முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கை ராசியைப் பெருக்குவது எப்படி ?

அஸ்வினி மருத்துவ தேவதைகளைப் பற்றிப் பலரும் அறியார். பிரம்ம சந்தானங்களான இவர்கள் செவ்வாய் மற்றும் அஸ்வினி போன்ற மருத்துவ சக்தி நாட்களில் பூமியில் மருத்துவ சக்தித் தலங்களில் ஒளி, தீபம், நெருப்பு சம்பந்தமான அக்னிப் பொருட்களில் மருத்துவ சக்திகளை நிரவுகின்றனர். மருத்துவர்கள் செவ்வாய் தோறும் கருட மந்திரம் ஓதி அரசு, ஆல், வேம்பு, மகிழ மரங்களைப் பிரதட்சிணம் செய்து வர, மருத்துவ சக்திகள் மேம்படும். கைராசியும் விருத்தி ஆகும்.
அஸ்வினி மருத்துவ தேவ மூர்த்திகள் திருவிடைமருதூர் அருகே மருத்துவக்குடி ஆலயத்தில் தூல, சூக்கும, காரண வடிவுகளில் பூஜிக்கின்றனர்.

ஸ்ரீஒளியுல்லா சுவாமிகள் ஜீவாலயம்
துவரங்குறிச்சி

இந்தப் புனித பூமியில் தச மூலங்கள் எனப்படும் பத்து வகையான ஆதார மூல மருந்து திரவியங்கள் உண்டு. பொதுவாக, எந்த மருத்துவப் பொருளும் செவ்வாய்க்கு உரிய எண்ணான ஒன்பது திரவியங்களால் ஆக்கப் பெற்று நீர், தேன், திராட்சை போன்ற கனிச்சாறு போன்றதுடன் பத்தாவதாக தசமூலமாகப் பத்து ஆக்கப்படும். பத்து என்றால் நிறைவு பெறுதல் என்று பொருள். தசாவதரங்களிலும் அந்தந்த யுகத்திற்கு ஏற்பச் சில வகைகள் உண்டு. தசமூல நாராயண மூர்த்தியாக மருத்துவ சக்திகள் நிறைந்த ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியை, நிறைவாக வைப்பார்கள்.
தசமியும், செவ்வாயும் சேரும் நாட்களில் தசமூல மருத்துவ குண சக்திகளை நன்கு விருத்தியாக்கும். டாக்டர்கள் அனைவரும் செவ்வாய் தோறும் நிறைய மருத்துவ தேவ பூஜைகளை ஆற்றி, மருத்துவ மேன்மையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். ஸ்ரீதன்வந்த்ரீ, ஸ்ரீவைதீஸ்வரர், ஸ்ரீவைத்யநாதர் மூர்த்திகளுக்கான பூஜைகளை ஆற்றிப் பிறகு டானிக்குகள், ஹார்லிக்ஸ் போன்றவற்றை ஏழை கர்ப்பிணிகளுக்கு, உடல் நோஞ்சானாக உள்ள குழந்தைகளுக்கு அளித்திடுதல் மிகவும் விசேஷமானது. இதனால் மருத்துவத் துறை அறிவு விசாலமாகும்.
ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி வாழும் தாவரங்கள், விலங்கினங்களின் நல்ல ஆரோக்யமான வாழ்விற்காகவும் இயன்ற மருத்துவ சேவைகளை ஆற்றிட வேண்டும். மாதம் ஒரு முறையாவது கிராமப் பகுதிகளுக்குச் சென்று நோயுற்றுள்ள ஆடு, மாடு, பசு, கழுதை, குதிரைகளுக்குத் தேவையான மருந்துகளையும், புல், தழை, வைக்கோல், புண்ணாக்கையும் தந்து சேவையாற்றிட வேண்டும். இவ்வகையில் மருத்துவர்களும் நல்ல மருத்துவ குண சக்திகளைப் பெற்றிடலாம்.
ஏனையோர் மருந்துகளை உடல் நாளங்கள் ஏற்று, நோய்த் தற்காப்பு சக்தி, நோய் நிவாரண சக்திகளைப் பெறவும் சில மூல காரண கர்ம வினைகளைக் கழித்தாக வேண்டும். இதற்கும் செவ்வாய்க் கிழமை அன்று கண்டிப்பாக ஓரிரு எளிய பூஜைகளை ஆற்றி வர வேண்டும்.
செவ்வாய் தோறும் ஸ்ரீதன்வந்த்ரீ காயத்ரீ மந்திரத்தை 1008 முறை ஓதிய பின், ஸ்ரீவைத்யநாதரை, ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியைத் தரிசித்த பின் உணவேற்பது, சிகப்பு நிற ஆடைகளைத் தானமளித்தல், ஆடுகளுக்கு (செவ்வாய் மூர்த்தியின் வாகனம்) உணவளித்தல், கடுமையான நோய்களால் வாடும் ஏழைக்கு மூன்று வேளைக்கான உணவளித்தல், கடுமையான உடலுழைப்பை நல்கும் ரிக்ஷாக்காரர்கள், கொல்லுப் பட்டறைத் தொழிலாளர்களுக்கு சக்தி மிகுந்த கஞ்சி மாவு, ஹார்லிக்ஸ் போன்ற ஊட்டச் சத்துத் திரவியங்கள், முளை விட்ட பயறு தானியக் கலவை, பை நிறையக் கொத்துக் கடலைச் சுண்டல் அளித்தல் போன்ற பணிகளை ஆற்றுதலும் பூஜையோடு சேர்ந்து நற்பயனளிக்கும்.
அனுஷ நட்சத்திரம் பல சுப சக்திகளைக் கொண்டது. செவ்வாயோடு சேரும் அனுஷம் மனதை நெருடும் சம்பவங்களின் விளைவுகளைத் தணிக்க அருள் தருவதாம். செவ்வாய் கூடிய அனுஷத்தில் மஹான்களின் தரிசனம், மஹான்களின் ஜீவசமாதி தரிசனம் மனம், உள்ளத்திற்கு நற்சுகம் அளிக்க வல்லதாம். இந்நாளில் ஆடுகளைக் கூட்டமாகத் தரிசித்தல் நல்ல சகுனமாகும்.

மணமான மண வாழ்க்கை

(செவ்வாய் + அனுஷம் + தசமி), (புதன் + ஏகாதசி + கேட்டை + சித்தயோகம்) என்றவாறாக யோகம், நட்சத்திரம், கிழமை, திதி, நாள் போன்ற பல கால அம்சங்கள் தினமும் மாறி மாறிக் கலந்து வருகின்றன அல்லவா! இவை கூடும் தன்மைகளை வைத்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட கணிதப் பூர்வமான நாள் தன்மைகள் கலியுகத்திற்கென அமைகின்றன. இவற்றை எல்லாம் தொகுத்து, அந்தந்த நாளின் சிறப்புத் தன்மைகளை தீர்க தரிசனமாக அளிப்பதென்றால் என்னே காலபைரவ, சரஸ்வதி கடாட்சத்தால் ஏற்படுவது இந்த மஹாத்மியம்! இவற்றின் முழுத் தாத்பர்யங்களை அறிந்தவர்களே காலபைரவ லோகத்துச் சித்தர்கள் ஆவர்.
எனவே ஒவ்வொரு நாளும் விதவிதமான தெய்வீக சக்திகளைப் பூண்டுள்ளது என்பது புலனாகின்றது அல்லவா! இவை தவிர, விண்வெளியில் ஒவ்வொரு நாளிலும் நட்சத்திரப் பிரகாசத் தன்மைகள் மாறுபடுவதும் உண்டு. இவ்வாறு நட்சத்திர, கோளங்கள் கொள்ளும் நாளின் தன்மைகளை வராஹமிஹிரர் வாய்வழி உபதேசமாகக் குறித்த பலருக்கு உரைத்துள்ளார். இவை நட்சத்திர ப்ரகாசப் பஞ்சாங்கமாக வருங்காலத்தில் சிறப்படையும்.
பொதுவாக, தெய்வீகத்திலும் ஒவ்வொருவருக்கும் தினமும் பல ஆன்மீகப் பாடங்கள் உணர்த்தப் பெறுகின்றன. நல்லதோ, நல்லது அல்லாதனவோ அனைத்தும் காரணங்களுடனேயே நிகழ்கின்றன. ஆனால் இவற்றை உணர வல்ல ஆறாம் பகுத்தறிவை மனிதன் சரிவர இயக்குவதில்லை!

திருவீழிமிழலை

25 வருடத் திருமண வாழ்வை ஒரு தம்பதியர் சிறப்பாக நிறைவுறச் செய்கையில், ஓர் உத்தமப் புனிதப் பாடம், தக்க பூபால பரிபாலன சக்திகளுடன் அனைத்துத் தம்பதிகளுக்கும் உணர்த்தப் பெறுகின்றது. இதுவே “வரபூஜித சக்தியாக” மலர்ந்து கிட்டுவதாகும். ஆனால், டிரான்ஸ்பர், வேலை மாற்றம் என்றில்லாமல், குடும்பத்தோடு கணவன், மனைவி, குழந்தைகளுடன் சேர்ந்து வாழ்ந்து அமைவதான இந்த 25 வருட மண வாழ்க்கையில் திரளும் வரபூஜித சக்திகளை, தம்பதிகள், ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர், ஸ்ரீநித்ய கல்யாணி, ஸ்ரீதிருமணங்கீசர், ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீமாப்பிள்ளைச் சாமி என்ற நாமம் பூண்டு இறைவன், இறைவி அருளும் தலங்களில் அர்ப்பணிக்க வேண்டும்.
25 ஆண்டுகள் நிறைவேறியவுடன் இத்தலங்களில் 25 மாம்பழங்கள், 25 வாழைப் பழங்கள், 25 (தேனில் ஊறிய) பலாச் சுளைகளைச் சுவாமிக்குப் படைத்து, தேனபிஷேகம் செய்து, 25 ஏழைத் தம்பதிகளுக்கு 25 விதமான மங்களப் பொருட்களைத் தானமாக அளித்திட வேண்டும். சுவாமிக்கு வெள்ளிப் பட்டயத்தை வெள்ளிக் கம்பியில் கோர்த்து, 25 வருடத் திருமண வாழ்க்கையின் நல்வரங்களை ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரரிடம் அர்ப்பணிப்பதால், வரபூஜித சக்திகள் பன்மடங்கு விருத்தியாகி, மஹா வரபூஜித சக்திகளாக விருத்தி அடைகின்றன.
25 வருட மண வாழ்க்கையில் வரபூஜித சக்திகள் விருத்தியாகி உள்ளன என்பதை எவ்வாறு அறிவது? 25 வருடத் திருமண வாழ்விற்குப் பிறகு, கணவன் எண்ணுகின்றதை மனைவி முடித்து வைத்தல், இருவருக்கும் ஒரே விதமான கருத்துகள் எழுதல், மனைவியின் எண்ணத்திற்கேற்பக் கணவன் தீர்க தரிசனமாக நடந்து கொள்தல், மாதவிலக்கு, நோய்களால் பாதிக்கப்படாது பண்டிகைகளைக் கொண்டாடுதல், நற்பண்புகளுடன் பிள்ளைகள் வளர்தல் - போன்றவை வரபூஜித சக்திகளின் மகிமையாகும். இதன் பிறகு, 30, 35, 40, 45, 50 ஆண்டுகளுக்கான விசேஷமான நல்வர பூஜித சக்திகள் திரளும்.

சித்துக்காடு பெருமாள் தலம்

மேலும் 25 ஆண்டுத் திருமண வாழ்விற்குப் பிறகு, தம்பதியர் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு முறையாவது, (திருஅண்ணாமலை, மதுரை அருகே மேலூர், கோனேரிராஜபுரம்) ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர், இன்னம்பூர், அம்பாசமுத்திரம் ஸ்ரீநித்ய கல்யாணி, (குத்தாலம், சென்னை மேலூர்) திருமணங்கீசர், திருவிடந்தை மற்றும் நேமம் ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள், திருவீழிமிழலை ஸ்ரீமாப்பிள்ளைச் சாமி - மூர்த்தி சன்னதிகளில் வழிபடுதல் வேண்டும்.
பொதுவாக, தம் வாழ்வில் பிறர் அறிந்தோ, அறியாமலோ பல தவறுகளைச் செய்த கணவன், 25 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகாவது, நல்ல பிராயச் சித்த வழிகளைப் பெறும் பாக்யம் கிடைத்திட, ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர், ஸ்ரீநித்ய கல்யாணி, திருமணங்கீசர், ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாள், ஸ்ரீமாப்பிள்ளைச் சாமி ஆலயங்களில் வழிபடுதல் நன்று.
இவர்கள் முதலில் தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வகை ஈடும் தர இயலாவிடில், தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் போல், வாழ்வில் பாதிப்புகளை அடைந்த குடும்பங்களுக்கு உதவிட வேண்டும். 25 வயதுத் திருமண வாழ்வில் இருந்தாவது நல்ல புத்தியை நிரந்தரமானதாக, நிறைபெறச் செய்து அடைய, வாரந்தோறும் புதன் கிழமையில், தனக்கு மிகவும் பிடித்தப் பொருட்களைத் தொடர்ந்து தானம் அளிக்க வேண்டும்.
துளசி - நெல்லித் திருமணம், வில்வம்-வேம்பு விருட்சத் திருமண வைபவங்களை சித்துக்காடு, கோயம்பேடு ஸ்ரீவைகுண்டப் பெருமாள், மணமேல்குடி போன்ற கோயில்களில் நிகழ்த்துதலால், திருமண வாழ்வு சிறப்படைவதுடன், பிள்ளைகள், பெண்களின் திருமணத் தடங்கல்களுக்குக் காரணமான பெற்றோர்களின் கர்ம வினைகள் கழியப் பரிகாரங்கள் கிட்டும்.

பெண்களுக்குப் பாதுகாப்பு

வியாழன் அன்று விளையும் பிரதோஷ நேரத்தில் அற்புதமான பலன்கள் கிட்டுகின்றன. எனவே இந்நாட்களில் காலையில் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, குரு பகவானின் பாதங்களுக்குக் குங்குமப் பூ, புனுகு அத்தர், பன்னீர் கலந்த (அரைத்த) சந்தனக் காப்பு இட்டு, வில்வம், முஞ்சிப் புல் மற்றும் தர்பை மாலைகளைச் சார்த்தி வழிபட்டு, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து மனைவி கையால் தர்பைகளைப் பெற்று, இடுப்பில் முஞ்சிப்புல் ஆரம் அணிந்து காலையில் தர்ப்பணம் அளித்திடுக!
தர்பை போலான மூன்று கற்றை முஞ்சிப் புல்லைத் திரித்து உருட்டி அரைஞாண் கயிறு போலாக்குவதே முஞ்சிப் புல்ஆரம் ஆகும்.
முஞ்சில் என்பது ஒரு வகையான புனிதப் புல். உபநயனமாகிய பூணூலின் போது சிறுவர்களுக்கு முஞ்சிற்புல் கொடியை இடுப்பில் கட்டி விடுவார்கள். வாமன அவதார விஷ்ணுவிற்குப் பூணூல் அணிவிக்கப் பட்டபோது, முஞ்சிகேச முனிவர் தலைமையில் ஏனைய மகரிஷிகளும் ஒன்று கூடி, வாமன மூர்த்திக்கு முஞ்சிப் புல் ஆரத்தை அணிவித்தார்கள். முஞ்சிகேச மகரிஷி மிகவும் விசேஷமாகக் கொண்டாடும் பிரதோஷமிது!

ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர்
உய்யக்கொண்டான்மலை திருச்சி

தூல வடிவில் இந்நாளில் முஞ்சிகேச மகரிஷி, சென்னை - அரக்கோணம் இடையே திருவள்ளூர் அருகே உள்ள திருவாலங்காடு ஆலயத்தில், பிரதோஷ பூஜையில் தேவ பூர்வமாகப் பங்கு கொள்கினறார். இத்தலத்தில் முஞ்சிகேச மகரிஷியின் தவக் கோலம் காணுதற்கரியது. சிறு பிள்ளைகள், மாணவர்கள் முஞ்சிப் புல் மாலை சார்த்தி, இவரைத் தரிசித்து இறைவனை வணங்குவதால் நல்ல ஞாபக சக்தி விருத்தியாகும்.
96 வகைத் தர்ப்பண நாட்களில் வைதிருதித் தர்ப்பண நாளானது, பிரதோஷம் கூடிய வியாழனில் வருவது மிகவும் விசேஷமானது. இந்நாளில்தாம் முஞ்சிகேச மகரிஷி தோன்றினார். பித்ருக்களுக்கு மிகவும் உவப்பானப் பிரதோஷ நன்னாள். இதனைப் “பித்ரு ப்ரகாசப் பிரதோஷம்” என்று சித்தர்கள் இதனைப் போற்றுகின்றனர்.
ஸ்ரீராம நாமத்தையே எப்போதும் முழு மூச்சாக ஓதி உறைந்து வரும் ஸ்ரீஆஞ்சநேயப் பிரபு, சிவ பூஜையில் உத்தம நிலைகளை அடைந்தார் எனப் பலரும் அறியார். லிங்கத்தைத் தன் திருமேனியில் சுமந்து வருகின்ற உத்தம நிலைத் தெய்வ மூர்த்தி! அனுமாரின் திருவதனத்தையே “லிங்கப் பிரபாசம்” என்று தெய்வ மூர்த்திகளே போற்றுமளவு சிவ பூஜையில் வல்லவர்.
மூலப் பிரதோஷம் மோட்சப் பிரதோஷம்
முக்திப் பிரதோஷம் முஞ்சிற் பிரதோஷம்
முத்தாழிப் பிரதோஷம் முற்றப் பிரதோஷம்
அத்தாழப் பிரதோஷமது! ஆஞ்சநேயப் பிரதோஷமாம்”
(முத்தாழி-மூன்று திரி முகங்களுடனான பெரிய அகல் தீபம் அத்தாழம் - பிரதோஷ பூஜையில் பங்கேற்ற உடன் ஸ்ரீஆஞ்சநேயர் தரிசித்த முதல் பெருமாள் மூர்த்தியே திருநெல்வேலி அருகே அத்தாழ நல்லூர்ப் பெருமாள்)
- என்பது சித்தர்களின் மூலநட்சத்திரப் பிரதோஷ வாக்கியச் சித்தத் துதியாகும்.


சத்திமுற்றம் சிவாலயம்

திருஅண்ணாமலையிலும் முஞ்சிற் புல் மூலாதார தரிசனம் என்ற ஒன்று உண்டு. இங்கு பூணூலின் பிரம்ம முடிச்சை இருதயத்திற்கு நேராக, வலது கைக்குள், வைத்து, வலது கையை இருதயம் போல் மடித்து வைத்து ஸ்ரீகாயத்ரீ ஜபம் ஆற்றுவோர்க்கு, இருதய நளங்கள் வலுப் பெறும். பாரம்பரிய நுரையீரல், இருதய நோய்கள் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம். மேலும் இருதயம் நன்கு வலுப் பெறும்.

முஞ்சிப்புல்

அருணாசல கிரிவலத்தில் உண்ணாமுலை மண்டபத்தை அடுத்துச் சற்று தூரத்தில் வலது புறத்தில் மூன்று முகடுகள் வரும். இது ஸ்ரீகாயத்ரீ த்ரய லிங்க தரிசனமாகும். இதன் கடைசிப் பகுதியே முடிமுஞ்சிற் புல் தரிசனமாகும். இங்கு முஞ்சிப் புல் மலைச் சாரத்தில் விளைகின்றது.
மூல நட்சத்திரப் பிரதோஷ நாளில், ஆஞ்சநேயரே இடுப்பிலும் மணிக் கட்டிலும் முஞ்சிற்புல் கங்கணம் கட்டிப் பூஜிப்பதால், அந்நாள் பிரதோஷத்தில் அனைத்து விதமான கங்கணங்களையும், இயன்றால் முஞ்சிற்புல் கங்கணத்தையும் சேர்த்து மணிக் கட்டுகளில் அணிந்து பிரதோஷ வழிபாடு ஆற்றுதல் மிகவும் சிறப்பானதாகும். இதனால் நாபிக்குக் கீழ்ப் பகுதியில் உடலில் ஏற்பட்டுள்ள நோய்களுக்குத் தக்க தீர்வுகள் கிட்டும்.
முற்றப் பிரதோஷம் என்பது சிவபுரம், நடராஜபுரம், சிவசிதம்பரம், சக்திமுற்றம் போன்ற சிவ சக்தி முற்றல் தலங்களில் ஆற்றப் பெறும் பிரதோஷ பூஜையாம். கும்பகோணம் - பட்டீஸ்வரம் அருகே சக்திமுற்றம் என்ற சிவத்தலம் உள்ளது. ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி மூல நட்சத்திர நாளில் வரும் பிரதோஷப் பூஜைகளை ஆற்றும் தலங்களில் ராமகிரி (ஆந்திரா), சுரட்டப் பள்ளி, ஆச்சாள்புரம், சக்திமுற்றம், மப்பேடு போன்றவையும் அடங்கும். எனவே, மூல நட்சத்திர பிரதோஷ நாளில் ஆஞ்சநேயர் (தூணிலாவது) அருளும் தலங்களில் பிரதோஷ பூஜைகளை ஆற்றுதலால் மிக, மிக ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாந்து நிற்கும் நற்காரியம் நிறைவேற நல்வழி பிறக்கும். ஆண் துணையின்றி அல்லல்படும் பெண்மணிகளுக்குத் தக்கக் காப்பு சக்திகள், ரட்சா சக்திகள் அளிக்க வல்ல பிரதோஷம்

பகைமையை விரட்டிடுங்கள்

கூடாநாளில் அனைத்து விதமான காரியங்களையும் ஒதுக்கி வைத்து விட்டு, விஷ்ணு சகஸ்ரநாமம், திருமால் துதிகளை நாள் முழுதும் ஓதி வழிபடுதல் வேண்டும் என்பதைப் பன்முறை அறிவுறுத்தி வந்துள்ளோம்.
தீய சக்திகள் என்றால் எங்கிருந்தோ திடீரென்று வந்து முளைப்பதல்ல. ஒவ்வொரு மனிதனும் கடந்த பல யுகப் பிறவிகளிலும், தற்போதும் செய்த, செய்து வருகின்ற அதர்மமான, பாபகரமான இழிச் செயல்கள், மனதில் எழுந்த தவறான எண்ணங்கள் இவற்றின் விளைவுகளே பரவெளியில், வானில், காற்றில் தீய சக்திகளாக நிரவி உள்ளன. எனவே பரவெளியின் புனிதத்தை மாசுபடுத்தியதில், தன்னுடைய பங்கான தவறுகளை, ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து, இனியேனும் நல்ல இறைவழிபாடுகள், சமுதாயச் சேவைகள் மூலம் நிவர்த்தி காண பாடுபடுதல் வேண்டும்.
கலியுகத்தில் இயந்திர கதியான வாழ்க்கையில், கூடாநாளில் ஆபீஸ், வேலைகள் இருக்குமே என்ன செய்வது? “நாராயணா, நாராயணா!” என்று கூடாநாள் அமையும் நேரம் முழுதும் ஓதிக் கொண்டே இருக்க வேண்டும். விடுமுறை எடுத்துக் கொண்டு ஸ்ரீமஹா விஷ்ணு பூஜைகளை ஆற்றிடுதல் மிகவும் உத்தமமானது. ஆனால் கிரிக்கெட், டிராமா, கேளிக்கைகள், சாதாரணத் தலைவலி, காய்ச்சல் என்று எதெதற்கோ லீவு எடுக்கும் போது, இதற்கு மனம் ஒப்புமா? கலியுகத்தில் ஆன்மீகம் என்றாலே கடைசியாக ஒதுக்கி வைக்கும் சுயநல அவல எண்ணம்தானே ஏற்படுகின்றது!

ஸ்ரீவிநாயக மூர்த்தி
திருப்பூவனூர் பெருமாள் தலம்

பெருமாள் ஆலயங்களில் உள்ள, நாமமிட்ட தும்பிக்கை ஆழ்வாராம் பிள்ளையாருக்கு, அபிஷேக ஆராதனை ஆற்றி, நீல நிறப் பட்டு வஸ்திரம் சார்த்திய பின்னரே உணவு உண்ணுதலும், “நாராயண நாமம்” ஓதி, நாள் முழுதும் நாராயண ஜபமும் ஆற்றுதலும் கூடா நாட்களில் தேவகடமையாகுதல் வேண்டும்.
பெருமாள் ஆலயங்களில், 12 ஆழ்வார்களுக்கும் புது வஸ்திரம், புஷ்பம் சார்த்தி,
“நாராயணதாச நானாவித ஆராதன,
பாராயண ஹரி நாம
பகவான் பரப்ரம்மம்!”
என்று 108 முறை ஓதி, ஒவ்வொரு ஆழ்வாரையும் சாஷ்டாங்கமாக விழுந்து பக்தியுடன் நமஸ்கரித்து, நாராயண தாசர்களின் பரமானந்த பகவத்பாத ஆசிகளைப் பெறுதல் வேண்டும். நாராயண ஆசிகளைப் பெற்றுத் தர வல்லவர்கள், ஆழ்வார்களைப் போன்ற உண்மையான, பக்திபூர்வமான நாராயண தாசர்களே!
நெற்றியில் நாமம் எப்போதும் இடும் நற்பழக்கம் பூண்டிருக்கும் மூன்று ஏழைகளுக்கு, கூடா நாட்களில் அவர்களுக்கு விருப்பமான உணவு வகைகளைச் செய்தோ, வாங்கிக் கொடுத்தோ பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத் தரும் அதிதிக் கைங்கரியத்தை நிறைவேற்ற வேண்டும். அவர்கள் எந்த உணவு வகையைக் கேட்டாலும் காசு, பணம், அசதி, அலைச்சல் பாராது செய்து அல்லது வாங்கிக் கொடுத்தல் மிகவும் சிறப்புடையது.
பொதுவாக பிரபலாரிஷ்ட யோகமும், சித்த யோகமும் சங்கமிக்கும் (சேரும்) நேரமே மித்ராமிர்த பூஷணக் காலமாகும். இச்சமயத்தில் எத்தகைய பகைமை உணர்வுகளும் தணிந்து பரிகாரம் கிட்டிட ஏதுவாகின்றது. எனவே சரியாக இந்த நேரத்தை அறிந்து, இதில் பெருமாள் மூர்த்திகளுக்குத் தேன் கலந்த பால் அபிஷேகம் அல்லது நைவேத்யம் செய்து, குழந்தைகளுக்கு அளித்தலால், அநாவசியமாகப் பிறரை, பெற்றோர்களை, மாமனார், மாமியாரைப் பேசி, ஏசிய பாவ வினைகள் காலைச் சுற்றிக் குடும்பத்தைத் தாக்காது காக்கப் பரிகார வழிகள் கிடைக்கப் பெறுவர்.
மனித வாழ்க்கையில் எவரையும் பகைத்து வாழ்தல் கூடாது. உள்ளூரவும் பகைமை கொண்டு, ஒருவரைக் கண்டு பயங்கர எரிச்சலுடன் வாழ்ந்திட்டால், அப்பகை ஜென்மாதி ஜென்மமாகத் தொடர்ந்து வந்து, ஒவ்வொரு பிறவியிலும் எதிர்க் கட்சியாக, எதிரியாக, எதிரி நாட்டுப் பிரஜையாக மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டியது இருக்கும். தற்போதைய கலியுக அரசியலில் அனைத்து நாடுகளிலும் இத்தகைய பகைமை வினைகள் பலத்துப் பெருகி உள்ளது மிகவும் வேதனை தருவதாகும்.

ஸ்ரீபூமிநாதர் ஸ்ரீநடராஜர் ஸ்ரீஅங்கவளநாயகி திருநல்லம் கோனேரிராஜபுரம்

எனவே ஒவ்வொருவர் வாழ்விலும் எப்படியோ, எப்படியோ பல வகைகளில் புகுந்துள்ள கடுமையான அசுர சக்தியான பகைமையை இப்பிறவியிலேயே களைதல் வேண்டும். இதற்காக, எத்தகைய பகைமை உணர்வுகளையும் களைய வல்லதான ஸ்ரீபாம்பன் சுவாமிகளின் பகை கடிதல் பதிகங்களைத் தினமும் ஓதி வருதல் வேண்டும். மித்ராமிர்த பூஷண நேரத்தில் பெருமாள் துதிகளுடன், இவற்றை ஓதி வர, மிருத்யுவாகிய பகைமையான தீய சக்திகளைத் தீர்க்க மிகவும் உதவும்.
ஒருவர் எவர் மீதும் பகைமை கொள்ளாவிடினும், பிறர் அவரை வெறுத்து எதிர்த்து வருவதும் உண்டு. இதுவும் ஒரு தலைப் பகைமையே! சமாதானத்துக்கு ஒருவர் தயாரானாலும், மற்றவர் முறுக்கிக் கொண்டு பகைமை பல்கிப் பெருகலாகும். இதுவும் பூர்வ ஜன்மப் பகைமையால் வருவதே. இதனை நிவர்த்தியாக்க உதவுவதே பிரபலாரிஷடமும், சித்தயோகமும் சங்கமிக்கும் ஒரு நாழிகை நேர மித்ராமிர்த பூஷணக் காலப் பூஜையாகும்.

கூடா நாளன்று நாள் முழுதும் ஸ்ரீநாராயண நாமம் ஓதி, மாலையில்  ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம மந்திரங்கள், பெருமாள் துதிகளை ஓதி, ஸ்ரீபாம்பன் சுவமிகளின் பகை கடிதல் மந்திரங்களுடன் நிறைவு செய்தலால், பகைமையைக் கடிந்து தீர்த்திட நல்வழி பிறக்கும். அர்ச்சனையின் ஒவ்வொரு வரிக்கும் ஒரு முழுக் கொத்துக்கடலையை வைத்து அர்ச்சிக்க வேண்டும். பிறகு கொத்துக் கடலைச் சுண்டல் செய்து அதை அப்படியே தானம் செய்திட வேண்டும். தான் அதைச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாது, அனைத்துச் சுண்டல்களையும் தியாகமயமாகத் தானமளிப்பதால், பகைமை உணர்வுகள் சிறிது சிறிதாகத் தணிந்து நல்லுறவும் உண்டாகும்.
பகைமையால் நாம் பெற்ற புண்யச் செல்வமும் வெகு வேகமாகக் கரைகின்றது என்பதை நன்கு உணரவும். ஒருவர் நம்மைத் திட்டிக் கொண்டே இருந்தால் அது நம்மை ஏவுகணையாகத் தாக்கிக் கொண்டே இருக்கும். எனவே பகைமையைக் களையும் கூடா நாட்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். காக்கும் கடவுளாம் பெருமாளை, கூடாநாளில், நம் மனித சமுதாயத்தைப் பகைமையில் இருந்து காக்கும்படி நன்கு தோத்தரித்து, ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம மந்திரங்களை, திருமால் துதிகளை (தமிழில் திவ்யப் பிரபந்தம்) தினமும் ஓதிப் பூஜித்திட, உற்றம், சுற்றத்தில், தொழில், அலுவலகத்தில், நட்பில் மிதந்து வதைக்கும் பகைமையைக் களைய மிகவும் உதவும்.

பூர்ண சந்திரன் தரும்
புண்ணிய சக்திகள்

கர்த்தமப் பிரஜாபதியான தட்சனின் சாபத்தால் பதினாறு கலைகளையும் இழந்த சந்திர மூர்த்தி, ஆதிசிவன் அருளால் கலைகள் வளர்வதும், மறைவதுமான அம்சங்களைப் பெற்றார். இதுவும் மகத்தான இறைலீலையே! இதனால் தாமே இயற்கைப் பூர்வமான, பூவுலகிற்கு உரித்தான ஜீவசக்திப் பூர்வமான அமாவாசை, பௌர்ணமித் திதிகள் தோன்றின. அதுகாறும் தேவபூர்வமான அமாவாசை, பௌர்ணமித் திதிகள் அமைந்திருந்தன.
இந்த தேவானுபூதி நிகழும் முன்னர், சந்திரன் நித்யப் பௌர்ணமிச் சந்திரராய், தினமுமே முழுச் சந்திரனாய்த் தோன்றினார். அப்போதைய ஜாதகப் பூர்வங்களில் நட்சத்திர அம்சங்கள் கிடையா!
இந்தப் புராண அனுபூதி நிகழ்வதற்கு முன், நித்தியப் பௌர்ணமியாகவே 16 கலைகளுடன் சந்திர மூர்த்தி பொழிகையில், பௌர்ணமி என்ற நாமத்வம் தோன்றாத ஆதிகாலமது! சந்திரனுக்கு எனத் தனி அமுததாகரண ஒளிக்களம் தோன்றிய பிறகே, அமாவாசை, பௌர்ணமித் திதிகள் தோன்றின.

ஸ்ரீபொய்யாமொழி ஈசர் கோயில்
திருக்கோளக்குடி

கலைக் கோட்டுச் சித்தர் என்பார் சந்திரனுடைய அனைத்து ஆதிமூல வரலாற்றையும் நித்திய சாட்சியாய்க் கண்டவர் ஆவார். சூரிய, சந்திர சாட்சியாக என்று கூறுகின்றோம் அல்லவா, இந்த ஆன்ம மொழிவழக்கு தோன்றும் முன்னர், அப்போதெல்லாம் கலைக்கோட்டு மாமுனிச் சித்தரின் சாட்சியாகவே அனைத்தும் நிகழ்ந்தன. இருக்கும் இடத்திலிருந்தே அனைத்துலக நிகழ்ச்சிகளையும் தீர்க தரிசனமாக அறிய வல்லவர்.
கலைக் கோட்டு முனிவர் அருந்தவம் புரிந்த திருமண் பூமிகளுள் ஒன்றே செனனை - திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் ஆலயமாகும். இங்கு அபூர்வமாகக் காணப் பெறும் 108 லிங்கங்களுள் கலைக் கோட்டு மாமுனிச் சித்தர் ஐக்யமான சிவலிங்கமும் ஒன்றாகும். இவர் லிங்கப் பூர்வமாக ஐக்யமான தினமே ப்ரீதி யோகம் கூடிய மஹா பௌர்ணமித் தினமாகும். இதனால் தான் பௌர்ணமிப் பண்டிகை திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வர் ஆலயத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகின்றது
பௌர்ணமியன்று பலரும் வீட்டில் முறையாகப் பூஜைகளை ஆற்றுவது கிடையாது. ஏதோ ஞாயிறு, திங்கள் போல் பௌர்ணமியும் வந்து செல்கின்றது என்றே பலரும் எண்ணுகின்றனர். பௌர்ணமி அன்று சந்திரனில் இருந்து பூமிக்கு அமிர்தப் பிரவாகம் பொழிகின்றது. திருஅண்ணாமலை, அய்யர்மலை, திருக்கோளக்குடி போன்ற கிரிவலத் தலங்களில் பௌர்ணமி அன்று தெய்வீகமய அமிர்த சக்திகள் பூரித்து, இங்கு கிரிவலம் வந்து வழிபடுவோருக்கு உதவுகின்றன.
பௌர்ணமியன்று, இல்லத்தில் இருப்போர், ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலம் எந்த நாளின் இரவில் பௌர்ணமி உச்சம் கொண்டுள்ளது என அறியவும். அன்று காலையிலேயே இல்லத்தை நீரால் நன்றாகக் கழுவி வைத்திட வேண்டும். இது இல்லத்தின் பூமியில் அமிர்தச் சுரப்பு பெருக்கெடுத்திட உதவும். பலரும் நீர்ப் பஞ்சம் காரணமாகவும், நீர் வெளிச் செல்ல நீர்த் தாரை சரியாக இல்லாமையாலும் துணியை நீரில் தோய்த்து, வெறுமனே தரையை மெழுகுகின்றார்கள். இது சரியல்ல.
இரு வாரத்திற்கு ஒரு முறை அமாவாசை, பௌர்ணமிக்கு முதல் தினமாவது தரையில் நன்றாக நீரை விட்டுத் தேக்கி நன்கு வீட்டைக் கழுவுதல் வேண்டும். ஈரத் துணியால் மெழுகிடாது, நீர் தேக்கிப் பாய்ச்சிக் கழுவுதலே சிறப்புடையது. தேக்கிய நீரில் தாம் பல தோஷங்களும் நன்கு முழுமையாகக் கரைந்து கழியும். பிறகு வீடு முழுக்க அனைத்து நிலப்படி, வாசற் படிகளிலும் நீர் மாவுக் கோலம் போட வேண்டும்.
பௌர்ணமி அன்று மாலை 4 மணி முதல் இரவு முழுவதுமாக அல்லது குறைந்தது எட்டு மணி நேரத்திற்காவது தீபத்தைத் தொடர்ந்து ஏற்றி வைத்துப் பூஜித்தல் வேண்டும்.
ஒரு மரக்கலத்தில் ஏலக்காய், ஜாதிக்காய் சிறிது பச்சைக் கற்பூரம் துளசி கலந்த நீர்,
மூங்கில் குவளையில் -வில்வமும் துளசியும் கலந்த நீர்,
வெள்ளிக் கிண்ணத்தில் - தேன் கலந்த பால்,
- மூன்றையும் வைத்து விரதமிருந்துப் பூஜித்து, மறுநாள் காலை சிறிது அருந்திட வேண்டும். ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர், சந்திரசேகராஷ்டகம், அபிராமி அந்தாதி
போன்ற துதிகளை ஓதிப் பௌர்ணமி இரவில் பூஜிப்பது நன்று.

ஸ்ரீவெண்ணீற்று உமையம்மை ஆச்சாள்புரம்

ஸ்ரீவேதஆஞ்சநேயர் ஆச்சாள்புரம்

பௌர்ணமி அன்று அவரவர் வசதிக்கு ஏற்ப சிறிய அளவிலாவது அன்னதானம் செய்ய வேண்டும். பௌர்ணமி தோறும் குடும்பத்தில் ஒருவராவது அருணாசலமாம் திருஅண்ணாமலை அல்லது மலைத்தலக் கிரிவலம் வருவது குடும்பத்திற்கு நல்ல புண்ய வரங்களைப் பெற்றுத் தரும்.
பௌர்ணமித் திதி தொடங்கும் நேரத்தைக் குறித்துக் கொண்டு, இதிலிருந்து பௌர்ணமித் திதி முடியும் வரை,
நாராயண தீபம், நவசத்யாதி தீபம்
ஸ்ரீபாராயண தீபம், சிவபூராதி தீபம்
சந்த்ராதி தீபம், பவமந்த்ராதி தீபம்
தீபம் தீபஸ்ய, தீபாத்பவ தைவீகம்
என்று 108 முறை ஓதி ஆலயங்களிலும் இல்லத்திலும் பூஜிக்க வேண்டும்.
பௌர்ணமி என்பது சந்திர மூர்த்தி 16 கலைகளுடன், 16 வகை அக்னி வகைகளால் இறைவனை ஆராதிப்பதால், இன்று அமிர்த சக்திகளைப் பல வகைகளில், குறிப்பாக அக்னி வடிவில் பெற்றுத் தரும் பண்டிகை இதுவேயாம்.
ஊதுபத்தி, கற்பூர அக்னி, அகல் விளக்கு தீபம், பித்தளைக் குத்து விளக்கு தீபம், வெள்ளிக் குத்து விளக்கு தீபம், சாம்பிராணி, மா விளக்கு தீபம், ஹோம அக்னி, எலுமிச்சைக் கனி உறை தீபம், ஜல தீபம் (ஒரு கிண்ணத்தில் நன்னீர் வைத்து அதில், பச்சை வாழை இலையில் தீபமுள்ள அகல் விளக்கை மிதக்க விடுதல்), கம்பி மத்தாப்பூ போன்ற மத்தாப்பூ, வண்ணத் தீக்குச்சி தீபம், வெண்கலக் கிண்ணத் தீபம், தாமிர விளக்குத் தீபம், பீங்கான் தீபம், கண்ணாடி தீபம், உடைத்த தேங்காய்க்குள் பசு நெய் நிரப்பி தீபம் ஏற்றுதல் ஆகிய பதினாறு வகை தீபங்களை ஏற்றி வழிபடுவதால் அக்னி வகை மூலம் திரளும் அமிர்த சக்தியைப் பெற்றிடலாம். இதனால் குடும்பத்தில் நல்ல சுமுகமான உறவு ஏற்படும்.
இதில் பதினாறு வகைத் தைலக் காப்பு கொண்டு வழிபடுவது நல்ல கல்வி ஞானத்தைப் பெற்றுத் தரும்.

சொத்துப் பிரச்னைகளுக்கு
முற்றுப் புள்ளி

தமிழகப் பகுதியில் பிரதமையில் சுப காரியங்களை வைக்கும் வழக்கத்தை அவ்வளாகக் காண இயலாது. ஆனால் ஆந்திரப் பகுதியில், அமாவாசையிலும், பிரதமையிலும், பிரம்ம முகூர்த்த நேரத்திலும் திருமணங்களை நிகழ்த்துவது உண்டு. பொதுவாக, பகுளமாகிய பிரதமை திதிக்கு ஆயுளை விருத்தி செய்யும் (சங்கீத) சக்திகள் நிறையவே அமைந்துள்ளன.

ஸ்ரீவன்மீகநாதர் ஒன்பத்துவேலி

பிரதமைத் திதியில் ரேவதி, பேகடா, வசந்தா ராகங்களில் சங்கீதத்தால் இறைவனைப் போற்றுவது உத்தம பூஜைகளுள் ஒன்றாகும். ஏனைய ராகங்களும் ஏற்றவையே! இறைவன் சந்நிதியில் கணீரென்று பாடி வழிபடுதல் சிறப்பு.
பாடத் தெரியோர் ஏழை வித்வான்களை, தேவார ஓதுவார்களைப் பாட வைத்துச் சன்மானம் அளித்து, பிரதமை அன்று இறைவனை வழிபடுதலாலும், பல அனுகிரகங்கள் கிட்டுகின்றன. குறிப்பாக, சந்ததி, சந்ததியாக எங்கே சில குறைகள், நோய்கள், துன்பங்கள் வந்து தொற்றுமோ என்று அஞ்சுவோர்க்கு நல்ல மனத் தெளிவும் பரிகார முறைகளும் கிட்டும்.
பகுளம் எனப்படும் பிரதமைத் திருநாள், சங்கீத பீஜ சக்திகள் நன்கு பொழியும் திருநாள். பண்டைய பீஜங்கள் பலவும், பல கோடி யுகங்களாக விண்ணில் மிதந்து வரும் பீஜாட்சர சக்திகளும், பகுளமாகிய பிரதமை நாளில் பூமியின் நெருங்கிய வான் வெளிக்கு வருகின்றன. இவற்றை நன்கு கிரகித்துத் தரும் பிரதமைத் திதிக்கான பூஜைகள் நிறையவே உண்டு. இவற்றைக் கடைபிடித்தால் தலை தலைமுறையாக வரும் சில பெரும் இன்னல்கள் தணிய வழி பிறக்கும்.
பிரதமை அன்று அவரவருக்கு மிகவும் பிடித்தமான உணவை வீட்டில் சமைத்து அல்லது செய்ய வைத்துத் தானும் வயிறார மனத் திருப்தியுடன் உண்டு, பிறருக்கும் தாராளமாகவே தானமளித்திட, இஷ்டா பீஷ்ட சக்திகள் கிரகிக்கப் பெற்று அளிக்கப்படுகின்றன.

ஸ்ரீகள்ளியடி சித்தர் ஜீவாலயம்
வடமதுரை அருகே திண்டுக்கல்

பொதுவாக, உலகெங்கும் உள்ள அனைத்து மனிதர்களும் 55 வயது முதல் அறுபது வயதிற்குள் அனைத்து விதமான ஆசைகளையும் துறந்திட வேண்டும். இதனால்தான், 55 - 60 வயதுக் காலத்தைப் “பகுளபூம்யம்” என்று குறிப்பிடுகின்றனர். இந்த வயதில் உள்ளவர்கள், கண்டிப்பாக பிரதமை அன்று திருவொற்றியூர், கும்பேஸ்வரர் போன்ற புற்று லிங்க சன்னதிகளிலும், ஸ்ரீபடேசாஹிப், சற்குரு ஸ்ரீதியாகராஜ சுவாமிகள், பாடகச்சேரி ஸ்ரீராமலிங்க சுவாமிகள், ஸ்ரீபோடா சுவாமிகள் போன்ற யோகியரின், சித்தர்களின், மஹான்களின் ஜீவசமாதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள், அன்னதானத்துடன் பூஜித்திட வேண்டும். இதனால் வாழ்வின் இறையிலக்கணம் தெளிவு பெற, தக்க உத்தமர்களின் ஆசி கிடைக்கும்.
மேலும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுடன் மனதார நீண்ட நெடு நேரம் அவர்கள் மனம் சந்தோஷம் அடையும்படி பேசி, அவர்களுக்கு இஷ்டமான உணவை, உணவுப் பண்டங்களை அளித்தல், அவர்கள் (நன் முறையில்) ஆசைப்படுவதை நிறைவேற்றித் தருதல், “பண்டசாலப் பித்ருக்களின்” பழமையான முதிர்ந்த ஆசிகளைப் பெற்றுத் தரும். இதனால் பிள்ளைகள் எங்கே தன்னைக் கை விட்டு விடுவார்களோ என்ற சஞ்சலத்துடன் வாழும் பெற்றோர்கள் நல்ல சுமுகமான தீர்வுகளைத் தம் வாழ்வில் பெற உதவும்.
பிரதமை அன்று 18 அங்குலங்களுக்கு (ஒன்றறையடி உயரத்திற்கு) மேல் உள்ள பெரிய குத்து விளக்கில், 5 முகத் திரிகளை (பஞ்சுத் திரி, புதுத் துணித் திரி, தாமரைத் தண்டுத் திரி, மஞ்சளில் தோய்த்த பஞ்சுத் திரி, மூன்று நூல் திரிகளைச் சேர்த்து வைத்த ஐந்தாவது முக்கூட்டு நூல் திரி) கிழக்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கில் திசைகளில் வைத்து தீபம் ஏற்றி, ராமாயணம், திருப்புகழ், திருமந்திரம், மகாபாரதம், பாகவதம், திவ்யப் பிரபந்தம் போன்ற புராணங்களின், இறைத் துதிகளின் முதல் அத்யாயத்தை, முதல் பகுதியை வாசித்தல், படித்தல், ஓதுதல் வேண்டும். இதனால் பணம், சொத்துக் கணக்கு விஷயத்தில், பெற்றோர்கள், சகோதர சகோதரிகளிடையே ஏற்பட்டுள்ள பிணக்குகள் தீர உதவும்.
ஆலயங்களில் 12 ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள், நான்கு சமயக் குரவர்கள், நான்கு சந்தனாச்சார்யக் குரவர்களின் நாமங்களை (பெயர்களை) தனித் தனியே சொல்லி ஓதி, அவர்கள் முன் தலை குனிந்து வணங்கி,
மூல முதலடியார் முதற்பாத முற்றடியார்
காலபதம் போற்றிக் கடவுட் புலம் நாடி
பாலபகுளமாய் பகுத்துன் பதம் போதமே!
என்று ஒவ்வொரு ஆழ்வார், நாயன்மார், சந்தானாச்சார்யார் முன் பக்குவமாய் ஓதி வணங்குதலால் மனதை அரித்துக் கொண்டிருக்கும் வேதனைகள் தணிய நல்வழி பிறக்கும்.

ஆடி பெருக்கும் அற்புதம்

பஞ்சாங்க சாஸ்திர ரீதியாக, வானவேத சாஸ்திர ரீதியாக ஆடி மாதம் 18ஆம் தேதியானது பல்துறை வளம் பொழிநாளாகப் போற்றப் படுகின்றது. வளங் கொழிக்கும் நாளொன்று வாழ்க்கையில் அரிதாக வந்திட, அதனை ஆன்மீக ரீதியாக இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டியதுதானே புத்திசாலித்தனம்.
அதெப்படி ஆடி பதினெட்டிற்கு மட்டும் அவ்வளவு வளம் பொழியும் மகத்துவம் வந்தது? பதினைந்து நாட்கள் கொண்டது ஒரு பட்சம் ஆமாற் போல, ஆறு நாட்கள் கொண்ட காலத்திற்கு ரவிஷட்கம் என்று பெயர். வானத்துச் சந்திரர் தோன்றி வளர்பிறை, தேய்பிறை இரு பட்ச காலம் வரும் முன்னர், ஆறு நாளைய ரவிஷட்கங்கள் அமைந்தன. இவ்வாறு ஒரு வருடத்தில் 60 ரவிஷட்கங்கள் அமையும். ஒவ்வொன்றும் விதவிதமான சூரிய சக்திகளைக் கொண்டிருக்கும்.
ஆடிமாதப் பிறப்பில் தட்சிணாயன அம்சத் தேர்ப் பாத கிரக சலனத்தைக் கொள்ளும் சூரிய மூர்த்தி, தட்சிணாயன முதல் மாதத்தில் பஞ்ச சுத்திகள் என்பதான ஐந்து விதங்களில் மேற்கொள்கின்றார். முதல் ஆறு நாட்கள், இரண்டாம் ஆறு நாட்கள் என்பதாக ஆகாசம், வாயு, நீர், நெருப்பு, பிருத்வி ஆகிய ஐவகை பஞ்ச ரவிஷட்க பூத சுத்திகளை, ஐந்து ரவிஷட்கக் காலங்களாக ஆடி மாதத்தில் தம் ஒற்றைத் தேர்ச் சக்கரத்தில் பெறுகின்றார்.
அதாவது, சூரியத் தேர்ச் சக்கரத்தில், அனைத்து ஆரங்களும் ஆகாசத் தளி, வாயு விளாகம், ஜலபாத்யம், அக்னிப் பூர்வம், பூம்யரேகம் ஆகிய ஐந்து விதமான சுத்திப் பூர்வங்களைக் கொண்டிருக்கும். இதில் ஜலபாத்யம் எனும் நீர்சுத்திப் பூர்வம், ஜல சுத்திகரமாக அமைகின்றது. இதில் ஆடி பதினெட்டோடு முடிவதாக, ஆறு நாட்களுக்கு, சூரியத் தேரானது, பல தேவஜல கூபங்களில் பிராண கோசம் கொள்கின்றது.

ஸ்ரீவெள்ளை வாரணப் பிள்ளையார் திருவலஞ்சுழி

கூபம் என்றால் புனிதமான கிணறு என்று பொருள். எண்ணற்ற சுயம்புத் தலங்களில், கோயில் வளாகத்துள், வனங்களுக்குள், மலைப் பாறைக்குள் கூபம் எனப்படும் புனிதமான கிணறு, தீர்த்தக் குளம், புனிதமான சுனை அமைந்துள்ளன. உலக ஜீவன்களின் அனைத்துக் காரியங்களுக்கும் சூரியன் சாட்சியாக இருப்பதால் சூரியக் கிரணப் பிரகாசம் சற்று மாசடைகின்றது. இவற்றை நிவர்த்திக்கும் வழிமுறைகளுள் ஒன்றாகவும், மேற்கண்ட புனிதமான தேவகூபங்கள் யாவற்றிலும் சூரியத் தேர்ச் சக்கரப் பரிமாணங்கள், ஆடி பதினெட்டு அன்று தீர்த்தவாரி சக்திகளைப் பெறுகின்றன

ஸ்ரீசோமகமலாம்பாள் ஒன்பத்துவேலி

பிரபஞ்சத்திலே மிகச் சிறந்த தெய்வீகக் கூபங்கள் நிறைந்த தலமே சென்னை - மப்பேடு - கூவம் - தக்கோலம் மார்கத்தில் உள்ள கூவம் தலமாகும். முற்காலத்தில் அற்புதச் சித்சக்திகள் நிறைந்த தலமாய், ருத்ராட்ச விருட்சங்கள் நிறைந்ததாய் (இன்றும் ஒரு ருத்ராட்ச வகை மரம் உள்ளது), நிறைந்த “கூபம்” என்பதே இன்று “கூவமாய்” ஆகி உள்ளது.

ஆடிப் பெருக்கு தினத்தில் பூவுலகில் அனைத்து நீர்ப் பிரவாகங்களிலும் விசேஷமான ஜலரேகைகள் உருவாகின்றன. இந்நீரோட்டங்கள் பூமியின் அடியில் பரந்து நிரவி, தென்னை, பனை போன்ற உயரமான மரங்களையும், மலைகளையும் அடையும். எனவே தாம் சமீப காலம் வரை ஆடிப் பெருக்கில் காவேரியிலும், கங்கையிலும் இயற்கையாகவே, தானாகவே ஜலப்ரவாகம் ஏற்பட்டு வந்துள்ளன. எனவே தென்னை மரங்களுக்கு நீர் ஊற்றி, உரமிட்டு, வேர் மண்ணை ஸ்திரமாக்கி சேவை புரிதல் மிகவும் விசேஷமானது. சந்ததி தழைக்க நல்ஆசிகளைப் பெற்றுத் தரும்.
அனைத்துக் கோடி ஜல தேவதைகளும் ஆடிப் பெருக்கு தினத்தில் சூரியச் சக்கர திவ்யாமிர்தப் பிரகாசத் தரிசனம் பெறுகின்றனர். ஆடிப் பெருக்கு என்றால் ஒளி, வெப்பம், அக்னிப் பிரகாசம், தீபம், ஜல சக்தி என அனைத்துமே பல்கிப் பெருகுவதாகும். விருத்தி ஆகும் சக்திகள் பலவும் அனைத்துத் துறைகளிலும் விஸ்தீரணமாகப் பெருகும் நாள்.

பதினெட்டு என்ற எண்ணானது சூரியன் (1), சனி (8), செவ்வாய் (9=1+8) ஆகிய மூன்று கிரக மூர்த்திகளின் அம்சங்களைப் பூண்ட முக்கூட்டு எண்ணாகும். ஜாதகத்தில் இம்மூன்றின் இருப்பிடத்தைக் கொண்டு பல ஜாதகத் தன்மைகளை உணர்விக்கும் ஜோதிடத் துறைக்கு மூவாற்றுப் புலம் என்று பெயர் (3 x 6). மூவாற்றுப் புழா எனும் தலவழிபாடு 18 என்ற எண்ணோடு நெருங்கிய தொடர்புடையது. முக்கூடல், பவானி, கன்யாகுமரி போன்ற மூன்று ஆறு, கடல் சங்கம வழிபாடுகளும் ஆடி 18ல் மிகுந்த மகத்துவம் பெறுகின்றன.
மனித மூளையில் வலது காதுப் பகுதி அருகில் மூன்று விதமான அமிர்தக் கபாலக் கிரந்திகள் உண்டு. இதில் ஒவ்வொன்றிலும் ஆறு புல நாளங்கள் உள்ளன. இவற்றை அவ்வப்போது ஆக்கப்படுத்தி, மூளையை பலம் பெறச் செய்யவே காதுகளின் மேல் மல்லிகை, சம்பங்கிப் புஷ்பங்களை வைக்கும் வழக்கமும் உண்டு.
ஆடிப் பெருக்கு தினத்தன்று ஆலயங்களில் கிட்டும் பிரகாசப் புஷ்பங்களைக் காதில் வைத்துக் கொண்டு கோயிலை வலம் வருதல் மிகவும் சிறப்பானது. குந்தி தேவி கர்ணனைப் பெட்டியில் இட்ட நாளும், அதனைத் தேர்ப்பாகன் எடுத்த நாளும் ஆடிப் பதினெட்டாம் தினமாகும். வடபாரதத்தில் ஹரித்வாரில் ஹர்கிபைடி எனும் புனிதமான கங்கைப் படித் துறையில் இலையில் அகல் தீபத்தை ஏற்றிக் கங்கையில் மிதக்க விடும் தினசரி கங்கா ஜலதீப உற்சவம் கண் கொள்ளாக் காட்சியாகும்.

ஆடிப் பெருக்கு தினத்தன்று கர்ணன் வழிபட்ட, பூஜித்த தலங்களில், சுவாமிக்குப் புஷ்பம் சார்த்தி புஷ்பப் பிரசாதம் பெற்று, காதுகளில் வைத்துக் கொண்டு, 18 முறை ஆலயத்தை வலம் வந்து வணங்குதலால், நெடுங்காலமாகத் தொலைந்திருக்கும் நகை, பத்திரம், தஸ்தாவேஜு, காணாமற் போனவை பற்றிய (நற்)செய்திகள் கிட்டிட நல்வாய்ப்பு ஏற்படும்.
நாள் முழுதும் ஸ்ரீஹயக்ரீவ மந்திரங்களை ஓதுதலால், மறந்து போன முக்கியமான பாடங்கள், விஷயங்கள் நன்கு மனதில் பதிய உதவும்.
கர்ணன் வழிபட்ட தலங்களுள் ஒன்றே, கோட்டையூர் ஸ்ரீஎச்சில் பொறுக்கி ஆறுமுக சித்தர் ஜீவாலயத்தை அடுத்து வரும் (குபேரன் ஆண்டு வழிபட்ட) அழகாபுரி அருகே உள்ள ஒரு கிராமச் சிவாலயத்தில் கர்ணன் பூஜித்த சுயம்பு லிங்க ஆலயமாக உள்ளது. பொதுவாக, இத்தலத்தில் ஸ்ரீகார்த்ய வீர்யாஜுன மந்திரம் ஓதி வழிபடுதலால் காணாமற் போனவை, காணாமற் போனவர்கள் கிட்டிடவும், இவற்றைப் பற்றி நற்செய்திகள், விளக்கங்கள் கிட்டவும் நல்வழி பிறக்கும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு வருதல் வேண்டும்.

கரி தோஷங்கள் அகல ...

கரிநாள் என்பது முற்றிலுமாக எதற்குமே தவிர்க்கப்பட வேண்டிய நாள் என்ற தவறான எண்ணம் மறைந்து, ராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜை போல. ஸ்ரீசனீஸ்வரருக்கு உரித்தான பூஜைத் திருநாளே கரிநாள் என்பதை மனதில் நன்கு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். எந்தத் திதியில், பட்சத்தில், நட்சத்திரத்தில் கரிநாள் அமைகின்றதோ அதைப் பொறுத்து அந்நாளுக்கு உரிய சனீஸ்வர பூஜை முறைகள், பலாபலன்கள் அமையும்.
ஸ்ரீசனீஸ்வரர் ஆயுள் சக்தியை அளிப்பதால் பஞ்சமிப் பூஜைகள் மூலமான நீண்ட நல்ல ஆயுளைப் பெற்றிட, ஸ்ரீசனிவார மூர்த்தியின் அருளும் கிட்டிடும்.
கரிநாள் என்பது கரித்துக் கொட்டுதல் என்பதில் வருகின்ற கரி என்பதின் பொருளில் வருவதல்ல. கோயம்புத்தூர்ப் பகுதிகளில் ஸ்ரீகரிவரதப் பெருமாள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாள் என்பதாக கரிநாம வகைத் திருமால் மூர்த்திகள் நிறையவே உண்டு. இவற்றிற்கு மங்களகரமாக அர்த்தங்களும் நிறைய உண்டு.
ஸ்ரீசனைஸ்சரருக்காக ஸ்ரீகிருஷ்ணன் எடுத்தளித்தக் கோலமே கரிகிருஷ்ணப் பெருமாள் என்னும் பெருமாள் அவதாரத் தோற்றமாகும். எனவே, கரிநாளில் கரிகிருஷ்ணன், கரிமாதவர், கரிவரதர் போன்ற கரி வகை நாமத் திருமால் மூர்த்திகளை வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

ஸ்ரீசனீஸ்வரர் விளங்குளம்

கரிநாட்களில் மருதாணியில் சிறிது புளி, பாக்கு, எலுமிச்சை சேர்த்து, கை கால் விரல்கள், உள்ளங்கைகளில் முதல் நாள் இரவே இட்டு, கருஞ் சிவப்பு நிற மருதாணி வண்ணத்துடன் கரிநாளில் சனிமூர்த்தியைப் பூஜிப்பது மிகவும் நன்மை பயக்கும்.
பெண்களுக்கு மாங்கல்யம், நெற்றி முன் வகிடு, தாலி ஆகிய மூன்றிலும் வைக்கப்படும் குங்குமப் பொட்டுகள், கைகளில் வளையல்கள், கால்களில் மெட்டிகள், தோடு, மூக்குத்தி, இடுப்பிலும் மணிக்கட்டிலும் காசிக் கயிறுகளை அணிந்திருத்தல் போன்றவை இயற்கையான தெய்வீக மயமான ரட்சா சக்திகள் ஆகும். பெண்கள் எப்போதும் இவற்றுடனே துலங்க வேண்டும்.
மருதாணிக்கு ஆயுள் தீர்க சக்திகளையும், சுமங்கலித்துவ நல்வரங்களையும் தபதி மகரிஷினி மூலமாகப் பெற்துத் தந்தவரே ஸ்ரீசனீஸ்வரர் ஆவார். எனவே, கரிநாளுக்கு முதல் நாள் இரவிலேயே மேற்கண்ட வகையில் கருஞ் சிவப்பு வண்ண மருதாணியை இட்டுக் கொண்டு கரிநாளில் புது மருதாணிப் பொலிவுடன் ஸ்ரீசனீஸ்வரரை வணங்குதல் மிகவும் விசேஷமானதாகும்.
ஸ்ரீசனீஸ்வரரை வணங்குவதற்கென்று ஹஸ்தப் பில முத்திரை என்று ஒன்று உண்டு. சனீஸ்வரரை நோக்கி வாய்க்கு நேராக கைகளைக் குவித்து, ஸ்ரீசனீஸ்வரரை வணங்கி. மூக்கின் நடுவில் குவிந்த கைகள் இருக்குமாறு வைத்து இரண்டு கைகளின் உள்ளங்கை விரல்களை சனீஸ்வரரை நோக்கிப் பிரித்து, பிறகு கரங் குவித்து வணங்குதல் ஹஸ்தப் பில முத்திரையாகும். பிலம் என்றால் தேவ துவாரம் என்று பொருள்.

ஸ்ரீசனீஸ்வரர் கோனேரிராஜபுரம்

திருவலஞ்சுழியில் பிலத்துள் மறைந்த காவிரி நதியை வெளிக் கொணர்வதற்காக ஏரண்ட மகரிஷி தம்மை அர்ப்பணித்துப் பூமிப் பிலத்துள் நுழைந்து தம்மை ஆத்மப் பலியாகத் தந்து காவிரியை மீட்டுத் தந்தார். பூலோக மக்களுக்காகத் தம்மைத் தியாகம் புரிந்த மாமுனியின் புனிதத்துவத்தைப் பணிந்து காவிரி நதி மூர்த்தியே அவரை வணங்கி மீட்டுத் தந்து வலஞ் சுழியாக நதிச் சுழித்துச் சென்ற இடமே திருவலஞ்சுழி ஆயிற்று அல்லவா! இது நிகழ்ந்த தினமே வலஞ்சுழிக் கரிநாள் ஆகும்.

ஏனென்றால், இக்கரிநாளில்தாம் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி பிரபஞ்சம் எங்கும் உள்ள வலஞ்சுழி பிள்ளையார் மூர்த்திகளையும் சுவாமிக்கு வலப் புறமாய் அம்பிகை அமர்ந்திருக்கும் தலங்களிலும் (திரைலோக்கி) சிறப்பான வழிபாடுகளை நிகழ்த்தினார்.
கரி என்பதற்கு யானை என்ற பொருளும் உண்டு அல்லவா. கரிமுகத்தாராகிய விநாயகப் பெருமான் வலஞ் சுழியுடன் விளங்குவது ஆயுட்காரக சக்திகளை அளிக்க வல்லதையும் குறிப்பதாகும். ஆனால், ஒரு யுகத்தில் பல தீய செய்கைகளைப் புரிந்த பலருக்கும் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி அனுகிரஹம் செய்தமையால் கர்ம வினை இயக்கத்தில் பல தடங்கல்கள் ஏற்பட்டன. இது சனீஸ்வரரையும் பாதித்திடவே அவர் விநாயகரை வேண்டிட கிரக சஞ்சார ரீதியாக சனீஸ்வரர் விநாயகரைப் பீடிக்க வேண்டிய தருணம் வரும் என்றும், அப்போது கண் இமைக்கும் நேர விநாயகத் திருமேனி ஸ்பரிசத்தால் சனீஸ்வரருக்கு ஏற்பட்ட கால தோஷங்கள் நீங்கும் என்பதையும் எடுத்துரைத்தார். இத்தகைய துன்பங்கள் அவரை இனியேனும் பீடிக்காதிருக்க, விநாயகப் பெருமான், சனீஸ்வரரை, கரி தீர்த்த சக்தித் தலங்களில் இறைப் பணி புரிந்து, இறைவனுக்கு முதல் நாள் பூஜிக்கப் பெற்ற நிர்மால்யப் புஷ்பங்களை ஆற்றில், கடலில் கரைக்கும் திருப்பணியை மானுட வடிவில் ஆற்றி வருமாறு பணித்தார்.
இவ்வாறு சனீஸ்வரரே மனித வடிவில் மூலச் சுயம்பு லிங்க மூர்த்திக்குச் சார்த்தப் பெற்றப் புஷ்பங்களை மறு நாள் காலையில் நிர்மால்யப் புஷ்பமாகக் களைந்து அவற்றைத் தக்க தீர்த்தத்தில் கரைக்கும் அருட் பணியாற்றிய தலங்களில் ஒன்றே கும்பகோணம் அருகே ஸ்ரீகோனேரி ராஜபுரம் ஆலயம் ஆகும். இங்குதாம் சனீஸ்வர மூர்த்தி, மறைத் தமிழ்வேதம் ஓதுவார் போன்று பஞ்சக் கச்ச வேஷ்டி அணிந்தவராய் மூல மூர்த்திக்கு ஆறு வேளையும் பூணூல் சேர்த்து வழிபட்டு இறைவனுடைய திருமணக் கோலக் காட்சியைப் பெற்றிட்டார்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
திரைலோக்கி

ஸ்ரீசுந்தரேஸ்வரர்
திரைலோகி

இதனால்தான் சிவ பூஜை செய்த சனீஸ்வரரை அல்லது சிவனைச் சனீஸ்வரர் பூஜித்த ஆலயங்களில் வழிபடுவதால் திருமணத் தடங்கல்களுக்குக் காரணமாக இருக்கும் வசதி இல்லாமை, அழகு இல்லாமை, தாழ்வு மனப்பான்மை, ஊனம் போன்ற தடங்கல்கள் நன்முறையில் நீங்கிட, சனீஸ்வரரே இறைவனுடைய ஆசிகளை நல்வரமாகப் பெற்றுத் தருகின்றார்.
கோனேரி ராஜபுரத்தில் இன்றும் சனீஸ்வரருக்கு மற்றைய ஆலயங்களைப் போல் கறுப்பு வேஷ்டி வஸ்திரம் அணிவிக்கப் படாது, வெள்ளை வஸ்திரமே சார்த்தப்படுகின்றது. மேலும் மூல மூர்த்திக்குச் சார்த்தப்பெறும் புஷ்பங்கள் மறுநாள் நிர்மால்யப் புஷ்பமாகக் களையப் பெற்றுச் சனீஸ்வரருக்குச் சார்த்தப் பெறுவது இக்கோயிலின் விசேஷமாகும்.
சோழபுரம் ஸ்ரீகைலாச நாதர் ஆலயம், கோனேரிராஜபுரம், சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில், திருநள்ளாறு, மதுரை மாவட்டம் குச்சனூர், பட்டுக் கோட்டை அருகே விளங்குளம், திருச்சி அருகே திருப்பட்டூர் சிவாலயத்தில் தூணில் அருள்பாலிக்கும் சனீஸ்வரர் போன்ற தலங்களில் கரிநாளில் அபிஷேக ஆராதனை நிகழ்த்துதலால் பழ வினைகளில் ஒட்டியுள்ள கரிதோஷங்கள் நீங்க உதவும். பகைமை, குரோதம், விரோதத்தால் ஏற்படும் வல்வினைகளும் கரிதோஷங்களில் அடங்கும்.

இதுவா அதுவா எது நல்லது ?

விஞ்ஞானத்தில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், அணுவியல் என்று சிலவிதமான சக்திகளையே அறிவார்கள். ஆனால், நாள், கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் போன்ற தினசரிக் கால வகைகள் உணர்த்தும் சக்தி அம்சங்கள் எத்தனை, எத்தனையோ உள்ளன. இவற்றில், கலியுகத்திற்கு உரித்தானதாக 64 வகை சக்திகளைச் சித்தர்கள் பகுத்து அளித்துள்ளனர். எதிர்கால பௌதிக விஞ்ஞானத்தில் இவை உணரப் பெறும்.

ஸ்ரீகைலாச நாதர் சோழபுரம்

விஞ்ஞானத்தின் எல்லையே மெய்ஞானத்தின் துவக்கம். அண்ட சராசரத்தில் “நடந்ததே, நடப்பனவாக, நடக்கும்!” இப்புவியின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் யாவும் ஏற்கனவே பல்லாண்டுகளுக்கு முன் பல பூமிகளில் கண்டு, அறிந்து, புழங்கியவையே! எனவே சித்தர்களுக்கு அனைத்துமே அறியப் பெற்றவேதாம்! எதுவுமே நவீனமன்று!
இதுவே மெய்ஞான விஞ்ஞானிகளான சித்தர்கள், யோகியர், ஞானிகள், மாமுனிகளின் கூற்று! உதாரணமாக, இன்று நாம் பூமியில் காண்கின்ற பென்டியம் போன்ற விஞ்ஞான வகையறாக்கள் எல்லாம் விண்ணுலக பூமிகளில் பல ஆண்டுகளுக்கு முன்னரேயே ஒதுக்கப்பட்டுள்ள பழைய பொருட்கள் ஆகும். எனவே சித்தர்களுக்கு எதுவுமே புதிதல்ல! மக்களுக்கு, அனைத்து ஜீவன்களுக்கும், இயற்கைக்கும் ஊறு விளைவிக்கா வண்ணம், விஞ்ஞானப் படைப்புகள் அமைதல் வேண்டும்.
கலியுகத்திற்கு உரித்தானதாக 64 வகை சக்திகளுக்கு, அஷ்டாஷ்ட (8 x 8 = 64) மஹாஅமிர்த சக்திகள் என்று பெயர். இவற்றில் அஷ்டமா சித்திகள் எனப்படும் எட்டு வகைச் சித்சக்திகள் உயர்ந்த ஆன்ம நிலைகளில் பெறவல்லவை. ஆனால் அஷ்டமா சித்திகளைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் கீழ்த் தரமான மனநிலைக்கு ஆளாகி விடுவதுடன், தன் வினைகளே தன் மீது பாய்ந்து விடும் நிலைக்கும் ஆளாகி விடுவர். எனவே எந்த மந்திரச் சித்சக்தியும் பாதுகாப்பாக, தக்க குரு மூலமாகவே பெறுதல் வேண்டும்.

ஒன்பது என்ற எண், எட்டு வகைச் சித்திகளின், சக்திகளின் நிறைவைக் குறிப்பதாகும். எனவேதாம் சித்சக்திகளை நவமித் திதியில் ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி, ஸ்ரீசெவ்வாய் மூர்த்திகளின் பூஜைகளோடு நிறைவு செய்வார்கள்.
ஒரு யுகத்தின் நவராத்திரி உற்சவத்தில் துருவ யோகம் கூடிய நாளில் அமைந்த நவமித் திதியில் தோன்றியவளே ஒன்பது கரத்தாளான ஸ்ரீஆயுர்தேவி ஆவாள். துருவ நவமி என்பதான துருவ யோக நாளில் நவமி திதி கூடி வருவது மகத்தான அம்பாள் பூஜை நாளாக, அளப்பரிய பூஜா பலன்களைத் தர வல்லதாகும்.

ஸ்ரீதுர்கைதேவி ஒன்பத்துவேலி

வானில் வடக்கே தென்படும் துருவ நட்சத்திரத்திற்கு ஒன்பது முகங்கள் உண்டு. மற்ற நட்சத்திரங்கள் போலல்லாது, துருவ நட்சத்திரத்தில் ஒன்பது திசை வழிபாடுகள் சிறந்து விளங்குகின்றன. துருவ மகரிஷி என்பார் இரு கரங்களிலும் ஒன்பது கங்கண்கள், கால்களில் ஒன்பது சதங்கைகள், ஒன்பது கற்கள் கொண்ட நவரத்தினக் கடுக்கன்கள், மோதிரம், ஒன்பது நிலைகளை உடைய ஜடாமுடி, ஒன்பது கஜம் பஞ்சக் கச்ச வேஷ்டியை அணிந்து பூஜிக்கின்ற மாமகரிஷி ஆவார். எப்போதும் வடபுறத் தியானம் பூண்டவர். இம்மகரிஷி வடபுறம் அமர்ந்து, தெற்கு நோக்கும் துர்க்கை அம்பிகையைப் பூஜிக்கும் கலைகளில் தலை சிறந்தவர். எனவே துருவ நவமி தினங்களில் தெற்கு நோக்கிய துர்கையை தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
ஒன்பது புரிகள் கொண்ட பூணூலுக்குத் துருவ சம்பாதி என்று பெயர். நவமி திதிகளில் புதுப் பூணூல்களை ஒன்பது விநாயக மூர்த்திகளுக்குச் சார்த்துதல் மிகவும் விசேஷமானதாகும். சம்பாதி எனும் கழுகு, ஒன்பது இறக்கைகளைக் கொண்டு, வடக்குத் திசை நோக்கி மிகவும் அபூர்வமாகப் பாயும் கங்கை நதி (வடப்புறம் நதி பாய்தல் மிகவும் விசேஷமானது) தீரமான காசியில், ஒன்பது துறைகளில் இருந்து கங்கை நீரை ஒன்பதாம் சிறகில் சுமந்து வந்து, இறக்கைகளால் சுயம்பு மூர்த்திகளை ஸ்பரிசித்துப் பூஜை செய்து உத்தம நிலைகளை அடைந்து தூல, தூக்கும வடிவுகளில் திருக்கழுக்குன்றத்தைச் செவ்வாய் ஹோரை நேரத்தில் வலம் வந்து பூஜிக்கின்றது. தற்போது இங்கு கழுகு தரிசனம் மறைந்தது போல் இருப்பினும், ஆழ்ந்த பக்தியுடன் தரிசிப்போர்க்குக் கிட்டுவதாகும்,

துருவ நவமியில், திருக்கழுக்குன்றத்தில் துர்க்கை பூஜை மிகவும் விசேஷமானது.
ஒன்பது துளித் துளசித் தீர்த்தம் மட்டும் அருந்தி, உண்ணா நோன்பிருந்து நவதுர்க்கை மூர்த்திகளை வழிபடுதலால் நிறையப் பாவச் செயல்களைப் புரிந்து மேலுலகங்களில் அல்லல்படுகின்ற முன்னோர் தக்க பரிகாரங்களைப் பெறவும் உதவும். இதனால் குடும்பத்தைத் தாக்குகின்ற வம்சாவளிப் பாவ வினைகளில் இருந்து தீர்வு பெறத் தக்க பிராயச்சித்தங்கள் கிட்டும்.
நவமி அன்று நவதுர்க்கைத் தரிசனத்தைப் பெற இயலாதோர், ஒன்பது ஆலயங்களில் துர்க்கையரைத் தரிசித்து வழிபடுதலால், கணவன் கோபத்தால் என்ன செய்வாரோ, ஏது செய்வாரோ என்று அஞ்சி வாழும் பெண்களுக்கு நல்ல தீர்வுகள் கிட்டும்.
நவமி அன்று (கும்பகோணம் அருகே) ஒன்பத்து வேலி, நவபாஷாண மூர்த்தி, நவகிரகத் தலங்கள் என்பதாக - ஒன்பது சம்பந்தமுள்ள தலங்களில் வழிபடுதலால், உறவினர்களின் பழிச் சொற்களால் வாடுவோர் நலம் பெற வழி பிறக்கும்.
நவதானியங்களை ரவையாக்கி, வனதுர்க்கா, வாசிஸ்ய துர்க்கா
வாசஸ்பதீ வம்சபல வர துர்க்கா நமஸ்துப்யம் -
என்று ஓதி வழிபட்டு, சர்க்கரை சேர்த்து எறும்புகளுக்கு இடுவதாலும், இதுவா அதுவா என்று, எந்த முடிவை எடுப்பது என்று தெரியாமல் விழிப்போர், நல்ல முடிவெடுக்க நல்வழி பிறக்கும்.

குச்சியான பிள்ளைகளுக்கு
கச்சிதமான பரிகாரம்

ரோகிணி நட்சத்திரம், தசமி திதி, செவ்வாய்க் கிழமை இவை இணையும் நாட்கள் மலை வள நாட்களாக சிறப்புப் பெறுகின்றன. ரோஹிணி நட்சத்திரம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கு உரியது. தசமித் திதி, பத்து அவதாரங்களைக் கொண்ட பெருமாளுக்கானது அன்றோ! (திரு)மால்மருகனான முருகப் பெருமானுக்குச் செவ்வாய் மிகவும் ஏற்றதாயிற்றே! நிலபுல, சொத்து அம்சங்களை உணர்த்தும் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாம் முருகனுக்கு உரித்தான நாளும்தானே இந்நாள்!
முருகனும், திருமாலும் மலைப் பிரியப் பதிகள் அல்லவா! எனவே, மலைத் தல மகிமைகள் நன்கு விருத்தியாகிப் பூரித்து மலையில் இருந்து பூமியில் இறங்கிப் பூரிக்கும் நாளில் மலையில் அருளும் பெருமாளை, முருகப் பெருமானை வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

மலைத்தலத்தில் அனைத்து விதமான இயற்கைக் காற்று சக்திகளும் உண்டு. மூலிகைக் காற்று, புனித வாசனைக் காற்று, மண் காற்று, பாறைக் காற்று, அருவிக் காற்று என்பதாக பத்து விதமான காற்றுச் சக்திகள் மலையில்தாம் நன்கு பூரிக்கும். மனித உடலிலும் தச வாயுக்கள் உண்டு. கரு உருவாவதிலிருந்தே உயிர் உறையும் உடலில் தச வாயுக்கள் உறையலாகின்றன.
இறைவன் அளிக்கின்ற உடலை எவ்விதப் பங்கமும் இல்லாமல், உயிர் பிரிகையில், அக்னிக்கு அர்ப்பணிக்க வேண்டும். எனவே சடலத்தை அக்னியில் எரிக்கும் முறையே சிறப்பானது.
தற்போதைய உலகில் பைரவ தோஷங்கள், மிருத்யு தோஷங்கள், காம தோஷங்கள், அக்னி தோஷங்கள் பெருகி உள்ளன. ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம், தசை, சதை அறுபட்டால் கூட, அது அக்னி மற்றும் பைரவ தோஷத்தையே குறிக்கின்றது. எனவே, மருத்துவ ரீதியாக உடலில் கத்தி படாமல் உயிர் நீத்தலும் ஒரு பெரும் பாக்யமே. இதே போலவே அல்லோபதியின் ரசாயன மருந்துகள் இல்லாது கூடிய மட்டும் சித்த, ஆயுர்வேத மருந்துகளை மட்டும் ஏற்று உயிர் நீத்தலும் ஒரு பெரும் பாக்யமே.

ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் பம்பரம்சுத்தி லால்குடி

உடல் பலம், ஆரோக்யம் உள்ளவர்கள் மலை வள நாட்களில் பெருமாள், முருகனை இரு மலைத் தலங்களில் ஏறிச் சென்று தரிசித்து, துவிதீய அம்சங்கள், அதாவது இரட்டை அம்சங்கள் கூடிய முந்திரி, நிலக்கடலை, தேங்காய், பால், தயிர் போன்றவற்றைத் தானமாக அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். இதனால் அலுவலகம், வீடு இரண்டிலுமே பிரச்னைகள் நிறைந்து வாழ்வோரின் துன்பங்கள் தணிய வழி பிறக்கும்.
உடல் வளம் இல்லாதோர், வயதானோர் கட்டுமலைக் கோயில் எனப்படும் சீர்காழி, கும்பகோணம், சாரங்கபாணி, சக்கரபாணி, காஞ்சீபுரம் வரதராஜர் போன்ற சற்று உயரமான சந்நிதித் தலங்கள் உள்ள பெருமாள், முருகனை வழிபட வேண்டும்.
எவ்வளவு நேரம், அய்யர் மலை, மலைக் கோட்டை போன்ற உயரமான மலைத் தலங்களில் இருந்து வழிபட முடியுமோ, அவ்வளவு நேரம் மலையில் தங்கி பூஜையில், தியானத்தில் இருத்தலால் உடலில் தசவாயுக்கள் சுத்தி பெற உதவும். இயற்கையான பொருட்களைக் கண் நிறைய தரிசித்தலான பாக்கியத்தை மலைகளில்தானே பெற இயலும். எனவே இத்தகைய மலைத் தல தரிசனம் நல்ல மனசாந்தியைப் பெற உதவுவதாகும்.

திருமலை முருகன் தலம்

மலையில் அருளும் பெருமாளையும், முருகப் பெருமானையும் வழிபடுதல் நல்ல பிராண சக்திகளைப் பெற்றிட உதவும். 36 முறையேனும் மலையில் பிராணாயாமம் செய்க! ஒரே மலையிலேயே முருகனும், பெருமாளும் இருந்தால் இதுவும் சிறப்பானதே!
திருஅண்ணாமலையில் காஞ்சி சாலைச் சந்திப்பில் அபய மண்டபத்தில் இருந்து அருணாசலத்தின் தசமுக தரிசனங்கள் கிட்டும். மலையின் பத்து முகடுகளும் தெரியும் இடம் இதுவே! இங்கு தர்ப்பணம் அளித்தலால், பெற்றோர்கள் இறக்கும்போது அருகே எவரும் இல்லாதிருக்கின்ற சாபவினைகள் தீர வழி பிறக்கும்.
மலைத்தலத்தில் அனைத்து விதமான - குறிப்பாக உடல் நாளங்களை மேம்படுத்தும் - பத்து விதமான (தசவாயுக்) காற்று சக்திகளும் நிறைந்திருக்கும். ஒருவர் இறந்த பின் அவருடைய உடலில் பல்வேறு இடங்களிலும் உள்ள பத்து வாயுக்களுமே முறையாக நீங்கிப் பரவெளியை அடைய வேண்டும். தலையின் கபால வாயு விடுதலை பெறுதல் மிகவும் கடினமானது. இது அக்னிக்கு எரியூட்டலில்தான் சாத்தியாகும். எனவே தான் மறுநாள் மயானத்தில் எலும்புச் சாம்பலுக்குப் பால் ஊற்றுவதாக, சடலம் எரிபட்ட விதத்தை அறியும் முறையை வைத்துள்ளனர். பால் ஊற்றுகையில், உடலின் எந்தப் பகுதி சரியாக வேகவில்லை என அறிந்து, அதற்குரிய தலங்களில், இந்தப் பத்து நாட்களிலும் பின்னரும், தக்க சடங்குகளை, பூஜைகளை ஆற்றிட வேண்டும்.
சடலத்திற்கு மின்சார தகனம் ஆன்மீக ரீதியாக ஏற்புடையது அன்று. இதில் பலத்த சாபங்களே ஏற்படும். அறிந்தோ, அறியாமலோ, குடும்பத்தில் எவருக்கேனும் மின்சார தகனம் ஆகி இருப்பின், அவர்களுடைய தசவாயுக்களும் இன்னமும் சரியாக விடுபட்டு இருக்காது. இதற்காக, தசாவதார மூர்த்தி ஆலயங்களில் அவர்களுக்காக வேண்டி, இறந்தவர்களின் அந்தந்தக் குறித்தத் திதியில் தேங்காய் சாத அன்னதானம் செய்து வர வேண்டும்.
தேங்காய் உடைத்தலில் பல அர்த்தங்கள் உண்டு. இது கபால வாயு பிரிதலைக் குறிக்கும் சின்னமும் ஆகும். அன்னதானத்திற்காக எவ்வளவுக்கெவ்வளவு தேங்காய்கள் உடைக்கப்படுகின்றனவோ அந்த அளவிற்குக் கபால வாயுப் பிரிவு பூரணம் அடையும். மலைத் தலங்களில் சிதறு காய் உடைத்தல் பிரேத தோஷ நிவர்த்திக்கு நன்கு உதவும். பிள்ளைகள் சரியாக உண்ணாது, குச்சியாக இருக்கின்ற தோஷங்கள் தீர உதவும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam