கண் மூடி வந்தவர் மண் மூடிப் போகார்.

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை ஓம் ஸ்ரீகுருவே சரணம்

எளிய அகத்திய தேவாரத் திரட்டு

கருணையே வடிவானவர்கள் சித்தர்கள். எல்லையில்லா பரம்பொருளாகிய இறைவனின் ஒரு அணுத் துகளைக் கூட புரிந்து கொள்ள முடியாத நிலையில் நாம் இருப்பதால் சித்தர் பெருமக்கள் இறைவனின் பெருங்கருணையை நாமும் அனுபவித்துப் பயன் பெறும் வகையில் பல வழிபாட்டு முறைகளை அமைத்துத் தந்துள்ளனர். இவ்வகையில் பன்னிரு திருமுறைப் பாடல்களை நாம் எப்படி ஓதிப் பயன்பெற வேண்டும் என்ற முறையையும் நமக்காக அவர்கள் வகுத்துத் தந்துள்ளனர்.

விதிவசத்தால் இரண்டு பெண்களுடன் வாழும் ஆண்களும், சூழ்நிலை சந்தர்ப்பங்களால் இரண்டு கணவன்மார்களுடன் வாழும் பெண்களும் திருச்சி உய்யக் கொண்டான் திருமலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் திருக்கோயிலில் அருள்புரியும் இரட்டை பிள்ளையார் மூர்த்திகளை வணங்கி அர்த்த நாரீஸ்வரருக்கு ஐந்து தேங்காய் எண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வந்தால் அவர்கள் துன்ப நிலை மாற வழி பிறக்கும்.

இதன் பின்னால் அமைந்த வரலாறு மிகவும் ஆச்சரியமான ஒன்று. அது என்ன என்பதைத் தெரிந்து கொள்வோமா?

காலத்தின் சுழற்சியில் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கிருத யுகத்தில் மனிதர்களுக்கு இறை நம்பிக்கை பரிபூரணமாக இருந்தது. இறைவன், இறைவி அவர்களின் நடமாட்டங்களும் இருந்தன. அதனால் இறை அவதாரங்களை நேருக்கு நேர் பார்க்கும் பாக்கியத்தை அந்த யுக மக்கள் அனைவருமே பெற்றிருந்தனர். சிவன், பார்வதி, பெருமாள் என அனைத்து இறை மூர்த்திகளையும் நாம் இன்றைய மனிதர்களைப் பார்ப்பது போல தெருக்களிலேயே காணும் பேற்றைப் பெற்றிருந்தனர். ராமர், கிருஷ்ணர் போன்ற அவதார மூர்த்திகளும், மார்கண்டேயர், அகஸ்தியர், வசிஷ்டர், காகபுஜண்டர் போன்ற மகரிஷிகளும் கூட மக்களோடு மக்களாய்ப் பேசி உரையாடி, ஆன்மீக ரகசியங்களைப் பகிர்ந்து கொண்டு உலாவி வந்தனர். இறை வழிபாடுகளும், சந்தியா வந்தனம், தர்ப்பணம், ஹோம, யக்ஞம் போன்றவையும் நேரம், காலம் தவறாமல் முறையாக நிறைவேற்றப்பட்டு வந்தன.

யுக தர்மங்கள் மாற்றம் கொண்டபோது இந்த வழிபாட்டு முறைகளில் அசிரத்தை ஏற்பட்டு சிறிது சிறிதாக மக்கள் இறைவழிபாட்டை ஏனோ தானோ என்று நிறைவேற்ற ஆரம்பித்தனர். ஆனால், மக்களை நன்னெறியில் இட்டுச் செல்லும் சித்தர் பிரான்கள் எவ்வகையிலேனும் இறை உணர்வை மங்காமல், தளராமல் வைத்துக் கொள்ள தங்களால் இயன்ற வரையில் அருட் பணிகளை தொடர்ந்து ஆற்றிக் கொண்டே இருக்கிறார்கள். வானமும் பூமியும் உள்ள அளவும், ஏன், அதன் பின்னரும் காணும் பொருட்களும், காணாத பொருட்களும் தோன்றி மறைந்தாலும் கூட கருணை உள்ளம் கொண்ட சித்தர்களின் அருந் தொண்டு என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இம்முறையில் கிருத யுகத்தில் முறையாக விளங்கி வந்த வேத பாராயணம் நாளடைவில் சந்தியா வந்தனம், காயத்ரீ ஜபம் போன்ற வழிபாட்டு முறைகளைப் போல நலிவடைந்த போது புனித தென் பாரதத்தில் நால்வர் என்று அன்புடன் அழைக்கப்படும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள், திருநாவுக்கரசு சுவாமிகள், சுந்தர மூர்த்தி சுவாமிகள், மணிவாசக சுவாமிகளும் தேவார திருவாசகப் பாக்களை ஓதி இறை பக்தியையும், தமிழ் வேத பாராயணத்தையும் மங்காது காத்து வந்தனர்.

ஸ்ரீஅகத்தியர் நடந்து செல்லும்போது வாயு பகவான் கூடவே சென்று அவர் அனுமதியுடன் குளிர்ந்த தென்றல் காற்றை வீசுவார். நறுமண மலர் தேவதைகள் அகத்தியருக்கு அற்புத மணத்தை வீசும். அவர் தலைக்கு மேல் தேவ லோக விமானங்கள் கூட பறப்பது கிடையாது.

மனித கற்பனைக்கு எட்டாத பல உண்மைச் சம்பவங்களையும் இத்திரு மூர்த்திகள் சிவனருளால் நிகழ்த்தியுள்ளனர். மண்ணைப் பொன்னாக்குதல் வறுமை, பஞ்சம் தீர்த்தல், முதலை விழுங்கிய குழந்தையைப் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதலை வாயிலிருந்து உயிருடன் மீட்டல், இறந்து சாம்பலாகிப் போன சிறுமியை உயிர் பெற்று எழச் செய்தல், வயிற்றில் கல்லைக் கட்டி கடலில் வீசினாலும் நமச்சிவாயத் தெப்பம் கொண்டு கரையேறுதல் போன்ற பற்பல அற்புதங்களை எல்லாம் நிகழ்த்தி சிவ நாம மகிமையை உலகெங்கும் பரப்பி வந்தனர். நாயன்மார்கள் மட்டும் அல்லாது திருமூலர், சேக்கிழார் போன்ற 27 உத்தம இறையடியார்கள் அருளிய தெய்வீகப் பாடல்களையே பன்னிரு திருமுறைப் பாக்கள் என வழங்குகிறோம்.

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் இந்த பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினந்தோறும் ஓதியே ஆக வேண்டும். இத்திருமுறைப் பாடல்கள் அனைத்தும் நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுடன் தொடர்பு கொண்டவை. ஆனால், இன்றைய கலியுகத்தில் வாழும் ஒரு சாதாரண மனிதனால் பன்னிரு திருமுறைகளில் உள்ள அனைத்துப் பாடல்களையும் தினமும் ஓத முடியுமா? தேவாரம், திருக்கோவையார், திருப்பல்லாண்டு, திருவாசகம், பெரிய புராணம், திருவிசைப்பா, திருமந்திரம் போன்ற நூல்கள் இப்பன்னிரு திருமுறை தொகுப்பில் அடங்கும்.

இறைப் பெரும் அடியார்களால் இறையருளால் மனித குல மேம்பாட்டிற்காக அருளப் பெற்றவையே இந்தப் பாக்கள். சாதாரண மனிதனுக்கு உண்டான இறை பக்தி, அவனுக்கு உலகப் பொருட்கள் மேல் உள்ள நாட்டம் இவற்றை முழுவதுமாக உணர்ந்த சித்தர் குல நாயகரான ஸ்ரீஅகஸ்திய மாமுனி கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் தினமுமே எவ்வாறு ஓத முடியும் என்பதைக் குறித்து பொதிய மலையில் இறைவனை நோக்கி தவமியற்றினார். அன்ன ஆகாரமின்றி பன்னெடுங் காலம் அவருடைய தவம் தொடர்ந்தது. நீண்ட கால தவத்திற்குப் பின் எம்பெருமான் மனம் கனிந்து ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு காட்சி அளித்து அச்சித்தர் பிரானின் நீண்ட தவத்திற்கான காரணத்தை வினவினார்.

ஸ்ரீஅகஸ்திய மாமுனியும், “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே! தாங்கள் அறியாதது ஒன்று உண்டா? கலியுகத்தில் இன்று வாழும் மனிதன் தன்னுடைய சாதாரண கடமையான பொருள் ஈட்டுதல், குடும்பத்திற்காக உணவு தேடுதல், குடும்பத்தாரைப் பாதுகாத்தல் என்று சுயநல செயல்களிலேயே தன்னுடைய பெரும்பான்மையான நேரத்தைச் செலவிட்டு விடுகிறான். தன்னுடைய உண்மையான கடமையான சிவ வழிபாட்டை முற்றிலுமாக மறந்து விட்டு அலைகிறான். சிவ வழிபாட்டிற்காக தற்போது செலவிடும் நேரத்தை மிக மிகக் குறைவாக மனித சமுதாயம் அமைத்துக் கொண்டு விட்டது. அதனால் மனிதன் சிவ வழிபாட்டை இயற்றாமல் வீணாக்கிய நேரம் என்னும் சஞ்சித கர்மாவின் அளவு பெருகிக் கொண்டே வருகிறது. இந்த வினைச் சுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டியது சித்தர்களின் கடமை அல்லவா? இதுவும் தாங்கள் எங்களுக்குக் கருணை மேற்கொண்டு அளித்த பெரும் பேறு அல்லவா?’’

"கிருத யுகத்தில் நிகழ்ந்தது போல் இன்றைய கலியுகத்தில் வேத பாராயணத்தை நிறைவேற்ற இயலாவிட்டாலும் பன்னிரு திருமுறைப் பாக்களைத் தினமும் ஓதி வந்தால், அதுவே கலியுக மனிதன் வேதம் ஓதிய பலனை அடைய வழிகாட்டும் என்று முன்னரே அருளினீர்கள். ஆனால், இன்றைய மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்களைக் கூட தினமும் முழுமையாக ஓத முடியாக அவல நிலையில் தள்ளப்பட்டுள்ளான். தாங்கள் பெருங் கருணை கொண்டு பன்னிரு திருமுறைப் பாக்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற இறை நியதிக்குச் சற்று விலக்கு அளிக்க வேண்டும் என்று தங்கள் திருவடிகளைச் சரணடைந்து கேட்டுக் கொள்கிறேன்," என்று எம்பெருமானிடம் தன்னுடைய கருத்தை வெளியிட்டார் அகத்திய மாமுனி.

காயத்ரீ மந்திரத்தின் பொருள் தெரிய வேண்டுமா? திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலயத்தின் ஓங்காரப் பிரகாரத்தை 24 முறை வலம் வந்து வணங்குங்கள்.

ஸ்ரீஅகஸ்திய மாமுனிக்கு உயிர்கள் மேல் கொண்ட பெருங் கருணையைப் பாராட்டிய சிவபெருமான், "உனது வேண்டுகோள் எமக்கு மிகவும் ஆனந்தத்தை அளிக்கிறது, மாமுனியே. மண்ணுயிர்கள் மேல் நீர் கொண்ட கருணை ஒப்பற்றது. நீர் விரும்பிய வண்ணமே கலியுக மனிதன் பன்னிரு திருமுறைப் பாடல்கள் அனைத்தையும் ஓதியே ஆக வேண்டும் என்ற எமது நியதியிலிருந்து சற்றே விலக்கு அளித்து சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் ஓதினாலே யுக தர்ம நியதியால் அவனுக்கு அனைத்துப் பாடல்களையும் ஓதிய பலன் கிடைக்க யாம் வழி செய்வோம்," என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

இவ்வாறு வேத நாயகனான சிவபெருமான் பெருங் கருண கொண்டு நமக்கு அளித்த பாடல்களே ஸ்ரீஅகஸ்தியர் பன்னிரு முறைத் திரட்டு என்னும் இறைப் பாக்கள் ஆகும். பல்லாயிரக் கணக்கான பன்னிரு திருமுறைப் பாடல்களை ஓத வேண்டிய கடுமையான நியதியிலிருந்து விலக்களித்து எம்பெருமான் அருளிய 32 பதிகப் பாடல்களை இங்கு அளித்துள்ளோம். திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை சித்த பாரம்பரியம் மூலமாக இந்தப் பன்னிரு முறைத் திரட்டுப் பாடல்களை கலியுகத்தில் நமக்காகப் பெற்றுத் தந்தவரே திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குரு மகா சந்நிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் ஆவார்கள். தன்னுடைய குருநாதரான சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளிடம் குருகுல வாசம் கொண்ட திரு வெங்கடராம சுவாமிகள் நாம் அனைத்து நலன்களையும் பெற்று வாழ இவ்வரிய பாக்களை வழங்கி உள்ளார்கள். அனைவரும் எளிய இந்தத் திருமுறைப் பாடல்களைப் பாடி உலகத் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று வாழ எல்லாம் வல்ல அருணாசல ஈசனின் திருப் பாதங்களைப் பணிந்து வேண்டுகிறோம்.

ஸ்ரீஅகஸ்திய மாமுனி அருளிய
பன்னிரு திருமுறைகளை ஓதும் விதிமுறைகளும் பலாபலன்களும்

1. காலை, மதியம், மாலை என எந்த நேரத்திலும் இந்தப் பன்னிரு திருமுறைப் பாடல்களைப் பாடி இறைவனை வழிபடலாம்.

2. தனி மனித ஆராதனையை விட கூட்டுப் பிரார்த்தனைக்கு வலிமை அதிகம். இறையடியார்கள் தங்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் சேர்ந்து இந்தப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு. உற்றார், உறவினர், நண்பர்கள், அறிந்தோர், அறியாதோர் என அனைவரையும் ஒன்று திரட்டி இத்திருப்பதிகங்களை ஓதி வந்தால் சமுதாய ஒற்றுமையும், அமைதியும் நிலவ வழி ஏற்படும்.

3. காலை, மதியம், மாலை என்ற மூன்று வேளைகளிலும் தினமும் சந்தியா வந்தன வழிபாடுகளை அனைவரும் நிறைவேற்றியாக வேண்டும். இதற்கு எந்தவித விலக்கும் கிடையாது. காணாமல், கோணாமல், கண்டு சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது சித்தர்கள் வாக்கு. அதாவது காலையில் சூரிய உதயத்திற்கு முன்னும் (சூரியனைக் காணாத போது), மதியம் உச்சி வேளையிலும் (சூரியன் கோணாமல் சரியாக தலை உச்சிக்கு நேராக இருக்கும்போது), மாலையில் சூரியன் மறைவதைக் கண்டும் (சூரிய அஸ்தமனத்தின்போது) சந்தியா வந்தன வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சந்தியா வந்தன வழிபாட்டைத் தக்க சற்குரு மூலம் அறிந்து நிறைவேற்றுவதே சிறப்பு. அவ்வாறு சற்குரு அமையப் பெறாதோர் இந்த 32 பதிகங்களைக் கொண்ட ஸ்ரீஅகஸ்தியர் தேவாரத் திரட்டுப் பாடல்களைப் பாடி வந்தால் சந்தியா வந்தன வழிபாட்டுப் பலன்களைப் பெறலாம்.

பிரம்மாவை நிந்தித்தால் விஷ்ணுவிடம் சென்று பிராயச்சித்தம் பெறலாம். விஷ்ணுவை வசைபாடினால் சிவபெருமானிடம் சென்று மன்னிப்புக் கோரலாம். அந்தச் சிவனையே திட்டி விட்டால் கூட உத்தம சற்குரு அதற்கும் பிராயச் சித்தம் தருவார். ஆனால், சற்குரு ஒருவரை நிந்தனை செய்தால் ஈரேழு உலகிலும் பிராயச் சித்தம் பெறவே முடியாது. அந்த உத்தம குருவே மனம் வைத்தால்தான் பிராயச் சித்தம் தர முடியும். அறியாமை காரணமாக குரு வார்த்தையை மீறியதற்கு (குருவை நிந்தித்தவர்கள் அல்ல) பிராய சித்தம் தருவதே திருச்சி உய்யக் கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவ நாதர் ஆலய தீர்த்தமாகும்.

4. இந்தப் பன்னிரு திருமுறைத் திரட்டுப் பாடல்களைக் காரிய சித்திக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, நோயால் வாடும்போது மந்திரமாவது நீறு ... என்னும் திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகத்தை ஓதி திருநீறு அணிந்து வந்தால் நோய் அகலும். காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களின் கடுமை தணியும். திருமணம், வீடு, நிலம் போன்ற நியாயமான தேவைகளுக்காகவும், வருமானத்தை மிஞ்சிய செலவு, கடன் தொல்லை போன்றவை நிவர்த்தியாகவும் வாசி தீரவே காசி நல்குவீர் .. என்ற திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய தேவாரப் பதிகத்தைத் தொடர்ந்து ஓதி பலன் பெறலாம்.

5. ஒவ்வொரு திருப்பதிகத்தின் இறுதியிலும் திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம், திருச்சிற்றம்பலம் என்று மூன்று முறை ஓதுதல் சிறப்பு.

6. பாடல் பெற்ற சிவத் தலங்கள், மங்கள சாசனம் அமைந்த பெருமாள் தலங்கள் (திவ்ய க்ஷேத்திரங்கள்), சுயம்பு மூர்த்தி அருளும் தலங்கள், கங்கை, காவிரி போன்ற புனித நதிக் கரைகள், துளசி மாடம், பசுமடம், திருஅண்ணாமலை, ஐயர்மலை, பழனி மலை கிரிவலப் பாதைகள், மலைத் தலங்களில் இந்தப் பதிகங்களை ஓதுவதால் வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காகப் பெருகும். ஆனால், அபரிமிதமான இந்தப் பலன்களை சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் வெள்ளம், புயல், வறட்சி, பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து மக்களைக் காக்கவும், சமுதாய அமைதிக்காகவும், இன ஒற்றுமைக்காகவும் அர்ப்பணித்தல் சிறப்பாகும்.

7. தமிழ் மொழியும், சமஸ்கிருதம் என்னும் வடமொழியும் இறைவனின் இரு கண்கள் என்பது சித்தர்கள் கூற்று. ஹோமம், வேள்வி, யாக வழிபாடுகளில் தேவமொழியில் அமைந்த மந்திரங்களை ஓதியே ஆஹூதி அளித்து வருகிறோம். ஆனால், தேவமொழி அறியாதோரும் இந்த 32 பதிகங்களில் உள்ள பாடல்களை ஓதி ஹோம, யக்ஞ வழிபாடுகளை மேற்கொள்ளலாம். பொதுவாக, திருநாவுக்கரசு சுவாமிகள் அருளியுள்ள திருத்தாண்டகப் பதிகங்களை ஹோம வழிபாட்டிற்காக ஓதுதல் சிறப்பாகும்.

8. மனிதப் பிறவிக்கு வித்தாக அமைவது நாம் செய்த கர்மமே. நிறைவேறாத ஆசையும் கர்மா என்னும் முறையில் பிறவிக்கு வழி வகுக்கும். முறையான எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வந்தால்தான் பிறவி இல்லாத நிலையை என்றாவது ஒரு நாள் மனிதன் அடைய குருவருள் துணை புரியும். நியாயமான எல்லா இன்பங்களையும் இந்தப் பிறவியிலோ அடுத்த பிறவிகளிலோ நாம் பெற துணை புரிவதே இந்த 32 திருப்பதிகங்கள். உணவு, உடை, இருப்பிடம், வாகனம், செல்வம், போகம் என மனித அனுபவிக்கக் கூடிய இன்பங்கள் 32 வகைப்படும். இந்த 32 வகையான இன்பங்களை ஒரு மனிதன் பெற வேண்டுமானால் அவன் 32 விதமான அறங்களை நிறைவேற்றியாக வேண்டும். அன்னதானம், ஆடை தானம், கல்வி தானம், விலங்குகளுக்கு உணவு, அநாதை குழந்தைகள் பராமரிப்பு, இலவசத் திருமணங்கள், முதியோர் சேவை என 32 விதமான அறங்களையும் நிறைவேற்றியவர்களுக்கே 32 விதமான இன்பங்களை, போகங்களை அனுபவிக்க ஏதுவான பிறவிகள் அமையும். இந்த 32 விதமான இன்பங்களை ஒரு மனிதன் அனுபவித்த பின்னரே அவன் ஆசைகள் இல்லாத, பிறவி அற்ற நிலையை அடைய முடியும். ஆசை இல்லாத நிலையை அடைந்த மனித மனமே முழு மூச்சுடன் இறை வழிபாட்டில் ஈடுபட முடியும். அணு அளவு ஆசை இருந்தால் ஒரு மனிதனிடம் இருந்தால் கூட அது ஒரு பிறவிக்கு வித்தாக அமைந்து அப்பிறவியில் பல கர்ம வினைகளை உருவாக்கிப் பிறவிகளைப் பெருக்கிக் கொள்ளும் நிலை ஏற்படலாம். இங்கு அளித்துள்ள 32 பதிகங்களை தொடர்ந்து ஓதி வந்தால் 32 அறங்களை நிறைவேற்றும் நிலையை அடைய குருவருள் துணை புரியும்.

9. தர்பைப் பாய், துண்டு, கம்பளி இவைகளின் மேல் அமர்ந்து திருமுறைப் பதிகங்களை ஓதுதல் சிறப்பு.

10. திருமுறைகளை ஓதும்போது அனைவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு வட்ட வடிவில் அமர்ந்து வழிபாட்டை மேற்கொள்வதால் மனம் அலைபாயாமல் ஒருமுகப்பட்ட தியானம் எளிதில் கை கூடுவதைக் கண் கூடாகக் காணலாம். வழிபாட்டுப் பலன்களும் பன்மடங்காகப் பெருகும்.

11. தேவ மொழியில் அமைந்த ரிக், யஜூர், சாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் ஓதிய பலன்களை ஒட்டு மொத்தமாக அளிக்கவல்லதே இந்த 32 திருமுறைப் பாடல்கள். தேவமொழி அறியாதோரும் வேதம் ஓதிய பலன்களை எளிதில் பெற வழி வகுப்பதே திருமுறைப் பாடல்கள். உதாரணமாக, மந்திரமாவது நீறு என்று தொடங்கும் ஒரு (திருநீற்றுப்) பதிகத்தின் பாடல்களே நான்கு வேதங்களின் பீஜாட்சர சக்திகளை உள்ளடக்கி, நான்கு வேதங்களின் திரட்சியாக அமைகின்றது என்றால் அனைத்துப் பதிகங்களின் பலாபலன்களை எழுத்தில் வடிக்க இயலுமா என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.

12. கடுக்கன், தீட்சை, ருத்ராட்சம், யக்ஞோபவீதம், ஸ்திர கங்கண், வைபவ கங்கண் போன்ற காப்புச் சாதனங்களை அணிந்து திருமுறைகளை ஓதுவதால் வழிபாட்டுப் பலன்கள் பன்மடங்காகப் பெருகும்.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய இடர்களையும் பதிகம்

(ருக், யஜுர் முதலான நான்கு வேதங்களும் சமஸ்கிருத மொழியில் அமைந்துள்ளதால் பலருக்கும் இந்த வேதங்களை ஓத இயலவில்லையே என்ற மனக் குறை இருந்து கொண்டு இருக்கும். மேலும் இந்த வேதங்களை முறையான ஸ்வரம், அட்சர சுத்தியுடன் ஓதுவது மிகவும் அவசியம். இம்முறை அறியாதோர் தொடர்ந்து இடர்களையும் பதிகத்தை ஓதி வந்தால் இக்குறை தீர்ந்து நான்கு வேதங்களையும் முறையாகப் பயிலும் வழிமுறை சிவனருளால் கிட்டும்.)

பண் : பழந்தக்கராகம்      

மறை யுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும்
பிறை யுடையாய் பிஞ்ஞகனே என்றுனைப் பேசினல்லால்
குறை யுடையார் குற்ற மோராய் கொள்கையினா லுயர்ந்த
நிறை யுடையார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

திருநெடுங்களம்

கனைத் தெழுந்த வெண்திரை சூழ் கடலிடை நஞ்சுதன்னை
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவநின்னை
மனத்தகத்தோர் பாடல்ஆடல் பேணி இராப் பகலும்
நினைத் தெழுவார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக்கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்றடர் கூற்றுதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவ நின்தாள் நிழல்கீழ்
நிலைபுரிந்தார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

பாங்கின் னல்லார் படிமம் செய்வார் பாரிடமும் பலிதேர்
தூங்கி னல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கி நில்லா அன்பினொடுந் தலைவ நின்தாள் நிழற்கீழ்
நீங்கி நில்லார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே.

விருத்தனாகி பாலனாகி வேதமோர் நான்குணர்ந்து
கருத்தனாகி கங்கையாளைக் கமழ் சடைமேல் கரந்தாய்
அருத்தனாய ஆதிதேவன் அடியிணையே பரவும்
நிருத்தர் கீதர் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாகக் கூட்டியோர் வெங்கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்த மீதென்று எம்பெருமான் அணிந்த
நீறுகொண்டார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

குன்றின் உச்சி மேல்விளங்கும் கொடிமதில் சூழ் இலங்கை
அன்றி நின்ற அரக்கர்கோனை அருவரைக் கீழ் அடர்த்தாய்
என்று நல்ல வாய்மொழியால் ஏத்தி இராப் பகலும்
நின்று நைவார் இடர் களையாய் நெடுங்கள மேயவனே.

வேழவெண் கொம்பொசித்த மாலும் விளங்கிய நான்முகனும்
சூழவெங்கும் தேட ஆங்கோர் சோதியுள்ளாகி நின்றாய்
கேழல் வெண்கொம்பணிந்த பெம்மான் கேடிலா பொன்னடியின்
நீழல் வாழ்வார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

வெஞ்சொல் தஞ்சொல் ஆக்கி நின்ற வேடமிலாச் சமணுந்
தஞ்சமில்லாச் சாக்கியரும் தத்துவ மொன்றறியார்
துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரம் நின்னடியே
நெஞ்சில் வைப்பார் இடர்களையாய் நெடுங்கள மேயவனே

நீடவல்ல வார்சடையான் மேய நெடுங்களத்தை
சேடர் வாழும் மாமருகிற் சிரபுரக்கோன் நலத்தால்
நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந்தன் சொன்ன
பாடல் பத்தும் பாட வல்லார் பாவம் பறையுமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

1. திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளியது

(வாழ்க்கையில் வளம்பெற இப்பதிகத்தை ஓதி வரவும். குழந்தைகளுக்கு நல்ல ஞாபக சக்தியை அளித்து படிப்பில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கக் கூடிய பதிகம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஓதி வந்தால் ஞான வளத்தை சிவனருளால் எளிதில் பெற முடியும்.)

பண் : நட்டபாடை      

தோடு டையசெவி யன்விடை யேறியோர் தூவெண் மதிசூடிக்
காடு டையசுடலைப் பொடி பூசியென் னுள்ளங் கவர் கள்வன்
ஏடு டையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள் செய்த
பீடு டையபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

முற்ற லாமையிள நாகமோ டேனமுளைக் கொம் பவைபூண்டு
வற்ற லோடுகல னாப்பலி தேர்ந்தென துள்ளங் கவர் கள்வன்
கற்றல் கேட்ட லுடை யார்பெரி யார்கழல் கையால் தொழுதேத்தப்
பெற்ற மூர்ந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

நீர்ப ரந்த நிமிர் புன்சடை மேலோர் நிலாவெண் மதிசூடி
ஏர்ப ரந்தயின வெள்வளை சோரஎன் உள்ளங் கவர்கள்வன்
ஊர்ப ரந்தவுல கின்முத லாகிய ஓரூரிது வென்னப்
பேர்ப ரந்தபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

விண்ம கிழ்ந்தமதி லெய்த்து மன்றி விளங்கு தலையோட்டில்
உண்ம கிழ்ந்துபலி தேரிய வந்தென துள்ளங் கவர்கள்வன்
மண்ம கிழ்ந்தஅர வம்மலர்க் கொன்றை மலிந்த வரைமார்பில்
பெண்ம கிழ்ந்த பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

பெருமாள் ஆலயங்களில் துவார பாலகராக அருள்புரியும் தெய்வமே ஸ்ரீவிஷ்வக்சேனர் என்றழைக்கப்படும் சேனை முதலியார் ஆவார். திருமகளைக் கொடியில் ஏந்திய இவரைத் தரிசித்து பெருமாள் பிரசாதமான துளசித் தீர்த்தத்தை அருந்தி வந்தால் விந்து குற்றங்கள் நீங்கும்.

ஒருமை பெண்மையுடை யன்சடை யன்விடையூரும் இவனென்ன
அருமை யாகவுரை செய்ய அமர்ந்தென துள்ளங் கவர்கள்வன்
கருமை பெற்ற கடல் கொள்ள மிதந்ததோர் காலம் இதுவென்னப்
பெருமை பெற்றபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.

மறை கலந்தஒலி பாடலோடு ஆடலராகி மழுவேந்தி
இறை கலந்த இனவெள் வளைசோர என்னுள்ளங் கவர்கள்வன்
கறை கலந்த கடியார் பொழில் நீடுயர் சோலைக் கதிர் சிந்தப்
பிறை கலந்த பிரமா புரமேவிய பெம்மான் இவனன்றே.

சடை முயங்கு புனலன் அனலன் எரிவீசிச் சதிர்வெய்த
உடை முயங்கு மரவோடுழி தந்தென துள்ளங் கவர்கள்வன்
கடன் முயங்கு கழிசூழ் குளிர்கானலம் பொன்னஞ் சிறகன்னம்
பெடை முயங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

வியரிலங்கு வரையுந்திய தோள்களை வீரம் விளைவித்த
உயரிலங்கை அரையன் வலிசெற் றெனதுள்ளங் கவர்கள்வன்
துயரிலங்கு் உலகிற்பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம்
பெயரிலங்குபிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

தாணுதல் செய்திறை காணிய மாலொடு தண்டா மரையானும்
நீணுதல் செய்தொழியந் நிமிர்ந்தான் எனதுள்ளங் கவர்கள்வன்
வாணுதல் செய் மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்தப்
பேணுதல் செய்பிர மாபுர மேவிய பெம்மா னிவனன்றே.

புத்த ரோடுபொறியில் சமணும் புறங்கூற நெறிநில்லா
ஒத்த சொல்ல உலகம் பலிதேர்ந் தெனதுள்ளங் கவர்கள்வன்
மத்த யானை மறுகவ்வுரி போர்த்ததோர் மாயம் இதுவென்னப்
பித்தர் போலும்பிர மாபுரம் மேவிய பெம்மா னிவனன்றே.

அரு நெறிய மறைவல்ல முனியகன் பொய்கை அலர்மேய
பெரு நெறியபிரமாபுர மேவிய பெம்மான் இவன்றன்னை
ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன் உரைசெய்த
திரு நெறிய தமிழ்வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

வளரும் தேவாரம் ...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam