அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் பால பருவ குருகுலவாச அனுபூதிகள்..
கலியுகத்தில் சற்குரு இருக்கின்றாரா, அக்காலத்தில் நிலவியது போல கலியில் குருகுலவாசம் உண்டா, தற்காலத்தில் சற்குருமார்கள் மக்களிடையே சிரஞ்சீவியாய் உலவுகின்றனரா என்று கேட்டு ஐயங்கொள்வோரும் உண்டு. ஸ்ரீராமபிரான் தோன்றிய திரேதா யுகமோ, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் துவாபர யுகமோ, ஸ்ரீகல்கி விஷ்ணு மூர்த்திக்குரிய கலியுகமோ எந்த யுகத்திலும் சற்குருமார்கள் உண்டு என்பதை உணர்த்துமுகமாகத்தான் இந்த “அடிமை கண்ட ஆனந்தம்” புகட்டும் குருகுலவாச அனுபூதிகள் அமைகின்றன.
ஸ்ரீராமருக்கே ஸ்ரீவசிஷ்ட மஹரிஷி குலகுருவாகப் பிரகாசிக்கின்றார். ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் குலகுருவே ஸ்ரீசந்தீபனி மாமுனியாம். இவ்வாறாக எந்த யுகமாயினும் சரி, சற்குருவின் மூலமாகவே எவ்வித முக்தி, மோட்ச நிலைகளை, இறை தரிசனங்களை, இறை நல்வரங்களைப் பெற முடியும் என்பதை நிலை நாட்டுவதாகவே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருவாம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம் பெற்ற கலியுக குருகுல வாச அனுபூதிகள் அமைந்துள்ளன என்பதையும் தெளிவாக அறிந்திடலாம்.
அமாவாசை சித்தர், த்ரைலிங்க சுவாமிகள், மஹா அவதூது பாபா, தடி தூக்கி சித்தர் என எத்தனையோ சித்தர்களுடைய தரிசனங்களையும் பெற்றுத் தந்து அவர்களுடைய அனுபூதிகளைப் பற்றியும் பெரியவர் சிறுவனுக்கு மிகவும் சுவாரசியமாக விவரித்து இருக்கிறார். அவற்றைப் பற்றி இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். அந்த அளவிற்கு இறையினிமை கொண்டதாக அவை விளங்குகின்றன. எக்காலத்தும், எங்கும் தித்திக்கும் திவ்ய தேனாமிர்தமே அவை யாவும்!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

இப்படித்தான்....ஒரு முறை..... கோவணாண்டிப் பெரியவருடன் சிறுவன் திருஅண்ணாமலைக்கு நடைப் பயணம் கொண்ட போது.... ஆமாம், பெரும்பாலும் சிறுவனுக்கு சென்னையிலிருந்து திருஅண்ணாமலைக்கு வெயில், மழை பாராமல் ஒரே நடைதான்.. எப்போதாவது தான் பஸ், டிரெயின்! அச்சமயத்தில் நடையோ நடையென நடந்து செஞ்சிப் பகுதியைத் தாண்டிய பின்... ஓரிடத்தில் .. சந்திரகிரி மலைகளின் தரிசனப் பகுதியில்., ஒரு ஆள் குப்பையை அள்ளிக் கொண்டிருந்தான். திடீரென்று அதிலேயே உட்கார்ந்து கொள்வான். சிறிது குப்பையை அள்ளிக் கொள்வான். சற்று தூரம் நடந்து சென்று அடுத்த குப்பையைக் கிளறுவான்! முதலில் பொறுக்கிய குப்பை என்ன ஆயிற்று? எங்கு போயிற்று? இப்படியே ஒரு மைல், இரண்டு மைல் தூரத்திற்கு அவனைத் தொடர்ந்தார்கள், பெரியவரும், சிறுவனும்! நடுவில் பெரியவர் சிறுவனுக்கு பரோட்டா, டீ எல்லாம் வாங்கிக் கொடுத்தார். “ஏன் வாத்யாரே அந்த ஆளுக்கு ஏதாச்சும் வாங்கித் தரலாமா?”
“ஏண்டா, நம்ப கைலேந்து அந்த ஆளுக்கு ஏதாச்சும் கொடுக்கணும்னு பாக்கி இருந்தா, நான் கொடுக்க மாட்டேனா என்ன? பாக்கியில்லைன்னா விட்டுட வேண்டியதுதானே. எதயாச்சும் தேவையில்லாம கொடுத்து புதுசா ஏதாச்சும் கர்மாவ சேத்துப்பாங்களா என்ன? அதாண்டா கலியுகத்துலே, பக்கத்துலேயே குரு இருந்தாலும் கூட அவரோட “value” புரியாதுடா, ஏதோ இந்தக் கெழவன் வர்றான், போறான், நம்பள மாதிரி இட்லி, பரோட்டா திங்கறான், காபி, டீ குடிக்கறான், வேற என்ன புதுசா செய்யறான்? ஏதோ கோயில் குளம் போறான், எப்பப் பார்த்தாலும் அண்ணாமலையைச் சுத்துன்னு சொல்வான், தான, தர்மம் பண்ணும்பான், ரொம்பப் போனா பாக்கி பாக்கினு சொல்லி கழுத்தறுப்பான்... அப்படீன்னு மட்டும்தான நெனக்கற...”
பெரியவர் சொல்லிக் கொண்டே செல்ல, சிறுவனுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது! “வாத்யாரே” வீலென்று சிறுவன் கத்தினான், “நான் என்னிக்காவது அப்படி நெனச்சுருக்கேனா சொல்லு வாத்யாரே, நீதான் என் குருன்னு தெரியும், ஆனா அது சரியா மண்டேல ஏறலயே, என்ன பண்றது?”
“சிவ, சிவ! அடியேனை குருன்னு சொல்லாதேடா, ரொம்ப கஷ்டமான போஸ்ட் அது! ஏன்னா, குருன்னா, அவரோட சிஷ்ய கோடிகளோட கர்மாவெல்லாம் அவரு ஏத்துக்கணும். என்னோட கர்மாவையே அனுபவிக்க முடியாம தெணறிகிட்டு இருக்கேன்! உனக்கு ஒரு சிஷ்யனுக்குத் தேவையான எல்லா தகுதியும் இருக்குடா! ஆனா உனக்கு குருவா ஆறதுக்கான தகுதி எங்கிட்ட இல்லையே, கண்ணு என்னடா செய்யறது?”
சிறுவன் விழித்தான், பரிதவித்தான், நன்றாகப் “பட்டுக்” கொண்டான் ... “எப்படி யெல்லாம் வார்த்தைகளை வில்லாக வளைக்கிறார், எப்படி plateஐயே மாத்தி போட்டுடறாரு!”
பெரியவர் கண்ணைச் சிமிட்டினார்! அவன் தோளில் பெருங்கருணையுடன் தன் கைகளை வைத்து, “இத பாருடா, சித்தன் போக்கு சிவன் போக்குன்னா என்ன அர்த்தம் தெரியுமா? சித்தனுக்குன்னு தனி இலட்சியம், வழி, கொள்கைன்னு கெடயாதுடா! ஆனா ஆதிசிவன் நெனக்கறது எல்லாம், சொல்றதெல்லாம், செய்யறதெல்லாம் தான் சித்தருங்க செய்யறாங்க.... எந்த சித்தனையும் எந்த காலத்துலயும் புரிஞ்சுக்க முடியாதுடா, இப்படி தோள் மேலேயே கை போட்டுக்கிட்டுப் பேசினாக் கூட அவரு “சித்தர்னு” தெரியாதுன்னா பார்த்துக்கோயேன்!”
டக்கென்று கைகளை எடுத்து விட்டு மீண்டும் கண்களைச் சிமிட்டியவாறாய், அண்டமே அதிரும் வண்ணம் பெருஞ்சிரிப்பைக் கொட்டலானார் பெரியவர்! தன் குருகுலவாசத்தில் ஒரு சில சமயங்களில் தான் அவர் அவ்வாறு பெருஞ்சிரிப்பைக் கொட்டுவதைப் பார்த்திருக்கின்றான், அப்போது தான் “சிரிப்பின்” ஆன்மீக ரகசியத்தை சிறுவனுக்கு போதித்தார் பெரியவர்.
“உதடு பிரிஞ்சு சிரிக்கறதெல்லாம் சிரிப்பு இல்லடா! உள்ளம் விரியச் சிரிக்கணும்டா!” ஆலகால விஷத்தைத் தம் கையில் நந்தியெம்பிரான் ஏந்திய போது அகங்காரம் சற்றே ஏற்பட்டமையால்தான், அதன் தண்டனையாய் ஸ்ரீநந்தீஸ்வரர் சிரித்தார், சிரித்தார், சிரித்துக் கொண்டேயிருந்தார் பல கோடியுகங்களாக! அதன் பிறகுதான் அவர் அம்பிகையை வணங்கிட, அன்னையும் ஸ்ரீதர்மசம்வர்தினியாய், ஸ்ரீநந்தீஸ்வரரின் மூக்குக் கயிற்றை சற்றே இழுத்து “நாசி பிரம்ம யோகத்தில்” அவரை ஆழ்த்திட சிரிப்பகன்று அகந்தையை விடுத்து நன்னிலை பெற்றார். இவ்வாறு அகந்தை நீங்கியவராய் இன்றும் அருள்பாலிப்பவரே கோயம்பேடு (சென்னை) ஸ்ரீகுறுங்காலீஸ்வரர் ஆலய ஸ்ரீநந்தி மூர்த்தியாவார். (விளக்கம் எம் ஆஸ்ரம “பிரதோஷ மஹிமை“ நூலில்).
அப்போதுதான் பெரியவர் சிரிப்பின் ஆன்மீக ரகசியங்களை, கோயம்பேடு நந்தியெம் பெருமானின் புராணம் மூலமாக எடுத்துரைத்தார்.. “இத பாருடா, பூண்டி மஹான் இருந்தாரு, ஏதாச்சும் சொன்னா பெருசா சிரிப்பாரு, அவ்வளவுதான்! ஆயிரங்கோடி அர்த்தமிருக்கும்! ஏன்னா மஹானுங்க சிரிச்சா அவங்க உடம்புல இருக்கற 72000 நாடி நரம்பும் ஃபுல்லா activate ஆகும். அப்படீன்னா என்ன அர்த்தம்? இந்த 72000 நாடி நரம்பு தேவதைகளெல்லாம் அவங்களுக்கு முன்னாடி உடனேயே பிரசன்னமாகும். அவங்க அந்தந்த தேவதைகளுக்கு “நமஸ்காரம்” பண்ணி, அம்மா! தாயே, இவங்களுக்கு இந்தந்த கஷ்டம் இருக்கு! பிதுர் தேவதைகளை வேண்டி இவங்களுக்கு எது நன்மையோ அத செஞ்சுக் கொடுங்கன்னு வேண்டிப்பாங்கா! அதுவே மஹானுடைய தரிசன பலனாக மாறிடும்! இதுதாண்டா சிரிப்போட ஆன்மீக ரகசியத்துல ஒண்ணு!”
பெரியவர் மீண்டும் பெருத்த குரலில் சிரிக்கலானார். தெய்வீகச் சிரிப்பையா அது! அப்போது ஆங்கே சிறுவனால் 72000 நாடி, நரம்பு தேவதைகளை தரிசிக்க முடிந்ததோ இல்லையோ, அத்தனை ஆயிரம் தேவதைகளின் பிரசன்ன நிலையுடன் சேர்ந்திருக்கின்றோம் என்று தெளிந்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்! வேண்டுமென்றே பெரியவரின் முன்னால் தன் கைகளை வீசி “test” செய்து பார்த்தான், தன் கைகளில் ஏதேனும் தேவதைகளின் “ஸ்பரிசம்” தென்படுகின்றதா என்று! பெரியவர் இதனை அறிய மாட்டாரா என்ன? அவன் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “ஷ்..... ஷ்... ஷ்..... இந்த கோணங்கி வேலையெல்லாம் செய்வேன்னு தெரிஞ்சுதான் அந்த தேவதைங்க தள்ளியே நிக்கறாங்கடா!” ..... பெரியவர் குறும்பாய்ச் சிரித்திட சிறுவனும் அதில் கல(ரை)ந்தான்!
இன்றைக்கு “laughing gas (CO)” என்று சொல்கிறோமே அது 72000 நாடி நரம்புகளின் சிரிப்பு இயக்கத்திற்கான “தானவ தேவதைகளின்“ சுவாச பஞ்சன யோகத்திலிருந்து வெளிப்படுவதாகும்! இதுவும் பெரியவர் பகன்ற ஆன்மீக ரகசியமே! சித்தர்களுடைய spiritual scienceல் அனைத்தும் விஞ்ஞானமும் அடங்குடுமே! ஆம், உண்மையே, இவ்வாறாக சிறுவன் சற்குருவின் அனுகிரகத்தால் எத்தனையோ வருஷங்களுக்கு முன் குருவாய் மொழி அருவியாகக் கொட்டிப் பெற்றமையே (டேப் ரெகார்டர், மைக், ஸ்பீக்கர் develop ஆகாத காலத்தில் ) சற்குருவின் அருட்பிரவாகமாக ஊறி இன்று ஸ்ரீ அகஸ்திய விஜய தீர்த்தமாக இனித்துக் கொண்டிருக்கிறது.
அந்த பைராகி போலான பிச்சைக்காரனை ஏன் பெரியவர் தொடர வேண்டும் என்பது சிறுவனுக்குப் புரியவில்லை? ஏதோ மூன்று மணி நேரத்தைப் பெரியவர் வீணடிப்பதாகவே சிறுவனுக்குத் தோன்றியது. அந்த ஆள் ஏதாச்சும் சித்தராகவோ, ஞானியாகவோ, யோகியாகவோ இருக்கலாம் என்ற எண்ணத்தையும் சிறுவன் விட்டுவிட்டான். ஏனென்றால் முன்பெல்லாம் சூட்சும வடிவில் சித்தர்கள் வந்தால் கூட பெரியவர் மிகவும் பவ்யமாக இருப்பதைக் கவனித்திருக்கிறான். யாரென்று அப்போது சொல்ல மாட்டாரே தவிர, அவர்கள் அவ்விடத்தை விட்டுக் கிளம்பியவுடன் தான் உண்மை வெளிவரும். யாரென்று புரியும் போது, அடடா, விட்டு விட்டோமே, என்ற சிறுவன் புலம்பும் போது, “இதபாருடா, உனக்கு இவ்வளவு நேரம் அவங்களோ தரிசனம் கெடச்சதே பெரிய விஷயம், ரொம்ப ஏங்காதே! ஆமர அவ்வளவு நேரம் அவங்க உன் முன்னாடி இருந்து அனுகிரஹம் பண்ணினதுக்கு நீ என்ன கைமாறு செய்யப் போற, சொல்லு பார்க்கலாம்!”
பெரியவருடைய “பாக்கி theory“ சில சமயங்களில் சரியாகப் புரிபடாத போது சிறுவன் குறுக்கே எதையாவது கேட்டு வைப்பான்! பெரியவரும் சலித்துக் கொள்வார், “இத பாருடா, பாக்கி விஷயத்தை வெறும் theory“ன்னு நினைச்சா புரிபடாதுடா! இது பிரம்ம calculation டா! எப்படி இது வெறும் theoryயும் hypothesis-ம் ஆகும்? குரு சொன்னார்னா அது factual state அது நடந்தாகணும் .... rather நடக்கப் போறதைத்தான் அவரே சொல்றார்! அதனால நாங்க ஒருத்தருக்கு ஒண்ணைக் கொடுன்னா கொடுத்துத்தான் ஆகணும், அவர் வேண்டாம்னு ஒதுங்கினாலும் நாங்க சொல்லியாச்சுன்னா அவருக்கு நீ கொடுக்கற வழியப் பாக்கணும்! இதுதாண்டா குரு தொட்டுக் காட்டற வித்தை! சுட்டிக் காட்டற பாடம்! கட்டித் தர்ர சொத்து! ஒண்ணைக் clearஆ புரிஞ்சுக்கடா, எவன் ஒருத்தன் குருகிட்ட பரிபூரணமாக நம்பிக்கைய வைக்கலையோ அவனுக்குத்தான் எல்லாம் தியரி மாதிரியும் ifs and buts ஆவும் தோணும்!
சிறுவன் தலை குனிந்தான் as usual! …  ஒண்ணுமில்லைடா, இதோ நம்ப முன்னாடி போறானே அந்த பைராகி! அந்த ஆள் எடுத்துக்கிட்டு போற குப்பைல கொஞ்சம் குப்பைய கேட்டு வாங்கிகிட்டு வாயேன், பாக்கலாம்! அவனைப் பொறுத்த வரைக்கும் இந்த குப்பைதாண்டா ஐஸ்வர்யம்! நீ கோடிப் பணம் கொடுத்தாக் கூட சின்ன குப்பையக் கூட தரமாட்டாண்டா...?” “அதெப்படி பைசாவுக்கு மயங்காத பிச்சைக்காரன் உண்டா?”
சிறுவன் ஓடினான், அந்த பிச்சைக்காரனைத் துரத்திக் கொண்டு! ஆங்காங்கே எவ்வளவோ குப்பைக் கூளம் இருந்தாலும் அந்த “குப்பைவாதி” கொஞ்சம் குப்பையைத்தான் அள்ளும். ஆனால் அள்ளிய சிறு குப்பையில் ஒரு தும்பு, தூசி கூட கீழே விழாது! சிறுவன் ஆச்சரியத்துடன் பின் தொடர்ந்தான். பெரியவரோ, ரொம்ப தூரம் பின் தங்கி விட்டார்! இந்த “குப்பைவாதியோ” சந்து பொந்தெல்லாம் சுற்றிப் பெரிய குப்பைத் தொட்டிகளையெல்லாம் “ஒரு பதம்” பார்த்து ஒரு வழியாய்ச் சாலையோரம் வந்து அமர்ந்தது! கையிடுக்கில் செருகிய குப்பையெல்லாம் திரட்டிக் கீழே வைத்து வானுக்கு மேலும் கீழும் பார்த்தவாறு நெடுநேரம் எதையோ முனகிக் கொண்டிருந்திடவே.... சிறுவனும் சற்று அருகில் அமர்ந்து பார்த்து பார்த்துக் கண்விழிகள் பூத்துச் செருகிடவே சற்றே கண் அயர்ந்து விட்டான்.
“என்ன நயினா! கண்ணு அசந்துட்ட! குப்பைச் சித்தர் தரிசனம்னா கோடானு கோடி தேவர்கள் ஓடி வராங்க! நீ என்னடான்னா அவருக்கு எதித்தாப்பலேயே உக்காந்து கிட்டு “miss” பண்ணிட்டியே! பெரியவர் தட்டி எழுப்பியவுடன்தான் சிறுவன் தன் நினைவிற்கு வந்தான். எதிரில் அந்த குப்பைவாதியைக் காணோம்! அவர் திரட்டிய குப்பையையும் காணோம்!
“குப்பைச் சித்தரா அவர்!“
சிறுவனுக்கு அழுகை வந்து விட்டது! “அடடா! miss பண்ணி விட்டோமே!” சிறுவனை தலையிலடித்துக் கொண்டான்... “குப்பை என்றாலே குப்பைச் சித்தர் தானே ஞாபகத்திற்கு வர வேண்டும், எப்படி மறந்தேன்!”
“அதுதாண்டா விதி! அந்த மாதிரி மாயைல மாட்டிகிட்டா வெளில வரதே கஷ்டம்! பாத்தியா எதுத்தாப்பலேயே சித்தன் உக்காந்தாக் கூட கலியுகத்துல தெரிஞ்சுக்க முடியுதா சொல்லு பார்க்கலாம். இந்த குப்பைச் சித்தர் கைல வச்சுருக்கறது வெறும் குப்பை மட்டும் இல்லையடா! இந்த உலகத்துல எக்கச்சக்கமா கெட்ட எண்ணங்கள் குப்ப குப்பையாச் சேரும் போது பூமாதேவியினால் அதத் தாங்க முடியாதுடா! அத “balance“ பண்றதுக்குத் தான் அப்பப்ப குப்பைச் சித்தர் அங்கங்க சிரஞ்சீவியா வந்து அதெயல்லாம் பஸ்மம் செய்வாரு. நீயும் நானும்னா எந்த சின்ன கர்மத்தையும் செஞ்சு அனுபவிச்சுத்தாண்டா கழிச்சாகணும், ஆனா குப்பைச் சித்தர் மாதிரி மஹானுங்க எல்லாம் உக்காந்த இடத்துலேந்தே அத பஸ்மம் செஞ்சுடுவாங்க! அவர் கணக்குல குப்பைன்னா என்னடா அர்த்தம்? எது தேவையில்லையோ அதை பூமில தூக்கி எறியறோம். எதயும் பூமா தேவி தாங்கிக்கறா, பூமாதேவியாட பாரத்தைக் கொறக்கணுமே! அதுக்குத்தான் எத்தனையோ மஹான்களையும், சித்தர்களையும் சுவாமி பூமிக்கு அனுப்பராரு...”
“இந்த குப்பைச் சித்தர் அள்ளினது எது தெரியுமா? மோசமான தீய எண்ணங்களை யெல்லாம், கெட்ட கர்ம வினைகளையெல்லாம் தெரட்டிக்கிட்டுப் போறாரு! பூமிலேந்து மட்டுமில்லைடா, வானத்துல மெதக்கற துர்சக்தியெல்லாந் தெரட்டி சுருட்டி ஒரு செகண்ட்ல பஸ்மம் பண்றாரு! அதுதான் அவரு மேலயும், கீழயும் பாத்தாரு! ஒனக்கு புரியலை! சித்தர்களோட ஒவ்வொரு அசைவுக்கும் ஆயிரமாயிரம் காரணம் இருக்கும் தெரிஞ்சுக்க!”
“ஆமாம், அகஸ்தியரோ பொதிய மலைக் குடிலுக்குப் போன வெவரத்தை இன்னும் உனக்கு சொல்லி முடிக்கலைதானே.... இன்னிக்கும் வெளிநாட்டுல சித்தர்கள் தெய்வமா, குருவா கும்பிடறவங்க நெறைய பேரு இருக்காங்கடா! இமயமலை மாதிரி, ஆல்ப்ஸ் மலையும் நல்ல அமைதியான இடம்., அங்கேயும் சித்தர்கள் நடமாட்டமுண்டு அமெரிக்கால அப்பலேச்சியன் valleyயும் சித்தர்கள் புழங்கற இடம்தான். இப்படி நெறய உண்டு. இன்னும் சொல்லப் போனா சித்தர்கள் தான் universal divine messengersனு சொல்லணும்டா! ஆனா இந்தியாலதான் மாஹானுங்க, யோகிங்க, சித்தர்கள் நடமாட்டம் ஜாஸ்தி, குறிப்பா தமிழ்நாட்டுல, அதுலேயும் திருஅண்ணாமலை தான் கோடிக்கணக்கான சித்தருங்க வந்து போறாங்க..!”
“இன்னிக்கும் டாக்டர்கள் ரூபத்துல, பாண்ட், சூட், ஸ்டெதாஸ்கோப் மாட்டிகிட்டு சித்தர்கள் எத்தனையோ பேர்களைக் காப்பாத்திகிட்டு வரராங்க! அதனால சித்தர்கள்னா ஜடாமுடி, தாடி வச்சுகிட்டு மட்டும் வருவாங்கன்னு நெனைக்க வேண்டாம்! நாம எப்படி பொங்கல் கொண்டாடறோமோ அதே மாதிரி அகஸ்தியரும் லோபாமாதாவோட பொதிய மலைல தன்னோட பர்ணசாலைல மண்பானைல பொங்கல் வச்சு சாமி கும்பிடராரு! ஆனா அவரு இருக்கற இடத்துக்கு யாரு போக முடியும்? சற்குருவோட அருள் இருக்கணும், புனிதமான உள்ளம் இருக்கணும், தான் பொறவி எடுத்தது தனக்காக வாழறதுக்கு இல்லைன்னு தெரிஞ்சுகிட்டு மத்தவங்களுக்காக இந்த ஒடம்பை நாறா தச்சுப் போட்டு ஒழைக்கணும் ... இதெல்லாம் இருந்தாத்தாண்டா அகஸ்தியர் குடிலையே தரிசனம் பண்ண முடியும்!”
“..... ரெண்டு நாளா எங்க போயிருந்தேன்னு கேட்டியே, எங்கயும் போகலைடா, பொதிய மலைல நம்ப குலகுரு அகஸ்தியரோட தரிசனத்துக்குத் தாண்டா போயிருந்தேன்..... கொஞ்சம் வஸ்திரம் வச்சுக் கொடுத்து நமஸ்காரம் பண்ணிட்டு வரலாம்ன்னு ஆசை, ஆனா அது ஈஸியில்லையே, அதுக்குன்னு ஸ்பெஷலா divine call வரணுமே!.... ஆனா உண்மையான பக்தியோட அகஸ்தியர நெனச்சாப் போரும்டா.. அன்புக்குக் கட்டுப்பட்டு அவரே நேர வந்து இங்கயே நிப்பாரு....”
பெரியவரின் கண்கள் பனித்தன.! பெரியவர் தொடரும் முன்னர் சிறுவன் குறுக்கிட்டான், “நாம உண்மையான உள்ளத்தோட பக்தியோட கூப்பிட்டாக் கூட அவர் வரலைன்னா...?”
பெரியவர் முறைத்தார்!
“அப்படியும் அவர் வரலைன்னா... அங்க அன்பு, உண்மையான பக்தி கொஞ்சம் கூட இல்லைன்னு அர்த்தம்!”
“வாங்கிக் கட்டிக்” கொள்வதுதான் சிறுவனின் விதி ஆயிற்றே! சற்று மௌனத்திற்குப் பிறகு பொதிகை மலை ஸ்ரீஅகஸ்திய தரிசன படலத்தைத் தொடர்ந்தார்.
“ஏதோ சத்தம் கேக்குதுன்னு வாசல்ல பாத்தா... எத்தனை தேவர்கள் கைகூப்பி பொதிய மலை திக்கைப் பார்த்து நிக்கறாங்க தெரியுமா? நல்லா கண்ணைக் கசக்கிப் பாத்தா... யாரு யாரோ ஜோதி, ஜோதியா, கலர், கலரா நிக்கறாங்க...  அந்த மாதிரி கலரெல்லாம் நம்ம பூலோகத்துலேயே கெடயாதுடா! தேவ விமானம் ஒண்ணு தயாரா நிக்குது.... சரி . சரி யாரோ மஹான் வராரு போல இருக்குன்னு நெனைச்சேன்... ஏன்னா இன்னிக்கும் திருஅண்ணாமலையைச் சுத்தி கிரிவலம் வரதுக்காக ஏதாச்சும் மஹானுங்க, சித்தருங்க வராங்கன்னா உடனே மழைத் துளி பொல பொலன்னு அவங்களுக்காக விழும். பூமிய cool ஆக வச்சு வருண பகவானே சந்தோஷப்பட்டு அவங்கள வரவேற்பாரு! அந்த மாதிரி என் கண்ணுக்கு முன்னாடி ஒரு தேவவிமானம் நின்னப்போ ஏதோ மஹானுங்க வராங்கன்னு நெனச்சுட்டேன்”
... “பெரியவரே வாங்க...... நம்ப கும்பமுனி சுவாமி (ஸ்ரீஅகஸ்தியர்) உங்களைக் கூட்டிக் கிட்டு வரச் சொன்னாரு!”
“யார் யாரோ ஜடாமுடி ரிஷிங்க, தேவருங்க கூப்புடறாங்க! எனக்கு கனவா நனவான்னு புரியலை! ஏதோ கற்பனைன்னு என்னையே கிள்ளி பாத்துக்கிட்டேன். இது உண்மைதான்னு உறுதி வந்து மெல்ல மெல்ல விமானத்துகிட்ட நடந்து போனேன். ஏற்ரதுக்கு முன்னாடியே சொல்லிவிட்டேன், “இத பாருங்கப்பா நம்ப கும்பமுனி சுவாமிய தரிசனம் பண்ணணும்னா அடியேன் மதுரைல வைகை ஆத்துலயும், குத்தாலம் அருவிலேயும் தீர்த்தமாடணும்னு சொன்னேன்!“ எல்லாரும் சரின்னாங்க!“ ...... புஷ்ப விமானத்துல உள்ளே ஏறி உக்காந்தா.... எங்க பாத்தாலும் தேவலோக புஷ்பம்... கமகமன்னு வாசனை.... உடனேயே புறப்படாங்க! கண்ண மூடி கண்ண தெறக்கறதுக்குள்ளாற மதுர வந்துடிச்சு....அதுலேந்து எறங்கி வைகைல தீர்த்தமாடிட்டுக் கரையேறினா தேவவிமானத்தைக் காணோம்!“

தங்கத்தேர் உற்சவம்

உங்கள் கண்களுக்கு தீர்க தரிசன சக்தி கிட்ட வேண்டுமா? சுவாமிக்குத் தங்கத் தேர் உற்சவம் காணுங்களேன்!
அங்க சுத்திக்கு வழிவகுக்கும் தங்கத்தேர் மஹிமையாக கடந்த இதழிலிருந்து, ஆலயங்களில் நடைபெறுகின்ற தங்கத்தேர் பவனியின் மகிமையைப் பற்றி நம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் அளித்து வருகின்றோம் அல்லவா! இத்தகைய அபூர்வமான பல தெய்வீக விஷயங்களைப் பற்றி நிறைய எழுதும்படி அன்பர்கள் பலர் நமக்குக் கடிதங்களை எழுதியுள்ளார்கள். எழுதி, எழுதி பக்கம் பக்கமாகப் படித்தலால் யாது பயன்? ஒன்றையேனும் முறையாகக் கடைபிடித்தால் தானே கடைத்தேற முடியும்.
தங்கம் ஒரு மிகமிகப் புனிதமான உலோகம் ஆகும். வேத, மந்திர, யந்திர சக்திகளையும், பீஜாட்சர மந்திரங்களின் சக்திகளையும் தன்னுள் கிரகித்து எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்குத் தன்னுள்ளே நிலை நிறுத்திக் கொள்ளக் கூடிய தன்மை கொண்டதாகும். ஆனால் முறையற்ற வழியிலே சம்பாதித்து பிறருடைய சொத்தை அபகரித்தோ, ஏமாற்றியோ, திருடியோ அல்லது கோயில் சொத்துக்களிலிருந்து சிறிது சிறிதாக கையாளப்பட்ட தங்கமாகவோ, அல்லது ஆபரணங்கள் செய்வதற்காகவும் அல்லது அடகிற்காகவும், வியாபாரத்திற்கும் வந்த தங்கத்தின் கூடுதல் சேதாரம் மற்றும் பலவிதமான அதர்மமான மற்றும் முறையற்ற, வழிகளில் தங்கத்தைச் சேர்ப்போர் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாக நேரிடும்.
தங்கம், தங்கமான குணமுடையதே, ஆனால் முறையாகப் பெறாவிடில் எதிர்வினையாகப் பாய்ந்து குலத்தையே நாசஞ் செய்யும். முறையற்ற வழியிலே பெறப்பட்ட தங்கத்தை அணிந்தால் அதற்கு வேதமந்திரங்களை மற்றும் நற்சக்திகளை ஈர்த்து கிரகிக்கின்ற தன்மை இல்லாது போய்விடுகின்றது. மாறாக எவர் அந்தத் தங்கத்தை ஏமாந்து இழந்தார்களோ, அவர்களுடைய சாபங்கள் தான் வந்து சேரும். பொதுவாக நேர்மையான வழியில் பெறப்பட்ட தங்க ஆபரணங்கள் தாம் புனிதம் நிறைந்தவையாக இருக்கும்.! தங்க விமான தரிசன பலன்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள்.
பொன்னம்பல நாயகனுடைய சிதம்பரம் திருத்தலத்தில் சிற்றம்பல மூலத்தானத்தின் மேல் காணப்படுகின்ற பொன்னாலான ஏடுகளையும் தங்கக் கலசங்களையும் தரிசிப்போருக்கு அபூர்வமான நேத்திர சக்தி உருவாகின்றது. இதன் பயனாக நல்ல காட்சிகளை நீங்கள் காணுகின்ற போது, அதிலிருந்து வெளிவருகின்ற நற்கதிர்களை  கிரகித்து, உடலில் புண்ணிய ஸ்தம்பன சக்தியாக மாற்றி தங்க கோபுர கலச தரிசனம் நமக்குத் தருகின்றது. சிதம்பரம், மதுரை, காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் காணுதற்கரிய தங்கத்தாலானா கோபுர கலச தரிசனங்களைப் பெற்றிடலாம்.. உங்கள் கண்களுக்கு தீர்க்கமான சக்தி கிட்ட வேண்டுமா? தங்கத் தேர் தரிசனம் இதற்குரித்தான பல நேத்திர சக்திகளை அளிக்கின்றது.
உங்கள் கண்களுக்கு நல்ல தீர்க்க தரிசனச் சக்தி கிட்டிடவும் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும், நன்முறையில் எடுத்துரைக்கின்ற வாக்சக்திதனை அடையவும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நல்லமுறையில் தயாரிக்கப்பட்ட கண் மையையும், மருதாணியையும் நல்மங்கலப் பொருட்களாக ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமளித்து தங்கத்தேர் தரிசனத்தைப் பெற்றிட வேண்டும். எப்போதுமே ஒருதான தருமத்தைச் செய்து விட்டு, இறைவழிபாட்டை மேற்கொண்டால் அதற்குரிய பலன்கள், தீர்கமாகக் கிட்டும் ஜோதிடர்களுக்கும், அருள்வாக்கு அளிப்போர்க்கும் ஏற்ற அற்புத தரிசனமிது! ஆனால், எவரிடமிருந்தும் எக்கட்டணமும் பெறலாகாது.
இவ்வாறாக, கண் மைதனை தங்கத் தேர் தரிசனத்திற்காக வருகின்ற ஏழைச் சுமங்கலிகளுக்கு அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். ஏனெனில் எங்கு தான தர்மத்தை நிகழ்த்தினாலும், அங்கே பிரசன்னமாக வேண்டிய கடமை, அனைத்து தான தரும தேவதைகளுக்கும் உண்டு. இவ்வகையில் தங்கத் தேர் தரிசனத்திற்கு வருகின்ற ஏழை மக்களுக்கு நீங்கள் அளிக்கின்ற தான, தருமங்களை ஆசீர்வதிக்கின்ற தரும தேவதைகள், தங்கத் தேர் தரிசனப் பலனோடு கூட்டி கண் மையில் குடியிருக்கும் அஞ்சனா விஸ்வ சக்தியுடன் சேர்த்து அருள்பாலிப்பதால் இவற்றிற்குப் பன்மடங்கு பலன்கள் உண்டு.
பீஜாட்சர சக்திகள் எத்தனையோ கோடி உண்டு. பீஜாட்சர மந்திரங்களும், கோடிக் கணக்காக விளங்குகின்றன. இவையெல்லாம் பிரபஞ்சத்தில் என்றும் எப்போதும் விண்வெளியில் நிறைந்து விளங்குகின்றன. விண்ணிலே இத்தனை கோடி நட்சத்திரங்களை ஆண்டவன் ஏன் படைத்தான் என்று பலரும் எண்ணுவது உண்டு. எத்தனையோ கோடி பீஜாட்சர மந்திரங்கள் பிரபஞ்சத்திலே நிறைந்து கிடக்கின்ற போது அவற்றை எவ்வாறு இந்த ஜீவன்கள் பெற்றுப் பயன் அடைய முடியும்? அதற்காகத்தான், அக்காலத்தில் மஹரிஷிகளும், யோகியர்களும், ஆழ்ந்த தவம் பூண்டு, தம் தவப்பலனாய் விண்வெளியில் நிறைந்திருக்கும் மந்திரங்களைக் கிரகித்து அவற்றைத் தக்க உபதேசத்தோடு பூலோகத்திற்குத் தந்து அருளினார்கள்.  ஆனால் கலியுகத்தில் சற்குருமார்களையும், மஹரிஷிகளையும், யோகியரையும் மதிக்கின்ற பண்பாடு வெகுவாகக் குறைந்து வருவதாலும், அனைத்தையும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடு நோக்குகின்ற பயனற்ற குறுகிய அறிவு ஏற்பட்டுவிட்டதாலும், சற்குருமார்கள் கலியுகத்தில் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாது இலைமறை கனியாக மக்களோடு மக்களாக வாழ்ந்து தம்மை அண்டிச் சரணடைபவர்களுக்குத் தக்க நல்வழி காட்டி வருகிறார்கள்.
ஒளியில் ஒளிரும் பொற்றேரொளி!
தங்கத் தேரில் சூரிய ஒளியும், சந்திர ஒளியும், நட்சத்திர ஒளியும் பட்டுப் பிரகாசிக்கின்ற போது விண்வெளியில் நிறைந்திருக்கின்ற பீஜாட்சர மந்திரங்கள் பலவும் இவற்றின் பிரதிபலிப்பு கொண்டு, தங்கத் தேரில் தோய்ந்து உறைகின்றன. மேலும், சூரியனிடமிருந்து ஒவ்வொரு பருவத்திலும் விதவிதமான சூரியகிரணங்கள் எழுகின்றன. நமக்கு வந்து சேருகின்ற சூரிய கிரணங்களும், நம்முடைய பூலோக வாழ்விற்கு ஏற்றவாறாக, சற்றே, வீரியமும், உஷ்ணமும், ஆன்மசக்தியும், குறைந்ததாகத்தான் வெளிவருகின்றது. ஏனென்றால் சூரியனிடமிருந்து நேரடியாக வருகின்ற சூரிய கிரணங்களை அதே வடிவில் ஏற்கின்ற உடல்பாங்கினை நாம் பெறவில்லை.
விண்வெளியில் நிறைந்து இருக்கின்ற எத்தனையோ காற்று மண்டலங்களை, சூரிய கிரணங்கள் தாண்டி வருகின்ற போது அவற்றில் எல்லாம், சௌர உஷ்ணமும், வீரிய சக்தியும், ஆன்ம சக்தியும் வடிகட்டப் பெற்று, பூலோக வாழ்விற்குத் தேவையான அளவில் உள்ள கிரணங்கள் மட்டுமே நம்மை அடைகின்றன. மேலும், சூரிய மண்டலத்திலிருந்து பெறப்படுகின்ற கிரணங்களில் பூமியை வந்தடைவது மிகமிகக் குறைந்த விகிதாச்சாரமே ஆகும். ஆனால் தங்கத் தேரில் நிறைந்திருக்கின்ற தங்க ஓடுகள் யாவும் சூரிய மண்டலத்திலிருந்தும் நட்சத்திர மண்டலங்களில் இருந்தும் எழுகின்ற மூலாதார ஒளிக் கிரணங்களை நேரடியாகப் பெறும் ஆற்றல் பெற்றவை ஆகும்.
எனவே, தங்கத் தேரிலிருந்து பிரதிபலிக்கின்ற கிரணங்கள்யாவும் சூரிய மண்டலத்தின் ஆத்ம் சௌர சக்தியையும், நட்சத்திர மண்டலங்களின் பரிபூரண ஆத்ம ஜோதிப் பிரவாகத்தையும் தாங்கு வருவதோடு நில்லாமல் விண்வெளியில் பரந்தும், நிறைந்தும் இருக்கின்ற , பிஜாட்சர மந்திர சக்திகளையும் தாங்கி வருவதால் தங்கத் தேரின் தரிசனமே அளவற்ற பலாபலன்களை நமக்கு அள்ளித் தருகின்றது. எனவே, நமக்குத் தங்கத் தேர் உற்சவத்தை ஏற்று நடத்த வசதி இருக்கின்றதோ இல்லையோ இதை எவரேனும் முன்வந்து நடத்தித் தரும் போது தங்கத் தேரை தரிசிக்கின்ற மகத்தான வாய்ப்பையாவது நழுவ விடாதீர்கள். தங்கத் தேர் பவனிக்காக மண்டகப்படித் தொகையை ஆலயத்தில் கட்டுபவர்கள் பெறுதற்கரிய தங்கத் தேர் தரிசனத்தைப் பல்லாயிரக்கணக்கான மக்களுக்குப் பெற்றுத் தருவதோடு இதனால் அவர்களுக்கு சேருகின்ற புண்ய சக்தியும் அளப்பற்றதாகும் என்பதை உணர்ந்து ஆனந்தமடைந்திடுக! இது royalty போல் வாழ்நாள் முழுதும் அவர்களுடைய புண்ணியக் கணக்கிற்குத் தொடர்ந்து வரவாக வந்து கொண்டிருக்கும்.

கோயில் கும்பாபிஷேகம்

SAND BLASTING

கோயில் கும்பாபிஷேகப் பணிகளில் வேண்டாம் இந்த Sand Blasting விபரீதம். கோயிலில் தெய்வ சிலா வடிவுகளை மூளிபடுத்தும் Sand Blasting மிகவும் கொடூரமான செயலாகும்! Negative forces   எனப்படும் தீவினைகளைக் கூட்டும் தீயபணியுது. கோயிலின் புனிதத்தைப் பாழாக்கும் Sand Blasting  மிகவும் பாபகரமானது. இதில் சம்பந்தப்பட்டோருக்குக் கொடிய தோஷங்களும், சாபங்களுமே ஏற்படுகின்றன. கும்பாபிஷேக ஆலயத் திருப்பணியில் பின்பற்றப்படும் Sand Blasting எனப்படும் கேடான முறையை முற்றிலுமாகத் தவிர்த்திடுவதே ஆன்மீக உலகின் முதற்கடமை. Sand Blasting எனும் இந்த அதர்ம முறையில், இயந்திரம் கொண்டு, மண், கல், கொண்டு புனிதமான சிற்பங்களையும், ஓவியங்களையும், தெய்வ சிலா மூர்த்திகளையும் சிதைக்கும் கொடூரமான பாவச் செயல் நடைபெறுகிறது. இனியேனும் இவை நிகழாவண்ணம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இறை மூர்த்தி சிலா வடிவங்களின் அவயங்களைச் சிதைப்பது என்பது எந்தவிதமான பிராயச்சித்தங்களும் இல்லாத கொடுமைச் செயலே! இம்முறையால் ஆலயத்தின் திருச்சக்கரங்களும், யந்திரங்களும் வடிவம் சிதைந்து போவதினால் இதில் சம்பந்தப்பட்டோருக்குச் சாபங்களே ஏற்படுகின்றன! இன்று ஆலயங்களிலுள்ள சிற்பங்களிலும், தெய்வ மூர்த்திகளிலும், எளிதில் தெய்வீக சக்தி ஆவாஹனம் ஆகும் வடிவுகளாய் இறைசக்தியுடன் பரிபூரணமான பல விசேஷக் கற்களாய்த் திகழ்கின்றன.
Sand Blasting  முறையில் நடப்பதென்ன? இறை மூர்த்திகள் அருள்பாலிக்கும் தூண்களின் மேல்பட்டையைச் சிதைத்து, சிலா வடிவங்களை மூளிபடுத்துவதுதான்! எத்துணையோ ஆயிரம் சிற்பிகளைக் கொண்டு காலம் காலமாக உருவாக்கப்பட்ட இறைச் சிற்பங்களைத் தேவையற்ற Sand Blasting மூலம் சிதைத்து மூக்கு, விழிகள், முகங்களை சின்னா பின்னமாக்குவது போன்ற இதைவிட தெய்வீகத்திற்குக் கெடுதலான செயல் வேறு ஏதேனுமுண்டா? ஆலயக் கும்பாபிஷேக இறைத்திருப்பணியில் Sand Blasting எனும் கொடுமையான முறையைத் தடுப்பதற்காக ஸ்ரீஅகஸ்திய விஜய இதழில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோமல்லவா? தற்போது நூற்றுக்கணக்கான ஆலயங்களில் இக்கொடிய முறை மேற்கொள்ளப்பட்டு., ஆயிரக்கணக்கான தெய்வ மூர்த்திகள் சிதைந்து விட்டன.
கோடானு கோடி தேவதைகள் அருள்புரிந்து வரும் ஆலயங்களில் இந்த அவலட்சணமான, அதர்மமான முறை கையாளப்படுவதால், எத்துணையோ, தெய்வ சிலா, திருவுருவ, சக்கர யந்திரங்கள் பின்னமடைகின்றன என்பதைக் காணும் போது, உள்ளம் படும் பாட்டினை வார்த்தைகளில் வடித்து எழுத இயலாது. பக்தகோடிகள் இத்தகைய Sand Blasting முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நல்வழிகளை உடனடியாகக் காண வேண்டும். உலகே வியக்கும் வண்ணம் நம் பாரத நாட்டில்தான் குறிப்பாக நம் தமிழகத்திலுள்ள இனி எங்கும் எப்போதும் காண இயலாத இறைவனின் அருட்பிரசாதமாய் இயங்கும் திருக்கோயில்களில் இன்றும், என்றும் பேசும் தெய்வங்கள் வாழும் நம் ஆலயங்களில் தெய்வீகப் புனிதம் மேலும் சிதறா வண்ணம் காக்க வேண்டியது நம் வாழ்வின் முதற் கடமையாகும். Sand Blasting  முறையில் ஆலயத் தூண்களையும், சிலைகளையும் சுத்தம் செய்வோர் இதனால் ஏற்படும் பாவத்தையும், தீய கர்ம வினைகளையும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். சந்ததிகளையும் பாதிக்கும் கொடிய வினையைச் சம்பாதித்துத் தருகிறது இ(எ)த்தகைய அதர்மச் செயல் என்பதை இனியேனும் உணருங்கள்!
எந்த ஆலயத்திற்குச் சென்று முக்தியையும், மோட்சத்தையும் பெற வேண்டுகின்றோமோ அங்குதான் Sand Blast செய்து வல்வினையையும், பாவங்களையும் சேர்க்கின்ற கொடுமையை என்னென்று சொல்வது? எந்த ஆலயங்களுக்குச் சென்று கர்ம வினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமோ, அங்குதானா வலியச் சென்று தீயசக்திகளையும், தீய வினைகளையும் சேர்த்துக் கொள்வார்கள்? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! Sand Blast  முறையில் உண்மையில் நிகழ்வது என்ன? மோட்டரில் Machine-ஐப் பொருத்தி, மண்துகள், இரும்பு, ஈய குண்டுகளையும், சிறு உருண்டைக் கற்களையும், வேகமாகத் தூண்களிலும், சுவர்களிலும், மேற்பரப்புகளிலும் பாய்ச்சி, ஆலயத்தூண்களையும், தெய்வ உருவங்களையும், சிலாமூர்த்திகளையும் சின்னாபின்னமாகச் சிதைப்பது தான்.
இதனால் மேற்பரப்பிலுள்ள அழுக்குப் படிவு சுத்தம் செய்யப்படுகிறது என்று சமாதானம் சொல்லப்படினும், உண்மையில் நிகழ்வது என்னவெனில் தெய்வ, சிலா மூர்த்திகளின் சூட்சும ரூபம் அழிக்கப்படுகின்றது என்பதேயாம். இவ்விதக் கர்மவினைகளில் அறிந்தோ, அறியாமலோ தம்மை ஈடுபத்திக் கொள்வோர் இனியேனும் இறைப் பகுத்திறிவுடன் சிந்தித்து இனியும் இத்தகைய அதர்மச் செயல்கள் நிகழாவண்ணம் தெளிந்து அவர்கள் தம்மையும், தம் சந்ததியினரையும், பக்த கோடிகளையும் கொடிய கர்மவினைகளினின்று தற்காத்துக் கொள்ள வேண்டும். செலவைக் குறைக்க வேண்டும். குறுகிய காலத்தில் முடிக்க வேண்டும் என்பதற்காக ஆலயங்களில் பாவச் சூழல்களையா பெருக்குவது?
அன்பர்களே, பக்தர்களே, ஆன்மீகச் சிந்தையுடன் சற்றே சிந்தித்துச் செயல்படுங்கள். கும்பாபிஷேகத்திற்குச் சற்று நாட்கள் கூட ஆனாலும் பரவாயில்லை. இறைவன் அளித்துள்ள இம்மானுட உடலால் பல்லாயிரம் ஏழைகளுக்கு இறைப்பணி ஆற்ற வாய்ப்பைத் தந்திடுங்கள்! சட்டென முடிக்க வேண்டுமென்று இத்தகைய கொடூர காரியங்களில் ஒரு போதும் ஈடுபடாதீர்கள்! நாட்டின் புனிதத்திற்கு ஊறு விளைவிக்கும் Sand Blasting முறையை விட்டொழியுங்கள்! தெய்வ பங்கம் விளைவிக்கும் Sand Blastingதனை சமுதாயக் குற்றம் என்று கூறினால் கூட மிகையாகாது. ஒரு ஆலயத்தை நன்முறையில் சுத்திகரிக்கும் போதுதான் லட்சக்கணக்கான மக்களின் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிட்டுகிறது. எனவே ஆலயக் கும்பாபிஷேகத்தின் போது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு நல்ல இறையருள் தருவதான ஆலயப் பணிகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அளித்து manual ஆகவே ஆலயப்பகுதிகளைச் சுத்தி செய்யும் நல்ல வழியைப் பெற்றுத் தருகின்ற அறவழியிலான இறைப் பணிகளை மேற்கொள்ளுங்கள்!
Sand Blast துறையில் ஈடுபட்டிருப்போரும் எவ்வகையிலாவது இந்த அதர்மவழியினின்று விடுபட்டுத் தங்களுடைய குடும்பங்களுக்கும், சந்ததிக்கும் நிகழவுள்ள பேரழிவினின்றும் தற்காத்துக் கொள்ள வேண்டும். இதுவரையில் இத்தகைய Sand Blasting அதர்ம காரியங்களில் ஈடுபட்டுப் பெருந் தீவினைகளை அறிந்தோ, அறியாமலோ சேர்த்திருப்போர் இதற்குரிய பிராயச்சித்தம் பெற தக்க சற்குருவை நாடவும்.

விஷ்ணுபதி புண்ணியகாலம்

ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலம்  (பாடலூர் ஸ்ரீவீர ஆஞ்சநேயர் மஹிமை )

பிரதோஷம், கிரஹண காலம் போன்று மிகவும் புனிதமான நேரங்களுள் ஒன்றாக விளங்குவது ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமாகும் இந்த விசேட தினத்தில் செய்யப்படுகின்ற ஹோமம், பூஜைகள், விளக்கு பூஜை மற்றும் தான, தர்ம தெய்வீகக் காரியங்களுக்கு மகத்தான பன்மடங்குப் பலன்களுண்டு. பலவிதமான வழிபாடுகளை கலியுகத்தில் நாம் கைவிட்டு வருகின்ற நிலையில் மிகவும் புனிதமான இத்தகைய நேரங்களில் செய்யப்படும் பூஜைகளால் கிட்டுகின்ற பன்மடங்குப் பலன்களே நம் கர்மவினைகளை நிவர்த்தி செய்து நம்மைக் காக்கும்.
விஷ்ணுபதி புண்ய காலத்தில் பூஜைகளுக்கு அதியற்புதமான காரிய சித்தி சக்திகளுமுண்டு. அபூர்வமாக அமைகின்ற இந்த விசேஷ தினத்தை நன்முறையில் குருவருளால் கொண்டாடி ஆனந்தமடையுங்கள். பெறுதற்கரிய புண்ய சக்தியைப் பெறுங்கள்! நம் வாழ்நாளில் எத்தனையோ விதமான சாபங்களுக்கு ஆட்பட்டு நமக்குப் பலவிதமான காரியத் தடங்கல்கள் ஏற்படுகின்றன அல்லவா! அறிந்தும், அறியாமலும் ஏற்படுகின்ற இவற்றை நிவர்த்தி செய்வதாக அமைவதே விஷ்ணுபதி போன்ற புண்ணிய கால பூஜைகளும், தர்ப்பணமும் தான, தர்மங்களுமாம்.

பாடலூர் திருத்தலம்

மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக வருடத்திற்கு நான்கு முறையே அமைகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலச் சிறப்பினைப் பற்றிக் கடந்த பல வருடங்களாக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் இதன் மஹிமையை யாவரும் அறியும் பொருட்டு அரும்பாடுபட்டு இறைப் பிரச்சாரங்கள் மூலம் விளக்கி வருகின்றார்கள். பலகோடி யுகங்களுக்கு முன் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியவையே இந்த விஷ்ணுபதி புண்ணிய கால பூஜைகளாம். காலப்போக்கில் மக்களின் அசிரத்தையாலும், தற்போது குருவருள் தன்மையை உணரும் பாங்கு மறைந்து வருகின்றமையாலும், இதனுடைய மகத்துவத்தைப் பலரும் அறியாது இருக்கின்றனர்.
எவ்வாறு சமீப காலங்களில் பிரதோஷ பூஜையும், சபரிமலை ஸ்ரீசாஸ்தா விரதமும் மிகவும் பிரபல்யம் அடைந்து வருகின்றனவோ இதே போல ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய கால பூஜையும் அனைவருக்கும் உரித்தான சமுதாய வழிபாடாக நன்கு உணரப் பெற்று ஜாதி, மத, பேதமின்றி உலகம் தழுவிய மிகச் சிறந்த சமுதாயப் பண்டிகையாக இப்பூவுலகில் இடம் பெற வேண்டும் என்பதற்காக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் இதன் மஹிமைகளை சித்புருஷர்கள் அருள்கின்ற வகையில் எளிமையான முறையில் எடுத்துரைத்து வருகின்றார்கள்.
எனவே வைணவப் பெரியோர்களும், திருமால் பக்தர்களும், பக்த கோடிகளும் ஆன்மீகத்தில் திளைப்போரும் அனைவரும் ஒன்று சேர்ந்து செய்யும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய கால பூஜையானது பிரதோஷ பூஜை போன்று ஜாதி, இன, குல பேதமின்றி அனைத்து மக்களுக்கான வைணவ ஆலயங்களிலும் மிக்ச் சிறந்த சமுதாய பூஜையாக இடம் பெற்று அனைத்து ஆலயங்களிலும் மிக்ச் சிறந்த தெய்வீகப் பணியினை ஆற்றுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றோம். ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தில்தான் கோடானு கோடி தேவாதி தேவ தெய்வ மூர்த்திகளும் மகரிஷிகளும், சித்புருஷர்களும், யோகியரும், ஞானியரும் பலவிதமான தெய்வீக அனுபூதிகளை உய்த்து உணர்ந்து அவற்றை நமக்கு அருட்கருணைப் பிரவாகமாக அள்ளித் தருகின்றார்கள். இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில்தான் எத்தனையோ இறை லீலைகள் அன்றும் இன்றும் என்றுமாக நிகழ்ந்து கொண்டு வருகின்றன. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீமஹா விஷ்ணு, ஸ்ரீஆஞ்சநேய மஹாபிரபு என்றவாறாகப் பல தெய்வ மூர்த்திகள், தம்முடைய இறை லீலைகளை உற்பவித்த காலமாகவும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலம் விளங்குவதோடு மட்டுமல்லாமல் எத்தனையோ மகரிஷிகளும், சித்புருஷர்களும் இறைவனுடைய நல்வரத்தை, நல்தரிசனத்தை பெற்ற காலமாகவும் இன்றும் பலரும் பெறுவதாகவும் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்ணிய காலம் விளங்குகின்றது.

பாடலூர் திருத்தலம்

சூர்ய உதயத்திற்கு முன் நள்ளிரவு சுமார் இரண்டு மணி முதல் பகல் பத்தரை மணி வரை அமைகின்ற இந்த விஷ்ணுபதி புண்ணிய கால விசேஷ தினத்தை, நன்முறையில் பயன்படுத்திக் கொண்டு, பலவிதமான வழிபாடுகளிலும், பூஜைகளிலும் தர்ப்பண பூஜைகளிலும் தான, தர்மங்களிலும் குடும்பத்தோடு உற்றம் சுற்றத்தோடு சத்சங்கமாக ஈடுபடுத்திக் கொண்டு மகத்தான பூஜாபலன்களைப் பன்மடங்காகப் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ்ந்திட எல்லாம் வல்ல சர்வேஸ்வரனாம் ஸ்ரீமந் நாராயணப் பரந்தாமனைப் பிரார்த்திக்கின்றோம்.
சித்தர்களின் ராமாயணம்!
எத்தனையோ சதுர்கோடி யுகங்களுக்கு முன் கிருத யுகத்திற்கு அடுத்ததாக வருகின்ற திரேதா யுகத்தில்தான் நாம் இன்றும் விரும்பிப் போற்றுகின்ற ராமாயண இறை லீலைகள் நடைபெற்றனவல்லவா! இன்று நமக்குக் கிட்டியுள்ள ராமாயணப் பகுதிகள் ஒரு சிலவே. எவ்வாறு பெரும்பான்மையான தேவாரத் திருமறைகளை நாம் இன்றும் பெற்றிட வில்லையோ, அவையெல்லாம் அருட்பெரும் சுரங்கமாக புதைக்கப்பட்டுள்ளனவோ இதே போலத்தான் ராமாயணம் மற்றும் மஹாபாரதத்தின் அதியற்புத இறை நிகழ்ச்சிகள் பலவும் காலப் போக்கில் மறைந்து இறை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. தக்க சமயத்தில் சற்குருமார்களால் இவை வெளியிடப் பெறும். இதே போலத்தான் விண்வெளியில் பரந்து கிடக்கின்ற கோடானு கோடிக்கணக்கான பீஜாட்சர வேதாந்திர மந்திரங்கள் யாவும் அவ்வப்போது அந்தந்த யுக, கால நியதி, நீதிக்கேற்ப மகரிஷிகளாலும், சித்புருஷர்களாலும் கிரஹிக்கப்பட்டு நமக்கு எளிய மந்திரங்களாக அந்தந்த கால நிலைத் தேவைகளுக்கேற்பவே உபதேசமாகத் தரப் படுகின்றன. இப்போதும் எத்தனையோ சித்புருஷர்கள் தம்முடைய குருவழி அருட் தோன்றல்கள் மூலமாகப் பலவிதமான புராண சம்பவங்களை சித்புருஷர்களின் கிரந்தங்கள் மூலமாகவும், குருவாய் மொழி மூலமாகவும் எழுதாக்கிளவியாகவும், குருவாய் மொழி வேதங்களாகவும் நமக்கு அளித்து வருகின்றார்கள். சித்தர்களே இயற்றிய இருடிகள் ராமாயண, இருடிகள் மகாபாரத கிரந்தங்களும், உண்டு.

பாடலூர் திருத்தலம்

ஸ்ரீராமருக்கே ஏற்பட்ட பெருஞ் சோதனை!
..... இதோ ..... இலங்கையில் அதர்மத்தின் ஒட்டு மொத்த வடிவாய் விளங்குகின்ற ராவணனை மாய்க்கும் பொருட்டு போர்க்களத்தில் நிற்கின்றார் ஸ்ரீராமன். தான் செய்த பூஜை பலன்களின் சக்தியைக் கொண்டு அதர்மமான வழியிலே ராவணன் போரிட்டு, ஸ்ரீராமனுக்கும் அவருடைய இளவலுக்கும், படைவீரர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றான். ஆனால் சர்வேஸ்வரனாகிய ஸ்ரீராமர் மனித வடிவில் வந்து நின்ற போதும், தான் மானுட ரூபத்தைக் கொண்டிருப்பதால் தன்னுடைய தெய்வ அவதார சக்திகளை ஒரு சிறிதும் வெளிக்காட்டாது எப்போதுமே ஒரு சாதாரண மனிதனாகவே வாழ்ந்து காட்டினார் தானே! ஆனால் தற்காலத்தில் ஏதோ சில மந்திரங்களை ஓரளவு ஜபித்து விட்டு அதன் மூலமாகக் கிட்டுகின்ற சிறிய சித்திகளைக் கொண்டு எத்தனையோ பேர்கள் அகங்காரத்துடன் ஆடுகின்றார்களே! ஸ்ரீராமரோ தம்முடைய அவதாரம் முடியும் மட்டும் தன் தெய்வக் கோலத்தை எங்கும் காட்டிடாது, தன் குடும்பத்திற்கும், ராஜ்ய மக்களுக்கும் கூட வெளிக் காட்டிடாது, மிக மிகச் சாதாரணமான எளிய மனிதனாகவே வாழ்ந்து நமக்குப் பாடம் புகட்டியுள்ளார்! இதோ.......
ராவணனை எதிர்த்துப் போரிடும் முறையைப் பற்றிச் சற்றே கலக்கம் கொண்டு தன்னுடைய படைவீரர்கள் பலரும் மாய்ந்து, விட்டார்களே, வானரங்கள் சேனையும், பெருமளவில் சாய்ந்து வருகின்றதே என்று வருத்தமும் கொண்டு தன்னுடைய சகாக்களைக் கலந்து ஆலோசிக்கின்றார் ஸ்ரீராமன். ஸ்ரீராமனுடைய கலக்கத்தைக் கண்ட ஸ்ரீஆஞ்சநேயர் அவருடைய திருமுகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கின்றார். ஸ்ரீராமன் பேசலுற்றார்.
“இறையருளால் என் மேல் பேரன்பு பூண்டோரே! நம்முடைய படையானது ராவணனால் துவம்சம் செய்யப்பட்டு வருகின்றது. எவ்வாறு அவனை எதிர்த்துப் போரிடுவது, எந்த மந்திர சக்திகளைப் பயன்படுத்துவது, என்னென்ன அஸ்திரங்களை எங்கு எவ்வாறு பிரயோகித்திட வேண்டும் என்பதை நாம் நன்கு அறிந்த போதும் அவையெல்லாம் ராவணுனுடைய தவ வலிமையினால் மறைக்கப்பட்டு விட்டன. அடியேனே கலக்கமுற்றால் நம்முடைய படைவீரர்களும் கலக்கமுற்று விடுவார்கள் அல்லவா! எனவே போர் பற்றி ஆலோசிக்க விரும்புகின்றேன். அடியேனும் இப்போது இவ்வாறு கலக்கமுற்று இருப்பதற்கான காரணத்தை எவரேனும் தெரிவிப்பீர்களேயானால் அதற்குரிய பிராயச்சித்தத்தைப் பெற்றுப் பரம்பொருளை வேண்டிடுவேன்! நன்முறையில் நாம் இந்தக் காரியத்தில் வெற்றியுற வேண்டும் என்பதற்காகத்தான் உங்களுடைய ஆலோசனையை ஏற்றிட இக்கூட்டத்தைக் கூட்டியுள்ளேன்”.
என்னே அடக்கம், பணிவு, எளிமை! ஸ்ரீராமனே பரம்பொருள் தானே! ஆனால் மானுட அவதாரங் கொண்டமையால் என்னே எளிமையாகத் தன்னை வெளிக் காட்டிக் கொண்டுள்ளார்? நாமறியும் ஒரே ஒரு பாடமாக நமக்குப் பணிவை ஊட்டும் இந்த தெய்வீகப் புராண விளக்கத்தை நன்கு உணர்ந்தாலே போதும், நாம் ஆன்மீகத்தில் எளிதில் முன்னேறி விடுவோம். ஸ்ரீராமனுடைய மனக் கலக்கத்தைக் கண்டு துயர் மேம்பட்டுக் கண்ணில் நீர்த்தாரை பெருகிட அனைவரும் ஜடமாய் அமர்ந்திருந்தார்களே தவிர எவருமே எந்த பதிலையும் கூறிட முன்வரவில்லை, “தெய்வத் திரு அவதாரத்திற்கு முன் நாம் எம்மாத்திரம்?” என்ற எண்ணமே அவர்களுக்கு மேலோங்கியிருந்தது!
வாஞ்சையுடன் ஆஞ்சநேயர்!
ஆனால் ஸ்ரீஆஞ்சநேயர் மட்டும் சற்றும் கலக்கமின்றித் தன் கருத்தினை உரைத்திட முன்வந்தார். (அதாவது ஸ்ரீராமனே அவர் மூலமாகப் பேசுகின்றாரோ!) “சுவாமி, அடியேன் சொல்லப் போவது எந்த அளவில் உண்மையானது என்பதை அறிந்திலேன். எனினும், தாங்களே அவரவர் மனதில் பட்ட காரணங்களை எடுத்துச் சொல்ல வேண்டுவதாலும், என் மனதில் பட்டதைத் தெரிவித்திட விழைகின்றேன்”.

ஸ்ரீராமர் உள்ளம் நெகிழ்ந்தவராய்,  “ஆஞ்சநேயா! தைரியமாக உன் மனதில் பட்டதைச் சொல்! ஸ்ரீராமன் ஆயிற்றே இவையெல்லாம் நாம் சொல்லலாமா என்றெல்லாம் எண்ணாதே, அடியேன் அடியார்க்கும் அடியேன்தான்! நான் மிக மிகச் சாதாரண மனிதன் தானே! ஸ்ரீராவணனை எதிர்த்து நாம் செய்கின்ற போர்த் திட்டங்கள்யாவும் பயனற்றவையாகி விட்டனவே அல்லவா! இவையாவும் உண்மையாக உங்கள் கண்கள் முன் நிகழ்வதுதானே! எனவே எனக்கு ஒரு நல்ல உபாயத்தை, தந்திரத்தை எடுத்து உரைப்பதற்கு நீயே முன் வருவது கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்”, என்று கூறிய ஸ்ரீராமர் மிகவும் முகம் மலர்ந்தவராய் ஆஞ்சநேயருடைய கரங்களைப் பற்றி சொல்! ஆஞ்சநேயா! சொல்! நான் என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டும், நன்றாக விவரித்துச் சொல்வாயாக! ஏனென்றால் நம் படை வீரர்களையும், வானர சேனைகளையும், சீதாபிராட்டியையும் காப்பாற்ற வேண்டிய தார்மீகக் கடமை முக்கியமாக உங்களுக்கும், எனக்கும் உண்டல்லவா! உன்னைப் போன்ற புனிதமான பிரம்மச்சரிய காந்தி உள்ளவர்களும், வேத மந்திரங்களை உணர்ந்தவர்களும், அனைத்து சாஸ்திர விற்பன்னர்களாக விளங்குகின்றவர்களும் , குறிப்பாக நவவியாகரண பண்டிதனாக நீயும் கொடுக்கின்ற ஆலோசனைதானே, என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், வருத்தங்களைப் போக்குகின்ற தக்க மாமருந்தாக வந்து உதவும்”, என்று கூறி மனம் உருகினார்!
ஸ்ரீராமரின் நிலை கண்டு, ஆஞ்சநேயர் கண்ணீர் உகுத்தார்! “ஸ்ரீராமசந்திரப் பிரபோ! தாங்கள் அறியாதது ஒன்றுமில்லை! தாங்கள் நினைத்தால் ராவண சேனையையே ஒரு விநாடி காலத்தில் பஸ்பம் செய்து விடலாமே! ஆனால் தாங்களோ தங்களுடைய அவதார சக்திகளை எல்லாம் கட்டுப்படுத்திக் கொண்டு எளிய மனிதனாய் உருவெடுத்து எங்களுக்காக வாழ்ந்து காட்டி வருகின்றீர்கள்! இது எங்களுடைய பாக்யம் என்றாலும் தங்களுக்கே அடுக்கடுக்கான துன்பங்கள் என்றால் என் செய்வது! இது இந்த யுக மக்களுக்கு மட்டும் அல்லாமல் எதிர்வருகின்ற அனைத்துக் கோடி யுகத்தில் வாழ இருக்கின்ற மக்களுக்கும் இது ஒரு படிப்பினையாக இருக்கட்டும்!”
ஸ்ரீஆஞ்சநேயர் தொடர்ந்தார்!  “சுவாமி அடியேனைப் பொறுத்தவரையில் இப்போது நம்முடைய பெருத்த கஷ்டங்கள் தீர்ந்திட தங்களுக்கு பூஜா பலன்கள் இன்னும் நிறையத் தேவை என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது, நான் இவ்வாறு சொல்வதற்குத் தாங்கள் தான் என்னை மன்னித்து அருள வேண்டும்”, என்று செப்பிக் கதறி அழுது ஸ்ரீராமருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு விட்டார், ஸ்ரீஆஞ்சநேயர்!

பாடலூர் சஞ்சீவிமலை

அங்கிருந்த அனைவருக்குமே கண்களில் நீர் ஆறாகப் பெருகியது. ஆஞ்சநேயரின் மாசில்லா பக்திப் பெருக்கைக் கண்டு ஸ்ரீராமரும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, “ஆஞ்சநேயா! நீ சொல்வது சரிதான், பூஜா பலன்கள் அடியேனுக்குக் குறைந்து விட்டமையால்தான் அடியேன் இன்றைக்கு மனம் கலங்கி நிற்கின்றேன். எந்தப் படைத் தலைவன் தன் சேனைகளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டுமோ, துயர உணர்ச்சிகளைத் தணித்து மனஊக்கம் ஊட்ட வேண்டுமோ, அவனே தட்டுத் தடுமாறி நிற்கின்றான் என்றால் அதற்குக் காரணம் இந்த ராமனின் வழிபாடுகளும், பூஜாபலன்களும் குறைந்து விட்டமையால்தான்! நல்லதைச் சொன்னாய்! இறைவன் உன் மூலமாக இக்குறையை எனக்கு உணர்த்துகின்றான். ஆஞ்சநேயா! இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை! உன் புனிதமான மனதில் பட்டதைச் சொன்னாய்! எனவேதான் அதுவே பரிசுத்தமான உண்மை யாகவும் இருக்கின்றது! ஆனால் இதனைச் சொல்வது மட்டுமல்லாமல் இதற்குரிய பரிகாரத்தையும், உன்னுடைய பூஜா பலசக்தியால் எனக்குப் பெற்று தந்தால் நான் மிக்க மகிழ்ச்சி உடையவன் ஆவேன். நம்முடைய படைவீரர்களுக்கும் இது ஒரு தெய்வீக மறுமலர்ச்சியாக இருக்கட்டும்!” இதனைக்கேட்டு ஆஞ்சநேயர் கதறிக் கதறி அழுது மனங்கலங்கினார். “என்ன இது! எம்பரம்பொருளாம் சர்வேஸ்வரனாம் ஸ்ரீராமனையே குறை சொல்லி விட்டேனா!”ஆஞ்சநேயர் உள்ளம் பொறாது பெருங் கண்ணீர் வடித்தார்.
“சுவாமி! ஏன் இவ்வாறு என்னைச் சோதனை செய்கின்றீர்கள்? தாங்கள் அறியாதது எதுவுமே இல்லையே? தங்களுக்கு பூஜா பலன்கள் இல்லை என்று சொல்லுமளவுக்கு நான் அடக்கத்தையும், பணிவையும், பண்பையும் இழந்து விட்டு உங்கள் முன்னால் வந்து நான் நிற்கின்றேனே! தாங்கள் வைத்த சோதனையில் ஓர் இறை அவதாரத்திற்கே ஆலோசனை தருகின்றோம் என்ற அகங்காரத்தில் அடிபட்டு விட்டேனே! ஏதோ நீங்கள் கேட்டீர்கள் என்பதற்காக மனதில் உள்ளதைச் சொல்லிவிட்டு இப்போது அடியேன் தட்டு தடுமாறி நிற்கின்றேனே! தாங்களோ அதற்குரிய பரிகாரத்தையும் கேட்கின்றீர்கள், அடியேன் என் செய்வேன், மகா பிரபோ! இனிமேலும் சோதிக்காதீர்கள் ஐயனே!”
“ஆஞ்சநேயா! அப்படி எல்லாம் எண்ணாதே, இறைவன் எந்த சமயத்திலும் யார் மூலமாக வேண்டுமானாலும் எந்த உதவியையும், அறிவுரையையும், நல்உதவியையும், அறிவுரையையும், நல்வழியையும் எவருக்கும் தந்திடலாம் என்பது அனைவரும் அறிந்தது தானே! அதைத் தானே அவர் இப்போது உன் மூலமாக நடத்திக் கொண்டிருக்கின்றார். அடியேனே மனம் கலங்கி தட்டுத் தடுமாறி நிற்கின்ற பொழுது உண்மையிலேயே எதிரிகளைச் சமாளிக்கின்ற சக்தியையும் இழந்தவன் ஆகின்றேன் அல்லவா! எனவே, உன்னைப் போன்ற திடகாத்திரமான வைராக்ய சித்தத்தை உடையவர்கள்தாம் இறைவனுடைய அருள் ஆசிகளையும், அருள் வரங்களையும் உணர்ந்து பரிபூர்ணமாகப் பெற்று மற்றவர்களுக்கு அளிக்க முடியும். உன்னுடைய பராக்ரமத்தையும் இவ்வுலகம் உணர்ந்திடவே, இறைவன் இந்தத் திருவிளையாடலைப் புரிகின்றார்.”
“எனவே, ஆஞ்சநேயா அடியேனுடைய பூஜா பலன்களைப் பெருக்குவதற்கான நல்ல பரிகார முறையையும் நீயே அடியேனுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்”. ஆஞ்சநேயர் மிகவும் வேதனைப்பட்டார். “தான் எதையும் சொல்லாமல் இருந்திருக்கலாமோ”, என்று கூட அவருக்குப்பட்டது. ஆனால், நடப்பதெல்லாம் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் அம்சமாகிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் செயல் என்பதை அவர் பரிபூர்ணமாக உணர்ந்தவர் என்பதாலும், தம்முடைய ஒவ்வொரு அங்க அசைவிற்கும் காரணம் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருவருள் என்பதை நன்கு அறிந்தவர் ஆதலாலும் மிகவும் தைரியத்துடன் மீண்டும் சொல்லலானார்.
“சுவாமி! எத்தனையோ பெரிய தெய்வாவதார மூர்த்திகளுக்கு நல்ல மந்திரங்களைத் தக்க தருணத்தில் உபதேசிக்கின்ற வல்லமையையும், கடமையையும் பெற்றிருப்பவர்களே மகரிஷிகளும், சித்புருஷர்களும் ஆவார்கள். எனவே, நாம் ஸ்ரீஅகஸ்திய மாமுனியை நாடுவோமேயானால் அவரே நமக்குத் தக்க பூஜை முறைகளைத் தந்து அருள்வார்!” ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். இவ்வாறாக அனைவரும் இறைவனை வழிபட்டு ஒன்று கூடி ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் நல்வரவிற்காகக் காத்திருந்தனர். ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீநாரதர், ஸ்ரீபரத்வாஜர் போன்ற சித்புருஷர்களும், மகரிஷிகளும் பிரபஞ்சம் எங்கும் இறையருளால் கோடானு கோடி யுகங்களாக எப்போதும் வலம் வந்து இறைப் பிரச்சாரத்துடன் எத்தனையோ கோடி இறைப் பணிகளையும் செய்து வருகின்றார்களன்றோ!
ஸ்ரீஅகஸ்திய(ர்) விஜயம் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் சோக நிலையைக் கண்டு துணுக்குற்றார் ஸ்ரீஅகஸ்திய மஹரிஷி! “ஸ்ரீராம மஹா பிரபோ! தெய்வ அவதார மூர்த்தியாகிய தாங்களே மனங்கலங்குவது கண்டு அடியேனுக்கு மிகவும் வருத்தமாக இருக்கின்றது. சர்வேஸ்வரனாம் பரந்தாமனாக விளங்குகின்ற தாங்களே இத்தகைய இன்னல்களுக்குத் தங்களை ஆட்படுத்திக் கொள்வது ஏனோ? எங்களைப் போன்ற முனிவர்களுக்கும், மக்களுக்கும் ஏனைய ஜீவன்களுக்கும் பாடம் புகட்டத் தானே”.
“இறையருளாலும், தங்களுடைய திருவடிகளின் மேன்மையினாலும், அடியேன் இங்கு நடந்ததை அறிந்தேன். ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியே அருள்வது போல ராவணனுடைய அஸ்திரங்களை எதிர்க்கின்ற மாபெரும் பணியினால், தங்களுடைய வீராதி கோசங்கள் அயர்ந்து விட்டன என்பது சற்றே உண்மைதான். ஆனால் அதே சமயம், இதற்குரிய பரிஹாரமாக அறவழிகளாக சாஸ்திரங்களில் கூறியுள்ளவற்றை எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்”, என்று கூறி எத்தகைய பூஜை முறைகளை இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் ஸ்ரீராமன் மேற்கொள்ள வேண்டும் என்று நன்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.
ஸ்ரீஅகஸ்திய மகரிஷி ஸ்ரீராமனுடைய திருவடிகளில் வீழ்ந்து பன்முறை வணங்கினார், “எம்முடைய சர்வேஸ்வர மூர்த்தியாகிய ஸ்ரீராமச்சந்திர மகாதேவரே! தாங்கள் தானே சர்வேஸ்வர மூர்த்தி, ஸ்ரீமந் நாராயணனாய் பிரபஞ்சத்தைக் காத்து ரட்சிப்பவர்! தங்களுக்கே துன்பம் என்றால் நாங்கள் என்ன செய்வது? தங்களை நம்பித் தானே நாங்கள் எல்லாரும் ஜீவிக்கின்றோம்., அடியேனை இவ்விடத்தில் வரவழைத்து, எளியேனுடைய ஆலோசனைப் பெறுவது என்றால் அதற்கு அடியேனுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஸ்ரீஆஞ்சநேயர் மூர்த்தி, ஸ்ரீஜாம்பவான் போன்ற உங்களுடைய திருவடி வாழ் பக்தர்களுக்கும் முன் அடியேன் எம்மாத்திரம்? அவர்களுடைய பாததூசிக்குக் கூட, அடியேன் ஈடாக மாட்டேனே! ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அடியேனைக் கூப்பிடுகின்றார் என்ற உடனேயே உள் நடுக்கம் ஏற்பட்டு விட்டது. மகத்தான சீடர்களையும், பக்தர்களையும் ராமனடிப் பொடி பணிபவர்களையும் கொண்டுள்ள தாங்கள் ஓரணுவின் பக்திப் பங்கு கூடத் தகுதி இல்லாத அடியேனை வைத்துக் கொண்டு என்ன செய்ய போகின்றீர்கள்?” என்று பலவாறாகக் கூறி ஸ்ரீராமனுடைய திருவடிகளைப் பற்றினார் ஸ்ரீஅகஸ்தியர். 
ஸ்ரீராமரும், “ஸ்ரீஅகஸ்திய மாமுனியே அவ்வாறு சொல்லி எங்களை ஏமாற்றத்திற்கும், கலக்கத்திற்கும் உள்ளாக்கி விடாதீர்கள்! சிவபெருமானுக்கும், ஸ்ரீமகாவிஷ்ணுவுக்கும், ஸ்ரீபிரம்ம மூர்த்திக்கும் கூட தாங்கள் பலவிதமான மந்திரங்களை உபதேசமாக எடுத்துத் தந்துள்ளீர்கள். உங்களுக்கெனவே சில கடமைகளை சர்வேஸ்வரன் விதித்துள்ளான் அல்லவா! அக்கடமைகளில் நியமமாக உள்ள தெய்வீக வழிமுறைகளை தங்களிடம் தானே பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அத்தகைய மந்திரங்களைச் சித்தி செய்தவர் தாங்கள் தானே!
ஒரு மந்திர உபதேசம் என்றால், அதனை எந்த மகரிஷியானவர் தக்க முறையில் உபதேசமாகப் பெற்று, சித்தி செய்து அதில் மிகச் சிறந்து விளங்குகின்றாரோ அவரிடமிருந்து உபதேசங்களைப் பெறுவது தானே இறைவன் விதித்துள்ள உலக நியதியாகும். அதுதானே இறைவனுடைய விருப்பமும் கூட! எனவே அந்த நியதிக்கு மாறாக அடியேன் எதுவும் செய்யக் கூடாதல்லவா! எனவே, அடியேனுக்குரிய பூஜா வழிமுறைகளை எடுத்துரைத்து இந்த முக்கியமான சோதனையிலிருந்து அடியேனையும், அடியேனுடைய சேனையையும், அடியேனுடைய மக்களையும், சீதா தேவியையும் காப்பாற்றுவதற்கான நல்வழி முறைகளையும் தருவீர்களாக”, என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்ரீராமன் அறிந்திராதது ஒன்றும் கிடையாதுதான். ஆனால் அவரால் மொழியப்படுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள கோடானு கோடி ஜீவன்களுடைய செவிகளிலும் பாய்கின்ற சக்தியை அவரே அளித்துள்ளார் என்பதால் தான் ஸ்ரீராமருக்காக ஸ்ரீஅகஸ்தியர் உரைத்த முனிமொழிகளும் அனைத்து வானர சேனைகளின் காதுகளில் தோய்ந்து நல்லிறை ஆக்கத்தை ஏற்படுத்தின, யாவர்க்கும் பொசியுமாம் வான் மாமழை போல்! பிறகு ஸ்ரீஅகஸ்திய மாமுனி ஸ்ரீராமரிடம், “சுவாமி, அடியேன் தங்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய விசேஷமான சூரிய மந்திரங்கள் பல உண்டு. அவற்றை சூரிய பகவானுக்குரித்தான ஞாயிற்றுக் கிழமையன்று குருவருளால் சூரிய ஹோரை நேரத்தில் உபதேசிக்கின்றேன். அதுவே சிவபெருமான் இட்ட ஆணை!“ என்று உரைத்து சந்தியா வந்தனத்திற்கான நேரம் நெருங்கி விட்டமையால் தம்முடைய கமண்டலத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீகாயத்ரீ பூஜைக்காக ஸ்ரீராமனின் அனுமதியைப் பெற்றுச் சென்றார். இதன் பிறகு ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் ஸ்ரீராமருக்கு, “ஆதித்ய ஹிருதயம்” என்ற அரிய மந்திரத்தை உபதேசித்து, அதனைக் கடைபிடிக்க வேண்டிய முறைகளையும் எடுத்துரைத்தார்.
ஸ்ரீஅகஸ்திய மாமுனி ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு அளித்த ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்திரத்தைப் பின்னர் உபதேசிப்பதாகச் சொன்னதன் காரணம் என்னவென்றால் ஸ்ரீஆதித்ய ஹ்ருதயத்தை உபதேசமாகப் பெறுவதற்கு முன்னால் கடைபிடிக்க வேண்டிய இறைவழிபாட்டு முறைகள் நிறைய உண்டு. அவற்றை முறையாகக் கடைபிடிப்பதற்காகத் தான் இதற்கு அடிப்படையாக ஸ்ரீஅகஸ்திய மாமுனி பலவிதமான ஆதார மூல மந்திர வழிபாடுகளையும், வேத பூஜைகளையும் புகட்டினார். ஸ்ரீஅகஸ்திய மாமுனி, உபதேசித்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற ஓர் அற்புத மந்திரத்தைக் கடைபிடித்தே ஸ்ரீராவணனை வெல்வதற்கான தக்க மனோதைர்யத்தையும், திட வைராக்கியத்தையும் ஸ்ரீராமர் பெற்றார்.

ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீகிருஷ்ணர் போன்ற அவதார தெய்வ மூர்த்திகள் அறியாத மந்திரங்கள் ஏதும் இல்லை. ஆனால் எந்த மந்திரத்தையும் தக்க சற்குரு மூலமாகப் பெற வேண்டும். அந்தந்த மந்திரங்களை, முறையாக ஜபித்து, யோகம் செய்து, தியானம் செய்து, சித்தி செய்தவர்களின் மூலமாகவே பெற வேண்டும் என்பதை ஒரு பாடமாக இந்தப் பிரபஞ்சத்திற்குப் புகட்டும் பொருட்டுத்தான் ஸ்ரீராமனே ஸ்ரீஆதித்ய இருதய மந்திரத்தை உபதேசமாக ஸ்ரீஅகஸ்திய மாமுனியிடமிருந்து பெற்றார். ஸ்ரீஅகஸ்திய (மகரிஷியின்) விஜயமும் நன்கு கனிந்தது. ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் குருவாய்க் கனி இறைமொழிகள் தாம் அவர்தம் சித்தர்குலத் தோன்றல்களின் குருவாய் மொழியாக “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மூலமாகவும், அருங்கனிச்சாறாய் மறையாரமுதமாய் மாதந்தோறும் உங்கள் திரு உள்ளத்தில் ஊறி இனிக்கின்றதன்றோ!
ஸ்ரீராமர் ஆஞ்சநேயரைக் கட்டித் தழுவி, “நான் ராவணனை வெற்றி பெற தக்க பூஜா பலன்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை நீ தக்க தருணத்தில் தைரியமாக எடுத்துரைக்காவிட்டால் எனக்குப் பெரிய சங்கடங்கள் வந்து சேர்ந்திருக்கும், துன்பங்களும் பெருகி நமக்குப் பலவிதமான சேதங்களைத் தந்திருக்கும். எனவே, சமயத்தில் எனக்குத் தைரியமாக இறை அறிவுத் துணையாக தக்க ஆலோசனைகளைத் தந்தமையால் நாம் மிகவும் சந்தோஷம் கொண்டு உனரத்து சர்வேஸ்வரனைத் துதிக்கலானார்!
ஸ்ரீராமர் பாடினாரே! ஆம்! ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே தினந்தோறும் மூன்று வேளை சந்தியாவந்தன மந்திரங்களை முறையாகச் செய்து ஆறுகால பூஜைகளையும் நிறைவேற்றி ஒரு சாதாரண மனிதர் போல வாழ்ந்து காட்டியமையால் தான் அன்றும், இன்றும், என்றும் நமக்கு அருள்வழி காட்டுகின்ற ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாய், ஸ்ரீசீதாராமனாய், ஸ்ரீசக்கரவர்த்தித் திருமகனாய், எந்நாளும் எந்த யுகத்திலும் நல்வழிகாட்டும் நாயகராய்ப் பரிமளிக்கின்றார். தமக்கு நல்லருள் கூட்டுமாறு வேண்டி ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தம் அவதார காலத்திற்குள் எத்தனையோ பூஜையையும், ஹோம வழிபாடுகளையும், தர்ப்பண வழிபாடுகளையும் நிறைவேற்றினார். அவ்வாறு அன்று ஸ்ரீராமன் ஓதிய இறை மந்திரங்களே, பாசுரங்களே, துதிகளே, பாமணிகளே மலை போல் குவிந்தன..மகரிஷிகளும் கூட வியக்கும் அளவிற்கு எத்தனையோ கோடி மந்திரங்களை, துதிகளை ஓதி ஓதி உய்த்து ஆனந்தம் அடைந்தார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.
அந்த மந்திர ஒலிகளை எல்லாம் என்றும் எப்போதும் எந்நேரமும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று சொல்கின்ற அளவிற்கு தம்முடைய வழிபாடுகளைச் சாந்தமாக நடத்தி அனைவருக்கும் பலாபலன்களைத் திருவருளாக அள்ளித் தந்தார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. இவையெல்லாம் இறைத் திருவிளையாடல்கள் தாமே! பரந்தாமனே பரம்பொருளாக வந்து நின்றாலும் கூட ஒரு சாதாரண மனிதனாய்த் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றிக் கொண்டு மிக எளிமையான முறையிலே வாழ்ந்து தம்முடைய தெய்வத் திருஅவதாரச் சக்திகளை ஒரு போதும் காட்டிடாது ராமாயணத்தை நடத்திக் கொடுத்தமையால் தான் இன்றும் ஸ்ரீராமர் அனைத்து ஜீவன்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றார். இவ்வாறாக அந்த யுகத்தின் அத்திருநாளில் ஸ்ரீராமன் ஓதிய துதிகளும் கோடானு கோடி மந்திரங்களும் பிரபஞ்சத்தையே நிறைத்து விட்டன என்று சொல்லும் அளவிற்கு யாங்கணும் பொங்கி வழிந்தன. எங்கு நோக்கினாலும், ஸ்ரீராமனுடைய தேனினுமினிய குரலே ஒலித்தது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மந்திரங்களை ஓதினார், ஓதினார் ஓதிக் கொண்டே இருந்தார்.
காலத்தைக் கடந்தவராய், காலமாப் பொருளாய், பரஞ்ஜோதியாய், பரந்தாமனாய், பரம் பொருளாய், சர்வேஸ்வரனாய், ஸ்ரீராமன் ஓதிய மந்திரங்கள் தாம் எத்தனை எத்தனை! ஓதிய துதிகள் தாம் எத்தனை எத்தனை! அவையெல்லாம் நால்வேத உபநிஷத் மந்திரங்கள் போல் வானத்தையே நிறைத்தன.
ஆனால், அனைவரும் ஸ்ரீராமனுடைய மந்திர ஒலி வழிபாட்டிலே லயித்துத் தன்னை மறந்து நின்றமையினால் எவருமே அவர் ஓதிய மாமலைத் துதிகளை நினைவிற் கூட்டி வைக்க மறந்து விட்டார்கள். ஆம்! இதுவும் இறை லீலை தானே! ஸ்ரீராமரே ஓதிய துதிகள் என்றால் அதற்கு எத்தகைய தெய்வீக சக்திகள் உண்டு! ஸ்ரீராமர் அனைத்துத் துதிகளையும் ஓதி முடித்த பின்னர்தான் அனைவருமே தங்களுடைய பிழைகளை அதாவது துதியைத் தம் மனதில் பதித்திராததை உணர்ந்தனர்.
“ஆமாம் ஸ்ரீராமர் ஓதிய அரும்பெரும் துதிகளை நாம் மனதில், நினைவில் கூடக் கூட்டி வைக்க மறந்து விட்டோமே! அந்த அளவிற்கு நம்மைப் பரம ஆனந்தத்தில் ஆட்படுத்தி விட்டாரே, அவற்றை எவ்வகையிலேனும் பெற்றாக வேண்டுமே!”  அங்கு கூடிய கோடானு கோடி மகரிஷிகளும், தேவ மூர்த்திகளும், ஸ்ரீராமனையே இதற்கு நல்வழி காட்டுமாறு வேண்டினர். “சுவாமி, தங்களுடைய துதிகளைக் கேட்டு நாங்கள் எங்களையே மறந்து லயித்து நின்று விட்டோம்., எம்பெருமானின் திருவாய் மொழியாக ஓதிய துதிகள் யாவும், துதிப் பாடல்கள் எல்லாம் எங்களுக்கும், இனி வருகின்ற கோடானு கோடி ஜீவன்களுக்கும் பயன் தருமாறு தாங்கள் தான் அவற்றைப் பெற்றுத் தர வேண்டும்!”
ஸ்ரீராமர் புன்னகை புரிந்தார்! “அப்படியா! அந்தளவிற்கு மலையளவு துதிகளையா பராந்தாமனே தமக்கென ஓதிய ஆத்மலிங்கப் பாசுரங்களாக இறைவன் அடியேன் மூலமாக ஓத வைத்துவிட்டாரா! என்னே இறைவனுடைய பெரும் கருணை! ஆனால் அவற்றையெல்லாம் மீண்டும் என்னால் எடுத்துரைக்க இயலாதே! என்ன செய்வது?” மகரிஷிகள் திகைத்தனர்! ஏனென்றால், மந்த்ரங்களை கிரகித்து, கிரந்தங்களாக எழுதி, உரை கொண்டு அவற்றை மக்களுக்கு அளிக்க வேண்டியது அவர்களுடைய கடமைதானே! அவர்களே தங்களுடைய கடமையில் தவறி விட்டார்கள் என்றால் என்ன செய்வது! அனைவருமே அச்சம், பயம், பொறும்ப்பின்மை காரணமாகத் தலைகுனிந்து நின்றனர்.
ஜாம்பவானின் ஆற்றலோ ஆற்றல்! 
ஸ்ரீராமர் பார்த்தார். பிரபஞ்சத்தின் அனைத்துத் துன்பங்களையுங் களையும் பரஞ்சோதி அவர்தானே! சுற்றிலும் தம் திருக்கண்களால் நோக்கினார்.. ஆங்கே... ஒரு ஓரத்தில்..... அடக்கத்தின் சிகரமாய், பணிவின் பேருருவாய் பக்தியின் அருமறை வடிவமாய் அமர்ந்திருந்த ஸ்ரீஜாம்பவானை அழைத்தார். “ஜாம்பவான், இவர்கள் ஏதேதோ சொல்கின்றார்களே, அடியேன் குருவருளால் ஓதிய இறைத் துதிகள் யாவற்றையும் அவர்கள் பெற வேண்டுமாமே, நீதான் இதற்குத் தக்க உபாயத்தைச் சொல்ல வேண்டும்!”
ஜாம்பவானுக்கு நாத்தழுதழுத்தது..! “சுவாமி! என்ன வார்த்தைகளைச் சொல்லி விட்டீர்கள். அடியேனும் அவர்களைப் போலக் கேட்டுக் கொண்டு தானே இருந்தேன். இதைத் தவிர அடியேன் என்ன செய்ய முடியும்! அடியேனுக்குப் போய் இத்தகைய பெரும் சோதனைகளை வைத்து, பெரும் பணியைக் கொடுக்கின்றீர்களே! என் செய்வது,” ஸ்ரீராமர் ஜாம்பவானை அரவணைத்துக் கொண்டார்.
“ஜாம்பவான்! உன்னுடைய பெருமையை இந்தப் பிரபஞ்சம் அறிய வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதனால் தானே, இந்த இறை லீலையும் இவ்வாறு நடந்து வருகிறது. அதனால், அடியேன் இப்போது ஓதிய துதிகளையெல்லாம் தக்கத் தருணத்தில் நான் கேட்பேன். அதனைப் பெற்றுத் தர வேண்டியது உன்னுடைய கடமை”, என்று சொல்லி, “வாருங்கள், நம்முடைய அறப்பணியைத் தொடருவோம்”, என்று புறப்பட்டு விட்டார். அனைத்து மஹரிஷிகளும் கோடானு கோடி தேவர்களும் திகைத்தார்கள்.. அடுத்த இறை லீலை எப்படி வரப் போகின்றதோ! போரெல்லாம் முடிந்து அமைதி திரும்பி ஸ்ரீராமருடைய ராமராஜ்ய வைபவத்தில் ஜாம்பவானை அழைத்தார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி.
“சில காலம் முன் உனக்கு நான் ஒன்றைச் சொன்னேனே நினைவிருக்கின்றதா! அடியேன் ஓதிய இறைத்துதிகளை எல்லாம் மஹரிஷிகள் கேட்டு, கேட்டு என்னைத் துரத்துகின்றார்கள்! அவர்களுக்கு அதனைப் பெற்றுத் தரவேண்டிய தருணம் இப்போது வந்து விட்டது., எனவே, நீதான் அவற்றை கிரகித்து, அவர்களுக்குத் தந்திட வேண்டும்”,என்று கூறி அருளாணையிட்டார்.
ஜாம்பவான், “சுவாமி! அடியேன் வானரக் குலத்தில் வந்தவன். வேத அறிவு இல்லாதவன். எனினும் இறையருளால் தாங்கள் அருளிய இறைப் பாக்களை, தெய்வத் துதிகளை எல்லாம் கற்களாக வடித்து வைத்திருக்கின்றேன். அவற்றைத் தங்களுடைய திருவடிகளிலே சமர்ப்பிக்கின்றேன். அவற்றைக் கொண்டு தாங்கள் ஏதேது செய்ய  வேண்டும் என்பதைத் தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்”, என்று ஆங்கே ஒரு பெருமலையைக் கூட்டி வந்து சேர்த்தார் ஜாம்பவான்.
பாமா(ம)லையே பூமா(ம)லை!
ஆம்! ஸ்ரீராமர் ஓதிய துதிகள் அனைத்தையும் தம்முடைய பக்தியின் தன்மையால் ஜாம்பவான் அவற்றைச் சிகரமாய் வடித்து, தம்முடைய திருமார்பிலே பாமணியாய், ஆபரணமாய் அணிந்திருந்தார். இதைக் கண்டு ஸ்ரீராமர் மிகவும் சந்தோஷப்பட்டார். “ஜாம்பவான், எதையுமே நன்கு கிரஹிக்கின்ற ஆற்றல் உன்னுள் ஒளிந்து கிடக்கின்றது. இதனை இதுவரையில் இந்தப் பிரபஞ்சமே அறியாது, இனியேனும் பிற்காலத்தில் உன் பெருமையை அனைவரும் உணரட்டும். இத்தகைய பாக்யத்தை வருங்காலத்தில் சகாதேவன் உன்னிடமிருந்து பெற்றுக் கொள்வான்., அப்போது அவனுக்கு நீ அதனை அளிக்கச் சித்தமாக இருக்க வேண்டும்”, என்று சொல்லி ஜாம்பவான் ஆசீர்வதித்தார். “ஆஞ்சநேயா! இந்த இறைத் துதிகளை எல்லாம் அடியேன் ஓதி, கூடுதலான பூஜைகளைச் செய்வதற்குக் காரணமாக இருந்தவன் நீயே! ஏனென்றால் நீ ஒருவன் தான் அடியேனிடத்தில், “ஸ்ரீராமா! உன்னுடைய பூஜா பலன்கள் போதாது, அதனால் தான் இத்தகைய காரியத் தடங்கல்கள் நமக்கு வந்து கொண்டிருக்கின்றன”, என்று எனக்குச் சொல்லிப் போர்முனையில் உண்மையை எடுத்து உரைத்தமையால் தான் எத்தனையோ அரிய பூஜைகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே தோன்றி, இந்த இறைத் துதிகளை எல்லாம் அடியேனுடைய குல குருவான் வசிஷ்ட மாமுனியின் பெருங்கருணையால் ஓத முடிந்தது. இவற்றை எல்லாம் ஜாம்பவான் இன்று சிறு குன்றாய்த் திரட்டிப் பிரபஞ்சத்திற்கு அளித்துள்ளான்.”
“நீ சஞ்சீவி மலையைச் சுமந்து வந்த போது அதனுடைய சில பகுதிகள் பூலோகத்தில் இறையருளால் ஆங்காங்கே சிதறி விழுந்தன, காரணம் என்னவோ? ஏனென்றால் வருகின்ற யுகங்களில் குறிப்பாக கலியுகத்தில் மக்கள் எத்தனையோ விதமான நோய்களால் வாடுகின்ற போது, உன்னுடைய கையிலிருந்து வெளிப்போந்த சஞ்சீவி மலைச் சிகரங்கள் தாம் பலவிதமான மூலிகைகளையும் தாங்கி ஆரோக்கியமான காற்றையும் சுமந்து மக்களுக்கு நோய் நீக்கும் மாமருந்தாய் அருள்பாலிக்க இருக்கின்றது. இவ்வாறாக நீ சுமந்த சஞ்சீவி மலையிலிருந்துத் தெரித்த பூமலைக்குப் பாஆரமாக, பாமணியாக இந்த மந்திரச் சிகரத்தை  ஆபரணமாய் போர்த்தி விடுகின்றேன். அம்மலையின் ஒவ்வொரு கல்லும், மண்ணும் இந்த இறைத் துதிகளைப் பதித்துப் பிரதி பலிக்கட்டும். குருவின் அனுக்ரஹத்தைப் பெற்றோர், தக்க மந்திர சித்திகளை உடையவர்க்கு இம்மலையின் ஒவ்வொரு கல்லும், மண்ணும் இந்த இறைத் துதிகளின் பலாபலன்களை உணர்த்திடும், எடுத்துரைக்கும்”, என்று சொல்லி ஜாம்பவான் கொண்டு வந்த சிகரத்தைப் பெருமலையாக்கி, அதன் உச்சியிலே அனுமாரை வீர ஆஞ்சநேயராக அமர்த்தி வைத்து ஆசீர்வதித்தார்..! ஆம் இவ்வாறு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ஓதிய பாமாலையேதாம் ஸ்ரீஆஞ்சநேயர் கொண்டுவந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதியாகிய சஞ்சீவப் பூமலையுடன் சேர்ந்து ஒரு பெரும் பாமா(ம)லையாக வளர்ந்து இன்றைக்குத் திருச்சி – பெரம்பலூர் சாலையில் பாடலூர் என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ள அற்புதமான மலைத்தலமாக விளங்குகின்றது.  
இவ்வாறாக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே தாம் ஓதிய இறைத் துதிகளை ஜாம்பவானின் மானசீக பூஜையால் மலைச் சிகரமாய் மாற்றி அதனை ஸ்ரீசஞ்சீவிராயப் பூமலையாக்கி, இன்றைக்கு ஸ்ரீவீர ஆஞ்சநேயராக , பாடலூர் பூமலை ஸ்ரீசஞ்சீவ ஆஞ்சநேயராக அருள்பாலிக்கின்ற வகையில் நமக்கு ஆக்கித் தந்துள்ளார். ஸ்ருதிமலை, ஸ்மிருதி மலை என்றும், புராண மலை பூமலை என்றும் பலவிதமான பெயர்களால் அழைக்கப்படுகின்ற பாடலூரில் பூமலையாயிற்று. இவ்வாறாக ஜாம்பவான் திரட்டிய தம்முடைய இறைத் துதிச் சிகரத்தை எல்லாம் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி கொணர்ந்த சஞ்சீவி மலையில் பகுத்து வடித்துப் பெருக்கி பூமலை ஸ்ரீசஞ்சீவராய தெய்வமாக ஆங்கே மிளிர்வதற்கு ஸ்ரீராமன் வழிவகுத்தார், இது நிகழ்ந்த புனிதமான நேரமே அந்த யுகத்திற்கான விஷ்ணுபதி நேரமாகும். எனவே வரும் விஷ்ணுபதி புண்ய காலத்தில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலிருந்து திருச்சி – பெரம்பலூர் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 40 கி.மீ தொலைவில் பாடலூர் கிராமத்தில் அருள்பாலிக்கின்ற பூமலை சஞ்சீவராய ஸ்வாமி என்று அழைக்கப்படும் ஸ்ரீவீராஅஞ்சநேயருக்கு அனைத்து விதமான அபிஷேகங்களையும், பூஜைகளையும் வேத மந்திர, யந்திர பூஜைகளையும் செய்து, தர்ப்பணமிட்டு, தான தருமங்களைச் செய்பவர்கள் குருஅருளால் மகத்தான பலன்களைப் பெற்றிடலாம்.. பிரதோஷ இறைகால பூஜை போன்று ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலத்தில் செய்யப்படுகின்ற பூஜைகளுக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு என்பதை நினைவில் கொண்டிடுக!

தூக்கம் என்றால் என்ன ?

தூக்கம் என்றால் என்ன? கனவு எவ்வாறு ஏற்படுகின்றது? இவையெல்லாம் மெய்ஞ்ஞானத்தில்தான் தக்க முறையில் விளக்கப்படுமே தவிர, தற்போதைய விஞ்ஞானமும் கூட ஆராய்ச்சி என்ற பெயரில் இதனைப் பற்றி இன்னமும் ஒரு முடிவிற்கும் வராமல் குடைந்து கொண்டிருக்கின்றது. மருத்துவ விஞ்ஞானத்தில் இன்றைக்குக் குறித்த நோய்க்கான மருந்து ஒன்றைக் கண்டுபிடித்து நாளையே, அதனை உபயோகித்தால் இத்தகைய பக்க விளைவுகள் (Side Effects) வரும் என்று ஆராய்ந்து அந்த மருந்தையே மாற்றி விடுவார்கள். எனவே,  விஞ்ஞானத்திற்கும் எல்லை உண்டு தானே!
தக்க சற்குரு அமைந்தால்தான் உலகத்தில் எந்த சிருஷ்டிக்கும் உரித்தான தகுந்த விளக்கங்களைப் பெற முடியும் என்பதே முயற்சியாக விஞ்ஞானம் மூலமாக எதையும் கண்டுபிடித்து விட முடியும் என்று எண்ணுவது அறியாமையுடன் அகங்காரத்தின் அம்சமே ஆகும் என்பதை உணர வேண்டும். தூக்கத்தை மரணத்தின் ஒத்திகை என்று பெரியோர்கள் உரைக்கின்றனர். ஆம் உண்மையே! எத்தனையோ கோடி ஆன்மீக ரகசியங்களைத் தன்னுள் புதைத்துத் கொண்டிருக்கும் தூக்கத்தினைப் பற்றிச் சித்புருஷர்களுடைய கிரந்தங்கள் தருகின்ற விளக்கங்களை விவரித்தால் எத்தனையோ புராணங்களாக அவை விரிந்து மலர்ந்து விடும்! எனினும் தூக்கம் பற்றிய ஆன்மீக விளக்கங்களை இறப்பின் ரகசியமாக, பிறப்பின் காரண, காரியங்களாக அனைவரும் தம் வாழ்வில் ஓரளவேனும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் சில அற்புதமான விளக்கங்களை சித்புருஷர்களுடைய குருவாய் மொழியாக இங்கு அளிக்கின்றார்கள்.
உள்ளேயிருப்பது ஒன்பது உடலாம்!
ஒவ்வொருவருடைய உடலிலும் ஒன்பது விதமான சூட்சும சரீரங்கள் பதிந்து உறைகின்றன. அதாவது நாம் உடல் (தேகம், body) என்று சொல்வது, நம்முள் உறையும் ஆத்மாவைச் சுற்றிப் போர்த்தப்படும் வெளி உடல் ஆகும். உள் உறையும் ஆத்மாவைச் சுற்றி ஆன்ம தேகமாக இறைவனால் ஒன்பது சூட்சும சரீரங்கள் பின்னப்பட்டுள்ளன. இதுவே ஒட்டு மொத்த சூட்சும சரீரம் ஆகும். பொதுவாக அனைவருக்கும் இந்த சூட்சும சரீரங்கள் அவரவர் கர்ம வினைப்படி மொத்தமாக ஒன்பது உண்டு. உயிர் இந்த உடலை விட்டுப் பிரிகின்ற போது பலவிதமான வினைப் படிமானங்களுடன் ஆன்மத்துடன் சேர்ந்து செல்கின்றவையே இந்த ஒன்பது சூட்சும சரீரங்கள் ஆகும். ஆனால் ஆத்மா பரிசுத்தமானது, சிப்பிக்குள் உள்ள முத்தைப் போல்! சூட்சும சரீர மாற்றங்கள் ஆன்மாவை பாதிக்க முடியாது.
வாழ்க்கையில் இந்த உடலால் நாம் செய்கின்ற காரியங்களுடைய புண்ய, பாப விளைவுகளுக்கு ஏற்ப, இந்த ஒன்பது சூட்சும சரீரங்களின் மேல் பல படிவுகள் ஏற்படும். சுருங்கச் சொல்லப் போனால் உள்ளத்தில் அமர்கின்ற ஆத்ம ஜோதியைச் சுற்றி உள்பரிமாண ஆன்ம உடலாக அமைகின்ற இந்த ஒன்பது சூட்சும சரீரங்களும் எத்தனையோ கோடி ஜன்மங்களில் ஏற்பட்ட வினைகளின் வடிவு பிம்பங்களின் பட்டைகளாய் விளங்குகின்றன. எனவே, இந்த ஒன்பது சூட்சும சரீரங்கள் அனைத்துமே புனிதமானவையாக விளங்கினால் தான் முக்தியோ, மோட்ச நிலையோ கைகூடும்.
இந்த சூட்சும சரீரங்களிலிருந்து எழுகின்ற ஆன்ம ஜோதியின் நிற ஒளியையே “AURA“ என்று சொல்கின்றோம். தீய கர்ம வினைப்படிவுகள் மிகும் போது இந்த aura ன் நிறம் பெரிதும் மாறும் மகான்களுடைய தரிசனத்தைப் பெறுகின்ற பொழுது அவரவருடைய தலையின் மேல் சூட்சுமமாக எழுகின்ற இந்த “AURA“ ஒளியின் நிறத்தைப் பொறுத்து அவரவருடைய கர்மவினைப் பாங்கை அவர்கள் எளிதில் அறிந்து கொண்டு விடுவார்கள். எனவே ஜாதகத்தைப் பகுத்துப் பார்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்குக் கிடையாது. ஆனால், தீவினைகளிலேயே உழன்று கொண்டிருந்தால் இந்த ஒன்பது சூட்சும சரீரங்களின் சுற்றுப் பிரகாரம் பாவச் சுவர்களைக் கொண்டவையாக விளங்கிவிடும்.
அப்படியானால் இந்த ஒன்பது சரீரங்களுடைய பணிகள் தான் என்னே! எத்தனையோ உண்டு. ஒரு சிலவற்றை ஈண்டு காண்போம்! நாம் ஒன்பது தெய்வ நவகிரக மூர்த்திகளை வணங்குகின்றோம் அல்லவா! சனி தசை, சுக்கிர தோஷம், செவ்வாய் தோஷம் என்றால் மனிதன் பயந்து விடுகின்றான். ஆனால் நவகிரக மூர்த்திகளுடைய தலையாய கடமை என்னவென்றால் இவர்கள் யாவருமே நம்முடைய கர்ம வினைகளுக்கேற்ப பலா பலன்களைத் தருகின்றார்கள் என்பதே உண்மையாகும். இன்னும் சொல்லப் போனால் நம் புனித உடலினுள் வீற்றிருக்கும் இந்த ஒன்பது சூட்சும சரீரங்களும் நவக்கிரக மூர்த்திகளுடைய ஆணைகளுக்குக் கட்டுப்பட்டுத் தான் இயங்குகின்றன என்பதே தெய்வீக ரகசியம் ஆகும். இதிலும் எத்தனையோ ஆன்ம விளக்கங்கள் உள்ளன.
அவற்றை இப்போது விளக்கினால் சற்றுக் குழப்பம் ஏற்படத்தான் செய்யும். ஏனென்றால் நித்ய பூஜைகள், தான, தருமங்கள், தர்ப்பணம் போன்றவற்றை முறையாகச் செய்து வந்தால்தான் சில தெய்வீக இரகசியங்களை ஓரளவேனும் அறிந்து கொள்ளக் கூடிய உள்ளப் பக்குவமும், இறைப் பகுத்தறிவும் நன்கு கைகூடும். ஒரு கைக் குழந்தைக்கு அணு விஞ்ஞானத்தைப் புகட்டினால் எப்படியிருக்கும்! லௌகீக/சுயநல/எப்படியேனும் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடனும் மற்றும் முறையற்ற காம எண்ணங்களுடன் இருந்தால் சூட்சும சரீர விளக்கம் சற்றும் கூடப் புரியாது. வெறும் Philosophy புத்தகத்தைப் படித்தால் மட்டும் பிறப்பு ரகசியங்களை அறிந்து உணர்ந்திட முடியாது.
பசித்தால் புத்தகத்தில் படமாக உள்ள பழத்தையா தின்பீர்கள்! ஆனால் மனமோ அனைத்து விதமான தெய்வீக ரகசியங்களை அறிந்து கொள்ளத் துடிக்கும். அறிந்து என்னதான் செய்யப் போகின்றீர்கள்? ஏதேனும் ஒன்றையேனும் வாழ்க்கையில் உருப்படியாக மேற்கொண்டு நன்முறையில் கடைபிடித்தால்தானே தெய்வீக வாழ்க்கையில் முன்னேற்றம் பெற முடியும்! எல்லாவற்றையும் மனத்தளவில் தெரிந்து கொண்டு நடைமுறையில் கேடான வகையில் வாழ்ந்தும் என்ன பயன்? இதனால் தான் பல பிறவி/இறப்பு ரகசியங்கள் மறைந்தே கிடக்கின்றன. எடுத்துரைப்பார் சற்குருமார்களே! ஆயினும் ஏற்பார் கலியுகத்தில் எத்தனை பேர்?
படுத்த நிலை உறக்கமே பாங்கானது!
கண்களைத் திறந்தவாறான விழிப்பு நிலை வாழ்க்கை மட்டுமே மனித வாழ்க்கை அல்ல! அதாவது காலையில் எழுவது முதல் தூங்கப் போகின்ற நேரம் வரை மட்டுமே மனிதனின் வெளி வாழ்க்கை என்றும் உறக்கம் என்பது வெறும் ஓய்வு என்றும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏனென்றால் நீங்கள் தூங்குகின்ற போது உங்கள் உடலானது ஓரிடத்தில் ஜடமாக இருந்த இடத்திலேயே இருப்பது போல் தோன்றினாலும் மன சரீரத்தால் மன தேகத்தால் (Mental Body) நீங்கள் செய்ய வேண்டிய கடமைகளும், கழிக்க வேண்டிய கர்ம வினைகளும், ஆற்ற வேண்டிய காரியங்களுல் நிறைய உண்டு. இன்னும் சொல்லப் போனால், விழித்துக் கொண்டிருக்கும் நிலையில் நீங்கள் செய்கின்ற பணிகளை விட, தூக்கத்தில் மன தேகத்தால், மன சரீரத்தால், (Mental Body) நீங்கள் செய்கின்ற செயல்கள் தாம் அதிகம்!
ஆனால், தூக்கம் என்றால் உடலுக்கு ஓய்வு என்ற தவறான எண்ணம் மட்டுமே இதுவரையில் நிலவி வருகின்றது அல்லவா! இனியேனும் இந்த தேவரகசியத்தை உணர்ந்து கொள்க! பொதுவாக ஒருவர் உபயோகமற்ற கேவலமான எண்ணங்களிலும் தீயகாரியங்களிலும் மிதக்கும் போது, சில சூட்சும சரீரங்கள் உடலில் தங்குவதை விரும்புவது இல்லை. ஏனெனில் அவை எப்போதும் புனிதத்தையே விரும்புகின்றன. குழந்தையும , தெய்வமும் ஒன்று என்று சொல்கின்றோம் அல்லவா! எவ்வகையில்? கைக் குழந்தைப் பருவத்தில் ஜாதி, மத, இன, குல, பேதமின்றி யாவருக்குமே பெரும்பான்மையாக இந்த ஒன்பது சூட்சும சரீரங்களும் புனிதத்துடன் திகழ்கின்றன. சோறும், மலமும் உணரா பச்சைக் குழந்தை நிலையது! ஆனால் மனித வாழ்க்கையின் பல்வேறு பருவங்களில் சேர்கின்ற வினைகள் இப்புனிதத்தை மறைத்து விடுகின்றன. இந்த சூட்சும சரீரங்கள் எப்போதுமே புனிதத் தன்மையில்தான் திகழ வேண்டும்.
எனவே நீங்கள் தெய்வீக நிலையில் நிலை பெற்று நன்முறையில் வாழ்க்கை நடத்தினால்தான் இந்த ஒன்பது சூட்சும சரீரங்களுமே உங்களுடைய ஆத்மச் சூழ்நிலையில் எப்போதும் உங்களுள் குடியிருக்கும். இல்லையெனில் அவ்வப்போது வெளிவந்து விடும். இதனை உணர முடியாமல்தான் சில சமயங்களில்.. “டல்” (dull)லாக இருக்கிறது என்கிறோம். எதற்காக, இந்த மனிதப் பிறவி எடுத்தோம்? நமக்காக, நம்முடைய குடும்பத்திற்காக சுயநலமாக வாழ்ந்திடுவதற்காகவா? இல்லை, இல்லை, நிச்சயமாக இல்லை! இந்த உடலால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் இறையருளால் எவ்வகையில் நன்முறையில் வாழ முடியும் என்றுணரவும் சத்குருவின் அருளைப் பெற்று இந்த உடலால் சமுதாயத்திற்கெனப் பாடுபடுவதற்குமாகத்தான்! எனவேதான் பெறுதற்கரிய மனிதப் பிறவி என்று இதனை வருணித்துள்ளார்கள் நம் பெரியோர். உறக்க நிலையில் கூட நாம் பிறருக்கு உதவலாம் ஐயா!  எவ்வாறு?
உயர்வான(தே) உறக்க நிலை!
ஓர் அரிய மானிடப் பிறவி எடுத்துவிட்டு அதில் மனம் போனவாக்கில் வாழ்ந்து கொண்டிருந்தால் அதில் என்ன பயன்? விழிப்பு நிலை, உறக்க நிலையிலும் அயராது பிறருக்குச் சேவை செய்யும் வழிவகையை அறிய வேண்டும். நீங்கள் படுத்த நிலையில் உறங்கினால் தான் இந்த உடலிலிருந்து சூட்சும சரீரங்கள் வெளிச் சென்று நன்முறையில் பல காரியங்களை ஆற்றுவதற்குத் துணையாக இருக்கும். நீங்கள் உட்கார்ந்து கொண்டோ, சாய்ந்து கொண்டோ, நின்று கொண்டோ, தூங்குவீர்களானால், இந்த சூட்சும தேகப் பரிமாற்றத்தில் பல பிரச்னைகள் ஏற்படும். இதனால், தேவையில்லாத தலைவலியும், உடல்வலியும், நோய்களும் உண்டாவதோடு மனக் குழப்பங்களும் ஏற்படும். ஏனென்றால், படுத்த நிலையில் அமரும் போதுதான் சூட்சும சரீரம் வெளிச் சென்று, மீண்டும் திரும்பி உள்ளே வருவதற்கு ஏற்ற வகையில் தீர்க்க நாடிப் பாதை நன்கு விரிந்து இருக்கும்.
சூட்சும உடல் தனக்குரிய தேவ சக்தியைப் பெறுதற்கும் இம்முறையே அடிகோலும்! மிகவும் கேவலமான எண்ணங்களில் ஒருவன் மிதந்து தீய காரியங்களைச் செய்தாலும் அவற்றைப் பொறுக்காமலும் சூட்சும சரீரம் வெளிச் செல்வதுண்டு என்பதையும் முன்னரேயே நாம் அறிந்துள்ளோம்! இவ்வகையில் சூட்சும சரீரம் வெளிச் சென்று வருவதைத் தான் சில வழி முறைகளில் Astral Travel என்று சொல்கின்றார்கள். இதில் எத்தனையோ கோடி தேவ ரகசியங்கள் உள்ளன. இதனைப் பலரும் தற்போது அரைகுறையாக ஓரிரண்டு விஷயங்களை மட்டும் அறிந்து கொண்டு Astral Travel-ல் செல்வதாகவும், ஆவிகளுடன் பேசுவதாகவும் எண்ணிப் பல துன்பங்களுக்கு ஆட்பட்டு விடுகின்றார்கள். தக்க சற்குருவின் துணை கூடினால் தான், Astral  Travel எனப்படும் வகையிலே நம்முடைய சூட்சும சரீரத்தின் மூலமாக வெளிச் சென்று எத்தனையோ நற்காரியங்களை ஆற்றித் திரும்பி வரமுடியும்.
உடலில் உள்ள ஒன்பது துவாரங்களில் ஒன்றின் மூலமாக இந்த சூட்சுமப் பிரயாணம் நிகழும். குருவருளால் இறைப் பகுத்தறிவுடையோர் தான் எந்த துவாரம் மூலமாக எங்கு எப்போது எவ்வகையில் Astral பயணம் செல்ல வேண்டும் என்பதை நன்கு அறிவார்கள்! சூட்சும சரீரங்கள் உடலில் நுழைதல், வெளிப் போதல் அனைத்தும் உறக்க நிலையில்தான் கைகூடும்.. பஸ், டிரெயின், ஏரோப்ளேன் ஆகியவற்றில் பயணம் செய்யும் போது, பலரும் அமர்ந்து கொண்டு தூங்குவதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இது தவறான வழக்கம் ஆகும். ஏனென்றால் நன்கு படுத்த நிலையில் தூங்குகின்ற போதுதான் நம் உடலிலிருந்து ஒன்பதில் சில சூட்சும சரீரங்கள் வெளிச் செல்கின்றன. நாம் விழிப்பதற்கு முன் நம் உடலில் சூட்சும சரீரங்கள் மீண்டும் வந்து சேர வேண்டும்.
இல்லாவிடில் பைத்தியம் பிடித்தாற் போல் மனநிலை ஆகிவிடும். இது  நிகழ்வது நாபிக் கமல கிரந்தி யந்திரம் மூலமாகத்தான். இதனால்தான் உறங்குபவர்களை உலுக்கி எழுப்பக் கூடாது என்று நம் பெரியோர்கள் சொன்னார்கள். உட்கார்ந்த நிலையில் தூங்கினால் சூட்சும சரீரப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படும். ஒன்பது சூட்சும சரீரங்களில் பெரும்பாலும் சில நல்ல புனித நிலைப் படிகளுடன் திகழும். ஆனால் இவை எப்போதும் ஆன்ம ஜோதியின் உட்பகுதியில் புதைந்திருக்கும். வெளியுலகுடன் சூட்சுமப் பயணம் செய்பவையும் ஒரு சில சூட்சும சரீரங்களே! எனவே எந்த ஒரு மனிதனும் இந்த ஒன்பது சூட்சும சரீரங்களினுள் எவ்வகை சூட்சும சரீரத்தில் பெரும்பான்மையான  நேரத்தில் வாழ்கின்றான் என்பதே நாம் அறியவேண்டிய முதல் பாடமாகும். உறக்க நிலைதான் பெரும்பாலும் சூட்சும சரீரப் பயணத்திற்கு உரியது என்றாலும் உயர்ந்த தெய்வீக நிலைகளில் விழிப்பு நிலையில் கூட இதனைத் தக்க முறையில் பயன்படுத்திட முடியும்! ஸ்ரீத்ரைலிங்க சுவாமிகள் இந்த நித்திரா பந்தன யோகத்தில் வல்லவராவார்.
எனவே நல்ல மன ஆரோக்கியத்தையும், உள்ள அமைதியையும் பெற படுத்த நிலை உறக்கமே ஏற்றது. சாய்ந்த நிலையில் உறங்குவதைத் தவிர்த்திடுக! தேவைக்கு மேல் அடிக்கடி உறங்குதலும் தவறே! உறங்குவதற்கென குறித்த நேரத்தைக் கைக் கொள்ள வேண்டும். உறக்க நிலையில் நாம் காணும் கனவு என்பது நம்முடைய சூட்சும சரீரத்தில் நாம் கொள்கின்ற வாழ்க்கையாம். ஓய்வு, கனவு வாழ்வு , Astral Travel என உறக்க நிலைப் பணிகள் நிறைய உண்டு.
தூக்கத்தின் போது நிகழ்வது என்ன? ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது மிகவும் அத்யாவசியமான செய்கையாகும். உடலின் வெளி உறுப்புகளுக்கு ஓய்வு அளிப்பது மட்டுமே தூக்கம் என்று நாம் எண்ணுகின்றோம். தூக்கத்தின் பால் நிறைந்திருக்கும் ஆன்மீக ரகசியங்களும் பல உண்டு. மனிதப் பிறவியில் தன் மனித உடலால் ஆற்ற வேண்டிய கர்மவினைகள் மட்டுமல்லாது தன் சூட்சும சரீரத்தால் மனிதனால் நிறைய காரியங்களை ஆற்ற வேண்டியுள்ளது என்பதை இப்போது உணர்கின்றீர்கள் அல்லவா! உறக்கத்தின் போது தன்னையும் அறியாமல் சூட்சும சரீரத்தின் மூலம் பூலோகத்தின் பல பாகங்களுக்கு மட்டுமின்றி எத்துணையோ கோடி லோகங்களுக்கும், சென்று பல வினைகளைச் செய்கிறான் மனிதன், வினையெனில் தீவினை மட்டும் என எண்ண வேண்டாம். நல்வினையும் உண்டு, தீவினையும் உண்டு, ஆக வினை எனில் அவரவர் நிறைவேற்ற வேண்டிய கடமை என்று பொருள் கொள்ள வேண்டும்.
யார் ஒருவர் உறக்கத்தின் இரகசியங்களை சற்குருவின் அருளால் நன்கு உணர்கின்றார்களோ அவர்களே Astral Travel என்ற பிரபஞ்சப் பயணத்திற்குத் தகுதி உடையவர்கள் ஆகின்றார்கள். அவர்களே சூட்சும பயணம் எனப்படும் Astral Travel –லும் சிறந்து விளங்க முடியும். தற்காலத்தில், பூர்வஜென்மப் புண்யத்தால் பலரும் சில மந்திரங்களை ஜபித்து சிறிய சித்திகளைப் பெற்றுத் தக்க சற்குருவின்றி Astral Travel செய்வதால் மன நோய்களுக்கு ஆளாகின்றனர். இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், அனைத்தையும் தக்க சற்குரு மூலம் பெற்றால்தான் தெய்வீக வாழ்வில் சிறந்து விளங்க முடியும் என்பதேயாம்.
இல்லையெனில் பல சிறிய சித்திகளில் லயப்பட்டு, பேராசை உண்டாகி சித்திகளைத் தவறான முறையில் பயன்படுத்தி பல கர்மவினைகளின் பலனால் மன வியாதிகளும், முதுகுத் தண்டில் கொடிய நோய்களும், வாழ்வில் பெரும் நஷ்டங்களும் ஏற்பட்டு விடும். எனவே நீங்கள் உறக்கத்திற்குச் செல்லும் போதே பலவித சூட்சுமப் பிரயாணங்களையும் உங்களையும் அறியாமல் மேற்கொள்கின்றீர்கள் என்பதை நன்கு உணருங்கள்! அதனால்தான் உறக்கத்திற்கு முன் நாம் செய்ய வேண்டிய சில பூஜை முறைகளை நம் பெரியோர்கள் வகுத்துள்ளார்கள். வைச்வதேவம் எனப்படும் இரவு நேர, ஹோமம், ராத்திரி சூக்தம் எனப்படும் மந்திரங்கள், அரிச்சந்திர மந்திரத் துதிகள் எனப் பலவகையான தியான யோக முறைகளும் இரவிற்கென உண்டு. தற்போதைய விஞ்ஞானமய உலகில் யந்திர தியான வாழ்வில் இரவில் பாய், தலையணையை விரித்தவுடனேயே பலரும் தூங்க ஆரம்பித்து விடுகிறார்கள், கேட்டால் என்ன சொல்வார்கள் அசதி, களைப்பு, அயர்வு, வேறு என்ன செய்வது என்ற பதிலையே பெரும்பாலும் பெறுகின்றோம். பின் எப்படி ஐயா உறக்கத்தின் ரகசியத்தை உணர முடியும்?
உறங்கும் முன் ஓர் உத்தம தியானமாம்!
உறக்க நேரம் என்பது மிகவும் புனிதமான நேரம். இரவில் தான் இக்கலியுலகில் பல வன்முறைகளும், பலாத்காரங்களும், முறையற்ற காம, குரோத வன்முறைகளும் நிகழ்ந்து உலகின் பரவெளியில் தீய எண்ணங்களைப் பரப்பி விடுகின்றன. எனவேதான் நாம் இரவில் வெளிச் செல்லலாகாது! இரவுப் பயணங்களையும் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு மனிதன் தான் தெய்வீகத்தில் திறம்பட வாழ்ந்து, தெய்வீகத்திற்காகத் தியாக வாழ்வினை மேற்கொள்ள வேண்டுமோ, அவனே தன்னை சினிமா, மது, காமம் போன்று தீயசக்திகளுக்கு ஆட்படுத்திக் கொண்டு உலக விண் பரவெளியையே இரவில் மாசுபடுத்தி விடுகின்றான் எனில் எத்தகைய கொடுமை இது!
பெறுதற்கரிய மானுடப் பிறவியையும் பெற்று இத்தகைய இழிச் செயலுக்கு ஆளாகிவிடுகிறான். ஏனிந்த இழிநிலை! சற்றே சிந்தித்துச் செயல்படுங்கள்!  இரவில் நன்கு ஓய்வு கொண்டு உறங்கினால் கூட மீண்டும் மறுநாள் காலையில் பலருக்கும் உறக்கம் வருவதைப் பார்த்திருப்பீர்கள். இதற்குக் காரணம் என்ன? என்னதான் நல்ல உறக்கம் மூலமாக வெளி உடலுக்கு (External Body) ஓய்வு கிட்டினும், மனிதன் பலவிதமான, பணப் பிரச்னை, குடும்பப் பிரச்னை, இல்லத்தில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள், அலுவலகப் பிரச்னைகள் என அடிக்கடி பலவிதமான வேதனைகளுக்குள்ளாவதால், இது சம்பந்தப்பட்ட சூட்சும சரீரங்கள் மிகவும் வெம்மையாகி விடுகின்றன.
சூட்சும சரீரத்திற்குக் களைப்பு என்ற ஒன்று இல்லைதான். எனினும் நன்கு புரிவதற்காக இவ்வாறு உரைக்கின்றோம். எனவே, என்னதான் வெளியுடல் ஓய்வு எடுத்துக் கொண்டாலும் அவன் சூட்சும சரீரம் அசதியடைந்து விடுகின்றது. காரணம் சூட்சும உடலானது பலவிதமான லௌகீகமான எண்ணங்களால் ஆன்மச் சூடு அடைந்து அவதியுற்று உடலை விட்டு வெளிச் சென்று நல்ல தெய்வீகமான இடங்களுக்குச் சென்று தன்னுடைய ஆன்ம சக்தியைப் புதுப்பித்துக் கொள்கிறது.
ஒரு மனிதன் தன் வீட்டில் பூஜைக்கென தனி இடம் ஒதுக்கி முறையான பூஜைகளைச் செய்து வருவானேயாகில் அந்த சூட்சும சரீரமானது வீட்டிற்கு உள்ளேயே பூஜைப் பகுதியில் சற்று உறைந்து மீண்டும் உடலுக்கு வந்து சேரும். இது எல்லா மனிதர்களின் உடலிலும் நடக்கும் சாதாரண நிகழ்ச்சியாகும். இதனை நூற்றுக்கு 99.99% மக்கள் அறியாதிருப்பதால் இதை நாம் எடுத்துரைக்கும் போது, இது பெரும் விந்தையாகவும் தோன்றும், ஒன்பது வித சூட்சும சரீரங்களும் பொதுவாக எப்போதும் தெய்வீக நிலையில் திளைக்கவே விரும்புகின்றன என்று அறிந்தோமல்லவா! நமக்கு எவ்விதப் பிரச்னைகள் இருந்தாலும், கோயிலுக்குச் சென்று வழிபடுதலால் நமக்கு நல்ல அமைதி கிட்டுகிறது தானே எவ்வாறு?
நம் வெளி உடலை விட நம் சூட்சும சீரரங்கள் தாம் தெய்வத்தையும், தெய்வீகத்தையும் கண்டு ஆனந்தித்து மன அமைதி பெறுகின்றன. உள்ளிருக்கும் ஆனந்தமே வெளியுடலுக்கு அமைதியையும், ஆனந்தத்தையும் அளிக்கின்றது. எனவே தான் எப்போதுமே புனித எண்ணமுடன் திகழ நாம் முயற்சித்தல் வேண்டும். கோயிலில்தான் சூட்சும சரீரங்கள் ஆன்ம சக்தியைப் பெற்று புத்துணர்வு பெறுகின்றன. ஆனால், “இவ்வளவு வாழ்க்கைப் பிரச்னைகளுடன் இது இயலுமா? ஊர்ப்பட்ட துன்பங்களின் ஊடே நான் எவ்வாறு நல்ல எண்ணத்துடன், இறையுணர்வுடன் வாழ இயலும், நற்காரியங்களைச் செய்ய முடியும் எனக் கேட்கத் தோன்றுகின்றதல்லவா?”
கடவுளைப் பற்றிய எண்ணமே தியானம் என்னும் யோகத்தின் முதற்படி என்று முதலில் உணர வேண்டும். ஆனால் பிரச்னைகளுக்கிடையே தியானம் செய்வது மிகவும் கடினமே., அதற்காகத்தான் உடலால் ஆற்ற வேண்டிய பல நற்காரியங்களையும் இறைப்பணிகளையும் நம் பெரியோர்கள் நமக்கு வகுத்துள்ளனர். ஆலயங்களில் கோலமிடுதல், விளக்கேற்றுதல், அன்னதானம், சத்காரியங்களைச் செய்தல், தானே பூக்களைத் தொடுத்து, ஆலயங்களில் அளித்தல், கோசாலைகளில் பசுக்களை நீராட்டி மஞ்சள் குங்குமமிட்டுப் பூஜித்தல், கோயில்களில் குப்பை, கூளங்களைத் துப்புரவு செய்தல் போன்ற நற்காரியங்களைச் செய்யும் போது உங்கள் மனம் இப்பிரச்னைகளினின்று விடுதலை பெறுவதோடு மட்டுமின்றி, இத்தகைய நற்காரியங்களின் பலன்களால் உங்கள் பிரச்னைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும்.
இத்தகைய சமுதாய இறைப்பணிகளின் பலாபலன்களால் தான் சூட்சும சரீரங்களைச் சுற்றியுள்ள கர்மவினைப் பூச்சுகள் கரைவுற்று ஆன்ம சக்தி சிறிது சிறிதாக வெளிப்பட்டுக் காரிய சித்தி கிட்டுவதோடு துன்பச் சுமைகளுக்கும் தீர்கமான தீர்வும் ஏற்படும். மேலும் தியானம் என்று அமரும் போது, மனம் தனில் பெரும்பாலும் தீய எண்ணங்களே முதலில் குழுமி நிற்கும். ஆனால் மேற்கண்ட சரீரப் பணிக்கான நற்காரியங்களில் மனம் ஒருமித்துச் செயல்படுவதால் சிறந்த யோகப் பயிற்சியாகவும் இது மிளிர்கிறது. இதுவே சிறந்த விழிப்பு நிலை தியானம் ஆகிறது. எனவே தான் சமுதாய இறைப் பணிகளே கலியுகத்தின் சிறந்த தியானப் பயிற்சியாக அமைவதாக சித்புருஷர்கள் வலியுறுத்துகின்றார்கள்.
இத்தகைய சமுதாயப் பணியில் மனிதன் தன்னை அர்ப்பணித்துத் தியாக வாழ்வில் ஈடுபடும் போதுதான் அவனுக்கு ஆரம்ப தியானத்தில் நிலைக்கும் தன்மை கிட்டுகிறது. ஒருவன் 10 வருடங்களுக்கு மேலாக இத்தகைய சமுதாய இறைப்பணிகளில் ஈடுபட்டுப் பின்னர் தியானம் என ஒரு மரப்பலகையிலோ, தர்ப்பைப்பாயிலோ அமர்ந்து தியானம் செய்ய ஆரம்பிப்பானாயின் அடுத்த நிமிடமே அவனுக்கு மனம் ஒருமித்து, ஆரம்ப யோக இறைநிலை கூடுவதை கண்கூடாகக் காணலாம். ஆனால் இதற்காகத்தான் தக்க சற்குருவின் பரிபூரண ஆசியால், குருகுலவாசமாக அவர் இயக்கும் சத்சங்கத்தில், சத்சங்கப் பணிகளான, ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி, அன்னதானம் போன்ற பலவிதமான திருப்பணிகளைச் செய்வதால்தான் அவனால் மன அமைதி பெற இயலும். ஒருவன் தனித்து எவ்வளவுதான் தான, தர்மம் புண்ணிய காரியங்களைச் செய்திடினும், சத்சங்கத்தில் பெறும் பெரும் பலனை தனித்துப் பரிபூரணமாக அடைய முடியாது. மேலும் தனித்துச் செய்யும் பணியாற் கிட்டும் புண்ணிய சக்தி முறையாகப் பயன்படுத்தப்படாவிடில் அகம்பாவமும், ஆணவமும் தான் பெருகும்.
தியாகத்தின் பரிசே அரசியல் பிறவி!
‘இவ்வளவு அக்கிரமங்கள் செய்தும், அவர்கள் நன்கு வாழ்கின்றார்களே’, எனப் பலரும் எண்ணும் நிலையில் வாழ்கின்ற சிலர் நம்மிடையே இருப்பார்கள். இதற்குக் காரணம் என்னவெனில், ஒருவர் செய்யும் பாவ, புண்ணியச் செயல்களின் விளைவுகள் தனித்தனியே பலனை அளிப்பதில்லை. விதி நியதிப்படி அப்பலாபலன்கள் யாவும் இங்கும் அங்குமாக, பலவித வழிமுறைகளில் இணையாக செயல்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பல நாடுகளில் சுதந்திரத்திற்குப் பாடுபட்ட பலரும் தன் தியாகமயமான வாழ்வு சமுதாய மக்களால் சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லையே, அதற்குரித்தான வெகுமதி கிட்டவில்லையே என்று எண்ணி ஏங்கி இறக்கின்றனர்!
சுயநலமன்றிச் சமுதாயப் பணிகளை ஆற்றுவோரும் கூடத் தம்மை, தம்முடைய தியாகத்தை அரசாங்கமும், மக்களும் உணர்ந்து மதித்து அங்கீகரித்து, ஆதரவும், பொருளும், பட்டமும், பரிசும் தரவில்லை என்று ஏங்குவதும் உண்டு. எனவேதான் தம்முடைய தியாகமய வாழ்விற்குப் பரிசாக ஏதோ ஒரு ஜென்மத்தில் அரசியற் பதவிகளைப் பெறுகின்றனர். எனவே இன்று பல நாடுகளின் தலைவர்களாக, மந்திரிகளாக இருப்போர் யாவரும் பூர்வ ஜென்ம தியாகமய வாழ்வின் புண்ய சக்தியையே பதவி போகமாக அனுபவிக்கின்றனர். ஒரு பிறவியில் தியாக மனப்பாங்கில் இவ்வாறு வாழ்ந்து இறந்தவர்களே ஏதோ ஒரு பிறவியில் அமைச்சர்களாகவும், நாட்டின் தலைவர்களாகவும், பேரவை, சட்டமன்ற உறுப்பினர்களாகவும் ஆகின்றனர்.
எந்தத் தியாகமயமான வாழ்விற்குப் பரிசினையும், பொருளையும் எதிர்பார்த்தனரோ, அவர்களே அரசாங்க அவைகளிலும், அமைச்சர்களாயும் உள்ளனர் என்பது பலரும் அறியாத பிறவி ரகசிய காரண காரியங்களாகும். ஆனால் இத்தகைய பதவி நிலை பெற்றோர் இவை யாவும் தன் பூர்வ ஜென்ம தியாக வாழ்வில் கிட்டியது என்பதை எண்ணி நேர்மையான முறையில் வாழ்ந்தால் தான் கர்மவினைகளை மேலும் சேர்த்துக் கொள்ளாமல் வாழ இயலும்.
எனவே, பிறர் வாழ்வைப் பற்றியும் இவ்வளவு அதர்மங்கள் செய்தும் நன்கு வசதியுடன் இருக்கின்றார்களே என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். அவரவர் கர்மவினைக்கேற்ப பதவி, வசதி, குடும்ப வாழ்வு அமைகிறது. மேலும் பொது மக்களுக்குச் சேவை செய்யும் இறைவாய்ப்பை இறைவனே மனமுவந்து அளிக்கும் போது, அதில் எவ்வித அதர்மமும், அநீதியும், லஞ்ச லாவண்ய எண்ணங்களும், குடிகொள்ளாது தார்மீக முறையில் புனித எண்ணத்துடன் வாழ்ந்து சேவை செய்தால்தான் நல்ல பலன்களைப் பெறலாம். இல்லையெனில் அதர்மமான முறையில் வாழ்ந்தால் பல கொடிய பிறவிகளையும் பெற்றேயாக வேண்டும் என்பதையும் உணர வேண்டும்.  எனவே, பணம் சேர்வதோ, அனைத்து வசதிகளையும் பெற்று வாழ்வதோ அவரவர்கள் பூர்வஜென்மப் பலனே என்பதை அறிந்து தெளிந்திட வேண்டும். ஆனால், இப்பிறவியில் நல்வசதியையும், செல்வத்தையும் பெற்று விட்டு அதனை அதர்ம முறையில் செலவழிப்பார்களேயானால் அதற்குரிய தண்டனையை அவர்கள் நிச்சயம் பெற்றுத்தான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்தால் தான் பிறர்  அவ்வாறு உள்ளனரே, இப்படி வாழ்கின்றனரே என்ற எண்ணம் எழாது. அவரவர்க்கு ஏற்பட்ட வாழ்வை அவரவருடைய கர்மவினையின் பலன் என்பதை நாம் அனைவரும் நன்கு உணர வேண்டும்.
உறங்கும் முன் ஒளிரும் (இறைப்) பகுத்தறிவு!
உறக்கத்தின் போது நிகழும் விந்தைகள் ஏராளம், ஏராளம்! ஒருவர் பகலில் செய்யும் செயல்களின் விளைவே இரவு வாழ்வின் அம்சங்களுக்கு ஓரளவு வழிகோலுகின்றது. மேலும் உறக்கத்திற்கு முன் உள்ள யோக நேரத்திற்கு விசார சுவேத தியான காலம் என்று பெயர். ஒவ்வொருவரும், அன்றைய உறக்கத்திற்கு முன், தன்னுடைய அன்றைய வாழ்க்கைக் காரியங்களை மனதால் அசை போட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான் அன்றுதான் செய்த நிறைகுறைகளை ஆராய்ந்து குறைகளை நீக்கி மீண்டும் தொடரா வண்ணம் தன்னைத் தானே தூய்மைப்படுத்திக் கொண்டு மேன்மையுர இயலும், நல்ல ஆன்மவிசார சக்தியும் கிட்டும். அன்று நடந்ததைக் கிண்டுவதால் என்ன பயன் என்று கேட்கலாம். ஒருவர் தினமும் தன்னை விசார தியான நிலைக்குக் கட்டாயமாக உட்படுத்திக் கொள்ள வேண்டும். உச்சி முதல் உள்ளங்கால் வரை பிழைகளை, தீய ஒழுக்கங்களை ஊற வைத்துக் கொண்டு, தியானம் மேற்கொண்டால் தியானநிலை எவ்வாறு கைகூடும்?

உறங்குவற்கு முன்
சில உன்னத காட்சிகள்

படுத்தவுடனேயே உறங்குதல் எனும் வழக்கத்தை விடுத்து, உறங்கும் முன்னர் தியான நேரம் என்று சிறிது நேரம் வைத்துக் கொண்டு, அப்போது குலதெய்வம், இஷ்ட தெய்வம், சற்குரு தியானம், தெய்வ மூர்த்தி வழிபாடு செய்தபின், அன்றைய தினம் தான் செய்த அனைத்து காரியங்களையும் சிந்தித்து குறைகளை நீக்கி, பின் இரவு நேர தேவதைகளையும், சுவப்ன தேவியையும் துதித்து, ஜேஷ்டா தேவிக்கான பிரார்த்தனையுடன் உறங்க ஆரம்பிக்க வேண்டும். இதற்குக் குறைந்தது அரைமணி நேரம் ஆகலாம். இந்த இரவு நேர பூஜையை நன்முறையில் செய்தால்தான் தெய்வீக வாழ்வை அடையும் முதற்படியில் ஏறமுடியும்.
உண்டோம், படுத்தோம், உறங்கினோம் என்றால் யாது பயன்? நல்ல தியானத்துடன் உங்கள் உறக்கத்தை துவங்குவீர்களானால் இவ்வாறு ஆரோக்யமாக 3 மணி நேரம் தூங்கினால் கூட 6 மணி நேர சாதாரண உறக்கத்திற்குச் சமம் ஆகிவிடுகின்றது! எனவே, சாதாரண உறக்கம் கொண்டு எட்டு மணி நேரம், 10 மணி நேரம் என்று உறங்குவதை விட 3 மணி நேரம் ஆரோக்யமாக உறங்கலாமல்லவா! மேற் கண்ட விசார சுவதே தியானத்திற்கு உறக்கத்தின் பால் நிகழும் தெய்வீக இரகசியங்களை தக்க சற்குரு மூலம் மட்டுமே பெற இயலும், நம் குருமங்கள கந்தர்வா R.V வெங்கடராமன் அவர்கள் உறக்கத்தின் தெய்வீக இரகசியம் பற்றிப் பல புராணங்களாக விரியும் அளவிற்கு விளக்கியுள்ளார்கள்.
ஆனால், அவற்றையெல்லாம் எடுத்துரைப்பதென்றால், பல சிறப்பிதழ்களை வெளியிட வேண்டி வரும். தக்க சற்குருவைப் பெற்றோமேயானால் எளிதில் கடைத்தேறலாம் என்பதை நாம் உணர வேண்டியதாகும். அதுதானே நாம் பெற்றுள்ள இம்மானுடப் பிறவியின் பெறுதற்கரிய பிறவிப் பயனுமாம்! உறக்கத்தின் போது சூட்சும சரீரங்கள் ஒன்றோ, இரண்டோ தம் பயணத்திற்காக  நவதுவாரங்களில் எதை வேண்டுமாயினும் தேர்ந்தெடுக்கும். ஆனால் உத்தம தெய்வீக நிலையடைந்தோர், எந்த துவாரம் வழியே எந்த சூட்சும சரீரம் சென்று யாருக்கு அருள்புரிய வேண்டும் என்பதை அறிந்திருப்பார்கள். எனவே விழிப்பு நிலை, கனவு நிலை, ஸுஷுப்தி நிலை மூலமும் அருள்பாலிக்கும் சித்புருஷர்களும், மஹான்களும், யோகியரும், ஞானியரும் நிறைய உண்டு. பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை அரவிந்த மாதா இத்தகைய தெய்வீக சூட்சும ஜோதியை அருள்வழி முறையில் இன்றும் அருள்பாலித்து பல்லாயிரக் கணக்கானோரை உலகெங்கும் இறைப்பெரும் வழியில் வாழவைத்துக் கொண்டு தான் உள்ளார்கள்.
உறங்கும் போது வெம்மையைத் தவிர்த்திட, நல்ல குளிர்ச்சியைத் தரும் கோரைப் பாயில் படுப்பதும், இயன்றவரையில், மா, பலா போன்ற மரப் பலகைகளைத் தலைக்கு வைத்தோ, அல்லது இலவம் பஞ்சால் ஆன தலையணை வைத்து உறங்குவதும், ஆரோக்யமான உறக்கத்தை அளிக்கும். ஆரோக்யமான உறக்கம் என்றால் நிம்மதியான உறக்கம் மட்டுமல்ல. சூட்சும சரீரம் செல்கின்ற, சிறப்பான வழியில் நன்முறையில் கர்மவினை கழிந்து, நற்காரியங்களை உறக்க நேரத்திலும் நிகழ்த்தும் நல்உறக்க நிலை கொண்டதே ஆரோக்யமான உறக்கமாகும்.
கனவுச் சீலைக் கொடி எனும் அற்புத மூலிகையைக் கால் கட்டை விரலில் கட்டிக் கொண்டு யோகியர்கள் சீருஷ யோக நித்திரை பயிலுவர். தக்கக் கட்டு மந்திரங்களுடன் சற்குருவின் அறிவுரையோடு இம்மூலிகையைப் பயன்படுத்துவார்களாயின், ஆரோக்யமான உறக்கத்திற்கு இது வழிவகுக்கும். Astral Travel பயணத்திற்கு இது நல்வழியில் உதவும். பிரயாணம் செய்யும் பொழுதோ, அலுவலகத்திலோ எங்குமே எப்போதும் உட்கார்ந்து தூங்குவதையும் தவிர்க்க வேண்டும்! இதற்காகவே ஏதாவது மந்திரத்தை உரு ஏற்பது நலம்! இயந்திர கதியில் வாழும் வாழ்வில் இது கைகூடுமா என எண்ணாதீர்கள். சூட்சும சரீர இயக்கமாவது நன்முறையில் இயங்க அதாவது, நம் மனித உடலிலுள்ள 9 சூட்சும சரீரங்கள் செம்மையான நிலையிலேயே இயங்க படுத்த நிலை உறக்கமே ஏற்றது.
மாறாக அமர்ந்த நிலையில் நீங்கள் உறங்க முயலும் போது இச்சூட்சும சரீர பயணம் சரிவர இயங்காமையால், தலைவலியும், தலையில் நீர் கொள்வதும், பலவிதக் கபால நோய்கள் ஏற்படுகின்றன. Migraine என்னும் ஒற்றைத் தலைவலி ஏற்பட இதுவே காரணமாகும். எனவே உறக்கத்தின் பின்னணியில் அமைந்துள்ள இறை இரகசியங்கள் சொல்லில் அடங்கா! உறக்கத்தின் தெய்வ இரகசியங்களை நீங்கள் அறிவீர்களேயானால் பிறப்பு/இறப்பு ரகசியங்கள் எளிதில் உங்களுக்கு புலப்படும். இதற்கும் சற்குருவின் கருணைக் கடாட்சம் தேவையே!

ஸ்ரீஅசாத்யசாதக சரபேஸ்வரர்

நற்காரியங்கள் கைகூட வேண்டுமா? கைகூட வைப்பவர் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வரர் எங்கு அருள்பாலிக்கின்றா? மதுரை ஸ்ரீமீனாட்சி ஆலய ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாக! நாம் நினைப்பதைப் போல சரபேஸ்வரர் அவதாரத்தில் நாம் வழிபடுவது ஒரேயொரு ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை மட்டுமல்ல! எவ்வாறு முருகப் பெருமான், கார்த்திகேயராகவும், சுப்ரமண்யராகவும், பழநி தண்டாயுதபாணியாகவும் பல வடிவங்களில் அருள்பாலிக்கின்றாரோ, அதே போல ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி எத்தனையோ அவதார மூர்த்தங்களாக பல்வகை ரூபங்களில் நமக்கு அருள் கூட்டுகின்றார். ஏனென்றால் ஸ்ரீநரசிம்மரைச் சாந்தப்படுத்துவதற்காக மட்டுமே ஸ்ரீசரபேஸ்வர அவதாரம் ஏற்பட்டது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஸ்ரீசரபேஸ்வர அவதார மகிமைகளில் ஒன்றே, ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உக்கிரத்தைத் தணிப்பதாகும்.
இதுவன்றி இதற்கு எத்தனையோ காரண கரியங்களுமுண்டு. ஏனென்றால், கலியுகத்தில் வளர்ந்து வருகின்ற வன்முறைச் செயல்கள், முறையற்ற காமக் குரோத, பெரும் குற்றங்கள், பொய்மை, ஏமாற்று, சூது, மது, லாட்டரி சீட்டு, பித்தலாட்டம் போன்ற பலவிதமான பெரும் கொடுமைகளிலிருந்து நல்லோர்களைக் காப்பதற்காகவும் அருட்பெரும் சக்தி நிறைந்தவராகவும் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி விளங்குகின்றார். எனவே, கலியுகத்தின் கண் கண்ட மூர்த்தியாக, பிரத்யட்ச தெய்வமாக விளங்குவதற்காகவும் ஸ்ரீசரபேஸ்வர அவதாரம் ஏற்பட்டது எனச் சித்புருஷர்கள் அருள்கின்றார்கள். ஸ்ரீநரசிம்ம சுவாமியின் உக்ரங்களிலும் (கோபாவேசம்) பல்வகை உண்டு. ஏதோ ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சினந்து உக்ரதாண்டவம் ஆடினார் என்று மட்டும் தானே நாம் உணர்கின்றோம். உண்மையில் ஸ்ரீ உக்ர நரசிம்மர் எத்தனையோ விதமான அக்னிரூபக் கோலங்களிலும், ஆவேச உக்ர தாண்டவ நிலைகளிலும் இந்த பிரபஞ்சத்தை வலம் வந்த போது, அந்தந்தக் கோலத்தில் அவரைச் சாந்தப்படுத்துவதற்காக ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியும் பல அவதார ரூபங்களை வெவ்வேறு வகைகளில் மேற்கொண்டார். இவ்வாறாகத் தான் இன்றைக்கும் பல ஆலயங்களிலும் வெவ்வேறு வடிவுகளில் தூண்களில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி அருள் பாலிக்கின்றார்.
கடந்த சில இதழ்களாக திருஅண்ணாமலையில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தியின் அவதார மகிமையைப் பற்றி நாம் அளித்திருந்தோம் அல்லவா! இப்போது இத்தொடரில் நாம் தொடர்ந்து காண இருப்பது மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தி என்ற திருநாமம் கொண்ட சரபேஸ்வரர் ஆவார். ஒவ்வொரு ஆலயத்திலும், ஒவ்வொரு தூணிலும் நிறைந்திருக்கின்ற தேவாதி தேவ, தெய்வ மூர்த்திகள் மற்றும் சித்புருஷர்கள், மஹரிஷிகளின், யந்திரங்களின் கிரந்தங்களில் நிறைய விளக்கங்கள் கிடைக்கின்றன. இவற்றையெல்லாம் புராணங்களாக வடித்தால் இப்பிரபஞ்சமே நிறைந்து விடும்!
மேலும் அனைத்தையும் புராணங்களாக வடித்தாலும் மனித சமுதாயம் இவற்றை மறைத்து விடும் அல்லது மறந்தும் விடும்! ஏனென்றால் ஆயிரக்கணக்கான புராணங்கள் இன்றைக்கு பாரத நாட்டிலே பொலிந்து கிடக்க, அவை அனைத்தையுமா மக்கள் போற்றித் துதித்து உணர்ந்து வழிபடுகின்றார்கள், சொல்லுங்கள் பார்க்கலாம்! ஆங்காங்கே சில இடங்களில் சில புராண வைபவங்கள் ஸ்ரீராமநவமி போன்ற அந்தந்த விஷேச நாட்களில் மட்டும் நினைவிற்கு வரும். எத்தனையோ கோடி தெய்வ மூர்த்திகளுடைய அவதார மகிமைகளை, அதிலும் குறிப்பாக ஸ்ரீசரபேஸ்வரருடைய பல்வேறு வகையான அவதார மூர்த்தங்களின் மஹிமைகளைப் பற்றி நிறைய விளக்கங்கள் சித்புருஷர்களின் பல கிரந்தங்களிலும் காணப்படுகின்றன. இவற்றைத் தக்க சற்குருவின் வாய்மொழியாகக் கேட்டு உணர்தல்தான் சிறப்புடையதாம்.
ஸ்ரீநரசிம்மருடைய உக்ரதாண்டவக் கோலங்களில் ஒன்றுதான் பூர்வாக்னி உக்ர தாண்டவம் ஆகும். ஸ்ரீநரசிம்மருடைய அவதார மகிமைகளுள் ஒன்றுதான் எத்தனையோ ஆனந்தத் தாண்டவத் திருக்காட்சிகளை இந்தப் பிரபஞ்சத்திற்கு உணர்த்தியதும் ஆகும். நாம் ஏற்கனவே பன்முறை விளக்கியுள்ளது போல ஸ்ரீநரசிம்ம மூர்த்தி பிரபஞ்சத்தின் கோடானு கோடி லோகங்களிலும் பல்வேறு நிலைகளிலான ஆனந்தத் திருநடனங்களைப் புரிந்தவராய் நடனம் ஆடி உலா வந்த போது, அரக்க சாம்ராஜ்யங்களாக விளங்கி வேதனையில் வாடிய எத்தனையோ கோடி லோகங்களுக்கு நன்னிலை கிட்டியது. அதாவது ஆங்காங்கே பல லோகங்களில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் திருப்பாதங்கள் பட்டதுமே ஆங்கே மண்டிக் கிடந்த அரக்க குணங்களும், தீய குணங்களும், கொடிய சக்திகளும் பஸ்மம் ஆகின. எனவே, ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் அவதாரத்தால் நன்னிலைக்கு மீண்ட லோகங்கள் எத்தனையோ உண்டு.
இவையெல்லாம் அரக்கத்தனங்களின் உச்சமாக விளங்கி, “யார் வந்து இந்த லோகங்களின் ஜீவன்களை மீட்பாரோ, எவர் வந்து நம்மைக் காப்பாரோ”, என்று பல கோடி ஜீவன்கள் கதறி வெந்து புலம்பின! ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் திருப்பாதப் படிவால் ராட்சச குணங்களும், அம்சங்களும் பஸ்பமாகி அழிந்திடவே இந்த லோக ஜீவன்கள் யாவரும் நல்வாழ்வைப் பெற்றனர். இந்த லோகங்களும் மீண்டும் சுபிட்ச செழிப்பிற் கொழிக்கலாயின! ஆனால் இந்த அக்னி தாண்டவத்தோடு ஸ்ரீநரசிம்மப் பெருமான் உலா வந்த போது அவர்தம் ஆகர்ஷண அக்னி சக்தியைத் தாங்க இயலாமல் பல பூலோகங்கள் தவித்தன.. நாம் இருப்பது மட்டுமே ஒரே ஒரு பூலோகமாக எண்ணி விடாதீர்கள்! இதனைப் போன்று பூலோகங்கள் எத்தனையோ உண்டு.
இவ்வாறாக ஒவ்வொரு பூலோகத்திலும் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு வகை யுகங்கள் இன்றைக்கும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. நமக்குரிய பூலோகத்தில் இப்போது கலியுகம் நிகழ்கின்றது. நம் பூலோகத்திலிருந்து நூறாயிரங் கோடிக் கோடி சதுரானன கோடி மைல்களுக்கு அப்பால் விளங்குகின்ற இன்னுமொரு பூலோகத்தில் இப்போது தான் கிருதயுகம் தொடங்கியிருக்கின்றது. அதாவது நம் ஆயுர்தேவியின் அவதார மகிமை அங்கு இப்போது கோலோச்சி விளங்குகின்றது! மற்றுமொரு பூலோகத்தில் ராமாவதாரம் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது! இவற்றையெல்லாம் குருவாய் மொழியாக அளிக்கின்ற காலங்கடந்த சஞ்சீவியாய் வாழும் சித்புருஷர்களின் மகிமை தான் என்னே!

ஸ்ரீஅசாத்யசாதக சரபேஸ்வர மூர்த்தி
மதுரை

அசாத்ய சாதகர் வந்தார்!
பூர்வாக்னி உக்ர லோகத் தாண்டவத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி பூலோகத்தில் வலம் வந்த போது அவருடைய உக்ரப் பிரவாகத்தைத் தணித்துச் சாந்தப்படுத்துவதற்காக ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி, ஸ்ரீஅசாத்ய சாதக விஜய சரபேஸ்வரராக புதுக்கோலம் பூண்டு நிரஞ்சனா நேத்ர நோக்கு என்ற அற்புதமான நேத்ர தீட்சையை எழுப்பிடவே, அதன் அருட்பெரும் சீதள ஜோதி வெள்ளத்தால் ஸ்ரீநரசிம்மருடைய உக்ரம் தணிந்து, அவருடைய அக்னிப் பிழம்புத் திருவடிகளும் பூமியில் படிந்தன. ஆனால் நரசிம்ம மூர்த்தியுடைய கனத்தைத் தாங்க இயலாததால் பூமா தேவி திகைக்கலானாள்.

ஒருபுறம் ஸ்ரீநரசிம்மருடைய பொற்பாதங்கள் தம்மீது படிந்ததே என்ற ஆனந்தத்தைப் பூமாதேவி பெற்றாலும், பூமியின் கனம் தாங்காமல் இருப்பின் தேவியால் என்ன செய்ய முடியும்? பூலோகமே ஆட்டம் கொண்டு விடும் அல்லவா? என் செய்வது? ஸ்ரீபூமாதேவி ஸ்ரீசரபேஸ்வரரை வேண்டிடவே, சரபேஸ்வர மூர்த்தியும் தம்முடைய அருட்பெரும் நிரஞ்சனா நேத்ர நோக்கினால் ஒளிப்பெரு வெள்ளத்தைப் பாய்ச்சிடவும், இதனால் ரீங்கார, ஓங்கார பீஜாட்சரங்கள் தோன்றி, அவை சாகரச் சுழற் சக்கரங்களாய்ச் சுழன்று, காணுதற்கரிய நிரஞ்சனா சுழற்சிகளை ஏற்படுத்தி ஸ்ரீநரசிம்ம மூர்த்தியுடைய உக்ரதாண்டவ உக்ர சக்தியைத் தணித்தது. அப்போது ஸ்ரீசரபேஸ்வரர் ஏற்ற கோலம்தான் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வரர் மூர்த்தம் ஆகும். இந்த ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்திதான் நிரஞ்சன ஜோதிப் பொலிவுடன் மதுரை ஸ்ரீமீனாட்சி ஆலயத் தூணில் இன்றும் அருள்பாலிக்கின்றார். காணுதற்கரிய மூர்த்தி! கண் கொள்ளாக் காட்சிதரும் திவ்யமூர்த்தி! இன்றைக்குப் பல ஆலயங்களிலும் பல மூர்த்தங்கள் புது வடிவு பெற்று, மானுடப் பிரதிஷ்டையாக விளங்கினாலும், எந்த தெய்வ மூர்த்தி எந்த இடத்தில் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பது இறை ஆணையாகவே, இறை நியதியாகவே இன்றைக்கும் விளங்குகின்றது. அதிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஸ்ரீசெல்வ கணபதியாகவோ, சொல்காத்தான் பெருமாளாகவோ தெய்வமூர்த்திகள் விளங்கி, அவை புது மூர்த்தங்களாக அதே இடத்தில் வேறு முறையில் இருப்பினும் கூட எத்தனையோ கோடி யுகங்களுக்கு முன்னால் அவ்விடத்தில் அத்தகைய தெய்வ மூர்த்திகள் எழுந்தருளியிருந்து பின் பூமியில் மறைந்து தக்கத் தருணத்தில் இவ்வகைப் புதுமூர்த்தங்களாக வெளிவர வேண்டும் என்ற இறை நியதியாக விளங்குகின்றது என்ற தெய்வீகப் பேருண்மையை உணர்ந்தாக வேண்டும். ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வரரைத் தரிசிக்கும் முறைகளும், பலாபலன்களும் நிறைய உண்டு.

சரபச் சுழற்சி மகாசக்தி!

சுழற்சியில் சுற்றும் கலியுகமே
மாயாச் சூழலில் சிக்கி மீளாதென
ஓயாதொளிரும் அசாத்ய சாதனாய்
சரபச் சிவனாரின் சுந்தர வடிவுடைக்
கோலம் கொண்டானே கொன்றைச் செம்மல்
கோலமிகு சோம சுந்தரன் கோயிற்களத்தில்!  - சரப கல்ப சூத்திரம்

.... என சித்தர்களின் கிரந்தங்களில் கலியுகத்தில் ஸ்ரீசரபத் திருஅருளைப் பற்றி வடித்திருக்கின்றனர். கலியுகத்தில் இயந்திர கதியில் வாழ்கின்ற நாம், விஞ்ஞானமயக் கருவிகளை, சுழல்கின்ற கருவிகளைத் தானே நாம் பெரும்பான்மையாக பயன்படுத்துகின்றோம்., Refrigerator, Washing Machine, A/C Machine  என மின்சார சாதனங்கள் அனைத்திலும் மின்சார இயந்திரங்கள் சுழன்று, மோட்டார் சுழன்று சுழன்று தானே இன்றைய மனித வாழ்க்கைக்குப் பல வசதிகளைத் தருகின்றன. நமக்கு மிகவும் அத்யாவசியமான தண்ணீர்த் தொட்டியில் கூட (Water Tank) மின்சார மோட்டர்கள் தானே பயன்படுத்தப் படுகின்றன.
இவ்வாறு சுழற்சிமய கருவிகளால் இயங்குகின்ற இக்கலியுக மனித வாழ்க்கைக்குப் பெரிதும் பயன்படுவதெல்லாம் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வரருடைய திருவருளாகும்.. பால், வெண்ணெய், மாவு, நூல் போன்று சுழற்சியைப் பெறும் பொருட்களில் ஏற்படும் கலப்படம், தோஷம் போன்ற தீமைகளுக்குத் தக்க நிவர்த்தியைத் தருபவர் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தி ஆவார். இத்தகைய தொழிற்சாலைகளில் வேலை செய்வோருக்குத் தங்களுக்கு ஏற்படுகின்ற அலுவலக இடமாற்ற குடும்பப் பிரச்னைகளுக்குத் தக்க நிவர்த்தியாக விளங்குவதே ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தி வழிபாடாகும். ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்திக்கு இடுப்பிற்கு மேல் சந்தன காப்பும், இடுப்பிற்குக் கீழே துவீதபலக் காப்பாக இட்டு வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும். ஏனென்றால், சுழற்சி என்பது விஞ்ஞான மய உலகில் கடைச் சுழற்சி, எதிர்ச் சுழற்சி என்ற இருவகையாம் விஞ்ஞான எதிர்மய எந்திர சுழற் விதி போல மனித சமுதாயமும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளுக்கிடையே, தான் சுழற்சிப் பொருளாய், மாயா வாழ்வினைக் கொண்டுள்ளது. எனவே, சுழற்சி சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட்டோர் தம்முடைய நல்வாழ்விற்காகக் கலியுகத்தில் வழிபட வேண்டிய மூர்த்தியாக விளங்குபவரே ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தி யாவார்.
நரம்புகளுக்கும் சுழற்சி உண்டு. நம்முடலில் பிணைந்து கிடக்கும் 72000 நாடி நரம்புகளுக்குள்தானே மனித தேகம் இயங்குகின்றது. எனவே நரம்பியல் நிபுணர்கள் (Neuro Surgeons) மிகவும் முக்கியமாக வழிபட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தியாவர். மேலும் நரம்புகள் சம்பந்தமான நோய்களில் வாடுவோரும் செவ்வாய்க்கிழமை தோறும் ராகு காலத்தில் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்திக்கு சுழல் உணவுப் பண்டங்களை (முறுக்கு, ஜாங்கிரி, ஜிலேபி, தேன்குழல், etc..) போன்றவற்றைப் படைத்து ஏழைகளுக்கு உணவாக அளித்து வந்தால் நரம்பு சம்பந்தமான வியாதிகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
மேலும் நரம்பியல் நிபுணர்கள் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்திக்கு நேர்த்தி வைத்து, கடினமான அறுவை சிகிச்சையை மேற்கொள்வார்களேயானால் நன்முறையில் நோய்நிவர்த்தி கிட்டும். வாழ்க்கையில் சிக்கலான பிரச்னைகள் பலருக்கும் ஏற்படுவது உண்டு. நிதி நிலைத்துறை, வியாபாரத் துறை, Economical Strategy எனப்படும் நிதி நிர்வாகப் பிரச்னைகள், குடலிறக்கம், குடல் சுழற்சி, குடல் பின்னல் போன்று குடல், கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படுகின்ற பிரச்னைகளுக்கும் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர வழிபாடு நல்ல தீர்வுகளைப் பெற்றுத் தரும்.. இத்தகைய துன்பங்களுக்கு ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு எவ்வாறு துணை புரிகின்றது?
எவ்வகையில் இதனை விளக்க முடியும் என்றால், ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் அவதாரத் தோற்றத்தை நீங்கள் பார்த்தீர்களேயானால், ஸ்ரீநரசிம்ம மூர்த்தியைத் தம்முடைய உடலிலே கிடத்தி வயிறு, மார்பு போன்ற பகுதிகளில் தம் திருவிரல்களின் நடனம் கூட்டுவதைக் கண்டிருப்பீர்கள்! ஆனால் இதனை சரபமூர்த்தி நரசிம்மரின் குடலைக் கிழித்ததாகப் பலரும் தவறான அர்த்தத்தைத் கொள்கின்றார்கள். ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி ஸ்ரீநரசிம்மரைத் தன் திரு உடலிலேக் கிடத்தி நரசிம்மருடைய உக்கிர தாண்டவத்திற்கு ஏற்றபடியாகத் தம்முடைய உடுக்கையில் எழுந்த தாளங்களைத் தம்முடைய திருவிரல்களால் நரசிம்ம மூர்த்தியின் உடலில் பல பகுதிகளில் நடன தாள அம்சங்களைப் பதித்துப் பரிணமித்திட, இவ்வாறாகத்தான் குடல், மண்ணீரல் போன்ற பல பகுதிக்கும் உரித்தான பல நோய் தீர்வு முறைகள் பிரபஞ்ச ஜீவன்களுக்கும் கிட்டின. இதுவே சித்தர்கள் கண்ட உண்மை!
இவ்வாறாக நரசிம்மரைத் தன் திருமேனியில் கிடத்திய கோலம், அவருடைய குடல் வயிற்றுப் பகுதிகளில் தாண்டவ நடனத் தாளம் இட்ட கோலம், அவரை மீண்டும் சிரசால் தொட்டு எழுப்பிய கோலம்  இவ்வாறாக எழுந்த பலவிதமான அவதாரக் கோலங்களை வைத்துத்தான் ஸ்ரீசரபேஸ்வரருடைய வழிபாட்டுப் பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. பூலோகத்தில் நாம் செய்கின்ற தவறுகள் யாருக்கும் தெரியாது என்று எண்ணி விடாதீர்கள்., சூரிய, சந்திர, கோடிக் கணக்கான நட்சத்திரங்களின் சாட்சியாகத்தான் நீங்கள் ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள். உங்கள் குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, உற்றம், சுற்றத்தாருக்குத் தெரியாமல் நீங்கள் எத்தனையோ விஷயங்களை மறைத்திருக்கலாம்., காரியங்களை நிகழ்த்தியிருக்கலாம், ஆனால் அவையெல்லாம் இப்பிறவிக்குள் வெளிவந்தால் தான் இந்தப் பிறவித் தளைகளிலிருந்து நீங்கள் விடுதலை பெறமுடியும் என்பதை மட்டும் நீங்கள் மறந்து விடாதீர்கள்.
நல் ஒழுக்கமே இறைமை!
காமாக்ய லோகம் என்று உண்டு. இங்குதான் முறையற்ற காமத்தால் உண்டாகும் குற்றங்களுக்குத் தீர்வுகளும , தண்டனைகளும் ஜீவன்களுக்கு வழங்கப் பெறும், இந்த காமாக்ய லோகத்தின் வழியே ஸ்ரீநரசிம்ம மூர்த்தி உக்கிர தாண்டவம் ஆடிய போது, அங்கு இருந்த காமத் தீ நாக்குகள் அனைத்தும் பஸ்பம் ஆயின. காமத்தீ என்பது மனதில் ஏற்படுகின்ற முறையற்ற காம எண்ணங்கள் தாம்! காமத்தை அடக்குதல் எந்த யுகத்திலும் மிகவும் கடினமான செயல். இதற்கான பார்த்திப யோகத்தைப் பயின்றால்தான் காமத்தை யோக முறையில் அடக்குதல் முடியும். இதற்காகத் தான் இல்லறத்தையே காமத்தீயைத் தீர்க்கும் தக்கதொரு மருந்தாக நம் பெரியோர்கள் விதித்துள்ளார்கள்.
காமம் என்பது மனித வாழ்வின் இயல்பெனினும், இதனை நன்முறைப்படுத்தி சந்ததி விருத்திக்காகவும், தெய்வீகக் காரியங்களை வாழையடி வாழையாகவும் சந்ததி சந்ததியாக வழிப்படுத்தவும், உலகத்தின்பால் சிருஷ்டி நியதி முறையாக இயங்கவும், ஒருவருக்கொருவர் அன்பையும், மனித நேயத்தையும் புரிந்து கொண்டு இறைச் சமுதாய வாழ்க்கையின் இலக்கணங்களில் தேர்ச்சியைப் பெறவும் இறைவன் இல்லறத்தை வகுத்துத் தந்துள்ளான். எனவே, ஸ்ரீநரசிம்ம மூர்த்தி எத்தனையோ லோகங்களில் உக்ரதாண்டவம் ஆடிய போது தீயோர்கள் நிறைந்த லோகங்களில் உள்ள தீய சக்திகள் யாவும் பஸ்பம் ஆயின அல்லவா!
இத்திருக்கோலத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி உக்ர நடனயோகம் பூண்டபோதுதான் பல கோடி லோகங்களில் காமாந்தகர்கள் அழிந்தனர். காமத் தீயை மாய்க்கின்ற மற்றும் முறையற்ற காமத்தால் ஏற்படுகின்ற பாவங்களை தக்க பிராயசித்தத்துடன் தீர்க்கின்ற திருவருளைத் தந்து கலியுகத்தில் அருள்பவர்தான் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தியாவர். ஏனென்றால் சூது, வாது, மது, முறையற்ற காமம் போன்ற அதர்மம் தலைவிரித்து ஆடுகின்ற இடங்களில்தான் கலிபுருஷர் ஆனவர் தன் வாசத்தைப் பெருக்கிக் கொண்டு செல்வதால் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்திதான் இக்கலியுகத்தில் தீவினைகளிலிருந்து காத்து நம்மை நல்வழிப்படுத்த நல் அருள் புரிகின்றார்.
இத்தகைய அருட்சுரக்கும் தன்மையை சரபேஸ்வர மூர்த்தி பெறுவதற்கு காரணம்தான் என்னவோ? இரண்யனை வதம் செய்து அவனுடைய கொடூரமான உதிரமும், மாமிசமும், எலும்புகளும், காமாந்திர துர்எண்ணங்களும் பூலோகத்திலோ அல்லது வேறு லோகத்திலோ விழுந்தால் அதிலிருந்து கோடிக்கணக்கான துஷ்டர்கள் துளிர்த்து விடுவார்களோ என்று அஞ்சிய நரசிம்ம மூர்த்தி அவற்றை தம் தேகத்தில் ஏற்றார் அல்லவா? இத்தகையக் கொடுமையான அரக்கனை துவம்சம் செய்தமையால் அவருடைய அக்னியின் உக்ரமானது பன்மடங்கு பெருகலாயிற்று. இந்த உக்ரம் பல்வகை அக்னி வெளிப்பாடுகளைக் கொண்டதாம்!
தீவினை தீர்க்கும் சரப மூர்த்தி! 
எனவே நரசிம்ம உக்ராக்னியை சாந்தப்படுத்தும் முகந்தான் தம்முடைய நிரஞ்ஜன யோக நேத்ர நோக்கை ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் பால் செலுத்திய பொழுது இரண்யனுடைய எஞ்சிய அரக்கக் குணங்களும் முற்றிலுமாக பஸ்மமாயின! நிரஞ்சன நேத்ரப் பார்வையைப் பூண்ட ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தியை வழிபட்டிடில் மது, சூது, வாது, முறையற்ற காமம் போன்ற தீவினைகளுக்கு ஆட்பட்டோர் திருந்த நல்வழி கிட்டும். மதுரை ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தியை உண்மையான பக்தியோடு வழிபட்டு, தம்முடைய தவறுகளுக்கு வருந்தி, கதறி அழுது, தக்கப் பரிகாரத்தை நாடி வேண்டி வழிபடுக!
ஆனால் அவர்கள் மனதார வருந்தி மீண்டும் அப்பிழையை தம் வாழ்வில் செய்தல் ஆகாது என்ற மன வைராக்யத்தைப் பூண்டால் தான் சுவாமியின் பேரருள் கடாட்சத்திற்குப் பாத்திரமாக முடியும். ஆனால் இத்தகைய மன வைராக்யம் எளிதில் கிட்டிவிடுமா, அதற்கு என்ன வழிமுறையோ? மேற்கண்ட தீய ஒழுக்கங்களுக்கு ஆட்பட்டோர், மதிகாரனாகிய ஸ்ரீசந்திர பகவானுக்கு உகந்த திங்கள் அன்றும் வித்யா சூட்சும காரணனாய் விளங்குகின்ற புத பகவானுக்குரிய புதன்கிழமை அன்றும் சனிபகவானுக்கு உரித்தான சனிக்கிழமையன்றும், புத்திக் கூர்மையை நல்குகின்ற சூரிய கடவுளுக்கான ஞாயிறு அன்று சந்திர ஹோரை நேரத்திலும், புத ஹோரை நேரத்திலும், பொதுவாக ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்திக்கு சந்தனம், மற்றும் வெண்ணெய் காப்பிட்டு இனிப்பு பண்டத்தைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்திடுக.
இதன் மூலம் கிட்டுகின்ற புண்யமும், தான, தர்ம, அன்னதான புண்ய சக்தியும் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வருடைய அருட்கடாட்சத்தைப் பெறுவதற்குரிய நல்வழிகளைக் காட்டுகின்றன. எனவே, எந்த ஒரு பிழையையும் திருத்திக் கொள்வதற்கு முன்னால், அப்பிழையை மீண்டும் செய்தல் ஆகாது என்ற மன வைராக்யத்தைப் பெறுவதற்கும், அந்த தீய ஒழுக்கத்தின்பால் ஆட்பட்ட மனதை திருத்தி நல்வழிப்படுத்துவதற்கும், முதலில் அடிப்படையான நீலலோசன பாவன இறை சக்தியைப் பெற்றாக வேண்டும். இதற்குத் துணைபுரிவது தான் ஸ்ரீசரபேஸ்வரருக்கு ப்ரீதியான சூய்யம் இனிப்புப் பணியார வடிவில் நைவேத்யமும், அன்னதானமுமாம்.
ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமைகளில் அவற்றிற்குரிய ஹோரை நேரங்களைப் பார்த்து அறிந்து பூஜை செய்யவும். இவ்வாறாக மதுரை ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தியின் மகிமையானது சொல்லவும் பெரிதேயாம்! இவரை வழிபடுவதற்கான விசேஷமான பூஜை முறைகளும் உண்டு, நிரஞ்சன யோக நேத்ரா சக்தியைப் பெற்றவராதலால் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை மாதுளம் பூ மூத்துக்களால் அலங்கரித்து (சந்தனம் (or) வெண்ணெய் காப்பிட்டு) அதில் மாதுளம் பழ முத்துக்களைப் பதித்து அதனைக் கண்ணாரக் கண்டு குறைந்தது ஒரு மணி நேரமாவது அமர்ந்து கண்ணோடு கண்நோக்கி நிரஞ்ஜன யோக நேத்ரா சக்தியைப் பெரும் பொருட்டு தியானித்தால் உள்ளத்தில் ஒரு உத்வேகமும், ஆன்மீகப் புத்துணர்ச்சியும், ஆத்மகான வெளிப்பாடும் காணுவதை உணரலாம். ஏனென்றால் இச்சரப மூர்த்தி யோக சக்திகள் நிரம்பப் பெற்றவராதலால் சீதள யோக சக்தி நிறைந்த நைவேத்யப் பிரசாதங்கள் மிகவும் ப்ரீதியானதாகும். ( சீதாப்பழம், ஆரஞ்சு, மாதுளை etc.)

அமுத தாரைகள்

1. கண்நோய் தீர்க்கும் கனகத் தேர் தரிசனம் :- தங்கத் தேர்தனை தரிசனம் செய்வதால் கிட்டுகின்ற பலாபலன்கள் 27 நட்சத்திரங்களுக்கும் விதவிதமாக அமைகின்றன. உதாரணமாக, அஸ்வினி நட்சத்திர நாளன்று பெறுகின்ற தங்கத் தேரின் தரிசன பலன்களுக்கும், ரேவதி நட்சத்திர தினத்தன்று பெறுகின்ற தங்கத் தேரின் தரிசன பலன்களுக்கும், வித்யாசங்கள் உண்டு. உதாரணமாக கண் சம்பந்தமான வியாதிகளால் துன்புறுவோர் ஞாயிறும், அசுவினி நட்சத்திரமும் கூடும் நாட்களில் தங்கத் தேர் உற்சவக் கைங்கர்யத்தை மேற்கொண்டு பொன்னாங்கண்ணிக் கீரை கலந்த உணவினை தானமாக அளித்து வந்திடில் தக்க நோய் நிவர்த்தி கிட்டும் இவ்வரிய நோய் நீக்கும் சக்தியைத் தன்னுள் கொண்டுள்ளமையால்தான் அது பொன்(னாங்) கண் (ணிக்) கீரை ஆயிற்று, பொற்கண் அம்பிகையின் திருவிழிகளிலிருந்து தோன்றிய மூலிகை ஆதலின் தங்கத்தேர் தரிசனத்தின் போது இக்கீரையுடன் கூடிய அன்னதானம் கண் சம்பந்தமான வியாதிகளுக்குத் தீர்வைத் தரும். இவ்வாறாக அந்தந்த நட்சத்திரத்திற்குரித்தான தங்கத் தேர் தரிசன பலன்கள் நிறைய உண்டு. தக்க சற்குருவை நாடி அறியவும்.

ஸ்ரீஉய்யவந்த அம்மன்
சாக்கோட்டை

2.  அழைத்தாலே போதும்! ஓடோடி வந்து அருள்பாலிக்கும் சாக்கோட்டை ஸ்ரீஉய்யவந்த அம்பாள் மஹிமை! கும்பகோணம் அருகில் ஒரு சாக்கோட்டையும், காரைக்குடி – புதுவயல் அருகே மற்றொரு சாக்கோட்டைத் திருத்தலமும் உள்ளன. அட்டைப்படத்தில் நாம் தரிசிப்பது புதுவயல் அருகே உள்ள சாக்கோட்டையில் அருள்பாலிக்கின்ற ஸ்ரீஉய்யவந்த அம்பிகையின் கோலமிகு திருஉருமாகும்.. அழைத்தாலே ஓடோடி வந்து அருள்பாலிக்கின்ற அம்பிகை! கலியுகத்தில் பிரத்யட்சமாய்த் தோன்றி அருள்கூட்டும் அம்பிகை! கண்கூடாக நற்பலன்களையும், நல்வரங்களையும் தருகின்ற தேவி! உத்தம பக்தியுடன் வழிபட்டால் எத்தகைய நோய்களுக்கும் தக்க தீர்வை தரும் ஸ்ரீஉய்யவந்த அம்பிகையை வெள்ளிக் கிழமைகளிலும், பஞ்சமி திதியன்றும் வழிபட்டு, ஐவகைக் காய்கறிகள் கலந்த சாம்பார் சாத உணவினைப் படைத்து அன்னதானமாக இட்டு வந்தால் சுவாச சம்பந்தமான கடுமையான நோய்களுக்கு நல்ல தீர்வு கிட்டும். தாமே தொடுத்த சம்பங்கிப் பூக்களால் ஆன மாலைகளை இந்நாட்களில் அம்பிகைக்குச் சாற்றி அடிப்பிரதட்சிணமாக வந்து ஏழைச் சுமங்கலிகளுக்கு சம்பங்கிப் பூக்களை தானமாக அளித்து வர வேண்டும். கபாலம் மற்றும் தலைப்பகுதி நோய்களால் வாடுவோர் புதன்கிழமைகளில் தவனம், மரிக்கொழுந்து மாலைகளால் அம்பிகையை அலங்கரித்து கீரை உணவைப் படைத்து தானமாக அளித்து வர தக்க நோய் நிவாரணம் கிட்டும். இருதய நோய்களால் வாடுவோர் ஞாயிற்றுக்கிழமையன்று நாகலிங்க புஷ்பங்களை அம்பிகையின் சிரசிலும், திருவடிகளிலும் சாற்றி குங்குமப்பூ கலந்த பலாய் நைவேத்யமாகப் படைத்து தானமாக அளித்துவர நோயின் கடுமை தணிந்து சாந்தம் பெறுவர். தீராத வயிற்றுவலித் துன்பங்களாலும், குடல் நோய்களாலும் வாடுவோர் அஸ்வினி, மிருகசிரீஷம், அனுஷ நட்சத்திர நாட்களிலும், வியாழக் கிழமைகளிலும் செம்பருத்திப் பூக்களால் அம்பிகையை அலங்கரித்து வணங்கி இடியாப்பம், இட்லி, ஆப்ப உணவு வகைகளைப் படைத்து தானமாக அளித்து வர அம்பிகையின் திருக்கடாட்சத்தால் நல்ல நிவர்த்தியைப் பெறுவர். அழைத்தாலே போதும், ஓடி வந்து அருள்புரிகின்ற ஸ்ரீஉய்ய வந்த அம்பிகையே! எம்பிழை பொறுத்து குலம்தனைத் தழைக்கச் செய்து அருள்மழை பொழிந்து உன் திருவடி சரண பாக்யத்தையும் தந்தருள்வாயாக!

3.  ஒவ்வொரு ஆலயத்தையும் பேணுகின்ற தார்மீகப் பொறுப்பு அந்தந்த ஊர்வாழ் மக்களைச் சார்ந்ததாதலின் Sand Blasting மூலமாக ஏற்படும் ஆலயத்தின் புனிதத்தின் பங்கமானது அந்தந்த ஆலயத்தில் பூஜை செய்பவர்களையும், ஊர் ஜனங்களையும், ஊர் நிர்வாகஸ்தர்களையும் பாதிக்குமாதலின் Sand Blasting முறையைத் தவிர்த்து தக்க முறையில் ஆலயத் திருப்பணிகளை நடத்த பக்தகோடிகள் முன்வர வேண்டும்.

விஷ்ணுபதி பலன்கள்

திருச்சி – விழுப்புரம் நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பாடலூரைப் பற்றித் தற்போதைய வழக்கில், சமயக் குரவர்கள் நால்வரும் பாடாமல் சென்றமையால் “பாடாலூர்“ என்ற பெயர் பெற்றது என்ற தவறான கருத்து நிலவி வருகின்றது., இன்றைக்கும் 274 தலங்கள் மட்டுமே சமயக் குரவர்கள் மூவரால் பாடப் பெற்றவை என்று பலரும் நினைக்கின்றார்கள். தேவாரம் பாடிய மூவருடைய அருள்மறைச் சுரங்கமானது, மறைந்த போது சிதம்பரம் திருத்தலத்தில்தான் இறையருளாலேயே அவை மீண்டும் நமக்குக் கிட்டின., அப்போதும் கூட இறைவன், தேவார அருட்சுரங்கத்தில் ஒரு பகுதியைத் தருகின்றோம் என்று ஒரு பகுதியையே எடுத்துத் தந்தார்! எனவே, நமக்குக் கிட்டாத தேவாரப் பாடல்கள் எத்தனையோ உள்ளன. எனவே சமயக்குரவர்கள் அனைத்துத் தலங்களையும் பற்றிப் பாடியுள்ளார்கள் என்பதே உண்மை. ஆனால் அந்தந்த யுகநியதிக்கு ஏற்ப எந்தெந்த தேவாரப் பாசுரங்கள் எப்போது எந்த சற்குரு மூலமாக வெளிவர வேண்டுமோ அப்போதுதாம் அவை நமக்குக் கிட்டும். திருபுவனம், லால்குடி போன்ற அற்புதத் தலங்களுக்குச் சமயக் குரவர்கள் செல்லாமலா இருந்திருப்பார்கள்! எனவே, இதுவரையில் நமக்குக் கிடைத்துள்ளவை 274 தலங்களைப் பற்றிய பாடல்களே என்றுதான் நாம் பொருள் கொள்ள வேண்டுமே தவிர, பாடல் இல்லாத தலங்களையெல்லாம் பாடல் பெறாதவை என்று ஒரு தவறான கருத்துக்கு வந்திடக் கூடாது, எனவே, இவ்வழகிய தெய்வத் திருத்தலத்தை பாடாலூர் என்று சொல்வது சரியன்று, பாடலூர் என்பதே காரணமுடையதாம். ஏனென்றால் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே பாடி விட்டுச் சென்றமையால், நாம் பாடுவதற்கு என்ன இருக்கின்றது என்று சமயக் குரவர்கள் கருதி தம் பாடல்களையே மறைத்து விட்டனர் போலும். மலையோடு மலையாய் பதிந்துள்ள அவையும் என்று நம் வழக்கிற்கு வருமோ அத்துதிப் பாடல்கள். இறைவனே அறிவான்! எனவே பாடலூர் என்பதே சரி !
அக்காலத்தில் நம் மூதாதையர்கள் “அதிதி உண்ணல்“ என்ற வகையில் தினந்தோறும் அதிதி எனப்படும் ஒரு விருந்தினருக்காவது உணவு அளித்த பின்னர் தாம் உண்கின்ற நல்ல பழக்கத்தைக் கைக் கொண்டு இருந்தனர் அதிதி இல்லாவிடினும் இராப் பிச்சை எனப்படுவதாக உணவு இன்றி இரவில் வாடுகின்ற ஓர் ஏழைக்கேனும் உணவைத் தந்த பின்னர்தான் தாம் உணவு ஏற்பது என்ற தெய்வீகக் கைங்கர்யத்தையும் கொண்டு இருந்தனர். ஆனால் தற்காலத்தில் நடப்பது என்ன? விருந்தினர் என்றாலே ஓடி ஒளிந்து கொள்கின்ற அளவிற்கு நம்முடைய விருந்தோம்பல் பண்பாடு குறுகிவிட்டது. விருந்தோம்பலுடன், காக்கை, பசுவிற்கு உணவளித்தல் என்பதெல்லாம் மிகச் சிறந்த நித்திய தான தர்மங்கள் இதனைத்தான் திருமூல சித்தர் பெருமானும் “பசுவிற்கு ஒரு வாயுறை“ என்று உரைத்து பசுவின் தெய்வத் தன்மையை உணர்த்தியுள்ளார்.
ஏழைகளோ, நடுத்தர குடும்பத்தினரோ, கோடீஸ்வரர்களோ, லட்சாதிபதிகள , திருஅண்ணாமலை போன்ற தலங்களில் கிரிவலம் வருகின்ற பொழுது களைப்பாலும், அயர்வாலும் தாகமும் பசியும் அவர்கட்கு ஏற்படுகின்ற பொழுது அவர்களுடைய வீட்டிலும், தொழிற்சாலையிலும் கொட்டிக் கிடக்கின்ற பணமா வந்துதவும்? அந்தப் பசிப் பொழுதில், தாகம் எடுக்கும் சமயத்தில் சிறிது உணவையும், நன்னீரையும், தானமாக, விருந்தோம்பலாக, அதிதி போஜனமாக அன்னதானமாக அளித்தால், அதற்கு நிகர் எதுவும் கிடையாது.! வரும் விருந்தாளிகள் எத்தனையோ வசதிகளைப் பெற்றிருந்தாலும் அவர்களுக்குத் தக்க சமயத்தில் தங்க இடமளித்து, உண்ண உணவு அளித்து விருந்தோம்பலைப் போற்றிடுவோர்களேயானால் இது மிகச் சிறந்த புண்ய சக்தியாக எச்சமயத்திலும் கைகூடும்.
எனவே, கிரிவலம் வருகையில் சிறிய அளவில் ஒரு உணவுப் பொட்டலத்தையேனும் அன்னதானமாக, அதிதி உணவாக அளிக்கின்ற பெரும் புண்ய காரியத்தை மேற்கொள்ளுங்கள்! இது தர்ப்பண புண்ய சக்தியையும் ஒரு பங்காய்ப் பெற்றுத் தரும். இராப் பிச்சை என்பது ஏதோ பிச்சைக்காரர்களுக்காக உணவு அளிப்பது என்று எண்ணாதீர்கள்! நாம் யாருக்கு அன்னத்தை அளிக்கின்றோமோ அவருக்கும் நமக்கும் பூர்வ ஜென்மத் தொடர்பு உண்டு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ஏனென்றால் எந்தவித காரண காரியமும் இன்றி இருவரிடையே அன்னதானத் தொடர்பு ஏற்படாது. பெறுபவர் இருந்தால்தான் அன்னாதானத்திற்கு மதிப்பு!
ஆம், இன்றைக்குத் திருஅண்ணாமலை திருத்தலத்திலே பல்லாயிரக்கணக்கானோருக்கு அன்னதானப் பிரசாதம் அளிக்கின்றோம் என்றால் அவர்களுக்கும் நமக்கும் எத்தனையோ பூர்வ ஜென்மத் தொடர்புகள் உண்டு. அந்த கர்மவினை பாக்கிகளை நிறைவு செய்தால்தான் நாம் விடுபடமுடியும். இதுவும் அன்னதானத்தின் தெய்வீக ரகசியங்களுள் ஒன்று. தினசரி அதிதி உணவு இடாமைக்காக ஒட்டு மொத்தப் பரிகாரமாகத் தான் திருஅண்ணாமலை அன்னதானம், விஷ்ணுபதி புண்யகால தான, தர்மங்கள் திகழ்கின்றன!
அதிதிகளைப் பேணாததும், விருந்தாளிகளைச் சரிவர கவனிக்காது அவர்களுக்கு எரிச்சல் ஊட்டும் வகையில் நடந்து கொள்வதும், விருந்தோம்பலையே முற்றிலும் தவிர்ப்பதும் கசடுப் பாறை என்ற ஒரு தோஷத்தை உண்டாக்குகின்றது. இது பெரிதாக வளர்ந்து நமக்கும், நம்முடைய சந்ததிகளுக்கும் எத்தனையோ துன்பங்களைத் தருகின்றது. உதாரணமாக நல்ல மதிப்புள்ள நிலமோ, தொழிற்சாலையோ, சொத்தோ ஒரு சிறிய உறவு மனஸ்தாபம் காரணமாக பல ஆண்டுகளாக முடங்கிக் கிடப்பதை நீங்கள் இன்றைக்கும் பல குடும்பங்களில் காண்கின்றீர்கள். தனக்குப் பல லட்ச ரூபாய் நஷ்டமானாலும் சரி அடுத்தவருக்கு ஒரு பைசா கூடக் கிட்டக் கூடாது என்ற கசப்பான மனநிலை தானே இன்றைக்கு உறவு, சுற்றம், நட்பு முறையில் நிலவுகின்றது.
இவ்வாறாக அதிதி போஜனமான விருந்தோம்பலை முறையாகப் பேணாததின் காரணமாக வருகின்ற சாபங்கள் எத்தனையோ உண்டு. நாம் இந்த உலகைவிட்டு பிரிகின்ற போது இத்தகைய சாபங்களையா நம்முடைய சந்ததிகளுக்குப் பெற்றுத் தருவது? ஒன்றும் அறியாத நம் குழந்தைகளுக்கு நன்முறையில் ஈட்டிய புண்ய சக்தியையும், முறையாக ஈட்டிய செல்வத்தையும் அளிப்பதுதானே நமது கடமை, இத்தகைய சாபங்களையா தீய சக்தியாக வளரவிட்டுச் செல்வது? நீங்கள் அறிந்தும் அறியாமலும் இத்தகைய சாபங்களுக்குக் காரணமாகி விட்டால் என் செய்வது? மேலும் விருந்தோம்பலை முறிக்கின்ற வகையிலே நீங்கள் எப்போதேனும் உங்கள் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கலாம் அல்லவா? இவ்வாறு ஏற்பட்ட கசடுப் பாறை தோஷத்திற்குப் பரிகாரமாக விஷ்ணுபதி புண்ய கால தினத்தன்று பாடலூர்த் திருத்தலத்தில் மலை உச்சியில் உள்ள பூமலை ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்குத் தயிர் சாதக் காப்பிட்டு பன்னீர் திராட்சைகளை சாதத்துடன் கலந்து படைத்து இறைவனின் திருமேனியைத் தழுவிய தயிர் சாத பிரசாதத்தை ஏழைகளுக்கு அன்னதானமாக அளித்து வந்திடில் இத்தகைய கசடுப் பாறை என்ற சாபம் நீங்குவதற்கான நல்வழிகள் கை கூடும்!
பணியாளர் நலம் போற்றுக!
பலரும் தம்முடைய பணியாளர்களை, வேலைக்காரர்களை, கார் டிரைவர்களை முறையாகப் பேணாது அவர்களுடைய வருத்தத்திற்கும், வேதனைகளுக்கும் ஆளாகி விடுகின்றார்கள். இத்தகைய பணியாளர்கள் நமக்கு அமைவது கூட பூர்வஜென்மத் தொடர்புதான், உதாரணமாக, பிள்ளையாகப் பிறந்து விட்டு தன்னுடைய பெற்றோர்களை நன்முறையில் கவனிக்காது, சம்பாதிக்கும் நோக்கத்தில் வெளிநாடு சென்று அங்கேயே உழன்று விட்டுப் பெற்றோர்கள் இங்கு வருத்தத்தில் துடிக்கின்ற வேளையிலே அருகில் இல்லாமல் இருந்தால் என்ன பயன்? எந்தப் பெற்றோருக்குப் பணிவிடை செய்து அவர்களுடைய நலம் காக்க வேண்டுமோ அதனை விடுத்து,  “நல்ல பங்களா வாங்கித் தந்தேன், சுற்றிலும் பணியாளர்களை அமர்த்தினேன், செல்வதற்குக் கார் வைத்தேன், சுற்றி வருவதற்கு ஒரு தோட்டம் அமைத்தேன்”, என்று பல வசதிகளைக் கொடுத்து விட்டு வெளிநாடு சென்று விட்டால் உண்மையான அன்பு எப்படிப் பிறக்கும்? இத்தகையோரே பணியாளர்களாகப் பிறந்து முன் ஜென்ம பெற்றோர் சேவையை எஜமானர் பணியாளர் முறையில் கர்மவினை பாக்கியைத் தீர்க்கின்றார்கள். இது மட்டுமல்லாது வேலைக்காரர்களுக்கும் தான் சாப்பிட்ட எஞ்சிய உணவையும் “பத்தாக” உள்ள உணவையும் எடுத்துக் கொடுத்தல் என்றால் அவர்களுக்கு எரிச்சல் தானே உண்டாகும். ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு சமையல் சாமான்கள் கொட்டிக் கிடக்க, நல்ல சூடான காபியையோ சுவையான உணவையோ பணியாளர்களுக்கு அளித்தால் என்னதான் குறைந்து விடப் போகிறது?
இவ்வாறு பணியாளர்களையும், வேலையாட்களையும் அதர்மமான முறையில் நடத்துவதால் ஏற்படுவதுதான் குழிவுத்திணை என்ற தோஷம் ஆகும். இதனால் குழந்தைகள் சரிவர வளராமையும், படிப்பில் மந்தமாக இருத்தல், அடிக்கடி நோய்வாய்ப் படுதல் போன்ற பலவிதமான துன்பங்களும் ஏற்படுகின்றன. இவையெல்லாம் எந்த வைத்தியத்திலும் குணமாவதில்லை. இதற்குரிய குணத்தை அளிப்பது ஆன்மீகம் ஒன்றேதான். இவ்வாறான முறையில் வேலைக்காரர்களுடைய / பணியாளர்களுடைய சாபத்திற்கு ஆளானோர் பாடலூர் ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாற்றி வேர்கடலையைப் பதித்து அலங்கரித்து, ஆராதனைகள் செய்து வெண்ணையையும், வேர்க்கடலை, பானகத்தையும் ஏழைகளுக்குத் தானமாக அளித்து வர இந்த குழிவுத்திணை சாபம் தீர்வதற்கான நல்வழிகள் காட்டப்பெறும்.
குறிப்பாக குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் தீரும். தன் பெற்றோர்களுக்கும், தன்னை வளர்த்து ஆளாக்கியவர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்திடாது பணியாளர்களைக் கொண்டு அவர்களுடைய கடமைகளைச் செய்ய வைத்து தான் வெளிநாடு சென்றும், வெளியூர் சென்றும் சம்பாதித்து வாழ்வோர் என்றேனும் நிச்சயமாக தாய், தந்தையர்க்கான கடமையைச் செய்துதான் ஆகவேண்டும். இவர்களே பணியாளர்களாகப் பிறந்து தம்முடைய விட்ட குறை தொட்ட குறையை நிவர்த்தி செய்து கொள்கின்றார்கள். பிறவி இரகசியங்களுள் இதுவும் ஒன்றாகும். மேலும், பணியாளர்களாக அமைவதற்கும் மேலும் எத்தனையோ காரண காரியங்கள் உண்டு.
இவ்வாறு பெற்றோர்களைப் பேணும் கடமையிலிருந்து தவறியோர் பந்த பாண்டுலம் என்ற ஒருவித சாபத்திற்கு ஆளாகுகின்றார்கள். இது பல்லாயிரக்கணக்கான ஜென்மங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் எத்தகைய வசதிகள் இருந்தாலும் வாழ்க்கை முழுவதுமே சோதனைகளும், வேதனைகளும் நிறைந்ததுமாகி விடும். ஏனென்றால் எந்தப் பெற்றோர்களை அவர்களுடைய வயதான காலத்தில் பேண வேண்டுமோ அதை விட்டுவிட்டு அவர்களைத் தவிக்க விட்டு ஒவ்வொரு நிமிடத்திலும் அவர்களுக்கு வருத்தமான சூழ்நிலையில் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தி விட்டதால் இந்த சாபவிளைவுகள் பன்மடங்காகப் பெருகி விடும். எனவே இவ்வாறு தம்முடைய பெற்றோர்களுக்குரித்தான கடமைகளைக் செய்யத் தவறியோர் வருகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலத்தில் பாடலூர்த் திருத்தலத்தில் பூமலை ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்புச் சாற்றி பன்னீர் திராட்சைகளைப் பதிக்க வைத்து அலங்கரித்து இதனை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருதல் வேண்டும். தம்முடைய வாழ்நாளில் குறிப்பாக பெற்றோர்களுடைய திதி நாட்களில் அடிக்கடி பூமலை ஆஞ்சநேயருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து தக்க தான தர்மங்களுடன் வழிபட்டு வருவார்களேயானால் பந்தபாண்டுலம் என்ற சாபங்கள் தீர்வதற்கான நல்வழிகள் காட்டப்படும். பந்தபாண்டுல தோஷத்தின் விளைவுகள் ஒன்றாக திடீர் மரணம், திடீர் நஷ்டங்கள், திடீர் விபத்துகள் என்று துக்கரமான சம்பவங்கள் ஒன்று மாற்றி ஒன்றி வந்து கொண்டிருக்கும்.
கடனேயென வாழாதீர்!
கடன் வாங்குதலும், கடன் கொடுத்தலும் கலியுகத்தில் மிகவும் சகஜமாகி விட்டது. சிரித்துப் பேசி, மகிழ வைத்துப் பணத்தைக் கடனாகப் பெற்று செல்பவர்கள் கொடுத்த கடனை திருப்பிக் கேட்கும் போது நட்பையோ, பந்தத்தையோ, உறவையோ  முற்றிலும் முறிப்பது போல பேசி ஓடிவிடுவார்கள் அல்லது வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த நெடுங்காலம் எடுத்துக் கொள்வார்கள். நமக்குத் தக்க சமயத்தில் உதவியவருக்கு வட்டியும், முதலுமாகத் தக்கத் தருணத்தில் திருப்பித் தருவது தான் உண்மையான வாழ்வாகும். இந்த ஜென்மத்தில் வேண்டுமானால் வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் ஏமாற்றி விடலாம். ஆனால் இந்த பாவமானது பல ஜென்மங்களுக்கு தொடர்ந்து வந்து உங்களுக்கு வேதனைகளையும், சோதனைகளையும் தருவதாகவே இருக்கும். வாழ்க்கையில் எவ்வாறேனும் வாழ்ந்தால் சரி என்ற மனப்பான்மையை விடுத்து நல்ல இலட்சியமான வாழ்க்கையைப் பெறுவதற்கு இவ்விஷ்ணுபதி புண்ய கால பூஜை பெரிதும் உதவுகிறது, நீங்கள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரிவர இல்லாது இருக்கலாம். அதற்குரிய வசதிகளையும், முன்னேற்றத்தையும் நீங்கள் பெறாமல் இருக்கலாம். நீங்கள் கடனாக வாங்கிய பணத்தால் தொடங்கிய தொழிலில் நஷ்டங்கள் ஏற்பட்டு திருப்பித் தரமுடியாமல் சந்தர்ப்பங்கள் இருக்கக் கூடும்.
இதனால் தான் கடன் தந்தோரை ஏமாற்றுதல் என்ற எண்ணத்தை மட்டும் தயவு செய்து வளர்த்துக் கொள்ளாதீர்கள்.. இத்தகைய கடன் துன்பங்களைப் பெற்றிருப்போர் வரும் விஷ்ணுபதி புண்யகால பூஜையன்று பாடலூர் ஸ்ரீபூமலை ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்கு கொய்யாப் பழத்தால் ஆன மாலையை அணிவித்து ஸ்ரீஆஞ்சநேயப் பெருமானை ஆராதித்து கொய்யாப்பழங்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் பிராயச்சித்தம் பெறுவதற்கான நல்வழிகளைப் பெறுவர் கடன் சுமை தீர நல்வழிப் பிறக்கும். ஏனென்றால் கொய்யாப்பழம் என்பது மரத்திலிருந்து கொய்யாமல் பெறுகின்ற பழம் என்ற பொருள். அதாவது கொய்யாப்பழத்தை மட்டும் மரத்திலிருந்து பறித்தல் கூடாது என்பது மூதாதையர்களின் நியதி. கீழே விழுந்த கொய்யாக்கனியை மட்டுமே உண்ணுதல் வேண்டும். எனவேதான் கொய்யாப்பழம் எவராலும் கொய்யப்படாத பழமாக சிறப்பைப் பெறுகிறது.
இதே போன்று நம்மிடமிருந்து எவரும் பிரிக்க முடியாத கொய்யாததாக இருக்க வேண்டியதுதான் நாணயம் என்னும் பண்பாடு. கொய்யாத கனியாக எவ்வாறு கொய்யாப்பழம் மரத்தோடு ஒட்டி இருக்கின்றதோ, அதே போல நம் உயிரோடு, உடலோடு ஒட்டியதாக நாணயம் இருக்க வேண்டும். எக்காலத்திலும் நாணயத்திலிருந்து தவறுதல் கூடாது. நாணயம் தவறியோர்க்கு நல்ல பாடம் கற்பிப்பதே, நல்ல தீர்வைத் தருவதே கொய்யாப்பழத்தின் ஆன்மீகப் பயனாகும். கொய்யாப்பழம் என்பதற்கு சித்புருஷர்கள் அளிக்கின்ற விளக்கத்தை அளித்துள்ளோம். நடைமுறையில் நாம் காண்கின்ற கொய்யாப் பழம், கொய்யப்பட்டுத்தானே நமக்குக் கலியுகத்தில் வருகின்றது. இறைவனுக்கு எந்தப் பழத்தையும் படைத்து தானமாக அளிக்கின்ற பொழுது அதில் உள்ள தோஷங்கள் நீங்கி விடுகின்றன என்பதையும் மனதில் கொள்ளுங்கள்.. வாங்கிய கடனைத் தீர்க்காது கொய்த தோஷங்களுக்கான தீர்வை கொய்யாக் கனி வழிபாட்டில் நன்முறையில் பெற்றிடுங்கள்.
பிறர் வளர நீங்கள் பாடுபட வேண்டும்
இசையில் வசைபாடுதல் நன்று அன்று, இசை என்பது இறைவனைக் காட்டுகின்ற வழிமுறைகளில் ஒன்றாகும். ஆனால் தற்காலத்தில் இசைத் துறையில் நன்கு முன்னுக்கு வந்தவர்கள் பலரும் பிறரையும், இளங்கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்பதையும் மறந்து விடுகின்றார்கள். தன்னுடைய பக்க வாத்தியக்காரர்களை மட்டம் தட்டுவது, அவர்களுக்குத் தகுந்த வருமானத்தை அளிக்காது இருப்பது, அவர்கள் எப்போதும் தன்னைச் சார்ந்து வாழும் படியான நிலையை ஏற்படுத்திக் கொள்வது, பிற கலைஞர்களை முன்னுக்கு வர விடாமல் அவர்களுக்கு முறையான பாடங்களைச் சொல்லித் தராமல் இருப்பது, இசை பற்றி தானறிந்த இரகசியங்களைப் பிறருக்கு உணர்த்தாமல் தாமே தம் மனதில் வைத்துக் கொள்ளுதல், இவ்வாறாக இசைத் துறையிலே தான் ஒரு நட்சத்திரமாக மிளிர்வதற்காகப் பலரும் எத்தனையோ தவறான வழிமுறைகளைக் கையாளுகின்றார்கள். எங்கே தன்னுடைய இசை பற்றிய இரகசியத் திறமைகள் எல்லாம் பிறருக்குச் சென்று அவர்கள் முன்னுக்கு வந்துவிடுவார்களோ தாம் அழுந்திப் போய்விடுவோமோ என்றெல்லாம் கவலைப்படுவோரும் உண்டு. ஆனால் இசை என்பது இறைவனால் யாவருக்கும் இலவசமாக அளிக்கப்பட்ட தெய்வீகக் கலையாகும், இது எனக்குச் சொந்தமானது, என்னுடைய பணி என்று சொல்வதற்கு எதுவுமே இதில் கிடையாது.
எவ்வாறு எந்த ஒரு இரகசியத்தையும் கூட மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது. எதுவாயினும் இறக்கும் முன் எவருக்கேனும் சொல்லிவிட வேண்டும் என்ற ஒரு ஆன்மீக விதி கூட விதிக்கப்பட்டுள்ளதோ அதே போல தன்னுடைய எந்த இசைத் திறமையையும் பிறருக்கு அளிக்காமல் செல்லக் கூடாது. தன்னுடைய சந்ததியரை விட மற்றவர்கள் இசைத் துறையில் வல்லுநர்களாக இருந்தால் அவர்களுக்கு தன்னுடைய இசை நலனுக்காகக் கற்றுத் தர வேண்டுமே தவிர சற்றுமே திறமை இல்லாத தன்னுடைய சந்ததியர்களுக்குச் சொல்லித் தரவேண்டும் என்ற சுயநலத்தை ஒரு போதும் கைக் கொள்ளக் கூடாது.
இவ்வாறாக இசைத் துறையில் இருப்போர் அறிந்து கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் ஏராளம்.. இதனைத் தக்க சற்குரு மூலமாகப் பெற்று உணர்ந்திடவும். ஏனென்றால் இசைத் துறையில் புகழ் பெறும் போதே இசைத் துறையில் தாம் செய்கின்ற தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேடுவதுதான் மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு பிறர் இசையில் முன்னுக்கு வராமல் தடுப்பதற்குத் தான் மேற்கொண்ட அதர்மமான வழிமுறைகளுக்கு என்றேனும் ஓர் நாள் பிராயசித்தம் காண வேண்டும் அல்லவா! இதற்குரித்தான பிராயசித்த நல்வழி முறைகளைக் காட்டுவது தான் வரும் விஷ்ணுபதி புண்ய கால பூஜையன்று பாடலூர் பூமலை ஸ்ரீவீர ஆஞ்சநேயருக்கு உரித்தான வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதாகும்.
 இவ்வாறாக இசைத் துறையில் பல தவறுகளைப் புரிந்தோர் இன்று பூமலை ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பிட்டு அதில் செம்பவள நிற மாதுளம் பழ முத்துக்களைப் பதித்து கண்ணாரக் கண்டு தரிசித்து, பலருக்கும் இத்தரிசனக் காட்சியை அளித்து வெண்ணையையும், மாதுளம் பழ முத்துக்களையும் தானமாக அளித்து வருவார்களேயானால் அவர்கள் தாம் செய்த தவறுகளுக்குத் தக்க பிராயசித்தத்தைப் பெற சற்குருவின் அறவழியைக் காணப் பெறுவார்கள். இவ்வாறாக மேற்கண்ட பிராயசித்த வழிமுறைகளில் ஒரு தெய்வீக நுணுக்கம் என்னவென்றால் இவற்றிற்குரித்தான பிராயச்சித்தங்களைப் பெறுவதற்கான நல்வழிகளைத் தருவதாக அருள்பாலிப்பதாக இந்த விஷ்ணுபதி புண்ய கால பூஜா பலன்கள் அமைகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஏனென்றால் தக்கச் சற்குருவின் தகை சார்ந்த தெய்வீக இணைப்பைப் பெற்றால்தானே நீங்கள் வாழ்க்கையில் எத்தகைய பிராயச் சித்தங்களையும் பெற்றிட முடியும், இதுவே ஒரு பெரிய அனுகிரஹம் அல்லவா!
கூலியிற் பழுது வேண்டாம்!
அடுத்ததாக கலியுகத்தில் நாம் அடிக்கடி காண்பது செய்த பணிக்குத் தக்கக் கூலியைத் தராதது ஆகும். தன்னைச் சுமந்து செல்கின்ற வண்டியை ஸ்கூட்டரோ, காரோ எதுவானாலும் சரி அதை ஒரு தெய்வ வாகனமாகக் கருதி அதற்குரித்தான மதிப்பைத் தந்து வழிபட வேண்டும் என்று வலியுறுத்தி வந்துள்ளோம். எந்த வண்டியிலும் ஏறிப் புறப்படும் முன்னால் “வேல் வேல் வெற்றிவேல் சுற்றி வந்து எம்மை காக்கும் சுப்ரமண்ய வேல்” என்று 18 முறை ஓதித் தானே எடுத்துச் செல்ல வேண்டும்! ஆனால் யார் இதனைக் இக்கலியுகத்தில் கடைபிடிக்கின்றார்கள்? டக் என்று ஏறிக் கொண்டு டர் என்று வண்டியில் புறப்படுவதுதானே நம் இயந்திர கதியான வாழ்க்கையாக அமைந்து விட்டது.
ஆன்ம ஜோதி உறைகின்ற இந்த மனித உடலில் வாழ்வது பெறுதற்கரிய இந்த மானிட உடலைத் தாங்கிச் செல்கின்ற வாகனம் என்றால் அது எத்தகைய புண்ய சக்தியைப் பெற்று இருக்க வேண்டும்? எனவேதான் தினந்தோறும் வாகனத்தைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற நியதியை வைத்து அந்த வாகனத்தை வழிபடுவதற்கான விசேஷ தினத்தையும் நமக்கு வகுத்துத் தந்துள்ளார்கள் ஆயுத பூஜையாக! தன் ஆத்மா உறைகின்ற உடலைத் தாங்கிச் செல்லும் தன்னுடைய வண்டியில் ஏற்படுகின்ற பழுதுகளைப் பார்க்கின்ற ஒரு மெக்கானிக்கின் உழைப்பிற்கும், திறமைக்கும் உரித்தான கூலியைத் தந்தாக வேண்டும். அவர் ரூ.700/- என்று சொல்லிட அதனைக் குறைத்து நீங்கள் ரூ. 500/- கொடுத்தால் அடுத்த முறை தானாகவே அவர் கூலியை உயர்த்திச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
நல்ல மெக்கானிக் உங்களுக்குக் கிட்டும் போது அவர் மனம் திருப்தி அடையுமாறு அதற்குரிய கூலியை அளிப்பதுதான் நல்லது. யார் ஏமாற்றுகின்றார்களோ அவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெறுவார்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள். எனவே, நன் முறையில் அமைந்துள்ள உங்களுக்குரிய மெக்கானிக் மனம் விரும்பி மகிழ்வுறுமாறு அவர்களுக்குத் தேவையானவற்றை அளித்து நல்ல ஆடை, நல்ல பாதணிகள் என்ற வகையில் அவர்கள் குடும்பத்திற்குரித்தான உங்களாலான எளிய தான, தர்மங்களைச் செய்து வாருங்கள்.. மேலும் மூங்கில் கூடை, மண்பாண்டம் என இவ்வாறு ஒருவர் தன்னுடைய தொழில் திறமையைக் காட்டுகின்ற போது அவர்களுக்குரித்தான கூலியைத் தராததினால் ஏற்படுகின்ற சாபங்கள் உண்டு. இவையெல்லாம் காய்ச் சுறை என்ற ஒருவிதமான சாபத்தை ஏற்படுத்தித் தருகின்றது.
இவ்வாறு உங்களுடைய மெக்கானிக்களுக்குத் தேவையானக் கூலியைச் சரிவர தராததினால் தான் ஆங்காங்கே உங்கள் வாகனத்திற்கு பலவிதமான தொந்தரவுகள் ஏற்படுகின்றன. தமக்குரியக் கூலியைப் பெறாது போது அந்த மெக்கானிக்கின் உள்ளம் எப்படி வேதனைப்படும் என்று சிந்தித்துப் பாருங்கள். அதுவே வாகனத்திற்கும் வேதனையாக மாறுகின்றது. இதே போல தம் தொழிலாளர்களுக்குச் சரியான ஊதிய நலன்கள் தராதோரும், தொழிலாளர்  யூனியன் பிரச்னைகளினால் அவதியுறுவோரும், இந்த விஷ்ணுபதி புண்ய காலத்தில் ஸ்ரீஆஞ்சநேயருக்கு 1008 வடைகளுக்குக் குறையாது வடைமாலை சார்த்தி வழிபட்டு வடைகளை தானமாக அளித்துவர தொழிற்சாலை / அலுவலகப் பிரச்னைகள் தீர்வதற்கான அறவழிகள் காட்டப் பெறுவர்.

நித்திய கர்ம நிவாரண சாந்தி

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை / வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுன் கடைபிடித்திடில், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.

1.2.2000 – சுக மஹரிஷி அனுஷ்டித்த ஏகாதசி – கிளிக்கு நன்றாகப் பழுத்த கோவைப் பழம் அளித்திட – உயர் அதிகாரியின் துன்புறுத்தல்கள் குறையும்.

2.2.2000 – குரங்களுக்கு கமலா ஆரஞ்சு பழம் அளித்தல் – அகங்காரம் நிறைந்த பெண் அதிகாரிகளால் வரும் துன்பம் குறையும்.

3.2.2000 – மீன்களை கோயில் குளத்தில் விட்டு உணவிடுவதால் – கோர்ட்டுக்குப் போகாத கொடுக்கல் / வாங்கல் பணப் பிரச்னைகள் தீரும்.

4.2.2000 – ஸ்ரீவித்யாதீசர் விநாயகருக்கான சதுர்த்தசி ஹோம வழிபாடு கொண்ட நாள், யானைக்கு வயிறார உணவு இட்டிடில் – வழக்குகளினால் வரும் துன்பம் தீரும்..

5.2.2000 – இன்று அனைவரும் நெற்றிக்குத் திருநாமம் இட்டு நாமம் இட்டோருக்கெல்லாம் அன்னதானம் செய்திடில் – வாக்குத் திறமை பெருகும்.

6.2.2000 – இன்று ஒரு வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரப்பர் பந்து வாங்கி விளையாடச் செய்திடில் பல்லில்லாத பெரியோர் கொடுத்த சாபத்தின் வேகம் தணியும். (பல்லிழந்த முதிய பெண்களின் வசைச் சொற்களுக்குச் சில பலித சக்திகள் உண்டு..)

திருப்பைஞ்ஞீலி திருத்தலம்

7.2.2000 – (Fan) மின் விசிறி இல்லாத ஏழைக் குடும்பத்திற்கு மின் விசிறி அளித்தல் – Blood Pressure (இரத்த அழுத்த) நோயின் வேகம் குறையும்.

8.2.2000 – தோலால் செய்யப்படாத (Rubber, Rexin போன்ற பொருட்களால் செய்யப்பட்ட) பாதணிகள் தானம்  - சக தொழிலாளிகளின் நட்பை வளர்க்கும்.

9.2.2000 – குட்டி யானைகளுக்கு மிகப் பெரிய பொரி உருண்டை தானம் – குழந்தைகளால் கணவன், மனைவிக்குள் ஏற்படும் சண்டை சச்சரவுகள் தணியும்.

10.2.2000 – பர்வதம், பங்கஜம், பாஞ்சாலி, திரௌபதி, பாமா போன்ற பெயருடையவர்கள் இன்று புதுப் புடவை, ஜாக்கெட், மஞ்சள், குங்குமம் , தாம்பூலந்தனை 60/80 வயது சுமங்கலிகளுக்கு தானம் அளித்திடில் – இல்லறத்தில் ஏற்படும் திடீர் சோதனைகளின் / கஷ்டங்களின் வேகம் தணியும்.

11.2.2000 – பத்துக் கண்களை (பொந்துகள்) உடைய பாம்பு புற்றைத் தேர்ந்தெடுத்து புற்றிலிருந்து மூன்றடி தூரத்தில் மஞ்சள், அரிசி, குங்குமத்தால் கோலமிட்டு அலங்கரித்து புது மண் சட்டியில் கறந்த பசுவின் பாலையோ, ஆட்டுப் பாலையோ வைத்து வணங்கிடில் – பத்துக் கண் புற்றில் வசிக்கும் பகலவ நாகதேவர் என்ற நாக தேவதையின் ஆசியால் ஏமாந்து போன / வராத கடன்கள் வசூலாகும்.

12.2.2000 – பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று காலையிலிருந்து இரவுக்குள் 6 மணி நேரமேனும் (சற்றே தேவையானால் சிறுஇடைவெளியுடன்) சிவ நாமாவளி ஜெபித்திடில் – சிறு சிறு உதவிகள் அவர்கள் வீடு தேடி வரும்.

13.2.2000 – கிருத்திகை, மிருத்திகா, நிருத்திகா, கார்த்திகேயன் போன்ற கார்த்திகை நட்சத்திர சம்பந்தமான பெயருடையவர்கள் பழங்காலக் கல் எந்திரத்தில் பொடி செய்த அரிசி ரவை, கோதுமை ரவை போன்ற ரவைகளை அவர்களின் தாய், தந்தையரோ, கணவன், மனைவியரோ, பாட்டிமார்கள் மூலமாக அரைத்து, அரிசி உப்புமா, கோதுமை உப்புமா, கோள உருண்டை செய்து பெருமாள் கோயிலில் தானம் செய்திடில் கணவன், மனைவி  தம்பதியர் அன்பு பரிசுத்தமாய் இறுகும், அதாவது ஒன்றாய் நன்றே எண்ணுவர்.. (think alike)..

14.2.2000 – தேங்காய் நாரினால் கயிறு திரிப்பவர்களுக்கு வஸ்திர தானம் செய்திடில் – நல்லவர்களால் உதவி பெறுவர்..

15.2.2000 – பூம்பூம் மாட்டுக்காரனிடம் பூம்பூம் மாட்டுக் காளைக்கான பூம்பூம் மாட்டுக் கல்யாணத்தை நடத்தச் சொல்லி பசுக்கான திருமண வைபோகத்தை செய்யச் சொல்லி மாடுகளுக்கும், பூம்பூம் மாட்டுக்காரனுக்கும் வஸ்திரமும் உணவும் அளித்தால் நிச்சயதார்த்தம் நடந்து தடைபட்டு நின்று போன திருமணங்கள் சமூகமாய் முடியும். காரிய சித்தி தரும் பூம்பூம் மாட்டுச் சகுனம் மிகவும் சிறப்பானது.

16.2.2000 – தென்னந்தோப்பு வைத்திருக்கின்றவர்கள் பெண் கொடுக்கல், வாங்கல் எடுத்திருந்தால் அதுவும் செம்மண் பூமியில் இருந்தால் பெண் வீட்டாரின் தோட்டச் செம்மண்ணைத் தோண்டி எடுத்து ( ஒரு வண்டி மண்) அதை மாப்பிள்ளை வீட்டுத் தோட்டத்திலும், மாப்பிள்ளை வீட்டுத் தோட்டத்திலிருந்து ஒரு வண்டி செம்மண்ணை எடுத்து வந்து பெண் வீட்டுத் தோப்பிலும் நிரவினால், மண்ணோட்ட ரகசியம் என்னும் பிருத்வி கல்யாண சந்திர ரகசிய மாற்றத்தால் இரு வீட்டாரிடையே உள்ள சச்சரவுகள் நீங்கி உறவுகள் பரஸ்பர அன்பாய் மாறும். சந்ததி தழைத்தோங்கும். இதில் இன்னும் பல ரகசியங்கள் உண்டு. அதை தக்க சற்குருவை நாடி அறியவும்.

17.2.2000 – ஏரிகாத்த ராமர் மதுராந்தகம் ஏரித் தீர்த்தம் கொண்டு 12 ராமர் கோயில்களில் அபிஷேகம் – கணவன் / மனைவி பிரியாமல் நலமடைவர்.

18.2.2000 – இன்று தெய்வீக நூல்களை இலவசமாக அச்சடித்து நல்லதோர் ஆஸ்ரமத்திற்கு அளித்திடில் – திக்குவாய் குழந்தைகளுக்கு வாக்கு நலம் பெற இறைவன் அருள்புரிவான்.
19.2.2000 – தர்ப்பணம் செய்யத் தெரியாதவர்கள் இன்று சேறு படிந்திருக்கும் எருமைகளை அழகாகக் கூட்டி வைத்து தேங்காய் நாரினால் தேய்த்து வேப்பிலை அல்லது எலுமிச்சையால் செய்யப்பட்ட சோப்பால் நீராட்டி நெற்றிக்கு வெள்ளை நாமமும், சிவப்பு நாமமும் / திருமண் இட்டு வயிறார உணவிட்டு அதன் முன்னால் விளக்கேற்றி வைத்து வலம் வந்து வணங்கிடில் – பித்ருக்களும், தர்மராஜனும் மகிழ்வுறுவார்கள்.

20.2.2000 – தர்மராஜர் இருக்கின்ற கோயில்களில் தீபமிட்டு அன்னதானம் செய்திடில் (திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம், திருக்கோடிக்கா) – தீதுறு நட்சத்திரங்கள் என பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ள நட்சத்திர நாட்களில் நோயில் வீழ்ந்தோர் நலமடைவர்.

21.2.2000 – தென்னை மரமேறி தேங்காய் பறிப்போருக்கு ஆடை, அன்னதானம் செய்திடில் – உயரமான கட்டிடங்களில், தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு வரும் துன்பங்கள் விலகும்.

22.2.2000 – சிசேரியன் செய்யாது ஐந்து குழந்தைகளுகளைப் பெற்றெடுத்த சுமங்கலித் தாய்மாரைத் தேர்ந்தெடுத்து ஆடைதானம், அன்னதானம் தொடர்ந்து செய்து வந்திடில் சுகப் பிரசவ வைத்தியத்தில் கை தேர்ந்தவராய் மாறலாம். இது மகப்பேறு வைத்தியர்களுக்கு மிகவும் விசேஷமான தான தர்ம பூஜை நாளாகும்.

23.2.2000 – புனித தீர்த்தமாகிய மலைத் தீர்த்தங்களில் குறைந்தது 10 வகைத் தீர்த்தங்களை 10 குடும்பங்களுக்கு அளித்து பூஜை செய்யவும், பருகவும் இலவசமாக அளித்திடில் நீரினால் தோஷங்கள் / நோய்கள் விலகும்.

24.2.2000 – தெய்வ மூர்த்திகளின் சித்திரங்களை மட்டும் வரைபவருக்கு ஆடை, உணவு தானம் செய்திடில் மனக் குழப்பங்கள் விலகும். சுவாமி சித்திரங்கள் மட்டும் வரைபவருக்கு ஆடை உணவு செய்திடில் மனக் குழப்பங்கள் விலகும்.

25.2.2000 – பாடல் பெற்ற தலத்திலுள்ள முருகனுக்கு வெள்ளி வேல் புதிதாக வாங்கிச் சாற்றுதல் – பங்காளிச் சண்டைகள் தீரும்.

26.2.2000 – இன்று கழுதைகளை நீராட்டி மூட்டை சுமக்காமல் ஓய்வில் வைத்து, உணவளித்து அதனை கௌடி அம்மனாய் (காசி ஸ்ரீசோளி அம்மன்) நினைத்து அதன் காதில் கர்ப்ப சம்பந்தமான நோய்களைப் பற்றிக் கூறிட அப்போது அது கனைத்துக் கத்தினால் உங்கள் பிரார்த்தனை கௌடீ அம்மனின் காதில் விழுந்ததாக அர்த்தமாகும். கணைப்பதற்காகக் கழுதையின் காலையோ, காதையோ இழுத்துத் துன்புறுத்தக் கூடாது.

27.2.2000 – உற்சவ மூர்த்திகள் உலா வந்து தங்குகின்ற மண்டபங்களைத் தூய்மைப்படுத்திச் சீர்திருத்தும் சிறு உழவாரத் திருப்பணிகளைச் செய்ய உகந்த நாள் இது. இத்திருப்பணியால் தோப்புத் துரவுகளால் வரும் துன்பங்கள் விலகும்.

28.2.2000 – வீடு, நில, புலன்கள் விற்பதற்கு முயற்சி செய்கின்றவர்கள் இன்று கழுகாசல மூர்த்திக்கு (கழுகு மலை முருகன்) அபிஷேக ஆராதனை செய்து, காரக் குழம்பு சாதம் அன்னதானம் செய்திடில் நல்லது நடக்கும்.

29.2.2000 – “தங்கப் பல்” கட்டினவர்களை அழைத்து அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வணங்கிடில்  - புதிய தொழில் துறைகளில் ஈடுபட நல்வழி பிறக்கும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam