தர்மத்தை நிலைநாட்டவே நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சிலகாகித ஹம்ஸ்வர லீலை

திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அருள் பெறும், அருள் வர்ஷிக்கும் சித்தர்கள் கோடி கோடியே. இதில் சிலகாகித சித்தர்கள் என்ற ஒருவகை அற்புத சித்தர்கள் திருஅண்ணாமலையை சதாசர்வ காலமும் கிரிவலம் வந்த வண்ணம் இருக்கின்றனர். பொதுவாக, 30000 என்ற எண்ணிக்கையில் வலம் வரும் இத்தகைய உத்தமர்கள் தங்கள் எண்ணிக்கையை 3000, மூன்று லட்சம் என்றவாறு எல்லாம் மாற்றிக் கொள்வதும் உண்டு. சிலகாகித சித்தர்களின் மகிமை என்னவென்றால் இவர்களை திருஅண்ணாமலை புனித வளாகத்தில், கிரிவலம் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசிக்க முடியும் என்பதே. ஒரு மேகக் கூட்டத்தைப் போல், மேகங்கள் வடிவில் இவர்களின் உருவம் அமைவதால் சற்குருவின் வழிகாட்டுதலின்பேரில் மட்டுமே இவர்களை இனங் கண்டு கொள்ளவோ, தரிசிக்கவோ முடியும் என்றாலும் திருஅண்ணாமலையை வலம் வரும் பக்தர்கள் தாங்கள் கிரிவலம் வரும்போது தரிசிக்கும் அனைத்து மேகக் கூட்டங்களையுமே சிலகாகித சித்தர்கள் என்று நினைத்து தரிசனம் செய்வதால் அவர்கள் வெறும் மேகக் கூட்டங்களாகவே இருந்தாலும் அந்த பக்தர்களுக்கு சிலகாகித தரிசனப் பலன்களை வலம் வரும் பக்தர்களின் மூதாதையர்கள் பெற்றுத் தந்து விடுவார்கள் என்பதும் திருஅண்ணாமலை கிரிவல தரிசனப் பலன்களில் ஒன்றாகும்.

காமசமன தரிசனம்
திருஅண்ணாமலை

ஹம்ஸ்வரம் என்றால் என்ன ? ஹம் என்பதற்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் இருந்தாலும் இங்கு சித்தர்கள் குறிப்பது அனைத்து அட்சரங்களின் ஒலி ஒளிகளை இணைக்கும், சித்தர்கள் மட்டுமே அருளக் கூடிய யோக நிலையாகும். யோகம் என்றால் இணைப்பு. உதாரணமாக, மற்றுப் பற்று ... என்று தொடங்கும் சுந்தர மூர்த்தி நாயனார் அருளிய தேவாரப் பதிகத்தில் உள்ள வார்த்தைகள் ஹம்ஸ்வர முறையில் சித்தர்களால் இணைக்கப்படும்போது அந்தப் பதிகம் மட்டுமே குறைந்தது 300 நோய்களைத் தீர்க்கும் மாமருந்தாக அமைகின்றது. அணு என்பது நம்மைப் பொறுத்தவரையில் மேலோட்டமாக புரோட்டான் எலெக்ட்ரான் என்ற அடிப்படைத் துகள்களைக் கொண்டு அமைவது என்றாலும் இந்த அணுக்களில் உள்ள புரோட்டான் எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையின் மாற்றம் மட்டுமே பிராணவாயு, ஹைட்ரஜன் போன்ற வாயுக்களை உருவாக்குகிறது என்பதை அறிவோம். இந்த வாயுக்களைக் கொண்டே சக்தி வாய்ந்த அணுகுண்டுகளைத் தயாரிக்கலாம் என்றாலும் இந்த இரண்டு வாயுக்களின் இணைப்பு மட்டுமே பூலோகத்திற்கு அதி அத்யாவசியமான நீரை உருவாக்குகிறது அல்லவா ? இதுவே சித்தர்களின் அரிய பணி. மனிதன் அழிவிற்காக பயன்படுத்தும் எந்த சாதனத்தையும் அறிவையும் மக்களின் நன்மைக்காக, மேன்மைக்காக மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றவர்களே சித்தர்கள். நீரை பூலோக மக்களின் நன்மைக்காக அருளியது சுதீக்ஷண மகரிஷியின் தவப் பயன்தானே ? அதனால்தான் தினமும் நீரைப் பயன்படுத்தும் முன் ஸ்ரீசுதீக்ஷண மகரிஷியே போற்றி என்று கூறி சித்தர் பிரானுக்கு நன்றி தெரிவிக்கும் வழிபாட்டை நம் சற்குரு பல்லாண்குகளுக்கு முன் அருளினார். இந்த ஒரே ஒரு வழிபாட்டை அடியார்கள் இத்தனை வருடம் இயற்றி வந்திருந்தால் கூட போதுமே, எந்த தொற்றுநோயையுமே கண்டு நாம் இன்று அஞ்ச வேண்டியதில்லை. இதனால் மாஸ்க் (முக ஆடை) அணிந்து நாமும் பயந்து கொண்டு மற்றவர்களையும் பயமுறுத்தும் அவல நிலை ஏற்பட்டிருக்காது.

எந்த ஒரு விஷயத்திற்குமே சற்குரு அளிப்பதே இறுதி விடை, ஒரே விடை என்றால் சிலகாகித சித்தர்கள் என்ற உத்தமர்களைப் பற்றி மட்டும் வேறு எவரிடமாவது இருந்து நாம் தெரிந்து கொள்ள முடியுமா என்ன. கிரிவலப் பாதையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமத்தை நிறுவிய நம் சற்குரு முதன் முதலில் சிலகாகித சித்தர்களின் தரிசனத்தை தம் அடியார்களுக்கு பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் அனுகிரத்தையும் பூரணமாய்ப் பெற்றுத் தந்தார். இது 1993ம் ஆண்டில் நடந்த ஒரு குரு வீலைதானே, நமக்கு எப்படி இந்த அனுகிரகம் உதவி செய்ய முடியும் என்று நீங்கள் நினைக்கலாம். இன்று நீங்கள் இங்கு காணும் சிலகாகித சித்தர்களின் தரிசனம் செவ்வாய் மடத்திலிருந்து பெறப்பட்டதே ஆகும். நம் சற்குரு ஆஸ்ரமத்தை நிறுவுவதற்காக ஹோமம் நிகழ்த்தியபோது திருஅண்ணாமலை செவ்வாய் மடத்தில் தம் அடியார்களுடன் தங்கித்தான் அந்த அரும்பணியை ஆற்றினார்கள் என்பதை பலரும் அறிந்திருக்கலாம். பூர்வ வாஸ்து ஹோமம் நிகழ்ந்த அன்று மாலைதான் தம் அடியார்களுடன் ஆஸ்ரம வளாகத்தில் எழுந்தருளி சிலகாகித சித்தர்கள் கூட்டத்தின் பலவிதமான தரிசனத்தை அடியார்களுக்குப் பெற்றுத் தந்தார். எப்படி ஒரு ஆலயத்தில் நடை சார்த்தும்போது இறுதி பூஜையாக பைரவருக்கு நன்றி தெரிவிக்கிறோமோ அதே போல் நம் சற்குரு பெற்றுத் தந்த சிலகாகித சித்தர்களை உடனிருந்து தரிசனம் செய்தது பைரவ வடிவில் வந்த ஒரு உத்தம அடியாரும் என்பதே அனைத்து உயிர்களுக்கும் கருணை வழங்கும் நம் சற்குருவின் மேன்மையாகும்.

ஸ்ரீபிட்சாடன மூர்த்தி
திருபாற்றுரை

திருஅண்ணாமலையில் நம் அகஸ்திய ஆஸ்ரமம் நிர்மாணிக்கப்பட்டபோது நடந்த வாஸ்து ஹோமத்தில் பங்கேற்ற அடியார்களுக்கு மட்டும்தான் சிலகாகித சித்தர்களின் ஆசி கனிந்தது என்று பொருள் அல்ல. அன்று மாலை யார் யாரெல்லாம் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து மலையை நோக்கி தரிசனம் செய்தார்களோ அவர்கள் அனைவருக்குமே சிலகாகித சித்தர்கள் அருட்கூட்டமாக வழங்கிய அற்புத தரிசனப் பலன்கள் எல்லாம் கனிந்திருக்கும் என்பதே உண்மை. இதற்காகத்தான் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்கள் அனைவரும் முடிந்தவரை திருஅண்ணாமலை உச்சியை நோக்கி தரிசனம் செய்தவாறே கிரிவலம் வர வேண்டும் என்று நம் சற்குரு அருளுரை வழங்குகிறார். தற்போது ஏகப்பட்ட தரிசனங்களை கட்டடங்கள் மறைத்தவாறு எழுந்து உள்ளதைக் காண்கிறோம். போகப்போக இன்னும் எத்தனை எத்தனை தரிசனங்களை நாம் இழப்போம் என்று கூற முடியாது என்பதால் இருக்கும், கிடைக்கும் தரிசனப் பலன்களையாவது அடியார்கள் தக்க வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதற்கு ஒரே வழி முடிந்தபோதெல்லாம் இயன்றவரை திருஅண்ணாமலையை கிரிவலம் வருவது ஒன்றுதான். போட்டோ வீடியோ என்னும் உபகரணங்கள் எல்லாம் ஏதோ பெயருக்கு நம் சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக அமையுமே தவிர, நாம் கிரிவலம் வந்து நம் சூட்சும சரீரத்தில் பெறும் பொக்கிஷங்களுக்கு இவை ஒரு அணு அளவு கூட நிகராக மாட்டா.

நாம் இப்போது தரிசனம் செய்யும் திருஅண்ணாமலை மலை வடிவில் இருந்தாலும் திருஅண்ணாமலையின் ஆதிவடிவம் மணி மாலை போன்றதே. யுகங்கள் தோறும் வைரம், பவளம், மாணிக்கம் என்று பல வடிவுகளில் எழுந்தருளிய திருஅண்ணாமலை ஆதியில் பல மணிகளைக் கோர்த்திருந்த வடிவில்தான் துலங்கியது. இந்த ஆதி வடிவை தரிசனம் செய்த நவநாத சித்தர்களின் அனுகிரகமே இன்றும் பூலோக மக்களுக்கு நலம் தரும் தேவாரம் என்பதான 32 தேவாரப் பதிகப் பாடல்களாகத் திகழ்கின்றன. திருஅண்ணாமலையை ஒன்று சேர்க்கும், இணைக்கும் மணிகளே திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் என்று ஒவ்வொரு தேவாரப் பதிகத்தை ஓதிய பின்னரும் கூறும் நம் சற்குரு வழங்கிய திருஅண்ணாமலை அகஸ்திய முற்றோதல் பத்ததியாகும். ஆக்சிஜன் ஹைட்ரஜன் என்ற இரு அணுவின் மூலக் கூறுகளே மக்கள் சமுதாயத்திற்கு அதி அத்தியவசியமான நீரைத் தோற்றுவிக்கக் கூடியவை என்றால் பல்லாயிரம் பிரணவ பீஜாட்சர மூலக் கூறுகளுடன் அமைந்த இந்த 32 பதிகங்கள் சாதிக்கும் அனுகிரகங்களை வாய் விட்டு விவரிக்க முடியுமா ? இந்த தேவார மணி மலையின் தன்மையை உணர விரும்புவோர்கள் முதலில் இரண்டே இரண்டு அடிப்படை மூலக் கூறு கொண்ட நீரை பயன்படுத்தும் விதமாக அமைந்த நம் முன்னோர்கள் அளித்த அர்க்யம், ஆசமணீயம், தர்ப்பணம் என்ற நீர் சார்ந்த வழிபாடுகளை தொடர்ந்து இயற்றி வர வேண்டும். அழகு, படிப்பு, செல்வம் போன்றவை பரம்பரையாக நம்மைத் தொடரும் நாம் விரும்பும் பாரம்பரியச் செல்வமாக இருந்தாலும் உண்மையில் ஒரு மனிதனைக் கரையேற்ற வல்லவை பக்தி என்ற பாரம்பரியமே ஆகும். அர்க்யம், ஆசமணீயம், தர்ப்பணம் என்ற பாரம்பரியச் செல்வங்களைக் குவித்தவர்களே ஸ்ரீகொன்றையடி விநாயகர் அருளும் கமணீய சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். இந்த பிலவ வருடம் இத்தகைய பீஜாட்சர வியாபகத்துடன் இணைந்திருப்பதே நாம் பெற்ற பெரும் பேறாகும். கம், பம், லம், வம் என்ற ஸ்ரீகொன்றையடி விநாயகர் அருளும் கமணீய சக்திகள் இந்த வருடத்தில் பல்கிப் பெருகுவதால் ஸ்ரீகொன்றையடி விநாயகரை வளர்பிறை சதுர்த்தி திதிகளில் வணங்கி நம் சற்குரு அருளிய தேவாரப் பதிகங்களை ஓதி வருவதால் இந்த ஆண்டில் மிகவும் சுலபமாக மணிமாலை சக்திகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பதே நம் சற்குரு வழங்கும் இனிய அனுகிரகமாகும்.

இரட்டைப் பனைமரம்
அரண்மனைப்பட்டி

ஸ்ரீகொன்றையடி விநாயகரை தரிசனம் செய்து அரண்மனைப்பட்டியில் இந்த நலம் தரும் தேவாரப் பதிகங்களை ஓதிய பின்னர் திருஅண்ணாமலையை தேவாரப் பதிகங்களை ஓதியவாறு வலம் வந்து வணங்குவதால் மிகவும் அபூர்வமாக திருஅண்ணாமலையில் மிளிரும் மலரும் மணிமாலை சக்திகளைப் பெறலாம். இது எத்தனை லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் சித்தர்கள் அனுகிரகம் என்பதை நாம் சற்றும் பகுத்துணர முடியாது. ஜபமாலையைக் கொண்டு நாம் மந்திரங்களை ஜபிக்கும்போது அதில் அமையும் மேரு மணியை நாம் தாண்டிச் செல்லாது மீண்டும் ஜபத்தைத் தொடருவது போல் நம் சற்குரு அருளிய தேவாரப் பதிகங்களில் அமைந்த இடர் களையும் பதிகம் அமைகிறது என்பதே இந்த மேரு தேவாரப் பதிகத்தின் மகிமையாகும். அதனால்தான் ஒவ்வொரு முறை திருஅண்ணாமலையில் கார்த்திகை தீப அன்னதான வைபவமாக இருந்தாலும் அல்லது வேறு எந்த வித அன்னதான வைபவமாக இருந்தாலும் அப்போது இந்த மேரு சக்திகளை பெருக்கும் இடர்களையும் பதிகம் நம் சற்குருவின் ஆசியால் ஓதப்பட்டது என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும்.

திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தவாறே இந்த 32 தேவாரப் பதிகங்களையும் ஓதுவது சிறப்பு என்றாலும் குழந்தைகள், முதியவர்கள் பலரும் அமைந்த சத்சங்க வழிபாட்டை மேற்கொள்ளும்போது ஓரிடத்தில் அமர்ந்து இந்த தேவாரப் பதிகங்களை ஓதுவதும் ஏற்புடையதாகும். பிரம்மலிங்கம், கற்பக விநாயகர் ஆலயம், சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், ரமணாஸ்ரமம், பிருத்விலிங்கம், காமக்காடு, உண்ணாமுலை மண்டபம், அடிஅண்ணாமலை, அபயமண்டபம், நம் ஆஸ்ரமம், பஞ்சமுத தரிசனம், பச்சையம்மன் கோயில், துர்கை அம்மன் கோயில் போன்ற திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து தேவாரப் பதிகங்களை ஓதுவதும் ஏற்புடையதாகும்.

விசிறி சுவாமிகளைத் தரிசனம் செய்து யாராவது எந்த அனுகிரகத்தையாவது கேட்டால், “எங்க அப்பாவோ (திருஅண்ணாமலையான்) பெரிய பிச்சைக்காரன், அவனுடைய குழந்தையான நான் மட்டும் என்ன பணக்காரனா என்ன, நானும் ஒரு பிச்சைக்காரன்தான் ...”, என்று சொல்வார். ஆழ்ந்த பொருள் பொதிந்த சித்த வாசகம் இது. பொதுவாக, பிச்சைக்காரர்களுக்கு உணவு, உடை, செல்வம் என்று நாம் வழங்குவது வழக்கம். ஆனால், அகிலாண்ட நாயகனான சிவபெருமானுக்கு நாம் எதைத்தான் அளிக்க முடியும் ? ஆனால், அவரோ திருஓடு ஒன்றை ஏந்தி பிச்சை வாங்குவதற்கு தயாராகத்தான் இருக்கிறார். அதனால் நாம் ஒருவேளை சிவனுக்கு பிச்சை அளிப்பதாக இருந்தால் நம்முடைய ஆசை, காமம், குரோதம், பகைமை, பொறாமை போன்ற பல தீய குணங்களையும் சுபாவங்களையும் தானமாக அளிக்கலாம். ஆனந்தமாக ஏற்றுக் கொள்வான் நம் ஈசன். ஆனால், இந்த பிச்சை அளிப்பது முழுமையாக இருந்தால்தான் ஈசனுக்கும் சுவை, நமக்கும் பெருமை. அதாவது ஒரு முறை நாம் ஈசனுக்கு கோபம், ஆசை, காமம், பொறாமை இவற்றை தானமாக அளித்து விட்டால் மீண்டும் இத்தகைய நினைவுகள் நம்மை கனவிலும் தீண்டக் கூடாது. அப்போதுதான் அது முழுமையான “பிச்சையாக” இருக்கும். இருந்தாலும் மனித சுபாவம் அறிந்தவன் நம் ஈசன் என்பதால் முடிந்தபோதெல்லாம் இறைவனுக்கு இந்த பிச்சையை அளிப்பதால் பணச் செலவே இல்லாத இந்தப் பிச்சை நம்மை குணக் கோடீஸ்வரனாக ஆக்கும். இத்தகைய பிச்சையை முழுமையாக அளிக்க நமக்கு உறுதுணை செய்வதே 32 தேவாரப் பதிகங்களின் ஒரு பலனாகும்.

ஸ்ரீபார்த்தசாரதி கோயில்
திருஅல்லிக்கேணி சென்னை

ஒரு முறை பகவத் கீதை பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் நம் சற்குரு, “பகவத் கீதை பாராயணம் என்பது எத்தனையோ நன்மைகளைத் தரக் கூடியதுதான். ஆனால், பகவத்கீதையின் அர்த்தத்தை, பகவத்கீதை புகட்டும் பாடத்தை உணர்ந்து தெளிவதே மனிதர்களுக்கு பயன் தரக் கூடிய செயலாகும். உதாரணமாக, பகவான் ‘தர்மத்தை நிலை நாட்டவே நான் யுகங்கள் தோறும் அவதரிக்கிறேன்’, என்று உபதேசிக்கிறார் அல்லவா ? அப்படியானால் பகவானைத் தவிர வேறு எவரும் தர்மத்தை நிலை நாட்டுவதில்லையா ? தர்மத்தை நிலை நாட்டும் கிருஷ்ண பகவான் எங்கே, எவ்விடத்தில் அந்த தர்மத்தை நிலை நாட்டுகிறார் ? இதை ஒவ்வொரு அடியாரும் ஆத்ம விசாரம் செய்து பார்க்க வேண்டும். இதற்கு சரியான விடையை உங்களால் கண்டு கொள்ள முடிந்தால் அதுவே உங்கள் சாதனை வாழ்வின் கடைசிப் படியாக அமையும். அதன் பின்னர் நீங்கள் இறைவனை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டிய அவசியமே இருக்காது. உணர்ந்த பொருளை, அறிந்த தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் கூறுவதாகத்தான் உங்கள் எஞ்சிய வாழ்வு அமையும் ...”, என்று பொருள் பொதிந்த அகஸ்திய கீதையை உபதேசித்தார்கள். இது அனைவருமே நிறைவேற்றக் கூடிய ஒரு ஆத்ம விசார பாடமாக இருந்தாலும் இந்த ஆத்ம விசாரத்தையும் தொடர்ந்து நிறைவேற்ற முடியாத அடியார்கள் பலர் உண்டு. அவர்களுக்கு கை கொடுப்பதே நலம் தரும் தேவாரப் பாராயணம் ஆகும். பொருள் புரிகிறதோ இல்லையோ, தொடர்ந்து நம் சற்குரு அளித்த தேவாரப் பதிகங்களை ஓதி வந்தால் சிறிது சிறிதாக கீதை புகட்டும் பாடத்தை, தத்துவத்தை உணர்ந்தவர்கள் ஆவோம். எல்லாப் பாதைகளுக்கும், வழிகளுக்கும், சுருக்கு வழி என்று உண்டு அல்லவா ? குறுக்கு வழியை காஞ்சி பரமாச்சாரியார், நம் சற்குரு போன்றோர் அங்கீகரிப்பதில்லை. இவ்வாறு காமத்தை வெல்வதற்கும் உள்ள சுருக்கு வழியே தேவாரப் பதிக முற்றோதல் ஆகும். திருஅண்ணாமலையில் உள்ள காமசமன தரிசனத்தை நோக்கியவாறே துர்கை ஆசனம் அல்லது துர்கா சரண ஆசனத்தில் நிலைத்து தேவாரப் பதிகங்களை ஒருமுகமாக ஓதுதல் என்பதே சித்தர்கள் அளிக்கும் சுறுக்கு வழியாகும். பல வருடங்களில் சாதிக்கக் கூடிய காமசமன அனுகிரகங்களை சில நாட்களிலேயே பெற்று விடலாம் என்பதே இத்தகைய தரிசனங்களின் மகாத்மியமாகும். திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள துர்கை அம்மன் கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் நிலை நின்றும் இந்த தேவார பதிகம் ஓதும் முறையை மேற்கொள்ளலாம்.

மனித மூளையில் கோடிக்கணக்கான செல்கள் உண்டு. இந்த செல்களின் பயன்பாடு பற்றி இன்றைய விஞ்ஞானம் எதுவுமே அறிந்து கொள்ள முடியவில்லை. மனித வாழ்நாளில் பாதிப் பகுதியை தூங்கியே கழிக்கும் ஒரு மனிதனின் தூக்கத்தை நிர்வகிப்பது ஒரே ஒரு செல் என்றால் நமது மூளையில் உள்ள மற்ற செல்களின் பயன்பாடு எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். நாம் சிறுவயதில் படித்த பள்ளிக் கூடத்தின் பெயரையோ, நேற்று சாப்பிட்ட ஹோட்டலின் பெயரையோ எந்த வித கால வித்தியாசமும் இன்றி நம் நினைவுக்கு கொண்டு வரக் கூடியதே மூளையின் செயல் திறன் ஆகும். அறிவு ஜீவிகள் என்று நாம் புகழும் விஞ்ஞானிகள் கூட மூளையின் இரண்டு சதவீதத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். சித்தர்கள், மகான்கள் போன்றோர் சுமார் ஐந்து சதவீத மூளையின் செயல் திறனை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். மகான்களுக்கு 20, 30 சதவீதம் என்ற அளவில் மூளையின் செயல்திறனை அதிகப்படுத்துவது சாத்தியமே என்றாலும் அந்த அளவிற்கு நம் பூலோகத்தில் தேவையில்லை என்பதே அதன் காரணமாகும்.

உதாரணமாக கோபால் (cobol) என்ற கம்ப்யூட்டர் மொழியைப் பற்றியோ மறைந்து போன பேஜர் (pager) என்ற தொலை தொடர்பு சாதனம் பற்றியோ உள்ள அறிவால் மனிதனுக்கு என்ன பயன் ? எப்படி 26 எழுத்துக்களே உடைய ஆங்கில மொழி இன்று உலகை ஆளும் ஒரு மொழியாக இருக்கிறதோ அது போன்றதுதான் நமது மூளையில் உள்ள செல்களின் செயல்திறனும் ஆகும். எப்படி ஆக்சிஜன் ஹைட்ரஜன் என்ற இரண்டு வாயுக்கள் இணைந்து நீரை உருவாக்கும் அற்புதத்தை நிகழ்த்துகின்றனவோ அது போன்றதே இந்த செல்களின் இணைப்பில் தோன்றும் பயன்பாடும் ஆகும். ஆனால், இந்த இணைப்பை நவநாத சித்தர்கள் என்ற உயர்ந்த நிலை சித்தர்களால் மட்டுமே நிகழ்த்த முடியும் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் மாமறை இரகசியம் ஆகும். இத்தகைய ஒரு இணைப்பையே திருச்சிற்றம்பலம் என்ற திருவார்த்தையால் நவநாத சித்தர்கள் நிறைவேற்றுகின்றனர். இதற்கு அடிப்படையாக அமைவதே சிலகாகித சித்தர்களின் செயல்பாடு ஆகும். எனவே அது எழுத்துக்களின் இணைப்பாக அமைந்து மொழியாகத் தோன்றினாலும், மூலக் கூறுகளின் இணைப்பாக அமைந்து பல்வேறு பொருட்களாகத் தோன்றினாலும், சக்திகளின், பீஜாட்சரங்களின் இணைப்பாக அமைந்து இந்த உலகையே ஆளும் சக்தியாக இருந்தாலும் அனைத்தின் பின்னணியில் செயல்படுவதே சிலகாகித சித்தர்களின் அருட்பணியாகும். இந்த இணைப்பு இரகசியத்தை தொடர்ந்து சென்றால் பல சங்கம இரகசியங்களும் தெளிவாகும். சிவ சக்தி ஐக்யம், ஆண் பெண் இணைப்பு இரகசியங்கள் என்பவை எல்லாமே சிலகாகித இணைப்பு இரகசியங்களை குறிப்பவைதாமே. நம் சற்குரு திருஅண்ணாமலையை தொடர்ந்து வலம் வருவதால் இந்த உலகத்தையே வில்லாக வளைக்கலாம் என்பதன் பின்னணியில் அமைந்துள்ள இரகசியம் எந்த அளவிற்கு பிரம்மாண்டமாக வியாபித்து நிற்கிறது பார்த்தீர்களா ?!

ஸ்ரீவையாழி விநாயகர்
மப்பேடு சிவாலயம்

நாம் இரண்டு விதமான சக்தி பரிமாண மாற்றங்களைப் பற்றி அறிவோம். ஒன்றில் இரு சக்திகள் இணைகின்றன, மற்றொன்றில் ஒரே சக்தி இரு சக்திகளாகப் பிரிந்து செயல்படுகின்றது. இதில் இரு சக்திகள் இணைவதால் அதிக சக்தி ஏற்படும் என்பதை நம் பகுத்தறிவும் ஒப்புக் கொள்கிறது. விஞ்ஞானம் கூறுவதும் அதுதான். இதுவே ஆண் பெண் குழுமும் குடும்ப இணைப்பில் தோன்றும் சிவ சக்தி ஐக்ய இணக்கமாகும். ஆனால் ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இருப்பது என்பது இறுதி வரை ஏற்றுக் கொள்ளக் கூடிய பகுத்தறிவு வாதம் அல்லவே. இதைத்தான் நம் முன்னோர்களும் மகான்களும் சுட்டிக் காட்டினர், தங்கள் நடைமுறை வாழ்வில் சாதித்தும் காட்டினர். சிவ சக்தி ஐக்ய தரிசனம் கூறும் உன்னத உண்மையும் இதுவே ஆகும். ஆரம்பத்தில் கணவன் மனைவியாக இணையும் இருவரும் ஓரிரு சந்தானங்களைப் பெற்றெடுத்தவுடன் இந்த சிவ சக்திகளைப் பிரித்து அந்த சக்திகளை உலகிற்கு தாரை வார்த்து அளிக்க வேண்டும் என்பது நம் சற்குரு சுட்டிக் காட்டும் சித்த மகாத்மியமாகும். இணைப்பு, பிரிவு என்ற இரண்டு காரணங்களாலும் சக்தி தோன்றுவது இயற்கையே. இந்த இரண்டு விதமான சக்தி மாற்றத்தை முறையாக மக்கள் சமுதாய நன்மைக்காக பயன்படுத்த வேண்டுமென்றால் அதற்கு நிச்சயமாக நம் சற்குரு போன்ற வழிகாட்டிகளின் வழிகாட்டுதல் அவசியமே. கணவன் மனைவி என்ற இருவரும் உடலால் பிரிந்து உள்ளத்தால் இணைந்து நிறைவேற்றும் சாதனைகள் இந்த fusion, fission என்ற இரு விதமான சக்தி மாற்றங்களையும் உண்டாக்குவதால் இந்த சக்தி பரிமாணத்திற்கு ஈடு இணையே இல்லை என்பார் நம் சற்குரு. சிலகாகித சித்தர்கள் 3000 எண்ணிக்கையில் தோன்றுவதும், மூன்று லட்சம் என்ற எண்ணிக்கையிலும் தோன்றுவதுண்டு என்ற சித்த வார்த்தைகளில் பரிமளிக்கும் தத்துவங்கள் எத்தகைய பொருள் பொதிந்ததாய் விளங்குகின்றன ?

ஸ்ரீசுதபுத மகரிஷி
மப்பேடு சிவாலயம்

நாம் நினைப்பது போல் fusion, fission என்ற கோட்பாடுகளை நடைமுறைப்படுத்துதல் என்பது சற்றும் எளிதல்ல. சித்தர்களைத் தவிர வேறு எவராலும் சாதிக்க முடியாத தத்துவமே இவை என்பதில் ஐயமில்லை. தன்னில் தானாய் இருக்கும் சிவ நிலையே பிரிவு என்று சாதாரண கண்ணோட்டத்தில் நாம் அறியக் கூடிய பௌதீக நிலையாகும். சிவனும் சக்தியுமாக இணைந்திருக்கும் நிலையையே நாம் இணைப்பு என்ற தத்துவமாக அறிந்துள்ளோம். புரியாது, தெரியாது என்பதற்காக எந்த இறை தத்துவத்தின் பலனையும் நாம் இழப்பதற்கு நம்மை விடுவதில்லை நம் முன்னோர்கள். புரிகிறதோ இல்லையோ இந்த பலவித இணைப்புகளின் பலவிதமான இரகசியங்களை சாதாரண ஒரு மனிதனும் புரிந்து கொள்ள உதவுவதே நம் பெரியோர்கள் அனுசரித்து வந்த குடுமி வகை சிகை பராமரிப்பும், பெண்களின் சடை வகைப் பின்னல் அலங்காரமும் ஆகும். குடுமி என்பதில் தலை கேசம் அனைத்தையும் ஒன்றாக இணைத்து சிவ தத்துவ ஐக்யமாகவும், பெண்களின் சடை அமைப்பில் மூன்றாக தலை முடி பிரிக்கப்பட்டு இணைக்கப்படுகிறது என்பதே இந்த தெய்வீக சங்கமத்தின் பின்னணியில் அமைந்த இரகசியமாகும். அலாகாபாத் திரிவேணி சங்கமத்தில், மற்றும் நம் புனித பாரதத்தில் அமைந்த சங்கமங்கள் அனைத்துமே இத்தகைய கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற சக்தி அம்சங்களைக் குறிப்பதாக அமைவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்.

பெண்கள் சடையைப் பின்னி இறுதியில் மூன்று மணிகள் கொண்ட ஒரு குஞ்சத்தை இணைக்கும்போது இந்த குஞ்சங்கள் பெண்களின் முதுகுத் தண்டின் முடிவில் அமைந்துள்ள மூலாதாரத்தை அடிக்கடி தீண்டுவதால் சிறிது சிறிதாக இந்த “தீண்டல்” இயற்கையாக குண்டலினியை எழுப்பும் ஒரு வழிபாடாக அமைகின்றது. முற்காலத்தில் இந்த குஞ்சத்தில் வைரம், மாணிக்கம் போன்ற மணிகள் அமைந்த வில்லைகளை வைத்து சூடுவதற்கு இதுவே காரணமாகும். பகட்டிற்காகவோ, வெறும் அலங்காரத்திற்காகவோ ஏற்பட்டதல்ல நம் முன்னோர்களின் செயல்முறைகள் அனைத்துமே. குண்டலினியின் தீண்டல் சக்தியில் குறைவு ஏற்படக் கூடாது என்பதற்காகவே பெண்கள் தங்கள் சடையை முன்னால் போடக் கூடாது என்று எச்சரித்து வந்தனர் நம் முன்னோர்கள். இவ்வாறு பெண்கள் தங்கள் சடையை முன்னால் போட்டுக் கொள்வதால் பிற ஆண்களின் காமப் பார்வை பெண்களின் முதுகுத் தண்டில் நிலைகொள்வதால் இத்தகைய பார்வை ஏக்கங்கள் பலவிதமான தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. அதே சமயத்தில் பெரியோர்களை, மகான்களை நமஸ்கரிக்கும்போது அவர்கள் அனுகிரக சக்திகள் விரயம் ஆகாது இருக்க பெண்கள் தங்கள் குஞ்சங்களை தங்கள் வலது கையால் பிடித்துக் கொள்வதால் இத்தகைய உத்தமர்கள் அளிக்கும் அருளாசி சுமங்கலிகளின் வலது கைரேகைகள் மூலமாக உடலை அடைந்து குடும்பத்திற்கு நன்மை பயக்கும். இத்தகைய அனுகிரகங்கள் எத்தனையோ பரம்பரைகளையும் தாண்டிச் செல்லும் இயல்புடையன என்பதே இந்த சடை, குஞ்சம், மணிகள் உணர்த்தும் பாடமாகும்.

காளி ஆசனம்
ஆரியங்காவு ஐயப்பதலம்

தற்காலத்திலோ இத்தகைய நீண்ட சடை உடைய பெண்களே அரிதாகி விட்டதால் இத்தகைய குஞ்சங்கள் அளிக்கும் அனுகிரகத்தை பெற விரும்பும் பெண்கள் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்த துர்கை அம்மன் கோயிலிலோ அல்லது காமசமன தரிசனப் பகுதியிலோ இறைவனுக்கு குறைந்தது 21 முறை முன் தலை நன்றாக தரையைத் தொடுமாறு வணங்கி எழுவதால் திரிவேணி சங்கமம் அருளும் அனுகிரகத்தை பெறலாம் என்பதே சித்தர்கள் அளிக்கும் வரப்பிரசாதமாகும். இந்த வழிபாட்டிற்குப் பின் தலை முடிக்கு செயற்கையான சாயப் பூச்சு மேற்கொள்வதை தவிர்த்தால்தான் வழிபாட்டின் பலன் பூரணமாகும். தற்காலத்தில் திருமணம் என்பதே அரிதாக வர, இதில் விளையும் (?!) முறையான சந்தான பாக்கியமும் அதனினும் அரிதாக வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான இரசாயன உரங்கள், மருந்துகளின் பயன்பாடு என்றாலும் ஜாதக அம்சங்கள் முறையாக கணிக்கப்படாததால் தம்பதிகள் இடையே ரஜ்ஜுப் பொருத்தங்கள் முறையாக அமையாததும் முக்கிய காரணமாகும். இதை முறைப்படுத்துவதாக அமைந்துள்ளதே ஸ்ரீவையாழி விநாயகர் எழுந்தருளியுள்ள மப்பேடு திருத்தலமாகும். ரஜ்ஜுப் பொருத்தங்களும் யோனிப் பொருத்தங்களும் சரியாக அமையாத குடும்பங்களில் தாம்பத்ய உறவுப் பிரச்னைகள் தோன்றுவது இயற்கையே. எனவே திருமணமான தம்பதிகள் மப்பேடு திருத்தலத்தை தரிசனம் செய்து ஸ்ரீவையாழி விநாயகரையும், ஸ்ரீவீர்யபாலீஸ்வரரையும், தம்பதி சகிதமாக எழுந்தருளியுள்ள நவகிரக மூர்த்திகளையும் தரிசனம் செய்து, வழிபட்டு பயனடையுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

யோக ஆசனங்களில் காளி ஆசனம் என்ற ஒரு அற்புத ஆசனம் உண்டு. மாதவிலக்கு பிரச்னைகளையும், தாம்பத்ய உறவு பிரச்னைகளையும் நீக்கி, ஆரோக்யமான சந்தானத்தைப் பெறுவதற்கு வழிகோலும் இந்த ஆசனம் தற்போது மறைந்து விட்டது என்றே கூறலாம். முற்காலத்தில் காளி ஆசனத்தில்தான் குழந்தைகளைப் பெற்றெடுத்துனர். இதனால் தாய்மார்களின் கனிவான பார்வையே அவர்கள் பெறும் குழந்தையின் மேல் படிய, சிறந்த ஆசீர்வாதத்தை அளிக்க ஏதுவாக அமைந்தது. தற்காலத்தில் குழந்தைப் பேற்றின்போது தாய் குழந்தையைப் பார்க்கும் முன் பல மருத்துவர்களும் செவிலிப் பெண்களும் குழந்தையை முதலில் பார்க்கும் நிலை ஏற்படுவதால் பெற்றோர்களின் முதல் ஆசீர்வாதத்தை குழந்தை பெற முடியாமல் போய் விடுகிறது. அது மட்டுமல்லாமல் காளி ஆசனத்தில் குழந்தைப் பேறு ஏற்படும்போது அது பூமியின் புவியீர்ப்பு விசைக்கு ஏற்ப அமைவதால் பிறக்கும் குழந்தைகள் அறிவுத் திறனுடனும், வியாதிகள் எளிதில் நெருங்காத உடல் ஆரோக்கியத்துடனும் தோன்றுகின்றன. தற்காலத்தில் இத்தகைய பிறப்புகள் ஏற்படும் வாய்ப்பு இல்லாததால் குழந்தைகள் பிறந்த பின்னராவது போரூர், திருவானைக்காவல், கேரள மாநிலத்தில் உள்ள ஆரியங்காவு திருத்தலம் இவற்றை தரிசனம் செய்தலால் குழந்தைகள் நல்ல ஆரோக்யம் பெற ஏதுவாகும்.

ஸ்ரீவேதாந்த தேசிகர் காஞ்சிபுரம்

மேலும் காளி ஆசனத்தில் குழந்தை பிறக்கும்போது குழந்தையின் மூளைக்கு ஏகப்பட்ட இரத்தம் பாய்கிறது. இதுவே குழந்தைக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தந்து அது சிறந்த அறிவாளியாக மலர துணை செய்யும். கோச்செங்கட் சோழனின் தாய் தலை கீழாகத் தொங்கினாலும் குழந்தைப் பிறப்பின்போது காளி ஆசனத்தில் குழந்தையை ஈன்றெடுத்தாள். இதுவே அந்த குழந்தை வரலாறு காணாத அளவிற்கு சிவாலயங்களை கட்டும் சிவபக்தனாக மலர காரணமாக அமைந்தது என்பதே சித்தர்களின் அருள் மொழி.

வரும் 15.10.2021 வெள்ளிக் கிழமை ஸ்ரீஆயுர்தேவிக்கு உரிய சந்தான சௌபாக்ய பூஜை தினமாக அமைவது நம் கலியுக மக்கள் பெற்ற பெரும் பேறே. பலவிதமான அபமிருத்யு தோஷங்களையும், சிசு வேதனைகளையும் தீர்க்கும் தினமாக இந்நாள் அமைகிறது. மூன்று ஆறு என்ற எண்களின் குசா இணைப்பு இத்தகைய சக்திகளைத் தோற்றுவிப்பதாகும். மேற்கண்ட ரஜ்ஜு தோஷங்களையும், சங்கம பிரச்னைகளையும், குழந்தைப் பேறு பிரச்னைகள் அனைத்திற்கும் ஒரு தீர்வாக, விடியலாக தோன்றுவதே வரும் வெள்ளிக் கிழமை அன்று திகழும் ஸ்ரீஆயுர்தேவி பூஜை தினமாகும். ஆயுர்தேவி பூஜையை எம்முறையிலும் நிறைவேற்றலாம் என்றாலும் இந்த ஆயுர்தேவி பூஜையை முடிந்த மட்டும் வெள்ளிக் கும்பத்தில், அதிலும் சிறப்பாக அஷ்ட லட்சுமிகள் உருவம் பொறிக்கப்பட்ட கலசத்தில் நிறைவேற்றுவதே சிறப்பாகும். கலச தீர்த்தத்தில் கங்கை, காவிரி (பவானி முக்கூடல்) போன்ற புனித தீர்த்தங்களை சேர்ப்பது சிறப்பு. குறைந்தது வானநீல வண்ணத்தில் அமைந்த மூன்று மீட்டர் நீளமுள்ள ரவிக்கைத் துணியை கலசத்திற்கு சார்த்தி, பூசை நிறைவில் அதை ஒன்பது கஜ புடவை, மாங்கல்யப் பொருட்கள், முழு தேங்காய் இவற்றுடன் சுமங்கலிகளுக்கு அளித்தல் கிடைத்தற்காரிய பேறாகும். ஸ்ரீவேதாந்த தேசிகரின் ஜயந்தி தினமாக இந்நாள் அமைவதால் அந்த உத்தமரின் அருளாசியும் இந்த பூஜையில் பல்கிப் பெருகும். வேதாந்த தேசிகரின் பெற்றோர்கள் இத்தகைய சுமங்கலி பூஜைகளைத் தொடர்ந்து 30 வருடங்கள் இயற்றிட அதன் கனிந்த அனுகிரகம் பெற்றவரே ஸ்ரீவேதாந்த தேசிகர் என்ற உத்தம ஆழ்வார் என்பதே நாம் நினைவில் கொள்ள வேண்டிய சுவையாகும்.

சிவஸ்வஸ்தி சக்கரம்

சிவஸ்வஸ்தி சக்கரம் என்ற ஒரு சக்கரத்தை நம் சற்குரு பல வருடங்களுக்கு முன்பே அருளியுள்ளார். இதன் மகிமையை உணர்ந்து கொள்ள பல பிறவிகள், பல்லாண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்றாலும் இந்த பிறவியில் நாம் ஆரம்பித்து தொடர்ந்து இந்த சக்கர தியானத்தை, பயிற்சியை மேற்கொண்டால் காமம் என்பதை அறவே நீக்கும் உபாயத்தை பெற்றோர்கள் ஆவோம். பலருக்கும் உள்ளூர காமத்தை விட்டு விடும் விருப்பம் என்ற ஒன்றே முளைப்பதில்லை. காரணம் பஜ்ஜியாக இருந்தாலும், பட்டாடையாக இருந்தாலும் அதை விட்டு விடுவது என்பது சற்றும் சுவை அளிக்காது என்ற எண்ணம் ஆழப் பதிந்து விட்டதே அதன் காரணமாகும். ஆனால், எதையும் அறவே ஒழித்தால்தான் தியாகம் உணர்த்தும் பேரின்பத்தை உணர முடியும். இதற்கு ஆரம்பப் பாடமாக அமைவதே இந்த சிவஸ்வஸ்தி சக்கர வழிபாடாகும். வரும் வெள்ளிக்கிழமை அன்று அமையும் ஸ்ரீஆயுர்தேவி பூஜையில் கலச ஸ்தாபனத்தை மேற்கொள்ளும்போது பச்சரிசி மேல் சிவஸ்வஸ்தி சக்கரம் அமைத்து, வரைந்து, அதன் மேல் கும்ப கலசத்தை அமைப்பது சிறப்பாகும். இனியாவது தொடர்ந்து இந்த சக்கரத்தை முடிந்த போதெல்லாம் நம் வழிபாடுகளுடன் இணைத்து வழிபட்டு வருவதால் சுக்ர ஜோதி என்ற பெண்களிடம் தோன்றும் ஜோதியை நாம் தரிசிக்க முடியும். இந்த ஜோதி தரிசனத்திற்குப் பின்னரே பெண்களின் மேல் தோன்றும் மோகம் முற்றிலும் முறையும் என்பது மட்டுமல்லாது அடுத்து நாம் பெறும் ஸ்ரீசக்கர லோக தேவதைகளின் தரிசனத்திற்கும், ஸ்ரீலலிதா பரமேஸ்வரின் தரிசனத்திற்கும் இது அத்தியாவசியமானது என்பதே பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக இரகசியமாகும். இதே போல் பெண்களுக்கும் ஆண்களைப் பார்க்கும்போது வீர்ய ஜோதி என்ற செந்நிற ஜோதி தோன்றும். சுக்ர ஜோதியில் ஏற்படும் தெளிவின்மை பெண்கள் ஆண் தன்மையைப் பெறுவதற்கும், வீர்ய ஜோதியில் ஏற்படும் குறைபாடு ஆண்கள் பெண்களைப் போல் நடமாடுவதற்கும் காரணமாகும். மப்பேடு திருத்தலத்தில் அருளும் ஸ்ரீவையாழி விநாயகர், ஸ்ரீவீர்யபாலீஸ்வரர் இறை மூர்த்திகளின் தொடர்ந்த வழிபாடு இத்தகைய குறைபாடுகளைத் தீர்க்கும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீவீர்யபாலீஸ்வரர் மப்பேடு

வையாழி கூத்து என்ற ஒருவித நடனம் முற்காலத்தில் சிறப்புற்று விளங்கியது. தற்போதைய jerk dance போன்றது என்றாலும் இத்தகைய வையாழி கூத்து நடனத்தை ஆடுபவர்கள் முழுக்க முழுக்க பெண் போகத்தை நாடாதவர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். இவர்களால் மட்டுமே இத்தகைய jerk கொடுத்து ஆட முடியும். நம் சற்குரு இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, “இப்போது ஆடுபவர்கள் வையாழி கூத்தில் ஒரே ஒரு குலுக்கலை (jerk) மேற்கொண்டாலே போதும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அந்த உறுப்பைச் சரி செய்ய முடியாது ...”, என்பார். இத்தகைய ஒரு நடனத்தால் என்ன பயன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா ? இதற்கான விளக்கம் ஒரு விரசத்தை உருவாக்கும் என்பதால் இந்த நடனத்தை மக்கள் எப்படி தற்கால வாழ்வில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையே சித்தர்கள் இங்கு விவரிக்கிறார்கள். ஆண் பெண் நடனக் கலைஞர்கள் குறைந்தது ஒன்பது பேரை வைத்து அவர்கள் எத்தகைய நடனமாடுவதாக இருந்தாலும் அதை வையாழி கூத்தாகவே ஏற்றுக் கொண்டு, குறைந்தது ஒரு மணி நேரமாவது ஸ்ரீவையாழி கணபதி முன்போ அல்லது மப்பேடு திருத்தலத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இந்த நடனத்தை மேள தாளத்துடன் நிகழ்த்தி நடன முடிவில் அந்த கலைஞர்களுக்கு வயிறார உணவளித்து ஆடை அணிகலன்களுடன் கௌரவிப்பதே தற்போது நிகழ்த்தக் கூடிய வையாழி கூத்து வைபவமாகும். இதனால் சந்ததிகள் இல்லாத பிரச்னைகளும், பிறந்த சந்ததிகள் புகை, மது, ஆடம்பரம் போன்ற கேளிக்கையால் வீணாகாமல் காக்கவும் இத்தகைய நடன நிகழ்ச்சிகள் துணை புரியும். கணபதி மூர்த்திகளில் பல தத்துவங்கள் இருந்தாலும், கணபதி வடிவங்களே பல தத்துவங்களைக் குறிப்பது என்றாலும் சித்தர்கள் நமக்கு புரிவதற்காக கற்பக, வையாழி, கொன்றை போன்ற சில தத்துவங்களை உபதேசிக்கிறார்கள்.

நவகிரகங்கள் மப்பேடு

கற்பக விநாயகர் என்னும் திருஅண்ணாமலையில் தெற்கு வாசலில் எழுந்தருளி உள்ள மூர்த்தி காலத்தைக் குறிப்பவர், வையாழி விநாயகர் அசைவால் தேசம் என்னும் இடத்தைக் குறிப்பவர், கால தேச பரிமாணங்களை இணைப்பவரே அரண்மனைப்பட்டியில் அருளும் கொன்றயடி விநாயகர். இதன் பொருட்டே வேறு எந்த இடத்திலும் நிகழ்த்தாத வேள்விகளையும், யாகங்களையும் நம் சற்குரு அரண்மனைப்பட்டி திருத்தலத்தில் மட்டுமே நிகழ்த்தினார். இந்த தெய்வீக இணைப்பைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள உதவும் தலமே மப்பேடு ஆகும். இங்கு அருளும் ஸ்ரீசுதபுத மகரிஷி இடது காலையும் வலது காலையும் வைத்திருக்கும் யோகக் கோலமே சுதபுதசோதி யோகம் என்பதாகும். இத்தகைய சுதபுதசோதி யோகமே வரும் வெள்ளிக் கிழமை அன்று மலர்கின்றது என்பதே நாம் பெற்ற பேறு ஆகும். மூன்றின் குசம் ஆறு, ஆறின் குசம் மூன்று. இவ்வாறு மூன்றும் ஆறும் இணைவதாக வரும் 15.10.2021 அன்று ஆறைக் குறிக்கும் வெள்ளிக் கிழமையும் அமைவதே சுதபுதசோதி பரிணமிக்கும் ஜோதிட அம்சங்களாகும். வலது நாசியில் தோன்றும் சூரிய கலையும், இடது நாசியில் திகழும் சந்திர கலையும் சுசும்னா நாடியில் லயமாவதே சுதபுதசோதி ஆகும். குண்டலினி யோகம் பயிலும்போது இடது குதிங்காலை மூலாதாரச் சக்கரத்தின் கீழும், வலது குதிங்காலை மூலாதாரச் சக்கரத்தின் மேலும் வைத்துப் பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், மூலாதாரச் சக்கரத்தையே காண முடியாத நிலையில் உள்ள நம்மைப் போன்ற அடியார்களுக்கு உதவுவதாக எழுந்தருளி உள்ளவரே ஸ்ரீசுதபுத மகரிஷி ஆவார். எனவே குண்டலினி யோகத்தில் முதலில் மூலாதாரச் சக்கரத்தை அடையாளம் கண்டு கொள்ளும் ஆரம்பப் பயிற்சிக்கு உரிய தலமே மப்பேடு ஆகும். அதனால்தான் இங்கு அனைத்து கிரகங்களிலும் உயர்ந்தவராக சூரிய பகவான் தோன்றி இந்த ஆரம்பப் பாடத்தை பக்தர்களுக்கு அனுகிரகமாக அளிக்கும் வகையில் எழுந்தருளி உள்ளார். சுத புத சோதி என்பதில் புத என்னும் கிழமை ஏழு கிழமைகளில் நடுநாயகமாக குசா சக்திகளுடன் மிளிர்வதும், இயக்கமில்லாமல் இயங்கும் சுசும்னா நாடி சூரிய சந்திர நாடிகளின் இடையே விளங்குவதும் நாம் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ள வேண்டிய யோகத் தத்துவங்களாகும். ஸ்ரீஆயுர்தேவி பூஜை தினம் அவிட்டம் நட்சத்திரத்துடன் இணைவது தனிச் சிறப்பாகும். அவிட்டம் தவிட்டுப் பானையெல்லாம் பொன் ... என்பது பழமொழி. அதாவது முற்காலத்தில் தவிட்டை இலவசமாக கொடுத்து வாங்குவர், அந்த அளவிற்கு மலிவாய்க் கிடைத்த பொருளே தவிடு. அதனால் உபயோகம் இல்லாத தவிடு கூட அவிட்டம் நட்சத்திர தினத்தன்று பொன் போன்ற விலைமதிப்பில்லாத சக்திகளை அருளக் கூடியது என்றால் ஸ்ரீஆயுர்தேவி என்ற உயர்ந்த தேவியை, நம் சற்குரு என்ற உயர்ந்தவரால், பொன் பெருகும் உயர்ந்த நாளில் ஆராதனை செய்வதால் கிட்டும் பலன்களை வர்ணிக்க யாராலும் இயலுமா ?!

ஸ்ரீகற்பக விநாயகர்
திருஅண்ணாமலை

சிவஸ்வஸ்தி சக்கரத்தில் ஒன்று முதல் ஒன்பது எண்களும் இடம் பெற்றுள்ளன என்றாலும் இதில் அனைத்து எண்களின் சக்தி லயமாகும் பூஜ்யம் என்பது சிறப்பிடம் பெற்றுள்ளதே நம் சற்குரு நமக்களித்த ஈடில்லா பொக்கிஷமாகும். எப்படி நவதேவிகளாய் உருவெடுத்த அம்பிகையின் திருஉருவம் விஜய தசமி அன்று பூரணம் பெறுகிறதோ அதேபோல ஒன்பது எண்களும் வரும் தசமி திதியில் பூஜ்யத்தில் பூரணம் கொள்கின்றன என்பதே எண் கணிதம் சுட்டிக் காட்டும் இரகசியம். கணக்கு வல்லுநர்களும், எண் கணித ஜோதிடர்களும் (numerologists) இந்த சக்கரத்தை வைத்து அதில் எந்த மந்திரத்தை வேண்டுமானாலும் இணைத்து ஓதி பயன் பெறலாம். உதாரணமாக, சிவயசிவ, சிவசிவ, நமசிவாய, சிவாயநம என்ற நான்கு சிவ மந்திரத்தையும் சக்கரத்தில் உள்ள நான்கு சிவ அட்சரங்களில் இணைத்து ஓதலாம். ஒரே ஒரு எண்ணில் வல்லமை பெறவே, அதன் சக்தியை முழுமையாக உணர்ந்து கொள்ளவே சுமார் 20 வருடங்கள் ஆகும் என்பதே சித்தர்களின் கணக்கு. ஆனால், இந்த ஸ்வஸ்தி சக்கரத்தை தொடர்ந்து பயன்படுத்தி வழிபட்டால் இந்த பிறவிக்குள்ளேயே அனைத்தை எண்களின் தெய்வீக சக்திகளையும் நாம் பெற முடியும் என்பதே நம்முடைய சற்குரு நமக்காக பரிந்து அளிக்கும் அனுகிரகமாகும். உதாரணமாக,
3 - 3 = 0
2+4-6=0
என்ற இரண்டு சமன்பாடுகளை எடுத்துக் கொண்டால் இடது பக்க எண்கள், வலது பக்க எண்களுக்கு சமமாக இருக்கும் என்ற கோட்பாடு உண்மையே என்றாலும் வலது பக்க எண்ணான பூஜ்யத்தை மட்டும் வைத்துக் கொண்டு இடது பக்க எண்களை யூகிக்கும் திறன் உடையவர் எவருமே இப்பூமியில் இல்லை என்லாம். ஆனால் கற்பக விநாயகரின் அருள் பெற்ற ஒரு பக்தரோ உள்ளங்கை நெல்லிக் கனியாய் இடது பக்க எண்களை எளிதில் கூறி விடலாம். காரணம் கால சக்கரத்தில் சற்றே பின் நோக்கி சென்றால் இடது பக்க சமன்பாட்டு எண்கள் பளிச்சிடும் அல்லவா ?

சீதாராம வைபோகம்
வையாழி விநாயக வைபோகமே

இதே போல ஒரு ஆணின் துணையை வெறுக்கும் ஒரு பெண் மற்றொரு ஆணிற்கு அடி பணிந்து சேவை செய்யலாம். இது வையாழி விநாயகரின் அனுகிரகமாகும். ஆனால், இந்த இரண்டு அனுகிரகங்களும் லயமாவது கொன்றையடி விநாயகர் திருத்தலத்தில். பக்தர்களுக்கு புரிவதற்காக இவ்வாறு கணபதி மூர்த்திகளின் சக்தி பரிமாணங்கள் இங்கு விளக்கப்பட்டுள்ளனவே தவிர இறை மூர்த்திகளின் சான்னித்தியத்தில் எவ்வித குறைபாடும் ஏற்படுவது கிடையாது, அவ்வாறு சான்னித்திய குறைபாடு ஏற்படுவதுபோல் தோன்றினால் அது மனிதர்களின் கண்ணோட்டமே தவிர எந்த இறை மூர்த்தியும் இதற்கு பொறுப்பாக மாட்டார்.

சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிறந்தவர்களும், தாங்கள் எப்படிப் பிறந்தோம், அதாவது இயற்கையாகவா அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவா என்று தெரியாதவர்களும், பிராய்லர் கோழிகள், முட்டைகள் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளோரும், வீடியோவில் காமக் காட்சிகளைக் கண்டு உடல் மன ஆரோக்யத்தை இழந்தோரும், டெஸ்ட் ட்யூப் குழந்தைகளும் பெற்றோர்களும் வணங்கி வழிபட வேண்டிய மூர்த்தியே மப்பேடு ஸ்ரீவையாழி விநாயக மூர்த்தி ஆவார். இத்தகைய அனுகிரகத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்களும் வையாழி விநாயகரின் அருள் வர்ஷிக்கும் பாங்கை ஆத்ம விசாரம் செய்து பல தெய்வீக இரகசியங்களை அறிந்து கொள்ளலாம். இந்த அனுகிரகத்திற்கு தொடர்புடைய ஒரு ராமலீலையை இங்கு விவரிக்கிறோம். ஸ்ரீராமபிரான் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு லட்சம் ராம பாணங்களை எய்யும் ஆற்றல் உடையவர். அப்படியானால் ராமபாணத்தின் வேகம் என்ன என்று கணக்கிட்டால் நாம் தெய்வீக தத்துவத்தை இழந்தவர்கள் ஆவோம். நாம் நினைப்பது போல் ராமபாணம் என்பது ஒன்றின் பின் ஒன்றாக அமைந்து செல்வது அல்ல, அந்த லட்சம் பாணங்கள் அனைத்தும் ஏக காலத்தில் (simultaneous) பெருகி இலக்கை நோக்கிப் பாய்வனவாகும். அது ராவணனை வீழ்த்திய அம்பாக இருந்தாலும் சரி, கூனியின் கூனலை நிமிர்த்த எய்யப்பட்ட மண் உருண்டையால் தயார் செய்யப்பட்ட குச்சி அம்பாக இருந்தாலும் சரி, ராம பாணம் ராம பாணமே. அது பிறவிப் பிணிகளைத் தீர்க்கும், மாய்க்கும். இதுவே வையாழி வைபோகம் உணர்த்தும் உண்மையாகும்.

ஆனந்த பாஷ்பவாரி ஆஞ்சநேயர்
மப்பேடு

நம் பெரியோர்கள் நமக்களித்த பழமொழிகள் மட்டுமல்ல அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பல விளையாட்டுக்களும் நம் வாழ்க்கையை செம்மையாக நடத்திச் செல்ல உறுதுணை செய்பவையாகும். அத்தகைய விளையாட்டுக்களில் ஒன்று, இரு குழந்தைகள் கைகளைக் கோர்த்துக் கொண்டு நிற்க ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக் கொண்டு அவர்கள் இடையே புகுந்து எட்டு வடிவில் குழந்தைகள் இரயில் போல் வளைந்து வளைந்து செல்ல அப்போது பாடப்படும் ஒரு பாடல் ...
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்துச்சாம் ...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம் ...
என்றவாறாக விரியும் இப்பாடல் நாம் வையாழி விநாயகரைத் துதிக்கும் வழிபாட்டையும் சுவாமி நமக்களிக்கும் கருணையையும் குறிப்பதாகும். சாதாரண விளையாட்டு என்றாலும் பிஞ்சு மனதில் பதியும் இந்த எட்டு எண் வடிவம் எந்த தவறான சூழ்நிலையிலும் மனம் மாசு அடையாத வல்லமையைக் கொடுக்கும், இதை அளிப்பவர் எட்டு எண்ணுக்குரிய பகவான் கிருஷ்ணர் ஆவார். பணிவையும் ஒற்றுமையையும் குழந்தைகள் மனதில் பதிக்கும் ஒரு சமுதாயப் பாடல் இது. இந்தப் பாடலில் நாம் செய்து கொள்ள வேண்டிய மாற்றம் ...
ஒரு குடம் தண்ணி ஊத்தி ஆயிரம் பூ பூத்துச்சாம் ...
என்பதே வையாழி பெம்மானின் வானளாவிய கருணை. ஆழி என்றால் கடல், வை ஆழி என்றால் கடலை, பிறவிப் பெருங்கடலையும் உள்ளங்கை தீர்த்தம் அளவிற்கு சுருக்குதல் என்று பொருள், என்ன பொருத்தமான இறை நாமம் !
பக்தியின் ஆரம்ப கட்டத்தில் குடங்களில் நீர் வார்த்து நறுமணம் பரப்பும் மலர்களை இறைவனுக்குச் சூட்டும் பக்தர்கள் விரைவில் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க இறைவனை விழிக் கமலங்களால் அர்ச்சிக்கும் அனுகிரகத்தைப் பெறுவார்கள். இதை அளிக்க வல்லவரும் வையாழி விநாயகரே.

ஆனந்த பாஷ்பவாரி பரிபூர்ண
லோசன தரிசனம் மப்பேடு

குறைந்தது நான்கு உறுப்பினர்கள் அடங்கிய குடும்பம் கூட மேற்கண்ட கிருஷ்ணாமிர்தம் என்ற விளையாட்டை அவர்கள் இல்லங்களில் “விளையாடி” குடும்ப ஒற்றுமையை, சமுதாய ஒற்றுமையை, ஆரோக்யத்தைப் பெருக்கலாமே. இந்த கிருஷ்ணாமிர்த விளையாட்டில் வியக்க வைக்கும் முறையில் குசா சக்திகள் இணைவதே இந்த விளையாட்டின் மகத்துவமாகும்.

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனன் என்று ஆஞ்சநேய மூர்த்தியை அழைப்பதுண்டு. ராமபிரான் திருவடிகளையே நினைத்து நினைத்து கண்ணீர் மழையை வர்ஷித்ததால் ஆஞ்சநேயர் இந்த அடைமொழியைப் பெற்றார் என்றாலும் இந்த நாமத்தின் பின்னணியில் பல அற்புத கருத்துக்கள் உண்டு. அமிர்தானந்தா அன்னை இறை கீர்த்தனைகளை இசைக்கும்போது பல சமயம் அம்மாவின் விழியோரங்களில் கண்ணீர் பெருகும் ஆனந்தக் காட்சியை பலரும் தரிசனம் செய்து இருக்கலாம். கண்ணீர் வழியும் விதத்தைக் கொண்டே அது மனிதப் பிரிவில், லௌகீக பொருட்கள் கிட்டாததால் ஏற்பட்டதா, உணர்ச்சி மிகுந்த நிலையா, பக்திப் பெருக்கைக் குறிப்பதா என்றெல்லாம் கூறி விடலாம். பொதுவாக, விழிகளின் நடுவில் பொழிந்தால் அது மனிதக் கண்ணீர், பிரிவின் வருத்தத்தைக் குறிப்பது, விழிகளின் ஓரத்தில் வழிந்தால் அது தெய்வீகக் கண்ணீர், இறை தரிசனத்தில் விளையும் ஆனந்தத்தைக் குறிப்பது. நம் சற்குருவோ எந்த வருத்தமான சூழ்நிலையிலும் கூட கண்ணீர் சிந்தியதை எவரும் கண்டிருக்க முடியாது. ஆனந்த பாஷ்பவாரியையும் யாரும் அனுபவித்தது கிடையாது. அப்படியானால் அவர் இறைக் காட்சிகளைக் காண வில்லையா ?

ஒரு முறை தெய்வீக லோகங்கள் பலவற்றைப் பற்றி விவரித்துக் கொண்டே வந்தார் நம் சற்குரு. “நம் பூலோகத்தைத் தாண்டி இருப்பது கந்தவர்வ லோகம், அதைத் தாண்டி இருப்பது தேவ லோகம், இந்திராதிகள் இருப்பது, தேவ லோகத்தைத் தாண்டி பல லோகங்கள் சென்ற பின் வருவது வைகுண்டம், வைகுண்டத்தைத் தாண்டி வருவது கயிலாயம், கயிலாயத்தையும் கடந்தால் கவனிக்க ... ஈசன் உறையும் திருக்கைலாயத்தையும் கடந்தால் சக்தி லோகம், இதையும் கடந்து பின்னர் பல லோகங்களைக் கடந்தால் வருவது சத்திய லோகம், இதன் பின்னர் பல லோகங்களைக் கடந்தால் வருவது மங்கள கந்தர்வ லோகம், மங்கள கந்தர்வ லோகம் பலவற்றைக் கடந்து சென்றால் வருவதே குருமங்கள கந்தர்வ லோகம், அடியேன் இருக்கும் லோகம், இங்குதான் 108 சூரியன்களும் 108 சந்திரன்களும் உதிக்கின்றன ...”, என்று தம் குருமங்கள கந்தர்வ லோக சிறப்பைக் கூறி முடித்தார் நம் சற்குரு. பூலோகத்தைத் தாண்டி தேவ, தெய்வ லோகங்களுக்குச் சென்று விட்டாலே அங்கு “கண்ணீர்” என்பதே கிடையாது. இவ்வாறு பல தெய்வ நிலைகளை அடைந்தாலும் பூலோக வாசியான ராமபிரானின் திருவடிகளில் தன் பார்வை நிலை கொண்டதால் ஆனந்த பாஷ்பவாரியைப் பெருக்கினார் ஆஞ்சநேய மூர்த்தி, அன்னை அமிர்தானந்தா. பூலோகவாசிகளுக்கு சற்குருவாய் வந்து உதித்தாலும் உன்னத குருமங்கள கந்தவர்வ லோக வாசியாகவே என்றும் காட்சி அளித்தவரே நம் சற்குரு வெங்கடராம சுவாமிகள். அதனால்தான் நம் சற்குருவின் கண்கள் பூலோகத்தில் கண்ணீரை உகுக்கவில்லை.

தழுவக் குழைந்த தரிசனம்
பழையாறை

பல சமயங்களில் நம் ஆஸ்ரமத்தில் நம் சற்குருவின் அருகில் பல அடியார்கள் அமர்ந்திருக்கும்போது அந்த அடியார்கள் நம் சற்குருவைச் சுற்றி சுமார் 20, 25 பேர் அமரும் அளவிற்கு காலி இடத்தை விட்டே தள்ளி அமர்வதைப் பலரும் கவனித்திருக்கலாம். இது பற்றி கேட்டபோது நம் சற்குரு தனக்கே உரிய வினயத்துடன், “அடியேன் உங்களுக்கு மட்டும்தான் இறைவனைப் பற்றி கூறுகிறேன் என்று கிடையாது, ஏற்கனவே கூறிய பல லோக வாசிகளும் அடியேனின் உரையை கேட்க அங்கு வந்து குழுமியுள்ளனர். அவர்களுக்கு இடம் அளிக்கவே நீங்கள் உங்களையும் அறியாமல் சற்று தள்ளி அமர்கிறீர்கள். சில சமயங்களில் வானில் பிரகாசிக்கும் சிலகாகித சித்தர்களும் இங்கு உறைவதுண்டு. அவர்களின் பிரகாசத்தை உங்களால் தாங்க முடியாது என்பதால்தான் வெறும் வெற்றிடம் போன்ற அவர்கள் தரிசனத்தையும் நீங்கள் பெறுகிறீர்கள் ...”, என்றார். அப்படியானால் நம் சற்குரு என்ற ஒரே ஒரு பீடத்தைத் தரிசிப்பதால் கிட்டும் சற்குரு பீட தரிசனங்கள் எத்தனை எத்தனையோ ?!

ஒரு ரப்பர் ட்யூபை எடுத்துக் கொண்டு அதை மேலும் கீழும் பிடித்துக் கொண்டு முறுக்கினால் அது எட்டு என்ற எண் வடிவை உருவாக்கும் அல்லவா ? இதுவே இரு பரிமாணத்தில் வளையமாக இருந்தது முப்பரிமாணத்தில் எட்டாக தோற்றம் அளிக்கும் விந்தையாகும். இதுவே பகவான் கிருஷ்ணர் தானே அனைத்துமாக இருக்கிறேன் என்று உரைப்பதன் உட்பொருளாகும். இந்த கீதா வசனத்தை உணர விளையும் தம்பதிகள் ஒருவர் ஆடையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு வீட்டில் எட்டு வடிவில் தொடர்ந்து வலம் வந்து ஏதாவது ஒரு பகவத் கீதை சுலோகத்தை பாராயணம் செய்து வருதலால் கிட்டும், பெருகும் குடும்ப ஒற்றுமை அமோகம். இந்த ஒற்றுமை பெருக பெருக, அங்கு எட்டும் பூஜ்யமும் இணையும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் ஆன்மீக தத்துவமாகும். ராதையும் கிருஷ்ணரும் இணைந்து தோற்றம் கொள்ளும் சித்திரங்களை கூர்ந்து கவனித்தால் இந்த உண்மை விளங்கும். எட்டு இடங்களில் வளைந்து காட்சி கொடுக்கும் கிருஷ்ணரின் அங்க லாவண்யங்களுடன் இணைவதே ராதையின் அங்க இலக்கணங்களுமாகும். நாம் தியாகமயமாக வையாழி கூத்து நடனத்தை மப்பேடு திருத்தலத்தில் நிகழ்த்தினால் அப்போது ஆண் பெண் இருவரின் நடனங்களில் இத்தகைய ராதா கிருஷ்ண வையாழி இணைப்புகள் தோன்றி நம்மை பிரமிக்க வைக்கும், நம் ஆன்மீக அறிவைப் பெருக்கும் என்பதே இந்தக் கூத்தின் பின்னணியில் திகழும் இரகசியங்களாகும்.

8 x 8 = 64 என்பது நீங்கள் அறிந்த கணிதமே. இரண்டை ஆறு மடங்காக பெருக்கினால் 64 என வரும் என்பதும் நீங்கள் அறிந்ததே. ஆனால், இந்த இரண்டு கணித சூத்திரங்களும் இணையும் தழுவக் குழைந்த தரிசனம் என்பதைப் பற்றி நாம் எந்த அளவிற்கு அறிந்துள்ளோம் என்பதே கேள்விக் குறி. தாந்திரீக சாஸ்திரத்தில் பல கோலங்களாக, கோணங்களாக விளக்கப்பட்டுள்ள ஆண் பெண் என்ற இணைப்பையே இத்தகைய தழுவக் குழைந்த தரிசனமாக நம் முன்னோர்கள் நம் வழிபாட்டிற்காக பழையாறை, சத்திமுற்றம் போன்ற பல திருத்தலங்களில் அளித்துள்ளனர். இந்த கோல இரகசியங்கள 64 திருவிளையாடல்களாக மதுரையம்பதியில் நிகழ்த்திக் காட்டியதும் நம்மை அரவணைக்கும் சிவபெருமானே. தழுவக் குழைந்த தரிசனம் எந்த அளவிற்கு இன்றைய உலகில் நம் அன்றாட வாழ்விற்கு துணைபுரியும் என்று விளக்குவதே கிருஷ்ணாமிர்த விளையாட்டும் அதன் அடுத்த கட்டமாக விளையும் கிருஷ்ணாமிர்த யோகமும் ஆகும். தம்பதிகள் இருவரும் எதிர் எதிரே அமர்ந்து கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்த வண்ணம் குறைந்தது ஒரு மணி நேரம் அமர்ந்து வழிபடுவதே கிருஷ்ணாமிர்த யோகமாகும். இதன் பலன்களை அனுபவத்தில் மட்டுமே உணர முடியும் என்றாலும் பல அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்கி இந்த யோகத்தின் மற்றோர் அம்சத்தை இங்கு அளிக்கிறோம்.

ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள்
ஜீவாலயம் சென்னை

எதிர் எதிரே அமர்ந்திருக்கும் தம்பதிகள் ஒருவர் மார்புப் பகுதியை மற்றவர் நோக்கி இரு மார்பகங்களைச் சுற்றி எட்டு என்ற எண்ணைச் சுழற்றிக் கொண்டே பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும். நாட்கள் செல்லச் செல்ல இந்த எட்டு என்ற எண் மறைந்து அது பூகோளமாக, வட்டமாக காட்சி தர அந்த வட்டத்தில் பெண்ணுக்கு ஆணின் தத்துவ தரிசனமும், ஆணிற்கு பெண்ணின் தத்துவ தரிசனமும் கிட்டும். ஆரம்பத்தில் தத்துவார்த்தமாகத் தோன்றும் இந்தக் காட்சியில் பலவித குழப்பங்கள் ஏற்படுவது சகஜமே என்றாலும் தம்பதிகள் தொடர்ந்து இந்த வழிபாட்டில் ஈடுபட்டு வந்தால் சிறிது சிறிதாக இந்த தத்துவங்கள் சுட்டும் உண்மைப் பொருள் தெரிய வரும். அது என்ன என்பதை சித்தர்கள் சுட்டிக் காட்டத் தயாராக இருந்தாலும் அதை ஆர்வமுள்ள தம்பதிகள் அனுபவித்துப் பார்த்தலே சுவை, இன்பமோ இன்பம், திகட்டாத பேரின்பம். பெண்களின் மார்பகங்கள் குறித்து எத்தனையோ அர்த்தத்தையும் அவசியத்தையும் நாம் உணர முடிந்தாலும், ஆண்களின் மார்பகங்களுக்கு நம்மால் சரியாக காரணத்தைக் கூற முடியவில்லை. மார்பகங்களே இல்லாத கிருஷ்ண பகவானே இந்த யோகத்தின் உட்பொருளை நமக்கு உணர்விக்கும் தெய்வ மூர்த்தி ஆவார். பகவான் கிருஷ்ணரின் அவதாரம் பூர்ணமானது, முழுமையானது என்று சித்தர்கள் பாராட்டுவது எத்தகைய பொருள் பொதிந்தது என்று நினைக்கும்போது நம் பிரமிப்பிற்கு எல்லையே இல்லை, இல்லை இல்லை !

தம்பதிகள் ஒருவர் ஆடையை மற்றொருவர் பிடித்த வண்ணம் எட்டு வடிவில் வலம் வருவதால் கிருஷ்ணாமிர்த சக்திகளைப் பெறலாம் என்று விவரித்தோம் அல்லவா ? இது உண்மைதான் என்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளதே இங்குள்ள வீடியோ படமாகும். தம்பதிகள் இருவரின் பாதங்கள் நான்கு என்பதாக அமைய அந்த நான்கு பாதங்களில் வலம் வந்து எட்டு என்ற எண்ணிற்கு இணையான குசா சக்திகளை ஒரு நாய் பெருக்குகிறது என்றால் இதை நாய் என்றா கூற முடியும் ? இந்த பைரவரின் கிருஷ்ணாமிர்த வலத்தில் இரண்டு விதமான சிவ சக்தி ஐக்யங்கள் ஏற்படுகின்றன. ஒன்று சிவத்தைக் குறிக்கும் இரண்டு முன் கால்களும், சக்தியைக் குறிக்கும் இரண்டு பின்கால்களும் ஏற்படுத்தும் ஐக்யம், வலமாக அமையும் வட்டமும், இடமாக அமையும் வட்டமும் மற்றோர் சிவசக்தி ஐக்யமாகும். இந்த இரண்டையும் இணைப்பவரே நீங்கள் காணும் பைரவ மூர்த்தி. இத்தகைய இணைந்த சிவசக்தி ஐக்ய பலன்களைப் பெற விரும்புவோர் திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசன எதிரிலோ, நிருதி லிங்கம் எதிரிலோ அல்லது சென்னை ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் ஜீவாலயத்திலோ மேற்கொண்டு பயனடையுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். பைரவ வழிபாட்டிற்கு உரிய திதி அஷ்டமி என்ற எட்டாம் திதியே என்று சுட்டிக் காட்டிய நம் முன்னோர்களுக்கு நாம் எத்தகைய நன்றிக் கடனையும் செலுத்த முடியுமா ?

சுக்ரபீட முத்திரை

எட்டில் உள்ள இரண்டு வட்டங்கள் இரண்டாம் பரிமாணத்தில் வெவ்வெறு திசையை நோக்கிச் செல்வதாகத் தோன்றினாலும் மூன்றாம் பரிமாணத்தில் இவை ஒன்றாக இணைந்து ஒரே திசையில்தானே செல்கின்றன. பெண்கள், ஆண்களின் எதிரிடைச் சக்தி உடையவர்கள் அல்ல அவர்கள் ஆண்களின் வாழ்வை பூரணிக்க, புனிதமாக்க இறைவனால் படைக்கப்பட்டவர்களே என்பதால்தான் நம் முன்னோர்கள் திருமணம் என்ற தெய்வீக பந்தத்தையே ஏற்படுத்தினார்கள். மாங்கல்ய தாரணத்தின்போது கூறும், “மாங்கல்யம் தந்துநானேனா ...”, என்ற சுலோகமும் இந்த உண்மைப் பொருளையே சுட்டுகிறது.

நம் சற்குரு உறையும் குருமங்கள கந்தர்வ லோகத்தில் 108 சூரியன்களும் 108 சந்திரன்களும் பிரகாசிக்கின்றன என்று கூறினோம் அல்லவா ? அது மட்டுமல்ல 108 பரிமாணங்களைக் கடந்து செல்லும் ஆற்றல் உடையவர்களுக்கு மட்டுமே குருமங்கள கந்தர்வ லோகத்தின் தரிசனமே கிட்டும் என்பதும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய தத்துவமாகும். இரண்டு மூன்று என்ற பரிமாணங்களே நம் தலையை சுற்ற வைக்கிறது என்றால் 108 பரிமாணங்கள் என்றால் ... ?

நம் சற்குருவால் அளிக்கப்பட்ட தியான முத்திரைகளில் ஒன்று சுக்ர பீட முத்திரை என்பதாகும். படத்தில் காட்டியபடி இரண்டு கை விரல்களின் நடுவில் அமையும் டைமண்ட் என்ற சுக்ர வடிவல் உள்ள துவாரம் வழியாக நமது இஷ்ட தெய்வத்தின் ஏதாவது ஒரு பகுதியை இதயம், கண், மான் மழு போன்ற ஆயுதங்கள், தும்பிக்கை போன்ற எந்த பொருளையம் நம் தியானத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். தியானத்திற்காக தேர்ந்தெடுக்கும் படத்தில் பிரகாசிக்குமாறு சக்தி வாய்ந்த மின்சார பல்புகளையும் இணப்பதால் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும். நம் சூட்சும சரீரத்தையே இந்த முத்திரையின் மூலம் பார்க்கிறோம் என்பதே இந்த முத்திரையின் தனிச் சிறப்பாகும்.

நமக்குத் தெரிந்த நண்பரோ, உறவினரோ நம் முன்னால் செல்லும்போது அவருக்குத் தெரியாமல் அவரை பின்தொடர்ந்து செல்ல முடியாது. சிறிது நேரத்தில் அவரையும் அறியாமல் சட்டென திரும்பி அவர் நம்மைப் பார்த்து விடுவார். காரணம் நாம் அவரைப் பார்க்கும்போது நம்முடைய பார்வை அவர் சூட்சும சரீரத்தில் பதிவதுதான். இந்த சூட்சும சரீரத்தையே நாம் மேற்கண்ட சுக்ர பீட முத்திரையில் இஷ்ட மூர்த்தியின் சூட்சும சக்தியுடன் இணைக்க முயற்சி செய்கின்றோம். சுக்ர பீடம் மற்ற இடங்களை விட மங்கலாக இருப்பதற்கு இந்த சூட்சும சுரீரம் மூலம் நம் பார்வை செல்வதுதான். திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களை கிரிவலம் வரும்போதும், திருத்தலங்களில் மூர்த்திகளை தரிசனம் செய்யும்போதும் நின்றோ, ஓரிடத்தில் அமர்ந்தோ இந்த முத்திரைகளை அமைத்து தியானம் செய்து பயன்பெறலாம். இந்த தியானத்தின் உடனடிப் பலன் எதிர்காலத்தைப் பற்றிய அறிவை, தீர்க தரிசனத்தைப் பெறுவதுதான். புற்று நோய், தொற்றுநோய்கள் போன்ற அனைத்து நோய்களுமே முதலில் நம் சூட்சும சரீரத்தில்தான் குடியேறி நம்மைத் தாக்குகின்றன. இதை உணர்ந்து கொண்டால் எந்த வியாதியையும் முன்னரே இனங் கண்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் அல்லவா ?

ராமகிரி

சுக்ர பீட முத்திரையை தம்பதிகள் இணைந்து நிறைவேற்றும் முறையையும் நமக்கு அளிப்பவரே மப்பேடு ஸ்ரீசுதபுத மகரிஷி ஆவார். கணவன் மனைவி எதிர் எதிரே அமர்ந்து கொண்டு கணவனின் இடது கை சுக்ர முத்திரை அமைப்பில் துலங்க, மனைவியின் இடது கை இதே அமைப்பில் கணவனின் கரங்களுடன் இணைய வேண்டும். தம்பதிகள் இருவரின் வலது கரங்களை இணைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அமைப்பில் தோன்றும் சுக்ர டைமண்ட் வடிவ துவாரத்தின் வழியே தம்பதிகள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு தங்கள் தியானத்தைத் தொடர வேண்டும். இந்த முத்திரையின் ஆரம்பக் கட்ட பலனாக குடும்ப ஒற்றுமை மலர்ந்து பிரகாசிக்கும் என்பதில் சந்தேகமில்லை. தியானம் தொடர, தொடர தம்பதிகளிடையே, குடும்பத்தில், சமுதாயத்தில் தோன்றும் வியாதிகள் மட்டும் அல்லாது விபத்துக்கள் போன்ற நிகழ்ச்சிகளின் முன்னறிவிப்பும் கிட்டும். இந்த தியானத்தை மேலும் தொடர்ந்தால் இந்த வியாதிகளை நீக்கும் முறைகளையும், விபத்துக்களால் ஏற்படும் விபரீதங்களைத் தடுக்கும் தார்மீக முறைகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

E = mc2 என்பது பௌதீக வல்லுநர்கள் அறிந்த ஒரு சமன்பாடு என்றாலும் இது தூல பொருட்களுக்கு மட்டுமே பொருந்தக் கூடியதே என்பதே சித்தர்கள் அளிக்கும் ஆன்மீக இரகசியமாகும். ஒரு துளி நீரின் சக்தியால் இந்த உலகையே அழித்து விடக் கூடிய ஒரு அணுகுண்டைத் தயாரித்து விடலாம் என்பதே ஐன்ஸ்டீன் விஞ்ஞானியின் மேற்கண்ட சூத்திரம் விளக்கும் சக்தி பற்றிய சமன்பாடு. ஒரு குண்டு போட்டு லட்சம் பேரை மாய்ப்பது அல்ல சித்தர்கள் கூறும் விஞ்ஞானம், ஒரு குண்டைப் போட்டு லட்சம் அரிசி மூட்டைகளை விழ வைக்கும் விந்தையைப் புரிபவர்களே சித்தர்கள். இந்த இரகசியம் பயன்படும் பல திருத்தலங்களில் ஒன்றே ஆந்திர மாநிலத்தில் உள்ள ராமகிரி திருத்தலமாகும். இங்கு நந்தி வாயிலிருந்து பொழியும் தீர்த்தம் இத்தகைய சூட்சும சக்திகளுடன் பொலிவதே நம் கலியுக மக்கள் பெற்ற பெரும் பேறாகும்.

ஸ்ரீசாயுஜ்ய விநாயகர் ராமகிரி

குறைந்தது ஒன்பது வருடங்கள் மேற்கண்ட சுக்ர பீட முத்திரையை தொடர்ந்து தியானித்து வந்தவர்களே இந்த நந்தி வாய் தீர்த்தத்தில் பொலியும் தீர்த்தத்தின் சூட்சும சக்திகளைப் பற்றி புரிந்து கொள்ள முடியும் என்றாலும் மற்றவர்கள் ராமகிரியில் இந்த நந்தி மூர்த்தியை வணங்கி தங்கள் சுக்ர பீட தியான முத்திரையை தனியாகவோ தம்பதி சகிதமாகவோ நிறைவேற்றி நற்பலன் பெறலாம். ராமேஸ்வரத்தில் ராமச்சந்திர மூர்த்தி தன் நன்றியைத் தெரிவிக்க பூஜை செய்ய ஒரு சிவலிங்கத்தைப் பெற நினைத்தபோது அதற்கு உதவி செய்வதற்காக ஆஞ்சநேயர் கைலாயத்திற்கு பறந்து சென்று ஒரு சிவலிங்கத்தை எடுத்து வந்தார் அல்லவா? அந்தச் சிவலிங்கத்தை வெகுதூரம் எடுத்து வந்தபோது ஏற்பட்ட களைப்பால் அவருக்கு மிகுந்த தண்ணீர் தாகம் ஏற்படவே அதை தீர்த்துக் கொள்ள ராமகிரி நந்தி தீர்த்தம் உதவியது என்பதே ராமகிரி திருத்தல வரலாறு கூறும் மகிமையாகும். உண்மையில் தாகம், பசி என்பவை ஆத்மாவில் தோன்றி அவை முதலில் சூட்சும சரீரத்தில் பதிந்து, பின்னர் அதை தூல சக்தியாக தூல சரீரமான உடம்பில் பசியாகவும் தாகமாகவும் உணர்கின்றோம். அதனால்தான் பசித்திருப்பவர்களுக்கு அளிக்கும் அன்னதானமும் நீர் வகை தானங்களும் தானத்தில் சிறந்த தானமாக சித்தர்களால் உரைக்கப்படுகிறது.

இவ்வாறு ஆஞ்சநேய மூர்த்தி தாகம் தீர்க்க உதவிய அனுமன் தீர்த்தம் இன்றும் உத்தம மூர்த்திகளின் ஆன்மீக தாகத்தையும் தீர்க்கும் பொய்கையாக, பைரவ ஔஷதமாக, வாலீஸ்வர அமிர்தமாக விளங்குகிறது என்பதை இங்குள்ள வீடியோவே உங்களுக்கு உணர்த்தும். இங்குள்ள பைரவ மூர்த்தியின் சூட்சும உருவத்தை உங்களால் உணர முடிந்தால் நீங்கள் பிரமிப்பால் மயங்கிப் போய் விடுவீர்கள் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது. இன்றோ நாளையோ இன்னும் பத்து வருடங்கள் கழித்தோ உங்களால் இந்த மகிமையை உணர முடியாவிட்டாலும் நீங்கள் தொடர்ந்து சுக்ர பீட முத்திரையை தம்பதி சகிதமாக பயின்று வந்தாலே போதும் உங்களுக்குக் கிட்டும் ஆன்மீக அனுபவங்கள் உங்களை மெய் மறக்கச் செய்யும், காலத்தின் மகிமையை, கால பைரவரின் மகிமையை, ஏன் இந்த பிரபஞ்சத்தின் மகிமையையே உங்களால் உணர முடியும். அப்போது E என்பது வெளியே உள்ள E அல்ல, அதை உள்ளே, உள்ளே உணர்வதே என்ற பெருமையையும், ஆனந்தத்தையும் நீங்கள் பெறுவீர்கள். வால் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. எல்லையில்லாத, சூட்சுமமான, கண்ணுக்குப் புலப்படா என்பவை அனைத்தும் வாலறிவே, அதனால்தான் வள்ளுவப் பெருந்தகை இறைவனை வாலறிவன் என்று புகழ்கிறார். வாலீஸ்வரர் என்றால் ஆஞ்சநேய மூர்த்தி தன்னுடைய வாலால் இறைவனைக் கட்டினார் என்ற தூல பொருளைச் சுட்டினாலும் இதன் சூக்குமப் பொருள் நீண்ட வாலுடைய ஆஞ்சநேயப் பெருமான் தன்னுடைய சூக்கும அறிவால் உணர்ந்த இறை சக்தியையே இது குறிக்கிறது. இந்த சூட்சும அறிவைத் தரக் கூடியதே ராமகிரி நந்தி தீர்த்தமாகும்.

ஒரு துளி நீரால்
உலகை அழிப்பது
விஞ்ஞானம்
ஒரு துளி நீரால்
உலகை மீட்பது
மெய்ஞானம் !

ஒரு முறை ஒரு மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற பல விஞ்ஞானிகள் கூடினர். மாநாடு ஆரம்பிக்கும் சற்று முன் திடீரென மின்சாரம் நின்று விடவே அனைத்து விளக்குகளும் அணைந்து இருள் சூழ்ந்தது. எதிர்பாராத இந்த களேபரத்தால் அங்கிருந்த பலரும் தங்கள் மேஜை மேல் இருந்த நீர் நிரம்பிய டம்ளரைத் தட்டி விட்டு விடவே அதனால் நீர் வீணாகியது ஒரு புறம் இருக்க வழிந்த அந்த நீரால் அந்த விஞ்ஞானிகள் வாசிக்க வேண்டிய குறிப்பு ஏடுகள் நனைந்து வீணாகி விட்டன. சற்று நேரம் கழித்து மீண்டும் மின்சாரம் வந்தபோது பெரும்பாலானவர்களின் டம்ளர்கள் சாய்ந்து நீர் கீழே கொட்டி விட்டது, சிலரின் ஆராய்ச்சிக் குறிப்புகள் அந்த நீரில் நனைந்து வீணாகியும் விட்டன.

தீர்த்தம் பொழியும் நந்தியும்
ஸ்ரீஉதீத மகரிஷி வழிபட்ட
சிவலிங்கமும் தக்கோலம்

ஆனால், பகவான் கிருஷ்ணரின் பெயரைக் கொண்ட ஒரே ஒரு எட்டெழுத்து இந்திய விஞ்ஞானி மட்டும் இடது கையில் நீர் நிரம்பிய டம்ளரையும் வலது கையில் தன்னுடைய ஆராய்ச்சிக் குறிப்புகளையும் பத்திரமாக பற்றிக் கொண்டு இருந்தார். இதைக் கண்ட அனைவரும் வியந்து இது எப்படி சாத்தியமாயிற்று என்று அவரை வினவவே தான் மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்தபோது அங்கு மின்சாரம் ஷார்ட் சர்க்யூட் ஆகி மின்சாரம் தடைபடப் போகிறது என்பதை தன் மூக்கின் புலன் சக்தியால் உணர்ந்ததால் தான் அவ்வாறு செயல்பட முடிந்தது என்று விளக்கினார். நம் சற்குருவோ, “அந்த விஞ்ஞானியின் மூதாதையர்கள் தொடர்ந்து நிகழ்த்தி வந்த அர்க்யம், ஆசமனீயம், தர்ப்பணம் என்ற நீர் சம்பந்தப்பட்ட பூஜைகளே அந்த விஞ்ஞானி பெற்ற சூட்சும அறிவிற்கு அடிப்படையாக அமைந்தன...”, என்று விவரித்தார்.

காயத்ரீ ஓதும் காயத்ரீ

ராமகிரி சிவத்தலத்தில் நந்தி வாய் வழியாக தீர்த்தம் வழிவதை நாம் இன்றும் தரிசித்துப் பயன் பெறலாம், மற்ற இடங்களில் உள்ள இத்தகைய தீர்த்தங்கள் தற்போது வறண்டிருப்பது போன்றே தோன்றுகின்றன. கரூர் அருகே உள்ள தேவர்மலை ஸ்ரீநரசிம்மர் ஆலயம், தக்கோலத்தில் உள்ள ஸ்ரீகங்காதீஸ்வரர் சிவத்தலம் போன்ற இடங்களில் உள்ள நந்தி மூர்த்திகள் நீர் சுரப்பின்றியே தற்போது காணப்படுகின்றனர். நீர் சுரந்தாலும், நீர் சுரப்பு மறைந்து பொலிந்தாலும் நம்பிக்கை உடையவர்களுக்கு இந்த நந்தி மூர்த்திகள் அளிக்கும் அனுகிரகத்தில் எவ்வித குறைபாடும் ஏற்படுவதில்லை என்பதே மெய்ஞானம் கூறும் உண்மையாகும். எப்படி மூலவரை நாம் திருத்தலங்களில் தரிசிக்க முடியவில்லை என்றாலும் தல விருட்சம், கொடிக்கம்பம், திருக்குளம் இவற்றின் தரிசனம் பக்தர்களுக்கு பூரணமான பலன்களை நல்கும் சக்தியுடன் துலங்குகின்றனவோ அது போன்றதே இந்த நந்தி மூர்த்திகள் வர்ஷிக்கும் அனுகிரகமும் ஆகும். உதாரணமாக, தேவர்மலை திருக்குள நந்தி மூர்த்தியின் தரிசனம் பெற்ற ஒரு அடியார் இல்லத்தின் முன்னே காயத்ரீ மந்திரத்தை ஜபித்தவாறே ஒரு பசு பல மணி நேரம் அமர்ந்து தரிசனம் அளித்தது என்றால் நந்தி மூர்த்திகள் அருளும் அனுகிரகத்தை நாம் கற்பனை செய்துதான் பார்க்க முடியுமா என்ன ?

தற் கோலம் என்ன என்று உணர்த்துவதே தக்கோலத்தின் மகிமை. ஆம், “நான் யார் ?” என்று தெளிவாக உணர உறுதுணை செய்யும் தலமே தக்கோல நந்தி வாய் தீர்த்தத்தின் மகிமைகளுள் ஒன்றாகும். மனித உடல் ஆண் பெண் சங்கமத்தில் தோன்றுவதுபோல் தோன்றினாலும் ஏழாவது மாதமே அந்த உடலில் உயிர் தோன்றுகிறது. இதையொட்டியே வளைகாப்பு போன்ற பல்வேறு புனித சடங்குகளை நிகழ்த்தி அந்தப் புது உயிரை உடலில் வரவேற்கிறோம்.

ஸ்ரீஉதீத மகரிஷி தக்கோலம்

உயிர் தோன்றும்போது தசவாயு என்ற பிராணன் முதலாக தனஞ்செயன் ஈறாக உள்ள பத்து வாயுக்களும் உயிருடன் சேர்ந்தே மனித உடலினுள் பிரவேசம் கொள்கின்றன. மனித உயிர் பிரியும்போது பிராணன் முதலிலும் மற்ற வாயுக்கள் பத்து நாட்களில் ஒவ்வொன்றாக மனித உடலை விட்டுப் பிரிகின்றன. இது மனித உயிர் கொள்ளும் மாற்றம். சற்குருவைப் பெற்றவர்களுக்கோ உயிருடன் சேர்ந்து தசவாயுக்களும் நொடியில் பிரிந்து விடுகின்றன.
த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
ஊர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
என்ற மிருத்யுஞ்சய மந்திரத்தின் உண்மைப் பொருளை உணர்வதே சற்குருவைப் பெற்றவர்களின் மகிமையாகும். பத்துத் தலையையுடைய ராவணனின் கர்வத்தை அடக்கிய சிவபெருமான் என்றெல்லாம் அப்பர் சுவாமிகளின் தேவாரப் பாடல்களில் வரும் வர்ணனைகள் எல்லாம் சிவனை நம்புவோர்க்கு இந்த தசவாயுக்கள் கொள்ளும் மாற்றத்தையே குறிக்கின்றன. நம் சற்குரு அருளிய 32 தேவாரப் பதிகங்களை தினமும் ஓதி வருபவர்கள் இந்த தசவாயுக்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளத் தேவையில்லை என்பதே இந்த இறை கீர்த்தனை உணர்த்தும் ஆறுதலாகும். இந்த இரகசியங்கள் அனைத்தையும் உணர உதவுவதே தக்கோலம் திருத்தலம் ஆகும். இவ்வாறு தசவாயுக்களைப் பற்றி உணர்வதால் என்ன பயன் என்று உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். நம் உடலின் அனைத்து இயக்கங்களும் தசவாயுக்களால்தான் ஏற்படுகின்றன. எனவே தசவாயுக்களை ஆளக் கூடிய மனிதன் உறக்கம், கண் இமைப்பது, இருமல், தும்மல் போன்ற தன்னிச்சையாக நடைபெறும் காரியங்களையும் வென்ற “தனஞ்சயன்” ஆகிறான். இதுவே அர்ச்சுனனுக்கு அமைந்த நாமத்தின் மகிமையாகும்.

தக்கோலம்

உடலுக்குள் உயிர் இருக்கிறதா, உயிருக்குள் உயிர் இருக்கிறதா ? உடலுக்குள்தான் உயிர் இருக்கிறது என்பதே நாம் இதுவரை அறிந்த, பிறர் சொல்லக் கேட்ட கூற்று. சித்தர்களே எதற்கும் இறுதி விடை அளிக்கக் கூடியவர்கள். நம் சற்குரு கூறுவதோ உயிர் என்ற பரந்த சாம்ராஜ்யத்தின் நடுவில் இருக்கும் ஒரு சிறிய ஊரே உடல் என்பதாகும். பிலவ வருடமும் 2021ம் இணைவது மூன்றும் ஐந்தும் இணைவதுதானே. இதுவே உதீத என்பதும் தக்கோலம் என்பதும் இணையும் இந்த வருடத்தின் மகாத்மியமாகும். தக்கோலத்தில் அருள்புரியும் ஸ்ரீஉதீத மகரிஷி இவ்வருடம் உடல், உயிர், தச வாயுக்கள், சூட்சும சரீரம் பற்றிய இரகசியங்களை சிறப்பாக அருள்வதால் இந்த அரிய அனுகிரக சக்திகளை அடியார்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மனிதன் உடலைச் சுருக்க வேண்டியவன், தெய்வீகத்தைப் பெருக்க வேண்டியவன். உண்டி சுருங்கினால் அனைத்தும் சுருங்கும் என்பது மனிதர்களின் நிலையாக இருந்தாலும் கடவுளை உணர்ந்த உத்தம மகான்களின் நிலையோ இதற்கு நேர் எதிராக இருப்பதுதான்.

சத்ய சாய்பாபா ஆனந்த தியானம் என்று அரிய தியானத்தை மேற்கொள்வார். தன் பூத உடலை அணுவிலும் சிறியதாக மாற்றிக் கொண்டு தன் சூக்கும உடலை ஒரு லட்சம் மைல்கள் விஸ்தீரணத்திற்கு பெருக்கிக் கொண்டு தியானத்தில் அமர்வார். பூமியின் குறுக்களவே வெறும் 9000 மைல்கள் என்றால் இந்த ஒரு லட்சம் மைல் விஸ்தீரணத்தில் அடங்கும் உயிர்கள் எத்தனை எத்தனை. ஏன் பாபா ஒரு லட்சம் மைல் அளவிற்கு தன் சூட்சும உடலை வியாபிக்கிறார் ? புத்தர் போன்ற மகான்களின் சூட்சும உடல் 30 மைல் தூரத்திற்கு பரவி இருந்ததாம். அப்படியானால் நாம் வாழும் பூமியின் சூட்சும சரீரம் எந்த அளவிற்கு பரவி இருக்கும் ? இதை யாராவது நினைத்துப் பார்த்தோமா ? இதுவே மகான்களின் அரிய சேவை. எனவே சத்யசாய் பாபாவின் தியானம் வெறும் தூல உயிரினங்களுக்கு மட்டும் அல்ல, பூமியை வலம் வரும் எண்ணற்ற சூட்சும சரீரங்களின் மேன்மைக்கும் என்பதை உணர்ந்தால்தான் மகான்களின் சேவையை ஒரு துளியாவது உணர்ந்தவர்கள் ஆவோம்.

இவ்வாறு ஆனந்த தியானத்தில் அமர்ந்திருக்கும் பாபாவின் கோர்த்த விரல்களின் வழியே இந்த பூலோகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் பிரவேசம் செய்து, இரு கைவிரல்களுக்கு இடையே உள்ள ஆனந்தபுட்குழி என்ற தேவாமிர்த தீர்த்தக் குளத்தில் மூழ்கி, பெறற்கரிய ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி, மீண்டும் தங்கள் இருப்பிடத்தை அடைகின்றன. அதனால்தான் பல சமயங்களிலும் அவர்களை அறியாமலேயே எல்லையில்லா பரவசத்தை, விவரிக்க முடியாத ஆனந்தத்தை மக்கள் அடைகின்றனர். இதன் பின்னணி சக்தியாக அமைவதே ஸ்ரீசத்ய சாய்பாபா, நம் சற்குரு, ஸ்ரீஉதீத மகரிஷி போன்ற மகான்களின் தன்னலம் கருதா தியானம் என்பது இப்போது புலனாகின்றது அல்லவா ? கலியுக மனிதனோ உறக்கம், உணவு இவற்றால் தூல உடலை ஓரளவு பெருக்கும் முறையை அறிந்திருந்தாலும் சூக்கும உடலைப் பெருக்கும் முறையை சற்றும் உணரவில்லை. சூட்சும உடல் பெருக்கத்திற்கு, உண்மையான ஆன்மீக சேவைக்கு மனிதன் தன்னை அர்ப்பணிக்க உதவுவதே சுக்ரபீட முத்திரை தியானமும், நலம் தரும் தேவாரப் பதிகங்கள் பாராயணமும் ஆகும்.

சுக்ரபீடம் தக்கோலம்

ஒரு முறை ஒரு அடியார் தன்னை வீட்டில் உள்ள அனைவரும் தங்கள் சொந்த வேலைக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, தன்னை யாரும் மதிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். அதைக் கேட்ட நம் சற்குரு, “அம்மா, நீங்கள் சுமைதாங்கி போல் நின்று அனைவருக்கும் சேவை செய்யத்தானே இருக்கிறீர்கள் ...”, என்று கூறினார். சுமைதாங்கி என்பது ஐந்து எழுத்து பீடத்தின் மேல் அமையும் மூன்று எழுத்து (குரு) கட்டிடம்தானே. எத்தனையோ வருடங்களுக்கு முன் நம் சற்குரு அளித்த வழிகாட்டுதல் இது என்றாலும், மூன்றும் ஐந்தும் இணையும் இவ்வருடத்தில்தான் அந்த அடியாருக்கு மேற்கூறிய வார்த்தைகள் தங்கள் ஆழ்ந்த அர்த்தத்தை புலன்களின் பரிதிக்குள் கொண்டு வருகின்றன என்பதே எண்கணித சூத்திரத்தின் மகத்துவமாகும். எந்தச் சுமையையும் நீ சுமந்து வருந்தாதே, அனைத்தையும் குருவிடம் சமர்ப்பித்து விடு என்பதே சுமை தாங்கி உணர்த்தும் பாடமாகும்.

தக்கோலம் திருத்தலத்தில் அமைந்துள்ள சுக்ர பீடத்தை பல ஆலயங்களிலும் அடியார்கள் தரிசனம் செய்து இருக்கலாம். இந்த பீடங்களின் எண்ணிக்கையில் சற்றே மாற்றம் தெரியும் என்றாலும் இந்த பீடங்கள் உணர்த்தும் உண்மைப் பொருள் ஒன்றுதான். அதுவே மனிதனின் தூல உடலையும் சூக்கும உடலையும் இணைக்கும் அரும்பணியாகும். நமது மூக்கின் உள் புகும் காற்றிற்கும் மூக்கிலிருந்து வெளி வரும் காற்றிற்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரிவதில்லை. அதிக பட்சம் வெளி வரும் காற்று சற்று உஷ்ணம் கூடியதாக இருக்கும். உண்மையில் மூக்கினுள் புகும் காற்றிற்கும் வெளி வரும் காற்றிற்கும் 108 சூட்சும இரகசியங்கள் உள்ளன. இதை உணர்த்துவதே ஆலயங்களில் உள்ள சுக்ர பீடங்களாகும். இதை அடியார்கள் உணர்ந்து கொள்ள உதவுவதே பிலவ வருடத்தில் நிகழ்த்தும் வழிபாட்டுப் பலன்களில் ஒன்றாகும்.

ஸ்ரீகிரிஜா கன்னிகாம்பாள்
தக்கோலம்

பிராணாயாமம் மூலம் 108 சுக்ர பீட இரகசியங்களில் ஒன்பதை மட்டுமே உணர முடியும். இந்த இரகசியங்களே தற்போது மனிதனின் எந்த உடல் நோயையும் தீர்க்கக் கூடிய அளவிற்கு அமிர்த சக்திகளைக் கொண்டதாக அமைகின்றது என்றால் மற்ற தத்துவங்களின் பலன்கள் எந்த அளவிற்கு சுவை உள்ளதாக இருக்கும் ? சுக்ர பீட முத்திரையைப் பற்றி எதுவும் அறியாதவர்களும் கூட திருத்தலங்களில் உள்ள சுக்ர பீடங்களின் எதிரே அமர்ந்து கொண்டு அமிர்த சக்திகள் பெருகும் வெள்ளிக் கிழமைகளில் இத்தகைய சுக்ர பீடங்களைத் தரிசனம் செய்து வருவதால் உயிர், உடல், தசவாயுக்கள் பற்றிய இரகசியங்களை சிறிது சிறிதாக உணர்வார்கள்.

எப்படி மூக்கினுள் புகும் காற்றிற்கும், வெளிவரும் காற்றிற்கும் இடையே ஏகப்பட்ட இரகசியங்கள் உள்ளனவோ அதே போல் இந்த சுக்ர பீடங்களின் உள் புகும் காற்றிற்கும், இந்த பீடங்களில் உள்ள துவாரங்களின் வழியே வெளி வரும் அமிர்த ஔஷத கிரணங்களுக்கும் இடையே பலவித இரகசியங்கள் அமைந்துள்ளன. இந்த சுக்ர பீடங்களைப் பற்றி ஓரளவு உணர்ந்து கொண்டால் கூட மனிதன் எந்தக் கோயிலையும் விட்டு வெளியே வர மாட்டான் என்பதே சற்குருவின் உபதேசம். துர்கை, அம்பாள், லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி போன்ற எந்த பெண் தெய்வத்திற்கும் உரிய அஷ்டோத்திர துதியைத் தொடர்ந்து இந்த சுக்ர பீடங்க்ளின் எதிரே அமர்ந்து ஓதி வருவதும் பலன்களை துரிதமாக்கும். மலடி என்ற பெயர் வாங்கிய பெண்கள் கூட இத்தகைய வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள் என்றால் இதன் மகிமைதான் என்னே ?

ஸ்ரீநந்தாமிர்த மூர்த்தி
தக்கோலம்

ரமண மகரிஷி திருஅண்ணாமலையில் விருபாட்சி குகை, பாதாள லிங்கம் போன்ற பல இடங்களில் அமர்ந்து தியானம் புரிந்தாலும் அனைத்து இடங்களிலும் எறும்புகள் பகவானின் உடலைக் கடித்து “தொந்தரவு” செய்தன என்பதை நாம் அறிவோம். உண்மையில் மகான்களின் பார்வையோ இதை வேறு விதமாகப் பார்க்கும். எறும்புகள் கடிக்கும்போது சுக்ராமிர்தம் என்ற ஒரு வகை உணவு சக்தி இவ்வாறு தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகான்களுக்கு உணவாக எறும்புகளால் பரிமாறப்படுகிறது என்பதே நாம் இதுவரை உணராத பிப்ல இரகசியம். இதனால்தான் பல மகான்களும் உணவின்றியே பல நாட்களுக்கு தியானத்தில் ஆழ முடிகிறது. மனிதர்களாகிய நாம் இத்தகைய எறும்புகளின் “கடி” மூலம் பிப்ல சக்தியைப் பெற முடியாது என்றாலும் கோயிலை வலம் வரும் எறும்புகளுக்கு தான்ய ரவைகளை சர்க்கரையுடன் சேர்த்து அளித்து பிப்ல சக்தியை “வருந்தாமல்” பெறலாமே.

பிப்பிலம் என்றால் எறும்புகள் என்று பொருள். தக்கோலத்தில் அருளும் ஸ்ரீநந்தாமிர்த மூர்த்தியே எறும்புகள் மட்டுமே பெற்ற அபூர்வ அமிர்த சக்திகளை அளிக்கும் மூர்த்தியாவார். தற்போது வெட்டவெளி மூர்த்தியாக ஸ்ரீநந்தாமிர்த மூர்த்தி துலங்கினாலும் இம்மூர்த்தியின் வரலாறு மிகவும் புராதானமானதே. கரிசலாங்கண்ணி, செம்பருத்தி போன்ற குறைந்தது ஐந்து தைலங்களால் இம்மூர்த்திக்கு காப்பிட்டு தாமே அரைத்த சந்தனத்தால் பொட்டிட்டு ஆராதனை செய்வதால் சக்தி குறைவால், தற்காலத்தில் கூறப்படும் vitamin deficiency நோய்கள் அனைத்துமே துரித நிவாரணம் பெறும்.

“எறும்பு ஊர்வதைப் போல் ...”, என்ற ஒரு வழக்கு உண்டு. பணிவையும் அடக்கத்தையும் குறிப்பதே எறும்பின் இத்தகைய செயல்பாடு. எறும்பைத் தவிர மற்ற எந்த உயிரினத்திலும் நாம் காண முடியாத ஒர் அற்புத பண்பாடு. அதனால்தான் நம் சற்குரு எறும்புகள் வழிபட்ட திருவெறும்பூர் திருத்தலத்தில் திருப்பணி நிறைவேற்றியபோது ஒருவர் பின் ஒருவராகவே படிகளில் ஏற வேண்டும் என்றும் ஒருவர் பின் ஒருவராகவே படிகளில் இறங்க வேண்டும் என்றும் பணித்தார்கள். இவ்வாறு தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் அடியார்கள் மேல் அன்பைப் பொழிந்தவரே நம் சற்குரு. இந்த அன்பின் ஒரு துளியையாவது நாம் பெற வழிகோலுவதே தக்கோலம் திருத்தலத்தில் நாம் இயற்றும் ஸ்ரீநந்தாமிர்த லிங்க மூர்த்தியின் வழிபாடாகும். நந்தா விளக்கு என்று அணையாமல் தொடர்ந்து ஒளி வீசும் திருத்தல தீபங்களைக் குறிப்பார்கள். ஆனால், அமிர்த சக்திகளையே நந்தாமல், குறையாமல், தொடர்ந்து எப்போதும் ஒரு சிவலிங்க மூர்த்தி தன் அனுகிரகமாக அளிக்கின்றார் என்றால் இந்த சிவலிங்க மூர்த்தியை நாம் அறிந்து கொள்ள அருள்சுரந்த நம் சற்குருவிற்கு நாம் எப்படி நன்றி செலுத்த முடியும் ?
சுக்ராமிர்தம் வேறு
சுக்லாமிர்தம் வேறு
என்று அடியார்கள்
உணர்வதே
நாம் சற்குருவிற்கு
அளிக்கக் கூடிய
குரு காணிக்கையாகும் !

சுக்லாமிர்தம், சுக்ராமிர்தம் இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை மக்கள், பக்தர்கள் அல்ல, உணர வழிகோலுவதே ஆலயங்களில் உள்ள சுக்ர பீடங்களாகும். இந்த சுக்ர பீடங்களில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே பிரதிபலிப்பது மக்களின் சுக்லாமிர்த சக்திகள், இந்த பீடங்களிலிருந்து வெளியே பிரகாசிப்பது சுக்ராமிர்த இறை சக்திகள். இந்த வித்தியாசத்தை மக்கள் தொடர்ந்து சென்று, அவர்கள் பக்தர்களாக இறையடியார்களாக மலர, மிளிர வழிகாட்டுவதே ஆலய சுக்ர பீடங்களாகும். நம்முடைய ஆசைகள், பொறாமை எண்ணங்கள், வெறுப்புகள் இவற்றை பிட்சையாக ஏற்றுக் கொண்டு அன்பு, கருணை, பொறுமை போன்ற இறைப் பொக்கிஷங்களை அளிக்கும் பிட்சாடன மூர்த்தியின் அனுகிரக பாங்காகும்.

ஸ்ரீஔர்வ தட்சிணாமூர்த்தி
தக்கோலம்

திருத்தலங்களில் உள்ள சுக்ர பீடங்களைப் போன்றே நம் உடலிலும் சுக்ர பீடங்கள் உள்ளன. ஒரே ஒரு அங்குலாஸ்திதியில் மட்டும் இத்தகைய முன்னூறுக்கும் மேற்பட்ட சுக்ர பீடங்கள் நிறைந்துள்ளன என்றால் கடவுள் கருணை எல்லையில்லாததுதானே ? இத்தகைய அமானுஷ்ய சுக்ர பீட சக்திகளைப் பயன்படுத்தாதது யார் குறை ? இதையே மகான்கள் கடவுள் கருணையே வடிவானவர் என்று கூவிக் கொண்டே இருந்தார்கள், கூவிக் கொண்டே இருக்கிறார்கள், கூவிக் கொண்டே இருப்பார்கள்.

இவ்வாறு மனித உடலில் கோடி கோடியாய்த் துலங்கும் சுக்ர பீடங்கள் அனைத்தின் வழியாகவும் மகா விஷ்ணுவைத் தரிசனம் செய்து எல்லையில்லா ஆனந்தம் பெற்றவரே ஸ்ரீசைதன்ய மகா பிரபு ஆவார். இந்த எல்லையில்லா ஆனந்தம் சைதன்யருக்கு மட்டுமே சொந்தமா என்ன ? உங்களுக்கும் தான் ... இதற்கு வழிகாட்டுவதே தக்கோலம் திருத்தலம்.

ஔர்வர் கர்ப்பத்தில் சிசுவாய் இருக்கும்போது அம்மகரிஷியின் தாய் அந்தச் சிசுவை அசுரர்களிடமிருந்து காக்க கர்ப்பத்தையே தன் தொடைக்கு மாற்றிக் கொண்டார் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். ஊரு என்றால் தொடை, தொடை கர்ப்பத்தில் தோன்றியதால் ஊரு என்பது ஔர்வ என்று ஆயிற்று. கேட்பதற்கு இது சாதாரணமாக இருந்தாலும் அந்தத் தாய் அடைந்த வேதனையை இறைவன் என்ற அனைவருக்கும் தாய் மட்டுமே உணர முடியும். இந்த கற்பனைக்கெட்டாத கர்ப்ப வேதனைக்கு செவி சாய்த்து அத்தாயின் வேதனைகளை ஏற்றுக் கொண்டவரே தக்கோலம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீஔர்வ தட்சிணா மூர்த்தி ஆவார். தட்சிணா மூர்த்தியின் தலை சற்றே இடது பக்கம் சாய்ந்திருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாகும். கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் பல துன்பங்களை அடைவார்கள் என்று என்று யார் பயமுறுத்தினாலும் அதைக் கேட்டு சற்றும் கலங்காது தக்கோலத்தில் அருள்புரியும் ஸ்ரீஔர்வ தட்சிணா மூர்த்தியை அடிப் பிரதட்சணம் செய்து வணங்கி வந்தால் சுகப் பிரசவத்தைப் பெறுவார்கள் என்பது இத்தல குரு கடாட்சமாகும். பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கு ஏற்படும் பலவிதமான உடலுறவுப் பிரச்னைகளையும் “திரப்படுத்தி” இல்லறம் நல்லறமாய்த் துலங்க அருள்புரிபவரே தக்கோலம் ஸ்ரீஔர்வ தட்சிணா மூர்த்தி ஆவார். “ஔர்வ” என்பது சித்தர்கள் சூட்டிய காரணப் பெயரே. இந்த நாமத்தை ஆண்கள் தியானித்து வந்தாலே பல பிறவிகளின் தவறுகள் மாயமாகும், பொடிப் பொடியாகும்.

தக்கோலத்தில் எழுந்தருளிய நடராஜப் பெருமான் ஒளர்வ தாண்டவ அதுல்ய நடனம் என்ற ஒரு அற்புத நாட்டியக் கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். தற்காலத்தில் மாப்பிள்ளை பெண் நிச்சயம் ஆகி விட்டாலும் திருமணத்திற்கு சற்று முன் இந்த தம்பதிகள் மாறி விடுகின்றனர், இதில் பல திருமணங்களும் நின்று போய் விடுகின்றன, சில சமயங்களில் இத்தகைய மாற்றங்களால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்கள் மனம் பேதலித்து தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு போய்விடுவதும் உண்டு.

ஸ்ரீநடராஜப் பெருமான்
தக்கோலம்

இத்தகைய எதிர்பாராத மாற்றங்களை நிவர்த்தி செய்து நல்ல முறையில் திருமணங்கள் இனிதே அமைய வழிகோலுபவரே தக்கோல நடராஜப் பெருமான் ஆவார். திருமணம் நிச்சயம் ஆனவுடன் தக்கோல ஔர்வ தட்சிணா மூர்த்தியையும் நடராஜப் பெருமானையும் வேண்டி மாப்பிள்ளை பெண் வீட்டார் ஆயுர்தேவி பூஜை போன்று கங்கை காவிரி தீர்த்தங்களை கொதிக்க வைத்து அதில் வெட்டிவேர், துளசி, ஏலக்காய், சுக்கு, கடுக்காய் என்ற ஐந்தையும் சேர்த்து ஒரு வெள்ளி அல்லது வெண்கலப் பாத்திரத்தில் வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பாத்திரத்தை சுத்தமான மஞ்சள் துணியால் மூடி வைத்து விட வேண்டும். தினமும் இந்த கலசக்தை அர்த்தநாரீஸ்வரராகப் பாவித்து மாப்பிள்ளையும் பெண்ணும் அவரவர் இல்லங்களில் அப்பர் பெருமானின் வேற்றாகி விண்ணாகி என்று தொடங்கும் தேவார தாண்டக பதிகத்தை ஓதி வர வேண்டும். மூன்று மாதங்கள் திருமணத்திற்கான இடைவெளி காலம் இருப்பதாக வைத்துக் கொண்டால் சுமார் 45 நாட்கள் கழித்த பின்னர் இந்த கலச செம்புகளை எதிர்காலத் தம்பதிகள் மாற்றிக் கொண்டு பூஜைகளைத் தொடர வேண்டும். மாதவிலக்கு நாட்களில் பெண்ணின் உற்றம், சுற்றத்தார் இந்த பூஜைகளைத் தொடர்தல் நலம். திருமணம் இனிது நிறைவேறிய பின்னர் இந்த கலச செம்புகளில் உள்ள தீர்த்தங்களைக் கலந்து தக்கோலம் இறை மூர்த்திகளுக்கு, குறிப்பாக ஔர்வ தட்சிணா மூர்த்திக்கும், நடராஜ பெருமானுக்கும் நன்றி தெரிவித்து இத்திருத்தலத்தில் உள்ள எந்த மூர்த்திக்கும் வேண்டுமானாலும் அபிஷேகம் நிறைவேற்றி விடலாம். இது முடியாதபோது இந்த திருத்தலத்தில் உள்ள நந்தி வாய் தீர்த்தத்திலும் சேர்த்து விடலாம். இதனால் திருமண சம்பந்தங்களில் தோன்றும் எத்தகைய குழப்பங்களும் தீரும், குடும்ப ஒற்றுமை பெருகும். ஏற்கனவே திருமணம் ஆகிய தம்பதிகளும் மேற்கூறிய பூஜையை தம்பதிகள் இருவரும் சேர்ந்து குறைந்தது 21 நாட்களுக்கு நிறைவேற்றி, தக்கோல மூர்த்திகளை தரிசனம் செய்து பலன் பெறலாம்.

கைகேயியின் உத்தரவை சிரமேற்கொண்டு ராமச்சந்திர மூர்த்தி வனவாசத்திற்கு சென்றபோது சீதையும் உடன் வருவதற்குத் தயாரானாள். இதைக் கண்ட ராமபிரான் அதை விரும்பாததுபோல் உரைத்திடவே சீதையோ தான் ராமபிரானுடன் வருவதால் அவருடைய பிரம்மசர்ய விரதத்திற்கு எந்தவித பங்கமும் தன்னால் ஏற்படாது என்று உறுதி அளித்த பின்னரே சீதையை தன்னுடன் அழைத்துச் சென்றார் என்பது நீங்கள் அறிந்ததே. வனவாசம் முடிந்த பின்னர் மனிதன் என்ற முறையில் தம்பதி சகிதமாக தக்கோலம் திருத்தலத்திற்கு சீதையுடன் எழுந்தருளி கிரிஜா கன்னிகாம்பாள் தாயாருக்கு நன்றி தெரிவித்தார் ஸ்ரீராமபிரான். கிரிஜா என்றால் இமவானின் மகள் என்று பொருள். கன்னித் தன்மையில், கற்பில் இமயமலையைப் போல் உயர்ந்தும், மலைபோன்ற திர தன்மையும், திடத் தன்மையையும் கொண்டிருந்த சீதையால் வழிபடப்பட்ட அம்பிகையே ஸ்ரீகிரிஜா கன்னிகாம்பாள் ஆவாள். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆண் பெண் இருவருமே இத்தகைய உயர்ந்த நடத்தையை அருங்குணமாக பெற உதவுவதே ஸ்ரீகிரிஜா கன்னிகாம்பாள் சமேத ஸ்ரீஜலநாதேஸ்வரர் வழிபாடாகும்.

ஸ்ரீபிரம்ம மூர்த்தி
தக்கோலம்

ஸ்ரீஹம்ஸ்வர பெருமாள்
தக்கோலம்

ராமபிரானுடன் தக்கோலம் திருத்தலத்தை தரிசனம் செய்தபோது ஸ்ரீகிரிஜா கன்னிகாம்பாள் தேவியால் ஹம்ஸ்வரம் என்ற அபூர்வ சக்தியைப் பெற்றாள் சீதாதேவி. இந்த ஹம்ஸ்வரம் என்ற சக்திகளே லவ குசா என்ற இரு சக்திகளாய் வால்மீகி முனிவரின் அனுகிரகத்தால் பூரணம் பெற்று லவன், குசன் என்ற பக்திச் செல்வங்களாய் இன்றளவும் இப்பூவுலகை வலம் வந்த வண்ணம் இருக்கின்றன. எனவே சீதை ராமபிரானைப் பிரிந்து பூமியில் சென்று மறைந்தாள் என்பதை விட ஹம்ஸ்வர பூரணம் பெற்ற சீதை இறைவனுடன் வைகுண்டம் ஏகினாள் என்று உணர்த்துவதே ஹம்ஸ்வர லீலையின் மகத்துவம். மனிதனை புனிதப்படுத்துவதே, பூரணமாக்குவதே ஹம்ஸ்வரம். இந்த ஹம்ஸ்வரத்தை சாதாரண மக்களும் உணர்ந்து பயன்பெற அருளும் தலமே தக்கோலமாகும்.

பிரம்மம் என்பது மனிதனையும், செடியையும், விலங்கையும் இணைப்பது, இணைந்ததுதானே. இந்த இணைப்பை உருவாக்குவதே ஹம்ஸ்வரம் ஆகும். இந்த ஆரம்ப கட்ட பயிற்சிக்கு உறுதுணை செய்வதும் தக்கோலம் என்றால் மிகையாகாது. இத்தலத்தில் ஸ்ரீஔர்வ தட்சிணா மூர்த்தி தன்னுடைய இடது காலை மடக்கி உயர்த்தி, வலது காலை தொங்க விட்டு இருப்பதும், ஸ்ரீஹம்ஸ்வர பெருமாள் தன்னுடைய வலது காலை மடக்கி இடது காலை தொங்க விட்டு அமர்ந்திருப்பதும் இத்தகைய ஹம்ஸ்வர யோகத்தின் தன்மையை சாதாரண பக்தர்களும் புரிந்து கொள்ள துணை புரிகின்றன.

தந்தை எவ்வழி, மகனும் அவ்வழி என்பது போல் தந்தையான பெருமாள் இடது காலைத் தொங்க விட்டு அமர்ந்திருப்பதுபோல் தந்தையைப் பின் பற்றும் தனயனாக, எப்போதும் பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து அருள் புரியும் பிரம்ம தேவரும் இங்கு இடது காலைத் தொங்க விட்டு அமர்ந்து இருப்பது வேறு எத்தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத அபூர்வ காட்சியாகும். பாகப் பிரிவினை, சொத்துத் தகராறு, உறவுப் பிரச்னைகள் போன்றவற்றால் பெற்றோர்களுடன் பகைமை கொண்ட குழந்தைகள் தக்கோலம் திருத்தலத்தில் செவ்வாய்க் கிழமை பிரம்ம மூர்த்தியையும், புதன் கிழமை பெருமாள் மூர்த்தியையும் தரிசனம் செய்து இவர்கள் முன் அமர்ந்து தங்கள் பிரச்னையை வாய் விட்டுக் கூறுவதால் எத்தகைய குடும்ப சம்பந்தமான பிரச்னைகளுக்கும் உரிய தீர்வுகள் இந்த மூர்த்திகளால் உணர்த்தப்படும், மனம் உண்டால் மார்க்கமும் உண்டே.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam