ஏ மனமே அஞ்சாதே, எல்லாம் ஈசன் செயல்.

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

அடியார்
குழலுறவு தியாகி என்பதன் பொருள் என்ன, குருதேவா?

சற்குரு
குழல் என்றால் புல்லாங்குழல். குழல் உறவு என்றால் புல்லாங்குழலுடன் உறவு கொள்தல், நட்பு பாராட்டுதல் என்று அர்த்தம். அதாவது குழந்தைத் தனம், அப்பாவித்தனம் என்று சொல்லலாம். மனத் தூய்மைக்கு குழந்தையை உதாரணமாகச் சொல்வது போல தாவரங்களில் மூங்கிலைத் தூய்மைக்கும், தியாகத்திற்கும் எடுத்துக் காட்டாகச் சொல்வதுண்டு. அதனால்தான் மிக மிகத் தொன்மையான சீர்காழி சிவாலயத்தின் தலவிருட்சம் மூங்கிலாக அமைந்துள்ளது.

63 நாயன்மார்களில் ’அம்மையே’ என்று சிவபெருமானாலேயே என்று அன்புடன் அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் திருஉருவத்தின் முன் பிரதோஷ நேரத்தில் பச்சரிசி மாவால் கோலம் இட்டு வணங்கி வந்தால் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் சொந்த வீடு வாங்க நல்வழிகள் பிறக்கும்.

ஆங்கிலத்தில் இன்னெசென்ட் என்று சொன்னால் ஒருவாறு இதைப் புரிந்துகொள்வார்கள். இந்த இன்னசென்ஸை தியாகம் செய்தவர்களே குழலுறவுத் தியாகிகள்.

அடியார்
குழந்தைத் தனம் என்பதை ஓரளவு புரிந்துகொள்ளலாம். ஆனால், அந்தக் குழந்தைத் தனத்தை, இன்னசென்ஸை தியாகம் செய்வது என்றால் ... அதைப் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக உள்ளதே.

சற்குரு
உண்மைதான். குழலுறவு தியாகி என்பது புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான சொற்பதம்தான். ஆனால், தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் இதன் பொருள் ஓரளவிற்குப் புரிய வரும். இந்த ஒரு வார்த்தையைப் புரிந்து கொள்ளவே நீங்கள் இவ்வளவு சிரமப் பட்டால் இது போன்ற ஆயிரமாயிரம் சொற்களும், சொல் தொடர்களும் சித்தர்களின் அகராதிகளில் உள்ளனவே. அவைகளை என்று நீங்கள் புரிந்து கொள்ளப் போகிறீர்கள். இத்தகைய பல அபூர்வமான சொற்றொடர்களைக் கொண்டே சித்தர்களின் பரிபாஷைப் பாடல்கள் அமைந்துள்ளன. அவைகளை எல்லாம் என்று நீங்கள் புரிந்துகொண்டு மற்றவர்களுக்கு அதைப் புரிய வைக்கப் போகிறீர்கள். குழலுறவு தியாகம் என்பது உங்களுக்குப் புரியாது என்பதால்தான் குழலுறவு தியாகம் செய்த அடியார்களைப் பற்றி எல்லாம் உங்களுக்கு அவ்வப்போது கூறி வருறேன்.

வியாழக் கிழமை தோறும் இயற்பகை நாயனார் திருஉருவத்தின் முன் மாக்கோலம் இட்டு சுத்தமான மஞ்சள் பொடியினால் அலங்கரித்து வணங்கி வந்தால் கன்னிப் பெண்கள் உரிய காலத்தில் திருமண வாழ்வைப் பெற மங்கள சக்திகள் உறுதுணை புரியும்.

திருஅண்ணாமலையை எப்போதும் கிரிவலம் வரும் ஒவ்வொரு சித்தர் பெருமானும் குழலுறவு தியாகிதான். நமது 63 நாயன்மார்களும், 12 ஆழ்வாராதிகளும் குழலுறவு தியாகிகளே. அவர்களுடைய வாழ்க்கை முறையையும் அவர்கள் ஆற்றிய தியாகங்களையும் நீங்கள் ஊன்றிப் படித்து வந்தால் குழலுறவு தியாகி என்பதன் அர்த்தம் ஓரளவு புரிய வரும். இதுவும் ஓரளவே. ஒருவன் குருவின் அருளாணையுடன் தன்னலம் மறந்த சேவையில் முழுவதுமாக தன்னை அர்ப்பணிக்கும்போதுதான் குழலுறவு தியாகி என்பதன் முழுமையான அர்த்தத்தை உணர முடியும்.

அடியார்
சபரிமலை செல்பவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே, சுத்தம் என்றால் என்ன என்பதை விளக்க வேண்டுகிறேன். சற்குரு சுத்தம் என்றால் பொதுவாக உடல் சுத்தம், மன சுத்தம் என்று சொல்வார்கள். ஆனால், சித்தர்களைப் பொறுத்தவரையில் நம்பிக்கையையே சுத்தம் என்று சொல்கிறோம். நீ எந்த அளவிற்கு இறை நம்பிக்கை கொண்டுள்ளாயோ, கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறாயோ அந்த அளவிற்கு நீ சுத்தமாக இருக்கிறாய் என்று அர்த்தம். நீ ஐயப்பன் இருக்கிறான் என்று நம்பினால் ஐயப்ப விரதம் பூண்டிருக்கும்போது புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தவறுகளைச் செய்வாயா? விரதம் ஏற்றவன் மனதார பொய் சொல்லுவானா? ஐயப்பன் நம்மைத் தண்டித்து விடுவான் என்ற பயம் இருக்காதா? எனவே, நம்பிக்கையே சுத்தம். சபரிமலை யாத்திரை மட்டுமல்ல. எந்த விதமான விரதம் ஏற்றுச் செய்வதாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை கனிந்து வராத நிலையில் எந்த விரதமும் பலனளிக்காது, அதனால் மற்றவர்களை ஏமாற்றுவதாக நினைத்து தன்னைத் தானே ஒருவன் ஏமாற்றிக் கொள்கிறான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

புதன் கிழமை தோறும் வாயில் நாயனாரின் திருஉருவத்தின் முன் மாக்கோலம் இட்டு வணங்கி வந்தால் இதய நோய்கள் தீர நல்வழி பிறக்கும்.

சித்தர்களும், யோகிகளும் கடவுள் நம்பிக்கை பரிபூரணமாகப் பூண்டுள்ள காரணத்தினாலேயே அவர்கள் தினமும் குளித்தல், சுத்தமான ஆடைகளை அணிதல் என்ற புறஉலக சுத்த நியதிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அதே சமயத்தில் அழுக்கான ஆடைகளை அணிந்து உடல் சுத்தம் பாராட்டாதவர்கள் அனைவரும் மகான்கள் என்று கூற விடமுடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அடியார்
எந்தக் காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் பிள்ளையாரை வணங்கியே ஆரம்பிக்க வேண்டும். கடிதம், பத்திரம், செக் என எதை எழுதினாலும் முதலில் பிள்ளையார் சுழியிட்டே எழுத வேண்டும் என தாங்கள் அறிவுரை அளித்துள்ளீர்கள், குருதேவா. ஆனால், நடைமுறையில் இதை நிறைவேற்றுவதில் சில சிக்கல்களை எதிர்நோக்க வேண்டி உள்ளதே.

சற்குரு
எந்த விஷயத்தையும் பரந்த மனப்பான்மையுடன் பாராது குறுகிய கண்ணோட்டத்தைக் கொண்டு பார்க்கும்போது பல அர்த்தங்கள் அனர்த்தங்களாகத் தோன்றுகின்றன. பிள்ளையார் சுழி என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, குறிப்பிட்ட கடவுளையோ குறிப்பிடுவதாக எண்ணுவதால்தான் அதனால் பல குழப்பங்களும் வீண் வாதங்களும் தோன்றுகின்றன. சமட்டிப் பிரணவம், வியட்டிப் பிரணவம் என்ற இரண்டு அடிப்படையான இயக்கங்களின் குறியீடே பிள்ளையார் சுழியாகும். இந்த இரண்டு இயக்கங்களே நமது எல்லா செயல்களுக்கும் அடிப்படை. நம்முடைய எல்லா செயல்களும் நன்முறையில் அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த அடிப்படை இயக்கங்களை வழிபட்டு எல்லா காரியங்களையும் நிறைவேற்றி வருகிறோம். இந்த இயக்கங்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகள், தாவரங்கள், புழு, பூச்சி, கோள்கள், நட்சத்திரங்கள் என அனைத்திற்குமே அடிப்படையாக அமைந்ததாகும்.

ஞாயிற்றுக் கிழமை, சப்தமி திதி நாட்களில் தங்கள் கையால் தொடுத்த நந்தியாவட்டை மாலையை திருஞானசம்ப மூர்த்தி நாயனாருக்குச் சார்த்தி அவர் திருஉருவத்தின் மாக்கோலம் இட்டு வணங்கி வருதலால் காது கோளாறுகள் நீங்க வழி பிறக்கும்.

அரச மரமும், கரடியும், சூரியனும் எந்த மதத்தைச் சேர்ந்தவை, எந்த குலத்தில் பிறந்தவை? என்னே மனிதனின் அறியாமை? ஒரு செக்கில், பாஸ்போர்ட்டில், பத்திரத்தில் பிள்ளையார் சுழியிட்டு கையெழுத்திடுவது உசிதமானதாகத் தோன்றவில்லை என்றால் இதற்கும் ஒரு எளிதான தீர்வு உண்டு. வேறு ஏதாவது ஒரு பேப்பரில் மூன்று முறை பிள்ளையார் சுழியைப் போட்டு பிள்ளையாரையும், அகமர்ஷண ரிஷியையும் வணங்கிய பின்னர் செக்கிலோ பத்திரத்திலோ கையெழுத்திடலாமே? எனவே மனமிருந்தால் எல்லாவற்றிற்கும் மார்கமுண்டு.

அடியார்
குருதேவா, பேய், பிசாசு என்பவை எல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவா? இவை எல்லாம் சோம்பேறிகளின் கற்பனை என்று பலர் பதில் அளிக்கிறார்களே. சற்குரு பேய், பிசாசு என்பவை உண்மையே. இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஆனால், இதில் ஆயிரக் கணக்கான கற்பனைக் கதைகளும் வதந்திகளும் சேர்ந்து விடுவதால் உண்மை நிலை தெரியாமல் பலரும் குழப்பமடைந்துள்ளனர். முதலில் பேய், பிசாசு என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பேய், பிசாசுகளில் ஆயிரக் கணக்கான பிரிவுகள் உண்டு. ஒரு சாதாரண ஆவி முதல் இரத்தக் காட்டேரி, சுடலைப் பேய் என பல தரப்பட்ட தீய சக்திகள் உண்டு. இவை எல்லாவற்றையும் விளக்கமாகத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. உங்களைப் பொறுத்த வரையில் பேய், பிசாசு என்பது சாதாரண மனித கண்ணுக்குத் தெரியாத ஒரு தீய சக்தி, இந்தத் தீய சக்தியிடமிருந்து உங்களையும் உங்களைச் சார்ந்தவர்களையும் எப்படிக் காத்துக் கொள்வது என்பதை மட்டும் நீங்கள் தெரிந்து கொண்டால் அதுவே இப்போதைக்கு உங்களுக்குப் போதுமானதாகும்.

ஸ்ரீகைலாசநாதர் சிவாலயம் காரைக்கால்

நம் கண்ணுக்குத் தெரியாத சக்திகளை நல்லது கெட்டது என இரண்டு பிரிவாகக் கொண்டால் நல்ல சக்திகளை தேவதைகள், தெய்வங்கள் என்றும் கெட்ட சக்திகளை, தீய சக்திகளை, எதிர்மறை சக்திகளைப் பேய், பிசாசுகள் என்றும் அழைக்கிறோம். ஒரு சாதாரண மனிதனுக்கு நன்மையைச் செய்யக் கூடிய சக்திகள் ஆவி நிலையில் உள்ள, இறந்துபோன அவனுடைய பெற்றோர், சகோதர, சகோதரிகள், நண்பர்கள் ஆவர். எப்போதாவது, எங்காவது ஒரு பேய் உங்களைத் தொந்தரவு செய்வதாகத் தோன்றினால் அல்லது தீய சக்தியால் நீங்கள் பயந்து விட்டால் உடனே இறந்து போன உங்கள் தாயை அல்லது தந்தையை அல்லது உங்கள் மேல் அதீதமான அன்பைப் பொழிந்து மறைந்து போன உங்கள் உற்றார், உறவினர், நண்பர்களை நினையுங்கள். இந்த நல்ல ஆவிகள் உடனே தோன்றி உங்களைத் துன்புறுத்தும் கெட்ட ஆவிகளுடன் சண்டையிட்டு, விரட்டி உங்களுக்கு நிம்மதியைத் தரும். இது உண்மையே.

முடிந்தவரை வெளியிடங்களில் தெரியாத வீடுகளில், லாட்ஜ் போன்ற விடுதிகளில் தங்குவதைத் தவிர்க்கவும். தெரிந்தவர்கள் இல்லத்தில், கோயில் வளாகங்களில் தங்குவதையே வழக்கமாகக் கொண்டிடுங்கள். இரவு பயணங்களை அறவே தவிர்த்திடவும். அவ்வாறு நீங்கள் தங்கும் இடத்தில் தீய ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாகத் தோன்றினால் மன சஞ்சலம், பதட்டம் அடையாமல் ஒரு டம்ளர் நீரை அருந்திய பின்னர் அவ்விடத்தை விட்டு உடனே வெளியேறி விடுவதே உத்தமம். நாம் மிகவும் தைரியசாலி, இந்தக் கெட்ட ஆவி எப்படிப்பட்டது, நம்மை என்ன செய்யும் என்று எந்தவித ஆராய்ச்சியிலும் இறங்க வேண்டாம்.

இத்தகைய செயல்கள் மிகவும் ஆபத்தாக முடியும். முடிந்தவரை கந்தர் சஷ்டி கவசம், திருஞானசம்பந்த நாயனார் அருளிய திருநீற்றுப் பதிகம், பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பதிகம் போன்ற கவசப் பாடல்களைப் பாடி வாருங்கள். இப்பதிகங்கள் எல்லாம் நிழல் போல் உங்களைத் தொடர்ந்து உங்களை எல்லாவிதமான ஆவித் தொந்தரவுகளிலிருந்தும் காப்பாற்றும். நெற்றியில் அணியும் விபூதி, சந்தனம், செந்துõரம், திருமண், குங்குமம், காதுகளில் அணியும் கடுக்கன், கைகளில் அணியும் காசிக் கயிறு, கங்கண், இடுப்பில் அணியும் கருப்புக் கயிறு இவையும் அற்புதமான கவசச் சக்தி சாதனங்களே.

அடியார்
ஆவிகளுக்கும் பூதங்களுக்கும் என்ன வித்தியாசம்?

காளி ஆசனம் ஆரியங்காவு

சற்குரு
மனிதர்களைப் பொறுத்த வரையில் ஆவிகள், பூதங்கள், பேய், பிசாசு இவை எதுவுமே கண்ணுக்குத் தெரியாத சக்திகள். ஆவிகள் அனைத்துமே நல்லது என்றோ கெட்டது என்றோ ஒட்டு மொத்தமாக கூற முடியாது. நற்காரியங்களில் ஈடுபடும் ஆவிகளும் நிறைய உண்டு.

அடியேன் ஒரு முறை அவசர காரியமாக சைக்கிளில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அது வாடகை சைக்கிளாக இருந்த்தால் சற்று தூரம் சென்றதுமே காற்று இறங்கி விட்டது. அன்னதானத்திற்கு அவசியமான சில பொருட்களை வாங்கி வேண்டி இருந்த்தால் அதைப் பற்றி சிந்தித்தவாறே சென்று கொண்டிருக்கும்போது ஒரு இளைஞன் அடியேனிடம் வந்து, ”சார், உங்கள் சைக்கிளில் காற்று இல்லை போல் இருக்கிறதே. கொடுங்கள் நான் வேண்டுமானால் அதை சரி செய்து தருகிறேன்,” என்று கூறி சில நிமிட்ங்களில் பஞ்சர் ஒட்டி சைக்கிளுக்கு காற்று அடித்து அடியேனிடம் திருப்பித் தந்து விட்டான். அவனிடம் உதவியாக மற்றொரு சிறுவனும் கூட இருந்தான்

சைக்கிளை சரி செய்ததற்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டதற்கு, அவன், ”சார், நீங்கள் ஏதோ அவசர காரியமாக செல்வது போல் தோன்றுகிறது. உங்கள் வேலையை முடித்து விட்டு திரும்பி வரும்போது பணம் கொடுத்தால் போதும்,” என்றான். அடியேனுக்கும் அவன் கருத்து சரியாகத் தோன்றியதால் அன்னதான வேலையை உடனே முடித்துக் கொள்ள புறப்பட்டு விட்டேன்

வேலை எல்லாம் முடிந்து திரும்பி வந்து பார்த்தால அடியேன் சைக்கிளை ரிப்பேர் செய்த இடத்தில் ஒரு சைக்கிள் கடை இருந்த சுவடே தெரியவில்லை. அப்போது் வாத்தியார் காதில், ”நைனா, அது பக்கத்து சுடு காட்டுல இருக்கற நல்ல ஆவிடா, உன்னோட காரியத்துக்கு துணையா வந்துச்சு, அவ்வளவுதான்,” என்று கூறினார்.

இது போல நற்காரியங்களுக்கு உதவும் நல்ல ஆவிகளும் உண்டு.

பூதங்கள் என்றால் பொதுவாக உருவ வழிபாட்டில் நம்பிக்கை வைத்து அதீத உடல் தவத்தை மேற்கொள்பவர்கள் காலம் கணியும்போது பூத கணங்களாய் பிறக்கிறார்கள். சிவ வழிபாட்டை மேற்கொள்வோர் திருக்கைலாயத்தில் சிவ கணங்களாகவும், பெருமாள் வழிபாட்டைத் தீவிரமாக மேற்கொள்வோர் வைகுண்டத்தில் பெருமாளுக்கு சேவை செய்யும் கணங்களாகவும் பிறவி எடுக்கிறார்கள்.

பூத கணங்களைப் பற்றிய ரகசியங்கள் நிறைய உண்டு. அவற்றை ஸ்ரீஅகஸ்திய நாடிகள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. உதாரணமாக, திருக்கைலாயத்தில் பங்குனி உத்திர வைபவத்தன்று அங்கு கூடும் பூத கணங்களைப் பற்றிய அகஸ்திய நாடிப் பாடல் இதோ.

    
நாத வேத சித்த பூதம் நாலிரண்டு கோடியே
வேத யோக ஞான பூதம் எட்டிரண்டு கோடியே
கீத கானம் பாடும் பூதம் பத்திரண்டு வேலமாய்
போதம் யோகம் புகழும் பூதம் ஆறிரண்டு இலக்கமே
நான்ற வேத பூத கணங்கள் ஏழிரண்டு கோடியே
நின்ற வேத பூத கணங்கள் எட்டிரண்டு கோடியே
அந்தரத்தில் நின்றியங்கும் பூதம் ஆறு கோடியே
விந்தை புரியும் நாத பூதம் ஐயிரண்டு கோடியே
மூன்று லோகம் ஓடி ஆடும் முக்குணத்து பூதங்கள்
மூன்று தத்துவ முறை உணர்ந்த மோன ஞான பூதங்கள்
மூன்று யோக முறையைக் கற்கும் முதிர்ந்த யோக பூதங்கள்
மூன்று கோடி கணங்கள் பெற்ற வாலை சூல பூதங்கள்
சாடைகளும் ஒலிகளும் சுடர்களுமே
சுந்தர நாதனை எழுப்புது பார்
சுந்தர நாதன் எழுந்து விட்டான்
சுற்றமெல்லாம் ஆடுது பார்
 

இத்தகைய பூதங்களைப் பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சியை உங்களுக்குக் கூறுகிறேன்.

சூரபத்மனுடைய படையில் கலிபந்தனன் என்ற ஒரு அசுரன் இருந்தான். இரண்டு அங்குல உயரமே இருந்த அவனுடைய எடை அரை டன்னாகும். போர்க்களத்தில் சண்டையிடும் அசுரர்கள் எவராவது தங்கள் கை, கால்களை இழந்து விட்டால் தன்னிடம் உள்ள ஒரு விசேஷமான பசையை வைத்து அசுரர்களின் கை, கால்களை ஒட்டி விடுவான். அடுத்த கணமே அவர்கள் எழுந்து போரில் ஈடுபடுவார்கள்

அதில் அற்புதம் என்னவென்றால் இரண்டு அங்குல உயரம் உடைய கலிபந்தனன் இரண்டு தென்னை மர உயரம் உடைய அசுரர்களின் கை, கால்களைக் கூடி ஒட்டி சரி செயயும் வல்லமை பெற்றிருந்தான்.

ஒரு நாள் போர் முடிந்து ஓய்வு நேரத்தில் கலிபந்தனனை வீரபாகு தேவர் காண நேர்ந்த்து. அந்தச் சிறிய உருவத்தைக் கண்ட வீரபாகுவிற்கு சிரிப்பு வந்து விட்டது. உடனே அவனை வைத்து தங்கள் வாளால் தட்டி விளையாடலாம் என்று நினைத்து விட்டார். அதற்கு வீரபாகுவின் சகோதரர்களும் ஊக்கம் அளிக்கமே கலிபந்தன்னைப் பந்தாக வைத்து விளையாட ஆரம்பித்தனர்.

கலிபந்தனனும் அவர்களுடைய விளையாட்டில் சேர்ந்து கொண்டு குதூகலத்தை ஏற்படுத்தினான். சற்று நேரம் விளையாடிய பின் கலிபந்த்ன்னை ஒரேயடியாக அடித்து நசுக்கி கொன்று விடலாம் என்று வீரபாகு நினைக்கவே, கலிபந்தன்ன் அந்த எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நினைத்தான்.

அவ்வளவுதான், மறு விநாடியே வீரபாகு சகோதரர்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒட்டிக் கொண்டனர். ஒன்றும் செய்ய முடியாமல் செயலிழந்து விட்டனர். அவமானம் மேலிட என்ன செய்வதென்று தெரியாது திகைத்தனர். வேறு வழியின்றி முருகப் பெருமானை துதிக்கவே முருகப் பெருமான் அவ்விடம் வந்து சேர்ந்தார்.

தலையைக் குனிந்த வண்ணம் ஆணவம் அழிந்த நிலையில் விளங்கிய வீரபாகுவையும் அவர் சகோதரர்களையும் முருகப் பெருமான் கண்டு புன்னகைத்தார்.
“அகம்பாவத்தால் வந்த விளைவைப் பார்த்தீர்களா ?” என்று கேட்பதுபோல் இருந்தது அவர் உதடுகளில் தவழ்ந்த அவர் புன்னகை.

பின்னர் முருகப் பெருமான் கூறிய வண்ணம் பகைவன் பாசறையைச் சேர்ந்த கலிபந்தனனிடம் மன்னிப்புக் கோரி விடுதலை பெற்றனர்.

அடியார்
குருதேவா, மகான்கள் பலரும் தங்கள் உடல் அங்கங்களை பலவித கோணத்தில் வைத்து ஆசி அளிக்கிறார்களே. இதன் மகத்துவம் பற்றி விளக்க வேண்டுகிறேன்.

சற்குரு
மகான்களின் விரல்கள் அசைந்தால் அண்டங்களே அசையும் என்று எம் ஈசன் இடியாப்ப சித்த பிரான் அடிக்கடி சொல்வதுண்டு. அவ்வளவு சக்தி வாய்ந்த முத்திரைகளை தங்கள் தபோ பலன் மூலம் உலக மக்களுக்கு அளிக்கிறார்கள். மகான்களின் யோக முத்திரைகளைப் பற்றி விளக்க வேண்டுமானால் யுகங்கள் போதாது. எனவே, ஓரிரு முத்திரைகளைப் பற்றி மட்டும் உனக்கு விளக்கம் அளிக்கிறேன். மற்றவைகளைப் பற்றி நீயே தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ள முயற்சி செய்.

மகான்களின் யோக முத்திரைகள்


ஒரு தனி மனிதனின் வாழ்விற்கும் மகான்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒரு சராசரி மனிதன் தனக்காகவும் தன்னுடைய குழந்தைகள், மனைவி, நண்பர்களுக்காகவும் வாழ்கிறான். ஆனால், மகான்களும் யோகிகளும், ரிஷிகளும் மற்ற ஜீவன்களின் நன்மைக்காகவே வாழ்கிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு செயலும், ஏன் அவர்களின் ஒவ்வொரு மூச்சுக் காற்றும், விரல் அசைவும் கூட மற்றவர்களின் நலனை உத்தேசித்தே செயல்படுத்தப் படுகிறது.

எல்லா மகான்களுமே தங்களுடைய கை, கால்கள், விரல்கள் என உடலின் பல்வேறு அங்கங்களை ஒரு குறிப்பிட்ட நிலையில், கோணத்தில், செயல்பாட்டில் வைத்துக் கொள்வார்கள். இதையே யோக முத்திரைகள் என்று அழைக்கிறோம். ஆனால், எந்த ஒரு மனிதனும் ஒரு மகான் இந்த யோக முத்திரையைப் பயன்படுத்தி இந்த தெய்வீக அனுபூதியைக் கொடுக்கிறார் என்று அறிந்து கொள்ளவோ, உணர்ந்து கொள்ளவோ முடியாது. பாம்பின் கால் பாம்பறியும் என்பதற்கேற்ப ஒரு மகான் என்ன முத்திரையைக் கையாண்டு என்ன அனுகிரகத்தை மக்களுக்கு மற்ற ஜீவன்களுக்கு அளிக்கிறார் என்பதை மற்ற மகான்களே இனம் கண்டு கொள்ள முடியும்.

ஸ்ரீரமண மகரிஷியின் ஆபஸ்தம்ப முத்திரை

தன்னுடைய இள வயதில் திருஅண்ணாமலை வந்தடைந்த ரமண மகரிஷி அங்குள்ள குகைகளில் தியானத்தில் ஆழ்ந்து எங்கும் நகராமலே இருந்து விட்டார். இருப்பினும் ”அருணாசலம்” என்ற வார்த்தை அவர் ஆழ்மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அவருடைய தியானம் கனிய கனிய திருஅண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும் என்ற எண்ணம் தழைத்து ஆலமரமாக விரிந்து பரவத் தொடங்கியது.
தியானத்தை விட்டும் வெளி வர அவரால் முடியவில்லை, அதே சமயம் திருஅண்ணாமலையைத் தொடர்ந்து கிரிவலம் வர வேண்டும் என்ற பேரவாவும் அவரை ஒருங்கே சூழ உடலால் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளைப் போல திருஅண்ணாமலையை கிரிவலம் வர முடியாவிட்டாலும் மனத்தளவிலாவது திருஅண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும் என்ற சங்கல்பம் மேற்கொண்டு திருஅண்ணாமலையை மானசீகமாக கிரிவலம் வர ஆரம்பித்தார்.

இவ்வாறு திருஅண்ணாமலையை பத்தாயிரம் முறை கிரிவலம் வந்த பின் அவருக்கு திருஅண்ணாமலை உச்சியில் கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து அருளாட்சி புரியும் திருஅண்ணாமலையாரின் தட்சிணா மூர்த்தி கோல தரிசனம் கிட்டியது. அதற்கு முன்னோடியாக அவருக்கு கல்லால மரத்தின் ஒரே ஒரு இலையின் தரிசனம் கிட்டிய சம்பவம் பக்தர்கள் பலரும் அறிந்ததே.
ஆனால், கல்லால மர இலையின் தரிசனத்திற்கும் சாட்சாத் தட்சிணாமூர்த்தியின் திவ்ய உருவ தரிசனத்திற்கும் இடையே அவர் பெற்ற அனுபூதிகள் பலப் பல. அவை யாவும் சித்த கிரந்தங்களில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

திருஅண்ணாமலையை ஒரு லட்சம் முறைக்குக் குறையாமல் மனித உடல் எடுத்தோ அல்லது ஏதாவது ஒரு பூலோக ஜீவனின் உடல் எடுத்தோ கிரிவலம் வந்தவர்களுக்கே அந்த அனுபூதிகள் புரிய வரும்.
இவ்வாறு பல பல தெய்வீக கட்டுப்பாடுகள் காரணமாக திருஅண்ணாமலையை கிரிவலம் வரா முடியாதவர்களுக்கும், பல்வேறு நோய் நொடிகள் போன்ற காரணங்களால் திருஅண்ணாமலையை வலம் வர முடியாதவர்களுக்கும் திருஅண்ணாலையை கிரிவலம் வந்த பலனில் ஓரளவு அளிப்பதற்காகவே அருணாசல ஆபஸ்தம்ப முத்திரையுடன் ரமண மகரிஷி காட்சி அளிக்கிறார்கள். (படத்தைப் பார்க்கவும்),

அருணாசல ஆபஸ்தம்ப முத்திரையுடன்
திகழும் ரமண மகரிஷி

திருஅண்ணாமலையை குறைந்தது பத்தாயிரம் முறை கிரிவலம் வந்தவர்களே இந்த ஆபஸ்தம்ப முத்திரையை இடலாம் என்ற இறை நியதி உள்ளது.
இடது கை சுக்கிர விரலும் சனி விரலும் ஒன்றையொன்று தொடுமாறு வைத்துக் கொண்டு ஒரு வட்டம் அமைக்க வேண்டும். இது சிவலிங்கத்தின் ஆவுடையைக் குறிக்கும். வலது கால் கட்டை விரலையும் (குரு விரல்), அதற்கு அடுத்த விரலையும் (சுக்கிர விரல்) சேர்த்து பிடித்த நிலையில் சிவலிங்க வடிவில் அமைவதே அருணாசல ஆபஸ்தம்ப யோக முத்திரை ஆகும்.
அருணாசல ஆபஸ்தம்ப யோக முத்திரையின் சிறப்புகள் ஏராளம். எவர் ஒருவர் இந்த முத்திரையை இட்டு அமர்ந்திருக்கிறாரோ அந்த இடம் திருக்கயிலாயமாக போற்றப்படுகிறது. யாரெல்லாம் அவ்விடத்தில் வழிபாடுகளை இயற்றுகிறார்களோ அவர்கள் திருக்கயிலையில் எம்பெருமானை தரிசனம் செய்த பலனைப் பெறுவார்கள். அதனால்தான் திருஅண்ணாமலையில் ரமணர் பல்லாண்டுகள் தவம் இயற்றிய ரமண ஆஸ்ரமத்தின் வாயில் படியைத் தொட்டு வணங்கினாலே திருக் கயிலாயத்தை வணங்கிய பலன் கிட்டும் என்று சித்த கிரந்தங்கள் உறுதி அளிக்கின்றன.
கை விரல்களுக்கும் கால் விரல்களுக்கும் நவ கிரக ஸ்தாபன நிலையில் சிற்சில வேறுபாடுகள் உண்டு. உதாணமாக, கை கட்டை விரல் சுக்கிர விரலாகவும், ஆள்காட்டி விரல் குரு விரலாகவும் அழைக்கப்படுகிறது அல்லவா? ஆனால், கால் கட்டை விரல் குரு விரலாகவும் கால் கட்டை விரலுக்கு அடுத்த விரல் சுக்கிர விரலாகவும் மாறி அமையும். எனவே திருமணமான பெண்கள் கணவனுக்கு பாத பூஜைகள் நிறைவேற்றும் போது கணவனின் கால் கட்டை விரலை குரு சக்திகள் பொங்கிப் பொலியும் தட்சிணா மூர்த்தி ரூபமாக பாவிப்பதால் அவர்களின் சுமங்கலித்துவ சக்திகள் பெருகி ஆடை ஆபரணங்கள் குறைவில்லாது பெருகும் என்பது உண்மை. குரு கடாட்சம் இன்றி லட்சுமி கடாட்சம் அமையாது என்பது அடிப்படை தெய்வீக உண்மை.

எனவே திருமணமான பெண்கள் அனைவருக்கும் அவர்கள் கணவனே ஆதிகுரு. இதைத்தான் நமது முன்னோர்கள் எளிமையாக கணவனே கண் கண்ட தெய்வம். கல்லானாலும் கணவன் என்று பறை சாற்றினார்கள்.
இவ்வாறு ராமச் சந்திர மூர்த்தியின் கால் கட்டை விரலில் பெருகி நின்ற குருவர சக்திகளின் ஸ்பரிசத்தால் அகலிகை தேவி சாப விமோசனம் பெற்றதுடன் வரம்பில்லா தீர்க்க சுமங்கலித்துவ சக்திகளையும் பெற்று பஞ்ச சுமங்கலிகளில் முதன்மையாகத் திகழும் சிறப்பைப் பெற்றாள். மேலும் ராமச் சந்திர மூர்த்திக்கு மனைவியாகும் பேறு பெற்ற சீதா தேவி முறையான பாத பூஜையால் சுமங்கலித்துவ வர சக்திகளைப் பெற்றாள் என்பது அனைவரும் அறிந்ததே.

அருணாசல ஆபஸ்தம்ப முத்திரை தட்சிணா மூர்த்தியின் சின் முத்திரையின் ஒரு அம்சத்தைத் தன்னுள் கொண்டது. குரு விரல் சுக்கிர விரல் நுனிகள் ஒன்றையொன்று தொட்ட நிலையில் அமையும் சின் முத்திரையை தெய்வங்கள் மட்டுமே பிரயோகம் செய்ய முடியும். காரணம் குரு விரல் தேவ சக்தியையும் சுக்கிர விரல் அசுர சக்தியையும் குறிப்பதால் இவ்விரு சக்திகளுக்கு அப்பாற்பட்ட தெய்வ நிலையில் உள்ளவர்களே சின் முத்திரை இடும் தகுதி உள்ளவர்கள்.

சாதராண மனிதர்கள் தேவ சக்திகளுக்கும் அசுர சக்திகளுக்கும் ஆட்பட்டு, அவைகளுக்கு உட்பட்டு இயங்குவதால் அவர்கள் சின் முத்திரையை சற்று மாறுபட்ட நிலையில் பயிலுவதே சிறப்பாகும். அதாவது, வளர்பிறை நாட்களில் வலது குரு விரல் (ஆட்காட்டி விரல்) நுனி வலது சுக்கிர விரல் (கட்டை விரல்) அங்குலாஸ்திதியை தொட்டுக் கொண்டு இருக்குமாறும், தேய் பிறை நாட்களில் வலது சுக்கிர விரல் வலது குருவிரல் முதல் அங்குலாஸ்திதியை தொட்டுக் கொண்டு இருக்குமாறும் முத்திரையைப் பயிலுவதே ஏற்புடையதாகும்.

இதனால் வளர்பிறையில் நிறைவேற்றும் நற்காரியங்களில் சுப மங்கள சக்திகள் பெருகியும். தேய் பிறையில் பூஜா பலன்களின் விருத்தியும் ஏற்பட்டு நற்காரிய சித்தி கிட்டும். தேய் பிறை என்னும் கிருஷ்ண பட்சத்தில் அமையும் சங்கடஹர சதுர்த்தி பூஜை, அஷ்டமி திதியில் அமையும் கால பைரவ பூஜை, திரயோதசியில் அமையும் பிரதோஷ பூஜை, சதுர்த்தசி திதியில் அமையும் சிவராத்திரி பூஜை இவை அசுர சக்திகளை நிவர்த்தி செய்து பூஜா பலன்களை விருத்தி செய்கின்றன. இவ்வாறு தேய் பிறை பூஜைகளால் அசுர சக்திகள் குறைந்து, நற்சக்திகள் விருத்தியாகி அவை வளர்பிறையில் நிறைவேற்றும் திருமணம், கிருஹபிரவேசம் போன்ற சுப காரியங்கள் நல்ல முறையில் தடையின்றி நிறைவேறி சிறப்படையச் செய்கின்றன. எனவே, வளர்பிறை நல்லது, தேய்பிறை கெட்டது என்ற குறுகிய கண்ணேட்டத்தில காலத்தை பாகுபடுத்திப் பார்ப்பதை விட தேய்பிறை பூஜா பலனை விருத்தி செய்ய உகந்தது, வளர்பிறை சுப காரியங்களை நிறைவேற்றுவதற்கு உகந்தது என்று காலத்தை உரிய முறையில் பயன்படுத்துவதே சரியான ஆன்மீக அணுகு முறையாகும். இம்முறையைத்தான் நமது முன்னோர்களும், மகான்களும் யோகிகளும் இன்று வரை பின்பற்றி வருகிறார்கள்.

அதே போல மகான்களுக்கு உரிய யோக நிலைகளைப் பயில்வதை விட மனிதர்களுக்கு உரித்தான சரியான பூஜை முறைகளைக் கையாள்வது சிறப்பாகும். இம்முறையில் அருணாசல ஆபஸ்தம்ப யோக முத்திரையைப் போல மனிதர்கள் பயில ஆபஸ்தம்ப ரிஷியால் அருளப் பெற்றதே எமது ”காயத்ரீ முத்திரைகள்” என்னும் நூலில் அளிக்கப்பட்டுள்ள ஆபஸ்தம்ப காயத்ரீ முத்திரை ஆகும்.  
ஆபஸ்தம்ப காயத்ரீ முத்திரையைப் பயிலுவதால் கிட்டும் பல்வேறு பலன்களில் சனீஸ்வர பகவானின் அனுகிரமும் உத்தாதலக மகிரிஷியின் அனுகிரகமும் ஒன்றாகப் பெருகும் பேறாகும்.

இப்பலனை விளக்கும் புராண சம்பவம் ஒன்று உண்டு. இலங்கையை ஆண்ட ராவணன் நவகிரகங்களை படிகளாக்கி தன்னுடைய அரண்மனையில் கொலு மண்டபத்தில் வைத்திருந்தான். தினமும் அப்படிகளை மிதித்துச் சென்றே தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அசுர பூஜைகளால் மிகுந்த தபோ பலனை ராவணன் பெற்றிருந்ததால் அந்த நவகிரக தேவதைகள் அவனை எதிர்க்க முடியாமல் செயலற்று இருந்தன. ஒரு முறை நாரத மகரிஷி இலங்கைக்கு வான மார்கமாக வந்தபோது சனீஸ்வர பகவான் அவரிடம் தான் அடைந்த வேதனையையும் மற்ற நவகிரக தேவதைகளின் அவல நிலையையும் எடுத்துரைத்து விமோசனம் வேண்டினார்.

நாரத மகரிஷியும் சனீஸ்வர பகவானிடம், ”கவலைப்படாதே. என்னதான் ஒருவன் தவம் இயற்றி சிவபெருமானிடம் இருந்து வரங்களைப் பெற்றாலும் அவற்றை தவறாகப் பயன்படுத்தினால் நிச்சயம் அவன் அழிந்து போவான். இது இறை தர்மம். ராவணன் அழியும் காலம் நெருங்கி விட்டது. நான் கூறும் சரியான நேரத்தில் நீ ராவணனுடைய மாரக ஸ்தானத்தைப் பார்த்து விடு. அவன் கதை முடிந்து விடும்”, என்று ஆறுதல் வார்த்தைகள் அளித்தார். நாரதர் அருளியபடியே சனீஸ்வர பகவான் உச்சம் பெற்று ராவணனைப் பார்க்க அது முதல் அவன் அழியும் காலமும் ஆரம்பாகி விட்டது. ஆனால், சனீஸ்வரனின் பார்வை தன் மேல் விழுந்ததை ராவணன் தன்னுடைய தபோ பலத்தால் உணர்ந்து விட்டான். மறு கணமே தன்னுடைய கதையால் சனீஸ்வர பகவானைத் தாக்க அவர் மேல் பாயவே சனீஸ்வர பகவான் அங்கிருந்து தப்பித்து வான மார்கமாக பல லோகங்களுக்கும் விரைந்து சென்றார்.

திருச்சி உய்யக்கொண்டான் மலையில்
அருள்புரியும் ஸ்ரீஜேஷ்டாதேவி

எல்லா லோகங்களுக்கும் ராவணன் சனீஸ்வர பகவானைத் துரத்திக் கொண்டு வரவே எங்கும் புகலிடம் இன்றி சனீஸ்வர பகவான் தவித்தார். அந்நிலையில் மீண்டும் நாரதர் எதிர்ப்படவே அவரிடம் தன்னுடைய இக்கட்டான நிலையைக் கூறி ராவணனின் கதாயுத தாக்குதலிலிருந்து தப்பிக்கும் உபாயத்தைக் கேட்டார். நாரத ரிஷியும், ”ராவணன் தேவ லோகத்தையே வென்று வெற்றிக் கொடி நாட்டியவன். எந்த லோகம் சென்றாலும் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது. இதற்கு ஒரே ஒரு வழி பூலோகத்தில் அசுர சக்திகள் நெருங்க முடியாத திருத்தலத்தில் நீ புகலிடம் கொள்ள வேண்டும்.

திருச்சிரபுர திருவானைக்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீஜேஷ்டாதேவியிடம் நீ அடைக்கலம் கொள். அது ஒன்றுதான் ராவணனிடமிருந்து தப்பிக்கும் உபாயம்,” என்று கூறி சனீஸ்வர பகவானுக்கு நல்வழி காட்டினார் தேவ ரிஷி. நாரதர் அருளிய வண்ணம் சனீஸ்வர பகவான் ஜேஷ்டா தேவியிடம் தஞ்சம் புகுந்தார். திருவானைக்கோவிலை அடைந்த ராவணன் தன்னுடைய இயலாமையை உணர்ந்து அவ்விடத்தை விட்டு அகன்றான். பின்னர் குரு சந்திர யோகம் பூரணமாகப் பொலிந்த ராமபிரானின் பாணத்திற்கு இலக்கான வரலாறு நீங்கள் அறிந்த ஒன்றுதானே.

ஏன் இராவணன் திருவானைக் கோவிலிலிருந்து திரும்பிச் சென்றான்? இதற்கு காரணம் அறிய வேண்டும் என்றால் ஜேஷ்டாதேவியின் திருமண வைபவத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். தேவர்களும் அசுரர்களும்பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிவந்த ஜேஷ்டாதேவியை யாரும் மணந்து கொள்ள முன்வராத போது உத்தாதலக மகரிஷியே அவள் கைப்பிடிக்க சம்மதித்ததால் சிவபெருமான் மனம் மகிழ்ந்து உத்தாதல மகரிஷிக்கு பல வரங்களை அருளினார். அவற்றில் ஒன்று உத்தாததலகர் குடியிருக்கும் இடத்தில் எந்த அசுர சக்திகளும் வேலை செய்யாது என்பது. ஜேஷ்டாதேவி உத்தமரான தன் கணவன் உத்தாதலகரை தன்னுடைய இதயக் கோவிலில் எழுந்தருளிச் செய்து இருந்ததால் அசுரனான ராவணன் திருஆனைக்காவல் எல்லையையே நெருங்க முடியாமல் தோல்வியுடன் திரும்பிச் சென்றான்.

எனவே, அஷ்டம சனி, ஏழரை நாட்டுச் சனி, ஜன்ம சனி போன்ற பல்வேறு சனி பகவானின் பீடிப்பால் துன்பம் அனுபவிக்கும் நிலையில் உள்ளவர்கள் திருவானைக்கோவிலில் ஜேஷ்டாதேவியுடன் எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி ஊனமுற்றோருக்கு புத்தாடைகள் வழங்கி மகிழ்விப்பதால் நலம் பெறுவர். கால் ஊனமுடையவர்களுக்கு மூன்று சக்கர சைக்கிள் தானம் சிறப்புடையது.  

தனக்கு தாயாக அருள்புரிந்து அடைக்கலம் தந்த ஸ்ரீஜேஷ்டாதேவியை சனீஸ்வர பகவான் தன்னுடைய சனீஸ்வர லோகத்திற்கு உரிய சுஜனி என்ற தேவமொழியில் புகழ்ந்து துதி செய்தார். (அந்த அற்புதமான ஸ்ரீஜேஷ்டாதேவி துதியை தோத்திர மாலை என்னும் பகுதியில் காணலாம்).

காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் இரு உள்ளங்கைகளையும் அகல விரித்து கர தரிசனம் செய்யும் போது உத்தாதலக மகரிஷியை தியானித்தல் நலம் என அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம். இரு உள்ளங் கைகளும் இணையும்போது இரு கைகளிலும் உள்ள இதய ரேகைகள் இணைந்து அர்த்த சந்திர வடிவத்தைக் கொடுக்கும். இந்த அர்த்த சந்திர தரிசனத்துடன் உத்தாதலக மகரிஷியின் தியானம் இணையும்போது அது குருசந்திர யோக பலனைக் கொடுக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இதனால் அசுர சக்திகளால் துன்பம் அடையாமல் அன்றைய பொழுது இனிமையாகக் கழியும்.

ஸ்ரீஜேஷ்டாதேவி உத்தாதலக தம்பதியரின் வழிபாட்டைப் போல அழுக்குனி சித்த பிரானின் வழிபாடும் சனி பகவான் பீடிப்பால் வரும் துன்பங்களை களையக் கூடிய சக்தியைப் பெற்றுள்ளது. ஒரு மனிதனின் வாழ்வில் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கால கட்டத்தில் சக்தி உள்ளதாக அமைந்து அம்மனிதனுக்கு வரும் இன்ப துன்பங்களை நிறைவேற்றி வைக்கிறது. இந்நிலையில் மனிதர்களின் அந்திம கால கிரகமாக அமைபவரே சனி பகவான். எனவே, சனி பகவான் ஒரு ஜாதகருடைய அஷ்டமத்திலோ, ஜன்மத்திலோ குடிகொள்ளும் போது பொதுவாக அந்திம காலம் சிரமம் உடையதாக இருக்கும். அத்தகையோர் பல்வேறு மனக் குழப்பங்களையும், நோய் நொடிகளையும், நரம்பு சம்பந்தமான துன்பங்களையும் அனுபவிக்க வேண்டி வரும்.

இத்தகைய துன்பங்களிலிருந்து நிவாரணம் அளிப்பதற்காக அழுக்குனி சித்தர் திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயிலில் அற்புதமான ரோக நிவர்த்தி சக்கரங்களை பிரதிஷ்டை செய்து வைத்துள்ளார். எனவே Myasthania Gravis போன்ற நரம்பு சம்பந்தமான நோய்களால் அவதியுறுவோர், வயது முதிர்ந்த நிலையில் கவனிப்பார் இல்லாமல் நிராதரவாக இருப்பவர்கள் இத்திருக் கோயிலில் ”வேயுறு தோளி பங்கன் ,,,,” போன்ற தேவாரப் பதிகங்களை ஓதி வந்தால் அவர்களுக்கு இத்தல ஈசன் உரிய நல்வழியைக் காட்டுவார்.

உண்மையில் சனி பகவானின் அனுகிரகம் இருந்தால்தான் எந்த தவமும் சிறப்பாக அமையும். குரு மகா திசையில் பிறந்த ரமண மகரிஷி சனி மகா திசையில் திருஅண்ணாமலையில் தவத்தை மேற்கொண்டார். அவருடைய தவம் முழுவதும் சனி மகாதிசையிலேயே வளர்ந்து கனிந்தது. சனி சக்தி ஜன சக்தியைக் குறிப்பதால் மக்களுக்குத் தொண்டாற்ற நினைக்கும் எவரும் சனி பகவானின் பரிபூரண ஆசியைப் பெற்றாக வேண்டும். நமது குருமங்கள கந்தர்வா அவர்களின் ஜாதக நிலைகளை ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மை பளிச்சென விளங்கும். ராசி, ஹோரை, நவாம்சம், துவாதசாம்சம், சஷ்டியாம்சம் என எந்த விதத்தில் அவருடைய நவகிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்தாலும் அவை எல்லாவற்றிலும் சனி பகவானின் நமது குருநாதரின் லக்னத்துடன் தொடர்பு கொண்ட நிலையிலேயே அமர்ந்து இருப்பார் என்பது அற்புதமான, வியக்கத்தக்க தெய்வீகமான உண்மையாகும்.  

இவ்வாறு சனி பகவானின் பரிபூரண ஆசியைப் பெற ஆபஸ்தம்ப மகரிஷியால் பூலோக வாசிகளுக்கு அருளப் பெற்றதே காயத்ரீ ஆபஸ்தம்ப முத்திரையாகும். இம்முத்திரையைக் கூர்ந்து கவனித்தால் அற்புதமான பல உண்மைகளை சராசரி மனித அறிவைக் கொண்டு கூட உணரத் தக்க முறையில் எளிமையாக அமைத்துள்ளனர் நமது பெரியோர்கள். சுக்கிர விரல் சனி விரல் இணைந்து ஆவுடையை அமைக்க அந்த புனித ஆவுடை புத விரலால் அமைந்த சிவலிங்கத்தைத் தழுவி நிற்கிறது. தனி புதன் புனிதமானதுதானே? குரு விரலும் சுக்கிர விரலும் சேர்ந்து புனிதமான கோமுகத்தை அமைக்க ஓர் அற்புதமான சிவலிங்கத்தை உங்கள் கைகளுக்குள் அமைத்து விடுகிறீர்கள்.

இவ்வாறு சுக்கிர சக்திகளும் சனீஸ்வர சக்திகளும் இணையும்போது அங்கு அசுர சக்திகள் மறைந்து போகின்றன. ஒவ்வொரு தெய்வத்திற்கும் வேல், சூலாயுதம், சங்கு, சக்கரம் போன்ற ஆயுதங்கள் உண்டு. அது போல ஜேஷ்டாதேவியின் ஆயுதம் என்ன தெரியுமா? விளக்குமாறு (தென்னை மரத் துடைப்பம்) ஏந்திய வண்ணமே ஸ்ரீஜேஷ்டாதேவி அருள்பாலிக்கிறாள். சுக்கிர சக்திகள் அசுர சக்திகளை மாய்க்கும் தன்மை பெற்றிருப்பதால் விளக்குமாற்றுடன் கூடிய ஜேஷ்டாதேவியின் தரிசனம் அசுர சக்திகளை மாய்க்கிறது. அதனால்தான் விளக்குமாறு ஏந்தியிருக்கும் துப்புரவு தொழிலாளிகளின் தரிசனம் சுப சகுனமாக சகுன சாஸ்திரத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

புனித கங்கை கரையில் அமைந்த ரிஷிகேஷில் தவமியற்றிய சுவாமி சிவானந்தாவின் தவம் முதிர்ந்த நிலையில் தன்னுடைய மனதில் இருந்த எல்லா அழுக்குகளையும் களைந்து விட்டாலும் தான் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்ற மாசை மட்டும் அவரால் களைய முடியவில்லை. அந்நிலையில் இரண்டு வருட காலத்திற்கு தன் கண்ணில் பட்ட எல்லா துப்புரவு தொழிலாளிகள் காலிலும் சாஷ்டாங்கமாக விழுந்து, விழுந்து வணங்கினார். அதன் விளைவாக தான் உயர்ந்தவன் என்ற அசுர எண்ணத்தை அவர் முழுவதுமாகக் களைந்து இறை அருளுக்குப் பாத்திரமானார்.

அது போலவே ராமகிருஷ்ண பரமஹம்சரும் தன்னுடைய அகந்தையைக் களைய தாழ்ந்த குல மக்களின், துப்புரவு தொழிலாளிகளின் கழிவறைகளைத் தன்னுடைய தலைக் கேசத்தால் அலம்பி, அலம்பியே உயர்ந்த தெய்வீக நிலைக்கு உயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
அருணாசல ஆபஸ்தம்ப முத்திரையுடன் திகழும் ரமண மகரிஷி தூய வெண் கோவணத்தை அணிந்துள்ளார் அல்லவா? இந்த வெண் கோவணத்தின் வலது முடிச்சு சிவத் தலங்களில் அமையும் கோமுக தரிசனப் பலனைப் பெற்றுத் தரும்.

இறை மூர்த்தங்களின் கோவண ஆடை மிகவும் சிறப்பு வாய்ந்த பலன்களைத் தரக் கூடியது. உதாரணமாக, பழநி மலையில் அருள்புரியும் தண்டபாணி தெய்வத்தின் கோவண ஆடை தரிசனம் தீராத பல நோய்களைத் தீர்க்க வல்லது. எத்தகைய கடுமையான சஞ்சித கர்மங்களையும் களையக் கூடிய ஆன்மீக அருமருந்தாக அமைவது. சமீப காலத்தில் சினிமாத் துறையைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் முருகப் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி வைத்திருந்தார். இவர் தினமும் பழநி தண்டபாணி சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட கோவண ஆடையை நீரில் நனைத்து அந்த நீரை முருகப் பிரசாதமாக அருந்திய பின்னரே தன்னுடைய நித்திய அலுவல்களைக் கவனிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  

ஸ்ரீமுருகப் பெருமான் திருச்சுழி

பல முருகத் தலங்களில் திருப்பணிகளையும் ஆற்றி வந்தார். ஒரு முறை ஒரு அன்பர் இவரை, ” உங்களுடைய வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?” என்று கேட்டபோது இவர் எந்த யோசனையும் இல்லாமல் அக்கணமே பளிச்சென்று, ”எனக்கு மிகவும் விருப்பமான தெய்வம் பழநி முருகன்தான். அவன் அவதரித்த சஷ்டி திதியில் என்னுடைய உடலை உகுக்கும் பேறு கிடைத்தால் போதும், அதைவிட நான் பெறும் பாக்கியம் எதுவும் இல்லை,” என்று ஆணித்தரமாக கூறினார்.

சில வருடங்களுக்குள் அவருடைய தெய்வீகமான விருப்பத்தை தண்டபாணி தெய்வம் நிறைவேற்றி வைத்தது. அவர் விரும்பியே வண்ணமே ஒரு வளர்பிறை சஷ்டி திதியில் அந்த பிரமுகர் தண்டபாணி தெய்வத்தின் மலரடிகளைத் தழுவினார். அது மட்டும் அல்ல. ஒவ்வொரு வருடமும் பத்து கோடி மனிதர்களில் ஒருவர் இறைவனை அடைகிறார் என்பது நீங்கள் அறியாத இறை உண்மை. அதாவது ஒவ்வொரு வருடமும் நமது புனிதமான பாரதத் திருநாட்டில் குறைந்தது எட்டு பக்தர்களாவது இறைவனின் திருப்பாதங்களை அடைகிறார்கள். அந்த வருடத்தில் (1978) இறைவனை அடைந்தவர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தெய்வீக உண்மைதான் என்பதை எப்படி நீங்கள் ஒத்துக் கொள்ள முடியும்? இதற்கு என்ன சான்று? இந்த வரிகளை முதன் முதலில் படிக்கும்போது தண்டபாணி சுவாமியின் அருளால் உங்களுக்கு மெய் சிலிர்ப்பு ஏற்படும். அதை வைத்தே நீங்கள் தண்டபாணி தெய்வத்தின் கோவண ஆடையின் மகிமையை உணர்ந்து கொள்ள முடியும். வேறு ஒருவரின் சிபாரிசு உங்களுக்குத் தேவையில்லை. இறை உண்மை எதையும் நீங்கள் நீங்களாகவே உணர்ந்து கொள்ளலாம்.

இறைவன் என்பவர் எங்கோ வானத்தில் கண்ணுக்குத் தெரியாமல் அமர்ந்து இருப்பவர் என்று நினைக்க வேண்டாம். அவர் உங்கள் திருஉள்ளத்தில் அமர்ந்து இமைப் பொழுதும் நீங்காமல் உங்களை பாதுகாத்துக் கொண்டே இருக்கிறார். அந்த உண்மையை இது போன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது உங்களுக்கு நினைவுறுத்துகின்றன. அவ்வளவே.

இறுதி காலத்தில் பாயில் படுத்து நோயில் விழாமல் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் ஒவ்வொரு சஷ்டி திதியிலும் ஆறு பொட்டலங்கள் இட்லி (ஒரு பொட்டலத்தில் ஆறு இட்லிகளுடன் கருவேப்பிலை, கொத்தமல்லி கலந்த துவையல் சேர்த்து) தானம் அளித்து வந்தால் நன்னிலை அடைவர். படுத்த படுக்கையாகக் கிடக்கும் நோயாளிகள் அமைதியான மரணத்தைத் தழுவிட மேற்கூறிய வழிபாடு உறுதுணை செய்யும்.  

எமது சற்குரு நாதர் இடியாப்ப சித்த பிரான் இத்தகைய வெண்ணிற கோவணாண்டியாக இந்தியாவில் உள்ள அனைத்து திருத்தலங்களுக்கும் அடியேனை கால் நடையாகவே அழைத்துச் சென்று கற்பனைக்கும் எட்டாத இறை அனுபூதிகளை வாரி வழங்கினார். அந்த அனுபூதிகளே அடிமை கண்ட ஆனந்தமாக உங்களுக்கு அளிக்கப்படுகின்றன. அவற்றை அள்ளிப் பருகி ஆனந்தம் அடையுங்கள்.

அருணாசல ஆபஸ்தம்ப யோக முத்திரை தரிசன பலன்கள்
அருணாசல ஆபஸ்தம் யோக முத்திரையை அனைவரும் பயில முடியாது என்றாலும் அத்தகைய முத்திரைகளுடன் திகழும் ரமண மகரிஷி போன்ற மகான்களை தரிசனம் செய்வதால் அற்புதமான பலன்களைப் பெற்று நலம் அடையலாம் அல்லவா? அருணாசல ஆபஸ்தம்ப யோக முத்திரை தரித்த ரமண மகரிஷி படங்களை வீட்டில் வைத்திருப்போர் அந்தப் படங்களுக்கு தங்கள் கையால் அரைத்த சந்தனத்தை சிறு உருண்டையாக்கி மகரிஷியின் வலது கால் விரல்களில் வைத்து சுத்தமாக குங்குமத்தால் அலங்கரித்து கன்றுடன் கூடிய பசுக்களுக்கு (குறைந்தது மூன்று) அகத்திக் கீரை தானம் அளித்து வந்தால் கணவன் மனைவி ஒற்றுமை பெருகும்.
காரண காரியம் இன்றி பலருடைய இல்லங்களில் கணவன் மனைவியரிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு வாய்ச் சண்டையும் அதன் விளைவாக பிரிவினையும் ஏற்படுவதுண்டு. மேற்கூறிய முத்திரை வழிபாடு குடும்பத்தில் அமைதி நிலவ வழி செய்யும். நற்காரிய சித்திகளை அளிக்கும் எளிமையான வழிபாடு இது.

லிங்க வடிவத்தில் திகழும்
காயத்ரீ ஆபஸ்தம்ப முத்திரை

ஆபஸ்தம்ப முத்திரையுடன் திகழும் ரமண மகரிஷி படத்தில் வலது பக்கத்தில் உள்ள கோவண முடிச்சிற்கு தங்கள் கையால் அரைத்த சந்தனத்தை சார்த்தி ஸ்ரீஅகத்திய முனிவர் அருளிய ஸ்ரீஆதித்ய ஹ்ருதய துதியை ஓதி வழிபட்டு வந்தால் வேலைக்குப் போகும் பெண்களுக்கு தகுந்த வழித்துணை கிடைப்பதுடன் அவர்கள் பணி செய்யும் இடத்தில் உரிய பாதுகாப்பும் மன அமைதியும் கிட்டும். வெள்ளிக் கிழமைகளில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுவது நலம்.

திருஅண்ணாமலை, பழநி, தேனிமலை, ஐயர் மலை போன்ற மலைத் தலங்களில் கிரிவலங்களை மேற்கொள்வோருக்கு நோய் நொடிகள், உடல் பாதிப்புகள் இடையூறாக அமைந்தால் ஆபஸ்தம்ப முத்திரையுடன் திகழும் ரமண மகரிஷி படத்திற்கு அரைத்த சந்தனத்தால் நெற்றிப் பொட்டிட்டு பௌர்ணமி, திரயோதசி திதிகளில் வழிபட்டு வந்தால் நோயற்ற வாழ்வும், நல்ல உடல் ஆரோக்கியமும் பெற வாய்ப்புண்டு.

சத்யசாய்பாபாவின் ஊர்த்துவ சக்தி முத்திரை

வலது கையை தன்னுடைய முகத்திற்கு இணையாக வைத்தும் இடது கையை வலது கையை விட சற்று உயரத்தில் வைத்தும் ஆசீர்வதிக்கும் கோலத்தில் அமைந்த முத்திரை ஊர்த்துவ சக்தி முத்திரை என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறது.
சிவபெருமான் அமைதியாக தரையில் படுத்திருக்க அவர் மேல் காளி கால் வைத்து நிற்கும் கோலத்தைத் தரிசனம் செய்திருப்பீர்கள். இதன் பின்னணியில் உள்ள வரலாறு என்ன?

பொதுவாக, சிவனை வெற்றி கொண்டு காளி சிவனின் மேல் நர்த்தனம் ஆடுகிறாள் என்று சொல்வதுண்டு. உண்மையில் சிவன் சக்தி என்பது இறைவனின் இரு வேறு சக்தி அம்சங்களே. இதில் ஒன்றையொன்று வெற்றி கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை.

பராசக்திக்கு கருணை புரியும்
சிவபெருமானின் திருக்கோலம்

தேவர்களின் பிரார்த்தனையை ஏற்று எவராலும் வெற்றி கொள்ள முடியாத மகிஷாசுரனை அழிக்க திருவுள்ளம் கொண்டாள் அன்னை பராசக்தி. அதற்காக நவராத்திரி ஒன்பது தினங்களிலும் ஊசி முனையில் நின்று கடுமையான கோர தவத்தை இயற்றினாள் தேவி. இருப்பினும் தவ முடிவில் இன்னும் தான் மகிஷாசுரனை வெற்றி கொள்ளும் அளவிற்குத் தேவையான புனித சக்திகளைப் பெறவில்லை என்பதை உணர்ந்த அன்னை இதை விடவும் கடுமையான எத்தவத்தையும் இயற்ற முடியாது என்பதால் பரமேஸ்வரனைச் சரணடைந்தாள் பராசக்தி.

”சுவாமி, என்னால் முடிந்த அளவு மிக மிக கடுமையான தவத்தை இந்த ஒன்பது நாட்களும் இயற்றி முடித்து விட்டேன். ஆனாலும், மகிஷாசுரனை வெல்லும் அளவிற்குத் தேவையான சக்திகளைப் பெற முடியவில்லை. தாங்கள்தான் அருள்கூர்ந்து அவ்வசுரனைக் கொல்லும் வழிமுறையைத் தந்தருள வேண்டும்,” என்று எம்பெருமானின் திருவடிகளைப் பணிந்து நின்றாள். இறைவன் புன்முறுவலுடன், ”தேவி, நீ கூறுவது நிஜமே. என்னதான் நீ தவம் இயற்றினாலும் அந்த அசுரனை உன்னுடைய சக்தியால் மட்டும் நிச்சயமாக வெல்ல முடியாது. எனவே உன்னுடைய சக்தியுடன் சிவ சக்தியும் ஒன்றாக இணைந்தால்தான் அவனுடைய அசுர சக்திகள் மாயும்,” என்று கூறி தான் பூமியில் படுத்துக் கொண்டு தேவியைத் தன் திருமார்பில் கால் ஊன்றி நிற்குமாறு கேட்டுக் கொண்டார்.

எம்பெருமானின் உத்தரவை ஏற்றுக் கொண்டு தேவி சிவ பெருமானின் திருமார்பில் தன்னுடைய கால்களை ஊன்றி நிற்க பெருமான் தன்னுடைய பூரண இறை சக்தியை தேவிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். அப்போது தேவியின் தவமும் பரிபூரணம் ஆனது. இதுவே சிவம் சவமான வரலாறு. அகிலாண்ட நாயகனாக இருந்தாலும் பெருமான் தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்ளாத தியாகராஜனாக தன்னுடைய அனைத்து சக்திகளையும் தேவிக்காக அளித்து அசுர சக்திகளை மாய்ப்பதற்காக திருவிளையாடல் புரிந்து அனைவர் உள்ளத்திலும் நீங்காத, நிலையான இடத்தைப் பெற்றார்.
அற்புதமான இந்த இறை லீலையை உலக மக்களின் நலனுக்காக அர்ப்பணிக்கும் முத்திரையே பாபாவின் ஊர்த்துவ சக்தி முத்திரையாகும். பாபாவின் வலது கை சிவ தத்துவத்தையும் இடது கை சக்தி தத்துவத்தையும் குறிக்கும். வலது கையை விட இடது கை உயர்ந்து நிற்பது ஊர்த்துவ சக்தி தத்துவத்தைக் குறிக்கும். பாபாவின் இடது காலும் (சக்தி தத்துவம்) வலது கால் (சிவ தத்துவம்) மேல் ஏறி நிற்பது கவனிக்கத்தக்கது.

இனி வரும் காலங்களில் பெண்களே பல உயர்ந்த பதவிகளை வகிப்பார்கள். இரக்கமற்ற பல பெண்களின் செய்கைகளால் உலகெங்கும் மக்கள் பலவிதமான துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இவ்வாறு உயர் நிலையில் உள்ள பெண்களால் அவதியுறும் ஆண்கள் மேற்கூறிய பாபாவின் திருஉருவத்தை வணங்கி பாபாவின் இரு உள்ளங்கைகளுக்கும் திருப்பாதங்களுக்கும் கையால் அரைத்த சந்தனப் பொட்டு வைத்து சுத்தமான ஜவ்வாது பொட்டுகளால் அலங்கரித்து வணங்குவதால் தங்கள் துறையில் ஏற்படும் துன்பங்களைக் களைய வாய்ப்புண்டு.

ஊர்த்துவ சக்தி முத்திரையுடன்
காட்சி தரும் சத்ய சாய்பாபா

பாபா அமர்ந்திருக்கும் சோபாவின் இடது கைப்பிடியில் ஒரு சிறு துண்டு தொங்குகிறது அல்லவா? இது ஒரு கேள்விக் குறி வடிவத்தில் அமைந்திருக்கும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆன்மீகத்தில் புதிதாக பிரவேசிக்கும் பக்தர்களுக்கு ஏராளமான கேள்விகள் தோன்றும். தன்னுடைய குருநாதரிடம் அக்கேள்விகளுக்கான பதில்களைப் பெற்று மேலும் மேலும் தங்களுடைய சாதனைகளைத் தொடர்வது சீடர்களின் இயல்பு. ஆனால், பாபா தனிப்பட்ட முறையில் தனக்கென்று சீடர்களை வைத்துக் கொள்ளாததால் அத்தகைய சீடர்கள் தங்களுக்குத் தோன்றும் கேள்விகளுக்கான விடைகளை யாரிடமிருந்து பெற முடியும். அவர்களுக்கு வழிகாட்டியாக அமைவதே பாபாவிடம் காணப்படும் வெள்ளைத் துண்டு.

பக்தர்களின் நம்பிக்கையைப் பொறுத்து இந்தக் கைத்துண்டு அவர்களுடைய நியாயமான கேள்விகளுக்கான பதிலைக் கொடுக்கும். அரைத்த சந்தனத்தால் இந்த துண்டின் நுனியில் பொட்டிட்டால் அது கேள்விக் குறியை முழுமை ஆக்கும் அல்லவா? ஆனால், அதுவே குரு வழிபாடாக மலர்ந்து சீடர்களுக்கு நல்ல வழியைக் காட்டும் என்பது சித்தர்களின் அறிவுரை. கேள்விக் குறியில் இடும் பொட்டை சுத்தமான ஜவ்வாது கொண்டு அலங்கரித்தல் நலம். வாரம் ஒரு முறையாவது குறிப்பாக வியாழக் கிழமைகளில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் நலம்.

ஒரு குடும்பத்தில் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் ஒருவர் இறந்து விட்டால் அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக் குறி ஆகி விடும் அல்லவா? சேமிப்பு பணம் எல்லாவற்றையும் ஒருவரிடம் கொடுத்த பின் அந்த பணத்தை வாங்கியவர் பணத்தைத் திருப்பித் தராவிட்டால் பணம் கொடுத்தவரின் நிலை கேள்விக் குறி ஆகிவிடும் அல்லவா? உயிருக்குயிராக காதலித்தவன் வேறு ஒரு பெண்ணுடன் ஓடிப் போய் விட்டால் காதலியின் நிலை கேள்விக் குறி ஆகி விடும் அல்லவா? இவ்வாறு மக்கள் பலருடைய வாழ்வும் ஏதாவது ஒரு கட்டத்தில் கேள்விக் குறியாக மாறி அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தி விடுவது உண்டு. அவ்வாறு கேள்விக் குறியால் குழப்பமடைந்தவர்கள், துன்பம் அடைந்தவர்கள் மேற்கூறிய குருவார வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் நலம் அடைவர்.

ஸ்ரீசத்ய சாய்பாபாவின் இடது கன்னத்தில் ஒரு மச்சம் இருப்பதை பலரும் தரிசனம் செய்திருக்கலாம். அந்த மச்சம் குறிக்கும் இரகசியம் பற்றி சாய்பாபாவின் அடியார் ஒருவர் நம் சற்குருவிடம் கேட்டபோது அது பற்றி நம் சற்குரு அளித்த விளக்கத்தை தனியாக வேறொரு இடத்தில் அளித்துள்ளோம்.

அமிர்தானந்த மயி அன்னையின் வராஹ சாஸ்வத முத்திரை

உலகில் எது நித்தியமானது? எது நிரந்தரமானது? நமது கண்ணெதிரே உள்ள அனைத்துமே மாயையின் விளைவால் ஏற்பட்டதே. இப்பிரபஞ்சத்தில் நிரந்தரமானது இறைவன் ஒருவனே. இறைவனை உணரச் செய்யும் குரு அருள் ஒன்றே உலகில் என்றென்றும் நிலையானது. இதை விளக்குவதே அமிர்தானந்த மயி அன்னையின் வராஹ சாஸ்வத முத்திரையாகும்.

இம்முத்திரையில் குரு விரல்களைத் தவிர ஏனைய விரல்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிய நிலையில் இருக்கும். ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாட்டை நடமாடும் தெய்வங்களான மகான்கள் மக்களுக்குப் போதித்து வருகிறார்கள். இம்முறையில் கலியுகத்திற்கு உகந்த வழிபாடாக சித்தர்களால் போற்றப்படுவது சக்தி வழிபாடே ஆகும். இதை விளக்கும் முகமாக அன்னையால் அமைக்கப்பட்டதே வராஹ சாஸ்வத சக்தி முத்திரையாகும். தனது இடது புத விரலை பக்தர்கள் காணும் வண்ணம் அமைத்து சக்தி வழிபாட்டை வலியுறுத்துகிறார் அன்னை.

இனி வரும் காலங்களில் காமக் குற்றங்கள் பெருகும். முறையற்ற காம எண்ணங்கள் சமூகத்தை சீரழியச் செய்யும். நல்லவர்கள், தூய எண்ணம் கொண்டவர்கள் கூட கலி புருஷனின் காமத் தாக்குதல்களிலிருந்து மீள்வது மிகக் கடினமே. இதை கருத்தில் கொண்டு அன்னை வராஹ சக்தி முத்திரையை அருளி உள்ளார்கள்.

கணவனுடன் இல்லறத்தில் இனிமை காணும் இள வயது பெண்கள் கூட சமுதாயத்தில் நடமாடும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில் கணவனை இழந்த அல்லது விவாகரத்து செய்த இளம் வயது பெண்கள் சமுதாயத்தில் எவ்வளவு கவனத்துடன் செயல்பட வேண்டும?. அவர்களுக்கு ஆறுதலாக, வழிகாட்டியாக அமைவதே அன்னையின் வராஹ முத்திரையாகும். தங்கள் கையால் அரைத்த சந்தனத்தை (சந்தனத்தை மட்டும்) சிறு உருண்டையாக்கி அதை தாங்கள் வைத்திருக்கும் மேற்கூறிய அன்னை படத்தில் அன்னையின் உச்சி நெற்றி நடு வகிட்டில் வைத்து, எஞ்சிய பிரசாத சந்தனத்தை தங்கள் நெற்றியில் அணிந்து வந்தால் சமுதாயத்தில் பாதுகாப்பும் மன அமைதியும் கிட்டும். குறிப்பாக வேலைக்குச் செல்லும் இள வயதுப் பெண்கள் இத்தகைய  வழிபாட்டால் பாதுகாப்புப் பெறுவர்.

பெண்களைப் பாதுகாக்கும் நறுமண வழிபாடுகளும் உண்டு. உதாரணமாக, சுத்தமான சந்தன தைலத்தை மூன்று துளிகள் எடுத்துக் கொண்டு அதை முன கையின் உள்புறத்தில் பூசிக் கொண்டு வெளியே சென்றால் மற்றவர்களின் தவறான எண்ணங்களும், பார்வைகளும் தங்கள் மேல் பட்டு மனக் குழப்பங்கள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். முடிந்த மட்டும் ஒரு நாளைக்கு இரு வேளையாவது குளித்தல் பெண்களின் உடல், மன ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பது சித்தர்களின் அறிவுரை.

மாதா அமிர்தானந்த மயி

தூய வெண்ணிற ஆடைகள் மனதில் அமைதியை ஏற்படுத்துவதுடன் உடலில் சாத்வீகமான நாடிகளை நிலைப்படுத்தும் இயல்பு கொண்டது. சமுதாயத்தில் மன அமைதியை நிலைகொள்ளச் செய்யும் தவ வழிபாடாக அன்னை இந்த வராஹ முத்திரையை தூய வெண்ணிற ஆடையை அணிந்து அருளியுள்ளார்கள். குரு விரலைத் தவிர ஏனைய விரல்கள் ஒன்றுக்கொன்று பிணைந்து நிற்பது குரு ஒருவரே என்றும் மாறாதவர், நிலையானவர் என்னும் தத்துவத்திற்கு சான்றாக விளங்குகிறது.    

பெண்களைப் போல ஆண்களும் மேற்கூறிய நறுமண வழிபாட்டால் நலம் அடைவர். பஸ் கண்டக்டர்கள், மருத்துவர்கள், பிசியோதெரபி துறையில் உள்ளவர்கள் போன்றோர் மற்றவர்கள் உடலைத் தொட வேண்டிய நிலையில் இருப்பதால் அவர்களுடைய ஆன்ம சக்தி விரைவில் குறைந்து போய் பலவித தொற்று நோய்களுக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. இத்தகையோர் அன்னையின் படத்திற்கு வாசனை உள்ள மல்லிகை, முல்லை, வெள்ளை ரோஜா போன்ற வெண்ணிற மலர்களால் அலங்கரித்து வழிபடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.

இனந் தெரியாத தொற்று நோய்கள், அரிப்பு நோய்களால் பாதிப்பு அடைந்தவர்கள் அன்னையின் வராஹ முத்திரையை வணங்கி சந்தன சோப்புகளை மருத்துவ மனையில் உள்ள நோயாளிகளுக்கு செவ்வாய்க் கிழமைகளில் அளிந்து வந்தால் விரைவில் குணம் பெறுவார்கள்.   

வராஹ முத்திரையுடன் விளங்கும் அன்னையின் படத்திற்கு உரிய சிறப்பான வழிபாடு ஒன்று உண்டு. மூல நட்சத்திர தினத்தன்று 12 வெற்றிலைகளை மாலையாகக் கட்டி அன்னை படத்திற்கு அணிவிக்க வேண்டும். பின்னர் அன்றைய தினமோ அல்லது மறுநாளோ பூராட நட்சத்திரம் நிலவும் நேரத்தில் அந்த வெற்றிலை மாலையை அவிழ்த்து மூன்று வெற்றிலையுடன் இரண்டு இலை பாக்கு அல்லது தெக்கம் பாக்கு, வாழை பழம் (1 டஜன்), தேங்காய், மணமுள்ள பூக்கள் இவற்றை சுமங்கலிகளுக்கு தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு 9 வெற்றிலைகளை மூன்று சுமங்கலிகளுக்கு தானமாக அளித்த பின் எஞ்சிய மூன்று வெற்றிலைகளுடன் இரண்டு இலை பாக்கு, சுண்ணாம்பைச் சேர்த்து அதை இரண்டு சமபாகங்களாக்கி தம்பதியர் பிரசாதமாக இரவு உணவிற்குப் பின் ஏற்க வேண்டும்.

வெற்றிலை மாலை கட்டும்போது ”ஸ்ரீராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்” என்று 108 முறைக்குக் குறையாமல் ஓத வேண்டும். இவ்வாறு தொடர்ந்து அன்னையை வழிபட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாத விடாய் குறைபாடுகளும், நோய்களும், கர்பப்பை கோளாறுகளும் நிவர்த்தியாகும். ஆண்களுக்கு ஏற்படும் விந்து குறைபாடுகள் நீங்கும். நல்ல குணமுள்ள, ஆரோக்கியமான சந்ததிகள் கிட்டும்.

வெற்றிலை என்றால் வெற்று இலை என்று பொருள். அதாவது பரவெளி தத்துவத்தைக் குறிப்பதே வெற்றிலை என்னும் மூலிகை ஆகும். தாந்த்ரீக சாஸ்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கும் வெற்றிலை சக்தி வாய்ந்த ஆன்மீக குணங்கள் உடையது. உயர்ந்த ஆன்மீக நிலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடியதே முறையான வெற்றிலை வழிபாடாகும்.

வளரும் விடைகள் ...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam

முன்னே
HOME
வளர