விற்குடி வீரனா, விற்குடி விஜயனா ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருவிற்குடி திம்மராயன்

பகைகளில் இரண்டு விதமான பகை சக்திகள், எதிர்மறை சக்திகள் உண்டு. வெளி பகை, உள் பகை என்று பொதுவாக இவற்றை அழைக்கிறோம். உதாரணமாக, ஒரு இளைஞர் தான் தற்போது வாங்கும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்ட முடியாது என்று நினைத்து அயல்நாட்டில் கிடைப்பதாக இருக்கும் ஒரு வேலைக்கு முயற்சி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய வயதான பெற்றோர்கள் இதைப் பற்றி ஒன்றும் கூறாவிட்டாலும் அவர்கள் மனது அந்த இளைஞரின் முயற்சியை அங்கீகரிக்காது, அது ஒரு எதிர்மறை சக்தியாக செயல்பட்டு அவர் முயற்சிகளுக்கு தடை விதிக்கும். இது தன் குடும்பத்தில் தோன்றும் ஒரு வெளிப்பகை.

விற்குடி

ஒருவர் ஒரு திருக்கோயிலுக்கு செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டு இரவில் உறங்கச் சென்று விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். விடியற் காலையில் எழுந்து பார்த்தால் மின்சார சப்ளை இல்லை, சோவென்று மழை பொழிகிறது. அப்போது அந்த அன்பர் இவ்வளவு சிரமத்திற்கு இடையில் நாம் கோயிலுக்குச் செல்ல வேண்டுமா என்று நினைக்கிறார். இது வெளியே எங்கிருந்தும் வரும் எண்ணம் அல்ல. நாம் தினமும் சந்திக்கும் உள் பகை என்பதற்கு ஒரு உதாரணம்.

இத்தகைய இரு விதமான பகை எண்ணங்களும், எதிர்மறை சக்திகளும் மறையும் இடமே, மாயமாகும் திருத்தலமே ஸ்ரீவீரட்டானேஸ்வரர் அருளும் விற்குடி திருத்தலமாகும்.

திம்மம் என்றால் நெஞ்சுறுதி என்று பொருள். திம்மராயன் என்றால் கல்லைப் போன்ற நெஞ்சுறுதி உடைய வீரன், அஞ்சா நெஞ்சன் என்பது ஒரு பொருள். இத்தகைய நெஞ்சுறுதியை அனுகிரகமாக அளிக்கும் ஈசன் அருளும் தலமான திருவிற்குடி சிவத்தலத்தையே 2023 ஆங்கில ஆண்டிற்கான வழிபாட்டுத் தலமாக நம் சற்குரு அருள்கின்றார்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபரிமளநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் அருளும் திருவிற்குடி சிவத்தலம் சிவ விஷ்ணு அம்சங்களுடன் பொலியும் வீரட்டானத் தலமாகும். ஜலந்தராசுரனை இறைவன் சம்ஹரித்து, வீரட்டான லீலை புரிந்து உலகைக் காத்த தலமே திருவிற்குடி. இறைவன் ஒரு அசுரனை அழிப்பதில் என்ன வீரம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்.

ஒருவன் எவ்வளவுதான் புத்திசாலியாக இருந்தாலும் அவன் அகந்தையால் தூண்டப்பட்டு தவறுகள் இழைக்கும்போது, தான் என்ற மமதைக்கு போதைக்கு அடிமையாகும்போது அவன் அழிவது நிச்சயம் என்ற எண்ணத்தை தெளிவாக்குவதே திருவிற்குடி வரலாறு ஆகும்.

இறைவனின் வீர மகிமையைப் பற்றி ஒரு சம்பவத்தை நீங்கள் அறிந்து கொள்வது சிறப்பு. நளாயினி தன்னுடைய வயதான கணவரை ஒரு கூடையில் அமர்த்தி வைத்து ஒரு விலைமாதின் வீட்டிற்கு சுமந்து சென்றபோது மரத்தில் தலை கீழாக தொங்கி தவம் புரிந்து கொண்டிருந்த ஒரு முனிவர் மீது தவறுதலாக அவருடைய கணவரின் கால் பட்டு விட்டது.

ஞானசடாட்சர தீர்த்தம் விற்குடி

அவ்வளவுதான்...
அந்த முனிவர் கோபமடைந்து சூரியன் மறையும் முன் தன்னைத் தீண்டியவரின் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறட்டும் என்று சாபமிட்டு விடுவார். நளாயினி எவ்வளவோ மன்றாடியும் அந்த முனிவர் தன்னுடைய சாபத்தை மாற்றிக் கொள்ளவோ, திரும்பப் பெறும் நிலையிலோ இல்லை.

வேறு வழியின்றி சூரியன் மறைந்தால்தானே தன்னுடைய கணவன் உயிரை இழப்பார். அதனால் சூரியனே மறையக் கூடாது என்று எதிர் சாபமிடவே, “விரைவாக சென்று கொண்டிருந்த சூரியன் ‘சலாக்’ என்று ப்ரேக் அடித்து அப்படியே நின்று விட்டானாம்.’ (சுவைக்காக,நம் சற்குருவின் வார்த்தைகளை அப்படியே இங்கு அளித்துள்ளோம்.) மேலுலகில் ஒரே சர்ச்சை கிளம்பியது. சூரிய இயக்கம் நின்று விட்டதால், பிரபஞ்சமே ஸ்தம்பித்து விட்டது. தேவர்கள் செய்வதறியாது திகைத்து மும்மூர்த்திகளை அணுகியபோது, மும்மூர்த்திகளுமே தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர். பத்தினி சாபத்திற்கு எதிராக எந்த தெய்வீக சக்தியும் செயல்படாது, செயல்பட முடியாது என்று தெளிவாக உரைத்து விட்டனர்.

இத்தகைய பத்தினியான பிருந்தையின் கணவனே ஜலந்தராசுரன் என்ற அசுரன் அவான். அசுரன் என்றாலும் ‘புத்திசாலித்தனமான’ ஒரு வரத்தை பிரம்ம தேவரிடமிருந்து பெற்றான். அதாவது உத்தமியான தன்னுடைய மனைவி கற்பை இழக்கும்போது மட்டுமே தன்னை எவரும் வெல்ல முடியும் என்பதே ஜலந்தராசுரன் பெற்ற வரம். தன்னை விட, தன் மனைவியின் கற்பின் மீது ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருந்தான் அந்த அசுரன்.

ஆனால், எந்த ஒரு தவறும் நீண்ட நாள் தொடராது, முடிவுக்கு வந்தே ஆக வேண்டும் என்பதற்கு இணங்க ஜலந்தராசுரனின் தவறுகள் எல்லை மீறியபோது சிவபெருமானே சக்கராயுதத்தால் அவன் தலையைக் கொய்ய முற்பட்டபோது, ஜலந்தாரசுரனின் மனைவியான பிருந்தையின் கற்பு சக்திகள் அவனைக் காத்து நின்றன.எம்பெருமானின் சக்கராயுதமே ஜலந்தராசுரனின் மேல் பாயாமல் ஒரு கணம் திகைத்து நின்றதாம்.

ஸ்ரீவீரட்டானேஸ்வரர்
விற்குடி

பார்த்தார் எம்பெருமான்...
வேறு வழியின்றி தன் மைத்துனனான பெருமாளை அழைக்கவே ஓடோடி வந்தார் பெருமாள்.
தீயவர்களை அழித்து நல்லவர்களைக் காப்பேன் என்று சூளுரைத்தவர்தானே பெருமாள். கீதாசாரியானாக நின்ற பெருமாள் எம்பெருமானின் வேண்டுகோளுக்கிணங்க பிருந்தையின் முன் ஜலந்தராசுரன் வடிவில் நின்றார் பெருமாள். ஒரே ஒரு நொடி பெருமாளைத் தன் கணவனாக வரித்த பிருந்தை கற்பிழந்தாள்.

தீய சக்திகள் மிகவும் வலிமை உடையவை, ஆனால் சிறிது நேரம் மட்டுமே நிலைத்து நிற்கும் தன்மை உடையவை என்ற இயற்கை விதிக்கு ஏற்ப, ஜலந்தராசுரனின் அக்கிரமச் செயல்கள் உருவாக்கிய மாயையால் பிருந்தை தன் கற்பை இழக்கும் நேரம் ஒரே ஒரு விநாடி காலம்தான் என்றாலும் அந்த ஒரு விநாடி காலம் போதாதா காலாதீதனான எம்பெருமானுக்கு ?

சக்கராயுதம் ஜலந்தராசுரனின் கழுத்தை அறுத்து விட்டது. மண்ணிலிருந்து மறைந்தான் ஜலந்தராசுரன். உத்தம பத்தினி என்பதால் பிருந்தையின் உயிரும் அடுத்த நொடியே பிரிந்தது.

ஸ்ரீமகாவிஷ்ணு விற்குடி

ஆக்கலும் அழித்தலும் எம்பெருமானின் திருவருளாலேயே நடைபெறுவதால் பிருந்தையை உயிருடன் பூவுலகில் மீண்டும் எழுப்பினார் நம் பெருமான். இப்போது தோன்றிய பிருந்தை, ஒரு அசுரனின் மனைவி அல்ல. எம்பெருமான் திருவருளால் தூய இறை சக்தியுடன் தோன்றிய தெய்வ அவதாரம். தெய்வம் தெய்வத்துடன் சேர்ந்தது.

ஆம், பிருந்தை தேவி துளசி தளமாக, துளசி தேவியாக பெருமாளின் திருவடிகளை என்றென்றும் அர்ச்சிக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஆனாலும் பெருமாள் மூர்த்தியால் துளசி தேவியின் அன்பான கணவனாகக் திகழ முடியவில்லை. காரணம், தான் அறியாமல் ஒரு பிஞ்சு மனதில் நஞ்சைப் பாய்ச்சியது பெருமாளின் உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருந்தது. பெருமாள் உலக ஜீவன்களின் நன்மைக்காகத்தானே அத்தகைய ஒரு காரியத்தை ஆற்றினார் என்றாலும் அந்தப் பழிச் செயலுக்கு பிராயசித்தம் பெற எம்பெருமானை நோக்கி தவமியற்றினார்.

தினமும் ஒரு காராம் பசுவின் பாலைக் கறந்து அதன் இளஞ் சூடு ஆறும் முன்னர் அதை இறைவனுக்கு அபிஷேகித்து அதன் பின்னர் ஆயிரம் செந்தாமரை மலர்களால் அர்சித்து தினமும் பூஜையை நிறைவேற்றினார் செந்தாமரைக் கண்ணன். இவ்வாறு பெருமாள் அர்ச்சித்த பூக்களில் ஒன்று குறையவே தன்னுடைய விழிகளையே பறித்து தாமரை மலராக சூட்டியமையால் பெரிதும் மகிழ்ந்த பெருமாளுக்கு அழகிய செந்தாரை விழிகளை அளித்ததுடன் அவருக்கு துளசி தேவியை, மருள் விழியாளை மனைவியாக அளித்தான் எம்பெருமான்.

இந்த திருமணத்திற்கு பார்வதி பரமேஸ்வரரின் அன்புப் பரிசாக அளிக்கப்பட்டதே சக்கராயுதம் ஆகும்.

ஒருவர் பிறந்த தேதிக்கு இணையான எண்ணைக் குறிக்கும் வகையில் அவருடைய பெயர் அமைந்தால்தான் அவருடைய பெயர் சிறப்புடையதாக அமையும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதாவது 21, 19, 5 என்ற தேதிகளில் பிறந்திருந்தால் அவர்களுக்கு 3, 1, 5 என்ற எண் சக்திகள் கூடுமாறு பெயர்களை அமைப்பது முறை. அதே சமயம் 4, 7, 8 என்ற தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதே எண் சக்திகள் கொண்ட பெயர்களை அமைப்பது கூடாது என்பதே நம் சற்குருவின் பரிந்துரை. அத்தகைய தேதிகளில் பிறந்தவர்களின் கூட்டு எண் இத்தகைய ராகு, கேது, சனீஸ்வர அம்சங்கள் இல்லாதிருந்தாலோ அல்லது அத்தகைய கூட்டு எண்களும் 4, 7, 8 என்றவாறு அமைந்திருந்தால் 3 அல்லது 5 எண்ணில் அமையுமாறு அவர்களுடைய பெயர்களை அமைப்பதே சிறப்பு.

ஆலிலை அஸ்வத பிரதட்சிணம்

இதே முறையில் வரும் ஆங்கில வருடம் 2023 என்று கேது சக்தி ஆண்டாக இருப்பதால் கேதுவின் குண நலன்கள் பொங்கிப் பெருகும் என்பதால் இதன் தீய சக்திகளை ஓரளவு இறை சக்தியால் தணித்து அருளும் வழிபாட்டு முறைகளை இங்கு குருவருளால் அளித்துள்ளோம். சற்குருவின் வழிகாட்டுதலை முறையாகப் பின்பற்றினால் இந்த கேது சக்திகளை, ஞான சக்திகளாக மாற்றி அடியார்கள் பயன்பெறுவார்கள் என்பதும் இத்தகைய வழிபாடுகள் அருளும் பலன்களாகும்.

இந்த புதுவருடம் சனிக் கிழமை இரவு உதயமாகும் முன் பகல் சுமார் 12 மணி வரையும், அடுத்த நாள் வருடப் பிறப்பு தினமான 1.1.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று பகல் 12.48க்கு மேல் கூடா நாள் வியாபித்து இருப்பதால் இது சரியாக கேது என்ற பாம்பின் வாயிலும் வாலிலும் விஷ சக்திகள் இருக்கும் தன்மையை பறைசாற்றுகிறது. இத்தகைய விஷ சக்திகளிலிருந்து விடுபட்டு கேது பகவான் அருளும் ஞான சக்திகளை மட்டும் பெறும் முகமாக அளிக்கப்பட்டுள்ளவையே இந்த வழிபாடுகள்.

விற்குடி திருத்தலத்தில் கோயிலின் முன்புறம் சங்கு தீர்த்தமும், கோயிலின் பின்புறம் சக்கர தீர்த்தமும் கோயிலின் உட்புறம் தென்கிழக்கு மூலையான அக்னி மூலையில் ஞான தீர்த்தமும் அமைந்துள்ளன. இந்த மூன்று தீர்த்தங்களையும் வலம் வரும் விதமாகவே மேற்கண்ட ஆலிலை அஸ்வத பிரதட்சிண முறை அமைக்கப்பட்டுள்ளது. 3, 6, 12, 24, 48 என்ற முறையில் அடியார்கள் தங்கள் ஆரோக்யம், வசதியைப் பொறுத்து எத்தனை பிரதட்சிணங்களையும் நிறைவேற்றி நல்லருள் பெறலாம்.

ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயம் அருகில் உள்ள சங்கு தீர்த்தத்தின் மேற்கு கரையில் வலத்தை ஆரம்பித்து மீண்டும் அங்கேயே பூரணம் செய்யும் முறையே இங்குள்ள படத்தில் விளக்கப்பட்டுள்ளது. இந்த வலத்தில் சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் இரண்டையும் வலமாக பிரதட்சிணம் செய்யுமாறும், ஆலயத்தில் உள்ள ஞான தீர்த்தத்தை அப்பிரதட்சிணமாக வலம் வருமாறும் அமைத்ததே நம் சற்குருவின் சீரிய கருணையைக் குறிப்பதாகும். திருத்தலங்களில் கேது மூர்த்தியையும் ராகு மூர்த்தியையும் அப்பிரதட்சிணமாக வலம் வருவதுதானே முறை?

இத்தகைய பிரதட்சிணங்களின் போது
நீர் நீயே நிமலன் நீயே
கார்வண்ணன் நீயே கனிமுகன் நீயே
தேர்வண்ணன் நீயே
     தீயதை அழிக்கவல்ல திம்மராயன் நீயே !
என்று வாய்விட்டோ மனதிற்குள்ளோ ஓதுதல் சிறப்பு. இந்த பிரதட்சிணம் மூன்றின் இருமடங்கு என்ற ‘S’ தத்துவ முறைப்படி இயங்கும். ‘S’ தத்துவம் பின்னர் விவரிக்கப்படும்.

இந்த துதியில் வரும் தேர் வண்ணன் மகிமையைப் பற்றி இங்கு விளக்குகிறோம். மகாபாரத யுத்தத்தில் அர்ஜுனனின் தேரோட்டியாக பரந்தாமன் அமர்ந்து தேரை செலுத்திக் கொண்டிருந்தார் அல்லவா? போர் நிறைவுற்ற வேளையில் அர்ஜுனனை தேரிலிருந்து இறங்குமாறு கூறினார். இதைக் கேட்ட அர்ஜுனனுக்கோ மகா கோபம் ஏற்பட்டது. காரணம் அக்கால ராஜ பரம்பரை protocol முறைப்படி முதலில் தேரோட்டிதான் தேரிலிருந்து இறங்க வேண்டும், அதன் பின்னரே தேரில் பவனி வரும் ராஜகுமாரன் இறங்குவான்.

தனக்கு தேரோட்டியாக அமர்ந்து பணி புரிந்தது சாட்சாத் எம்பெருமானே என்பதை ஒரு கணம் மறந்த அர்ச்சுனன் அவ்வாறு மமதையால் செயல்பட்டான். இருந்தாலும் பகவான் கூறும்போது அதை மறுக்க முடியாமல் மௌனமாக தேரிலிருந்து இறங்கிச் சென்றான்.

விற்குடி விஜய தீபம்

கோமதி கோபுர வாசம்

அர்ச்சுனன் வெகு தொலைவு செல்லும் வரை காத்திருந்து அதன் பின்னர் பகவான் கிருஷ்ணரும் தேரிலிருந்து இறங்கிச் சென்றார். பகவான் தேரிலிருந்து காலை எடுத்த மறுவிநாடியே அந்த தேர் பயங்கரமாக தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. பதினெட்டு நாட்கள் நடந்த யுத்தத்தில், யுத்த களத்தில் நடமாடிய கணைகள் அனைத்தின் சக்திகளும் தீயாக உருவெடுத்து அந்தத் தேரை விழுங்கின.

பரம்பொருளே அந்தத் தேரில் அமர்ந்திருந்ததால் அந்த கணைகளின் தீய சக்திகள் அர்ச்சுனனைத் தாக்காமல் அவன் காப்பாற்றப்பட்டான் என்பதை உணர்ந்து கொண்ட அர்ச்சுனன் பகவானின் திருவடிகளைச் சரணடைந்தான் என்பதைக் கூறவும் வேண்டுமோ? இவ்வாறு தீய சக்திகளிலிருந்து நம்மைக் காப்பதே திருவிற்குடி ஈசனின் அருட்சக்திகளாகும்.

விற்குடி திருத்தலத்தின் நாமம் ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. இதன் அர்த்தத்தை ஓரளவு புரிந்து கொண்டால் நம் பாரதத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களையும் தரிசனம் செய்த பலன் கிட்டும் என்பதே இந்த திருத்தல மகாத்மியமாகும். அந்த அளவு பொருட் செறிவு உடையதால், சித்தர்களால் மட்டுமே இந்த திருத்தலத்தின் மகிமை புரியும் வண்ணம் உள்ளதால் இங்கு அளிக்கப்பட்டுள்ள திருக்குள பிரதட்சிண முறை இந்த இரகசியத்தை ஓரளவு புரிந்து கொள்ள துணை புரியும்.

விற்குடி திருத்தல நாம மகிமையை விளக்கும் சித்திரம் இக்கோயில் தூண் ஒன்றில் விளங்குகிறது என்றாலும் தற்கால குறுகிய எண்ணம் கொண்ட மக்களால் இதன் தெய்வீகத்தை உணர முடியாது என்பதால் அது இங்கு அளிக்கப்படவில்லை. என்றாலும் ஆழ்ந்த குரு பக்தி உடைய அடியார்கள் இங்கு வழிபாடுகளைத் தொடர்ந்து இயற்றி வந்தால் அந்த சித்திரம் விளக்கும் தெய்வீக உண்மையை உணர்ந்து எல்லையில்லா ஆனந்தம் பெறலாம்.

வருடப் பிறப்பின் முதல்நாள் சனிக் கிழமை மாலை சங்கு தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து தீர்த்தக் கரையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசெல்வ கணபதிக்கும், சக்கர தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து கோயில் பின்புறம் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமயான ஈசனான சம்ஹார மூர்த்திக்கும் அபிஷேகம் இயற்றி வழிபாடுகள் நிறைவேற்றுதல் சிறப்பு. ஏற்கனவே நம் சற்குரு அருளிய முறையில் கேதுவிற்கு உரித்தான ஏழு எண் சக்தியை மாற்றும் முகமாக மூன்று ஏழுகள் சேர்ந்த முறையில் கலச தீர்த்தங்களை அமைத்து வழிபாடுகளை இயற்ற வேண்டும். வழிபாடுகளின் போது மூன்று ஏழுகள் சேர்ந்த விற்குடி விஜய தீபங்களை ஏற்றி வழிபட வேண்டும். வழிபாட்டின் நிறைவில் கோமதி கோபுர வாசம் என்ற மூவேழு பால்இனிப்புகளை தானம் அளித்தலும், புது வருட விற்குடி ஈசன் பிரசாதமாக ஏற்று ஆனந்தித்தலும் சிறப்புடையதாகும்.

ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
விற்குடி

விற்குடி திருத்தல வழிபாட்டில் திகழும் மூன்று ஏழுகளைப் பற்றி சற்றே விளக்குவோம். இந்த ஏழு வடிவம் ஐந்து தீபங்கள் கொண்ட நேர் கோட்டுடன் இணைந்த மூன்றாம் பிறையின் வடிவத்தை ஒத்த ஏழு தீபங்களால் உருவான பிறைப் பகுதி இணைந்த கோலமாகும். இந்த ஏழு உருவத்தில் 12 தீபங்கள் அமைந்துள்ளன. இது அக்னி சக்தியைக் குறிப்பதாகும் அதாவது, 3 x 12 = 36 = 9. விளக்குகளின் தோற்றம், உருவ அமைப்பு குரு சக்தியைக் குறிப்பதாகும் அதாவது 3 x 7 = 21 = 3. கேதுவிற்கு உரித்தான மூன்று செந்நிற ஆப்பிள் கனிகள் கேதுவையும் பூரணத்துவம் பெற்ற சனி பகவானையும் குறிக்கும்.

இறைவன் ஸ்ரீவீரட்டானேஸ்வரருக்கும் இறைவி ஸ்ரீபரிமள நாயகிக்கும் மேற்கூறிய முறையில் சனிக் கிழமை அன்று பெற்ற ஞானசடாட்சர தீர்த்த நீரால் ஞாயிற்றுக் கிழமை விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அபிஷேக ஆராதனைகள் இயற்றி வழிபடுவது கிடைத்தற்கரிய பாக்கியமே. ஸ்ரீசெல்வ கணபதி, ஸ்ரீமயான ஈசன், ஸ்ரீவீரட்டானேஸ்வரர் ஆகிய மூர்த்திகளுக்குத் தேவையான தீர்த்தம் அனைத்தையும் ஒன்றாக எடுத்து வைத்து பூஜிப்பதும் ஏற்புடையதே. வாழ்வில் வசந்தத்தை, இனிய நறுமணத்தை, குறைவிலா ஆனந்தத்தை அளிப்பவளே பரிமள நாயகி.

விற்குடி திருத்தல அக்னி மூலையில் அமைந்த ஞானசடாட்சர தீர்த்த மகிமையை சொல்லிக் கொண்டே இருக்கலாம் என்பார் நம் சற்குரு. ஞான பண்டிதனான முருகனுக்கு உரிய ஆறு அட்சர சக்திகள் வியாபிப்பதே ஞானசடாட்சர தீர்த்தம். அவையே,
ச .. மூலாதார முச்சுடர் இரகசியம்
ர .. இரமணீய சொர்க்க இரகசியம்
வ .. வலம்புரி வாதூள இரகசியம்
ண .. நமண ஜோதி நாம இரகசியம்
ப .. பர தத்துவ பால இரகசியம்
வ .. வருண வஞ்சுள வரகுண இரகசியம்
என்று ஆறு தத்துவ இரகசியங்களை உள்ளடக்கியதே ஞானசடாட்சர தீர்த்தமாகும். ஒரு முறை ஆஞ்சநேய மூர்த்தி எண்ணம் எங்கிருந்து தோன்றுகிறது என்ற இரகசியத்தை அறிவதற்காக பல திருத்தலங்களையும் வழிபட்டு வந்தார். திருச்சி நாச்சியார் கோயிலில் உள்ள ஸ்ரீகணபதி மூர்த்தி அனுமாரப்பனுக்கு வழிகாட்டி, சுமார் ஒரு லட்சம் திருத்தலங்களில் திருப்பணி நிறைவேற்றி வந்தால் இந்த இரகசியத்தை உணர்ந்து கொள்ளலாம் என்று அருள்புரியவே அனுமாரும் பிள்ளையார் அருளிய முறையில் ஒரு லட்சம் திருத்தலங்களில் உரிய முறையில் வழிபாடுகள் இயற்றி இறுதியில் எண்ணத்திற்கு மூலமான இரகசியத்தை ஒரு மூல நட்சத்திர நாளில் உணர்ந்து கொண்டார்.

ஸ்ரீஆத்மவிசார விநாயகர்
நாச்சியார் கோவில் திருச்சி

இவ்வாறு அனுமார் எண்ணத்தின் மூலத்தை அறிந்த மூல நட்சத்திர தினமே மக்களுக்கும் உரியதாக, ஆஞ்சநேய வழிபாட்டு தினமாக பிற்காலத்தில் வந்தமைந்தது. தான் பெற்ற இன்பம் பெறுக வையகம் என்பதாக ஞான மூர்த்தியான ஆஞ்சநேயரே விற்குடியில் ஞானசடாட்சர தீர்த்தத்தை அமைத்து இத்தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து இத்திருத்தல மூர்த்திக்கு தினமும் அபிஷேக ஆராதனை நிறைவேற்றும் ஞான மார்க்கத்தை ஏற்படுத்தித் தந்தார். எனவே ஞான குருவான தட்சிணா மூர்த்தியின் எதிரில் அமைந்த ஞான தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து ஞான சக்திகள் பூரிக்கும் ஆண்டில் ஞான சக்திகளை வழங்கும் ஸ்ரீவீரட்டானேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்துவது என்பது எத்தகைய பேறு?

நீரின்றி வறண்டு கிடக்கும் ஆற்றில் நீர் பெருக்கு ஏற்படும்போது நீர் சுழிகள், சுழற்சிகள், சுழல்கள் தோன்றுவதைப் பார்த்திருப்பீர்கள். இந்தச் சுழலில் தெரியாமல் மாட்டிக் கொள்பவர்கள் என்ன செய்வார்கள்? நீர் சுழலும் திசைக்கு எதிராக நீந்தத் தொடங்கினால் அவர்கள் எளிதில் நீரின் சுழல் சக்தியிலிருந்து விடுபட்டு கரை சேர்வார்கள். இதுவே 2023 என்ற கேது சுழல் ஆண்டில் அடியார்கள் ஆஞ்சநேய மூர்த்தியை விற்குடி விஜய தீபம் என்ற வெற்றியை நல்கும் தீபங்களை ஏற்றி வழிபடும் முறையாகும். மூல நட்சத்திரம் அமையும் தனுசு ராசியானது அசுவனி அமையும் மேஷ ராசியிலிருந்து ஒன்பதாம் ராசியாக, நவவியாகரண பண்டிதரான ஆஞ்சநேய மூர்த்திக்கு உரித்தானதாக அமைவதே நாம் இப்புத்தாண்டில் பெறும் பாக்கியமாகும்.

ஏழில் எழும் எழில் சக்தி

ஒரு அரசியல்வாதியையோ, நடிகரையோ, விளையாட்டு வீரரையோ குருவாக ஏற்று கூட நாம் இறைவனை நிச்சயமாக அடையலாம் என்பார் நம் சற்குரு. அந்த நடிகரோ, யாரோ இறைவனைப் பற்றி சற்றும் அறியாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, ஒருவர் கொள்ளும் நம்பிக்கையின் ஆழமே இறைவனைத் தேடித் தரும்.

ஒரு கிராமத்து ஐய்யனார் கோவில் குதிரை மேல் அமர்ந்த சிலையில் உள்ள ஐயனார் காலப் போக்கில் சிதலமாகி விழுந்து விட்டார். அவர் அமர்ந்திருந்த மண் குதிரை மட்டும் கோயிலில் இருந்தது. அந்த மண் குதிரைதான் ஐயனார் என்று கருதி அதன் மேல் மாறாக் காதல் கொண்ட படிப்பறிவில்லாத ஒரு விவசாயி முக்தி அடைந்த, இறைவன் அடி சேர்ந்த அற்புதத்தை நாம் ஏற்கனவே விளக்கி உள்ளோம்.

ஸ்ரீபிடாரி ஸ்ரீமாரியம்மன் தேவிகள்
விற்குடி

சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தில் ஒரு ஏழெழுத்து நடிகை மஞ்சள் நிறத்தில் அமைந்த திரைச்சீலையை நடுவே விலக்கி, தன்னுடைய ஒரு கண்ணை மட்டும் காட்டி, ஒரு வீரனிடம் தன்னுடைய பொன் முத்திரை மோதிரத்தைக் கொடுக்க அந்த வீரன் அதன் மூலம் பல நற்காரியங்கள் செய்த வித்தையை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அதே போல வில்வமங்களா என்ற பெயர் கொண்ட ஒரு காவியத்தை பகவான் ரஜனீஷ் விளக்கியதை நீங்கள் அறிந்திருக்கலாம். வேத சாஸ்திரத்தில் கரை கண்ட ஒரு இளைஞன் சாலை வழியே சென்று கொண்டிருந்தபோது அருகே உள்ள ஒரு கொல்லம்பட்டறையில் கீழ் சாதியைச் சேர்ந்த பெண்ணொருத்தி ஒரு அம்பைத் தட்டி, தட்டி ஒரு கண்ணை மூடி கூர் பார்ப்பதைப் பார்த்து, வியந்து முடிவில் அவளுடன் சேர்ந்து ஒரு மயானத்தில் வசித்து இறைவனை தரிசனம் செய்த அதிசயத்தையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.

இவ்வாறு இலக்கை நோக்கிப் பாயும் அம்பின் வடிவத்தில்தான் கோமதி கோபுர வாசம் என்ற பால் இனிப்பும், விற்குடி விஜய தீபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பெயர்தான் வேறு வேறே தவிர, இவை சுட்டும் தத்துவம் ஒன்றே.

இது போன்று இறைவனிடம் நம்மை கொண்டு சேர்க்கும் தத்துவமே விற்குடி சிவாலயத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது என்றாலும் இந்த தத்துவத்தை நாம் உணரும் சக்தியை, கண்ணோட்டத்தைப் பெறாததால் இந்த உண்மையை நமக்கு எளிதில் உணர்த்தும் முகமாகவே இங்கு தீர்த்த வழிபாடு அளிக்கப்பட்டுள்ளது.

2023 வருடத்தில் தினமும் இயற்றும் வழிபாடாக அங்காள பரமேஸ்வரி அந்தாதி, லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி போன்ற தேவி துதிகளை ஓதி வருதல் சிறப்பு. காலை, மதியம், மாலை என்று ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு துதியையும் அல்லது மூன்று நேரமும் ஒரே துதியை ஓதி வருதலும் ஏற்புடையதே. இரவில் மாரியம்மன் தாலாட்டு, கண்ணன் துயில் கீதங்கள் போன்ற தாலாட்டு பாடல்களை ஓதுதல் சிறப்பாகும். சினிமாப் பாடல்களையும், படங்களையும் இரவு உறங்கும் முன் இந்த வருடத்தில் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.

இந்த வருடம் மட்டுமாவது காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து நீராடி இறைவனை வழிபடுவதை ஏதாவது ஒரு ரூபத்தில் மேற்கொள்ளவும். அவகாசம் உள்ளவர்கள் இதை சரி கட்டும் விதமாக பகல் நேரத்தில் சற்று உறங்கி ஓய்வெடுத்துக் கொள்வதில் தவறு கிடையாது.

‘S’ ஜன்ம உறவுகள்

பூர்வ ஜன்ம உறவுகளையே இவ்வாறு ‘S’ ஜன்ம உறவுகள் என்று குறிக்கின்றோம். நம் சற்குருவிடம் ஒரு அடியார் வந்தார். “வாத்யாரே, நம் சபை அடியார் ஒருவரின் மனைவி ... அடியேன் கன்னத்தைக் கடித்து செல்லமாக முத்தமிடுவதைப் போல் விடியற்காலையில் ஒரு கனவு கண்டேன்... விடியற் காலையில் கண்ட கனவு பலிக்கும் என்று கூறுவதால் அடியேனுக்கு பயமாக இருக்கிறது...”, என்று கூறினார். நம் சற்குரு, “அப்படியா, நைனா, இதை யாரிடமும் சத்தம் போட்டுச் சொல்லி விடாதே... உன்னுடைய கள்ளம் கபடமற்ற மனது அடியேனுக்குத் தெரியும். ஆனால், இதைக் கேள்விப்பட்டால் உன்னைப் பற்றி தவறாக நினைத்து விடுவார்கள். உனக்கு முத்தமிட்ட பெண் உன்னுடைய பூர்வ ஜன்மத்தில் மனைவியாக வாய்த்தவள். அவள்தான் தற்போது உன்னுடைய பெண் குழந்தையாக வந்து பிறந்துள்ளாள். அவளுடைய முந்தைய உருவம் தெரியாததால் நீ அவளை மற்றொருவருடைய மனைவியாகக் கருதி குழப்பிக் கொள்கிறாய்... அவ்வளவுதான்...,” என்று விவரித்தார்.

‘S’ ஜன்ம உறவுகள்

அந்தப் பெண் பெயரும் உன்னுடைய குழந்தையின் பெயரும் ‘S’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் இரகசியம் இதுதான் ... தெரிந்து கொண்டாயா?” என்று கூறி ஒரு பொன் சிரிப்பை உதிர்த்தார் நம் சற்குரு. நம்முடைய சற்குரு அடிக்கடி கூறுவதைப் போல், “நீங்கள் அனைவரும் உறவுக்காரர்களே, ஆனால், அந்த உறவை விவரித்தால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என்பதால் அதைப் பற்றி அடியேன் அவ்வளவாக விவரிப்பது இல்லை...”, என்ற சற்குருவின் வார்த்தைகள் நம் அடியாரின் மனதில் எதிரொலித்ததால் அவர் மனம் சமாதானம் அடைந்தது.

இந்தப் பதிலை கூறும்போதுதான் நம் சற்குரு நம் ஆஸ்ரம ஜன்னல்களில் ‘S’ வடிவம் பதித்திருப்பதன் காரணத்தை விவரித்தார். எத்தகைய கடுமையான, கொடுமையான சூழ்நிலையிலும் வளைந்து நெளிந்து காரியத்தை சாதிப்பதில் குறியாக இருக்க வேண்டும் என்பதையே இந்த வடிவம் காட்டுகிறது. அவ்வாறு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் கொண்டவர்கள் என்றென்றும் காப்பாற்றப்படுவார்கள் என்பதையே டைமண்ட் வடிவ சக்கரம் உணர்த்துகிறது. டைமண்ட் என்பது சதுரம் என்ற நாற்கர பாதுகாப்பு சக்தியின் மாறிய கோண வடிவம்தானே.

இந்த ‘S’ வடிவத்தை மோதிரங்களில் அமைத்து தாராளமாக அடியார்கள் அணிந்து கொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு மோதிரத்தையும் இரண்டாக செய்து மற்றொன்றை அறிமுகம் இல்லாத ஒருவருக்கு தானம் அளித்துவிட வேண்டும். எப்படி மாலை அணியத் தகுதி இல்லாத மனிதர்களும் திருமணத்தின்போது இரு மாலைகளைத் தயார் செய்து ஒன்றை இறைவனுக்கும் மற்றொன்றை தாங்களும் அணிந்து கொள்கிறார்களோ அது போல்தான் இந்த ‘S’ வடிவ மோதிரம் அளிக்கும் பாதுகாப்பும் ஆகும். இந்த ‘S’ வடிவத்தை டாலர்களில் பதித்துச் செயினாகவும் அணிந்து கொள்ளலாம்.

ஓங்காரத்தை உபதேசமாக அளிக்கவல்லவர் நம் சற்குரு ஒருவரே. இந்த உபதேசத்தையும் மறைமுகமாக ஒரு தங்க டாலர் வடிவில் ஒரு அடியாருக்கு அன்புப் பரிசாக அளித்தார் என்றால் என்னே வானளாவிய குரு கருணை. இந்த உபதேசத்தின் மகிமையை உணர்ந்து கொள்ளவே அந்த அடியாருக்கு பல்லாண்டுகள் ஆயினவாம். இந்த மகிமையை நீங்களும் உணர்ந்து பயன்பெறவே ‘S’ யந்திரத்தை அமைக்கும்போது இந்த ஓங்கார டாலர் தயார் செய்யப்பட்டுள்ள முறையைக் கையாளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

சூரிய சந்திர நாடிகள்
இலயமாகும் அற்புதம் விற்குடி

மனிதர்கள் அனைவரும் குழந்தையாக இருக்கும்போது பேனா, பென்சிலைக் கொண்டு வட்டம், வட்டமாக வரைவதைப் பார்த்திருப்பீர்கள். இது ஒரே திசையிலேயே அமைந்திருக்கும். இதுவே மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தையானது இறைவனை நோக்கியே செயல்படும் விதத்தை, இறைவனை சதாசர்வ காலமும் தரிசித்த அத்வைத நிலையில் இருப்பதை உறுதி செய்கிறது.

காலம் செல்லச் செல்ல இரு இயக்கங்களைக் கொண்டதாக அதன் மனம் மாறும்போதுதான் இரு இயக்க அட்சரங்களை அது எழுதத் தொடங்குகிறது. ஆனால், இந்த ஓரியக்க அட்சரமே இறைவனை அடையும் குறிக்கோளைக் காட்ட வல்லதால் நம் சற்குரு இரண்டு டைமண்ட் வடிவத்திற்குள் அமைந்த ஓரியக்க எழுத்து வடிவத்தை மோதிரமாக, ஆபரணமாக அணிந்து நாம் குழந்தைத் தன்மையை, இறைவனை அடையும் குறிக்கோளை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள இதன் மூலம் வழிகாட்டுகிறார் என்பதே ‘S’ தத்துவம் குறிப்பதாகும்.

மனிதர்களின் மூச்சுக் காற்று சூரிய சந்திர நாடிகளாக பரிணமிக்கிறது என்கிறோம். வலஞ் சுழி, இடஞ் சுழி என்ற இயக்கத்தைக் கொண்டிருப்பவையே மனிதனின் மூச்சுக் காற்றில் திகழும் சக்திகளாகும். குண்டலினி யோகத்தில் இந்த வலஞ்சுழி இடஞ்சுழி இயக்க சக்திகள் ஒன்றில் ஒன்று லயமாகி அது சுசும்னா நாடியில் நிலைகொள்ளும்போதே தியானம் சித்தியாகி அது இறைவனை அடையும் வழியில் முன்னேறுகிறது. இந்த இயக்க சக்திகளின் ஒருமைப்பாட்டையே யானை மேல் அமர்ந்திருக்கும் சிம்மத்தின் காட்சி நமக்குத் தெரிவிக்கிறது. இதுவேதான் கஜகேசரி யோகத்தின் உருவக் காட்சியுமாகும்.

இவ்வாறு எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்பதை நமக்கு இவ்வருடச் சிக்கலான சூழ்நிலையில் அருளவல்லதே விற்குடி திருத்தலத்தில் நாம் காணும் கஜகேசரி உருவ வழிபாடாகும்.

ஸ்ரீஞானதட்சிணா மூர்த்தி
விற்குடி

அடியார்கள் விற்குடி திருத்தலத்திற்குச் சென்றிருந்தபோது ...737 என்ற மொபைல் தொலைபேசி எண் கொண்ட ஒரு அடியார் தொடர்பு கொண்டார். ஆனால் சற்குரு அளித்த வழிகாட்டுதலை அவரால் எவ்விதத்திலும் புரிந்து கொள்ள முடியவில்லை, காரணம் மூன்று என்ற குரு சக்தி ஏழு என்ற இருபுறம் சூழ்ந்த கேது சக்திகளால் மறைக்கப்பட்டிருப்பதே ஆகும். எத்தகைய சிக்கலான பிரச்னைகளுக்கும் தீர்வு அளிக்கவல்லதே யானை மேல் அமர்ந்த சிம்மத்தின் உருவ வழிபாடு ஆகும்.

மேற்கண்ட விளக்கங்களை குருவருளால் அளித்த அடியாரின் தொலைபேசி எண்ணும் ...737 என்பதே. ஒரு சீடனுக்கு வழிகாட்டும் சற்குரு மற்றொரு சீடனைத் திண்டாட வைப்பாரா என்ன? இதுவே ‘S’ தத்துவத்தை புரிந்து கொண்டு செயல்படும் முறையாகும். எத்தனை கோடி மக்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் மேற்கண்ட விஜய தீப வழிபாட்டில் பங்கேற்றவர்கள் மொத்தம் 12 பேர் என்ற குரு கடாட்சமே.

மனிதர்களின் ஜனன ஜாதகங்களில் ஒற்றைப் படை ராசிகள் ஆண் சக்தியையும், இரட்டைப்படை ராசிகள் பெண் சக்தியையும் குறிக்கும். இந்த வியாபகத்தைக் கொண்டே ஒருவருக்கு எத்தனை ஆண் குழந்தைகள் பிறக்கும், எத்தனை பெண் குழந்தைகள் பிறக்கும். அவர்களால் அந்தப் பெற்றோர்கள் பெறும் பலன் என்ன, பெற்றோர்களால் அந்தக் குழந்தைகள் பெறும் பலன் என்ன என்ற விவரங்களை எல்லாம் கணித்துக் கூறுவார்கள். கணவன் மனைவி இடையே உள்ள ஒற்றுமையே இத்தகைய உறவுகளுக்கு பாலமாக, பலமாக அமைவதால் கணவன் முதுகை தேய்த்து விடுதல், பாத பூஜை, பாத சேவை போன்ற பல பூஜைகளை நம் முன்னோர்கள் உருவாக்கினார்கள்.

இத்தகைய பூஜைகள் எல்லாம் ego என்ற தேவையற்ற வளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல குடும்பங்களும் பிரிவினையால் அல்லல்படுகின்றன. ஆன்மீக கண்ணோட்டம் உடையவர்களாவது இத்தகைய சக்திகளை முறையாக உணர்ந்து தம் குடும்பத்தில் பெற்றுப் பயனடைய எழுந்தருளிய மூர்த்திகளே ஞானசடாட்சர தீர்த்தம் எதிரே, ஞான குரு எதிரே எழுந்தருளிய ஸ்ரீபிடாரி தேவியும், ஸ்ரீமாரியம்மனும் ஆவார்கள். ஒருவருக்கொருவர் 90 டிகிரி செங்கோணத்தில் எழுந்தருளிய கோலமே தாச தத்த கோலம் என்று நம் சற்குருவால் வர்ணிக்கப்படுகிறது.

ஸ்ரீவினை தீர்க்கும் வேலவன்
விற்குடி

Ego பிரச்னையால் இதுவரை கணவனுக்கு நிறைவேற்ற வேண்டிய பாதபூஜைகளை தவற விட்டவர்கள் இனியாவது தங்கள் தவறுகளுக்கு வருந்தி தாச தத்த தேவிகளிடம் முறையிட்டு இனி திருந்தி வாழ்வதாக சங்கல்பம் கொண்டு செயல்பட்டால் அவர்களுக்கு நல்லருள் புரிபவர்களே ஸ்ரீபிடாரி தேவியும் ஸ்ரீமாரியம்மன் தேவியும். மனைவியின் சேவையைப் பெறும் அளவிற்கு தகுதி உள்ளவராக மாற கணவனும் இத்தேவிகளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதும் சரிதானே?

சுக போகமாக எல்லா வசதிகளுடனும் வாழ்பவர்களும் வாழ்க்கையில் விரக்தி கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தூண்டப்படும் ஆண்டு இதுவாகும். எனவே இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே விற்குடி திருத்தலத்தில் விளங்கும் மூன்று தீர்த்தங்களையும் ஏற்கனவே கூறிய முறையில் வலம் வந்து இந்த தாச தத்த தேவிகளை வணங்கி அருள்பெறுவதால் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பது உறுதி.

ஸ்ரீபிடாரி ஸ்ரீமாரியம்மன் தேவிகள் எழுந்தருளிய கோண சக்தியே தாச தத்த கோணம் ஆகும். இதை கணித ரீதியாக புரிந்து கொள்வது கடினம் என்பதால் ராம சக்தியின் பிரயோகமாக நமக்கு அருள்கிறார் நம் சற்குரு. ராமபிரான் எதிரில் நான்கு எதிரிகள் நான்கு திசைகளில் இருந்து தாக்கினால் ராமபிரான் அப்போது என்ன செய்வார்? ராமபிரானிடம் இருப்பதோ ஒரே ஒரு ராமபாணம்தான். இதை நாம் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? இதையே தொட்டுக் காட்டிய வித்தையாக அருள்கிறார் நம் சற்குரு. அந்தச் சூழ்நிலையில் ராமபிரான் ஒரே ஒரு முறை ராம பாணத்தை எய்தால் போதும் அந்த ஒரு பாணம் நான்கு பாணங்களாக மாறி, பிரிந்து அந்த நான்கு எதிரிகளின் தலையையும் கொய்து விடும், மீண்டும் அந்த பாணங்கள் ஒன்றாய் இணைந்து கங்கையில் நீராடி விட்டு மீண்டும் ராமபிரானின் அம்பாரத் துணியில் வந்து அமர்ந்து கொள்ளும்.

ராம பாணம் என்பது நாம் நினைப்பது போல் இரும்பினால் உருவான ஒரு ஆயுதம் அல்ல, சகல தீய சக்திகளையும் மாய்க்கவல்ல அஸ்திர சக்தியே அது. அந்த அற்புதமான அஸ்திர தேவியின் உருவத்தையே நீங்கள் தாச தத்த தேவிகள் எழுந்தருளிய கோலத்தின் பின்னணியில் தரிசனம் செய்கிறீர்கள்.

ஏழெழுத்து மூன்றெழுத்தை
அரவணைக்கும் காட்சி!

இவ்வாறு செங்கோண முக்கோண சக்தியாக எழுந்தருளிய அஸ்திர தேவியின் அருளை முழுமையாக நாரத மகரிஷி உணர்ந்திருந்ததால்தான் வால்மீகிக்கு ராம நாமத்தை உபதேசம் செய்து அதை அம்மகரிஷி முறையாக சொல்லத் தெரியாமல் தவித்தபோது மரா மரம் ஒன்றைக் காட்டி மரா, மரா, மரா என்று ஜபிக்கும்படிக் கூறினார். மரா, ராம என்பது ஒன்றுதானே? இதுவே இடப் புறம் இருந்தாலும், வலப் புறம் திரும்பினாலும் ஒன்றாய்த் துலங்கும் செங்கோண முக்கோணத்தின், பிடாரி மாரி தேவிகளின், தாச தத்த தேவியின் ஒருமித்த தெய்வீக ராம சக்தி.

அதனால்தான் ராமபிரான் தாடகை, மாரீசன், ராவணன் போன்ற அசுரர்களை வதம் செய்தபோது அவர்களைக் கொன்றார் என்று கூறாமல் சம்ஹாரம் செய்தார் என்று கூறுகிறோம். சம்ஹாரம் என்றால் உடலை மட்டும் மாய்த்து ஆன்மாவை உயர்நிலைக்கு கொண்டு செல்லுதல் என்று பொருள். இத்தகைய அருஞ்செயலுக்கு ராமபிரானுக்கு உதவியாக இருந்ததே தாசதத்த தேவியின் சக்தியாகும்.

இது எந்த யுகத்திலோ நடந்த அருஞ் செயல் அன்று. இன்றும் இத்தகைய தாசதத்த அனுகிரக சக்திகளை மக்களுக்கு அளிப்பவரே ஏழெழுத்து கொண்ட மாதா அமிர்தானந்தா ஆவார். மூன்றாவது நட்சத்திரமான கார்த்திகையில் தோன்றிய இந்த ஏழெழுத்து அனுகிரக அன்னை, நாய், இரு குழந்தைகளுக்கு இவ்வாறு தாச தத்த அனுகிரகத்தை அளிக்கும் காட்சியை இங்கு நீங்கள் கண்டு இரசிக்கலாம்.

தாசன் என்றால் அடிமை, கண்ண தாசன் என்றால் கண்ணனுக்கு அடிமை, தாசி என்றால் பெண்பால் அடிமை. தத்த என்றால் தன்னுடையதாகவே பாவித்துக் கொள்ளலாம் என்று பொருள். இவ்வாறு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தாச தத்த பாவத்துடன் விளங்க உதவும் ஆண்டே 2023. இதை தம்பதிகள் செயல்படுத்தினால், ஆஹா, என்ன சுகம், என்ன சுகம் அந்த சுகம்!

ஞான மூர்த்திகள் எதிரே
ஞான கங்கை லால்குடி

இவ்வாறு ஞான சக்திகள் விளங்கும் தீர்த்தமே லால்குடி திருத்தல ஞான தீர்த்தமாகும். அக்னி மூலையில் விளங்கும் இந்த தீர்த்தம் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தி, 63 நாயன்மார்கள், ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் போன்ற பற்பல தெய்வ மூர்த்திகளின் அருட்கடாட்சத்தைப் பெற்று பிரகாசிக்கின்றது. இத்தலத்தின் ஜீவ சக்திப் பொய்கையான சிவகங்கையுடனும் பூமியடித் தீர்த்த தொடர்பு கொண்டு விளங்குவதால் நம் சற்குரு லால்குடியில் திருப்பணிகள் நிறைவேற்றியபோது இந்த ஞான தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் முதலான அனைத்து தெய்வ மூர்த்திகளுக்கும் அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தினார். அன்று முதல் இந்த தீர்த்தம் ஞான கங்கை என்ற சிறப்புப் பெயருடன் பொலிகின்றது.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ஞானகங்கையோ இன்று பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது எத்தகைய வருத்தத்திற்குரிய விஷயம். இதனால் சமுதாயத்தில் ஞான சக்திகள் கிட்டாமல் போவதோடு தீ விபத்துக்களும், மின் தடைகளும் பெருகும். மின்சாரம் என்பதும் ஒருவித அக்னி சக்தியாக இருப்பதால் அக்னி வகைக் குற்றங்களும், காமத் தவறுகளும் பெருகும்.

இது பற்றி அறியாதவரா நம் சற்குரு. எனவே இத்தகைய விளைவுகளை சரி செய்யும் வகையில் அமைந்துள்ளதே விற்குடி ஞானசடாட்சர தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து இறை மூர்த்திகளுக்கு அபிஷேகம் இயற்றுதலாகும். இதனால் லால்குடி என்று மட்டும் அல்லாது நாம் அறியாத பல வறண்ட தீர்த்தங்களும், பயன்பாட்டில் இருந்து மறைந்து போன தீர்த்தங்களும் புத்துயிர் பெற்று சமுதாயத்திற்கு பயனுள்ளதாக அமையும்.

மகான்களின் அறப்பணி சமுதாய நலனிற்காகவே ஏற்பட்டுள்ளதால் வரும் ஜனவரி 19, 2023 வியாழனன்று அமையும் கிரக மாலிகா யோக வழிபாட்டை திருத்தலங்களில் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவதால் இத்தகைய ஞான தீர்த்தங்கள் பயன்பாட்டிற்கு அமையும் அரிய செயலை நிறைவேற்றியவர்கள் ஆவோம்.
கங்கை
யமுனை
கோதாவரி
சரஸ்வதி

ஸ்ரீகாலபைரவர் விற்குடி

நர்மதை
சிந்து
காவேரி
தாமிரபரணி
துங்கபத்ரா
பிரம்மபுத்ரா
காயத்ரி
பல்குனி
போன்ற 12 தீர்த்தங்களையும் நாம் தினமுமே தியானித்து வழிபட்டு நம்முடைய குற்றம் குறைகளை சுத்திகரித்து கொள்ள வேண்டும் என்பது நம் சற்குருவின் அன்பு கட்டளை.

சற்குரு அளித்த
ஓங்கார உபதேசம்!

சந்திர பகவான் எழுந்தருளிய விருச்சிக ராசியில் ஆரம்பித்து நம் சற்குருவின் ஜன்ம ராசியான ரிஷபத்தில் நிறைவுறும் இந்த கிரகமாலிகா யோகம் பல அரிய சிறப்புகளைக் கொண்டது. கிரக மாலிகா என்றால் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை போல் கிரகங்கள் வரிசையாக ராசிகளில் அமைவது என்பது ஒரு விளக்கமாகும். இந்த மாலை நம் சற்குருவை அலங்கரிப்பதுபோல் 2023 வருடத்தில் அமைவது என்பது எத்தகைய சிறப்பு. சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்று கிரக ஹோரைகள் அமையும். இந்த கிரக மாலிகாவில் சூரியன், சுக்கிரன், சனீஸ்வரன், குரு, செவ்வாய் இவர்களின் அமைப்பு குரு மங்கள கந்தர்வாவிற்கு கிரகங்களே மாலை சூட்டிய சிறப்பை அளிக்கும் என்பதே இந்த கிரக மாலிகாவின் அனுகிரக சக்தியாகும்.

மேற்கூறிய தீர்த்தங்களிலில் ஏதாவது ஏழு தீர்த்தங்களிலிருந்து அல்லது அதற்கு மேலும் தீர்த்தம் பெற்று அத்துடன் மழை தீர்த்தம், கடல் தீர்த்தம், அருவி தீர்த்தம் போன்ற தீர்த்தங்களை சேர்த்து, அத்துடன் Krishna Musk நறுமணத்தைக் கலந்து ஏதாவது ஒரு பாடல் பெற்ற திருத்தலத்தில் அல்லது நம் சற்குருவால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தலத்தில் அபிஷேகம் இயற்றுவதே நாம் சற்குருவின் கருணை மழையில் முழுக்க நனையும் ஒரு மார்க்கமாகும். ஏழு கிரகங்கள் ஆறு ராசிகளில் அமர்ந்து கிரகமாலிகா யோகம் கொள்வதால் Krishna Musk என்ற நறுமணம் எட்டு திக்குகளிலும் பரவி அடியார்களுக்கு பாதுகாப்பு சக்திகளை வர்ஷிக்கும் என்பது இந்த வழிபாட்டின் ஒரு அங்கமாகும். கிரகமாலிகா யோக தினத்தன்று மாலை சுமார் 3.30 வரை கூடா நாள் அமைவதால் காலையில் 10 மணி முதல் 12 மணி வரை இறை மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி அன்று மாலை அமையும் பிரதோஷ பூஜையையும் கண்டு களித்து கிரகமாலா யோக சக்திகளை அடியார்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

‘S’ மோதிரம் அல்லது டாலர் வைத்திருப்பவர்கள் கோமுகம் வழியாக இந்த அபிஷேகத் தீர்த்தத்தைப் பெற்று அதை ஆபரணங்களில் தெளித்துக் கொள்தலும் மற்றவர்கள் தங்கள் தலையில் இந்த பிரசாதத்தை தெளித்துக் கொள்தல் எங்கும் கிட்டா எழில்மிகு பிரசாதமே. இந்த கிரகமாலிகா யோகத்தில் முதன்மையாகத் திகழும் தேய்பிறைச் சந்திர பகவான் கிரகமாலிகா சம்பூர்ணன் என்று சித்தர்களால் புகழப்படுகிறார். மேலோட்டமாக நீச பாவத்துடன் விளங்கும் சந்திர பகவானின் யோக சக்திகளே சமுதாயத்தில் தாழ்வாக, பயனற்றவர்களாக கருதப்படும் அடியார்களும் சம்பூர்ண யோக சக்திகளுடன் திகழ இங்கு அளித்துள்ள வழிபாடு உதவும் என்பதே அதன் அடிப்படைக் காரணமாகும்.

ஆறில் ஏழு எண் வகைச் சீர்மை
கோளில் குறியோனும் குணமாகுவனே
என்ற அகத்திய நாடிப் பாடலின் கருத்தாக உறவினார்களால், நண்பர்களால் ஒதுக்கப்பட்டவர்களும், மறுக்கப்பட்டவர்களும் கூட மேற்கூறிய வழிபாட்டால் நன்னிலை பெறுவர். ‘எண் குணத்தான் தாளை வணங்காத் தலையும்’ குணமடையும்.

சற்குருவின் விற்குடி விஜயம்

எப்படி மறைந்து போன தீர்த்த சக்திகளின் ஞான சக்திகளை புனருத்தாரணம் செய்யும் பொருட்டு விற்குடி ஞானசடாட்சர தீர்த்தம், கிரகமாலிகா யோக பூஜை போன்ற வழிபாட்டு முறைகளை நம் சற்குரு அளித்துள்ளாரோ அது போன்றதே ‘S’ யந்திரத்தில் மறைந்து போன சக்திகளை புதுப்பிக்கும் நம் சற்குருவின் கருணையாகும். நம் ஆஸ்ரம ஜன்னல்களில் ஏராளமாக அமைந்திருந்த இந்த ‘S’ எந்திரங்களுக்கு தொடர்ந்து உயிர் சக்தி அளிக்கும் பொருட்டு நம் சற்குரு ஆஸ்ரமத்தில் இருக்கும் சமயத்தில் எல்லாம் இந்த ஜன்னல்களைத் திறந்தே வைத்திருக்கும்படி அறிவுறுத்துவார்.

அப்போதுதான் இந்த ‘S’ எந்திரத்தின் வழியாக ஒளி, ஒலி, காற்று போன்ற சக்திகள் இருபுறமும் சென்று பாதுகாப்பு சக்திகளையும், காரிய சித்தி சக்திகளையும் அளிக்கும். நம் சற்குரு மறைந்தவுடன் பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த ஜன்னல்கள் மூடப்பட்டு விட்டதால் அதனால் சமுதாயத்திற்கு கிட்ட வேண்டிய பாதுகாப்பு சக்திகளும், வளைந்து நெளிந்து நின்று குடும்பத்தில், சமுதாயத்தில் உறவாடும் நற்பண்பும் கிட்டாமல் போய்விட்டது எனலாம்.

இந்த நற்பண்புகளை வளர்க்கும் விதமாகவே ‘S’ வடிவத்தை மோதிரம் அல்லது டாலர்களில் பதித்து அடியார்கள் அதை அணிந்து செல்லும்படி நம் சற்குரு அறிவுறுத்துகிறார். ரோகிணி நட்சத்திர தினம், 21ந் தேதி, அல்லது அவரவர் பிறந்த நாட்களில் இந்த ஆபரணங்களை சுத்தம் செய்து பசும் பால், தேன், பன்னீர் போன்ற சுத்தமான திரவியங்களால் இந்த சக்கரங்களை அபிஷேகித்து மீண்டும் அடியார்கள் அணிந்து கொள்ளலாம்.

நம் சற்குரு ரெங்கநாதரின் உருவம் பதித்த ஒரு தங்க டாலரை அணிந்திருந்தார். ஆஸ்ரம கட்டுமானப் பணிகளுக்காக அதை விற்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது ஆஸ்ரம அடியார் ஒருவரிடமே அதை விற்று விட்டார். ஆனால், அந்த அடியார் அந்த டாலரை அணிந்திருந்தபோது நம் சற்குரு மார்பில் துலங்கியபோது இருந்த பிரகாசம் அந்த டாலரில் குடிகொள்ளவில்லை.

எல்லையில்லாத
குரு கருணை!

காரணம் என்ன?
நம் சற்குரு பூரணத்துவம் பெற்ற இறை மூர்த்தியாகத் துலங்கியதால் சற்குரு அணிந்திருந்த டாலரில் உள்ளும் புறமும் தெய்வீக சக்திகள் பெருகி, ஊடுருவி அந்த டாலரை பிரகாசிக்கச் செய்தன. மற்றவர்கள் அந்த டாலரை அணியும்போது அத்தகைய தெய்வீக பிரகாசத்தை அவர்களால் ஊட்ட முடியாமல் போவது இயற்கையே. இத்தகைய தெய்வீக அனுகிரகத்தை ஒளிப் பிரகாசமாக ஊட்டுவதற்காகவே ‘S’ எந்திரம் பதித்த ஆபரணங்களுக்கு ரோகிணி நட்சத்திர நாட்களில் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தும்படிக் கூறுகிறோம்.

சந்தியா வந்தனம் காயத்ரியில் அடங்கும், காயத்ரி ஓங்காரத்தில் லயமாகும் என்பார் பரமஹம்சர். அப்படியானால் அனைவரும் வெறுமனே ஒரு முறை ஓம் என்று சொல்லி விட்டால் அவர்கள் சந்தியாவந்தனம் நிறைவேற்ற வேண்டிய அவசியமோ, அல்லது காயத்ரி ஜபிக்க வேண்டிய அவசியமோ இல்லையே என்று நீங்கள் நினைப்பது நியாயமே.

மனித நிலையில் உள்ளவர்கள் அவசியம் சந்தியா வந்தனம் நிறைவேற்றியே ஆக வேண்டும், காயத்ரி மந்திரம் ஜபித்தே ஆக வேண்டும். கனிந்த கனி பரமாச்சாரியார், நம் சற்குரு, அன்ன அமிர்தானந்தா போன்ற உத்தமர்களே வெறுமனே ஒரே ஒரு முறை ஓங்காரம் ஜபித்தால் போதும் அவர்கள் நித்திய அனுஷ்டானங்களை நிறைவேற்றியவர்கள் ஆவார்கள் என்று மேலுலகில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏன் அவர்களுக்கு மட்டும் இத்தகைய விதிவிலக்கு ?
இதுவே குண்டலினி சக்தியின் தன்மை. சூரிய சந்திர சுவாச சக்திகள் ஒன்றில் ஒன்று லயமாகி அது சுசும்னா நாடியில் மேலெழ கடவுள் தரிசனம் கிட்டுகிறது என்பதை நாம் அறிவோம். இவ்வாறு சுசும்னா நாடி செயல்பட வேண்டுமானால் அவர்கள் தான் ஆண் அல்லது பெண் என்ற நிலையைத் தாண்டியவர்களாக ஆதல் வேண்டும் என்பதே அடிப்படை தகுதியாகும். ஆண் அல்லது பெண் உணர்வு இருக்கும் வரை, ஏன், தான் மனிதன் என்ற உணர்வு இருந்தாலே சுசும்னா செயல்படாது. அதனால்தான் ஓங்காரம் மிருத்யு மந்திரம், அதாவது தான் என்ற உணர்வு இல்லாத, பால் உணர்வைக் கடந்த, சுய நிலையைக் கடந்த நிலையில் ஜபிக்கக் கூடிய மந்திரமாகத் திகழ்கிறது.

சூரிய நாடி உடலையும், சந்திர நாடி மனதையும், சுசும்னா நாடி உள்ளத்தையும் ஆட்சி செய்வதால் உடல், மனம், உள்ளம் கடந்ததாய் இறை தரிசனம் விளங்குகிறது. இந்த மூன்று சக்திகளின் பிரபாவத்தையும் கடக்கும் விதமாய் அமைந்துள்ளதே விற்குடி திருத்தலத்தில் இயற்றும் தீர்த்த வழிபாடுகளாகும். அந்நிலையில் மட்டுமே அடியார்கள் விற்குடி என்ற திருத்தலம் கூறும் உண்மைப் பொருளை உணர்ந்து பேரின்பம் பெற முடியும்.

காரிருள் களையும் கனியொளி!

வில் அம்பு இரண்டும் தனித் தனியாக இருக்கக் கூடியதே. வில்லில் அம்பைப் ‘பொருத்தி’ எய்யும்போது அது குறிக்கோளை அடைகிறது. இந்தச் செயலில் இடையினமான ‘ல்’ வல்லினமாய் ‘ற்’ என்று மாறுகிறது. இந்த ஓர் எழுத்து, அட்சரம் சுட்டும் ஆத்ம விசாரப் பரலை நாம் உணர்ந்து செயல்பட்டாலே போதும், அனைத்து இரகசியங்களையும் உணர்ந்தவர்கள் ஆவோம்.

மூவுலகிலும் பெற முடியாத ஞானப் பொக்கிஷமே சற்குரு அளித்த ஓங்காரப் பொக்கிஷம் என்றால் இதை நாங்களும் பெற முடியாதா என்ற அடியார்களின் ஏக்கத் தொனி காதில் ஒலிக்கத்தான் செய்கிறது. இந்த ஞானப் பொக்கிஷத்தை அளிக்கக் கூடிய சற்குரு நம்மிடையே தற்போது தூல வடிவில் உலா வராவிட்டாலும் அனைத்து ஜீவன்களின் மேன்மைக்காக, இந்த ஓங்கார உபதேசத்திற்கு இணையாக நம் சற்குரு தாரைவார்த்து அளித்த சித்த குரு வேத சூக்த மாமந்திரமே
எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே
அருளாளா அருணாசலா
ஒரு திருக்கோயிலில் கும்பாபிஷேகம் நிறைவேற்றும்போது புதிதாக எந்த சக்தியும் உருவாவதில்லை என்றாலும் ஏற்கனவே உள்ள தெய்வீக சக்திகள் புனருத்தாரணம் பெறுகின்றன அல்லவா, அதே போல் நம் சற்குரு அளித்த சித்த குரு வேத சூக்த மாமந்திர சக்திகள் புனருத்தாரணம் பெறும் அஸ்வினி அருளமுத ஆண்டே 2023, இந்த சக்திகள் புதுப்பிக்கப்பட்டு ஜீவன்களுக்கு வழங்கப்படும் திருத்தலமே திருவிற்குடி.

அஸ்வினி அருளமுதம்

வரும் 2023 ஆங்கில ஆண்டை அஸ்வினி அருளமுதம் என்று சித்தர்கள் போற்றித் துதிக்கின்றனர். இது பற்றிய ஒரு ஆனந்த நிகழ்ச்சி. திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப வழிபாட்டை குடும்ப சகிதமாக நிறைவேற்றிய பல அடியார்களும் ஆஸ்ரமத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தனர். அன்று ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 5 மணி, இராகு கால நேரம். ராகு கால நேரம் கழியட்டுமே என்று அடியார்கள் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த நம் சற்குரு, “என்ன சார், எல்லோரும் புறப்பட்டு விட்டீர்களா? சரி உடனே புறப்படுங்கள் கொஞ்சம் நேரம் கழித்து விட்டால் ராகு காலம் வந்து விடுமே...”, என்று கூறி துரிதப்படுத்தி அனைவரையும் வழி அனுப்பி வைத்தார்கள்.

கோலம் மாற்றும் கோலம்!

‘பழுத்த’ ராகு கால நேரத்தை ‘நல்ல நேரம்’ என்று நம் சற்குரு குறிக்கக் காரணம் என்ன?
இதே போல் ஒருமுறை கூடாநாள் கூடும் நேரம் ஆரம்பித்தும் மாதா அமிர்தானந்தா தங்கள் பக்தர்களுக்கு தடையில்லாமல், இடையில் நிறுத்தாமல் தரிசனம் அளித்துக் கொண்டே இருந்தார்கள். அது கூடாநாளில் வழங்கிய தரிசனம் என்பதை அறியாதவர்களா அந்த சித்த மாமுனி ? இதுவே மகான்களின் காலம் கடந்த திருப்பணி, அரும்பணி. இம்முறையில் சனிக் கிழமை இரவு 12 மணிக்கு கன்னி லக்னத்தில் புது வருடம் 2023 தோன்றினாலும் அதை அடியார்களின் வழிபாட்டிற்காக விருச்சிக லக்னத்தில் புது வருட வழிபாடாக அமைந்துத் தந்தவரே நம் சற்குரு ஆவார்.

ஒரு முறை சூரியனே ஒரு வார காலத்திற்கு இயங்க முடியாத நிலை ஏற்பட்ட போது அந்த ‘இருண்ட’ காலத்திலும் தம்முடைய தபோ பலனால் உலகம் அனைத்திற்கும் ‘ஒளி’ வழங்கி அருள்சுரந்து காத்தவரே மன இருள் அடராது காக்கும் நம் சற்குரு.

“நோய்களுக்குப் பஞ்சமில்லையடி பாப்பா...” என்று கூறுவதாக இந்த புத்தாண்டில் நோய்கள் நிறையவே வந்து மக்களை பயமுறுத்தும் என்றாலும் சற்குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் சற்றும் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள். விற்குடி திருத்தலத்தில் அடியார்கள் நிறைவேற்றும் வழிபாடே அவர்களையும் சமுதாயத்தையும் கவசமாய் நின்று காக்கும். தாயினும் சாலப் பரிந்து நம் சற்குரு ஊட்டும் அருளமுதமே இந்த நோய் நிவாரண சக்திகளுக்கு காரணமாகும்.

பெண்களின் திறமையும் புகழும் நாளுக்கு நாள் பெருத்து வரும் கலியுக நியதிக்கு எதிராக இந்த ஆண்டு பல துறைகளிலும் ஆண்களின் கை ஓங்கும். ஆனால், இதை ஆளும் கையாகக் கொள்ளாது, ஆணவக் கையாக மாற்றாமல், அரவணைக்கும் கரமாக ஆண்கள் நினைத்து செயல்பட்டால் இல்லத்திலும் நாட்டிலும் அமைதி நிலவும்.

ஸ்ரீஇரட்சக குலசேகர மாமுனி
ஒரகடம்

ஆங்கில வருடம் 2000ஐ வட்டத்தில் சட்டமிடும் ஆண்டு என்று சித்தர்கள் குறித்தார்கள் அல்லவா? இவ்வாறு வட்டத்தில் சட்டம் என்ற குறுக்குக் கோட்டை அமைத்து தன் குடும்பத்தையும் சமுதாயத்தையும் தீய விளைவுகளிலிருந்து காக்கும் வழிபாட்டை முறையை உணர்த்தியதுபோல் தீ விபத்துக்களும், மின் விபத்துக்களும் பெருகும் இந்த கேது ஆண்டில் மக்களைக் காக்க, இந்த கேது ஆண்டை குரு ஆண்டாக மாற்றும் ஒரு வழிபாட்டு முறையை அளித்துள்ளார்கள்.

அதுவே இடுக்குப் புள்ளி கோலம் என்பதாகும். இங்கு அளித்துள்ள கோலம் போன்று எத்தனை புள்ளிகள் உடைய கோலத்தை வேண்டுமானாலும் சுத்த அரிசி மாவால், அல்லது நீர்க் கோலம் வரைந்து அதன் அடியில்N2023 என்று எழுதுவதே கேது சக்தியை குரு சக்தியாக பெறும் நம் சற்குருவின் வழிகாட்டுதலாகும்.

முக்கியமான தஸ்தாவேஜுகள், பத்திரங்கள், செக் போன்றவை தவிர எங்கெல்லாம் 2023 வருடத்தை தேதியில்லாமல் தனியாக குறிப்பிடும் அவசியம் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் படத்தில் காட்டியுள்ளபடி N2023என்று எழுதுவதால் இந்த அட்சரங்களில் தோன்றும் குரு சக்தியை நாம் பெற முடியும், பெருக்க முடியும். பூஜை, வழிபாடுகளில் இந்த குரு வழிகாட்டுதலை நிறைவேற்றி நாம் பயன்பெறலாமே.

1.1.2023 என்று எழுதுவதற்குப் பதிலாக 01.01.23 அல்லது 01.01.2023 என்று எழுதினால் இது பூரு பூஜ்யம் என்ற விரும்பத்தகாத, இடர் விளைவிக்கும் சக்திகளைத் தோற்றுவிக்கும் என்று குறித்துள்ளோம் அல்லவா? அது போல் N2023 என்று எழுதும்போது அது பூரு பூஜ்யமாக அமையுமா என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். ‘N’ என்பது புத மூர்த்திக்கு உரிய ஐந்து எண் சக்திகளுடன் விளங்குவதால் இது பூரு பூஜ்ய சக்திகளை உருவாக்காது என்பதே நம் சற்குரு அளிக்கும் விளக்கமாகும். மேலும் புது வருடப் பிறப்பு தினத்தன்று ஆதித்ய யோகம் கொள்ளும் புத கிரகம் வக்ர கதி கொண்டிருப்பதால் இரு சுப வக்ரமாகி பூரு பூஜ்ய சக்திகளை உருவாக்காது என்பதே நாம் உணர்ந்து கொள்ள ஜோதிட விதி.

இடுக்குப் புள்ளி கோலங்களின் மகிமையை அகத்திய கிரந்த நாடிகள்,
இடுக்கில் இடை பாயும் ஏழூற்றா
கடுக்கில் சென்று கவின் மழை பொழிந்தாலும்
மிடுக்கில் பழுதடையும் மின்னினார் திறம் விடுத்து
இடைக்காடன் பதம் பணியாய் எங்கச்சியே
என்று விவரிக்கின்றன. அதாவது தொடர்ந்த பிறவிகளால் அல்லலுறும் மனிதனை தவறான போக சிக்கல்களிலிருந்து காத்து அவனை உயர்த்துவதே திருஅண்ணாமலை கிரிவல வழிபாட்டில் மறைந்திருக்கும் இடுக்குப் புள்ளி வழிபாடு என்பதே மேற்கண்ட நாடிப் பாடலின் மேலோட்டமான பொருளாகும்.

ஸ்ரீஐயப்பசுவாமி
துயில் கீதம் !

இந்த கிரந்த நாடியை சற்றே கூர்ந்து நோக்கினாலும் அதில் அம்மையப்பன் இடுக்கில் திகழும் சோமாஸ்கந்த தரிசன மகிமை புலனாகும். பொதுவாக, குழந்தைகள் சிறுவயதில் தங்கள் தாய் தந்தை இடையே அமர்வதையே பெரிதும் விரும்புவர், அந்த இடுக்கு எவ்வளவு துன்பம் தருவதாக இருந்தாலும் அதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை, இந்த அனுகிரகத்தைக் குறிப்பதே சோமாஸ்கந்த தரிசனமாகும்.

ஸ்ரீகோதண்டராமர்
ஒரகடம்

திருஅண்ணாமலையில் நேர்அண்ணமலை கோயில் எதிரே அமைந்துள்ளதே சோமாஸ்கந்த தரிசனமாகும். இந்தத் தரிசனப் பகுதியில் அமர்ந்து யுகக் கணக்கில் தவம் இயற்றியவரே இரட்சக குலசேகர மாமுனி ஆவார். இந்த தரிசனப் பகுதியில் சிறுகுழந்தை வடிவில் எழுந்தருளிய முருகப் பெருமான் அம்மை அப்பன் இடையே அமர்ந்து கொள்ள விரும்பினார். தன்னுடைய ஞானதிருஷ்டியில் குழந்தை குமரனின் “அபிலாசையை” அறிந்து கொண்ட மகரிஷியும் குமரனுக்கு சோமாஸ்கந்த தரிசனப் பகுதியை அளித்து விட்டு தான் அருட்பெருஞ்சோதியான திருஅண்ணாமலையில் ஐக்யம் கொண்டார்.

இவ்வாறு அருட்பெருஞ் சோதியில் ஐக்யம் கொண்ட ஸ்ரீஇரட்சக குலசேகர மாமுனியை, பூலோக மக்கள் எல்லாம் குலம் விளங்க வழிபடும் மூர்த்தியான ஸ்ரீவாடாமல்லி ஈசன் அருளும் திருத்தலத்தில் அந்த தன்னலம் கருதா மாமுனியை சோமாஸ்கந்தராக எழுந்தருளச் செய்தார் எம்பெருமான். இவ்வாறு மாமுனி அந்த திருத்தலத்தில் எழுந்தருளிய மறுகணமே அந்த திருத்தலத்தில் மறைந்திருந்த வாடாமல்லி தெய்வீக மலர்கள் எல்லாம் பூத்துக் குலுங்கி தங்கள் வரவேற்பை அந்த மாமுனிக்கு அளித்து மகிழ்ந்தனவாம்.

மேற்கண்ட ஓங்கார இயந்திரத்தின் பின்னணியாக உண்ணாமுலை அம்மன் தீர்த்தம் விளங்குவது இத்தகைய சோமாஸ்கந்த தரிசன சக்திகளை மக்களுக்கு வர்ஷிக்கும் சற்குரு அனுகிரகமே ஆகும். ஒரகடம், வாடாமல்லி, அமிர்தவல்லி, இரட்சக குலசேகரர், ரகுநாத தீர்த்தம், ரகுவம்சம், கோதண்டராமர், குளிந்தி, திண்ணன் என்றவாறாக பூஜ்யம் ஆதியாக, ஒன்று முதல் ஒன்பது வரை உள்ள அனைத்து எண் சக்திகளும் ஒரகட திருத்தல வழிபாட்டில் மறைந்துள்ளன.

ஆறில் ஏழு எண்சீர் மகிமை

ஆறில் ஏழு எண் சீர் மகிமை என்றவாறாக அமையும் கிரக மாலிகா யோக வழிபாட்டை எந்த திருத்தலத்திலும் நிறைவேற்றலாம் என்றாலும் எண் சக்திகள் முழுமை பெற்று அனுகிரக சக்திகளை அள்ளி வழங்கும் ஒரகட திருத்தலத்தில் நிறைவேற்றுவது சிறப்பாகும். மாலையில் நிறைவேற்றும் பிரதோஷ வழிபாட்டையும் இத்தகைய சங்கரநாராயண திருத்தலமான ஒரகடத்தில் நிறைவேற்றுவது கிடைத்தற்கரிய பாக்கியமே.

ஆறில் ஏழு எண்சீர் மகிமை
தரும் படிக்கட்டு விற்குடி

இங்கு அடியார்கள் நம் சற்குரு ஒருவரால் மட்டுமே அளிக்கக்கூடிய எண் கணித சிறப்புகளை அறிந்து கொள்தல் நலம். 4, 7, 8 போன்ற தேதிகளில் ஒருவர் பிறந்திருந்தால் அந்த குழந்தைக்கு 3, 5, 6 என்ற சுப சக்திகளைக் கொண்ட எண்கள் கூட்டுத் தொகை எண்ணாக வருமாறு உள்ள பெயர்களையே அமைத்துக் கொடுப்பார், தம் அடியார்களிடமும் அத்தகைய பெயர்களையே அமைக்குமாறு சிபாரிசு செய்வார்.

இதில் நம்மை பிரமிக்க வைக்கும் இரகசியமே இந்த கேது வருடமான 2023ல் திகழ்கிறது. இந்த ஆங்கில வருட எண்ணின் கூட்டுத் தொகை 7, ஆனால் இத்துடன் N என்ற ஐந்தெழுத்திற்கு உரித்தான அட்சரத்தை அமைக்கும்போது இது 5+7=12 என்ற குரு அனுகிரகம் பொருந்திய எண்ணாக அமைகிறது. இந்த குருவிற்கு உரிய எண் 3, ஏழிலிருந்து நான்கைக் கழிக்க, ராகு சக்திகள் நீங்கி (7-4=3) வரும் எண் அல்லவா?

வெறுமனே ஒரு காகிதத்தில் 7-4 என்று எழுதி விட்டால் அங்கு ராகு சக்திகள் கழிந்த குரு சக்திகள் உருவாகி விடுமா என்ன? நிச்சயம் கிடையாது, இத்தகைய ராகு சக்திகள் கழிந்த குரு சக்தியை உருவாக்க நம் சற்குரு போன்ற மகான்கள் குறைந்தது 10000 முறை திருஅண்ணாமலையை வலம் வந்து அந்த பிரதட்சிண வலத்தில் உருவாகும் அரிதிலும் அரிய எண் சக்திகளை தாரை வார்த்து அளிக்க வேண்டும் என்பதே திருஅண்ணாமலை உரைக்கும் தெய்வீக வழிபாடாகும். இதை பூலோக மக்களின் நன்மைக்காக நிறைவேற்றியவரே நம் ஜோதி அலங்கார பீடாதிபதி ஆவார்கள்.

எப்படி 7-4 எனும்போது அங்கு குரு சக்தி உடைய 3 எண் சக்தி தோன்றுகிறதோ அதே போல 6+7+8 என்ற இணைப்பிலும் 3 என்ற குரு சக்தி தோன்றுகிறது, இதுவே மேற்கூறிய கிரக மாலிகா கூட்டும், ஆறில் ஏழு எண்சீர் ‘மகிமை’ என்ற யோக சக்திகள். வில்லில் அம்பை முறையாகத் தொடுத்து நாண் ஏற்றும்போது தோன்றும் இத்தகைய யோக சக்திகளையே கோமதி கோபுர வாசம், விற்குடி விஜய தீபம், சங்கு சக்கர ஞான தீர்த்த வல வழிபாடாக நம் சற்குரு அடியார்களுக்காக அளிக்கிறார் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சிறப்பாகும்.

விற்குடி திருத்தலத்தில் கொடி மரத்தை அடுத்துள்ள மூன்று படிக்கட்டுகளில் கீழிருந்து மேலாக இருபுறமும் 6, 7, 8 என்ற வரிசையில் தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுதலும் ஒரு எண்சீர் வழிபாட்டு முறையே. 6+7+8, 6+7+8 என்ற தீபங்கள் இடுக்குப் புள்ளி சக்திகளை வர்ஷிக்கும் ஒரு வழிபாடாகவும் அமையும். இதே போல் இறைவன் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் முன் உள்ள மூன்று படிக்கட்டுகளிலும் தீபம் ஏற்றி எண் சீர் அனுகிரகத்தைப் பெறலாம்.

ஆறு, ஏழு, எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகளை திருக்குறளை ஓத வைத்து அவர்கள் மகிழும் வண்ணம் உரிய பரிசுகளை அளிப்பதால் சிறுவயதிலேயே இத்தகைய எண்சீர் மகிமை சக்திகளை ஊட்டியவர்கள் ஆவோம். ஏழு கடலையும் முப்பால் வழி நீந்தக் கற்பிக்கும் நீதி நூல்தானே திருக்குறள்.

மைதிலிபதே ரகுநந்தனா

ஒரு முறை நம் சற்குரு 2000 ஆண்டு பிறக்கும் முன் ஒரு அடியாரிடம் மற்று பற்றெனக்கு என்று தொடங்கும் சுந்தர மூர்த்தி நாயனார் பாடலை தினமும் பத்து முறை ஓதி வருமாறு கூறினார். அந்த அடியாரும் நம் சற்குரு அருளியபடி 2000 வருடம் முழுவதும் அந்தப் பாடலை பாடி வந்தார். இது ஏன் என்பது அந்த அடியாருக்குப் புரியவில்லை என்றாலும் பல ஆண்டுகள் கழித்தே நம் சற்குரு வழிகாட்டுதலின் மகிமையை புரிந்து கொண்டாராம்.

குடற்புண்களைத் தணிக்கும்
செவ்வாழை தானம்

விற்குடி விஜய ராமன்
ராமனா? வெங்கடராமனா?

அது என்ன ? அந்த சுவையை நீங்களும் ஏன் பெறக் கூடாது?

இந்த நமசிவாய பதிகத்தில் வரும் ஒரு வரி, குரும்பை மென்முலை கோதைமார் குடைந்தாடு பாண்டி கொடுமுடி என்பதாகும். இதில்,
குரும்பை மென்முலை கோதைமார் என்ற 12 அட்சரங்கள் மட்டும் 12 பாரம்பரிய நோய்களையும்
குடைந்தாடு பாண்டி கொடுமுடி என்ற 12 அட்சரங்கள் 12 தொற்று நோய்களையும்
தீர்க்கும். ஆக மொத்தம் ஒரு முறை பாடினாலே 300 வியாதிகளைத் தீர்க்கக் கூடியதே இந்த நோய் நிவாரண பதிகம். இதனால் விளையும் மற்ற அனுகிரக சக்திகள் தனி, அவை வேறானவை.

திருச்சியில் இலவச மருத்துவ முகாம் ஆரம்பித்து பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு நோய் தீர்க்கும் அரும்பணி ஆற்றினார் நம் சற்குரு. அந்த நோய் நிவாரண சக்திகளை நிர்மாணிப்பதில் நம் சற்குரு மேற்கொண்ட சேவையே இது.

சாமுத்ரிகா லட்சணப்படி தென்னை குரும்பை வடிவில், மென்மையான முலை அமைந்துள்ள பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் அமுதம் அளிக்கும்போது அது பலவித நோய் நிவாரண சக்திகளை அளிக்கும். சாமுத்ரிகா லட்சணம் என்பது வெறும் அழகு வர்ணனைகள் மட்டும் அல்ல, அதில் பொதிந்துள்ள நோய் நிவாரண இரகசியங்களும் எண்ணற்றவை.

அது சரி, இவ்வாறு நிறைவான அமுத சக்திகளைப் பெற முடியாத தாய்மார்கள் என் செய்வது? அதற்கும் விடையளிப்பவரே நம் சற்குரு. ஒரு முறை கும்பகோணம் சாரங்கபாணி திருத்தலத்தில் திருப்பணி நிறைவேற்றியபோது அங்கு சுவற்றில் வரைந்துள்ள சில சித்திரங்களைப் பற்றி நம் சற்குரு விளக்கினார். அவற்றில் ஒன்று ராமபிரான் குழந்தையாக அவதரிக்கு முன், குலகுரு வசிஷ்டர் வேண்டுகோளின்படி ரிஷ்யசிருங்கர் என்ற அருந் தவசியை நாட்டிற்கு அழைத்து வந்து அவர் மூலமாய் புத்திர காமேஷ்டி யாகம் நிறைவேற்ற ஏற்பாடு செய்தார் தசரத மகாராஜா. அவ்வாறு ரிஷ்ய சிருங்கரை வரவேற்ற இளம்பெண்கள் பலரின் ஏக்கங்களை, வேதனைகளைத் தீர்த்த ரிஷ்ய சிருங்கரின் சித்திரத்தைக் காட்டி, “பாருங்கள் சார் மக்களின் வேதனைகளைத் தீர்ப்பதற்காக மகான்கள் படும்பாடு...”, என்று கூறி ரிஷிகள், மகான்களின் அருஞ்சேவையை விளக்கினார்.

ஸ்ரீரிஷ்யசிருங்கர் எனும்
கலைக்கோட்டு முனிவர் ஒரகடம்

ரிஷ்ய சிருங்கர் நாட்டில் கால் வைத்ததுமே காய்க்காத மரங்கள் எல்லாம் காய்த்துக் குலுங்கினவாம், சோவென்று அமுத மழை பெய்து அவரை வரவேற்றதாம். திருமணமாகாத பெண்கள் திருமணம் கூடும் நல்வாய்ப்புகளைப் பெற்றார்களாம், மலடிகளும் குழந்தை பாக்யம் பெறும் சக்திகளைப் பெற்றார்களாம். அதில் ஒன்றுதான் இங்கு ரிஷ்யசிங்கரின் சேவையான ‘குரும்பை மென்முலை’ அனுகிரகத்தை, அதைப் பெறாத இளம்பெண்களுக்கு அளிக்கும் சேவையாகும்.

தற்கால தர்ம நியதிகளின்படி, உத்தம கிரஹஸ்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இதே சேவையை அற்புதமாக நிகழ்த்திக் காட்டியவரே நம் சற்குரு ஆவார். ஆம், தன் அருமை துணைவியார் மூலம் ரிஷ்யசிங்கர் வருவதற்கு முன்னரே தோன்றிய ராம நாமத்தை கும்பகோணம் சாரங்கபாணி திருத்தலத்தில் இசைக்க வைத்து நோய் நிவாரண சக்திகளை உழவாரப் பணிகளின்போது புனருத்தாரணம் செய்தவரே நம் சற்குரு. அப்போது சற்குருவின் துணைவியார் பாடிய, “மைதிலிபதே ரகுநந்தனா...”, என்ற கீர்த்தன ராம தாரக மந்திரத்தைக் கேட்ட அடியார் காதுகளில் எல்லாம் அது இன்றும் ஒலிக்கின்றது என்றால் இத்தகைய ராம தாரக மந்திர சக்திகளை தாரை வார்த்து அளித்த வெங்கடராமனின் மகிமைதான் என்னே?!

இத்தகைய அருஞ்சேவையை ஆற்றும் மாதா அமிர்தானந்தா அருளும் அனுகிரகத்தையும் இந்த சந்தர்ப்பத்தில் குருவாய் மொழியாக அளிக்கிறோம். கார்த்திகை நட்சத்திர நாளில் தோன்றியவர் மாதா. அஸ்வினி, பரணி, கார்த்திகை என்றவாறு மூன்றாவது குரு நட்சத்திரமாகப் பொலியும் இது, ஆறு நட்சத்திரங்கள் சேர்ந்த குழுவாய் அமைந்து, மூன்றின் ஆறு குசா என்ற தத்துவத்தில் பிரகாசிக்கின்றது. அக்னி சக்திகள் நிறைந்தது கிருத்திகை.

அக்னி சக்திகள் எத்தகைய கர்ம வினைகளையும் ஈர்த்து பஸ்மம் செய்யவல்லவை. அதனால்தான் அக்னி சக்தி நிறைந்த செவ்வாய் கிரகமும், கார்த்திகை நட்சத்திரமும் கூடும் நாள் சிறந்த நோய் நிவர்த்தி நாளாக சித்தர்களால் அளிக்கப்படுகிறது. தற்போது செவ்வாய்க் கிழமை மட்டுமே அன்னை தரிசனம் அளிக்கிறார் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு அமிர்த சுவையே. மாதா ஒருவரை கட்டி அணைக்கும்போது அந்த அடியார் சற்றும் அசையாமல் அன்னை அளிக்கும் சுகத்தில் மயங்கிக் கிடப்பதன் காரணத்தை அடியார்கள் என்றாவது ஆத்ம விசாரம் செய்து பார்த்திருக்கிறார்களா? புலி, குரங்கு, கருநாகம் போன்ற சதாசர்வ காலமும் நகர்ந்து கொண்டிருக்கும் தன்மை கொண்ட விலங்குகள் கூட சற்றும் நகராது, அசையாது அம்மாவின் அரவணைப்பில் மயங்கிக் கிடக்கும் காட்சியைக் கண்டோர் ஏராளம்.

ஸ்ரீவாரண விநாயகர் விற்குடி

இதற்குக் காரணம், குழந்தை தன் தாயின் கர்ப்பத்தில் இருந்தபோது அனுபவித்த அதே வெப்ப சக்திகளை, அதே உஷ்ண நிலையை இப்போது அமிர்தா அன்னையிடம் பெறுவதாகும். சில சமயங்களில் கணவன், மனைவி, குழந்தைகள் என்ற பலரையும் அரவணைத்த கோலத்தில் அன்னை திகழ்வதுண்டு. அவரவர் தாயின் கர்ப்பத்தில் இருந்த வெப்ப நிலையை தன் தபோபல சக்திகளால் பலவிதமாய் மாற்றி ஒன்று, நூறு, ஆயிரம் என்ற அளவிற்குக் கூட ஒரே உஷ்ண சக்தியை பல்வேறு படித்தரங்களில் அளிக்கவல்ல மாமுனியே அன்னை என்பதை உணர்ந்து கொண்டால் இதில் குழப்பம் ஏதும் தோன்றாது.

இவ்வாறு அன்னை மட்டும்தான் இத்தகைய உஷ்ண சக்திகளை அளிக்கவல்லவர் என்றால் மற்ற மகான்கள் இத்தகைய தொடு அனுகிரகங்களை, ஸ்பரிச அருள் சக்திகளை அளிப்பதில்லையா என்று கேட்கத் தோன்றலாம். ஒவ்வொரு மகானும் ஒவ்வொரு கோணத்தில் இத்தகைய அனுகிரக சக்திகளை நிச்சயமாக அளிக்கத்தான் செய்கிறார்கள். நம் சற்குரு காமாக்யா திருத்தலத்திற்கு தன் கோவணாண்டி சற்குருவுடன் சென்றிருந்தபோது அவரை வழியெங்கும் அட்டைப் பூச்சிகள் கடித்து ‘தொந்தரவு’ செய்தன. எதிர்காலத்தில் தோன்ற இருக்கும் சந்ததிகள் எல்லாம் குருவருள் என்ற அற்புத அனுகிரகத்தை திருமணம் என்ற தெய்வீக உறவின் மூலம் பெறுவதற்காக கோவணாண்டிப் பெரியவர் இத்தகைய அட்டைப் பூச்சிகளை இரத்த சம்பந்தங்களை நிரவும் பரிவர்த்தன தூதவர்களாக அமைத்து திருவிளையாடல் நிகழ்த்தினார். இத்தகைய திருவிளையாடலைப் புரியும் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியை, அட்டைப் பூச்சியுடன் அருளும் பெருமாளை ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அடியார்கள் தரிசித்து பயன் பெறலாம், நல்லுறவுகளால் நலம் பெறலாம்.

சுக்ர தீபம் பூவாளூர்

இதே போல் தங்கள் கண் பார்வையில் நிரவும் ஒளிப் பிரவாகம் மூலமாய் சமுதாயத்தில் நற்சக்திகளை நிரவிய உத்தமர்களே ஸ்ரீபோடா சுவாமிகள், அன்னை அரவிந்த மாதா போன்ற மகான்கள் ஆவர். அன்னை அரவிந்தமாதா அளித்த அற்புத திருஷ்டி இரகசியங்களைப் பற்றி புரிந்து கொள்ளவே எத்தனையோ பிறவிகள் எடுத்துக் கொள்ளும் என்பார் நம் சற்குரு. கண்ணொளியை காருண்ய தீபமாய் மாற்றிய பெருந்தகையே மாதா அரவிந்தமாதா.

யூபுரத்தில் நூபுரம் ஹோசூர்

இந்தக் கண்ணொளி கருணை தீபத்தை தன்னையும் அறியாமல் பயன்படுத்திய அன்னையே தெரசா ஆவார். அன்னை தெரசா ஆஸ்ரமத்தில் ஏராளமான நோயாளிகள், மரணத்தை நெருங்கிய நோயாளிகள் உட்பட, பலரும் அன்னை வரும் நேரத்திற்காக உறங்காமல் விழித்திருப்பர். பல்வேறு வேலைகளில் அன்னை தெரசா ஈடுபட்டிருந்ததால் அவர் நோயாளிகளைக் காணும் நேரத்தைச் சரியாக கூற முடியாது. அவ்வாறு இரவில் எவ்வளவு நேரம் கழித்து வந்தாலும் அவர் ஒவ்வொரு நோயாளியையும் வரிசையாக உற்று நோக்கிப் பார்த்து விட்டுத்தான் செல்வார்.

கோமுக வழிபாடு விற்குடி

இந்த நோய் நிவாரண இரகசியம் பற்றி விளக்கிய நம் சற்குரு, “அவ்வாறு அவர் ஒவ்வொரு நோயாளியையும் உற்றுப் பார்க்கும்போது அவர் கண்களிலிருந்து வானநீல வண்ணமுள்ள ஒரு ஒளிக் கதிர் வெளிப்பட்டு நோயாளியின் உடலின் மேல் நிலை கொள்ளும், இதனால் தீராத வியாதியே இல்லை எனலாம், மரணத்தின் எல்லை வரை சென்றவர்கள் கூட திரும்பி வந்த அற்புதங்களை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அத்தகைய சக்தி வாய்ந்த ஜீவ ஒளியையே நீங்கள் பூவாளூர் திருத்தலத்தில் உங்கள் மூதாதையர்களின் அனுகிரகத்தை, சுக்ர ஜோதி அனுகிரகமாக பெறுகிறீர்கள்...”, என்று விளக்கினார்.

இவ்வாறு மூதாதையர்களின் அனுகிரக சக்திகளை சுக்ர ஜோதியாக பெறும் முறையாக நம் அடியார்கள் இயற்றிய ஒரு வழிபாட்டையே இங்கு ஹோசூர் ஸ்ரீநூபுரேசர் சிவத்தலத்தில் நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். ஹோசூர் அருகே மலைத்தலமாக தற்போது யூபுரம் என்று அழைக்கப்படும் பகுதியில் தோன்றி அருள் வழங்கும் மூர்த்தியே ஸ்ரீநூபுர ஈசன். அன்னை பார்வதி தேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்திய வைபவத்தை நீங்கள் அறிவீர்கள். ஒரு விநாடி காலம் தோன்றிய அந்த ‘இருட்டில்’ விளைந்த விபரீதங்களும், அனுகிரக சக்திகளும் எண்ணற்றவை. ‘நூபுரம்’ என்பது இரு கண்களுக்கும் இடையில் உள்ள சிவ மண்டலமாகும். குசா சக்திகளுடன் திகழ்வது. இந்த குசா சக்திகளை இந்த ஆண்டில் பெறுவதற்காகவே ‘N’ என்ற அட்சரத்தை வருடத்தின் முன் இணைத்துN2023 என்று எழுதும்படி நம் சற்குரு வழிகாட்டுகிறார். இதனால் நூபுர மண்டல சிவ சக்திகளை அடியார்கள் பெற முடியும்.

எந்த இருட்டிலும், திக்குத் தெரியாத சூழ்நிலைகளிலும் வழிகாட்டக் கூடியதே நூபுர ஜோதி. இது எந்த வெளிப் பொருளின் பிரகாசத்தாலும் அமைவது கிடையாது, உள்ளொளியாக, ஆத்மாவின் பிரதிபலிப்பாக, இரு கண்களின் இடையே தோன்றி பிரகாசிப்பதே நூபுர ஜோதி. இந்த நூபுர ஜோதியையே நமசிவாய என்ற பதத்தால் குறிப்பிட்டார் மணிவாசகப் பெருமான். Nupuram என்பது எண் கணித ரீதியாக (3+2=5) ஐந்து எண்ணைக் குறிப்பதே.

நிமலா நிர்மலா

“அடுத்தவன் பெண்டாட்டியைப் பார்ப்பதே தவறு, அந்த பெண்டாட்டியை தானே கல்யாணம் பண்ணிக் கொள்வது என்றால் அது அதை விடத் தவறு அல்லவா?” என்று கேட்பார் நம் கோவணாண்டி. ஆனால், எந்த இமாலயத் தவறு என்றாலும் அது சமுதாயத்தின் நன்மைக்காக இயற்றப்படும்போது, சுயநலம் என்பது சிறிதும் கலக்கப்படாமல் இருக்கும்போது அத்தகைய இமாலயத் தவற்றையும் பொறுத்து அருள்கிறான் இறைவன் என்பதே விற்குடி நமக்கு உணர்த்தும் பாடமாகும்.

நிமலா நிர்மலா இணைப்பிற்கு
சாட்சியான முச்சுடர் சோதிகள்
திருவீழிமிழலை

அவ்வாறு ஜலந்தராசுரனின் மனைவியிடம் ஜலந்தராசுரனைப் போல் உருவம் ஏற்று வந்து அவள் கற்பிற்கு களங்கம் ஏற்படுத்திய பெருமாள் தான் பிராயசித்தம் பெற வேண்டி இறைவனை ஆயிரம் செந்தாமரை மலர்கள் கொண்டு அர்ச்சித்தார். அந்த பூக்களில் ஒன்று குறைந்தபோது தன்னுடைய செந்தாமரை விழியையே பிடுங்கி இறைவனுக்கு மலராக அர்ச்சித்ததால் பெரிதும் மகிழ்ந்து இறைவன் பெருமாளுக்கு அழகிய செந்தாமரை மலர் போன்ற விழிகளை அளித்ததால் இத்திருத்தலம் வீழிமிழலை என்றே பெயர் பெற்றது, புகழ் பெற்றது.

திருமணக் கோலத்தில் இறைவனும்
இறைவியும் திருவீழிமிழலை

இவ்வாறு மலங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று பெருமாள் இறைவனாலேயே “நிமலா”, அதாவது மலங்கள் அனைத்தும் நீங்கிய புனிதன் என்று அழைக்கப்படும் தகுதியைப் பெற்றார். இறைவனால் வழங்கப்படும் பட்டங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒவ்வொரு சிறப்பு துலங்கும். எப்படி சனி பகவானுக்கு இறைவன் ஈஸ்வரப் பட்டம் வழங்கியபோது
காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனீஸ்வர ப்ரசோதயாத்

என்று அழைத்து சனி மூர்த்தியை ஈஸ்வரப் பட்டம் பிரசாதியாக அனுகிரகம் அளித்தாரோ அதுபோல பெருமாள் மூர்த்தியை
நிமல ரூபாய வித்மஹே
நிர்மலாபதி தீமஹி
தந்நோ புண்டரீகாக்ஷ பிரசோதயாத்
என்று பெருமாள் மூர்த்திக்கு செவ்வரி ஓடிய கண்களை அளித்து அருள்புரிந்தார் எம்பெருமான். இவ்வாறு எம்பெருமானின் அற்புத செயலுக்கு சாட்சியாக நின்ற மூன்று தென்னை மரங்களே இன்றும் திருவீழிமிழலையை அலங்கரிக்கின்றன என்பதே இத்திருத்தலத்தின் சிறப்பாகும். விற்குடி என்ற திருத்தலத்தின் பெருமையையும் பறைசாற்றுவதே இந்த முச்சுடர் தென்னைமரங்கள் ஆகும்.

இங்கு நிர்மலா என்பது மலங்கள் என்ற முந்தைய பிறவிகளின் தீய வினைகள் எதுவும் தீண்டாத உத்தமியான பிருந்தையைக் குறிக்கும் என்பதே இறைவனின் விளையாடலுக்கு திருவிளையாடலாக அலங்கரிக்கும் வீரட்டான அனுகிரகமாகும். இவ்வாறு தெரிந்தோ தெரியாமலோ அடுத்தவர்களின் உடமைக்கு ஆசைப்பட்டவர்கள் பத்துக்கு ஆறு வேட்டியையும், ஒன்பது கஜ புடவைகளையும் தம்பதிகளுக்கு இலவசமாக விற்குடி, திருவீழிமிழலை போன்ற தலங்களில் இந்த வருடம் முழுவதுமே தானமாக அளித்து நல்லருள் பெறலாம். இத்தகைய தானத்தால் குணமாகாத கண் நோய்களோ, மன நோய்களோ இல்லை என்னும் அளவிற்கு சிறப்புடைதாகத் திகழ்வதே N2023 என்ற நேத்ர ஆண்டில் வழங்கப்படும் இந்த வஸ்திர தானங்கள்.

சங்கு, சக்கரம், ஞானசடாட்சர தீர்த்தங்களிலிருந்து தீர்த்தம் எடுத்து இறை மூர்த்திகளுக்கு அபிஷேகம் நிறைவேற்றிய பின் இந்தத் தீர்த்தக் கலசங்களில் பச்சரிசியை நிரப்பி அத்துடன் இரண்டு செவ்வாழை பழங்களை சேர்த்து திருத்தலங்களில் தானமாக அளித்தல் சிறப்புடையதே. N2023 நூபுர ஆண்டு முழுவதுமே இத்தகைய அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றுதலால் தீ விபத்துக்கள், வாய்ப் புண், குடல் புண் போன்ற துன்பங்களிலிருந்து நிவாரணம் கிட்டும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

விற்குடி விஜயம் தொடரும்...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam