தென்புலத்தார் சீராட்டும் தென்னலத்தான் !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

என் கடன் பணி செய்து கிடப்பதே

சிதம்பரம் அருகே அப்பர் பெருமானால் உழவாரத் திருப்பணிகள் நிறைவேற்றப்பட்ட திருத்தலமே தென்கடம்பை திருக்கரக்கோயிலாகும். இறைவன் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர், இறைவி ஸ்ரீஜோதி மின்னம்மை. மதுரை, குளித்தலை போன்ற திருத்தலங்கள் கடம்ப மரத்தை தலவிருட்சமாகக் கொண்டுள்ளதாக சிறப்பிக்கப்பட்டாலும் மேலைக்கடம்பூர் திருத்தலத்திற்கு உள்ள தனிப்பட்ட சிறப்பே இத்தல விருட்சம் அமிர்தம் என்னும் சாகா வரம் தரும் அனுகிரகத்தைப் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கும் சக்தியைப் பெற்றதே ஆகும். இதை உறுதி செய்வதாகவே இத்தல ஈசனும் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் என்னும் திருநாமத்துடன் திகழ்கிறார். இத்தல ஈசனின் பெருமையைப் பாராட்டுவதாக,

கடம்பூர் சிவாலயம்

நம் கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென் கடம்பை திருக்கரக் கோயிலான்
நின் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணி செய்து கிடப்பதே

என்று பாடி ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி அப்பெருமான் இருந்ததை அனைவரும் அறிவர். ஆனால், இந்த குரு கவிதையின் பொருளை உணர்ந்து அப்பர் பெருமான் போல் சிவ கருணையில் மூழ்கித் திளைக்க வேண்டுமானால் இறையடியார்கள் இத்தலத்தில் மட்டுமே ஒரு யுகம் திருப்பணி ஆற்ற வேண்டும் என்பது உண்மையே. காரணம் பிறவிப் பிணியை அறுத்து பேரருள் பக்தி வெள்ளத்தை அளிப்பது மேற்கூறிய அப்பர் பெருமானின் தேவார வாசகங்கள் மட்டுமல்ல, இத்தலத்தில் நாம் நிறைவேற்றும் ஒவ்வொரு வழிபாடும் இத்தகைய இறைபக்தியை ஊட்டும் தன்மையுடன் செறிந்திருப்பதே ஆகும். நடைமுறையில் இறை வழிபாட்டில் முன்னேறிச் செல்லும் அடியார்கள் எதைப் பெருக்குகிறார்களோ இல்லையோ தன்னை விட இறை பக்தியில் சிறந்தவன் வேறு எவரும் இல்லை என்ற எண்ணத்தை நிச்சயமாகப் பெருக்கிக் கொள்கிறார்கள். இது குருவருள் இன்றி வேறு எந்த உபாயத்தாலும் நீக்க முடியாத அகந்தை என்பது உண்மை, உண்மையே. இதை அடியார்கள் உணரும் இடமே, திருத்தலமே கடம்பை திருக்கரக்கோயிலாகும். இதை உணர்ந்துதான் அப்பர் பெருமான் பணி செய்து “கிடத்தலே” பக்தியின் ஆணிவேர் என்று சுட்டிக் காட்டுகிறார். பணி செய்தல் என்பது பெரும்பாலோருக்கு சாத்தியமே என்றாலும் “கிடத்தல்” என்று முழுவதுமாக தன்னை இறைவனிடத்தில் அர்ப்பணித்தல் என்பது குருவருளால் மட்டுமே சாத்தியமாகும் ஒரு நிலையே என்பதே உண்மை. இதை இறை அடியார்கள் உணர்ந்து கொள்ள அவர்களுக்கு உறுதுணையாக நிற்பதே இத்தலத்தில் அவர்கள் நிறைவேற்றும் வழிபாடாகும். பக்தி என்பது ஒரு அடியார் இறைவன் மேல் கொள்ளும் அன்புதானே ? ஆனால் தான் என்பது யார், என்ன என்பதை உணராதவரை பக்தி என்ற நிலை கனியவே கனியாது அது காயாகவே கிடக்கும் என்பதே ஆன்றோர்கள் அளிக்கும் அருளுரை. இந்த பக்தியைக் கனிய வைக்க அதாவது பக்தி என்ற தங்கத்தை புடம் போட்ட தங்கமாக மிளிர வைக்க உதவும் தலமே கடம்பூர் என்றால் மிகையாகாது. இவ்வாறு பக்தியில் விளைந்த கனியின் சுவையை பலருக்கும் பகிர்ந்தளிக்க, அப்பர் பெருமான் அடியார்களுக்கு விநியோகம் செய்ய மேற்கொண்ட யாத்திரையே கயிலை யாத்திரை ஆகும். ஆனால் இறைவனோ நீ கயிலை வரை சென்று சிரமப்பட வேண்டாம். இல்லறத்தில் பூக்கும் நல்லறமே பக்தி என்ற ஆழ்ந்த மணத்தைப் பரப்பும் என்று அப்பர் பெருமானின் பக்தி நிலையை நெறிப்படுத்தி குடும்ப ஒற்றுமை என்ற தார்மீக நிலையை அவருக்கு திருவையாற்றில் சுட்டிக் காட்டினார். இவ்வாறு இறைவன் சுட்டிக் காட்டிய இல்லறத்தை நல்லறமாக கைக்கொண்டாலே போதும் பக்தி கனியை எளிதாகப் பறித்து ஆசை தீர சுவைக்கலாம் என்ற பேருண்மையை உணர்த்துவதும் கடம்பூர் திருத்தலமாகும்.

விளக்கேற்றும் மருமகள்

அப்பர் பெருமான் தேவாரத்தின் முதல் வரியே நம் கடம்பனைப் பெற்றவள் என்று பராசக்தியைப் பாராட்டுகிறது அல்லவா ? ஆனால், அனைவரும் இறைவனின் முக்கண் சோதியே முருகப் பெருமானாக மலர்ந்தது என்பதை அறிவோம். இதை சற்றே கூர்ந்து நோக்கினால்தான் இறைவனின் அருட் சக்தியே முருகப் பெருமான் என்னும் குழந்தையாக மலர்ந்தது என்ற பேருண்மையை உணர முடியும். எனவே இறைவனின் சக்தி பூரிக்கும் திருத்தலமே கடம்பூர் என்பது தெளிவாகும். அதனால்தான் திருமணமான மணமக்கள் இத்தல இறைவனையும் இறைவியையும் வணங்கி இத்தலத்தில் ஐந்து முக தீபத்தை ஏற்றி இறைப் பரம்பொருளை ஜோதியாக வணங்கி இந்த சோதி சக்தியை தங்கள் இல்லத்தில் இல்லறத்தில் தொடர வேண்டும் என்ற பாரம்பரியம் தொடர்ந்தது, இன்றும் தொடர்கிறது. எனவே இறைவனிடமிருந்து பெறும் ஜோதி சக்தியாக, தாய்மை என்னும் மின்சக்தியாக பெண்கள் உடலில் சேர்ந்து அது குழந்தை என்னும் அருட் பிரசாதமாக கனிகிறது என்பதே உண்மை. இந்த உண்மையை மணமான அனைவரும் உணர வழிவகுப்பதே கடம்பூர் திருத்தல வழிபாட்டு மகிமையாகும். முற்காலத்தில் மணமக்களுக்கு அளிக்கும் சீர் என்பதில் ஒரு ஐந்து முக மங்கள விளக்கு அவசியம் இடம் பெற்றதன் காரணம் இதுவே. இவ்வாறு கடம்பூர் திருத்தலத்தில் இறைவியின் பிரசாதமாகப் பெற்ற ஐந்து முகக் குத்து விளக்கை தங்கள் இல்லத்தில் ஏற்றி வைத்து அந்த விளக்கொளியில்தான் தம்பதிகளின் தாம்பத்யம் நிறைவேறியது. அதனால்தான் உத்தமர்களின் எண்ணிக்கை அக்காலத்தில் மிகுதியாக இருந்தது என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால், தற்காலத்தில் பலரும் இந்த இறை இரகசியங்களை உணரா விட்டாலும் திருமணமான அன்று ஹோமம் நிகழ்த்தி அந்த ஹோம தீபத்தில் இருந்து பெறப்பட்ட அக்னியால் மணப்பெண்ணைக் கொண்டு இல்லத்தில் தீபம் ஏற்றும் வழக்கத்தை சில இல்லங்களில் நிறைவேற்றி வருகின்றனர். எனவே முறையான சந்தான பாக்கியத்தைப் பெற பெரியோர்கள் காட்டிய மேற்கூறிய வழிமுறைகளை அறிந்திராவிட்டாலும் இனியாவது தங்கள் இல்லத்திலிருந்து ஐந்து முக குத்து விளக்கை தம்பதிகள் கொண்டு வந்து கடம்பூர் திருத்தலத்தில் இறைவியின் சக்தி பிரசாதமாகப் பெற்று குறைந்தது இரண்டு மணி நேரமாவது (5 நாழிகை) இத்திருத்தலத்தில் வழிபட்டு அந்த குத்துவிளக்கைக் கொண்டு தங்கள் இல்லத்தில் தீபம் ஏற்றி வந்தால் கிட்டும் பலன்கள் அமோகம்.

ஸ்ரீஆலிங்கன மூர்த்தி கடம்பூர்

குடும்ப ஒற்றுமை, சந்தான பாக்கியம், பொருள் சேர்க்கை போன்ற பல நற்காரியங்களுக்கு உறுதுணையாக அமைவதே மேற்கூறிய தீப வழிபாடு ஆகும். இதில் இன்னும் எத்தனையோ வழிபாட்டு முறைகள் உள்ளன. அவற்றை தக்க சற்குரு மூலம் உணர்ந்து கடைபிடித்தலால் வாழ்வில் கிடைத்தற்கரிய அனைத்து நலன்களையும் பெறலாம் என்பது உண்மையே. குருவைப் பெறுதல் என்பதே தற்காலத்தில் அரிதான விஷயமாக இருக்க தக்க சற்குருவைப் பெறுதல் என்பதை மக்கள் நினைக்கத்தான் முடியுமா ? காரணம் தவறு குருவின் மேல் கிடையாது, குருவை நாடும் சீடர்கள் தகுந்த குருவைத் தேடும் ஆர்வம் இல்லாமல் இருப்பதே காரணம் என்பதே பெரியோர்கள் கூற்று. குரு அமையாத பலரும் தாறுமாறான ஜாதகப் பொருத்தங்களால் முறையான இல்வாழ்க்கை அமையாது தடுமாறுகிறார்கள். ஆனால், அதற்காக இறையருளால் தற்போது அமைந்த இல்லற பந்தத்தை மாற்ற முடியாது, மாற்றக் கூடாது என்பதும் உண்மையே. இந்நிலையில் கடம்பூர் திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீஆலிங்கன மூர்த்தியை வழிபட்டு அடர்த்தியாக சாம்பிராணி தூபமிட்டு வந்தால் எத்தகைய இல்லற குறைபாடும் மாறி அமைந்து குடும்ப வாழ்க்கை ஒரு பூஞ்சோலையாக மலரும் என்பதும் உண்மையே. உயரம், நிறம், உடல் பருமன், படிப்பு, கௌரவம், அந்தஸ்து, வறுமை போன்ற பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் தம்பதிகள் இடையே நிலவும்போது சகஜ சூழ்நிலை மாறி குடும்ப உறவில் புயல் வீசும் என்பது உண்மை ஆயினும் சித்தர்கள் கூறிய இம்முறையில் கடம்பூர் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றி ஸ்ரீஆலிங்கன மூர்த்தியை வணங்கி வருவோர் தங்கள் குறைபாடுகள் நீங்கப் பெறுவார்கள். குறைபாடு நீங்கப் பெறுதல் என்றால் கறுப்பாக இருக்கும் மணமகளோ மணமகனோ சிவப்பாக மாறுவார்கள் என்று பொருள் கிடையாது. நமக்கு அமைந்த துணை இறையருளால் ஏற்படுத்தப்பட்டதே என்ற தெய்வீக பேருண்மையை உணர்ந்து கொண்டாலே மனம் அடங்குமே, அமைதி கொள்ளுமே. இந்த அமைதியை ஏற்படுத்துவதே கடம்பூர் திருத்தல வழிபாடு என்பதில் ஐயமில்லை. எத்தகைய ஏற்றத் தாழ்வுகள் குடும்பத்தில் நிலவாதபோதும் அத்தகைய தம்பதிகளும் மேற்கூறிய வழிபாடுகளால் பயனடைவர் என்பது உண்மையே. அவர்கள் இடையே நிலவும் பரஸ்பர அன்யோன்யம், அன்பு இத்தகைய வழிபாட்டால் அதிகரிக்கும். உண்மையில் பல தம்பதியர்கள் பரஸ்பர அன்பு ஒன்று என்ற ஒன்றையே அனுபவிக்காது இருக்கிறார்கள் என்பதே சித்தர்கள் உணர்த்தும் உண்மையாகும். கேட்பதற்கே வியப்பாக இருக்கும் பரஸ்பர அன்பு, தாம்பத்ய அன்யோன்யம் என்ற உண்மைகளை உணர்த்துவதும் கடம்பூர் வழிபாட்டு மகிமைகளில் ஒன்றாகும். அனுபவித்தால்தான் ஆழம் புரியும், அன்யோன்யம் மலரும். பரஸ்பர அன்பு என்பதே ஒருவித லட்சுமி கடாட்சமே. இந்த லட்சுமி கடாட்சத்தை ஸ்ரீகிருஷ்ண பகவானின் அனுகிரகமாக முழுமையாகப் பெற்றவனே அர்ச்சுனன் ஆவான். இரவில் மலரும் அல்லி மலர்களால் ஸ்ரீஆலிங்கன மூர்த்திக்கு மாலை தொடுத்து வழிபடுவதால் தம்பதிகள் இடையே அன்யோன்யம் பெருகும். பகவான் கிருஷ்ணரின் அறிவுரையின்படி அர்ச்சுனன் மனைவியான அல்லி, அல்லி மலர்களால் ஸ்ரீஆலிங்கன மூர்த்திக்கு மாலையிட்டு வணங்கி அர்ச்சுனனின் உண்மையான அன்பைப் புரிந்து கொண்டாள் என்பது கிருஷ்ண கீதை. இவ்வாறு தம்பதிகள் இடையே ஏற்படும் எத்தகைய மன வருத்தங்களையும், மன வேற்றுமைகளையும் களைந்து குடும்பத்தில் அன்யோன்யத்தை ஏற்படுத்துவதே இத்தலத்தில் நிறைவேற்றும் அல்லி, தாமரை மலர்கள் வழிபாடு ஆகும்.

ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி கடம்பூர்

தனித்து வாழும் பெண்களும் ஆண்களும் தாங்கள் வாழ்வில் நிராகரிக்கப்பட்டதாகவே நினைத்து மன வேதனையுடன் வாழ்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் இறைவனின் அரவணைப்பு நிச்சயம் உண்டு என்பதை உணர்ந்தால் அவர்கள் வாழ்வில் வெறுமை என்ற உணர்வு நெருங்கவே நெருங்காது. இத்தகைய மன நிறைவுக்கு வழி வகுப்பதே கடம்பூர் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீசனீஸ்வர பகவானின் வழிபாடு ஆகும். கூரிய கண் பார்வையுடன் திகழ்வதுதானே கழுகு ? ஆனால், அது தன்னுடைய பார்வையால் மற்ற விலங்கினங்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளை பெற்றுத் தருவதிலேயே தன்னுடைய நேரத்தைக் கழிக்கிறது என்பதை உணர்ந்தால் வயதான ஆணோ பெண்ணோ வெறுமையை உணர்வார்களா என்ன ? இங்குள்ள சக்தி தீர்த்தத்தில் தினமும் பொழுது புலர்வதற்கு முன் அமர்ந்து பொழுது விடியும் வரை இத்தீர்த்தக் கரையில் வழிபாடுகளை இயற்றி, குளத்தில் நீராடுதல், முடியாவிட்டால் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்தல், காயத்ரீ ஜபம், சந்தியா வந்தனம் போன்ற வழிபாடுகளை நிறைவேற்றி நன்கு விடிந்த பின் கோயிலுக்குள் சென்று சர்க்கரைப் பொங்கல் தானம், நைவேத்யத்துடன் ஸ்ரீசனீஸ்வர பகவானை வழிபடுவதால் வாழ்வில் புது தெம்பையும் பிடிப்பையும் அனைவரும் உணர்வார்கள். குறிப்பாக தனித்து, துணையின்றி வாழ்வோரும் வாடுவோரும் உற்சாகம், உரிய பாதுகாப்பு பெறுவார்கள். சரியான வீடு, வாகனம், தொழில் போன்ற வசதி வாய்ப்புகள் பெறாதோரும் நன்னிலை அடைவர். வெண்கடம்பு வினை தீர்க்கும் என்ற வாக்கு உண்மையே. வெண்கடம்பு என்பதற்கு உதய நேரத்தில் சிறப்பாக ஞாயிற்றுக் கிழமை அதிகாலையில் பெறும் தரிசனம் என்றும் பொருள் உண்டு. கழுகு வாகனமும் இத்தல ஸ்ரீசனீஸ்வர பகவானுக்கு உரித்தானதே என்பதை இத்தல வரலாற்றின் மூலம் உணரலாம். மதுரை பொற்றாமரைக் குளத்தில் மலரும் ஒரே ஒரு தாமரை மலரின் அபராஞ்சித தங்க சக்தியைக் கொண்டு இந்தியாவையே விலைக்கு வாங்கலாம் என்றால் இத்தலத்தில் மலரும் நூற்றுக் கணக்கான தாமரை மலர்களைக் கொண்டு எத்தனை இந்தியாவை வாங்கலாம் என்று சற்றே கணக்கிட்டுப் பாருங்கள். நாம் இந்தியாவை விலைக்கு வாங்குகிறோமோ இல்லையோ வயதான காலத்தில் நல்ல கண் பார்வையும் பாதுகாப்பான வாழ்வையும் பெற்றால் போதுமே. அதை விட வேறு சிறப்பு என்ன வேண்டும் ? மதுரையை ஆண்ட செண்பக பாண்டியன் தன்னுடைய ராணியின் கூந்தலில் விளைந்த மணம் இயற்கையானதா இல்லை மலர்களைச் சூடுவதால் ஏற்பட்ட செயற்கை மணமா என்று அறிவதற்காக ஒரு போட்டியை அறிவித்ததாக திருவிளையாடல் புராணத்தில் கேள்விப்பட்டிருக்கிறோம். மேலோட்டமாகப் பார்த்தால் நாட்டை ஆளும் மாமன்னன் பெண்கள் கூந்தலை ஆராய்ச்சி செய்வதில் ஈடுபட்டுள்ளான் போலிருக்கிறதே என்று எண்ணத் தோன்றும். உண்மையில் தன் கணவனை மட்டும் நேசிக்கும் பெண்களுக்கு அபராஞ்சித மணம் என்ற ஒரு மணம் அவர்கள் கூந்தலில் வீசும். இந்த அபராஞ்சித மணத்தை இயற்கையாகவே பூர்வ ஜன்ம பலனால் பெற்ற பெண்களே ரஞ்சிதம் என்று அழைக்கப்படுவர். இந்த ரஞ்சித, அபராஞ்சித மணம் வீசும் கூந்தலில் வீசும் மணத்தை உணரக் கூடியவர்களே தம் மனைவியின் மேல் உள்ளன்பு கொண்ட கணவனாக அமைகிறார். இந்த இரு புனித உள்ளங்களை, புனித மணம் வீசும் உள்ளங்களை இணைக்கும் இனிய நிகழ்ச்சியே திருமணம் ஆகும். எனவே தன் நாட்டில் இந்த ரஞ்சித மணத்தை உணர்ந்த எத்தனை இறை அடியார்கள் பரிணமிக்கிறார்கள் என்று அறிந்து கொள்தல் ஒரு மாமன்னனின் தலையாய கடமை அல்லவா ? இதை உணர்த்துவதே செண்பக பாண்டியனின் வரலாறு ஆகும். இந்த ரஞ்சித மணம் வீசும் கூந்தலை உடைய அடியார்களுக்கே மாதம் ஒரு முறை வருண பகவானும் தன் கருணை மழையைப் பொழிந்தார்.

வைகல் மாடக்கோயில்

காலையில் சூரிய உதயத்திற்கு முன் தன் கணவனின் பாதங்களைத் தொட்டு வணங்கும் பெண்கள், தன் கணவனுக்கு வாரம் இரு முறையாவது பாத பூஜை செய்யும் பெண்கள் இத்தகைய ரஞ்சித மணத்தை எளிதில் பெற முடியும். இவ்வாறு கிட்டும் ரஞ்சித மணத்திற்கு வைகல் என்ற பெயரும் உண்டு. வைகல் மாடக் கோயிலில் உறையும் அம்பிகை இயற்கையாகவே இத்தகைய வைகல் மணம் வீசும் தேவியாகத் திகழ்வதால் திருமணமாகாத கன்னிப் பெண்களும், மணமான பெண்களும் இந்த அம்பிகையை வழிபட்டு வருதலால் நல்ல கணவன்மார்கள் அமையவும் மணமான பெண்களுக்கு குடும்ப அன்யோன்யம் அமையவும் இத்தகைய வழிபாடு உறுதுணையாக அமையும். இத்தலத்தில் செண்பக மரம் தலவிருட்சமாக அமைந்துள்ளது இறை சக்தியின் எத்தகைய முனனேற்பாடு என்பது இப்போது ஓரளவு புரிகின்றது அல்லவா ? தன்னுடைய முற்பிறவியில் அல்லி மகாராணி வழிபட்டு நற்கதி பெற்ற தலமே, அர்ச்சுனனை மணாளனாக வரிக்க வழிகாட்டிய திருத்தலமே வைகல் திருத்தலம் ஆகும். தன்னிகரற்ற தலைவியாய் விளங்கியவளே அல்லி மகாராணி என்பது அனைவரும் அறிந்ததே. அல்லியை எதிர்த்துப் போரிட வந்த பல மாமன்னர்களும் அவள் வாளைச் சுழற்றிய வேகத்தில் எழுந்த காற்றொலியைக் கேட்டே மிரண்டு போயினர் என்பதே உண்மை. அந்த வாளொலியில் மயங்கி விழுந்தோர் அனேகர், காற்றுச் சலனத்தால் புறமுதுகிட்டு ஓடியவர் ஏராளம். இவ்வாறு வீரத்தின் உச்சியில் விளங்கிய அல்லி ராணி அர்ச்சுனனைக் கண்டதும் தன் வாளைச் சுழற்றியது உண்மைதான். ஆனால், அர்ச்சுனனோ நல்லோரைத் துணை கொண்ட நாயகன் அல்லவா ? கிருஷ்ண பகவானின் துணையோடு, அதாவது பகவானின் பக்தியில் திளைத்ததால் அல்லி ராணியின் வாள் வீச்சில் எழுந்த ஒலியை கீதை நாயகன் அற்புத மாருத கானத்தில் இணைத்து விட்டார். விளைவு ? அல்லி தன் வாள் சுழற்றும் வேகத்தை அதிகரிக்க அதிகரிக்க இந்த மாருத கானத்தின் ஒலியின் பண்பும் அதிகரித்ததால் அந்த இனிய கானத்தில் மயங்கி அர்ச்சுனனில் மார்பில் முதலும் முடிவுமான ஆனந்த வெள்ளத்தில் சாய்ந்தாள் அல்லி. அல்லி வைகல் பெருமானிடம் பெற்ற வரத்தால் அவளை யாரும் எதிர்த்துப் போரிட முடியாது. ஆனால் அல்லியுடன் போரிட்டது அர்ச்சுனனின் மோகன கானம்தானே, அதில் உத்தம பெண்கள் மயங்குவது இயற்கைதானே. தற்காலத்தில் வேலைக்குப் போகும் பெண்கள், ஆண்கள் துணை தனக்குத் தேவையில்லை என்ற தவறான முடிவுடன் திகழும் பெண்கள் அல்லி மாலையை ஸ்ரீஆலிங்கன மூர்த்திக்கு சமர்ப்பித்து கடம்பை திருக்கோயிலை அடிப் பிரதட்சணமாக வலம் வந்து வணங்குதலால் தங்கள் பணியில் உன்னத நிலை பெறுவதுடன் அற்புத குடும்பத் தலைவியாகவும் திகழ்வர். வெண் தாமரை மலர்களும் இத்தகைய வழிபாட்டிற்கு ஏற்றவையே. வைகல் திருத்தல அம்பிகையின் திருநாமம் ஸ்ரீசாகாகோமளவல்லி என்பது. தன் கணவரைவிட படிப்பில், அந்தஸ்தில், செல்வத்தில், உயரத்தில் அதிகமாக உள்ள பெண்கள் அவசியம் வழிபட வேண்டிய அம்பிகை தெய்வமே இவள். அபூர்வமாக மூலவருக்கு வலது பக்கம் சற்றே முன் எழுந்தருளிய படி தாண்டா பத்தினி. எனவே வீரத்தின் உச்ச கட்டத்தில் பொலிந்தாலும் அர்ச்சுனின் அன்பு மனைவியாக, அவன் இதய ராணியாக அல்லி விளங்கியதில் வியப்பு ஒன்றுமில்லையே ?

கரக்கோயில் என்றால் என்ன ?

தென்கடம்பை திருத்தலம் கரக்கோயில் என்று புகழப்படுவதன் காரணம் என்ன ? கரக்கோயில் என்பதற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் யுகங்கள் தோறும் அமைந்துள்ளன. எத்தகைய உஷ்ண சக்தியையும் ஈர்க்க வல்லதாகவும் அதே சமயத்தில் எத்தகைய உஷ்ண சக்தியையும் எளிதில் மாற்றும் அபூர்வ சக்தி உடையதான கடம்ப மரத்தை தலவிருட்சமாக கொண்ட திருத்தலம் என்பது ஒரு பொருள். சூர பத்மன் எத்தனையோ யுகங்கள் பஞ்சாக்னியின் நடுவில் அமர்ந்து தவம் இயற்றியவன். ஆனால் அத்தகைய சூர பத்மனே இறைவனை அக்னி கோளமாக தரிசிக்கும் ஆற்றலைப் பெற முடியவில்லை. அதனால் அவன் தன்னை எவரும் வெல்ல முடியாது, அத்தகைய அக்னி சக்திகளை எவராலும் பெற முடியாது என்ற ஆணவத்தால் கடம்ப மரமாக நின்றான். எம்பெருமானின் மூன்றாம் நேத்ரம் முன்பு இந்த பிரபஞ்சத்தில் எந்த அக்னிதான் நிற்கும் ? எனவே கடம்ப மரமாய் நின்ற சூர பத்மனை எம்பெருமானின் ருத்ராக்னி சக்தியால் இரண்டாகப் பிளந்து சூரன் என்ற அதீத தீய சக்தியை சேவல், மயில் என்ற முருக பிரசாதமாக மாற்றி அனுகிரகம் புரிந்தான் முருக வேள். இன்று நாம் அனுபவிக்கும் அதீத சூரிய வெப்பத்திலிருந்து நம்மைப் காப்பாற்றும் ஒரே வழிபாடு கடம்ப மர வழிபாடே என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. இந்த பிரபஞ்சத்தை அழிவிலிருந்து காக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் உடைய பக்தர்கள் இவ்வாறு கடம்ப மரம் தல விருட்சமாக உள்ள கடம்பூர், குளித்தலை, மதுரை திருத்தலங்களில் இறை மூர்த்திகளையும் தல விருட்சங்களையும் பூஜித்து வணங்குதல் ஒன்றே அவர்களுடைய தலையாய கடமை ஆகும்.

அதிகரித்து வரும் சூரிய வெப்பத்திற்கு வேறு மாற்று கிடையாது, கிடையாது என்பதே சித்தர்கள் உணர்த்தும் உண்மையாகும். மக்களின் பொருள் சேர்க்கும் எண்ணமும், உழைக்காமல் ஊதியம் பெற வேண்டும் என்று வளர்ந்து வரும் எண்ணமும், காமத் தீயொழுக்க எண்ணங்களுமே பெருகும் சூரிய வெப்பமாக பரிணமிக்க இந்த வெப்ப அலைகளிலிருந்து உலக ஜீவன்களைக் காக்க, கரையேற்ற மக்கள்தானே பொறுப்பேற்க வேண்டும். கரத்தில் விளங்கும் ஐந்து விரல்களைப் போல் பஞ்ச பூதங்கள் துலங்குகின்றன. இதை விவரித்தே நமசிவாய வாழ்க என்று இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார் மணிவாசகப் பெருமான். பஞ்ச பூதங்களில் முதலில் தோன்றியது அக்னி என்பதால் கடம்ப மர வழிபாடு, கடம்ப மரம் தலவிருட்சமாகப் பொலியும் திருத்தலங்கள் வழிபாடு முக்கியத்துவம் பெறுகின்றது. கரவீரம் என்றால் அரளி மலரைக் குறிக்கும். அரளி மலருக்கு உரியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானின் அதிதேவதை முருகப் பெருமான். செவ்வாய் பகவான் சிறப்பாக எழுந்தருளி உள்ள தலமாக கடம்பூர் விளங்குவதால் இத்தலம் அனைத்து வாஸ்து தோஷங்களை நீக்குவதாகவும், தம்பதிகளுக்கு இடையே விளையும் மன வேற்றுமைகளைக் களையும் சிறப்பான தலமாகவும் பொலிகின்றது. எனவே 30 வருடங்கள், 60 வருடங்கள் என்ற ஒருமித்த தாம்பத்ய வாழ்வை மட்டும் அளிப்பது அல்ல திருக்கடம்பூர் அந்த தாம்பத்யத்தைக் கடந்த தெய்வீக வாழ்வையும் அளிப்பதே இத்திருத்தலம் என்ற மறைவாசகம் புலனாகின்றது அல்லவா ?

ஸ்ரீவில்லேந்திய வேலவர் கடம்பை

பொதுவாக வேல் ஏந்தி வினை தீர்க்கும் முருகப் பெருமான் இத்தலத்தில் வில்லேந்தி காட்சி அளிப்பது அற்புதமே. களத்திர தானத்தில் அமைந்த செவ்வாய் தோஷத்தை உடைய பெண்களைத் தவிர்க்க வேண்டியது முறையே. அத்தகையோர் திருமணம் பெறாமல் நல்ல வேலை வாய்ப்பைத் தேடிக் கொண்டு உரிய பாதுகாப்புடன் வாழ்வதே முறை என்றாலும் தற்காலத்தில் செவ்வாய் தோஷம் உடைய பல பெண்களும் திருமண பந்தத்தை உண்டாக்கிக் கொண்டு பலவித இன்னல்களை அனுபவிப்பதை நாம் காண்கிறோம். இவ்வாறு செவ்வாய் தோஷம் உள்ள பெண்களை அறிந்தோ, அறியாமலோ மணந்து கொண்ட கணவன்மார்கள் கடம்பை திருத்தல முருகப் பெருமானுக்கு செண்பக மாலைகளை அணிவித்து வழிபடுதலால் தக்க தீர்வுகளைப் பெறுவார்கள். மற்றவர்களுக்கு முருகப் பெருமானின் திருக்கையில் அமர்ந்த வில் பூங்கணை என்னும் மன்மத பாணங்களைச் சொரியும் அம்பாரமாக மாறும் என்பது முருக வேளின் கருணையே. எத்தகைய தாம்பத்ய தோஷங்களை உடைய மணமக்களும் கடம்பை முருகப் பெருமானை மேற்கூறிய முறையில் வணங்கி வருதலால் வீடு, வாகனம், சந்தானப் பிராப்தி போன்ற அனைத்து சுகங்களையும் பெற்று வாழ்வர். இதற்கு உறுதுணை புரிவதே முருகவேளின் திருக்கரங்களில் தவழும் பூங்கணை வேலாகும். இதுவும் கரக் கோயிலின் பின்னணியில் அமைந்த ஒரு இனிய காரணமே. தம் கையால் தொடுத்த செவ்வரளி மாலைகளை ஆறு முழத்திற்கு குறையாமல் கட்டி முருகப் பெருமானுக்கு சூட்டி வழிபடுவதும் வாஸ்து தோஷங்களை நீக்கி, சொந்த வீடு, நல்ல வாடகை வீடு பெறுவதற்கு வழி கோலும். சிறப்பாக வாஸ்து தினங்களிலும் செவ்வாய்க் கிழமைகளிலும் இத்தகைய வழிபாட்டின் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும். தண்ணீர் இல்லாமல் அவதியுறுவோரும், எவ்விடத்தில் கிணறு வெட்டுவது என்று திணறுவோரும் இத்தகைய வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். ஆனால் இவ்வாறு பலனடைந்தோர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு நன்றி செலுத்தி் ஏழைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் தானம் அளித்தல் அவசியமாகும். பொதுவாக இரண்டாம் தாரமாக அமையும் பெண்கள் முதல் தாரம் உயிரோடு ஆரோக்கியமாக இருந்தாலும் தங்கள் கணவன்மார்களிடம் நல்ல மதிப்பைப் பெறுவதையும் முதல் தாரமாக அமையும் பெண்களோ அவர்கள் குழந்தைகளோ அந்த அளவிற்கு கணவனால் மதிக்கப்படுவதில்லை என்பதை நடைமுறையில் நாம் பல குடும்பங்களில் காண்கிறோம். இதற்கு எத்தனையோ பூர்வ ஜன்ம காரணங்கள் உண்டு என்றாலும் இவை அனைத்தையும் மனித மனம் ஏற்றுக் கொள்வதில்லை, ஏற்றுக் கொள்ளவும் முடியாது. அத்தகையோர் கடம்பை முருகப் பெருமானை வணங்கி செவ்வாழை, சிறுமலைப் பழங்களை ஒன்று விட்டு ஒன்றாக அமைத்து மாலையாகக் கட்டி ஸ்ரீமுருகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வானை மூர்த்திகளுக்கும் அணிவித்து வழிபட்டு வருதலால் அத்தகையோர் குடும்பத்தில், சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெறுவார்கள் என்பது உறுதி. அவர்களுக்கு உரிய சொத்து, நிலபுலன்கள் போன்றவை முறையான பங்கீடாக அமையவும் இத்தகைய வழிபாடு துணை நிற்கும். ஒவ்வொரு மூர்த்திக்கும் குறைந்தது 18 வாழைப் பழங்களால் மாலை கட்ட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஸ்ரீஅகத்திய பெருமான் கடம்பை

தேவ பிரதிஷ்டை, ரிஷி பிரதிஷ்டை, முனி பிரதிஷ்டை என்று இறை சக்திகளைப் பிரதிஷ்டை செய்யும் முறைகள் உண்டு. இவற்றில் சுயம்பு லிங்க மூர்த்திகளே ஆயிரம் கலைகளுக்கு மேலுள்ள தெய்வ அவதார மூர்த்திகளாய் பிரகாசிக்கிறார்கள். இம்முறையில் ஸ்ரீஅகத்திய பெருமானால் சுயம்பு லிங்க மூர்த்தி சக்திகளை அற்புத நவபாஷாண முறையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூர்த்தியே ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் ஆவார். பிரதிஷ்டை செய்ததோடு என் இறைப் பணி நிறைவேறி விட்டது என்றில்லாமல் தினமும் தெற்கு திசை நோக்கி அமர்ந்து ஸ்ரீஅகத்திய பெருமான் இறை சக்திகளை தொடர்ந்து புனருத்தாரணம் செய்து வருதலால் இது தென்கடம்பூர் திருக்கரக்கோயில் என்று அழைக்கப்படுகிறது. என்ன அற்புத இறை இரகசியம் ? இந்த இரகசியத்தை இறை அடியார்களுக்காக வெளிப்படுத்திய நம் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களுக்கு நாம் எப்படித்தான் நன்றியைச் செலுத்த முடியும் ? ஐயர் என்பது மனித சாதியை குறிக்கும் சொல் அல்ல.

அனைத்திலும் உயர்ந்தவர் என்ற பொருளை அளிப்பதே ஐயர் என்ற பதம். எனவே அனைத்திலும் அனைவரிலும் உயர்ந்த சிவபெருமான் உறையும் ஐயர்மலையில் திருப்பணி நிறைவேறியபோது நம் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஒவ்வொரு படியிலும் தன் தோளில் சுமந்து வந்த மண் வெட்டியை சுமார் 20, 30 படிகளுக்கு ஒரு முறை அப்படிகளில் சிறிது நேரம் தான் ஓய்வு கொள்ளும் நேரம் வரை வைத்திருந்து அதை மீண்டும் எடுத்து தன் தோளில் வைத்துக் கொள்வார். சற்குருவிற்கு உதவி செய்வதற்காக அந்த மண் வெட்டியை தங்கள் தோளில் சுமந்து கொள்ள உடன் வந்த அடியார்கள் கேட்டபோது அந்த உதவியையும் மறுத்து விட்டார். உழவாரப் பணிகள் நிறைவேறிய பின் அனைவரும் கீழிறங்கி வந்தவுடன்தான் தன் செயலுக்கான காரணத்தை விவரித்தார் சற்குரு. “அது ஒண்ணுல்ல ராஜா, அப்பர் பெருமான் இந்தக் கோயிலுக்கு வந்து திருப்பணி செய்தபோது எங்கெல்லாம் தன் உழவாரப் படையை வைத்தாரோ அங்கெல்லாம் அடியேன் இந்த மண் வெட்டியை வைத்து எடுத்தேன், அவ்வளவுதான்,” என்றார். சற்குரு கூறிய வாசகத்தின் பொருள் உங்களுக்குப் புரிகின்றதா ? இது புரிந்து விட்டால் உங்களுடைய படையெடுப்பு கடம்பை திருக்கோயிலுக்குத்தான் இருக்கும் !!

கடம்பை திருக்கோயிலில் நிகழ்ந்த சிவ பிரதிஷ்டையில் அப்படி என்ன விசேஷம் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? இறைப் பிரதிஷ்டையின் போது நிகழும் நவபாஷாணத்தில் இறை சக்தியை பிரதிஷ்டை செய்பவர்கள் குரு மருந்து என்ற ஒரு சக்தியை நவபாஷாணத்தில் கலந்து பிரதிஷ்டை செய்வார்கள். இந்த குரு மருந்து கையில் பட்டாலே கை புண்ணாகி விடும். ஆனால் அதைப் பற்றி கவலை கொள்ளாது சித்தர்கள் குரு மருந்தை நவபாஷாணத்தில் கலந்தாக வேண்டும் என்பதே விதி. எனவே நாம் நவபாஷாணத்தைத் தயாரிக்கும் நிலைக்கு உயரவில்லை என்பது உண்மையாயினும் இவ்வாறு நவபாஷாண கலையில் தேர்ச்சி பெற்ற ஸ்ரீஅகத்திய பிரானின் புண்பட்ட கரங்களுக்கு ஒத்தடம் கொடுக்கும் திருப்பணியையாவது நிறைவேற்றிடலாம் அல்லவா ? எனவே கடம்பையில் திகழும் ஸ்ரீஅகத்திய பிரானின் வலது கரத்திற்கு சுத்தமான பசு வெண்ணையையும் இடது கரத்திற்கு சுத்தமான அரைத்த சந்தனத்தையும் சாற்றி எம்பெருமானின் மற்ற உடல் பகுதிகளுக்கு சுத்தமான பசு வெண்ணையையும் சுத்தமாக அரைத்த சந்தனத்தையும் கலந்து சாற்றுதல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். இதனால் கிட்டும் பலன்கள் சொல் பொருள் கடந்த சிவஞான போதம் என்பதால் அதைப் பற்றி இங்கு விவரிக்கவில்லை. நம் திருஅண்ணாமலை ஸ்ரீஅகத்தியர் ஆஸ்ரமத்தில் விற்பனை செய்யப்பட்ட ஊதுபத்திகளில் எல்லாம் இந்த குரு மருந்தைத் தடவி ஆசீர்வசித்தவர் நம் சற்குரு என்ற உண்மையை உணர்ந்தோர் ஒரு சிலரே. எனவே அப்போது விளைந்தவை எல்லாம் ஊதுபத்திகள் அல்ல, ரஞ்சித புஷ்பங்கள், அபராஞ்சித தங்க மலர்கள், பொன் முத்துக்களே, மாணிக்கங்களே, சிவஞான போத வைரப் பரல்களே ! தஞ்சாவூரில் திகழும் சுயம்பு லிங்க மூர்த்திகள் நாற்பது ஆயிரத்திற்கும் மேல் என்பது நம் சற்குருவின் கணிப்பு. அப்படியானால் திருஅண்ணாமலை ஸ்ரீஅகத்தியர் ஆஸ்ரமத்தில் நம் சற்குருவின் கரம் பட்டு முகிழ்த்தெழுந்த சிவலிங்கங்கள் கோடி கோடி அல்லவா ?

ஸ்ரீசமநோக்கு சபாநாயகர் கடம்பை

சமநோக்கு என்பது எல்லா இறை மூர்த்திகளுக்கும் பொதுவான ஒரு குணாதிசயம் என்றாலும் கடம்பையில் அருள்புரியும் ஸ்ரீநடராஜ பெருமான் இந்த பிரத்யேகமான நாமத்துடன் துலங்குவதற்கு பல காரணங்கள் உண்டு. இத்தல நடராஜ மூர்த்தியை இரு கூறாகப் பகுக்க முடிந்தால் அந்த இரு கூறுகளும் மிக மிகத் துல்லியமாக சமமாக இருக்கும் என்பதே இந்த நடராஜ பெருமானின் சிலா ரூபா இரகசியமாகும். மண் மறைத்த இரகசியங்கள், கோயில் மறைத்த இரகசியங்கள், ஜோதி மறைத்த இரகசியங்கள் என்றவாறாக திருத்தலங்களைப் பற்றிய இரகசியங்களில் இத்தகைய சமநோக்கு மூர்த்திகளைப் பற்றிய இரகசியங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நடுநாயகமாக விளங்க வேண்டிய நீதிபதிகள், சபாநாயகர்கள் போன்ற உயர் அதிகாரிகளால் வணங்கப்பட வேண்டிய மூர்த்தியே இந்த ஸ்ரீநடராஜ மூர்த்தி ஆவார். தாங்கள் எடுக்கும் முடிவுகளால் ஆயிரம், லட்சச்கணக்கில் மக்கள், உயிரினங்கள் பாதிக்கப்படும்போது அத்தகையோர் இத்தகைய மூர்த்திகளை அவசியம் வழிபட்டாக வேண்டும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பெண்ணெய் என்ற மூன்று எண்ணெய்கள் கலந்த கலவையால் இந்த மூர்த்திக்கு காப்பிட்டு இந்த மூன்று எண்ணெய்கள் கலந்த தீபங்களை ஏற்றி வழிபடுதல் சிறப்பாகும். முக்கியமான வழக்குகளில் முடிவெடுக்க வேண்டிய நிலை வரும்போது இந்த நடராஜ மூர்த்தியை வணங்கி வழிபடுதல் நீதிபதிகள் மட்டும் அல்லாது மாஜிஸ்டிரேட்டுகள், வழக்கறிஞர்கள் போன்றோரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய நியதியாகும். பல வழக்கறிஞர்களும் தங்கள் கட்சிக்காரரை வெற்றி பெறச் செய்தலே தங்கள் தொழிலின் குறிக்கோள் என்று கருதுகின்றனர். உண்மையில் நீதியை நிலைநாட்ட பாடுபடுவதே உண்மையான வக்கீலின், வழக்கறிஞரின் கடமை என்பதை உணர்த்துவதும் இந்த நடராஜப் பெருமானின் பெருங்கருணையாகும். அரிதாக அம்பிகையின் அருகில் ஸ்ரீநடராஜப் பெருமான் எழுந்தருளி உள்ளார். தாய் தன் அனைத்துக் குழந்தைகளிடமும் சமமான அன்பை வர்ஷிப்பது போல இறைவனின் சமநோக்கை சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காக எம்பெருமான் நிகழ்த்தும் நாட்டியக் கோலமே சமநோக்கு சாஸ்வத நாட்டியக் கோலம் என்றால் இறைவனின் கருணைக்கு எல்லைதான் என்ன ? சமநோக்கு என்ற பதத்தை சற்றே ஆராய்ந்தால் மிகவும் ருசிகரமான தகவல்கள் கிட்டும். உதாரணமாக ஒரு குழந்தைக்கு ஒரு இட்லி அளித்தால் சம நோக்கு என்ற பெயரில் ஒரு பெரியவருக்கும் அதே ஒரு இட்லியை அளிக்க முடியுமா ? இங்கு ஒரு குழந்தைக்கும் ஒரு பெரியவருக்கும் எத்தனை இட்லிகள் அளித்தால் அது அவர்கள் பசியைப் போக்கி ஆரோக்கியத்தை அளிக்கும் என்ற நோக்கை சமமாகக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது அல்லவா ? அதே போல காய்ச்சல், புற்றுநோய் போன்ற வியாதிகளால் வருந்துவோரும் இரத்த சோகை, பார்வைக் குறைவு போன்ற குறைகளால் வாடுவோரும் வழிபட்டுப் பயனடைய வேண்டியே மூர்த்தியே கடம்பை ஸ்ரீநடராஜப் பெருமான் என்பது தெளிவாகின்றது அல்லவா ? நீங்கள் கடம்பை நடராஜ மூர்த்தியை வழிபடும் அளவிற்கு உங்கள் சமநோக்கும் பல்கிப் பெருகும் என்பது அதிசயமே.

ஸ்ரீஆரவார விநாயகர்

கடம்பை திருத்தல கன்னி மூலை கணபதியே ஸ்ரீஆரவார விநாயகர் என்ற சிறப்புப் பட்டத்துடன் அழைக்கப்படுகிறார். சாதாரணமாக ஒருவர் வீதியில் செல்வதற்கும் அவரே ஆயிரம் பேர் புடை சூழ செல்வதற்கும் வித்தியாசம் உண்டு அல்லவா ? அது போலவே ஒரு சாதாரண காரியமானது பலராலும் பாராட்டப்படும், புகழப்படும் தகுதியைப் பெறும்போது அது ஆரவாரம் மிக்கதாக ஆகிறது. எனவே ஒரு சாதாரண நிகழ்ச்சியை ஆரவாரம் மிக்கதாக, பலராலும் பாராட்டப்படக் கூடியதாக மாற்றும் வல்லமை உடைய கணபதி மூர்த்தியே ஸ்ரீஆரவார கணபதி என்ற திருநாமத்துடன் ஆரவாரமாக அழைக்கப்படுகிறார். ஒரு சாதாரண மனிதப் பிறவியைப் போல பல கோடி மடங்கு சக்தி பெற்றதே ஸ்ரீகிருஷ்ண அவதாரம். ஆனால் அவர் பிறவியோ சற்றும் ஆரவாரமின்றி சிறைச் சாலையில் நிகழ்ந்தது. ஆனால் மனிதனாகப் பிறந்த ஸ்ரீராமபிரானின் அவதாரமோ உலகமே அறியும் வண்ணம் அரண்மனையில் ஆரவாரமாக நிகழ்ந்து, கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சித்தர்களைப் பொறுத்த வரையில் எந்த உயிரினத்தின் பிறவி மக்களுக்கு, மற்ற உயிர்களுக்கு பயனுள்ளதாக அமைகிறதோ அதுவே ஆரவாரப் பிறவி ஆகும். சித்தர்கள் கூறும் இந்த தெய்வீக ஆரவாரத்தை அளிக்க வல்ல மூர்த்தியே கடம்பை ஸ்ரீஆரவார கணபதி மூர்த்தி ஆவார்.

ஸ்ரீஆரவார விநாயகர் கடம்பை

இவ்வாறு புல்லாய் பூடாய்ப் பிறக்கினும் அப்பிறவியை ஆரவாரம் மிக்க பிறவியாய் மாற்ற அருள்புரியும் தெய்வமே கடம்பை ஸ்ரீஆரவார விநாயகர் ஆவார். ஒருமுறை அன்னபூரணி லோகத்தைச் சேர்ந்த ஒரு சாண் உயரமே உள்ள ஒரு சித்தருடனும் பூண்டி மகானுடனும் திருஅண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தார் நம் சிறுவனான வெங்கடராமன் அவர்கள். அப்போது நிலம்புரண்டி என்ற மூலிகை பூமியிலிருந்து பூமியைத் துளைத்துக் கொண்டு மேலே வருவதைப் பார்த்தான் சிறுவன் வெங்கடராமன். அப்போது பூண்டி மகான், “இது சாதாரண செடி அல்ல, இதுவே நிலம்புரண்டி என்ற அற்புத மூலிகை. இதைத் தொட்டாலே போதும். சாட்சாத் சிவபெருமானே இங்கு தோன்ற வேண்டும் என்ற இறை நியதி உண்டு,” என்றார். அதைக் கேட்ட சிறுவன் மகிழ்ந்து, “ஒரு மூலிகைக்கு பரம்பொருளையே அழைத்து வரும் சக்தி உண்டா, சுவாமி. கேட்பதற்கே வியப்பாக இருக்கிறதே. அப்படியானால் அடியேன் இந்த மூலிகையைத் தொட்டுப் பார்க்கட்டுமா?” என்று அப்பாவித்தனமாகக் கேட்டாராம். அதைக் கேட்ட பூண்டி சுவாமிகள் கடகடவென நகைத்து, “இந்த நிலம்புரண்டி மூலிகையைப் பார்ப்பதற்கே உனக்கு தகுதி உண்டு. அந்தத் தகுதியும் அடியேன் உன் ஆள்காட்டி விரலில் கட்டிய மூலிகா தேவதையின் அனுமதியால் கிட்டியதே. எனவே அந்த வேரை அவிழ்த்துக் கொடுத்து விடு,” என்று கூறினராராம். பூண்டி சுவாமிகளின் கட்டளைப்படி அந்த வேரை அவிழ்த்த மறுவிநாடி சிவபெருமானின் தரிசனத்தைப் பெற்றுத் தரக் கூடிய அந்த அற்புத மூலிகை சுழன்று பூமிக்குள் சென்று மறைந்து விட்டதாம். பின்னாட்களில் சுமார் பத்து கோடி இறையடியார்களுக்கு அன்னதானம் படைத்த சற்குரு வெங்கடராமன் அவர்களால் ஒரு சிறு புல் பூண்டு தரிசனத்தைக் கூட பெற முடியவில்லை என்றால் நிலம்புரண்டியின் மூலிகைப் பிறவி ஆரவாரம் மிக்க ஒரு பிறவிதானே. எனவே நாம் எத்தகைய பிறவியைப் பெறுகிறோம் என்பதை விட நமது பிறவி எத்தகைய ஆரவாரத்தைத் தோற்றுவிக்கிறது என்பதே முக்கியம். இதை அளிப்பதே ஸ்ரீஆரவார விநாயகரின் வழிபாடு ஆகும். ஒருவர் தன் சக்திக்கு மீறிய வழிபாடுகளை ஸ்ரீஆரவார விநாயகருக்கு நிறைவேற்றும்போதுதான் இந்த விநாயக மூர்த்தியின் அருள்பாங்கை உணர முடியும். தங்கள் சக்திக்கு மீறிய முறையில் குறைந்தது மூன்று மடங்கு தன்னுடைய வருமானத்தைக் குறிக்கும் செலவினத்தால் இந்த ஸ்ரீஆரவார கணபதியை வழிபடுவதால் கிட்டும் பலன்களே ஆரவாரத்தை அளிக்கும். பொதுவாக கன்னி மூலை கணபதி மூர்த்திகள் திருமணத்தை நடத்திக் கொடுப்பவர்கள்தாமே. எனவே மாத சம்பளம் 10000 ரூபாய் பெறும் ஒருவர் ரூபாய் 30000 செலவு செய்து ஒரு பெண்ணிற்கோ ஆணிற்கோ இலவச திருமணம் செய்து வைத்தால் அவருக்கு கணபதி அருளால் நல்ல இடத்தில் ஆரவாரமான திருமணம் கை கூடும். ஒரு லட்சம் மாத வருமானம் உடைய ஒருவர் மூன்று லட்சத்திற்கு ஒரு கார் வாங்கி ஒருவர் அதை ஓட்டி பிழைப்பு நடத்தும்படியாக அளித்தால் நிச்சயமாக அவர் தன்னுடைய தொழிலில் முன்னேறுவார் என்பது உறுதி. இத்தகைய அனுகிரகங்களை அளிக்கக் கூடியவரே ஸ்ரீஆரவார விநாயக மூர்த்தி ஆவார். முயன்று பாருங்கள், முன்னேறி வாழுங்கள் !

அருள் கனியும் ஸ்ரீகங்காதரர்

சிவபெருமானின் சிரசில் பொலியும் கங்கா தேவி இத்தலத்தில் தர்ம பத்தினியாகப் பொலிவது கண்கொள்ளாக் காட்சியாகும். கங்கையில் நீராடுவதால் எத்தனையோ முன் ஜென்மங்களில் செய்த பாவங்களும் தீரும் என்பது பெரியோர்கள் வாக்கு. இது உண்மையே. கங்கை நீராடலே பாவங்களைத் தீர்க்கும் என்றால் கங்கா தேவியின் தரிசனம் எத்தகைய கொடிய வினைகளைத் தீர்க்கும். வெளியில் சொல்ல முடியாத பல கொடுமையான, கடுமையான பாவங்களையும் தீர்க்கவல்லதே இத்தல கங்கா தேவி சமேத ஸ்ரீகங்காதர மூர்த்தி வழிபாடாகும். நடை (சாதாரண) பிரதட்சிணம், அடிப் பிரதட்சணம், அங்க பிரதட்சிணம் என்ற மூன்று பிரதட்சிண முறைகளால் இத்தல ஸ்ரீகங்காதர மூர்த்தியை வழிபட்டு வருதலால் எத்தகைய கொடிய தவறுகளுக்கும் உரிய பிராயசித்த முறைகள் நல்லோர்களால் உரிய நேரத்தில் உபதேசிக்கப்படும். நம்பிக்கையே அனைத்தையும் சாதிக்கும்.

ஸ்ரீகங்காதரர் கடம்பை

ஒரு செப்புப் பாத்திரத்தில் கங்கா நீரை நிரப்பி அதில் ஏலக்காய், துளசி, வெட்டிவேர் இட்டு அதை மாவிலை தேங்காயால் அலங்கரித்து அவரவர் இயன்ற தூரம் இந்த தீர்த்தத்தை தோளில் சுமந்து வந்து கடம்பை இறை மூர்த்திகளின் அபிஷேகத்திற்கும் நந்தவனத்திற்கும் அளித்தல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என அனைவரும் இந்த பூஜா விதானத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம். கங்கை தீர்த்தம் அபிஷேகத்திற்கு முன் மேற்கூறிய மூன்று வித பிரதட்சிண முறைகளையும் நிறைவேற்றுதல் சிறப்பு. அப்பர் பெருமான் இத்தலத்திற்கு வருகை புரிந்த போது அவரை வரவேற்பதற்காக மேற்கூறிய முறையில் 108 செப்புக் குடங்களில் கங்கா ஜலம் அளிக்கப்பட்டதாம். அவை அனைத்தையும் நந்தவனங்களில் ஊற்றி அங்குள்ள மலர்ச் செடிகளுக்கெல்லாம் இறை சக்தியைப் பெருக்கினாராம் உழவார மூர்த்தி. அப்பர் பெருமானால் வளர்க்கப்பட்ட பல மலர்ச் செடிகள் இன்றும் பூத்துக் குலுங்கி பக்தர்களுக்கு அனுகிரகத்தை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. அப்பர் பெருமானை வரவேற்ற பக்தர்கள் எல்லாம் மேற்கூறிய பிரதட்சிண முறையைக் கைக்கொண்டார்கள் என்பதே அவர்கள் அளித்த வரவேற்பின் சிறப்பம்சமாகும். கங்கா ஜலத்துடன் எப்படி ஒருவர் அங்கப் பிரதட்சிணம் நிறைவேற்ற முடியும் ? இது நீங்கள் விடுவிக்க வேண்டிய புதிர். கடம்பை திருத்தல ஈசனின் திருநாமம் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் என்று திகழ்வதால் 60, 70, 80 வயது நிறைந்த பலரும் சஷ்டியப்த பூர்த்தி போன்ற விழாக்களை இத்தலத்தில் நிறைவேற்றிப் பயனடைகின்றனர். உண்மையில் அமிர்த சக்தி என்பது நமது கண் துடிப்பிற்கும், ஒவ்வொரு விரல் அசைவிற்குமே தேவைப்படும் அத்தியாவசியமான சக்தியே. எனவே மக்கள் அனைவரும் தங்கள் அனைத்து பிறந்த தினங்களிலும் இத்தல ஈசனை வழிபட்டு தங்கள் அமிர்த சக்திகளைப் பெருக்கிக் கொள்வதால் எத்தனையோ வியாதிகளுக்கும் துன்பங்களுக்கும் இத்தல வழிபாடு வருமுன் காப்பாக அமையும். இவ்வாறு பிறந்த நாள் கொண்டாடும் பக்தர்கள், கணவன் மனைவிமார்கள் அவசியம் மேற்கூறிய முறையில் கங்கா ஜலத்தை இறை மூர்த்திகளின் அபிஷேகத்திற்கு அளித்து அதில் ஒரு பகுதியை பிரசாதமாகப் பெற்று தங்கள் இல்லங்களில் வைத்து வழிபடுதலால் நிரந்தர ஐஸ்வர்ய, ஆரோக்கிய கடாட்சத்தைப் பெறலாம். இதைத்தான் சுந்தர மூர்த்திப் பெருமானும், “காட்டூர் கடலே கடம்பூர் மலையே ...”, என்று தேவாரப் பதிகம் மூலம் உறுதி அளிக்கிறார். கடம்பூர் மலை என்பது இறைவனின் அருட்சக்தியை நிரந்தரமாக, நிலையாக, தாணுவாக அளித்தலாகும். மேலும் இந்த அருட் சக்தி மலையிலிருந்து பொழியும் பேரருவி போல் விரைந்து வந்து பக்தர்களை அடையும் என்ற பொருளையும் வர்ஷிக்கும். கோயிலுக்குச் செல்லும்போது வெறுங்கையுடன் செல்லலாகாது என்பது ஆன்றோர் வாக்கு. குறைந்த பட்சம் இறைவனுக்கு மலர்களையும் பக்தர்களுக்கு பழங்களையும் குழந்தைகளுக்கு அளிக்க தின்பண்டங்களையும் ஏந்திச் செல்லுதலே முறை. இவ்வகையில் அமிர்த சக்திகள் வர்ஷிக்கும் இத்தலத்தில் அமிர்த சக்திகள் நிறைந்த பால் பாயசத்தில் குங்குமப்பூ கலந்து அளித்தலால் நிறைவான ஆரோக்கியமான வாழ்வைப் பிறருக்கு அளிக்கலாம், நாமும் பெறலாம் என்பது உறுதி. இத்தலத்தை வலம் வரும்போது ஸ்ரீவள்ளலார் சுவாமிகள் போல் இரு உள்ளங்கைகளை சேர்த்த வண்ணம் வலம் வருதலால் இத்தலத்தில் பொலியும் அமிர்த சக்திகளை விரயம் செய்யாமல் வெகு காலம் காத்துக் கொள்ளலாம். நற்காரியங்களை ஆற்றும்போதெல்லாம் அடியார்கள் இத்தலத்தில் பெருக்கிய அமிர்த சக்திகளை மேலும் விருத்தி செய்து மற்றவர்களுக்கு விநியோகம் செய்யலாம் என்பதும் இத்தல அமிர்த சக்திகளின் கடாட்ச அனுகிரகமாகும்.

ஸ்ரீவனதுர்கை கடம்பை

அபூர்வமாக சில திருத்தலங்களில் மட்டுமே எழுந்தருளிய தேவியே ஸ்ரீவனதுர்கை தேவியாவாள். வனதுர்கை என்றால் காட்டிற்கு, வனத்திற்கு உரிய தெய்வம் என்று மட்டும் பொருள் கிடையாது. ஆதரவற்று நிராதரவாய் இன்னல்களைச் சந்திக்கும் அனைவருக்கும் பாதுகாப்புப் பூஞ்சோலையாய்த் திகழ்பவளே ஸ்ரீவனதுர்கை ஆவாள். அரண்மனை வாசம், தோழிகள், காவலாளிகள், பூந்தோட்டம், நந்தவனம் என எத்தனையோ வசதிகள் இருந்தாலும் ஒருவர் துணையுமின்றி தவித்தவள்தானே சீதா பிராட்டி. இவ்வாறு துணையின்றி தவிக்கும் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கும் தெய்வமே கடம்பை திருத்தல ஸ்ரீவனதுர்கை ஆவாள். செல்வம், ஆரோக்யம், பதவி, அந்தஸ்து, உறவினர்கள், நண்பர்கள் இவை அனைத்தையும் இழந்து பரிதவிக்கும் ஆதரவற்ற அநாதைகளுக்கும், அனைத்து வசதிகளும் இருந்தாலும் சீதையைப் போல் தற்காலிகமாக எந்த உதவியையும் பெற முடியாமல் தனித்து தவித்தாலும் அத்தகையோருக்கு வழிகாட்டும் தெய்வமே ஸ்ரீவனதுர்கை ஆவாள். தற்காலத்தில் திருமணமாகியும் தனித்து வாடும், தனியே வாழும் பெண்களும் ஆண்களும் அநேகர். அத்தகையோர் பருத்தி ஆடைகளை இத்தேவிக்கு அணிவித்து தாமே தொடுத்த மணமுள்ள மாலைகளை இத்தேவிக்கு அளித்து வழிபட்டு வந்தால் தங்கள் பயனற்ற வாழ்வில் நல்ல மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். வன வாழ்வு மண வாழ்வாக மாற உறுதுணையாய் நிற்பவளே ஸ்ரீவனதுர்கை. பலருக்கும் அடர்ந்த வனங்களில் அன்ன ஆகாரமின்றி தவமியற்ற வேண்டும் என்ற பேரவா இருப்பதுண்டு. ஆனால் அதற்குத் தேவையான மன உறுதியை அவர்கள் பெற்றிருப்பதில்லை. திருஅண்ணாமலை ஈசான்ய சித்தர் அத்திருத்தலத்தை வலம் வந்தபோது அவருடன் 16 அடி வேங்கை எப்போதும் உலவிய வண்ணம் இருக்குமாம். அதனால் ஈசான்ய சித்தரை நெருங்கும் மன உறுதியை எவரும் பெற முடியவில்லை. உண்மையில் அச்சித்தரின் யோக சக்தியே இவ்வாறு வேங்கையாக உருவெடுத்து வேண்டாதவர்களிடமிருந்து அவரைக் காத்து நின்றது என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக இரகசியம். இவ்வாறு நீர், ஆகாரம் தவிர்த்து காற்றும் வெயிலும் நுழையா கன இருள் குகையில் தூக்கம் என்பதையே மறந்து தவம் இயற்றும் பக்தர்களுக்கு உறுதுணையாய் நிற்பவளே கடம்பை ஸ்ரீவனதுர்கை ஆவாள். கொடிய கருநாகம், புலி, சிங்கம் போன்ற அச்சுறுத்தும் பல வன விலங்குகளின் வடிவுகளைக் காட்டி தன்னை அண்டி வாழும் பக்தர்களைக் காப்பவளே ஸ்ரீவனதுர்கை ஆவாள். வனம் என்பதற்கு என்றும் மாறா இளமை என்ற ஒரு பொருளும் உண்டு. பலருக்கும் தோல் சுருக்கம், முதுகு கூன் விழுதல், நரை முடி, பற்கள் விழுதல் போன்ற பல்வேறு காரணங்களால் சிறு வயதிலேயே முதுமைத் தோற்றத்துடன் விளங்குகிறார்கள். இன்னும் பலருக்கு இத்தகைய காரணங்களால் திருமணம் நிறைவேறாமல் போவதும் உண்டு. இத்தகையோர் மஞ்சள் நிற பருத்தி ஆடைகளை ஸ்ரீவனதுர்கைக்கு சாற்றி, நல்ல மணமுள்ள மஞ்சள் நிற சாமந்திப்பூ மாலை அணிவித்து வருதலால் இத்தகைய குறைபாடுகள் நீங்கப் பெறுவார்கள் அல்லது இத்தகைய குறைகளைப் பேணாத உறவுகளைப் பெறுவார்கள். மஞ்சள் நிறத்திற்கு இளமையைப் பாதுகாக்கும் தன்மை உள்ளதால் சிறுவயதிலிருந்தே பெண்கள் முகத்திற்கு மஞ்சள் பூசி குளித்து வருவதுடன் அம்பிகை மூர்த்திகளின் தரிசனத்தையும் பெற்று வருதலால் எத்தகைய உடல், மன ஊனங்களும் நிவர்த்தியாகி நல்ல திருமண வாழ்வைப் பெறுவர். நோய் எதிர்ப்பு சக்தியும் மிகும். மஞ்சள் நிற ரசாயணப் பொட்டுக்கள் எதிர்மறை சக்திகளையும், நச்சுத் தன்மையும் வளர்ப்பதால் பெண்கள் அவற்றைத் தவிர்த்தல் நலமே.

அமிர்த கடமா அமிர்த குடமா ?

பொதுவாக குடம் என்னும் சொல் மண், செம்பு, பித்தளை என்னும் எதனலாலும் செய்யப்பட்ட கொள்கலத்தைக் குறிக்கும். கடம் என்பது மண்ணால் செய்யப்பட்ட கலயமாகும். கடம் என்பதை மனித உடலாகவும் அதில் உறையும் அமிர்தமாக இறைவனைக் குறிப்பதே மாண்புடையோர் செயல். அமிர்தத்தின் சக்தியாக, ஒளியாக, உயிராக ஒளிர்பவளே அம்பாள் ஆவதால் ஸ்ரீசோதி மின்னம்மை என்பது கடம்பை அம்பாளுக்கு எத்துணை பொருத்தமாக அமைந்த நாமமாக உள்ளது ? அமிர்தம் என்பது உயிர் துடிப்புள்ள ஒரு சக்தியே, மனித உடல் முழுவதும் விரவி நிற்பதே. ஒளியுடன் பிரகாசிப்பதே இது. அதனால்தான் ஒருவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய மனிதனின் இதயத் துடிப்பை விட அவனின் விழிப் படலத்தை (iris) பார்த்தே உறுதி செய்கிறார்கள். இதையே உயிருக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பாக மாமணி சோதியான் என்று பாடுகிறார் அப்பர் பெருமான். ராமகிருஷ்ணரின் மறைவிற்குப் பின் இப்பூவுலகில் நிலைத்திருக்க விரும்பாத அவரது துணைவியார் சாரதா அம்மையார் இறைவனைக் குறித்து தவமியற்றத் தொடங்கினார். அப்போது எங்கோ தொலைவில் ஒரு மண் பாத்திரம் பொல பொலவென்று நொறுங்கி விழும் சப்தத்தைக் கேட்டு தெளிவடைந்து தன் உயிரை விடும் எண்ணத்தைத் துறந்து தன் ஆருயிர் கணவரின் அரும் பணியைத் தொடர்ந்து இறைச் சேவையில் மூழ்கித் திளைக்கலானார். இவ்வாறு மனிதனின் உடல் என்பது வெறும் மண் பாத்திரமே, அதில் அமர்த மயமாகத் துலங்குவதே இறைவன், அந்த அமிர்தத்தின் ஒளியாகத் துலங்குபவளே இறைவி, இறை சக்தியாகும் என்ற பேருண்மையை உணர்த்துவதே கடம்பை திருத்தல வழிபாடாகும்.

மாதா அமிர்தானந்த மயி

இந்த உண்மையை உடலிலும் உள்ளத்திலும் நிலை நிறுத்துவதற்காகவே அவரவர் பிறந்த தினங்களிலும், சஷ்டியப்த பூர்த்தி போன்ற விசேஷ தினங்களிலும் இத்தலத்தில் உரிய தான தர்மங்களுடன் வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்று பெரியோர்கள் வலியுறுத்துகின்றனர். பொதுவாக இனிப்பு சக்திகளே அமிர்த சக்திகளாக உருவெடுப்பதால் இனிப்பு சக்திகளாக உருவெடுக்கும் சர்க்கரை போன்றவற்றையோ அல்லது இனிப்பு சக்திகளை கிரகித்து உடம்பில் வளமாகச் சேர்க்கும் பால், தேங்காய் போன்றவற்றையோ நிரவுவதையோ இவ்வாறு அமிர்தம் நிரவும் வழிபாடுகளாக நிறைவேற்றுகிறோம். எனவே கடம்பை திருத்தலத்தில் தேங்காய், பால், பனவெல்லம் இவை மூன்றும் கலந்த இனிப்பு வகைகளை தானமாக அளித்தலால் அது அமிர்த சக்திகளை நிறைவாக அளித்து இறைவனை வழிபடும் முறையாகவும் இறைவன் வடிவில் உலவும் உயிர்களின் வழிபாடாகவும் அமைகின்றது. மாதா அமிர்தானந்தா மயி அன்னையின் நினைவுடனும் சற்குரு வெங்கடராமன் அவர்கள் தியானத்துடனும் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுவதால் அமிர்த சக்திகளை விநியோகிக்கும் அற்புத வழிபாடாக இது அமைகிறது. அமிர்தம் என்பது சாகா வரமளிக்கும் சக்திதானே. அப்படியானால் அமிர்த சக்தியைக் கொண்ட மகான்களின் திருஉடல்கள் மறைவது ஏனோ என்ற கேள்வி எழுவது இயற்கையே. அமிர்தம் தாங்கும் உடல்கள் மறையாமல் பல லட்சம் வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும் என்பது உண்மை ஆயினும் மகான்கள் தாங்கள் பெறும் அமிர்த சக்திகளை தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளாது அவ்வப்போது மற்ற உயிர்களுக்கு இந்த அமிர்த சக்திகளை அந்தந்த உயிர்களுக்கு வேண்டிய சக்திகளாக மாற்றி அருள்பாலிக்கின்றார்கள் என்பதே உண்மை. அமிர்தானந்த மயி அன்னை ஆஸ்ரமத்திற்கு எதிரே அமைந்த சமுத்திரப் பகுதி அமிர்த சாகரம் என்றே அழைக்கப்படுகிறது. அதாவது அமிர்தம் என்னும் சாகா வரம் தரும் சக்தியை அளிக்கக் கூடியதே அமிர்தத்தின், அமிர்த சாகரத்தின் இயல்பாகும். ஸ்ரீதன்வந்த்ரி மூர்த்தி அமிர்த கலசத்தை தாங்கி தரிசனம் அளிப்பதை நீங்கள் அறிவீர்கள். அது போல் அமிர்தானந்தா மயி போன்ற குருமார்களும் தங்களை தரிசனம் செய்யும் அடியார்களுக்கு அமிர்த சக்தி என்னும் சாகா வரம் அளிக்கும் சக்தியை தரிசன பிரசாதமாக அளிக்கிறார்கள். இவ்வகையில் அன்னை தன்னை சந்தித்து ஆசி பெறுவோர்க்கெல்லாம் தன்னுடைய அரவணைப்பின் மூலம் அமிர்த சக்தியை வர்ஷிக்கிறார் என்பதே பக்தர்கள் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். அன்னையின் ஜன்ம ஜாதகமும் இவ்வாறு அடியார்களுக்கு அமிர்தம் வர்ஷிக்கும் பாங்கை உறுதிப்படுத்தும். லக்னாதிபதியான சுக்ரன் கடக ராசியில் நிலைகொள்ள, அமிர்த சக்திகளை அளிக்கும் சந்திர பகவான் குருவுக்கு உகந்த மீனத்தில் எழுந்தருள மீன ராசிக்கு உரித்தான குரு பகவான் ரிஷப ராசியில் எழுந்தருளும் கருணை அமிர்த சாகரத்தையே வர்ஷிக்கும் தன்மையை உறுதிப்படுத்துவது அல்லவா ? இறைவனின் மூச்சுக் காற்றாக திருத்தலங்களில் நந்தி மூர்த்திகள் விளங்குவது போல் அன்னையின் மூச்சுக் காற்றாக அமிர்த சாகரம் விளங்குகிறது என்பது உண்மையே. எனவே விடியற்காலை நேரத்தில் அமிர்த சாகரத்தின் முன் அமர்ந்து பிராணாயாம பயிற்சிகளைப் பயில்வதாலோ அல்லது ஆழ்ந்த சுவாச பந்தனங்களை மேற்கொள்வதாலோ இங்கு வியாபித்துள்ள அமிர்த சக்திகளைப் பெறலாம். இது எத்தகைய உடல் உள்ளப் பிணிகளையும் நீக்கி நீண்ட ஆரோக்கியமான ஆயுளை அளிக்கவல்லதாகும். இத்தகைய அமிர்த சக்திகளை தென்கடம்பை திருத்தலத்தில் சந்தியா நேரத்தில் பெறலாம் என்பது உண்மையே. சற்குரு ஹோமம், வேள்வி நடத்திய இடங்களில் எல்லாம் இத்தகைய அமிர்த சக்திகள் 24 மணி நேர காலத்திற்கு நிரவி நின்றன என்பது ஒரு சில அடியார்கள் அறிந்த அமிர்த இரகசியமாகும். மாதாவின் மாண்புமிகு முத்தம் என்பது அமிர்தப் பொழிவு, மழலையின் கொஞ்சுதல் அதன் தெய்வீக முத்தம், யூதாஸ் அளித்த முத்தமோ பணிவின் சிகரம், தாயின் முத்தம் பாசப் பிணைப்பு, நங்கை அளிக்கும் முத்தமோ காமப் பரிசு என முத்தங்களில்தான் எத்தனை எத்தனை வகை !

அமிர்த சாகரம், அமிர்தபுரி

அமிர்தானந்தா அன்னை
அருளும் அமிர்தவர்ஷினி சக்திகள் !

அமிர்த சக்திகள் பால், தேன், நெல்லி, கொய்யா போன்ற வஸ்துக்களில் மட்டுமல்லாது அமிர்த சாகரம், கோயில் கோமுக தீர்த்தங்களிலும் நிரவி நிற்பதால்தான் கோமுக பிரசாதத்தை பக்தர்கள் அனைவரும் ஏற்கின்றனர். ஒரு முறை தன் அடியார்களுடன் காசிக்கு யாத்திரை சென்றிருந்தார் சற்குரு. அப்போது கயாவில் தனக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை விட்டு விட வேண்டும் என்ற நியதியை ஒட்டி ஒரு அடியார் கொய்யாப் பழத்தை விட்டு விட சற்குருவின் அனுமதியை வேண்டியபோது சற்குருவோ, “அதுவோ கொய்யாத கனி, அதை ஏன் விட்டு விட நினைக்கிறாய், வேறு ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொள்,” என்று கூறி தன் அடியார்கள் இறுதிவரை அமிர்த சக்திகளைப் பெற்று வாழ வேண்டும் என்று தன் உள்ளத் துடிப்பை வெளிப்படுத்தினார் சற்குரு. சற்குருவின் இந்த வார்த்தைகளில் இன்னும் ஏராளமான ஆன்மீகப் புதையல்கள் மறைந்துள்ளன. அடியார்கள் பொறுமையாக இதைப் படித்து அமிர்த சக்திகளைக் குறித்து நன்கு ஆத்ம விசாரம் செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வகையில் அமிர்த சாகர தரிசனமே எத்தனையோ விதமான அமிர்த சக்திகளை அளிக்கவல்லது. அதனால்தான் தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் இயன்றபோது அமிர்த சாகரத்தைப் பார்த்தவாறே அமர்ந்திருக்கும்படி வலியுறுத்துவதும் தன்னுடைய பிறந்த நாள் போன்ற நாட்களில் அற்புத அமிர்தம் நிறைந்த வழிபாடுகளை அன்னை அங்கு நிறைவேற்றுவதும் ஆகும். சாதாரணமாக கடவுளை உணரும் திருப்பணியில் ஈடுபட்டுள்ள ஒரு இறை அடியார் தன்னுடைய நல்ல எண்ணெங்களால் தன்னுடைய இரத்த அணுக்களை தூய்மை செய்து கொள்ளும்போது குறைந்தது 72 துளி தூய்மையான இரத்தம் ஒரு துளி விந்து அல்லது பிந்து சக்தியாக மாறுகிறது. இவ்வாறு தன்னுடைய உடம்பில் நிரவியுள்ள 72000 நாடி நரம்புகளும் இத்தகைய விந்து சக்திகளால் நிறையும்போதுதான் ஒருவன் கடவுள் தரிசனத்தையே பெற முடியும், பெறுகிறான் என்பது உண்மை. எனவேதான் காம எண்ணம் என்பது ஒரு தூசி அளவு உள்ளத்தில், மனதில் இருந்தால் கூட, ஒருவன் தான் ஆணோ பெண்ணோ என்ற எண்ணத்தை சிறிதளவு சுமந்திருந்தால் கூட அவர்கள் இதயம் இறைவனைச் சுமக்காது. எப்போது அவர்கள் இறைவனைச் சுமக்க தயாராகின்றார்களோ அப்போதுதான் அவர்கள் இதயம் தூய்மை பெறும். அந்த நேரத்தில் அனைவரும் நந்தி மூர்த்திகளே, இறைவன் சிவபெருமானை நந்தி என்று அழைப்பதற்கு இதுவும் ஒரு காரணமே. இவ்வாறு விந்து சக்திகள் மனிதனின் 72000 நாடி நரம்புகளிலும் விரவுதலையே, நிரவுதலையே விந்து கெட்டிப் படுதல், ஒளி பெருகுதல், தேஜஸ் தோன்றுதல் என்றெல்லாம் இறை உணர்வை வர்ணிக்கிறார்கள் பெரியோர்கள். இந்த பிரம்ம தேஜஸை கொண்டுதான் ஒருவர் இறைவனை உணர்ந்துள்ளாரா இல்லையா என்பதை மகான்கள் பாம்பின் கால் பாம்பறியும் என்று வர்ணிக்கிறார்கள். ஒருவரின் வெளிப்படையான உருவத்தை வைத்து மகான்கள் யாரையும், அவர்கள் தெய்வீக நிலையை அறிய முற்படுவது கிடையாது. இந்தக் கட்டுரையைப் படித்து தீவிர ஆத்ம விசாரம் செய்து வந்தால் நீங்கள் நிச்சயம் இதுவரை இல்லாத ஒரு புதுக் கோணத்தில் இறைவனைக் காண்பீர்கள். ஒரு வேளை அது இயலவில்லை என்றால், சற்றும் மனம் தளர வேண்டாம். இங்கு குறிப்பிட்டுள்ள வழிபாடுகளை இயற்றி தொடர்ந்து கடம்பை ஸ்ரீஅமிர்தகடேச ஈசனை வழிபட்டு வாருங்கள். வெற்றி உமதே.

பொன்னான நாள்

வரும் 4.6.2019 (வைகாசி மாதம் 21ந் தேதி) செவ்வாய்க் கிழமை அமிர்த சக்திகளை வர்ஷிக்கும் பொன்னான நாளாகும். வாழ்வில் எப்போதோ ஒரு முறை கடம்பை ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரை தரிசனம் செய்ய, எத்தகைய வியாதிகளிலிருந்தும் நிவாரணம் பெற்று ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் திகழ இறைவனால் அளிக்கப்பட்ட அற்புதமான ரோக நிவர்த்தி நாளாகும், கங்காதர அம்ருத வர்ஷிணி சக்திகள் பெருகும் நாளாகவும் விளங்குவது இறைவனின் பெருங்கருணையே. சிறப்பாக 60, 70, 80 வயது பூர்த்தி அடைந்தவர்கள், இத்தகைய தம்பதிகள் கடம்பை ஈசனை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவது கிடைத்தற்கரிய பாக்கியமாகும். இந்நாளின் சிறப்பை பல காண்டங்களாக விவரித்துக் கொண்டு செல்லலாம் என்றாலும் இந்நாளுக்குரித்தான அமிர்த சக்திகள் பொலியும் பாங்கைப் பற்றி மட்டும் இங்கு விவரிக்கிறோம். வைகாசி மாதத்தில் சந்திர பகவான் ரிஷப ராசியில் உச்சம் பெற்று விளங்குவதால் இம்மாதம் சந்திர பகவான் அளிக்கும் அமிர்த சக்திகள் உச்சம் பெற்று விளங்குவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே. 4.6.2019 அன்று சந்திர தரிசன தினமாக விளங்குவதால் சந்திரன் இன்று அளிக்கும் அமிர்த கிரணங்கள் கோகர்ண ஸ்வேதாம்பரம் என்ற அபூர்வமான அமிர்த சக்திகளுடன் விளங்குகின்றன. இதன் பலனாய் காக்கைக் குஞ்சு போன்ற பெண்களும் கிளி போன்ற அழகுடன் விளங்குவர் என்றால் உண்மையிலேயே கிளி போன்ற அழகுடன் திகழும் பெண்களின் அழகை வர்ணிக்க முடியுமா ? ஆனால் அழகுடன் திகழ்ந்தாலும், எப்படி இருந்தாலும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தைப் பெறும் ஆண்களும் பெண்களும் தமக்கு நன்மையே தரும் மண வாழ்வைப் பெறுவர் என்பதே கங்கா தேவி இத்தகைய கோகர்ண ஸ்வேதாம்பர சக்திகள் பொலிந்த நாளில் பெற்ற வரமாகும்.

 

ஸ்ரீசோதி மின்னம்மை சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்

இன்று கங்கையைப் பூஜிப்பதற்கு உகந்த நாள். குறிப்பாக திருமணமாகாத பெண்களும் ஆண்களும் தங்கள் ஊரில் உள்ள சுயம்பு சிவ மூர்த்திகளுக்கோ அல்லது சிறப்பாக கடம்பை ஸ்ரீஅமிர்தகடேச ஈசனுக்கோ கங்கை தீர்த்தத்தை அபிஷேகத்திற்காக அளிப்பதால் அற்புதமான மண வாழ்க்கையைப் பெறுவார்கள். திருமணமான பெண்களும் ஆண்களும் தங்கள் இல்லறத்தில் சந்திக்கும் தாங்கமுடியாத வேதனைகளுக்கு ஒரு வடிகாலாகவும் இத்தகைய கங்கா அபிஷேகம் அமையும் என்பதில் ஐயமில்லை. கங்கை கங்கோத்திரியிலிருந்து தோன்றினாலும் முடிவில் கங்கா சாகர் என்னும் திருத்தலத்தில் கடலில் கலக்கும் முன்பு பல இடங்களில் மறைந்து விடுவது போல் தோன்றும். அவ்விடங்களில் எல்லாம் கங்கை ஈசனை விட்டுப் பிரிந்து விடுவதாக ஐதீகம். இத்தகைய பிரிவுகள் தன்னைத் தீண்டா வண்ணம் சித்தர்கள் கூறிய முறையில் இத்தகைய அமிர்த சக்திகள் நிறைந்த மூன்றாம் பிறைச் சந்திர நாளில் ஒரு சாதாரண மானுடப் பெண்ணாய் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளை நிறைவேற்றி சந்திர மௌலீஸ்வரரைப் போல் சுவாமியின் தலையில் நிரந்தரமாக அமரும் பேற்றினைப் பெற்றாள். இவ்வாறு மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் கங்கா பூஜன காலமும் அமைவது வாழ்வில் கிடைத்தற்கரிய பாக்கியம்தானே. இத்தகைய கங்கா பூஜன நாளும் சந்திர தரிசன நாளும் மங்கள வாரமாகிய செவ்வாய்க் கிழமை அன்று கூடுவது பெரும் சிறப்பே.

ஸ்ரீமகா விஷ்ணு கடம்பை

ஸ்ரீமகா லட்சுமி கடம்பை

தற்காலத்தில் திருமணமாகாத பெண்களும் ஆண்களும் தங்களுடைய விட்டுப் போன மங்கள பூஜைகளுக்கு ஈடுகட்டும் முகமாக இத்தகைய மங்களவார பூஜைகள் அமைகின்றன. சந்திரன் இருக்கும் ராசியிலிருந்து ஏழாம் ராசியில் இருக்கும் கிரகம் தன்னுடைய பார்வை வீச்சை செலுத்துவதால் இத்தகைய சுப பார்வையை 4.6.2019 அன்று பெறுவதும் ஒரு சிறப்பே. பொதுவாக சுப கிரகங்கள் வக்ர கதியை அடைவது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருப்பதால் 4.6.2019 அன்று வக்ர கதியை அடைந்த குருவின் பார்வையைப் பெறும் சந்திர பகவான் தன்னுடைய அமிர்த சக்தியின் கலை அம்சங்களை மேலும் பெருக்கிக் கொள்கிறார். கரவீர விரதம் இந்த நன்னாளில் கூடுவதால் ஓர் அற்புதமான கரவீர பூஜை முறையை சித்தர்கள் அறிவிக்கிறார்கள். ஆண்கள் தங்கள் கையால் தொடுத்த சம்பங்கி மாலைகளை 21 முழத்திற்கு குறையாமல் கடம்பை ஈசனுக்கும், கல்யாணம் ஆன பெண்களும், கல்யாணம் நிறைவேறாத பெண்களும் தனித்தனியாக 21 முழம் கரவீரம் என்னும் அரளி மாலைகளை தொடுத்து கடம்பை அம்மனுக்கும் துர்கைக்கும் அளிப்பது ஒரு வழிபாடாக அமையும். கங்கா தேவிக்கும் ஈசனுக்கும் பூக்கள், எண்ணிக்கை வேறுபாடின்றி அனைவரும் மலர்களைத் தொடுத்து இந்நாளில் அளிக்கலாம். இதனால் கிட்டும் பலன்களை அனுபவித்துப் பார்த்தலே உசிதமானது. செவ்வாய் என்பது பூமிக்கு உகந்ததாக வாஸ்து பகவானுடன் தொடர்பு உடையதால் வாஸ்து சக்திகளும் இந்நாளில் பெருகுவது மிகவும் அற்புதமாகும். சுவாமிக்கு அபிஷேகமாக அளிக்கப்பட்ட கங்கா தீர்த்தத்தில் சிறிது பிரசாதமாகப் பெற்று அதை இல்லத்திலும் வியாபாரத் தலங்களிலும், யந்திரங்கள் நிர்மாணிக்கப்பட்ட இடங்களிலும் தெளித்தலால் எத்தகைய தல, எண்ண, எந்திர தோஷங்களிலிருந்தும் எளிதில் நிவர்த்தி பெறலாம். இது மிகவும் அபூர்வமாக அமையக் கூடிய வாஸ்து பூஜை திருநாள் என்பதை பக்தர்கள் உணர்ந்து கடைபிடித்தல் சிறப்பாகும். வக்ர கதி அடைந்த பிரகஸ்பதியின் நேரடிப் பார்வையை வளர்பிறைச் சந்திர பகவான் பெறுவதால் இதனால் கண் கோளாறுகளும், கண்ணேறு தோஷங்களும், கண் திருஷ்டிகளும் விலகும். திடீரென்று பொருட்கள் கிழே விழுதல், குழந்தைகள் உடலை முறுக்கிக் கொண்டு அழுதல், கைகால்களில் அடிக்கடி அடிபடுதல் போன்ற தோஷங்களுக்கு உடனடி நிவர்த்தி தோஷம் கிட்டும் நாள். குண்டுமணி அளவு தங்க தானம் கூட மலையளவு புண்ணியத்தை வர்ஷிப்பதால் அவரவர் தங்களால் இயன்ற பொன் மாங்கல்யம், தோடு, மூக்குத்தி போன்ற தங்க ஆபரணங்கள் தானங்களை இயற்றுதல் சிறப்பு. ஒவ்வொருவர் தலையிலும் ஐந்து கிலோ தங்க தானம் பாக்கியாக எழுதப்பட்டுள்ளதாக சித்தர்கள் அறிவிக்கிறார்கள். இத்தகைய பாக்கிகளை சாதாரண மக்களும் நிறைவேற்றக் கூடிய நாட்களே இத்தகைய அபூர்வ தான நாட்களாகும்.

அமுத நந்தியா தேவதைகளின் அருட்பணி

திருமண அழைப்பிதழ்களை அச்சிடும்போது பத்திரிகைகளின் இருபுறமும் மாலைகளைத் தாங்கியவாறு தோற்றமளிக்கும் தேவதைகளே அமுத நந்தியா தேவதைகள் ஆவர். தற்காலத்தில் பலரும் இத்தகைய தேவதைகளின் படங்களை திருமணப் பத்திரிகைகளில் அச்சிட்டு அவர்களை வேண்டி அவர்களின் ஆசியைப் பெறாததால் குடும்பத்தில் அன்யோன்ய நிலை தோன்றாது லட்சக் கணக்கான விவாரகத்து வழக்குகள் நீதி மன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. சந்திர பகவானின் சலனத்தை ஒட்டி உடலில் ஆங்காங்கே அமிர்த கலைகள் தோன்றும். அன்யோன்யத்திற்கும் உத்தம சந்ததிகளின் தோற்றத்திற்கும் உறுதுணையாய் நிற்பதே இத்தகைய அமிர்த சக்திகள். திருமணமான ஐந்து வருட காலத்திற்குள் அமுத நந்தியா தேவதைகளின் அனுகிரகத்தால் பெண்களின் உடலில் தோன்றும் இத்தகைய அமிர்த சக்திகளின் சஞ்சாரத்தை இனம் கண்டு கொள்ளக் கூடிய தம்பதிகளே உத்தம தம்பதிகளாக அன்யோன்யத்துடன் திகழ்வார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் உத்தம குணங்களுடைய சந்தானங்களாக, மழலைச் செல்வங்களாக மாறுவார்கள். இதற்கு நன்றி கூறுவதாக அமைவதே சஷ்டியப்த பூர்த்தி போன்ற பண்டிகைகள் எல்லாம்.

ஸ்ரீசரஸ்வதி தேவி கடம்பை

ஆனால் இத்தகைய அமுத நந்தியா தேவதைகளைப் பற்றியே பல தம்பதிகளும் அறியாது இருப்பதால் அவர்கள் இனியாவது கடம்பை திருத்தலத்தில் உறையும் அமர்ந்த நிலைப் பெருமாளை தரிசனம் செய்து, லட்சுமி, சரஸ்வதி தேவியர்களையும் வழிபடுதலால் தங்கள் இல்லற வாழ்வில் அன்யோன்யத்தையும் நல்ல மாற்றத்தையும் காணலாம். குடும்ப அன்யோன்யம் என்பது உடலால் அமைவது என்பதை விட உள்ளத்தால் கிரகிக்கப்படுவதே ஆகும். கணவன் நினைப்பதை மனைவியும், மனைவியின் வேண்டுகோளை அவள் வாய்விட்டுக் கூறாமலே கணவன் நிறைவேற்றுவதே உத்தம அன்யோன்ய நிலையாகும். இதை நிறைவேற்றுவதே அமுதா நந்தியா தேவதைகளின் வழிபாடாகும். இத்தகைய அன்யோன்யத்தை தம்பதிகள் பெற்றுவிட்டார்களா என்பதை எப்படி அறிவது ? இதற்கு அருள்புரிவதே கடம்பை பெருமாளின் தரிசனமாகும். பெருமாளிடம் உள்ள அமிர்த குடமானது கடமாகத் தெரியும் வரை தம்பதிகள் இன்னும் தேவையான அன்யோன்ய நிலையைப் பெறவில்லை என்பதே பொருளாகும். அமிர்த கடம் மறைந்து அந்த அமிர்த கடத்தில் பொலியும் அமிர்த சக்திகளைத் தம்பதிகள் தரிசிக்க முடியுமானால் அவர்களே உத்தம தம்பதிகள். அத்தகைய உத்தம தம்பதிகள் இன்றும் நம்மிடையே உலா வருகிறார்கள். அவர்களுக்காகவே வருண பகவானும் அடிக்கடி மழைப் பொழிவை உருவாக்குகிறார் என்பது உண்மையே. அத்தகைய தம்பதிகளை நாடி அவர்களின் ஆசி பெறுதல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். அமுத நந்தியா தேவதைகளின் அருளாசி மட்டுமல்லாமல் அமர்ந்த நிலை லட்சுமி சரஸ்வதி தேவதைகளின் அருட்கடாட்சமும் தம்பதிகளுக்குத் தேவையான ஒன்று என்பதால் இந்த தெய்வ மூர்த்திகளின் ஆசியையும் ஒருங்கே அளிப்பதே கடம்பை திருத்தலமாகும். சர்வாலங்கார பூஷிதா என்ற தேவலோக வீணையுடன் ஸ்ரீசரஸ்வதி இத்தலத்தில் பூஜிப்பதும் நம் மூதாதையர்களின் அருளால் நாம் பெறும் பேறே. அமிர்த கட தரிசனத்தைப் பெறும் பக்தர்கள் சர்வாலங்கார பூஷிதா என்ற வீணையில் பொலியும் தேவகானத்தையும் கேட்டு இன்புற முடியும் என்பதே கடம்பை திருத்தலத்தின் ஆயிரமாயிரம் சிறப்புகளில் ஒன்றாகும்.
சற்குரு வெங்கடராமன் அவர்கள் பூண்டி மகானுடனும் அன்னபூரணி லோகத்து சித்தருடனும் சேர்ந்து திருஅண்ணாமலையில் வலம் வந்த போது நிலம்புரண்டி மூலிகையின் தரிசனத்தைப் பெற்றார் என்று விவரித்தோம் அல்லவா ? இத்தகைய அற்புத நிலம்புரண்டி மூலிகையின் தரிசனம் பெற்ற நாளே அட்சய திரிதியை திருநாளாகும். பலரும் தற்போது சற்குரு வழிகாட்டிய முறையில் அன்னதானம் போன்ற நற்காரியங்களை நிகழ்த்தி அட்சய திரிதியை நாட்களில் தோன்றும் தேவ கிரண அமிர்த வர சக்திகளை அனுகிரகமாகப் பெறாமல் தங்க ஆபரணங்களை வாங்கி குவித்துக் கொண்டு அட்சய சக்திகளைப் பெற்று விட்டதாக நினைத்து மகிழும் மாயையை என்னவென்று கூறுவது ? சாதாரணமாக சற்குரு போன்ற மகான்களை ஒரு கொசு தீண்டுவதாக இருந்தால் கூட, பூங்காற்று அவர் மேல் வீசுவதாக இருந்தாலும் கூட சற்குருவின் அனுமதியைப் பெற்றே ஆக வேண்டும் என்ற தெய்வ விதி இருக்கும்போது திருஅண்ணாமலையில் முட்புதர்கள் வழியே நம் சற்குரு புகுந்து சென்றபோது சற்குருவின் உடலில் முட்கள் தைக்க முடியுமா என்பதை சற்றே ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். செந்நாயுருவிப் படலம் என்ற முட்கள் வழியேதான் நம் சற்குரு புகுந்து சென்றார். அவ்வாறு சென்றபோது அவரின் திருஉடலை முட்கள் பதம் பார்க்க அவர் உடலெங்கும் இரத்தம் கசிந்தது. ஆனால், கேட்பதற்கு இது மிகவும் கொடுமையான தபசாகத் தோன்றினாலும் மகான்கள் தன்னை அண்டியிருக்கும் அடியார்களின் நல்வாழ்விற்காக எத்தகைய தியாகமய செயல்களையும் ஏற்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது புலலாகின்றது அல்லவா ?

செந்நாயுருவி படலம்

மனிதன் குழந்தையாக இருக்கும்போது அவனுக்கு காம எண்ணம் சிறிதும் தோன்றுவதில்லை. அவன் வாலிபப் பருவம் அடையும்போதே உடலுறுப்புகள் காமத்தை வெளிப்படுத்துவதுடன் மனதும் காம எண்ணிங்களின் பால் வயப்படுகிறது அல்லவா? எனவே குழந்தைப் பருவத்தில் தோன்றா நிலையில் இருந்த காம எண்ணங்களே வாலிபப் பருவத்தில் தக்க சக்தியுடன் தோன்றி உடலையும் மனதையும் ஆக்கிரமிக்கின்றன. இதுவே செந்நாயுருவி படல மூலிகையின் சக்தியாகும். நம் சற்குரு பெற்ற நிலம்புரண்டி மூலிகையின் சக்திகளை சிறுவனான வெங்கடராமனின் உடலில் பல்லாண்டுகள் நிலை நிறுத்தி அவன் சற்குருவாக மலர்ந்து ஸ்ரீஅகத்திய ஆஸ்ரமத்தில் கோடிக் கணக்கான இறை அடியார்களுக்கு அன்னதானம் நிறைவேற்றியபோது சிறுவன் வெங்கடராமன் பெற்ற நிலம்புரண்டி மூலிகை சக்திகளே ருத்ராக்னியில் புடம் போட்ட தங்கமாக செந்நாயுருவி மூலிகை சக்தியால் மலர்ந்து பக்தர்களுக்கு திருஅண்ணாலையாரின் அருளை வாரி வழங்கியது என்றால் இந்த மூன்று (திரிதியை) இறையடியார்களின் சங்கமத்தில் திகழ்ந்த நிலம்புரண்டி மூலிகை மகாத்மியத்தை வர்ணிக்க முடியுமா ? அட்சய திரிதியை அன்று அவரவர் இயன்ற அளவு அன்னதானம், தங்க தானம், அமிர்த பானங்கள் தானம் போன்றவற்றை நிகழ்த்தி இந்த தானப் பலன்களை அருணகிரி ஈசனுக்கு அர்ப்பணித்து திருஅண்ணாமலையை கிரிவலம் வருதலே அட்சய திரிதியை திதியை கொண்டாடும் உத்தம வழிபாடாக சித்தர்கள் உரைக்கின்றனர்.

ஸ்ரீபைரவ மூர்த்திகள் கடம்பை

செந்நாயுருவிப் படல மூலிகைகளின் சக்திகளில் ஒன்றே இவ்வாறு காலத்தைக் கடந்து செல்வதாகும். ஒரு முறை முருகப் பெருமானின் அருள்பெற்ற ஒரு மகானை 70 வயதான ஒரு அடியார் சந்திக்க நேர்ந்தது. அவர் எதிர்காலத்தில் சாதிக்க இருக்கும் இறைச் சேவைகளைப் புரிந்து கொண்ட அந்த மகான், “ஐயா, நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் நினைக்கும் அனைத்து நற்காரியங்களையும் செய்து முடிக்க இறைவன் அருள்புரிவார். அதற்குத் தேவையான ஆயுள்சக்தியை சமயபுரம் மாரியம்மா உங்களுக்கு அருள்வாள்,” என்று கூறி அந்த அடியாரை ஆசிர்வசித்தார். உண்மையில் அந்த அடியாரின் ஆயுள் 70 வயதில் முடிவுறுவதாக இருந்தது உண்மையே. ஆனால் ஒரு மகானின் அருள் ஆசி கூட்டியதால் அந்த அடியாரும் தன்னுடைய 90 வயது வரை வாழ்ந்து அன்னதானம் இயற்றி நற்செயல்கள் பல புரிந்து இறைவனடி சேர்ந்தார். இவ்வாறு காலத்தில் முன் நோக்கி செல்லவும், பின் நோக்கி ஆயுளைப் பெருக்கவும் உறுதுணையாக அமைவதே செந்நாயுருவிப் படல மூலிகை சக்தியாகும். ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா ஆஸ்ரமம் எதிரில் அட்சய திரிதியை நாட்களில் இந்த மூலிகையை தரிசனம் செய்யும் ஆன்ம சக்தியை அடியார்கள் பெறவில்லை ஆயினும் தங்களால் இயன்ற தான தர்மங்களை இயற்றி திருஅண்ணாமலையை அட்சய திரிதியை நாளில் கிரிவலம் வந்து வணங்குதலால் செந்நாயுருவி படல மூலிகை சக்திகளை அட்சய தென்றல் என்ற குருவருள் சக்தி மூலம் அடியார்கள் பெறலாம். இதன் பயனால் அவரவர் தான தர்ம சக்திகளைப் பொறுத்து ஆண்டுகள், யுகங்கள் என்ற கணக்கில் காலத்தில் முன்னோக்கியோ பின்னோக்கியோ நகரலாம் என்பது ஆச்சரியமளிக்கும் உண்மையாகும். இத்தகைய அனுகிரக சக்திகளை இறைப் பிரசாதமாக அளிப்பதும் கடம்பை திருத்தலத்தில் அருள்புரியும் பைரவ மூர்த்திகளின் அருட்பாங்காகும்.
கடம்பை திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஅமிர்தகடேஸ்வர மூர்த்தி நவபாஷாணத்தில் துலங்கும் மூர்த்தியாகத் துலங்குவதால் அபிஷேக ஆராதனைகளை, தேவிக்கோ நந்தவனத்தில் பொலியும் ஸ்ரீகடம்பவன நாதருக்கோ நிறைவேற்றுவது ஏற்புடையதே. கங்கா தீர்த்தத்தால் ஸ்ரீகடம்பவன நாதருக்கு அபிஷேகம் இயற்றி, தொடர்ந்து பால், தயிர், தேன், பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம் என்ற அமிர்த வஸ்துக்களால் அபிஷேகம் இயற்றி நிறைவாக கங்கா தீர்த்தத்தால் அபிஷேகம் நிறைவேற்றுவது கடம்பை திருத்தலத்திற்கு உரிய சிறப்பான அபிஷேக வழிபாடாக மலர்கிறது. இத்தகைய அபிஷேக ஆராதனைகளின்போது அமிர்தவர்ஷிணி ராக கீர்த்தனைகளை இசைப்பதும், வீணை போன்ற நரம்பு கருவிகளை இசைத்து இறை மூர்த்திகளை மகிழ்விப்பதும் ஆயுளை நீட்டிக்கும் அற்புத வழிபாடாகவும், ஆரோக்கியத்தைப் பெருக்கும் இறை மார்கமாகவும் அமையும். பொதுவாக வயதான காலத்தில் தூக்கமின்றி படுக்கையில் வேதனையுடன் புரள்வோரும், நோய் நோடிகளால் தூக்கமின்றி அல்லல்படுவோரும் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள்.

யதீந்திரா! யதீந்திரா!!

இந்திரியங்கள் சுட்டும் புலன் இன்பங்களைக் கடந்த ஸ்ரீராமானுஜ ஆச்சாரியார் போன்ற பெருந்தகைகளையே நாம் யதீந்திரர் என்ற பட்டத்தால் அழைக்கிறோம். இவ்வகையில் கடம்பையில் அருள்புரியும் அமர்ந்த நிலை அமிர்த கடேச பெருமாள் மூர்த்தியும் ஸ்ரீயதீந்த்ர பெருமாள் மூர்த்தி என்றே அழைக்கப்படுகிறார். காரணம் ஐம்புலன்களை அடக்கி அமிர்த சக்திகளை நாடி நரம்புகள் அனைத்திலும் நிரவியவர்களே யதீந்திரர்கள் என்று அழைக்கப்பட்டாலும் இத்தகைய சக்திகளை அனுகிரகமாக அளிக்கும் மூர்த்தியே கடம்பை திருத்தல பெருமாள் மூர்த்தி ஆவதால் இவரும் அன்புடன் அடியார்களால் ஸ்ரீயதீந்த்ர பெருமாள் என அழைக்கப்படுகிறார். இவ்வாறு ஸ்ரீஅமிர்தகடேச ஈசன் அருள்புரியும் திருத்தலத்தில் ஸ்ரீயதீந்திர பெருமாள் மூர்த்தியும் அருள்புரிகின்றார் இறைவனின் பெருங்கருணைக்கு எல்லைதான் உண்டோ ? மேலும் இந்த பெருமாள் மூர்த்திக்கு அடியார்களாய் சேவை சாதிப்பவர்களே ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியும் ஸ்ரீகருடாழ்வார் மூர்த்தியும் ஆவர். பொதுவாக அட்சய திரிதியை தினங்களிலும், மற்ற வளர்பிறை திரிதியை திதி தினங்களிலும் இந்த மூன்று மூர்த்திகளையும் வணங்கி அடிப் பிரதட்சணமாக வலம் வந்து வழிபடுதலால் கிட்டும் பலன்கள் கோடி கோடி. பொதுவாக மருத்துவர்கள், சிறப்பாக பெண் மருத்துவர்கள் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். குழந்தை மருத்துவம், மகப்பேறு போன்ற துறைகளைச் சேர்ந்த மருத்துவர்களும் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். 12 மணி நேரத்திற்குப் பின்தான் பதில் சொல்ல முடியும் என்று நேரம் குறித்து பல மருத்துவர்கள் தங்களால் சரியாக முடிவெடுக்க முடியாத நிலையில் இத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாடே அவர்கள் சரியான முடிவை எடுக்க பெருந்துணை புரியும்.

ஸ்ரீகடம்பவன நாதர் கடம்பை

வள்ளலார் சுவாமிகள் ஒரு முறை, “மனிதன் எதற்காக இறக்கிறான் என்பதே தெரியவில்லையே,” என்றாராம். காரணம் ஒரு மனிதனின் ஆயுள் காலம் என்பது 120 ஆண்டுகள். இவ்வாறு 120 ஆண்டுகள் வாழ்ந்து தன் ஆயுளை இறை சேவைக்காகப் பயன்படுத்திய உத்தமரே யதீந்திரர் என்று அழைக்கப்படும் ஸ்ரீராமானுஜர் ஆவார். எனவே மனிதர்கள் அனைவரும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற உறுதியான எண்ணத்துடன் வாழ்ந்தால் அவர்களுக்கு விந்து நஷ்டம் என்ற ஒன்று அவர்கள் கனவிலும் தோன்றாது. விந்துக் குறைபாடுகளே ஆயுளைக் குறைக்கின்றன என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம். இத்தகைய விந்துக் குற்றங்களைக் களைந்து மனிதன் என்பவன் பூரண ஆயுளான 120 வருடங்களைப் பெற உதவுவதே கடம்பை கரக்கோயிலில் நாமியற்றும் வழிபாடாகும். கரக் கோயில் என்பதற்கு நம் ஆயுளை நாமே நிர்ணயித்துக் கொள்ளும் விதியை நம் கரங்களிலேயே பெற்றுள்ளோம் என்பதும் ஒரு பொருள். இவ்வாறு பூரண ஆயுளைப் பெறுவது மட்டுமல்லாமல் மனிதன் தன் ஆத்மாவை வெள்ளரி பழத்திலிருந்து விடுபடும் வகையில் நினைக்கும்போது பத்மாசன கோலத்தில் அமர்ந்து புன்முறுவலுடன் மரணத்தை ஏற்பதும் கடம்பை ஈசன் அருளும் பிரசாதமாகும். மனித உடலை இரதமாகவும் இறை பரம்பொருளை அதை செலுத்தும் சாரதியாகவும் ஏற்று வழிபடுவர்கள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலமே தென்கடம்பையாகும். இத்தகைய வழிபாட்டில் உன்னத நிலையை அடைந்த அர்ச்சுனனால் வழிபடப் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்றாகும். கடம்பை திருத்தலம் கிழக்கு நோக்கி செல்லும் ரதத்தின் வடிவில் அமைந்துள்ளது. கிழக்கு திசை இந்திரனுக்கு உரித்தானதுதானே. இதையொட்டி இந்திரன் கடம்பை திருத்தலத்தையே இரதத்தில் வைத்து இந்திர லோகத்தை நோக்கி ஓட்டிச் செல்ல முயன்றதாகவும் அதை ஆரவாரப் பிள்ளையார் தன் கட்டை விரலை தரையில் அழுத்தி நிறுத்தியதாகவும் வரலாறு உண்டு. புதிதாக பணியில் சேருபவர்கள் இவ்வாறு கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்திகள் அருள்புரியும் திருத்தலங்களை அடிப்பிரதட்சணமாக வலம் வந்து வணங்கிச் செல்லுதல் சிறப்பு. நீதிபதிகள், காவல்துறையினர் போன்று தங்கள் துறையில் தவறு நேரா வண்ணம் காத்து அற்புத பணியாற்ற நினைக்கும் அனைவரும் வணங்க வேண்டிய மூர்த்தியே இரதத்தில் பவனி வரும் இத்தல மூர்த்தியாவார். ஹரிச்சந்திர மகாராஜாவைப் போல் வாய்மையே வெல்லும் என்று மனதார நினைப்பவர்கள், உண்மைக்காக உயிரையும் விடத் துணியும் பக்தர்கள் அவசியம் வழிபட்டு அருள்பெற வேண்டிய திருத்தலம். பொதுவாக தென்கடம்பை, தென்கயிலை, தென்னாடு போன்ற சொற்றொடர்கள் இதயத்துடன் தொடர்பு கொண்டதால் இறைவனை இதயத்தில் நிறுத்தி இறை நினைவுடன் வழிபடுபவர்கள், தியானத்தில் ஈடுபடுபவர்களுக்கு உகந்த தலம் இதுவே ஆகும். அபூர்வமாக பத்து கரங்களுடன் தசபுஜ தாண்டவ மூர்த்தியாக சிவபெருமான் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளதால் இறைவனை உள்ளத்தில் நிலைநிறுத்த இத்தலத்தில் எப்பகுதியில் வேண்டுமானாலும் பாடி, ஆடி, பிரதட்சணம் செய்து, அமர்ந்து இறைவனை தியானிக்க உகந்த தலம். அப்பர் பெருமான் போன்ற பக்தர்கள் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று கூறி இறை தியானத்தில் லயித்துக் கிடந்தார்கள் என்றால் அந்த “கிடத்தலுக்கு” பின் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு என்பது இப்போது புரிகின்றது அல்லவா ? இப்போது புரியாவிட்டாலும் அப்பர் பெருமானைப் போல் இத்தலத்தில் வழிபாடுகள் இயற்றி “கிடத்தலால்” அனைத்தையும் அறியலாம் என்பது உண்மையே.

 

திசைகள் மொத்தம் எட்டு. இதில் ஆகாயம் பூமியையும் திசைகளாகக் கொள்ளும்போது திசைகள் பத்தாக மலர்கின்றன. இவ்வாறு பத்து திசைகளிலிருந்து வரும் எண்ணங்களை ஒடுக்கி தியானத்தில் ஆத்மசாதகனை நிலைநிறுத்துவதே கடம்பை திருத்தலத்தின் விசேஷமாகும். கடம்பை தசபுஜ ரிஷபாரூடர் வழிபாட்டுப் பலன் இத்தகைய தியான முறையை எளிதாக்குகிறது. ஆரம்பத்தில் பத்து திசைகளிலிருந்து வரும் எண்ணங்களை அறியும் இந்த தியான முறையானது நாளடைவில் குவியும்போது அது மனித உடலை இயக்கும் தசவாயுக்களின் வழிபாடாக மாறுகிறது. இவ்வாறு தியானத்தில் தொடர்ந்து செல்லும் பக்தனே தான் யார் என்ற உண்மையை உணர்கிறான். இதற்கு வழிகோலுவதே கடம்பை திருத்தல வழிபாடாகும். வரும் 4.6.2019 (விகாரி வைகாசி 21ம் நாள்) அன்று கடம்பை திருத்தலத்தில் குரு மங்கள கந்தர்வ சக்திகள் அபூர்வமான முறையில் விருத்தி அடைகின்றன என்பதே சித்தர்கள் கூறும் தெய்வீக இரகசியமாகும்.

குரு வக்ர கதியில் விருட்சிக ராசியில் வீற்றிருக்க குருவின் பார்வையைப் பெறும் சந்திர பகவான் வீற்றிருக்கும் ரிஷப ராசிக்குரிய சுக்ர பகவான் மேஷத்தில் வீற்றிருப்பது அற்புத குரு கந்தர்வ யோக அமைப்பாகும் அல்லவா ? இதற்கு அணி சேர்ப்பதே மங்கள பகவானாகிய செவ்வாய் பகவான் ஆட்சி பெற்ற புத பகவானுடன் மிதுன ராசியில் கொள்ளும் சாயுஜ்யம். வளர் பிறை சந்திரன் சூரியன் இருவரின் இருபுறம் வக்ர குருவின் முன்னிலையில் நிகழும் இத்தகைய சாயுஜ்ய யோகம் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே நிகழும் அற்புதம் என்பதால் பக்தர்கள் இதை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அன்று புன்னாக கௌரி விரத நாளும் அமைகிறது அல்லவா? இந்நாளில் அம்பிகை கிழக்கு நோக்கி அருளும் ஈசனை புன்னை மலர்களால் வழிபட்டு மகிழ்கிறாள். எனவே இத்தலத்தில் நிலவும் புன்னை மரங்களுக்கு மஞ்சள் பூசி குங்குமமிட்டு வழிபடுவதும், அம்மரங்களை வலம் வந்து வழிபாடுகள் இயற்றுவதும் இந்த மங்கள நாளுக்கு அணி சேர்க்கும் வழிபாடாகும். இத்தகைய வழிபாட்டுப் பலனால் எத்தனை பிறவிகள், எந்த கோலத்தில், லோகத்தில் பெற்றாலும் அத்தனை பிறவிகளிலும் தாங்கள் விரும்பிய கணவனையே மணாளனாக வரிக்கும் பாக்கியத்தை மணமான பெண்கள் பெறுவர். கிடைத்தற்கரிய இந்த வரத்தின் மகிமையை உணர்த்துவதும் கடம்பை திருத்தலத்தில் இந்நாள் இயற்றும் வழிபாடாகும்.

ருத்ர கங்காவில் பொலியும் குபேர சக்திகள்

குருவிற்கு உரிய பங்குனி மாதத்தில் 3, 4, 5 என்று மூன்று தேதிகளில் சூரிய கிரணங்கள் சுவாமியின் மேல் பொலியும் திவ்ய பூஜை நடைபெறும் திருத்தலமே கடம்பை ஆகும். இந்நாட்களில் கடம்பை ஈசனை வழிபடுவோர்க்கு குரு பக்தி வேரூன்றி பெருகுவதுடன் லட்சுமி கடாட்சமும் பெருகும். ஆனால், இந்த அற்புத சூரிய பூஜையை அறியாதோர் எண்ணற்றோர், இதை அறிந்தும் ஏதோ பல காரணங்களால் கடம்பை ஈசனை தரிசிக்க முடியாதோர் எண்ணற்றோர் உண்டே? ஈசன் பெருங்கருண உடையவன் என்பதற்கு சான்றாக இவ்வாறு பங்குனி மாதத்தில் பொலியும் சூரிய பூஜைகளின் சக்தியில் ஒரு பகுதியும் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் பிறை அன்று சந்திர பகவானிடமிருந்து தோன்றும் அமிர்த சக்திகளில் ஒரு பங்கும் கடம்பை கோயில் குபேர சக்தி தீர்த்தத்தில் ஸ்ரீஅகஸ்திய மாமுனியால் சேர்க்கப்படுகின்றன என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். பாற்கடலை கடைந்து தோன்றிய அமிர்தத்தின் ஒரு துளி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த போட்டியின் விளைவாக கடம்பை சக்தி தீர்த்தத்தில் விழுந்து கலந்த வரலாறு நீங்கள் அறிந்ததே.

குபேர சக்தி தீர்த்தம் கடம்பை

மனித கற்பனைக்கு எட்டாத பல விதமான ருத்ர அனுகிரக சக்திகள் பொலிவதால் கடம்பை திருத்தல தீர்த்தம் ருத்ர கங்கா என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறது. இதனால்தான் ருத்ரம் சமகம் போன்ற போன்ற வேத கீதங்களை இத்தீர்த்தக் கரையில் ஓதுவது சக்தி வாய்ந்த வழிபாடாக அமைகிறது. அப்பர் பெருமானின் திருத்தாண்டவ பதிகத்தை குறைந்தது 11 முறை ஓதுவதும் சிறப்புடையதே. இவ்வாறு கடம்பையில் விழுந்த அமிர்த துளியின் சக்திகள் சூரிய பூஜையாலும் சந்திர அமிர்தத்தாலும் தொடர்ந்து பெருகி வருகிறது என்றால் மக்கள் மேல் எம்பெருமானுக்கு உள்ள அன்பை எப்படிப் புரிந்து கொள்ள முடியும் ? 4.6.2019 அன்று காலை 10.30 (நம் சற்குரு பூமியில் அவதாரம் கொண்ட சித்தாம்ருத முகூர்த்த நேரம்) மணிக்கு ஒன்பதிற்குரியவர் லக்னத்திலிருந்து ஐந்தாம் இடத்திலிருந்து அமிர்தம் பெருக்கும் சந்திர பகவானை நேர் பார்வையாக பார்ப்பதால் எத்தகைய அமிர்த கடாட்ச சக்திகளும் குபேர சக்திகளும் வர்ஷிக்கும். இந்த அபூர்வ அமிர்த சக்திகளை பக்தர்கள் எப்படிப் பெறுவது ? அவரவர் கட்டை விரல் அளவே அவரவர் ஆத்மா என்பதால் மனித கட்டை விரலை விடக் குறைந்த உயரம் கொண்ட ஒரு செப்புப் பாத்திரத்தில் கடம்பை சக்தி தீர்த்தத்தை இறைப் பிரசாதமாக எடுத்துச் சென்று அவரவர் இல்லத்தில் வைத்து பூஜித்தலே எளிய முறையில் அபூர்வமான இந்த முகூர்த்த நாளில் பொலியும் குபேர சக்திகளையும் அமிர்த சக்திகளையும் குடும்ப அங்கத்தினர்கள் பெறும் முறையாகும். ஆலயத் தீர்த்தம் சிவன் சொத்து என்பதால் இந்த அளவிற்கு அதிகமான சக்தி தீர்த்தத்தை பக்தர்கள் எடுத்துச் சென்று விநியோகிக்க ஆரம்பித்தால் அதனால் எம்பெருமானின் சாபங்களே விளையும் என்பதை கருத்தில் கொள்ளவும். மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு இந்த ருத்ர கங்கா தீர்த்தத்தை அருந்துவதற்கு அளிப்பதால் அவர்கள் உயர்ந்த தேவ பதவிகளைப் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை.

தலவிருட்சம் பாதிரி அவிநாசி

மனிதர்கள் உயிர் நீத்தபின் அவர்கள் உடலை அக்னிக்கு ஆஹூதியாக அளித்து எஞ்சிய எலும்புப் பகுதியை அஸ்தி என்கிறோம். அஸ்தி என்றால் இருப்பது என்று பொருள். இறைவன் ஒருவனே என்றும் இருக்கும் பொருள் ஆதலால் இறைவனை நம்பும் அடியார்களை ஆஸ்திகர்கள் என்றும். இறைமையை மறுப்பவர்களை நாஸ்திகர்கள் என்றும் அழைக்கிறோம். ஆஸ்திகரான விக்ரமாதித்ய ராஜா தன்னுடைய தாய் இறந்த பின் தாயின் அஸ்தியை ஒரு மண் கலயத்தில் சுமந்தவாறு பல திருத்தலங்களுக்கும் புனித யாத்திரையை மேற்கொண்டான். அப்போது பூவாளூர் திருத்தலத்தை அடைந்து அங்கு இரவில் தங்கி மறுநாள் காலை பார்த்தபோது அவன் கொண்டு வந்திருந்த மண் கலசத்தில் இருந்த தாயின் அஸ்தி அனைத்தும் தாமரை மலர்களாக பூத்திருந்தன. பேருவகை கொண்ட மன்னன் அந்த அஸ்தி மலர்களை பல்குனி நதியில் மிதக்க விட்டு விட்டு தன் இறுதிக் கடனான அஸ்தி கரைத்தல் என்னும் புனிதச் சடங்கை நிறைவேற்றினான். இப்போது ஒரு கேள்வி. தாமரையாக மாறிய மலர்கள் எங்கிருந்து வந்தன ? காரணம் உலகில் உள்ள எல்லாப் பொருட்களும் மாற்று உருவம் கொண்டாலும் மாறாதிருப்பது தாமரை மலர் மாத்திரமே. அதனால்தான் எல்லா தெய்வீக மூர்த்திகளும் தங்கள் ஆசனமாகவோ, கைகளில் ஏந்தும் அலங்காரப் பொருளாகவோ தாமரையைக் கொண்டிருக்கின்றனர். ஆம், உங்கள் ஊஹம் சரியே. அமிர்த சக்திகள் நிறைந்த தென்கடம்பை தீர்த்தமே இவ்வாறு தாமரை வடிவில் பூவாளூரில் தோன்றியது என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். பூ ஆள் ஊர் அதாவது அஸ்தி தாமரை மலர்களாக உருவெடுக்க அந்த தாமரை மலர்கள் ஆண்ட தலமே பூவாளூர் ஆயிற்று என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய திருத்தலச் சுவை. இத்தகைய அமிர்த சக்திகள் காலம் தேசம் என்ற பாகுபாட்டைக் கடந்து நிற்பவையே. இருப்பினும் பொன்னிறமாக வறுத்த முந்திரி பருப்பு கலந்த சர்க்கரை பொங்கலை ஞாயிறு, சப்தமி சிறப்பாக பானு சப்தமி தினங்களில் தானமாக அளித்தலால் இவ்வாறு அஸ்தி வடிவில் நிலைகொண்டுள்ள ஆத்மாக்கள் நன்னிலை அடைய உறுதுணை புரியும்.

அவிநாசி

அவிநாசி திருத்தலத்தில் சுந்தரர் முதலையால் விழுங்கப்பட்ட சிறுவனை மீட்டுத் தந்தார் அல்லவா ? நான்கு வயதில் மறைந்த சிறுவன் மூன்று வருடங்கள் கழித்து அந்தச் சிவனடியாரால் மீட்கப்பட்டான் என்றால் அத்தனை காலமும் அவன் உயிர் நிரவி நின்ற அமிர்த சக்தியே தென்கடம்பையில் துயில் கொள்ளும் கடம்ப சக்திகள் என்னும் அமிர்த சக்திகளாகும். விநாசம் என்றால் அழிதல் என்று பொருள். அவிநாசி என்றால் மறைந்த பொருள் மாறாமல் என்றும் நிலைத்திருப்பது என்று பொருள். இத்தகைய அவிநாச சக்திகள் பெருகும் அமிர்த சக்திகள் நிறைந்த தலமே தென்கடம்பை என்பது தற்போது புலனாகின்றது அல்லவா ? இவ்வாறு உடலிலிருந்து விலகிய உயிர்கள் ஒளி வடிவில் மறைந்திருக்கும் என்பதையே அவிநாசி திருத்தலத்தின் புராண பெயரான புக்கொளியூர் உரைக்கின்றது. இது ஒரு குழப்பமான நிலையே. நாம் எப்பொருளையும் காண விளக்கு என்னும் ஒளியை நாடும்போது ஒளியுடன் விளங்கும் உயிர்கள் எப்படி மறைந்திருக்கும் என்பது புரியாத புதிர்தானே. இதற்கு விடையாக வருவதே நாம் இறந்தவர்கள் நன்னிலை அடைய ஒளி பொருந்திய விளக்கை ஏற்றி வைப்பதும் அவர்கள் தாகம் தீர்க்க குடிநீரை வார்ப்பதும் ஆகும். எப்போது ஒரு மனிதன் தன்னுள் ஒளிரும் ஆத்மாவை ஒளி வடிவில் காண்கின்றானோ அப்போதுதான் இந்த வினாவிற்கு விடை கிடைக்கும். அந்த விடை என்னும் ஒளியைத் தருவதே புக்கொளியூர். எனவே அவிநாசி நிலையாமை என்பதை மட்டும் நாசம் செய்வது கிடையாது அறியாமை என்னும் இருளையும் நாசம் செய்வதே. புது மண் பானைக்கு அசுத்தத்தை நீக்கும் தன்மை இயற்கையாகவே நிறைந்திருப்பதால் குடிநீருக்காக பயன்படுத்தும் நீரை புதுப் பானையில் வைத்து அதில் வெட்டி வேர், கடுக்காய் போன்றவற்றை சேர்த்து வைத்திருப்பதுண்டு. அதே போல புதுப் பானையில் அஸ்தியை வைத்து பாதிரி மரம் தல விருட்சமாக உள்ள அவிநாசி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர், சென்னை பாடி போன்ற திருத்தலங்களை தரிசனம் செய்து காசி, ராமேஸ்வரம், பூவாளூர் போன்ற திருத்தலங்களில் அஸ்தியை விடுவதால் அந்த ஆத்மாக்கள் நன்னிலை அடையும்.

அவிநாசி

பாதிரிப் பூவிற்கு ஆத்மாவைச் சூழ்ந்துள்ள கர்ம வினை இருளைக் களையும் தன்மை மிகுந்திருப்பதே இதற்குக் காரணம். இதுவும் சித்தர்களின் பரிந்துரையே. ஆதித்ய சக்திகள் உச்சம் கொள்ளும் சித்திரை மாதத்தில் மட்டுமே பாதிரிப் பூக்கள் மலர்வதற்கு இதுவும் ஒரு காரணமே. ஆத்ம சுத்தியில் மற்ற மலர்களுக்கு இல்லாத ஒரு தனிச் சிறப்பு பாதிரி மலருக்கு மட்டுமே இருப்பது ஏனோ என்ற கேள்வி உள்ளத்தில் முளைக்கிறது அல்லவா ? சூரிய பகவானுக்கு உரிய மித்ரன் ஆதியாக பாஸ்கரன் ஈறாக உள்ள 12 பெயர்களில் உள்ள ஆதித்யன் என்ற ஒன்பதாவது நாமமும் பாதிரிப்பூவின் வண்ணமும் ஒன்றாக இருப்பதுதான். பாதி நாரி என்ற சொற்களே பாதிரியாக வடிவெடுத்துள்ளன. அதாவது அர்த்தநாரி சொரூபமாக இருப்பதே பாதிரி மலரின் தன்மை ஆதலால் பாதிரி மரத்தை வலம் வந்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்யமாக அளித்தலால் எத்தகைய குடும்பப் பிணக்குகளும் தீர்ந்து இல்லத்தில் ஒற்றுமை ஓங்கும். திருப்பாதிரிப்புலியூர் திருத்தலத்தில் சொக்கட்டான் ஆடியபோது இறைவன் பல முறை தோற்றாலும் தானே வென்றதாக கூறவே அன்னை கோபித்துக் கொண்டு பரம்பொருளின் கண்களைப் பொத்தியதாக வரலாறு ஒன்று உண்டு. உண்மையில் அர்த்தநாரீஸ்வர தத்துவமாக இறைவன் விளங்கும்போது யார் வெற்றி பெற்றாலும் அது இறைவனுக்குக் கிடைத்த வெற்றிதானே? இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் எந்தக் குடும்பத்திலாவது மன வருத்தம் தோன்றுமா என்ன ? சற்குரு அவர்கள் உரையாடும்போது அடியார்கள் கேட்கும் கேள்விகளுக்கு விடையளித்த பின், “அப்புறம் ... அப்புறம் ... ?” என்று கேட்டு ஒரு புன்முறுவலைத் தவழ விடுவார்கள். அதாவது அடியார்கள் தாங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது ஏதாவது உள்ளதா என்ற மேலோட்டமான பதிலை இது குறித்தாலும், அப்புறம் என்ற ஐந்தெழுத்து மாணிக்கவாசகரின் நமசிவாய வாழ்க என்பதைப் போல இறைவனைக் குறிக்கும் ஐந்தெழுத்தாக அமைவதால் இறைவனை விட வேறு எதுவும் தெரிந்து கொள்வதற்கு இல்லை என்பதையே இந்த அப்புறம் என்ற சித்த மந்திரம் குறிக்கும். அதைப் போல இறைவனின் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தை விட உயர்ந்த தத்துவம் இப்பூவுலகில் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதாகவே சிவசக்தி ஐக்ய தரிசனம் எதிரே ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர்  ஆஸ்ரமம் அமைந்துள்ளது சற்குருவிற்கு உயிர்களின் மேலுள்ள கருணையைக் குறிக்கும்.

எதற்கும் வழிகாட்டும் அருட்களஞ்சியமாக சற்குரு அவர்களின் வாழ்க்கை விளங்குவதால் அவர்தம் வாழ்க்கை நிகழ்ச்சி சுட்டிக் காட்டும் ஒரு உண்மை நிகழ்ச்சியை இரசிப்போமா? ஒரு முறை சற்குருவுடன் செஸ் விளையாடுவதற்காக ஒரு பெரிய குழந்தைப் பட்டாளமே வந்து விட்டது. இது பெரியவர்களுக்கு பாடம் புகட்ட சற்குரு நிகழ்த்திய திருவிளையாடலே என்பதைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு பெரியவர்கள் “வளரவில்லை” என்பதும் உண்மையே. ஆனால், சற்குருவிற்கு எதிராக அணி திரண்ட குழந்தைப் பட்டாளம் எதிர்பார்த்தபடி சற்குரு குழந்தைகளை ஜெயிக்க முடியாமல் வேண்டுமென்றே அவர்கள் வெட்டும் வண்ணம் தன் ராணி போன்ற சக்திகளை கொண்டு நிறுத்தி தோல்வி மேல் தோல்வியாக தழுவிக் கொண்டிருந்தார். விளைவு ? சற்குருவிற்கு எதிராக ஆடுவது என்ற தங்கள் எண்ணத்தை விடுத்து எப்படியாவது சற்குருவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதில் குழந்தைகளின் ஆர்வம் மாறி அமைந்ததால் சற்குருவின் பக்கம் அவரை ஜெயிக்க வைக்க நிறைய “போட்டியாளர்கள்” சேர்ந்து விட்டனர். இதுதானே சற்குரு எதிர்பார்த்தது ? இப்போது சொல்லுங்கள் இந்த விளையாட்டில் ஜெயித்தது சற்குருவா அல்லது அவரை எதிர்த்து விளையாடிய குழந்தைகளா ? ஆனால், இந்த விளையாட்டை நாம் செஸ் ஆட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் குடும்பம் உட்பட இந்த விளையாட்டைத் தொடர முடிந்தால், நிச்சயம் வெற்றி நமதே, இந்த காரணத்தை இறை அடியார்கள் உணர வேண்டும் என்பதற்காக ஆஸ்ரமத்தில் செஸ் விளையாட்டும் ஒரு போட்டி அம்சமாக சேர்க்கப்பட்டிருந்தது. இறுதி வெற்றி இறைவனுக்கே என்ற உண்மையை குரு அருளால் உணர வழிகாட்டுவதே செஸ் விளையாட்டு.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி கடம்பை

ஸ்ரீதட்சிணா மூர்த்தியும் ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தியும் இணைந்து அருளும் அற்புத தலமே தென்கடம்பை. இத்திருத்தலத்தில் ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தி ஏந்தி அருள்புரியும் வீணை சபரிகந்தம் என்னும் திருநாமத்துடன் விளங்குகிறது. சப்தஸ்வரங்குளுக்கு உரிய அட்சரங்களுடன் துலங்குவது. உண்மையில் இந்த ஒவ்வொரு அட்சரமும் ஒளி சேர்க்கை அனுகிரகத்தைப் போல் ஏழு ஸ்வரங்களைத் தோற்றுவிப்பதால் 49 ஸ்வரங்கள் கூடிய வீணா கானம் இந்த சபரிகந்தம் வீணையில் எழுகின்றது. இந்த சபரிகந்தம் என்பது இறைவனைத் தவிர வேறு எதையும் நினைக்காத உள்ளம் உள்ளவர்கள் உடலிலிருந்து வீசும் ஒரு மணமாகும். இந்த மணம் உள்ள காலம் வரை இந்த மணத்தை நுகரும் பொருட்கள் வாடாமல், தன்னிலை மாறாமல் இருக்கும் என்பது உண்மை. இவ்வாறு ராமபிரானுக்காக பலவிதமான நறுமணம் வீசும் மலர்களையும், பழங்களையும் வைத்திருந்து ராமச்சந்திர மூர்த்திக்கும் சீதாபிராட்டிக்கும் படைத்த தெய்வமே சபரி தாய் ஆவாள். அவள் உலவிய திருத்தலமே ஸ்ரீஐயப்ப சுவாமி இன்று கோடிக் கணக்கான பக்தர்களுக்கு அருள்புரியும் சபரிமலையாகும். உத்தம காம தகனம் செய்தவர்களுக்கே அதாவது இறைவனைத் தவிர வேறு எதையும் உள்ளத்தில் உள்ளாதவர்களே இந்த சபரி மணத்தை நுகர முடியும் என்பதால்தான் கடுமையான விரதம் ஏற்று ஸ்ரீஐயப்பனை தரிசிக்க வேண்டும் என்ற முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சபரி மணத்தை நுகராமல் சபரி கிரீசனை தரிசப்பதால் யாது பயன் ? கடம்பை திருத்தலத்தில் அருவமாகவும் உருவமாகவும் அமர்ந்து இந்த வீணா கானத்தை கேட்பதால் கிட்டும் பலன்கள் அமோகம். தட்சிணா மூர்த்தி என்றால் உள்ளத்தில் உறையும் தெய்வம் என்ற ஒரு பொருளும் உண்டு. அதனால் பலரும் அவர்களையும் அறியாமல் திருத்தலங்களில் தட்சிணா மூர்த்தி முன் அமர்ந்து தங்கள் இதயத்தில் ஒலிக்கும் தட்சிண ஒலியைக் கேட்டு அமைதி அடைவர். இறைவனை தியானம் செய்ய உகந்த இடம் இதயமே என்பதை உணர்த்தும் தெய்வமே தட்சிணா மூர்த்தி ஆவார். இந்த சுவை அறிந்தவர்கள் இதயே நோய் என்பதையே அறியமாட்டார்கள்.

கடம்பை திருத்தலத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து குறைந்தது ஒரு நாழிகை நேரமேனும் (24 நிமிடங்கள்) தங்கள் இதயத் துடிப்பாக எழும் தட்சிண ஒலியைக் கேட்டு வருபவர்களுக்கு இதய நோய்களே தோன்றாது. இதே போல சபரிகந்தம் என்ற வீணா கானத்தை குறைந்தது ஒரு நாழிகை நேரத்திற்கு கிரகித்து அதன் பலனை மற்றவர்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணிப்பவர்கள் குறைந்தது அவர்களின் ஆயுளில் 100 நாட்களை கூட்டித் தர முடியும் என்பதே உண்மை. மேலே கூறிய முருக பக்தர் தன்னுடைய அடியாருக்கு இவ்வாறு 20 வருட ஆயுட்காலத்தை கூட்டித் தந்தது இம்முறையில்தான். சபரிகந்த ஆயுள் சக்தியை சுயநலத்திற்காக அதாவது எவரும் தன்னுடைய சொந்த ஆயுளை இந்த வீணா கானத்தால் ஒரு நொடி கூட அதிகரித்துக் கொள்ள முடியாது என்பதே சபரி கானத்தின் தன்மையாகும், பெருமையாகும். இதனால் என்ன பயன் என்பது ஒரு சாதாரண மனித மனம் கேட்கும் கேள்விதானே. இதைத்தான் சித்தர்கள், “தன்னை அறிந்தால் தன்னலம் புரியும் தன்னலம் மறைந்தால் பெரும் பேரின்பம்,” என்று பேரின்பத்தை அடைவதற்கான வழிமுறையை எளிமைப்படுத்தி அருளியுள்ளார்கள்.

ஸ்ரீமகிசாசுரமர்த்தினி கடம்பை

தொடரும் இந்த சபரிகானத்தைக் கேட்டு அதன் பலனை மற்றவர்களுக்கு அர்ப்பணிக்கும் பக்தர்கள் தங்கள் உடலில் நவ விதானமாய்ப் பொலியும் சூட்சும சரீரங்களின் தன்மையையும் நவநாத சித்தர்களின் அருள்கடாட்சத்தையும் சிறப்பாக நவநாத சித்தர்களில் ஒருவராய் விளங்கும் நம் சற்குருவின் அருமை பெருமைகளையும் புரிந்து கொள்ள இயலும். இதைப் புரிந்து கொண்டால் நீங்கள் ராஜாதானே. ஆனால் என்றாவது ஒருநாள் நிச்சயம் தமது சீடர்கள் இந்தப் பேருண்மையைப் புரிந்து கொள்வார்கள் என்ற தமது தொலைநோக்குப் பார்வை மகிமையால் அனைவரையும் “ராஜா” என்று அழைத்த நம் சற்குருவின் பெருமையை எப்படிப் புகழ்வது ?! ஒரு முறை ஒரு சீடர் சற்குருவிடம், “வாத்யாரே, முக்தியைப் பற்றி சாஸ்திரங்கள் அளிக்கும் விளக்கங்களோ, பெரியவர்கள் தெரிவிக்கும் விரிவுரைகளோ மிகவும் குழப்பமாகவே உள்ளன. தாங்கள்தான் இதை எளிமைப்படுத்தி எங்களுக்கு அளிக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார். சற்குரு அந்த அடியாரை கருணையுடன் பார்த்து, முக்திக்கான மிக மிக எளிமையான விளக்கத்தை அளித்தார், “நீ நீயில்லை”. சற்குரு அவர்கள் தெரிவித்த முக்திக்கான விளக்கமாக, ஐந்தெழுத்து தெளிவுப் பரல்களாக எழுந்தருளிய நான்கெழுத்து திருத்தலமே கடம்பை.
அப்பர் பெருமான் கடம்பை திருத்தலத்திற்கு எழுந்தருளியபோது 108 குடங்களில் கங்கை நீரை கொண்டு வந்து அப்பெருமானுக்கு வரவேற்பு அளித்ததாக விளக்கியுள்ளோம். திருப்பூந்துருத்தி, கண்டியூர், திருப்பைஞ்ஞீலி, திருப்பழனம் போன்ற பெரும்பாலான திருத்தலங்களில் அப்பர் பெருமான் யாரென்றே அறியாத சிவபக்தர்கள் எப்படி கடம்பை திருத்தலத்தில் மட்டும் அவரை வரவேற்க திரளாகக் கூடினார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? ஆயிரக் கணக்கான இறையடியார்களுக்கு அமிர்த சக்தியை அளிக்க எம்பெருமானால் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஏற்பாடே இதுவாகும். காரணம் கடம்பை திருத்தலத்தில்வ மட்டுமே பொலியும் அமிர்த சக்திக் கிரண்ங்களை வேறு எத்தலத்திலும் பெற முடியாது. ஒவ்வொரு பங்குனி மாதமும் சூரிய பகவான் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரைப் பணிந்து பெறும் அமிர்த சக்திகளின் ஒரு பகுதியை ஸ்ரீஅகத்திய பெருமான் இத்தல சக்தி தீர்த்தத்தில் நிரவி வைக்க அது ஒவ்வொரு மாதம் மூன்றாம் பிறை தினத்தன்று சந்திர பகவான் அதை அமிர்த சக்திகளாக மாற்ற அந்த அமிர்த சக்திகளை சூரிய பகவான் ஏற்று இத்தலத்தில் சூட்சுமமாக நீர் வார்க்கும் உத்தமர்களுடன் சேர்ந்து அதை அமிர்த பாஸ்கர கிரணங்களாக மாற்றி இத்தலத்தை வலம் வரும் பக்தர்களுக்கு அளிக்கின்றார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். இந்த பாஸ்கர சக்திகளின் ஒரு கூற்றையே ஸ்ரீதட்சிணாமூர்த்தியை அலங்கரிக்கும் ஒளி வீசும் கிரீடமாக இங்கே நீங்கள் தரிசனம் செய்கின்றீர்கள். அதனால்தான் ஒவ்வொரு இறையடியாரும் எந்த அளவிற்கு கங்கா தீர்த்தத்தை தலையில் சுமந்து வந்து இங்குள்ள மரங்களுக்கும் மூலிகை வனத்திற்கும் வார்க்கின்றார்களோ அந்த அளவிற்கு அவர்கள் குடும்பம் தழைப்பதுடன் சந்ததிகளும் தழைத்து நோய் நொடியின்றி நெடிது வாழும் என்பதே உண்மை. செவ்வாய்க் கிழமை அன்று செம்பருத்தி தைலத்தால் துர்கைக்கு காப்பிட்டு கரிசலாங்கண்ணி தைலத்தால் எருமை வாகனத்திற்கு காப்பிட்டு வழிபடுதல் குடும்பத்தில் நிலவும் கருத்து வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையைப் பெருக்கும் அற்புத வழிபாடாக அமையும். செம்பருத்தி, கரிசலாங்கண்ணி தைலத்துடன் சுத்தமான தேங்காய் எண்ணெயை கலந்து ஒன்பது தீபங்களை ஏற்றி துர்கை தேவியின் முன்போ அல்லது ஆலயத்தில் பாதுகாப்பான இடத்தில் வழிபடுதல் நலம். தீபம் குளிரும் வரை அல்லது ஒன்பது முறை ஆலயத்தை அடிப்பிரதட்சணமாக வலம் வருதல் சிறப்பு. வரும் 4.6.2019 இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றி தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை ராகுகால நேரத்தில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் நலம். எரிவாயு (gas), மின்சாரம், நெருப்பு, திருஷ்டி போன்ற தோஷங்களால் குடும்ப அங்கத்தினர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வரும் ஆபத்துக்களிலிருந்து வருமுன் காப்பாக அமைவதே இத்தகைய மங்களவார வழிபாடாகும்.

கங்கையின் புனிதத்துவம்

மகான்கள், ஞானிகள் என்போர் மனிதர்களைவிட உயர்ந்த நிலையில் இருந்தாலும் அவர்களிலும் பல படித்தரங்கள் உண்டு. மகான்கள், யோகிகளின் அடிமட்ட நிலையில் உள்ளவர்களால் பஞ்சபூத சக்திகளை உணர முடியும் என்றாலும் ருத்ராக்னியின் சக்தியையோ, கங்கை நீரின் புனிதத்துவத்தையோ அவர்களால் உணர முடியாது என்பது உண்மையே. சாதாரண மகானால் ஒரு அடுப்பில் எரியும் அக்னிக்கும் அங்கே நிரவியுள்ள ருத்ராக்னிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியாது, ஒரு குடத்தில் உள்ள சாதாரண தண்ணீருக்கும் கங்கா தீர்த்தத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடியாது. உதாரணமாக ஒரு விறகில் பொலியும் ருத்ராக்னி சக்தி கொண்டு ஒரு லட்சம் பேருக்கு உணவளிக்கலாம், உள்ளங்கையில் பொலியும் கங்கை தீர்த்தத்தால் ஒரு கோடி பசுமாடுகளின் தாகத்தைத் தீர்க்கலாம். ஒரு துளி நீருக்கு ஆயிரம் ஆண்டுகள் ருத்ரம் சமகம் மந்திரங்கள் கூறி பூஜை செய்தாலும் அந்த நீர் தூய்மை பெறுமே தவிர அது கங்கை நீராக மாறாது, அதே போல் ஒரு துளி கங்கை நீருக்கு கோடி ஆண்டுகள் ருத்ர மந்திரங்கள் ஓதி ஜபித்தாலும் அது மேலும் புனிதமாக மாறுமே தவிர அது ஒரு போதும் இன்னொரு துளி கங்கை நீரைக் கொண்டு வராது.

ஸ்ரீநர்த்தன விநாயகர் கடம்பை

எதற்காக கங்கை நீரைப் பற்றிய இத்தகைய விளக்கங்கள், பீடிகைகள் என்று உங்களுக்குத் தோன்றலாம். வரும் 4.6.2019 முகூர்த்த நாள் மனித வாழ்வில் ஏதோ ஒரு முறை மலரும் அரிய சந்தர்ப்பம். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை கிட்டும் அபூர்வ வழிபாட்டு முறை. ஆதலால் இதை நன்முறையில் பக்தர்களும் அடியார்களும் பயன்படுத்திக் கொண்டு தங்களால் இயன்ற அளவு கங்கா தீர்த்தத்தை தலையில் சுமந்து கொண்டு வந்து கடம்பை தீர்த்தத்தில் நிலவும் இறை மூர்த்திகளுக்கு அபிஷேகத்திற்காக அளித்து உங்கள் குடும்பமும் குடும்ப அங்கத்தினர்களும், மூதாதையர்களும் நலமுடன் வாழ இறையருளை பிரார்த்திக்கிறோம். தீவிரமாக ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் எந்த அளவிற்கு மேற்கூறிய பூஜை முறைகளால் வைகாசி 21ந் தேதி அமையும் சாயுஜ்ய யோக நாள் அன்று கங்கை தீர்த்தத்தின் புண்ணிய சக்திகளும் ருத்ராக்னியின் தீர்த்த சக்திகளும் பல்கிப் பெருகுகின்றன என்ற பேருண்மை புரிய வரும். இத்தகைய அபூர்வ யோக நாளில் தாமே அரைத்த சந்தனதை அரைத்த மூன்று மணி நேரத்திற்குள் இத்தல ஸ்ரீநர்த்தன கணபதி மூர்த்திக்கு சார்த்தி வழிபடுதல் வாழ்வில் கிடைத்தற்கரிய ஒரு சந்தர்ப்பமாகும். இந்த சந்தனத்திற்கு குபேர சந்தனக் குழம்பு என்று பெயர். குபேர சக்திகள் செறிந்தது. ஏன் இத்தகைய பெயர் என்பதை நீங்களே ஆத்மவிசாரம் செய்து அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக சிவாலய கோஷ்டங்களிலும் அம்மன் ஆலய கோஷ்டங்களிலும் எழுந்தருளும் கோஷ்ட மூர்த்திகளே இவர்கள். குபேர சக்திகள் அரைத்த சந்தனத்தில் நிரவி நிற்கும் நேரம் 7 நாழிகைகள் அதாவது கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். மற்ற காரணங்கள் ... ?
கலவியில் ஈடுபடும் ஆண் பெண் இருவரில் யார் அதிக இன்பத்தை அடைவர் என்பது மனித குலம் தோன்றிய நாள் முதற் கொண்டு மனித மனதில் எழும் கேள்வி என்றாலும் இதற்கு எந்த விஞ்ஞானியாலும் விஞ்ஞானத்தாலும் திருப்திகரமான பதிலைக் கூற முடியாது. ஆனால், அனைத்து அறிவையும் பூரணமாகப் பெற்ற சித்தர்களால் பதிலளிக்க முடியாத கேள்வி என்ற ஒன்று உண்டா என்ன ? ஆண் பெண் இருவரில் (கவனிக்க, கணவன் மனைவி இருவரில் அல்ல) யார் கோசார ரீதியாக அதிகமான அளவில் அமிர்த சக்தியைக் கொண்டுள்ளார்களோ அவர்களே கலவியில் அதிக இன்பம் அடைவார்கள் என்பதே அவர்கள் தெரிவிக்கும் பதில். உண்மையில் வரன்களுக்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது இந்த ஜாதகப் பொருத்தத்தையே யோனிப் பொருத்தம் என்ற முக்கியமான பொருத்தமாக நம் பெரியோர் கைக்கொண்டனர். இன்றும் ஜாதகப் பொருத்தங்களில் இதுவே முக்கியமான, முதன்மையான பொருத்தமாக திகழ்கிறது. இது பத்துப் பொருத்தங்களில் ஒன்றாகத் திகழ்வதால் கடம்பையில் அருள்புரியும் ஸ்ரீதசபுஜ ரிஷபாரூடர் தம்பதிகளுக்கிடையே நிலவும் பத்துப் பொருத்தங்கள் எப்படி இருந்தாலும் அவர்களின் இறை நம்பிக்கையைப் பொறுத்து அந்த தச பொருத்தங்களை மாற்றி அமைத்து அவர்கள் நல்வாழ்விற்குத் துணை புரிகிறார் என்பதே கடம்பை ஈசனின் அனுகிரக பாங்கைக் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும்.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கடம்பை

கடம்ப மூலவரே அனைத்து தினங்களிலும் தரிசனம் அளித்தாலும் ஸ்ரீரிஷபாரூட மூர்த்தியோ பட்சத்திற்கு ஒரு முறை மட்டுமே எழுந்தருளி பக்தர்களுக்கு அனுகிரகம் அளித்து நல்லருள் புரிகிறார். மாதம் இருமுறை அமிர்த சக்திகள் உச்ச நிலை, நீச்ச சாம்யம் கொள்வதும் இதனுடைன் தொடர்புடையதே என்பதை உணர்வதும் பிரமிப்பை அளிக்கக் கூடிய விஷயமாகும். கணவன் மனைவி முறையாக இணையும் சங்கத்திற்கே இத்தகைய விதிகள் பொருந்தும் என்பதும் அது முறையற்ற காமத் தொடர்பாக அமையும்போது அப்போது ஏழு மடங்கு அமிர்த சக்திகள் விரயமாவதால் இது எத்தகைய ஆயுள் குறைபாட்டை அளிக்கும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான கோட்பாடாகும். திருஞானசம்பந்தரின் மனைவி தோத்திர பூர்ணாம்பிகை திருமணத்திற்கு முன் கடம்பை திருத்தல ஸ்ரீரிஷபாரூட மூர்த்தியின் அனுகிரகம் பெற்றே திருஞானசம்பந்த மூர்த்தியின் வாழ்க்கைத் துணையாய் மாறி இறையருள் பெற்றாள் என்பது சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். எனவே இன்றும் இறைநெறியில் முன்னேறத் துடிக்கும் இளம்பெண்கள் இத்தல ஸ்ரீரிஷபாரூடரை வணங்கி அருள்பெறுதல் சிறப்பே. தோத்திரபூர்ணாம்பிகை என்ற ரிஷபாரூடரின் திருக்கரங்களைக் குறிக்கும் தச அட்சரங்கள் ஏதோ தற்செயலாக அமைந்த ஒரு அனுகிரகம் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தோத்திர பூர்ணாம்பிகை என்றால் வணங்குதற்குரிய, போற்றுதற்குரிய சக்தி அம்சங்களை பூர்ணமாக, முழுமையாகப் பெற்ற தேவி என்று பொருள். கை, கால், முகம் போன்ற உடலுறுப்புகள் முழுமை அடையாது இருப்பவர்களும், ஊனமுற்றவர்களும், சிறப்பாக திருமணமாகாத இத்தகைய பெண்கள் ஸ்ரீரிஷபாரூட மூர்த்தியை தொடர்ந்து வழிபட்டு வருதலால் அங்கக் குறைபாடுகள் ஒரு பொருட்டாக அவர்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமையாமல் நன்னிலை அடைவர் என்பது உறுதி. ஒருவருக்கொருவர் அன்யோன்யமான இல்லறத்திற்கு உதவியாய் இருக்கும் சுக்ர சக்திகளின் எண் சக்திக்கு உகந்த ஆறு தேங்காய் எண்ணெய் தீபங்களை ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் முன் ஏற்றி வழிபட வேண்டும். பெருமானின் இரு சீரிய பாதங்களுடன் ரிஷப வாகனத்தின் நான்கு பாதங்களும் சேர்ந்து ஆறு சுக்ர பாதங்களாக மாறுவது ஒரு தனி சிறப்பே. சிவபெருமானின் கோலங்களில் அர்த்தநாரீஸ்வர கோலம் தனித்தன்மை வாய்ந்ததாகும். மேலோட்டமாகப் பார்த்தால் இல்லறத்தில் இணையும் கணவன் மனைவிமார்களின் ஒற்றுமைக்கு வழிகாட்டும் தரிசனம் போல் அமைந்தாலும் உண்மையில் ஆண் பெண் என்ற தத்துவத்தை விளக்கும் ஆண் ஆணாகவும் பெண் பெண்ணாகவும் துலங்கி இறைவனை அடையும் உத்தம கோலமே அர்த்தநாரீஸ்வர கோலமாகும். இதை விரிவாக விளக்குவதே பகவான் ரஜனீஷின் உபதேசங்களும். பகவான் ராமகிருஷ்ணர் தந்திர சாஸ்திரத்தின்படி இறைவனை அடைய இந்த அர்த்தநாரீஸ்வர தத்துவமே அவருக்கு உறுதுணையாக நின்றது. அக்கால வழக்கப்படி ஆண் பெண் சேர்ந்த புணர்ச்சியில் ஈடுபடாமல் கள், சாராயம் போன்ற தான் என்ற உணர்வை மறக்க வைக்கும் போதைப் பொருட்களை உபயோகிக்காமல் தாந்திரீக சாத்திரத்தின் மூலமாக இறைவனை அடைந்து இந்த தத்துவத்தின் உண்மைப் பொருளை உலகிற்கு உணர்த்தியவரே ராமகிருஷ்ண பரமஹம்சர். தந்திர சாஸ்திரம் தற்காலத்தில் நிலவும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டிற்கு இயைந்ததே என்று நிரூபித்துக் காட்டியதே நமது சற்குரு வெங்கடராமன் அவர்கள் கைக்கொண்ட இல்லற வாழ்க்கை முறையுமாகும். நிர்விகல்ப ஜீவ சமாதி இலக்கணப்படி சற்குரு வெங்கடராமன் தான் ஆண் என்ற உணர்வைக் கடந்து நின்றாலும் தன்னுடைய குருநாதர் ஸ்ரீஇடியாப்ப சித்தர் அனுமதியுடன் அவர் முன்னிலையிலேயே சிவபெருமானை ஒரு சதுர்யுக காலத்திற்கு தரிசனம் செய்யும் சித்த பெருமையைப் பெற்றார். மனிதன் தோன்றிய நாள் முதலாய் இதுவரையில் எந்த சாதகனும் புரியாத ஒரு இறை சாதனையே இது !


ஸ்ரீதசபுஜ ரிஷபாரூடர் தென்கடம்பை
அமிர்த சக்திகள் என்பவை மனிதனின் வாழ்விற்கு மட்டும் உறுதுணையாக நிற்பவை அல்ல, மனித வாழ்விற்கு முன்னும் பின்னும் ஆத்மாவுடன் தொடர்பு கொண்டவையே. மனித வாழ்விற்கு முன்னும் பின்னும் அவனுடன் தொடர்பு கொள்ளும் சற்குரு ஒருவரே இத்தகைய அமிர்த சக்திகளின் தெய்வீகத் தன்மையை முற்றிலுமாக உணர்ந்தவர். உதாரணமாக ஒரு அடியார் ஊமையான தன் சித்தியுடன் தவறான தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். ஆனால் நம் சற்குருவைக் கண்டதும் தன்னுடைய தவறுகள் அவர் கண் முன் பளிச்சிட அத்தவறுகளைத் திரும்பவும் தொடர்வதில்லை என்ற வைராக்யம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல் சற்குருவின் முன்னிலையில் ஒரு குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி வாய் விட்டுக் கதறி அழவும் செய்தார். தாயினும் சாலப் பரிந்து நம் சற்குரு அவரைத் தேற்றினார். கண்ணீரில் கரையாத காமத் தவறும் உண்டா என்ன ? காமம் என்பது ஒரு கை ஓசை அல்லவே. அப்படியானால், இங்கு அந்த திருமணமாகாத ஊமை சித்திக்கு சற்குருவின் பரிபாலனம் உண்டா என்பதைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள். அதற்கு உறுதுணை செய்வதே வேறெங்கும் பெற முடியாத ரிஷபாரூடர் தரிசனமாகும். உண்மையில் தாய் என்பவள் தன் குழந்தை இப்பிறவியில் செய்யும் தவறையே சரியாக அறியாதவள். சற்குரு மட்டுமே தன்னை நம்பும் அடியார்கள் முற்பிறவியில் செய்த தவறுகளையும் களையும் மனப் பக்குவத்தை தன் அடியார்களுக்கு ஊட்டுகிறார். இவ்வாறு சற்குருவின் வழிகாட்டுதல் என்பது என்றோ ஒரு நாள் தோன்றி மறையும் கோடை மின்னல் கிடையாது அது என்றும் தொடரும் இனிய பாரம்பரியமே என்று உணர்த்துவதே தென்கடம்பை திருத்தலத்தில் பிரதோஷ நாளில் மட்டுமே பெறும் ஸ்ரீரிஷபாரூடரின் தரிசன மகாத்மியமாகும்.


தென்கடம்பை ஸ்ரீஅமிர்தகடேஸ்வர மூர்த்தி கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். திருத்தவத்துறையான லால்குடியில் ஸ்ரீஅமிர்தகடேஸ்வர மூர்த்தி மேற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். பூமி ஆகாய தத்துவமாக கடம்பையில் எழுந்தருளி உள்ள தட்சிணா மூர்த்திகள் லால்குடியில் அபூர்வமாக பிரதட்சிணம் வரும் வகையில் எழுந்தருளி உள்ளனர். இதில் ஆயிரமாயிரம் தெய்வீக கோட்பாடுகளும், இரகசியங்களும் பொதிந்திருந்தாலும் கடம்பையில் தோற்றம் கொள்ளும் அமிர்த சக்திகள் லால்குடியில் பூர்ணம் பெறுகின்றன, நிறைவு கொள்கின்றன என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய அமிர்த சுவையாகும். சற்குரு வெங்கடராமன் அவர்கள் திருத்தவத்துறையில் சிவபெருமானுக்கு தேவர்களும் அசுரர்களும் தாங்கள் பெற்ற தெய்வீக அமிர்த கடாட்சத்திற்காக நன்றி செலுத்திய புனித நாளில் உழவாரத் திருப்பணிகள் நிறைவேற்றி ஈசனை தனது அமிர்த சக்திகள் நிரம்பிய புனிதத் தோளில் ஏற்றி திருநடனம் இயற்றி வழிபாடுகள் செய்து பக்தர்களுக்கு எல்லாம் அமிர்த சக்திகளை வாரி வழங்கினார் என்பது ஒரு சிலரே அறிந்த இரகசியமாகும். எனவே ஒரு பட்சத்தில் வளர்பிறையிலோ தேய்பிறையிலோ அல்லது சிறப்பாக கஜகேசரி யோக சங்கம நாட்களில் இவ்விரு திருத்தலங்களையும் தரிசனம் செய்தலால் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி என்ற அனுகிரக சக்தியை பக்தர்கள் பெற்று சிறப்படையலாம்.
இந்த தரிசனத்தில் ஆறு அமிர்த சக்தி மூர்த்திகளின் தரிசனத்தைப் பெறுதலும் ஒரு பெரும் சிறப்பல்லவா ?


திருத்தவத்துறையில் பொலியும் பௌர்ணமி விசாகத் தென்றல்

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam