முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

நோய் நிவாரண சக்திகள்

கிருஷ்ண பட்சம் எனப்படும் பெளர்ணமியை அடுத்த பிரதமை முதல் அமாவாசை வரையிலானத் தேய்பிறை நாட்களில் வரும் செவ்வாய், ஆயில்ய நட்சத்திர நாட்கள் நோய் நிவர்த்திக்கு, அறுவை சிகிச்சைக்கு மிகவும் ஏற்றவையாகும். இவற்றை வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

நமக்கென்ன, அவ்வளவாக நோய்கள் இல்லையே, நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும்? எனச் சுயநலமாக எண்ணாது, பிறருடைய நலன்களுக்காகத் தியாகமயமாக இதனை ஆற்றத் தொடங்குங்கள்! இந்நாட்களில் மணத் தக்காளிக் கீரை, அகத்திக் கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை போன்ற மூலிகை வகைக் கீரைகளை மட்டுமே உண்ணுதல், இத்தகைய உணவுப் பண்டங்களைத் தானமளித்தல் விசேஷமானதாகும். இதன் மூலமாகவே இந்நாட்களில் பரவெளியில் பரிணமிக்கும் மருத்துவ சக்திகளை ஈர்த்துப் பெற்றிட முடியும்.
வளர்பிறை, தேய்பிறைப் பட்ச நாட்களில் சூரிய, சந்திர கிரண சக்திகள் வேறுபடுவதால், இதனை ஒட்டி, அந்தந்தத் திதி, நாளுக்கு ஏற்ப காய்கறிகள், உணவு முறைகளை நம் முன்னோர்கள் அளித்துள்ளனர்.
உதாரணமாக, சனிக்கிழமை எனில் பொதுவாக, எள், கருவேப்பிலை, கரிசலாங்கண்ணி போன்றவற்றை நிறையச் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஞாயிற்றுக் கிழமை அன்று, கோதுமை, சூரியகாந்தி எண்ணெய்ப் பண்டங்கள், காராமணி, அகத்திக் கீரை, காரெட், அத்திப் பழம் போன்றவற்றைப் பயன்படுத்திட வேண்டும். திங்களன்று பால் வகைப் பண்டங்கள், இடியாப்பம், தயிர், வெண்ணெய், மிளகு போன்றவற்றைச் சேர்த்து உண்ண வேண்டும்.
மருத்துவ சக்திகளும் அக்னி சக்திகளும் நிறைந்து வரும் நாட்களில் திருச்சி அருகில் உள்ள வாத்தலை ஸ்ரீபாதாளேஸ்வரர் ஆலயத்தில், தூண்களில் முன்னுக்கு முன்னால் அமைந்தருளும் நரசிம்மர், சனீஸ்வர மூர்த்திகளை அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜித்தல் நல்ல துரிதமான, ஸ்திரமான பலன்களைத் தரும்.

ஆயில்ய நட்சத்திரம், செவ்வாயுடன் சேர்கையில் தோல், எலும்பு மற்றும் இருதயம் சம்பந்தமான நோய் நிவாரண சக்திகள் பரிமளிக்கும் தினமாக மலர்கின்றது. தோல் வியாதிகள் மிகவும் கடுமையாகி விட்டால், வருடக் கணக்கில் உடலில் இருந்து நிலை கொண்டு துன்புறுத்தும். பொதுவாக, பூர்வ ஜன்மங்களில் மனைவி, உற்றம், சுற்றம், பணியாட்களை வருடக் கணக்கில் துன்புறுத்தி வருகின்றோர்க்கு இவ்வகையான கடுமையான தோல் நோய்கள் அமையும். இதனை, இவ்வாறு மனப் பூர்வமாக, தெளிவாக மனதார உணர்வதே தோல் வகை நோய்த் துன்பங்களை ஓரளவு தணிக்கும்.
தோல் நோய்களுடன் வெறுப்புடன் போராடுவதை விட, தம்முடைய பூர்வ ஜன்ம வினைகளே இவற்றுக்குக் காரணம் என மனதாரத் தெளிந்து, மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திர நாளில் மருத்துவ சக்தித் தலங்களில் வழிபட்டு, ஆயில்யம், செவ்வாய் போன்ற மருத்துவ குண சக்தி நாட்களில் விரதமிருந்து பூஜித்து, மருந்துகளோடு மருத்துவ விருட்சங்கள், மருத்துவ சக்திக் கோயில்களில் பிரதட்சிணம் வந்து, இதோடு உரிய மருந்துகளையும் ஏற்று வருதலே நன்று.

ஸ்ரீவைத்யநாத சுவாமி திருத்தலம்
கல்யாணபுரம் வீரசிங்கம்பேட்டை

மாதம் தோறும் மருந்தீஸ்வரர், வைத்யநாத சுவாமி, அருமருந்து நாயகி, ஒளஷதபுரீஸ்வரர், வைத்தீஸ்வரன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைத்யநாதர், மருங்கப்பள்ளம், திருத்துறைப் பூண்டி, திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவையாறு அருகே கல்யாணபுரம், சென்னை பூந்தமல்லி, திருவள்ளூர், நேமம், சென்னை திருக்கச்சூர் ஸ்ரீமருந்தீஸ்வரர், திருக்கற்குடி, கோனேரிராஜபுரம், போன்ற 12 தலங்களில் மாதத்திற்கு ஒன்றாக சத்சங்கமாகப் பூஜையாகப் பலருடன் ஒன்று சேர்ந்து ஆலயத்தைப் பசுஞ் சாணமிட்டு மெழுகித் தூய்மை செய்து வருதல் நோய் நிவாரணத்திற்கான மகத்தான சமுதாய வழிபாடாகும்.
வளர்பிறை ஆயில்ய நாள் நோய் நீங்க உதவும் தீர்த்த நீராடலுக்கானதாகும். தேய்பிறையில் ஆயில்யம் கூடும் செவ்வாயை, வாஸ்து மருத்துவ நாளாகச் சித்தர்கள் குறிக்கின்றனர். ஆயில்ய நட்சத்திரந் தோறும் விரதமிருந்து, கும்பகோணம் திருவிசநல்லூர் அருகே உள்ள திருக்கற்குடி ஸ்ரீஅருமருந்து நாயகி ஆலயத்தில், 64 வகை மூலிகைத் திரவியங்களால் காப்பிட்டு, 108 மூலிகைகள் நிறைந்த பஸ்மத்தால் அபிஷேகித்து வழிபடுதல், நல்ல நோய் நிவாரண சக்திகளைத் தருவதாகும்.
ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்திக்குச் செவ்வாய் ஹோரை நேரத்தில் தவனம், மரிக் கொழுந்து, வில்வம், துளசி போன்றவற்றால் இடைவிடாது குடும்ப சகிதம் தினமுமே அர்ச்சித்து வருதல் நல்ல உடல் பலம் மன பலத்தைத் தரும்.
செவ்வாய் கூடும் ஆயில்ய நாளில், மூலிகைகளுக்குச் சத்குருவாகப் பொலியும் ஸ்ரீஅகஸ்திய மாமுனி (கருவளர்ச்சேரி, பஞ்சேஷ்டி போன்றவை) எழுந்தருளி உள்ள ஆலயங்களில் மூலவருக்கும், அகஸ்தியருக்கும் பஞ்சகவ்ய அபிஷேகம் (பசு நெய் + பசும் பால் + பசுந் தயிர் + பசுஞ் சாணம் + பசுவின் கோமேயம் ஆகிய ஐந்து திரவியங்களால் ஆன அதீத மருத்துவ சக்திகள் நிறைந்தது) ஆற்றி, காராம் பசும் பாலால் அபிஷேகம் செய்து, பால் கோவா படைத்துத் தானமளித்து வருதலால், தோல் வகை நோய்க் கடுமை தணிய நல்வழிகளைப் பெறலாம்.

பழையன கழிதல் நலமே

பிரதோஷ நாட்களில், பிரதோஷத் திதியான திரயோதசித் திதி நிரவும் நேரத்தை ஒட்டிப் பிரதோஷத்தின் பல வகைகளும், பலா பலன்களும் அமைகின்றன. பிரதோஷ நாட்களில், நாள் முழுதும் திரயோதசித் திதி நிறைந்து வரும். சிலவற்றில் மதியம் தொடங்கும். இவற்றுக்கெல்லாம் நிறையக் காரணங்கள் உண்டு.
மண்டபத்தோடு கூடிய நந்தி, விமானக் கலசத்தோடு உள்ள நந்தி, இரட்டை நந்திகள், வாயிலைப் பார்த்துள்ள நந்தி, நின்ற நிலை நந்தி, மூக்குக் கயிறு அற்ற நந்தி, அம்பிகையின் வாகனமாக உள்ள நந்தி, வலது காலை முன் வைத்த நந்தி - என்றவாறாக, ஒவ்வொரு பிரதோஷ வகையிலும், அந்தந்தப் பிரதோஷத் திதிக் கால அமைப்பிற்கு ஏற்ப, எவ்வகை மூர்த்தி, நந்தி வகைத் தலத்தில் பிரதோஷ கால வழிபாடு அமைதல் வேண்டும் என்பதற்கான விதி முறைகள் யாவும், சித்தர்களின் நந்தியம்பலக் கலம்பகக் கிரந்தங்களில் குறிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீஅகத்திய பிரான் பஞ்சேஷ்டி

உதாரணமாக, ஒரு பட்சத்தில் திரயோதசித் திதிக் காலமானது, இரவு ஏழு மணிக்குத் தொடங்கி மறுநாள் பகல் மூன்று மணிக்கு நிறைவடைந்தால், அன்று மாலைப் பொழுதில் பிரதோஷத் திதி அமையாததாகின்றது அல்லவா! இதற்கான பிரதோஷ வழிபாட்டை - முந்தைய திதியிலா, பிந்தைய திதியிலா - எத்திதியில் ஆற்றுவது என அறிவதற்கான ஆலய ஆகம நியதிகளும் உண்டு. மாலைச் சந்தியா காலத்தில் அமையாத மேற்கண்ட வகையிலான மத்யமாவதிப் பிரதோஷ பூஜையை ஸ்ரீநந்தீஸ்வரர் (உ-ம் சென்னை திருவொற்றியூர்) எனப் பெயர் கொண்டு ஈஸ்வரன் அருளும் ஆலயங்களில் கொண்டாடுதல் மிகவும் விசேஷமானது. சில தலங்களில் சில ஆகமங்களுக்கு ஏற்ப துவாதசி பட்சத்திலேயே கொண்டாடும் வழக்கமும் நிலவுகிறது. பரிபூரண வைதீகத் தலங்களில் சதுர்த்தசித் துவக்க நாளில் பிரதோஷ பூஜையை வைத்துக் கொள்வர். எனினும் தக்க சத்குருவின் வழிகாட்டுதலைப் பெறுதலே நன்று.
இந்நாட்களில் ஸ்ரீகாலபைரவரை, ஸ்ரீமஹாகால பைரவராக பாவனை செய்து 64 விதமான அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டுப் பிறகு இவ்வகை மத்யமாவதிப் பிரதோஷ பூஜையைக் கொண்டாடுதல் வேண்டும்.

சித்தாமிர்த தீர்த்தம் வைத்தீஸ்வரன் கோவில்

திரயோதசித் திதி என்பது பூலோக ஜீவன்களுக்கென வடித்தளிக்கப் பட்டுள்ள பிரதோஷ நடனத்தின் கால வடிவாகும். தினசரியே நித்யப் பிரதோஷ நேரம் என்ற ஒன்று உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே! நித்யப் பிரதோஷ நேரமாக உரைக்கப் பெறும் காலமாகிய தினமும் மாலை 4 மணி முதல் 6.30 மணி நேரம் வரையான காலம், எத்தனையோ பூமிக் கோளங்களில் (பூமி ஒன்றல்ல) சிலவற்றில் பிரதோஷத் திதிக் காலம் அமைவதையும், ஆங்கே சிவப் பிரதோஷ பூஜைகள் நிகழ்வதையும் குறிப்பதாகின்றது.
ஆதிசிவன், நந்தியெம்பெருமானின் திருக்கொம்புகளின் இடையே திருநடனம் ஆடிய நந்நேரமே பிரதோஷம் என நாமறிவோம். ஆனால், சிவபெருமான் பிரதோஷ நடனம் ஆடிய காலமானது, நாம் எண்ணுவது போல ஒரு திரயோதசி மாலைக் காலமான நாலரை முதல் ஆறரை மணி வரையிலான நேரம் மட்டுமல்ல. பல கோடி யுகங்களுக்கு இந்தத் திருநடனக் காட்சி நிகழ்ந்து, எண்ணற்ற அருட்தலங்களிலும் புனரப் பெற்றதாகும். இவ்விடங்களில்தாம் இன்றும் பிரதோஷ பூஜைகள் நிகழ்கின்றன.
பிற தோஷங்கள் எதுவுமே இல்லாத நேரமே பிரதோஷமாகும். கலியுகத்திற்கும் கால தோஷம் என்ற ஒன்று உண்டு. இது சுப நேரங்களில் மறைகின்றது. பிரதோஷ நேரத்தில் தானே மறைவு படுகிறது. தற்காலத்தில் 24 மணி நேரமாக, 60 நாழிகையாக தினமானது குறிக்கப்பட்டுள்ளது அல்லவா! காலத்தைக் குறுக்கிக் காண்பிப்பதால் இதுவே கால தோஷமாகும். மேலும், கடவுள் அளித்துள்ள நேரத்தை நல்ல படியாகப் பயன்படுத்தாமல் இவ்வாறு காலத்தை தினந்தோறும் வீணாகக் கழித்த காலமே கால தோஷமாக மனித சமுதாயத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. இதற்காகத்தான் நம் முன்னோர்கள் பிறந்த தேதி என்ற ஒன்றை எழுதி வைத்ததே கிடையாதே, மேலும் வருடங்களுக்கு 2004, 2005 என வரிசையாக வரும் எண் வகையை அளித்திடாது, 60 வருடச் சுழற்சியாக, காலத்தைக் குறுக்காது, மீண்டும் பிரபவ, விபவ எனச் சுழன்று வருவதாக அமைத்தார்கள்!

ஸ்ரீபூமிநாதர் ஸ்ரீநடராஜர் ஸ்ரீஅங்கவளநாயகி திருநல்லம் கோனேரிராஜபுரம்

இவ்வாறு காலவிரயத்தால் மனித சமுதாயத்திற்கு வந்துள்ள தோஷங்களை எல்லாம் அவ்வப்போது நிவர்த்தி செய்யவே, 15 நாட்களுக்கு ஒரு முறை பட்சப் பண்டிகையாக பிரதோஷ காலம் வந்து சேர்கின்றது. பிரதோஷ நேரத்தில் ஆலயத்திற்குச் சென்று சற்று நேரம் இருந்து, இறைவனைச் சாஷ்டாங்கமாக வணங்குவதால் கூட, அபரிமிதமான புண்ய சக்திகள் திரண்டு, எல்லையற்ற வகையில் கால தோஷங்கள் நிவர்த்தி ஆகின்றன எனில், என்னே பிரதோஷ மஹிமை!
பிரதோஷ நடனம் அமைவதற்குக் காரணமான சிவ நடனம் நிகழ்ந்த காலமே நம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விஷயமாகும். நமக்கு ஓரளவு புரியும் வகையில் சொல்வதானால், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் நந்தியின் திருக் கொம்புகள் இடையே சிவ நடனம் நிகழ்ந்தது என உரைக்கலாம். ஏனெனில் ஆயிரம், பல்லாயிரம் என உரைத்தால்தான் மனித மூளையால் ஓரளவு புரிந்து கொள்ள முடியும்!
எனவே, பிரதோஷம் என்பது மனிதக் காலத்துக்கு அப்பாற்பட்டதாகக் காலப் பரிமாணத்தைப் பரந்து, நிரந்து, நிறைவு செய்வதாகும். எனவேதான், தினமும் கால பைரவரை, காலையும் மாலையும் வழிபடுவது என அமைத்திருப்பது, கால தோஷங்கள் நம்மைப் பற்றாமல் இருக்கவேயாகும்.

தினமும் நித்தியப் பிரதோஷ நேரமான மாலை நேரத்தில், மந்தகாசப் புத்தியை நிவர்த்தி செய்யும் வகையில்,
* மந்தாரைப் பூ, மந்தாரை இலையை வைத்துப் பூஜை,
* மந்தாரை இலையில் அன்னதானம் ஆற்றுவது விசேஷமாகும்.
தினமும் மாலை நேரத்தில் புத்திக் கிரணங்களை விருத்தி செய்யும், நல்ல நினைவாற்றலைத் தரும் ஆதித்ய ஹ்ருதயம் துதிகளை ஓதியும் வருதல் வேண்டும். ஸ்ரீஅகஸ்தியர் ஆதித்ய ஹ்ருதய சுலோகத்தை ஸ்ரீராமருக்கு உபதேசித்த பல தலங்கள் உண்டு. எனவே, சூரிய மூர்த்தியும், அகஸ்தியரும் எழுந்தருளி இருக்கும் சிவத் தலங்களில், பிரதோஷ நேரத்தில் ஆதித்ய ஹ்ருதயத் துதிகளை ஓதுதலால்,
* பழைய நினைவுகள், சம்பவங்களால் அடிக்கடி பாதிக்கப்படுவோர் தக்க நிவாரணம் பெறவும்,
* நல்ல ஞாபக சக்தி, நினைவுத் திறன் கூடவும் உதவும்.
* வயதானோர்க்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்பட்டுத் தன்னையும் வருத்திக் கொண்டு, பிறருக்கும் வேதனை தரும் நிலை மாறிச் சீரடைய உதவும்.
* பழைய நினைவுகளால் பிறரை வசை பாடி, வீட்டில் துன்பம் தரும் முதியோர்கள் வாழ்வில் சீர் பெறவும் உதவும்.
ஸ்ரீஆதித்ய ஹ்ருதய சுலோகம் ஓதி திருநின்றவூர் ஸ்ரீஹிருதயாலீஸ்வரர் ஆலயத்தில் வழிபடுவது நன்று.

மனத்தைப் பட்டாக்கும்
பட்டை லிங்க வழிபாடு

ஆஞ்சநேயரையும், சனீஸ்வரரையும் தாராளமாக வீட்டில் வைத்துப் பூஜிக்கலாம். ஆஞ்சநேய சுவாமியைத் தினமும் 24 முறையேனும் வலம் வந்து வணங்குபவர்கள், தமக்கு நல்ல ரட்சா சக்திகளை, வீட்டிலும், அலுவலகத்திலும், தொழிலும் ஏற்படுத்திக் கொள்வது மட்டுமல்லாது, இவ்வழிபாடு ஒவ்வொருவருடைய அனுமார் பூஜையும், நாட்டையும் தார்மீக ரீதியாகக் காக்கின்றது என்பது இதன் விசேஷமான பலன்களாகும்.
நாடு, ஜாதி, மத பேதம் மனித மனத்திற்கே! விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் கூட இவை கிடையாது எனில், பகுத்தறிவுவாதி எனப் புகழ்ந்து கொள்ளும் மனிதன், விலங்குகளின், தாவரங்களின் சிற்றறிவு நிலையைக் கூட அடையாது, தன் ஆறறிவை அறியாமை, ஆணவம், அகங்காரம், சுயநலம், பேராசைக்கு அடகு வைத்துள்ளான் என்பது நன்கு தெரிகின்றது அல்லவா!

ராமபக்த சாம்ராஜ்யப் பேரண்டத்தைக் கட்டிக் காக்கும் அனுமார், தன்னை ஆழ்ந்த நம்பிக்கையுடன் வணங்குகின்ற அனைத்து நாட்டு மக்களையும், ஜீவன்களையும் காக்கின்றார். மேலும், அதர்மமமான, தீயவிதமான எண்ணங்களை பஸ்மம் செய்து நல்வழிப்படுத்துவதும் அனுமார் வழிபாட்டின் சிறப்பம்சமாகும். எத்தகைய தீயவர்களும் ஆஞ்சநேயரைத் தினமும் 108 முறை வலம் வந்து வணங்கிட, வாழ்வில் குறுகிய காலத்திலேயே நல்ல மாற்றங்களைக் காணலாம்.
ஒவ்வொரு நிமிடமும் தன்னை நம்பி வாழும் தன் பக்தர்களை, ஆஞ்சநேய சுவாமியே ஒவ்வொரு விநாடியும் காப்பாற்றுகிறார். கோயிலில் வைத்துத்தான் அவரை வணங்க வேண்டும் என்ற நியதி கிடையாது. தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், வீணையிலும் இருப்பார், வெற்றிலையிலும் இருப்பார். வியாழன் தோறும் சிவாலயங்களில் குரு ஹோரை நேரத்தில், அனுமாரப்பர் வீணா கானம் மீட்டி, சிவ பூஜையை, தட்சிணா மூர்த்திப் பூஜையாக ஆற்றுகிறார்.

ஒற்றுமையை வளர்க்கும் சண்டேச
மூர்த்திகள், நன்னிமங்கலம்

இல்லறத்திலும், தொழிலும் பலத்த மனக் கொந்தளிப்புகளுடன் வாழ்வோர்,
* கோயில்களில் ஆஞ்சநேயரின் திருமார்பிற்கு அரைத்த சந்தனத்துடன் புனுகு, ஜவ்வாது, அதிமதுரம், கஸ்தூரி, கோரோஜனை, புனுகு, குல்கந்து, பன்னீர் சேர்த்துக் காப்பிட்டு,
* அனுமார் எழுந்தருளும் தூணுக்கு முன்பாக குறிப்பாக, சென்னை - மப்பேடு ஆலய நவ வியாகரண பலிபீடத்தின் முன்பு ஏழை வித்வான்களைக் கொண்டு, வியாழனன்று குரு ஹோரை நேரத்தில் வீணைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்து, அவர்களுக்குத் தக்க சன்மானம், உதவிகள் அளித்து, ஏழைகளுக்குத் தாம்பூலத்துடன் வயிறார உணவளித்து வந்தால் எத்தகைய மனக் கொந்தளிப்புகளும் தீர நல்வழி பிறக்கும்.
ஆஞ்சநேயரை உளமாரப் பூஜிக்க, பூஜிக்க, வாழ்வில் நல்ல பலன்களைக் கண்ணெதிரிலேயே பெறலாம். உளமார எனில், முதலில் ஆரம்ப நிலையில் அவருடைய நாமங்களையே உரக்க ஓதி, ஓதி அவர் நினைவிலேயே இருத்தல் ஆகும்.
ஆஞ்சநேய உபாசனை நல்ல அறிவு வளர்ச்சி, ஞாபக சக்தி, தெளிந்த ஞானத்தோடு நல்ல பக்தியையும் ஊட்டுவதாகும். மேலும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப செயல்படும் ஞானம், செல்வம், சத்ரு நிவர்த்தி, குடும்பத்தில் சாந்தம், தம்பதியர் இடையே ஒற்றுமை, பித்ருக்களின் ஆசி, தன தரித்திர நிவர்த்தி, மித்ரு தோஷ ஜயம் எனப் பலவற்றையும் ஒருங்கே இணைத்துத் தருவதே அனுமார் வழிபாட்டின் சிறப்பம்சங்களாகும். பிள்ளைகள் தினமுமே ஸ்ரீஆஞ்சநேயரை வலம் வந்து வழிபடுதலே, கல்வியில் அவர்களுக்கு நல்ல பலாபலன்களைத் தருவதாகும்.
குடும்பத்தில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்துக் குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தித் தரக் கூடியதே ஆஞ்சநேய வழிபாடு. நல்ல குழந்தைச் செல்வத்தையும் நல்ல தனமாகத் தரக் கூடியவர். சுருக்கமாகச் சொன்னால், உண்மையாக வேண்டினால், எல்லாவித அனுகிரகங்களையும் கேளாமலேயே தரக் கூடியவரே ஸ்ரீஆஞ்சநேய சுவாமி.
ஆஞ்சநேயரை பிரம்மசாரிகள்தான் கும்பிடலாம் என்பதில்லை, சம்சாரிகளான குடும்பத்தாரும் தினந்தோறுமே ஆலயத்திலும், வீட்டிலும் தாராளமாகக் கும்பிடலாம்.

பட்டை லிங்கம் திருப்பட்டூர்

கற்பூரப் பூ என்பது இயற்கையிலேயே ஒளி தரும் தேவலோக நறுமணப் புஷ்பமாகும். மட்டிப்பால் விருட்சம் அருகே குறித்த பெளர்ணமி உச்சத்தில் மலர்வது. கற்பூரப் பூவும், கமலப் பூவும் அருகருகே இருக்கும்.
ஆஞ்சநேயர், வியாழனும் பூரமும் கூடும் நாளில் நவரத்ன வடிவ லிங்க மூர்த்திகளை வழிபடுகின்றார். திருவாரூர்ப் பகுதியில் (திருவாரூர், நாகப்பட்டினம், திருக்காறவாசல் போன்ற சப்த விடங்கத் தலங்கள், குளித்தலைக்கு அடுத்த கரையான ஈங்கோய் மலை) மரகத லிங்க வழிபாட்டுத் தலங்கள் உண்டு. வியாழப் பூரத்தில் குரு ஹோரை நேரத்தில் ஆஞ்சநேயர் மரகத லிங்க வழிபாட்டை மேற்கொள்கின்றார். செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் மார்கத்தில் உள்ள திருவடீச்சரமும் பச்சை வண்ணச் சுயம்பு லிங்கத் தலமாகும்.
மரகத மூர்த்திக்கும் உரித்தான ஒளிப் பட்டை இரகசியங்களும் உண்டு. ஒவ்வொரு பட்டையிலிருந்தும் கோடிக் கணக்கான ஒளிக் கதிர்கள் பிரகாசித்து வெளி வரும். இவற்றைப் பூலோகத்தில் சாதாரணமாகப் பெற முடியாது. மரகதப் பட்டை உள்பிரிசப் பிரதிபலிப்புப் பிரகாசக் கற்றைகளாகவே நாம் பூவுலகில் பெற முடியும். இவை வியாழனும் பூரமும் கூடும் நாளில் ஆற்றப் பெறும் நவரத்தினக் கல் வடிவ சிவலிங்கப் பூஜையில் பரிணமிப்பதாகும்.
வியாழன் அன்று மரகத லிங்க தரிசனம், நவரத்ன லிங்க தரிசனம், ஸ்படிக லிங்க தரிசனம், பட்டை வடிவ லிங்க தரிசனம் மிகவும் விசேஷமானவை! இவற்றுக்குப் பட்டாடை சார்த்தி, ஆஞ்சநேயர் எப்போதும் உறையும் ராமநாம கீர்த்தனப் பரலாதிப் பரலாக,
ராமநாத ராமலிங்க ராமநாம தாரகம்
ஆஞ்சநேய ரத்னலிங்க பூஜமார்க போதகம்
ராமநாத ராமலிங்க ராமநாம தாரகம்
ஆஞ்சநேய ஞானதீப சோபனாதி பாவனம்
அனுமாரப்பா அனுமாரப்பா அஞ்சனபுத்ர அனுமாரப்பா

ஆகமம் நீயே, ஆசான் நீயே, எல்லாப் பொருளும் ஆனாய் நீயே
கண்டேனறியேன், காணாதறியேன், விண்டேனறியேன், வினையானறியேன்
கண்கண்டானே! பண்புப் பொருளே! கணகதி புரபரி ராமக் கருவே
என 1008 முறை ஓதி, 108 முறையாவது ஸ்ரீஅனுமாரப்பனை வலம் வந்து வணங்கி, சிவாலயத்தில் பட்டை லிங்கத்திற்கு இரண்டு பட்டாடைகள் சார்த்தி, ஒரு சிறு பட்டுத் துணியையாவது வஸ்திரப் பிரசாதமாகப் பெற்று, வீட்டில் வைத்துக் கொண்டு தினமும் இதனை முகத்திலும், மார்பிலும் வைத்து ஸ்பரிசித்து வர, கொந்தளிக்கும் மனதிற்குச் சாந்தம் கிட்டலாகும்.

தம்பதியர் ஒற்றுமை ஓங்க

தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவ தினமே பங்குனி உத்திரம் என நாம் நன்கு அறிவோம். மதுரை மீனாட்சி அம்மனின் திருமண உற்சவத் தினம் சித்திரை உத்திரத்தில் அமைகின்றது. பங்குனி உத்திர தினத்தன்று முருகன், சிவன், பெருமாள் ஆலயங்களில், தெய்வத் திருமண உற்சவத்தைத் தம்பதி சகிதம் கண்டு தரிசத்தலுடன், பலரும் தெய்வ மூர்த்திகளின் மாங்கல்ய தாரணத்தை நடத்துகையில், அதே நேரத்தில், தாங்களும் புதுத் தாலிச் சரடை ஏற்றுக் கொள்ளும் மங்களகரமான வைபவத்தை நடத்திக் கொள்கிறார்கள்.
மாங்கல்யத்தில் உள்ள தோஷங்களும், அறிந்தோ அறியாமலோ தங்களுக்குத் திருமணம் நிகழ்ந்த, சுப முகூர்த்த நாளில் சேர்ந்த கால தோஷங்கள், மாங்கல்யத்தில் உள்ள தங்கத்தில் படிந்துள்ள தோஷங்கள், இல்லற வாழ்வில் பிறருடைய கண் திருஷ்டி, பொறாமை, பேராசை தோஷங்கள் போன்ற பலவற்றையும் நிவர்த்தி செய்வதற்காகவே, பங்குனி உத்திரம், சித்திரை உத்திர நாளில் சுவாமியின் திருமண உற்சவ வைபவம் நிகழும்போது, இல்லறப் பெண்கள் புதுத் தாலிச் சரடை மாற்றிக்கொள்கின்ற புனிதமான கைங்கர்யத்தை நடத்துகின்றார்கள்.

இடையாற்றுமங்கலம் திருத்தலம்

ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் இந்த அற்புத நிகழ்ச்சியானது, ஆலய வைபவமாகவும் இல்லற வைபவமாகவும் நன்கு பிரகாசித்து வருகின்றது. இந்நாளில் புதுத் தாலிச் சரடுகளை வஸ்திரங்கள், மெட்டி, வளையல்கள், ரிப்பன், மருதாணி, கண் மை போன்றவற்றுடன் சேர்த்து அளிப்பதும் இல்லறத்திற்குச் சாந்தம் தரும் புனித சக்திகளை அளிக்கும்.
மேலும் வசதி இன்மை காரணமாக வெறும் தாலிச் சரடு அணிந்திருப்போர்க்கு, ஒரு குண்டுமணித் தங்கமாவது தானமாக அளித்தல் மிகவும் விசேஷமான பலன்களைத் தரும். தற்காலத்தில் பெரும்பான்மையானோர், சரியாகவே சுப முகூர்த்த நாட்களைக் கணிப்பதில்லை! ஏனோ தானோவென்று நாட்களைக் குறித்தல் என்பது ஒரு தம்பதியரின் விதியோடு விளையாடுவது போலானது. ராகு காலம், எம கண்டம், சுப நாள் சுப திதி, சுப யோகம், சுப நட்சத்திரம் போன்றவற்றை மட்டும் கவனித்துக் கணித்தல் போதாது. இதில் தம்பதியரின் அந்தந்த ராசிக்கான சூன்ய திதியையும் ஒதுக்குதல் வேண்டும். ஆனால், வழக்கில் பிரபலாரிஷ்ட யோகம் எனப்படும் கூடா நாள், மாப்பிள்ளை பெண்ணிற்கு உரிய சூன்ய திதி நாட்களில் எல்லாம் தற்காலத்தில் சுப முகூர்த்த நாளாக வைத்து விடுகின்றார்கள். இது தம்பதிகளின் இல்லற வாழ்க்கையை பாதிக்கும்.
இவ்வாறு தவறாகக் கணித்துக் கொடுத்தவர்களின் குடும்பத்திற்கும் பலத்த தோஷங்களை அளிக்கும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
இவற்றிற்கு எல்லாம் ஓரளவேனும் பரிகாரம் பெறவேதான் பங்குனி உத்திர நாட்களில் ஏழைகளுக்கு மாங்கல்ய தானம் செய்வதும் வாழ்வில் அவ்வப்போது மாங்கல்ய தானங்களை அளித்துக் கொண்டிருப்பதும், பல வகையான தோஷங்களையும் தீர்க்க உதவும். திருச்சி லால்குடி அருகே உள்ள இடையாற்றுமங்கலம் ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் ஆலயத்தில் உத்திர நட்சத்திரம் தோறும் வழிபட்டு, ஏழைகளுக்கு மாங்கல்ய தானம் அளித்து வந்திடில், பலத்த மன வேறுபாடுகளுடன் வாழ்கின்ற தம்பதியர்களுடைய மனம் ஒத்து நல்வாழ்க்கை அமைந்திட, இங்கு எப்போதும் சூக்குமமாகத் தவம் புரிந்து வரும் மாங்கல்ய மகரிஷி உதவுகின்றார்.
உலகெங்கும் நிலவும் தெய்வத் திருமூர்த்திகளின் திருமண உற்சவங்களில், இறையருளால் மாங்கல்ய மகரிஷி பிரசன்னம் ஆவதால் குடும்பத்தில் மன வேறுபாடுகளால், மனக் கொந்தளிப்புகளால் வாடுகின்ற தம்பதியர் இங்கு மாங்கல்ய மகரிஷியின் திருவடியைச் சரணடைந்து இத்தலத்தில் உழவாரப் பணிகள் மற்றும் பல்வகை இறைப் பணிகளை ஆற்றி வருதல் அற்புதமான முறையில் இல்லற வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களைப் பெற்றுத் தரும்.

பிரச்னை இல்லாத ஆபரேஷன்

ஆக்கப் பூர்வமாக வளர்ச்சிக்கு உதவுகின்ற ஞாயிறன்று வெட்டுதல், அறுத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுதல் ஆகாது. இதனால்தான், ஞாயிறன்று சமைக்கப்படும் பண்டங்களைக் கூட, அரிவாள் மனையில் அறுக்காது, அப்படியே, முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய பழங்கள், காய்கறிகள், திரவியங்களை வைத்து உணவு வகைகளை ஏற்றமையால்தான், நம் முன்னோர்கள் எந்நாளிலும் எந்நேரத்திலும் சுறுசுறுப்பான மூளை, புத்திக் கூர்மை, துரிதமான அசைவுகள் நிறைந்த தேகப் பாங்கைப் பெற்றிருந்தார்கள்.

ஆனால், தற்போதோ பொது விடுமுறை என்ற சாக்கில் ஞாயிறன்றுதான் உலகெங்கும் ஷேவ் செய்து கொள்தல், தலைமுடியை வெட்டுதல் போன்ற நன்கு வளர்ந்தவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் காரியங்களை நிகழ்த்தி வருவது மிகவும் வேதனைக்குரியது. ஆதித்ய ஹ்ருதயம் மந்திரங்களை ஓதுதற்கு உத்தமமான நாளே ஞாயிறு ஆகும்.

ஸ்ரீகண்வ மகரிஷி அவளிவநல்லூர்

ஞாயிறு அன்று ஓதப் பெறும், ஜபிக்கப் பெறும், தியானிக்கப் பெறும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்திற்குப் பன்மடங்குச் சக்திகளைக் கிரகித்துத் தரவல்ல பண்பு உண்டு. ஞாயிற்றுக் கிழமை அன்று சூரிய லிங்கத்தை வழிபடுதலும், சூரிய மூர்த்தி தம் கிரணங்களைப் பெய்து, அதாவது சூரிய ஒளி படும் லிங்கத் தலங்களில் பூஜித்தலும், நல்ல புத்திக் கூர்மையைப் பெற்றுத் தரும். குறிப்பாக, அலுவலகக் கணக்குகள், ஆடிட் கணக்குகள் போன்றவற்றில் நல்ல திறமை பெற்றிட, ஞாயிறு தோறும் இத்துறையில் உள்ளவர்கள் சூரிய மூர்த்தி வழிபட்ட தலங்களில் பூஜித்து வருதல் வேண்டும்.
மகிழ மரத்திற்குச் சூரிய சக்திகள் நிறைய உண்டு. ஒரு வகை பாஸ்கர சக்தி மகிழ மர வகையில் ஆதவப் புலம் எனப்படும் அபூர்வமான ஆரஞ்சு வண்ணத்தில் காட்சி தருவதாகும். மரங்களில் உள்ளதைப் பறிக்காது, கீழே தானாக உதிர்ந்து விழுந்து கிடக்கும் மகிழம் பூ மரக் கனிகளை சுத்தப்படுத்தி, பதனப்படுத்தி, பச்சைக் கற்பூரம், புனுகு, ஜவ்வாது, குங்கிலியம் போன்றவற்றைக் காய வைத்தச் சந்தனத்துடன் சேர்த்து, சாம்பிராணி தூபத்தில் இட்டு, ஞாயிறு தோறும் சூரிய லிங்கத் தலங்கள், சூரியன் வழிபட்ட தலங்களிலும் வீட்டிலும், ஆதவ தூபம் இட்டு வருதலால், போரடிக்கின்றது என்று சொல்லுவதற்கு மூல காரணமாக இருக்கும், மூளையில் அசமந்தம் அகன்று, சுறுசுறுப்பான மூளைத் தன்மை கிட்டிட உதவிடும்.
ஸ்ரீசூரிய நாராயண சுவாமி அருளும் தலங்களிலும் மற்றும் சூரியூர், பாஸ்கர ராயபுரம், சூரிய மங்களம், ஆதித்யபுரி போன்ற சூரிய நாமத்தை உடைய ஊர்களில் உள்ள ஆலயங்களிலும், சூரிய வழிபாடு நிகழ்த்துதலால், புத்திச் சலனங்களால் அடிக்கடி தவறு செய்பவர்கள், ஞாபக மறதியால் நஷ்டம் அடைபவர்கள், கணிசமான தீர்வுகளைப் பெற்று நல்ல முன்னேற்றங்களைப் பெற உதவும்.
ஞாயிறு தோறும் சூரிய மண்டல மகரிஷியான கண்வ மகரிஷியின் (சென்னை அருகே ஞாயிறு திருத்தலம்) தரிசனத்தைப் பெற்று, சூரிய மூர்த்தி வழிபட்ட லிங்கத்திற்கு நேத்ராவ்ருத்தித் தைலக் காப்பிட்டுப் பூஜித்து வருதலால், ஆபரேஷன் செய்து கொண்டவர்களுக்கு மேலும் பிரச்னைகள் வராமல் தடுக்க உதவும்.

பெண்கள் பீதி அடைய வேண்டாம்

முனீஸ்வர மூர்த்திகள் பலரும் ஈஸ்வரப் பட்டம் பூண்டிருப்பதாலும், பலருக்கும் முனீஸ்வரர் குலதெய்வமாக விளங்குவதாலும், முனீஸ்வரரை யாவரும் வீட்டில் தாராளமாக வைத்துப் பூஜிக்கலாம். இவ்வாறு வீட்டில் குலதெய்வத்தை. இஷ்ட தெய்வத்தை வைத்து வழிபடுவதால், பல்லாயிரமாண்டுப் பாரம்பரிய வழிபாடு காரணமாக, பால், பழம், பிரெட் என அனைத்தையுமே அவ்வப்போது படைத்துப் படைத்து, உங்கள் குடும்பத்தில் ஒருவர் எப்போதும் கூடவே தற்காப்பிற்கு இருப்பது போல, குலதெய்வத்துடன் ஒரு அன்யோன்யமான தெய்வீகப் பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

துயர் தீர்க்கும் துர்கை
நன்னி மங்கலம் சிவாலயம்

முனீஸ்வரருக்கு உரிய சக்கரங்கள், காயத்ரீ மந்திர வகைளும் உண்டு. ஓம் ஸ்ரீமுனீஸ்வராய நம: என்பது ஜாதி, மத பேதமின்றி யாவருமே ஓதிப் பயன் பெற வல்லதாகிய ஸ்ரீமுனீஸ்வரருக்கு உரித்தான எளிமையான மூல மந்திரம். தவ முனி, லலாட முனி, பச்சை முனி, லாட முனி, அரச முனி, ஆல முனி என்று பல்வேறு முனீஸ்வர தேவதைகள் உண்டு. முனீஸ்வரருடைய பெயர் தெரிந்தால் அந்தப் பெயருடன் ""ஓம் ஸ்ரீ'' சேர்த்து அதையே மூல மந்திரமாக ஜபிக்கலாம், எழுதி வரலாம்.
உதாரணமாக, தவ முனீஸ்வரர் என்பது முனீஸ்வரரின் பெயராக இருந்தால், ஓம் ஸ்ரீ தவமுனீஸ்வராய நம: என்று சொல்லி ஜபிக்கலாம், வழிபடலாம்.
நிறையப் பேருக்கு முனீஸ்வரர் குல தெய்வமாக இருந்தும், பலரும் முறையாக முனீஸ்வரரை வழிபடுவதில்லை. முனீஸ்வரருக்கு நிறைய தேவதைக் குழாம்கள் உண்டு. முதலில், முனீஸ்வரர். இவர்கள் மூலமாகவே எளிமையாக அருள்வார். மூதாதையர்களில் நிறையத் தபஸ் செய்து, உத்தமத் தெய்வீக நிலைகளில் பட்டம் பெற்றவர்கள், மூதாதையர்களில் உத்தமப் பித்ரு நிலைகளை அடைந்தவர்கள், பல குடும்பங்களுக்கும் குல தெய்வமாக, குலதெய்வத்தின் தேவதைகளாக அருள்பாலிக்கின்றார்கள்.
சில கோயில், மடங்களில் பாரம்பரியமாக மரகத லிங்கங்கள் உண்டு. இவற்றைக் காப்பவர்களும் அருகில் உள்ள முனீஸ்வரர்களே! இவற்றில் சிறப்பான திருத்தலங்கள் செங்கல்பட்டு அருகே திருவடிச்சூலம், லால்குடி அருகே சாத்தமங்கலம், திசமுகச்சேரி, சிதம்பரம், திருஅண்ணாமலை, உத்தரகோச மங்கையில் மரகத நடராஜர், ராமநாதபுரம், திருக்காறவாயில், நாகப்பட்டினம் போன்றவையாகும். மரகத லிங்கத்திற்கு லிங்கோத்பவ மரகத சக்திகள் என்ற அற்புதமான 300 வித லிங்க சக்தி கூறுபாடுகள் உண்டு.
திருவாதிரை நட்சத்திரம் தோறும் இத்தகைய மரகத லிங்க மூர்த்திகளுக்கு முனீஸ்வர மூர்த்திகளால் அமிர்தாபிஷேகம் நிகழும். இவற்றின் தெய்வீக சக்திகளைச் சாதாரண மனிதப் பகுத்தறிவு சக்தியால் புரிந்து கொள்ள முடியாது. எனினும் மரகத லிங்க வழிபாட்டுப் பலன்களை மிக எளிதில் அருள வல்லதே ஸ்ரீபச்சை முனீஸ்வர வழிபாடாகும். இந்த முன்னூறு விதமான லிங்க சக்தி கூறுபாடுகளில்,

ஸ்ரீமுனீஸ்வர மூர்த்திகள்
திருஅண்ணாமலை

* குருத்திர(ள்) சக்தி
* கும்ப ருத்ர சக்தி
* மருத்திர சக்தி
* மாருதி ருத்ரகவித சக்தி
* கம்பத்ரய சக்தி
* அவத்ரய சக்தி
* மித்ரத்ரய வஸ்த்ர சுத்ர லிங்க சக்தி
* கவித்ர சக்தி
* கணாதிபத்ர சக்தி
* மாத்ருகா சக்தி , பித்ரு சக்திகள்
- போன்றவை மிகவும் முக்கியமான சக்திகள் ஆகும். இவற்றில் மாத்ருகா சக்தி, பித்ரு சக்திகளைத் திரட்டி அளிப்பவையே முனீஸ்வர வழிபாடுகளாகும்.
பெண்களுக்கு ஏற்படும் மன பீதிகளைத தணிக்க முனீஸ்வர வழிபாடு உதவும். குலதெய்வ மூர்த்தியை முறையாக வழிபடாதிருப்போர், முதலில் எவ்வகை முனீஸ்வரரையும் வணங்கி, மன்னிப்புக் கோரி, பிறகு விரைவில் குலதெய்வ வழிபாடுகளை ஆற்றிக் கொள்ள வேண்டும். குலதெய்வ வழிபாடு முறையாக இல்லாவிடில், குடும்பத்தில் அடிக்கடி மனத்தாங்கல்கள், அம்மை வகை நோய்கள், பாரம்பரியச் சொத்தில் பங்காளிப் பகைமைத் துன்பங்கள் ஏற்படும்.

கர்பப்பை நோய்களுக்கு நிவாரணம்

சில லிங்க வடிவுகளில் பட்டைகள் இருக்கும். ஒவ்வொரு பட்டையிலும் கோடானு கோடி ரகசியங்கள் உள்ளன. பல அண்டங்களுக்கும் அனுகிரக சக்திகளை நிரவ வல்லவையே பட்டை லிங்கங்கள் ஆகும். எனவே சுயம்புப் பட்டை லிங்க வடிவு என்றாலேயே தேவேந்திரனாகிய இந்திர மூர்த்தியே மிகவும் கவனமாகப் பூஜித்திடுவார். நவரத்னங்களிலும், குறிப்பாக மரகதத்திலும், பவளத்திலும் பட்டை லிங்கங்கள் அமைவதுண்டு.

ஸ்ரீமரகதலிங்கேஸ்வரர் சாத்தமங்கலம்

போர், கலவரம், வன்முறைகள் நாட்டில் பெருகுகையில், நம் பழங்காலத்து மன்னர்கள், பட்டை வடிவ லிங்கங்களுக்கு, ஒரு மண்டலம் (48 நாட்கள்) தொடர்ந்து 1008 வகை மூலிகை, திரவிய, தைலங்களால் அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி வழிபடுவர். இதனைத் தற்போது மீண்டும் புதுப்பித்தால், எந்த நாட்டிற்கும் துன்பங்களைத் தரும் கலவரம், வன்முறைகளுக்கு உடனடியாக நல்ல முறையில் தீர்வுகளைக் காணலாம்.
பட்டை லிங்க மூர்த்திகளிலும் ஞானப் பட்டை, லக்ஷணப் பட்டை, தீர்கப் பட்டை, ஸ்வேதப் பட்டை, கந்தப் பட்டை எனப் பல வகைகள் உண்டு. ஏழு வகை ஹோரைகளிலும், ஆறு ஜாமங்களிலும் எந்த ஜாமத்தில், எந்த ஹோரையில் எவ்விதமாகப் பட்டை லிங்கப் பூஜை ஆற்றிட வேண்டும் என்ற பட்டை லிங்கப் பூஜை நியதிகளும் உண்டு. ஒவ்வொரு பட்டையிலிருந்தும், ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு விதமான ஒளிக் கதிர்கள் வெளிவரும்.

பட்டைலிங்க மூர்த்தி திருநாவலூர்

மனிதக் கண்களால் காண இயலாத வண்ண வகைகள் நிறையவே உண்டு. இவற்றைக் காண்பதற்கான சக்திகளைத் தர வல்ல பட்டை லிங்க நேத்ர சக்திப் பூஜை முறைகளைத் தக்க சத்குருவிடம் கேட்டறியவும். பொதுவாக, பச்சை நிறக் கண்களை உடையவர்கள், பூனைகள், பறவைகள் நிறைய தேவ வண்ணங்களைக் காணும் வல்லமை பெற்றவர்கள் ஆவர்.
பட்டை லிங்கத்தின் ஒவ்வொரு பட்டையிலிருந்து வரும் ஒளிக் கதிரும், வெவ்வேறு வகையான நோய்கள், மன ஏக்கங்கள், பிரச்னைகளைத் தீர்க்க வல்லனவாம். உள்ளம், மனம், உடலில் 72000 நாடி நரம்புகளுக்கும் உரித்தான சக்தி மாற்றங்களை அளிக்க வல்லவை இவை.
ஒவ்வொரு பட்டையிலிருந்தும் வரும் ஒளிக் கதிர்களை கிரகித்து, உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும், ஜீவ ராசிகளுக்கும் உரித்தான மருந்துகளைத் தயார் செய்து அளித்திடலாம். இந்த ஆத்ம மருத்துவ இரகசியம், ஒரு பெரிய கடல் போன்றது. இதில் ஒரு இரகசியத்தை அறியவே, பல்லாண்டுகள் யோகம் பயில வேண்டும். தேரைச் சித்தர் இத்துறையில் மஹாவல்லமை கொண்டவர். தேரையர் மருத்துவ வாடகங்களில் பட்டை லிங்க மருத்து சக்தி விளக்கங்கள் நிறையவே காணப்படும்.
எனவே ஒரு பட்டை லிங்கத்தின் ஒரு பட்டையின் கூறு இரகசியத்தை அறியவே, ஒரு சராசரி மனிதனுக்குப் பல கோடி ஆண்டுகள் தேவைப்படும் எனில், என்னே பட்டை லிங்கங்களின் மஹிமை!
பொதுவாக பட்டை லிங்கங்களில் பிருத்வி, அக்னி, ஜலபுலம் போன்ற பஞ்சபூத வகைகள் உண்டு. இதில் பிருத்வி வகையானது, பூமிக் குற்றங்களையும், மனக் குற்றங்களையும், நோய்த் தன்மைகளையும், மன ஏக்கங்களைத் தீர்க்கும். இவற்றுக்குச் செவ்வாய்க் கிழமைகளில் ஒவ்வொரு பட்டைக்கும் சந்தனம், வெண்ணெய், புனுகு, எள் போன்று எட்டு வகைக் காப்பிட்டு,
வள்ளிக் கிழங்கு, மர வள்ளிக் கிழங்கு வகை உணவு படைத்துத் தானம் அளித்தலால், பூமி நிலங்கள், வீடுகளில் உள்ள வாஸ்துவிற்கு எதிரான தோஷங்கள் நீங்கும்.
பட்டை லிங்கங்களுக்கு பூமியின், பூமியை ஒட்டியதாகத் தரையில், பூமியடியில், நீரில், இருளில் அதாவது சூரிய ஒளி படாத குகை போன்ற இடத்தில் -
என ஐந்து வகைகளில் வளரும் / பூக்கும் / காய்க்கும் மூலிகைகளால் காப்பு இட்டு, புதன் கிழமைகளில் வழிபட்டு வந்தால்,
கர்பப் பை சம்பந்தமான நோய்கள் தீர்வதற்கு நல்ல மருத்துவக் கருவியாக இப்பூஜா பலன்கள் அமையும். எவ்வாறு இப்பூஜைப் பலன்கள் நோய்களைத் தீர்க்கும்? அவரவர் கொள்ளும் நம்பிக்கைத் தன்மைகளைப் பொறுத்து இவை அமையும்.
பலரும் ஏதோ ஓரளவு நம்பிக்கையுடன்தான் பெரும்பாலும் பூஜைகளை ஆற்றி வந்தால் கூட, அபரிமிதமான பலன்கள் கிட்டுகின்றன எனில், முழு நம்பிக்கை திரண்டால் எப்படி இருக்கும், சற்றே சிந்தித்துப் பாருங்கள்!
பொதுவாக, தேய்பிறைப் புதன், தன்வந்த்ரீ பெருமாளுக்கு உரியதாகும். இதிலும் தேய்பிறையில், புதன், அனுஷம், சித்த யோகம் போன்ற பலத்த சுப முகூர்த்த அம்சங்கள் திரளும் நாளில், பட்டை லிங்கங்களில் மருத்துவ சக்திகள், தன்வந்த்ரீ சக்திகளாகப் பூரிக்கும். இந்நாட்களில் தன்வந்த்ரீ மூர்த்தி வழிபாடு, பட்டை லிங்க தரிசனம் அல்லது இயற்கையாகவே பட்டைகள் தீட்டப் பெற்ற ஸ்படிக, (நவரத்னக்) கல் வடிவ லிங்க தரிசனம், பூஜை மிகவும் விசேஷமானது.
புதுக்கோட்டை திருப்பத்தூர் அருகே செவலூர், சென்னை - தக்கோலம் அருகே இலம்பையங் கோட்டூர்,
பட்டுக்கோட்டை - திருத்துறைப் பூண்டி அருகே திருக்கடிக்குளம் போன்றவை பட்டை வடிவ லிங்க மூர்த்தித் தலங்களாகும்.

குழப்பம் தீர்க்கும் குருவாரம்

பெரும்பாலும் பலன்களை எதிர்பார்த்ததாகவே, தற்காலத்தியக் குடும்பங்களின் வீட்டு வழிபாடும், ஆலய வழிபாடுகளும் அமைந்து வருகின்றன என்பதைக் காண்கின்றோம் அல்லவா. இதனால்தான் கோயில்களில் ஆறு வேளைப் பூஜைகளை, சுயநலமின்றி, சமுதாய நலன்களுக்கான பொதுச் சங்கல்பங்களுடன் ஆற்றி வருகின்ற மகத்தான சமுதாய சேவையாக நடைபெற்று வருகின்றது.
ஆலய வழிபாடுகளில் குறைபாடுகள் ஏற்பட்டால், அது சமுதாயத்தை சூறாவளி, கடல் கொந்தளிப்பு, வெள்ளம், வறட்சி, பஞ்சம், அம்மை வகைப் பரப்பு நோய்கள் என்றவாறாக வந்து பாதிப்பதோடு கடமையிலிருந்த தவறிய சாபமாக வந்து சேர்ந்து, சம்பந்தப்பட்ட ஆலயத் துறையினரையும் வெகுவாகப் பாதிக்கும்.

குபேர செல்வங்களின் குரு
சென்னி வாய்க்கால், லால்குடி

எனவே, ஆலயப் பூஜைகளை மிகுந்த சிரத்தையுடன் ஆற்ற வேண்டிய பொறுப்பு பூஜாரிகள், அர்ச்சகர்கள், ஆலய நிர்வாகிகளுக்கு, அரசாங்கத்திற்கு நிறையவே உண்டு என்பதை நம் பழந்தமிழ் மாமன்னர்கள் பக்தியுடன் துலங்கி ஆலயத் திருப்பணிகளை முறையாக ஆற்றி, நன்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து விளக்கி உள்ளனர்.
தற்காலத்தில் பிள்ளைகளும் தாம் தேர்வுகளில் நல்ல மார்க்குகளை வாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் வேண்டி வணங்கி வருகின்றார்கள். பெற்றோர்கள்தாம், தினமும் தம்பதி சகிதம் தாமே ஆலயங்களுக்குச் சென்று வழிகாட்டி, பிள்ளைகளுக்குத் தினமும் ஆலயந் தொழுதல் ஒரு கடமை என்ற உணர்வை ஏற்படுத்தித் தருதல் வேண்டும். இத்தகைய வழிபாட்டு நெறிகள் சிறக்கும் நாளே குருவாரமாகிய வியாழக் கிழமை ஆகும்.
வியாழன் என்பது வாராவாரம் வந்து போகும் நாள்தானே என மெத்தனமாக இருந்து விடாதீர்கள்! வியாழனன்று பரவெளியில் நிறையும் குருபாந்தவக் கிரண சக்திகளை வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாழனன்று காலையில் பல் துலக்கி, உடனேயே நீராடி அல்லது கை, கால்களை நன்கு கழுவிக் கொண்டு, நெற்றிக்குத் திருநீறு இட்டு, உடனே பஞ்சாங்கத்தை எடுத்து அந்த நாளின், அந்த வாரத்தின், அந்த மாதத்தின் கிரக சஞ்சார நிலைகளை, அதாவது எந்த கிரகம் எந்த ராசியில் இருக்கிறது எனப் பார்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இதில் சந்திர கிரகம் மட்டும் இரண்டே கால் நாட்களுக்கு ஒரு முறை ராசி இடம் மாறும்.
இவ்வாறு கிரக சஞ்சார உணர்வுகள் மனதில் நன்கு படிந்தால், இதுவே உடலிலும் நன்கு நிரவி, தீய சக்திகளை, எண்ணங்களைப் படிப் படியாகத் தணித்து, நல்ல மன நிலை, மனோசக்தி, மனோவைராக்ய சக்திகளையும் பெற்றுத் தரும்
உதாரணமாக ஒரு நாளில் சூரியன் – மீனம், சந்திரன் –விருச்சிகம், செவ்வாய் –மகரம், புதன்- மீனம், குரு (வியாழன்) – கன்னி,  சுக்கிரன் மீனம், சனி-கடகம், ராகு-மீனம், கேது-கன்னி ஆகிய ஒன்பதும் மேற்கண்ட வகையில் அந்தந்த ராசியில் அமைந்துள்ளன. ராசிக் கட்டம் என்பது ஒரு விதத்தில் வான்வெளியின் வரைபடம்.
இவ்வாறாக, எந்தெந்த ராசியில் எந்த கிரகங்கள் இருக்கின்றன என்பதை மனதில் பதித்துக் கொண்டு வாருங்கள். நாளடைவில் இவை நன்கு மனப்பாடம் ஆகி விடும். அதாவது எந்த கிரகம் எந்த ராசியில் இருக்கிறது என்பது உங்கள் மனதில் நன்றாக ஊறி விடும். இதனால் உடல், மனம், உள்ளத்தில் கிரக சஞ்சார அமைப்பு நிரவுவதால், இதுவே நல்ல மனப் பூர்வமான வழிபாடாகி, மிகவும் சக்திவாய்ந்த மானசீக வழிபாடுமாக ஆகி விடுகின்றது. பாண்டவ சகாதேவன் ஒரு கோடிக்கும் மேலான கோள்கள், நட்சத்திரங்களின் வானியல் அமைப்பைத் துல்லியமாக அறிந்திருந்தான். இதற்குக் காரணம் தினமும் குரு ஹோரை நேரத்தில் அவன் ஸ்ரீகிருஷ்ணருக்கு ஆற்றிய பூஜையே ஆகும்.
தினமுமே இவ்வாறு கிரக நிலைகளை அறிந்து வருவதால், எந்த கிரகம் எந்த இடத்தில் இருக்கிறது என அறிவுப் பூர்வமாகத் தெரிந்து கொள்வதால், உடலிலும் எங்கெங்கு அந்தக் கிரகப் பதிவுகள் உள்ளனவோ, அவற்றிலும் உள்ளறிவுப் பூர்வமாக நல்ல மாற்றங்கள் ஏற்படும். இந்த கிரக அறிவு நிலையை முதலில் பார்த்து, படித்து அறிதல் மிகவும் எளிமையானதே!

ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி திருநறையூர்

ஒவ்வொருவரிடமும் தேவ குணங்கள் எனப்படும் நல்ல குணங்கள் மென்மேலும் மேம்பட, வியாழ மூர்த்தி நன்கு அருள்கின்றார். ஒவ்வொருவரிடமும் உள்ள தீய குணங்களான பொறாமை, பேராசை, பகைமை, சோம்பேறித்தனம், முறையற்ற காம எண்ணங்கள், இச்சைகள், குரோதம், விரோதம் போன்ற அசுர குணங்கள் சீர் திருந்திட, அசுரர்களின் குருவான சுக்ர மூர்த்தி உதவுகின்றார்.
கலியிலும் தேவர்கள், அசுரர்கள் உண்டு. இவ்விரண்டு வகை குணங்களும் ஒரே மனிதனிடம் நிலவுவதால், கலியுகத்தில் தேவராகவும், அசுரராகவும், இரண்டும் இல்லாத நிலையிலும், மனிதன் தினமுமே கவனமின்றி வாழ்ந்து, தன்னை மிகவும் குழப்பிக் கொள்கின்றான். இவ்வகைக் குழப்பங்களை அகற்ற குருவார வழிபாடு உதவும்.
கலியுக மனிதன் ஒவ்வொருவரும் தேவ குணங்கள், அசுர குணங்கள் கலந்தவராக இருக்கின்றார் என்பது இப்போது புரிகின்றது அன்றோ! இதனை நன்கு சீரமைத்து நிவர்த்திக்க, இரு குரு சக்திகளான வியாழ மூர்த்தி, சுக்கிர மூர்த்தியின் அனுகிரக சக்திகள் கலியுக மனித சமுதாயத்திற்கு மிகவும் தேவை! தேவ குருவான பிரஹஸ்பதியும், அசுரர்களின் குருவான சுக்கிரரும், தமக்குரிய குரு தேவார்த்தங்களை, மேதா தட்சிணா மூர்த்தியிடம் இருந்தே பெற்று அருள்கின்றனர். இதனால்தான் தட்சிணா மூர்த்தியின் சின்முத்திரையில் குரு விரலான ஆள்காட்டி விரலும், சுக்கிர விரலான கட்டை விரலும் ஒன்று சேர்ந்து பரிமளிக்கும்.
எனவே, வியாழனன்று குரு விரலான ஆள்காட்டி விரலும், சுக்கிர விரலான கட்டை விரலும் ஒன்று சேர்ந்து செய்யும் நற்காரியங்களான பூத்தொடுத்தல், தோப்புக் கரணம் இடுதல், விரல் விட்டு காயத்ரீ மந்திரம் ஜபித்தல் போன்ற நற்காரியங்களை ஆற்றுதல் மிகவும் விசேஷமானதாகும். நின்ற நிலையில் அருளும் தட்சிணா மூர்த்தி, மூலவருக்குப் பின் கோஷ்ட மூர்த்தியாக அருளும் தட்சிணா மூர்த்தி தரிசனங்கள் விசேஷமானவை! தேவையில்லா பகைமை உணர்வுகளை அகற்ற இது உதவும்.
உதாரணமாக கண்டக்டர் சில்லறை தரவில்லை எனில் பலரும் ஆக்ரோஷமாகி, இந்தப் பகை உணர்ச்சியை நெடுநாள் வளர்த்துத் தம் மனதைப் பாழாக்கிக் கொள்வர். இத்தகைய சிறு சிறு மனஸ்தாபங்களே வாழ்வில் பெரிதாகிப் பாதிக்கும். இவற்றை நிவர்த்திக்க கோள் நிலை சஞ்சார அறிவு வழிபாடு உதவும்.

சுபமான பிரயாணம்

மூல சப்தமி எனப்படும் நாளில், சூலை சக்தி தேவதைகள் ஒளி ரூபத்தில் தோற்றம் கொண்டனர். சூலை என்பது ஒரு வகை வயிற்று நோயையும் குறிக்கும். சூலை என்பது ஒரு வகை வானியல் அக்னியும் ஆகும்.
தஞ்சாவூர் - அய்யம்பேட்டை அருகில் உள்ள சூலமங்கலம் சிவபூமியே ஸ்ரீகாலபைரவரால் வார தேவதைகள் தோற்றுவிக்கப் பெற்ற தலமாகும். காலவ மஹரிஷியும், பைரவ மாமுனியும் தினமும் வழிபடும் தலங்களில் இதுவும் ஒன்று. சப்தமித் திதியில் இங்கு வழிபடுதலால், வாழ்வில் இதுவரையில், நேரம் பாராது செய்த காரியங்களில் ஏற்பட்டுள்ள துன்பகரமான, துக்ககரமான விளைவுகளுக்குத் தக்கப் பிராயச்சித்தங்களைப் பெற்றிடலாம்.
பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு நாளைக்கும் ஒரு திசையை வார சூலை எனக் குறித்திருப்பர். இதில் வாரம் என்பது ஒரு வாரத்தைக் குறிப்பதன்று, வாரம் எனில் கிழமை என்று பொருள். வாரசூலைச் சூத்திரப்படி, குறித்த கிழமையில் குறித்த வாரசூலைத் திசையில் பயணத்தைத் தவிர்த்தல் வேண்டும். இவை எல்லாம் மூட நம்பிக்கைகள் அல்ல!

ஞான மூர்த்திக்குப் பின் வீணைமூர்த்தி
திருத்தவத்துறை லால்குடி

டெலஸ்கோப் இல்லாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே, கிரகங்கள், பூமிகள், நட்சத்திரங்களின் அமைப்பை நம் பண்டைய வானியல் அறிஞர்கள் உரைத்துள்ளார்கள் எனில், அவர்கள் எத்தகைய மேன்மையான அறிவைப் பெற்றிருந்தார்கள் என நாம் அதிசயிக்க வேண்டியுள்ளது. மேலும், அவர்களுடைய காலமானது, உத்தம சத்திய கீர்த்திகள் நிறைந்து, தர்ம மயமான ஆட்சி நிலவிய காலமும் ஆனதாதலின், பண்டைய வானியல் சாத்திர வாக்கியம் ஒவ்வொன்றும் சற்றும் பொய்மையற்ற ஸ்வேதமாமறைப் பொக்கிஷங்களாய், ஒவ்வொன்றும் கோடிப் பொன் பெறும்.
சூலை என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. குறுக்கே நின்று தடுத்துக் காப்பது என்பது வார சூலை (வாரம் = கிழமை) என்பதில் இங்கு புலனாகும் அர்த்தமாகும். தற்போதைய சாலைகளில், குறுகிய பாதை, வளைவான பாதை, ஜாக்கிரதை என்று காணப் பெறும் சாலை விதி போர்டுகளைப் போல, பிரயாண திசைக்கான வார சூலை என்பது, குறித்த திசையில் பிரயாணம் செய்யலாகாது என்று நன்மைப் பூர்வமாகத் தடுத்து, நம்மைக் காக்கும் சூலபாண வாலை சக்தியாகும்.
எனவே, பஞ்சாங்கத்தில் ஒரு திசையில் சூலை என்று போட்டிருக்கும் போது அந்தத் திசையில் நிச்சயமாகப் பிரயாணம் செய்யலாகாது. அதாவது பிரயாணம் செய்யும் போது, சூலை இருக்கும் திசையை அவசியம் தவிர்க்க வேண்டும்.
பூமியில், வானத்தில் எல்லா இடங்களிலும் ஒலி, ஒளி வகையிலான, ஒளிப் பிழம்புகள், ஒளி வட்டங்கள், ஒளிச் சக்கரங்கள், ஒளி முக்கோணங்கள், ஒளிக் கிரந்திகள், ஒளிச் சங்குகள், ஒளிச் சூலைகள் போன்று பற்பல ஒலி, ஒளி வடிவங்கள் சுற்றிக் கொண்டு வருகின்றன. இவற்றில் பலவற்றைக் குறிப்பதே நம் உள்ளங்கை ரேகைகளில் உள்ள பலவிதமான வடிவுகளாகும். இவற்றில் நன்மை பயப்பவை, நம்மால் காண முடியாதவை, அணுக முடியாதவை, நமக்கு நன்மை தராதவை என்ற பல வகைகள் உண்டு.
வார சூலை என்பது கெடுதலைக் குறிக்கிறது என்பதை விட, கெடுதல் வாராது காக்கின்றது என்பதே உண்மை!
உதாரணமாக, அதிமகா உஷ்ணம் காரணமாக, சூரிய லோகத்தினுள் நம் மானுட உடலில் செல்ல இயலாது என்பதால் சூரிய லோகம் துன்பம் தருவது என்றா சொல்ல முடியும்!
இதே போலவே, கோள்களின் கிரகண நாளில், கிரணங்கள் நேரடியாக நம் உடலில் படக் கூடாது, இவற்றைத் தாங்கும் வன்மை நமக்கு இல்லை என்பதால்தான், கிரகண நேரத்தில் வெளிச் செல்லாது தற்காத்துக் கொள்கின்றோம் அல்லவா. இதுபோலவே வார சூலை எனக் குறிக்கப்பட்டிருக்கும் திசையில், அத்திசைப் பகுதியில் வானில் பலத்த ஒளி, ஒலிக் காரண, காரியங்கள் நிகழ்வதால் அத்திசையையே முற்றிலுமாகத் தவிர்த்தல் வேண்டும். சூரிய, சந்திர, பூமி சம்பந்தப்பட்ட கிரகணம் தவிர, நாமறியாது வானில் உலவும் லட்சக் கணக்கான கோள்கள், நட்சத்திரங்களிலும் கிரகணங்கள் அமையும். இவற்றையும் ஓரளவு உணர்த்துவதே வார சூலைக் காரணங்கள் ஆகும்.
எந்தக் கிழமையில் எந்தக் கிரக அசைவுகள் எவ்வகையில் மாற்றமுறும் என்றவாறான ஆயிரக் கணக்கான வானியல் மாற்றங்களைக் கொண்டு அர்த்தமுள்ள வார சூலை இலக்கணத்தை நம் முன்னோர்கள் தந்துள்ளனர். பயன்படுத்துவோர் நன்மை காண்பர். பயன்படுத்தாதோர் பத்தோடு பதினொன்றாய்ப் பல துன்பங்களைக் காண்பர்.
வானில், விண்ணில் இயங்கும் கோடிக் கணக்கான ஒலி, ஒளிச் சக்திகளைச் சாதாரண மனிதர்களால் உணர, காண, அறிய முடியாது. இந்த ஒளி வட்டங்களைக் காணும் சக்தி பெற்றால்தான், மனிதன் முக்காலத்தையும் உணரும் ஆற்றலைப் பெற முடியும். இத்தகைய ஒளிப் பிழம்புகள், ஒளி வட்டங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
இவற்றை தக்க வானியல் அறிஞர்களின் துணையோடு ஆன்மப் பூர்வமாக  நன்கு ஆய்ந்து பார்த்தால்தான் எண்ணற்ற தெய்வீக ரகசியங்கள் ஓரளவேனும் புரியலாகும். எந்தெந்தத் திசையில் சூலை என வாரசூலையாகக் குறிக்கப்படுகின்றதோ, அந்தத் திசையில் அந்தந்த நாளில் இந்த ஒளி வட்டங்களின் வீரிய சக்தி அதிகரிக்கிறது.
உதாரணமாக, வியாழனன்று தெற்கு, தென்கிழக்கில் வாரசூலையாதலால் சென்னையில் வசிப்போர் தெற்கில் செங்கல்பட்டு போன்று தெற்குத் திசைப் பிரயாணம் செய்தலைத் தவிர்த்தல் வேண்டும். செங்கல்பட்டில் இருப்போர்க்கு திண்டிவனம் போன்று தென்திசைப் பயணம் ஆகாது. இதை நன்கு பகுத்தறிவுடன் ஆய்ந்திடில், சமுதாய ஜீவப் பண்பாட்டிற்கும், பொருட்களின் சரிசமமான நிறைவான போக்குவரத்திற்கும், வாரசூலைகள் நற்பாலமாய் அமைந்து, சமுதாய நல்வளத்திற்கும் உதவுவதையும் நன்கு உணராம்.
மேலும், உதாரணமாக ஒரு நாளில் தெற்கே சூலை என்று பஞ்சாங்கத்தில் குறித்திருந்தால், அன்று தெற்குத் திசையில் மேற்கண்ட வகை ஒலி, ஒளி வட்டங்களின் சக்திகள் அதிகமாக இருக்கும் என்பதும் ஆன்மப் பொருளாகும். அந்த நாளில் தெற்கே ஒருவர் பிரயாணம் செய்தால், இந்த ஒளி வட்டங்கள் ஒவ்வொரு மனிதனையும் சுற்றியுள்ள ஒளி வட்டங்களை ஊடுவிச் செல்லும்போது, இந்த ஆரா ஒளி வட்டத்திலுள்ள நல்ல சக்திகளையும் கிரகித்துக் கொண்டு சென்று விடும். இதனால் தீர்க்க முடியாத பல உடல் நோய்களும், மன நோய்களும் ஏற்படும்.
பொதுவாக, சூலத்திற்கு எந்த விதமான முழுமையான பரிகாரமும் கிடையாது. அந்த நாளில் அந்தந்தத் திசையில் பிரயாணத்தைத் தவிர்ப்பதே முறை. அத்தியாவசியமான காரணங்களால் சூலைத் திசையில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தால், குறித்த சூலை நிவர்த்தி இறை மந்திரங்களை ஓதி, முறையாக வழிபாடுகளையும், தான தர்மங்களையும் நிறைவேற்றி விட்டுச் சென்றால் இது ஓரளவு துன்பத்தைக் குறைக்கும்.
அக்னி சக்திகள் மிகும் நாள். சற்று வயிறு உபாதைகள் தோன்றலாகும். மூலிகை வகை பழ ரசங்களைத் தானமாக அளித்தல் நன்று. ஆலயத்தில் பலி பீடத்திற்குப் புஷ்பங்கள் சார்த்தி, 16 பலி பீடங்களைத் தரிசித்தல் விசேஷமானது.

குடும்பத் தலைவர்கள் கவனிக்க

எண் எட்டும், எட்டாம் திதியான அஷ்டமித் திதியும், கரிநாளும், கருப்பு அல்லது கருநீல வண்ணமும், சனீஸ்வரப் ப்ரீதிக்கு உதவும் நாட்களாகும் என நாமறிவோம். இந்நாட்களில் யாங்கணும் பரிமளிக்கும் சனைஸ்சர சக்திகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
புனிதமான ஜோதிட ரீதியாக, லக்னத்தை முதலாவது இடமாகக் கொண்டு, முதலாம் இடம், இரண்டாம் இடம் என்ற வகையில், 12 ராசிக் கட்டங்களும், 12 இடங்களாக, ஜீவனம், பித்ரு, தொழில், ஆயுள் - போன்று ஜீவ வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைக் குறிக்கின்றன. இதில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். சனீஸ்வரரே ஆயுள்காரகர்.
பாற்கடலில் தரிசனம் தந்த சங்குப் பிள்ளையாரை, கயிறாக இருந்து வதை பட்ட வாசுகியும் தரிசித்துத் தன் உடற் களைப்பைப் போக்கிக் கொண்டாள். எனவே, நாகத்தைப் பிடித்த நிலையில், நாகாபரணம் அணிந்த நிலையில், நாகத்தைக் குடையாகக் கொண்ட நிலையில், நாகத்தையே பூணூலாகத் தரித்த நிலையில் அருளும் விநாயக மூர்த்திகள் யாவரும் அமிர்த விநாயக மூர்த்திகளே!

பட்டைலிங்கம் நேமம்
திருக்காட்டுப்பள்ளி

சென்னை - திரிசூலத்தில் நாகத்தையே பூணூலாகத் தரித்த விநாயக மூர்த்தி அருள்கின்றார். நிலநடுக்கங்களில் இருந்து நம்மைக் காக்கும் அற்புத மூர்த்தி.
ஒரு அஷ்டமித் திதியில், சனீஸ்வரர், விநாயகரைப் பீடிக்க வருகையில், அவருடைய நாகாபரணத்தை ஸ்பரிசித்துத் தன் பீடிப்புத் தேவ பணியையும் பூர்த்தி செய்து இந்த ஸ்பரிசத்தால் ஈஸ்வரப் பட்டம் பெறும் தெய்வாம்சத் தகுதிகளையும் நல்வரங்களாகப் பெற்றார்.
கரிநாளுக்கு மறுநாள் வரும் அஷ்டமியுடன் கூடி வரும் சனிக்கிழமை மகத்தான ஆயுள் சக்திகளைப் பூண்டு வரும். காரணம், இந்நாளில்தாம் பிறப்பு, இறப்பற்ற சாசுவதமான நிலைகளைத் தர வல்ல அமிர்தம் பரிபூரணமாக நிறைந்த சங்கில் தோன்றிய சங்குப் பிள்ளையாரை, அமிர்த விநாயகராக சனீஸ்வரர் பூஜித்து மகிழ்ந்ததாகும்.
இதன் பலாபலன்களை கரிநாளில் தாம் பூஜிக்கும் மும்மூர்த்திப் பூஜைகளின் பலாபலன்களோடு நிரவி, கரிநாளுக்கு மறுநாள் வரும் அஷ்டமி, சனிக் கிழமை கூடிய நாளில் தம்மைப் பக்தியுடன் பூஜிப்போர்க்கும், அமிர்த சக்திகள் நிறைந்த தேன், சர்க்கரைப் பொங்கல், சர்க்கரை வள்ளிக் கிழங்கு கலந்த உணவு, பால் பொங்கல் போன்றவற்றைச் சங்க(பாணி)ப் பிள்ளையார்க்கும்,
மேற்கண்ட வகையில் நாகசக்தி பூண்ட விநாயகருக்கும் படைத்துத் தானமளிப்போர்க்கும் சனீஸ்வரரே முன் வந்து அருள்கின்றார்.
அமிர்தம் பெற வேண்டும் என்று எண்ணியே சுயநலமாகத் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைப் பன்முறை கடைய வேண்டியதாயிற்று.  மீண்டும் மீண்டும் பன்முறையாகப் பாற்கடலைக் கடைந்த போது, உச்சஸ்ரவஸ் என்ற குதிரையும், கெளசிப மணி மாலையும் வந்தன. சந்திரனும், மகாலட்சுமியும் தோன்றினர். தன்வந்த்ரீ மூர்த்தியும் அமிர்தக் கலசத்துடன் தோன்றினார். அமிர்தமும் வந்தது. அமிர்தம் வந்தவுடன் அதற்காகப் பலரும் போட்டியிடவே, அமிர்தமும் பாற்கடலில் மறைந்து, மறைந்து தோன்றலாயிற்று.

அமிர்தம் வந்தவுடன் முதலில் அமிர்த விநாயகரை அல்லவா வணங்க வேண்டும். அமிர்தத்தைப் பெற்றதும் அவசர கோலத்தில், தேவர்களும் அசுரர்களும் இதைச் செய்ய மறந்தனர். ஆனால் அமிர்த பவனியைக் காணும் பேறு பெற்ற பலருள், ஹம்ஸவர்தனர் என்ற வினாயக பக்தர், அமிர்தத்தின் முதல் பெருக்கை, ஒரு சிறு சங்கில் ஏந்தி, வினாயகரை நோக்கிப் பூஜை செய்தார். உடனே அமிர்தம் அச்சங்கினுள் மறைந்தது. ஆனால் அமிர்தத்தை அசுரர்கள் எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர் எனத் தேவர்களும், தேவர்கள் எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர் என அசுரர்களும் தவறாகவே எண்ணினர்.
பாற்கடலில் அப்போது அந்த அமிர்தச் சங்கு சற்றே வெளியே வந்தது, சங்கில்  பிள்ளையார் காட்சி தந்தார். அனைவருக்கும் இக்காட்சி கிட்டவில்லை! அவரே சங்கு(பாணி)ப் பிள்ளையார். அமிர்தச் சங்கில் பவனி வருபவர். பாற்கடல் வைபவங்களைப் பக்தியுடன் கண்டவர்களுக்கு சங்குபாணிப் பிள்ளையாரின் தரிசனம் கிட்டியது. இவருடைய அம்சங்களுள் ஒருவராகவே காஞ்சீபுரத்தில் சங்குபாணிப் பிள்ளையார் அருள்கின்றார்.
பாற்கடல் அமிர்தம் வந்தது, சிவபெருமான் ஆலகால விடமுண்டது போன்ற வைபவங்களின் பின்னணியாய், பிரதோஷ நடனம், சனிப் பிரதோஷம் அனைத்தும் தோன்றின அல்லவா!
எனவே, சனிக் கிழமை மாலையில் நித்யப் பிரதோஷமாகிய 4-30 - 6-30 மணி நேரத்தில்,
சங்குப் பிள்ளையாருக்கு அமிர்தம், மதுரம் எனப்படும் தேனால் 108, 1008 சங்குகளால் அபிஷேகம் செய்வது சனீஸ்வரருடைய அருளைப் பெற்றுத் தரும்.
எங்கே தான் இறந்து விடுவோமோ என்று அஞ்சி, அஞ்சி வாழ்வோரின் மரண பயம் அகலவும், குடும்பமே, தொழிலே ஒருவரை நம்பி ஜீவித்திருக்க, அவரின்றேல் குடும்பம், தொழில் நொடித்திடும் என்ற நிலையில், அவரோ நோய், நொடிகளால் பீடிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத்திற்குச் சக்கரமாய்த் துலங்கும் அவருக்கு நல்ல  ஆயுள் சக்தியைப் பெற்றுத் தரவும் இந்நாள் பூஜைகள் உதவும்.

தேனீக்களின் தியாகம்

ஞாயிறன்று, சூரிய மூர்த்தி, தேவர்களின் அதிபதியான இந்திரனுடன் சேர்ந்து சிற்றாமூர் போன்று கருவறையில், தேன் கூடுகள் உள்ள ஆலயங்களில் மதுராமிர்த பூஜை என்ற வகையிலான தேனபிஷேகம் போன்ற தேன் வகைப் பூஜைகளை ஆற்றுகின்றனர். தேனபிஷேகமானது தனவிருத்தி, நல்ஆயுள் சக்திகளைப் பூண்டு அருள்பாலிக்கும்.
தேன்களின் உற்பத்தித் தலமான பூக்களில் நிறைய நாளங்கள், நரம்புகள், ரேகைகள் தென்படும். பூக்களுக்கும் சிரசு (தலை), பாதம், கரங்கள் போன்ற அங்கங்கள் உண்டு. சில வகைப் பூக்களுக்குப் பீடங்களும் உண்டு. நாகலிங்கப் பூ, பீட வகைப் புஷ்பங்களில் ஒன்று. உதாரணமாக, பெரிய பூக்களான செம்பருத்தி, பறங்கிப் பூ போன்றவற்றை நன்கு கூர்ந்து கவனித்தால் இவை புலப்படும்.
இத்தகையப் புஷ்பப் பீடங்களில் பல வடிவங்கள் அமைந்திருக்கும் இவற்றில் பலவும் தனமாகிய செல்வர வரத்திற்கு அனுகிரகங்களை அளிக்கக் கூடியவை. பலவிதமான தேவ புஷ்பங்களும் பூமியில் உண்டு. தேனீக்கள், அனுஷ நட்சத்திர நாள், துவாதசி போன்ற தனசக்தி நாட்களில் தம் குலமூர்த்தியான சூரிய பகவானை வலம் வந்து வணங்குகின்றன. எனவே ஞாயிறன்று தேனபிஷேகம் செய்து வழிபடுதலும், நந்தவனப் பராமரிப்பு அறப் பணிகளும் விசேஷமானவையாகும்.

ஸ்ரீஅகத்தியர் தேனீ வடிவில்
வழிபட்ட திருஈங்கோய் மலை

பொதுவாக மஞ்சள் நிறப் பூக்கள், தனகாரகராகிய குரு மூர்த்திக்குரியதாகும். ஞாயிறன்று மலரும் பூக்களைத் தாமே தொடுத்துச் சூரிய நாராயண மூர்த்திக்குச் சார்த்தி வழிபடுதல் குருவருளை ஆக்கப்படுத்தித் தருவதாகும். கை ரேகைகளிலும் தன ரேகை என்ற ஒன்றுண்டு. தனமாகிய செல்வத்தை விருத்தி செய்து தர வல்லது. துரியோதனின் கரங்களில் தன ரேகை இருந்தது. ஆனால், இதனை துரியோதன் நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை, எனவே காலப்போக்கில் தனரேகை இருந்தும், தனரேகை சக்திகள் துரியோதனனை விட்டுச் சிறிது, சிறிதாகப் பிரியலாயிற்று.
பூக்களில் உள்ள தன ரேகைகள், அருள் ரேகைகள், வித்யா ரேகைகள் பலவும், கை ரேகைகளில் உள்ள தன ரேகைகள், வாஸ்து ரேகைகள், அருள் ரேகைகள், வித்யா ரேகைகளுடன் இணைந்தருளவே தினமுமே பூத்தொடுத்தல், புஷ்பத்தால் அர்ச்சனை போன்ற பூ வகை அறப் பணிகளை ஆற்றி வருதல் வேண்டும். இவ்வாறு தெய்வ சாதனங்களைப் பிணைத்துப் பயன்படுத்தும் வழிமுறைகளை அறிந்து கடைபிடித்தலால், நல்வர சக்திகளின் பாங்கை துரிதமாக்கிடலாம்.

ஸ்ரீவைத்யநாத சுவாமி திருக்கோயில்
ஸ்ரீவில்லிபுத்தூர்

சூரிய ஒளி மட்டுமன்றி, சூரிய சக்தி, சுக்கிர கிரக ஒளி, சந்திர ஒளியிலும், நட்சத்திர ஒளியிலும் பூக்கள் மலர்வதுண்டு. எந்தெந்த மலர் எவ்வகை ஒளியில் மலர்கின்றன என்பது குரு பூர்வமாகவே அறிந்து கொள்ள வேண்டியதாகும்.
இளங்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் மலரும் பாரிஜாதம் போன்றவற்றிற்கு லக்ஷ்மி கடாட்ச சக்திகள் நிறையவே உண்டு. தேனீக்களும் பல்லாயிரம் மலர்களில் இருந்து லக்ஷ்மி கடாட்ச சக்திகளைத் திரட்டித் தேனில் பிணைந்து தருகின்றன. இதிலும் குறிப்பாக, ஜோதி விருட்சம், புண்ய விருட்சம் போன்ற தேவ புஷ்பங்களில் இருந்து வரும் தேனில், லக்குமிக் கடாட்ச சக்திகள் பொங்கிப் பூரிக்கும். எனவே தனசக்திகள் நிறைந்த அனுஷம், துவாதசி, புதன் கிழமைகளில் இவற்றால் திருமகளுக்கு தேனபிஷேகம் செய்து தேன் கலந்த சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்றவற்றைத் தொன்னை அல்லது மந்தாரை இலையில் (இவ்விரண்டிலும் தனசக்திகள் நிறைந்துள்ளன) வைத்துப் படைத்துத் தானமளித்து வருதலால், குடும்பத்தை வருத்தும் பணக் கஷ்டம் அகலவும், தொழிலில், பண வரவுப் பூர்வமாக முன்னேற்றம் பெறவும் பெரிதும் உதவும்.
எனவே தேனீக்களும் பூவுலகில், தனவிருத்திக்காக மிகவும் உதவுகின்றன என அறிந்திடுக! மிகவும் மென்மையான, துல்லியமான அங்க வடிவுகளைக் கொண்டவையே தேனீக்களாகும். தொழிலில், சிறு முதலீடுகளில் இருந்து பெருமுதலீடு வரை, எதிலும், போட்ட முதலானது, தனநஷ்டம் அடையமால் நன்கு விருத்தியாக அனுக்கிரகம் செய்கின்ற வழிபாடுகளில் ஒன்றாக விளங்கும் தேனபிஷேகத்திற்கு மூல காரணமாக இருக்கும் தேனீக்களின் குலம் நன்கு தழைக்க நல்ல நன்றி வழிபாடுகளை ஆற்றுவதும் தனவிருத்திக்கு வழி வகுக்கும். சூரிய நாராயண லோக வகைகளைச் சார்ந்த தேனீக்கள் படைக்கப் பெற்ற நாளே பானு வாரமாகிய ஞாயிற்றுக் கிழமையாகும்.
தேனீக்களுக்கு எவ்வாறு நன்றி பூஜைகளை ஆற்றுவது? தேனீக்கள் நம்பி வாழும் பூச்செடிகளைப் பராமரிக்க உதவுதல், ஆலய நந்தவனங்களைப் பேணிட உதவுதல், வீட்டிற்கு வீடு, குறைந்தது மூன்று பூத்தாவரங்களை வளர்த்தல் அல்லது பயிரிட்டு வளர்க்க உதவுதல், வாரம் ஒரு முறையாவது வெளியில் லாரித் தண்ணீரையாவது வாங்கி (நீரை விற்றலே பெரும் பாவம்), ஆலயங்கள் மற்றும் ஏழைகள், நடுத்தர மக்கள், தோட்டம் வைத்திருப்போருடைய வீடுகள், நிலங்கள், தோட்டங்கள், நந்தவனங்களில் உள்ள பூத் தாவரங்களுக்கு நீரூற்றுதல் நல்ல தனவிருத்திக்கு உதவும். வியாபாரிகள் அனைவரும் ஞாயிறு தோறும் ஆற்ற வேண்டிய அறப் பணி இது!
ஞாயிறன்று குறைந்தது ஏழு பூச்செடிகளுக்காவது நிறைய நீரூற்றிப் பேணும் அருட்பணி ஆற்றி, தேனீக்களின் ஆசிகளைப் பெற்றிடுக!
தேனி மலை, சிற்றேமம் போன்ற தேனீக்களும் முக்தி பெறும் தலங்களில் தேனபிஷேக வழிபாடு சிறப்புடையது.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam