முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சாந்தம் நல்கும் சமுதாய பூஜை

காக்கும் கடவுளாம் பெருமாளே எத்தகைய துன்பங்களில் இருந்தும் ஜீவன்களைக் காப்பதால், கூடா நாட்களில் வேறு எந்தப் பணிகளையும் ஆற்றிடாது, பெருமாள் பூஜைகளையும், அபிஷேக, ஆராதனைகளையும் ஆற்றிட வேண்டும். விஷ்ணு சஹஸ்ரநாமம், 1008 விஷ்ணு போற்றித் துதிகளை ஓதிப் பெருமாளைப் பூஜிக்கும் பூஜை நாளாக மட்டுமே பயன்படுத்திடுதல் மனித சமுதாயத்திற்கும் நன்மை பயப்பதாகும்.
அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார், கடினமான தபோ பலன்களைப் பெற்றும், கூடா நாட்களை அறியாது, அசுரர்கள் தம் தவ சக்திகளை இழப்பது கண்டு வருத்தமுற்று, அவர்களுக்குக் கூடா நாட்களில் ஆற்ற வேண்டிய பூஜை முறைகளை வகைப் படுத்தித் தந்து, அவர்களில் பலரையும் திருத்தினார். எனவே, கூடா நாளில் அமையும் முழுமையான, பக்திப் பூர்வமான பூஜைகளினால், தீய வழக்கமும் மாயப் பரிகாரங்கள் கிட்டும்.
வெள்ளிக் கிழமையில் அமையும் பிரபலாரிஷ்டப் பூஜா பலன்கள், சகல ஜீவன்களையும் அடைந்து, அவர்களுடைய தீய பழக்கங்களைத் தகர்த்து அனைவரும் பெருமாள் பூஜைகளினால் தற்காப்பு சக்திகளைப் பெற்றுப் பயன் பெற வேண்டும் எனச் சுக்கிரர் எடுத்துரைத்தார். இவை யாவும் சுக்ர நீதி, சுக்ரபலம் போன்ற கிரந்தங்களில் காணப் பெறுகின்றன.
வாழ்வில் அறிந்தோ அறியாமலோ கூடாநாளில் காரியங்களைச் செய்து அதன் விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருப்போர் இன்றும் உண்டு. குறிப்பாக, இவ்வகை நாட்களைச் சுபநாட்களாகக் குறித்துத் தந்தோரும், பலத்த காலதோஷங்களுக்கு ஆளாகி வாடுகின்றனர். இதற்காகத்தான் தக்க சத்குருவை, குலகுருவை நாடி எதையுமே அறிதல் வேண்டும் என வகுத்துத் தரப் பட்டுள்ளது.
வெள்ளியும், பூராடமும் கூடி வரும் கூடாநாளில், சுக்ர பூரணம் என்ற நாட்டியக் கோல அருட்பாங்கைப் பெருமாள் அளிக்கின்றார். எனவே, இந்நாளில் நடனக் கோலப் பெருமாளுக்கு உரிய பூஜைகளை ஆற்றுதல் வேண்டும்.
நீங்கள் மட்டும் இத்தகைய விஷயங்களை அறிந்து இந்நாளில் பெருமாள் பூஜையை ஆற்றினால் போதுமா? இவ்வரிய ஆன்மீக விஷயங்களைச் சமுதாயத்தில் அனைவரும் அறிதல் வேண்டுமல்லவா? மேலும், எந்த நல்ல தெய்வீக விஷயத்தையும் உடனடியாகக் கலியுக மனித மனம் நம்பிக்கையுடன் ஏற்றிடாது.
மனம் பக்குவப்பட்டு இத்தகைய தெய்வீகக் காரியங்களை ஆற்றுவதற்குள் காலம் கழிந்தால் அதே நாட்கள் மீண்டும் வருமா? இதற்குள் பல அரிய காலசக்திகளையும் மனித குலம் இழந்து விடுமே! இந்நிலையில் என் செய்வது?
இதற்காகவே, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, ஜாதி, மத பேதமின்றி பிறருடைய நலன்களுக்காக, சமுதாய இறைப் பணிகளாக இவற்றைத் தியாகமயச் சிந்தனைகளுடன் ஆற்றுதலே அறிவுப் பூர்வமானதாகும்.
ஏனெனில், கூடாநாளில் எந்தக் காரியம் நிகழ்ந்தாலும், சம்பந்தப்பட்டோர் அனைவருமே அந்நாளில் மட்டுமல்லாது வருங்காலத்திலும், அந்த நிகழ்ச்சிகளின் விளைவுகளால் பாதிக்கப்படுவர் என்பதால், நீங்கள் கூடாநாளில் பயன்படுத்தும் பொருட்கள், திரவியங்கள் அனைத்திலுமே கூடாநாள் தோஷ வினைகள் தொற்றி இருக்கக் கூடும் அல்லவா.
உதாரணமாக, இத்தகைய கூடா நாளில் பத்திரம் பதிவு செய்யப்பட்டால், அந்தக் குறித்த நிலம், வீட்டை அனுபவிப்போர் ஆண்டாண்டு காலமாகப் பல தோஷங்களுக்கு ஆளாவர்.
எனவே, கூடாநாளில் சமுதாயப் பூஜையாக பெருமாள் ஆலயங்களில், விஷ்ணு சகஸ்ரநாமத் தோத்திரங்கள், 1008 போற்றித் துதிகளை ஓதி, உலகச் சமுதாய வளப் பூஜையாக ஆற்றிடுதல் நல்லது.
ஆலயத்தில், இல்லத்தில் 12 ராசிகளையும் பச்சரிசிமாக் கோலத்தில் வரைந்து, நாள் முழுதும்,
மேஷத்துறைத் திருமாலே போற்றி,
ரிஷபத்துறைத் திருமாலே போற்றி!
- என 12 போற்றி வகைத் துதிகளையும் ஓதி, 12 ராசிக் கட்டங்களையும், வலது கை மோதிர விரலைப் பதித்தும், புஷ்பங்களால் அர்ச்சித்தும் வழிபடுக.

வக்ர புத்தி வேண்டாமே

அக்னி மண்டல நட்சத்திரங்களில், அஸ்வினி, பரணி, பூரம், கார்த்திகை போன்றவை ஜீவாக்க சக்திகளை அளிப்பவையாகும். இதில், அஸ்வினியில் இருந்து சூரிய மூர்த்தி, தமக்கு மிகவும் ப்ரீதியான சப்தமித் திதியில், பரணியின் அடுத்தடுத்த நட்சத்திரப் பாதங்களுக்கு மாறும் போது, ஆயுளை, ஆரோக்யத்தை விருத்தி செய்கின்ற பல தன்மையான அக்னி சக்தி வகையிலான ஒளிக் கதிர்கள், கல்யாண முருங்கை, முருக்கை, அரசங் குச்சி, பிரண்டை, மாணிக்க மரம், பன்னீர் புஷ்பம் போன்ற ஒளி சக்தி விருட்சங்களில் கதிரவ மண்டலத்தில் இருந்து சூரிய ரேகைகளாக வந்து நிரவுகின்றது.
சப்தமித் திதியில் இத்தகைய ஏழு விதமான ஜோதி சக்தி மூலிகைத் தாவரங்களை, மரங்களைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானது.
சூரிய மூர்த்தி பரணியின் இரண்டாம் பாதத்திற்குச் செல்லும்பாது ஆயுள் சக்திகள் சூரியக் கதிர்களில் பரிமாணம் பெறுகின்றன. சிவாலயங்களில் மூலவருக்கு முந்தைய நடு மண்டபத்தில் சூரியனும், சந்திரனும் தனித்த மூர்த்திகளாகத் தோன்றி, சுவாமியை நோக்கியவாறே எழுந்தருள்வதைப் பார்த்திருப்பீர்கள்! (ஞாயிறு சிவத்தலம், பூந்தமல்லி ஸ்ரீவைத்தீஸ்வரன் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்).

ஸ்ரீசோமநாதேஸ்வரர்
மானாமதுரை

இவ்வாறு நவகிரக அதிபதிகளாக அல்லாது, தமக்குரியப் பிறிதொரு அவதாரத் தோற்றத்தில் அருளும் இம்மூர்த்திகளுக்கு, ஆதிபல மூர்த்திகள் என்று பெயர். ஏனெனில், நவகிரக வழிபாடு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், குரு, புதன், சுக்கிரன், சனி, செவ்வாய் ஆகிய பஞ்ச கிரக மூர்த்தி பூஜையாக, ஐந்து கிரக வழிபாடுகளே இருந்தன. இதனை ஒட்டித்தாம் மனிதனுக்கு ஐவிரல் அங்கத் தத்துவங்களும் அமைந்தன.
பிறகு சூரிய, சந்திர கோளங்கள் சேர்ந்தன. நவகிரகங்களின் வக்ர கதி இல்லாத கோளங்கள் சூரிய, சந்திர கிரகங்கள் மட்டுமே ஆகும். எனவே, வக்ர புத்தி உள்ளவர்கள் மாறித் திருந்த உதவும் நன்னாட்கள், சூரியன் அக்னி நட்சத்திரப் பாதங்களில் உறையும் நாட்களாகவும் அமைகின்றன.
வக்ர புத்தி எனில்,
* எதற்கெடுத்தாலும் எதையாவது சொல்லி, மறுத்து, எதிர்த்து, குறை கூறித் தட்டிக் கழிப்பவர்கள்
* தனக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதால், எந்த நல்ல காரியத்திற்கும் இடையூறு அளிப்பவர்கள்,
* எந்தக் காரியத்தையும், தடுத்துக் கொண்டே இருப்பவர்கள்,
* எப்போதும் சிடு சிடுவென்று, வள்வள்ளென்று எரிந்து விழுபவர்கள்
* எப்போதும் குறை சொல்லிப் புலம்புவர்கள்
* பெரியோர்களை வன்மையாக, காரண, காரியமின்றி எதிர்த்துப் பேசுபவர்கள்
* ஸ்திரமான புத்தி இல்லாது ஒன்று மாற்றி ஒன்று சொல்லிக் கொண்டு முடிவை மாற்றிக் கொண்டே இருப்பவர்கள்
* மிகவும் கேவலமான, அவலமான, சகிக்க முடியாத வகையில், மிக மிகப் பாவகரமான, வக்ரமான எண்ணங்கள் மனதில் எழுதல்
- போன்ற வகையினர் வக்ர புத்தி உடையவர்கள் ஆவார்கள்
தற்காலத்தில் சில பெற்றோர்கள், பல வகையான வக்ர புத்திகளைக் கொண்டிருப்பதால்தான், பிள்ளைகள், பெண்களின் கல்வியும், திருமணமும், நன்னடத்தையும், குடும்ப வாழ்வும் மிகவும் பாதிக்கப்படுகின்றது.
செவ்வாய் தோஷ ஜாதகத்திற்கு, செவ்வாய் தோஷ ஜாதகப் பிணைப்பே மாமருந்தாவது போல, வக்ர புத்தி (குணமுடையோர்) ஜாதகத்திற்கு, வக்ர புத்தி (குணமுடையோர்) ஜாதகத்தையே பொருத்தமாக அளிக்க வேண்டிய நிலை பெருகி வருகிறது.
அவரவர், வக்ர புத்தி உடையவர்களா இல்லையா எனத் தம்மைத் தாமே உண்மையாகவே, எடை பார்த்துக் கொள்ள உதவும் காலமே, கிரகங்களின் வக்ர சஞ்சாரக் காலமாகும்.
கடந்த ராசிக்கே மீண்டும் ஒரு கிரகம் வந்து மீண்டும் தன் நேர் நிலைக்குத் திரும்புதலே ஒரு கிரகத்தின் வக்ர கதியாகும்.  
எனவே, எந்த கிரகம் வக்ர கதியில் உள்ளதோ, அப்போது தேவையான பரிகாரங்கள், தான தருமங்களைச் செய்து வந்தால், பெற்றோர்களின் பிள்ளைகளின், பெண்களின் வக்ர புத்தி நன்னிலைக்கு மாற உதவும்.
தம்முடைய வக்ர புத்தித் துன்பங்களில் இருந்து விடுதலை பெறவும் உதவும்.
தனக்கு வக்ர புத்தி நிறையவே உண்டு, என்று உணர்ந்து மனதார அறிந்து, திருந்தி வாழ உறுதி பூண்டு இருப்பவர்களும், வக்ர புத்தி ஒரு போதும் குடும்பத்தை அண்டலாகாது என விரும்புவோரும், இத்தகைய அக்னி நட்சத்திர ஆதிபல மூர்த்திகளின் சஞ்சார மாற்ற நாட்களில், மேற்கண்ட வகையில் ஆதிபல சூரிய, சந்திர மூர்த்திகளாக அமைந்து அருளும் ஆலயத்தில் வழிபடுதல் வேண்டும்.
ஞாயிறு, திங்கட் கிழமைகளில் சூரியத் தம்பதி, சனீஸ்வரர் சேர்ந்து சூரியக் குடும்பமாக அருளும் (பொன்னமராவதி) தலங்களிலும்,
ஆதிபல சூரிய, சந்திர மூர்த்திகளாக அருளும் தலங்களிலும்,
சூரிய புத்திரர்கள், சூரிய புத்திரிகள் (யமுனை, எம மூர்த்தி, சனீஸ்வரர்) அருளும் தலங்களிலும்,
சந்திர மூர்த்தி, கார்த்திகை, திருவோணம், ரோஹிணி போன்ற பத்னியருடனும் அருளும் தலங்களிலும்,
முழுத் தாமரை மலர்களால் மாலை சார்த்தி, முழுமையான - கிரக வடிவ சக்திகள் நிறைந்த - கோள வகை உணவுப் பண்டங்களை படைத்துத் தானமளித்தல் மிகவும் விசேஷமானதாகும். இதனால், மேற்கண்ட வக்ர புத்திக் குணங்கள் நாளடைவில் ஓரளவு சீர் பெற உதவும்.
(கொழுக் கட்டை, வடை, போளி, போண்டா, இட்லி, பஜ்ஜி போன்றவை கோள வகைப் பண்டங்களாகும்.)

வாய் தவறிய விபரீதம்

சூரிய நாராயணப் பெருமாள், பித்ருக்களுடைய அதிபதி மூர்த்தி என்று நாம் அறிவோம். சூரிய மூர்த்தி பித்ருகாரகராகவும், சந்திர மூர்த்தி மாத்ருகாரகராகவும் வானதேவ இயற்பூர்வமாகவும் அருள்கின்றார்.
தினசரியுமே சூரிய நாராயண ஸ்வாமியின் திருவடிகளைப் பூஜித்துத் தொழுதே சூரிய மூர்த்தி தன் நித்தியப் பணிகளைத் தொடர்கின்றார்.
பூவுலகிற்கு ஒளி தருவது மட்டும் ஆதவனின் பணியன்று. கோடிக் கணக்கான அவருடைய தெய்வீகப் பணிகளில் இதுவும் ஒன்று. ஞாயிறன்றாவது விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில், சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, மிகவும் பாதுகாப்பாக, நம் பாரதத்தின் மிகவும் தொன்மையான, பாசாங்குலி முத்திரையில் சூரிய மூர்த்தியைத் தரிசித்து, கதிரவனுக்கு உரிய இந்நாளில் இவ்வகையில் சூரிய மூர்த்தியின் மஹிமைகளைப் படித்தறிந்து உணர்வதும், பிறருக்குச் சொல்வதும்,

ஸ்ரீ ஆதியான அம்மன் தலம் லால்குடியில்
குபேர திக்கில் அரிதாய் எழுந்தருளிய ஸ்ரீலட்சுமி தேவி

தினமுமே காலையில் அந்தந்த நாளுக்குரிய திங்கள் சந்திரன், செவ்வாய், புதன் என அந்தந்த மூர்த்தியின் சிறப்பைப் படித்தலும், கேட்டலும் நல்ல வகையிலான, மிகவும் எளிமையான நவகிரக வழிபாட்டு முறையே ஆகும்.
திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு மிகவும் ப்ரீதியான நட்சத்திரமுமாகும். திருவோண நட்சத்திரந் தோறும் சூரிய நாராயணப் பெருமாள், பூவுலகு உட்பட, அண்ட சராசர லோகங்களிலும் திருஉலா வருகின்றார். இதைத் தான் பெருமாளைக் காணக் கண்கோடி வேண்டும், என்று உரைப்பர்.

ஞாயிறும், சிராவண நட்சத்திரமுமாகிய திருவோணமும் சேர்ந்து வரும் நாளில், தக்க வகையில் உண்ணா நோன்பு அல்லது திரவ வகை உணவு என எவ்வகையிலேனும் விரதமிருந்து பெருமாளைப் பூஜித்தல் மிகவும் விசேஷமானதாகும். வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியமும் கூட. ஏனெனில் திருவோண நட்சத்திரத்திற்கு உடலையும், மனதையும், உள்ளத்தையும் ஒருங்கிணைக்கும் சாந்த சக்திகள் நிறைய உண்டு.
சிராவண நட்சத்திர விரத நிறைவில் பானகம் அருந்தி விரதத்தை முடித்தல் மிகவும் விசேஷமானது. ஆந்திர மாநிலத்தில் உள்ள பானக நரசிம்ம மூர்த்தி ஆலய மகிமைகளைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இங்கு நரசிம்மரின் திருவாய்க்குள் செல்லும் பானகம் எங்கு செல்கின்றது என்பது மகா தேவ ரகசியமாகும். ஆனால் ஒவ்வொரு துளி பானகமும், நரசிம்மரின் திருநாவை ஸ்பரிசித்த உடனேயே அமிர்தாக்னிப் பிரவாகம் கொள்கின்றது.
இதுவே சகல லோகங்களிலும் திருவோண நட்சத்திர நாளில் சூரியாமிர்தம், சந்திராமிர்தம் என்ற இரு வகை அமிர்தங்களாகச் சுரந்து, ஸ்ரீமன் சூரிய நாராயணப் பெருமாள், நிலாத் திங்கள் துண்டப் பெருமாள் என்பதாக சூரிய சந்திர நாமங்கள் இணைந்து பெருமாள் ஆலயத்தின் கோமுகம் வழியாகவும், இத்தகைய அமிர்தாக்னி சுரப்பு குறித்த ஹோரையில் ஏற்படும்.  அப்போது பெருமாள் ஆலயக் கோமுகத்தில் தீர்த்தப் பிரசாதத்தை ஸ்பரிசித்து அருந்துவோர்க்கு, வாழ்வில் நிறைய சுபிட்சங்கள் உண்டாகும். சுபிட்சம் என்றால் சுப சக்திகள் பன்மடங்காகப் பல்கிப் பெருகுவதாகும்.
ஞாயிறு கூடும் திருவோணத்தில் விரதம் இருப்போர்க்குச் சில விதமான சுபிட்சச் சக்திகள் தாமே கேளாமலே வந்தடையும்.
எனவே திருவோணம் அன்று எவ்வகையிலேனும் விரதமிருக்க முயன்று, இனி மாதந்தோறும் திருவோண நாள் விரதத்தைக் கடைபிடிக்க முயலுங்கள். இந்நாளில் மழை பொழியும் இடங்களில் சூர்ய, சந்த்ராமிர்த அமிர்தப் பொழிவு ஏற்படுவதால், வருண பகவானை வேண்டி, ஒரு சிறிதேனும் மழைத் துளிகளை அருந்தி, அமிர்தப் பிரவாகச் சக்தியைப் பெற்றிடுக!
சூரிய, சந்திரர்களுடன் கூடியருளும் பெருமாளுக்கு ஆரஞ்சு நிற, வெண்ணிறச் செம்பருத்தி அல்லது வெண் தாமரை சார்த்தி, இதழ்களைப் பிரசாதமாகப் பெற்றுப் பூஜித்துத் தேனில் தோய்த்துப் பிரசாதமாக உண்ணுதல் வாய் தவறி, அளவுக்கு மீறிப் பேசுவதால் விளையும் விபரீத விளைவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும்.

மனம் அடங்க
அனைத்தும் அடங்கும்

மதிகாரகராகிய சந்திர மூர்த்திக்கு உரித்தான திங்கட் கிழமை தோறும் மெளன விரதம் பூணுதல் நல்லது. அலுவலக, இயந்திர கதியாக மாறி விட்டக் கலியுக வாழ்க்கையில், மெளன விரதம் சாத்யமானதா?
கலியில் அனைத்து வகைத் துன்பங்களையும் தாங்கி, வெல்ல வல்ல ஆன்மீக சக்திகளைப் பெறுதல் வேண்டுமெனில், சமுதாயத்தில் மறைந்து போயுள்ள மெளன விரதம் போன்ற பண்டைய பூஜை வழிமுறைகளை மீண்டும் நடைமுறையில் கடைபிடித்தாக வேண்டும்.
தனக்கும், குடும்பத்திற்கும், சாந்தமான நற்கிரணங்களை வெளிப்படுத்துவதால், சமுதாயத்திற்கும் ஆன்ம சக்திகளை அளிக்க வல்ல, மெளன விரதத்தை ஒரு ஆறு மணி நேரம், பத்து மணி நேரத்திற்கேனும் மதிகாரக சக்திகள் நிறைந்த திங்கள் தோறும் நிச்சயமாகக் கடைபிடித்து வருதல் என்ற திடமான வைராக்யத்தைக் கங்கணச் சங்கல்பமாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள், பிறகு விளையும் நற்பலன்களைத்தான் பாருங்களேன்!

ஸ்ரீஅகத்திய பிரான் அவளிவநல்லூர்

அலுவலகத்திலும் கூட, திங்கள் தோறும் மெளன விரதம் பூணுபவர் என்ற தனித்த மரியாதையும், ஒத்துழைப்பும் கூடவே எழுவதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.
பொதுவாக, மெளன விரதம் பூண்டு உள்ளுக்குள் இறைநாமம் ஜபித்தல், அளப்பரிய, அபரிமிதமான மனோசக்தியை, மனவளத்தை, அரிய ஆன்ம சக்தியை அளிப்பதாகும். மெளன விரதம் பூண்டவாறே, பூசலார் நாயனார், வாயிலார் நாயனார் பெருமான்களை தரிசித்தல், இவர்களுடைய சன்னதிகளில் அமர்ந்து தியானம் பூணுதல் (திருநின்றவூர், திருமயிலை கபாலீஸ்வரர் கோயில்கள்), இவர்களுடைய சரிதங்களைப் படித்துப் பிறருக்குச் சொல்லுதல், இவர்களை தரிசித்து மெளன விரதத்தைப் பூணுதல், விரதத்தை நிறைவு செய்தல் போன்றவை நிறைந்ததாகத் திங்கட் கிழமை வளமானதாக, மனமங்களம் நிறைந்ததாக அமையட்டும்.
மனம் என்பது ஒரு கோளம் போன்றது. இதில் சுழற்சிகள் அதிகம். இதனால்தான் மனாதிபதியான சந்திர கிரகமும் இரண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை ராசி பெயர்கின்றார். உண்மையில் சந்திராஷ்டமம் என நாம் கூறுவது சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி போலான சந்திரப் பெயர்ச்சியைத்தான்!

ஸ்ரீசந்திர பகவான்
மானாமதுரை

சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சியை நல்வைபவமாகக் கொண்டு பெரிய விழாவாகக் கடைபிடித்துப் பூஜிக்கும் தமிழ் கூறும் நல்லுலகம், சந்திரப் பெயர்ச்சியையும்,
சந்திர சக்தித் தலங்கலான,
* சந்திரத் தீர்த்தம், ரோஹிணி, கார்த்திகை, திருவாதிரை தேவியருடன் சந்திர மூர்த்தி அருளும் தலங்களிலும், (மானாமதுரை, உத்தம பாளையம், மதுரை, அய்யர்மலை)
* சந்திரசேகரர், சந்த்ர மெளலீஸ்வரர் எனச் சந்திர நாமம் கொண்டருளும் ஆலயங்களிலும்
* சூரிய, சந்திரருடன் பெருமாள் அருளும் தலங்களிலும்
சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி போலக் கொண்டாடுதல் வேண்டும். இவைதாம் சமுதாயத்தில் சாந்த சக்திகளை எளிதில் நிரவிட உதவும்.
ஆலயச் சன்னதிகளில் தனித் தனி விமானம் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். விமானத்தையே கும்பம் என்றும் மூலவரைக் கும்ப சக்தி எனவும் அழைப்பர். கும்பகோணம் அருகே இன்னம்பூர்த் திருத்தலத்தில் ஆதி மூலக் கும்ப சக்தியாகிய மூலக் கருவறையில் ஆதிசிவனே அகத்தியருக்கு இலக்கண சக்திகளை போதித்தமையாலும் கும்ப முனிவர் எனப் பெயரைப் பெற்றார். கும்பத்தில் பிறந்தவர், மனித உடலின் கும்ப சக்திகள் பொதிந்த கபால அறிவு சக்திகளை இன்னம்பூரில் அமுதமாக்கிய மாமுனி ஆதலினும் கும்பமுனி ஆனார்.
மனதிலும் நிருதி மூலை, சனி மூலை, கன்னி மூலை என எட்டு மூலைகள் உண்டு. இதில் சிவந்த நிற மங்கள மன பூமியே மனச் சாந்தத்தை அக்னிப் பூர்வமாக அளிப்பதாகும்.  
திங்கட் கிழமைகளில் மண் பானை அல்லது வெங்கலப் பானையில் சமைத்த உணவைப் படைத்து உண்ணுதல், பல விமானங்கள் உள்ள ஆலய தரிசனம், மெளன விரத சக்திகளைத் தருவதாகும்.
சென்னை அருகே உள்ள திருமழிசை சிவாலயத்தில் கஜபிருஷ்ட விமானம் போன்ற வகையில் ஐந்து வகைக்கு மேலான விமானங்கள் உள்ள ஆலயமாகும். திருச்சி அருகே நெடுங்களம் சிவாலயம் காசியைப் போல் இரட்டை விமானம் கொண்டது.
எனவே திங்கட் கிழமைகளில் கும்ப சக்திகளைப் பெற மௌன விரதம், பல்வகை விமான தரிசனம் பெற்றிடுக! மனவளம் பெற உதவும். மன பலவீனத்தை அகற்ற மெளன விரதம் உதவும்.
தன்னை எவரும் புரிந்து கொள்ளவில்லையே, தன்னுடைய நல்ல காரியங்களுக்கு யாரும் உதவியாக இல்லையே, தன் நல்ல உள்ளத்தைப் பிறர் அறியாது ஏசுகின்றார்களே. என்ற வகையில் வெளியிற் சொல்ல இயலாமல் எண்ணித் தவிப்பவர்களுக்கு மெளன விரத சக்திகள், மகத்தான முறையில் உதவி புரியும்.

சந்தன சதயப் புனல்

சதய நட்சத்திரம் மங்களகரமான சுப நட்சத்திரங்களுள் ஒன்றாகும். இதனுடன் மங்கள வாரமாகிய செவ்வாய் சேரும்போது அது சதமூல மங்கள சக்திகளை அளிப்பதாகும்.
சதகுப்பை என அற்புதமான மூலிகை ஒன்றுண்டு. கிராமப் புறங்களில் சர்வ சாதாரணமாகக் காணப் பெறுகின்று, இதனைத் தக்க சமூலமாக, ஹோம பூஜையில் பயன்படத்தினால் தனமங்கள சக்திகளை அளிப்பதாகும்.
எனவேதான் சதய நட்சத்திர ஹோமத்தில் சதகுப்பை பிரதான ஆஹூதியாக அமைந்து, அக்னியில் இடப் பெறும். சதமூலி, குப்பை மேனி என மூலிகைகளே இப்பெயர் வகையைத் தாங்கி வருவதால், குப்பை என்பதற்குப் பல நல்அர்த்தங்களைப் பெற்று, ஆன்மீகத்தில் சிறப்பிடத்தையும் பெறுகின்றன.
சதய நட்சத்திர நாளில் சதமூலி, குப்பைமேனி மூலிகைகளின் தரிசனம் இவற்றாலான ஹோம வழிபாடுகள், இதிலும் நோய் நிவாரண நாளில் சதயநட்சத்திரம் அமைந்து, ஆற்றி வருவது பணத் தட்டுப்பாட்டிற்கான கர்ம வினைகளையும் தடங்கல் வரக் காரணமான தோஷங்களையும் நிவர்த்திக்கும்.
சதயம் அப்பர் சுவாமிகளின் திருநட்சத்திரத் தினமாகும். சதயப் புனல் என்பது சக்தி வாய்ந்த கிரணங்கள் காற்றோட்டம், நீரோட்டம் ஆகும். சதய நாளில் மட்டும் சந்தனத் தல விருட்ச, சந்தன நீரோட்டக் கூடிய குறித்த சில தலங்களில், மற்றும் சந்தன நறுமணம் வீசுகின்ற இடங்களில் ஏற்படுவதாகும்.
சித்தரைச் சதய நாளில் மழைப் பொழிவு ஏற்பட்டிடில், அதில் சதயப் புனல் பொழிவு பெரும் பாக்யமாக வந்தமையும். இந்த மழை நீரைத் தரையில் படாமல், வானிலேயே ஒரு மண் குவளை, தாமிரப் பாத்திரத்தில் பிடித்து வைத்துச் சந்தனம் அரைத்து இறைவனுக்குச் சார்த்துதல் நல்ல விருத்தி சக்திகளைத் தருவதாகும்.

உத்தமபாளையம் சிவத்தலம்

சதயப் புனல் எனில் மிகவும் ஆனந்த மயமான, தெய்வீக மயமான குளுமையைத் தரக் கூடியது. திருமழிசைச் சிவாலயத்தில் அருளும் குளிர்ந்த நாயகி இப்புனலை நல்வரமாக அளிக்கின்றாள். எனவே, சதய நாளில் இங்கு அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபடுவது உஷ்ண சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் தரும்.
எமமூர்த்திக்கென அளிக்கப் பெற்ற ஆதிசிவப் பூஜைத் திருநாட்களுள் ஒன்றே சதய நட்சத்திரமாகும். இதிலும், சித்திரைச் சதயத்தில்தாம் ஆதிசிவனே பந்தளமுகச் சந்தன விருட்சத்தைப் படைத்தளித்தார். முதன் முதலாக சந்தனாம்பிகை என்ற திருநாமத்துடன் அம்பிகை சந்தனத்தை அரைத்துத் தந்த சித்திரைச் சதய சந்தானாபிஷேகம் துலங்கிய சிவத் தலங்கள் உண்டு.
ஆண்டு முழுதும் சிவலிங்கம் எப்போதும் சந்தனக் காப்பிலேயே துலங்கி, வருடத்திற்கு ஒரு முறை மட்டும் சந்தனம் களையப் பெற்று மீண்டும் சார்த்தப் பெறும் அபூர்வமான தலங்களில் சதய நாளில் வழிபடுதல், சந்ததி விருத்திக்கு உதவும். தோல், முடி சம்பந்தமான நோய்களுக்கு நல்ல நிவாரணமும் தரும்.
வேதாரண்யத்தில் மூலவருக்குப் பின் உள்ள திருமணக் கோலம், சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சிவலிங்கம், உத்தரகோசமங்கை மரகத நடராஜர் போன்ற தலங்களில் சுவாமி ஆண்டு முழுதும் சந்தனக் காப்பில் ஜ்வலிக்கின்றார். குடும்பத்துடன், சதய நாளில் இம்மூர்த்திகளைத் தரிசித்திடில் குடும்ப ஒற்றுமை விருத்தியாகும்.
சந்தனக் கட்டையில் நிறைய ரேகைகள் உண்டு. மங்கள ரேகை, தீர்க தரிசன ரேகை, பண்டார ரேகை (இதன் காரணமாகவே பண்டார வாடையாக, பண்டாரவாடைத் திருத்தலமாக உள்ளது), பந்தள ரேகை போன்ற எண்ணற்ற சந்தன ரேகைகள், வளையங்கள் உண்டு. இவற்றை வைத்தே சந்தன மர வயதையும் கணக்கிடுவர்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
உத்தரகோசமங்கை

அம்பிகையே தம் இரு திருக்கரங்களால் மூன்றடி நீளமான சந்தனக் கட்டையைக் கொண்டு சந்தனத்தை அரைத்துப் பிறகு, சகல மூர்த்திகளுக்கும் அரைத்து, பிறகு அகஸ்தியர், வசிஷ்டர் போன்ற சித்தர்கள், மகரிஷிகள் அரைத்து சப்த ரிஷிகளிடம் தந்திட, இவ்வாறு சப்த ரிஷிகள் முதன் முதலாகச் சந்தனம் அரைத்துத் தந்த தலமே திருக்கடவூர் ஆகும்.
சதயப் புனல் என்பது இமயமலைச் சாரலில் சந்தன நறுமணத்துடன் வீசும் குளிர்த் தென்றலாகும். அப்பர் பிரானைச் சுண்ணாம்புக் காளவாயில் இட்ட போது, அவரைக் காத்தது இந்தச் சதயப் புனலே ஆகும். இதன் மூலமும், சதய நட்சத்திரத் தேவாரக் குரவரின் மகிமை நன்கு புலனாகும்.
சந்தன மரம் தலவிருட்சமாக உள்ள தலங்களிலும் சதய நாள் நாள் வழிபாடு மிகவும் விசேஷமானது. சந்தன நீரோட்டம் உள்ள தலங்களும், சந்தனக் கட்டில், சந்தனக் கூண்டு போன்ற சந்தனக் கிரந்திகள் கூடிய தலங்களும் உண்டு.
இவற்றில் எல்லாம் சதயம் அன்று சந்தனக் காப்பு இட்டு வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.

அமிர்தமான ஆரோக்யம்

பாற்கடலில் அமிர்தம் கிட்டிய பின், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும், அமிர்தத்தை முதலில் இறைவனுக்கு அர்ப்பணித்தல் வேண்டும் என்ற எண்ணம் எழாது, தங்களுக்குள் அதனைப் பங்கிட்டுக் கொள்வதிலேயே மும்முரமாகி, இதற்காகச் சித்தர்களின், மஹரிஷிகளின் சாபங்களுக்கும் ஆளாயினர். இதன் பிறகு சித்தர்களும், மாமுனிகளும், அமிர்தத்தைப் பெரிய சங்குகளிலும், கிளிஞ்சல் தட்டுக்களிலும் நிரப்பி, முதலில் அமிர்த விநாயகருக்குப் படைத்தனர். கிளிஞ்சல் தட்டில் சுவாமிக்குப் பிரசாதம் படைத்தல் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
அமிர்தப் பிரசாதத்தை மகரிஷிகளும், சித்தர்களும் படைத்திட, அமிர்த விநாயகரோ அமிர்தம் அனைத்தையும் தன்னுள் கிரகித்து, அமிர்த கடாட்ச விநாயகர் ஆகி, 108 விநாயக மூர்த்திகளாகக் காட்சி அளித்துப் பிரபஞ்சமெங்கும் விரிந்து, நிறைந்து யாங்கணும் அமிர்த சக்திகளை நிரவிட விழைந்தார்.
இவ்வகை அமிர்த விநாயக மூர்த்தி அவதாரிகையில்தாம், தேனுறுஞ்சும் விநாயகராக கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் இன்றும் அருள்கின்றார். பாற்கடல் அமிர்தப் பிரசாதத்தை ஏற்றவராதலின், எவ்வளவு தேனபிஷேகம் செய்தாலும், அனைத்தும் விநாயகருக்குள் கிரகிக்கப்படும் அற்புதமான காட்சி விநாயகச் சதுர்த்தி தோறும் இத்தலத்தில் நிகழ்கின்றது. குடும்ப ஒற்றுமைக்கு அருளும் அதியற்புத மூர்த்தி!
இவ்வாறு சித்தர்களும், மஹரிஷிகளும் அமிர்தம் படைக்கையில் தோன்றிய 108 விநாயக மூர்த்திகளும் எழுப்பிய இசையில்தாம் முதன் முதலாக அமிர்த வர்ஷிணி ராகம் பிறந்தது. அமிர்தவர்ஷிணி விநாயகர், அம்சவர்தன பால வினாயகர் என்ற பல நாமங்களை அவர்கள் சூடினர். அமிர்தப் பிள்ளையார் பாடிய அமிர்த வர்ஷிணி ராக கான மழையில் நனைந்து, அமிர்தமய சிரஞ்சீவித்வம் பெற்றவர்களுள் ஒருவரே ஸ்ரீமார்கண்டேய மஹிரிஷி ஆவார்.

ஸ்ரீஅமிர்த விநாயகர் திருபுறம்பியம்

அமிர்த விநாயகராகப் பிள்ளையார் தோன்றி அம்மையைக் காண, இவ்வாறு அமிர்த விநாயகர் தம் அன்னையாம் பார்வதியைத் தரிசித்த கோலமுமாக அமிர்தாம்பிகை, அமிர்தவல்லி தேவி ஆனாள். இதன் பிறகே விநாயகப் பெருமான் பிரபஞ்சத்தில் அமிர்தத்தைப் பெற வேண்டிய நியமங்களை எடுத்துரைத்த தலங்கள் எல்லாம் நேமம் எனப் பெயர் பெற்றன. இத்தகைய அமிர்தவர்ஷணி ராக கான மழைத் துளிகள் நிறைந்த அமிர்தத் தீர்த்தம், பித்ரு மோட்சத் தீர்த்தமாக இன்றும் சென்னை அருகே நேமம் தலத்தில் உள்ளது. பல யுகங்களில் பல பெயர்களுடன் 16 துறைகளுடன் பொலிந்த அற்புதத் தீர்த்தம் தற்போது சுருங்கி உள்ளது.
இங்கு, அமுதக் கிரணங்கள் பொழியும் பெளர்ணமி நாளில், 1008 சங்குகளால் தேனபிஷேகம் செய்து வழிபடுதலால், குடும்பத்தில் நல்ல ஒற்றுமை ஏற்படும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். இதன் அருகிலேயே, திருமண தோஷங்களை நீக்க வல்ல பலரும் அறியாத ஸ்ரீநித்யகல்யாணப் பெருமாள் ஆலயமும் உள்ளது. திருப்பணிகள் பலவும் தேவையான ஆலயம்.
பண்டைய யுகங்களில் தினமுமே திருமாலுக்கு, திருப்பதி போல, பிரம்மாண்டமான திருக்கல்யாண உற்சவங்கள் நிகழ்ந்த பெருமாள் ஆலயம் தற்போது ஒரு சிறு அறை போல காட்சி அளிப்பது வேதனை தருவதாகும். பக்தர்கள் முனைந்து இதனுடைய பண்டையச் சிறப்பை ஈர்த்து வர வேண்டும்.
அமிர்த வர்ஷிணி ராகத்தில் அமிர்தம் பெய்வித்த அமிர்த விநாயகர் அம்சவர்தன சங்கில் அமிர்தத்தை நிரப்பி ஆதிசிவனை அபிஷேகித்து மகிழ்ந்தார். எனவே, எந்தச் சங்கில் தேன் நிரப்பப்படுகின்றதோ அதற்கெனத் தனி மகிமைகள், மகத்துவங்கள், சிறப்புகள் உண்டு. அமிர்த கடாட்சத்தை அமிர்த விநாயகரிடம் இருந்து பெற உதவுவதே இனிப்புப் பண்டங்களைப் படைத்து ஏழைகளுக்குத் தானமளித்தலாகும்.

அமிர்தம் என்பது செல்வம், ஆரோக்யம், தீர்க்காயுள், சுப மங்களம், நோய் நிவர்த்தி என அனைத்தையும் அருள வல்லது. இதனால்தான் அபிஷேகம், காப்பு, மருந்து, காப்புத் துறை அனைத்திலும் தேன் பயனாகின்றது. தேனானது, கோடிக் கணக்கான பூக்களின் தவசக்திகளையும் தாங்கி வருவதால், பலத்த மூலிகை சக்திகளையும் கொண்டது.
முதலில் தேனபிஷேகப் பலனாக, கலியுக மனிதன் வேண்டிப் பிரார்த்திக்கின்ற நல்ஆரோக்கியத்தைத் தர வல்லதாகும். தற்காலத்தில் மனிதர்கள் சர்க்கரை நோயைக் கண்டுதான் மிகவும் அஞ்சுகின்றார்கள். சிறு வயதில் இருந்தே தினமும் சிறிது வெந்நீர், சிறிது எலுமிச்சைச் சாற்றுத் துளிகள், தேனையும் கலந்து சங்கில் வைத்து அமிர்த விநாயகருக்குப் படைத்து அருந்தி வந்தால் ஒரு போதும் சர்க்கரை வியாதி அண்டாது.
உலகில் நிலவும் அமிர்த சக்திகளை மனித சமுதாயம் முறையாகப் பயன்படுத்தாமையைக் குறிப்பதே சர்க்கரை வியாதியாகும். கலியுக மனிதனுக்கு நல்ஆரோக்கியம் தருகின்ற சுகத்தை, செல்வத்தால் ஒரு போதும் அடைய முடியாது. எனவேதான் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாயிற்று. ஆரோக்கியம் இருந்தாலே உடலில் எல்லாவிதமான பலங்களும் இருக்கும். ஆனால், ஆரோக்கியம், தெம்பினை நல்வழிகளில் பயன்படுத்திட வேண்டும். இதற்கு அமிர்த விநாயகர் வழிபாடு உதவும்.
நல்ஆரோக்யம் பெற, புதன் கிழமை தோறும், அமிர்த விநாயகருக்கு, பெருமாளுக்கு, குறிப்பாக ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியின் திருப்பாதங்களுக்குத் தேனபிஷேகம் செய்து கோமுகம் வழியாக வரும் தீர்த்தப் பிரசாதமாகப் பெற்று அருந்தி வர நல்ஆரோக்யம் கிட்டும்.

உத்தியோகத்தில் நிலை பெற வேண்டுமா ?

ரக்த பலம், ரஞ்சன பலம், ரங்க பலம், ரம்ப பலம் போன்ற எட்டு வகை ரஞ்சித சக்திகள் விஷ்கம்ப யோக நாளில் மலர்கின்றன்.
மனித உடலையே கொடிக் கம்பமாகக் கருதுவதால்தான், ஆலயத்தில் கொடிக்கம்பம் அருகே உடலைத் தரையில் யோகப் பூர்வமாகக் கிடத்தி வீழ்ந்து வணங்குகின்றோம். ஜீவகளையுடன் அதாவது உயிர்ச் சக்தியுடன் கிடந்து வணங்குதல் சிவமாகும். கிடக்கும் நிலையில் ஜீவகளை அதாவது உயிர்ச் சக்தி இல்லையெனில் அது சவமாகிறது. இதனை இவ்வாறு உணரும் யோகநிலையே சிவபவம் !

நந்தி கொடி மரம்
ஸ்ரீகாளஹஸ்தி

அாவது, ஜீவகளையுடன் இறைவனை வணங்கி வாழ்கின்ற உத்தம வாழ்க்கை முறைகளை உணர்த்துவதே விஷ்கம்ப யோக நிலை வழிபாடாகும். இதனால்தாம் துறவியர் விஷ்கம்ப யோக சக்திகள் நிறைந்த மர தண்டத்தைத் தாங்கி வருகின்றனர். சாதாரண மனிதர்களுக்கு அதாவது துறவு நிலை அல்லாது, இல்லற தர்மத்தில் இருப்போர் இல்லறத்தில் சிறந்திட, திருநீறாகிய விஸ்வசிவகம்பம் அல்லது நெற்றியில் கிடந்த கோலத்தில் திருநீறு இடுதலும் அல்லது நின்ற கோலத்தில் திருமண் (நெற்றி நாமம்), இடுவது மிகச் சிறந்த யோகமாகப் போற்றப்படுகின்றது. ஆம், திருநீறும், திருமண் இடுவதும் அரும் பெரும் யோகமே!

ஸ்ரீதுர்கை கூரூர் நன்னிலம்

27 வகை யோக நாட்களின் சிறப்புகளை அறிந்து, அந்தந்த யோகம் வருகின்ற நாளில், குறித்த வழிபாடுகளை ஆற்றி வந்தால், நோயற்ற வாழ்வை இறையருளால் பெற்றிடலாம். குறிப்பாக, கடுமையாக உழைத்து வாழும் மனப்பான்மையைப் பெறவும் இது உதவும்.
உலகெங்கும் கடுமையாக உழைத்து வாழும் குணம் மங்கி வருவது ஏமாற்றமளிக்கிறது. ஏனெனில், உழைக்காது பெறும் வருமானத்தில் பிறரை ஏமாற்றுதல், பிறர் பொருளை அபகரித்தல், பிறர் பொருளில் வாழ்தல், பிறருடைய பொருளைத் துஷ்பிரயோகம் செய்தல் போன்ற பல்வகைத் துர்கர்ம வினைகள் எளிதில் சேர்ந்து விடுகின்றன. நாமெங்கே இவ்வாறான அதிபயங்கரச் செயல்களைச் செய்தோம் என எண்ணாதீர்கள்!
உங்கள் அலுவலகத்தில் ஒரு சிறு குண்டூசியையோ, தொலைபேசியையோ உங்களுக்காக என்றேனும் ஒரு முறையாவது பயன்படுத்தினீர்களா, அப்படியானால் மேற்கண்ட வகையில் கர்ம வினைகளுக்கு ஆளாகி உள்ளீர்கள் எனப் பொருள்!
பலரும் ஓய்வு பெறுகையில் தனக்கு ஓய்வூதியங்கள் முறையல்லாதோ, குறைத்தோ, தாமதமாகவோ வருகின்றது எனக் குறைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் தம் ஆயுள் முழுதும் அலுவலகத்தில் எவ்வளவு ஓசி போன்களைச் செய்தார்கள் என்று (இதுவே பெரும்பாலும் மக்களுடைய வரிப் பணத்தில் செய்த, ஆயிரக் கணக்கான போன் கால்களாக இருக்கும்!) கணக்கிட்டு, அதற்கு வட்டி போட்டால் என்ன ஆகுமோ, அதுவே குறைந்த, தாமதமான தொகையாக வந்துள்ளது என்று சற்றே சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
எனவே கடுமையாக உழைக்கும் மனப்பான்மையைப் பெறவும், இவ்வாறு தகாத முறையில் சேர்ந்த கர்ம வினைகள் கழியவும், விஷ்கம்ப யோக நாளில் அமையும் பிரதோஷ பூஜை நன்கு உதவும். இதற்குப் பஞ்ச பூத சக்திகளின் அனுகிரகம் மிகவும் தேவை!
விஷ்கம்ப யோக நாளில் கொடி மர உச்சியில் தியானம் பூண்டிருக்கும் நந்தீஸ்வரரை வணங்கி, தியானித்துப் பிரதோஷ பூஜையில் பங்கேற்க வேண்டும். பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் ஆகிய ஐந்து அம்சங்கள் கூடிய பஞ்சமுக கணபதி அருளும் ஆலயங்களிலும், நல்ல உயரமான கொடிக் கம்பம் உள்ள ஆலயங்களிலும், மூலவர், அம்பிகை, முருகப் பெருமானுக்குத் தனித் தனியே கொடிக் கம்பங்கள் உள்ள ஆலயங்களிலும் விஷ்கம்பயோகப் பிரதோஷ வழிபாடாற்றுவது வாழ்வில், வேலையில் ஸ்திரம் பெற்றிட உதவும்.

சந்ததிகளை வளர்க்கும் கிளிகள்

அனைத்து ஜீவன்களின் உடலிலும் பஞ்சபூத சக்திகள் உண்டு. ஜீவசக்தியை உடலில் நிலை நிறுத்தி, அதனதற்குரிய கர்ம வினைகளை நன்கு ஆற்றிட வேண்டிய கடமையை ஆக்க வைப்பதும் பஞ்சபூத சக்திகளின் தெய்வீகக் கடமையாகும்.
சஞ்சார பஞ்சமுக கணபதி மூர்த்தியின் அருளால், ஜீவசக்தியில் பஞ்சபூத சக்திகளை நிலை நிறுத்திடலாம். பூமியில் எத்தகைய தொழிலும், காரியமுமே ஐந்து பூத சக்திகளில் அடக்கமாகிறது. சஞ்சார பஞ்சமுக கணபதியாக இவர் எளிமைத் தோற்றம் கொள்கையில் சிறு மரப்பெட்டியில் செல்லும் இடமெங்கும் எடுத்துச் சென்று பூஜித்திடலாம். சிறு குழந்தை போல, யார் எங்கு சென்றாலும், நானும் வரேன்! என்று சொல்வது போல சஞ்சார கணபதி எட்டிப் பார்க்கின்ற பாவனை இதில் தென்படும். யாத்ரா கணபதி, தொடர் விநாயக மூர்த்திகள் இவருடைய அம்சங்களே!

ஸ்ரீதுங்கஸ்தனாம்பிகை
கஞ்சனாகரம்

பலரும் நினைவாற்றல் குறைவு என்று குறைப்பட்டுக் கொள்வார்கள். பூமியில் ஜீவ வாழ்க்கை நன்கு நிகழ்ந்திட, அனைவருக்கும் போதுமான அளவில் நினைவாற்றல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், மனிதனுக்கு அதிக நினைவாற்றல் ஏற்பட்டு, பூர்வ ஜன்ம நிகழ்ச்சிகளும், அதில் சம்பந்தப்பட்டவர்களும் நினைவிற்கு வந்தால் பெரும் குழப்பமல்லவா ஏற்படும்?
இவர்தான் என் பூர்வ ஜன்மத் தந்தை என்று இப்பிறவியில் எவரையாவது அறிந்தால் என்னாகும்? பைத்தியம் என உலகத்தார் முடிவு கட்டி விடுவார்கள். எனவேதான் அபரிமிதமான நினைவாற்றல் எவருக்கும் அளிக்கப்படவில்லை! வெண்டைக் காய்க்கு நினைவாற்றலை நன்கு விருத்தி செய்யும் குணங்கள் உண்டு.
பலருக்கும் எவ்வளவு பணம் வந்தாலும் இருக்கிறதே தெரியாத மாதிரி இருக்கும். அதே நேரத்தில், எவ்வளவு பணம் வந்தாலும் அனுபவிக்கிற புத்தியும் இருக்கும். அவர்கள் அனுபவிப்பதை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. எனவே இன்பமோ, சுகமோ, சுநயலமானதாக இருந்தால் அது அவரையே சாரும். அந்தந்த நேரத்திற்கு மட்டுமே இருக்கும். தான, தர்மங்களில்தான் உண்மையான பேரின்பம் நிறைந்து நிரவும்.
மாதசிவராத்திரி நாளில் நினைவாற்றல் சக்திகள், பூர்வ ஜன்மப் புண்ய சக்திகள் மற்றும் அரிய நல்வர சக்திகள் பரிணமிக்கின்றன. இவை அகங்கார ஆணவத்தையும் தணிக்கும்.   
எனவே, ஒவ்வொருவரும் தேய்பிறை மாதசிவராத்திரி தோறும், அடுத்த நாள் அமாவாசையாக அமைவதால், சிறு தானங்களையாவது நிறைவேற்றியாக வேண்டும். பொதுவாக, மாதச் சதுர்த்தசி நாளில் அம்பிகையோடு பித்ருக்களும் பூவுலகிற்கு வந்து வழிபடுவதால், அருணாசலக் கிரிவல பூஜைகளை ஆற்றுவதால், பஞ்சபூத சக்திகள் பரிமளித்துப் பூரிக்கும். இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியது பூவுலகத்தாரின் கடமையாகும்.
மாதசிவராத்திரி நாளில், இதிலும் தனந்தரும் சுக்ர வார வெள்ளியன்று பூரிக்கும் ரேவரங்க ஜோதி சக்திகள் பூரிக்கும் ரேவதி நட்சத்திர நாளில், விநாயக மூர்த்தி கற்பக விருட்சத்தின் கீழே அமர்ந்து அருள்கின்றார். மாதசிவராத்திரி வழிபாட்டில் அம்பிகை முதலில் கற்பக விநாயகரையே வணங்குகின்றாள். அருகில் கிளிகள் நிறைய இருக்கும். பொதுவாக, சில வகைக் கற்பக விருட்சங்ளில் தீர்க தரிசன சக்திகளை உடைய கிளிகளைத் தவிர வேறு வகைப் பறவைகள் அமரா! இதனால்தாம் கிளிகள் எதிர்காலத்தை அறியும் தீர்க தரிசன சக்திகளைப் பெற்று, கிளி ஜோஸ்யம், கிளி சகுன சாத்திரங்களும் பிறந்தன.
சுங்கிலம் எனும் கிளிப் பச்சை நிற மூலிகா திரவிய சமூலம் ஒன்றும் உண்டு. கிளிகள் சுங்குடி வகை வஸ்திர சக்திகளைப் பூண்டவை! காரணம் கீர வேத சக்திகளைப் பூண்டவையே ஸுங்கிடி வகை வஸ்திரங்கள். கீரனூர் எனும் பெயருடைய தலங்களில் கீரபாவன சக்திகள் நிறைந்திருக்கும். (கீரம் = கிளி)
கிளிகளுக்கும் வஸ்திரங்களுக்கும் என்ன சம்பந்தம்? சுங்குடியில் பச்சை வண்ணம் நன்கு சேரும். மேலும் கிளிப் பச்சை நிறத்திற்கு சுபசக்திகளை விருத்தி செய்யும் ஆற்றல் உண்டு. நாய், பூனை போன்றவை அருகம்புல்லை மெல்வது போல, சில வகை சுங்கீரக் கிளிகள் சுங்கில மூலிகை இலைகளை மட்டும் சற்றுத் திரட்டி உண்ணும்.
மாத சிவராத்திரி அன்று கிளி வாகன மூர்த்திகள், கிளியைத் தாங்கி இருக்கும் மூர்த்திகள், கிளி (உள்ள) கோபுரத் தலங்களில் வழிபடுதல் விசேஷமானதாகும். அருணாசலத்தில் கிளி கோபுரத்தில் கிரிவலத்தைத் தொடங்கி இங்கே நிறைவு செய்தலும், கிளிகளுக்குப் பழங்கள், தானியம் அளித்தலும் விசேஷமானது. சந்ததி தழைக்க உதவும் கீரபாவன பித்ரு சக்திகளை அளிக்கும்.

மன இருளை மாய்ப்பது எப்படி ?

அமாவாசை நாள் வந்தாலே, என்றைக்கு அமாவாசை, எப்போது தர்ப்பணம் என்ற கேள்விகள் தற்போது நிறையவே எழுகின்றன. முற்காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்குமென குலகுரு என இருந்தமையால், அவர் கூறுவதையே வேதவாக்காக நம்பி எதையுமே கடைபிடித்தமையால், இத்தகைய வினாக்கள், சந்தேகங்கள் அக்காலத்தில் எழவில்லை!
ஆனால் தற்காலக் கலியுகத்தில், உத்தமப் பெரியோர்கள், சத்குருமார்களை மதிக்கும் தெய்வீக மாண்பு, மங்கியும், மறைந்தும் வருவதால், இதனால் மக்கள் சமுதாயத்திற்குத்தான் பலவகை ஆன்மநெறி முறைகளும் கிட்டாது பேரிழப்பாகி வருகின்றது.
குழந்தை பாக்யம் இல்லாதோர் மற்றும் தலைக்கு மேல் தலையாய பிரச்னையை, நோயைக் கொண்டிருப்பவர்கள், எள், கங்கை, காவிரி போன்ற புனிதத் தீர்த்தங்கள் கலந்த நீரை, மூங்கில் தம்ளரில் வைத்துத் தினமுமே தர்ப்பணம் அளித்து, பித்ரு சாப, பைரவ தோஷ, நாக தோஷங்களுக்குத் தீர்வு காண வேண்டும்.
மஹாபாரதத்தில், ஸ்ரீகிருஷ்ணனின் திருவாக்கை ஒட்டி, அமாவாசைத் தர்ப்பணம் அளித்தவர்கள், போதாயனக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். ஜாதி பேதமின்றி மக்கள் சமுதாயத்தில், அனைத்துத் தரப்பினர்களிலும் போதாயன அமாவாசைத் தத்துவக்காரர்கள் நிரவி உள்ளனர். ஆனால், இவர்கள்தான் போதாயன அமாவாசை நாட்களில் தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்பதில்லை!
பிரபஞ்சப் பரம்பொருளாம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா சிருஷ்டித்துத் தந்துள்ளமையால், போதாயன அமாவாசைத் தர்ப்பணம் ஜாதி, மத, குல பேதமின்றி அனைவருக்கும் உரித்தானதே! போதாயன அமாவாசையை நிர்ணயம் செய்யும் கால நிர்ணய முறைகளும்  
பலவிதமான தோஷங்களையும் பித்ருத் தர்ப்பண சக்தியால் நீக்க வல்லதாகவும் கூடிய போதாயன அமாவாசைத் தர்ப்பணப் பலன்கள் நிறையவே உண்டு.
* உத்தமப் பெரியோர்களை எதிர்த்துப் பேசியது,
* பெரியோர்களையும், பெற்றோர்களையும் ஏசியது,
* பெரியோர்களையும், பெற்றோர்களையும் கை நீட்டி அடித்தது,
* பெரியவர்களை மதியாது, கலந்து ஆலோசிக்காது முடிவு எடுத்தல்,
* பெற்றோர்களின் நல்வார்த்தைகளை மீறிக் காரியங்களை ஆற்றுதல்,
* பெரியோர்களை ஏமாற்றிப் பொருளை, பணத்தை, அபகரித்தல்
* அபவாதம், பழி, பகைமை, பொறாமையால், பூர்வ ஜன்மக் கர்மத் தீவினை பாக்கியாக, பெரும் பிரச்னையானது பூதாகாரமாக வடிவெடுத்து நிற்பது
- போன்ற பல பாவ வினைகளுக்கும், ஓரளவேனும் பரிகார வழிகள் பெற, போதாயன அமாவாசை நாளில் பித்ருக்களுக்குப் படையல் பூஜைகளை நிகழ்த்தி, முழு நீள வாழை இலையில் ஜாதி, மத வேறுபாடின்றி பழங்கள், கீரைகள் நிறைந்த அன்னதானத்தை, குறிப்பாக மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள போதாயனப் பரம்பரை வழி வந்தோர்க்கு,
இதிலும் பசு, காளை, ஆடுகளைப் பராமரிக்கின்ற ஏழைகளுக்கு அன்னதானமாக அளித்து வர வேண்டும். மேலும், சூரிய, சந்திரத் தீர்த்தம் உள்ள தலங்களிலும் பித்ரு ஹோமங்களை ஆற்றிட வேண்டும்.
சூரிய, சந்திர மூர்த்திகள் தனிச் சன்னதி கொண்டோ அல்லது (நவகிரக மூர்த்திகளாக மட்டுமன்றி) தனித்த மூர்த்திகளாக அருளும் தலங்களில், 24 தலைமுறைகளுக்கான பசு நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுதலால், பெரியோர்களின் சாபங்கள் தீர நல்வழி பிறக்கும்.
அமாவாசையன்று சூரிய, சந்திர கிரகங்கள் ஒரே தளத்தில் இருப்பதால் (இனணந்திருப்பது சூரிய கிரணமாகும்), இரு கண்கள் இணையப் பார்த்துத் தரிசிக்கும் சாளரத் தலங்களில் போதாயன நாளில் வழிபடுதல் நன்மை தரும். அதாவது மூலவருக்கு முன் கதவு வழி இல்லாது ஒன்பது துவாரங்கள் / பலகணிகள் / சாளரங்கள் உள்ள அமைப்பே சாளரக் கோயிலாகும். (வியாசர்பாடி, திருவேற்காடு, திருஆனைக் கோயில், திருவான்மியூர், காஞ்சிபுரம் அருகே பெருநகர்) இத்தகைய சாளரத் தலங்களில் தனிச் சன்னதி கொண்டருளும் சூரிய, சந்திர மூர்த்திகளை வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.
வாழ்வில் நல்ல நாள் பாராது, நற்பெரியோர்களின் சொல் கேளாது, அகம்பாவம், ஆணவம், கடவுள் நம்பிக்கை இன்மை போன்றவற்றால் செய்த சில தவறுகள், பாவ வினைகள் மனதின் ஒரு பகுதியை இருட்டாக்கி விடும். இந்த மனஇருள் தகர்ந்திட, போதாயன அமாவாசைத் தர்ப்பணங்கள், படையல்கள் மிகவும் உதவும்.

முரட்டுக் குழந்தைகள் பராமரிப்பு்

பொதுவாக அமாவாசைப் பெளர்ணமியில் சத்ய நாராயணப் பூஜையை, நன்முறையில் விரதத்துடன் கொள்பவர்களுக்கு, அடுத்து வரும் பிரதமையில் உடல் சுத்தி இருக்குமாதலின், பிரதமைத் திதி, மனசுத்திக்கு வழிவகை செய்யும் உத்தம நாளாகிறது.
மன சுத்திக்கு, முதல் படியாக உடல் சுத்தியும் அமைகிறது என்பது உண்மையே! ஆனால் வெளிப் பார்வைக்குத் திருநீறு, திருச்சூர்ணம் இட்டு, மனம் நிறையத் தீய எண்ணங்கள், தீய பழக்கங்கள் குவிந்திருந்தால் என்ன பிரயோஜனம்?
எனவே, அவரவருக்கே தெரியும், அவரவருடைய மனம் எந்த அளவிற்குச் சுத்தமாய் இருக்கிறது என்று! “இது வரை நடந்தது போகட்டும், இனியேனும் திருந்தி வாழ்வோமாக!” என்று சங்கல்பம் எடுத்துத் திருந்தி வாழ, பிரதமைத் திதி நாளில் ஸ்ரீவேதபுரீஸ்வரர் என இறைவன் அருளும் தலங்களில் அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம் செய்து வாருங்கள்!
உடல் நாற்றத்தோடு, வியாதிகளோடு, வியாதி உபாதைகளோடு இருந்தால், மனம் அவற்றிலேயே மிதப்பதால், மனம் எவ்வாறு ஒருமித்து, இறைதரிசனத்தில் ஒன்றி சுத்தியாகும்? இதற்காகத்தான் கிருத்திகை விரதம், திருவோண விரதம் என்று வைத்துள்ளனர். விரதத்தில் உடல் சுத்தி ஏற்பட்டு, மனசுத்திக்கு வழி வகுக்கிறது! விரதப் பலாபலன்கள் எல்லையற்றவை எனினும், நடப்புக் கர்ம வினைகள் அவற்றைக் கரைத்து விடும். எனவே கலியுகச் சூழ்நிலையில், ஒரு நாள் விரத சக்திகள் முறையாகப் பயன்படுத்தப்பட்டால் ஐந்து நாட்களுக்கு நன்கு நிலைக்கும்! இதனை மென்மேலும் நன்கு பண்படுத்திக் கொள்ள வேண்டும்.

திருவொற்றியூர்

என்னதான் ஒருவர் நன்கு மலஜலம் கழித்து ஆலயத்திற்குச் சென்றாலும், உடலுக்குள் சிறிதேனும் மலஜலம் இருக்கும் அன்றோ! ஆனால், விரத நாளில் உடல் சுத்திகரிக்கப்படுவதால் உடலில் சிறிது கூட மலஜலத் தங்கல் இன்றி இறைவனை வழிபடுகையில், இறைவழிபாட்டில் மனம் நன்றாகவே ஒன்றும்.
அதெப்படி உண்ணா விரதம் பூண்டால், மலஜலத் தங்கல் உடலில் இல்லாவிடினும், பசி, தாகம் இருக்குமே, இவற்றை அடக்கியா இறைவனை வழிபட முடியும்? விரதத்தின்போது பசி, தாகம் எடுக்கும் என்பது உண்மையே, ஆனால், இவற்றை வென்று உண்மையாக விரதத்தைக் கடைபிடித்து முடிக்க வேண்டும் என்ற அதீதமான மனோ வைராக்ய சக்தி, அதியற்புத யோக சக்தியாக விரத நாளில் தோன்றி, நன்முறையிலான மனசுத்தி கூடிய வழிபாட்டை அளிக்கும். இந்த வைராக்ய யோக சுத்தியை உண்ணா நோன்பு விரதத்தில்தான் பெற முடியும்! பிரதமை வழிபாடும் துணை புரியும்!
சத்குருவின், உத்தமப் பெரியோர்களின் தலைமையில் நடைபெறும் அன்னதானக் கைங்கர்யங்களில், மனம் ஒருமிப்பு, சிரத்தை, உடல் உழைப்பு தேவையாவதால், அன்னதானக் கைங்கர்யப் பணிகளில் உண்ணாநோன்பு, மெளன விரதம் போன்ற அனைத்து வகை விரதப் பலன்களும் ஒன்று திரண்டு வந்து அருள் புரியும். எனவே, வாழ்வில் சத்சங்கப் பூர்வமான பலரும் ஒன்று சேர்ந்து ஆற்றும் அன்னதானப் பணிகளில் அடிக்கடி பங்கு கொண்டு பல்வகை விரதப் பலாபலன்களையும் பெற்றிடுக!
இவ்வாறு, பல்வகை சுத்திகரிப்பு நாட்கள் வாழ்க்கையில் வரும். ஒவ்வொன்றும், ஒவ்வொரு விதத்தில் மன, உள்ள, உடல் சுத்திகரிப்பைத் தரும். இதற்காகவே, அந்தந்தத் திதியில் உண்ண வேண்டிய உணவு வகைகள், காய்கறி வகைகளும் உண்டு. ஸ்ரீநிகமாந்த தேசிக சுவாமிகள் அந்தந்த நாளுக்கான உணவு முறைகளைப் பற்றிய பாடல்களை அருளி உள்ளார். தக்க சத்குருவை நாடி, தக்க விளக்கங்களைப் பெறவும்.
பிரதமை தோறும் நீர் வகை திரவியம் மட்டும் அருந்தி அல்லது உண்ணாவிரதத்துடன் முழு நேர அல்லது குறைந்தது ஆறு மணி நேரமேனும் மெளன விரதம் பூண்டு, பிரதமை தோறுமாவது, காளைகளுக்குப் புல்லும், தழையும், காய்கறிகளும் அளித்தல் நல்ல மனோ சுத்தத்தைப் பெற்றுத் தரும்.
வாரந்தோறும் காளைகளுக்கு உணவளித்து, ஸ்ரீநந்தீஸ்வரர் எனும் பெயரில் இறைவன் அருளும் தலங்களிலும் (திருவொற்றியூர்), நந்தி சக்தித் தலங்களிலும் தக்க வழிபாடுகளை ஆற்றி வந்தால், கணவன், மனைவி, பிள்ளைகளிடம் உள்ள முரட்டுத் தனம், அடம்பிடிக்கும் சுபாவம், அடாவடித்தனம் தணியும். முரடாக உள்ள வேலையாட்களின் குணம் நல்விதமாக மாறுபடும்.

குருவைக் காட்டும்
அஷ்டாங்க யோகம்

உண்மையில் சத்குருவிடமிருந்து நமக்கு நல்ஆசிக் கதிர்கள் வந்து கொண்டுதாம் இருக்கின்றன. ஆனால் அவரவருடைய வல்வினைகள் சுவராக நின்று தடுத்து விடுகின்றன. இதற்காக வல்வினைச் சுவர் வலிதானது என்று பொருளல்ல! வல்வினைகளே தடை மார்கங்கள் என அறிதல் வேண்டும்.
ஜீவாலயத் தரிசனத்தில், சத்குருவின் மார்கத்தில் இருந்து வரும் ஒளிக் கதிர்கள் எவற்றாலும் தடைபடாது, நம் உடலில் சேர்ந்து நமக்கு வரும் துன்பங்களை நிவர்த்தி செய்ய உதவுகின்றன. .
இதனால்தான் அவரவருடைய சத்குருவை அறியா விடினும், அனைத்து மதங்களிலும், நாடுகளிலும் சத்குருமார்கள் பொலிந்தாலும் அவர்கள் யாவரும் ஒரே இறைப்புல வீட்டில் உறைவதால், குரு சக்திகள் பூரிக்கும் வியாழன் தோறும் மேற்கண்ட வகையில் சித்தர்கள், மஹான்கள், யோகியர், ஞானியரின் ஜீவ சமாதிகள், ஜீவாலயங்கள், குருமூர்த்தங்கள், அதிஷ்டானங்களில் வழிபட்டு வருதலால், சத்குருவின் மார்கப் பாதையில் இருந்து விலகிச் சென்ற தூரம் குறைந்து, வாழ்வுப் பாதை நன்னெறியில் சீரடைய உதவும்.
உண்மையில் சத்குரு மார்கப் பாட்டை (வழி) தெளிவானதே! ஆனால் அவரவருடைய கர்ம வினைகள்தாம் சுவர், கல், முள்ளாக வழியில் பரவிப் பாதையையே மறைக்கின்றன. பூனைக் குட்டியைத் தாய்ப் பூனை வாயால் கவ்வி அரவணைத்துச் செல்வது போல, சத்குருவே வந்து அரவணைக்கும் அளவிற்குப் பக்திப் பூர்வமான வாழ்க்கையை மக்கள் கொள்ளாமையால், வேதப் பூர்வமாய் விளக்கப்படுவது போல, குரங்குக் குட்டி தாய்க் குரங்கைக் கெட்டியாகப் பற்றிக் கொள்வது போல, நாமே சத்குரு மார்கத்தைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகள்
ஜீவாலயம் கசவனம்பட்டி

அவரவருக்கு உரிய சத்குருவிடம் இருந்து நல்வர ஒளிக் கதிர்கள் எப்போதும் கிளைக்கும். இவற்றைப் பார்க்க வேண்டுமானால், அதற்கெனத் தனி யோகம் உண்டு. திருஅண்ணாமலை, பொதிய மலை, குற்றால மலை, கேதார்நாத், கொல்லி மலை, இமய மலைப் பகுதிகளில் மலையில் இருந்து தனித் தன்மையான ஒளி வீசும். இது எப்போதாவது பாக்யம் உள்ளவர்களுக்கு மட்டும் தோன்றக் காண்பதாகும். இவற்றைப் பலரும் காணச் செய்வதற்கென்றே அவரவருடைய பித்ருக்கள் தேவஆடியைக் கொண்டு பிரதிபலிக்கச் செய்வர்.
பொதுவாக, குருபாந்தவ யோகம் எனும் அற்புத யோகத்தைப் பதினெட்டு வருடங்கள் பயின்று வந்தால், குருமார்கமாக வரும் ஒளிக் கதிர்களை ஓரளவு உணரலாம். அதுவரையில் சக்கரங்கள், யந்திரங்களைப் பூஜிப்பதன் மூலமும், விளக்குப் பூஜை மூலமாகவும் இவை உணர, அறிய, அடையப் பெறும். பதினெட்டு வருடங்கள் யோகம் பயின்று மெய் வருந்தக் கஷ்டப் பட்டு அறிந்தால்தான் இது ஓரளவேனும் புரிபடும். எதையுமே வாழ்வில் கஷ்டப்பட்டு அடைந்தால்தான் அதனதன் அருமை, மகத்துவம் தெரிய வரும்.
இவ்வாறு சித்தர்கள், மஹான்கள், யோகியர், ஞானியரின் ஜீவ சமாதிகள், ஜீவாலயங்கள், குருமூர்த்தங்கள், அதிஷ்டானங்களில் இருந்து தினமும் குரு ஹோரை மற்றும் குறித்த அமிர்த நேரங்களிலும், குரு வாரத்திலும், நிச்சயமாக வரும் ஒளிக்கதிர்களைப் பார்த்தவர்களும் உண்டு. இவை ஆபத்துக் காலங்களில் நன்கு ரட்சித்துக் காக்கும்.
ஆனால் ஆபத்து என்றால் உயிரைக் காப்பது என்ற மட்டும் எண்ணல் கூடாது. தீயவை பக்கம் சாயாமல், மது, போதைப் பழக்கங்களில் சிக்காமல் காப்பதும் ஆபத்திலிருந்து காத்தலே!
ஒரு நல்லவர் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என எண்ணினால். ஜீவாலய தரிசனத்தினால் அவரே வீடு தேடி வந்து உதவிகளைச் செய்திடுவார்.
ஜீவாலயத்தில் ஆற்றும் அன்னதானத்தில் எழும் அன்னஜோதி சக்தி, குருபாந்தவ ஜோதிக் கதிர்களின் அனுகிரகத்தை எளிமையாக்கித் தரும். மேலும் நற்காரியங்களை நிறைவேற்றப் பொருள், பணம் இல்லையே! எனப் பரிதவிக்கையில் நற்காரிய சித்திக்கு, அதில் சுயநலம் இல்லாமல் இருந்தால், அது சித்திக்க ஜீவாலய தரிசனம் உடனேயே உதவும்.
வியாழனன்று சித்தர்கள், மஹான்கள், யோகியர், ஞானியரின் ஜீவ சமாதிகள், ஜீவாலயங்கள், குருமூர்த்தங்கள், அதிஷ்டானங்களில் தானே தொடுத்த துளசி மாலை சார்த்தி, உருண்டை வடிவ வகை உணவு, பழ வகைகளைத் தானமாக அளித்து, முழங்காலில் மண்டியிட்டு அஷ்டாங்க யோக நிலையில் கண்களை மூடியவாறு தியானித்து உங்களுக்குரிய குல மஹரிஷியை வேண்டிப் பிரார்த்தனை செய்க! முழங்காலில் வலி ஏற்பட, ஏற்பட மனம் ஒருமிப்பதை இந்த அஷ்டாங்க யோக நிலையில் உணரலாம்.

சுக்ரவார அம்மன் வழிபாடு

அக்னி என்றால், வெப்பம், சூடு, வெளிச்சம், ஒளி எனப் பலவற்றையும் குறிக்கின்றது அல்லவா! விளக்குத் தீபங்களிலும் விளக்கின் தன்மை, உலோகம், திரி, தைல வகைகள் இவற்றைப் பொறுத்துத் தீபத்தின் வகைகளும், வண்ணமும், தன்மைகளும் மாறும். மின் ஒளியிலும் பல்வகைகள் உண்டே! இதற்கெல்லாம் விஞ்ஞானப் பூர்வமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், மெய்ஞான விளக்கங்களும் பல உண்டு.
வெப்பம் என்றால் உடலைச் சுடுவது, தீ என்றால் எரிப்பது என்று அக்னியைப் பற்றிப் பல தவறான அர்த்தங்கள், கருத்துகள் தோன்றி உள்ளன. ஆனால் வெப்பம், உஷ்ணம், நெருப்பு, ஒளி இன்றி, மனித வாழ்க்கை ஒரு நிமிடம் கூட நகராது என்ற வகையில், கண் ஒளி, கண் பார்வை, உணவு, உறைவிடம், அலுவலகம், தொழில் என அனைத்திலுமே அக்னி சக்திகள்தாம் மனிதனுக்குத் தேவைப்படுகின்றன.
நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் பயன்படுத்தும் கம்ப்யூடர், கடிகாரம், வாகனம், பாத்திரங்கள் போன்ற வீட்டுப் பொருட்கள், அலுவலகச் சாமான்கள் பலவும் வெப்பத்தில் பிணைந்து வந்த உலோகக் கலவைகள் தாமே!
எனவே, வெப்பம், உஷ்ணம், நெருப்பு, ஒளி என அனைத்தையுமே பொதுப்படையாக அக்னி என்றே குறித்து விடுகின்றோம். வெயில் சுட்டுப் பொசுக்குகிறது என்று கூடச் சொல்கிறோம். ஆனால் குப்பை, கூளங்கள், வெட்ட வெளி மல, ஜலக் கழிவுகள் பலவும், தகிக்கின்ற வெயிலால் தாமே தினமுமே இயற்கையாகவே காய்ந்து, பஸ்மமாகி, சுத்திகரிக்கப்பட்டு, மக்களும் பல்வகைத் துன்பங்களில், நோய்களில் இருந்தும் காக்கப்படுகின்றனர். எனவே, தகிக்கின்ற சூரிய அக்னி சக்திகள், காத்து ரட்சிக்கும் சக்திகளாக ஆகின்றன அல்லவா!

ஸ்ரீசுக்கிரவார அம்மன் அருளும்
திருக்குறுக்கை

இவ்வாறாக அக்னி சக்திகள் பலவும் கலந்த பொருட்களை, திரவியங்களை நாம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் போது, அக்னி என்றாலே சுடுவது என்று தோன்றும் எண்ணமும் தவறானதுதானே! ஆனால், கலியுகத்தில், அக்னி சக்திகளை, புகை பிடித்தல், மது காய்ச்சுதல், அணுகுண்டு, வெடிகள், என்று மிகவும் தாறுமாறாக, தவறான வழிகளில் பயன்படுத்துவதால், அக்னியும் இயற்கையாகவே சீற்றம் கொண்டு விடுகிறது.
இவ்வாறு மனித குலத்தாலேயே அக்னி சக்திகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதால்தான், இவற்றுக்கு ஓரளவு நிவாரணம் தேடும் வகையில், விளக்குப் பூஜை, ஹோம பூஜை போன்ற பொது நலத் தேவகாரியப் பூஜைகளை மஹரிஷிகளும், சித்தர்களும் நிர்ணயித்துத் தந்துள்ளனர்.
அம்பாள் மூர்த்திகளும் அக்னியில் கடுந் தவம் புரிந்து சாந்தமான, உக்ரமான, அருள்வளம் பூரிக்கின்ற பல அவதாரிகைளைக் கொண்டு அருள்கின்றனர்.
பொதுவாக, வெள்ளியும், செவ்வாயும் உலகெங்கும் உள்ள ஆலயங்களில் நிறைய விளக்குகள், மெழுகு வர்த்திகள் ஏற்றப்படும் அல்லவா! இதனால் வெள்ளிக் கிழமை அன்று விசேஷமான அக்னி சக்திகள் அகிலத்தில் யாங்கணும் பூக்கின்றன. வளர்பிறைப் பஞ்சமியில் வரும் வெள்ளியில் பூக்கும் தீபச் சுடரில் ஸ்வர்ண லாவண்ய தேவ சக்திகள் பூரிக்கும்.
லாவண்யம் என்பது சாசுவதமான இறையழகாகும். ஆனால் அழகு எனில் தவறான அர்த்தங்களும், எண்ணங்களும் கலியுகத்தில் எழுவது வேதனைக்குரியது.
பலரும் தாம் அழகாக இல்லையே என ஏங்கிட, இன்னும் பலரோ தம் அழகே தமக்குத் துன்பங்களைத் தருவதாக வருந்தித் துடித்திட ....
கலியுலகில் இத்தகைய வேதனைகள் தீரவும், இறையழகே சாசுவதமான அருளழகு என்பதை உணர்த்திடவுமே, ஆலய உற்சவங்களில் தெய்வ மூர்த்திகளை ஆபரணங்கள், மலர்களால் அழகுபடுத்தி மக்களும் தரிசனம் பெற்று மகிழ்கின்றனர். இவ்வகையில் பெறுவதே அழகான, புனிதமான, தூய்மையான, கல்மிஷமில்லாத மகிழ்ச்சியாகும்.
லாவண்ய கெளரீ விரத நாளன்று விளக்குத் தீபத்தில் அம்பிகையை சர்வ தீபாலங்கார லாவண்யங்களுடன் தரிசித்தலே தெய்வ லாவண்யம் ஆகும். அதாவது மின்ஒளி கூட இல்லாது விளக்கொளியில் தெய்வ மூர்த்திகளைத் தரிசித்திட வேண்டும்.
விரத நாளன்று மிகவும் எளிமையான பருத்தி ஆடைகள், கண்ணாடி வளையல்கள் போன்றவை மட்டும் அணிந்து,
மஞ்சள், குங்குமம், கண் மை, சாந்து, திருநீறு, சந்தனம் போன்றவற்றுடன் எளிமையாகத் துலங்கி,
இயன்ற வரை நடந்தே ஆலயத்திற்குச் செல்தல் என்றவாறாக எளிமை பூண்டு, உண்ணா விரதமிருத்தல் சிறப்புடையது.
* குறைந்தது ஆறு மணி நேரம் தொடர்ந்து விளக்கொளியில் அம்பிகையைப் பூஜித்தவாறே தரிசித்தல்,
* நிறையப் பூக்களைத் தாமே தொடுத்து அம்பிகைக்குச் சார்த்துதல்,
* இல்லத்திலும், ஆலயத்திலும் அம்பிகைக்குப் பட்டு வஸ்திரங்கள், ஆபரணங்கள் சார்த்தி, பலவகைத் திரிகள், பல்வகை விளக்குகள், பல்வகைத் தைலங்களுடன் நிறைய விளக்குகளை ஏற்றி, லாவண்ய கெளரீ அம்பிகையாய் உருவகித்து வழிபடுதல் வேண்டும்.
* கெளரீ அல்லது சுக்கிர வார அம்மன் என்ற பெயரில் அருளும் அம்பிகையை விரதமிருந்து தரிசித்தல் விசேஷமானதாகும்.
சென்னை - குன்றத்தூர் அருகே உள்ள சிறுகளத்தூர் ஆலயத்தில் சுக்ரவார அம்மன் அருள்கின்றாள். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி. வெள்ளி தோறும் அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபட்டு, கத்தரிப் பூ வண்ண ஆடைகளைச் சார்த்தி, இதே வண்ணத்திலும், நீல வண்ணத்திலுமான ஆடைகளைத் தானமாக அளித்து வர பலவிதமான திருமண தோஷங்களும், திருமண வாழ்வில் உள்ள மனக் கசப்புகளும் அகல உதவும்.
லாவண்ய கெளரீ விரத மகத்துவத்தால்,
தான் அழகாகப் பிறக்கவில்லையே என்ற ஏக்கங்கள் ஓரளவேனும் மனப்பூர்வமாகக் காரணங்களை அறிந்து தீர்வு பெறவும்,
அழகாய்ப் பிறந்து அல்லலுக்கு ஆளானவர்களின் கர்ம வாதனைகள் தணிந்து, வேதனைகள் தீரவும்
விபத்து, நோய்கள் போன்ற பலவிதமான காரணங்களால் அழகு வதனம் மாறுபட்டவர்கள் விதிப் பூர்வமான காரணங்களை அறிந்து, தெளிந்த நிலையில் மனத் துயரங்கள், வருத்தங்கள் தீரவும்,
தம் பெண் பிள்ளைகளின் திருமணம் மற்றும் திருமண வாழ்வு பற்றிய கவலைகளைப் பெருக்கிக் கொண்டிருக்கும் தாய்மார்களின் மனக்கஷ்டங்கள் தீர வழி பிறக்கும்.
வெள்ளி தோறும், கெளரீ, சுக்ரவார அம்மனுக்காக விரதமிருந்து, பக்திப் பூர்வமாக வழிபட்டு வர, பித்ரூ பத்னியரின் ஆசிகளுடன், சுக்ர வார கெளரீ அம்மனின் அருளையும் பெற்றுத் தரும். இதில், மேலும் பல வகை விரத முறைகள் உண்டு. இதனைக் கடுமையான விரதமாகப் பூண்டு, அனுசரித்து, குருவருளுடன் சுக்கிர வார அம்மன், கெளரீ அம்மனை தரிசித்து வழிபடுவோர் நற்பலன்களை துரிதமாகக் காணலாம்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam