எண்ணிக்கை முக்கியமல்ல, எண்ணமே முக்கியம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்ஊட்டத்தூர் சிவாலயம்

ஒவ்வொரு கோயிலுக்கும் அதன் ராஜ கோபுரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாமறிவோம்.
எனவே ஊட்டத்தூர், லால்குடி போன்ற திருத்தலங்களில் ராஜ கோபுரங்களில் ஏழு கலசங்கள் அமைந்திருக்கின்றன என்றால் அந்த கலசங்களின் ஏழு என்ற எண்ணிக்கையானது மூலவரின் அனுகிரக சக்தியுடன் ஒத்துப்போகும் என்பது உண்மையே. அத்தோடு இந்த ஒற்றுமை என்பது முடிவடைந்து விடுவதில்லை. அக்கோயிலில் உள்ள தீர்த்தம், தல விருட்சம், தீர்த்தக் குளம், எழுந்தருளியுள்ள விக்ரஹ மூர்த்திகள், கொடி மரம், நந்தி மூர்த்தி என்றாவாக இந்த ஒற்றுமை அனைத்தையும் ஒருங்கிணைப்பதாக அமையும் என்பதையே பெரியோர்களும், ரிஷிகளும், மகான்களும் கண்டு, தரிசித்து இந்த உண்மையை மக்கள் அனைவரும் பயன்பெற சதாசர்வ காலமும் வெளியிட்டுள்ளனர் என்பதே உண்மை.ஸ்ரீநடராஜர் திருநல்லம் சிவாலயம் கும்பகோணம்
கோனேரிராஜபுரத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநடராஜர் சுயம்பு தத்துவத்தில் திருவாசி நடராஜரைப் போல் எழுந்தருளியுள்ள மிகவும் அரிதான நடராஜ மூர்த்தி ஆவார். பொதுவாக மனிதர்கள் இறந்த பின் இறைவனையோ இறைத் தூதுவர்களையோ தரிசனம் செய்வது கிடையாது. மிக உயர்ந்த நிலைக்குச் செல்லும் நம் மூதாதையர்கள் கூட இறைவனை தரிசிப்பது கிடையாது என்பதே உண்மை. இறை தரிசனம் என்பது சிறிதளவே பாவம், பண்ணியம் இருந்தால் கூட அந்த பாவத்தை அல்லது புண்ணியத்தை செலவழித்த பின்னரே கிடைக்கக் கூடிய ஒரு பேறாகும். தாம் உயிர் நீத்த பின்னர் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தம்முடைய தாத்தாவான ஸ்ரீகேசவ சந்திரரை மனோலயமாக தொடர்பு கொண்ட நம் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஸ்ரீகேசவ சந்திரர் தான் பித்ரு லோகத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகத்தான் தெரிவித்தாராம். இதிலிருந்து என்ன தெரிகிறது. ஸ்ரீகேசவ சந்திரர் அந்த பித்ரு லோகத்தில் தன்னுடைய புண்ணிய தீரும் வரை ஒரு பித்ரு தேவதையாகவே இருப்பார் என்பது புலனாகிறதுஅல்லவா ? அந்த புண்ணியம் தீர்ந்த பின்னரே அவர் இறைவனைத் தரிசிப்பாரா என்ற கேள்வியே எழும். அப்படியானால் சாதாரண மனிதர்களின் நிலை என்ன என்பதை நீங்கள் ஊகித்தறியலாம். எனவே சாதாரண மனிதர்களின் ஆன்மா ஒரு சாண் அளவிற்குக் கூட அவர்கள் உயிர் துறந்தவுடன் பூமியை விட்டுக் கிளம்பாது தான் உய்வு அடைய அடுத்து உடலை நாடுகிறது என்பதே சித்தர்கள் கூறும் ஆத்ம பரிபாலன இரகசியமாகும். இந்த ஆத்ம பரிபாலனத்திற்கு உறுதுணையாக அமைவதே திருநல்லம் திருத்தலத்தில் நாம் ஸ்ரீநடராஜ பெருமானை செய்யும் தரிசனத்தின் பலனாகும். மதுரை, உத்தரகோசமங்யைப் போல இத்தல ஸ்ரீநடராஜ மூர்த்தியும் வெளியே திருஉலா வருவது கிடையாது.
உத்தரம் என்றால் பதில் என்று ஓர் அர்த்தம். தங்கள் மனதினுள் எழும் எத்தகைய கேள்விகளுக்கும் உத்தரம் அதாவது பதில் அளிக்கக் கூடியவரே திருநல்லம் ஸ்ரீநடராஜ மூர்த்தி ஆவார். வரகுண பாண்டியன் போன்று இந்த நடராஜ மூர்த்தியை வணங்கியே தாங்கள் போர் தொடுக்கும் முன்னர் தங்களுடைய அணுகு முறை சரியானதா என்று கேட்டு தங்கள் தவறுகளைச் சரி செய்து கொள்ளும் பண்பாடு பண்டைய அரசர்களுக்கு இருந்ததே திருநல்ல நடராஜ மூர்த்தி வழிபாடு மக்களுக்கு இன்றும் சுட்டிக் காட்டும் உண்மையாகும். மற்ற நாட்டுடன் போர் தொடுக்கத்தான் ஸ்ரீநடராஜ மூர்த்தியை அணுக வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தங்கள் மனதில் தோன்றும் எல்லா வினாக்களுக்கும் உரிய விடையளிக்கக் கூடியவரே திருநல்லம் ஸ்ரீநடராஜ மூர்த்தி ஆவார். பெண்கள் திரு சிவகாமி அம்மனிடம் தங்கள் கோரிக்கையைத் தெரிவித்து உரிய விடையைப் பெறலாம். இது திருநல்லம் ஸ்ரீநடராஜ பெருமானுக்கும் ஸ்ரீசிவகாமி அம்மனுக்கும் மட்டும்தான் பொருந்தும் என்று எண்ண வேண்டாம். அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து தங்கள் ஊரில் உள்ள எந்த நடராஜ மூர்த்தி அல்லது சிவகாமி அம்மனிடம் தங்கள் குறையைத் தெரிவித்து அதற்குரித்தான விடையைப் பெறலாம். மேலும் ஆண்கள் ஸ்ரீநடராஜரிடம் பெண்கள் ஸ்ரீசிவகாமி அம்மனிடம் தங்கள் குறையைத் தெரிவிக்க வேண்டும் என்பது கூட ஆரம்ப நிலையில் உள்ள அடியார்களுக்கே. பழுத்த பண்பட்ட மனநிலையில் உள்ள இறை அன்பர்கள் நடராஜரோ சிவகாமி அம்மனோ யாரிடம் வேண்டுமானாலும் தங்கள் மனக் குறையை மனம் விட்டுத் தெரிவித்து தங்கள் குறைகளுக்கான தக்க விடையைப் பெறலாம் என்பதே சித்தர்கள் காட்டும் அறவழி முறையாகும்.


ஸ்ரீபூமிநாதர் திருநல்லம்
சதுர பீடமுடைய இந்தச் சிவலிங்க மூர்த்தியை தரிசித்தலால் வீடு, மனை, அலுவலகம் போன்ற இடங்களில் உள்ள வாஸ்து தோஷங்கள களைவதற்கு இத்தரிசனம் ஏதுவாகிறது. இந்தச் சிவலிங்கத்தின் நான்கு மூலைகளுமே உண்மையான திசைகளைக் குறிப்பதால் தற்காலத்தில் சரியாக திசைகள் அமையாத வீடுகள், அலுவலங்களில் பணிபுரிவோருக்கு ஏற்படும் நிலம், திசைகள் சம்பந்தமான தோஷங்களிலிருந்து நிவர்த்தி கிட்டுகிறது.
திருச்சி கீழரண்சாலை, மண்ணச்சநல்லூர், மணல்மேல்குடி போன்ற பல தலங்களில் பூமிநாதர், ஜகன்னாதர் என்ற திருநாமத்துடன் சிவலிங்க மூர்த்திகள் எழுந்தருளியிருந்தாலும் ஒவ்வொரு சிவலிங்க மூர்த்தியின் அருட்பாங்கில் எண்ணற்ற அனுகிரக சக்திகள் மாறுபடுகின்றன என்பதே உண்மை. இதை முழுவதுமாக உணர்ந்தவர்கள் சித்தர் பெருமக்களே. இவ்வகையில் திருநல்லம் சிவத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவமூர்த்தி கோண தோஷங்களைக் களையும் அற்புத மூர்த்தியாவார். பண்டைய காலத்தில் இத்தகைய கோண தோஷங்கள் அவ்வளவாக இடம் பெறாததால் தற்போது போன்ற நிலத்திலும் மனையிலுமான பிரச்னைகள் அவ்வளவாக தோன்றவில்லை என்றே கூறலாம். தற்போது இடநெருக்கடி, நகர குடியிருப்பு போன்ற காரணங்களால் கோணங்களைப் பற்றிய ஞானம் அவ்வளவாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் வாஸ்து நியதிகளில் மிகவும் முக்கியமாக அனுஷ்டிக்க வேண்டியது கோண அளவாக இருப்பதால் அவை சரியான திசையில் அமையாதபோது அல்லது கோண அளவைப் பற்றிய ஞானத்தைப் பெறாதவர்கள் திருநல்லம் சிவமூர்த்தியை அடிக்கடி வணங்கி வருதலால் வீடு, மனை, நிலங்களில் அமையும் கோண தோஷ விளைவுகளிலிருந்து காக்கப்படுகிறார்கள். இதற்காகவே திருநல்லம் சிவமூர்த்தி சதுர ஆவுடைமேல் எழுந்தருளி உள்ளார் என்று கூட கூறலாம்.மேலும் சதுரஆவுடை என்பது அடிப்படை திசைகளைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல் அடிப்படையான நான்கு வேதங்களையும் குறிக்கும் என்பதும் உண்மையே. திருநல்லம் சிவமூர்த்தியின் முன் எழுந்தருளி உள்ள நான்கு தூண்களும் நான்கு வேதங்களைக் குறிப்பதால் இந்த தூண்களின் தரிசனமே வேதங்களின் தரிசனமாக அமைவதால் ஸ்ரீஅகத்தியர், ஸ்ரீபரத்வாஜர் போன்ற வேதவித்துக்கள் இங்கு சுவாமியை தரிசனம் செய்ய வரும்போது முதலில் இந்த தேவ, வேத தேவதைகளை முறையாக வணங்கிய பின்னரே மூலவரான ஸ்ரீபூமிநாதரை வழிபடுகின்றார்கள் என்பதே உண்மை. நாம் அவர்கள் காட்டிய வழியில் சென்று முதலில் இந்த நான்கு வேத தூண்களை வணங்கிய பின்னரே மூலவரான ஸ்ரீபூமிநாதரை வழிபட வேண்டும் என்பது முக்கியமாகும். நான்கு என்பது வேதத்தை மட்டும் குறிப்பதன்று, இது ஸ்திர தன்மையையும் குறிப்பதால் இந்த நான்கு தூண்கள் இடையே நின்று இறைவனை வணங்குவதால் அடங்காத மனமும் அடங்கும் என்பதே உண்மை. வாஸ்து சக்திகளைக் கொண்ட இந்த நான்கு தூண்கள் ஸ்ரீபூமிநாதருக்கு அமைந்திருப்பதும் ஒரு ஆன்மீக விந்தை, விநோதமாகும். பத்மாசனமிட்டு இந்த நான்கு தூண்களுக்கு இடையே இயற்றும் வழிபாடுகளின் பலன்களை, தரிசன ஆற்றல்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.


ஸ்ரீஅங்கவளநாயகி திருநல்லம்
கல்யாணம் பண்ணிப் பார், வீட்டை கட்டிப் பார் என்று சொல்வதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளன. சரியான அளவுகள் கொண்ட ஒரு வீட்டை கட்டுவது எவ்வளவு சிரமமோ அதே போன்று சரியான உடல் அளவுகள் உள்ள ஒரு மணமகளைத் தேடுவதும் ஆகும். காரணம் எப்படி ஒரு மனையின் அளவுகள் அவ்வீட்டில் வசிக்கும் மக்களின் எண்ணங்களை, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறதோ அதே போல்தான் ஒருவருக்கு மனைவியாக அமையும் மணப் பெண்ணின் உடல் அளவுகளும் மணமகனுடைய உடல் ஆரோக்கியத்தையும் மனதையும் பாதிக்கும் என்பது உண்மையே. பலரும் நினைப்பது போல் மனையை நம் இஷ்டப்படி மாற்றி கட்டிக் கொள்ளலாம் ஆனால் மனைவி நாம் நினைப்பது போன்ற உடலமைப்புடன் திகழ்வாளா ? உண்மையில் இரண்டுமே இறைவன் கொடுத்த வரத்தின்படி அமைவதே. எனவேதான் இதை உணர்ந்த பெரியோர்கள் மேற்கண்ட பழமொழியை சிந்தித்துப் பார்க்கும்படிக் கூறினார்கள். என்னதான் பார்த்து பார்த்து கட்டினாலும் ஒருவர் கட்டும் வீட்டில் ஏதாவது குறைபாடு பின்னர் தெரிய வருவதுபோல என்னதான் பார்த்து பார்த்து பெண்ணைத் தேர்ந்தெடுத்தாலும் திருமணத்திற்குப் பின் எத்தனையோ குறைபாடுகள் அப்பெண்ணிடத்தில் தோன்றுவது இயல்பே. இதை கருத்தில் கொண்டே நம் பெரியோர்கள் திருநல்லம் போன்ற திருத்தலங்களை நம் வழிபாட்டிற்காக குறிப்பிட்டுள்ளார்கள். எனவே ஒரு மனிதனுக்கு வசிக்கும் இடமான வீடு எந்த அளவு முக்கியமோ அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக தனக்கு வாய்க்கும் வாழ்க்கைத் துணை அமைவதால் அனைவரும் திருமணத்திற்குப் பின் திருநல்லம் ஸ்ரீபூமிநாதரையும் ஸ்ரீஅங்கவளநாயகி என்னும் ஸ்ரீதேக சௌந்தரியையும் அவசியம் வணங்கி அவர்கள் ஆசி பெற வேண்டும் என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நிச்சயம் அவர்களுடைய அங்க அளவுகள் சரியாக அமைவது கிடையாது அதாவது அவரவர் உடல் அங்கத்தைப் பார்த்து அவரவர் சந்தோஷம், பெருமை கொண்டாலும் அடுத்தவருக்கு நிச்சயமாக அது திருப்தியைத் தராது என்பதால் மற்றவர்களுக்கு தங்கள் உடலால், அங்கத்தால் சேவை செய்யும் மனப்பாங்கு உடையவர்கள் நிச்சயமாக ஸ்ரீஅங்கவளநாயகியை வணங்கி ஆசி பெற வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது.
உடல் அளவுக் குறைகளால் அங்கஹீனம் ஏற்பட்டு மனக் குறை ஏற்படும், அந்த மனக் குறையைத் தீர்ப்பதற்கு அருள்புரியும் நாயகியும் ஸ்ரீஅங்கவள நாயகியே ஆவாள். எனவே உடல் ஊனமுற்றவர்களும், நிறம், உயரம், பருமன் போன்ற காரணங்களால் மன ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்களும் அவசியம் வழிபட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீஅங்கவளநாயகி ஆவாள். இத்தகைய உடல் மன ஊனங்கள் திருமணத்தின்போது மிகவும் பெரிதாக மக்களையும், சம்பந்தப்பட்ட தம்பதிகளையும் பாதிப்பதால் ஸ்ரீஅங்கவள நாயகியும் ஸ்ரீபூமிநாத மூர்த்தியும் திருமணக் கோலத்தில் எழுந்தருளி எத்தகைய உடல் மன நோய்களையும் தீர்க்கிறார்கள். இவர்களுக்கு இடையே ஸ்ரீசோமாஸ்கந்த மூர்த்தியாக ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியும் ஸ்ரீவைத்தியநாத சுவாமியும் எழுந்தருளி உள்ளதால் இவர்கள் எத்தகைய மன உடல் ஊனங்களையும் களையும் வல்லமை படைத்தவர்களாகத் திகழ்கிறார்கள்.


திருநல்லம் சிவத்தலம்
கோனேரிராஜபுரம் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. கோன் என்றால் தலைவன் என்ற பொருளும் உண்டு. அக்காலத்தில் தஙகள் தலைவனான ராஜராஜ சோழனின் பாட்டியான செம்பியன் மாதேவியால் வணங்கப்பட்ட தெய்வம் திருநல்லம் ஈசன் என்பதால் இத்தலத்திற்கு கோனேரிராஜபுரம் என்ற பெயர் ஏற்பட்டதாக வழக்கு அமைந்துள்ளது. அதற்கு சான்றாக மேற்கூறிய செம்பியன் மகா தேவி இறைவன் திருநல்ல ஈசனை வழிபடும் சித்திரம் நமக்கு கிடைத்துள்ளது. உண்மையில் வீடு, நிலம், மனை அளவுகளில் ஏற்படும் கோண அளவு மாற்றங்களால் ஏற்படும் தோஷங்களைக் களைய வல்ல நாதரே ஸ்ரீபூமிநாதர் ஆவார். வீட்டின் கோண அளவுகள் சமமாக அமைவதே முறை. சில வீடுகள் ஆரம்பத்தில் அகலமாகவும் போகப் போக குறுகலாக அமைவது உண்டு. சில வீடுகள் ஆரம்பத்தில் குறுகலாக இருந்து போகப் போக அகலமாக அமைவது உண்டு. இத்தகைய அமைப்பு பாம்பு மனை என்று வழங்கப்படுகிறது. இது சரியான கோண அளவைக் குறிப்பது கிடையாது. இதற்காக அத்தகையோர் தங்கள் இல்லங்களை மாற்ற முடியாது அல்லவா ? இத்தகைய இல்லங்களில் வசிப்போர் திருநல்லம் ஈசனை தரிசனம் செய்து உரிய தான தர்மங்களை நிறைவேற்றுவதால் கோண அளவுகள் சரியாக அமையாதபோதும் கோனேரிராஜபுரம் ஈசன் அவர்களைக் காப்பான் என்பது உண்மையே. இந்த கோண அளவுகளுக்கும் தங்கள் மனைவியின் உடல் அளவுகளுக்கும் தங்கள் உடல் கோண அளவுகளுக்கும் நிச்சயமாக சம்பந்தம் உண்டு, உண்டு. இக்காரணம் பொருட்டே எவரும் தாங்கள் வசிப்பதற்காக கட்டிய வீட்டை அக்காலத்தில் வாடகைக்கு விடுவது கிடையாது. தற்காலத்தில் வாடகைக்கு விடுவதற்காகவே வீடுகளைக் கட்டினால் யாருடைய உடல் கோண அளவுகளுக்கு அந்த வீடு அமையும் ? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.


ஸ்ரீவைத்தியநாதர் திருநல்லம்
வியாதிகள் எப்போதும் தேய்வு பெறுதலே சிறப்பு. திருநல்லத்தில் அருள்புரியும் ஸ்ரீவைத்தியநாத சுவாமி லிங்க மூர்த்தியானவர் மேற்கு திசையை நோக்கி சூரிய பகவானின் தேய்வு திசையில் எழுந்தருளி இருப்பதால் ஸ்ரீவைத்தியநாத சுவாமியை தரிசிக்கும் அன்பர்கள் இயற்கையாகவே தங்கள் வியாதி குறைவதைக் கண் கூடாகக் காணுதல் வியப்பென்ன ? பண்டைய மன்னர்களான ராஜேந்திர சோழன் உட்பட பல மன்னர்கள் தங்கள் வியாதிகளுக்கு தக்க நிவாரணம் பெற்றதோடு மட்டுமல்லாமல் தற்காலத்தில் பலரும் தங்கள் வியாதிகளிலிருந்து நிவாரணம் பெறுவதைக் கண் கூடாகக் காணலாம். ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீஅங்கவள நாயகிக்கு இடையே அமர்ந்து அருளாட்சி செய்வதுடன் செவ்வாய்க் கிழமைக்கு உரிய வைத்ய நாதனான ஸ்ரீசுப்ரமண்ய சுவாமிக்கு எதிரில் எழுந்தருளி இருப்பதும் ஸ்ரீவைத்தியநாதரின் தனிச் சிறப்பாகும். வருங்காலத்தில் சூரிய ஒளி பட்டு தோலில் புற்று நோய் ஏற்படும் அபாயம் பற்றி சித்தர்கள் தெரிவித்து உள்ளதால் அதற்கு வருமுன் காப்பாக அமைவதும் இந்த மூர்த்தியின் வழிபாடே என்பதை அடியார்கள் கருத்தில் கொள்ளவும். குறிப்பாக தேய்பிறைகளில் வரும் செவ்வாய்க் கிழமை அன்று வாழைத் தண்டு பொரியல் தானம் தோல் வியாதிகளிலிருந்து நல்ல நிவாரணத்தைப் பெற்றுத் தரும். அதோடு மட்டுமல்லாமல் தேன் கலந்த எல்லா வகையாக உணவுப் பொருட்களும் தானம் அளிக்க சிறந்த தலமே ஸ்ரீவைத்தியநாதர் அருளும் திருநல்லம் சிவத்தலமாகும். உடம்பில் முகத்தில் தோன்றும் கருப்புப் புள்ளிகளுக்கு நிவாரணம் அளிப்பதும் இத்தல மூர்த்திகளை வணங்கி இயற்றும் வழிபாடே.


ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி திருநல்லம்
ஸ்ரீசனீஸ்வர பகவான் அவருக்குரித்தான மேற்கு திசை நோக்கி ஸ்ரீபைரவர், ஸ்ரீதுர்கை தேவி, ஸ்ரீசூரிய பகவானுடன் தனித்து எழுந்தருளி இருப்பது விந்தையாகும். நடுவயதைத் தாண்டியவர்கள் தரிசிக்க வேண்டிய மூர்த்திகளே மேற்கு திசையை நோக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானும் ஸ்ரீசூரிய பகவானும் ஆவர். பொதுவாக ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு கறுப்பு ஆடை சார்த்துவது வழக்கம் என்றாலும் இத்தல ஸ்ரீசனீஸ்வர மூர்த்திக்கு வெள்ளை ஆடையும் வெள்ளை எள் கொண்டு தயாராகும் நல்லெண்ணெயுமே ப்ரீதி ஆகிறது. சனி தசையை தங்கள் ஜாதகப்படி கடைசி தசையாக கொண்டிருப்பவர்கள் இந்தச் சனி மூர்த்தியை வணங்கி வழிபடுவதால் பிறர் தயவில் வாழாமல் தானே தனித்து இயங்கும் ஆற்றலும் மன அமைதியும் உண்டாகும். குடும்பத்தினர் குறிப்பாக தங்கள் ஆண் குழந்தைகளுடன் கொண்ட மன வேற்றுமை தணிய இத்தகைய சூரிய சனி குடும்ப வழிபாடு பெரிதும் துணைபுரியும். வெண்தாமரை மலர்களால் ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கும் செந்தாமரை மலர்களால் ஸ்ரீசூரிய பகவானுக்கும் அலங்கரித்து வழிபடுதலால் தந்தை மகன் இவர்களிடையே உருவாகும் சொத்து தகராறு, குடும்ப பிரச்னைகள் சீர்பெறும்.


சில ஐந்தாமிட ஜாதகங்கள்
ஒருவருடைய ஜாதகத்தில் ஐந்தாமிடம் பூர்வ புண்ணியத்தை, முற்பிறவிகளில் ஈட்டிய புண்ணியத்தைக் குறிப்பதாகும். இவ்வாறு பெண்கள் ஜாதகத்தில் ஐந்தாமிடத்தில் சனி இருந்தால் அவர்களுக்கு திருமணப் பொருத்தம் பாரக்கும்போது அதில் பெற்றோர்களின் மனப் பொருத்தத்தைவிட மணப் பெண்ணின் பொருத்தத்தையே முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பது சித்தர்களின் எச்சரிக்கை. இவ்வாறு ஐந்தாமிடத்தில் சனீஸ்வரன் இருக்கப்பெற்ற பெண்கள் திருநல்லம் சனீஸ்வர மூர்த்தியை தரிசனம் செய்து தங்கள் வாழ்க்கை முடிவுகளை எடுத்தல் நலம் பயக்கும். இதற்கு நவாம்ச கூறுகளையும் கருத்தல் கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். இவ்விஷயத்தில் சரியான முடிவை எடுப்பதற்கு பஞ்ச கன்யா சுலோகத்தை ஓதிய ஸ்ரீகோடரி மாதேவியை தியானித்தலும் பெண்களுக்கு அமைந்த வரப்பிரசாதமாகும். இத்தகைய பெண்கள் ஸ்ரீகோடரி மாதேவியை தியானித்தல் நலம் பயக்கும். காலையில் எழுந்தவுடன் கணவன் மனைவியை நோக்கி சிரிக்க வேண்டும். அப்போது கணவனுடைய ஆறு பற்களாவது குறைந்த பட்சம் வெளியில் தெரிய வேண்டும் ஆனால் பெண்களோ, குறிப்பாக ஐந்தாமிடத்தில் சனி உள்ள பெண்கள் தாங்கள் அமைதியாக பற்களைக் காட்டாமல் மோனாலிசா சிரிப்பை உதிர்த்தலே உத்தமம் என்பது பெரியோர்களின் அறிவுரை. வீட்டில் அழுகை ஒலி கேட்டால் லட்சுமி கடாட்சம் இருக்காது. அதனால் பெண்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று பெரியோர்களால் வலியுறுத்தப்படுகிறது.
திருநல்லம் திருத்தலத்தில் ஸ்ரீசூரிய பகவான் அபூர்வமாக சுவாமிக்கு வலப்புறத்தில் குபேர திக்கில் எழுந்தருளி உள்ளார். தந்தைமார்கள் தங்கள் குழந்தைகளை உப்புமூட்டையாக தங்கள் முதுகில் ஏற்றிச் செல்வதுண்டு. மனிதனை வாகனமாக உடைய குபேர பகவான் இது குறித்து கூறும்போது இச்செயல் உன்னுடைய தந்தைதான் உனக்கு வழிகாட்டும் குரு என்பதைக் குறிக்கும் செயலாகிறது என்பார். இதற்கு நன்றி கூறும் முகமாக பௌர்ணமி தினங்களில் குறிப்பாக சித்ரா பௌர்ணமி அன்று தேங்காய் துருவல் கூடிய புட்டுதானம் சிறப்பாகும். புட்டின் மேல் வைத்த தேங்காய் துருவல் தந்தைமேல் தொற்றிக் கொண்ட குழந்தையைக் குறிப்பதாகும். சித்ர குப்தன் தவறு செய்ததே கிடையாது என்பர் பெரியர். எனவே சித்ர குப்தனுக்கு ப்ரீதியான இத்தகைய தான தர்மங்களினால் தங்கள் துறையில், குடும்பத்தில் தவறு செய்யாத நிலையை அடையலாம்.


ஸ்ரீகாத்யாயனி சிவபெருமான் திருமணக் கோலம், திருநல்லம்
திருஅதிகை வீரட்டானத்தில் மூன்று அசுரர்களை வென்று வெற்றிக் கொடி நாட்டிய சிவபெருமான் உற்சவ மூர்த்தியாக எழுந்தருளிய சிறப்பை உடையதே திருநல்லம் திருத்தலமாகும். தாமிரம், வெள்ளி, இரும்புக் கோட்டைகளுடன் இந்த மூன்று அசுரர்களை வெல்வதற்கு முன் காமத்தை வெல்ல வேண்டும். இத்தகைய தகுதி படைத்தவரே சிவபெருமானாக அமைவதால் அவர் திரிபுரசம்ஹார மூர்த்தியாக மூன்று அசுரர்களை வென்று காமராஜனாக காத்யாயனியான பார்வதியின் கரம் பிடித்தார். ஸ்ரீபார்வதி தேவி ஸ்ரீசிவபெருமானின் திருமணக் காட்சியும் முப்புரம் எரித்த ஸ்ரீதிரிபுரசம்ஹார மூர்த்தியின் சிலா உருவங்களும் சுயம்புமூர்த்தியான ஸ்ரீநடராஜப் பெருமானின் அருகிலேயே தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது பூலோக மக்களின் பெரும்பேறே. இந்த தரிசனங்களை எல்லாம் காண்பதற்காகவே ஸ்ரீஅகத்திய முனிவர் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார் என்று சித்த நாடிகள் தெரிவிக்கின்றன. அமுத நந்தியா தேவதைகளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய ஸ்ரீசிவபெருமானின் திருமணக் கோலத்தை தரிசிப்பதாலேயே எத்தனையோ திருமண தோஷங்கள் நிவர்த்தி பெறுகின்றன.


ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி திருநல்லம்
எத்தகைய குடும்ப பேதங்களையும் முறைப்படுத்தி தம்பதியரிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதே தம்பதி சமேதராக எழுந்தருளியுள்ள ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி தரிசனமாகும். ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி ஸ்ரீவைத்யநாத சுவாமிக்கு எதிரில் எழுந்தருளி இருப்பதால் தந்தையுடன் சேர்ந்து எத்தகைய உடல் மன நோய்களையும் விரட்டும் வல்லமை பெற்றவராகப் பொழிகிறார். செவ்வாய்க் கிழமை அன்றும் சஷ்டி திதிகளில் நிறைவேற்றும் வழிபாடு ஸ்ரீவைத்யநாத சுவாமிக்கும் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமிக்கும் உரிய வழிபாடாக அமைவது சிறப்பாகும். தேனில் ஊறிய அத்திப்பழங்களை இங்கு தானமளித்தல் சிறப்பாகும். மேலும் வாஸ்து தினங்களில் இத்தலத்தில் இயற்றும் வழிபாட்டால் சொந்த வீடு, வாடகை வீட்டில் சந்திக்கும் பிரச்னைகள் விலகும். வெகுநாட்களாக பணம் இருந்தும் சொந்த மனையோ வீடோ அமையாத குறைபாடு நீங்கும். திருமணக் கோலத்தில் திகழும் சிவபெருமானுக்கும் அம்பிகைக்கும் இடையே எழுந்தருளி இருப்பதால் ஸ்ரீசுப்ரமண்யர் செவ்வாய் தோஷம் போன்ற எத்தகைய திருமண தோஷங்களையும் களையும் வல்லமை படைத்தவராக விளங்குகிறார் என்பதை அவரவர் அனுபவம் மூலமாகவே உணர்ந்து கொள்ளலாம். செம்பால் அபிஷேகம் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமிக்கு உகந்தது. சுத்தமான பசும்பால் அபிஷேகம் ஸ்ரீவைத்தியநாத சுவாமிக்கு நிறைவேற்றி பலன்பெறலாம். பொதுவாக திருத்தலங்களில் சிவபிரானுக்கு பின்னால் எழுந்தருளும் ஸ்ரீமுருகப் பெருமான் இங்கு சிவபெருமானை தரிசிக்கும் வண்ணம் தன் தாய் நோக்கும் திசையை நோக்கி சிவபெருமானை நோக்கி எழுந்தருளி உள்ளதால் கணவன் மனைவி பிரச்னைகளைக் களைவது மட்டுமல்லாமல் தந்தை, மகன் உறவில் ஏற்படும் சொத்து தகராறு போன்ற குடும்ப பிரச்னைகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கிறது இத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாடு.


ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் திருநல்லம்
சிவபெருமான் முன்னால் அமைந்துள்ள நான்கு வேத தூண்கள், ஸ்ரீவைத்யநாத சுவாமி ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி எதிரெதிரே எழுந்தருள்தல், வியாதி நயம் பெறும் மேற்கு திசை நோக்கி ஸ்ரீவைத்யநாத சுவாமி எழுந்தருள்தல் போன்ற பல ஆரோக்கிய அம்சங்களுடன் திகழும் தலமே திருநல்லம் திருத்தலமாகும். இந்த அனைத்து மூர்த்திகளின் தரிசனத்துடன் ஸ்ரீஅகத்தியரின் தரிசனத்தை ஆண்கள் புதன் சனிக் கிழமை பெறுவதாலும் பெண்கள் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பெறுவதாலும் ஆரோக்கியம் பூர்ணமாக அவர்களுக்குக் கிட்டுகிறது. இத்தகைய தரிசனங்களை ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் போன்ற மாமன்னர்கள் அடிக்கடி பெற்று வந்ததால்தான் அவர்கள் ஆரோக்கியமாகத் திகழ்ந்தார்கள் என்பதே வரலாறு சுட்டிக் காட்டும் உண்மையாகும். குறிப்பாக எண்ணெய் குளியலுக்குப் பின் திருநல்லம் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுவதால் ஆரோக்கியம் பெருகும் என்பது உண்மை. அதனால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற ஆரோக்கிய வழிகாட்டியை அக்காலத்துப் பெரியோர்கள் நமக்கு வைத்துள்ளார்கள். நல்லெண்ணெய் குளியலுக்குப் பின் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபமிட்டு அத்தீபம் எரியும்போது திருநல்லம் போன்ற திருத்தலங்களை வலம் வருவதால் எத்தகைய கண் நோய்களும் அண்டாது என்பது உண்மையே. சிறுவயது முதல் இத்தகைய நல்ல பழக்கங்களை கைக்கொண்டு வந்தால் வயதானால் கூட கண்ணாடி போடும் நிலை வராது என்பதை சித்தர்கள் உறுதிபட உரைக்கின்றார்கள்.


அபூர்வமாக வடக்கு நோக்கி அருள்புரியும் ஸ்ரீகுபேர கணபதி ஆறாவது கணபதி மூர்த்தியாக இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். ஸ்ரீஅகஸ்திய லிங்கத்தை நோக்கி அருள்புரியும் இவரை வணங்கி ஸ்ரீஅகத்தியர் குபேர சக்திகளை நிரவி உள்ளார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும். பொதுவாக ஐந்து கணபதி மூர்த்திகளின் வழிபாடு பஞ்ச பூத சக்திகளை நல்கும் என்றாலும் திருநல்லம் திருத்தலத்தில் அபூர்வமாக ஆறு கணபதி மூர்த்திகள் எழுந்தருளி உள்ளதால் பஞ்ச பூத சக்திகளுடன் குபேர சக்தியையும் வர்ஷிக்கும் ஸ்ரீகணபதி மூர்த்தியாக இந்த குபேர கணபதி எழுந்தருளி உள்ளார்.வெள்ளிக் கிழமைகளில் இந்த ஆறு கணபதி மூர்த்திகளையும் தரிசனம் செய்து பூரண கொழுக்கட்டைகளை தானமாக அளித்தலால் வறுமை நிலையில் உள்ளோர் நன்னிலை அடைவர். விவசாயத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வயல்களில் பூச்சிகள் அரிக்காமல் பாதுகாக்கவும் இவ்வாறு வெள்ளிக்கிழமைகளில் இயற்றும் வழிபாடு துணையாக நிற்கும். தற்காலத்தில் வயலுக்கு பூச்சி மருந்து, களைக் கொல்லி போன்ற இரசாயன மருந்துகளைப் பயன்படுத்துவதால் பயிர்கள் நாசமடைவதுடன் வயல்வரப்புகளும் நீர் நிலைகளும் பாதிப்படைகின்றன என்பது உண்மையே. இதற்கு காப்பாக அமைவதே ஸ்ரீகுபேர கணபதி மூர்த்தி வழிபாடாகும். பஞ்ச கவ்ய வழிபாடும் விவசாயிகளுக்கு உதவி செய்யும் பூச்சி கொல்லி வழிபாடாகும். இங்கு பூச்சிகள் கொல்லப்படுகின்றன என்பதை விட அவற்றை அடுத்த உயர்நிலைக்கு இட்டுச் செல்வதே இத்தகைய வழிபாடாகும். இதுவே ஆறறிவு உடையவன் மனிதன் என்று பறைசாற்றிக் கொள்வதன் அர்த்தமுமாகும்.


ஸ்ரீகணேச மூர்த்தி திருநல்லம்
திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீசெவ்வந்தி விநாயகர், மலையடிப்பட்டி ஸ்ரீகணபதி மூர்த்தி போன்ற மூர்த்திகள் மிகவும் தொன்மையான கணபதி மூர்த்திகள் ஆதலால் இவர்கள் மூலவருக்கு இடப்புறம் ஸ்ரீமுருகப் பெருமான் எழுந்தருளும் இடத்தில் எழுந்தருளி உள்ளார்கள். அதனால் இத்தொன்மையான மூர்த்திகளைத் தரிசிக்கும்போது இவர்கள் பொதுவாக ஸ்ரீமுருகப் பெருமானின் தரிசன அனுகிரகத்தையும் சேர்ந்தே நல்கும் இயல்புடைய மூர்த்திகளாகத் துலங்குகிறார்கள். அதுபோல திருநல்லம் ஸ்ரீகணேச மூர்த்தியும் சுவாமிக்கு இடப்புறத்தில் தனித்து எழுந்தருளி உள்ளார். இத்தகைய தொன்மையான மூர்த்திகளின் தரிசனப் பலன்கள் வெவ்வேறானவை என்பதில் ஐயமில்லை. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைச் செல்வங்களுடன் திகழ்வதே சிறப்பு என்றாலும் ஒரே ஒரு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையுடன் திகழ்பவர்கள் வணங்கி வழிபட வேண்டிய மூர்த்தியே திருநல்லம் ஈசன் இடப் புறத்தில் திகழும் ஸ்ரீகணேச மூர்த்தி ஆவார்.


தலவிருட்சம் அரசமரம் திருநல்லம்
பஞ்ச வில்வங்கள் என்பதில் இரண்டு பஞ்ச வில்வங்களான அரசு, 13 இதழ் கொண்ட வில்வத்தை உடைய திருநல்லம் திருத்தலத்தில் அமைவது சிறப்பாகும். உரிய அனுதியுடன் இந்த மகா வில்வ இதழ்களை மூலவருக்கு சாற்றி வழிபடுவதால் நிரந்தர லட்சுமி கடாட்சம் கிட்டும் என்பதில் ஐயலமில்லை. (13=1+3) 4 என்பது நிரந்தர சக்திகளைக் குறிப்பதால் நான்கு வேத தூண்களுடன் பொலியும் ஸ்ரீபூமிநாதருக்கு 13 இதழ் வில்வ தளங்களை சார்த்தி வழிபடுவது அற்புத பலன்களை அளிக்கும். ஸ்திர வாரமான வியாழக் கிழமைகளிலும் வாஸ்து தினங்களிலும் நிறைவேற்றப்படும் இத்தகைய வழிபாடுகள் சிறப்பான பலன்களை நல்குகின்றன. தாமே அரைத்த மஞ்சளை அரச மரத்திற்கு பூசி அரச மரத்தை அடிப் பிரதட்சணமாக வலம் வந்து பிரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவதால் பிரம்ம தீர்த்த கரையில் அமைந்த இந்த அரசமர வழிபாடு எத்தகைய வேண்டுதல்களையும் நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடாக மலர்கிறது. தற்போது உள்ளது போல் இங்குள்ள பிரம்ம தீர்த்தம் நிரம்பிய நிலையில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் என்பது கிடைத்தற்கரிய பேறாகும். பொதுவாக திருமணமாகி நீண்ட நாட்கள் குழந்தைப் பேறு இல்லாமல் தவிப்பவர்கள் இத்தகைய வழிபாடுகளால் அற்புத பலன்கன் பெறுவார்கள். ஆண் பெண் இருபாலருக்கான எத்தகைய மலட்டுத் தன்மையையும் நீக்கக் கூடியதே இத்தகைய வழிபாடாகும்.


பிரம்ம தீர்த்தம் திருநல்லம்
பிரம்மம் என்பது யானை முதல் ஈ வரை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறை சக்தியாகும். எனவே இங்கு நீங்கள் காண்பது போல் நீர் நிறைந்திருக்கும் திருக்குளமானது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிரம்மத்தை குறிப்பதால் இவ்வாறு நீர் நிறைந்திருக்கும் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அரச மரத்தை வலம் வருவது அற்புத வழிபாடாக அமைவதால் இது எத்தகைய மலட்டுத் தன்மையையும் தரித்திர நிலையையும் மாற்றக் கூடிய தன்மை உடையது. நள சக்கரவர்த்தியும் தமயந்தியுமே இந்த பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இங்குள்ள அரச மரத்தை வலம் வந்து நற்கதி அடைந்தார்கள் என்றால் இந்த தீர்த்தத்தின் மகிமையைப் பற்றியும் இந்த அரச மரத்தின் மேன்மையைப் பற்றி கூறவும் வேண்டுமோ ? செல்வம் இல்லாதது ஒரு குறைபாடாக திகழ்வது போல குழந்தையின்மையும் ஒரு குறைபாடாக அமைவதால் இந்த இரண்டு குறைபாடுகளையும் ஒரு சேர நீக்கவல்ல வழிபாடே பிரம்ம தீர்த்தத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீராடி அரச மரத்தை வலம் வரும் வழிபாடாகும். அரச மரத்தை வலம் வந்த பின் குங்குமப்பூ கலந்த சூடான சர்க்கரைப் பொங்கல் தானமாக அளிப்பது சிறப்பாகும்.


ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருநல்லம்
வாஸ்து நாட்களிலும் செவ்வாய், புதன், வியாழக் கிழமைகளில் பூமாதேவி அருளிச் செய்த கீழ்க்கண்ட துதியைப் பாராயணம் செய்வதால் பூமியில் விளங்கும் வாஸ்து தோஷங்கள் மறைவதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து இத்துதியை வியாழக்கிழமைகளில் இத்தல ஸ்ரீஅகத்தியர் முன்னரோ ஸ்ரீதட்சிணா மூர்த்தி முன்னரோ அமர்ந்து ஓதி வருதலால் தக்க சற்குரு அமையப் பெறுவர். சற்குரு வாய்க்கப் பெற்றவர்கள் தங்கள் சற்குருவின் மேல் உள்ள நம்பிக்கை ஆழமாக வேரூன்றி வளர இத்தகைய வழிபாடு அவர்களுக்கு உதவி செய்யும்.

சிவ துஷ்டிஹர ஸ்தோத்ரம்
த்யான ஸ்லோகம்
மரகதமணி தேஜா மானவீ லோக பூஜ்யா
ஸகல புவன ரக்ஷாகாரிணீ சாந்த மூர்த்தி
ஸ்தவமிதம் அயி சம்போரக்ரத: கீர்த்ய பஸ்சாத்
முனிவர ஜனஸங்கை: துஷ்டிம் இஷ்டாம வாப
நமோ நமஸ்தே ஜகதீஸ்வராய சிவாய லோகஸ்ய ஹிதாய சம்பவே
அபார ஸம்ஸார ஸமுத்தராய நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
விஸ்வாதிகாய அதிவிமானகாய ஸோமாய ஸோமார்த்த விபீஷணாய
ஸ்ரீகாளகண்டாய க்ருபாகராய நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
ஆஸாம்பராய அம்பர வர்ஜிதாய திகம்பராய அம்பிகாய யுதாய
குணத்ரயாத்யை: அபவர்ஜிதாய நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
மாயாவிகாராதி விவர்ஜிதாய மாயாதி ரூடாய தபஸ்திதாய
கலாதிரூடாய கபர்தினேச நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய
கபாலினே காமவிவர்ஜிதாய கதம்ப மாலா கலிதாய பூம்னே
நிரஞ்சனாயாமித தேஜஸே ச நமோ நமஸ்தே ப்ருதிவீஸ்வராய


ஸ்ரீபைரவ மூர்த்தி திருநல்லம்
ஈசான்ய மூலையில் எழுந்தருளி அக்னி அம்சத்துடன் துலங்கும் இத்தகைய பைரவ மூர்த்திகள் எத்தகைய தீய எண்ணங்களையும் களைந்து மனிதர்களை புடம் போட்ட தங்கமாய்ப் பிரகாசிக்கச் செய்கிறார்கள். தற்காலத்தில் டீவி, சினிமா, இண்டர்நெட் போன்றவைகளை அடிக்கடி காண வேண்டிய சூழ்நிலைகளில் இருப்பதால் என்னதான் ஒருவருடைய மனம் தூய்மையாக இருந்தாலும் பிறர்மனை நோக்குதல் போன்ற காமத் தவறுகளுக்கு ஆட்படுகிறது அல்லவா ? திருநல்லம் திருத்தலத்தில் எழுந்தருளிய பைரவ மூர்த்திகள் மக்களின் இத்தகைய குறைபாடுகளைக் களையும் அற்புத மூர்த்திகளாகப் பிரகாசிக்கிறார்கள். அதனால்தான் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் அன்பர்கள் கடைசியாகத் துலங்கும் ஈசான்ய லிங்க மூர்த்தியை தரிசனம் செய்த பின் அருணகிரியைத் தரிசனம் செய்தலால் தங்களையும் அறியாமல் காம உணர்வுகள் நீங்கப் பெற்ற தூய்மையான மனதுடன் திருஅருணகிரியை தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். எனவே ஒரு முறை திருஅண்ணாமலையை முறையாக கிரிவலம் வருதலால் கிட்டும் பலன்கள் கோடி, கோடி. தங்கள் மனதை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள விரும்பும் இறையடியார்கள் பரிசுத்தமான மூலையில் துலங்கும் இந்த பைரவ மூர்த்தியை தரிசனம் செய்து இத்தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த பைரவ மூர்த்தியின் உருவத்தைக் கண்ணெதிரில் கொண்டு தியானம் புரிதலால் எத்தகைய முறையற்ற காம எண்ணங்களும் சீர்பெறும் என்பது உண்மையே. ஈசான்ய மூலையில் எழுந்தருளியிருக்கும் பைரவ மூர்த்திகளுக்கே மனதைத் தூய்மைப்படுத்தும் சக்தி உண்டு. மனத் தூய்மை பெற்றவர்களுக்கே காலத்தைக் கடக்கும் சக்தி கிட்டுகிறது. கால தேசத்தைக் கடக்கும் சக்தி அளிப்பவரே பைரவ மூர்த்தி ஆவார். பைரவர் மேல் படியும் இத்தகைய வடிவ நிழல்களுக்கும் காரணங்கள் உண்டு. ஆழ்ந்து சிந்திப்பீர்களாக !


நவகிரக மூர்த்திகள் திருநல்லம்
திருநல்லம் திருத்தலத்தில் சுவாமிக்கு வலப்புறம் சூரிய பகவான் சனீஸ்வர மூர்த்தியோடு எழுந்தருளி உள்ளார். நவகிரக மூர்த்தியாக சூரிய பகவான் அனைத்து கிரகங்களின் நடுநாயகராக வீற்றிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மாலையில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி மேற்கு நோக்கி எழுந்தருளிய ஸ்ரீபூமிநாதரை தொழுது அன்றைய திருப்பணியை நிறைவேற்றுகிறார். எனவே மாலையில் சூரியன் மறையும் நேரத்தில் இந்த மூன்று சூரிய மூர்த்திகளையும் முறையாக வணங்கி வழிபடுவதால் தங்கள் பணியில் எந்தவித குறைபாடுகளும் நிகழாமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த சூரிய மூர்த்திகள் வெவ்வேறு அனுகிரக சக்திகளை அளிக்கவல்லவர்கள் என்பது நீங்கள் அறிந்ததே. காவல் துறை, நீதித்துறை, பொதுப் பணித்துறை போன்ற பொது காரியங்களில் ஈடுபட்டவர்கள் என்னதான் கவனமாக இருந்தாலும் தங்கள் தொழிலில் ஏற்படும் தவறுகளைக் களைய இத்தகைய வழிபாடு அவர்களுக்கு துணை புரியும். மேலும் இத்தகைய வழிபாட்டால் வயதான காலத்தில் கூட கண் கண்ணாடி அணியாது நல்ல முறையில் பணியாற்ற இந்த வழிபாடு உறுதுணை புரியும். கோதுமை சப்பாத்தியுடன் பச்சை பட்டாணி உருளைக் கிழங்கு குருமா தானம் மிகச் சிறந்த பலன்களை வர்ஷிக்கும். சூரியன் மறையும் வேளையில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இத்தகைய சூரிய வழிபாடுகளை நிறைவேற்றுவதும் சிறப்புடையதே.ஸ்ரீமகா கணபதி திருநல்லம்
திருநல்லம் கோயில் ஈசனின் இடப் பக்கத்தில் இறைவனைப் பார்த்து கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் மூர்த்தியே ஸ்ரீமகா கணபதி ஆவார். நைதிருதி திக்கில் அமர்ந்திருப்பதால் இவரை ஓம்கார கணபதி மூர்த்தி என்று அழைப்பதும் உண்டு. திருச்சி மலைக்கோட்டை, லால்குடி போன்ற தலங்களில் இவ்வாறு எழுந்தருளியுள்ள ஸ்ரீசெவ்வந்தி விநாயகர் போன்ற மூர்த்திகள் இறை நம்பிக்கையை வளர்க்கும் மூர்த்திகள் ஆதலால் இவரை வணங்கியே கோயில் வழிபாட்டை ஆரம்பிக்க வேண்டும் என்பது நியதி ஆகும். மேலும் எந்த காரியத்தை ஆரம்பிப்பதாக இருந்தாலும் கிழக்கு திசையே ஆரம்ப திசையாக இருப்பதால் கிழக்கு திசையை நோக்கி எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமகா கணபதி தரிசனத்துடன் திருநல்லம் சிவத்தலத்தில் வழிபாட்டைத் துவக்க வேண்டும் என்று பெரியோர்கள் வைத்துள்ளனர். எனவே திருநல்லம் ஈசனை நேரடியாக சென்று தரிசிப்பதை விட இந்த ஓம்கார கணபதி மூர்த்தியை முதலில் தரிசனம் செய்து தரிசனத்தின் இறுதி கட்டமாக தரிசனப் பலன் அனைத்தையும் ஸ்ரீபூமிநாதரிடம் அர்ப்பணிப்பதே சரியான திருநல்ல ஆலய தரிசன முறை என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.


திரு ஸ்ரீமதி அம்மன் லால்குடி
திருத்தவத்துறையான லால்குடியில் உழவாரத் திருப்பணி நிறைவேற்றியபோது சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் இவ்வாறு நைதிருதி திக்கில் எழுந்தருளிய ஓம்கார கணபதி மூர்த்தியை வணங்கியே உழவாரத் திருப்பணியை ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டுமல்லாமல் அன்றைய தினம் பிரதோஷ தினமாக அமைந்ததால் பல அடியார்களுடன் திருத்தவத்துறை ஈசனை தோளில் சுமந்து சிவபெருமானுக்கு பலவித ஆடல் பாடல்களால் திருநடனமிட்டு சற்குரு அவர்கள் ஈசனையும் ஈசன் அடியார்களையும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள். இதற்கு பெருந்துணை புரிந்ததும் ஸ்ரீநைதிருதி கணபதியின் ஆசியாகும் என்பதே உண்மை. தன்னை ஆடல் பாடலால் மகிழ்வித்த சற்குரு ஸ்ரீவெங்கடராமனை சும்மா விடுவானா ஈசன் ? அன்று மாலை சற்குரு அவர்கள் தம்பதி சமேதராய் ஒரு அடியார் இல்லத்தில் எழுந்தருளி அங்கு நடந்த ஊஞ்சல் சேவையில் பங்கேற்று அனைவருக்கும் சற்குருவாய், தட்சிணா மூர்த்தியாய் அருளாசி வழங்கினார்கள். அந்த சிறப்பான ஆசீர்வாதத்தைப் பெற்ற பல அடியார்கள் இன்றும் நம்மிடையே உண்டு. ஊஞ்சல் சேவைக்குப் பின்னர் சற்குருவிற்கு அளித்த விருந்தில் ஒன்றுக்கு இரண்டு முழு மாம்பழங்கள் பரிமாறப்பட்டன. ஆனால் சற்குரு அவர்கள் அந்த ஞானக் கனிகளை தான் உண்ணாமல் வைத்திருந்தார் என்பதை மட்டும் அடியார்கள் அறிவர். ஞானிக்கு எதற்கு ஞானக் கனி ? அந்த ஞானக் கனிகள் எவருக்கு அளிக்கப்பட்டன என்பதை அந்த திருத்தவத்துறையானே அறிவான். அந்த இரண்டு மாம்பழங்களில் ஒன்றை சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம்முடைய சட்டை பாக்கெட்டில் வைத்திருந்தார்கள். அந்த இதயக் கனி பெற்ற இதயக் கனி யாரோ ? ஆமாம், முதலில் தரிசனம் செய்ய வேண்டிய ஸ்ரீஓம்கார கணபதி மூர்த்தியைப் பற்றி இறுதியில் விவரிப்பானேன் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ?
இந்த ஆத்ம விசார வினாவை எழுப்புவதும் அந்த வினாவிற்கு விடையளிப்பதும் ஸ்ரீஓம்கார மூர்த்தியின் திருவருள்தானே !?

 

திருத்தல யாத்திரை தொடரும்

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam