யோகத்தில் அடங்குவது திசை ! மௌனத்தில் லயமாவது ஓசை !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்சென்னை பார்த்தசாரதி ஆலயம்

புராதன சிறப்பு பெற்ற திருத்தலங்களுள் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருத்தலமும் ஒன்றாகும். ஸ்ரீராமபிரானின் அவதாரத்திற்கு முன் தோன்றியவரே மதுமான் மகரிஷி ஆவார். மதுமான் மகரிஷிக்கு தம்பதி சமேதராய் சீதா பிராட்டியுடன் பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஒரு சேர தரிசனம் அளித்த அற்புத திருத்தலம் இது. இத்தலத்தில் ராம பிரான் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தெய்வங்கள், அவதாரங்களின் படத்தை வைத்துப் பூஜிக்கும் முறையை விவரிக்கும்போது ராமரின் படத்தை மட்டும் தெற்கு திசை நோக்குமாறு வைக்கக் கூடாது என்றும் வாஸ்து மூர்த்தியின் படத்தை கண்டிப்பாக கிழக்கு அல்லது வடக்கு திசையில்தாடன் வைக்க வேண்டும் என்றெல்லாம் தெளிவுபடுத்தி உள்ளார்கள். காரணம் ராமபிரானின் உயிரான சீதையை ராவணன் கவர்ந்து சென்றதால் ராம பிரானை தெற்கு நோக்கி எழுந்தருளச் செய்யும்போது அவர் தெற்கு திசையான இலங்கையில் சீதை அடைந்த வேதனைகளை நினைவுகூர வேண்டி வருவதால் இராம பிரான் தெற்கு திசையை நோக்க விரும்பவில்லை. ஆனால், ஸ்ரீரங்கம் போன்ற திருத்தலங்களில் ராமபிரான் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார் என்பது நாம் அறிந்ததே.ஸ்ரீரங்கம் ராஜகோபுரம்
இறைமூர்த்திகளின் செய்கைகளில் ஆயிரமாயிரம் காரணம் இருக்கும். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தை நிர்மாணித்தபோது நமது சபையைச் சேர்ந்த பலரும் தங்கள் நகை, உடைமைகளை விற்றுக் கூட திருப்பணிக்காக அளித்தார்கள். இது குறித்து நமது சற்குருவிடம் ஒரு அடியார், “வாத்யாரே, ஸ்ரீரங்க ராஜ கோபுரம் கட்டினால் இலங்கை அழிந்து விடும் என்கிறார்களே. அது உண்மையா ?” என்று கேட்டார். சற்குரு, “அது உண்மைதான் என்று சாஸ்திரத்திலும் உள்ளது,” என்று பதிலளித்தார். அதைக் கேட்ட அடியார், “வாத்யாரே, ஒரு நாடு அழிந்து விடும் என்று சொல்லும்போது அந்த காரியத்தை நாம் செய்வது சரியா ?” என்று கேட்கவே, ஸ்ரீவாத்யார்,“இங்க பாருய்யா, சாமிக்கு ஒருத்தன் கோபுரம் கட்டுகிறான் என்றால் அதற்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது நம் கடமை. அதனால் உலகமே அழிந்து விடும் என்றாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. அது இறைவனின் பொறுப்பு. வீணாக மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ரங்கநாதர் தெற்கு நோக்கிய பார்வையுடன் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி உள்ளதால் ராஜகோபுரம் அமைக்கும்போது தெற்கில் உள்ள இலங்கை அவருடைய பார்வை தீட்சண்யம் பெறாது. அதனால் இலங்கை அழியும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது உண்மையே. அடியேனுக்கும் உனக்குமே இந்த சாஸ்திரம் தெரியும்போது ரெங்கநாதருக்குத் தெரியாதா ? ராஜ கோபுரம் இல்லாமல் பல காலம் ரெங்கநாதர் இருந்தார். அது அவர் விருப்பம். இன்று ராஜகோபுரம் வானளவ எழுகிறது. இதுவும் அவர் விருப்பமே என்று தெளிந்தால்தான் தெய்வீகம் புரியும்,” என்று தன் உரையை நிறைவு செய்தார் சற்குரு.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் நிறைவு பெற்றபின் இலங்கையின் பெரும்பகுதி உள்நாட்டு கலவரத்தால் அழிந்தது நாம் அறிந்ததே. ஆனால், இலங்கையை ஆண்ட ராவணன் எவ்வளவு தவறு செய்திருந்தாலும் அங்கிருந்த மண்டோதரி, விபீஷணன், கும்பகர்ணன், திரிசடை போன்ற பலரும் உத்தமர்களாகத்தானே இருந்தார்கள். அவர்களின் கதி என்னாவது ? எனவே அத்தகைய நல்லவர்களைக் காக்கவே ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமர் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். எனவே ஒருவர் எத்தகைய கொடுமையான சூழ்நிலையில் இருந்தாலும் அவர் இறைவனை நம்பினால் உலகமே அழிந்தாலும் அவர் பாதுகாப்புடன் திகழ்வார் என்பதற்கு ஸ்ரீரங்க ராஜகோபுரமும் தெற்கு நோக்கிய ராமர் திருக்கோலமும் நமக்கு எடுத்துக் காட்டாக அமைகின்றது.

அதுபோல தெற்கு நோக்கிய பார்த்தசாரதி ஆலய இராம பிரானுக்கும் ஒரு சரித்திரம் நிச்சயம் இருக்கும் அல்லவா ? மதுமான் மகரிஷி என்பவர் ராம அவதாரத்திற்கு முன்னரே சாயாவனம் திருத்தலத்தில் அவதாரம் பெற்று திருஅண்ணாமலையை யுக கணக்கில் கிரிவலம் வந்து வழிபாடுகள் நிறைவேற்றியவர். அவர் ராமருக்கு மூத்தவர் என்பதால் ராமபிரான் அவரைத் தன்னுடைய தந்தையாக பாவித்து குடும்ப சகிதமாக தன்னுடைய தரிசனத்தை அளித்தார். ஸ்ரீராமர் மதுமான் மகரிஷிக்கு தரிசனம் அளித்தார் என்பதை விட மகரிஷியை குடும்ப சகிதமாக வணங்கி வழிபட்டார் என்று சொல்வதே சரியாகும். ராமபிரானின் பணிவுக்கு இது மற்றோர் சான்றாகும்.
ராம அவதாரத்தை நாம் அழ்ந்து நோக்கினால் ராம பிரான் தன்னைச் சக்கரவர்த்தி என்று பிரகடனப்படுத்தியதை விட தன்னை ஒரு சாதாரண மனிதனாக காட்டி சேவை செய்த நிகழ்ச்சிகளே ஏராளம். தான் ஒரு சாதாரண மனிதன் என்று காட்டுவதில்தான் அவர் பேரானந்தம் கொண்டார். ஒரு சாதாரண நிலையில் உள்ள மனிதன் தன் மனைவி துன்பம் அனுபவித்த திசையை நோக்க விரும்பமாட்டான் என்பதற்காகத்தான் ராமரை நாம் சாதாரண மனிதனாகப் பாவித்து அவரை தெற்கு தவிர மற்ற திசைகளில் எழுந்தருளச் செய்கிறோம். இதை தெளிவுபடுத்தவே ராம பிரான் மதுமான் மகரிஷிக்கு தெற்கு நோக்கிய கோலத்தில் தரிசனம் அளித்தார். மேலும் ஸ்ரீராமர், சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்னன் தரிசனம் என்பது பஞ்ச பூத தரிசனத்திற்கு இணையானது ஆகும். பஞ்ச பூதங்களின் கூட்டுதானே மனித உடல் ? எனவே பஞ்ச பூதத்திலான இந்த மனித உடலை விடுத்து உயர் நிலைக்கு செல்ல உதவி செய்யக் கூடியதே பித்ருக்களின் தரிசனம். பித்ருக்கள் தெற்கு திசையில்தானே குடிகொண்டிருக்கிறார்கள். எனவே தெற்கு நோக்கிய ராம தரிசனம் என்பது நமது பித்ரு மூர்த்திகள், பித்ரு பத்னிகள் அனைவரின் ஒட்டு மொத்த தரிசனம் ஆகும். இந்த தரிசனத்தை மக்களுக்கு பெற்றுத் தர வேண்டும் என்ற உயரிய நோக்கில் அமைந்ததுதான் மதுமான் மகரிஷியின் தவமும்.

இதுவரை தங்கள் மூதாதையர்களுக்கு எந்த வித படையல், திவசங்கள், தர்ப்பணங்கள் நிறைவேற்றாதவர்கள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆலயத்தில் எழுந்தருளிய ஸ்ரீராமபிரானை தரிசனம் செய்து மதுமான் மகரிஷி தோன்றிய சாயாவனம் திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றுவதால் இதுவரை மூதாதையர்களுக்கு வழிபாடுகள் இயற்றாத தவறிலிருந்து ஓரளவு விமோசனத்தைப் பெறலாம்.

மங்கை கண்ணும் மாய கண்ணே மதுமான் கண்ணே மாசறு கண்ணே
மங்கை பங்கன் மாசறு மணாளா இங்கு தங்கி எம்குறை தீர்ப்பீர்

என்ற மதுமான் மகரிஷி துதியை ஓதி ஸ்ரீராமரை வலம் வந்து வணங்குவதும் சாயாவன திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றுவதும் அற்புத பலன்களை அளிக்கும் சிறப்பான வழிபாடாகும். சற்குருவின் வழிகாட்டுதலைப் பெறாதவர்கள் மேற்கண்ட மதுமான் துதியை ஓதியவாறே பார்த்தசாரதி ஆலய ராமபிரானை ஞாயிறு, வியாழக் கிழமைகளில் வலம் வந்து வணங்குவதால் சூரிய பகவானே அவர்களுக்கு சற்குருவை காட்டி அருள்வார். சற்குருவைப்பெற்ற பலரும் சற்குருவின் பெருமையை உணர்வது கிடையாது. “நான் பல வருடங்களாக சற்குரு காட்டிய வழியில்தான் செல்கின்றேன். ஆனால், எந்த முன்னேற்றத்தையும் கண் கூடாகக் காண முடியவில்லை,” என்று கூறுபவர்கள் ஆயிரக் கணக்கில் உண்டு. ஏன் சற்குருவைப் பெற்ற லட்சக் கணக்கான அடியார்கள் கூட சற்குரு பெற்றும் சரியான முன்னேற்றத்தைக் காண்பது கிடையாது. இதற்குக் காரணம் அவர்கள் சற்குருவின் உபதேசத்தை ஏனோதானோவென்று புரிந்து கொள்வதுதான். இது சீடர்களின் தவறே தவிர சற்குருவின் இயலாமை கிடையாது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சற்குருவின் ஒரே ஒரு உபதேசத்தை, மீண்டும் கவனிக்கவும், சற்குருவின் ஒரே ஒரு உபதேசத்தை முழுமையாக, தெளிவாக, சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்து கொண்டால்போதும் அனைத்தையும் சாதித்து விடலாம். இதற்கு உதவுவதும் மேற்கூறிய ராமபிரான் வழிபாடாகும்.ஸ்ரீகாமதகனேஸ்வரர் திருக்கொறுக்கை வீரட்டானம்

திருமணம் என்பது காமத்தின் முறையான வடிகால் என்று பலரும் நினைத்தாலும் உண்மையில் காமத்தை வென்றவர்களே திருமண வாழ்க்கைக்கு தகுதி உடையவர்கள் ஆகிறார்கள் என்னும் உண்மைக்கு நிரூபணமாக இருப்பதே திருக்குறுக்கை வீரட்டானத் திருத்தலமாகும். நடைமுறையில் திருமணம் என்பது முறையான காமக் கோரிக்கைகளுக்கு வடிகாலாக இருப்பதால் தற்காலத்தில் திருமணமான தம்பதிகள் முதலில் தங்கள் காமத்தை முறைப்படுத்தும் மார்கமாக திருக்கொறுக்கை போன்ற திருத்தலங்களை தரிசனம் செய்ய வேண்டும் என்று பெரியோர்களால் விதிக்கப்பட்டுள்ளது. உண்மையில் திருமணமான தம்பதிகள் முதலில் தரிசனம் செய்ய வேண்டியது ஸ்ரீகாசி விஸ்வநாதரைத்தான். அது முடியாதபோது குறைந்தபட்சம் உள்ளுரில் உள்ள காசி விஸ்வநாதரையாவது புது மணத் தம்பதிகள் தரிசனம் செய்ய வேண்டும் என்பதால் பல திருத்தலங்களிலும் காசி விஸ்வநாதர் விசாலாட்சி மூர்த்திகள் எழுந்தருளி உள்ளார்கள். காமத்தை வென்றவர்களே இறை நெறியில் நிலைத்து நிற்க முடியும் என்பது மட்டுமல்லாமல் அவ்வாறு காமத்தை வென்றவர்களுடைய சந்ததிகளே இறை நெறியில் சிறந்து விளங்க முடியும் என்பது உண்மையே. இதை நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருந்தமையால்தான் திருமணத்திற்குப் பின் புது மணத்தம்பதிகள் முதலில் காசி விஸ்வநாதரை வழிபடும் முறையை வைத்தார்கள்.சதுர்புஜ முருகன் திருக்கொறுக்கை

காசியில் ஸ்ரீவிஸ்வநாதரை வழிபடுவதற்கு முன்னால் வருண் முதல் அஸ்ஸி வரையிலான 64 தீர்த்த கட்டங்களையும் வழிபட வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. வருண் அஸ்ஸி சேர்ந்ததே வாரணாசி என்னும் காசி திருத்தலமாகும். இதனால் காமத்தை தகனம் செய்த திருக்கொறுக்கை ஸ்ரீகாமதகன ஈசுனின் திருவருளால் காமத்தை தகனம் செய்து காசி ஸ்ரீவிஸ்வநாதரை தரிசனம் செய்யும் தகுதியைப் பக்தர்கள் பெறுகிறார்கள். இம்முறையில் காசி சென்று ஸ்ரீவிஸ்வநாதரை வழிபட முடியாதவர்கள் திருக்கொறுக்கையில் சூல தீர்த்தத்தில் நீராடி குளக்கரையில் ஓங்கார தியானம் கூட்டி ஸ்ரீசதுர்புஜ முருகனையும் ஸ்ரீகாம தகன ஈசனையும் வழிபடுதலால் காசியில் ஸ்ரீவிஸ்வநாதரையும் ஸ்ரீவிசாலாட்சி அம்மனையும் வழிபட்ட பலனை ஓரளவு பெற முடியும். அபூர்வமாக திருக்குறுக்கையில் ஸ்ரீமுருகப் பெருமான் நான்கு கரங்களுடன் எழுந்தருளி உள்ளார். பிரணவத்திற்கு பொருள் தெரியாத பிரம்மாவை சிறையில் அடைத்த பின்னர் பிரம்மா ஏற்று நடத்திய படைப்புத் தொழில் பாதியில் நின்று விட்டதல்லவா ? எம்பெருமான் ஈசனின் உத்தரவின்பேரில் ஸ்ரீமுருகப் பெருமானே பிரம்மாவின் படைப்புத் தொழிலை ஏற்று பிரம்மா தன்னுடைய படைப்புத் தொழிலை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் வரை செவ்வனே நடத்தி வந்தார். திருக்கொறுக்கை ஈசனின் திருவருளால் பிரம்மா தன்னுடைய படைப்புத் தொழிலை மீண்டும் பெற்றார் என்பது நீங்கள் அறிந்ததே. இன்றும் பிரணவத்தின் பொருளை அறிந்து கொள்ள விரும்பும் இறையடியார்கள் சூல தீர்த்தத்தில் நீராடி திருக்குளப் படிக்கட்டுகளில் அமர்ந்து நான்கு கர முருகப் பெருமானை வேண்டி பிரணவத்தை ஓதி வந்தால் பிரணவத்தின் பொருளை உணர்ந்து தெளியலாம் என்பது உண்மையே.சூல தீர்த்தம் திருக்குறுக்கை

மிகவும் அபூர்வமாக கொறுக்கை திருத்தலத்தின் தல விருட்சமாக காம சமனியான கடுக்காய் அமைந்துள்ளது. பலரும் அறியாமையால் கடுக்காய் காமத்தை குறைக்கும் தன்மை உடையது என்று கருதுகிறார்கள். உண்மையில் பெரும்பாலான இன்றைய மக்கள் தங்கள் உடலுக்கு மிஞ்சிய காம எண்ணத்துடன் திகழ்வதால் அத்தகையோர் கடுக்காயை ஏற்றவுடன் தங்கள் உடலில் காமக் கோரிக்கைகள் குறைவதைக் கண்டு கடுக்காய் காமத்தைக் குறைக்கும் என்ற தவறான முடிவுக்கு வந்து விடுகிறார்கள். உண்மையில் மன பலத்தைக் கோருவோரும் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களும் அவசியம் இரவில் ஏற்றுக் கொள்ள வேண்டிய அரிய மூலிகைப் பொடியாகும். குளிர்காலத்தில் தேனில் கலந்தும் வெயில் காலத்தில் மோரில் கலந்தும் இரவில் கடுக்காயை ஏற்பதால் மனம், விந்து, உள்ளம் இம்மூன்றும் சுத்தியாகும் என்பது சித்தர்களின் கொள்கை. வேறு எந்த மூலிகையாலும் இம்மூன்றையும் ஒரே சமயத்தில் சுத்தி செய்ய முடியாது என்பதால் சித்தர்கள் அந்த அளவு கடுக்காய்க்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எனவே உண்மையான மூலிகை கடுக்காய் காமத்தை அழிக்குமா ? இதைப் புரிந்து கொண்டால் கடுக்காய் மரத்தை தல விருட்சமாகப் பெற்ற திருக்கொறுக்கை ஈசனின் கருணை நமக்குப் புரிய வரும். காமத்தைக் களைந்து மோகத்தை விட்டு இறைவனை நாடும்போதுதான் ஞானம் என்றால் என்ன என்று அன்னை ஸ்ரீஞானாம்பிகை புரிய வைப்பாள். அது வரையில் அன்னை ஸ்ரீஞானாம்பிகையின் வழிபாடு சாதாரண வழிபாடாகத்தானே இருக்கும்.ஸ்ரீஞானாம்பிகை திருக்குறுக்கை

காமத்தை முழுவதுமாக களைந்தவர்களே ஆன்மீகச் சாதனைகளை கைக்கொண்டு உன்னத நிலையை அடைய முடியும் என்பது உண்மையாக இருந்தாலும் ஆரம்பத்தில் காமத்தை விடுவது என்பது அனைவருக்கும் சாத்தியாகாத ஒன்றாக இருப்பால் காமத்திலிருந்து மனதை விடுவிக்கும் வழிபாடுகளும் திருத்தலங்களும் நம் முன்னோர்களால் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் முதன்மையாகத் திகழ்வதே இன்றைக்கு ஏதோ பெயருக்கு வழிபாடுகளுடன் திகழும் திருக்குறுக்கை சிவாலயமாகும். இங்குள்ள சூல தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீகாம தகன ஈசனையும் தலவிருட்சம் கடுக்காயையும் வழிபட்டு வந்தாலே காமம் வாழ்வில் முறைப்படுத்தப்பட்டு எளிதில் இறை நெறியில் நிலைத்து நிற்க முடியும் என்பதில் ஐயமில்லை. உண்மையில் காலையில் நெல்லி அல்லது இஞ்சி, மதியம் சுக்கு, மாலையில் கடுக்காய் என்பது காமத்தை முறைப்படுத்தி உடலையும் உள்ளத்தையும் பலப்படுத்தும் சாதனமே என்பதை நீண்ட நாள் அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். உண்மையில் காமத்திலிருந்து விடுபடுவது மட்டும் ஞானமாகாது. இறைவனால் உண்டாக்கப்பட்ட அனைத்தையும் சமமாக நோக்கும் எண்ணமே காமத்திலிருந்து நாம் விடுபட்டதை, நம் மனம் காமத்திலிருந்து விடுலை அடைந்ததை குறிக்கிறது. இந்நிலையில்தான் எந்த ஒரு உயிருக்காகவும் உண்மையாக இறைவனிடம் வேண்டவே முடியும், பிரார்த்தனை செய்ய முடியும். நாம் அறிந்த மகான்களும் முனிவர்களும் இவ்வாறு காமத்திலிருந்து முற்றிலுமாக விடுபட்டவர்கள் என்பதில் ஐயமில்லை. காமத்திலிருந்து விடுபட்ட மனதுதான் வேண்டுதல் வேண்டாமையை உடைய மனமாக, இறைவனின் பண்பாக போற்றப்படுகிறது. இந்த வேண்டுதல் வேண்டாமையை இறைவனின் உட்கருத்தாக வைத்து வள்ளுவர் புகழ்ந்து கூறுவதன் பொருள் இதுவே ஆகும்.தலவிருட்சம் கடுக்காய் திருக்குறுக்கை

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து ஏழாமிடம் களஸ்திர ஸ்தானம் என்னும் திருமண வாழ்வைக் குறிப்பதாகும். அதனால் திருமண முகூர்த்த நேரங்கள் குறிக்கும்போது ஏழாமிடம் சுத்தமாக அதாவது ஏழாமிடத்தில் ஒரு கிரகமும் இல்லாமல் இருத்தலே உத்தமமாகும். அவ்வாறு தங்கள் திருமண முகூர்த்த நேரத்தில் ஏழாமிடத்தில் கிரகங்கள் இருந்தால் அது களத்திர தோஷத்தைக் குறிக்கும். இவ்வாறு களத்திர தோஷத்துடன் திருமணம் புரிந்து கொண்டவர்களின் வாழ்வில் களத்திர தோஷத்தை சந்திக்க வேண்டிதானே வரும். இவ்வாறு களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஸ்ரீசுக்கிரவார அம்மன் எழுந்தருளிய திருக்குறுக்கை போன்ற தலங்களில் வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீசுக்கிரவார அம்மனை தரிசனம் செய்து மாங்கல்ய தானம் நிறைவேற்றுதலால் களத்திர ஸ்தானத்தில் அமைந்த கிரக சஞ்சாரங்களுக்கு ஓரளவு நிவர்த்தி கிட்டுகிறது. ஆனால், ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் களத்திரகாரகனான சுக்கிர பகவானே எழுந்தருளி இருந்தால் என் செய்வது ? இத்தகையோரும் ஸ்ரீசுக்கிரவார அம்மனை வழிபட்டு மாங்கல்ய தானம் போன்ற தான தர்மங்களை நிறைவேற்றுவதால் திருமணத்திற்கு முன் பெண் உறவு, கனவில் பெண்களுடன் உறவு போன்ற செயல்களால் திருமண வாழ்க்கை பாதிக்கப்படாமல் உரிய நேரத்தில் காப்பாற்றப்படுவார்கள்.ஸ்ரீவிஷ்ணு துர்கை திருக்குறுக்கை

மிகவும் அபூர்வமாக திருக்கொறுக்கை திருத்தலத்தில் ஸ்ரீசுக்கிரவார அம்மன் எழுந்தருளி இருந்தாலும் பாதுகாப்பு காரணத்தால் அம்மனின் விக்ரஹம் பக்தர்களின் தரிசனத்திற்கு கிட்டாவிடில் ஸ்ரீசுக்கிரவார அம்மனின் தியானத்துடன் தலவிருட்சம் கடுக்காய் மரத்தை அடிப் பிரதட்சணமாக வலம் வந்து வணங்குதலால் ஸ்ரீசுக்கிர வார அம்மனை வழிபட்ட பலனை பூரணமாகப் பெறுவார்கள். ஸ்ரீசுக்கிர வார அம்மன் மட்டுமல்லாமல் எந்த தெய்வ மூர்த்தியாக இருந்தாலும் பாதுகாப்பிற்காகவோ அல்லது வேறு ஏதாவது நடைசாற்றுதல் போன்ற இயற்கை காரணங்களால் சுவாமியை வழிபட முடியவில்லை என்றால் தலவிருட்சம், தீர்த்தம் இவற்றை முறையாக வணங்குதலால் அந்த குறிப்பிட்ட தெய்வ மூர்த்தியை வழிபட்ட பலன் பூரணமாக கிட்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இத்தகைய வழிபாடு இயற்கையாக நிகழ வேண்டுமே தவிர சோம்பேறித்தனத்தின் விளைவாக அமையக் கூடாது என்பது முக்கியம்.
ஒருமுறை சோமசுந்தர பாண்டியனின் மைந்தன் உக்கிர பெருவழுதி மன்னன் மதுரையில் உள்ள ஸ்ரீஉக்ர நரசிம்மரை வழிபட 18 முறை முயற்சி செய்தும் அது முடியாது போகவே அங்கு வந்த சித்தர் ஒருவர், “அப்பா, நீயும் உக்கிரம், நரசிம்மரும் உக்கிரம். இரண்டு உக்கிர மூர்த்திகள் ஒருவரையொருவர் தரிசனம் செய்து கொண்டால் அதை இந்த உலகம் தாங்குமா ? அதனால் அடுத்த முறை நரசிம்மரை தரிசனம் செய்யப் போகும்போது, அடியேன் பாண்டிய மன்னன் நரசிம்ம மூர்த்தியின் தரிசனத்திற்காக வந்திருக்கிறேன்,” என்று சொல்லச் சொல்லி உக்கிரப் பெருவழுதி நரசிம்ம மூர்த்தியை வழிபடும் முறையை சுட்டிக் காட்டினாராம். அது போல் ஒவ்வொரு மூர்த்தியை வழிபடுவதற்கும் உரிய முறையைக் கையாள வேண்டும் என்பதையே சித்தர்கள் இந்நிகழ்ச்சி மூலம் சுட்டிக் காட்டுகிறார்கள்.ஸ்ரீஆத்மநாதேஸ்வர சுவாமி திருஆலம்பொழில்

கடவுள் மனிதர்களுக்கு 32 பற்களைக் கொடுத்துள்ளார். எந்த அளவு 32 அறங்களையும் ஒரு மனிதன் நிறைவேற்றுகிறானோ அதைப் பொறுத்து இந்த 32 பற்களின் ஆரோக்யம் இருக்கும். பெரும்பாலும் பூர்வ ஜன்ம பரிசாகவே ஒருவர் தமது பற்களைப் பெறுவதால் பூர்வ ஜன்மங்களில் 32 அறங்களையும் முறையாக நிறைவேற்றியவர்களே இந்த பிறவியில் 32 பற்களைப் பெற்று இறுதி நாள் வரை அவற்றை பாதுகாக்கவும் முடிகிறது. எனவே பற்களின் ஆரோக்கியத்தை வைத்தே ஒருவரின் தான தர்மத்தை எடைபோட்டு விடலாம். அதனால்தான் எல்லா மகான்களுக்கும் உறுதியான 32 பற்கள் அமைந்துவிடுகின்றன என்பதை நாம் கண் கூடாக காண முடியும். பற்கள் ஆரோக்கியமாக அமைந்தால் உடலில் மற்ற அவயவங்களும் ஆரோக்கியமாக அமைந்து விடும் என்பது நாம் அறிந்ததே. எனவே ஓரிரு பற்கள் சீர்கேடான நிலைக்குப் போய் உடல் ஆரோக்கியம் குறைந்தால் நிச்சயமாக அது மனிதனுடைய தான தர்மங்களின் குறைவைக் காட்டுவதால் எந்த விதமான தான தர்மத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஞானத்தை அளிப்பதே திருஆலம்பொழில் ஸ்ரீஞானாம்பிகையின் அருட்பாங்காகும். எனவே பட்டீஸ்வரம், திருச்சேறை என கும்பகோணத்திலேயே எத்தனையோ ஞானாம்பிகைகள் இருநதாலும் ஒவ்வொருவரின் அருட்பாங்கும் தன்னிகரற்றது என்பது இதன் மூலம் தெரிகின்றது அல்லவா ? ஞானம் எல்லையற்றது என்பது நாம் அறிந்ததே.ஸ்ரீஞானாம்பிகை திருஆலம்பொழில்

திருஆலம்பொழிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஞானாம்பிகையை வழிபடுவதால் எந்த தான தர்மத்தின் குறைபாட்டால் எந்த விதமான உடல், மன குறைபாடுகள் மனித உடலில் தோன்றியுள்ளன என்பதை உணர்ந்து கொள்ளலாம். இதற்கு உறுதுணையாக அமைவதே சற்குரு வெங்கடராமன் அவர்கள் அருளியுள்ள தேவாரத் திரட்டு என்ற 32 பதிகங்களை எந்த சிவத்தலத்திலும் அல்லது இல்லத்திலும் ஓதி வருதலாகும். குறிப்பாக திருஆலம்பொழில் சிவத்தலத்தில் இந்த 32 தேவாரப் பதிகங்களை ஓதி வருதலால் எந்த விதமான தான தர்ம குறைபாட்டால் பற்களில் வியாதிகள் தோன்றியுள்ளன என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். பல் மருத்துவர்களும் பல் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்களும் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலமே சென்னை அருகே ஞாயிறு திருத்தலமும் தஞ்சை அருகே திருஆலம்பொழில் திருத்தலமுமாகும். லலாடங்க கஷாயம் அருந்துபவர்கள் அவ்வாறு கஷாயத்தை தயாரித்து திருஆலம்பொழில் அம்பிகையின் முன் வைத்து வணங்கி அந்த கஷாயத்தை தொடர்ந்து பயன்படுத்துவதால் துரிதமான பலன்களைப் பெறுவார்கள். பற்கள் பாதுகாப்பிற்கு மட்டும் அல்லாது தொடர்ந்து எந்த நற்காரியத்தையும் நிறைவேற்ற உறுதுணையாக இருப்பதே லலாடங்க கஷாயம் ஆகும். கடையில் விற்கும் ஆலம்பட்டையை திருஆலம்பொழில் அம்பாள் முன் வைத்து பின்னர் அதில் லலாடங்க கஷாயத்தை தயாரித்து அருந்துவதாலும் பற்களின் ஆரோக்கியத்தை பேணுவதுடன் எடுத்த காரியத்தை திறமையுடன் முடிக்கும் ஆற்றலைப் பெறலாம்.புண்ணியப் பங்கீடு இறைவனால் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியாது. ஒரு முறை ஸ்ரீவாத்யார் அவர்களைப் பார்க்க ஒரு அரசாங்க அதிகாரி வந்திருந்தார். தனக்கு அந்த அளவிற்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் தான் கோயில் கணக்குகளை தணிக்கை செய்யும் ஆடிட் அலுவலராக வேலை செய்வதாகவும் அதனால் எந்த ஆலயத்திற்கு சென்றாலும் மூலவர் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வதுடன் அந்த மூலவருக்குப் படைக்கப்படும் லட்டு, முறுக்கு போன்ற பிரசாதங்கள் நிறைய அவருக்கு வழங்கப்படும் என்பதையும் தெரிவித்த அவர் தன்னுடைய தந்தை தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு பல இடங்களில் வைத்தியம் பார்த்து பலனளிக்காததால் ஸ்ரீவாத்யாரைப் பற்றி கேள்விப்பட்டு அவரைப் பார்க்க வந்ததாகவும் கூறினார்.ஸ்ரீசுதபுத மகரிஷி மப்பேடு சிவாலயம்

ஸ்ரீவாத்யாரும் ஒரு மகரிஷியின் நாமத்தைக் கூறி ஆலமரப் பட்டை மூலம் லலாடங்க கஷாயம் தயாரிக்கும் முறையைக் கூறி அந்த கஷாயத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தொண்டை புற்று நோய் குணமாகும் என்று அறிவுரை கூறினார். ஆனால் அந்த மகரிஷியின் பெயர் தற்போது சட்டென்று நினைவுக்கு வராததால் மறுநாள் அந்த அதிகாரி தன்னை வந்து பார்த்தால் அந்த மகரிஷியின் நாமத்தை நினைவு படுத்திக் கூறுவதாக சொல்லவே அந்த அதிகாரியும் மறுநாள் வருவதாக கூறி ஸ்ரீவாத்யாரிடமிருந்து விடைபெற்றுச் சென்று விட்டார். அருகிலிருந்த அடியார்களுக்கு ஒரே ஆச்சரியம். காரணம் ஸ்ரீவாத்யார் எந்த விஷயத்தையும் மறந்ததாக சரித்திரம் கிடையாது. அப்படி ஏதாவது ஒரு விஷயத்தை மறந்து விட்டதாக கூறினால் அதன் பின்னால் ஆயிரம் இரகசியம் இருக்கும். அப்போதுதான் ஸ்ரீவாத்யார் இந்த விஷயத்திற்கான விளக்கத்தை அளித்தார்.ஸ்ரீதட்சிணாமூர்த்தி, திருஆலம்பொழில்

ஸ்ரீவாத்யார் அடியார்கள் நினைப்பது போல் எந்த விஷயத்தையும் மறக்கக் கூடியவர் அல்ல, ஆனால் அப்படி மறந்தது போல் நடித்த காரியங்கள் ஏராளம். வந்திருந்த அடியாரின் தந்தை புதுக்கோட்டை அருகிலுள்ள சிவாலயத்தில் மெய்க்காவலாளியாக இருந்து அற்புத சேவை புரிந்து வந்தார். அதன் பலனாக அவருடைய மகனுக்கு பல கோயில் திருத்தலங்களில் மதிப்பு, மரியாதையுடன் கூடிய இறை தரிசனமும், இறைப் பிரசாதமும் கிடைத்தது. ஆனால், அதே சமயம் மெய்க்காவலாளியோ தனக்கு வேண்டியவர்களை தரிசனத்திற்காக அழைத்து வந்து அவர்களிடம் லஞ்சமாக பெற்ற பணத்தில் சில நற்காரியங்களை நிறைவேற்றினாலும் புகையிலை, மது போன்ற தவறான பழக்கங்களுக்கும் அந்த லஞ்சப் பணம் உதவி செய்தது. நற்காரியத்திற்காக பயன்பட்ட பணம் தன்னுடைய மகனுக்கு உயர்ந்த கல்வியையைம் அந்தஸ்தையும் அளித்தது, தவறான காரியங்களுக்கு பயன்பட்ட பணம் அவருக்கு புற்று நோயைத் தந்தது மட்டுமல்லாமல் ஸ்ரீவாத்யார் அந்த நோய் அனுபவித்து கழிக்க வேண்டிய நிலையில் இருந்ததால் அதற்குப் பரிகாரம் கூறினாலும் அது பயன்படுத்த முடியாத விதத்தில் அதற்குரிய ஸ்ரீசுதபுத மகரிஷியின் பெயரைக் கூறாமல் மறந்ததுபோல் நடிக்க வேண்டியதாயிற்று. இங்குதான் விதியின் விளையாட்டை சித்தர்கள் உலகிற்கு தெளிவுபடுத்துகிறார்கள். ஸ்ரீவாத்யார் தெரிவித்தபடி அந்த அதிகாரி ஸ்ரீவாத்யார் அவர்களைப் பார்க்க வரவேயில்லை. அவருடைய தந்தையும் சில மாதங்களில் புற்று நோய்க்கு பலியானார்.ஸ்ரீஅகஸ்திய பெருமான் திருக்குற்றாலம்

இறைவனின் அகத்திலிருந்து தோன்றியவரே ஸ்ரீஅகத்திய பெருமான். இவ்வாறு தோன்றிய ஸ்ரீஅகத்திய முனிவர்களைக் கணக்கிட்டால் இன்றைய கணக்குப்படி அவர்கள் எண்ணிக்கை 2000 கோடியைத் தாண்டும் என்பது சித்தர்களின் கணக்கு. ஒவ்வொரு துறைக்கும் ஒரு அகத்தியர் என்ற கணக்கில் அகத்திய பெருமான்கள் இறைவனின் இதயத்திலிருந்து தோன்றி மீண்டும் இறைவனின் அகமான இதயத்திலிலேயே மறைகிறார்கள்.
ஏன் சொல்லப்போனால் நம் குருமங்கள கந்தர்வா சற்குரு ஸ்ரீவெங்கடராம சித்தரும் ஸ்ரீஅகத்திய பரம்பரையைச் சேர்ந்தவர்தானே ? அதனால்தான் சுவாமிகளின் திவ்ய உடல் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா ஆஸ்ரமத்தில் இருக்கும்வரை ஸ்ரீஅகத்திய பெருமானின் திருவுருவம் மக்களின் தரிசனத்திற்காக கிடைக்கவில்லை. ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் திவ்ய உருவம் மறைந்த பின்னரே ஸ்ரீலோபாமாதா ஸ்ரீஅகத்தியர் இவர்களின் தரிசனம் இன்றும் அடியார்கள், பக்தர்களின் தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே மேலே நீங்கள் காணும் திருக்குற்றாலத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஅகத்திய முனிவருக்கும் மற்ற இடங்களில் எழுந்தருளி இருக்கும் அகத்திய முனிவர்களுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது. ஆம், அதில் எந்த அளவு சந்தேகமும் கிடையாது.ஸ்ரீஅகஸ்தியர் திருவைகாவூர்

எப்படி ஆயிரக் கணக்கான சுயம்பு சிவ மூர்த்திகள் எழுந்தருளி இருந்தாலும் அவர்களின் அருட்சுரக்கும் பாங்கில் வித்தியாசம் தென்படுகிறதோ அது போல ஸ்ரீஅகத்திய முனிவர்கள் எழுந்தருளிய கோலத்திலும் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு. அவற்றில் ஒரு சில அவதார இரகசியங்களை சித்தர்களால் கூறிய வகையில் இங்கு வெளியிடுகிறோம். ஸ்ரீஅகத்தியரின் தோற்றம்பற்றிக் குறிப்பிடும்போது
அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து
எழுந்து நின்ற எண்ணிலா ஈசருக்கும் பட்டம் சூட்டி
எண்ணத்தில் கலந்து எண்ணத்தைச் சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்த் தேர்ந்தெடுத்த
என்மகனே அகத்தியா வா!
என்று ஈசனின் அகத்தினுள் உருவாகும் ஸ்ரீஅகத்தியனை அழைக்கிறாள் அவருடைய தாயார் ஸ்ரீஆஷாசுவாசினி தேவி. எனவே ஈசனுக்கும் அகத்தியருக்கும் எவ்வித வித்தியாசமும் பாராட்டுவது கிடையாது. அது பற்றியே ஸ்ரீஅகத்தியரும் சிவத்தலங்களில் சிவபெருமானுடைய கோஷ்டத்தை அலங்கரிக்கும் மூர்த்தியாகவே எழுந்தருளி உள்ளார். அதிலும் சிறப்பாக திருவைகாவூர், திருவையாறு போன்ற ஐகாரத் தலங்கள் மக்களின் அறியாமையால் தோன்றும் மரண பயத்தைப் போக்குகின்றன.திருவைகாவூர் திருத்தலம்

வேடன் ஒருவன் புலியிடமிருந்து தன்னைக் காக்க வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு வில்வ தளங்களை இரவு முழுவதும் கீழிறிருந்த சிவலிங்கத்திற்கு அர்ச்சிக்க அவன் மரண பயத்தைப் போக்கி வாழ்ந்தது நீங்கள் அறிந்ததே. திருவைகாவூர் திருத்தலம் இத்தகைய சிறப்புகளுடன் பொலிவதே ஆகும். அதே போல திருவையாறு திருத்தலமும் குங்கிலியப் புகை செல்லும் தூரத்திற்கு மரண தேவதை நெருங்காது காத்தருளும் தலமாக இன்றும் மக்களால் போற்றப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
ஸ்ரீஆட்கொண்டார் சப்தஒலி பிரகாரம் திருவையாறு திருத்தலம்
மரண சமயத்தில் பூரண இறை நினைவை அளிப்பதே திருவையாறு திருத்தல தரிசனமும் இத்தலத்தில் நிறைவேற்றும் திருப்பணியும் ஆகும். சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தன் அடியார்களுடன் திருப்பணி நிறைவேற்றி “ஐயாறா ஐயாறா” என்று அடியார்களை ஓத வைத்து அனைவரின் மரண பயத்தையும் போக்கினார் என்பது ஒரு சிலரே அறிந்த இரகசியமாகும். இன்றும் சற்குருவைப் பெற்றோரும் ஸ்ரீஐயாறப்பனை ஐயாறா என்று அழைப்போரும் தங்கள் மரண பயம் நீங்கி வாழ்வர் என்பது உறுதி. பொதுவாக கோஷ்ட மூர்த்திகளின் வழிபாடு மரண பயத்தைக் களையும் என்பது அனைவரும் அறிந்ததே. அதனால்தான் அடியார்களின் மரண பயத்தைக் களைய கோஷ்டத்தில் எழுந்தருளி உள்ளார் ஸ்ரீஅகத்திய மாமுனி. இவ்வாறு கோஷ்டத்தில் எழுந்தருளி இருக்கும் அகத்திய மூர்த்திகள் மரணத்தைக் களைவதுடன் பிள்ளையாரைப் போல் பெருவயிறுதாரியாகவும் எழுந்தருளி இருப்பதால் அகத்திய முனிவரின் தரிசனம் மரண பயத்தைக் களைவதுடன் மரணம் அடையும் அந்தக் கடைசி நொடி வரை உணவிற்கு பஞ்சம் ஏற்படாத செல்வ நிலையையும் அளிக்கும் என்பதும் கோஷ்டத்தில் ஸ்ரீஅகத்தியர் எழுந்தருளி இருப்பதன் மற்றோர் ஆன்மீக இரகசியமாகும்.ஸ்ரீஅகத்தியர் கரிவலம்வந்தநல்லூர்

விதி என்று இருந்தால் அதற்கு விலக்கு இருந்தால்தானே அந்த விதியும் சுவையாக இருக்கும் ? கோஷ்ட மூர்த்தி என்ற விதிக்கு விலக்காக அமைந்திருப்பதே கரிவலம்வந்தநல்லூர் திருத்தலமாகும். வெள்ளை நிறமுடைய ஐராவத யானை காடு மேடெங்கும் திரிந்து தன்னுடைய விதியை மாற்றிக் கொள்ள கடைசியாக வலம் வந்து வணங்கி தன்னுடைய பழைய வெள்ளை நிறத்தை மீண்டும் பெற்றுக் கொண்ட திருத்தலமே கரிவலம்வந்தநல்லூராகும். இறைவன் இந்நிகழ்ச்சிக்கு சான்றாக இன்றும் வெள்ளைத் திருமேனி நாதராக காட்சி அளிக்கிறார் என்பது இத்தலத்தின் மற்றோர் அற்புதமாகும். திரிகூடமலையில் வாயு மூலையில் எழுந்தருளிய ஸ்ரீஅகத்திய பெருமான் அதே போல மற்ற திருத்தலங்களில் கோஷ்ட மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீஅகத்திய பெருமான் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் ஈசான்ய மூலையில் ஸ்ரீபாலசுப்ரமணியருக்கு எதிரில் எழுந்தருளி உள்ளார். தாமே அரைத்த சந்தனத்தால் இந்த ஸ்ரீஅகத்தியருக்கு உரிய முறையில் காப்பிட்டு வணங்குவதால் எத்தகைய தவறுகளுக்கும் உரிய பிராயசித்தம் கிட்டும் என்பது உறுதி.ஸ்ரீஉதயமார்த்தாண்டலிங்கம் கரிவலம்வந்தநல்லூர்

ஸ்ரீஅகத்திய மாமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட உதயமார்த்தாண்ட லிங்கம். ஸ்ரீஅகத்திய முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரே மார்த்தாண்ட லிங்கம் இதுவே. காரணம் பூலோகத்தில் உதய மார்த்தாண்ட சக்திகளை கிரகித்து மக்களுக்கு அளிக்கவல்ல ஒரே தலம் இதுவே. தஞ்சை மாவட்டத்தில உள்ள கீழ்சூரியமூலையைப் போல உதயமார்த்தாண்ட சக்திகளை மக்களுக்கு, பக்தர்களுக்கு அளிக்கக் கூடிய ஒரே திருத்தலம் கரிவலம்வந்தநல்லூராகும். இந்த மார்த்தாண்ட சக்திகளை கிரகிக்கும் ஆற்றல் வேறு எவருமே இந்தக் கலியுகத்தில் பெறாத காரணத்தால் ஸ்ரீஅகத்திய மாமுனியே இந்த உதய மார்த்தாண்ட சக்திகளை ஏற்று அதை பக்தர்களுக்கு அளித்து அரும்சேவை புரிந்து வருகிறார்கள். மற்ற இடத்தில் எல்லாம் பேழை வயிற்றுடன் திகழும் ஸ்ரீஅகத்திய பெருமான் ஒட்டிய வயிற்றுடன் திகழும் ஒரே திருத்தலம் கரிவலம்வந்தநல்லூராகும்.ஸ்ரீஅகத்திய பெருமான் ஒட்டிய வயிற்றுடன் திகழ்வதற்கும் இத்தலத்தில் மார்த்தாண்ட சூரிய சக்திகள் பரிணமப்பதற்கும் உள்ள காரணத்தை இனங் கண்டு கொள்ள முடிந்தவர்களே பூமியல் அணுகுண்டு வெடிக்காமல் பூமியைக் காப்பாற்றுகிறார்கள். இதுவும் சித்தர்களின் அரும்பணிகளில் ஒன்றாகும். இந்த சிவ சூரிய மூர்த்தியை சாளரம் வழியே தரிசித்து உரிய தான தருமங்களை நிறைவேற்றிய பின்னரே உதய மார்த்தாண்ட லிங்க மூர்த்தியை நேரே தரிசிக்க வேண்டும் என்பது இத்தல தரிசன விதி. புது உத்யோகத்திற்கு செல்லும் முன்னும், கண் கோளாறுகளால் அவதியுறுவோரும் உதயமார்த்தாண்ட லிங்க மூர்த்தி தரிசனத்தால் அற்புத பலன் பெறுவார்கள். சூரிய உதயத்திற்கு முன் மலரும் பூக்களால் இந்த சூரிய லிங்கத்திற்கு அலங்கரித்து வழிபாடுகள் இயற்றுவதும் ஆரஞ்சு வண்ண ஆடைகளை இந்த சிவலிங்க மூர்த்திக்கு சாற்றி வழிபடுவதும் சிறப்பாகும். ஞாயிற்று கிழமைகளிலும் மாதப் பிறப்பு, உத்தராயண, தட்சிணாயன புண்ணய காலத்தில் இந்த சிவ சூரிய மூர்த்தியை வழிபடுவதால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.ஸ்ரீபைரவர் கரிவலம்வந்தநல்லூர்

தெற்கு நோக்கிய பைரவ மூர்த்திகளின் தரிசனமே மிகவும் அரிதாகும். அன்பில், ராச்சாண்டார் திருமலை போன்ற சில திருத்தலங்களில் மட்டுமே பைரவ மூர்த்திகள் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளனர். தெற்கு திசை பித்ரு மூர்த்திகளுக்கு உரியது என்பது தாங்கள் அறிந்ததே. அதிலும் அரிதாக கரிவலம்வந்தநல்லூரில் அருள்பாலிக்கும் பைரவரின் வாகனம் நாயானது கிழக்கு நோக்கிய பார்வையுடன் திகழ்கிறது. இது அரிதிலும் அரிய பைரவ தரிசனமாகும். புதிதாக பணிக்கு செல்பவர்கள் இந்த பைரவ மூர்த்தியை வழிபட்டு செல்வதால் தாங்கள் ஏற்கும் பணியில் எந்த வித தவறுகளும் ஏற்படாமல் காத்துக் கொள்வதுடன் தங்கள் பணியில் சிறந்தவராகத் திகழவும் இந்த பைரவ வழிபாடு உதவுகிறது. துர்வாச முனிவரின் சாபத்தால் கரிய நிறம் பெற்று காட்டு யானையாகத் திரிந்த ஐராவதமானது தன்னுடைய சாபம் தீர்ந்தபின் மீண்டும் தன்னுடைய பணியில் தவறுகள் ஏற்படாமல் தொடர்ந்து பணியாற்ற இவ்வாறு கிழக்கு நோக்கிய வாகனத்துடன் திகழும் கரிவலம்வந்தநல்லூர் பைரவ மூர்த்தியை பிரார்த்தனை செய்து தன்னுடைய பணியை தொடங்கியதால் தான் தொடர்ந்து எத்தகைய தவறும் செய்யாமல் பணியை நிறைவேற்றியதுடன் தன் மேல் பவனி வந்த இந்திரமூர்த்திகளுமே எத்தகைய தவறுகட்கும் ஆட்படாதவாறு காத்தது என்றால் என்னே பைரவ மூர்த்தியின் சக்தி, அவர் வாகனத்தின் பெருமை !சகஸ்ரலிங்கம் கரிவலம்வந்தநல்லூர்

சகஸ்ரலிங்க மூர்த்திகள் பொதுவாக பிரதட்சிணம் செய்யும் வகையில் அமைவது கிடையாது. ஒரு முறை சகஸ்ர லிங்கத்தை தரிசனம் செய்தால் ஆயிரம் லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்த பலன் கிட்டும் என்பது உறுதி. அதே போல ஒரு சகஸ்ர லிங்கத்தை பிரதட்சிணம் வந்தால் ஒரு சுயம்புலிங்க மூர்த்தியை ஆயிரம் முறை பிரதட்சிணம் வந்த பலன் கிட்டும் என்பதும் நிச்சயம். ஆனால், நகர், காளையார்கோவில், திருச்செங்கோடு போன்ற ஒரு சில திருத்தலங்களில் மட்டுமே சஹஸ்ரலிங்க மூர்த்திகள் தனிச் சன்னதி கொண்டு அடியார்கள் பிரதட்சணம் வரும் வகையில் அமைந்துள்ளார்கள். பெரும்பாலான திருத்தலங்களில் சகஸ்ரலிங்க மூர்த்திகளை மூலவரோடு மற்ற தெய்வ மூர்த்திகளுடன் வலம் வந்து வணங்கும் முறையிவ்தான் அமைத்திருப்பார்கள். இவ்வகையில் கரிவலம்வந்தநல்லூரில் எழுந்தருளியுள்ள சகஸ்ரலிங்க மூர்த்தி வலம் வந்து வணங்கும் முறையில் அமைந்திருப்பது அடியார்களின் பெரும்பாக்கியமே. முடிந்த வரை இந்த லிங்க மூர்த்தியை வலம் வந்து வணங்கி மூளைக்கு சத்தான பாதம், அக்ரூட், பிஸ்தா, முந்திரி, உலர்கனிகள் இவற்றை வேக வைத்து பாலில் கலந்து தானமாக அளித்தலால் கம்ப்யூட்டர் உயர் பதவிகள் தேடி வரும். இரவில் தூக்கமில்லாமல் படுக்கையில் புரளும் நிலை மாறும், சிறிதளவு தூக்கமே மூளைக்குத் தேவையான ஓய்வை அளித்து விடும். பேருந்து, கார் ஓட்டுனர்கள், இரவு பணி செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் அற்புத மூர்த்தி இவர்.கரிவலம்வந்தநல்லூர்

இறைவன் படைப்பில் எல்லா காரியங்களுக்கும் ஒரு காரணம் உண்டு என்பது போல் இங்கு நீங்கள் கறுப்பாக காணும் யானை வாகனத்திற்கும் ஒரு காரணம் உண்டு. ஆம், ஐராவத யானை முதலில் துர்வாசரின் சாபத்தால் கரிய நிறம் பெற்றுதான் பூமியில் விழுந்தது. அதை நினைவு கூர்வதே நீங்கள் கரிவலம்வந்தநல்லூரில் காணும் யான வாகனம். மேலும் தாங்கள் கறுப்பாக இருக்கிறோமே, தங்கள் குழந்தைகள், மனைவி கறுப்பாக இருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து கறுப்பான இந்த யானை மூர்த்திகளை வழிபட்டு கறுப்பு திராட்சை, பீட்ரூட் போன்ற கருப்பு நிற உணவுப் பொருட்களை தானமாக அளித்தலால் கறுப்பு தங்கள் வாழ்க்கையில் ஒரு குறைபாடாகத் தோன்றாது. மேலும் கறுப்பாக இருக்க வேண்டிய தலை முடி சிறுவயதிலேலே சிவருக்கு வெள்ளையாக மாறி அவர்கள் திருமண வாழ்க்கை, தொழிலை பாதிப்பது உண்டு. இத்தகைய பாதிப்புகளால் கவலைப்படுவோரும் கரிவலம்வந்தநல்லூர் கரிய நிற யானை உருவங்களை தரிசித்து கறுப்பு சாக்லேட், அல்வா போன்ற கரிய பொருட்களை தானம் அளித்தலால் நற்பலன் பெறுவார்கள்.ஸ்ரீகாயத்ரீ நந்தி கரிவலம்வந்தநல்லூர்

மிகவும் அரிதாக காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கும் நந்தி மூர்த்தியை நாம் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் தரிசனம் செய்கிறோம். சற்குரு ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியபடி இவ்வாறு வலது காலை முன்னே நீட்டி அமர்ந்துள்ள நந்தி மூர்த்திகள் காயத்ரீ மந்திரத்தை ஜபித்த வண்ணமிருப்பர். இவ்வாறு வலதுகாலை முன்னே நீட்டிய பசு மாடுகளின் தரிசனமும் மிகவும் அபூர்வமானதே. காரணம் அவைகளும் இவ்வாறு வலது காலை மட்டும் முன்னே நீட்டி அமர்ந்திருக்கும்போது அவை காயத்ரீ மந்திரத்தை ஜபித்துக் கொண்டு இருக்கின்றன என்பது அர்த்தம். இவ்வாறு காயத்ரீ மந்திரம் ஜபிக்கும் நந்தி மூர்த்தியையும் பசு மாடுகளையும் வலம் வந்து வணங்கியவரே ஸ்ரீகௌதம முனிவர் ஆவார். எனவே கரிவலம்வந்தநல்லூர் நந்தி மூர்த்தியை வலம் வந்து வணங்குதல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். சிறப்பாக புது மணத் தம்பதிகள், புகுமன புகுவோர், வியாபாரம் போன்று புதிதாக எக்காரியத்தை செய்யும் முன்னர் இந்த காரிய சாதக நந்தி மூர்த்தியை தரிசனம் செய்து வலம் வந்து வணங்குவதால் வாழ்வில் கிடைத்தற்கரிய பலன்களைப் பெறுவார்கள்.கரிவலம்வந்தநல்லூர்
ஸ்ரீகௌதம மகரிஷி இவ்வாறு கன்றை பிரசவித்துக் கொண்டிருந்த ஒரு பசுவை வலம் வந்து அற்புதமான பலனைப் பெற்றார். ஒரு அசுவமேதயாகத்தை மிஞ்சிய பலனை அளிக்கக் கூடியதே இவ்வாறு முன்னால் ஒரு திருமுகமும் பின்னால் ஒரு திருமுகமும் கூடிய ஐஸ்வர்ய கடாட்ச தரிசனமாகும். இவ்வாறு ஐஸ்வர்ய கடாட்ச தரிசனத்தைப் பெற்றுத்தான் ஸ்ரீகௌதம மகரிஷி அகலிகையை மணந்தார். இவ்வாறு ஒரு பசு கன்று ஈணும் தரிசனத்தைப் பெறுவதற்கு முன்னால் 1008 வலது காலை முன் வைத்த பசு மாடுகளை வலம் வந்து வணங்கி காயத்ரீ ஜபித்து உன்னத பலன்களைப் பெற்றார் ஸ்ரீகௌதமர் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும். தெய்வீகத்தில் எந்தப் பரிசும் எளிதில் கிடைத்துவிடுவதில்லை என்பதும் கௌதமர் அகலிகை வரலாறு உணர்த்தும் பாடமாகும். இவ்வாறு இரு திருமுக தரிசனங்களைப் பெற்றவர்கள் வற்றாத ஜீவ சக்திகளைப் பெறுவார்கள் என்பதற்கு இலக்கணமாக வேறெங்கும் காண இயலா வண்ணம் ஸ்ரீசௌபாக்ய கணபதி இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். ஸ்ரீசௌபாக்ய கணபதியின் திருக்கோபுர தரிசனத்தையே நீங்கள் மேமே உள்ள படத்தில் தரிசனம் செய்கின்றீர்கள். ஸ்ரீசௌபாக்ய கணபதி மூர்த்தியின் தரிசனம் நேரே பெற்று அனுபவிக்க வேண்டிய ஒன்று என்ற காரணத்தால் இங்கு அந்த தரிசனம் பிரசுரிக்கப்படவில்லை.தலவிருட்சம் களா கரிவலம்வந்தநல்லூர்
பொதுவாக தொப்பையுடன் காட்சி தரும் ஸ்ரீஅகத்திய முனிவர் இங்கு சாதாரண வயிற்றுடன் காட்சி தருவதற்கு தலவிருட்சம் களா மரமும் ஒரு காரணமாகும். பொதுவாக கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளும் ஸ்ரீஅகத்திய பெருமான் இங்கு பிரகார மூர்த்தியாக எழுந்தருளி இருப்பதும் பொதுவாக வலம் வந்து வணங்கும் விதத்தில் காட்சி தரும் தலவிருட்சம் இங்கு பிரகார மூர்த்தியைப் போல் எழுந்தருளி இருப்பதும் இத்தலத்தின் சிறப்புகளாகும். தயிர் சாதத்துடன் களா அல்லது நார்த்தை ஊறுகாயைச் சேர்த்து தானமளித்தலால் அடிவயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஆண் பெண் இருபாலாருக்கும் நயமாகும். தானத்திற்குப் பின் களா மரத்தையும் ஸ்ரீஅகத்திய பெருமானின் தரிசனம் பெறுதல் அவசியம் ஆகும். தானத்தை எத்தலத்தில் வேண்டுமானாலம் நிறைவேற்றலாம்.ஸ்ரீலட்சுமணேஸ்வரர் கரிவலம்வந்தநல்லூர்
ஸ்ரீகாகபுஜண்டமகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீலட்சுமணேஸ்வர மூர்த்தி இவரே. இராமாயண காலத்திற்கு முந்தைய தலம் இது. ஸ்ரீலட்சுமண சுவாமி ஸ்ரீராமரை தன்னுடைய அண்ணனாக வேண்டி வரம் பெற்ற தலம். பல மகரிஷிகளை இதற்காக சரணடைந்து வேண்டிய ஸ்ரீலட்சுமண சுவாமி எதிர்காலத்தில் அண்ணன் தம்பிகள் என்ற உறவுக்குள்ளேயே கலகங்கள் ஏற்படும் என்பதை உணர்ந்து அதை நிவர்த்தி செய்யும் முகமாக ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷியை வேண்டிடவே அவர் உத்தரவின்படி கரிவலம்வந்தநல்லூர் சிவபெருமானைச் சரணடைந்து ஸ்ரீகாகபுஜண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கத்தை வணங்கி வழிபட்டு எதிர்காலத்தில் பங்காளிச் சண்டைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் தலமாக இதை ஏற்படுத்தினார் என்பதே சித்தர்கள் கூறும் வரலாறு. இராமாயண காலத்திற்கு முன்னரே இத்தலத்தில் தோன்றியவர்களே ஸ்ரீஅகத்திய மகிரிஷியும் களா மரமும் என்றால் இத்தலத்தின் தொன்மையை எப்படி வர்ணிப்பது ? பூமியில் தோன்றும் முதல் கதிர்களை இத்தல ஈசனின் மேல் பொலிந்து பூமியை சூரியன் வலம் வருவதால் கரிவலம்வந்தநல்லூர் என்னும் பெயர் அமையும் முன் பால்வண்ணநாதபுரம் என்பதே கரிவலம்வந்தநல்லூரின் பெயராக இருந்தது. அதனால்தான் ஈசனும் பால்வண்ண நாதனாகத் திகழ்கிறான். எனவே இத்தலத்தில் தீராத பங்காளிச் சண்டை, தகராறுகள் வேறு எத்தலத்திலும் தீராது என்பதற்கு இலக்கணம் படைத்தவரே ஸ்ரீலட்சுமணேஸ்வர மூர்த்தி ஆவார். வளர்பிறை நாட்களில் இறைவனுக்கு சர்ச்கரைப் பொங்கல் நைவேத்யம் படைத்து தானம் அளிப்பதால் நாட்பட்ட பங்காளிச் சண்டைகள் தீர்ந்து குடும்பத்தில் சுமுகமான உறவு ஏற்படும். பங்காளிச் சண்டை என்றால் வெளியிலிருந்துதான் வர வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு குடும்பத்திற்குள்ளேயே ஏற்படும் எல்லா உட்பூசல்களுக்கும் மன வருத்தங்களுக்கும் தீர வழி வகுப்பதும் இத்தலத்தில் நிறைவேற்றப்படும் சர்க்கரை பொங்கல் படையலும் தானமுமாகும்.


ஸ்ரீஅன்னபூரணி கரிவலம்வந்தநல்லூர்
பல அன்ன குற்றங்களை நீக்கும் தரிசனமே கரிவலம்நல்லூர் திருத்தலத்தில் ஸ்ரீஅன்னபூரணி அம்பாள் சந்நதியின் இடப் புறத்தில் எழுந்தருளியுள்ள தரிசனமாகும். எதுவும் தெய்வீகத்தில் உடனே சாதிப்பது கிடையாது என்ற தத்துவம் உண்மை என்பதற்கு தானே வாழ்ந்து காட்டிய பெருமை அன்னை பராசக்தியை சேரும். அம்மை அப்பனாக சிவ பெருமான் எழுந்தருளும்போது அன்னை சுவாமியின் இடப் பக்கத்தில்தானே உமை அம்மையாக காட்சி தருகிறாள். இது திடீரென்று அன்னை பார்வதிக்கு கிடைத்த பரிசு கிடையாது. பல யுகங்கள் உயிர்களுக்கெல்லாம் அன்னையாக இருந்து உயிர்களை அபீதகுஜாம்பிகையாக, உண்ணாமுலைத் தாயாக இருந்த அருள்பாலித்ததால் மகிழ்ந்த ஈசனே அன்னைக்கு மாதொரு பாகனாக தன்னுடைய இடப் பாகத்தை அளித்தான். இவ்வாறு அன்னை ஈசன் இடப்பக்கத்தில் அமர்ந்து உயிர்களுக்கு உயிரூட்டி வளர்த்த தத்துவத்தை உலகிற்கு அளிக்கும் தரிசனவே அன்னபூரணி தேவி ஸ்ரீபால்வண்ண நாதருக்கு இடப் புறத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் அன்னைக்கு தான் இடப்புறத்தில் இருந்து அருள்புரியும் தன்மையாகும். ஒருவருக்கு வெண்டைக்காய் அலர்ஜி, மற்றொருவருக்கு கத்தரிக்காய் அலர்ஜி. இவ்வாறு ஒத்துக் கொள்ளாத உணவுப்பொருட்களால் அவதியுறுவோர் கரிவலம்வந்தநல்லூரில் அருள்புரியம் அன்னபூரணி தேவிக்கு தனக்கு ஒத்துக் கொள்ளாத உணவுப் பொருட்களை இத்தேவி நினைவுடன் தானமாக தங்கள் ஊரிலேயே அளித்து வந்தால் அலர்ஜி நோயிலிருந்து குணமடைவர் என்பது உறுதி. மேலும் ஒத்துக் கொள்ளாத அந்தப் பொருளை தாங்கள் உண்ணாவிட்டாலும் அதனால் உடம்பில் எந்த பற்றாக்குறையும் ஏற்படாது என்பதே கரிவலம்வந்தநல்லூர் அன்னபூரணியின் மகத்துவம் ஆகும். உதாரணமாக, ஒருவருக்கு கத்திரிக்காய் சேர்த்துக் கொள்ளாததால் உடம்பில் இரும்புச் சத்து குறைந்து அதனால் போதுமான இரத்தம் ஊறவில்லை என்றால் அவர் கரிவலம்வந்தநல்லூர் அன்னபூரணி தேவியை வணங்கி இரும்புச் சத்துக்கள் மிகுந்த கத்தரிக்காய், ராஜ்மா பருப்பு போன்ற பொருட்களை ஸ்ரீகரிவலம்வந்தநல்லூர் அன்னபூரணி தேவி நினைவுடன் தானமாக அளித்து வந்தால் அவர் இரும்புச் சத்துக் குறைவால் பாதிக்கப்பட மாட்டார் என்பதே இறைவன் அவர்களுக்கு அளிக்கும் பரிசு ஆகும். ஆனால் குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையே இவை அனைத்திற்கும் மூலதனம் என்பதை மறந்து விட வேண்டாம்.


ஸ்ரீஅதுல்யநாயகி கரிவலம்வந்தநல்லூர்
கரிவலம்வந்தநல்லூர் அம்பாளின் பெயர் ஸ்ரீஅதுல்யநாயகி என்பதாகும். அதுல்ய என்றால் ஈடு இணையில்லாத, தனக்கு ஒப்புவமை இல்லாத என்று பொருள். அதாவது ஸ்ரீஅதுல்யநாயகியை தரிசனம் செய்யும் அடியார்கள் ஈடு இணையில்லாதவர்களாகவும், அற்புத சாதனை படைத்தவர்களாகவும் மாற வேண்டும் அல்லவா ? ஆனால், நடைமுறையில் கரிவலம்வந்தநல்லூர் அம்பாளை தரிசனம் செய்யும் அடியார்கள் அனைவரும் இத்தகைய உன்னத நிலையை அடைகிறார்களா என்பது சந்தேகமே. இந்த சந்தேகத்தை நமது குருநாதர் அவர்களிடம் வெளியிட்டபோது அவர் கூறியதாவது, “நீங்கள் நினைப்பது போல் வெறும் பெயரை வைத்து எதையும் முடிவ செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். பலரும் இறந்தவர்கள் அனைவரும் இறைவனடி சேர்ந்தார் என்று பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்தி விடுகிறார்கள். அவர் உண்மையாகவே இறைவனடியை சேரும் தகுதி பெற்றவரா என்பதை தெளிவாக அறிந்த பின்னரே அவர் இறைவனடி சேர்ந்தார் என்று சொல்ல வேண்டும். உண்மையில் ஒருவர் இறைவனடி சேர்ந்தாரா இல்லையா என்பதைக் கூறும் தகுதி கூட பலருக்கும் இருப்பதில்லை. காரணம் பத்து கோடி பேரில் ஒருவர்தான் இறைவனின் சன்னிதானத்தையே அடைகிறார்கள். அவ்வாறு அடைந்தவர்களும் பல்வேறு மாயைகளில் சிக்கிக் கொண்டு அதிலிருந்து வெளிவர வழி தெரியாமல் மீண்டும் பூமியில் பிறந்து பிறவி மாயையில் மாட்டிக் கொள்கிறார்கள். உதாரணமாக பத்துக் கோடி பேரில் ஒருவராக இறைவனின் சன்னிதானத்தை அடையும் ஒருவரிடம் அவர் சக்தி லோகம் போகிறாரா அல்லது முருக லோகம் போக விரும்புகிறாரா என்று கேட்பார்கள். நிச்சயம் அவர் எதாவது ஒரு லோகத்திற்கு தான் போக விரும்புவதாகத்தான் கூறுவார். அப்படி அவர் ஏதாவது ஒரு லோகத்தின் பெயரைச் சொன்னால் அடுத்த விநாடி இவ்வளவு தூரம் வந்த பின்னும் இன்னும் சக்தி, முருகன் என்ற பாகுபாடு உன்னிடம் உள்ளதே, அந்த தெய்வ பாகுபாட்டை தீர்த்துக் கொண்டு வா என்று திருப்பி அனுப்பி விடுவார்கள். ஆனால், அடியேன் இங்கு சில கேள்விகளை முன்னரே வெளியிட்டு விட்டதால் இந்த கேள்விக்கு ஏற்ற பதிலை, அதாவது தாங்கள் விரும்பும் லோகத்திற்கு அனுப்புங்கள் என்று சொல்லலாம் என்று நினைக்கிறீர்கள்.”


ஸ்ரீஅகத்திய பீடம் கரிவலம்வந்தநல்லூர்
அடியார்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். சற்குரு அவர்கள் தொடர்ந்தார். “ஆனால் இப்போது தங்களிடம் கேள்விகளை வெளியிட்டு விட்டதால் இதே கேள்விகள்தான் அங்கு கேட்கப்படும் என்பது அவசியம் கிடையாது. அவர்கள் இந்நேரம் கேள்விகளை மாற்றி இருப்பார்கள்.” தற்போது அடியார்கள் முகத்தில் புன்னகை மறைந்து மீண்டும் கேள்விக் குறி தோன்றிடவே சற்குரு தொடர்ந்தார். “நீங்கள் கண்ணால் பார்ப்பதையும் காதால் கேட்பதை மட்டும் வைத்து எந்த முடிவுக்கும் வந்து விடாதீர்கள். தீவிர இறை நம்பிக்கை, குரு நம்பிக்கை, குருவின் செயல்களை கேள்வி கேளாமல் நிறைவேற்றுதல் எந்த தகுதிகள் அவசியம் தேவை.”


ஸ்ரீபால்வண்ணநாதேஸ்வரர் கரிவலம்வந்தநல்லூர்
“உதாரணமாக இவன் (அருகில் ஒரு அடியாரைச் சுட்டிக் காட்டி) ஒருவர் வந்து கோயிலுக்கு பணம் கேட்டால் தருகிறேன் என்று சொல்லி விட்டான். காரணம் அந்த கமிட்டிக்கு தலைவராக இருந்தவர் பெயர் வெங்கடராமன் அதாவது அடியேனுடைய பெயராக இருந்ததுதான். பின்னர் அவர் அடியேனுடைய பெயரை வைத்திருந்தார் என்பதற்காக நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டியதில்லை. வெங்கடராமன் என்ற பெயரில் திருடர்களும் உண்டு என்பதை இவனிடம் விளக்கமாகக் கூறினேன். மேலும் பணம் தருகிறேன் என்பதை நீதானே முடிவு செய்தாய், அதனால் நீயே பணம் தர மாட்டேன் என்று சொன்னால் அது வாக்குறுதியை மீறியது ஆகாது, நீ செய்ததை, நீ முடிவு எடுத்ததை மாற்றும் தகுதி உனக்குண்டு என்பதை இவனிடம் விளக்கினேன்,” என்றார்.


ஸ்ரீகோமளாம்பிகை சமேத ஸ்ரீலட்சமணேஸ்வரர் கரிவலம்வந்தநல்லூர்
மிகவும் அரிதாகவே ஸ்ரீகோமளவல்லி, ஸ்ரீகோமளநாயகி என்ற நாமத்தில் எழுந்தருளிய அம்பாள் மூர்த்திகளை தரிசிக்க இயலும். கலியுக நியதியாக இரக்கமில்லாத பெண்மையுடன், மீசை, தாடி வளர்தல், உடலமைப்பு போன்ற காரணங்களால் பல பெண்களும் பெண்களுக்குரித்தான கோமளமான, மென்மையான தன்மையுடன் இல்லாத காரணத்தால் அத்தகைய பெண்களுக்கு அருள்புரியும் தன்மை உடையவர்களே இத்தகைய கோமள பெயர் கொண்ட நாயகி மூர்த்திகள். ஆனால், இத்தகைய மூர்த்திகளை தரிசித்தாலும் விதி வசத்தால் அவர்கள்மேல் ஈடுபாடு கொள்ளாத மனப் பான்மையே பெண்களுக்கு வளரும் என்பதும் உண்மையே. இருந்தாலும் கோடியில் ஒருவராக தங்கள் சுபாவ தன்மையை மாற்றி கோமளமாக ஜொலிக்க விரும்பும் பெண்களுக்கு உதவி செய்யும் செய்யும் தெய்வமே கரிவலம்வந்தநல்லூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகோமளவல்லித் தாய் ஆவாள். ஸ்ரீகோமளாம்பிகையை மருதாணி இட்ட கை, கால்களுடன் வணங்கி தாமே தொடுத்த மலர்மாலைகளை அம்பிகைக்கு சூடி வணங்குதலால் உடம்பிலும் மனதிலும் கோமளத் தன்மை பெண்களுக்கு பெருகும் என்பது உறுதி. இவ்வாறு மீசை, தாடி, கட்டைக்குரலுடன் இருக்கும் பெண்கள் கோமளாம்பிகையை வழிபட்டு கை கால்களுக்கு மருதாணி இட்டு வணங்குவதல் சிறப்பாகும். பட்சத்திற்கு ஒரு முறையாவது இத்தகைய வரிபாடுகளை இயற்றி வருதல் நலம்.


ஸ்ரீஅதிகார நந்தீஸ்வரர் கரிவலம்வந்தநல்லூர்
சித்தர் குல நாயகராம் ஸ்ரீஅகத்திய முனியும் திருக்கயிலாயத்தின் காவல் மூர்த்தியுமான ஸ்ரீஅதிகார நந்தீஸ்வர மூர்த்தியும் அருகருகே எழுந்தருளிய அற்புத திருத்தலமே கரிவலம்வந்தநல்லூராகும். பூலோகத்தில் உள்ள திருக்கோயில்களில் எத்தகைய வழிபாடுகளை இயற்ற வேண்டும், எந்த நாமாவளிகளை ஓத வேண்டும், சுவாமிக்கு என்ன நைவேத்யம் படைக்க வேண்டும் என்று முடிவு செய்பவரே அதிகார நந்தீஸ்வர மூர்த்தி. ஆனால் பார்வதி தேவியே கிரிவலம் வருவதாக இருந்தாலும் அன்னை பார்வதி எந்த விதமான கிரிவலத்தை மேற்கொள்ள வேண்டும், அவர்கள் கிரிவலத்தை எங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்பவர் திருஅண்ணாமலை ஸ்ரீகுதூகல நந்தீஸ்வர மூர்த்தியே ஆவார். எனவே ஸ்ரீஅதிகார நந்தீஸ்வர மூர்த்தியும் சித்தர்குல நாயகரான ஸ்ரீஅகத்திய முனியும் அருகருகே எழுந்தருளிய அற்புத தரிசனம் காணக் கிடைக்காத ஒன்றாகும். IAS, IPS போன்ற உயர் பதவி வகிப்பவர்களும், நீதிபதிகளும், அமைச்சர்களும் பெறுதற்கரிய ஸ்ரீஅகத்தியர் ஸ்ரீஅதிகார நந்தி மூர்த்திகளை தரிசனம் செய்து வந்தால் தங்கள் துறையில் ஏற்படும் இன்னல்களைத் தீர்த்துக் கொள்ளலாம். இவ்வழிபாடுகளுக்கு உரித்தான தான, தர்ம முறைகளை தக்க சற்குருவை நாடித் தெரிந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.


மனிதர்களின் தெய்வீக நிலை அவர்களின் தற்போதைய பிறவியைப் பொறுத்து அமையும். அது போல் மகான்களின் தெய்வீக நிலை அவர்கள் இதுவரை அமைத்த ஜீவசமாதிகsன் எண்ணிக்கையை வைத்து உறுதிப்படும். இவ்வகையில் நம் சற்குரு வரலாறு காணாத 51 ஜீவ சமாதிகளை பூலோகத்தில் பெற்று தன் ஆதி இருப்பிடமான குருமங்கள கந்தர்வ லோகத்தில் எழுந்தருளி உள்ளார். இந்த வைபவத்தை பூலோக மக்கள் கொண்டாடும் நாளே 30.7.2022 சனிக் கிழமை ஆகும். இந்த கொண்டாடத்தின் தன்மைகளை விளக்குவதே இங்கு மூன்றாம்பிறை முத்தோரணம் என்ற தலைப்பின் கீழ் நீங்கள் காணும் வர்ணனையாகும்.


ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருவைகாவூர்
வேறெங்கும் காண இயலாத செங்கோல் ஏந்திய ஸ்ரீதட்சிணாமூர்த்தியை திருவைகாவூர் திருத்தலத்தில் தரிசித்து மகிழலாம். செங்கோல் ஏந்திய தட்சிணா மூர்த்தியுடன் ஸ்ரீமகாவிஷ்ணுவும் ஸ்ரீபிரம்மாவும் காட்சி நல்குகின்றனர். பொய் கூறியதால் தனக்கு கோயில் எதுவும் அமையாது என்ற சாபத்தைப் பெற்ற பிரம்மா தன்னுடைய சாபம் தீர தரிசனம் செய்த தலங்களுள் திருவைகாவூர் திருத்தலமும் ஒன்றாகும். இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி உடைந்த செங்கோலுடன் காட்சி தருகிறார்.இவ்வாறு தங்கள் தவறுகளால், பொய்யுரைகளால் தங்கள் துறையில் தவறுகள் செய்திருந்தால் அவர்கள் பிராயசித்தம் பெற உதவும் தலமே திருவைகாவூர் ஆகும். தன் தவற்றை உணர்ந்து கொண்ட திருமாலுக்கு இறைவன் திருக்காட்சி நல்கிய திருத்தலமும் இதுவேயாகும். அதனால் செங்கோல் ஏந்திய ஸ்ரீதட்சிணா மூர்த்தி அருகிலேயே ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிஷ்ணு இவர்களின் தரிசனமும் கிடைக்கின்றது. மேலோட்டமாக பார்ப்பதற்கு தவறு செய்த பிரம்மா, தவற்றை ஒத்துக் கொண்ட ஸ்ரீமகாவிஷ்ணு, இவர்களுக்கு அருள்புரியும் உடைந்த செங்கோல் ஓச்சும் ஸ்ரீதட்சிணா மூர்த்தி. ஆனால், இவர்கள் அனைவரும் காவல் மூர்த்திகளாய் எழுந்தருளி உள்ளார்கள் என்றால் திருவைகாவூர் ஈசனின் பெருமையை வாய் விட்டுக் கூறத்தான் முடியுமா ?


ஸ்ரீவில்வவனநாதர் திருவைகாவூர்
உயர்பதவி வகித்தவர்கள், செல்வந்தர்கள் தங்கள் தவறுகளால் தங்கள் உடைமைகளை இழந்து வருந்தும்போது அவர்கள் செங்கோல் ஏந்திய ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டு சுத்தமான காய்ச்சிய பசும்பாலில் குங்குமப்பூ போட்டு தானமளித்த பின்னர் கரிவலம்வந்தநல்லூரில் அருள்புரியும் ஸ்ரீஅகத்திய முனிவரையும் ஸ்ரீஅதிகார நந்தியையும் தரிசனம் செய்வதால் இழந்த தங்கள் பதவியை மீண்டும் பெற வாய்ப்புண்டு. சுசீந்திரம் உத்தமர்கோவில் போன்ற திருத்தலங்களில் சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மும்மூர்த்திகள் தனித்தனியே எழுந்தருளி இருந்தாலும் இம்மூன்று மூர்த்திகளையும் ஒரே இடத்தில் ஒருசேர தரிசனம் செய்வதாக அமைந்துள்ளதே திருவைகாவூர் திருத்தல சிறப்பாகும்.


மூன்று பருப்புகள் சேர்ந்த வேர்க்கடலையை கட்டி மாலையாக்கி இம்மூர்த்திகளுக்கு அணிவித்து வழிபடுவதலும் மூன்று பருப்புகள் சேர்ந்த நிலக்கடலையுடன் வெல்லம் சேரத்து தானமாக அளித்தலும் கிடைத்தற்கரிய பேறு ஆகும். இத்தகைய வழிபாடுகளால் கடவுள் நம்பிக்கை, குரு நம்பிக்கை வலுவடையும் என்பது உண்மை. தான தர்மங்களும் பிறர் நன்மைக்காக தன் உடலைத் தேய்த்தலுமே ஆன்மீகத்தின் ஆணி வேராக அமையும் என்பதே நம் குருமங்கள கந்தர்வா அடிக்கடி வலியுறுத்தும் உண்மையாகும்.


ஸ்ரீஆதிசங்கரர் அருளிய ஸ்ரீசக்கரம் கரிவலம்வந்தநல்லூர்
வடக்கு நோக்கி இவ்விடத்தில் நின்று கொண்டு ஸ்வஸ்தி துதிக்கு பின்னர் சற்குரு தனக்காக செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தால் குரு நம்பிக்கை பெருகும். அவ்வாறு சற்குரு தனக்காக செய்த தியாகங்களை நினைவுகூர முடியாதவர்களும் சற்குருவின் வழிகாட்டுதல் அமையப் பெறாதவர்களும் 21 முறை சாஷ்டாங்கமாக ஒவ்வொரு முறை ஸ்ரீசக்கரத்தை தரிசனம் செய்த பின்னர் கீழே விழுந்து வணங்குவதால் நிச்சயமாக இப்பிறவிலேயே சற்குருவின் வழிகாட்டுதலை ஏதாவது ஒரு ரூபத்தில் பெறும் மார்க்கம் உண்டாகும். கொடி மரத்திற்கு அருகில் அமைந்துள்ள ராசி சக்கரத்தை வழிபடுதலாலும் சற்குருவின் மேல் நம்பிக்கை வளரும் என்பது உண்மையே. ஐராவத யானை முதலில் இந்த ஆலயத்தை வலம் வந்த பின்னர் இந்த இடத்தில் நின்று கொண்டு வடக்கு நோக்கி வணங்கிய பின்னரே ஆலயத்தினுள் செல்லாமலே ஐராவத யானைக்கு மூலவரின் தரிசனம் கிட்டியது. அதனால் இந்த க்ஷேத்திரம் கரிவலம்வந்தநல்லூர் ஆயிற்று. நம்பிக்கை உள்ளவர்கள் இன்றும் ஐராவத யானை தியானத்துடன் கோயிலை வலம் வந்து தற்போது ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பீடத்தின் கீழ் தரையில் வடக்கு நோக்கி விழுந்து வணங்குதலால் மூவரின் சூட்சும தரிசனம் கிட்டும் என்பது உண்மையே. இதுவும் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். வேறு எந்த தலத்திலும் இவ்வாறு மூலவரின் தரிசனம் பெறுதல் சாத்தியமில்லை என்பதை உணரவும். இதற்கு முக்கிய காரணம் ஊரின் பெயரே குருவைக் குறிக்கும் மூன்றெழுத்தாக (12=1+2=3) அமைந்திருப்பதும் ஒன்றாகும். இது அரிசி என்ற பெயருள்ள மூன்று எழுத்தில் அமையும் ஊராக திருநெல்வேலியில் அமைந்திருப்பதும், அந்த ஊருக்கு உரிய ஆறெழுத்து கரிவலம்வந்தநல்லூருக்கு குசா எண்ணாக (3 x 2 = 6) அமைந்திருப்பதும் இறைவன் கருணையே அன்றி இது வெறுமனே ஏனோதானோ என்று அமையவில்லை என்பதை உணர்ந்து கொள்ளவும். மேலும் கீழ் நோக்கிய ஐந்து முக்கோணங்களுடனும் மேல் நோக்கிய நான்கு முக்கோணங்களுடனும் பொலியும் ஸ்ரீசக்கரம் ஒன்பது கோபுர கலசங்கள் பொலியும் கரிவலம்வந்தநல்லூரில் அமைந்திருப்பதும் இறைவனின் கருணையை வலுப்படுத்துவதாகவே உள்ளது அல்லவா ?


ஸ்ரீசுப்ரமண்யசுவாமி கரிவலம்வந்தநல்லூர்
இத்தலத்தின் அம்பிகையின் பெயர் ஸ்ரீஅதுல்யநாயகி, ஸ்ரீஒப்பிலாநாயகி என்பதாகும். எனவே அதுல்யா என்ற பெயருடையவர்கள் அவசியம் வணங்க வேண்டிய தெய்வமே கரிவலம்வந்தநல்லூரில் குடிகொண்ட நாயகி. அதுல்யா என்றால் ஈடுஇணையற்று, ஒப்பிலாதவள் என்ற பெயரும் இருப்பதால் ஈடுஇணையற்ற, ஒப்பில்லாத சாதனைகள் புரிய நினைக்கும் அனைவரும் வணங்கி வழிபட வேண்டிய தெய்வமே ஸ்ரீஅதுல்யநாயகி ஆவாள். உடனே உங்கள் மனதில் அப்படி என்ன ஒப்பில்லாத காரியம் அம்பாள் நிறைவேற்றினாள் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்த அனவைரும் ஆணின் துணையுடனே குழந்தையைப் பெற வேண்டும் என்பது விதியாக இருக்க இந்த விதிக்கு விலக்காக அம்பிகை ஆண் துணையின்றி கணேசனை குழந்தையாகப் பெற்றெடுத்தாள். ஆம், பார்வதியின் திருமேனியிலிருந்து தோன்றியவர்தானே கணபதி மூர்த்தி. அவரே இத்தலத்தை அலங்கரிக்கும் ஸ்ரீசௌபாக்ய கணபதி மூர்த்தி ஆவார். இவ்வாறு ஒப்பில்லா குழந்தையாகப் பிள்ளையார் தோன்றினாலும் பூலோக நியதியாக சுவாமியின் வலப்புறத்தில், அதாவது ஆண் சக்திகள் பொலியும் இடத்தில் அமர்ந்துள்ளது பூலோக மக்களின் நலன் கருதியே. அதே போல பெண்ணின் சம்மந்தமில்லாமல் தோன்றிய முருகப் பெருமானும் கரிவலம்வந்தநல்லூர் திருத்தலத்தில் தண்டபாணி தெய்வமாக சுவாமியின் இடப்புறத்தில் எழுந்தருளி உள்ளார். இவ்விரு மூர்த்திகளின் தரிசனத்தைப் பெற்று ஆத்ம விசாரம் செய்து வந்தால் ஆண் பெண் தத்துவங்கள் பற்றிய விளக்கங்கள் தெரிய வரும்.


ஸ்ரீதண்டபாணி தெய்வம் கரிவலம்வந்தநல்லூர்
திருஅண்ணாமலை கிரிவலம் வந்து ராஜராஜேஸ்வரி தரிசனம் பெற்று வருவதாலும் ஆண் பெண் தத்துவ இரகசியங்களை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் இத்தகைய ராஜராஜேஸ்வரி தரிசனத்தைப் பெற்றும் காமோ கார்ஷீத் மந்திரத்தை ஓதியுமே பெண்கள் மேல் உள்ள மோகத்தைக் களைந்தார் என்பது சித்தர்கள் கூறும் இரகசியம் ஆகும். அருணகிரியை ஒரு லட்சம் தடவைக்கு மேல் கிரிவலம் வந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு லட்சம் தடவைக்கு மேல் சுடுகாட்டில் காமோ கார்ஷீத் மந்திரத்தை ஓதி அனைத்துப் பொருட்களின் மேல் உள்ள ஈடுபாட்டை சிறப்பாக பெண் மோகத்தைக் களைத்துக் கொண்டார் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். சுவாமிகளின் ஜாதகத்தை பரிசீலனை செய்பவர்களும் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளலாம். நாயன்மார் அனைவர்களுமே இவ்வாறு பெண் மோகத்தைக் களைத்துக் கொண்டவர்கள்தான். அவர்களுக்கு பெண்கள் மேல் ஆசை இல்லை என்று பொருள் கிடையாது.அவர்கள் தங்கள் குழந்தைகளை, மனைவியை உயிருக்கு உயிராக நேசித்தார்கள். ஆனால் இறைவன் மேல் சற்றே அதிகமாக அவர்களுடைய அன்பு இருந்தது என்பதே பொருள். நாயன்மார்களின் மூன்றாவதாக வைத்துப் பாடப்பட்ட ஸ்ரீஇயற்பகை நாயனார் தன்னுடைய மனைவி குழந்தைகளை உயிருக்கு உயிராக நேசித்தவர்தான். ஆனால், அவருடைய மைத்துனி காளிந்தி அவர்மேல் அன்பு கொண்டு தன்னை முழுவதுமாக அவருக்கு அர்ப்பணிக்க எண்ணம் கொண்டபோது அதை நிராகரித்து இறைவன் மேல் அதிகப்படியான தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினார். நாயன்மார்களை விடவும் இறைவன் மேல் அன்பைப் பொழிந்தவரே ஸ்ரீமாணிக்கவாசகர் ஆவார். அவர் இறைவனைத் தவிர வேறு எதையும் அறியாதவர். ஸ்ரீமாணிக்கவாசகர் நாயன்மார்களுக்கு முன் தோன்றியவராக இருந்தாலும் அவர் இறைவன் மேல் கொண்ட அன்பின் ஆழத்தைப் புரிந்து கொணடதால் சேக்கிழார் பெருமான் அவரை 63 நாயன்மார்களில் ஒருவராக வைத்துப் பாடவில்லை என்பதே சற்குரு வெங்கடராமன் அவர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும்.


ஸ்ரீகாமதகன சித்தர் ஸ்ரீவில்லிபுத்தூர்
நாம் அறிந்த ஆண் பெண் உடலுறவு சுகத்தை விட மேலான சுகத்தை உணர்ந்தவர்களே சித்தர் பெருமக்கள் ஆவார்கள். இறைவனைத் தவிர வேறு எதையும் அறியாத நிலையில் உணர்வதே இத்தகைய சுகமாகும். இத்தகைய சுகத்தை மனிதர்களும் அறிய வழிகாட்டுபவரே ஸ்ரீவில்லிபுத்தூர் சிவத்தலத்தில் உறையும் ஸ்ரீகாமதகன சித்தர் பெருமான் ஆவார். இந்த சித்தர் பெருமானை வணங்கி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஸ்ரீராஜராஜேஸ்வரி தரிசனம் பெற்று மீண்டும் கரிவலம்வந்தநல்லூரில் ஸ்ரீராஜராஜேஸ்வரி பீடத்தை தரிசனம் செய்வதே சாதாரண மக்களும் காமத்தை வெல்லும் வழியாகும். இந்த முக்கூட்டு தரிசனத்தை ஒரு பட்சத்திற்குள் நிறைவேற்றுவதே சிறப்பாகும். பள்ளியறைக்குப் பால்தானம் அதாவது சுத்தமாக காய்ச்சிய பசும்பாலுடன் குங்குமப்பூ கலந்து சிவன் கோயிலில் இரவில் அளிப்பது சிறப்பாகும். குங்குமப்பூ கலந்த பால் தானம் அளிப்பதும், பால் அருந்துவதும் சிறப்பே. பசும்பால் காமத்தைக் கூட்டுவது கிடையாது, அது ஒரு காமசமனியே. இந்த முக்கூட்டு தரிசன பெருமையை உலகிற்கு உணர்த்திய பெருந்தகையே ஸ்ரீரஜனீஷ் ஆவார். அத்வைத தத்துவத்தில் உச்சாணிக் கொம்பில் வீற்றிருப்பவர். இவரும் பூமிக்கு வந்தார். எதற்காக ? ஆண் பெண்ணிற்கு இடையே அமையும் காம சுகம் என்னும் உடலுறவு சுகத்திற்கு அப்பாற்பட்டதே இறையுணர்வு என்பதை உலகிற்கு உணர்த்த இப்பூமியில் தோன்றியவரே ஸ்ரீரஜனீஷ் ஆவார்.


ஸ்ரீராஜராஜேஸ்வரி பீடம் கரிவலம்வந்தநல்லூர்
தன்னுடைய எண்ணத்தை நிறைவேற்றும் முகமாக ஒரு முறை ஒருவரை தன்னுடைய இரண்டு நடுவிரல்களை தொடுமாறு ஒரு பெண் எதிரில் வைக்கச் சொன்னார். அந்நிலையில் அவ்வாறு விரல்களை வைத்தவருக்கு சென்னை ஸ்ரீகபாலி கோயிலின் தீப ஆராதனை காட்சி கிடைத்ததாம். அந்த அன்பரோ தினமும் ஸ்ரீகபாலி கோயிலின் தீப ஆராதனையை தரிசித்து வருபவர். அதனால் அவருக்கு ஆச்சரியம் எல்லை மீறி ஸ்ரீரஜனீஷ் அவர்களைக் கேட்டபோது, “இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீங்கள் என்னுடன் தொடர்ந்து இருந்தால் இது போன்ற பல அற்புதங்களைப் பார்க்கலாம்,” என்று கூறினார். ஆண் பெண் உடலுறவு இரகசியங்களை எல்லாம் பலருக்கும் நடைமுறையில் நிறைவேற்றி புலப்படுத்தினாலும் தான் எந்தப் பெண் மீதும் ஈடுபாடு கொள்ளவில்லை. மாறாக ஒரு இளஞ் ஜோடியை தயார் செய்து அவர்கள் விரல்களைத் தொடும் உணர்ச்சியில் ஆண் பெண் உறவு நிலையைக் கொண்டு வந்து உணர்த்தி அவர்கள் ஒருவர் உடல் மேல் மற்றொருவர் ஈடுபாடு கொள்ளாத நிலையை அடைந்தால் தான் கடவுள் சுகத்தை வெளியிடுவதாகத் தெரிவித்தார். ஆனால் அவருடைய எண்ணத்திற்கு விபரீதமாக அவர்களின் நடவடிக்கை போகவே அதாவது அந்த இளஞ்ஜோடி ஒருவரையொருவர் விரும்பி திருமணம் செய்து கொள்ளவே தன்னுடைய திட்டத்தைக் கைவிட்டு மேலுலகம் சென்று விட்டார் ஸ்ரீரஜனீஷ்.


பரகாய பிரவேச கோபுரம் திருஅண்ணாமலை
18 கலசங்களுடன் திகழும் கோபுரம் இது ஒன்றே. நமது ஸ்ரீஅகத்திய ஆஸ்ரமத்திற்கு எதிரே இருப்பது.
ஒன்பது என்பது முழுமையைக் குறிப்பதால் உடல் ஆசை, மன ஆசை என்ற பற்றுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் இக்கோபுர தரிசன பலன்களில் ஒன்றாகும். அதிலும் சிறப்பாக மன ஆசையான காமத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இத்தகைய பரகாய பிரவேச கோபுரங்களின் தன்மையாகும்.


ஸ்ரீவிவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது நம் குருமங்கள கந்தர்வா, “இன்றைக்கு விவேகானந்தர் இருந்தால் அவர் நிச்சயம் திருமணம் புரிந்து கொண்ட கிரகஸ்தராக ஆன்மீகத்தைப் பரப்பும் பணியில் ஈடுபடுவார். காரணம் அவருக்கு பெண் மோகம் என்பது துளியும் இல்லை என்றாலும் தன்னைப் பின்பற்றும் பலரும் பிரம்மச்சர்யம் என்ற பெயரில் காமக் கடலில் விழுந்து தத்தளிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு.” இவ்வாறு காமத்தை முறைப்படுத்துவதே இத்தகைய 18 கலச கோபுரங்களின் தரிசனம் ஆகும். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீஅங்கபிரதட்சிண அண்ணாமலை சுவாமிகள் போன்று காமத்தை வென்ற பலரும் சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனத்தைக் கண்டு காம சக்திகளை முறைப்படுத்தி உள்ளனர். எனவே மணமானவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தரிசனங்களுள் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.


திருஅண்ணாமலையார் திருக்கோபுரம்
காமத்தை வென்றவர்களே முறையான சந்ததிகளைப் பெற முடியும் என்பது உண்மையே. மேலும் காமத்திற்கு அப்பாற்பட்டவர்களே ஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் உள்ளது போன்ற பரகாய பிரவேச கோபுரத்தை உருவாக்க முடியும் என்பது உண்மை. சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் “காட்டும்” திருஉடலில் முகத்தில், நெஞ்சில், அக்குள், வயிற்றுப் பகுதிகளில் ரோமம் என்பதே கிடையாது. ஸ்ரீபரமசிவ மூர்த்தி, பிள்ளையார், முருகன் போன்று தானும் ஓர் அவதார மூர்த்தி என்பதை இத்தகைய வெளிப்படையான சான்றுகள் மூலமும் உலகிற்கு உணர்த்தியவரே ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார். காலையில் எழுந்தவுடன் 9 அல்லது அதற்கும் மேற்பட்ட கலசங்கள் உள்ள கோபுர தரிசனம் காட்டும் திருக்கோயில் படங்களை தரிசனம் செய்வது நல்லது என்பதற்கு ஒன்பது கலசங்கள் உள்ள கோபுரங்கள் மனித உடலில் உள்ள ஒன்பது சூட்சும சரீரங்களை குறிப்பதால் அந்த ஒன்பது உடல்களும் நன்முறையில் சமூகத்திற்கும் இறைவனுக்கும் பயன்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட கலசங்கள் உள்ள கோபுரங்களை அல்லது படங்களை காலையில் தரிசனம் செய்ய வேண்டும் என்று பெரியோர்கள் வைத்தார்கள்.


திருவாரூர் திருக்கோபுரங்கள்
மிகவும் அரிதாக 21 கோபுர கலசங்களுடன் திகழும் திரு தியாகராஜர் திருச்சன்னதியில் பொலியும் கோபுரங்களாகும். இவ்வாறு மூன்று கோபுரங்கள், 21 கலசங்களுடன் (11+9+1) பொலியும் கோபுரங்கள் காணுதற்கரிய காட்சியாகும். மே மாதம் 21ந் தேதி ஜனனம் கொண்ட சற்குரு ஸ்ரீவெங்கடராம சுவாமிகளே இத்தகைய முழுமையான பரகாய பிரவேச கோபரத்தை பிரதிஷ்டை செய்ய முடியும். ஸ்ரீ சுவாமிகள் மேற்கூறிய 21ந் தேதி பிறந்தது ஒரு சாதனை என்றால் கருகும் உடலிலிருந்து வலது கரம் மீண்டு, நீண்டு அனைவருக்கும் ஆசி அளித்தது உலக வரலாற்றில் இடம் பெறக்கூடிய அதிசயமும் அற்புதமுமாகும். இத்தகைய உலகளாவிய சாதனைக்கு உறுதுணையாக இருப்பதே சனீஸ்வர பகவானின் அருட்பங்காகும். ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளைப் போல் லக்னத்தில் மட்டுமல்லாது நவாம்சம், துவாதசாம்சம் என்ற ராசி பாகுபாட்டின் ஒவ்வொன்றிலும் ஸ்ரீசனீஸ்வர பகவான் ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் ஜாதகத்தில் லக்னத்தில் வீற்றிருப்பதே ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் எவரும் புரியாத சாதனையான 18 கலசங்கள் உடைய பரகாய பிரவேச கோபுர பிரதிஷ்டையை நிகழ்த்துவார்கள் என்பதைக் குறிப்பதாகும். இவ்வாறு ஸ்ரீசனீஸ்வர பகவானின் சேர்க்கையை கொண்டவர்களே இத்தகைய உலகம் வியக்கும் பரகாய பிரவேச கோபுரத்தைத் தோற்றுவிக்க முடியும் என்பது உண்மையே.

 

திருத்தல யாத்திரை தொடரும்

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam