பசுவை ஏமாற்றாதே, படுகுழியில் வீழாதே !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்ஸ்ரீமுனீஸ்வரர் தவசிமடை

பலரும் இறந்து போன கன்றுகளுக்குள் வைக்கோலை அடைத்து பசுவை ஏமாற்றி பால் கறக்கிறார்கள். இதனால் பசுவின் உடலில் உள்ள அனைத்து தேவதைகளின் தெய்வங்களின் சாபத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் ஆளாகிறார்கள் என சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். அறிந்தோ அறியாமலோ இத்தவறுகளை செய்தோர் எட்டு முழ வேஷ்டிகளை தவசிமடை அருகிலுள்ள முனீஸ்வர மூர்த்திக்கு சமர்ப்பித்து அவற்றை பிரசாதமாக பெற்று கறவை நின்று போன மாடுகளுக்கும், கன்றை இழந்த பசுக்களுக்கும் அணிவித்தலால் மேற்கூறிய சாபங்களிலிருநது ஓரளவு பிராயசித்தம் கிட்டும்.ஸ்ரீநஞ்சுண்ட விநாயகர், காருகுடி
சுவாதி நட்சத்திர தினங்களில் 108 பசு நெய் தீபங்களை காருகுடி திருத்தலத்தில் ஏற்றி வழிபடுதலால் காவல்துறை, நீதி துறையில் இருப்பவர்கள் நலம் பெறுவார்கள். கண்களை மூடிக் கொண்டு நிற்கும் நீதி தேவதை இத்திருத்தலம் ஒன்றில்தான் கண்களைத் திறந்த நிலையில் அருளாட்சி புரிகிறது என்பது சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக இரகசியம். இதன் பின்னணியில் அமைந்த தெய்வீக பொக்கிஷங்களை தக்க பெரியோர்களை நாடி அறிந்து கொள்ளவும்.ஸ்ரீவிநாயகர் வீரசிங்கம்பேட்டை தஞ்சாவூர் மாவட்டம்
ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் ஔவையார் அருளிய “சீதக் களப ... “ என்று தொடங்கும் விநாயக துதியை ஓதி ஹோமம் வளர்த்து வந்தால்தான் உடல் ஆரோக்யமாகத் திகழ்வதுடன் எதிர்வரும் துன்பங்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளலாம். பலரும் மறந்து விட்ட இத்தகைய ஹோம வழிபாட்டை இயற்றிய பலன்களை அளிக்கக் கூடியவரே ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருத்தலத்தில் அருள்புரியும் விநாயக மூர்த்தி ஆவார். அவரவர் தங்கள் பிறந்த நாள் அன்று இந்த விநாயக மூர்த்திக்கு 108 நீர்க் கொழுக்கட்டைகளைப் படைத்து தானம் அளித்தலால் அற்புத பலன்களைப் பெறலாம்.ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயில், வீரசிங்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்
தற்காலத்தில் பலருக்கும் சிறு வயதிலேயே பற்கள் சொத்தையாகி விடுகின்றன. சொத்தையான பற்களை சரி செய்ய முடியாது எனினும் மீதமுள்ள பற்களைப் பாதுகாத்துக் கொள்ள அருள்புரிபவரே இத்திருத்தல நந்தீஸ்வர மூர்த்தி ஆவார். ஞாயிற்றுக் கிழமைகளில் குரு ஹோரை நேரத்தில் (காலை 11 மணி) நந்தியெம்பெருமானுக்கு சுத்தமான நல்லெண்ணெய் காப்பிட்டு இவர் அருகே 108 தோப்புக் கரணங்கள் இட்டு வழிபட்டு வந்தால் பற்கள் சொத்தையாகமல் இருக்க அருள்புரிவார்.ஸ்ரீவாலாம்பிகை வீரசிங்கம்பேட்டை தஞ்சாவூர் மாவட்டம்
தாமே அம்மியில் அரைத்த மருதாணையை பூவரச இலையில் வைத்து குறைந்தது 12 கன்னிப் பெண்களுக்கு பௌர்ணமி தினங்களில் தானம் அளித்து வந்தால் முகத்தில் ஏற்பட்டுள்ள மச்சம், மரு, தழும்பு போன்ற காரணங்களால் தடைபட்ட திருமணங்கள் நன்முறையில் நிறைவேறும். தொடர்ந்து செவ்வாய்க் கிழமைகளில் இத்தகைய தானத்தை நிறைவேற்றி வருவதால் எத்தகைய தோல் வியாதிகளும் நிவாரணம் பெறும்.ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயில், வீரசிங்கன்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்
இத்திருத்தலத்தில் உள்ள சிவலிங்க மூர்த்திகளுக்கு நல்லெண்ணெய் காப்பிட்டு புத்தாடைகள் அணிவித்து தாமே அரைத்த சந்தனத்தால் பொட்டிட்டு வணங்குவதால் வாராக் கடன்கள் வசூலாகும். புனர்பூச நட்சத்திர தினத்தன்று இத்தகைய வழிபாடுகளை செய்வதால் என்றுமே ஆடைக்கு பஞ்சமோ, மானம் இழக்கும் சூழ்நிலையோ ஏற்படாமல் இருக்க எம்பெருமான் அருள்புரிவார்.ஸ்ரீமுருகப் பெருமான் வீரசிங்கம்பேட்டை தஞ்சாவூர் மாவட்டம்
சிலருக்கு படுக்கையிலிருந்து அடிக்கடி கீழே விழுவது போன்ற பிரமை ஏற்பட்டு அதனால் திடீர் என்று பயமடைந்து தூக்கம் கெட்டுப் போய்விடுவதுண்டு. அத்தகையோர் சனிக் கிழமைகளில் இத்தல முருகப் பெருமானை வழிபட்டு காலிபிளவர் பஜ்ஜி தானமாக அளித்து வருதலால் நிம்மதியான உறக்கம் கிட்டும். நல்ல உறக்கத்தை அனுகிரகமாக அளிக்கும் மூர்த்தியே இத்தல முருகப் பெருமான் ஆவார்.மரகத லிங்கம், வாணியம்பாடி திருத்தலம்
பொதுவாக ஜாதகத்தில் எட்டாம் அதிபதியின் தசா, புத்தி, அந்தரங்க காலங்களில் நோய், கடன், விபத்து, சிறைவாசம் போன்ற துன்பங்கள் ஏற்படுவது சகஜம். இத்தகையோர் வாணியம்பாடி திருத்தலத்தில் அருள்புரியும் மரகத லிங்க மூர்த்தியை வணங்கி பிஸ்தா பருப்பு கலந்த சுத்தமான காய்ச்சிய பசும்பாலை தானம் அளித்தலால் எத்தகைய மனவேதனையையும் எதிர்கொள்ளும் மனோ திடத்தைப் பெறுவார்கள். பல உயர்மட்ட அதிகாரிகள் இரகசியமாக வந்து வழிபட்டு செல்லும் அனுகிரகமூர்த்தி.ஸ்ரீசரஸ்வதி தேவி, வாணியம்பாடி
ஊமையான சரஸ்வதி குரல் பெற்றவுடன் ஸ்ரீஅதிதீஸ்வரரை தோடி ராகப் பாடல்களைப் பாடி மகிழ்வித்தாள். தமிழ் வல்லின இடையினமாகிய தகாரம் என்னும் ‘த‘ அட்சரம் குரல் வளம், அதிகாரம், பேச்சாற்றல், பக்தியை அளிக்கக் கூடியது. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் ஞானம் பெற்றவுடன் “தோடுடைய செவியன் ... ” என்றுதானே பாடினார். வாணியம்பாடி திருத்தலத்தில் தோடி ராகத்தில் அமைந்த கீர்த்தனைகளை பாடுவதும், இசைப்பதும் அற்புதமான பலன்களை வர்ஷிக்கும். தோடி கோடி பெறும் என்று வழக்கும் உண்டே.வாணியம்பாடி திருத்தலம்
திருமணங்களை கோயிலில் நடத்துவதால் அனைத்து விதமான கால சந்தி தோஷங்களும் தம்பதிகளைப் பாதிக்காமல் அவர்களின் திருமண வாழ்வு சிறப்படைந்து அற்புத சந்ததிகளைப் பெறவும் வழிவகுக்கிறது. பற்பல சந்தர்ப்பங்களால் இவ்வாறு திருக்கோயிலில் மாங்கல்ய தாரண வைபவத்தை நிறைவேற்ற இயலாதவர்கள் வாணியம்பாடி திருத்தலத்தில் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர் சந்நதியில் மீண்டும் மாங்கல்ய தாரண வைபவத்தைக் கொண்டாடுவதால் முகூர்த்தங்களைச் சரியாக கணிக்காத தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறுவர். முருகன் சந்நதிகளில் எதிரே உள்ள பலி பீடங்கள் இத்தகைய அற்புதமான முகூர்த்த தோஷ நிவாரண சக்திகளை உடையவை.பத்னிக்கல் வழிபாடு
பலரும் தங்கள் திருமணத்திற்குப் பின் பலவித சோதனைகளைச் சந்திக்கும்போதுதான் செவ்வாய் தோஷம் பார்க்காமலே தங்கள் திருமணம் நிறைவேறியதைக் கண்டு மனம் வருந்துகிறார்கள். நடந்தது அனைத்தும் நாராயணன் செயலே. இவ்வாறு செவ்வாய் தோஷ விளைவுகளால் பல்வேறு மனக் கொந்தளிப்புகளுடன் வாழும் தம்பதிகள் தேவாரப் பாடல் பெற்ற தலங்களிலோ, சுயம்பு மூர்த்தி தலங்களிலோ பத்னிக்கல் வழிபாடுகளை இயற்றி வெள்ளி மெட்டிகளை தானம் அளித்தலால் குடும்ப ஒற்றுமை பெருகும்.திருப்புன்கூர் திருத்தலம்
பக்தியில் சிறந்த நந்தனார் திருப்புன்கூர் திருத்தலத்தில் சிவபெருமானை வழிபடச் சென்றபோது இறைவனின் ஆணையின் பேரில் நந்தி. கொடி மரம் அனைத்தும் விலகி நந்தனார் கோயிலின் வெளியிலிருந்தே மூல மூர்த்தியை தரிசனம் செய்ய அனுமதித்தார்கள் அல்லவா? இந்த திடீர் மாற்றத்தால் அத்திருத்தலத்தில் வாஸ்து தோஷங்கள் ஏற்படாதா ? நிச்சயமாக நந்தியின் அசைவால் பல வாஸ்து தோஷங்கள் நிகழலாயின. ஆனால், எதிர்காலத்தில் வாஸ்து மூர்த்தியின் மகிமையை அறியாமல் பலரும் கட்டிடங்களை திடீர், திடீரென்று தேவையில்லாமல் மாற்றி விடுவார்கள் என்பதை உணர்ந்த வாஸ்து மூர்த்தி வாஸ்து தோஷங்களிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக இன்றும் வருடத்தில் வரும் எட்டு வாஸ்து நாட்களில் திருப்புன்கூர் திருத்தலத்தில் பலவிதமான சிறப்பு யோக சயன நிலைகளை மேற்கொள்கிறார் என்பது சித்தர்கள் கூறும் ரகசியமாகும். எனவே தேவையில்லாமல் கட்டிடங்களை, வீடுகளை இடித்தல், பேஷன் என்ற பெயரில் தேவையில்லாத மாற்றங்களை ஏற்படுத்துவதால் வாஸ்து தோஷங்கள் பெருகும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்தல் அவசியமாகும். இவ்வாறு அறியாமல் இதுவரை தேவையில்லாமல் வீடு, கட்டிடங்களை இடித்து மாற்றியவர்கள் திருப்புன்கூர் திருத்தலத்தில் வாஸ்து நாட்களில் இறைவனை வணங்கி எட்டு முழ வேஷ்டிகள், பெரிய துண்டு இவற்றை கட்டிடத் தொழிலாளர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் தானம் அளித்தலால் நலம் பெறுவர்.ஸ்ரீஅகத்திய லிங்கம், திருபுன்கூர்
ஏழுகடலையும் ஒரு துளி நீராக்கி தன் உள்ளங்கையில் வைத்து அருந்தி ஸ்ரீஅகத்திய பெருமான் இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து தீர்த்தங்களையும் புனிதமாக்குவதற்கு தேவையான சிவமங்கள சக்திகளை திருப்புன்கூர் தலத்திலிருந்தே பெற்றார். எனவே எத்தகைய நீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும், நீர் சம்பந்தமான வியாதிகளுக்கும் நிவாரணம் அளிப்பவரே ஸ்ரீஅகத்திய லிங்க மூர்த்தி ஆவார். சிறுநீரக கோளாறுகள், உடல் வீக்கம் போன்ற பிரச்னைகளால் வருந்துவோர் பழரசங்களால் இந்த லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபடுதலால் நல்ல நிவாரணம் பெறுவர்.திருப்புன்கூர் திருத்தலம்
வலியன் குருவி வழிபட்டு முக்தி அடைந்த தலம் பாடி, சென்னை. நண்டு தவமியற்றி பேறு பெற்ற தலம் திருந்துதேவன்குடி. ஆனால், விலங்கு, தாவரங்கள், தேவர்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவ ராசிகளும் முக்தி பெறக் கூடிய திருத்தலமே திருப்புன்கூர் ஆகும். சிவபெருமானை திருப்புன் சடை உடையவர் என்று பெரியோர்கள் புகழ்வார்கள். புன்சடை என்றால் எல்லை காண முடியா ஜடா முடி. திருப்புன் சடை ஈசன் அருளும் தலமே திருப்புன்கூர். பக்தியின் எல்லை காண விரும்புவோர் பணிய வேண்டிய இறை மூர்த்தியே திருப்புன்கூர் ஸ்ரீசிவலோகநாதர்.ஸ்ரீகுளம்வெட்டிய விநாயகர், திருபுன்கூர்
பொதுவாக மனையின் ஈசான்ய மூலையில் கிணறு அமைத்தலே நலம். இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலும் இந்த நியதியை யாரும் பின்பற்றுவதில்லை. ஒரு சிலர் ஈசான்ய மூலையில் குழாய் கிணறு மூலம் தண்ணீரைப் பெற்றுக் கொள்கிறார்கள். இதுவும் வாஸ்து நியதியை மீறுவதே ஆகும். இத்தகைய வாஸ்து தோஷங்களால் நல்ல குடிநீரை பெற முடியாதவர்கள் திருப்புன்கூர் ஸ்ரீகுளம்வெட்டிய விநாயகரை கீழ் நோக்கு நாட்களில் தரிசனம் செய்து தங்கள் தவறைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டி சிறுமிகளுக்கு உள்ளாடைகளை குறைந்தது 12 செட் தானமாக அளித்தலால் தகுந்த நிவாரணம் பெறுவர்.ஸ்ரீமுருகப் பெருமான், திருப்புன்கூர் திருத்தலம்
பொதுவாக வாயுமூலையில் சம்பதி சமேதாய் எழுந்தருளி உள்ள முருகப் பெருமான் வளமான வாழ்வை அனுகிரகமாக அளிக்கக் கூடியவர். வெள்ளிக் கிழமைகளில் தாமே தொடுத்த மல்லிகை, முல்லை மலர் மாலைகளை இம்மூர்த்திகளுக்கு அணித்து வணங்கி வருதலால் வாழ்க்கை மணமாகும், செல்வ வளம் கொழிக்கும். ஆறு, 12, 18 என்று முழக் கணக்கில் மாலைகளை அணிவித்தல் சிறப்பு. சரவணபவ குகனை வளர்ப்பதற்காக கார்த்திகை பெண்கள் வாயு மூலையில் எழுந்தருளியதே இதன் பின்னால் உள்ள தெய்வீக இரகசியமாகும்.திருபுன்கூர் திருத்தலம்
திருக்கோயில் பிரகாரங்களில் வேம்பு, வில்வம், அரசு போன்ற தெய்வீக விருட்சங்களின் கீழ் எழுந்தருளிய சிவலிங்க மூர்த்திகள் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் அனுகிரகமாக அளிக்கவல்லவர்கள். திருப்புன்கூர் போன்று தலவிருட்சங்கள் நிழலில் எழுந்தருளிய லிங்க மூர்த்திகள் மிகவும் சக்தி பெற்றவர்கள். இம்மூர்த்திகளை மக நட்சத்திர நாட்களில் 12 முறை வலம் வந்து தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானமாக அளித்தால் அகால மரணம் அண்டாது. ஆயுள் பெருகும். உடல் நடுக்கம் அகலும்.ஸ்ரீநந்தி மூர்த்தி, திருப்புன்கூர் திருத்தலம்
“குழந்தையாய் இருந்து பார், கடவுள் உன் கண்ணுக்குத் தெரிவார்,“ என்று அருளினார் குருமங்கள கந்தர்வா. கலியுகத்தில் கடவுளைக் காணும் இந்த எளிய முறையை நடைமுறைப்படுத்தி ஸ்ரீசிவலோக நாதரை தரிசனம் செய்தவரே நந்தனார் ஆவார். இறைவனை தரிசனம் செய்வதற்காக திருப்புன்கூர் திருத்தலத்தை அவர் அடைந்தபோது இறைவனை மறைத்துக் கொண்டு பிரம்மாண்டமான நந்தி மூர்த்தி எழுந்தருளி இருந்ததால், ”மாடு படுத்திருக்கிறதே, இறைவா உன்ன நான் எப்படிக் காண முடியும் ?“ என்று அழுது புலம்பினார் நந்தனார். நந்தியெம்பெருமானை மாடு என்று அழைத்த அந்த மழலை நிலையே அவருக்கு சிவலோக, சிவலோக நாதர் தரிசனத்தைப் பெற்றுத் தந்தது. நந்தனாரின் சிவ தரிசனத்திற்குப் பின் மீண்டும் நந்தியை பழைய இடத்தில் அமரும்படி இறைவன் அழைத்தபோது நந்தியெம்பெருமான், “சுவாமி, தங்களின் சுவாசக் காற்றாக இத்தனை யுகங்கள் இருந்த நான் இன்று முதல் ஒரு உன்னத அடியாரின் சுவாசக் காற்றாகவும் இருக்க விரும்புகிறேன். அதற்கு உங்கள் அனுமதியை வேண்டுகிறேன், ” என்று கூறி சிவலோக ஈசனை பணிந்து நின்றாராம். இறைவன் நந்தியின் பக்தி மிகு வேண்டுகோளுக்கு செவி சாய்த்து நந்னாரின் பக்தியின் பெருமை என்றும் உலகிற்கு சான்றாக இருக்கும் வண்ணம் நந்தி விலகிய நிலையிலேயே இருக்க அனுமதி அளித்தாராம். அன்று முதல் திருப்புன்கூர் நந்தி மூர்த்தி, “அடியார் பிராண நாதன்“ என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார் என்பது சித்தர்கள் கூறும் சுவையான இரகசியம்.மேற்கு கோபுரம், திருபுன்கூர் திருத்தலம்
சிதம்பரம், திருஅண்ணாமலை போன்ற பல திருத்தலங்களில் நான்கு திசைகளிலும் ராஜ கோபுரங்கள் அமைந்திருப்பதுண்டு. இத்தகைய கோபுரங்களில் ஒவ்வொன்றின் வழியாக பிரவேசம் செய்வதால் பலன்கள் மாறுபடும். அவ்வாறு மக்களுக்குத் தேவையான அனுகிரக சக்திகளை அளிப்பதற்காகவே திருஞானசம்பந்த மூர்த்தி முதலான நால்வர் பெருமக்கள் சிதம்பரத்தின் ஒவ்வொரு வாயில் வழியாக உள்ளே சென்று இறைவனைப் பாடி மக்களுக்கு அளப்பரிய அனுகிரகத்தை பெற்றுத் தந்தனர். இவ்வகையில் இங்கே உள்ள வருண கோபுரத்தை 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வழிபடுதலால் அற்புத பலன்களைப் பெறுவார்கள்.ஸ்ரீசிவலோகநாதர், திருப்புன்கூர் திருத்தலம்
ஒரு முறை பிரம்மாவும் விஷ்ணுவும் எம்பெருமானின் அடி முடியைத் தேடி அன்ன பறவையாகவும் வராக மூர்த்தியாகவும் அவதாரம் பெற்றார்கள் அல்லவா ? அந்த இறை லீலைக்கு முன்னரே ஒரு யுகத்தில் பஞ்ச பூத தேவதைகளுக்குள் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட்டபோது, வருண மூர்த்தி தேவர்களை எல்லாம் கேட்க தேவர்கள் தலைவனான இந்திரன் வருண பகவானிடம், “பூலோகத்தில் தவமியற்றும் அகத்தியரை நாடி உன்னுடைய பெருமையைப் பற்றிக் கூறு. அவர் கூறுவதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம், ” என்று வருண பகவானை அகத்தியரிடம் அனுப்பி வைத்தார். தவசீலரை வணங்கிய வருண பகவானை வரவேற்ற அகத்திய பெருமான், ”வருண பகவானே, அடுத்த நூறு சதுர்யுகங்களுக்கு பூலோக ஜீவன்களுக்குத் தேவையான நீரை ஒரு புங்க இலையில் வைத்திருந்தேன். அதை அடியேனுக்குத் தெரியாமல ஒரு எறும்பு அருந்தி விட்டு அதோ தெரிகிறது பார். அந்தப் புற்றில் போய் ஒளிந்து கொண்டு விட்டது. அந்த எறும்பை நீ தேடிக் கண்டு பிடித்து அந்த நீரை மீட்டு விட்டால் நீயே பெரியவன் என்று இந்திரனிடம் சொல்லி விடுகிறேன்,” என்று அகத்தியர் வாக்களித்தார். அகத்தியர் கூறிய வார்த்தைகள் வருணனை வியப்பில் ஆழ்த்தின. ஒரு எறும்புக்கு இவ்வளவு சாமர்த்தியமா என்று வியந்தவாறே அகத்தியர் சுட்டிக் காட்டிய புற்றை நோக்கி நடந்தான் வருணன். அப்போது திடீரென்று தன் மேல் விழுந்த ஒரு மழை வெள்ளத்தால் வருணனே தடுமாறிப் போய் கீழே விழுந்து விட்டான். அங்கு வந்த அகத்தியர் அவனைப் பார்த்து, “என்ன வருண பகவானே, ஒரு எறும்பு துப்பிய தாம்பூல எச்சிலுக்கே மயக்கம் போட்டு விழுந்து விட்டாயே ?” என்று கேட்டு நகைத்தார். அகத்தியர் தொடர்ந்து, “உன்னிடம் காட்டிய அந்த புற்றிலுள்ள இறைவனுக்கு சேவை செய்யும் எறும்பு ஒன்றுதான் தன்னுடைய தாம்பூல எச்சிலை உன் மேல் துப்பியது,” என்று விவரிக்கவே தன்னிலை அடைந்தான் வருண பகவான். எறும்பின் தாம்பூல பிரசாதத்தால் வருணனின் கர்வமும் நீங்கியது. அத்தலத்தில் இறைவனுக்கு கோபுரம் கட்டி பல யுகங்கள் இறைவனை வேண்டி நற்கதி அடைந்தான் வருண பகவான். அந்த புற்றுதான் இன்றைய ஸ்ரீசிவலோக நாத சிவ லிங்க மூர்த்தி !!ஸ்ரீபிட்சாடன மூர்த்தி திருபாற்றுறை
காலையில் எழுந்தவுடன் வலது உள்ளங்கையில் ஒரு ரூபாய் எடையுள்ள தேங்காய் எண்ணெய் அல்லது மூலிகை தைலத்தை வைத்து உச்சந்தலையில் அழுத்தித் தேய்த்து குளித்து வருதலால் கபாலத்தில் உள்ள மூளைச் செல்கள் விருத்தியாகும். அறிவைப் பெருக்கவல்ல யோகம் இது ஒன்றே. இது மூலாதார சூட்டையும் தணிக்கும். தேங்காயில் உள்ள வெண்மையும் குண்டலினி யோக ஒளி கிரணங்களும் ஒரே சக்தியை மூலமாகக் கொண்டவை என்பது சித்த இரகசியமாகும்.நவகிரகங்கள், திருபாற்றுரை திருத்தலம்
நவகிரகங்கள் என்றால் ஒன்பது கிரகங்கள் என்பது ஒரு பொருள். நம் மூளைச் செல்களுக்கு புதுவிதமான வளர்ச்சியை அளிக்கக் கூடியவையும் நவகிரகங்களே. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாருடைய கோளறு பதிகத்தில் அமைந்துள்ள, “ஒன்பது ஒன்று ஏழு பதினெட்டு ஆறு“ என்ற பதங்கள் இவ்வாறு மூளைச் செல்களின் வளர்ச்சியைக் குறிக்கும் பரிபாஷைச் சொற்களே. பஞ்ச தீபங்களை நவகிரகங்களின் நான்கு திசைகளில் ஏற்றி வழிபடுதல் குழந்தைகளின் அறிவைப் பெருக்கும் எளிய வழிபாடாகும்.ஸ்ரீசூரிய பகவான், திருப்பாற்றுறை
இறை மூர்த்திகளின் வலது கண் சூரிய சக்தியையும் இடது கண் சந்திர சக்தியையும் குறிப்பதாக கூறுகிறோம். இவ்வாறு இறை மூர்த்திகளின் வலது கண்ணில் அமரும் பாக்கியத்தை சூரிய பகவான் பெற்ற திருத்தலமே திருப்பாற்றுறை ஆகும். இறை சக்தியே இரண்டாக பிரிந்து சூரிய சக்தியாகவும் சந்திர சச்தியாகவும் இலங்குவதால் காவிரி நதியே பொன்னி நதியாகவும் வடகாவிரியாகவும் திகழும் சங்கமத்தில்தான் சூரியன் இந்த அனுகிரகத்தைப் பெற வேண்டும் என்ற திருவிளையாடலை நிகழ்த்திய ஈசன்தான் திருப்பாற்றுறை ஸ்ரீஆதிமூல நாதர் ஆவார். புதிய வேலைகள், வியாபாரம், படிப்பு, விவசாயம் போன்று புதிதாக எதையும் தொடங்கும் முன் இத்தல சூரிய மூர்த்தியை வழிபட்டு காரியங்களை ஆரம்பித்தல் சிறப்பாகும்.ஸ்ரீவருணபாச லிங்கம், திருபாற்றுரை திருத்தலம்
மக்கள் அனைவரும் பாலில் உள்ள அமிர்த சக்திகளை முறையாகப் பெற பாலமுத பசுந்துறை அபிஷேக முறையை ஸ்ரீமார்கண்டேய மகரிஷிக்கு அருளிய லிங்க மூர்த்தியே ஸ்ரீவருணபாச லிங்க மூர்த்தி ஆவார். சனிக் கிழமைகளில் சாம்பிராணி தைலக் காப்பிட்டு இம்மூர்த்தியை வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும். எள் கலந்த முறுக்கு, கார சீடை தானம் சிறப்பு.திருப்பாற்றுறை திருத்தலம்
திருப்பாற்றுரை திருத்தல அர்த்த மண்டபத்தில் உள்ள நான்கு தூண்களும் நான்கு வேதங்களின் நிரூபணமாக விளங்கும் வேத சாட்சி தூண்களாகும். சதா சர்வ காலமும் வேத பீஜாட்சரங்களை ஒலித்துக் கொண்டிருப்பவையே இந்த தூண்களாகும். எந்த வித லௌகீக எதிர்பார்ப்பும் இன்றி நிறைந்த ஒழுக்கமுடையவர்கள் இந்த அர்த்த மண்டபத்தில் அமர்ந்து 60 நாழிகை வேதம் ஓதினால், சிறப்பாக யஜூர், சாம வேத மந்திரங்களை ஓதுவதால் அவை மீண்டும் 60 நாழிகைக்கு அனைவரும் கேட்கும் வண்ணம் பிரதித்வனிக்கும் என்பது இன்றும் நாம் உணரக் கூடிய அதிசயமாகும். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார், “காரார் கொன்றை ... ” என்ற யஜூர் வேத பீஜாட்சர சக்திகள் அமைந்த பதிகத்தை ஒரு நாழிகை நேரத்திற்கு இத்திருத்தலத்தில் பாடினார். அப்போது இந்த வேத கீத தூண்கள் தொடர்ந்து 24 நாழிகை நேரத்திற்கு அந்த வேத கீதத்தை கிராமத்து மக்கள் அனைவருமே கேட்கும் அளவிற்கு வீணை நாதமாக பிரதித்வனி செய்தன என்றால் இந்த தூண்கள் நான்கு வேதத்திற்கு இன்றும் நிரூபணமாக நிற்பதில் வியப்பில்லையே.ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தி திருப்பாற்றுரை
மலயமாருத ராகம் எழுச்சியும் புத்துணர்ச்சியும் அளிப்பது. காலையில் சூரிய உதயத்திற்குப் பின் இறை மூர்த்திகளுக்கு வாசிக்கப்படுவது. இத்திருத்தலத்தில் தோன்றிய பொய்கை ஆழ்வார் சூரிய பகவானின் அனுகிரகத்தால் தினமும் மலயமாருத கீர்த்தனைகளை ஸ்ரீஆதிமூல நாதருக்கு கீதாஞ்சலியாக அர்ப்பணிக்கிறார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும். இளைஞர்களும், படித்த பட்டதாரிகளும் மலயமாருத கீர்த்தனைகளை, சிறப்பாக வீணை கச்சேரியாக இத்தலத்தில் நிறைவேற்றுதலால் அற்புத பலன் பெறுவார்கள்.ஸ்ரீநர்த்தன கணபதி திருப்பாற்றுறை
காலையில் எழுந்தவுடன் வலது காலை முன் வைத்து கிழக்கு நோக்கி முதல் மூன்று அடிகளை வைப்பதால் அன்றைய பொழுது நல்லபடியாக அமையும் என்பது சித்தர்கள் வாக்கு. ஆனால் இங்கு காணும் ஸ்ரீநர்த்தன கணபதியைப் போன்ற மூர்த்திகளின் ஒரு அடியே நாம் வாழ்வில் இவ்வாறு நிறைவேற்ற வேண்டிய எத்தனையோ நற்காரிய சித்திக்கான வழிபாடுகளுக்கு பிராயசித்தமாக அமைகின்றது. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய இடர்களையும் பதிகத்தை ஓதி ஸ்ரீநர்த்தன கணபதி முன் குறைந்தது 12 தோப்புக் கரணங்கள் இட்டு வழிபட்டு வருதலால் எதிலும் வெற்றி எங்கும் வெற்றி என்ற நிலையை எளிதில் பெறலாம் என்பது உறுதி. வலது காலை முன் வைத்து இங்கு ஸ்ரீநர்த்தன கணபதி அருளும் கோலம் ஆதித்ய சிங்கார நர்த்தன கோலம் எனப்படும்.ஸ்ரீதட்சிணா மூர்த்தி, திருபாற்றுரை திருத்தலம்
பொதுவாக இரு தட்சிணா மூர்த்திகள் அருளும் திருத்தலங்களில் அமர்ந்த நிலை தட்சிணா மூர்த்தி ஞானத்தையும் நுண் அறிவையும் அளிக்கும் வரபிரசாதியாக துலங்குகிறார். ஜோதிடம், கணிதம், அணுவிஞ்ஞானம், கம்ப்யூட்டர் போன்ற துறைகளுக்குத் தேவையான நுணுக்கமான அறிவைத் தரக் கூடிய தட்சிணா மூர்த்தியே அமர்ந்த நிலை மூர்த்தி ஆவார். ஒன்றரை அடி அகலம், இரண்டடி நீளமுள்ள மா, பலா, தேக்கு பலகையால் ஆன மரஆசனங்களை படிக்கும் மாணவர்களுக்கும் வேதம் ஓதுபவர்களுக்கும் தானமாக அளிப்பதால் உயர்கல்வி மாணவர்கள் உன்னத நிலை அடைவர்.கொன்றை மரம், திருப்பத்தூர்
காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கொன்றை மரத்திற்கு முன் அமர்ந்து திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய, “வேற்றாகி விண்ணாகி ...“ என்ற பாடலை ஓதிக் கொண்டே இருந்து சூரிய உதய சமயத்தில் சூரிய கதிர்கள் கொன்றை மலர்களின் மேல் படுவதை தரிசனம் செய்து வந்தால் அற்புத யோக சக்திகள் மலரும். இவ்வாறு ஒரு நாள் பெறும் யோக சக்தியே ஒரு வருட பிராணாயாமத்திற்கு ஈடான பலன்களை அருள வல்லது.திருப்பத்தூர் திருத்தலம்
செவ்வாய்க் கிழமை காலை சூரிய ஹோரை நேரம் முழுவதும் அதாவது 7 முதல் 8 வரை இத்தல கொன்றை மரத்தை வலம் வந்து வணங்குதலால் தோல் வியாதிகள் எளிய முறையில் நிவாரணம் பெறும். மாணவர்களுக்கு ஆரஞ்சு பழரச தானம் சிறப்பு. செயற்கை பழரசங்களைத் தவிர்க்கவும்.

 

திருத்தல யாத்திரை தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam