எண்ண முடியாது என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. அந்த பிரம்ம மூர்த்திகள் அனைவரும் செந்தாமரை மேல் தியானத்தில் ஆழ்ந்து இறைவனின் வலது கால் நுனியில் ஓர் ஓரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த அதிசயத்தை சிறுவன் பார்த்தான்.

பெரியவரின் இனிய குரல் தெளிவாக ஒலித்தது. “நைனா, போதும் வாடா. ஒரு சதுர்யுகம் சாமிய பாத்துட்டடா. செய்ய வேண்டிய காரியம் நெறய இருக்குடா.”
தியானத்திலிருந்து எழுந்தான் சிறுவன். (“எழுந்தார்” என்பதே சரியான பிரயோகம் என்றாலும் கதையின் சுவையும் முக்கியம் அல்லவா ?) சுற்றும் முற்றும் பார்த்தான். பிரபஞ்சமே வியக்கும் ஆன்மீக அனுபவங்களை சிறுவன் பெற்றாலும் கோவணாண்டிப் பெருமானுக்கு நன்றியை அர்ப்பணிக்க அவன் கண்கள் தன் குருவின் திருப்பாதங்களையே தேடின.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை கோவணாண்டியைக் காண முடியவில்லை.
பெரியவர் எங்கே போனார் ?
“அட்ட பூச்சி எங்க வந்திச்சி, எங்க போச்சி,” பெரியவரின் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் சிறுவனின் ஆழ்மனதில் எதிரொலித்தன.
சிறுவன் மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.
ஒரு சதுர்யுகம் என்பது 43 லட்சம் ஆண்டுகளுக்கு மேல். இத்தனை லட்சம் ஆண்டுகள் இறைவனை தரிசனம் செய்த ஸ்ரீவெங்கடராம சுவாமிகளை தரிசனம் செய்வதை விட, அவர் காட்டிய ஆன்மீக வழியில் நடப்பதை விட கலியுக மனிதன் வேறு எதை சாதித்து விட முடியும் ?
அற்புதமான, இந்த பிரபஞ்சமே கண்டிராத ஆன்மீகப் பெருந்தகையான ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தான் பெற்ற இறை அனுபவங்களையும் மற்றவர்களுக்காக அர்ப்பணித்தார்.
எப்படி ?
எங்கு இத்தகைய மனிதக் கற்பனையை மிஞ்சிய ஆன்மீக அனுபவத்தைப் பெற்றாரோ அந்தப் புனிதமான இடத்தில் கோடிக் கணக்கான இறை பக்தர்களுக்கு இறை பிரசாதத்தை அளித்து அந்த அண்ணாமலை பிரசாதத்தில் தான் பெற்ற இறை சக்திகளையும் நிரவி தன்னலமற்ற சேவையை ஆற்றினார்கள் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள். இந்த ஆன்மீக அனுபவங்களுக்கு ஆதரவாக அமைந்த அகஸ்திய தீர்த்தத்திலிருந்து தீர்த்தத்தைப் பெற்று தான் நிகழ்த்திய அன்னதான பிரசாத மகிமைகளைப் பூரணம் செய்தார் என்பதும் ஒரு சுவையான ஆன்மீக இரகசியமே.
அதோடு நின்றதா அன்னாரின் தியாக சேவைகள் ?
எம்பெருமானின் தரிசனத்துடன் அன்னதானமும் நிறைவேற்றிய ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அந்த தூய தலத்திலேயே தன்னுடைய ஜீவாலயத்தையும் பெற்று அருள்பாலிக்கிறார் என்றால் அவருடைய கருணைக்கு இணையேது, ஈடேது ?
ஆம், திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்கிய தரிசனமே இத்தகைய ஆன்மீக அனுபவங்கள் அரங்கேறிய புனித மேடை.

திருவருள் தரும் திருமலை

“திரு” என்ற சொல்லுக்கு செல்வம் என்றே பொருள் கொள்வோம். ஆனால், செல்வம் என்பது இயற்கையிலேயே ஓரிடம் விட்டு மற்றோரிடம் உருண்டு செல்லும் இயல்புடையது அல்லவா ? அப்படியானால் திருமலை என்பது அழியக் கூடிய, நிலையற்ற செல்வத்தை அருளும் தலம் என்று பொருள் கொள்ள முடியாது அல்லவா? எனவே திருமலை என்றால் மலை அசையாதது போல் நிலையான, அழியாத செல்வத்தைத் தரும் தலம் என்று பொருள் கொள்வதே சிறப்புடையதாகும்.
எது நிலையானது ? இவ்வுலகில் அருணாசலம் ஒன்றே என்றும் நிலையான, மாறாத செல்வம். அந்த அழியாச் செல்வத்திற்கு வழிகாட்டுபவையே இங்குள்ள வில்வ மரங்கள்.

அது எப்படி என்ற விளக்கமும் சுவையானதே.
கிணற்று நீரும், பெண்களின் தனமும், ஆல மர நிழலும் குளிர் காலத்தில் கதகதப்பாகவும் வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும் என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. மேலோட்டமாக இதை ஏதோ முதியோர் வாக்கு என்று நினைக்காமல் இதன் பின்னால் உள்ள ஆன்மீக இரகசியங்களை ஆராய்ந்து பார்த்தால் திருமலை எப்படி திருவருளைத் தரும் என்ற உண்மைகள் தெளிவாகும்.

ஸ்ரீரதி மன்மதன் திருலோகி

கிணற்று நீர், பெண்களின் தனம், ஆல மர நிழல் இவைகளின் குளிர்ச்சி, சூடு தத்துவத்தைப் புரிந்து கொள்ளும் முன்னால் மனிதர்களுக்கும் மற்ற பொருட்களுக்கும் உண்டான குடு, குளிர்ச்சி த்த்துவத்தைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
உள்சூடு, வெளிசூடு, நடுசூடு என்று மூன்று விதமான சூட்டுத் த்த்துவங்கள் நம் உடம்பில் விரவி உள்ளன. இந்த்த் சூட்டுத் தத்துவங்களை புரிந்து கொள்ளாத காரணத்தால்தான் பெரும்பாலானோர் நோய்வாய்ப்பட்டு வேதனை அடைகிறார்கள். இந்தச் சூட்டுத் தத்துவங்கள் சித்தர்களுக்கு மட்டுமே தெரிந்த இரகசியமாக இருப்பதால் இந்த தத்துவங்களைப் புரிந்து கொள்ள முயற்சிப்பதைவிட அவர்கள் கூறும் நற்பழக்க வழக்கங்களை கண்ணை மூடிக் கொண்டு நிறைவேற்றி வந்தால் நோய் நோடியற்ற நீண்ட வாழ்வையும் நல்லொழுக்கத்தையும் பெற்று இன்பமுடன் வாழலாம் என்பது உறுதி.
உதாரணமாக, நம் உள்ளங்கை நடு சூடு தத்துவத்தையும், பெண்களின் புறங்கை வெளி சூடு தத்துவத்தையும் கொண்டுள்ளது. அதனால், திருமண வைபவத்தின் போது மணமகன் மணமகளின் குவிந்த கை விரல்களைப் பற்றும் பாணி கிரஹணம் என்னும் சடங்கை நிறைவேற்றுகிறார்கள். இந்த பாணி கிரஹண மந்திரங்களைக் கவனமாகக் கேட்டுப் புரிந்து கொண்டால் ஆரோக்கியமான உடல், மன வளங்கள் கொண்ட குழந்தைகள் பிறக்க ஏதுவாகும்.
இந்த வைபவத்தில் மேலும் சில அற்புத இரகசியங்கள் உள்ளன. கிரஹணம் என்றால் விழுங்குதல், பற்றுதல் என்று பொருள். சூரிய கிரஹணத்தின்போது ராகு சூரியனை விழுங்குவதாகக் கூறுகிறோம். எனவே பாணி கிரஹணம் என்றால் மணமகன் மணமகளின் கையைப் பற்றுகிறான் என்று மட்டும் அல்லாது மணமகன் மணமகளை விழுங்குகிறான் என்ற பொருளும் உண்டு.
காமேஸ்வரனான எம்பெருமான் சிருஷ்டியைத் தோற்றுவிக்க மன்மதனை அனுப்பினார்கள் அல்லவா ? அப்போது மன்மதனை சிவபெருமான் எரித்து காம தகனம் செய்தார் என்று சொல்கிறோம். உண்மையில் இறைவன் லீலையில் எதுவுமே அழிவதில்லை என்றுதானே கூறுகிறோம். அதை கருத்தில் கொண்டு இவ்வுண்மையை நோக்கினால் அங்கு நிகழ்ந்தது காம தகனம் அல்ல. அது காம தமனமே. அதாவது காமம் அழியவில்லை. காமம் தமனம் செய்யப்பட்டு அதாவது காமம் அடக்கப்பட்டு சிவனின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது.

காமம் அழிந்து விட்டால் சிருஷ்டி எப்படி நடக்கும் ? இதுவே பாணி கிரஹணத்தில் நிகழ்வது. மணமகன் மணமகளை விழுங்கி அதாவது சக்தி தத்துவம் என்னும் காமத்தை விழுங்கி தன்னுடைய கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொண்டு அதன் மூலம் முறையான இல்லறமாகிய நல்லறத்தை நடத்துகிறான் என்பதே பொருளாகும். அப்போதுதான் அவன் உண்மையில் வள்ளுவர் கூறிய, “பிறன்மனை நோக்கா பேராண்மை”, கொண்ட ஆண் மகனாகத் திகழ்வான்.
இவ்வாறு நடு சூடு, வெளி சூடு தத்துவங்கள் அமையாமல் போவதால்தான் சுய போகத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, தாழ்வு மனப்பான்மை போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.

கொடுக்க வேண்டியது எது ?

ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது கை கொடுத்துக் கொள்ளும் பழக்கம் வேகமாக அனைத்துத் தரப்பினரிடமும் பரவி வருவதைக் காண்கிறோம். இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய பழக்கமாகும். கை கொடுக்கும்போது இரு உள்ளங்கைகள் சேர்வதால் அங்கு நடு சூடும் நடு சூடுமே இணைகின்றன. அதனால் உடலில் அளவுக்கு மீறிய உஷ்ணமும் உடல் தளர்ச்சியும் ஏற்படுகிறது. விரல் நுனிகளில் உள்ள நுண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.
ஒருவர் ஒருவரைப் பார்க்கும்போது இரு உள்ளங்கைகளையும் குவித்து வணக்கம் சொல்வதே நம்முடைய பண்டைய பண்பாடு. இதனால் இரு உள்ளங்கைகளின் இடைவெளியில் உள்ள பரவெளி காற்று மண்டலம் வணக்கம் செலுத்துபவரின் இதயத்திற்கு அருகாமையில் அமைவதால் இதயத்தில் உறையும் ஆண்டவனின் கருணையை மற்றவர்களுக்கு அர்ப்பணித்தவர்கள் ஆகிறோம்.
இரு உள்ளங்கைகளுக்கு இடையில் உள்ள காற்று மண்டலம் சூரிய சந்திர சக்திகளின் சங்கமமாகத் திகழும். வலது கை சூரிய சக்திகளையும், இடது கை சந்திர சக்திகளையும் கொண்டிருப்பதால் இவ்விரு சக்திகளின் சங்கமத்தில் விளையும் அமைதி சமுதாயத்திலும் அமைதியை ஏற்படுத்தும்.
ஆனால், கைகொடுத்துக் கொள்ளும் போது சூரிய சக்திகள் சூரிய சக்திகளால் எதிர்கொள்ளப்பட்டு உடம்பின் உஷ்ணம் தேவையில்லாமல் அதிகரிக்கிறது.
இவ்வாறு சூடு குளிர்ச்சி தத்துவத்தைப் புரிந்து கொண்டு செயல்பட்டால்தான் கிணற்று நீரின் குளிர்ச்சியைப் புரிந்து கொள்ள முடியும். கிணற்று நீரின் குளிர்ச்சியைப் புரிந்து கொண்டதால்தான் காஞ்சி பரமாச்சாரியார் அவர்கள் கிணற்று நீரை வாளி கொண்டு கயிறு மூலம் இறைக்காமல் கையால் வாளியில் நீர் எடுத்து நீராடி வந்தார்கள்.
இராட்டினம் கொண்டு கிணற்று நீரை இறைக்கும்போது அதன் சூட்டுத் தன்மை மாறி விடும். இது ஒரு பெரிய விஷயம் அல்லவே என்று நீங்கள் நினைக்காலாம். ஆனால், கிணற்று நீரின் குளிர்ச்சி தன்மை புரிந்தால்தான் பரமாச்சாரியார் சுவாமிகள் அடுத்து சந்திர மௌலீஸ்வர்ர் பூஜையில் அர்ப்பணிக்கப்படும் வில்வ இலையின் குளிர்ச்சி தன்மையைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வாறு ஒரு தெய்வீக விஷயம் மற்றொன்றிற்கு பாலமாக, தொடர்புடையதாக அமைகிறது.

அடிமுடி காணா (காணும்?)
படலம் கடுவெளி

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்படும் வில்வ இலையைப் பற்றி புரிந்து கொண்டால்தான் மரம் முழுவதுமே வில்வ இலைகள் நிறைந்திருக்க ஆதிசங்கரர் எதற்காக, “ஏக வில்வம் சிவார்ப்பணம்,” என்று ஒரே ஒரு வில்வ இலையை அர்ப்பணித்தார் என்ற இரகசியம் புரிய வரும்.
வில்வ இலையைப் பற்றி புரிந்து கொண்டால்தான் இலைக்குப் பின்னால் தோன்றிய வில்வ காயைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். வில்வ காயைப் பற்றி புரிந்து கொண்டால்தான் பூசுர ஜோதியைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். பூசுர ஜோதியைப் பற்றி புரிந்து கொண்டால்தான் பெண்களின் தனத்தைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.
பூசுர ஜோதி என்றால் என்ன ? பிரம்மா விஷ்ணு இவர்களில் யார் பெரியவர் என்ற தர்க்கம் எழுந்த போது அடி முடி காண அழற் பிழம்பாக எம்பெருமான் அவர்கள் முன்னே தோன்றினார் அல்லவா ? அப்போது எழுந்த அழற் பிழம்பின் ஓர் ஜோதி அம்சமே பூசுர ஜோதி ஆகும். பூசுரம், பூசரை, பூசுர ஜோதி அனைத்தும் சுட்டிக் காட்டுவது ஒன்றையே.
இந்த பூசுர ஜோதி அத்தருணத்தில் பூமியில் மட்டுமல்லாது அண்ட சராசரம் எங்கும் வியாபித்திருந்த வில்வ காய்களிலும் பரிணமித்தது. அப்போது ராச்சாண்டார் திருமலையில் சிருஷ்டி கொண்ட வில்வ மரங்களிலும் இந்த பூசுர ஜோதி வியாபகம் கொண்டது. எனவேதான் திருஅண்ணாமலைக்கு நிகரான பழைமை உடையதாக இத்தலத்தைப் போற்றிப் புகழ்கிறார்கள்.
ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதப் பிறப்பின்போது இந்த பூசுர ஜோதியின் ஒரு பகுதி திருஅண்ணாமலையிலிருந்து வெளிப்பட்டு பூமியெங்கும் உள்ள காற்றுப் பரல்களுடன் கலந்து மக்களுக்குத் தேவையான ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. மார்கழி மாதம் வாசலில் சாணம் தெளித்து மாக்கோலம் இட்டு ஒரு சாணி உருண்டையின் மேல் பரங்கிப் பூவை வைக்கும்போது இந்த பூசுர ஜோதி அதில் வியாபித்து மனித சமுதாயத்திற்கு அளப்பரிய நன்மைகளை அளிக்கிறது.
மார்கழி மாதம் மட்டும் காலையில் எழுந்து இந்த பூசுர ஜோதி சக்திகளைப் பெற்றாலே போதும். வருடம் முழுவதும் மக்களுக்குத் தேவையான உடல், மன ஆரோக்கிய சக்திகள் கிடைத்து விடுகின்றன. பூசுர சக்தியின் ஒரு வாயு அம்சமே ஓசோன் என்றழைக்கப்படுகிறது.
எனவே ராச்சாண்டார் மலையில் பொலியும் வில்வ மரத்திலிருந்து ஒரு வில்வ இலையை இறைவனுக்கு அர்ப்பணித்தால் கூட அதனால் கிட்டும் பலன்கள் வார்த்தைகளில் அடங்காது. இத்திருத்தலத்தில் எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு இந்த வில்வ காய்களை தியானித்து தவமியற்ற வேண்டும்.
எப்போது இந்த பூசுர ஜோதியின் தரிசனம் கிட்டுகிறதோ அப்போதுதான் திரு உண்ணாமுலை அம்மனின் தன இரகசியங்கள் புரிய வரும். இந்த இரகசியங்கள் புரிந்தவர்களையே அமுதப் பால் அருந்தியவர்கள் என்று குறிப்பிடுகிறோம். எனவே திருஞானசம்பந்த மூர்த்தி மட்டும் அல்லாது தோடுடைய செவியனின் அமுதப் பாலைப் பெற்ற அனைவருமே பூசுர ஜோதியின் தரிசனத்தைப் பெற்றவர்கள்தான் என்பது சொல்லாமலே புரிகிறது அல்லவா ?

ஸ்ரீகுதூகல நந்தீஸ்வரர்
திருஅண்ணாமலை

அமுதப் பாலைப் பெறுவதால் வெறும் ஞானம் மட்டும் கிடைக்கும் என்பதில்லை. அப்போதுதான் ஆலமர நிழலின் இரகசியம் தெரிய வரும். ஆலமர நிழலின் ரகசியம் உணர்வதால் என்ன பயன் ? அப்போதுதான் திருஅண்ணாமலையில் கல்லாலின் புடை அமர்ந்த தட்சிணா மூர்த்தியின் திருமேனியை தரிசிக்கும் மகா பாக்கியம் கிட்டும்.
இவை அனைத்திற்கும் மூலாதாரமாக கிணற்று நீர் அமைவதால்தான் இன்றும் பல திருக்கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தத்தை மின்சார சாதனங்கள் கொண்டு இறைக்காது கையால் இறைத்து அபிஷேகம் செய்யும் நற்பழக்கம் உள்ளது. எனவே இறை அபிஷேகத்திற்கு நீர் இறைத்துத் தரும் திருப்பணி மிகவும் உன்னதமாக போற்றப்படுகிறது.
இந்த பேருண்மைக்கு சான்றாக விளங்குபவரே குதூகல நந்தீஸ்வர மூர்த்தியாக திருஅண்ணாமலையில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார். எந்த அவதார மூர்த்தி திருஅண்ணாமலையை வலம் வருவதாக இருந்தாலும் இந்த ந்ந்தி மூர்த்தியிடம் அனுமதி பெற்று அவர் கூறும் முறையில்தான் திருஅண்ணாமலையாரை வழிபட வேண்டும் என்றால் அவரின் உன்னத ஆன்மீக நிலையைப் பற்றி எப்படி எடுத்துரைக்க முடியும் ? அத்தகைய உன்னத நிலையை அவர் அடைந்ததற்குக் காரணம் திருசோற்றுத் துறையில் அவர் கிணற்று நீரை சுவாமி அபிஷேகத்திற்காக இறைத்து அளித்த மிகச் சாதாரண திருப்பணிதான்.
ராச்சாண்டார் திருமலையில் விளங்கும் வில்வ மரங்களின் தரிசனமே பூசுர ஜோதிக்கு இணையானது என்றால் இம்மரங்களை மக்கள் எந்த அளிவிற்குப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் ? எக்காரணம் கொண்டும் இம்மரத்திலிருந்து இலைகளை இறைவனின் பூஜையைத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
எம்பெருமானின் வானளாவிய பெருமையை விளக்கும் சித்தர்கள் மற்றொர் அதிசயத்தையும் தெரிவிக்கிறார்கள். மனிதர்களுக்கு ராமன், கிருஷ்ணன் என்று பெயர்கள் இருப்பது போல ஈ, எறும்பு, மரம் என அனைத்திற்குமே இபபூவுலகில் தனித் தனி பெயர்கள் உண்டு. அவ்வகையில் ராச்சாண்டார் திருத்தலத்தில் கன்னி மூலை கணபதிக்கு அருகில் உள்ள வில்வ மரத்தின் பெயரை பூசுர ஜோதி வில்வம் என்றும் துர்கை அமமனுக்கு எதிரில் உள்ள வில்வ மரத்தின் பெயரை சக்தி விளம்பித வில்வம் என்று தெரிவிக்கிறார்கள்.

சுஸ்வரூப பைரவ மூர்த்தி

தன்னை அறிவ்தே அனைத்து இறைவழிபாடுகளுக்கும் மூலம் ஆகும். ஆனால், இந்த ”தன்னை அறிவது” என்பது அத்தனை எளிமையான காரியம் அல்ல என்பது இவ்விஷயத்தில் மூழ்கிப் பார்த்தவர்களுக்கே தெரியும். இத்தகைய ஆத்ம விசாரத்திற்கு துணை நிற்பவரே ராச்சாண்டார் மலையில் அருளும் சுஸ்வரூப பைரவ மூர்த்தி ஆவார்.
ரமண மகரிஷி இத்தல பைரவ மூர்த்தியை வழிபட்டு அனுகிரகம் பெற்ற அற்புதத்தை அறிந்து கொள்வது அவசியம். அவர் பன்னிரெண்டு வயது அடைந்தபோது இத்தல சுஸ்வரூப பைரவ மூர்த்தியின் முன் அமர்ந்து ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திர தினத்திலும் நட்சத்திரம் வியாபித்து இருக்கும் நேரம் முழுவதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பார்.

ஸ்ரீசுஸ்வரூப பைரவ மூர்த்தி
ராச்சாண்டார் திருமலை

அதே போல ஒவ்வொரு ரோஹிணி நட்சத்திர தினத்தன்றும் இத்தல தட்சிணா மூர்த்தியின் முன் அமர்ந்து ரோஹிணி நட்சத்திர நேரம் வியாபித்து இருக்கும் நேரம் முழுவதும் இத்தல வில்வ மரத்தில் விரவியிருக்கும் பூசுர ஜோதியை குறித்து தியானம் இயற்றுவார். இந்த ஆன்மீக சாதனைகளின் தொடர்ச்சியாகவே அவர் திருஅண்ணாமலையை அடைந்து ஆத்ம விசாரத்தில் உன்னத நிலைகளைப் பெற்று நிறைவில் கல்லால் ஈசனின் தரிசனத்தையும் பெற்றார்.

தனிச் சன்னதி கொண்டு தெற்கு பார்த்து அருள்வது இத்தல சுஸ்வரூப பைரவ மூர்த்தியின் தனிச் சிறப்பாகும். அதே போல மலையடிப்பட்டி திருத்தலத்திலும் இத்தகைய பைரவ மூர்த்தி எழுந்தருளி இருப்பது பூலோக மக்கள் பெற்ற பெரும் பாக்கியமாகும்.

பொதுவாக தெற்கு நோக்கி நின்று அருள்புரியும் பைரவ மூர்த்திகளை வழிபடுவதால்

 1. ஆத்ம விசாரத்தில் உன்னத நிலையை அடையலாம். தான் யார் என்று தன்னுடைய சுய நிலையை, நிதர்சன தன்னிலையை உணர்விப்பவதே இம்மூர்த்தியின் அருள் சுரக்கும் பாங்காகும்.
 2. உடல், மன வள குறைபாடுகளால் தன்னம்பிக்கையின்றி தாழ்வு மனப்பான்மையுடன் வாழ்பவர்களுக்கு விரக்தி நிலை மாறி தன்னம்பிக்கையும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் ஏற்படும்.
 3. எதிர்பாராத நோய், விபத்து, கடன், காதல் தோல்வி, வியாபார நஷ்டம் போன்ற பேரிழப்புகளால் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு வந்தவர்கள் கூட மன தைரியமும், எந்த துரதிர்ஷ்டத்தையும் எதிர்கொள்ளும் மனோ திடத்தையும் பெறுவர்.
 4. நீண்ட காலமாக முன்னோர்களுக்கு நிறைவேற்ற வேண்டிய பித்ரு, தர்ப்பண வழிபாடுகளை செய்யத் தவறிவர்கள, மறந்தவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள சந்தர்ப்பம் பெறுவார்கள்.
 5. தங்கள் குல தெய்வம் அறியாதர்வள், எந்த தெய்வத்தை இஷ்ட தெய்வமாகக் கொள்வது என்று திகைத்து இருப்பவர்களுக்கு தங்க வழிகாட்டுதல் கிடைக்கும்.

இறைவலமான கிரிவலம்

ராச்சாண்டார் திருத்தலத்தை சுற்றிப் பிரதட்சணமாக வலம் வந்து வழிபடும் முறைகளில் குறைந்தது 108 முறைகள் இருந்தாலும், இதில் முக்கியமாக மூன்று கிரிவல முறைகளை கலியுக மக்களின் நன்மைக்காக சித்தர்கள் அறிவித்துள்ளார்கள்.
இத்தலத்திற்கு உரிய சிறப்பான கிரிவல முறைகளை காய்சிரை வலம் என்று சித்தர்கள் பரிபாஷையில் உரைக்கிறார்கள். காய்சிரை வலம் என்ற பெயர்க் காரணத்தை விளக்குவத்தை விட இத்தலத்தை வலம் வரும் பக்தர்கள் தொடர்ந்த வலத்தால் அதன் பொருளை தாங்களாகவே உணர்தலே சிறப்பாகும்.
அஷ்டாட்சர காய்சிரை வலம்
இம்முறை கிரிவலத்தில் முதலில் ஜெய அரச மரத்தை எட்டு முறைகளும் விஜய அரச மரத்தை எட்டு முறைகளும் தனித் தனியாக வலம் வர வேண்டும். பின்னர் திருமலையை ஒரு முறை வலம் வந்து தொடங்கிய இடத்தில் நிறைவு செய்தலாகும். இது அஷ்டாட்சர காய்சிரை வலத்தில் ஒரு சுற்றாகும்.
பிரணவ காய்சிரை வலம்
இம்முறை கிரிவலத்தில் முதலில் ஜெய அரச மரத்தை மட்டும் ஒரு முறை வலம் வந்து திருமலையை வலம் வர வேண்டும். கிரிவல முடிவில் விஜய அரச மரத்தை மட்டும் ஒருமுறை வலம் வந்து தொடங்கிய இடத்தில் நிறைவு செய்ய வேண்டும். இதுவே ஒரு சுற்று பிரணவ காய்சிரை வலமாகும்.
தோடக காய்சிரை வலம்
இம்முறையில் மேற்கூறிய தோடக முகூர்த்த நேரம் முழுவதையும் திருமலையை சுற்றி வருவதிலேயே கழிக்க வேண்டும். இந்த முகூர்த்த நேரத்தில் ஒன்று, எட்டு, பத்து என எத்தனை முறை வேண்டுமானாலும் வலம் வரலாம். எண்ணிக்கை உங்கள் வசதியை, விருப்பத்தைப் பொருத்தது. கிரிவலத்தை தோடக முகூர்த்த நேரம் (3 மணி நேரம்) முழுவதும் நிறைவேற்ற வேண்டும் என்பது அவசியம்.
மேற்கூறிய எம்முறையில் வேண்டுமானாலும் திருமலையை வலம் வந்து வணங்கி அற்புத பலன்களைப் பெறலாம்.

பண்டரி பாதுகா கிரிவலம்
இம்முறையிலான கிரிவலத்தை எந்த திருத்தலத்தில் வேண்டுமானாலும் நிறைவேற்றலாம் என்றாலும் ராச்சாண்டார் திருமலையில் நிறைவேற்றப்படும் இத்தகைய கிரிவலத்திற்கு அற்புதமான பல விசேஷ பலன்கள் உண்டு.
ஒரு ஜோடி புதிய செருப்புகளை தலையில் வைத்துக் கொண்டு பரதர் ராம பிரானுடைய பாதுகைகளை தலையில் சுமந்து கொண்டு வந்து அவற்றை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்ததைப் போல புதிய பாதுகைகளை தலையில் சுமந்து ராச்சாண்டார் திருமலையை கிரிவலம் வந்து அந்த பாதுகைகளை எவருக்காவது தானமாக அளித்தலால் கிட்டும் பலன்கள் ஏராளம், ஏராளம்.
தோல் செருப்புகளை கட்டாயம் தவிர்க்கவும். தானத்தை குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் அளிக்கலாம். தலைக்கு வரும் ஆபத்து தலைப் பாகையோடு போகும் என்பார்கள் அல்லவா அது போல எதிர்பாராமல் வரக் கூடிய ஆபத்துக்களை தவிர்த்து மக்களைக் காக்கும் அற்புத் தானம் இதுவே.
அரசு, அரசியல், ஆன்மீகம், பொருளாதாரம் போன்ற துறைகளில் பெரும் பதவிகளில் இருப்பவர்களுக்கு ஆபத்து எங்கிருந்து எப்படி முளைக்கும் என்பதை எதிர்பார்க்கவே முடியாது. இவ்வாறு உயர்ந்த அஸ்தஸ்து உடையவர்கள், “நித்திய கண்டம் பூரண ஆயுசு,” என்று ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர் நோக்கியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் தங்களுடைய பயத்தை வெளியே சொல்ல முடியாமல் லட்சக் கணக்கான கோடிக் கணக்கான பணம் செலவு செய்து பாதுகாப்பு கருவிகளை வாங்கி குவிக்கிறார்கள். உண்மையில் துப்பாக்கி என்பது ஒரு எதிர்மறை சக்தியே. அது எவரையும் காப்பாற்றாது என்று சித்தர்கள் திட்டவட்டமாக அறிவிக்கிறார்கள. உயிரைப் படைத்தவன் ஈசனே, அவன் ஒருவனை உயிரைக் காக்கவும் முடியும்.
மேற்கூறிய பாதுகா தியானம் எத்தகைய ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்தும் மக்களைக் காக்கும் அற்புத வழிபாடாகும். கண்டம், சூலம், அதிகண்டம் போன்ற யோக நாட்களில் இத்தகைய வழிபாடுகளை தேய்பிறை வளர்பிறை என்ற கணக்கில்லாமல் நிறைவேற்றலாம்.

விண்ணவரேத்தும் விராச்சிலை ஈசன்

ராச்சாண்டார் திருமலை ஈசன் ஸ்ரீவிராச்சிலை நாதனின் அனுகிரக சக்திகளை எத்தனை கிரந்தங்களிலும் அடக்க முடியாது என்பதே உண்மை. அமிர்தமயமான ஈசனின் பெயர் சுட்டும் சொற்களின் சுவையை மட்டும் சற்று சுவைத்துப் பார்ப்போமா ?
சிலை என்றால் வில், உருவம், வடிவம் போன்ற அர்த்தங்கள் உண்டு அல்லவா ? விராச் சிலை என்றால் உடையாத சிலை, முறியாத சிலை என்று பொருள். ஆனால், ஜனக மகராஜாவிடம் இருந்த சிவ தனுசை ராமபிரான் முறித்து சீதையை மணந்தார், தர்ம ராஜாவிடம் இருந்து பெற்ற சிவதனுசை விதுரர் கோபத்தில் முறித்து விட்டார். அப்படியானால் விராச் சிலை சுட்டும் ஆன்மீகப் பொருள் வேறு ஏதோ இருக்க வேண்டும் அல்லவா? அதைப் பற்றி நீங்களே சிந்தித்துத் தெளிந்தால்தான் அது சுவையாக இருக்கும். எனவே யோசியுங்கள், யோசியுங்கள்.
அடுத்து சிலை என்ற பதத்திற்கு உருவம், வடிவம் என்று பொருள் கொண்டால் அது விராட்(டு)+சிலை = விராச் சிலை என்று வரும். விராட்டு என்பது ஈசனின் தோன்றா நிலை. பர பிரம்ம நிலையில் எம்பெருமானின் அருட் பாங்கை விராட் ஸ்வரூபம் என்று குறிக்கிறோம். விராட் புருஷன் சக்தியுடன் யோகம் கொள்ளும்போது கோடிக் கணக்கான யோனி பேதங்கள் கொண்ட உயிர்கள் உருவாகின்றன.
எனவே விராச்சிலை ஈசன் என்பது கோடிக் கணக்கான உயிர்களின் தலைவன் என்று ஒலிக்கும். இதை நிர்விகல்ப சமாதி போன்ற மிக உயர்ந்த ஆன்மீக யோக நிலையிலேயே உணர முடியும் என்றாலும் மிகவும் சாமான்ய ஜீவன்களும் இந்த உண்மையை உணர இத்தல ஈசன் அருள் புரிவான் என்பதையே விராச் சிலை ஈசன் உணர்த்தும் உண்மையாகும்.
இதைவிட உயர்ந்த ஆன்மீக நிலை இல்லவே இல்லை.

அன்று சிறுவன் வெங்கடராமன் நிர்விகல்ப சமாதியில் அமர்ந்த அதே அருணாசல புனித பூமியில்தான் இன்று சற்குரு வெங்கடராமன் அவர்களுடைய ஜீவ சமாதி அமைந்து அனைவருக்கும் நிர்வாணம் என்னும் இறை பேரின்ப நிலையை வழங்கிக் கொண்டிருக்கிறது !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam