பாடுபடும் உயிர் பரமனைச் சேரும் நாள் என்றோ !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பகவத்கீதை பாராயணம்

மனித வாழ்க்கையின் குறிக்கோள், மனிதனாய்ப் பிறந்த உயிரின் குறிக்கோள் இறைவனை அடைவதே. மனிதர்களில் எத்தனை பேர் இந்தப் பேருண்மையை உணர்ந்து செயல்படுகிறார்கள் என்பது கேள்விக் குறியே. அவ்வாறு மனித சமுதாயத்தில் எங்கோ ஓரிருவர் அத்தி பூத்தாற்போல் உலக சுகங்களை ஒதுக்கி விட்டு இறைவனை அடைய முயன்றாலும் அவர்கள் இறைவனை அடைய எத்தனையோ இடர்களைச் சந்திக்க வேண்டியதாகிறது, பல இன்னல்களை அனுபவித்துத் தேற வேண்டியுள்ளது. இதை உணராதவர்களா நம் முன்னோர்கள். ஸ்ரீதிருநாவுக்கரசு சுவாமிகள் இறைவனின் திருவடியையே தன் தலை மேல் சூட்டப் பட்டாலும் அவரும் திருக்கையிலைநாதனின் தரிசனத்திற்காக கை கால்கள் தேய, உடல் முழுவதும் தேய தேயத்தான் கைலையை நோக்கி சென்றார். இறுதியில் அவர் அவயவங்கள் அனைத்தும் தேய்ந்து போகவே நடை என்பதை மறைந்து சுவாமிகளின் இதயம் மட்டும் தத்தி தத்தி கயிலையை நோக்கி நகர்ந்து சென்ற திருக்காட்சியை நேரில் கண்டு அனுபவித்த சித்தர்குல பெருமக்கள் அதைத் தம் அடியார்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அந்த சுவையை நேரில் அனுபவித்தவர்களுக்கே அதன் மகத்துவம் தெரியும். இவ்வளவு சிரமப்பட்டு இறை தரிசனத்திற்காக அடியார்கள் முயற்சி செய்வது ஏனோ என்று உங்களுக்கு கேட்கத் தோன்றும். வருங்காலத்தில் மக்களுக்கு இறை தரிசனத்திற்கான பொறுமையோ, வலிமையோ இருக்காது என்பதை தம் தீர்க தரிசனத்தால் உணர்ந்த நம் முன்னோர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றோர் வகுத்துத் தந்த வழிபாடுகளில் ஒன்றே தினமும் பகவத் கீதையை பாராயணம் செய்யும் வழிபாட்டு முறையாகும். ஆனால், நம் சற்குரு போன்றோர் வெறுமனே பகவத் கீதையை படித்தால் மட்டும், பாராயணம் செய்தல் மட்டும் போதாது, அதைக் கருத்தூன்றிக் கற்கவும் வேண்டும் என்று வலியுறுத்துவார்கள். இதன் முதல் கட்டமாக மாயைகளும் மாற்றங்களும் என்னும் தலைப்பில் நம் சற்குரு அருளிய சொற்பொழிவு திகழ்கின்றது. இதில் அமைந்துள்ள பகவத் கீதையின் 23 சுலோகங்களை மட்டுமாவது தினமும் பாராயணம் செய்து வந்து படிப்படியாக அந்த பாடல்கள் கூறும் உண்மையை உணர்ந்து பக்தர்கள் தங்கள் வாழ்வில் செயல்படுத்தி வந்தால் அவர்கள் அனைத்து சுகபோகங்களையும் பெற்று வாழ்வார்கள் என்பது உறுதி. நிலையான இறுதி பேரின்பமான இறைவனுடன் ஒன்றும் நிலையையும் அவர்கள் அடைவார்கள் என்று உறுதியளிப்பவர்களே சித்தர்கள்.

பஞ்சபூதங்களின் தொகுப்பாக அமைவதே மனித உடல். இறைவனுடன் ஒன்றும் நிலையை அடைய விரும்பும் பக்தர்கள் இந்த பஞ்ச பூதங்களையும் தூய்மைப்படுத்தி அவற்றை இறைவனுடன் ஒன்றச் செய்ய வேண்டும் அல்லவா ? இதற்கு வழிகாட்டுவதே 23 சுலோகங்கள் கொண்ட கீதை பாராயணம் ஆகும். வெறுமனே கீதை பாடல்களைப் பாடுவதால் மட்டும் ஒருவர் இறைவனுடன் ஒன்றும் இறுதி நிலையை அடைய முடியுமா என்ற சந்தேகம் பக்தர்களுக்கு தோன்றுவது இயற்கையே. நிச்சயமாக ஒருவர் கீதை சுலோகங்களைப் பாராயணம் செய்வதால் மட்டும் இறைவனுடன் ஒன்றிவிட முடியாது என்பது உண்மையே ஆயினும் இந்த முயற்சிக்கு தோள் கொடுப்பவர் நம் சற்குருநாதர் என்பதால் குரு நம்பிக்கை திடமாக உடைய ஒருவர் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம், சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்வதும் இந்த பகவத் கீதை பாராயணம் ஆகும். நம் அடியார்கள் இத்தகைய உயர்ந்த நிலையை அடைவதற்காக நம் சற்குரு மேற்கொண்ட தியாகம் நம்மை பிரமிக்க வைக்கும் ஒன்றாகும். நம் சற்குரு நோய்வாய்ப்பட்டு மிகவும் வருந்தியபோது பஞ்ச பூதங்களாலான இந்த மனித உடலைப் பிரித்து அளித்து விட்டு இந்த பூலோகத்தை விட்டு விலக திருவுள்ளம் கொண்டார்கள். அந்த இறுதிக் கட்டத்திலும் தன்னுடைய ஒவ்வொரு செயலும் மனித சமுதாயத்திற்கு நன்மைபயக்கும் விதமாகவே அமைந்தது என்பதே பக்தர்களைப் பிரமிக்க வைக்கும் உண்மையாகும். ஒரு சாண் மலத்தை மலக் குடலில் வைத்து மனித வடிவில் நடமாடும் மகான்கள் தாங்கள் மனித உடலை உகுக்கும்போது இந்த ஒரு சாண் மலத்தையும் வெளியேற்றி விடுவார்கள். இவ்வாறு ஒரு சாண் அளவு மலத்தையும் வெளியேற்றும் அளவிற்குக் கூட உடல் வலிமை இன்றி நம் சற்குரு திகழ்ந்தார். காரணம் தன் உடலில் இருந்த தூசி தூசி அளவு வலிமையையும் மக்கள் சமுதாயத்தின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்து விட்டார்கள் நம் சற்குரு என்பதே இந்த நிகழ்ச்சி உணர்த்தும் அன்பின் வெளிப்பாடு. உடலில் சற்றும் பலமில்லாததால் நம் இலவச மருத்துவ முகாம்களில் ஆர்வத்துடன் பங்கு பெற்ற ஒரு மருத்துவரிடம் ஒரு மலமிளக்கி மாத்திரையைப் பெற்று அதை அங்கிருந்த ஒரு அடியார் மூலம் தம் ஆசன வாயிலில் (குதத்தில்) செருகிக் கொண்டார்கள். சில நிமிடங்களில் நம் சற்குருவின் உடலிலிருந்து சரியாக ஒரு சாண் அளவு உள்ள மலம் வெளியேறியது. அதை அங்கிருந்த நெருங்கிய அடியார்களுக்கு தரிசனமாகவும் அளித்தார். இல்லை ஒரு வேளை அவர்கள் தங்கள் மலமான எண்ணங்களை வெளியேற்ற சற்குரு கைக்கொண்ட முயற்சிகளில் அதுவும் ஒன்றோ, யார் அறிவார், அந்த பரம்பொருளைத் தவிர ? இவ்வாறு பூமியின் மலங்களை எல்லாம் வெளியேற்றிய நம் சற்குரு அடுத்த இரண்டு நாட்களில் தம் சுயவாசஸ்தலமான குருமங்கள கந்தர்வ லோகத்தை அடைந்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

ஸ்ரீராமபிரான் நாச்சியார்கோவில்

இவ்வாறு பஞ்ச பூதங்களால் உருவான மனித உடலை தூய்மை செய்வதில் பல அடியார்களும் தத்தம் முறைகளில் சதா சர்வ காலமும் முயன்று கொண்டுதான் இருக்கின்றனர். இவ்வகையில் திருவரங்கத்தில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை என்ற பாமாலையை இயற்றி திருவரங்கத்தானுக்கு சமர்ப்பித்து அற்புத சேவை ஆற்றினார் என்று நாம் மேலோட்டமாகப் பொருள் கொண்டாலும் இதன் மூலம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருமே தங்களுடைய சூட்சும சரீரங்கள் ஒன்பதையும் தூய்மைப்படுத்தும் முகமாகவே சுவாமிகளுடைய திருப்பதிகங்கள் அமைந்தன என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். பஞ்ச பூதங்களின் கூடுதானே மனித உடல், இந்த பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கைதானே. இவ்வாறு பஞ்சபூதங்களையும் தூய்மைப்படுத்துவதாக அமைந்ததே ஆழ்வாரின் திருமாலை ஆகும். 45 என்று ஆழ்வார் அருளிய திருமாலைப் பாடல்களுக்கான பல அரிய விளக்கங்களுள் (9 x 5 = 45), இதுவும் ஒன்றாகும். பொதுவாக, வைணவத் தலங்களில் நவகிரகங்கள் காணப்படுவதில்லை. பெருமாளின் தசாவதாரங்களே இவ்வாறு நவகிரகங்கள் ஆற்றும் பணியை மேற்கொண்டு பரிசீலனை செய்வதாலும், வைணவப் பக்தர்களை தசாவதார மூர்த்திகளே வழிநடத்திச் செல்வதால் தசாவதா மூர்த்திகளின் வழிபாடே நவகிரக வழிபாட்டையும் முழுமை அடையச் செய்கின்றது என்பதே நாம் திருமாலை பதிகத்தின் மூலம் உணர்ந்து கொள்ளும் மற்றோர் உண்மையாகும். தசாவதார மூர்த்திகளுள் ராம அவதாரம் ஒன்றே மனிதர்களால் ஓரளவு புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது. மச்சாவதாரம், கூர்ம அவதாரம் போன்ற ராம அவதாரத்திற்கு முந்திய அவதாரங்கள் எதுவுமே மனித சக்தியால் சற்றும் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் எப்படி மனிதனின் ஆதி பிறப்பு மச்சம் என்ற மீனில் இருந்தே தோற்றம் கொண்டதால் தன் முந்தைய பிறப்பு பற்றிய இரகசியங்களை தெரிந்து கொள்ள விரும்பும் மனிதர்கள் கட்டாயம் மச்ச அவதாரத்தை வழிபட்டே ஆக வேண்டும் என்ற காரணத்தால் பெருமாளின் அனைத்து அவதாரங்களும் திருக்கோயில்களில் பக்தர்களின் வழிபாட்டிற்காக எழுந்தருளி உள்ளன. மனித அறிவிற்கு அப்பாற்பட்டு, மனித கற்பனைக்கு அதீதமாய் விளங்கும் இறை சக்தியையும் வழிபடும் முறையை மனிதர்களுக்குத் தெரிவிக்க வல்லவர்கள் சித்தர்கள் என்பதால் சித்தர்கள் வழங்கிய தசாவதார வழிபாட்டு முறைகளை இங்கு அளிக்கிறோம்.

ராமாவதாரம்

ராமாவதாரத்தை அடுத்த கிருஷ்ண அவதாரமோ, பலராமர் அவதாரமோ மனித உருவில் தோன்றிய அவதாரங்கள் என்றாலும் இவை எல்லாம் மனித சக்திக்கு அதீதமான கிருத்தியங்களை உடையதால் ராம அவதாரத்தைப் போல் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதிலும் சிறப்பாக இந்த கலியுலகத்திற்கு ஏற்ற அவதாரமாக இருப்பது ராம அவதாரமே ஆகும். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்து காட்டியவர் ஸ்ரீராம பிரான். ராமபிரானுடைய தாயார் கைகேயி, “உன்னை காட்டிற்கு போகும்படி தந்தை கூறினார்,” என்று சொல்லிய மறு விநாடியே தன்னுடைய தந்தையின் ஒப்புதலுக்காகக் கூட காத்திராமல் வனம் புக தயாராக இருந்தார் என்பதைச் சுட்டிக் காட்டுவதே ஒரு சொல் என்று ராமபிரான் கைக்கொண்ட பண்பாடு.

ஸ்ரீராமபிரான் இந்தலூர்

அதே போல் ஒரு இல் என்று கட்டிய மனைவியைத் தவிர வேறு எவரையும் ஏறெடுத்தும் பார்க்காத மனத் தின்மை உடைய ராமபிரான் தன்னைக் கட்டித் தழுவ ஆவலுடன் இருந்த ஆரண்ய முனி புங்கவர்களைக் கூட தொடாது ஏக பத்தினி விரதத்தைக் காத்தார் என்பது நீங்கள் அறிந்ததே. இத்தகைய ஏக பத்தினி விரதத்தை மேற்கொண்டவர் ஸ்ரீராமபிரான் மட்டுமல்ல ராமபிரானை குல தெய்வமாக, இஷ்ட தெய்வமாக, வழிபாட்டு நாயகனாக ஏற்றுக் கொண்ட பலரும் ராமபிரானின் மரபில் வந்தவர்களே. நம் சற்குரு இந்த ஏக பத்தினி விரதத்தைப் பற்றிக் கூறும்போது, “கண்ணகி பதி விரதையாக இருந்தாள், சீதை பதிவிரதையாக இருந்தாள் ... என்று பலரும் கூறுகின்றார்களே, ஏன் நீங்கள் ஏக பத்தினி விரதத்தைக் கொள்ளவில்லையா உங்களுடைய மனைவிமார்கள் அனைவரும் இத்தகைய கற்புக்கரசிகள் இல்லையா ?” என்று கேட்பார். இதிலிருந்து என்ன தெரிகிறது ? தெய்வீகத்தில் காலடி எடுத்து வைக்கும் அடியார் எவராக இருந்தாலும் அவருக்கு இருக்க வேண்டிய முதல் தகுதி இந்த ஏக பத்தினி விரதமோ, கற்புக்கரசி என்ற குணநலனோ ஆகும். அவ்வளவு எளிதில், நினைத்த மாத்திரத்தில் கைக்கொள்ள முடியாத இந்த விரத முறையை மக்கள் சமுதாயத்தில் விளைவிக்க, விதைக்க பல தலைமுறைகளாகப் பாடுபட்ட ஒரு உன்னத பாரம்பரியத்தில், பரம்பரையில் தோன்றியவரே நம் சற்குரு ஆவார். இதற்கு உதாரணமாக விளைந்ததே மதுரையில் ஒரு ஆறெழுத்து அடியாரின் திருமண வைபவத்தில் நிகழ்ந்த ஹோமமாகும். நம் சற்குரு ஹோமம் இயற்றும்போது ஹோம செங்கற்களை ஒரு மணல் மேடையில் அடுக்குவார்கள். இந்த மணல் மேடை மேல் தானோ அல்லது மற்றவர்களைக் கொண்டோ மந்திரங்களையோ, யந்திரங்களையோ, குழுக்குறிகளையோ அமைப்பதுண்டு. இவ்வாறு திருமணத்திற்காக இயற்றிய அந்த ஹோமத்தில் ஒரு ஆறெழுத்து அடியாரைக் கொண்டு ஸ்ரீராமபிரான் தன் உயிர் மூச்சாக அனுஷ்டித்த சத்ய வாக்யங்களை தெலுங்கில் எழுதச் சொன்னார்கள். ఒక మాట ఒక బాణం ఒక భార్య என்ற வாசகங்கள் சற்குருவின் தாத்தாவான ஸ்ரீகேசவசந்திரசேனர் குழந்தையாக இருந்த நம் சற்குருவிற்கு உபதேசமாக அளித்த தெய்வீக வாசகங்களாகும். ஸ்ரீமுத்து மீனாட்சி என்ற நம் சற்குருவின் அம்மாவின் திருப்பெயர் அன்னை மீனாட்சி தேவியையும் ராமச்சந்திர மூர்த்தி அவதரித்த கடக ராசியில் ஆட்சி பெறும் சந்திர பகவானையும் சந்திர பகவானுக்கு உகந்த முத்தையும் குறிக்கும். கடக ராசியில் உச்சம் பெறும் குரு பகவானை தம் ஜன்ம ஜாதகத்தில் பெற்றவர்தானே ராமச்சந்திர மூர்த்தி. இவ்வாறு கடக ராசியில் உச்சம் பெறும் குரு பகவானுடன் சேர்த்து மூன்று நவகிரகங்களை தன் ஜாதகத்தில் கொண்ட ஒரு அடியாரைக் கொண்டுதான் மேற்கண்ட வாசகங்களை ஹோம குண்டத்தில் அமைத்தார் என்பதே நம் சற்குரு அமைத்த ஹோம குண்டத்தைப் பற்றி நாமறிந்த ஒரு துளி தெய்வீக இரகசியம். இவ்வாறு நம் சற்குரு அமைத்த ஒரு ஹோம குண்டத்தில் எழுதும் ஒரு வாக்கியத்தின் பின்னணியில் இத்தகைய தெய்வீக அம்சங்கள் நிறைந்திருக்கும், எத்தனையோ பரம்பரையைச் சேர்ந்தவர்களின் தியாகமய பூஜைகள் பூரித்திருக்கும் என்றால் அந்த ஹோமத்தில் ஓதப்படும் மந்திரங்களின் தன்மை குறித்து விளம்பத்தான் முடியுமா ?

ஸ்ரீராமபிரான் வாலிகண்டபுரம்

அது மட்டுமா ? ஒவ்வொரு ஹோமம் நிகழும் இடத்தின் சூழ்நிலைகளோ எண்ணத்தால் வளைக்க இயலா மகாத்மியம் கொண்டவையாகத் துலங்கும். மேற்கண்ட ஹோமம் நிகழ்ந்த இடம் வைகை நதிக் கரையில் அமைந்த ஐராவதநல்லூர் என்பதாகும். ஐராவதம் என்பது இந்திரனின் வாகனமான வெள்ளை யானையைக் குறிப்பதாக மேலோட்டமாகக் கொண்டாலும் ஐராவத ஐக்ய ஜோதி என்ற கணவன் மனைவி இடையே ஒற்றுமை வளர்க்கும் தெய்வீக ஜோதி பூமியின் மேற்பரப்பில் தோன்றிய இடமாகும். இந்த ஜோதியை சதாசர்வ காலமும் ஊட்டி வளர்ப்பதே அருகில் உள்ள நூபுர கங்கை காட்டுப் பகுதியில் தோன்றிய தென்றலும், பழமுதிர்ச்சோலை தென்றலுமாகும். மேலும் இந்த ஆரண்யம் தற்போது ஒத்தக்கடை என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள ஸ்ரீநரசிம்மரின் நேரடி அனுகிரக மேற்பார்வையில் திகழும் பகுதியாகும். ஒரு சொல் என்பது தாய் அல்லது தந்தையின் வார்த்தைக்கு மரியாத கொடுத்தல், கட்டளைகளை மீறாது அனுஷ்டித்தல் என்று மட்டும் பொருள் கிடையாது. அரசன் என்ற நிலையில் உள்ளவர்கள் தங்கள் குடிமக்களாகிய பிரஜைகளின் வேண்டுகோள் வார்த்தைகளையும் செவிமடுக்க வேண்டும் என்ற செங்கோல் தத்துவத்தையும் நிலைநாட்டியதே இன்றும் அனைவராலும் புகழப்படும் ராமராஜ்யமாகும். தன்னுடைய எதிரியின் கட்டுப்பாட்டில் இருந்த ஒருத்தியை எப்படி மனைவியாக ஏற்க முடியும் என்று ராமராஜ்யத்தில் ஒரே ஒரு குடிமகன் கேட்டான் என்பதற்காக தன் ஆருயிர் மனைவியான சீதையை காட்டில் விட்டு விட்டு வரச் செய்த ராமபிரானின் உயர்ந்த பண்பாடும் ஒரு சொல் என்பதில் அடங்கும். தன்னுடைய பிரஜைகளின் நல்வாழ்விற்காக தன்னுடைய சுகபோகங்கள் அனைத்தையும் தியாகம் செய்த செம்மலே ராமபிரான் ஆவார். ராம பிரான் எய்த ஒரு பாணமே எத்தனையோ மக்களின் பிறவிப் பிணியைத் தீர்த்து அவர்களை உயர்ந்த நிலை அடையச் செய்தது. வெறுமனே ஒருவரை தண்டிப்பதற்காகத் தோன்றியதல்ல ராம பிரான் விடுத்த அம்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஸ்ரீபரசுராமர் ராமபிரானை எதிர்த்து தன்னுடைய வில்லை நாணேற்ற முடியுமா என்று சவால் விடுத்தபோது அதில் நாணேற்றிக் காட்டியதால் அந்த வில்லில் ஏற்றப்பட்ட ராம பாணத்திற்கு இணையாக, இலக்காக தன்னுடைய தபோ பலன் அனைத்தையும் அர்ப்பணித்தார் ஸ்ரீபரசுராமர். இவ்வாறு பெற்ற பரசுராமரின் தபோசக்திகள் அனைத்துமே ராவணனின் உயிரை மாய்த்து அந்த அரக்கனின் கோரப் பிடியில் மாட்டி தவித்துக் கொண்டிருந்த எத்தனையோ நவகிரக தேவதைகளுக்கும், உத்தம ஆத்மாக்களுக்கும் உயர்கதியை அளித்தன என்பதே இவ்விரு அவதாரங்கள் சேர்ந்து இயற்றிய high level conspiracy என்று மகான் சத்ய சாய்பாபாவால் புகழப்படும் ராம லீலையாகும்.

ஐங்கரனே ஆனைமுகத்தோனே

வைகை என்பது இரண்டு ஐகார சக்திகள் சேர்ந்த நீரோட்டத்தைக் குறிப்பது, சந்திரனைக் குறிக்கும் இரண்டு எழுத்துக்களை உடையது என்று நாம் நினைத்தாலும் இந்த ஐகார சக்திகள் தமிழ் மொழியின் ஒன்பதாவது எழுத்தாகத் திகழ்வதால் இதற்கு மேல் சிறந்த பொருள் என்று ஒன்று இல்லை என்று நிரூபிக்கும் சக்தியையும் குறிக்கும். கணவன் மனைவியின் ஒற்றுமையைக் குறிக்கும் சிவ சக்தி ஐக்ய தரிசனத்திற்கு எதிரே அமைந்துள்ள நம் ஆஸ்ரமத்தின் சிறப்பும் இதுதானே. இக்காரணம் பற்றியே எந்த ஒரு நற்காரியத்தை ஆரம்பிக்கும் முன்னும் மன ஒற்றுமையை ஏற்படுத்தும் மறையுடையாய் என்னும் இரண்டு ஐகார சக்திகள் நிறைந்த பதத்தில் ஆரம்பிக்கும் தேவாரப் பதிகத்தை அடியார்கள் மூலம் ஓதுவதை வழிபாடாகக் கொண்டிருந்தார்கள் நம் சற்குரு. நாமும் சற்குருவின் வழியில் நின்று காரிய சித்தியை அருளும் இந்தப் பதிகத்தை இடைவிடாது ஓதி நற்பலன் அடையலாம் அல்லவா ? மேலும் மறையுடையாய் என்னும் பதம் உடலையும் உள்ளத்தையும் இணைக்கும் ஆற்றலையும் உடையது என்பதே இப்பதத்தின் சிறப்பாகும். மீனாட்சி அம்மை தன் கையை வைகையில் வைத்து தீர்த்தம் எடுத்து குண்டோதரன் பசியை மட்டும் ஆற்றவில்லை எத்தனையோ தம்பதிகளிடையே மன ஒற்றுமையை ஏற்படுத்தினாள் என்பதும் வைகை நதியின் சிறப்பாகும். மன ஒற்றுமையில்லாமல் எந்த அளவிற்கு குடும்பத்தில் பேதங்கள் தோன்றினாலும் சுவாமி பிட்டுக்கு மண் சுமந்த படலம் கொண்டாடப்படும் மதுரை திருநகரில் உதிர்ந்த பிட்டுக்களை தானமாக வைகை ஆற்றின் கரையில் அளித்தலால் குடும்ப ஒற்றுமை பல்கிப் பெருகும். பிள்ளையாரின் ஐங்கரன் அவதாரத்திற்கு, அதாவது தன்னுடைய துதிக்கையை ஐந்தாவது கரமாகப் பெற்றுத் திகழும் விநாயக மூர்த்திக்குத் துலங்கும் தனிப்பட்ட சிறப்பிற்கு இந்த ஐகார சக்தியும் முக்கிய காரணமாகும். இவ்வாறு மதுரை திருநகரில் மண் சுமக்கும் திருவிழாவில் பங்கேற்க முடியாதவர்கள் அவரவர் ஊரில் ஐங்கரனாகத் துலங்கும் கன்னி மூலை கணபதியை வழிபட்டு உதிர்ந்த பிட்டுக்களைத் தானமாக அளிப்பதாலும் ஒற்றுமையில்லாமல் சிதறிய குடும்பங்கள் ஒன்று சேரும், பிட்டு என்ற அனைத்து துகள்களிலும் விளையும் சுவை ஒன்றே என்று அறியாமல் பல பெண்களின் மேல் மோகம் கொள்ளும் ஆண்களின் தவறான நடவடிக்கைகள் நல்லதொரு மாற்றத்தைப் பெறும். இத்தகைய ஐங்கர சக்திகள் அபூர்வமாகப் பொலியும் ஜாதக அம்சத்தைக் கொண்டதே நம் சற்குருவின் ஜனன ஜாதகமாகும். லக்னத்திலிருந்து ஐந்தாவது இடத்தில், அதாவது ஜன்ம லக்னமான கடக ராசியிலிருந்து ஐந்தாவது ராசியான விருச்சிக ராசியில் கேது பகவான் வீற்றிருக்கும் ஜாதக அம்சங்களைக் கொண்டவர்களே இத்தகைய ஐங்கரன் சக்திகளை, கேது பகவான் அருளும் மனோ ரீதியான சிவ சக்தி ஐக்ய சக்திகளை அளிக்க முடியும் என்பதே பலரும் அறியாத ஜாதக இரகசியங்களாகும். இவ்வாறு தங்கள் ஜன்ம லக்னத்திலிருந்தோ ராசியிலிருந்தோ ஐந்தாம் இடத்தில் கேது பகவானைப் பெற்றவர்கள் தங்கள் கையால் பிடித்த இனிப்புக் கொழுக்கட்டைகளை கன்னி மூலை கணபதிக்கு நைவேத்தியமாகப் படைத்து பக்தர்களுக்கு தானம் அளித்தலால் குடும்ப ஒற்றுமை பெருகுவதுடன் தங்கள் எடுத்த காரியங்கள் வெற்றி அடையும் நற்காரிய சித்தியையும் பெறுவார்கள்.

கூனலா வந்தியா ?

ராமாயணக் கூனியைப் பற்றி நாம் நன்கறிவோம். ஆனால், இந்த கூனியின் கூனல் உடம்பை சரி செய்ய ராமபிரான் மேற்கொண்ட முயற்சியை ஒரு சிலரே அறிவர். கூனி, கோணல், வக்ரம் என்பதெல்லாம் மனதின் சரியான செயல்பாடு மாறிச் செயல்படுவதையே குறிக்கிறது. சிறுவனாக இருந்த ராமபிரான் கூனியின் கூனலை சரி செய்வதற்காக தன்னுடைய ராமபாணத்தை கூனியின் இடுப்பைக் குறி பார்த்து எறிந்தார். தாடகை, மாரீசன், ராவணன் போன்ற அரக்கர்களின் தீய எண்ணங்களை மாய்த்து, தகர்த்தது மட்டும் ராம பாணம் அன்று. கூனி போன்று கோணல் மனம் படைத்த பலரின் கூனல்களைச் சரி செய்யவும் ராம பிரான் ராம பாணத்தை பயன்படுத்தினார் என்பதே ராம பாணத்தின் சுவையாகும். என்றோ, எந்த யுகத்திலோ, எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ராமபிரான் ராமபாணத்தை பயன்படுத்தி இருந்தாலும் ராம பாணத்தின் தூய சக்திகள், ஆணவத்தை வேரறுக்கும் அபூர்வ சக்திகள் இன்றும் பிரபஞ்சத்தில் நிறைந்துதான் உள்ளன. ஆனால், நம் சற்குரு போன்ற உத்தமர்களே மறைந்திருக்கும் இந்த ராமபாண சக்திகளை நல்வரங்களாகப் பெற்றிட வழி கூற முடியும். ராம பாணம் என்று பெயர் பெற்ற வலி நிவாரணிகளும் உண்டு என்பதை பலரும் அறிவோம். ஆயுர்வேத, சித்த மருந்துகள் மட்டும் அல்லாது ஆங்கில மருந்துகளை ஏற்போரும் மருந்துகளை விழுங்கும் முன்னால்,

ஸ்ரீசந்திரசேகரர் அலவந்திபுரம்

ராமபாணம் ராமபாணம் ராமபாணம் பாஹிமாம்
ராமபாணம் ராமபாணம் ராமபாணம் ரட்சமாம்
என்று ஓதி மருந்துகளை, மாத்திரைகளை, டானிக்குகளை உட்கொள்வதால் அந்த மருந்துகளின் முழுப் பலனையும் பெற்று உடனடி நிவாரணம் பெறலாம். சிறப்பாக வயிற்று வலி, தலைவலி போன்ற வலிகளுக்கு ராமபாண மந்திரத்தின் உடனடி செயல்பாட்டை நாம் உணரலாம். விதி வலியது என்பதற்கு உதாரணமாக ராமபிரானின் ராம பாணங்களும் அமைந்ததால் கூனியில் கூனல் முதுகைச் சரி செய்வதற்கான மூன்று ராம பாணங்களை ராமபிரானால் எய்ய முடியவில்லை. முதல் ராமபாணத்திலேயே கூனி ராமபிரானின் அற்புத தியாகச் செயலைப் புரிந்து கொள்ளாது ராமபிரானைப் பற்றி தாயார் கைகேயிடம் முறையிட்டதால் ராமபிரான் தன்னுடைய கூனல் நோயை நீக்கும் நிவாரணப் பணியை முதல் பாணத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று. ராமர் என்னதான் பெருமாளின் பூர்ண அவதாரமாக இருந்தாலும் மனிதன் என்ற போர்வையில் உலவி வந்ததால் ராம அவதாரம் நிறைவுபெறும் வரை ராமபிரான் ஒரு சாதாரண மனிதராகவே திகழ்ந்தார். அவ்வாறு ராமபிரான் மனிதனாகவே உலவியதால்தான் ஒரு சாதாரண மனிதன் இந்த பூமியில் தாங்கிக் கொள்ள வேண்டிய துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் தாங்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் அந்த துயர்களுக்கெல்லாம் சுமை தாங்கிகளையும் தன்னுடைய அவதாரம் மூலமாக மக்கள் சமுதாயத்திற்கு அளித்தார் என்பதே ராம அவதாரம் சுட்டிக் காட்டும் உண்மை ஆகும். கும்பகோணம் அருகில் அலவந்திபுரம் என்ற அற்புத விஷ்ணுபதி திருத்தலம் உண்டு. வந்தி மூலிகைகள் என்ற அபூர்வ மூலிகைகள் செழித்திருக்கும் இடம். அருகில் உள்ள திருத்தலமே கபிஸ்தலம் என்ற ஆறு எழுத்து திருத்தலமாகும். கபிஸ்தலம் திருத்தலத்தில் பாயும் காவிரி ஆற்றின் களிமண் சக்திகளைப் பற்றியும், இந்த களிமண்ணின் மூலிகை நோய் நிவாரண சக்தி பற்றியும், கண் திருஷ்டி, தீய பார்வைகளை நீக்கும் சக்தி பற்றியும் நம் சற்குரு அருளியவற்றை ஏற்கனவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழ் மூலமாக அளித்துள்ளோம். இந்த கபிஸ்தல திருத்தல காவிரி மண்ணுடன் அலவந்திபுரத்தில் அபூர்வமாக கிடைக்கும் வந்தி மூலிகையின் சாற்றைக் கலந்து ஒரு மண்டல காலத்திற்கு பூஜைகள் இயற்றி அந்த மண் உருண்டைகளை தன் ராம பாணத்தில் வைத்தே பாலகனான ராமபிரான் வந்தியின் கூனலைச் சரி செய்ய முனைந்தான் என்பதே சித்தர்கள் மட்டுமே அறிந்த தெய்வீக இரகசியம். ஒரே ஒரு கூனியின் கோணல் எண்ணங்களைச் சீர்செய்வதற்காகவா ராமபிரான் வைகுண்டத்திலிருந்து அவதாரம் எடுத்து பூமியில் இறங்கினார். நிச்சயமாக கிடையாது. வந்தியைப் போன்று, வந்தியை விடவும் மோசமான கோணல் எண்ணங்களை, வக்ர புத்தியை உடைய அநேக மக்கள் பூமியில் தோன்றுவார்கள் என்பதை உணர்ந்தவர்தானே பரம்பொருள். காளிங்க நாகத்தின் பெருகிய விஷ ஜ்வாலைகள் தணிந்த இடம் மட்டும் அலவந்திபுரம் கிடையாது, மக்களின் அனைத்து விதமான வக்ர எண்ணங்களும், உலகை ஆட்டும், மனதை ஆட்கொள்ளும் தீய சக்திகள் அனைத்தையும் நீக்கக் கூடிய அற்புத தலமே அலவந்திபுரமாகும். இவ்வாறு தன்னுடைய முதல் ராமபாணம் எய்தவுடன் அதைப் புரிந்து கொள்ளாது கூனி செயல்பட்டதால் மற்ற இரண்டு பாணங்களையும் அவள்மேல் எய்யாது தன் அம்பாரத் துணியில் பத்திரப்படுத்தி வைத்து விட்டார் ராமபிரான். அந்த இரண்டு வந்தி மூலிகைகள் சக்தி செறிந்த ராமபாணங்கள் என்ன ஆயின ?

ஸ்ரீவிஷ்ணு துர்கை அலவந்திபுரம்

உங்கள் ஊகம் சரியே. சீதையை ராவணன் கவர்ந்து சென்று சிறை வைத்ததால் ராவணனை ராமபாணத்தால் சம்ஹாரம் செய்து அரக்க குணங்களை பரவெளியில் தூய்மை செய்தாலும் இன்னும் எஞ்சிக் கிடந்த தீய எண்ணங்களை பஸ்மம் செய்வதற்காக தன் அம்பாரத் துணியில் மறைத்து வந்திருந்த வந்தி மூலிகை சக்திகள் செறிந்த ராம பாணத்தை எங்கிருந்து பெற்றாரோ அந்த திருத்தலத்திலேயே ஈசனுக்கு சமர்ப்பித்து விட்டார் ராமபிரான். ஆம், அலவந்திபுரம் ஸ்ரீசந்திரசேகரப் பெருமானின் திருவடிகளில் அந்த இரண்டு வந்தி சக்திகள் நிறைந்த ராமபாணங்களையும் ராமபிரான் சீதையுடன் எழுந்தருளி சமர்ப்பித்தார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். தீய சக்திகள் இரவில் அதிக ஆதிக்கம் பெறுவதைப் போல சில குறித்த கிரக சஞ்சாரங்களின்போதும் எதிர்மறை சக்திகள் பெருகுவதால் ராகவேந்திர வருடமாகத் துலங்கும் இவ்வருடம் தீய சக்திகளின் ஆதிக்கம் எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதற்கு நீங்கள் ஒவ்வொருவருமே சாட்சி கூறுவீர்கள் அல்லவா ? இத்தகைய தீய சக்திகளுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கக் கூடியதே அலவந்திபுரத்தில் மேற்கொள்ளும் வழிபாடாகும். அலவந்திபுரத்தின் அருகில் உள்ள காவிரி ஆற்றில் நீர் பெருக்கு அதிகரித்து வெள்ளம் தோன்றியபோது இத்தல ஸ்ரீசிவகாமி அம்பிகை வெள்ளப் பெருக்கிலிருந்து மக்களையும், வளர்ப்பு மிருகங்களையும், பயிர்களையும் காப்பாற்றி பெருங்கருணை புரிந்தாள். இது என்றோ நடந்த வைபவம் கிடையாது. இன்றும் அலவந்திபுர அம்பிகையை நம்பிக்கையுடன் தொழுவோர்கள் எத்தகைய துயர் வரினும் எதிர் கொள்ளும் மன ஆற்றலைக் கொள்வர் என்பது உறுதி.
அலைமீது அலையாக துயரங்கள் வரும்போது
அஞ்சாதே எனும் குரலை செவி கேட்குமா ?
என்று எந்த துயரத்திலும் ஆறுதல் வார்த்தைகளை அளிப்பவளே அலவந்திபுரம் அம்மை ஆவாள். துயர அலைகள், துன்ப அலைகள் தஞ்சம் கொள்ளும் திருவடிகளே அன்னையின் ஆனந்தத் திருவடிகள். ஆனால், அன்னையின் ஆறுதல் குரலைக் கேட்கும் அளவிற்கு, அந்த தெய்வீக ஆறுதலைப் புரிந்து கொள்ளும் புனித சக்தியை நாம் பெற்றுள்ளோமா என்பதே கேள்விக் குறி. பொதுவாக, சூரிய கிரகண சமயத்தில் பட்சிகள், மிருகங்கள் போன்றவை அமைதியாக தாங்கள் வசிக்கும் இடங்களில் யோகத்தில் நிலைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஏன், வீட்டில் வளர்க்கும் மீன்கள் கூட அமைதியில் குளிப்பதை பலரும் கண்டு களித்திருக்கலாம். இந்த அமைதியான சூழ்நிலையிலும் மற்றவர்களுக்காக பாடுபடும் மகான்ளும் யோகிகளும் பூஜைகள் இயற்றி அந்த அபூர்வ கிரகணத்தின் பலனை மற்ற ஜீவன்களுக்கு அர்ப்பணிக்கின்றார்கள் அல்லவா ? இங்கு நீங்கள் காணும் வீடியோ படத்தில் மூவிலை என்ற பித்ரு லோகத்திலிருந்து வந்த அண்டங் காக்கை ஒன்று திருமழபாடி திருத்தலத்தில் மூவிலை கிரகண சமயத்தில் காவிரி தீர்த்தத்தை தன் அலகில் சுமந்து செல்வதைக் கண்டு இரசிக்கலாம்.

ஸ்ரீசிவகாமி அம்பாள் அலவந்திபுரம்

இவ்வாறு காக்கைகளுக்கு நாம் குறைந்தவர்கள் அல்லர் என்பதை நிரூபிக்கும் முகமாகவே நம் சற்குரு காட்டிய வழியில் இந்த மூவிலை கிரகண சக்திகளை பாமர மக்களும் பெறும் பொருட்டு தாமரை இலைகளில் அடியார்கள் கிரகண பிரசாதத்தை அளித்தார்கள் என்பது நீங்கள் அறிந்ததே. கிரக சஞ்சாரங்களால் தோன்றும் விளைவுகளில் ஒன்றே கால சர்ப்ப யோகமாகும். இந்த ராகவேந்திர ஆண்டில் காலசர்ப்ப யோக விளைவுகளும் பின்னிப் பிணைவதால் ஸ்ரீகாளிங்கநர்த்தன பெருமாள் அருள்புரியும் திருவந்திபுர திருத்தலத்தில் வழிபாடு இயற்றுவது அவசியம், மிக அவசியம் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா ? இவ்வாறு கால சர்ப்ப யோகம் திகழும் சமயத்தில் பிறந்தவர்கள், அதிலும் இந்த வருடம் முழுவதுமே பிறந்தவர்கள் வழிபட வேண்டிய திருத்தலமே அலவந்திபுரமாகும். அபூர்வமாக அலவந்திபுரம் சிவத்தலத்தில் குரு பகவானும் சனீஸ்வர பகவானும் எதிரெதிரே எழுந்தருளி உள்ளனர். நவகிரக மூர்த்திகளின் இத்தகைய அனுகிரகத்தின் பின்னால் ஆயிரமாயிரம் இரகசியங்கள் மறைந்திருக்கும் என்றாலும் சனி, குரு நட்சத்திர மூர்த்திகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் வகையில் ஜனன ஜாதக அமைப்புகள் கொண்டோர் இத்தல ஈசனை வழிபட்டு வருதல் சிறப்பே. குரு பகவானின் பார்வை 5, 7, 9 என்ற இடங்களில் அமைவது போல சனீஸ்வர பகவானின் பார்வையும் 3, 7, 10 என்ற இடங்களில் அமையும். இதில் சம சப்தம பார்வையான ஏழாம் இட பார்வையே மிகுந்த விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகும். குரு பார்க்க கோடி நன்மை என்பதாக குருவின் பார்வை நன்மையை விளைவிக்கும் என்றாலும் சனி பகவானின் பார்வையால் பல துன்பங்கள் நேரும் என்பது உண்மையே. நல்ல விளைவுகளால் நாம் பெருமை கொண்டு திரியாமலும், தீய விளைவுகளால் சலனப்படாமலும் காத்தருள்வதே அலவந்திபுர வழிபாடாகும். அலவந்திபுர சிவத்தலத்தில் குரு பகவானுக்கு தேங்காய் எண்ணெய் காப்பிட்டு முல்லைப் பூச்சரங்களால் அலங்கரித்து, சனி பகவானுக்கு நல்லெண்ணையால் காப்பிட்டு நீலோத்பல மலர்களால் அலங்கரித்து வழிபடுவது குரு சனி மூர்த்திகளின் சம சப்தம பார்வையால் ஏற்படும் தோஷங்களுக்கு பரிகாரம் அளிக்கும் என்று சித்தர்கள் உறுதி அளிக்கிறார்கள். மஞ்சள் பட்டு வஸ்திரத்தை குரு பகவானுக்கு சாற்றியும், நீல வண்ண பட்டாடையை சனி பகவானுக்குச் சார்த்தியும், வறுத்த நிலக்கடலை கலந்த எலுமிச்சை சாத அன்னதானம் அளித்தல் சிறப்பு. ராம பிரானின் ஜனன ஜாதகத்தில் சனீஸ்வரன் தன் பத்தமாமிட உச்ச பார்வையாக குரு பகவானைப் பார்ப்பதால் இந்த குரு சனி யோகத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வண்ணம் ராமபிரான் சீதையுடன் இத்தலத்திற்கு எழுந்தருளி இத்தகைய வழிபாடுகளை மனிதனாகவே மேற்கொண்டார் என்பதும் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

குருவில்வம் அலவந்திபுரம்

கனிந்த கனி ஸ்ரீசங்கராச்சாரியார் வழிபட்ட திருத்தலங்களுள் சுவாமிகளின் திருநாமத்திலேயே ஸ்ரீசந்திரசேகரர் என அமைந்த அலவந்திபுரம் சிவத்தலமும் ஒன்றாகும். ஒரு முறை சதுர்மாஸ்ய விரதத்தை சுவாமிகள் இத்தலத்தில் மேற்கொண்டது அல்லாமல் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைப் பெற்ற திருத்தலமும் இதுவே ஆகும். அபூர்வமாக இன்று (2.7.2020) சாதுர்மாஸ்ய விரதமும் குரு வாரமும் இணையும் நாளாக அமைவதால் ஸ்ரீசந்திரசேகரப் பெருமானின் தரிசனத்தைப் பெறுதல் என்பது உங்கள் மூதாதையர்களின் திரண்ட புண்ணிய சக்தியால் விளையும் ஒரு அனுகிரகமே. மேலும் சமசப்த பார்வையாக சந்திர பகவானுடன் குரு பார்வையைக் கொண்ட கனிந்த கனியின் ஜாதகத்தில் குரு பகவானின் சிறப்பு பார்வையான ஐந்தாமிட அதிசூட்சும புத்தி பார்வையைப் பெற்றவரே சனீஸ்வர பகவான் ஆவார். இத்தகைய அனுகிரகமும் குரு ஆசீர்வாதமாக கனியும் என்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். குரு சந்திர யோகம் பூரணமாகப் பெற்ற ஜாதகமாக ஸ்ரீராமபிரானின் ஜாதகம் அமைந்ததால் இத்தல ஈசனை வணங்கி தன்னுடைய அவதார கிருத்தியங்களை பூர்ணம் செய்து கொண்டார் ராமபிரான் என்பது சொல்லாமலே விளங்கும் அல்லவா ? வியாழக்கிழமைகளிலும், மூன்றாம் பிறைச் சந்திர நாட்களிலும், வில்வ திரிராத்ரி விரத நாட்களிலும் வழிபட வேண்டிய மூர்த்தியே இத்தல ஈசனாவார். ஸ்ரீதட்சிணா மூர்த்தியை சதா சர்வகாலமும் தரிசனம் செய்தவாறே துலங்கும் இத்தல குருவில்வ மரத்தை தரிசனம் செய்தலால் சற்குரு அமையப் பெறாதோர் சற்குருவைப் பெற வழிகாட்டுவதும் அவ்வாறே மூதாதையர் அனுகிரகத்தால் கிடைத்த சற்குருவின் மகிமையை உணர்ந்து போற்றுதற்கு குரு நம்பிக்கையை வலுப்படுத்துவதும் இத்தல வழிபாட்டின் மகிமையாகும். குரு நம்பிக்கை என்பது மனதின் திறம்தானே, மதியை வளர்ப்பது சந்திரன்தானே, இத்தகைய மூன்றாம் பிறையைத் தரித்த வள்ளல்தானே இத்தல ஸ்ரீசந்திரசேகர ஈசன். இத்தகைய மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்திற்கு அருள்கூட்டுவதும் இங்கு நீங்கள் காணும் ஸ்ரீவிஷ்ணு துர்கையின் தரிசனமாகும். துர்கை தாயின் வர ஹஸ்தமானது மறைந்து துலங்குவதால் இது மூன்றாம் பிறைக்கு மெருகூட்டுவதாக மூன்று கரங்களுடன் அமைவதுடன் ஸ்ரீதுர்கை அளிக்கும் வர சக்திகள் மறைவாகவே மற்றவர்களின் கண்படா கவின் சக்தியாகத் துலங்கும். அதோடு மட்டுமன்றி மற்றர்களுக்குத் தெரியாது என்ற தைரியத்தில் தவறுகளைப் புரிந்தோர் அத்தகைய தவறுகளைத் திருத்திக் கொண்டோர் மீண்டும் அத்தவறுகளைப் புரியாத மன உறுதியைத் தருவதும் இவ்வாறு மூன்று கர தரிசனம் அளிக்கும் துர்கா தேவியின் மாண்பு ஆகும். இத்தகைய தரிசனங்கள் இயற்கையாகவே அமைய வேண்டுமே தவிர நாமாக அமைத்துக் கொள்வதில் பயனேதும் இல்லை என்பதையும் பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

குருவில்வமா ... ?
குருவும் வில்வமுமா ?

கிரகணம் என்பது சூரியனின் அல்லது சந்திரனின் சக்திகள் மறைக்கப்படுவதுதானே ? இத்தகைய சூரிய சந்திர கிரகண நாட்களில் அலவந்திபுர ஈசனை தரிசனம் செய்து, துர்கை அம்மனை வணங்கி பழத்திற்கு வெளியே தோன்றும் முந்திரி பருப்புகள் கலந்த பாயசத்தை தானமாக அளித்தலால் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்தல், டெண்டர் காண்ட்ராக்ட் போன்ற இரகசியங்களை பணம் வாங்கிக் கொண்டு பிறருக்கு வெளியிட்டோர் போன்றோர் தங்கள் தவற்றிற்கான பிராயசித்த முறைகளை நிறைவேற்றும் நல்வழி காட்டப் பெறுவர். இவ்வாறு மறைந்திருக்க வேண்டிய விஷ சக்திகளால் பாதிக்கப்பட்டோரும் மேற்கூறிய வழிபாடுகளால் நன்னிலை அடைவர். கனிந்தகனி வில்வமாலையை அணிந்த வண்ணம் பல சமயங்களில், பல இடங்களில் நமக்கு தரிசனம் அளித்துள்ளார்கள். இவற்றின் பின்னணியில் பல சுவையான அர்த்தங்கள் பொதிந்துள்ளன. விசாகம் என்பது முருகப் பெருமான் தோன்றிய திருநட்சத்திரம். காஞ்சி கனியின் சிறுவயது பெயரும் முருகப் பெருமானின் சுவாமிநாதன் என்ற பெயர்தானே. மேலும் சுவாமிகள் பிறந்த ஊரான விழுப்புரம் என்பது வில்வபுரம் என்று வழங்கப்படுவதும் சுவாமிகளின் சிரசை அலங்கரிக்கும் வில்வ மகுடம் பிறந்த காரணத்திற்கு சுவை கூட்டும் தெய்வீக தத்துவமாகும். இதனால் கனிந்த கனி அலவந்திபுரம் திருத்தலத்தில் எழுந்தருளியபோது குருவில்வம் என்னும் வில்வமரத்திலிருந்து பெற்ற வில்வ தளங்களை ஸ்ரீசந்திரசேகர ஈசனுக்கு சூட்ட அந்த வில்வப் பிரசாதத்தையே தன் தலையில் சூடி அங்கு இருந்த அடியார்களுக்கு எல்லாம் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரராக காட்சி அளித்தாராம் ஸ்ரீகனிந்த கனி. அந்த அற்புத காட்சியை நினைவு கூர்வதாக அமைவதே இங்கு நீங்கள் காணும் வில்வம் சூடிய பெருமானின் காட்சி. காஞ்சி மாமுனியின் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் நிலைகொண்ட சந்திர பகவான் ரிஷபத்தில் நிலைகொண்ட மூவரைப் பார்க்க ரிஷபத்தில் நிலைகொண்ட குரு பகவான் கன்னியில் எழுந்தருளியிருக்கும் சனி பகவானை சூட்சும குளிர்ச்சியுடன் நோக்க இந்த தெய்வீக இணைப்பே கனிந்தகனியின் வில்வமாலாதாரியான சந்திர மௌலீஸ்வர தரிசனத்தில் பொலிகிறது என்றால் இதன் மகிமைதான் என்னே, என்னே. சூரியனும் குருவும் இணையும் யோகத்தை சிவராஜ யோகம் என்பார்கள். இவ்வாறு ரிஷப ராசியில் அமைந்த சிவராஜ யோகத்துடன் திகழும் காஞ்சி கனிந்தகனி உலகத்து மன்னர்களுக்கெல்லாம் மாமன்னராகத் திகழ்ந்ததில் வியப்பென்ன ? வியாழக் கிழமைகள், விசாகம் நட்சத்திர தினங்கள், மூன்றாம் பிறை நாட்களில் மூலவருக்கு வில்வ தளங்களை சார்த்தி பெற்ற பிரசாத தளங்களை மண் கலயத்தில் உள்ள காவிரி நீரில் போட்டு இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் விடியற்காலையில் அருந்துவதை வழக்கமாகக் கொண்டால் அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும். சிறப்பாக பெண்களுக்கு ஏற்படும் அடிவயிறு பிரச்னைகளும், மாதவிடாய்த் துன்பங்களும், உடல் உஷ்ணத்தால் தோன்றும் வெட்டை போன்ற நோய்களும் நிவாரணம் பெறும். இங்கு நீங்கள் காணும் குருவில்வம் புகைப்படமானது விசாகம் நட்சத்திர தினத்தில் அமைந்து அருள்கூட்டுவதும் உங்கள் மூதாதையர்களின் புண்ணிய சக்தியே, குருவின் கருணை கடாட்சமே. கூடாநாட்கள் என்ற பிரபலாரிஷ்ட யோக நாட்கள், மரண யோகம், ராகுகாலம், எமகண்டம் போன்ற அரிஷ்ட யோகங்களில் பிறந்தவர்களின் பெற்றோர்கள் அலவந்திபுரத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று என்பதாக எந்த வித ஆபத்துகளும் அண்டாமல் அத்தகைய குழந்தைகள் பாதுகாப்பைப் பெறும் என்று சித்தர்கள் உறுதி அளிக்கிறார்கள்.

ஸ்ரீஅம்ருத மிருத்யுஞ்ஜய மூர்த்தி

விஷக்கடியிலிருந்து பாதுகாப்பை அளிப்பது மட்டும் அலவந்திபுரத்தின் சிறப்பு கிடையாது விஷமான எண்ணங்களிலிருந்தும், விஷம் தோய்ந்த கிரக சஞ்சார விளைவுகளிலிருந்தும் பாதுகாப்பு நல்குவதே அலவந்திபுரத்தில் மேற்கொள்ளும் வழிபாட்டின் சிறப்பாகும். பெற்றோர்கள் மட்டுமல்லாமல் இவ்வாறு அரிஷ்ட யோகத்தில் பிறந்த குழந்தைகள் தாங்கள் விவரம் அறிந்த பின்னர் அலவந்திபுரத்தில் தங்கள் பெற்றோர், உற்றார், சுற்றத்தார் மேற்கொண்ட வழிபாடுகளைத் தொடர வேண்டும் என்பது அவசியமே. நம் சற்குரு அருளிய ஸ்ரீஅம்ருத மிருத்யுஞ்ஜய மூர்த்தியின் வழிபாடு எத்தகைய மிருத்யுஞ்ஜய தோஷங்களையும் களையும் என்பது உண்மையே. மேற்கண்ட அரிஷ்ட தோஷங்களில் பிறந்தவர்களும், கால சர்ப்ப தோஷங்களைக் கொண்டவர்களும் விஷ்ணு சஹஸ்ரநாம தோத்திரங்களை ஸ்ரீஅம்ருத மிருத்யஞ்ஜயர் முன் தொடர்ந்து பாராயணம் செய்து வருவதால் மிருத்யு தோஷங்கள் களையப் பெறுவார்கள். அதே போல் இங்கு அளித்துள்ள ஸ்ரீகனிந்தகனியின் தரிசனமும் மிருத்யஞ்ஜய சக்திகளை அளிக்க வல்லதே. சுவாமிகளின் ஜாதகத்தில் பூர்ண சந்திர பகவானின் பார்வையைப் பெற்ற குரு பகவான் தன் சிறப்பு பார்வையாக ஆயுள்காரகனான சனீஸ்வர மூர்த்தியைப் பார்ப்பதும் இந்த பார்வை எட்டாமிட அதிபதியான குருவின் பார்வையாகவும் அமைவதே இந்த மிருத்யஞ்ஜய அம்சங்களை தெளிவாக்கும் கோட்பாடுகளாகும். பிரம்ம தண்டம் உட்பட சுவாமிகளின் முழு உருவமும் தன் ஆசனத்தில் அமையுமாறு உள்ள இந்த பூர்ண சரீர உருவ தரிசனம் பூர்ண ஆயுளை பக்தர்களுக்கு அளிக்கவல்லதே. ஆயுள் பாவமான எட்டாமிடத்தில் உச்சம் பெற்ற சுக்கிர பகவானும் ஆயுட்காரகனான சனி பகவானைப் பார்ப்பதால் பூர்ண ஆயுளுக்குப் பங்கமல்ல என்ற தத்துவத்தைக் குறிப்பதுதானே. இந்த ஜோதிட அம்சங்கள் அனைத்துமே இங்கு நீங்கள் காணும் கனிந்தகனியின் விரல் முத்திரைகளில் அமைந்துள்ளன என்பதே பாமரனையும் பரவசப்படுத்தும் மிருத்யுஞ்ஜய அம்சங்களாகும். ஸ்ரீஅம்ருத மிருத்யுஞ்ஜய மூர்த்தியின் வழிபாட்டிற்கு உரிய சிறந்த ஆண்டாக இந்த சார்வரி வருடம் பொலிகின்றது. தன் நான்கு கரங்களால் தன்னைத்தானே அமிர்தத்தால் அபிஷேகித்துக் கொள்வது என்பது ராகவேந்திர சக்திகளைப் பெருக்குவதுதானே ? பரமாச்சார்யாள் சுவாமிகள் திருஅண்ணாமலையைத் தரிசனம் செய்தது கிடையாது என்பது பலரும் அறியாத இரகசியம். திருஅண்ணாமலையிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள திருக்கோயிலூர் திருத்தலத்திற்கு வந்து அங்கிருந்தவாறே திருஅண்ணாமலையை தரிசனம் செய்து திரும்பி விட்டார்கள். மகான்கள் விரல் அசைவிற்குப் பின்னால் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் அல்லவா ? நம் சற்குரு காசி திருத்தலத்திற்குச் சென்றபோது வியாசகாசிக்குச் செல்ல மறுத்து விட்டார்கள். தான் அந்த திருத்தலத்தில் பல பிறவிகளுக்கு முன்னால் உலவியதாகவும் மீண்டும் தற்போது அதே இடத்திற்குச் சென்றால் பூர்வ ஜன்ம நினைவுகளால் அலைக்கழிக்கப்படுவார் என்பது நம் சற்குரு கூறிய காரணம். அப்படியானால் நம் சற்குரு வியாச பகவானா ? அந்த உண்மையை வேத மாமலையே அறியும். அதே போல கனிந்த கனியும் ஒரு பிறவியில் கூடை வில்வ தளங்களை தலையில் சுமந்து சென்று திருஅண்ணாமலையை கிரிவலமாக வந்து திருஅண்ணாமலையானுக்கு அர்ப்பணித்தார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் சுவை.

கூடை வில்வம்
கோடி செல்வம்

ஏக வில்வம் சிவார்ப்பணம் என்பதாக ஒரே ஒரு வில்வ தளத்தை சிவபெருமானுக்கு அர்ப்பணித்தாலே கோடி கோடியாக செல்வம் பெருகும் என்று ஆதிசங்கரர் உறுதி கூறுகிறார் என்றால் அப்பெருமானின் மரபில் வந்த கனிந்தகனி சுவாமிகள் கூடை வில்வத்தை இறைவனுக்கு அர்ப்பணித்தால் அப்பெருமான் பெறும் செல்வம் எத்தகைய உயர்ந்ததாக இருக்கும். இப்பிறவியில் சுவாமிகள் ஜகத்குருவாக உலகத்தவர்களுக்கு எல்லாம் ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்ததில் வியப்பில்லை அல்லவா ? ஸ்திர ராசியான ரிஷபத்தில் குருவும் சூரியனும் சிவராஜ யோகம் கொள்ள ரிஷப ராசியை பூர்ண சந்திரன் நேர்பார்வையால் நோக்க அந்த இடத்து அதிபதி குருவின் ஆட்சி வீடான மீன ராசியில் உச்சம் கொள்வது என்பது மிக மிக சக்தி வாய்ந்த சிவராஜ யோகம்தானே ? சிவராஜ யோகத்தை கொள்ளும் சூரிய பகவானும் குருவும் லக்னாதிபதியாகவும் ஐந்தாம் அதிபதியாகவும் திகழ இந்த சிவராஜ யோகம் ஆளுமைக்கு உகந்த பத்தாம் இடத்தில் பரிணமிப்பது என்றால் ... ?

திருஅண்ணாமலையில் உள்ள ஒரே தரிசனம் பல நாமங்களால் அழைக்கப்படும் என்பது நீங்கள் அறிந்ததே. நம் அஸ்ரமத்திற்கு எதிரில் உள்ள சிவசக்தி ஐக்ய தரிசனம், தீர்க தரிசனம், திவ்ய சந்தான தரிசனம் என்றெல்லலாம் அழைக்கப்படும். நம் ஆஸ்ரமத்தில் உள்ள பாத்திரங்களில் எல்லாம் RVV என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கும். Royapettah Viswanathan Venkataraman என்று நம் குருநாதரின் இந்த ஜன்மத்து நாமத்தை இந்தப் பாத்திரங்கள் குறிப்பதாகக் கொண்டாலும் அவை குரு பிரசாதமாக ஏற்றுக் கொள்ளப்படுவதால் இதில் தவறேதும் இல்லை என்றாலும் Ragavendra Vijaya Vilwam என்ற தரிசன சக்திகளையே, வில்வ தளங்கள் அளிக்கும் மூவிலை குரு சக்திகளையே ராகவேந்திர விஜய வில்வ தரிசனம் என்ற திருஅண்ணாமலை தரிசனம் அருள்கின்றது என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சித்த சுவையாகும். தனம் மட்டும் செல்வம் அன்று ராகவேந்திர பெருமாள் அருளும் விஜயம் என்ற வெற்றியும் நிலையான செல்வம்தானே. அதே போல இங்கு நீங்கள் காணும் கனிந்தகனியின் தரிசனமும் காமகோடி ஆடி தரிசனம், வரசித்தி வர தரிசனம், பார்த்திப பார்கவ தரிசனம் என்றெல்லாம் அழைக்கப்படும். இந்த தரிசனங்களை பக்தர்கள் பயன்படுத்தும் அளவிற்கு அந்த தரிசனங்கள் அமைந்து குறித்த பலன்களை நல்கும் என்பதே இத்தகைய தரிசனத்தின் மறைபொருளாகும்.

காமகோடி ஆடி தரிசனம் என்றால் ஒரு மனிதனின் உள்ளத்தில் மறைந்திருக்கும் ஆசைகளை பிரதிபலித்து காட்டும் தரிசனம் என்று பொருள். இந்த காமகோடி ஆடியாக விளங்குபவையே மீன ராசியில் ராகு பகவானுடன் துலங்கும் சுக்ர பகவானும் இவர்களின் சப்தம தானத்தில் அமைந்த சனியுடன் இணைந்த கேது பகவானும் ஆவார்கள். சனி பகவானும் சுக்ர பகவானும் நட்பு அம்சங்களுடன் விளங்குவதால் பிரிவினை அறியா நிழலது போல என்ற அம்சங்களுடன் துலங்கி பக்தர்களிடம் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்தி அவைகளைக் களையவும் நல்வழி காட்டுவார்கள். இதை உணர்ந்து கொள்ள அவர்களுக்கு உதவுவதே உமாபதி சிவாச்சாரியார் அருளிய கொடிக்கவி துதி பாராயணமும் வழிபாடும் ஆகும்.

கனிந்தகனி காட்டிய வழியில் நாமும் ரோகிணி, விசாகம், அனுஷம் நட்சத்திர நாட்களிலோ, புனர்பூசம் நான்காம் பாத நேரம் பரிணமிக்கும் ராமாமிர்த முகூர்த்த நேரத்திலோ தலையில் அல்லது வலது தோளில் அல்லது கைகளில் மூங்கில் கூடையில் அல்லது மூங்கில் தட்டுகளில் வில்வ தளங்களை வைத்து திருஅண்ணாமலையை வலம் வந்து வணங்கி அந்த வில்வ தளங்களை சுவாமி அர்ச்சனைக்காக திருக்கோயில்களில் அளிப்பதோ அல்லது தாமே ஸ்ரீமிருத்யுஞ்ஜய மூர்த்திக்கோ அல்லது ஸ்ரீகனிந்த கனியின் பாதக் கமலங்களுக்கு வில்வாஷ்டகம் துதியை ஓதி அர்ச்சிப்பதோ சிறப்புடையதாகும். தம்பதிகள், குழந்தைகள் இந்த வில்வ தளங்களை மாறி மாறி சுமந்து செல்வதும் ஓர் அற்புத வழிபாடாக அமைந்து குடும்பத்தில் அமைதி நிலவ அருள்புரியும். கணவன், குழந்தைகளிடன் உள்ள தீய பழக்கங்கள், கெட்ட நடத்தைகளைக் களையவும் இந்த வழிபாடு துணை புரியும். ஏக வில்வம் சிவார்ப்பணம் என்ற பீஜாட்சர சக்திகளுடன் துலங்கும் இடரினும் தளரினும் ... என்று ஆரம்பிக்கும் திருஞானசம்பந்தி மூர்த்தி நாயனார் ஓதிய தேவாரப் பதிகத்தை ஓதி அர்ச்சிப்பதும் சிறப்புடையதே. இவ்வாறு திருஅண்ணாமலையாரை வலம் வந்த வில்வ தளங்களை ஒரு வருடத்திற்குக் குறையாமல் இல்லங்களில் வைத்திருந்து அர்ச்சனைக்குப் பயன்படுத்தலாம். அவ்வாறு அர்ச்சித்த வில்வ தளங்களை மேற்கூறிய வகையில் மண் கலய தீர்த்தங்களில் வைத்து அருந்துவதும் ஏற்புடையதே. மாம்பலகையில் வஜ்ராசனத்தில் அமர்ந்து கனிந்தகனி காட்டிய வகையில் தியானம் புரிவதும் லட்சுமி தோத்திரங்கள், வில்வாஷ்டகம், தேவாரப் பதிகங்கள், கொடிக்கவி துதியை ஓதுவதும் சிறப்புடையதே.

அரகண்டநல்லூர்

மிருத்யுஞ்சய சக்திகளைப் பெருக்குவதற்காக கொடிக்கவி துதியை ஓதும்படியும், இடரினும் தளரினும் தேவாரப் பதிகத்தை ஓதும்படியும், ஸ்ரீஆதிசங்கரர் அருளிய வில்வஷ்டாகத்தை ஓதும்படியும் சற்குரு அருளியுள்ளதாக தெரிவிக்கிறீர்களே அப்படியானால் எல்லாவிதமான வழிபாடுகளையும் எப்படி ஒரு சாதாரண மனிதன் நிறைவேற்ற முடியும் என்று ஒரு அடியார் கேட்டுள்ளார். இது இன்று ஒரு இறையடியாரால் தொடுக்கப்பட்ட கேள்வி கிடையாது. ஆன்மீகத்தில் நாட்டம் துளிர்க்கத் தொடங்கும் அனைவர் மனதிலும் முளைத்தெழும் கேள்வியே இது. சாட்சாத் பராசக்தி தேவியான பரம்பொருளின் அம்சமான பார்வதி தேவியும் எம்பெருமானிடம் இந்த கேள்வியைத்தானே கேட்கிறாள். “பெருமாளின் ஆயிரம் நாமங்களை சொல்வதற்கு முடியாமல் போகும் பட்சத்தில் ஆயிரம் நாமத்திற்கு இணையான ஒரு சக்தி உடைய ஒரு நாமத்தை தங்களால் கூற முடிமா ?” என்று தன் ஆருயிர் கணவனிடம் பணிந்து கேட்கும்போது சற்குருமார்களுக்கெல்லாம் குருவாய்த் திகழும் பரம்பொருளோ, “ராமா என்று ஒரே ஒரு தடவை கூறினால் அது விஷ்ணுவின் ஆயிரம் நாமம் கூறிய பலனைக் கொடுக்குமே,” என்று தெளிவாக, திறம்பட உரைத்தாலும் எத்தனை பேர் எம்பெருமானின் கூற்றை ஒப்புக் கொண்டு ஒரே ஒரு முறை மட்டும் ராமா என்று கூறுகிறார்கள். இறை நாமத்தை உரைப்பது என்பது ஒரு புறம் இருக்க, அரிசியால் செய்யப்பட்டதுதானே இட்லி, பொங்கல், தோசை, உப்புமா போன்ற அனைத்து விதமான பலகாரங்களும். ஆனால், ஒரு ஒரே உணவில் திருப்தி கொள்வோர் யார் ? மனிதனின் இந்த அடிப்படை குறைபாடை அறியாதவர்களா மகான்களும் சித்தர்களும். இவ்வாறு பல கோணத்தில் செல்லும், பல பாதைகளில் பிரிந்து செல்லும் மனித சக்தியை முறைப்படுத்தி ஒரே திசையில் சென்று, இந்த சக்திகள் அனைத்தையும் ஒரே புள்ளியில் குவிக்க உதவுவதே அரகண்டநல்லூர் என்று தற்போது வழங்கப்படும் அறையணிநல்லூர் என்ற சிவத்தலத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடாகும். பெண்ணையாற்றங்கரையில் அமைந்துள்ள இச்சிவத்தலத்திலிருந்துதான் ஸ்ரீதிருஞானசம்பந்தர் திருஅண்ணாமலை நாதனை வணங்கி பாடல் இயற்றினார். திருக்கோயிலூரில் ஜீவசமாதி கொண்டு அருள்புரியும் ஸ்ரீஞானானந்த கிரியின் தியானகிரியும் இதுவே. ஸ்ரீரமண மகரிஷி திருஅண்ணாமலை ஈசனை திருஅண்ணாமலை சென்று தரிசிக்கும் முன் அரையணி கோவண தரிசனம் என்ற அபூர்வ தரிசனத்தை இத்தலத்தில் அமர்ந்தே பெற்றார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக தரிசனம். இவ்வாறு அரையில், தன் இடுப்பில் கட்டிய கோவணத்துடனே இறை தரிசனம் பெறும் வரை திகழ்ந்தவரே ஸ்ரீரமண மகரிஷி என்பதைப் பலரும் அறிவர். கனிந்த கனி காஞ்சி முனியும் அரகண்டநல்லூர் திருத்தலத்திலிருந்துதான் திருஅண்ணாமலையை தரிசனம் செய்தார்.

கெட்டி வாசல் அரகண்டநல்லூர்

மனிதர்கள் பல பொருட்களின் மேல் கொள்ளும் மோகத்திற்கு குறிப்பாக அன்னக்குற்றங்கள் அகல சங்கல்பத்தை காஞ்சி மகான் மேற்கொண்ட புனிதத்தலமும் இதுவேயாகும். முதலில் சில கைப்பிடி அளவு அன்னத்தை உணவாக ஏற்ற காஞ்சிப்பிரான், பின்னர் ஒரே ஒரு வாழைக்காயை மட்டும் வேக வைத்து உண்ணத் தொடங்கினார். இறுதியில் ஒரு சில நெல் மணிகளை பொரித்து அந்த அவல் பொரி ஊறிய பாலை மட்டும் சிறிது மட்டும் பருகி தான் உணவருந்தும் பூஜையை நிறைவு செய்து கொண்டார். இவ்வாறு பல தெய்வங்களை வழிபடும் முறையையோ, பல மூர்த்திகளின் மேல் ஈடுபாடு கொள்ளும் மனதையோ, பல உணவுப் பொருட்களின் மேல் கொள்ளும் நாட்டத்தையோ, பல பெண்களின் மேல் தோன்றும் மோகத்தையோ, இவ்வாறு பலவாக விரிந்த மனித சக்தியை எல்லாம் ஒருமுகப்படுத்தி ஒரே ஒரு இறைவன் மேல், ஒரே உணவின் மேல், ஒரே பெண்ணான தன் மனைவியை மட்டும் நேசிக்கும் தன்மையை விருத்தி செய்ய விரும்பும் அடியார்களுக்கு வழிகாட்டியாக அருள்வதே அறையணிநல்லூர் திருத்தலத்தில் மேற்கொள்ளும் வழிபாடாகும். இந்த தத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் முகமாக இங்கு முருகப் பெருமான் ஆறு திருக்கரங்களுடன் ஒரே முகத்துடன் வடக்கு நோக்கி வள்ளி தெய்வானை தேவியர்களுடன் எழுந்தருளி உள்ளார். தங்கள் கையால் ஒரு சாண் அளவு அகலமுடைய கோவணங்களை தானம் அளிப்பதும், தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானமாக அளிப்பதும் இத்தலத்தில் நிறைவேற்றக் கூடிய சிறந்த வழிபாடாகும். ஒரு பக்தருடைய அனைத்து ஆசைகளும் அபிலாஷைகளும் மறைந்து இறைவன் ஒருவனின் மேல் மட்டுமே வழிபாடு தீவிரம் அடையும்போது ஓதக் கூடியதே ஏக வில்வம் சிவார்ப்பணம் என்ற மந்திரம் எதிரொலிக்கும் உண்மையான வழிபாடாகும். முருகப் பெருமான் வடக்கு நோக்கி அபூர்வமாக குபேர திசை நோக்கி எழுந்தருளி உள்ளார். அனைத்து செல்வங்களையும் அளிக்கும் அதிபதியாக முருகப் பெருமான் இத்தலத்தில் அருள்புரிகின்றார் என்றாலும் அனைத்து செல்வங்களுக்கும் உண்மையான அதிபதி, அனைத்து செல்வங்களையும் வெல்லக் கூடிய தன் தந்தை ஒருவரே என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தும் முகமாக வடக்கில் திகழும் திருஅண்ணாமலையாரை தரிசிக்கும் முகமாகவே வடக்கு நோக்கி குபேர வேந்தனாக ஸ்ரீமுருகப் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளார். இங்கு காணும் அரகண்டநல்லூர் கெட்டிவாசல் படிகளிலோ அல்லது வடக்கு முகமாகத் திகழும் எந்த திருத்தல படியில் வேண்டுமானாலும் அமர்ந்து தியானத்தில் லயிப்பதால் பல உருவங்களின் மேல், பல திசைகளிலும் விரயமாகும் மனோ சக்திகள் ஒரே புள்ளியில் குவியும் அரகண்ட சக்தியைப் பக்தர்கள் பெறுவார்கள் என்பது திண்ணம். அர கண்டம் என்பது சிவபெருமானின் கண்டத்தில் பொலியும் நீலகண்ட சக்திகளாகப் பொலிவதால் இந்த நீலகண்டத்திற்கு இணையான ஒரு தெய்வீக சக்தி பிரபஞ்சத்தில் வேறு எங்குமே காண இயலாது என்பதே சித்தர்கள் தெளிவுபடுத்தும் உண்மையாகும். இத்தகைய நீலகண்ட தலத்தில், அரகண்ட ஆலயத்தில் நிறைவேற்றப்படும் பிரதோஷ வழிபாடு எத்தகைய மகிமை உடையதாக இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

முள்ளுடன் ரோஜா
கள்ளுடன் முகை

இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றி பல யுகங்கள் தவமியற்றிய ஸ்ரீநீலகண்ட முனிவருக்கு இறைவன் மூன்றாம் பிறை அணிந்த சந்திரமௌளீஸ்வரராக காட்சி தந்தமையால் காஞ்சிகனி ஸ்ரீசந்திரசேகரானந்த சரஸ்வதி இங்கிருந்து நீலகண்ட பெருமான் தரிசனத்தை திருஅண்ணாமலை முகடு தரிசனமாகவும் மூன்றாம் பிறை அணிந்த பெருமானின் தரிசனத்தை அறையணிநல்லூரிலும் பெற்றார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் இறை அனுபுதியாகும். இது ஏதோ ஒரு காலத்தில் கனிந்தகனி பெற்ற அனுபூதி கிடையாது. இன்றும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தையும் திருஅண்ணாமலை ஈசனின் அரையணி கோவண தரிசனத்தையும் அறையணிநல்லூர் திருத்தலத்திலிருந்தோ அல்லது திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலிருந்தோ பெறுதல் என்பது கிடைத்தற்கரிய ஒரு பாக்யமே.

அரிதிலும் அரிய
அரையணி கோவண தரிசனம்
அரகண்டநல்லூர்

பூமியில் தோன்றிய ரோஜா மலரின் மணம் தெய்வ லோகத்திலிருந்து தோன்றியதே. ரோஜா மலரில் பொலியும் தேனானது காமதேனு லோகத்திலிருந்து தோன்றிய அமிர்த சஞ்சீவினி சக்திகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதாகும். தேனோ, மணமோ பூலோகத்தில் எந்த மனிதனாலும் தோற்றுவிக்கப்பட முடியாத ஈடு இணையற்ற தெய்வீக சக்திகள் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உறுதுணையாக இருப்பதே அறையணிநல்லூர் திருத்தலத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடாகும். அதே போல் ரோஜா மலரில் உள்ள முள்ளோ, நெருஞ்சி தாவரத்தில் உள்ள முள்ளோ மனிதர்களால் தோற்றுவிக்க முடியாத மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். இன்றும் நெருஞ்சி முட்கள் நிறைந்த படுக்கையில் இருதய நோயாளிகளை படுக்க வைத்து இதய நோய்களை, இரத்த ஓட்ட நோய்களை குணப்படுத்தும் ஆயுர்வேத வைத்திய முறைகளும் உண்டு. வில்வம், நெருஞ்சி, ரோஜா, தூதுவளை போன்ற முட்கள் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தோன்றினாலும் இதன் மருத்துவ குணங்களும், நோய் நிவாரணத் தன்மைகளும் முற்றிலும் வேறானவையே. அது மட்டுமல்லாமல் வேப்பம் பூ, தாமரை பூக்கள், சூரிய காந்தி போன்ற மலர்களில் உள்ள தேன்களின் குணாதிசயங்களும் முற்றிலும் வேறானவையே. முள் மலருக்கோ, செடிக்கோ பாதுகாப்பு தரக் கூடியது என்று மேலோட்டமாகக் கூறினாலும் முள்ளும் மலரும் சேர்ந்தே நோய் நிவாரண சக்திகளை பூரணம் செய்கின்றன. அதே போல் பூவில் செறியும் தேனின் தன்மையும் இத்தகைய அமிர்த சக்திகளுடன் துலங்குவதால்தான் தேனீக்கள் அமராத பூக்களையே தேர்ந்தெடுத்து இறை மூர்த்திகளின் பூஜைகளுக்கு நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். தென்னம் பாளைப் பூக்களில் தோன்றும் தேனுக்கே கள் என்ற சிறப்புப் பெயர் உண்டு. தனது இஷ்ட தெய்வத்தின் மீதோ, தனது குருநாதர் மீதோ தோன்றும் அன்பானது வளர்ந்து வலுப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் இவ்வாறு கள் ஊறும் தென்னம்பாளைகளை இறை மூர்த்திகளின் பூஜைகளுக்கு அளித்தல் என்பது நம் மூதாதையர்களின் அருந்தவப் பேறால் கனிவதே. இந்த தென்னங்கள்ளால் தீர்க்க முடியாத நோய்களே கிடையாது என்னும் அளவிற்கு அமிர்த சக்திகளுடன் தென்னம்பாளைகள் திகழ்கின்றன என்பது உண்மையானாலும் இறைவனுக்கு குறிப்பாக ஸ்ரீஅதுல்யநாதர் என்ற நாமத்தை உடைய அரகண்டநல்லூர் ஈசனுக்கு தேய்பிறை கூடிய செவ்வாய்க்கிழமைகளிலும், அஸ்வினி, சுவாதி நட்சத்திர நாட்களிலும் அர்ப்பணித்தல் சிறப்பாகும். இறை பக்தி மேம்பாட்டிற்காக இத்தகைய தென்னம்பாளை மலர்களை எந்நாளிலும் அர்ப்பணித்து பயன்பெறலாம். நன்றி உள்ளது தென்னை அல்லவா ?

துல்யம் என்றால் சமம், அதுல்யம் என்றால் ஈடுஇணையற்ற என்னும் பொருள், அதுல்ய நாதர் என்றால் ஈடு இணையற்ற செல்வங்களுக்கெல்லாம் அதிபதியாகத் திகழ்பவரே அரகண்டநல்லூர் ஸ்ரீஅதுல்யநாதர் ஈசன். ஈடு இணையற்ற மருத்துவ குணம் உடைய தென்னம்பாளையை ஈடு இணையற்ற இறைவனுக்கு அர்ப்பணித்து ஈடு இணையற்ற செல்வங்களை, அனுகிரக சக்திகளை வாரிச் செல்லுமாறு பக்தர்களை கேட்டுக் கொள்கிறோம். தொற்றுநோய்கள் பீடிக்குமோ என்னும் பயத்தால் வீட்டிற்குள் முடங்கிக் கிடந்தாலும் அவர்களுக்கும் அருள்பாலிக்கும் முகமாக இங்கு அருணாசல பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளதே திருக்கோயிலூர் திருத்தலத்திலிருந்து எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் போன்றோரும், சமீப காலத்தில் வாழ்ந்த ஸ்ரீஞானானந்த கிரி, ஸ்ரீரமண மகரிஷி, ஸ்ரீமாம்பட்டாடை சித்தர் போன்ற மகான்களும் பெற்ற அரையணி கோவண தரிசனமாகும். ஆறுமுகப் பெருமானும் ஞானப்பழம் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு பழநி மலைமேல் கோவணம் தரித்த ஆண்டியாக அமரும் முன் இங்கு நிலவும் அரையணி கோவண தரிசனத்தைப் பெற்று மகிழ்ந்தார் என்பதே அகத்திய கிரந்தங்கள் உரைக்கும் சிறப்பாகும். இங்கு காணும் அரையணி தரிசனத்தை சற்றே கூர்ந்து நோக்கினாலும் விளையும் ஜோதிக் கிரணங்களே அரகண்ட அரஅர சக்தியின் வெளிப்பாடாக அமைகின்றன. ஸ்ரீஞானானந்த கிரி, ஸ்ரீமாம்பட்டாடை சித்தர், ஸ்ரீமுருகப் பெருமான் இவர்களின் சரிதம் ஞானக் கனியான மாம்பழத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டதால் இத்தலத்தில் குறைந்தது 12 மாம்பழங்களை முருகப் பெருமானுக்கு அளித்து பக்தர்களுக்கு தானமாக அளித்தலால் தங்க நகைகளால் நின்று போன திருமணங்கள் நன்முறையில் நிறைவேறுவதற்கும், தங்க நகைகள் திருடு போனதால் பல குடும்பங்களில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கும் அத்தகைய தானதர்மங்கள் தீர்வாக அமையும்.

ஸ்ரீதழுவக் குழைந்த தரிசனம்
பழையாறை

நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு நிகழ்ச்சியைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறோம். அமெரிக்காவில் பணி புரியும் ஒருவர் தன் மனைவி கர்ப்பம் தாங்கி இருப்பதாக தன்னுடைய அம்மாவிற்கு தெரிவிக்கிறார். அப்போது அமெரிக்காவில் நல்ல ஹோரை கூடிய முகூர்த்த நேரமே. ஆனால் இந்தியாவில் உள்ள அவரது தாய் அந்த செய்தியைப் பெறும் நேரமோ பழுத்த ராகு காலம் கூடிய கூடா நாள். இப்போது அந்த செய்தி குலத்தை விளக்க வந்த குலவிளக்கா அல்லது குலத்தை நாசம் செய்ய வந்த கோடரிக் கொம்பா ? யார் பதிலளிக்க முடியும் ? சித்தர்கள் எந்த சூழ்நிலையையும் விவரிக்கும் விதமே அலாதி சுவை உடையதாக விளங்கும். ஒரு முறை மணமாகாத பெண் ஒருத்தி தன் வயிற்றில் பிரச்னை ஏதோ இருப்பதாகத் தோன்றவே ஒரு மருத்துவரைச் சந்தித்தாள். அவளைப் பரிசோதித்த மருத்துவர், “மிசஸ் பூம்பூம், கங்ராஜுலேசன்ஸ், நான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்லப் போகிறேன். நீங்கள் தாயாகப் போகிறீர்கள்,” என்று கூறினாராம். அதைக் கேட்ட அந்தப் பெண்மணி பெரிதும் திகைத்து, “நான் மிசஸ் இல்லை, மிஸ்தான்,” என்றாளாம். அதைக் கேட்ட அந்த மருத்துவர், “அப்படியா ... நீங்கள் கர்ப்பமுற்று இருக்கிறீர்கள் என்ற வருத்தமான செய்தியை தெரிவிக்க வேண்டியுள்ளது ...”, என்றாராம். மாதா அமிர்தானந்தா மயி பயன்படுத்திய பூம்பூம் என்ற பெண்மணியின் பெயரே மாயையில் விளைந்த பெண்ணின் பெயர் அளிக்கும் ஈர்ப்பு என்பது இங்கு தெளிவாகிறது அல்லவா ? சாதாரணமாக ஆனந்தத்தை அளிக்க வேண்டிய இந்த செய்தி பேரதிர்ச்சியை அளிப்பது தகுதி அடிப்படையில் ஏற்பட்ட கோளாறுதானே. இதுபோன்ற இக்கட்டான வேளைகளில் தெளிவை அளிப்பதே அரகண்டநல்லூர் திருத்தலத்தில் கெட்டிவாசல் படிக்கட்டுகளில் வடதிசை நோக்கி அமர்ந்து நிறைவேற்றும் தியானமாகும். இங்குதான் நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பதொன்றுதான் என்று சித்தர்கள் அருளும் உபதேசத்தின் உண்மைப் பொருளையும் உணர முடியும். இத்தகைய நடுநிலைமை வகிக்கும் குருமார்களே தங்கள் செயல்பாடுகளில் காலத்தை கடந்த செயல்களை நிர்வகிக்க முடியும். அமிர்தானந்த அன்னை தம் ஆருயிர் குழந்தைகளை கூடா நாட்கள், ராகு காலம், எம கண்டம் என்று பாராது அனைத்து நேரத்திலும் அரவணைப்பதை கண்டு இரசித்திருப்பீர்கள். ஒரு முறை அன்னதானம் நிறைவேறிய பின் அடியார்கள் தத்தம் ஊருக்கு திரும்பியபோது ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் 5 மணி ஆயிற்று. அங்கு வந்த சற்குரு தம் கையில் உள்ள கடிகாரத்தை பார்த்தவாறே, “அப்பா, அனைவரும் சீக்கிரம் புறப்படுங்கள், இன்னும் சற்று நேரத்தில் ராகு காலம் வந்து விடும். அதற்குள் நீங்கள் பேருந்து நிலையத்திற்கு சென்று விட வேண்டும் ...”, என்று சிரித்துக் கொண்டே கூறினார்கள். அடியார்களுக்கு இன்று வரை நம் சற்குரு கூறிய வார்த்தைகளின் பொருள் விளங்கவில்லை ? உங்களுக்கு ... ? இதுவே காலம் கடந்து நிற்கும் சற்குருமார்களின் சாம்ராஜ்யத்தில் விளங்கும் சுவை. நீங்களும் இந்த சாம்ராஜ்யத்தில் பிரவேசிக்க உங்களுக்கு வழிகாட்டுவதே கெட்டிவாசலில் மேற்கொள்ளும் தியானம். இத்தகைய தியானத்திற்கு உறுதுணையாக நிற்பதும் அலவந்திபுரம், கூனஞ்சேரி என்று ஸ்ரீபாணைவாலை சித்தர் வழிபட்ட திருத்தலங்களில் இயற்றும் வழிபாடாகும். இத்தகைய வழிபாடுகள் பற்றி நம் சற்குரு அளித்த பாண வாலை என்ற கையெழுத்து பிரதிகளையே இங்கு பக்தர்களின் தரிசனத்திற்காக அளிக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் ஸ்ரீபாணவாலை சித்தர் வழிபட்ட கூனஞ்சேரி, அலவந்திபுரம் என்ற இரண்டு திருத்தலங்களை வழிபட முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் நம் சற்குரு அளித்த இரண்டு மந்திரங்களையாவது தொடர்ந்து ஓதி வரலாம் அல்லவா ?
1. இரக்ஷ இரக்ஷ இரக்ஷ இரக்ஷ அருணசிவோம்
2. ஓம் நமசிவாயை சோணாசலாயை சிவதாயை நமோநம:
நமஸ்தே காளிங்கநர்தனாயை ப்ரம்மமூர்த்யை நமோஸ்துதே
என்ற இரண்டு மந்திரங்கள் இந்த ராகவேந்திர வருடத்தில் சூழும் மன இருளைப் போக்குபவை மட்டும் அல்ல, வல இட கண்களில் ஏற்படும் பார்வை கோளாறுகளை நீக்க வல்லவையே நம் சற்குரு அளித்த அருணாசல நேத்ர ஜோதிகள் ஆகும். உடலில் ஏற்படும் கூனல்களை சரி செய்பவை மட்டும் அல்ல இந்த வழிபாடுகள், மனக் கூனல்களையும் மாய்க்கவல்லவையே இவை. ஸ்ரீபாணவாலை நவநாத சித்தர் மட்டும் அல்லாது அனைத்து சித்தர்களின், நவநாத சித்தர்களின், மகான்களின் திருநாமங்களுமே பக்தர்களுக்கு அளப்பரிய அனுகிரக சக்திகளை அளிக்கும் பீஜாட்சர சக்திகளுடன் பொதிந்திருப்பவையே. பாண வாலை என்ற இரண்டு பதங்களை தியானித்தவாறே அருணாசலத்தை கிரிவலம் வருவதாலோ அல்லது எந்த திருத்தலத்தை வலம் வந்தாலும் எம்பெருமான் உணர்த்தும் பீஜாட்சர சக்திகளின் மகிமையை கண்கூடாக உணர்ந்து பயன்பெறலாம். பாணவாலை என்ற நான்கு எழுத்துக்கள் இந்த வருடத்திற்கு உரிய அட்சரங்களாக அமைவதுடன் சுவாமி நவநாதர் சுட்டிக்காட்டும் கூனஞ்சேரியில் அமைந்துள்ள எட்டு லிங்கங்களும் இதற்கு குசாவாக அமைவதே இவ்வருடம் அமையும் வழிபாட்டின் எண் கணித சிறப்பாகும்.

நம் ஆஸ்ரம சார்பாக நம் சற்குரு முன்னின்று நிறைவேற்றும் திருமணங்களில் எல்லாம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்ற மந்திரமே ஓதப்படுவதை அனைவரும் அறிவீர்கள். இதன் பின்னணியில் அமைந்த தெய்வீக இரகசியங்கள் நம்மை மெய்மறக்கச் செய்பவையே. இதில் மூன்று ராம் என்ற பதங்களும் மூன்று ஜெய என்ற வெற்றி தரும் பதங்களும் இணைகின்றன. இதற்கு சாட்சியாக அமைவதே ஸ்ரீ என்ற அட்சரம். இது ஆங்கிலத்தில் SRI என்ற மூன்று எழுத்துக்களுடனும் ஆறு என்ற எண் கணித சூத்திரத்துடனும் அமையும். இதை விளக்குவதுதான் ஆறு கரங்களுடன் ஒரு தலையுடன் அரகண்டநல்லூர் திருத்தலத்தில் விளங்கும் முருகப் பெருமான் மகிமை ஆகும். சுவாமிநாதன் வடதிசை நோக்கி அருளும் சுக்ர சக்திகளை இணைத்துக் கொண்டால் இந்த சுக்ர தரிசனம் அபாரமே. சுக்கிலம் என்பது ஆண்கள் விந்துவில் தோன்றும் உயிர் சக்திகள் பரிணமிக்கும் ஒரு வகையான தேஜோமய கதிர்களே. ஆனால் சுக்கிரனின் தத்துவமோ பெண் தத்துவமாகும். இதை விளக்குவதே தழுவக் குழைந்த கோலமாகும். இங்கு தழுவக் குழைந்த பெருமான் என்றோ, தழுவக் குழைந்த நாயகி என்றோ கூற முடியாது. இரண்டும் ஒன்றாகி, ஒன்றில் ஒன்றாய் இணையும் கோலமே தழுவக் குழைந்த கோலம். இடைமருது, புடைமருது என்றவாறாக அமிர்த சக்திகள் துலங்குவதைப் போல் வாசல் என்ற தோற்ற சக்திகளும், அமிர்த சக்திகளும் உண்டு. இதையே திருப்புனவாசல், திருக்காரவாசல், அன்னவாசல், திருவிடைவாசல் போன்ற திருத்தலங்களில் விளையும் சக்திகள் குறிக்கின்றன. புனவாசல் என்றால் மீண்டும் ஆண் பெண் இணையும் கர்ப்பவாசம் கொள்ளாத பிறவியை அளிக்கும் திருத்தலம் என்று பொருள். காரவாசல் என்றால் கிருத்தியங்கள் என்ற செயல்களில் மனம் லயிக்கும் பிறவியிலிருந்து விமோசனம் அளிக்கும் திருத்தலம் என்று பொருள். அன்னவாசல் என்றால் நம் சற்குரு அருளுவதைப் போல் அன்னதானம் என்ற ஒரே ஒரு யோகத்தின் மூலமே இறைவனை அடையும் வழிமுறையைக் கூறும் தலம் என்ற பொருள். இடைவாசல் என்றால் மூன்று சக்திகளுக்கு இடையில் நல்லதல்ல கெட்டதல்ல என்ற தன்மையுடன் அமர்ந்து, அமைந்து முக்திக்கு வழிகாட்டும் தலம் என்று பொருள். ஒரு உடலுக்கு ஒரு தலை, ஒரு மனிதனுக்கு ஒரே ஒரு சற்குரு என்பதைச் சுட்டிக் காட்டுவதாக அம்பிகை தன் இடது கையை இடுப்பில் ஊன்றி மற்ற மூன்று விரல்களிடமிருந்து பிரிந்து குரு விரல் தன் தலையைச் சுட்டும் அபூர்வ தரிசனத்தை அம்பிகை அருளும் தலமே திருவாரூர் அருகிலுள்ள திருவிடைவாசல். அம்பிகையின் இந்த அற்புதமான தரிசனத்தை நேரில் பார்த்தே அனுகிரகம் பெற வேண்டும் என்றாலும் இந்த லீலையைக் குறிக்கும் ஒரு பெண் மயிலின் வீடியோ படத்தை இங்கு பக்தர்களுக்குப் பரிசாக அளிக்கிறோம்.

பாணவாலை
பரம சக்திகள்

அலவந்திபுரம் அருகில் உள்ள கூனஞ்சேரியில் ஸ்ரீபாணவாலை நவநாத சித்தர் வழிபட்டு ஸ்ரீஅஷ்டவக்ர சித்தர் நிர்மாணித்த எட்டு வக்ர லிங்கங்களுக்கும் புனருத்தாரண சக்திகளை அளித்தார். இவ்விரு உத்தமர்களின் திருஉருவங்களையும் இன்றும் பக்தர்கள் தரிசித்து வழிபட்டு பயன்பெறலாம் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும். கரிசலாங்கண்ணி தைலத்தால் ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷிக்கு காப்பிட்டு வணங்கியும், செம்பருத்தி தைலத்தால் ஸ்ரீபாணவாலை நவநாத சித்தருக்கும் காப்பிட்டு வணங்கி வருதலால் உத்தமமான பலன்களைப் பெறலாம். இந்த இரண்டு தைலங்கள் கலந்த மாலை காப்பு என்ற அற்புத காப்பை இந்த அஷ்டலிங்க மூர்த்திகளுக்கும் இட்டு வணங்குதல் கிடைத்தற்கரிய பேறே. மாலை காப்பு என்ற காப்பை பற்றி பல கிரந்தங்கள் சித்தர்கள் அருளியுள்ளார்கள் என்றாலும் இதைப் பற்றி அறிந்து கொள்ளும் மகிமையாகத் தோன்றியதே 10.7.2020 வெள்ளிக் கிழமை கூடிய சுபதினத்தில் பாண வாலை என்ற இரு சூரிய சக்திகளும் அல்லது சித்தப் பிழம்புகளும் இரு சூரிய கோளங்களாய் திருப்பாலைத்துறை திருத்தலத்தில் பிரகாசித்தன என்பதே நம்மை வியக்க வைக்கும் சித்த இரகசியமாகும். திருப்பாலைத்துறையில் மட்டுமல்லாது ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் தினந்தோறும் நடந்து சென்று வழிபட்ட கீழ்க்கண்ட எட்டுத் திருத்தலங்களிலும் இந்த இரட்டை சூரிய அனுகிரகம் அல்லது பாண வாலை சூரிய பிம்பங்கள் தோன்றின. ஏன் இவற்றை பிம்பங்கள் என்று கூற வேண்டும் ? உண்மையான சூரிய பகவானின் உருவத்தை தரிசனம் செய்யும் அளவிற்கு பூலோகவாசிகள் எவருமே போதுமான உடல், மன, உள்ள ஆற்றலைப் பெறவில்லை என்பதே இதற்கு முக்கிய காரணமாகும். நவநாத சித்தர்களில் ஒருவரான நம் குருமங்கள கந்தர்வாவின் தலைமைப் பீடமான குருமங்கள கந்தர்வ லோகத்தில் தினமும் 108 சூரிய மூர்த்திகளும் 108 சந்திர மூர்த்திகளும் உலா வருகின்றனர் என்றால் அதன் திருக்காட்சி எத்தனைய பிரம்மாண்டமானதாக இருக்கும் ?

ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷி
ஸ்ரீபாணவாலைசித்தர்
கூனன்சேரி

கூனஞ்சேரி அருகில் உள்ள திருமண்டங்குடி திருத்தலத்தில் அவதாரம் கொண்டவரே ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் ஆவார். விப்ர நாராயணன் என்பதே ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வாரின் தாய் தந்தையர் சூட்டிய பெயர். ஒரு மனிதன் தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள, தன்னுடைய பிறப்பின் இரகசியங்களைப் பற்றிப் புரிந்து கொள்ள சுயநாம ஜபம் என்று தன்னுடைய பெயரையே தொடர்ந்து ஜபித்தல் அற்புதமான பலன்களை நல்கும் என்பதே சித்தர்கள் கூறும் சக்தி வாய்ந்த வழிபாட்டு முறை. இந்த ஒரே ஒரு வழிபாட்டைத் தொடர்ந்து பயின்றே பக்தியின் உச்சக் கட்டத்தில் துலங்கினார் ஆழ்வார் என்றால் சித்தர்களின் பெருமைதான் என்னே. விப்ரன் என்றால் பிராம்மணன் அதாவது பிரம்மத்தை உணர்ந்த உத்தமன் என்று பொருள். இந்த உயர்ந்த உண்மையை நடைமுறைப்படுத்தவே ஆழ்வார் கீழ்க்கண்ட எட்டுத் திருத்தலங்களையும் தினமும் நடந்தே சென்று தரிசனம் செய்து வந்தார்.
1. திருமண்டங்குடி
2. கூனன்சேரி
3. அலவந்திபுரம்
4. திருப்பாலைத்துறை
5. சுவாமிமலை
6. பாபநாசம்
7. தியாகசமுத்திரம்
8. புள்ளபூதங்குடி
என்பவையே ஆழ்வார் தரிசித்த அஷ்டாட்சர தலங்கள். எட்டு எழுத்துக்கள் கொண்ட திருத்தலமாகிய திருமண்டங்குடியில் எட்டு எழுத்துக்கள் கொண்ட விப்ர நாராயணன் என்ற திருநாமத்துடன் அவதாரங் கொண்டு தினமும் எட்டு எழுத்துக்களை ஓதியே எட்டு எழுத்து மந்திர நாயகனை அடைந்தார் ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். நம் சற்குருவின் தாத்தா கேசவசந்திரர் என்ற எட்டெழுத்து நாயகரும் தன்னுடைய எண்பதாவது வயதில் நடந்தே சென்று எட்டு சிவத்தலங்களை தரிசனம் செய்து நற்கதி பெற்றார் என்பது நீங்கள் அறிந்ததே.

திருமண்டங்குடி

இவ்வாறு தன்னுடைய பக்தியைப் பெருக்கிக் கொண்ட ஆழ்வார் பெருமாளின் திருவடி தரிசனத்தை பெருமாளின் பக்தர்களிடமும் பெற்றார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் ஆழ்வாரின் வழிபாட்டு முறையாகும். ஆழ்வார் இயற்றிய திருமாலை என்ற 45 பாடல்கள் கொண்ட துதிகள் இவ்வாறு மாலிருஞ்சோலையாக மலர்ந்த அடியார்களின் திருவடிப் பெருமையே ஆகும். ஆழ்வார் என்றோ அடியார்களின் பெருமைகளை, இறைத் திருவடிகளை தோத்திரம் செய்தார் என்று நாம் நினைத்தலாகாது என்பதற்கு உதாரணமாக திருமண்டங்குடி திருத்தலத்திலும் 10.7.2020 அன்று தான் தரிசித்த மா, லை என்ற சக்திகளை இரு சூரிய சக்திகளாக புனருத்தாரணம் செய்து பெருமாளை வழிபட்டார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். தேன் துழாய் என்று அழைக்கப்படும் சிவப்பு நிற இட்லிப் பூக்களை அடுத்த மண்டல காலமாகிய 48 நாட்களுக்குள் ஏதாவது ஒரு பெருமாள் மூர்த்திக்கோ அல்லது ஆஞ்சநேய மூர்த்திக்கோ அளித்து பெரிய வெங்காயச் சட்னி கலந்த திண்டு தோசைகள் குறைந்தது 12 தானமாக அளித்தலால் இந்த இரு சூரிய மா, லை சக்திகளை, நோய் நிவாரண மிருத்யுஞ்சய சக்திகளை அடியார்கள் பெற்று சிறப்படையலாம். மாலை சக்தியில் தோன்றும் ஒன்பதாவது அட்சரமாகிய ஐகாரத்தில் விளங்கும் (லை) சக்திகளே நோய் நிவாரணத்தை அளிக்கவல்லவை என்பதே சாதாரண மக்களும் புரிந்து கொள்ளக் கூடிய நோய் நிவாரண பரிணாமம் ஆகும். இன்றும் ஸ்ரீதொண்டரடிப் பொடியாழ்வார் வெகுகாலம் உழவாரப் பணிகள் புரிந்து தொண்டாற்றிய ஸ்ரீரங்கம் நந்தவனத்தில் தேன் துழாய் மலர்களாக விருட்சிகள் விருத்தியாகி மலர்ந்திருப்பதற்கு மாலை சக்திகளும் ஒரு காரணமே. மண்டங்குடி என்றால் நிலைபெற்ற புகழுடைய பிறப்பு என்ற பொருளும் உண்டு. தோன்றின் புகழொடு தோன்றுக என்றவாறு தங்களுடைய குழந்தைகள் புகழோடு தோன்ற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் திருமண்டங்குடியில் பெருமாளை வணங்கி தேனும் தினையும் கலந்த உருண்டைகளை பன்னிரெண்டின் மடங்காக பெருமாளுக்கு அர்ப்பணித்து வணங்கி வருதலால் திருமணமாகி வெகுநாட்கள் குழந்தைப் பேறு இல்லாமல் வருந்துவோர்களின் சந்ததி நன்முறையில் விருத்தி அடையும். நடந்து கொண்டே உறங்குபவர்கள், அலுவலகம், பிரயாணம் என்றவாறாக தவறான உறங்கும் பழக்கம் உடையவர்கள் இத்தகைய தான தர்மங்களால் நலமடைவர். பொதுவாக, ரெங்கநாதர் என்னும் திருநாமம் உடைய பெருமாள் மூர்த்திகள் சயனக்கோலத்துடன் திகழ, திருமண்டங்குடியில் அருள்புரியும் பெருமாளோ நின்ற கோலத்தில் திகழ்வது மண்ணும் சிறப்புடைய மணாளனின் பெருமையே.

பெருமாள் தலம் அன்பில்

அன்பில் திருத்தலத்தில் அருளும் ஸ்ரீசுந்தரராஜ பெருமாளும் இத்தகைய உறக்க நிலைகளில் ஏற்படும் தவறுகளுக்கு பிராயசித்தம் நல்கும் மூர்த்தி ஆவார். உறக்கமே வராமல் அவதிப்படுவோரும், கண்ட நேரங்களில் உறங்கும் வழக்கத்தைக் கொண்டோரும் மண்டூக தீர்த்தம் அருகே துலங்கும் தூங்குமூஞ்சி மரத்திற்கு சந்தனம் குங்குமம் பொட்டிட்டு ராகு கால நேரங்களில் சிறப்பாக ஞாயிற்றுக் கிழமை மாலை ராகு கால நேரத்தில் வழிபாடுகளை இயற்றுவதால் நல்ல உறக்கம் பெறவும், நேரம் கெட்ட நேரத்தில் உறங்கும் வழக்கத்தைத் தவிர்க்கவும் இத்தகைய வழிபாடுகள் துணையாக நிற்கும். அரிதிலும் அரிதாக அன்பில் திருத்தலத்தில் பெருமாள் மூர்த்தி சுதை வடிவில் எழுந்தருளி இருப்பதால் இத்தகைய மாறுபட்ட இரு அனுகிரகங்களை அளிக்கும் வள்ளல் மூர்த்தியாகத் திகழ்கிறார். மிகவும் பழைமையான சுதை மூர்த்தி இவர். சிறப்பாக இந்த ராகவேந்திர வருடத்தில் 8, 16, 24 என்றவாறாக எட்டின் மடங்கில் இந்த தூங்குமூஞ்சி மரத்தை வலம் வந்து வணங்குதலால் எதிர்பாராமல் தூக்கத்தில் வண்டி ஓட்டி வருவோர்களால் ஏற்படும் ஆபத்துகளும், தூக்கத்தில் இத்தகைய ஆபத்துக்களை பிறருக்கு இழைப்பதும் தவிர்க்கப்படும். நிலத்திலும் நீரிலும் வாழக் கூடியதே தவளை என்னும் மண்டூகம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், ஆழ்ந்த உறக்கத்திலும் இறை நினைவைக் கூட்டவல்லதே மண்டூக நாதம் அளிக்கும் தியான நிலையாகும். இத்தகைய மண்டூக தியானத்திற்கு உறுதுணையாக அமைவதே அன்பில் சுதை ஆலயத்தில் மேற்கொள்ளும் வழிபாடுகளும் தூங்குமூஞ்சி மரத் திருச்சுற்றுமாகும். ராமபிரான் நீராடச் செல்லும் முன் தன் ராமபாணத்தையும் வில்லையும் ஆற்றங்கரையில் வைத்து விட்டுச் செல்வது வழக்கம். அவ்வாறு ஒரு முறை செல்லும்போது ராம பாணமானது மண்ணில் மறைந்திருந்த ஒரு தவளையின் மேல் பட்டு அது குற்றுயிராய்க் கிடந்தது. நீராடிய பின்னர் ராமர் தன்னுடைய ராம பாணத்தை திரும்ப எடுத்தபோது அதன் நுனியில் இரத்தம் தோய்ந்திருப்பதைக் கண்டு அந்த இடத்தை அவசரமாக அகழ்ந்து பார்த்தார். அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் ஒரு தவளையைக் கண்டு அதைக் கையில் எடுத்து அதற்கு ஆறுதலாகத் தடவிக் கொடுத்து, “நீ ஏன் நான் அம்பைத் தரையில் வைக்கும்போதே சொல்லவில்லை ...”, என்று கேட்டாராம்.

ஸ்ரீவல்வில் ராமர் புள்ளபூதங்குடி

அதற்கு அத்தவளையோ, “ராமா, யாராவது என்னைத் தாக்க வந்தால் ராமா ராமா என்று சொல்லித்தான் தப்பித்துக் கொள்வேன். அந்த ராமனே என்னைக் கொல்ல வந்தால் நான் யாரிடம் சென்று அடைக்கலாம் பெறுவேன் ...,” என்று பரிதாபமாகத் திருப்பிக் கேட்டதாம். இந்த ராமாயண நிகழ்ச்சியை பலரும் அறிவர். ஆனால், அவ்வாறு ராமபிரானின் ஸ்பரிச தீட்சையால் அந்த தவளை மரணமில்லா பெருவாழ்வு பெற்றது என்பதையோ அதன் முற்பிறவி ஒன்றில் அன்பில் திருத்தலத்தில் வழிபாடு இயற்றியது என்ற இரகசியத்தையோ அறிந்தோர் சித்தர்கள் மட்டுமே. அன்பில் பெருமாளின் திருநாமம் ஸ்ரீசுந்தரராஜன் அதாவது வடிவழகிய நம்பி. நிலையற்ற உடல் அழகைவிட அந்த மண்டூகம் பெற்ற மரணமில்லாப் பெருவாழ்வே நிலையான அழகு, சுந்தரம் என்று உணர்த்துவதே அன்பில் திருத்தலம். இங்கு மரணமில்லாப் பெருவாழ்வு, மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் மோட்சத்தை ஸ்ரீராமபிரான் அருளினார் அல்லவா ? மோட்சம் என்பது இறை மூர்த்திகளால் மட்டுமே அளிக்கக் கூடிய அனுகிரகம் அல்லவா ? மனிதனாகவே புவியில் தோன்றி மனிதனாகவே வாழ்ந்து காட்டினாலும் சிற்சில இடங்களில் இந்த மனிதக் கோலத்தையும் தாண்டி, அப்பால ரெங்கநாதராக ராமர் பூண்ட திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றாகும். இது போன்றதே புள்ளபூதங்குடி திருத்தலத்தில் ராமர் நான்கு கரங்களுடன் சயனக் கோலத்தில் எழுந்தருளிய கோலமுமாகும். இந்த ராகவேந்திர வருடத்தில் ஒரு முறையாவது தரிசித்து பக்தர்கள் பயன்பெற வேண்டியதே ராமபிரான் நான்கு கரத்துடன் திகழும் ஸ்ரீவல்வில் ராமத் திருக்கோலமாகும். இவ்வாறு மனிதனாகத் தோன்றினாலும் தெய்வ அவதாரங்களின் சக்தியை அருளவல்லதால் புள்ளபூதங்குடி நிரந்தர மோட்சத் தலமாக மாறி அனைவருக்கும் முக்தியை அளிக்கும் திருத்தலமாக உள்ளது. இக்காரணத்தினால் புள்ளபூதங்குடியில் மயானபூமி கிடையாது. திருஅண்ணாமலையை நினைக்க முக்தி, திருவாரூரில் பிறக்க முக்கி, காசியில் இறக்க முக்தி, பேரூரில் பிறவாப்புளி விருட்சத்தை வழிபட முக்தி, சாயாவனத்தை பிரவேசிக்க முக்தி என்றெல்லாம் முக்தி பற்றிய விளக்கங்களை அறிவீர்கள். இவ்வகையில் புள்ளபூதங்குடி அளிக்கும் முக்தி நிலை யாதோ ? நான்கு கரத்தனாக, நான்கு அட்சரங்கள் கொண்டு விளங்கும் ஸ்ரீவல்வில் ராமனை தரிசித்தாலே முக்தியைத் தருவதுதான் புள்ளபூதங்குடி ராமபிரான் அருளும் ராமலீலை அனுகிரக சக்திகளாகும். உடல் கூனத்தால் தனக்கு மட்டுமே துன்பம், விரக்தி தோன்றும் என்றாலும் மனக் கூனத்தால் சமுதாயத்தில் உள்ள மற்றவர்களுக்கும் வேதனைகள் குவியும் அல்லவா ?

ஸ்ரீபொற்றாமரையாள் புள்ளபூதங்குடி

உதாரணமாக, உலகத்திலேயே பெரும் பணக்காரராகத் திகழ்ந்த ஒருவர் தன் மனைவியின் முகத்தில் அபான வாயு விடுவதை (forting) ஒரு பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். இத்தகைய அருவறுக்கத்தக்க பழக்க வழக்கங்களுக்கு மூல காரணமே இத்தகைய மன ஊனங்களாகும். கூனஞ்சேரியில் வியாழக்கிழமைகளில் மேற்கொள்ளும் வழிபாடு இத்தகைய மனக் கூனல்களுக்கு பரிகாரமாக அமையும். தவிர்க்க முடியாத காரணங்களால் கூனஞ்சேரியில் வழிபாடுகளை இயற்ற முடியாதவர்கள் சனீஸ்வர பகவான் தனிச் சன்னிதி கொண்டு அருளும் திருத்தலங்களில் வளைந்த புடலைங்காய் கலந்த உணவு வகைகளை அன்னதானமாக அளித்தல் நலமே. தனுர்வித்தையில் விற்பன்னரான துரோணாச்சாரியாரிடம் கௌரவர்கள், பாண்டவர்கள் என்ற இருகுலத்தாரும் வில்வித்தை பயின்றாலும் அர்ச்சுனனே வில்வித்தையில் சிறந்து விளங்கினான். இதற்கு பூர்வஜன்மங்களில் அமைந்த பல காரணங்கள் இருந்தாலும் பகவானாகிய கிருஷ்ணனை துணையாகக் கொண்டதுடன் அர்ச்சுனனின் வில்வித்தைகள் யாவுமே நல்லோரைக் காப்பதற்காக பயன்பட்டனே என்பதே முக்கிய காரணமாகும். தொலைவில் உருவம் தெரியாது சப்தத்தை மட்டுமே கேட்டு அம்பை பிரயோகம் செய்யும் தனுர் வித்தையில் சிறந்தவரான துரோணாச்சாரியாரின் மாணவன் என்பதை உலகிற்கு அறிவித்தவனே அர்ச்சுனர் ஆவான். எந்த ஆயுதமாக இருந்தாலும் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்தே பயன்தரும் என்ற கூற்றிற்கு ஏற்ப துரோணாச்சாரியார் தீயவர்களான கௌரவர்களின் பக்கம் சேர்ந்து குருக்ஷேத்திர யுத்தத்தில் பங்கு கொண்டதால் அஸ்வத்த குஞ்சரஹ என்ற சாதாரண ஒலிகளே மிருத்யு அஸ்திரமாக மாறி ஆச்சாரியாரின் உயிரைக் கவரக் காரணமாக அமைந்தன என்பதை நீங்கள் அறிவீர்கள். இது போலவே மூச்சுக் காற்று என்பது மூக்கின் வழியாக செல்லும்போது அது மூளைச் செல்களால் பிரிக்கப்பட்டு உடலுக்கு நன்மை அளிக்கும் பிராண வாயுவாக மாறுகிறது. அதே காற்று வாய் வழியாக குறட்டை வடிவில் சென்று வரும்போது சொல்லொணாத் துன்பத்தை அளிக்கிறது. ஸ்ரீராமர் புள்ளபூதங்குடியில் அருளும் சயனகோலம் இத்தகைய தவறான குறட்டை ஒலிகளுக்கும், துரோணாச்சாரியாரைப் போல் ஒலியின் அனுகிரக சக்திகளை தவறாகப் பயன்படுத்துவோர்களுக்கும் பிராயசித்தத்தை அளிக்கக் கூடிய திருத்தலமாகும். குறட்டை ஒலியை ஏற்படுத்துபவர்களுக்கு எந்த விதமான மேலோட்டமான துன்பத்தை அளிப்பது கிடையாது என்றாலும் பலமான குறட்டை ஒலி பலரின் தூக்கத்தையும் விரட்டி அவர்களுக்கு தூக்கத்தால் விளையும் ஓய்வு கிடைக்காமல் போவதால் அவர்கள் அறியாமல் குறட்டை விடுபவர்களுக்கு அளிக்கும் சாபமும் குறட்டை விடுபவர்களுக்கு சேர்ந்து கொள்ளும். அறிந்தோ அறியாமலோ இத்தகைய பழக்கங்களுக்கு ஆட்பட்டோர் புள்ளபூதங்குடியில் ஸ்ரீவல்வில் ராமன் தரிசனம் பெற்று குங்குமப்பூ கலந்த காய்ச்சின பாலை நவமி திதிகளில் தானம் அளித்து வருதலால் குறட்டை ஒலி நீங்குகிறதோ இல்லையோ குறட்டையால் பலருக்கும் அளித்த துன்பங்களுக்கு இத்தகைய வழிபாடுகள் பிராயசித்தமாக அமையும் என்பதே சித்தர்கள் கூறும் தெளிவுரை.

ஸ்ரீதசரதர் வழிபாடு ஆவூர்

ஸ்ரீராமபிரான் புள்ளபூதங்குடி திருத்தலத்தில் மேற்கொள்ளும் கோலத்திற்கு பல அற்புத அறிதுயில் காரணங்கள் உண்டு. கண்ணிழந்தான் பெற்றிழந்தான் என்பதாக தசரத மகாராஜா தவசீலனாக ஸ்ரீராமபிரானைப் பெற்றும் கண்ணிழந்த பெற்றோர்களைப் பேணிய சிறுவனின் மேல் ஒலியில் விளைந்த தவறால் அம்பு எய்து கொன்றார். இவ்வாறு தன் தந்தையின் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காகவும் ஸ்ரீராமபிரான் நான்கு கரங்களுடன் புள்ளபூதங்குடியில் சயனக்கோலத்தில் இலயித்துள்ளார் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். ஒரு முறை வெள்ள நிவாரணத்திற்காக புடவைகளைத் தானமாக அளித்தபோது அந்த இலவசப் புடவைகளை வாங்குவதற்காக வரிசையில் அடித்து பிடித்துக் கொண்டு சென்ற பல பெண்கள் தங்கள் உயிரை இழந்தனர். இவ்வாறு ஒலியால் நேர்ந்த துன்பங்களுக்கு பிராயசித்தம் வழங்கும் தலமே ஸ்ரீவல்வில் ராமர் அருள் புரியும் புள்ளபூதங்குடியாகும். சந்திர பிறையில் மூன்றாம் பிறையைத் தரிசனம் செய்வது இறைவனையே நேரில் தரிசனம் செய்த பலன்களை அளிப்பது போல இங்கு நீங்கள் காணும் முதுகில் வெள்ளைப் பிறையை உடைய காளை மாடுகளை சூரிய பிறை சூடிய மாடுகள் என்று அழைப்பது வழக்கம். ஞாயிற்றுக் கிழமை, செவ்வாய்க் கிழமை, வியாழக்கிழமைகளில் இத்தகைய சூரிய பிறை சூடிய மாடுகளுக்கு அகத்திக் கீரை, கடலை மிட்டாய், உருண்டை வெல்லம் இவற்றை தானமாக அளித்து வழிபடுதலால் கண்ணில் புரை விழுதல் போன்ற கோளாறுகளால் பாதிகப்பட்டோரின் துன்பங்கள் விலகும். வயதான காலத்தில் தோன்றும் மாலைக் கண் போன்ற நோய்களால் துன்பம் ஏற்படாது. தங்கள் ஜாதகங்களில் சூரியன் உச்சமாகவோ, ஆட்சியாகவோ, நீச்சமாகவோ இருப்பதால் பலரும் கண் பார்வைக் கோளாறுகளால் வருந்துவர். இத்தகையோர் மேற்கண்ட வழிபாடுகளால் நலமடைவர். இத்தகைய பிறை சூடிய மாடுகளை 10, 20, 30 என்றவாறு பத்தின் மடங்கில் வலம் வந்து வணங்குதலால் முரட்டுக் குணம் உடைய பிள்ளைகளால், கணவன்மார்களால் வருந்துவோர் நலம் அடைவர். சமீப காலத்தில் ஆயிரக் கணக்கான, லட்சக் கணக்கான மான்கள் காரணம் தெரியாமல் திடீர் மரணமடைந்ததுபோல், பல யானைகளும் மரணமடைந்துள்ளன. இத்தகைய நான்கு கால் விலங்குகளின் மரணத்திற்காக வருந்தி இத்தகைய மரணங்களை தவிர்க்க எண்ணுவோர் அபூர்வமாக ராமபிரான் நான்கு கரத்துடன் துலங்கும் புள்ளபூதங்குடியில் ஆதித்ய ஹிருதயம் மந்திரம் ஓதுவதை சத்சங்கமாக குறைந்தது எட்டு பேர் ஓதி சர்க்கரைப் பொங்கல் தானமாக அளித்தலால் இத்தகைய எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த ஜீவன்களுக்கு அவை நல்வழியை காட்டும்.

ஸ்ரீகைலாசநாதர் தியாகசமுத்திரம்

வண்டுண்ணா மாமரம் என்பது சண்பக மரத்திற்கு அமைந்த ஒரு புனை பெயர். இதற்கு சண்பக மலரில் அமைந்த அபூர்வ மணமும் ஒரு காரணமாக இருப்பதால் சண்பக வாசனை திரவியம் கலந்த தாமே கையால் அரைத்த சந்தனத்தை புள்ளபூதங்குடி ராமபிரானுக்கு சாற்றி வழிபடுதலால் தீராத தூக்க வியாதிகளோ, மரண தோஷங்களோ இல்லை எனலாம். இத்தகைய அனுகிரகத்தை மனித சமுதாயத்திற்கு தம் பக்தர்கள் மூலம் வாரி வழங்கியவரே நம் சற்குரு என்ற இரகசியத்தை உணர்ந்தோர் ஒரு சிலரே. இன்றும் இத்தகைய வழிபாடுகளை புதன், சனிக்கிழமைகளில் இயற்றி நற்பலன் பெறலாம். புள்ளபூதங்குடியில் ராமபிரான் உறங்குவதுபோல் சயனக்கோலத்தில் இருந்தாலும் பிரானின் அறிதுயில் யோகமானது பக்தர்களுக்கு அரிய பல பலன்களை அளித்துக் கொண்டுதானே இருக்கும். புள்ளபூதங்குடியில் மயானபூமி கிடையாது என்பதற்கு முக்கிய காரணம் ஸ்ரீராமபிரானின் அறிதுயில் யோகமே. இத்தலத்தின் அருகிலுள்ள தியாகசமுத்திரம் திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீஅமிர்தவல்லியின் அமிர்த சக்திகளேயே ஸ்ரீராமபிரான் புள்ளபூதங்குடியில் அமிர்த சக்திகளாக வர்ஷிக்கிறார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். சாதாரண பக்தர்கள் ஸ்ரீஅமிர்தவல்லி சமேத ஸ்ரீகைலாசநாதரை தரிசித்து அமிர்தசக்திகளைப் பெற முடியும் என்றாலும் அவதார மூர்த்தியான ராமபிரானுக்கு அமைந்த தெய்வீக ஆற்றல் எந்த மனிதனுக்கும் அமைந்தது கிடையாது, இனி அமையவும் முடியாது அல்லவா ? அனைவருக்கும் புரியும்படியாகக் கூறுவதென்றால் குரு பகவான் வலிமை பெற்று மிருத்யுஞ்சய சக்தியுடன் திகழ்வதால் ஐந்துக்கு ஒன்பதாகத் திகழும் அமிர்த சக்திகளை வர்ஷிப்பதாக சுக்ர பகவான் ராமர் ஜாதகத்தில் அமர்ந்து இந்த அனுகிரகத்தை எல்லாம் வாரி வழங்குகிறார். சமுத்திரம் என்றால் கடல். கடலே இல்லாத இடங்கள் லவண சமுத்திரம், தியாக சமுத்திரம் என்ற பெயர்களைப் பெற்றுள்ளதே என்று நீங்கள் ஆச்சரியப்படலாம் அல்லவா ? சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலும் இத்தகைய சமுத்திரம் என்ற வார்த்தைகள் அரிய மூலிகைகளையே குறிக்கின்றன என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். இவ்வகையில் தியாகசமுத்திரம் என்பது மிருத்யுஞ்சய சக்திகளை அளிக்கக் கூடிய ஒரு மூலிகையே. தியாகசமுத்திரம் என்ற திருத்தலத்தின் 12 மைல் சுற்றளவிற்கு இந்த மூலிகை சக்தியின் வியாபக சக்திகள் நிறைந்துள்ளமையால் தியாகசமுத்திரம் திருத்தலம் திகழும் இடத்திலிருந்து 12 மைல் தூரத்திற்குள் பத்மாசனம் இட்டு அமர்ந்து சூரிய கலையில் சுவாசத்தை நிறுத்தி வழிபடுவதால் அற்புத மிருத்யுஞ்சய சக்திகளைப் பெறலாம். இதை சிரமமாக நினைப்பவர்கள் சம்பா, குதிரைவால், பாசுமதி போன்ற நீண்ட நாட்கள் வளரும் அரிசிகளைப் பயன்படுத்தி சர்க்கரைப் பொங்கல் சமைத்து இறைவனுக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு தானம் அளிப்பதும் இத்தகைய மிருத்யுஞ்சய மூலிகை சக்திகளைப் பெறும் வழிபாட்டு முறையாகும்.

இரட்டை பிள்ளையாரின்
இரட்டை வேடங்கள்

இறைவன் ஒருவனே என்றாலும் மனிதர்களின் மனோபாவத்திற்கு ஏற்ற சக்தியாகவும் சிவனாகவும், வள்ளியாகவும் முருகனாகவும் அருட்காட்சி அளிப்பதுபோல வேறுபட்ட இறைசக்திகளே இரட்டைப் பிள்ளையார் கோலத்தில் திருத்தலம் எங்கும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. சக்தி சிவன் பிள்ளையார் மூர்த்திகளாகவும், சூடு குளிர்ச்சியை விளக்கும் மூர்த்திகளாகவும், கணவன் மனைவியாகவும், துவார சக்திகளை விளக்கும் துவார பாலகர்களாகவும் இரட்டைப் பிள்ளையார் மூர்த்திகள் எழுந்தருளிய கோலங்கள் கோடி கோடியே. இவற்றில் திருமண்டங்குடி, கூனன்சேரி, திருப்பாலைத்துறை போன்ற திருத்தலங்களில் பிள்ளையார் மூர்த்திகள் கண்ணுக்குத் தோற்றம் கொண்டு அருளினாலும் ஆழ்வார் எட்டு இரட்டை பிள்ளையார் சக்திகளை மேற்கண்ட திருத்தலங்களில் வழிபட்டு அந்த வழிபாட்டின் சக்திகளை எல்லாம் மக்களுக்குத் தாரை வார்த்து அளித்தார். அதன் பயனாகவே அடியார் திருவடிகளை ஸ்ரீரங்கநாதப் பெருமானின் திருவடிகளாக தரிசிக்கும் உயர்ந்த தெய்வீகப் பேற்றைப் பெற்றார்.

ஸ்ரீவடகைலாய பிள்ளையார்
கூனன்சேரி

ஸ்ரீதென்கைலாய பிள்ளையார்
கூனஞ்சேரி

ஜோடியாகப் பிறந்தவர்கள் அதாவது இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தவர்களும், உத்தம ஜோடியாகத் திகழ வேண்டிய கணவன் மனைவிமார்களும் தங்களிடையே பிணக்குகள் வந்து பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டால் அவர்களில் யார் வேண்டுமானாலும் மேற்கண்ட தலங்களில் உள்ள இரட்டைப் பிள்ளையார் மூர்த்திகளை வணங்கி இரட்டையாகப் பயன்படுத்தும் தோடு, கொலுசு, மெட்டி போன்ற ஆபரணங்களை இத்தலங்களில் தானமாக அளித்து நற்பலன்களைப் பெறலாம். உடல் ஊனம், உள்ள ஊன்ம் என்ற இரண்டு ஊனங்களையும் சரி செய்து நிவாரணம் அளிப்பதே இத்தகைய பாதச் செல்வ பரதேவ வழிபாடுகளாகும். முடிந்தவர்கள் முடிந்தவரை இத்தகைய திருத்தலங்களை நடந்தே சென்று இரட்டைப் பிள்ளையார் மூர்த்திகளை தரிசனம் செய்வதே சிறப்பாகும். ஒரே மூச்சில் இந்த எட்டுத் தலங்களையும் நடந்து சென்று தரிசனம் செய்ய இயலாவிட்டாலும் ஏதாவது ஒரு திருத்தலத்தில் தங்கி தினமும் ஒரு தலத்திற்கு நடந்து செல்வதும் ஏற்புடையதே, சிறப்புடையதே. ஆரஞ்சு, பச்சை, மஞ்சள் என்ற ஒரே நிறத்தில் பட்டுத் துண்டுகளை இம்மூர்த்திகளுக்கு சாற்றி வழிபடுதல் சிறப்பு. அங், உங், சிங், லங், மங், வங், பங், டங் என்ற மிருத்யுஞ்சய சக்திகளைப் பற்றி சித்தர்களே அறிவர் என்றாலும் இந்த பீஜாட்சர சக்திகளைப் பெறும் வழிபாட்டு முறையையே ஸ்ரீதொண்டரடிப் பொடி ஆழ்வார் மேற்கொண்டு, இந்த எட்டு திருத்தலங்களை வழிபட்டு இத்தகைய மிருத்யுஞ்சய சக்திகளை எல்லாம் ஸ்ரீரெங்கநாதரின் பாதக் கமலங்களில் அர்ப்பணித்தார். அடியார் தரிசனம் ஆண்டான் தரிசனமாக துலங்குவதற்கு, அல்லது ஆண்டான் தரிசனத்தை அடியார்களின் பாதங்களில் பெறுவதற்கு உதவிய அஷ்ட தலங்களே இவை. மனிதர்கள் மட்டும் அல்லாது சங்கு பூச்சிகள், நத்தைகள், மயில்கள், வண்ணத்துப் பூச்சிகள், புலிகள் போன்ற பல்வேறு மிருகங்களும் இறைவனின் சாம்ராஜ்யத்தை அலங்கரிக்க வந்தவையே. இத்தகைய உயிரினங்களின் வாழ்க்கை முறையை சாதாரண மக்கள் அறிந்து கொள்ள முடியாததால்தான் அவைகளுக்குப் பயந்து அவைகளை அழிக்க எண்ணுகிறோம்.

மார்த்தாண்டரே வருக வருக

ஸ்ரீஉதயமார்த்தாண்ட லிங்க மூர்த்தி
கரிவலம்வந்தநல்லூர்

உதாரணமாக, இவ்வருடம் வழிபட வேண்டிய நத்தையின் தெய்வீக தாத்பர்யங்களை சற்றே கூர்ந்து கவனியுங்கள். நாம் அறிந்தவை சூரிய நிறமாலையில் ஒளிரும் ஊதா, சிவப்பு என்ற ஏழு நிறங்கள் மட்டுமே. உண்மையில் இவை ஒவ்வொன்றிலும் ஏழு ஏழு வண்ணங்கள் அமைந்துள்ளன. மொத்தம் 7 x 7 = 49 வண்ணங்கள் பிரகாசிப்பதே இறைவனின் இந்த உலகம். இந்த 49 வண்ண சக்திகளை தங்கள் தலையில் அமைந்துள்ள இரு ஆண்டெனாக்கள் போல் அமைந்துள்ள நுண் உணர் கருவிகளால் கிரகித்து தங்கள் உடலில் ஊறும் மார்த்தாண்ட திரவத்துடன் இணைத்து உலகிற்கு பயன்படும் வண்ணம் அளிப்பதே நத்தைகளின் பணிகளில் ஒன்றாகும். ஒரு நத்தை ஒரு நாளில் செய்யும் இந்த அற்புத வித்தையை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாலும் சாதிக்க முடியாது என்பதே உண்மை. அதிக பட்சம் இவ்வாறு சூரிய ஒளியில் பிரதிபலிக்கும், பிரகாசிக்கும் இந்த மார்த்தாண்ட திரவத்தை தரிசனம் செய்து நிலக்கடலை கலந்த எலுமிச்சை சாதத்தை சிவாலயங்களில் அன்னதானமாக அளித்தால் தாங்கள் பெற்ற மார்த்தாண்ட சக்திகளை மற்றவர்களுக்கு அர்ப்பணிக்கும் இந்த நத்தையின் திருப்பணியில் நாமும் பங்கு பெற்றவர்கள் ஆவோம். இதனால் அத்தகைய அடியார்களுக்கும் அவர்கள் பரம்பரையில் தோன்றுவோர்களுக்குமே கண் கோளாறுகள் அண்டாது என்பதே இத்தகைய மார்த்தாண்ட சக்திகளின் சிறப்பாகும். மார்த்தாண்ட லிங்க மூர்த்தி அருளும் கரிவலம்வந்த திருத்தலத்திலோ அல்லது சூரியபகவான் இறையருள் பெற்ற சூரியனார்கோவில், பரிதிநியமம் போன்ற தலங்களிலோ அல்லது திருத்தலத்தின் பெயர் நறையூர் சித்தீச்சரம் என்றவாறாக ஏழு அல்லது அதற்கு மேல் அட்சரங்கள் கொண்ட திருத்தலங்களிலோ இத்தகைய வழிபாடுகளை இயற்றி அடியார்கள் பயன்பெறலாம். 49 என்பது எண் கணித ரீதியாக ராகுவிற்கு ப்ரீதியாக அமைவதால் நத்தை தரிசனமும் மேற்கூறிய வழிபாடும் இவ்வருடம் சிறப்படைகிறது.

பாடலூர் ஸ்ரீசஞ்சீவராயர் திருமலை

மனிதனுக்கு அதீதமான வண்ண சக்திகளை கிரகித்து மக்கள் நல்வாழ்விற்கு அளிப்பவைகளில் வண்ணத்துப் பூச்சிகளும் அடங்கும் என்பது அவைகளின் பெயர்களே உங்களுக்கு உணர்த்தும். Patterns and numbers make this world என்பார் தத்துவ ஞானி சாக்ரடீஸ். இந்த சித்திரங்களின் மகிமையை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் பாடலூர் திருத்தலத்தில் பூமலை என்ற சஞ்சீவிமலையில் உலவும் வண்ணத்துப் பூச்சிகளை தரிசித்து ஆத்மவிசாரம் செய்து வருதல் அற்புத பலன்களை அளிக்கும். ஸ்ரீராமர் ஓதிய வேதமந்திரங்கள் அனைத்துமே இன்று கற்களாக, கற்பாறைகளாக, பல்வேறு கல் வடிவங்களில் இந்த சஞ்சீவராயர் மலையில் பிரகாசிக்கின்றன. ராமபிரான் ஓதிய மந்திரங்களை நாம் ஒலி அலைகளாக, வார்த்தைகளாக, வேதசக்திகளாக கிரகிகும் தெய்வீக சக்தியுடன் திகழவில்லை என்றாலும் சஞ்சீவி மலையில் ஏறி வழிபாடுகளை இயற்றுவதால் இந்த வேத சக்திகளின் மகிமையை உணர்ந்து கொள்ள இயலும். சித்திரம், வண்ண இரகசியங்களை பார்வையால் மற்றுமே பருக முடியும் என்றாலும் இருளிலோ, கண் பார்வை புலராத பொழுதிலும் மக்கள் இந்த இறை இரகசியங்களை உணர்ந்து கொள்ள உதவி செய்வதே வண்ணத்துப் பூச்சிகளின் மகிமையாகும்.

வேறு எத்தலத்திலும் காண இயலாத அளவிற்கு இந்த பூமலையில் வண்ணத்துப் பூச்சிகளின் நடமாட்டம் துலங்குவதற்கு இந்த வண்ண இரகசியங்களே முக்கிய காரணமாகும். கோதுமை மாவால் செய்த சமுசாவில் காரட் துருவலை வைத்து ஸ்ரீசஞ்சீவராய அனுமாருக்குப் படைத்து இத்தலத்தில் தானமாக அளித்தலால் அதீதமான ஞாபக ஆற்றல் பெருகும். சித்தர்கள் அளிக்கும் நினைவூட்டுச் சூரணம் என்னும் சூரணத்தை இத்தலத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்குப் படைத்து பின்னர் அருந்தத் தொடங்கினால் பெரியவர்களுக்கும் வயதானவர்களுக்கும் ஏற்படும் ஞாபக மறதிகள், நினைவுத் தடுமாற்றம் நீங்கும். படிக்கும் பள்ளிக் குழந்தைகள் பிரமிக்க வைக்கும் நினைவாற்றலைப் பெறுவர். வல்லரை இலை 15, ஆடாதொடை இலை 5 இவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். காலையில் மலஜலம் கழித்த பின்னர் இந்த கஷாய நீரை வடிகட்டி அருந்தவும். மூளை அயர்ச்சி, சோம்பலை போக்கி சுறுசுறுப்பு அளிக்கும் சிறந்த மருந்து. கார்பன்டைஆக்சைடு நிறைந்த, மாசு படிந்த சூழ்நிலையில் பல மணி நேரம் பணிபுரிய வேண்டிய நிலையில் உள்ள துப்புரவு தொழிலாளிகள், காவல்துறையினர், மருத்துவ, ஆஸ்பத்திரி பணியாளர்கள் இத்தகைய பாணத்தால் நலம் பெறுவர். இரவில் கண் விழித்து படிப்பதால் மூளைச் சோர்வு அடையும் மாணவர்கள் இந்த புத்துணர்ச்சி பாணத்தை காலையும் மாலையும் பருகி வருதல் சிறப்பு. பேதி ஏற்பட்டு அடிக்கடி மல ஜலம் கழிக்க வேண்டி வந்தால் இந்த பாணத்தை நிறுத்தி விடவும். சிலருக்கு படிப்பதற்கு புத்தகத்தை திறந்தாலே தூக்கம் வந்து விடும். இது மூளையின் செயல் திறன் குறைவால் ஏற்படுவதே. அத்தகையோர் மேற்கண்ட சூரணத்தால் நலம் பெறுவர்.

பாடலூர் செட்டிக்குளம் முருகன் திருத்தலங்கள்

மூளைச் செல்களின் ஆக்கத்தை விருத்தி செய்யும் சாணக்ய தரிசனம் என்று திருஅண்ணாமலை இரட்டைப் பிள்ளையார் கோயிலின் வளாகத்திலிருந்து கிடைக்கும் தரிசனம் ஒன்று உண்டு. ஆனால், காலத்தின் பிரவாகத்தில் தற்போது இந்த தரிசனம் கிடைக்காமல் போயிற்று. இத்தகைய காலகமனத்தால் ஏற்படும் தவறுகளையும் நிவர்த்தி செய்யக் கூடியவை சித்தர்கள் அருளும் வழிபாட்டு முறைகளே என்று உறுதி செய்வதே இந்த வழிபாடு ஆகும். வல்லாரை, ஆடாதொடை என்ற மூலிகைகளை குறித்த விகிதத்தில் இணைத்து பயன்படுத்துதலே இங்கு சாணக்ய தந்திரம் கூறும் எண் கணித முறையாகும். இந்த மூளைச் செல் விருத்தியை சிறப்பாக நிரவ வல்ல ஒரு வழிபாடும் உண்டு. இதுவே இவ்வருடம் இயற்றவல்ல முல்லைச்சர வழிபாடாகும். முல்லைச் சரம் என்பது மூன்று முல்லை மலர்களை ஒன்றன்பின் ஒன்றாக இணைத்து பூச்சரமாக்கி இறைவனுக்கு அளித்தல்தானே. இந்த முச்சர வழிபாட்டில் பாடலூர், செட்டிக்குளம் முருகன், செட்டிக்குளம் சிவத்தலங்களை ஒன்றன்பின் ஒன்றாக ஒரே நாளில் தரிசித்து வழிபடுதலாகும். ஒன்றன்பின் ஒன்றாக கனிந்து குவியும் இந்த வழிபாட்டின் மகிமைகளை உடலில், உள்ளத்தில் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் பக்தர்கள் காலில் செருப்புகள் அணியாமல் நடந்தே சென்று இந்த மூன்று தலங்களையும் தரிசித்தல் சிறப்பு. மற்றவர்கள் அவர்கள் வசதிக்கேற்ப வாகனங்களில் சென்று இந்த மூன்று தலங்களை தரிசிப்பதிலும் தவறு கிடையாது.

அஞ்செழுத்து குருவெழுத்து

திருப்பாலைத்துறை திருத்தலத்தில் அப்பர் பெருமான் சிவாய என்ற சூட்சும பஞ்சாட்சரத்தை கீழ்க்கண்ட பாடலில் பதித்துப் பாடியுள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

திருஅருணாசல குருஅருணாசல

விண்ணினார் பணிந்து ஏந்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத் துறையரே
இது சூட்சும பஞ்சாட்சரத்தை என்றோ நாயன்மார்கள் நிறுவிய அருஞ்செயல் என்றல்லாது இன்றும் சித்தர்களும் மகான்களும் இத்தகைய சூட்சும பஞ்சாட்சர சக்திகளை தங்கள் காரியங்கள் அனைத்திலுமே நிரவி, நிறுவி வருகின்றார்கள் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். அண்ணாமலை என்ற வார்த்தையில் மூன்றாவது எழுத்தாக நடுவில் பொலியும் ‘ணா’ என்ற அட்சரம் இத்தகைய பஞ்சாட்சர சக்தியுடன் பொலிவதாகும். நவீன காலத்தில் ண என்ற எழுத்திற்கு துணைக் கால் இட்டு பயன்படுத்துவதால் இந்த ‘ஆகார’ சக்திகள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் இதை ஈடுகட்டும் முகமாக நம் சற்குரு இவ்வாறு ண என்ற அட்சரத்தை துணைக் கால் சக்திகள் இணைந்த ஒரே எழுத்தாக பயன்படுத்தி தெய்வீகத்திற்கு ஒளி கூட்டினார்கள் என்பதே இங்கு நீங்கள் காணும் சித்திரம் உணர்விக்கும் உண்மையாகும். இதுவே ஒருவர் தலையெழுத்து எப்படி இருந்தாலும் குரு மனது வைத்தால் தனது கையெழுத்தால் அவர் தலையெழுத்தையும் மாற்றி விடுவார் என்பதன் தாத்பார்யமாகும். இங்கு நீங்கள் காணும் திருஅண்ணாமலை என்னும் அட்சரங்கள் ஒரு கோணத்தில் பார்த்தால் குருஅண்ணாமலை என்பதாகவும் தோற்றம் கொள்ளும் அல்லவா ? இதுவே குருவே திருவாக, திருஅண்ணாமலையாகவும் அருள்வார் என்னும் மூலக் கருத்தை சுட்டிக் காட்டுவதாகும். இதையே சித்தர்கள் அண்ணாக்கு சக்தி என்றழைக்கின்றனர். பகவான் கிருஷ்ணர் தன் தாயான யசோதைக்கும், தன்னை நண்பனாகப் பாவித்த அர்ச்சுனனுக்கும், அருமை மனைவியான ருக்மணிக்கும் குறித்த கால கட்டங்களில் தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை காட்டி அருளினார். கிருஷ்ணா என்ற வார்த்தையில் உள்ள நான்காவது அட்சரம் இத்தகைய அண்ணாக்கு சக்திகளுடன் திகழ்வதே. யசோதாவின் வாத்சல்ய பாவத்தையும், அர்ச்சுனன் மேற்கண்ட சக்ய பாவத்தையும் உள்ளடக்கியதே ருக்மணி தேவியின் மதுர பாவமாகும்.

பாடலூர்

இதை உணர்த்துவதும் துணைக்கால் சக்தி கொண்ட ‘ண’ அட்சரமாகும். இந்த சக்திகளைப் பற்றி எதுவுமே தெரியாவிட்டாலும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் மேற்கண்ட முல்லைச்சர வழிபாட்டை மேற்கொண்டால் இந்த ‘பாவ’ சக்திகள் அனைத்தும் ஒன்றாகக் கனிய பக்தர்களின் பாவங்கள் அனைத்தும் வடிகால்களில் மறையும் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் தெளிவுரை. சூரிய சக்திகளோ பகலில் மட்டுமே தோன்றி மக்களுக்கு ஒளி வீசும், குரு சக்திகளோ பகல் இரவு என பாராது எந்நேரத்திலும் தோன்றி இருண்ட உள்ளங்களை பிரகாசப்படுத்துமே. தன்னுடைய தந்தையை விட செல்வத்திலோ, கல்வியிலோ, தகுதியிலோ, செல்வாக்கிலோ உயர்ந்த நிலை அடைந்தவர்கள் நிலை தடுமாறாமல் தாங்கள் பெற்ற அனைத்து வசதி வாய்ப்புகளுமே தங்கள் தந்தையால் விளைந்ததே, அனைத்திற்கும் தந்தையான குரு சக்திகளே இதற்குக் காரணம் என்ற உள்ளத் தெளிவை அளிக்கவல்லதே இங்கு விளக்கிய முல்லைச் சர வழிபாடுகளாகும். செவ்வாய், வியாழக் கிழமைகளில், கிருத்திகை, ரோகிணி நட்சத்திரங்கள் இணையும் நாளில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுதல் சிறப்பு. குருவருளால் இங்கு நீங்கள் காணும் முல்லைச்சர வழிபாட்டைக் குறித்த புகைப்படங்கள் அனைத்தும் இத்தகைய அற்புத தெய்வீக சங்கமத்தில் விளைந்தவையே. நம் சற்குரு அளித்த ஹோரை வழிபாடுகள் மனிதனுக்குத் தேவையான வண்ணங்கள் அனைத்தின் சக்தியையும் அருள்வதே ஆகும். நவீன விஞ்ஞானத்தால் மாசுபடுத்தப்பட முடியாத ஒன்று வண்ணங்கள் என்பதால்தான் அந்தந்த நாளுக்குரித்த வண்ண ஆடைகளையும், ஒவ்வொரு தேவதைக்கும் உரித்தான வண்ணங்கள் உடைய உணவு வகைகளை அன்னதானமாக அளித்தும் பக்தர்கள் அனைத்து அனுகிரகங்களையும் பெறும்படியாக சித்தர்களின் வழிகாட்டுதல் அமைந்துள்ளது. இவ்வகையில் அடிப்படையான ஏழு வண்ணங்களுக்கும் அதீதமான 49 வண்ணங்களின் சக்தியைப் பெற விரும்பும் அடியார்களுக்கும் உதவி செய்வதே இந்த சப்த நிறமாலை வழிபாடாகும். சுயம்பு லிங்க மூர்த்திகள் எழுந்தருளிய எந்த தலத்திலும் இடைவிடாது ஏழு மணி நேரத்திற்கு வலம் வந்து வணங்குதலே இத்தகைய அதீத வண்ண சக்திகளை சாதாரண மக்களும் பெறும் வழிபாட்டு முறையாகும்.

திருஅண்ணாமலை, பழநி, திருக்கழுக்குன்றம் போன்ற மலைத்தலங்களிலும் இத்தகைய சப்த நிறமாலை வழிபாட்டை இயற்றி பயன்பெறலாம். வழிபாட்டின் நிறைவில் குறைந்தது மூன்று வண்ணங்களில் அமைந்த அன்னத்தை பிரசாதமாக அளித்தல் நலம். உதாரணமாக, தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், புளிசாதம் இவற்றுடன் வற்றல், ஊறுகாய் கலந்து சுவையுடன் அன்னதானத்தை அளிக்கலாமே. பாடலூர், செட்டிகுளம் முருகன் கோயில், செட்டிகுளம் சிவன் கோயில் இம்மூன்று தலங்களையும் ஒரே நாளில் தொடர்ந்து தரிசித்தால் அத்தகைய வழிபாட்டின் நேரமும் ஏழு மணி நேரத்தை தாண்டி நிலவுவதால் அதுவும் சப்த நிறமாலை வழிபாடாக கனியும் என்பதே சித்தர்கள் அருளும் ஆசியாகும். இவ்வாறு அறுசுவை அன்னதானத்தில் நிரவும் சப்த நிறமாலை அனுகிரகத்தை பக்தர்களுக்கு அருளும் சக்தி சித்தர்களுக்கு மட்டுமே உண்டு என்பதை நினைவில் கொள்க.

தவள வெண்ணகையின்
தனிச் சிறப்பு

“பெண்பிள்ளை சிரித்தால் போச்சு, புகையிலை விரித்தால் போச்சு”, என்ற பழமொழி ஒன்று உண்டு. பெண்கள் அடக்கத்துடன் இருக்க வேண்டும். அதிலும் சிரிப்பு விஷயத்தில் அவர்கள் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்பது நம் பெரியோர்களின் வாய்மொழி. திரௌபதியின் ஒரே ஒரு சிரிப்பால் இந்த உலகம் முழுவதிலுமுள்ள உள்ள அனைவரும் போரில் உயிரிழந்தனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல புகையிலை என்பது வலியை உணராதிருக்க மிக மிக கவனமாக கையாளப்பட வேண்டிய ஒரு மருந்தே என்பது போய் அது போதைப் பொருளாக மாறி விட்டதால் உலகம் அனைத்தும் அதன் புகையால் ஏற்படும் நச்சுக் காற்றால் அனுபவிக்கும் வேதனை அனைவரும் அறிந்த ஒன்றுதானே. இத்தகைய மாசுபடுத்தும் செயல்களுக்கெல்லாம் மாசிலாமணியாக ஒளிர்வதே திருப்பாலைத்துறை திருத்தலத்தில் ஒளிரும் அம்பிகையின் தவள வெண்ணகையாகும். தவளம் என்றால் வெண்மை என்று பொருள். தவள வெண்ணகை என்றால் தன் பிரானின் சிரிப்பில் விளையும் ஒளிச் சக்தியை பாதுகாத்து, அதை தன்னுடைய சக்தியுடன் சேர்த்து உலக ஜீவன்களுக்கெல்லாம் சிவசக்தி அனுகிரகமாக அளிக்கும் அம்பிகை என்று பொருள். என்னே தாயின் கருணை !

ஸ்ரீதவளவெண்ணகையாள்
திருப்பாலைத்துறை

பாலை சக்திகள் என்பவை ஒரு விதமான சூரிய சக்திகளே. தாவரங்களுக்கும் உயிர்களுக்கும் ஒளி என்னும் வெளிச்சத்தை அளிப்பது மட்டுமல்லாமல் உயிர் சக்தியையும் ஊட்டுபவையே பாலை சக்திகள். இந்தப் பாலை சக்திகள் அபரிமிதமாகப் பொலியும் திருத்தலமே கும்பகோணம் அருகில் உள்ள திருப்பாலைத்துறை திருத்தலமாகும். இந்த உயிர் சக்திகளை அபரிமிதமாகப் பெற்ற ஜீவன்களே பாலைவனத்தில் விஷம் நிறைந்த பாம்புகளாக, நட்டுவாக்கிளிகளாக உலவுகின்றன என்பது மேலோட்டமான உயிர் தத்துவ விளக்கங்களாகும். மனிதனுக்குப் புரியும் வகையில் கூறுவதாக இருந்தால் இந்த பாம்புகளின் நச்சுத்தன்மை என்று அழைப்பது மனித ஜீரண சக்திக்கு மேம்பட்ட, மனித இரத்த அணுக்களால் கிரகிக்க முடியாத புரதச் சத்தாகும். ஒரே ஒரு மழைத் துளியில் விளையும் அமிர்த சக்தியைக் கொண்டு இந்த உலகம் முழுவதற்கும் உணவு படைக்க முடியும் என்றால் இறைவனின் சிருஷ்டி தத்துவத்தைப் பற்றி அறிந்து கொள்ளாதது யார் குறை ? அது போலவே பாலை சக்திகள் என்ற உயிர் சக்திகள் மகான்கள், யோகிகள் ஏன் சித்தர்களுக்கே அதீதமாக விளங்குபவையே. இந்த பாலை சக்திகளைப் பற்றி முழுமையாக உணர்ந்து அந்த சக்திகளை மக்களுக்குப் பயன்படும் விதத்தில் அளிக்கக் கூடியவர்களே நவநாத சித்தர்கள் என்னும் விந்தைமிகு சித்தர்கள் ஆவர். நவநாத சித்தர்களின் ஒருவரான ஸ்ரீபாணவாலை சித்தர் இத்தகைய பாலை சக்திகளை புனருத்தாரணம் செய்வதாக விளங்கியதே திருப்பாலைத்துறையில் 10.7.2020 அன்று தோன்றிய இரு சூரிய காட்சிகளாகும். பாணவாலை என்ற நாமத்தின் முதல், இறுதி அட்சரங்களால் தொடுக்கப்பட்ட மாலைதானே பாலை சக்திகள் என்ற பூச்சரம். அம்பிகையின் பாலை சக்திகளை மக்களுக்கு மட்டும் அல்லாது மற்ற ஜீவன்களுக்கும் தாரை வார்த்து அளிக்க சித்தர்களால் உருவாக்கப்பட்டதே இத்தலத்தில் விளையும் நெற்களஞ்சியமாகும். அம்பிகையின் தவளவெண்ணகை சக்திகளை இந்த நெற்களஞ்சியம் ஈர்த்து, சேமித்து அதை உயிரினங்களுக்கு விநியோகம் செய்யும் இரகசியங்கள் மனித அறிவிற்கு அப்பாற்பட்டவையே. மனிதனால் கிரகிக்கக் கூடிய எண் கணித இரகசியங்கள் ஒன்றிரண்டைப் பற்றி மட்டுமே இங்கு குருவருளால் விளக்குகின்றோம். இந்த நெற்களஞ்சியத்தின் உயரம் 36 அடி. இது 3000 கள நெல்மணிகளை பாதுகாத்து வைக்கும் கொள்ளளவுடன் திகழ்வது. மூன்று படிகள் ஒரு மரக்கால், 12 மரக்கால் ஒரு களம். 3000 களம் என்பது தற்காலத்தில் (3000 x 12 x 3) 108000 படிகளைக் குறிக்கும். நெற்களஞ்சியத்தின் உயரமான 36 அடிகளே பாலை சக்திகளை, அதாவது (2 x 3) x (2 x 3 = 36) என்ற இரு பாத பாலை அளவைக் குறிப்பதாகும். ஸ்ரீஅகத்திய மகா பிரபு தவள வெண்ணகையாளின் பாலை சக்திகளை ஈர்த்து இந்த நெற்களஞ்சியத்தில் சேமிக்கப்பட்ட நெற்மணிகளில் நிரவி மக்களுக்கு இறைவனின் அனுகிரகமாக அளித்து வருகிறார் என்பதே திருப்பாலைத்துறை நெற்களஞ்சியத்தின் மகிமை குறித்து சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். ஆஷாசுவாசிணி என்ற அகத்திய பிரானின் தாயைக் குறிக்கும் ஆறு எழுத்து அட்சரங்கள் மகிமையும் தவளவெண்ணகையுடன் இணைவதே இத்தலத்தின் தனிச் சிறப்பாகும். முற்காலத்து மன்னர்கள் அனைவரும் திருப்பாலைத்துறை நெற்களஞ்சியத்தில் தங்கள் நாட்டின் விளைச்சலில் ஒரு பகுதியையாவது ஒரு மண்டல காலத்திற்கு பாதுகாத்து வைத்திருந்து இந்தப் பாலை சக்திகள் என்ற அபூர்வ நோய் நிவாரண சக்திகளையும், சந்ததி விருத்தி சக்திகளையும் தங்கள் குடிமக்களுக்கு அளித்து வந்தனர். பாலை என்றால் நிலையாக இடம்பெறுதல் என்றுதானே பொருள் ? பாலை சக்திகள் நிலையாகக் குடிகொள்ளும் நெற்களஞ்சியமாக இது திகழ்வதால் எக்காலத்தும் இந்தப் பாலை சக்திகளை மக்கள் பெறும் வகையில் அமைந்துள்ளதே இந்த நெற்களஞ்சியத்தின் தனிச் சிறப்பாகும்.

திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம்

நவநாத சித்தர்களும் மகான்களும் வழிகாட்டிய முறையில் இந்தக் களஞ்சியத்தில் நெல் மணிகளை சேமித்து அதை மக்களுக்கு அளித்தலால் சமுதாயத்தில் விளையும் பலன்களை அளவிட முடியாது. குறிப்பாக தொற்றுநோய்களும், வம்சாவழி நோய்களும் அண்டாமல் காப்பதே இந்த நெற்களஞ்சியத்தில் விளையும் ஆரோக்கிய சக்திகளாகும். நெல் விளையும் சமயத்தில் நெற்பயிரில் நிறையும் இரசாயண மருந்துகள், இரசாயண உரங்கள், கண் திருஷ்டி தோஷங்களின் விஷத் தன்மை பெருமளவில் குறைந்து மக்களுக்குப் பயன்படும் ஔஷத சக்திகளும் ஆரோக்ய சக்திகளும் இந்த நெல் மணிகளில் நிறையும் என்பதே தவள வெண்ணகையின் தவளச் சிறப்புகளில் ஒன்றாகும். அனைவர்க்கும் இத்தகைய தான்ய சேமிப்பு சாத்தியம் இல்லை என்றாலும் அவரவர் தங்கள் கையிருப்பில் உள்ள நெல் மணிகளையோ அல்லது அரிசி மணிகளையோ ஒரு வாழை இலையில் குவித்து வைத்து பூசம் நட்சத்திரம் நிரவும் நாட்களில் அப்பர் பெருமானின் மேற்குறித்த “விண்ணினார் பணிந்து ...” என்ற பாட்டின் வரிகளை 21 முறை ஓதி அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் அன்னதானம் அளித்தலால் தங்களிடம் உள்ள அனைத்து நெல்மணிகளுமே நோய் நிவாரண சக்திகளைப் பெறும் என்பதே சித்தர்கள் அளிக்கும் உறுதி மொழி. பக்தர்கள் அனைவரும் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது இந்த நெற்களஞ்சியத்தை நேரில் தரிசனம் செய்து அப்பர் பெருமான் ஓதிய சொற்றுணை வேதியன் என்று தொடங்கும் தேவாரப் பதிகத்தை இந்த நெற்களஞ்சியத்தின் முன் ஓதுதல் சிறப்பாகும். பலருக்கும் தங்களால் நிறைந்த அளவு மக்களுக்கு அன்னதானம் அளிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருப்பதுண்டு. அத்தகையோர் இந்த நெற்களஞ்சியத்தின் முன் அமர்ந்து நம் சற்குரு அளித்த 32 தேவாரப் பதிகங்களையும் ஓதுதலால் அன்னதான கைங்கர்யத்தை நிறைவேற்றும் சந்தர்ப்பங்கள் சிங்காரித்துக் கொண்டு இனிதே வரும். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் மருத்துவர்களும் இந்த நெற்களஞ்சியத்தின் முன் அமர்ந்து நோய் நிவாரண காயத்ரி மந்திரங்களை ஓதி தங்கள் கைராசியை பெருக்கிக் கொள்ளலாம் என்பதே. இதன் பின்னணி மனித அறிவிற்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் மருத்துவர்கள் அணியும் சீருடை வெள்ளை நிறத்தில் தவள வெண்ணகையைக் குறிப்பதாகும் என்னும் கருத்து மனிதர்களால் கிரகிக்கக் கூடிய ஒரு நிற தத்துவம்தானே. முற்காலத்தில் குழந்தைகளுக்கு நிறைவேற்றும் முதல் அமுதூட்டும் நிகழ்ச்சிகளில் இவ்வாறு திருப்பாலைத்துறை நெற்களஞ்சியத்தில் வைத்த அரிசி மணிகளே சமைப்பதற்குப் பயன்பட்டன. இன்றும் முதல் அமுதூட்டும் நிகழ்ச்சிகளை இந்த நெற்களஞ்சியத்தின் முன் அமைத்துக் கொள்வதோ அல்லது அவரவர் இல்லங்களில் மேற்கூறிய அப்பர் பெருமானின் பஞ்சாட்சர பதிகத்தை ஓதி நிறைவேற்றுவதோ குழந்தைகள் பிற்காலத்தில் நல்ல சந்ததிகளாக உருவாவதற்கு உறுதுணையாக நிற்கும்.

ஸ்ரீஅரிசி பிள்ளையார் திருப்பாலைத்துறை

ஸ்ரீஉமி பிள்ளையார் திருப்பாலைத்துறை

திருப்பாலைத்துறையில் ஸ்ரீதவளவெண்ணகையாள் அம்பிகையின் துவார சக்திகளாக, துவார பாலகர்களாக விளங்கும் மூர்த்திகளே சித்தர்களால் புகழப்படும் ஸ்ரீஅரிசி பிள்ளையார், ஸ்ரீஉமி பிள்ளையார் மூர்த்திகள் ஆவர். அரிசி என்ற மூன்றெழுத்துடன் உமி என்ற இரண்டெழுத்து சேர விளைவதுதானே நெல் தானியம், இதுவே பஞ்சாட்சரம் என்ற இறை சக்தி, நமசிவாய நாதம். பிரிந்து வாழும் தம்பதியர் இந்த இணைபிரியா பிள்ளையார் மூர்த்திகளின் வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். வெள்ளிக் கிழமைகளில் உடல் சுத்தியோடு விளங்கும் பெண்கள் ஒரு படி அளவிற்கு குறையாது நெல்மணிகளை வாங்கி உரலில் இடித்து அரிசியைத் தனியாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். அந்த அரிசியால் சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து சுயம்பு மூர்த்திகள் விளங்கும் எந்தத் திருத்தலங்களில் வேண்டுமானாலும் நைவேத்யமாக அளிக்கலாம். இந்த சேவையில் பிரிந்த உமிகளில் கற்பூரம், தேங்காய்நார் போன்ற பொருட்கள் மட்டும் கொண்டு எரித்து அதனுடன் சுத்தமான பசு வெண்ணெய், நெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து அதை கண் மையாக கணவனைப் பிரிந்த சுமங்கலிப் பெண்கள் இட்டு வர வேண்டும். இதனால் தாங்கள் கணவன்மார்களைப் பிரிந்து வாழ்வதை அறிந்த காமக் கண்களின் பார்வையிலிருந்து தெய்வீக ரீதியாகவே அவர்கள் தப்பித்து பாதுகாப்புடன் வாழ முடியும். இத்தகைய வழிபாடுகளை அவர்கள் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் அத்தகையோர் நிச்சயம் தாங்கள் பிரிந்த கணவன்மார்களுடன் இணைவார்கள் என்பது உறுதி. அவ்வாறு அவர்கள் தங்கள் புனர்வாழ்வைப் பெற்ற பின்னர் மேற்கூறிய முறையில் கண் மை தயாரித்து கன்னிப் பெண்களுக்கும், சுமங்கலிப் பெண்களுக்கும் வெள்ளிக் கிழமைகளில் அல்லது நவராத்திரி ஒன்பது தினங்களிலும் தானமளித்து இத்தல தவளவெண்ணகையாளுக்கும், அரிசி உமி பிள்ளையார் மூர்த்திகளுக்கும் நன்றி கூறுதல் வேண்டும். நகமும் சதையுமாய் இருந்து பிரிந்த பல நண்பர்களும் இத்தகைய வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். தம்பதிகளுக்கு இடையே அமைய வேண்டிய பத்து திருமணப் பொருத்தங்களில் ரஜ்ஜு பொருத்தம் சரியாக அமையாதபோது தம்பதிகள் இடையே வேற்றுமை தோன்றி சந்தானங்கள் அமையாமல் போவதும் உண்டு. சில சமயங்களில் அங்கக் குறைவான குழந்தைகளோ அல்லது மன வளர்ச்சி அடையாத சந்தானங்களும் அமைவது உண்டு. இத்தகைய குறைபாடுகளை களைய வல்லதே திருப்பாலைத்துறையில் நிறைவேற்றும் ஸ்ரீதவளவெண்ணகையாள் வழிபாடு ஆகும்.

வில்வமரம் திருப்பாலைத்துறை

திருப்பாலைத்துறை திருத்தலத்தின் தலவிருட்சம் பாலை என்பதாகும். எத்தகைய உஷ்ணத்துடன் தகிக்கும் சூரிய கிரணங்களின் சக்தியையும் ஈர்த்து குளிர்ச்சி அளிக்கக் கூடியதே பாலை மரத்தின் தன்மையாகும். திருப்பாலைத்துறையில் உள்ள நெற்களஞ்சியம் வடகிழக்கு திசையான ஈசான்ய திசையில் அமைந்து தூய இறை சக்திகளுடன் துலங்குவதைப் போல் அக்னி திசையான தென்கிழக்கு திசையில் பக்தர்களுக்கு குளிர்ச்சியை வாரி வழங்கியதே தலவிருட்சமான பாலை மரம் அளித்த தெய்வீகக் குளிர்ச்சியின் தன்மையாகும். ஊருக்கு ஒரு பிள்ளை இருந்தால் போதும் என்று தென்னை மரத்தின் சிறப்பை வர்ணிப்பது போல ஊருக்கு ஒரு பாலை இருந்தால் போதும் அது எத்தகைய உஷ்ண சக்திகளையும் ஈர்த்து அதீத உஷ்ணத்தால் தோன்றும் பல உடல் நோய்களை மாய்க்கும். திருப்பாலைத்துறை திருத்தலத்தில் பாலை மரத்தை நட்டு பராமரித்தல் என்பது கிடைத்தற்கரிய தெய்வீக பேறே. ஒரு ஊரையே வியாதியிலிருந்து, நோய் நொடிகளிலிருந்து காப்பாற்றும் புண்ணிய சக்திகள் திரளும் என்றால் இந்த தெய்வீக மரத்தின் சிறப்பியல்புகளை எப்படிப் புகழ்வது ? துர்காதேவிக்கு பாலைக்கிழத்தி என்ற நாமம் ஒன்று உண்டு. கிழத்தி என்றால் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவள் என்று பொருள். இவ்வாறு பாலை சக்திகளை பக்தர்களுக்கு அனுகிரகமாக அளிப்பதில் தேர்ச்சி பெற்றவள் என்ற நாமத்துடன் பாலை சக்திக்கு உரிய தலத்தில் துர்காதேவி அருள்பாலிக்கிறாள் என்றால் இது கலியுக பக்தர்கள் பெற்ற எத்தகைய சிறந்த பேறு ? கணவன் மனைவி இடையே தோன்றும் வெப்ப சக்திகளை முறைப்படுத்துவதே இந்தப் பாலை சக்திகள். சப்தரிஷி மண்டலம், சப்த ரிஷிகள், திருமண சப்தபதி என்ற சாங்கியங்கள் யாவுமே தம்பதிகள் இந்த ஏழு சக்திகளை பெறும் வழிமுறைகளையே சுட்டிக் காட்டுகின்றன. நடைமுறையில் இந்த வழிபாடுகள் எல்லாம் மறைந்து, மறந்து போய் விட்டமையால் பாலை சக்திகளைப் பெறும் முறையாக இந்த பாலைக்கிழத்தியை வழிபட்டு பாலை சக்திகளை தம்பதிகள் பெறுமாறு சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். ஸ்ரீதட்சிணா மூர்த்தி எதிரில் அமைந்துள்ள 15 சுக்ர பீடங்களில் எண்ணெய் வார்த்து, அதாவது நடுவில் தேங்காய் எண்ணெயும் மற்ற பீடங்களில் நல்லெண்ணெயும் வார்த்து விளக்கேற்றி இத்தல ஸ்ரீபாலைக்கிழத்தியாக அருளும் துர்காதேவியை வணங்கி வருவதால் தம்பதிகள் ஒற்றுமையுடன் திகழ்வர்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருப்பாலைத்துறை

சுக்ரபீடம் திருப்பாலைத்துறை

ஸ்ரீதவளவெண்ணகையாள் அம்பிகை இத்தலத்தில் திருமணக் கோலத்தில் சுவாமிக்கு வலப்புறத்தில் காதலியாக எழுந்தருளி தம்பதிகள் மத்தியில் என்றும் நிலவ வேண்டிய உண்மைக் காதலை, வெண்ணகை பிரசாதமாக அருள்கின்றாள். சுருக்கமாகச் சொன்னால் திருப்பாலைத்துறையில் மரம், செடி, கொடி என அனைத்துமே தம்பதிகளின் ஒற்றுமையை அருளும் சோலையாகவே மலர்ந்துள்ளன என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். சுக்ர பீடத்தில் 15 தீபங்களை ஏற்றி வைத்து இத்தலத்தை 12, 24, 36 என்ற பன்னிரெண்டின் மடங்கில் வலம் வந்து வணங்குதல் சிறப்பே. முற்காலத்தில் பாலைக்கிழத்தி அருளும் சுமங்கலி சக்திகளைப் பெறுவதற்காக முதலில் பாலை தலவிருட்சத்தையும் அதன் பின்னர் ஸ்ரீதுர்காதேவியான பாலைக்கிழத்தியையும் வலம் வந்து வணங்குவர். பாலை தல விருட்சம் அமையும் வரை இத்தல வில்வ மரத்தை வலம் வந்து வணங்கி பாலை சக்திகளைப் பெறும் வழிபாட்டு முறையை நடைமுறைக்குக் கொண்டு வந்த சித்தரே ஸ்ரீபாணவாலை சித்தர் ஆவார். நடைமுறையில் இங்குள்ள சுக்ர பீடத்தில் விளக்கேற்றி வழிபாடு இயற்ற முடியாதபோது இந்த சுக்ர பீடத்தில் அகல் தீபங்களை ஏற்றி வழிபடுவதும் ஏற்புடையதே. தம்பதிகள் இடையே நிலவும் ஏழு வகை அக்னி சக்திகளில் ஒன்றான பாலை சக்தியை ஸ்ரீவசிஷ்ட மகரிஷி மக்களின் நன்மைக்காக வார்த்து அளித்த தலமே திருப்பாலைத்துறை ஆகும். இந்த பாலை சக்திகளின் ஒரு அம்சத்தைக் கொண்டே கண்ணகி மதுரை மாநகரையே எரித்தாள் என்றால் பாலை சக்திகளின் மகிமை எத்துணை சக்தி உடையதாக இருக்கும். ஆண்களும் இத்தகைய பாலை சக்திகளைப் பெற வேண்டும் என்றால் பஞ்ச கச்சம் அணிந்து தாமே சமைத்து குறைந்தது 108 அடியார்களுக்கு (36 x 3 = 108) அன்னதானமாக இத்தலத்தில் அளித்தல் நலம். நம் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு அடியார் இத்தகைய பாலை சக்திகளுடன் துலங்கி சமுதாயத்திற்கு இன்றும் நற்சக்திகளை வழங்கி வருகிறார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் குருவின் வழிகாட்டுதலாகும். நீங்களும் ஏன் பஞ்சகச்சத்தை அணிந்து பிரசாதம் படைத்து ஏழைகளுக்கு வழங்கி பாலை சக்திகளை சமுதாயத்திற்கு அளிக்கும் ஒரு பாலை நாதராக உருவாகக் கூடாது ? பாலை சக்திகளை அளிக்கும் விதமாகவே இறை மூர்த்திகளின் 108 போற்றித் துதிகள் அமைந்துள்ளன என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும். இவ்வுலகில் அக்னி சக்தியுடன் பொலியாத எந்தப் பொருளும் இல்லை ஆதலால் தம்பதிகளை ஆசீர்வதிக்கும் அரிசி மணிகளிலும் அக்னி சக்திகள் நிறைந்திருக்கும் அல்லவா ? இந்த அட்சதைகளில் விளங்கும் அக்னி சக்திகள் தம்பதிகளுக்கு நன்மையையே அளிக்க வேண்டும் என எண்ணுவோர் அட்சதைகளை இத்தல திருமணக் கோல அம்பிகையின் முன் வைத்து வணங்கி எடுத்துச் சென்று தம்பதிகளை ஆசீர்வதிக்க அளித்தல் நலம். தம்பதிகள் இடையே தோன்றும் பாலை சக்தியை நிர்மாணிக்கும் தேவதையாக திருப்பாலைத்துறையில் அம்பிகைக்கும் இறைவனுக்கும் இடையே விளங்கும் ஸ்ரீபாலைக்கிழத்தி அருள்கின்றாள் என்ற ஒரே ஒரு வாக்கியத்தை தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தாலே போதும் நீங்கள் தெய்வீகத்தில் அறிய வேண்டிய அனைத்தையும் அறிந்தவர்கள் ஆவீர்கள் என்றால் வேறு என்ன தெய்வீக அனுகிரகம் உங்களுக்கு வேண்டும் ?!

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam