முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பிரதட்சிண சக்திகள்

கை விரல் ரேகைகள் போல, கால் அடிப் பகுதியிலும் பாத ரேகைகளும் உண்டு. பிரதமை திதி அன்று உள்கால் பாதங்களை நன்றாகக் கழுவி, பாத ரேகைகளை நன்றாகக் கவனியுங்கள். கால் பாத ரேகைகள் அபூர்வமான சக்திகளைப் பெற்றிடவே, தினசரி மூன்று வேளைகளிலுமே ஆலய தரிசனம் செய்திடுதலே கலியுகத்தில்,
* விடுபட்டுப் போன விரதங்கள், பண்டிகைகளின் பலாபலன்களைப் பெற ஓரளவு பரிகார வழிகளையும் அளிக்க வல்லதாகும்.
* வன்முறைகள், தீய சக்திகளின் ஆக்கிரமிப்பு இவைகளுக்கு இடையே மன பீதியுடன் வாழ்கின்ற கலியுக மக்களுக்குத் தக்கத் தற்காப்பு சக்திகளை அளிக்கக் கூடியதாகும்
* குடும்பத்தினர் பலருமே அலுவலகத்திற்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய நிலையில், சந்தியா வந்தனம் போன்ற பல நித்திய வழிபாடுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் பல வகைகளிலும் தடைபட்டுள்ளமையால், குடும்பத்திற்குத் தேவையான புண்ய சக்திகளையும் வீட்டில் இருக்கின்றவர்களாவது மூன்று வேளைகளிலும் ஆலயம் செல்வதால், தக்கக் கூடுதல் புண்ய சக்திகள் கிட்டும்.
* இதிலும், விசேஷமான தெய்வீக சக்திகள் நிறையும் நாட்களிலாவது மூன்று தடவைக்கும் மேலாகப் பழமையான சுயம்பு லிங்கத் தலங்களில் வழிபட்டு வருதல் வேண்டும். குறிப்பாக, ஞாயிறு போன்ற விடுமுறைகளில், ஓய்வு என்ற பெயரில் சோம்பி அமராது, குடும்பத்தோடு ஆலய தரிசனம், கிரிவலத்தை நிறைய மேற்கொள்ளல் வேண்டும்.

பிறவிக் கடலை நடந்தே
கடந்து விடலாம் !

* காலையில் ஆண்கள் சூரியோதய நேரத்தில் வழிபடுவதும், பெண்கள் சமையல், வீட்டுப் பணிகளை நிறைவு செய்து, பகல் பூஜைகளிலும், மாலையில் பள்ளி, கல்லூரியில் இருந்து திரும்பி வரும் பிள்ளைகளும், பெண்களும், இரவு 7 மணி நேர பூஜையில் குடும்பத்தினர் அனைவருமாக என, தினசரி ஆலயப் பூஜைகளில் குடும்பத்தினர் அனைவருமே பங்கு கொள்ள வேண்டும்.
* வாரமொரு முறை சத்சங்கமாகப் பலரையும் சேர்த்துக் கொண்டு ஆலயத்தில் சாம்பிராணி தூபம் இடுதல், பச்சரிசி மாக்கோலம் இடுதல், ஆலயத்தைத் தூய்மை செய்தல், நிறைய விளக்குகளை ஏற்றுதல் எனப் பலவழிகளில் சத்சங்கப் பூஜைகளை ஆற்றி வருதல்தான், குடும்பத்தை நன்கு காப்பாற்ற வல்லப் புண்ய சக்திகளை அளிக்கும். குறிப்பாக, அபிஜித் முகூர்த்த வழிபாட்டுப் பலன்கள் பலரையும் அடையாது தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அபிஜித் முகூர்த்தப் பூஜைகளினால் கிட்ட வேண்டிய புண்ய சக்திகளும் கிட்டாமல் போவதோடு, இவற்றால் கழிபட வேண்டிய வினைகளும் அப்படியே தேக்கமடைந்து விடுகின்றன.
உள்ள உயர்வுக்கும், மனப் பிழைக்கான தீர்வளிப்பதாகவும், கழிவுக் குதம் போக்கும் வகையிலும் அமைவதே குதிகால் பிரதட்சிணம் என்பது சித்தர்களின் பரிபாஷை! அதாவது குதிகால்களை மட்டும் பூமியில் வைத்து நடக்கும் யோகமுறைப் பிரதட்சிணமாகும். இதனைத் தற்காலத்தில் பலரும் மறந்து விட்டனர். எவ்வாறு குதமானது உடலுக்குத் தேவையற்ற கழிவுப் பொருட்களை வெளியேற்றுகின்றதோ, இதே போல கேவலமான முறையற்ற காம, குரோத எண்ணங்களும் வெளித் தள்ளப்பட வேண்டுமல்லவா! எனவேதான், ஆலயங்களை வலம் வருவதில் பல்வகைப் பிரதட்சிணங்கள் அமைகின்றன. இவ்வகையில்தான் மலவினைக் குதம் போக்கும் மாமேருப் பிரதட்ணம் என்பதாகவும் மேரு சக்கர வகையில் பல பிரகாரங்களை வலம் வரும் முறைகளை அளித்துள்ளனர். காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன் ஆலயப் பிரதட்சிணம் இவ்வகையில் அமைவதே!
*இவ்வாறாக, ஆலயப் பிரதட்சிணம் என்பது ஒரு வகைப் பூஜை, தியான, யோக முறை, வினைக் கழுவு வாடகம் எனப் பல வகைகளில் மக்களுக்குப் பயன்படுகின்றது. குறிப்பாக, மனித மனதிலுள்ள குப்பைகளை, கழிவுகளைக் கழிப்பதற்கான நடைவாரப் புண்ய சக்திகளை அளிப்பதாக விளங்குவதே பிரதட்சணப் பரிகாரம் என்று உரைத்துள்ளனர்.

எவ்வாறு இக்கழிவு நிகழ்கிறது? சித்புருஷர்களும், யோகியரும், மஹரிஷிகளும் எப்போதும் வலம் வந்து கொண்டுள்ள ஆலயங்களில் தாம் நில, ஆகாய, நீர், வளி, பரவெளி மிகவும் சுத்தமாக இருக்கும். ஆலயத்தை அடிப் பிரதட்சணமாக வரும் பொழுது இத்தகைய இறைத் தூதவர்களின் திருவடிபட்ட பிரகார வழிகளில் அவர்தம் தபோபல சக்திகள் யாவும் நிரவி, நம் பாத ரேகைகள் மூலமாக உட்சென்று, நமக்கு பலவித அனுகிரகங்களைப் பெற்றுத் தருகின்றன. வேகமாக நடந்து பிரதட்சிணம் வருவதை விட, அங்கப் பிரதட்சணமாகவோ, அடிமேல் அடிவைக்கும் அடியில் பிரதட்சிணமோ, குதிகால் பிரதட்சிணமாகவோ வரும்போது, உடலும், பாத ரேகைகளும் நிலத்தில் நெடுநேரம் தங்கி அமிழ்வதால், உத்தமர்களின் திருவடிச் சுடர்களின் சக்திகள் நம் உடலில் நிறைந்து நிரவுவதற்கு நிறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. எனவே தான் ஒவ்வொரு முறையும் ஆலய தரிசனத்திற்குச் செல்லும் போதெல்லாம் குறைந்தது 12 முறை அடிப்பிரதட்சிணம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
குறைந்தது ஐந்து பிரகாரங்கள் உள்ள ஆலயங்களிலோ அல்லது ஐந்து ஆலயங்களிலோ பிரதமை திதிகளில் நெடுநேரம் பிரதட்சிணமாக வலம் வருக! இயன்றால் அனைத்து வகைப் பிரதட்சிண வகைளையும் கடைபிடித்திடுக!

மச்சேந்திர சக்தி

மச்சேந்திரச் சக்கரம் என்ற அற்புதமான யந்திரச் சக்கர வகை உண்டு. இதை வைத்து முறையாகப் பூஜித்தலால், வாழ்க்கையின் பல துறைகளிலும் உள்ள இன்னல்கள் அகன்று முன்னேற்றம் பெற உதவும். இதற்கான பூஜைகளை ஆற்ற வேண்டிய மிகவும் முக்கியமான பூஜை நாட்களுள் ஒன்றே, வாஸ்து நாளும், பெருமாளுக்கு உரிய சனிக் கிழமையும் ஆகும்.
மனிதன் ஒவ்வொரு விநாடியும் பூமியில் உறைந்து வாழ வேண்டிய நிலை இருக்க, பூமா தேவிக்கு நன்றி செலுத்தும் வழிபாட்டை முறையாக ஆற்றிடப் பலரும் மறந்து விடுகின்றார்கள். செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் பெருமாள் ஆலயங்களில், பூமா தேவிக்குக் குறைந்தது ஆறடி நீளமுள்ள பூமாலைகளைச் சார்த்தி வழிபட்டு வருவதால் அறிந்தோ, அறியாமலோ, பூமிக்கு / பூமியில் செய்த தீவினைகளுக்கான பரிகாரங்களைப் பெற உதவும்.
பீடி, சிகரெட், பூமியில் இட்டுப் பொசுக்குதல், புகையிலையின் நச்சு நீரை உமிழ்தல் போன்ற வகையிலான, பூமிக்குச் செய்த துரோகங்கள், தோஷக் காரிய வினைகளில் இருந்து மீளவும் பிராயச் சித்தம் பெறவும் முடியும்.
கீழ்நோக்கு நாட்கள், மேல் நோக்கு நாட்கள் என்று பஞ்சாங்கத்தில் சில நாட்களைக் குறித்துள்ளனர். இதில் கீழ்நோக்கு நாட்களில், மச்சேந்திரச் சக்கரத்தை நன்னாரி, விளமிச்சை, வெட்டி வேர் மீது வைத்து பூமி சூக்தம் போன்ற துதிகளை ஓதிப் பூஜை செய்து, பூமியின் கீழ் விளையும் காய்கறி வகை உணவுகளைப் படைத்துத் தானமளித்து வருவதால், நில தோஷங்களும், வாஸ்துமுறி தோஷங்களும் அகலவும், பூமி வகை ஆஸ்திசேர் அனுகிரகங்களைப் பெறவும் நன்கு உதவும்.

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

தசமி நாட்களில், மச்சேந்திரச் சக்கரத்தை நெல், நவதான்யங்களின் மேல் வைத்துப் பூஜிப்பதால், கடன் நிவாரணத்திற்கான நல்வழிகளைப் பெறத் துணை புரியும்.
புதன் கிழமை அன்று துளசி தளங்களின் மேல் மச்சேந்திரச் சக்கரத்தை வைத்துப் பூஜித்து, பச்சை நிறக் காய்கறிகள் கலந்த உணவு, பச்சைப் பயிறு சுண்டல் படைத்துத் தானமளித்து வருவதால், பத்திரங்கள், சட்ட ரீதியான விஷயங்களால் கட்டடங்கள், நிலங்களில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள் அகல உதவும்.
குடும்பத்தில் பங்காளிகள், உறவினர்கள் இடையே சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் காக்கவும், ஏற்கனவே எழுந்துள்ள குறைபாடுகளைக் களையவும், 36 அச்சு வெல்லங்களின் மேல் வாழை இலை வைத்து, அதன் மேல் மச்சேந்திரச் சக்கரத்தை வைத்து, 12 திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள், பூ சூக்த மந்திரங்களை ஓதி வழிபட்டு, விளாம்பழத்துடன் வெல்லத்தைப் பிசைந்து படைத்துத் தானமளிக்க வேண்டும்.
மனிதனுக்குத் தீர்க ஆயுள் அம்சங்கள் மிகவும் தேவை அல்லவா! இதே போலவே, நிலங்கள், கட்டடங்களுக்கும் தீர்க்க ஆயுள் அம்சங்கள் பொலிந்தால்தான் அவை நிலைத்து நிற்கும். இதற்காகவே அஸ்திவாரப் பூஜையின் போது மச்சேந்திரச் சக்கர வகையிலான பல சக்தி வாய்ந்த யந்திரங்களைப் பூமியில் வைத்துப் பதிப்பர். இவ்வாறு சனிக் கிழமையன்று பூமியில் திரளும் பூம்ய ஆயுள்காரக சக்திகளை நன்கு பயன்படுத்திக் கொண்டிட, பூமா தேவியை தரிசித்துப் பூஜித்த பின்னரே உணவேற்றல், சனிக் கிழமை தோறும் மச்சேந்திரச் சக்கரப் பூஜையை ஆற்றல் போன்றவற்றை நல்ல வைராக்யம் பூண்டு செய்து வருக!

கண்ணாடியில்லா கண் பார்வை

ஞாயிற்றம்பலச் சித்தர் பாரத நாடெங்கும் வலம் வந்து புனிதமான ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பூஜை, சூரிய நாராயண சுவாமி பூஜை, அம்பாளின் பூஜை இம்மூன்றையும் திறம்பட நடத்தி, நாடெங்கும், உலகெங்கும் ஆயிரக் கணக்கானோரை இம்மூன்று இணைப் பிணை வழிபாடுகளிலும் தேர்ச்சிப் பெறச் செய்தவர். ஞாயிற்றம்பல பகவதியின் உபாசகச் சித்தராவார்.
இன்றும், என்றுமாய், எந்தெந்த ஆலயங்களில் எல்லாம் வருடந் தோறும், குறித்த நாட்களில், இறைவனின் மேல் சூரிய கிரணங்கள் பெய்து, சூரிய பூஜை நிகழும் தலங்களில், இச்சித்தர்பிரான் நேரிலேயே வந்து 108, 1008, 10008 எனப் பல்வகையான மூலிகைத் திரவியங்களால் பூஜித்து, இதன் அனுகிரக சக்திகளை, ஞாயிறு தோறும் இத்தலங்களில் வழிபட வருவோர்க்கு அளிக்கும் வண்ணம் சங்கல்பித்து வருகின்றார்.
கீழ்க்கண்ட இடங்களில் வருடத்தில் சில நாட்களில் சூரிய கிரணங்கள் சிவலிங்கத்தின் மேல் படுகின்றன. இவைதாம் சூரிய மூர்த்தியே தம் கிரணங்களால் ஸ்பரிசித்து சிவலிங்க மூர்த்திகளை வழிபடுகின்ற மிகவும் சக்தி வாய்ந்த ஆலயங்கள் ஆகும். கண் வகை நோய்களைத் தீர்க்க வல்ல தலங்கள், மன வியாதிகள், பீதிகளையும் போக்க வல்ல தலங்கள். இவ்வாலயங்களில் வருடத்தில் சிவமூர்த்தியின் மேல் சூரிய கிரணங்கள் படிகின்ற நாட்களை விசாரித்து அறிந்து கொண்டு நன்கு பூஜித்துப் பயன் பெறுங்கள்.

திருபுறம்பியம்

* சென்னை -பூந்தமல்லி ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயில்
* திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமானேஸ்வரர் ஆலயம்
* (முற்காலத்தில்) கும்பகோணம் - கஞ்சனூர் அருகே கீழ்சூரியமூலை ஸ்ரீகோடி சூரிய பிரகாசர் ஆலயம் - தற்போது விசாரிக்கவும்
* சென்னை -திருவேற்காடு ஸ்ரீவேதபுரீஸ்வரர்
* கரூர் அருகே வாங்கல் ஸ்ரீரவீஸ்வரர்
* மயிலாடுதுறை அருகே வைத்தீஸ்வரன் கோயில்
* திருபுறம்பியம் ஸ்ரீசாட்சிநாதர் ஆலயம் - நன்கு விசாரிக்கவும்

ஸ்ரீசூர்யகோடி பிரகாசர்
கீழ்சூரியமூலை

* திருச்சி - குளித்தலை அருகே அய்யர்மலை ஸ்ரீரத்னகிரீஸ்வரர் ஆலயம்
* விழுப்புரம் - உளுந்தூர்ப்பேட்டை இடையில் திருநாவலூர் - நன்கு விசாரிக்கவும்
* கும்பகோணம் திருநாகேஸ்வரர் ஆலயம்
* சேலம் அருகே ஏத்தாப்பூர்
* கரூர் ஸ்ரீபசுபதீஸ்வரர் ஆலயம்
* தஞ்சாவூர் அருகே திருக்கண்டியூர் சிரகண்டீஸ்வரர் ஆலயம்
* காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
* சென்னை அருகே ஞாயிறு கிராமச் சிவாலயம்
இத்தலங்களில் ஞாயிற்றம்பலச் சித்தர், சூரிய கிரணங்கள் சிவலிங்கத்தின் மேல் விழும் நாட்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு ஞாயிறன்றும் சூரியக் கிரணப் பூஜா பலாபலன்களை மீண்டும் நிலை நிறுத்தி பூஜிப்பதால் ஞாயிறு இத்தகைய ஆலயங்களில் வழிபடுவதுடன் தர்ப்பணமும் ஆற்றி வருதல் முறையாக முதியோரைப் பராமரிக்காமையால் தந்தை வகை மூதாதையர்களின் சாபத்திற்கு ஆளான குடும்பங்களைக் காத்திடவும் உதவும். கண் சம்பந்தமான பலத்த நோய்களுக்கு ஆட்பட்டோர் நல்ல நிவாரணங்களைப் பெறவும் உதவும்.

ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம்
வாங்கல் கரூர்

ஞாயிற்றம்பலப் புழை, ஞானப்பாடிவர ஞானத்துறை ஞாலம்
ஞானாதிக்க ஞாயிறே, ஞாயிற்றப்பரே, ஞானச்சுடர்ப் பிழம்பே
மெய்ஞான சிவமே! ஞானக் கிரணமே! சிவஞான மெய்யே!
ஞாயிற்றம்பலத்தான் கண்ட ஞானப் பொழில்பாத ஞாணே கதி கதி
என்று 36 முறை ஓதியவாறே வலம் வந்து, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, காரட், போன்றவை கலந்த உணவு வகைகளைப் படைத்தும், தானமளித்தும் வணங்குதலால், கண் சம்பந்தமான நோய்களுக்கு நல்ல நிவர்த்தி கிட்டும்.
பல குடும்பங்களில் கண்களுக்குப் பலத்த கண்ணாடி போட்டு, சிறு பிள்ளை முதல் முதியோர் வரை, பாரம்பரியம் பாரம்பரியமாக கண் பார்வைக் குறை நோய்கள் அண்டியிருக்கும். இதற்குக் காரணம், பித்ரு தர்ப்பணங்களை முறையாக அளிக்காது, சூரிய பூஜைகளை, குல தெய்வ பூஜை முறைகளை பன்னெடுங்காலமாக ஆற்றாததே ஆகும். இவ்வாறு சந்ததி சந்ததியாகத் தொடரும் கண் பார்வைக் குறை தோஷங்களை அகற்றிட, தினமுமே இத்தகைய குடும்பத்தார் அகஸ்திய மாமுனி ஸ்ரீராமருக்கு உபதேசித்த ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை தினமும் 12 முறை ஓதி வருவதுடன், ஞாயிறு தோறும் சூரியன் வழிபட்ட தலங்களில் குறைந்தது, 12 மூலிகா திரவியங்களுடன் அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜித்தும் வருதல் வேண்டும். கண் துறை மருத்துவர்கள் தம் துறைகளில் சிறப்படைய, இவ்வகைப் பூஜைகளைக் கண்டிப்பாக ஆற்றி வருதல் வேண்டும்.

மனக் குற்றங்கள் சீர்மை பெற

ஆறும் ஏழும் அணிவது தானம்
ஆறும் ஏழும் பணியுடை மானம்
ஆறும் ஏழும் கனியுடை தானம்
ஆறும் ஏழும் மணியுடை வானம்
என்ற சித்தர்களின் பரிபாஷைத் துதிக்கு ஏற்ப, சஷ்டியும், சப்தமித் திதியும் சங்கமிக்கும் நேரம் அமைகின்ற நாளில் தீபாக்னி சக்திகள் வளம் பெற்று அருள்கின்றன. ஏழு வகைக் கனிகளை, ஏழு தீபங்களின் சாட்சியாய் இறைவனுக்குப் படைத்து வழிபடல் நலம்.
சஷ்டி என்பது அக்னி சக்தித் திதியாகும். சப்தமி என்பது, எண் ஏழு சக்திகளுடன், சப்தப்ரவாக சக்திகள் நிறைந்ததும், சூரிய சக்திகளுடன் மேன்மை பெற்றிருப்பதும் ஆகும்.
இவ்வாறு சஷ்டியும், சப்தமித் திதியும் இணையும் நேரத்தில், அதாவது சஷ்டித் திதி முடிந்து, சப்தமித் திதித் துவங்குகையில், ஏழேழு வகை விளக்குகளில் பசு நெய் தீபம் ஏற்றி, (சப்தமியின் ஏழாம் வகைப் படை சக்திகளையும், சப்தஸ்வர சக்திகளையும் பெற்றிட) சப்த ஸ்வரங்களும் கூடி வருகின்ற வகையில், குறைந்தது ஏழு (ராக வகையில்) இறைப் பாடல்களை ஓதி, தீபத்தின் முன் அமர்ந்து குடும்பத்தாருடன் சேர்ந்து பாடுதல் வேண்டும். பொதுவாக, ராகம் தெரிந்து பாடத் தெரியாதவர்கள் கூடத் திருப்புகழ்ப் பாடல்களை ஓதினால், இதில் இயற்கையாக அமையும் சந்தங்களே ராகவள வரங்களைப் பொழிவதாகும்.

குளித்தலை கடம்பர்கோவில்

ரேவதி நட்சத்திர தேவி அக்னி வகை பூஜை, தான தர்ம வழிபாடுகளில் தலை சிறந்தவள். ரேவானம் என்பது இரண்டு வகை அக்னி சக்திகள் சேரும் போது ஏற்படும் கூட்டு அக்னி சக்தி ஆகும். உதாரணமாக, கற்பூர தீபம் ஏற்றும் போது கற்பூரத்திற்கான ஜோதியை ஒரு விளக்கில் இருந்து பெறுகின்றீர்கள் அல்லவா ? விளக்கில் இருந்து எழும் ஜோதியானது, கற்பூரத்திற்குள் அக்னியாய்ச் சேர்கின்ற நேரத்தில், இரண்டு வகை ஜோதிகளுக்குள்ளும் ரேவானப் புனல் எனும் அரிய அக்னி சக்தி உண்டாகின்றது. இதற்கு மனதை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு.
செவ்வாய் கிரகமும் அக்னி வகை கிரகமாகும். அக்னிக் கோள மூர்த்தியாகிய செவ்வாய் மூர்த்தி, ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிரவேசிக்கும் நேரத்தில் பல்வகை ஜோதி கூட்டுகளை ஏற்றி வழிபடுதல் விசேஷமானதாகும். இதற்காக  அகல் விளக்கு, ஐந்து, ஏழு, ஒன்பது, பன்னிரண்டு வகை முகங்கள் உள்ள குத்து விளக்குகள், எலுமிச்சை உறை விளக்கு, வெள்ளிக் குத்து விளக்கு, பித்தளைக் குத்து விளக்கு, மா விளக்கு போன்ற பலவகை விளக்குகளை குறைந்தது ஏழு வகை விளக்குகளை தினமும் ஏற்றுகின்ற நெய் விளக்கின் தீபத்திலிருந்து, ஏனைய விளக்குகளுக்கு ஒரு தாமரைத் தண்டு திரி தீபமாக ஏற்றி வந்து, குறைந்தது ஏழுவகை தீப தரிசனங்களைப் பெற்றிடுக! இவ்வாறுப் பல்வகை ஜோதிப் பிணைப்பின் காட்சிகளைக் காணுதல் சிறப்பு.

திருத்தலையூர் ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருத்தலம்

தனி விமானத்துடன் தனித்துச் சந்திர மூர்த்தி எழுந்தருளும் சன்னதிகளிலும் ஏழு வகைத் தீபங்களை ஏற்றி வழிபடுதலால், கணவன், பிள்ளையின் தவறான போக்கைப் பற்றி வருந்தும் பெண்மணிகளின் வருத்தங்கள் தணிய நல்வழி அமையும்.
மேலும், பொதுவாக, தன்னைப் பற்றிப் பிறர் கோள்மூட்டியதால்தான், அலுவலகத்திலும், குடும்பத்திலும், வேறு இடங்களிலும் தன் நன்னிலை தளர்ந்து போய் உள்ளதாய் எண்ணுவோர்க்கு, நல்வகையில் மன நிவாரணம் கிடைக்க இந்த சப்த தீப வழிபாடு உதவும். சப்தமித் திதி நாளில், சப்தமாதர், சப்த கன்னியருக்கு ஆடைகள் சார்த்தி ஏழு முறை வலம் வந்து வணங்குவதுடன் அவர்களுக்கு ரட்சையாய்க் காத்து நிற்கும் பிள்ளையாருக்கும் பட்டு வஸ்திரம் சார்த்தி, ஏழு வகைத் தீபங்களை தாமரைத் திரி கொண்டு ஏற்றி வழிபட்டு வருதலின் பலாபலன்களில் ஒன்றாக,
வெளியில் சொல்ல முடியாதபடி பலத்த மனக் குற்ற உணர்வுகளால் வாடுவோர் சீர்மை பெற உதவும்.
கதம்ப மஹரிஷி சப்த ரிஷிகளின் தரிசனம் பெற்று, கடம்ப மரம் உள்ள தலங்களில் சப்தமி திதி அன்று தியான பூஜைகளை ஆற்றுவதால்,
பசுவிற்கு, பட்சிகளுக்கு உணவு, சிறிய அளவிலாவது அன்னதானம் ஆற்றி, இந்த நற்காரியச் சிந்தனையுடன், சப்த ரிஷிகள் உள்ள ஆலயங்களிலும், (திருச்சி லால்குடி), கடம்ப மரம் உள்ள தலங்களிலும் (குளித்தலை)

கடம்ப ஜோதிச் சுடராழி,
குடம்பா துளதன் வடவாழி,
மடமா தவமா துரையாழி
சடமா இறைமா துணையாமே
என்று மனதினுள் ஓதியாறு தியானித்தல் நல்ல தியான பலன்களைத் தரும். இவ்வாறாக தியானத்திற்கு முன் ஒரு நற்காரியத்தையாவது ஆற்றி, தியானத்தில் அமர்ந்து, ஆற்றிய நற்காரியத்தினை மனதினுள் கொணர்ந்து, மனதை இயற்கையான முறையில் நற்சிந்தை உழவால் சீர்படுத்தி, இதனை ஆற்றுவித்த இறைவனுக்கு நன்றி கூட்டி அமையும் ஆரம்ப நிலை தியானமே ஆழ்நிலை தியானத்திற்கு வழிவகுத்துச் சிறக்கும்.

கணவன்மார்கள் திருந்தி வாழ ...

திரிலோசன விரத நாளில் பரத நேத்ரப் புல சக்திகள் நன்கு பிரகாசம் பெறும். சிவபெருமானுக்கு மட்டுமல்லாது அனைத்துத் தெய்வ மூர்த்திகளுக்கும் மூன்று கண்கள் உண்டு. மனிதனுக்கும் கூட பரத நேத்ரப் புலம் என்ற மூன்றாம் நேத்திரம் உண்டு.  
அவரவருடைய சத்குருவால் மட்டுமே தீர்க தரிசன சக்திகளாக அவரவருக்கே நன்கு புலப்படுவதாகும். ஒருவருக்குள் உள்ள இத்தகைய மூன்றாம் (நெற்றிக்) கண்ணாகிய பரத நேத்ரப் புலம் மற்றொருவருக்குத் தெரியாது.

ஒளிபடா தீர்த்தம்
வள்ளிமலை

எந்த ஒரு பூலோக மனிதருமே, தம்முடைய விடா முயற்சியான ஆழ்ந்த பக்தியால், பக்திமிகு இறைப்பணிகளால், தியாகமயமான சமுதாயப் பணிகளால் மூன்றாம் பரதப் புலத் தன்மைகளைச் சுயம்பு ஆதித்யப் பூர்வமாகவே அதாவது, பக்தி நிலைகளின் அருட்பாங்காக, பரதப் புலத் தெய்வீகத் தன்மைகளை அடைவர். அதாவது, எந்த ஒரு மனிதனும் ஆழ்ந்த பக்தியால் மஹானாக வல்லதாகும் என்பதைப் பரத நேத்ரப் புலச் சக்திகள் நன்கு புலப்படுத்துகின்றன.
ஆனால், தீர்க தரிசன சக்திகளைச் சித்சக்திகளாகப் புலப்படுத்தும் பரத நேத்ரப் புல சக்திகளை, தாமாகவே அடைதல் வேண்டும். சுயநலமாகப் பயில்வோர்க்கோ, இவற்றை அடைய மிகவும் எதிர்பார்த்து யோக, தவம் புரிவதாலோ, இவை எவரையும் வந்தடைவதில்லை. ஆனால், அவரவருடைய ஆழ்ந்த பக்தித் தன்மைகளைப் பொறுத்து, இவை தாமாகவே சுயம்பாய்ப் பிரகாசிப்பதும் உண்டு. மொத்தத்தில், அவரவருக்குள் தெய்வீகத் தன்மைகள் நிறையவே பதிந்துள்ளன, இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் புலப்படுத்துவதே பரத நேத்ரப் புலத்திற்கான விளக்கமாகும். பரத நேத்ரப் புல சக்திகள் நன்கு பிரகாசம் பெறும் நாளே திரிலோசன விரத நாளாகும்.

காருகுடி ஸ்ரீஅகோரவீரபத்திரர்

பொதுவாக, முகத்தில் தேஜஸ், தலையின் மேல் ஒளிப் பரல், மூன்றாவதாக, பரதப்புல தீர்க தரிசனம் எனும் நெற்றிக்கண் - இவை மூன்றும் ஆழ்ந்த பக்தி நிலைகளில் தாமே தோன்றிச் சித்துக்களாய்ப் பூரிக்கும். உத்தமத் தெய்வீக நிலைகளில் சித்துக்கள் செய்வதை அனுமதிப்பதில்லை. ஆனால் மூன்றாம் நேத்திரத் திருச்சாழல் சித்துக்கள் சத்குருவின் அருட்பாங்காய்த் தாமாய் வந்து உத்தமர்களிடம் வந்தும் உறைவதுண்டு.
மூன்று கண்களை உடையது தேங்காய் எனவேதான் இதற்கு பரதக் கனி, பரதப்புலக் கனி என்றெல்லாம் பெயர்களுண்டு.
சிவபெருமானுக்கே திரிலோசனன், முக்கண்ணன் என்ற பெயர்கள் உண்டே! இறைலீலையாக, அம்பிகை, சிவபெருமானின் கண்களைப் பொத்திய போது, - வலது கண் சூரிய அம்சம் உடையது, இடது கண் சந்திரப் பிரவாகம் உடையது ஆதலின் - பிரபஞ்சத்தின் கோடானு கோடி லோகங்களும் சூரியப் பிரகாசத்தை இழந்தன. இடது கண் சந்திர அம்சம் என்பதால் பிரபஞ்சத்தின் கோடானு கோடி சந்திர மூர்த்திகளும் சந்திரப் பிரகாசத்தைச் சற்று நேரம் இழந்தனர்.
சித்தர்கள், இத்தகைய இறைலீலையாகவே, முக்கண்ணனாரின் திருவிளையாடலாகவே உண்மையாக அல்லது மாயா தேவ விநோதமாக நிகழும் என்பதால் தான், அவர்கள் இதனைத் தீர்க தரிசனமாக அறிந்து, இறைவனிடம் வேண்டி, மின்மினிப் பூச்சி, ஜோதி விருட்சங்கள், நட்சத்திர மீன்கள் இவற்றைக் கொண்டு, பூவுலகில் ஒளியை நிலை நிறுத்திடச் செய்தனர். இவ்வாறு அந்த க்ஷண நேர இருளில் தோன்றிய சிருஷ்டிப் படைப்புகளும் உண்டு. இவை சிவ, பார்வதி ஹஸ்த, நேத்ர ஸ்பரிச சக்திகளில் பொலிபவை!
புதுக்கோட்டை - பொன்னமராவதி அருகே உள்ள காஞ்சாத்து மலையில் உள்ளது போலான, சூரிய, சந்திர ஒளிபடா மலைச் சுனைத் தீர்த்தங்கள் இவ்வகையைச் சார்ந்தவையே ! சிலவகை ருத்தராட்சங்களில் சுயம்புத் துளைகள் இந்த இருளில் தாம் தோன்றின. இவ்வாறு இருள் மூடித் திறந்த ஒளி வந்த நேரத்தில், நோன்பு நோற்ற இல்லறப் பெண்கள் திரிலோசனிகள் ஆயினர்.

திரிலோசன விரத நாளன்று இளநீர் மட்டுமே அருந்தி, சிவ ஸ்துதிகளை ஓதி விரதமிருந்து, கண்களை மூடிய நிலையில் ஒவ்வொரு ஹோரை நேரத்திலும் சிவநாமத் தியானம் செய்து, 108 தேங்காய்களுக்கு மஞ்சள் பூசி நல்ல பெரிய வடிவு பூண்ட பிள்ளையாருக்குத் தேங்காய் மாலையாகச் சார்த்துதல்,
* வீரபத்திர சுவாமிக்கு மட்டைத் தேங்காய் மாலை சார்த்தல்,
* முக்கண்களுடன் உருவ வடிவுள்ள சிவமூர்த்திக்கு (பிட்சாடனர், கங்காதரர்) முக்கண் பொருளாகிய தேங்காய் மாலை சார்த்தி வழிபடுதல்,
* நேத்ர சக்திகள் நிறைந்த ஜவ்வரிசிப் பாயசம், தேங்காய் கலந்த உணவுகள், நுங்கு போன்ற கண் உள்ள பொருட்களால் ஆன உணவைத் தானம் அளித்தல்
* தாமரைத் திரி, பருத்தித் துணித் திரி, பஞ்சுத் திரி ஆகிய மூன்று திரிகளை வைத்து திருஷ்டி நிவாரண தீப விளக்கேற்றி வழிபடிதல்
* கண்ணப்ப நாயனார் அருள் பெற்ற தலங்கள்
- போன்ற வழிபாடுகள் விசேஷமானவை. தன் கணவனின் குணநலன்களைப் பற்றி வேதனை அடைவோர் அவர் சீரடைந்து, நல்மார்கம் பெற உதவும் நல்விரதம்.

குரு கடாட்சம் பெற்று வாழ்க

27 நட்சத்திரங்களையும் ஒன்பது ஒன்பதாக, மூன்று நவப்பிரகாச நட்சத்திர வகைகளில் ராசிமானச் சதுரத்தில், இடவோட்டு, வலவோட்டு, மேல்வோட்டு, கீழ்வோட்டு என்பதாகப் பிரிக்கின்றனர். மேலும், நவகிரகங்களில் ஒவ்வொரு கோளுக்கும் மூன்று, மூன்று நட்சத்திரங்கள் தசா நிர்ணயத்திற்குமாகவும் அமைகின்றன. இவ்வாறு, வேறு பல வகைகளிலும் மூன்று மூன்றாக அமையும் நட்சத்திரப் பகுப்பு / வகைகள் உண்டு. இதே போன்று, திதிகளிலும் எண் சக்திகளைக் கொண்டும், ஒன்பது வரையில் நவமியில் ஒரு சுற்று முடிவதாகவும், பத்தாவதாகத் தசமி எனத் தொடங்கிப் பதினைந்தாவது திதியில் முடியும் திதிப் பகுப்பும் உண்டு.
இவ்வகையில் நவமி முடிந்து தசமி தொடங்குதலும், ரேவதி நட்சத்திர காலம் முடிந்து, அஸ்வினி நட்சத்திரம் தொடங்குதலும், 12ஆவது நிறைவு ராசியாகிய மீனத்தில் இருந்து, முதலாவது ராசியான மேஷத்திற்குச் சந்திர மூர்த்தி வருவதும் நிறைவு, முடிவு, ஆரம்பம் ஆகிய காலச் சுழல் சக்திகள் ஒன்று சேர்ந்து வருவதைக் குறிப்பதாகும்.
இவ்வகையில் நிறைவும், தொடக்கமும் நிறைந்த பலவகைக் கால நாள், அரை குறையாக முடிந்தும், முடியாமலும், விட்டும், விடாமலும் இருக்கின்ற நற்காரியங்கள் நன்கு நிறைவு பெற உதவும் பூரண சக்திகள் நன்கு விருத்தி ஆகும் நாளுமாகிறது.

திருநரையூர் ஸ்ரீமேதாதட்சிணா மூர்த்தி

இத்தகைய நாட்களில் மூன்றின் மடங்காய் வரும் வகையில், மூன்று வேளைகளிலும் வீட்டில் விளக்குத் தீபத்தையும், ஆலயத்தில் முடிச்சுத் தீபங்களையும் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அலுவலகப் பணி, கடும் வெயில், காலை, மாலை மட்டுமே ஆலய தரிசனப் பழக்கம் காரணமாகப் பலருக்கும், உச்சி வேளையில் ஆலய தரிசனம் செய்யும் பாக்யம் கிட்டாமற் போவதால், மதிய நேர வழிபாட்டுப் பலன்கள் கலியுக மனித சமுதாயத்திற்குக் கிட்டாமல் போய் விடுகின்றது. இதனால் உச்சி வேளை ஆலய தரிசனப் பலாபலன்களால், புண்ய சக்திகளால் கழிய வேண்டிய கர்ம வினைகள் தேக்கமுறுகின்றன. இவற்றால் கிட்டப் பெற வேண்டிய நற்சந்ததி, ஆண் பெண் பாலார் நிறைந்த குடும்ப விருத்தி, நல்ல குடும்ப ஒற்றுமை போன்ற பல அரிய நல்வரப் பலன்களையும் கலியுக மக்கள் இழந்து வருகின்றனர்.

நல்விதமான தியான சக்தி, தேவையான சத்விஷயங்களை நன்கு நினைவில் கொள்தலுக்கும் (லெளகீகமான கல்வி விஷயங்களை அல்ல), உச்சிக் கால - அபிஜித் முகூர்த்த நேர - ஆலய தரிசனம், வழிபாடு மிகவும் உதவும்.
சூரிய மண்டலத்தைச் சார்ந்த தேவாதி தேவ மூர்த்திகள், மாமுனிகள், பித்ருக்கள் வழிபடும் காலமே பகல் உச்சிக் கால நேரப் பூஜை அல்லவா! தந்தை மகனிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நன்முறையில் தீரவும், வியாழக் கிழமையிலான உச்சிக் கால குருமூர்த்தி ஆலய வழிபாடுகள் நன்கு உதவும் என்பதைப் பலரும் அறியார்.
முடிச்சுத் தீபம் என்பது (கொழுக்கட்டை வடிவில்) திரவியங்களை, ஒரு துணி முடிச்சில் வைத்துத் தைலத்தில் தோய்த்து அக்னியூட்டித் தூப தீபமாக சுவாமிக்கு ஏற்றி வைத்தல் ஆகும். இத்தகைய முக்கோண வடிவு வஸ்திர முடிச்சுத் தூப தீபங்கள் நவகிரக வழிபாடுகளில் முக்கியத்வம் பெறுகின்றன.
தற்காலத்தில் மூலத்தானத்தில் ரசாயனக் கலவை கூடிய கற்பூரத் தீபக் கரிக் கறை படிதல் கூடாது என்பதற்காக, பசு நெய் அல்லது எண்ணெய் தீபம் காட்டி சுவாமிக்கு வழிபாடு நிகழ்த்துகின்றார்கள். இவ்வாறு காட்டப் பெறும் எண்ணெய் தீபத்தில், பருத்தி முடிச்சு வைத்துத் தீபம் காட்டுவது உண்டு. இதற்குக் கோள தீபம் என்று பெயர். குறிப்பாக, சனீஸ்வரருக்கு, பைரவருக்கு இது மிகவும் ப்ரீதி தருவதாகும்.
வியாழக் கிழமைகளில் முடிச்சு வகை தீபங்களை, 12, 24, 36, 48, 60 என்ற எண்ணிக்கையில், அகல் விளக்குகளில் பசுநெய் தீபம் ஏற்றுதலும், தீப தூப முடிச்சுகளைத் தைலத்தில் தோய்த்து ஏற்றுதலும் மிகவும் விசேஷமானதாகும். பொதுவாக, முடிச்சுகளுக்குக் கிரந்திகள் என்று பெயர். கிரந்திகள் அக்னிப் பூர்வமாக கரைதலுக்குக் கோளப் பூவாளம் என்று பெயர். ஆலயங்களில் கோள தீபங்கள் ஏற்றி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் ஜீவாலயம் கொச்சி

பிற ஜீவன்கள் பெறாத பகுத்தறிவைப் பூண்டு அனைத்து ஜீவன்களுக்கும் நல்வழி காட்ட வேண்டிய நிலையில் மனித சமுதாயம் உள்ளது என்பதை ஒவ்வொரு மனிதரும் அறிய வேண்டியதும் பகுத்தறிவின் பால் பட்டதேயாம். வியாழன் தோறும் குரு ஹோரை நேரத்தில், காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் தட்சிணா மூர்த்தி வழிபாடு மிகவும் முக்கியமானதாகும்.
குருவார சக்திகள் பூரிக்கும் இத்தகைய வியாழனன்று உலகெங்கும், தன்னையும் அறியாமல், ஒவ்வொருவருக்கும், தன்னை நடத்தி செல்ல ஒரு பெரும் இறைசக்தி குருவருட் பூர்வமாகக் காத்திருக்கின்றது என்பதான ஒவ்வொரு மனிதருக்கும் புலப்படும் மார்க ஒளிப் பிரவாகம் திளைக்கின்றது. ஆனால் இத்தகைய பேராண்மை சக்தி பூண்டதாகத் துலங்கும் குருவார மஹிமையைப் பலரும் உணர்வதில்லை.
வியாழனன்று உலகெங்கும் ஒளிரும் இதனை நன்றாகப் பற்றிக் கொண்டு வாழ்வில் எங்கிருந்தும் குரு நமக்கு நல்வழி காட்டுகின்றார் என்ற உண்மையான ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்தால், ஒவ்வொருவரும் வாரந்தோறும் எப்போது வியாழக் கிழமை வரும் என ஆர்வமுடன் காத்துக் கிடக்கும் பொற்காலமும் கலியுகத்திலும் நன்கு மலரும்.

முறையான இறுதிச் சடங்குகள்

சுக்ர தசை என்பது பூவுலகத்தாருக்கு மட்டுமல்ல, ஒரு குடும்பத்தில் இறந்தவர் நற்பிறவி அடையவும், அவருடைய சஞ்சித, ஆகாமியின் நற்கர்ம பலன்களை ஆக்கம் பெறச் செய்யவும் உதவுவதே விசேஷமான பூசபாதச் சுக்கிர சக்திகள் ஆகும்.
ஒவ்வொரு நட்சத்திரத்தின் நான்கு பாதங்களிலும், குறித்த பாதசக்திகள் நீத்தார்களாகிய மூதாதையர்களின் நலனுக்குப் பல வகைகளில் மிகவும் உதவுவதாகும். இவ்வாறு சுக்கிர மூர்த்தி பூச நட்சத்திரத்தின், இரண்டாம் பாதத்தில் இருந்து மூன்றாம் பாதத்திற்கு வரும் தருணமானது, ஏக்கங்களுடன் இறந்தோர், பிரார்த்தனைகளை நிறைவேற்றாது இறந்தோர், மனைவி, பிள்ளை, பெண், பேரன் பேத்திகளுடன் பலத்த பாசப் பிணைப்புகளை இறுக்கி வைத்துக் கொண்டு இறந்தோரின் சாயைச் சரீர மேன்மைக்கும் நற்கதிக்கும் உதவுவதாகும்.
ஒரு குடும்பத்தில் எவரேனும் இறந்து விட்டால், அக்குடும்பத்தினர் ஒரு மாதத்திற்கு, ஒரு வருடத்திற்கு ஆலயத்திற்குச் செல்லலாகாது என்று பலவகையான தவறான, அறியாமையிலான நியதிகள் நிலவுகின்றனவே, என் செய்வது? இத்தகைய தவறான நியதிகளை எப்படி நிவர்த்தி செய்து, சீர் திருத்தி மக்களைக் கரையேற்றுவது?

ஸ்ரீஜேஷ்டாதேவி பூவாளூர்

ஒரு குடும்பத்தில் ஒருவர் இறந்தால், அவருடைய உடலுக்கான நெருப்பு வகைத் தகனத்திற்குப் பின், அந்தக் குடும்பத்தில் கடைபிடிக்க வேண்டிய நியதிகளுக்கான விளக்கங்களை நாம் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயம் தமிழ் மாத இதழில் அளித்து வந்துள்ளோம். பிறப்பும், இறப்பும் மனித சமுதாயத்தில் சக்கரச் சுழலாக அமைந்து வருவதன்றோ!
ஒருவர் இறந்த பின், அவருடைய ஜீவ சக்திப் பரிமாணம், சாயைச் சரீரம் என்ற கண்ணுக்குத் தெரியாத சரீரத்தை எடுத்துக் கொள்ளும். அதற்குரித்தான அடுத்த பிறவி அமையும் வரை, அந்த சாயைச் சரீரத்தில்தான் அந்த ஜீவசக்தி வாழ்ந்தாக வேண்டும். ஆம், இறப்பிற்குப் பின்னும் பலவகை வாழ்க்கை நிலைகள் நிச்சயமாக உலகில் அனைத்து மனிதர்களுக்கும் உண்டு.
உலகில் எந்த நாட்டில் எவர் இறந்தாலும், ஒருவர் இறந்த பின், அவருக்குரிய அந்த சாயைச் சரீரத்திலேயே பொதுவாக, பூமியில் 15 நாட்கள் இருந்திட அனுமதி உண்டு. இதன் பிறகு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஆன வான்வெளி யாத்திரை அதே சாயைச் சரீரத்திலேயே தொடரும். இந்த 15 நாட்களிலும், அவருடைய கடந்த பல பிறவிகளிலும் செய்த நல்வினைகள், தீவினைகள் அனைத்துமே திரைப் படம் போல அந்தச் சாயைச் சரீரத்தில் நன்கு புலப்படுத்தப் பெறும். அந்தப் பதினைந்து நாட்களிலும், அதனதன் கர்மவினை அழுத்தங்களைப் பொறுத்து, அவரவருடைய சாயைச் சரீரமானது, பூவுலகில் அவர் பல பிறவிகளிலும் அவர் எத்தனையோ உடல்களில் எவ்வெவ்வாறோ, எங்கெங்கோ வாழ்ந்த ஆயிரக் கணக்கான இடங்களைச் சுற்றி, சுற்றி வரும்.
மிகவும் மோசமான, பாவகரமான வாழ்க்கையை வாழ்ந்தவர்களுடைய சாயைச் சரீரமோ, இறப்பு நிகழ்ந்தவுடன் ஒரு நிமிடம் கூட சாயைச் சரீரத்தில் தங்காமல், உடனடியாக அடுத்தடுத்த கொசு, ஈ பிறவிகளையோ அல்லது ஆவி நிலைகளையோ உடனேயே அடைந்து விடும். இது நல்ல அறிகுறி அல்ல.
தற்கொலை செய்து கொள்பவர்களுக்குப் பரிகாரப் பிராயச்சித்தமே கிடையாது. தற்கொலை செய்து கொள்பவர் இறந்த உடனேயே, தன் (ஆத்ம சக்தியையே கொலை செய்த கொடிய) பாவச் செயலுக்காக, பயங்கரமான ஆவி வடிவத்தைப் பெற்றுப் பிராயச்சித்தமே இல்லாது, கோடானு கோடி ஆண்டுகளாக அலைய நேரிடும். இதனால்தான் தற்கொலை என்பது அதிபயங்கரப் பாவச் செயலாக எச்சரிக்கப்படுகின்றது.

முற்காலத்தில் இறந்தவரின் நலன்களுக்காகத் தினமுமே ஓராண்டு முழுதும் அவருடைய குடும்பத்தில், இல்லத்தில், சொந்த ஊரில், ராமேஸ்வரம், காசி போன்ற பித்ரு முக்தித் தலங்களில் பல்வகைச் சடங்குகள், தர்ப்பணங்கள், தான தர்மங்கள் நிகழும்.
ஆனால், ஒருவர் இறந்தவுடன் அவருடைய குடும்பத்தில், தற்காலத்தில் 3, 9, 10, 15 நாட்களில் மட்டுமே சடங்குக் கிரியைகள் நிகழ்வதாலும், பதினைந்து நாட்களுக்குப் பிறகு இறந்தவரை முழுமையாகவே காலப்போக்கில் மறந்து விடும் பாங்கு நிலவுவதாலும், முந்தையக் காலம் போலல்லாது, தற்காலத்தில், இறந்தவரின் சாயைச் சரீர கதிகள் விண்ணுலகில் மிகவும் தேக்கமுறுகின்றன.
இதிலும் சடலம் சரியான முறையில் நெருப்பில் பஸ்மம் ஆகாவிடினும், புதையுண்டாலும், மின்சார தகனத்திலும், பங்கங்கள் ஏற்படும். மேலும், விபத்து, அறுவை சிகிச்சை போன்றவற்றால் அங்கங்கள் சிதைவடைந்து சிதறுவதாலும், தற்காலத்தில் நிறையக் குடும்பங்களில் பின்னக் குதமம் என்ற வகையிலான பிரேத தோஷங்களும் ஏற்பட்டுச் சந்ததிகளுக்கு ஊமைக் குறை, பார்வைக் குறை, அங்க ஹீனம், தோல் நோய்கள், மனம், உடல் வளர்ச்சி இன்மை போன்றவை உண்டாகின்றன.
இறந்தவரின் சாயைச் சரீர விடுதலைக்கும், நற்கதிக்குமாக அவருடைய குடும்பத்தாருக்கும், உற்றம், சுற்றத்திற்கும், நிறையப் புண்ய சக்தி தேவைப்படுவதுடன், இறந்தவரின் வானுலகச் சரீர நற்கதிக்காகவும், ஆலய வழிபாடுகள் மிகவும் தேவைப்படுகின்றன. எனவே, ஒருவர் இறந்த சில நாட்களிலேயே, உடனடியாக ஆலய வழிபாடுகளைத் தொடர்வதுதான் மேற்கண்ட வகையிலான தோஷங்களை, புண்ய சக்திக் குறைவை ஈடு செய்ய உதவும். எனவே, குடும்பத்தில் எவரேனும் இறந்து விட்டால், அக்குடும்பத்தினர் ஒரு மாதத்திற்கு, ஒரு வருடத்திற்கு ஆலயத்திற்குச் செல்வதில் எவ்விதத் தவறும் கிடையாது. நிச்சயமாகச் சென்று வழிபட்டாகவும் வேண்டும்.
சாஸ்திர சம்பிரதாயங்களில் உள்ள எத்தனையோ நியதிகளைத தனக்கு ஒத்து வருவதை, ஏற்று வருவதை மட்டும் தன் வசதிக்காகப் பிடித்து வைத்துக் கொண்டு,
முக்கியமான தினசரி மூன்று வேளை சந்தியா வந்தனம், ஏகாதசி, திருவோண நட்சத்திர விரதங்கள், நித்தியத் தர்ப்பணம், தேவமொழி, தமிழ் மாமறை மந்திரங்களை தினமும் ஓதுதல் போன்ற பலவற்றையும் கைவிட்டு விட்டு, பலவிதமான தீய வழக்கங்களுடன் அரைகுறையான ஆன்மீகத்தில் வாழ்வது போல் எண்ணுவது சரியல்ல!
எனவே, இனியேனும் கலியுகத்திற்கு ஏற்றதான இறைவழிபாடு முறைகளை யாவும் ஒழுங்காக கடைபிடித்து வாழ்தல் வேண்டும்.

இறந்தவரின் மேல் உண்மையான அன்பு பூண்டவர்கள், இறந்தவரின் உடலை வேனில் ஏற்றாமல், உற்றம், சுற்ற உறவினர்கள் மயானம் வரை சுமந்து சென்று, பசு விறாட்டி, விறகு வைத்து நன்முறையில் தகன மந்திரங்களை ஓதித் தகனம் செய்கின்றார்களா ?
தான் கொண்டுள்ள தீய வழக்கங்களை முற்றிலுமாகக் கை விட்டு விட்டு, ஓராண்டு முழுதும், ஒரு வேளை உணவு மட்டும் உண்ணத் தயாராக இருந்து, புத்தாடைகள், ஆபரணங்களை அணியாது, டீ.வி, சினிமா போன்ற கேளிக்கைளில் ஈடுபடாதும்,
நித்தியத் தர்ப்பணப் பூஜைகளை, முறையாகவும், மாதந்தோறும் இறந்தவரின் திதி நாளில் அளித்து, மாதாந்திரத் திவசம், படையல், தர்ப்பணம் அளித்து வரத் தயாராக இருக்கின்றார்களா ?
இறந்தவரின் சொத்துக்களில், மூன்றில் ஒரு பங்கை ஆலயங்களுக்கும், தான தர்மங்களுக்குச் செலவழிப்பதுடன், இறந்தவரின் சார்பாக 32 விதமான தான தர்மங்களை செய்யத் தயாராக இருக்கின்றார்களா ?
இத்தகைய நியதிகளை எல்லாம் கடைபிடிக்காது, ஒரு வருடம் கோயிலுக்குச் செல்லலாகாது என்று எதையோ ஒன்றை அறியாமையால் பற்றிக் கொண்டு சொல்வதே தவறானது.
முற்காலத்தில் ஒரு வருடம் முழுதுமே, இறந்தவரின் ஆத்ம நலன்களுக்காக எண்ணற்ற ஏனைய சடங்குகளை, விரதங்களைக் கடைபிடித்தல், பித்ரு முக்தித் தலங்களைத் தரிசித்தல் போன்றவற்றை முழுமையாக ஒரு வருடத்திற்குக் கடைபிடித்து வந்தமையால், ஆலயத்திற்கே செல்ல நேரமில்லாத அளவிற்கு நிறையப் பித்ரு பூஜைகள் ஒரு வருடம் நிறைந்து இருக்கும். இவற்றில் ஒன்றை கூட முழுமையாகக் கடைபிடிக்காமல் எதையோ ஒன்றைப் பிடித்துக் கொண்டு ஒரு வருடத்திற்குக் கோயிலுக்குச் செல்லக் கூடாது என்பது அதர்மமானது, மனசாட்சிக்கு விரோதமானது.
கலியுகத்தில் மூதாதையர்கள் வழிபாடு ஒழுங்காக நடைபெறாமல், பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்திலும், 108க்கும் மேலான முன்னோர்களின் சாயைச் சரீரங்கள் நல்கதி அடையாமல் அப்படியே மரங்களில் தலைகீழாகத் தொங்கிக் கிடக்கின்றார்கள். மாதம் ஒரு முறை ஏதோ கடனே என்று எள்ளும், நீரும் வார்த்தால் போதுமா ? அப்படியும் மாதம் ஒரு முறை எள்ளும், தண்ணீரும் வார்த்தாலேயே பல்வகைப் பித்ருக்களுக்கும் ஓரளவு மன சாந்தி அளிக்கிறது எனில், மாதாந்திரத் திதிப் பூஜை, வாராந்திர தர்ப்பணம், நித்தியத் தர்ப்பணம் அளித்தல் எனில் என்னே பெரும் புண்யம் கிட்டும்!
எனவே இனியேனும் வெள்ளிக் கிழமைதோறும் சுக்கிர சக்தித் தலங்கள், பூவாளூர், திருவள்ளூர், ராமேஸ்வரம், காசி, கேதார்நாத், பத்ரிநாத், திருவிடைமருதூர், திருவையாறு, நெடுங்குடி, தேனிமலை போன்ற பித்ரு முக்தித் தலங்களிலும், சனீஸ்வரர் தம் பத்னியருடன் அருளும் தலங்கள், யமன், சித்திர குப்தர் அருளும் தலங்களிலும்,

* அம்பிகையின் திருவடிகளில் செம்பருத்திப் பூக்களால் பாதணித் திருவடி சார்த்தி,
* சுக்ர தூபங்கள் ஏற்றி,
* கத்ரிப் பூ வண்ண ஆடைகளைத் தானமாக அளித்து,
* மூதாதையர்களின் மேன்மைக்காக சுக்ர மூர்த்தியின் கடாட்சத்தை வேண்டிடுக!
பெற்றோர்களின் மேல் அளப்பரிய பாசம் கொண்டு, அவர்களுக்கு என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ எனப் பீதியுடன் வாழ்வோருக்கு நல்மனவழி மார்கம் கிட்ட உதவும்.

மாரக தோஷங்கள்
நீக்கும் விரதம்

கோடானு கோடி எண்ணற்ற தெய்வீக சக்திகள் என்ற அளவிட முடியாத தெய்வ சக்திகளின் தொகுப்பையே நமக்கு புரியும் வண்ணம் உருவமற்ற இறைவனை எங்கும் பொலிந்திருக்கும் கடவுள் பெம்மானை பெருமாளாக, அம்பிகையாக, முருகனாக வடிவு கொடுத்துப் பார்த்துப் பரமானந்தம் கொள்கின்றோம். பிரபஞ்சமென்றும் உள்ளும் புறமும் நிரவி இருக்கும் இறைப் பரம்பொருளை, சிறு கற்சிலைக்குள்ளா வடித்துப் பொருத்தி வைக்க முடியும் ? ஆனால், கலியுக மனிதக் கண்களோ எதையும் கண்களால் பார்த்துப் பார்த்து பழகி வந்து விட்டமையால், கலியுலகில் உருவ வழிபாடுதாம் மனிதனுக்கு எளிதில் இல்லற வாழ்க்கையோடு இணைந்த தெய்வீகத்தைத் தருவதாக நன்கு பிரகாசத்துடன் அமைகிறது. உருவ வழிபாடு என்பது உருவமற்ற இறைப் பொருளைப் பகுத்துணரவே!
சனிக் கிழமையோடு கூடி வரும் ஏகாதசி விரதப் பலாபலன்கள், குறிப்பாக, மாரக சம்பந்தமான துன்பங்களைத் தீர்க்க நற்பரிகாரங்களைத் தருவதாகும்.

மாரக தோஷமெனில் அடிக்கடி மரண பயம் ஏற்படுதல், பீதியுடன் இறப்பதாகக் கனவுகள் வருதல், நிழலாடுதல் போன்ற மரண தோஷ பீதிகள், இறந்து விடுவோமோ, குடும்பம் பரிதவிக்குமோ என்ற மனவாதனை வகையிலான பயம், பிரேத தோஷங்கள், ஆயுள் பங்க தோஷங்கள் போன்றவையாகும்.
தற்காலக் கலியுகப் பெண்கள் தம்முடைய தவறான பழக்க வழக்கங்கள், செய்கைகள் மூலம் கணவனுடைய ஆயுளுக்கு வன்மையான பங்கங்களை, மாரக தோஷங்களை ஏற்படுத்திக் கொண்டு விடுகின்றார்கள்.
* நெற்றிக்கு குங்குமம் இடாது பிலாஸ்டிக்கினால் ஆன ஒட்டுப் பொட்டு இடுதல்
*. நெற்றியில் எப்போதும் புனிதமான பொட்டின்றி இருத்தல், கைகளில் வளையலின்றி இருத்தல், பாத விரல்களில் மெட்டி அணியாது இருத்தல், மாங்கல்யத்தைத் தாலிச்சரடில் கோர்க்காது பொன் சங்கிலியில் கோர்த்தல்.
*. புருவத்தையும், முன் தலைமுடியையும் அழகுக்காகக் கத்தரித்தல்
* பெற்றோர்களை, மாமனார், மாமியார்களை இல்லற வயோதிகர்களை மனம் நோக ஏசி, பேசி வதைத்தல்.
- இவை போன்றவை தாம் குடும்பத்தை வாட்டும் மாரக தோஷங்களுக்குக் காரணமாகவும் அமைகின்றன.
கணவனே கண் கண்ட தெய்வம் என்பது பாரதப் பண்பாடு. ஒவ்வொரு கணவனும், மனைவி தனக்குப் பாத பூஜை செய்யும் அளவிற்கு தன்னை நல்ஒழுக்கப் பூர்வமான மனித சக்தியுடனும், நற்பூரண யோக்யதாம்சங்களுடனுமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். இதனால்தான் கணவனுக்குப் பாத பூஜை செய்து வழிபட மிகவும் சங்கோஜப்படுதல், யோசித்தலானவை பெண்களுக்கு ஏற்படுகின்றன.
மேற்கண்ட குறைபாடுகள் அனைத்தையும் நீக்க வல்லதே ஏகாதசி விரதமாகும். முக்கியமானதாக, கணவனுக்கு நல்ல புத்தியைப் பெற்றுத் தர ஏகாதசி விரதம் மிகவும் உதவும்.  
அனைத்துக் குடும்பத்தாரும் தம்பதி சகிதம் ஒரு வேளை விரதத்துடனாவது ஒவ்வொரு ஏகாதசித் திதியையும் கொண்டாடிடுக! ஒரு நாளின் தூய ஏகாதசி விரதம் பல்லாண்டு மனத் தூசிகளைக் களைய வல்லதாகும். சனி கூடும் ஏகாதசியை, அமர்ந்த நிலைப் பெருமாள் ஆலயத்திலும், வில்வ மரம் உள்ள பெருமாள் ஆலயத்திலும் கொண்டாடுவது மிகவும் விசேஷமானதாகும். உறவினர்கள் மத்தியிலே, அலுவலகத்திலே தாம் செய்யாத தவறுகளுக்காக ஏசல் படுவோர் வாழ்வில் நன்கு மீள, இந்நாளில் ஏகாதசி விரதமிருந்து, நெல்லி மர தரிசனம் பெற்று, திருமால் சிந்தனையுடன் நெல்லி மரத்தை வலம் வந்து வணங்குதல் நன்று. தேனில் ஊறிய நெல்லிக் கனி மிகவும் விசேஷமானதாகும்.
உங்களால் ஏகாதசி விரதம் இருக்க முடியா விட்டாலும், ஏகாதசி விரதம் பூணுவோரின் தாள் பணிந்து வணங்கி, அவர்களுடைய கரங்களால் அன்னதானம், பழதானம் அளித்திடுக! காக்கைளும், ஏனைய பட்சிகளும், நாய்களும், பூனைகளும் கூட ஏகாதசி விரதம் பூணுகின்றன எனில், மனிதனால் இருக்க முடியாதா என்ன? விரதமிருக்கும் பட்சிகளின் தரிசனமும் விசேஷமானது. இதனை எப்படி அறிவது? ஆலயத்தில் கொடிக் கம்பத்தின் மேல் கிழக்கு நோக்கி அமரும் பட்சிகள் ஏகாதசி விரதம் பூணுபவை என அறிக!

பிறர் தயவில் வாழ்கிறீர்களா ?

ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதமும் செலவுக்கான பட்ஜெட்டை எழுதுவது போல், ஒவ்வொரு மாதமும், தன் குடும்பத்தோடு ஆற்ற வேண்டிய இறைப் பணிகளையும், தான, தர்மங்களையும் பட்டியல் இட்டு நிறைவேற்றி வர வேண்டும். இதற்காக, ஒரு மாதம் முன்னரேயே பஞ்சாங்கத்தைப் பார்த்து, அடுத்து வரும் முப்பது நாட்களையும் பற்றிக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். அன்னதானம் - ரூ150/-, ஆடைதானம் - ரூ 100/-, பசுக்களுக்கு உணவு, பழம் - ரூ 100/-, பறவைகள், நாய்களுக்கு உணவு - ரூ25/-, காலணிகள் தானத்திற்கு ரூ 50/-
- என்றவாறாக மாதாந்திரத் தான தர்மத்திற்கான பட்ஜெட்டை அமைத்துக் கொண்டு, குடும்பத்தாருடனும், உற்றம், சுற்றத்துடனுமாகப் பலருடன் சேர்ந்து 32 வகையான தான, தர்மங்களையும் ஆற்றி வர வேண்டும். இதன் மூலமாகவே பல்துறைப் புண்ய சக்திகள் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்குமாகச் சேர்ந்து வந்து நன்கு உதவும்.
பூஜைகள், ஹோமங்கள், தமிழ் மற்றும் தேவமொழி மாமறையோதுதல் போன்றவை மறைந்து, குறைந்து வருகின்றக் கலியுகத்தின் தற்போதைய நிலையில், இத்தகைய தான, தர்மங்கள்தாம் இவற்றை ஓரளவேனும் ஈடு செய்து தர வல்லனவாம்.

ஸ்ரீசூரியபகவான் திருப்புனவாசல்

“தான, தர்மங்களுக்கான பட்டியல் என்றால், மாதாந்திரக் குடும்பப் பட்ஜெட்டிலேயே துண்டு விழுகிறதே! இதில் தான, தர்மத்திற்கான தொகைக்கு எங்கே போவது?” என முணுமுணுப்பது காதில் விழுகிறது. ஆனால், நீங்கள் தற்போது அனுபவிக்கும் சொத்து, சுகம், வேலை, குழந்தைச் செல்வம் போன்ற அனைத்தும், இவ்வாறு நீங்கள் பூர்வ ஜன்மங்களில் செய்த பூஜைகளின், தான, தர்மங்களின் பலாபலன்களே என்ற உண்மையை நன்கு உணர்ந்தால் இந்த வகையிலான தவறான முணு முணுப்பும், எண்ணமும் தோன்றாது.
மேலும் குடும்பத்தின் கடனுக்கும், பற்றாக்குறை பட்ஜெட்டுக்கும் உண்மையான காரணம் என்ன என்பது அவரவர் மனசாட்சிக்கே நன்கு தெரியும். மாதா மாதம் பணம் போதாத பட்ஜெட் என்றாலும், சிகரெட், மது, புகையிலை, சினிமா, டீவி, கேபிள் டீ.வி, ஹோட்டல், டிராமா, ஆடம்பர ஆடைகள், சினிமாப் பத்திரிக்கைகள், உபயோகமற்ற இதழ்கள், புத்தகங்கள், சினிமா போன்றவற்றுக்கான செலவுகள் மட்டும் குறைவதில்லை என்பது அவரவருடைய மனசாட்சிக்கே நன்கு தெரியும். எனவே, ஹோட்டல், கேபிள் டீவிக்கும், ஏனைய கெட்ட வழக்கங்களுக்கும், உபயோகமற்ற பழக்கங்களுக்கும் கொடுக்கின்ற முன்னுரிமையைச் சற்றே, சிறிதே, தான, தர்மங்களுக்குக் கொடுத்துப் பாருங்கள், பிறகு இதன் பலாபலன்கள் பன்மடங்காய்த் திரும்பி வருவது தானே புலப்படும்.
தினமும் பசுவிற்கு ஒரு வாயுரை, ஆங்கோர் ஏழைக்கு ஒரு பட்டைச் சாதம், ஏழைக்கு மங்களப் பொருட்கள் மற்றும் நறுமணப் பூச்சரம், பிறிதே காக்கை, குருவிக்குச் சிறிது தானிய மணிகளும், நாய்களுக்கென நல்ரொட்டிகளும் சிறிய வகையிலான தான, தர்மம்தானே அய்யா! இதற்கென்ன பெரிதாகச் செலவாகப் போகிறது? மனசாட்சியை உரைத்துப் பாருங்களேன்!
இதைப் போலவே, ஒரு மாதத்தில் ஆற்ற வேண்டிய கிரிவலம், 12 முறை அடிப் பிரதட்சிணம், 36 முறை நடைப் பிரதட்சிணம், 3 முறை அங்கப் பிரதட்சிணம், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை, வீரபத்ர சுவாமிக்கு மட்டைத் தேங்காய் மாலை, பிள்ளையாருக்குக் கொழுக் கட்டை, முருகனுக்கு அரளி மாலை - என்றவாறாக, ஒரு மாதத்திற்கான குடும்பத்தினர் அனைவரும் ஆற்ற வேண்டிய வழிபாடுகளையும் நிர்ணயித்துக் கொண்டு, முறையாக இவற்றை ஆற்றி வர வேண்டும்.
இதே போல ஒரு மாதத்தில் துதிக்க வேண்டிய பிள்ளையார், சிவன், அம்பாள், முருகன், பெருமாள் துதிகளையும் நிர்ணயித்துக் கொள்ளுங்கள். எதெதற்கோ பட்ஜெட் போடும் மனிதன், தெய்வீகப் பணிகளுக்குப் பட்ஜெட் போட்டுப் புண்ய சக்தி வரவு, பட்ஜெட்டாக வைத்துக் கொள்வதும் நல்லதே! . எந்த நற்காரியத்தையும் புண்ய சக்தியை எதிர்பார்த்துச் செய்யக் கூடாது என்றாலும், தியாகமயமான மனித மனம் முகிழ்த்திருந்தால் இவ்வளவு விளக்கங்கள் தேவை இல்லையே! எனவே, இவ்வாறு ஒரு குடும்பத்தில் ஆற்றும் பல்வகை வழிபாடுகள் தாம் மனவேற்றுமை, பகைமை, பணக்கஷ்டம், நோய்கள், ஆபீஸ் பிரச்னைகள் போன்ற பல்வகைத் துன்பங்களையும் தீர்த்துத் தர வல்லதாகும் என இனியேனும் அறிக!

திருப்போரூர்

இவ்வாறு நன்ககு திட்டமிட்டு மாதந்தோறும், வாரந்தோறும் இறைப் பணிகளை, வழிபாடுகளை, தான, தர்மங்களை ஆற்றுவதற்கான ஆக்கப் பூர்வமான சக்திகளை அளிக்க வல்லவையே ஞாயிறன்று அமையும் பிரதோஷ வழிபாட்டுப் பலன்களாகும். எந்த நாளில் - (கிழமை, நட்சத்திரம், யோகம் போன்று) எத்தகையக் கால அம்சங்களுடன் பிரதோஷம் அமைகின்றதோ அதைப் பொறுத்தும் பலாபலன்கள் அமையும்.
ஞாயிறன்று அமையும் பிரதோஷத்தை
- சூரியத் தீர்த்தம், தனித்த விமானம், கலசத்துடன் சூரியன் அருளும் தலம்,
* ஆலயத்தின் உள்ளே தீர்த்தக் குளம் உள்ள தலம்,
* அகோர வீரபத்ரர் அருளும் தலம்,
* துர்க்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி மூவரும் அமர்ந்த கோலத்தில் அருளும் தலங்களில் கொண்டாடுதல் விசேஷமானதாகும். ஏனெனில், ரோஹிணி நட்சத்திர தேவி, பிரதோஷ பூஜைகளைத் திறம்பட ஆற்றுகையில், ஞாயிறன்று பிரதோஷம் திரண்ட நாளில் தாம், பரமேஸ்வரரின் குக்குட நடனக் (கோழி போல் குந்தியக் கோலக்) காட்சியின் தரிசனத்தைப் பெற்றாள்.
* எனவே இந்நாளில் கோழி, சேவலுக்கு உணவிடுதலும்,
* (சென்னை அருகே) திருப்போரூர், (மன்னார்குடி அருகே) திருக்காறவாசல் போன்ற குக்குட நடன சக்தித் தலங்களிலும், சேவல் சகிதம் முருகன் அருளும் தலங்களிலும் பிரதோஷ பூஜை ஆற்றுவது மிகவும் விசேஷமானதாகும். பிறர் வீட்டில், பிறர் தயவில் வாழுகின்றோமே என வருந்தும் உள்ளங்களுக்கு நல்ல தீர்வுகளைப் பெற்றளிக்கும் பிரதோஷ வழிபாடு.

கால விரயத்தைத் தடுப்போம்

“ஆலயத்தில் ஒவ்வொரு தெய்வ மூர்த்திக்கும் முன்னால் நின்று வணங்க வேண்டுமா, இதற்கு மிகவும் நேரமாகுமே,” என்று பலரும் எண்ணிடலாம். ஆனால் இப்படிச் சொல்லும் அளவிற்கு நீங்கள் ஒரு நிமிடக் காலத்தைக் கூட விரயம் செய்யாது, காலத்தை நன்கு நல்வழிகளில் பயன்படுத்தி வருகின்றீர்களா என்பது உங்கள் மனசாட்சிக்கே நன்கு தெரியும். பணச் செலவுக்கு மாய்ந்து, மாய்ந்து பட்ஜெட் போடுவோர், இறைவன் ஆயுட் சம்பளமாக அளிக்கும் கால அம்சங்களை, நன்கு வாழ்வில் தினந்தோறுமே பயன்படுத்துவதற்கான வகையில்,
- பூஜை - 3 மணி நேரம்,

- ஆலயத் தரிசனம் 1 மணி நேரம்
- குழந்தைகள், பிள்ளைகள் முதியவர்களுடன் புனிதமான அன்புடன் (பாசத்துடன் அல்ல!) அளவளாவ 1 மணி ரேம்
- ஆத்ம விசாரம் 1/2 மணி நேரம்
- அலுவலகப் பணி - 10 மணி நேரம்,
பிரயாண நேரம் - 1 மணி நேரம் என வகுத்திடலாமே! ஆனால், இவை அனைத்திலும் இறைமயச் சிந்தனைகளை நிரவச் செய்யும் வழி முறைகளும் உண்டு.
உதாரணமாக, பஸ் பிரயாணத்தில் காலபைரவ தியானம், உணவு உட்கொள்கையில் அன்னபூரணித் துதிகள், நீராடுகையில் புண்ணிய நதி, வருண பூஜைகள், அலுவலக வேலையின் ஊடே அந்தந்த ஹோரை நேரப் பட்டியலை வைத்துக் கொண்டு அந்தந்த ஹோரை நேரத்தில்,

திருநல்லூர்

சூர்யா போற்றி, சந்திரா போற்றி, என மனதினுள் துதிப்பதும் மிகச் சிறந்த நவகிரக வழிபாடாக ஆகின்றது தானே! இவ்வாறாக இல்லறத்தில்தாம் அனைத்திலும் இறைமையை நிரவச் செய்ய முடியும். நிரவுவது வேறு புகுத்துவது வேறு! வலுக் கட்டாயமாகப் புகுத்துவது சரியன்று. நிரவுவதே நிலைத்து நின்று அருளும்.
தற்போது, உலகெங்கும் காலத்தை விரயம் செய்யும் சினிமா, விடியோ, கேளிக்கைகள், டீ.வி, கம்ப்யூட்டர் விளையாட்டு எனப் பல வகை கால விரய அம்சங்களே பெருகி வருகின்றன. ஆனால், நல்ல விதமான புராணமயத் திரைப்படம், கருத்துள்ள கதைகள், தீங்கில்லாத வகையிலான கார்ட்டூன் இவற்றில் பொழுது போக்காகக் காலத்தைச் செலவிடுகையில் கூட, இவற்றிலும் இறைமையை நிரவிட முடியுயும்.  
ஓம் ஞானானந்த வித்யாய வித்மஹே, ஞானப்ரகாசாய தீமஹி
தந்நோ அனுராதா க்ரமண சரஸ்வதீ ப்ரசோதயாத்
என்று ஓதி website browsing, email writing செய்கையில், உலகெங்கும் இதன் ஆன்ம சக்திகளை நிரவச் செய்ய முடியும்.
ஆதியுகத்தில் சனாதன பூமியாக உலகெங்கும் ஒரே சனாதன பாரத நாடாக இருந்தமையால், ஆங்காங்கே நிரவும் அனுராதா க்ரமண, சுசரித சக்திகளை ஆக்கப்படுத்திட உதவும் மகத்தான சேவையாகவும் இது அமைகின்றது.

மாதசிவராத்திரி நாளில் வீணை ஏந்திடா ஞான சரஸ்வதி அருளும் கோயில்கள் (வேதாரண்யம், கோயம்பேடு, மங்கலக்குடி) ஞானாம்பிகையாக இறைவி அருளும் ஆலயங்களில் (காளஹஸ்தி, முழையூர்) உள்ள சரஸ்வதியையும், அம்பிகையையும் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.
கலியுகத்தில் வர, வர, காலபைரவப் பூஜைகளின் மகத்துவம் நிறையவே பெருகும். ஏனெனில் காலத்தை விரயம் செய்வதும் ஒரு பாவமாக ஆகின்றது. இதனை இவ்வகையில் இன்னமும் உலக மக்கள் சமுதாயம் உணரவில்லை! காலத்தை விரயம் செய்ய எவருக்கும் உரிமை இல்லை! காலத்தை வீணாக்குவோர்க்கு மாத சிவராத்திரி பூஜைகள்தாம் நற்பரிகாரங்களைத் தரும். மாத சிவராத்திரி அன்று ஆலயத்தில் அர்த்த ஜாம பைரவப் பூஜையில் பங்கு கொண்டு மஹாசிவராத்திரி போல மாத சிவராத்திரிப் பூஜையை ஆற்றிடுக! சரியாக முதியோர்களைப் பராமரிக்காமையால் வந்திடும் தோஷங்கள் பிள்ளைகளைப் பற்றா வண்ணம் காத்திடுவதே மாத சிவராத்திரி வழிபாடு!

கோடி புண்ணியம் தரும்
கொடி மரம்

ஆலயங்களில் கோபுரம், திருஉண்ணாழி, கோபுரச் சுவர்கள் போன்று சகல இடங்களிலும், அனைத்துத் திக்குகளிலும், தேவாதி தேவ மூர்த்திகளும், பரிவாரத் தேவதைகளும், பிரதட்சிணத் தேவதைகளும், அஷ்டதிக்கு பால தேவதைகளும், பரிகாரந் தரும் தேவதைகளும், கோமுகத் தேவதைகளும், கோஷ்டித் தேவதைகளுமாக என எங்கு நோக்கினாலும், பல கோடி தேவதை, தேவதா மூர்த்திகள் நம் கண்களுக்குப் புலப்படாமல் நிறைந்து இருப்பதோடு, ஆலயத்திற்கு எப்போதும் வந்து செல்லும் எண்ணற்றச் சித்தர்களும், யோகியர்களும் ஆலயம் எங்கும் சூட்சமமாக நிரவி வழிபட்டுக் கொண்டிருப்பதாலும், ஒவ்வொரு இடத்திலும் விழுந்து வணங்குவது என்றால் அவர்களை நோக்கி நம் கால் நீண்டு விடும் அல்லது பட்டு விடும்.

ஸ்ரீஞானசரஸ்வதி வேதாரண்யம்

இதற்காகவே கொடி மரத்தைச் சுற்றிச் கிருஷ்ணச் சக்கரத் தளம் எனும் ஒரு வெற்றிடத்தை தேவப் பரவெளியாக விச்வகர்ம தேவர்கள் ஏற்படுத்தித் தந்துள்ளனர். எனவே, கொடி மரமருகே ஆண்கள் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குதலும், பெண்கள் பஞ்ச அங்க முறைப்படியும் வணங்குதலும் நிர்ணயமாகிறது. ஒவ்வொருவருடைய உடலும், தினமும் ஆலயத் திருவளாகத்தில் ஐந்து முறையாவது வணங்குதற் படலம் மூலமாக, ஆலய பூமியை ஸ்பரிசித்தல் வேண்டும். இதில் சதுர்த்சித் திதியானது வணங்கல் வழிபாட்டு நாளாகும். அங்கப் பிரதட்சிண நேர்த்திக்கு உகந்த திதி நாளும் கூட. அங்கப் பிரதட்சிணத்தில் உடலின் இரு பக்கங்களும் வழிபாட்டை இயற்றுவதால் இதற்கு துவித்வ சரீர வழிபாடு எனப் பெயர்.

ஸ்ரீகொடிக்கம்ப விநாயகர்
வடமாகறல்

கொடி மரத்தருகே வணங்குவதால், ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து தெய்வ மூர்த்திகளுக்கும் அந்த நமஸ்காரம் சென்றடையவதோடு மட்டுமின்றி, மேற்கூறிய அனைத்து வகைத் தேவதா மூர்த்திகளுக்கும் இந்த நமஸ்காரம் சென்றடைகிறது.
இதற்காகவே கொடி மரத்திற்கான விசேஷமான மரஸ்தம்ப சக்திகள் நிறைந்துள்ளன. கொடிக் கம்பத்திற்குக் கீழ் மிகவும் அபூர்வமாக அருளும் விநாயகர் யோக ஸ்தம்பன விநாயகர் ஆவார். சதுர்த்தசித் திதியில் கொடி மரத்து யோக ஸ்தம்பன விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தி வழிபடுவதுடன் புடலங்காய், முருங்கைக் காய், பீர்க்கங்காய் போன்ற நீள் வகைக் காய்கறி வகை உணவுகளை முழு வாழை இலையில் வைத்துத் தானமாக அளித்து வருவதால், ரத்த அழுத்தம், நரம்பு வியாதிகள், முதுகுத் தண்டு பலவீனம் போன்ற பல்வகை வியாதிகள் காரணமாக, சற்று நேரம் நிமிர்ந்து, நேராகச் சரியாக நின்றோ, அமர முடியாமல் தவிப்போர், நல்ல நிவாரண சக்திகளைப் பெறுவர். இதனை ஒரு மண்டலக் காலப் பூஜையாக நிகழ்த்துதல் துரிதமான பலன்களைப் பெற்றுத் தருவதாகும்.
மேலும் அனைத்து மஹரிஷிகளும், சித்புருஷர்களுமே கொடி மரத்திற்கு அருகில் வீழ்ந்து வணங்குவதால், நீங்கள் வணங்கும் இடத்தில் ஏற்கெனவே கோடானு கோடி உத்தம இறைத் தூதுவர்கள் விழுந்து வணங்கி புனித இடமாகவும் அமைவதால், உங்கள் பூவுடலின் பல்வகை நாளங்களும் மிகவும் புனிதமாகிறது. எனவே, கொடி மரத்திற்கு அருகில் விழுந்து வணங்குவது தான் உத்தம வழிபாடுகளில் ஒன்றாகும்.

அயல் நாட்டு உறவுகளுக்குப் பாதுகாப்பு

சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி எனச் சில வகை நவராத்திரிகள் உண்டு. சித்தர்கள்தாம் உத்தம அம்பாள் உபாசகர்கள் ஆவர். சித்சித்சாக்தப் பூர்வகர்கள் என்றே சித்தர்களுக்குப் பெயர் உண்டு. அம்பாள் உபாசனைக்கு மிகவும் முக்கியமானதான ஸ்ரீலலிதா சஹஸ்ர நாமத் துதிகள் யாவும் சித்தர்களின் மூலத் தலைமைப் பீடாதிபதியாம் ஸ்ரீஅகஸ்திய மாமுனி தன் பத்னியுடன் ஆற்றிய வழிபாட்டின் மூலம் ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியிடம் இருந்து பெறப்பட்டுத் தாமே பூவுலகிற்கு வந்தது.
பண்டைய காலத்தில், பராசக்தி வழிபாட்டில் தலைசிறந்த சித்தர்களால் அம்பாள் உபாசகர்களுக்கும், இல்லறப் பெண்மணிகளுக்கும் வேதப் பூர்வமாக நிர்ணயித்து அளிக்கப்பட்ட 12 வகை நவராத்திரிப் பூஜை வகைகள் பொலிந்தன. ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிக்கும் நாள்தானே மாதப் பிறப்பு ஆகின்றது. எந்த ராசியில் சூரிய, சந்திர சேர்க்கையுடன் அமாவாசை ஆகின்றதோ, அந்த ராசியின் பெயரைக் கொண்டு, அந்தந்த அமாவாசைக்கு அடுத்தப் பிரதமைத் திதி முதல், அந்தந்த மாத நவராத்திரி பிறக்கும். இவ்வாறு 12 மாதங்களுக்குமான நவராத்திரிகள் உண்டு.

ஸ்ரீபங்கஜவல்லி ஸ்ரீபசுபதீஸ்வரர் ஸ்ரீமங்களாம்பிகை ஆவூர்

இவ்வாறு மிதுன ராசியில் சூரிய மூர்த்தியும் சந்திர மூர்த்தியும் இணையும் மிதுன நவராத்திரிப் பூஜை குடும்பத்தில் நல்ல மனஒற்றுமையைப் பேண உதவும் பூஜையாகும். இந்நாளில் இரண்டு அம்பாள் மூர்த்திகள் அருளும் ஆலய வழிபாடு மிகவும் விசேஷமானதாகும். (கும்பகோணம் அருகே இன்னம்பூர், திருச்சி அருகே திருப்பைஞ்ஞீலி, திலதைப்பதி). கும்பகோணம் - மருதாநல்லூர் அருகே கருவளர்ச்சேரி போன்ற ஸ்ரீஅகஸ்தியர் தம் பத்னியாம் ஸ்ரீலோபா மாதாவுடன் அருளும் ஆலய வழிபாடுகளும் சிறப்புடையவையே!
தினசரி பூஜைகளில், அருணாசலமாம் திருஅண்ணாமலையை மானசீக கிரிவலம் வரும் பூஜையும் ஒன்றாக அமைதல் வேண்டும். இதனால் அனைத்து வகை மூர்த்திகளையும் பூஜித்தப் பலாபலன்கள் வந்தமைகின்றன. மேலும், இதனால் எப்போதும் எண்ணற்றச் சித்தர்களும், மஹரிஷிகளும் கிரிவலம் வரும் அருணாசலத்தில், இவர்களோடு தினந்தோறும் கிரிவலம் வரும் பாக்யமும் கிட்டுகிறது அல்லவா!
உண்மையாக திருஅண்ணாமலையில் நடந்து கிரிவலம் வந்தால் எவ்வளவு நேரம் ஆகுமோ, அவ்வளவு நேரம் மானசீகமாக (மனதால் அருணாசலத்தைக் கிரிவலம் வருதல்) கிரிவலம் வருதலே உத்தமமானது.
மாதசிவராத்திரி தோறும் அதாவது அமாவாசைக்கு முதல் நாள், அருணாசலத்தை கிரிவலம் வந்து, அல்லது மானசீகமாகவேனும் கிரிவலம் வந்து, மறுநாள் அமாவாசைத் தர்ப்பணம் அளிப்பதால் அபரிமிதமான பலன்கள் கை கூடுகின்றன.
சித்தர்களும், மஹரிஷிகளும் தாங்கள் கடைபிடிக்கும் விரதாதி பலாபலன்களையும் அருணாசலத்தில் உறைய வைப்பதால் அருணாசலக் கிரிவலப் பலன்களில் இவையும் கூடுவதாகக் கிட்டுகின்றன. எனவே தினமும் உடலாலோ, மனதாலோ திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதலும் நித்திய வழிபாடுகளில் ஒன்றே!
பண்டைய யுகங்களில் நன்கு பொலிந்த 12 மாத நவராத்திரி வழிபாடுகள் மறைந்து, மிகவும் முக்கியமானவையாக, சாரதா நவராத்திரி, வசந்த நவராத்திரி என நான்கு வகை சிவராத்திரிகள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் வரை பிரசித்தி பெற்று இருந்தன. அம்பிகை உபாசகர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் துவாதச நவராத்திரிப் பூஜைகளை அதாவது மாதந்தோறும் ஒன்பது நாட்களிலும் நவராத்திரிப் பூஜைகளாகக் கொண்டாடியப் புனிதமான காலமும் இப்புவியில் பொலிந்தது.
இதனை இவ்வாறு இன்று அறிவதும் சத்குரு வாக்கியமாகவே உணர்தலாகிய பெரும் பாக்கியமே!
புரட்டாசி மாத மாளய பட்ச அமாவாசைக்குப் பிறகு வரும் நவராத்திரியை மட்டுமே தற்போதையக் கலியுகம் பெரிய நவராத்திரியாகக் கொண்டாடுகின்றது. இது மட்டுமன்றி, ஏனைய மாத நவராத்திரி வழிபாடுகளும் ஆலயங்களில் மேன்மை பெற வேண்டும். இதற்காக, நிறைந்த பக்தியுடன் ஒவ்வொரு குடும்பத்திலும் சங்கல்பம் செய்து கொண்டு, மாதந்தோறும் அமாவாசைக்குப் பிறகு ஒன்பது நாட்களிலும் மாத நவராத்திரியாக இரவு நேர அம்பாள் பூஜைகளை ஆற்றி வருதல் வேண்டும். இவ்வாறு அமைதியாக, படாடோபமின்றிப் பல குடும்பங்களிலும் மாத நவராத்திரி வழிபாடுகளை-
* 9 முறை ஸ்ரீஅங்காளி அந்தாதி, அபிராமி அந்தாதி ஓதுதல்
* ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம், ஸ்ரீலலிதா திரிசதி மந்திரங்களை ஓதுதல்
* குறைந்து 36 முழங்களுக்குத் தாமே மந்திரங்களை ஓதிப் பூச் சரம் தொடுத்து இறைவனுக்குச் சார்த்துதல்
* துர்க்கா சூக்தம், ஸ்ரீசூக்தம், பூமி சூக்த மந்திரங்களை ஒன்பது முறை ஓதுதல்
போன்றவாறாக அமாவாசைக்கு அடுத்த பிரதமைத் திதி நாளில் இருந்து ஒன்பது நாட்களுக்கு இரவில் ஓதிப் பூஜித்தல் நற்பிரார்த்தனைக் காரிய சித்தி ஆக்கித் தரும். குறிப்பாக, பெண் பிள்ளைகளுடன் அயல்நாட்டில் பீதி தெறிக்க, நித்திய மனக்கிலேசங்களுடன் வாழும் குடும்பத்தினர் நல்ல தற்காப்பு சக்திகளைப் பெற மிகவும் சக்தி வாய்ந்த இவ்வகைப் பூஜைகளை ஆற்றி வர வேண்டும்.
இத்தகையப் பூஜைகளை முறையாக ஆற்றி வந்தால், இல்லத்தில், குடும்பத்தில் நல்ல விருத்தி அம்சங்களை, நல்மாற்றங்களை நன்முறையில் தெள்ளத் தெளிவாகப் பெற்றிடலாம்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam