ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
வடமாகறல் வரதராஜன் |
கடவுளை நம்பினோர் கைவிடப்படார்
குருவை நம்பினோர் குபேரன் ஆவாரே
என்பது தமிழ் புத்தாண்டு சுபகிருது குறித்து நம் சற்குரு அளிக்கும் இனிய செய்தியாகும். ஏப்ரல் 14, 2022 சுக்ர வருடம் குரு வாரமான வியாழக் கிழமை அன்று காலை மணி சுமார் 8.30 அளவில் சூரிய ஹோரையில் ரிஷப லக்னத்தில் தோன்றுவதே சுபகிருது தமிழ் புத்தாண்டு ஆகும். எண் கணித ரீதியாக 2022 ஆண்டு சுக்ர சக்திகளுடன் துலங்குவதோடு மட்டுமல்லாமல் 14.4.2022 என்ற சுபகிருது தோற்றமும் சுக்ர சக்தியுடன் பொலிவதே சுக்ர சக்திகளை வலுப்படுத்தும் சுபகிருது ஆண்டின் அடிப்படை செயல்பாடாகும். தமிழ் புத்தாண்டு தினத்தை காஞ்சிபுரம் அருகிலுள்ள ஸ்ரீதிரிபுவனநாயகி உடனுறை ஸ்ரீஅகத்தீசர் உறையும் மாகறல் சிவத்தலத்தில் கொண்டாடி மகிழும்படி நம் சற்குரு வழிகாட்டியுள்ளார். ஸ்ரீமாகறலீசர் என்பதும் இத்தல இறைவனைக் குறிக்கும் நாமங்களில் ஒன்றாகும். சம்பந்த மூர்த்தி நாயனார் மாகறல் திருத்தலத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது “வட” மாகறல் என்று பாடுகின்றார். வடமாகறல் என்பதே ஆறு எழுத்துக்களுடன் திகழ்வதுதானே.
ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி
மாகறல்
வடக்கு என்ற சுக்ர திசைக்கு பல்வேறு தெய்வீக குணப்பாடுகள் உண்டு. வடக்கு முகம் ஓடும் வேரைக் கொண்டுதான் பல தெய்வீக வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் பின்னணியில் பல காரணங்கள் இருந்தாலும் பூமி எப்போதும் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சுழன்று கொண்டிருப்பதால் வழிபாட்டுப் பலன்களை மக்கள் வடக்கு திசையிலிருந்தே ஈர்க்க ஏதுவாகின்றது. அதனால்தான் தியானமும் வடக்கு திசை நோக்கி இருக்கும்போது அது சிறப்பாக அமையும் என்று நம் முன்னோர்கள் வழிகாட்டுகின்றனர். வடக்கு திசை என்பது குபேர திசை என்றும் வழங்கப்படுவதால் முருகப் பெருமான் வடக்கு திசை நோக்கி மாகறல் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளார்.
அபூர்வமாக ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி கஜபிருஷ்ட விமானத்தில் எழுந்தருளி உள்ளார். இசையை தெய்வீகமாக மட்டுமே பயன்படுத்த நினைப்பவர்களுக்கு அருளும் கருணாமூர்த்தி. ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், கனிந்த கனி பரமாச்சாரியார், ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள் போன்றோர் இந்த வீணா தட்சிணாமூர்த்தியை வழிபட்டே தங்கள் சங்கீத ஞானத்தைப் பெருக்கிக் கொண்டனர்.
சுபகிருது என்பதை சுப கி ருது, சுப கிருது என்றெல்லாம் பிரித்து பொருள் கொள்வதால் ருதுக்களின் சிறப்பான வழிபாட்டிற்கான வருடமாகவும், நற்செயல்களை குரு காட்டிய வழியில் நிறைவேற்றும் வருடமாகவும் சுபகிருது பொலிகின்றது. ஒரு தமிழ் வருடத்தில் வசந்தம் முதலாக சிசிர ருது ஈறாக ஆறு ருதுக்கள் அமைகின்றன. பெண்களின் பூப்பு அடையும் பருவ மாறுதல்கள் அவர்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளைக் குறிப்பதாக நாம் இவற்றைக் கொண்டாலும் பொதுவாக நம் சமுதாயத்தில் ருதுவின் பலனாகத் தோன்றும் பல தாவரங்களால் மக்கள் மனதில் ஏற்படும் பல மாறுதல்களை இத்தகைய ருதுக்கள் குறிக்கின்றன.
ஸ்ரீயானைவாகன முருகன்
மாகறல்
அதனால்தான் ஜனன ஜாதகத்துடன் பெண்கள் ருது அடையும் ஜாதகத்தையும் சேர்த்தே திருமண சம்பந்தங்களில் பொருத்தம் பார்த்து வந்தார்கள் நம் முன்னோர்கள். சுபகிருது வருடம் முழுவதுமே Night Queen B என்ற நறுமணத்தை தாமே அரைத்த சந்தனத்தில் கலந்து இறை மூர்த்திகளுக்கு காப்பாக இடுதல் மிகவும் சிறப்பாகும். குறிப்பாக மூன்றாம் பிறை, சஷ்டி திதிகளில் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு வருதலால் பெண்களின் பூப்பு சம்பந்தமான குறைபாடுகள் நிவர்த்தியாகும்.
குரு இல்லாத வாழ்க்கை குருட்டு வாழ்க்கை என்று நாம் அடிக்கடி கூறி வந்தாலும் இந்த சுபகிருது ஆண்டில் குருவின் வழிகாட்டுதல் மிகவும் தேவையான ஒன்றே. லக்னத்திற்கு 11ம் இடத்தில் குரு ஆட்சி பெற்று விளங்குவது ஜோதிட ரீதியாகவே 11ல் விளங்கும் கிரகத்தின் நன்மை பெருக்கும் பலன்களை தெளிவுபடுத்துகிறது. உதாரணமாக, அன்னமிடுவது சிறப்பு, மற்றோர் பெண்ணைக் கட்டி முத்தமிடுவது தவறான பலன்களைப் பெருக்கும் என்பது சாதாரணமாக அனைவரும் அறிந்த ஒன்று. அதே சமயம், ஒருவன் ஒரு பசுவைக் கொல்வதற்காக விரட்டிக் கொண்டு வந்தான். அந்த முயற்சியில் அவன் களைப்புற்றுப் போகவே அருகில் உள்ள வீட்டில் அடைக்கலம் கொண்டான். அந்த வீட்டில் இருந்தவர்கள் அவனுக்கு திவச சாப்பாட்டையும் நீரையும் அளிக்கவே அந்த இளைஞனும் களைப்பு நீங்கி ஓடிப் போன அந்த பசுமாட்டைத் தேடி கசாப்புக் கடைக்கு அனுப்பி விட்டான். அதனால் திவசம் பெற்ற அந்த பித்ருவும் அவன் சந்ததிகளும் பல வேதனைகள் அடைய நேரிட்டது. இது ஒரு புறம். ஒரு முறை சேஷாத்ரி சுவாமிகள் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்தபோது ஒரு வேசியைக் கட்டிப் பிடித்து முத்தமிடவே அவளை மறுநாள் ஒரு ஜமீன்தார் கண்டு திருமணம் புரிந்து கொண்டான். அந்த வேசியும் அன்று முதல் உத்தம பதிவிரதையாக மாறி விட்டாள். இதுவே சற்குரு ஒருவரின் வழிகாட்டுதல் புரியும் விந்தைக்கும் அது இல்லாதபோது உண்டாகும் வேதனைக்கும் உள்ள வித்தியாசம்.
சற்குருவின் மகிமை அனைவரும் அறிந்த ஒன்றுதான் என்றாலும் அதை அடிமை கண்ட ஆனந்தாக உணரும்போது அந்த ஆனந்த இரசத்தை எத்தனை முறை அருந்தினாலும் திகட்டாது அல்லவா ? ஒரு முறை இருகுரங்குகை என்று மூலிகை அகத்திய வாடகத்தில் கூறப்பட்டுள்ளதே அதைப் பற்றி விவரிக்க முடியுமா என்று நம் சற்குருவிடம் ஒரு அடியார் கேட்டபோது நம் சற்குரு புன்முறுவலுடன், “குரங்கு என்றால் குரங்கு முகத்தையுடைய முசுகுந்த சக்கரவர்த்தியைக் குறிக்கும். இரு குரங்கு என்றால் முசு முசு, இத்துடன் கை என்பதை சேர்த்தால் முசுமுசுக்கை என்ற மூலிகையின் பெயர்...”, என்றாரே பார்க்கலாம்.
ஸ்ரீமகாவிஷ்ணு மாகறல்
அதுபோல் குல்சபந்துருணி என்ற மூலிகையின் சக்தி பெருகும் செட்டிக்குளம் பெருமானின் சூரிய பூஜை பற்றி நம் சற்குரு விவரித்துள்ளார். பங்குனி மாதம் 19, 20, 21 தேதிகளில் (2022 ஏப்ரல் 2, 3, 4 தேதி நாட்கள்) செட்டிக்குளம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் சிவலிங்க மூர்த்தியின் திருமேனியை சூர்ய பகவான் தன் கிரணங்களால் தழுவும்போது உண்டாகும் சக்தியே குல்சபந்துருணி என்பதாகும். ஒவ்வொரு வருடமும் பங்குனி தமிழ் மாதத்தில் இந்த கிரணங்கள் தோன்றும் என்றாலும் இதை மற்ற இடங்களிலும் சிசிர ருதுக்காலத்தில் பெறலாம் என்பதும் நம் சற்கருவின் வழிகாட்டுதலாகும். பர்வதமலை, வள்ளிமலை போன்ற மலைத்தலங்களில் சிசிர ருதுக் காலமான மாசி, பங்குனி மாதங்களில் வளர்பிறை காலத்தில் பக்தர்கள் பெறக் கூடியதே குல்சபந்துருணி மூலிகை சக்தியாகும்.
குல்சபந்துருணி என்ற மூலிகையின் நாமத்தில் வரும் முதல் ஏழாம் எழுத்துக்களே சிசிர ருதுக் காலத்தில் தோன்றும் (1 + 7 = குல்சபந்துருணி) மூலிகை சக்தியைக் குறிக்கும். எண் ஒன்று சூரியனுக்கு உரியது, ஏழு என்பது சூரியனின் நிறமாலை ஏழைக் குறிக்கும். இத்தகைய அபூர்வ குரு சக்தியைப் பெற விரும்பும் அன்பர்கள் சிசிர ருது நிலவும் மாதங்களான மாசி, பங்குனி மாதங்களில் வளர்பிறை காலத்தில் செட்டிக்குளம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் தலத்தில் நிகழும் சூரிய பூஜையை தரிசனம் செய்தல் சிறப்பாகும். அது இயலாதபோது வள்ளிமலை திருத்தலத்தை இந்த சிசிர ருதுக் காலத்தில் வளர்பிறை காலத்தில் தரிசனம் செய்வதும் சிறப்புடையதே. ஊதா என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்ட குல்சபந்துருணி சக்திகள் வள்ளிமலையில் தோன்றுவதே நம் சற்குருவின் கருணை மகாத்மியமாகும். Night Queen B என்ற மலர் நறுமணம் இந்த குல்சபந்துருணி சக்தியை இயற்கையாகவே ஈர்க்கும் விசேஷ சக்தியைப் பெற்றிருப்பதால்தான் சுபகிருது வருடம் முழுவதும் வழிபாடுகளில் இந்த நறுமணத்தைப் பயன்படுத்தி அனுகிரகம் பெற நம் சற்குரு வழிபாட்டுகிறார்.
வடமாகறல் திருத்தலத்தில் மூன்று தட்சிணா மூர்த்திகள் கோஷ்டத்தில் அருளாட்சி புரிகின்றனர். இத்தகைய உருவ அமைப்பை குருதம்பம் என்று சித்தர்கள் புகழ்கிறார்கள். மேலிருந்து கீழாக இந்த குருதம்பத்தில் ஞான தட்சிணா மூர்த்தியும், வீணா தட்சிணாமூர்த்தியும், குக தட்சிணா மூர்த்தியும் ஞானம், இசை, செல்வம் என்ற கலியுக மனிதனுக்குத் தேவையான மூன்று சக்திகளையும் வாரி வழங்கும் தெய்வ மூர்த்தியாக இவர்கள் திகழ்கின்றனர்.
ஸ்ரீகுக தட்சிணாமூர்த்தி
மாகறல்
சிவபெருமானுக்கு நான் மட்டும் சளைத்தவனா என்ன (?!) என்பதற்கு நிரூபணமாக கிடந்த கோலம், அமர்ந்த கோலம், நின்ற கோலம் என்ற மூன்று கோலங்களிலும் கோஷ்டத்தில் அருள்புரிகின்றார் மகாவிஷ்ணு.
பிள்ளையார் பிடிக்க குரங்கானது போல் என்பது ஒரு பழமொழி. தெய்வம் என்ற ஒரே பொருளை தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தால் அது பிள்ளையாராக இருந்தாலும் அனுமார் என்ற குரங்காக இருந்தாலும் அந்த உருவங்களின் தெய்வீக சக்திகளையே நமக்கு அளிக்கும் என்பதே இந்த பழமொழியின் உண்மைப் பொருளாகும். அது போல் வடமாகறல் திருத்தலத்தில் உள்ள பிள்ளையார் உட்பட அனைத்து மூர்த்திகளுமே குருவருளை வர்ஷிக்கும் முகமாக எழுந்தருளி இருப்பதே நம்மை பிரமிக்க வைப்பதாகும். கணபதி ஸ்ரீபொய்யா கணபதி, இறைவனோ பன்னிரெண்டு நாமங்கள் (1+2=3) கொண்டு புரியும் ஸ்ரீமாகறல் ஈசர். இறைவியோ ஸ்ரீதிரிபுவன நாயகி, மூன்று உலகத்திற்கும் தலைவி. முருகப் பெருமானோ மூன்று நிலைகளில் அருளும் லட்சுமி கடாட்ச மூர்த்தி, தட்சிணாமூர்த்தியோ ஞான, கீத, வேத சக்திகளை அருளும் யோக மூர்த்தி. பெருமாள் மூர்த்தியோ நிலைத்த செல்வங்களை வாரிக் குவிக்கும் குபேர சக்திகளை வர்ஷிக்கும் விஷ்ணு சக்திகளை பொலிபவர். தீர்த்தமோ அக்னி என்ற மூன்று எழுத்துக்களை உடையது.
ஸ்ரீபொய்யா கணபதி மூர்த்தி அருளும் இத்தலத்தை “வெய்யாக் கதிரோன்” பிரகாசிக்கும் தலம் என்ற பெரியோர்கள் புகழ்கின்றனர். சூரிய பகவானின் ஒளிக் கதிர்கள் நாம் நினைப்பதுபோல் எல்லா இடங்களிலும் எல்லோருக்கும் ஒரே மாதிரி பொழிவதில்லை. மனிதர்களுக்குள்ளும் அவரவர் கர்ம வினைகளைப் பொறுத்தே சூரியக் கதிர்களின் தன்மை அமையும் என்பதே நம் சற்குருவின் திருவாய் மொழி. அத்தகைய சூரிய பகவானும் ஸ்ரீபொய்யா கணபதியின் அருள் பெற்ற பக்தனாக ஒருவன் மாறும்போது அவனுடைய வினைகள் முழுவதும் “பொசுக்கப்படுவதால்” அவன் சூரிய பகவானின் குளிர்ந்த கிரணங்களைப் பெறும் நிலைக்கு உயர்வான் என்பதே இத்தல பொய்யா கணபதி அருளும் அனுகிரகமாகும்.
ஸ்ரீபொய்யா கணபதி
மாகறல்
இத்தகைய “பொய்யா கதிர்களை” பக்தர்கள் பெறும் பொருட்டே சிசிர ருதுக் காலத்தில் வள்ளிமலையில் பொலியும் குல்சபந்துருணி சக்திகளை பக்தர்கள்பெறுவதற்கு நம் சற்குரு வழிகாட்டுகிறார் என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ? ஸ்ரீபொய்யா கணபதி அருளும் இடிந்த மண்டபத்தை சீரமைக்கும் திருப்பணியை நாம் அடியார்கள் நிறைவேற்ற முடியா விட்டாலும் இந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீபொய்யா கணபதியை அனைவரும் இந்த சுபகிருது வருடத்தில் வணங்கி வழிபடும் வண்ணம் சீரமைத்து சுத்தம் செய்து தரலாமே. பல அடியார்களும் தாங்கள் ஷன்னவதி தர்ப்பணத்தின் மகத்துவத்தை அறியாததால் பரியாமருதுபட்டியில் கிருஷ்ணர் வில் ஊன்றிய தீர்த்தத்தில் தர்ப்பணம் இயற்ற முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர். அத்தகையோர் ஸ்ரீபொய்யா கணபதி அருளும் மாகறல் மண்டபத்தை சீரமைத்து தருவதால் இது ஒரு பிராயசித்த வழிபாடாக அமையும் என்ற அனுகிரகத்தை அருள்பவரும் நம் சற்குருவே.
சற்குரு அருளும் இந்த விசேஷ விதிவிலக்கு பற்றி மேலும் நாம் விளக்குகிறோம். பன்னிரு திருமுறைகளையும் சிதம்பரம் திருத்தலத்தில் ஓலைச் சுவடிகளாய் பாதுகாத்து வைத்திருந்தனர். இந்த ஓலைச் சுவடிகள் அனைத்தையும் ஸ்ரீபொய்யா கணபதியே மீட்டுக் கொடுத்தார் என்று நீங்கள் அறிவீர்கள். திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகர் என்ற நால்வரின் முன்னிலையில்தான் இந்த ஓலைச் சுவடிகள் திரும்ப எடுக்கப்பட வேண்டும் என்று சிதம்பர திருத்தல பொறுப்பில் இருந்த தில்லைவாழ் அந்தணர்கள் கூறவே இதற்கு என்ன செய்வது என்ற ஓலைச் சுவடிகளை மீட்கும் பொறுப்பில் இருந்த ராஜராஜ சோழனுக்குப் புரியவில்லை.
ஸ்ரீநடராஜப் பெருமான்
மாகறல்
அப்போது ராஜராஜ சோழனின் தாயார் செம்பியன் மாதேவியின் மெய்க்காப்பாளாராக இருந்த நம் சற்குருவே இவ்வாறு நான்கு தேவார நால்வரையும் தங்க விக்ரஹங்களாக வார்த்து பல்லக்கில் ஏற்றிக் கொண்டு சென்று தில்லைவாழ் அந்தணர்கள் முன் நிறுத்தி அந்த நால்வரின் முன்னிலையில் தேவாரப் பதிகங்களை மீட்டுத் தந்தார். செம்பியன் தேவி ஆறு சோழ மன்னர்களுக்கு மாதேவியாய் அவர்களுக்கு வீரமும் பக்தியும் ஊட்டி வளர்த்ததற்கு முக்கிய காரணமே இவ்வாறு மெய்க்காப்பாளர் வடிவில் வந்த நம் சற்குருவின் கருணையே. இவ்வாறு பன்னிரு திருமுறைகளை மீட்டு வந்த சற்குரு இந்த பன்னிரு திருமுறை பாடல்களை நம் அன்றாட வழிபாட்டிற்கு உரிய முறையில் மாற்றியதோடு மட்டுமல்லாமல் ஒரு மனிதன் அடையக் கூடிய அனைத்து இக பர சுகங்களையும் ஸ்ரீஅகத்திய பெருமானின் சித்த அனுகிரகமாக பெற்றுத் தருகின்றார் என்றால் நம் சற்குருவின் எல்லையில்லா கருணைக்கு இதை விடச் சிறந்த ஒரு தியாகத்தை எப்படி விளக்க முடியும் ?
காஞ்சிபுரத்திற்கு வடக்கில் பாயும் செய்யாறு நதிக் கரையில் இருப்பதால் மாகறல் திருத்தலம் வடமாகறல் என்று சம்பந்தப் பெருமானால் பாடப்பட்டது என்பர் பெரியோர். இது ஒரு காரணமாக இருந்தாலும் வடமாகறல் என்பதற்கு இன்னும் பல தெய்வீக காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. செய் ஆறு என்றால் உருவாக்கும் தீர்த்தம் என்று பொருள். இறைவன் ஒருவனே எந்தப் பொருளையும் உருவாக்கும் வல்லமை பெற்றவன். இறைவன் அருள் பெற்ற மகான்கள் எதையும் உருவாக்க முடியும். சத்ய சாய்பாபா பக்தர்களுக்கெல்லாம் அளிக்கும் கை கடியாரம், மாங்கல்யம், விபூதி, குங்குமம், மோதிரம் போன்ற அனைத்து மங்கலப் பொருட்களும் இறை சக்தியால் உருவாக்கப்பட்டவையே என்பார் நம் சற்குரு. அதே போல் சாதாரண மனிதர்களும் “உருவாக்கும்” தகுதியைப் பெற்றவர்களே. இந்த உருவாக்கும் சக்தி ஆரண மையமான பெண்களின் கருப்பையில் பூரணம் பெறுவதால் இதற்கு அடிப்படையான திருமணம் என்ற தெய்வீக பந்தத்தை நம் முன்னோர்கள் வாழ்க்கையில் நடக்கக் கூடிய ஒரு “பொது நிகழ்ச்சியாக” அங்கீகரித்தார்கள். அதனால் இந்த ஒரே ஒரு பொது நிகழ்ச்சியில் மட்டும் மணமக்கள் மலர் மாலையை சூட்டிக் கொள்ளத் தகுதி பெறுகிறார்கள்.
தலவிருட்சம் எலுமிச்சை
மாகறல்
உத்தம தம்பதிகள் உத்தம குழந்தைகளைப் பெறவே நம் சற்குரு திருமணங்கள் எங்கு நிகழ வேண்டும் என்பதை தெளிவாகக் குறிப்பிடுகிறார். அவையாவன ...
சுயம்பு மூர்த்திகள் அருளும் தலங்கள்
பன்னிரு திருமுறை பாடல் பெற்ற தலங்கள்
ஆழ்வார்களின் மங்களசாசனம் நிறைவேறிய பெருமாள் தலங்கள்
நம் சற்குரு உழவாரப் பணி நிறைவேற்றிய தலங்கள்
ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் குறிப்பிடப்பட்டுள்ள தலங்கள்
நம் சற்குரு தரிசனத்திற்காக எழுந்தருளிய தலங்கள்
மேற்கூறிய தலங்களில் மூலவர் எழுந்தருளிய மூலத்தானத்திலிருந்து 12 அடிக்குள் மாங்கல்ய தாரண நிகழ்ச்சியை நிறைவேற்றுதலால் உத்தம சந்தான பாக்கியம் உருவகித்து கிட்டும். அரிதிலும் அரிதாக மாகறல் திருத்தலத்தில் ஸ்ரீஆரண விநாயகர் என்று சித்தர்களால் புகழப்படும் பிள்ளையார் மூர்த்தி பலி பீடம் அருகே எழுந்தருளி உள்ளார். பொதுவாக, கொடிக் கம்பத்தின் அருகில் விநாயக மூர்த்திகள் எழுந்தருள்வது உண்டு. மாகறல் திருத்தலத்தில் பிள்ளையார் எழுந்தருளிய இடமே ஆண்களின் ஆரண மையம் என்ற சிருஷ்டி மூலையாகும். எப்படி பெண்களின் கருப்பையானது ஆரண மையத்தில் அமைந்து உள்ளதோ அதேபோல் ஆண்களின் சிருஷ்டி மையமும் ஆரண மையத்தில்தான் தோன்றுகிறது. இதனை பக்தர்கள் தெய்வீக அம்சமாக தரிசிக்கக் கூடிய ஒரே திருத்தலம் மாகறல் ஆகும்.
சிருஷ்டி என்ற ஒன்று உலகில் தோன்றினால்தானே அதிலிருந்து செயல்கள் உருவாக முடியும் ? அனைத்து காரியங்களுக்கும் காரணமாக இருப்பவர் பிள்ளையார் ஒருவரே என்பதால்தான் ஸ்ரீஆரண விநாயகர், ஸ்ரீபொய்யா கணபதி, ஸ்ரீவலம்புரி விநாயகர் என்பதாக மூன்று கணபதி மூர்த்திகள் மாகறல் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ளனர். இந்த மூன்று கணபதி மூர்த்திகளை வணங்கி, ஆத்ம விசாரம் செய்து வழிபட்டு வந்தாலே போதும் இறைவனின் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முச்செயல்களுமே உள்ளங்கை நெல்லிக்கனி ஆகி விடும் என்ற உத்தரவாதத்தை அளிப்பவரே நம் சற்குரு ஆவார்.
ஸ்ரீவலம்புரி விநாயகர்
மாகறல்
இந்த சிருஷ்டி மூலையில் எழுந்தருளி இருப்பவரே ஸ்ரீபிரம்ம தேவர் ஆவார். இவ்வாறு பிரம்ம மூர்த்தி விஷ்ணுவின் தொப்புளில் தோன்றியிருக்கும் தோற்றத்தை பக்தர்கள் தரிசிக்கும் தலமாக இருப்பதும் மாகறல் மணிமகுடத்தில் பதிந்த மற்றோர் மாணிக்கமாகும். பிரம்மா தன் தந்தையான மகா விஷ்ணுவின் தொப்புளில் தோன்றினாலும் பிரம்மாவின் தோற்றம் மறை பொருளாக இருக்கும் காரணத்தினாலேயே பிரம்மாவிற்கு கோயில் கிடையாது, அதாவது மக்கள் கண் பார்வைக்கு மறைந்து விளங்கும் திருத்தலம் கொண்டு விளங்குபவரே ஸ்ரீபிரம்ம மூர்த்தி என்ற பொருள்பட பிரம்மா தத்துவத்தை விளக்குகின்றனர். தாமரைக் கொடி என்றும் அழியாது, மாற்றம் கொள்ளாது. அதுபோல் நாம் இறைவனுடன் கொள்ளும் தொடர்பும் நிரந்தரமானதே, சிரஞ்சீவித்துவம் பொருந்தியதே என்பதை விளக்கவும் பிரம்மா தாமரைக் கொடியில் தோன்றியுள்ளார். இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள நிரந்தர தொடர்பை விளக்குவதற்காகவே மகாவிஷ்ணு கிடந்த கோலமாக, மூன்று பெருமாள் மூர்த்திகளுக்கு நடுவில், கஜபிருஷ்ட விமானத்தின் மைய மையத்தில், ஆரண தோற்றம் தெளிவாகும் வண்ணம் எழுந்தருளி உள்ளார் என்பதும் மாகறல் திருத்தலத்தின் மாறாச் சிறப்பாகும்.
பிரம்ம தேவரின் இந்த ஆரண மைய சக்திகளை மக்கள் புரிந்து கொண்டு வழிபடுவதற்காகவே தாமரைக் கொடியை குறிக்கும் வண்ணம் ஒரு துணியின் மூலமாவது பிரம்ம தேவரையும் மகாவிஷ்ணுவின் தொப்புள் பகுதியையும் இணைத்து வைப்பர். இந்த தெய்வீக தத்துவ இணைப்பை நம் சற்குருவின் மூதாதையர்கள் 300 ஆண்டுகளுக்கு மேல் வழிபட்ட ஸ்ரீரெங்கநாதரின் விக்ரஹத்தில் இன்றும் காணலாம்.
மகான்களின் விரல் அசைந்தால் அதில் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் என்பார் நம் சற்குரு. அது போல் மகான்களின் மேற்பார்வையில் பெரும்பாலான திருத்தலங்கள் எழுந்தருளி இருப்பதால் இந்த திருத்தலங்களில் விளங்கும் ஒவ்வொரு இறை மூர்த்தியுமே கோடி கோடி தெய்வீக இரகசியங்களை உள்ளடக்கி பொலிவார்கள்.
ஸ்ரீமுருகப் பெருமான்
மாகறல்
இவ்வகையில் கன்னி மூலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீவலம்புரி விநாயகர் வடமாகறல் என்ற அக்னியின் இயக்கத்தை குறிக்கும் வகையில் எழுந்தருளி உள்ளார் என்று சித்த கிரந்தங்கள் வர்ணிக்கின்றன. சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் தோன்றிய செல்வமே முத்துக்குமார முருகப் பெருமான் ஆவார். முருகப் பெருமான் சக்தியின் துணையின்றி சிவபெருமானின் நெற்றிக் கண் ஜோதியில் தோன்றியவர் என்று நாம் கூறினாலும் உண்மையில் தேவியின் கர்ப்பவாசம் கொள்ளாதவர் என்றே முருகப் பெருமானின் தோற்றம் குறிக்குமே அல்லாது பார்வதியின் சக்தியைப் பெறாதவர் முருகப் பெருமான் என்று நாம் அனர்த்தமாக எண்ணுதல் கூடாது. “சிவனுக்கு ஏது சக்தி, சக்தி இல்லையென்றால் அவர் சிவம் அல்ல, சவமே...” என்பார் நம் சற்குரு. ஆழ்ந்த பொருள் பொதிந்த இந்த சித்த வாசகத்தை குறைந்தது 102 முறையாவது படித்து ஆத்ம விசாரம் செய்து அர்த்தம் தெரிந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். அனர்த்தம் கலியுலகின் பெரும்பான்மையான வாசகங்களின் தன்மையாக இருப்பதால் அடியார்கள் இதில் மிகவும் கவனமாக செயல்படும்படி கேட்டுக் கொள்கிறோம்.
ஸ்ரீமுருகப் பெருமான்
பட்டீஸ்வரம்
இவ்வாறு வடமாகறல் என்ற முக்கண் சக்தியைப் பெற்றவரே மாகறல் திருத்தலத்தில் எழுந்தருளிய முருகப் பெருமான் ஆவார். முருகப் பெருமானை வளர்க்க ஆறு கார்த்திகைப் பெண்கள் எம்பெருமானால் நியமிக்கப்பட்டார்கள் என்று கூறுவது இந்த வடமாகறல் அக்னி சக்திகளின் ஓர் உருவகமே என்பது நமக்குப் புரிகின்றது அல்லவா ? மாகறல் ஈசனுக்கு வலப் புறமாக, ஸ்ரீவலஞ்சுழி விநாயகர் எதிரே அக்னி தீர்த்தம் அமைந்திருப்பதும் இந்த அக்னியின் வியாபகத்தை சுட்டிக் காட்டுவதாகும். முருகப் பெருமானுக்கு மயில் வாகனம் அமைவதற்கு முன் எம்பெருமானால் ஆதிவாகனமாக அளிக்கப்பட்டதே யானை வாகனமாகும். இத்தகைய யானை வாகன முருகப் பெருமானை பட்டீஸ்வரம் திருத்தலத்திலும் அடியார்கள் தரிசித்துப் பயன்பெறலாம்.
மனிதர்களும் எம்பெருமானின் முக்கண் நேத்ர சக்தியின் ஒரு அம்சத்தைப் பெற்றுள்ளவர்கள் ஆதலால் இந்த முக்கண் சக்தியைப் பெறும் வழிபாடாக சித்தர்கள் தர்ப்பணம் என்ற பித்ரு வழிபாட்டை அளித்துள்ளார்கள். நினைவாற்றல் என்ற ஒரு சக்திதான் மனிதர்களின் திறமையை பறைசாற்றுவதாக அமைகிறது. மகான்களோ, சித்தர்களோ எதையும் மறப்பதில்லை, ஞாபக மறதி என்ற ஒரு நிலைக்கு அப்பாற்பட்டவர்களே இந்த உத்தமர்கள். இத்தகைய அற்புத நினைவாற்றலை அளிக்கும் நரம்பு நம் பாதத்தில் அமைந்துள்ளது. அதற்காகவே இந்த நினைவாற்றலை பெருக்கும் மனித முயற்சியாக நம் கோவணாண்டி நம் சற்குருவான சிறுவனை ராயபுரம் அங்காளி கோயிலை தினமும் 1008 முறை வலம் வரச் செய்தார்.
வடமாகற ஜோதியில் பிரகாசிக்கும்
ஸ்ரீஅகத்தீசர்
சேஷாத்ரி சுவாமிகளும் திருஅண்ணாமலையை 40 வருட காலத்தில் ஒரு லட்சம் முறை கிரிவலம் வந்தார்கள். முருக அவதாரம் என்று புகழப்படும் ரமண மகரிஷியும் திருஅண்ணாமலையை மானசீகமாக ஒரு லட்சம் முறை வலம் வந்தவரே. மனிதர்கள் தம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும்போது உள்ளங்கையில் உள்ள செவ்வாய் மேட்டில் வார்க்கும் தீர்த்தமானது எள்ளில் திகழும் தில அக்னியுடன் சேர்ந்து பித்ரு மண்டலத்தை அடைகிறது. பித்ருக்களின் ஆசியாக கிட்டுவதே, வடமாகறல் சக்தியாகப் பொலிவதே இந்த மூன்றாம் கண் அக்னி சக்தியாகும். உள்ளங்கால் பாதத்திலிருந்து எழும் ஞாபக சக்தி கிரணங்கள் செவ்வாய் மேட்டில் உருவாகும் வடமாகறல் கிரணங்களோடு இணைவதே ஆண்களின் ஆரண மையமாகும். இந்த கிரணங்களின் இணைப்பு இயற்கையாக உண்டாகும் குழந்தை பாக்கியத்தில் மட்டுமே கிட்டக் கூடியது. தற்காலத்தில் உருவாகும் ‘டெஸ்ட் ட்யூப் பேபிகள்’ என்ற குழந்தைகள் இந்த ஆரண மைய சக்திகளைப் பெறவே முடியாது என்பதே சித்தர்களின் தெளிவுரை.
அதனால் என்ன ? இது பலரின் மனத்தில் எழும் கேள்வி.
ஆரண மையத்தில் தோன்றாத குழந்தை மன அமைதியைப் பெறவே முடியாது, இறைவனை நெருங்கவே முடியாது என்பதே சித்தர்களின் வாக்கு.
சீதா தேவி போன்றோர் கற்புக்கரசிகளாய் விளங்கி இவ்வுலகைத் காத்தது நீங்கள் அறிந்ததே.
அகல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரி
ததா பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம்
மகா பாதக நாசனம்
என்ற பஞ்ச கன்னிகைகள் சுலோகத்தில் வரும் ‘கன்னிகள்’ அனைவரும் திருமண பந்தத்தில் கணவனுடன் இணைந்தவர்களே. திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் இத்தகைய சக்திகளைப் பெற முடியாமல் போவதற்கு இத்தகைய வடமாகறல் சக்திகளே காரணம் ஆகும்.
ஸ்ரீதிரிபுவன நாயகி
மாகறல்
“மேற்கண்ட ஐந்து தேவிகள் மட்டும்தான் கற்புக்கரசிகள் என்று கிடையாது, உங்கள் மனைவிகள் அனைவருமே கற்புக்கரசிகள்தாமே ...”, என்று ஒருமுறை மந்தகாச புன்னகையுடன் தம் அடியார்களைப் பார்த்து வினவியவரே நம் சற்குரு ஆவார். கன்னி என்றால் திருமணமாகாத பெண் என்பது பொதுவான பொருள் என்றாலும் கணவனுடன் வாழ்ந்து முறையாக வடமாகறல் ஜோதியைப் பெற்ற உத்தமியும் கன்னியே என்பது சித்தர்கள் கூற்று. கணவன் மறைந்த பின்னும் சாரதா தேவி மாதா போன்றோர் போஷித்து வந்ததே இந்த வடமாகறல் அக்னி சக்தியாகும். இன்றைய மகான்களிடம் நாம் மாதா அமிர்தானந்தாவிடம் இந்த வடமாகறல் ஜோதி பிரகாசத்தை அவர்கள் அன்பு அரவணைப்பின் மூலம் பெறலாம்.
வடமாகறல் என்ற அற்புத ஜோதியை உருவாக்குவதற்கும், போஷிப்பதற்கும், மற்றவர்களுக்கு அனுகிரகமாக வழங்குவதற்கும் மிகவும் இன்றியமையாததே ஒருவனுக்கு ஒருத்தி என்ற கற்பு நெறியாகும். இந்த நெறியில் வழுவாது நின்ற சீதாராம தம்பதிகள் இந்த வடமாகறல் ஜோதி அனுகிரகத்தை மக்களுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் அளிப்பதற்காகவே பதினான்கு வருடங்கள் காட்டில் வனவாசம் புரிந்தனர் என்பதே ராமாவதாரம் பற்றி நம் சற்குரு அளிக்கும், நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் செய்தியாகும். வெறுமனே கணவனுடன் ‘ஹனிமூன்’ செல்வதற்காக சீதை ஏற்றது வனவாசம் அல்ல என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய ராமாயணச் சுவையாகும். அதனால்தான் ராமாயணம் இன்றளவும் தெவிட்டாத தேன் பாகாய்த் தித்திக்கின்றது.
ராமபிரானின் அவதார இரகசியத்தை அறிந்த பரத்வாஜர் போன்ற மகரிஷிகளுக்கும் ராமபிரான் வடமாகறல் அனுகிரகங்களை அளிக்கத்தானே செய்தார் ? ஆனால், மற்றவர்களுக்கு அனுகிரகமாக வழங்கப்பட வேண்டியது இந்த ‘ராமாமிர்தம்’ என்பதால் இந்த அபூர்வ அனுகிரக சக்திகளை விநியோகிக்க ஒரு சதுர்யுக காலத்திற்கு மேல் ஸ்ரீபரத்வாஜர் எடுத்துக் கொண்டார் என்றால் வடமாகறல் அக்னி கிரணங்களைப் பற்றி மனிதர்கள் எப்படி வர்ணிக்க முடியும் ?
இதில் வேடிக்கையான, மனிதர்களால் ஜீரணிக்க முடியாத விஷயமே வடமாகறல் ஜோதி தோன்றுவதற்கு அடிப்படை தகுதி காமம் என்பது முற்றிலும் மறைந்த, மறந்த மனித வாழ்க்கையாகும். அதனால்தான் மன்மதனை எரித்த இறைவனாகவும், காமத்தை வென்ற பராசக்தியாக சீதையும் மக்களால் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். காமம் என்பது முற்றிலும் மறைந்த நிலையிலேயே முருகப் பெருமான் போன்ற அதியற்புத தெய்வீக மூர்த்திகளும் லவன் போன்ற மனித தெய்வங்களும் உருவாக முடியும்.
இவ்வாறு காமம் மறைந்த நிலையில் தோன்றும் வடமாகறல் ஜோதியில் தோன்றுவதே மனிதனின் அடிப்படையான சிவலிங்க உருவமாகும். அதனால் எத்தனை கோடி யுகங்கள் ஆனாலும் சிவலிங்க வடிவம் மனித சமுதாயத்தின் வழிபாட்டிலிருந்து மறையவே மறையாது என்று நம் சற்குரு தெளிவுபடுத்துகிறார். காரணம் சிவலிங்கம் என்பது மனிதனின் அடிப்படை ஆதார சக்தியே, ஆதிமூல வடிவமே, ஆதிவிடங்கமே.
திருக்காரவாசல் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஆதிவிடங்கர் இவ்வாறு ஆயுதத்தால் செதுக்கப்படாத மூர்த்தியாகத் திகழ்வதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும் ? வடமாகறல் அக்னி சக்திகளை முழுமையாகப் பெற பள்ளிமுக்கூடல் போன்ற திருத்தலங்களில் உள்ள ஷோடச கங்கா தீர்த்த சக்திகளும் பெருந்துணை புரியும். ராமபிரானின் பட்டாபிஷேகம் அயோத்தியில் நிகழ்ந்தபோது ஸ்ரீஅகத்தியரின் தலைமையில் பாரத கண்டத்தில் இருந்த அனைத்துத் தீர்த்தங்களிலிருந்தும் புனித தீர்த்தங்கள் அயோத்தி மாநகருக்கு குதிரைகளில் ஏற்றிச் செல்லபட்டன என்பதை ஏற்கனவே நம் சற்குருவின் திருவாக்கின் மூலம் நாம் அறிந்திருக்கிறோம்.
ராமர் பட்டாபிஷேகத்திற்கு ஒரு வருடம் முன்னரே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ராமபிரானும் சீதாப்பிராட்டியும் இத்தகைய தீர்த்தங்களால் அபிஷேகம் ஏற்றதற்கு இத்தகைய வடமாகறல் சக்திகளை உலகம் முழுவதும் அர்ப்பணித்ததும் இந்த தீர்த்த நீராடலின் பின்னணியில் அமைந்த இரகசியமாகும்.
சந்திரன் ஜன்ம லக்னமாக அந்த கடக நீர் ராசியில் உச்சம் பெற்ற குருவும் வளர்பிறை சந்திரனும் ஆட்சி பெற்று பிரகாசிக்க, இந்த கஜகேசரி யோகமானது வேறு எந்த மானிடனுக்கும் இதுவரை சித்தித்ததில்லை, இனி சித்திக்கப் போவதுமில்லை என்பதே ராம அவதாரத்தின் மகத்துவமாகும். இந்த அற்புத இராமாயண சுவையை இன்றும் நாம் அனுபவிக்க இங்கு நீங்கள் காண்பதே கருங்குருவி, கருட பகவான் பள்ளிமுக்கூடலில் தரிசனம் அளித்த காட்சியாகும்.
அக்னி தீர்த்தம்
மாகறல்
திருமணம் போன்ற சுபகாரியங்களில் நம்முடைய பழக்க வழக்கங்களை குடும்ப பெரியோர்கள் வழிகாட்டும் முறையில் அமைத்துக் கொள்வது எத்தகைய சிறப்புடையது என்பதை நாம் உணர வேண்டும். உதாரணமாக, திருமண வைபவங்களில் பணியாரக் குடம் அளித்தல் என்ற ஒரு சுபநிகழ்ச்சியை பல குடும்பங்களில் கொண்டாடுகின்றனர். அரிசி தான்யத்தை பிரதானமாகக் கொண்டு கையால் மாவை அரைத்து அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து, சட்டியில் சுட்டெடுத்து அத்துடன் மற்ற இனிப்பு பலகாரங்களையும் சேர்த்து மணமகள் புகுந்த வீடு செல்லும்போது ஸ்ரீதனமாக அளிப்பதே பணியாரக் குடமாகும். உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் இந்த பலகாரங்கள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டு விடும். இதில் நிவாரணம் ஆகும் திருஷ்டி தோஷங்கள், சிருஷ்டி தோஷங்கள், எண்ண தோஷங்கள் எத்தனை எத்தனையோ. விட்டுப்போன இந்த பணியாரக் குட தோஷ நிவர்த்தி சக்திகளை இன்றும் பெற விரும்பும் தம்பதிகள் மேற்கண்ட முறையில் பணியாரம் சுட்டு எடுத்து மூன்று பணியாரங்கள், இரண்டு கீரை வடைகள் என்றவாறு முருங்கை கீரை சேர்த்த வடையை தானமாக அளித்தலால் அற்புத பலன்களைப் பெறலாம். கஜகேசரி யோக நாட்களில் சுபகிருது வருடம் முழுவதும் இத்தகைய தான தர்மங்களை வள்ளிமலை, திருப்போரூர், மாகறல் போன்ற திருத்தலங்களில் நிறைவேற்றுவது சிறப்புடையதாகும். வெளியே சொல்ல முடியாத எத்தனையோ தாம்பத்ய உறவுப் பிரச்னைகள் இந்த சாதாரண தான முறையில் குணமடையும் என்பதே நம் சற்குரு தம் அடியார்களுக்கு அளிக்கும் வரப்பிரசாதமாகும்.
சுக்ரசக்தி வழிபாடு
திருக்காரவாசல்
இந்த 2022 சுக்ர வருடம் சுக்ர சக்திகளை எளிதில் பெறும் முறைகளை, விருத்தி செய்யும் வழிபாட்டு முறைகளை அளிக்கவல்லதால் இதன் பலாபலன்களை பெற விரும்பும் பக்தர்கள் சுத்தமான தேங்காய் எண்ணெயை வழிபாடுகள் அனைத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம். எப்படி சுத்தமான பசு நெய்யை பெற விரும்புவோர் சுத்தமான பசும் பாலை பயன்படுத்த வேண்டுமோ அதுபோல் சுத்தமான தேங்காய் எண்ணெயை குடும்ப ஒற்றுமைக்காக பெற விரும்பும் அன்பர்கள் முதலில் தூய்மையான சுக்ர சக்திகளை உடைய தேங்காய்களை பெற வேண்டும் என்பது முக்கியம். உதாரணமாக, சாராயம், புகையிலை, கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்திய ஒருவர் ஒரு தென்னைமரத்தின் மேல் சிறுநீர் கழித்தாலோ அல்லது உமிழ்ந்தாலோ அந்த மரத்திலிருந்து பெறும் இளநீர், தேங்காய்கள் எந்த அளவு ‘தூய்மையுடன்’ துலங்கும் என்பது நீங்கள் உணரக் கூடியதே. அத்தகைய தேங்காய்களை நாம் உணவாக ஏற்பது ஒரு புறம் இருக்க, அந்த தேங்காய்களை வழிபாட்டிற்குப் பயன்படுத்தினால் எப்படி இருக்கும் ? எனவே தேங்காய்களை இறைவனுக்குப் படைத்து புருஷசூக்தம் போன்ற துதிகளையோ, அல்லது வாசி தீரவே என்ற தேவார பதிகத்தையோ ஆறுமுறை ஓதி அந்த தேங்காய்களிலிருந்து எண்ணெய் ஆட்டி எடுத்து அதனால் ஏற்றும் தீபமே சுக்ர தீபமாகப் பிரகாசிக்கும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதல் ஆகும்.
மலர்களை மொய்க்கும் வண்டுகள், தேனீக்கள் உடனே அவைகளின் மேல் அமர்ந்து தேனை உறிஞ்சி விடுவதில்லை. இதன் பின்னணியில் அமைந்துள்ள பல தெய்வீக காரணங்களில் ஒன்றே சுக்ர சக்திகள் என்ற அபூர்வ சக்திகளை சமுதாயத்தில் தேனீக்கள் தங்கள் இறக்கைகளின் அசைவால் பரப்பும் திருப்பணியாகும். ஆறு சுக்ர கால்களை உடைய அனைத்து விதமான வண்டுகளும் இத்தகைய திருப்பணிகளை இயற்றும் வல்லமை பெற்றிருந்தாலும், இத்தகைய தேனீக்களில் கோத்தும்பி என்ற அரச வண்டுகளைப் பற்றியே மணிவாசகர் தன் திருக்கோத்தும்பி பதிகத்தில் சிறப்பித்துள்ளார்.
சிசிர ருதுக் காலத்தில் வள்ளிமலை, மாகறல் போன்ற திருத்தலங்களில் இத்தகைய கோத்தும்பிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வளைந்தது வில்லு பதிகத்தை இத்தகைய தலங்களில் வெள்ளிக் கிழமைகளிலோ அவரவர் பிறந்த தினங்கள், திருமண நாட்கள் இத்தகைய சிசிர ருதுக் காலத்தில் அமைந்தால் அவர்கள் தேனில் ஊறிய குல்கந்து தடவிய கோதுமை ரொட்டிகளை இத்தலங்களில் தானமாக அளித்தல் சிறப்பாகும். இதனால் சிறிது தூரம் நடந்தாலே மூச்சு முட்டுதல், களைப்பு ஏற்படுதல் போன்ற அசதிக் கோளாறுகள் குணமடையும். பெரும்பாலும் மனதில் தோன்றும் இயலாமையே இத்தகைய குறைகளுக்கு காரணம் என்று தெரிய வைப்பதும் இத்தகைய வழிபாடுகளின் பயனாகும்.
ஸ்ரீஸ்வாஹா தேவி
நாகப்பட்டினம்
தும்பிகள் மட்டுமே ஒரே இடத்தில் நிற்கவும், பின்னோக்கி பறக்கவும் இயலும். இதன் பின்னணியில் அமைந்த தெய்வீக சக்திகள் நம்மை பிரமிக்க வைப்பவையே. சாலாட்டி, வாலாட்டி என்ற இருவகை நாக்குகள் அல்லது சக்திகளுடன் அக்னி பகவான் துலங்குகிறார். அக்னி பகவானின் மனைவியான ஸ்வாஹா தேவி இரு அக்னி சக்திகளுடன் துலங்குகிறான். இருதலையுடன் துலங்கும் அக்னி பகவானை நாம் திருக்கழுக்குன்றம் சிவத்தலத்திலும், இரு சக்திகளுடன் துலங்கும் ஸ்வாஹா தேவியை நாம் நாகப்பட்டினம் சிவத்தலத்திலும் தரிசனம் செய்திடலாம். இந்த அக்னி பகவான் தம்பதிகளின் தரிசனமே பல திருமண தோஷங்களையும், மகப் பேறு பிரச்னைகளையும் தீர்க்கவல்லதாம். அக்னி பகவான் இருநாக்குகளுடன் துலங்குவதால் என்ன பயன் ? மனிதர்களைப் பொறுத்தவரையில் உடல் சூடு பத்து டிகிரி ஏறினாலும் அதித காய்ச்சல் நோயால் வாடி விடுவான், பத்து டிகிரி உடல் வெப்பம் குறைந்தாலோ ஜன்னியால் மலையேறி விடுவான். இதுவே அக்னி சக்தியில் துலங்கும் வாலாட்டி சாலாட்டி என்ற உயர் நிலை, தாழ்நிலை வெப்ப நிலை சக்திகளை உயிர்களுக்கு ஏற்றவாறு மாற்றி அளிக்கும் அக்னி பகவானின் தன்மையாகும். அதே போல் பூமிவாழ் மக்களின் வெப்பநிலை நூறு டிகிரிக்குக் கீழே இருந்தாலும் செவ்வாய் கிரகத்தின் உஷ்ண நிலையோ 5000 டிகிரி ஆகும். அங்கும் நம் மூதாதையர்கள் இருப்பார்களே, அவர்களுக்கு எப்படி ஹோம பிரசாத சக்திகளை ஸ்வாஹா தேவி அளிப்பது. இதுவே வாலாட்டி சாலாட்டி சக்திகளின் தன்மையாகும். வேண்டும் அளவிற்கு வெப்ப சக்திகளை ஏற்றவோ இறக்கவோ வல்ல திறமை பெற்றவளே ஸ்வாஹா தேவி ஆவாள். மலையன், மாகறன் என்ற இரண்டு அசுரர்கள் மாகறல் திருத்தலத்தில் தவமியற்றி இத்தகைய உயர்ந்த நிலை, தாழ்ந்த நிலை வெப்ப சக்திகளை உயிர்களுக்கெல்லாம் முறைப்படி அளிக்கும் சக்திகளைப் பெற்றார்கள். இந்த சக்திகளை மக்கள் பயன்பெறும் முறையில் நமக்கு அளிப்பவரே நம் சற்குரு. வளர்பிறை அஷ்டமி திதிகளில் பைரவரின் தொப்புளுக்கு மேல் அரைத்த சந்தனத்தால் காப்பிட்டு, தொப்புளுக்குக் கீழ் பசு வெண்ணெயால் காப்பிட்டு வழிபடுதல் அக்னி மாற்றங்களால் ஏற்படும் அனைத்து வியாதிகளுக்கும் ஒரு நிவாரணமாக அமையும். குறிப்பாக, ரஜ்ஜுப் பொருத்தங்கள் சரியாக அமையாத தம்பதிகள் இடையே அமையும் தட்ப வெப்ப நிலைகளையும், புது இடங்களில் குடியேறுவதால் ஏற்டும் சீதோஷ்ண நிலைகளை உடல் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் இத்தகைய வழிபாடுகள் முறைப்படுத்தும்.
வடமாகறல் சிவசக்தி
ஐக்ய சக்திகள்
மாகறல் என்றால் உடும்பு என்பது நாம் அறியும் பொருள். வடமாகறல் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஅகத்தீசர் இத்தகைய சாதாரண ஒரு பொருளைக் குறிக்கும் முகமாகவா எழுந்தருளி இருப்பார். அறிந்த ஒரு பொருளைக் காட்டி, அறியாத ஒரு தத்துவத்தை நமக்கு உணர்த்துபவர்களே மகான்கள், சிறப்பாக சித்தர்களின் பணியாகும்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
என்பதாக வெறுமனே ஒரு பொருளைப் பற்றினால் அதன் மேல் உள்ள ஆசை, அதை மேலும் மேலும் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை பெருகுமே தவிர, குறையாது. ஆனால், உடும்பு போல் ஒரு பொருளை மிக இறுக்கமாக பற்றிக் கொண்டால் இதன் அடுத்த நிலை “பற்றை விடுவது” தானே. இதுவே வட மாகறல் தத்துவம். மாகறல் என்ற நான்கெழுத்து வட என்ற இரண்டு எழுத்திற்கு குசாவாக அமையும். வடமாகறல் என்பது மூன்றிற்கு குசாவாகத் திகழ்வது, குசா சக்திகள் நன்மையை மட்டுமே விளைவிப்பன என்பதை உறுதி செய்வதும் வடமாகறல் தத்துவமாகும்.
மாகறல் என்ற உடும்பின் உடல் பகுதி சிவம் சக்தி என்ற மூன்று, மூன்று எழுத்துக்களின் சக்தியாக, இணைப்பாக இருப்பதே. இத்தகைய சிவசக்தி ஐக்ய சக்திகள் உடும்பின் வால் பகுதியில்தான் அதிக அளவு விரவி, நிரவி உள்ளன. மலை ஏறுபவர்களும், மதில் மேல் ஏறுபவர்களும் இவ்வாறு உடும்பின் வால் பகுதியில் கயிற்றைக் கட்டி அதைப் பற்றிக் கொண்டு மேலே ஏறுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த அளவிற்கு “நெருக்கமான ஒரு இணைப்பை” உடும்பின் வால் பகுதி பெறுவதற்கு இந்த “வடமாகறல்” சக்திகளே காரணம் என்பது இப்போது புரிகின்றது அல்லவா? இந்த வாலின் நுனி பகுதியே ஸ்ரீமாகறலீசராக, சுயம்பு லிங்க மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். கண்ணின் கடை மணியைக் காட்டி விட்டால் வானை முட்டும் மலையையும் ஒரு கடுகாக நினைத்து மக்கள் தாண்டுவதற்கு காரணம் இந்த சிவ சக்தி ஐக்ய வடமாகறல் சக்திகளே ஆகும்.
உடும்புகளுக்கு இரண்டு நாக்குகள் உண்டு. இந்த இரண்டு நாக்குகள் சாலாட்டி, வாலாட்டி அம்சங்கள் கொண்டு திகழ்வதால் ஸ்ரீஉடும்பீசர் என்ற திருநாமத்துடன் மாகறல் ஈசன் துலங்குகிறார். அகத்தின் செயல்பாடாக, மனத்தில் தோன்றும் நல்ல விஷயங்களை மற்றவர்களுக்குப் பயன்படும் விதமாக எடுத்துரைக்க இந்த இரட்டை நாக்குகள் உதவுவதால் ஸ்ரீஅகத்தீசர் என்றும் இத்தல இறைவன் சிறப்புப் பெறுகிறார்.
யாகாவாராயினும் நாகாக்க என்பதாக எதைக் காக்கா விட்டாலும், அடக்கி ஆளா விட்டாலும் நாக்கை அடக்கி ஆளத் தெரிந்தவனே இறைவனை உணர்ந்தவன் ஆகிறான். எப்படி வாலாட்டி சாலாட்டி என்ற அக்னி சக்திகள் அக்னி சக்தியின் இரு எல்லையைப் பயன்படுத்தும் விதத்தை உணர உதவுகின்றனவோ அதே போல பேசும் போது பேசி, பேசாமல் மௌனமாக இருக்க வேண்டிய சமயத்தில் பேச்சை அடக்கும் சாமர்த்தியத்தை அளிப்பதும் உடும்பின் இரு நாக்குகள் ஆகும்.
ஸ்ரீஅதிகார நந்தீஸ்வரர்
மாகறல்
இதைத்தான் கனிந்த கனி பரமாச்சாரியார், “வளவளவென்று பேசிக் கொண்டிருப்பது எளிதே, பேசாமல் மௌனமாக இருப்பதும் கைவரக் கூடியதுதான், எதை எப்படி எப்போது பேச வேண்டும் என்ற அறிந்து, தெரிந்து பேசுவது என்பதற்கு இறைவன் அளிக்கும் ஞானம் அவசியம்,” என்பார்.
சுக்லாம்பரதரம் .. வெண்ணிற ஆடையை அணிந்தவர் .. வ
விஷ்ணும் .. உலகம் முழுவதும் வியாபித்து இருப்பவர் .. ல
சசிவர்ணம் .. முத்துப் போல் வண்ணமுடையவர் .. ம்
சதுர்புஜம் .. நான்கு கரங்கள் உடையவர் .. பு
பிரசன்ன வதனம் .. ஆனந்த மந்தகாச புன்னகை உடையவர் .. ரி
(தியாயேத் சர்வ விக்ன உபசாந்தயே)
என்று நாம் பிள்ளையாரை துதித்து வணங்குகிறோம். சுக்ர விரலான கட்டை விரலை மற்ற விரல்களோடு சேர்த்து தலையில் குட்டிக் கொண்டு வணங்கும் சாதாரணமாக நாம் நினைக்கும் இந்த வழிபாடே மாகறல் திருத்தலத்தில் ஸ்ரீவலம்புரி விநாயகரை வணங்கும்போது மேற்கூறிய வடமாகறல் சக்திகளை மிகவும் எளிதாக, விரைவாக மக்கள் பெறுவதற்கு வழிவகுக்கும் என்றால் இத்தலத்தில் இயற்றும் மற்ற வழிபாடுகளின் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா ? ஆதிமுதல்வன் கணபதி என்று சிருஷ்டி தத்துவத்தின் தலைவனாகவும் நாம் கணபதியை விளிக்கும், வலம்புரி சக்தியை விளக்கும் துதி இதுவாகும்.
திருத்தலங்களில் நாம் இறை தரிசனத்திற்காக செல்லும்போது கும்பலாகச் சேர்ந்து செல்வதை நம் சற்குரு அங்கீகரிப்பதில்லை. குறிப்பாக திருவெறும்பூர் போன்ற திருத்தலங்களில் எறும்புகள் ஒன்றன்பின் ஒன்றாக செல்வதைப் போல் ஒருவர் பின் ஒருவராக, மௌனமாகச் செல்ல வேண்டும். இறை தரிசனத்திற்கப் பின்னும் முடிந்த மட்டும் நந்திகள் குறுக்கே செல்லாது கோயிலை விட்டு அமைதியாக வெளியேற வேண்டும் என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதல். அதே போல் எப்படி ஒரு குழந்தை தாயின் கர்ப்பப்பையான ஆரணமையத்தில் உருவாக வேண்டுமோ அதே போல் அந்த ஆரண மையத்திலிருந்து முறையாக வெளிவர வேண்டும். ஆயுதங்களாலோ, Caesarean operation போன்ற இயற்கைக்கு முரணான முறைகள் மூலமோ குழந்தைகள் வெளிவருவது ஏற்புடையது அல்ல. இவ்வாறு இயற்கைக்கு ஒவ்வாத முறையில் இவ்வுலகில் தோன்றியவர்கள் வழிபட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீமாகறல் ஈசன் ஆவார்.
ஸ்ரீபைரவர் மாகறல்
விதி என்ற ஒன்று இருந்தால், அதற்கு விலக்கு என்ற ஒன்றும் இருக்கத்தானே செய்யும். ஆனால், விதியை விதித்தவன்தானே அந்த விலக்கையும் அளிக்க முடியும். இவ்வாறு இறைவன் விதித்த விதிக்கு விலக்கை அளிக்கவல்ல தெய்வமே இத்தலத்தில் எழுந்தருளிய ஸ்ரீஅதிகார நந்தி மூர்த்தி ஆவார். குறைந்தது மூன்று முணி நேரம் ஸ்ரீஅதிகார நந்தி மூர்த்தி முன் அமர்ந்து தமக்குத் தெரிந்த துதிகளை ஓதி வழிபடுதலே மேற்கண்ட குறை உடையவர்கள் தங்கள் “குறைகளை” நிவர்த்தி செய்து கொள்ளும் மார்க்கமாகும்.
வாங்கிய நிலத்தில் வரவு பார்த்திடாமல் தூங்கியே கழித்தாயே தும்பியப்பா என்ற ஆசானின் அனுபவ மொழி தும்பியின் சுறுசுறுப்பான செயலைப் பற்றி விளக்குகிறது. தும்பி ஒரு நிமிடத்திற்கு ஏழு லட்சம் முறை தன் இறைக்கைகளை அசைத்து பறக்கவல்லது. இத்தகைய அதியற்புத வேகத்திலும் தன் மனைவியுடன் அன்புடன் அளவளாவி உறவு கொள்ளும் இயல்பு உடையது. அப்படியானால், “எனக்கு நேரமில்லை என்று கூறி இறைவனுடன் உறவு கொள்ளாமல் இருக்கலாமா ?” என்று கேட்பவரே நம் சற்குரு. இதையே உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே என்று இறைவனின் பெருங்கருணையை விவரிக்கிறார் அப்பர் சுவாமிகள். இத்தகைய நெருக்கத்தை இறைவனுடன் உண்டாக்க வல்லதே மாகறல் திருத்தலத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடுகளாகும். இறைவனுக்குச் சூட்டிய மலர்களை மனைவி தன் தலையில் சூடிக் கொள்ளும்போது கணவனின் முன்னிலையிலேயே சூடிக் கொள்ள வேண்டும் என்ற சித்தர்களின் வழிகாட்டுதல் எவ்வளவு சுவைக்கிறது பார்த்தீர்களா, இல்லை மணக்கிறதா ?
ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர்
மேலபரங்கிரி
இவ்வாறு ஒரு நெருக்கம் தம்பதியர்களுக்கிடையில் ஆரம்ப கட்டமாக ஏற்பட வேண்டும் என்பதற்காகவே திருத்தலங்களில் இறைவன் இறைவி இவர்களுக்கிடையில் அமர்ந்து அருள்புரியும் சோமாஸ்கந்த மூர்த்தியை அடிக்கடி தரிசனம் செய்து குடும்ப ஒற்றுமையை வளர்த்துக் கொள்ளும்படி நம் சற்குரு வழிகாட்டுகிறார். “தும்பியப்பனை” தொடர்ந்து வழிபட மாகறல் திருத்தல இரகசியங்கள் மேலும் மேலும் தெளிவாகும்.
வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தன முப்புரம் உந்தீபற
ஒருங்குடன் வெந்தவாறு உந்தீபற
என்று மணிவாசகர் பாடும்போது இதில் உள்ள “உந்தீபற” வார்த்தைகள் ஏதோ இசை சுவைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளது போல் தோன்றும். உண்மையில் இதில்தான் ஆரணமைய கருத்துக்கள் பெருமானால் பக்தர்களின் நலனுக்காக அளிக்கப்பட்டுள்ளன என்பது இந்தப் பதிகத்தை தொடர்ந்து பாடி வருவதால் பக்தர்கள் தாங்களாகவே உணர்ந்து கொள்ளலாம். இப்பதிகத்தில் “உந்தீபற” என்பது இரண்டு முறை இடம் பெறுவது ஏனோ ?
தவளசித்து தாளமிடும் தங்கால் |
தவளசித்து அல்லது தவளைசித்து என்ற ஒருவகை சித்தி உண்டு. இதில் வல்லவரே தங்கால் மௌனகுரு ஆவார். வள்ளிமலை அருகே உள்ளதே தங்கால் திருத்தலம் ஆகும். மௌனகுரு என்னும் வள்ளிமலை சுவாமிகள், சுந்தரராம் குருஜி போன்றோர் ஜீவசமாதி அமைந்த திருத்தலமே தங்கால் ஆகும். அரிய சிரஞ்சீவி மூலிகைகள், காய கல்ப சக்திகள் குடிகொண்ட திருத்தலம். நம் சற்குரு சிரஞ்சீவி சக்திகளை புனருத்தாரணம் செய்த முக்கிய தலங்களுள் தங்கால் திருத்தலமும் ஒன்றாகும். திருமால், முனிவர் வடிவில் தோன்றி ஒரு மானைப் பார்க்க அந்த மான் கர்ப்பமடைந்து ஒரு அழகிய பெண் குழந்தையை பிரசவிக்க, அந்த குழந்தையே வள்ளி என்ற கன்னியாக முருகப் பெருமானை மணக்கும் பாக்கியம் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஸ்ரீவள்ளி வள்ளிமலை
நாம் நினைப்பது போல் வள்ளி என்பவள் ஒரு சாதாரண குறத்தி மகள் அல்ல. தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் துணைவியாக எழுந்தருள வல்லவள் வள்ளி என்றால் தமிழுக்கும் வள்ளிக்கும் எத்தகைய ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். தமிழில் மட்டுமே ல, ழ, ள என்ற மூன்று மெல்லின எழுத்துக்கள் இடம் பெறுகின்றன. இதிலும் ‘ள’ என்ற அட்சரமே தவள சித்திகளுடன் தொடர்புடைய ஆத்ம சக்திகளை உடையதாகும். மனித உடல் உறங்குவது தூக்கம் என்று அழைக்கப்படும், ஆத்மா உறங்குவது தவள சித்து எனப்படும். அனைத்தும் உறங்கினாலும் ஆத்மா என்றும் விழித்திருப்பதே என்பதை நாம் அறிவோம். அப்படியானால் ஆத்மா ‘உறங்குவது’ என்றால் என்ன ? ஆத்ம உறக்கத்தை உணர்ந்த, சுந்தரராம் குருஜி போன்ற உத்தமர்களே ஆத்ம உறக்கத்தைப் பற்றி விவரிக்க முடியும் என்றாலும் தங்கால் ஆஸ்ரமத்தில் குறைந்தது ஒரு மணி நேரம் தங்கி ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் இந்த தவள சித்தி சக்திகளை நமக்கு தேவையான அளவு பெற்றுக் கொள்ளலாம் என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதல்.
வேலூர் ஸ்ரீஜலகண்டேஸ்வரர் திருத்தல திருப்பணிக்காக சுவாமியை நகர்த்த வேண்டியிருந்தது. எவ்வளவு முயன்றும் மூல சிவலிங்கத்தை நகர்த்த முடியாமல் தவித்தபோது ஸ்ரீசுந்தரராம் குருஜி எட்டு பேர்களை மட்டும் வைத்துக் கொண்டு அந்த சிவலிங்க மூர்த்தியை வேறு இடத்திற்கு நகர்த்தி வைத்தார். கும்பாபிஷேக திருப்பணிகள் நிறைவேறிய பின் மீண்டும் அதே போல் எட்டு பேரை மட்டும் வைத்துக் கொண்டு அந்த லிங்க மூர்த்தியை பழைய இடத்தில் வைத்து புனருத்தாரணம் செய்தார்கள்.
“இதுவே தவளசித்து...”, என்பார் நம் சற்குரு. நூறு பேர் சேர்ந்தாலும் தூக்க முடியாத அளவு எடை உள்ளதே வேலூர் சிவலிங்க மூர்த்தி. ஆனால், அந்த “கல்லை” தூங்க வைத்தால் அது பஞ்சு போல் இலேசாகி விடும். அப்போது ஒரு குழந்தை கூட அந்த மூர்த்தியை நகர்த்தி விட முடியும். இதுவே தவள சித்து என்ற சித்தியின் மகிமை. இதை நிறைவேற்றக் கூட சக்தி பெற்ற ஒரே மகான் ஸ்ரீசுந்தரராம் குருஜி. இந்த சித்தியை அருளவல்ல ஒரே திருத்தலம் தங்கால். வள்ளி வள்ளிமலைப் பகுதியில் சிறுமியாய் ஓடி ஆடியபோது இத்தகைய சித்திகளை எல்லாம் அங்கு நிரவி அரும்பணி ஆற்றினாள். எனவே வள்ளிமலையில் குணமாகாத வியாதிகள் எதுவுமே இல்லை எனலாம், இங்கு கிட்டாத உடல் ஆரோக்ய சக்திகளும் எதுவும் கிடையாது என்பதே வள்ளிமலையின் பெருமை.
பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியின் போது உள்ளிழுக்கும் காற்று பூரகம் என்றும், உள்ளே அடக்கி வைத்தல் கும்பகம் என்றும், வெளியே விடும் காற்று ரேசகம் என்றும் வழங்கப்படும். நம் சற்குருவோ வெளியே விடும் சுவாசத்தை ரேசகம் என்று கூறுவார்கள். இதன் காரணம் என்ன ? ஒரு குழந்தை பிறக்கும்போது அது 60, 70 ஆண்டுகள் ஆயுள் சக்தி கொண்ட குழந்தையாய் பிறக்கிறது என்று கூறுவது பொதுவான ஜோதிட விதி. நம் சற்குருவோ மனிதனின் ஆயுள், மூச்சுக் கணக்கை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது என்பார். எனவே நாம் வெளிவிடும் ஒவ்வொரு மூச்சுக் காற்றும், இறைவனை நோக்கி செல்லும் ரேசக சக்தி உடையதாகும். இந்த ரேசக காலத்தை நாம் நீட்டிக்கும் அளவிற்கு நம் ஆயுள் பெருகும் என்பதே சித்தர்கள் கூறும் ஆயுள் கணக்கு, என்ன ஆச்சரியம் இந்த அற்புதம் ?!
ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்
வள்ளிமலை
தாம்பத்ய உறவில் ஈடுபடும் மனிதன் வேகமாக மூச்சு விடுவதால் அவன் பலவீனம் அடைந்து ஆயுள் குறையும் என்பது சாதாரண மக்களின் கூற்று. விந்து விட்டான் நொந்து கெட்டானே... என்ற பழமொழியும் இதைத்தான் குறிக்கிறது. தாம்பத்ய உறவு என்பது ஆரண்ய மைய சக்திகளுடன் தொடர்பு கொள்ளும்போது அதனால் மனித ஆயுள் விருத்தி ஆகிறது என்பதே தெய்வீக இலக்கணம். அதனால்தான் முறையான தாம்பத்ய உறவு அஸ்வமேத யாகம் நிறைவேற்றிய பலனை அளிக்கவல்லது என்று சித்தர்கள் உரைக்கின்றனர். இந்த “முறையான” என்பதில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் நிரவியுள்ளன என்பதால் வள்ளிமலையில் நிறைவேற்றும் வழிபாடுகள் இந்த “முறையான” என்ற பதத்தை மக்கள், பக்தர்கள், அடியார்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தித் தரும்.
வெறுமனே கல்லை தூங்க வைப்பதால் மட்டும் தவள சித்து பூரணம் பெறுவது இல்லை. இதில் மறைந்துள்ள இரகசியமே தூங்காமல் தூங்கி சுகம் பெறும் சித்தர்கள் கூறும் சாகாக் கலை ஆகும். சாகாக் கலையில் இரண்டு வகை உண்டு. தூக்கம், கனவு, நனவு என்ற மூன்று நிலைகளைக் கடந்த சுசுப்தி நிலையில் இருப்பது. இது ஸ்ரீஆதிசங்கரர் கூறும் யோக நிலை. காலையில் தூக்கம் கலைந்து எழாமல் தூக்க நிலையிலேயே உணர்வுடன் இருப்பது. இதுவே ஸ்ரீரமணர் கூறும் ‘நான் யார்?’ என்று தன்னைத் தானே அறிந்து கொள்ளும் யோக நிலை. இந்த இரண்டு நிலைகளுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்விப்பதே தவள சித்து என்பதாகும்.
வள்ளிமலை அடிவாரத்திலும், நடுப் பகுதியிலும், மலை உச்சியிலும் பல சுனைகள், தீர்த்தங்கள், நீர்க்கசிவுகள் உள்ளன. சிரஞ்சீவி சக்திகள் பல்கிப் பெருகும் நீர்வள தெய்வீக தடாகமே வள்ளிமலை வனப்பகுதியாகும். இந்த சிரஞ்சீவி சக்திகளை மக்களுக்கும் பக்தர்களுக்கும் வாரி வழங்கியவரே, இன்றும் வழங்கிக் கொண்டிருப்பவரே ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள் எனும் வள்ளிமலை சுவாமிகள் ஆவார்.
இங்குள்ள சித்திரத்தில் ஸ்ரீவள்ளிமலை சுவாமிகளின் இருபக்கமும் உள்ள குன்றுகள் லட்சுமி, சரஸ்வதி என்ற மலைகளாய் சுவாமிகளால் வணங்கப்பட்டட சக்திகளாகும். இந்த லட்சுமி சரஸ்வதி என்ற சக்திகளுக்கிடையில் “வள்ளி” எனும் சக்தியை ஆவாஹனம் செய்து ஸ்ரீபொங்கி அம்மன் என்று புகழ்ந்து வழிபட்டார் வள்ளிமலை சுவாமிகள். திருமகள், கலைமகள் இருவருக்கிடையே பொங்கி வரும் சக்தியே பொங்கி அம்மன் ஆவாள். ஆழ்ந்த பொருள் பொதிந்த, நம் சற்குரு அளித்த இந்த வாசகத்தை தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வருவதும் குமர குருவின் “மணாள” சக்தியை உணர்விக்கும் வழிபாடாகும்.
ஸ்ரீபொங்கி அம்மன்
வள்ளிமலை
வள்ளியை வள்ளி என்று கூறாமல் ஏன் வள்ளிமலை சுவாமிகள் வள்ளியை பொங்கி என்று அழைத்தார். குமரி தீர்த்தம் என்ற சூரிய, சந்திர, நட்சத்திர ஒளிபடா வள்ளிமலையில் உள்ள தீர்த்தத்தை தரிசனம் செய்து ஆத்மவிசாரம் செய்து வந்தால்தான் பொங்கி அம்மன் என்ற பதத்தின் பொருளை அறிந்து கொள்ளலாம். சாதாரண மனிதனுக்கு இதற்கு எத்தனை யுகங்கள் ஆகும் என்று கூற முடியாது என்பதால் சித்தர்கள் குமரி தீர்த்தத்தை தரிசனம் செய்து நலம் தரும் தேவாரப் பதிகங்களை இந்த தீர்த்தம் முன் அமர்ந்து ஓதும்படி வழிகாட்டுகிறார்கள். இது ஓர் அற்புத இறை சேவையும் கூட. உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்த குமரி தீர்த்தம் முன் அமர்ந்து தேவாரப் பதிகங்களை ஓதினாலும் இந்த தீர்த்தத்தின் சக்தியை “saturate” செய்ய முடியாது, நிறைவுறச் செய்ய முடியாது என்பதே இந்த தீர்த்தத்தின் மகிமையாகும். முருகா, பொங்கி, குமரி என்ற வார்த்தைகள் குறிக்கும் இறைத் தன்மையை நாம் “பூரணமாக” அறிந்து கொள்ள முடியாது என்பதை தெளிவாக உணர்த்துவதே குமரி தீர்த்தத்தின் மகிமையாகும்.
அப்படியானால் குமரி தீர்த்தத்தின் முன் அமர்ந்து நிறைவேற்றும் வழிபாட்டால் என்ன பயன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். நமது குழந்தைகள், பரம்பரைக்கு மட்டுமல்லாது நமது சமுதாயத்திற்கு தேவையான அனைத்து நோய் நிவாரண சக்திகளையுமே நாம் குமரி தீர்த்த வழிபாட்டால் பெற்றுத் தர முடியும் என்பதே குமரி தீர்த்தத்தின் மகிமையாகும். குமரி தீர்த்த வழிபாட்டின் போது சிறகடிக்கும் பட்டாம்பூச்சிகளின் தரிசனத்தை நீங்கள் பெற்றால் உங்கள் குடும்பத்தில் மிக விரைவில் ஒரு மங்கள காரியம், சுப நிகழ்ச்சி நிகழப் போகிறது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். தோழிகளுடன் வள்ளி இத்தலத்தில் விளையாடியபோது வள்ளி பெற்ற சுபசகுனமே இது. இதற்குப் பின்னரே வள்ளி குமரனின் தரிசனத்தைப் பெற்றாள். வள்ளியையும் குமரனையும் இணைத்த கணநாதனே, ஸ்ரீவலம்புரி நாயகனே வடமாகறல் திருத்தலத்தில் வலம்புரி விநாயகப் பெருமானாக எழுந்தருளி உள்ளார் என்பதே சித்தர்கள் வழங்கும் சித்தாமிர்தம் ஆகும்.
வள்ளி மணாளன் அருளும் வளமிகு வாழ்வு |
சிரஞ்சீவி சக்தி என்பது நாம் நினைப்பது போல் ஒரே ஒரு சக்தியைக் குறிப்பது அல்ல. முக்கியமான 1008 சக்திகள் மட்டும் வள்ளிலை குமரி தீர்த்த வழிபாட்டில் பெருகுகின்றன. இதில் தனிகை குமரி என்ற சஞ்சீவ ஆயுஷ்கர சக்தியை ஒவ்வொரு வருடமும் ஆங்கில புத்தாண்டு துவக்கத்தில் அருளியவரே ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள் ஆவார். ஸ்ரீவள்ளிமலை சுவாமிகளின் மேற்பார்வையில் ஒவ்வொரு தம்பதியரும் தனிகைமலை படிகளில் ஆங்கிலப் புத்தாண்டு முதல் தேதி அன்று நின்று கொள்வர். சுவாமிகள் ஒரு மந்திரத்தை ஓதிய பின்னர் அந்த தம்பதிகள் அந்த மந்திரத்தை ஓதி அடுத்த படிக்கு ஏறிச் செல்வர். அடுத்த படியில் வேறொரு மந்திரத்தை ஓதிய பின்னர், அடுத்த படிக்கு ஏறிச் செல்வர்.
ஸ்ரீமுருகப் பெருமான்
வள்ளிமலை
இவ்வாறு குமரி தீர்த்தத்தில் பொலியும் சஞ்சீவ ஆயுஷ்கர சக்தியையே தம் அனுகிரகமாக தன்னை நம்பிய பக்தர்களுக்கெல்லாம் அருளிவந்தார் ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள். இதை விளக்கிய நம் சற்குரு, “வருடப் பிறப்பு என்ற முதல் தேதிக்கும் சுவாமிகள் அருளிய சஞ்சிவ ஆயுஷ்கர சக்திகளுக்கும் தேதி குறித்த எந்த சம்பந்தமும் இல்லை, சுவாமிகள் தன்னுடைய தபோ பலனால்தான் இந்த சஞ்சீவ சக்திகளை அருளினாலும் மக்கள் வழக்கில் பிரசித்தி பெற்ற ஒரு நாளை இந்த சக்தி மாற்றத்திற்கு தேர்ந்தெடுத்தார், அவ்வளவே...”, என்பார். தம்பதிகள் இருவரும் ஒரே படியில் நிற்கும்போது கணவனின் ரேசக சக்தி மனைவியின் பூரக சக்தியாகவும், மனைவியின் ரேசக சக்தி கணவனின் பூரக சக்தியாகவும் மாறி மாறி பொலிவதால் இது ஆயுஷ்கரம் என்ற மங்கள சக்திகளை வர்ஷிக்கும். இது குடும்ப ஆரோக்யத்தை, ஒற்றுமையை வளர்ப்பதுடன் சமுதாயத்திலும் அமைதியையும் ஆனந்தத்தையும் அளிக்கும் பூஜையாக மலரும்.
இன்று நாம் ஸ்ரீவள்ளிமலை சுவாமிகளின் பூத உடல் தரிசனத்தைப் பெற முடியாவிட்டாலும் குமரி தீர்த்தத்தில் தேவாரப் பதிகங்களை ஓதுவதால் “குமரி” சக்திகளை நாமும் சமுதாயமும் பெற்று வாழ்வாங்கு வாழலாமே.
ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள் தம்பதிகளை திருத்தனி படிகளை ஏறி வந்து சுவாமியை வணங்குமாறு அருள்புரிந்தமைக்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. திருவீழிமிழலை, சுவாமிமலை போன்ற தலங்களில் 12 ராசிகள், வாரம், மாதம், 60 வருடங்களைக் குறிக்கும் படிகள் அமைந்திருப்பது போல் திருத்தனி மலையில் ஒரு வருடத்திற்கான 365 நாட்களைக் குறிக்கும் படிகள் அமைந்துள்ளன. இந்த படிகளில் ஏறி வரும் பக்தர்களுக்கெல்லாம் முருகப் பெருமானின் ஆசியை ஐங்கரன் ஆசியாக பெற்றுத் தரும் வகையில் முருகப் பெருமானின் யானை வாகனம் பக்தர்களை நோக்கி அமைந்துள்ளதே நாம் வேறு எங்கும் காண முடியாத “தனி” சிறப்பாகும். கோபம் தணிந்த சாந்த மூர்த்தியாய் “தணி” முருகனாய் அருள்வதால், திருத்தனி திருத்தணி என்றும் வழங்கப்படும்.
சரவணப் பொய்கை
வள்ளிமலை
ரேசகம் என்ற சுவாசம் வலது மூக்கில் அமைந்த ஐந்து பூத முடிச்சுக்கள் வழியாக வெளியேறுவதால் இந்த “திருத்தனி” சக்திகளை பக்தர்களுக்கெல்லாம் வருடம் முழுவதும் நிலவுமாறு பெற்றுத் தந்ததே ஸ்ரீவள்ளிமலை சுவாமிகளின் பெருங்கருணை என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ? எப்போதும் வேல் ஏந்தி சம்ஹாரக் கோலத்தில் திகழும் முருகப் பெருமான். வேல் ஆயுதம் இன்றி யானை வாகனத்துடன் மாகறல் திருத்தலத்திலும், தணிகைமலையிலும் எழுந்தருளி இருப்பது சாந்த சக்திகளை தம்பதிகளுக்கும், பக்தர்களுக்கும் வர்ஷிக்கத்தானே.
ஐந்தெழுத்து கோட்டை கட்டி
ஐந்தெழுத்து காவலனாய்
ஐந்தெழுத்தின் மேலமர்ந்த
ஐந்தெழுத்து அண்ணலே தனிகைவேல்
என்று தனிகை அமர்ந்த ஆறுமுகனை சிறப்பிக்கிறது அகத்திய நாடிப் பாடல்.
முற்காலத்தில் இறைவனின் இயற்கை சக்திகளையே இடி, மின்னல், மழை, மலை வடிவில் வழிபட்டு வந்தனர் மக்கள். ருத்ரம், சமகம் போன்ற வேதத் துதிகள் யாவும் இத்தகைய இறைவனின் உருவ வர்ணனைகளைக் கொண்டவையே. காலப் போக்கில் மனித மனம் தன்னைப் போன்ற ஒரு இறை உருவத்தை நாடியதால்தான் முருகன், பிள்ளையார், மாரியம்மன் போன்ற இறை மூர்த்திகளும், உருவ வழிபாடுகளும் தோன்றின. இவ்வாறு இறை மூர்த்திகளை இறை சக்திகளாக வழிபட விரும்பும் பக்தர்களுக்கு அமைந்த தெய்வீகச் சோலையே வள்ளிமலை என்றால் அது மிகையாகாது. மலை, குன்று, சுனைகள், தீர்த்தங்கள், மரங்கள், செடிகள், பூக்கள், பரந்த வானம் என்றவாறு இறை சக்தி பொங்கி பூத்துக் குலுங்கும் இறை சோலையே வள்ளிமலை ஆகும்.
மொழியாத மொழி |
“சொல்லாத வார்த்தைக்கு நீ எஜமானன்
சொல்லிய வார்த்தைக்கு அது எஜமானன்”
என்பார் நம் சற்குரு. ஒரு தவறான வார்த்தையைக் கூறி ஒருவரைத் திட்டி விட்டால் அவர் வாழ்க்கை முழுவதும் அந்த வார்த்தை ‘கொட்டிய’ வேதனையால் துடித்துக் கொண்டு இருப்பார் என்பதால் நாம் வார்த்தைகளை பிரயோகம் செய்யும்போது மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அதே சமயம் சொல்லாத வார்த்தைகள் கொடுக்கும் ஆனந்தத்திற்கும் எல்லையே இல்லை இன்பதால் இந்த பிரயோகமே மகான்களால் அடிக்கடி கையாளப்படுகிறது.
வள்ளிமலை
உதாரணமாக,
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
என்று அப்பர் பெருமானை சுண்ணாம்புக் காளாவாயில் போட்டு அவரைக் கொடுமைப்படுத்தியபோது ஈசன் திருவடிகளின் குளிர்ச்சியை தியானித்து அடைந்த பேரின்பத்தையே இவ்வாறு வர்ணிக்கிறார் சுவாமிகள்.
மூசு வண்டறை பொய்கை என்றால் வண்டுகள் மொய்க்கும் தாமரைகள் நிறைந்த பொய்கை என்று பொருள். ஆனால், இங்கு தாமரை என்ற வார்த்தையையே அப்பர் சுவாமிகள் கூறவில்லை. சிருஷ்டி முதலாக இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன்கள், தாவரங்கள், விலங்குகள் அனைத்தும் கலப்படமாகிவிட்டன. இந்த கலப்படத்தால் பாதிக்கப்படாது, தூய்மையாக விளங்கும் (uncrossed) ஒரே பொருள் தாமரை ஆகும். அதனால்தான் எல்லா தெய்வ மூர்த்திகளும் இத்தகைய கலப்படம் இல்லாத தூய்மையைக் குறிப்பதாக தாமரையை கையில் ஏந்தியோ, தாமரை மேல் அமர்ந்தோ, தாமரை பூத்த தடாகங்களில் எழுந்தருளியோ இத்தகைய தூய்மை பிரபாவத்தை, தூய்மை சக்தியை பக்தர்களுக்கு அருள்கின்றனர்.
கறல் என்றால் விறகு என்று பொருள். விறகில் தீயினன் என்று அப்பர் சுவாமிகள் இறைசக்தியை வர்ணிக்கின்றார். மாகறல் என்றால் மிகப் பெரிய அக்னி சக்தி. இந்த மிகப் பெரிய அக்னி சக்தி தோன்றிய இடமே மாகறல் திருத்தலமாகும். முருகப் பெருமான், எம்பெருமான் முக்கண் ஜோதி பிரகாசத்தில் தோன்றியவர் என்பதை நாம் அறிவோம். எல்லையில்லா பிரகாசமுடைய அக்னி சக்தியை தாங்கும் அளவிற்கு குளுமை சக்திகள் நிரம்பிய ஒரு பொருள் பூலோகத்தில் எங்குமே இல்லை என்பதால் அதை இறைவன் சரவணப் பொய்கை என்ற குளுமையான தீர்த்தத்தில் தூய்மையே வடிவான ஆறு தாமரை மலர்கள் மேல் பொழிந்து முருகப் பெருமானின் அதீத அக்னி சக்தியை பூலோகத்தில் எழுந்தருளச் செய்தார்.
வள்ளிமலை
முருகப் பெருமானின் இந்த அதீதமான சிவ நேத்ர முக்கண் ஜுவாலை சக்திகளை பூலோக மக்கள் அனைவரும் பெறும் பொருட்டே வள்ளி தெய்வானை என்ற இரு தேவ சக்திகளையும் இறைவன் அளித்து கருணை புரிந்தார் என்பதே எம்பெருமானின் கருண மழைக்கு சாட்சியாக நிற்கும் திருவிளையாடலாகும். இவ்வாறு அரிதிலும் அரிய அக்னி சக்திகளை மக்களுக்கு அளிப்பதற்காகவே நம் சற்குரு போன்ற கருணா மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர் என்பதே நம் சற்குருவின் அவதார இரகசியங்களில் ஒன்றாகும்.
வள்ளி மலையில் உள்ள குமரி தீர்த்தம் இத்தகைய சரவண பொய்கை சக்திகளையும், அக்னி தீர்த்தத்தையும் ஒருங்கே இணைத்து அளிக்கவல்லது என்றால் இதன் மகிமைதான் என்ன ? மெய், மனம், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டதே குமரி தீர்த்தத்தின் மகிமையாகும். இந்த மகிமைகளை ஓரளவு அடியார்கள் பெற்று மக்கள் சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கவே குமரி தீர்த்தத்தின் அருகில் அமர்ந்து நலம் தரும் தேவாரப் பதிகங்களை ஓதும்படி நம் சற்குரு வழிகாட்டுகின்றார். ஒவ்வொரு பதிகத்தின் நிறைவிலும் திருச்சிற்றப்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் என்று ஓதும்போது இந்த 30 அட்சரங்கள் “சற்குருவின் மொழியாத மொழியாக” அமைந்து அடியார்களுக்கு நற்சக்திகளை வாரி வழங்கும் என்பதை அனுபவத்தில் ருசித்துப் பார்த்தால்தானே தெரியும்.
சித்தர்கள் தவச் சுனை
வள்ளிமலை
ஒரு முறை நம் கோவணாண்டி சிறுவனான நம் சற்குருவுடன் வள்ளிமலைக்கு பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே வந்து விட்டார். இங்கு நீங்கள் காணும் சுனையின் கரையில் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொண்டார். கண்களைத் திறக்காமல் ஏதேதோ மந்திரங்களை ஓதிக் கொண்டே இருந்தார். கோவணாண்டி அருகில் அதேமுறையில் பத்மாசனக் கோலத்தில் சிறுவன் அமர்ந்தாலும் அருகில் பல மிருகங்களின் அசைவுகளும், உறுமல் ஒலிகளும் அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்தன. இதற்காகத்தான் நம் கோவணாண்டி கண்களை மூடிக் கொண்டு விட்டாரோ என்று நினைத்துக் கொண்டே கண்களைத் திறக்காமலே தனக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தான் சிறுவன்.
காலை கடந்து மதியம் வந்தது, மதியமும் மறைந்து மாலையும் நெருங்க ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக சிறவனுக்கு பயம் சேர்ந்து அவனைப் பாடாய்ப் படுத்தி விட்டது. பசி ஒரு புறம், பயம் மறுபுறம். சிறுவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கைகளால் தொட்டுப் பார்க்கும் நெருக்கத்தில் பெரியவர் அமர்ந்திருந்தாலும் ‘தவத்தில்’ மூழ்கியிருக்கும் அவரை எழுப்பிவிட்டால் நம் பாடு அதோகதிதான் என்பதை சிறுவன் உணர்ந்திருந்ததால் அவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. கண்ணைத் திறந்தாவது என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்றாலும் அதற்கும் பீதி மனதை காரிருளாய் கவிழ்ந்து தாக்கியது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிறுவன் தவித்துக் கொண்டு இருந்தபோது பெரியவரின் குரல் தேனினும் இனியதாய் தென்றலில் தவழ்ந்து வந்தது, “டேய், இப்போது வீசுவதுதான் வள்ளித் தென்றல், மெதுவாக, மிக மெதுவாக இந்த தென்றல் காற்றை வலது மூக்கின் வழியே உள்ளே இழுத்து வலது மூக்கின் வழியாகவே வெளியே விடு ...”, என்றார்.
அப்பாடா ... என்று நினைத்து ஒரு பெரிய மூச்சை விட்டு விட்டு பெரியவர் கூறியபடியே பிராணாயாம பயிற்சியை நிறைவேற்றினான் சிறுவன். காலையிலிருந்து உண்ண உணவு, அருந்த நீர் என்று அந்த அத்துவானக் காட்டில் கிடைக்காவிட்டாலும் பெரியவரின் தெம்பூட்டும் குரலையாவது கேட்க முடிந்ததே என்பதுதான் சிறுவன் அடைந்த ‘பெரிய’ சந்தோஷம். சிறுவனுக்கு ஏற்பட்ட பயத்தில் பெரியவர் கூறிய முறையிலேயே சுவாசம் வலது மூக்கின் வழியாகச் சென்று வலது மூக்கின் வழியாகவே வெளியேறி ‘ரேசக’ சக்தியைப் பெற்றதா என்பதை உணர முடியாவிட்டாலும், தான் பெற்றது ‘வள்ளி ரேசக’ சக்திதான் என்பதை பிற்காலத்தில் உணர்ந்து கொண்டான். எப்படி ?
ஸ்ரீசிரகிரி பெருமான்
வள்ளிமலை
மூன்று முறை இவ்வாறு வலது மூக்கின் வழியாக வள்ளித் தென்றலை சுவாசித்த பின்னர் பெரியவர் கண்களைத் திறந்து, “சரி வாடா நாம் போகலாம், நம் டியூட்டி முடிந்தது...”, என்று கூறி சிறுவனை இழுத்துக் கொண்டு அந்த அரைகுறை வெளிச்சம் பொலியும், பொழியும் நேரத்தில் வள்ளி மலையை விட்டு வெளியேறினார். கோவணாண்டி அவ்வாறு வந்தபோது அங்கிருந்த ஆலமர விழுதுகளை நெடுநாள் பிரிந்த குழந்தையை தாய் அரவணைத்து மகிழ்வது போல் அரவணைத்து மகிழ்ந்தாராம். அந்த ஆலமர விழுதுகளையே இன்றும் நீங்கள் தரிசிக்கும் பெற்றைப் பெறுகிறீர்கள்.
சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பது போல காமாக்யா திருத்தலத்திற்கு பெரியவருடன் சிறுவன் யாத்திரை சென்றபோதுதான் பெரியவருடைய திருவாக்கின் மகிமையை அனுபவ பூர்வமாக உணர்ந்தான். காமாக்யா இருண்ட வனப்பகுதியில் சிறுவனை அரவணைத்து அன்னை வள்ளி சிறுவனுக்கு அன்புடன் பச்சை குத்தி விட்டாள் என்பதை ராச்சாண்டார் திருமலை மகிமையாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதில் நம்மை பிரமிக்க வைக்கும் வள்ளிமலை மகாத்மியம் என்னவென்றால் அன்று சிறுவனின் வலது தோளில் வள்ளி பச்சை குத்தியது வேல் ஏந்திய முருகப் பெருமானின் ‘தனி கை வேல்’ கோலத்தைத்தான்!?
பொதுவாக, இந்த சுபகிருது வருடத்தில் பிரபஞ்சம் முழுவதும் பொலியும் ஆறுமுக சக்திகளைப் பெறும் முறையாக, சிறப்பாக மாகறல் திருத்தலத்தில் பொலியும் அக்னி சக்திகளைப் பெறும் முறையாக நம் சற்குரு ஒரு பஞ்சாமிர்த அபிஷேகத்தை அளிக்கிறார்கள்.
வள்ளிமலை
மலைத்தேன், மலை வாழைப்பழம், நாட்டுச் சர்க்கரை, டைமண்ட் கல்கண்டு போன்ற அமிர்த சக்திகள் நிறைந்த தெய்வீக திரவியங்களுடன் முந்திரி, பாதம், அக்ரூட் போன்ற ஆறுவகை பருப்புகள், சிறிது ரோஜா இதழ்கள், சிறிது பொடித்த ஏலக்காய் போன்ற குறைந்த பட்ச அமிர்த திரவியங்களுடன் அவரவர் விரும்பும் அனைத்து தெய்வீக திரவியங்களையும் சேர்த்து மாகறல் திருத்தலத்தில் அருள்புரியும் மூன்று முருக தெய்வ மூர்த்திகளுக்கும் அல்லது ஏதாவது ஒரு தெய்வ மூர்த்திக்கு அபிஷேகம் நிறைவேற்றி அந்த பஞ்சாமிர்த பிரசாதத்தை அனைவருக்கும் வலது உள்ளங்கைகளில் பிரசாதமாக அளிக்க வேண்டும். இவ்வாறு அளிக்கப்பட்ட பஞ்சாமிர்த குக பிரசாதத்தை அடியார்கள் நாக்கால் நக்கி ஏற்கும்போது உண்டாகும் சக்தியே வடமாகறல் என்ற அரிதிலும் அரிய அக்னி சக்தியாகும்.
இந்த அக்னி சக்தியை விதிவசத்தால் பெற இயலாதவர்கள் இலையில் அல்லது தொன்னையில் முருக பிரசாத்தை அளிக்கும்படிக் கேட்டால் அதை அவ்வாறு அளிப்பதும் ஏற்புடையதே என்பதை நினைவில் கொள்ளவும்.
பஞ்சாமிர்தத்தை நாக்கால் நக்கி ஏற்கும்போது உண்டாகும் வடமாகறல் அக்னி சக்திகள் என்பவை இன்றோ, நேற்றோ தோன்றியவை அல்ல. பராசரர் காலத்திற்கு முன்பே தோன்றி இன்றுவரை நம்மை வாழவைப்பதே இத்தகைய சிரஞ்சீவி சக்திகள் ஆகும். பராசரர் மச்சகந்தியுடன் இணைவதற்காக அவர்களைச் சுற்றிலும் ஒரு இருளை உண்டாக்கினார். அந்த ‘இருண்ட’ வேத சக்திகள் நிறைந்த சூழ்நிலையில் பராசரர் மச்சகந்தியின் வலது உள்ளங்கையை ‘நக்கி’ தன்னிடம் உள்ள வேதசக்திகளை தாரை வார்த்து அளித்தார் என்பதே சித்தர்கள் அருளும் சித்தாமிர்தம். பராசரரின் புதல்வன் வேதங்களை ஒருங்கிணைக்கும் வேதவியாசராக, கரிய உருவத்துடன் மலர்ந்ததற்கு இந்த வேத சக்திகளே அடிப்படை என்பது உங்களுக்குப் புரிகின்றது அல்லவா ? இதையே கிளி கக்கிய வேத சக்திகள், கீர வாணி என்றும் கூறுவதுண்டு.
ஆறு மானே ஆறு |
அவரவர் ஜன்ம ராசியிலிருந்து எட்டாவது ராசியில் சந்திரன் இருக்கும்போது தோன்றும் மனக் குழப்பத்தையே சந்திராஷ்டம விளைவுகளாக குறிப்பிடுகிறோம். வள்ளி மானின் வயிற்றில் பிறந்தாள் என்பதில் இத்தகைய மனக் குழப்பங்களை நீக்கும் சக்திகளை வள்ளி தன் அனுகிரக சக்திகளாக அளிக்க வல்லவள் என்பது தெளிவாகின்றது. அதனால்தான் திருமண வைபவங்களின்போது எதை மக்கள் நிறைவேற்றுகிறார்களோ இல்லையோ குறைந்த பட்சம் வள்ளித் திருமணத்தையாவது நிறைவேற்றி மக்கள் முற்காலத்தில் பயன்பெற்றனர். இத்தகைய சந்திராஷ்டம விளைவுகள் காலசர்ப்ப யோகத்தில் அதிக பலவீனமான மனோ நிலையைத் தரும் என்றாலும் இந்த விளைவுகளிலிருந்து முதலில் மீளும், அதிக வேகம், ஆற்றல் உள்ள கிரகம் சந்திரனாக இருப்பதும் நமக்கு நற்பலன்களை அளிக்கவல்ல கிரக சஞ்சாரமே.
வருவான் வடிவேலன்
வள்ளிமலை
எண் கணித ரீதியாகவும் இத்தகைய சந்திராஷ்டம நிவாரண விளைவுகள் உத்தராயண புண்ணிய காலம் முழுவதும் நீடித்து, தட்சிணாயன காலத்திலும் தொடர்வது நாம் பெற்ற பேறே. ஜூலை 2, 2022 நாள் எண் கணித ரீதியாகவும் ஆறுமுகப் பெருமானுக்கு உரியதாக அமைவதால் இந்த சுபகிருது வருடம் முழுவதுமே நாம் மேற்கூறிய வகையிலான பஞ்சாமிர்த அபிஷேகங்களை மாகறல் முருகப் பெருமான் மூர்த்திகளுக்கு நிறைவேற்றுவதால் சந்திராஷ்டம விளைவுகள் அனைத்திலிருந்தும் நாம் மீள முடியும் என்பதே இந்த வழிபாடுகளின் மகத்துவம் ஆகும்.
வடமாகறல் வர்ணபவம் என்ற ஒரு அபூர்வ வழிபாட்டை ஆறு கிரகங்களுமே ஆட்சி பெறும் சரவணபவ கோஷ்டத்தில் நிறைவேற்றி நல்லருள் பெறும் முறையை சித்தர்கள் வர்ணிக்கின்றனர். இம்முறையில் ஒவ்வொரு மாதமும் இரண்டே கால் நாள் நிலவுவதாக அனைவருக்கும் சந்திராஷ்டம விளைவுகள் தோன்றுமல்லவா ? அந்த சமயத்தில் படத்தில் காட்டியுள்ளபடி வாழை இலை அல்லது மாம்பலகை மேல் சரவணபவ சக்கரத்தை அரிசி மாவால் வரைந்து அதில் 2.7.2022 அன்று ஆட்சி பெற்று விளங்கும் ஆறு கிரகங்களுக்குரித்தான தான்யங்களயும், மற்ற கிரகங்களுக்கு உரித்தான தான்யங்களையும் பரப்பி, நடுவில் சர்க்கரையை பரப்பி கோளறுபதிகத்தை ஆறு முறை ஓதி, அந்த தான்யங்களை அரைத்து சர்க்கரையுடன் சேர்த்து கோயில்களில் மதில் சுவர் ஓரம் எறும்புகளுக்கு தீனியாக இட்டு வர வேண்டும். இந்த வழிபாட்டை அவரவர் இல்லத்தில் அல்லது எந்த திருத்தலத்தில் வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். 2.7.2022 அனைத்து அடியார்களும் மாகறல் திருத்தலத்தில் மேற்கண்ட முறையில் முருகப் பெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நிறைவேற்றுதலால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.
வடமாகறல் வர்ணபவம்
இந்த கிரகச் சோலையில் முதலில் சனி பகவானும் ஈறாக சந்திரபகவானும் அமைந்து குளிர்விப்பதால் இது பித்ரு தேவதைகளுக்கு மிகவும் விருப்பம் உடையதாகவும் அமைகிறது. அதனால் இது வடமாகறல் வருணபவம் என்றும் சித்தர்களால் புகழப்படுகிறது. மேற்கண்ட வர்ணபவம் அல்லது வருணபவம் என்ற பூஜையை வடமாகறல் திருத்தலத்தில் 2.7.2022 சனிக் கிழமை அன்று நிறைவேற்றுவது சிறப்பு என்றாலும் அது இயலாதபோது மூன்று முருகப் பெருமான் மூர்த்திகள் எழுந்தருளி உள்ள எத்தலத்திலும், திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலும், நெடுங்குடி போன்ற வர்ணபவம் சக்திகள் பூரிக்கும் தலங்களிலும் இத்தகைய வழிபாடுகளை, அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி பயன்பெறலாம்.
ஆறுமுகசுவாமிக்கு உரித்தான சக்திகள் பெருகும் இந்த ஆண்டில் பெருமானுக்கு உரித்தான சரவணபவ என்ற மந்திரத்தை விரல் நுனிகளைத் தொட்டு முடிந்தபோதெல்லாம் ஓதி வருவதும் ஏற்புடையதே. படுக்கை, பிரயாணம், உணவு ஏற்றல் என்ற பாகுபாடு அல்லாது அவரவர் வலக்கையிலோ அல்லது இடக் கையிலோ நாள் முழுவதும் பிரயோகம் செய்து வரக் கூடியதே இந்த சரவணபவ மந்திரத்தின் சக்திகளாகும். காஞ்சிபுரம் அருகிலுள்ள பெருநகர் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஇஷ்டசித்தேஸ்வரரின் முன் அமர்ந்து நிறைவேற்றக் கூடிய இந்த மந்திர ஜபத்தை சரவணபவ சக்திகள் நிலவும் 2022 ஆண்டில் பக்தர்கள் பயன்படுத்தும் முறையை இங்குள்ள வீடியோவில் கண்டு இரசிக்கலாம். சரவணபவ மந்திரம் என்று அல்லாது ராம, ஓம்நமோநாராயணாய, நமசிவாய என்று மெய்யெழுத்துக்கள் அமையாத எந்த மந்திரத்தையும் இந்த வருடம் மேற்கூறிய முறையில் ஓதி வருதல் சிறப்பாகும். குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்றுத் தரும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் மேற்கூறிய முறையில் அ, ஆ, இ என்றவாறாக 12 உயிர் எழுத்துக்களையும் பயிற்றுவிக்க இந்த சரவணபவ விரல் அமைப்புகளை பயன்படுத்தி பயன்பெறலாம் என்பது சித்தர்களின் வழிகாட்டுதலாகும். சமுதாயத்தில் பள்ளிப் பருவத்திலேயே நல்லொழுக்கத்தை பேணி வளர்க்கும் ஒரு சிறப்பான வழிபாட்டு முறை இதுவாகும்.
பொதுவாக, கால சர்ப்ப யோகத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே நெடுங்குடி சர்ப்ப தீர்த்தக் கரையில் தர்ப்பணம் அளித்து வருதலால் தேவையில்லாத அச்சம், பீதி போன்றவற்றால் பாதிக்கப்பட மாட்டார்கள். கால சர்ப்ப யோகத்தைத் தீர்மானிப்பதிலேயே பலவித குழப்ப நிலைகள் ஜோதிடர்களிடையே உருவாவதால் இறைவனே அனைத்திற்கும் இறுதி விடை அளிக்கவல்லவன் என்பதை உணர்க. இந்த மனத் தெளிவை அளிக்கவல்லதும் நெடுங்குடி திருத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாடுகளாகும்.
வெகு வேகமாக சுழலக் கூடிய கண்பார்வையை உடைய மகளிரை மானின் மருண்ட கண்களுக்கு ஒப்பிடுவது உண்டு. ஒரு பெண்ணின் பார்வை மருண்ட பார்வையா, தெளிந்த பார்வையா என்று அறிவது சித்தர்களுக்கு மட்டுமே சாத்தியம் என்றாலும் வள்ளிதேவி போன்ற தெளிந்த, சுழலும் பார்வையை மகளிர் பெறுவதற்கு மேற்கண்ட வர்ணபவ வழிபாடு அவர்களுக்கு துணைபுரியும் என்பதில் சந்தேகமில்லை. ஆண்களும் பெண்களும் தாங்கள் நிறைவேற்றும் நாம ஜபங்களை, தேவார திருவாசக பதிகங்களின் வரிகளையும் கூட, இந்த சரவணபவ சக்கரத்தின் ஒவ்வொரு அட்சரத்திலும் நிரவுவதால் அவர்கள் வசீகரமான பார்வையை பெறுவதுடன் எதிர்காலத்தைப் பற்றிய உணர்வையும் இந்த வழிபாடு அவர்களுக்கு அளிக்கும்.
மூன்றிற்கு ஆறு குசா, ஆறிற்கு மூன்று குசா என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், எத்தனை பேர் இந்த அற்புத குசா சக்திகளை நடைமுறையில் பெற்று நமக்கும் நம் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் நற்சக்திகளைப் பெருக்கித் தந்தோம் என்பது அவரவர் மனசாட்சியைத் தட்டிக் கேட்டால்தானே தெரியும் ? இத்தகைய நற்சக்திகளை அபரிமிதமாக பெருக்கிக் கொள்ளும் ஆண்டே பிலவ 2022 இணையும் வருடமும், மூன்று ஆறுமுகப் பெருமான் மூர்த்திகள் அருளும் வடமாகறல் திருத்தலமுமாகும். மனித சமுதாயத்தில் தாங்க முடியாத அளவிற்கு சூரிய வெப்பம் மிகுந்து வருவது அனைவரும் அறிந்ததே, இதை விடவும் பலம் பெற்று வருவதே தொற்றுநோய்களின் ஆதிக்கம், தீராத வியாதிகளின் ஓயாத தொல்லை என்பதும் நாம் அறிந்ததே.
ஒரு முறை நம் சற்குருவிடம் ஒரு அடியார், “ஏன் வாத்யாரே, ஸ்ரீரங்கத்தில் ராஜகோபுரம் எழுப்பினால் இலங்கை அழிந்து விடும் என்று சொல்கிறார்களே, இந்தக் கூற்று உண்மையா?” என்று கேட்டார். சற்குருவோ மிகவும் அமைதியாக, “ஆம் உண்மைதான்,” என்று கூறினார். கேட்ட அடியார் திடுக்கிட்டு, “இவ்வாறு ஒரு நாடே அழியும் என்று தெளிவாகத் தெரிந்திருந்தும் ஏன் மக்கள் கோபுரம் கட்டுகிறார்கள்?” என்று அவர் குரலில் குழப்பம் கொப்பளிக்கக் கேட்டார். சற்குருவோ அவரை உற்றுநோக்கி, “இங்க பாருய்யா, இலங்கை என்ன, உலகமே அழியும் என்றாலும் நாம் அதைப்பற்றிக் கவலைப்படக் கூடாது, சுவாமிக்கு வானளாவ கோபுரம் எழ வேண்டும்...அதுதான் இப்போது நாம் செய்ய வேண்டியது,” என்றார்.
Fusion Fission ?
ஆழ்ந்த பொருள் பொதிந்த நம் சற்குரு கூற்றின் பொருளை நாம் இன்று அனுபவிக்கின்றோம் அல்லவா? யாரும் ராஜகோபுரமே கட்டவில்லை என்றாலும் ஒரு நாடு அழிந்து கொண்டுதானே இருக்கிறது? அணுக் கதிர்களின் கதிர்வீச்சை உலகம் முழுவதும் அனுபவித்துக் கொண்டுதானே இருக்கிறது? இத்தகைய சூரிய வெப்பத்திலிருந்து மனித சமுதாயம் பாதிக்கப்படாமல் இருக்க நாம் செய்யக் கூடிய ஒன்றே மூன்று ருத்ராட்ச மணிகளை ஆறு செப்பு வளையங்கள் நடுவே கட்டிக் கொள்தலாகும். இந்த ருத்ராட்ச மணிகள் நம் இதயத்தைத் தொடுவதாக அமைத்துக் கொள்ளும்போது இதயத்தின் நடுவில் உறையும் ஈசன் குளுகுளுவென்று இருப்பார் அல்லவா? இறைவன் குளிர்ச்சி அடைந்தால், உலகமே குளிர்ச்சி அடையுமே, அதில் வாழும் ஜீவன்களுக்கு நன்மை பெருகுமே. நம் சற்குரு இத்தகைய குசா சக்திகள் பெருகும், இறைவனுக்கு சதா குளிர்ச்சி ஊட்டும் ருத்ராட்ச மணிகளையே அணிந்திருந்தார் என்பதை பலரும் அறிந்திருக்கலாம்.
இந்த மூன்று ருத்ராட்ச மணிகளையும் நூலில் கோர்த்து நெஞ்சுக் குழியைத் தொடுமாறு அணிவதே முறை. பெண்களுக்கு அவர்கள் கணவர் அணியும் மாங்கல்யமே இத்தகைய ‘fusion, fission’ சக்தியைத் தரவல்லதால் பெண்கள் ருத்ராட்ச மணிகளை அணிய வேண்டிய அவசியம் இல்லை. நடப்பு உலகில் fusion என்ற இணைப்பில் தோன்றும் சக்திகளை விளக்கவல்ல இயற்கைப் பொருட்கள் ஏதும் இல்லை என்பதால் அதை மக்கள் தங்கள் இறைவழிபாட்டின் மூலமே, கணவருக்கு, சற்குருவிற்கு இயற்றும் பாதபூஜைகள் மூலம் அறிந்து பயன்பெறும்படி சித்தர்கள் அருள்கின்றார்கள். இதன் பலா பலன்களை அறிய முடிந்தால், ஆஹா ... ?!
மேற்கூறிய fission, fusion பற்றிய விளக்கங்களை நம் சற்குரு அளித்தபோது அது யாருக்கும் புரியவில்லை என்பது அருகிலிருந்த அடியார்களின் முகபாவம் காட்டியது. அப்போது ஒரு அடியார் தயக்கத்துடன், “வாத்யாரே, நீங்கள் கூறும் விளக்கங்கள் எதுவும் புரியவில்லையே ...”, என்றார். அதைக் கேட்ட சற்குரு ஒரு புன்னகையுடன், “சித்தர்களின் கூட்டத்தில் எல்லா கேள்விகளுக்குமே பதில் உண்டு என்றாலும், பதில் சொல்லக் கூடாத கேள்விகள் என்று ஒரு சில உண்டு. பணிந்து கேட்டால் பதில் கொடுக்கக் கூடிய கேள்விகள் என்று சில உண்டு. நீ பணிந்து கேட்பதால் அந்த கேள்விக்கு உரித்தான பதிலை சொல்ல அடியேன் கடமைப்பட்டிருக்கிறேன்,”.
“நம் கோவணாண்டி ஏற்கனவே கூறிய அனுபவ மொழியோடு இதை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு எளிதில் விடை கிடைத்துவிடுமே ...”, என்றார் சற்குரு.
சில நிமிடங்கள் மௌனமாக கழிந்தன...
நம் சற்குரு தொடர்ந்தார் ...
Fission விளைவால் இறைவனிடமிருந்து பிரிந்த நாம் மீண்டும் இறைவனோடு இணையும்போது (fusion) அங்கு லட்சோப லட்சம் அரிசி மூட்டைகள் பொழியும் ஆனந்தத்தைப் பெறுவதால் இது பேரானந்தம், பரமானந்தம் என்றெல்லாம் புகழப்படுகிறது. இந்த பேரானந்தத்தை உணர்ந்ந்ந்ததால்தான் அப்பர் சுவாமிகள் ‘ஈசன் எந்தை இணையடி நீழலே’, என்று வர்ணிக்கிறார். இங்கு மற்றோர் சுவையையும் அடியார்கள் உணரலாம். ‘ந’ வரிசையில் வரும் ‘நா’ என்ற நான் மறைந்தால்தான், அதை அடுத்து ‘நீ’ என்பது வரும், ஆனால், நான் என்பது மறைய வேண்டியதில்லை அது “நீ” என்ற இறைவனில் லயமானால் போதும் என்று சுட்டுவதே சித்தர்களின் அடிமை கண்ட ஆனந்தமாகும்.
நீர்த்தாரை நியமங்கள் |
திருஅண்ணாமலையின் உயரம் சுமார் 1500 அடி என்பது பூலோக மக்களின் கணக்கு. உண்மையில் திருஅண்ணாமலை என்பது வானுக்கும் மண்ணுக்கும் விரிந்து பரந்திருக்கும் இறை சொரூபமே என்பது சித்தர்கள் வர்ணிக்கும் இறைக் காட்சி. அதுபோல் வள்ளிமலை என்பது சில நூறு அடிகள் வானில் உயர்ந்திருப்பதுபோல் தோன்றினாலும் அதன் உயரம் 1800 அடிகள் என்பதே சித்தர்களின் கணக்கு. இந்த 1800 அடியை சிவபெருமானின் செல்லக் குழந்தையான முருகப் பெருமானின் உயரமாக நம் பூலோக மக்களுக்காக வார்த்துக் கொடுத்த அன்னையே பராசக்தி தேவி ஆவாள். பூமியின் மேல் ஒவ்வொரு ஆறு அடி உயரத்திற்கும் ஒருவிதமான காற்று நீரோடை பொலிகின்றது. இவ்வாறு நீர்த்தாரை போல் 300 விதமான காற்று நீரோடைகள் பொலியும் திருத்தலமே வள்ளிமலை ஆகும். இந்த நீரோடை மாற்றங்கள் உயிர்களின் உயரத்திற்குத் தக்கபடி மாறும் என்பதும் சித்தர்கள் தெரிவிக்கும் வள்ளிமலை இரகசியங்களில் ஒன்றாகும்.
வள்ளிமலை
உதாரணமாக, 30 அடி உயரமுள்ள மரத்தில் ஒரு எறும்பு ஊர்ந்து அந்த மரத்தின் உச்சிக்கு செல்கிறது என்றால் அந்த எறும்பு மர உச்சியை அடையும்போது வள்ளிமலையில் திகழும் நீர்த்தாரை சக்திகள் அனைத்தையும் பெற்று விடும் என்பதே வள்ளிமலை தரிசனத்தில் பொலியும் அனுகிரகமாகும். இதனால் என்ன பயன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். குண்டலினி யோகத்தில் மூலாதார சக்கரத்தில் உறங்கும் சக்தியை விழித்து எழச் செய்து அதை ஊர்த்துவமுகமாக மேல் நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை ஓரளவு அடியார்கள் புரிந்து கொண்டிருப்பார்கள். இந்த குண்டலினி சக்தி ஸ்வதிஷ்டான சக்கரத்தை தாண்டுவதற்கு எத்தனை பிறவிகள் எடுத்துக் கொள்ளும் என்று கூற முடியாது. நம் சற்குருவோ தம் தபோபலனால் இந்த பிலவ 2022 என்ற இணைப்பில் சுபகிருது என்ற ஒரே வருடத்தில் மேற்கொள்ளும் வழிபாட்டால் குண்டலினி சக்தியானது ஸ்வதிஷ்டானத்தை தாண்டும் அனுகிரகத்தை அளிக்கக் காத்திருக்கிறார் என்பதே சித்தர்கள் உயிர்கள் மீது பொழியும் கருணைக்குச் சான்றாகும்.
ஸ்ரீவள்ளிமலை சுவாமிகள் தேவாமிர்த சின்முத்திரையுடன் தன் பக்தர்களுக்கு காட்சி அளித்த தவக்கோலம் இந்த ஸ்வதிஷ்டான சக்கர அனுகிரகங்களை அளிப்பதற்காகவே என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். வளர்பிறை, தேய்பிறை என்றல்லாது அனைத்து நாட்களிலுமே பக்தர்கள் வள்ளிலையில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் தரிசனம் செய்து மலை உச்சியில் உள்ள ஸ்ரீசிரகிரி லிங்க மூர்த்தியின் தரிசனத்தையும் பெறுதலே இந்த அபூர்வ நீர்த்தாரை சக்திகளை அடையும் மார்க்கங்களில் ஒன்றாகும். இத்தகைய தரிசனத்திற்குப் பின் வள்ளிலை குமரி தீர்த்தத்தின் அருகில் அமர்ந்து பன்னிரு திருமுறைப் பதிகங்களை ஓதுதல் சிறப்பாகும்.
ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் திருத்தனி மலையில் தம்பதிகளுக்கு வள்ளிமலை சுவாமிகள் படி பூஜை மூலம் பெற்றுத் தந்த அதே அனுகிரகங்களையே நம் சற்குரு வள்ளிமலையில் அனைத்து நாட்களிலுமே அனைத்து அடியார்களுக்கும் பெற்றுத் தருகின்றார் என்பதே இவ்விரு உத்தமர்களின் ‘கூட்டு சதியாகும்.’ இந்த ‘சதியின்’ முழுமையான பலன்களைப் பெற விரும்புவோர்
தன்னிலை தானறிந்த தன்மையனே
என்னிலை நானறிய எமக்கருள்வாய் ஈசனே
என்று வள்ளிமலையில் ஏறும்போதும் இறங்கும்போதும் மனதிற்குள்ளோ வாய்விட்டோ ஓதுதல் நலம். வர்ணபவம் பூஜை இயற்றிய தான்ய மணிகளை தலையில் சுமந்து சென்று வழிநெடுகிலும் உள்ள எறும்புகளுக்கு இடுதல் கிடைத்தற்கரிய பாக்கியமே. ஏன் இவ்வாறு குண்டலினி யோக வழிபாட்டிற்கு நம் சற்குருமார்கள் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறார்கள் என்று நாம் நினைப்பதற்கு காரணம் நம்முடைய அறியாமையே. சுவாதிஷ்டான சக்கரத்திலிருந்து மீளும் நிலையில் உண்டாகும் ஆனந்தத்தை ஒரு மனிதன் ஒரே ஒரு துளி அனுபவித்தாலும் போதும் அவனுக்கு ‘குடும்ப வாழ்வே பாழுங் கிணறாய்த் தோன்றும், சுற்றத்தார் கருநாகமாய்க் காட்சி தருவர்’ என்னும் அளவிற்கு உலக பந்தங்களிலிருந்து விடுபடுவான் என்பதே இந்த வழிபாட்டின் மகத்துவமாகும்.
வள்ளிமலை
பக்தியில் பல படித்தரங்கள் உண்டு. கோபியர்கள் அனைவரும் பகவான் கிருஷ்ணர் மீது நிஷ்டா பக்தியைக் கொண்டிருந்தனர். கிருஷ்ணன் பிருந்தாவனத்திலிருந்து மதுராபுரிக்குச் சென்று துவாரகை மாமன்னனாக பொறுப்பேற்றவுடன் கோபிகள் கிருஷ்ணரைக் காணச் சென்றனர். அவர்களுக்கு சக்கரவர்த்தியாக காட்சியளித்த கிருஷ்ண பகவானைக் கண்டு கோபிகள் அனைவரும் தங்கள் முகத்தை சேலைத் துணியால் மூடிக் கொண்டனர். மயிற் பீலியுடன் துலங்கிய பாலகிருஷ்ணனைப் பார்த்த கோபிகளுக்கு நவரத்தினங்கள் பதித்த தங்கக் கிரீடம் அணிந்த கிருஷ்ண பகவானைத் தங்கள் ஆசைநாயகனாகப் பாவிக்க முடியவில்லை. ‘இவன் ஏதோ அயலான் போலிருக்கிறதே, மற்றவர்கள் முன் நம் முகத்தை மறைத்துக் கொள்வதே முறை...”, என்று கோபிகள் நினைத்ததே அவர்கள் செய்கைக்கு காரணம்.
இத்தகைய நிஷ்டா பக்தியை உடைய அனுமனை ஒரு முறை கிருஷ்ண பகவான் அழைத்தார். எதற்கு ? இலங்கைக்குச் செல்ல குரங்குகள் கட்டிய பாலத்தைக் கடந்து சென்றார் அல்லவா ஸ்ரீராமர். அந்த பாலத்தைக் கண்ட அர்ச்சுனன் ஏளனமாக நினைத்து, “இந்த பாலத்தைக் கட்டவா லட்சக் கணக்கான குரங்குப் படையை வைத்துக் கொண்டு ராமர் போராடினார். ஒரே ஒரு அம்பை விடுத்து நான் பாலத்தை கட்டி விடுவேனே?” என்றானாம். கிருஷ்ண பகவான் நகைத்து, “அப்படியா, நானும் உன் வீரத்தைப் பார்க்கிறேனே...எங்கே உன் திறமையைக் காட்டு...”, என்று சொல்ல அர்ச்சுனன் ஒரே ஒரு அம்பை விட்டு இலங்கையை இணைக்கும் ஒரு பாலத்தை உருவாக்கினான்.
வள்ளிமலை
கிருஷ்ண பகவான் அர்ச்சுனனின் செய்கையைப் பாராட்டி விட்டு, “சரி, இப்போது இந்த பாலத்தின் பலத்தை எப்படி பரிசோதிப்பது, ராமர் கட்டிய பாலம் திரேதா யுகத்தைச் சேர்ந்ததால் அந்த யுகத்தில் வாழ்ந்தவர்கள்தான் அந்தக் காலப் பொருட்களின் தன்மையைப் பரிசோதித்து உறுதி கூற முடியும் என்பதால் யுகயுகமாய் சிரஞ்சீவியாய் வாழும் அனுமனை அழைத்து வாருங்கள்...” என்றாராம் கிருஷ்ண பகவான்.
இமயமலையில் சாந்தவெளியில் தவத்தில் இருந்த அனுமனை பஞ்சபாண்டவர்கள் சென்று அழைத்தபோது முதலில் அனுமன் வர மறுத்தாலும், கிருஷ்ண பகவான் ராம பிரானின் துவாபர யுக அவதாரமே என்று கூறிய பின்னரே அனுமார் பஞ்சபாண்டவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாராம். இது நிஷ்டா பக்தியின் அடுத்த நிலை.
சித்தர்கள் தெரிவிப்பதோ பக்தியின் உச்சகட்ட நிலை. இந்நிலையையே மகாகவி பாரதியார்,
“ஆசை முகம் மறந்து போச்சே
இதை யாரிடம் சொல்வேனடி தோழி”
என்று வர்ணிக்கிறார். ஆசை முகம் எப்போதாவது மறக்குமா ? மறக்காது. உங்கள் குழந்தை முகம் உங்களுக்கு மறக்குமா ? மறக்காது. ஆனால், அங்கே தோன்றும் ‘தனது’ என்ற ஆசை மறைந்து நேசம் என்ற அனைத்து உயிர்களிடத்தும் தோன்றும் அன்பாக பரிணமித்தால் அங்கு கிருஷ்ணன் என்ற குழந்தையின் திருமுகம் மட்டும்தானே நிற்கும். இதுவே மாதா அமிர்தானந்தா போன்ற மகான்களின் நிலை. அனைவரும் கடவுளின் பிரதிபலிப்பாகத் தோன்றும்போது, யாரிடம் இந்த நிலையைக் கூற முடியும் ? தோழி என்பவள் உயர்வு தாழ்வின்றி சரி சமமாகப் பழகும் தோழமைத்தன்மை உடையவள் ஆதலால் அவளிடமே தன் நிலையை உரைக்கிறார் பாரதியார்.
வடமாகறல் திருத்தலத்தில் பக்தியின் இந்த மூன்று நிலைகளையும் பக்தர்கள் இந்த 2022 பிலவ ஆண்டு இணைப்பில் உணர முடியுமாதலால் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மூன்று இரண்டுகள் இணையும் ஆண்டாக சுபகிருது தமிழ் வருடம் துலங்குவதால் ராமகிருஷ்ண பரமஹம்சர், மகாகவி பாரதியார் போன்று தங்களை பெண்ணாகப் பாவித்து பக்தியில் உயர்நிலையை அடைய விரும்பும் ஆண் வீரர்களுக்கு இது சிறந்த ஆண்டாக அமையும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும்.
கனிந்த கனி பரமாச்சாரியார் அவர்கள் பூர்ண சந்திர அம்சங்கள் பொருந்திய தன்னுடைய இடது குருவிரலால் பூர்ண சந்திர சக்திகள் பொலியும் இடது கால் கட்டை விரலை தொடுவது போன்ற அமைப்பை இங்குள்ள வீடியோவில் பக்தர்கள் கண்டு இரசிக்கலாம். இந்த வீடியோ படத்தின் பின்னணியாக அமைந்துள்ள திருமழபாடி லட்சுமி தீர்த்தத்தையும் மற்ற படங்களையும் பெரியவாளின் அரிய தரிசனத்துடன இணைத்து ஆத்ம விசாரம் இயற்றி வந்தால் சுபகிருது வருடத்திற்குள் லட்சுமி கடாட்ச சக்திகளைப் பக்தர்கள் பூரணமாய்ப் பெற்று வாழ்வாங்கு வாழலாம் என்பது உறுதி.
மற்ற கிரகங்களிலிருந்து பூமிக்கு வரும் அயல்கிரக வாசிகள் அநேகர் உண்டு. இவர்களின் நடமாட்டம் இவ்வருடம் அதிகமாகும் என்பது சித்தர்களின் கணிப்பு. பூலோக மக்களைப் போல் இவர்களிலும் நல்லவர்கள், தீயவர்கள் என்று இருந்தாலும் இவர்களில் தீயவர்களின் நடமாட்டத்தால் பூலோகவாசிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பது இவ்வருட கிரக சஞ்சாரத்தின் அமைப்பாகும். மாதா அமிர்தானந்தா கூறுவதுபோல் மன உறுதியுடன் இவர்களைச் சந்திப்பதே தெய்வீகத்தில் பற்றுள்ளவர்களின் செயல்பாடாகும். மனம் சஞ்சலம் அடைந்தால் இறைவனிடம் ஏற்படும் கொஞ்ச நஞ்ச பக்தியும் மறைந்து விடும் என்பதால் இறை பக்தியை வளர்க்கும் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை தொடர்ந்து இயற்றிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது முக்கியம். ஓம் நமசிவாய என்று சொல்லி ஒரு பிஸ்கட்டை ஒரு நாய்க்கு அல்லது துண்டுகளாக்கி பறவைகளுக்கு அளித்தால் கூட அந்த ஒரு சிறிய ரொட்டித் துண்டும் பரவெளியில் நற்கதிர்களை உருவாக்கி தீய சக்திகளைத் தடுக்கும் என்பது உண்மையே. இச்சிறிய காரியத்தின் பெரும்பலனை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம்.
ஒரு முறை நம் சற்குரு ஒரு அடியார் வீட்டிற்கு எழுந்தருளி இருந்தார். நம் சற்குருவின் படத்தை மரத்தால் அமைந்த தேர் ஒன்றில் வைத்து அதை மலர்களால் அலங்கரித்து வழிபட்டு வந்தார் அந்த அடியார். நம் சற்குருவின் வருகையை ஒட்டி அந்த திருவுருவத்திற்கு மலர் அலங்காரம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். சற்குருவின் அருமைப் புதல்வியோ சற்குருவை தள்ளிக் கொண்டு சென்று அந்த படத்திற்கு மலர்களை வைத்தார். அதை மற்றவர்களிடம் காட்டி புன்னகையுடன், “நரம்பும் சதையுமாக இருக்கும் அடியேனைத் தள்ளிக் கொண்டு சென்று, ஒரு புகைப்படத்திற்கு மலர்களை வைக்கிறாயே, நீ என்ன கடவுளைப் பற்றிப் புரிந்து கொண்டாய்?” என்று ஒரு அர்த்தமுள்ள கேள்வியைக் கேட்டார்கள்.
பல அடியார்கள் இறைவனைப் பற்றி சற்றும் புரிந்து கொள்ளாமல், எது எதையோ தெய்வீகம் என்று நினைத்து செயல்படும் தவறான செய்கையை தன் அருமைப்புதல்வி மூலம் அன்று மறைமுகமாக தெரிவித்தவரே வடமாகறல் வரதராஜன் ! வடமாகறல் வரதராஜன் உணர்த்தும் நீதி இதுவே,
ஓம் ஸ்ரீகுருவே சரணம்