எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா! அருணாசலா!!

ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்
ஆடையூர், திருஅண்ணாமலை 606602

இருப்பிடம்

நமது உலகிற்கு மட்டுமல்லாது நாம் காணும் எல்லையற்ற எல்லா உலகங்களுக்கும்,கிரகங்களுக்கும், நட்சத்திர மண்டலங்களுக்கும் ஆன்மீக மையமாக இருப்பதே திருஅண்ணாமலையாகும். எல்லா இருப்பிடத்தையும் இதை மையமாகக் கொண்டே கூற வேண்டும். எந்த இடத்திலிருந்தும் வான்வெளி மார்கமாகச் செல்பவர்கள் (astral travel) திருஅண்ணாமலையையே தொடக்க அடையாளமாக (point of origin) வைத்துக் கொள்வார்கள்.
இருப்பினும் தற்கால ஆன்மீக வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு திருஅண்ணாமலைக்கும் விலாசம் சொல்ல வேண்டிய சூழ்நிலையில் இருப்பதால் இதைப் புனிதமான தென்னிந்தியாவில் உள்ள தமிழ் நாட்டின் ஒரு ஊராகக் குறிப்பிடுகின்றோம்.

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்குத் தெற்கே சுமார் 210 கி.மீ. தொலைவில் உள்ளது திருஅண்ணாமலை என்னும் எழில் நகரம். திருஅண்ணாமலை என்பது இங்கு ஊரையும் குறிக்கும், பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் அடிமுடி காணாமுடியாமல் நின்ற ஆதிசிவனின் திருமேனியான திருஅண்ணாமலை என்னும் மலைக் குன்றையும் குறிக்கும். திருஅண்ணாமலையைச் சுற்றி வரும் கிரிவலப் பாதையில் எட்டுத் திசைகளிலும் எட்டு லிங்கங்கள் உள்ளன. இவற்றில் வாயு லிங்கத்திற்கும் குபேர லிங்கத்திற்கும் இடையே அமைந்துள்ளது நமது ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்.

 

ஸ்தாபகர்

ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் ஸ்தாபகர் ஜோதி அலங்கார பீடாதிபதி திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மகா சன்னிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை குருமங்கள கந்தர்வா திரு R.V. வெங்கடராமன் அவர்கள்.

திரு வெங்கடராமன் அவர்களின் குருநாதர் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமி அவர்கள். தமது குருநாதரிடம் பல்லாண்டுகளாகக் கடுமையான குருகுல வாசம் பயின்று அவருடைய திருவாக்கின்படி அவர் சுட்டிக் காட்டிய இடத்திலேயே உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும், எல்லா உயிரினங்களுக்கும் ஆன்மீகப் பணியாற்றுவதற்காக இந்த ஆன்மீக மையத்தை உருவாக்கி உள்ளார்கள். அன்பு என்னும் ஒன்றையே ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே ஸ்ரீலஸ்ரீலோபா மாதா அகஸ்தியர் ஆஸ்ரமம். திருஅண்ணமலையைப் பணிந்து நிற்கும் இந்தத் தெய்வீக ஆஸ்ரமத்தின் ஆணி வேராகவும், மரம், கிளை, இலை, மலர், காய், கனி என அனைத்துமாக இருப்பவரும் திரு வெங்கடராமன் அவர்களே.

திரு வெங்கடராமன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள தெய்வீகப் பட்டங்கள் யாவுமே மனிதர்களாலோ, ஏன் தேவர்களாலும் கூட அவருக்கு அளிக்கப்பட்டதல்ல. இந்தப் பட்டங்கள், அடைமொழிகள் யாவும் சித்தர்களால் அளிக்கப்பட்டவையே. இந்த அடைமொழிகள் ஒவ்வொன்றுக்கும் ஆழ்ந்த ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. இவை எல்லாம் நமது குருநாதரின் இப்பூவுலக அவதார தத்துவத்தையும் அவரின் ஆதி உலகத் தோற்ற விளக்கங்களையும் நமக்கு எடுத்துரைப்பவையே.

இவற்றில் சில தத்துவங்களை மட்டும் இங்கே விளக்குகிறோம்.
ஜோதி என்றால் அக்னி, வெளிச்சம், ஞானம், ஆத்மா என்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு. திரு வெங்கடராமன் அவர்கள் சாதாரண மானிட உடல் தரித்தவர் அல்ல. மகான்களுக்கு உடல் என்ற தூல சரீரம் கிடையாது. மற்றவர்கள் கண்களுக்கு அவர்கள் உடலோடு இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகிறார்கள். அவ்வளவே.
திரு அண்ணாமலை ஜோதி என்று சொன்னால் சுயம்பிரகாசமாய்த் தானாய் தோன்றியது என்றுதானே பொருள். அவ்வாறே சுயம்புவாய், தான் தோன்றியாய், ஆரம்பமோ, முடிவோ இல்லாத, எல்லை இல்லாத அக்னிப் பெருஞ் சுடர் ஜோதியே திரு வெங்கடராமன் என்ற ஜோதி ஆகும்.

திரு வெங்கடராமன் அவர்கள் திருக்கயிலாயப் பொதிய முனிப் பீடத்தை அலங்கரிக்க வந்த உத்தமப் பெருந்தகை ஆவார். அவர்கள் மிக மிகப் புனிதமான திருக்கயிலாயப் பொதிய முனிப்பரம்பரையின் பீடாதிபதியாய்ச் சித்தர்களால் நியமனம் செய்யப்பட்டவுடன் அப்புனிதமான சித்தர் பரம்பரை மேன்மேலும் எல்லையில்லாப ்புனிதத்துவத்தை அடைந்தது என்பதை அவருடைய அலங்கார பீடாதிபதி என்னும் சிறப்பான பட்டம் சுட்டிக் காட்டுகின்றது.

திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரையின் 1001வது குரு மகா சன்னிதானமே திரு வெங்கடராமன் அவர்கள். இதன் தலைமைப் பீடாதிபதி ஸ்ரீஅகஸ்தியர் ஆவார். ஸ்ரீஅகஸ்தியரை முதலாகக் கொண்டு பல்லாயிரக் கணக்கான சித்தர் பெருமான்கள் தோன்றி நிறைந்துள்ளனர். ஒரு பீடாதிபதிக்கும் அடுத்த பீடாதிபதிக்கும் இடையே ஆயிரக் கணக்கான சித்தப் பீடக் குருக்கள் தோன்றி நிறைவதுண்டு. இவ்வகையில் பொதுவாக நாம் 1001வது குரு மகா சன்னிதானம் என்று மனிதக் கணக்கில் கூறினாலும் சித்தர்கள் கணக்கில் கோடிக் கணக்கான சித்தர் பிரான்கள் திருக்கயிலாயப் பொதிய முனிப்பரம்பரையில் தோன்றி அலங்கரித்து நிறைந்து கொண்டே உள்ளனர். இது எம்பெரும்பான் சிவபெருமான் திருவருளால் என்றும் தொடரும் ஒர் ஆன்மீக அற்புதமாகும்.
திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரையின் 1000வது குரு மகா சன்னிதானமே ஸ்ரீஅஸ்தீக சித்தராவார். இப்பீடத்தின் 999வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீசதாதப சித்தர் பிரான் ஆவார்.

ஸ்ரீஅகஸ்தியரின் தலையாயச் சீடரான ஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளே ஒவ்வொரு குருமகா சன்னிதானத்தையும் தம் குருகுல வாசத்தில் அரவணைத்து அந்தந்த யுக தர்மங்களைப் போதித்து, நெறிப்படுத்தி அற்புத பணியை ஆற்றி வருகின்றார்கள். ஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள் நமது பூவுலகம் மட்டுமல்லாது அண்ட சராசரங்களில் உள்ள அனைத்து லோகங்களிலும் குரு தத்துவத்தை உபதேசித்து குரு மகா சன்னதானங்களுக்கு ஒரு வழிகாட்டியாய்த் திகழ்கிறார்.

திரு வெங்கடராமன் அவர்களின் பூர்வீக ஆதி லோகமே குருமங்கள கந்தர்வ லோகம் ஆகும். அங்கே 108 சூரியன்களும் 108 சந்திரன்களும் பிரகாசிக்கின்றன. நமது ஒரு ஆண்டு தேவ லோக வாசிகளுக்கு ஒரு பகல். தேவ லோக வாசிகளுடைய ஒரு வருட காலம் கந்தர்வ லோகத்திற்கு ஒரு பகல். இவ்வாறு அடுத்தடுத்த லோகங்களின் காலப் பரிமாணங்கள் மாறிக் கொண்டே இருக்கும். தேவ லோகம், கந்தர்வ லோகம் இவற்றை எல்லாம் தாண்டிச் சென்றால் வைகுண்டம், கைலாயம், சத்திய லோகம் என்ற பல தெய்வ லோகங்களை அடையலாம். இந்த லோகங்களுக்கு எல்லாம் அப்பால் திகழ்வதே குரு மகா சன்னிதானங்களின் குரு மங்கள கந்தர்வ லோகம். இத்தகைய அற்புதமான, தெய்வீகமான, கற்பனைக்கும் எட்டாத சிறப்பு வாய்ந்த லோகத்திலிருந்து நமது நன்மைக்காக, நம்மை இவ்வுலகத் துன்பங்களிலிருந்து மீட்க நம்மிடையே நம்மில் ஒருவராய்த் தோன்றி நம்மைத் தாயினும் சாலப் பரிந்து வழி நடத்துபவரே திரு வெங்கடராமன் என்ற உண்மையை அவருடைய அவதார இரகசியத்திலிருந்து நாம் ஓரளவு ஊகித்துக் கொள்ளலாம்.

இந்த உண்மையின் விளக்கமாய் வருவதே - நீ இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் கடவுள் உன்னை நோக்கிப் பத்து அடி எடுத்து வைப்பார், குரு உன்னை நோக்கி ஆயிரம் அடி எடுத்து வைப்பார் - என்ற ஞான உரையாகும்.

கடவுள் மீது நாம் கொள்ளும் பக்தியில் பல நிலைகள் உண்டு. எவ்வாறு நமது பூமியில் படிப்பிற்குப் பல பட்டங்களும், தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றனவோ அவ்வாறே மேலுலகம் என்னும் தெய்வீக லோகத்திலும் பக்தி நிலைக்குச் சான்றிதழ்கள் ஆதிசிவனால் வழங்கப்படுகின்றன. கடவுள் பக்தியில் 12 நிலைகள் குறிக்கப்படுகின்றன. இதில் பன்னிரெண்டாவது நிலையாகத் திகழ்வதே அடிமை என்ற தாச பக்தி நிலை. இது வார்த்தைகளால் வர்ணிப்பதற்கு மிகவும் கடினமான ஒர் நிலை. முழுக்க முழுக்க இறைவனிடம் ஐக்கியமாகித் திகழும் ஒர் உன்னத நிலை. இந்த நிலையில் ஒன்பது படித்தரங்கள் இருப்பதாக சித்தர்கள் விளக்குகிறார்கள். இந்த ஒன்பதாம் உயர்நிலையில் திகழ்பவரே நமது குருநாதர் திரு வெங்கடராமன் அவர்கள்.

இவ்வாறு திரு வெங்கடராமன் அவர்கனின் அவதாரத் தோற்ற இரகசியத்தையும், பெருமைகளையும் எடுத்துரைப்பதற்குக் காரணமே நம் பூவுலகம் பெற்றது எத்தகைய பெரும் பேறு என்பதை உலக மக்கள் அனைவரும் உணர்வதாற்காகவே. திரு வெங்கடராமன் அவர்கள் நமது தமிழ்நாட்டிற்கு மட்டுமோ, புனித பாரத நாட்டிற்கு மட்டுமோ ஆன்மீக வழிகாட்டியாக வந்தவர் அல்லர். நமது உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும், புழு, பூச்சி, விலங்குகள், தாவரங்கள், தேவர்கள், கந்தர்வர்கள் என அனைத்து நிலையிலுள்ள ஜீவன்களும் கடைத்தேற இறைவன் வழங்கிய கருணை மழையே திரு வெங்கடராமன் அவர்கள் என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களின் ஆன்மீகப் பேருரைகளை, வழிகாட்டுதலை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

 

எமது ஆஸ்ரமத்தின் கொள்கைகள்

1. கடவுளை முழுமையாக நம்புகிறது இந்த ஆஸ்ரமம். கடவுள் உண்டு, கடவுள் உண்டு, கடவுள் உண்டு என்பதே திரு வெங்கடராமன் அவர்களின் தாரக மந்திரம். நம் எண்ணம், சொல், செயல் - அனைத்திற்கும் ஆதாரமாக, அடிப்படையாக இருப்பது இறை நம்பிக்கையே. இறைவனே உள்ளும் வெளியுமாக அனைத்தையும் இயக்குகிறான் என்ற ஆழ்ந்த நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதே ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்.

2. இந்த உலகம், உயிர்கள், அனைத்துப் பொருட்களின் தோற்றம், மறைவு முதலிய அனைத்தையும் முழுமையாக உணர்ந்தவர்களே சித்தர்கள். சித்தர்களின் ஞானமே எல்லா ஞானங்களுக்கும், அறிவிற்கும் முதன்மையானது, முழுமையானதும் கூட. சித்தர்களின் ஞான மார்க்கத்தைப் பூரணமாகப் பின்பற்றுவதே எமது ஆஸ்ரமம். சித்த வாக்கியமே அனைத்திற்கும் ஆதியும் அந்தமுமாவது.

3. இறைவனை அடைவதே மனிதனின் இலட்சியம், இறைவனுக்குத் தொண்டு செய்யவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான் என்பது எமது கொள்கை.

4. குருவின் துணை கொண்டு அவர் காட்டும் வழியைப் பின்பற்றியே கடவுளை அடைய முடியும் என்பதே நமது கொள்கை. குருவே அனைத்திற்கும் மூலம். இப்பிறப்பிலும், எப்பிறப்பிலும் வழிகாட்டி குரு ஒருவரே. குருவே ஆத்மம். குருவே பிரம்மம். குருவே சர்வம். குருவருளே திருவருளாகப் பொழியும் என்பதே எங்கள் தலையாயக் கொள்கை.

பதினென் சித்தர்கள் தினமும் துதிக்கும்
அபூர்வ கனி கணபதி

5. எங்கே ஆரம்பமோ, அங்கேதான் முடிவும். இறைவனிடமிருந்து தோன்றிய நாம், முடிவில் இறைவனையே சென்றடைய வேண்டும் என்பதே எமது கொள்கை.
எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா - என்ற சித்த வேத சூக்த மாமந்திரத்தை உயிர் மூச்சாகக் கொண்டு திருஉலா வருபவரே திரு வெங்கடராமன் அவர்கள்.

6. விதியை நாங்கள் நம்புகிறோம். எல்லாம் இறைவன் விதித்த விதிப்படியே நடக்கிறது. விதியை யாராலும் மாற்ற இயலாது. நடந்தனவே நடப்பனவாக நடந்து கொண்டு இருக்கிறது என்ற சித்த வேத மகா வாக்கியத்தின் அடிப்படையில் இயங்குவதே நமது ஆஸ்ரமம்.

7. வினை, வினைப் பயனில் நம்பிக்கை கொண்டது எங்கள் ஆஸ்ரமம். நல்லது செய்தால் நல்லது நடக்கும். நல்ல எண்ணம், நல்ல சொல், நல்ல செயலில் நம்பிக்கை கொண்டுள்ளோம் நாங்கள். இன்று நாம் அனுபவிக்கும் இன்ப, துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் நமது வினைப் பயன்களே.

8. பூர்வ ஜன்மத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது எமது ஆஸ்ரமம். பூர்வ ஜன்மம் நிச்சயமாக உண்டு. 84 லட்சம் யோனி பேதங்களைக் கடந்தே ஓர் ஆன்மா மனிதப் பிறவியை அடைகிறது. நாம் பூர்வ ஜன்மத்தில், முந்தைய பிறவிகளில் செய்த செயல்களின் பலா பலன்களுக்கு ஏற்பவே இந்தப் பிறவி அமைகின்றது.

9. அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்ற மனிதப் பிறவியின் மேன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளது எமது ஆஸ்ரமம். மனிதனாய்ப் பிறந்த ஒருவன் மீண்டும் மனிதப் பிறவி எடுப்பதற்கு ஒரு கோடி வருடம் ஆகும் என்ற சித்தர்களின் வாக்கியத்தில் நம்பிக்கை கொண்டுள்ளது எமது ஆஸ்ரமம். பெறுதற்கரிய இந்த மானிடப் பிறவியை நல்ல முறையில் பயன்படுத்த எமது ஆஸ்ரமம் ஒரு வழிகாட்டியாகச் செயல்படுகின்றது. மனிதர்கள் யாவரும் கடைத்தேறி இந்தப் பிறவியிலேயே கடவுளைக் கண்டு இறை இன்பத்தை உணர முழுவதுமாகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் திரு வெங்கடராமன் அவர்கள். முயன்றால் இந்தப் பிறவியிலேயே குருவருளுடன் இறைவனை அடையலாம் என்பதும் எமது கொள்கைளுள் ஒன்று.

10. இறைவனை வழிபடும் முறைகளுள் 1008 மார்க்கங்கள் உண்டு. இவற்றில் சாதி, மத, இன பேதமில்லாமல் நிறைவேற்றும் அன்னதானம் மூலமாக இறைவனை வழிபடுவதைச் சிறப்பு மார்க்கமாகக் கடைபிடிக்கிறது எமது ஆஸ்ரமம். சோற்றைப் போடு, சித்தனாவாய் என்ற சித்த வாக்கியத்தில் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் நாங்கள். அர்ச்சனை, அபிஷேகம், காவடி, அலகு குத்துதல், ஹோமம், தீர்த்த நீராடல், பாத யாத்திரை, பிரதட்சிணம் முதலான 1008 இறை வழிபாட்டு முறைகளுள் சிறப்பான வழிபாடாக அன்னதானத்தையே நம் குருநாதர் திரு வெங்கடராமன் அவர்கள் கைக்கொண்டுள்ளார்கள்.

11. அவரவர் செய்த வினைகளின், செயல்களின் பலன்களை அவரவரே அனுபவித்துக் கழித்தாக வேண்டும். பொதுவாக, ஒருவர் மற்றொருவருடைய துன்பங்களை மாற்றவோ, ஏற்கவோ முடியாது. பரிகாரங்கள் எல்லாம் துன்பத்தின் அளவை ஓரளவு குறைக்குமே தவிர, அவற்றை முழுமையாக அகற்றி விடாது என்பதே சித்தர்களின் கொள்கை.

12. இறைவன் சாதி, மத, இன பேதத்திற்கு அப்பாற்பட்டவன். உண்மையில் சாதி, மத, இன வேறுபாடு ஒரு சிறிது மனதில் தோன்றினால் கூட அவை இறைவனை நோக்கிச் செல்லும் பாதையில் தடைக் கற்களாக அமையும் என்பதே எம் குருநாதரின் கொள்கை.

13. இல்லறம் மூலமாக இறைவனை அடைவதையே கலியுகத்தில் எளிய மார்கமாகச் சித்தர்கள் எடுத்துரைக்கின்றனர். அந்த மார்கத்தையே நாம் ஏற்கின்றோம். துறவறம் என்பது நிற்க வைத்த கத்தியின் மேல் நடப்பதைப் போன்றது. மிகவும் கடினமானது. கரணம் தப்பினால் மரணம். இல்லறமோ படுக்க வைத்த கத்தியின் மேல் நடப்பதைப் போன்றது. மிகவும் பாதுகாப்பானது.

14. இறைவனும் அவன் நாமமும் ஒன்று. நாம சங்கீர்த்தனத்தின் மூலம் இறைவனை எளிதில் அடையலாம். நமது அன்றாட பிரச்னைகளுக்கும், இறைவனுடன் ஒன்றிப் போகும் இறைப் பேரின்பத்திற்கும் கூட வழி வகுப்பதே இறைவனைக் கூவி அழைக்கும் வழிபாடாகும். ராமனும் அவன் நாமமும் ஒன்றே என்பது நமது கொள்கை.

15. சைவ உபாசணை, கௌமார உபாசனை என்றவாறாக இறைவனை நோக்கிச் செல்வதில் பல உபாசனை மார்க்கங்கள் உண்டு. இவை சிவ வழிபாடு, முருக வழிபாடு என்று மேலெழுந்தவாரியாக உருவ வழிபாட்டைக் குறித்தாலும் இதில் பல ஆழ்ந்த தத்துவங்கள் உண்டு. இவற்றைத் தக்க குருமார்கள் மூலமாகவே ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும். இந்த உபாசனை மார்க்கங்களில் கலியுகத்திற்குச் சிறந்த மார்க்கமாக சாக்த உபாசனை என்னும் சக்தியை வழிபடும் உபாசனை மார்க்கமே சிறந்ததென நமக்குச் சித்தர்கள் உபதேசிக்கின்றனர். தனி மனித ஆன்ம முன்னேற்றத்திற்கும், சமுதாய நன்மைக்கும் அடிப்படையாக அமைவது சாக்த உபாசனையே என்பது சித்தர்களின் கொள்கை.

ஆஸ்ரம இறைப் பணிகள்

குரு மங்கள கந்தர்வா திரு வெங்கடராமன் அவர்கள் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் சபா அறக்கட்டளையை ஏற்படுத்தி அதன் மூலம் எண்ணற்ற ஆன்மீகத் திருப்பணிகளை பல்லாண்டுகளாக ஆற்றி வருகின்றார்கள். சாதி, மத, இன பேதமின்றி திரு வெங்கடராமன் அவர்களின் அன்பு என்றும் அருட் குடைக் கீழ் பணியாற்ற விரும்பும் எல்லா அடியார்களும் இந்த இறைப் பணிகளில் பங்கேற்கிறார்கள். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலிருந்தும் அயல் நாடுகளிலிருந்தும் இந்த ஆன்மீகப் பணிகளில் பங்கேற்று பலரும் ஆர்வமுடன் தங்கள் சேவையை ஆற்றி வருகின்றனர்.

அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றோம்.

1. ஓவ்வொரு வருடமும் கார்த்திகை தீப உற்சவம் திருஅண்ணமலையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. அச்சமயம் நமது ஆஸ்ரமத்தில் இறை அடியார்களுக்கு அன்னதானம் சிறப்பாக வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாது திருஅண்ணாமலையார் சிவாலயத்தில் எல்லாக் கோபுர வாயில்களிலும், திருஅண்ணமலையைச் சுற்றி உள்ள பள்ளிகளிலும், திருத்தலங்களிலும், சித்தர்கள், மகான்களின் ஜீவ சமாதிகளிலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அன்னதானப் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

2. இந்த அன்னதான வைபவத்தில் சூடான, சுவையான, பல்வகைக் காய்கறிகள் கலந்த பிரிஞ்சி சாதம், கை கொள்ளாத பெரிய லட்டுப் பிரசாதம், பெரிய அளவு 9 சுற்று, 12 சுற்று கை முறுக்கு போன்ற இனிப்பு, கார வகைகளும், பள்ளிச் சிறுமிகளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், கண் மை, சீப்பு, கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களும் இறைப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

3. திருஅண்ணாமலை தீப உற்சவத்தின்போது சாதாரண பள்ளிக் குழந்தைகள் மட்டும் அல்லாது கண் பார்வையற்ற குழந்தைகள், அனாதை குழந்தைகள், உடல் ஊனமான குழந்தைகள், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இறைப் பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.

4. திருஅண்ணமலையில் ஏற்றப்படும் ஜோதி நமது பூலோகம் மட்டுமல்லாது அனைத்து லோகங்களுக்கும் அனைத்து நன்மைகளையும் அளிக்கவல்ல ஓர் ஒப்பற்ற ஜோதி. சுயம்புவாய்த் தோன்றும் இந்த ஜோதியில் பொது மக்களும் பங்கு பெறுவதற்காக பசு நெய், திரி கொண்டு திருஅண்ணாமலை தீபம் ஏற்றும் திருத்தொண்டு நிலவி வருகிறது. தீபக் கைங்கர்யத்தில் மக்கள் அனைவரும் பங்கு பெற்று தங்கள் கர்மச் சுமைகளை பஸ்மாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நமது ஆஸ்ரமம் பொது மக்கள் சார்பில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான மீட்டர் காடாத் துணியும், சுத்தமான பசு நெய்யும் திருஅண்ணாமலை தீபத்திற்காக வழங்கப்படுகிறது.

5. உயிரைக் காக்கும் அன்னதானம் போல் மானத்தைக் காக்கும் ஆடை தானமும் யாவரும் அவசியம் செய்ய வேண்டிய ஒன்றாகும். இதில் அற்புதமான வஸ்திரதான முறையை நமது சற்குரு திரு வெங்கடராமன் அவர்கள் செயலாற்றி வருகின்றார்கள். ஒவ்வொரு வருட திருக்கார்த்திகை தீப உற்சவத்தின் போதும் எல்லா விதமான புது ஆடைகளையும் - 16 கஜம், 9 கஜ புடவைகள், எட்டு முழ வேஷ்டிகள், சட்டை, பாண்ட், துண்டு, அங்கவஸ்திரம், கம்பளி, போர்வை, ஆண் பெண்களுக்கான உள்ளாடைகள் போன்றவை - ஆஸ்ரமத்தில் அடியார்கள் மூலமாக சேகரிக்கப்படுகின்றன. இந்த வஸ்திரங்கள் அனைத்தும் திருஅண்ணமாலை கார்த்திகை தீப ஜோதி தரிசனத்தைக் கண்டு, பூஜைகள் செய்யப்பட்டு சுத்திகரிக்கப்படுகின்றன. இவ்வாறு தூய்மையான ஆடைகள் நமது ஆஸ்ரம அடியார்களிடம் அளிக்கப்படுகின்றன. இவை இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் உள்ள கோயில்களுக்கு அடியார்களால் கொண்டு செல்லப்பட்டு அங்கு வரும் இறை அன்பர்களுக்குத் தானமாக அளிக்கப்படுகின்றன. இவ்வாறு திருஅண்ணாமலை கார்த்திகை தீப ஜோதி பிரசாதமானது உலகெங்கும் ஆடைகள் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டு உலகெங்கும் அமைதியையும் அன்பையும் பொங்கிப் பெருகச் செய்கின்றது. இதைவிட அற்புத உலகளாவிய சமுதாயப் பணி ஒன்று இருக்க முடியுமா என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

6. மனிதர்கள் செய்யும் செயல்களை கர்மம், வினை என்று சொல்கிறோம். இதில் தவறான செயல்களாக இருந்தாலும், நற்செயல்களாக இருந்தாலும் அவற்றின் பலன்களை பாவம், புண்ணியம் என்று அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால், பாவத்தின் விளைவுகளை அனுபவிக்க யாரும் முன் வருவது கிடையாது. மகான்களே இந்நிலையறிந்து தங்கள் தவ, யோக சக்திகள் மூலமாக இந்த விளைவுகளிலிருந்து மக்களை ஓரளவு காப்பாற்றி வருகின்றார்கள். எல்லா கர்ம வினை விளைவுகளையும் பூஜை, தவம், யோகத்தால் களைய முடியாது. எத்தகைய பூஜைகளாலும் தீர்க்க முடியாத கர்ம வினைகளை என்ன செய்வது? இதற்கும் வழி வகுத்துள்ளார் கருணை வடிவான கடவுள். திருக்கார்த்திகை அன்று மலைத் தலங்களில் ஏற்றப்படும் தீபத்திற்கு களையப் படாத கொடுமையான எந்த வல்வினைகளையும் தீர்க்கும் வல்லமை உண்டு. இதைக் கருத்தில் கொண்டு நமது ஆஸ்ரமத்தின் சார்பாக திருச்சி குளித்தலை அருகே ஐயர் மலையில் திருக்கார்த்திகை அன்று பெரிய கொப்பரையில் தீபம் ஏற்றப்படுகிறது. தீப தானத்துடன் அன்னதானம், ஆடை தானம் போன்ற தானங்களும் இங்கே ஆஸ்ரம சார்பில் நிறைவேற்றப்படுகின்றன. கார்த்திகை அன்று மலைத் தலங்களில் ஏற்றப்படும் தீபம் மக்களுக்கு மட்டும் அல்லாது புல், பூண்டு, தாவரங்கள், விலங்குகள் என அனைத்து உயினங்களுக்கும் மேன்மையைத் தரவல்ல சஞ்சீவி மருந்தாகும்.

7. மாதந்தோறும் திருஅண்ணாமலையைச் சுற்றி பௌர்ணமி இரவு ஐந்து லட்சத்திற்குக் குறையாமல் கிரிவலம் வருகின்றார்கள். இறை அடியார்களால் இறை நாமங்களைச் சொல்லி தயார் செய்த தூய்மையான பிரசாதம் கிரிவலம் அடியார்களுக்கு நமது ஆஸ்ரம வாசலிலேயே அன்னதானமாக வழங்கப்படுகிறது.

8. அன்னதானம் போல் ஞான தானமும் அவசியமானதே. மக்கள் யாவரும் இறை மார்கத்தில் நிலைத்திருப்பதற்காக ஆன்மீக விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய விஜயம் என்னும் ஆன்மீக மாத இதழ் மூலமாக திரு வெங்கடராமன் அளித்து வருகின்றார்கள். சித்தர்களின் எழுதாக் கிளவியாக உள்ள ஆன்மீக இரகசியங்களை தம் குருநாதர் ஸ்ரீஇடியாப்ப சித்தரிடம் இருந்து நேரடியாக பெற்ற அற்புத விளக்கங்களை எல்லாம் உலக மக்களின் நன்மைக்காகவும் மேன்மைக்காகவும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாகவும் மற்றும் ஸ்ரீஆயுர்தேவி மகிமை, திருஅண்ணாமலை கிரிவல மகிமை, மஞ்சள் மகிமை, ஸ்ரீகாயத்ரீ மகிமை போன்ற ஆயிரக் கணக்கான நூல்கள் மூலமாகவும் அளித்து வருகின்றார்கள். இந்த நூல்களை சென்னையிலுள்ள ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயாவிலும், நமது ஆஸ்ரமத்திலும் பெற்றுப் பயனடையலாம்.

8. பேரின்பமாகிய இறை இன்பத்தை உடனே அடைந்து விட முடியாது. இவ்வுலகில் உள்ள எல்லா லௌகீக இன்பங்களையும் அனுபவித்த பின்னரேயே இறை இன்பத்தை அடையும் வழி புலப்படும். இந்த உலக இன்பத்தை முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால் நமது முன்னோர்கள் காட்டிய 32 அறங்களையும் யார் ஒருவர் முழுமையாக இப்பிறவியில் ஆற்றுகின்றாரோ அவரே இவ்வுலக இன்பத்தை முழுமையாகப் பெற்று இறை இன்பத்தை அடுத்து நாடுவதற்கான தகுதியைப் பெறுகின்றார். உலக மக்கள் சார்பில் எமது ஆஸ்ரம் இறை அடியார்கள் மூலமாக இந்த 32 அறங்களையும் திரு வெங்கடராமன் அவர்கள் முழு மூச்சாக இடையறாது ஆற்றி வருகின்றார்கள்.

9. காவிரிக் கரையில் உள்ள 256 சிவத் தலங்களிலும் ஹோமம், வேள்விகளை ஆற்றி ஒவ்வொரு திருத்தலத்திலும் அன்னதானமும் சிறப்பாக நமது ஆஸ்ரம சார்பில் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. பௌர்ணமி தினங்கள் மட்டுமல்லாது, மாத சிவராத்திரி, பங்குனி உத்திரம், மாசி மகம், அமாவாசை, மாளய பட்சம் முழுவதும், 96 ஷண்ணவதி தர்ப்பண நாட்கள் போன்ற விசேஷ நாட்களில் எல்லாம் இத்திருத்தலங்களில் அன்னதானம், ஆடை அணிகலன் தானம் நமது ஆஸ்ரம சார்பில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

10. நவராத்திரி உற்சவத்தின்போது ஆயிரக் கணக்கான சுமங்கலிகளுக்கு மாங்கல்ய தானம், 9 கஜ, 16 கஜ புடவைகள், ஜாக்கெட்டுகள், உள்ளாடைகள், வளையல், மஞ்சள், குங்குமம், கண் மை, சீப்பு, பெரிய கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களும் சாதி, மத, இன பேதமில்லாமல் வழங்கப்படுகின்றன.

11. ஸ்ரீராமபிரான், தசரத சக்கரவர்த்தி, தர்மராஜர் போன்றோர் ஆற்றிய உத்தமமான அஸ்வமேத யாகத்தை சாதாரண மக்கள் இக்காலத்தில் நிறைவேற்ற முடியுமா? முடியும் என்று உரைக்கிறார்கள் நமது சித்தர்கள். முறையான ஆண் பெண் உறவு ஒரு அஸ்வமேத யாகப் பலனை அளிக்கக் கூடியது என்பது சித்தர்கள் கூற்று. இந்த எளிமையான அஸ்வமேத யாக அற்புதத்தை இன்றைய கலியுகத்திலும் பல்லாயிரக் கணக்காக நிறைவேற்றி பெரும் சாதனை படைத்தவரே நமது குருமங்கள கந்தர்வா அவர்கள். ஆம், ஆயிரக் கணக்கான இலவச திருமணங்களை சாதி, மத, இன பேதமில்லாமல் நிறைவேற்றி அனைத்துத் தம்பதிகளுக்கும் பொன் மாங்கல்யம், வெள்ளி மாங்கல்யம், புடவை, வேஷ்டி மங்கலப் பொருட்களைத் தானமாக அளித்து, இலவசத் திருமணங்களைப் பாரதம் எங்கும் நிகழ்த்தி உலக அமைதிக்கும், சமாதானத்திற்கும் வழி வகுத்தவரே திரு வெங்கடராமன் ஆவார்கள்.

12. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற முதுமொழிக்கேற்ப ஏழை மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கட்டணம், புத்தகம், நோட்டு, பேனா, சைக்கிள் போன்ற வாகன வசதி, தங்கும் வசதி, சாப்பாடு வசதி என அனைத்து விதமான வசதிகளும் நமது அறக்கட்டளை மூலம் ஏற்படுத்தித் தரப்படுகின்றன. இத்திட்டத்தில் முதல் வகுப்பு வரை உயர் கல்வி வரை படித்துப் பயனடைந்தோர் ஏராளம், ஏராளம்.

13. இந்தியாவில் உள்ள பல கோயில்களிலும், சிறப்பாக தமிழ் நாட்டில் உள்ள கோயில்களில் வாரந்தோறும் உழவாரப் பணி நமது அடியார்களால் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கோயில்களில் உள்ள குப்பை, ஒட்டடை போன்றவை அகற்றப்பட்டு, சாக்கடை, கோமுகம் போன்ற நீர்த் தாரைகள் சீரமைக்கப்பட்டு, விளக்குகள், வஸ்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டு ஆலயம் முழுவதும் நீரால் அலம்பப்பட்டு சோப்பு நீரால் நன்றாக தூய்மை செய்யப்படுகிறது. இவ்வாறு தூய்மை செய்யப்பட்ட ஆலயத்தில் நறுமணம் பரப்பும் சுத்தமான சாம்பிராணி தூபமும் இடப்படுவதால் ஒரு கும்பாபிஷேகத்திற்கு இணையான புனருத்தாரண சக்தியை இத்தகைய உழவாரத் திருப்பணிகள் அளிக்கின்றன. உத்தம குருநாதர் ஒருவர் உத்தரவின் பேரில் நிறைவேற்றப்படும் இத்தகைய ஆலயத் திருப்பணிகள் உலகிற்கு சுபிட்சத்தையும், மழை, விவசாய அபிவிருத்தி, சமுதாய ஒற்றுமை போன்ற நற்பலன்களைத் தோற்றுவிக்க வல்லவையாகும்.

14. சமுதாயத்தால் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அவல நிலையில் உள்ள மக்களுக்கும் இறைவனின் கருணை சென்றடையும் பொருட்டு குருடர் சேவை, தொழு நோயாளிகள் பராமரிப்பு, உடல் ஊனமுற்றோருக்கு உதவி, மன வளர்ச்சி, மூளை வளர்ச்சி இல்லாதோருக்கு உதவி, மன நோயாளிகள் சேவை, அனாதை காப்பகங்களில் அறப் பணி, வயதானோர் சேவை போன்ற பல்வேறு சேவைகளும் இத்தகையோருக்குத் தேவையான ஆடைகள், மருத்துவ வசதி, பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் பலவும் நமது அறக்கட்டளை மூலமாக வழங்கப்படுகின்றன.

15. திருச்சி, சென்னை போன்ற நகரங்களைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் ஒவ்வொரு வாரமும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு தகுதி வாய்ந்த மருத்துவர்கள் மூலம் கிராம நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான மாத்திரைகள், மருந்துகள், ஊசிகள், டானிக்குகள் இலவசமாக அளிக்கப்படுகின்றன. கர்ப்பிணிகளுக்குத் தேவையான சத்து மருந்துகளும், டானிக்குகளும், குழந்தைகளுக்குத் தேவையான போலியோ தடுப்பு ஊசிகளும், சொட்டு மருந்துகளும், டானிக்குகள், மாத்திரைகளும் சிறப்பாக அளிக்கப்படுகின்றன. இறை நாமத்துடன் கூடிய சேவையால் இத்தகைய மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெறும் நோயாளிகள் அற்புதமான முறையில் வெகு விரைவில் குணம் பெறுவது இறைவனின் பெருங்கருணையை நமக்கு நினைவுறுத்துகிறது. இத்தகைய கிராமங்களில் நமது குருநாதர் கூறும் முறையில் நிறைவேற்றப்படும் தன்வந்த்ரீ பூஜைகள் அக்கிராம மக்களுக்கு நீண்ட நாள் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் ஆரோக்கியத்தையும் அளிப்பதைக் கண் கூடாகக் காணலாம்.

16. இந்த உலகம் இயங்குவது வேத சக்தியால்தான். வேதம் தழைத்தோங்கினால்தான் மாதம் மும்மாரி பொழிந்து சுபிட்சம் ஏற்படும். ஆனால், நாளுக்கு நாள் வேதம் ஓதுதல் குறைந்து கொண்டே வருகிறது. வேதம் கற்போரின் எண்ணிக்கையும் மருகி வருகிறது. வேத சம்ரட்சணம் என்னும் அரிய திருப்பணியை நமது அறக்கட்டளை மூலமாக திருவெங்கடராமன் அவர்கள் நிறைவேற்றி வருகின்றார்கள். வேதம் கற்போருக்கு நிதி உதவி, அன்னதானம், ஆடைதானம், மருத்துவ உதவி போன்ற அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படுகின்றன. சமஸ்கிருதமும், தமிழ் மொழியும் இறைவனின் இரு கண்கள் அல்லவா? சமஸ்கிருதம் அறியாதோரும் தமிழ் மொழியில் அமைந்த தேவாரம், திருவாசகம் போன்ற பன்னிரு திருமுறைப் பாடல்களையும், திருப்புகழ், திருவருட்பா, கவசப் பாடல்கள் போன்ற தமிழ் மறைகளைப் போதித்து தமது சத்சங்கத்திலுள்ள இறை அடியார்கள் மூலமாக வாரந்தோறும் ஓதி வரச் செய்து வேதம் தழைத்தோங்க அரும்பணி ஆற்றி வருகின்றார்கள். திரு வெங்கடராமன் அவர்கள் அருளிய திரு அகத்திய பன்னிரு முறைத் திரட்டுப் பாடல்களை தொடர்ந்து ஓதி வந்தால் (32 பதிகங்கள்) 32 அறங்களைச் செய்த பலன்கள் ஓரளவு கிட்டும்.

முன்னூறுக்கும் மேற்பட்ட
அனுகிரகங்களை அளிக்கவல்ல
காயத்ரீ ஸ்தம்பம்

இவை அனைத்திற்கும் மேலாக, இவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் திகழ்வதே திரு வெங்கடராமன்அவர்களின் திருஅகஸ்திய குருகுலம். உலகெங்கிலும் உள்ள இறை அன்பர்களைத் தனது அன்பால் ஈர்த்து திருஅகஸ்தியக் குருகுலத்தில் அவர்களைப் புடம் போட்ட தங்கமாய் மிளிரச் செய்யும் ஒப்பற்ற ஆன்ம சேவைக்கு உலகில் வேறு எதையும் ஈடாய்ச் சொல்ல முடியாது. இன்றும் சித்தர்களின் குருகுலம் உண்டு. இந்த உண்மையைப் பறை சாற்றுவதே ஸ்ரீலஸ்ரீலோபா மாதா அகஸ்தியர் ஆஸ்ரமமாகும்.

மேலும் மேற்கூறிய அறப் பணிகள் எல்லாம் திரு வெங்கடராமன் அவர்களின் அளவிட முடியாத ஆன்மீகப் பணிகளின் மிக மிகச் சிறிய பகுதியே. அவர்தம் ஆன்மீகப் பெருங்கடலின் ஒரு சிறு துளியே இப்பணிகள் எல்லாம். அவற்றை முழுதுமாக விளக்குவது என்பது அருணாசலப் புராணத்தை ஓர் இரவில் சொல்லி முடிப்பது போலாகும். உதாரணத்திற்காக ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றோம்,

ஹோமம் என்ற ஒரு திருப்பணியை எடுத்துக் கொள்வோம். எமது ஆஸ்ரமத்தில் ஒரு ஹோம குண்டத்தை நிர்மாணிக்கும்போது நமது குருநாதர் திரு வெங்கடராமன் அவர்கள் ஒரு சில அட்சரங்களை மணல் பீடத்தில் எழுதி அதன் மேல் செங்கற்களை அடுக்கி ஹோம குண்டங்கள் கட்டுவார்கள். அதில் எழுதப்படும் மந்திர அட்சரங்கள் அனைத்தும் சித்தி செய்யப்பட்டவையே. ஒரு மந்திரத்தை ஒரு சாதாரண மனிதன் சித்தி செய்ய வேண்டும் என்றால் அதை ஒரு நாளைக்கு 22 மணி நேரம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும். இவ்வாறு இடைவிடாமல் 18 ஆண்டுகள் தொடர்ந்து ஜெபித்து வந்தால்தான் அந்த மந்திரம் சித்தியாகும். அவ்வாறு சித்தி செய்த மந்திரத்தை ஒரு முறை ஒரு ஹோம குண்டத்தில் சங்கல்பம் செய்து அளித்து விட்டால் (பிரயோகம் செய்து விட்டால்) உடனே அதன் சக்தி பரவெளியில் கலந்து விடும். மீண்டும் அதை யாரும் தனி மனித நலனுக்காகப் பயன்படுத்த முடியாது. ஆனால், திரு அகஸ்திய குருகுலத்திலோ இத்தகைய ஹோமங்கள் ஆயிரக் கணக்கில் நிகழ்ந்துள்ளன. அப்படியானால் இந்த ஹோமங்களுக்கெல்லாம் ஆதாரமான அடிப்படை மந்திர சித்தி சக்திகளை என்னவென்று எடுத்துரைப்பது?

இவ்வாறு ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமத்தின் ராஜகோபுரம், பித்ரு படிக்கட்டுகள், கோபுர மண்டபங்கள், வண்ண விளக்குள், இறைவனின் திருவுருவங்கள், கதவுகள், ஜன்னல்கள் என்று எந்தப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அவை அனைத்துமே நல்ல தெய்வீகக் கதிர்களையே வெளிப்படுத்தி உலக மக்கள் அனைவருமே, உலகிலுள்ள புழு பூச்சி என அனைத்து உயிரினங்களின் நல்வாழ்விற்காகவே திகழ்வன ஆகும். இந்தப் பொருட்களில் ஏதாவது ஒன்றை ஒரு ஆத்ம சாதகர் எடுத்துக் கொண்டு ஆத்ம விசாரம் செய்து வந்தாலே போதும் அவர் எளிதில் முக்தியையே அடைந்து விடலாம்.

உதாரணமாக, நமது ஆஸ்ரமத்தில் எத்தனை டியூப் லைட்டுகள் உள்ளன, எத்தனை மின் விசிறிகள் உள்ளன, அவை ஏன் இந்தந்த இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன என்ற ஒரு விஷயத்தை மட்டும் கணக்கிட்டு ஒரு ஆன்மீக சாதகர் ஆத்ம விசாரம் செய்து வந்தாலே எளிதில் இந்த ஆத்ம விசாரம் அவரை முக்திப் பாதையில் கொண்டு சேர்த்து விடும். அந்த அளவிற்கு தேவ தெய்வீக ஞானத்தையும், தியாக சக்திகளையும் உள்ளடக்கியவை ஆஸ்ரமத்திலுள்ள ஒவ்வொரு பொருளும் ஆகும். இந்தப் பொருட்கள் யாவும் மக்களின் பலவிதமான ஏக்கங்களைத் தீர்த்து அவர்களை இறை வழியில் நிலைநிறுத்தும் அற்புதப் பணியை செயலாக்குகின்றன.

நமது ஆஸ்ரமத்தின் பிரதான வாயிலிலும், பித்ரு படிக்கட்டுகளின் இருபுறமும், கோபுர மண்டபங்களுக்கு இடையே என பல்வேறு இடங்களில் அமைந்துள்ள டைமண்ட் வடிவில் உள்ள மூவண்ண சக்திபீட வடிவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். சிவப்பு, மஞ்சள், பச்சை என்ற மூவண்ணங்களால் ஆக்கப்பட்டுள்ள இந்தப் பீட வரைவுகள் மனிதர்களின் முன்னூறுக்கும் மேற்பட்ட ஏக்கங்களைக் களைந்து அவர்களுக்கு மன அமைதியை அளிக்கின்றன.

இந்தப் பீடங்கள் அளிக்கும் சில யோக சக்திப் பலன்களை மட்டும் இங்கே குருவருளால் அளிக்கிறோம். மற்ற பலன்களை எல்லாம் நீங்களே ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். இந்தப் பீடத்தின் வடிவத்தை டைமண்ட் என்று கூறுகிறோம். ஒவ்வொரு நவகிரகமும் ஒவ்வொரு உலோகத்திற்கும் நவரத்தின கல்லிற்கும் அதிதேவதை ஆகிறது. உதாரணமாக, தங்கத்திற்கும் புஷ்பராக மாணிக்கத்திற்கும் அதிதேவதை வியாழ (குரு) பகவான். வைரத்திற்கு அதிதேவதை சனிபகவான். சனி பகவானின் அருளைப் பெறவும், அஷ்டம சனி, ஏழரை நாட்டுச் சனி போன்ற துன்பங்களிலிருந்து மீளவும் அனைவரும் வைரம் அணிந்து கொள்ள வேண்டும். ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியம் ஆகுமா?

தங்கத்தையே பார்க்காத ஏழை, எளிய மக்கள் வாழும் நாட்டில் வைரத்தை அணிவது என்பது அவ்வளவு எளிதானதா? ஏழை எளிய மக்களும் நலம் பெற, அவர்கள் வைரம் அணியாத ஏக்கத்தைத் தீர்க்க இந்த டைமண்ட் சித்திரம் உதவும். இந்தச் சித்திரத்தைப் பார்த்தாலே சனி பகவானை வழிபட்ட பலன்களும், வைரம் அணியாத ஏக்கங்களும், வைர நகைகள் அணிந்து பூஜை செய்த பலன்களையும் எளிதாகப் பெறலாம். வெள்ளி அல்லது சனிக் கிழமைகளில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து எமது ஆஸ்ரமத்தில் அமைந்துள்ள இந்த டைண்ட் வண்ணச் சித்திரத்தைத் தரிசனம் செய்து பால்கோவா தானம் செய்து வந்தால் வைர நகை வியாபாரிகள் நலம் பெறுவர்.

டைமண்ட் வண்ணப் படத்திலுள்ள சிவப்பு, மஞ்சள், பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் முறையே பூலோகம், புவர் லோகம், சுவர்(க) லோகம் என்ற மூன்று லோகங்களைக் குறிக்கின்றன. இந்த லோகங்களின் தரிசனம் கால சந்தி தோஷங்களைக் களையவல்லது. நாம் எந்நேரமும் இடைவிடாது இறைவனின் நாமத்தை உச்சரித்த வண்ணமே இருக்க வேண்டும். ஆனால், எந்த ஒரு மந்திரத்தைச் சொன்னாலும் அதன் வார்த்தைகளுக்கு நடுவில் சிறிதளவாவது இடைவெளி ஏற்படும் அல்லவா?
உதாரணத்திற்கு,
ஓம் பூர் புவ சுவஹ தத் சவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதுகையில் இதை

1. ஓம்

2. பூர் புவ சுவஹ

3. தத் சவிதுர் வரேண்யம்

4. பர்கோ தேவஸ்ய தீமஹி

5. தியோ யோந ப்ரசோதயாத்

என்று ஐந்து பதங்களாகப் பிரித்து ஓத வேண்டும். அவ்வாறு ஓதும்போது ஒவ்வொரு பதத்திற்கு இடையிலும் மந்திரம் ஓதாத சிறிது நேர இடைவெளி ஏற்படும். அல்லவா? இந்தச் சிறிது நேர இடைவெளியைக் கூட தெய்வீக லோகங்களில் ஏற்பது கிடையாது. இதை மந்திரம் ஓதாது, எந்த வித பூஜையும் செய்யாது வீணே கழிந்த காலமாகக் கணக்கிடுவார்கள். பல விதமான கால சந்தி தோஷங்களில் இது ஒரு வகையாகும். இவ்வாறு சில வினாடிகளாகச் சேரும் கால தோஷங்கள், நிமிடங்கள், மணி, நாட்கள், மாதங்கள், வருடங்களாக மாறி பல பிறவிகளில் வந்து நம்மைத் தாக்கும். இத்தகைய கால சந்தி தோஷங்களின் விளைவுகளிலிருந்து ஓரளவு நம்மைக் காப்பதே இந்த மூவண்ணக் காப்புச் சின்னமாகும்.

குருவின் தலையாய கடமைகளில் ஒன்று தன்னை அண்டி இருக்கும் அடியார்களின் கர்ம வினைகளைக் களைய வழி காட்டுவதாகும். நல்ல, தீய செயல்களின் விளைவுகளையே நாம் கர்ம வினை என்று கூறுகிறோம். கர்ம வினைகளில் சஞ்சிதம், பிராரப்தம், ஆகாமி என்று மூன்று விதமான வகைகள் உண்டு. அதாவது இதுவரை நாம் செய்த வினைகளின் தொகுப்பு சஞ்சிதம், நாம் இப்பிறவியில் சேர்க்கும் வினைகளின் விளைவுகள் பிராரப்தம், நாம் இனி செய்யப் போகும் செயல்களின் தாக்கம் ஆகாமி எனப்படும். இந்த மூன்று விதமான கர்மவினைகளின் சுமையை ஓரளவு குறைக்க வழி காட்டுவதே இந்தக் கர்ம வினை நீக்கும் மூவண்ணச் சக்கரமாகும்.

ஒருவருடைய ஜாதகக் கட்டத்தில் ஒன்பதாம் இடத்தை பாக்யஸ்தானம், பித்ரு ஸ்தானம் என்று சொல்வதுண்டு. இந்த இடத்தின் வலிமையே ஜாதகருக்குக் கடவுள் பக்தி, தர்ம சிந்தனை, நற்குணங்கள், குரு உபதேசம் போன்ற பாக்கியத்தைக் கொடுக்கும். எனவே, ஜாதகத்தில் ஒன்பதாம் இடம் நல்ல முறையில் அமைவது மிகவும் அவசியம். ஸ்ரீராமரின் ஜாதகத்தில் உச்சம் பெற்ற சுக்ர பகவான் ஒன்பதாம் இடத்தில் வீற்றிருக்க, யோக பலமுற்ற உச்ச கடக குரு தனது விசேஷமான பார்வையால் ஒன்பதாம் இடத்தை அலங்கரிக்கிறார். இவ்வாறு ஒன்பதாம் இடம் சிறப்பாக அமையப் பெறாதவர்களும் குருவின் கருணை கடாட்சத்தைப் பெற வேண்டும் அல்லவா? குரு இல்லாத குருட்டு வாழ்க்கையை யாரும் பெறக் கூடாது என்றால் இந்த குரு கடாட்சச் சக்கரத்தை அனைவரும் எமது ஆஸ்ரமத்தில் தரிசனம் செய்வது அவசியம். ஒன்பதாம் இட தோஷங்களைக் களைய வல்லது இந்தச் சுப சக்கரம்.

பெண்களின் மாத விடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பையில் ஏற்படும் குறைபாடுகள், கான்சர் போன்ற நோய்களிலிருந்து காக்கும் வல்லமை உடையதே இந்த கன்னிக் காப்புச் சக்கரமாகும். வெள்ளிக் கிழமைகளிலும் சிறப்பாக வெள்ளியும் பஞ்சமி திதியும் சேர்ந்த விசேஷ நாட்களில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து, இந்தச் கன்னிக் காப்புச் சக்கரத்தைத் தரிசனம் செய்து ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு டானிக்குகள், மருந்துகள், சத்து மாத்திரைகள், உள்ளாடைகள், sanitary napkins தானம் செய்து வந்தால் பெண்கள் நலம் பெறுவர். பெண் மருத்துவர்கள் இத்தகைய வழிபாடுகளை வெள்ளியும் மூல நட்சத்திரமும் சேர்ந்த நாட்களில் மேற்கொள்வதால் அவர்கள் கைராசியும் தங்கள் துறையில் பேரும் புகழும் பெற இறைவன் அருள் புரிவார்.

பித்ரு படிக்கட்டுகள்
ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்
திருஅண்ணாமலை

சுமங்கலிப் பெண்கள் எப்போதும் ஒரு ரூபாய் அளவுள்ள குங்குமப் பொட்டை நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒட்டுப் பொட்டு எந்தக் காரணம் கொண்டும் பெண்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. கெட்டுப் போனாலும் ஒட்டுப் பொட்டு வைக்காதே என்பது சித்தர்களின் அறிவுரை. ஒட்டுப் பொட்டு கணவனின் ஆயுளைக் குறைக்கும். தெரிந்தோ தெரியாமலோ இத்தகைய தவறுகளைச் செய்தவர்கள் இனியேனும் மனம் திருந்தி நல்ல சுப மங்கள சக்திகளைப் பெற்று வாழ உதவி செய்வதே இந்தக் குருமங்களச் சக்திச் சக்கரமாகும். முடிந்த போதெல்லாம் இந்தச் சக்கரத்தைத் தரிசனம் செய்து சுத்தமான குங்குமத்தை ஏழைச் சுமங்கலிகளுக்கும் கோயில்களுக்கும் தானமாக அளித்து வந்தால் மங்களமான வாழ்வு பிறக்கும்.

பலருடைய வாழ்வில் முடியாமல் பாதியிலேயே நின்று தடுமாறும் பல காரியங்களைக் காண்கிறோம். பாதியில் நிற்கும் வீடு, கட்டிடங்கள், கோயில் கும்பாபிஷேகங்கள், விட்டுப் போன தேர்வுகள், கடைசிக் கட்ட இண்டர்வியூ, தடைபட்ட திருமணங்கள், இவ்வாறாக முடிக்க வேண்டிய தருணத்தில் ஏதோ சில காரணங்களால் முடிவடையாமல் துன்பங்களில் சிக்கித் தவிப்போர் உண்டு. அத்தகைய காரியங்களில் பூரணத்துவத்தை ஏற்படுத்தி காரியங்களை முடித்து வைக்கும் பூரணச் சக்கரமே எமது ஆஸ்ரமத்தில் அமைந்துள்ள மூவண்ணச் சக்கரமாகும். 9, 18, 27 என்ற தேதிகளிலோ, பௌர்ணமி இரவிலோ திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து இந்தப் பூரணச் சக்கரத்தை தரிசனம் செய்து வந்தால் முடியாமல் பாதியில் நின்று போன காரியங்கள் சுபமான பூரணத்துவத்தைப் பெறும்.

கிட்டப் பார்வை, எட்டப் பார்வை, காட்ராக்ட், மாலைக் கண் போன்ற கண் கோளாறுகள் வராமல் தடுக்க வல்லதே இந்த மங்கள நேத்ரச் சக்கரமாகும். ஞாயிற்றுக் கிழமைகளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் (விடியற்காலை 3.30 மணி) திருஅண்ணாமலை கிரிவலத்தைத் தொடங்கி சூரியோதய நேரத்தில் இந்தச் சக்கர தரிசனம் பெற்று வந்தால் கண் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். மன நடுக்கத்தைப் போக்கி தேர்வுகளிலும், இண்டர்வ்யூகளிலும் மனோ தைரியத்துடன் வெற்றி பெறவும் இந்த வழிபாடு பெரிதும் துணை புரியும்.

இது போன்ற முன்னூறுக்கும் மேற்பட்ட ஏக்கங்களைத் தீர்த்து, மக்களின் பல தரப்பட்ட குறைகளைக் களைந்து அவர்களை இறைவழியில் நடத்திச் செல்ல வல்லதே இந்த மூவண்ண டைமண்ட் சக்கரமாகும். இவ்வாறு எமது ஆஸ்ரமத்தில் உள்ள ஒவ்வொரு மண்டபமும், தூணும், கோபுரக் கலசமும், விளக்கும், நாற்காலி, படுக்கை, பாத்திரம், கதவு, ஜன்னல் எல்லாமே பல்வேறு வகையான அனுகிரகங்களையும், நல்வரங்களையும் அளிக்க வல்ல கற்பகத் தருவாக மலர்ந்துள்ளன. இவை அனைத்திற்கும் மூலாதாரமாக, அடிப்படையாக இருப்பது திரு வெங்கடராமன் அவர்களின் இடையறாத தவமும், அயராத பூஜா சக்திகளுமே ஆகும். உயிர்களின் மேல் உள்ள இந்த அரும்பெருஞ் சித்தரின் எல்லையில்லா அன்பின் வெளிப்பாடே எமது ஆஸ்ரமத்தில் நீங்கள் காணும் தெய்வீகச் சின்னங்கள்.

தாயின் அன்பை விஞ்சிய ஒன்றை நீங்கள் அனுபவிக்க விரும்பினால் இன்றே நீங்கள் திருஅகஸ்திய குருகுலத்திற்கு வாருங்கள். பல கோடித் தாய்மார்கள் ஒன்றாகத் திரண்ட அகண்டாகார அன்பு ஜோதியை, கருணைக் கடலை திருஅகஸ்திய குருகுலத்தில் கண்டு அனுபவித்து மகிழுங்கள்.

திருக்கயிலாயத்திற்கு இணையான பக்திப் பரவசத்தில் நீங்கள் மூழ்கித் திளைக்க வேண்டுமா? நீங்கள் உடனே வர வேண்டிய இடம் திருஅகஸ்திய குருகுலம். இறை பக்தி என்றால் என்ன? அது எப்படி இருக்கும்? ராமகிருஷ்ணர், ரமணர், சேஷாத்ரி போன்ற மகான்கள் தங்களை மறந்து, தங்கள் உடலை மறந்து மூழ்கித் திளைத்தார்களே அந்த இறை இன்பம் எப்படித்தான் இருக்கும் என்பதை உங்கள் கண்ணால் காண வேண்டுமா? உங்களுக்கு இறைவன் இந்த வாழ்க்கையிலே அளிக்கும் சந்தர்ப்பம். உடனே திருஅண்ணாமலை வாருங்கள்.

ராமர் வாழ்ந்த காலத்தில் நாம் இல்லை. கிருஷ்ணரின் லீலைகளைக் காண எனக்குக் கொடுத்து வைக்க வில்லை. லலிதா பரமேஸ்வரியை நான் பார்த்ததே இல்லை. மீனாட்சி திருமணம் எவ்வளவு கோலாகலமாக நடந்திருக்கும். அந்தப் புனிதமான நேரத்தில் நாம் மதுரையில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?
இத்தகைய ஏக்கங்கள் எல்லாம் உங்கள் அடி மனதில் எழுகின்றனவா? நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது திருஅகஸ்திய குருகுலத்தை அடைவதுதான். உங்கள் ஆன்மீக ஏக்கங்கள் அனைத்தையும் நீக்கும் ஒரே தெய்வீக நீரூற்று திரு வெங்கடராமன் அவர்களின் அருள் மொழிகளே.

உங்களை யாரும் புரிந்து கொள்ளவில்லையா? நேர்மையான உங்கள் நெஞ்சில் கொடுமையான வார்த்தை வேல்களை வீசி உங்கள் மனதைப் புண்படுத்துகிறார்களா? உங்கள் திறமையை மதிக்கத் தெரியமாமல் எள்ளி நகையாடுகிறார்களா? கவலையை விடுங்கள். உங்களைப் படைத்த இறைவன் ஒருவனே உங்களைப் புரிந்து கொள்ள முடியும். இறைவனை உங்களால் பார்த்து உங்கள் மன வேதனையை அவரிடம் கொட்ட முடியாமல் போகலாம். ஆனால் இறைவனைப் பார்த்த ஒரு அன்பு உள்ளம் உங்கள் நல்வரவிற்காக திரு அண்ணாமலையில் உங்கள் சேவைக்காக ஏங்குகிறது. திரு அகஸ்திய குருகுலத்தில் உங்கள் திருப்பாதங்களைப் பதியுங்கள் உங்கள் கவலைகள் எல்லாம் பறந்து போகும், எல்லாம் மறந்துபோகும், அன்பு ஒன்றைத் தவிர.

நல்லவர்களின் கனவு நனவாகும் என்பது உண்மை, அதிலும் நம் சற்குரு போன்ற நல்லவர்களின் கனவு நிச்சயம் நனவாகத்தானே வேண்டும், நடைமுறையில் நடந்தே தீர வேண்டும் என்பதற்கு நம் ஆஸ்ரமத்தில் அமைக்கப்பட்டுள்ள பித்ரு படிக்கட்டுகளே சாட்சி. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் நம் ஆஸ்ரமத்தின் பித்ரு படிக்கட்டுகளை சலவைக் கல்லில் அமைக்க வேண்டும் என்பது நம் சற்குருவின் விருப்பம். அது தூய ஒரு உள்ளத்தின் விருப்பமாக பிரகாசித்ததால், அண்ணாமலையான் இதயத்தின் எதிரொலியாக இருந்ததால், மறையொலியாக திகழ்ந்ததால் நம் ஆஸ்ரமத்தில் அது உயிர் பெற்று, படிக்கட்டு என்னும் 12 பித்ரு மூர்த்திகளின் பவள வடிவம் பெற்று இங்கு திகழ்வதை இன்று நீங்கள் தரிசித்து மகிழலாம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam