பற்று முக்தி இரண்டின் காரணம் மனம் :: மாதா அமிர்தானந்தா

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மூதாதையர்கள் வழிபாடு

ஒரே ஒரு பித்ருவின் ஆசி கிடைத்தால் கூட போதும் நம் தெய்வீகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம் என்பார் நம் கோவணாண்டிப் பெரியவர். இவ்வாறு கடினமாகத் தோன்றும் அந்த முன்னோர்களின் ஆசியை எளிதில், மிக எளிதில் பெறும் வழி முறையை நமக்காகத் தேடித் தருபவரே சற்குரு ஆவார். நம் மூதாதையர்களின் வழிபாட்டிற்கு உகந்த பல திதிகளுள் தை அமாவாசையும் ஆடி அமாவாசையும் மிகவும் முக்கியமான தினங்களாக விளங்குகின்றன. அதிலும் இன்றைய சூழ்நிலையில் வரும் ஆடி மாதம் 23ந் தேதி ஞாயிற்றுக் கிழமை அன்று (8.8.2021) அமையும் அமாவாசை பல கோணங்களிலும் மிகவும் சிறப்புடையதாக அமைவதால் பக்தர்கள் இதை நன்முறையில் பயன்படுத்தி பயன்பெற வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். இந்த அமாவாசையின் மகத்துவத்தை மிக உயர்ந்த சித்தர்கள் நிலையில் இருந்து பார்க்க முடியாவிட்டாலும் சாதாரண மனிதக் கண்ணோட்டத்தில் பார்த்தாலே பல உன்னத தெய்வீக கருத்துக்கள் தெளிவாய்ப் புலப்படுதலே இந்த அமாவாசையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

அமாவாசை என்றால் இருள் சூழ்ந்ததுதான். அதிலும் பூசம் நட்சத்திரம் என்பதும், எட்டாந் தேதி என்பதும் சனி பகவானுக்குரிய இருளைக் குறிப்பதுதான். இவை இணைவதோ சதுஷ்பாதம் என்ற நான்கு கால்களைக் குறிக்கும் கரண சக்திளுடனும், வியதீபாதம் என்ற யோகத்துடனும். இந்த ஜோதிட விளக்கங்களை எல்லாம் ஒன்று கூட்டிப் பார்த்தால் நமக்குத் தெளிவாவது நான்கு கால்களுடைய, கரிய நிறம் கொண்ட மிருகத்திற்கு உணவு என்னும் சேவையை அளிப்பதால் நம்முடைய பிரார்த்தனைகள் அனைத்தும் நம் மூதாதையர்கள் அனுகிரகத்தால் நிறைவேறும் என்பதுதானே. திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஸ்ரீகஜாரண்யேஸ்வரர் திருத்தலம் இத்தகைய வழிபாடுகளுக்கு உரியது என்பது சொல்லாமலே நீங்கள் அறிந்து இன்புறும் சுவையைத் தருவதே. காட்டுப்பள்ளி என்பதும் ஆரண்ய ஈஸ்வரம் இரண்டும் ஒன்றே.

கஜராஜன் திருப்பத்தூர்

இந்திரனுடைய வாகனமான கஜேந்திரன் வெண்மை நிறத்தில் துலங்குபவன் என்றாலும் துர்வாசர் கொடுத்த இறை பிரசாதமான தாமரை மலரை அவமதித்து காலில் போட்டு மிதித்ததால் கஜேந்திரனின் ஒளி வீசும் வெண்ணிறம் மறைந்து கருநிறமுடைய யானையாக பூமியில் விழுந்தான் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டியது. எனவே வரும் ஆடி அமாவாசை தினத்தன்று திருக்காட்டுப்பள்ளி அருகில் ரெங்கநாதபுரத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஆனேஸ்வரர் திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றி யானைகள், குதிரைகள், பசு மாடுகள், எருமை மாடுகள், நாய்கள் போன்ற நாலுகால் ஜீவன்களுக்கு இயன்ற உணவு வகைகளை அளித்தலால் இது நம் மூதாதையர்கள் அனைவரின் ஆசியைப் பெற்றுத் தருவதாக அமையும். மாடுகளுக்கு கோதுமை தவிடு, அச்சு வெல்லம், அகத்திக் கீரை இவற்றை உணவாக அளித்தல் சிறப்பு, குதிரைகளுக்கு அவித்த கொள்ளையும், நாய்களுக்கு பொறை, பிஸ்கட் போன்றவற்றை அளித்தலும் சிறப்பே. அன்று மாலையில் உரிய தட்சிணையை அளித்து அனைவரும் யானையின் அனுகிரகத்தை தலையில் தவழும் யானையின் மூச்சுக் காற்றின் மூலம் பெறுதல் சிறப்பு. நம் சற்குரு ஒரு முறை இத்தகைய ஆயில்ய நட்சத்திரம் திகழும் தினத்தில் நம் அடியார் ஒருவருக்கு மதுரை மீனாட்சி அம்மன் திருத்தலத்தில் விளங்கிய யானையின் ஆசியைப் பெற்றுத் தந்தார் என்பதை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அபூர்வமாக ஆயில்யம் அமாவாசை சதுஷ்பாதம் இணையும் இந்த அரிய காலாமிர்த நேரத்தில் யானையின் அனுகிரக சக்திகளைப் பெறுதல் என்பது மிகவும் அபூர்வமே. இந்த ஆசியைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆயில்ய நட்சத்திர தினத்தன்றும் அடியார்கள் பெறுதல் சிறப்பே. குறிப்பாக எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படும் பெண்களும், ஆண்களும், எப்போதுமே ‘டென்ஷன்’ வாழ்க்கையை சந்திப்போரும் இத்தகைய ஆசிகளால் விரைவில் நன்னிலை அடைவார்கள். கொட்டாரம் என்பது யானைகள் இருப்பிடத்தையும், லாயம் என்பது குதிரைகள் தங்குமிடத்தையும், கொட்டில் என்பது மாடுகள் உறையும் இடத்தையும் குறிக்கும். வரும் ஆடி அமாவாசை தினம் சதுஷ்பாதம் கரணத்துடன் இணைவதால் ஆடிக் கொண்டே இருக்கும் இயல்புடைய யானைக் கொட்டாரத்தில் தர்ப்பண வழிபாடுகள் இயற்றுதல் என்பது மிகவும் அரிய பேறே. தர்ப்பணம் ஆரம்பிக்கும் முன் தர்பைகளை கட்டுக் கட்டாக யானையின் நான்கு கால்களிலும் கட்டி வைத்திருந்து தர்ப்பணம் நிறைவேறிய பின்னர் அந்த யானைக்கு போதுமான உணவு அளித்து விட்டு அந்த தர்பைகளை அவிழ்த்து தனியாக ஒரு இடத்தில் தீயிட்டு கொளுத்தி அந்த சாம்பலுடன் தேங்காய் எண்ணெய் அல்லது பசு நெய் சேர்த்து கண் புருவங்கள், இமை, நெற்றிக்குத் திலகம் என்றவாறெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். தலைக்கு சாயப் பூச்சாக பயன்படுத்திக் கொள்வதும் தவறு கிடையாது. இதனால் கண்ணேறு தோஷங்கள், காத்து கருப்பு தோஷங்கள் தீர்வதுடன் உடல் உள்ளுறுப்புகளும் குளிர்ச்சி பெறும். திருவாரூர் அருகில் உள்ள திருக்கொட்டார திருத்தலத்தில் இத்தகைய தர்ப்பணங்களை இயற்றுதல் மிகவும் சிறப்பாகும். யானக் கொட்டார வசதிகள் கிட்டாதோர் பசுக் கொட்டில்களிலும், குதிரை லாயங்களிலும் தர்ப்பணத்தை மேற்கூறிய முறையில் நிறைவேற்றுதலும் ஏற்புடையதே.

தில்லைஸ்தானம்

ஆடி அமாவாசையில் கனிந்த மூதாதையர்கள் ஆசியை சதுஷ்பாத தேவதைகள் மூலம் பெற்ற நாம் அந்த தர்பைகளை எரித்து கண் மை தயாரித்து அதை வெள்ளிக் குப்பிகளில் வைத்து நவராத்திரி தானமாக மற்ற மங்கள பொருட்களுடன் சேர்த்து அளித்தலும் சிறப்பாகும். தர்ப்பணத்தின்போது பிராணிகளின் காலில் கட்டிய தர்பைகளை மட்டும்தான் கண் மை தயாரிக்க பயன்படுத்த வேண்டும். யானை, குதிரை, பசு என்ற எந்தப் பிராணியின் காலில் கட்டப்பட்ட தர்பைகள் என்றாலும் அவை கஜகேசரம் என்ற சிறப்புப் பெயரைப் பெறும். கஜம் என்றால் அனந்தம், எல்லையில்லாதது என்ற பொருளையும் சுட்டும். எள் மூலம் தர்ப்பணம் அளித்த தர்பைகளை வழக்கம்போல் ஓடும் நதிகளில், சமுத்திர தீரங்களில் விட்டு விடவும். இத்தகைய தர்ப்பண வழிபாடுகளை திருவையாறு அருகில் உள்ள தில்லைஸ்தானத்தில் நிறைவேற்றி பிரிந்த தன் உத்தம மனைவியுடன் சேர்ந்தவரே சப்த ரிஷிகளில் ஒருவரான ஸ்ரீகௌதம மகரிஷி ஆவார்.

ஐந்து ஆறுகள் பொலியும் திருத்தலமாக அமைவதும், 2021 என்று ஐந்து எண்ணின் சக்தி பெற்ற வருடமாக இவ்வருடம் அமைவதும், கௌதமர் சப்தரிஷிகளில் ஐந்தாவதாக இடம் பெறுவதும் ஏதோ யதேச்சையாக அமைந்த பஞ்ச சக்திகள் கூடிய தெய்வீகம் கிடையாது என்பதை உணர்ந்தால்தான் நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் அனுகிரகங்களின் ஒரு துளியையாவது இரசிக்க முடியும். ஸ்ரீகௌதம மகரிஷி தன் மனைவியை கல்லாகும்படி சபித்தவுடன் தன் மனைவியின் இந்த நிலைக்கு தன்னையும் ஒரு கருவியாக்கிக் கொண்டு தன் மனைவியின் சாபம் தீர புவியெங்கும் வலம் வந்தார். அவ்வாறு வலம் வந்தபோது ஸ்ரீபாலாம்பிகை சமேத ஸ்ரீநெய்யாடியப்பர் விளங்கும் தில்லைஸ்தானத்தையே தனக்கு உரிய இடமாக தேர்ந்தெடுத்து இங்கு வழிபாடுகளைத் தொடர்ந்து இயற்றி வந்தார். அதன் பின்னர் ஸ்ரீராமபிரானின் திருவடிகள் பட்ட தன் மனைவி சாம விமோசனம் பெற்றவுடன் மீண்டும் தம்பதி சமேதராய் தில்லைஸ்தானத்திற்கு வந்து இத்தல இறை மூர்த்திகளுக்கு நன்றி தெரிவித்தார். இந்த வழிபாட்டில் ஸ்ரீகௌதம மகரிஷியுடன் தேவலோகத்து காமதேனுவும் சேர்ந்து கொண்டது என்பதே இத்தல வரலாறு சுட்டிக் காட்டும் சுவையாகும். நாமும் ஸ்ரீகௌதம மகரிஷியைப் பின்பற்றி அம்பிகைக்கு கறந்த பசும்பாலையும், இறைவனுக்கு பசு நெய்யையும் அபிஷேகித்து வழிபடுதலால் தம்பதிகள், உறவினர்கள், நண்பர்கள் இடையே உள்ள எத்தகைய கருத்து வேற்றுமையும் மறைந்து ஒற்றுமை பெருகும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று கூடுவர்.

பொதுவாக, எண் ஒன்பது பூரணமானது, முருகப் பெருமானுக்கு உரியது, செவ்வாய்க் கிழமையும் முருகப் பெருமானுக்கு உரியது, இவ்விரண்டும் இணையும் ஆடி பெருக்கு அன்று தில்லைஸ்தான கோபுரத்தில் ஆண் மயிலின் தரிசனம் பெறுதல் என்பது குடும்ப ஒற்றுமைக்கான மூதாதையர் அனுகிரகத்தைப் பெற்றுத் தருவது. இந்த அற்புத அனுகிரகத்தையை நம் சற்குருவின் பிரசாதமாக இங்குள்ள வீடியோவில் அளிக்கிறோம். இந்த அரிய மயில் வாகன வலத்துடன் ஜோடி மைனாக்களின் தரிசனமும் குடும்ப ஒற்றுமையைக் குறிப்பதாக அமைவதால் இத்தகைய ஒரு தரிசனம் தில்லைஸ்தானத்தில் பெறுவதற்கு உங்கள் மூதாதையர்களுக்கு நீங்கள் எந்த அளவு கடமைப்பட்டுள்ளீர்கள். இத்தயை தரிசனப் பலன்கள் எல்லாம் நம்முடைய சூக்கும சரீரத்தில் பதிந்து நாம் ஏற்றும் தீபங்களிலும் நிரவி நிற்கும் என்பதற்கு சாட்சியாக இருப்பவையே இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் தீப பிரகாசமாகும். இந்த தீபப் பிரகாசத்தில் நீங்கள் தரிசனம் செய்வது குரு மங்கள கந்தர்வ சக்திகளே என்பதை உறுதி செய்வதே மாலையில் மேற்கு திசையில் ஒளிரும் சுக்ர பகவானின் அனுகிரக சக்திகளாகும். ஸ்ரீஅகத்திய பெருமானால் தங்க வாரணம் என்று அழைக்கப்படும் அகத்திய நட்சத்திரத்தின் (Canopus star) ஒலியும் ஒளியும் இந்த ஆடி பெருக்கு தீபங்களில் தெற்கு திசையில் குருபாத அனுகிரகமாக ஒன்றுவதே நம் பூலோக மக்கள் பெற்ற பெரும் பாக்கியமாகும். தீபங்களின் அசைவை உற்று நோக்கினால் இந்த உண்மையைத் தெளிவாக நாம் உணர்ந்து கொள்ளலாம்.

கோக்ஷீர தர்ப்பணம்

பிலவ வருடத்திற்கான ஒரு சிறப்பான தர்ப்பண முறையை சித்தர்கள் அறிவித்துள்ளார்கள். பசும்பால் தர்ப்பணம் என்றும் வழங்கப்படும் இந்த தர்ப்பணம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் தில்லைஸ்தான நெய்த்தானத்தில் இயற்றப்பட வேண்டிய தர்பபண பூஜையே. பல குடும்பங்களிலும் குழந்தைகளும் பெரியோர்களும் காரண காரியமின்றி திடீரென நோய்வாய்ப்படுதல், பலரும் திடீரென விபத்து, நோய் போன்ற காரணங்களால் மரணமடைதல், நகைகள் உடைமைகள் கொள்ளை போதல், வயதாகியும் அனைத்து தகுதிகள் இருந்தும் ஆண்கள் பெண்களுக்கு திருமணம் ஆகாமல் இருத்தல் போன்ற பல பிரச்னைகளும் குடும்பத்தையும், சந்ததியினரையும் வாட்டுவதுண்டு. இதற்கு எளிய தீர்வாக அமைவதே கோக்ஷீர தர்ப்பணம் ஆகும்.

காமதேனுவின் பூஜை
தில்லைஸ்தானம்

ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி என்ற இந்த ஐந்து மாதங்களில் வரும் அமாவாசைக்கு முதல் நாள் ஆவூர், பேரூர், பட்டீஸ்வரம், ஆச்சாள்புரம், கரூர் போன்று காமதேனு, பட்டி, ஆச்சா என்ற தெய்வ மூர்த்திகள் வழிபட்ட தலங்களில் ஏதாவது ஒன்றில் தர்ப்பணத்தை இயற்ற வேண்டும். அடுத்த நாள் அமாவாசை அன்று தில்லைஸ்தானத்தில் தர்ப்பணங்களை நிறைவேற்ற வேண்டும். கோதுமையை வறுத்து, அரைத்து மாவாக்கி அதில் சிறிது நீர் விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி, இந்த உருண்டைகள் அறுபதை ஒரு வாழை இலை மேல் வைத்து தர்பை சட்டம் அமைத்து தர்ப்பணம் இடுதலே கோஷீர தர்ப்பண முறையாகும். தொடர்ந்த இந்த தர்ப்பண பூஜையால் சந்ததிகளைத் தொடரும் பிரச்னைகளுக்கு உரிய நிவாரணம் காட்டப் பெறும். நிவாரணம் மட்டுமே இந்த தர்ப்பண முறையில் காட்டப் பெறும். உரிய நிவாரண முறைகளை முடிந்த வரை பூர்ணமாக நிறைவேற்ற வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் கடமையாகும். இத்தகைய பிரச்னைகள் தங்கள் குடும்பங்களில் இல்லாவிட்டாலும் சமுதாய பூஜையாக இந்த தர்ப்பணத்தை இயற்றுதல் சிறப்பாகும். குறிப்பாக வீட்டில் இருந்து வேலை என்பதை ஒரு காரணம் காட்டி பல மணி நேரங்கள் அதிகப்படியாக வேலை செய்யும் நிலையிலுள்ள கம்ப்யூட்டர் எஞ்சினீயர்கள் இத்தகைய தர்ப்பணத்தால் நற்பலன் பெறுவார்கள். கம்ப்யூட்டருக்கும் இந்த உருண்டைகளின் எண்ணிக்கைக்கும் உள்ள தொடர்பை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்தல் சிறப்பே. தர்ப்பண நிறைவில் கோதுமை உருண்டைகளை இலை, தர்பைகளோடு சேர்த்து ஆற்றில், ஓடும் நீரில் விட்டு விடுதல் நலம். ஜனக மகாராஜா நிர்வாணமான இளம் பெண்களுடன் சரசமாடிக் கொண்டிருந்தார் என்ற நிகழ்ச்சியைப் பற்றி ஒருமுறை நம் சற்குருவிடம் வினவியயோது, நம் சற்குரு தமக்கே உரிய இளஞ்சிரிப்புடன், “நைனா, நீ ஜனக மகாராஜாவைப் பற்றி புரிந்து கொண்டது அவ்வளவுதான்.

கோதூளியும் கஜதூளியும்
இணையும் அற்புதம்

ஜனக மகாராஜா நிர்வாணமாக மற்ற பெண்களுடன் சரசமாடிக் கொண்டிருந்தார் என்பது கிடையாது, மற்ற இளம் பெண்கள் அவருடன் நிர்வாணமாக விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய மகாபாரத நிகழ்ச்சியாகும்.” இந்த வார்த்தைகளை நம் சற்குரு கூறிக் கொண்டிருந்தபோது அவர் கண்கள் காலம் கடந்த ஒரு யுகத்தில் இலயித்திருந்தன என்பதை நாமும் உணர முடிந்தது. விவேகானந்தர், பகவான் ரஜினீஷ் போன்ற அப்பழுக்கற்ற துறவிகளைச் சுற்றி பல இளம் பெண்கள் கூடியிருந்தனரே தவிர இந்த மகான்கள் எவர் பின்னும் சென்றதில்லை என்பதை நினைவு கூர்க. அப்போதுதான் கோக்ஷீர தர்ப்பணம் என்பது பற்றி நம் சற்குரு அடியார்களுக்கு விளக்கிக் கூறினார். நம் சற்குரு அளித்த அதே முறையில் தற்போது அந்த விளக்கங்களை அளிக்க முடியாவிட்டாலும் மேற்கூறிய முறையில் தர்ப்பணம் அளித்தலால் தற்போதும் அடியார்கள் நம் சற்குரு விரும்பும் அந்த பலன்களைப் பெற முடியும். சாதாரணமாக 12 வருடங்கள் தொடர்ந்து தினந்தோறும் தர்ப்பணம் அளித்தால் மட்டுமே இந்த கோக்ஷீர தர்ப்பணத்தின் பலன்களை பூரணமாகப் பெற முடியும் என்றாலும் சற்குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள் அவரவர் நம்பிக்கையின் ஆழத்தைப் பொறுத்து இவ்வருட இறுதிக்குள் அதாவது 2021 வருடத்திற்குள் கோக்ஷீர தர்ப்பணத்தின் பூரணமான பலன்களைப் பெறலாம் என்பது உறுதி. தற்போது உள்ள சூழ்நிலையில் யானைகளை திருத்தலங்களிலோ கொட்டாரங்களிலோ காண முடியாவிட்டால் யானையின் சுழுமுனை ஆசியை எப்படிப் பெறுவது என்று ஒரு சில அடியார்கள் விளக்கம் வேண்டியுள்ளனர். அடியார்கள் முயற்சி செய்தும் யானையின் ஆசிகளைப் பெற முடியாவிட்டால் பசுக்கள், குதிரைகள், நாய்கள் போன்ற நாற்கால் ஜீவன்களுக்கு வயிறார உணவிட்ட பின் மாலையில் கன்றுடன் கூடியிருக்கும் பசுவிற்கு சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிப்பதால் யானையின் ஆசீர்வாத சக்திகளை கோதூளி பிரசாதமாக அளிக்க காமதேனு லோகத்து சதாஸ்து தேவதைகள் முன்வந்துள்ளனர். பின் அடியார்கள் ஐயம் கொள்ள காரணம் ஏதும் உண்டோ ?

கௌதமர் என்றால் தூய அறிவினன் என்று பொருள். தூய அறிவு என்று எதைக் கூற முடியும் ? இதில் சந்தேகம் உண்டா என்ன ? இறைவனைப் பற்றிய ஞானம், அறிவு ஒன்றுதானே தூய அறிவாக இருக்க முடியும். ஒவ்வொருவரும் தங்களுடைய பெயருக்கு ஏற்ற வகையில் இருத்தலே, திகழ்தலே உண்மையான அறிவு என்பதாகும். இதை அடைவதற்காகவே நம் சற்குரு ஒவ்வொரு அடியாரையும் சுயநாம ஜபம் என்று தன்னுடைய பெயரையே திரும்ப திரும்பக் கூறும் முறையை வலியுறுத்தி வந்தார்கள். இவ்வாறு தன்னுடைய பெயரின் மகிமையை தான் அறிந்திருந்தாலும் அவ்வாறு தான் அறிந்ததை உலக மக்களுக்கும் பறைசாற்றி அவர்களையும் நன்னெறிப்படுத்தும் முகமாக ஒரு தீர்த்த யாத்திரையை மேற்கொண்டார் ஸ்ரீகௌதம மகரிஷி. ஆடி மாதம் என்பது சந்திர பகவான் ஆட்சி பெறும் கடக ராசிக்குரிய மாதம்தானே. இம்மாதம் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைப் பெறுதல் என்பது எத்தகைய கிடைத்தற்கரிய பேறு ? திரமான சிம்ம ராசியில் சந்திரனுடன் செவ்வாய், புதன், சுக்கிரன் இவர்கள் துலங்க இவர்களுடன் வக்ரகதி கொண்ட குரு பகவானும் இணைதல் என்றால் எத்தகைய யுகங்களுக்கு ஒரு முறை இத்தகைய அற்புத கிரக சங்கமத்தை நாம் பெற முடியும் ? இத்தகைய சக்தி வாய்ந்த ஒரு மூன்றாம் பிறையை தரிசனம் செய்த பின்னரே தன்னுடைய தீர்த்த யாத்திரையைத் துவக்கினார் ஸ்ரீகௌதம மகரிஷி. எதற்கு ?

ஸ்ரீஆனேஸ்வரர் ரெங்கநாதபுரம்

மூன்றாம் பிறையாக விளங்கும் திருத்தலங்களுடைய இறை மூர்த்திகளைத் தரிசிப்பதற்கு. ஆம், அதுவே,
1. செங்கல்பட்டு ஸ்ரீபட்டு விநாயகர்
2. ஒரகடம் ஸ்ரீவாடாமல்லி ஈஸ்வரர்
3. கூவத்தூர் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள்
4. அரசர்கோயில் ஸ்ரீவரதராஜப் பெருமாள்
5. மதுராந்தகம் ஸ்ரீஏரிகாத்தராமர்
என்ற ஐந்து மூர்த்திகள் எழுந்தருளிய தலங்களாகும். இந்த தீர்த்த யாத்திரையின் சிறப்பை அகத்திய கிரந்தங்கள்
பட்டு ஆதியாக மதுரமீறாக
ஓரகடமே என்றும் தொடரும் சீரகடமாக
கூவத்தூரில் ஏகமாக கூவி நின்றால்
அரசனும் ஆண்டி ஆவானே
என்று புகழ்ந்து உரைக்கின்றன. இங்கு அரசனும் ஆண்டி ஆவானே என்பது எத்தகைய அரச போகங்களில் மூழ்கி உழல்பவர்களும் இறையருளால் அனைத்து சுக போகங்களையும் மற்ற உயிர்களின் மேன்மைக்காக தியாகம் செய்து ஆண்டி என்ற கோலத்தில் முருகப் பெருமான் கொண்ட உயர் நிலையை அடைவார்கள் என்பது கருத்து. ஐந்து திருத்தலங்களை சுட்டும் அகத்திய கிரந்தமும் பஞ்சாட்சரமாய் பொலிவதே இந்த நாடியின் சிறப்பாகும். மேற்கண்ட ஐந்து திருத்தலங்களையும் ஸ்ரீகௌதமர் என்ன வரிசையில் தரிசனம் செய்தார், என்ன வரிசையில் இத்தலங்களில் மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்து அனுகிரகம் பெற்றார் என்பது சித்தர்களால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் காஞ்சி பரமாச்சாரியார் இந்த நியதியை ஒட்டியே இத்தலங்களில் எல்லாம் மூன்றாம் பிறையை தரிசனம் செய்தார் என்பதும் பெரியவாள் பல நாட்கள் தங்கி ஆராதனை செய்து வழிபட்ட ஸ்ரீஆனேஸ்வரர் திருத்தலமே ஆடி அமாவாசை தர்ப்பணத்திற்கு உகந்த முதல் தலமாக சித்தர்களால் சிபாரிசு செய்யப்பட்டது என்பதும் நாமறிந்து கொள்ள வேண்டிய ஒரு சித்த சுவையே.

ஸ்ரீவலஞ்சுழி விநாயகர்
ரெங்கநாதபுரம்

பௌர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற உற்சவங்களின்போது பல நாட்கள் நம் சற்குரு தம்முடைய ஓய்வு அறையில் தங்கி இருப்பது உண்டு. பாத்திரங்கள் கழுவும் பகுதி, ஆண் பக்தர்கள் தங்கும் அறைகளுக்கு செல்பவர்கள், உணவருந்துவோர் நம் சற்குருவின் இருப்பிடத்தைத் தாண்டியே செல்ல வேண்டி இருப்பதால் பல அடியார்களும் நம் சற்குரு தன்னுடைய அறையில் உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாரா என்பதை அறியா நிலையில் கூட அவரை மானசீகமாக இருகை கூப்பி வணங்கியே செல்வது உண்டு. இது பற்றி ஒருமுறை நம் சற்குருவிடம் வினவியபோது, சற்குரு மிகவும் அமைதியாக, “இதை நீங்கள் அடியேன் தற்பெருமைக்காகச் சொல்கிறேன் என்றோ, எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு மனிதன் விழித்திருக்கும்போது அவன் எதிரில் செல்பவர்கள் மரியாதை நிமித்தமாகவோ அல்லது வேறு எந்தக் காரியங்களுக்காகவும் அவனுக்கு வணக்கம் தெரிவிப்பது இயற்கையே. ஆனால், ஒரு மனிதன் உறங்கும்போது அவனுக்கு மனதார வணக்கம் தெரிவிக்கிறீர்கள் என்றால் அவன் நிச்சயம் கடவுளைக் கண்டவனாகத்தான் இருக்க வேண்டும்,” என்றார்கள். இதுவே சற்குருமார்களின் உயர்ந்த நிலை. மாதா அமிர்தானந்தாவைப் பற்றியும் ஒரு பக்தர் இவ்வாறுதான் குறிப்பிட்டுள்ளார். “அம்மா ஆயிரக் கணக்கான பக்தர்கள் இடையேதான் அமர்ந்துள்ளார்கள். ஆயிரக் கணக்கான பக்தர்கள் அம்மாவைத் தரிசித்துக் கொண்டு இருந்தாலும் அம்மாவின் மனமோ எங்கோ, தனியாக (இறைவனிடம்தான்?!) இலயித்திருப்பதாகத்தான் நமக்குத் தோன்றும்.” மனிதர்கள் உறங்கும்போது சவமாக இருப்பதாகத்தான் பெரியோர்கள் எண்ணுகிறார்கள். உறங்குவதுபோலும் சாக்காடு என்பதுதானே வள்ளுவர் வாக்கு. மகான்களுக்கு உறக்கம் என்பதே இல்லை என்று உணர்த்துவதும் அவர்கள் பெறும் இத்தகைய மரியாதைகளே. இரவு வேலைகளுக்குச் செல்பவர்களும், தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவர்களும், சரியாக தூக்கம் வராமல் தூக்கத்தில் உளறிக் கொட்டுபவர்களும் ரெங்கநாதபுரத்தில் உள்ள ஸ்ரீவலஞ்சுழி விநாயகரை வணங்கி வழிபடுதலால் சிறிது சிறிதாக தங்கள் நிலையில் நல்ல முன்னேற்றம் காண்பர். ஒரு முறை பெரியவாளின் மடத்தில் சமையலறையில் பணிபுரியும் ஒரு வேலைக்காரனை தான் உறங்கும் அறையிலேயே படுத்துக் கொள்ள சம்மதித்தார் பெரியவாள். சில நாட்கள் கழித்த பின்னர் அந்தப் பணியாளரை வேறு ஒரு அறைக்குச் செல்லுமாறு கூறவே, அந்தப் பணியாளும் பெரியவாளின் உத்தரவிற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் வேறு ஒரு அறைக்கு சென்று தூங்கிக் கொண்டிருந்தார். ஆனாலும் பெரியவாள் தன்னை அவருடன் தூங்க அனுமதிக்காத காரணத்தால் மிகவும் மனக் கலக்கம் அடைந்திருந்தார். அனைத்தும் அறிந்த கனிந்த கனிக்கு இது தெரியாதா என்ன ?

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ரெங்கநாதபுரம்

சில நாட்கள் அப்படியே செல்ல விட்டு பின்னர் ஒரு நாள் அந்த வேலைக்காரனை அழைத்து, “உன்னை ஏன் வேறு ஒரு அறையில் சென்று தூங்குமாறு கூறினேன் என்று உனக்கு விளங்கவில்லை அல்லவா? இதோ பார்...” என்று தன்னுடைய வேட்டியை தொடைக்கு மேல் உயர்த்தி காண்பித்தாராம். அந்த பணியாள் கண்ட காட்சி அவர் கண்களில் நீரைப் பெருக்கி விட்டதாம். அப்படி என்ன காட்சியை அவர் கண்டார் ? கொசுக்கள் கடித்து கடித்து பெரியவாளின் இடது தொடை முழுவதும் இரத்தக் காடாய் மாறி இருந்தனவாம். இந்த இரத்தக் காட்டை மற்றவர்கள் காணக் கூடாது என்பதற்காக அதைத் தன் காஷாய வேட்டியால் மறைத்திருந்தார், ஆனால் கொசுக்கடியின் வேதனைகளை மற்றும் தான் ஒருவரே அனுபவித்துத் தீர்த்தாராம். எனவேதான் அவரை பெரியவாள் என்று வெறுமனே கூறாமல் “மகா” பெரியவாள் என்று அழைக்கிறோம். இவ்வாறு உறக்க நிலையில் மனிதன் அனுபவிக்க வேண்டிய பல கர்ம வினைகளை அனுபவிப்பவையே யானைகள் என்பதை ஒரு சிலரே அறிவர். பெரியவாள் ஒரு சில நாட்களே கஜ ஆரண்ய திருத்தலத்தில் தங்கி இருந்தாலும் எத்தனை லட்சம் மக்களின் உறக்க வினைகளைத் தீர்த்தார் என்பது பெரியவர்களுக்கே வெளிச்சம். மரத்தை மறைத்தது மாமத யானை, மரத்தில் மறைந்தது மாமதை யானை என்பதற்கு எத்தனையோ விளக்கங்கள் உண்டு. இங்கு கொசுக்களின் ஆரவாரத்தை தன் காஷாய வேட்டியில் மறைப்பது போல் யானைகளும் தங்கள் கொசுக்கடிகளை மண் பூச்சுகளால் மறைக்கின்றன என்பதே நம்மை வியக்க வைக்கும் ஆன்மீக மருந்தாகும். அப்பர் ஒயின்ஸ் என்று ஒரு சாராயக் கடைக்கு பெயர் வைத்திருந்தனர். அதே போல் பெரியவாளின் அனுகிரகத்துடன் நடக்கும் திருமணங்கள் என்று சொல்லி பலரும் திருமணப் பத்திரிகைகளில் அச்சடிக்கின்றனர். இத்தகைய செயல்கள் எல்லாம் அந்தப் பெரியோர்களின் நாமத்திற்கு வேதனைகளையே அளிக்கின்றன என்பதை அத்தகையோர் புரிந்து கொள்வதில்லை. சாராயம் என்பது பல உயிர் கொலைக்கு நிகரான ஒரு செயல், வரதட்சிணை வாங்கும் திருமணமோ, பட்டு வஸ்திரங்களைப் பயன்படுத்தும் திருமணமோ சமுதாயத்தில் எத்தகைய வேதனைகளை உண்டாக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. இது வரையில் எப்படி நடந்திருந்தாலும் இனியாவது இத்தகையோர் மனந்திருந்தி தங்கள் காலம் கடந்த செயலுக்கு மனதார வருந்தி ரெங்கநாதபுரம் திருத்தலத்தில் பூரண கொழுக்கட்டைகளை ஸ்ரீவலஞ்சுழி விநாயகருக்குப் படைத்து தானமளித்து வருதலால் தங்கள் தவறுகளுக்கு உரிய பிராயசித்தங்களைப் பெறுவர்.
ஆயிரம் மூன்றாம் பிறைகளுக்கு மேல் தரிசனம் செய்து அந்த தரிசனப் பலன்களை எல்லாம் உலகத்தவர் நன்மைக்காக அர்ப்பணித்த உத்தமர்களுள் ஒருவரே காஞ்சி பெரியவாள் ஆவார். இந்த உத்தம மகானே மூன்றாம் பிறை தரிசனம் செய்ய இயலாமல் போகும்போது அதற்கு உரிய பிராயசித்த வழிபாட்டு முறைகளையும் அருளியுள்ளார். வரும் 10ந் தேதி ஆகஸ்டு மாதம் அமையும் மூன்றாம் பிறை தரிசன நாள் இவ்வாறு என்ன முயற்சி செய்தும் வானில் மூன்றாம் பிறையை தரிசனம் செய்ய முடியாதவர்களுக்கே உரிய பலன் அளிக்கும் என்றாலும் மற்றவர்கள் அடுத்து வரும் மூன்றாம் பிறைகளை தரிசிக்கும் வழிமுறைகளைப் பெறுவார்கள் என்பது உண்மையே. வரும் மூன்றாம் பிறை 10.8.2021 செவ்வாய்க் கிழமை அன்று தோராயமாக மாலை 7 மணி முதல் 8 மணி வரை அமைவதால் அவரவருக்கு வசதியாக உள்ள இடத்தில் மாலை ஏழு மணிக்கு வடக்கு நோக்கி நின்று கொள்ளவும். அந்த இடமோ திருத்தலமோ மூன்றாம் பிறை கண்ணுக்குத் தெரியும் இடமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதைப் பற்றி கவலை வேண்டாம்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

ஓம் தத்புருஷாய வித்மஹே அம்ருத ரூபாய தீமஹி
தந்நோ சந்த்ரமௌலீஸ்வர பிரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை மிருகி முத்திரையுடன் வாய் விட்டு கூறி விட்டு ஒரு முறை ஸ்வஸ்தி நமஸ்காரம் நிறைவேற்றவும். மீண்டும் மீண்டும் மாலை ஏழு மணி முதல் எட்டு மணி வரை தொடர்ந்து காயத்ரி மந்திர பாராயணத்தையும் நமஸ்காரங்களையும் நிறைவேற்றி வரவும். இத்தகைய முத்திரைகளையும் நமஸ்காரங்களையும் எந்த அளவிற்கு நம்பிக்கையுடன், சிரத்தையுடன் நிறைவேற்றுகிறீர்களோ அந்த அளவிற்கு இதுவரை உங்கள் வாழ்வில் விட்டுப் போன அனைத்து மூன்றாம் பிறை தரிசனங்களின் பலன்களையும் ஒட்டு மொத்தமாகப் பெறுவீர்கள். மிக மிக அரிதாக சித்தர்களால் அளிக்கப்படும் இந்த பிராயசித்த வழிபாட்டு முறையை மேற்கொண்டு பலனடையுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம். நமஸ்கார நிறைவில் அச்யுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ என்று மூன்று முறை கூறி வலது உள்ளங்கையில் நீர் வார்த்து அருந்தி, நாராயணாய நமஹ என்று கூறி நான்காம் முறை நீரை தரையில் விடவும். இந்த ஆசமன வழிபாட்டால் மூன்றாம் பிறை தரிசன பலன்கள் பூரணமாய் நம் உடல் நாளங்களில் நிரவும். பலரும் பலவிதமான ஆசமன மந்திரங்களை கூறும் வழக்கம் இருப்பதால் அவரவர் பின்பற்றும் முறைகளைக் கையாளுவதும் ஏற்புடையதே.
கவட்டை கால் வழி உதட்டில் உரை வழி
பரட்டை பரமானால் இரட்டை இனிதாகுமே
என்ற அகத்திய நாடி மிருகி முத்திரை, ஸ்வஸ்தி நமஸ்காரம், மூன்றாம் பிறை தரிசனம், அப்போதைய கிரக சஞ்சாரகம், ஆசமன வழிபாடு இவை அனைத்தையும் இணைக்கும் சூத்திரமாகும். இந்த நாடியின் உட்பொருளை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தால் அடுத்த எந்த உடல் சுத்தி வழிபாடும் தேவைப்படாது. அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் நூறோ, ஐந்நூறோ நமஸ்காரங்கள் நிறைவேற்றி பின் ஒரே ஒரு முறை ஆசமன வழிபாட்டை நிறைவேற்றினால் போதுமானது. உடல் நலம் மிகவும் குன்றிய நிலையிலிருந்த நம் சற்குருவோ நம் அடியார்களின் நலனுக்காக மிகவும் சிரமப்பட்டு 100 ஸ்வஸ்தி நமஸ்காரங்களுக்குக் குறையாமல் 2007ம் ஆண்டு ஆவணி அவிட்டம் நாளன்று திருஅண்ணாமலையில் அடியார்கள் நலனுக்காக நிறைவேற்றினார்கள் என்றால் நம்முடைய கடமை எவ்வளவு சிறப்புடையதாக இருக்க வேண்டும் ?

ஆரண்யத்தில் வழிகாட்டும்
பித்ரு படிக்கட்டுகள்

சிறு வயது முதலே நாம் நமது பெற்றோர்களின் துணையை நாடித்தான் அனைத்தையும் தெரிந்து கொள்கிறோம். பெற்றோர்களின் பெற்றோர்களாகிய உத்தம நல்வழியை அடைந்த உத்தமர்களையே நாம் பித்ருக்கள், பித்ரு தேவர்கள் என்றெல்லாம் அழைக்கிறோம். இத்தகைய முன்னோர்களின் அனுகிரகத்தைப் பெற்றுத் தர வழிகாட்டுவதே கஜாரண்யம் என்னும் தற்போது திருக்காட்டுப்பள்ளி அருகிலுள்ள ரெங்கநாதபுரம் திருத்தலமாகும். அனைத்து பித்ரு மூர்த்திகளுக்கும் ரெங்கநாதர் என்னும் பெருமாளே தலைவராக விளங்குவதால் ரெங்கநாதபுரம் தன் வழித் தோன்றல்கள் அனைவருக்கும் ஆரண்யம் என்னும் அடர்ந்த காட்டில் திக்குத் தெரியாமல் தடுமாறுவோர்க்கு நல்வழி காட்டி அருள்புரின்றார் என்பதை நாம் உணர உதவுவதே ஸ்ரீஆனேஸ்வரர் திருத்தலத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாட்டின் மகிமையாகும். இத்தகைய வழிபாடுகளுக்கு உரிய எளிய சாதனமாக நம் சற்குருவால் அருளப்பட்டதே பித்ரு படிக்கட்டாகும். நம் ஆஸ்ரமத்தில் திருஅண்ணாமலை சிவசக்தி தரிசனம் எதிரே அமைந்து இன்றும் பக்தர்களுக்கு எல்லாம் அருள் வழி காட்டிக் கொண்டிருப்பதே, அருளமுதம் கூட்டிக் கொண்டிருப்பதே பித்ருக்கள் படிக்கட்டுகள் ஆகும். இங்குள்ள படத்தில் காட்டியுள்ளதுபோல் வெள்ளியிலோ அல்லது தேக்கு, சந்தனம், பலா, வேம்பு, மா பலகைகளில் படிக்கட்டுகளை அமைத்து வழிபடுதலால் கிட்டும் பலன்களை அமோகம். இத்தகைய வழிபடுகளுக்கு உரிய தலமாக ரெங்கநாதபுரம் திகழ்வதுடன் இதுவரை இத்தகைய வழிபாடுகளை மேற்கொள்ளாதோர் இந்த வழிபாடுகளை தொடங்குவதற்கு வரும் 10.8.2021 மூன்றாம் பிறை தரிசன நாளும் சிறப்பானதே. நம் கையில் பித்ரு படிக்கட்டுகள் இல்லையே, என்ன செய்வது என்று குழப்ப நிலையில் உள்ளவர்கள் வெள்ளி, தங்கம், வெள்ளியில் மரப்படிக்கட்டுகள் அமைத்து வாங்குவதற்கு உரிய நேரத்திற்காக காத்திருக்காமல் அந்தப் படிகள் கிட்டும்போது நாம் வழிபாட்டை ஆரம்பிப்போம் என்ற சங்கல்பத்தை நிச்சயம் இந்த மூன்றாம் பிறை தரிசன நாளில் திடமாக எடுத்துக் கொள்ளலாமே. மனமிருந்தால் அனைத்திற்கும் ஆனேஸ்வரர் திருத்தலத்தில் மார்க்கமுண்டு, உண்டு.

செங்கல்பட்டு ஸ்ரீபட்டு விநாயகர்

மேற்கூறிய ஒரகடம் போன்ற மூன்றாம் பிறைத் தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்ய வேண்டும் என்ற அவசியமே இல்லை. அவரவர் சூழ்நிலை, விருப்பதைப் பொறுத்து ஒவ்வொரு தலத்தையும் ஒரு நாளில் தரிசனம் செய்வதும் ஏற்புடையதே. ஆனால் இத்தலங்களை வெவ்வேறு நாட்களில் தரிசனம் செய்வதாக இருந்தால் அதற்கு முன் ஒவ்வொரு முறையும் நம் சற்குருநாதர்கள் அருளிய முறையில் ஸ்ரீபட்டு விநாயகரை தரிசனம் செய்து உத்தரவு பெறுதலே ஏற்புடையதாகும். சென்னை ராயபுரம் அங்காளி கோயிலிலிருந்து புறப்பட்டு எப்போது செங்கல்பட்டைத் தாண்டி செல்வதாக இருந்தாலும் ஸ்ரீபட்டு விநாயகர் தரிசனம் பெறாது கோவணாண்டிப் பெரியவர் இருந்ததே இல்லை. “சிறுவன்” பெரியவனாக வளர்ந்து திருஅண்ணாமலை தரிசனம், அன்னதானம் என்ற பல காரணங்களுக்காக செங்கல்பட்டு வழியாக வரும்போதும் போகும்போதும் ஸ்ரீபட்டு விநாயகர் தரிசனத்தை நம் சற்குரு கைவிட்டதே கிடையாது.

ஸ்ரீபட்டு விநாயகர்
செங்கல்பட்டு

ஒரு முறை நம் கோவணாண்டியுடன் இங்கு வந்தபோது சாலைப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால் நேரே கோயிலுக்கு அவர்களால் வர முடியாமல் போகவே பல சாக்கடைக் குழிகளைத் தாண்டிக் கொண்டு பள்ளம், மேடுகளைத் தாண்டி வர வேண்டி இருந்தது. வழக்கம் போல் இந்த இடர்பாடுகளைக் கண்டு தளர்ந்த சிறுவன், “ஏன் வாத்யாரே இந்த ஒரு தடவை மட்டும் நேரே நாம் திருஅண்ணாமலைக்குப் போய் வரலாமே ? ஏன், இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் ...”, என்று கேட்டு விட்டான். அவ்வளவுதான் பெரியவர் நரசிம்ம உக்ரகம் எப்படி இருக்கும் என்பதை சிறுவனுக்கு தன் முகத்திலேயே காட்டி விட்டார். அப்புறம் என்ன நரசிம்மர் உக்கிரம் தணிந்து சாந்தம் பெற்ற வரலாற்றை எழுதினால் அது வேறு ஒரு புராணமாக அல்லவா மாறிவிடும் ? சாந்தமடைந்த பெரியவர், “நைனா, உனக்கு பட்டு விநாயகர் சரித்திரம் தெரியாது. அவன் சின்னப் பிள்ளையா இருந்தபோதிருந்தே என் கூட விளையாடியவன் ...”, என்று கூறவே ஒரு பெரிய கதை கேட்கும் சுவாரஸ்யத்தில் சிறுவன் பெரியவரை நெருங்கி அமர்ந்து கொண்டான். பாலனாக இருந்த பிள்ளையாருக்கு தினமும் காமதேனு பாலைச் சுறக்க அன்னை பார்வதி அதில் சிறிது கல்கண்டைச் சேர்த்து தங்கக் குவளையில் அளித்து வந்தாளாம். ஒரு நாள் அந்த கல்கண்டு வைத்திருந்த பாத்திரம் காணாமல் போய் விடவே அந்தப் பாத்திரத்தைத் தேடி பார்வதி தேவி அங்கும் இங்கும் அலைந்தாளாம். தன் அன்னை அலைவதைக் கண்டு வருந்திய பால விநாயகர், “சரி, சந்திரனில்தான் அமிர்தம் இருக்கிறது என்று அன்னை கூறுவாளே. அமிர்தச் சுவைதானே வேண்டும் என்று எண்ணி சந்திரனைப் பிடித்து குவளையில் போட்டு அதைத் தங்கக் கரண்டியால் கலக்க ஆரம்பித்து விட்டாராம். குழந்தையின் அதிசய செயலைக் கண்டு பிரமித்த பார்வதி தேவி சந்திரனின் தீனக் குரலைக் கேட்டு அங்கு விரைந்து வந்து சந்திரனை விடுவித்தாளாம். அன்று முதல் சந்திர ஒளியில் பொன்னிற ஒளிப் பிரகாசம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் சந்திர ஒளியில் பீதாம்பர அமிர்தம் என்ற ஒரு வகை அமிர்த சக்தியும் கூடியதாம். “இதை எல்லாம் அடியேன் பக்கத்துல இருந்து பார்க்கிற பாக்கியம் கிடைச்சுதடா, கண்ணு, அந்த பிள்ளையார்தான் இங்கு நீ பார்க்கிற பட்டு விநாயகர். அப்பத்தில இருந்து அடியேனைக் காப்பாத்தி வர்ற தெய்வம்டா இவன்,” என்று செங்கல்பட்டு விநாயகருக்கும் கோவணாண்டிக்கும் உள்ள தெய்வீக பிணைப்பை ருசிகரமாய் தெரிவித்தாராம் கோவணாண்டி.

ஸ்ரீசந்திரசேகர சுவாமி
சந்திரசேகரபுரம்

ஸ்ரீசௌந்தர நாயகி அம்மன்
சந்திரசேகரபுரம்

செங்கல்பட்டு விநாயகருக்கு ஸ்ரீபாலவிநாயகர், ஸ்ரீபாலேந்திர விநாயகர், ஸ்ரீஅமிர்த கணபதி என்ற நாமங்கள் அமைவதற்கு இதுவே மூலகாரணம் ஆகும். சிவபெருமான் மூன்றாம் பிறைச் சந்திரனைச் சூடி சந்திரமௌலீஸ்வரராக அருள்புரிவதை நீங்கள் அறிவீர்கள். எம்பெருமான் மட்டும் அல்லாது விநாயகர், பார்வதி, பெருமாள், ஆயுர்தேவி போன்ற அனைத்து தெய்வ மூர்த்திகளுமே சந்திர பகவானின் மூன்றாம் பிறையைச் சூடிய தரிசனத்தை அளிப்பார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது ? இவர்கள் அனைவரும் ஒரே ஒரு மூன்றாம் பிறையைச் சூடியவர்கள் அல்லர். ஒவ்வொரு மூன்றாம் பிறைச் சந்திர பகவானின் அனுகிரகத்தையும் சந்திர பகவான் இந்த தெய்வ மூர்த்திகளின் திருவடிகளில் அர்ப்பணிக்க அதை ஏற்று, இந்த மூர்த்திகள் தங்கள் அனுகிரக சக்திகளுடன் இணைத்து அளிக்கிறார்கள். இதுவே பணிந்தவனே பக்தன் என்றவாறு சந்திர பகவானின் ஈடு இணையற்ற பக்தியைச் சுட்டிக் காட்டுகின்றது. நாம் ஒவ்வொரு முறை தரிசிக்கும் மூன்றாம் பிறைச் சந்திரனும் ஒவ்வொரு இறை மூர்த்தியின் ஜடாமுடியை, கூந்தலை அலங்கரிக்கின்றது என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் இறை இரகசியம்.
சந்திரச்சூட சந்திரச்சூட சந்திரச்சூட பாகிமாம்
சந்திரச்சூட சந்திரச்சூட சந்திரச்சூட ரட்சமாம்
என்று ஒவ்வொரு முறை மூன்றாம் பிறை சந்திரனை தரிசனம் செய்து மேற்கண்ட துதியைக் கூறும்போதோ அல்லது எந்த சந்திர துதியைக் கூறினாலும் அந்த மூன்றாம் பிறையை அப்போது ஏற்கும் மூர்த்தி தன் அனுகிரகத்தை செங்கல்பட்டு ஸ்ரீபட்டு விநாயகர் மூலம் அருள்கின்றார் என்பதே சித்தர்கள் அளிக்கும் அமிர்த சுவை. பரதநாட்டியம் ஆடும் பெண் குழந்தைகளுக்கு முத்துப் பரல்கள் பதித்த சதங்கைகளை தானமளித்தலால் சுவையில்லாத திருமண வாழ்க்கை சுவை பெறும்.

ஸ்ரீஆடிதபசு அம்மன்
லால்குடி

10.8.2021 அன்று நிகழ்ந்த அற்புத கிரக சங்கம இரகசியத்தின் மகிமை பற்றி பக்தர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். வக்ரம் பெற்ற குருவின் ஏழாமிட பார்வையைப் பெறும் மூன்றாம் பிறைச் சந்திரன் அந்த இடத்தில் ஆட்சி பெறும் சூரிய பகவானுடன் பரிவர்த்தன அம்சங்களுடன் துலங்குவதால் இந்த பரிவர்த்தனையில் பஸ்மமாகும் தாம்பத்ய பிரச்னைகள் எத்தனை எத்தனையோ. குறைநிறைபிறை தரிசனம் என்ற நாமம் கொண்ட அபூர்வமான இந்த மூன்றாம்பிறை தரிசனம் எத்தகைய மனப் போராட்ட பிரச்னைகளையும் சீர்செய்யக் கூடியதாகும். உதாரணமாக, பல வருடங்களுக்கு முன்பு இத்தகைய கிரக சங்கமத்தைப் பற்றி நம் சற்குருவின் முன்னிலைக்கு ஒரு நிகழ்ச்சி கொண்டு வரப்பட்டது. நம் சற்குருவிடம் சீடராக இருந்த ஒரு அடியார் தன் மனைவியுடன் அவருடைய சொந்தக்காரர் ஒருவர் இல்லத்திற்கு சென்றிருந்தார். எப்போதுமே பெண்கள் தங்கள் சொந்தத்திற்கு முன்னுரிமை வழங்குவது சகஜமாக இருப்பதால் அந்த அடியார் பல மணி நேரம் எதிர்பார்த்தும் அவர் மனைவி அங்கிருந்து வருவதாக இல்லை. இதற்கிடையில் தன்னுடைய மைந்தனை இரு முறை தூது அனுப்பியும் பார்த்து விட்டார், ஊஹூம் பலனில்லை. அந்த அம்மணி திரும்பி வரும்வரை அந்த அடியார் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. வீட்டிற்குத் திரும்பியதிலிருந்து ஏதேதோ காரணம் காட்டி இருவருக்கிடையில் சச்சரவுகள் தோன்றின. உண்மையான காரணம் மனைவி கணவனை “மதிக்கவில்லை” என்பதே. அப்புறம் என்ன ? வழக்கம் போல் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜான நம் சற்குருவிடம் கேஸ் தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பினரையும் தனக்கே உரிய பாணியில் பொறுமையாக கேட்டுவிட்டு, “இந்த அம்மாவிடம் எந்த குறையுமில்லை, பிறந்த வீட்டுச் சொந்தக்காரர்களின் வீட்டில் ஒரு பெண் எவ்வளவு நேரம் இருந்தாலும் அது தவறு கிடையாது, தன்னுடைய பையனை தூதாக அனுப்பியும் மனைவி அதை மதிக்கவில்லை என்றால், பையன் “தன்னுடையவன்” என்ற அகம்பாவம்தானே அனைத்து சச்சரவிற்கும் அடிப்படையாக ஆகி விட்டது. இது உண்மையா ?” என்று கேட்டு ஒரு குறும்புப் புன்னகையை உதிர்த்தார். அவ்வளவுதான், நம் அடியார் முகத்தில் அசடு வழிந்தது என்பதைக் கூறவும் வேண்டுமோ? இவ்வாறு 20 வருடங்களுக்கு மேல் நெருங்கிப் பழகிய ஒரு அடியாரின் நிலையே இந்த அளவிற்கு நான் என்ற அகந்தையால் பலமாக பாதிக்கப்பட்டது என்றால் சற்குருவின் கருணை நிழலையே அறியாதவர்களின் நிலை எப்படி இருக்கும் ?

குறைபிறைநிறை தரிசனம்
உய்யக்கொண்டான்மலை

இவ்வாறு ஆடி பூரம் இணையும் மூன்றாம் பிறை தரிசன நாளில்தான் திருத்தவத்துறை அம்மன் தன் தவம் கனிந்து இறைவனுடன் ஒன்றினாள். இந்த அற்புத அனுகிரகத்தைக் குறிப்பதே இங்கு நீங்கள் காணும் ஆடிப்பூர அம்மன் தரிசனம். எத்தனையோ யுகங்களுக்கு முன் அம்பிகை இத்தகைய அனுகிரகத்தைப் பெற்றாலும் இன்றும் இந்த அனுகிரகத்தை, பிறை சூடிய சந்திர மௌலீஸ்வரி தரிசனத்தை, நம் அடியார்கள் பெற்றார்கள் என்பதையே இங்கு நீங்கள் வாசித்து பயன் பெறுகிறீர்கள். குறைநிறைபிறை தரிசனம் என்று இந்த மூன்றாம்பிறை தரிசனம் வழங்கப்படுவதன் காரணத்தை நீங்களே யூகித்து அறிந்து கொள்ளக் கூடியதுதானே ? இல்லற வாழ்வில், தம்பதிகள் இடையே, ஆண் பெண் குலத்தில், முதலாளி தொழிலாளிகள் இடையே, பலதர உறவுகளில் விளங்கும் மக்களிடையே விளங்கும் எத்தகைய ஏற்றத் தாழ்வுகளையும் நிறைவு செய்யும் வல்லமை பெற்றதே இந்த மூன்றாம் பிறை தரிசனம் ஆகும். இத்தகைய அனுகிரக சக்திகளை அடியார்கள் அனைவரும் பூரணமாகப் பெறுவதற்கே நம் சற்குரு ஆசமனீய வழிபாட்டை குரு அனுகிரகமாக இதில் இணைத்தார்கள் என்பதும் இந்நேரம் அடியார்களுக்குப் புரிந்திருக்கும் அல்லவா ?

சர ஜீவம், திர ஜீவம், நாத ஜீவம் என்ற மூன்று வித அபூர்வ அமிர்த சக்திகளுடன் துலங்குவதே உஜ்ஜீவ நாதர் என்னும் திருநாமத்தில் அழைக்கப்படும் திருச்சி உய்யக்கொண்டான்மலையில் விளங்கும் சிவலிங்க மூர்த்தத்தின் மகிமையாகும். ஆடி மாதம் மட்டுமே அமையும் இத்தகைய அமிர்த சக்திகளை நம் அடியார்கள் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவே ஒரு சதாபிஷேக நிகழ்ச்சியையும் நம் அடியார்களுக்கு சற்குரு இத்தலத்தில் நிறைவேற்றினார் என்பதையும் நீங்கள் நினைவு கூர்வதற்கு இதுவே தக்க தருணமாகும். ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் தம்பதிகள் பலரும் அமாவாசைக்குப் பின் தங்கள் இல்லம் ஏகி கணவனுடன் மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்யும் வழக்கம் தோன்றியிருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இவ்வாறு சுக்கிரனுடன் மூன்றாம் பிறைச் சந்திர பகவான் இணைவதால் விளையும் அமிர்த சக்திகள் கந்தர்வ சுக்லாமிர்தம் என்ற சிறப்புப் பெயரைப் பெறுகின்றன. அபூர்வமான இந்த கந்தர்வ சுக்லாமிர்த சக்திகளே மூன்றாம் பிறை தரிசனத்திற்குப் பின் அமையும் ஆசமனிய வழிபாட்டில் அடியார்களின் அனைத்து நாடிகளிலும் நிரவி நிற்கின்றன என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் குருவருளாகும்.

இணையடிகுண தரிசனம்
திருஅண்ணாமலை

பௌர்ணமி அன்னதானம் நிறைவேறிய பின்னரும் சில சமயங்களில் நம் சற்குரு ஆஸ்ரமத்தில் சில நாட்கள் தங்கி இருப்பதுண்டு. அவ்வாறு தங்கி இருக்கும் நாட்களில் எல்லாம் சிறிய அளவில் அன்னதானமும் புத்தக விற்பனையும் தொடர்ந்து நடக்கும். அவ்வாறு ஒரு முறை நம் சற்குரு ஆஸ்ரம ஹாலில் அமர்ந்திருந்தபோது புத்தகங்கள் விற்பனை செய்யும் அடியார் நம் சற்குருவிடம் வந்து, “வாத்யாரே, ஒருவர் தன்னிடம் 600 கோடி ரூபாய் வெளிநாட்டில் சம்பாதித்த பணம் இருப்பதாகவும், அதை ஏதாவது ஒரு நல்ல ஆஸ்ரமத்திற்கு டொனேஷன் தருவதற்காக அலைந்து கொண்டிருப்பதாகவும், நம் ஆஸ்ரமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு அந்த தொகையை அளிக்க ஆஸ்ரம நிர்வாகியை பார்க்க விரும்புவதாகவும் கூறுகிறார். அவரை உள்ளே அனுப்பலாமா ?” என்று கேட்டார். வழக்கமாக யார் வந்து கேட்டாலும் பெரும்பாலும் நம் சற்குரு கிரிவலம் போயிருப்பதாகத்தான் கூறுவது வழக்கம். ஆனால், ஏதோ பெரிய நன்கொடை வருவதாகத் தோன்றவே அந்த நபரை நம் சற்குரு பார்க்கலாம் என்ற சிந்தனையால் நம் சற்குருவிடம் அனுமதி கேட்டார் அந்த அடியார்.
நம் சற்குரு, “அவ்வளவு பணம் எல்லாம் நமக்கு வேண்டாம், சார், ஏதோ அடியேனால் முடிந்த ஆயிரம், இரண்டாயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு அன்னதானம் செய்கிறேன். இது போதும் அடியேனுக்கு, வழக்கமாக அடியேன் கிரிவலம் போயிருப்பதாகத்தானே சொல்வாய், அதே பொய்யைக் கூறி அந்த ஆளை அனுப்பி விடு,” என்றார்.
அந்த அடியாரும் திரும்பிச் சென்றார்.
அவர் சில அடிகள் சென்ற பின், நம் சற்குரு, “இங்கே வாய்யா,” என்று அழைத்தார். அந்த அடியாருக்கு ஓரே ஆச்சரியம். ஒரு வேளை நம் சற்குரு தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு விட்டாரோ என்று நினைத்தார் போலும்.

விடிவெள்ளி தரிசனம்
திருஅண்ணாமலை

நம் சற்குரு, “அந்த ஆள் எவ்வளவு பணம் வைத்திருப்பதாகச் சொன்னான் ?”
அடியார், “சுமார் 600 கோடி ரூபாய் ... வாத்யாரே,”.
“சரி, 600 கோடி ரூபாய் ... ”
சற்று நேர மௌனம் ...
“ம்... 600 கோடி ரூபாய் வைத்திருக்கும் ஒரு பெரிய பணக்காரனைப் பார்க்க அடியேன் விரும்பவில்லை, அவன் தருவதாகச் சொல்லும் பணத்தை அடியேன் மதிக்கவில்லை. ஆனால், உன்னைப் பார்க்க விரும்புகிறேன், உன்னிடம் பேச விரும்புகிறேன், இதைத் தெரிந்து கொள், போதும் ...,” என்றார்.
இந்த அற்புத நிகழ்ச்சியை அருகிலிருந்து இரசித்த ஒன்றிரண்டு அடியார்களின் நிலை எப்படி இருந்திருக்கும் ? இதுவே நம் சற்குருவின் கற்பனைக்கெட்டாத கருணைக் களஞ்சியம். தான் நன்கொடை தருபவரைப் பார்க்க விரும்பவில்லை என்று கூறியது தூல உரையாடல். ஆனால், அந்த அடியாரிடம் பேச விரும்புவதாகக் கூறியது ஒரு சற்குரு சீடனின் உள்ளத்தில் விதைக்க விரும்பும் ஆன்மீகப் பொக்கிஷம். இந்த இரண்டிற்கும் சரியான இடைவெளி இருக்க வேண்டும் என்பதற்காக தேவையான இடைவெளியை விட்டு “விதை விதைத்த” நம் சற்குருவிற்கு இணை நம் சற்குருவே. இது என்றோ நிகழ்ந்த ஆன்மீகத் திருவிளையாடல் அல்ல. மூன்றாம் பிறைச் சந்திரன் தூல வடிவம், இதை சூடியிருப்பவர் சூட்சுமமாய் ஒளிர்பவர், இந்த இரண்டு தெய்வீக வடிவங்களையும் நிரந்தரமாய் நம் உள்ளத்தில் நிலை நிறுத்த ஸ்வஸ்தி முத்திரை, ஆசமனியம் என்ற சித்த பொக்கிஷத்தை அளித்த நம் சற்குருவிற்கு எப்படி நன்றியைத் தெரிவிக்க முடியும் ?

ஸ்ரீகனிகணபதி திருஅண்ணாமலை

நம் ஆஸ்ரமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகனிகணபதி மூர்த்தி பூலோக மக்களின் நல்வாழ்விற்காக தோன்றிய கால நேர அம்சங்களே வரும் செப்டம்பர் மாதம் 10ந் தேதி வெள்ளிக் கிழமை அமையும் விநாயக சதுர்த்தி அன்று அமைவதால் அடியார்கள் இதை நன்முறையில் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். மானசீக வழிபாடு என்பது அனைவராலும் எளிதில் நிறைவேற்றக் கூடிய ஒரு வழிபாடாக அமையாததால் நம் சற்குரு இத்தகைய வழிபாடுகளுக்கு அந்த அளவிற்கு முக்கியத்துவம் தருவதில்லை என்றாலும் இத்தகைய மானசீக வழிபாட்டில் சிறந்து விளங்கும் மனோவன்மை உடையவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது அல்லவா ? அத்தகையோருக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதமாக அமைவதே வரும் விநாயக சதுர்த்தி ஆகும். நம் ஆஸ்ரமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகனிகணபதி 18 சித்தர்களால் வழிபடப்படும் உத்தம தெய்வ மூர்த்தி என்று கூறும்போது இது வெறும் 18 சித்தர்களை மட்டும் குறிப்பதன்று. தூசுக்கு 300 கோடி சித்தர்கள் உறையும் திருஅண்ணாமலையில் உறையும் கணபதி மூர்த்தி வெறும் 18 சித்தர்களால் மட்டுமா வழிபடப்படுவார். 18 x 18 x 18 ... ... 18 என்று பெருகிக் கொண்டு செல்வதே இந்த சித்த கணக்கு. இதே கணக்கு முறைதான் ஸ்ரீஆயுர்தேவி கரப்பீடத்தை அலங்கரிக்கும் ரிஷிகளுக்கும், சப்தரிஷிகளுக்கும் தோன்றுவது. தினமும் 108 குசா தோப்புக் கரணம், ஆலய வலங்கள், கிரிவலங்கள், 108 ஸ்வஸ்தி நமஸ்காரம், கீழ்க்கண்ட மந்திரங்களை வாய்விட்டு கூறுதல் என்ற வழிபாட்டு முறைகளில் ஒன்றையோ பலவற்றையோ அவரவர் சக்திக்கு முடிந்த வகையில் நிறைவேற்றி அந்தப் பலன்கள் அனைத்தையும் தினமும் திருஅண்ணாமலையில் எழுந்தருளி உள்ள ஸ்ரீகனிகணபதி மூர்த்திக்கு மானசீகமாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தீ ப்ரசோதயாத்
அல்லது
லோகா சமஸ்தா சுகினோ பவந்து
என்ற வேத மந்திரம். வரும் விநாயக சதுர்த்தி அன்று இந்த வழிபாட்டுப் பலன்கள் அனைத்தையும் களிமண் பிள்ளையாருக்கு அர்ப்பணித்து பிள்ளையாரை ஆற்றில், ஓடும் நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்து விட வேண்டும். இத்தகைய மானசீக வழிபாடுகளையும், உடல் ரீதியான வழிபாடுகளையும் ஸ்ரீகனிகணபதிக்கு அர்ப்பணித்தல் என்பது வாழ்வில் ஒருமுறையே கிடைக்கும் உன்னத சந்தர்ப்பம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஸ்ரீபிள்ளையார் மூர்த்தி ஜாதகம்

திருஅண்ணாமலையைச் சுற்றி கோடி கோடி முகடு தரிசனங்கள் உண்டு. ஆனால், எந்த தரிசனமும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியைக் குறிப்பதாக அமைவதில்லை. காரணம், ஸ்ரீதட்சிணா மூர்த்தியே மனித உருவில், சதையும் எலும்புமாய் மனிதனைப் போலவே அருளாட்சி கூட்டுவதால் சுவாமியின் தூல தரிசனத்தையே தகுதி உடையோர் பெறுகின்றனர். அதுவும் ரமண மகரிஷியே கல்லால மரத்தின் ஒரு இலையையே நேரில் தரிசனம் செய்ய முடிந்தது என்பதை நாம் அறிவோம். இதில் நம்மை பிரமிப்படைய வைக்கும் இரகசியமே நம் சற்குரு தான் தூல உடலை துறப்பதற்கு முன் ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் தரிசனத்தைப் பெற்று அதை ஸ்ரீகனிகணபதி உருவத்தில் பதித்து நாம் அனைவரும் நல்வாழ்வு பெற வழி செய்தார் என்பதே. எனவே வரும் விநாயக சதுர்த்தி அன்று சற்குருவின் இந்த பரமார்த்த அனுகிரகத்தையே உலக மக்களுக்கு எல்லாம் தாரை வார்த்து அளிக்கும் ஒரு சந்தர்ப்பத்தை குரு அருளால் பெறுகின்றோம். ஒரு நுனி வாழை இலையில் விக்ந விநாயகர் ஜாதகத்தை அரிசி மாவால் வரைந்து இலை நுனி வடக்கு நோக்கி இருக்கும் வண்ணம் அமைத்துக் கொண்டு அவரவர் விருப்பம் போல் மந்திரங்களை ஓதி குறைந்தது ஒரு மணி நேரமாவது வழிபாடுகள் இயற்றி வழிபாட்டின் நிறைவில் வாழை இலையுடன் சிறிது வெல்லம் சேர்த்து பசு மாட்டிற்கு தினமும் அளிப்பதும் ஒரு சிறந்த வழிபாடாகும். இந்த வருடம் இறுதி வரை முகூர்த்த நேரங்களில் பல விதமான குழப்பங்கள் தோன்ற இருப்பதால் மேற்கூறிய விக்ன கணபதி வழிபாடு இத்தகைய குழப்பங்களுக்கு ஒரு தீர்வாகவும் அமையும். ஒரு லட்சம் ராஜ யோகங்களுக்கு மேல் அமைந்துள்ள ஸ்ரீகணபதி மூர்த்தியின் ஜாதக வழிபாடு முகூர்த்த நேர தவறுகளை, குறைபாடுகளை, குழப்பங்களைத் தீர்க்காதா என்ன ? உதாரணமாக, பரஞான பரபிரம்ம யோகம் என்ற ஒரு ராஜ யோகம் உண்டு. விருச்சிகத்தில் அமையும் கேதுவுடன் பதினொன்றில் சுக்கிரன், புதன், சந்திரன் எழுந்தருள்வதாகும். இந்த ராஜயோக ஜாதக தரிசனமே எத்தனையோ முகூர்த்த நேர பேதங்களைக் களையவல்லது என்றால் மற்ற ஜாதக அம்சங்கள் எந்த அளவிற்கு சிறப்புடையதாக இருக்கும் ? இத்தகைய பரபிரம்ம ராஜ யோக அம்சங்கள் நம் சற்குருவின் ஜாதகத்திலும் இணைந்திருப்பதே நமக்கு பெருமை அளிப்பதாகும். 23.8.2021 அன்று அமையும் காயத்ரீ மந்திர ஜபத்தில் சிராவண பகுள சக்திகள் என்ற அபூர்வ தெய்வீக சக்திகள் இணையும் மகிமை பற்றி ஏற்கனவே விளக்கி இருந்தோம் அல்லவா ? தகுதி வாய்ந்த சற்குருமார்கள் இத்தகைய சிராவண பகுள சக்திகள் மூலம் பரஞான பரபிரம்ம யோக சக்திகளையும் அளிக்கவல்லவர்கள் ஆதலால் இந்த பகுள வழிபாட்டை நன்முறையில் பக்தர்கள் நிறைவேற்றி பெறற்கரிய ஞான சக்திகளை சற்குரு பிரசாதமாகப் பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஒரகடம்

செங்கல்பட்டு அருகில் உள்ளதே ஒரகடம் திருத்தலமாகும். மதுராந்தகம் போன்ற ஊர்களில் இருந்தும் பிரயாண வசதிகள் உண்டு. இறைவன் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர், ஸ்ரீகோதண்ட ராமன், ஸ்ரீகுளிந்தி அம்மன் இவர்கள் எழுந்தருளிய அற்புதத் தலம். ஸ்ரீராமபிரான், ராவணன் கவர்ந்து சென்ற தன் மனைவி சீதையைத் தேடி அலைந்தபோது காட்டில் உள்ள மரங்கள், செடி, கொடிகள் இவைகளை எல்லாம் பார்த்து பார்த்து, “அரச மரமே என் மனைவி சீதையைக் கண்டாயா ?” என்று கேட்பாராம். அது இல்லை என்று மறுதலிக்கும்போது அதைக் கேட்டு கதறி அழுவாராம் ஸ்ரீராமர். அடுத்து ஒரு முல்லைக் கொடியைக் கண்டு, “என் மனைவியை நீ எங்கேவாது பார்த்தாயா ?” என்று வினவுவாராம். அந்த முல்லைக் கொடி இல்லை என்று தலையசைத்தவுடன், “ஆஹா, நீயும் பார்க்கவில்லையா, நான் என் செய்வேன்,” என்று கதறிப் புலம்புவாராம். முல்லைக் கொடி போன்ற இடை உடைய தன் மனைவியின் ஞாபகம் வந்தாலும் அவள் முல்லைக் கொடி போன்ற இடை உடையவள் என்பதை தன் வாழ்நாளில் ஒரு போதும் உரைத்தது இல்லையாம், அந்த வார்த்தை கூட தான் கைக்கொண்ட ஏக பத்தினி விரதத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்ற கருத்துடன் செயல்பட்டவரே ஸ்ரீராமர்.

ஸ்ரீகோதண்டராமர் ஒரகடம்

இவ்வாறு செடி கொடிகளை எல்லாம் பார்த்து தன் ஆருயிர் மனைவியைப் பற்றி விசாரித்த தன் சகோதரனைக் கண்டாள் வான மார்க்கமாக பரமேஸ்வரனுடன் சென்ற பார்வதி தேவி. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஸ்ரீராமர் தான் விஷ்ணு மூர்த்தியின் அவதாரம் என்பதையே மறந்து விட்டார் போலும். இதை ஞாபகப்படுத்துவது நம் கடமை அல்லவா என்று நினைத்து பரமேஸ்வரனை வினவ பரமேஸ்வரனோ ஒரு மந்தகாச புன்னகையுடன், “தேவி, தன்னுடைய அவதாரத் தத்துவத்தையே மறக்கும் நிலை கொண்டவர் அல்லர் ராமர் ...”, என்று கூற இருவருக்கும் வாக்குவாதமே இறுதியில் நிலை நின்றதால் பரமேஸ்வரன், “தேவி, நீ வேண்டுமானால் உன்னுடைய சகோதரனுக்கு புத்தி புகட்டி விட்டு வா, நான் காத்திருக்கிறேன்,” என்று கூறவே ராமபிரான் வரும் வழியில் வாடாமல்லி மலர்களால் ஒரு சீதை பொம்மையை உருவாக்கி வைத்து விட்டு, ஒரு வேளை அதைக் கண்டாலாவது தன்னுடைய சோகத்தை ராமர் ஓரளவு தணித்துக் கொள்ள மாட்டாரா ?” என்று நினைத்து அருகில் ஒரு அசோக மரத்தின் அடியில் நின்று கொண்டாள் பார்வதி தேவி. அங்கு வந்த ராமபிரான் வாடாமல்லி மலர்களால் உருவான சீதை உருவத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஏகபத்தினி விரதம் என்றால் என்ன என்பதை உலகிற்கு காட்டிய ராம கதையா இல்லை ராம கீதையா இது ? ஆனால், அருகில் நின்ற தன் சகோதரியைப் பார்த்து, “வா, பார்வதி சௌக்கியமாக இருக்கிறாயா ?” என்று விசாரித்தாராம். அதிர்ந்து போனாள் பார்வதி. “மகா விஷ்ணு பெருமாளாகவே நிற்க, தானோ ஒரு சாதாரண மானிடப் பெண் போல பெருமாளின் அவதாரத்தையே சந்தேகித்து விட்டோமே ? இந்தத் தவறுக்கு எப்படிப் பிராயசித்தம் பெறுவது என்று புரியவில்லையே ?” என்று புலம்பினாள் பார்வதி. ஸ்ரீராமபிரானின் ராம அவதாரம் நன்கு கனிய ஜகன்மாதா என்ற முறையில் ஆசியை வழங்கிவிட்டு அங்கிருந்து விண்ணுலகில் பறந்து சென்றாள் பார்வதி. கைலாயத்தில் பரமேஸ்வரனைக் காண முடியவில்லை. “தேவி, ஒரு அவதாரத்தின் மகிமையை சந்தேகித்ததால் நீ என்னைக் காண முடியாமல் போயிற்று. இது வரக் கூடிய சந்ததிகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும். தக்க தருணம் வரும் வரை நீ என்னை வாடாமல்லி மலர்களால் அர்ச்சித்து வா,” என்று அசரீரியாக அன்னைக்கு பாடம் புகட்டினான் ஈசன். “நீ நின்ற அசோகமரத்தின் அடியில்தானே சீதை சோகமே வடிவாய் அமர்ந்துள்ளாள். அவளுடைய சோகத்தில் விளையும் கண்ணீர்த் துளிகள் எல்லாம் ரகுநாத புஷ்கரிணியாக மாறி இத்தலத்தில் விளையும்,” என்றும் அருளினான் இறைவன். இவ்வாறு ராமபிரானைப் பிரிந்து சோகத்தில் விளைந்த சீதாப் பிராட்டியின் கண்ணீர்த் துளிகள் அனைத்தும் ஒரு புஷ்கரிணியாகவே உருக் கொண்டன என்றால் தேவி தன் கணவனின் பிரிவுக்காக எந்த அளவு கலங்கியிருப்பாள். இவ்வாறு சீதா ராமர் என்ற இரு சோகக் கடல்களின் சங்கமமே ஒரகடம் என்றால் அது மிகையாகாது. சீதையுடன் மீண்டும் இணைந்து இறைவனுக்கு நன்றி கூற ஸ்ரீராமர் சீதையுடன் ஒரகடம் திருத்தலத்திற்கு எழுந்தருளியபோது சீதையின் நேத்திரங்களிலிருந்து பொழிந்த கண்ணீர்த் துளிகள் அனைத்தும் இறைவனின் பெருங்கருணையால் தாமரை மலர்களாய் மாறி ஒளி வீசின.

ஸ்ரீவாடாமல்லீசர் ஒரகடம்

ஸ்ரீஅமிர்தவல்லி அம்மன் ஒரகடம்

குடும்பத்தில் வியாபாரத்தில் தொழிலில் எத்தகைய பிரச்னைகள் தோன்றினாலும், அதனால் கண்ணீர் விடக் கூடிய சூழ்நிலைகள் உருவானாலும் ஒரகட ஈசனையும் ரகுநாத புஷ்கரிணியையும் அங்குள்ள தாமரை மலர்களையும் வணங்கி வழிபடுவதால் நல்லருள் பெறுவர். ஒரகடத்திலிருந்து கைலையை அடைந்த பார்வதி தேவி ஈசனைக் காணாமல் வாடினாள் அல்லவா ? ராமருக்கு பாடம் புகட்ட நினைத்த அதே திருத்தலத்தில் ஸ்ரீவாடாமல்லி ஈசனை வணங்கி அடிப் பிரதட்சணமாக வலம் வந்து கொண்டிருந்தாள். வாடாமல்லி என்றால் எப்படி இருக்கும், அதை எப்படி, எங்கே பெறுவது என்று அறியாததால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு தரக் கூடிய ஈசனை வணங்கி வலம் வந்து கொண்டு இருந்தாள் பார்வதி. சிறிது கால பிரார்த்தனைக்குப் பின் ஸ்ரீஇரட்சக குலசேகரர் என்ற மாமுனியை ஒரகட திருத்தலத்தில் கண்டு அவர் திருவடிகளில் பணிந்து வணங்கி தான் ஈசனைப் பிரிந்து வாழும் நிலை குறித்து தெரிவித்தாள். முனிவரோ, “ஜகன்மாதாவாகிய தங்களுக்கு புத்தி கூறும் வல்லமை அடியேனுக்கு சிறிதும் இல்லை எனினும் இந்த வாடாமல்லிக் குன்றைச் சுற்றி மலர்ந்திருக்கும் மலர்களால் ஈசனை அர்ச்சித்து வணங்குதலால் உங்கள் நியாயமான எண்ணம் நிறைவேறும்,” என்று அருளினார். தேவிக்கு ஒரே ஆச்சரியம். தான் இத்தனை காலம் வலம் வந்தும் தன் கண்களில் படாத அந்த “வாடா மல்லி மலர்கள்” இப்போது கருஞ்சிவப்பு நிறத்தில் அந்தக் குன்று முழுவதும் பூத்துக் குலுங்குவது கண்டு அதிசயித்தாள் அன்னை. இது ஈசன் கருணையா இல்லை ஈசனின் உண்மையான ஒரு அடியாரின் கருணையா என்று இனம் பிரிக்க முடியாத தேவி, எது எப்படியிருந்தாலும் நாம் நீண்ட காலம் தேடிய மலர்கள் கிடைத்தனவே என்ற பரமானந்தத்தில் திளைத்து அந்த வாடாமல்லி மலர்களால் ஈசனை வழிபடத் தொடங்கினாள் தேவி. காலங்கள் உருண்டோடின. ஈசனும் மனம் கனிந்தான். ஸ்ரீஇரட்சக குலசேகரர் முன்னிலையில் தேவியை தன்னுடன் இணைத்துக் கொண்டான் தேவாதி தேவன். இவ்வாறு ஸ்ரீஅமிர்தவல்லி அம்மன் ஸ்ரீவாடாமல்லி ஈசன் இவர்கள் இடையே அமர்ந்துள்ள ஸ்ரீஇரட்சக குலசேகர மகரிஷிக்கு தேங்காய் எண்ணெய், சாரியட் (chariot) நறுமணம் கலந்த எண்ணெய் கலவையால் காப்பிட்டு வணங்குதலால் எத்தகைய கணவன் மனைவி மனத் தாங்கல்களும் இறைவனருளால் சீர்பெறும்.

ஸ்ரீஇரட்சக குலசேகர மகரிஷி
ஒரகடம்

தேவியும் ஈசனும் ஸ்ரீஇரட்சக குலசேகர மகரிஷியின் அற்புத சேவையைப் பாராட்டி அம்மகரிஷியை தங்கள் சந்தானமாகப் பாவித்து திருஅண்ணாமலையில் சக்திசிவ தரிசனத்தில் உண்ணாமுலை மண்டபம் எதிரே அமர்த்திக் கொண்டனர். பின்னர் குமரப் பெருமான் குலசேகர மகரிஷியின் இடத்தை வேண்டியதால், “எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா!" என்ற சித்தகுரு வேதசூக்த மாமந்திரத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த குலமாமுனி தன்னுடைய இருப்பிடத்தை சோமாஸ்கந்த அருள் இருக்கையாக சுப்ரமண்ய சுவாமிக்கு அர்ப்பணித்து விட்டு திருஅண்ணாமலை அருட்ஜோதியில் இரண்டறக் கலந்தார் என்பது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு சீதா தேவி, பார்வதி தேவி என்ற இறை மூர்த்திகள் இறையருள் பெற்ற தலமே ஒரகடம் என்று அல்லாது ஒரு சாதாரண மானிடப் பெண்ணும் தெய்வ நிலைக்கு உயர உதவிய தலமே ஒரகடம் ஆகும். ஒரகடம் திருத்தல அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீகுளிந்தி அம்மன் திருத்தலம் மானிடப் பெண்கள் அடைய வேண்டிய பக்தி நிலையை உணர்த்துவதே ஆகும். ஸ்ரீகமல முனியின் வழிகாட்டுதலால் ஒரு பெண் இறைவியாக உயர்ந்தாள் என்று மட்டும் அல்லாது ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் தனக்கு அருள்புரிந்த ஸ்ரீகமல முனியின் நினைவாகவும், ஸ்ரீஇரத்தினகிரி ஈசனுக்கு நன்றி கூறும் வகையிலும் ரகுநாத புஷ்கரிணியையும் ஸ்ரீவாடாமல்லி ஈசனையும் வலம் வந்து வணங்குகிறாள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். வெள்ளிக் கிழமைகளில் செந்தாமரை மலர்கள் முப்பதிற்குக் குறையாமலும், மல்லிகை மலர்கள் முப்பது முழத்திற்குக் குறையாமலும் ஸ்ரீகுளிந்தி அம்மனுக்கு அணிவித்து வழிபடுதலால் தங்கள் மீது தவறு இல்லாதிருந்தும் கணவரால் சந்தேகிக்கப்படும் மனைவிமார்கள் நற்கதி பெறுவர். அத்தகையோருடைய கணவன்மார்கள் மனம் திருந்தி அன்பைப் பொழியும் அனுகிரகத்தை அருளவல்லவளே ஸ்ரீகுளிந்தி அம்மன் ஆவாள். வழிபாட்டிற்குப் பின் இத்தகைய மலர்களை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்தல் சிறப்பாகும். ஸ்ரீகுளிந்த அம்மனை மனைவியாகப் பெற்ற அவள் கணவன் தன்னுடைய மனைவி குளிந்தி அம்மனாகவே மாறி விட்டாள் என்பதை அறிந்து எல்லையில்லா சந்தோஷம் அடைந்தான். தன் மனைவி பெற்ற அந்த இறை நிலையை அடையும் தகுதி தனக்கு இல்லை என்றாலும் தன் மனைவி அம்மனாய் அருளும் அதே திருத்தலத்தில் தான் ஒரு ஆலமர வேராகவாவது அமரும் தகுதியை ஸ்ரீவாடாமல்லி ஈசனிடம் வேண்டிப் பெற்றவனே குளிந்தியின் கணவன் ஆவான். ஆலமர வேராகத் துலங்கும் அந்த “திண்ணன் விழுதையும்” சேர்த்து வலம் வந்து வணங்குதலால் கணவன் மனைவி இடையே நிலவும் எத்தகைய மனத்தாங்கல்களும் மறையும். மனைவியை இழந்தவர்களும், மனைவியைப் பிரிந்தவர்களும், நல்ல வேலைக்காரர்களை, நண்பர்களை இழந்து துன்பப்படுபவர்களும் இந்த திண்ணன் விழுதை ஆலமரம், குளிந்தி அம்மன் ஆலயத்தோடு வலம் வந்து வணங்குதலால் நல்ல துணை கிடைக்கப் பெறுவார்கள். தனக்கு சற்குரு கிடைக்கவில்லையே என்று ஏங்குவோர்கள் இந்த ஆலமரத்தையும், குளிந்தி அம்மன், திண்ணன் வேர் இவற்றோடு 18 முறை வலம் வந்து வணங்கி, பின்னர் குன்றின் மேலேறிச் சென்று ஸ்ரீவாடாமல்லீசன், ஸ்ரீஅமிர்தவல்லி அம்மனோடு ஸ்ரீகுலசேகர மாமுனியையும் மூன்று முறை வலம் வந்து வணங்குதலால் சற்குருவின் அன்பு அவர்களை அரவணைக்கும்.

ஸ்ரீ குளிந்தி அம்மன் ஒரகடம்

திண்ணன் விழுது ஒரகடம்

ஆடகம் என்றால் தங்கம் என்று பொருள். ஒர் அடகம் என்றால் ஒப்பற்ற தங்க சக்திகள் மிளிரும் தலம் என்று பொருள். தங்கத்தில் பல வகைகள் உண்டு. இதில் ஆடகம் என்பது கிளிப்பச்சை நிறத்தில் துலங்குவதாகும். வாடா மல்லிகள் என்பவை இத்தகைய ஆடக பொன் சக்திகளை ஈர்த்து இறைவனுக்கு வர்ஷிக்கவல்லவை ஆதலால் வாடா மல்லி மலர்களால் அர்ச்சனை செய்வது ஒரகடம் சிவனுக்கு உகந்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தப் பச்சை நிறத்தை பெருமாளுக்கு அனுகிரக சக்திகளாக அளித்ததால் பெருமாள் பச்சை மாமலை போல் மேனி உடையவனாகத் திகழ்ந்தான் என்று உணர்த்துவதும் ஒரகட திருத்தல வழிபாடே. ஜகன்மாதா பார்வதி தேவியின் கரம்பட்டதால் இந்த வாடாமல்லி மலர்கள் அனைத்தும் மேல் நிலை அடைந்து கைலாயத்தில் வாசம் கொண்டதால் இந்த வாடாமல்லி மலர்களை பூலோகத்தில் எங்குமே காண முடியாது. இருப்பினும் ஸ்ரீஇரட்சக குலசேகரர், ஸ்ரீகமல முனி போன்ற உத்தமர்களின் வேண்டுகோளை ஏற்று வாடா மல்லி மலர்களின் நறுமணத்தை மட்டும் பூலோகத்தில் நிரவியிருக்குமாறு ஈசன் அருளாணை இட்டுள்ளதால் குறைந்தது ஆயிரம் தாமரை மலர்களால் ஸ்ரீவாடாமல்லி ஈசனையோ, ஸ்ரீகோதண்டராமப் பெருமாள் மூர்த்தியையோ வழிபடுவோர்கள் சாட்சாத் வாடாமல்லி மலர்களால் அர்ச்சித்த பலன்களையே பெறுவார்கள் என்பதே ஈசன் அளித்த வரங்களுள் ஒன்று. தங்கத்தில் பச்சை நிறக் கற்களைப் பதித்து சுமங்கலிப் பெண்களுக்கு தானம் அளிப்பதும் ஒரகடம் திருத்தலத்தில் நிறைவேற்றக் கூடிய வழிபாடுகளில் ஒன்றாகும். பொறாமையால் செயலிழந்து போன கை, கால்கள், மூளை செயல் திறன் போன்ற வியாதிகளும் இத்தகைய தானத்தால் நயம் பெறும். Parkinson's Disease என்று அழைக்கப்படும் கைகள் நடுங்குதல் போன்ற வியாதிகளும், சிறு வயதாக இருந்தாலும் ஆபரேஷன் செய்ய முடியாத அளவிற்கு செயல்திறன் குறைந்த மருத்துவர்களும் (surgeons) இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள்.

ஒரகடம்

ஒரகடம் திருத்தலத்தின் பண்டைய பெயர் பராங்குசபுரம் என்பதாகும். ஒருவருக்கு சிலை மாதிரி மூக்கும் முழியுமாய் மனைவி அமைந்திருந்தாலும் அவர் மற்ற பெண்களின் மேல் இச்சை கொள்வார், ஒருவரின் முதலாளி அவருடைய தேவைகள் அனைத்தையும் கவனித்து சம்பளம் கொடுத்தாலும் அவர் முதலாளிக்கே துரோகம் இழைப்பதுண்டு, ஒருவர் அனைத்து வசதிகளைப் பெற்றிருந்தாலும் மற்றவர் உடைமைகளின் மேல் ஆசை கொண்டு அவற்றைத் திருடுவதுண்டு. இவை எல்லாம் தெரியாமல் நடைபெறும் தவறுகள் அல்ல, ஒரு காரியம் தவறு என்று தெரிந்து இருந்தும் ஆசையை அடக்க முடியாமல், தன்னுடைய தவறுக்கு வடிகால் தேட முடியாமல் இத்தகைய தவறுகளைச் செய்வோர்தாம் அனேகம். இத்தகைய தவறான ஆசைகளுக்கு இறையருளால் முற்றுப்புள்ளி வைக்க உதவும் திருத்தலமே பராங்குசபுரம் ஆகும். அங்குசம் என்றால் யானையை அடக்க பாகனுக்கு உதவும் ஆயுதம், பராங்குசபுரம் என்றால் எத்தகைய ஆசைகளையும், விருப்பங்களையும், துர் எண்ணங்களையும் இறைவன் அருளால் களைய உதவும் திருத்தலம் என்று பொருள். பராங்குசபுரத்தில் உள்ள பல ஆலமரங்களில் இருந்து தரையில் விழுந்து கிடக்கும் ஆலமர இலைகளைச் சேகரித்து அந்த இலைகளின் மேல் “குளிந்தி பராங்குசபுரம்” என்ற துவாதச அட்சரங்களை தங்கள் கையால் அரைத்த சந்தன விழுது கொண்டு சந்தன குச்சியாலோ, வெள்ளி எழுதுகோல் கொண்டோ எழுதி இத்தகைய 108 ஆல இலைகளை நாரில் அல்லது கயிற்றில் கட்டி மாலையாக்கி ஸ்ரீகுளிந்தி தேவிக்கு அணிவித்து வழிபடுதலே பராங்குச வழிபாடாகும். எத்தகைய மனக் கலக்கங்களும் குழப்பங்களும் மாயமாய் மறையும் விந்தையை இந்த வழிபாட்டில் நாம் காணலாம். வெள்ளிக் கிழமை, சதுர்த்தி, சதுர்த்தசி தினங்களில் ஸ்ரீகுளிந்தி அம்மன் ஆலயத்தில் கணபதி ஹோமம் நிகழ்த்தி அதில் மற்ற ஆஹூகளோடு சேர்த்து இந்த நாமங்கள் எழுதிய ஆல இலைகளை அளித்தலும் சிறப்புடையதே. இவ்வாறு ஹோம ஆஹூதியாக அளிக்கும்போது ஆல இலைகளுக்கு 108 என்ற வரையறை கிடையாது. அவரவரால் இயன்ற எத்தனை குளிந்தி அட்சர இலைகளையும் ஹோமத்தில் ஆஹுதியாக அளிக்கலாம். இது மிகச் சிறந்த சமுதாய பூஜையாகவும் மலர்ந்து தம்பதிகளிடையே, உறவினர்களிடையே ஒற்றுமையைத் தோற்றுவிக்கும். சற்குருவின்மேல் அவ்வப்போது தோன்றும் அவநம்பிக்கையை வேரறுத்து குரு நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும் இந்த பராங்குச வழிபாடு பெரிதும் உதவும். இவ்வாறு ஆஹூதி அளிக்கும்போது ஹோம குண்டத்திலிருந்து ஆறு அடிக்குள் எழும் நறுமணமே வாடாமல்லி மலரின் மணம் என்பதை உணர்ந்து கொள்ளவும். கிடைத்தற்கரிய வாடாமல்லி ஈசனின் தேடா அனுகிரகம் இதுவே.

ரகுவம்ச நாயகன்

ஒரகடம் திருத்தலத்தில் வேறு எங்கும் காண முடியாத வீராசன கோலத்தில் ராமபிரான் எழுந்தருளி உள்ளார். இது குறித்து ஒரு சுவையான வரலாற்றைக் காண்போமா ? ராமபிரான் ரகுவம்சத்தைச் சேர்ந்தவர் என்பதை நாம் அறிவோம். இந்த ரகுவம்சம் தோன்றுவதற்குக் காரணமான மாமன்னன் ரகு என்பவரோ மிகப் பெரிய கொடையாளியாகத் திகழ்ந்தவர். ஒரு முறை அவருடைய ராஜ்யத்தில் ஒரு மாணவன் தன்னுடைய குருகுல வாசம் முடிந்து தன்னுடைய குருவிற்கு குருதட்சிணை அளிக்க வேண்டிய நேரம் வந்தது. அப்போது அவன் தன் குருவிடம், “வழக்கமாக எல்லோரும் அளிக்கும் குரு தட்சிணைக்குப் பதிலாக ஏதாவது ஒரு சிறந்த பொருளை, தாங்கள் விரும்பும் காணிக்கையை அர்ப்பணிக்க விரும்புகிறேன்,” என்று மிகவும் வினயத்துடன் தெரிவிக்கவே குருநாதரும் மகிழ்ந்து, “சரி நான் யானை மேல் ஏறி நின்று இங்கிருந்து ஒரு அம்பு எய்கிறேன், அந்த அம்பு எங்கு சென்று விழுகிறதோ அந்த தூரம் வரையில் கோணிப் பைகளில் தங்க நாணயங்களை நிரப்பி குரு காணிக்கையாகத் தர வேண்டும்,” என்று கூறினார்.

ரகுநந்தன் அரியாசனம் ஒரகடம்

எந்த ஒரு மனிதனும் நிறைவேற்றக் கூடிய தானம் இது இல்லையே ? இருந்தாலும் ஒரு சீடன் தானாகக் கேட்டு குரு உத்தரவு வழங்கியதால் அந்த சீடனும் மூன்று நாள் அவகாசத்தில் அந்த குரு தட்சிணையை அர்ப்பணிப்பதாகக் கூறி விட்டு சென்று விட்டான். வீட்டிற்குச் சென்ற சிறுவன் குரு காணிக்கை பற்றி தன் பெற்றோர்களிடம் தெரிவித்தான். பெற்றோர்கள் இது கேட்டு அதிர்ந்தனர். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த பெற்றோர்களால் இவ்வளவு பெரிய தங்கக் குவியலை எப்படி அளிக்க முடியும். இருந்தாலும் உற்றம், சுற்றம், அறிந்தவர்கள் பலரிடம் கேட்டுப் பார்த்தனர். அனைவரும் இதைக் கேட்டு அயர்ந்து நின்றனரே தவிர எவரும் உதவ முன்வரவில்லை, உதவவும் முடியவில்லை. ஒரு சிலர் இந்தச் செய்தியைக் கேட்டு பரிகசிக்கவும் செய்தனர். நேரமோ கடந்து கொண்டிருந்தது. இரண்டாவது நாள் அந்த நாட்டு மன்னனிடம் சென்று கேட்டு வரும்படி தங்கள் மகனை அனுப்ப அவனும் அவ்வாறு ரகு சக்கரவர்த்தியின் அரண்மனைக்கு யாசகத்திற்காகச் சென்றான். அன்று காலைதான் சக்கரவர்த்தி தன்னுடைய செல்வத்தை எல்லாம் பல அந்தணர்களிடம் தானமாக அளித்து விட்டு ஓய்வாக அமர்ந்திருந்தார். அன்று இரவு உணவையே தங்க, வெள்ளி பாத்திரங்களுக்குப் பதிலாக மண் தட்டுகளிலும், மண் பாத்திரங்களிலும்தான் அருந்திக் கொண்டிருந்தார் மாமன்னன். இந்தக் காட்சியைக் கண்ட சிறுவன் மன்னனிடம் உத்தரவு பெறுவதற்காகக் கூறினான். மன்னனோ ஆச்சரியத்துடன், ”ஏனப்பா, ஏதோ காரியத்திற்காக வந்த நீ ஒன்றும் கேட்காமல் திரும்புகிறாயே ? என்ன விஷயம் ?” என்ற கேட்டார். சிறுவன் தயங்கி தயங்கி, “இல்லை அரசே, ஒரு பெரிய தங்கக் குவியலை குரு தட்சிணையாகத் தருவதாக என்னுடைய குருவிடம் வாக்களித்து விட்டேன். இது என்னுடைய சக்தியை மீறிய ஒரு காணிக்கையாக இருப்பதால் இதை மாமன்னனாகிய தங்களிடம் கேட்டுப் பெற முடியுமா என்ற எண்ணத்தில்தான் இங்கு வந்தேன். தாங்களோ பெரிய மனம் படைத்தவர் என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் தற்போது உள்ள சூழ்நிலையில் தாங்களே மண் பாண்டங்களில் உணவு ஏற்பதைப் பார்த்தவுடன் தங்களிடம் எப்படி தங்க நாணயங்களை கேட்பது என்று நினைத்து இங்கிருந்து வெளியேற உத்தேசித்துள்ளேன் ...”, என்றான். ரகு மாமன்னனோ சற்றும் அயராமல், “என்ன காரியம் செய்யத் துணிந்து விட்டாய், இங்கு யாசகத்திற்காக வந்து எவருமே வெறுங் கையுடன் திரும்பிச் சென்றதில்லை. அத்தகைய பெயர் பெற்ற ரகு வம்சத்தில் ஒருவர் யாசகத்திற்காக வந்து திரும்பிப் போவதா ? கவலைப் படாதே, நாளை இதே நேரத்தில வந்து என்னைப் பார்,” என்று கூறி அந்தச் சிறுவனை அனுப்பி விட்டார். சிறுவன் சென்றவுடன் அவசர ஆலோசனை செய்து இந்த இக்கட்டிலிருந்து எப்படி மீள்வது என்று குறித்து அவையோரை வினவினார். அப்போது மந்திரி, “அரசே, இத்தகைய அளவு உள்ள தங்கத்தை அளிக்கக் கூடியவர் பூலோகத்தில் தற்போது எவரும் இல்லை. இத்தகைய தங்கக் குவியல் கிடைக்கக் கூடிய ஒரே இடம் குபேர லோகம் என்பதால் நீங்கள் குபேர லோகத்திற்கு படையெடுத்துச் செல்வதே உகந்த வழியாகத் தோன்றுகிறது,” என்றார். அதை அனைவரும் ஆமோதித்தனர்.

ஒரகடம்

உடனே குபேர லோகத்திற்கு படையெடுப்பதற்கான பேரிகைகள் முழங்கத் தொடங்கின. பறையொலி குபேர லோகத்தைச் சென்றடையவே, இதுவரை பூமியிலிருந்து இத்தகைய ஒலியைக் கேட்டறியாத குபேரனும் குழப்பமுற்று ஒற்றர்களை அழைத்து அதன் காரணத்தைக் கேட்கவே ஒற்றர்களும், அது ரகு மாமன்னன் சாம்ராஜ்யத்திலிருந்து ஒலிப்பதாகவும் குபேர லோகத்திற்கு படையெடுத்து வருவதற்காகவே அந்த பேரிகைகள் முழங்குகின்றன என்று கூறியதும் குபேரன் திடுக்கிட்டான். ரகு சக்கரவர்த்தியின் அருமை பெருமைகளை உணர்ந்தவன் குபேரன். அவரை ஈரேழு உலகத்தில் எவரும் போரிட்டு வெல்ல முடியாது என்பதை அவன் உணர்ந்ததால் உடனே தன் படைத் தளபதியை சக்கரவர்த்தியின் அரண்மனைக்கு அனுப்பி அவர் விரும்பும் எதை வேண்டுமானாலும் தர குபேரன் தயாராக இருப்பதாகக் கூறவே, படைத் தளபதியும் விரைவில் சக்கரவர்த்தியிடம் சென்று குபேரனின் எண்ணத்தை தெரிவித்தான். ரகு மாமன்னனும் மகிழ்ந்து யாசகமாகப் பெறாமல் குபேரனே இந்தப் பொற்குவியலைத் தர தயாராக இருப்பதால் தனக்கு சில கஜானாக்கள் நிறையும் அளவிற்கு தங்க நாணயங்கள் வேண்டும் என்று தெரிவிக்கவே குபேரனும் ஒரு நொடியில் ரகு மாமன்னனின் அரண்மனையில் இருந்த கஜானாக்கள் அனைத்தையும் தங்க நாணயங்களால் நிரப்பி விட்டு அந்த நாணயங்கள் அனைத்தும் தீர்ந்தவுடன் மீண்டும் கஜானாக்களை நிரப்பித் தருவதாக வாக்களித்து விட்டு குபேர லோகம் திரும்பினான். ராஜா ரகுவும் சிறுவனை அழைத்து அவனுடைய குருநாதர் வேண்டுமளவு தங்கத்தை கஜானாக்களில் இருந்து பெற்றுக் கொள்ளும்படி கூறினார். அவ்வாறு அந்த குரு எடுத்துக் கொண்டது போக மீந்த தங்க நாணயங்கள் தன்னுடைய ராஜ்ய பரிபாலனம் செய்த காலம் முழுவதிலும் கூட தீரவில்லை. ரகு தன்னுடைய ஆயுள் பூர்ணம் அடைந்தவுடன் தான் செய்த புண்ணிய காரியங்கள் அனைத்தையும் ஒரகடம் ரகுநாத தீர்த்தத்தில் அர்ப்பணித்து விட்டு இறைவனுடன் ஒன்றினார். அந்த அற்புத புஷ்கரிணியில்தான் ரகுவம்ச நாயகியான சீதையின் கண்ணீர்த் துளிகளும் சேர்ந்து புனித தீர்த்தத்தை மேலும் புனிதடையச் செய்தன என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் வரலாறு. இவ்வாறு எல்லையில்லாத வீரத்திற்கும், தான தர்மங்களுக்கும் உறைவிடமாகத் திகழ்வதே, சான்றாய் மிளிர்வதே ஒரகடம் திருத்தலமாகும். இங்கு ராம பிரான் எங்கும் இல்லாத அதிசயமாக வீராசனத்தில் திகழ்வதன் பின்னணியில் எத்தகைய மகத்துவங்கள் மறைந்துள்ளன பார்த்தீர்களா ? பல்லி, கரப்பான் பூச்சி, பூரான் போன்ற சிறுசிறு பூச்சிகளுக்கெல்லாம் பயப்படுபவர்கள் பலர்.

ரகுநாத தீர்த்தம் ஒரகடம்

இவ்வாறு கோழைத்தனம் குடிகொண்டிருப்பவர்களும், வறுமையில் உழல்வோரும் ஒரகடம் திருத்தலத்தில் கோதுமை அல்வாவை தானமாக அளித்து ரகுநாத தீர்த்தத்தை அல்லது ராமர் கோயிலில் இருக்கும் சிம்மாசனத்தை 21 முறை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல் நலம். இத்தலத்தில் கிட்டாத வீரமும் செல்வமும் வேறு எங்கும் கிடைக்க வாய்ப்பில்லை என்பது இப்போது உங்களுக்குத் தெளிவாகின்றது அல்லவா ? குண்டோதரனின் கட்டுக்கடங்காத பசியை மீனாட்சி அம்மன் அளித்த உள்ளங்கை தீர்த்தம் நிவர்த்தி செய்தது அல்லவா ? அதே போல ஒரகடம் ரகுநாத தீர்த்தமும் எத்தகைய வறுமையையும் தீர்க்கவல்லதாகும். மூன்று வயதிற்கு மேற்பட்ட அனைவருமே தங்கள் உள்ளங்கையில் ரகுநாத புஷ்கரிணியின் தீர்த்தத்தை ஒரே ஒரு உள்ளங்கை ஏந்தி கீழ்க்கண்ட பஞ்சாட்சர துதியை ஓதி அருந்துவதால் கிட்டும் பலன்கள் அமோகம்.
உண்மையை உணர்த்தும் உள்ளங்கை
உள்ளதை உணர்த்தும் உள்ளங்கை
உள்ளத்தை உணர்த்துவதும் உள்ளங்கை
உண்மையில் உள்ளது உள்ளங்கையே
தினமும் காலையில் எழுந்தவுடன் கர தரிசனம் செய்த பின்னர் இந்த பஞ்சாட்சர துதியை ஓதி இருகைவிரல் ரேகைகளையும் உற்றுக் கவனித்து வந்தால் அன்றைய தினம் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய ஞானத்தை இந்த வழிபாடு உணர்த்தும். இதனால் சிறிது சிறிதாக எதிர்காலத்தைப் பற்றிய தெளிந்த அறிவு விருத்தியாகும்.

ஒளி ஒலிப் பிரவாகம்

உத்தம நிலையில் உள்ள மகான்கள் தங்கள் அனுகிரகத்தை ஒளிப் பூர்வமாகவும், ஒலிப் பூர்வமாகவும் அளிப்பதுண்டு. ராமபிரானின் அவதார வைபவத்திற்கு முன்னரே தோன்றிய கலைக்கோட்டு முனிவர் வழிகாட்டுதலின்படி தசரத மகாராஜா புத்ர காமேஷ்டி யாகத்தை நிகழ்த்தி ராமபிரான் பூவுலகில் தோன்ற வழிகோலினார் என்பதை நாமறிவோம். இவ்வாறு கலைக்கோட்டு முனிவரின் அனுகிரகம் என்பது வெறும் குழந்தைப் பேற்றிற்காக மட்டும் அமைவதில்லை, அது வழிவழியாக கடவுள் மேல் தோன்றும் நம்பிக்கையை, குரு நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காகவும் பொலிவதாகும்.

ஸ்ரீகலைக்கோட்டு முனிவர் ஒரகடம்

இதை அனைத்து அடியார்களும் பெறும் முகமாகவே நம் சற்குரு ஒவ்வொரு வாசமுள்ள மலரையும் கடவுள் ஆராதனைக்காக கொய்யும்போது சாந்த்யை ஸ்ரீரிஷ்யசிருங்கர் பத்ன்யை நமஹ என்று கூறி மலர்களைக் கொய்து இறை வழிபாட்டிற்காக பயன்படுத்தும்படி வலியுறுத்தினார்கள். இவ்வாறு என்றும் பொலியும் குருவின் அனுகிரக சக்திகள் நிறைந்ததே ஸ்ரீராமபிரான் சீதையுடன் வழிபாடுகள் செய்த ஒரகடம் திருத்தலமாகும். இன்றும் ரிஷ்யசிருங்கரின் அனுகிரகத்தை இங்கு ஒலியாகவும் ஒளியாகவும் பக்தர்கள் பெற முடியும் என்று சான்றளிப்பதே இங்குள்ள வீடியோ படமாகும். ஆதித்ய ஒளியாக வரும் ஒளிக் கிரணங்கள், ஆலய கொடி மரத்தில் காற்றாக மாறி மணிகளை அசைத்து ஒலி அலைகளாக அடியார்களுக்கு அளிக்கும், வர்ஷிக்கும் ராம அனுகிரகத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். ரிஷ்யசிருங்கரின் தந்தை விபாண்டக மகரிஷி என்பார் ஆவார். பூரணத்தைக் குறிப்பதே விபாண்டகம் என்பதாகும். கலைக்கோட்டு முனிவர் என்றால் பூரணத்தின் ஒரு கலையாக விளங்குவதை பூரணமாக மாற்றித் தரும் அனுகிரகத்தை அளிக்கவல்லவர் என்று பொருள். இவ்வாறு கலைகளை பூரணமாக மாற்றித் தரும் பாரம்பரியத்தில் தோன்றியவர்களால் புத்திர காமேஷ்டி யாகம் நிறைவேற்றப்பட்டு அதில் தோன்றிய அமிர்தத்திலிருந்து பூலோகத்தில் ராம பிரான் என்னும் மனித வடிவில் தோன்றிய பெருமாள் அவதாரம் இறை அவதாரங்களிலேயே பூரணம் பெற்ற அவதாரமாக, பூரணத்தை அளிக்கக் கூடிய அவதாரமாக சித்தர்களால் புகழப்படுவதில் வியப்பென்ன ? கலைக்கோட்டு முனிவர் தன் எதிர்கால மனைவியான சாந்தியை மணப்பதற்காக அங்க நாட்டிற்கு விஜயம் செய்தபோதும், தசரதர் ஆண்ட கோசலை ராஜ்யத்தில் எழுந்தருளியபோதும் அந்நாடுகளில் உள்ள அரண்மனைக் கொடிகள், வனங்களில் உள்ள முல்லைக் கொடிகள், பசு மாடுகள், கன்றுகள், பற்பல பறவைகள் எல்லாம் கூவி கூவி கலைக்கோட்டு முனிவரை வரவேற்றனவாம். அப்படியானால் கலைக்கோட்டு முனிவரின் அருள் அமிர்தத்தால் பூலோகத்தில் தோன்றிய ராம பிரானின் மகத்துவம் எப்படி இருக்கும் ? வங்க தேசத்தில் வாழ்ந்த சுவாமி ராமா என்ற ஒரு சந்நியாசி தன் வீட்டை விட்டு மாலையில் வெளியே கிளம்பினால் ஆடுகள், மாடுகள், பாம்புகள், பறவைகள், விலங்கினங்கள் என்ற அனைத்தும் அவருடன் கூடவே வருமாம். அவர் திரும்பி தன் இல்லத்தை அடையும்போது அனைத்து பசுக்களும் கன்றுகளும் தாமாகவே தங்கள் கொட்டில்களில் சென்று அடங்கி விடுமாம்.

ஸ்ரீநிறைகணபதி கூவத்தூர்

ராமர் என்ற பெயருக்கே இத்தகைய மகத்துவம் வாய்க்கும் என்றால் அந்த ராமபிரானே தோன்றுவதற்கு தன் தவ சக்திகளை ஈந்த கலைக்கோட்டு முனியின் அனுகிரக சக்திகளை வர்ணிக்கத்தான் இயலுமா ? ஒவ்வொரு ஆவணி மாதமும், சித்திரை மாதமும் துலங்கும் பௌர்ணமி ஒளியில் கலாதித்ய கிரணங்கள் என்ற அபூர்வ கிரணங்கள் தோன்றி பக்தர்களுக்கு அருள்மழை பொழிகின்றன. கலை என்பது பூர்ணத்தின் ஒரு பகுதிதானே ? பலரும் அறிவில், அங்கத்தில், மனதில் குறைபாடுகளுடன் வாழ்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. எனவே அனைவரும் உடல், மன, உள்ளக் குறைபாடுகளைத் தீர்க்கவல்ல இந்த கலாதித்ய கிரணங்களின் அருள் மழையில் நனைந்து பசு நெய்யில் வறுத்த முழு முந்திரிகள் கலந்த பக்கோடா தானம் அளித்தலால் தங்கள் குறைகள் நீங்கி நல்லருள் பெறுவர். இங்கு நீங்கள் காணும் வீடியோ படமும் இத்தகைய கலாதித்ய கிரணங்கள் பொலியும் பௌர்ணமி அன்று எடுக்கப்பட்டதே என்பதே கலைக்கோட்டு முனியின் கனிந்த அனுகிரகமாகும். எப்படி ராம என்ற தாரக மந்திரம் நாராயண என்ற மந்திரத்தின் இரண்டாவது அட்சரமும், நமசிவாய என்ற பஞ்சாரட்சரத்தின் இரண்டாவது அட்சரமும் இணைந்து பொலிகின்றதோ அது போன்றதே லா என்ற ரா நெடிலும் தி என்ற ம குறிலும் இணைந்து பொலிவதே கலாதித்ய ஒளிக் கிரணங்கள். கலாமிர்தமே ராமாமிர்தம், ராமாமிர்தமே கலாமிர்தம். இத்தகைய கலாதித்ய பௌர்ணமி சக்திகளை ஆவணி, சித்திரை என்றவாறு வருடத்தில் இருமுறை மட்டுமே பெறமுடியும் என்பதால் நம் சற்குரு திதி, நட்சத்திரம், யோகம் போன்றவை திரிதினமாக அமையும் நாட்களிலும் இத்தகைய கலாமிர்த சக்திகளை அனுகிரகமாக அளிக்க சித்தம் கொண்டுள்ளதால் பக்தர்கள் இத்தகைய அபூர்வ நாட்களையாவது நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஞானம், தெய்வீக அருள் இவற்றில் பூர்ணத்துவத்தை அளிப்பதோடு மட்டுமல்லாமல் இவைகள் நிறைந்த நற்சந்ததிகளை உருவாக்குவதற்கு உரிய வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் இத்தகைய திரிதின வழிபாடுகள் உதவும். 29.8.2021 ஞாயிற்றுக் கிழமை கிருத்திகை நட்சத்திர திரிதினமாகவும், 1.9.2021 புதன் கிழமை தசமி திதி திரிதினமாகவும் அமைகின்றன. 22.9.2021 புதன் கிழமை அன்று வளர் துவிதியை திதியும், ரேவதி நட்சத்திரமும் திரிதினமாக அமைந்து விருத்தி யோகத்துடன் இணைவது நம் பூலோக மக்களின் பெரும் பயனே. பக்தர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி மேற்கூறிய வகையில் வழிபாடுகளை இயற்றி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

21.9.2021 செவ்வாய்க் கிழமை உத்திரட்டாதி நட்சத்திரம் அமைவதால் அன்று கோசலம் என்னும் பசுவின் கோமேயத்தை ஒரு தாமிர செம்பில் பெற்று மாவிலைகளால் வீடு, அலுவலகம், கடைகள், வியாபாரத் தலங்களில் தெளித்து கோ சூக்த துதிகளை அல்லது லட்சுமி காயத்ரீ மந்திரங்களை ஓதுதல் சிறப்பாகும். இதனால் எத்தகைய வறுமையான சூழ்நிலைகளும் மாறும், ஆவி நடமாட்டங்களால் ஏற்படும் துன்பம் விலகும். பலரும் உரிய தகுதிகள் இருந்தும் திருமணம் ஆகாமல் கால தாமதம் ஆகுதல், என்னதான் விளக்குகள் போட்டாலும் வீடு இருண்டு கிடத்தல், குளித்து விட்டு வந்தவுடன் பார்த்தாலும் உடல் அழுக்கேறி கிடப்பது போன்ற பிரமை இவை எல்லாம் லட்சுமி கடாட்ச சக்திகளின் குறைபாட்டைக் குறிக்கின்றன. லட்சக் கணக்கில் வங்கியில் பணம் குவிந்திருந்தாலும் அவர்களும் இத்தகைய குறைபாடுகளால் வருந்துவதுண்டு. அத்தகையோர் மேற்கண்ட கலாதித்ய வழிபாடுகளை தொடர்ந்து இயற்றி வருவதால் நற்பலன் பெறுவார்கள்.

ஸ்ரீஅகத்தியபிரான் வேதாரண்யம்

லட்சுமி கடாட்ச சக்திகளில் அதி சக்தி வாய்ந்தது என்று ஒன்றைச் சொல்ல வேண்டுமானால் அது குரு நம்பிக்கையே. குரு நம்பிக்கை என்ற லட்சுமி கடாட்ச சக்தி ஒன்று நிறைவாக இருந்தால் மற்ற அனைத்து செல்வங்களும் ஒரு தூசுதானே. இதை அருளக் கூடியதும் மேற்கூறிய வழிபாடே. நம் சத்சங்கத்தில் ஒரு அடியார் இருந்தார். நம் சற்குரு அவரை தன் குழந்தையைப் போல் பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தார் என்றே கூறலாம். ஒரு முறை அவர் காஞ்சி பெரியவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது கனிந்த கனி அந்த அடியாரைப் பார்த்து, “பதினெட்டு பதினெட்டு ...”, என்று கூறுவதாகத் தோன்றியதாம். கனிந்த கனி கூறிய வார்த்தைகளின் பொருள் அவருக்குப் புரியவில்லை. எதற்கும் இறுதி பதில் என்பது சித்தர்கள் கூறும் விளக்கம்தானே. எனவே நம் சற்குருவை அணுகி கனிந்த கனியின் மறைகளாய் விளங்கிய சொற்றொடருக்குப் பதில் தருமாறு கேட்டார் அந்த அடியார். நம் சற்குரு சற்று நேரம் ஆழ்ந்து அடியாரை உற்று நோக்கிப் பார்த்து விட்டு, “பத்து எட்டு என்பதே பதினெட்டு, அதாவது பற்று ... எட்டு, அதாவது தற்போது உன் குருவாய் வாய்த்தவரைப் பற்று, இறுதிவரை அவர் துணையை விடாது பற்றிக் கொண்டே கடவுளை எட்டு, கடவுளின் திருப்பாதங்களை அடைவாயாக, என்பதே காஞ்சிப் பெரியவர் கூற விழையும் விளக்கமாகும்,” என்றார் நம் சற்குரு. அப்போது நம் சற்குரு கூறிய விளக்கங்கள் நமக்குப் புரியாவிட்டாலும் காலப் போக்கில் நம் சற்குருவின் அற்புத விளக்கங்கள், காலம் கடந்த நம் திருவுருவின் தொலை நோக்குப் பார்வையின் மகத்துவம் புரியத்தான் செய்தது. மேற்கூறிய அடியாரை விட ஜூனியராக இருந்த ஒருவரின் வார்த்தைகளைக் கேட்டு அந்த அடியார் நம் சற்குருவின் சத்சங்கத்திலிருந்து சென்றே ... விட்டார். பதினெட்டு வருடங்களுக்குப் பின் நிகழப்போகும், ஒரு அடியார் சத்சங்கத்திலிருந்து விலகும் நிகழ்ச்சியை என்னதான் நம் சற்குரு தம் தொலைநோக்குப் பார்வையால் சுட்டிக் காட்டினாலும் அதை அவர் உணர்ந்து, தெளிந்து, இறைவனை அடையும் வழியில் நிலைகொள்ள முடியவில்லை. இந்த நிகழ்ச்சியைப் படிக்கும் அடியார்களாவது அத்தகைய தவறுகளைச் செய்யாமல் இறைவழிபாடுகளை இயற்றி குரு நம்பிக்கையைப் பெருக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எப்படி சற்குருவின் மேல் கொள்ளும் அவநம்பிக்கை நம்மை மீளாத் துயரில் ஆழ்த்துமோ, அதே போல் நாம் சற்குருவின் காரியங்களை நிறைவேற்றுவதில் காட்டும் ஒரு சிறிதளவு ஆர்வமும் மலையளவு நன்மையை அளிக்கும் என்பதை இங்குள்ள வீடியோ படம் உங்களுக்கு உணர்த்தும். சமீபத்தில் பேரூர் திருத்தலத்தில் நிகழ்த்திய முந்திரிப்பருப்பு பக்கோடா தானத்தில் குழுமிய குரு சக்திகள் எப்படி எண் கணித சக்திகளுடன் இணைந்து அருள்புரிந்தன என்பதே குருவின் கருணையை நமக்கு உணர்விக்கும். பேரூர், அரசு, ஆவுடை (கணபதி), மூன்றாவது நட்சத்திரமான கார்த்திகை, அணில், அதன் முதுகில் துலங்கிய மூன்று கோடுகள், திரிதின வியாப்தம் என்ற ஏழு அம்சங்களுடன் இது பானு சப்தமி திதியில் அமைந்ததால் அதுவும் குருவின் அனுகிரகத்தை வர்ஷிப்பதாக அமைந்தது (7 x 3 = 21 = 3) காவிய ராமனின் கருணையா இல்லை சற்குரு வெங்கட ராமனின் குரு கடாட்சமா ? ஒரகடம் ராமர் ஆலயத்தில் அமைந்த ரகுவம்ச சிம்மாசனத்தை 21 முறை வணங்குவதால் குரு நம்பிக்கை பெருகும் என்று நம் சற்குரு அருளியதன் பின்னணியில் அமைந்த வழிபாடு எவ்வளவு சுவையாக இருக்கிறது பார்த்தீர்களா ?

ஸ்ரீஆண்டாள் நாச்சியார் கூவத்தூர்

நம் சற்குரு தம்மை யாராவது போட்டோ எடுக்க முயன்றால், “ராஜா, அடியேனை போட்டோவில் பிடிக்காதீர்கள், உங்கள் உள்ளத்தில் அடியேனை பிடிக்க முயற்சி செய்யுங்கள் ...”, என்று அடிக்கடி கூறுவார்கள். என்னதான் முயற்சி செய்தாலும் குருவை உள்ளத்தில் நிலைநிறுத்துவது என்பது பிரம்ம பிரயத்னம்தானே ? இதை அறியாதவரா நம் சற்குரு ? இதற்காகவே கனிகணபதி என்ற மூர்த்தியை நம் ஆஸ்ரமத்தில் நிரவி இந்த இறை மூர்த்தியை உள்ளத்தில் நிலை நிறுத்தி பூஜைகள், வழிபாடுகள் இயற்றி வந்தால் மெல்ல மெல்ல இதுவே சற்குருவின் மேல் கொள்ளும் ஆழ்ந்த நம்பிக்கையாக உருவெடுக்கும் என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதல். நம் சற்குருவின் பூதஉடலை நேரில் கண்டு தரிசிக்கும் பாக்கியம் பெறாதவர்களுக்கும் இது தக்க வழிகாட்டுதலை அளிக்கும் என்பதில் ஐயமில்லை. தெற்கு நோக்கி அமர்ந்து அனைவருக்கும் தட்சிணா மூர்த்தி குருவாய் விளங்கும் சற்குருவின் தத்துவமே, உருவமே நம் ஆஸ்ரமத்தில் துலங்கும் கனிகணபதியின் திருவுருவம். கனிகணபதி என்ற ஆறு எழுத்துக்களும் குருவிற்கு உரித்தான மூன்றின் குசா சக்தியுடன் பொலிவதுதானே ?

ஸ்ரீஅமிர்தலட்சுமி தாயார் கூவத்தூர்

கோவணாண்டி பெரியவர் நம் சற்குருவை நிர்விகல்ப சமாதியில் திருஅண்ணாமலை புனித பூமியில் இலயிக்கச் செய்தார் என்பது நீங்கள் அறிந்ததே. இதுவரை நமக்குத் தெரிந்த ஆன்மீக வரலாற்றில் நிர்விகல்ப சமாதி கொள்ளும் எந்த ஒரு சாதகனும் தனியே இறைவனுடன், இறை உணர்வில் ஒன்றுவதே இயற்கை என்றாலும் எதிலும் “புரட்சி” செய்யும் நம் சற்குரு இதில் மட்டும் புரட்சியை செய்ய மாட்டாரா என்ன ? நிர்விகல்ப சமாதி நிலையையும் தன்னுடைய முயற்சியால் அடைந்தார் என்பது இல்லாமல், அதுவும் சற்குருவின் துணையோடுதான், சற்குருவின் அருளோடுதான் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். கோவணாண்டிப் பெரியவரும் “சிறுவனின்” இந்தக் கருத்தை ஆமோதித்து சிறுவன் எம்பெருமானின் தரிசனத்தைப் பெற வழிகாட்டி, வழித் துணையாய் அமைந்து அருள்புரிந்தார். சிறுவன் கோவணாண்டியின் வழிகாட்டுதலின் பேரில் சிவபெருமானின் கால் கட்டை விரல் ஒன்றைத்தான் தரிசனம் செய்தான். அந்த தரிசனத்தில் இலயித்தே தன்னை மறந்து காலம் கடந்த நின்றபோது கோவணாண்டியின் குரல் எங்கோ வெகு தொலைவில் ஒலிப்பது போல், “வாடா நைனா, போதும், எம்பெருமானின் கால் கட்டை விரலையே ஒரு சதுர்யுகத்திற்கு மேலாக பார்த்துக் கொண்டிருக்கிறாயே, நமக்கு நிறைய வேலை இருக்கிறது. அதை கவனிக்க வேண்டுமே ...”, என்று கூறி சிறுவனை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தாராம். இவ்வாறு பல லட்சம் ஆண்டுகள் இறைவனின் திருவுருவத்தை நேரில், புலன்களை கடந்து தரிசனம் செய்த நம் சற்குருவின் தரிசனப் பலன்கள் எல்லாம் எங்கு சென்று மறைந்தன. அவை எங்கும் சென்று விடவில்லை. அந்த தரிசனப் பலனில் ஒரு பகுதி நம் ஆஸ்ரமத்தில் உள்ள கனிகணபதியின் திருவுருவத்தில் பதிந்து மறைந்துள்ளன. ஆர்வமும், துடிப்பும், நம்பிக்கையும் உள்ள அடியார்கள் கனிகணபதியின் ஏதாவது ஒரு உடல் அங்கப் பகுதியை உள்ளத்தில் தியானித்தால் போதும் அவர்கள் நிச்சயமாக சற்குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையையும் வழிகாட்டுதலையும் பெறுவார்கள். உதாரணமாக, இந்த பிலவ ஆண்டில் கனிகணபதி மூர்த்தி தன் துதிக்கையில் ஏந்தி இருக்கும் அமிர்த கலசத்தைக் கண் முன் கொண்டு வந்து தியானிக்கலாம். அதனால் கிட்டும் அமுதப் பலன்கள் நம் அடியார்கள் வாழ்வில் பெருகும், பொங்கி நிறையுமே.

இந்த அமிர்த சக்திகளை உலகத்திற்கு நிரவும் எண்ணம் உடையவர்கள் சனிக் கிழமைகளில், பிரதோஷ நாட்களில் நெற்றிக்கு நாமம் இட்டு ஸ்ரீகனிகணபதி தன் துதிக்கையில் ஏந்தியிருக்கும் அமிர்த கலசக்தை தியானித்தவாறு திருக்கோயில்களை ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் வலம் வந்து வணங்குவதால் அவர்கள் பெறும் அமிர்த சக்திகள் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அவர்கள் தரிசிக்கும் உருவங்களில் எல்லாம் நிரவி வளம் பெருக்கும். அவரவர் கொள்ளும் பக்தியின் ஆழத்தைப் பொறுத்து இந்த ஒரு மணி நேர கால அளவை நீட்டிப்பதும் சாத்தியமே. சாரூப அமிர்தம், சொரூப அமிர்தம், விரூப அமிர்தம் என்று மூன்று வித அமிர்தரூப சக்திகள் இந்த பிலவ என்ற மூன்று எழுத்து ஆண்டில் பொதிந்துள்ளதால் இந்த அமிர்த சக்திகளை அளிக்கும், விநியோகிக்கும் வழிபாடு அமைவதும் இந்த பிலவ ஆண்டில்தான். அடியார்கள் நெற்றியில் விளங்கும் திருமண் நாமங்கள் இத்தகைய அமிர்த கலைகளை ஈர்க்கும் பதித கலை, துதித கலை, வேணுக கலை என்ற மூன்று கலை அம்சங்களுடன் துலங்கும் என்பதே நம் சற்குரு அளிக்கும் “நாம” மகிமை. இத்தகைய மூன்று மூன்றான ஒன்பது கலைகளும் எத்தகைய தொற்று நோயையும் விரட்டும் வல்லமை உடையன என்பதைக் கூறவும் வேண்டுமோ ? இத்தகைய ஒன்பது கலைகளே ஒன்பது என்ற பூரணத்துவத்தை அளிப்பதால்தான், ஒற்றை நாமம் அணியாமல் மூன்று நாமங்களை நெற்றியில் இடுமாறு தம் சீடர்களுக்கு அறிவுறுத்தி வந்தார். தம் அடியார்கள் பூரணமாய்த் திகழ வேண்டும் என்ற எண்ணத்தை பூரணமாய்ப் பெற்றவரே நம் சற்குரு !

ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் மதுரை

இத்தகைய நாமத்தின் பூரணத்துவம் பற்றி பறைசாற்றி வந்தவரே மதுரையில் ஜீவசமாதி கொண்டு அருள்புரியும் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் ஆவார். இம்மகான் ஆண்டாள் கொண்டையுடன் துலங்கி ஆணா பெண்ணா என்று மக்கள் அறியாத வகையில் பக்தி நிலையில் துலங்கினார் என்பது பலரின் வாதமாக இருந்தாலும் இத்தகைய ஆண்டாள் கொண்டை என்பது ஆண் பெண் இணைந்த பூரணத்துவத்தை குறிப்பதே ஆகும் என்பதே நம் சற்குருவின் தெளிவுரை. நடன கோபால நாயகி என்ற ஒன்பது எழுத்துக்களே இத்தகைய பூரணத்துவத்தின் சான்றாகத் திகழ்கின்றன. சற்குருவின் உரையிலிருந்து நாம் அறிவது அர்த்தநாரீஸ்வரர் என்ற இறை உருவம் ஆண் அல்லது பெண்ணின் அரைகுறையான தோற்றமன்று, இறைவனின் மனித சிருஷ்டி தத்துவத்தின் பூரணமான, சம்பூர்ணக் கோலமே. குருவும் சூரியனும் இணைந்த சிவராஜ யோகத்தில் தோன்றியவரே கிருஷ்ண பரமாத்மா. பகவானின் ஜனன முகூர்த்தத்தில் அமைந்த இந்த சிவராஜ யோகமானது இவ்வாறு குருவால் பார்க்கப்படும் சிவராஜ யோகமாக இன்று மலர்ந்து பக்தர்களுக்கு அருள்வதும் நம் பூலோக மக்களின் பெரும் பேறே. கிருஷ்ண பகவானின் ஜன்மாஷ்டமியுடன் ஜனன நட்சத்திரமான ரோஹிணியும் இணைந்து இந்த சிறப்பிற்கு மேலும் சிறப்பூட்டுகின்றன. இத்தகைய அபூர்வ அமிர்த சக்திகளை மக்களுக்கு எல்லாம் கனிந்தூட்டும் எண்ணம் உடைய பக்தர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு திருத்தலங்களை வணங்கி திராட்சை பதித்த பால்பேடா தானத்தை பக்தர்களுக்கு அளித்தல் சிறப்பே.

அழைப்பாய் அண்ணலை !
தேனிமலை

நாமம் என்னும் ஒருவருடைய பெயர் மகிமையைப் பற்றி பலரும் அவ்வளவாக அக்கரை கொள்வதில்லை. இது பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுவதே இங்கு நாம் அளிக்கும் நிகழ்ச்சியாகும். நம் சற்குருவிடம் இருந்த ஒரு அடியார் தன் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கேட்டபோது நம் சற்குருவும் தாமோதரன் என்ற நாமத்தை அளித்தார். தாமோதரன் என்றால் வயிற்றில் கயிறு கட்டிய கிருஷ்ணன் என்று பொருள். மிகவும் சுட்டியாக இருந்த இளவயது கிருஷ்ண பரமாத்மாவை கட்டுப்படுத்துவதற்காக தாய் யசோதா தேவி கிருஷ்ண பரமாத்மாவின் இடுப்பில் கயிற்றைக் கட்டி அந்தக் கயிற்றை ஒரு உரலோடு பிணைத்திருந்த நிலையைக் குறிக்கும் நாமமாகும். அந்த அடியாரின் முதல் குழந்தை முரட்டுத் தனமாக நடந்து கொண்டு இந்த உலகை விட்டு மறைந்ததால் அத்தகைய ஒரு சோகத்தை அந்த அடியார் மீண்டும் அனுபவிக்க வேண்டாம் என்ற பெருங்கருணை கொண்டு நம் சற்குருவால் அளிக்கப்பட்டதே அந்த அரிய நாமமாகும்.

ஸ்ரீஇரட்சக குலசேகர மகரிஷி
ஒரகடம் சிவாலயம்

ஆனால், சற்குருவைப் புரிந்து கொள்தல் என்பது கோடியில் ஒருவருக்குக் கூட கிடைக்காத பேறு, அமையாத நற்குணம் என்பதால் அந்த அடியாரும் சற்குருவின் வழிகாட்டுதலை நிராகரித்து விட்டார். இது ஒருபுறம் இருக்க மற்றோர் அடியார் தன் குழந்தைக்கு ஒரு நான்கெழுத்து நாமத்தை சூட்டியிருந்தார். இதை பல ஆண்டுகள் கழித்து நம் சற்குருவின் கவனத்திற்குக் கொண்டு வந்தபோது நம் சற்குரு அந்தக் குழந்தையின் விதியை மாற்றும் எண்ணத்துடன் ஒரு ஐந்தெழுத்து நாமத்தை அந்தக் குழந்தைக்கு அளித்தார். இங்கும் விதி விளையாடியது. நம் சற்குரு அளித்த நாமத்தை தவறாகப் புரிந்து கொண்டு அது சனி பகவானுக்குரிய பெயர் என்று கருதி அந்த அடியார் அந்தப் பெயரை நிராகரித்து விட்டார். உண்மையில் அந்தப் பெயர் அம்பாளின் திருநாமமே. சனி பகவானின் பெயராக இருந்தாலும், அதிலும் தவறு கிடையாது. காரணம் அந்த அடியாரின் குடும்பத்தவர் நினைத்தது போல் சனி கேவலமானவர் அல்லர். கேவலம் என்றால் தனித்தன்மை வாய்ந்தது என்ற பொருளும் உண்டு. எத்தனையோ கோடி கோடியாய் சாதாரண மக்கள் இருக்க இவர்கள் மத்தியில் தனித்தன்மை பூண்டவராய்ப் பிறந்து ஜொலித்தவரே சனி பகவானை தம் லக்னத்தில் பெற்ற உத்தம நம் சற்குரு ஆவார். மகான் சேஷாத்ரி சுவாமிகளும் இத்தகைய தனித்தன்மை கொண்டவர் என்பதும் நீங்கள் அறிந்ததே. தொடர்ந்த அந்த அடியாரின் நம்பிக்கையால் தம் மகளின் விதியை மாற்ற அமைந்ததே இந்தப் பெயர் மாற்றம் என்பதை அந்த அடியார் உணர உதவியதும் இந்த பிலவ என்ற மூன்று எழுத்து ஆண்டே. எனவே இதுவரையில் சுயநாம ஜபம் என்ற தன்னுடைய பெயரையே கூறும் ஜபத்தை இயற்றாதவர்கள் இனியாவது, இன்றிலிருந்து கிருஷ்ண பரமாத்மாவின் நாம ஜோதி பிரகாசிக்கும் இந்த கிருஷ்ண ஜயந்தி தினத்தில் ஆரம்பித்தல் சிறப்பாகும், மிகவும் சிறப்பாகும். தொற்றுநோய்களிலிருந்து விடுதலை அளிப்பது மட்டுமே சுயநாம ஜபத்தின் சிறப்பு என்பது கிடையாது. உயிரினங்கள் அனைத்தையும் பீடிக்கும் பிறவித் தளையிலிருந்து நம்மை மீட்க நம் சற்குருவால் அளிக்கப்பட்ட ஞானப் பொக்கிஷமே சுயநாம ஜபமாகும். நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் காண்க என்று எம்பெருமானைப் புகழ்ந்து பாடுவார் மணிவாசகர். கரிய அன்னையின் திருவடிகளில் திளைப்பவரே ஸ்ரீராமகிருஷ்ணர். இருளில் திளைப்பவள் காளி என்றால் சூரிய வெளிச்சம் எங்கே போயிற்று என்று ஆத்மவிசாரம் செய்து பார்க்கும்படிக் கூறுவார் பகவான். இந்த ஆத்ம விசாரத்திற்கு விடையாக வருவதே நம் சற்குருவின் சுயநாம ஜப மகிமை என்பதை உணர்தலும் உன்னதம். அதற்காகவே கனியும் காலமும் இதுவாகும். பகவான் ரஜனீஷும் ஒரு ஆண் பெண் என்ற இளஞ் ஜோடியை இறை தரிசனத்திற்காக தயார் செய்தார். ஆனால், அவர்கள் இறைவனை தங்கள் இணைப்பில் தேடும் முயற்சியில் சற்றும் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்தார். விதி வலியது அல்லவா ? அவர்கள் சற்குருவின் வேண்டுகோளை நிராகரித்து இறை தரிசனத்தையும் நிராகரித்து விட்டார்கள். இதை படிக்கும் அடியார்கள் மீண்டும் அந்த தவற்றைச் செய்து பிறவித் தளையில் சிக்காது சுயநாம ஜபம் என்னும் தெப்பம் கொண்டு பிறவிப் பெருங்கடலை நீந்த இறையருளை வேண்டுகிறோம்.

விடியல் விளைவது ஒரகடத்திலே !

கணவன் மனைவியாய் உறவு கொண்டவர்களும் இந்த சுயநாம ஜபத்தை கைக்கொண்டு இறையருளுக்குப் பாத்திரமாகும் அரிய வித்தையைப் புகட்டியவரே நம் சற்குரு ஆவார். ஒரு முறை நம் சற்குரு, “சுயநாம ஜபம் என்பது நாம் நினைப்பது போல் நம்முடைய பெயரைத்தான் கூறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நம்முடைய அப்பாவோ, அம்மாவோ நம்மை அழைக்கும் செல்லப் பெயரைக் கூட, அதாவது தம்பி, சின்னத்தம்பி, கண்ணு, செல்லா, ஆத்தா என்ற பெயர்களைக் கூட சுயநாம ஜபத்திற்கு எடுத்துக் கொண்டு ஜபிக்கலாம். இதனால் அந்தப் பெரியோர்களுடைய கனிந்த அருளும் நமக்குத் துணையாக வரும்,” என்று கூறி பல அடியார்களுக்கும் அவர்கள் ஜபிக்க வேண்டிய நாமங்களை அருளினார்கள். அப்போது ஒரு தம்பதியருக்கு “திருநா” என்ற பெயரையே சுயநாம ஜபமாக கணவன் மனைவி என்ற இருவருமே ஜபித்து இறையருளைப் பெறலாம் என்று தெரிவித்தார்கள். இந்த ஒரு நாமத்திலேயே நம் சற்குருவிற்கு தம் அடியார்கள் மேல் உள்ள அன்பு பூத்துக் குலுங்குவதைக் காணலாம். திருநா என்ற மூன்றெழுத்து குருவைக் குறிக்கும் மூன்று எழுத்துக்களுடன் துலங்குவது, இது மனைவி ஜபிக்கும்போது தன்னுடைய கணவனின் நாமமே தனக்கு சற்குருவின் வழிகாட்டுதலாக நின்று வழிநடத்தும் என்றும், கணவன் ஜபிக்கும்போது தாய் தந்தையர் தன்னை அழைக்கும் இந்த அன்புப் பெயரை அவர் ஜபிப்பதால் பெற்றோர்கள் இருவரின் வழிகாட்டுதலுமே அவருடைய குடும்பத்திற்கு அழியாச் செல்வமாய் நின்று காக்கும் என்றவாறும் பொருள் அமையும். திருநா என்பதை ஆங்கிலத்தில் அமைத்தால் அது THIRUNA என்று பொலியும் அல்லவா ? அப்போது அது THIRU NA, அதாவது 9, 6 என்ற எண்கள் இணைந்ததாக, அதாவது செவ்வாயும் சுக்கிரனும் இணைவதாக, சூடும் குளிர்ச்சியும் இணைவதான சுகத்தை அளிக்கும் அல்லவா ? இந்த இரண்டு எண்கள் இணையும்போது அது சுக்கிரனுக்கு உரிய ஆறு என்பதாக அமைவதால் அது அந்த அடியார் குடும்பத்திற்கு சுக்கிர சக்திகளை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லையே. அந்த அடியாரும் ஒரு அரசு வங்கியில் பணிபுரிந்து உயர் பதவிகளை வகித்து ஓய்வு பெற்றார் என்பதும் சுக்கிர சாட்சியாக அமையும் ஒரு அனுகிரகம்தானே.

ஸ்ரீகோதண்டராமர் ஒரகடம்

ராவணனை வெல்வதற்காக ஸ்ரீஅகத்தியர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசித்து அருளினார். ஆதித்ய இருதய மந்திரத்தை சித்தர்குல நாயகனிடமிருந்து பெற்ற ராமபிரானை வெல்வதற்கு எவராலும் இயலுமா ? அவ்வாறு இருக்க தன் குழந்தைகளிடமே போரில் தோற்று தன் உயிரை இழந்தார் என்பதை ராமாயண நிகழ்ச்சிகள் மூலம் அறிகின்றோம். இது எப்படி என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகின்றது அல்லவா ? இதுபற்றிய விளக்கங்களை வால்மீக இராமாயணத்திலோ, கம்ப இராமாயணத்திலோ நாம் பெற முடியாவிட்டாலும் இருடிகள் ராமாயணம் என்ற நவநாத சித்தர்களின் புராணம் இது பற்றிய விளக்கங்களை அளிக்கிறது. ராம பிரான் ராவணனை வென்ற பின் தான் எந்த சக்கரவர்த்தியுடனோ, ராஜவாவுடனோ போரிட வேண்டிய அவசியம் இருக்காது என்பதை மனத்தளவில் உணர்ந்தார். இருப்பினும் தான் மனித உருவில் பூமிக்கு வந்த இறை அவதாரம் என்பதால் தனக்கு தேவைப்படாத எதையும் தான் சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது என்ற பூலோக நியதியின்படி ஸ்ரீஅகத்திய பிரானிடம் பெற்ற வெற்றி தரக் கூடிய விஜய சக்திகளை ஒரகடம் திருத்தலத்தில் அனுபூதி பிரகாச கிரணம் என்ற விஷ்ணுக் கதிர்களாக சமர்ப்பித்து விட்டார். அந்த ராம பிரசாதத்தையே இங்கு ஒரகட திருத்தலத்தில் சூரிய ஒளி பிரகாச கதிர்களாக நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். இவ்வாறு “விஜய” சக்திகளை இழந்ததால்தான் தன் புதல்வர்களிடமே தோல்வி அடைய வேண்டிய நிலை அவதார புருஷரான ராமருக்கும் ஏற்பட்டது. ஆனால், மனிதன் ஒரு பொருளை தியாகத்தின் மூலம் இழந்தால் அது பல மடங்காக திரும்பி வரும் என்ற நியதிக்கு ஏற்ப தான் ஒருவன் உயிரை இழந்தாலும் அது வால்மீகி என்ற ஒப்பற்ற முனிவரால் திருப்பி அளிக்கப்பட்டு இந்த தியாகம் பின் வரும் கோடிக் கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாய், வளர் ஒளியாய் அமைந்தது. இதுவே ராம அவதாரம் மனிதர்களுக்குக் கற்பிக்கும் அற்புத பாடம். எதிலும், எக்காரியத்திலும் வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இங்கு அளித்துள்ள அனுபூதி பிரகாச கிரணங்களை ஒரகட திருத்தலத்தில் தரிசனம் செய்து ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை தினமும் ஓதி வருதல் வேண்டும்.

அரசர்கோவில்

செங்கற்பட்டு மதுராந்தகம் வழியாக சென்றடையக் கூடிய லட்சுமி தேவியின் அருள்கடாட்ச தலமே ஸ்ரீமகாலட்சுமி உடனுறை ஸ்ரீகமலவரதராஜ பெருமாள் திகழும் அரசர்கோயில் என்னும் பெருமாள் தலமாகும். நம் சற்குருவால் அருளப்பட்ட விஷ்ணுபதி திருத்தலம். லட்சுமி தேவி அபூர்வமாக தன் காலில் ஆறுவிரல்களுடன் திகழும் அதிஅற்புத சுக்ர சக்தி தலம். ஆறாம் தேதி பிறந்தவர்களும், 15, 24 என்ற தமிழ் தேதி எண்ணோ ஆங்கில தேதி எண்ணோ பிறந்த நாளாக உடையவர்கள் வழிபட்டு லட்சுமி கடாட்ச சக்திகளை பெருக்கிக் கொள்ளும் சிறப்பான மகாலட்சுமி தலம். மகா லட்சுமி பெருமாளின் திருமார்பில் ஸ்ரீதேவியாய் எழுந்தருள கோதை பெருமாளின் உருவத்தில் கீதையாய் துலங்கிய கோதை கீதை திருத்தலம். அரசனும் ஆண்டியாகும் அற்புத தலம். ஆம், ஆண்டியும் அரசனாக வேண்டும் என்று நினைப்பதே பூலோக மக்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அரச போகத்தில் திளைப்பவர்களும் இறையருள் பெற்று இறைவன் என்ற அருளைத் தவிர வேறு எதையும் நாடாத ஆண்டிக் கோலத்தை, ஆண்டியாய் உறையும் அற்புதத்தை நிகழ்த்தக் கூடிய திருத்தலமே அரசர்கோயிலாகும்.

ஸ்ரீஆண்டாள் அரசர்கோயில்

சிந்தூர ரஞ்சித புஷ்பம் என்ற அரிய தேவலோகத்து மலர் ஒன்றைப் பற்றி நம் சற்குரு ஏற்கனவே விளக்கியுள்ளார்கள். கைலாயத்தில் மட்டுமே இதன் சுகந்தத்தை முகரும் சந்தர்ப்பம் உண்டு. அதுவும் பூலோக மக்களுக்கு இத்தகைய சந்தர்ப்பங்கள் விளைவது அரிதிலும் அரிதே. அடியார்கள் நலனையே எப்போதும் விழையும் நம் சற்குரு இந்த அரிய மலரின் சுகந்தத்தையும் தம் அடியார்களுக்கு அருள திருவுள்ளம் கொண்டு வரும் 5, 6 செப்டம்பர் ஆதிய தேதிகளில் ஞாயிற்றுக் கிழமை, திங்கட் கிழமை என்ற இரு தினங்களிலும் இந்த அபூர்வ சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் நறுமண அனுகிரகத்தை தம் அடியார்களுக்கு உரிய வழிபாடுகள் மூலம் அளிக்கிறார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும்.

கரூர் அருகே தேவர்மலை நரசிம்ம பெருமானை போட்டோ படம் எடுத்து வரும்படி தம் அடியார் ஒருவரை நம் சற்குரு அனுப்பி வைத்தார் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். என்ன முயன்றும் அந்த அடியாரால் நரசிம்மரை படம் எடுக்க முடியவில்லை. ஆனால், இதற்காக சும்மா இருப்பதே சுகம் என்று கருதி நம் சற்குரு “சும்மா” இருந்துவிட வில்லை. பதினைந்து ஆண்டுகள் விடாமல் முயற்சி செய்து, அரும்பாடுபட்டு ஆயுர்தேவி அன்னையின் வழிபாட்டை பூலோகத்திற்கு கொண்டு வந்தாரோ அதே போல தேவர்மலை ஸ்ரீநரசிம்மரின் புகைப்படத்தையும் அடியார்களின் தரிசனத்திற்காக தம் பிரார்த்தனையால், தவப் பலனால் அளித்தவரே நம் சற்குரு. அதேபோல் சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் நறுமணம் அபூர்வமாக வீசும் ஞாயிறு திங்கள் என்ற கிழமைகளின் சங்கமத்தில் கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடம் பெயரும் உத்தம முகூர்த்த வேளையில் இந்த சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் சுகந்தத்தை பூலோக மக்களும் பெற வழிவகை செய்தவரே நம் சற்குரு ஆவார். இந்த நள்ளிரவு வேளையில் நாம் இந்த நறுமணத்தை நுகர்ந்து அபூர்வமான இந்த மலரின் சுகந்தத்தை, ஆயுள் விருத்தி சக்திகளை, அதனால் விளையும் ஆயுள் கடாட்ச சக்திகளை பெருக்கிக் கொள்ளலாம். அது இயலாதபோது சற்குரு அருளியுள்ள இந்த பூஜைகளை நிறைவேற்றியும் இந்த சிந்தூர ரஞ்சித புஷ்ப நறுமண சக்திகளைப் பெறலாம். பெண் குழந்தைகளை உரிய வரனுக்கு தாரை வார்த்து அளிக்கும்போது வரனின் தகப்பனார் குழந்தையை தன் மடியில் அமர்த்திக் கொண்டுதான் மணமகன் மாங்கல்ய தாரணம் நிகழ்த்தும்போது அதையே தன் புதல்வியான லட்சுமி தேவியை திருமாலுக்கு தாரை வார்த்து அளிக்கும் வைபவமாக இன்றும் பல திருமண வைபவங்கள் நிகழ்வதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இத்தகைய தாரை வார்க்கும் திருமணக் கோலத்தில் எழுந்தருளிய அன்னையே அரசர்கோயில் திருத்தலத்தில் ஆறுவிரல்களுடன் பொலியும் ஸ்ரீமகாலட்சுமி தேவி ஆவாள்.

ஸ்ரீநரசிம்மர் தேவர்மலை

அரசர்கோயில் திருத்தலத்தில் மகாலட்சுமி அன்னை எழுந்தருளிய கோலத்தை பல புராணங்களாக வடித்தாலும் நம்மால் அன்னையின் அருட்கோலத்தை முழுமையாக உணர முடியாது என்பார் அகத்திய பிரான். அத்துணை சிறப்புடன் பொங்கிப் பொலிவதே ஸ்ரீசுந்தர மகாலட்சுமியின் திருக்கோலமாகும். மணப்பெண்ணை புகுந்த வீட்டிற்கு வரவழைக்கும்போது உன் வலது காலை எடுத்து வைத்து வாம்மா என்று அன்புடன் அழைப்பார்கள். காரணம் மணப் பெண்ணில் வலது காலில் உள்ள லட்சுமி கடாட்ச வரலட்சுமி சக்திகள் நிலையாக கணவனின் இல்லத்தில் படிய வேண்டும் என்பதே இதன் உட்பொருள். இத்தயை லட்சுமி கடாட்ச சக்திகள் ஆறு விரல் சக்திகளுடன் சுக்ர கடாட்சம் பெற்றுத் திகழ்ந்தால் அதன் சக்தி எப்படி இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா ?

ஸ்ரீகமல வரதராஜ பெருமாள்
அரசர்கோயில்

மனிதர்களின் கை விரல்களில் கட்டை விரல் சுக்ர சக்திகளுடனும், கால் கட்டை விரல் குரு சக்திகளுடன் துலங்கும். அப்படியானால் மகாலட்சுமி தேவியின் எந்த விரல் இவ்வாறு ஆறு விரல் சக்திகளுடன் ஆறாவது விரலாகப் பெருகி, கூடுதல் லட்சுமி கடாட்ச சக்திகளுடன் துலங்குகின்றது என்பதைக் கூற முடியுமா ? இந்த இரகசியம் தெரிந்தவர்கள் ஸ்ரீகமல வரதராஜ பெருமாளும், ஸ்ரீமகாலட்சுமி தேவியுமே ஆவர். தேவாதி தெய்வ மூர்த்திகள் மட்டுமே தெரிந்த இந்த இறை இரகசியத்தை, சாதாரண அடியார்களுக்கும் வழங்க திருவுள்ளம் கொண்டுள்ளார் நம் சற்குரு. 5, 6 செப்டம்பர் என்ற இரு தேதிகளில் ஒன்றிலோ அல்லது இரண்டிலிமோ அல்லது இன்னும் சிறப்பாக இவ்வாறு ஞாயிறு திங்கள் கிழமைகள் இணையும் சங்கம நேரத்திலோ இறைவனுக்கும் தேவிக்கும் வெண் தாமரை, செந்தாரை மலர்கள் ஆயிரத்திற்குக் குறையாமல் அர்ச்சித்து வழிபடுதலால் இத்தகைய லட்சுமி கடாட்ச நுணுக்கங்களை சாதாரண மனிதர்களும் அறிந்து தெளிந்து பயன்பெறலாம் என்பதே நம் சற்குரு அளிக்கும் குரு அனுகிரகம் ஆகும். அது மட்டுமல்லாது சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் அரிய மணத்தையும் பூலோக மக்கள் பெறுவர் என்பதும் சித்தர்கள் அளிக்கும் குரு கடாட்ச சக்திகள் ஆகும். பெருமாள் ராமனாக பூலோகத்தில் அவதாரம் கொள்ளும் முன் பல ஆண்டுகள் முன்னதாகவே தண்டகாரண்யத்து பல ரிஷிகளும் ராம பிரானை தரிசிக்க பூலோகத்தில் வானரங்களாக, பகுஜன்வாலி என்ற குரங்குப் படைகளாக பூலோகத்தில் அவதாரம் அடைந்து காத்திருந்தனர் என்பது நீங்கள் அறிந்ததே. அதே போல வெகு வெகு அபூர்வமாக வீசும் இந்த சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் நறுமணத்தை நுகர இத்தலத்தில் பிருந்தாவனத்து கோபிகள் அனைவரும் துளசி செடிகளாக இன்று அரசர்கோயில் திருத்தலத்தை அலங்கரிக்கின்றனர் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் சித்தாமிர்தம் ஆகும். அரிதிலும் அரிய இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அரசர்கோயில் பிரகாரத்தை இந்த துளசிச் செடிகளின் மேல் சற்றும் கால் தீண்டாத வகையில் வலம் வந்து, வலம் வந்து திருமால் திருவருளை, லட்சுமி கடாட்ச சக்திகளைப் பெருக்கிக் கொள்ளுமாறு பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறோம். பொதுவாக, திருக்கோயில் பிரகாரங்களை வலம் வரும்போது 12, 108 முறை என்ற கணக்கெல்லாம் பக்தர்கள் வைத்துக் கொள்வதுண்டு. ஆனால், அரசர்கோயில் திருத்தலத்தை வலம் வருவதற்கு எந்த கணக்குமே தேவையில்லை என்பார் நம் சற்குரு. காரணம் இத்திருத்தலத்தில் பக்தர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு வலமும் அவர்களுக்கு ஆயுள், ஆரோக்யம், மக்கள் செல்வம், குரு பக்தி என்ற செல்வங்களை அளித்துக் கொண்டே இருக்குமாம். இந்தச் செல்வங்களை வேண்டாம் என்று கூறுவோர் யாருளர் ?

ஸ்ரீசுந்தர மகாலட்சுமி
அரசர்கோயில்

அதனால் அரசர்கோயில் திருத்தலத்தை வழிபாட்டிற்காக அடைந்த தருணம் முதற் கொண்டு அந்த தலத்தை நீங்கும் வரை பக்தர்கள் வலது கையில் தர்ப்பை மோதிரம் அணிந்திருத்தல் சிறப்பாகும். இது பற்றி அறியாதோருக்கும் தர்ப்பை பவித்திரத்தை அணிந்து கோயில் பிரகாரங்களை வலம் வரச் செய்தல் சிறப்பாகும். இதனால் பக்தர்கள் பெறும் லட்சுமி கடாட்ச சக்திகள் பன்மடங்காய்ப் பெருகுவதுடன், அத்தகைய சக்திகள் நிலைபெற்று சாஸ்வதமாக விளங்கவும் இத்தகைய பவித்ர வழிபாடுகள் உறுதுணையாய் அமையும். வரும் 6.9.2021 திங்கட்கிழமை அமாவாசையாக அமைவதால் அரசர்கோயில் திருத்தலத்தில் அமாவாசை தர்ப்பணங்களை நிறைவேற்றுதல் சிறப்பாகும். இதனால் குணசோபித பித்ருக்களின் ஆசி நமக்குக் கிட்டும். இந்த பிலவ வருடம் கார்த்திகை தீப நன்னாளை ஒட்டி திருஅண்ணாமலை வலம் வரக் கூடிய பித்ரு மூர்த்திகளே குணசோபித பித்ருக்கள் என்னும் அனைத்து விதமான லட்சுமி கடாட்ச சக்திகளையும் அருள வல்ல அபூர்வ பித்ரு மூர்த்திகள் ஆவர். இவர்கள் திருஅண்ணாமலையை வலம் வரும் அற்புத முகூர்த்த நேரம் சித்தர்களால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும் அரசர்கோயில் திருத்தலத்தில் பிரகார வலங்கள் இயற்றி அந்த புண்ணிய சக்திகளோடு தர்ப்பணம் இயற்றுதலால் அத்தகைய அடியார்கள் குணசோபித பித்ரு மூர்த்திகளின் ஆசீர்வாத சக்திகளைப் பெறுவார்கள் என்பதே சித்தர்கள் அளிக்கும் வாக்குறுதி. பொதுவாக, தர்ப்பணத்திற்குப் பின் வலது கையில் உள்ள பவித்ர மோதிரங்களைக் கழற்றி, பிரித்து ஆற்றில், ஓடும் நீரில் விசர்ஜனம் செய்வது இயல்பே என்றாலும் இதற்கு விதி விலக்காக வரும் திங்களன்று அரசர்கோயில் திருத்தலத்தில் தர்ப்பணம் அளித்த பின் தர்ப்பை பவித்ரங்களை கழற்றாமல் வைத்திருந்து திருக்கோயிலை விட்டு நீங்கும் சமயத்தில் அவற்றைக் கழற்றி விசர்ஜனம் செய்யலாம். தர்ப்பணத்திற்குப் பின் சுக்ர சக்திகள் பொலியும் லம்போதரன் என்னும் நாமம் உடைய குழந்தைகளுக்கோ, அவர்கள் பெரியவர்களாக இருந்தால் அவர்கள் கையால் ஆண், பெண் குழந்தைகளுக்கு வெள்ளிக் கொலுசுகளை தானமளித்தல் நம் வாழ்வில் கிடைக்கக் கூடிய அரிய பேறாகும். லம்போதரன் என்னும் நாமம் உடையவர்களைத் தேடிப் பிடித்தல் என்பது அரிதாக இருந்தால் எந்தத் திருத்தல பிள்ளையார் மூர்த்தியையும் அல்லது ஆஞ்சநேய மூர்த்தியையும் 12, 18, 24 என்ற கணக்கில் வலம் வந்து
ஓம் கமலாவல்லபாய வித்மஹே லட்சுமி கடாட்சாய தீமஹி
தந்நோ லம்போதர பிரசோதயாத்
என்று 108 முறைக்குக் குறையாமல் ஓதி வெள்ளிக் கொலுசுகளை தானம் அளித்தலாலும் குணசோபித பித்ருக்களின் கனிந்த ஆசிகளை அனுகிரகமாகப் பெறலாம்.

தேவபாண்டலம் சங்கராபுரம்

தாமரை மலரை அரவிந்தம் என்று அழைக்கிறோம். அரவிந்தம் என்றால் சூரிய ஒளி சக்திகளால் மலரும், சூரிய ஒளியைப் பெறும் மலர் என்ற பொருளும் உண்டு. மகரந்த மணம் என்ற பூவின் மணம் மறைந்து இருப்பதே தாமரை மலரின் சக்தியாகும். இந்த மகரந்த நறுமணம் சூரிய ஒளியால் தாமரை மலரும் போது அது சூரிய பகவானின் ஆதித்ய கிரணங்களுடன் இணைந்து ஒளி வீசும், மணம் கூட்டும் என்பதே தாமரை மலரின் சிறப்பாகும். தற்காலத்தில் இவ்வாறு இயற்கையாக அரவிந்த மணத்தை பெறுவது கடினம் என்பதை அறிந்த சித்தர்கள் தாமரை மலரை இறைவனுக்குச் சூட்டும் முன் அடியார்கள் தங்கள் கைவிரல்களால் தாமரை இதழ்களைப் பிரித்து மலர்ந்த பூக்களாய் இறைவனுக்கு சமர்ப்பிக்கும்படி, அர்ச்சிக்கும்படிக் கூறுகிறார்கள்.

ஸ்ரீசௌந்தரவல்லி தாயார்
தேவபாண்டலம்

இதனால் தெரிந்தோ தெரியாமலோ தாமரை மலர்களின் இதழ்களின்மேல் மக்களின் சூரிய விரல் ஸ்பரிசம் படுவதால் இது ஆதித்ய கிரண சக்திகளாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதே சித்தர்கள் நமக்களிக்கும் அரவிந்த இரகசியம். இவ்வாறு தன் அரவிந்த சூரிய விரலால் தாமரை மலர்களின் இதழ்களைப் பிரித்து இறைவனுக்கு நம் சற்குரு சூட்டிய பேரழகை அருகில் இருந்து தரிசிக்கும் பாக்கியம் பெற்ற அடியார்கள் இன்றும் நம்மிடையே உண்டு. எனவேதான் எப்போது தாமரை மலர்களை இறைவனுக்குச் சூட்டினாலும் அதன் இதழ்களைப் பிரித்தே இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது நம் சற்குருவின் வழிகாட்டுதல். மேலும் அரசர்கோவில் திருத்தலத்தில் இவ்வாறு தாமரை மலர்களைச் சூட்டும்போது அத்திருத்தலத்தில் திகழும் சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் நறுமணத்தையும் இத்தகைய மலர்கள் ஈர்ப்பதால் சிந்தூர ரஞ்சித ஆரக் கதிர்களை இறைவனுக்கு ஒளி மாலையாக சூட்டும் அரிய வாய்ப்பையும் அடியார்கள் தங்கள் சூரிய விரல்களின் மூலம் பெறுகிறார்கள் என்பதும் நாம் அறிந்து இன்புற வேண்டிய ஒளி சுவையே.

சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் நறுமணத்தை நுகர நம் சற்குருவைப் போன்ற உத்தமர்களின் வழிகாட்டுதல் இன்றி சாத்தியமே இல்லை எனலாம். காரணம் இத்தகைய உத்தமர்களே மனிதர்கள் அறியாத பல ஜோதி நுணுக்கங்களையும் அடியார்களின் நல்வாழ்விற்காக பகிர்ந்தளிக்கிறார்கள். வரும் 6.9.2021 அன்று பரிணமிக்கும் கிரக சஞ்சார இரகசியங்களை உணர முடிந்தால் நம் சற்குருவின் மகிமையும் நமக்கு ஓரளவு புரிய வரும். சிம்ம ராசியில் சூரியனுடன் சந்திரன் திகழ, கன்னியில் புதனும் செவ்வாயும் இணைய, துலா ராசியில் சுக்ரன் பூர்வ புண்ணிய சக்திகளுடன் மிளிர்வது என்பது எத்தனையோ ஆயிரம் ஆண்களுக்கு ஒரு முறையே நிகழும் பார்ஹஸ்பதிய குணசோபித கிரக சஞ்சாரம் என்ற அரிய நாமத்தைப் பெற்று பக்தர்களுக்கு அனுகிரகத்தை அள்ளி வழங்குகிறது.

குணசோபித என்ற பித்ருக்களின் நாமம் அமைவது ஏதோ ஏதேச்சையாய் நிகழ்வது அல்ல என்பதை கு ண சோ பி த என்ற ஐந்து அட்சரங்களும், இந்த கிரக சஞ்சாரத்தில் இணையும் ஐந்து கிரகங்களின் அம்சங்களை உணர்த்தும். மேற்கூறிய ஐந்து கிரகங்களுடன் வலிமை பெற்ற குரு பகவான் இணைவதே பிரஹஸ்பதீய கிரக சஞ்சாரம் ஆகும். இதுவும் ஐந்துடன் ஆறு இணையும் ஒரு அபூர்வ அனுகிரகம்தானே. அரவிந்த அன்னை நம் சற்குருவின் சீடர்களுக்கு பிரத்யேகமாக அளிக்கும் அனுகிரகங்கள் பற்றி ஏற்கனவே தெரிவித்திருந்தாலும் தற்போது அதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம். அரசர்கோயிலில் இறைமூர்த்திகளை வழிபடுவதால் கிட்டும் லௌகீகமான பலன்கள் ஒருபுறம் இருக்க தன்னில் தன்னை உணரும் அரவிந்த லோசனம் என்ற தெய்வீக சக்தியையும் இறையருளால், குருவருளால், அரவிந்த அன்னையின் தனித்த நல்லருளாய் பக்தர்கள் பெறலாம் என்பதும் மேற்கூறிய வழிபாட்டுப் பலன்களில் ஒன்றாகும்.

ஐந்தின் மேல் ஆறு பெருகவே

அரசர்கோயில் திருத்தலத்தில் ஸ்ரீசுந்தர மகாலட்சுமி தேவி தன்னுடைய இடது காலின் மேல் வலது காலை வைத்து வரகுணதில சக்திகளுடன் துலங்குகிறாள். இடது காலில் ஐந்து விரல்களும் வலது காலில் ஆறு விரல்களும் துலங்குவது நாம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வரகுணதில சக்திகளாகும். இத்தகைய வரகுணதில சக்திகள் ஐந்து, ஆறு என்ற தேதிகளில் லட்சுமி கடாட்ச சக்திகளை ஈர்க்க வல்லவை என்றாலும் இவ்வாறு சுக்ர பகவான் தான் ஆட்சி பெறும் துலா ராசிக்கு பிரவேசம் கொள்ளும்போது இத்தகைய வரகுணதில சக்திகள் பொங்கிப் பொலிவது என்பது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே நாம் பெறக் கூடிய அபூர்வ லட்சுமி கடாட்ச சக்திகளாகும்.

ஸ்ரீகருடாழ்வார் அரசர்கோயில்

அடியார்களுக்கு இத்தகைய ஆறு விரல் அமையவில்லையே என்றாலும் அரசர்கோயில் திருத்தலத்தை மேற்கூறிய 5, 6 என்ற தேதிகளில் வழிபட்டு தொடர்ந்து நாம் லட்சுமி தேவியை வழிபடும் போதெல்லாம் இத்தகைய ஐந்தின் மேல் ஆறு என்ற ஆசனத்தைப் பயின்று லட்சுமி துதிகளை ஓதி வருதலால் நாம் லட்சுமி கடாட்ச சக்திகளைப் பெருக்கிக் கொள்ளலாம். இத்தகைய வழிபாடுகளால் கிட்டும் லௌகீகமான பலன்களை வர்ணிப்பதை விட அடியார்கள் தாங்களாகவே தங்கள் அனுபவங்கள் மூலம் ஆத்ம விசாரம் நிறைவேற்றி புரிந்து கொள்தலே நலம் பயக்கும். ஐந்து என்பது ஒற்றைப்படை ஆண் பாலுக்கு உரியது, ஆறு என்பது இரட்டைப் படை பெண் பாலுக்கு உரியது என்பதை ஆத்ம விசாரத்திற்கு உரிய “கருவாக” எடுத்துக் கொள்தலும் ஏற்புடையதே. அரசர்கோயில் திருத்தலத்தில் ஸ்ரீமகாலட்சுமி ஆறு விரல்களுடன் பெண் சக்தி அம்சங்களுடன் துலங்குவதால் பெண்களால் நிலை நிற்கும் குடும்பங்கள் நன்னிலை பெற இத்தல வழிபாடு பெரிதும் உதவும். பல வீடுகளிலும் ஆண்கள் வேலை செய்யாமல், பொறுப்பில்லாமல், வீட்டை, குழந்தைகளை சரியாக கவனிக்காமல் இருப்பதைக் காண்கிறோம். அத்தகையோர் அரசர்கோயில் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுவதால் பெண்கள் தலைமையில் அத்தகைய குடும்பங்கள் நன்னிலை அடைவதை நாம் கண் கூடாகக் காணலாம். காயத்ரீ கோபுர தரிசன முத்திரையை வரகுணதில ஆசனத்துடன் இணைத்து நிறைவேற்றுதலாலும் அற்புத பலன்களைப் பெறலாம். குறைந்தது ஒரு வருட காலம் இந்த முத்திரையை மேற்கண்ட ஆசனத்தில் இயற்றி வந்தால் அவர்கள் நிச்சயமாக ஸ்ரீமகாலட்சுமியின் தரிசனத்தையே பெறுவார்கள் என்பது உறுதி. ஐந்திற்கும் ஆறிற்கும் இடையே உள்ள தெய்வீக இணைப்பு தெய்வீக காவியங்களிலும் இடம் பெற்றிருப்பதை நாம் காணலாம். ராமபிரான் குகனோடு ஐவரானோம், வாலியின் புதல்வன் அங்கதனோடு அறுவரானோம் என்று ஒரு தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த மனிதனையும் தன்னை விட தாழ் நிலையில் உள்ள குரங்குப் பிறவியான அங்கதனையும் தனக்குச் சமமாக மதித்து ராம அவதாரம் மகிழ்கின்றார் என்றால் இத்தகைய எண்களின் தெய்வீக மதிப்புதான் என்னே. அதேபோல் பஞ்சபாண்டவர்கள் என்ற ஐவரோடு கர்ணன் அறுவராக இருக்க வேண்டியவன், பஞ்சபாண்டவர்களுக்கும் மூத்தவன் என்ற தகுதியைப் பெற்று தரணியில் புகழுடன் திளைக்க வேண்டியவன் என்றாலும் அவன் அந்நிலையை அடைய விடாமல் விதி குறுக்கே புகுந்தது. இருந்தாலும் இந்த ஆறாவது சகோதரனாக திகழ்ந்து கண்ணபிரான் பாண்டவர்களுக்கு ஆற்றிய உதவிகளை அனைவரும் அறிவோம். திருஅண்ணாமலைக்கு அருகில் சங்கராபுரத்தில் உள்ள தேவபாண்டலம் என்ற திருத்தலமே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இவ்வாறு பாண்டவர்களுக்கு மட்டுமல்லாமல் தன்னை நம்பி அடைக்கலம் கொண்ட அனைவருக்குமே பாந்தவனாக அதாவது உண்மையான உறவு கொண்ட தெய்வ அவதாரமாக திகழும் அதிசயத்தை உணர்த்துவதாகும்.

14.9.2021 செவ்வாய்க் கிழமை அன்று வரை சிவராஜயோகம் சிறப்பாகத் திகழ்வதால் 5, 6 செப்டம்பர் தேதிகளில் அரசர்கோயிலில் இறை தரிசனம் பெற்ற பின்னர், செப்டம்பர் 14ந் தேதிக்குள் தேவபந்தலத்தில் இறை மூர்த்திகளை வணங்கி திருஅண்ணாமலையை வலம் வந்து வணங்குதலால் அரசர்கோயிலில் பெருகும் லட்சுமி கடாட்ச சக்திகளையும், வரகுணதில சக்திகளையும், அரிதிலும் அரிய சிந்தூர ரஞ்சித புஷ்ப சக்திகளையும், பூரண அவதாரத்தின் தேவபாந்தல சக்திகளையும் நாம் பெற்று இத்தகைய அபூர்வ சக்திகளை நம் பரம்பரையில் உள்ள அனைவருக்கும், சமுதாயத்திற்குமே தாரை வார்த்து அளிக்கலாம் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் அரசர்கோயில் தரிசன மகாத்மியமாகும். ராம பிரானைப் போல ஸ்ரீகிருஷ்ண பகவானும் அகில உலக சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தாலும் கிருஷ்ணன் என்றவுடன் நம் மனதில் தோன்றும் உருவம் ஒரு சக்கரவர்த்தி அணிந்துள்ள தலை கிரீடம் அல்லவே, குழந்தை கிருஷ்ணன் தன் தலையில் அணிந்த மயிற்பீலிதானே நம் மனதைக் கொள்ளைக் கொள்கிறது. இதை நாம் அனுபவிக்கும் முகமாக அனுபூதி பிரகாச கிரணங்கள் பொலியும் இந்த முகூர்த்த வேளையில் நாம் திருஅண்ணாமலையை இயற்கையாக கிட்டும் மயில் பீலிகளை கையில் ஏந்தியவாறு வலம் வந்து அந்த மயிற்பீலிகளை அவரவர் பூஜை அறையில் வைத்து பூஜிப்பதும், மற்ற அடியார்களுக்கு இத்தகைய மயிற்பீலிகளை கிருஷ்ண பிருந்தாவன பிரசாதமாக அளிப்பதும் சிறப்புடையதாகும்.

பாண்டவமித்ர தரிசனம்
திருஅண்ணாமலை

மயிற்பீலிகளுடன் திருஅண்ணாமலையை கிரிவலமாக வரும்போது அதைக் கையில் ஏந்தி வருவதற்குப் பதிலாக ஒரு மஞ்சள் பருத்தித் துணியில் தலைப் பாகையைக் கட்டி அதில் குரு பாதுகைகளை வைத்தோ அல்லது மயில் இறகுகளை மட்டும் செருகி தாங்களோ அல்லது தங்கள் குழந்தைகளோ கிரிவலம் வருவதும் மிகவும் சிறப்பானதே. கிரிவல சமயத்தில்
ஓம் தத் புருஷாய வித்மஹே பீதாம்பரதரி சமேதாய தீமஹி
தந்நோ சம்பூர்ணேஸ்வர ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதிக் கொண்டே வருதலால் பூரண பலன்கள் சம்பூர்ணமாய் வர்ஷிக்கும்.

ஸ்ரீவிரஜா ஆஞ்சநேய மூர்த்தி
அரசர்கோயில்

சனி தசை, சனி அந்தரம், சனி புத்தியுடன் விளங்குபவர்கள், ஏழரை நாட்டுச் சனி பீடிப்பில் வாடுபவர்கள் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். அரசர்கோயிலில் வழிபாடுகளை நிறைவேற்றிய பின் கிட்டும் பிரசாத தாமரை மலர்களை தங்கள் இல்லத்திற்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்திருந்து, விநாயகப் பெருமானை ஓடும் நதிகளில், நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யும் நாள் வரை தினமும் அந்த தாமரை பிரசாத மலர்களுக்கு லட்சுமி அஷ்டோத்திர துதிகளையோ அல்லது மேற்கண்ட லம்போதர காயத்ரீ மந்திரத்தையோ 108 முறை ஓதி 12.9.2021 ஞாயிறு அன்று பிள்ளையாருடன் ஆற்றில் விசர்ஜனம் செய்து விடுவதால் உலகம் முழுவதுமே சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் அனுகிரக சக்திகளை விநியோகித்த புண்ணிய சக்தி நம் அனைவருக்கும் கிட்டும். சிவராஜ யோக தினங்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது மயில் இறகுகளுடனோ மயிற்பீலி இல்லாமலோ அணியும் மஞ்சள் தலைப்பாகையை கிரிவல நிறைவில் அடியார்கள் தாங்களே வைத்திருந்து தொடர்ந்து பூஜை செய்து வருவதும் மற்றவர்களுக்கு தானமாக அளிப்பதும் சிறப்புடையது. இதனால் தலைக்கு வருவது தலைப்பாகையோடு போகும் என்ற வகையில் தலைக்கு வரும் கடன் பிரச்னைகளும், மானப் பிரச்னைகளும், விபத்துகளும் தீர்வடையும்.

ஒரு முறை தொடர்ந்த வழிபாடுகள், பிரயாணங்கள், பூஜைகள் என்று வந்தபோது ஒரு அடியார் சற்று உஷ்ணமாகவே, “வாத்யாரே, தொடர்ந்து இவ்வாறு பூஜைகளை இயற்றத்தான் வேண்டுமா ?” என்று கேட்கவே நம் சற்குரு தனக்கே உரிய பேரமைதியுடன், “சார், எங்கய்யா (கோவணாண்டிப் பெரியவர்) சொல்வதை அப்படியே உங்களிடம் சொல்லி விடுகிறேன். ஒரு லட்சம் முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த சேஷாத்ரி சுவாமிகளும், துரோபதை போன்று மற்றவர்களின் மானத்தைக் காக்க கிரிவலம் வந்த கிருஷ்ண பகவானும் தராசின் ஒரு தட்டில்தான் அமர்கின்றனர். இந்த தராசு சமமாக இருக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கு மேல் ஏசி ரூமில் தூங்கி சோம்பேறித்தனமாக பொழுதைக் கழிப்பவர்கள் தராசின் அடுத்த தட்டில் அமர வேண்டும். இறைவனைப் பொறுத்த வரையில் இவர்கள் அனைவரையும் ஒரே விதமாகத்தான் பார்க்கிறான். அடியேனைப் பொறுத்த வரையில் நீங்கள் கிருஷ்ண பகவானோடு, சேஷாத்ரி சுவாமிகள் போன்ற உத்தமர்களோடு அமர வேண்டும் என்பதுதான் விருப்பம். அடியேனின் இந்த “சுயநலமான” விருப்பத்தில் தவறேதும் உண்டா ?” என்று கேட்டார். அந்த அடியாரின் நடிவடிக்கைகளின் மேல் நம் சற்குருவின் இந்த எல்லையில்லா அன்பு வார்த்தைகள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தியதோ தெரியாது, ஆனால், சுற்றி இருந்த அடியார்களின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகியது என்பதைக் கூறவும் வேண்டுமோ ?

அரசர்கோவில் திருத்தலத்தில் அருள்புரியும் ஆஞ்சநேய மூர்த்தி ஸ்ரீவிரஜா ஆஞ்சநேய மூர்த்தி என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறார். விரஜா நதி என்பது மேலுலகத்தில் இருப்பது. மனிதர்கள் அனைவரும் தாங்கள் அடுத்த பிறவி மேற்கொள்ளும் முன் இந்த விரஜா நதியில் மூழ்கி எழுவதால் தாங்கள் இதுவரை இயற்றிய பாவ புண்ணியங்கள் அனைத்தும் மற்ற எவரும் கூறாமல் தங்களே அறிய உதவும் தேவக் கண்ணாடி ஆகும். இதன் விளைவாக தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள ஏதுவாக அமையும் அடுத்த பிறவியையே மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அரசர்கோயில் சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் நறுமண மகிமையால் பக்தர்கள் தங்கள் தவறுகளை இந்தப் பிறவிலேயே உணரவும், அத்தகைய தவறுகளை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளையும் தன்னுடைய தரிசனப் பலன்களாக அருள்பவரே ஸ்ரீவிரஜா ஆஞ்சநேய மூர்த்தி. எத்தனை ஆண்டுகள் திருத்தலங்களை சுற்றி வந்தாலும், கோயில் தீர்த்தங்களில் மூழ்கி மூழ்கி எழுந்தாலும் கிட்டாத விரஜா நதி சக்திகளை ஒரே வழிபாட்டில் நம் சற்குரு அளிக்கவல்லவர் என்றால் அண்ணாருக்கு நாம் எந்த அளவிற்கு கடமைப்பட்டுள்ளோம் ?!

ஸ்ரீரெங்கநாதர் தேவபாண்டலம்

ஒரு ஒலிம்பிக் வீரனை விட பன்மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது காற்று, காற்றை விடக் கடிந்து செல்லக் கூடியது ஒளி, ஒளியின் வேகத்தையும் விஞ்சுவது மனம், மனத்தின் வேகத்தையும் விட அதிக வேகத்தில் செயல்படக் கூடியதே ஆஞ்சநேய பெருமான் தோன்றிய வாயு சக்தி, இந்த வாயு சக்தியின் வேகத்தையும் மிஞ்சி நிற்பதே விரஜா சக்திகளாகும். ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமரின் நன்றிக் கடன் பூஜைக்காக ஆஞ்சநேய மூர்த்தி சிவலிங்கம் ஒன்றைத் தேடி திருக்கயிலாயத்திற்கு விரைந்து பறந்தார் அல்லவா ? அத்தருணத்தில் ஆஞ்சநேய மூர்த்தி கயிலையில் சிவலிங்கத்தை தேடிய தரிசன பகுதியே விரஜா பர்வதம் ஆகும். இத்தகைய விரஜா பர்வதத்தில் ஆஞ்சநேய மூர்த்தி சிவலிங்கங்களைத் தேடியபோதுதான் ஆஞ்சநேய மூர்த்திக்கு இவ்வாறு வாயு சக்திகளையும் மிஞ்சும் விரஜா சக்திகள் எம்பெருமான் அனுகிரகமாக அளிக்கப்பட்டன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் விரஜா இரகசியமாகும். தன்னுடைய அன்புக் குழந்தை இத்தகைய விரஜா சக்திகளைப் பெற வேண்டும் என்பதற்காக தோன்றிய சீதா ராம லீலையே இவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தியின் கால தாமதத்திற்கு ஏற்பட்ட கனிந்த அனுகிரகமாகும். இந்த தேவ லீலையில் பங்கு பெற்றவர்கள் சீதா ராமர் மட்டுமல்ல எம்பெருமான் காலாதீதனும் ஆவான். அவரவர் கொண்ட இறை நம்பிக்கை, குரு நம்பிக்கையைப் பொறுத்து கோடி கோடியாய்ப் பிறவிகளை “ஸ்கேன்” செய்து பிறவித் தளையிலிருந்து மீளும்படி அடியார்களை கேட்டுக் கொள்கிறோம். எப்படி திருஅண்ணாமலை கிரிவலம், இடுக்குப் பிள்ளையார் இடுக்கில் மேற்கொள்ளும் பிரவேசம், குருவாய்மொழி ஆக்கம் போன்றவை நம்மை பிறவித் தளைகளிலிருந்து மீட்கின்றனவோ அதே போல் எத்தனையோ பிறவிகளைத் தோன்றா நிலையிலேயே மாய்க்கவல்லவையே அரசர்கோயில் திருத்தலத்தில் நாம் ஸ்ரீவிரஜா ஆஞ்சநேயரை வலம் வந்து மேற்கொள்ளும் வழிபாடாகும். இங்கு நாம் நிறைவேற்றும் ஒவ்வொரு பிரதட்சணமுமே விரஜா நதியில் ஒரு தடவை மூழ்கி எழுந்த பலன்களை அளிக்கவல்லவை என்றால் அரசர்கோயிலில் நாம் மேற்கொள்ளும் வழிபாட்டின் மகிமைகளை வார்த்தைகளால் விளக்கத்தான் இயலுமா ?

அரசர்கோயில்

மனிதனிதன் உணர்வு நிலைகள் உறக்கம், கனவு, நனவு, துரீயம் என்பதாக அமையும். இதில் துரியம் என்பதில் உணர்வு பரிபூரணமாக இருக்கும். இறைவனை உணரக் கூடிய உணர்வு நிலை இதுவே. அரசர்கோயில் திருத்தலம் இத்தகைய நான்கு நிலைகளையும் மனிதன் முறையாக அடைந்து இன்புற வழிகாட்டுவதாகும். எப்படி ? திதி, யோகம், கரணம் என்ற கால பாகுபடுகளுள் கரணம் என்பது திதியில் பாதியாக அமைவது. ஒரு நாள் என்பது அறுபது நாழிகை கொண்டதாக அமைவதால் 60 நாழிகைக்கு மேல் ஒரு திதி அமையும்போது அது திரிதினமாக அமைந்து மிகுந்த சக்தியைப் பெறுகிறது. அதே போல திதியில் பாதியான கரணம் 30 நாழிகைக்குள் மேல் அமையும்போது அதுவும் மிகுந்த சக்தி கொண்டதாக அமைகிறது. இவ்வாறு 6.9.2021 அன்று அமையும் சதுஷ்பாதம் என்னும் கரணமானது 32 நாழிகை நேரத்திற்கு மேல் அமைவதால் இது சக்தி வாய்ந்த இடர் களையும் வர சக்திகளுடன் துலங்குகின்றது. இந்த இடர்களையும் சக்திகளை நாம் கைக்கொண்டு சிந்தூர ரஞ்சித புஷ்ப சக்திகளை மேன்மேலும் பெருக்கிக் கொள்ள சதுஷ்பாத வழிபாடு நமக்கு வழிகாட்டுகிறது.

அரசர்கோயில்

6ம் தேதி செப்டம்பர் அன்று காலை 7.30 மணி அளவில் சதுஷ்பாத கரணம் ஆரம்பமாவதால் அதற்கு முன் பித்ரு தர்ப்பணங்கள், வழிபாடுகளை நிறைவேற்றி, பின்னர் 7.30 முதல் அமையும் கிட்டத்தட்ட 32 நாழிகை சதுஷ்பாத கரண நேரத்தில் 32 தேவார பதிகங்களைப் பாடி கரண சக்திகளைப் பெருக்குதல் மிக மிக அபூர்வமாக அரசர்கோயில் திருத்தலத்தில் அமையும் வரப்பிரசாதமே, குரு பிரசாதமே. 32 நாழிகைள் அமையும் இந்த கரண நேரத்தை நான்கு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டால் ஒவ்வொரு பாதமும் மூன்று மணி நேரத்திற்கு மேல் வியாபகம் கொண்டதாக அமையும் அல்லவா ? இந்த கரண நேரத்தில் 32 தேவார பதிகங்களை எட்டு எட்டு பதிகமாகப் பிரித்து ஓதுவதோ, அல்லது ஒவ்வொரு நாழிகைக்கும் ஒவ்வொரு பதிகமாக 32 நாழிகைக்கும் 32 பதிகங்களை ஓதுவதையோ அல்லது மனதிற்குள் ஓத முடிந்தவர்கள் ஒவ்வொரு பாத நேரத்திலும் ஒவ்வொரு முறை இந்த 32 பதிகங்கள் அனைத்தையுமே ஓதி விடலாம். இதனால் அந்தந்த உணர்வு நிலைகளில் நிகழக் கூடிய அற்புத பாக்கியங்கள் கை கூடி வரும். அதாவது உறக்க நிலை ஆழ்ந்த அமைதியுடன் துலங்கும், கனவு நிலையில் தேவையில்லாத மனதை மயக்கும், பயமுறுத்தும், உடலை வருத்தும், அருவருப்பான கனவுகள் தோன்றாது, நனவு நிலையில் கோயில்கள், கோபுரங்கள், இறை விக்ரகங்கள், நல்லவர்கள், மலர்ச் செடிகள், பழங்கள், பால் விருட்சங்கள், நண்பர்கள் போன்ற நல்ல தரிசனங்களே கிட்டும், அனைத்திற்கும் மேலாக துரீய நிலையில் பூரணமான இறை தரிசனத்தையும் பெறுவோம். 32 தேவாரப் பதிகங்களை ஓத முடியாதவர்கள் நாராயணா என்ற நான்கு எழுத்து மந்திரத்தை ஒவ்வொரு அட்சரத்திற்கும் புத விரல், சூரிய விரல், சனி விரல், குருவிரல் இவற்றைத் தொட்டுத் தொட்டு சதுஷ்பாத கரண நேரம் முழுவதும் ஓதி வருவதும் ஏற்புடையதே. சற்குருவின் மேல் கொண்டுள்ள நம்பிக்கை ஆழமாக வேருன்றி வளர உதவும் அதி உன்னத வழிபாடு இதுவாகும்.

இறையடியார்கள் தாங்கள் நிறைவேற்றும் காரியங்களுக்கும் பூஜைகளுக்கும் ஏதாவது ஒரு பலனை எதிர்பார்ப்பது இயற்கையே. சதுஷ்பாதம் என்பது நான்கு பாதங்களை உடைய நாயைக் குறிக்கும். இது திர கரணம் ஆகும். நாயின் தன்மை உண்ண நேரமில்லை, உறங்க சமயமில்லை, ஓட்டம், ஓட்டம் என்பதே நாயின் தன்மையாக இருக்க இது எப்படி திர கரணமாக இருக்க முடியும் என்ற சந்தேகம் பலருக்கும் தோன்றலாம். பைரவரின் வாகனமாக இருக்கும் நாய் தான் எப்படி ஓடிக் கொண்டே, நகர்ந்து கொண்டே இருக்கிறதோ அதுபோல் உண்மையான காவலாளியின் தன்மை இவ்வாறு சுற்றிலும் படரும் பார்வையை ஓட்டிக் கொண்டே இருப்பதுதானே ? இத்தகைய அசைந்து கொண்டே இருக்கும் விழிப் பார்வையை உடையதே நாய் மட்டுமன்று முருக வாகனமான மயிலும் ஆகும். இந்த இரண்டு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று உறவாக நெருங்கிப் பழக வழிகோலுவதே இத்தகைய சதுஷ்பாத கரண வழிபாட்டுப் பலன்களில் ஒன்றாகும். இந்தப் பலனை அடியார்களுக்கு உணர்த்துவதே குளித்தலை அருகிலுள்ள ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரர் திருத்தலத்தில் நிகழும் ஒரு அன்யோன்ய உறவாகும். 5, 6 செப்டம்பர் தேதிகளில் அரசர்கோயில் திருத்தலத்தில் இயற்றிய வழிபாட்டுப் பலன்களை, சொல்லப் போனால் அரசர்கோயில் வழிபாட்டுப் பலன்கள் அனைத்தையும் ஒரே காட்சியாக விவரிப்பதே இங்குள்ள வீடியோவாகும், இந்தத் தரிசனப் பலன்களை ஒரே வரியில் கூறுவதானால் கண்......டவர் விண்டிலர் விண்டவர் கண்......டிலர். திரு கண் மால் !


குரு விரும்பினால் ...
திறக்காத கதவுகளும்
திறக்கும்
முள்ளும் மலரும் !

மாணிக்கவாசகரின் மணிவாசகங்களை அடியார்களுக்குத் தெளிவுபடுத்தும் முகமாக அமைந்த, “பைங்குவளைக் கார்மலர், செங்கமலப் பைம்போது” என்ற திருவெம்பாவை வார்த்தைகள் இறைவன் இறைவியின் திருவடிகளை உணர்த்தும் சிவசக்தி ஐக்ய சொரூப காட்சியாகும் என்று நம் சற்குரு விவரித்து உள்ளார் அல்லவா ? இவ்வாறு சிவ சக்தியாக இணையும் செந்தாமரை, வெண்தாமரை மலர்களை அரசர்கோயில் திருத்தலத்தில் ஸ்ரீகமல வரதராஜ பெருமாளுக்கும் ஸ்ரீசுந்தர மகாலட்சுமி தேவிக்கும் அர்ப்பணிப்பதால் அந்த மலர்களில் விளையும் சிந்தூர ரஞ்சித புஷ்பத்தின் நறுமணத்தையோ அந்த நறுமணத்தை பூலோக மக்களும் பெற்றுணர வழிகோலும் விரஜா சக்திகளையும் நாம் வர்ணிக்க முடியுமா ?

அரசர்கோயில்

இருப்பினும் இந்த அரிதிலும் அரிய அனுகிரக சக்திகளை அடியார்கள் அனைவருக்கும் அளிக்க விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட சற்குருவின் வாசகத்தை படமாக தங்கள் இல்லத்தில் குறிப்பாக படுக்கை அறையில் வைத்திருந்து தினமும் உறங்கும் முன் தரிசித்து வருதல் சிறப்பாகும். இவ்வருடம் 2021 முழுமையும் கோள் அம்சங்கள் தம்பதிகளின் சங்கமத்திற்கு பலவித தோஷங்களை உருவாக்குவதால் இவற்றை அறியாது திருமண முகூர்த்த நேரங்களை குறித்தவர்கள் அத்தகைய சங்கம தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெற சிந்தூர ரஞ்சித புஷ்ப நறுமணம் நிரவிய விரஜா சக்திகள் உதவும் என்பதால் இந்த புகைப்படங்களை புது மணத் தம்பதிகளுக்கு பரிசாக அளித்து சிவசக்தி ஐக்ய மகிமையை அவர்களும் பெற்று வாழ உதவும்படிக் கேட்டுக் கொள்கிறோம். அரசர்கோவில் என்பது அரசர் கோ இல் ஆகும். அதாவது தன்னுடைய உத்தம கணவனான சிவபெருமான் பார்வதியின் உள்ளத்தில் உறைந்த இடம் என்பது மட்டுமல்லாது, மகா லட்சுமி தேவியை மகா விஷ்ணு தன் உள்ளத்தில் நிரந்தரமாக ஏற்றுக் கொண்ட தலம் என்றும் கணவன் தன் மனைவிக்கு தன் உள்ளத்தில் நீங்கா இடத்தை அளிக்க வேண்டிய தலம் என்றெல்லாம் பொருள் கொண்டுள்ளதால் கணவன் மனைவி ஐக்ய ஒற்றுமைக்கு இதை விடச் சிறந்த தலம் ஒன்று உண்டா என்ன ? “போது, மலர் என்ற இரு வார்த்தைகளைக் கொண்டே ஒரு காவியம் படைத்து விடும் அளவிற்கு இதில் தாம்பத்ய இரகசியங்கள் அடங்கியுள்ளன, நைனா, அப்படியானால் முழு திருவெம்பாவைக்கும் உரை கூறுவதானால் எத்தனை வருடங்கள் ஆகும் என்று நீயே உணர்ந்து கொள் ...,” என்று மணிவாசகப் பெம்மானின் இறை பக்தியைக் குறித்து அடியார்களுக்கு விளக்கும்போது கூறினார் நம் சற்குரு. இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த அடியார்களில் ஒருவர் சற்று நேர இடைவெளிக்குப் பின், “வாத்யாரே, நீங்கள் கூறிய எதுவுமே எனக்குப் புரியவில்லை. சற்று விளக்கமாகக் கூற முடியுமா ?” என்று தயங்கி தயங்கிக் கேட்டார்.

ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்
தேவபாண்டலம்

நம் சற்குரு ஒரு புன்சிரிப்பை உதிர்த்து விட்டு சற்று நேர அமைதிக்குப் பின், “சரி ... நீ கேட்பதால் சொல்கிறேன். ஒவ்வொருவருக்கும் அவரவர் கையால் மூன்று சாண் அளவு கொண்டதாக அவர்கள் கை நீளம் அமைந்திருக்கும். சிலர் இந்த அளவுகளில் சிறிது மாற்றத்தை உணர்வார்கள். இது ஏன் ?” என்று கேட்டார். அந்த அடியாருக்கு “போதே” போதும் போல் தோன்றியதோ என்னவோ அவர் அமைதியாக இருந்து விட்டார். சற்குரு தொடர்ந்து, “இந்த அளவுகளை நீங்கள் ஆத்மவிசாரம் செய்து வந்தாலும் போதும் பல இரகசியங்களை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். கடவுள் பெருங்கருணை புரியும்,” என்றார்கள். கணக்கில் வல்லவர்கள் மல ர் போது = லம்போதரன் என்ற சமன்பாட்டிற்கு உரிய விடையைக் கண்டு பிடித்து சித்தர்கள் உணர்த்தும் பேருவகைக் கடலில் நீந்தி மகிழலாம். மேற்கூறிய சிந்தூர ரஞ்சித புஷ்ப நறுமணம் கமழும் அரசர்கோயில் வழிபாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற ஏக்கத்துடன் பலர் இருந்தாலும் அவர்களும் ஓரளவு இந்த வழிபாட்டின் பலன்களைப் பெறவிரும்பினால் மேற்கண்ட சற்குருவின் வார்த்தைகள் பொதிந்த படங்களுடன் சுக்ர வடிவில் அமைந்த, டைமண்ட் வடிவம் பொறிக்கப்பட்ட, டைமண்ட் வடிவ துளைகள் அமைந்த கரண்டிகள், டீ வடிகட்டிகள் போன்ற பாத்திரங்களுடன் உப்பு, புளி, மிளகாய் போன்ற மளிகைப் பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருந்து விநாயக சதுர்த்தி அன்றிலிருந்து, அதாவது 10.9.2021 வெள்ளிக் கிழமை முதல் மூன்று நாட்கள் பூஜை செய்து அவற்றை 12.9.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று ஏழைகளுக்கு தானமாக அளித்தலால் அற்புத பலன்களைப் பெறுவார்கள். தொழிற்சாலைகள், அலுவலகங்கள், உலைகலன்களில் மேற்கண்ட குருவார்த்தைகளை படமாக வைத்து தினமும் மலர்கள் இட்டு வணங்கி வருவதால் அவ்விடங்களில் பணிவோருக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் குறையும். 32 அட்சரங்கள் கொண்ட இந்த குருவாசகம் 8 x 4 = 32 என்ற வகையில் அமைந்து எண் திசைகளிலும் வரக் கூடிய ஆபத்துக்களுக்கு கவசமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

மூவா முச்சர ஜோதி அரிசில்

பிருந்தாவனம், ஜீவசமாதி, அரசு, அரிசில், ஜீவாலயம் என்பவை எல்லாம் பூலோகத்தில் பிறவி கொள்ளும் உத்தம மகான்கள் தங்கள் பூத உடலை உகுத்து தங்கள் யதார்த்த இருப்பிட லோகங்களுக்கு செல்லும்போது இப்பூலோகத்தில் அவர்கள் பெற்ற சக்தி அனைத்தும் ஜோதி வடிவில் நிலைபெறும் திருத்தலங்கள் ஆகும். இந்த பேரொளிப் பிழம்பையே சித்தர்கள் மூவா முச்சர ஜோதி அரிசில் என்று அழைக்கிறார்கள். அந்த ஜீவாலயத்தை வழிபடும் பக்தர்களுக்கும், அடியார்களுக்கும், அவர்கள் மேல் நம்பிக்கை கொண்ட உத்தம சீடர்களுக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து வழிகாட்டும் இத்தகைய அரிசில்கள். இது அர சு, அரிசி இல் என்றும் அழைக்கப்படும். அர சு என்றால் அரியும் சிவனுமாக உறையும் சித்த ஜோதி, மங்கள சக்திகள் முழுமையாக விளங்கும் இருப்பிடம் என்று பொருள்படும். இந்த பிலவ என்ற முச்சர ஜோதி வருடத்தில் நாம் தரிசித்து பயன்பெற வேண்டிய ஜீவசமாதியே தஞ்சாவூர் கும்பகோணம் இடையே பசுபதிகோயில் திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயமாகும். முச்சுடர் ஜோதி சக்திகள் பரிணமிப்பதே பசுபதிகோயில் திருத்தலமாகும்.

ஸ்ரீபெரியநம்பிகள் ஜீவாலயம் பசுபதிகோயில்

ராமானுஜ ஆச்சாரியாரின் குருவான ஸ்ரீபெரிய நம்பிகள் தன்னுடைய வாழ்க்கை முழுவதையுமே தன்னை நம்பி வந்த சீடர்களுக்காக அர்ப்பணித்த உத்தமராவார். ஆனால், தன்னுடைய சீடர்களின் முன்னேற்றத்திற்காக ஒரு சற்குரு இயற்றிய தியாகங்களை கூர்ந்து கவனித்து, ஆழ்ந்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் உணர முடியும் என்பதும் பெரிய நம்பிகளின் அற்புத வரலாறு உணர்த்துவதாகும். ஒரு முறை பெருமாளின் கண்களைப் பற்றிய வர்ணனை ஒன்றை தன் சீடர்களுக்கு விளக்கிக் கூறிக் கொண்டிருந்தார் ராமானுஜரின் குருவான யாதவ பிரகாசர். அதாவது திருமாலின் கண்கள் குரங்கின் “சூத்து” போல் இருந்தது என்பது அக்கணம் வரை எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்ணனையே.

ஸ்ரீவரதராஜ பெருமாள்
பசுபதிகோயில்

ஸ்ரீபெருந்தேவி தாயார்
பசுபதிகோயில்

இதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் எண்ணெய் ஸ்நானம் செய்விப்பதாற்காக சற்குருவின் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்த ராமானுஜர். அவர் கண்களில் சூடான கண்ணீர்த் துளிகள் திரண்டு அவரையும் அறியாமல் குருவின் முதுகில், தோள்களின் மேல் விழுந்து தெறித்தன. அனைத்தையும் உணர்ந்த சற்குருவோ ஒன்றும் அறியாதவர்போல் தன் சீடனை நிமிர்ந்து பார்க்க ராமானுஜரின் கண்கள் குளமாக இருக்க, சிவந்த அவர் கண்களிலிருந்துதான் இவ்வாறு சூடான கண்ணீர்த் துளிகள் நிரம்பி வழிந்தன என்பதை அறிந்து கொண்டு ராமானுஜரின் அழுகைக்கான காரணத்தைக் கேட்டார். ராமானுஜர் அழுது கொண்டே, “தேவரீர், ஈரெழு உலகிலும் ஒப்புமை கூற முடியாத பேரழகு பொருந்திய திருமால் கண்களை கேவலம் ஒரு குரங்கின் சூத்திற்கு ஒப்பிடுவதைக் கேட்டு அடியேன் உள்ளம் துடிப்பதால் ஏற்பட்ட அழுகையே இது ...”, என்று தன்னுடைய அழுகைக்கான காரணத்தைக் கூறவே குருவோ, “ராமானுஜா, இந்த விளக்கம்தான் இந்த சுலோகத்திற்கு வழிவழியாகக் கூறப்பட்டு வருகிறது, நீ வேண்டுமானால் ஒரு புது விளக்கத்தைக் கூறலாமே ...”, என்று கூறவே உடனே சற்றும் தாமதியாமல், “எப்படி வேண்டுமானாலும் சமஸ்கிருத பதங்களை பிரித்து பொருள் கொள்ளலாம் என்றாலும், அவரவர் தகுதி, திறமையைப் பொறுத்து ஒரு பதத்தை எப்படிப் பிரித்தால் அது சரியான பொருளைச் சுட்டுமோ, அப்படி பிரித்துப் பொருள் கொள்வதே ஆன்றோர் செயல். இது தாங்கள் அறியாதது அல்ல, எனவே இங்குள்ள வார்த்தைகளுக்கு, மார்கழி பனியின் குளிர்ந்த சூரிய கிரணங்களால் மலர்ந்த செந்தாமரையை ஒத்த விழிகளை உடையவன் நம் பெருமாள் ..., என்று வர்ணிப்பதே பெருமாளின் செந்தாமரை விழி அழகை சுட்டும் சுலோகமாக அமையும்,” என்றார் ராமானுஜர்.

ஸ்ரீநந்தீஸ்வரர்
மாளாபுரம்

இந்த உபநிஷத் விளக்கங்களைக் கேட்ட அனைவரும் அதுவே சரியென்று ஆமோதித்தனர். இவ்வாறு “குருவை மிஞ்சிய சீடனுக்கு” சற்குருவாகத் திகழ்ந்த நம்பியாண்டான் நம்பிகள் தான் தன்னுடைய கண் ஒளியை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை உணர்ந்து தூல கண் ஒளியை சூட்சுமமாக மாற்றி தன்னுடலில் நிலைத்துக் கொள்ள, நிறைத்துக் கொள்ள வழிகாட்டியவரே பாபநாசம் அருகிலுள்ள உத்தமதானபுரம் என்னும் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீமும்மூர்த்தி விநாயகர் ஆவார். மாளாபுரம் என்று ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் குறிப்பிடப்படும் திருத்தலம் இதுவே. மாளா புரம் என்றால் மாளாத நிலையை, இறவா நிலையை அளிக்கக் கூடிய திருத்தலம் என்று பொருள். இத்திருத்தல ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் இறக்கப் போகும் அடியார்களின் காதில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதி அவர்களுக்கு முக்திப் பேற்றை அளிக்கும் கருணை வள்ளலே. வடநாட்டில் உள்ள காசி திருத்தலத்திற்கு உண்மையாகவே பொருளாதாரம், உடல்நிலை காரணமாக செல்ல இயலாதவர்களுக்கு ராம ராம என்னும் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஓதி அவர்களுக்கு முக்தி அளிப்பவரே மாளாபுரம் இறைவன் ஆவார். அருகிலுள்ள பாபநாசம் திருத்தலத்தில் 108 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து தன் தந்தை தசரதர் உள்பட மூதாதையர்கள் அனைவருமே முக்திப் பேற்றை அடைய வழிவகுத்தார் ஸ்ரீராமர் என்பது நீங்கள் அறிந்ததே. மூன்று பிள்ளையார் மூர்த்திகள் அருளும் உத்தமதானபுரம், 108 சிவலிங்கங்கள் அமைந்த பாபநாசம், பாலை சக்திகள் பொலியும் திருப்பாலைத்துறை திருத்தலம் இம்மூன்றும் தமிழ் ஆயுத எழுத்து வடிவத்தில் அமைந்திருப்பதும் இந்த திருத்தலங்களின் சிறப்பாகும். தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே. சாமிநாத ஐயர் தோன்றிய திருத்தலம் தமிழ் ஆயுத எழுத்து சக்திகளுடன் தோன்றுவதில் வியப்பு ஒன்றும் இல்லையே. இத்தகைய மிருத்யுஞ்சய சக்திகளை சாமிநாத ஐயர் பெற்றிருந்ததால்தான் அவர் ஸ்ரீஅகஸ்தியர் உறையும் பொதிய மலையில் கல்யாணி அருவி வரையில் அனுமதிக்கப்பட்டார் என்பதும் நாம் உணர வேண்டிய ஆன்மீக இரகசியமாகும். திருஅண்ணாமலையில் பத்து முகங்களுடன் விளங்கும் இறைவனை தரிசனம் செய்ய பத்து முகங்களை வரமாக வேண்டி ராவணன் பெற்றது போல ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஸ்ரீகைலாச நாதர் என்ற இரு மூர்த்திகளின் தரிசனத்தை முழுமையாகப் பெறவும் சூரிய பகவான் இரு முகங்களுடன், அதாவது இரண்டு பிம்பங்களுடன் தோன்றினார் என்ற வரலாறும் சுவை அளிப்பதுதானே.

உத்தமதானபுரம்

இவ்வாறு மிருத்யுஞ்சய சக்திகளை அனுகிரகமாக அளிக்கக் கூடிய உத்தமதானபுரம் (3 x 3 = 9) திருத்தலத்தில் விளங்கும் ஸ்ரீமும்மூர்த்தி விநாயகப் பெருமானை தரிசனம் செய்து அதனால் பெற்ற மிருத்யுஞ்சய சக்திகளையே தன் உடலில் நிரவிக் கொண்டு அதை எதிர்கால இறை அடியார்களுக்கு எல்லாம், இறைவனை நம்பும் பக்தர்களுக்கெல்லாம் தாரை வார்த்து அளித்த பெருந்தகையே ஸ்ரீபெரிய நம்பிகள் என்று அழைக்கப்படும் நம்பியாண்டான் நம்பிகள் ஆவார். கூரத்தாழ்வார் மடியில் தலையை வைத்து, கூரத்தாழ்வார் மகள் திருத்துழாய் மடியில் தன் பாதங்களை வைத்து பெருமாளின் திருவடி ஐக்கியத்தைப் பெற்றவரே நம்பியாண்டார் ஆவார். பசுபதிகோயிலில் ஸ்ரீவரதராஜ பெருமாளின் வலது பக்கத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீபெருந்தேவி தாயார் தன்னுடைய அருள் கடாட்சத்தை இம்மூவர் மேல் வீசும் ஜோதி பிரகாசம் வேறு எங்குமே பக்தர்கள் பெற முடியாத ஒரு நிலைத்த குபேர அனுகிரகமாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
உத்தமதானபுரம்

வடதிசை நோக்கி இருக்கும் நம்பிகளின் திருவரிசில் லட்சுமி தேவியின் நிரந்தர கடாட்ச சக்திகளை பெற்று அதைப் பக்தர்களுக்கு எல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதே நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் லட்சுமி அம்ச பாக்கியமாகும். கேட்டை நட்சத்திரத்தில் தோன்றிய மகான்கள், பெரியோர்கள் கோடி கோடியாக இருந்தாலும், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்து கேட்டை நட்சத்திர சக்திகளை ஸ்ரீமகாலட்சுமி ஸ்ரீவரதராஜ பெருமாள் மேற்பார்வையில் பகிர்ந்தளிப்பது என்றால் இது நம்பியாண்டான் நம்பிகள் ஒருவர் மட்டுமே சாதிக்கக் கூடிய பெருமாள் அனுகிரகமாகும். அதனால்தான் நம்பிகள் “பெரிய” என்ற அடைமொழியைக் கொண்டு பசுபதிகோயில் மட்டும் அல்லாது தரணி எங்கும் “கோட்டை” கட்டி வாழ்கிறார் என்பதும் நாம் உணர வேண்டிய இரகசியமாகும். தன்னுடைய உடல் சேவைகளை எல்லாம் ஒளியாக்கி, பெருமாள் சேவையை ஒளிப் பிரகாச சக்திகளாக அளித்து, இவை அனைத்தையும் திருஅரிசில் என்ற கலை மகாத்மியத்தில் இணைத்தவரே ஸ்ரீபெரிய நம்பிகள் ஆவார். இந்த சக்திகளை எல்லாம் குபேர ஒளிப் பிழம்பாய் மாற்ற அருள் புரிந்ததே உத்தமதானபுரம் மும்மூர்த்தி விநாயகப் பெருமான் தரிசன சக்திகள் ஆகும். உத்தமதானபுரத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீமும்மூர்த்தி விநாயகப் பெருமானின் தரிசனம் பெற்றாலே இந்த உண்மை பளிச்சென விளங்கும். இங்குள்ள மூன்று விநாயக மூர்த்திகளின் உருவங்கள் வடக்கிலிருந்து தெற்கில் பிரம்மாண்டம் கொள்வது போல் தோன்றும், அதே சமயத்தில் இவை தெற்கிலிருந்து வடக்கு திசைக்கு ஊடுருவும் குரு கடாட்ச சக்திகளைப் பெருக்குகின்றன என்பதே உண்மை. இந்த “ஊடுருவும்” சக்திகளே பல லோகங்களுக்கும் சென்றடைந்து வியாபிக்கும் மிருத்யுஞ்ஜய சக்திகளாகும். அதனால்தான் இந்த தெய்வ உருவங்களை விநாயகப் பெருமானின் மூன்று உருவங்கள் என்று அழைக்காது மும்மூர்த்தி விநாயகர் என்று ஒருமையிலேயே அழைக்கிறோம்.

ஸ்ரீமும்மூர்த்தி விநாயகர் உத்தமதானபுரம்

முச்சர அரிசில் வழிபாடு என்ற ஒரு அரிய வழிபாட்டை சித்தர்கள் அருளியுள்ளனர். பசுபதிகோயில் பெரிய நம்பிகளின் ஜீவசமாதியில் மட்டுமே இயற்றக் கூடிய இந்த வழிபாட்டின் மகிமையைப் பூரணமாக அறிந்து கொள்ள விழைவோர் உத்தமதானபுரத்தில் ஸ்ரீமும்மூர்த்தி விநாயகரை முறையாக வழிபட வேண்டும் என்பது முக்கியம். நாம் நினைப்பது போல் இவர்கள் வெறும் பிள்ளையார் மூர்த்திகள் மட்டும் அல்லர், சிருஷ்டி, காப்பு, மறைவு என்று இறைவனின் அடிப்படை மூன்று சக்திகளையும் பிரபஞ்சத்தில் நிர்வகிக்கும் உன்னத தெய்வ மூர்த்திகளாக இவர்கள் அமைந்திருப்பதால் இந்த ஸ்ரீமும்மூர்த்தி விநாயகரை தொடர்ந்து வழிபட்டு வருவதால் சிருஷ்டி போன்ற தெய்வீக இரகசியங்களை சிறிது சிறிதாக அறிந்து உன்னதம் பெற இவர்களின் வழிபாடு பெரிதும் துணை புரியும்.

ஸ்ரீகைலாசநாதர்
உத்தமதானபுரம்

ஸ்ரீஆனந்தவல்லி
உத்தமதானபுரம்

சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் குறைந்தது 1008 பூரணக் கொழுக்கட்டைகளை ஸ்ரீமும்மூர்த்தி விநாயகருக்குப் படைத்து பல பிறவிகளில் வழிபட்டு வந்தவர்களே இத்தகைய தெய்வீக இரகசியங்களை தக்க குரு மூலமாய் அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். இவ்வாறு சற்குரு மூலம் அறிந்து கொண்ட தெய்வீக இரகசியங்களையே பெரிய நம்பிகள் அவர்கள் பசுபதிகோயில் திருத்தலத்தில் பக்தர்களுக்கு தாரை வார்த்து அளித்தார்கள். பெரிய நம்பிகளும், கூரத்தாழ்வாரும் தங்கள் கண்களை இழந்து வாடினார்கள் என்று நாம் அறியும்போது ஏன் திருமால் சங்கு சக்கரதாரியாக எழுந்தருளி இத்தகைய அடியார்கள் துயரங்களைத் துடைக்கவில்லை, தவறுகள் இழைத்த சோழ மன்னனைத் தண்டிக்கவில்லை என்றெல்லாம் அறியாமையால் பலர் நினைப்பதுண்டு. நாம் காணும் இந்த ஊனக் கண்கள் மறையும்போதுதான் “ஞானம்” என்ற அகக் கண் திறக்கும். இந்த அகக் கண்ணை பெறுவதற்கு எத்தனையோ ஆயிரம் பிறவிகள் தேவைப்படும் என்றாலும் தன் பக்தர்கள் மேல் உள்ள பெருங்கருணையால் ஒரே பிறவியிலேயே இத்தகைய ஞானக் கண்ணை கூரத்தாழ்வாரும் பெரிய நம்பிகளும் மாலின் மாபெரும் கருணையாகப் பெற்றார்கள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக இரகசியம்.

ஜீவாலயங்களை வணங்கும்போது அஷ்ட நமஸ்காரம் என்ற முறையில் எட்டு திக்குகளிலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே. இம்முறையில் பெரிய நம்பிகளின் அரிசிலை பசுபதிகோயிலில் வணங்கும்போது அமையும் மூன்றாவது அஷ்ட நமஸ்காரம் வடக்கு திசை என்னும் குபேர திக்கை நோக்கி அமையும். இவ்வாறு தெற்கு, கிழக்கு, வடக்கு, மேற்கு நோக்கி நான்கு நமஸ்காரங்களையும், அடுத்து வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்ற எட்டு திசைகளையும் நோக்கி வணங்குவதே பசுபதிகோயில் பெரிய நம்பி அரிசிலில் நிறைவேற்றக் கூடிய அஷ்ட நமஸ்கார பத்ததியாகும்.

ஸ்ரீஆஞ்சநேயர் பசுபதிகோயில்

இதில் மூன்றாவது நமஸ்காரம் நிறைவேற்றும்போது மூவா முச்சர அரிசில் சோதி போற்றி என்ற மந்திரத்தை ஓதுவது சிறப்பாகும். இதில் மூன்றாவது நமஸ்காரம் வடக்கு திசைக்கான மூன்று எண் சக்திகளின் குசாவாக அமைவதால் இது வழிபாட்டின் பலன்களை பன்மடங்காகப் பெருக்கும். அபூர்வ இந்த மந்திர சக்திகளின் பலன்களைப் பெற ஒவ்வொரு சுற்று அஷ்டநமஸ்காரத்தை நிறைவேற்றிய பின்னரும் ஒரு தேங்காயை பெரிய நம்பிக்கு அர்ப்பணிக்க வேண்டும். அவரவர் சக்தி, நேரம், சூழ்நிலைகளைப் பொறுத்து எத்தனை தேங்காய்களை வேண்டுமானாலும் பெரிய நம்பிக்கு அர்ப்பணிக்கலாம். வழிபாட்டின் நிறைவில் இந்த தேங்காய்களை நம்பிகளின் பிரசாதமாக எடுத்துச் சென்று தங்கள் ஊரில் அமைந்த திருத்தலங்களில் பழம், வெற்றிலை பாக்கு, பூ போன்ற மங்கலப் பொருட்களை சேர்த்து பக்தர்களுக்கு தானம் அளித்தலால் அரிதிலும் அரிதாக பெரிய நம்பிகளின் திருவரிசிலில் பூத்த பக்தி மலர்களை உலகம் முழுவதும் நிரவும் திருப்பணியை நிறைவேற்றியவர்கள் ஆவோம். பொதுவாக, மூன்று கண்களுடன் துலங்கும் தேங்காய்கள் சில சமயம் ஓரிரு கண்கள் குறைந்து துலங்கும் அற்புதத்தையும் அடியார்கள் கண்டு மகிழலாம். இதுவே பெரிய நம்பியின் அரிசிலில் விளங்கிய மூன்று பெருமாள் அடியார்கள் பெற்ற அனுகிரகத்திற்கு இன்றும் சான்றாக நிற்கும் மகிமையாகும். அடியார்களின் தூல கண்களைப் பெற்றுக் கொண்ட பெருமாள் அவர்களுக்கு சூட்சும கண் பார்வையை அளித்தார் என்பதற்கு இன்றும் விளங்கும் சான்று இதுவே.

பசுபதிகோயில் திருத்தலத்தில் எந்நாளிலும் மேற்கூறிய வழிபாடுகளை இயற்றி பயன்பெறலாம் என்றாலும் மூன்றாம் பிறை தரிசன நாட்கள், ஞாயிற்றுக் கிழமை, வியாழக் கிழமை, ரோகிணி, கேட்டை நட்சத்திர நாட்கள், அஷ்டதி திதி நாட்கள் வழிபாடுகளுக்கு உகந்தவை. இந்த சிறப்பிற்கு மேலும் அணி கூட்டுவதே உத்தமதானபுரம் திருத்தலத்தில் மும்மூர்த்தி விநாயக மூர்த்தியை வணங்கி பின்னர் பசுபதிகோயில் வழிபாடுகளை மேற்கொள்தல் ஆகும். உத்தமதானபுரம் என்ற திருத்தலமே பிள்ளையார் சுழி என்னும் ‘உ’ கொண்டு ஆரம்பிப்பதும், பிரணவ ஜோதியில் துலங்கும் அ, உ, ம என்ற மூன்று ஜோதிகளும் இந்த மும்மூர்த்தி விநாயக மூர்த்திகளிடம் ஐக்யம் கொண்டுள்ளதும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் தெய்வீக இரகசியங்களாகும்.

தும்பிக்கை ஆழ்வார்

பெருமாள் தலங்களில் இருக்கும் பிள்ளையார் மூர்த்தி தும்பிக்கை ஆழ்வார் என அழைக்கப்படுகிறார் என்று நாம் நினைப்பது சகஜமே. உண்மையில் இந்த தும்பிக்கை ஆழ்வார் என்ற பிரயோகத்தை பக்தர்களின் வழிபாட்டிற்கு அருளிய பெருமை பெரிய நம்பிகள் அவர்களையே சாரும். பெரிய நம்பிகள் சுமார் 105 வயது வரையிலும், ராமானுஜர் 120 வயது வரை மனித வாழ்வை நிறைவாக வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் அந்த நிறைவான வாழ்வை இறைவனை வழிபடும் உண்மையான சாதனையாக மாற்றி மக்களுக்கு வழிகாட்டியவர்களே இத்தகைய வைணவப் பெரியோர்கள். பல அனுகிரகங்களோடு நீண்ட ஆயுள் என்று மக்கள் விரும்பும் அனுகிரகத்தையும் அளுளக் கூடியதே தும்பிக்கை ஆழ்வார் வழிபாடு என்பதை உணர்ந்தோர் ஒரு சிலரே.

ஸ்ரீசெல்வவிநாயகர் மாளாபுரம்

இந்த ஒப்பற்ற அனுகிரகத்தை அருளக் கூடியதும் பசுபதிகோயில் பெரிய நம்பிகள் ஜீவாலயம் ஆகும். பெரிய நம்பிகள் உத்தமதானபுரம் என்ற ஒன்பது அட்சர திருத்தலத்தில் பொலியும் மூன்று விநாயக மூர்த்திகளின் அனுகிரகத்தை இவ்வாறு ஆயுள் வளர்க்கும் ஔஷத சக்திகளாக தன் திருவரிசிலில் நிரவினார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். தற்போது தும்பிக்கை ஆழ்வாரின் சிலா விக்ரஹம் பசுபதிகோயில் திருத்தலத்தில் வழிபாட்டிற்கு அமையவில்லை என்றாலும் பெரிய நம்பிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த தும்பிக்கை ஆழ்வாரின் ஆயுள் விருத்தி சக்திகள் பசுபதிகோயில் திருத்தலத்தில் நிரம்பி வழிகின்றன என்பதை மறுக்க முடியாது. பசுபதிகோயில் திருத்தலத்தில் நிரவியுள்ள இத்தகைய அபூர்வமான ஆயுள்விருத்தி சக்திகளை பெற விரும்புபவர்கள் உத்தமதானபுரம் மும்மூர்த்தி விநாயக மூர்த்தியை வணங்கி பின்னர் பெரிய நம்பிகளின் ஜீவாலயத்தை பசுபதிகோயில் திருத்தலத்தில் அஷ்ட நமஸ்கார வழிபாடுகள் மூலம் நிறைவேற்றுதல் நலம். வழிபாட்டின் நிறைவில் வடக்கு நோக்கி நின்று கொண்டு தங்கள் நெற்றியில் ஒன்பது ஒரு ரூபாய் காசுகளை வைத்துக் கொண்டு
ஓம் தத் புருஷாய வித்மஹே மகா தேவாய தீமஹி
தந்நோ தும்பிக்கை ஆழ்வார் பிரசோதயாத்
என்று ஒன்பது முறைக்குக் குறையாமல் ஓதுவதால் இது பல நாட்பட்ட நோய்களை நிவாரணம் செய்யும் ஔஷதமாக அமையும். வழிபாட்டிற்குப் பின் அவரவர் இல்லங்களில் இவ்வாறு ஒன்பது நாணயங்களை தங்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு குறைந்தது 12 அடிகள் வடக்கு நோக்கி நடந்தும், பின்னர் 12 அடிகள் பின்னோக்கி நடந்தும் புரியும் யோகமே பெரிய நம்பிகள் ஆயுள் விருத்தி யோகம் என்று அழைக்கப்படும். ஆரம்பத்தில் நாணங்கள் கீழே விழாமல் நெற்றியில் வைத்துக் கொள்வது சிரமமாக இருக்குமாதலால் பயிற்சியில் முன்னேறும் வரை ஒரே இடத்தில் வடக்கு நோக்கி நின்று கொண்டு 12 முறை மேற்கண்ட தும்பிக்கை ஆழ்வார் காயத்ரி மந்திரத்தை ஓதுவதும் ஏற்புடையதே. அனைவரின் ஆயுளை வளர்க்கும் அதியற்புத வழிபாடாக இது அமையும் என்றாலும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் சங்கம பிரச்னைகள், இடுப்பு வலி, கழுத்து வலி, முழங்கால் வலி போன்று எலும்பு தேய்மானங்களால் ஏற்படும் பல பிரச்னைகள் தீர்வு பெறும். இரண்டு கைகளையும் கோர்த்து வைத்துக் கொள்வதோ அல்லது இரு கைகளையும் இணைத்து கும்பிட்ட நிலையில் வைத்துக் கொள்வதோ ஏற்புடையதே. நம் சற்குரு உறங்கும்போது இவ்வாறு இரு கைகளையும் கும்பிட்ட நிலையில் இணைத்து வைத்துக் கொண்டே உறங்குவார். இந்த வழக்கத்தை நாமும் மேற்கொள்வதால் நம்முடைய அன்றாட பிரச்னைகளுக்கு உரிய தீர்வை காணாபத்ய லோகத்தைச் சேர்ந்த பித்ருக்கள் நமக்கு சூட்சுமமாக உணர்விக்கும் அதிசயத்தையும் நாம் அனுபவிக்க இயலும். திருஅண்ணாமலையில் ரமணாஸ்ரமம் எதிரே உள்ள பிள்ளையார் மூர்த்தியும், பாண்டிச்சேரி அரவிந்த அன்னை ஆஸ்ரமத்தில் அமைந்துள்ள கணபதி மூர்த்தியும் இத்தகைய நோய் நிவாரண சக்திகளுடன் எழுந்தருளிய மூர்த்திகளே. மந்திர ஜபத்திற்கு பயன்படுத்தும் ஜபமாலை போல மேற்கண்ட ஒன்பது நாணயங்களையும் மாற்றவோ பிறருக்கு அளிக்கவோ கூடாது. வழிவழியாக, பரம்பரை சொத்தாக அளிக்கக் கூடியதே இத்தகைய ஆயுளை வளர்க்கும் நாணய செல்வமாகும். இங்கு விளக்கியுள்ள வழிபாட்டைக் குறித்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் ஏற்படலாம். இந்த சந்தேகங்கள் அனைத்திற்கும் விடையளிக்கக் கூடியவரே மாளாபுரம் ஸ்ரீசெல்வவிநாயகர் ஆவார்.


அவரவர் நிலையிலிருந்து
அவரவர் முடிவுகளை
எடுக்கிறார்கள் !

தங்கம், வைரம், வைடூரியம், மாணிக்கம் போன்ற ஆபரணங்களுக்கெல்லாம் ஆசைப்படாதவர்கள் இவ்வுலகில் எவருமே இல்லை எனலாம். ஆனால், கடவுளை அறிந்தவர்களுக்கோ, கடவுள் தரிசனத்தைப் பெற்றவர்களுக்கோ இவை எல்லாம் களிமண் உருண்டைகளே. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். ஒரு முறை ரிஷிகேஷில் ஒரு சாது வசித்து வந்தார். நவராத்திரி சமயம். தேவியை ஆடை ஆபரணங்களுடன் அலங்கரித்து பூஜிக்க பெரிதும் விரும்பினார். அவரோ ஒரு சன்னியாசி. ஒரு வேளை உணவிற்கே கையேந்தும் அவர் தங்க வைர ஆபரணங்களை நினைத்துக் கூட பார்க்க முடியாதே ? அவருடைய அப்பழுக்கற்ற அன்பை உலகிற்கு பறைசாற்ற விரும்பினாள் ஜகன்மாதா. அன்று மாலை அவர் தங்கியிருந்த அறைக் கதவை யாரோ தட்டுவது போல் தோன்றியது. அவர் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று பார்த்தார். வாசலில் ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். பட்டுப் பாவாடை, பட்டுச் சொக்காய் அணிந்திருந்தாள்.

பசுபதிகோயில்

நெற்றியில் தங்கச் சுட்டி, முகத்தில் மந்தகாசப் புன்னகை. கையிலோ ஒரு தங்கத் தட்டு, அதில் ஏதேதோ ஆடை அணிகலன்கள். அந்த சன்னியாசிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆச்சரியத்துடன், “அம்மா, நீ யார் உனக்கு என்ன வேண்டும் ?” என்று கேட்கவே அந்தச் சிறுமி கலகலவென்று நகைத்து, “ஐயா, நவராத்திரியின்போது அம்பாளை நீங்கள் தங்க ஆபரணங்களால் அலங்கரித்து அழகு பார்க்க விரும்பியதால் பக்கத்து அறையில் உள்ள சிவானந்தா இந்த ஆடை ஆபரணங்களை எல்லாம் உங்களிடம் தரச் சொன்னார் ...”, என்று கூறவே அந்த சன்னியாசிக்கு ஒரே ஆச்சரியம். தான் அம்பாளுக்கு தங்க நகை போட்டு அலங்கரிக்க நினைத்த “கனவை” யாரிடமும் அவர் வாய் விட்டுக் கூறாதிருக்க எப்படி இந்த சிவானந்தா இதை அறிந்து கொண்டார். அதை அறிந்து கொண்டது ஒரு ஆச்சரியம் என்றால் சரியாக நம்முடைய இந்த விருப்பத்தை நிறைவேற்ற இவ்வளவு ஆபரணங்களை, வைரம் வைடூரியங்களை அளித்துள்ளாரே ...,” என்று நினைத்தபோது அவர் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. சிந்திய கண்ணீரைத் துடைத்துக் கொண்டே அந்த சிறுமியிடம் இருந்து ஆடை அணிகலன்களைப் பெற்றுக் கொண்டு நன்றிப் பெருக்குடன் அறைக்குள் சென்று விட்டார், போவதற்கு முன் அந்தச் சிறுமியிடம் தான் ஆடை, நகைகள் பெற்றுக் கொண்டதை பின்னர் சிவானந்தாவிடம் தெரிவிப்பதாகவும் கூறினார்.

திருவாவடுதுறை

அந்தச் சிறுமியும் நகைகளைக் கொடுத்த பின் சிட்டாகப் பறந்து சென்று மறைந்து விட்டாள். அந்த சன்னியாசியும் மிகவும் ஆனந்தத்துடன் அந்த பட்டு ஆடைகளையும், தங்க வைர நகைகளையும் அம்பாளுக்கு ஆசை தீர அணிவித்து பேருவகை எய்தினார் என்று கூறவும் வேண்டுமோ ? மறுநாள் பூஜை எல்லாம் நிறைவடைந்தவுடன் சிவானந்தாவுக்கு நன்றி கூறுவதற்காக அவர் அறையை அடைந்தார். அந்த சன்னியாசியைப் பொறுத்தவரை சிவானந்தாவும் ஒரு சாதாரண சந்நியாசிதான். அவருக்குத் தெரிந்த வரை அவர் எந்தவிதமான சக்தி உபாசனையையும் மேற்கொண்டவர் அல்லர். சுத்த அத்வைதி. அவரைப் போலவே அன்றாடம் சாப்பாட்டிற்கே பிறர் கையை எதிர்பார்த்து வாழ்ந்தவர்தான். அவ்வாறிருக்க ஆடை அணிகலன்களை வாங்கும் அளவிற்கு அவரிடம் செல்வம் குவிய வாய்ப்பே இல்லை ... இதை எல்லாம் நினைத்து மனதில் அசைபோட்டுக் கொண்டே சிவானந்தாவின் அறையை அடைந்தார். அது வழக்கம்போல் உள்பக்கம் தாழ்ப்பாள் போடாமல் சற்றே திறந்திருந்தது. கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று சிவானந்தாவைப் பார்த்து அவருடைய அருஞ் செயலுக்கு நன்றி கூற விழைந்தார். அந்த சன்னியாசியின் “கதையை” கேட்ட சிவானந்தாவோ உரக்க சிரித்து, “அடியேனும் உங்களைப் போன்ற ஒரு சன்னியாசிதான். அடியேனிடம் ஏது நீங்கள் கூறும் அளவில்லாத செல்வம் ...”, என்று திருப்பிக் கேட்கவே, அந்த சன்னியாசியும் சிவானந்தாவுடன் தன் அறைக்கு திரும்பி வந்து அந்தச் சிறுமி அளித்த ஆடை அணிகலன்களை எல்லாம் சிவானந்தாவுக்கு காண்பித்தாராம். சிவானந்தா ஆச்சரியத்துடன் அவைகளைப் பார்த்து லலிதா பரமேஸ்வரியின் அனுகிரகத்தை நினைத்து கண்ணீர் உகுத்தாராம். ஒரு உண்மையான பக்தன் கண்ணீர்த் துளிகளைத் தவிர வேறு எதை தேவிக்கு காணிக்கையாக அளிக்க முடியும் ? ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா தனது தென்னிந்திய திருத்தல யாத்திரையின்போது தரிசனம் செய்த திருத்தலங்களுள் பசுபதிகோயில் பெரிய நம்பிகள் ஜீவாலயமும் ஒன்றாகும். வரும் நவராத்திரியின்போது திருஅண்ணாமலை, ஸ்ரீரங்கம், பசுபதிகோயில், திருவாரூர், திருவாவடுதுறை போன்று ஜீவசமாதிகள் விளங்கும் தலங்களில் அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் சிறுமிகளுக்கு ஆடை அணிகலன்களைத் தானமாக அளித்தலால் கிட்டும் பலன்கள் அமோகம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam