எள் மகிமை புரிந்தால் கம்ப்யூட்டர் என்பது விளையாட்டு பொம்மையே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்


இறை மூர்த்திகளின் திருமணக் காட்சி திருவீழிமிழலை

சமீப காலம் வரை ஆயுர்வேத வைத்தியர்கள் நாடி பார்த்து நோயின் தன்மையை அறியும்போது நோயாளிகளின் கைகளின் மேல் ஒரு பட்டுத் துணியை விரித்து வைத்து அதன் மேல் கைவைத்துத்தான் நாடி பார்ப்பார்கள். இதனால் நோயாளியின் உடலை நேரடியாகத் தொடாமல் இருப்பதால் நோயாளியின் நோய் வைத்தியர்களுக்குப் பரவாமல் இருப்பது ஒரு புறம் இருக்க, மருத்துவரின் உடல் நாடியும் நோயாளிகளின் நாடியில் கலக்காமல் தெளிவாக நாடிகளின் தன்மையை அறிய முடியும். இவ்வாறு பட்டுத் துணி எதிர்மறை சக்திகளிலிருந்து, எதிர்மறை எண்ணங்களிலிருந்து பாதுகாக்க ஒரு கவசமாய் அமைவதால் ராஜ பரம்பரையினரும், பெரும் பணக்காரர்களும் தரமான பட்டை பயன்படுத்தி வந்தார்கள். தற்போது பட்டு ஒரு ஆடம்பர அணிகலனாக அமைந்து விட்டதால் அதை இறை மூர்த்திகளின் வழிபாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தும்படி பெரியோர்கள் வழிகாட்டுகிறார்கள். திருமணம் போன்ற தவிர்க்க முடியாத சமயங்களில் இறை மூர்த்திகளுக்கு பட்டாடைகளை சார்த்தி வழிபட்டு, திருமணத் தம்பதிகள் பட்டாடைகளை அணிவதால் திருமண வைபவங்களில் பலர் கூடுவதால் மணமக்கள் மேல் படியும் ஏக்க எண்ணங்களுக்கும், ஆசையால் விளையும் பொறுமல்களுக்கும் இது ஓரளவு நிவாரணத்தை அளிக்கும்.


ஸ்ரீராமபிரான் தர்ப்பணமிடுதல் திலதைப்பதி
ஸ்ரீராமபிரானே தன் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் அரிய காட்சியை திலதர்ப்பணபுரியில் இன்றும் தரிசித்து மகிழலாம். ஸ்ரீராமபிரானின் தர்ப்பணம் வெறுமனே தன் மூதாதையர்களுக்கு மட்டுமே நிறைவேற்றப்பட்ட ஒன்று என்று கிடையாது. ராமபிரான் இந்த பூலோகம் அனைத்திற்கும் உரித்தானே சக்கரவர்த்தி அல்லவா ? அப்படியானால் இந்த பூலோக மக்கள் அனைவருக்குமான பித்ரு பூஜை, மூதாதையர்களின் வழிபாடாகத்தானே அது திகழ முடியும். இதைக் குறிப்பதாகவே கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுக தேவதைகளின் சாட்சியாக திலதர்ப்பணபுரியில் எள் நீர் வார்த்து சாதாரண மனிதனைப் போலவே தர்ப்பணம் பூஜைகள் நிகழ்த்தினார் ஸ்ரீராமபிரான். எத்தனை மூதாதையர்களுக்கு விட்டுப் போன தர்ப்பண வழிபாடுகளையும், மறந்து போன பூஜைகளை மக்களுக்கு நினைவுபடுத்தி அவர்கள் புனர் வாழ்வு பெற அருள்புரியும் தலமே திலதர்ப்பணபுரியாகும்.


மகாபாரத யுத்தத்தின்போது ஸ்ரீகிருஷ்ண பகவான் அமாவாசைக்கு முதல் நாள் தர்ப்பணத்திற்கான ஏற்பாடுகள் செய்ய அது கண்டு சூரிய சந்திர மூர்த்திகள் திகைத்து, அமாவாசை அல்லாத நாளில் ஸ்ரீகிருஷ்ண பகவான் தர்ப்பண வழிபாடுகளுக்கான ஆயத்தங்களைச் செய்து கொண்டிருப்பதற்கான தெய்வீக காரணங்களை அறிந்து கொள்வதற்காக பூலோகத்தில் இறங்கி ஸ்ரீகிருஷ்ண பகவானை நமஸ்கரித்து பகவானின் அரிய செயலுக்கான காரணத்தைக் கேட்டனர். ஸ்ரீகிருஷ்ணனோ வழக்கம்போல் ஒரு குறும்புப் புன்னகையை உதிர்த்து, “பூலோகத்தைப் பொறுத்த வரையில் அமாவாசை என்பது சூரிய சந்திர மூர்த்திகள் இணைந்து துலங்கும் நாள்தானே ? இங்கு இப்போது சூரிய சந்திர மூர்த்திகளே இணைந்து துலங்குவதால் இதை விடச் சிறந்த அமாவாசை தினம் எப்படி நிகழ முடியும் ?” என்று கேட்டவாறே தம் மூதாதையர்களுக்கான தர்ப்பண வழிபாடுகளை சூரிய சந்திர மூர்த்திகள் முன்னிலையில் நிறைவேற்றினார். இவ்வாறு சூரிய சந்திர மூர்த்திகளே பூமியில் பிரத்யட்சமாகத் தோன்றியதால் பித்ரு மூர்த்திகளுக்குச் சென்றடைய வேண்டிய தர்ப்பண, அர்க்யங்கள் முறையாக, உடனடியாகச் சென்று சேர்ந்தன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். தர்ப்பண வழிபாடுகளுக்கு உரிய மூர்த்திகளான சூரிய சந்திர மூர்த்திகளே பித்ருக்களின் நாயகரான ஸ்ரீவரதராஜ பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியுடன் எழுந்தருளி இருக்கும் சன்னதியில் பித்ரு வழிபாடுகளை ஏற்றுக் கொள்வதால் திலதைப்பதி திருத்தலம் ஆண்டு முழுவதும் பித்ரு வழிபாடுகளுக்கு உகந்த தலமாக பெரியோர்களால் போற்றப்படுகிறது.


ஸ்ரீஆதிவிநாயகர் திலதைப்பதி
திலம் என்றால் எள், ஐ என்றால் நீர், திலம் ஐ பதி அதாவது திலதைப்பதி என்றால் எள்ளையும் நீரையும் ஏற்று அருள்புரியும் ஈசன் என்பதே திலதைப்பதியின் மகிமையாகும். ஐ என்பது சளியையும் குறிக்கும். இவ்வாறு இறுதி காலத்தில் ஐ மிகுந்து அது மார்பில் பெருகி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உயிர் பிரியும் நிலை ஏற்படாது இருக்கவே ஐயாறா ஐயாறா என்று நாம் நலமுடன், ஆரோக்யமாக இருக்கும்போது இறை நாமத்தைக் கூவி அழைக்க வேண்டும் என்பார்கள். இவ்வாறு நம்முடைய பல முன்னோர்களும் இறை நாமத்தைக் கூவி அழைக்க மறந்திருந்தாலும் அவர்கள் நன்னிலை அடைய இன்று அவர்கள் பெயரால் வார்க்கும் எள்ளையும் நீரையும் ஏற்கும் ஈசனே திலதைப்பதி ஈசன் ஆவார்.


சந்திர தீர்த்தம் திலதைப்பதி
மானிட உடலில் முக்கால் பகுதிக்கு மேல் நீர் நிறைந்து இருப்பதால் இந்த மனித உடலால் நிறைவேற்றும் காரியங்கள் அனைத்து நலமடைய அருளும் தலமே திலதைப்பதி என்பதே நாம் உணர்ந்து பிரமிப்பு அடையும் தலமாகும். இத்தல தீர்த்தத்தின் பெயர் சந்திர தீர்த்தம் ஆகும். இறைவன் ஸ்ரீமுத்தீசர், சந்திரனுக்கு உரிய முத்தைக் குறிப்பது. தனியாக இருக்கும் முத்தை விட அதனுடன் பொன் சேரும்போதுதானே அது விலையுயர்ந்த ஆபரணமாகிறது. இதைக் குறிக்கும் முகமாக இறைவனுடன் ஸ்ரீபொற்கொடி அம்மன் இணைந்து இங்கு இறை சுவைக்கு அருள் கூட்டுகிறாள். பொன் குறிக்கும் ஆடக திசையில் அதாவது வட திசையில் எழுந்தருளி இருப்பதும், பித்ருக்களுக்கு உரிய தென்திசை நோக்கி எழுந்தருளி இருப்பதும் ஸ்ரீபொற்கொடி அம்மனின் கருணை விளக்கும் மகாத்மியங்களாகும். இவர்கள் எல்லாம் வளத்தைப் பெருக்குகையில் வளத்திற்கு எல்லாம் அதிபதியான பெருமாள் மட்டும் வெறுமனே இருப்பாரா என்ன ? குபேர திசை நோக்கி பித்ருக்கள் வேந்தன் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்கள் பெறக் கூடிய வளங்கள் எல்லாம் பூர்ணம் அடையச் செய்கிறார்.


ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவரதராஜ பெருமாள் திலதைப்பதி
மூர்த்தி தீர்த்தம் தலம் என்ற மூன்றுமே ஒரு திருத்தலத்திற்கு முக்கியமாகத் திகழ்பவை என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், ஒரு திருத்தலமே இத்தகைய மூன்று முத்துக்களான சக்தியுடன் பொலிவது திலதைப்பதி ஒன்றேதான் என்பதே இதன் சிறப்பாகும். திலதைப்பதி அல்லது திலதர்ப்பணபுரி என்பது ஊரின் பெயராக அமைய, கோவில் மதிமுத்தம் என்பதாக அமையும், கோவில் எழுந்தருளிய இடமோ கோயில்பத்து என்பதாக அமைந்த சிறப்பு எங்கும் காணாத தனிச் சிறப்பே. மதிமுத்தம் என்ற ஆறெழுத்துச் சொல்லை ஒரு பக்தர் ஆத்மவிசாரம் செய்து வந்தாலே போதும் அவர் இறைவனைக் குறித்த அனைத்து இரகசியங்களையும் அறிந்து கொள்ள முடியும் என்ற அளவிற்கு சிறப்பு வாய்ந்த சொல் இதுவாகும். முத்தம் என்றால் உதடுகள் இணைதல் என்றுதானே பொருள். தாயின் அதரங்கள் குழந்தையின் கன்னத்தில் பதியும்போது அது பாச முத்தம், காதலனின் உதடுகள் காதலியின் கன்னத்தில் பதியும்போது அது ஆசைமுத்தம், பக்தனின் உதடுகள் இறைவன் மேல் பதியும் போது அது பக்தி முத்தம், அமிர்தானந்தா அன்னையின் அதரங்கள் பக்தர்கள் மேல் பதியும்போது, படியும்போது அது ஞான முத்தம், அன்பு முத்தம்.


ஸ்ரீமுத்தீசர் திலதைப்பதி
இவை அல்லாமல் காரிய முத்தம், காசு முத்தம், பைரவ முத்தம் போன்ற முத்தங்களும் உண்டு. ஏசுநாதரைக் காட்டிக் கொடுக்க யூதாஸ் அவர் கன்னத்தில் அளித்தது காரிய முத்தம், நடிகை நடிகர்கள் போன்றோர் பரிமாரிக் கொள்ளும் முத்தம் காசு முத்தம், தன் நன்றியைத் தெரிவிக்கும் முகமாக நாய் அளிப்பது பைரவ முத்தம். வருங்காலத்தில் காரிய முத்தம் பெருகும் என்பதால் இத்தகைய முத்தங்களை இனங் கண்டு கொள்ள விழைவோர் சதுர்த்தி திதி அன்று முத்தக்காசு என்ற மூலிகையை உலர வைத்து தங்கள் கையால் ஒரு கைப்பிடி அளவு கணபதி ஹோமங்களில் ஆஹூதியாக அளித்து வருவதால் காரிய முத்தங்களை அடையாளம் கண்டு கொண்டு அத்தகையோரிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். ஒரு தண்டு, நான்கு இதழ்களுடன் தமிழ்நாடு எங்கும் பரவலாகக் காணப்படுவதே முத்தக்காசு என்னும் மூலிகையாகும்.


முத்தக்காசு மூலிகை
முத்தக்காசு என்னும் மூலிகை ஐந்து, ஆறு இதழ்களுடன் காணப்படும் என்றாலும் இங்கு அளித்துள்ளது போல் நான்கு இதழ்களுடன் திகழும் முத்தக்காசு மூலிகையே கணபதி ஹோமத்திற்கான சிறந்த ஆஹூதியாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் பின்னணியில் அமைந்த ஆன்மீக இரகசியங்களை நீங்களே எளிதில் அறிந்து உணர்ந்து பயன்பெறலாம். காசு என்பது பண்டமாற்றத்திற்காக பயன்படும் ஒரு பொருள் என்று நாம் சாதாரணமாக நினைத்தாலும் நிலையற்ற பொருள்கள் மீது உண்டாகும் பற்றுதலையும் இது குறிப்பதால் இந்த முத்தக்காசு மூலிகையைத் தொடர்ந்து ஆஹூதியாக கணபதி ஹோமத்தில் அளித்து வருதலால் பணத்தின் மேல், பெண்கள் மேல் பெருகும் அளவு கடந்த மோகம் படிப்படியாகக் குறையும் என்பதும் முத்தக்காசு வழங்கும் ஓர் அனுகிரகமாகும்.


ஸ்ரீஐம்முகனா ஆனைமுகனா திலதைப்பதி
ஒரு முறை தங்கப் பெயருடைய ஒரு அடியார் தன்னுடைய மகள் திருமணத்திற்கான அழைப்பிதழை நம் சற்குருவிடம் அளிக்க அதைப் படித்துப் பார்த்த நம் சற்குரு, “என்ன சார், தேய்பிறையில் மகள் திருமணத்திற்கு நாள் குறித்திருக்கிறீர்கள், தேய்பிறை நற்காரியங்களுக்கு கூடாது என்பது உங்களுக்குத் தெரியாதா ?” என்று கேட்டார். அந்த அடியாரோ, “வாத்யாரே, தேய்பிறை நற்காரியங்களுக்கு அனுமதிக்கப்படுவது கிடையாது என்று தெரிந்தாலும் வேறு வழியில்லாமல் மாப்பிள்ளை வீட்டுக்காரரின் வற்புறுத்தலால் இதற்கு சம்மதிக்க வேண்டியதாயிற்று ...”, என்று வருத்தமாகக் கூறினார். நம் சற்குருவோ, “சரி பரவாயில்லை விடு, அடியேன் பார்த்துக் கொள்கிறேன்,” என்றார். இதுவே சற்குருமார்களின் கருணை கடாட்சம். நாம் நினைப்பது போல் தேய்பிறைச் சந்திர சக்திகளை வளர்பிறை சந்திர சக்திகளாக எந்த மகானும் மாற்றுவது கிடையாது. தேய்பிறையில் நிறைவேறும் மாங்கல்ய தாரணம் போன்ற நிகழ்ச்சிகளின் விளைவுகளை தாங்கள் ஏற்றுக் கொண்டு அந்த தீய விளைவுகளை தங்கள் புண்ணிய சக்தியால் பஸ்மம் செய்கின்றனர். இதுவே நித்திய தர்ப்பண தலமாக விளங்கும் திலதைப்புரியிலும் இந்த வருடம் ஏற்படும் கிரக சங்கமங்களின் விளைவும். தேய்பிறைச் சந்திரனை ராஜயோகம் பெற்ற குரு ஏழாம் பார்வையாக பார்ப்பதால் தேய்பிறைச் சந்திரனின் விளைவுகளை குரு சன்னிதானங்கள் ஏற்றுக் கொண்டு தங்களை நம்பிய, அண்டி வந்த அடியார்களையும் அவர்கள் குடும்பத்தையும் காத்து இரட்சிக்கின்றனர் என்பதே திலதைப்பதியில் நாம் மேற்கொள்ளும் வழிபாடுகள் உணர்த்தும் மகிமையாகும்.


ஸ்ரீபொற்கொடி நாயகி திலதைப்பதி
திலதைப்பதி தலத்தின் தலவிருட்சம் அந்தி மந்தாரையாகும். அந்தி மந்தாரை என்பது அந்தி நேரத்தில் சூரிய பகவான் அளிக்கும் வண்ணத்தை இது குறிக்கிறது. கொக்கு மந்தாரை, குரு மந்தாரை போன்ற மந்தாரை பூக்களும் உண்டு. திலதைப்பதி திருத்தலத்தில் ஒரு காலத்தில் எல்லா வகை மந்தாரை மலர்களும் மலர்ந்து இது மந்தாரை வனமாகவே திகழ்ந்தது. கொக்கு மந்தாரையை தினமும் பார்த்து வந்தாலே கண் கோளாறுகள் அகலும். சிவனுக்கு அர்ச்சிக்கப்பட்ட கொக்கு மந்தாரை மலர்களை கண்ணில் வைத்து இரவு முழுவதும் வைத்திருந்தால் கண் கட்டிகள், புரை நோய்கள் குணமாகும். பிள்ளைகள் நற்குணம் பெற்று வாழ்வர். இறைவன் முத்தீசர் என்ற திருநாமத்துடன் விளங்குவதால் சுத்தமான முத்துக்கள் பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்களை பொற் கொடி அன்னைக்கு அளித்தலால் எத்தகைய திருமண தோஷங்களையும் களைந்து தம்பதிகளிடையே ஒற்றுமை மலர, வளர அருள்புரிவாள் பொற்கொடி நாயகி. சுத்தமான முத்து கரைந்த பாலை மூன்றாம் பிறைச் சந்திர ஒளியில் வைத்து ஏழைத் தம்பதிகளுக்கு தானமாக அளித்தலால் நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் நலம் பெறுவர். பெண் குழந்தைகளின் அறிவு விருத்தியாகும்.


ஸ்ரீசர்வாலங்கார கணபதி திலதைப்பதி
நான்கில் தொடங்கி எட்டில் முடிப்பது சிறப்பு என்பது குசா விதிகளில் ஒன்று. அதாவது மருந்து ஏற்றல், கிணறு தோண்டுதல், பத்திரங்களைத் தேடுதல் போன்ற காரியங்களை 4, 13, 22 தேதிகளில் ஆரம்பித்து 8, 17, 26 போன்ற தேதிகளில் நிறைவு செய்தலால் அந்த காரியங்கள் குருவருளால் வெற்றி பெறும் என்பது குசா விதிகளில் ஒன்று. இங்கு நீங்கள் காணும் ஸ்ரீசர்வாலங்கார கணபதி அபூர்வமாக 13 கரங்களுடன் திகழ்வதால் மேற்கண்ட தேடல் பணிகளை ஆரம்பிக்கும்போது இவரை மனதில் நினைத்து தியானித்தவாறே காரியங்களை ஆரம்பித்து பின்னர் அந்த காரியங்கள் நன்முறையில் குருவருளால் நிறைவேறியவுடன் திலதைப்பதி ஸ்ரீஆதிவிநாயக மூர்த்திக்கு உரிய அபிஷேக ஆராதனைகளுடன் நன்றி செலுத்துதல் நலம்.


தீராத விளையாட்டுப் பிள்ளை !
நம் சற்குரு நிறைவேற்றும் ஒவ்வொரு காரியத்திலுமே இந்த எண் கணித இரகசியங்கள், குசா சக்தி பரிமாணங்கள் இலை மறை காயாக மறைந்திருக்கும். உதாரணமாக, ஒரு அடியாரிடம் 3500 தரவேண்டியிருக்கிறது என்றால் அந்த 3500 ரூபாயை மொத்தமாக அளிக்க மாட்டார். முதலில் 3000 ரூபாயை அளிப்பார், அதை எண்ணிப் பார்த்து சரியாக இருக்கிறது என்று கூறியவுடன் பாக்கி 500 ரூபாயை அளிப்பார். அரைகுறை அறிவுடன் நோக்கினால் 3500 ரூபாக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா என்று நினைக்கத் தோன்றும். ஆனால், சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் இந்த “சித்த” கணக்கிற்குப் பின்னணியான பிரம்மாண்டம் புரிய வரும். மொத்தமாக 3500 ரூபாயை கொடுத்தால் அது (3+5=8) சனீஸ்வரரைக் குறிப்பதாக அல்லவா அமையும். 3000, 500 என்று பிரித்து அளிக்கும்போது குரு, புதன் என்ற நல்ல கிரகங்களைக் குறிப்பதாக அது அமையும். அதே சமயத்தில் 3000, 500 என்று இரண்டையும் சேர்த்து ஒரே தடவையில் அளித்தாலும் புதன் மற்ற கிரகச் சாயைகளை கொள்ளும்போது அதன் தன்மைகள் மாறும் அல்லவா ? இந்த அற்புத கர்ம பரிபாலனத்தை ஓரளவு நம் சற்குருவிடமிருந்து படித்துக் கொண்ட அந்த அடியார் ஒரு நாள் தன் வீட்டில் வண்ணம் தீட்ட வந்த ஒரு வேலையாளுக்கு 3500 ரூபாயை வழங்கி விட்டார். அந்த தொழிலாளி சென்ற பல மணி நேரங்கள் கழித்தே தன்னுடைய தவறு தெரிய வந்தது. இதைப் பற்றி நம் சற்குருவிடம் வினவியதுபோது, “நீ அடியேனை நம்பித்தானே ஒரு காரியத்தில் இறங்குகிறாய். அப்படி இருக்கும்போது, எப்படி அந்த காரியம் தவறான பலன்களை அளிக்கும். உன்னிடம் வேலை செய்து கூலி பெற வந்தது ஒரு கூலி ஆள்தானே. அவரிடம் 3000 ரூபாயை முதலில் கொடுத்து புதன் சாரத்தில் அது சாரா வண்ணம் பிரித்து பின்னர் 500 ரூபாய் கொடுத்தால், நீ கூலியை குறைத்து விட்டதாக அல்லவா அந்த வேலையாள் எண்ணுவார். பின்னர் அந்த 500 ரூபாயை கொடுத்தாலும் அவர் மனதில் இட்ட சாபம், சாபம்தானே. இது தேவையா உனக்கு ? அது மட்டும் அல்ல. நீ கூலி கொடுத்த தேதி 13. 1+3=4 என்ற கணக்குப்படி நான்கின் குசாவான எட்டு எண்ணுக்கு உரிய தொகையைத்தானே கொடுத்தாய். இது அந்த வேலையாளுக்கு நன்மையைத்தானே செய்யும் ?” என்ற தீராத நம் விளையாட்டுப் பிள்ளை குருவின் திருவிளையாடல்களை விவரித்துக் கொண்டே போகலாம்.


ஸ்ரீசரஸ்வதிதேவி
திலதைப்பதி அருகிலுள்ளதே கூத்தனூர். ஒட்டக்கூத்தர் என்னும் தமிழ்ப்புலவர் வாழ்ந்து ஸ்ரீசரஸ்வதி தேவியின் அருள் பெற்ற தலம். ஒட்டக்கூத்தன் பாடலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒவ்வொரு பாடலுக்கும் மேலோட்டமான அர்த்தமும், சூக்குமமான அர்த்தமும் இருக்கும். இவ்வாறு தூல அர்த்தத்தையும் சூட்சும அர்த்தத்தையும் இணைத்து பாடியதால் ஒட்டக்கூத்தர் இத்தகைய சிறப்பு பெற்றார். ரவிவர்மா வரைந்த சரஸ்வதி தேவியின் ஓவியத்தை இங்கு நீங்கள் காணலாம். தன் வலது காலை இடது கால் மேல் வைத்து அமர்ந்திருக்கிறாள் கலைவாணி. பொதுவாக, கால் மேல் கால் போட்டு அமர்வதால் மக்களின் ரஜோகுணம் பெருகும் என்பது சாஸ்திரமாக இருக்க எப்படி ஒரு தெய்வமே இப்படி அமர்கிறது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். அமிர்தபத்ம விலாசம் என்ற தந்திரத்தின்படி யோக நிலையில் இங்கு அமர்ந்துள்ளவளே சரஸ்வதி தேவி. ரவி வர்மா அனைத்து தெய்வ மூர்த்திகளின் தரிசனத்தை நேரில் பெற்ற ஓவியர் என்பதால் அவர் வரைந்த ஓவியங்களை நாம் பூஜையில் வைத்து வழிபடுதல் சிறப்பாகும். ராஜா ரவிவர்மாவின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்தே சரஸ்வதி தேவி இத்தகைய அமிர்தபத்ம விலாசம் என்ற யோக நிலையில் அமர்ந்துள்ளாள்.


ஸ்ரீகசவனம்பட்டி சித்தர்
ஸ்ரீகசவனம்பட்டி சித்தர் இவ்வாறு இடதுகாலை வலது கால் போட்டு அமிர்தசூர்ய விலாசம் என்ற யோக நிலையில் அமர்ந்துள்ளார். இந்த இரு காட்சிகளும் வெவ்வேறு யோக நிலைகளைக் குறிப்பதுபோல் தோன்றினாலும் அடிப்படை தத்துவம் ஒன்றே. தூல சக்தியையும் சூக்கும சக்தியையும் யோக முறையில் இணைக்கும்போது அங்கு குண்டலினி என்னும் அபாரமான சக்தி மூலாதாரத்தில் தோன்றுகின்றது. இந்த சக்தியை மகான்களும் தெய்வங்களும் தங்களுக்கு வேண்டிய முறையில், தகுதியுள்ள விஷயங்களுக்கு அர்ப்பணிக்கின்றனர். இதுவே இரட்டைத் தாழ்ப்பாள் இரகசியம். இந்த யோக நிலைகளைப் பற்றி மேலும் அறிய விரும்பும் அன்பர்கள் திலதைப்பதி சந்திர தீர்த்தத்தில் நீராடி தினமும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றி வருதலால் அவர்கள் பித்ரு தேவர்களின் ஆசியால் அனைத்து யோக நிலைகளையும் அறிவர். இவ்வாறு இந்த சந்திர தீர்த்தத்தில் ஓயாமல் நீராடி சரஸ்வதி தேவியின் அருள்பெற்ற ஒட்டக்கூத்தரின் வழிவந்த ஓவாக்கூத்தர் என்பவரே கூத்தனூரில் ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு கோயில் எழுப்பினார் என்பதே நாம் அறிய வேண்டிய சுவையான செய்தி.


ஸ்ரீவிஷ்ணு துர்கை திலதைப்பதி
இறை மூர்த்திகள் தங்கள் கைகளில் ஏந்தியிருக்கும் சங்கு, சக்கரம், மான், மழு போன்ற ஆயுதங்கள் எல்லாம் பல இறையன்பு கொண்ட பக்தர்களைக் குறிப்பதே. இறைவனை விட்டு எப்போதும் நீங்காதிருக்க பக்தர்கள் இவ்வாறு எழுந்தருள்வதுண்டு. அதே போல தெய்வங்கள் அணிந்திருக்கும் ஆபரணங்களும் இத்தகைய பக்தர்களைக் குறிப்பதே. அம்முறையில் சரஸ்வதி தேவி அணிந்திருக்கும் முத்து ஆபரணத்தைக் குறிப்பதாகவே சசி முத்து என்ற ஆபரணம் நம் ஆஸ்ரமத்தில் அளிக்கப்பட்டுள்ளது, சரஸ்வதி தேவியின் அருள்கடாட்சம் நிரம்பியது. இன்று இத்தகைய முத்துக்களை பக்தர்கள் பெற முடியாவிட்டாலும் நல்ல முத்துக்கள் அமைந்த தங்க ஆபரணங்கள் செய்து அதை ஸ்ரீமுத்தீசர் திருவடிகளில் சமர்ப்பித்து கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் திருமணமாகாத இளம் பெண்களுக்குத் தானமளிப்பதும், கூத்தனூர் சரஸ்வதி தேவியின் திருவடிகளில் சமர்ப்பித்து அதை திலதர்ப்பணபுரி திருத்தலத்தில் பக்தர்களுக்கு தானமளிப்பதாலும் முரட்டுக் குணமுடைய பெண்கள் நலமடைவர், முரட்டுக் குணத்தால், ஆண் தன்மையால் திருமணம் நிறைவேறாத பெண்களின் தடைபட்ட திருமணங்கள் இத்தகைய வழிபாட்டால் நன்முறையில் நிறைவேறும். அஷ்ட லட்சுமிகளில் வீர லட்சுமி உறையுமிடம் ஆண்களின் இடது தொடையாகும். இது மனைவிக்கு உரியது. அதனால்தான் பல தெய்வ மூர்த்திகளும் தங்கள் மனைவி மூர்த்திகளை இடது தொடையில் அமர்த்தி அவர்கள் அனுகிரகங்களை சேர்த்து பக்தர்களுக்கு இத்தகைய தரிசனம் மூலம் அளிப்பர். துரியோதனன் துரோபதையை தன்னுடைய இடது தொடையின் மீது வந்து அமரும்படி சபையினர் முன் ஆரவாரித்தபோது வீரலட்சுமி கோபம் கொண்டு துரியோதனின் தொடையில் இருந்து மறைந்து விட்டாள். அதனால்தான் அவன் பீமனுக்கு நிகரான கதை வீரனாக இருந்தாலும் பீமசேனனிடம் தோற்று கதையால் இடது தொடையில் அடிபட்டு இறந்தான். நாம் சாதராணமாக நினைக்கும் இந்த மகாபாரத நிகழ்ச்சியின் பின்னணியில் அற்புத குண்டலினி இரகசியங்கள் மறைந்துள்ளன.


நவகிரகங்கள் வேதாரண்யம்
திலதைப்பதி திருத்தலம் நித்திய தர்ப்பணத்திற்கு மட்டும் உரிய தலமன்று, நித்திய சரஸ்வதி தேவியின் வழிபாட்டிற்கும் உகந்த தலமும் ஆகும் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். குறைந்தது ஒன்பது அடியார்கள் சேர்ந்து திலதைப்பதி திருத்தலத்தில் ஐந்து முக குத்து விளக்கில் 21 முழம் மல்லிகை அல்லது ராமபாணம் பூவை சுற்றி அது நான்கு பிரிவாக வரும்படி அமைத்து அந்த நான்கு மூலைகளிலும் நான்கு தீபங்களை ஏற்றி அவை நடுவில் இருக்கும் ஐந்து ஜோதிகளைப் பார்க்குமாறு அமைக்க வேண்டும். சரஸ்வதி பூஜை அன்று நிறைவேற்றும் வழிபாடுதான் இது. இவ்வாறு அமைந்த தீபத்தின் எதிரில் அமர்ந்து அடியார்கள் சகலகலாவல்லிமாலை தோத்திரத்தை ஓதுதல் நலம். இதனால் விளையும் பலன்கள் ஏராளம், ஏராளம். பெண்களோ ஆண்களோ தங்கள் இளமைக் காலத்தில் செய்த காமத் தவறுகளுக்குத் தக்க பிராயசித்தம் கிட்டும். வீர லட்சுமி தேவி மட்டும் அல்லாது அஷ்டலட்சுமிகளின் அனுகிரகத்தையும், சரஸ்வதி தேவியின் அனுகிரகத்தையும், துர்கா தேவியின் அனுகிரகத்தையும் ஒருங்கே பெறக் கூடிய அபூர்வ வழிபாடு இது.


கூத்தனின் கூத்தை யார் அறிவார் ? வேதாரண்யம்
திலதர்ப்பணபுரியைத் தவிர வேறு எந்த தலத்திலும் இத்தகைய அனுகிரகத்தை பக்தர்கள் பெறமுடியாது என்பதை நினைவில் கொள்ளவும். அஷ்டலட்சுமிகளின் அனுகிரகம் மட்டும் அல்லாது எண் சக்திகளைப் பற்றி பக்தர்கள் புரிந்து கொள்ள வழிவகுப்பதும் இத்தகைய வழிபாடு ஆகும். சாதாரணமாக ஒரு எண்ணைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ள 20 ஆண்டுகள் தேவைப்படும் என்பது நம் சற்குரு அளிக்கும் அனுகிரகம். அப்படியானால் பூஜ்யத்தையும் சேர்த்து பத்து எண்கள் கொண்ட எண் கணித தத்துவங்களை செயல்படுத்த எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இந்த கால அளவை சுருக்கித் தருவதாக அமைவதும் மேற்கூறிய சரஸ்வதி தேவி வழிபாடாகும். திலதைப்பதி சந்திர தீர்த்தம், அரசிலாறு என்ற இரு தீர்த்தங்களைக் கொண்டு விளங்குகிறது. அரசலாறு அரிசிலாறு என்றும் வழங்கப்படும். அரியும் சிவனும் சேர்ந்ததால் அரசலாறு அரிசிலாறு என்று வழங்கப்படுகிறது. வடக்கே உள்ள திரிவேணி சங்கமத்தைப் போல கூத்தனூர் சரஸ்வதி தேவியின் அனுகிரக சக்திகள் இங்கு சூட்சுமமாய், அந்தர்யாமியாய் கலப்பதால் இது தெற்கு திரிவேணி சங்கமம் என்று புகழ் பெறுகிறது. இத்தகைய தட்சிண திரிவேணி சங்கமத்தில் நீராடி நித்திய திலதர்ப்பணபுரியான திலதைப்பதியில் பித்ரு வழிபாடுகள்இயற்றுவது என்றால் அதனால் விளையும் பலன்களை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.


காமதேனு பூஜை திருஅண்ணாமலை
பல பிறவிகளில் சேர்த்த தர்ப்பண பாக்கியை தீர்ப்பது மட்டும் திலதைப்பதியின் மகத்துவம் அன்று, இப்பிறவியில் நாம் சேர்த்த புண்ணிய சக்திகளையும் அழியா புண்ணிய செல்வமாக மாற்றித் தருவதும் தட்சிண திரிவேணி சங்கமத்தின் நீராடல் அளிக்கும் பலன்களில் ஒன்றாகும். கும்பகோணம் மகாமகத் திருவிழாவின்போது நம் சற்குரு அத்திருத்தலத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் நிறைவேற்றி அந்தப் பலன்களை எல்லாம் தம் அடியார்களுக்கு புண்ணிய சக்தியாக வாரி வழங்கினார். அந்த வருடம் நிறைவேறிய திருஅண்ணாமலை அன்னதானத்திற்காக பல லட்சம் ரூபாய்களை செலவிட்ட நம் சற்குரு திருக்கார்த்திகை தீபத்தை தொடர்ந்து ஓரிரு மாதங்களில் வந்த இந்த மகாமக அன்னதானத்திற்காக தன்னுடைய வீட்டை அடகு வைத்தார் என்பதே இந்த அன்னதானத்தின் பின்னணியில் அமைந்த சித்த சுவையாகும். இவ்வாறு தியாகத்தில் மலர்ந்த அன்னதானத்தில் நம் அடியார்கள் பங்கேற்றார்கள் என்றால் அவர்களுக்கு குவியும் புண்ணிய சக்திகள் மலை போல் அல்லவா இருக்கும்.


இந்த புண்ணிய சக்திகளை விரயம் செய்து விடாமல் அதை தங்கள் வாழ்க்கைக்கு தேவையான முறையில் தங்கள் குடும்பத்தினருக்கும் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க மகாமக அன்னதானம் நிறைவேறிய பின் அரசலாற்றில் அனைத்து அடியார்களையும் நீராடச் செய்து இந்த புண்ணிய சக்தி பரிமாணத்தை மாற்றித் தந்தார் நம் சற்குரு. அதனால்தான் திலதைப்பதி வழிபாட்டிற்கு முன்னோ பின்னோ அரசலாறு நீராடலையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும். சக்கரவர்த்தி ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு சாமரம் வீசுவதற்கும், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்கு ராமானுஜர் சாமர கைங்கர்யம் இயற்றுவதற்கும் இணையான ஒன்றாக அமைந்ததே தன்னைக் கடிக்கும் கொசுவிற்கும் சாமரம் வீசிய நம் சற்குருவின் அரிய திருப்பணி. இத்தகைய திருப்பணி ஆற்றும் அளவிற்கு பக்தர்கள் சமநோக்குப் பார்வையைப் பெற உதவுவதே அரசலாற்றில் நம் சற்குரு கூறிய முறையில் நிறைவேற்றும் நீராடலாகும். அரசலாறு அல்லது அரிசிலாறு என்றாலும் அது பஞ்சாட்சரமாக அமைவதால் பஞ்சாட்சர சக்திகள் பூரிக்கும் 2021ம் வருடம் மட்டும் அல்லாது பஞ்சபூதங்களால் ஆனது மனித உடல் என்பதால் காவிரி என்ற பொன்னி நதியிலிருந்து தோன்றிய ஐந்து ஆறுகளில் ஒன்றாக அமைந்த அரசலாற்றில் நீராடுவது, குரு அனுகிரகத்தில் மூழ்கிக் குளிப்பது பஞ்சாட்சர ஈசனின் அருளை வாரி வழங்கும் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆண்டியையும் அரசனாக்குவதும் அரசலாறு நீராடல் பலன்களின் ஒன்றாகும். கரிகால் சோழன் இவ்வாறு தினமும் அரசலாற்றில் நீராடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதனால்தான் அவன் சிறையில் அடைக்கப்பட்டாலும் இறைவனருளால் அதிலிருந்து தப்பித்து பொற்குவியல்களை குரு அனுகிரகமாகப் பெற்று திருவையாறு திருத்தலத்தையே நிர்மாணித்தான் என்பது நீங்கள் அறிந்த ஒன்றுதானே.


அரசலாற்றில் நீராடும்போது சாதிஞ்சன ஓ மனசா என்ற ஆரபி ராகத்தில் அமைந்த தியாகராஜர் இயற்றிய பஞ்சரத்ன கீர்த்தனையையோ அல்லது நீர்பரந்த நிமிர்புன் சடை என்ற தேவாரப் பதிகத்தையோ ஓதுதல் சிறப்பே. தினந்தோறும் அரசலாற்றில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி இந்த துதிகளை ஓதி பிறவி என்னும் “முடிச்சை” அவிழ்த்தவரே கீர்த்தனை ராஜாவான தியாக “ராஜர்”.


மந்தாரை பந்தமே பந்தம்
திலதைப்பதியில் அந்தி மந்தாரை தல விருட்சமாக விளங்குவதன் மகிமையை சித்தர்கள் விரித்துரைக்கிறார்கள். மந்தாரை இலை இரண்டாக பிளவு பட்டதுபோல் தோன்றும், இதுவே பாரம்பரியங்களை இணைக்கும் தலைமுறைப் பாலமாகும். தர்ப்பணம் அளிக்கையில் ஆறுமுகம் என்பவருக்காக அவருடைய மகன் மாணிக்கம் என்பவர் தர்ப்பணம் அளிப்பதாக வைத்துக் கொண்டால் பூலோகத்தில் கோடி கோடியான ஆறுமுகங்கள் உண்டே. இதில் எந்த ஆறுமுகத்திற்கு மாணிக்கம் அளிக்கும் தர்ப்பணம் சென்றடையும். இந்தப் பணியை ஸ்வதா தேவி நொடியில் நிறைவேற்றுவதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு ஸ்வதா தேவி ஏற்று நிறைவேற்றும் பணியை பன்மடங்கு செயல்திறன் கொண்டதாக மாற்றித் தருவதே அந்தி மந்தாரை ஆகும். அந்தி மந்தாரையின் ஒரே ஒரு இலையே இந்த பூலோக ஜீவன்கள் அனைத்தின் தர்ப்பண பரிபாலனத்தை ஏற்கும் என்றால் மந்தாரை வனமே அமைந்திருக்கும் திலதைப்பதியின் மகிமையை வர்ணிக்க முடியுமா என்ன ?


உறவுக்கு கை கொடுப்போம் !
சூரிய சந்திர மூர்த்திகள் திலதைப்பதி
இந்த மந்தாரை செயல்படும் விதத்தை வர்ணிப்போமேயானால் நவீன கம்ப்யூட்டர் துறையில் Transmission Control Protocol, Internet Protocol என்ற கம்ப்யூட்டர் செய்தி பரிமாற்றத்தில் packet transmission என்ற முறையில் செய்திகள் பரிமாறப்படுகின்றன. ஒவ்வொரு பாக்கெட்டிலும் தலை, வால் என்ற பகுதிகள் உண்டு. ஒரு பாக்கெட்டின் வால் அடுத்த பாக்கெட்டின் தலைப் பகுதியாக அமையும். இவ்வாறு உலகெங்கிலும் பரிமாறப்படும் செய்தியைத் தாங்கி செல்லும் பாக்கட்டுகள் பலவாக இருந்தாலும் இந்த தலை வால் இணைப்பைக் கொண்டு உரிய பாக்கெட்டுகள் மட்டுமே இணைக்கப்பட்டு செய்திகள் பரிமாறப்படுகின்றன. கிட்டத்தட்ட இந்த அடிப்படையில்தான் அந்தி மந்தாரை இலைகளும் தர்ப்பண செய்திகளை தாங்கிச் செல்கின்றன என்பதே நம்மை வியக்க வைக்கும் தர்ப்பண முறையாகும். திலதைப்பதி கோயில்பத்து என்றும் அழைக்கப்படும் அல்லவா ? கோயில்பத்து என்றால் திலதைப்பதியில் அளிக்கப்படும் தர்ப்பணங்கள் ஒன்றுக்குப் பத்தாக பலம் பெறுவதால் மூதாதையர்களின் பல பிறவிகளும் விரைவில் மாய்க்கப்பட்டு அவர்கள் கோயில் தெய்வங்களாக, குல தெய்வ மூர்த்திகளாக விளங்கும் தன்மையைப் பெறுவார்கள் என்பதே கோயில்பத்து திருத்தலத்தில் அளிக்கப்படும் தர்ப்பண மகிமை ஆகும். அவ்வாறு தாங்கள் கோயிலில் குடியேறும் தெய்வங்களாக மாற தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றி தங்களை உயர்த்திய தங்கள் இரத்த சம்பந்தமான உறவுகளை அவர்கள் கைகொடுத்து கரையேற்றுவார்கள் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இந்த இரத்த சம்பந்த நாளங்களாக அந்தி மந்தாரை இலையில் நாம் சாதாரணக் கண்களால் காணக் கூடியவையே மந்தாரை இலை நரம்புகளாகும்.


சூரியலிங்கம் திருஅண்ணாமலை
திலதைப்பதியில் விளங்கும் தலவிருட்சமாக அந்தி மந்தாரையின் இலை, மலர், வேர், கிளை என அனைத்தும் தெய்வீகமாய்ப் பொலிபவையே. அந்தி மந்தாரை மலர்களை ஒரு பிறவியில் இறைவனுக்கு அளித்து அதன் பலனாய் பிரான்ஸ் தேசத்தில் அசிசி சகோதரியாய் பூமியில் தோன்றி ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் ஏசுநாதரின் சிலுவை சாதனையை கண்ணாரக் கண்டு வணங்கி அருள்பெற்றாள் என்பதே இத்தல வரலாறு தெரிவிக்கும் சுவை ஆகும். பிரான்ஸ் நாட்டிற்கு விஜயம் செய்த சுவாமி யோகானந்தாவும் சூட்சுமமாக இந்த தரிசனத்தைப் பெற்றார் என்பதும் நீங்கள் அறிந்ததே. வரும் 24.12.2020 வியாழன் அன்று இரவு 12 மணி என்பது ஆங்கில கணக்கும்படி வெள்ளிக்கிழமை 25ந் தேதியாக அமைவதால் அன்று அசிசி சகோதரி திருஅண்ணாமலையை கிரிவலமாக வந்து மீட்பர் லோகத்தில் அதாவது சித்தர்கள் பாராட்டும் சிலுவை தரிசனப் பகுதியில் பரமபிதாவின் தரிசனம் பெறுகிறார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் செய்தி ஆகும். வைகுண்ட ஏகாதசியுடன் இணையும் இந்த அற்புத சிலுவை நாளில் நாமும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சிலுவை தரிசனப் பகுதியில் பரமபிதாவின் தரிசனம் பெறுதல் கிடைத்தற்கரிய பாக்கியமே. அசிசி சகோதரி பிரெஞ்சு மொழியில் ஓதும் சிலுவைத் துதியை நமக்காக இனிய தமிழில் மாற்றித் தருபவர்களே மீட்பர்லோக சித்தர்கள்.
ஒளியாய் வந்த ஒளி வேந்தே
ஒளியை மீட்பாய் ஒளி வேந்தே
நின்னடி பணிவோம் வாழியவே
என்ற ஒளி மீட்பு துதியை ஓதி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து வணங்குவதால் எத்தகைய குழப்பமான சூழ்நிலையிலும் பரமபிதாவின் வழிகாட்டும் ஒளி இருள் நீக்கும், ஒளி காட்டும், வழிகாட்டும். இந்த வைகுண்ட ஏகாதசி திருநாளில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம், சூரிய லிங்கம், சிலுவை தரிசனம் என்ற மூன்று தரிசனங்களில் ஏதாவது ஒன்றில் கிரிவலம் ஆரம்பித்து மீண்டும் அதே இடத்தில் நிறைவு செய்தலால் வேணுகோபாலன், மீட்பர், அசிசி சகோதரி, அமிர்தலோக சித்தர்கள் இவர்களின் ஒருமித்த அனுகிரக சக்திகள் அமிர்தமாய்ப் பொழியும்.


பகைமையைக் களையும் மெழுகு தீபம்
அமிர்தயோகம் 60 நாழிகையும் பொலியும் அமிர்த தினமாக வெள்ளிக் கிழமையுடன் சுக்ல ஏகாதசி திதி இணைவதால் சுத்தமான காய்ச்சின பசும்பாலில் மஞ்சள் தூள், தேன் கலந்து பக்தர்களுக்கு அளித்தலால் எத்தகைய கொடுமையான நோய்களிலிருந்தும் இந்த அமிர்த சக்திகள் நிவாரணம் அளிக்கும். மறைமுக எதிரிகள் பலமிழப்பர். கிரிவலப் பாதை முழுவதும் மெழுகுவர்த்தி ஏற்றி தாங்கி வருதல் அல்லது மேற்கூறிய மூன்று தரிசனப் பகுதிகளில் மட்டுமாவது குறைந்தது 300 அடிகள் தேங்காய் எண்ணெய் தீபம் தாங்கி கிரிவலத்தை நிறைவேற்றுதல் சிறப்பாகும். கல்வாரி மலையில் ஏசுநாதர் சிலுவையை மிகவும் சிரமப்பட்டு சுமந்து சென்றார். காரணம் உலகிலுள்ள மக்கள் அனைவரும் மனதில் சுமந்திருந்த தேவையற்ற எண்ணங்களிலிருந்து அவர்களை விடுவித்து அவர்களுக்கு சுகத்தை அளிக்கவே அவர் சிலுவை மிகவும் எடையுள்ளதாக மாறிற்று. சிலை போல் மனைவி உடைய ஒரு மனிதன் கூட ஒரு நடிகையின் அந்தரங்க உடல் பாகங்களை நினைத்து ஏங்கும்போது அவன் மனம் எடை உள்ளதாக ஆகி விடுகிறது அல்லவா ? இவ்வாறு தன்னுடைய ஒரே சிலுவையில் அனைத்து மக்களின் எண்ணச் சுமைகளை சுமந்து சென்றதால்தான் அவர் பிரமபிதா என்று அழைக்கப்படுகிறார். ஆனால், என்றோ பரமபிதா மக்களுக்காக இயற்றிய தியாகம் இது என்றாலும் இன்றும் பரமபிதாவை உள்ளன்போடு பிரார்த்திக்கும் பலரின் எண்ணச் சுமைகளை சுமக்கின்றார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும்.


கொக்கு மந்தாரை வண்ணத்தில் பொலியும் Casper Angel
ஸ்ரீசகஸ்ரலிங்கம் காளையார்கோவில்
இதற்கு நிருபணமாக அமைந்ததே அசிசி சகோதரியின் வாழ்க்கை. அவள் சர்ச்சில் முழந்தாளிட்டு பிரார்த்தனை செய்யும்போது அவளுடைய உடலும் மனமும் பிரார்த்தனையில் ஒன்றி இலேசாகி விடுவதால் அவள் உடல் பறந்து கோயில் விதானத்தை முட்டிக் கொண்டு நிற்குமாம். இதைத் தவிர்க்க அவள் பிரார்த்தனை செய்யும்போது தன்னுடைய மேல் ஆடையை அங்கிருக்கும் பெஞ்சில் முடிச்சு போட்டு வைத்து விடுவாளாம். நம் சற்குருவும் தம் அடியார்களுடன் டிசம்பர் 25 அன்று சர்ச்சுகளுக்கு சென்று நிறைய அளவில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அங்கு முழங்காலிட்டு மக்களின் துயர் துடைக்க ஆற்றிய பிரார்த்தனைகளைப் பற்றி அறிந்தோர் ஒரு சிலரே. இயேசு பிறந்த தேதியுடன் வைகுண்ட ஏகாதசியும் இணைந்து வருவதால் மக்கள் இயற்றும் திருஅண்ணாமலை கிரிவலத்தில் அவர்கள் மனமும் உடலும் அன்ன சிறகுகளைப் போல் இலேசாகிப் பறக்குமே.


ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திருஅண்ணாமலை
அது மட்டுமல்லாமல் Casper Angel என்ற தேவதைகள் ஒவ்வொரு டிசம்பர் 25ந் தேதியும், திருஅண்ணாமலை கார்த்திகை தீப உற்சவத்தின்போதும் திருஅண்ணாமலையை அடைந்து கிரிவலம் வரும். இந்த தேவதையின் கொக்கு மந்தாரையைப் போன்ற தூய வெண்ணிற உருவத்தைக் கண்டு இரசித்த அடியார்கள் பலர் இன்றும் நம்மிடையே உண்டு. வைகுண்ட ஏகாதசியுடன் இணையும் இந்த பரமபிதா பிறந்த நாளில் Casper Angel முழு நாள் கிரிவலத்தை மேற்கொள்வதால் அன்று கிரிவலம் வரும் அனைத்து அடியார்களுக்கும் இந்த தேவதையின் திருஅண்ணாமலையில் எப்போதும் பிரகாசிக்கும் சாந்த கதிர்களின் பிரதிபலிப்பு அனுகிரகமாக படியும்.
என்னே அனுகிரகம் இந்த அனுகிரகம்.
நம் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தில் பொலியும் ஒவ்வொரு கலசமும் நம் பாரதத்தில் உள்ள ஒவ்வொரு திருத்தலத்தின் அனுகிரகத்தை வர்ஷிப்பது போல் திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது ஆஸ்ரமத்தில் ஏற்றப்படும் ஒவ்வொரு மின்சார தீபமும் ஒவ்வொரு அடியாரின் அனுகிரக ஜோதியாக மலரும், அதாவது ஹரிக்கேன் விளக்கு சித்தர், Casper Angel, வருணாஇஷ்ட திகம்பர நாதர், வள்ளலார் சுவாமிகள், தற்போது நம் சற்குரு போன்றோர் மலரும் சுடராக பிரகாசிக்கும் என்றால் இதன் மகிமைகளை வர்ணிக்க வார்த்தைகள்தான் ஏது ?


ஸ்ரீஅரசம்பலவாணர் திருத்தலம் பேரூர்
அம்பலங்களில் பொன்னம்பலம், வெள்ளி அம்பலம், தாமிர அம்பலம், பவள அம்பலம், சித்திர அம்பலம் என்றெல்லாம் அம்பலங்கள், நடராஜப் பெருமானின் நடன கோலங்கள் நிகழ்ந்த, நிகழும் திருச்சபைகள் பற்றி நீங்கள் அறிவீர்கள். ஆனால், மிகவும் புராதனமான அரச அம்பலம் என்று அரச மரத்தையே அம்பலாகப் பெற்ற நடராஜ பெருமானின் திருக்கூத்து நிகழும் அம்பலத்தைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள உறுதுணையாய் அமைவதே வரும் வைகுண்ட ஏகாதசி திருநாளாகும். அம்பலவாணர் என்றால் ஒரு மகனை, வாரிசை அம்பலத்திற்கு கொண்டு வரும் உலகறியச் செய்யும் தந்தையைக் குறிக்கும் சொல். என்னதான் பெருமாள் இறைவனாக இருந்தாலும் பெருமாளின் பெருமையை ராமபிரான் வடிவில் உலகறியச் செய்ய தசரச மகாராஜாவின் சேவை தேவைப்பட்டது அல்லவா ? ஒரு முறை ஒரு அடியார் ராம்சூரத் குமார் என்ற விசிறி சுவாமியை திருஅண்ணாமலையில் தரிசிக்கச் சென்றபோது அவர் வசிக்கும் இல்லத்தில் தாழிடப்பட்டு இருந்ததால் அந்த அடியார் அழைப்பு மணியை ஒலிக்கவே, அதைக் கேட்டு வேகமாக வெளியில் வந்த சுவாமிகள், “யார் உன்னை மணியை அடிக்கச் சொன்னது?” என்று கேட்கவே, அந்த அடியாரும் அறியாமையால், “சுவாமி உங்களைப் பார்க்கவே இந்த அழைப்பு மணியை அழுத்தினேன்...”, என்று கூற, சுவாமிகளும், “Don't see me, see Arunachala, He is your Father !” என்றார்கள். சுவாமிகளின் இந்த மூன்று வாசகங்களை முழுவதுமாகப் புரிந்து கொள்ள 300 ஆண்டுகள் கூட போதாது என்பதே இந்த குரு வாசகங்களின் சுக்ர மகத்துவமாகும்.



ஒவ்வொரு பெருமாள் திருத்தலத்திலும் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவேறும் என்றாலும் விஷ்ணுபதியைப் போல ஒவ்வொரு திருத்தலத்திலும் நிறைவேறும் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்கென்று பிரத்யேகமான பலன்கள் இருக்கத்தானே செய்கின்றன. இம்முறையில் இந்த சார்வரி வருட இருளில் மிளிரும் ஒளியாகத் திகழ்ந்ததே விஷ்ணுபதி தலமான சிங்கவரம் அல்லது சிங்காவரம் என்ற சிங்கார வனத்தில் நடந்த வைகுண்ட ஏகாதசியாகும். இந்த உற்சவத்தின் ஒரு பகுதியை இங்குள்ள வீடியோவில் பக்தர்கள் தரிசித்து மகிழலாம்.


சுக்ர தரிசனம் திருஅண்ணாமலை
சுவாமிகள் கூறியது போல் அண்ணாமலை ஒருவரே மனிதர்கள் அனைவருக்கும் உரிய அன்பு தந்தை என்று அருளிய ராம் சூரத் குமார் என்னும் தத்துவஞானியைப் பற்றி நாம் புரிந்து கொள்ள உதவும் சந்தர்ப்பமும் இந்த வைகுண்ட ஏகாதசி திருநாளே. ராம்சூரத் என்னும் ஐந்து எழுத்துக்கள் குமார் என்ற வாரிசாக உருவெடுக்கும் திருநாளே வரும் வைகுண்ட ஏகாதசி திருநாளாகும். விசிறி சுவாமிகள் தன்னுடைய ஒரே பொக்கிஷமாக வைத்துக் காப்பாற்றியது தன்னுடைய குருநாதர் அளித்த ஒரு தேங்காய் ஓட்டையே. எப்போதாவது எவரிடமிருந்தாவது டீ வாங்கி குடிப்பதாக இருந்தால் இந்த தேங்காய் ஓட்டில் டீ ஊற்றி குடித்து விட்டு, பின்னர் அந்த ஓட்டை நீர் விட்டு அலம்பி பத்திரப்படுத்தி விடுவார். தேங்காய் ஓட்டிற்கும், தந்தைக்கும், மெழுகுவர்த்திக்கும், பரமபிதாவிற்கும், அம்பலவாண திருத்தலத்திற்கும் “முடிச்சு” போடுவதே இந்த வைகுண்ட ஏகாதசி திருநாளாகும். விசிறி சுவாமிகளின் அனுகிரகத்தைப் பெற விரும்பும் பக்தர்கள் திருஅண்ணாமலையில் ரமணாஸ்ரமம் அடுத்து வரும் ஸ்ரீசுப்ரமண்யர் சுவாமி கோயிலில் ஆறு தேங்காய் எண்ணெய் தீபங்களை ஏற்றி 25 டிசம்பர் அன்று முழுவதும் வழிபடுவது சிறப்பே. பேரூர் ஸ்ரீஅரசம்பலவாணர் திருத்தலத்தில் வெள்ளி அகல் விளக்குகளை ஏற்றியோ அல்லது வெள்ளித்தட்டில் மண் அகல்களில் ஆறு தீபங்களை ஏற்றியோ திருத்தலத்தையோ அல்லது இங்குள்ள அரச மரத்தையோ வலம் வருதல் கிடைத்தற்கரிய பாக்கியமாகும். மரங்களில் நான் அஸ்வத்தமாக, அரசமரமாக எழுந்தருளி இருக்கிறேன் என்று பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் உணர்த்தியது எந்த அரசமரம் என்பதை அடியார்கள் இப்போது புரிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா ? அது அம்பலவாணர் கொலுவீற்றிருக்கும் பேரூர் திருத்தலம் என்றால் பேரூர்வாசிகள் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் ?!


ஸ்ரீஆறுமுகப் பெருமான் ஸ்ரீநெல்லையப்பர் ஆலயம்
இவ்வாறு குடும்ப ஒற்றுமைக்காகவோ, செல்வ விருத்திக்காகவோ, சந்தான பாக்கியத்திற்காகவோ சுக்ர சக்தியைப் பெற விரும்பும் அன்பர்கள் திருஅண்ணாமலையில் சுக்ர பகவான் ஸ்ரீஆறுமுகசுவாமியின் தரிசனம் பெற்ற முருக தலத்திலோ அல்லது பேரூர் திருத்தலத்திலோ மூன்று மூன்றாக இரண்டு வரிசைகளில் ஆறு தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடுகளை எந்நாளிலும் குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில், சஷ்டி திதிகளில், கிருத்திகை நட்சத்திர நாட்களில் இயற்றி நற்பலன் பெறலாம். பக்தர்களின் பல நடைமுறை சந்தேகங்களை தீர்த்து வைப்பவர்களே மனித வடிவில் தோன்றிய தெய்வ மூர்த்திகள். இவ்வாறு ஸ்ரீஆறுமுக சுவாமியின் வழிபாட்டிற்கு ஆறு தீபங்களை மூன்று மூன்று தீபங்களாக இரண்டு வரிசைகளில் ஏற்றி வைத்து வழிபடும் விதத்தை குறிப்பால் உணர்த்தும் மூர்த்தியே ஸ்ரீநெல்லையப்பர் ஆலயத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் ஆவார். ஸ்ரீமுற்றும் கண்ட ராமக்கோன், ஸ்ரீஅகத்திய பிரான், ஸ்ரீவேதபட்டர் முதலிய உத்தமர்களும் இவ்வாறு ஆறுமுகங்களுடன் துலங்கிய நெல்லை ஸ்ரீமுருகப்பெருமானை வணங்கி அருள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சுக்ர சக்திகளை அபரிமிதமாக அருளும் மூர்த்திகள் சிங்கவரம் செஞ்சி
ஸ்ரீஅரங்கநாயகி ஸ்ரீவரதராஜ பெருமாள ஸ்ரீலட்சுமி வராகர் ஸ்ரீரெங்கர் திருவடிகள்
ஸ்ரீவராக மூர்த்தியின் தரிசனமும் ஸ்ரீவராகி அம்மனின் தரிசனமும் பக்தர்கள் பல திருத்தலங்களில் பெற முடியும் என்றாலும் இவ்வாறு வராகி அம்மனுடன் இணைந்த வராக மூர்த்தியின் தரிசனம் காணக் கிடைக்காத அரிய தரிசனமே. இந்த அரிய தரிசனத்தை சிங்காவரம் திருத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி திருத்தலத்தில் பெறுதலால் எத்தகைய வாஸ்து தோஷங்களும் நிவாரணம் பெறும். பல்லில்லாப் பழிச் சொல் என்பதாக பொக்கை வாயுடன் திகழும் மூதாட்டிகள் அளித்த சாபங்களுக்கு இந்த தரிசனம் ஓரளவு பிராயசித்தத்தை தரும். இங்குள்ள அரசமரத்தை ஏகாதசி நாட்களில் குறைந்தது 48 முறை வலம் வந்து கொட்டையுள்ள பேரீச்சம் பழங்களை இங்குள்ள குரங்கு ஜீவன்களுக்கும் பக்தர்களுக்கும் தானமாக அளித்தலால் உடல் ரீதியான குறைபாடுகளால் சந்ததி விருத்தி தடைபட்டிருந்தால் அது விலகும். ஆண் பிள்ளைகளின் சேட்டைகள் குறையும். பிறருக்கு எதைப் பார்த்தாலும் உண்ண வேண்டும் என்ற அவா மிகுதியாக இருக்கும். இத்தகைய தேவையில்லாத ஆசைகள் சீர்பெறும் திருத்தலமே சிங்காவரமாகும்.


சுவாமிமலை
பிள்ளைக்குத் தந்தை ஒருவன்
நம் எல்லோர்க்கும் தந்தை இறைவன்
என்று பாடினான் ஒரு கவிஞன். இந்த கவிதைக்கு விளக்கமாக அமைந்ததே விசிறி சுவாமிகள் அளித்த குரு பொக்கிஷங்கள், அந்த பொக்கிஷங்களை நடைமுறைப்படுத்த உதவுவதே திருஅண்ணாமலை வைகுண்ட ஏகாதசி கிரிவலமும், பேரூர் அம்பலவாண அரசமர வலமும்.
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல் ... என்ற ஒரு பழமொழியைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். புருஷன் என்பது குணங்களோடு கூடிய இறைவனைக் குறிக்கும். இந்த வைகுண்ட ஏகாதசி அன்று பேரூர் அம்பலவாண அரச மரத்தை தொடர்ந்து வலம் வந்து வணங்குவதால் குணங்களற்ற இறைவனை உணரும் அத்வைத இறை சிந்தனையை வளர்க்க இந்த வழிபாடு ஒரு முன்னோடியாக அமையும். அத்வைத வழிபாட்டை உலகிற்கு அளித்த ஸ்ரீஆதிசங்கரரே பஜ கோவிந்தம் என்றுதானே இறை பக்தியை வளர்ப்பதே கலியுகத்திற்கு ஏற்ற தர்மமாக நிலைநாட்டினார். என்றாலும் அத்வைத தத்துவமே நிலையான தத்துவம் என்பதால் இந்த நிலையான தத்துவத்தை பக்தர்கள் உணர வழி வகுப்பதே பேரூர் அரச மர பிரதட்சிணமாகும். காலை மாலை என்ற கணக்கு இல்லாமல் எவ்வளவுக்கு எவ்வளவு இந்த அம்பல வாண அரச மரத்தை பக்தர்கள் வலம் வருகிறார்களோ அந்த அளவிற்கு அத்வைத சிந்தனை வலுப்படும்.


நொய்யல் ஆறு பேரூர் திருத்தலம்
2021 என்ற பஞ்ச சக்திகள் பொலியும் வருடத்தில் வழிபாடுகள் இயற்ற வேண்டிய பஞ்ச சக்தி தலங்களுள் பேரூர் திருத்தலமும் ஒன்றாகும். ஆவூர் தலத்துடன் இணையும் பேரூர் திருத்தலத்தில் பொலியும் பஞ்ச பூத சக்திகளே இதற்கு முக்கிய காரணமாகும். காமதேனுவின் புதல்வியான பட்டி வழிபட்ட பேரூர் திருத்தலத்திற்கு ஐந்து முக்கிய சிறப்புகள் உண்டு என்பது பலரும் அறிந்ததே. பிறவாப்புளி, இறவாப்பனை திகழும் தலம் பேரூர். இது மட்டுமல்லாமல் இங்கு பசுஞ்சாணத்தில் புழுக்கள் இருப்பதில்லை. உண்மையில் இது அதிசயமாகக் கருதப்பட்டாலும் இதில் எந்தவித அதிசயமும் இல்லை என்பதே சித்தர்களின் கூற்று. அதிசயச் செயலை செய்யத் தெரிந்த ஒரு மந்திரவாதிக்கு தான் செய்யும் செயல்களில் எந்தவித அதிசயமும் தோன்றுவதில்லை என்பதைப் போல இத்தலத்தில் விளையும் பசுஞ்சாணத்தின் இயல்பைத் தெரிந்து கொண்டால் இதில் எந்தவித அதிசயமும் மறைந்திருக்கவில்லை என்பது தெரியவரும். பசுவின் உடலில் எல்லா தேவதைகளும் தெய்வங்களும் வசிக்கும். அப்படியானால் காமதேனு என்ற தேவலோகத்துப் பசுவின் உடலில், பாற்கடலில் தோன்றிய தேவ பசுவின் உடலில் வசிக்கும் தேவதைகளின் மகிமையைப் பற்றி என்ன கூற முடியும், அந்த காமதேனுவே வழிபட்ட சுயம்பு மூர்த்தி ஸ்ரீபட்டீஸ்வரன் என்றால் அந்த திருத்தலத்தில் விளையும் பசுஞ்சாணத்தில் எப்படி புழுக்கள் வசிக்க முடியும் ?


அதுமட்டுமல்ல, குறைந்தது ஒரு லட்சம் பேர்களுக்கு அன்னதானம் நிறைவேறிய இடத்தில்தான் ஒரு தாமரை பொய்கை உருவாக முடியும் என்பது இறைநியதி. அப்படியென்றால் இத்தகைய புண்ணிய சக்திகள் மிகுந்த ஒரு தாமரை இலையில் பசுஞ்சாணத்தைப் பெற்று அதில் விபூதி தயாரித்து இறை மூர்த்திகளுக்கு அளித்தல் என்பது எத்தகைய சிறந்த பேறு ? இத்தகைய அற்புத கைங்கர்யத்தை ஒரு யுகம் முழுவதும் இயற்றிதான் பிரம்ம மூர்த்தி தன் ஐந்தாவது தலையை பெற்றார் என்பதுதான் பேரூர் தலத்தில் பாயும் தெய்வீக நொய்யல் ஆற்றின் தன்மைகளுள் ஒன்றாகும். தினமும் நொய்யல் ஆற்றில் நீராடி, தாமரை இலையில் பசுஞ்சாணத்தைப் பெற்று அதில் விபூதி பிரசாதம் தயாரித்து அந்த விபூதி பிரசாதத்தால் ஸ்ரீபட்டீஸ்வரருக்கு காப்பிட்டு வணங்கியவரே பிரம்ம மூர்த்தி. இக்காரணம் பற்றியே நொய்யல் நதிக்கு காஞ்சி நதி என்ற பெயரும் ஏற்பட்டது.


நொய்யல் ஆறு பேரூர்
நம் சிருஷ்டிக்கு காரணமான பிரம்ம மூர்த்தியே மனித உடல் மறைந்த பின்னும் அது நன்னிலையில் விசர்ஜனமாவதற்கு வழிகாட்டியாகவும் திகழ்கிறார் என்பதே பேரூர் தலத்தின் சிறப்பாகும். இத்தலத்தின் நான்காவது சிறப்பு நொய்யல் ஆற்றில் இடப்பட்ட இறந்தவர்களின் அஸ்தி எலும்புகள் கல்லாகி விடுகின்றன என்பதாகும். கல் என்பது நாம் நினைப்பதுபோலான கடினத் தன்மையைக் குறிப்பதல்லை. நொய் என்றால் மென்மை என்று பொருள். ஒரு மனிதன் எந்த அளவிற்கு நாம சங்கீர்த்தனம், உழவாரப்பணிகள், அன்னதானம் போன்ற நற்காரியங்களை இயற்றுகிறானோ அந்த அளவிற்கு அவன் சுவாசத்தில் ஆரம்பிக்கும் இந்த மென்மைத் தன்மை அவன் உடலில் எலும்பு வரையில் ஊடுருவிச் சென்று அவன் எலும்புகளும் மென்மை அடைகின்றன. இந்த மென்மைத் தன்மையே உறுதிக்கு சான்று.


எள்ளைப் பிழிந்து எண்ணெய் எடுக்கும் அளவிற்கு சிறுவர்களும் சிறுமிகளும் பலமுடையவர்களாகத் திகழ்ந்ததே பேரூர் திருத்தலத்தின் சிறப்பாகும். இந்த மென்மைத் தன்மை சிறுவர்களுக்கு எப்படி வந்தது ? பளு தூக்கும் உலகச் சாம்பியன்கள் கூட ஆற்ற முடியாத இந்த அற்புத வித்தையை சாதாரண பேரூர் சிறுவர்கள் இயற்றியதற்குக் காரணமே தாய் தந்தையர்களுக்கு இந்தச் சிறுவர்கள் இயற்றிய பாத பூஜை என்ற வழிபாடு ஒன்றே இந்த வியக்க வைக்கும் ஆற்றலை அவர்களுக்கு நல்கியதே. மென்மைதான் உண்மையான உடல் பலத்தை அளிக்க முடியும் என்பதற்கு சான்றாக பெண்களின் பிறப்பு உறுப்புகள் குழந்தை பிறக்கும் சமயத்தில் ஒரு இரும்புக் கம்பியையும் வளைத்து விடும் அளவிற்கு பலத்தைப் பெறுகின்றன என்தே மென்மையின் சாதனையை நாம் உணர வைக்கும் நிகழ்ச்சியாகும். தான் உயிருடன் இருக்கும் வரையில் எந்த நற்காரியத்தையும் இயற்றாவிட்டாலும் அந்த மனிதன் இறந்த பின் அவரின் எலும்புகளை நொய்யல் ஆற்றில் கரைப்பதால் அவை ஒரு ஞானியின் அஸ்தியைப் போல் மென்மை அடைந்து அவர் அடையும் அடுத்த பிறவிகள் மென்மையாய், சிறப்பாய் அமையும் என்பதே பேரூர் தலத்தின் சிறப்பாகும். பக்தர்கள் இன்றே இத்தலத்தின் பலனை அடைய நொய் அரிசி என்னும் குருணை அரிசியில் செய்த பணியாரங்களை தாமரை இலையில் ஐந்து ஐந்தாக வைத்து தேங்காய் சட்னியுடன் அன்னதானம் இயற்றுவதால், சிறப்பாக இந்த வெள்ளிக்கிழமையுடன் இணையும் வைகுண்ட ஏகாதசி திருநாளில் இத்தகைய தானங்களை இயற்றுவதால் கிட்டும் பலன்கள் அமோகம், ஆச்சரியமே.


ஸ்ரீஅகஸ்திய பெருமான் திருக்குற்றாலம்
வைகுண்டம் எங்கோ திகழ்வதாக நினைக்கும் பக்தர்களுக்கு நினைத்தவுடன் பலனளிப்பதுதானே பேரூர் திருத்தல ஈசனின் அனுகிரகம். இந்த தெய்வீக செய்தியைப் பார்க்கும் மறுநாளே உங்களுக்கு அருள்புரிய காத்திருக்கிறார் பேரூர் ஈசன். 16.12.2020 புதன் கிழமை மார்கழி மாதப் பிறப்பாக அமைகிறது. குருவிற்கு உகந்த தனுர் மாதத்தில் பேரூர் பட்டி அருள் பெற்ற திருத்தலத்தில் மூன்றாம் பிறை தரிசனம் அமையும் நாளில், ஐந்து எண்ணுக்குரிய புதன் கிழமை நாளில் (விதி எண்ணும் ஐந்தாக அல்லவா அமைகிறது), ஏழு சிறுநதிகள் ஒன்றாகச் சேர்ந்து நொய்யல் ஆறாய்ப் பெருகும் புண்ணிய நதி தீரத்தில், ஏழு எண் சக்திகள் பெருகும் நாளில், ஐந்து நொய் பணியாரங்களை தேங்காய் சட்னியுடன் சேர்த்து தாமரை இலையில் அளிப்பதென்றால் இதனால் விளையும் புண்ணிய சக்திகள் தலைமுறைகளையும் தாண்டிப் பெருகும், கவசமாய்க் காக்கும் என்பதே சித்தர்கள் அளிக்கும் உறுதி மொழி. மார்கழி மாதம் முழுவதும் நொய்யல் நதியில் நீராடி அல்லது இந்த நதி தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு, நொய்யல் தீர்த்தம் கலந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பது என்றால் அப்பப்பா ... ?


பஞ்சாட்சர குசா தீபம்
பேரூர் திருத்தலத்தின் ஐந்தாவது சிறப்பம்சமாகத் திகழ்வது இங்கு இறந்தவர்களின் காதில் பெருமான் ஐந்தெழுத்தை ஓதுகிறார் என்பதே. இந்த நற்காரியம் நன்முறையில் நிறைவேறுதற்காக இத்தலத்தில் உயிர் விடும் அன்பர்களின் வலது காது மேல் நோக்கி இருக்கும் வண்ணம் அடக்கம் செய்வதுண்டு. ஆனால், மனித உயிர் பிரியும்போது அவர்கள் எங்கே இருப்பார்கள் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்பதால், அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்பதாக நல்ல நினைவு கூடி வரும் இந்த நல்ல நாளிலேயே பேரூர் திருத்தலத்தில் ஸ்ரீஅகத்திய பெருமான் அருளிய தேவாரத் திரட்டுப் பாக்கள் 32 பதிகங்களையும் கூட்டு நாம சங்கீர்த்தனமாக ஓதுதல் சிறப்பாகும். அது இயலாதபோது அவரவர் தனியாகவும் இந்த பதிகங்களை ஓதியவாறே ஆலயத்தை வலம் வருதலும் ஏற்புடையதே. இத்துடன் கூடுதல் சிறப்பாக அரிசி மாவினால் குசா சக்கரம் வரைந்து படத்தில் உள்ளது போல் ஐந்து தீபங்களை ஏற்றி (இரண்டு தீபங்கள் வடக்கு நோக்கி இருத்தல் நலம்) அந்த தீபங்கள் குளிரும் வரை திருத்தலத்தில் வலம் வருதலால் எங்கு, எந்நிலையில் உயிர் பிரிந்தாலும் சிவ சக்திகள் நம்மை நிச்சயம் அரவணைக்கும்.


ஸ்ரீதுர்வாச மகரிஷி திருஅண்ணாமலை
ஒரு அடியார் காயத்ரி மந்திரத்திற்கு ரிஷி சாபம் உள்ளதால் அந்த சாபத்தை நிவர்த்தி செய்யாமல் எப்படி ஜபிப்பது என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். எந்த ரிஷியும் முனிவரும் மகானும் சாபம் அளிப்பதில்லை. சினத்தால் சிவக்கும் துர்வாச மகரிஷியின் சாபம் கூட இறுதியில் நன்மையைத் தான் விளைவித்ததே தவிர எவருக்கும் எந்தத் துன்பத்தையும் அளித்ததில்லை. விசிறி சுவாமிகளின் கோபக் கனலில் விளைந்த வார்த்தைகளில் செறிந்த தெய்வீக பொக்கிஷத்தை ஏற்கனவே விவரித்துள்ளோம். காயத்ரீ மந்திரத்தை ஒரு முறை கூறினாலே மழை பெய்யும், டன் கணக்கில் தங்கம் வர்ஷிக்கும் என்பதெல்லாம் காயத்ரீ மந்திரத்தின் சக்திதான். ஆனால், இவ்வாறு தகுதி பாராது மந்திர சக்திகள் பெருகினால் அதனால் உலகில் தீமையே அதிகம் விளையும் என்பதால் விஸ்வாமித்திரர் தேவலோகத்திலிருந்து கொண்டு வந்த இந்த காயத்ரீ மந்திரத்திற்கு ஒரு “பூட்டை” போட்டு அந்தப் பூட்டை திறந்தால்தான் காயத்ரீ மந்திரத்தின் முழுப் பலனைப் பெற முடியும் என்று பின்னர் ரிஷிகள் காயத்ரீ மந்திரத்தின் சக்தியை தகுதி உள்ளோர் மட்டுமே பெறும் வண்ணம் மாற்றி வைத்து விட்டனர். ஒரு தெய்வத்தை வழிபடுவதற்கோ, கடவுளின் பிரம்ம சக்தியை வழிபடுவதற்கோ காயத்ரீ மந்திரம் எப்போதும் துணைபுரியும், இதை தகுதி உள்ள குரு ஒருவரிடமிருந்தோ அல்லது அவரவர் தங்கள் தந்தையிடமிருந்தோ உபதேசமாகப் பெற்று தாராளமாக ஜபிக்கலாம். இதில் எந்தவித தவறும் கிடையாது. இதில் சந்தேகம் உள்ளவர்கள் பிரம்மா மீண்டும் தன் ஐந்தாவது தலை சக்திகளைப் பெற்ற பேரூர் திருத்தலத்தில் பொலியும் ஐந்து தலை பிரம்மாவை தரிசித்து ஆத்ம விசாரம் செய்வதால் தக்க மனத் தெளிவைப் பெறுவார்கள்.


ஸ்ரீபிரம்ம மூர்த்தி பேரூர்
பிரம்மா தன் ஐந்தாவது தலையை இழந்து மீண்டும் பெற்ற இறை அனுபூதிகளுக்கு பின்னணியாக அமைந்த விஷயங்களை அறிந்து கொண்டால் நாம் அடையும் பிரமிப்பிற்கு எல்லையே இல்லை. ஒரு மனிதன் தான் என்ற அகம்பாவத்துடன் திகழும்போது அவன் அடையும் சக்தியை விட அவன் தான் என்ற எண்ணத்தை முற்றிலும் தியாகம் செய்ய முடிந்தால், அனைத்தும் இறையருளால், இறை சங்கல்பத்தால் நிகழ்கின்றன என்பதை பூரணமாக உணர்ந்தால் அவன் அடையும் பலத்தை கற்பனை செய்து பார்க்கவே முடியாது. தான் என்ற உணர்வை இழந்த மனிதன் எத்தனை மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், தேவர்கள் முதலான உயர்ந்த உயிர்கள் உள்ளனவோ அத்தனை உயிர்களின் சக்தியைப் பெற்றவன் ஆகின்றான். நாம் ஒரு மகானிடம் செல்லும்போது அவர் “நான்” என்ற உணர்வு சிறிதும் இன்றித் திகழ்வதால் அவர் எளிதாக தன் உடலை விட்டு நம்முள் பிரவேசித்து நம் மனதை, சூட்சும சரீரத்தை நொடிப் பொழுதில் ஊடுருவிப் பார்த்து நம் கோடிக்கான பிறவிகளில் நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்து கொண்டு நமக்கு உரிய வழிகாட்டுதலை எளிதில் அளித்து விடுகிறார். இவ்வாறு ஒரு சாதாரண மனிதனும் பூரணம் பெற்ற ஆத்மாவாக பிரகாசிக்க உதவுவதே பேரூர் திருத்தலத்தில் பூரண சக்திகள் திகழும் 2021ம் ஆண்டில் மேற்கொள்ளும் வழிபாடுகள் ஆகும்.


ஸ்ரீபோடா சித்தர்
இத்தகைய பூரணமான பிரம்மா சக்திகளுடன் சரஸ்வதி தேவியின் திருவருளும் போடா சுவாமிகளின் விலைமதிப்பற்ற ஞான சக்திகளும் கூடுவதுதான் இந்த வருட பேரூர் திருத்தலத்தில் இயற்றும் வழிபாட்டின் மகிமையாகும். தேவலோகத்திலிருந்து வேகவதியாய் சீறி வந்த சரஸ்வதி தேவியை சாந்தம் செய்யும் சக்தி பூமியில் எவருக்கும் இருக்கவில்லை. பூலோகம் அழியும்போலிருந்தது. அந்நிலையில் ஸ்ரீபோடா சித்தர் என்ற அற்புத மகான் பிரம்ம கபாலத்தில் சரஸ்வதியைத் தாங்க, சரஸ்வதி தன் “புக்காத்தில்” பிரவேசித்து புனிதம் அடைந்ததாக உணர்ந்தாள். “நல்லிடம் சேர்ந்தேன் நலமடைந்தேன்,” என்ற சரஸ்வதி காஞ்சி முனிக்கு தன் நன்றியைத் தெரிவித்தாள். பூலோகத்தில் மனித உடலில் 2000 ஆண்டுகள் வாழ்ந்தவரே ஸ்ரீபோடா சித்தர். ஆயிரம் பிறை கண்ட உத்தமர்களே சதாபிஷேகம் என்னும் 80 வயது நிறைவை அடையும்போது ஆயிரம் மூன்றாம் பிறை தரிசித்தவர்கள் ஆகிறார்கள் என்றால் 2000 ஆண்டுகள் வாழ்ந்த உத்தமர் எத்தனை லட்சம் மூன்றாம் பிறைகளை தரிசனம் செய்திருப்பார் ? இதனால்தான் நொய்யல் ஆற்றிற்கே காஞ்சி நதி என்ற பெயரும் உண்டாயிற்று என்ற நாம இரகசியம் இப்போது உங்களுக்கு விளங்குகின்றது அல்லவா ? இக்காரணம் பற்றியே சனீஸ்வர பகவானுடன் சேர்ந்து ராஜயோகம் பெற்ற குரு பகவானின் ஏழாமிடத்து பார்வையைப் பெறும் சந்திர பகவான் முன்னிலையில் இந்த புத்தாண்டு பிறப்பதால் குருவருளால் தடைபட்ட திருமணங்கள் இனிது நிறைவேறும் என்று குறிப்பிட்டுள்ளோம். இத்தகைய நல்லுறவுகளுக்கு வழி வகுப்பதே பேரூர் திருத்தலத்தில் இயற்றும் குசா ஜோதி வழிபாடுகளும் பணியார தானமும் ஆகும்.


இதுவும் குரு சந்திர யோகமே
மனிதர்களின் கையிலுள்ள கட்டை விரல் சுக்ர விரல் என்றும் ஆட்காட்டி விரல் குரு விரல் என்றும் அழைக்கப்படும். கால் விரல்களைப் பொறுத்தவரை இந்த சக்திகள் மாறி அமையும். அதாவது கால் கட்டை விரல் குரு அம்சங்களுடனும் அடுத்த விரல் சுக்ர அம்சங்களுடனும் பொலியும். இந்த அனுகிரக சக்திகளை பிரபஞ்சத்திற்கு அருள்வதற்காக அவதாரம் மேற்கொண்ட ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தான் சிறுகுழந்தையாய் தவழ்ந்தபோது இவ்வாறு குருவிரலை தன் திரு அதரங்களில் வைத்து அனைவருக்கும் திருக்காட்சி நல்கினார் என்பது நீங்கள் அறிந்ததே. இது என்றோ நடந்த வைபவம் என்றாலும் இன்றும் இத்தகைய குழந்தைகளின் மழலை சேட்டைகளை நீங்கள் தரிசனம் செய்து பலன்பெறலாம் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும். இவ்வாறு குரு விரலை அதரங்களில் இணைக்கும் யோகம் குரு சந்திர யோகமாக அமைவதால் இது குருபகவான் ராஜயோகம் கொள்ளும் இந்த ஆண்டில் சிறப்பான பலன்களை வர்ஷிக்க வல்லதே.


கோடியக்கரை
இவ்வாறு குரு சக்தியையும், சுக்ர சக்தியையும் ஒருங்கே பெறும் முகமாக சித்தர்கள் மூன்று விதமான வழிபாட்டு முறைகளை நமக்கு அருளியுள்ளனர். மேற்கண்ட முறையில் கால் கட்டை விரலை முத்தமிடும் குழந்தைகளுக்கு அவரவரால் இயன்ற ஆடை அணிகலன்களை அணிவித்து அதன் பெற்றோர்களை வணங்கி அவர்களின் ஆசி பெறுதல். திலதர்ப்பண புரியில் வியாழன் அல்லது வெள்ளிக் கிழமைகளில் தர்ப்பணம் அளித்து வெள்ளிக் கொலுசுகளை குழந்தைப் பருவத்தில் உள்ள மழலைச் செல்வங்களுக்கு தானம் அளித்தல். திருஅண்ணாமலை தசமுக தரிசனப் பகுதியில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்து வெள்ளி ஆபரணங்களை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்தல். இந்த மூன்று வழிபாடுகளில் அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்து எந்தவிதமான வழிபாடுகளை மேற்கொண்டாலும் குடும்ப ஒற்றுமை குருவருளால் சீர் பெறும். கணவனுக்கு இயற்றும் பாதபூஜை என்பது இவ்வாறு குரு சக்திகளை சுமங்கலிகள் பெறும் ஒரு பூஜை முறை என்பதும் இப்போது புலனாகின்றது அல்லவா ? கஜகேசரி யோகம் சிறப்படையும் இந்த புத்தாண்டில் (2021) இத்தகைய வழிபாடுகள் அபரிமிதமான பலன்களை அளிக்கவல்லவையே.

சோற்றைப் போடு சித்தனாவாய் !

கோடியக்கரை என்னும் பதத்தை ஆயிரம் விதமாகக் கூறலாம். இதில் கோடி அ கரை என்பது ஒரு பொருள். இக்கோடியில் மனிதனாய் பிறந்துள்ள நாம் அக்கோடியில் உறையும் இறைவனை அறிய வல்ல முறைகளுள் ஆரம்பப் பணியாக திகழ்வதே எள் கொண்டு நிறைவேற்றும் தில தர்ப்பணமாகும். இதன் மகிமையை உணர்த்துவதே கோடியக்கரை, திலதைப்பதி, திருஅண்ணாமலை தசமுக தரிசனம் போன்ற பித்ருக்களின் அனுகிரகத்தை வர்ஷிக்கும் தலங்களாகும்.
ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோடியக்கரை
இவ்வாறு ஆரம்பமாகும் பக்தர்களின் தன்னலமற்ற பணி தொடரும்போதுதான் நம் பரமேஷ்டி குரு அளித்த மேற்கண்ட பொன்மொழியின் ஒரு தூசி அளவு விளக்கத்தை அறியலாம். சோற்றைப் போடு சித்தனாவாய் என்ற பன்னிரெண்டே எழுத்துக்களில் அமைந்த இந்த சித்த குரு வேத மந்திரத்தின் பொருளை அறிய மனிதர்களுக்கு
எத்தனை கோடி பிறவிகள் ஆகுமோ ?
எனினும் இந்த ஆண்டில் தினமும் ஒரு மணி நேரமாவது இந்த சித்த வாக்கியத்தை ஆத்ம விசாரம் செய்து வந்தால் அதன் பலனாய் விளையும் ஆத்ம விசார தெளிவே தெளிவு.


உடல் வாக்கு மனம் புத்தி பிரகிருதி மூலம் செய்யும் காரியங்களின் பலன்கள் அனைத்தும் இறைவனுக்கே சமர்ப்பணம் !


திருத்தல யாத்திரை தொடரும்


ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam