அமிர்தத்தைப் படைத்த ஈசன்தான் ஆலகால விஷத்தையும் படைத்தான் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்திருவிசயமங்கை சிவத்தலம்

சுவாமிமலை அருகிலுள்ள திருவிசயமங்கை சிவத்தலம் அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் பெற்ற சிறப்பான தலமாகும். அர்ச்சுனனுக்கு பாசுபத அஸ்திரம் அளித்ததோடு திருவிஜயமங்கை ஈசனின் பணி முடிந்து விட்டதா ? இல்லையே. அதற்கு முன்னும் பின்னுமாக ஈசனின் அருட்பணிகள் எத்தனையோ. ஆனால், இது போன்ற புராண சம்பவங்கள் ஈசனின் அருட் பாங்கினை குறிப்பதால் நமக்குத் தேவைப்படும் அருட்சக்திகளை அந்தந்த திருத்தலஙகளிலிருந்து பெற நமக்குத் துணை புரிவதால் நாம் இத்தகைய இதிகாச, புராண சம்பவங்களை நினைவு கூர்கின்றோம். நாம் எடுக்கும் எந்த காரியத்திலும் நமக்கு வெற்றியைத் தேடித் தருவதே விஜயமங்கை ஈசனின் அருள் வழங்கும் தன்மையாக இருந்தபோதிலும் இந்த வெற்றி தரும் ஈசனை பூலோகத்தில் நாடுவோர் கிடையாதே ஏன் என்ற எண்ணம் இவரை தரிசிக்கும் பலருக்கும் தோன்றுவதே இயல்பே. இதற்கு காரணம் நல்ல குறிக்கோள்களுக்கு மட்டுமே திருவிஜயமங்கை ஈசனின் அருள் சுரக்கும் என்பதே உண்மை. இதை பலரும் உணர்ந்துள்ளதால் திருவிஜயமங்கையை நாடும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.


ஸ்ரீவிஜயநாதர் திருவிசயமங்கை
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்லாம். நல்ல காரியம் நிறைவேற இறைவனை நாட வேண்டுவதன் அவசியம் என்ன ? நல்ல காரியம் என்றாலே அது இயற்கையாகவே வெற்றியைத் தானே தர வேண்டும் என்று தோன்றலாம். உண்மையில் நல்ல காரியமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த காரியமாக இருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கு எத்தனையோ தடங்கல்களும் போராட்டங்களும் வரும் என்பது இயற்கையே. நல்ல காரியம் என்பதால் மட்டும் ஒரு காரியத்தை சுலபமாக நிறைவேற்றிவிட முடியாது என்பதை உணர்த்துவதும் திருவிசயமங்கையின் தரிசனப் பலன்களில் ஒன்றாகும். உண்மையில் தவறான ஒரு காரியத்திற்கு கை கொடுக்கும் தேவதைகளின் எண்ணிக்கையை விட நல்ல காரியத்திற்கு துணை நிற்கும் தேவதைகளின் எண்ணிக்கை குறைவு என்பதும் இதற்கு ஒரு காரணமாகும். உதாரணமாக நீங்கள் தெரியாத ஒரு ஊரில் சாராயக் கடைக்கு வழி கேட்டால் உடனே அதற்கு வழி சொல்ல பலர் முன் வருவார்கள். ஆனால், ஒரு சிவாலயம் என்றால் அதைத் தங்கள் முதுகுப் பின்னால் வைத்துக் கொண்டே அப்படி ஒரு கோயில் அங்கு இல்லவே இல்லை என்று சாதிப்போரும் உண்டு. விஜயம் என்றால் வெற்றி. இவ்வாறு வெற்றியை தன் பெயரிலேயே உடைய திருத்தலமே திருவிஜயமங்கையாகும். இத்தல ஈசனை தரிசிப்பவர்கள் அனைவரும் தங்களுடைய நியாயமான பிரார்த்தனையில் வெற்றியை அடைவார்கள் என்பது உறுதி. அர்ச்சுனன் விஜயன் என்ற திருநாமத்தை இத்தலத்தில் பெற்றதால் தான் எடுத்த எந்த காரியத்தையும் வெல்லும் வெற்றி வீரனாகத் திகழ்ந்து எம்பெருமானான பசுபதியிடமே பாசுபத அஸ்திரத்தைப் பெறும் தகுதி பெற்றவனானான்.


ஸ்ரீதுவார சக்தி கணபதி விசயமங்கை
துவார சக்தி அம்பிகை என்று சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் திருத்தலம் போன்ற சில குறிப்பிட்ட தலங்களில் மட்டுமே எழுந்தருளிய தெய்வ மூர்த்திகள் உண்டு. இத்தகைய துவார சக்தி அம்பிகைகள் பெண்கள் பூப்பு அடைதல் போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் தருபவர்களாக அமைகிறார்கள். இவ்வாறு துவார சக்தி அம்பிகைகள் எழுந்தருளாத திருத்தலங்களில் இத்தகைய துவார சக்தி கணபதி மூர்த்திகளே பெண்களின் பூப்பு சம்பந்தமான பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும் மூர்த்திகளாகத் துலங்குகிறார்கள். எனவே கன்னிமூலை கணபதி, நர்த்தன கணபதி, ஆதிரை கணபதி, ஆநிறைகொண்ட கணபதி என்றவாறாக ஒவ்வொரு கணபதி மூர்த்தியின் அனுகிரக பாங்கும் வித்தியாசம் உடையதே. திருச்சி நாகநாத சுவாமி கோயில் போன்ற திருத்தலங்களில் உள்ள துவார சக்தி கணபதி மூர்த்திகள் இத்தகைய விசேஷ சக்திகளுடன் துலங்குகிறார்கள். அனைத்து விதமான நாகதோஷங்களுக்கும் நிவாரணம் அளிக்கவல்லவர் திருச்சி ஸ்ரீநாகநாதர் என்றாலும் இத்திருத்தலத்தில் உள்ள ஸ்ரீதுவார கணபதி மூர்த்தியை வணங்கினாலே எல்லாவிதமான நாக தோஷங்களுக்கும் தீர்வளிப்பதுடன் எத்தகைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்ற வல்லவர்களே இத்தகைய துவார சக்தி கணபதி மூர்த்திகள். உண்மையில் இத்தகைய துவார சக்தி மூர்த்திகள் உள்ள திருத்தலங்களில் மூலவரிடம் சுயநலமற்ற பொது பிரார்த்தனையை சமர்ப்பிப்பதே உசிதமானது. மற்ற பிரார்த்தனைகளை இந்த கணபதி மூர்த்திகளே செவிமடுத்து நிறைவேற்றி விடுகின்றனர் என்பது இவர்களின் சிறப்பு அம்சமாகும். பெண்களில் சில குழந்தைகள் 6, 7 வயதில் பூப்பு அடைந்து விடுவர். ஆனால் அவர்களுடைய உடல் மன வளர்ச்சியோ போதுமான அளவில் இல்லாததால் இது குறித்து அவர்களுடைய பெற்றோர்கள் அக்குழந்தைகளுடைய பாதுகாப்பு குறித்து மிகவும் கவலை கொள்வர். சில பெண் குழந்தைகள் 15, 20 வயதாகியும் பூப்பு அடையாமல் பெற்றோர்களுக்கு மிகவும் மன வேதனையை அளிப்பது உண்டு. இவ்வாறு பூப்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் மூர்த்தியே இத்தகைய துவார சக்தி கணபதி மூர்த்திகள் ஆவர். சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் தேங்காய் துருவல் கலந்த நீர்க் கொழுக்கட்டையை தானமளித்தலால் இத்தகைய பிரச்னைகளுக்கு அது ஒரு தீர்வாக அமையும்.


அர்ச்சுன தீர்த்தம் திருவிசயமங்கை
இங்குள்ள திருக்குளம் அர்ச்சுன தீர்த்தம் என்றே வழங்கப்படுகிறது. கரப்பான் பூச்சி, சுண்டெலி என்று எதற்கெடுத்தாலும் பயந்து நடுங்கும் தன்மை உள்ளவர்கள் ஏராளமாய் உண்டு. இத்தகையோர் இங்குள்ள அர்ச்சுன தீர்த்தத்தில் நீராடி வியாழக் கிழமைகளில் அவித்த சுண்டல் தானம் செய்து வந்தால் எடுத்த காரியத்தை மன தைரியத்துடன் நிறைவேற்றி காரிய சாதனை படைப்பார்கள். பல அற்புத மரங்கள் கொண்ட இத்தலத்தில் தலவிருட்சம் ஒன்றும் அமையவில்லை. மருத மரமே இத்தலத்திற்கு உரிய தலவிருட்சமாக சித்தர்கள் அறிவிக்கிறார்கள். அன்புள்ளம் கொண்ட பக்தர்கள் மருத மரத்தை இத்தல விருட்சமாக நட்டு பாதுகாத்து வந்தால் திரு விஜயமங்கை ஈசனுடைய அருளுக்குப் பாத்திரமாவார்கள். அர்ச்சுனன் இறைவனிடமிருந்து பெற்ற பாசுபத அஸ்திரமானது பொதுவாக அந்த அஸ்திரத்தைப் பெற்றவர்களைத் தவிர பிறர் கண்களுக்குத் தெரியாது என்பது மட்டுமல்லாமல் அந்த அஸ்திரத்தின் கிரணங்களே மற்றவர்களை அழிவிலிருந்து காக்கும் தன்மை உடையது என்பது உண்மை. அதனால் பாசுபத அஸ்திரம் பெற்ற அர்ச்சுனன் தன்னுடைய மற்ற திவ்ய அஸ்திரங்களை விராடபுர அஞ்ஞான வாசத்தின்போது ஒரு மரப்பொந்தில் மறைத்து வைத்து அந்த அஸ்திரங்களைக் காக்க அங்கு தொங்கிய சடலத்தை அந்த மரப் பொந்தின் முன் வைத்து விட்டான். அப்போது பாசுபத அஸ்திரம் பிறர் கண்களுக்குத் தெரியாது என்பதால் அந்த அஸ்திரத்தை கழற்றாமல் விராடபுர அஞ்ஞான வாசத்தின்போதும் தன்னிடமே வைத்திருந்தான். அதனால்தான் ஒரு முறை விராடபுர ராஜா நகுலனுடன் ரதத்தில் பயணம் செய்தபோது குதிரைகள் சட்டென ஓரிடத்தில் நின்று விட்டன. காரணம் கேட்டதற்கு அதனருகில் சென்ற நகுலன் குதிரைகளின் மொழியை அறிந்திருந்ததால் சற்று நேரத்தில் சுமார் மூன்று ஆள் உயரத்திற்கு அதாவது 18 அடி உயரத்திற்கு காட்டாற்று வெள்ளம் வரும் என்பதை உணர்ந்து ராஜாவுடன் அருகில் இருந்த மரம் ஒன்றில் ஏறி உயர் தப்பினான். இவ்வாறு அரண்மனையில் மாறுவேடத்திலிருந்த அர்ச்சுனன் அணிந்திருந்த பாசுபத அஸ்திரத்தின் மகிமையால் நகுலன் மட்டுமல்லாது விராட தேசத்து மன்னன், குதிரை அனைவரும் காட்டாற்று வெள்ளத்திலிருந்து உயிர் தப்பினர். இவ்வாறு 18 உயரத்திற்கு எழுந்த காட்டாற்று வெள்ளத்தைப் பற்றி பேசப் புகுந்தால் அதுவே பெரியே புராணமாக மாறும் என்பது சித்தர்களின் குறிப்புரை.


ஸ்ரீமங்களநாயகி திருவிசயமங்கை
பாரதப் போரில் தர்மத்தைக் காக்க விஜயனின் ஆயுதங்கள் பயன்பட்டதால் அந்த அஸ்திரங்களைக் காத்த எதற்கும் பயன்படாத சடலமும் அந்த பட்டமரமும் உய்வடைந்து விராட பூமியிலிருந்தே மறைந்து விட்டன. நல்ல காரியத்திற்காக பயன்படும் எந்தப் பொருளுமே உய்வடையும் என்பதே உண்மை. இதை தெளிவுபடுத்துவதும் திருவிசயமங்கை ஈசனின் தரிசனப் பலன்களில் ஒன்றாகும். விராடபுரத்தின் அருகில் உள்ளதே தற்போதைய சஞ்சீவராயர் மலை அமைந்த பாடலூர் திருத்தலமாகும். அத்தல ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியை தரிசனம் செய்து விட்டு தன்னுடைய துணைவியாருடன் திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்ரீஅகஸ்திய விஜய அடியார் ஒருவர். அவர் சாலையைக் கடக்கும்போது சுமார் 150 கிமீ வேகத்தில் வந்த ஒரு ரேஸ் பைக் அவர்கள் மேல் மோதாமல் எவ்வாறோ அவர்களைக் கடந்து சென்று அம்மூவரும் காப்பாற்றப்பட்டனர். எனவே திருவிசயமங்கை, விராடபுரம், பாடலூர் இவையெல்லாம் பார்த்து தரிசனம் செய்து அனுபவிக்க வேண்டிய திருத்தலங்களாகும். உயிர்காக்கும் உத்தம தலங்களிவை. திருவிசயமங்கை தலத்தின் முகப்பு வாயிலில் ஸ்ரீநிருத்த கணபதி எழுந்தருளி இருப்பது அபூர்வமான ஆயத்த கோலமாகும். பொதுவாக இறைச் சன்னதிகள் கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ எழுந்தருள்வது உண்டு. கிழக்கு திசையே எல்லா திசைகளுக்கும் ஆரம்ப திசையாக இருப்பதால் புதிதாக வேலைக்கு அமர்தல், தேர்வுகள் போன்று புதிதாக ஆரம்பிக்கும் காரியங்களுக்கு முன்னால் இவ்வாறு கிழக்கு நோக்கிய மூர்த்திகளை தரிசனம் செய்தல் சிறப்புடையதாகும். மேலும் தெற்கு நோக்கும் ஸ்ரீநிருத்த கணபதி இத்தலத்தில் கோயில் வாயிலிலேயே ஆயத்தமாக எழுந்தருளி இருப்பது எத்தகைய நற்காரியங்களுக்கும் காரிய சித்தியை தரவல்ல தன்மையைக் குறிப்பதால் இவர் கிடைத்தற்கரிய தரிசன மூர்த்தியாக அமைகிறார்.


ஸ்ரீதட்சிணாமுர்த்தி திருவிசயமங்கை
நிருதி கணபதி வேறு நிருத்த கணபதி வேறு என்பதை இறையடியார்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
நிருதி மூலை என்னும் கன்னி மூலையில் தென் மேற்கு திசையில் எழுந்தருளியுள்ள கணபதி மூர்த்தியே கணக்கு, விஞ்ஞானம் போன்று மனதில் பதிய வைக்க கடினமான பாடங்கள கிரகிக்கவல்ல மனோ சக்தியைத் தரவல்லவர். திருமணமாகாத ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரபிரசாதியாக அமைவதால் கன்னி மூலை கணபதி என்றும் போற்றப்படுகிறார். நிருத்த கணபதி மூர்த்தி என்பவர் பொதுவாக கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ள கணபதி மூர்த்தி ஆவார். நிருத்தம் என்றால் நடனம் என்று பொருள். இரு கால்களையும் சமநிலையில் வைத்து நாட்டிய கோலத்தில் அருளும் தெய்வமே நிருத்த கணபதி ஆவார். நாட்டியம் மட்டுமல்லாமல் கராத்தே, குங்பூ போன்ற சண்டை பயிற்சிகளிலும் திடமான ஆரம்பநிலை பயிற்சியாக அமைவதும் நிருத்த நிலையே ஆகும். நிருத்த கணபதி என்பவர் நவமி என்ற ஒன்பதாம் திதிக்கு உரிய மூர்த்தி ஆவார். ஒன்பது என்பது பூரண எண்ணாக அமைவதால் இவர் பூரணத்தைக் குறிக்கும் கணபதி மூர்த்தியாகவும் அருள்கிறார். எனவே இந்த நிருத்த கணபதியை தரிசனம் செய்த அர்ச்சுனன் பூரண இறையம்சம் கொண்ட சிவபெருமானை வேடனாக சந்தித்து அவருடன் போரிட்டு பாசுபத அஸ்திரம் பெற்றது அதிசயம் அல்லவே.


திருவிசயமங்கை
வேடன் வடிவில் சிவபெருமான் தோன்றி அர்ச்சுனனுடன் மல்யுத்தம் புரிய வேண்டிய அவசியம் என்ன உங்களுக்குத் தோன்றலாம். மனித உடல் பஞ்ச பூதத்திலானாது. பஞ்ச பூதத்தை அடிப்படையாகக் கொண்ட மனித உருவில் அர்ச்சுனனுடன் போரிடும் கோலத்தில் அவனுக்கு அனுகிரகத்தை அளித்தால்தான் பஞ்ச பூத உடலைப் பெற்ற அர்சசுனனால் இறை சச்தியைப் புரிந்து கொள்ள முடியும் என்பதும் ஒரு காரணம். இது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இங்கு விவரிக்கிறோம். துர்கை என்ற ஒரு அடியார் இருந்தார். திருமணமாகி குழந்தைகளுடன் இருப்பவர். ஒரு முறை அவர் ஒரு மகானைச் சந்திக்க நேர்ந்தது. பூர்வ ஜன்ம தொடர்பினால் துர்கையை ஆட்கொள்ள நினைத்த அந்த மகான் துர்கையிடம், “நான் உன்னைக் காதலிக்கிறேன்,” என்றார். அந்த மகானின் தூய அன்பைப் புரிந்து கொள்ளாமல் சாதாரண மனித நிலையில் இருந்த அந்த பக்தை திருமணமான தன்னை எப்படி ஒருவர் காதலிக்க முடியும் என்று வியந்தாள். உண்மையில் அந்த மகான் ஆண் பெண் என்ற நிலையைக் கடந்த இறை நிலையில் இருந்தார்.


காரைக்கால் சிவாலயம்
கோயிலில் நாம் காணும் லிங்க வடிவம் என்பது ஆண் பெண் என்ற நிலையைக் கடந்த நிலையில் உள்ள இறை நிலையே. மேல் நாடுகளில் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தையைக் கொஞ்சம்போது, "I love you, darling!" என்று தங்கள் அன்பைத் தெரிவிப்பதுண்டு. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தரும் தின்பண்டம், ஆடைகள், வசதிகள் போன்றவற்றில் தங்கள் அன்புப் பரிமாற்றத்தைத் தெரிவிப்பதால் இவ்வாறு வார்த்தைகள் மூலம் தங்கள் தூய அன்பை வெளிகாட்ட வேண்டிய அவசியல் இல்லாது போய்விடுகிறது. இவ்வாறு இறைநிலையில் இருந்த மகான் தன்னுடைய தூய அன்பை வெளிப்படுத்தினாலும் அதைப் புரிந்து கொள்ள இயலாத நிலையில் அந்த பெண் அடியார் இருந்ததால்தான் அந்த மகான் அத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டி வந்தது என்பது இப்போது ஓரளவு புரிகின்றது அல்லவா ? ஆனால் ஒரு பெண்ணிற்கோ ஆணிற்கோ எது ஒருவருடைய மறைமுக ஆசை, எது ஒருவருடைய யதார்த்தமான அன்பு மொழிகள் என்பதை நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியாது. இறைவனின் அன்பிற்காக ஏங்கும் பலரும் தங்களுடைய பொருளை, கற்பை மற்றவர்களிடம் பறிகொடுத்து விட்டு பரிதவித்து நிற்பதையும் நாம் இன்று சமூகத்தில் பல இடங்களில் காண்கிறோம். இறைவனின் தூய அன்பிற்காக ஏங்கும் எவரும் எந்த ஆணிடமோ பெண்ணிடமோ ஏமாற வேண்டிய அவசியம் இல்லை என்பதை சுட்டிக் காட்டுவதே, தொட்டுக் காட்டுவதே திருவிசயமங்கை திருத்தல சிறப்பாகும். இறை அன்பிற்காக ஏங்கும் ஆணோ பெண்ணோ திருவிசயமங்கை ஈசனை நாடி வலம் வந்து அவர் உத்தரவை ஏற்று அதை மட்டும் நிறைவேற்றுவதால் இறைவனின் திருப்பாதங்களை அடைவர் என்பதில் எந்த வித ஐயப்பாடும் இல்லை. இவ்வாறு இறைவனின் திருப்பாதங்களை அடைந்த விசயமங்கைகளில் ஒருவரே ஸ்ரீகாரைக்கால் அம்மையார் ஆவார்.


காரைக்கால் சிவாலயம்
இறையருளால் ஒரு பெண்ணுக்குரித்தான சர்வ அங்க லட்சணங்களையும் முறையாகப் பெற்ற புனிதவதி என்ற மங்கை காரைக்கால் அம்மையாராக உருவாவதற்கு உதவிய தலமே திருவிசயமங்கை எனலாம். எனவே அர்ச்சுனன் விசயனாக மாறியது மட்டுமல்லாமல் பெண் குலத் தோன்றலான புனிதவதியார் ஸ்ரீகாரைக்கால் அம்மையார் என்ற புனித பட்டம் பெறுவதற்கு உதவிய தலமும் திருவிசயமங்கை என்பதைப் பலரும் உணர்ந்திருக்க நியாயமில்லை. புனிதவதியார் தன்னுடைய கணவனை இறைவனுக்காக பிரிந்தபோது சர்வ அங்க லட்சணங்களும் முறையாகப் பெற்ற ஒரு பெண் இந்த சமுதாயத்தில் சுதந்திரமாக இறைவனுக்காக கூட வாழ முடியாது என்பதை உணர்ந்ததால் தன்னுடைய இயற்கை அழகை இறைவனிடம் அர்ப்பணித்து பேயுருவத்தை பெற்றுக் கொண்ட தலமே திருவிசயமங்கை ஆகும். அதனால்தான் சாதாரண மங்கையாக இருந்த புனிதவதியார் ஸ்ரீகாரைக்கால் அம்மையாராக உயர்ந்து தாயும் தந்தையும் அற்ற இறைவனாலேயே “தாயே” என்று அழைக்கப்படும் பெருமையையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு மட்டுமல்லாமல் 63 நாயன்மார்களில் அமரும் தகுதியைப் பெற்ற ஒரே பெண் திலகமும் ஸ்ரீகாரைக்கால் அம்மையார் ஆவார்.


நந்தியுள் நந்தி விசயமங்கை
அர்ச்சுனம் என்றால் பொன்மயமான, வெண்மை என்றெல்லாம் பொருள் உண்டு. இத்தலத்தில் உள்ள அர்ச்சுன தீர்த்தத்தில் அர்ச்சுனன் நீராடியதால் இத்தீர்த்தத்திற்கு அப்பெயர் ஏற்பட்டது என்ற காரணம் கிடையாது. உண்மையில் அர்ச்சுனன் தோன்றுவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதே இத்திருத்தலத்தில் உள்ள அர்ச்சுன தீர்த்தமாகும். இந்த தீர்த்தத்தில் நீராடுவதால் குழந்தையைப் போன்ற வெண்மையான, பொன்னைப் போன்ற தூய்மையான மனதையும் பெறுவர் என்பது இத்தீர்த்தத்தின் சிறப்பாகும். எனவே ஒருவர் பொன்மனச் செம்மல் என்ற பட்டத்தை இப்பிறவியில் பெறுகிறார் என்றால் அவர் ஏதோ ஒரு பிறவியில் நிச்சயமாக இத்திருக்குள தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டிருக்கிறார் என்பது பொருளாகும். எனவே ஒருவர் இப்பிறவியில் இந்த அர்ச்சுன தீர்த்தத்தில் நீராடினால் அவருடைய கர்ம வினைகளைப் பொறுத்து அவர் இப்பிறவியிலோ அல்லது வரும் பிறவிகளிலோ நிச்சயம் பொன்னைப் போல், குழந்தை மனம் பெற்றவராய் மாறுவார் என்பது உறுதி. அதனால்தான் என்னவோ தற்போது இத்தீர்த்தம் வறண்டு கிடப்பது போல் தோன்றுகிறது. வறண்டிருக்கும் இத்தகைய சமயங்களில் தங்கள் இல்லங்களிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து இங்கு தர்ப்பணம் அளிப்பதால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. இவ்வாறு பொன் மனச் செம்மலாய் மாறியவர்களே, “பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டெனில் உனை என்றும் மறவாமை வேண்டும்,” என்று இறைவனை நோக்கிப் பாடும் மனம் பெற்றவர்களாய் மாறுகின்றார்கள். இறைவனைத் தவிர, இறைச் சுவையைத் தவிர வேறு எதையும் பெற விரும்பாதவர்களாய் ஆகிறார்கள். அத்தகைய பேற்றைத் தரக் கூடியதே அர்ச்சுன தீர்த்த நீராடலாகும்.


ஸ்ரீபைரவமூர்த்தி திருவிசயமங்கை
பலரும் ஆலயங்களில் தரிசனம் செய்யும் அர்த்தநாரீஸ்வர சொரூபத்தை சரியாகப் புரிந்து கொள்வது கிடையாது. மக்கள் வழக்கில் ஆணும் பெண்ணும் கலந்த பிறவியை அலி பிறவி என்று சொல்கிறோம். இது மனிதர்களிடையே காணக் கிடைப்பது. ஆனால் இறைவனின் அர்த்தநாரீஸ்வர சொரூபம் என்பது ஆண் பெண் தத்துவத்தை தாண்டி நிற்பது. இந்த அர்த்தநாரீஸ்வர தத்துவ பிறவியை அனுகிரகமாக பெற்றவன்தான் அர்ச்சுனன். அதனால்தான் ஆண் பெண் தாண்டிய மறுபிறவியில் வேடர் குலத்தில் கண்ணப்ப நாயனாராக பிறவி கிட்டியது. உண்மையில் கண்ணப்ப நாயனார் என்ற பிறவி ஆண் பெண் தத்துவத்தின் இறுதியில் அமைந்ததே. சித்தர்களும் மகான்களும்தான் கண்ணப்ப நாயனாரின் பிறவி இரகசியம் பற்றி முழுமையாக அறிந்தவர்கள். திருவிசயமங்கை தீர்த்தத்தில் நீராடி இறைவனை முறையாக வழிபாடுவோர்க்கே இத்தகைய ஆண் பெண் தாண்டிய பிறவி கிட்டும் என்பதையே அர்ச்சுனன் வரலாறும், புனிதவதி காரைக்கால் அம்மையாரின் வரலாறும் சுட்டிக் காட்டும் உண்மையாகும். அர்ச்சுன தீர்த்த மகாத்மியம் சொல் பொருள் கடந்த அற்புதமாகும். ஆழ்ந்து, மூழ்கி, மீண்டும் மீண்டும் அனுபவித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய பொக்கிஷமாகும். வைரத்தில் உள்ள தோஷத்தை நீக்க யாராலும் முடியாது என்பது உண்மையே. ஆனால், தோஷமுள்ள வைரத்தை இரண்டு துண்டுகளாக்கி விட்டால் அந்த இரண்டு துண்டுகளையும் தனித் தனியாக பயன்படுத்தலாம். அவ்வாறு இரண்டாகப் பிரிக்கும்போது அந்த வைரம் இரண்டாகப் பிரியுமா அல்லது பொடியாகி விடுமா என்பதை யாராலும் கூற முடியாது. ஆனால், இந்த அர்ச்சுன தீர்த்தத்தில் நீராடி இறை நம்பிக்கையோடு செயல்பட்டால் வைர வியாபாரிகளும் தங்க நகை வியாபாரிகளும் பயனடைவர். விசய மங்கை என்ற பதத்தில் இந்த தோஷத்திற்கான, பிரிவிற்கான இரகசியங்கள் பதிந்துள்ளன.


திரிபுரசம்ஹாரம் திருவதிகை
பசுபதியான சிவபெருமானிடமிருந்து அர்ச்சுனன் பாசுபத அஸ்திரம் பெற்றபோது அதை சிவனும் அர்ச்சுனனும் மட்டுமே பார்க்க முடிந்தது. காரணம் இங்கு அஸ்திரத்தை கொடுப்பவர், அதைப் பெறுபவர் இருவரைத் தவிர வேறு எவரும் பாசுபத அஸ்திரத்திதைப் பார்க்க முடியாது என்பது இறைநியதி. எனவே பாசுபத அஸ்திரம் எப்படி இருக்கும் என்பதை யாராலும் வர்ணிக்க இயலாது. ஆனால், பாசுபத அஸ்திரத்தைப் பெறுபவர் அதை தன்னுடைய மனத்தால், வார்த்தைகளால், கண்களால், வில்லால் இயக்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தனர். அதனால்தான் விஜயன் ஜயத்ரதனைக் கொல்ல எண்ணி பாணத்தை எய்யும் முன்னால் கிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனன் பெற்ற பாசுபத அஸ்திரத்தை மனதில் எண்ணிக் கொள்ளுமாறு கூறினார். இதன் பொருள் என்ன ? ஜயத்ரதன் அர்ச்சுனனுடைய மைந்தன் அபிமன்யுவைக் கொன்றதால் ஜயத்ரதனை அன்று சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வதாக பிரதிக்ஞை எடுத்திருந்தான் அர்ச்சுனன். அர்ச்சுனன் போன்ற ஒரு வீரன் பிரதிக்ஞை எடுப்பது தவறு கிடையாது. ஆனால், தன்னுடைய மைந்தனைக் கொன்றவனை சூரிய அஸ்தனமனம் ஆவதற்குள் பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு வீரனுக்கு ஏற்புடையது அல்லவே. எனவே பாசுபத அஸ்திரத்தை மனதில் எண்ணினாலே போதும் அது பழி வாங்கும் எண்ணத்தையும் பழிக்குப் பழி என்ற தவறான சபதத்தையும் வேரறுக்கும் என்பதால் அர்ச்சுனனை பாசுபத அஸ்திரத்தை நினைவுக்குக் கொண்டு வருமாறு கூறினார் கீதை நாயகன்.


திருவதிகை வீரட்டானம்
பாசுபத அஸ்திரத்தின் நினைவே பழிக்குப் பழி என்ற தவறான எண்ணத்தையும் காலப் பதட்டத்தையும் வேரறுக்கும் என்றால் பாசுபத அஸ்திரம் எத்தகைய தூய்மை உடையதாக இருக்கும். அதனால்தான் அத்தகைய தூய்மையான அஸ்திரத்தை தாங்கும் நிலைமை யாருக்கும் ஏற்படவில்லை. எனவேதான் மகாபாரத யுத்தத்தில் யாராலும் வெல்ல முடியாத பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனன் பெற்றிருந்தாலும் அதை பயன்படுத்த வேண்டிய சந்தர்ப்பமே அர்ச்சுனனுக்கு கிட்டாமல் போய் விட்டது. இதை உணர்ந்தவன் பகவான் கிருஷ்ணன். அதனால்தான், “மனம்தான் தருவேன் மகாதேவா !” என்று கூறினார் கிருஷ்ணர். பாசுபத அஸ்திரத்திற்கு மகாதேவ அஸ்திரம் என்ற நாமமும் உண்டு. மகாதேவன் என்ற பதத்தின் அருமையையும் பெருமையையும் உணர்ந்தவன் கிருஷ்ணன் ஒருவன்தான். (கிருஷ்ணனை ஏகவசனத்தில் பயன்படுத்துவது சிலரின் மனதை பாதிக்கலாம். சற்குரு பயன்படுத்தியே அதே பதங்களை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்பதால்தான் இந்த ஏற்பாடு என்ற நோக்கில் பார்த்தால் இதன் சுவையை அறியலாம்) பாசுபத அஸ்திரத்தைப் பெற்ற அர்ச்சுனனும் அந்த மனத்தைப் பெறவே அதை உரிய நேரத்தில் நினைவு கூறச் செய்தான் ஸ்ரீகிருஷ்ணன். இல்லாவிட்டால் பாசத்தால் உந்தப் பெற்று அர்ச்சுனன் தவறுக்குக் காரணமாக மாறி இருப்பான். எப்போதோ ஒரு காலத்தில் அர்ச்சுனன் பெற்ற பாசுபத அஸ்திர தலத்தை நாம் இன்று வணங்குவதால் என்ன பயன் என்று நினைப்பவர்களுக்கு ஜயத்ரதன் வதம் ஒரு முன் மாதிரியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 24 மணி நேரத்தில் ஒரு க்ஷணப் பொழுதில் அர்ச்சுனன் பெற்ற பாசுபத அஸ்திரத்தின் பின்னணியில் இத்தனை இறை இரகசியங்கள் மறைந்திருக்கும், பொதிந்திருக்கும் என்றால் யுக யுகமாக விசயமங்கையில் வீற்றிருக்கும் ஈசனின் திருக்கூத்தின் மகிமையை மனிதர்கள் விண்டுரைக்கத்தான் முடியுமா ?


ஸ்ரீசண்டிகேஸ்வரர் திருவிசயமங்கை
பெண்களின் அழகுக்கு ஈடு இணை எதுவும் இல்லைதான். அந்த பேரழகையே இறைவனின் காலடியில் சமர்ப்பித்து பேயுருவைப் பெற்றாள் என்பதால்தான் புனிதவதி, காரைக்கால் அம்மையார் என்றெல்லாம் அழைக்காமல் பேயார் என்றார் சேக்கிழார் பெருமான். எனவே தியாகத்தின் சின்னமாக இன்றும் விளங்குவதே திருவிசயமங்கை திருத்தலமாகும். பாசுபத அஸ்திரத்தால் யாரும் அழிக்கப்படவில்லை என்றால் அந்த அஸ்திரத்தைப் பெற ஸ்ரீகிருஷ்ண பிரான் அர்ச்சுனனை ஏன் தூண்டினார் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? இங்கு வாழ்க்கைக்கு பயனுள்ள ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். மிகவும் சிரமப்பட்டு ஒரு விஷயத்தைப் பெறுவதால் அந்த விஷயத்தைப் பெறுபவர்க்கு என்ன பயன் என்று யோசிப்பதை விட அந்த விஷயம் மற்றவர்களிடம் சிக்கினால் பலருக்கும் ஆபத்து விளையும் என்பதால் நல்ல மனம் படைத்த ஒருவர் அதைப் பெற்று பயன்படுத்தாமலே தன்னிடம் வைத்துக் கொள்வதும் ஒரு யுத்த தந்திரமாகும். இவ்வகையில் அமைந்ததுதான் ஏகலவனுடைய கட்டை விரலை குருதட்சணையாக துரோணர் கேட்டுப் பெற்றதாகும். அது போல பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனன் பெற்றிருக்காவிடில் கருணைக் கடலான சிவபெருமான் அதை யாருக்காவது தாரை வார்த்து அளித்திருக்கலாம் அல்லவா ? அவ்வாறு அஸ்வத்தாமா பெற்ற பிரம்மாஸ்திரம் வாங்கிய பழி நாம் நன்கு அறிந்ததே.


ஸ்ரீதிருமகள் பூவாளூர்
விஜயம் என்றால் வெற்றி, மங்கை என்றால் 12, 13 வயதுடைய பெண் என்று பொருள். எனவே வயது வந்த பெண்கள் தங்கள் உத்தம மணாளனாக வரிக்க வேண்டிய தெய்வம் முருகன், கண்ணன், ராமன் என்ற தெய்வங்களே என்ற உண்மையை உணர்த்தும் தலமே திருவிசயமங்கை ஆகும். ஆண்கள் வெற்றி தரும் மங்கையை தங்கள் மணவாட்டியாக நினைக்க வேண்டும் என்று உணர்த்துவதும் திருவிசயமங்கையின் சிறப்பாகும். இத்தகைய சிறப்பைப் பெற்றவரே 14 வயதில் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களை மணாளனாக வரித்த அவர் துணைவியாவார். திருமணப் பொருத்தங்கள் பார்க்கும்போது கணவனின் ஜாதகத்தில் ஏழாவது இடமான களத்திர ஸ்தானத்தை மனைவியின் லக்னமாகக் கொண்டு அதிலிருந்து வரப் போகும் மனைவியின் குணநலன்கள் குறித்து தெரிந்து கொள்ளும் முறை ஒன்று உண்டு. அது போல நம் சற்குரு அவர்களின் ஜாதகத்தை பரிசீலித்தால் அவரது துணைவியார் எந்த அளவு சீதையைப் போல் கற்புக்கரசியாக விளங்குவார் என்ற உண்மை புரியவரும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் அவர்களின் கற்பு நிலையை உணர்த்தும் என்பது நீங்கள் அறிந்ததே. மேஷ ராசியில் பிறந்த நேரமும் ஹோரையும் மங்கள கந்தவர்வமாக இணைவது அதிசிறப்பே. அது மட்டுமல்லாமல் இந்த நான்காம் இடம் நவகிரகங்களின் சங்கமமாகத் திகழ்வது நம்மை பிரமிக்கவைக்கும் ஆச்சரியமாகும். பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் நான்காம் இடம் அவருடைய இதயத்தைக் குறிப்பதால் நம் குரு மங்கள கந்தர்வா தன் இதயத்தில் தனது சற்குரு நாதரையும் அவரது துணைவியார் தனது கணவரையும் தன் இதயத்தில் தாங்கியது எத்தகைய பொருத்தமுடைய செயல் ?
சற்குரு வெங்கடராமன் சிறுவன் வெங்கடராமனாக இருந்தபோது அவர் பள்ளிக்குச் செல்லும் சமயங்களில் பெரிய வாத்யார் என்னும் கோவணாண்டிப் பெரியவர் சிறுவனை மாதக் கணக்கில் திருஅண்ணாமலை கிரிவலத்திற்கு அழைத்துச் சென்று விடுவதுண்டு. அவ்வாறு பல நாட்கள், மாதங்கள் வீட்டை விட்டு, பள்ளியை விட்டு செல்ல வேண்டிய சமயங்களில் எல்லாம் சிறுவனைப் போன்றே மற்றொரு “வெங்கடராமனை” தயார் செய்து கோவணாண்டிப் பெரியவர் அனுப்பி விடுவார். இந்த இரகசியம் சிறுவனுக்குத் தெரியவே பல மாதங்கள் ஆகிவிட்டதாம். ஆனால் சிறுவன் பெரியவனாகி இதற்கிடையே கோவணாண்டி டூப்ளிகேட் சிறுவனை விட்டு விட்டு மறைந்து விட்டாலும் ஒரிஜினல் கோவணாண்டியும் ஒரிஜினல் சிறுவன் வெங்கடராமனும் இன்னும் இன்றும் ராயபுரம் அங்காளி ஆலயத்தையும் திருஅண்ணாமலையையும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த இரகசியத்தையும் உணர்விக்கக் கூடியதே, தெரிவிக்கக் கூடியதே குருவருளால் கூடும் நிர்விகல்ப சமாதி நிலையாகும். அதுவரையில் சிறுவனும் கோவணாண்டியும் தலையைச் சுற்றும் சமாசாரங்ளே. எண்ணம் என்பது ஆக்டிவ் செயல், நினைவு என்பது பாசிவ் செயல், இரண்டையும் கடந்த நிலையே நிர்விகல்ப சமாதி நிலை. இந்த நிலையை சாதிக்கக் கூடியவர் சற்குரு ஒருவரே, ஆம் சற்குரு ஒருவரே.
இந்த அசல் நகல் சமாசாரங்கள் படிப்பதற்கு எளிமையாகத் தோன்றிடினும் நடைமுறையில் இதை செயல்படுத்துவது என்பது சித்தர்களைத் தவிர வேறு யாருக்கும் சாத்தியம் இல்லை என்றே கூறலாம். உதாரணத்திற்கு, ஒரு மூன்றெழுத்து நடிகரின் திரைப்படத்தைக் காண நம் கோவணாண்டி சிறுவன் வெங்கடராமனை அழைத்துச் சென்றாராம். பெரிய வாத்யாருடன் திரைப்படம் பார்ப்பது என்பது சிறுவனுக்கு மிகவும் பிடித்த காரியம் என்றாலும் அவர் கோவணத்துடனே திரையரங்கிற்கு வருவது என்பது சிறுவனால் சகித்துக் கொள்ள முடியாத விஷயமாக இருந்தது. ஆனால் கோவணத்துடன் திரையரங்கிற்குள் நுழைந்த கோவணாண்டி இடைவெளையின்போது கோட் சூட் சகிதம் எழுந்தருளி வழக்கம்போல் சிறுவனை குழப்பிவிட்டார். அந்த நடிகர் கனிந்த கனி காஞ்சி பரமாச்சாரியாரைப் பல முறை தரிசனம் செய்ததால் அந்த தரிசன பலன்கள் எல்லாம் லட்சக் கணக்கான குழந்தைகளின் மதிய உணவில் அனுகிரகமாக சேர்ந்தது என்பதை சிறுவன் புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆனதாம். திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கும்போது பெரிய வாத்யார் சிறுவனைப் போல் எழுந்து காது கிழியும்படி விசில் அடித்து சப்தம் எழுப்புவாராம். ஆனால் அந்த ஒலியே ஓஜஸ் ஒலி என்பதையும் குழந்தைகளின் மதிய உணவில் அவர்களுக்கு அந்த ஒலி ஆரோக்யம் அளித்த இரகசியத்தையும் புரிந்து கொண்ட சிறுவன் வெங்கடராமன் தானே பின்னாட்களில் அந்த ஓஜஸ் ஒலியை எழுப்பி தன்னுடைய திருக்கார்த்திகை அன்னதான வைபவத்தை நிறைவு செய்தாராம். குறைந்தது 30 வருடங்கள் தாம்பத்ய உறவு பூணாமல் சேர்த்து வைக்கும் சக்தியே ஓஜஸ் ஒலியாகப் பரிணமிக்கும் என்பது ஓஜஸ் ஒலி பற்றி சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும்.


ஸ்ரீகுங்குமசௌந்தரி அம்மன் பூவாளூர்
பொதுவாக திருமண வைபவங்களின் போது மாங்கல்ய தாரணத்திற்குப் பின் கணவன் தன்னுடைய மனைவியை வலது பக்கத்தில் வைத்து தனது வலது கையால் மனைவியின் நெற்றி, திருமாங்கல்யம், முன் வகிடு ஆகிய மூன்று இடங்களில் குங்குமம் இடுவது வழக்கம். முதன் முதலில் ஒரு பெண்ணிற்கு குங்குமம் இடும் தகுதியும் உரிமையும் உள்ளவன் அவளது கணவனே என்பது இதிலிருந்து புலனாகின்றது அல்லவா ? ஆனால், தற்காலத்தில் பலருக்கும் இந்த விதி தெரியாததால் தங்கள் மனதுக்கு தோன்றும் விதத்தில் யார் யாரோ ஒரு பெண்ணிற்கு குங்குமத் திலகம் பொட்டு இடுவதைக் காண்கிறோம். இத்தகைய தவறுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் சுத்தமான குங்குமத்தை ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மனுக்கு அளித்து மேற்கூறிய மூன்று இடங்களில் தங்கள் கணவன் மூலம் குங்குமம் வைத்துக் கொள்வதால் மனைவிமார்களின் மாங்கல்ய பலம் பெருகும். கணவனின் ஆயுளும் விருத்தியாகும். குங்குமம் இடும்போது, வாசி தீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏசலில்லையே, என்று கூறி குங்குமம் இடுவது சிறப்பாகும். ஆயுள் விருத்தியை அளிப்பதில் ஸ்ரீகுங்குமசௌந்தரி அம்மனுக்கு ஈடு இணை வேறு எவரும் இல்லை. அது ஏனோ?


ஸ்ரீசௌந்தரநாயகி அன்பில்
இவ்வாறு கணவனால் குங்குமத் திலகம் பெற்ற மனைவியானவள் கணவனை வலம் வந்து ஆசி பெறுதல் கிடைத்தற்கரிய பாக்கியமாகும். இவ்வாறு கணவனின் பரிபூரிண ஆசியைப் பெற்ற கோலத்தில் எம்பெருமானின் இடது பக்கத்தில் எழுந்தருளிய மூன்று அம்பிகைகளை தங்கள் திருமண நாளன்றும், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நாட்களிலும், தங்கள் பிறந்த நாளிலும் தரிசனம் பெறுதல் கிடைத்தற்கரிய பாக்கியமாகும். திருச்சி பூவாளூர், அன்பில், பின்னவாசல் என்ற மூன்று தலங்களை ஒரே நாளில் தரிசனம் செய்து அந்த அம்பிகைகளை தரிசனம் செய்தல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும்.


ஸ்ரீகைலாசநாதர் பின்னவாசல்

தமிழ்நாட்டில் பல ஊரின் பெயர்கள் தாழமங்கை, அரியமங்கை என்ற நாமத்துடன் விளங்குகின்றன. இந்த ஒவ்வொரு நாமத்திற்கும் பல தெய்வீக தாத்பர்யங்கள் உண்டு. அதனால்தான் ஊர் பெயர்களின் மேல் போஸ்டர்களை ஒட்டி அதன் பெயர்களை மறைத்து வீண் பழிக்கு ஆளாக வேண்டாம் என்று நம் பெரியோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஸ்ரீராமகிருஷ்ணருக்கு திருமணமானபோது அவருக்கு வயது 23 அவருடைய துணைவியாரின் வயது ஐந்து. அதனால்தான் அவர்கள் மனம் ஒருமித்த தம்பதிகளாய் வாழ முடிந்தது. தற்போதோ இரண்டு மங்கை வயதையும் தாண்டிய பெண்களைத் திருமணம் புரிந்து கொண்டு இல்லறம் சுவைக்கவில்லை என்றால் அது யாருடைய தவறு ?


ஸ்ரீசெவிசாய்த்த விநாயகர் அன்பில்
குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் தலங்களில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடல் பெற்ற அன்பிலாந்துறை திருத்தலமும் ஒன்று. ஸ்ரீசம்பந்த மூர்த்தி அன்பிலுக்கு வருகை தருகையில் கொள்ளிடத்தில் நீர் பெருக்கு ஏற்பட்டதால் அவர் அக்கரையிலிருந்தே ஈசனைப் பாடினார். அதைக் கேட்ட விநாயகர் தன்னுடைய செவியை சாய்த்து அம்மையப்பன் புகழைக் கேட்டதால் அவர் செவிசாய்த்த விநாயகர் ஆனார் என்பது வரலாறு. அனைத்தும் உணர்ந்த சம்பந்த நாயனாருக்கு காவிரியில் வெள்ளம் பெருகும் என்பது தெரியாதா இல்லை அப்படி பெருக்கெடுத்தோடும் காவிரியை அணைக்கத்தான் அவருக்குத் தெரியாதா ? அனைத்தும் உணர்ந்தவர்களே இறை தூதுவர்கள் அல்லவா ? ஸ்ரீசெவிசாய்த்த விநாயகரின் புகழ் உலகெங்கும் பரவுவதற்காகவும் மனைவி கணவனின் சொல்லுக்கு செவி சாய்த்தால் அவள் சொல்லுக்கு மற்றவர்கள் செவி சாய்ப்பார்கள் என்ற உண்மையை உணர்த்துவதற்காகவும் திருமணமாகாத பாலகனாக இருந்த நாயனார் மூர்த்தியின் ஏற்பாடே இது. தங்கள் மழலைக் குழந்தையின் குதூகல வேத வார்த்தைகளை பொங்கிப் பாயும் காவிரிப் புனல் வழியாக கேட்பதற்காகவும் அன்பில் ஈசனும் தாயும் செய்த ஏற்பாடே இது என்று சொன்னாலும் அது மிகையாகாது. வெள்ளத்தினூடே மழையினூடே வேதங்களைக் கேட்பதால் ஒருவித சாளர சக்தி கிட்டுகிறது. இது வேறு எந்த உபாயத்தாலும் பெறமுடியாது. இந்த சாளர சக்திகளைக் கிரகித்து மக்களுக்கு வழங்குவதற்காகவே செவிசாய்த்த விநாயகர், ஈசன், அன்னை, வாகீச முனிவர் போன்றோர் தொண்டாற்றுகின்றார்கள் என்றால் அந்த அற்புத சேவையை எப்படி வர்ணிப்பது ? தங்களிடையே அன்பே இல்லாத இல்லறவாசிகள் கூட சம்பந்தரின் தேவார பதிகத்தை ஓதி இத்தல மூர்த்திகளை நம்பிக்கையுடன் வழிபட்டு வந்தால் அவர்கள் இல்லம் அன்பு இல்லமாக மலர்ந்து அது ஆலந்துறையாக பரிணமிக்கும் என்பதே இத்தலத்தின் நாமம் கூறும் உண்மையாகும். இது சத்தியம் என்று உறுதி செய்பவரே இத்தல ஈசன் ஸ்ரீசத்யவாகீசர் ஆவார்.


வைகல் மாடக் கோயில் கும்பகோணம்
ஸ்ரீவைகல்நாதர் மாடக் கோயிலில் எழுந்தருளியிருக்க ஸ்ரீவைகல்நாயகி இறைவனுக்கு கீழே வலப்புறமாக எழுந்தருளியிருக்கும் அபூர்வ தலம். இறைவி இறைவனிடம் குங்குமத் திலகம் இட்டுக் கொண்ட சிறப்பான திருத்தலம். வைகல் என்றால் விடியற்காலை என்றுதானே பொருள். விடியற்காலையில் சூரியோதத்திற்கு முன் கணவன் எழுந்து நீராடி தனக்கு முன்னால் எழுந்து நீராடிய மனைவிக்கு மூன்று மங்கள இடங்களில் குங்குமம் இடுதலை நிறைவேற்றி வருபவர்கள் பாக்கியசாலிகளே. அத்தகையோர் உடலில் இயற்கையாகத் தோன்றும் சண்பக மணத்தைக் குறிப்பதாகவே இத்தல விருட்சம் சண்பக மரமாகவும் இத்தலம் சண்பக ஆரண்யமாகவும் விளங்குகிறது. தினமும் காலையில் தோன்றும் சூரிய பகவான் இறைவனால் குங்குமத் திலகம் இடப்பெற்ற ஸ்ரீசாகாகோமளவல்லி அம்மன் திருவடிகளை வணங்கியே பின்னரே ஸ்ரீவைகல்நாதரை வணங்குகின்றார். அம்மையப்பன் திருவடிகளைத் தொழும் நேரத்திற்கு இடைபட்ட நேரத்தையே சூரிய வைகறை இடைவெளி என்று போற்றுகிறோம். இந்த இடைவெளி நேரத்தில் தோன்றிய மாதர்களான அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி என்ற பஞ்ச கன்னிகைகளை பெண்கள் தொழுவதால் எத்தகைய கொடிய பாவங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள். ஒரு க்ஷண பொழுது நேரமே நிரவியிருக்கக் கூடிய இந்த வைகறைப் பொழுதை பக்தரகள் குருவருளுடன் கூடிய நிர்விகல்ப சமாதியில் மட்டுமே கிரகிக்க முடியும் என்பதால் இங்கு ஸ்ரீவைகல்நாதரை தரிசிக்கும் தகுதியுள்ள அன்பர்கள் ஸ்ரீவைகல்நாயகியின் திருஉருவத்தையும் தரிசிக்க முடியும் என்பது உண்மை. ஸ்ரீவைகல்நாயகியின் திருஉருவத்தை தினமும் ஸ்ரீவைகல்நாதரின் திருவடிகளில் பதிப்பவரே சூரிய பகவான்.


செண்பகாரண்யத்தில் ஸ்ரீகஜானனர் வைகல்
சூரிய பகவான் வைகல் திருத்தலத்தில் அம்பிகையை தரிசனம் செய்து விட்டு சுவாமியின் திருவடிகளை தரிசனம் செய்வதற்கு இடைப்பட்ட வைகல் இடைவெளி நேரத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத பத்தினி தெய்வங்களே மேற்கூறிய பஞ்ச மாதர்கள் ஆவர். இந்த பத்தினி தெய்வங்களுக்குப் பின்னால் கோடானு கோடி பத்தினி தேவ தெய்வங்கள் மறைந்துள்ளனர். கவனிக்கவும், பயன்பெறவும். இவ்வாறு எந்நேரமும் கணவனின் திருப்பாதங்களையே நினைவு கொள்ள விரும்பும் பத்தினி தெய்வங்கள் வைகல் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுதல் சிறப்பு. தாமே அரைத்த மஞ்சளால் கன்னிப் பெண்களும் திருமணமான மகளிரும் இத்தல அம்பிகை மூர்த்திக்கு காப்பிடுதல் சிறப்பாகும். எத்தகைய திருமண தோஷங்களையும் களையும் சக்தி வாய்ந்த வழிபாடு இது. அரைத்த மஞ்சளை பூவரசு இலை அல்லது வாழைஇலையில் வைத்து எடுத்து செல்லுதல் சிறப்புடையதாகும். இத்தலம், இலஞ்சி முருகன் திருத்தலம், திருவிடைமருதூர் போன்ற பல திருத்தலங்களை செண்பக ஆரண்யமாக விளிப்பதற்கு ஆழ்ந்த பல உள்ளர்த்தங்கள் உண்டு. அவற்றை தம்பதிகள் தங்கள் சொந்த அனுபவங்கள் மூலம் உணர்ந்து கொள்தலே சிறப்புடையதாகும். இவ்வாறு எவரும் வெளியிடாத இரகசியங்களை எல்லாம் பக்தர்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வருபவர்களே சித்த பெருமக்கள் ஆவர். அருணாசல கிரிவலப் பாதையில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஒரு விபச்சாரியைக் கட்டிப் பிடித்து முத்தமிட்டதை இங்கு நினைவு கூறவும். தற்போது உள்ளதைப் போல மூல நட்சத்திரத்தில் மூன்றாம் பாதத்தில் சனி பகவானின் பிரவேசத்தையும் நவாம்சத்தில் மிதுன பிரவேசத்தையும் ஆராய்ந்தால் இந்த அற்புத உண்மைகள் புலப்படும்.


ஸ்ரீஅங்காளம்மன் கோவில் ராயபுரம்
நிர்விகல்ப சமாதி நிலையிலேயே குருவருளால் நேரத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியும் என்று கூறினோம் அல்லவா ? உண்மையில் நேரம் தூரம் கடந்த நிலையே குருவருளால் கூடும் நிர்விகல்ப சமாதி நிலையாகும். இதை நடைமுறையில் அனுபவித்துப் பார்த்தவரே நம் குருநாதர் ஆவார். அவர் சிறுவன் வெங்கடராமனாக இருந்தபோது பள்ளிக்குப் போகும் முன்னரோ பள்ளி முடிந்த பின்னரோ கோவணாண்டிப் பெரியவர் கூறிய வண்ணம் ராயபுரம் அங்காளியை 1008 முறை வலம் வருவார். இதற்காக சிறுவன் எடுத்துக் கொண்ட நேரமோ கிட்டத்தட்ட இரண்டு மணி நேரமே ஆகும். ஆனால் சாதாரணமாக ஒருவர் ஸ்ரீஅங்காளம்மனை 1008 முறை வலம் வருவதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு மேல் ஆகும். இந்த கணக்கு புரியவே சிறுவன் வெங்கடராமனுக்கு பல மாதங்கள் எடுத்துக் கொண்டதாம். அதே போல குருவருளால் அவருக்கு திருஅண்ணாமலையில் நிர்விகல்ப சமாதி நிலை கூடியபோது எம்பெருமான் சிவபெருமானின் கட்டை விரலை சில நொடிகளே கவனித்துப் பார்த்தாராம். அதற்குள் கோவணாண்டியின் குரல், “நைனா, போதும் வாடா, ஒரு சதுர்யுக நேரத்திற்கு சாமிய பாத்துக்கிட்டே இருந்தா நமக்கு இருக்கற மத்த வேலைய எப்படா பாக்குறது,” என்று ஒலித்ததாம். எனவே ஒரு சதுர்யுகமான 48 லட்சம் ஆண்டுகள் நிர்விகல்ப சுமாதியில் சிறுவனுக்கு சில நொடிகளாகத் தோன்றியதாம். குருவின் திருவருளே நேரம் தூரத்தைக் கூட்டவோ குறைக்கவோ மாற்றவோ முடியும். ஆகவே, சற்குருவின் மேல் உள்ள ஆழ்ந்த நம்பிக்கையே எதையும் சாதிக்கவல்லது என்று சிறுவன் (?!) உணர்ந்த மறுகணமே கோவணாண்டி மறைந்து விட்டாராம், வானில் கரைந்து விட்டாராம்.


குருவாய் வருவாய் குகனே திருவிசயமங்கை
அனைத்து யோக நிலைகளிலும் தேர்ச்சி பெற்ற ஸ்ரீராமகிருஷ்ணர் நிர்விகல்ப சமாதி நிலையை அடைய அவருடைய குருநாதர் ஸ்ரீதோத்தாபுரி எவ்வளவோ முயற்சி செய்த போதும் ஸ்ரீராமகிருஷ்ணரால் காளியின் நினைவிலிருந்து மீள முடியவில்லை. அப்போது ஸ்ரீதோத்தாபுரி ஒரு கண்ணாடியால் ஸ்ரீராமகிருஷ்ணரின் நெற்றியைக் கிழிக்கவே ஸ்ரீராமகிருஷ்ணரின் நெற்றியிலிருந்து இரத்தம் வழிந்தவுடன் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு சமாதி நிலை கூடியது என்பதைப் பலரும் அறிவர். ஆனால் இந்த நிர்விகல்ப சமாதி கூடிய இரகசியத்தை முழுவதுமாக அறிந்தவர்கள் சித்தர்களே. ராமகிருஷ்ணரிடமிருந்த காளி என்ற பக்தி நிலை என்ன முயற்சி செய்தும் ராமகிருஷ்ணரால் அழிக்க முடியாத ஒரு ‘நான்’ என்ற நிலையாகவே இருந்தது. அதை அறிந்த சற்குரு உடைந்து கிடந்த கண்ணாடி துண்டு ஒன்றின் மூலம் ’நான் காளியின் பக்தன்’ என்று ராமகிருஷ்ணரின் இரத்தத்தில் ஊறிக் கிடந்த நான் என்ற எண்ணத்தை வெளியேற்றி ராமகிருஷ்ணருக்கு சமாதி நிலையைக் கூட்டினார். பின்னர் சமாதி நிலையிலிருந்து வெளியில் வருவதற்கும் ஸ்ரீதோத்தாபுரிதான் ஓங்காரத்தை மூன்று முறை ஸ்ரீராமகிருஷ்ணரின் காதில் ஓதி அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார். இவ்வாறு குருவே அனைத்து நிலைகளையும் கூட்ட வல்லவர் என்ற குருபக்தியை வளர்ப்பதும் விசயமங்கையின் தரிசனப் பலன்களில் ஒன்று என்பது இத்தல ஈசனை தரிசித்தால்தான் புரிய வரும்.


திருவிடைமருதூர் சிவாலயம்
‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’, என்று ஒரு மகான் கூறியதாக முன்னர் தெரிவித்தோம். இது இறை பக்தியின் ஆரம்ப நிலை. கடவுள் தேடலின் முதன் நிலை இது. பக்தியின் இறுதி நிலையாக வருவதே, ‘நான் என்னைக் காதலிக்கிறேன்,’ என்பதாகும். இந்த நிலையில்தான் ஒருவர் தன்னுடைய பெயரையே சுயநாமம் என்ற இறைநாமமாக ஜபிப்பதன் அர்த்தம் புரிய வரும். இவ்வாறு பக்தியின் இறுதி நிலையில் இருப்பவர்களே சித்தர்கள். ஆரம்ப நிலையில் பக்தன் வேறு, இறைவன் வேறாகத் தோன்றுகிறான். இறுதி நிலையிலோ பக்தனும் கடவுளும் ஒன்றாகத் தெரிகின்றார்கள். இந்த இறுதி நிலையில்தான் ஒருவன் இல்லறத்தை துறக்க முடியும். அதனால்தான் சித்தர்கள் இல்லறத்தையே நல்லறமாகப் போதிக்கிறார்கள். ஆரம்ப நிலையில் கணவனாகத் தெரியும் மனிதனே இறுதி நிலையில் கடவுளாகத் தெரிகின்றான். ஆனால், இந்த சம்சார சாகரமோ மற்றவர்களுக்குத் தெரியாது. அந்த குறிப்பிட்ட கணவன் மனைவிக்கு மட்டுமே தெரிந்த இல்லற தர்மமாகும். இந்த இல்லற தர்மத்தில் ஊறி நின்றவர்களே ஸ்ரீஅகத்தியர் போன்ற சித்தர்கள். இது அத்வைத தத்துவத்தின் ஆரம்ப நிலையாகும்.


திருவிடைமருதூர்
சப்த புஜங்களும் கலசங்களும் கலந்து நிற்கும் அற்புதம் !
அத்வைத தத்துவத்தின் உச்சக் கட்டத்தில் நின்ற ஸ்ரீரஜனீஷ் ஒரு இளஞ் ஜோடியை கடவுள் தரிசனத்திற்காக தயார் செய்ய முயன்றார். அவர்களை நான் உன்னைக் காதலிக்கிறேன் என்ற ஆரம்ப தத்துவத்தில்தான் நிற்கச் சொன்னார். ஆனால், அவர்களால் அது முடியாமல் ஒருவர் மற்றொருவரின் உடலைக் காதலிக்க ஆரம்பித்ததால் அவர்கள் திருமணம் புரிந்து கொண்டார்கள். இந்த தத்துவத்தை செயல்படுத்த முயன்ற மகான் ஸ்ரீரஜனீஷ் தன்னுடைய சொந்த லோகத்திற்கு திரும்பிச் செல்ல வேண்டியதாயிற்று. எனவே அத்வைதம் என்ற பக்தியின் உச்சக்கட்டத்தை திருவிடைமருதூர் திருவிசயமங்கை திருத்தலங்கள் குறிப்பதால் திருவிசயமங்கையில் அர்ச்சுனம் என்னும் மருதமரத்தை தலவிருட்சமாக வைத்துப் பாதுகாக்குமாறு கூறுவதன் மகத்துவம் இப்போது புரிந்திருக்கும். திருமணமான ஐந்து ஆண்டு காலத்திற்குள் இந்த அத்வைத அதாவது பிரிக்க முடியாத ஒருமித்த மனோ நிலையை தம்பதியர்கள் பெற வழிகோலுவதே விசயமங்கை திருத்தலமாகும். தானும் ஈசனும் வேறு அல்ல என்ற நிலையில் கிருஷ்ண பரமாத்மா திகழ்ந்ததால்தான் அவர் பாசுபத அஸ்திரத்தை மனதில் நினைத்துக் கொள்ளுமாறு அர்ச்சுனனுக்கு அறிவுரை கூறினார். ‘அத்வைதம் சத்யம்’ என்று மூன்று முறை ஈசனே சிவலிங்கத்திலிருந்து ஓதி முழங்கியதால் அத்வைத ஞானத்தைப் பெறக் கூடிய தலமாக திருவிடைமருதூரும் திருவிசயமங்கையும் திகழ்கின்றன. குருநாதடைய திருப்பாதங்களையோ, திருப்பாதுகைகளையோ, திருஅர்த்தநாரீஸ்வர மூர்த்தியின் திருவடிகளையோ மனதில் தியானித்து வருதலால் தன்னுள் முழுமை அடையும் பாங்கிற்கு உறுதுணை செய்யும்.


ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருநறையூர் சித்தீச்சரம்
ரிஷி பஞ்சமி தினங்களில் (உதாரணமாக 14.9.2018) இவ்விரு தலங்களையும் வழிபடுதல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். வெள்ளிக் கிழமையுடன் வளர்பிறை பஞ்சமி திதி சேர்வதும் சித்த யோகம் 60 நாழிகைக்கு மேல் மூன்று தினங்களுக்கு நிரவி நிற்பதும் எம்பெருமானின் கருணையையே குறிக்கிறது. இடைமருதூரும் விசயமங்கையும் ஆறு எழுத்துக்களுடன் சுக்ர சக்திகளுடன் பொலிவது ஏதோ தற்செயலாக நிகழ்ந்தது என்று எண்ண வேண்டாம். அனைத்திற்கும் தெய்வீக காரிய காரணங்கள் நிரம்ப உண்டு. இத்தகைய தலங்களில் தேங்காய், பழம், பொன் மாங்கல்யம் அல்லது மாங்கல்ய சரடு, பூ, வெள்ளி மெட்டி போன்ற மங்கள, மாங்கல்ய பொருட்களை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்தலால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். மேலும் சற்குருவின் பாதக் குறடுகளும் அர்த்த நாரீஸ்வர தத்துவமும் தம்பதிகளைக் குறிப்பதால் இம்மூர்த்திகளுக்கு செய்யும் பூஜைகள், வழிபாடுகள் அற்புத பலன்களை வர்ஷிக்கின்றன. இத்தகைய வழிபாடுகளின்போது தம்பதியர் பஞ்சகச்ச மடிசார் முறையில் ஆடை அணிந்து பூஜைகளை மேற்கொள்வது சிறப்பான பலன்களை நல்கும் என்பது உண்மையே. தங்கள் குழந்தைகள் Blue Whale Challenge, Momo போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ளாமல் பாதுகாக்க விரும்பும் பெற்றோர்கள் இத்தகைய சுக்ர சக்தி நாட்களில் உரிய தான தர்மங்களுடன் வழிபடுவதால் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள் என்பது உறுதி. இதனால் அக்குழந்தைகள் போதை, குடிப்பழக்கம் போன்ற தவறுகளுக்கும் ஆட்படமாட்டார்கள் என்பது திண்ணம்.
14.9.2018 அன்று சந்திர பகவான் துலா ராசியில் ஆட்சி பெறும் சுக்கிரன், பிரஹஸ்பதி இவர்களுடன் கலந்து துலங்குவதால் இன்று காரட் துருவல், காய்ச்சின பசும்பால், தேன் கலந்த தானம் மிகவும் சிறப்பாக வலியுறுத்தப்படுகிறது.


குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் ஸ்ரீஅர்த்த நாரீஸ்வர திருக்கோலம், உய்யக்கொண்டான்மலை
உண்மையில் விஜயமங்கை என்றால் வெற்றி பெற்ற பெண் என்று பொருள். யார் வெற்றி பெற்ற பெண்ணாக கருதப்படுவர் ? எவர் ஒருவர் தன்னுடைய கணவனின் திருமார்பில் லட்சுமியைப் போல, பார்வதி தேவியைப் போல நிரந்தர இடத்தைப் பெறுகிறாரோ அவரே வெற்றி பெற்ற மங்கையாக கருதப்படுகிறார். இதைக் குறிப்பதே திருவிஜயமங்கை ஈசனுக்கு ஏற்றப்படும் இரண்டு தீபங்களாகும். அவரவர் இல்லங்களில் இரண்டு தீபங்களை ஏற்றி இறைவனை வழிபடும்போதும் இந்த அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை மனதில் கொண்டு வழிபடுவதால் இறைவன் தம்பதிகளுக்கிடையே மன ஒற்றுமையை ஏற்படுத்துவான் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு வெற்றியைத் தரும் விஜயமங்கையை, வெற்றி மங்கையை தன் மார்பிலேயே சூடியவர் ஸ்ரீவிஜயநாதராகத் திகழ்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைதான் ! சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சுக்ரன் இவர்கள் பலமாக நட்பு பாவத்தில் இருந்தால் தம்பதியரிடையே ஒற்றுமை மலர்ந்து இல்லறம் நல்லறமாக செழிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதற்கு உறுதுணையாக அமைவதே வெள்ளிக் கிழமை பஞ்சமி திதிகளில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்ச தீபங்களால் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரரை வழிபடுவதாகும். கோசார பலனாக வளர்பிறை பஞ்சமி அன்று சூரியனிடமிருந்து சந்திர பகவான் மூன்றாம் வீட்டில் நிற்க, சந்திர பகவானிடமிருந்து சூரிய பகவான் 11ம் வீட்டில் ஆட்சி பெற்றிருப்பதால் இது தம்பதியரிடையே உள்ள எத்தகைய மன வேற்றுமையையும் களைந்து அவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கிறது. சூரிய பகவான் உடலிற்கும், சந்திர பகவான் மனதிற்கும் அதிபதி ஆவார் என்பது தாங்கள் அறிந்ததே. சுக்கிர சக்திகள் மிகுந்த தேங்காய் எண்ணெய் குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தி வளர்க்கும் வித்தாய் அமைகிறது. மேலும் கலப்படத்தால் தேங்காய் எண்ணெயில் சுக்ர சக்திகள் மாறுபாடு கொண்டாலும் குடும்ப ஒற்றுமைக்காக ஆறு தீபங்களை ஏற்றும்போது அந்த எண்ணிக்கையில் தவறு ஏற்பட வாய்ப்பில்லையே. என்னே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன். தம்பதிகளுக்கிடையே எவ்வளவோ மனவேற்றுமைகள், பிரச்னைகள் ஏற்பட்டபோதிலும் அத்தகையோர் இரவில் ஒரே போர்வையில் உறங்கி தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதை இன்றும் கண்கூடாகக் காண்கிறோம். இதற்கு அடிப்படையாக அமைவதும் சுக்ர சக்திகளே. எத்தகைய காமக் குற்றங்களையும் களையும் அற்புத தரிசனம் இது. இதன் பின்னணியில் அமைந்துள்ள ஜோதிட நுணுக்கங்களை அலசி ஆராய்ந்தால் இந்த உண்மை புரிய வரும்.


தசமுக தரிசனம் திருஅண்ணாமலை
சுக்ர சக்திகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது நமது குருநாதர் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள்தான். காரணம் சுக்கிர சக்திகளை அவர் பெற்றிருப்பது போல் வேறு எவருமே பெறவில்லை என்பதை அவருடைய ஜாதகத்தை கூர்ந்து நோக்கும் எவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு அத்துணை எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த முறையில் எழுந்தருளி உள்ளார் சுக்ர பகவான். பாரிஜாத யோகத்துடன் எழுந்தருளி இருக்கும் சுக்ர பகவான் துலாவில் இருக்கும் குருவின் ஏழாம் பார்வையைப் பெற்று ஆட்சி பெற்ற செவ்வாய் பகவானுடன் இணைந்து மேஷ ராசியில் வீற்றிருப்பதால் குரு மங்கள கந்தர்வா என்று சித்தர்கள் அழைப்பதில் நூற்றுக்கு நூறு பொருத்தம் உடையவராகத் திகழ்கிறார். 51 என்றால் (5+1=6) சுக்கிர பகவானுக்குரித்தான எண்தான். ஸ்ரீகுழந்தையானந்தா சுவாமிகள் நான்கு பீடங்களுடன் பொலிவதைப் போல நம் குருமங்கள கந்தவர்வா 51 பீடங்களுடன் பூமியில் மட்டும் பொலிகின்றார் என்றார் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு ஈடு இணையாக எவரைத்தான் சுட்டிக் காட்ட முடியும்? வெறும் சுக்கிர சக்திகளை பெற்றிருத்தல் மட்டும் சாதனை ஆகாது. அந்த சுக்ர சக்திகளை சாதாரண மனிதர்களும் பக்தர்களும் பரிந்து கொள்ளும் வகையில் உலகிற்கு விநியோகம் செய்ததுதான் சற்குரு வெங்கடராமன் அவர்களுடைய அபார கருணையாகும். ஒரு முறை சுக்ர சக்திகள் பொலியும் ஒரு தலத்திற்கு சற்குரு அவர்கள் வருகை புரிந்தார்கள். தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்த அந்த சன்னிதானம் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் வருகையை மற்றவர்களுக்குத் தெரிவிக்கவில்லை. அதுவும் சற்குருவின் கருணை கடாட்சமே.


வாழையடி வாழையான குருபாரம்பர்யம்
அனைவரும் விருந்துண்ணும் சமயத்தில் அந்த சன்னிதானம் சில இறையடியார்களுக்கு சற்குரு அவர்கள் மூலம் அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அத்துடன் சற்குரு அவர்கள் வழங்குவதற்கு ரூபாய் நாணயங்களையும் ஒரு தாம்பாளத்தில் வைத்திருந்தார்கள். விருந்துண்ண வந்திருந்த அனைவருக்கும் தன்னுடைய பொற்கரங்களால் நாணயங்களை அளித்த சற்குரு அவர்கள் அந்த சன்னிதானத்திடமிருந்து விடைபெறும்போது ரூபாய் 1500க்கு ஒரு செக்கையும் அளித்தார்கள். சன்னிதானத்தின் நற்காரியங்களுக்கு அந்த சிறு தொகையை காணிக்கையாக வைத்துக் கொள்ளும்படி சற்குரு சன்னிதானத்திடம் கூறினார்கள். ஆனால் நெருங்கிய அடியார்களுடன் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், “சார், அந்த சன்னிதானம் அளித்த ஆயிரம் ரூபாய் சில்லரை மடத்து சொத்து. அந்த மடத்து சொத்தை அடியார்களுக்காக இருந்தாலும் வாரி வழங்க அடியேனுக்கு எந்த வித உரிமையும் கிடையாது. அதனால் ஏதோ நற்காரியத்திற்காக அளிப்பது போல் அடியேன் அளித்த சில்லரைக் காசிற்கு ஈடான தொகையை காசோலையாக வழங்கி விட்டேன்,” என்றார். இந்த நிகழ்ச்சியை கவனித்து படிக்கும் அடியார்கள் எப்படி சற்குரு அவர்கள் சுக்ர சக்திகளை இறையடியார்களுக்கு விநியோகம் செய்தார் என்ற இரகசியம் புரிய வரும்.
விசயமங்கை சுக்ர சக்திகளுடன் பொலிவது அந்த ஊர் பெயருக்கான ஆறு எழுத்துக்கள் மட்டும் காரணம் அல்ல என்பது இத்தலத்தை சுக்ர பகவானுக்குரித்தான வெள்ளிக் கிழமைகளில் தொடர்ந்து தரிசனம் செய்பவர்களுக்கே புரியவரும். வெள்ளிக் கிழமையே ஆறாவது கிழமைதானே. உங்களுக்கு சுக்ர சக்திகள் பூரணமாகப் பெற்ற சற்குருவைப் பற்றி குறிப்பிடும் வெப் தளமும் சுக்ர சக்திகளுடன் பூரிப்பதும் அவர் பெருங் கருணையால்தான்.
அவர் அளித்த சிறுபக்தித் துளியே இந்தத் தளமாகும். அனைத்தும் சற்குரு மயமே !!
எதுவும் என்னுடையது அல்ல
அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா
என்ற சித்த குரு சூக்த வேத மாமந்திரமும் குரு சக்திக்கு உகந்த குசா சக்தியுடன் பொலிவதுதானே.


சற்குரு நிரவிய சுக்ர சக்திகள்
சற்குரு அளித்த அகஸ்தியர் என்ற வெப்தளம் குருவிற்குரிய மூன்று எழுத்துக்களுடனும் குழலுறவுதியாகி அதன் குசா எண்ணான ஆறு எழுத்துக்களுடன் திகழ்வதும் அவர்தம் பெருங்கருணையையே சுட்டிக் காட்டுகிறது. ஓருமுறை சற்குரு அவர்கள் ஆறு எழுத்துக்களுடன் சுக்ர சக்திகளுடன் துலங்கும் ஒரு அடியார் இல்லத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவருடைய தோட்டத்தில் இருந்த தென்னைமரங்களை எல்லாம் ஒவ்வொரு மரமாக பார்வையிட்டு விட்டு அந்த அடியாரிடம் அந்த தென்னை மரங்களுக்கு எல்லாம் தொடர்ந்து நீர் பாய்ச்சும்படிக் கூறினார். கிணற்றில் கைமூலம் நீர் இறைக்க முடியாதபோது மின்சார மோட்டர் வசதியை மேற்கொள்ளும்படியும் அறிவுரை கூறினார். எனவே மனைவி, மக்கள் என்று மட்டுமல்லாமல் உலகில் உள்ள அனைத்திலும் சுக்ர சக்தியை நிரவும் சற்குருவின் கருணை பற்றி அந்த அடியார் புரிந்து கொள்ள பல வருடங்கள் ஆகிவிட்டதாம். முறையான தாம்பத்ய வாழ்விற்கு உதவுவது மட்டும், சுக போகங்களை அளிப்பது மட்டும் சுக்ர சக்திகள் அல்ல, பல தீய சக்திகளிலிருந்து மக்களைக் காப்பதும் சுக்ர சக்திகளே என்பதால் இறையருள் பெற்ற நம் சற்குரு போன்றோர் மட்டும் அல்லாது ஸ்ரீரமண மகரிஷி போன்ற பலரும் தங்கள் வாழ்நாள் இறுதி வரையிலும் தலைக்கு எண்ணெய் குளியலை மேற்கொண்டு சுக்ர சக்தியை எங்கும் நிரவி வந்தார்கள் என்பது அவர்களுடன் நெருங்கிப் பழகிய அடியார்களுக்கே புரியவரும்.


மனப் பொருத்தமே மணப் பொருத்தம் திருவீழிமிழலை
தற்கால திருமணப் பொருத்தம் பார்க்கும்போது பத்துப் பொறுத்தங்களைப் பார்த்து அதில் 10க்கு 8 பொருத்தங்கள், ஆறு பொருத்தங்கள் இருந்தால் கூடப் போதும் என்று நினைத்து அதற்கு பாஸ் மார்க் கொடுத்து திருமணங்களை நிகழ்த்தி விடுகிறார்கள். இது முறையன்று. உண்மையில் பத்துப் பொருத்தங்களைத் தாண்டியும் வரன்கள் ஜாதகங்களுக்கு இடையே பார்க்க வேண்டிய பொருத்தங்கள் ஏராளமாக உண்டு. இந்தப் பொருத்தங்களில் யோனிப் பொருத்தமும் ரஜ்ஜுப் பொருத்தமும் வரன்களுக்கு இடையே இருந்தால்தான் மற்ற ஜாதகப் பொருத்தங்களைப் பற்றியே யோசிக்க வேண்டிய வேண்டும் என்பர்கள் பெரியோர். ஆனால் தற்காலத்தில் இத்தகைய ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கும்போது ஜாதகங்களையே மாற்றிக் கொடுத்து விடுவதால் திருஅண்ணாமலையை முறையாக கிரிவலம் வந்து தசமுக தரிசனம் அல்லது சிவசக்தி ஐக்ய தரிசனங்களை வரன்கள் தரிசனம் கண்டு அதன்பின் எடுக்கும் முடிவுகள் அவர்கள் வாழ்க்கைக்கு தக்க துணையை தேர்ந்தெடுக்கும் என்பது சித்தர்களின் வாக்கு. மேலும் சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளைக் கொண்டாடுவோரும், தங்கள் திருமண நினைவு நாட்களை கொண்டாடுவோரும் இத்தகைய தசமுக, சிவசக்தி ஐக்ய தரிசனங்களை கண்டு தங்கள் வைபவங்களை நிகழ்த்துவதால் அற்புத ஆயுள் ஆரோக்கிய விருத்தி பலன்களை பெறுவார்கள் என்பது உறுதி. இதே தரிசனங்களை இரவில் பெறும்போது அது தீர்க தரிசனம் என்ற பெயரில் அமைந்து தம்பதிகளுக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளிப்பதுடன் அவர்கள் இடையே நிலவும் கருத்து வேற்றுமைகளையும் களையும். தம்பதிகளைச் சுற்றியுள்ள மேற்கண்ட தீ ஜுவாலைகளை எண்ணிப் பார்ப்பதிலும் ஒரு பலன் உண்டு. எண்ணிப் பாருங்கள், பலன் பெறுங்கள். அப்போதுதான் விஜயமங்கைக்கும் வீழிமிழலைக்கும் உள்ள தொடர்பும் தெரிய வரும். எத்தனை முறை சுற்றி வந்தாலும் கண்களுக்கு குளிர்ச்சியை ஊட்டக் கூடியவைவே இந்த அக்னி ஜ்வாலைகள். இந்த ஜ்வாலைகளில் 16 ஜ்வாலைகளை தரிசனம் செய்தாலே சிறப்பானது. கண்கள் திறந்த நிலையில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தீபங்களை தரிசனம் செய்யும் ஒருவர் கண்களை மூடிய நிலையில் எத்தனை தீபங்களை தரிசனம் செய்ய முடிகிறது என்பதே அவருடைய பக்தி நிலையைக் குறிக்கும்.
ஆமாம், தீர்க தரிசனத்திற்கும் போர்வைக்கும் என்ன சம்பந்தம் ? போர்வையை “விரித்து” பாருங்கள். அப்போதுதான் சில அற்புத உண்மைகள் தெளிவாகும்.


துங்க மிழலையீர் சங்கை தவிர்மினே
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழுங்கள் என்பதன் அர்த்தம் மேற்கூறிய சம்பந்தரின் வாக்கியங்களில் ஓரளவு புரிய வரும். எனவே முறையான திருமண வாழ்வே பிறவித் தளைகளிலிருந்து விடுவிக்கும் மார்கம் என சித்தர்களும் நமக்கு தெளிவுபடுத்துகிறார்கள். நிலக்கடலையை கொள்ளிடம் மணலில் வறுத்தால் அதன் சுவை மிகுதியாகும். காரணம் கொள்ளிடம் மணலில் குருவைக் குறிக்கும் தங்க சக்திகள் மிகுதியாக இருப்பதுதான். கடலையும் குருவைக் குறிப்பதுதானே. ஒருமுறை சற்ருரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்துபோது தன்னுடன் வந்த அடியாரிடம் கடலை மிட்டாயை கிரிவலப் பாதையில் வந்த பைரவ மூர்த்திகளுக்கு இடும்படிக் கூறினார். இவ்வாறு சுவை, பொருள், தயாரித்த முறை, அதை ஏற்கும் இறைமூர்த்தி அனைத்திலும் தனது குருநாதரையே கண்ட சற்குரு வெங்கடராமன் அவர்கள் இயற்றிய தானத்தின் மகிமையைப் பற்றி புரிந்து கொள்ளவே அந்த அடியாருக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டதாம். நீங்களாவது சுறுசுறுப்பாக இயங்கி விஜயமங்கை திருத்தலத்தில் கடலை மிட்டாய் தானம் அளித்து விரைவில் நற்பலன் பெறலாமே. முறையான இல்லற வாழ்க்கையே பிறவித் தளைகளிலிருந்து ஒருவரை விடுவிக்கும் என்பதை உலகத்தோருக்கு உணர்த்தவே தோத்திரபூர்ணாம்பிகையை கைப்பிடித்தார் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் என்பதே திருமண வாழ்க்கை பற்றி சித்தர்கள் தரும் விளக்கமாகும்.


தேனருந்திய வண்டின் நிலை போன்றது பக்தனின் நிலை
பகவான் ரஜனீஷ் கூறிய கதையை இங்கு நினைவு கூர்கிறோம். ஒரு முறை ஒரு சீடன் பிரம்மத்தைப் பற்றி தன் குருநாதரிடம் கேட்டான். அதற்கு குருநாதர் பிரம்மம் என்பது ஒரு கை ஓசையைப் போல இருக்கும் என்றும் அதைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள தியானத்தில் ஈடுபடுமாறு கூறி அந்த சீடனை அனுப்பி விட்டார். சில நாட்கள் கழித்து தன்னுடைய குருநாதரிடம் வந்த சீடன் ஒரு கை ஓசை நீர்வீழ்ச்சியைப் போல் இருக்கும் என்று கூறுவே அதற்கு குருநாதர் நீர்வீழ்ச்சியின் நீர் ஏதாவது கற்பாறையில் மோதுவதால் அங்கு கல் தண்ணீர் என்று இரு பொருள் இருப்பதாக கூறி மீண்டும் ஆழ்ந்து தியானிக்குமாறு கூறி சீடனை அனுப்பி விட்டார். இன்னும் சற்று காலம் கழித்து குருவைக் காண வந்த சீடன் ஒரு கை ஓசை தேனியின் ரீங்காரம் போல் இருக்கும் என்று கூற குருவோ தேனியின் சிறகுகள் காற்றில் மோதுவதால் அந்த ஒலி ஏற்படுகிறது. காற்றை நாம் பார்க்க முடியாவிட்டாலும் தேனீயின் இறக்கை நாம் பார்க்கும் வகையில்தானே உள்ளது என்று சொல்லி சீடனை திருப்பி அனுப்பி விட்டார். சற்று நாட்கள் கழித்து சீடன் மீண்டும் ஆர்வமாக தன் குருநாதரை நோக்கி வந்தான். ஆனால், தூரத்தில் வரும்போதே அவனுடைய ஆர்வத்தைப் பார்த்த குருநாதர் தொலைவில் இருந்தே கையசைத்து அவன் கூறப் போகும் பதில் சரியில்லை என்று தன்னுடைய சைகையாலேயே உணர்த்தி சீடனை திருப்பி அனுப்பி விடுவார். பின்னர் வெகு நாட்கள் கழித்து சீடன் திரும்பி தன்னுடைய சற்குருநாதரிடம் வருவான். இம்முறை அவன் எந்த பதிலையும் கூறாது மௌனமாக தன்னுடைய குருநாதரைப் பார்ப்பான். ஆனால் அவனுடைய கண்களிலிருந்து கடவுளை தரிசனம் செய்த ஆனந்தக் கண்ணீர் சொரிவதைக் கண்ட குருநாதர் அமைதியாக இப்போது நீ பிரம்மத்தை உணர்ந்து விட்டாய். இனி உனக்கு என்னுடைய வழிகாட்டுதல் தேவையில்லை என்று விடைகொடுத்து அனுப்புவார்கள். இதுவே தங்களுக்குள் உள்ள தீபங்களைக் காணும் பக்தர்களின் நிலை. இந்த நிலையை அடைந்த பிரம்மஞானியை சந்திக்க விரும்பும் பக்தர்கள் இன்றும் ஸ்ரீஅமிர்தானந்த மயி அன்னையை தரிசனம் செய்து ஒரு பிரம்மஞானி எப்படி இருப்பான் என்ற உண்மையை தங்கள் கண்களாலேயே தரிசித்து மகிழலாம்.


திருஅண்ணாமலையில் அமைந்துள்ள சிவசக்தி ஐக்கிய தரிசனம் புதிதாக திருமணம் புரிந்து கொண்டவர்கள், தம்பதிகளுக்கு மட்டுமல்லாது உத்தம ஞானிகளுக்கும் நலம் அளிக்கும் தரிசனமே ஆகும். பசுவினுடைய பாலை ஒரு இறை மூர்த்திக்கு அபிஷேகமாக அளித்து விட்டாலே அந்தப் பசு தான் பிறந்த பயனை அடைந்து விடுகிறது அல்லவா ? அது போல் தான் மனிதனாகப் பிறந்த பயனை அடையும் மகான்கள் குறிப்பாக சித்தர்கள் தாங்கள் இறைவனுடன் ஒன்றும் நிலையில் தங்கள் பிறவிப் பயனை அடைந்து விட்டதாக கருதுகிறார்கள். அவ்வாறு மனித உருவத்தில் இப்பூலோகத்தில் தோன்றும் சித்தர்கள் தாங்கள் மணாளனாக கருதும் சிவன் திருவடிகளில் தங்கள் உடல், உயிர், உள்ளம் இவற்றை அர்ப்பணிக்கும்போது தங்கள் தவ வாழ்க்கை நிறைவு கொண்டதாக கருதுகிறார்கள். எனவே சிவசக்தி ஐக்ய தரிசனம் என்பதற்கு மகான்கள் கோணத்திலிருந்து பார்த்தால் இந்த ஒரு பொருளும் உண்டு. இவ்வாறு சித்தர்கள் தங்கள் உடலை அருணாசல ஜோதியில் கலக்கும்போது அதைக் காண கண் கோடி வேண்டும். அந்தக் “கோடி” கண்களை பெற்றவர்கள் இன்றும் நம்மிடையே உண்டு.

 

திருத்தல யாத்திரை தொடரும்

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam