சங்கமம் சுகமா, பிரிவு வேதனையா ?

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

கிரகங்களின் சங்கமம்

மயிலாடுதுறை அருகிலுள்ள மூவலூர் சிவத்தலத்தில் அருள்புரியும் தெய்வமே ஸ்ரீமார்கசகாயபந்து ஈசன் ஆவார். திக்குத் தெரியாமல் வாழ்க்கையில், குழப்பத்தில் தடுமாறும் அனைவர்க்கும் வழிகாட்டும் அண்ணலாக இத்தல இறைவன் திகழ்வதால் ஸ்ரீவழிகாட்டும் வள்ளல் என்று மெய்யுணர்ந்தவர்களால் போற்றப்படும் அண்ணலாகத் திகழ்கிறார். இறைவிகளான துணைவர் இருவர் ஸ்ரீமங்களநாயகி சௌந்தர நாயகி அருள் வழங்குகின்றனர். அரிதாக ஸ்ரீமேதா தட்சிணா மூர்த்தி அறிவும் ஆற்றலும் உடைய மிருகங்கள் வணங்கும் கோலத்தில் அருள்புரிகின்றார். சௌந்தர நாயகி, மங்கள நாயகி என்ற மாதாக்களும், வழிகாட்டும் வள்ளல் என்ற பிதாவும் மேதா தட்சிணாமூர்த்தி என்ற குருவும் நாம் இறையருளை பூர்ணமாகப் பெற எழுந்தருளிய திருத்தலமே மூவலூர் ஆகும். இந்த அண்ணல்கள் மூவரும் எழுந்தருளிய தலம் என்றால் இது மூவரூர் என்றுதானே சிறப்புப் பெற வேண்டும்? ஆரம்பத்தில் மூவராகத் திகழும் இம்மூவரும் நாட்கள் செல்ல செல்ல தெய்வீகத்தில் முன்னேற முன்னேற இந்த மூவரின் உருவம் மறைய இந்த மூவர் சுட்டிக் காட்டும் தத்துவங்கள் மட்டும் எஞ்சி விஞ்சி நிற்கின்றன. இதுவே மூவலூர் திருத்தல வழிபாடு சுட்டிக் காட்டும் பேருண்மை.

மூவலூர் திருத்தலம்

புத்தம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
என்கிறது பௌத்த மதம். இது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்க்கும் உரித்தான கொள்கையே என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பத்தில் புத்தர் என்ற உருவத்தைச் சரணடையும் மனம் இறுதியில் புத்தம், பகுத்தறிவு என்ற பேரருளைச் சரணடைகிறது. இதை உணர்த்துவதே மூவலூர். கடவுள் என்றால் என்ன ? இதுதான் கடவுள், கடவுள் இந்த இந்த தன்மைகளுடன் துலங்குவார் என்று ஒருவரால் வரையறுக்க முடிந்தால், சுட்டிக் காட்ட முடிந்தால் அவர் நிச்சயமாக கடவுளாக இருக்க முடியாது, அந்தப் பொருள் நிச்சயமாக கடவுளாக இருக்க முடியாது. இதற்கு சான்றாக இருப்பதே மூவலூர் வழிபாடு உணர்த்தும் உண்மையாகும். மூன்றின் குசாவாகத் திகழ்வது ஆறு என்பது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு ஆறு கிரகங்கள் அதாவது சூரியன், சந்திரன், புதன், குரு, சனி, கேது என்ற ஆறு கிரகங்களும் தனுசு ராசியில் ஒன்றாக இணையும் கிரகங்களின் சங்கமம் வரும் மார்கழி மாதம் ஒன்பதாம் நாள் (25.12.2019) புதன் கிழமை அன்று நிகழவிருப்பதால் இறையன்பர்கள் இந்த சங்கம கோலத்தை நல்ல முறையில் பூஜித்து பயன்படுத்தும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த விகாரி வருட பலாபலன்களைப் போன்றே இவ்வருடம் தோன்றும் இந்த சங்கமக் கோலமும் மாறுபட்ட பலன்களை அளிக்கக் கூடியதே. இவ்வருட ஆரம்பத்தில் சித்தர்கள் சுட்டிக் காட்டியபடி செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தால் பல இடங்களில் தீ விபத்துக்கள் உலகளாவிய நிலையில் ஆயிரக் கணக்கான லட்சக் கணக்கான மக்களுக்கும் பொருட்களுக்கும் சேதத்தை விளைவித்தாலும் குருவை கடவுளை நம்பியோர்கள், வழிபாடுகளை இயற்றியவர்கள் இத்தகைய ஆபத்துக்களிலிருந்து மீண்டு வந்துள்ளார்கள் என்பது அவரவர் அனுபவத்தால் அறிந்திருக்கக் கூடும். அதே போல் செவ்வாய் பகவான் அளிக்கும் உஷ்ண வியாதிகளிலிருந்து மீண்டு ஆரோக்யம் பெற்ற அடியார்களின் வரலாறும் பல நீங்கள் அறிந்திருக்கலாம். இவ்வாறு மூல நட்சத்திர ஆதிக்கத்தில் அமையும் இந்த சங்கமக் கோலமும் கடவுளை நம்பியோருக்கு அற்புதமான பலன்களை வர்ஷிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. சற்குரு அருளியதுபோல் இந்த சங்கமக் கோலத்தின் மகிமையை விளக்க மூன்று யுகங்கள் கூட போதாது என்றாலும் கலியுக வாசிகளுக்கு பயன்படும் சில கருத்துக்களை மட்டும் இங்கு அளிக்கிறோம். பஞ்ச பூதங்களும் ஒரு யுகத்தில் ஸ்ரீரங்கநாதரை வழிபட்டு நற்கதி அடைந்தன என்பது நீங்கள் அறிந்ததே. அது போல் இந்த சங்கமக் கோலமும் பெருமாளுக்கு உரிய புதன் கிழமை அன்று நிகழ இருப்பதால் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் 25.12.2019 அன்று மாலை சுமார் 5 மணிக்கு நிகழ இருக்கும் கிரக சங்கமக் கோலம் பற்றிய வரைபடைத்தையே இங்கு பக்தர்களின் வழிபாட்டிற்காக அளிக்கிறோம். அடியார்கள் தாங்கள் வசிக்கும் இடங்களிலோ அதாவது மற்ற மாநிலங்களிலோ அயல்நாடுகளிலோ வசிப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு உரித்தான கிரக சங்கமங்களின் படத்தை வரைந்து வழிபடுவதும் ஏற்புடையதே. மேஷ ராசியிலிருந்து ஒன்பதாவது ராசியான தனுசு ராசியில் இந்த கிரக சங்கமம் நிகழ்வதால் ஐந்திற்கு ஒன்பது என்ற கணக்கில் தனுசு ராசியில் ஐந்து கிரக சங்கமத்தில் தோன்றிய பகவான் ரஜனீஷ் அவர்களின் ஜன்ம ஜாதகத்தை வைத்து வழிபடுவதும் ஏற்புடையதே.

ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி மூவலூர்

பகவானின் ஜாதகத்தில் உச்சம் பெற்ற குரு பகவான் ராஜ யோகம் பெற்ற கிரகமாகத் திகழ்வது போல பகவானின் உபதேசமும் கடவுள் அனுகிரகத்தை பூர்ணமாக வழங்கக் கூடிய அருளுரைகளே என்பதை உணர்த்தும். நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பதொன்றுதான் என்று கடவுளைப் பற்றி சித்த கிரந்தங்கள் உரைப்பதைப் போல நடுநாயகமாக நின்று இறைவனின் மகிமைகளை உலகிற்கு உணர்த்தியவர்களுள் பகவான் ரஜனீஷ் அவர்களும் ஒருவர் என்ற உண்மையை அவர் ஜாதகத்தில் நவாம்சத்தில் சந்திரன் துலா ராசியில் நிலைகொள்வதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். ஒரு ராசிக் கட்டத்தை ஒன்பதாகப் பிரித்தல் என்ற நவாம்சமும், பன்னிரெண்டாகப் பிரித்தல் துவாதசாம்சமும், 108 பாகங்களாகப் பிரித்தல் என்ற அஷ்டோத்தர சதம் போன்ற பிரிவினைகளும் நவகிரக அம்சங்களை நாம் விரும்பும் வண்ணம் பகுத்து தெரிந்து கொள்ளும் ஒரு முறையாகும். இதில் நவாம்சம் என்பது பூர்வ ஜன்ம வினைகளை அறியும் கண்ணாடியாக அமைவதால், பூர்வ ஜன்ம விளைவாகவும், முந்தைய பிறவிகளின் நிறைவாகவும் இந்த பிறவி வாய்த்துள்ளதால் ராசிக் கட்டமும் நவாம்சக் கட்டமும் திருமணம் போன்ற காரியங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கின்றன. மூவலூர் தலத்தில் பொலியும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி முயலகன் மட்டும் அல்லாது காளை வாகனம் போன்ற ஐந்து வாகனங்களுடன் துலங்குவதால் பகவான் ரஜனீஷ் முற்பிறவிகளில் இம்மூர்த்தியை வணங்கி வழிபட்டே ஐந்து கிரக அம்சங்களுடன் பொலியும் ஜாதக அம்சங்களைப் பெற்று புகழ் பெற்றார் என்பதே நாம் அறிந்துகொள்ள வேண்டிய வேத உண்மையாகும். பிருத்வி முதலான பஞ்ச பூதங்களையும் நாகம் போன்ற பஞ்ச சக்திகளையும் தன் கரங்களில் ஏந்தி அருள்புரியும் அரிதான தட்சிணா மூர்த்தி இவரே. மாதங்களில் நான் மார்கழி என்று பகவான் கிருஷ்ணர் முழங்கிய மார்கழி மாதத்தில் தோன்றும் இந்த கிரக சங்கமத்தை வழிபட்டு பயன்பெறும் முறையாக சித்தர்கள் அருள்வது என்ன ? பித்ருக்களின் நாயகராகத் துலங்கும் பெருமாள் மூர்த்திக்கு உரிய புரட்டாசி மாதத்தில் இந்த கிரக சங்கமத்திற்கு உரித்தான வழிபாடுகளை ஆரம்பித்து புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மூன்று மாதங்களுக்கு நிறைவேற்றுதல் நலமே. இந்த கிரக சங்கமம் அமாவாசை திதியில் ஆரம்பித்து மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்திற்கு உரித்தான வெள்ளிக் கிழமையில் நிறைவு கொள்வது மிக மிக அரிதான ஒரு பாக்கியமே, பூலோகவாசிகள் பெற்ற தவப்பலனே இது.

நாகதேவதைகள் மூவலூர்

நாகங்களின் தலைவனான கார்கோடகன் தன்னுடைய நாக குலத்தைச் சேர்ந்த நாக தேவதைகள் நன்னிலை அடையவும், மற்ற குலத்தைச் சேர்ந்த பிராணிகள் மனிதர்களிடமிருந்து துன்பத்தை அடையாமல் இருக்கவும் திருஅண்ணாமலையை பல வருடங்கள் தொடர்ந்து கிரிவலம் வந்து பிரார்த்தித்தது. அதன் பிரார்த்தனைக்கு மகிழ்ந்த ஈசன் கார்கோடக நாகத்தை தன்னுடைய கையில் ஏந்தி மூவலூர் திருத்தலத்தில் தட்சிணாமூர்த்தியாக அருள்புரிந்தார். கார்கோடகனுடன் நாக வடிவில் கிரிவலம் வந்த நவகிரக தேவதைகளும் தட்சிணா மூர்த்தியின் அருளைப் பெற்று இங்கு நாக தேவதைகளாக எழுந்தருளின. அதனால் எத்தகைய நாக தோஷங்களால் வருந்துவோரும், ராகு கேது மூர்த்திகளை தங்கள் ஜாதகங்களில் லக்னம், ஏழாம் இடம் போன்ற இடங்களில் அமையப் பெற்றோரும் மூவலூர் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றி இங்குள்ள நாகதேவதைகளுக்கு தாமே அரைத்த மஞ்சளை சார்த்தி சுத்தமான குங்கமப் பொட்டிட்டு வணங்குதலால் அவர்கள் வாழ்வில் ஜாதகக் குறைபாடுகள் நீங்கி நன்முறையில் திருமணம் நிறைவேறும். நாக தோஷங்கள் திருமண வாழ்வை மட்டும் பாதிப்பவை அல்ல, சந்ததிக் குற்றங்களையும் மணவாழ்வில் கருத்து வேற்றுமையை ஏற்படுத்துபவையும் நாக தோஷங்களே. வியாபாரத்தில் போட்டி பொறாமை, முதலாளி தொழிலாளி வேற்றுமைகள் இவைகளுக்கும் மூலக் கரு நாக தோஷங்களே என்பதால் இவற்றைக் களைவது அவசியம். குடும்பத்திலும் சமுதாயத்திலும் அமைதியை ஏற்படுத்தக் கூடியதே நாக வழிபாடு. 25.12.2019 அன்று ஏற்படும் கிரக சங்கமத்தில் மிதுன ராசியில் துலங்கும் ராகு பகவானின் பார்வை தனுசு ராசியில் உள்ள கேது பகவான் திருஷ்டியுடனும் லக்ன தேவதையுடனும் பாரிஜாத சங்கமம் கொள்வதால் இந்த அற்புத சங்கமத்தால் களையப்படும் திருமண தோஷங்கள் பல. திருமண தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்களும், திருமணமாகி நாக தோஷங்களால் குடும்பத்தில் வியாபாரத்தில் அலுவலகத்தில் பல கருத்து வேற்றுமைகளால் துன்பங்களைச் சந்திப்போரும், சந்ததிக் குறைபாடுகளால் வருந்துவோரும் மேற்கூறிய நாக தேவதைகள் வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். இந்த வழிபாடுகளை புத பகவான் ஆட்சி பெறும் புரட்டாசி மாதம் முதல் கார்த்திகை மாதம் இறுதி வரை நிறைவேற்றி வர வேண்டும் என்பது முக்கியம். இந்த வழிபாடுகளின் போது ஏதாவது ஒரு நாகப் புற்றுக்கு பசும்பாலை புதன் கிழமை அல்லது வெள்ளிக் கிழமைகளில் குறைந்தது 300 மிலி ஒரு கொட்டாங்குச்சியில் ஊற்றி நாகப் புற்று அருகே வைத்து வழிபட வேண்டும் என்பது அவசியம்.

தத்தாத்ரேய கிரக சங்கமம்

25.12.2019 அன்று அமையும் கிரக சங்கமக் கோலத்தை தத்தாத்ரேய கிரக சங்கமம் என்ற நாமத்தால் சித்தர்கள் அழைக்கிறார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளின் இனிய இணைப்பாக தோன்றிய தத்தாத்ரேய அவதாரம் அளிக்கும் சக்திகளுடன் துலங்குவதே இந்த கிரக சங்கமக் கோலமாகும். மூன்றிற்கு ஆறு குசா எண்ணாக அமைவது போல ஆறிற்கு மூன்று குசாவாக அமையும். இவ்வாறு மூன்று மூர்த்திகள் இணைந்த கோலம் தத்தாத்ரேய கோலம் என்ற ஆறு எழுத்துக்களுடன் அமைவது போல இந்த கிரக சங்கமத்தில் ஆறு கிரகங்கள் இணைவதால் இந்த சங்கமம் இத்தகைய சிறப்பான நாமத்தைப் பெற்றது. எத்தனையோ நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழக்கூடிய கிரக சங்கமம் இது என்பதை நினைவில் கொள்ளவும். எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்பது குரு சந்திர சங்கமமாகத் திகழும் கஜகேசரி யோகத்தின் சிறப்பாகும். இந்த கஜகேசரி யோகம் பாரிஜாத யோக சக்திகளுடன் துலங்கியதால் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அஜாத சத்ருவாக அதாவது யாராலும் வெல்ல முடியாத சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார் என்பது நீங்கள் அறிந்ததே. ராமபிரானின் எதிரியான ராவணனும் இத்தகைய கஜகேசரி யோக அமைப்புகளுடன் திகழ்ந்தாலும் ராம பிரானின் தெய்வீக ஜாதகம் பெற்றிருந்த பலன் வேறு எவராலும் பெற முடியாத ஒரு சிறப்பாகும். அதே போல பகவான் ரஜனீஷின் ஜாதக அமைப்பும் மேற்கூறிய தத்தாத்ரேய கிரக சங்கம அமைப்பும் இத்தகைய கஜகேசரி யோக சக்திகளுடன் பொலிவதால் இந்த யோக அமைப்புகளை நன்முறையில் பூஜித்து எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்பதாக அனைத்து அடியார்களும் வையகத்தில் வாழ்வாங்கு வாழ இறையருளை வேண்டுகிறோம்.

தத்தாத்ரேய கிரக சங்கமம்

ஐந்தை ஒன்றில் பெற்றார்

மூன்று நாட்கள் நிரவும் கிரகங்கள் சங்கமத்தின் முதல் நாள் அமாவாசை தினமாக அமைவதால் அதாவது சந்திரனும் சூரியனும் கூடும் ரீதியில் அமைவதால் இதே ரீதியில் அமைந்த இறை கீர்த்தனைகளையும் மந்திரங்களையும் பாடல்களையும் புரட்டாசி மாதம் முழுவதும் பாடி வருதல் வேண்டும். குறிப்பாக ஹயக்ரீவர் தோத்திரங்களையும் துர்கா மந்திரங்களையும் ஓதி வருதல் சிறப்பாகும். ஜாதக கட்டங்களில் ஒற்றைப்படை ராசிகள் ஆண் தத்துவத்தையும் இரட்டைப்படை ராசிகள் பெண் தத்துவத்தையும் குறிக்கும். இரட்டைப்படை கடக ராசியை ஆட்சி வீடாக கொண்டவர் பெண்களுக்குரிய சந்திர பகவான், ஒற்றைப் படை சிம்ம ராசியை ஆட்சி வீடாகப் பெற்றவர் சூரிய பகவான். எனவே ஒற்றைப்படை நாட்களில் துர்கா தோத்திரங்களையும் இரட்டைப்டை நாட்களில் ஹயக்ரீவர் மந்திரங்களையும் ஓதி வருதல் சிறப்பாகும். பற்பல அனுகிரகங்களுடன் இத்தகைய வழிபாடுகள் பித்ருக்களின் ஏராளமான புண்ணிய சக்தியைப் பெற்றுத் தருவதுடன் குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஹயக்ரீவர் துர்கை என்ற நாமங்களே ஒற்றைப் படை இரட்டைப்படையாக, ஒன்றிற்கொன்று குசாவாக அமைந்தவைதானே. புரட்டாசி மாதம் முழுவதும் குடும்ப ஒற்றுமைக்கான சமுதாய ஒற்றுமைக்கான துதிகளை ஓதி வருதலே உரிய வழிபாட்டு முறைகளாகும். இத்துடன் முந்திரி, பாதம்பருப்பு, டபுள் பீன்ஸ் போன்ற இதயத்தைக் குறிக்கும் பெரிய பருப்புகள் கலந்த உணவு வகை அன்னதானங்களும் சிறப்பே. காது தோடுகள், செருப்பு, வளையல்கள், மெட்டிகள் போன்ற இரட்டைப் பொருட்களையும் தானம் அளித்தல் சிறப்பு. இவ்வருடம் முழுவதும் சிறப்பாக இவ்வருட புரட்டாசி மாத வழிபாட்டிற்கு உகந்தவர்களே மூவலூர் பிள்ளயார் மூர்த்தியும் ஒடுக்கத்தூர் சித்தரும் ஆவார்கள். மூவலூரில் கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள மூன்று கணபதி மூர்த்திகளும் தம்பதிகளிடையே தோன்றும் வேற்றுமைகளைக் களைந்து குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் அனுகிரகத்தை சிறப்பாக இவ்வருடம் அருள்கின்றனர். தகுதிகள் இருந்தும், எவ்வித குறைபாடுகள் இல்லாவிட்டாலும் திருமணம் ஆகாத ஆண்களும் பெண்களும் நிறைய உண்டு இந்த சமுதாயத்தில். அத்தகையோர் இந்த கணபதி மூர்த்திகளை வணங்கி மேற்கூறிய தான தர்மங்களுடன் வழிபடுதல் சிறப்பாகும்.

ஸ்ரீஒடுக்கத்தூர் சித்தர்

ஸ்ரீஒடுக்கத்தூர் சித்தர்
ஜீவாலயம் பெங்களூர்

பெங்களூர் அல்சூர் ஏரியில் தென்கரையில் ஜீவாலயம் கொண்டு அருள் வார்க்கும் அற்புத மகானே ஒடுக்கத்தூர் சித்தர் ஆவார். ஐம்புலன்களை அடக்கும் உபாயம் கூறவல்ல அற்புத மகான் இவர். பொதுவாக குடும்பத்தில் சமுதாயத்தில் தோன்றும் பல பிரச்னைகளுக்கு புலனடக்கம் இல்லாததே முக்கிய காரணமாகும். இவ்வாறு புலன்களை அடக்கும் வழிமுறையை தன்னுடைய தரிசனத்தின் மூலம் அளிப்பவரே ஒடுக்கத்தூர் சித்தராவார். தானே முன்மாதிரியாக வாழ்ந்து யாருடனும் பேசாது தன்னுடைய செய்கையாலேயே பல அற்புதங்களைப் புரிந்த மகான். வேலூர் அருகே பிறந்த இவர் திருஅண்ணாமலையை வலம் வந்து பஞ்சமுக தரிசனம் பெற்று புலன்கள் அடங்கும் வித்தையைப் பயின்றார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதாக நாம் நம்மைப் புரிந்து கொள்ள ஒரு தெய்வமோ, ஒரு மந்திரமோ, ஒரே ஒரு கோட்பாடே போதும் என்பதை தன்னுடைய வாழ்க்கை மூலம் நிரூபித்தவரே ஒடுக்கத்தூர் சித்தர் ஆவார். ஒரு முறை தன்னுடைய இளமை வேகத்தால் பல தவறுகளைப் புரிந்த ஒரு இளைஞன் மனம் திருந்திய நிலையில் ஆனால் உடல் அடங்காத நிலையில் சித்தரைச் சரணடைந்தான். அதிகம் பேசாத சித்தரும் அந்த இளைஞனிடம் எந்த கேள்வியும் கேட்காமல் தான் போர்த்தியிருந்த போர்வையை எடுத்து அந்த இளைஞன் உடலில் போர்த்தி விட்டாராம். அதுவே அவன் ஆசையில் துள்ளி ஆடிய கடைசி நாள். அவன் மனம் உள்முகமாகத் திரும்ப தொடர்ந்து இறைசேவையை அவன் மனம் நாட இறுதியில் இறையருளும் பெற்றான். இவ்வாறு மௌனத்தால் பலரின் வாழ்க்கையில் பிரகாச ஜோதி ஏற்றி வைத்தவரே ஒடுக்கத்தூர் சித்தர். சித்தர் பிரானின் ஜீவ சமாதியை தரிசனம் செய்து கம்பளி ஆடைகள் தானம் அளித்தல் சிறப்பாகும். விவாகரத்து வரை சென்ற தம்பதிகள் கூட இம்மகானின் வழிகாட்டுதலால் நல்லருள் பெற்று மீண்டும் மலர்ந்த குடும்ப வாழ்வைப் பெற்ற வரலாறுகள் பல உண்டு.

மகான்களின் விரல் அசைந்தால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் என்பது போல மகான்கள் அணியும் ஆடைகளிலும் பல பல அர்த்தங்கள் பொதிந்திருக்கும். அது போல கம்பளியைப் போர்த்திய கோலத்தில் அருள்புரியும் ஒடுக்கத்தூர் சித்தரின் தரிசனத்தையே நீங்கள் திருஅண்ணாமலை ஸ்ரீஅகத்திய ஆஸ்ரமத்தில் தரிசனம் செய்கிறீர்கள். ஐம்புலன்கள் அடக்கும், அடங்கும் அற்புத தரிசனமே இது. இந்த தரிசனம் தரும் பலனை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். திருஅண்ணாமலை ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் எப்போதும் அழுக்கடைந்த ஆடையுடனே திரிவார். யாராவது அவருக்கு புதிய ஆடைகளை அளித்தால் அதை அவர்கள் பார்க்கும் நேரம் வரை அணிந்திருந்து பின்னர் தான் கிரிவலம் வரும்போது அங்குள்ள மயானங்களை காவல் காக்கும் ஒரு வெட்டியானுக்கு அளித்து விடுவார். மேலோட்டாகத் துலங்கும் இந்த தானத்தின் பின்னால் அமைந்த தெய்வீக இரகசியங்களை சித்தர்களே அறிவர். பொதுவாக மனிதர்கள் இறந்த பின் அவர்களை எரிப்பதே முறை. அதனால் மனித உடலை இயக்கும் தச வாயுக்களும் உடனே தக்க பரிணாமத்தை அடைந்து விடும். ஆனால் சில பாரம்பரியங்களில் இறந்தவர்களை புதைத்து விடுவது உண்டு. அப்போது தச வாயுக்கள் தங்கள் சுய பரிணாமத்தை அடைய பல மாதங்கள், வருடங்கள் கூட எடுத்துக் கொள்ளும். எது எப்படியிருந்தாலும், அக்னி சம்ஸ்காரமாக இருந்தாலும், பிருத்வி சம்ஸ்காரமாக இருந்தாலும் இறந்த உடல் சுற்றுப்புறத்தை மாசு அடையச் செய்யும் என்பது உண்மையே. இதனால் இந்த நிலையை சரி செய்யும் பொறுப்பு பல தேவதைகளுக்கு உண்டு. சேஷாத்ரி சுவாமிகள் தான் அணிந்த ஆடைகளை வெட்டியானுக்கு அளித்தார் என்று கூறினோம் அல்லவா ? இத்தகைய அக்னி, பிருத்வி சம்ஸ்காரங்களைக் களையும் மார்கமாக செயல்பட்டதே அவருடைய தானம் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய சுவையாகும்.

புன்னைமர நிழலில்
ஸ்ரீவழிகாட்டும்வள்ளல் மூவலூர்

இறந்தவர்களின் உடல்களைச் சுடும் அக்னி ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வியாபித்தலே சிறப்பு. ஆனால் தற்காலத்தில் இத்தகைய இரகசியங்களை அறிந்தோர் அருகிவிட்டதால் சேஷாத்ரி சுவாமிகள் வெட்டியானுக்கு தன்னுடைய ஆடையை தானமாக அளித்து அதன் மூலம் இந்த அக்னி சம்ஸ்காரத்தை முறையாக நிறைவேற்றினார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். புதைகுழியை நாடும் புழுக்களும் இத்தகைய வெட்டியான்கள் போர்த்திய போர்வையால் நல்லருள் பெறும் என்பது உண்மையே. எனவே மகான்கள் என்பவர்கள் மக்களுக்கு மட்டும் சேவை செய்ய வந்தவர்கள் அல்லர், பூச்சிகளுக்கும் மயானத்தைச் சூழும் புழுக்களுக்கும் நற்கதி அளிக்கவல்லவர்களே மகான்கள் ஆவர். இந்த உண்மையை உணர்த்துவதும் ஒடுக்கத்தூர் சித்தர் போர்த்திய போர்வை மகிமையும் தரிசன மகிமையும் ஆகும். மயானக் கிரியைகளின்போது ஓதப்படும் மந்திரங்களை அறிந்தால் அவை இத்தகைய கிரியைகளின்போது இறக்கும் பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் நற்கதி அளிப்பதாக இருப்பதை நாம் அறியலாம். இறப்பிற்குப் பின் நிகழும் பத்து நாள் சடங்குகளின் போது நாம் அளிக்கும் நீர் மோர், பானகம், செருப்பு போன்ற தானங்கள் இந்த புழு பூச்சிகளின் மேன்மைக்காகவும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள உதவி செய்வதே புரட்டாசி மாத வழிபாடுகளாகும். கோலம் என்றால் அமைப்பு என்ற பொருளும் உண்டு. அதாவது நின்ற கோலம், நடந்த கோலம் போன்றவை நாம் அறிந்த சில கோலங்களாகும். மேலே குறிப்பிட்ட துதிகளை ஆறு மணி நேரம் ஏதாவது ஒரு கோலத்தில் நிறைவேற்றுதல் சிறப்பு என்றாலும் தற்கால வேலை, சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு இரண்டு மணி நேரம் மட்டுமாவது ஒரு குறிப்பிட்ட கோலத்தில் நிறைவேற்றுதல் நலம் என்பதே சித்தர்களின் பரிந்துரை. உதாரணமாக ஒரு திருத்தலத்தில் அமர்ந்தோ, வீட்டில் பூஜை அறையில் அமர்ந்தோ அல்லது திருத்தலங்களை வலம் வந்தோ, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களை பிரதட்சிணம் இயற்றும்போதோ மேற்கூறிய துதிகளை ஓதுவது சிறப்பாகும். குறைந்தது இரண்டு மணி நேரம் ஒரு கோலத்தை மேற்கொண்டு இந்த வழிபாடுகளை இயற்றி மற்ற நான்கு மணி நேரத்தில் அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் இந்த வழிபாடுகளின்போது கோலங்களை மாற்றிக் கொள்ளலாம். அதாவது நின்றோ, நடந்தோ, அமர்ந்தோ, படுக்கையில் படுத்தவாறோ, திருத்தலங்களிலோ, இல்லங்களிலோ குறைந்தது இரண்டு மணி நேரம் கோலம் மாறாமல் இந்த வழிபாடுகளை இயற்ற வேண்டும் என்பதே சித்தர்கள் கூறும் நியதி. மற்ற நான்கு மணி நேரத்திற்கு தாங்கள் விரும்பும் கோலத்தை மேற்கொள்வதில் தவறு கிடையாது.

அசோகம் தணிக்கும் சோகம்

மன்மதன் தாமரை, அசோகம், மா, முல்லை, நீலோத்பல மலர்களை தன்னுடைய கணைகளாகப் பொழிந்து மக்களுக்கு அருள்வழங்குவதை பலரும் அறிந்தாலும் மன்மதன் சிருஷ்டிக்கு மட்டுமே கர்த்தா என்று நினைத்து மன்மதனை ஒதுக்கி விடுகிறார்கள். உண்மையில் பக்திக்கு வித்திடுபவனே மன்மதன் என்பதை உணர்ந்தால் மன்மதன் வழிபாட்டின் முக்கியத்துவம் தெரிய வரும். இக்காரணம் பற்றியே இன்றும் எரிந்த கட்சி எரியாத கட்சி என்று மன்மதன் சிவபெருமானின் லீலா விநோதங்களை கிராமப்புறங்களில் மக்கள் வர்ணிக்கிறார்கள். இவ்வாறு மன்மதனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பை விளக்கியவர்களுள் ஒருவராகத் திகழ்பவரே ரஜனீஷ் ஆவார். சித்தர்களைப் பொறுத்தவரை மன்மத மலர்க் கனைகளின் வித்தையை வழிபாட்டிற்குப் பயன்படுத்தி அதை பக்தி நிலைக்கு உயர்த்துவதையே தங்கள் பெருங்கடமையாகக் கொண்டுள்ளார்கள். இம்முறையில் மன்மதனின் மலர்க் கணைகளில் குறைந்தது மூன்று மலர்களை இறை வழிபாட்டிற்காகப் பயன்படுத்தி வந்தால் குறிப்பாக மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த பித்ரு வழிபாட்டிற்காக இந்த புரட்டாசி மாதம் முழுவதும் பயன்படுத்தி வருதலால் எத்தகைய சோக சூழ்நிலைகளும் குடும்பத்தை அண்டாது என்பது உண்மையே.

அசோகவனத்தில் ஸ்ரீசெண்பக விநாயகர்
இலஞ்சி முருகத் தலம்

சீதை அசோக வனத்தில் அமர்ந்து எதிர்காலத்தில் பெண்கள் தங்கள் குடும்ப அங்கத்தினர்களை இழந்து வேதனைக் கடலில் மூழ்கித் துன்புறும் நிலையை மாற்றவே தன்னுடைய பூஜா பலன்களை எல்லாம் அர்ப்பணித்தாள் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். எனவே அசோக மலர் தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்தில் நிலவும், எதிர்காலத்தில் வர இருக்கின்ற துன்பங்களைக் களையும் மாமருந்து என்பதே இறையடியார்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய இறை இரகசியமாகும். முற்காலத்தில் பெண்கள் அசோக மரங்களை உதைத்து விளையாடினார்கள் என்ற பாட்டுக்களை அறிந்திருக்கலாம். ஆண் பெண் தத்துவத்தில் பெண்கள் அசோக மர நிழலில் அமர்ந்து சோகத்தால் ஏற்படும் அதிகப்படியான உடல் சூட்டைத் தணித்துக் கொள்ளும் முறையே அசோக மரத்தில் தங்கள் பாதங்களைப் பதித்தல் என்பதாகும். இதை மரத்தை உதைத்தல் என்று பொருள் கொள்வதை விட, அம்மி மிதித்தல் என்ற திருமண சாங்கியத்திற்கு ஈடான ஒரு வழிபாடே என்று தெளிவதே சிறப்பாகும். வளமையான எவ்வளவோ மரங்கள் இருக்க ஏன் பெண்கள் அசோக மரத்தை உதைக்க வேண்டும் என்று ஆத்ம விசாரம் செய்தால்தான் அசோக மரத்தின் தெய்வீகம் புலப்படும். குற்றாலம் இலஞ்சி முருகன் திருத்தலத்தில் அபூர்வமாக ஸ்ரீசெண்பக விநயாகர் எழுந்தருளி உள்ளார். செண்பக மலர்களால் மலர்க் கிரீடம் அமைத்து, சம்பங்கி மலர்களால் தாமே மாலை தொடுத்து இந்த கணபதி மூர்த்திக்கு அளித்து வழிபடுதலால் பெண்கள் எத்தகைய சோகமயமான சூழ்நிலைகளையும் வென்று அமைதி கொள்ளலாம் என்பதே இந்த வழிபாட்டின் சிறப்பாகும். இந்த வழிபாட்டிற்குப் பின் அடிப் பிரதட்சிணமாக கோயிலை வலம் வந்து வணங்குதலால் எந்த வித சோகச் சூழ்நிலைகளும் வாழ்வில் அண்டாது என்பது உண்மை. அசோக வனத்தில் செண்பக விநாயகர் எழுந்தருளி உள்ளதால் இந்த வழிபாட்டில் இணையும் அசோகம், செண்பகம், சம்பங்கி ஆகிய மூன்று மலர்களின் சக்தி இணையும்போது பரிச்சுடர் என்ற அக்னி சக்தி தோன்றுகிறது. எத்தகைய சோக சூழ்நிலைகளையும் மாற்றி மனதிற்கு அமைதி அளிக்கக் கூடியதே இந்த பரிச்சுடர் அக்னியின் தன்மையாகும். மேலும் திரிசடை என்ற தேவதைகள் ஒரு யுகத்தில் விகாரி வருடத்தில் நவராத்திரியின்போது தோன்றியதால் இவ்வருடம் திரிசடை தேவதைகளின் நடமாட்டம் மிகுதியாகவே திருத்தலங்களிலும் காணப்படும். சீதை அசோகவனத்தில் சிறைப்பட்டிருந்தபோது விபீஷணனின் மகளான திரிசடையே சீதைக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி சீதை உயிர் நீக்கா வண்ணம் காத்தருளினாள் என்பது நீங்கள் அறிந்ததே. ஜகன்மாதாவாக விளங்கிய சீதாப் பிராட்டியே திரிசடையை “அன்னையே” என்று அழைத்தாள் என்றால் திரிசடையின் வார்த்தைகள் எத்துணை ஆறுதலை சீதைக்கு அளித்திருக்கும் என்பதை யூகித்துப் பாருங்கள். இந்த ஆறுதலை அளிக்கக் கூடியதே இலஞ்சி முருகத் தலத்தில் இயற்றும் பரிச்சுடர் வழிபாட்டு மகிமையாகும். ருத்ராக்னியில் தோன்றிய முருகப் பெருமானே இத்தகைய பரிச்சுடர் யோக சக்திகளை அளிக்கவல்லவர் ஆயினும் மற்ற திருத்தலங்களிலும் கொடி மரத்தின் கீழ் பெண்கள் பஞ்சாங்க முறையில் வணங்குதலால் இந்த பரிச்சுடர் யோக அக்னி சக்திகளை ஓரளவேனும் பெற சித்தர்கள் அருள் கூட்டுகிறார்கள். பெண்கள் தலை நடுவில் வகிடெடுத்து கூந்தலை மூன்றாகப் பிரித்து சுத்தமான எண்ணெய் தடவி திரிசடையுடன் திகழ்ந்து வாசமான மலர்களைத் தலையில் சூடிக் கொண்டால் அத்தகையோர் திருக்கோயில்களில் கொடி மரங்களின் முன் வணங்கும்போது இந்த பரிச்சுடர் அக்னி சக்திகளைப் பெறுவர். குறிப்பாக இந்த நவராத்திரி தினங்களில் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் வளையல், குங்குமம், மெட்டி, சீப்பு, கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களுடன் மணமுள்ள மலர்களை அளித்தலால் திருத்தலங்களில் இறை மூர்த்திகளை வணங்கும்போதும் கொடி மரத்தின் முன் வணங்கும்போதும் பெண்கள் இத்தகைய பரிச்சுடர் யோக சக்திகளைப் பெறலாம். எத்தகைய பிரிவினைகளையும், சோகமய சம்பவங்களையும் தாங்கும் மன உறுதியை அளிக்கக் கூடியதே இந்த பரிச்சுடர் அக்னியின் தன்மையாகும். இவ்வாறு பெண்கள் பெற்ற பரிச்சுடர் யோகாக்னி சக்திகளை பெண்கள் உடலில் தேக்கி வைத்து தக்க தருணத்தில் அவர்களுக்கு அனுகிரகமாக அளிப்பவர்களே திரிசடை தேவதைகள் ஆவர். அதனால்தான் அக்காலப் பெண்கள் எத்தகைய துன்பத்தையும் தாங்கும் வல்லமை பெற்றிருந்தனர்.

மூவிதழ் முல்லைச் சரம்

பல பெண்களும் ஆண்களைப் போல குணாதிசயங்களுடன் இருப்பார்கள். அதாவது கட்டையான குரல், நேர்கொண்ட பார்வை, முகத்தில் முடி வளர்தல், மார்பக வளர்ச்சியின்மை போன்ற காரணங்களால் வருந்தும் பெண்கள் ஏராளம். மகிசாசுரன் இறைவனிடம் வரம் பெறும்போது ஒரு பெண் மூலமாகவே தான் மரணம் அடைய வேண்டும் என்று விரும்பியதால் அவ்வரத்தை அளித்தார் எம்பெருமான். பெண்கள் ஒரு அசுரனைக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் தாய்மை இடம் கொடுக்காது என்ற எண்ணமே அவன் கோரிய வரத்திற்கு காரணம். இதுவே உண்மையே ஆயினும் சூழ்நிலை சந்தர்ப்பங்களில் நியாயத்தை, தர்மத்தை நிலை நாட்ட பெண்கள் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் துணிந்து செயல்படுவார்கள் என்ற உண்மையை உணர்த்த தோன்றியதே துர்கை அவதாரம். மலரினும் மென்மையான பெண்கள் ஒரு அசுரனை அழித்து மாய்க்க வேண்டுமானால் அவர்கள் தோற்றம் எத்தகைய கொடூரமானதாக இருக்க வேண்டும். அந்த கொடூர தோற்றத்திற்கு இணையான உடல் பாங்கும் கடினமாகத்தானே மாறும் ?

ஸ்ரீதுர்கை அம்மன் மூவலூர்

எனவே இவ்வாறு அசுர குணப்பாடுகளுடன் தோன்றிய துர்கா தேவி தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறியதும் மீண்டும் பழைய பெண்மைக்குரித்தான குணப்பாடுகளை அடைய இறைவனை வழிபட்ட தலமே மூவலூர் ஆகும். எனவே மூவலூர் திருத்தலத்தில் வழிபடும் பக்தர்களுக்கு வசீகரம், அழகு, மென்மை என்ற பெண்களுக்குரித்தான குணப்பாடுகள் கிட்டும் என்பதே இத்தலத்தில் அருளும் முத்தேவியரின் அனுகிரக சக்திகளாகும். எந்த தேவி எந்த அனுகிரகத்தை பக்தர்களுக்கு அளிப்பாள் என்று முழுமையாக உணர்ந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. சித்தர்களோ இத்தகைய தேவி அனுகிரகம் பக்தர்கள் இடையே பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் இவ்வருடம் புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் சனிக்கிழமை, வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமைகளில் மூவலூர் திருத்தலத்தில் இந்த மூன்று தேவியரையும் வழிபட்டு வருதலால் பெண்கள் விரும்பும் அனைத்து சக்திகளையும் பெறுவார்கள் என்று அருளி உள்ளனர். ஆண் குணாதிசயங்களுடன் விளங்கும் பெண்கள் இந்த மூன்று மாதங்களிலும் மூவலூர் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றி வருதலால் தங்கள் மணாளன் விரும்பும் மங்கையராக மாறுவர் என்பது உறுதி. இத்தகைய குறைபாடுகளால் திருமண பாக்கியம் பெறாதவர்கள் முறையான திருமண வாழ்வைப் பெறுவார்கள், திருமண வாழ்வைப் பெற்றவர்கள் இல்லத்தில் இத்தகைய குறைபாடுகளால் தோன்றும் கசப்பான உறவுகள் சீர்படும் என்பது உண்மையே. ஆண்களும் இத்தகைய வழிபாடுகளால் நன்மை அடைவர். பல ஆண்களுக்கும் பெண் குரல் அமைவதுடன், மார்பக வளர்ச்சி, நளினமான நடை போன்ற பாவனைகள் அமைந்திருக்கும். இத்தகையோரும் மூவலூர் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றி நற்பலன் பெறுவார்கள். ஆண்களும் பெண்களும் கை கால்களில் மருதாணி இட்டு இத்தலத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வருதல் நலம். வாரம் ஒரு முறையாவது மருதாணி இட்டுக் கொள்வது இந்த வழிபாட்டிற்கு உறுதுணையாக அமையும். பெண்கள் நல்ல வாசனைப் பூக்களை பந்தாக தலையில் வைத்து வலம் வருதலும், முகத்திற்கு அரைத்த மஞ்சள் பூசி வழிபடுவதும் சிறப்புடையதே. தாமே தொடுத்த முல்லைப் பூக்களை இறை மூர்த்திகளுக்கு அளித்து, இறை பிரசாதமாகப் பெற்ற பூக்களை சிறிது தலையில் சூடி வலம் வருதல் கிடைத்தற்கரிய பாக்கியமே. இவ்வருடம் முழுவதுமே முல்லைப் பூ வழிபாடு சிறப்பான பலன்களைத் தரும். காரணம் நீங்கள் ஆத்ம விசாரம் செய்து கொள்தல் சிறப்பாகும்.

திருந்து தேவன் குடி

கும்பகோணம் அருகில் உள்ள திருந்துதேவன்குடி சிவாலயம் ஸ்ரீகற்கடேஸ்வரர் அருளும் சிவத்தலமாகும். கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூஜித்த தலமாதலால் நண்டாங்கோயில் என்ற வழக்கும் உண்டு. சமீபத்தில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேகம் திருப்பணியின்போது எங்கிருந்தோ வந்த ஒரு நண்டு அனைவரும் வியக்கும் வண்ணம் அடியார்கள் நடுவே நடைபயின்று மூலத்தான சிவலிங்க ஜோதியுடன் கலந்த சம்பவம் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். நண்டிற்கு எத்தனை கால்கள் ? 6, 8, 10, 12 என்றெல்லாம் நண்டின் கால்களை விவரித்தாலும் சித்தர்களே நண்டிற்கு எத்தனை கால்கள் என்பது பற்றிய இறுதி முடிவைத் தர வல்லவர்கள். நண்டிற்கு எத்தனை கால்கள் இருந்தால் என்ன என்பது பற்றி மனிதர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றாலும் இந்த நண்டிற்கு உரிய கடக ராசியில் மனித அவதாரம் எடுத்து மக்களைக் கரையேற்றிய ராமர் இது பற்றி முழுவதுமாக அறிந்தவர் என்பதால் மக்கள் நண்டைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

ஸ்ரீஅருமருந்துநாயகி ஸ்ரீஅபூர்வநாயகி சமேத
ஸ்ரீகற்கடேஸ்வரர் திருந்துதேவன்குடி

ஸ்ரீஅருமருந்துநாயகி அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடியவள். சிறப்பாக சர்க்கரை நோய்க்கு நிவாரணம் அளிக்கக் கூடியதாக இருப்பதே திருந்துதேவன்குடியில் நிறைவேற்றும் வழிபாடுகளாகும். நண்டுகளில் மருந்து நண்டு, திருந்து நண்டு, அருமருந்து நண்டு, வாக்கிய நண்டு, வாசிட்ட நண்டு, கற்பூர நண்டு என்று பல வகை நண்டுகள் உண்டு. இதில் திருந்து நண்டு என்ற வகை நண்டுகளால் பூஜிக்கப்பட்ட இறை மூர்த்தியே ஸ்ரீகற்கடேஸ்வரர் ஆவார். இத்தகைய திருந்து நண்டுகளின் அனுகிரகத்தைப் பூரணமாகப் பெற்றவரே ஸ்ரீராமர் ஆவார். அவ்வாறு தான் பெற்ற அனுகிரகத்திற்கு நன்றி கூறும் முகமாகவே கடக ராசியில் ஸ்ரீராம அவதாரம் ஏற்பட்டது என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். ஸ்ரீராமபிரானின் வாழ்க்கை வரலாற்றை கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை பளிச்சென விளங்கும். பெருமாளின் அவதாரமாகத் தோன்றிய கிருஷ்ணாவதாரம் என்பது மக்கள் வாழ வேண்டிய வழி முறைகளை கீதையாக உபதேசித்தாலும் ஸ்ரீராமபிரான் “உபதேசம்” என்று எங்குமே அளித்ததில்லை. விபீஷணனுக்கு இலங்கையை அளித்து இலங்கை மன்னனாக விபீஷணனை அங்கீகரித்தபோது கூட அதை தான் சக்கரவர்த்தி என்ற முறையில் எடுத்த முடிவாக அறிவிக்காது ஒரு சாதாரண மனிதன் என்ற முறையில் தன்னிடம் இருப்பதை பகிர்ந்தளிக்கும் முடிவாக அறிவித்த பெருந்தகையே ஸ்ரீராமபிரான்.

ஸ்ரீதன்வந்திரி ஸ்ரீஅகத்தியபிரான்
திருந்துதேவன்குடி

ஸ்ரீநடராஜபெருமான்
திருந்துதேவன்குடி்

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது என்ற பழமொழி ஒன்று உண்டு. உடல் திமிர் கொண்டவர்கள் தங்கள் உடல் பலத்தைக் காட்ட மற்றவர்களை வம்புக்கு இழுப்பார்கள் என்று சாதாரணமாக இதைப் பொருள் கொண்டாலும் நண்டின் தியாக வாழ்வைக் குறிக்கும் பழமொழியே இது. குறிப்பாக திருந்து நண்டுகள் தங்கள் உடலைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளத் தேவையான அளவு உடைய கிளிஞ்சல் கூட்டை மட்டுமே, மற்ற ஜீவராசிகளால் வாழ்வதற்குத் தகுதியற்றதாக கருதப்பட்ட அல்லது நிராகரிக்கப்பட்ட கூடுகளையே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். தாங்கள் வளர்ந்த பின்னர் அவ்வாறு தேர்ந்தெடுத்த கிளிஞ்சல் கூடு பற்றாத போது தங்கள் “இருப்பிடத்தை” மாற்றிக் கொள்ளும். இதை மக்களுக்கு உணர்த்துவதற்காக ஏற்பட்டதே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அவதாரமாகும். தனக்கு வேண்டியதை மட்டும் வைத்துக் கொண்டு எஞ்சியதை மற்றவர்களுக்காக அளிக்கும் திருந்து நண்டுகளை ஒரு முன் மாதிரியாக, சற்குருவாக ஏற்றுக் கொண்டால் உலகில் சண்டையும் சச்சரவும் என்றுமே தோன்றாது அல்லவா ? இதை உணர்த்துவதே திருந்துதேவன்குடியில் இயற்றும் வழிபாடாகும். சர்க்கரை வியாதிக்கு மூல காரணமே தகுதிக்கு மிஞ்சிய ஆசையால் அலைக்கழிக்கப்படுவதாகும். திருந்து நண்டுகளைச் சற்குருவாக ஏற்றுக் கொண்டால் சர்க்கரை வியாதி என்ன எந்த வியாதியுமே நம்மை அண்டாதே. மூர்த்தி தீர்த்தம் தலம் என்ற மூன்றையும் முறையாக தரிசிப்போர் அனைத்து நலனையும் குருவருளால் பெற்று வாழ்வர். இதில் திருந்து தேவன் குடி என்ற திருத்தல நாமத்தை தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தாலே அதுவே சற்குருவாக நம் உள்ளத்தில் என்றென்றும் நிலைத்து நம்மை இறுதியாக இறைவனிடமே சேர்க்கும் பெருமை உடையதாகும். அறம் செய்ய விரும்பு என்ற ஆத்தி சூடியை அனைவரும் அறிந்தவர்கள்தான் நாம் அனைவரும். இந்த ஆத்திசூடியின் இந்த முதல் உபதேசத்தையே நாம் செயல்படுத்தாமல் மற்றவர்களைச் செயல்படுத்த விரும்பும்போதுதான் உலகமே போர்க்களமாக மாறுகிறது. நீ திருந்திவாழ், உலகம் தானாகத் திருந்தும், சீர் பெறும் என்ற உபதேசமே சற்குரு வெங்கடராமன் அவர்களின் உபதேசம். இந்த உபதேசத்தின் விளக்கமாக அமைவதே வரும் 25.12.2019 அன்று அமையும் கிரகங்களின் சங்கமமாகும். எப்படி ?
சர்க்கரை என்ற இனிப்பு சுவையில் குருவிற்கு உகந்ததாக இருப்பதால் இனிப்புகளையும், சர்க்கரை கலந்த பதார்த்தங்களையும் திருந்துதேவன்குடி போன்ற திருத்தலங்களில் தானமாக அளித்து வந்தால் தெய்வீகத்தில் மட்டுமல்ல பலரின் அன்றாட வாழ்க்கையில் விடை காண முடியாத பல பிரச்னைகளுக்கும் தங்கள் மனம் ஏற்றுக்கொள்ளும்படியான விடைகளைப் பெறலாம். திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் கார்த்திகை தீப அன்னதான வைபவத்தின்போது இவ்வாறு பல பிரச்னைகளால் வாடுவோர்க்கும் தீர்வு அளிக்கும் முகமாக அவர்களை இனிப்புகள் தயாரிக்கும் பிரிவிற்கு மாற்றி அவர்கள் பிரச்னைகளுக்கு “தாங்களாக” தீர்வு பெறும் முறையை வகுத்துத் தந்தவரே நம் சற்குரு. Sweet is a sweet solution.

அமைதியும் ஆனந்தமும் எதுவரை ?

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்கிறார் பரமபிதா. மன்னியுங்கள் 70க்கு 7 முறை என்பதும் வேத வாக்கியமே. அப்படியானால் எவ்வளவு நாள்தான் தவறுகளை பொறுத்துக் கொள்வது ? இது பற்றி சித்தர்கள் கூறுவது என்ன ? ஒருமுறை ஒரு அடியார், “வாத்யாரே, என்னுடைய பெண் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாள். இதற்கு நான் என்ன செய்வது?” என்று பொறுமை இழந்து கேட்டார். சற்குருவோ அமைதியாக, “சார், அறிவுரை சொல்வதோடு உங்கள் கடமை முடிந்து விடுகிறது. மீண்டும் அவள் தவறு செய்தால் மீண்டும் நீங்கள் ஏற்கனவே சொன்ன பதிலைத்தான் திரும்ப சொல்ல வேண்டும். இதற்கு வேறு வழியே கிடையாது,” என்று உறுதியாகச் சொல்லி விட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது ? சித்தர்கள் கணக்கில் நாம் நமது கடமையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். மற்றவர்கள் நாம் சொல்வதை கேட்டு நடக்கிறார்களா இல்லையா என்பது நமது வேலை கிடையாது. இந்தக் கோட்பாட்டை நமது இறுதி மூச்சு வரை செயல்படுத்த வேண்டும் என்பதே சித்தர்களின் அறிவுரை.

சிரமேற் கொள்ள வேண்டியது எது ?

ஒரு முறை திருஅண்ணாமலை கார்த்திகை தீப அன்னதானத்திற்காக சுமார் 100 அடியார்களுக்கு மேல் அழைத்து வருவதாக வாக்குறுதி அளித்த ஒரு அடியார் அவ்வாறு அடியார்களை அழைத்து வராது மட்டுமல்லாமல் அந்த அடியார்கள் எவருமே அன்னதானத்தில் பங்கேற்க முடியாதபடியும் செய்து விட்டார். அன்னதானத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த நம் சற்குருவின் மனம் என்ன பாடு பட்டிருக்கும் என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். அவ்வாறு மனம் வாடி வதங்கிய நிலையில் திகழ்ந்த நம் சற்குருவிடம் அந்த அடியார் விடை பெறுவதற்காக வந்தபோது நம் சற்குரு, “ராஜா, உன்னுடைய நல்ல மனதிற்கு நீ எங்கிருந்தாலும் நலமுடன் இருப்பாய், போய் வா,” என்று விடை கொடுத்து அனுப்பினார். கற்பனை பண்ண முடியாத வேதனையை தனக்கு அளித்த அந்த அடியார் கடைசி சில நொடிகளில் கூட மனதை மாற்றிக் கொண்டு தன் சற்குருவிடம் தொடர்ந்து பணியாற்றலாம் அல்லவா ? இதுவே சற்குருநாதர்களின் எதிர்பார்ப்பு, செயல்பாடு. நம் சற்குரு இந்த பூலோக வாசத்தை முடித்துக் கொள்ளும் முன் சில விநாடிகள் இருக்கும்போது ஒரு நர்ஸ், “ஐயா, தங்கள் கழுத்தில் உள்ள ருத்ராட்சங்களை கழற்ற முடியுமா?” என்று கேட்டபோது, “அம்மா, அடியேன் சிறு வயது முதலாகவே அணிந்திருக்கும் ருத்ராட்சம் இது, வேண்டுமானால் உங்கள் பணிக்கு இடையூறாக இல்லாதபடி இதை அடியேன் தலைக்கு மேல் வைத்துக் கொள்கிறேன்,” என்று கூறி ருத்ராட்சங்களை தலைக்கு மேல் வைத்துக் கொண்டார் நம் சற்குரு. அந்த நர்ஸிற்கு நம் சற்குருவால் அந்நிலையில் ஆறுதலை அளிக்க முடியாது, ஆனந்தத்தையும் அளிக்க முடியாது என்றாலும் நம் வார்த்தையை இந்த நோயாளி கேட்டார் என்ற மன அமைதியை அளிக்கலாம் அல்லவா ? இதுவே சற்குருமார்கள் மற்றவர்களிடமும் எதிர்பார்க்கும் செயல்பாடு. இறுதி மூச்சு உள்ளவரை அன்பும் ஆதரவும் அரவணைப்பும் ஆனந்தமும் ஆறுதலும் அளிப்பதே இறைவனை நம்பும் அடியார்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் என்பதை தன் வாழ்க்கைப் பாடமாக செயல்படுத்திக் காட்டியவரே நம் சற்குரு. ஒரு அடியாருக்கு நம் சற்குரு ஆசனம், சூரிய நமஸ்காரம், பிராணாயாமம் போன்றவற்றோடு காயத்ரீ மந்திரத்தை உபதேசமாக அளித்து ஜபித்து வரவும் கூறினார். சில ஆண்டுகள் கழித்து இந்த விரத அனுஷ்டானங்கள், ஆசனங்களால் பயன் யாதோ என்று கேட்கவே சற்குருவின் இந்த கேள்விக்கு உரிய பதிலை அளிக்க முடியாத அந்த அடியார் சற்குரு அளித்த அனுஷ்டான முறைகளை நிறுத்தி விட்டார். பின்னர் இந்த அனுஷ்டானங்கள் குறித்து சற்குரு அந்த அடியாரை எதுவும் விசாரிக்கவில்லை. ஆனால், ஞாபக சக்தி தொடர்ந்து செயல்படுவதற்கான வல்லாரை லேகியத்தை மட்டும் உணவிற்குப் பின் சாப்பிடும்படி அந்த அடியாரிடம் தெளிவுபடுத்தினார். இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஒருவர் உடல் உள்ளத்தை பலப்படுத்தும், வளப்படுத்தும் எந்தப் பயிற்சிகளை வேண்டுமானாலும் பாதியில் நிறுத்தி விடலாம், விட்டு விடலாம். ஆனால் இறை நினைவையும் சற்குருவின் தியாக சீலத்தையும் ஒருவர் என்றென்றும் மறத்தலாகாது என்பது தெளிவாகிறது அல்லவா ? குரு தத்துவத்தையே சிரமேற் கொண்ட குருவை குருவிற்கெல்லாம் குருவான தட்சிணாமூர்த்தி ஈசன் சும்மா விடுவானா ? வரலாறு காணாத அதிசயமாக திருஅண்ணமலையார் ஆலயத்திலிருந்து உரியவர்கள் மூலம் சற்குரு வெங்கடராமனுக்கு இறுதி மரியாதையாகத் தன்னுடைய மார்பில் தவழ்ந்த மலர் மாலையை அருள் பிரசாதமாக அனுப்பி நம் சற்குருவைக் கௌரவித்தான் அண்ணாமலையான், இல்லை வெங்கடராமன் என்ற அன்புக் குழந்தையைத் தன் மார்புடன் அணைத்துக் கொண்டானா அருணாசலம், இல்லை தன் நெஞ்சில் இணைத்துக் கொண்டானா இறைவன் ?!

குடகு யோகம்

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சிதிலமடைந்து இடிபாடுகளுடன் கிடந்தது திருந்துதேவன்குடி சிவாலயம். பிரகாரத்தில் பல்லாண்டுகளாக மண்டிக் கிடந்த முட்புதர்களை எல்லாம் அகற்றி உழவாரப் பணி நிறைவேற்றிக் கொண்டிருந்தனர் சில இறையடியார்கள். அப்போது முருக நாமம் பூண்ட ஒரு அடியார் பூமியில் விழுந்து கிடந்த ஒரு பெரிய கல் தூணை நகற்றியபோது அதன் அடியில் இருந்து சுமார் 15, 20 அடி நீளமுள்ள ஒரு கருநாகம் எதுவுமே நடக்காதது போல் தன் யோகத்தைக் களைத்து சகஜ நிலைக்குத் திரும்பி மெதுவே அங்கிருந்து நகர்ந்து சென்றது. வைத்த கண் வாங்காமல் அந்த நாகத்தையே அனைத்து அடியார்களும் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு நாகங்கள் பூணும் யோகமே குடகு யோகமாகும். “குடகு யோகம் பற்றி கோடி வார்த்தைகள் கூறலாம்,” என்பார் ஸ்ரீஅகத்திய பிரான். அந்த அளவு சிறப்பு வாய்ந்தது நாகங்களின் குடகு யோகம் என்றாலும் இவ்வருடம் நிகழ இருக்கும் கிரகங்களின் சங்கமம் குறித்த குடகு யோக இரகசியங்களைப் பற்றி மட்டும் இங்கு விவரிக்கிறோம். தம்பதிகள் உறங்கும்போது ஆண்கள் இடது பக்கம் ஒருக்கணித்தும் பெண்கள் வலது பக்கம் ஒருக்கணித்தும் படுத்து உறங்க வேண்டும் என்பது நமது முன்னோர்கள் வகுத்த மாண்பு. இதனால் ஆண்களுக்கு வலது நாசி சுவாசமும் பெண்களுக்கு இடது நாசி சுவாசமும் மேம்பட்டு இல்லறம் நல்லறமாக மலரும். இவ்வாறு குறைந்தது 30 ஆண்டுகள் மனமொத்து வாழ்ந்த தம்பதிகள் இடையே நிலவும் சுவாசக் கலைகள் ஒன்றுகூடி விளையும் யோகமே குடகு யோகம் என்பதாகும்.

குடகு வேந்தன் ஸ்ரீமுருகப் பெருமான்
கடம்பர் கோவில் குளித்தலை

இந்த குடகு யோகம் வெற்றிகரமாக அமையும்போது குடகு நாகங்கள் வெளிவிடும் ‘ஹிஸ்’ என்ற ஒரு ஒலி ஏற்படும். இந்த ஒலியைக் கேட்க முடிந்தவர்கள் அந்த குடகு ஒலியில் மனத்தை லயித்து தியானிப்பதே குடகு யோகமாகும். ஹிஸ் என்ற ஒலியே ஆங்கிலத்தில் கிஸ் என்பதாக மருவி உதடுகள் இணையும் ஒலியைக் குறிப்பதாக அது மாறியது. திருமணமானவர்களே இந்த குடகு யோக ஒலியைக் கேட்க முடியும், அந்த குடகு நாதத்தில் திளைக்க முடியும் என்பது புலனாகின்றது அல்லவா ? ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை மனப் பூர்வமாக அங்கீகரித்து செயல்படுத்துபவர்களே இந்த யோகத்திற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். இந்த யோகம் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள்தான் செயல்படும் என்பதால் அந்த எல்லையைக் குறிக்க போர்வை என்ற எல்லையை வைத்தார்கள் அறிவு ஜீவிகளான நம் முன்னோர்கள். இவ்வாறு பலரும் இந்த குடகு யோகத்தைப் பெற முடியாது என்பதால் வருடத்திற்கு ஒரு முறையாவது இந்த குடகு யோக சக்திகளைப் பெறுவதற்காக தம்பதிகள் ஒரு போர்வைக்குள் படுத்துறங்கும் துப்பட்டி திருவிழா என்பதை கோயிலில் நடத்தி நல்ல சந்ததிகள் உருவாக வழிவகுத்தவர்களே நம் முன்னோர்கள். குடகு யோகத்தின் ஆரம்ப பயிற்சியாக பெண்களும் ஆண்களும் ஒருவரை ஒருவர் நெருங்கி படுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் இதற்காக ஒருவரை ஒருவர் தொடாமல் படுத்து குடகு யோகத்தைப் பயில்வதற்காக ஒரு இளம் தம்பதியரைத் தயார் செய்தார் பகவான் ரஜனீஷ். ஆனால் கலியுகத்தில் இத்தகைய பரிசோதனைகள் பலனளிக்காது என்ற சித்தர்களின் வாக்கை மெய்பிப்பதாக இந்த சோதனை அமைந்து இறுதியில் அந்த இளம் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். பகவான் தன்னுடைய பணியை நிறைவேற்றிய திருப்தியில் மேலுலகம் சென்றார் என்பதே சித்தர்கள் தெளிவுபடுத்தும் இரகசியம். குடகு யோக அதிபதியே ஸ்ரீமுருகப் பெருமான் ஆவார். ஸ்ரீமுருகப் பெருமானின் திருவடியில் குடிகொண்ட குடகு நாகம் இத்தகைய குடகு யோக சக்திகளை அனுகிரகமாக அளிக்கவல்லதாகும். வள்ளிமலை சுவாமிகள் இந்த குடகு யோக சக்திகளை அளிப்பதில் வல்லவர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தன்று தன் அடியார்களை வள்ளி மலையில் ஒவ்வொரு படியாக தம்பதிகள் ஒன்று சேர்ந்து ஏறிவந்து முருகப் பெருமானை வழிபடும்படிப் பணித்து இந்த வழிபாட்டின் மூலம் அபூர்வமான குடகு சக்திகளை அந்த தம்பதிகளுக்கு அளித்து அருந்தொண்டாற்றினார்.

ஸ்ரீகஜலட்சுமி மூவலூர்

ஒரு முறை பறக்கும் தட்டில் பிரயாணம் செய்த அயல்கிரகவாசி ஒருவர் ஸ்ரீவள்ளிமலை சுவாமிகளின் மகிமை அறியாது தன்னுடைய பறக்கும் தட்டை கீழே இறக்கி அதில் சுவாமிகளை ஏற்றிச் சென்று விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவர் எண்ண ஓட்டத்தை அறிந்த சுவாமிகள் தன் கையை அசைக்கவே அந்த பறக்கும் தட்டு தானாகவே மேலே எழுந்து பறந்து வானில் மறைந்தது. அவ்வளவுதான் கதி கலங்கிப் போனான் அந்த அயல்கிரகவாசி. டெலிபதி மூலமாக தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு அளிக்கும்படி சுவாமிகளை வேண்டவே சுவாமிகளும் மனமிரங்கி மீண்டும் தன் கையை அசைக்கவே எங்கோ வானில் மறைந்த பறக்கும் தட்டு மீண்டும் வள்ளி மலையில் இறங்கவே தப்பித்தோம் பிழைத்தோம் என்பதாக அந்த வேற்று கிரகவாசியும் பறக்கும் தட்டில் ஏறி மறைந்தான். குடகு என்ற வார்த்தையை எப்படிப் படித்தாலும் ஒரே மாதிரிதான் ஒலிக்கும் அல்லவா ? பறக்கும் தட்டும் அவ்வாறே இருந்த இடத்திலேயே ஏறவும் இறங்கவும் கூடியதுதானே. இவ்வாறு குடகு யோக சக்திகளை அனுகிரகமாகப் பெற விரும்பும் தம்பதியர்களும் உத்தம சந்தானங்களைப் பெற விரும்புவோரும் இந்த விகாரி வருடம் முழுவதும் மேற்கூறிய வழிபாடுகளை இயற்றி வருதல் நலம். சிறப்பாக உத்திர நட்சத்திரம் திகழும் நாட்களில் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் அருளிய பகைகடிதல் பதிகத்தை படுக்கையில் படுத்தவாறே ஓதி வருதல் சிறப்புடையதாகும். காலை கடம்பர், மதியம் சொக்கர், அந்தி ஈங்கோய் நாதர் என்பதாக காலையும் மாலையும் காவிரி நதியில் நீராடி காலை, மதியம், மாலை குளித்தலை, ஐயர்மலை, ஈங்கோய்மலை நாதர்களை தரிசனம் செய்து இரவில் தம்பதிகள் குடகு யோகம் புரிதலால் அற்புத பலன்களைப் பெறுவர் என்பது உறுதி. குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் அதியற்புத வழிபாடுகளில் இதுவும் ஒன்றாகும். யக்ஞோபவீதம் என்பது தமிழில் மூன்றெழுத்து உடையதாக பூநூல் என்று வழங்கப்படும். இது அவரவர் விரல் அளவைக் கொண்டு 96 பாகமாக இருக்க வேண்டும் என்பது நியதி. இந்த நியதியை தற்காலத்தில் நாம் கைக்கொள்வது கடினம் என்றாலும் இந்த விகாரி வருடம் முழுவதும் ஸ்ரீஅகத்தியர் தேவாரத் திரட்டு என்னும் தேவாரப் பதிகங்களை உத்திர நட்சத்திர தினத்தன்று பகலில் ஓதி வருவதும் இவ்வாறு குடகு சக்திகளைப் பெறும் ஒரு வழிபாட்டு முறையாக அமையும். 32 x 3 = 96 என்ற கணக்கில் இந்த தேவாரப் பதிகங்கள் அமைவதால் அவை எளிதில் இந்த குடகு சக்திகளின் ஆற்றலை கிரகிக்கும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும்.

ஸ்ரீபூண்டிமகான்

ஆண்களுக்கு பூநூல் என்பது போல பெண்களுக்கு உரிய அணிகலனே மாங்கல்யமாகும். ஸ்ரீஅகத்திய பெருமான் ஸ்ரீலோபாமாதா தேவிக்கு அணிவித்த மாங்கல்யத்தை அளித்தவர் யாராக இருக்க முடியும் ? உங்கள் யூகம் சரியே, சாட்சாத் சிவபெருமானே ஸ்ரீஅகத்திய பிரான் ஸ்ரீலோபாமாதா அணிவதற்கான மாங்கல்யத்தை வார்த்தளித்தார் என்று ஸ்ரீஇடியாப்ப சித்த பிரான் நம் சற்குருவிடம் கூறினார். இதையே, “குடகு கோடி பெறும் கும்ப முனிக்கு வார்த்தளித்தது சதம் பெறும்,” என்ற சித்தகுரு வேத வாக்கியங்கள் பறைசாற்றுகின்றன. குடகு என்பது குடகு யோகத்தை குறிப்பதோடு குடகு மலையில் தோன்றிய காவிரியையும் குறிக்கும். சதம் என்றால் நூறு என்று அர்த்தம், அப்படியானால் கோடியைவிட நூறு என்பதன் மதிப்பு குறைவாகத்தானே இருக்கும். இங்குதான் ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசனின் மறைவாக்கியம் மறைந்து விளையாடுகிறது. சுப்ரமண்ய புஜங்கத்தில் சுப்ரமண்யம் சுப்ரமண்யம் என்று இரண்டு முறை வரும்போது அது அனந்தம், எல்லையில்லாதது என்ற பொருளைக் குறிக்கும் அல்லவா ? அதுபோல இங்கு சதம் என்பது ஒன்றிற்கு பின் அமையும் இரண்டு பூஜ்யங்களாக அமைந்து அவை எல்லையற்ற மதிப்பைக் கூறுகின்றன.

இவ்வாறு எல்லையற்ற மதிப்பை உடைய மாங்கல்யமே கணவன் மனைவி இடையே சாட்சி பூதமாக அமைந்து, ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்ள கூடிய கருவியாக நிலவி அவர்கள் இயற்றும் குடகு யோகத்தை செயல்படுத்துகின்றன. ஆணும் பெண்ணும் கோயில் திருவிழாக்கள் என எத்தனையோ இடங்களில் அருகருகே நின்று ஒருவர் சுவாசம் மற்றவரிடம் பரிமாறுவதாக அமைவது உண்டு அல்லவா ? அத்தகைய சமயங்களில் இவ்வாறு கணவன் மனைவியின் சுவாசத்தை இனங் கண்டு இணைக்கும் தெய்வீக பதக்கமே, கருவியே திருமாங்கல்யமாகும். அதனால்தான் ஒன்பது பருத்தி சரடுகளைக் கொண்டு அமைந்து மாங்கல்ய சரடே ஆண் பெண்ணை இணைக்கும் சக்தி பெற்றது என்பது இப்போது புரிகின்றது அல்லவா ? இத்தகைய மாங்கல்யத்திற்கு ஈடு இணை உலகத்தில் கிடையவே கிடையாது. அதனால்தான் மாங்கல்ய தானம் தானங்கள் அனைத்திலும் உயர்ந்ததாக வலியுறுத்தப்படுகிறது. ஆனால், சுமங்கலிப் பெண்கள் அனைவருக்கும் அளிக்கக் கூடிய தானமாக ஆடை தானங்கள் அமைவதால் நவத்வீபம் என்ற ஒன்பது வித ஆடை அணிகலன்களும் மாங்கல்ய தானத்திற்கு ஈடான பலன்களை அளிக்கவல்லதாக சித்தர்கள் அருள்கின்றனர். தற்காலத்தில் பல பெண்களும் வசதியின்மையாலும் நாகரீக மோகத்தாலும் குறைந்த ஆடைகளையே அணிகின்றனர். உண்மையில் பெண்கள், சிறப்பாக சுமங்கலிப் பெண்கள் ஒன்பது விதமான ஆடைகளை அணிய வேண்டும் என்பது நியதி. எப்படி சுமங்கலிகள் அணியும் மாங்கல்யமானது ஒன்பது இழைகளுடன் துலங்குவதால் அது ஒன்பது சரீரங்களுக்கும் கவசமாக அமைகிறதோ அது போல் இந்த ஒன்பது விதமான ஆடைகளும் அணிபவருக்கு மட்டுமல்லாமல் பெண்களைப் பார்க்கும் மற்றவர்களுக்கும் சரியான மனோ நிலையை அளிக்கின்றன. தற்போது மாதா அமிர்தானந்த மயி போன்ற மகான்கள் பெண்களின் ஆடை சம்பந்தமான இயலாமை குறித்து அறிந்துள்ளதால் அவர்கள் எப்போதும் ஒன்பது விதமான ஆடைகளுடன் துலங்கி எல்லா மக்களுக்கும் வழிகாட்டியாக அருள்கின்றார். பெண்கள் அணியும் இந்த ஒன்பது ஆடைகளும் ஆடம்பரத்திற்காக ஏற்பட்டதல்ல, மற்றவர்களின் மனம் சஞ்சலப்படாமல் காக்கும் இரட்சையே இவையாகும். இந்த நவராத்திரி தானமாக உள்ளாடைகள் உட்பட ஒன்பது வித ஆடைகளை பெண்களுக்கு அளித்தலால் மாங்கல்ய தானம் அளித்த பலன்களை எல்லா மக்களும் பெற்று வாழ்வார்கள் என்பது உறுதி.

காலமும் நேரமும் இணையும் கோலம்
மூவலூர்

பூண்டி மகானுடன் நம் சற்குரு திருஅண்ணாமலையை வலம் வந்தபோது நெடிதுயர்ந்த தோற்றத்துடன் இருக்கும் பூண்டி மகான் தன்னுடைய ஒரு கால் பாண்ட்டை முழுவதுமாகவும் மற்றொரு கால் பாண்ட்டை பாதி மடித்து விட்ட தோற்றுத்துடனும் கிரிவலம் வருவது வழக்கம். இது குடகு யோக சக்திகளை வர்ஷிப்பதாகும். பிற்காலத்தில் பூண்டி மகான் ஒரு வீட்டுத் திண்ணையில் எங்கும் வெளிசெல்லாது பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வந்தார். அக்காலங்களில் அவர் வாழ்ந்த திண்ணையில் ஒரு பழைய சாக்குத் திரையைப் போட்டு வைத்திருப்பார்கள். இரவு தரிசனம் முடிந்தவுடன் அந்த சாக்கை கீழே தொங்க விட்டு விடுவார்கள். சுவாமிகளின் தரிசனம் முடிந்து விட்டது இனி மறுநாள் காலையில்தான் சுவாமிகளின் தரிசனம் கிட்டும் என்பது அதன் பொருள். இதை அறியாத ஒருவர் ஏதோ சாக்குதானே தொங்க விட்டு வைத்திருக்கிறார்கள். சுவாமிகள் உள்ளேதானே இருப்பார், நாம் அவரை தரிசனம் செய்யலாமே என்று நினைத்து திரையை விலக்கி உள்ளே பார்த்தார். அவ்வளவுதான் வீல் என்று அலறிக் கொண்டு வெளியே ஓடி வந்து விட்டார். பக்கத்து டீக்கடையில் இருந்தவர்கள் அவரைக் கண்டு பதறிப் போய் என்ன விஷயம் விசாரித்துபோது அவர் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, “பா ... ம்பு, பா ... ம்பு,” என்று கூறினாராம். அங்கிருந்த மக்கள் தீவட்டி, டார்ச் விளக்கு, கம்புகள் சகிதம் சுவாமிகள் வசிக்கும் திண்ணையில் ஏதாவது பாம்பு வந்து விட்டதா என்று அறிய நுழைந்தபோது அங்கே சிரித்துக் கொண்டே மௌனமாக அமர்ந்திருந்தாராம் பூண்டி மகான். அதைக் கண்டு அமைதி அடைந்த பக்தர்கள் தங்கள் ஆரவாரத்திற்கான காரணத்தை விளக்கியபோதுதான் தான் குடகு யோகத்தில் அதாவது ஒரு பெரிய நாகம் புடமிட்ட நிலையில் அமர்ந்திருந்ததாகவும் அதைக் கண்ட பக்தர் பதறிப் போய் கூச்சலிட்டதாகவும் விளக்கினார். மகான்கள், யோகிகள், பாம்புகள் மேற்கொள்ளும் இந்த குடகு யோகத்திற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. குறிப்பாக ஒரு லட்சம் ஜீவ ராசிகளைக் காக்கவல்லதே குடகு யோக சக்திகளாகும். காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாகவும், கால வர்த்தமான மாறுதல்களாலும் இந்த குடகு நாகங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால்தான் குடகு யோக சக்திகளும் குறைந்து விபத்துகள், குணமடையாத பல வியாதிகள், சமுதாயத்தில் குழப்பம், பீதி இவை அதிகரிக்கின்றன என்பது உண்மையே. இவை அதிகரித்துக் கொண்டுதான் செல்லும். சமுதாயம் இழந்த இந்த குடகு சக்திகளை ஈடுசெய்வதற்காகவே அரிதாக அமைந்த இந்த கிரக சங்கம காலத்தை முறையாகப் பயன்படுத்தும் முறையாக சித்தர்கள் பல பூஜை முறைகளை அளித்து வருகின்றனர். இந்த பூஜை அனுஷ்டானங்களை எல்லாம் எந்த அளவு சிரத்தையுடனும் நம்பிக்கையுடனும் குருவை நம்புபவர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டோர் நிறைவேற்றுகிறார்களோ அந்த அளவிற்கு சமுதாயமும் தனி மனித வாழ்வும் நலம் பெறும், வளம் பெறும் என்பது உண்மையே. பொதுவாக ஒரு நாகம் 3, 6, 9 என்ற எண்ணிக்கையில் புடமிட்டு அமர்ந்தால் அது குடகு யோகத்தில் நிலைத்துள்ளது என்று பொருள். இதையொட்டியே இந்த குடகு பூஜை முறைகளும் அளிக்கப்பட்டுள்ளன என்பதை பக்தர்கள் ஊன்றிக் கவனித்தால் அறிந்து கொள்ளலாம். மேலும் இத்தகைய நாகங்கள் தங்கள் யோகத்திற்கு பங்கம் விளைந்தால், தடை ஏற்பட்டால் யாரையும் தீண்டாது அவ்விடத்தை விட்டு அமைதியாக சென்று விடும் என்பது உண்மையே. இதனால்தான் குடகு இரகசியம் அறிந்தவர்கள் இத்தகைய குடகு நாகங்களுக்கு எந்த விதமான தொந்தரவையும் அளிப்பதில்லை.

அகர ஈற்று ஹோமம்

வரும் கிரக சங்கமம் வைபவத்தில் ஆறு கிரகங்கள் இணைவதால் இந்த ஆறு கிரகங்களையும் ப்ரீதி செய்வதாக ஒரு அற்புத ஹோமத்தை சித்தர்கள் அறிவித்துள்ளனர். அக்னிக்கு உரியவன் முருகப் பெருமான்தானே. அந்த முருகனுக்கு உரிய சக்கரமே சரவணபவ என்று ஆறெழுத்து அகர ஈற்றுகளை உடைய யந்திரமாக அமைகிறது. ஆறு செங்கற்களை வைத்து சரவணபவ யந்திரத்தை ஹோம குண்டமாக வைத்து இதில் முருகப் பெருமானுக்குரிய மந்திரங்களை ஓதி ஆஹூதி அளித்தலால் இது இந்த ஆறு நவகிரகங்களையும் மகிழ்விக்கும் ஹோமமாக அமைகிறது. இதில் இன்னும் முக்கியமான அம்சமாகத் திகழ்வது என்னவென்றால் அடுத்த வருடம் அதாவது 2020 என்பது ராகுவிற்கு உரிய சக்திகளுடன் திகழ்வதால் அசுர சக்திகளின் ஆதிக்கத்தால் இருள் சூழும் நிலை உருவாகும் என்று சித்த கிரந்தங்கள் தெரிவிக்கின்றன.

அகரீற்று ஹோம குண்ட
செற்கற்கள் அமைப்பு

ஸ்ரீசந்திர பகவான்
திருந்துதேவன்குடி

ருத்ராக்னியிலிருந்து முருகப் பெருமான் தோன்றியதால் ஹோமங்கள் நிகழ்த்தி சிறப்பாக இவ்வாறு ஆறு கிரகங்களின் சங்கமத்தில் இயற்றும் ஹோம வழிபாடுகள் இந்த அசுர சக்திகளுக்கு மாற்றாக அமைவதால் இறைவனை நம்பும் அடியார்களுக்கு இந்த ஹோம சக்திகள் அக்னி பரல்களாக பிரபஞ்சத்தில் வியாபித்து அவர்களுக்குத் தேவையான ஒளியை அளிக்கும். இதுவே ஹோம மந்திர ஒலிகளை ஒளியாக்கும் வித்தையாகும். இவ்வாறு ஒலியை ஒளியாக்கும் வித்தையை சாதாரண பக்தர்கள் பிரயோகம் செய்ய முடியாது என்றாலும் முருகப் பெருமானுக்கு உரிய கீழ்க் கண்ட மந்திரத்தை ஓதி ஆஹூதி அளித்தலால் அந்த மந்திர ஒலிகளை ஒளியாக்கும் வித்தையை அதற்கென்று நியமிக்கப்பட்ட தேவதைகளும், மகான்களும், சித்தர்களும் கவனித்துக் கொள்வார்கள். அது பற்றி அடியார்கள் கவலைப்படத் தேவையில்லை என்பதே சித்தர்கள் அளிக்கும் ஆறுதலாகும். பாதம் பருப்பு, முந்திரி, பிஸ்தா போன்ற ஆறுவகை பருப்புகளையும், அத்தி, திராட்சை, ஆப்ரிகாட் போன்ற ஆறு வகை உலர்கனிகளையும் ஆஹூதியாக அளித்தல் சிறப்பாகும். செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், குரு ஹோரை நேரத்திலும் மேற்கண்ட ஹோம வேள்விகளை நிறைவேற்றுதல் சிறப்பு. இந்த ஹோமத்தை சமுதாய நன்மைக்காக மட்டுமே நிறைவேற்ற வேண்டும், முடியும் என்பதால் குறைந்தது ஆறின் மடங்காக இந்த ஹோமத்தில் அடியார்கள் பங்கு பெறுதல் சிறப்பாகும். 27.12.2019 அன்று நிறைவேறும் ஹோமம் வெள்ளிக் கிழமை அன்று அக்னிக்குரிய செவ்வாய் பகவானின் நாளில் (2+7=9) நிறைவு பெறுவது சிறப்பே. இந்த சங்கமத்தில் இணையும் கிரகங்களான சூரியன், சந்திரன் முதலானவை அக்னிக்குரிய ஒன்பது எழுத்துக்களுடன் பொலிவது அக்னி சக்திகளின் பெருக்கத்தைக் குறிக்கிறது. அன்று பெறும் சந்திர தரிசனத்தின் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

 
    ஓம்
    தத் புருஷாய வித்மஹே
    அகரீற்று தேவாய தீமஹி
    தந்நோ சரவணபவ ப்ரசோதயாத்
 

என்ற அக்னி மந்திரத்தை ஓதி ஆஹூதி அளித்தலால் அகர ஈற்று தேவதைகள் இந்த ஹோமத்தில் ஆவாஹனமாகி தேவையான ஒலிப் பரல்களை பெருக்கி அருள்கூட்டுவர். முதல் அடுக்கில் மூன்று செங்கற்களை முக்கோணத்தின் நுனி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கும்படி முக்கோணமாக வைத்து அடுத்த அடுக்கில் அதற்கு எதிரிடையாக முக்கோணமாக மூன்று செற்கற்களை வைத்து ஹோம குண்டம் அமைக்கவும். இதுவே சரவணபவ சக்கர வடிவில் அமையும் அகர ஈற்று ஹோம குண்டமாகும். செங்கற்களை படுத்தவாக்கில் அல்லது நின்ற வாக்கில் அவரவர் வசதியைப் பொறுத்து அமைத்துக் கொள்ளலாம். “(அன்று விளையும்) மூன்றாம் பிறை முப்பரிமாணமும் தத்தாத்ரேய முப்பரிமாணமும் எப்பரிமாணத்திற்கும் ஈடாகாதே,” என்று இந்த சங்கமத்தின் சிறப்பை சித்த நாடிகள் வர்ணிக்கின்றன. சூரிய கிரகணத்தின்போது சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையே வந்து சூரியனை மறைக்கிறது என்று கூறுவதைவிட சந்திரபகவான் சூரியன் பூமி என்ற நேர்கோட்டில் அமைந்து சூரிய பகவானின் பிரகாசத்தை முழுவதுமாக கிரகிக்கிறது. இதற்கு பூமியின் ஆகர்ஷண சக்தி சந்திரனுக்கு துணைபுரிகின்றது என்று தெளிவதே சித்தர்கள் சுட்டிக்காட்டும் உண்மையாகும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
கடம்பர்கோயில் குளித்தலை

26.12.2019 அன்று முழுமையான சூரிய கிரகணம் ஏற்படுவதால் சந்திரனின் பிரகாசம் வழக்கத்தை விட பல மடங்கு பலமடைகின்றது. இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிடைக்கக் கூடிய சந்திர அனுகிரகம் என்பதை நினைவில் கொள்ளவும், பூமாதேவியின் சூரிய பகவானின் ஒருமித்த அனுகிரக சக்திகளின் விளைவே இதுவாகும். ஒருவன் கங்கையில் நீராடும் போது அவன் முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் கங்கை தீர்த்தத்தில் கரைந்து மறைகின்றன என்பது உண்மையே. அது போல் சூரிய கிரகணத்தின்போது சந்திர கிரகத்தில் ஐக்கியமான பூமியில் உள்ள ஜீவ ராசிகளின் கர்மவினைகள் அனைத்தும் சூரிய ஒளியில், ஆதித்ய பிரகாச கிரணங்களால் பஸ்மமாவதால் இவ்வாறு தூய்மை அடைந்த சந்திரனைச் சூடி திருக்காட்சி நல்கும் சிவபெருமானை நாம் தரிசனம் செய்கின்றோம் என்றால் இது எத்தகைய தெய்வீக அனுகிரகம் ? இவ்வாறு தரிசனம் நல்கும் சந்திர பகவானையே நாம் திருந்துதேவன்குடி திருத்தலத்தில் தரிசிக்கிறோம் என்பதே சித்தர்கள் உரைக்கும், இதுவரை எவரும் அறியாத இரகசியமாகும். தேய்பிறையில் பிறந்தவர்களும், குரூர கிரகங்கள் சந்திரனுடன் சேர்ந்த ஜாதக அமைப்பைக் கொண்டவர்களும் திருந்துதேவன்குடி சந்திர பகவானை வணங்கி அல்லி மலர்களால் அர்ச்சித்து மகிழ்தலால் நற்பலன் பெறுவார்கள். ஒரு முறை குளித்தலை கடம்பர்கோயிலில் அடியார்களுடன் உழவாரத் திருப்பணி நிறைவேற்றிக் கொண்டிருந்தார் நம் சற்குரு. அப்போது கருவறையிலிருந்து வேகமாக வெளிவந்த நம் சற்குரு அங்கு பிரகாரத்தில் தன் மர்ம பாகங்கள் வெளியே தெரியும்படி உறங்கிக் கொண்டிருந்த ஒரு உள்ளூர் பக்தர் ஒருவர் மேல் தன் கையிலிருந்த விசைக் குழாய் மூலம் நீரை இறைக்கவே அந்த பக்தர் திடுக்கிட்டு எழுந்தார். அங்கு என்ன நடந்தது என்று அவர் புரிந்து கொள்ள சில நிமிடங்கள் ஆனது. அந்த இடைவெளியில் நம் சற்குருவோ அடியார்கள் புடைசூழ பிரகாரத்தை சுத்தம் செய்யும் திருப்பணியில் சுறுசுறுப்பாக இறங்கி விட்டதால் அந்த பக்தரும் தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டு சந்தடியில்லாத பிரகாரத்திற்கு சென்று விட்டார். அரை நொடியில் நிகழ்ந்த இந்த சம்பவம் பற்றி பின்னர் சற்குரு சாவகாசமாக விவரிக்கலானார். அந்த பக்தரின் மூதாதையர்கள் அங்கிருந்த யானைக்கு ஒரு சீப்பு பூவன் வாழைப் பழத்தை தானமாக அளித்திருந்தனர். கருவறையில் திருப்பணிகள் நிறைவேற்றிக் கொண்டிருந்த சற்குருவை அவர்கள் மனோரீதியாக தொடர்பு கொண்டு தங்களுடைய வம்சாவழியினர் ஒருவர் அக்கோயிலுக்கு வந்திருப்பதாகவும் அவருடைய தாம்பத்ய பிரச்னைகளை நம் சற்குரு தீர்க்க கருணை புரியும்படியும் கேட்டுக் கொண்டனர்.

ஸ்ரீகாவிரித்தாய் திருமங்கலக்குடி

சற்குருவின் மின்னல் வேக சிந்தனையின் விளைவாக எழுந்ததே இந்த கருணா வர்ஷம். உள்ளூர் வாசிகள் திருக்கோயிலில் உறங்கினால் அவர்கள் ஒரு பிறவியில் மலைபாம்பாக பிறப்பார்கள் என்ற ஒரு சாபம் கிட்டும். சற்குருவைப் போன்று குடகு யோகத்தில் வல்லவர்களே அந்த சாபத்திற்கு நிவர்த்தி அளிக்க முடியும். அந்த திருக்கோயில் இறை தரிசனத்திற்காக வந்த சில பெண் பக்தர்கள் இவ்வாறு அலங்கோலமான நிலையில் உறங்கும் பக்தரைக் காண நேரிட்டதால் அவர்கள் மனம் அளிக்கும் சில சாபங்களும் அந்த பக்தரைச் சூழும். இவை அனைத்தையும் அரை நொடியில் களைய வேண்டுமானால் நம் சற்குரு எத்தகைய மின்னல் வேக மூளைத் திறனையும் செயல் வேகத்தையும் கொண்டிருக்க வேண்டும். இந்த அற்புத சக்திகளை அனுகிரகமாக அளிக்கக் கூடியதே திருந்துதேவன்குடியில் இயற்றும் சந்திர பகவான் வழிபாடாகும். அகர ஈற்று ஹோம குண்டத்தைச் சுற்றி புள்ளியில்லாத ஆறு எலுமிச்சை கனிகளை வைத்து ஹோம நிறைவில் அந்த கனிகளை அறுத்து துர்கைக்கு தீபம் ஏற்றுதலால் தம்பதிகளிடையே தோன்றும் தாம்பத்ய பிரச்னைகளும், சந்ததி குறைபாடுகளும் தீர்வடையும். “ஈற்றில் மறைந்து கீற்றில் தோன்றும்,” என்பது இந்த அனுகிரகத்தைக் குறிக்கும் சந்ததி, சங்கேத நாடி. பிரபஞ்சத்தில் 3, 6, 9 என்ற எண் சக்திகள் விருத்தியாகும். தரணி ஆளும் யோகமுடைய நாமம் கொண்ட ஒரு அடியார் சற்குருவின் ஆஸ்ரமத்தில் பணி புரிந்து கொண்டு இருந்தார். எப்போதும் தற்கொலையைப் பற்றியதாகத்தான் அவருடைய கேள்வி இருக்கும். சற்குரு அந்த அடியாருக்கு ஆறுதல் வார்த்தைகளை மாறி மாறி அளித்தாலும் அந்த அடியார் தன் கேள்விகளை மாற்றி மாற்றிக் கேட்டு ஏதாவது ஒரு ரூபத்தில் சற்குருவிடமிருந்து பதில்களைப் பெற்றுக் கொண்டிருந்தார். தன்னுடைய உயிர் இந்த பூமியில் நிலைகொண்ட காலம் முழுவதும் கண்ணை இமை காப்பது போல் அந்த அடியார் தற்கொலை செய்து கொள்ளாதவாறு காத்து வந்தார் கருணக் கடலான நம் சற்குரு. சற்குருவின் உடல் மறைந்ததும் அந்த அடியாரும் தற்கொலை செய்து கொண்டு இந்த பூமியை விட்டு மறைந்தார். இது சந்ததியை பாதிக்கும் ஒரு விதமான தோஷமே. இவ்வாறு எத்தகைய சந்ததி தோஷங்களுக்கும் நிவர்த்தியாக அமைவதே மேற்கண்ட ஹோம வழிபாடாகும். அயல்கிரகங்களிலிருந்து பூமிக்கு கங்கை நீரை சுமந்து செல்ல வரும் பறக்கும் தட்டுக்கள் ஒரு டம்ளர் கங்கா தீர்த்தத்தை மட்டுமே எடுத்துச் செல்கின்றனர் என்று தெரிவித்திருந்தோம்.

ஸ்ரீசௌந்தரநாயகி சமேத ஸ்ரீசிவலோகநாதர் திருவிசைநல்லூர்

ஒரு அடியார் ஏன் இவ்வாறு 600, 700 வருடங்கள் பறந்து வரும் அன்பர்கள் மிகுந்த அளவு கங்கை தீர்த்தத்தை எடுத்துச் சென்று பலருடைய வியாதிகளைத் தீர்க்கலாமே என்று தன் சந்தேகத்தைத் தெரிவித்துள்ளார். நம்மைப் போல் ஒரு பாத்திரத்தை எடுத்துச் சென்று கங்கை தீர்த்தத்தை அயல் கிரக வாசிகள் எடுப்பது கிடையாது. கங்கை மேல் பறக்கும் தட்டு நின்று கொண்டு இருக்கும்போதே feelers என்று அழைக்கப்படும் குழாய்கள் மூலமாக கங்கை தீர்த்தத்தை உறிஞ்சிக் கொள்கிறார்கள். இந்த feelers தெரிவிக்கும் அளவு கிட்டத்தட்ட 300 மிலி அளவை நெருங்கியதும் அவர்கள் தீர்த்தம் எடுப்பதை நிறுத்திக் கொள்கிறார்கள். இல்லாவிட்டால் கங்கை தீர்த்தத்தின் புண்ணிய சக்தியைத் தாங்காமல் பறக்கும் தட்டுகள் வெடித்துச் சிதறி விடும். எந்த அளவு தீர்த்தத்தை வேண்டுமானாலும் சுமக்கும் புண்ணிய சக்தியை பூமிவாழ் மக்கள் பெற்றுள்ளதால்தான் மனிதப் பிறவியின் மகத்துவம் தெரியாமல் வாழ்கிறார்கள். அதனால்தான் முடிந்த அளவு கங்கை, காவிரி, காஞ்சிபுரம் அத்தி வரதர் பொற்றாமரைக் குளத்து தீர்த்த நீரைக் கலந்து பிரசாதம் தயாரித்து பக்தர்கள் விநியோகம் செய்யும்படிக் கேட்டுக் கொள்கின்றோம். அரிய மானிடப் பிறவியில் அரிய காரியங்களைச் செய்வோமே. திருவிசைநல்லூரில் வாழ்ந்து வந்த ஸ்ரீதர ஐயாவாள் அவர்கள் தன் வீட்டு கிணற்றில் கங்கையை தருவித்த அதிசயத்தை பலரும் கேள்விப்பட்டு இருப்பார்கள். ஆனால் இதன் பின்னணியில் அமைந்த தெய்வீக இரகசியங்களை விவரிக்கக் கூடியவர்கள் சித்தர்கள் மட்டுமே. வீட்டு கிணற்று நீரில் கங்கை பெருக்கெடுப்பது என்றால் இதில் காலம் தூரம் என்ற இரு கோட்பாடுகளை கங்கை தீர்த்தம் கடந்தாக வேண்டும் என்ற நியதி ஏற்படுகின்றதல்லவா ? இந்த அனுகிரகத்தை அளிக்கவல்லவர்களே நனவு, கனவு, தூக்கம், துரீயம் என்ற நிலைகளைக் கடக்க உதவும் திருவிசைநல்லூர் திருத்தலத்தில் எழுந்தருளிய பைரவ மூர்த்திகளாவர். இந்த பைரவ மூர்த்திகளை நெடுங்காலம் உபாசித்து வந்த ஸ்ரீதர அய்யாவாளின் பெருமையை உலகிற்கு உணர்த்த எம்பெருமான் புரிந்த சிவலீலையே இது என்பது தற்போது புரிகின்றது அல்லவா ? குறைந்த பட்சம் ஸ்ரீசிவலோகநாதருக்கு அலங்காரமாக அமைந்த ஆறு சரவிளக்குகளுக்கு மட்டுமாவது சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது இந்த தத்தாத்ரேய கிரக சங்கமத்தின் பலன்களைப் பெறும் மற்றோர் வழிபாட்டு முறையாகும். ஸ்ரீதர ஐயாவாளின் கிணற்று கங்கையிலிருந்து பெற்ற தீர்த்த பிரசாதம் கலந்த அன்னதானத்தை குறைந்தது 60 பேருக்கு வழங்குவதும் ஏற்புடையதே. வரும் கார்த்திகை அமாவாசை அக்னி சக்திகளுடன் பொலியும் செவ்வாய்க் கிழமை அன்று இணைவதால் இந்த அன்னதானம் எத்தகைய கர்மவினைகளையும் தீர்க்கும் சக்தி பெற்றதாக அமைகிறது.

ஸ்ரீநந்தீஸ்வரமூர்த்தி அச்சிறுபாக்கம்
(ஈற்றில் மறைந்து ...)

ஸ்ரீஆட்சிகொண்டநாதர் அச்சிறுபாக்கம்
(... கீற்றில் தோன்றும்)

ஈற்றில் மறைந்து கீற்றில் தோன்றும் என்ற சித்த நாடி 4 x 4 x 6 = 96 என்பதாக 96 விதமான அனுகிரகங்களை அளிக்கக் கூடியதாகும். இதில் பெரும்பாலான இரகசியங்கள் தாம்பத்ய உறவுடன் சம்பந்தப்பட்டதால் அவற்றை அடியார்கள் நன்கு ஆத்ம விசாரம் செய்து பயனடையும்படிக் கேட்டுக் கொள்கிறோம். ஓரிரு அனுகிரக சக்திகளைப் பற்றி மட்டும் இங்கு விவரிக்கிறோம். அகரீற்று ஹோமத்தின்போது உச்சரிக்கப்படும் மந்திரங்களும் ஹோமத்தில் இடப்படும் ஆஹூதிகளும் சில ஆரசக்திகளை அளிக்க அவற்றை இந்த ஹோம குண்டத்தைச் சுற்றி வைக்கப்படும் எலுமிச்சை கனிகள் ஈர்த்துக் கொள்கின்றன. அந்த எலுமிச்சை கனிகளால் துர்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றும்போது இந்த சக்திகள் அக்னிப் பரல்களாக பிரபஞ்சத்தில் வியாபித்து அடியார்களுக்கு ஒளி சக்தியை அளிக்கிறது. ஒரு பாட்டரியில் மின்சார சக்திகள் நிறைந்திருந்தாலும் அது மறைந்தே இருக்கும். இந்த பாட்டரியை ஒரு மின்விளக்குடன் இணைக்கும்போது அந்த பாட்டரியிலிருந்து மின்சாரம் அந்த மின்விளக்கில் பாய்ந்து ஒளி கூட்டும். அது போலவே இருள் அடர்ந்த காட்டின் வழியே செல்வதாக இருந்தாலும் இந்த மின்சார டார்ச்சிலிருந்து வரும் ஒளியானது ஒருவர் தன் பாதையைப் பார்த்துச் செல்வதற்கான ஒளியை வீசும். அடுத்த வருடம் விதியின் வேகத்தால் உலகமே இருள் சூழ்ந்து கிடந்தாலும் அருள் பெற்ற அடியார்கள் மட்டும் தாங்கள் வாழ்வதற்கான ஒளியை இந்த அகர ஈற்று ஹோமத்தில் இடப்படும் ஆஹூதிகள் மூலமாகப் பெறுவர் என்பது உறுதி. அதற்கு உதவியாக இருப்பதே இந்த ஹோம வழிபாடுகளாகும். இவ்வாறு இந்த அருள் சக்திகள் செயல்படும் விதத்தைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள விரும்புவோர் அச்சிறுபாக்கத்தில் அருள் புரியும் ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தியையும் அவரை ஆட்கொண்ட நாதரான சிவபெருமானையும் தொடர்ந்து வணங்கி ஆத்ம விசாரம் செய்து வருதலால் நல்ல மனத் தெளிவைப் பெறுவார்கள். இவ்வாறு ஈற்றில் மறைந்து கீற்றில் தோன்றும் தத்துவத்தில் அமைந்ததே இந்த சதுர்முக துவாரமும் ஸ்ரீஆட்சி கொண்ட நாதரின் தரிசனப் பலனும். ராஜகோபுரத்தின் எதிரே மூலவர் கருவறையில் அமையாது சற்றே இடது பக்கம் தள்ளி வீற்றிருப்பதும் இந்த அழகிற்கு அழகு கூட்டும் தத்துவமாகும். அச்சிறுபாக்கம் என்றால் திரிபுர சம்ஹாரத்திற்காக எம்பெருமான் இரதத்தில் ஏறிப் புறப்பட்டபோது மூலமுதற் கடவுளான பிள்ளையாரைப்பனை சிவபெருமான் வணங்காததால் அந்தத் தேரின் அச்சு முறிந்தது என்பது நாம் அனைவரும் அறிந்து கொள்ளக் கூடிய காரணமாக இருந்தாலும் தோன்றாத அச்சின் முடிவில், இறுதியில் தோன்றும் இறைவனின் தரிசனம் அமையும் என்பதே “அச்சில்” மறைந்த பொருள்.

குரு காட்டும் சங்கு வித்தை

சற்குரு ஒரு முறை திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் புத்தகங்கள், சங்கு, படங்கள் போன்றவை விற்பனையாகும் நிலையத்திற்கு வந்து அங்குள்ள அடியார்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அடியாரிடம் ஒரு சங்கைக் கொடுத்து தன் விரலை முடிந்த மட்டும் நுழைத்துப் பார்க்கும்படிக் கூறினார். அந்த அடியாரும் சற்குரு சுட்டிக் காட்டிய முறையில் சங்கிற்குள் விரலை விட்டு அது எவ்வளவு தூரம் போகிறது என்று அளந்து காட்டினார். பின்னர் சற்குரு அதே சங்கிற்குள் விரலை விட்டு அளந்து பார்த்தார். சற்று நேர யோசனைக்குப் பின், “என்ன சார், ஈற்றிற்கும் கீற்றிற்கும் மிகுந்த இடைவெளி இருப்பது போல் தோன்றுகிறதே, சரி பரவாயில்லை, அடியேனுடனே இருங்கள் உங்கள் கணக்கை சீர் செய்து விடலாம்,” என்றார். அந்த அடியாருக்கு மட்டுமல்ல, அங்குள்ள எவருக்குமே சற்குருவின் வார்த்தைகள் அப்போது சற்றும் புரியவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த அடியார் இன்றும் சற்குருவின் சேவையில் மூழ்கி இருப்பதால் சற்குரு வாக்களித்தபடி அவர் எதிர்காலம் நிச்சயம் பிரகாசமானதாக அமையும் என்பதில் ஐயமில்லை அல்லவா ? இதுவே நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை. சற்குரு விவரிக்கும் தத்துவங்கள் நமக்குப் புரிகின்றதோ இல்லையோ நம்மால் முடிந்த தெய்வீக திருப்பணிகளை நம்மால் முடிந்த மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருந்தாலே போதுமானது. சற்குருவே அனைத்தையும் பார்த்துக் கொள்வார்.

சங்கு தீர்த்தம் திருக்கழுக்குன்றம்

பொதுவாக மக நட்சத்திர தினத்தன்று தீர்த்த நீராடல் சிறப்பானதாக அமைகின்றது. இதை ஒட்டியே கும்பகோணத்தில் மாசி மக தீர்த்த நீராடல் வைபவமும் அமைகின்றது. இதே போல குடும்ப ஒற்றுமை, தாம்பத்ய குறைகளை நிவர்த்தி செய்வதாக அமையும் தீர்த்த நீராடல் கன்னி ராசியில் குரு அமையும் நேரத்தில் நிகழ்வது சிறப்பானதே. மூன்றிற்கு உரித்தான குரு அதன் குசாவான ஆறைக் குறிக்கும் கன்னி ராசியில் எழுந்தருள்வது நாம் அறியக் கூடிய ஒரு சுவை. இத்தகைய முகூர்த்த நேரங்களில்தான் திருக்கழுக்குன்ற சங்கு தீர்த்தத்தில் தோன்றும் சங்குகள் நிலை கொள்கின்றன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். தற்போது குரு பகவான் விருச்சிக ராசியில் எழுந்தருளியிருப்பதால் கன்னி ராசி என்பது குரு பகவான் எழுந்தருளிய ராசிக்கு 11ல் அமைவதால் இந்த மாதம் முழுவதும் சங்கு தீர்த்தத்தில் நீராடி பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிப்பது என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பாக்கியமாகும். வரும் 5.11.2019 செவ்வாய்க் கிழமை அன்று குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுர் ராசிக்கு எழுந்தருள்வதால் அன்று முதலாக தத்தாத்ரேய கிரக சங்கமம் நிறைவடையும் (27.12.2019) நாள் வரை சங்கு தீர்த்தத்தில் நீராடி இறைவனை வேண்டுவதால் எத்தகைய கிரக சம்பந்தமான கோளாறுகளும் நிவர்த்தியாகி சிறப்பான குடும்ப ஒற்றுமை நிலவும் என்பதே சித்தர்களின் பரிந்துரை. சங்கினால் அமைந்த பாலாடைகளையும், வெள்ளி பாலாடைகளையும், பாலில் செய்த இனிப்பு வகைகளையும் சங்கு தீர்த்தத்தில் தானம் அளித்தல் சிறப்பாகும். பல இல்லங்களில் தற்காலத்தில் தாய்மார்கள் போதுமான அளவு தங்கள் குழந்தைகளுக்கு பால் புகட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். இவர்கள் சங்கு தீர்த்தத்தில் நீராடி மேற்கண்ட தான தர்மங்களை நிறைவேற்றுதலால் தாங்கள் போதுமான பால் சுரப்பைப் பெறுவதோடு குடும்பத்தில் ஒற்றுமை தோன்றவும் இது வழி வகுக்கும். குடும்ப ஒற்றுமைக்கும், பால் சுரப்பிற்கும், பாலாடைக்கும் உள்ள தொடர்பை அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து தெரிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

விண்ணுலாவும் தீர்த்த சக்திகள்
திருக்கழுக்குன்றம்

தற்காலத்தில் பல குழந்தைகளும் பார்ப்பதற்கு சதைப் பிடிப்புடன் தோன்றினாலும் அவர்களுக்கு எந்த வியாதியையும் எதிர்க்கும் சக்தி துளியும் கிடையாது என்பது கண்கூடு. சத்து என்ற பெயரில் பல இரசாயண உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டுவதும், சங்கினால் ஆன பாலாடைகளை பயன்படுத்தாமல் இருப்பதும் இதற்கு முக்கிய காரணங்களாகும். வயது பெருகியவர்களும் கூட இவ்வாறு ஒவ்வாமை (allergy) போன்ற வியாதிகளால் துன்புறும்போது இத்தகைய பாலாடை தானங்களை நிறைவேற்றுதல் சிறப்பாகும். ஸ்ரீஆதிசங்கரர் ஒரு முறை தாங்க முடியாத வயிற்று வலியால் துடித்தார். அப்போது சிவபெருமான் அவர் முன் தோன்றி, “வருந்தாதே. திருச்செந்தூர் வான் வழியாகச் சென்று அங்கு நம் குழந்தை வேலனின் பிரசாதத்தை ஏற்றால் வயிற்று வலி உடன் மறையும்,” என்று அருளினார். ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் வான மார்கமாக பவனி வரும் சக்தி பெற்றவர் என்றாலும் இறையாணை இன்றி அந்த சித்திகளை பயன்படுத்துவது கிடையாது என்பதால் சிவபெருமானே அந்த சித்தியை பயன்படுத்தி திருச்செந்தூர் செல்வதற்கு அனுமதி அளித்தார். பெருமானின் உத்தரவை ஏற்று ஸ்ரீஆதிசங்கரர் திருச்செந்தூரை அடைந்து அங்கு கிளிஞ்சல்களே விபூதியாக அமையும் பிரசாதத்தை ஒரு துளி ஏற்றவுடன் அவருடைய வயிற்று வலியும் மாயமாய் மறைந்தது. இதுவே சங்குகள் உணர்த்தும் மகிமையும் ஆகும். பொதுவாக, அனைத்து கோயில் திருக்குளங்களின் தீர்த்த சக்திகள் வானை நிறைக்கும் என்றாலும் திருக்கழுக்குன்ற தீர்த்த சக்திகள் வானில் நிறைந்து பல லோகங்களுக்கும் அருள் கூட்டுவதால் இந்த சக்திகளை பல லோகங்களுக்கும் நிரவுவதாகவே இத்தலத்தில் இரண்டு பட்சிகள் வடிவில் வந்த கழுகு தேவதைகள் அரும்பணி ஆற்றின என்பதை நீங்கள் தற்போது நினைவு கூறலாம். இதே முறையில் திருச்செந்தூர் முருகப் பெருமானின் அனுகிரக சக்திகளை வானில் நிரவுவதற்காகவும் ஸ்ரீஆதிசங்கரரை வானில் பறந்து வரச் செய்தார் எம்பெருமான் என்பது தற்போது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும் சிவ சுவைதானே. க்ளூகோமா போன்று கண்களில் நீர் திரளும், நீர் அழுத்தம் மிகும் வியாதிகள் உடையோர் திருக்கழுக்குன்றத்தில் சங்கு தீர்த்தத்தில் நீராடி இந்த “ஊர்பருந்து” தரிசனம் திருக்கழுக்குன்றம் மேலிருந்து பெறுதல் சிறப்பாகும். கண் நோய்கள் அனைத்திற்கும் நிவாரணம் அளிப்பதே திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்த நீராடல் ஆகும். வயதான காலத்தில் ஏற்படும் பார்வை கோளாறுகளை சரி செய்வதுடன் ஆயுளை நீட்டித் தருவதும் இத்தீர்த்தக் குள வழிபாடாகும். இதை உணர்த்தும் முகமாகவே ஸ்ரீமார்கண்டேயர் இந்த தீர்த்தத்தில் நீராடி வலம்புரிச் சங்கு பெற்று அந்த சங்கினால் இறைவனுக்கு அபிஷேகத்தை நிறைவேற்றினார். சங்கு தீர்த்தத்தில் நீராடும்போது “ஊர்” சக்திகள் மறைந்து மலைமேல் ஈசனை தரிசிக்கும்போது “பருந்து” சக்திகள் நிறைகின்றன என்பதே இந்த ஊர்பருந்து தரிசன வழிபாட்டின் பின்னணியில் அமைந்த இரகசியமாகும்.

இராசி மண்டலம் திருக்கழுக்குன்றம்

திருத்தலங்களில் தலைக்கு மேல் அமைந்திருக்கும் ராசி மண்டலங்களை பலரும் அறிந்திருப்பதில்லை. அவ்வாறு அறிந்தவர்களும் இவற்றை முறையாக வழிபடுவதில்லை. இந்த ராசி மண்டலங்களின் கீழ் நின்று கொண்டு வானத்தை நோக்கி கைகளை உயர்த்தி வணங்கி 12 முறை தங்களைத் தாங்களே ஆத்ம பிரதட்சிணம் செய்து வந்தால் இந்த 12 ராசிகளையும் வலம் வந்தவர்கள் ஆவோம். சித்தர்களால் அளிக்கப்பட்ட சக்தி வாய்ந்த ராசி மண்டல வழிபாடு இது. இந்த ராசி மண்டல வழிபாடுகளை தொடர்ந்து சிறுவயது முதல் நிறைவேற்றி வந்தால் நிச்சயமாக எத்தகைய கண் கோளாறுகளும் நம்மை அண்டாது என்பது உண்மையே. பருந்துகள் வானத்தில் மிக உயரப் பறந்தாலும் பூமியில் உள்ள நீர் நிலைகளையும் பிற பறவைகளுக்கு உணவாகும் பூச்சி, பயிர், இறந்த மிருகங்கள் போன்ற விவரங்களையும் அறிந்து பிற ஜீவன்களின் நல்வாழ்விற்கு உறுதுணையாக செயல்படுபவையாகும். அது போல் கூரிய கண்பார்வைக்கு உறுதுணையாக இருப்பதே ஊர்பருந்து என்னும் அரிய மூலிகைகளாகும். திருக்கழுக்குன்ற மலையின் மேல் மட்டுமே கிடைக்கக் கூடிய மூலிகை சக்திகளாகும். இந்த மூலிகை சக்திகளை வானத்தில் பல லோகங்களுக்கும் குறிப்பாக பாரதம், இலங்கை முழுமைக்கும் நிரவுவதே திருக்கழுக்குன்ற கழுகுகளின் அரிய பணியாகும். இந்த மூலிகை சக்திகளை கிரகிக்கும் சக்திகளை ஸ்ரீகாசி விஸ்வநாதரை தரிசித்தே பெறுகின்றன. காசி என்ற இரு எழுத்துக்கள் வலது இடது கண்களில் பொலியும் நேத்ர சக்திகளின் வியாபகமாகும். இந்த நேத்ர சக்திகளை வர்ஷிப்பற்கும் பகல் இரவு தத்துவங்களின் வெளிப்பாடாகவும் இரண்டு கழுகு பறவைகள் திருக்கழுக்குன்றத்தில் வழிபாடுகளை இயற்றின என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய தெய்வீக உண்மைகளாகும். ஸ்ரீகாசி விஸ்வநாதரை தரிசிக்கும் முன் கங்கையில் இந்த இரு கழுகுகளும் புனித நீராடலை இயற்றின என்பதே நம்மை வியக்க வைக்கும் உண்மையாகும். எனவே கழுக்குன்றம் திரு கழுக்குன்றமாக வழங்குவதில் வியப்பென்ன ? ஸ்ரீமார்கண்டேயர் தோன்றிய யுகம் முதலாக இன்று வரை லட்சக் கணக்கான ஆண்டுகளில் சரியாக ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இந்த சங்கு தீர்த்தத்தில் சங்குகள் தவறாமல் தோன்றிக் கொண்டுதான் உள்ளன. ஆனால் இன்று நம் காட்சிக்கு கிடைப்பவையோ ஒரு சில சங்குகள்தான். காட்சிக்கு மறைந்த சங்குகளின் நிலை என்ன என்று ஆராய்வதை விட இந்த சங்குகள் தோன்றிய சங்கு தீர்த்தத்தில் தினமும் நீராடி பாலாடை சக்திகள், ஊர்பருந்து அனுகிரகம் போன்ற அற்புத சக்திகளைப் பெறும் பக்தர்கள் எத்தனை பேர் என்று ஆத்ம விசாரம் செய்வதே பலனளிக்கும் என்பதே சித்தர்களின் பரிந்துரை. சங்கு தீர்த்தத்தில் சோப், ஷாம்பூ போன்ற இரசாயனங்களைக் கலப்பதால் இந்த ஊர்பருந்து சக்திகள், ஊர்பருந்து மூலிகைகள் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் பக்தர்கள் சங்கு தீர்த்தத்தில் எந்த வித இரசாயனங்களையும் உபயோகிக்காமல் இருக்கும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சங்கும் கழுகும் இணையும் காவியம்

நம் சற்குரு நம் அடியார் ஒருவரை சங்கிற்குள் விரலை நுழைத்துப் பார்க்கும்படிக் கூறியதன் பின்னணியில் அமைந்துள்ள தெய்வீக விளக்கங்களை அளிக்கும்படி ஒரு சில அடியார்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் அவற்றை இங்கு விவரிக்கின்றோம். திருக்கழுக்குன்றம் என்ற திருத்தலத்திற்கு பெயர் அமைய காரணமான இரண்டு கழுகுகளும் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள 16 தீர்த்தங்களில் முதன்மையான சங்கு தீர்த்தமும் இந்த விளக்கத்தில் இணைவதும் மற்றொரு முக்கிய காரணமே. பொன் விகிதம் (golden ratio) என்பதே சங்கையும் கழுகையும் இணைக்கும் தெய்வீகச் சங்கிலியாகும். மேலோட்டமாகப் பார்க்கும்போது, கழுகுகள் தங்கள் இரையை வேட்டையாடும்போது நேரிடையாகப் பெறுவது கிடையாது. பொன் விகிதம் அமையும் வண்ணமாக வட்டமடித்தே அவை தங்கள் இரையின்மேல் பாய்ந்து கவ்வும். இவ்வாறு வட்டமடிக்கும்போது அந்த இரையாக அமையும் எலி, பாம்புகளுக்கு பருந்துகளின் செய்கை புரியாது என்பது ஒரு காரணம், இவ்வாறு பறக்கும்போது விரைவாகப் பறந்து சென்று தங்கள் இரையைக் கவரலாம் என்பது மற்றோர் காரணம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருமுல்லைவாயில்

அதே போல் சங்கிற்குள் நாம் ஊதும் காற்றானது வெறும் சப்தத்தை மட்டும் ஏற்படுத்துவது கிடையாது. நம்முடைய எண்ணங்களை தாங்கிச் செல்லும் கருவியாகவும் அது மாறும் என்பது உண்மையே. திருஅண்ணாமலையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் நம் சற்குரு ஊதிய சங்கு நாதத்தில் எத்தனையோ அண்டங்கள் தோன்றின. அவ்வாறு தோன்றிய அண்டங்களுக்கெல்லாம் முதல் உணவாகப் படைக்கப்பட்டதே நம் ஆஸ்ரமத்தில் தயாரான உணவு பதார்த்தங்கள் என்பது ஒரு சில அடியார்களே உணர்ந்த தெய்வீக இரகசியமாகும். இத்தகைய சக்தி வாய்ந்த தெய்வீக நாதத்தை எழுப்பும்போது அது பொன் விகிதத்தில் எழுவதால் விரைவில் நாம் நினைக்கும் இடத்தை அடையும் செயல் திறன் கொண்டதாக அமைகின்றது. பொன் விகிதம் லயம் கொள்ளும் குரு தத்துவமே எதையும் சாதிக்கவல்லது என்பது இதிலிருந்து புலனாகின்றது அல்லவா ? கோயிலில் நிறைவேற்றும் அடிப் பிரதட்சணங்கள் போன்றவை இறைவனைக் காட்டும் என்பதற்கு இந்த பொன் விகிதமே, குரு தத்துவமே காரணமாக அமைகின்றது. இதுவே நம் சற்குரு அடிக்கடி குறிப்பிடும் குரு தத்துவத்தின் செயல்பாடாகும். “நாங்கள் ஒரு வழிகாட்டியே, அவ்வளவுதான். மதுரையில் இருந்து சென்னை செல்லும் ஒருவர் திருச்சியை அடைந்தவுடன் அங்கிருக்கும் வழிகாட்டி (sign post) சென்னை என்று குறிப்பிட்ட மார்கத்தில் செல்வதால் தெளிவாக தாங்கள் போக வேண்டிய இடமான சென்னையை அடைந்து விடலாம். எப்படி கைகாட்டியே சென்னையாக ஆக முடியாதோ அது போலவே குருவும் இறைவனாக முடியாது...,” என்பார் நம் சற்குரு. சின் முத்திரை என்பது ஸ்ரீதட்சிணா மூர்த்தி மட்டுமே பிரயோகம் செய்யும் தெய்வீக முத்திரையாகும். சாதாரண மனிதர்கள் ஜீவ சக்தி, தேவ சக்தி என்ற முத்திரைகளை அதாவது குருவிரல் நுனி கட்டை விரல் கணுவைத் தொடும்படியாகவும், கட்டைவிரல் நுனி குரு விரல் கணுவைத் தொடுவதாகவும் வளர்பிறை, தேய்பிறை காலங்களில் பிரயோகம் செய்யும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காரணம் மனிதர்களின் உடல் அந்த அளவு புனிதம் பெறாததே ஆகும். இதை உணர்த்துவதே நம் சற்குரு கையாண்ட சங்கு வித்தை. ஸ்ரீதட்சிணா மூர்த்தி பிரயோகம் செய்யும் குருவிரல் நுனியும் சுக்ரவிரல் நுனியும் சின் முத்திரையில் அமையும் வட்டம் முழுமையாக இருக்கும். It will be a perfect cirlce. நாம் எந்த அளவு இறை வழிபாடுகளை மேற்கொள்கிறோமோ அந்த அளவிற்கு உடல் மென்மை அடையும் என்பதால்தான் இதை அளக்கும் கருவியாக சங்கினுள் அமையும் குரு விகிதம் துணை புரிகின்றது. எப்படி பொன் விகிதத்தில் அமைந்த வட்டமானது தன் இலக்கை விட்டு விலக முடியாதோ அதே போல குருவைத் துணையாகக் கொண்ட வழிபாடு நிச்சயம் இறைவனை விட்டு விலக முடியாது. இதை உணர்த்துவதே திருக்கழுக்குன்றத்தில் இயற்றும் தீர்த்த வழிபாடுகளும் மலை மேல் இயற்றும் கழுகு தரிசன வழிபாடுகளும். தற்போது கழுகு தரிசனம் என்பது அரிதாகி விட்டாலும் இந்த தத்துவத்தை மேற்கொள்வோர் நிச்சயம் கழுகுகளின் தரிசனத்தைப் பெற முடியும். இது தெய்வீகத்தில் நாம் கொண்ட முன்னேற்றத்தின் அளவு கோலாகவும் அமையும் அல்லவா ? பிறவி என்னும் பெருங்கடலைத் தாண்ட உதவும் தெப்பமே, வழிகாட்டும் கலங்கரை விளக்கமே சற்குரு ஆவார்.

சிறுவாணி என்றும் மலரும் பெருவாணியே

வாணி என்றால் கலைவாணியான சரஸ்வதி தேவி, சிறுவாணி என்றால் சரஸ்வதி தேவியின் சக்திகள் குரு சக்தியில் இணைந்து பொழிதல் என்று பொருள். அதாவது குரு விகிதம் என்ற பொன் விகிதத்தில் தோன்றுவதே சிறுவாணி தீர்த்தமாகும். இதன் மகிமையை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். நமது ஆஸ்ரமத்தில் ஒரு வருட தீப அன்னதானத்தின்போது கோயம்புத்தூரைச் சேர்ந்த அடியார்களை சிறுவாணி தீர்த்தத்தைக் கொண்டு வரும்படி அருளினார் சற்குரு. அவ்வாறு அடியார்கள் கொண்டு வந்த தீர்த்தத்தை உபயோகித்து சோன்பப்டி என்று இனிப்பைத் தயாரித்து கார்த்திகை தீப அன்னதான வைபவத்தின்போது அளித்தனர். இதிலிருந்து என்ன தெரிகிறது ? குரு விகிதம் கலந்த சிறுவாணி தீர்த்தத்தை கலந்து குருவருளை என்றும் நிலைநிறுத்தும் இனிப்பைத் தயாரித்து சோனகிரியாகப் பிரகாசிக்கும் திருஅண்ணாமலையில் அன்னதானத்தை நிறைவேற்றியவரே தங்கமான நம் சற்குரு என்பது புலனாகின்றது அல்லவா ? சோன்பப்டி என்றால் தங்க சக்திகளை உடலில் உதிரத்தில் நிலைநிறுத்தும் இனிப்பு என்று பொருள். இத்தோடு முடிந்ததா நம் குரு லீலை, இல்லை இல்லை. தமது கண் பார்வையில் வைத்துக் கொண்ட சிறுவாணி தீர்த்தத்தை எல்லாம் எவருக்கும் தெரியாமல் ஒவ்வொரு பீப்பாயாக சிரமப்பட்டு தானே ஓவர்ஹெட் டாங்கில் சேர்த்து நம் அடியார்கள் அனைவரும் குளிப்பதற்கும் கழிவறைக்கும் என அனைத்து காரியங்களிலும் குருவருள் நிலவுமாறு நிறைவேற்றிய பெருமை நம் சற்குருவையே சேரும். சற்குரு ஆற்றிய திருப்பணிகள் தன் அருமை மனைவிக்குக் கூட தெரியாமல் நிறைவேற்றினார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவை. பல காரணங்கள் இதன் பின்னணியில் இருந்தாலும் இவ்வாறு ஸ்ரீஅகத்தியர் போன்ற மகான்கள் தீர்த்தங்களை பிரயோகிக்கும்போது அதில் பயன்படும் ஒவ்வொரு தீர்த்த துளிக்கும் கடமைப்பட்டவர்களே, பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே. அதனால்தான் கங்கையின் தீர்த்தம் 300 மிலி அளவைத் தாண்டினால் பறக்கும் தட்டே வெடித்து விடும் என்று கூறினோம். சிறுவாணி தீர்த்த மகிமையால்தான் இன்றும் கோயம்புத்தூர் பொன் விளையும் பூமியாகக் கொழிக்கிறது. இந்த உண்மையை உலகத்தவரும் உணர்ந்து பயன்பெறவே சோனாசலத்தில் ஒரு சிறந்த ஆடக சக்திகள் பெருகும் முகூர்த்தத்தில் ஹோமங்கள் இயற்றி அந்த ஹோம சக்திகள் பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாங்கல்யங்களை தானமாக பல திருத்தலங்களிலும் சற்குரு தம் அடியார்கள் மூலம் நிறைவேற்றினார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும்.

ஓரகடம் உந்தன்
சீரகடப் பார்வையில் விளைந்ததோ ?

சீதாதேவியைப் பிரிந்த ஸ்ரீராமர் மிகுந்த வேதனையுற்று காட்டில் அலைந்து திரிந்து கொண்டிருந்தார். வழியில் எதிர்ப்பட்ட மரம், செடி, கொடிகள், விலங்குகளிடம் எல்லாம் என்னுடைய சீதையை எங்காவது கண்டீர்களா என்று கேட்டு அழுது புலம்பினாராம். இந்த அதிசய காட்சியைக் கண்டனர் வான மார்கமாக சென்று கொண்டிருந்த பார்வதி பரமேஸ்வரர்கள். பார்வதி தேவியின் சகோதரன்தானே பெருமாள். தன்னுடைய அண்ணன் இவ்வாறு தான் கொண்ட மனித அவதாரம்தான் ராமர் என்பதையே மறந்த பூலோக மனிதனைப் போல பத்தினிப் பிரிவால் வாடுவதைக் கண்டு மனம் மிக வருந்தி இதற்கு என்ன உபாயம் செய்வது என்று பரம்பொருளிடம் கேட்க அவரோ, “தாயே, இதற்கு என்ன செய்வதென்று எனக்கும் தெரியவில்லை. நீ உனக்குத் தெரிந்த ஏதோ ஒரு உபாயத்தை கைக்கொள்,” என்று சொல்லி கையை விரித்து விட்டார். பார்வதி தேவியும் வேறு வழியின்றி தன்னுடைய சகோதரனைத் தேற்றும் முகமாக வாடாமல்லி என்ற ஒரு வகை மல்லிகைப் பூவால் சீதையைப் போன்றே ஒரு உருவத்தை உருவாக்கி ஸ்ரீராமர் வரும் பாதையில் அந்த சீதையை நிறுத்தி விட்டு தான் மறைவாக ஒரு இடத்தில் நின்று கொண்டாள். அழுது புலம்பி அவ்வழியாக வந்த ராமபிரானோ வாடாமல்லியால் உருவான சீதையை ஏறெடுத்தும் பார்க்காமல் மறைவில் நின்ற தன் தங்கை பார்வதியை நோக்கி, “பார்வதி, ஏன் இங்கு நீ தனியாக நிற்கிறாய் ? சுவாமி நலமாக இருக்கிறாரா ?” என்று விசாரித்தாராம். நிலை குலைந்து போனாள் பார்வதி தேவி. ராமர் ஒன்றும் தெரியாதவர் என்று நினைத்து நாம் அவரைத் தேற்ற வாடாமல்லியால் ஒரு தேவியை உருவாக்கி நிற்க அவரோ மலர் என்றாலும் அது பெண் உருவம் என்பதால் அதை ஏறெடுத்தும் பார்க்காமல் மறைவில் நின்ற தன் தெய்வீக உருவத்தை அவர் எவ்வாறு கண்டு கொண்டார் என்று வெட்கித் தலை குனிந்தாள். இவ்வாறு தொடரும் புராண நிகழ்ச்சிகள் ஒரு புறம் இருக்க வாடாமல்லியால் உருவான சீதை எப்படி உண்மையான சீதை அல்ல என்பதை ஸ்ரீராம பிரான் கண்டு கொண்டார் என்பதே நம் பதில் அறிய வேண்டிய கேள்வியாகிறது அல்லவா ? தூய்மையான ஓரகடம் என்ற தங்கத்தால் ஆன மாங்கல்யம் ஒரு ஆணும் பெண்ணும் இணையும் மங்கள வாழ்விற்கு சாட்சியாய் அமையும் சக்தி பெற்றது. கை ரேகை போல எத்தனை கோடி மக்கள் தோன்றி மறைந்தாலும் ஒருவர் ரேகை மற்றவருக்கு அமையாதது போல ஒரு ஆணும் பெண்ணும் இணையும் மங்கல இணைப்பின் போது மாங்கல்ய தேவதைகள் சாட்சியாய் சூட்டப்படும் ஓரகட சக்திகள் நிறைந்த மாங்கல்யங்கள் அந்த இணைப்பை மாங்கல்யத்தில் பதிக்கும். இதற்கு மாற்று கிடையாது. There is no duplicate entry. இந்த ஓரகட சக்திகளை அன்னை பார்வதி தேவியாலேயே தான் நிர்மாணித்த வாடாமல்லி சீதையின் மாங்கல்யத்தில் பதிக்க முடியவில்லை என்றால் ஓரகட சக்திகளுக்கு இணையேது. இந்த ஓரகட சக்திகளைக் கொண்டே சீதை வடிவில் இருந்தாலும் அந்த வாடாமல்லி தேவி அணிந்திருந்த மாங்கல்யத்தில் தான் அணிவித்த மாங்கல்யத்தின் ஓரகட சக்திகள் புலனாகவில்லை என்பதால் அந்த சீதை உண்மையான சீதை கிடையாது என்ற இரகசியத்தை ஸ்ரீராமர் அறிந்து கொண்டார். இத்தகைய ஓரகட சக்திகள் நிறைந்த மாங்கல்யத்தையே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகளுக்கு தானமாக அளித்து மாங்கல்ய தான வைபவத்தை நிறைவேற்றினார் நம் சற்குரு என்பதே ஒரு சில அடியார்கள் அறிந்த இரகசியமாகும். சூரியனுக்கு இரண்டாமிடத்திலும், சூரியன் குரு சங்கமத்திற்கு இரண்டாம் வீட்டில் சுக்ர பகவான் இருக்கும்போதும் இத்தகைய ஓரகட சக்திகள் நிலவும் என்பதால் வரும் 27.12.2019 சுக்ர தினம் அன்று மாங்கல்ய தானங்களையும் சிறுவாணி தீர்த்தம் கலந்த சோன்பப்டியும் தானம் அளித்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய எத்தகையே பேறு. செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளதே ஓரகடம் ஸ்ரீவாடாமல்லீஸ்வரர் சிவாலயமாகும்.

ஸ்ரீராமனதீஸ்வரர் ஸ்ரீஅகத்தியர் ஸ்ரீநந்தி மூர்த்தி ஸ்ரீசரிவார்குழலம்மை ராமனது ஈச்சரம் திருவாரூர் மாவட்டம்

அகடம் என்பது வயிறு என்ற பொருளையும் கொண்டு விளங்குவதால் வயிறு நிறையும் வண்ணம் அன்னதானம் அளிப்பதும் ஓரகட சக்திகளை வர்ஷிக்கும் ஒரு மார்கமாகும். ஓர் அகடத்திற்காவது இனிய சுவையான உணவை அளிக்கும் சங்கல்பத்தை நம் சற்குரு பெற்ற இடமே ஸ்ரீமகாலட்சுமி அருள்புரியும் மும்பை திருத்தலமாகும். இந்த சங்கல்பத்தை முப்பதாண்டு காலத்திற்கு மேலாக நிறைவேற்றிட தேவையான செல்வத்தை அனுகிரகமாக அளித்ததோடு மட்டுமல்லாது அவ்வாறு அளித்த சுவையான உணவை தானமாகப் பெற இறை அடியார்களையும் அனுப்பி வைத்த ஸ்ரீமகாலட்சுமி தேவிக்கு நன்றி கூறும் முகமாக சற்குரு மும்பைக்கு எழுந்தருளினார் என்பதை அந்த ராமநாதனே அறிவார். ஒரு ஏழைக்காவது அவன் வாழ்க்கையில் கண்டிராத சுவையான விலையுயர்ந்த உணவை அளிக்க வேண்டும் என்று மனஉறுதியை மேற்கொண்ட நம் சற்குரு அந்த அற்புத அன்னதானத்தை திருஅண்ணாமலையை வலம் வந்த பத்து கோடி இறையடியார்களுக்கு நிறைவேற்றினார் என்றால் அத்தகைய அன்னபூரணி தேவியை சற்குருவாகப் பெற்ற அடியாரை விட உயர்ந்தவர் வேறு எவராவது உண்டா ?

ராமனதீச்சரம்

ராமனதீச்சரம் என்ற திருத்தலத்தில் ஸ்ரீராமபிரான் இராவணனை அழித்த பாவம் தீர்வதற்காக மட்டுமல்லாமல் இலங்கை யுத்தத்தில் இறந்த அனைத்து வீரர்களும் நற்கதி அடைய வேண்டி தர்ப்பண வழிபாடுகளை இயற்றினார். இது என்றோ ஒரு நாள் நடந்த இறை வைபவம் என்று கிடையாது. இன்றும் மற்றவர்களின் நலனுக்காக தர்ப்பண வழிபாடுகள் இயற்றுவோர் இந்த ராம தீர்த்தத்தில் நீராடி தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றுதலால் சமுதாயத்தில் நற்பலன்கள் வெகுவாக விளையும்.
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வராணனே
என்று சிவபெருமானே ராம நாம தியானத்தில் மூழ்குகின்றார் என்றால் ராமர் எத்துணை பரோபகாரியாகத் திகழ வேண்டும். ஸ்ரீராமரோ மற்ற ஜீவன்களின் நன்மைக்காக சதா சர்வ காலமும் பாடுபட்டது மட்டுமன்றி தந்தை சொல் காத்த தனயனாக விளங்கி சமுதாயத்தில் ஏக பத்தினி விரதனாக சிறப்புற்று மக்கள் மேன்கைக்காக சக்கரவர்த்தியாக, உண்மையான சிவ பக்தராகத் துலங்கினார் என்பதே ராம ராஜ்யத்தின் சிறப்பம்சமாகும். பொதுவாக, சூரியன், சந்திரன், குரு இவர்களின் சங்கமத்தின்போது நிறைவேற்றும் தர்ப்பண வழிபாடுகள் கொலை, யுத்தம், தற்கொலை, விபத்து போன்றவற்றால் நிகழும் துர்மரணங்களுக்கு பிராயசித்தம் நல்கும். மேற்கூறிய தத்தாத்ரேய கிரக சங்கமம் இத்தகைய அம்சங்களுடன் திகழ்வதால் அத்தருணத்தில் ராமனதீச்சரம் ராம தீர்த்தத்தில் இயற்றும் தர்ப்பண வழிபாடுகள் துர்மரணங்களுக்கும் அகால மரணங்களுக்கும் பிராயசித்தமாக அமையும். ஒரு அடி விட்டம் உடைய மண் தட்டுகளில் தர்பை சட்டம் அமைத்து தர்ப்பணம் அளித்து தர்ப்பண நிறைவில் ஸ்ரீராமனதீச்சர ஈஸ்வர மூர்த்திக்கு வெண் தாமரை அல்லது செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபடுதலால் பல்லாண்டுகளாக பல தலைமுறைகளாக விட்டுப் போன தர்ப்பண வழிபாடுகளுக்கும் திவச வழிபாடுகளுக்கும் பிராயசித்தம் கிட்டும். பல தலைமுறைகளைத் தொடர்ந்து வந்து துன்புறுத்தும் ஆவி சேஷ்டைகள், இருள் சூழ்தல், நிழலாட்டம் போன்ற தொந்தரவுகளுக்கு அரிதாக கிட்டும் பிராயசித்த வழிபாடு இதுவே என்பதை நினைவில் கொள்ளவும்.

மனிதர்கள் சந்திக்கும் அனைத்து துன்பத்திற்கும் ஒரே காரணம் மனிதர்களின் விருப்பமும் இறைவனின் விருப்பமும் வேறு வேறாக இருப்பதுதான். ராமர் நத்தும் ஈஸ்வரன் என்பது போல ஈசன் விரும்பும் ராமர் என்பது போல, என்று ஈசனின் விருப்பமும் மனிதனின் விருப்பமும் ஒன்றாக அமைகிறதோ இணைகிறதோ அன்றே துன்பம் என்பது இல்லை, இன்பமே எந்நாளும். இதற்கு வழிவகுப்பதே ராமர் தீர்த்தத்தில் இயற்றும் வழிபாடுகள் ஆகும். கஜ சாயை என்றால் யானையின் நிழல் என்ற பொருள் மட்டும் கிடையாது. யானையின் நிழலைப் போல பெரிய அளவில், உருவத்தில் நம்மைத் தொடர்ந்து வரும் தற்கொலை, கொலை போன்ற கொடிய வினைகளும் அடங்கும் என்பதால் மேற்கூறிய தர்ப்பண வழிபாடுகள் நம்மைப் பல பிறவிகளில் தொடர்ந்து வரும் துன்பங்களுக்கு பிராயசித்தம் அளிக்கும். ஒரு முறை திருஅண்ணாமலைவாசி ஒருவர் கஜசாயை தர்ப்பணத்தை கும்பகோணத்தில் நிறைவேற்ற முடியவில்லையே என்று வருத்தம் தெரிவித்தபோது சற்குரு இதை விதி என்பதா இல்லை காலத்தின் கோலம் என்பதா என்று சிரித்துக் கொண்டே கேட்டாராம். காரணம், “திருஅண்ணாமலை பித்ரு முக்தி தீர்த்தத்தில் நீராடி, தர்ப்பணம் அளித்து ஒரே ஒரு யானைக்கோ, கழுதைக்கோ, நாய்க்கோ உணவளித்தால் கூட அது ஆயிரம் மடங்காகப் பெருகி உங்கள் வினைகள் அனைத்தையும் தீர்த்து விடும் என்று அடியேனும் பல ஆண்டுகளாக திரும்ப திரும்ப கூறிக் கொண்டுதானே இருக்கிறேன்,” என்று ஆயிரத்தோராவது முறையாக இந்த கருத்தை வலியுறுத்திக் கூறினார் நம் சற்குரு. கோயில் திருத்தலங்களிலோ யானையை மட்டுமே தரிசிக்க முடியும் ஆனால் திருஅருணாசலேஸ்வர ஆலயத்தின் பிரகாரமாகத் திகழும் கிரிவலப் பாதையில் முள்ளம்பன்றி, ஐந்து தலை நாகங்கள், பஞ்சவர்ணக் கிளிகள், டினோசார் போன்ற அரிதான பறவைகள் விலங்குகளுக்குக் கூட உணவளிக்கும் சந்தர்ப்பம் கிட்டுமே. திருஅண்ணாமலை திருத்தலம் காலம், தூரத்திற்கு அப்பாற்பட்டு விளங்குவதால் இங்கு இரவு, பகல் என்ற பாகுபாடு இல்லாது தர்ப்பணம், தீர்த்த நீராடல், அன்னதானம் போன்றவற்றை நிகழ்த்தலாம் என்பது உண்மையே. எவரும் உணவு ஏற்காத கிரகண காலங்களில் கூட இங்கு சற்குரு அன்னதான வைபவத்தை நிறைவேற்றியதை நினைவு கூர்க.

மா சுச

ராமனதீச்சர திருத்தலத்தில் தொடர்ந்து தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றுதலால் தர்ப்பணம் அளிப்பவரும், தர்ப்பணமும், தர்ப்பணம் பெறுபவரும் ஒன்றே என்ற உண்மையை உணரலாம். காரணம் ஸ்ரீஆதிசங்கரர் திருக்கு திருசிய விவேகம் அதாவது பார்ப்பவரும், பார்வையும், பார்க்கப்படும் பொருளும் ஒன்றே என்ற ஞானத்தைப் பெற உதவிய திருத்தலமே ராமனதீச்சரம் ஆகும். இங்கு அருளும் ஸ்ரீசரிவார் குழலம்மையே ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாளுக்கு இந்த ஞானத்தை அளித்த ஞான பரமேஸ்வரி ஆவாள். சரிவார்குழலியம்மை என்ற நாமமே அத்வைத ஞானத்தை பூர்ணமாக அளிக்கும் திருநாமமாகும். ராம திருக்குளத்தில் நீராடி தர்ப்பணமளித்து தொடர்ந்து ஸ்ரீசரிவார்குழலியம்மையைத் தியானித்து வந்தால் சிறிது சிறிதாக அம்மை, குழலி, வார், ரி என்ற வார்த்தைகள் மறைந்து இறுதியாக அவன் என்பதைக் குறிக்கும் ‘ச’ என்ற அட்சரம் மட்டுமே இறைவன் ஒருவனே உண்மை என்ற தத்துவத்தைச் சுட்டி நிற்கும்.

வருந்தாதே அர்ச்சுனா

இந்த அத்வைத தத்துவம் கூறும் உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள முடியாது என்றாலும், எல்லோரும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றாலும் அவதார மூர்த்திகளும், மகான்களும் தங்களை நம்பி இருக்கும் அடியார்களுக்கு இந்த தத்துவ ஞானத்தை அவ்வப்போது உபதேசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 40 வருடங்களுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு தரிசனம் நல்கும் ஸ்ரீஅத்தி வரதராஜ பெருமாளும் இம்முறையில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தபோது அவர் திருக்கரங்களில் பொலிந்த உபதேசத்தையே இங்கு தரிசனம் செய்கிறீர்கள். மா சுச: என்றால் வருந்தாதே என்று பொருள். கோடி கோடியாக பணம் குவிந்து கிடந்தாலும், அனைத்து வாழ்க்கை வசதிகளுடன் புரண்டாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனக் குழப்பங்களும் வேதனைகளும் மறைந்து கிடக்கின்றன என்பதே உண்மை. இதையே பகவான் கிருஷ்ணரும் அர்ச்சுனனுடைய மனக் குழப்பதை நீக்கும் மாமருந்தாக மட்டுமல்லாமல் அனைவர் உள்ளத்திலும் மண்டிக் கிடக்கும் வேதனைகளைக் களையும் முகமாக இவ்வாறு மா சுச என்ற உபதேசத்தை தம் திருக்கரத்தில் தாங்கி அருள்புரிகின்றார். காஞ்சி வரதர் மனமுவந்த அளித்த இந்த தரிசனத்தையும் காண முடியாதவர்கள் எத்தனையோ கோடி உண்டே. அவர்களுக்கும் கருணை சுரக்கும் முகமாக ஏற்பட்டதே வரும் மார்கழி மாதத்தில் நிகழும் கிரக சஞ்சாரக் கோலமாகும். மாதங்களில் நான் மார்கழி என்று பகவானே முழங்கியது போல மார்கழி மாதத்தில் சுக்ல பட்சத்தில் சனிக் கிழமை அன்று குரு ஹோரையில் பெருமாள் தரிசனமும் தான தர்மங்களும் நிறைவேற்றுதலால் ஸ்ரீபகவான் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே கனியும் இந்த அனுகிரகத்தை பக்தர்கள் பெற வழி வகுக்கிறார். அபூர்வமாக வரும் 28.12.2019 சனிக் கிழமை இத்தகைய கிரக சங்கம கோலத்தில் திகழ்வது நாம் பெற்ற பெரும் பாக்கியமாகும். மார்கழி மாதம் சுக்ல பட்சம் சனிக் கிழமை என்ற இந்த அற்புத சங்மங்களில் அமிர்த பங்கீட்டில் பங்கு பெற்ற ராகு, கேது, மோகின அவதார மூர்த்தி, அமிர்த சக்திக்கு உரித்தான குரு பகவான், அசுரர்களைக் காட்டிக் கொடுத்த சூரிய சந்திர மூர்த்திகள் அனைவரும் இந்த கிரக சங்கமத்தில் இணைவது பூலோக மக்களின் பெரும் பாக்கியமே. 28.12.2019 அன்று காலை குரு ஹோரை அமையும் ஏழு மணி அளவில் எந்த திருத்தல பெருமாள் மூர்த்தியையும், சிறப்பாக காஞ்சி வரதரைத் தரிசனம் செய்து மோகின அவதாரமாக பாவித்து வணங்குதலால் பக்தர்கள் பெறும் அனுகிரகம் ஏராளம். இவ்வாறு சனிக் கிழமையில் குரு ஹோரையில் மலரும் பெருமாள் தரிசனப் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. சந்திர பகவான் கிரக சங்கமத்திலிருந்தும் சூரிய கிரகணத்திலிருந்தும் மீண்டு புத்தம் புது அமிர்த சக்திகளுடன் திகழ்வது எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிட்டும் பேறு என்பதால் பூலோகவாசிகள் இந்த அரிதிலும் அரிய சந்தர்ப்பத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 
    குரு அளித்த வைரமே
    குருவாய் மலரும் வைரமே
    கருவினையும் களையும்
    குருவாய் மொழிக்கு இணையுண்டோ
                                    மாதேவா
 

நீலமேகசியாமளா என்று கிருஷ்ண பகவானை அழைப்பதுண்டு. அதனால் பலரும் கிருஷ்ணனின் வண்ணம் கருமை என்றே நினைக்கின்றனர். நம் சற்குருவோ எப்படி நீலமேகத்தை அருகில் சென்று பார்த்தால் அது எந்தவித வண்ணத்தையும் பிரதிபலிப்பது இல்லையோ அது போல கிருஷ்ணனை கார்மேக வண்ணன் என்று என்னும்போது அது வெகு தூரத்திலிருந்து நாம் காணும் கிருஷ்ண பகவானின் வண்ணத்தைக் குறிப்பதாகவும் உண்மையில் கிருஷ்ண பகவான் பொன்னிறமானவர் என்று வர்ணிக்கிறார். எனவே சனிக் கிழமை அன்று குரு ஹோரை நேரத்தில் வைரம் பதித்த பொன் ஆபரணங்களைத் தானமாக அளிப்பது சிறப்பானதாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே கனியும் இனிய சந்தர்ப்பம் இது என்பதை நினைவில் கொள்ளவும். தனிப்பட்டவர்கள் இந்த வைர தானத்தை நிறைவேற்றுவது சிரமம் என்றாலும் பலரும் ஒன்று சேர்ந்தால் ஒரு வைர மலையையே தானமாக அளித்து விடலாமே ? மனமிருந்தால் மார்க்க்கம் உண்டு. இந்த வைர தானத்தின் போது குறைந்தது பன்னிரெண்டு அடியார்கள் மேற்கூறிய வைரத் துதியை ஓதி தானமளித்தல் என்பது கிடைத்தற்கரிய பேறாகும்.

பஞ்சேஷ்டி திருத்தலம்

சென்னை கல்கத்தா பிரதான சாலையில் சென்னைக்கு வடக்கே 30 கிமீ தூரத்தில் அமைந்துள்ளதே பஞ்சேஷ்டி திருத்தலமாகும். இறைவன் ஸ்ரீஅகத்தீஸ்வரர், இறைவி ஸ்ரீஆனந்தவல்லி. பஞ்சபூதங்களால் ஆன மனிதன் படைக்கப்படுவதற்கு முன் தோன்றிய தலம் என்றால் இது எத்தகைய தொன்மை வாய்ந்ததாக இருக்கும். இத்தலத்தில் பஞ்சேஷ்டி என்னும் அற்புத யாகத்தை ஸ்ரீஅகத்திய பிரான் இயற்றி அவ்வாறு அந்த ஹோமத்தில் தோன்றிய பஞ்ச பூத சக்திகளை பிரம்மனுக்கு அளிக்க பிரம்மனால் முதன் முதலில் மனித வடிவம் படைக்கப்பட்டது என்பதே சிருஷ்டியின் இரகசியம். அந்த நாள் முதற் கொண்டு ஸ்ரீஅகத்திய பெருமானால் தொடர்ந்து பஞ்சேஷ்டி யாகம் இத்தலத்தில் சூக்குமமாக நடைபெற்று வருகின்றது என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். சிறப்பாக ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்களின் சங்கமம் ஏற்படும் போது ஸ்ரீஅகத்திய முனியால் பஞ்சேஷ்டி பஞ்சதாரண பஞ்சவடி என்ற ஒரு சிறப்பான ஹோமம் நிறைவேற்றப்படுகின்றது. இவ்வருடம் 25.12.2019 முதல் 27.12.2019 தோன்றும் இந்த கிரக சங்கமத்தில் ஆறு கிரகங்கள் ஒன்று சேர்வதுடன் ஏழாவதான ராகு கிரகத்தின் பார்வையும் இந்த சங்கமத்தில் இணைவதால் இது பெயருக்கு ஏற்றாற்போல் சப்தாட்சர ஹோமமாகவும் திகழ்வது பூலோக மக்கள் பெற்ற சிறப்பே.

பஞ்சேஷ்டி திருத்தலம்

பஞ்சவடி என்றால் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. இத்தலத்தில் ஆலமரம், அரசமரம், நெல்லி மரம், அசோகமரம், வில்வ மரம் என்னும் பஞ்சாட்சர மரங்கள் தோன்றி பெருகியமையால் இத்தலம் பஞ்சேஷ்டி என்று அழைக்கப்படுகிறது. சேஷ்டை என்றால் செய்கை என்று பொருள். பஞ்ச பூதங்களால் படைக்கப்பட்ட மனிதனின் ஒவ்வொரு பூதங்களுக்கும் இந்த ஐந்து மரங்களும் காரணமாகின்றன என்பதாலும் இத்தலம் பஞ்சவடி, பஞ்சேஷ்டி என்று அழைக்கப்படுகிறது. ஆஞ்சநேய பகவானை அஞ்சனா புத்திரன் என்று அழைப்பதில்தான் பெருமகிழ்வு கொள்கிறார் என்பது நீங்கள் அறிந்ததே. அஞ்சனா இத்தலத்தில் பஞ்சவடி என்ற நமஸ்காரப் பிரதட்சணத்தை ஒரு யுக காலத்திற்கும் மேலாக நிறைவேற்றி ஆஞ்சநேய மகாபிரபுவைப் பெற்றெடுத்தாள். தான் நலமுடன் திகழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு யுக காலத்திற்கு ஒரு தாயானவள் இறை வழிபாடுகளை மேற்கொள்கின்றாள் என்றால் அந்த தாயின் நாமத்தை நினைவூட்டும் பெயரைக் குழந்தை கேட்டு ஆனந்தம் கொள்வது இயற்கையானதே. அஞ்சனை இயற்றிய அந்த உன்னத வழிபாடு யாதோ ? பஞ்சவடி என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டை ஆண்களாக இருந்தால் வலது காலை முதலிலும் பெண்களாக இருந்தால் இடது காலை முதலில் வைத்தும் ஆரம்பிக்க வேண்டும் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். 1. ஓம் 2. பூர் புவ சுவஹ 3. தத் சவிதுர் வரேண்யம் 4. பர்கோ தேவஸ்ய தீமஹி 5. தியோ யோநஹ ப்ரசோதயாத் என்று பிரம்ம காயத்ரீ மந்திரத்தை ஐந்து பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு அடிக்கும் ஒவ்வொரு பகுதி காயத்ரீ மந்திரத்தை மனதிற்குள்ளோ வாய்விட்டோ கூறுதலே பஞ்சவடி வழிபாடாகும். ஐந்தாவது காயத்ரீ பகுதியை கூறியவுடன் இரண்டு கால்களையும் சமமாக, இணையடியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த முறை மந்திரம் ஓதம்போது கால்களை மாற்றி வைக்க வேண்டும், அதாவது ஆண்களாக இருந்தால் முதலில் இடது காலையும் பெண்களாக இருந்தால் முதலில் வலது காலையும் முன் வைக்க வேண்டும். காயத்ரீ மந்திரத்தை ஜபிக்கும்போது ஒவ்வொரு பதத்திற்கும் இடையில் சிறிது கால இடைவெளி ஏற்படுகின்றது அல்லவா ? இது வருடக் கணக்கில் சேரும்போது காயத்ரீ மந்திரம் ஜபிக்காத ஒரு நீண்ட இடைவெளியாக அமைந்து அமைந்து பல பிறவிகளுக்கு வழிகோலும். இதை உணர்ந்த நம் சற்குரு தம் அடியார்களைக் காப்பதற்காக காயத்ரீ மந்திரம் ஜபிக்கும்போது அதை சிதம்பரம் ஆலய மணி ஓசை, வரிசையாக ஏற்றிய தீபங்கள் போன்றவற்றோடு இணைக்கும் முறை பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளளோம். இதை நிறைவேற்ற முடியாத பல அடியார்களும் இதற்கு ஏதாவது மாற்று உண்டா என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்கி கருணைக் கடலான நம் சற்குரு மேற்கண்ட இணையடி பஞ்சவடி பிரதட்சிண முறையை அளித்துள்ளார்கள். ஏழு கலசங்கள் ஐந்து நிலைகளுடன் திகழும் பஞ்சேஷ்டி ராஜ கோபுரத்தை தரிசிக்கும்போது அது எப்படி ஏழு கடலையும் ஒரு துளியாக்கி அருந்திய ஸ்ரீஅகத்திய பிரானையும் அவர் இயற்றிய பஞ்சேஷ்டி யாகத்தையும் இணைக்கும் தூல வடிவ ஜோதியாக திகழ்கிறது என்று பரியவரும்.

ஸ்ரீஅகத்தீஸ்வரர் பஞ்சேஷ்டி

ஸ்ரீஆனந்தவல்லி பஞ்சேஷ்டி

ராமகிருஷ்ண பரமஹம்சர் பயின்ற பல சாதனகளுள் அத்வைத சாதனையும் அடங்கும். பரமஹம்சரின் சற்குருவான தோத்தாபுரி 40 வருடங்களுக்கு மேலாக நர்மதை நதிக்கரையில் பயின்ற கடுமையான குண்டலினி யோகத்தை மூன்றே நாட்களில் நிறைவேற்றி தன் சற்குருவே ஆச்சரியப்படும்படி விளங்கினார் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால் அதிசயமூட்டும் இந்த யோகத்திற்கு பின்னணியாக அமைந்தது பல பிறவிகளில் அவர் பஞ்சேஷ்டி திருத்தலத்தில் நிறைவேற்றிய பஞ்சவடி வழிபாடே என்பது நீங்கள் அறியாத சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும். மேலோட்டமாகப் பார்த்தால் சாக்கடைகள் தேங்கி, புழு பூச்சிகள் முட்புதர்கள் மண்டிக் கிடந்த பார்த்தாலே அச்சமூட்டும் அடர்ந்த பஞ்சவடி காட்டில்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் இந்த அத்வைத யோகத்தைப் பயின்றார் என்பது போல் தோன்றினாலும் அவர் பஞ்சவடி திருத்தலத்தில் இயற்றிய யோக வழிபாடுகளும் யாக வழிபாடுகளும் அனைத்திற்கும் மேலாக ஸ்ரீஅகத்திய பிரானின் வழிகாட்டுதலுமே அவருடைய சாதனைக்குப் பின்னணியாக அமைந்தது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வீக இரகசியமாகும். தற்காலத்தில் இத்தகைய பஞ்சேஷ்டி யாகத்தை இயற்றும் அளவிற்கு நாம் யோக சக்திகளைப் பெறவில்லை என்றாலும் சித்தர்கள் விவரித்த மேற்கூறிய பஞ்சவடி பிரதட்சிண முறையையும் தம்பதிகளுக்கு பஞ்ச ஆபரணங்களையும் தானமாக இத்தலத்தில் அளித்து வருதலால் ஸ்ரீராமகிருஷ்ணர் பயின்ற குண்டலினி யோகத்தைப் பயில நாமும் தகுதி உடையவர்கள் ஆவோம் என்பது உறுதி. பஞ்சவடி விருட்சங்கள் ஒரு காலத்தில் பல்கிப் பெருகிய திருத்தலமாக பஞ்சேஷ்டி விளங்கியதால் இத்தலத்தில் ஒரு மணி நேரமாவது மேற்கூறிய முறையில் பஞ்சவடி பிரதட்சிண முறையில் ஆலயத்தை வலம் வந்து இறை மூர்த்திகளை வணங்கி பின்னர் அவரவர் ஊரில் உள்ள ஆலயங்களை மேற்கூறிய முறையில் பிரதட்சிணமாக வந்து வழிபடுதலும் ஏற்புடையதே. திருத்தலங்களை மட்டும் அல்லாது காயத்ரீ மந்திரத்தை ஜபித்தவாறே இந்த ஐந்து மரங்களையும் வலம் வந்து வழிபடுதலும் சிறப்பே. ஒவ்வொரு மரத்தையும் காயத்ரீ மந்திரத்தை ஜபித்தவாறு வழிபடும்போது அதிலுள்ள கால இடைவெளி கர்ம வினைகளைக் களைய அஞ்சனா தேவியின், அவர்தம் அருமைப் புதல்வன் ஆஞ்சநேய மூர்த்தியின் கருணையும் துணை நிற்கும். இதை அவரவர் அனுபவத்தில் உணர்வதே சிறப்பு.

ஸ்ரீஅகத்திய பிரான் பஞ்சேஷ்டி

இந்த பஞ்சவடி மரங்களுக்கு உரித்தான திருத்தலங்களும் உண்டு. இவற்றில் தொடர்ந்து வழிபாடுகளை இயற்ற முடியாவிட்டாலும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இத்தகைய திருத்தலங்களில் வழிபாடுகளை இயற்றுவது சிறப்பே. சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் திருத்தலத்திலுள்ள ஆலமரம், காஞ்சி வரதராஜ பெருமாள் திருத்தலத்திலுள்ள அரச மரம், லால்குடி அருகே சாத்தமங்கலத்தில் உள்ள லவகுசர்கள் வழிபட்ட வில்வ மரம், புதுக்கோட்டை அருகே திருக்கோளக்குடி திருத்தலத்தில் பொலியும் நெல்லி மரம், தென்காசி இலஞ்சி திருத்தலத்தில் சோகத்தை நீக்கும் அசோக மரங்கள் முதலானவை மக்களின் துயர் தீர்க்கும் புண்ணிய விருட்சங்கள் ஆகும். உண்மையில் இவற்றை விருட்சங்கள் என்று அழைப்பதை விட தெய்வ மூர்த்திகளின் பேரருள் கடாட்சமே இத்தகைய மர ரூபத்தில் நமக்கு காட்சி அளிக்கின்றன என்பதே உண்மை. இந்த பஞ்சவடி வழிபாட்டை எந்த அளவிற்கு சிரத்தையுடன் வழிபாடுகிறோமோ அந்த அளவிற்கு மார்கழி மாதத்தில் அமையும் கிரக சஞ்சார கோலமும் சிறப்பு பெறும். அதாவது இது வெறும் கிரகங்களின் சங்கமம் என்ற கருத்து மறைந்து நவகிரக மூர்த்திகள் வர்ஷிக்கும் அருட்கடாட்சமே என்ற தெளிவை நேரே தரிசிக்கும் பாக்கியம் கிட்டும். என்னே கிடைத்தற்கரிய பேறு ? பஞ்சேஷ்டி திருத்தலத்தில் அருள்புரியும் அண்ணல் ஸ்ரீஅகத்தீஸ்வரர். ஸ்ரீஅகத்திய முனிவரால் வழிபடப்பட்ட மூர்த்தி இவர் என்ற மேலோட்டமான பொருளை இது குறித்தாலும் அனைவர் உள்ளத்திலும் பிரகாசிக்கும் தெய்வமே ஸ்ரீஅகத்து ஈஸ்வரர் என்று உண்மையை நாளடைவில் உணர வைப்பதே இம்மூர்த்தியின் பெருமை ஆகும். அகல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரி ததா பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் மகா பாப நாசனம் என்ற பஞ்ச கன்னிகா சுலோகத்தை இத்தலத்தில் ஆண்களும் பெண்களும் ஓதி வழிபட்டு வருதலால் கொம்பைச் சுற்றிப் படரும் கொடி போல குடும்ப ஒற்றுமை மலரும், வளரும் என்ற அனுகிரகத்தை வழிபாட்டுப் பலனாக அளிப்பவளே இத்தல ஸ்ரீஆனந்தவல்லி ஆவாள். அகலிகை ரிஷி பத்தினி, திரௌபதி சக்கரவர்த்திகளின் இதய நாயகி, சீதையோ மனித அவதாரத்தின் மாணிக்கம், தாரா குரங்கு வம்சத்தில் தோன்றிய பட்டத்தரசி, மண்டோதரி அரக்கர் குலத்தையே சிறப்பித்த கற்புக்கரசி. இவ்வாறு இந்த பத்தினிகள் மட்டுமே கற்புக்கரசிகள் என்று எண்ண வேண்டாம். கோடி கோடியாய் இது போன்ற கற்புக்கரசிகளை தன் இதயத்தில் கொண்டவளே பாரத அன்னையாவாள். மேலும் இது போன்ற எத்தனையோ கற்புக்கரசிகளின் பெட்டகமாகத் திகழ்வதே சென்னை பஞ்சேஷ்டி திருத்தலம். இந்த பஞ்ச கன்னிகா வழிபாட்டைத் தொடர்ந்து இத்தலத்தில் நிறைவேற்றி வருதலால் எத்தனையோ கற்புக்கரசிகள் நம் தாயகத்தில் தோன்றி நிறைவார்கள் என்ற மன நிறைவை அளிப்பதும் பஞ்சேஷ்டி திருத்தலமாகும். வளர்பிறை பஞ்சமி திதிகளில் மாங்கல்ய சரடு, பொன் மாங்கல்யங்களை தானமாக அளிப்பதற்கு மிகவும் சிறப்பான தலம். பஞ்சேஷ்டி என்ற ஐந்தெழுத்து திருத்தலத்தில் நிறைவேற்றிய வழிபாடே பஞ்சவடி என்ற ஐந்தெழுத்து திருத்தலத்தில் குண்டலினி என்ற ஐந்தெழுத்து யோகமாக மலர்ந்து அது தோத்தாபுரி என்ற ஐந்தெழுத்து சற்குருவால் அருளப்பெற்று பரம்பொருளின் அனுகிரகத்தைப் பெற்றுத் தந்தது என்பதே மேற்கூறிய ஐந்தாம் திதியான பஞ்சமியில் நிறைவேற்றும் தான தர்மங்களின் மகிமையாகும்.

ஸ்ரீநடராஜ பெருமான் திருக்களம்பூர்

அபூர்வமாக வரும் 1.11.2019 (ஐப்பசி 15) வெள்ளிக் கிழமை சுக்ல பட்சம் பஞ்சமி திதி ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருஅவதாரம் தோன்றிய மூல நட்சத்திர தினத்துடன் இணைவதால் ஸ்ரீரங்கம் திருத்தலத்திலோ, ஆழ்வார் திருநகரியிலோ, பஞ்சேஷ்டி தலத்திலோ அல்லது எந்த பெருமாள் தலத்திலும் இத்தகைய மாங்கல்ய மங்கள தானங்களை நிறைவேற்றுதலால் குடும்ப ஒற்றுமை பெருகும், நீண்ட நாள் திருமணம் ஆகாமல் அவதியுறும் குடும்பங்கள் தக்க வழிகாட்டுதலைப் பெறுவார்கள். துலா ராசியில் துலங்கும் லக்னம் உட்பட ஒன்பது கிரகங்களும் ஐந்து ராசிகளில் திகழ்வது என்பது எத்தகைய திருமண தோஷங்ளையும் தீர்த்து குடும்ப ஒற்றுமையைப் பெருக்கும் கிரக சஞ்சார அமைப்பாகும். துலா மாதத்தில் தோன்றிய பெருந்தகையே மணவாள மாமுனிகள் என்பது நீங்கள் அறிந்ததே. தம்பதிகள் இடையே தோன்றும் பிணக்குகளைத் தீர்த்து குடும்ப ஒற்றுமையைப் பெருக்கவும் வளமான மணவாழ்வை மக்கள் பெறவும் களத்திர தோஷங்களைக் களையும் குரு வாரத்தில் தோன்றியதே ஏழாம் மாதமான ஐப்பசி மாதத்தில் பூத்த மணவாள மாமுனிகளின் அவதாரம். நாசிக் போன்று ஐந்து ஆலமரங்கள் அமைந்த தலங்கள் மட்டுமல்லாது ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட கடம்ப மரங்கள் அமைந்த ஸ்ரீகடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை, கல்வாழை மரங்கள் நிலவும் திருப்பைஞ்ஞீலி, திருக்களம்பூர் போன்ற தலங்களும் பஞ்சவடித் தலங்களாக புகழ்பெறுவதால் இத்தகைய தலங்களிலும் மேற்கூறிய வழிபாடுகளை இயற்றுதல் ஏற்புடையதே. கனிந்த கனி காஞ்சி ஸ்ரீபரமாச்சாரியார் ஆரம்பத்தில் மற்றவர்களைப் போல் பிட்சை ஏற்றாலும் நாட்கள் செல்லச் செல்ல தான் ஏற்ற உணவின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்து இறுதியில் சில வறுத்த நெல்மணிகளைப் பாலில் தோய்த்து அந்தப் பாலை மட்டுமே உணவாக ஏற்கத் தொடங்கினார். ஆனால் ஒரு கைப்பிடி அரிசியில் மறைந்திருக்கும் உயிர் சத்துக்கள் கூட நூற்றுக் கணக்கில் இருப்பதால் திருக்களம்பூர் ஸ்ரீவைத்தியநாத சுவாமியின் உத்தரவைப் பெற்று ஒரு நாளைக்கு ஒரே ஒரு வாழைக்காயை மட்டுமே வேக வைத்து உண்ணத் தொடங்கினார். ஒரு வாழைக்காயில் ஒரே ஒரு உயிர்ச் சத்து விளங்குவதே இதற்குக் காரணம். இவ்வாறு பக்திக்காக ஆன்மீக முன்னேற்றத்திற்காக தங்கள் ஜீவாதாரத்தைக் குறைத்துக் கொள்ள விரும்பும் பக்தர்களும் அடியார்களும் திருக்களம்பூர் ஈசனை வேண்டி மேற்கண்ட உணவு முறையை கைக்கொள்ளலாம். 60 வயதைக் கடந்தவர்களும், சன்னியாசிகளும் இம்முறையை ஏற்பது சிறப்பானதே. தோல் வியாதிகளால் துன்புறுவோர் வாரத்தில் ஒரு நாள் சிறப்பாக செவ்வாய்க் கிழமை அன்று இத்தகைய உணவை ஏற்று வருதல் நலமே.

விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

ராமனதீச்சரத்தில் துலங்கும் அன்னை ஸ்ரீசரிவார்குழலம்மை என்ற திருநாமத்தில் பொலியும் ‘ச’ என்ற பதத்தை மேலும் விளக்கும்படி ஒரு அடியார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘ச’வை மேலும் விளக்க முடியாது என்பதே இதற்கு உரிய சுருக்கமான பதிலாகும். ச என்பது இறைவனைக் குறிப்பது, தன்னில் தானாய் விளங்கும் இந்த ஜோதியின் மகத்துவத்தை மேலும் விளக்க முடியாது. விளக்குதல் என்றால் மனிதன் பேசும் ஒரு மொழியில் இறைவனைப் பற்றித் தெளிவு படுத்துதல் அல்லவா ? இறைவனோ அனைத்தும் கடந்து நிற்பவன். இறைவனின் படைப்பில் ஒரு தூசியில் தூசாக, தூசிற்கும் தூசாக விளங்கும் மனிதன் எப்படி இறைவனைப் பற்றி விளக்க முடியும். ஆனால் இந்த தூசு தூசு தூசியின் உள்ளத்திலும் ஒளிர வல்லவனே இறைவன். இதைக் குறிப்பதும் திருத்தலங்களில் நாம் பெறும் இறை தரிசனங்களாகும். உதாரணமாக திருக்களம்பூர் திருத்தலத்தில் ஸ்ரீசிவகாமி அம்மன் ஒரு மலராத மலரைக் கையில் தாங்கி உள்ளார்கள். இதற்கு கோடி கோடி அர்த்தங்கள் இருந்தாலும் இந்த மலரை வேறு எந்த சக்தியாலும் ஆதவன் ஒளியாலும் சந்திர கிரணங்களாலும் மலர வைக்க முடியாது என்பதே பொருள். தன் ஒளியில் இதை மலர வைக்க முயற்சி செய்யலாம் என்றாலும் தன் ஒளியைத் தான் தரிசித்தவாறாக அல்லவா சிவகாமி அருள்பாலிக்கிறாள். மற்றோர் உதாரணமாக பல அடியார்களும், எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே அருளாளா அருணாசலா என்று சித்தகுரு வேத சூக்த மாமந்திரத்தை தங்கள் வாகனங்களிலும் இல்லங்களின் முகப்பிலும் எழுதி வைத்துள்ளார்கள். இதைப் பற்றி நம் சற்குருவிடம் கேட்டபோது, “இந்த வேத மந்திரம் உள்ளத்தில் எழுதப்பட வேண்டியது. அதாவது சதாசர்வ காலமும் ஒரு மனிதனால் உணர்ந்து செயல்பட வேண்டிய தெய்வீக வாக்கியமே தவிர, விளம்பரத்திற்காக பயன்படுத்தப்படுவது அல்ல இது,” என்றார். மனம் என்று கூட அல்ல, உள்ளம் என்பது அனைத்தையும் கடந்த ஒரு தெய்வீக நிலை. ச என்று கிடையாது ம, ரி, க என்ற எழுத்தினாலும் இறைவனைக் குறிக்க சித்தர்கள் போன்ற பெருமக்களுக்கு உரிமை உண்டு. ஒருவர் வசு ருத்ர குலத்தைச் சேர்ந்த தன் தந்தையான மாணிக்கம் என்பவருக்கு தர்ப்பணம் அளிப்பதாக வைத்துக் கொண்டால் கோடி கோடியாக மாணிக்கங்கள் இருக்கும்போது எப்படி அந்த குறிப்பிட்ட நபர் எந்த லோகத்தில் இருந்தாலும் சரியாக அவருக்குத் தர்ப்பண சக்திகளை அளிக்கும் பொறுப்பை ஸ்வதா தேவி நிறைவேற்றுகின்றாள் ? இது போன்றதே சற்குருமார்களின் வானளாவிய திருப்பணி. தேவை நம்பிக்கை ஒன்றே. சற்குரு மேல் ஒருவர் கொள்ளும் அசைக்க முடியாத நம்பிக்கை எதை வேண்டுமானாலும் சாதிக்கும் என்றால் இறைவனை ஒரு எழுத்தால் குறிக்கவா முடியாது ? இதுவே உண்மையான பகுத்தறிவு. மற்றதெல்லாம் ...

சுரபாத அம்பிகை

பொதுவாக திருத்தலங்களில் அருள் புரியும் சக்தி மூர்த்திகள் இணையடி மூர்த்திகளாக விளங்குவது இயல்பென்றாலும் பஞ்சேஷ்டி திருத்தலத்தில் ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகை தன் இடது காலை முன் வைத்து அருட்காட்சி வழங்குகின்றாள். அம்பிகையின் இந்தக் கோலத்திற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டென்றாலும் வரவிருக்கும் கிரக சம்பந்தம் குறித்த செய்திகளை மட்டும் இங்கு தெரிவிக்கிறோம். இவ்வாறு ஒரு காலை முன் வைத்து நிற்பதை வழக்கமாகக் கொண்ட பெண்கள் துடிப்பு, ஆர்வம், புதிய காரியங்களைச் செய்வதில் ஊக்கத்துடன் இருப்பார்கள். ஆனால் இவர்களை சமுதாயம் புரிந்து கொள்ளாது நிராகரிப்பதால் அடிக்கடி பெரும் போராட்டத்தை இவர்கள் சந்திக்க நேரிடும். 1.11.2019 அன்று நிறைவேறும் கிரக சங்கமம் இத்தகைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாக அமைவதால் தங்களை குடும்ப அங்கத்தினர்களும் சமுதாயமும் புரிந்து கொள்ளாமல் மனப் போராட்டங்களுக்கு இடையே வாழும் பெண்கள், மூல நட்சத்திரத்தில் பிறந்த, பூப்பெய்திய பெண்கள் பஞ்சேஷ்டி திருத்தலத்தில் மேற்கூறிய பஞ்சவடி வழிபாடுகளை நிறைவேற்றுதலால் நற்பலன் பெறுவார்கள். திருமணம் ஆகியோ, ஆகாமலோ தனித்து வாழும் பெண்களும் இத்தகைய வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள்.

பஞ்சேஷ்டி திருத்தலம்

வரும் 2020 வருடம் ராகுவிற்கு உரிய சக்திகளுடன் திகழ்வதால் பெண்கள் பெருமளளில் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்பதாக பஞ்சேஷ்டி திருத்தலத்தில் வழிபாடுகளை ஆரம்பித்து தங்கள் சொந்த ஊரில் இத்தகைய பிரதட்சிண வழிபாடுகளைத் தொடர்வதால் இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு என்று மட்டுமல்லாது தங்கள் வாழ்க்கைக்கே உறுதுணையாக நிற்கும் வழிபாடு இது என்பதை நினைவில் கொள்ளவும். சிறப்பாக அம்பிகா, மல்லிகா, காயத்ரி போன்ற நான்கு எழுத்து நாமங்களை உடைய பெண்களும், ரமணன், செல்வம், சங்கர் போன்ற நாமங்கள் உடைய ஆண்களும் இத்தகைய வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். விரைவில் மக்களைத் தாக்கும் “இருள் சூழ்தல்” என்னும் ஒரு வகை மனத் துன்பத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அதற்கு வருமுன் காப்பாக இத்தகைய வழிபாடு அமையும். பகைமை, குரோதம், பழிவாங்குதல் போன்றவை நாமறிந்த சில இருள் எண்ணங்களே. இவை அல்லாமல் விவரிக்க முடியாத ஆயிரமாயிரம் துன்பங்களும் இத்தகைய எண்ணங்களால் தோன்றும், அதனால் சமுதாயம் பெருமளவில் பாதிக்கப்படும் என்பதால் நல்லெண்ணம் கொண்ட ஆன்மீக அன்பர்கள் அனைவருமே இந்த பிரதட்சிண வழிபாட்டை நிறைவேற்றி வருதல் நலமே. பஞ்சவடி பிரதட்சிணத்தில் ஒரு முறை காயத்ரீ மந்திரத்தை ஓதியதுமே இணையடி வைத்த கோலத்தில் ஒரு தோப்புக் கரணம் இட வேண்டும். மீண்டும் பிரதட்சிணத்தை நிறைவேற்றி ஒரு முறை காயத்ரீ மந்திரத்தை ஓதிய பின் ஒரு முறை இணையடிகளை வைத்து மீண்டும் தோப்புக் கரணம் இட வேண்டும். பிரதட்சிண பத்ததி இல்லாமல் வெறுமனே குசா தோப்புக் கரணத்தை இடுபவர்கள் அத்துடன் இந்த பஞ்சவடி வழிபாட்டையும் இணைத்துக் கொள்ளலாம்.

   
    நினதடி திருவடி எனதடி சொல்லடி
    இணையடி கனியடி சொல்லடி சுவையடி
   

என்ற பஞ்சேஷ்டி அம்மன் பாத துதியை ஓதி வலது காலை முன் வைத்தோ இடது காலை முன் வைத்தோ குசா தோப்புக் கரணம் இட்டு வருதலும் பலவிதமான துன்பங்களுக்கு நிவர்த்தியாக அமையும். இந்த வழிபாட்டை பஞ்சேஷ்டி திருத்தலத்தில் ஆரம்பித்தலே சிறப்பாகும். கோயம்பேடு, சக்கரபள்ளி போன்று அம்பாள் தனது திருப்பாதங்களை முன்வைத்து பக்தர்களுக்கு தரிசனம் நல்கும் திருத்தலங்களிலும் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் சிறப்பாகும். நம் சற்குரு ராயபுரம் அங்காளம்மன் கோயிலை தினமும் ஆயிரம் முறை வலம் வந்து வணங்கினார் என்பது நீங்கள் அறிந்ததே. நீங்கள் அறியாதது இவ்வாறு அங்காளி கோயிலை ஆயிரம் முறை வலம் வருவதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பதே. குறைந்தது மூன்று நாட்களாவது கோயில் திறந்திருக்கும் நேரத்தில் பிரதட்சிணம் வந்தால்தான் இந்த ஆயிரம் சுற்றுக் கணக்கை முடிக்க முடியும். நம் சற்குருவோ சுமார் இரண்டு, இரண்டரை மணி நேரத்தில் ஆயிரம் முறை அங்காளியை வலம் வந்து வணங்கினார் என்றால் அந்த அசாத்ய காரியம் நம் பரமகுரு ஸ்ரீஇடியாப்ப சித்தரின் அனுகிரகத்தால்தான் என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? இவ்வாறு பரம குரு, பரமேஷ்டி குரு இவர்களின் சிறப்பான அனுகிரகத்தையும் பெற்றுத் தருவதே மேற்கண்ட திருவடித் துதியுடன் இணையும் குசா தோப்புக் கரண வழிபாடாகும்.

சுரபாத அம்பிகையின் பாத நளினத்தைக் கொண்டே நாமிடும் குசா தோப்புக் கரணத்தின் நாமமும் அமைந்தது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும். அதாவது இடது காலை முன் வைத்து குசா தோப்புக் கரணம் இடும்போது அது சுரபாத தோப்புக் கரணம் என்றும், வலது காலை முன் வைத்து குசா தோப்புக் கரணம் இடும்போது அது பரிபாத தோப்புக் கரணம் என்றும் அழைக்கப்படும். குசா தோப்புக் கரணம் இடும்போது எந்தக் காலையும் முன் வைத்து தோப்புக் கரணம் இடலாம் என்பதே சித்தர்கள் அளிக்கும் விலக்கு ஆகும். இதில் ஆண் பெண் என்ற பாகுபாடு கிடையாது. இப்போது தனுசு ராசியைப் பற்றி சற்றே சிந்தியுங்கள். பரி என்றால் குதிரை, சுர என்றால் மனிதன், தனுசு ராசி என்றால் குதிரையில் பவனி வரும் வில்லேந்திய வீரன். தனுசு ராசியில் சந்திரன் அமையும் மூல நட்சத்திர தினத்தில் வழிபாடுகள் சிறப்பாக குசா பத்ததி தோப்புக் கரணம் இடும் மகிமை பற்றி விளக்கிய நம் சற்குருவின் பெருமையை வர்ணிக்க வார்த்தைகள்தான் போதுமா ? ஒரு நாளைக்கு மூன்று வேளையாக ஒவ்வொரு முறையும் 32 முறை குசா தோப்புக் கரணம் இடுவதே பஞ்சேஷ்டி அம்மன் வழிபாடாக அமைந்து பஞ்சேஷ்டி நாரி சக்திகள் என்ற அபூர்வமான சித்த சக்திகளை வர்ஷிக்கும். ஆண் மூலம் மட்டும் அரசாளும் என்பது அல்ல பெண் மூலமும் அரசாளும் என்று பறை சாற்றுவதே இந்த பஞ்சேஷ்டி நாரி சக்திகளாகும். இந்த சுவைக்கு மேலும் சுவை கூட்டுவதே சோமசுந்தர பெருமான் நரிகளை பரிகளாக்கி மூல நட்சத்திர தினத்தில் மதுரையில் எழுந்தருளிய திருவிளையாடல் வைபவமாகும். ஓட்டப்பந்தயம், ஹாக்கி போன்று ஓட்டத்தை அடிப்படையாக உடைய விளையாட்டு வீரர்களும் மேற்கண்ட வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். இந்த யோகத்தை முறையாகப் பயின்றால் உலகளாவிய புகழ் பெறுவது என்பது திண்ணமே. குதிரை வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் அதி விரைவில் குதிரையில் பயணம் செய்ய விரும்புபவர்களுக்கும் இந்த வழிபாடு பெரிதும் துணை புரியும். வீரபாண்டிய கட்டபொம்மனின் உயிரைக் காக்க மணிக்கு 600 மைல் வேகத்தில் குதிரை மேல் பறந்த போர் வீரன் பஞ்சேஷ்டி திருத்தலத்தில் மூன்று வருடங்கள் பிரதட்சிண வழிபாடுகளை இயற்றி இத்தகைய அபூர்வ சக்திகளை வரமாகப் பெற்றான் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும்.

அகத்தியர் விரஜா தீர்த்தம்

மக்கள் இறந்து மேலுலகம் சென்றவுடன் அங்கு விரஜா நதி என்ற தீர்த்தத்தில் நீராடும்போது தாங்கள் அப்பிறவியில் செய்த தவறுகள் அனைத்தும் ஒரே நொடியில் அவர்களுக்குத் தெரிய வரும். அவ்வாறு தான் அறிந்த தவறுகளுக்கு பிராயசித்தம் புரியவும் மனம் விழையும். இதுவே விரஜா நதியின் தெய்வீக சக்தி. இவ்வாறு தாம் செய்த தவறுகளுக்கு பிராயசித்தம் செய்யும் விதத்தில்தான் நம்முடைய அடுத்த பிறவி அமைகிறது. ஆனால் இந்த இரகசியத்தை மனித மனம் ஏற்காததால்தான் நடப்பு வாழ்க்கையில் பலவித துன்பங்களும் பிரச்னைகளும் தோன்றுகின்றன. இறந்த பின் இத்தகைய தவறுகள் தெரிந்து அதன் பின் அடுத்த பிறவியில் பிராயசித்த வாழ்க்கையத் தொடருவதை விட இப்பிறவிலேயே முடிந்த வரை தம்முடைய தவறுகளைத் திருத்திக் கொண்டு நல்வாழ்க்கை வாழ தெளிவான மன நிலையைப் பெற்றவர்களும் உண்டல்லவா ? அத்தகையோருக்கு உதவுவதே பஞ்சேஷ்டி திருத்தலத்தில் அபூர்வமாக அமைந்த அகத்தியர் விரஜா தீர்த்தமாகும்.

அகத்தியர் விரஜா தீர்த்தம்
பஞ்சேஷ்டி

உதாரணமாக ஒருவர் ஒரு பெண்ணை மனதார காதலித்து அவளை மணம் புரிவதாக வாக்களித்து அவள் கர்ப்பிணி ஆனதும் சூழ்நிலை சந்தர்ப்பங்களால் வேறு ஒரு பெண்ணை மணந்து கொள்வது என்பது பலரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவமாகும். பெரும்பாலும் இத்தகைய தவறுகளை திருத்துவதற்கு போதுமான மன உறுதியைப் பலரும் பெற்றிருப்பதில்லை. ஒரு வேளை என்ன நடந்தாலும் தன்னுடைய தவறுக்கு பிராயசித்தம் நிறைவேற்றியே தீருவேன் என்று அத்தகையோரில் ஓரிருவர் உறுதி பூண்டாலும் மீண்டும் அதே பெண்ணை திரும்பவும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது அல்லவா ? ஆனால் உண்மையிலேயே மனம் திருந்திய ஒருவர் பஞ்சேஷ்டி விரதா தீர்த்தத்தில் சனிக் கிழமையில் குரு ஹோரையில் நீராடி தன்னுடைய தவறுகளுக்கு பிராயசித்தம் நிறைவேற்ற சந்தர்ப்பம் அளிக்கும்படி ஸ்ரீஅகத்திய பிரானை, இத்தல இறை மூர்த்திகளை வேண்டினால் தன்னால் ஏமாற்றப்பட்ட அந்த பெண் நிச்சயம் அவர் கண் முன் தோன்றுவாள். இதை பலரும் தங்கள் அனுபவத்தால் உணர்ந்து பிராயசித்தம் பெறும் அற்புத தலமே பஞ்சேஷ்டி ஆகும். ஒரு முறை நம் சற்குருவிடம் விஜயன் என்ற ஒருவர் வந்தார். அவர் ஒரு கம்பெனியில் எஞ்சினீயராகப் பணி புரிந்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு குறை. அதாவது அவரால் தயிரை ரசித்து உண்ண முடியாது. இரண்டு மணி நேரம் உறைக்கு ஊற்றி வைத்த தயிரை ஏற்றால் கூட அவர் உடம்பெல்லாம் தடிப்புகள் தோன்றி அரிப்பு ஏற்பட்டு விடும். அவர் பார்க்காத வைத்தியரில்லை, செய்யாத வைத்தியமில்லை. இந்த விவரங்கள் அனைத்தையும் நம் சற்குருவிடம் தெரிவித்தபோது அனைத்தையும் கவனமாக கேட்ட நம் சற்குரு முடிந்தால் அடுத்த வாரம் தான் நிறைவேற்றும் உழவாரப் பணியில் கலந்து கொள்ளும்படி அந்த எஞ்சினியரைக் கேட்டுக் கொண்டார். பல நாட்கள் சுத்தம் செய்யப்படாமல் நாற்றமடித்துக் கொண்டிருந்த ஒரு கோமுகத்தைத் தூய்மை செய்யும் பணி அந்த திருப்பணியில் அவருக்கு அளிக்கப்பட்டது. அவரும் சற்றும் முகம் சுளிக்காமல் அந்த திருப்பணியை நிறைவேற்றினார்.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
திருநறையூர் சித்தீச்சரம்

திருப்பணி நிறைவில் அவரை சந்தித்த நம் சற்குரு, “என்ன சார், கோயில் வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?” என்று கேட்டார். அந்த அடியார், “பரவாயில்லை சுவாமிஜி, தீர்த்தத் தொட்டிதான் சற்று நாற்றமடிக்கிறது ... மேனேஜ் செய்து கொள்கிறேன்,” என்று கூறவே சரி சார் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு சற்குரு அங்கிருந்து நகர்ந்தார். தொடர்ந்து பல மாதங்களுக்கு அவருக்கு பல்வேறு திருத்தலங்களில் கோமுக நீர்த் தொட்டிகளையும், நீர்த்தாரை வழிகளையும் சுத்தம் செய்யும் திருப்பணி வேலைகளே அளிக்கப்பட்டன. பின்னர் ஒரு நாள் சற்குரு தன் மனைவியிடம் தயிரை உறைக்கு ஊற்றி ஒரு வாரம் வைத்திருக்கும்படிக் கூறினார். அவ்வாறு ஒரு வாரம் புளித்த தயிரை தன் வீட்டிற்கு வரவழைத்த அந்த அடியாருக்கு பரிமாறச் சொன்னார். அந்த அடியாரும் சாதாரணமாக அவ்வாறு புளித்த தயிரை இட்லியில் தோய்த்து தோய்த்து சந்தோஷமாக உண்டார். உணவிற்குப் பின் அந்த அடியாருடன் நம் சற்குரு அமர்ந்து சில மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்தார். பிறகு மெதுவாக, “என்ன சார், தயிர் சாப்பிட்டால் உங்களுக்கு ஒத்துக் கொள்ளாது, உடனே அலர்ஜி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் தடிப்பு ஏற்பட்டு விடும் என்பீர்களே. தற்போது ஒரு தடிப்பு கூட ஏற்பட்டதாகத் தெரியவில்லை. நீங்கள் இட்லிக்கு தொட்டுக் கொண்ட தயிர் ஒரு வாரத்திற்கு முன் உறைக்கு ஊற்றி புளிக்க வைத்தது,” என்று சுவாரஸ்யமாகக் கூறினார். அந்த அடியார் துள்ளிக் குதித்து விட்டார், “என்ன சுவாமிஜி, நீங்கள் உண்மையைத்தான் சொல்கிறீர்களா ? என்னால் கொஞ்சம் கூட நம்ப முடியவில்லையே. இரண்டு மணி நேரம் ஆகி விட்டால் கூட அந்த தயிர் என் உடலில் தடிப்பை ஏற்படுத்தி விடுமே,” என்று ஆச்சரியம் கலந்த உரத்த குரலில் கூறினார். சற்குருவோ, “சரி சார், அது அப்படியே இருக்கட்டும், இப்போது உங்களுக்கு ஒரு கதையைக் கூறுகிறேன், கேளுங்கள்,” என்று கூறவே அந்த அடியாரும் அமைதி அடைந்தது மகுடிக்கு கட்டுண்ட பாம்பானார். சற்குரு கதையைத் தொடர்ந்தார். வெகு நாட்களுக்கு முன் ஒரு சிவன் கோயிலில் பராந்தகன் என்ற ஒரு வேலையாள் இருந்தான். மிகவும் பலசாலி. அநாதை. அவன் கோயிலுக்குச் சொந்தமான பசுமாடுகள் அனைத்திற்கும் தீனி போட்டு பராமரித்து வந்ததோடு மட்டுமல்லாமல் காலை மாலை இரு வேளையும் அந்த பசுக்களிடமிருந்து பால் கறந்து அதில் ஒரு பகுதியை சுவாமியின் அபிஷேகத்திற்கும் மற்றோர் பகுதியை தயிராக உறைக்கு ஊற்றி அந்த தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுத்து அந்த வெண்ணெயிலிருந்து நெய் தயாரித்து, அந்த பசு நெய்யால் கோயில் முழுவதும் தீபமேற்றி இறைவனுக்கு சேவை செய்து வந்தான். நாட்கள் செல்லச் செல்ல அந்த பராந்தகன் நாம்தான் தினமும் கஷ்டப்பட்டு உழைத்து பாலைக் கடைந்து வெண்ணெய் எடுத்து சுவாமிக்கு நெய் தீபம் ஏற்ற வழி செய்கிறோமே, நாம் ஏன் இந்தத் தயிரில் சிறிதளவை எடுத்து உண்ணக் கூடாது என்று எண்ணி அந்த தயிரிலிருந்து தினமும் வேண்டிய அளவு தயிரை எடுத்து உண்ணத் தொடங்கினான். அந்த பராந்தகன்தான் தற்போது பல பிறவிகள் கழிந்து ஒரு எஞ்சினியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று கூறி தான் விவரித்த கதையை முடித்தார் நம் சற்குரு. அந்த அடியார் ஆடிப் போய் விட்டார். “என்ன சுவாமிஜி, நீங்கள் விவரிக்கும் அந்த பராந்தகனா நான், என்னால் நம்பவே முடியவில்லையே ...” என்று ஆச்சரியத்தால் அந்த அடியாரின் கண்கள் அகல விரிந்தாலும் நேரம் செல்லச் செல்ல சற்குரு விவரித்த யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டார் அந்த அடியார். இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறியும் உண்மை என்ன ?

எத்தனை பிறவிகள் கழிந்திருந்தாலும் ஒரு சற்குரு ஒரு அடியாரை அவர் முந்தைய பிறவிகளில் சேர்த்துக் கொண்ட கர்ம வினையிலிருந்து உரிய முறையில் விடுவித்து அவரை நன்னெறியில் நடத்தும் வல்லமை உடையவர் என்பதே. ஆனால், தற்காலத்தில் அத்தகைய தகுதி வாய்ந்த சற்குருவை நாம் காண முடியவில்லையே என்று அடியார்கள் வருந்தினாலும் பஞ்சவடி திருத்தலத்தில் அகத்தியர் தீர்த்தத்தில் நீராடி வந்தால் தாங்கள் முற்பிறவிகளில் சேர்த்துக் கொண்ட கர்ம வினைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் மார்க்கம் கிட்டும். முற்காலத்தில் திசைக்கு ஒன்றாக எட்டு தீர்த்தக் கட்டங்களுடன் விளங்கியதே அகத்தியர் விரஜா தீர்த்தமாகும். ஸ்ரீஅகத்திய பெருமான் அணிந்திருக்கும் கடுக்கனும் எட்டு முகங்களுடன் விளங்குவதே. எட்டு என்பது விதியைக் குறிக்கும். தற்போது பக்தர்கள் மீண்டும் இத்திருக்குளத்தில் நீராடும் எட்டுக் கட்டங்களைக் கட்டிப் புதுப்பித்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். இப்பூவுலகில் விரஜா தீர்த்த சக்திகளுடன் துலங்கும் ஒரே திருக்குளம் இது என்பதை நினைவில் கொள்ளவும். இவ்வாறு இந்த தீர்த்தக் குளத்தை சீரமைக்கும் திருப்பணியை நிறைவேற்ற முடியாதவர்கள் இந்த திருப்பணி எவர் மூலமாவது நன்முறையில் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்திக்கலாம் அல்லவா ? ஐந்து முகங்கள் கொண்ட சுத்தமான குத்து விளக்கை ஏற்றி அதில் 21 முழம் முல்லை, ஜாதிப்பூ போன்ற மலர்களைச் சுற்றி அவ்வாறு பிரிந்த நான்கு ஆரங்களிலும் ஆரத்திற்கு ஒன்றாக ஒவ்வொரு திசைக்கும் ஒரு மண் அகல் தீபத்தை ஏற்றி ஸ்ரீஅகத்தியர் தேவாரத் திரட்டு பதிகங்களை ஓதுதல் சிறப்பு. சரஸ்வதி தேவிக்கு உகந்த இந்த வழிபாட்டை 7.10.2019 திங்கட் கிழமை அன்று நிறைவேற்றுதலும் நலம் பயப்பதே. இதனால் நம் குழந்தைகள் மட்டுமல்ல நம் 21 தலைமுறைச் செல்வங்களும் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது உறுதி. பூஜை நிறைவில் பூச்சரங்களுடன் மங்கலப் பொருட்களையும் சேர்த்து சுமங்கலிகளுக்கும் பக்தர்களுக்கும் தானம் அளித்தல் சிறப்பு. சரஸ்வதி பூஜை நாள் என்று அல்லாது எந்த சனிக் கிழமை அன்றும் இத்தகைய வழிபாடுகளை பஞ்சேஷ்டி திருத்தலத்தில் நிறைவேற்றுதல் சிறப்பே.

சரஸ்வதி பூஜைக்கும் பஞ்சேஷ்டி அகத்திய தீர்த்தத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம் அல்லவா ? கலைவாணியின் குருவான ஸ்ரீஹயக்ரீவ மூர்த்தியே அகத்திய முனிவருக்கு லலிதா சகஸ்ரநாமத்தை முதன் முதலில் உபதேசித்த தெய்வ அவதாரம் ஆவார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய முதல் கட்ட ஆத்ம விசார விடையாகும். இந்த ஜோதி வழிபாட்டில் எண் கணித அடிப்படையில் உள்ள ஒன்பது எண்களின் சக்திகளுமே இணைகின்றன என்றால் இந்த எண் சக்திகளைப் பெற நம் சற்குரு எந்த அளவிற்கு பாடுபட்டு உள்ளார் என்பதே நம்மை

 
பி
ரமிக்க
வைக்கும்

ளி
கி வழிபாடு 

ஆகும். இந்த எண் சக்திகளில் பெரும்பாலானவை வெளிப்படையாக இருந்தாலும் எண் ஆறின் சக்திகளைப் புரிந்து கொள்வது சற்றே கடினம் என்பதால் ஆறு எண்ணிற்கு உரித்தான சுக்ர சக்திகளைப் பற்றி மட்டும் இங்கு விவரிக்கிறோம். பொதுவாக இல்லங்களில் மாலை ஐந்து மணிக்கு தீபங்களை ஏற்றி வைக்கும்படி சித்தர்கள் சிபாரிசு செய்கின்றனர். இதனால் எந்த எண்ணெயால் தீபம் ஏற்றினாலும் அப்போது மேற்கு திசையில் பிரகாசிக்கும் சுக்ர கிரகத்தின் சக்தியால் தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும். உதாரணமாக இன்று (7.10.2019 திங்கட்கிழமை) ஏற்றும் தீபமானது மாலை 5.23 வரை சுக்ர சக்திகளை ஈர்க்கும் சக்தி பெற்றிருப்பதால் இந்த சில நிமிட சுக்ர சக்திகளே தம்பதிகளிடையே ஒற்றுமையைத் தோற்றுவிக்கும் சக்தி பெற்றதாக விளங்குகிறது. இரண்டாவதாக இவ்வாறு தீபம் ஏற்றும்போது அதில் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து விளக்கேற்றும்போது தேங்காய் எண்ணெயில் வியாபித்துள்ள சுக்ர சக்திகள் பகலிலோ இரவிலோ எந்நேரம் தீபம் ஏற்றினாலும் அங்கு சுக்ர சக்திகளை நிரவுவதால் இது குடும்ப ஒற்றுமைக்கு பெருந்துணை புரியும். இவ்வாறு சுக்ர பகவானுக்கு உரிய ஆறு தீபங்களை திருக்கோயில்களில் அர்த்தநாரீஸ்வரர் முன் ஏற்றும்போது இந்த வழிபாடு தம்பதிகள் ஒற்றுமையாய் வாழ வகுக்கிறது. சக்தி வாய்ந்த இந்த சுக்ர ஜோதி வழிபாட்டை இயற்றிய ஒரு பெண்மணி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்தபோது அதைத் தடுத்து அவர் உயிரை நம் சற்குரு காப்பாற்றிய நிகழ்ச்சியை ஏற்கனவே பிறிதொரு சம்பவத்தில் விவரித்துள்ளோம். மூன்றாவதாக நவராத்திரியின்போது மாலை ஆறு முதல் ஒன்பது வரை தீபங்கள் ஏற்றி வழிபாடும்போது அவை எத்தகைய தீபங்களானாலும் மின்சார விளக்குகளாக இருந்தாலும் கூட அந்த தீபங்களில் எல்லாம் லலிதா பரமேஸ்வரி லோகத்தைச் சேர்ந்த சுக்ர தேவதைகள் ஆவாஹனம் ஆகின்றனர் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம் ஆகும். தெய்வ மூர்த்திகளால் உற்பவிக்கப்படும் இந்த சுக்ர சக்திகளுக்கு தம் தபோ பலன்களை மகான்களும் யோகிகளும் தங்கள் நவராத்திரி பூஜா பலன்களாக இந்த ஜோதியில் இணைக்கிறார்கள். இவ்வாறு அற்புத சுக்ர சக்திகளைப் பெற்ற ஒளி கிரணங்களே நவராத்தியின்போது கொலு வீற்றிருக்கும் மிருகங்கள், பறவைகள், மரங்கள், செடி கொடிகள், உயிருள்ள உயிரற்ற என்ற பாகுபாடின்றி அனைத்தை கொலு சாதனங்களிலுமே நீக்கமற நிறைந்து அருள் வழங்குகின்றனர். கொலுவில் வைக்கப்படும் அனைத்து பொம்மைகளுமே நவராத்திரி சமயத்தில் ஒரு தனிப் பொலிவுடன் துலங்குவதற்கு இந்த சுக்ர ஜோதி அம்சங்களும் ஒரு காரணமே.

கோழை என்றால் பயந்தாங்கொள்ளி என்று மட்டுமல்லாமல் சளி என்ற பொருளும் உண்டு. இந்த கோழையே பெரும்பாலான இயற்கை மரணங்களில் தொண்டையில் அடைத்து உயிர் நீக்கும் உபாயமாக அமைகிறது. இதைத் தடுக்கவே படுத்த படுக்கையாய் கிடக்கும் நோயாளிகள் உள்ள வீடுகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வைத்து அதை நோயாளிள் பார்க்கும் இடத்தில் வைத்திருப்பது உண்டு. ஐயாறு வாயாறு பாயுமுன் ஐயாறப்பனை நினை என்று சளி தொண்டையில் அடைத்து உயிர் பிரியும் முன் ஐயாறப்பனை அழைக்க வேண்டும் என்று பெரியோர்கள் கூறி வந்துள்ளனர். அதே சமயத்தில் இவ்வாறு சளி அடைக்காமல் இருப்பதற்காக இந்த திருவாசகமும் தீபமும் துணை நிற்கும் என்பது பலரும் அறியாத இரகசியம் ஆகும். ஐயாறு, வாயாறு, ஐயாறப்பன் என்று வரும் மூன்று ஆறுகளும் குருவருளால் துலங்கும் அக்னி சக்திகளைக் குறிக்கின்றன (3 x 6 = 18 = 9). சளி அடைப்பு என்பது கோழைத்தனம் என்ற பயத்தாலும் அடைப்பதால் இதை நீக்கும் பொருட்டாக தீபமும் கீதமும் துணை புரியும் என்று கண்டு கொண்ட நம் மூதாதையர்களின் அறிவுத் திறனை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா ? பொதுவாக நீர் சக்திகள் குளிர்ந்து அது சளியாக உருவெடுக்கும்போது அதை அக்னி சக்தியால் மட்டுமே களைய முடியும் என்பது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு படுத்த படுக்கையாய் கிடக்கும் நோயாளிகள் ஒருவேளை இறந்து விட்டால் அதே தீபமானது ஒற்றைத் தீபமாக இறந்தவரின் தலைமாட்டில் வைக்கப்படும். இறந்தவரின் உடலிலிருந்து வெளியாகும் நோய்க் கிருமிகளையும் தீய சக்திகளையும் இந்த தீபம் ஏற்று பஸ்மம் செய்து விடும். இது ஒரு அற்புதமான சமுதாய சேவையும் ஆகும் என்பதை நினைவில் கொள்க. உயிர் பிரிந்த மறு விநாடியே மனித உடலானது தீய சக்திகளை வெளிவிடும் கலமாக அமைவதுடன் அது தீய சக்திகளை ஈர்க்கும் கொள்கலமாகவும் அமைந்து விடுவதால் இத்தகைய பாதிப்புகளிலிருந்து உடலைப் பாதுகாப்பதற்காக ஒற்றை தீபத்தை தலைமாட்டில் ஏற்றி வைத்து இறுதி சடங்குகள் நிறைவேறும் வரை இந்த தீபத்திற்கு போதுமான எண்ணெய் ஊற்றி பாதுகாக்க வேண்டும் என்பதும் முக்கியமே. பெரும்பாலான ஜீவன்கள் முறையான ஆவி கூறு பகுப்பை மேற்கொள்வது கிடையாது என்பதால் இத்தகைய தீபங்களே அந்த ஜீவன்கள் வரும் பிறவிகளில் நற்கதியை அடையவும் துணை புரியும். இந்த அந்திம தீப சக்திகளே அந்த ஜீவன் கொள்ளும் அடுத்த பிறவியில் மனித குழந்தையாகவோ அல்லது வேறு எந்த ஜீவனாக பிறப்பெடுத்தாலும் அவர்களுக்கு வழிகாட்டியாக வளர் ஒளியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆதி முதல் அந்தம் வரை நம்முடன் வருவது தீபம், தீபமே, தீப சக்திகளே. இறந்தவரின் மேன்மைக்காக ஏற்றப்படும் மோட்ச தீபம் திருவையாற்றில் சிறப்பு பெறுவது இக்காரணம் குறித்தேதான் என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா ?

திரிபுர தீர்த்த நீராடல்

நம் பூமியில் உள்ளது போல் கைலாயத்திலும் கங்கை காவிரி போன்ற அற்புத தீர்த்தங்கள் உண்டு. அந்த தீர்த்தங்களில் கைலாச வாசிகள் மட்டுமே நீராட முடியும் என்பது உண்மை. அத்தகைய தீர்த்தங்களில் ஒன்றே திரிபுர தீர்த்தம் என்பது. இந்த திரிபுர தீர்த்தத்தில் நீராடிய பலனை பூலோகத்தில் உள்ள காவிரியும் அளிக்க வல்லது என்றால் என்னே காவிரி நதியின் புனிதத்துவம். இத்தகைய புனிதத்துவத்திற்கு நம் சிந்தைக்கு எட்டாத பல காரண காரியங்கள் இருந்தாலும் இன்றைய ஐப்பசி மாதப் பிறப்பு நம் சற்குருவின், கிருஷ்ண பரமாத்மாவின் ஜன்ம நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்துடன் இணைவது பூலோகவாசிகள் பெற்ற பெரும் தவப்பயனே. இவ்வாறு உச்சம் பெற்ற சந்திர பகவானுக்கு ஆறாம் ராசியான துலாவில் சூரியன், சுக்கிரன், புதன் என்ற மூன்று கிரகங்கள் எழுந்தருளி இருப்பதே இந்த திரிபுர தீர்த்த சக்திகளை ஈர்க்கவல்ல கிரக சஞ்சார அமைப்பாகும். இதன் பயனாக காவிரித் தலங்களில் எந்தத் தலத்திலும் காவிரியில் நீராடி இந்த துலா மாதம் முழுவதும் இறைவனை தரிசித்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பலனாகும்.

கைலாய தீர்த்த நீராடல் பயனை பூலோகத்தில் அருளவல்ல அற்புத நீராடல் இதுவாகும். நிறைவாக 14.11.2019 வியாழக்கிழமை அன்று காவிரியில் நீராடி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து இந்த திரிபுர தீர்த்த நீராடலை நிறைவு செய்தல் நலம். திருஅண்ணாமலை கிரிவலத்தை ஐப்பசி மாதத்திலோ அல்லது கார்த்திகை மாதத்திலோ நிறைவு செய்யலாம். அவ்வாறு திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது ஏதோ ஒரு அடியார் உங்களை அணுகி அன்னதானம் வேண்டுமென்று வினவினால் அவருக்கு வயிறார உணவு அளிப்பதன் மூலம் உங்கள் தெய்வீக விரதம் அந்த இடத்திலேயே பூர்த்தி அடைகின்றது என்று நினைத்து மகிழலாம். நீங்கள் மேற்கொண்டு கிரிவலத்தை தொடர வேண்டும் என்ற நியதி கூட கிடையாது. இவ்வாறு ஒரே ஒரு முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தால் நீங்கள் ஆயிரம் முறை கிரிவலம் வந்த பலனைப் பெறுவீர்கள் என்பது திண்ணம். அது மட்டுமல்ல இதுவரை சற்குருவின் வழிகாட்டுதல் அமையப் பெறாதவர்களுக்கும் இந்த தீர்த்த நீராடலும், கிரிவலமும், அன்னதானமும் துணைபுரியும். ஒரு வேளை உங்களுக்கு ஒரு அன்னதான அடியாரின் தரிசனம் கிட்டவில்லை என்றால் கிரிவலத்தை உரிய முறையில் நிறைவு செய்து உங்கள் இல்லம் திரும்பலாம். எதிர்காலத்தில் நிச்சயம் நீங்கள் சற்குருவின் வழிகாட்டுதலை ஏதாவது ஒரு வடிவில் பெறுவீர்கள் என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம். திரிபுரம் உங்களைக் காக்கும். பல வருடங்களுக்கு முன் இவ்வாறு திரிபுர தீர்த்த சக்திகளைப் பெற்ற ஒரு அடியாருக்கு நம் சற்குரு அளித்த விளக்கத்தையே இந்தக் கட்டுரை வடிவில் இங்கு நீங்கள் பெறுகிறீர்கள். ஒரே ஒரு அடியாருக்கு மட்டும்தான் நம் சற்குரு சொந்தமா என்ன ?!

எது உண்மையான பாதுகாப்பு ?

ஐப்பசி மாதம் முழுவதும் காவிரி நதியில் நீராடி திரிபுர தீர்த்த சக்திகளைப் பெறுதல் என்பது பலருக்கும் இயலாத ஒரு திருப்பணியாக இருக்கலாம். அத்தகையோர் முடிந்த மட்டும் காவிரி நதியில் முடிந்தபோது நீராடி திரிபுர தீர்த்த சக்திகளைப் பெருக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். சற்றே கூர்ந்து கவனித்தால் இந்த துலா நீராடலில் அபூர்வமாக சூரியன் முதலாக சனி கிரகம் ஈறாக ஏழு கிரகங்களும் இணைகின்றன என்பதே நம்மை வியக்க வைக்கும் கிரக சங்கம அமைப்பாகும். இத்தகைய நீராடலின்போது இயன்றவரை நீரில் நின்றோ அமர்ந்தோ ஸ்ரீஅகத்தியர் தேவார திரட்டுப் பாடல்கள், ருத்ரம் சமகம், புருஷ ஸூக்தம், பஜனைப் பாடல்கள், கீர்த்தனைகளை ஓதுதலும் ஏற்புடையதே. சுடர் விட்டு எரியும் அக்னியில் நீரை ஊற்றினால் அக்னி அணைவதற்குப் பதிலாக அந்த நீர் சக்தியும் அக்னிப் பிழம்பாகி அக்னி மேலும் பிரகாசிக்கும் என்பது நீங்கள் அறிந்தே. அது போல ஐப்பசி மாதத்தில் பக்தர்கள் நிறைவேற்றும் மேற்கூறிய வழிபாடு அக்னி சக்தியைப் பெருக்க அது அருணாசல கார்த்திகை தீப ஒளியால் புடம்போடப் பட்டு பக்தர்களுக்கு பிரகாசமாக மலர்ந்து அவர்கள் வாழ்வில் ஒளியைக் கூட்டும் என்பது மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் அவர்கள் வாழ்க்கைக்கே வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக அமையும் என்பதில் ஐயமில்லை. இத்தகைய தீர்த்த வழிபாடுகளே பக்தர்களின் உள்ளத்தில் பிரகாசிக்கும் பக்தி அக்னியை வளர்க்கும். இந்த வழிபாடு தீவிரம் அடையும்போதுதான், “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி,” என்று முழங்கிய வள்ளலார் சுவாமிகளின் பக்திப் பெருக்கையும் நாம் ஒரு தூசி அளவாவது புரிந்து கொள்ளமுடியும். காவிரி நீராடலின்போது ரோகிணி நட்சத்திரம் திகழும் ரிஷப ராசியிலிருந்து ஆறாவது ராசியான துலா ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் என்ற மூன்று கிரகங்கள் திகழ்கின்றன அல்லவா ? இந்த நான்கு கிரகங்களின் சங்கமம் மட்டுமே கோனேறு என்ற கவச சக்திகளை அளிக்கின்றன. ரோகிணி நட்சத்திரம் திகழும் ஆரம்ப காலத்திலும் அதாவது 18.10.2019 அன்றும் 14.11.2019 வியாழன் அன்றும் துலா ராசியில் மூன்று கிரகங்கள் சங்கமம் திகழ்வதே அரிதிலும் அரிய சிறப்பாகும். கோன் ஏறு என்றால் யானைப் படை, குதிரைப் படை போன்று நாற்படைகளால் சூழப்பட்ட தலைவன், அரசன் பெறும் பாதுகாப்பு என்று பொருள். ஒரு முறை நம் சற்குருவின் கார் செல்லும் வழியில் ஒரு முதல்வர் செல்ல நேர்ந்ததால் நம் சற்குரு சில நிமிடங்கள் நிற்கும்படி ஆயிற்று. அப்போது அவரைக் கடந்து அந்த முதல்வரின் கார் சென்றபோது அந்த காரின் முன்னும் பின்னும் இரு பெரும் விளக்குகள் பிரகாசித்துக் கொண்டு சென்றனவாம். அதைப் பற்றிக் குறிப்பிடும்போது நம் சற்குரு, “அந்த முதல்வரின் பூர்வ ஜன்ம நற்காரியங்களின் விளைவாக அத்தகைய புண்ணிய சக்திகள் காவலாளிகளாய் அவரை பாதுகாத்துக் கொண்டு செல்கின்றன. அவருக்கு இந்தப் பாதுகாப்பைத் தவிர வேறு எந்த பாதுகாப்பும் தேவையில்லை,” என்றார்கள். அவ்வளவு பலமான பாதுகாப்பும் சில வருடங்களில் கரைந்து மறைந்து விடும். ஆனால் இந்த திரிபுர தீர்த்த நீராடல் அளிக்கும் கோனேறு பாதுகாப்பு ஒன்றே மேன்மேலும் பெருகி பக்தர்களைக் காக்கும் உண்மையான பாதுகாப்பு என்பது அவரவர் அனுபவத்தால் மட்டுமே உணரக் கூடிய தெய்வீகப் பரிசாகும்.

வாலிகண்டபுரம்

சந்திரனிடமிருந்து ஆறாவது ராசியில் சூரிய பகவானும் சூரியன் திகழும் துலா ராசியிலிருந்து எட்டாவது வீட்டில் சந்திர பகவானும் நிலைகொள்ளும்போது பக்தர்கள் உச்சந் தலையில் காவிரி தீர்த்தம் விழ விழத்தான், பொன் முகலி சக்திகள் கேசத்தைத் தழுவும்போதுதான் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மை உள்ளத்தில் வேரூன்றத் தொடங்கும். இதை விடச் சிறந்த பரிசை ஒரு பக்தன் பெற முடியுமா ? பொன் முகலி சக்திகள் என்பவை பெயருக்கேற்றாற்போல் குருவருளால் மட்டுமே பெறக் கூடிய, குருவருளால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய சக்திகள் ஆகும். சொற் பொருளுக்கு அப்பாற்பட்ட பலனை வர்ஷிக்க வல்ல தான முறையாக இந்த பொன் முகலி தானம் அமைவதால் இதன் பலனை சித்தர்கள் அளிக்கவில்லை. வைரம் என்பது கருப்பு கரியால் ஆனதே. ஆனால் வைரத்திற்குப் பட்டை தீட்டத் தீட்ட இந்தக் கரியே கண்ணைக் கவரும் சக்திகளுடன் ஒளியைப் பிரதிபலிக்கும். இந்தப் பிரதிபலிப்பு தங்கத்தின் பிரதிபலிப்பையும் விஞ்சும் சக்தியுடன் திகழும். சனி பகவான் துலா ராசியில் உச்சம் பெறுவது இந்த பொன் முகலி சக்திகளைப் பிரதிபலிக்கும் ஜோதிட அம்சமாகும். இதுவே சாதாரண மக்கள் புரிந்து கொள்ளக் கூடிய பொன் முகலி சக்திகள். இருந்தாலும் இந்த சக்திகளை மற்றவர்களும் பெற வழி வகுப்பதே சற்குருவின் பெருங்கருணையாகும். இந்தப் பொன் முகலி சக்திகளைப் பெறும் எளிய முறையே பொன் முகலி ருத்ராட்ச தானமாகும். அதாவது ஐந்து முகங்கள் கூடிய ருத்ராட்சத்தில் 0.3 காரட் முதல் 3.0 காரட் வரை அளவுள்ள வைரம் பதித்த வளையத்தைக் கோர்த்து தானமாக அளிப்பதே பொன் முகலி தானமாகும். இந்த விகாரி வருட ஐப்பசி மாதத்தில் மட்டுமே அமையும் அற்புத தான முறையே இந்த பொன் முகலி தானமாகும். பலரும் இத்தகைய அற்புத தானத்தை அளிக்க மனது இருக்கிறது, ஆனால் இவ்வளவு பலன் தரும் தானத்தை அளிக்க என்னிடம் வசதி இல்லையே என்று கூறுவதுண்டு. ராம அவதாரம் தோன்றுவதற்கு காரணமானவர்கள் லட்சம், கோடி பக்தர்கள் என்றுதானே நாம் நினைப்போம். ஒரே ஒரு நல்ல உள்ளத்தின் பிரார்த்தனையின் பலனாகத் தோன்றியதே ஸ்ரீராம அவதாரம் என்பார் நம் சற்குரு வெங்கடராமன். அது போல் நீங்கள் 3 கேரட் வைரத்தை தானமாக அளிக்காவிட்டாலும் யாராவது ஒரு அடியார் வைரத்தை தானமாக அளிக்க அதை ஒருவர் தெய்வீகப் பரிசாகப் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் உண்மையாக பிரார்த்தனை செய்யலாமே ? அந்த உயர்ந்த எண்ணம் கொண்ட உத்தமர் ஏன் நீங்களாக இருக்கக் கூடாது ?

ஸ்வர்ண பாத ரேகைகள்

நாம் ஒரு பெண்ணையோ ஆணையோ பார்த்து அழகாக இருக்கிறார் என்று இரசித்து மகிழும்போது நாம் நம் உடல் அழகையே இரசிக்கிறோம் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஆத்ம விசார சிந்தனையாகும். உடலைப் பற்றிய எண்ணத்தை வளர்க்காதவர்களே இறைவனைப் பற்றிய சிந்தனையில் இலயிக்க முடியும். ஸ்ரீசேஷாத்ரி மகான் போன்ற கோடியில் ஒரு உத்தமரே உடல் உணர்வை முற்றிலுமாகக் களைய முடியும் என்பதே உண்மை ஆயினும் இந்த உடல் உணர்வைக் கடந்த தெய்வீக நிலையை அனைவருக்கும் அளிக்க இறைவன் சித்தமாகத்தான் உள்ளார் என்பதை உணர்த்துவதே விகாரி வருட துலா நீராடல் ஆகும். கோடி தீர்த்தங்களில் கோடி முறை மூழ்கி எழுந்தாலும் உடல் உணர்வு என்பது மறையாது. உடல் உணர்வைக் களைய வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாக மூண்டெழுந்தால்தான் உடல் உணர்வு என்னும் விலங்கைத் தளர்த்த முடியும், தகர்க்க முடியும். இதற்கு வழிகோலுவதே துலா நீராடல் ஆகும். துலா நீராடலுக்கும் உடல் உணர்வுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தொன்றுகின்றதல்லவா ? பாத ரேகைகளுக்கும் குருவின் கர்ம பரிபாலனத்திற்கும் உள்ள சம்பந்தத்தைப் புரிந்து கொண்டால்தான் துலா நீராடல் பற்றிய உண்மைகளும் சுவைக்கும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஓமாம்புலியூர்

நம் உள்ளங்கையில் உள்ள ரேகைகள் போன்றே நம் பாதங்களிலும் சங்கு ரேகைகள், சக்கர ரேகைகள், ஒளி ரேகைகள், ஒலி ரேகைகள், தீப ரேகைகள், தர்ம ரேகைகள் என்றவாறாக பல ரேகைகள் உண்டு. இந்த ரேகைகள் அனைத்துமே ஒருவர் பாதங்களில் துலங்காது என்றாலும் அவரவர் பாதங்களில் துலங்கும் ஒளி ரேகைகள் நிச்சயமாக இந்த துலா நீராடலால் தூய்மை பெறும், மேன்மேலும் புனிதம் பெறும் என்பது உண்மையே. காவிரி மணலை வைத்து நம் கால் விரல் இடுக்குகள், பாதங்களைத் தேய்த்து எப்படி சுத்தம் செய்வது என்பதை நம் சற்குரு நேரிடையாக காவிரி தீர்த்தத்தில் விளக்கிக்காட்டியதை தரிசனம் செய்து பலன் பெற்றவர்கள் இன்றும் நம்மிடையே உண்டு. இவ்வாறு துலா நீராடல் அளிக்கும் தங்க சக்திகளை லட்சக் கணக்கில் நாம் செலவு செய்து பெறும் தங்க பஸ்பம் கூட அளிக்க முடியாது. காரணம் காவிரியில் மிளிரும் தங்க சக்திகள் மிக மிக நுண்ணிய இறை சக்திகளாக, குரு சக்திகளாக பரிணமிக்கின்றன. மேலும் இவை விகாரி வருடம், துலா மாதம், நவகிரகங்கள் போன்ற பற்பல தெய்வீக சக்திகளால் புடம் போடப்படுவதால் துலா நீராடலுக்கு இணையான வேறு எந்த சக்தியையும் கூற முடியாது. விகாரம் என்றால் உருவம், தோற்றம் என்று பொருள். விகாரி என்றால் இந்த தோற்றம் மனதில் ஏற்படுத்தும் பிரதிபலிப்பு. ஒரு பெண்ணை அவள் தாய் காணும் போதும், ஒரு ஆண் மகன் காணும்போதும் எத்தகைய பிரதிபலிப்புகள் அவரவர் மனத்தில் தோன்றுகின்றன. இந்த பிரதிபலிப்புகளை முறைப்படுத்துவதே துலா நீராடல் ஆகும். நீராடலுக்குப் பின் காவிரி மணலால் தூய்மைப்படுத்தப்பட்ட பாதங்களுடன் திருத்தலங்களை அடைந்து பிரதட்சிணம் நிறைவேற்றும்போதும், அம்பாள், துர்கை, தட்சிணா மூர்த்தி, ராம பிரான் போன்ற தெய்வ மூர்த்திகளை தரிசனம் செய்யும்போதும் நாம் பெறும் பொன் சக்திகள் மனித உடலில் தெய்வீக அனுகிரக சக்திகளாக பதிந்து விடுகின்றன. இந்த சக்திகளுக்கு ஈடு இணையே இல்லை. இந்த ஐப்பசி முழுவதும் துலா நீராடலை மேற்கொள்ள முடியாவிட்டாலும் ஹஸ்தம், சுவாதி, அனுஷ நட்சத்திரம் துலங்கும் நாட்களில் மட்டுமாவது காவிரி தீர்த்தத்தில் நீராடி காவிரி மணலால் பாதங்களைத் தூய்மை செய்து கொண்டு இறை மூர்த்திகளை தரிசனம் செய்து அரிதிலும் அரிய பொன் முகலி சக்திகளைப் பக்தர்கள் பெற்று வாழும்படி கேட்டுக் கொள்கிறோம். தற்காலத்தில் பல குடும்பங்களில் ஆண்களுக்கு போதுமான வீரிய சக்திகள் நிறைந்து இருப்பதில்லை. பெண்களும் ஒருவிதமான மலட்டுத் தன்மையுடனே வாழ்கின்றனர். இவ்வாறு இரு பாலரும் குறைபாடுகளுடனே திகழ்வதால் குடும்பத்தில் சதா சச்சரவும், சந்தேகங்களும் முளைத்தெழுகின்றன. குடும்ப ஒற்றுமையைத் தகர்க்கும் இத்தகைய குறைபாடுகளுக்குத் தீர்வு அளிப்பதே துலா நீராடலாகும். நம் சற்குரு தம்மை நாடி வந்த திருச்சி, கும்பகோணம் போன்ற காவிரிக் கரையில் வாழும் பக்தர்களுக்கெல்லாம் காவிரி நீராடல் மகிமைகளை எடுத்துக் கூறி அவர்கள் வாழ்வாங்கு வாழ வழி செய்தார் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இவ்வாறு வான் பொய்த்தாலும் தான் பொய்யாத காவிரியை கொல்லைப்புறத்தில் வைத்துக் கொண்டு மருந்து மாத்திரைக்காக ஆயிரக் கணக்கில் செலவு செய்யும் கொடுமையை என்னவென்று கூறுவது ?

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஓமாம்புலியூர்

தங்கம் அளிக்கும் பாதுகாப்பைப் போல் வேறு எந்த உபகரணமும், உபாயமும் பெண்களுக்குப் பாதுகாப்பை அளிக்க முடியாது என்பதால்தான் பலவிதமான ஆபரணங்களை சூடி பெண்கள் பாதுகாப்பைப் பெற்றார்கள். இது நம்பிக்கை உள்ளோர் இன்றும் விடாப்பிடியாக பெறும் தெய்வீக பாதுகாப்பாகும். ஆனால் இவ்வாறு தங்கப் பாதுகாப்பைப் பெற முடியாத ஏழைப் பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் பாதுகாப்பை அளிப்பதே துலா நீராடலாகும். மேலும் தங்க ஆபரணங்களை இடுப்பிற்குக் கீழ் அணியக் கூடாது என்ற விதி முறையும் உண்டு. துலா நீராடலில் மட்டுமே இவ்வாறு தங்க சக்திகள் உடல் முழுவதும் நிறையும் வாய்ப்பு உள்ளதால் துலா நீராடலுக்கு இத்தகைய வரவேற்பு பக்தர்களால் சிறப்பாக பெண்களால் அளிக்கப்படுகிறது. எவ்வாறு இரண்டு காளைகள் பூட்டிய மாட்டு வண்டியில் செல்லும் பயணம் மாடுகள் ஒரே சீராக இழுத்தால்தான் சொகுசாக அமைவதைப் போல, கணவன் மனைவி, ஆண் பெண் அமைந்த சமுதாயத்தில் அமைதியை ஏற்படுத்துவதே துலா நீராடலாகும். ஆண் பெண் என்பவர்கள் சமுதாயத்தின் இரண்டு கண்கள்தானே. இந்த உண்மையை உணர்த்தி இருபாலாருக்கும் உரிய அந்தஸ்தையும் வரவேற்பையும் அளிப்பதே முறையான துலா ஸ்நானமாகும். நீதிபதிகள், வக்கீல்கள், அரசியல்வாதிகள், உயர்ந்த அந்தஸ்து உடைய அரசு அலுவலர்களும் இத்தகைய துலா நீராடல் மூலம் தங்கள் துறையில் நடுநிலைமையுடன் திகழ முடியும். துலா என்றால் தராசு அல்லவா ? தராசை பிரதானமாக உடைய வியாபாரிகளும் நன்னிலை அடைய வழிவகுப்பதே துலா நீராடலாகும். காவிரிப்பூம்பட்டிணத்தில் வியாபாரியாகத் திகழ்ந்த பட்டினத்தார் சுவாமிகள் அரசனே வியக்கும் வண்ணம் செல்வம் திரட்டி தன் வீட்டுத் தூண்களுக்குக் கூட வைரம் வைடூரியங்களால் கவசமிட்டு இரசித்தார். அத்தகைய செல்வந்தரும் உடலின், பொருளின் நிலையாமையை உணர்ந்து அனைத்தையும் ஏழைகளுக்கு வாரி வழங்கி விட்டு என்றும் நிலைக்கும் ஞானச் செல்வத்தை நாடி அலைந்த நிகழ்ச்சிக்கு வித்திட்டதே நாம் வர்ணித்த துலா நீராடலாகும். ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று குறிக்கிறோம். மேலோட்டமாக இரண்டின் குசா நான்கு என்ற பாணியில் ஐப்பசி மாதம் அமைந்தாலும் இதன் பின்னணியில் பல சுவையான கோட்பாடுகள் உள்ளன. துலாம் என்பது தராசுத் தட்டுக்களை ஏந்திய வியாபாரியைக் குறிக்கும் துலா ராசிக்கு உரிய மாதமாக அமைவதுடன் இறைப் பரம்பொருளின் இணையடிகளையும், அர்த்தநாரீஸ்வரத் தத்துவமாக அமைந்த திருவடிகளையும், வசு ருத்ர ஆதித்ய பித்ரு தேவர்கள், பித்ரு பத்னி மூர்த்திகளின் திருவடிகளையும், கணவன் மனைவி இருவரின் காலடிகளையும் குறிக்கும். எனவேதான் துலா நீராடல் என்பது நம் மூதாதையர்களான பித்ரு தேவர்களின் ஆசியால், தெய்வ மூர்த்திகளின் அனுகிரகத்தைப் பெற்றுத் தரும் அற்புத வழிபாடாக அமைகிறது.

இணையடி இயைந்த அடிகளே

இணைந்த காலடிகள் அற்புத சாமுத்ரிகா லட்சணமாக அமைவதால் இத்தகைய இணைந்த காலடிகளைப் பெறாதவர்களும் துலா நீராடலை மேற்கொள்வதால் இணையடி திருவடிகளின் அனுகிரகத்தைப் பெறுவார்கள் என்பது திண்ணம். துலா நீராடலுக்குப் பின் மூன்று ஜோடி தேங்காய் எண்ணெய் தீபங்களை கிழக்கு, தெற்கு, வடக்கு என்ற மூன்று திசைகளில் படத்தில் காட்டியுள்ளதுபோல் ஏற்றி இந்த தீபங்களின் சாட்சியாக பித்ரு மூர்த்திகளுக்கு தர்ப்பணம் அளித்தல் மிகச் சிறந்த பித்ரு வழிபாடாக அமைகிறது. தீபங்களுக்கு நடுவே பச்சரியைப் பரப்பி அதன் மேல் ஓம் என்ற பீஜாட்சரத்தை எழுதி இந்த ஓங்கார சக்கரத்தின் மேல் தர்ப்பைச் சட்டத்தை அமைக்க வேண்டும். தர்ப்பண நிறைவில் இந்த தர்ப்பைகளுடன் பச்சரிசியையும் ஆற்றில் மீன்களுக்கு உணவாக இடுதல் சிறப்பு. சாந்தி முகூர்த்தம் என்பது திருமணம் நிறைவேறியவுடன் கணவன் மனைவி உத்தம சந்தானங்களை உருவாக்க இணையும் ஒரு தெய்வீக நிகழ்ச்சி ஆகும்.

இணையடித் தர்ப்பணம்

பிரம்மசர்ய தேவதைகளுக்கு சாந்தி அளித்து அவர்களை தாங்கள் ஏற்கும் சந்தான வேள்விக்கு உறுதுணையாக நிற்கும்படி வேண்டுவதே சாந்தி முகூர்த்த வைபவத்தின் முக்கிய நோக்கமாகும். சாந்தி முகூர்த்தம் என்பது ஒரு உயிரை இவ்வுலகிற்கு வரவேற்பதாகவே அமைவதால் சாந்தி முகூர்த்த நேரம் ஜோதிட ரீதியாக லக்ன சுத்தத்துடன் இருக்க வேண்டும் என்ற நியதி உண்டு. இந்தப் பிரார்த்தனை இனிது நிறைவேறுதற்காகவே சாந்தி முகூர்த்த அறைகளில் மூதாதையர்கள் பன்னெடுங்காலம் உபயோகித்து நன்மக்களை சுபமாகப் பெற்ற கட்டில்களைப் பயன்படுத்துவதுடன் அந்த அறைகளில் தீபங்களை ஏற்றி வைப்பது உண்டு. எவ்வாறு உடலை விடுத்த ஆன்மாவானது தன் சொந்த லோகத்தை அடைய ஒரு ஒளிப் பாதை வழியாக செல்கின்றதோ அவ்வாறே தன் சொந்த லோகத்திலிருந்து வந்து மானிட உடலுக்குள் உருவெடுக்க ஆன்மாவிற்குத் துணை புரிவதே சாந்தி முகூர்த்த அறையில் ஏற்றி வைக்கப்படும் ஒளி விளக்காகும். தற்போது சாந்தி முகூர்த்தம் என்பது முதலிரவாக மாறி, அது கணவன் மனைவியின் ஆனந்தக் களிப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக மாறி விட்டது. இக்காரணம் குறித்தே சற்குருமார்களும் சாந்தி முகூர்த்தம் என்பதற்கு தனியாக முகூர்த்தத்தைக் குறிக்காது திருமண வைபவத்தின் ஒரு பகுதியாகவே இதைக் கருதி அதற்கு ஏற்றவாறு முகூர்த்தங்களைக் குறித்து வருகின்றனர். இத்தகைய குறைபாடுகளைச் சீர்செய்வற்காகவே மேற்கண்ட தர்ப்பண வழிபாடுகள் அமைகின்றன. உடற் கூறு பிரச்னைகளால் சந்தான பிராப்தியைப் பெறாதவர்கள் மேற்கூறிய முறையில் தர்ப்பண வழிபாடுகளை நிறைவேற்றுதலால் நற்பலன் பெறுவார்கள். ஐப்பசி என்பது ஐம்பசியையும் குறிக்கும். அதாவது ரிஷிகள், தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்ற ஐந்து வகையான ஜீவன்களின் பசியைப் போக்கும் மாதமே ஈசனுக்கு அன்னாபிஷேகம் நிறைவேறும் ஐப்பசி மாதம். மேற்கண்ட தர்ப்பணத்தில் தர்ப்பண சக்திகளைப் பெற்ற அரிசி உணவானது அந்தந்த இனத்தைச் சேர்ந்த ஜீவன்களுக்கு உணவாக மாற்றி அளிக்கும் பொறுப்பை சாகம்பரிதேவி ஏற்று அருள்புரிகிறாள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம் ஆகும். சாகம்பரி தேவிக்கு நன்றி கூறும் முகமாக ஐப்பசி மாத நிறைவில் பச்சை காய்கறிகளை ஏழைகளுக்கும் பசு போன்ற விலங்கினங்களுக்கும் அளித்தல் சிறப்பாகும். குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் அற்புத தர்ப்பண வழிபாடு இது என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கக் கூடிய உண்மை அல்லவா ?

இணையடி தாமரை

மாசில் வீணை, மாலை மதியம், வீசு தென்றல், இளவேனில், மூசு வண்டறை பொய்கை போன்றது எம்பெருமானின் திருவடி நிழல் என்று மகிழ்ந்து பாடும் திருநாவுக்கரசு பெருமான் இந்த திருவடி நிழலாய் விளங்கும் தாமரை மலர்களைப் பற்றி கூறாமல் கூறியதே இறைவன் அனைத்துப் பொருட்களிலும் மறைந்து தோன்றும் சிறப்பாகும். இவ்வாறு ஜீவன்கள் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை மாறாமல் இருப்பது ஒன்று தாமரை, இரண்டு கரப்பான் பூச்சி. இக்காரணம் பற்றியே எல்லா இறை மூர்த்திகளும் தாமரை மலர்களுடன் தொடர்புடையவர்களாக விளங்குகின்றனர், அதாவது தாமரையில் அமர்ந்தோ, தாமரையைப் பீடமாகக் கொண்டோ அல்லது தாமரையைக் கையில் ஏந்தியோ அருள் பாலிக்கின்றனர். இது இறைவனின் நற்சக்தியைக் குறிப்பது. கரப்பான் பூச்சியோ எத்தனை அணுகுண்டுகள் போண்டாலும் அதனாலெல்லாம் அழியாது இன்றும் எதிர்மறை சக்தியின் பிறப்பிடமாகத் திகழ்வது. நாம் காவிரியில் துலா நீராடலை மேற்கொள்ளும்போது மணலால் உள்ளங்கால்களைத் தேய்த்து சுத்தம் செய்தலால் குருவருளால் நற்சக்திகள் உடம்பில் பெருகுகின்றன என்று தெரிவித்தோம். எதுவரை இந்த நற்சக்திகளை உடம்பில் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற வினா உங்கள் உள்ளத்தில் தோன்றுவது இயல்பே. அதற்கு விடையாக கீழ்க் கண்ட நிகழ்ச்சியை அளிக்கிறோம்.

ஈசன் எந்தை இணையடி நீழலே
திருக்களம்பூர்

நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் பல இடங்களில் கரப்பான் பூச்சிகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். கரப்பான் பூச்சிகள் எதிர்மறை எண்ணங்களின் பிறப்பிடமாகத் திகழ்வதால் அதை உடனே அழித்து விட வேண்டும் என்பது நம் சற்குருவின் எதிர்பார்ப்பு. இதை செயல்படுத்தும் முகமாக அந்த பூச்சிகளைப் பார்த்தவுடன் கொன்று விடுவார்கள். நம் சற்குரு இந்தப் பூச்சிகளை அழிக்கும் காட்சியே ஒரு தனித் தன்மை வாய்ந்தது. அந்தப் பூச்சிகளைக் கண்டவுடன் அவை மேல் தன் பாதங்களை வைத்து எடுப்பார். அவ்வளவுதான் அந்தப் பூச்சிகள் இறந்து விடும். அந்தப் பூச்சிகளின் ஒரு சிறு இறகோ, காலோ, உடம்போ கூட பாதிக்கப்படாது என்பதே காண்போரை பிரமிக்க வைக்கும் ஆச்சரியமாகும். இறைவனின் சிருஷ்டி இரகசியத்தை உணர்ந்தால்தான் இந்த ஆச்சரியத்தின் பொருள் விளங்கும். இராவணன் லட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் ரிஷிகளையும், முனிவர்களையும் அழித்து விழுங்கியபோது இறைவன் ராம அவதாரமாகத் தோன்றி அவனை சம்ஹாரம் செய்ய திருவுள்ளம் கொண்டார் அல்லவா ? ஆனால் அந்நிலையிலும் ராவணனைக் கொல்ல எந்த அளவு சக்தி வேண்டுமோ அந்த அளவு சக்தியுடன் மட்டும் தோன்றியதே ராம அவதாரம் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். அதனால்தான் இந்திரஜித் நிஷ்கும்பலா யாகத்தை நிறைவேற்ற முனைந்தபோது அந்த சக்திகளை ராவணன் பெற்றால் அவனை ராமபிரானும் ஜெயிக்க முடியாது என்பதால் நிஷ்கும்பலா யாகத்தை ஆஞ்சநேயர் அழித்து விட்டார். இதுவே இறைவனின் சிருஷ்டி இரகசியம். இந்த அற்புத சிருஷ்டி இரகசியத்தை சாதாரண அடியார்களும் நேரில் கண்டு இன்புற வழிவகுத்தவரே நம் சற்குரு. நாம் துடைப்பத்தைக் கொண்டு கரப்பான் பூச்சியை பத்து அடிகள் அடித்தாலும் அது இறக்காது ஏதாவது ஒரு காலை ஆட்டி நம்மை பரிகசிப்பதை பலரும் அனுபவித்திருக்கலாம். இந்த உண்மையை உணர்ந்து தெளிந்தால்தான் சற்குருவின் மாய வித்தை நமக்குப் புரிய வரும். வெறுமனே ஒரு கரப்பான் பூச்சியை அழிப்பதோடு சற்குருவின் வேலை முடிந்து விட்டது என்று கிடையாது. எதிர்மறை சக்திகளின் பிறப்பிடமாகத் தோன்றிய அந்தக் கரப்பான் பூச்சி தற்போது ஒரு நற்சக்திகளின் பெட்டமாக மாறி விட்டது அல்லவா ஒரு உத்தமரின் காலடி பட்டதால், ஒரு உயர்ந்த உள்ளம் மனமுவந்து அளித்த தியாகப் பரிசால். கனிந்த கனி பரமாச்சாரியார் மலஜலம் கழித்த பின் காவிரி, கொள்ளிடம் மணலால்தான் தன் உடலை சுத்தி செய்து கொள்வார். இந்த தெய்வீக சுத்தியின் பின்னணியில் அமைந்த இரகசியம் தற்போது ஓரளவு உங்களுக்கு விளங்கி இருக்குமே ? ஒரு முறை தியானத்தில் ஆழ்ந்து மூழ்குவதாகத் தெரிவித்த ஒரு அடியார் நம் சற்குருவைக் காண வந்திருந்தார். அவர் விடைபெற்றுச் சென்றபின் அவர் கைக்கொண்ட தியான முறையைப் பற்றி விவாதம் எழுந்தபோது நம் சற்குரு, “மலஜலம் கழித்த பின் தன் உடலையே சுத்தம் செய்யத் தெரியாத ஒருவர், மற்றவர் எண்ணங்களைத் தூய்மை செய்கிறேன் என்று சொன்னால் அது எத்தகைய வேடிக்கையான செயல் ... ,” என்று கூறி அப்போதுதான் “உடல் சுத்தி” என்றால் என்ன என்பதைப் பற்றியும் காவிரி நீராடல் எந்த அளவிற்கு இவ்விஷயத்தில் ஒரு பக்தனுக்குத் துணை புரியும் என்ற மேற்கண்ட இரகசியங்களை எல்லாம் விவரித்தார் நம் சற்குரு. ராமகிருஷ்ண பரமஹம்சரும் இவ்வாறு தன் உடலைச் சுத்தி செய்து கொண்ட இரகசியத்தை ஒரு சிலர் அறிந்திருக்கலாம்.

இணையடி சுக்ர தீபங்கள்

பொதுவாக உடல் பருமன், நிறம், உயரம் போன்ற உடல் கூறு பிரச்னைகளை எத்தகைய இறைவழிபாடுகளாலும் இந்தப் பிறவிலேயே சரி செய்ய முடியாது என்பது உண்மை. கருப்பாக இருக்கும் ஒருவர் தன் தோலின் நிறம் மாறுவதற்காக வழிபாடுகளை மேற்கொண்டால் நிச்சயம் அதன் பலனாய் வரும் பிறவிகளில் அவர் சிவந்த தோலுடன் பிறப்பார் என்பது இறையருள் கூறுவதே. ஆனால், இவ்வுலகம் என்ன எவ்வுலகிலும் சற்குருவால் ஆகாத காரியம் என்று எதுவுமில்லை அல்லவா ? படுக்கையில் சிறுநீர் கழிக்கும் வழக்கம் உள்ள ஒரு அடியார் நம் சற்குருவின் சத்சங்கத்தில் இருந்தார். தன்னுடைய குறைபாட்டைக் களைவதற்காக அவர் பார்க்காத வைத்தியமில்லை, கைக்கொள்ளாத உணவு முறை கிடையாது, தியானப் பயிற்சிகளோ ஏராளம். ஆனாலும் அந்தக் குறைபாடு இம்மியும் சரியானதாகத் தெரியவில்லை. அந்த அடியாரும் இது பற்றி ஒரு வார்த்தை கூட நம் சற்குருவிடம் கூறியது கிடையாது. நாட்கள் சென்றன.

ஜோதி ஜோதியே பூவாளூர்

நம் சற்குருவோ அந்த அடியாரை இணையடித் தர்ப்பணத்தைத் தொடர்ந்து நிறைவேற்றுமாறு கூறினார். காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. மூன்று வருடங்கள் கழிந்தன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த அடியார் அனுபவித்த வேதனைகள் மறைந்தன. தற்போது எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டாலும் அந்தக் குறைபாடு சற்றும் தலைகாட்டவில்லை. இதுவே சற்குருவின் மறைமுகமான கர்ம பரிபாலனம். இது போன்று சற்குரு மேற்கொண்ட கர்ம பரிபாலனங்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நம்புங்கள் நலம் பெறுவீர். காலடிகள் மட்டும் மனித உடலில் இரண்டு அல்லவே. கண்கள், காதுகள், சிறுநீரகம் என்று இரண்டு இரண்டாக உடலில் உள்ள எல்லா அவயவங்களுக்கும் தீர்வு அளிப்பதே இந்த இணையடித் தர்ப்பணமாகும். இதே போல அற்புத பலன்களைத் தரக் கூடியதே இணையடி சுக்ர தீப வழிபாடாகும். பூவரசு, வாழை, தாமரை இலைகளில் தேங்காய் எண்ணெய், பசு நெய், நல்ல எண்ணெய் தீபங்களை ஒரு விளக்கில் இரண்டு திரிகளை வைத்து தீபமேற்றி காவிரி, கங்கை, பல்குனி நதிகளில் ஆடி 18, ஐப்பசி மாதங்களில் மிதக்க விடுவதே இணையடி சுக்ர தீப வழிபாடாகும். மனித உடலில் இரண்டாக உள்ள அனைத்து அவயவங்களின் குறைபாடுகளைத் தீர்க்கும் அற்புத தீப வழிபாடு இது. தீபாவளிக்கு முதல் நாள், தீபாவளி தினம், தீபாவளிக்கு அடுத்த நாள் என மூன்று தினங்களில் நிறைவேற்றும் இத்தகைய தீப வழிபாடு அற்புத பலன்களை அளிக்க வல்லதாகும். இங்கு நாம் விவரிக்கும் வழிபாடுகள் அனைத்துமே கிரக சங்கமங்களாலும் வேறு பல காரணங்களாலும் இந்த உலகில் சூழும் இருட்டையும், மனித உள்ளங்களில் சூழும் இருட்டையும் களையும் என்பதை அடிக்கடி நினைவுறுத்திக் கொள்ளவும். இறை வழிபாட்டில் உன்னதம் அடைந்தோர் எத்தனையோ கோடி உண்டு. அவர்கள் அனைவரும் நாயன்மார்களே. ஆனால் இவர்களில் 63 நாயன்மார்களின் தத்துவங்களை மட்டும் நாம் திருத்தலங்களில் கொண்டாடுகிறோம் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம் ஆகும். காவிரி போன்ற புனித நதிகளின் அருகே வாசம் கொள்ளாதோர் இத்தகைய நாயன்மார்களுக்கு புத்தாடை அணிவித்து அவர்கள் முன் பச்சரிசி மாக்கோலங்களை இட்டு தீபங்கள் ஏற்றி வழிபடுவதும் ஓர் அற்புத வழிபாட்டு முறையாகும். நாயன்மார்களின் வரலாறுகளை ஊன்றிப் படித்து அவர்கள் வாழ்க்கை கூறும் தத்துவங்களை மனதில் நிலைத்து அந்தந்த நாயன்மார்களுக்கு தீபம் ஏற்றி வணங்குவதும் தங்கள் உடல், மனக் குறைபாடுகளை நீக்கும் ஓர் உபாயமாகும்.

கர்மவினை களையும் காவிரி

காவிரி மணலுக்கு அதீதமான ஆகர்ஷண சக்தி உண்டு. இக்காரணம் பற்றியே ஆயுர்வேத வைத்திய முறையில் சுத்தமான காவிரி மணலுடன் சிறிது காவிரி தீர்த்தத்தையும் கலந்து உண்ணக் கொடுப்பார்கள். உடலுள் செல்லும் இந்தக் காவிரி மணலானது எத்தனையோ ஆண்டுகள் மலக் குடலில் சேர்ந்து கிடந்த அழுக்கைக் கூட ஈர்த்து வெளிக் கொண்டு விடும். இதன் முக்கிய காரணம் பொன்னி நதியில் கலந்துள்ள தங்க சக்திகளே ஆகும். வயதாகி படுத்த படுக்கையில் கிடக்கும் நோயாளிகளுக்கு இவ்வாறு காவிரி தீர்த்தம் கலந்த சிறிது மணலை அளிப்பதுண்டு. காரணம் எத்தனையோ ஆண்டுகள் தீராத ஆசைகளால் உயிர் பிரியாமல் தவிக்கும் நோயாளிகளுக்குக் கூட அவர்கள் அறியாமல் தேக்கி வைத்த பல ஆசைகளை நிறைவேற்றி அவர்கள் அமைதியாக மரணத்தை எதிர்நோக்க வழிவகுக்கும் என்பதே இதன் பின்னணியில் அமைந்த காரணமாகும். சென்னையில் நிலக்கடலை வறுக்கும் வியாபாரி ஒருவர் பழைய கருத்துப் போன மணலை வைத்துக் கொண்டு இருந்ததைப் பற்றி விசாரித்தபோது, “சார், நானும் எவ்வளவோ மணலை மாற்றிப் பார்த்து விட்டேன். இந்த காவிரி மணலில் கிடைக்கும் ருசி வேறு எதிலும் கிட்டவில்லை,” என்றாராம்.

தங்கம் ஒன்றில் மட்டுமே உஷ்ணம் சீராகப் பரவும் என்பதே இதன் காரணமாகும். இனம் இனத்தோடுதானே சேரும் ? தங்கத்தில் மிளிரும் பொன் சக்திகளும், நிலக்கடலையில் பொதிந்துள்ள தங்க சக்திகளும் இணைவதில் வியப்பென்ன. இன்றும் ஆகாயவிமானங்களில் ஜன்னல் கண்ணாடிகளில் தங்கத்தை மெல்லிய இழைகளாகப் பொருத்தி அதன் வழியே மின்சாரத்தைப் பாய்ச்சுகின்றனர். அப்போது அந்த ஜன்னல்களில் உஷ்ணம் ஏற்படுவதால் கண்ணாடிகளில் ஐஸ், பனிக் கட்டிகள் ஏற்படாது பயணிகள் நல்ல காட்சிகளைப் பெற முடியும். எவ்வாறு தங்கக் கடுக்கன்கள் நல்ல ஒலிகளை, வேத சக்திகளை மட்டுமே வடிகட்டி காதிற்குள் செலுத்துமோ அது போல் தங்கக் கண்ணாடிகள் (optical, spectacle frames) நல்ல காட்சிகளையே நமக்கு நல்கும். இதுவே விலையுயர்ந்த பொருள் அளிக்கும் விலை மதிப்பற்ற பரிசு. இந்த அடிப்படை காரணமே காவிரி நீராடலிலும் அமைகின்றது என்பதே நாம் ஆத்ம விசாரம் மூலம் அறிந்து கொள்ளும் உண்மை. இன்னும் சிறப்பாக ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் நித்திய சூரிகள் என்பார் தினமும் அம்மாமண்டபப் பகுதியில் நீராடி விட்டு நடந்தே சென்று ஸ்ரீரங்கநாதரை தரிசனம் செய்கின்றனர். அம்மாமண்டபத்தில் தினமும் விடியற்காலை நீராடுவதால் இந்த நித்திய சூரிகளின் தேகத்தைத் தழுவிய புனித காவிரி தீர்த்தம் நம் உடலையும் தீண்டுவதால் அதனால் களையப்படும் கர்ம வினைகள் எத்தனை எத்தனை. தான் சற்குரு, ஜகத்குரு, நல்லவன் என்ற உண்மைகளை நேரிடையாக கூறாவிட்டாலும், மறைமுகமாக நம் சற்குரு இந்த உண்மைகளைத் தெளிவுபடுத்திய சந்தர்ப்பங்கள் ஏராளம், ஏராளம்.

மாயக் கண்ணனா மாயா விநோதனா ?
நாச்சியார்கோவில்

உதாரணமாக, “அடியேன் வல்லவன் அல்ல (நல்லவன்), வல்லவர்களோடு சேர்ந்து நற்காரியம் புரிகின்றேன்...”, என்பார். அது போல் ஒரு நடிகர் நீச்சல் குளத்தில் குளித்தவுடன் அந்தக் குளத்தில் குளிக்கும் வல்லவராக இல்லாவிட்டாலும் நித்திய சூரிகள் தீர்த்தமாடும் காவிரித்துறையில் தீர்த்தமாடும் நல்லவராக நீங்கள் இருக்கலாமே ? நம் சற்குரு ரேபான் கண்ணாடி அணிந்து சூப்பர் ஸ்டாராக விளங்கிய கோலத்தைக் கண்டு இரசித்தவர்கள் அநேகர். ஆனால் இதன் பின்னணியில் அமைந்த இரகசியத்தை உணர்ந்தோர் ஒரு சிலரே. ரேபான் (rayban =12=3) என்பது எண் கணித சூத்திரப்படி குருவிற்கு உகந்த மூன்று எண் சக்திகளுடன் துலங்குவது. நரகாசுரன் பெற்ற வரங்களில் ஒன்று தீபாவளி அன்று சூரிய உதயத்திற்கு முன்பு நல்லெண்ணெய் தேய்த்து நீராடும் அனைவரும் கங்கையில் நீராடிய பலனைப் பெறுவர் என்பது. இந்த நீராடல் பலனை எப்போதும் எந்நாளும் பெற வழி வகுப்பதே இத்தகைய ரேபான் கருப்புக் கண்ணாடிகள் அணிந்து மற்றவர்கள் நலனுக்காக பிரார்த்தனை செய்யும் நற்பண்பாகும். இந்த நற்பண்பைப் பெறுவது அனைவருக்கும் கடினம் என்றாலும் குறைந்த பட்சம் ரேபான் கருப்புக் கண்ணாடிகளை வாங்கி தீபாவளி வைபவத்தில் தானம் அளித்தல் என்பது அனைவரும் நிறைவேற்றக் கூடிய தான முறைதானே ? இதனால் அவர்கள் அனைவரும் தீப ஓளியை வறியவர் வாழ்வில், இல்லத்தில் ஏற்றிய உத்தமர்களே என்பதில் சிறிதும் ஐயமில்லை. அசுரர்கள் என்பவர்கள் கருப்பு நிறமுடையவர்கள் என்பது மக்களின் கணிப்பு. இங்கு கருப்பு என்பது தீய சக்திகளின், தவறான எண்ணங்களின் தாக்கத்தையே குறிக்கும். நரகாசுரன் பெற்ற தீய புண்ணிய சக்திகள் அனைத்துமே கிருஷ்ண பரமாத்மாவினால் மக்களுக்கு பயன்படும் புண்ணிய சக்திகளாக மாற்றப்பட்டு இன்று வரை பூலோக ஜீவன்களுக்கு பலன் அளித்து வருகின்றன என்றால் நரகாசுரன் எந்த அளவு தவ சக்திகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதுவேதான் சற்குருவின் காலடியில் அகப்பட்ட கரப்பான் பூச்சியின் நிலையும். இவ்வாறு தீய சக்திகளை ஈர்த்து நம்மைக் காக்க இறைவனால் அளிக்கப்பட்டதே கருப்புத் தலை முடியாகும். இதன் மனித முயற்சியே கருப்புக் கண்ணாடி ஆகும். நீங்கள் இங்கு தரிசனம் செய்யும் கிருஷ்ண பகவானைப் பற்றி ஒரு புராணமே எழுதலாம் என்றாலும் இந்த தரிசன மகிமை பற்றி சிறிதளவே விளக்குகிறோம். பசுவின் உடலில் அனைத்து தேவாதி தெய்வ மூர்த்திகள் விளங்கினாலும் அந்த கோமாதாவானது தன்னை தூய்மை செய்து கொள்ள கிருஷ்ண பகவானின் வலது உள்ளங்காலை தன்னுடைய நாக்கால் நக்குகிறது. பசுவின் நாக்கு நுனியில் வருண பகவான் வசிப்பதால் வருண பகவான் பெறும் தீர்த்த சக்திகள் பசுவின் உடலில் வியாபித்து அனைத்து மூர்த்திகளுக்கும் இது ஆஹூதியாக அமைகின்றது. உடல் சுத்திக்காக ஆசமனம் செய்யும்போது அச்சுதா அனந்தா கோவிந்தா என்று மூன்று முறை பெருமாள் நாமங்களை ஓதி நீரை உள்ளங்கையில் வார்த்து அருந்துவதால் உடலில் உள்ள அனைத்து நாடிகளும் தூய்மை அடைகின்றன. ஆசமனம் செய்யும்போது இரு கால்களையும் குத்துக்கால் இட்ட விதத்தில் காளி ஆசனத்தில் அமர வேண்டும் என்று கூறுவது இக்காரணம் பற்றியே. இதன் மகிமை புரிந்தால் துலா நீராடலின் மகிமையும் உள்ளங்கை நெல்லிக்கனியே. பசு நக்கும் கிருஷ்ண பகவானின் இந்த திருவடிப் பகுதியையே ராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரின் இதயத்தில் பதித்து பரமாத்மாவின் தரிசன காட்சியை நல்கினார் என்பதே நாம் அனுபவித்து இன்புற வேண்டிய மற்றோர் சுவை. புருஷ சூக்தம் விளக்கும் இந்த கிருஷ்ண பிங்கல காட்சியைக் குறித்து ஆத்ம விசாரம் செய்து வந்தாலே நாம் பரம்பொருளின், சிவ சக்தி ஐக்ய சொரூபத்தின் மகிமையை, நம் இல்லற வாழ்வின் மேன்மையை உணர்ந்தவர்கள் ஆவோம்.

அரிய சந்தர்ப்பம் இனிய வாய்ப்பு

இறந்தவர்கள் அடையும் மூன்று லோகங்களே ஒளி லோகம், மத்திம லோகம், இருண்ட லோகம் என்பவை ஆகும். இந்த ஒவ்வொரு லோகத்திலும் லட்சக் கணக்கான பிரிவினைகள், படித்தரங்கள் உண்டு, உயர்ந்த வருமான பிரிவு, குறைந்த வருமான பிரிவு (Higher income flats, lower income groups) என்பதைப் போல. மரணம் அடைந்தவுடன் நாம் நினைப்பது போல எவரும் இந்த லோகங்களை அடைவது கிடையாது, பூமியிலிருந்து கட்டை விரல் உயரமே எழும் ஆத்மாக்கள் மீண்டும் பிறவித் தளையில் சிக்கி திரும்பவும் வேறு ஒரு கருப்பையில் தோன்றி பிறவியை எடுக்கின்றனர் என்பதே பெரும்பாலான ஜீவன்களின் நிலை. அபூர்வமாக ஒன்றிரண்டு ஜீவன்கள் இந்த லோகங்களை அடைகின்றன என்றாலும் இந்த மத்திம லோகம், இருண்ட லோகத்தை அடைந்த ஜீவன்களும் நற்கதி அடைய வேண்டி நம் சற்குரு போன்ற உத்தம மகான்கள் தங்கள் புண்ணியத்தின் ஒரு பகுதியை செலவிடுகின்றனர் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும்.

ஸ்ரீஒலியுல்லா சுவாமிகள் ஜீவ சமாதி
துவரங்குறிச்சி திருச்சி

உத்தராயண புண்ணிய காலம், வளர் பிறை, வலவோட்டு நட்சத்திரங்கள், பகல் பொழுது என்றவாறாக ஒளிப் பகுதியை அடையும் மூதாதையர்களின் நிலையும் வெவ்வேறு படித்தரங்களில் அமைகிறது. ஒரு ஜீவன் எப்போது பூமியில் பிறப்பெடுக்கின்றது என்பதோ அல்லது பூமியை விட்டு வேறு லோகத்தில் நிலை கொள்கிறது என்பதோ இறைவன் மட்டுமே அறிந்த இரகசியமாகும். உதாரணமாக, கனிந்த கனி பரமாச்சாரியார் மேற்கண்ட இலக்கணங்களுடன் பூமியிலிருந்து மறைந்து ஒளி உலகை அடைந்தாலும் அவர் ஒளி உலகை அடைந்த கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பின்னரே அவர் பூலோகத்தில் உயிர் நீத்ததாக அறிவிக்கப்பட்டது. அப்போதிருந்த இலக்கணங்களோ இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது என்பது உண்மை. இந்த மாறுபட்ட இலக்கணங்களை அப்படியே ஏற்றுக் கொண்ட அவர் தம் இஷ்ட தெய்வமான சிறுவாச்சூர் மதுர காளி அம்மன் மடியில் தவழ்ந்ததாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு நம் சற்குரு ஸ்ரீபரமாச்சாரியாரின் அனுகிரகத்தைப் பூலோகவாசிகள் பெற வேண்டி சிறுவாச்சூர் மதுர காளியம்மன் ஆலயத்தில் லட்ச மோட்ச தீபங்களை ஏற்றுமாறு அருளியதை ஒரு சில அடியார்கள் அறிந்திருப்பார்கள்.

எப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் கூட பரோலில் (parole leave) செல்ல அனுமதிக்கப்படுகின்றனரோ, சுதந்திர தினம் போன்ற தினங்களில் நிரந்தரமாக விடுதலை பெறுகின்றனரோ அது போல் இருண்ட லோகம், மத்திம லோகத்தை அடைந்த ஜீவன்களும் குறித்த காலம் கடந்தபின் விமோசனம் பெற்று விடுதலை செய்யப்படுவதோ அல்லது ஒளி லோகத்தில் நிரந்தரமாக இருக்க அனுமதிக்கப்படுவதோ உண்டு. சாதாரண நிலையில் உள்ள மகான்கள், பித்ருக்கள் முதலியோர் இந்த மத்திம லோகத்தையோ, இருண்ட லோகத்தையோ மனோ ரீதியாகக் கூட தொடர்பு கொள்ள முடியாது.

இருண்ட லோகத்தில் உள்ள ஜீவன்களிடம் எந்நாளும் எந்நேரமும் தொடர்பு கொள்ளும் சக்தி பெற்ற ஒரே மகான் துவரங்குறிச்சியில் ஜீவ சமாதி கொண்டு எழுந்தருளி உள்ள ஸ்ரீஒலியுலா சுவாமிகள் மட்டுமே ஆவார். ஒளியுலா, ஒளியுல்லா என்பதும் இவருக்கு உரித்தான பல திருநாமங்களே. பாண்டிச்சேரி சின்னபாபு சமுத்திரத்தில் ஜீவ சமாதி கொண்டுள்ள படே சாகிப் சுவாமிகள், அலாகாபாத் ரயில் நிலையத்தில் ஜீவ சமாதி கொண்டு அருள்புரியும் ஹஸ்ரத் மொகமத் அலி ஷா (லைன்பாபா) போன்ற மகான்கள் குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே இந்த மத்திம லோகம், இருண்ட லோக வாசிகளுடன் தொடர்பு கொள்ளும் சக்தியைப் பெறுகின்றனர்.

மேற்கூறிய ஜீவ சமாதிகளைத் தரிசனம் செய்யும்போது நம் வலது இடது கன்னங்களை மாறி மாறி மும்முறை வைத்து இந்த ஜீவ சமாதிகளை வணங்குவதால் நம் பரம்பரையில் தோன்றிய மத்திம லோகம், இருண்ட லோகத்தைச் சேர்ந்த பித்ருக்களும் நன்னிலை அடைய இந்த வழிபாடு உறுதுணை புரியும்.

வரப்பு உயர்ந்தால் பயிர் உயரும் அல்லவா ?

தீபாவளி என்பது பித்ரு தீப ஒளி மலரும் நன்னாளாகவும் அமைவதால் தீபாவளி தினத்தில் இருண்ட லோகம், மத்திம லோகத்தைச் சேர்ந்த நம் மூதாதையர்கள் ஒளி லோகத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்குத் தேவையான புண்ணிய சக்திகளை தாரை வார்த்து அளிக்கும் பெருந்தகையே நம் சற்குரு வெங்கடராம மூர்த்தி ஆவார். சற்குரு அருளும் ஒளிப் பாதை அலாதியான சிறப்பு வாய்ந்தது. தீபாவளி சமயத்தின்போது ஒரு வெள்ளி அல்லது எவர்சில்வர் டம்ளரில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு அதில் நல்லெண்ணெயை ஊற்றி அத்துடன் சீயக்காய், இனிப்பு, பலகாரங்கள், புத்தாடைகளை அவரவர் சக்திக்கு இயன்றவரையில் தானமாக அளிக்கும்படி நம் சற்குரு கூறுவார்கள். இந்த ஒரு ரூபாய் நாணயம், நல்லெண்ணெய், கங்கா தீர்த்தம் இவையே இருண்ட, மத்திம லோகத்திலிருந்து ஒளி லோகத்தில் நம் பித்ருக்கள் சஞ்சரிக்க உதவும் விசா, அனுமதி. இதற்கு உதவி செய்வதே வருடம் ஒரே ஒரு முறையே நம் உடலில் தோன்றும் சுவேதாக்னி பித்ரு சக்திகளாகும்.

தனித்துணை சிவமே

சிறப்பாக குருவருள் பிரகாசிக்கும் இந்த விகாரி ஆண்டில் இத்தகைய சுவேதாக்னி சக்திகளின் பிரகாசம் அமோகமாக பரிணமிப்பதால்,
ஓம் தத் புருஷாய வித்மஹே
லாலீலாய தீமஹி தந்நோ சுவேதாக்னி தேவ ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதி மேற்கண்ட தான முறையை நிறைவேற்றுதல் நலம். எத்தனையோ பிறவிகளுக்கு ஒரு முறையே கிட்டும் இந்த அரிய சந்தர்ப்பத்தை அடியார்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். குற்றாலம் திருத்தலத்திற்கு தம் அடியார் குழுவுடன் சென்ற சற்குரு இவ்வாறு ஒலியுலா சுவாமிகளின் ஜீவ சமாதியை வணங்கி சுவேதாக்னி சக்திகளைப் பெற்றதை நேரில் தரிசித்த நம் அடியார்கள் எவ்வளவு பேறு பெற்றவர்கள் ? இந்த சுவைக்கு மேலும் சுவை கூட்டியதே நம் சற்குரு மொஹமத் அலி ஷா அவர்களின் நேத்ராக்னி சக்திகளை அலாகாபாத் ரயில் நிலையத்தில் பெற்ற வரலாறும் ஆகும். ஏன் நம் சற்குரு ஒருவருக்கு மட்டுமே இவ்வாறு இருண்ட லோக வாசிகளுக்கும் விடுதலை அளிக்கும் அனுகிரகம் பரிணமித்தது என்பதும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு சுவையாகும்.

திருவைகாவூர்

பெருமாளின் அவதாரங்கள் அனைத்துமே நம் கற்பனைக்கு எட்டாத கருணை ஊற்றுகளே என்றாலும் மச்ச அவதாரம், வராக அவதாரம் போன்றவை மனித சக்தியால் சற்றும் புரிந்து கொள்ள முடியாத அவதாரங்களாகும். ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் என்ற இரண்டு அவதாரங்கள் மட்டுமே மனிதனோடு நெருங்கிய சம்பந்தம் உடைய அதாவது மனித சமூகத்தால் ஓரளவு புரிந்து கொள்ளக் கூடியவையாகும். இந்த இரண்டு அவதாரங்கள் அளித்த சுவேதாக்னி சக்திகளை நம் சற்குரு சிறப்பாகப் பெற்று அந்த அக்னி சக்திகளை எட்டு கோடி பக்தர்களுக்கு பிரசாதமாக விநியாகித்தார் என்பதே நம் சற்குரு இருண்ட லோகத்துடன் தொடர்பு கொள்ளும் ஈடு இணையற்ற பித்ரு சக்திகளைப் பெற்றதற்கு அடிப்படைக் காரணமாகும். ராம பிரான் சரயு நதியில் தன் உடலை உகுத்து வைகுண்டம் ஏகியபோது தான் ராமபிரானாக கிரகித்த புண்ணிய சக்திகளின் ஒரு பகுதியை சரயு நதியில் நிரப்பி வைத்தார். நம் சற்குரு தம் அடியார்களுடன் அயோத்தி மாநகருக்கு யாத்திரை புரிந்தபோது ராம பிரான் தன் புண்ணிய சக்திகளை நிரப்பி வைத்த அதே இடத்தில் நீராடி அந்த புண்ணிய சக்திகளின் ஒரு பங்கை தானும் தன்னைச் சார்ந்த அடியார்களும் ஏற்கச் செய்து அவர்கள் அனைவரும் திருஅண்ணாமலை அன்னதான வைபவத்தில் அந்த சுவேதாக்னி சக்திகளை எல்லாம் பக்தர்களுக்கு எல்லாம் விநியோகம் செய்தார்கள் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதேபோல் கிருஷ்ணாவதாரத்திலும் தான் ஒரு நல்ல மனிதனின் கையால் மனித உடலை உகுக்க வேண்டும் என்று திருஅண்ணாமலையாரிடம் பிரார்த்தனை செய்தார் அல்லவா கிருஷ்ண பகவான் ? அவ்வாறு பிரார்த்தனை செய்த போது ஒரு தூய வெள்ளை உள்ளம் கொண்ட பக்தன் மூலமே தன் உயிர் பிரிய வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார் பகவான். இத்தகைய செயலை நிறைவேற்றக் கூடியவன் ஏகலைவன் ஒருவனே என்று தெளிந்து அவன் விரும்பியவாறு வரங்களை அளித்தார். அவ்வாறு ஏகலைவனிடம் வரம் அளித்தபோது அவன் உணவிற்காக மட்டுமே வேட்டையாட வேண்டும் என்பதையும், எந்த மிருகத்தையும் கொடுமைப்படுத்தக் கூடாது என்றும், தான் வேட்டையாடப் போகும் உயிர் விலங்குதானா என்பதையும் உறுதி செய்து கொள்ளுமாறு கூறினார். அவ்வாறு வரம் அளித்த பின் ஒரு நாள் தன் இடது கால் மேல் வலது காலை வைத்து ஒரு வில்வ மரத்தின் மேல் சயனித்திருந்தபோது கிருஷ்ண பகவானின் செந்நிற பாதங்களை மான் என தவறாகக் கருதி ஏகலைவன் அந்த “மானின்” மேல் அம்பை எய்யவே கிருஷ்ண பகவான் தனித்துணை சிவமே, வழித்துணை சிவமே, வினைத் துணை சிவமே, என்றும் துணை சிவமே என்று முழங்கி வைகுண்டம் சென்றடைந்தார். தான் வைகுண்டம் அடைந்தாலும் தன் பக்தனான ஏகலைவனுக்கு கைலாயப் பிராப்தியை பெற்றுத் தந்ததே பகவான் கிருஷ்ணரின் தியாகச் செயலாகும். அந்த தியாக சரிதத்தை அறிந்து கொள்வோமா ? கிருஷ்ண பகவானின் மேல் அம்பு எய்ததை அறிந்ததும் தன் பகவான் மீதே அம்பு எய்திய துரோகச் செயலை எண்ணி மனம் மிக வருந்தினான் ஏகலைவன். தன்னுடைய அம்பு வீழ்த்தப் போவது மானா மனிதனா என்று உறுதி செய்து கொள்ளாதது அந்த வேடனின் தவறுதானே ? தன் தவறுக்காக வருந்தி அந்த மரத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான் ஏகலைவன்.

உத்யோக நந்தீஸ்வரர் திருவைகாவூர்

ஸ்ரீவில்வவனநாதர் திருவைகாவூர்

அப்போது அவ்வழியே வந்த ஒரு விறகு வெட்டி, “என்னப்பா நன்றாக வளர்ந்த இந்த மரத்தை வெட்டலாம் என்று நான் நினைத்தால் மாலை மயங்கி இரவு வந்த பின்னரும் நீ இதைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறாயே ?” என்று கேட்டானாம். ஏகலைவன் அந்த விறகு வெட்டியின் காலில் விழுந்து தன்னுடைய செயலை விவரித்தானாம். அந்த விறகு வெட்டி வேறு யாரும் அல்ல, சாட்சாத் ஸ்ரீஅகத்திய மகா பிரபுவே அவர். ஸ்ரீஅகத்திய பிரான் அந்த வில்வ மரத்தைச் சுட்டிக் காட்டியதுமே ஏகலைவனுக்கு அனைத்துப் பழைய நிகழ்ச்சிகளும் பளிச்சென புரிய ஆரம்பித்தன. ஏகலைவன் பகவான் கிருஷ்ணரை தரிசனம் செய்து இழந்த தன்னுடைய கட்டை விரலை மீண்டும் பெற விழைந்தான். ஆனால் அவன் சாதாரண ஒரு வேடன் என்பதால் அவனால் சக்கரவர்த்தியான பகவானை தரிசனம் செய்ய பகவானின் காவலாளிகள் அவனை அரண்மனை உள்ள போக அனுமதிக்கவில்லை என்றே முதலில் நினைத்தான். தற்போது ஸ்ரீஅகத்திய பிரான் அந்த வில்வ மரத்தைப் பற்றிக் கூறியபோதுதான் பகவான் கிருஷ்ணர் அந்த வில்வ மரத்தினடியில் தன்னை சந்தித்து தான் இழந்த கட்டை விரல் சக்திகளை அளித்தார் என்பதையும் அதே வில்வ மரத்தில் சயனித்துதான் வைகுண்டம் அடைந்தார் என்பதையும் உணர்ந்து கொண்டான். ஸ்ரீஅகத்திய பிரான் வேடனைத் தேற்றி காட்டு விலங்குகளின் தொந்தரவு அதிகமாக இருப்பதால் அந்த மரத்தின் மேலேறி வில்வ இலைகளைப் பறித்து பகவான் கிருஷ்ணரின் திருவடிகளை நினைத்து மானசீகமாக அர்ச்சிக்கும்படி அருளி மறைந்தார். “இவ்வாறு ஒவ்வொரு தலமாக அர்ச்சித்துக் கொண்டே வந்தால் எங்கு பக்தியும் பணிவும் கைகோர்த்து நிற்கிறதோ அங்கு நீ உன் தலைவனுடன் கைகோர்த்து செல்வாய்,” என்பதே ஸ்ரீஅகத்திய பிரானின் வாக்கு. ஏகலைவனும் பல சிவத் தலங்களில் வில்வ தளங்களால் பகவான் கிருஷ்ணரின் திருவடித் தியானத்துடன் அர்ச்சனை செய்து கொண்டே வந்தான். ஒவ்வொரு திருத்தலத்திலும் ஏகலைவன் வில்வ மரத்தின் மீது ஏறி பூஜை செய்து கொண்டிருந்த இரவு நேரத்தில் எல்லாம் பகவான் கிருஷ்ணரோ அந்த மரத்தடியில் எட்டடி நீளம் உள்ள வேங்கையாய் காவல் கொண்டு அந்த பூஜையை நிறைவு செய்வாராம். இதுவே பக்தனுக்காக பரமன் மேற்கொண்ட கிருஷ்ண லீலை. இவ்வாறு வில்வ தளங்களால் அர்ச்சித்துக் கொண்டே வந்த ஏகலைவன் திருவைகாவூர் திருத்தலத்தை அடைந்து அங்குள்ள வில்வ மரத்தில் ஒரு இரவுப் பொழுதில் வில்வ அர்ச்சனையை நிறைவேற்றினான். விடிந்து பார்த்தால் கைலாய பூத கணங்கள், தேவ கணங்கள் அனைத்தும் அவனை வில்வ மரத்திலிருந்து சகல மரியாதையுடன் இறக்கி திருக்கைலாயத்திற்கு அழைத்துச் சென்றனராம். இதுவே தூய தன்னலமற்ற வெள்ளை உள்ளத்திற்கு இறைவன் அளித்த மிக உயர்ந்த தெய்வீகப் பரிசு. ஏகலைவனுக்கு வரவேற்பு அளிக்கும் முகமாக திருவைகாவூர் திருத்தல துவார பாலகர்களும் ஏகலைவனுடன் சென்றார்களாம். இக்காரணம் குறித்தே திருவைகாவூர் திருத்தலத்தில் துவார பாலகர்களின் தரிசனம் கிட்டுவதில்லை.

ஸ்ரீஅகத்திய பிரான் திருவைகாவூர்

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருவைகாவூர்

பிரம்மா, விஷ்ணுவுடன் கோலேந்திய தட்சிணா மூர்த்தியும் கிழக்கு திசை நோக்கி எழுந்தருள நந்தி எம்பெருமானும், அம்பிகையும் அம்பிகையின் நந்தி மூர்த்தியும் ஏகலைவன் கைலை செல்லும்போது விடை கொடுத்து அருளிய காட்சியையே திருவைகாவூர் திருத்தலத்தில் இன்றும் நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். உன்னத பக்திக்கு உத்தமர்கள் அளிக்கும் வரவேற்பைப் பார்த்தீர்களா ? மீண்டும் ஒரு ஏகலைவன் வரமாட்டானா என்ற ஏக்கத்துடன் இன்றும் நந்தி காத்திருக்கிறாராம் ? அவர் நியாயமான பிரார்த்தனையை நிறைவேற்றுவது உங்கள் கையில்தான் இருக்கிறது. வைகம் என்றால் பக்தி, பணிவு என்று பொருள். இந்த இரு அற்புதங்களும் கைகோர்த்து நிற்கும் தலமே திருவைகாவூர் ஆகும் என்பது இப்போது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும். பகவான் கிருஷ்ணர் தன் பக்தன் திருக்கைலாயத்தில் வாசம் பெறுவதற்காக எந்த அளவிற்கு பாடுபட்டுள்ளார் என்பது உங்களுக்குத் தெளிவாகின்றது அல்லவா ? ஒரு இறை அவதாரத்தின் லீலையே இத்தகைய சிறப்புடன் விளங்குகிறது என்றால் ஒரு சற்குருவின் தியாகம் எவ்வளவு உயர்ந்ததாக மலரும் ? இந்த பாரத கண்டம் முழுவதையும் மூன்று முறை நடந்தே யாத்திரை செய்து தன் பரமகுரு ஸ்ரீஇடியாப்ப சித்தருடன் திருத்தலங்களை தரிசனம் செய்தவரே நம் சற்குரு வெங்கடராமன் ஆவார். அவ்வாறு மூன்று முறை திருத்தலங்களை தரிசனம் செய்த போது ஏகலைவன் பூஜித்த மூன்று வில்வ மரத் தளங்களைக் கொண்டு இறைவனைப் பூஜித்து அந்த லட்சுமி கடாட்ச சக்திகளை எல்லாம் தான் நிறைவேற்றிய அன்னதானத்தில் விநியோகம் செய்தார் என்பதே நம் சற்குருவைப் பற்றிய அறிந்து கொள்ள வேண்டிய தெய்வீக இரகசியமாகும். துவார கை, வை காவூர் என்ற ரீதியில் சிந்தித்தால் அந்த மூன்றாவது வில்வ மரம் பற்றிய இரகசியத்தையும் அறிந்து பயன் பெறலாம் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதல். சிவராத்திரி, மாத சிவராத்திரி என்று அல்லாது எந்த நாளில் இரவு பூஜையிலும் திருவைகாவூர் ஈசனை மூவிதழ் வில்வ தளங்களால் அர்ச்சிக்கும் பலனை இன்னும் விவரிக்க வேண்டுமா என்ன ? பணிந்தவனே பக்தன் என்ற நம் சற்குருவின் பணிவுக்கு இலக்கணம் கற்பித்த, கற்பிக்கும் தலமே திருவைகாவூர் ஆகும். பொதுவாக, பக்தர்கள் கீழே இருக்க இறைவன் உயர்ந்த ஆசனத்தில் வீற்றிருப்பதே பக்தியின் இலக்கணம். இது ஒரு வேளை சாதாரண பக்தியின் இலக்கணமாக இருக்கலாம். ஏகலைவன் தன் உயிருக்கும் மேலான கிருஷ்ண பகவானை நினைத்து அவர் மலரடிகளை வில்வத்தால் அர்ச்சனை செய்ய அந்த வில்வ தளங்களை தான் ஏற்காமல் அந்த உன்னத பக்திக்கு உரியவன் சிவன் ஒருவனே என்று வில்வ வனத்தில் வாசம் கொண்ட ஈசனுக்கு அர்ப்பணித்த கிருஷ்ண பகவானின் பக்திக்கு இணையாக எதைத்தான் சுட்டிக்காட்ட முடியும். அதனால்தான் என்னவோ பகவான் கிருஷ்ணர் கைலாயத்திற்கும் விஞ்சிய பல லோகங்களை ஆளும் பெருமை பெற்றாரோ ? இதுதான் பக்தியின் உச்ச நிலை என்றால் இந்த வழிபாட்டு முறையைக் கேளாமலே தொட்டுக் காட்டிய வித்தையாக அளித்த நம் பரமேஷ்டி குரு அகத்திய பிரானின் பக்திக்கு இணை ஏது, ஏது ? வில்வ தளத்தில் லட்சுமி வாசம் செய்வதால் வில்வார்ச்சனை லட்சுமி கடாட்ச சக்திகளை அளிக்கும் என்பது உண்மையே. திருவைகாவூர் திருத்தலத்தில் பொலியும் மூவிதழ் வில்வங்கள் குரு, பரமகுரு, பரமேஷ்டி குரு என்ற தத்துவங்களுக்கு உரியதாக வில்வ தளமாக அமைந்திருப்பதால் இது வேறு எந்த தலத்திலும் கிட்டாத அபூர்வ குரு சக்தியாக மிளிர்வதால் பக்தியைப் பெருக்கிக் கொள்ள விரும்பும் பக்தர்கள் நாட வேண்டிய பக்தித் தலமே திருவைகாவூர் ஆகும். இவ்வாறு மூன்று தலங்களின் முத்தாய்ப்பாக அனுகிரகத்தைப் பெற்றவர் கிருஷ்ண பகவான் மட்டுமல்ல, நம் சற்குரு பகவானும்தான். இவ்வாறு மூன்று திருத்தலங்களில் நிறைவேற்றிய வில்வார்ச்சனையின் பலனாக திருஅண்ணாமலையில் ஈசான்ய லிங்கம் என்ற எட்டாவது லிங்கத்தின் எதிரே ஈசான்ய சித்தராய் எட்டிற்கு குசாவான பதினாறு அடி வேங்கையுடன் உலா வந்தார் நம் சற்குரு என்பதும் ஒரு சிலரே அறிந்த ஈசான்ய இரகசியமாகும்.

ஸ்ரீசர்வஜன அம்மன் திருவைகாவூர்

வளைந்த கையும் வளையாத கோலும்
பிளந்தகுறியும் பரத்தைக் காட்டுமே
என்பது திருவைகாவூர் தலத்திற்கான சித்தச் சுவடிப் பாடலாகும். பொதுவாக பிளந்தகுறி என்னும் ஆடை பெருமாளுக்கே உரியது என்றாலும் இத்தலத்தில் பெருமாளே பரம பக்தனான ஏகலைவனால் பூஜிக்கப்பட்ட வில்வ தளங்களை இறைவனுக்கு அர்ச்சித்து பூஜை நிறைவேற்றியதால் பிளந்தகுறி என்னும் பெருமாளுக்கு உரிய ஆடையும் சிவனுக்கு உரியதாக ஆயிற்று என்பதே மேற்கண்ட சுவடிப் பாடலின் மேலோட்டமான அர்த்தமாகும். இத்தல ஸ்ரீசர்வஜன அம்மன் வளைக்கை நாயகியாக போற்றப்படுவதால் சுமங்கலிப் பெண்களும் திருமணமாகாத கன்னிப் பெண்களும் இத்தல அம்பிகைக்கு நிறைய வளையல்களை அளிப்பதுடன் தாங்களும் கைக்கு 32 கண்ணாடி வளையல்களை அணிந்து இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனை மூவிதழ் வில்வங்களால் பூசித்து பூசை நிறைவில் இத்தலத்திலோ அல்லது தங்கள் ஊரில் உள்ள திருத்தலங்களிலோ உரிய மாங்கல்ய பொருட்களுடன் இந்த வளையல்களில் ஒரு பகுதியை தானமாக அளித்தல் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் மிகச் சிறந்த வழிபாடாக அமைகிறது. பும்சவனம், சீமந்தம், வளைகாப்பு, பூப்பு எய்தல் போன்ற வைபவங்களின்போது இவ்வாறு பூஜைகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும் அம்பிகைக்கு வளையல்களை அணிவித்து அவற்றை தானமாக அளித்தலால் குடும்ப ஒற்றுமை பெருகுவதுடன் தம்பதிகள் நல்ல சந்தானங்களைப் பெறவும் இத்தகைய வழிபாடுகள் துணை புரியும். செங்கோல் என்பது ஈடு இணையற்ற அதிகாரத்தைக் குறிக்கும். இக்காரணத்தால்தான் செங்கோல் ஏந்தி துலங்கும் அதிகார நந்தி அருளும் தலங்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் அனைரும் வணங்கத் தக்க திருத்தலங்களாக விளங்குகின்றன. அப்படி இருக்கும்போது இங்கு இறைவன் தட்சிணா மூர்த்தி பெருமானே செங்கோலுடன் காட்சி தருகின்றார் என்றால் மாமன்னர்களும், சக்கரவர்த்திகளும், பெரும் பணக்காரர்களும், அரசியல் பிரமுகர்களும், குரு மகா சன்னிதானங்களுமே வணங்கி அருள் பெறக் கூடிய திருத்தலமே திருவைகாவூர் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா ? சுகப் பிரசவமே நிகழ்ந்தாலும் சில பெண்களுக்கு கர்பப்பையின் வாய் சரியாக மூடாததால் அதனால் பல பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும். வெளியே சொல்ல முடியாத இத்தகைய வேதனைகளுக்கும் தீர்வு அளிப்பதே மேற்கண்ட வழிபாடும் தான முறையும். இதற்கான சுவடிப் பாடல் இதோ. “பிளந்தகுறியும் இணைந்து மூடுமே பேதையவள் அதரங்கள் மௌனம் பூணுமே”. “இந்த ஒரு சுவடிப் பாடலை விளக்கிச் சொன்னாலே போதும் அடியேனுக்கு தங்கச் சிலை செய்து வைத்து விடுவார்கள் அயல்நாட்டில் (அமெரிக்கா), போகட்டுமா ?” என்று கேட்பார் நம் சற்குரு மௌனப் புன்னகையுடன்.

ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி திருவைகாவூர்

திருவைகாவூர் திருத்தலத்தில் முருகப் பெருமானின் மயில் வாகனம் வழக்கத்திற்கு மாறாக சுவாமியின் இடப்பக்கத்தை பார்த்தவாறு உள்ளது. இதன் பின்னால் உள்ள சுவையை அறிந்து கொள்ளலாமா ? ஏகலைவன் சிவராத்திரி பூஜையாக மூவிதழ் வில்வங்களால் பெருமாளுக்கு அர்ச்சனை செய்தான் அல்லவா ? இத்துடன் அம்பிகையும் கண்ண பிரானும் சேர்ந்து கொண்டதால் இந்த அற்புத காட்சியைக் காண பிரம்ம தேவர், ரிஷிகள், பூத கணங்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ இந்திரன் என அனைவருமே திருவைகாவூர் திருத்தலத்தில் குழுமியதால் இத்தலமே கோலாகலமாயிற்று. இந்தக் கோலாகலக் காட்சியைக் காண ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியின் மயில் வாகனமும் விழைந்தது தவறு அல்லவே ? அவ்வாறு சுவாமியின் அனுமதியைப் பெற்று ஏகலைவனின் சிவ பூஜையை மயில் வாகனம் தரிசித்த காட்சியையே திருவைகாவூர் திருத்தலத்தில் இன்றும் பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். இதனால் ஏதோ ஒரு பிறவியில் இறைவனை மறுத்துக் கூறிய பாவமும், இறைவனை எதிர்த்து நிந்தித்தப் பாவங்களும் மறைந்து இறை பக்தி வளர முருகப் பெருமானின் அருள் கனியும். “மால்மருகன் மயிலின் பார்வை மாலை நோக்க மாலின் பார்வையோ மன்னவனை நோக்கியதே”, என்று முருகப் பெருமானின் வாகனமான மயில் பெருமாள் பூஜை செய்த அழகை நோக்க பெருமாளோ பரம்பொருளின் பக்தியில் மயங்கி கைலாயம் பயணம் கொண்ட பக்தனான ஏகலைவனின் தரிசனத்தில் மூழ்கித் தன்னை மறந்து நின்றாராம். பக்தியில் மூழ்கித் தன்னை மறப்பவன்தானே பக்தன். “தன்னை அறிந்தால் தன்னலம் புரியும் தன்னலம் மறைந்தால் பெரும் பேரின்பம்,” என்று பேரின்பம் பெறும் வழியை அடிக்கடி தன் தேனினும் இனிய குரலால் பாடிக் காட்டுபவரே நம் சற்குரு ஆவார். இவ்வாறு தன்னலம் மறந்து, மறைந்து இறை இன்பத்தில் திளைக்க அருள் புரியும் முதன்மையான தலமே திருவைகாவூர் ஆகும். இத்தலத்தில் மறையாத தன்னலம் வேறு எத்தலத்திலும் மறையாது என்பார் நம் சற்குரு. தன்னலம் மறப்போம் பிறர் நலம் பேணுவோம் என்ற சூளுரையை பக்தர்கள் ஏற்று அதன்படி நடக்க அருள்புரியும் ஒப்பற்ற தலமே திருவைகாவூர் திருத்தலமாகும். வைகம் என்ற பணிவே, பக்தியே, அடக்கமே ஊராகத் திரண்டு நின்றால் அது எத்தகைய சிறப்புடையதாக இருக்கும் ?

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam