அவிநாசி அப்பன் அடியார்க்கு விநாசம் என்பதில்லையே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்


அவிநாசி சிவத்தலம்

ஒவ்வொரு திருத்தலத்திற்கும் ஒரு சிறப்பு இருப்பதைப் போல அவிநாசி திருத்தலத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு. விநாசம் என்றால் அழிவடைதல் என்று பொருள். அவிநாசி என்றால் அழியாமல் என்றும் நிலைத்திருத்தல் என்று பொருள். எப்போது ஒரு பொருள் நிலைத்திருக்க முடியும் ? இறைவனைப் போல் என்று ஒரு பொருள் முழுக்க முழுக்க இறைத்தன்மையுடன் விளங்குகிறதோ அப்போதுதானே ஒரு பொருள் நிலைத்திருக்க முடியும் ? இவ்வாறு நிரந்தரத் தன்மையை அளிப்பதே அவிநாசி தலத்தின் சிறப்பாகும். இந்த உண்மையே உணர்த்தும் முகமாகவே புக்கொளியூர் போடா சித்தர் என்ற மகான் திருஏகாம்பரேஸ்வரர் திருத்தலத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலான மனித ஆயுளுடன் திளைத்து என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாகத் திகழ்கிறார். இவ்வாறு தியாகத்தின் சுடராகப் பரிணமிக்க விரும்பும் இறையடியார்கள் அவிநாசி தலத்தில் தேள் உருவில் விளங்கும் ஸ்ரீவடவாக்னி சித்தரை தரிசனம் செய்து குங்கிலியம் கலந்த சாம்பிராணி தூபத்தை இத்தலத்தில் இட்டு வருதலால் தியாகம் மிக்க வாழ்வை அவர்கள் பெற இறையருள் துணை நிற்கும். செவ்வாய்க் கிழமைகளில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும். பொதுவாக சங்கமத்திற்குப் பிறகு பெண் தேள் ஆண் தேளைக் கொட்டிக் கொன்று விடும். தேள் குஞ்சுகள் பிறக்கும்போது தாயின் வயிற்றைக் கிழித்துக் கொண்டுதான் அவை பிறக்கும். இவ்வாறு தியாகத்தில் தோன்றி தியாகத்தில் மலர்ந்து தியாகத்தில் ஐக்யமாவதே தியாகேசன் திருத்தலமான அவிநாசி சுட்டிக் காட்டும் பாடமாகும். அநாதையாகப் பிறந்தவர்களும், தாங்கள் ஏதோ காரணங்களால் அநாதையாகி விட்டோம் என்று நினைத்து வருந்துவோர்களும் ஸ்ரீவடவாக்னி சித்தரை தினந்தோறும் தியானித்து வருதலால் தங்கள் வாழ்வில் ஒரு புத்துணர்ச்சியைப் பெறுவார்கள். சுயம்பு மூர்த்தியான ஸ்ரீஅவிநாசியப்பரே அனைவருக்கும் தாயாகவும் தந்தையாகவும் விளங்குவதால் எவருமே இவ்வுலகில் அநாதை கிடையாதுதானே ?


ஸ்ரீவீரபத்திரர் அவிநாசி சிவத்தலம்
பொதுவாக வீரபத்திரர் வழிபாடு காணமல் போன, திருட்டுப் போன பொருட்களை
திரும்பப் பெறுவதில் உறுதுணை புரியும் என்பது உண்மையே. தட்ச யாகத்தில் பல அசுரர்களின் உடல் பாகங்களை சிதைத்து அவர்களை சின்னாபின்னமாக்கியவரே வீரபத்திரர். அதனால் வீரபத்திரர் என்ற பெயரைக் கேட்டாலே அசுரர்களுக்கு சிம்ம சொப்பனம்தான். ஸ்ரீவீரபத்திரரடமிருந்து தப்பிக்க தலை தெறிக்க ஓடிய அசுரர்கள் பலர். தட்ச யாகத்தில் வீரபத்திரரால் தங்கள் அவயவங்களை இழந்து ஓல கானத்தால் மயங்கிச் சாய்ந்த அசுரர்கள் பலர், அந்த ஓலத்தால் தங்களை மறந்து ஒடத் தொடங்கிய பல அசுரர்கள் இன்றும் வீரபத்திரரின் தண்டனையிலிருந்து தப்பிக்க ஓடிக் கொண்டுதான் இருக்கிறார்கள், இத்தனை லட்சம் ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்களுடைய ஓட்டம் தொடர்கிறது என்றால் வீரபத்திரரின் தோற்றம் எத்தனை அச்சம் நிறைந்ததாக இருக்கும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள். ஒரு முறை திருஅண்ணாமலையில் வலம் வந்து கொண்டிருந்த கோவணாண்டிப் பெரியவர் திடீரென சிறுவனின் காதுகளை தன் இரண்டு கைகளால் பொத்தினாராம். சிறுவன் ஒன்றும் விளங்காது பெரிவரைப் பார்க்க பெரியவர் சைகையால் எதிரில் சுட்டிக் காட்டினாராம். கண் எதிரில் கண்ட காட்சியைக் கண்டு சிறுவன் இன்று நினைத்தாலும் உடல் கிடுகிடுவென நடுங்குமாம். காரணம் சங்கிலிக் கருப்பர் தன்னுடைய இரண்டு கைகளிலும் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு ஜல் ஜல் என்று அவர்கள் எதிரில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். சங்கிலிக் கருப்பருடைய கட்டை விரல் பாதி உயரம் கூட சிறுவனின் உயரம் இல்லையாம். அப்படியானால் அந்த கம்பீரமும் சிறுவனின் மறைந்த காதுகளைப் பிய்த்துக் கொண்டு வந்த சங்கிலி ஒலியும் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். சங்கிலிக் கருப்பர் சென்ற வெகுநேரம் கழித்துத்தான் கோவணாண்டி தன் கைகளை சிறுவன் காதுகளிலிருந்து எடுத்தாராம். அப்போது சிறுவன் விழித்ததைக் கண்டு கை கொட்டி சிரித்த பெரியவர், “ஏண்டா நைனா, இந்த சங்கிலி கருப்பன பாத்தே பயந்துட்டியா என்ன ? அப்புறம் வீரபத்திரனப் பாத்தா என்ன சொல்லுவ ... ?” என்று கேட்டு அப்போதுதான் வீரபத்திர சுவாமியைப் பற்றி விவரித்தாராம். அவ்வாறு கட்டுக்கடங்காத கோப வயப்பட்ட ஸ்ரீவீரபத்திர சுவாமி தட்ச யாகத்திற்குப் பின் அமைதி கொண்ட திருத்தலமே அவிநாசி ஆகும். எனவே கட்டுக்கடங்காக கோபத்தால் தங்கள் உற்றம் சுற்றம், பதவி, செல்வத்தை இழந்தவர்கள் பனை வெல்லம், கரும்புச்சாறு கலந்த இனிப்புகளை தானமாக அளித்தலால் நற்பலன் பெறுவார்கள். நியாயமாக நற்காரியத்திற்காக பெற்ற கடன்களிலிருந்து நிவாரணம் அளிப்பதும் இத்தல வீரபத்திரர் மகிமையாகும். வியாபாரத்தை நன்முறையில் விருத்தி செய்ய வாங்கிய கடன் தொகையும் இதில் அடங்கும்.


ஸ்ரீதபசு அம்மன் அவிநாசி சிவத்தலம்
தட்ச யாகத்திற்குப் பின் அம்பிகையின் சிதைந்த உடலை மீண்டும் மலரச் செய்வதற்காக
அம்பிகை தவம் இயற்றிய முக்கியமானத் தலங்களுள் ஒன்றே அவிநாசி ஆகும். நிலைத்த செல்வம், மன அமைதி வேண்டுவோர் இவ்வாறு அமர்ந்த கோலத்தில் அவிநாசி திருத்தலத்தில் அருள்புரியும் தவக்கோல அம்பிகையைத் தரிசனம் செய்து பறங்கி, பூசணி போன்ற அமர்ந்த நிலை காய்கறிகள் கலந்த கூட்டில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து தானம் அளித்தலால் நற்பலன் பெறுவார்கள். எதிரே உள்ள ஐராவத தீர்த்தத்தில் தேவலோகத்து ஐராவத யானை தீர்த்தம் எடுத்து தபசு அம்பிகைக்கு அபிஷேகித்து நற்பலன் பெற்றதால் இதை அனுசரித்து தற்காலத்தில் நிறம், வறுமை, அங்ககீனம் போன்ற குறைபாடுகள் உள்ளோர் ஐராவத தீர்த்தத்தில் நீர் சுமந்து இந்த அம்பிகைக்கு அபிஷேகம் இயற்றுதலால் நற்பலன் பெறுவார்கள். தன்னுடைய அவயவங்கள் தீயில் கருகி மறைந்து போனாலும் இறைவன் அருளால் பார்வதி தேவியானவள் மீண்டும் அந்த உறுப்புகளை நன்னிலையில் பெற்ற தலமே ஸ்ரீகேடிலியப்பர் அருள்புரியம் அவிநாசி திருத்தலமாகும். எனவே விபத்து, ஆபரேஷன், வியாதி போன்ற பல்வேறு காரணங்களால் தங்கள் அவயவங்களை இழந்து துன்புறுவோர் இத்தல அம்பிகைக்கு இயன்ற தான தர்மங்கள் இயற்றி வழிபடுதலால் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து நற்பலன் பெறுவார்கள். இறந்து மறைந்து போன பாலகனே மூன்று ஆண்டுகள் கழித்தும் உயிருடன் வந்தான் என்பதை மக்கள் மீண்டும் மீண்டும் நினைவு கூர்ந்தால்தான் அவிநாசி தலத்தில் கிட்டும் அவிநாசப் பேறு சிந்தனைக்குப் புலப்படும். ஸ்ரீஅக்னி புராந்தக மகரிஷி இத்தல அம்பிகையை வேண்டி ஸ்ரீதபசு அம்பிகையின் அக்னி சொரூபத்தை தரிசனம் செய்தார் என்பது இத்தல வரலாறு கூறும் செய்தி. இது ஏதோ ஒரு காலத்தில் நிகழ்ந்த அதிசயம் கிடையாது. ஸ்ரீபோடா சித்தர் உட்பட பல மகான்களும் அம்பிகையின் அக்னிக் கோளத்தை தரிசனம் செய்து பேருவகை கொண்டனர் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையான செய்தி. திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இறைவன் அளித்த வரப்பிரசாதமே அவிநாசி அம்மன் என்றால் அது மிகையாகாது. நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்று தவம் செய்கிறான் என்று விளையாட்டாகக் கூறுவதுண்டு. உண்மையில் இது விளையாட்டல்ல, இன்றும் இறைவன் அளிக்கும் வரப் பிரசாதமே என்று நிரூபிக்கும் திருத்தலமே அவிநாசி ஆகும். வரிசையாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் ஒற்றைக் காலில் நின்று கொண்டு தீர்த்தக் குடத்தை ஒருவர் மாற்றி ஒருவராக சுமந்து அம்பிகைக்கு அபிஷேகம் நிறைவேற்றுவதால் நன்முறையில் திருமணம் நிறைவேற இத்தகைய வழிபாடு துணை புரியும். திருமணம் நிறைவேறியவர்கள் இல்லத்தில் தோன்றும் மன வேறுபாடுகள், தாழ்வு மனப்பான்மை மாறி குடும்ப ஒற்றுமை பெருகும். வரிசையில் நிற்கும் ஒருவருக்கு குறைந்தது மூன்று குடம் என்ற கணக்கில் அபிஷேகம் நிறைவேற்றுவது சிறப்பு. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்தாறு நபர்கள் கூட ஒருவர் மாற்றி ஒருவராக குடத்தை மாற்றி அபிஷேகம் நிறைவேற்றுவதும் ஏற்புடையதே.


அவிநாசி சிவத்தலம்
அக்னிகளில் பலவகை உண்டு. அதில் தேள்களின் சங்கமத்தில் தோன்றும் அக்னி சில்பாக்னி வகையைச் சேர்ந்ததாகும். இந்த அக்னியைப் பற்றி நாம் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றலாம். மக்களிடம் தோன்றும் முறையற்ற காம எண்ணங்களை ஈர்த்து பஸ்மம் செய்யும் இயல்புடையவையே தேள், நட்டுவாக்கிளி, பாம்பு போன்ற விஷ ஜந்துக்களாகும். இந்த விஷ ஜந்துக்கள் வாசம் செய்யும் இடங்களில் வசிப்பவர்கள் தங்களுடைய பூர்வ ஜன்ம வினைகளால்தான் தமக்கு இத்தகைய வசிப்பிடங்கள் அமைந்துள்ளன என்பதை உணர்ந்து கொண்டாலே மனம் அமைதி கொள்ளுமல்லவா ? மனிதர்களுக்கு மட்டும்தான் யோனிப் பொருத்தங்கள் பார்த்து மணம் முடிக்கிறோம் என்று கிடையாது. தேள்களுக்கும் யோனிப் பொருத்தங்கள் உண்டு. இத்தகைய முறையான பொருத்தங்கள் கொண்ட தேள்கள்தான் ஜோடியாக வாசம் செய்கின்றன. மக்களின் முறையற்ற காம எண்ணங்களை ஈர்க்கும் ஆண் தேள் இந்த எண்ணங்களை சில்பாக்னி சக்தியாகத்தான் தன் உடலில் சேமித்து வைக்கிறது. இது எல்லையைத் தாண்டும்போது அதே அளவு சில்பாக்னி மிகுந்துள்ள பெண் தேளுடன் கூடும்போது இரு தேள்களின் சங்கமத்தில் மனிதர்களின் காம எண்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து காம எண்ணங்கள் மறைகின்றன. எனவே மனிதனின் தவறான காம எண்ணங்கள் இருக்கும்வரை தேள்களின் நடமாட்டமும் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சாலாக்னி என்பதும் மனிதர்களின் காம எண்ணத்தை ஈர்க்கும் அக்னி வகையாகும். திருஅண்ணாமலை அன்னதானத்திற்காக ஒரு அடியார் வீட்டில் நெல்மணிகளை சேமித்து வைத்தபோது அங்கு ஏகப்பட்ட தேள்கள் தோன்றின. ஆனால் அந்த நெல் மூட்டைகளை அன்னதானத்திற்காக எடுத்த சமயத்தில் ஒரு தேள் கூட அடியார்கள் கண்ணில் படவில்லை என்று ஏற்கனவே விவரித்திருந்தோம். இவ்வாறு நெல் மூட்டைகளில் பொதிந்த காம எண்ணங்களை தங்கள் உடலில் தோன்றிய சாலாக்னி மூலம் ஈர்த்த தேள்கள் மறைந்து விட்டன என்பதே நாம் இந்த நிகழ்ச்சியிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். இதே போல் அவிநாசி திருத்தலத்தில் அருள் வழங்கும் ஸ்ரீவடவாக்னி சித்தரின் திருஉருவ தரிசனத்தை அடியார்களுக்கெல்லாம் கொல்லிமலை கோரக்கர் குகையில் பெற்றுத் தந்தவரே நம் சற்குரு ஆவார். அந்த அற்புத தரிசனத்தைப் பெற்ற அடியார்கள் இன்றும் நம்மிடையே உண்டு. சங்மத்திற்கு முன்னோ பின்னோ சிலருக்கு உடலின் மறைவு பாகங்களிலோ மற்ற பாகங்களிலோ ஒருவித அரிப்பும் வேதனையும் ஏற்படுவதுண்டு. இத்தகையோர் அவிநாசி திருத்தலத்தில் அடர்த்தியாக சாம்பிராணி தூபம் இட்டு வணங்குவதால் நற்பலன் பெறுவார்கள். திருஅண்ணாமலை காமக் காட்டுப் பகுதியிலும் துர்கை அம்மன் கோயில் வளாகத்திலும் இத்தகைய அடர்த்தியான சாம்பிராணி தூபத்தால் நற்பலன் பெறலாம். இத்தகைய தூபக் காப்பு ஒரு அற்புத சமுதாய சேவையுமாகும்.


தலவிருட்சம் பாதிரி அவிநாசி சிவத்தலம்
பார்க்கும் பெண்களை எல்லாம் தங்கள் மனைவியாக எண்ணும் “பெரிய” மனம் கொண்ட பலர் உலவும் இப்பூமியில் தன் சொந்த மனைவி கணவனைப் பார்த்தாலே எரிச்சல் உண்டாகும் நிலையையும் நாம் பார்க்க முடிகிறது. இதற்கு காரணம் பல இருந்தாலும் கணவன் மனைவியர் இடையே இருக்க வேண்டிய அன்யோன்ய குறைபாடே இதற்கு முக்கிய காரணம் ஆகும். இதை நிவர்த்தி செய்வதே அவிநாசி திருத்தலத்தில் பாதி நாரி தத்துவத்தில் துலங்கும் பாதிரி மரமாகும். இதைப் பாதிரி என்று அழைப்பதை விட குருசாட்சி என்று அழைப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். தொடர்ந்து இவ்விருட்சத்தை வலம் வந்து வணங்கி ஜோடியாக உள்ள புடவை, வேஷ்டி, கடுக்கன், தோடு, வெள்ளி மெட்டி, செருப்பு போன்ற பொருட்களை தானமாக அளித்தலால் கணவன் மனைவி இருவரிடையே அன்யோன்யம் மிகும். அது மட்டுமல்லாது நாளடைவில் இந்த அன்யோன்யம் குரு நம்பிக்கையைப் பெருக்கி இறைவனிடமே கொண்டு சேர்க்கும் என்றால் இந்த விருட்சத்தை பூலோகத்தில் காணக் கிடைக்கப் பெற்ற நாம் எத்தகைய பாக்கியசாலிகள். குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தவும் குரு நம்பிக்கையைப் பலப்படுத்தவும் சித்தர்கள் அளிக்கும் வழிபாடே குருசாட்சி வழிபாடாகும். அவிநாசி திருத்தலத்தில் சித்திரை மாதத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் பாதிரி மலர்களை தரிசனம் செய்து தங்கள் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். தினமும் மாலை நான்கு மணிக்கு நல்ல எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி அப்போது எழும் தீபத்தில் பாதிரி மலரின் வண்ணத்தைப் பதித்து அந்த தீபத்தைப் பார்த்தவாறே
யா தேவி சர்வ பூதேஷூ ஸ்ரீவடவாக்னி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
என்று ஐந்து மணி வரை அல்லது அதற்கு மேலும் ஓதி வழிபடுதலால் குடும்ப ஒற்றுமை பெருகும். தம்பதியர் இடையே அல்லது குடும்ப அங்கத்தினர்கள் இடையே உள்ள எத்தகைய மனவேற்றுமைகளும் மறையும். இதை ஆண்களும் பெண்களும் கூட்டாக நிறைவேற்றுதலால் பலன்கள் பன்மடங்காகப் பெருகும். இவ்வாறு சித்திரை மாதத்தில் பாதிரி மலர்கள் தரிசனம் பெற முடியாதவர்கள் என் செய்வது என்ற கேள்வி எழுவது இயற்கையே. இத்தகையோர் தங்கள் கையில் அணிந்துள்ள தங்க மோதிரம் போன்ற குரு விலாசப் பொருட்களை தரிசனம் செய்து அந்த வண்ணத்தை விளக்கு தீபத்தில் பதித்து வழிபடலாம். ஆனால் அந்த வழிபாட்டுப் பலன்கள் கார்மேகத்தில் பதிந்துள்ள மழைத்துளியைப் போல் மறைந்துதான் இருக்கும். மீண்டும் சித்திரை மாதத்தில் பாதிரி மலர்களை தரிசித்து அதன் பொன் வண்ணத்தை மனதில் நிலை நிறுத்தினால்தான் அது கார் மழையை பூமியில் வர்ஷிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.


கொன்றை மலர்கள் உய்யக்கொண்டான்மலை
சூரியோதய கர தரிசனத்தில் நீங்கள் தரிசனம் செய்வது மோதிரத்தின் பாதி பாகம்தானே என்று நினைக்கலாம். ஆனால், அந்த பொன் நிறத்தின் மறுபாதியை உங்களுக்காக தரிசனம் செய்து அதன் பலன்களை சூரிய நாராயண மூர்த்தியிடம் சமர்ப்பணம் செய்பவரே சூரிய பகவான். இவ்வாறு கர தரிசனம் என்ற ஒன்றே உங்களை முழுமையாக்கும் என்றால் நம் சற்குருவின் மகிமைதான் என்னே. இவ்வாறு சற்குருவை தியானிப்பவரை சூரிய பகவானே வணங்குகிறார் என்றால் சற்குருவின் அருமை பெருமைகளை நவிலத்தான் இயலுமா ? மற்ற எந்த மலருக்கும் இல்லாத தனிச் சிறப்பாக திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தில் உறையும் ஸ்ரீவிநாயகப் பெருமான் தன் இருகரங்களிலும் பாதிரி மலர்களை ஏந்தி அருள்பாலிக்கின்றார். குடும்ப ஒற்றுமைக்கு இதை விடச் சிறந்த ஒரு எடுத்துக் காட்டை நாம் கனவிலும் நினைக்க முடியுமா ? பாதிரி புலியூர் என்பதற்கு புலிக்கால் முனிவரால் வழிபடப் பெற்ற பாதிரி மரத்தை தலவிருட்சமாக உடைய தலம் என்பது அத்தலத்திற்கு உரித்தான பல பெயர் விளக்கங்களில் ஒன்றே ஆகும். பாதிரி மலரின் வண்ணமும் புலியின் தோலில் பிரகாசிக்கும் மஞ்சள் வண்ணமும் குடும்ப ஒற்றுமையையும் குரு பக்தியையும் வளர்க்கும் என்பதே பாதிரி புலியூர் சுட்டிக் காட்டும் பெயர் விளக்கமாகும். பக்தர்கள் தரிசிக்கும் விதத்தில் சிவபெருமான் புலித் தோலின்மேல் அமர்ந்து தியானம் புரிவதும் இக்காரணம் பற்றியேதான. சிவபெருமானே ஒரு குடும்பிதானே. இந்த உண்மையை உணர்த்துவதே புலி வாகனத்தில் பவனி வரும் ஸ்ரீஐயப்ப தரிசனத்தின் மகிமையும் ஆகும். எனவே ஐயப்ப பக்தர்கள் தங்கள் முறையான வழிபாட்டால் குடும்ப ஒற்றுமை, சந்ததி வளர்ச்சி போன்ற பல்வேறு சுகபோகங்களைப் பெற்று வாழ்வதோடு மட்டுமல்லாமல் பக்தியின் கனிந்த நிலையாக அவர்கள் ஸ்ரீஐயப்பனோடு இணையும் சாயுஜ்ய முக்தி நிலையையும் பெறுவார்கள் என்பது உறுதி. இதற்காகவே ஐயப்ப வழிபாட்டில் இத்தனை கடினமான அணுகு முறைகளை பெரியோர்கள் வலியுறுத்துகின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியம் எல்லா காலத்திற்கும் பொருத்தமானதுதானே.


ஸ்ரீவிநாயகப் பெருமான் அவிநாசி
குடும்ப ஒற்றுமையை வலுப்படுத்தும் புலித் தோலின் பொன் நிறத்தை நம்மால் தரிசிக்க
முடியாவிட்டாலும் பாதிரி மலரில் பொலியும் பொன் நிறத்தை தரிசனம் செய்து, தியானித்து பலன் பெறலாமே. புலி வேகமாகப் பாய்ந்து ஓடும். இந்த ஓட்டத்தை பாரி சலனம் என்று சித்தர்கள் அழைப்பர். அதாவது ஒரு ஆண் மகன் முறையாக மணந்த தன் மனைவியுடன் கூடும்போது உண்டாகும் உஷ்ணமே பாரி வெப்பம். இதைத் தாங்குபவளே பார்யை என்ற சட்டப்பூர்வமான இல்லாள். ஆனால் அந்த ஆண் மற்ற பெண்களை காமத்துடன் நோக்கும்போது உண்டாகும் முறையற்ற வெப்பத்தையே புலிகள் தாங்கள் ஓடும்போது தங்கள் உடலில் ஈர்த்து தாங்குகின்றன. மகான்கள் போன்றோர் புலித் தோலில் அமர்ந்து தியானம் செய்யும்போது இந்த அதீத உஷ்ணத்தை தங்கள் உடலில் ஏற்று தகனம் செய்கின்றனர். இதுவே உண்மையான காம தகனமாகும். அதனால்தான் புலித் தோல் தியானத்தில் தகுதி இல்லாத பலரும் ஈடுபடக் கூடாது என்று விதித்திருப்பது. பிற பெண்களை காமக் கண்களுடன் பார்ப்பது என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டதால் மாதம் ஒரு முறையாவது தங்கள் கையால் அரைத்த சந்தனத்தை அவிநாசி திருத்தலத்தில் அருள்புரியும் விநாயக மூர்த்திகளுக்கு காப்பிட்டு வணங்கி வருதலால் இத்தகைய பாரி வெப்ப விளைவுகளிலிருந்து நிவாரணம் பெறலாம். புலிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருதலால் இத்தகைய சந்தன காப்பு வழிபாடே மக்களை காப்பாற்றும் பாரிக் குடையாகும், கொடையாகும். பாரி வள்ளல் அளித்த கொடைகளில் சிறந்த கொடையே இவ்வாறு அவர் விநாயக மூர்த்திகளுக்குத் தினமும் ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் சந்தனம் அரைத்து ஆற்றிய திருப்பணி. பாரி பாரி வள்ளல் ஆவதற்கு துணை புரிந்ததே இந்த சந்தனக் காப்பு.


ஸ்ரீவிநாயகப் பெருமான் அவிநாசி
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்று பெரியோர் உரைப்பர். இந்த முதுமொழியில் எவ்வளவோ அர்த்தங்கள் இருந்தாலும் கணவன் மனைவி இருவரும் கருத்தொருமித்து வாழ்ந்தால் அவர்கள் வாக்கை அனைவரும் ஏற்று அதன்படி நடப்பர் என்ற ஒரு சொல் வழக்கும் உண்டு. இந்த சொல் வழக்கை உறுதிப்படுத்த வழிகாட்டும் தலமே அவிநாசி ஆகும். இத்தலத்தில் அரசமரத்தடியில் அருள்புரியும் அண்ணலான ஸ்ரீவிநாயக மூர்த்தியே தம்பதிகளுக்கு இத்தகைய வரப்பிரசாதத்தை அனுகிரகமாக அளிக்கும் மூர்த்தி ஆவார். கணவன் முன் செல்ல அவர் நிழலில் அவருடன் நெருக்கமாக அவர் பின்னால் மனைவி சென்று குறைந்தது ஒன்பது முறை வலம் வந்து வணங்குதலால் அத்தகைய கணவன் மனைவி வாக்கை மீறாமல் மற்றவர்களும் கேட்டு அதன்படி நடப்பார்கள், பயன் பெறுவார்கள் என்பது உண்மை. நிழல் விழாத நேரமான சூரிய உதயத்திற்கு முன்னோ அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப் பின்னோ இத்தகைய வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும் என்பது முக்கியம். ஆனால், இந்த வழக்கை பரீட்சித்துப் பார்த்தல் என்பதை விட இத்தகைய வழிபாட்டால் கிட்டும் பலன்களை அனுபவிப்பதே சுவையானது. சப்தபதி என்னும் திருமண நிகழ்ச்சியை முறையாக நிகழ்த்தாமலோ அல்லது கூடா நாட்கள், தம்பதிகளின் சூன்ய திதி போன்ற நாட்களில் இத்தகைய நிகழ்ச்சியை நிகழ்த்தியதோலோ ஏற்பட்ட மாங்கல்ய திருமண தோஷங்கள் இத்தகைய வழிபாட்டால் நிவர்த்தி பெறும். பச்சரிசி மாவால் தயார் செய்த 18 பூரண கொழுக்கட்டைகளை இத்தகைய வழிபாட்டிற்குப் பின் விநியோகம் செய்தல் சிறப்பு. பல குடும்பங்களிலும் தட்டு, டம்ளர், தலையணை, புத்தகம் என கைக்கு கிடைத்த பொருட்களை தம்பதிகள் ஒருவருக்கொருவர் கோபத்தில் வீசி விடுவது உண்டு. மேற்கூறிய வழிபாட்டை அத்தகைய தம்பதிகள் தொடர்ந்து நிகழ்த்தி வருவதால் முரட்டுக் குணமுடைய கணவனோ மனைவியோ திருந்தி அன்புடன் வாழ்வர். உத்தம சந்தானத்திற்கு வழிகோலும் உத்தம வழிபாடுகளில் இதுவும் ஒன்று. சுந்தர மூர்த்தி நாயன்மாரால் புத்துயிர் பெற்ற பாலகனின் பெற்றோர் இந்த அரசமர வேந்தனையே வேண்டி நற்கதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ராசி மண்டலம் ஊட்டத்தூர் சிவாலயம்
தேள்களின் பிறவி குறித்து குறிப்பிடும்போது பிறக்கும்போதே தாய் தந்தையரை இழந்து இறைவனைப் போல் தாயுமிலி தந்தையுமிலி தான் தனியன் காணேடி என்பது போன்ற பிறவி கொள்ளும் என்கிறோம். அதே போல சிகண்டிகளாக, அலிகளாகப் பிறக்கும் குழந்தைகள் தங்கள் சந்ததி விருத்தி ஆகாமலே மறைந்து விடுகிறார்கள் அல்லவா ? துறவிகள், பிரம்மசாரிகளுக்கு அவர்களுடைய இறை வாழ்க்கை அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை இறையருளால் தேடித் தரும் என்பதால் ஏதோ ஒரு வாழ்க்கை முறையைத் தேடிக் கொள்ளும் அலிகளுக்கு தர்ப்பணம் அளித்து அவர்களுக்கும் நல்ல எதிர்காலத்தை தேடித் தர வேண்டியது நம் கடமையே என்று வலியுறுத்துவார் சற்குரு. இவ்வாறு அறவாணிகளுக்கு தர்ப்பணம் அளிக்க உகந்த தலம் பாதிரி மரம் தலவிருட்சமாக உள்ள திருத்தலங்களும், லால்குடி, திருகோகர்ணம், திருவதிகை போன்று விதானத்தில் ராசி மண்டலம் பதிந்த திருத்தலங்களும் ஆகும். நைஷ்டிக பிரம்மசாரியாக புகழ்பெற்றவர் பீஷ்மாச்சாரியார். ஒப்பற்ற மாவீரன். இச்சாமிருத்யு வரம் பெற்றவர். ஆனால் அவர் முடிவு ஒரு சிகண்டி கையால் நேர்ந்தது. இது பீஷ்மாச்சாரியார் பெற்ற வரமே. எதிர்காலத்தில் தனக்கு தர்ப்பண வழிபாடுகள் அளிக்க இயலாமல் சந்ததி இன்றி மறையும் தன் இறுதிக் காலத்தை நிர்ணயிக்க இவ்வாறு சந்ததி இல்லாமலே மறையும் தூய மனம் கொண்ட சிகண்டி கையால் இறுதி முடிவை வரவேற்றதால் பீஷ்மருக்கு நிகர் பீஷ்மாச்சாரியார்தான். அலி பிறவிகளுக்கு அவர்கள் மறைந்த எந்நாளிலும் தர்ப்பணம் அளிக்கலாம் என்றாலும் பீஷ்ம பஞ்சக நாட்களில் பீஷ்மருக்கு அர்க்ய, தர்ப்பண வழிபாடுகள் அளித்த பின் உடனே தான் அறிந்த, அறியாத சிகண்டிகளுக்கும் அத்தி இலைகளை வட்டமாக தரையில் பரப்பி மேற்குறித்த தலங்களில் தர்ப்பணம் அளித்தல் சிறப்பாகும். இது மிகச் சிறந்த சமுதாய பூஜை என்பதில் ஐயமில்லை. தர்ப்பணத்திற்குப் பின் தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானமாக அளித்தல் சிறப்பு.


ஸ்ரீபாதிரி அம்மன் சன்னதி அவிநாசி
அவிநாசி திருத்தலத்தின் சிறப்பான இறைவனை நம்பிய எவரும் விநாசம் அடைவதில்லை என்பதை உணர்த்துவதே மேற்கண்ட புகைப்படமாகும். தட்ச யாகத்தில் தட்சன் உட்பட அனைவரும் வீரபத்திரரின் கோபத்திற்குப் பலியானார்கள் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால் இறைவனின் கோபம் என்பது அவர்களைத் திருத்தி நன்னெறிப்படுத்துவதற்காகத்தானே. இவ்வாறு தன் உயிரை இழந்த தட்ச பிரஜாபதி தன் தவறை உணர்ந்து எங்கும் இறைவனின் புகழைப் பாடி வருகின்றான். ருத்ரத்தில் வரும் மே மே என்னும் வார்த்தைகள் ஆட்டின் மே மே என்னும் குரல் ஒலியை ஒத்திருப்பதாகக் கூறுவதுண்டு. இது உண்மையே. இவ்வாறு சிவத்தலங்களில் தட்ச பிரஜாபதி ஸ்ரீருத்ரம் ஓதி மகிழும் காட்சியைத்தான் இந்த அபூர்வமான புகைப்படத்தில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே இத்தலத்தில் ஸ்ரீருத்ரம் பாராயணம் செய்வதும் அப்பர் பெருமானால் அருளப்பட்ட ஸ்ரீருத்ரத்திற்கு இணையான வேற்றாகி விண்ணாகி என்ற திருவாசகப் பாடலை குறைந்தது 11 பேர் அமர்ந்து பாராயணம் செய்வதும் அடியார்கள் வாழ்வில் நிலைத்த செல்வம், குடும்ப ஒற்றுமை அனைத்திற்கும் மேலாக பலமான இறை நம்பிக்கையைக் கூட்டும் என்பதே நாம் பெறும் அனுபவப் பரிசாகும். திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் பஞ்சமுக தரிசனப் பகுதியை அடுத்து வருவதே ஏகாதச ருத்திரர்கள் பதவி பிரமாணம் மேற்கொள்ளும் தரிசனப் பகுதியாகும். இத்தரிசனப் பகுதியில் சாஷ்டாங்கமாக கீழே விழுந்து மலையை வணங்குவதால் அடியார்கள் தரிசனத்தின் சரியான இடத்தை அறியாவிட்டாலும் அவர்கள் ஏகாதச ருத்திரர்களின் அனுகிரகத்தைப் பெறுவார்கள் என்பது உறுதி.


வளர்பிறை ஏகாதசி திதிகளில் இத்தகைய தரிசனத்தைப் பெறுவது சிறப்பாகும். கணவனோ மனைவியோ அளவிற்கு அதிகமாக குண்டாக இருப்பதால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்கள் இத்தகைய தரிசனங்களால் சீர்பெறும். நாய்களுக்கு கடலை மிட்டாய் தானம் சிறப்பு. திருஅண்ணாமலை தரிசனத்திற்கு முன்னோ பின்னோ 11 நாட்களில் அவிநாசி திருத்தலத்தில் வழிபடுதல் வழிபாட்டுப் பலன்களை பன்மடங்காகப் பெருக்கும்.


அக்னி பிரவாக தரிசனம் திருஅண்ணாமலை
ஆடும் நாடும் அவனியை நோக்க ... என்ற வழக்கிற்கு இயைந்து வருவதே அவிநாசி திருத்தலம். நாடு என்றால் ஸ்ரீஅவிநாசி அப்பரும் அன்னையும் இணைந்து காட்சி தருவதுதானே. இதோடு தட்ச ஆடும் சேர்ந்து கிழக்கு திசையை நோக்குவது என்பது எத்தகைய கிடைத்தற்கரிய பேறு. பொதுவாக தங்கள் ஜாதகத்தில் ஸ்ரீராமரைப் போல், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளைப் போல் செவ்வாய் பகவான் உச்சம் பெற்றவர்கள் வர்மக் கலையில் சிறந்து விளங்கி அதை சமுதாய நன்மைக்காகப் பயன்படுத்துவர். தற்காலத்தில் அமிர்தானந்தா அன்னையும் வெளிப்படையாகவே கர்பப்பை குறைபாடுகளையும் தாம்பத்ய குறைபாடுகளையும் தன்னுடைய தரிசனத்தால் சரி செய்வதை பக்தர்களே நேரில் கண்டு வியக்கும் அளவிற்கு பணி புரிந்து சேவை ஆற்றுகிறார்கள். அன்னை ஜாதகத்தில் செவ்வாய் பகவான் நீச பங்க ராஜ யோகம் கொண்டு இத்தகைய செயல்பாடுகளுக்கு உறுதுணையாக நிற்கின்றார். இவ்வாறு வர்ம யோகக் கலையை சமுதாய நன்மைக்காகப் பயன்படுத்த விரும்புவோர் செவ்வாய்க் கிழமை செவ்வாய் ஹோரை நேரத்தில் திருஅண்ணாமலையில் அக்னி லிங்கம் அருகே அல்லது ஸ்ரீசேஷாத்ரி ஆஸ்ரமத்தில் தங்கள் கிரிவலத்தை ஆரம்பித்து அக்னி லிங்கத்தில் அருணாசல கிரிவலத்தை நிறைவு செய்து பயன்பெறலாம். இனம் புரியாத தொற்று நோய்களால் அவதியுறுவோறும் இத்தகைய கிரிவலத்தால் நற்பலன் பெறுவார்கள். ஸ்வஸ்திக் ஆசனம் அல்லது சித்த பரிபாஷையில் கணேசா ஆசனம் என்ற ஒரு ஆசனம் உண்டு. இந்த ஆசனத்தில் அமரும் தகுதி பெற்ற ஒரே மகான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆவார். கணேசா ஆசனத்தில் அமர்ந்தால் ஒரே நொடியில் மூலாதாரத்தில் மூண்டெழு கனலை எழுப்பி விடலாம். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் தன்னுடைய கிரிவலத்தின்போது ஒரு வேசியை முத்தமிட்டு அவளுடைய காமக் குற்றங்களை பஸ்மம் செய்தார் என்று குறிப்பிட்டிருந்தோம். அப்போது அவள் முதுகில் கை வைத்து அவளுடைய கர்பப்பை கோளளாறுகளையும் சரி செய்தவரே ஸ்ரீசுவாமிகள் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும். காரணம் கணேசா ஆசனத்தில் வல்லவர்களே இத்தகைய வர்மக் கலை யோகத்தைப் பயில முடியும். மேலும் ஸ்ரீசுவாமிகளின் இந்த பிரயோகத்திற்கு அவர் ஜாதகத்தில் கும்பத்தில் குடிகொண்ட சுக்ர சக்திகளே ஆதாரமாக அமைந்தன என்பதும் ஒரு சுவாரஸ்யம்.


எண்ணங்களே வண்ணங்களாகப் பிரகாசிக்கும்
(இந்தப் படத்தில் பொன் நிறத்தை உங்களால் தெளிவாக தரிசனம் செய்ய முடிந்தால் நீங்கள் ஆன்மீகத்தில் நன்கு முன்னேறி உள்ளதாக அர்த்தம்)

ஸ்வஸ்திக் ஆசனம் பற்றிய அறிவை பாமரர்களும் பெற வழிவகுப்பதே ஸ்ரீதபசு அம்மன் ஆலயத்தில் அடியார்கள் மேற்கொள்ளும் வழிபாடு ஆகும். குறைந்தது ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்து
யா தேவி சர்வ பூதேஷூ ஸ்ரீகாமகலா காமேஸ்வரி ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
என்று மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டு ஓதுதலோ இந்த யோகத்தின் ஆரம்ப பயிற்சியாகும். இந்த ஆரம்ப பயிற்சிலேயே குடும்ப ஒற்றுமையைப் பெருக்கி ஆனந்தம் அடைந்தோர் பலர். சூரிய ஒளியில் உள்ள வண்ணங்களை ஒரு அட்டையில் பதித்து சுழற்றினால் அது வெண்மையாகத் தோன்றும். சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் வானமோ நீல நிறத்துடன் பிரகாசிக்கிறது. அனைத்திற்கும் மூலமான பெருமாளோ கார்மேக வண்ணனாக காட்சி தருகிறார். வெண்மையாகப் பிரகாசிக்கும் வைரமோ கறுப்புக் கரியால் ஆனது. இவ்வாறு வண்ணத்தைப் பற்றிய எண்ணங்கள்தான் எத்தனை குழப்பமானவை. இந்த குழப்பத்தைப் பற்றி சாதாரண மக்கள் கவலை கொள்வது கிடையாது என்றாலும் பிரிண்டிங், துணி வியாபாரம், டிசைன், விளம்பரம் என வண்ணம் சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ளவர்கள் நிச்சயம் வண்ணம் பற்றிய அறிவை தெளிவாகப் பெற்றால்தானே தங்கள் துறையில் சிறந்து விளங்க முடியும். இதற்கு உறுதுணையாக அமைவதே அவிநாசி திருத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாடுகளாகும். குறிப்பாக சனிக் கிழமை அன்று தேங்காய், புளிசாதம், எலுமிச்சை சாதம் போன்ற பல வண்ண சித்ரான்னங்களைத் தானமாக அளித்து வழிபட்டு வந்தால் வண்ணம் பற்றிய அறிவை விருத்தி செய்து கொண்டு தங்கள் துறையில் முன்னேறலாம். 4, 8 அல்லது இந்த எண்களின் கூட்டுத் தொகையாக வரும் தேதிகளில் (அதாவது 13, 17, 22, 26 போன்ற தேதிகள்) மேற்கூறிய தானதர்மங்களை நிறைவேற்றுவதும் சிறப்புடையதே.
பலரும் மேலே கண்ணுக்குத் தெளிவாகத் தென்படும் சிவப்பு நிற அரளி மலர்களை ஒதுக்கி விட்டு அதன் பின்னணியில் அமைந்துள்ள மஞ்சள் நிற மலர்களைக் காண முயல்வர். ஆனால் சித்தர்களின் வழிகாட்டுதலோ சிவப்பு அரளி மலர்களை அன்புடன் பிரார்த்தித்து வந்தால் அவை தாமாகவே மறைந்து பொன்னிறமாய்ப் பொலியும் கொன்றை மலர்களின் தரிசனத்தைப் பெற்றுத் தரும். விசிறி சாமியார் சாமரத்தில் பொலியும் தென்றல் கூறும் உண்மை இதுவே. நமது சற்குருவின் கிரீடத்தில் அமைந்த மற்றோர் மாணிக்கமே இது !


மகான்களுக்கும் கூட பிறப்பு என்பது ஜனன உறுப்பின் வழியே நிகழும் ஒருவழிப்பாதை சம்பவமாகவே உள்ளது. பிறப்பு உறுப்புகள் என்று மனித உறுப்புகளை வரையறுக்கும் நம்மால் மரண உறுப்புகள் என்று எவற்றையாவது வரையறுக்க இயலுமா ? ஒருவருடைய ஜாதகத்தின் மூலம் மரண வழி என்பதை அறிய முடியுமே தவிர மரண உறுப்புகளை அறிய முடியாது. இறைவனின் எண்ணமோ அனைவரும் கபாலம் வழியே உயிரைத் துறந்து கபால மோட்சத்தை அடைவதே ஆகும் என்பதை இறைவன் அனைத்து உயிர்களுக்கும் ஆறு சக்கரங்களைப் படைத்து அவற்றின் வழியே உயிர் பிரயாணம் கொண்டு இறுதியாக கபாலம் வழியாக உயிர் பிரிவதையே விரும்புகிறார் என்பதாகும். இறைவனின் இந்தப் பெருங் கருணையை மறந்து கை, கால், வயிறு என பல்வேறு உறுப்புகள் வழியே தங்கள் உயிரைத் துறந்து மனிதர்கள் பிறவியைப் பெருக்கிக் கொள்வதைப் பார்த்து ஸ்ரீவள்ளலார் சுவாமிகளைப் போல் வருத்தப் படுவதைத் தவிர மகான்களால் வேறு என்ன செய்ய முடியும் ? இவ்வாறு இறைவனின் குறிக்கோளை நிறைவேற்றத் துடிக்கும் பக்தர்கள் மட்டைத் தேங்காயுடன், பூ, பழம், வெற்றிலை பாக்கு இவற்றைச் சேர்த்து அவிநாசி திருத்தலத்தில் தானம் அளித்து வந்தால் அவ்வாறு தானம் பெறும் அடியார்களில் ஆயிரத்தில் ஒருவர் இத்தகைய கபால மோட்சத்தைப் பற்றி நினைத்தால் தானம் கொடுத்தவர் உய்வு பெறுவார். அவர் குடும்பமே மேன்மையுறும் என்பது தெளிவு.


வேலுண்டு வினையில்லை அவிநாசி திருத்தலம்
!! சதுர ஆவுடைமேல் சாதுர்ய முருகப் பெம்மான் !!
சற்குரு ஒருவரே ஒரு மனிதனை ஜனன மரண சக்கரத்திலிருந்து விடுவித்து கரையேற்ற வல்லவர். வேறு எவராலும் இந்த சாதனையை கனவிலும் நிறைவேற்ற முடியாது. இதற்காக சற்குரு ஒருவர் எத்தகைய பாடுபடுகிறார் என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம். ஒரு அடியார் தன்னுடைய திருமணத்திற்கு முன் பல பெண்களுடன் உறவு கொண்டிருந்தார். ஆண்களின் இடது தொடை என்பது விஜய லட்சுமிக்கு உரியதாகும். அது மனைவிக்கு மட்டுமே உரித்தானது. அதனால்தான் பல அவதார மூர்த்திகளும் தங்கள் இடது தொடையில் தங்கள் மனைவியை அமர வைத்து தம்பதி சமேதராக ஆசி அளிப்பார்கள். இவ்வாறு பல பெண்களுடன் உறவு கொள்ளும் ஆண்களை விட்டு விஜய லட்சுமி விலகி விடுவாள் என்பது தெய்வ சட்டம். அரச சபையில் பலர் முன்னிலையில் பாண்டவர்களின் மனைவியான துரோபதையை மனைவி அமர வேண்டிய தன்னுடைய இடது தொடையில் அமருமாறு அழைத்து அவமானப்படுத்தியபோது துரியோதனின் இடது தொடையில் வாசம் செய்த விஜய லட்சுமி அவனை விட்டு விலகியதோடு மட்டுமல்லாமல் அவன் இடது தொடை பீமசேனனின் கதையால் அடித்து நொறுக்கப்பட்டு அவன் மரணம் அடைந்தான் என்பது அனைவரும் அறிந்ததே. இவ்வாறு விஜய லட்சுமியின் அனுகிரகத்தை இழந்த ஒரு அடியாரையும் அரவணைத்து அன்பு செலுத்துவதுதானே சற்குருவின் தலையாய பணி. இதற்காக தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருந்தார் நம் சற்குரு. திருஅண்ணாமலை கார்த்திகை வைபவத்தின்போது அனைவரும் மேஜை நாற்காலிகளில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது உணவருந்திக் கொண்டிருந்த அந்த அடியாரின் அருகில் அமர்ந்திருந்த சற்குரு அவர்கள் தன்னுடைய வலது தொடையை அந்த அடியாரின் இடது தொடை மேல் வைத்து ஒன்றுமறியாதவர்போல் உணவருந்தத் தொடங்கினார். மிகவும் அலர்ட்டாக கவனத்துடன் செயல்படுபவர் நம் சற்குரு என்பதை அந்த அடியார் அறிந்திருந்ததால் சற்குரு ஏதோ ஒரு அனுகிரகத்தை தகுதி இல்லாத தனக்கும் அளிக்கிறார் என்பது மட்டும் ஓரளவு புரிந்ததே தவிர ஆனால் அந்த அனுகிரகத்தின் தன்மையைப் பற்றி அவரால் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த அடியாருக்கும் சற்குருவுக்கும் இடையே நடந்த இந்த கர்ம வினை பரிபாலனத்தைப் பற்றி வேறு எவரும் அறியவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் கழிந்த பின்னரே அந்த அடியாருக்கும் சற்குரு விஜயலட்சுமியின் தாரண சக்திகளை புனருத்தாரணம் செய்து வைத்தார் என்ற ருசிகரமான உண்மை புரிந்தது. எனவே ஏதோ ஒரு அடியாருக்கு விஜயலட்சுமியின் அனுகிரகத்தை பெற்றுத் தருவதற்காக ஏற்பட்டதா சற்குருவின் பூலோக சஞ்சாரம். நிச்சயமாக கிடையாது. அவரவருக்கு உரித்தான அனைத்து லட்சுமி தேவிகளின் அனுகிரகத்தையும் ஒட்டு மொத்தமாக அளிக்கக் கூடியதே அவிநாசி தலத்தில் பக்தர்கள் இயற்றும் வழிபாடு.


அனைத்து விதமான திருமண தோஷங்களையும் குறிப்பாக செவ்வாய் தோஷங்களைக் களைந்து தடைபட்ட திருமணங்களை நிகழ்த்துவதற்கு உறுதுணை புரிவதே இத்தல ஆவுடை முருகன் வழிபாபாடாகும். அதே போல் கர்பப்பை கோளாறுகளைக் களைந்து குழந்தை பாக்கியத்தை அளிப்பவரும் இவரே. தண்டை ஒலி கேட்குமே குமரா சலங்கை ஒலியும் உன்னொலிதானே ... என்று இத்தல முருகப் பெருமான் திருமண தோஷங்களைக் களைந்து குழந்தைச் செல்வங்களையும் அளிக்கும் குணப்பாட்டை மகிழ்ந்து பாடுகிறார்கள் பெரியோர்கள்.
கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்த கதைதான் அவிநாசி முருகனை வைத்துக் கொண்டு பக்தன் அனுகிரகத்திற்காக அலைவது என்று அவிநாசி அப்பனின் அருமை பெருமைகளை நினைவு கூறுவார் நம் சற்குரு. மலைப் பழம், செவ்வாழை என்ற ஆறு கனிகள், முந்திரி, பாதம்பருப்பு போன்ற ஆறுவகை பருப்புகள், நாட்டுச் சர்க்கரை, தேன் போன்ற ஆறு அமிர்தங்கள், மல்லிகை, முல்லை, செவ்வரளி போன்ற ஆறு மலர்கள், சர்க்கரைப் பொங்கல், தினை மாவு போன்ற ஆறுவகையான நைவேத்யம் என்றவாறாக பக்தர்கள் தங்களால் இயன்ற அளவு ஆறு ஆறாக பொருட்களைக் குவித்து முருகப் பெருமானை வழிபட்டால் ஆறுமுகமோ ஆயிரம் ஆயிரமாக அனுகிரகத்தை வாரிவழங்குவார் என்பதே உண்மை. மேற்கூறிய வழிபாட்டை எந்நாளிலும் நிகழ்த்தி பயன்பெறலாம் என்றாலும் திருவாதிரை நட்சத்திரத்தன்று இயற்றப்படும் வழிபாடு பன்மடங்காக பலன்களை வர்ஷிக்கும் என்பதை, “ஆதிரை வழிபாட்டில் ஐயன் குளிர்வானே,” என்ற சொற்றொடரின் குளிர்ச்சியையும் நாம் மறந்து விடலாகாது.


புக்கொளியூர் போடா சித்தர் என்றும் விளங்கும் ஏகாந்த ஜோதியாக விளங்கினாலும் அச்சித்தர்பிரான் காஞ்சிபுர சிவாலயத்திலேயே நீண்ட நாள் தங்கி சேவை புரிந்தார் என்பது பலரும் அறிந்ததே. இதுவே புக்கொளியூர் என்னும் அவிநாசி திருத்தலத்தின் மகிமையாகும். ஒரு வங்கியின் கிளைகள் எங்கிருந்தாலும் அதில் பணிபுரியும் அலுவலர்கள் அந்த வங்கியுடன் நிரந்தர தொடர்பு கொள்வது போல் அவிநாசி ஈசனுடன் ஒரு அடியார் நிரந்தர தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு விட்டால் அவர் எங்கிருந்தாலும் எக்காலத்தும் இறை நினைவுடனே பொலிவார். இதை உணர்த்துவதே ஸ்ரீசுந்தர மூர்த்தி நாயனார் பக்தி உள்ள சிறுவனை மூன்று வருடங்கள் கழித்து உயிருடன் மீட்டு அவன் பெற்றோர்களுக்கு அளித்த வரலாறும் ஆகும். தோன்றும் பொருட்கள் மாறுவதும் மறைவதும் இயற்கையே, தோன்றாத பொருட்கள் மாறாது, மறையாது. இதை உணர்த்துவதே நடராஜ நாட்டியக் கோலம், அவிநாசி திருத்தலத்தின் வழிபாடு உணர்த்தும் பேருண்மையும் இதுவே.
தன்னில் தானாய் விளங்கும் தலைவனின் திருத்தாள்
சென்னியில் வைத்து வாழ்த்தி வணங்குவார்
மண்ணாவதில்லை அவர்தாளை விண்ணோரும் வணங்குவரே
என்று அவிநாசி அப்பரின் திருத்தாள் பணியும் அடியாரை இந்திரனும் பணிவான் என்றால் அவிநாசி தலத்தின் சிறப்புதான் என்னே ?


ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி சுசீந்திரம்
கன்னியாகுமரி அருகிலுள்ள ஸ்ரீதாணுமாலயன் கோவில் தாணு (என்றும் நிலையான சிவன்), மால், அயன் (பிரம்மா) என்ற மூவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரியும் அற்புத தலம். சுசி என்றால் தூய்மை என்று பொருள். இந்திரியங்களை தூய்மைப்படுத்த உதவும் திருத்தலமே சுசீந்திரம் ஆகும். இந்திரியங்களில் காம உறுப்புகளே முதலிடம் பெறுவதால் மும்மூர்த்திகளே இங்கு எழுந்தருளி அத்ரி மகரிஷியின் பத்தினியான அனுசூயா தேவியின் கற்புக்கு களங்கம் விளைவிக்கும் திருவிளையாடலைப் புரிவதற்காக அவளை நிர்வாணமாக தங்களுக்கு விருந்து அளிக்கும்படிக் கூறவே அனுசூயாவும் மும்மூர்த்திகளையும் பச்சிளம் பாலகர்களாக்கி அவர்களுக்கு தாய்ப்பால் ஊட்டி விருந்தோம்பலை சிறப்பாக நிறைவேற்றியதால் மும்மூர்த்திகளுக்கும் தாயாகவே விளங்கும் பெருமையைப் பெற்ற அற்புதத் திருத்தலம். மற்ற எந்த திருத்தலத்திலும் காண முடியாத அளவிற்கு ஆண் உருவங்களும் பெண் உருவங்களும் தூண்களில் நிர்வாண கோலத்தில் வியாபித்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.


ஆணோ பெண்ணோ இங்குள்ள தூண்களை கவனித்து வந்தால் தங்களிடம் உள்ள காம உணர்வுகள் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாக இனம் கண்டு கொள்ளலாம். அந்தக் குறிப்பிட்ட தூண் முன்பு அமர்ந்து அந்த சித்திரங்களை ஊன்றிக் கவனித்து தொடர்ந்து தியானித்து வந்தால் தங்களிடம் உள்ள குறைபாடுகளை எளிதில் களைந்து விடலாம். ஆனால், நடைமுறையில் இது சிரமம் என்று நினைப்பவர்கள் அந்த குறிப்பிட்ட தூணை தங்கள் மனக் கண்ணில் கொண்டு வந்து நிறுத்தி தாங்கள் இல்லம் திரும்பியவுடன் அந்தக் காட்சியைக் குறித்து தொடர்ந்து தியானம் புரிந்து வருவதாலும் தங்களிடம் உள்ள குறைபாடுகளைக் களைய முடியும். பொதுவாக, காமம் என்பது உடலைச் சார்ந்த ஒரு உணர்ச்சியாக நாம் நினைத்தாலும் இதன் வியாபகம் மனம், உள்ளம் இவற்றையும் கடந்து நிற்கும் ஒரு இறை உணர்வாகும். காமம் என்பது சிறப்பான இறை உணர்வே என்பதை மக்கள் உணர உதவும் தலமே இது. சுசீந்திரம் திருத்தலத்தில் நாம் காணும் நிர்வாணக் காட்சிகள் எல்லாம் நம் உணர்வை சீர்படுத்துபவை மட்டும் அல்ல, உண்மையில் இவை உயர்ந்த இறை உணர்வை ஊட்டவல்ல இறைப் பொக்கிஷங்களே. அனுசூயா தேவி நிர்வாணமாக மும்மூர்த்திகளுக்குப் பால் ஊட்டினாள் என்பதை ஆத்ம விசாரம் செய்து வந்தால்தான் காமத்திற்கும் இறை உணர்விக்கும் உள்ள ஒற்றுமை, நெருக்கம் புரிய வரும். இந்த நெருக்கத்தை உணர்ந்தால்தான் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியைப் போன்ற நைஷ்டிக பிரம்மச்சர்யம் என்னும் உன்னத, உத்தம இறை நிலையை அடைய முடியும்.


சுசீந்திரம் திருத்தலத்திலுள்ள காப்ளா கெளுத்தி என்ற வகை மீன்களுக்கு நெல் பொரி, தங்கள் கையால் தயாரித்த சுட்ட சப்பாத்தி இவைகளை உணவாக அளித்து வருதல் சிறப்பு. முதலில் சுசீந்திரம் தெப்பக்குளத்தில் இத்தகைய தானத்தை ஆரம்பித்து பின்னர் தங்கள் ஊரில் உள்ள கோயில் தெப்பக்குளங்களில் உள்ள மீன்களுக்கு இவ்வாறு உணவு அளிப்பதும் சிறப்புடையதே.


ஸ்ரீலட்சுமிநாராயண மூர்த்தி முந்நீர்பள்ளம் கருங்குளம்
கருங்குளம் என்ற பெயரில் நிறைய திருத்தலங்கள் பிரசித்தி பெற்றுள்ளன. கருநாகம், கார்மேகம் என்பவை எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டவைதானே. கருநாகம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த புரதச் சத்தை தன்னகத்தே கொண்டுள்ளதாகவும், கார்மேகம் என்பது மழை தரும் சக்திகளை அபரிமிதமாகப் பெற்றுள்ளது என்றும் பொருள். இவ்வகையில் கருங்குளம் என்பது கருமை நிறமுடைய கண்ணனின், பெருமாளின் அனுகிரக சக்திகளை அபரிமிதமாகப் பெற்றுள்ள திருத்தலம் என்று பொருள்படும். திருநெல்வேலி அருகே முந்நீர்பள்ளம் என்னுமிடத்திலும் செய்துங்கநல்லூர் அருகிலும் கருங்குளம் என்ற பெயரில் திருத்தலங்கள் அமைந்துள்ளன. இத்திருத்தலங்கள் பெருமாள் அனுகிரக சக்திகளின் அளப்பரியாப் பெட்டகங்களாகத் திகழ்கின்றன என்பதில் ஐயமில்லை. பள்ளம், சமதலம், வானம் என்ற மூன்று நிலைகளிலும் பெருமாள் மூர்த்தியின் அனுகிரக சக்திகள் பொங்கிப் பொலிவதை இத்தலங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த திருத்தலங்களில் பொலியும் அனுகிரகங்களை பக்தர்கள் பெற்று உய்யவே இத்தலங்களில் வழிபாட்டு முறைகளை சித்தர்கள் அளித்துள்ளனர் என்பதே உயிர்கள் மேல் சித்தர் பெருமக்களுக்கு உள்ள பேரன்பினைப் பறைசாற்றுகின்றது. முதலில் திருநெல்வேலியில் முந்நீர்பள்ளத்தில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளை தரிசனம் செய்து பின்னர் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கருங்குளத்தில் ஸ்ரீமார்த்தாண்ட ஈஸ்வர மூர்த்தியையும் பின்னர் வகுளகிரியில் வீற்றிருக்கும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளையும் தரிசனம் செய்வதால் கருங்குள தரிசனப் பலன்கள் பூர்ணம் பெறுகின்றன. இதனால் முந்நீர் பள்ளம் திருத்தலத்தில் தேங்கி நிலைபெற்றிருக்கும் பாதாள லட்சுமி கபளீகர தெய்வ சக்திகளையும் லட்சுமி கடாட்ச சக்திகளையும், ஸ்ரீமார்த்தாண்ட ஈசன் திருத்தலத்தில் பொங்கிப் பெருகும் பஞ்சபூத சக்திகளையும், வகுளகிரியில் பொலியும் ரெங்கநாத வகுளமண, கமண சக்திகளையும் பக்தர்கள் ஒருங்கே பெற ஏதுவாகும் என்பதே சித்தர்கள் வகுத்து அளித்துள்ள வழிபாட்டு முறை.


முந்நீர் பள்ளம், கருங்குளம்
ஒரே நாளில் இத்தலங்களில் வழிபாடுகள் இயற்ற வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. இந்த வழிபாடுகளை மூன்று நாட்களுக்குள் நிறைவேற்றி நல்லருள் பெறலாம் என்பதே முன்னோர்களின் வழிகாட்டுதலாகும். பொதுவாக, முந்நீர் என்ற சொல் மழை நீர், ஆற்று நீர், பாதாள நீர் என்ற இவற்றைக் குறிக்கும் என்றாலும் முந்நீர் என்பது திருவோண நட்சத்திர தினத்தன்று பொழியும் மழை நீரையும், தாமிரபரணி ஆற்று நீரையும், தாமிர பாத்திரத்தில் சுக்கு, துளசி, அருகம்புல் இவற்றை ஒரு இரவு முழுவதும் வைத்திருந்து பெற்ற நீர் என்றும் தெளிவுபடுத்துகின்றனர். இத்தகைய தீர்த்தத்தால் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாளுக்கு அபிஷேகங்கள் நிகழ்த்தி புளியோதரையில் நிலக்கடலை கலந்து அளிக்கும் அன்னதானமும் இந்த “முந்நீர்” சக்திகளைப் பக்தர்களுக்கு அளிக்கின்றன. இந்தப் பலன்களை எல்லாம் அனுபவித்துப் பார்த்தலே முந்நீர் பள்ளத்தின் தெய்வீக சக்திகளை முழுமையாக உணர வழிகோலும்.


ஸ்ரீகுளுமியானந்தா சுவாமிகள் ஜீவாலயம்
திருச்சி வரகநேரி அருகே உய்யக்கொண்டான் ஆற்றங் கரையில் அமைந்துள்ளதே ஸ்ரீகுளுமியானந்தா சுவாமிகள் ஜீவாலயம் ஆகும். ஆனந்தங்களில் பல வகை உண்டு. சுந்தரானந்தம், பரமானந்தம், நித்தியானந்தம் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதில் இறைவனுக்குக் குளிர்ச்சி ஊட்டுவதிலேயே தன் வாழ்நாளைக் கழித்தவரே ஸ்ரீகுளுமியானந்தா சுவாமிகள். உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில் உள்ள அரசமரம், அத்திமரம், ஆலமரம், வேப்பமரம் போன்ற பால் விருட்சங்களுக்கு எல்லாம் தம் கையால் சுத்தமான சந்தனத்தை அரைத்து பொட்டிட்டு குங்குமம் சாற்றி வழிபடுவது ஒன்றே இவர் மேற்கொண்ட வழிபாடு. இவ்வாறு இறைவனுக்கு குளிர்ச்சியை அளித்ததால் இறைவன் இத்தகைய உத்தம அடியாரை தன் உள்ளத்தில் சேர்த்து நிரந்தரக் குளிர்ச்சியை அளித்தார் என்பதே சித்தர்கள் கூறும் குளுமி இரகசியம். நம் ஸ்ரீஅகத்திய ஆஸ்ரம சார்பில் ஸ்ரீகுளுமியானந்தா சுவாமிகள் ஜீவாலயத்தில் திருப்பணிகள் நிறைவேற்றியபோது நம் சற்குருவால் அளிக்கப்பட்ட மகிமைகளையே இங்கு நீங்கள் அறிந்து பெருமை கொள்கிறீர்கள். ஸ்ரீகுளுமியானந்தா தன் பூதவுடலை உகுத்த பின்னர் இவருடைய ஜீவ சமாதியில் சேவை சாதித்துக் கொண்டு இருந்த ஒரு அன்பர் தோல் பதனிடும் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். மிருகத் தோலை பதனிடுவது என்பது தெய்வீகத்திற்கு ஏற்புடையது கிடையாது என்பதால் இந்த அன்பரின் சேவையால் மகிழ்ந்த ஸ்ரீகுளுமியானந்தா இந்த அன்பரை நம் சற்குருவிடம் அனுப்பி வைக்கவே நம் சற்குரு அந்த அன்பரை திருப்பராய்த்துறை வரை நடந்தே சென்று தன் கையால் அரைத்த சந்தனத்தை அங்குள்ள ஆலய மணிக்கு பொட்டிட்டு வணங்கி வரும்படி அருளினார். ஒரே ஒரு முறைதான் இந்த வழிபாட்டை அந்த அடியார் நிறைவேற்றினார். அதன் பின்னர் அவர் அந்த வேலையை விட்டு விட்டு உணவுத் தொழிலில் உன்னதம் பெற்றார் என்றால் இவ்வாறு அவரை வழிநடத்தியது ஸ்ரீகுளுமியானந்தாவின் திருவருளா இல்லை நம் சற்குருவின் குருவருளா ? இவ்வாறு ஸ்ரீகுளுமியானந்தா சேவை செய்து வழிபட்ட ஒரு அரசமரம் இன்றும் உய்யக்கொண்டான்மலை ஆற்றங்கரையில் சுவாமிகளின் ஜீவாலயம் எதிரே காட்சி அளிக்கின்றது. ஸ்ரீகுளுமியானந்தா சுவாமிகள் ஜீவாலயத்தில் வழிபாடுகள் இயற்றும் போது தாமே கையால் அரைத்த சந்தனத்தால் இந்த அரசமரத்திற்கு 21 பொட்டுகள் குங்குமப் பொட்டிட்டு வணங்கி வழிபடுதலால் எத்தகைய திருமணத் தடங்கல்களிலிருந்தும் வியாபாரப் பிரச்னைகளிலிருந்தும் விமோசனம் பெறலாம் என்பது உறுதி.


சங்கு அபிஷேகம் திருத்தவத்துறை லால்குடி
இயற்கையாகவே பிரணவ ஒலி பீஜாட்சரங்களுடன் சங்கு துலங்குவதால் இதற்கு எந்த விதமான தீட்டும் தோஷமும் கிடையாது. சங்கு தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. எனவே இதை துளசி, வில்வ மரங்களுக்கு விடுவது சிறப்பு. குறித்த சில தினங்களுடன் நட்சத்திரங்கள் சேரும்போது இவை அபரிமிதமான பலன்களை வர்ஷிக்கின்றன. ஞாயிற்றும் கிழமையுடன் அஸ்வினி நட்சத்திரம் சேர்ந்து வரும் நாட்களில் இறை மூர்த்திகளுக்கு சங்கு தீர்த்தத்தால் அபிஷேகம் நிறைவேற்றுவதால் ஆண் வர்க்கத்தினர் நலமடைவர். சகோதரர்கள், மாமனார், மைத்துனர்கள் இவர்கள் பிரச்னை, தொழில், வேலை வாய்ப்பு நல்ல விதமாய் அமையும். அப்பா வழி பிரச்னைகள் தீரும். திங்கட் கிழமையுடன் வளர்பிறை ரோஹினி சேரும் நாட்களில் இயற்றும் சங்கு அபிஷேகத்தால் மனத் தெளிவு கிட்டும். மருத்துவர்கள் (டாக்டர்கள்) தெளிவாக நோய்களின் தன்மையை கண்டறிய முடியும். தேய்பிறையில் நிறைவேற்றும் இத்தகைய அபிஷேகங்கள் மனக் குழப்பங்களை நீக்கும். இத்தகைய ஒரு அபிஷேக வழிபாடு பௌர்ணமி திரி தினமாக ரோஹினி நட்சத்திர நாளில் நம் அடியார்களால் கார்த்திகை மாதம் தங்கச்சி மட ஸ்ரீஅமிர்தவாவி ஈசனுக்கு நிறைவேற்றப்பட்டது என்பது நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இனிமையான செய்தியாகும்.


ஸ்ரீஅமிர்தவாவி மூர்த்தி தங்கச்சி மடம்
செவ்வாய்க் கிழமையுடன் விசாக நட்சத்திரம் கூடும் நாட்களில் நிறைவேற்றும் வலம்புரிச் சங்கு அபிஷேகத்தால் நமது பேச்சைப் பிறர் கேட்கும் ஆற்றல் உருவாகும். இதை தளபதி தத்துவம் என்று கூறுவர். ஒரு முறை மாவீரன் நெப்போலியன் தன்னை எதிர்த்து படை திரட்டிய ஒரு தளபதி ஒரு தீவில் ஆயிரக் கணக்கான படைவீரர்களைச் சேர்த்து வைத்திருக்கிறான் என்ற தகவல் அறிந்து அந்த தீவிற்கு தான் ஒருவனாக தனியாக விரைந்தான். ஏந்திய துப்பாக்கியுடன் தன்னை சல்லடையாக நொடியில் குண்டு வீசும் அந்த பதட்டமான சூழ்நிலையிலும் அவர்கள் அனைவரையும் பெயர் சொல்லி அழைத்து அவர்களுடன் அன்புடன் உறவாடி அவர்கள் அனைவரும் தாய் நாட்டிற்காக போரிடும் பணியில் மாற்றினான். இதுவே தளபதி தத்துவம் என்பது. நெப்போலியன் படையில் ஒரு லட்சம் போர் வீரர்கள் இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு அவர்கள் பெயரை ஞாபகம் வைத்திருந்தான் என்றால் அன்பினால் மட்டுமே இத்தகைய தளபதி தத்துவம் உயிர் பெறும் என்பது உண்மையே. இத்தகைய அபிஷேகத்தை இயற்றும் மருத்துவர்கள் அவர்கள் கொடுக்கும் மருந்து நன்றாக வேலை செய்யும் திறனைப் பெறுவார்கள்.


ஸ்ரீமகாவிஷ்ணு திலதைப்பதி
புதன் கிழமையும் திருவோண நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் வலம்புரிச் சங்கால் அபிஷேகித்தலால் கல்வி, படிப்பு சிறப்பாக அமையும். மாணவர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டிய ஞாபக சக்தி பெருகும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு (Reseach students) ஏற்படும் துன்பங்கள் நீங்கும். இத்தகையோர் சகலகலாவல்லி மாலை ஓதி வருதல் சிறப்பு. இயல்பாக இருக்க வேண்டிய கவன சக்தி, ஞாபக சக்தி என்றால் என்ன ? ஒருமுறை ஒரு அடியார், “வாத்யாரே, அடிக்கடி எனக்கு விஷயங்கள் மறந்து போகின்றன. இதைத் தவிர்க்க என்ன செய்வது ?” என்று கேட்டார். அதற்கு நம் சற்குரு, “அப்படியா, சாப்பிடும்போது உன்னுடைய இலையில் வைக்கும் பதார்த்தங்களைத்தானே நீ எடுத்து உண்கிறாய். அடுத்தவன் இலையில் வைக்கும் பதார்த்தங்களை நீ ஞாபக மறதியால் எடுத்து உண்பதில்லையே. அந்த அளவிற்கு உனக்கு ஞாபக சக்தி இருந்தால் போதும் ...”, என்று சிரித்துக் கொண்டே கூறினார். ஒருவருக்கு எந்த அளவிற்கு ஞாபக இருக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறாரோ, எந்த அளவிற்கு ஞாபக சக்தி இருந்தால் ஒருவருக்கு வாழ்க்கைப் பயணம் சீராக அமையுமோ அந்த அளவிற்கு ஞாபக சக்தி இருந்தால் போதும். அதிகப்படியான ஞாபக சக்தியால் துன்பங்களே விளையும். இதை முறைப்படுத்த வல்லதே வலம்புரிச் சங்கு அபிஷேகமாகும். பொதுவாக, திருவாதிரை திருவோண நட்சத்திர தினங்களில் நிறைவேற்றப்படும் அபிஷேக ஆராதனைகளும், வழிபாடுகளும் செல்வ விருத்தியைத் தரும் என்று சித்தர்கள் உறுதியளிக்கிறார்கள். ஸ்ரீராமபிரான் திலதைப்பதி என்னும் திலதர்ப்பணபுரியில் தன் தந்தை தசரச சக்ரவர்த்திக்கும் ஜடாயுவிற்கும் தர்ப்ப வழிபாடுகள் அளித்த பின்னர் இங்குள்ள ஸ்ரீஆதிவிநாயகருக்கு வலம்புரிச்சங்கால் அபிஷேக ஆராதனைகள் இயற்றி மகிழ்வித்தார். ஸ்ரீராமரை பின்பற்றி நாமும் திலதைப்பதி ஸ்ரீஆதிவிநாயகருக்கு புதனும் திருவோணமும் இணைந்து வரும் சிறப்பான நாட்களிலோ அல்லது திருவோண நட்சத்திர நாட்களிலோ வலம்புரிச் சங்கு அபிஷேகம் நிகழ்த்துதலால் என்றும் குன்றா செல்வ விருத்தியைப் பெற முடியும்.


ஸ்ரீஆதிவிநாயகர் திலதைப்பதி
திலதைப்பதி ஸ்ரீஆதிவிநாயகர் என்றும் குன்றா செல்வ விருத்தியை அளிப்பவர் என்பதற்குச் சான்றாக திகழ்பவளே திருமகள் ஆவாள். ஆம், திருமகள் அமரும் தாமரையைப் பெற்ற திருத்தலமே, திருமகளுக்கு தாமரைப் பீடத்தை ஸ்ரீஆதிவிநாயகர் அருளிய தலமே திலதைப்பதி என்றால் இதன் தொன்மையை எப்படிக் கூற முடியும். இந்த தெய்வீக நிகழ்ச்சிக்கு சான்றாய் இன்றும் ஸ்ரீஆதிவிநாயகர் அபூர்வமாக தாமரை திருவாசியுடனே இத்திருத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பெரும்பாலான திருத்தலங்களில் யாழிகளே திருவாசியை அலங்கரிக்கும் என்றாலும் திலதைப்பதி திருத்தலத்தில் ஸ்ரீஆதிவிநாயக மூர்த்தியை தாமரை திருவாசி அலங்கரிப்பது சிறப்பாகும். இந்த தாமரை திருவாசிக்கும் முந்தையதே ஓங்கார திருவாசி என்றால் அதன் தொன்மையை என்னவென்று கூறுவது ? இத்தகைய திருவாசியே நம் ஸ்ரீஅகத்திய ஆஸ்ரமத்தில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை அலங்கரிக்கிறது என்பதை நீங்கள் இன்றும் கண்டு களிக்கலாம். மனிதனாய் அவதாரம் கொண்ட பெருமாள் மூர்த்தி மனித முகத்துடன் தோன்றிய ஆதிவிநாயகரை வழிபட்டு பலன்கள் அடைந்தார் இதன் சிறப்பை எப்படி வர்ணிக்க இயலும் ? பெருமாளுக்கு உரிய சனிக் கிழமைகளிலும் ஸ்ரீஆதிவிநாயகரை வழிபட்டு நிரந்தர செல்வ கடாட்சத்தைப் பெறலாம்.


ஸ்ரீதட்சிணாமூர்த்தி, கரந்தை தஞ்சாவூர்
வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் இணையும் நாட்களில் வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் இயற்றுதலால் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் நல்ல பயன் பெறுவார்கள். தங்கம், வெள்ளி, வைர வியாபாரிகள் விலை ஏற்ற இறக்கத்தால் ஏற்படும் கடும் துன்பங்களால் பாதிக்கப்பட மாட்டார்கள். இத்தகைய பாதிப்புகளை முன்கூட்டியே அறியும் நுண்ணறிவை இத்தகைய வழிபாடுகளால் இத்தகைய வியாபாரிகள் பெறுவர். வெள்ளிக் கிழமையும் ரேவதி நட்சத்திரமும் கூடும் நாட்களில் வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் இயற்றுவதால் பெண்கள், தாய்மார்களுக்கு நல்ல பலன்கள் கிட்டும். குறிப்பாக ரேவதி என்ற பெயர் உடைய பெண்கள் இத்தகைய அபிஷேக ஆராதனைகளால் நற்பலன் பெறுவார்கள். ஒரு குடும்பத்தில் ஐந்து பெண்கள் திருமணம் ஆகாமல் தடுமாறி நின்றபோது அவர்களில் ரேவதி என்ற மூன்றாவது பெண் மேற்கூறிய வகையில் நம் சற்குருவின் வழிகாட்டுதலின்படி அபிஷேக ஆராதனைகளை இயற்றி சிறப்பான மணவாழ்வைப் பெற்றாள் என்பதை அறிந்த அடியார்கள் அநேகர். சனிக் கிழமையும் சதய நட்சத்திரமும் கூடும் நாட்களில் இயற்றும் வலம்புரிச் சங்கு அபிஷேகத்தால் நில புலன்கள் சம்பந்தமான பிரச்னைகள் நிவர்த்தியாகும்.

 

திருத்தல யாத்திரை தொடரும்


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam