முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சப்த சாகர சப்தமி

சப்தமித் திதி மிகவும் சக்தி வாய்ந்த சுபமுகூர்த்தத் திதிகளுள் ஒன்றாகும். திருவையாறு, நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற சப்த விடங்கத் தலங்கள் என்று ஏழு சிவத் தலங்கள் உண்டு. இந்த ஏழு சிவாலயங்கள் ஒவ்வொன்றிலும் மரகத லிங்கம் உள்ளது. சப்தமி திதி நாளில் இந்த ஏழு மரகத லிங்க மூர்த்திகளையும் தரிசித்தல் விசேஷமானது. இவற்றில் குறைந்தது மூன்றையேனும் பாத யாத்திரையாகச் சப்தமித் திதிக்குள் தரிசித்தல் மிகவும் சிறப்புடையதாம்.
சப்தமித் திதி தோறும் மரகத லிங்க தரிசன வழிபாடுகளை ஆற்றி வருதலால், நன்கு அன்புடன் பழகி விரோதமான உற்றமும், சுற்றமும், சொந்தச் சகோதர, சகோதரிகளும், பெற்றோர்களும், பிள்ளைகளும் மீண்டும் அன்புப் பிணைப்பால் இணையப் பித்ருக்களின் நல்ஆசி பெருகும்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
நாகப்பட்டிணம்

மருந்தீஸ்வரர், வைத்யநாத சுவாமி போன்ற பெயர்களில் இறைவனருளும் நோய் நிவர்த்தித் தலங்களில், சப்தமியும் சிவனாருக்கு, உரிய திருவாதிரையும் கூடும் தினங்கள் நடராஜ தரிசனங்களுக்கு மிகவும் விசேஷமானவை. வாரப் பதீயம் எனப்படும் பாதலோக சக்திகள் இதனால் கிட்டுகின்றன.   
இதனால்,

கௌரி தாண்டவம் திருப்பத்தூர்

உடலில் எந்த அங்கத்திலும் எவ்விதமான கோணமும், குறைபாடும் இல்லாமல் காக்க உதவும்.
அறுவை சிகிச்சையின் மூலமாகச் சில உறுப்புகள் கத்தரித்து எடுக்கப்படுதல் போன்றவை மூலமாக அங்கச் சிதைவுகள் ஆகாது காக்கப் பெறவும் உதவும்
எலும்பு, இருதயம் போன்றவற்றில் அயல் பொருட்கள், உடலில் அறுவைச் சிகிச்சை மூலம் சேராமல் காக்கவும் உதவும்.
மேலும் சப்தமித் திதி விரத வழிபாடுகள், அங்க பின்னமின்றி நன்முறையில் இந்த உடலில் வாழ்வை முடித்திடவும் அருள்கின்றன. சப்தமியில் கூடும் திருவாதிரை, திருவோண நட்சத்திர நாட்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
ஸ்ரீ என்பதற்கு, தனம், வளம், லக்ஷ்மி கடாட்சம் என்று நிறைய ஆன்மீக அர்த்தங்கள் உண்டு. இதைப் போல திரு என்ற தமிழ் சொல்லுக்கும் திருமகளின் பேரருள், சாசுவதமான செல்வம் என்று பல தெய்வீக அர்த்தங்கள் உண்டு. எனவேதான், 27 நட்சத்திரங்களில், திரு எனும் அடைமொழியை இரண்டே இரண்டுதாம் தாங்கி வருகின்றன. திருவோணம், திருவாதிரை என ஸ்ரீதன சக்திகள் நிறைந்த நாளில் கூடும் கிரக வகை, நாள், யோக, கரண அம்சங்களை பொறுத்து, எவ்வகையான செல்வ சக்திகள் திரள்கின்றன என்பதை நிர்ணயித்து தருகின்றார்கள்.
ராசிக் கட்டத்தில் ஜாதக ரீதியாக சூரியன் முதல் அனைத்து கிரகங்களுமே ஏழாம் இடம் பார்வையைக் கொண்டிருக்கின்றன. எனவே சப்தமித் திதி நாளில் ஒவ்வொரு கிரகத்தின் ஏழாம் வீட்டு அம்ச நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஏழு விதமான நடனங்களை திருவாதிரை நட்சத்திர நாளில் சப்தமி கூடும் பொழுது நடராஜப் பெருமான் நடத்தித் தருகின்றார். இவை வாரசப்தக் கூப சக்திகளாகப் பரிமளிக்கின்றன. கூபம் என்றால் பூஜைத் தீர்த்தத்திற்கான கிணறு என்று பொருள்.

சப்தமியில் நடராஜர் நிகழத்தும் சப்தவாரணக் கீர்த்தன நடன சக்திகளில் "வாரவரக் கூபம்" என்ற ஏழு விதமான சக்திகள் எழுகின்றன. இவை முகத்தில் உள்ள முக்கியமான கண்கள், காதுகள், நாசித் துவாரஙகள், வாய் ஆகிய ஏழு அங்க அம்சங்களை அடைகின்றன. இதனால்தாம் நாட்டியத்தில் முகபாவன யோகங்கள் முக்கியத்வம் பெறுகின்றன.
சப்தமி அன்று கோயிலுக்குள் கூபம் அதாவது பூஜைத் தீர்த்தக் கிணறு உள்ள தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. அதாவது குந்தி தேவி வேண்டியது போல, சப்தசாகர (எழுகடல் சக்திகள்) சக்திகள், கூப சக்திகளில் பரிமளம் கொள்ளும் சப்தமி அன்று கும்பத் தீர்த்தம், கோமுகத் தீர்த்தம், அபிஷேகத் தீர்த்தம் போன்று ஏழு வகைப் புண்ணியத் தீர்த்தங்களை அருந்துதல் நன்று.

துர்சக்திகளைக் களையும் முறை

"சிவபதவி அடைந்தார்'' என்பதைத் தற்காலத்தில், ஒருவர் இறந்ததை உணர்த்தும் முகத்தானும், இறந்தவரை மதிப்புடன், பண்பாடுடன் குறிப்பதாகவும் வைத்திருக்கின்றார்கள். " "காலமானார்'' என்று குறித்தலே போதுமானது.
சனிப் பிணம் தனிப் போகாது என்ற முதுமொழி உண்டு. இதற்கு நடைமுறையில், சனிக் கிழமையில் ஒருவர் இறந்தால், அந்த ஊரில் அருகில் கூடவே இன்னொருவரும் இறப்பர், இரண்டு அல்லது கூடுதல் சடலங்களாக மயானத்திற்குப் போகும் எனத் தவறாகப் பொருள் கொள்கின்றனர்.
அசுப நேரங்களில், இரவில் துர்ஆவிகள் ஆக்கம் கொள்வதால், இவை சடலங்களில் வந்து உட்கார்ந்து கொண்டு, தங்களுக்குப் பல்லாயிரம் ஆண்டுகளாக உறையச் சரீரம் கிடைக்காத ஏக்கங்களைப் போக்கிக் கொள்கின்றன. எனவே, துர்ஆவிகளுடன் சேர்ந்து சடலம், மயானத்திற்குப் பயணமாவதால், சனிப் பிணம் தனிப் போகாது என்ற முதுமொழியை வழக்கில் வைத்து, சடலத்தைத் துர்ஆவிகளிடமிருந்து காத்திட, சனிக் கிழமை அன்று கூடுதலாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நம் பெரியோர்கள் உணர்த்துகின்றனர்.
செய்தித் தாளிலோ, நோட்டீஸாகவோ எதிலும் மரணச் செய்தியை எவரும் விளம்பரமாகப் பிரசுரிக்காமல் இருப்பதே ஆன்மீக ரீதியாகவும் நல்லது. தேவையான அளவில் உற்றம், சுற்றத்திற்கு மட்டும் கடிதம், தொலைபேசி, தந்தி மூலமாக அறிவித்தல் போதுமானது. தயவு செய்து, செய்தித் தாளில், பேப்பர், சுவரொட்டிகளில் மரண அறிவிப்பினைப் புகைப்படத்துடன் அச்சடிப்பதை முற்றிலுமாகத் தவிர்க்கவும். ஏன் இவ்வாறு செய்யக் கூடாது என்பது நிறையக் காரணங்கள் உண்டு.

ஸ்ரீரெங்கநாதர் சூக்கும தரிசனம்
பொன்னகரம் மணமேல்குடி

பலவற்றையும் முழுமையாக எடுத்துச் சொன்னால், பலருடைய மனம் ஏற்றுக் கொள்ளத் தயங்கி அச்சமடையும். தவறான முறையில் அர்த்தங்களைக் கற்பித்து விடுவார்கள்.
சிலவற்றை ஆன்மீகமாக எடுத்துரைத்தால், நடைமுறையில் அவற்றை ஏற்பதோ, கடைபிடிப்பதோ மிகவும் கஷ்டமாகி விடுகிறது. இவ்வரிய விளக்கங்களை ஆன்மப் பகுத்தறிவுடன் அறிய வேண்டி இருப்பதால், இவற்றைப் பழைய பஞ்சாங்கமான, மூட நம்பிக்கைகள் என்று ஒரு சிலர் உதறி விடுவார்கள்.
எனவேதான், இத்தகைய ஆன்மீகக் காரணங்களை, தேடி, நாடுவோருக்கு, நம்பிக்கை உள்ளோருக்கு மட்டும் உரைப்பதாகப் பெரியவர்கள் வகுத்துத் தந்துள்ளனர். இவற்றுள் பலவற்றையும் சத்குரு மூலமாக அறிதலே நன்று. அப்போதுதான் பூரண நம்பிக்கையுடன் அறியும் பக்குவம் வரும்.
எனினும் கலியுக ஜீவன்களின் நலம் கருதி, சில காரணங்களை மட்டும் இப்போது அறிவீர்களாக!
முதலில், இறந்தோரெல்லாம் சிவபதவியை அடைந்தார்கள் என்பதாக, புனிதமான இவ்வார்த்தையை, வெறும் இறப்பை உணர்த்தும் செய்திக்கு, மரணச் செய்திக்கு உபயோகப்படுத்தி வைப்பதே, ஆன்மப் பூர்வமாக ஏற்புடையதன்று.
இறப்பு என்ற செய்தி, உற்றம், சுற்றம் அறிந்தால் மட்டும் போதுமானது. சுவரொட்டியை, செய்தித் தாளைப் படிக்கின்ற லட்சக் கணக்கானோரும் ஒருவருடைய இறப்பை அறிவதால் யாது பயன்? இவ்வாறு தேவையின்றி அறிவித்தலானது, இறந்தவர்கள் தரிக்கும் சாயைச் சரீரத்தின் பிரயாணத்தை, அமைதியை, அடுத்த சரீர நிலைக்கான பகுதிகளை மிகவும் பாதிக்கும் என்பதை அறிக!
பரவெளியில் என்ன நிகழ்கிறது என்பதைக் காண வல்ல கண்களை மனிதன் பெறாமையால்தான், கோடி, கோடியே, கோடானு, கோடி விஷயங்களை அவனால் அறிய முடியவில்லை! பூமியில் ஒழுங்கு முறையோடு வாழாதோர், ஆவி வகைப் பிறவிகளையே அடைந்து ஒரு புல், பூண்டு, புழுவாகக் கூடச் சரீரத்தைப் பெற முடியாமல் துர் ஆவிகளாக வானில் பல லட்சம் ஆண்டுகளாக அலைகின்றனர். இந்த துர்ஆவிகள் எந்தச் சரீரம் எங்கு எப்போது கிடைக்கும், சற்று நேரம் புகுந்து தங்கள் ஏக்கத்தைத் தணித்துக் கொள்ளலாம் என்று அலைந்து கொண்டுள்ளன.
ஒரு துர் ஆவி சற்று நேரம் மனம், உடலில் புகுந்தாலே போதும், பைத்தியம் பிடித்தது போல் இருக்கும், கொலை, தற்கொலை அடிக்கடி எண்ணங்கள் வரும்.
பூமியில் வாழ்க்கையில் கொண்டிருந்த ஆசாபாசங்கள், பகைமை, பேராசைகள், குரோதம், விரோதம், காமாந்திர உணர்ச்சிகள் யாவும் மரணத்திற்குப் பின்னும் சாயைச் சரீரத்திலும் தொடரும். எனவே இப்பிறப்பிலேயே அனைத்திற்கும் தீர்வு காணலே நன்று. இதற்காகவே முதுமை அமைந்துள்ளது. இளமை கடைசி வரை இருந்தால் கலியுக மனிதன் பாவக் களியாட்டங்களில் ஆடித் தீர்த்து விடுவான்.

முக்தி தீபம் ஏற்ற உகந்த
திருநல்லூர் திருத்தலம்

முறையாக ஆன்மீக ரீதியாகப் பாதுகாக்கப்படாத பிரேதம், பலவீனமான மனம், புகை பிடித்தல், மது மயக்கம், சூது, காமாந்திரத் தீச்செயல்கள் இவற்றில் துர் ஆவிகள் எளிதில் உள்ளே புகும். கொடிய பாவச் செயல்களைப் புரிந்ததால் ஆவி நிலையை அடைந்த ஒரு துர்ஆவி, ஒரு முறை எவருடைய மனம், சரீரத்தில் உள்ளே புகுந்து சென்றால், இதன் விளைவுகளை அந்த மனிதரிடமிருந்து அகற்றப் பல ஆண்டுகள் ஆகும்.
செய்தித் தாளில், சுவரொட்டியில் மரணச் செய்தி கொடுப்பதை ஒரு அந்தஸ்து வழக்கமாக நடைமுறைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். லட்சக் கணக்கானோர் இந்த மரணச் செய்திகளைப் படிப்பதால், அவர்களுக்கு ஏற்படும் பலவீனமான மனதை, உடலை வானில் உள்ள பல தீய ஆவிகளும் பிடித்துக் கொண்டு மரண பயம், தற்கொலை எண்ணம், அதிபயங்கரக் கொலைக் கனவுகள் போன்றவற்றுக்கு ஆளாக்கி விடுவர். இதிலிருந்து மீள்தல் மிகவும் கடினமே.
மேலும், இறப்பவர்களின் சடலம், அல்லது இறந்தவர்களின் சாயைச் சரீரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து துர் ஆவிகள் சேஷ்டைகளைச் செய்து அவர்களைப் பாடாய்ப் படுத்துவார்கள். ஆனால் எல்லாவற்றுக்கும் ஆன்மீகப் பாதுகாப்பு, ரட்சா சக்தி முறைகளும் நிறையவே உண்டு. துர்ஆவிகள், தீபம், விபூதி, திருமண், குங்குமம், மஞ்சள், சந்தனம் போன்ற புனிதமான பொருட்கள் அருகில் செல்ல அஞ்சும். இதனால்தான் எப்போதும் நெற்றிச் சின்னமும், பூணூல், கறுப்புக் கயிறு, மாங்கல்யச் சரடும் தரித்திடில், துர் ஆவிகள் அண்டாது காக்கும்.
இதனால்தான் பிரேதத்தின் அருகிலும், இறப்புச் சடங்கின் பதின்மூன்று நாட்களிலும் விளக்கை எப்போதும் ஒளிருமாறு ஏற்றி வைப்பார்கள். பிரேத உடலில் உள்ள பூணூல், மாங்கல்யச் சரடு, நெற்றிச் சின்னங்களும் துர்ஆவிகள் வராது தடுக்கும்.
ஆவிகள் தாமாக எதையும் ஆற்றுதல் கடினம். ஆதலால், அவை பலவீனமானோரின் மனதில் புகுந்து இறந்தோரின் சடலம், சாயைச் சரீரம் இருக்கும் இடத்தை அறிந்து, அந்த உடலில் புகுந்து, தங்களுக்குச் சரீரம் கிட்டாத ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்கின்றன.
புகை பிடிக்கும் போதும், மது அருந்தும் போதும், முறையற்றக் காமந்திரத் தீச்செயல்களின் போதும் எவருக்கும் மனம் மிகவும் பலவீனமாகும். எனவே ஒரு துண்டு சிகரெட், பீடி பிடித்தால் கூட துர்ஆவிகள் வந்து உடலில் புகுந்து கொண்டால் அதனையும், அதனால் வந்தடையும் துர்சக்திகளையும் வெளியேற்றுவது மிகவும் கடினம்.
பொதுவாக, ஆலய கோபுர தரிசனம், தீப தரிசனம் கண்டால் துர் ஆவிகள் அகலும். ஆனால் துர் ஆவிகள் உடலில் இருந்து கொண்டே இவற்றைச் செய்ய விடாமல் தடுக்கும்.
இவ்வாறாக நாமறியா வண்ணம் வானில் லட்சக் கணக்கான துர்ஆவிகள் தாம் உள்ளே புகுவதற்காக எந்தச் சடலம் கிடைக்கும். எந்தப் பலவீனமான மனமுள்ளோர் கிடைப்பர் என அலைந்து கொண்டுள்ளன என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள். இல்லத்தில் எவராவது மரணம் அடைந்தால் அவருடைய உடலில் துர்ஆவிகள் சேரா வண்ணம், பிரேத தகனம் வரையும், பின்னர் பத்து நாட்களும் முறையான சடங்குகளை ஆற்றி, தகனக் கிரியைகள், பத்து நாள் சடங்குகளை நன்கு வைதிகப் பூர்வமாகத் தான, தர்மங்களுடன் நிறைவேற்றிடுக!
இறந்தவரின் சாயைச் சரீரம், பொதுவாக பத்து முதல் பதினைந்து நாட்கள் வரை பூவுலகில் சுற்றுவதால், அதனைத் துர் ஆவிகள் பற்றாது காக்கவே இச்சடங்குகள் என உணர்ந்து செயல்படுவீர்களாக!
சனிக் கிழமையன்று ஆயுள்காரக சக்திகள் நிறைகின்றன. மேலும் மனஅதிபதியாகிய சந்திர மூர்த்தி, தன்னுடைய ஆட்சிப் பீடமாகிய கடகத்தில் அமரும் நாள் மனம் பலவீனமாகாது தற்காத்துக் கொள்ள உதவும் நாள். சனிக் கிழமை ஏற்றப்படும் எள் தீபங்களும், சனீஸ்வரருக்குச் சார்த்தப் பெறும் சங்குப் புஷ்பம், நீலோத்பவ மாலைகளும்,அபிஷேக ஆராதனைகளும், எள்சாதப் படையல் மற்றும் அன்னதானமும், துர்ஆவிகளை அண்ட விடாமல் தடுக்கும் ரட்சா சக்திகளை அபரிமிதமாகத் தரும்.
மேற்கு அல்லது கிழக்கு நோக்கித் தனித்தருளும் சனீஸ்வரருக்கு எட்டின் எண்ணிக்கையில் எள் முடிச்சுத் தீபங்களை ஏற்றி, சமுதாயத்தில் நிலவும் துர்சக்திகளைத் தணிப்பீர்களாக! பலருக்கும் இவ்வரிய பாடங்களை உணர்த்துவீர்களாக!

சௌரமான சங்கு பூஜை

ஒருவர் தினமும் 10000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரமும், 25000 முறை ஸ்ரீராமநாம தாரக மந்திரத்தையும் ஆழ்ந்த பக்தியுடன் ஓதுதலைக் கடமையைக் கொண்டால், பல அற்புதமான உத்தம நிலைகளை மிக எளிதில் அடைந்திடலாம். ராம நாம மந்திரமே எந்த யுகத்திற்குமான, எந்த லோகத்திற்குமான மாமந்திரம் ஆதலின் தாரக மந்திரமாக, அதாவது அண்ட சராசரத்திற்கும், பூவுலகில் எந்த நாட்டுக்கும், எந்த ஜீவனுக்கும் உரிய மஹாமந்திரமாகத் துலங்குவதாகும். ராமன் என்ற திருநாமம், ஸ்ரீராமருக்கும் முந்தையதாகையால், ஆதிராம சக்திகள் பொதிந்ததாய் ராமநாம தாரக சந்திகள் இன்றும், என்றுமாய் எவ்வுலகிற்கும் எளிதில் அருள்வதாய்ப் பரிமளிக்கின்றது.
ஏன், ஸ்ரீராம நாமம் போதாதா? 10000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையும் ஏன் சேர்த்து ஓதுதல் வேண்டும்? ஸ்ரீராமர் தெய்வாவதாரமாகப் பொலிந்தாலும், சாதாரண மானுடராய் வாழ்ந்து நித்தியக் கடமைகளைத் தவறாது செய்து வந்து, சந்தியாவந்தன பூஜைகள், மூன்று வேளை காயத்ரீ மந்திர ஜபத்தை முறையாக ஆற்றியவர் ஆதலின், ராமநாம சக்திகளுடன் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதுகையில், ஸ்ரீராமருடைய தெய்வாவதார காயத்ரீ மந்திர ஜப வைபவத்திலும் இணைகின்ற அற்புதமான வைபவமும் கூடிய பலாபலன்களும் கிட்டுகின்றன அல்லவா!
சங்கு என்பது நவகிரக அனுகிரக சக்திகளை அளிப்பதாகும். சங்கினை வீட்டில் வைத்து, நவதானியங்களை நிரப்பித் தினமும் சங்கையே நவகிரக சக்திகள் அமரும் பீடமாக பாவித்துப் பூஜித்துத் தினமும் பறவைகளுக்கும், சர்க்கரை சேர்த்து ரவையாக எறும்புகளுக்கு அளிப்பதும் மிக எளிமையான நித்ய நவகிரக வழிபாடாகும். பணக் கஷ்டத்தைப் போக்க இது உதவும்.
கடலினுள் இருந்து சங்கு அம்சங்கள் பல்லாண்டுகளாக அனைத்துக் கோள்களை, கோடிக் கணக்கான நட்சத்திரங்களின் ஒளிப் பிரகாச சக்திகளைக் கிரகிப்பதால், இதில் நவகிரக சக்திகள் நிறைகின்றன. தெய்வ மூர்த்திகளும் தாங்கி இருப்பதால், சங்குகள் எப்போதும் தெய்வீகக் கிரணங்களுடன் பரிமளிக்கின்றன.

அளகாபுத்தூர் முருகன்

ஆலய உற்சவங்களிலும், மஹான்கள், சித்தர்கள், உத்தமப் பெரியோர்களை வரவேற்பதற்கும், சங்கு ஊதுவது உண்டு. பிரேத ஊர்வலத்தில் சங்கு ஊதுதல் கூடாது. இந்தத் தவறான பழக்கம் சமீபத்தில் வந்தமையால்தான், சங்கு ஊதிப் பூஜித்தலைப் பற்றிச் சமுதாயத்தில் மரண பய அலர்ஜியே வந்து விட்டது.
சமுதாயத்தில் உத்தமப் பெரியோர்களை மதிக்கும் பண்பாடு மறைந்து வருவதால்தாம் இத்தகைய சக்தி வாய்ந்த பூஜைகள் பலவற்றையும் மனித சமுதாயம் இழந்து, இவற்றால் அடைய வேண்டிய பலன்களும் தற்போதைய மக்களுக்கும் கிட்டாமல், இவற்றால் தீர வேண்டிய கர்ம வினைத் துன்பங்களும் தீராமல் பல்கிப் பெருகி வருகின்றன.
சங்கொலி என்பது விஜய சக்திகளை, அதாவது வெற்றிச் சக்திகளை உரைப்பதாகும். சிவபாத, விஷ்ணுபாதப் பூஜைகளின் பலாபலன்களையும் அளிப்பதால்தான், தீர்த்தங்கள் நிறைந்த சங்குகள் இறை மூர்த்திகளின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜிக்கின்றனர். பூக்கள், ஆபரணங்கள், வஸ்திரங்கள் கூட அடிக்கடி மாற்றப் பெறும். ஆனால் சங்குகள் மட்டும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மூலக் கருவறையிலேயே, பூஜை அறையிலேயே இருக்குமெனில் என்னே சங்குகளின் மஹிமை!

மற்ற தெய்வீக சக்திகளுக்கெல்லாம் திரு, ஸ்ரீ எனும் அடைமொழிகள் சேர்த்து லட்சுமிகரமாகப் போற்றுவர். ஆனால் சங்குக்கு திரு, ஸ்ரீ எனும் அடைமொழிகள் சேர்ப்பதில்லை, காரணம், சங்கு என்றாலே, லட்சுமிகரமானது என்பதால்தான். பாற்கடலில் திருமகள் தோன்றிய போது, திருமகளின் கரங்களிலும், திருவடிகளிலம் கோடிக் கணக்கான சங்குகள் தோன்றின. அனைத்தும் லட்சுமி கடாட்சம் நிறைந்தவை! இவற்றுள் சிலவற்றைத் தெய்வ மூர்த்திகள் ஆதிசிவனிடம் அளித்திடவே, இவைதாம் ஸ்ரீசங்கமேஸ்வரரால் சித்தர்களுக்கும், மஹரிஷிகளுக்கும் அளிக்கப் பெற்றுப் பூவுலக் கடல் தீர்த்தங்களில் நிரவப் பெற்றன. இவ்வாறு சங்குகளின் உத்தமத் தோற்றமே மிகவும் தெய்வீகரமானதாகும்.
ஞாயிறன்று செளரமான சங்கு சக்திகள் நன்கு பூரிப்பதால், பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயத்தில் பூஜிப்பதும், சங்குச் சக்கரதாரியான திருமால் (அழகாபுத்தூர்), முருகன் மூர்த்திகளைப் பூஜிப்பதும் நன்று.
சங்கொலி என்பது விஷ்ணு பாதத்திற்கு வழிகாட்டுவதாகும். தேவலோகங்களில், அங்கு ஒலிக்கப் பெறும் ஒலியைக் கொண்டு எந்த மூர்த்தியின் தரிசனம், பூஜை கிட்டுகின்றது என்பதை உரைப்பர்.
சூரிய ஒளிச் சக்தியில் பரிமாணம் பெறும் சங்குகளுக்கு செளரவாரிச் சங்குகள் என்று பெயர். இவற்றில் ஆரஞ்சு, சிகப்பு நிற வண்ணம் சற்றே சேர்ந்திருக்கும். அதாவது தூய வெண்மையுடன் இவை இருக்காது. செளர சங்குகளிலும் ஆண் சங்கு,பெண் சங்கு இருக்கும், அலிச் சங்கு வகைகள் உண்டு. இவற்றை மனித அறிவுக் குணங்களுடன் ஆண், பெண் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. வீரம், தைரியம், மென்மை, பணிவு, அடக்கம், மன ஒடுக்கம், சமநிலை மனம் போன்று சங்குகளிடம் உள்ள பல அனுகிர சக்திக் குணங்களை இவை குறிக்கின்றன.

திருஅண்ணாமலையில் சங்கு ஊதிக் கொண்டே கிரிவலம் வருதலால், உடலில் பல்வகை நாளங்கள் ஆக்கம் பெறுகின்றன. அருணாசலத்தில், கலியுகத்தில், பல்லாண்டுகள் முன் வரை சங்கூதிச் சுவாமியார் எப்போதும் சங்கு ஊதிக் கொண்டே கிரிவலம் வந்து கொண்டு இருப்பார். வெறுமனே அவரைப் பார்க்க இயலாது. அவர் சங்குகளைப் பூமியில் வைப்பதே கிடையாது. மரப் பிணைகளில்தான் வைப்பார். கிரிவலம் வருகையில் சங்கு ஊதிக் கொண்டே வருவார்.
இவருடைய சங்கொலியே சுபசகுனமாகவும், பல தோஷங்களை, கர்ம வினைகளை, நோய்களை அகற்றுவதாகவும் அமைந்தது. இவருடைய மஹிமை யாதெனில் ஒளியையும், ஒலியையும் இணைத்து அருணாசல அனுகிரகத்தைத் தந்ததாகும்.
அருணாசல கிரிவலத்தில் பஞ்சமுக தரிசனம் அருகே உள்ள இசக்கிச் சித்தர் சுவாமியார் குருமூர்த்தம் உள்ளது. இவர் அந்தந்த நாளில் ஹோரைக் கணக்கிற்கு ஏற்ப, விதவிதமான திசையில், சங்கில் ஒலி எழுப்பி சங்கொலிப் பூஜையாகவே நிகழ்த்திக் கிரிவலம் வந்து அருளியவர்.
ஞாயிறு தோறும் 64 திக்குகளிலும் சங்கொலி ஊதி வருகின்ற காட்சி திவ்யமானதாகும். சந்தான பாக்யத்திற்கான அல்லது பிள்ளைப் பேற்றுக்கான நாள, நாடிகள் பலவீனமாக, மரபணுக்கள் குறைவாக இருப்பின், ஞாயிறன்று சங்கூதியவாறே சூரிய ஹோரை நேரத்தில் அருணாசல கிரிவலம் வந்து வழிபடுதல் நல்வழிகளைத் தரும்.
ஞாயிறன்று சிறிது, சிறிதாகத் தன்னைச் சுற்றி நகர்ந்து, 64 திசைகளில் நமஸ்காரம் செய்ய முயற்சி செய்யுங்கள். இதற்குச் செளரமான யோக வழிபாடு என்று பெயர். சூரிய நமஸ்கார வழிபாடுகளில் ஒன்று. சுற்றுப் புறத்தில் பகைமை, குரோதம் நிறைய இருந்தால், இவை முதலில் தணியவும், நன்கு தீரவும், பூஜையில் சங்கு ஊதியும், பெளர்ணமி, ஞாயிறு தோறும் சங்கு ஊதியவாறே அருணாசலக் கிரிவலம் வருதலும், தினமும் 64 திக்குகளிலும் நமஸ்கரித்து வழிபடுதலையும் செய்து வர வேண்டும்.
ஞாயிறு சிவத்தலத்தில் சங்குகளைத் தானமளிப்பதும், சங்கு ஊதிப் பூஜிப்பதும் விசேஷமானதாகும்.

யாருக்காக வாழ்கிறோம்

நாம் வாழ்வது நமக்காகவா, குடும்பத்திற்காகவா, மனசாட்சிக்காகவா? நாட்டுக்காகவா? இதனை எவ்வகையிலேனும் ஆத்மவிசாரம் செய்து பார்த்தது உண்டா?
ஒவ்வொரு விநாடியும் நம்மை முன்னேற்றிக் கொள்வதற்காக அமைந்ததே! ஆனால் வீணாக அரட்டை, கேளிக்கைகள், சும்மாகவே இருத்தல், வேடிக்கை பார்த்தல் என எவ்வளவு நேரத்தைத் தினமும் வீணே விரயம் செய்கிறோம்? இவ்வாறு நேரத்தை வீணே விரயம் செய்வதை விட, சும்மா இருக்கும் சமயங்களில் நம்முள்ளேயே நம்மை நிறைய ஆத்மவிசாரம் செய்து, சீர் தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது நம்முடைய உள்ளத்தின் ஆன்ம விசாரணை மன்றத்தில், நாம் நிதமும் ஆஜராகி, நாம் எங்கே போகிறோம் என்பதை அவ்வப்போது அறிந்து, நம் இறைப் பாதையைச் செம்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஆத்மவிசாரமும் கலியுகத்தின் யோக முறைகளுள் ஒன்றாய், ஆத்ம சுத்திகரிப்பாய், அக சுத்திகரிப்பாய், நல்ல இறைவழிபாடுகளுள் ஒன்றாய், யோகம், தியானம் போன்று ஒரு இறைச் சாதனங்களுள் ஒன்றாயும் அமைகிறது.
நடப்புக் கலியுகம் போகின்ற நிலையைப் பார்த்தால், மீண்டும் இங்கு வந்து பிறந்திட மனம் ஏற்குமா? எவ்வளவுதான் துன்பங்கள் இருந்தாலும், எவ்வளவு ஆலயங்களைத் தரிசிக்கின்றோம், இதற்காகவாவது மீண்டும் பூவுலகிற்கு வரலாமே? என்றெல்லாம் ஆத்மவிசாரத்தில் உள்ளுள் நிறைய வினாக்களும், ஆத்மார்த்தமான பதில்களும் வரும். இத்தகைய ஆத்மவிசார யோகப் பயிற்சியானது, கலியுகத்தில் மனிதன் தவறான எண்ணங்களில், தகாத செயல்களில் உழல்வதிலிருந்து தடுத்து, மனதை மீட்டு, நல்வழிப்படுத்தி நன்கு ரட்சித்துக் காக்கும்.
நல்ல புத்தி இருந்தாலேயே போதுமே, மனிதன் நல்வழியின்பால் மீண்டிடுவானே, பிறகு எதற்கு ஆத்மவிசாரம்? நல்ல புத்தியைத்தான் மனம் அழுத்தி, புகை, மது, கேளிக்கைகள், காமாந்திரச் செயல்கள், சோம்பேறித்தனம், தீய செய்கைகளின்பால் செலுத்தி விடுகின்றதே!

ஸ்ரீவில்லிபுத்தூர்

சந்திர சக்திகள் நிறைந்த திங்கட் கிழமையில் மனஆற்றல், மனோவைராக்யம், மனசக்தி போன்ற பல மனவள சக்திகளையும் நிறைத்துத் தருவதால், திங்கள் தோறும் ஆத்மவிசார யோகம் ஆற்றுதல், நல்ல மனோசக்திகளைத் தருவதாகும். இதில் நவமித் திதியானது மனோவேக சக்திகள் நிறைந்த திதி நாளாகும். இதனால்தான் நவமித் திதி தோறும், அவித்த கொள் தானியத்தை வயிறு நிறைய நல்உணவாகப் புல், தழைகளுடன் வெள்ளைக் குதிரைகளுக்கு,அளித்து வந்தால், கெட்ட வழக்கங்கள் அகல உதவும், மன சஞ்சலங்களும் அகலும். தம்பதியர் இடையே அடிக்கடி ஏற்படும் மனஸ்தாபங்களும், வாய்ச் சண்டைகளும் தணியும்.
ஆத்ம விசாரத்திலேயே முக்தி, மோட்சம், கடவுள் திருவடி, இன்ப துன்பங்களுக்கான காரணங்கள் அனைத்துக்குமான எளிய விளக்கங்கள் தாமே யோகப் பூர்வமாக அறிவதாகவே அடங்குவதாலும், பித்ரு லோக தேவதைகளின் அனுசரணையும் கிட்டுவதால், கலியுகத்தின் மிக முக்கியமான மனவகை யோகங்களுள் இது ஒன்றாய் அமைகிறது.
குடும்பம் என்பது சுயநலத்தைப் போக்கும் அற்புதமான இல்லற யோக சாதனமாகும். தனக்கென உள்ள வீடு, வாசல், உணவு, திரவியங்களை முதலில் கணவன், மனைவி என இருவருக்கும், பிறகு குழந்தைகள் வந்தவுடன் நால்வருக்கும், எண்மருக்குமாக இவ்வவாறாகப் பலருக்கும் ஈந்து, சுயநலத்தைத் தணித்து, மனதை நல்வழியில் விரிவாக்குவதே குடும்பமாகிய இல்லறமாகும். மனசாந்தமே குடும்பத்தின் ஆணி வேராகும்.
இவ்வாறு குடும்ப வாழ்க்கைக் காரியங்கள் அனைத்தும் ஆத்மப் பூர்வமாக யோசித்து ஆற்றுவதாக அமைந்து, ஜபம், பூஜை, தியானம், யோகம் போன்ற அனைத்தும் நிறைந்ததே பல்லாண்டு வாழ்க்கை அம்சங்கள் நிறைந்த இல்லறமாகும். இதற்காகவே மனவளப்புல நேரமாகத் தினமும் சந்திர ஹோரை நேரமும் அமைகிறது.
தனக்கென வாழ்ந்த சராசரி மனிதனை, குடும்பமாக, பூர்வ ஜன்ம சம்பந்தத்தால் வருகின்ற ஏனைய குடும்ப அங்கத்தினர்களுடன் புனிதமான திருமண பந்தம், குடும்பம் மூலம் சேர்ந்து வாழ வைத்து, காலப் போக்கில் பலருக்கும் பயன்படும்படியான அறப்பணிகளை ஆற்றி, வாழ்வதான முறையில், இறைப் பகுத்தறிவை நன்கு விருத்தி செய்து தருவதே, குடும்பத்தின் இல்லற யோக அடிப்படையாகும். எனவேதான் இல்லறமே கலியுகத்தில் மிகச் சிறந்த இறைமார்கமாக அமைகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி எல்லாவற்றையுமே நல்லனவற்றிற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை இல்லறம்தான் ஊட்டுகிறது.
ஆத்மவிசார யோக சக்திகளுக்கு யானை மிகவும் உதவுகிறது என்பது பலரும் அறியாத தெய்வீக ரகசியமாகும். என்னதான் தலை போகிற பிரச்னையாக இருந்தாலும், அனைத்தையும் மறந்து, கைக் குழந்தை முதல், முதியோர்கள் வரை, யானை என்றாலே, தங்களை மறந்து அதன் அசைவுகளில் மனத்தை சாந்தப் பூர்வமாக லயிப்பதை உலகெங்கும் காணலாம்.
யானையின் இந்த வசீகர யோக சக்திக்கு யாமண சக்தி என்று பெயர். ஒவ்வொரு யானையும் பெருமாளுடைய அனுக்கிரகத்தையும், யோக சரீரப் பூர்வமாக சிவானுகிரகத்தையும் பெற்றிருப்பவை! மேலும் யானையின் சுவாசம் எப்போதும் அதியற்புதமாக சுழுமனையில்தான் செல்லும் (இரு நாசியில் சீரான சுவாசமே சுழுமுனை சுவாசமாகும்). இதனால்தான் சுழுமுனை சுவாச ஒளி, ஒளி சக்திகள் இணைந்து பரிணமிக்கும் யானைத் துதிக்கையால் ஆசி பெறுவது மனதுக்குச் சாந்தமளிக்கும், வேறு பல அரிய காஷ்ட தியான சக்திகளையும் தர வல்லதாகும்.
மனிதனைப் போல் அல்லாது, ஜாதி, மத, ஆண், பெண் பேதமின்றி, மனமார யாவர்க்கும், யாவைக்கும் ஆசி தருபவையே யானைகள் ஆகும். இதற்காகவே அவை எப்போதும் மனயோகப் பயிற்சிகளை, மந்திர சுவாசங்களை, விதான தியான முறைகளை ஆற்றிக் கொண்டிருக்கும்.
திங்கட் கிழமைகளில் யானை தரிசனம், யானைக்கு உணவிடல், யானைகளை வைத்து, சுவாமிக்குப் புஷ்பங்களைத் தூவி, மாலை சார்த்த வைத்து வழிபடுதலுடன், ஒரு மணி நேரமாவது யானையைப் பார்த்தவாறே அமர்ந்து, ஆத்மவிசாரம் தியானம் ஆற்றுவது விசேஷமானது.
தான் அறிந்தோ அறியாமலோ, பிறரிடம் பலரைப் பற்றிக் கோள் மூட்டுதல், பழி சுமத்துதல் போன்றவற்றைச் செய்து பலருடைய வேதனைகளுக்கும், வருத்தங்களுக்கும் ஆளானவர்கள், நல்ல பரிகாரங்களை இனியேனும் பெற்றிட உதவும்.  
திங்கள் தோறும் மெளன விரதம் இருப்பது, இல்லத்தில் நல்ல சாந்த சக்திகளைத் தரும் . வாயிலார் நாயனார் மெளன சக்திகளால் உலகிற்கே சாந்த சக்திகளை அளிக்க வல்லார். திங்கள் தோறும் வாயிலார் நாயனார் சன்னதியில் சத்சங்கமாக மெளன விரதத் தியானம் ஆற்றி வருதல் மிகவும் விசேஷமான சாந்த சக்திகளை குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் அளிக்கும்.

படுத்த படுக்கை ஏன் ?

தனியனாள், கரிநாள், செவ்வாய் போன்ற நாட்களில், சுப முகூர்த்தக் காரியங்கள் அமையாமையால், இவற்றின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடுதல் கூடாது. ஒரு வருடத்தில், வளர்பிறையில், சில நாட்களே நல்ல சுப முகூர்த்த நாட்களாக அமைகின்றன என்பதும், அவரவருடைய சூன்ய திதி, சந்திராஷ்டம அம்சங்களைக் கணிப்புக் கருத்தில் கொண்டால், இந்நாட்கள் மேலும் குறையலாகும் அன்றோ! சுபம், அசுபத் தன்மைகள் மனித ஜீவ காலமுறைக்கே, இதிலும் மனிதன் காலஉணர்வைத் தாண்டி வாழ்கின்றான் என்பது குறிப்பிடத் தக்கது.
எனவேதான் அக்காலத்தில் இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்னரேயே சுப முகூர்த்த நாட்களைக் கணிக்கத் தொடங்குவர். ஒவ்வொரு விநாடிக் காலமும், அதனதற்குரிய காலபைரவ லோகப் பரல்களைத் தாங்கியே வருகின்றன.
வாக்கு நாணயம், தர்மம், நன்னம்பிக்கை கொழித்தமையாலும், காசு, பணத்திற்கு ஆசைப்படாத தூய்மையான ஜோதிடர்கள் அக்காலத்தில் இருந்தமையாலும், நன்முறையில் சுப காரியங்கள் நிறைவேறின. சுபகாரியங்களுக்கென பல வகை முறைகளில் நற்கால அம்சங்களைக் கணித்தாலும், நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் மகத்தான சக்திகளைப் பூண்டுள்ளன என்பதை நன்கு உணர்ந்து அறிந்து செயல்படுதல் வேண்டும். இதற்கு ஸ்ரீகாலபைரவ பூஜை நன்கு உதவும்.

ஸ்ரீவைத்யநாத சுவாமி திருக்கோயில்
திருவில்லிபுத்தூர்

உதாரணமாக, செவ்வாய்க் கிழமை ஆயில்யம் கூடுவது தன்வந்த்ரீ பூஜைகளுக்கு ஏற்றதாகவும், நோய் நிவாரணத்திற்கு உதவுவதான விசேஷமான நாளாகும். வளர்பிறைச் செவ்வாய், தேய்பிறைச் செவ்வாய் வெவ்வேறு வகையான பலாபலன்களைத் தாங்கி வருகின்றன.
உள்ளத்தில் காலஉணர்வறிதல் (time consciousness) சற்றும் இல்லாது, ஜடமாய் மனிதர்கள் தற்காலத்தில் வாழ்வது மிகவும் வேதனை தருவதாகும்.
ஒவ்வொருவரும் தம் வாழ்க்கையில் ஒன்றுமே செய்யாமலும், பயனற்ற கேளிக்கைகளிலும் விரயம் செய்த நேரத்தைக் கழிப்பூழி என்ற பகுதியில் விண்ணுலகத்தில் ஒதுக்கி வைக்கின்றார்கள். இவைதாம் அவரவருடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமுதாயத்திலும், பிற்காலத்தில், அடுத்தடுத்த ஜன்மங்களில், அவரவருடைய காலத்தில், மனப் பேரலை, ஊழிப் பேரலை, ஆழிப் பேரலையாக, பல காலம் நோயில் படுத்துக் கிடப்பதாக, ஒன்றுமே செய்ய முடியாமல் உடல்வாத நோயாக, அறுவைச் சிகிச்கைளால் பலவீனமானவராக, எந்தச் சிறு வேலையையும் செய்ய முடியாது உடல் ஊதிப் பெருத்துக் கிடப்பதாக என்பதாகவும்,
மேலும், சமுதாயத்தைப் பாதிக்கும் இயற்கைச் சீற்றங்களாகவும் வந்தமையும். ஆனால் இவை எல்லாம் கர்ம வினைப் பிரதிபலிப்பு ரகசியங்களாகவே வைக்கப்பட்டுள்ளன.
ஏனெனில், இதற்கான காரணங்களை அறிந்தால் இறைப் பகுத்தறிவு பூரணமாக நிறையாமையாலும், மனப் பக்குவம் இல்லாமையாலும், இவ்வகையில் அவதியுறுவோரைக் கண்டு, இதனால் இவருக்கு இது வந்தது என்று கருதி, அவர்களைக் காண்கையில் வெறுப்பும், பரிதாபமும் ஏற்பட்டு விடும்.
கர்ம வினைப் பரிபாலனத்தை நன்கு அறியாத வரையில், இவ்வாறு, எவர் மீதும் வெறுப்புக் கொள்வதற்கு எவருக்கும் உரிமையில்லை! கர்ம வினைப் பரிபாலனத்தை நன்கு அறிந்தாலோ, அவரவருடைய கர்ம வினைகளை அவரவர் அனுபவிக்கின்றனர், எனவே, அவரவர் வாழ்க்கையில் தம்மால் இயன்ற வரையிலும், ஜாதி, மத, இன பேதமின்றிச் சத்சங்கமாகப் பலருடன் சேர்ந்து நிறைய அளவிலும், வாழ்க்கை முழுதுமே சத்சங்கப் பூஜைகள், அறப் பணிகள், தான, தர்ம அறப்பணிகளை ஆற்றியும் வருதல் வேண்டும் என்ற முதிர்ந்த, பகுத்தறிவுப் பூர்வமான பக்குவம் ஏற்படும்.
உதாரணமாக, சில வகைக் கொடிய நோய்கள் வருவதற்கு ஆயிரமாயிரம் கொடிய கர்ம வினைக் காரணங்கள் உண்டு. ஆனால், இவற்றை எல்லாம் எடுத்துரைத்தால், கொடிய நோயுடையோரைக் கண்டாலே வெறுப்பு வந்திடும். எனினும், வெறுப்புணர்ச்சிகளை அவ்வப்போது வாழ்வில் களைந்து வருதலுடன், அவரவர் கர்ம வினைகள் தீரவும், பன்முறைகளிலும் கடமைகளை ஆற்றி வர வேண்டும்.
கலியுகத்தில் மனிதனை ஆட்டிப் படைப்பவை பணக் கஷ்டம், மரண பயம் மற்றும் நோய்த் துன்பங்கள் ஆகும். இளமையில், மரண பயம் வராது. ஆனால் நடுத்தர வயதில் இருந்து இது தொடங்கும்.
இம்மூன்றுக்கும் காரணமான கர்ம வினைகளே ருணபாக்கி, மிருத்யுதோஷம், ரோக வாதிக் கர்ம வினைகளாகும். ஆன்மீகத்தில் எதற்கெடுத்தாலும் கர்மா, கர்மா என்று சொல்கின்றார்களே. இது அலுத்துப் போய் விடுகின்றது என்று சிலர் சொல்லக் கூடும். இத்தகையோர், இவ்வாறு சொல்லக் காரணமே, வாழ்க்கையில் தாங்கள் எண்ணிய, செய்த, தங்களுடைய அவலமான எண்ணங்கள், தவறான காரியங்களைப் பற்றி எண்ணவே பயப்படுகின்றார்கள் என்றே இதற்குப் பொருள்.
பயத்தாலோ, உள்ளம் ஒன்றாது, வெறுமனே வாயால் வழிபடுவதாலோ, "கர்மத்தில் நம்பிக்கை இல்லை'' என்று சொல்வதாலோ, கர்ம வினைகள் கழிந்திடுமா?
தர்ம சக்திகளானவை, மனம், உள்ளம், உடல் இம்மூன்று நிலைகளிலும் மாறுபடும். இவற்றுக்கான விளக்கங்களை உணர்த்திடவே, தசமி திதி தோறும் எம மூர்த்தி பூவுலகில் தர்மராஜ மூர்த்தியாக வந்து, மரண பயத்தை நீக்கும் வழிமுறைகளை அருள்கின்றார். அறக் கடவுளாகவும், தர்மராஜராகவும், தெற்குத் திசை பாலகராகவும், காலனாகவும், எம மூர்த்தி, பல அவதாரிகைகளைக் கொண்டு அருள்பாலிக்கின்றார். இவை தர்மராஜ தசமியில்தாம் தோற்றம் பெற்றன.
சந்தனத்தின் நறுமணமானது தர்ம சந்தம் என்ற பெயர் கொண்டு எமபயத்தை நீக்க உதவுவதாகவும், மிருத்யு தோஷங்களைப் போக்கவும் உதவும். இதனால்தான் பொதுவாக, எமசக்தித் தலங்களில் சந்தன விருட்சம், சந்தனக் காப்பு, சந்தனப் பிரசாதம் சிறப்புப் பெறும்.
நல்லவர், தீயவர் என்று பாகுபாடு இன்றி சந்தன நறுமணம் அனைவரையும் அடையும். தர்மராஜ தசமி அன்று,
* பத்து ஆலயங்களுக்கு அல்லது பத்து மூர்த்திகளுக்காவது சந்தனம் அரைத்துத் தருதல்,
* ஏழை, நடுத்தரக் குடும்பத்திற்குச் சந்தனக் கட்டை, சந்தனக் கல் தானமளித்தல்
* முறையாக பூஜை நடக்க வசதியற்ற ஆலயங்களுக்கு, சந்தனக் கட்டை, சந்தனக் கல் இல்லாத கோயில்களுக்குச் சந்தனக் கட்டை, சந்தனக் கல் தானமளித்தல்,
* பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரத்தில் (தசமி, சதய நாள் தோறும்) பூஜித்தலால்,
எங்கே திடீரென்று இறந்து போய் விடுவோமோ, மார்வலி வந்துவிடுமோ, குடும்பத்தாரை அநாதையாக விட்டு விட்டு இறந்து விடுவோமோ என்றெல்லாமான மரண பய உணர்வுகள் அகல உதவும்.
தசமி அன்று தர்மராஜ மூர்த்தியை சாஷ்டங்கமாக வீழ்ந்து 10 முறை வணங்கிடுக! அங்கப் பிரதட்சிணம் விசேஷமானது. இதனால் கேவலமான எண்ணங்கள் மனதை ஆக்ரமிப்பது அகலும்.

அக்னி தோஷங்களுக்குத் தீர்வு

வெள்ளி மற்றும் பூரம் நட்சத்திரந் தோறும் அபூர்வமாகச் சில ஆலயங்களில் எழுந்தருளும் அருளும் ஆடிப் பூர அம்மனுக்கும், சுக்கிரவார அம்மனுக்கும் பூப்பாவாடை சார்த்தி வந்து, ஜாதி, மத பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்கு தாம்பூலம், தேங்காய், தாமே தொடுத்த பூச்சரங்களைத் தானமாக அளித்து வந்தால் தம் புதல்விகளுக்கு நல்ல குடும்பத்திலிருந்து நல்ல வரம் கிட்டவும், புதல்வியைக் கட்டிக் கொடுத்த இடத்தில் உள்ள பிச்சுப் பிடுங்கல்கள், துன்பம் தீரவும் நல்வழி பிறக்கும்.
அக்னி என்றாலே தாங்க முடியாத வெப்பம் என்றே பலரும் எண்ணுகின்றனர். சாதாரணமான கைச் சூடு முதல் சூரியன் போன்ற கோளாக்னிகள் வரை அனைத்தும் அக்னி வகைகளே!

ஸ்ரீஆடிப்பூர அம்மன்
பட்டீஸ்வரம்

உத்தராயணம் தட்சிணாயனம் போல ரிஷபாயனம் என்ற புண்ணிய காலங்களும் உண்டு. இவ்வாறு ரிஷபாயனத்தில் நிரவும் சூரியாக்னிக் கதிர்கள், பூர நட்சத்திராக்னி சக்திகளுடன் சேர்கையில், விசேஷமான அக்னி ஒளிச் சேர்க்கையானது, அயன நந்தீப் பூர்வயம் என்ற விசேஷமான, அற்புதமான அக்னி வகையாகத் தோன்றுகின்றது. இதனுடைய மூல அக்னிக் கதிர்கள் சூரிய மண்டலம், நந்தி மண்டலம். பூர நட்சத்திர மண்டலம் ஆகிய மூன்றிலிருந்தும், ஐந்து வகை ஜோதிகளாக எழுந்து பஞ்சபூத சக்திகளை கிரகித்துத் தருகின்றன.
பூர்வாஷாடம், தேவசுந்தரீ, பகணம், பூர்வயீ, பூர்வ பல்குனி ஆகிய ஐந்தும் பூர நட்சத்திரத்தின் பிற பெயர்களாகும். பசுவிடம் அனைத்துத் தேவாதி தெய்வ மூர்த்திகளும் பரிமளிப்பதால், பசு நெய்யால் ஏற்றப்படும் தீபத்தில், சர்வ தெய்வ வேத ஜோதி சக்திகளும் பரிணமிக்கின்றன. இதனால் தான் தினமுமே பசு நெய்யில் தீபம் ஏற்றி வணங்குதலால், இயற்கையாகவே பல விதமான தோஷங்களையும் தீர்வு செய்கின்றது.

ஸ்ரீஆதிகேசவ பெருமாள்
பொன்னகரம் மணமேல்குடி

இவ்வாறு அயன வகையம்ச அக்னி சக்திகள் பரிமளிக்கும் தினங்களில் தோன்றும் சூரிய சக்திகளில், பல அக்னி குணாவதீயங்கள் ஏற்படுகின்றன. இதிலும், பூர நட்சத்திரம் ரிஷபாயனக் கோணாக்னி அம்சங்களும் இணைவதால் சூரிய, சந்திர, நட்சத்திர, ஏனைய கோளங்களின் ஜோதித் தன்மைகளிலும், உலகில் பல்வகைகளிலும் ஏற்படும் நெருப்பு, வெப்பம், உஷ்ணம் போன்ற அக்னியின் ஏனைய வகைகளிலும் குணபல மாற்றங்கள், நிறைய மாற்றங்கள் ஏற்படும்.
இவற்றை நன்கு பயன்படுத்தும் வகையில் பல்வகை ஜோதி வகைகளுடன் பூஜைகளுடன், அக்னி சக்தி மூர்த்திகளையும் வழிபடுதல் வேண்டும்.
அதாவது குத்து விளக்கு, அகல் விளக்கு, வெள்ளி விளக்கு, பிருங்கி விளக்கு, திருஷ்டி தோஷ நிவாரண விளக்கு, பித்தளை விளக்கு எனப் பல்வகை விளக்கு தீபங்கள்,
எருக்குத் திரி, வாழைத் தண்டுத் திரி, தாமரைத் தண்டுத் திரி, நூல் திரி, பஞ்சுத் திரி எனப் பல்வகைத் திரிகளாலும்,
பல்வகைத் தைலங்கள், எண்ணெய், பசு நெய் வகைகளாலும் பல்வகை தீபங்களை ஏற்றி வழிபடுவதால், மேற்கண்ட வகையிலான பல்வகை அக்னி சக்திகளைப் பெற்றிட மிகவும் உதவும்.
(புகை பிடித்தல், பலவற்றையும் அக்னியில் எரித்தல் போன்றதின் மூலம்) அக்னியை அவமதித்தல்,
அக்னி வகைப் பிரார்த்தனை அல்லாது தேவையில்லாது நெருப்பை மிதித்தல், தீயைத் தவறாகப் பயன்படுத்துதல்,
அக்னிக்குள் எச்சில் துப்புதல் போன்ற பல பாவ வினைகளுக்கும், தோஷங்களுக்கும் தக்க நிவர்த்திகளைப் பெற்றிடலாம்.
மொத்தத்தில அக்னி சம்பந்தமான தோஷங்களுக்கு நிவர்த்திகளைத் தர வல்லனவே பூர நட்சத்திர நாளுக்குரிய வழிபாடுகளாகும். செவ்வாய் மற்றும் பூர நட்சத்திர நாளில் கிரிவலப் பாதை முழுதும் சாம்பிராணி தூபம் இட்டவாறே திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து வழிபட்டு வர, புகை பிடிக்கும் தீய பழக்கத்திலிருந்து விடுபடும் நல்மார்கம் கிட்டும்.
முறையற்ற காம இச்சை உணர்வுகளை, செய்கைகளின் பாவ வினைகளை ஓரளவேனும் பஸ்பம் செய்யும் சக்தி பூர நட்சத்திர அக்னி சக்திக்கு உண்டு. எனவே, பூர நட்சத்திர நாளில் கற்பூரம், பச்சைக் கற்பூரம் போன்றவற்றுடனான பூஜை, ஹோமம், கலச பூஜைகளையும், பூரண சக்திகள் நிறைந்த கொழுக்கட்டை, போளி போன்ற திரவியங்களை, பண்டங்களையும் வைத்துப் பூஜை, நைவேத்யம், படையல், தானமளித்தல் சிறப்பானதாகும். இதனால் பலத்த அக்னி வகை தோஷங்களும் தீரவும் உதவும்.

பிரதோஷ தவசிகள்

ஒரு மாலையில் திரயோதசித் திதி தொடங்கி, மறுநாள் மாலையில் நிறைவடையும் பிரதோஷம், கண்வமந்த்ர பூஷணப் பிரதோஷமாகும். சதாதப சித்தர் என்னும் அதிஅற்புதச் சித்தர், நித்தியப் பிரதோஷ வழிபாடாகத் தினமுமே அமையும் மாலை சுமார் 4.30 மணி முதல் 6.30 மணி வரை அமையும் நித்தியப் பிரதோஷ கால விரதத்தை, பூஜையை, காளஹஸ்தி சிவத் தலத்தில் அன்றும், இன்றும், என்றுமாய் ஆற்றி இதன் பலாபலன்களைப் பூவுலக ஜீவன்களுக்கு அர்ப்பணித்து வருகின்றார்.
அண்ட சராசரத்தில் எந்த லோகத்தில் அவர் இருந்தாலும், நித்தியப் பிரதோஷ நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6.30 மணிக்குக் காளஹஸ்தி சிவத் தலத்திற்கு வந்து பூஜிப்பதில் சற்றும் தவறுவதில்லை. யுகம், யுகமாக நடக்கும் விசேஷமான நித்தியப் பிரதோஷ வழிபாடு இது! எதற்காக இந்த தெய்வீக விஷயம் இங்கு உரைக்கப்படுகிறது என்றால், மனித குலம் ஆற்றாமல் விடுகின்ற பூஜைகளை, ஆலயத் தரிசனங்களை, விரதங்களை, கோயில் திருவிழாக்களை, சித்தர்களும், மாமுனிகளும் ஏற்று நடத்துகின்றனர் என்பதை உரைத்து உணர்த்திடவேயாம்!

இவ்வாறாக, தினப் பிரதோஷப் பூஜைகளைத் தூல, சூக்கும, காரிய, காரண வடிவுகளில் காளஹஸ்தியில் நிறைவேற்றிய பின்னர், பிரபஞ்சத்தில் உள்ள எண்ணற்ற தலங்களில் தினமுமே தம்முடைய பிரதோஷ பூஜா பலன்களை சதாதப சித்தர் அர்ப்பணிக்கின்றார்.
எந்தப் பிரதோஷ பூஜையில், எவ்வகையான பலன்கள், எந்தெந்தத் தலத்தில், திரவியத்தில் சதாதப சித்தரின் பிரதோஷப் பூஜைப் பலன்கள் நிரவுகின்றன என்பவை யாவும் சத்குரு மூலமாகவே அறியற்பாலதாகும்.

ஸ்ரீசதாதப சித்தர்
கண்டியூர்

பூவுலகில், இதிலும் நம் புனிதமான பாரதத்தில், பவித்ரமான தமிழ்நாட்டில் லட்சக் கணக்கில் கோயில்கள் உள்ளன. பூஜைகளே இல்லாத ஆலயங்கள் ஆயிரக் கணக்கானவை பாரதத்தில், தமிழ் நாட்டில் இருப்பதாகப் பலரும் எண்ணி வேதனைப்படுவது உண்டு. ஆனால், சித்தர்களும் மகரிஷிகளும், பூலோக மக்கள் பகுத்தறிவுடன் செயல்பட்டு, ஒவ்வொரு பழமையான ஆலயத்தின் பூஜைகளையும் திறம்பட ஏற்று நடத்தும் வரை, அவர்களே பல வடிவுகளில் அனைத்துத் திருத்தலங்களிலும் தினமுமே பூஜித்து வருகின்றார்கள் என்பதுதான் உண்மை நிலையாகும். ஆனால் நாம்தாம் அவர்களுடைய மகிமையை இன்னமும் அறிந்து கொள்ளவில்லை. இதனை உணரும் பூர்வமாக, பர்வத மலையில், நள்ளிரவில் தேவர்கள் சஞ்சரித்துப் பூஜிக்கின்ற அடையாளச் சின்னத்தை, மறுநாள் காலையில் பலரும் பர்வத மலை உச்சி ஆலயத்தில் தரிசித்துள்ளனர்.

ஸ்ரீஉய்யவந்த அம்மன் சாக்கோட்டை

ஆனால், இவ்வாறு சித்தர்களும், மகரிஷிகளும் பாரதத்தில் உள்ள ஒவ்வொரு பழமையான, சிதிலமடைந்த, தொன்மையான, ஜீரணமாகி உள்ள, இடிபாடுகளுடன் இருக்கின்ற ஒவ்வொரு ஆலயத்திலும் பூஜிக்கின்றார்கள் என்பதைக் கண்கூடாக அறிய வந்தால், இந்தக் கோயிலில் பூஜிப்பதற்குத்தான் தேவர்களும் சித்தர்களும் வருகின்றார்களே, நாம் எதற்கு இதில் பங்கு பெற வேண்டும் என்று அசிரத்தையாக மனிதர்கள் ஒதுங்கி விடுவதுடன், பூலோகப் பூஜைகளுக்காக வந்து செல்லும் தேவர்களிடம், ஏதாவது கேட்டுப் பெற்றிடுவோமா என்ற சுயநல எண்ணமே ஏற்பட்டிடும். இதனால்தான் இந்தத் தேவ ரகசியமானது, சாதாரணக் கண்களுக்கு உணர்த்தப் பெறுவது கிடையாது.
சித்தர்கள், மாமுனிகளை, இவர் இன்னார் என அறிந்தாலும், சற்றும் வெளிக்காட்டாது, அவரவரை அவரவரருடைய தவத்தில் யோகத்தில், தரிசனத்தில், ஒரு தடங்கலும் இல்லாது தொடரச் செய்யும் ஆழ்ந்த மனப் பக்குவம் செறியும் வரை, சித்தர்கள், மாமுனிகளின் தரிசனத்தைப் பெறுதல் கடினமே!
அவர்களை ஒரு வேளை, தரிசித்தால், அச்சமயத்தில் நாம் என்ன செய்வோம், நாமென்ன செய்ய வேண்டும் என ஒவ்வொருவரும் ஆத்மவிசார அனுபூதிகளைத் தம்முள் நிகழ்த்திப் பார்த்துக் கொள்தல் வேண்டும். இதுவும் ஒரு வகை ஆத்மவிசாரத் தியானமே!
கன்யா மண்டலத்தில் உறையும் சதாதப சித்தர், பிரதோஷப் பூஜைக்கு முன்னும் பின்னுமாய் வழிபடுகின்ற தலங்கள் மகத்தான பூஜை பலன்களை ஜீவன்களுக்கு நல்குகின்றன. இத்தகைய கன்யா மண்டல சக்திகள் நிறைந்த தலங்களை எவ்வாறு அறிவது?

உலகம்மை ஆலயம்
வாளாடி லால்குடி

ஆடிப் பூரத்தம்மன் மற்றும் அம்பிகை தனித்துச் சந்நதி கொண்டு, ஆலய மூலவராக அருளும் ஸ்ரீமுண்டகக்கண்ணி அம்மன், சாக்கோட்டை ஸ்ரீஉய்யவந்த அம்பாள், ஸ்ரீசமயபுரம் மாரியம்மன், சத்யமங்கலம் அருகே ஸ்ரீபன்னாரி அம்மன், கோயம்புத்தூர் ஸ்ரீகோணி அம்மன், சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகோலவிழி அம்மன், பெரியபாளையத்தம்மன், வாளாடி ஸ்ரீஉலகாயி அம்மன் போன்ற கன்யா சக்திகள் நிறைந்த தலங்களில், பிரதோஷ வழிபாட்டிற்கு முன்னும் பின்னும் வழிபடுதல் விசேஷமானதாகும்.
பிரதோஷ நாளில் பிரதோஷ நாயகராக வலம் வரும் சிவபெருமானை எட்டுத் திக்குகளிலும் நின்று வழிபடுதல் வேண்டும். இயன்ற வரை பிரதோஷ நேரம் முழுதுமே ஆலயத்திலே இருந்து கொண்டு, சிவய சிவ, சிவச் சிவ, நமச்சிவாய, சிவாய நம: என நமசிவாயப் சிவபஞ்சாட்சர சக்தி மந்திரங்களை ஓதியவாறு இருத்தலால், உள்ளம், மனம், உடல் மூன்றிலுமே நல்ல சாந்தம் ஊறி நிரவுவதை, அவரவர் தாமே நன்கு உணரலாம்.
இவ்வாறு ஏற்பட்டிடில் அன்று, அவர்கள் அந்தப் பழமையான சிவாலயத்தில், பிரதோஷ நேரத்தில் சித்தர்கள், யோகியர், மாமுனிகளின் தரிசனத்தைப் பெற்றுள்ளனர் என அறிந்திடலாம். "இத்தகைய அனுபூதிகள் நமக்குக் கிட்டவில்லையே,” என ஏங்காதீர்கள்! பெரும்பாலும் அவரவருடைய பித்ருக்களே, அவரவருடைய வம்சப் பரல்களின் பூரணத் திருமேனீயம் கொண்டு, மானுட உடலில் பிரதோஷ தரிசனங்களைப் பெறுவார்களாதலின், பித்ருக்களே இவ்வனுபூதிகளைப் பெற்று அருள்வதும் உண்டு.
இதற்காகவே, பிரதோஷ நேரம் முழுதுமே, மூன்று மணி நேரத்திற்கு ஆலயத்திலேயே இருந்து கொண்டு வழிபட்டிருத்தல் நன்று என்பது வலியுறுத்தப்படுகின்றது.  

கலைகள் வளரும்

சித்திரா பெளர்ணமிக்கு முன் வரும் சதுர்த்தசித் திதியானது, இசை, ஓவியம், நடனம், சிற்பக் கலை ஆகிய - கலைமகளுக்கு மிகவும் பிரீதியான - நான்கு திருக்கலைகளின் தெய்வீகப் பண்பாட்டு வளச் சதுர்த்த கலாபாவன அபிவிருத்தி நாளாகும்.
காஞ்சீபுரத்தில் சித்ர குப்தருக்கு நல்ஆலயமும் அமைந்துள்ளது. சித்ர குப்த மூர்த்தியின் வழிபாடுகளைத் தற்காலத்தில் பொதுவாக, பலரும் மறந்து விட்டமையால், இனியேனும் சித்ரகுப்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். காரண, காரியம் தெரியாது குடும்பத்தை அழுத்திக் கொண்டிருக்கும் பெருந்துன்பங்கள் கரைய, சித்ர குப்த வழிபாடு உதவும்.

சித்திர சபை திருக்குற்றாலம்

தர்மராஜ மண்டலத்தில் உறைந்து அருள்கின்ற தேவதா தெய்வ மூர்த்தியாகிய சித்ர குப்தர், பூவுலகெங்கும், சித்ரா பெளர்ணமிக்காகத் தான தர்ம காரியங்கள் நிகழும் இடங்களில் சித்ர குப்த வண்ணமால்ய வடிவில் ஆவாஹனமாகி, தர்ம ராஜ்ய சக்திகளை நிரவி, தர்ம ராஜ அருள் பிரவாகத்தைப் பொழிகின்றார்.
சித்ர குப்தருக்கு மிகவும் பிரீதியான சித்ரான்னங்கள் எனப்படும் குறைந்தது ஐந்து  வண்ணமய அன்ன வகைகளை (சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம்) தானமாக அளித்தலானது, வர்ணப் பூர்வ, ருசிப் பூர்வ, மனப் பூர்வ வகையான சித்திர சக்திகளை, குடும்பநல, சமுதாயதயச் சாந்தவள சாந்தி பூர்வ சக்திகளாக அளிக்கின்றது. வயிறு, குடல், பெருங்குடல், சம்பந்தமான நோய்களுக்குத் தக்கத் தீர்வுகள் பெற இதன் புண்ய சக்திகள் உதவும்.
ஸ்ரீராமர், சித்திரகூடம் எனும் இடத்தில் சித்திரை பெளர்ணமிக்கு முதல் நாளன்று சமுதாயப் பெருமக்களுடனும், குறிப்பாக உத்தம வனவாசிகளுடனும் மிகவும் விசேஷமாகக் கொண்டாடி, முழு நுனி வாழை இலையில் பழங்களுடனும் சித்ரான்னங்களைப் பரிமாறி, காக்கைகள், பட்சிகள், கிளிகள், மற்றும் பைரவர்களுக்கு வைத்து அளித்து, சமுதாயப் பெருங்குடி ஜீவன்களுக்கு மிகவும் எளிமையான சித்ரான்னத் தர்மராஜ சக்திகள் மூலம், பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தர வேண்டும் எனச் சங்கல்பம் செய்து தந்தார்.
நடராஜத் தத்துவங்களில், சித்திர சபை எனும் திருக்குற்றாலத்தில் நீராடி, விரதமிருந்து, தரிசனம் செய்து சித்ரான்னங்களைத் தானம் செய்த பின் உண்ணுதல்,
மூதாதையர்கள் பலவிதமான (இசைத்) துறைகளில் சிறப்புடன் துலங்கிட, தற்போதைய தலை முறை இதிலிருந்து விலகிச் சென்று விட்ட நிலை மாறி, மூதாதையர்களின் ஆசிகளுடன் குடும்பத்திற்கு என ஆகி வந்த நுண்கலைகள் சிறப்படைய உதவிடும் சதுர்த்தசி நன்னாள்.
சிலேட்டு, பலப்பம் கொண்டு ஓம் சித்ர குப்தாய நம: என வீட்டில் அனைவரும் எழுதுதல் குடும்பத்தில் வாக்குப் பூர்வமான நல்மாற்றங்களைத் தர வல்லதாகும்.

சீர்கெட்ட வாழ்க்கையும் சிறக்கும்

வாஸ்து நாளும் பெளர்ணமியும் இணைந்து வருகின்ற நாளுக்கு ஒளிப் பூர்வமான வாஸ்து அனுகிரக சக்திகளை அளிக்கின்ற சிறப்பம்சங்கள் நிறையவே உண்டு. பொதுவாக வாஸ்து சக்திகளை ஹோம பூஜைகள் மூலமாகவும், மந்திர ரீதியாகவும் பெறுவதும் உண்டு. ஆனால், ஒளிப் பூர்வமான வாஸ்து சக்திகளைப் பெறுவதற்கு பெளர்ணமி நாளில் அமைகின்ற வாஸ்து உற்சவ நாள் உதவிடும். காலையில் வாஸ்து நேரம் அமைந்திட்டாலும் மாலையில்தான் பெளர்ணமித் திதி தொடங்கிட்டாலும் வாஸ்து மூர்த்தியின் விஸ்வரூப திவ்ய தரிசன அம்சங்கள் நாள் முழுதும் பூமிநாதர், பூமீஸ்வரர் போன்ற பூமி நாமச் சுயம்பு லிங்க மூர்த்திகளின் திருமேனியில் நிறைந்திடும்.

பூபாரம் குறையவும் வாஸ்து பூஜைகள் உதவுகின்றன. பூபாரம் குறைதல் எனில் ஜீவப் பெருக்கம் குறைதல் என்று பொருளன்று. பூலோக ஜீவன்களின் கர்மச் சுமைகள் குறைந்தால்தான் பூபாரம் தணியும்.
வாஸ்து நாட்களில் சொந்த வீடு, வாடகை வீடு என அனைத்து வகை வீடுகளிலும் வசிப்போரும், இல்லத்தில் வாஸ்து நாட்களில் விசேஷமான பூஜைகளை ஆற்றிட வேண்டும். இதற்காக நிறைய மந்திரங்களை ஓதிட வேண்டுமே, நமக்கு அவை தெரியாதே என்று யோசித்திடாதீர்கள்! தலை வாசல்படி, நிலை வாசற்படிகளில் மஞ்சள், காவி இட்டு வீட்டில் மிகப் பெரிய கோலம் இட்டு அனைத்துக் கோளங்களையும் அதில் பதித்து வைத்தல், கிழங்கு வகை உணவு தானம், வாஸ்து சக்தித் தலங்களில் பூஜித்தல் போன்றவையும் விசேஷமான வாஸ்து வழிபாடுகளே!
குறித்த வாஸ்துத் தலங்களில் வழிபட இயலாதோர், ஜகதீஸ்வரர், பூமிநாதர், பூமீஸ்வரர், பூமாதேவி, பூலோகநாதர் எனப் பெயர் பூண்டு, இறைவன் அருளும் தலங்களில் வாஸ்து நாட்களில் வழிபடுதல் வேண்டும். சித்திரைப் பெளர்ணமித் திதி நேரத்தில் வாஸ்து நாள் இணைந்து வருவது மிகவும் விசேஷமானதே! இவ்வாறு வருவது மிகவும் அரியதும், அபூர்வமானதும் ஆகும். ஜீவன்களின் கர்மச் சுமைகள் தணிந்து பூபாரம் குறைக்க வல்ல பூஜா சக்திகளைக் கொண்ட நன்னாளாக இந்நாள் விளங்குகின்றது.

சில வீடுகளில் சூரிய, சந்திர ஒளிக் கிரணங்கள் வீட்டினுள் தளத் துவாரங்கள் வழியாக உள்ளே வரும். இதனருகே சாம்பிராணி தூபம் இட்டு, ஒளியுடன் சாம்பிராணிப் புகையை இணையச் செய்வதைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும். சொந்தமாக உள்ள நிலம், வீடு பற்றி உற்றம். சுற்றம் கொண்டுள்ள பொறாமை எண்ணங்களை அகற்றிட, இந்த குங்கலியப் புகைப் பூர்வமான ஒளி வகை வழிபாடு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
பெளர்ணமியுடன் இணைந்து வரும் வாஸ்து நாள் பாலச்சந்த்ர வாஸ்து சக்திகளைப் பூண்டது. பூமியில் உள்ள கட்டிடங்கள் யாவும் சூரிய, சந்திர ஒளிப் பரிமாண சக்திகளாலும் நிலை நிற்பவையே! எனவே, கட்டிடங்கள் நிலைத்து நிற்கவும், நிலம் மற்றும் தோட்ட, நந்தவன, பயிர், தாவர ஜீவித சக்திகளைப் பெறவும், நிலத்தடி நீர் வளத்துடன் துலங்கவும் முறையாக வாஸ்து வழிபாடுகளை, வாஸ்து சக்திகள் நிறைந்த எட்டு வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமைகளிலும் ஆற்றி வர வேண்டும்.
கலியுகத்தில், தனக்கு பூமி தானம் செய்ய வசதி உள்ளதோ, இல்லையோ, ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் சிறிதளவேனும் பூமி தானத்தை ஆற்றிட, பல்வகை நற்காரியங்களை ஆற்றுவோர்க்கும், இறைப் பணிகளை ஆற்றும் ஆஸ்ரமம் போன்ற நல்லிறை அமைப்புகளுக்கும் உதவி செய்து, இதன் மூலமும் வசதியற்ற ஏழைகளுக்கும், நிலம், நந்தவனம், வீடு என ஓரளவேனும் பூமி தானம் செய்திட உதவுதல் வேண்டும். இதற்காகத்தான் நற்காரியங்களை ஆற்றுகின்ற ஆஸ்ரமம் போன்ற நல்லிறை அமைப்புகளுக்கு உதவி செய்து வந்திடில், அவர்கள் ஆற்றுகின்ற எண்ணற்ற நற்காரியங்களில் பூமிதானமும் அமைவதால், பல்வகைத் தான தர்ம சக்திகளில் பூமிதான சக்தியும் வந்து சேரும்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
செவலூர் திருத்தலம்

பெளர்ணமித் திதியுடன் வாஸ்து நாள் சேர்கையில், வாஸ்து மூர்த்தி, சுந்தரபாவனம் என்ற திருவாசல் வழியே விஸ்வ ரூப தரிசனம் தருவதால், இந்நாளில் துவார சக்திகள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் கூடிய பண்டங்களை சுவாமிக்குப் படைத்துத் தானமாக அளித்தல் மிகவும் விசேஷமானது. தேங்காய், இளநீர், நுங்கு, முந்திரி, மங்குஸ்தான் பழம், அக்ரூட் போன்றவை துவார சக்திகள் நிறைந்த பழங்கள் மற்றும் திரவியங்களாகும்.
வாஸ்து நேரம் முழுதும் வாஸ்து மூர்த்தி நாமத்தை ஓதுதல் வேண்டும். அறிந்தோர் பூமி சூக்த மந்திரங்களை ஓதுதல் வேண்டும். புதுக்கோட்டை - குழிபிறை - செவலூர் - பொன்னமராவதி மார்கத்தில், செவலூர் ஸ்ரீஆரணவல்லி சமேத ஸ்ரீபூமீஸ்வரர் ஆலயத்தில் வாஸ்து நாளில் ஹோமம் மற்றும் பல்வகை பூஜைகள் நிகழ்வதால், இவற்றைப் பலரும் அறியுமாறு செய்து, யாவருக்கும் சொந்த வீடு, சொந்தக் கடை அமையும் வண்ணம் வாஸ்துப் புண்ய சக்திகளைப் பெற்றிட நற்கருவியாய், இறைப்பிரசார சாதகராய்த் துலங்குவதும் வாஸ்து பூஜை முறைகளில் அடங்கும்.
ஆலய நந்தவனங்களில் உள்ள பூச்செடிகளுக்கு உரப் பாத்தி கட்டி, நீரூற்றி இறைப் பணிகளை ஆற்றுதலும் வாஸ்து பூஜைகளின் ஒரு வகையே! இவ்வாறு வாரந்தோறும், வாஸ்து சக்தி நாளாகிய செவ்வாய் தோறும் செய்து வருதலால் சீரற்று இருக்கும் வாழ்க்கையில் தெளிவு கிட்டும்.

புத்தியைத் தீட்டுங்கள்

பொதுவாக, சூரியக் கோளத்தில் இருந்தே சந்திர மூர்த்தி, ஒளிப் பிரகாசத்தைப் பெற்று தம் அமுத சக்திகளையும், ஒளஷத சக்திகளையும் இணைத்துத் தருவதால், சூரிய சக்திகள் நிறைந்த ஞாயிறன்று அமையும் பெளர்ணமித் திதிக் காலத்திற்கு ஆதித்யாதி சோமபுலம் என்ற பெயருண்டு. மாத்ருகாரக, பித்ருகாரக சக்திகள் இந்நாளில் நன்கு பரிணமிக்கும்.
பெளர்ணமி அன்று, ராகு, கேது போல, சூரிய, சந்திர கிரக மூர்த்திகள் எதிரெதிர் ராசிகளிலும், அமாவாசையன்று ஒரே ராசியிலும் இருப்பர் என்பதை நாமறிவோம். எனவே ஒவ்வொரு பெளர்ணமியிலும் ஆற்ற வேண்டிய, சத்யநாராயணப் பூஜை, பெளர்ணமி விரத முறை, பெளர்ணமிப் பூஜை முறைகள், பெளர்ணமியின் உச்ச ஸ்தாயி கூடிய இரவிலமையும் அருணாசலக் கிரிவலம் போன்றவற்றுக்கான விசேஷமான முறைகளும் அந்தந்த கோசார ராசிமானத்திற்கு ஏற்ப, தனித் தனியே உண்டு.

மகிமாலை சிவாலயம்

எனவே, என்று எப்போது பெளர்ணமி என்ற கேள்விக்கு, மேற்கண்ட வகையில், சத்யநாராயணப் பூஜை, பெளர்ணமி விரத முறை, அருணாசலக் கிரிவலம், பெளர்ணமிப் பூஜை, ஆலயப் பூஜைகள் என்றவாறாக எந்த வகைக்கான பெளர்ணமித் திதி நிர்ணயம் என முதலில் அறிதல் வேண்டும்.  
அமாவாசையிலும், பெளர்ணமியிலும் கடல் அலைகளில் உலா ஏற்ற மாற்றங்கள் உண்டாகும் அல்லவா! மனித மனத்தையும் கடலுக்கு நிகராகவும், எண்ணங்களை அலைகளாகவும் உருவகப்படுத்துவதும் உண்டு. இதனால்தான் பெளர்ணமியில் மனநிலை அம்சங்களில் மாற்றங்கள் தென்படும். இவை யாவும் கூர்ந்து கவனித்தால்தான் புலப்படும். இதற்காகவே, பெளர்ணமித் திதி முழுதும், காசி மாலை, முத்து மாலை, ருத்ராட்சம், மணி கங்கண் போன்ற பல்வகை இறைச் சாதனங்களையும் உடலில் அணிந்திருத்தல், ஆதித்யாதி சோமபுல சக்திகளைக் கிரகிக்கத் துணை புரிந்து, நல்ல மனச் செறிவையும் தரும்.
ஞாயிறு கூடும் பெளர்ணமி நாட்களில் ஸ்ரீசந்த்ர மெளளீஸ்வரர், ஸ்ரீசந்த்ரசேகரர் போன்று சந்திர நாமம் தரித்த மூர்த்திகளுக்கு, முழுமையான வெண்ணெய்க் காப்பு இட்டு வழிபடுதல் விசேஷமானதாகும். மகிமதீயம் எனும் விசேஷமான ஒளிக் கதிர்கள் ஞாயிறன்று பூரிக்கும் பௌர்ணமித் திதியில் கிளைக்கின்றன. இவை செழித்தோங்கும் அற்புதத் தலங்களுள் ஒன்றாக விளங்குவது, தஞ்சாவூர் அம்மாப்பேட்டை அருகில் உள்ள மகிமாலை ஸ்ரீசந்த்ர மெளளீஸ்வரச் சிவஸ்தலமாகும்.
பிள்ளைக்குப் பேச்சு வரவில்லை, புத்தி மந்தமாக இருக்கிறது, பேச்சுத் தாமதமாகிறது என்ற வருந்தும் பெற்றோர், திங்கள் மற்றும் பெளர்ணமித் திதி நாட்களில், மெளன விரதமிருந்து மகிமாலைச் சிவத்தலத்தில் வெண்மை நிறப் பூக்களை வாழை நாரில் தொடுத்துக் குறைந்தது 10 முழம், 19 முழம் என கூட்டு எண்ணிக்கை ஒன்று வருமாறு பூமாலைகளைத் தொடுத்துச் சார்த்தி, மூக பஞ்சசதீ எனும் அரிய இறைத் துதிகளை ஓதி, ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு வர, நல்ல பலன்களைப் பெறலாம்.

பெற்றோர்களை மதிக்கும் பிள்ளைகள்

பிரம்ம சிருஷ்டியில் கடற் சங்குகள், மாடுகளின் கொம்புகள், யானையின் தந்தம், மயிற் பீலிகை போன்றவை, பிரம்ம மூர்த்தியாலேயே, படைப்பிற்கான சிவாவதாரமான ஸ்ரீகிராதமூர்த்தியின் நேரடிப் பார்வையில் படைக்கப் பெற்றமையால், இவை தோஷங்களைக் கடந்தவையாயும், சதை, உயிர்ப் பாங்குகளைக் கடந்ததான காலாதீத ஆத்ம சக்திகளையும் பூண்டுள்ளன.
இதனால்தாம் அந்தந்த யானை, மாடு, சங்குப் பூச்சி மடிந்தாலும், இவற்றிலிருந்து பெறப்படும் கொம்பு, தந்தம், சங்கு, கிளிஞ்சல் போன்றவை ஆன்மப் பூர்வமாகப் பிரிக்கப்பட்டு, எவ்விதமானத் தோஷங்களும் இல்லாமல், காலாதீத சக்திகளுடன், காலத்தைக் கடந்தவையாய்ப் போற்றப் பெறுகின்றன.

தந்த மூர்த்தி காளையார்கோவில்

தந்தங்களில் பல வகைகள், பல வண்ணங்கள் உண்டு. சாளக் கிராமம் போல, தந்தத்தினாலான தெய்வ மூர்த்திகள் விசேஷமான பலாதிபலன்களுடன் அருள்கின்றனர். பவானியிலும், திருவிடந்தையிலும், மேலும் பல தலங்களிலும் இறைவனுக்கான தந்தப் பல்லக்கு, பள்ளியறைக்கான தந்த ஊஞ்சல்களும், கட்டிலும் அமைந்துள்ளன. இவற்றின் தரிசனமே பலவிதமான கர்ம வினைகளைப் போக்க வல்லவையாகும்.
தந்தப் பல்லக்கு, தந்த வாகனம் போன்று தந்த நகை வகைகளுடன் இறைவன் காட்சியளிப்பதற்கும் பல காரண அனுகிரக சக்திகள் உண்டு. தந்தத்தினுள் இயற்கையான நாளச் சக்ரங்கள், யந்திரங்கள் பல உண்டு. இவற்றுக்கு இயற்கையான ஒளிப் பிரமாணம் உண்டாதலின், பகலிலும், இருளிலும் இவை தேவசக்திகளைப் பரிமளித்துக் கொண்டிருக்கும் என்பதால்தான், இவற்றை எவ்வளவு நேரம் தரிசித்துக் கொண்டே இருந்தாலும், இவற்றிலிருந்து தெய்வீக சக்திகள் பரிமளித்து, பரிணமித்துக் கொண்டே இருக்கும்.
தந்தத்தின் ஆத்மப் பிரவாக சக்திகள் பரிமளிக்கும் விசேஷமான தினங்களுள் வ்யதீபாதம் மற்றும் வைதிருதி யோக நாட்கள் மிகவும் முக்கியமானவையாம். . இந்த இரண்டு யோகக் காலத்திலும் ஆதவப் பரிமாணங்கள் 180, 360 கோண டிகிரியில் அமைவதால், இவை பித்ரு சக்திகள் நிறைந்த நாட்களாகவும் விளங்குகின்றன.
உண்மையில் மஹாப் பிரளயத்திற்குப் பின்னான சிருஷ்டிக்கானக் கிருத்தியக் காலத்தில், தந்தக் கோல் கொண்டே பிரம்ம லோக தேவதா மூர்த்திகளால் ஜீவ சரீரங்களுக்கு உணர்வுகள் எழுப்பப் பெற்றன. இவ்வாறு ஜீவன்களுக்கு உணர்வு என்ற கிருத்ய சக்திகள் உருவாக்கப் பெற்ற பிறகே, நாளடைவில் தந்த வழிபாடு நடைமுறைக்கு வந்தது.
அஷ்ட தந்தம், அஷ்டாட்சர தந்தம் எனத் தந்த ஒலிகளும் பல வகைகள் உண்டு. தந்த அனுகிரக சக்திகள் பூணூல், நெற்றித் திருச் சின்னம் வழியாக உடல்நாளங்களை அடையும்.
வ்யதீபாதம், வைதிருதி யோகம் நிரவும் நாட்களில் தந்த வடிவ மூர்த்திகளைத் தரிசித்து அர்க்யம், தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானது.
பெற்றோர்களிடம் உள்ள மனப் பிணக்குகள் அகல தந்த மூர்த்திகளின் பூஜை, தரிசனம் மிகவும் உதவும். இத்தகைய யோக நாட்களில் நீண்ட தந்தமுடைய யானைக்கு உணவளித்து, பல் இல்லாத முதியோர்கள் உண்ணும் வகையில் மென்மையான உணவு வகைகளையும் அளித்தலால், குடும்பத்தில் பெற்றோர்களிடம். பெரியோர்களிடம் உள்ள பிணக்குகள் அகல உதவிடும்.

நூபுர மங்களம்

சங்கு, கண்டா மணி மற்றும் கோயில் பூஜை வாத்யங்களில் இருந்து மிகவும் சக்தி வாய்ந்த அனுகிரகங்களைத் தரும் பலவிதமான இறையியல் ஒலிகளும் எழுகின்றன.
உலகியலில் ஒவ்வொரு காரியத்திலும் சங்கல்ப வாச பலன்கள் என்ற உத்தமமான பலன்கள் உண்டு. அதாவது, சொந்தக் காரியங்களில் சுயநலமான சங்கல்ப எண்ணங்கள் இருக்கும். ஆனால் ஆலயப் பூஜைகளில், அன்னதானத்தில் எழும் ஒலி, ஒளி சக்திகளில், சப்தங்களில், ஒலியொளிப் பிரமாணங்களில், சமுதாயப் பூஜையாக, யாவர்க்கும் நலனளிக்க வேண்டி அமைவதால், ஆலயத்தில் மலரும் ஒவ்வொரு ஒலியும், ஒளியும், மலரும், அட்சரமும் விதவிதமான நல்வர சக்திகளைப் பூண்டு வரும்.
இவற்றில் நல்சக்திகள் இயற்கையாகவே இறைமார்கத்தில் இருந்து பொழிவதால், மென்மேலும் இவற்றிலிருந்து பல்வகை இறைசக்திகளும் எப்போதும் விருத்தி ஆகிக் கொண்டே இருக்கின்றன. எவ்வாறு கார்த்திகை மாதத் திருக்கார்த்திகைத் தீபத்தன்று உலகெங்கும் ஒவ்வொரு வீட்டிலும், யாங்கணுமாய் மாலையில் ஏற்றப்படும் தீப விளக்கில், அருணாசலத் தீப சக்திகள் கூடுகின்றனவோ, இதே போல, ஒவ்வொரு ஊரிலும் உள்ள மிகவும் பழமையான ஆலயப் பூஜையில் எழும், ஒலி, ஒளி சக்திகள் யாவும் அந்தந்த ஊர்களில் உள்ள இல்லங்களில் தினமுமே நிரவுகின்றன.

ஸ்ரீகணேச மூர்த்தி
ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

இவ்வாறு தினசரி ஆலயப் பூஜைகளில் எழும் நல்வரசக்திகளை, நன்கு அனுகாரிய சித்சக்திகள் நிறைந்ததாய்ப் பெற்றிட வேண்டுமே! தினமும் மூன்று வேளையுமே, அல்லது காலையிலும், மாலையிலுமாவது விளக்கேற்றி, மணி ஒலித்து, இறைவனுக்குப் பிரசாதம் படைத்தால்தானே ஒலி, ஒளிப் பூர்வமாக இறைநல்சக்திகள், நல்வரங்களாக இல்லத்தில் சேரும்!
இவ்வாறு ஆலயத்தில் இருந்து வீட்டை வந்தடையும் நிஷ்காம்ய நல்தபோபல சக்திகள்தாம், வீட்டில் ஆற்றப் பெறும் பூஜா பலன்களையும் நன்கு விருத்தி செய்து தருகின்றன. இவைதாம் வீட்டின் எட்டுத் திக்குகளிலும் நின்று வீட்டையும், குடும்பத்தினரையும் காக்கின்றன. சூரிய, சந்திர, நவகிரக, நட்சத்திரங்களின் நல்வர சக்திகளையும் கிரகித்துத் தருகின்றன.
இவ்வாறாக கோயில் அமைந்த ஊர்களில் எல்லாம், பலரும் அறியா வண்ணம் தெய்வீக சக்திகள் ஆலயப் பூஜா சக்திகளாக பரவிக் கொண்டுதாம் இருக்கின்றன. இதனால்தான் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்'' என்ற முதுமொழி பிறந்தது.
மேலும் அவரவர் அணியும் மாங்கல்யம், கடுக்கன்கள், வளையல்கள், பூணூல், ருத்ராட்சம், மணி கங்கண் போன்றவற்றிலும் இத்தகைய நல்தவசக்திகள் தங்கி, உடல், மனம், உள்ளத்தையும் சுத்தப்படுத்தி, அவ்வப்போது வளமாக்கியும், புத்திச் செறிவையும் தருகின்றன.
இயற்கையாகவே நூற்கப் பெற்ற தக்களி நூலாலான பூணூலை அணிதலில் கூடுதலான விசேஷமான தெய்வீக சக்திகள் கிட்டுகின்றன. மாங்கல்யம் போல ஜாதி, இன, மத வேறு பாடின்றி யாவரும் நல்லதோர் இறைச் சின்னமாக, விபூதி, குங்கும், ருத்ராட்சம் போல, பூணூலையும், இதிலும் மிகவும் விசேஷமாக, தக்களியால் நெய்யப் பெற்றப் பூணூலை நன்கு அணிந்திடலாம்.
பூணூல் அணியும் பழக்கம் இல்லாதோர் தக்களி நூலால் ஆன திரிகளால் விளக்கேற்றி வழிபடுதல் வேண்டும். படையல்கள், சுபகாரியங்கள் மற்றும் திருமணத்தின் போது மட்டும் சில குடும்பங்களில் பூணூல் அணிவார்கள். இதுவாவது தக்களியால் நெய்தப் பூணூலாக இருப்பது நன்று.
நூல் வகை அம்சங்களில் ஒலி, ஒளி சக்திகள் நிறையச் சேரும் என்பதால்தான், விளக்குத் திரி, மாங்கல்யம், பூணூல், கும்பத்தைச் சுற்றிப் பின்னப் பெறுபவை யாவும் நூலால் அமைகின்றன.
யானையின் துதிக்கையால் பூணூல் அணியப் பெறும் நல்வைபவமும் உணடு. பொதுவாக, 80, 100 ஆண்டுகளாகக் கோயில் யானையாக இருக்கும் பாக்யம் பெற்ற யானையில் துதிக்கையில் இருந்து தக்களிப் பூணூல், மாங்கல்யச் சரடை ஆசியாகப் பெற்று அணிதல் கும்பாட்சர சக்திகளைத் தந்து, ஆயுள் விருத்தியையும், நற்சந்ததி அபிவிருத்தியாகவும், சந்தான பாக்ய அனுகிரகமாகவும் வந்தமையும்.
நூபுர மங்கள வாரமாகிய செவ்வாயில், அக்னி மண்டல மஹரிஷியான துர்வாச மாமுனி, அக்னி கோளமாகிய செவ்வாய்க் கோளத்தில் நூல்சக்திப் பூஜைகளை ஆற்றுகின்றார். எனவே, செவ்வாய்க் கிழமைகளில் காயத்ரீ மந்திரத்தை நிறைய ஜபித்தல் விசேஷமானது. கைகளில் தர்பை  தக்களி நூல், தக்களிப் பூணூல், தக்களி நூல் திரிகளை வைத்துக் கொண்டு, காயத்ரீ மந்திரம் நிறைய ஜபித்து, இத்திரிகளால் ஸ்ரீதுர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுவது, துர்வாச மகரிஷியின் ஆசிகளைப் பெற்றுத் தரும்.
நூபுர கங்கைத் தீர்த்தம் உள்ள தலங்களில் (பழமுதிர் சோலை) வழிபடுதல் பித்ரு தோஷங்கள் நீங்கிட உதவும்.

எறும்புகள் தரிசிக்கும் கிரகங்கள்

குரு, சூரியன், சந்திரன், புதன் போன்ற கிரகங்களில் அசைவுகள் வானத்தில் மட்டுமே நிகழ்கின்றன என்பது தவறானதாகும். இச்சலன மாற்றங்கள் மனித உடலிலும் தக்க விளைவான மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன என்ற உண்மையை உணர்த்துவதே அதியற்புத ஜோதிட மெய்ஞான விஞ்ஞானமாகும்.
இத்தகைய ஜோதிப் பூர்வமான சத்திய விளக்கங்களை, நாம் அட்டவணை, அட்சர வடிவில் எளிமையாக அறிந்து உணரவே பஞ்சாங்கம் பிறந்தது. இன்றைய விஞ்ஞான டெலஸ்கோப் அறிவதை வெறும் சுவடிகள், சிலேட்டு, குச்சி, பலப்பம் கொண்டு நம் முன்னோர்கள் அறிந்தனரெனில் என்னே அவர்களுடைய அதியற்புத மூளைத் திறன்!
வித்யாகாரக சக்தி அதாவது அறிவுக் கிரணங்கள் விருத்தியாகும் நாளான புதன் கிழமை தோறும் அவர்கள் வானியல் சாத்திர மந்திரங்களை ஓதி, பித்ருக்கள், மஹரிஷிகள், சித்தர்களைத் தொடர்பு கொண்டு எண்ணற்ற வானியல் சாத்திரத் தெய்வீக ரகசியங்களை நமக்குத் தந்துள்ளனர். எனவே, தினந்தோறும் அரை மணி நேரமாவது இரவில் நட்சத்திரங்களைத் தரிசித்து வந்தால் நல்வகையில் புத்தித் தெளிவு ஏற்படும். கண் பார்வை மேம்படும். நல்ல நினைவாற்றல் உண்டாகும். இதிலும் புதன் தோறுமாவது, வானத்தைக் கோயிலாகக் கொண்டு, ஒவ்வொரு நட்சத்திரத்தையும் ஒரு சன்னதியாகக் கொண்டு வழிபட்டு வருக!

ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

சந்திராஷ்டமம் என்பது அவரவர் ராசிக்கு எவ்விடத்தில் சந்திர கிரகம் அமையும் நிலை என நாமறிவோம். உடலைப் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து மனதை (சந்திர) லக்னமாக வைத்து, எட்டாவது பங்கில் உடல் பகுதி எங்கு அமைகிறதோ, அந்தப் பங்கில் சந்திர கிரக ஆகர்ஷண சக்தி ஏற்படும் விளைவுகளைக் குறிப்பதே சந்திராஷ்டம விளைவுகள் ஆகும். இவ்வாறு ஒவ்வொரு கிரகத்தையும் லக்னமாக அமைத்துப் பகுத்துப் பார்ப்பதும் உத்தம ஜோதிட ஞானப் பூர்வமானதாகும்.
அனைவருக்குமே சந்திராஷ்டம விளைவுகள் ஏற்படும் என்றாலும், சந்திர ராசி, சந்திர லக்னம், சந்திரன் அமையும் ராசி போன்றவற்றைப் பொறுத்தும் விளைவுகள் மாறுபடும்.
ஜோதிடம், எண் சாஸ்திரம், (கை) ரேகை சாஸ்திரம், சகுன சாஸ்திரம் ஆகிய நான்கும் நிறைந்ததே வானியலாகும். இதைத் தான் நாலும் தெரிந்தவன் என்று உரைப்பார்கள். இதற்குச் சதுர்த்த சாம்பவீய சக்திகள் என்று பெயர்.
சங்கடஹரச் சதுர்த்தி, புதன் கிழமைகளில் மேற்கண்ட நான்கு சாத்திரங்களும் இணைந்து,
நோய் நீக்கும், நோய்த் துன்பங்களைத் தணிக்கும் காணாபத்யப் பூஜா சக்திகளையும்,
கர்ம வினைகளின் அழுத்தங்களைத் தணிக்கும் காணாபத்ய சாங்க்ய சக்திகளையும் அருளும் தினமாகும்.
வளர்பிறையில் மூன்றாம் பிறை அமைவது போல், தேய் பிறையிலும் மூன்றாம் பிறை உண்டு. இதற்குப் பிறகு முழு நிலவைக் காண்பது அரிது. எனவே இதற்குச் சதுர்த்தச் சந்திரப் பூர்வம் என்று பெயர்.
ஒவ்வொரு எறும்பும் தனக்கு உணவு இட்டவருக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் இரு கால்களில் நிலை நின்று வானத்தை நோக்கி கிரக மூர்த்திகளைத் தரிசித்து எறும்புகளுக்கு உரிய சகுன சாஸ்திரத்தால் தனக்கு உணவிட்டவரின் கிரக நிலைகளை வானியல் பூர்வமாக அறிந்து அந்தந்த கிரக மூர்த்திகளிடம் அவருடைய நலன்களுக்காக வேண்டி வழிபடும். இவ்வகையில்தான் இன்றும் கேரளப் பகுதியில் பிப்பிலிய சகுன சாஸ்திரம் என்பதாக பச்சரிசி மாக்கோலச் சக்கரத்தில் எறும்பு நகரும் கட்டங்களை வைத்து வந்திருப்பவருக்கான பலன்களைச் சொல்லும் அற்புத சாஸ்திர முறை ஒன்றும் உண்டு.
எறும்புகளுக்கு அனைத்து கிரகங்களையும் தரிசிக்கும் அற்புதமான கண் பார்வை சக்திகள் உண்டு. புதன் கிழமைகளில் நவதானியங்களை ரவையாக்கிச் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, எறும்புகளுக்கும், பட்சிகளுக்கும் அளிப்பது நன்று. இதனால் கிரக சக்திகளைப் பற்றிய அறிவைப் பெற நாளடைவில் தக்க மார்கங்கள் கிட்டலாகும். மேலும் பத்னியருடன் நவகிரக மூர்த்திகள் அருளும் தலங்களில் வழிபடுதல் நன்று.

கற்பு அணையா அக்னி

பஞ்சமுக ஆஞ்சநேயர் என்பதான ஐந்து முக அனுமார் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகும். சனீஸ்வர மூர்த்தி நவகிரக மூர்த்தியாகவும், நவகிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்றவராகவும், ஆயுள்காரகராகவும், பல அவதாரிகைகளில், கரிநாளன்று இறைவனைப் பூஜித்து, இவற்றின் பலாபலன்களைப் பூலோக ஜீவன்களுக்காகப் பல்வகைகளிலும் நிரவுகின்றார்.
கரி என்பதற்கு - யானை, கருப்பு நிறம், அழுத்தமானவை - எனப் பல அர்த்தங்கள் உண்டு. சிவபெருமானை மதியாது தக்கன் ஆற்றிய வேள்வியில், தட்சனுக்கு வேள்விக்காக நெருப்பைத் தந்தமைக்காக, அக்னி தேவமூர்த்திக்கு நல்லன, நல்லன அல்லாதவை என அனைத்தையுமே எரிக்கும் சாபமும், ஏனையப் பலவிதமான சாபங்களுடன் வந்தடைந்ததல்லவா! இதனால், அக்னி மூர்த்திக்கு, கற்பு, பக்தி, அன்பு போன்ற புனிதமான சக்திகள் நிறைந்ததையும் அக்னியில் இருந்து பவித்ரமாகக் காக்கும் சக்திகள் பலவும் மறைந்தன.

ஸ்ரீபஞ்சமுக விநாயகர்
லால்குடி

அப்பர் சுவாமிகள் சூளையில் இட்ட நெருப்பில் இருந்து மீண்டாரன்றோ! சம்பந்தப் பெருமானின் தேவாரத் துதிகள் எழுதிய ஓலைச் சுவடி, தீயில் இருந்து மீண்டு பச்சைப் பதிகம் ஆயிற்றன்றோ!
தம்மை வந்தடைந்த சாபத்தால், பூவுலகில் விஷம், விஷமற்றவை, தீட்டுடையவை, தோஷமுடையவை, தீய பொருட்கள் என எல்லாவற்றையுமே தம்முடைய தீயில் பூவுலக மக்கள் எரிக்கும் தன்மைகள் வந்து சேர்ந்தது கண்டு , அக்னி மூர்த்தி மிகவும் வேதனையுற்ற போது, சனீஸ்வரர், சித்தர்களின், மகரிஷிகள் அளித்த நல்வழியில், அக்னி மூர்த்தியின் சாப விளைவுகளை ஓரளவேனும் தம்முள் ஏற்று, அவற்றை ஒரு சிறிதேனும் போக்கிடத் துணை புரிய முன் வந்தார்.
பஞ்சமித் திதி தோறும் பஞ்சமுக அனுமாரைப் பூஜிக்கும் சனீஸ்வரர், அக்னி மூர்த்தியின் சாப நிவர்த்திக்காக, இதன் பூஜா பலன்களாக, அக்னியில் அவியும் பொருட்கள் தன் கோளுக்கு உரிய அம்சங்களுள் ஒன்றான கருப்பு நிறத்தை அடையுமாறு செய்து, அவருடைய கடுமையான சாபத்தின் விளைவுகளால் ஒரு பங்கைத் தம்முள் இறையருளால் ஏற்று, அக்னி மூர்த்திக்குத் தன் அருட் தன்மையை ஈந்தார். இதற்கு ஈடாக, அக்னி மூர்த்தியும் சனீஸ்வர மூர்த்திக்காக, அடுப்புக் கரிக்கு வெந்த பொருள் எனும் தோஷங்களை நீக்கி, அடுப்புக் கரி, சாம்பலுக்குச் சில தெய்வீகத் தன்மைகளை அளித்தார். இதனால்தான் அடுப்புக் கரி ஆலயப் பூஜையிலும் சாம்பிராணி மற்றும் குங்கிலிய தூபத்திற்குப் பயன்படுகிறது, சாம்பலும் எச்சில் தோஷமின்றி விளக்குகள் மற்றும் பூஜைப் பாத்திரங்களைத் துலக்கவும், பல்பொடி மருந்தாகவும் பயன்படுகின்றது.
சனீஸ்வரரின் பூஜைப் பலன்களால் பேரானந்தம் கொண்ட அக்னி மூர்த்தி, கரிநாள் தோறும் சனீஸ்வரரைப் பூஜிப்போர்க்குப் பலவிதமான அக்னித் தோஷங்களை நிவர்த்தி செய்யவும் கருணை புரிந்தார்.

செவலூர் தீர்த்தம்

உதாரணமாக, புகை பிடித்தல் என்பது பவித்ரமான அக்னி தேவ சக்திகளை இழிவு செய்வதாகும். இதனால் குடும்பத்திற்கு அக்னி வகைத் தோஷங்கள், அக்னி வகைச் சாபங்கள் ஏற்பட்டு, தீ விபத்து, தீயில் அங்கங்கள் சிதைதல், நெருப்பில் சொத்துக்களை இழத்தல் போன்றவை ஏற்படும். எனவே, புகை பிடிக்கும் தீய செயலுக்கும் மேற்கண்டவற்றுக்கும் ஓரளவு பரிகாரமாக, தினமும் ஆலயத்திலும், அருணாசல கிரிவலம் வருகையிலும் நிறைய சாம்பிராணி தூபம் இட்டு வழிபட வேண்டும்.
அக்னி மூர்த்தியின் அருளால், கரிநாள் தோறும் அடுப்புக் கரி கொண்டு சமைக்கும் பொருட்கள், சாம்பிராணி, குங்கிலிய தீபத்தில் விசேஷமான அக்னி சக்திகள் வந்தமைந்து குடும்பத்தைக் காக்கின்றன. இதனால்தான் வெந்து மீந்த விறகுப் பொருள் எனினும், அடுப்புக் கரித் தணலில் ஏற்றப் பெறும் சாம்பிராணித் தூபம் மகத்தான அருட் சக்திகளைக் கொண்டு, சனீஸ்வரர் மற்றும் அக்னி மூர்த்திகளின் அருள் வரங்களை எளிதில் பெற்றுத் தருகின்றன.
ஆண், பெண் இருபாலாரும் கடைபிடிக்க வேண்டிய, புனிதமான கற்பு என்பதும் தீர்க்கமான, பவித்திரமான அக்னி சக்தியே.
அக்னியிலும் பல வகைகள் உண்டு. பொதுவாக அன்னதானத்திற்கான அடுப்பில் ஒளிரும் அக்னியில், மகத்தான அன்ன வாரண சக்திகள் பரிமளிக்கின்றன. இவை சுற்றுப்புற வானவெளி மாசைச் சுத்திகரிக்க வல்லவை. இடுபவர்க்கு மட்டும் பயன்கள் என்றில்லாது, சாம்பிராணி தூபம் மகத்தான இறைச் சமுதாயப் பொதுப் பணி அக்னி வகை வழிபாடாக, சமுதாயத்தில் அருகில் வாழும் ஏனைய ஜீவன்களின் மனம், உள்ளத்தையும் புனிதப்படுத்த வல்லதாகும்.
எனவேதான், வாரம் ஒரு முறையாவது (தினமும் ஒருவருக்கேனும் அன்னதானம் என்பதாக) வீட்டில் அன்னதானத்திற்காகச் சமைக்கையில், அதில் எழும் அக்னியானது வீட்டைச் சுத்திகரிக்கின்றது.
கரிநாள் என்பது சனீஸ்வரரே மும்மூர்த்திகளைப் பூஜிக்கும் மூலநாளன்றோ! இதில் பஞ்சமியும், அனுமாருக்கு உரிய மூல நட்சத்திரமும் சேரும் நாளில் வரும் கரிநாள் மிகவும் விசேஷமான பலன்களை அருள வல்லவை!
நிருதி மூலை, கன்னி மூலை போலச் சனி மூலை என்ற ஒன்று உண்டு. சனி மூலை எது என்று இன்று பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். பெயர் சொல்லா மூலிகை போல, பெரியோர்கள் மூலம் கேட்டுப் பெற வேண்டுவதான சில திரவிய அம்சங்கள், மாமந்திரங்கள், தெய்வீக விஷயங்கள் பல உண்டு. சனி மூலை பற்றி அறிவதுமான இதுவும் இவ்வகையில் பெரியோர்களிடம் கேட்டுப் பெறும் வகையைச் சார்ந்ததே!
பஞ்சமி திதி தோறும் ஆஞ்சநேயர் பஞ்ச மூர்த்திகளைத் தரிசனம் செய்து பூஜித்திடுகையில், அவருக்குப் பஞ்சவாரணப் பிள்ளையாராக, விநாயகர் தோன்றி அருள்கின்றார். ஆஞ்சநேயர். இப்பஞ்ச மூர்த்தித் தரிசனத்தை ஒவ்வொரு பஞ்சமித் திதியில் இன்றளவும் பெறுகின்றார். திருஅண்ணாமலை, மயிலாப்பூர் போன்ற தலங்களில் பஞ்ச மூர்த்தி தரிசனப் பெருவிழா உண்டு.
கரிநாளில், சனீஸ்வரரே வழிபடுவதாக பாவனை செய்து முதலில் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, விநாயகரின் பஞ்ச முகங்கள் தோன்றும் ஆஞ்சநேயரின் பஞ்சமித் திதிப் பூஜையிலும் பங்கு பெறுவதாக பாவனை செய்து பூஜித்திட, இவ்வாறு பஞ்ச முக விநாயகரைத் தரிசிக்கும் அனுமாருக்கு ஐந்து முகங்கள் தோன்றிப் பஞ்சமுக ஆஞ்சநேயராகவும் நமக்கு அனுமார் அருள்கின்றார். இவ்வாறு, அக்னி மூர்த்தி, அனுமார், சனீஸ்வரர் ஆகிய மும்மூர்த்திகளின் திரண்ட அருளைப் பெற, அடுப்புக் கரி வைத்து நிறையச் சாம்பிராணி தூபம் இடுதல் வேண்டும்.
வாரணம் என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. “ஸ்ரீ, திரு'' என்பது போல, ""வாரணமாயிரம்'' என்ற அழகிய சொற்றொடரே ஆயிரமாயிரம் (இறைபல) அர்த்தங்களுடன் பொலிகின்றது. பொதுவாக ஆரணம், சாரணம், வாரணம், தாரணம், காரணம் போன்ற சொற்கள் ஆழ்ந்த ஆன்ம அர்த்தப் பொதிவு நிறைந்தவை.
காம இச்சைகள், பண ஆசை, மரண பயம், வறுமை போன்றவற்றால் பலவீனமான மனதை, வைராக்ய சித்தம், நல்ல மனோதிடம் நிறைந்த வைரம் பாய்ந்த நல்மனதாக்கிட,"வாரணம்'' எனத் தொடங்கும் பாக்களைக் கரிநாளிலும், சனிக் கிழமைகளிலும், சனீஸ்வரருக்கு உரிய நட்சத்திர நாட்களிலும் ஓதி வருதல் வேண்டும். கருப்புக் கரியானது, பல யுகங்களில் ஆழ்ந்து புதைந்து, வராஹ யோகச் சுடரால் வைரமாக மாறுவது நாமறிந்ததே!
சாம்பிராணி தூபப் புகைக்கும் வாரணமுகில் என்ற விசேஷமான பெயருண்டு. எனவே கரிநாள் தோறும் நல்ல அடர்த்தியாக சாம்பிராணிப் புகை எழுப்பி வழிபடுதலால், ஆஞ்சநேயர், சனீஸ்வரர் மற்றும் அக்னி மூர்த்திகளின் திரண்ட அருளைப் பெற்றிடலாம்.
பொதுவாக உற்றம், சுற்றத்தின் பழிக்கு ஆளானவர்கள் இதனால் எழும் வேதனைகளில் இருந்து மீள, கரிநாளில் ஆற்றும் சாம்பிராணி தூப அக்னி வழிபாட்டுப் பலன்கள் நன்கு உதவும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam