முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீஸ்ரீஸ்ரீ பிரதோஷம்

திருமகளாகிய மகாலட்சுமி, ஆதி சிவனைப் பூஜித்து, பெருமாளின் திருமார்பில் உறையும் அனுகிரகத்தையும்,
வில்வ தளம், பசுவின் பிருஷ்டம் (மேல் வால் பகுதி), யானை, தாமரை, அரிசி /தவிட்டுப் பானை ஆகிய ஐந்து இடங்களில் உறையும் நல்வரத்தைப் பெற்ற திருநாளே வரலட்சுமி விரத நாளாகும்.
வரலட்சுமி விரத நாளில், பிரதோஷம் பூரிப்பது தனி சிறப்பாகும். வெள்ளியும் சௌபாக்ய யோகமும் பூரித்த பிரதோஷ நாளில்தாம் மகாலட்சுமி, ஆதிசிவனைப் பூஜித்து, வரலட்சுமி அவதார சக்திகளைப் பெற்று, பெருமாளின் திருவருளால், (ஸ்ரீ)சௌபாக்ய லக்ஷ்மியாக, (ஸ்ரீ)வரலக்ஷ்மியாக, (ஸ்ரீ)தனலக்ஷ்மியாக, ஆகிய மூன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீ சக்திகளுடன் அவதாரம் கொண்டாள்.

மருது சகோதரர்கள் நினைவாலயம்
காளையார்கோவில்

வரலக்ஷ்மியாக, மகாலக்ஷ்மி அவதாரம் பூண்ட நாளில் 108 சுப லட்சணங்களும் பரிபூரணமாகப் பொருந்தி இருந்தன. இவை அனைத்தும் மீண்டும் கூடி அமைவது மிக, மிக அபூர்வமே! இவற்றுள் சில அம்சங்கள் பரிமளிக்கும் திருநாளே வரலட்சுமி நோண்பு தினமும் பிரதோஷமும் கூடும் அற்புத தினமாகும்.
இந்நாளில் அரிசிப் பானையில், திருமகளை, ஒரு செம்பில் உற்பவிக்கச் செய்வது மகா விசேஷமானது. வீட்டில், முழு நீள வாழை இலையில் உணவுகளை இறைவனுக்குப் படைப்பதும், தாமும் உண்பதும், பிறருக்கும் முழு நீள வாழை இலையிலேயே தானமாக அளிப்பதும் மிகவும் விசேஷமானதாகும்.
வில்வ தள மாலையைத் தானே தொடுத்து, பிரதோஷ நேரத்தில் நந்தி, லிங்க மூர்த்தி, சிவன் கோயிலில் உள்ள கஜலக்ஷ்மிக்கும் சார்த்தியும், பிரதோஷ வழிபாடு முடிந்த பின் பெருமாள் ஆலயத்தில், லக்ஷ்மி என்ற நாமத்தைத் தாங்கி உள்ள தாயார்க்குச் சார்த்துவதும் திருவருள் கடாட்சத்தைத் தரும், திருமகளின் நல்வரங்களைப் பெற உதவும். மேலும் நற்காரியங்களை, தானதர்மங்களை நடத்துகின்ற உத்தமர்களுக்குப் பண உதவி அளித்தல் பெறுதற்கரிய தான தர்ம பலன்களைத் தரும்.
பணத்தைத் தோல் பர்சில் வைக்காதீர்கள். பணத்தை வைப்பதற்கான சந்தனப் பெட்டி, துணிச் சுருக்குப் பை போன்றவற்றை இத்தகைய மங்கள நாட்களில் வாங்கி முதலில் மல்லிகைப் பூக்களை வைத்து, தாயார், மனைவியின் கரங்களால் பணம் பெற்று வைத்தல் தன விருத்திக்கு உதவும்.

அனைத்து நோய்களுக்கும் நிவாரணம்

ஸ்திர வாரம் எனச் சிறப்பாகப் போற்றப் பெறும் சனிக்கிழமை, ஆயுளை விருத்தி செய்கின்ற ஆயுள்காரக சக்திகளைக் கொண்டவரான சனீஸ்வரருக்கு உரித்தானதும், பெருமாளுக்கு உகந்ததும் ஆயிற்றே! திருவோண நட்சத்திரமும் திருமாலின் பெருமைகளை உரைக்க வல்ல உத்தம நட்சத்திரமெனச் சிறப்பிடம் பெற்றுள்ளது. சனிக் கிழமையில் கூடும் திருவோண தினத்தில், பமைகையைக் களையும் பரந்தாம சக்திகள் நன்கு பரிமளிக்கின்றன.
சனிக்கிழமை, சனி ஹோரை நேரத்தில், புரசு இலையில் 12 அகல்களில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, நிலக் கடலை, முந்திரிப் பருப்புகளை நிறையச் சேர்த்து ஆக்கிய புளியோதரை அன்னத்தை ஒரு பெரிய வாழை இலையில் வைத்து, பெருமாளுக்கு நைவேத்யம் செய்து, ஏழைக் குழந்தைகளுக்கு அப்பளம், வடாத்துடன் சேர்த்து அளித்தவுடன், அவர்கள் பசியாற உண்டு களிக்கின்ற மகிழ்ச்சி நிலையைச் சற்று தூரத்தில் இருந்து கவனிக்கையில் உளமகிழும் ஆனந்தம் பெருகும்!
இவ்வாறாக, சிராவணச் சனிக் கிழமையின் புளியோதரை அன்னதானத்தால் பெறுகின்ற ஆனந்தத் திவலைக்குச் சாதனப்புழி என்று பெயர்.
பகைமை, குரோதம், விரோதத்தால் அலுவலகத்தில், குடும்பத்தில் வாடுவோருக்குத் தக்க ரட்சா சக்திகளை அளித்துக் காக்க வல்ல “பகை கடியும் சாதனப்புழி அன்னதானமிது”!
திருவோணம் நட்சத்திரம் நிரவும் நேரம் முழுதும், “நாராயணா, நாராயணா!” என்று மனதார ஓதிக் கொண்டே இருத்தல் சாதனப்புழி சாதனை ஆகும். முழுமையாக உபவாசம் இருத்தல் மிகவும் சிறப்பானது.

ஸ்ரீவீரசேகரப் பெருமாள் திருத்தலம்
சாக்கோட்டை

பெருமாள் கோயில் பிரசாதத்துடன் விரதத்தை நிறைவு செய்தல் நன்று.
ரிக் வேத மந்திரங்கள் சிலவற்றையேனும் தினமும், குறிப்பாக திருவோண நட்சத்திர தினத்தன்று சனி, புதன் ஹோரை நேரத்தில் ஓதி, இயன்ற சமுதாய இறைப் பணிகளை ஆற்றிட வேண்டும். சமுதாய நலன்களுக்கான இறைச் சக்திப் பாக்களைக் கொண்டதும் ரிக் வேத மந்திரங்களாகும்.
ரிக் வேத மந்திரங்களை ஓதிட, தேவமொழி மந்திரங்கள் தெரியாதே என ஏங்குதல் வேண்டாம். தேவ மொழியில் உள்ள ரிக் வேத மந்திரங்களை மட்டுமே ஓத வேண்டும் என்பதில்லை. உலக வாழ்வியலில் மொழிப் பகையோ, மொழி பேதமோ கொள்ளக் கூடாது. உலக மொழி அனைத்திற்கும் புனிதமான பாரத நாட்டில் தோன்றிய தமிழ் மொழி, தேவ மொழியே உலகமொழிகள் அனைத்திற்கும் அன்னையும். தந்தையுமாய்ப் பொலிகின்றன. அனைத்து மொழிகளிலும் உள்ள இறைப் பாடல்களிலும் நால்வேத சக்திகள் பரிமளிக்கின்றன. உலகின் அனைத்து மொழிகளும் கலைமகளின் கருணையில் ததும்புபவையே!
தேவாரம் போன்ற தமிழ் மாமறைகளிலும் ரிக் வேத சக்திகள் கொழிக்கும் ரிக் மந்திரங்கள் நிறையவே உண்டு. தேவார, திருவாசக, திருமந்திர, திருப்புகழ், திவ்யப் பிரபந்தப் பாக்களிலும், பட்டினத்தார், வள்ளலார், பாம்பன் சுவாமிகள் பாடல்களிலும் ரிக் வேத சக்திகள் நிறைந்த தமிழ் (வேத) மந்திர இறைப் பாக்கள் நிறையவே நன்கு உண்டு.
உலகின் அனைத்து மக்களும் நான்கு வேதங்களில் ஏதேனும் ஒரு வேத வகையைச் சார்ந்தவர்களே. உலகெங்கும் சனாதன தர்ம யுகமாகப் பண்டைய யுகக் காலத்தில் பொலிந்த போது, இன்றைய அனைத்து உலக மக்களும் முந்தைய ஜன்மங்களில் ஏதேனும் ஒரு வேத வகையைச் சார்ந்தவர்களாகவே இருந்திருப்பவர்களே! நாடு, மொழி, மத, இனப் பிரிவுகள் பிற்பாடு வந்தவையே!
அதாவது உலகின் ஆன்மீக மையமான, பிரபஞ்சத்தின் ஆன்மீக பூமியான, புனிதமான நம் பாரதத்தில் முன்பு பிறந்தவர்களே, உலகளாவிய ஒன்றாகித் துலங்கிய இத்திரு நாட்டில் பழமையான பிறவிகளில் தோன்றியவர்களே, இன்றைய உலகச் சகோதர மக்கள் யாவருமே ஆவர். ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது இதைக் குறிப்பதே! இதனை உணர்விப்பதே ருக் வேத மந்திர சக்தியாகும்.
அனைவருமே, தம் உலக சகோதர மக்களின் நல்வாழ்விற்காக, தினமும் ஒரு சிறிதேனும் - அவரவர் அறிந்தால், தேவ அட்சர மொழி மந்திரங்களோடும், அல்லது இவற்றை அறிந்தோரை ஓத வைத்தும்,  தேவார, திருவாசக, திருமந்திர, திருப்புகழ், திவ்யப் பிரபந்தப் பாக்களை, பட்டினத்தார், வள்ளலார், பாம்பன் சுவாமிகள் பாடல்களை, வேத சக்திகள் நிறைந்த தமிழ் (வேத) மந்திர இறைப் பாக்களையும் தினமுமே, சமுதாய நல சங்கல்பப் பூஜையாக ஓதி வர வேண்டும்.
தினந்தோறும் சனி ஹோரை நேரத்திலும், மேலும் திருவோண நட்சத்திர நாளிலும் மேற்கூறிய தமிழ் மாமறைகளை ஓதுவதால், சனி கிரகத்தைச் சுற்றி உள்ள வேதச் சுழிப்புழி வளையம் மூலம், உலக மக்கள், உலக ஜீவன் யாவர்க்கும் வேதசக்திகள் சென்று அடையும். இதுவும் மகத்தான உலகச் சமுதாய நல அறப்பணியே!

ஸ்ரீஞாயிற்றம்பல சித்தர் ஜீவாலயம் கொச்சி

சனி ஹோரை, சனிக் கிழமை, சனி கிரக நட்சத்திர நாட்களில் ரிக் வேத மந்திர சக்திகள் நிறைந்த கீழ்க் கண்ட பாடல்களை ஓதி வருதல் சிறப்புடையது. பொதுவாக உறவுப் பகை, அலுவலகப் பகை, சமுதாயப் பகை, நட்புப் பகையால் ஏற்படும் துன்பங்களை, நஷ்டங்களை, வேதனைகளைத் தீர்க்க வல்லதே ரிக் வேத மந்திரப் பாராயண சக்தி ஆகும். மந்திர ஓதல் முடிவில் புளியோதரை அன்னதானம் விசேஷமானது.
* நிகமாந்த தேசிகரின் வைராக்யப் பஞ்சகப் பாடல்களும் எத்தகைய பகைமையையும் போக்க வல்ல ரிக் வேத சக்திகளைப் பூண்டவையாம்.
* ஸ்ரீகாயத்ரீ மந்திரம், ராத்ரீ சூக்தம், அகமர்ஷண சூக்தம் போன்றவை ரிக் வேத மந்திரங்களாகும்.
* நோய்கள் தீர உதவும் அக்ஷீப்யாம் தே சூக்த மந்திரங்களும் ரிக் வேதத்ததே!
அக்ஷீப்யாம் தே சூக்த மாமந்திரம்:

சாக்கோட்டை சிவத்தலம்

அங்கா தங்கால் லோம்னோ லோம்னோ
ஜாதம் பர்வணி பர்வணி
யக்ஷ்மம் ஸர்வஸ் மாதாத் மனஸ்தமிதம்
விவ்ரு ஹாமிதே!
அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் தர வல்ல அதியற்புத ரிக் வேத மந்திரமும் இதுவே! சமுதாய மக்களின் நோய் நிவாரணத்திற்காக இதனைத் தினமும் ஓதுவதால் அவரவருக்குத் தானே நோய் நிவாரணம் கிட்டலாகும். அக்ஷீப்யாம் தே சூக்த மாமந்திரம் (தண்டமிழில்):
அங்கம நோயாம் அதுவும் எதுவும்
அம்முடி என்று முட்டிதப் பிணியாய்
அண்டம் உடலில் எத்தனை நோயும்
முறிதல், அறுதல், மறைதல் காணே!
அத்தள வித்தக அற்புத பீஜம்
அட்சீ தளபத அருமந்திரமே!
ரிக் வேதசக்தி நிறைந்த தமிழ் மாமறை மந்திரங்கள்
* பாம்பன் சுவாமிகளின் பகை கடிதல் மந்திரப் பாக்கள்
* வள்ளலார் சுவாமிகள் ஸ்ரீராமரைப் பற்றிப் பாடியுள்ள பாக்கள்
* திருஞானசம்பந்தரின் திருநெடுங்களப் பதிகப் பாக்கள்
* தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை
* கானாட்டம்புலியூர் திருத்தலம் பற்றிச் சுந்தரர் சுவாமிகள் பாடியுள்ள பாக்கள் (வல்வாய மதிமிளிரும் .... )
* சீர்காழி அருகே உள்ள திருநின்றியூர் தலம் பற்றி அப்பர் சுவாமிகள் ஓதிய பாடல் (கொடுங்கண் வெண்டலை .... ) போன்றவையாகும்.

பூணூல் அணி விழா

ஆவணியும் அவிட்டமும் கூடும் நாளான மஹா உபாகர்மாத் திருநாளில் பூணூல் அணிவதே உத்தமமானது. ருக், யஜுர், சாம வேதத்தவர் தனித் தனியே இதனைக் கொண்டாடினாலும், ஆவணியும் அவிட்டமும் சேரும் நாளில் மீண்டும் ஒரு புதுப் பூணூலைத் தரித்திடுதலே சிறப்பானது.
ஏனெனில், பூர்வ யுகங்களில், தினந்தோறுமே புதுப் பூணூலைக் காலையில் அணிந்து, தினமுமே நம் முன்னோர்கள் நித்தியத் தர்ப்பணம் செய்து வந்தனர் என்பதை அறிகையில்தான், ஆவணியும் அவிட்டமும் சேரும் நாளே, மஹா உபாகர்மத் திருநாளாக அமைந்து விளங்குவதின் மகிமை புரியலாகும்.
முற்காலத்தில் ஆவணி மாத அவிட்ட நட்சத்திர நாளில்தான் ஒரு ஆண்டுக்கான 360/365 பூணூல்களையும், (கும்பகோணம்) முப்புரிநாதரான ஸ்ரீயக்ஞோப வீதேஸ்வரருக்குச் சார்த்திப் பூஜிக்கும் மஹா உபாகர்ம நாளாகப் பொலிந்தது.

ஸ்ரீயக்ஞோபவீதேஸ்வரர் ஆலயம்
கும்பகோணம்

பூணூல் அணியும் வழக்கம் இல்லாதோர் என் செய்வது? ஆவணியும் அவிட்டமும் சேரும் நாளன்றும், இனியும், மாதந்தோறும் தொடர்ந்தும் பல ஆலயங்களுக்கும் புதுப் பூணூல்களைத் தானமாக அளித்து, ஆலய மூர்த்திகளுக்குத் தினமுமே பூணூல் சார்த்த உதவுவது மிகச் சிறந்த திருப்பணி ஆகும். இதனால் குறித்த சில தான தர்ம சக்திகளை வேத சக்திகளாகப் பெற்றிடலாம். குறிப்பாக, சகோதர, சகோதரிகளிடம் நல்ல மன ஒற்றுமை பெருகிட இது உதவிடும்.
வசதியுள்ளவர்களிடம் நிறையப் பூணூலைத் தானமாக அளிக்கச் செய்து, அவற்றைப் பெற்று, ஒவ்வொரு ஆலயத்திலும் 500, 700 எனப் பூணூலைத் தானமாக அளித்து சுவாமிக்குத் தினமும் பூணூல் சார்த்திடும் அறப் பணியை மனதார ஆற்றுவதால், தன்னால் பூணூல் அணிந்து முறையாக வழிபாடுகள் நடத்த முடியாமல் வேதனையுறுவோர், நல்ல திருப்பணிப் பலன்களை மன சாந்தியுடன் பெற உதவும்.
ஜாதி, குல பேதமின்றி யாவரும் ருத்ராட்சம், ஸ்படிக மாலை போன்று ஆன்மீக சாதனமாகப் பூணூலை யாவரும் அணிந்திடலாம். பூணூல் அணிய சங்கோஜம், வெட்கப்படுபவர்கள், பல காரணங்களால் பூணூல் அணிதலைக் கடைபிடிக்க இயலாதவர்கள், பூணூல் அணிய இயலாத தம் மனக்குறைகள் ஓரளவேனும் நீங்கிட, ஆலயங்களில் மூர்த்திகளுக்குச் சார்த்திடப் பூணூல்களை வாரந்தோறும், மாதந்தோறும் அளித்திட வேண்டும். எத்தனையோ கிராமக் கோயில்களில் ஒரு ரூபாய்க்குப் பூணூல் வாங்கிக் கடவுளுக்குச் சார்த்த இயலாத வகையில் வசதி அற்று உள்ளன. இங்கெல்லாம் வருடம் முழுதும் ஆலய மூர்த்திகளுக்குத் தினமும் சார்த்த இயலும் வகையில் நிறைய பூணூல்களை அளித்திடுக.

ஆவணி அவிட்ட நாளில் கும்பகோணம் மகாமகக் குளத்தருகே, ஸ்ரீகௌதமேஸ்வரர் ஆலயம் எனப்படும் முப்புரி நாதருக்கு (ஸ்ரீயக்ஞோப வீதேஸ்வரருக்கு) அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தி, பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதல் மிகவும் விசேஷமானது. இதனால் பெற்றோர்கள், பிள்ளைகள் இடையே உள்ள பலத்த பகைமை, மன வேறுபாடுகளைக் களைய நல்வழி கிட்டும்.

ஆவணி அவிட்ட நாளில் தறி ஆடைகளை நிறைய வாங்கி, ஆலயங்களில் அனைத்து மூர்த்திகளுக்கும் சார்த்திட அளித்தலால், உறவினர்களுக்கு இழைத்த விரோதப் பாவ வினைகள் கழிய, தக்க பிராயச்சித்தம் கிடைக்கும்.

காயத்ரீ மந்திர ஜபத் திருநாள்

ஆவணி அவிட்டத்திற்கு மறுநாள் ஸ்ரீகாயத்ரீ உற்சவத் திருநாளாகின்றது. ஆனால், நடைமுறையில் ஸ்ரீகாயத்ரீ ஜப நாளில் மட்டும் வேக வேகமாக சிறிதே ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்து விட்டு, ஆபீசிற்கு வேக வேகமாகச் சென்று, இதற்குப் பிறகு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிப்பதையே விட்டு விடுகின்றார்கள். இது தவறு. தினமுமே ஸ்ரீகாயத்ரீ ஜபத் திருநாள்தான்.
அவிட்டத்தில் தவிட்டுப் பானை நிறையத் தங்கம் என்ற பழமொழி, அவிட்ட நட்சத்திர ஸ்வேத மந்த்ர சக்தி மகிமையை உணர்த்துகின்றது. ஆவணி அவிட்ட நட்சத்திர நாளில் இறைவனுக்குத் தங்க, வெள்ளிப் பூணூல் சார்த்துவது மிகவும் விசேஷமானதாகும். இதனால் குடும்பம், வியாபாரத்தில் ஏற்படும் மனக் கொந்தளிப்புகள் அகல உதவும்.

மாதந் தோறும் அவிட்ட நட்சத்திர நாளில் பூணூலை மாற்றிக் கொள்வதும் சிறப்புடையதே. அவிட்ட நட்சத்திர நன்னேரத்தில் நல்பூணூலை சுவாமிக்கும் சார்த்தி மறுநாள் சர்வ சகஸ்ர காயத்ரீ மந்திர ஜப நாளாக, ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபத்தை ஆற்றுதல் வேண்டும். காயத்ரீ ஜப நாளில் குறைந்தது 10,000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி ஜபித்தலால், முப்புரி இழையுடன், கொப்புடைப் புரியாள் முப்புடை மருதளம் பூரித்திட அருள்வாள்.
காயத்ரீ மந்திரத்திற்கு மூன்று பதங்கள் உண்டு. ஓங்காரத்தில் அகர, உகர, மகர சக்திகளை நாமறியும் வண்ணம் நமக்கு உணர்த்தும் மந்திரங்களுள் ஸ்ரீகாயத்ரீ மந்திரமும் ஒன்றாகும். பொதுவாக, மருத மரம் காயத்ரீ மந்திர சக்திகளைக் கொண்டது. மருத என்ற புனிதமான சொல்லில் அகர, உகர, மகரங்கள் இழைகின்றன. ஓங்கார ஒலி எல்லோராலும் ஒரே மாதிரியாக எழுப்பப்படுவதில்லை. ஒவ்வொருவருக்கும் விதவிதமான ஓங்கார த்வனிகள் எழுகின்றன. கலியுகத்தில், மந்திர சக்திகளைத் தவறாகப் பயன்படுத்தாமல் தடுத்துக் காத்திட, அனைத்து மந்திரங்களின் தற்காப்பு சக்திக்காக முதலிலும் ஓம் ஒலிக்கப்படுகின்றது.

திருவிடைமருதம்

ஸ்ரீகாயத்ரீ மந்திரத்துக்கு உரிய ஓங்கார இழைப்பு மருத ஓதனமாகும். எனவேதாம், காயத்ரீ ஜப நாளில் மருத மரத்தடியில், திருவிடைமருதூர், பிள்ளையார்பட்டி போன்ற மருத மந்திர விருட்ச சக்தித் தலத்தில், மருத மரத்தைத் தரிசித்தவாறே, ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்தல் மிகவும் விசேஷமானது. மருத மரம் தல மரமாக உள்ள இடங்களில் மூன்று சிவத் தலங்கள் மிகவும் முக்கியமானதாக ஸ்ரீஓங்கார காயத்ரீ மந்திர சக்தி இழைகளைக் கொண்டவை.
ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம், திருவிடைமருதூர், தென்காசி அருகில் உள்ள திருப்புடைமருதூர் இவை மூன்றும் முறையே முதல், இடை, கடை மருத க்ஷேத்திரங்கள் ஆகின்றன. ஓங்கார காயத்ரீயின் முப்புரி இழைகளை இவை கொண்டு இருப்பதால்தாம் ஸ்ரீஆதிசங்கரர் இம்மூன்று தலங்களிலும் நேரடியாகவே வழிபட்டு, இவற்றின் சிறப்பினை உணர்த்தி உள்ளார்.
மருத மரப் பலகையில் அமர்ந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதுதல் பன்மடங்கு பலாபலன்களைத் தருவதாகும்.
காயத்ரீ ஜப நாட்களில் மருத மரத் தரிசனம் விசேஷமானது. நல்ல உடல், உள்ள, மனத் தின்மையும் வலிமை கொண்டவர்களும், சிவநெறியில் திளைத்தவர்களுமான மருது பாண்டிச் சகோதரர்கள், மகத்தான ஸ்ரீகாயத்ரீ மந்திர வலிமை கொண்டவர்கள். மருத மரத்தைத் தினமும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதிவாறே வலம் வந்து பெறுதற்கரிய அரிய தெய்வீக வீர சக்திகளைப் பெற்று மக்களுக்கு உறுதுணையாக இருந்தனர். இவர்கள் வழிபட்ட மூர்த்திகளுள் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஸ்ரீவீரசேகர சிவ மூர்த்தியும் ஒருவர். ஸ்ரீராமருக்கு வீரபாவனம் தந்த சிவமூர்த்தி. இங்குள்ள தீர்த்தம் ஒரு யுகத்தில் ஸ்ரீகாயத்ரீ தீர்த்தமாகப் பொலிந்ததாகும். இதன் துறைகளில் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிப்பது மிகவும் விசேஷமானதாகும். இதனருகில் ஒரு காயத்ரீ லிங்கமும் இருந்தது. தற்போது மறைவு பெற்றுள்ளது. மாத அமாவாசையில் இத்தகைய தெய்வ மகாவீரர்களுக்குத் தர்ப்பணம் அளித்தலும் காருண்யத் தர்ப்பண சக்திகளை அளிக்கின்றது.

கொறுக்கை சிவாலயம்

காயத்ரீ ஜப நாளில் குறைந்தது 12,000 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்து, இதன் பலன்களை மக்கள் சமுதாய நற்பலன்களுக்காக அர்ப்பணித்தல் பெறுதற்கரிய பாக்கியமாகும்.
தர்பைப் பாய், இதன் மேல் கம்பளி, இதன் மேல் புதுத் துணி, துண்டு, வேஷ்டி, இதன் மேல் நல்ல மரப் பலகை, நெற்றி, உடலில் திருநீறு, சந்தனம், குங்குமம், பூணூல், ருத்ராட்சம், ஸ்படிகம், கைகளில் மணி கங்கண், பத்மாசனம் இவ்வாறு எவ்வளவுக்கு எவ்வளவு ஆன்மீக சாதனங்கள் உடலில் அமைகின்றனவோ, அந்த அளவிற்கு ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகள் பரிணமித்துப் பன்மடங்காகப் பெருகும். இத்தகைய தெய்வீக விஷயங்களை சற்குரு மூலமாகவே நீங்கள் அறிகின்றீர்கள் அல்லவா!
எனவே இறைத் தூதுவராம் சற்குருவின் திருப்பாதங்களில் ஸ்ரீகாயத்ரீ ஜபப் பலன்களை அர்ப்பணித்தலும் ஒரு வகை தேவார்ப்பணப் பூஜையே! உலக ஜீவன்களின் நல்வாழ்விற்காக, ஜீவ நலனுக்காக அமைவதே ஆவணி அவிட்டத் திருநாளும், ஸ்ரீகாயத்ரீ ஜபத் திருநாளும் ஆகும்.
கும்பகோணம் - பட்டீஸ்வரம் மார்கத்தில் உள்ள கொறுக்கை ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பூணூல் வைபவம் நிகழ்த்துதல், ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்தல் மிகவும் விசேஷமானது. இங்கு ஸ்ரீகாயத்ரீ மண்டபத்தில், ஒரே மண்டபத்தில் சுவாமி மற்றும் அம்பாளுக்கு உரிய இரு நந்திகளும் அமர்ந்து, ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜப நிலையில் வாகன சேவை ஆற்றுகின்ற அற்புத ஆலயம் இது! இங்கு சந்தியா வேளைகளில் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிப்பது அரிதிப் பன்மடங்கு பலன்களைத் தருவாகும்.

நரக லோகம் போக வேண்டாம்

துவிதியைத் திதி, எமதர்மராகிய, தர்மராஜா வழிபாட்டிற்கு உரித்தானதாகும். நரக லோகம் அடையாமல் காக்க உதவும் பூஜா பலன்களைத் தருவதே துவிதியைத் திதி!
எம தர்ம மூர்த்தி உயிரைப் பறிப்பவர் அன்று. அவரவர் ஆயுள் முடிந்தவுடன், அந்தந்த உடலில் உள்ள ஜீவ சக்தியை விடுவித்து, அடுத்த பரிபாலனத்திற்கு அளிக்கின்றவரே எமதர்மர்!
இறப்பிற்குப் பின் நிறைய (ஆவி, பிற சரீர) வாழ்நிலைகள் உண்டு. இதில் நரக லோக வாழ்வும் ஒன்றாகும்.
நரக லோகம் என்ற ஒன்று உண்டா? ஆம், நிச்சயமாக உண்டு. நரக லோகம் என்பது தவறு செய்யாமல் இருப்பதற்காக சிருஷ்டிக்கப்பட்ட கற்பனை மண்டலமா? நிச்சயமாக இல்லை. நரக லோகம் என்பது நம் பூமியைப் போன்ற ஓர் உலகே! சந்திர மண்டலம், சூரிய மண்டலம் போல் நரக மண்டத்தைப் பார்க்க முடியுமா? நிச்சயமாகக் கண்களால் பார்க்க முடியும்.
ஆனால், இந்த நரக மண்டலமானது, பூமி, சந்திரன் போல் குறித்த திசையில், பாதையில் நகர்வதில்லை. இது கர்ம பரிபாலன தேவதா மூர்த்திகளால் இயக்கப்பட்டு கதிகழிந்த பாதையில் செல்வதாகும். உண்மையில் இது பிராணாயாதி அக்னி இயக்கச் சுழலில் இயங்குவதாகும்.
ஒருவர் இறந்த பின்தான் நரகத்தை அடைகிறாரா? பல சமயங்களில் அப்படித்தான். இருப்பினும் பூமியில், வாழ்க்கையில் உறக்க நிலையில் பெறும் சில கனவு நிலைகள், நரக லோக அனுபவங்களைத் தரும். பீதி, பயங்கர மன அச்சம் போன்றவையும் நரக லோக நிழல் சம்பவங்களாகும்.

திருவாலங்காடு, கும்பகோணம்

நரக லோகத்தில் தண்டனைகள்தாம் இருக்குமா? பல சமயங்களில் அப்படித்தான். ஆனால் தண்டனை என்பதை விட வினைக்கேற்ற விளைவுகள் எனச் சொல்வதே சரியாகும்.
ஒருவர் செய்த தவறுகளுக்கு, அந்தத் தவறின் விளைவுகளுக்கு ஏற்பத் தக்க தண்டனைகளை அனுபவித்தாக வேண்டும் என்ற தர்மச் சட்டம் பூமி உட்பட அனைத்து உலகங்களிலும் உண்டு. இது சரியானதுதானே! அப்படியானால் செய்த தவறுகளுக்கான விளைவுகளைத் தந்து திருத்தும் நரக லோகமும் நீதி, நியம, சத்தியப் பூர்வமானதுதானே!

நரக லோகம் என்பது பூமிச் சிறைவாசம் போலானதா? நரக லோகத்தின் பயன்களுள் ஒன்றே, வினைகளின் விளைவுகளை அனுபவித்துத் திருந்துவதற்காகவே. இதே கருத்தில்தான் பூமியில் சிறைச்சாலை அமைகின்றது. இருந்தாலும், பெரும்பாலான பூமிச் சிறைகளில் பெருத்த அமைதி இன்மையும், அதர்மமும் நிலவுவதால், அதர்மம் புரிந்தவன் விரக்தியில் மென்மேலும் கெட்டவனாகின்றான். எனவே நரக லோகம் என்பது உண்மையிலேயே ஒருவர் திருந்த உதவிடும் திருந்துதேவசாலை!
நரக லோகம் என்றாலே ஏன் பயம் வருகிறது?
தவறுகளுக்கான தண்டனைகளை அனுபவிக்க மனிதன் மிகவும் தயங்குவதால்! அதாவது, என்ன தவறுகள் செய்தாலும் அவற்றுக்காக விளைவுகளில் இருந்து தப்பிக்கவே கலியுக மனித மனம் வேலை செய்வதால், ஒன்றுக்கு மேல் ஒன்றாகத் தவறுகளைச் செய்து கொண்டே போகின்றான் மனிதன் .

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

ஸ்ரீபடே சாகிப் சமாதியில் சந்தனம் அரைத்து சார்த்த ஓத வேண்டிய துதி
ஓம் மஜும் போட் துத்யாய வித்மஹே
மதிபூரண சந்தன சந்த்ராய தீமஹி
தந்நோ குரு பாத விருட்ச ப்ரசோதயாத்
மூன்றாம் பிறையாகி முக்கண் சுதமாகி
முச்சுடர் பரிமாணம் மூதையர் வழி தாங்கி
ஒன்றாய் புலன் சேர்ந்து ஓதிய சந்தனப் பூ மலர்
நன்றாய் நவின்றேன் நமசிவாய என மகிழம்பூ சாறல்
மறையொலியாய் மாதவனை அகிலம் புகழ் ஓங்கும் அரணே அரண் !

இறந்த பின் ஒவ்வொரு உயிரும் சாயைச் சரீரம் என்ற இன்னொரு உடலைத் தாங்கி தர்ம தேவதைகளை ஒரு தர்மலோகச் சாலையில் சந்திக்கும்போது, அங்கு, தன் வாழ்வின் அனைத்து உண்மைகளும், சம்பவங்களும் படம் பிடித்தது போல் தானாகவே தெரிய வரும். அந்த விரஜா நதித் தீரத்தில்தான் இந்த இந்தத் தவறுகளுக்கு இந்த இந்தத் தண்டனைகள், இவற்றுள் சில பூலோகப் பிறவிகளிலும், சிலவற்றைச் சாயைச் சரீரத்திலும், சில நரக லோகத்திலும் அனுபவிக்க வேண்டும் என்ற பல தர்மச் சட்டங்கள் தெரிய வரும். இதன்படியே அனைவரும் நடந்தாக வேண்டும்.
நரக லோக சம்பவத்திற்கு ஓர் உதாரணம் தர முடியுமா?
பூமியில் வாழ்க்கையில், பிறர் சொத்துக்களை ஏமாற்றி ஒருவர் அனுபவிக்கின்றார் என்றால் இதற்கான தண்டனைகள் பூமியிலேயே சிறிது தொடங்கி விடும். ஆனால், அவர் செய்துள்ள சில நற்காரியப் புண்யசக்திகள் அவர் திருந்திட சற்று வாய்ப்புகளையும் தரும். ஆனால், இதனைப் பலரும் நாம் தப்பு செய்தாலும் கடவுள் மன்னித்து விட்டார், நாம் தவறுகளில் இருந்து தப்பித்து விட்டோம் என்று எண்ணி விடுகின்றனர்.
ஒருவர் இறந்த பின், விரஜா நதி என்ற புனித நதி தீர்த்தத்தால் தெளிக்கப்படும்போதுதான் அவர் செய்த பாவங்கள் தானாகவே புலனாகும். இவற்றிலிருந்து தப்பிக்க முடியாது எனற நிலை வந்தவுடன் அவரே நரக லோகத்தில் சத்தியப்பூர்வமாக தண்டனைகளை ஏற்கத் தயாராவார். பிறகு மீண்டும் பிறப்பு! ஆனால் பூமியில் பிறந்தவுடன் தாம் நரக லோகத்தில் செய்த சங்கல்பங்களை மறந்து விடுகின்றனர்.
ஒருவர் இறந்த பின், மனித உடல் போல ஒரு சாயைச் சரீர உடல் தரப்படும். ஒரு பெரிய எண்ணெய்க் கொப்பறையில் இருபதடி ஆழத்திற்கு எண்ணெய் கொதிக்கும். அதற்குள் அவர் தள்ளப்படுவார். ஆனால், அந்த கொப்பளிக்கும் எண்ணெயில், உடலில் உயிர் பிரியாது. மாறாக உடல் அனலால் கொதிக்கும், சுடும் எண்ணெய் உடலை வருத்தும். கண்கள், காது பொசுங்கும், வயிறு எரியும். இவ்வாறு நாட்கணக்கில், மாதக் கணக்கில் கொதிக்கும் எண்ணெயில் வதங்கி ஆக வேண்டும். மேலும் கொதிக்கும் கொப்பறைக்குள் பன்னெடுங் காலம் இருக்கையில் அவர் எந்தச் சொத்தை அதர்மமாகப் பறித்தார்களோ அதன் விளைவுகளால் அவர்கள் சந்ததியினரே அதிபயங்கரமாக பூமியில் அல்லல்படுவதையும் கண்டு கண்டு, மேலும் துயரடைய வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும்.
இவ்வாறாக இந்த நரக லோக அம்சமும் ஒரு அணுத் துளியே! ஏனைய நரக லோகங்களும் இருப்பது உண்மையே. தவறு செய்தவர்கள் எவரும் அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். இப்பிறவிக்குள் தம் தவறுகளைத் திருத்திக் கொண்டு தம் தவறுகளால் பாதிப்படைந்தோருக்குத் தக்க நிவாரணங்கள் அளித்து முழுமையாகத் திருந்தி வாழ்ந்தால்தான் நரக லோக வேதனைகளைத் தணித்து, தவிர்க்க முடியும்.

வந்த வினை, வருவினை, வந்திருக்கும் வினை என்ற மூன்று தரமான வினைகளையும் தீர்க்க வல்ல பூத லிங்கம், பவிஸ்ய லிங்கம், வர்தமான லிங்க மூர்த்திகளை கும்பகோணம் நன்னிலம் அருகே உள்ள திருப்புகலூர் ஆலயத்தில் காணலாம். இங்கும், எம மூர்த்தி வழிபட்ட தலங்களிலும் (ஸ்ரீவாஞ்சியம், கும்பகோணம் அருகே உள்ள திருவாலங்காடு, திருப்பைஞ்ஞீலி) துவிதியைத் திதி தோறும் செவ்வாய், சனி தோறும் வழிபட்டு வந்தால் அவரவர் தாமிழைத்த வல்வினைகளை உணர்ந்து பரிகாரம் பெற்று, நரக லோக வாழ்வையே தவிர்த்து விடலாம். துவிதியைத் திதி பூஜையானது வெளியில் சொல்ல முடியாதவாறு செய்த பாவ வினைகளுக்குத் தக்க பரிகாரம் பெற உதவும்.

பெண் குழந்தைகள் சிறப்படைய ...

இப்பூவுலத் தான்யப் படைப்பில் கனிகளுள் பேரீச்சம் பழத்தையும், முந்திரியையும் ஸ்ரீசாகம்பரீ தேவி தோற்றுவித்த நன்னாளே திரிதியைத் திருநாள்.
உள் அணுத் திரளும் வெளி அணுத் திரளும்
ஒன்றிய முந்திரி ஓங்குயர் கசூரம்
தெள்ளிய முத்துள நிதிவளம்தாமே
(கசூரம் = பேரீச்சை)
என்ற சித்த பரிபாஷைப் பாடல் மூன்றாம் திதியான திரிதியையில் மூன்று விதமான நல்வள நலவள சக்திகள் விருத்தியாகும் மகிமையை நன்கு உணர்த்துகின்றது.
திரிதியைத் திதியில் முத்தூட்டு மூவாட்டுப் புழம் என்ற வகையிலான பரசுராம சேத்திரக் கேந்திரத்தில், தானம், தவம், சத்தியம் ஆகிய மூன்று விதமான தெய்வீக சக்திகள், கேரளீய சுயம்புத் திருமேனிகளிலிருந்து தோன்றுகின்றன.
நந்தி, சண்டிகேஸ்வரர், கால பைரவர் ஆகிய மூன்று மூர்த்திகளின் தெய்வாம்சங்கள் திரிதியைத் திதியில் முத்துள முத்தூட்டுச் சக்திகளை ஆலயத்தில் திரிதியைத் திதியில் நன்கு பரிமளிக்கச் செய்கின்றன. பலரும் ஆலயங்களில் சண்டிகேஸ்வரரை வெறுமனே வழிபட்டு வந்து விடுகின்றார்கள். உண்மையில், சண்டிகேஸ்வரரிடம் சிவனிடம் ஏற்றிய விளக்கை, சிவப் பிரசாதமாக சண்டிகேஸ்வரரிடம் வைத்து ஏற்றி வழிபடுவதும் திரிதியைத் தின வழிபாட்டு அம்சமாகும்.
ஸ்ரீசண்டிகேஸ்வரர்தாம் திரிதியைத் திதியில் பிரபஞ்ச ஜீவன்களின் இருதயாலய சக்தி நலன்களுக்காக தானம், ஜபம், யோகம் ஆகிய மூன்று அங்கங்களுடன் சிவ பூஜைகளை ஆற்றுகின்றார்.
எனவே திரிதியை திதி அன்று ஸ்ரீநந்தி பூஜையாக, நந்திமூர்த்திக்கு சாற்றுவதற்கான தைலம், நந்தி மூர்த்தியின் திருமேனி முழுவதும் சார்த்தும் அளவிற்கு நீண்ட நெடு புஷ்பச் சரங்கள் அளித்தும்,

லால்குடி திருத்தலம்

* ஸ்ரீசண்டிகேஸ்வரர் பூஜையாக, சண்டிகேஸ்வரருக்கு மூன்று திரிகளுடன் விளக்கை ஏற்றுதலும்
* ஸ்ரீகாலபைரவர் பூஜையாக, ஸ்ரீகாலபைரருக்கான முழு முந்திரி மாலை அளித்தும் வழிபடுதல் மிகவும் விசேஷமானது. சண்டிகேஸ்வரர் சன்னதியில் மூன்று திரி விளக்கு தீபம் இட்டு வழிபடுதலால் தன்னுடைய கணவன், மனைவியின் உத்தியோகத்தில், பணி புரியும் இடத்தில் நல்ல சுப மாற்றங்கள் உண்டாக வழி பிறக்கும்.
பேரீச்சம் பழத் தாவரத்தை, சாகம்பரீ தேவி பூவுலகிற்காக அர்ப்பணித்த தினமே திரிதியைத் தினமாதலின் பேரீச்சம் பழ நைவேத்யமும், தானமும் விசேஷமானது.
மூன்று துர்க்கை மூர்த்திகள் சேர்ந்தருளும் தலமாகிய கும்பகோணம் அருகே அளகாபுத்தூர்
மூன்று பிள்ளையார் மூர்த்தங்கள் உள்ள கும்பகோணம் அருகே மாளாபுரம் போன்ற தலங்கள்
மூன்று லிங்க மூர்த்திகளும் அதற்கு மேலும் உள்ள தலங்களில் (திருவானைக்கோவில், லால்குடி, ராமேஸ்வரம்) போன்ற இன்று மூன்று திரியிட்டு விளக்கேற்றுதல் விசேஷமானது. இதனால் தன் கணவன் வேலைக்குச் செல்லாது சோம்பித் திரிதல் பற்றிக் கவலையுறும் பெண்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
பலிபீடம் இல்லாத சிவாலயங்களில் குறைந்தது 36 முறை வலம் வந்து இதன் பிறகு மூன்று பலி பீடங்களையாவது நிறுவிட ஆவன செய்து உதவி வர வேண்டும். இதனால் பிள்ளை. துள்ளி விளையாடாத வீடுகளில் குடியிருக்கும் வெறுப்பான தனித் தன்மை மாறி, நல்லவிதமான மறுமலர்ச்சி உண்டாக வழி பிறக்கும்.
ஸ்ரீசாகம்பரி தேவி பூவுலகில் தோன்றுவதற்கு முன் தாவர சக்திகளைப் பரிபாலனம் செய்திட உதித்த தலங்களுள் ஒன்றே (திருச்சி அருகே உள்ள) உத்தமர் கோயில் ஆலயமாகும்.
பூலோகம், புவர் லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று லோகங்களிலும் உள்ள சாகம்பரி லோக தேவதா மூர்த்திகள் தினந்தோறும் வழிபடுகின்ற மும்மூர்த்தித் தலமான உத்தமர் கோயில் எனப்படும் பிச்சாண்டார் கோயிலில், மும்மூர்த்திகளை மிகப் பெரிய அளவிலான பசு நெய் தீபம் காட்டி அனைவரும் விஸ்வ ரூப தரிசனம் போல் சிரசு முதல் பாதம் வரை நன்கு தரிசித்திட பெரிய விளக்கு, பசுநெய், அளித்து உதவுதல் விசேஷமானது. இதனால் கட்டுக்கு அடங்காமல் பேசும் பெண் பிள்ளைகள், பணிவு பெற உதவும்.
பலி பீடம் இல்லாத ஆலயங்களில் கிழக்கு, தெற்கு, வடக்கு திக்குகளிலும் பலி பீடங்களை நிறுவ உதவுதலால் இது பெண் குழந்தைகளின் மேன்மைக்கும் நன்கு உதவும்.
பெருமாள் ஆலயத்தில் இரவு அர்த்த ஜாம பூஜைக்கு முன் பலி பீடத்திற்கு அன்ன உருண்டை படைத்து வழிபடுவார்கள். இதனை திரிதியைத் திதியில் தரிசித்தல் விசேஷமானது.
தாய்ப் பால் மட்டும் அருந்துகின்ற குழந்தை உள்ள வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரையும் திரிதியை அன்று பிரம்மா, விஷ்ணு, ருத்ர மூர்த்திகளையும் நின்று இருந்து கிடந்த நடந்த - போன்ற மூன்று கோலங்களில் அருளும் பெருமாள் மூர்த்திகளையும் தரிசிக்க செய்தல் உதவுதல் விசேஷமானது. இதனால் பசுவை மிதித்த, பசுவை அடித்த தோஷங்களுக்கு ஓரளவேனும் நிவர்த்தி கிட்டும்.
மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றினாலும் பிரசித்தி பெற்றுள்ள ஆலயங்களில் திரிதியை திதிகளில் பெண்கள் குடும்பமாகச் சென்று வழிபடுதல் வேண்டும். இதனால் பெண்களுக்குத் தேவையான தற்காப்புச் சக்திகளை அளிக்கின்ற புண்ணிய சக்தியைப் பெறுவர்.

மருத்துவத் துறையில் மேன்மை அடைய ...

பொதுவாக, சுபகாரியங்களை வளர்பிறை, உத்தராயணத்தில் (தை முதல் ஆனி வரை) நிகழ்த்துவதுதான் சிறப்புடையது. அப்படியானால், தேய்பிறையில் பல சுபமுகூர்த்த லட்சணங்கள் பொருந்தி வருமானால் இந்நாளில் மிளிரும் சுப முகூர்த்த லட்சணங்களை எவ்வாறு நம் வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்வது? காலத்தைக் கடந்த பரப்பிரம்ம ரூபங்களான தெய்வ மூர்த்திகளுக்கு இத்தகைய நாட்களில் திருமண உற்சவங்களை நிகழ்த்தி, அறிந்தோ, அறியாமலோ தேய்பிறையில் திருமணம் போன்ற சுபகாரியங்களைச் செய்தமைக்குப் பரிகாரம் காணுதல் வேண்டும்.
திருமணம் என்பது நல்ல முகூர்த்த நாளில் நிகழ்ந்திட்டாலும், அதை அடுத்து வரும் திருமண வாழ்க்கையும் சுப மங்களகரமாக அமைதல் வேண்டும் அல்லவா! வாழ்க்கையில் மங்களத்தை நிரவ விடாது தடுக்கும் வல்வினைகளும் பல உண்டே! சுப மங்கள சக்திகளை தடுக்கின்ற தோஷங்களையும் தீவினைகளையும் அகற்றுவதற்கு உதவுவதே தேய்பிறைச் சுப முகூர்த்த நாளாகும்.
நடப்புப் பஞ்சாங்கத்தில் தேய்பிறை நாட்களையும், கூடா நாட்களையும் சுப முகூர்தத நாட்களாக அளிக்கின்றனர். இது தவறானது. திருமணச் சுபமுகூர்த்தம் வளர்பிறையில்தான் அமைதல் வேண்டும். நன்கு மங்களகரமாக அமைந்து சுபமாக விருத்தி அடைய வேண்டிய திருமணம், பூணூல் அணிதல், திருமாங்கல்யம் வாங்குதல் போன்றவை வளர்பிறையில் நிகழ்தலே சிறப்புடையது. ஆனால், தெய்வாதி உற்சவங்கள் யாவற்றையும் எந்நாளிலும் ஏ(ஆ)ற்றிடலாம்.

ஸ்ரீபவஔஷதபுரீஸ்வரர் திருத்தலம்
திருத்துறைப்பூண்டி

அறிந்தோ, அறியாமலோ தேய்பிறையில் நிகழ்ந்த திருமண தோஷங்களுக்குத் தீர்வு பெறவே, தேய்பிறையில் அமையும் இத்தகைய மங்கள லட்சண நாட்களில் பல பூஜைகளை, தெய்வாதி உற்சவங்களை நிகழ்த்திட வேண்டும். திருப்பதியில் சுவாமிக்கு நிகழழும் கல்யாண உற்சவம் இத்தகைய திருமண தோஷங்களை நிவர்த்திக்க வல்லதாகும். ஸ்ரீமீனாட்சி, ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்களில் சுவாமிக்குத் திருமண உற்சவம் நிகழ்த்துதலும், திருமண வாழ்வில் வரும் பலத்த துன்பங்களை நீக்கிட உதவுவதாகும்.
எல்லாவற்றிலும் மிகவும் விசேஷமாக அமைவது, சென்னை - திருமழிசை -வெள்ளவேடு அடுத்து வரும் நேமம் கிராமத்தில், ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீஆவூண்டீஸ்வரர் ஆலயத்தின் அருகே பலரும் அறியாத வகையில் உள்ள ஒரே ஒரு மூலத்தானத்துடன் மட்டுமே பொலியும் மிகவும் பழமையான ஸ்ரீநித்ய கல்யாண வீரராகவப் பெருமாள் ஆலயமாகும். திருவிடந்தைத் திருத்தலம் போல பண்டைய யுகங்களில் வருடம் முழுதும் பெருமாளுக்கு தினமுமே கல்யாண உற்சவம் சிறப்பாக நடந்து பிரம்மாண்டமான ஆலயமாகப் பொலிந்த பெருமாள் ஆலயம் தற்போது மிகவும் சிதிலமடைந்து, பக்தர்களின் அசிரத்தையால், கோயிலை நிர்வகிக்கத் தக்க வருமானமே இல்லாது, சரியான பூஜையின்றி இருக்கின்றது.
திருமண வாழ்வில் தினமுமே பிரச்னைகளைப் பெற்று பலத்த மன வேதனைகளுடன் வாழ்வோர், இங்கு பெருமாளை அடிக்கடி பூஜித்து வருதலால் ஆச்சரியகரமான, அற்புதமான பலாபலன்களைப் பெற்றிடலாம்.
கண்ட யோக நாளில், இங்கு பெருமாளை, குரு காட்டும் முறைகளில் வழிபடுவதால், ஜாதக ரீதியான கண்டங்களை முழுமையாகவே போக்கிடலாம். பலரும் அறியாத மிக மிகச் சிறிய வகையிலான 100 சதுர அடி சன்னதியுடன் மட்டுமே தற்போது தக்க பராமரிப்பின்றி உள்ள இக்கோயில், சகல விதமான திருமண தோஷங்களையும் போக்க வல்ல மிகவும் சக்தி வாய்ந்த தலம், இந்தக் கோயிலை நன்கு பராமரிப்பதற்கானத் தக்க திருப்பணிகளை ஆற்றுவோர் குடும்பத்தில் சந்ததி வளம் கொழித்து, ஒற்றுமையான குடும்ப வாழ்வும் அமையும்.

ஸ்ரீஅருமருந்துநாயகி கற்குடி !

நோய் நிவாரண சக்திகளைப் பெற அதாவது நோய்களுக்குக் காரணமான வல்வினைகளைக் களையவும் வல்லவையே இவ்வாறு தேய்பிறையில் வரும் சுப மங்கள நாட்களாகும். இந்நாட்களில்
சென்னை - திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர்,
திருத்துறைப்பூண்டி ஸ்ரீஔஷதபுரீஸ்வரர்,
சென்னை திருக்கச்சூர் மலைக்கோயில் ஸ்ரீமருந்தீசர்,
சென்னை பூந்தமல்லி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைப்பாக்கம் ஸ்ரீவைத்யநாத சுவாமி,
திருக்கற்குடி ஸ்ரீஅருமருந்து நாயகி,
பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவாலயம்,
காஞ்சீபுரம் ஸ்ரீபோடாசுவாமி (சிவசாமிச்) சித்தர் ஜீவாலயம்)
- போன்ற மருத்துவத் துறைத் தலங்களில் சுவாமிக்கு, அம்பிகைக்கு, பஞ்சால் ஆக்கப் பெறும் 108 பஞ்சு மாலைகள் சார்த்தி, அம்பிகையின் திருப்பாதங்களுக்குக் குங்குமப்பூக் காப்பு இட்டு, கீரை வகை உணவுகள், மாகாளிக் கிழங்கு ஊறுகாய், புதினாத் துவையல் அன்னம் படைத்துத் தானம் அளித்தலால், வெளியில் சொல்ல முடியாத நோய்களின் வேதனைகள் தணிய நல்வழி பிறக்கும்.
தேய்பிறை கண்ட யோக நாட்களில் துளஸி, வன்னி, குப்பைமேனி, கீழாநெல்லி போன்ற மூலிகைகளுக்கு நீரூற்றி விருத்தி செய்வதால், தலை, கழுத்துப் பகுதி சம்பந்தமான வியாதிகளுக்கான நிவாரண மருத்துவ வழிகளைப் பெறலாம்.
பட்டுக்கோட்டை - பேராவூரணி இடையில் உள்ள மருங்கப்பள்ளம் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயத்தில் செவ்வாய், வெள்ளி, அஸ்வினி, ஆயில்யம், பிரதமை நாட்களில், சுவாமிக்கு ஜவ்வாது, புனுகு, கஸ்தூரி, கோரோஜனை, கஸ்தூரி மஞ்சள், அத்தர் ஆகியவை கூடிய சந்தனக் காப்பு இட்டு, சாம்பிராணி தீபத்தில் குல்கந்து, ரோஜா, அத்தர் சேர்ந்த சந்தனப் பொடியைத் தூவி சாம்பிராணி தூபம் இட்டு வணங்கி வருதலால் ஸ்ரீமருந்தீஸ்வரரின் திருஅருளால் நோய் நிவாரண சக்திகள் கிட்டும்.
மருங்கப்பள்ளம் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலய வளாகம், பண்டைய யுகங்களில் பிரம்மாண்டமான சித்த, ஆயர்வேத வைத்திய சாலைகள் பொலிந்த தலமாகும். மருத்துவக் கல்வி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் அனைவருமே இங்கு செவ்வாய், சனிக் கிழமைகளில் வழிபட்டு வருதலால் மருத்துவத் துறையில் நன்கு மேன்மை பெற்றிடலாம்.

சனிப் பெயர்ச்சி வழிபாடு

ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து செல்வதையே அந்த கிரகத்தின் பெயர்ச்சியாகக் கொண்டாடுகிறோம்.
கிரகங்கள் வக்கிர நிலையில் தன் பாதையில் இருந்து மாற்றம் கொண்டு திரும்பி வருவதையும், கிரஹப் பெயர்ச்சியாகச் சில ஆலயங்களில், ஜோதிட மார்கங்களில் கொள்வதும் உண்டு.
கலியுக ஜீவன்களின் கர்ம பரிபாலனத்தை நிர்வகிப்பவர்களே நவகிரக மூர்த்திகள். எனவே, கிரக மூர்த்திகள் ஜீவன்களுக்கு கர்ம வினைகளின் விளைவுகளாக நல்லதையோ, தீயதையோ தாமாகவே அளிப்பதும் கிடையாது. அவரவர் விதிக்கேற்ப வினைகளின் விளைவுகளாக நல்லவை, தீயவற்றை அடைய வேண்டியதைப் பரிபாலனம் செய்பவர்களே நவகிரக மூர்த்திகள். எனவே, சத்தியசீல தேவாதி தேவசத்ய மூர்த்திகளாக, கர்ம பரிபாலனத்தைக் கலியுகத்தில் நடத்துபவர்களே கிரக மூர்த்திகள்!

ஸ்ரீகைலாசநாதர் சோழபுரம்

வானியல் சாத்திர ரீதியாக, அனைத்து கிரகங்களுக்கும் பெயர்ச்சி உண்டு. ஆனால், நடைமுறையில் குருப் பெயர்ச்சி மற்றறும் சனிப் பெயர்ச்சியை மட்டுமே பெரும் தெய்வ விழாவாகக் கொண்டாடுகின்றனர். உண்மையில், சூரியன் முதல் இராகு, கேது வரை அனைத்து மூர்த்திகளின் இராசிப் பெயர்ச்சியைத் தேதி வாரியாக, நேரம் உட்பட நன்கு குறித்துக் கொண்டு, அந்தந்த நேரத்தில் அந்தந்த கிரக ப்ரீதிப் பூஜைகளை, ஹோமங்களை நிகழ்த்துதலால், நவகிரக தேவதா மூர்த்திகளின் அனுகிரகத்தை நன்கு பெற்றிடலாம்.
தென்னை மரத்திலிருந்து இளநீர்க் காய் கீழே விழுந்து சற்றே அடிபட வேண்டும் என்று விதி இருப்பின், கீழே விழுந்து கொண்டிருக்கும் இளநீர்க் காயை ஒரு துண்டில் தாங்கி மெதுவாக பூமியில் இடும்போது அதன் அடிபடும் தன்மை சற்றுக் குறைகின்றது அல்லவா?
இதைப் போலத்தான் நவகிரக மூர்த்தியிடம், வர வேண்டிய துன்பத்தை முற்றிலுமாகத் தவிர்த்து விடு! என்று வேண்டிடாது, “என் கர்ம வினைகளுக்கேற்ப அமைகின்ற துன்பங்களைத் தாங்கி அனுபவித்து, கழித்து, கர்மங்களில் இருந்து விடுபடுவதற்குத் துணை புரிவாயாக!” என்று உளப்பூர்வமாக வணங்கினால்,
துன்பங்களின் சுமையே தெரியாது, தாங்கி அனுபவித்து, வினைகளைக் கழிக்க உதவுவதோடு, மேலும் அனுகிரக நல்வரங்களையும், அளப்பரிய ஆன்ம சக்தியையும் நவகிரக மூர்த்திகள் அளிக்கின்றார்கள்.
உதாரணமாக, சில கர்ம வினைகளால் நான்கு நாட்களுக்கு ஒருவர் வயிற்று பேதியால் அவதிப்படுதல் வேண்டும் என்று விதிப் பூர்வமாக கர்ம வினை அழுத்தம் அமையும்போது, அவர் உடல் களைப்பு, பலவீனத்தையும் கடந்து நான்கு நாட்களிலும் நன்கு உழைத்து அன்னதானம் போன்ற தியாகமய சமுதாய இறைப்பணியில் ஈடுபடும் போது, வயிற்று பேதித் துன்பங்களின் தன்மைகள் தணிகின்றன.
மேலும், பிற ஜீவன்களின் வயிற்றுப் பசியினைத் தீர்ப்பதற்கான அற்புதத் தியாகப் பணி என்பதால், அவருக்கும் தமக்கென வரவிருக்கும் எதிர் வருகின்ற துன்பங்களின் சுமைகளைக் கழிப்பதற்கும் இது உதவுகின்றது. இவையெல்லாம் உண்மையான இறைப் பகுத்தறிவால் மட்டுமே உணரப் பெற வல்ல, சூட்சுமமான இறைத் திருவிளையாடலாகும்.
சனிப் பெயர்ச்சி வழிபாடாக இங்கு அளிக்கப்படும் பூஜை முறைகளை மற்ற கிரக பெயர்ச்சிக்கும் தேவைக்கேற்ப மாற்றி அமைத்து பயன்பெறும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்ந்து செல்லும்போது அந்த தற்போது இருக்கும் ராசிக் காலத்திலும் அடுத்த ராசிக்கு நகர்ந்து செல்லும் நேரத்திலும், ஆக இருவித ராசி நிலைகளிலும் வழிபாடுகளை மேற்கொள்வதே சிறப்பாகும்.
உதாரணமாக சனிப் பெயர்ச்சியை வழிபடும்போது ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியின் படத்தை இல்லத்தில் வைத்து தாராளமாக வழிபட்டிடலாம். சனிப் பெயர்ச்சி நாட்களில் உங்கள் பூஜை அறையில் ஒரு மாம்பலகையின் மேல் அல்லது வாழை இலை அல்லது தாம்பாளத்தில் ஜாதகக் கட்டம் போல் 12 ராசிகளை வரைந்து, பஞ்சாங்கத்தில் உள்ளபடி ராசிக் கட்டத்தில் அந்தந்த கிரகத்தின் பெயரைக் குறித்திட வேண்டும்.
சனீஸ்வர மூர்த்தி இருக்கும் (கிரகப் பெயர்ச்சிக்கு முன் உள்ள) ராசிக் கட்டத்தில் 24 எள் உருண்டைகளை வைத்து, ராசிக் கட்டத்தின் நடுவில், “சனிக் கிரகச் சலனம் சத்குணாதி நன்மை தருவதாக!” என எழுதி, இதனைக் காலச் சக்கர யந்திரமாகப் பாவனை செய்து, மஞ்சள், குங்குமம், சந்தனம், மலர்களால் அலங்கரித்து, சாஷ்டாங்கமாக எட்டு முறை கீழே விழுந்து வணங்கிட வேண்டும். ஒரு வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைத்து, 12 மங்குஸ்தான் பழங்களை வைத்து, இவற்றைச் சனி கிரக தேவதா மூர்த்திகளாகப் பாவனை செய்து,
விநாயகர் பூஜை செய்து, எள் மணிகள், சங்கு புஷ்பத்தால் மங்குஸ்தான் பழங்களை அர்ச்சிக்க வேண்டும். பிறகு எள் சாதம் படைத்து, அன்னதானம் செய்திட வேண்டும்.
“ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நஸ் சனைஸ்சர ப்ரசோதயாத்”
என்ற சனீஸ்வர காயத்ரீ மந்திரத்தை ஆயிரம் முறையேனும் ஓதி ஜபிக்க வேண்டும்.
சனீஸ்வரர் தனித்து அருளும் சன்னதிகளில், திராட்சை, ஜம்பு நாவல் பழ மாலை சார்த்தி, கருப்பு, கரு நீல நிற ஆடைகளைத் தானமளிப்பதாலும், கும்பகோணம் அருகே சோழபுரத்தில், சனீஸ்வரரே பூஜிக்கும் லிங்கத்திற்கும் சனீஸ்வரருக்கும் 21 விதமான அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுதலால், சனி கிரகச் சலன மாற்றங்கள் நன்முறையில் அமைய வழி பிறக்கும்.
மறுநாள் விடியற் காலை முதல் நாள் பூஜையின் தொடர்ச்சியாக, சனீஸ்வரப் பூஜையைத் தொடர்தல் வேண்டும். பூஜை நிறைவாக ஊனமுற்றோர்க்கு சக்கர வண்டியைத் தானமாக அளித்தலால், சொத்தில் நெடுங்காலமாக உள்ள வழக்கு, பகைமை தீர உதவும்.

பானு சப்தமி

ஞாயிறன்று சப்தமி பரிணமிப்பதே பானு சப்தமியாகும்.
சூரிய பூஜையில், குறிப்பாக சப்தமித் திரிதினப் பூஜையில் வல்லவளாக விளங்கி, துரியோனனின் கரங்களில் மிளிர்ந்த தன ரேகையை நாட்டுக்கு நன்முறையில் நன்கு பயன்படச் செய்ய உதவியவளே துரியோதனின் மனைவியான பானுமதி தேவி ஆவாள். பானு வழிபட்ட தலங்களுள் ஒன்றே திருச்சி அருகே துடையூர் ஆலயமாகும். ஞாயிறு, சப்தமித் தோறும் இங்கு சூரிய மூர்த்தியை வழிபடுதலால் தந்தை - பிள்ளை இடையே உள்ள மனக் கசப்புகள் அகல உதவும்.
சூரிய நட்சத்திரமான கிருத்திகையும், ஞாயிறன்று திரிதின சப்தமியோடு கூடி வருவது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருகின்ற பல்லாயிர ஞாயிற்றம்பலத் திருநாளாகும். இதன் பலாபலன்களைப் பெற்றிட சூரிய மூர்த்தி, சூரியக் குடும்பமாக, தம் பத்னி தேவியருடனும், சனீஸ்வரருடன் சேர்ந்து அருளும் பொன்னமராவதி சிவாலயத்தில் பூஜித்திட வேண்டும். பெற்றோர்களுடன் விரோதம் பூண்டுள்ள பிள்ளைகள், பெண்கள் நன்கு சுமுகமாகிட, இங்கு ஞாயிறு தோறும் சூரியக் குடும்ப பூஜைகளை நிகழ்த்தி சூரிய கிரகத்திற்கு உரிய ஆரஞ்சு நிற கோதுமை அல்வா தானம் செய்து வர வேண்டும்.

பரிதிநியமம் சிவாலயம்

சூரிய, சந்திர மூர்த்திகளின் சாட்சியாகவே பூலோக நிகழ்ச்சிகள் யாவும் அமைவதால், மனிதர்களுடைய தவறான பாவச் செயல்களின் தோய்வாலும் சூரியக் கிரணங்கள் மாசடைகின்றன. மனிதர்களின் பல பாவ வினைகளால் மாசடையும் சூரியக் கிரணங்களைச் சுத்திகரிக்க, மனிதக் குலக் கடமையாக, சூரியக் கிரணங்கள் லிங்கத்தின் மேல் படியும் தலங்களில் பல்வகைப் பூஜைகளை, பானு சப்தமி, ஞாயிற்றுக் கிழமைகளில் விசேஷமானதாகக் கடைபிடிக்க வேண்டும்.

ஸ்ரீசூரியகோடிப் பிரகாசர்
கீழ்சூரியமூலை

சூரியக் கிரணங்களுக்கு லட்சுமிக் கடாட்சம் தந்து புனிதம் பெற்றிட உதவியவர்களே வாலகில்ய மகரிஷிகள் ஆவர். பிரம்ம கடாட்சம், சிவ கடாட்சம், நாராயண கடாட்சம், சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம் போன்ற பலவிதமான கடாட்சங்களும் சப்தமித் திதியில் சூரிய ஒளியில் நன்கு நிறைவதால், சப்தமித் திதி நாளில், சென்னை அருகே உள்ள ஞாயிறு, கரூர் அருகே வாங்கல், பட்டுக்கோட்டை அருகே பரிதிநியமம், கும்பகோணம் திரைலோக்கி அருகே கீழ்சூரிய மூலை போன்ற சூரியத் தலங்களில், சூரியனை விமரிசையாகப் பூஜித்திடுவதால் பல்வகை நல்வரங்கள் கூடி வரும்.
ஞாயிறு சிவாலயப் பூஜை கண் நோய்களுக்கு நல்ல நிவர்த்திகளைத் தருவதாகும்.
ஞாயிறு மற்றும் பிரதோஷ நாளில் ஆற்றும் கீழ்சூரிய மூலைத் தல சிவாலய பூஜையால், சொத்தை வைத்துப் பெற்ற கடன்கள் நிவர்த்தியாக வழி உண்டாகும்.

ஸ்ரீகோடிசூரியப் பிரகாசர்
பயரி

துர்க்கை கடாட்சம், சக்தி கடாட்சம், அர்தநாரீஸ்வர கடாட்சம் போன்ற ஏழுவிதமான வர சக்திக் கடாட்சம் பெற்றிட சூரிய மூர்த்தியும் சப்தமித் திதி தோறும் சப்தமாதர்களைப் பூஜிக்கின்றார். எனவே மக்களுக்கும் சப்தமித் திதியில் சப்தமாதர் பூஜை மிகவும் முக்கியமானதாகும். சப்த மாதர்களையும் பானு சப்தமி அன்று ஏழு வண்ண ஆடைகளால் அலங்கரித்து, ஏழுவிதமான புஷ்பங்களால் அர்ச்சித்து வழிபடுவதால் இல்லத்தில், மனதை நெருடிக் கொண்டிருக்கும் துயர சம்பவத் தீவினைகள் தணிந்திட நன்கு உதவும்.
லிங்க மூர்த்தியின் மேல் சூரிய கிரணங்கள் படுவதான, சூரியன் பூஜித்த ஏழு லிங்க மூர்த்திகளை பூஜித்து வழிபடுவதால், பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கும் பிதுரார்ஜிதச் சொத்து நன்கு பயன்பட உதவும்.
தந்தை வகைச் சொத்தை அனுபவிப்போர், நன்முறையில் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தாவிடில், பித்ரு கடன்கள் பெருகி நிலத்தை, வீட்டை விற்க வேண்டிய நிலை வராமல் தற்காத்துக் கொள்ள சப்தமித் திதி மற்றும் ஞாயிறன்று சூரிய பூஜைகளை, குறிப்பாக, கும்பகோணம் அருகே பயரி ஸ்ரீகோடி சூரியப்ரகாச லிங்கச் சிவாலயத்தில் பூஜைகளை ஆற்றி வர வேண்டும்.
இவ்வாறு பானு சப்தமி தினங்களில் சூரியக் குடும்பம் உள்ள தலத்தில் வழிபடுவதால்,
1. பெற்றோர்களுடன் முரண்பாடுகள் கொண்டுள்ள பிள்ளைகள், நன்கு சுமூகமாக உரையாடிட உதவும்.
2. பிள்ளையின் மேல், மனைவியின் மேல் நம்பிக்கை இல்லாதோர் நன்னம்பிக்கையைப் பெற வழி பிறக்கும்.
3. திருமணத்திற்குப் பின் பிள்ளையிடம் ஏற்படுகின்ற மாறுதல்களால் மனக் கசப்பு அடைந்துள்ள பெற்றோர்களின் மனக் குமுறல்கள் தீர வழி உண்டாகும்.

முழுமையான செவ்வாய் தோஷ பரிகாரங்கள்

சுபமுகூர்த்த விசேஷங்களைப் பலரும் செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் வைப்பது கிடையாது. ஆனால் செவ்வாய்க்குத் தான் மங்கள வாரம் என்று பெயர் அதிசயமாக, அற்புதமாக அமைந்து இருக்கின்றது. “செவ்வாயோ வெறும் வாயோ” என்ற (தவறான) வழக்கைக் கருத்தில் கொண்டு, பலரும் செவ்வாயைத் தவிர்த்து விடுவார்கள். ஆனால், வாரத்தில் மற்ற ஆறு நாட்களை விட, அற்புதமான சுப மங்கள சக்திகள் ஊறிப் பூரிக்கும் வகையில் செவ்வாய் மண்டலத்தில் இருந்து மங்களாக்னி எனப்படும் சுபமங்கள தீப சக்திகளுடன் தோன்றி வருவதே செவ்வாய்க் கிழமை!
செவ்வாய்க் கிழமையை நமக்குப் பெற்றுத் தந்தவர்களே அங்காரக லோகத்தைச் சார்ந்த த்ரய சுத மஹரிஷிகளான அங்கவ மஹரிஷி, மங்கள மஹரிஷி, மாங்கல்ய மஹரிஷி ஆவர். இதில் அங்கவ மஹரிஷி தினமும் ஓங்காரம் ஜபித்தவாறே செவ்வாய் ஹோரையில் நட்சத்திர வடிவில் திருஅண்ணாமலையில் தம் 10000 சிஷ்யர்களுடன் அருணாசல கிரிவலம் வருகின்றார். இந்த நட்சத்திர வடிவம் மலையின் கிழக்கிலிருந்து மேற்கில் நகர்வதைத் திருஅண்ணாமலை உச்சியில் இன்றும் கண்டு தரிசித்திடலாம்.
எனவே ஒவ்வொருவரும், தம் வாழ்க்கையில் தவறாது வாரந்தோறும் வரும் மங்கள வாரமான செவ்வாய்க் கிழமை நாட்களை எவ்வாறு நன்கு பயன்படுத்திக் கொள்வது என அறிதல் வேண்டும்தானே!
மங்கள மஹரிஷி, மாங்கல்ய மஹரிஷி இருவருமே திருச்சி - திருமாந்துறை - பச்சாம்பேட்டை அருகில் இடையாற்று மங்கலம் ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் (ஸ்ரீமங்களேஸ்வரர்) ஆலயத்தில் தினமும் செவ்வாய் ஹோரை நேரத்திலும், செவ்வாய் தோறுமாக, மானுட வடிவில் ஓங்கார சாதனைகளுடன் பூஜித்து வருகின்றனர்.

மங்களத்தின் பரிபூரண வடிவே ஓங்காரமாம். நாம் அறிந்துள்ளது ஓங்காரத்தின் ஒரு வடிவே! ஆதி மூல ஓங்காரம் தோன்றிய ஓங்கார ச்ருங்கம் அருணாசலமாம் திருஅண்ணாமலையிலும் சத்யசிவசக்தி பூஷண ஓங்கார வடிவு திருக்கயிலாயத்திலும், ஓங்கார சிவப்ரகாரம் திருவிடைமருதூரிலும், ஓங்கார ஸ்கந்தப்ரகாரம் திருச்சி - உய்யக் கொண்டான் மலையிலும், ஓங்கார லிங்க வடிவு ஓங்காரேஸ்வரர் கோயிலிலும் உள்ளன.
செவ்வாய் கிரகத்தில் தோன்றிய மங்கள மஹரிஷி, மாங்கல்ய மஹரிஷி இருவருமே செவ்வாய் தோஷப் பரிஹாரங்களை முழுமையாகத் தர வல்லவர்கள்!
மங்களவாரம் என்று பெயர் பெற்றதும் செவ்வாய் கிரகத்திற்கான அதிபதியாக விளங்கும் முருகப் பெருமானுக்கு உகந்ததுமான, செவ்வாய்க் கிழமையில்தாம், மங்களத்தைத் தரும் பூஜா பலன்கள் நன்கு பல்கிப் பெருகி விருத்தி ஆகின்றன. எத்தகைய துன்பங்களையும் தீர்க்க வல்ல சுபமங்கள சக்திகளைத் தர வல்லது செவ்வாய்க் கிழமையில் அமையும் ராகு கால பூஜை தானே!
செவ்வாய் தன் நட்பு ராசியான சிம்ம ராசியில் ஆவணி மாதத்தில் வக்ர நிவர்த்தி கொள்ளும்போது மிகவும் அற்புதமான சக்தி வாய்ந்த மங்கள சக்திகளை பொழிகின்றார். மாங்கல்ய தோஷங்களையும், கணவனுக்கு ஏற்பட்டுள்ள ஆயுள் பங்க சாரத்தையும், புத்தி பல பூஜைகளால் நிவர்த்தி செய்ய, இந்த மூன்று கிரக சங்கம நாளின் மங்கள வார பூஜை மிகவும் உதவும்.
பொதுவாக நோய் நிவர்த்திக்கான மருந்துகளை உட்கொள்தல், வாஸ்து பூஜைகளுக்கு செவ்வாய் மிகவும் ஏற்றது. சுப மங்கள காரியங்களைச் செவ்வாயில் பலரும் நிகழ்த்திக் கொள்ளாவிடினும், மங்கள வாரம் எனப் பெயர் பூஜைக் காரணம் என்ன?
அக்னிக் கோளமாகத் துலங்குவதே செவ்வாய் கிரகமாகும் என நாமறிவாம் தானே! சூரியனும் நெருப்புக் கோளம் எனினும், செவ்வாயின் அக்னித் தன்மைகள் பெரிதும் வித்யாசம் பூண்டவை.
ஜீவ சக்திகளை அளிப்பது சூரியன்.
ஜீவாமிர்த சக்திகளை அளிப்பது சந்திரன்.
ஜீவ மங்கள சக்தியைத் தருவது செவ்வாய்.
எனவே மங்களம் பொங்கும் சக்திகளை நன்கு ஸ்புடம் போட்டதாய்ப் புனிதத்துடன் அளிப்பதே மங்கள வாரமாகும். அதாவது செவ்வாயன்று சுபமங்கள சக்திகள் தோற்றம் நன்கு பரிபூரணித்துத் தோற்றம் பெறுகின்றன. இவைதாம் சுப முர்த்த நாட்களான திங்கள், புதன், வியாழன், வெள்ளிகளில் சுபமங்களப் புஷ்பா சாரமாக மலர்கின்றன. நன்முறையில் செவ்வாய் தோறும் விரதமிருந்து கௌரீயாம் பார்வதி அம்பிகையைச் செம்பில் ஆவாஹனம் செய்து வழிபடுதல் வேண்டும். கலச வடிவிலும், செவ்வாய்க் கிழமை பூஜை அம்சங்கள், வாழ்க்கையில் சுபமங்கள சக்திகளை நன்கு விருத்தி செய்து தருவதாகும்.
செவ்வாய்க் கிழமை அன்று அமைவதே சுப மங்கள கௌரீ விரதம். இதனைச் செவ்வாயில் தொடங்கி மூன்று/ஆறு/ஒன்பதாம் செவ்வாயில் நிறைவு செய்வது நல்ல சிறப்பான மங்கள சக்திகளைத் தருவதாகும். குறிப்பாக, புகுந்த வீட்டில், அகங்காரங் கொண்ட பெண்களின் ஏச்சு, பேச்சுக்களால் அவதியுறும் பெண்மணிகளின் வேதனைகள் தணிந்து நலம் பெற இது உதவும்.

ஸ்ரீகுங்குமசௌந்தரி உடனாய ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருத்தலம் திருத்தலையூர்

விரத முறை அறியாதோர் ஆலயங்களில் புதுக் கலசச் செம்புகளை அளித்து, உண்ண நோன்பு இருந்து, மாலையில் கோமுகத் தீர்த்தம், ஆலயத் தீர்த்தம், கலசத் தீர்த்தம் பெற்று, புன்னை, கொன்றை, வேம்பு போன்ற (தல) விருட்சங்களுக்கு மாங்கல்யச் சரடு அணிவித்திட, விரதம் பூரணமாகும். இது மகத்தான சுபமங்கள சக்திகளைத் தரும் ஒரு வகை விரத பூஜையாகும்.
(கும்பகோணம்) ஸ்ரீமங்களாம்பிகை ,
(இடையாற்று மங்கலம்) ஸ்ரீமாங்கல்யேஸ்வரி,
திருச்சி - லால்குடி அருகே பூவாளூர் ஸ்ரீகுங்குமசௌந்தரி,
கும்பகோணம் அருகே உமையாள்புரம் ஸ்ரீகுங்கும சுந்தரி,
சென்னை - வேலூர் இடையே காவேரிப்பாக்கம் குங்குமவல்லி
முசிறி அருகே திருத்தலையூர் ஸ்ரீகுங்குமசௌந்தரி
காவேரிப்பாக்கம் அருகே திருப்பாற்கடல் நிறைவளையாம்பிகை
- போன்ற மங்கள சக்தி நாமங்களை உடைய அம்பிகையரின் சந்நிதிகளில், அல்லது உள்ளூர் ஆலய அம்பிகை சன்னதியில், சூரிய உதய நேரத்தில், அம்பிகையின் திருவடிகளில் மஞ்சள் காப்புக் கயிறுகளைச் சார்த்திப் பிரசாதமாகப் பெற்று வீட்டிற்கு வந்து, இல்லத்தில் கலசத்திற்கு மாங்கல்யச் சரடு சார்த்தி, இல்லத்தில் பூஜித்து, மாலையில், ஆலயத்தில் கணவன், மனைவி குடும்ப சகிதம் வழிபட்டு இல்லத்திற்கு வந்து மஞ்சள் கயிறுகளை மணிக் கட்டுகளில் கட்டிக் கொண்டு விரத நிறைவு செய்திட, குடும்பத்தில் அபாரமான முறையில் நல்ல ஒற்றுமை பெருகும்.
தொழில், அலுவல், பணி பிற காரணங்களால் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கும் கணவனுடன் குடும்பம் ஒன்றாய் வாழ உதவும் மிகவும் சக்தி வாய்ந்த பூஜை இது!
கணவன், மனைவியின் மணிக் கட்டுகளில் எப்போதும் மங்கள கௌரீ கயிறு இருத்தல் நல்ல ரட்சா சக்திகளைத் தருவதாகும்.
இவ்வாறு செவ்வாய் தோறும் எளிமையாக, அவரவர் வசதிக்கு ஏற்ப, உண்மையாக விரதமிருந்து,
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே
சரண்யே த்ரயம்பகே கௌரீ நாராயணி நமோஸ்துதே!
சர்வ மங்களம், சாதன மங்களம்,
சத்திய மங்களம் சாம்பவீ மங்களம்
யாவர்க்கும் யாவைக்கும் யாங்கணும் மங்களம்
யாதேவீ பூதேவீ யாமினீ மங்களம்
உமையவள், ஓங்குயர் ஒப்பிலா மங்களம்
உருபதத் திருவடி ஓதிய மங்களம்
மங்களம், மங்களம், மங்களம், மங்களம்,
மங்களம், மங்களம், மங்களம், மங்களம்!
என்று நாள் முழுதும் ஓதுதல் வேண்டும்.

இவ்வாறு செவ்வாய்க்கான மங்கள வார பூஜை ஆற்றியே, பார்வதி தேவீ கேதார்நாத்தில் கௌரீ அவதாரம் பெற்றாள்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam