நான் எதையும் செய்வதில்லை, அனைத்தையும் சந்திக்கிறேன்.

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

அடியார்
குருதேவா, தானத்தில் சிறந்தது....?
சற்குரு
நிதானம்.

அடியார்
குருதேவா, அட்சய திரிதியை அன்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்களே. இது பற்றி தங்கள் விளக்கத்தை வேண்டுகிறோம்.

சுயநலம் சிறிதுமின்றி ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யும் உத்தமர்களை அன்னதானக் கூத்தர்கள் என்று அழைப்பர். இவ்வாறு ஒரு லட்சம் அன்னதானக் கூத்தர்களால் மனமுவந்து இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அன்னதான புண்ணிய ஜோதிப் பிரவாகத்தைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டதே திருச்சி திருவாசி சிவாலயத்தில் உள்ள ’அன்னமாம் பொய்கை’ என்னும் அற்புத தெய்வீகப் பொய்கையாகும்.

சற்குரு
அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்க வேண்டும் என்று மக்கள் சொல்லலாம். ஆனால், இறை அடியார்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள். ஆதியில் நம் முன்னோர்கள் நமக்கு அளித்த அற்புதமான வேத வாக்கியங்கள், பழமொழிகள் எல்லாம் தற்காலத்தில் அனர்த்தம் ஆகி விட்டதற்கு அட்சய திரிதியையும் ஒன்று. சற்றே யோசித்துப் பாருங்கள். அட்சய திரிதியை என்றால் என்ன?

இன்றைய உலகில் நமக்கு வேண்டிய எல்லா விளக்கங்களும் புராணங்களிலும் இதிகாலங்களிலும் உள்ளன. எனவேதான் அனைவரும் தினசரியே மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
ஆதிகாலத்தில் பிரம்ம தேவருக்கு ஐந்து தலைகள் இருந்தன. ஒரு முறை பிரம்ம மூர்த்தி தானே படைப்புக் கடவுள், தன்னை மிஞ்சிய தெய்வம் உலகில் எவரும் இல்லை என்று செருக்குக் கொண்டபோது சிவபெருமாள் பிரமனுடைய ஐந்தாவது தலையைக் கிள்ளி பிரம்மனுடைய அகங்காரத்தைச் சம்ஹாரம் செய்தார். இதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தின் விளைவாக பிரம்மாவினுடைய கபாலம் சிவபெருமானின் கையில் ஒட்டிக் கொண்டது. இந்த தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக பிரபஞ்சம் எங்கும் அலைந்து திரிந்து பிட்சை ஏற்று, இறுதியில் காசி அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்றபோது சிவபெருமானுக்கு ஏற்பட்ட தோஷம் நீங்கி பிரம்ம கபாலம் அவர் கையிலிருந்து மறைந்தது. அன்னை பராசக்தியிடம் சிவபெருமாள் பிச்சை ஏற்ற தினமே அட்சய திரிதியை ஆகும்.

சிவபெருமானே அன்னபூரணி தேவியிடம் பிச்சை ஏற்கிறார் என்றால் அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டியது அன்னதானம் என்பது ஒரு சிறு குழந்தை கூட புரிந்து கொள்ளும் அல்லவா? ஆறறிவு பெற்ற மக்கள் இந்தச் சிறு விஷயத்தைக் கூட எப்படித் தலைகீழாகப் புரிந்து கொள்கிறார்கள் என்பது வியப்புக்குரியதே. திதி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மகத்துவம் உண்டு. இதில் திரிதியை திதி எதையும் பெருக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. எது பெருக வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

உலகிவ் நல்ல காரியங்கள் பெருக வேண்டும், மக்கள் சமுதாயத்தில் விட்டுக் கொடுக்கும் தன்மை பெருக வேண்டும். பாரெங்கும் அமைதி பெருக வேண்டும், அன்பு பெருக வேண்டும், மற்றவர் நலனுக்காகத் தங்களைத் தியாகம் செய்யும் உயர்ந்த எண்ணம் பெருக வேண்டும். தன்னலம் பாராது மகான்களும், ஆன்மீக வழிகாட்டிகளும் நிறைவேற்றும் அன்னதானத்தில்தான் இவை எல்லாம் பெருகும். அதை விடுத்து, தங்கம் வாங்க வேண்டும், வைரமும் மாணிக்கமும் பெருக வேண்டும் என்ற எண்ணம் பெருகினால் சமுதாயத்தில் அமைதி நிலைக்குமா, இன்பம் கனியுமா? தங்கத்திற்காக அலைந்த மைதாசின் கதையை நீங்கள் எல்லோரும் சிறு வயதில் படித்தவர்கள்தானே?

திருவாசி அன்னமாம் பொய்கைத் தீர்த்தத்தை உணவில் கலந்து சமைத்து திருதியை, அமாவாசை நாட்களிலும் குறிப்பாக அட்சய திருதியை அன்றும் சுயம்பு மூர்த்தி எழுந்தருளியுள்ள தலங்களில் அன்னதானம் செய்து வந்தால் குடும்பத்தில், அலுவலகத்தில் உண்டாகும் மனக் குழப்பங்கள், தகராறுகள் நீங்கி அமைதி நிலவும்.

திதி நம் மூதாதையர்களுடன் தொடர்பு கொண்டது. அதனால்தான் இறந்தவர்களின் திதியை நாம் கொண்டாடுகிறோம். நாம் இன்று பெற்றிருக்கும் வீடு, வாகனம், பதவி, அந்தஸ்து, நற்பெயர் போன்ற எல்லாவற்றிற்கும் நம் மூதாதையர்களின் ஆசியே காரணம். எனவே, அட்சய சக்திகள் பெருகும் திரிதியை அன்று அன்னதானம் செய்வதால் நம் மூதாதையர்கள் மகிழ்ந்து அருளாசியைப் பொழிவார்கள். மூதாதையர்களின் அருளாசி பெருகும் நாளே அட்சய திரிதியை ஆகும் என்பதை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள்.

மனிதர்களைப் போல தெய்வங்களும் அவதாரங்களும் மதி மயங்கி தவறுகள் இழைப்பது கிடையாது. அவ்வாறு அவர்கள் தவறுகள் செய்வது போல் தோன்றுவதே நம்மைத் திருத்தி கரையேற்றுவதற்காகத்தான். அட்சய திருதியையின் மகத்துவத்தை பாமர மக்களும் அறிவதற்காகவே சிவபெருமான், அன்னபூரணி, பிரம்மா என்ற தெய்வ மூர்த்திகளே திருவிளையாடல்களைப் புரிந்து, நம்முடைய குற்றங்களைக் களைந்து நம்மை நாமே திருத்திக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தை அட்சய திருதியை என்னும் புனித நாளில் அளிக்கின்றார்கள் என்பதே உண்மை. மிகவும் அரிதான இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு சற்குரு காட்டும்வழியில் அன்னதானம், ஆடை தானம், மாங்கல்ய தானம் போன்ற தான தர்மங்களை நிறைவேற்றுதலே அட்சய திரிதியை நாளைக் கொண்டாடும் முறையாகும்.

கணவன் மனைவியரிடையே வாக்கு வாதமும் மனக் கசப்பும் அவ்வப்போது ஏற்படுவது இயற்கையே. ஆனால், அகம்பாவம், ஆணவத்தால் இதுவே எல்லை மீறி குடும்பத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்து விடும் நிலைக்குப் போய் விடுவதும் உண்டு. இவ்வாறு விவாகரத்து வரை சென்ற குடும்பப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் தெய்வமே ”பெண்டாட்டி ஆட்டி” என்னும் நாமம் பூண்ட தேவி ஆவாள். திருவாசி ஸ்ரீபாலாம்பிகை சன்னதி பிரகாரத்தில் குடிகொண்டிருக்கும் இந்தத் தேவியிடம் மனம் விட்டுப் பேசி, பிரச்னைகளை வாய் விட்டு சொல்லி அழுது காலிபிளவர் கலந்த உணவு வகைகளைத் தானமாக அளித்து வந்தால் குடும்ப ஒற்றுமை வளர அம்பிகை அருள் புரிவாள்.

அதனால், அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கக் கூடாது என்று பொருளல்ல. உங்கள் நோக்கமே இங்கு முக்கியம். தானத்திற்காக, ஏழைகளின் திருமணத்திற்காக நீங்கள் தங்கம் வாங்குவதாக இருந்தால் அட்சய திரிதியை மிகவும் சிறந்த நாளே. அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அன்று நீங்கள் வாங்கும் தங்கத்தில் அட்சய சக்திகள் பெருகி சமுதாயத்திற்கே அமைதியை அள்ளி வழங்கும்.

அட்சய திரிதியை என்பது அன்பையும், அமைதியையும் அள்ளித் தரும் நாள் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டால் மற்ற விஷயங்கள் உங்களுக்குச் சொல்லாமலே புரிய வரும். தஞ்சாவூர் அருகே திருச்சோற்றுத்துறை, அன்னபூரணி தேவி கோயில் கொண்டிருக்கும் திருப்பரங்குன்றம், அம்பாள் சிறப்புப் பெற்ற தலங்களான சமயபுரம், வெக்காளியம்மன் கோயில், மாகாணி அம்மன், கோட்டை மாரியம்மன் போன்ற திருத்தலங்களில் அட்சய திரிதியை அன்று அன்னதானம் இயற்றுவது மிகவும் சிறப்புடையது. ஒரு யுகத்தில் மக்களை வறுமைப் பிணியிலிருந்து காக்க வயல்வெளிகளில் நெல்லுக்குப் பதிலாக சோறாகவே அம்பாள் விளைவித்துக் கருணை புரிந்த தலமே திருசோற்றுத்துறை சிவத் தலமாகும்.

அடியார்
குருதேவா, எல்லா மிருகங்களுக்கும் தெய்வீகச் சிறப்புகள் உண்டு என்று பலமுறை அருளியுள்ளீர்கள். ஓநாய்க்கு என்ன தெய்வீக இயல்புகள் உண்டு என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

சற்குரு
எல்லாவற்றையும் அடியேனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதை விட நீங்களே முயன்று ஆத்ம விசாரம் செய்து பார்த்த பின்னர் ஒன்றுமே உங்களுக்குத் தோன்றவில்லை என்றால் அதன் பிறகு ஆசானை நாடுவதே முறை. இருந்தாலும் நீங்கள் கேட்டதால் இப்போது உங்களுக்குச் சொல்லக் கடமைபட்டுள்ளேன்.
உலகில் உள்ள எல்லா மிருகங்களுக்கும், ஏன் ஒவ்வொரு செடி, கொடி, தாவரம், புல், பூண்டிற்கும் கூட சிறப்பான இறைத் தன்மை உண்டு. நாம்தான் அந்த இறை இயல்புகளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்பதில்லை.

பலவிதமான கோர்ட் வழக்குகளால் துன்புறுவோர் திருவாசி ஸ்ரீமாற்றுவாதீஸ்வர சுவாமியை வெள்ளை நிற முழுத் தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்கி வந்தால் சுமுகமான நிலை ஏற்படும்.

ஸ்ரீவித்யா லோகத்தில் உறையும் 43 கோடி தேவிகளில் ஒரு தேவியே கோடரி மாதேவி என்ற ஓர் அற்புதமான தேவி ஆவாள். எந்நேரமும் பஞ்ச கன்யா தோத்திரத்தை ஓதி அதை பெண் குலத்திற்காக அர்ப்பணித்து பெண்களின் தீர்க்க சுமங்கலித்துவம், மாங்கல்யத்துவம், மங்களத்துவம் இவற்றிற்கு வழி வகுப்பவள். கணவன் மனைவி உறவு, கணவன் வீட்டாரிடம் நன்னடத்தை, சமுதாயத்தில் பாதுகாப்பு, நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்க்கை இது போன்ற பல வரப் பிரசாதங்களை பெண் குலத்திற்காக அள்ளி வழங்குபவளே கோடரி மாதேவி. இந்தத் தேவியின் வாகனம் ஓநாய். ஓநாயை முறையாக வழிபட்டால் கோடரி மாதேவியின் அருளைப் பெற்று பெண் குலம் பாதுகாப்புடன் வாழ முடியும்.

சீதா பிராட்டி அசோக வனத்தில் சிறைப்பட்டிருந்தபோது அவளுடைய காவலுக்காக இராவணன் வைத்திருந்த அரக்கிகள் எப்போதும் கடுமையான வார்த்தைகளையும், வசைச் சொற்களையும் சீதா தேவியிடம் சொல்லி வந்தார்கள். இதனால் மிகவும் மனம் வருந்திய சீதா தேவி அரக்கிகள் நல்வார்த்தை சொல்வதற்காக கோடரி தேவியின் வாகனமான ஓநாயை வழிபட்டு வந்தாள். இதுவே நாளடைவில் அரக்கிகளுக்கு நல்ல மனமாற்றத்தைக் கொடுத்து, பல அரக்கிகள் சீதா தேவியுடன் நட்புடன் பழக வழிவகுத்தது.

தற்காலத்தில் கடுமையான வார்த்தைகள் பேசும் முதலாளிகள், மேலதிகாரிகள், மாமனார், மாமியார், நண்பர்கள், உறவினர்களிடையே வாழ வேண்டிய சூழ்நிலையில் இருப்பவர்கள், குறிப்பாக பெண்கள் கோடரி மாதேவியின் வாகன மூர்த்தியான ஓநாயை வழிபட்டு வந்தால் கடுஞ் சொல், தகாத வார்த்தைகள், வசை பாடுவோர் மனம் திருந்தி சுமுகமாகப் பழகும் நிலை உருவாகும்.
அட்லாண்டிக் நாகரீகத்தில் ஸ்ரீஆயுர்தேவி வழிபாடு மேலோங்கி விளங்கிய காலத்தில் எகிப்திய நாகரீகத்தில் ஓநாய் வழிபாடு சிறப்புற்று விளங்கியது. காலப் போக்கில் எகிப்திய நாகரீகத்தில் ஓநாய் வழிபாட்டுப் பலன்கள் முறைகேடாகப் பயன்படுத்தப் பட்டøமையால் அதன் வழிபாடும் குன்றியது.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எவ்வாறு தங்களுக்குள் பரஸ்பர அன்பைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதை கோடரி தேவி வழிபாடு உணர்த்துகிறது. உதாரணமாக சிரிப்பு என்ற குணத்தை எடுத்துக் கொள்வோம். தாவரம், மிருகம் என எந்தக் குலத்திற்கும் இல்லாத ஓர் அற்புத பரிசே இறைவன் மனித குலத்திற்கு அளித்துள்ள சிரிப்பு என்ற வரப் பிரசாதமாகும். இதை மனித குலம் சரியாகப் பயன்படுத்தி வந்தாலே போதும். வேறு எந்த உபாயமும் இல்லாமலேயே குடும்பத்திலும் சமுதாயத்திலும் அமைதி பெருக்கெடுக்கும்.

காலையில் எழுந்தவுடன் கணவன் மனைவியைப் பார்த்து தன்னுடைய ஆறு பற்கள் தெரியும்படி சிரிக்க வேண்டும். மனைவி தன்னுடைய பற்களைக் காட்டாமல் கணவனைப் பார்த்து புன்முறுவல் பூக்க வேண்டும். தற்போது மோனாலிசா சிரிப்பு என்று சொன்னால் நீங்கள் உடனே புரிந்து கொள்வீர்கள். ஓநாய் தான் சந்தோஷமாக இருக்கும்போது ஆறு பற்களைக் காட்டும். எனவே, கணவன் மனைவியைப் பார்த்து தன்னுடைய ஆறு பற்கள் தெரியுமாறு சிரிக்கும்போது கோடரி மாதேவியின் அனுகிரகத்தால் கணவன் மனைவியரின் அன்புப் பரிமாற்றம் அங்கே பரிணமிக்கின்றது. குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் இந்தக் காலைச் சிரிப்பை இனி நீங்கள் பரிமாறிக் கொண்டு அதன் பயனை உணர்ந்து பாருங்கள். கலியுக பெண்கள் கணவன்மார்களின் ஆசீர்வாதத்தையும், அன்பையும் பெறுவதற்காக இன்றும் கோடரி மாதேவி தன் கணவனை சிரித்த முகத்துடன் எப்போதும் நோக்குகிறாள் என்பதே சித்தர்கள் உணர்த்தும் ரகசியம்.

இரவில் உறங்குவதற்கு முன் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்க்கும் வண்ணம் எதிர் எதிரே படுக்கையிலோ அல்லாது தர்பை, மாம்பலகை போன்ற ஆசனங்களிலோ அமர்ந்து கொள்ள வேண்டும். எவ்வித உரையாடலும் இன்றி அமைதியாக ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரமேனும் இந்த இல்லற பூஜையை நிகழ்த்தி வந்தால் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெருக ஏதுவாகும். குடும்ப ஒற்றுமையை பேணிக் காக்கும் அற்புத வழிபாடு.

இதற்காகத்தான் நம் பெரியோர்கள் எப்போதும் வீட்டில் சிரிப்பும் ஆனந்தமும் பெருக வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். குழந்தைகள் விளையாடும் சந்தோஷ ஒலி, பறவைகள் எழுப்பும் இனிய கீதங்கள், வீணை, மிருதங்கம் போன்ற வாத்தியங்களின் இனிய இசை நம் இல்லங்களில் நிறைந்திருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். வீட்டில் அழுகை ஒலி இருந்தால் லட்சுமி கடாட்சம் இருக்காது. மாலை சந்தியா வேளையில் டீவியில் அழுகுரல் கேட்கும் நாடகங்களைப் பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் மங்கிப் போய் தரித்திர நிலையே உருவாகும் என்தை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள்.

எப்போதுமே நீங்கள் கேட்பதற்கு அதிகமாகவே இறைவன் உங்களுக்குத் தருவார். நீங்கள் ஓநாயைப் பற்றிக் கேட்டீர்கள். இறைவன் நீங்கள் சிங்கத்தைப் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்புகிறார். சிங்கத்தைக் காட்டுக்கே ராஜா என்று கூறுகிறோம். இந்த சக்கரவர்த்திப் பட்டம் அதற்குக் கிடைக்கக் காரணம் என்ன என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்தது உண்டா?

தபோ பலம், விரத பலம் மிகுதியாக பெற்றிருப்பதே சிம்மம். அமாவாசை, பௌர்ணமி, சிவராத்திரி, அஷ்டமி, ஏகாதசி தினங்களில் எல்லாம் சிம்மம் முறையாக விரதம் இருக்கும். விரத பலமே சிங்கத்திற்கு ராஜா பட்டத்தைக் கொடுத்தது. அதனால்தான் இன்றும் விரதத்தில் பூரணமாக நம்பிக்கை உள்ளவனை சிம்மம் என்று கூறுகிறோம். உங்கள் காலத்திலேயே வாழ்ந்த மோகன்தாஸ் என்னும் சாதாரண மனிதன் உண்மை என்னும் தவத்தை ஏற்று அதை முறையாகக் கடைபிடித்ததால் மகாத்மா காந்தியாக மாறி விட்டாரே. எனவே, ஓநாய் வழிபாடும் கோடரி மாதேவியின் வழிபாடும் அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கு ஆரோக்ய பலம், விரத பலம், மாங்கல்ய பலம் இவற்றை நல்கும் உத்தம வழிபாடுகளாகும்.

முற்காலத்தில் பெண்கள் தங்களை மணக்க இருக்கும் ஆண்கள் பெரும் வீரனாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள். உடல் பலம், மன பலம், உள்ள பலம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றவனே வீரனாவான். ஆனால், தற்காலத்தில் உடல் அழகைப் பார்த்தே பெண்கள் தங்களுக்கு வரப் போகும் கணவனைத் தேர்ந்தெடுக்க நினைப்பது வேதனைக்குரிய விஷயமாகும். ஜாதகப் பொருத்தம் பார்த்து திருமணங்களை நிச்சயிப்பதே சரியான முறையாகும். ஜாதகத்தில்தான் ஒரு மனிதனுடைய உடல், மன, உள்ள வலிமையை நன்றாகக் கணித்துக் கூற முடியும். ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடைய நிலையைக் கொண்டு உடல் வலிமையையும், சந்திரனுடைய நிலையைக் கொண்டு மன வலிமையையும், குரு பகவானுடைய நிலையைக் கொண்டு உள்ள வலிமையையும் துல்லியமாகக் கணித்துக் கூற முடியும்.

வியாழக் கிழமை, வளர் பஞ்சமி திதி, அனுஷ நட்சத்திர நாட்களில் ஆலயங்களில் உள்ள வசந்த மண்டபங்களில் ஒட்டடை, அழுக்கு, குப்பைகளை நீக்கி, நீர் விட்டு அலம்பி, பச்சரிசி மாக்கோலம் இட்டு வந்தால் கன்னிப் பெண்களுக்கு நல்ல திருமண வாழ்வு விரைவில் கைகூடும்.

இவ்வாறு உடல், மன, உள்ள வலிமை உள்ள ஒருவனே தன் கணவனாக வர வேண்டும் என்று விரும்பி தவம் இருந்தாள் கோடரி மாதேவி. இதற்காக அவள் யாரை நோக்கித் தவமிருந்தாள் தெரியுமா? ஒரு வீரனை மணக்க வேண்டும் என்று கரடியை நோக்கித் தவமிருந்தாள் கோடரி தேவி. கரடிக்கு உடல் வலிமை, மன வலிமை, உள்ள வலிமை மூன்றும் உண்டு. கரடிக்கு இந்த அனுகிரகம் எப்படிக் கிடைத்தது. இந்த இரகசியம் இருடிகள் ராமாயணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

மகாபாரத யுகத்தில் கிருஷ்ண பகவான் சியமந்தக மணியைத் திருடியதாக ஒரு அவதுõறு வழக்கு அவர் மேல் சுமத்தப்பட்டதல்லவா? அப்பழியிலிருந்து விடுபட அவர் சியமந்தக மணியைத் தேடி வரும்போது ஜாம்பவான் வசிக்கும் குகையில் அந்த மணி இருப்பதாகத் தெரியவே அதை மீட்பதற்காக ஜாம்பவானுடன் சண்டையிட வேண்டிய சூழ்நிலை உருவானது. இருவருக்கும் இடையே கடுமையான மற்போர் நடந்தது. இது இரவு பகலாகப் பல நாட்களுக்குத் தொடர்ந்தது. எவருக்கும் வெற்றி தோல்வி இன்றி தொடர்ந்து நடந்து கொண்டிருந்த இந்தப் போட்டியை ஒரு முடிவுக்குக் கொண்டு வர நினைத்த ஸ்ரீகிருஷ்ண பகவான் இருபத்தியோராம் நாள் தன் கையை உயர்த்தி ’வலி அடி’ என்ற ஒரு அடியால் ஜாம்பவானைத் தாக்க முனைந்தார். வலி அடியை ஸ்ரீகிருஷ்ண பகவான் பிரயோகம் செய்தால் அதைத் தடுக்க யாராலும் இயலாது. அத்துடன் ஜாம்பவானின் கதையும் முடிந்துவிடும்.

தினமும் குறித்த நேரத்தில் திருவாசி அன்னமாம் பொய்கையில் கரடி சித்தர் நீராடி ஸ்ரீபாலாம்பிகையைத் தொழுது வழிபாடுகளை இயற்றி வருகிறார். வீரமும் நற்குணமும் அமையப் பெற்ற மணவாளனை மணக்க விரும்பும் பெண்கள் வியாழக் கிழமைகளில் இங்கு அன்னமாம் பொய்கையில் நீராடி அல்லது தீர்த்தத்தைத் தலையில் தெளித்துக் கொண்டு ஸ்ரீபாலாம்பிகையை வணங்கி மஞ்சள் நிற உணவுகளையும் ஆடைகளையும் தானமாக அளித்து வந்தால் மணமுள்ள மண வாழ்க்கை அமைய அம்பிகை அருள்புரிவாள்.

இந்த வலி அடி என்ற தனுர் வேத இரகசிய அடியை ஸ்ரீமகாவிஷ்ணு தன்னுடைய பல அவதாரங்களில் ஒரே ஒரு முறைதான் பிரயோகம் செய்திருக்கிறார். அதுவே ஸ்ரீராம அவதாரம். ராம அவதாரத்தில் இராவணனுடன் போர் நடந்த போது முதல் நாள் போரில் அனைத்தையும் இழந்த இராவணனிடம் மறுநாள் போருக்கு வரச் சொன்னார் ராமபிரான். இரண்டாம் நாள் போரிலும் அனைத்து ஆயுதத்தையும் இழந்த இராவணனை ஆயுதத்தால் தாக்குவது யுத்த தர்மம் ஆகாது என்பதால் இராவணனிடம் மல்யுத்தப் போரில் ஈடுபட்டார் ராமபிரான். அப்போது ராமபிரான் இராவணனைத் தாக்க முதன் முதலாக வலிஅடி என்ற அடியைப் பிரயோகம் செய்தார். அதற்குப் பின் ராம அவதாரத்திலும் வேறு எந்த அவதாரத்திலும் இந்த வலி அடிப் பிரயோகம் நிகழவில்லை. ராம அவதாரத்தை வசிஷ்டர், விசுவாமித்திரர், ஜனகர் போன்று முழுவதுமாக உணர்ந்து அனுபவித்தவர்களுள் ஜாம்பவானும் ஒருவர் அல்லவா?

கிருஷ்ணாவதாரத்தில் வலி அடிப் பிரயோகத்திற்காகத் தன் கையை உயர்த்தியவுடனேயே தன்னையும் அறியாமல் ’ராமா’ என்று கூவி கிருஷ்ண பகவான் திருப்பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கினார். உடனே கிருஷ்ணர் ஜாம்பவானைத் தன் இரு கரங்களால் தூக்கி ஆரத் தழுவிக் கொண்டார். ராம பிரான் ஒருவர்தான் உண்மையான வீரன் என்று உணர்ந்தவர் ஜாம்பவான். அந்த உத்தம வீரனே கிருஷ்ண வடிவில் தன்னிடம் போர் புரிந்ததை நினைத்து நினைத்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார் ஜாம்பவான். ’கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ என்பது போல ஒரு வீரனிடம் போட்டியிடுவதைத்தானே ஒரு வீரன் விரும்புவான்.

வழக்கறிஞர்கள், முகவர்கள், மேடைப் பேச்சாளர்கள், தரகர்கள் போன்று பேச்சு, வாக்கை மூலதனமாகக் கொண்டு வாழ்பவர்கள் திருவாசி ஸ்ரீமாற்றுவாதீஸ்வர சுவாமியை வணங்கி வயதானவர்களுக்குப் பல்செட் தானமாக வழங்கி வந்தால் தங்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர்.

ஜாம்பவானின் வீரத்தை மெச்சி ஸ்ரீகிருஷ்ணர் ஜாம்பவானுக்குக் கொடுத்த பல வரங்களில் ஒன்றே எதிர்காலத்தில் ஜாம்பவானின் கரடி உருவத்தை நினைத்து வணங்கும் கன்னிப் பெண்களுக்கு ராமரைப் போல் உடல் வலிமை, மன வலிமை, உள்ள வலிமை ஒருங்கே அமையப் பெற்ற வீரனே மணமகனாக வருவான் என்ற வரமாகும். ஸ்ரீராமர் ஜாதகத்தில் குரு பகவான், சூரிய பகவான், சந்திர பகவான் எவ்வாறு மிகவும் அற்புதமான உச்ச, ஆட்சி நிலைகளில் அமர்ந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

அடியார்
குருதேவா, முன்பு இருந்ததை விட தற்போது வாகன விபத்துக்கள் நிறைய ஏற்படுகின்றனவே. இதை எப்படித் தவிர்ப்பது என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

சற்குரு
மனித சமுதாயத்தின் மேல் உனக்குள்ள ஆர்வத்தைக் குறித்து மிக்க மகிழ்ச்சி. தற்காலத்தில் வாகன விபத்துக்களின் எண்ணிக்கையும் மக்களின் உயிர் இழப்பும் அதிகமாகி வருகின்றது என்பது உண்மைதான். வாகனங்களின் எண்ணிக்கை, சாலை அமைப்பு, இரவு நேரப் பயணங்கள், ஓட்டுநர்களின் அசிரத்தை, தூக்கம், மது போன்ற பல காரணங்களால் வாகன விபத்துக்கள் அதிகமாகி இருந்தாலும் அடிப்படைக் காரணங்களைப் பற்றி நாம் ஆராய்வோம்.

வாகனம் என்பதற்குப் பொருள் என்ன? ’வாகனம்’ என்பதற்குப் பல அர்த்தங்கள் இருந்தாலும் ஒரு காரியத்தில் உதவியாக இருப்பதும், ஒருவருக்குத் துணையாக இருப்பதும் வாகனமாகும். கோயிலில் மூலவருக்கு வாகனம் அமைந்திருப்பது இந்தக் காரணத்திற்காகத்தான். மூலவரின் அனுகிரக சக்திகளை வழிபடுவோரின் தகுதிக்கு ஏற்ப முறைப்படுத்தித் தருவதே வாகனமாகும். எம்பெருமான் சிவபெருமானுக்கு ஒரு கோடி வாகனங்கள் உண்டு. ஒரு கோடி என்பது வெறும் வாகனங்களின் எண்ணிக்கை அல்ல. ஒரு கோடி விதமான வாகனங்கள். காளை, தேர், ன்னம் என்று ஒவ்வொரு வகையிலும் உள்ள வாகனங்களோ கோடி கோடி. மனிதர்கள் எதிர்காலத்தில் வாகனங்களால் அனுபவிக்கும் துன்பங்களைக் கோடிட்டுக் காட்டி, அவர்கள் அத்துன்பங்களிலிருந்து மீள்வதற்காகவே சிவபெருமான் கோடிக் கணக்கான வாகனங்களில் பயணம் செய்து அந்த வாகனங்களை எல்லாம் தூய்மைப்படுத்தி உள்ளார்.

கணவனைப் பிரிந்து பாதுகாப்பின்றி வாழும் பெண்கள் தஞ்சை பெரிய கோயிலில் கருவூர் சித்தர் ஜீவாலயத்தின் பின் அருள்புரியும் பத்தினி தெய்வத்தை வணங்கி வந்திடில் நல்ல பாதுகாப்புடன் வாழ சித்தர்கள் துணை நிற்பர்.

சிவபெருமானுக்கு அமைந்த வாகனங்கள் எல்லாம் நாம் நினைப்பது போல சாதாரணமான பசு, மான், மயில் என்பவை அல்ல. பல ஆண்டுகள், பற்பல யுகங்கள் தவம் இயற்றி எம்பெருமானுக்கு வாகனமாக வேண்டும் என்று வேண்டிய தவசீலர்களையே சிவபெருமான் வாகனமாக ஏற்று அருள்பாலித்துள்ளார் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இன்று உலகில் நாம் காணும் அனைத்து வாகனங்களும் சிவன் சொத்தே என்ற எண்ணத்தை ஒரு மனிதன் கொண்டாலே போதும் அதுவே வாகன விபத்துக்களை பெருமளவில் குறைத்து விடும். இதைத்தான் நமது குருநாதரும் சித்த குரு வேத சூக்த மாமந்திரமாக ’எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதே, அருளாளா அருணாசலா’ என்று உரைத்துள்ளார். கோயிலில் நாம் வணங்கும் நந்தி மூர்த்திகள் உணர்த்தும் பல உண்மைகளில் இதுவும் ஒன்று.

திருவீழிமிழலை ஈசனைச் சுமக்கும்
பூத வாகனம்

வருடத்திற்கு ஒரு முறை வரும் ஆயுத பூஜை திருநாளில் வாகனங்களைக் கழுவித் துடைத்து வணங்குவதைப் போல, தினமுமே வாகனங்களைத் துடைத்து, அடிக்கடி கழுவி சுத்தப்படுத்தி, அதையும் நமக்குத் தேவையான விதங்களில் துணை புரியும் ஒரு ஜீவனாக, உற்ற தோழனாகக் கருதி வணங்கி வந்தால் வாகனங்களும் நமக்கு றுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வாகனப் பராமரிப்பைச் சிறுவயதிலேயே கற்றுத் தந்தவர்கள் நம் முன்னோர்கள்.

சிறு குழந்தைகளை முதுகில் ஏற்றி விளையாடும் உப்பு மூட்டை விளையாட்டு மூலமாகப் பெற்றோர்கள் பல நல்ல எண்ணங்களை குழந்தைகள் மனதில் முற்காலத்தில் விதைத்து வந்தனர். குழந்தையை அப்பா, அம்மா முதுகில் சுமப்பது மனிதனே மனிதனைச் சுமப்பது என்ற நிலையாகும். இது குபேர தத்துவத்தை விளக்குகிறது. குபேரனுக்கு மனிதனே வாகனமாக அமைந்திருக்கிறான். ’தந்தைதான் உனக்கு வழிகாட்டும் குபேரன்’ என்ற உண்மையையும் குழந்தைகளுக்கு இந்த உப்பு மூட்டை விளையாட்டு சொல்லித் தருகிறது. மனிதனைக் குபேரனுக்கு வாகனமாக வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியவரே சித்ர குப்தர் ஆவார்.

பலரும் தற்காலத்தில் சித்ர குப்தரை ஒரு சாதாரண கணக்குப் பிள்ளை என்று நினைத்து விட்டார்கள். மனிதர்களுடைய நல்வினை, தீவினை அனைத்தையும் முழுமையாகக் குறித்து வைப்பது என்பது சாதாரண விஷயம் அல்லவே. மிகவும் கடினமான ஒரு பணி. இந்தக் கடினமான பணியில் அவர் இதுவரையில் ஒரு சிறு தவறு கூடச் செய்ததில்லை என்று நீங்கள் உணர்ந்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஒரு நொடிப் பொழுது கவனக் குறைவு, சின்னஞ் சிறு தவறுகள்தான் பெருத்த வாகன விபத்துகளுக்குக் காரணமாகின்றன. ஓட்டுநர்களும், வாகனத்தில் பயணம் செய்பவர்களும் தவறே இழைக்காத சித்ரகுப்த மூர்த்தியை வணங்கி வந்தால் வாகன விபத்துகள் குறைய ஏதுவாகும்.

வாகன ஓட்டிகள் மட்டுமல்லாது, தாங்கள் எடுக்கும் முடிவுகள் பல நுõறு, ஆயிரம் பேருக்கு நன்மையோ தீமையோ விளைவிக்கும் பொறுப்பில் உள்ள மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், நீதிபதிகள், எல்லாத் துறைகளிலும் உள்ள உயர் அதிகாரிகள் இவர்கள் அனைவரும் சித்ர குப்த மூர்த்தியை வணங்கி வந்தால் தங்கள் தவறுகளால் மக்களுக்கு எந்தவித துன்பமும் நேராமல் காத்துக் கொள்ளலாம். வருடம் ஒரு முறை சித்ரா பௌர்ணமி அன்று மட்டுமே சித்ர குப்தரை வழிபடும் முறை தற்போது நிலவி வருகிறது. உண்மையில் மக்கள் னைவரும் தினமும் வழிபட வேண்டிய மூர்த்திகளுள் சித்ர குப்தர், எம மூர்த்தி, வாஸ்து மூர்த்திகளும் முக்கிய இடத்தை வகிக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தன்னுடைய அன்றாட தவறுகளைத் திருத்திக் கொண்டு தான் யார் என்ற ஆத்ம விசாரத்திற்கு வித்திடுவதே ஸ்ரீசித்ர குப்தர் வழிபாடு.

ஸ்ரீஆயுர்தேவியை வழிபடும்
ஸ்ரீபாலினன் சித்ர குப்த மூர்த்தி

சித்ரகுப்தரின் அருளைப் பெற விரும்புவோர் பௌர்ணமி தினங்களில் மலைத் தலங்களில் கிரிவலம் வந்து தேங்காய் புட்டு தானம் அளித்தல் சிறப்பாகும். புட்டு மேல் தேங்காய் ஏறி நிற்பது மனிதனை வாகனமாகக் கொண்ட குபேரனுக்கு ப்ரீதியாக அமைந்து இது குபேரனுடைய அனுகிரகத்தையும், சித்திரகுப்தரின் அனுகிரகத்தையும் ஒருங்கே பெற்றுத் தரும் சிறப்பான வழிபாடாக அமைகிறது.

சிலருக்கு அடிக்கடி நன்றாக பசிக்கும். ஆனால், ஒரு உருண்டை உணவு ஏற்றவுடன் பசி அடங்கி விடும். சிலருக்கு எவ்வளவு நேரமானாலும் பசியே இருக்காது. அதே சமயம் அளவுக்கு மீறிய சோர்வும், மயக்கமும் ஏற்படும். உணவு சாப்பிடுவதற்கும் ஆர்வம் இருக்காது. இத்தகைய துன்பங்களுக்கு காரணம் வயிற்றில் சுரக்கும் கங்கண நீர் என்னும் தீர்த்தமாகும். இந்தக் கங்கண நீருக்கு அதிபதியே சித்திர குப்தர் ஆவார். இவ்வாறு வயிற்றுக் கோளாறு, பசி மயக்கத்தால் துன்பம் அடைபவர்கள் வெள்ளிக் கிழமைகளிலும், பௌர்ணமி நாட்களிலும் தேங்காய் புட்டு தானம் செய்து வந்தால் நலம் அடைவர். சமைத்த உணவை ஸ்ரீஆயுர் தேவி படத்தின் முன் வைத்து ஸ்ரீஆயுர் தேவி மூல மந்திரத்தை 108 முறைக்குக் குறையாமல் ஓதி தானம் செய்து வந்தால் தானத்தின் பலன்கள் பன்மடங்காக விருத்தியாகும்.

குழந்தைவேல், கூத்தப்பன், குமரன் என்று ’கு, கூ’ என்ற எழுத்துக்களை முதல் எழுத்தாக தன்னுடைய பெயரில் கொண்டவர்கள் அவசியம் வணங்க வேண்டிய மூர்த்தியே சித்திர குப்தர் ஆவார். திருச்சி லால்குடி அருகே உள்ள கூகூர் என்னும் சிற்றுõரில் உள்ள சுயம்பு சிவலிங்க மூர்த்திக்கு ஒரு யுகத்தில் சித்திரை மாத சதய நட்சத்திர தினத்தன்று சந்தனம் அரைத்துத் தந்து கூகூர் சிவத்தல மகிமையை உலகிற்கு முதன் முதலில் உணர்த்தியவரே சித்திர குப்த மூர்த்தி ஆவார். தன்னுடைய பணியில் தவறுகளே ஏற்படாத அனுகிரகத்தைப் பெற சித்திர குப்த மூர்த்தி தொடர்ந்து பல யுகங்களுக்கு கூகூர் சிவலிங்க மூர்த்திக்கு கையால் சந்தனம் அரைத்துத் தரும் கைங்கர்யத்தை ஏற்று நடத்தி வந்தார்.

எனவே, ’கு, கூ’ என்று ஆரம்பிக்கும் பெயரை உடையவர்களும், தங்கள் பணியில், தொழிலில், வியாபாரத்தில் வறுகள் ஏற்படா வண்ணம் காத்துக் கொள்ள விரும்புபவர்கள் கூகூர் சிவலிங்க மூர்த்திக்கு மாதந்தோறும் சதய நட்சத்திர நாட்களிலும், வளர் பிறையில் வரும் வெள்ளிக் கிழமைகளிலும் கையால் அரைத்த சந்தனத்தைச் சார்த்தி வழிபடுதலால் நல்ல முன்னேற்றத்தை அடைவர்.

அரசமரம், ஆலமரம், வேப்ப மரம் போன்ற தெய்வீக மரங்களை சாலை ஓரங்களில் வளர்த்து, பராமரித்து வந்தால் இவற்றிலிருந்து வெளியாகும் நற்குண கதிர்கள் பரவெளியைத் தூய்மைப்படுத்தி வாகன விபத்துக்கள் ஏற்படா வண்ணம் காக்கும்.

காலத்தின் அருமையை உணர வைப்பதும் வாகனமாகும். நாம் தினமும் அலுவலகம், பள்ளி, விழா நிகழ்ச்சிகள், திருமண வைபவங்கள், தேர்வுகள் போன்ற முக்கியமான இடங்களுக்கு, பணிகளுக்கு கால தாமதம் ஆகாமல் குறித்த நேரத்திற்குள் செல்ல நாம் முழுவதுமாக நம்பி இருப்பது வாகனங்களைத்தானே. ஒரு பஸ் ரிப்பேர் ஆகிவிட்டால் எத்தனை பிரயாணிகள் அடுத்து ஒன்றும் செய்ய முடியாமல் திண்டாடி விடுகிறார்கள் என்பதை தினமும் கண் கூடாகக் காண்கிறோமே. நாம் காலத்தைச் சரியாகப் பயன்படுத்த உதவுவதில் வாகனங்களுக்கு உள்ள பங்கை நன்கு புரிந்து கொண்டு வாகனங்களை இனியாவது மதித்து நடந்தால் அவை நம்மைப் பல ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றும் உற்ற ண்பனாக பணியாற்றும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. அடியேனுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை இப்போது உங்களிடம் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஒரு முறை முக்கியமான அலுவல் காரணமாக தாம்பரத்திலிருந்து மைலாப்பூர் நோக்கி ஒரு பழைய காலத்து பியட் காரில் வந்து கொண்டிருந்தேன். குரோம்பேட்டை தாண்டி பல்லாவரம் நெருங்கிக் கொண்டிருக்கும்போது கார் நிற்கும்போல தோன்றியது. காரணம் என்னவென்று பார்த்தால் காரில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. அடியேன் அவசரமாக உடனே மைலாப்பூர் செல்ல வேண்டிய நிலை. அந்தச் சூழ்நிலையில் கார் பகவானிடம் வேண்டிக் கொண்டேன். ’கபாலி, எப்படியாவது நீதான் காப்பாற்ற வேண்டும். மைலாப்பூர் வரை ங்களை கொண்டு போய்ச் சேர்த்து விடு.’ என்று மனதிற்குள் திரும்ப திரும்ப சொல்லியபடியே காரை ஓட்டிக் கொண்டிருந்தேன். ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் கார் மைலாப்பூர் கபாலி கோயில் தெப்பக்குளம் வரை வந்து அங்கே நின்று விட்டது. எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.

ஒரு சொட்டு பெட்ரோல் கூட இல்லாமல் பல்லாவரத்திலிருந்து மைலாப்பூர் வரை ஒரு பழைய பியட் கார் நம்மைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்றால் வாகனங்கள் நமக்காக எந்த அளவுக்குச் சேவை புரியும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இனியாவது வாகனங்களை ஜடப் பொருள்கள் என்று எண்ணாதீர்கள். அவையும் உயிருள்ள ஜீவன்களே. நமக்குச் சேவை செய்ய அல்லும் பகலும் காத்திருக்கும் பைரவ மூர்த்திகள்.

தொடரும் விடைகள் ...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam