ஏ மனமே அஞ்சாதே, எல்லாம் ஈசன் செயல்.

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

கேள்வி கேட்டலே ஞானத்தின் ஆரம்பம். குழந்தைப் பருவத்தில் எதையும் துருவித் துருவி ஆராய்ந்து நமக்குள்ளேயே கேள்வி கேட்கும் நாம் பெரியவர்களாக வளர்ந்ததும் இந்தத் துருவி ஆராயும் பழக்கம் மறைந்து விடுகிறது. இதானல் நமது அறிவும் சிறிது சிறிதாக மங்கி, மறைந்து விடுகிறது. குழந்தைப் பருவத்தில் மழலைக் குழந்தைகளைச் சுற்றி வரும் தேவதைகளும் தெய்வங்களும் குழந்தை மூன்று வயதை அடைந்தவுடன் அவர்களை விட்டு விலகி விடுகின்றன. அதனால் குழந்தைகள் தெய்வீகத் தன்மையை இழந்து, கேள்வி கேட்டு அறிவை விருத்தி செய்யும் பண்பையும் இழந்து விடுகின்றன. கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்ற மகான்கள் வாக்கிற்கு ஏற்ப பெரியோர்கள் நாம் கேட்டால்தான் எதையும் கொடுக்கத் தயாராக உள்ளார்கள்.

உண்மையை நாடும் நாட்டம் உள்ள எவரும் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எப்போது எல்லா கேள்விகளுக்கும் பதில் தனக்குள்ளேயே கிடைக்கும் நிலை ஏற்படுகிறதோ அப்போதுதான் உண்மையான ஆன்மீக வாழ்வு ஒரு மனிதனுக்கு ஆரம்பமாகிறது என்று கூறலாம். இந்த நிலையை ஒவ்வொரு மனிதனும் அடைய அவனுக்கு உறுதுணையாக நிற்பவர்களே மகான்களும் சற்குருமார்களும். இறைவனை நோக்கி முன்னேற நினைக்கும் ஒவ்வொரு மனிதனும் உத்தம குரு ஒருவரைச் சரணடைந்து தன்னுடைய ஆன்மீக சந்தேகங்களை அவரிடம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய உலகில் நமது எல்லாவிதமான சந்தேகங்களுக்கும் ஆன்மீக வினாக்களுக்கும் அற்புதமான தெய்வீகம் ததும்பும் சித்த வேத, தேவ வார்த்தைகளை பதில்களாகத் தர முன் வந்துள்ளார்கள் திரு வெங்கடராமன் அவர்கள்.

ராமர் அன்பை மனித உருவில் நடித்துக் காட்டினார், வால்மீகி அதை எழுத்தில் வடித்துக் காட்டினார்.

பன்னெடுங் காலமாகத் தம்மிடம் வரும் இறையடியார்கள் எழுப்பிய வினாக்களுக்கு திரு வெங்கடராமன் அவர்கள் அளித்த பதில்களை இங்கு இறையடியார்களின் நன்மைக்காக அளிக்கிறோம். இவை அனைத்தையும் நன்கு படித்துப் பயன்பெற எல்லாம் வல்ல சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈசரின் திருப்பாதங்களைப் பணிகிறோம்.

அடியார் கேள்வி

மகாபாரதத்தில் அர்ச்சுனன் தன் தலைக்கு மேல் சுழலும் மீனை அம்பால் அடித்து தன் திறமையைக் காட்டி திரௌபதியை மணந்தான். ஆனால், ஸ்ரீராமரோ ஜனகர் வைத்திருந்த சிவதனுசுவை உடைத்துத் தன் பராக்கிராமத்தைக் காட்டி சீதையை மணக்க வேண்டியதாயிற்று. திரௌபதிக்காக வைத்த போட்டி தார்மீகமானதாகவும் (positive sport) சீதைக்காக வைத்த போட்டி (negative sport) எதிரிடையான செயல்போலவும் தோன்றுகிறதே. இதற்கான உண்மைக் காரணத்தை அறிய விரும்புகிறேன், குருதேவா?

குருநாதரின் பதில்

அருமையான கேள்வி உன்னுடையது. இந்த இரண்டுபோட்டிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் மு ன் சிவதனுசு இப்பூவுலகிற்கு வந்த வரலாற்றைப் பற்றி நீ தெரிந்து கொள்ள வேண்டும். சிவபெருமானிடம் கோடிக் கணக்கான தனுசுகள் அதாவது வில்கள் உண்டு. இவை அனைத்தையுமே சிவதனுசு என்றே கூறுகின்றோம். மக்களின் சிற்றறிவுக்குத் தெரிந்த வரை சிவபெருமான் தன்னிடம் உள்ள மூன்று சிவதனுசுகளைச் சிவப் பிரசாதமாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அளித்துள்ளார். இதில் ஒன்று ராவணனுடைய தவத்தை மெச்சி அவனுக்கு அளிக்கப்பட்டது.

ஒரு இல், ஒரு வில், ஒரு சொல் என்று வாழ்ந்ததால் மனிதர்கள் இதயத்தில் நீங்கா இடத்தைப்பெற்றார் ஸ்ரீராமர்.

சிவபெருமாளே வழங்கிய வில் என்றால் அதன் மகிமை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா? சிவ தனுசுவை வைத்திருக்கும் ஒருவனை எந்த உலகத்திலும் யாராலும் வெல்ல முடியாது. ஆனால், இந்த வில்லை முறையாகப் பயன்படுத்தும் வரைதான் அது சிவப் பிரசாதமாக இருக்கும். அதைத் தவறாகப் பயன்படுத்தினால் அது தன் சக்தியை இழந்து விடும். அன்பே சிவம். சிவப் பிரசாதமும் அன்பின் வடிவம் அல்லவா? தர்மத்தை நிலைநாட்ட உறுதுணையாக நிற்கும் சிவதனுசு அதர்மமான முறையில், நியாயமற்ற போரில் பயன்படுத்தப்பட்டால் தன் சக்தியை இழந்து விடும் என்பது சிவபெருமான் வாக்கு. இதை பூரணமாக உணர்ந்தவன்தான் இராவணன், ஆனால், தான் என்ற அகங்காரம் காரணமாக சிவ வாக்கை மறந்து எல்லா லோகங்களுக்கும் சென்று அனைத்து லோகங்களையும் வென்று தேவர்கள், கந்தர்வர்கள் என அனைவரையும் வென்றான்.

நவகிரக லோகங்களுக்கும் சென்று எல்லா நவகிரகங்களையும் தன் அடிமையாக்கி தன் சிம்மாசனப் படிகளாக்கி அவர்களை அவமானப்படுத்தினான். இத்தகைய அதர்மமான செயல்களால் சிவதனுசுவின் சக்தி சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. அனைத்து லோகங்களையும் வென்ற இராவணன் கடைசியில் பிரம்ம லோகத்திற்கும் சென்றான். பிரம்மாவையும் வென்று தன் அடிமையாக்க வேண்டும் என்பது அவன் விருப்பம். பிரம்ம லோகம் சென்ற ராவணனுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. இராவணனின் தவறான செய்கைகளால் தன் சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வந்த சிவதனுசு இராவணன் பிரம்ம லோகத்தை அடைந்தவுடன் முழுதுமாகத் தன் சக்தியை இழந்து விட்டது. இதைச் சற்றும் எதிர்பாராத இராவணன் செய்வதறியாது திகைத்தான். பிரம்ம லோகத்தை ஆளும் பிரம்மாவை எதிர்க்க முடியாமல் வெட்கம் அடைந்து தலை குனிந்தான் இராவணன். தன் செய்கையால் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை நினைந்து வருந்தி உடனடியாகத் தன் சொந்த அரக்க லோகத்திற்கு வெறுங் கையுடன் திரும்பி விட்டான். இனி சிவ தனுசால் என்ன பயன் என்று எண்ணி அதைத் தூக்கி எறிந்து விட்டான். இதைப் பார்த்தார் ஜனக மகாராஜா. சிவ பிரசாதம் என்றுமே சிவப் பிரசாதம் அல்லவா? இதை இராவணன் அறியவில்லையே என்று வருந்தி அந்த சிவதனுசுவை தான் எடுத்து வைத்துக் கொண்டு அதற்கு தினமும் எல்லா விதாமன அபிஷேக ஆராதனைகளையும் பூஜைகளையும் பன்னெடுங் காலமாக ஆற்றி வந்தார் ஜனக மகாராஜா.

காலச் சக்கரம் சுழன்றது...

குழந்தை பாக்கியம் இல்லாததால் சீதையைப் பூமியில் கண்டெடுத்துத் தன் மகளாக ஜனகர் வளர்த்து வந்தார் அல்லவா? சீதை சிறுமியாக இருக்கும்போது ஒரு நாள் தன் தோழிகளுடன் பூப்பந்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்தப் பந்து உருண்டு போய் சிவ தனுசுவின் கீழ் மறைந்து விட்டது. பந்தைத் தேடி வந்த சீதை தன் இடது கையால் சிவ தனுசுவைச் சாதாணமாக துõக்கிப் பிடித்துக் கொண்டு வலது கையால் பந்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டாள். இந்தக் காட்சியைக் கண்ட ஜனக மகராஜாவுக்கு ஒரே ஆச்சரியம். ஏனென்றால் அந்த சிவ தனுசுவை 10,000 வீர மல்லர்கள் சேர்ந்தால்தான் நகர்த்தவே முடியும். ஆனால், இந்தக் குழந்தை அலட்சியமாக இடது கையால் துõக்கி விட்டதே. அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதே சமயத்தில் இன்னொரு வருத்தமும் அவருக்கு எற்பட்டது. இந்தப் பராக்கிரமம் பொருந்திய கன்னியை எவருக்கு மணம் முடிப்பது? இவளுக்கே இவ்வளவு ஆன்மீக பலம் இருந்தால் இந்தச் சிறுமியை மணக்கும் வீரன் எத்தகைய பராக்கிரமசாலியாக இருக்க வேண்டும்? உண்மையில் அப்படி ஒருவன் ஈரேழு உலகத்திலும் இருக்கிறானா என்பதே சந்தேகம். இருந்தாலும் எப்படி, எங்கே அவனைத் தேடுவது? இப்படி பல்வேறு சிந்தனைகளிடையே உழன்றார் ஜனக மகாராஜா.

என்னதான் முயன்று யோசித்துப் பார்த்தாலும், விடை ஒன்றும் காண முடியாது திகைத்த ஜனகர் அரசவையில் உள்ள பெரியோர்களிடம் இந்த நிகழ்ச்சியைக் கூறி

ராம பிரானின் பராகிரமத்தைப் பரிசோதிப்பதற்காக ராமர் ஏழு ஆச்சா மரங்களை ஒரே பாணத்தினால் துளைக்க முடியுமா என்று சுக்ரீவன் கேட்டான். சுக்ரீவன் வேண்டியபடியே ஒரே ராம பாணத்தினால் ஏழு ஆச்சா மரங்களையும் துளைத்து தன்னுடைய பராகிரமத்தை உலகிற்கு உணர்த்தினார் ராம பிரான். ஆச்சா மரத்தின் பின்னணியில் உள்ள ஆன்மீக இரகசியங்களை சித்தர்களே அறிவர்.
ஆச்சா மரத்திற்கு உள்ள விசேஷமான தெய்வீகத் தன்மை என்னவென்றால் மூன்று முக்கியமான தகுதி உடையவர்களே ஆச்சா மரத்தைப் பாணத்தினால் துளைக்க முடியும்.தந்தை சொல்ல மிக்க மந்திரமில்லை என்று தந்தை சொல்லைத் தட்டாத குணத்தை உடையவர்களும், ஏக பத்தினி விரதனாக தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் மனதினாலும் தீண்டாத உத்தம குணத்தை உடையவர்களும், குடி மக்கள் நலனுக்காக தன்னையே தியாகம் செய்யும் தயாள குணம் வாய்க்கப் பெற்ற உத்தம சீலர்களே ஆச்சா மரத்தை பாணத்தினால் துளைக்க முடியும்.

சீதைக்கு எப்படித் தகுந்த மணவாளணைத் தேர்ந்தெடுப்பது என்று ஆலோசித்தார். ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய அற்புதமான யோசனைகளையெல்லாம் கூறினர்.

சீதையின் வீரத்திற்கும் பராக்கிரமத்திற்கும் ஈடு கொடுக்கக் கூடிய வீரன் இப்பூவுலகில் கிடையாது. ஈரேழு உலகத்திலும் சீதைக்கு இணையான ஒரு வீரனைப் பார்ப்பதே அரிது. எனவே அவளுக்கு மணம் முடிக்க வேண்டாம். அவளுக்குச் சக்கரவர்த்திப் பட்டம் சூட்டி அரியணையில் ஏற்றி வைப்பதே முறை. அகில உலகத்தையும் ஆளும் தகுதியும் வல்லமையும் உள்ளவள் சீதை. இவ்வாறு ஒரு சாரார் ஆலோசனை கூறினர்.

என்னதான் வீரம் உடையவளாக இருந்தாலும், பெண் மணம் முடித்திருப்பதே சிறப்பு. சீதையைப் படைத்த இறைவன் நிச்சயம் அவளை மணக்கத் தகுதியுள்ள ஒரு மகாவீரனையும் படைத்திருப்பான். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. சுயம்வரம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து இந்தச் சிவதனுசுவை முறிக்கும் வல்லமை உடைய வீரனுக்குச் சீதையை மணம் முடித்துக் கொடுக்கலாம். இது இன்னொரு சாரார் கொடுத்த ஆலோசனை.

இரண்டு யோசனைகளுமே சரியானதாக ஜனகருக்குத் தோன்றியது. அதனால் எந்த யோசனையை ஏற்றுச் செயல்படுத்துவது என்று அவருக்குப் புரியவில்லை. இது இவ்வாறிருக்க இறைவனுடைய திருவிளையாடலோ வேறு விதமாக இருந்தது.

வேத வியாசரின் அருமைப் புதல்வர் சுக பிரம்ம ரிஷி. தான் வேதத்தில் கரை கண்டு சிறந்த மகரிஷியாகத் துலங்கினாலும் தன் மைந்தனுக்கு உத்தம பிரம்ம ஞானத்தைத் தகுதி வாய்ந்த ஒருவர் மூலமாகப் புகட்ட விரும்பினார் வியாசர். அக்காலத்தில் ஜனக மகாராஜாவின் பிரம்ம ஞானப் புகழ் உலகெங்கும் பரவி இருந்தது. அத்தகைய உத்தம குருவிடம் பிரம்ம ஞானத்தைப் பெற சுக பிரம்ம ரிஷியை அனுப்பி வைத்தார் வியாச முனி. சிறுவனாக இருந்த சுக பிரம்ம ரிஷியும் தந்தை சொல்லை வேத வாக்காக ஏற்று ஜனகருடைய அரண்மனையை அடைந்தார். இதை அறிந்த ஜனக மகாராஜா தனது அனைத்துப் பரிவாரங்களுடனும் சுக பிரம்ம ரிஷியை எதிர் கொண்டழைத்து அவருக்கு எல்லா வித மரியாதைகளையும் பாத பூஜை அர்க்ய பூஜைகளையும் முறையாக நிறைவேற்றி கௌரவித்தார்.

 

கணவன் மனைவி ஒற்றுமையை
வளர்க்கும் நகர் திருத்தலம்

சுக பிரம்ம ரிஷி ஜனகரின் அரண்மனை மாளிகையில் தங்கி சில காலம் இளைப்பாறிய பின் ஜனகர் சுக பிரம்ம ரிஷி தன்னை நாடி வந்த காரணத்தைக் கேட்டார். அவரும் தான் ஜனகரிடம் பிரம்ம ஞானத்தைப் பற்றி உபதேசம் பெற தன் தந்தையால் அனுப்பி வைக்கப்பட்ட விவரத்தைத் தெரிவித்தார். ஜனகர் பெரிதும் மகிழ்ந்து சுக பிரம்ம ரிஷிக்கு பிரம்ம ஞானத்தை உபதேசிக்கத் தொடங்கினார். பிரம்ம ஞான உபதேசம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. பிரம்ம ஞானம் என்பது இந்தப் பூவுலகம் மட்டுமல்லாது பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் பற்றிய ஞானத்தைப் பற்றியதாகும். ஞானத்தின் பூரணத்துவம் என்றே பிரம்ம ஞானத்தைப் பற்றிக் கூறலாம். இதன் ஒரு பகுதியாக சம்சார வாழ்க்கை, அதில் வரும் இன்ப துன்பங்கள், அதை முறையாக வாழ வேண்டிய முறைகளைப் பற்றியும் ஜனகர் சுக பிரம்ம ரிஷிக்கு உபதேசித்தார்.

கணவரும் மனைவியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் அவசியம். ஐந்து வருட காலத்திற்குள் மனைவியின் விருப்பு வெறுப்புகளை கணவனும், கணவனின் குண நலன்களைப் பற்றி மனைவியும் புரிந்து கொள்ள வேண்டும். படகிற்கு இரு துடுப்புகள் போல் கணவனும் மனைவியும் எல்லா விதத்திலும் இணைந்து செயல்பட்டால்தான் சம்சாரம் என்னும் கடலை இனிமையாகத் துன்பமின்றி விரைவில் கடக்க முடியும். இங்கே உயர்வு தாழ்வு என்ற பேச்சிற்கே இடமில்லை. கணவன் மனைவியரின் உடல் கூறு ஒற்றுமையை விட இருவரின் மன ஓற்றுமையே மிகவும் முக்கியம். நல்ல சந்ததிகள் உருவாவதற்குக் கூட இந்த மன ஒற்றுமையே வழி வகுக்கும்.

அற்புதமான இத்தகைய விளக்கங்களைக் கேட்டு பெரிதும் மகிழ்ந்த சுக பிரம்ம ரிஷி ஜனக மகாராஜாவிடம் தன்னுடைய ஒரு சந்தேகத்தை வெளியிட்டார்.

மகாராஜாவிற்குத் தன்னுடைய சம்சார வாழ்க்கையில் எந்த விதமான பிரச்னைகளும் எழவில்லையா, அவ்வாறு ஏதாவது பிரச்னைகள் தோன்றியிலிருந்தால் அவற்றை எவ்வாறு அவர் சமாளித்தார் என்பதைத் தெரிந்து கொள்ளலாமா என்று மிகவும் வினயத்துடன் கேட்டார். தன்னுடைய அன்புச் சீடரின் உண்மையான வார்த்தைகள் ஜனக மகாராஜாவைப்பெரிதும் கவர்ந்தன. அப்போது ஜனக மகாராஜாவை வாட்டிக் கொண்டிருந்த மனக் குழப்பமான சீதையின் கல்யாணத்தைப் பற்றிய விஷயத்தை தன் அருமைச் சீடரிடம் விவரமாக எடுத்துரைத்தார். எல்லாவற்றையும் மிகவும் உன்னிப்பாகக் கேட்டார் சுக பிரம்ம ரிஷி. மிகவும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் ஜனக மகாராஜாவின் பிரச்னைக்கு தனக்குத் தோன்றும் தீர்வை வெளியிடலாமா என்று கேட்டார். சுக பிரம்ம ரிஷியின் அன்பு ததும்பும் வார்த்தைகளால் கட்டுண்ட சக்கரவர்த்தியும் அவர் தாராளமாக தனக்குத் தோன்றுவதை வெளியிடலாம் என்று அனுமதி கொடுத்தார்.

நகர் சிவாலயம் லால்குடி அருகே

ஜனகரின் பிரச்னைக்கு சுகபிரம்ம ரிஷி கொடுத்த பதிலே ஒரு இதிகாசத்தையே உருவாக்கும் வல்லமையைப் பெற்றிருந்தது. அந்த அற்புதமான பதில் இதுதான்.

இறைவனின் படைப்புகள் அனைத்துமே மிகவும் அற்புதமானவை, அதிசயமானவை, ஆழ்ந்த அர்த்தங்கள் நிறைந்தவை. ஒவ்வொரு படைப்பிற்குப் பின்னும் ஆயிரமாயிரம் காரண காரியங்கள் உண்டு. ஒரு பொருள் ஆக்கப்படும்போதே அது அழிந்து மறையும் என்ற நியதியை உள்ளடக்கித்தான் ஆக்கப்படுகிறது. தோன்றிய அனைத்துமே, ஒரு நாள் நிச்சயம் மறையும். இது இறைவனின் நியதி. கடவுள் விதித்த விதி. இதை யாரும் மாற்ற முடியாது. இறைவனின் இந்த விதியை அனுசரித்தே சிவ தனுசின் படைப்பு இரகசியத்தையும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். சிவபெருமானால் உருவாக்கப்பட்ட சிவ தனுசு தன்னுடைய சீரிய பணியை நிறைவேற்றிய பின் அதற்குரித்தான ஓய்வை அளிப்பதே முறையாகும். அதுவே தெய்வ சங்கல்பமும் ஆகும்.

அதனால் சிவ தனுசுவை நாணேற்றி உடைப்பவருக்கே சீதா தேவி மனைவி ஆவாள் என்று நிர்ணயம் செய்வதால் சிவ தனுசிற்கு எந்த வித அவமதிப்பும் உண்டாகாது. சிவ தனுசு நிறைவேற்றிய ஒப்பற்ற தியாகத்திற்கு நாம் அளிக்கும் வீர வணக்கமே, வெற்றிக் காணிக்கையே சீதா சுயம்வரத்தில் மணாளணைத் தேர்வு செய்யும் உன்னத நீதிபதி என்னும் பதவியாகும். நஞ்சுண்ட எம் ஐயன் சிவனுக்கு நிகரான தியாகராஜன், தியாகச் செம்மல், தியாகச் சுடர் எக்காலத்தும் தோன்றியதுமில்லை, இனி எவ்விடத்தும் தோன்றப் போவதுமில்லை. அந்த தியாகச் சுடர் அளித்த திருப்பரிசான சிவ தனுசுவும் தான் மறையும் தருணத்திலும் ஓர் உத்தம வீரனை உலகிற்குக் காட்டிக் கொடுக்கும் ஒப்பற்ற பணியைச் செய்யப் போகிறது என்றால் சிவபெருமானின் அன்பை யாராவது அளவிட்டு உரைக்க முடியுமா? சீதா தேவியின் சுயம்வரத்திற்குத் தாராளமாக தாங்கள் சிவ தனுசு போட்டியை அறிவிக்கலாம். அடியேனுடைய இந்தப் பணிவான கருத்தை தங்கள் திருப்பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன். குருதேவா, தங்கள் விருப்பப்படி இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ளலாம்.

சுக பிரம்ம ரிஷியின் தேவாமிர்தமான இந்த வார்த்தைகள் ஜனக மகாராஜாவுக்கு தான் நீண்ட நாட்களாகத் தேடிய அரிய ஒரு பொருளைப் பெற்ற பரமானந்தத்தை அளித்தன. சிவபெருமானே தன் அருமைச் சீடன் வடிவில் வந்து தன்னுடைய பிரச்னைக்கும், சீதா தேவியின் தெய்வீக திருமணத்திற்கும் ஒரு சிறந்த வழியைக் காட்டிய தாக உணர்ந்தார்.
இதன் பின்னர் நடந்த சீதா தேவியின் சுயம்வர வைபமும் சீதா ராமர் திருக்கல்யாணமும் அனைவரும் அறிந்ததே.

சற்குரு
நீங்கள் கேட்ட கேள்விக்கு அடியேனுடைய பதில் திருப்திகரமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
அடியார்கள் (ஒருமித்த குரலில்)
அதிலென்ன சந்தேகம், குருதேவா.

சற்குரு
மிகவும் சந்தோஷம். இப்போது அடியேன் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்.
ஸ்ரீராமர் சிவ தனுசை நாணேற்றி சுயம்வரத்தில் சீதையை மணம் முடித்தார். அதற்குப் பின் முறிந்த சிவ தனுசு என்னவாயிற்று? இதைப் பற்றி உங்கள் யாருக்கேனும் விளக்கம் தெரியுமா? அல்லது இதைப் பற்றி எப்போதாவது யோசித்தது உண்டா?

(அடியார்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். யாரும் இதைப் பற்றி எண்ணிக் கூடப் பார்க்கவில்லை என்பது அவரவர் முகத்திலேயே பிரதிபலித்தது. சற்று நேர அமைதிக்குப் பின் சற்குரு நாதர் புன்முறுவலுடன் தானே பதில் அளித்தார்.)

நாம் நினைப்பது போல சிவ தனுசு என்பது சண்டைக்காகப் பயன்படுத்தக் கூடிய ஒரு வில் மட்டுமன்று. சிவ தனுசு சிவபெருமானுடைய திரண்ட சக்தியின் ஒரு கூறு. சிவ தனுசில் ஆயிரக் கணக்கான தனுர் வேத தேவதைகளும் தெய்வங்களும் ரிஷிகளும் முனிவர்களும் வாசம் செய்தனர். தனுசு முறிந்ததால் அனைத்து தெய்வ சக்திகளும் வெளிவந்து தாங்கள் எங்குச் செல்வது என்று தெரியாமல் திகைத்தன. எல்லோரும் ஜனக மகாராஜாவை வணங்கி, சுவாமி, பன்னெடுங் காலமாக நாங்கள் இந்த சிவ தனுசிலே குடி கொண்டுள்ளோம். இப்போது இந்தத் தனுசு முறிந்து விட்டால் நாங்கள் எங்கே செல்வது? எங்களுக்கு சாத்வீகமாக எதிலும் ஈடுபட முடியாது. தனுர் வேதத்தில் இலயித்துள்ள எங்களுக்கு வீரம், சண்டை இவற்றில்தான் மனம் ஈடுபடும். எனவே, தாங்களுக்கு எங்கள் மார்கத்திலேயே ஒரு நல்ல வழியைக் கூற வேண்டும், என்றவுடன் ஜனகர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார்.

அன்பு ஒன்றே எங்கும் எக்காலத்திலும் நிலைத்து நிற்கக் கூடியது. பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீராமர் அன்புடன் ராமேஸ்வர கடற்கரையில் மணலால் பிடித்து வைத்த ராமலிங்கம் கோடிக் கணக்கான மக்களுக்கு கருணையை வாரி வழங்கும் அமுதசுரபியாக இன்றும் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.

பின்னர் சிவ தனுசிலிருந்து வெளிவந்த எல்லா தேவ, தெய்வ சக்திகளையும் 1008 அஸ்திரங்களில் ஆவாஹணம் செய்தார். அந்த 1008 அம்புகளையும் ராமபிரானுக்கே வெற்றிப் பரிசாக அளித்து விட்டார். அந்த தனுர் வேத சக்திகளும் ராமபிரானுடைய அம்பாரத் துணியிலேயே குடி கொண்டு ராமருக்கு உறுதுணையாக நின்றன. இலங்கையில் ராவணனுக்கு எதிராக நடந்த யுத்தத்தில் இராவணனின் உடலைத் துளைத்து அவனைப் பரலோகத்திற்கு அனுப்பியதும் இந்த 1008 அஸ்திர சக்திகளே. இராவணன் சிவ தனுசை முறையாகப் பயன்படுத்தாது யாரை எல்லாம் அதர்மமாகத் துன்புறத்தினானோ அவர்களுடைய சாபங்களே சிவ தனுசு அஸ்திரங்களாக மாறி அவன் உயிரைக் கவர்ந்தன. உண்மையில் இராமர் இராவணனைக் கொல்லவில்லை. இராவணனுடைய தீவினைகளே அவன் உயிரைக் கவர்ந்தன. தன் வினை தன்னைச் சுடும் என்று முதுமொழிக்கு நிரூபணமாக நின்றதும் சிவ தனுசே.

அடியார்
சற்குரு மகாதேவா, மூதேவியின் வழிபாடு சோம்பேறித் தனத்தை உண்டாக்கும் என்கிறார்களே. இதைப் பற்றிய விளக்கத்தை தங்கள் திருவாக்கால் அறிய விரும்புகிறோம்.

சற்குரு
உன்னுடைய கேள்வியிலேயே பதிலிருக்கிறதே. நீதான் அதைப் புரிந்து கொள்ளவில்லை. ”மூ” என்றால் உயர்ந்த, சிறந்த, உன்னத, உத்தம, மூல, முதன்மையான, மூத்த என்றெல்லாம் பொருளுண்டு. அப்படி இருக்கும்போது உயர்ந்த தேவியை வணங்கும் நீ தாழ்ந்து போவாயா, சற்றே சிந்தித்துப் பார்.

மூதேவி என்று அழைக்கப்படும் ஸ்ரீஜேஷ்டாதேவி திருமகளுக்கு மட்டும் மூத்தவள் என்று நினைக்க வேண்டாம். நவகிரகாதியருக்கே மூத்தவள் ஜேஷ்டாதேவி. மேலும் மூத்தவள் என்றால் எல்லோருக்கும் முன்னால் உற்பவித்தவள் என்று மட்டும் பொருளல்ல. அனைவரையும் விட ஞானத்தில், இறை பக்தியில் உயர்ந்தவள் என்றும் பொருள் உண்டு.

ஸ்ரீஜேஷ்டாதேவியிடம் தஞ்சம்
அடைந்த ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி

திருக் கைலாயம், வைகுண்டம் போன்ற தெய்வ லோகங்களைப் போல ஸ்ரீஜேஷ்டா தேவிக்கு என்றே ஒரு பிரத்யேகமான லோகமும் உண்டு.
மௌனகுரு தட்சிணா மூர்த்தி சனகாதி முனிவர்களுடன் காட்சி தருவதைப் போல ஸ்ரீஜேஷ்டாதேவியும் இரு கன்னிகைகளுடன் காட்சி தருவதை பல திருத்தலங்களில் நாம் பார்க்கலாம். ஸ்ரீஜேஷ்டாதேவி லோகத்தில் நிரந்தர வாசம் கொண்ட இத்தேவியர்களின் திருநாமங்கள் வில்வாம்ருதா, சுநந்யை என்பதாகும். ஸ்ரீஜேஷ்டாதேவியின் வலது புறத்தில் குதிரை முகத்துடன் அருள்புரியும் தேவியே வில்வாம்ருதா தேவி ஆவாள்.
ஒவ்வொரு தெய்வத்தின் அருள் புரியும் பாங்கு யுகம் என்னும் காலக் கோட்பாட்டைப் பொறுத்தும், மனிதர்கள் விலங்குகள் என்று ஜீவ சக்திக் கோட்பாட்டைப் பொறுத்தும் மாறுபடுவதைப் போல இத்தேவியர்களின் அருள்புரியும் பாங்கும் யுகத்திற்கு யுகம் ஜீவன்களைப் பொறுத்து மாறுபடும். கலியுக நியதியாக மனிதர்களுக்கு இவர்களின் அனுகிரக பாகுபாட்டை விளக்க வேண்டுமானால் வில்வாம்ருதா தேவி மனிதர்களுக்கு ஞாபக மறதியைத் தரக் கூடிய தேவியாக அருள்பாலிக்கிறாள்.
பொதுவாக, தேவதைகளும் தெய்வங்களும் மனிதர்களுக்குத் தேவையான நற்சக்திகளைத் தானே வரமாகத் தருவார்கள்? அப்படி இருக்கும்போது ஞாபக மறதியை ஒரு தெய்வம் அளித்தால் அது எப்படி ஒரு அனுகிரகமாக இருக்கும் என்று உங்களுக்குத் தோன்றலாம்? உண்மையில் இதை தீவிரமாக ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் ஞாபக மறதியின் மகத்துவம் புரிய வரும்.

எந்த ஜீவ ராசியும் ஞாபக மறதி இல்லையென்றால் அது ஆன்மீகத்தில் முன்னேற்றம் கொள்ளவே முடியாது. இதுவே உண்மை. இதற்காகத்தான் ஒரு ஜீவன் ஒரு பிறவி முடிந்து அடுத்து பிறவி எடுக்கும்போது இறைவன் அந்த ஜீவனின் முந்தைய பிறவி நிகழ்வுகள் அனைத்தையும் முழுவதுமாக அழித்து விடுகிறான்.
இதை மேலும் விளக்கினால் இன்று நீங்கள் ஏதாவது ஒரு வருத்தமான செய்தியைக் கேள்விப்பட்டால் இரவு நீங்கள் நிம்மதியாகத் தூங்க முடியாது. நாட்கள் செல்லச் செல்ல அந்த துக்கமான செய்தியை எந்த அளவிற்கு மறக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுக்குத் தூக்கம் அமைய வாய்ப்புண்டு. அது மட்டுமல்லாமல் ஒருவர் தேவைக்கு அதிகமாக செல்வத்தைத் தேடி வைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் இறந்தபின் தான் பாடுபட்டுத் தேடிய செல்வத்தின் நினைவு அவரிடம் இருந்தால் அவருடைய உயிர் தான் தேடிய செல்வத்தை விட்டுப் பிரியாமல் பேயாய் அவ்விடத்திலேயே சுற்றி வரும்.

இதைத்தான் பூதம் காத்த செல்வம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அந்த செல்வம் யாருக்கும் பயன்படாது. அதை வேறு யாரும் பயன்படுத்தவும் முடியாது. மனித உடல் இல்லாததால் உயிர் பிரிந்தவர்கள் ஆவி ரூபத்தில் அதை பயன்படுத்த முடியாது. மற்றவர்கள் அந்தச் செல்வத்தைக் கண்டால் அதைப் பயன்படுத்தும் எண்ணமும் அவர்களுக்குத் தோன்றாது. எனவே பணம் சேர்த்தவர்களுக்கு ஞாபக மறதி என்ற ஒன்று ஏற்பட்டால்தான் அவர்கள் தாங்கள் தேடிய செல்வத்தைப் பற்றி மறந்து இப்பூமியிலிருந்து விடுதலை பெற்று அடுத்த பிறவிகளுக்குத் தங்களை ஆயத்தம் செய்து கொள்ள முடியும்.
அதே போல ஒருவர் உங்ளைத் திட்டியோ அடித்தோ துன்புறுத்தினால் மீண்டும் அவரைக் காணும் போதெல்லாம் அவரைப் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றிக் கொண்டே இருக்கும் அல்லவா? இவ்வாறு ஒருவர் உங்களுக்கு இழைத்த துன்பம் முற்பிறவிகளில் நீங்கள் அவருக்கு இழைத்த துன்பத்தால் ஏற்பட்ட விளைவாக இருந்தால் நீங்கள் அவரைப் பழி வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறுதானே. இத்தகைய பழிவாங்கும் உணர்ச்சி உங்கள் உள்ளத்தில் நிரந்தரமாக தங்கி விடும்போது அதுவே கான்சர் அல்லது புற்று நோய் என்ற கொடிய நோயைத் தோற்றுவித்து விடுகிறது.

மனிதன் அனுபவிக்கும் எல்லா நோய்களுக்கும் காரணம் அவனுடைய முற்பிறவியின் செயல்களே என்று மகான்கள் வலியுறுத்துகிறார்கள். பழிக்குப் பழி என்ற உணர்வு சமுதாயத்தில் தற்போது மேலோங்கி நிற்பதன் காரணமாகவே எங்கு நோக்கினும் புற்று நோயின் தாக்குதல் அதிகமாக உள்ளது என்பதை நீங்கள் கண் கூடாகக் காணலாம்.
எனவே தயவு செய்து பழிவாங்கும் எண்ணத்தை வேரோடு களைய இறைவனை அடிக்கடி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவ்வாறு ஒருவர் அளித்த துன்பத்தை மறக்கத் தேவையான சக்தியை அளிக்கும் தேவியே வில்வாம்ருத தேவி ஆவாள்.
இவ்வாறு மனித உடல் இருக்கும்போது அந்த உடலில் தூக்கம் போன்ற சுகத்தை அனுபவிக்கத் தேவையான ஞாபக மறதியை அளிக்கும் தேவியாக வில்வாம்ருத தேவியும் மனித உடலைத் துறந்து அடுத்த பிறவிக்குத் தயாராவதற்காக இப்பிறவி நிகழ்வுகளை மறக்கத் தேவையான ஞாபக மறதியை அளிக்கும் தேவியாக சுநந்யை தேவியும் அருள்பாலிக்கிறார்கள். ஸ்ரீஜேஷ்டாதேவியின் இடது புறம் அருள்பாலிக்கும் தேவியே சுநந்யை தேவி ஆவாள்.  

ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி பிரசாதமாகப் பெற்ற அபிஷேக தீர்த்தத்தை தூங்கு மூஞ்சி மரத்திற்கு ஊற்றி மேற்கு நோக்கி சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வந்தால் எதை எதை மறக்க வேண்டுமோ அதை மறக்க வைக்கும் சக்தியை வில்வாம்ருத தேவியும் சுநந்யை தேவியும் அருள்வார்கள்.
மேலும் பாதுகாப்பு, சமுதாய சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் மறுமணம் செய்து கொண்ட இளம் பெண்கள் தங்கள் முந்தைய மண வாழ்க்கை நிகழ்ச்சிகளால் தற்போதைய வாழ்வில் பல்வேறு குழப்பங்களைச் சந்தித்து மன அமைதி இழக்க நேரிடும். அத்தகையோருக்கு மன அமைதி அளிக்கும் தேவியே சுநந்யை தேவி ஆவாள்.

அதே சமயம் கணவனை இழந்தவர்கள் தாங்கள் மீண்டும் மறுமணம் செய்து கொள்ளாமல் தங்கள் கணவனையே நினைத்து மிஞ்சிய காலத்தை ஆன்மீகமாகப் பாதையில் அமைத்துக் கொள்வோம் என்ற மன உறுதியுடன் இருந்தால் அவர்களுக்குத் தேவையான மன உறுதியும் பாதுகாப்பான சூழ்நிலையும் அமைய சுநந்யை தேவி அருள்பாலிக்க வல்லவள்.
பல்வேறு உடல், மன உபாதைகளால் ஒவ்வொரு இரவும் தூக்க மாத்திரையை உட்கொண்டே தூங்குவது என்னும் நோயால் பலரும் வாடுகிறார்கள். அத்தகைய பழக்கத்திற்கு ஆளானோர் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு மேற்கூறிய முறையில் வழிபாடுகள் இயற்றி வந்தால் நாளடைவில் இயற்கையான உறக்கமும் மன அமைதியும் கிட்டும். நரம்புத் தளர்ச்சி நோய்கள் குணமடையும்.

மூத்த திருமகள் முனிநிழல் வழிபாடு

மூத்த திருமகள் என்றழைக்கப்படும் ஸ்ரீஜேஷ்டா தேவியை வணங்கி வழிபட பல்வேறு பூஜை முறைகள் உண்டு. இதில் கலியுகத்தில் தேவியை வழிபடும் சிறப்பு பூஜை முறையாக சித்தர்கள் வகுத்துத் தந்துள்ளதே மூத்த திருமகள் முனிநிழல் வழிபாடாகும்.

தியாக சீலரான, உத்தம புருஷரான உத்தாதலக மகரிஷியின் அனுகிரக சக்திகளையே நாம் முனிநிழல் என்றழைக்கிறோம். இந்த பிரபஞ்சத்தில் மிகச் சிறந்த ஒன்றைக் கூற வேண்டுமானால் அதுவே குரு பிரசாதம் ஆகும். சற்குருவின் கருணை கடாட்சத்தைத் தவிர உயர்ந்த பொருள் இங்கு வேறொன்றுமில்லை. இதையே குரு பார்க்க கோடி நன்மை என்று பெரியோர்கள் கூறுவார்கள்.

உத்தம பத்தினி என்றால் கணவனை நிழல் போல் தொடர்பவள் என்ற ஓர் அர்த்தம் உண்டு. அதாவது உருவமும் நிழலும் ஒன்றை விட்டு ஒன்றுப் பிரியாத நிலையில் இருப்பதால் இந்நிலையில் வாழும் தம்பதிகள் தெய்வ கடாட்சம் பூரணமாய் நிரம்பப் பெற்றவர்கள் ஆகிறார்கள். அப்படி சிறப்பான வாழ்க்கை வாழும் கணவனின் திருமார்பில் மனைவியும் மனைவியின் உள்ளத்தில் கணவனும் வாழ்கிறார்கள் என்பது இல்லற தத்துவம்.

அதனால்தான் பெருமாளை வழிபடுவதால் திருமாலின் திருமார்பில் உறையும் லட்சுமி தேவியையும் வழிபட்ட பலன் பெருகி இல்லத்தில் லட்சுமி கடாட்ச சக்திகள் நிரவும். அதே போல திருமாலின் அவதாரமான மச்சாவதாரத்தை நினைவு கூரும் வகையில் அமையும் வண்ண மீன்கள் வளர்ப்பும் இல்லத்தில் செல்வத்தையும் அமைதியையும் பெருக்கும்.

ஸ்ரீசதாதப சித்தர் அருளிய இந்த முனிநிழல் வழிபாட்டை திருக்கோயில்களில் நிகழ்த்துவதே சிறப்பாகும். திருச்சி, செம்பொனார் கோயில், காஞ்சீபுரம் போன்ற குறித்த சில திருத்தலங்களில் மட்டுமே ஸ்ரீஜேஷ்டாதேவியின் திருஉருவம் உள்ளது. மற்ற திருத்தலங்களில் தேவியை வழிபட விரும்புவோர் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு உரிய வடமேற்கு (வாயு மூலை) திசையில் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

இல்லத்தில் ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபட விரும்பினால் அவர்கள் குறைந்தது ஒரு வருடமாவது (300 நாட்களுக்குக் குறையாமல்) காலையில் எழுந்தவுடன் கரதரிசனம் செய்து உத்தாதலக மகரிஷியை வழிபட்டிருக்க வேண்டும். ஸ்ரீசதாதப சித்தர் அருளிய ஸ்ரீஜேஷ்டாதேவி துதியை குறைந்தது 300 தடவை ஓதி வழிபட்டவர்களும் இல்லத்திலேயே ஸ்ரீஜேஷ்டாதேவியை வழிபடும் தகுதியைப் பெறுகிறார்கள்.

சுத்தமான நல்லெண்ணையால் 36 அகல் விளக்கு தீபங்களை ஏற்ற வேண்டும். இந்த 36 தீபங்களும் திசைக்கு ஒன்பது தீபங்களாக இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது கிழக்கு திசையை நோக்கி மூன்று வரிசையில் மூன்று தீபங்களையும். அதே போல தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளையும் நோக்கி தீபங்களை ஏற்றி அந்த 36 தீபங்களின் நடுவில் பச்சரிசி மாவால் ஹிருதய கமல கோலத்தையோ அல்லது ஸ்வஸ்திக் சக்கரத்தையோ வரைந்து கொள்ள வேண்டும்.

திருக்கோயில்களில் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றிய பின் ஆப்பிள், செந்தாமரை, பவளமல்லி, நீலோத்பலம் போன்ற மலர், கனி அலங்காரத்தை நிறைவேற்றுவது சிறப்பாகும். மேற்கூறிய முறையில் 36 தீபங்களையும் ஏற்றி வைத்து ஸ்ரீஜேஷ்டாதேவி துதியையும் வில்வாஷ்டகம், கோளறு பதிகம் போன்ற துதிகளையும் ஓதி வழிபடுவதால் சித்தர்கள் அருளும் முனிநிழல் என்ற அபூர்வமான அனுகிரக சக்திகளைப் பெறலாம்.

2012ம் வருடத்திற்கு உரிய சிறப்பான வழிபாடாக மலர்வதே மேற்கூறிய மலர், கனியுடன் திகழும் ஸ்ரீஜேஷ்டாதேவி வழிபாடாகும். காலம் செல்லச் செல்ல அமைதியின்மையும் மனக் குழப்பமும் மக்கள் சமுதாயத்தில் மிகும் என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. கடவுள் நம்பிக்கை உடையவர்கள் கூட சமுதாயத்தில் தோன்றும் பல்வேறு சீர்கேடான நிகழ்ச்சிகளால் கடவுள், குரு நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே உறுதியான, திடமான மனத்தை பெற்று வாழ உதவுவதே ஸ்ரீஜேஷ்டா தேவி வழிபாடாகும்.

வரும் 2020ம் ஆண்டு தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு சூரியனைக் காண முடியாத சூழ்நிலை உருவாகும் என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன. எதிர்பாராத வகையில் ஓரிரு நிமிடங்கள் மின் விளக்குகள் நின்று விட்டாலே மக்கள் மனதில் அச்சம், குழப்பம், பீதி போன்றவை உருவாகி விடுகின்றன என்பதை நாம் அறிவோம். அவ்வாறு இருக்கும்போது சூரியனே மறைந்து போகிறார் என்றால் அத்தகைய சூழ்நிலையில் எத்தகைய ஒரு கடுமையான மனக் குழப்பம் ஏற்படும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

எனவே அத்தகைய ஒரு கடுமையான மனக் குழப்பம், பீதியையும் அகற்றக் கூடிய அனுகிரக சக்தியை அளிக்கக் கூடியதே மூத்த திருமகள் வழிபாடாகும். தெய்வ நம்பிக்கையையும், குரு நம்பிக்கையையும் மேலும் மேலும் பெருக்கிக் கொள்ள விழைவோர் தொடர்ந்து ஸ்ரீஜேஷ்டா தேவியை மேற்கூறிய முறையில் துதித்து வருவதால் தங்கள் சாதனையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.

பொதுவாக தெய்வத்தை இந்நாளில் இந்த இடத்தில்தான் வழிபடலாம் என்ற வரைமுறை கிடையாது. எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் இறைவனை வழிபடலாம். இதில் எந்த விதமான சந்ததேகமும் வேண்டாம். ஆனால், சில குறிப்பிட்ட பூஜைகளில் சிறப்பான பலனை பெறுவதற்காக குறித்த கால தேச வரைமுறைகள் சித்தர்கள், மகான்களால் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் உண்மையே.

இம்முறையில் ஸ்ரீஜேஷ்டா தேவியை ரோஹிணி, மகம், அனுஷம், திருவோணம் என்னும் நட்சத்திரங்களில் வழிபடுவதால் உறுதியான மன உறுதியும் எடுத்த காரியத்தை வெற்றியுடன் சாதிக்கும் திறமையும் சிறப்பான முனிநிழல் அனுகிரகமாக கிட்டும். ஒரு வருடத்தில் வரும் மேற்கூறிய நான்கு நட்சத்திர தினங்களிலும் தொடர்ந்து வழிபாடுகளை நிகழ்த்தி வந்தால் எத்தகைய சூழ்நிலையிலும் அஞ்சாமல் செயல்படும் மன உறுதியைப் பெறலாம்.

நவமி, திரயோதசி, பௌர்ணமி திதிகளும் ஸ்ரீஜேஷ்டாதேவிக்கு உரிய சிறப்பான பூஜை தினங்களாகும். இந்த திதிகள் மேற்கூறிய நட்சத்திரங்களுடன் இணைந்து வந்தால் பலன்கள் பன்மடங்காக விருத்தியாகும்.

விடைகள் தொடரும் ...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam

முன்னே
HOME
வளர