முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பிடிவாத குணத்தைப் போக்குங்கள்

ஸ்ரீராமருக்கு உரிய புனர்பூச நட்சத்திர நாளில் அமையும் பிரதோஷமே ராமபூஜா சிவராமப் பிரதோஷம். ஆஞ்சநேயரும், ஸ்ரீராமரும் பூஜித்த சிவலிங்க மூர்த்திகள் பலவும் பல ஆலயங்களிலும் இன்றும் பொலிகின்றன. ஸ்ரீராமரே, தம் திருக்கரங்களால் தொட்டுப் பூஜித்த லிங்கங்கள், ராமேஸ்வரம், இடும்பாவனம், திருவாரூர் அருகே குருவி ராமேஸ்வரம் என்னும் பள்ளி முக்கூடல், திருப்புனவாசல் போன்ற தலங்களில் இன்றும் அருள்கின்றன. இவற்றில் புனர்பூசமும், திரயோதசியும் கூடும் அபூர்வமான பிரதோஷ நாளில் ஸ்ரீராமர் நிகழ்த்திய பிரதோஷ பூஜா பலன்களைக் கொண்டு துலங்கும் இத்தகைய லிங்க மூர்த்திகளில் அன்றும், இன்றும், என்றுமாய் ராம பூஜா பலன்கள் திரண்டு அருள்கின்றன.
புனர்பூச நட்சத்திர சக்திகளுள் ஒன்றே தீமைகளை அகற்றி, நன்மைகளைப் புனர வைத்துத் தருவதுமாகும். கலியுகத்தில் நல்லதும், தீயதும் கலந்தே பல சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒவ்வொரு விநாடியும் இறையருளால் வாழ்கின்றோம் என்ற மனப்பாங்கைப் பெற உதவும் நல்வர பூஜையே பிரதோஷ பூஜையாகும். இரும்பில் உள்ள துருவை அகற்றி, பழங்களில் உள்ள தோல், விதைகளை அகற்றி, காய்கறிகளில் உள்ள காம்பு, தோல், பூச்சிகளை அகற்றிப் புனர வைத்துப் பயன்படுத்துவது போல, புனர்பூச நட்சத்திர நாளில் வரும் பிரதோஷ பூஜையில் மனம், உடல், உள்ளத்தைப் புனர வைக்கும் நட்சத்திர சக்திகள் திரண்டு பிரகாசிக்கின்றன.

திருப்புனவாசல்

ஸ்ரீராமர் தம் அவதாரத் தன்மையை ஒருபோதும் வெளிக்காட்டாது பரிபூரணமாக, பரிசுத்தமான, முழுமையான மனிதராக வாழ்ந்து காட்டினார். மனம், உடல், உள்ளம் மூன்றையும் புனிதப்படுத்தும் வழிமுறைகளைத் தந்த மாமனிதராய் நல்வழி காட்டுபவரே ஸ்ரீராமர். சனிக்கிழமை வரும் பிரதோஷம் மஹாப் பிரதோஷம் ஆவது போல, புனர்பூச நட்சத்திர நாளில் வரும் பிரதோஷம், ராம பூஜா சிவராமப் பிரதோஷமாக மிகவும் அபூர்வமான மன சுத்திகளைத் தருகின்ற தினமாகும். ஸ்ரீராமர், ஆதிசிவ மூர்த்தியை ஸ்ரீராம (லிங்க) சுவாமியாகப் பூஜித்த நன்னாளே புனர்பூசம் கூடும் பிரதோஷத் திருநாள் ஆகும்.
எனவே, ராமன், ராமலிங்கம், சிவராமன் போன்ற பெயரை உடையவர்களும், ராம பக்தர்களும் இத்தகைய நாட்களில் பிரதோஷ நேரம் முழுதும் சிவ பூஜைகளில் திளைத்திட வேண்டும். “ராம் ராம்” என ராம நாம தாரக மந்திரத்தை ஓத வேண்டிய விசேஷமான விரல் முத்திரை முறைகள் உண்டு. இதனால் தாரக மந்திர தியானம் நன்கு விருத்தியாகும். விரல் ரேகைகள், விரல் கணுக் கங்கண ரேகைகளில் உறைந்துள்ள யந்திர, சக்கர சக்திகள் ராமநாம முத்திரை ஜப முறையால் நன்கு பரிணமித்து மன சாந்தியைத் தரும்.
இத்தகைய ராம பூஜா சிவராமப் பிரதோஷ நாளில் கைவிரல் முத்திரைகளால் ராம நாமத்தை திரயோதசித் திதித் துவக்க நேரத்தில் இருந்தே துவங்கி ஜபித்திடுதல் பெறுதற்கரிய பாக்கியமாகும்.
ராமன், ராமலிங்கம், சிவராமன் போன்ற ராமநாம பெயரை உடையவர்கள் இதனைக் கண்டிப்பாகக் கடைபிடித்திட வேண்டும். நாள் முழுதும் ராம நாம ஜபம் ஆற்றுதல் சிறப்பானது. குறைந்த பட்சம், பிரதோஷ பூஜை நேரத்தின் முன்னும் பின்னுமாகக் குறைந்தது ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) நேரத்திற்குக் குறையாமல் ராம பீஜாட்சர மந்திரத்தை கைவிரல் முத்திரைகளால் வரைந்து, உறைந்து பழகி ஓதுதல் வேண்டும்.

பள்ளிமுக்கூடல்

ஸ்ரீராமர் பூஜித்தத் தலங்களில் இத்தகைய பிரதோஷப் பூஜைகளை ஆற்றுவதால், மனைவியின் பிடிவாதம், கணவன் அல்லது மனைவியின் அதிகம் படிக்காத தாழ்வு மனப்பான்மைகள், மனைவியின் பெருந் தவறுகள், தகாத வார்த்தைகள் பேசியதால் ஏற்பட்ட குடும்பப் பகைமைகள் போன்றவை தீர புனர்பூச நட்சத்திரப் பிரதோஷப் பூஜா பலன்கள் நன்கு உதவும்.
ராமராஜபுரம், ராமநாதபுரம் போன்ற ராம நாமத்தைக்கொண்ட உள்ள தலங்களில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ சிவபூஜை ஆற்றுதலால், பிள்ளைப் பேறின்றித் தவிக்கும் இல்லத்தில், ராமநாம தாரக மந்திர சக்தி நிறைந்து, குடும்பத்தினரிடையே ஒற்றுமையும், சந்ததி விருத்தியும் பிரகாசிக்க சந்தான லோகப் பித்ருக்களின் அருளாசி கிட்டிட உதவும்.
பிரதோஷ பூஜையில் மனம், உடல், உள்ளத்தைப் புனர வைக்கும் நட்சத்திர சக்திகள் திரண்டு பிரகாசிக்கின்றன.

சனிக் கிழமையும் சந்தான பாக்யமும்

தனித் துள பதீதம்
இனித் துளசீய இதம் இதம்
என்பது சனிச் சதுர்த்தசியில் ஆற்றும் பூஜைகளுக்கான சந்தான பலத் துதியாகும். சந்தானம் என்றால் பிள்ளைப் பேற்றைக் குறிப்பதாகும். ஒவ்வொரு நாளுக்கும் உரிய சந்தானத் துதி ஒன்று உண்டு. இதைக் குறித்த ஹோரை, லக்னத்தில் ஓதி வந்திட,
* பிள்ளைப் பிறப்பு பாக்யம் கிட்டாமைக்கான தோஷங்கள் தீர உதவுவதுடன்,
* பிள்ளைகளைப் பெற்றவர்களும், பிள்ளைகளின் ஒழுக்கத்தைப் பற்றிக் கொள்ளும் கவலைகளும் நிவர்த்தி ஆகவும் உதவும்.
பிள்ளைகள் பிறந்து விட்டதால் சந்தான பலத் துதிகளை ஓதுவதை நிறுத்தி விடக் கூடாது. அவரவர் சந்ததிகளுக்கும் சந்தானப் பேறு கிட்ட வேண்டும் அல்லவா! மேலும் வளரும் பிள்ளைகளும் நன்கு வாழ்ந்து கடைத்தேற வேண்டுமன்றோ! இதற்கும் சந்தான லக்ஷ்மி, சந்தான விநாயகர் வழிபாடு, இரட்டைப் பிள்ளையார் பூஜை மிகவும் முக்கியமானதாகும்.
சதுர்த்தி, சதுர்த்தசித் திதிகள் விநாயகருக்கு ஏற்றவை. சனீஸ்வரர் தீர்கமான ஆயுளை அளிப்பவராவார். எனவே சந்தானப் பிராப்தி வேண்டுவதான, பிள்ளை பெறும் நல்வரம் அடைய உதவும் புத்திர காமேஷ்டி யாகம்தனைச் சனிச் சதுர்த்தசியில் ஆற்றப்படுவது மிகவும் விசேஷமானதாகும்.

ஐயர்மலை

வளர்பிறைச் சதுர்த்தி, தேய்பிறைச் சதுர்த்தி, வளர்பிறைச் சதுர்த்தசி, தேய்பிறைச் சதுர்த்தசி ஆகிய நான்கும் பல்வகைச் சந்தான சக்திகளை அளிக்க வல்லவை. பிள்ளைப் பேற்றை மட்டும் தருவது சந்தான சக்தி ஆகி விடாது. பிறருக்கும் சந்தான சக்திப் பூஜைகளை விளக்கிப் பலருடைய மனக் கஷ்டங்கள் தீர உதவுவதும் சந்தான சக்தி ஆகும்.
பெற்றோர்களை இறுதி வரை நன்கு வைத்துக் காப்பதற்கும் சந்தான சக்தியே உதவும்.
எனவே சனிக் கிழமைகளில் அருணாசலம் (திருஅண்ணாமலை), அய்யர்மலை, திருக்கழுக்குன்றம் போன்ற மலைத் தலங்களில் தர்பை, கமண்டல நீர், எள், நீர் ஆராக் கீரை இலை தளங்களைத் தாங்கி கிரிவலம் வருதலும், கிரிவலம் முடிந்த கையோடு தர்ப்பணம் அளிப்பதும் மிகவும் விசேஷமானதாகும்.
மறுநாள் ஞாயிறு விடியற்காலை அருணாசல கிரிவலத்தில் கிரிவலப் பாதையிலோ, ஆலயத்திலோ, தீர்த்தக் கரையிலோ தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானது.
24 நீர் ஆராக் கீரை இலைகளை, ஒரு பெரிய வாழை இலையில் / தாம்பாளத்தில் வைத்து, இதன் மேல் தர்ப்பணச் சட்டம் அமைத்து, முதலில்
புத்ர காமேஷ்டி தேவதா மூர்த்திம் தர்ப்பயாமி
புத்ர க்ஷேம தேவதா மூர்த்திம் தர்ப்பயாமி
சந்தானக் கிருபா தேவதா மூர்த்திம் தர்ப்பயாமி
என்று ஓதி புத்ர காமேஷ்டி தேவதைகள் 12 பேருக்கும் எழுந்து நின்று அர்க்யம் அளித்து, பிறகு தர்ப்பணம் அளித்தலால் சந்தான சக்திகள் மேம்பட உதவும். குழந்தை பாக்யம் இல்லாதோர் இதற்கான சந்தான சக்திகளைப் பெற சந்தான லோகப் பித்ருக்கள் உதவுவர்.
மதுரை அவனியாபுரம் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீசந்தான விநாயகர் சன்னிதியில் பூஜித்த பின், தர்ப்பணம் அளித்தலால், திருமணம் சம்பந்தமான தோஷங்களை நீக்க தக்க பரிகாரங்களைப் பெற்றிடலாம்.

அருமருந்து அமாவாசை

ஒரே திதி மூன்று நாட்களுக்கும் நிரவி, பரவி வந்தால் அதற்குத் திரிதினத் திதி என்று பெயர் அமைகின்றது என நீங்கள் நன்கு அறிவீர்கள்! இதில் இடைப்பட்ட நடு நாளில், அந்தக் குறித்த திதியானது, 60 நாழிகைக்கும், 24 மணி நேரத்திலும், பரிபூரணமாகவே நிரவி இருக்கும்.
இவ்வாறு அமாவாசை திதி மூன்று நாட்களுக்கும் நிரவி ஆயில்ய நட்சத்திரத்துடன் இணைந்து வந்தால் அது மிகவும் சக்தி வாய்ந்த கடுமையான நோய்களைத் தீர்க்க வல்ல அருமருந்து சக்தி நாளாக சிறப்புப் பெறுகிறது
ஆயில்ய நட்சத்திரம் மருத்துவ சக்திகள் நிறைந்ததாகும். சந்திர கிரகத்தில் நிறைய அமிர்த மூலிகைகள் இருப்பதால், பௌர்ணமி தோறும் திருஅண்ணாமலை போன்ற பல தலங்களில் பௌர்ணமியில் மட்டுமே பூரிக்கும் மூலிகைகள் பல தோன்றுகின்றன. மேலும் பௌர்ணமியில்தான் அனைத்து மூலிகைகளுக்கும் சோமசூர்யாமிர்தம் எனும் அரிய நோய் நிவாரண சக்திகள் சேர்கின்றன. அமாவாசையன்று மூலிகையின் வேர் தண்டு என அனைத்துப் பகுதிகளுக்கும் மருந்து சக்தியானது பூரித்து நிறைகின்றது.

ருத்ராட்ச பந்தலில் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் திருவக்கரை

எனவேதான், அமாவாசையோடு, ஆயில்ய நட்சத்திரத்தின், குறித்த பாதமானது, சந்திர கால்களில் ஊன்றி இருப்பது சிறப்பான மருத்துவ சக்திகளை அதற்குக் கூடுதலாக அளிக்கின்றது. எந்த நட்சத்திர மண்டலத்தில் சந்திரன் புழங்குகிறாரோ அதே அன்றைய நாளின் நட்சத்திரமாகும் என நாம் அறிவோம். அமாவாசை என்பது சூரிய, சந்திர கிரகச் சந்திப்புத் தானே! தோல் சம்பந்தமான நோய் நிவர்த்திக்கும் சூரிய சக்தி தேவை அன்றோ!  
இப்படியாக இந்த நாளில் உற்பவிக்கும் அரிய பல மருத்துவ சக்திகள் யாவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூமிக்கு வரப் பெறுவதாக உள்ளது நமக்குப் பெறும் பாக்யமே!
அமாவாசைத் திதியும், ஆயில்ய நட்சத்திரமும் சித்த யோகத்தில் பரிபூரணமாகக் கூடுகையில், ஆயில்ய நட்சத்திர மண்டலத்தில், குறித்த அமிர்த நேரத்தில், சூரிய, சந்திர, கிரக சஞ்சாரக் கூட்டொளிப் பிரவாக ஒளியில் அவதூது ரோக நிவர்த்தி சித்தர் உற்பவித்தார். இவரே பூவுலக நோய்கள் அனைத்தின் குணங்களையும் நிவர்த்தி செய்பவர். ஸ்ரீபடேசாஹிப் சித்தர் இவருடைய பரிபூரண அருளைப் பெற்றவர்.

இவர் பூவுலகில் பல விதமான மருத்துவ சக்திப் பூஜைகளை ஆற்றுவதற்கு வருகின்றார். இவர் சென்னை - பூந்தமல்லி ஸ்ரீவைத்தீஸ்வரர் ஆலயத்தில், ஸ்ரீ தைலநாயகி அம்பாள் எதிரே உள்ள தூண் ஒன்றில் தோன்றி அருள்பாலிக்கின்றார். இவர் அமாவாசை, ஆயில்யம் கூடியத் திரிதினம் பரிமளிக்கும் நாளில்தான் அவதரித்தார். அவதூது ரோக நிவர்த்தி சித்தர் இவ்விடத்தில்தான் ஜீவாலயம் பூண்டார்.
எனவே, எந்த ஆலயத்தில் எந்தத் தூணில், இடத்தில் சித்தர்கள் காணப்படுகின்றார்களோ, அந்த இடத்தில்தான் ஜீவ சமாதி பூண்டார்கள் அல்லது இறைவனோடு ஐக்கியமானார்கள் என்று பொருளாகும். அமாவாசை, ஆயில்யம் நட்சத்திர நாட்களில் இச்சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவது அற்புதமான முறையில் நோய் நிவர்த்தியாக உதவும்.
நுனி வாழை இலையை விரித்து, அதில் அரசு, ஆல், வன்னி, புரசு, வில்வம் போன்ற ஐந்து மூலிகைத் தளங்களை வைத்து, இதன் மேல் குறைந்தது 24 வகை ஹோமத் திரவியங்களை (சுக்கு, அதிமதுரம், வசம்பு, கொப்பரைத் தேங்காய் போன்றவை) வைத்து, இதன் மேல் விஷ்ணு தர்பை, சிவ தர்பை இரண்டாலும் ஆன தர்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் அளித்திடவேண்டும். தர்ப்பணம் முடிந்த பிறகு, ஹோமத் திரவியங்களை ஹோமம் செய்யும் போது பயன்படுத்திடலாம். அல்லது பொடி செய்து சாம்பிராணி தூபத்தில் சந்தனத்துடன் சிறிது, சிறிதாக இட்டிடலாம்.
தர்ப்பணத்தின்போது முதலில் மிகவும் பிரசித்தி பெற்ற, மக்களுக்கு நன்கு சேவை செய்து மறைந்த ஆங்கில, சித்த, ஆயுர்வேத வைத்தியருக்கு (முதலில் காருண்யத் தர்ப்பணம் அளித்து) பிறகு மற்றவர்களுக்குத் தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

ருத்ராட்ச லிங்க மூர்த்தி
திருகோகர்ணம்

கடுமையாக நோயுற்று இறந்தோருக்கும், அறுவைச் சிகிச்சையால் பல உறுப்புகளை இழந்து இறந்தோருக்கும் சாயைச் சரீர தோஷங்கள் நீங்க இத்தர்ப்பண சக்தி உதவி சாயைச் சரீரமும் நன்கு பூதளம் அடையப் பெறும்.
திருச்சி - லால்குடி பூவாளூர், மதுரை அருகே திருப்புவணம், லால்குடி அருகே ஆதிகுடி, நெடுங்குடி, திருவிடைமருதூர், ராமேஸ்வரம் போன்ற தலங்களில் மூங்கில் கூடையில் தாமரை மலர்களைச் சுமந்து சென்று, இவற்றின் மேல் தர்பைச் சட்டம் அமைத்து தர்ப்பணம் அளித்து, பூக்களை ஆற்றுப் படுகையில் இடுவதால், சடலமானது எரியூற்றுதலில் சரியாக பஸ்மமாகாததால் குடும்பங்களுக்கு ஏற்படும் பஸ்ம தோஷங்களும், சாயைச் சரீரங்களுக்கான துராக்னி தோஷங்களும் நீங்க உதவும்.
லால்குடி அருகே அன்பிலில் உள்ள காவிரி, பல்குனி, சரஸ்வதி போன்ற மூன்று ஆறுகளின் சங்கமத் திரிகூடலில் தர்ப்பணம் அளிப்பதால், தாய், தந்தையர் இறக்கும்போது அருகில் இல்லாத தோஷங்கள் தீரத் தக்கப் பரிகாரம் கிட்டும். ஆற்றில் நீர் இல்லாவிட்டால் ஆற்றுப் படுகையில் தர்ப்பணம் அளித்திடலாம்.

அமாவாசை சூரிய சந்திரர்களின் சந்திப்பில் நிகழ்வது போல, சூரிய சந்திர சக்திகளின் மாறுபட்ட இயக்கத்தால் தோல் வியாதிகள் முதலான பலவிதமான வியாதிகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கவே ருத்ராட்ச மாலைகளை அணிந்து பலவிதமான பூஜைகளை மக்கள் நிறைவேற்றி வந்தார்கள். ஆனால், தற்போது தரமான ருத்ராட்ச மணிகள் கிடைப்பதில்லை. மேலும் இறந்த மகான்கள், சாதுக்கள் பயன்படுத்திய மாலைகளிலிருந்து ருத்ராட்ச மணிகளைப் பெற்று விற்கும் நிலைகளும் ஏற்பட்டு விட்டதால் பலரும் ருத்ராட்ச மணிகளைப் பயன்படுத்த யோசிக்கின்றனர். இந்நிலைக்கு பரிகாரம் அளிப்பதே ருத்ராட்ச லிங்க வழிபாடாகும். ருத்ராட்ச லிங்கங்கள் அமைந்த திருக்கோயில்களில் அம்மூர்த்திகளை வணங்கி, அல்லது ருத்ராட்ச பந்தல்கள் அமைக்கப்பட்ட மூர்த்திகளை (உதாரணமாக ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சீபுரம்) வணங்கி சப்பாத்தி உருளைக் கிழங்கு மசால் தானமாக வழங்கி வருதலால் தோல் வியாதிகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சூரியப் பெயர்ச்சியின் புண்ணிய மழை

விஷ்ணுபதிப் புண்ய காலம். எத்தனையோ ஆயிரம் திருமால் அனுபூதிகள் நிகழ்ந்த அதியற்புதப் புண்யகாலமே விஷ்ணுபதிப் புண்ய காலம். இந்நாளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் தொடங்கி, காலை சுமார் 10.30 மணி வரை, திருமாலுக்கான சகல விதமான அபிஷேக, ஆராதனைகளை, அனைத்துப் பெருமாள் ஆலயங்களிலும், விசேஷமான விஷ்ணுபதிப் பூஜைகளாகக் கொண்டாடுதல் வேண்டும்.

ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆதிகுடி

அதெப்படி, சரியாக மாதப் பிறப்பன்று விஷ்ணுபதிப் புண்ய காலம் அமைகின்றது? மாதப் பிறப்பு என்பது சூரிய கிரகப் பெயர்ச்சி ஆகும். சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி போல, சூரியப் பெயர்ச்சி நிகழ்வதே தமிழ் மாதப்பிறப்பு என்பதைப் பலரும் மறந்து விடுகின்றார்கள். புத்திப் பிரகாசச் தெய்வீகச் சக்திகள் அபரிமிதமாகப் பரிமளிப்பதால், பூவுலகெங்கும், அதிகமான அளவில், சூரியப் பெயர்ச்சி நிகழ்கின்ற நாளில், பிற நாட்களை விட, நிறைய வழிபாடுகள் நிகழ்கின்றன. மாதப் பிறப்பில் ஸ்ரீசூரிய நாராயண மூர்த்தித் தெய்வமே மனம் கனிந்து வந்து, காருண்ய மூர்த்தியாக, அபரிமிதமான நல்வரங்களைப் பொழிகின்ற திருநாளாக, சூரியப் பெயர்ச்சித் திருநாளாக அமைகின்றது.
பித்ருக்களும் வம்ச வித்யா (கல்வி) சக்திகளுக்குப் பெரிதும் உதவுவதால், ஒவ்வொரு மாதப் பிறப்பும் தர்ப்பண நாளாகவும் பொலிகின்றது.
ஸ்ரீசூரியநாராயண சுவாமியாகப் பெருமாளே சூரியமண்டல நாயகராக, பூலோக ஜீவன்களுக்குத் தினமும் ஜீவசக்திகளை அளிக்கின்றார். சூரியன் இல்லையேல் தினசரி வாழ்வேது, ஜீவசக்தி கிட்டுவது ஏது? ஜீவசக்தி எனில் உடலில் உயிர் நன்கு தரித்து இருப்பதும், புத்தி பிசகாது வாழ்தலும் ஆகும்.

நத்தம் திரிவேணி சங்கமம்

மாதப் பிறப்பு நாளான சூரிய கிரகப் பெயர்ச்சியில், எண்ணற்ற இறைலீலைகள் நிகழ்கின்றன. இதனால்தாம் தமிழ் மாதப் பிறப்பு தோறும், காலையில் 5000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஓர் அற்புத தெய்வக் கடமையாக, திருஅண்ணாமலையில் அருணாசல கிரிவலம் வருகின்ற தெய்வ வழிபாடு கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றது.
சூரிய பெயர்ச்சி அன்று புத்தியைப் பிரகாசிக்கச் செய்யும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகள் நன்கு நிறைந்து பொலியும், சூரிய மண்டல சக்திகளுடன் பிணையும் அபூர்வமான இந்த மாதப் பிறப்பு கூடிய விஷ்ணுபதி நாளில், காப்புச் சக்திகள் நன்கு மிகுந்து, திரள்வதால், ஆக்கல், காத்தல், மறைத்தல் ஆகிய மூன்று தொழில்களில், காத்தல் தொழில்பிரானாம் கள்ளழகராம் திருமால் அற்புதப் புராண லீலைகளைப் புரிகின்றார்.
திருச்சி அருகே நத்தம் திருத்தலத்தில் திருமால், ஸ்ரீஆதிமூலப் பெருமாளாக, யானையைக் காத்தருளி, முக்தி, மோட்ச நிலைகளைத் தந்தருளிய விசேஷமான தினமும் இதுவே. எனவேதான் இங்கு யானையின் சிரசில் கை வைத்து ஆசிர்வதிக்கும் நிலையில், சயனக் கோலப் பெருமாளின் தோற்றம் பொலிகின்றது.
பெருமாளின் திருவடிகளை நாடுதலே உத்தம நிலைகளைத் தந்தருளும் என்பதை உணர வைக்கும் உத்தம நாளுமாவதால், விஷ்ணுபதி நாளில் தர்ப்பணம், ஹோமம், நடைப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம், அன்னதானம் போன்ற 16 விதமான வழிபாட்டு முறைகளை ஆற்றுதல் மிகவும் விசேஷமானதாகும்.
மாதப் பிறப்பாக சூரிய மூர்த்தி ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் போன்ற ஸ்திர ராசிகளில் ஆட்சிப் பீடமேறும் நாளாக இருப்பதால், விஷ்ணுபதி நாட்களில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை 10,000 முறை ஜபித்திடச் சங்கல்பம் பூண்டு, விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்திலிருந்து தொடங்கி மறுநாள் காலை சூரிய உதய நேரம் வரைக்குள் (தேவையானால் இரவு முழுதும் கண் விழித்தாவது) ஸ்ரீகாயத்ரீ ஜபம் செய்து 10,000 உருக்கள் ஏற்றிடுவது நல்ல புத்திப் பிரகாசத்தைத் தருவதாகும்.

நின்று, நடந்து காரிங்கள் செய்யும் போதெல்லாம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதிடலாம். கழுத்தில் ஸ்படிகம், ருத்ராட்சம் அணிந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதுதலால் விஷ்ணுபதிப் புண்ய காலச் சக்திகள் பெருகும் நாளாதலாலும்,  ருத்ராட்ச, ஸ்படிகப் பலாபலன்களால் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஒரு கோடி முறை ஓதிய பலன்கள் கூட உத்தம பக்தி உடையோர்க்குக் கிட்டிடும்.
ஸ்ரீகாயத்ரீ தேவி எழுந்தருளும் தலங்களில் உள்ள பெருமாள், நவகிரக மூர்த்திகளை வணங்கி, ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்தலும், கோசாலை, நதிக் கரை, ஆலய வளாகங்களில் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்தலும் மிகவும் விசேஷமானதாகும்.
விஷ்ணுபதிப் புண்யகால பூஜையை ஏதேனும் ஒரு பெருமாள் ஆலயத்தில் ஆற்றி, பவானி முக்கூடலில் தர்ப்பணம் அளித்து, பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்க தரிசனம் செய்து, இங்கேயே 10000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் ஆற்றுதலால், ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக ஓதாத முன்னோர்களுக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தி நிரவிட, தக்க அமிர்த சக்தி கிட்டும். இதனால் சில வகையான பித்ரு தோஷங்கள் நீங்கி, குடும்ப முன்னேற்றத்தைத் தடுக்கும் சந்ததிக் குற்றங்கள் தீர வழிபிறக்கும்.
விஷ்ணுபதிப் புண்யகால பூஜைக்குப் பிறகு, பவானியில் இன்று ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிப்போர்க்கு அமிர்தம் சுரக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகளின் அம்சங்கள் கிட்டிட, இங்குள்ள ஸ்ரீஅமிர்த லிங்க மூர்த்தி அருள்கின்றார்.

குஜசோம தீபம்

மூன்றாம் பிறை சந்திர தரிசன நாளில் கூடும் செவ்வாய்க் கிழமை அன்று ஸ்ரீராகு கால துர்க்கை பூஜைக்காக, ராகு கால நேரத்திற்கு முன் இல்லத்தில் தீபம் ஏற்றி, ஸ்ரீராகு கால துர்க்கா பூஜைகளை நிகழ்த்தி, ஆலயத்திலும் எலுமிச்சை உறை தீபமேற்றி, இயன்றால் அமர்ந்த கோல ஸ்ரீதுர்க்கையைத் தரிசித்து,  இல்லத்திற்கு வந்த பின், வீட்டில் ஏற்றிய அதே தீபத்தில், மேலும் பசு நெய் ஊற்றித் தீபப் பிரகாசத்தை மாலை மூன்றாம் சந்திர தரிசனத்தைப் பெறும் வரையேனும் தொடர்ந்து, பிரகாசிக்கச் செய்து தரிசித்தலே குஜசோம தீப தரிசனம் ஆகும்..
அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் வரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விசேஷமான தெய்வீக சக்திகள் உண்டு. நவகிரக மூர்த்திகள் அனைவருமே மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்று, அவர்கள் வழிபடும் சந்திரக் கிரணங்களில் இருந்து சுடரைப் பெற்று ஏற்றுகின்ற தீபமுமே குஜசோம தீபமாகும். நவகிரகச் சந்திர மூர்த்தி, பௌர்ணமிச் சந்திர மூர்த்தி, மூன்றாம் பிறைச் சந்திர மூர்த்தி அனைவருமே பலவிதமான சந்திர வர அம்சங்களைப் பூண்டவர்கள்.

ஸ்ரீபிரேமாம்பிகை ஆதிகுடி

சனீஸ்வரரே சனைஸ்சரன் எனப்படுவதாக மந்த கதி உடையவர் எனப் பொருளுடன் ஆகின்றார். மந்த கதி என்றால் மெதுவாக நடப்பவர் என்பது உலகியற் பொருள். இந்த உலகியல் பொருளில் மந்த கதி என்பது தாமதமாகச் செல்பவர் என்று அர்த்தம் கொண்டாலும், கிரக அம்சங்களில் மந்த கதி என்பது வேறு தேவ பொருளை உடையதாகும்.
உலகியல் காரியங்களில், மிகவும் மெதுவாக ஆற்ற வேண்டிய காரியங்கள் பல உண்டு. உதாரணமாக, தங்க ஆபரணத்தில் மிக மெதுவாகவே, பொன் தச்சர்கள் நவரத்தினங்களைப் பொருத்துவார்கள். வீட்டில் விளக்கேற்றும் போது, மந்திரங்களை ஓதி, மிகவும் மெதுவாகவே விளக்கேற்ற வேண்டும். இனிப்புகளைத் தயாரிக்கையில் சர்க்கரைப் பாகு ஆற்றும்போது மிகவும் மெதுவாகவே சர்க்கரையை ஊற்றிக் கம்பிப் பதப்பாகு செய்திட வேண்டும்.
எனவே, மிகவும் மெதுவாகப் பொறுமையுடன் ஆற்ற வேண்டிய காரியங்களுக்குத் தேவையான மந்த கதிக்கு, சனீஸ்வர அனுகிரகம் மிக மிகத் தேவை. இதற்காக, காரியங்களை மிகவும் தாமதித்திடவும் கூடாது. யம மூர்த்தியின் கோலால் ஸ்பரிசிக்கப் பெற்றுச் சனீஸ்வரருடைய இயக்கம் மெதுவானதாக ஆயிற்று. இவ்வாறான இறை லீலைகள் அனைத்திலும், ஒவ்வொன்றுக்கும் பலப் பல அர்த்தங்கள் உண்டு. ஏனெனில் இதன் பிறகுதான் கிரஹ கதிகளில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. சனீஸ்வர இயக்கம் மெதுவாய் ஆன பிறகே, விண்வெளியில் பல கிரக கதி மாற்ற இயக்கங்கள் ஏற்பட்டு, வானியலிலும் சனி கிரகத்தை வைத்தே சனி, குரு, செவ்வாய், சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன் இந்த வரிசையில்தாம் கிரக கதி வேகங்கள் அமைகின்றன. இதே வகையில்தாம் ஹோரைகளும் அமையும்
தற்போது நாம் பெற்றிருக்கும், வாரத்தின் ஏழு நாள் முறை, பாரத நாட்டிலிருந்துதான் பிற இடங்களுக்குப் பரவின. அதுவரையில் சனி முதல் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய ஐந்து கிரகங்களே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன் பிறகே சூரிய, சந்திர கிரகங்களும் சேர்ந்து, ஏழு நாட்கள், ஏழு கிரகங்கள் ஆயின.
மாலை சந்திர தரிசனம் கிட்டுவதற்கு ஒரு நாழிகை முன்னரேயே, இல்லத்தில் தீபம் ஏற்றி, சந்திரப் பிறை தரிசனம் கிட்டிய பின்,
* இயன்றால் சந்திரப் பிறைக்கு முன் விளக்கினைக் கொணர்ந்து,
* இன்னொரு (தாமரைத்) திரியைக் கூட வைத்துக் கூடுதல் சந்திர தீபமாக ஏற்றி வழிபட்டுப்
பிறகு இல்லத்திற்குள் விளக்கைக் கொண்டு வந்து,
* மல்லிகை, சம்பங்கி, வெண்தாமரை போன்ற வெள்ளை மலர்களால் அலங்கரித்துப் பூஜித்திட வேண்டும்.
இதனால் பிள்ளைகளுக்கும் மருத்துவர்கள், மருத்துவத் துறையினர்க்கும் தத்தம் துறையில் நல்ல நினைவாற்றல் ஏற்பட உதவும்.
வீட்டில் பெரிதான முழு (ஜம்பு) நாவற் பழங்களால் எட்டு என்ற வடிவில் நாவற் பழங்களை அடுக்கி வைத்துச் சனீஸ்வரச் சின்னமாகப் பாவித்து வணங்குதல் வேண்டும். (8 = சனீஸ்வர எண்). ஆலய நடை சார்த்தி இருக்கையிலும், அருகில் ஆலயம் இல்லாதோறும், மூன்று நாழிகைக்கு ஒரு முறையான வழிபாட்டிற்கு, இந்த ஜம்புப் பழ அஷ்டபல (எட்டுச்) சக்கரத்துள் தீபத்தை வைத்து, சனீஸ்வரச் சின்னமாக பாவனை செய்து வழிபட வேண்டும்.
சந்திர தரிசனத்திற்குப் பிறகு சோமகுஜ தீபத்தை எட்டு என்ற நாவற்பழ எண் சக்கரத்துள் வைத்து வழிபடுவதால், சனி தசைத் துன்பங்கள் சோமகுஜ தீப சக்திகளால் தீர வழி பிறக்கும். மேலும் மேற்குப் பார்த்த சனீஸ்வர தரிசனம் மிகவும் விசேஷமானது.

ஸ்வர்ண கௌரீ மங்கள விரதம்

பொதுவாக, ஆலயங்களில் நடத்தப் பெறும் பல விதமான அபிஷேகங்களில், ஸ்வர்ண ஜலாம்ருத அபிஷேகம் என்ற ஒன்றும் உண்டு. பக்தர்களிடம் இருந்து நகைகளைப் பெற்று, ஒரு குடத்தில் நீரில் வைத்து சுவாமி, அம்பிகைக்கு அபிஷேகித்து, சுவாமியின் பாதங்களில் நகைகளை வைத்து பக்தர்களுக்குத் திரும்ப அளிப்பதும் ஸ்வர்ணாபிஷேக வகைகளில் ஒன்றாகும்.
கௌரி மங்கள விரத நாளில் இவ்வாறு ஆலயத்தில், உங்கள் நகைகளை ஸ்வர்ண அபிஷேகத்திற்கு அளித்து, இறைப்பிரசாத சக்திகளுடன் நகைகளைப் பெற்று வாருங்கள். இதனால், இல்லத்தில் ஸ்வர்ண ரேகை சக்திகள் பரிமளிக்க நன்கு உதவும். இன்று ஆலயங்களில், எந்த அளவிற்குப் பஞ்ச லோகச் சிலைகளைத் தரிசிக்கின்றீர்களோ, அந்த அளவிற்குக் கண்களிலும், உடலிலும் ஸ்வர்ண ரேகை சக்திகள் நிரவும்.

ஸ்ரீசௌந்தர நாயகி சமேத ஸ்ரீஸ்வர்ணபுரீஸ்வரர்
அளகாபுத்தூர் கும்பகோணம்

ஸ்வர்ண ரேகை ஓடுகின்ற அபூர்வமான லிங்கம் மற்றும் அம்பாள் மூர்த்திகள் உண்டு. கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை அம்பிகையின் சிலாத் திருமேனியில் ஸ்வர்ண ரேகை ஓடுகின்றது. இதை விரத நாளில் தரிசித்தால், மனதை நெருடிக் கொண்டிருக்கின்ற முக்கியமான பிரச்னைக்குத் தீர்வு பெற நல்வழிகள் கிட்டும். இன்று மூகாம்பிகை, திருவிடை மருதூர் மூகாம்பிகை போன்ற மூகாம்பிகையின் பெயரை உடைய அம்பிகைக்கு, தங்கம், அல்லது தங்க முலாம் பூசிய அல்லது வெள்ளி இழைகளால் மாலை, ஒட்டியாணத்தை அவரவர் வசதிக்கு ஏற்ப அணிவித்து வழிபடுதல் மிகவும் விசேஷமானது. இதனால், தன் ஒரே பிள்ளையின் வாழ்வு எப்படி அமையுமோ என்று பீதியுடன் வாழ்வோரின் மன அச்சங்கள் தணிய, வழி கிடைக்கும்.
இன்று ஆலய உண்டியலில் ஒரு சிறு பொட்டுத் தங்கத்தையாவது பெருமாள் ஆலய உண்டியலில் இடுவதால், நேர்த்திக் கடன்கள் பெருகி உள்ளதால் வரும் தோஷங்கள் தீர உதவும். பொதுவாக நேர்த்திக் கடன்களை முறையாக நிறைவேற்றாது பாக்கியாகச் சேர்த்துக் கொண்டிருந்தால், உடலில் கட்டிகள், தலையில் சடை, சிறு பிள்ளைகள் அடிக்கடி நோய் வாய்ப்படுதல் போன்றவை அடிக்கடி ஏற்படும்.
ஸ்வர்ண கௌரி மங்கள விரதத்தின்போது மஞ்சள் நிற ஆடைகளை உடுத்தி, கை நிறைய மஞ்சள் நிற வளையல்களை அணிந்து, ஒரு செம்பில் கங்கை, காவிரி புனித நீர் ஊற்றி, நகைகளை இட்டு மஞ்சள், குங்குமம் பூசிய ஒரு தேங்காயை மேலே வைத்து செம்பை ஸ்ரீமங்கள கௌரீ அம்பிகையாக பாவனை செய்து, புடவை, ரவிக்கை, நகை சார்த்தி, பழங்கள், அன்னம், வெற்றிலை, பாக்கு வைத்து,
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்யம்பகே கௌரீ பரமேஸ்வரீ நமோஸ்துதே!
என்ற துதியை 1008 முறை ஓதி, வழிபடுதல் வேண்டும்.
ஒரு ஏழைக்காவது ஏதேனும் ஒரு வகையில் தங்க தானம் செய்திடுல் அல்லது தங்க நகைகளை அடகு வைத்தவர்களுக்கு அதை மீட்க உதவுதல், குறைந்த பட்சம் தங்க நகைக் கடன் வட்டியையாவது செலுத்த உதவுவதால் இல்லத்தில் ஸ்வர்ண சக்திகள் பரிமளிக்க உதவும்.
பலரும் வீட்டில் பழைய (நல்ல விதமான), புதிய பட்டுப் புடவைகளை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று யோசிப்பார்கள். இந்நாளில் சற்றும் தயங்காமல், இத்தகைய பழைய, புதிய பட்டு புடவைகளை ஏழைகளுக்குத் தானம் அளித்திடுக! இதனால், தன் பிள்ளை, பெண்ணின் மந்தமான அழகு, படிப்புப் பற்றிய தாழ்வான எண்ணக் கர்ம வினைகள் தணிய வழி பிறக்கும்.
ஆலயத்தில் அல்லது யாருடைய வீட்டிலேனும் ஹோமம் நடந்திடில், புது மஞ்சள் பட்டு வஸ்திரம் வாங்கிப் பசு நெய்யில் தோய்த்து ஆஹூதியாக அளித்திடத் தானமாக அளிப்பதும் சிறப்பானது.
ஆலயங்களில் உள்ள அனைத்து தெய்வ மூர்த்திகளுக்கும், சிற்றாடைகளைத் தானமாக அளித்து, வழிபட்டுப் பிரதட்சிணமாக வருதலால், அளவுக்கு மீறிப் பேசியதால், குடும்பத்தில் ஏற்பட்ட விபரீத விளைவுகள் பெரிதும் தணிய உதவும்.
காலையிலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை, புதுப் பழங்களை சுவாமிக்குப் படைத்து, சிறு குழந்தைகளுக்கும், பசுக்களுக்கும் அளித்து வர, கணவனின் மேல் உள்ள வெறுப்பு தணிந்து, இல்லத்தில் நாளடைவில் சகஜ நிலை ஏற்பட நன்கு உதவும்.
மாலையில் பூர்வாங்க பூஜையாக, 108 முறை ரோஜா, மல்லிகைப் புஷ்பங்களால் பூஜைச் செம்பை அர்ச்சித்து, தேங்காயை எடுத்து நைவேத்யம் செய்து அன்னதானம் அளித்தலும், செம்பு நிறைய உள்ள நீரைப் பிரசாதமாக அருந்தியும், இல்லம், தோட்டத்தில் மாவிலைகளால் தெளித்தும் மங்கள கௌரீ விரதத்தை நிறைவு செய்திட வேண்டும்.
(கும்பகோணம் அருகே அழகாபுத்தூர்) ஸ்ரீஸ்வர்ணபுரீஸ்வரர், ஸ்ரீஸ்வர்ணவல்லி, ஸ்ரீபொன்னி அம்மன், ஸ்ரீபொன்னாத்தாள் போன்ற பொன் சம்பந்தமான பெயர்களை உடைய சுவாமியை வழிபட்டு,  பப்பாளிப் பழத்தில் சர்க்கரை சேர்த்துத் தானமளித்தால், அனாவசியமாகப் பொய்கள் சொல்லும் கணவன் அல்லது மனைவி திருந்திட நல்வழிகிட்டும்.

மதுரம் அதிமதுரம்

உண்மையில், மது என்பதற்குத் தேன், திகட்டாத இனிப்பு சுவை, அமிர்த சுவை, அமிர்தம் என்றே பொருளாகும். ஆனால் தமிழ் வழக்கில், மது என்பது போதை திரவியத்தைக் குறிப்பதாகத் தற்போது தவறாகப் பொருள் அமைந்திருப்பது வேதனைக்குரியது. மதுரா, மதுக்கூர், மதுரை, மதுக்கரை, வடமதுரை, மானாமதுரை போன்ற மதுரமான அமிர்த வகைப் பெயர்களை உடைய தலங்களில், வளர்பிறை சதுர்த்தி திதி அன்று மதுர சக்திகள் பொங்கி பூரித்துப் பரிணமிக்கும்.
உண்மையில் ஒவ்வொருவருடைய நாக்கிலும், வாக்கிலும் மதுர சக்திகள் பொழியத்தான் செய்கின்றன. நாக்கில் மதுர சக்திகளை ஊற வைக்கும் மதுஸ்வர குண மொட்டுகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் இவற்றை ஆக்கப்படுத்தினால் தான் நாக்கில் மதுர சக்திகள் சுரக்கும்.
ஆனால் பொய் பேசுதல், நாக்குத் தடிக்கும்படி வெற்றிலை புகையிலை போடுதல், வாக்கு நாணயம் இல்லாமை, புகை பிடித்தல், போதை வகை (மது) பானங்களை அருந்துதல், பிறரை ஏசுதல், கெட்ட வார்த்தைகளைப் பேசுதல், அளவுக்கு மீறி உண்ணுதல் போன்றவற்றால் நாக்கின் மதுர மொட்டுக்கள் மறைகின்றன.

ஸ்ரீசோமநாதேஸ்வரர்
மானாமதுரை

இதே போல, தொண்டையில், குரல் எழுப்பும் குரல் வளையிலும், மதுஸ்ருதி மதுர நாளங்கள் உண்டு. இவையும் நன்கு ஆக்கம் பெற்றால்தான், குரல் இனிமையாக, மதுரமாக இருக்கும். இவற்றில் மதுஸ்ர மொட்டுகள், மதுர நாளங்கள் ஆண்களை விட, பெண்களுக்கு ஏழு மடங்கு அதிக அளவில் உண்டு.
மதுரமான அமிர்தம் சுரக்கும் குரல் வளை மண்டலத்திற்கு மதுர கூபம் என்று பெயர். மதுராவில், ஸ்ரீகிருஷ்ண பக்தி பூண்ட கோபியர்கள் அனைவருமே, ஒப்பில்லாத மதுரமான இனிய குரலைப் பெற்றிருந்தார்கள். அவர்கள் கிருஷ்ண கானம் பாடினால், மதுராவின் யமுனை நதிகளின் ஓரம் இருக்கின்ற மரங்களின் தேன் கூடுகளில் இருந்து தானகவே, சுயம்புவாகவே தேன் சுரந்து யமுனையிலும், பூமியிலும் திரண்டு, பூமியில், நிலத்தில், நீரில், காற்றில், ஆகாயத்தில் மதுராம்ருத சக்திகள் பூரித்தன.
இதே போல இன்றும் மதுரமாகிய அமிர்த சக்திகள், பல நாட்களில், பொருட்களில், திரவியங்களில் சுரக்கின்றன. பெயர் சொல்லா நாட்டு மருந்து ஒன்று உண்டு. இங்கு உங்களுக்குப் புரிவதற்காக இதனை வசம்பு என்று நாம் வெளிப்படையாகச் சொன்னாலும், பெயர் சொல்லா மருந்து என்று சொல்லியே, நாட்டு மருந்துக் கடையில் தேய்பிறை சதுர்த்தி திதி அன்று இதனை வாங்கிக் கல்லில் உரைத்து நாக்கிலோ, கட்டிகளின் மீது தடவி நற்குணம் பெறுவர். எந்த அளவிற்குப் பெயர் சொல்லாமல் இந்த மூலிகை பயில்கின்றதோ, அந்த அளவிற்கு அதன் மருத்துவக் குணம் நன்கு பல்கிப் பெருகும் என்பது மிகவும் உண்மையே!
இதே போல, அதிமதுரம் என்ற நாட்டு மூலிகையும் ஒப்புரைக்க முடியாத இனிய சுவையைப் பெற்றிருக்கும். நெல்லிக் காயைப் பல்லால் கடித்து, அந்த புளிப்புச் சுவையின் இறுதியிலும், சற்று நீர் அருந்தும் போது அமலாம்ருதம் எனும் இனிப்பு சுரப்பதை நீங்களே அறிவீர்கள். இவ்வாறு பூவுலகில், பல்வகையான மதுர சக்திகள் பூரிக்கும் திரவியங்கள் உண்டு.  
ஆனால் நடப்பு கலியுகத்தில், டயாபடீஸ் எனும் சர்க்கரை நோயால், 45 வயதைத் தாண்டிய உடனேயே பலராலும் இனிப்பு உணவை ஏற்க முடியாமல் போகின்றது. நம் முன்னோர்கள் அனைவருமே சர்க்கரை வியாதியையா பெற்றிருந்தார்கள்? உண்மையில், அவர்கள் நம்மை விட அதிகமாகவே இரண்டு, மூன்று தட்டு அரிசி சாதத்தை உண்டு சர்க்கரை வியாதி இன்றி வாழ்ந்தவர்கள்தாம். இதிலும் உழைப்பாளிகள். 40, 50 கவளங்களை, கவள அரிசி உணவை நன்றாகவே உண்டார்கள். நம் முன்னோர்கள் கண்டிடாத சர்க்கரை வியாதி இப்போது உலகெங்கும் மனித சமுதாயத்தை ஆட்டி படைப்பது ஏன்?
பல்லாண்டுகள் முன் வரை ஆறு மாத காலப் பயிரான நெற்பயிரின், இயற்கை உரத்தில் விளைவை அரிசியாக நாம் உண்டோம். எனவே, இயற்கை வளம் நிறைந்த தானியங்களில் சர்க்கரை வியாதிக் கூறுகள் அமையாது. தற்போதோ குறுகிய காலப் பயிராக, விஷ ரசாயனப் பூச்சி மருந்து, உர ரசாயனக் கலவைகளுடன் தானியங்கள் விளைவதால், அவற்றில் பல ரசாயன விஷச் சத்துக்கள் சேர்ந்து நம்மை பாதிக்கின்றன. இயற்கை உரமே மறைந்து விட்டது.

பேரையூர் புதுக்கோட்டை

சர்க்கரை மற்றும் அனைத்து வியாதிகளுக்கும் மூல முதல் காரணமே பூர்வ ஜென்மங்களில் செய்த பல கர்ம வினைகளின் விளைவுகளே என ஆன்மீக ரீதியாக காரணம் அளிக்கப்படுகின்றது. இதற்கான கர்ம வினைக் காரணங்கள் பற்றி இங்கு விவரித்தல் கூடாது. ஏனென்றால் இவற்றுள் பலவற்றையும் கலியுக மனித மனம் ஏற்காது. எனவே பூர்வ ஜென்ம கர்ம வினைகளின் விளைவுகளாலும் தான் டயாபடீஸ் (சர்க்கரை) நோய் ஏற்படுகின்றது என்பதை மட்டும் இப்போது தெரிந்து கொள்ளவும்.
அமிர்தக் காசினிக் கீரை என்ற அற்புதமான மூலிகையின் இனிப்பானது தக்க முறையில் பதனப் படுத்தப்பட்டால் டயாபடீஸ்காரர்களும் இந்த இனிப்பை நன்கு உண்ணுமாறு செய்திடலாம். இவ்வாறு உலகெங்கும் சர்க்கரை நோய் பெருகி வருவதை தடுத்திட, ஆன்மீகப் பூர்வமாக செவ்வாய்க் கிழமை, சதுர்த்தி திதிகளில் நிறைய இனிப்புகளை வீட்டில் செய்து சர்க்கரைப் பொங்கல், தேங்காய் பனியாரம், தேங்காய்ப் பால், பால் பாயசம், வேப்பம்பூ இனிப்பு பச்சடி, ஜாங்கிரி, மைசூர் பாகு என்று குறைந்தது பன்னிரண்டு வகை இனிப்புகளைச் செய்து சிறு குழந்தைகளுக்கு தானமாக தாராளமாக அளித்திட வேண்டும். இதனை டயாபடீஸ் நோய்க்காரர்களே, முன் வந்து, தாமே சேவை செய்து, வீட்டிலேயே இனிப்புகளைத் தயாரித்து அளித்தலால், அவர்களுக்கும் தக்க நிவாரணம் கிட்டுவதோடு, இனிப்பு சக்திகள் வானச் சமுதாயப் பரவெளியில் நன்கு ஊறி, உலக அளவில் மதுர சக்திகள் பரிமளிக்கச் செய்யும்.
ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர், ஸ்ரீஅமிர்தலிங்கம், ஸ்ரீஅமிர்தாம்பிகை (நேமம்), ஸ்ரீமதுராம்பாள், ஸ்ரீஅமிர்தவள்ளி - போன்ற மதுர வகைப் பெயர்களை உடைய சுவாமி, அம்பிகைக்குக் கொழுக்கட்டை, ஜாங்கிரி படைத்தும், அனுமதித்தால் இறைமூர்த்திக்கே கேசரிக் காப்பு இட்டும் வழிபட்டு வர, சர்க்கரை நோயின் கடுமை தானாகவே குறைவதைக் கண்டிடலாம்.
நமக்கு சர்க்கரை வியாதி இல்லையே, நாம் ஏன் இதனைச் செய்ய வேண்டும் என எண்ணாதீர்கள்! உலகில் இவ்வியாதி உள்ளவர்களின் நல்ல உடல் ஆரோக்யத்திற்கும், எதிர்காலத்தில் அவரவர்க்கு இவ்வியாதி ஏற்படாமல் இருக்கவும், இது அண்டாமல் சந்ததிகளையும் காக்கவும், சர்க்கரை வியாதிக்கான கர்ம வினை அழுத்தங்கள் உலகில் நன்கு தணியவும், அற்புத உலக சேவையாக, இப்பூஜையை ஆற்றி வரவும்.
புதுக்கோட்டை - பொன்னமராவதி இடையே உள்ள தேனிமலை, திருக்கோளக்குடி ஆலயங்களில் பாறைத் தேன் உண்டு. அபூர்வமான தரிசனம். இன்று இவற்றைத் தரிசித்து (தரிசனம் மட்டுமே, தேனீக்களை விரட்டக் கூடாது) இங்கு கிரிவலம் வந்து வழிபடுதலால், தான் அன்புடன் போற்றியவர்கள் (உற்றம், சுற்றம், நட்பு) பகைமை கொண்டிருப்பது அகன்று, நல்லுறவு பரிணமிக்க உதவும்.

கடுமையான நாகதோஷங்களுக்குப் பரிகாரம்

ஒவ்வொரு சுப முகூர்த்த நாளுக்கும், பொதுவாக, வளர்பிறை, புதன், வெள்ளி, அமிர்த யோகம், சுப லக்னம், சுப நட்சத்திரங்கள், பஞ்சமி போன்ற 32 விதமான முக்கியமான சுபமங்கள லட்சணங்கள் உண்டு. இதற்கு மேலும் உள்ளவை, தேவ மங்கள லட்சணங்களாகும். இவ்வாறு அனைத்தும் பொருந்தி நன்கு கூடி அமையும் தேவ சுப மங்கள நாட்களில் திருமணம் அமைவது, மகத்தான திருமண வாழ்க்கையைத் தருவதாகும்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும், அறிந்தோ அறியாமலோ, நாக தோஷங்கள் பலவும் சேர்ந்து விடுகின்றன. கலியுகத்தில் வாக்குக் குற்றங்கள் மிகுந்து, அதர்ம சக்திகள் பெருகுவதால், வெடுக்கென்று பிறரை மனம் நோகப் பேசுவது கூட, ஒரு வகை நாகக் கடி தோஷமாகின்றது. சமைக்கும் போது சரியாகக் காய்கறி, தானியங்களைச் சுத்தம் செய்யாது, கடனே என்று சமைத்திடில், உர விஷம், பாம்பேறிய காய்க் கொடி விஷம், வண்டு, பூச்சி வகை விஷ மாசுகள், தூசி, தும்பைகளின் விஷம் - என்பதாக எத்துணையோ வகைகளில் உணவு மூலமாகவும் நாக தோஷம் சேரும்.
தவறான வழிகளில் வந்த பணத்திலும், பலவிதமான விஷக் கர்ம வினைகள் சேர்ந்திருக்கும். உதாரணமாக, மது, புகையிலை, போதைப் பொருள் போன்ற துறைகள் ஜீவன்களுக்குக் கேடுகளையே அளிப்பதால், இவற்றைத் தயாரிப்போர், இத்துறைகளில் பணிபுவோர் ஆகிய அனைவருடைய வருமானத்திலும், பணப் புழக்கத்திலும் கேடுறும் சக்திகள் சேர்ந்து, ஒரு வகை நாகவிஷ தோஷங்களாகி, மக்களின் உடல் நலத்திற்கும், பணப் புழக்க ரீதியாகவும் கேடுகளை உண்டாக்கும். இவர்கள், அடிக்கடி நாக பூஜைகளை ஆற்றி, இத்துறைகளை விட்டு வெகு விரைவில் வெளி வந்திட வேண்டும். இல்லையெனில் சந்ததிகளுக்கும் நாக தோஷங்கள் தொற்றும்.
இவ்வாறு, அவரவர் அறியாமல் தம் வாழ்க்கையில் சேர்க்கும் விஷ சக்திகளை நீக்கிடவே, நாகநாதர், நாகேஸ்வரர், நாகம்மை, நாகாத்தம்மன் போன்ற நாக மூர்த்திகளுக்கு, பஞ்சமி, ரோஹிணி, மிருகசீர்ஷம் போன்ற நாகதோஷ நிவர்த்தி, குறிப்பாக, வெள்ளியுடன் இவை சேரும் நாட்களில் பாலாபிஷேகம், நாகப் புற்றுகளுக்குப் பால் ஊற்றுதல் போன்ற வழிபாடுகளை நிகழ்த்தி வருதல் வேண்டும்.

திருப்பாம்புரம் திருத்தலம்

மேலும் ஜாதகக் கட்டத்தில், எதிரெதிரே இருக்கும் ராகு, கேது கிரக மூர்த்திகளின் இடையே, ஜாதகக் கட்டத்திற்கு வலப் புறமாகவோ, இடப்புறமாகவோ, மேலோ, கீழோ, ஒரே பக்கத்தில் ஆறு கிரகங்களுக்கு மேல் இருத்தல், குறிப்பாக சூரியன், செவ்வாய், சனி கிரகங்கள் இருத்தலும், சில வகை நாக தோஷங்களைக் குறிப்பதாகும்.
எனவே இப்பிறவியில் நாக தோஷங்கள் இல்லை எனினும், பூர்வ ஜன்மங்களில் தொடர்ந்து வரும் நாக தோஷங்களை, ஜாதகப் பூர்வமாகவே அறிதல் கூடும்.
ஓட்டும் வாகனங்களில் பாம்பு அடிபடுதல், கீரி, பூனை போன்றவை நாகத்தைக் கொத்திப் போவதைக் காண்கின்ற காட்சியும் நாக திருஷ்டித் தோஷங்களைக் குறிப்பதாகும்.
தான் தவறு ஒன்றுமே செய்யாத போது, உற்றம், சுற்றம், நட்பில், அலுவலகத்தில் பலரும் வீண் பழி சுமத்துவதற்குக் காரணமும் “வறுத்த வரி ” எனும் ஒரு வகை நாக தோஷமே ஆகும். குறிப்பாக, நன்னடத்தை பற்றிய அவதூறுகள் ஏற்படக் காரணம், பசப்பு நாக தோஷமாகும். செய்யாத குற்றத்திற்குத் தண்டனை அனுபவித்தல் குறுத்து நாக தோஷமாகும்.
இவ்வாறு வாழ்க்கையில் எத்தனையோ வகை நாக தோஷங்கள் ஏற்படக் கூடும். இவற்றை எல்லாம், தக்க சற்குருவின் அருளின்றி, முழுமையாக நீக்க இயலாது. எனினும் இவற்றை ஓரளவாவது தீர்த்திடவும், இவற்றின் விளைவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், நாக பஞ்சமி தினத்தன்று புற்றுக்குப் பால் வார்த்தல் மிகவும் விசேஷமானது.

ஸ்ரீநாகாபரண விநாயகர்
நாகப்பட்டிணம்

புற்றுக்குப் பால் வார்த்தல் எனில் புற்றுக்குள் பால் வார்த்தல் என்பதல்ல இதன் பொருள். வாழும் புற்று, வாழ்ந்த புற்று, வளரும் புற்று என்று பாம்புப் புற்றில் சில வகைகள் உண்டு. தக்கோர் உதவி இன்றி, இவற்றை அறிந்து கண்டுபிடித்தல் கடினம். புற்றின் அருகில், ஒரு மண் பாண்டத்தில் அல்லது புதிதாகத் தேங்காய் துருவிய கொட்டாங்கச்சியில் (பழசு அல்ல), நல்ல பசும் பாலை ஊற்றி வைத்துப் புற்றை வலம் வந்து வணங்கிட வேண்டும்.
நாகர்கோயில், நாகப்பட்டினம், நாகையூர், பாம்புரபுரம் போன்ற நாகப் பெயர் உள்ள தல ஆலயங்களிலும், அய்யர்மலையில் கிரிவலப் பாதையில் வரும் அபூர்வமான பாம்புப் புற்றையும் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில், ஜோதி விநாயகர் ஆலயம் முன் வரும், காமக்காடுக்கு எதிரே வரும் உள்ளடங்கிய பெரிய குடநாகப் புற்று தரிசனமே மிகவும் விசேஷமானது.

செவலூர் திருத்தலம்

புற்று மண்ணால் ஆன லிங்கத் தலங்களில் உள்ள நாக மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் ஆற்றுவது சிறப்புடையது. இதனால் முறிந்துள்ள நெடுங்கிய சொந்த பந்தம் நன்முறையில் மலர வாய்ப்புகள் கை கூடும்.
30, 32, 34 வயதுக்கு மேலும் திருமணம் ஆகவில்லை என்றால், இதற்கு மூல காரணம் நாக தோஷங்களாகவே இருக்கக் கூடும். ஜாதகத்தில் கூட காணப்படாது, மறைமுகமாக உள்ள நாக தோஷங்களுக்கு நாறிப்பூ நாக தோஷம் என்று பெயர். இவற்றைச் செவலூர் பர்வதூஜாப நாக பூஜையாலும், துடையூர் நாகப் புற்று வழிபாட்டாலும் மற்றும் சமஷ்டி நாக மூர்த்தித் தலங்களிலும்தான் தீர்க்க முடியும்.

சமஷ்டி நாக மூர்த்தித் தலமெனில், நூற்றெட்டுக்கும் மேற்பட்ட நாக மூர்த்திகள் சேர்ந்து இருப்பதாகும். காஞ்சிபுரம் ஸ்ரீகச்சபேஸ்வரர், புதுக்கோட்டை - பொன்னமராவதி இடையே உள்ள பேரையூர் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட நாகக் கல் பிம்பங்கள் உள்ள சமஷ்டி நாக மூர்த்தித் தலங்களில் நாக வழிபாடு ஆற்றுதல், தீராத பல வகை நாக தோஷங்கள் நிவர்த்தியாக உதவி, திருமணம் கை கூட வழி பிறக்கும்.
புதுக்கோட்டை பொன்னமராவதி இடையே உள்ள செவலூர் ஸ்ரீபூமீஸ்வரர் ஆலயத்தில் உள்ள அபூர்வமான நாகதேவதா மூர்த்திக்கு, பர்வதூஜாப நாகம் என்ற பெயர். இவற்றின் தரிசனங்களே மிகவும் விசேஷமானவை. பொதுவாக இவற்றைத் தொட்டு, அலங்கார, அபிஷேக, ஆராதனைகள் செய்யாது, இவ்வடிவிற்கு முன் நாகக் கோலம், சூரிய, சந்திரக் கோலங்களை வரைந்து, கோலங்களின் நடுவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, மூன்று தேங்காய்களை வைத்து, தேங்காய்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதால், தீர்க்க முடியாத பல நாக தோஷங்களைப் போக்க வல்லதாகும்.

உற்ற துணை கிட்ட வழி

சூரிய மூர்த்தி, முருகப் பெருமானைப் பூஜித்துத் தம் கிரணங்களுக்கு ஸ்கந்தமாலய சக்திகளை நல்வரமாகப் பெற்ற திருநாளே சூரிய சஷ்டி ஆகும்.  
ஒவ்வொரு வானியல் மண்டலம், நிலம், இல்லம், தோட்டம் என ஒவ்வொன்றிற்கும் வாஸ்து சாஸ்திர ரீதியாக, சூரிய மூலை, சந்திர மூலை உண்டு. நமக்கு பிறந்த நேரத்தை ஒட்டிய ஜாதக அமைப்பு இருப்பது போல, ஒவ்வொரு நாட்டிற்கும், பீட பூமிக்கும், ஜாதக அமைப்பு உண்டு.
இப்பூவுலகிற்கான ஜாதக அமைப்புப்படி, சூரிய மூலையாக அமையும் தலமே கும்பகோணம் - கஞ்சனூர் மார்கத்தில், துகிலி கிளைச் சாலையில், துகிலி - சர்க்கரை ஆலை - திரைலோகி வழியில், திரைலோகியை அடுத்து, கீழ் சூரிய மூலை கிராமத்தில், ஸ்ரீசூரிய கோடீஸ்வரராக, சுயம்பு லிங்க மூர்த்தி அருள்கின்ற தலமும். இதுவே பூவுலகின் கீழ் சூரிய மூலை ஆகும்.  

ஸ்ரீசூரியகோடீஸ்வர சுவாமி
கீழ்சூர்யமூலை

மேல் சூரிய மூலை என்பது, சூரிய மண்டலத்திலேயே உள்ளது ஆகும். வாஸ்து சாஸ்திரப்படி, சூரிய மூலை எங்கு அமையும் என எப்படி அறிவது? நீர் ஊற்று பற்றி அறிவதற்கு கொய்யா மரக் குச்சியைக் கொண்டு, ஆகர்ஷண சக்தியால் ஜல வாஸ்து ஊற்று அறிவதற்கான சாஸ்திரம் அமைந்திருக்கின்றது அல்லவா! தாடிக் கொம்பு எனப்படும் கொம்பு வடிவில் உள்ள மரமஞ்சள் துண்டை, ஒரு ஆரஞ்சு வண்ணத் துணியில் கொய்யாக் கட்டையில் கட்டிப் பிணைத்து பூமியில் 24 மூலைகளிலும் இட்டுச் சென்றிட, எங்கு மரமஞ்சள் தாடிக்கொம்பு ஆகர்ஷண சக்தியால் சற்றே ஆடுகின்றதோ, அதுவே அந்த நிலத்தின் சூரிய மூலை ஆகும்.
சிலருக்கு இயற்கையிலேயே உடலில் விசேஷமான ஆகர்ஷண சக்திகள் பொலிந்திருக்கும். இந்த ஆகர்ஷண சக்திகளைக் கொண்டு, எந்த இடத்தில் நீருற்று அமைகின்றது, எங்கு எவ்வகைக் கனி வளம் கிட்டும் என்பதை நன்கு அறிந்திடலாம். கொய்யாக் குச்சி இயற்கையிலேயே பளிச ஆகர்ஷண சக்தியைக் கொண்டதாகும்.
கொய்யாப் பழம் என ஏன் பெயர் வந்தது? அக்காலத்தில் பல ரிஷிகளும் கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்தனர். இன்ன நாளில், இன்ன கனி உண்ணுதல் என்ற வரைமுறை நியதிகளும் உண்டு. அந்தந்த நட்சத்திரம், திதி, யோகத்திற்கு ஏற்ப, குறித்த நாளில் குறித்த வகைக் கனி கிடைக்காவிடில் என்ன செய்வது? இவ்வாறு தொடந்து குறித்த பழங்களே கிடைக்காவிடில், மகரிஷிகளின் உடல் நிலை பாதிக்கப் பெறும் அல்லவா.
வாழைப் பழம் போல எப்போதும் காய்க்கக் கூடிய கொய்யாப் பழத்திற்கு என்று சில யோக சக்திகள் உண்டு. குறித்த வகைக் கனி, குறித்த நாளில் கிட்டாவிடில் ஏதேனும் யோகக் கனியை உண்ணலாம் என்ற நியதி ஒன்று உண்டு. இதிலும் கொய்யா மரம் எப்போதும் யோகங்களைப் பூண்டு இருப்பதால் கொய்யாவின் இலைகள் எப்போதும் விடைத்துக் கொண்டு நிமிர்ந்த ஸ்திர யோக நிலை போல் இருக்கும். எனவே கொய்யாவின் யோகத்தைப் பாதிக்காத வகையில், கொய்யாப் பழத்தைக் கொம்பாலோ, கையாலோ பறிக்காது, கொய்யாது, தானே பழுத்து உதிரும் கொய்யாக் கனியை மட்டுமே விரதம் பூண்டிருக்கும் மாமுனிகள் உண்ணுதல் வேண்டும் என்று நியதி உண்டு. அவ்வாறு உண்ண நேரிடில் சில பூஜைகளை ஆற்றி உண்ணுதல் வேண்டும். எனவே தான் இது கொய்யாக் கனி ஆயிற்று!
கொய்யாக் கனி மீது பற்றுக் கொண்டவனே (பாண்டவ) அர்ஜுனன் ஆவான். கொய்யாவைக் கொய்யாது, கொய்யாக் கனியின் அருகில் அம்பு செலுத்தி, ஆகர்ஷண சக்தியால் அதனை மீட்டு, அதனைக் கீழே விழ விடாமல் கையில் பெறும் வில் வித்தையை அர்ஜுனன் நன்கு அறிந்திருந்தான். மேலும் அர்ஜுனன் தான் வழிபடும் லிங்க மூர்த்திகளுக்கு முதலில் கொய்யாப் பழம் வைத்துப் படைத்து பூஜித்திடுவான்.
எனவே சூரிய சஷ்டி தினத்தன்று இறைவனுக்குக் கொய்யாக் கனிளைப் படைத்து, முதலில் பலரும் அறியாமல் செய்த கொய்யாவைக் கொய்த தோஷத்தைப் போக்கி, அதன் யோக சக்திகளைப் பெறப் பிரார்த்திக்க வேண்டும். கொய்யாவிற்குச் சந்ததிகளை விருத்தி செய்யும் யோக சக்திகள் உண்டு. கொய்யா விதைகள் சற்று வயிற்றுப் போக்கினைத் தந்தாலும் வயிற்றைச் சுத்தம் செய்து விந்துக்களைச் சுத்திகரிக்கும் தன்மைகளைக் கொண்டதாகும்.
அர்ஜுனன் வழிபட்ட தெய்வ மூர்த்திகளுக்குக் கொய்யாப் பழம் படைத்து, ஏழைக் குழந்தைகளுக்கும், பசுவிற்கும் அளிப்பதால் தனக்கு நல்வழி காட்ட, உதவிட யாரும் இல்லையே என்று உண்மையாகவே ஏங்குவோர்க்கு, நல்ல உற்ற துணை கிட்ட வழி பிறக்கும்.
கொய்யாக் கட்டையை வைத்து, நீருற்றுச் சாத்திரப் படி, ஊற்றை அறிய வல்ல ஆகர்ஷண சக்திகளைக் கொண்டு, இந்த நீர் சாஸ்திரத் துறையில் பணி புரிந்து வருகின்ற நல்ல வயதான பெரியவர்களுக்கு தக்க மரியாதை செய்து, ஆடைகள், தாம்பூலம், தேங்காய், பூ வைத்து நமஸ்கரித்து, அவர்களுக்கு அர்ஜுனன் வழிபட்ட ஆலயத்தில் வழிபட்டு நீர் சாஸ்திர சக்திகளைப் பெற்ற புராண அனுபூதிகளை விளக்கிட வேண்டும். இதனால் பெரியோர்களால் வர வேண்டிய ஆசிகள், பூர்வ ஜன்ம வினைகளால் தடைப்பட்டிருக்குமானால் தடைகள் நீங்கி ஆசி கிட்ட வழி பிறக்கும். இதனை எப்படி அறிவது? தங்கு தடையின்றி நீர் பெருகி ஓடி வரும் காட்சி கிட்டுவதும், திடீரென்று பெரு மழை பொழிவதும் இதனை ஆன்மீக ரீதியாக உணர்விக்கும்.
சூரிய சஷ்டி அன்று நீர்க் கொழுக்கட்டை செய்து தானமளிப்பதால், அதிகார வசத்தால் கோபக் கனலுடன் இருக்கும் உயரதிகாரிகளுக்குத் தினமும் அஞ்சி அஞ்சி வாழ்வோரின் பீதிகள் தணிய உதவும்.

வயிற்றுக் கட்டிகள் குணமடைய ...

ஞாயிறும் சப்தமியும் சேர்வது மிகவும் விசேஷமான சக்திகள் நிறையும் நாளாகும். உலக மக்களின் அனைத்துக் காரியங்களுக்கும் சாட்சியாக இருந்து, அனைத்து ஜீவன்களின் நல்லது மற்றும் நல்லது அல்லாதனவாகிய அனைத்துக் காரியங்களுக்கும் சாட்சி பூதங்களாக நிற்பதால், தம் கிரணங்களில் படியும் மாசுகளைக் களைந்து சுத்திகரிப்பதற்காக, சர்வேஸ்வரனைச் சூரிய மூர்த்தி வழிபடுகின்ற திருநாளே சப்தமித் திதி நாள்!
* சூரிய மூர்த்தி தினசரி ஆற்றும் அருணாசல கிரிவலம்
* லிங்க மூர்த்திகளின் மேல் சூரிய கிரணங்களைப் பொழிந்து (சூரிய பூஜைத் தலங்கள்) பூஜித்தல்
* சப்தமித் திதி தோறும் ஸ்ரீசப்தமாதா வழிபாடு
- போன்ற சூரிய மூர்த்தி ஆற்றும் பூஜைகளில், ஒவ்வொரு சப்தமித் திதியிலும் ஏழேழு சக்திகள் திரண்டு, சூரிய கிரணங்களைச் சுத்திகரிக்கின்றன.
மேலும்,
* ஆலயக் கோபுரக் கலசங்களிலிருந்து எழும் ராஜேந்திரக் கதிர்ப் பிரமாணம்
* மக்கள் அளிக்கும் ஸ்ரீகாயத்ரீ அர்க்யத்தில் கிட்டும் அர்க்ய சக்தியால் ஏற்படும் ப்ரணதாப்தீத சுத்தி
* பழங்களின் மேல் சூரிய கிரணங்கள் படுகையில், பழங்களில் ஏற்படும். முதிர்ந்த பலாதி பலக் குண்டலக் கதிர்கள்
* மக்கள் ஜபிக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தில் எழும் ஜோதிப் பிரகாச சக்தியில் எழும் பூத சுத்தி -
போன்று, பூலோக மக்களின் பூஜைகளில் ஒரு பங்கும், ஆன்மீக முதிர்வு கொண்ட பல திரவியங்களின் தெய்வீக சக்திகளும் கூடியும், சூரியக் கிரணங்களுக்குப் பூத சித் சக்திகள் கிட்டுவதுண்டு.
* பொதுவாக சூரிய கிரணத்திற்கு, நன்றி உணர்ச்சியை விருத்தி செய்யும் அபூர்வமான சக்திகள் உண்டு. நாம் ஒவ்வொரு வினாடியும் சூரிய, சந்திர கிரண சக்திகளால் தான் ஜீவிக்கின்றோம் என்பதால், நாம் எப்போது சூரிய, சந்திர கிரக மூர்த்திகளுக்கு நன்றிக் கடன்பட்டு வாழ்தல் வேண்டும். இதை உணர்விக்க வல்லதும் சப்தமித் திதி வழிபாடு.
இதுவரையில் தமக்கு உதவியவர்களை உதாசீனப்படுத்தியவர்கள் இனியேனும் நன்றி பிறழாது வாழ, இனியேனும் சப்தமித் திதி தோறும் ஏழு சப்தஸ்தானத் தலங்களில் வழிபட்டு வர வேண்டும்.
சப்தமித் திதி தோறும் உலக மக்களாகிய நாம், இத்திதியில் ஆற்றும் நம்முடைய ஆத்மார்த்தப் பூஜைகளால், பல வினைகளைச் சுமக்கும் நம் உடலில் படும் சூரிய கிரணங்களைச் சுத்திகரித்திடப் பெரிதும் உதவிட வேண்டும்.
ஒவ்வொரு சப்தமித் திதியிலும் சூரிய மூர்த்தி, தன்னுடைய கோடிக் கணக்கான கிரணங்களைப் பல தேவ மண்டலங்களில், திருத்தலங்களில், புண்ணியத் தீர்த்தங்களில், மலைத் தல விருட்சங்களில் பல்வகையில் சுத்திகரித்துக் கொள்கின்றார்.

ஒளிபடா தீர்த்தம்
வள்ளிமலை

இவ்வாறு சூரிய மூர்த்தி சுத்திகரிக்கின்ற விஸ்வகர்மப் பட்டறை மண்டலங்களும் பல உண்டு. சப்தமி அன்று, எந்த நட்சத்திர, யோக, கரண சக்திகள் கூடுகின்றனவோ, அதைப் பொறுத்து சப்தமிக் கிரண சுத்திகரிப்பு வைபவங்கள் நடைபெறும்.
கும்பகோணம், திருவையாறு போன்ற தலங்களில், ஒவ்வொரு மூலக் கோயிலை வைத்து, அதனைச் சுற்றிலும் சப்த ஸ்தானத் தலங்களாக, ஏழு தலங்களை வைப்பார்கள். அந்த மூலக் கோயிலில் நடைபெறும் உற்சவங்கள் இந்த ஏழு தலங்களிலும் சேர்த்து அமைந்திடும்.
சப்தமித் திதி தோறும், திதி ஆரம்பத்தில் இருந்து திதி முடிவதற்குள் இத்தகைய ஏழு சப்த ஸ்தானத் தலங்களில் வழிபடுதலால் சந்ததி மாசின்றி, தடையின்றி பரிமளிக்க உதவும்.
சூரிய ஒளியே முற்றிலும் படாத வகையில் சில அபூர்வமான தீர்த்தங்கள் ஓரிரு தலங்களில் காணப்படுகின்றன. பாறைகளுக்கு இடுக்கிலோ, ஆலயத்திற்கு உள்ளேயோ இவை அமையும். இத்தகைய தீர்த்தங்கள் சூரிய பகவானால், மானுட வடிவில் மட்டுமே பூஜிக்கப்படுபவையாகும். இவற்றில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் - பூலாங்குறிச்சி அருகே உள்ள காஞ்சாத்து மலை என்னும் அற்புத மூலிகா சக்திகள் நிறைந்த மலையில் ஸ்ரீகாஞ்சலிங்கேஸ்வரர் கோயிலில் உள்ள சிவஸ்கந்தத் தீர்த்தமாகும்.
பிரபஞ்சத்தில் வேறு எந்த மண்டலத்திலும் சுத்திகரிக்க இயலாத வகையில் சேரும் சில வகை தோஷங்களைச் சூரிய மூர்த்தியே முருகனுக்குரிய விசாகமும், சப்தமியும் சேரும் நாளில் மானுட வடிவில் நேரில் இத்தலத்திற்கு வந்து நீராடி, பூஜித்து தீர்த்தத்தை ஸ்பரிசித்து தன் கிரணங்களைப் புனிதப்படுத்திக் கொள்கின்றார்.

சப்தமி திதி, ஞாயிற்றுக் கிழமைகளில் காஞ்சாத்து மலையில் இந்த தீர்த்தத்தைத் தரிசித்தல் விசேஷமானது. சந்ததிக் குற்றங்களைக் களைய வல்ல தலம். பொதுவாக, காணாமற் போனவர்களின் நிலையறிய, இங்கு விசாகம், கார்த்திகை, அமாவாசை சப்தமி நாட்களில் வழிபட்டு வருதல் வேண்டும். தனித்துச் செல்வதற்குச் சற்றுக் கடினமான மலைத் தலம். பலருடன் சேர்ந்து சென்று வழிபடவும்.
குறித்த நாட்களில் மட்டுமே இங்கு பூஜை நடைபெறும். தேனிமலையில் உள்ள அர்ச்சகரிடம் பூஜை நாட்களை அறிந்து செல்தல் நலம்.
சப்தமி திதி அன்று சூரிய தீர்த்தம் உள்ள தலங்களில் பூஜிப்பதால், வயிற்றுக் கல், கட்டி சம்பந்தமான நோய்களுக்கு நிவாரணம் பெற உதவும்.

மூலம் தரும் முழுப் பரிசு

ஆவணி மாதம் மூல நட்சத்திர நாளுக்குப் பல அபூர்வமான சக்திகள் உண்டு. மூல நட்சத்திரம் ஆஞ்சநேயருக்கு உரியது அல்லவா!
“ஆவணி மூலத்தில் ஆகாதது ஏதுமில்லை!” என்பதாக, ஆவணி மூலத்துச் சங்கல்பப் பிராத்தனை நல்ல காரிய சித்திகளைத் தருவதாகும்.
மலைக்கோட்டை விநாயகப் பெருமானுக்கு, உச்சிப் புழியார் என்ற பெயரும் உண்டு. ஆவணி மூலத்தில் ஆஞ்சநேயரே மலைக் கோட்டையை கிரிவலம் வருவதால், ஆவணி மூல மலைக் கோட்டை கிரிவலம், அனுமாரப்ப ஆக்ஞா கணபதியின் இரட்டை அருளைப் பெற்றுத் தருவதாகும்.
ஆஞ்சநேய சுவாமிக்கு ஸ்ரீராமர், கிரீடம் சூட்டிய போது மிகவும் பரமானந்தம் அடைந்த அனுமார், பிறகு சிறிதே கவலை கொண்டாராம், ஏனோ?

திருச்சி உச்சிபிள்ளையார்

எப்போதும் ராம நாம ஆனந்தத்தில் திளைக்கும் தனக்கு, ஸ்ரீராமர் கிரீடம் சூட்டியதும் ஆனந்தப் பெருவெள்ளம் தோன்றிடக் காரணம் என்ன? ஒரு வேளை, கிரீடம் சூட்டியதால், கிஞ்சித்துமான அகங்காரம், ஏதேனும் தன்னுள் ஒட்டிக் கொண்டு இதனால் மகிழ்ச்சி பெருகியதோ என்று அஞ்சி, அருகில் இருந்த விபீஷணரிடம், “சுவாமீ! தாங்களும் ஸ்ரீராமரின் திருக்கரத்தால் கிரீடம் சூட்டிக் கொண்டீர்கள்! தங்களுக்கும் கபாலத்தில் ஆனந்தம் பெருகியதா?” எனச் சிறு குழந்தையாய்க் கேட்டார்.
“உச்சிப் பிள்ளையாராகிய, உச்சிப் புழியாராகிய திரிசிர மலைப் (மலைக் கோட்டைப்) பிள்ளையார், அடியேனுடைய உச்சந் தலையில் கொட்டிய பாக்கியத்தால் தான், அடியேன் தலையில் கிரீடம் ஏறியதாகவே அடியேன் உணர்கின்றேன்!” என பவ்யமாகக் கூறிட்டார்.
அடுத்த க்ஷணத்தில் ஸ்ரீராமரிடம் அனுமதி பெற்று, ஆஞ்சநேயர் உச்சிப் பிள்ளையார் தரிசனம் பெற வேண்டி வானில் விரைந்தார்! ஆங்கே திரிசிர மலை எனப்படும் (திருச்சி) மலைக் கோட்டையைக் கிரிவலம் வலம் வரலானார். விபீஷணர் தலையில் குட்டியது போலவே தனக்கும் தலையில் விநாயகர் தம் திருக்கரங்களால் குட்ட வேண்டும் என வேண்டி வலம் வந்தார்.
அப்போது பிள்ளையார் தரிசனம் தந்து, “ஒவ்வொரு ஆவணி மூலத்திற்கும் இங்கு வருவாயா?” என்று கேட்டார்.
“தங்களருளால் தங்களின் மோதிரத் திருக்கரத்தால் குட்டுப் பெற வருகிறேன்!” சுவாமி என்று அனுமாரும் வாக்கு மூலம் தந்து வாக்களித்தார். எனவே இவ்வாறாகவே,
‘’ஆவணி மூலவாக்கு அனுமாரப்ப தேவ வாக்கு!” என்ற ஆன்ம வாக்காயிற்று!
எனவே பிள்ளையார் கையால் மோதிரக் குட்டுப்பட வேண்டி, ஆவணி மூலம் தோறும் யுகாதி யுகமாக, திருச்சி மலைக் கோட்டையில் ஆஞ்சநேயர் கிரிவலம் வருவதாக ஐதீகம் உண்டு. இதைக் குறிப்பதான பல ஆஞ்சநேயக் கற்படிவங்கள் மலைச் சுறறுப் பாதையிலும், சுற்றுப் பாதை ஆலயங்களிலும் உண்டு.
எனவே ஆவணி மூல நாட்களில் திருச்சி மலைக்கோட்டையில் கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானது. இதனால் வாக்குத் தவறிய தோஷங்கள் தீர வழி பிறக்கும். பிறர் வாக்கை நம்பி நஷ்டமடைந்தோர், நல்வாழ்க்கையையே இழந்தோர், தக்க ஈடு பெற, இங்கு தொடர்ந்து கிரிவலம் வந்து வழிபடுதல் வேண்டும்.

ஸ்ரீஇரட்டைப்பிள்ளையார் திருஅண்ணாமலை

தனித்த சனி எனப்படுவது, சனியும் கரிநாளும் சேர்ந்து வருவதாகும். இந்நாளில் தான் சனீஸ்வரர், பிள்ளையாரை ஓர் இமை மூடும் நேரமேனும் பீடித்திட விழைந்தார். இதற்காகவே, பிள்ளையார் தன் அருகிலேயே விபூதியால் ஆக்கிய வடிவை மற்றோரு வடிவை உற்பவித்து வைத்திட, இவ்வாறாகவே இரட்டைப் பிள்ளையார் வழிபாடு தோன்றியது. எனவே இரட்டைப் பிள்ளையார் தோன்றியதும் ஆவணி மூல நாளில்தான்! இரண்டு பிள்ளையார் மூர்த்தங்களில் எந்த விநாயகரைப் பீடிப்பது என்று சனீஸ்வரர் திகைத்து நின்று, வியந்து, வழிபட்டு பிள்ளையாரின் பாதங்களை, பற்றிட ...
இவ்வாறாக ஆவணி மூலத்தில் இரட்டைப் பிள்ளையார் தரிசனமானது, சனி தசைத் துன்பங்களைப் போக்குவதாக, பிள்ளையாரப்பரே இரட்டைப் பிள்ளையாராக அருள்வகை புரிந்தார்.
இது நிகழ்ந்ததும் ஆவணி மூலத்தில் தான்.
எனவே ஆவணி மூலத்தில் திருச்சி மலைக் கோட்டை கிரிவலம், இரட்டைப் பிள்ளையார் பூஜை, விநாயகர் உச்சியில் வீற்றிருக்கும் மலைத் தரிசனம் கிரிவலம் போன்றவற்றால், சனி தசையில் ஒருவர் பெறும் துன்பச் சுமைகள் தணிய நல்வழி பிறக்கும். சனீஸ்வரரின் அனுகிரகமும் கூடுதலாகப் பெற வழி உண்டு. குறிப்பாக, கும்பகோணம் அருகே பாபநாசம் அருகே உள்ள தமிழ்த் தாத்தா ஸ்ரீஉ.வே.சுவாமிநாதய்யரின் சொந்த ஊர் அருகே உள்ள மாளாபுரம் மும்மூர்த்திப் பிள்ளையார், திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தருகில் உள்ள இரட்டைப் பிள்ளையார் வழிபாடு மிகவும் விசேஷமானதாகும்.
இந்த முடிவா, அந்த முடிவா? என்று எந்த முடிவும் எடுக்க முடியாமல் திகைப்போர்க்கு, நல்முடிவு எடுக்க, ஆவணி மூல கிரிவல வழிபாடும், தொடர்ந்து ஆற்றி வரும் இரட்டைப் பிள்ளையார் வழிபாடும் நன்மை புரியும்.

பூராடப் பூக்கள்

பூராட நட்சத்திரம், குழந்தை பாக்யம் தர வல்ல பூஜைகளை ஆற்றுவதற்கான நட்சத்திரங்களுள் ஒன்று. மேலும் பெற்ற குழந்தைகளை நன்கு ஆளாக்கி வளர்த்திடவும் பூராட நட்சத்திர தினப் பூஜைகள் நன்கு உதவிடும்.
“ஷ, ர, ட” - ஆகிய மூன்று அட்சர சக்திகள், பூராட நட்சத்திற்கான மூல பீஜங்கள் ஆகும். ஷா, ரா, டா ஆகிய மூன்று எழுத்துக்களையும் உச்சரிக்கையில் இரு உதடுகளும் சேராது. இத்தகைய உதடுகள் சேரா உத்பவ சக்திகளைப் பூண்ட அட்சர சக்திகளில் யமக சக்திகள், ஷார சக்திகள், டீக்கா சக்திகள் என்றெல்லாம் உண்டு. பூராட நட்சத்திரத்தில் பிறந்த உத்தமர்களுக்கு டீக்காச்சாரியார் என்ற பெயரை வைக்கின்ற பழக்கமும் உண்டு.
பூராட நட்சத்திரத்தில் பிறந்தோர், இதற்காகவே ட வகை, த வகை பெயர்களைப் பூண்டிருப்பது மிகவும் சிறப்பானது. தம் குழந்தைகள் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும், நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து சிறந்திட, பூராட நட்சத்திர நாளில் குறித்த முறையில் விரதமிருந்து,

தவசிமடை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்

* தக்களியில் பஞ்சு நூலாக்கித் திரி ஆக்கி ஆலயங்களுக்கு அளித்தல்,
* சப்த கன்னியர்கள், சப்த மாதர்களுக்குத் தக்ளிப் பஞ்சுமாலை சார்த்துதல்,
* ஏழுவிதமான பழங்கள், மாலை கட்டி துர்க்கைக்குச் சார்த்தி பூஜித்து வருதல் - போன்ற பூஜைகளால், பிள்ளைகள், பெண் பிள்ளைகள் நல்லொழுக்கத்தில் பிரகாசிக்க நல்வழி பிறக்கும்.
பூராட தினத்தன்று முழு நேர உண்ணாவிரதம்
* ஒரு வேளை மட்டும் உண்ணுதல், உண்ணாதிருத்தல்,
* சிறிது பழங்களை மட்டும் உண்ணுதல்,
* கஞ்சி மட்டும் அருந்துதல்
-என்று எவ்வகையிலேனும் விரதம் இருந்து, தட்சிணாமூர்த்தி தரிசனம், பெருமாள் தரிசனம் பெற்றிடுதலால், தன் பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் தணிய நல்வழி பிறக்கும்.
தென்முகக் கடவுளாம் தட்சிணா மூர்த்தியின் பாதத் திருவடிகளில் இருக்கும் நான்கு சனகாதி மஹரிஷிகள், ஏகாதசியும் வியாழனும் கூடும் நாளில் தவம் புரிந்து, தட்சிணா மூர்த்தியின் திருவடிகளில் தம் தவ சக்திகளை அர்ப்பணிக்கின்றார்கள்.
எனவே பூராட நட்சத்திர நாளன்று தட்சிணாமூர்த்தியின் திருவடிகளில் படிந்து வரும் நீரை அருந்துதல் பெறுதற்கரிய பாக்கியமாகும். இதனால் நல்ல தவசிகளின் தரிசனமும், ஆசியும் கிட்டிட, பிருந்தசாரண்யப் பித்ருக்களின் துணை கை கூடும்.

திண்டுக்கல் அருகே உள்ள தவசி மடை ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தூல, சூக்கும வடிவில் எண்ணற்ற மஹரிஷிகள் பூராட நாளில் பூஜிப்பதால், அந்நாளில் இவ்வாலயத்தில் ஹோமம், லட்சார்ச்சனை, சாம்பிராணி தூபம் இடுதல் போன்ற நெடு நேர பூஜைகளை ஆற்றுதலால், நல்ல மஹான்களின, சித்தர்களின் தரிசனத்தை வாழ்க்கையில் பெறும் பாக்யம் உண்டாகும்.
சித்தர்கள், மஹான்கள், ஞானியர், யோகியரின் ஜீவாலயங்களில் வழிபடுதலால், மகத்தான தவ சக்திகளைப் பெற்றிட, ஆன்மீக ரீதியான வழிமுறைகள் கிட்டும். சுயநலமின்றி நன்கு பயன்படுத்திக் கொள்க!

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam