கோடி கொடுத்தாவது தேடிப் பெறுங்கள் கொன்றை வேந்தனை !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
ஸ்ரீதளி நாதர், திருப்பத்தூர்
தளி என்றால் உறையும் இடம் என்று பொருள். இந்த பிரபஞ்சத்தில் உள்ள வேத சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து உறைந்துள்ள திருத்தலமே திருப்பத்தூர் ஆகும். செல்வங்களின் சங்கமம் திருத்தளி. மங்களங்களின் திரட்சியே ஸ்ரீதிருத்தளி நாதர் ஆவார். இத்திருத்தலத்தில் மலரும் ஒரு கொன்றை மலரில் உள்ள வேத சக்தியை ஐம்பது அண்டங்களுக்கு அளித்து விடலாம் என்றால் இத்தலத்தில் வேத சக்திகளின் வியாபகத்தை என்னென்று புகழ்வது ?ஸ்ரீதட்சிணா மூர்த்தி, திருப்பத்தூர் திருத்தலம்
ஒவ்வொரு கிரகத்தின் பாதத்திலும் மூன்று நட்சத்திரங்கள் என்ற கணக்கில் 27 நட்சத்திர தேவதைகளுமே ஒன்பது கிரகங்களில் பாத சஞ்சாரம் கொள்கின்றன. இவ்வாறு நட்சத்திர தேவதைகள் அனைத்தும் தினந்தோறும் வணங்கும் மூர்த்தியாக இத்தல தட்சிணா மூர்த்தி அருள்பாலிப்பதால் இத்தல தட்சிணா மூர்த்தி வழிபாடு கிரகங்களின் எத்தகைய பிரதிகூல தசா, புத்தி, அந்தரங்க துன்பங்களையும் களையக் கூடியதாக அமைந்துள்ளது கலியுக மக்களின் பெரும்பாக்கியமே. பௌர்ணமி, அமாவாசை, மாதப் பிறப்பு தினங்களில் சித்தர்கள் அளித்துள்ள நட்சத்திர துதியை இத்தலத்தில் ஓதி பாதாம்பருப்பு கலந்த பால் தானம் அளித்து வந்தால் கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் அனைத்து துன்பங்களும் விலகும்.ஹரநந்தன தீர்த்தம், திருப்புன்கூர்
திருப்புன்கூர் திருத்தலத்தில் முன்புறம் கிழக்கு கோபுர வாயிலுக்கு இடப்பறம் உள்ள தீர்த்தமே ஹரநந்தன தீர்த்தமாகும். பலரும் தர்ப்பணம், பித்ரு ஹோமம், திவசம் போன்ற மூதாதையர்களுக்கான வழிபாடுகளை பலல்லாண்டுகளாக நிறைவேற்றாமல் போவதால் பித்ரு சாபங்களும், தோஷங்களும் மலை போல் குவிந்து விடுகின்றன. இத்தகைய நாட்பட்ட பித்ரு தோஷங்களை களைய வல்லதே திருப்புன்கூர் ஹரநந்தன தீர்த்தமாகும். தர்ப்பணத்தைப் பற்றி எதுவுமே அறியாதோரும் இத்தீர்த்தத்தில் நீராடி அல்லது குளத் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு குளக் கரையில் இருந்து ஸ்ரீசிவலோக நாதரை சாஷ்டாங்கமாக 12 முறை தரையில் விழுந்து வணங்கி இயன்ற அளவு நாரத்தை ஊறுகாய் சேர்த்து தயிர் சாதம் அன்னதானம் அளித்தலால் எத்தகைய பித்ரு தோஷங்களும் அற்புதமாக நிவாரணம் பெறும். பக்தி நிறைந்த நந்தனார் இத்திருக்குளக் கரையில் இருந்துதான் ஸ்ரீசிவலோக நாதரின் தரிசனத்தைப் பெற்றார். பாக்கியம் உள்ளவர்கள் இன்றும் நந்தனார் தன் புனித பாதங்களைப் பதித்த அதே இடத்தில் தங்கள் பாதங்களையும் பதித்து இறைவனை தரிசிக்கும் வாய்ப்பு பெறலாம். நந்தனாரின் திருப்பாதங்கள் பட்ட இடத்தில்தான் தங்கள் பாதங்களும் பதிந்துள்ளன என்பதை அடியார்கள் எப்படித் தெரிந்து கொள்வது ? இந்த இரகசியத்தை கலியுக மக்களுக்கு அறிவிக்கிறார் ஸ்ரீகுருமங்கள கந்தர்வா அவர்கள். நீங்கள் தரிசனம் செய்யும்போது உங்கள் தலைக்கு மேல் கருடன் உங்களை வலம் வருவதைப் பார்த்தால் நீங்கள் சரியாக நந்தனாரின் புனிதப் பாதங்கள் பட்ட இடத்தில்தான் உங்கள் பாதங்களையும் வைத்து ஸ்ரீசிவலோக நாதரை தரிசனம் செய்கிறீர்கள் என்று பொருளாகும். இதே போல ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடற்கரை மணல் பரப்பிலும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருப்பாதங்கள் பட்ட புனித இடத்தில் பக்தர்களின் பாதம் படும் பாக்கியம் கிட்டும் வாய்ப்பு உள்ளது அல்லவா ? மேற்கூறியது போல அடியார்கள் அவ்வாறு கடற்கரை மணலில் நின்று கொண்டு இறைவனை தரிசனம் செய்யும்போது அவர்கள் தலைக்கு மேல் கருடன் வலம் வருவதைப் பார்க்க முடிந்தால் அவர்கள் நிச்சயமாக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருப்பாதங்கள் பட்ட இடத்தில்தான் நின்று கொண்டு தரிசனம் செய்கிறார்கள் என்று பொருள். காரணம் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருப்பாதங்களைத் தீண்டி யார் ஒருவர் இறை தரிசனம் பெறுகிறாரோ அவரை ஸ்ரீராமச்சசந்திர மூர்த்தியாகவே பாவித்து அவர்களை வலம் வந்து தரிசனம் செய்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறாராம் கருடாழ்வார். தனுஷ்கோடிக்கு கோவாணாண்டிப் பெரியவருடன் வந்த சிறுவன் வெங்கடராமனுக்கு இந்த அற்புதத்தை காண்பித்து மேற்கண்ட ரகசியத்தை வெளியிட்டாராம் கோவாணாண்டிப் பெரியவர். அப்போது அவர்கள் தலைக்கு மேல் இரண்டு கருடாழ்வார் மூர்த்திகள் இணைந்து வலம் வந்தனராம்.
அவை இரண்டு மூர்த்திகளா, இல்லை இரண்டு மூர்த்திகளுக்கா ?கொன்றை மரம், திருப்பத்தூர் திருத்தலம்
ஒவ்வொரு மரத்தின் நிழலுக்கும் ஒவ்வொரு தெய்வீகத் தன்மை உண்டு. இவ்வகையில் கொன்ற மரத்தின் நிழலை வேத சக்திகளின் பிரதிபிம்பமாக வர்ணிக்கிறார்கள் சித்தர்கள். ஆம், நீங்கள் ஒரு கொன்றை மரத்தை தரிசனம் செய்யும்போது ஓங்கார சக்திகளை மட்டும் தரிசனம் செய்வதில்லை, அனைத்து வேதங்களின் பிரதிபிம்பத்தையே தரிசனம் செய்கின்றீர்கள் என்றால் இதைவிட சிறப்பாக இறைவனின் கருணைக்கு எதைச் சான்றாகக் காட்ட முடியும். இந்த வேத பிம்ப சக்திகளை முழுமையாக உணர்ந்தவர்கள் சித்தர்கள் மாத்திரமே. அதனால்தான் அகத்திய முனிவரை நாடி வந்த வால்மீகி முனிவருக்கு, “ஒன்றை சிவனுக்குச் சூட்டு, அது கொன்றையாக இருக்கட்டும்,” என்று கொன்றை மரத்தின் ஓங்கார வேத சக்திகளை அம்முனிவருக்கு உணர்த்தி அவர் திருப்பத்தூர் கொன்றை மரத்தின் அடியில் பல யுகங்கள் தவமியற்றி அற்புத வேத சக்திகளை தபோ பலனாக பெற அருள் வழி காட்டினார். வேத சக்தியால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதை சாதித்துக் காட்டியவரே வால்மீகி முனிவர். திருப்பத்தூர் கொன்றை மர நிழலில் பெற்ற தளிவேத சக்தியால்தான் லவகுசர்கள் விடுத்த அஸ்திரங்களால் மறைந்த ஸ்ரீராமரையே மீண்டும் உயிர்ப்பித்து இவ்வுலகிற்கு அளித்து ராமராஜ்யத்தை புனருத்தாரணம் செய்தார் வால்மீகி. ஒப்பற்ற ஒரு விஷ்ணு அவதாரத்தையே மீண்டும் உருவாக்கி பெரும் புகழ் பெற்றார். ஆம், சீதைக்கு பிறந்த லவனைப்போலவே மீண்டும் ஒரு ஸ்ரீராம பிரதிபலிப்பு என்ற குசனை உருவாக்கியவர் வால்மீகி முனிவர்தானே.
இவ்வாறு கொன்றை நிழல் கோடி சாதிக்கும்.ஆச்சாள்புரம் திருத்தலம், சிதம்பரம் அருகே
ஸ்ரீராமர் உண்மையிலேயே வாலியை வெல்லும் அளவிற்கு புஜ பலம் உடையவரா என்று ஸ்ரீராமருடைய வீரத்தின் மேல் சற்றே ஐயம் கொண்டான் சுக்ரீவன். அப்போது ஸ்ரீராமர் அங்கிருந்த ஏழு ஆச்சா மரங்களை ஒரே பாணத்தால் கண்ணிமைக்கும் நேரத்தில் துளையிட்டு தன்னுடைய வீரத்தை நிரூபித்தார் என்ற ராமாயண நிகழ்ச்சி நாம் அறிந்ததே. ஆனால், இதன் பின்னணியில் அமைந்த தெய்வீக இரகசியத்தை சித்தர்கள் மட்டுமே அறிவர். தேவையில்லாமல் ஒரு துரும்பைக் கிள்ளினாலே பாவம் என்று கூறுகிறது மனு தர்மம். அவ்வாறிருக்க தன்னுடைய திறமையைக் காட்டுவதற்காக ஏழு மரங்களை ராமர் தன்னுடைய ராம பாணத்தால் துளையிடுவாரா ? என்னதான் தனுர் வித்தையில் கெட்டிக்காரராக ஒருவர் இருந்தாலும் ஒரு ஆச்சா மரத்தைக் கூட அவர்கள் பாணத்தால் துளையிட முடியாது. காரணம் அதற்கு மூன்று முக்கியமான தகுதிகள் தேவை. எவர் ஒருவர் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று உண்மையாக வாழ்கிறாரோ, பிறர் மனைவியை மனதாலும் தீண்டாத ஏக பத்னி விரதத்தை காக்கிறாரோ, தன்னுடைய நாட்டு மக்களை தன்னுடைய உயிரினும் மேலாக மதித்து அவர்களுக்காக தன்னுடைய உயிர், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து வாழ்கிறாரோ அவர் மட்டுமே ஆச்சா மரத்தை அம்பால், அஸ்திரத்தால், பாணத்தால் துளைக்க முடியும் என்பது தனுர் சாஸ்திர விதி. இந்த சாஸ்திர நியதிகளை முழுமையாகப் பெற்ற ஒரே அவதார மூர்த்தி ராமர் மட்டுமே.
இப்பிரபஞ்சத்தில் எழும் அனைத்து சப்தங்களையும் ஏழு ஸ்வரங்களில் லயம் கொள்ளச் செய்து விடலாம். இவ்வாறு ஸ்வர சக்திகள் தவறாக பிரயோகம் செய்யப்பட்டபோது அவர்கள் இறைவனை வேண்டி ஆச்சாள்புர திருத்தலத்தில் தவமியற்றி தங்கள் வேதனைக்கு விமோசம் அளிக்கும்படி கேட்டபோது இறைவன் அவர்களை ஸ்ரீராமர் ஆச்சா மரத்தை துளைக்கும்போது அதில் ஆவாஹணம் பெற்றால் அவர்களுடைய வேதனைக்கு தீர்வு கிட்டும் என்று அருளினான். இவ்வாறு ஆச்சா மர வேள்வியில் புனிதம் பெற்றவையே சப்த ஸ்வர தேவதைகள். ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியின் ராம பாணம் ஒருவர் உயிரை மாய்ப்பதற்கு மட்டும்தான் பயன்படும் என்று நினைப்பது மக்களின் அறியாமையே. அது மட்டுமல்ல, ஒவ்வொரு முறை ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி ராம பாணத்தை பிரயோகம் செய்யும்போதும் ராம பாணம் தன்னுடைய பணியை நிறைவேற்றிய பின்னர் நேரே கங்கையில் நீராடி மீண்டும் ராமபிரானின் அம்பாரத் துணியில் வந்து சேர்ந்து விடும். இதனால் ராம காணத்தால் இறந்தவருக்கும் நற்கதி கிடைக்கும். இவ்வாறு ஏழு ஆச்சா மரங்களைத் துளைத்த ராம பாணம் கங்கையில் நீராடியபோது அத்தருணம் வரை கங்கையில் நீராடியவர்கள் அதில் கழித்த பாவங்களை எல்லாம் சப்த ஸ்வர தேவதைகளின் ஆசி பஸ்மம் செய்து கங்கைக்கும் புனிதம் சேர்த்ததாம். இவ்வாறு ராமச்சந்திர மூர்த்தியின் ஒவ்வொரு விரல் அசைவிலும் கோடி கோடி புனித வைபவங்கள் அரங்கேறின. மேலும் சப்தபதி என்னும் திருமண வைபவத்தின்போது தம்பதிகளுக்கு ஆசீர்வாத சக்திகளை அளிப்பவையே இந்த சப்தஸ்வர தேவதைகள் ஆகும். திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் தோத்திர பூர்ணாம்பிகையுடன் வேள்வி குண்டத்தை வலம் வந்து சப்தபதியை பூர்ணம் செய்துதான் திருக்கைலை அடைந்தார். அப்போது சப்தஸ்வர தேவதைகள் மீண்டும் தங்கள் புனிதத்திற்கு புனிதம் சேர்த்துக் கொண்டன. இவ்வாறு சாஸ்திர சம்பிரதாயத்துடன் சப்தபதி போன்ற சடங்குகளை தம்பதிகள் தற்காலத்தில் நிறைவேற்ற முடியாவிட்டாலும் அவர்கள் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய, “மந்திரமாவது நீறு ...” என்ற திருநீற்றுப் பதிகத்தையாவது ஓதி திருமண வைபவங்களை நிகழ்த்துவதால் அனைத்து தெய்வ மூர்த்திகளின் அருட்கடாட்சத்தையும் ஒருங்கே எளிதில் பெற்று விடலாம்.ஸ்ரீகஜேந்திர மூர்த்தி, திருப்பத்தூர்
திருத்தலங்களில் நாம் இறைவனுக்கு ஆறு காலங்களிலும் அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றி தூபம், தீபம், நைவேத்யம் போன்ற உபசாரங்களால் இறைவனை மகிழ்விக்கின்றோம். மற்ற சமயங்களில் அர்ச்சனை, தேவார திருவாசக கீர்த்தனைகள், அங்க பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளையும் மேற்கொள்கிறோம். ஆனால், இறைவனுக்கு எவ்வித வழிபாடுகளையும் எவருமே நிறைவேற்றாமல் இருக்கும் கால இடைவெளியும் இருக்கும் அல்லவா ? ஆனால், இறைமூர்த்திகளைப் பொறுத்தவரையில் அவ்வாறு எவ்வித வழிபாடுகளும் வெளிப்படையாக நிகழாவிட்டாலும் கூட அவர்கள் திகம்பர விநோத யோகம் என்ற தெய்வீக யோகத்தில் நிலை கொண்டு அதனால் உருவாகும் தெய்வீக அனுகிரக சக்திகளை அடியார்களுக்கு வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். இதுவே இறை மூர்த்திகளின் தனிப் பெருங் கருணை ஆகும். கொடி மரங்கள், தல விருட்சங்கள், கோயில் தீர்த்தங்கள் மூலமாக இத்தகைய சக்திகள் மக்களுக்கு அனுகிரகமாக அளிக்கப்படுகின்றன. இத்தகைய திருப்பணியில் பெரும் பங்கு வகிப்பவையே திருத்தலங்களில் உலா வரும் கஜேந்திர மூர்த்திகள் என்பது நாம் இதுவரை அறியாத தேவ இரகசியம் ஆகும். குறிப்பாக மூல மூர்த்தி அளிக்கும் தீர்க விநோத யோக சக்திகளை யானைகள் தங்கள் வலது காதுகள் மூலமாகவும், அம்பிகை மூர்த்திகள் வழங்கும் கட்க விநோத யோக சக்திகளை யானைகள் தங்கள் இடது காது மூலமாகவும், சண்டேஸ்வர மூர்த்தி அருளும் சுரபி விநோத யோக சக்திகளை தங்கள் துதிக்கை மூலமாகவும், கால பைரவ மூர்த்தி வழங்கும் அஞ்சன விநோத யோக சக்திகளை தங்கள் வால் மூலமாகவும் யானைகள் ஈர்த்து பக்தர்களுக்கெல்லாம் அளிக்கின்றன. யானைகள் சதா சர்வ காலமும் தங்கள் செவிகள், துதிக்கை, வால் இவற்றை அசைத்துக் கொண்டிருப்பற்கு இந்த யோக விதானமே காரணம் ஆகும். திருத்தலங்களில் உள்ள ஒரு கஜேந்திர மூர்த்தி ஒரு முறை தன் செவிகளை அசைத்து அளிக்கும் தீர்க, கட்க விநோத யோக சக்திகளை ஒரு மனிதன் ஒரு வருடம் முழுவதும் ஓதும் சாம கானத்தால் கூட நிறைவு செய்ய முடியாது என்பது இந்த யோக சக்திகளின் அதிசயம். அது மட்டுமல்லாமல் இந்த வேத சேவையை ஒரு விநாடி கூட கஜேந்திர மூர்த்திகள் நிறுத்துவது கிடையாது. எப்போது இந்த யோகத்தை நிறைவேற்ற முடியாத நிலையை திருத்தல யானைகள் அடைகின்றனவோ அப்போது அவைகளின் உயிர் பிரிந்து விடும். இத்தகைய இச்சா ம்ருத்யு சக்தி பெற்றவர்களே திருத்தல கஜேந்திர மூர்த்திகள். இதைத்தான் மக்கள் அறியாமையால் யானையின் காதிற்குள் எறும்பு நுழைந்து காது அசைவது நின்று விட்டால் யானை இறந்து விடும் என்று தவறாக கருதுகிறார்கள்.
யானைகளின் தரிசனமே பூர்ணமான இறை தரிசனமாகவும் சித்தர்களால் புகழப்படுகிறது. யானையின் முக தரிசனம் கணபதியின் தரிசனமாகவும், வால் தரிசனம் ஆஞ்சநேய மூர்த்தியின் தரிசனமாகவும் அமைவதால் இது பூரணமான தரிசனம்தானே. இத்துடன் அற்புத நவகிரக அனுபூதிகளும் இணைந்துள்ளன. யானையின் தந்தம் சூரிய சக்திகளை அளிக்க வல்லது. யானையின் மத்தகம் என்னும் நெற்றிப் பகுதி புத பகவானின் கூரிய மதியை அளிக்கக் கூடியது. அதனால்தான் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே யானையின் மத்தகப் பகுதியில் அமர வைத்து அவர்களின் அறிவையும் ஒழுக்கத்தையும் வளர்க்கும் சிறந்த பழக்கம் நாம் பாரத நாட்டில் தொன்று தொட்டு நிலவி வருகிறது. யானையின் கால் நகங்கள் சந்திர சக்தியுடன் திகழ்பவை. பசுஞ் சாணத்தால் செய்த விபூதியால் யானையின் நகங்களை தூய்மை செய்து வந்தால் புத்தி மந்தமான குழந்தைகள் நல்ல அறிவுடன் பிரகாசிக்கும். யானைகளின் நின்ற நிலையில் இது எதிர்பாராத துன்பங்களை விளைவிக்கும் என்று தயங்குபவர்கள் யானை சயனக் கோலத்தில் படுத்திருக்கும்போது இத்தகைய வழிபாட்டை நிறைவேற்றலாம். யானையின் வாலில் உள்ள ரோம தரிசனம் சனீஸ்வரபகவானின் அனுகிரகத்தை தரவல்லதாகும். எக்காரணம் முன்னிட்டும் யானையின் வால் முடியை வெட்டி வியாபார நோக்கில் பயன்படுத்தக் கூடாது. தெரிந்தோ தெரியாமலோ இவ்வாறு யானை முடியை விற்றவர்கள் இறுதி காலத்தில் யாருடைய ஆதரவும் இன்றி வேதனை அடைவதை மேற்பார்வை இடுவதையே தன்னுடைய பொறுப்பாக ஏற்றுக் கொண்டுள்ளார் சனீஸ்வர பகவான் என்பதை அனைவரும் நன்றாக நினைவில் கொள்ளுங்கள். யானையின் ஈருரி அதாவது இரண்டு தோல்களை எம்பெருமான் போர்த்தி அருளினார் அல்லவா ? நாம் காணும் யானைத் தோல் தூல தோற்றமாகும். யானையின் சூட்சும தோலானது நாம் காணும் தோலிற்கு மேல் சுமார் மூன்று அங்குல உயரத்திற்கு இருப்பது, கணணுக்குத் தெரியாதது. திருத்தலங்களில் உள்ள யானைகளுக்கு இந்த சூட்சம தோலின் பரிமாணம் இன்னும் அதிகமாகவும் இருக்கும். குழந்தைகளை யானையின் மேல் அமர வைப்பதால் இந்த சூட்சும தோலின் அனுகிரகம் அவர்களுக்கு நிரந்தர புத்திக் கூர்மையை அளிக்கிறது. யானையின் நான்கு கால்களின் தரிசனம் பிரஹஸ்பதியின் அனுகிரகத்தைத் தரும். காரணம் நான்கு கால்களும் நான்கு தூண்களாய் அமைய அவற்றின் இடையே உள்ள வடிவம் பிரஹஸ்பதி லோகத்தை குறிப்பதாகிறது. இந்த நான்கு வேத ஸ்தம்பங்களிடையே எப்போதும் வேத பீஜாட்சரங்கள் முழங்கிக் கொண்டே இருக்கும். யானைகள் குட்டியாய் இருக்கும்போது தங்கள் தாயின் கால்களின் குறுக்கே புகுந்து புகுந்து வருவதை பார்த்திருப்பீர்கள். பார்ப்பதற்கு இது மழலை விளையாட்டாகத் தோன்றினாலும் இந்த வேத ஸ்தம்பன யோகத்தை சிறு வயதிலேயே தொட்டுக் காட்டும் வித்தையாக யானைகள் பயிலுகின்றன என்பதே உண்மையாகும்.
யானைகள் மட்டுமல்லாது இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுமே பூலோகத்தில் நடக்கும் நற்காரியங்களில் பங்கேற்று தங்களால் முடிந்த வேத சக்திகளை ஆசிர்வாதமாக அளிக்கின்றன என்பதை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் பறவைகளைப் பற்றிய ஒலிப் பதிப்பில் ஒரு குயில் தேவதை தன்னுடைய ஆசிர்வாதத்தை அளிக்கும் அதிசயத்தை கேட்டு மகிழுங்கள்.

ஸ்ரீவிஷ்ணுமூர்த்தி, திருப்பத்தூர்
பொதுவாக இறை மூர்த்திகள், மகான்களின உருவங்களை முழுமையாக வைத்து வழிபடுதல் சிறப்பு. அப்போதுதான் அவர்களின் ஆசீர்வாத சக்திகளை முழுமையாகப் பெற முடியும். அதே போல தேவார, திருவாசகபதிகங்களை ஓதும்போதும் ஒரு பதிகத்தில் உள்ள பத்து அல்லது 11 பாடல்களையும் ஓதினால்தான் அந்த பாடல்களின் பலனை முழுமையாகப் பெற முடியும். ஆனால், சில சமயங்களில் இறை மூர்த்திகளும் தங்கள் முகத்தை மட்டுமே காட்சியாக அளிப்பதுண்டு. நாமும் வரலட்சுமி விரதம் போன்ற வழிபாடுகளில் தேவியின் முகத்தை மட்டும் வைத்து வழிபடுகின்றோம். இதன் பின்னால் உள்ள தாத்பர்யங்களுள் ஒன்றே நாம் நட்சத்திரங்களை முறையாக வழிபடாததுதான். நட்சத்திரங்களில் தலையில்லா, வாலில்லா, உடலில்லா நட்சத்திரங்கள், முழு நட்சத்திரங்கள் என்ற பாகுபாடு உண்டு. மனை கோலுதல், சீமந்தம், தம்பதிகளின் சங்கமம் போன்ற வைபவங்களை கண்டிப்பாக முழு நட்சத்திர நாட்களில்தான் நிறைவேற்ற வேண்டும். இந்த நட்சத்திர குணப்பாடை முறையாக பயன்படுத்தாமையால் ஏற்படும் தோஷங்களை ஓரளவு களைவதற்காகவே இத்தகைய இறை மூர்த்திகளின் அங்க வழிபாடு நமக்கு உறுதுணையாக அமைகிறது. உங்கள் வலது கையில் உள்ள மூன்று விரல்களில் உள்ள அங்குலாஸ்திதிகளை வலது கட்டை விரலால் வரிசையாக 27 நட்சத்திரங்களை எண்ணினால் சுண்டு விரல் கடைசி அங்குலாஸ்திதியில் அமைபவை தலையில்லா நட்சத்திரங்கள், மோதிர விரலின் இரண்டாம் அங்குலாஸ்திதியில் அமைபவை உடலில்லா நட்சத்திரங்கள், நடுவிரலின் முதல் அங்குலாஸ்திதியில் அமைபவை வாலில்லா நட்சத்திரங்கள். இந்த நட்சத்திர குணத்தை அறியாமல் விளையும் சங்கமங்களினால்தான் குறைப் பிரசவங்களும், பிறந்த குழந்தைகளுக்கு உறுப்புகள் பலவீனமாகவும், உறுப்புகளே இல்லாமல் பிறக்கும் நிலையும் உருவாகின்றன. எனவே தம்பதிகள் இவ்விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
லட்சுமி தேவி மக்கள் அனைவரும் இவ்வாறு உத்தம சந்தான பாக்கியங்களுடன் திகழ வேண்டும் என்பதற்காக ஸ்ரீவரலட்சுமி விரதத்தை பெற்றுத் தந்த இடமே திருப்பத்தூர் திருத்தலமாகும். லட்சுமி தேவி இவ்வாறு சந்தான வர சக்திகளை பெறுவதற்காக இத்தல இறைவனை சரணடைந்தபோது, “தாயே, நீ பதி போற்றும் பதிவிரதை என்ற பெயர் எடுத்தாலே போதும் உனக்கு வேண்டிய அனைத்து லட்சுமி கடாட்ச சக்திகளும் தானே வந்து மலரும்,“ என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஈசனின் ஆணையை சிரமேல் ஏற்று தன் கணவனுக்கு சேவை செய்வதையே உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்த லட்சுமி தேவியின் சேவையால் மகிழ்ந்த ஈசன் லட்சுமி தேவிக்கு மூன்று தளி சக்திகளைப் பரிசாக அளித்தானாம். கருணை வள்ளல் அல்லவா நம்மீசன் !! மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற முக்கூட்டு பெருமைகளுமே இத்தலத்தில் தளி அதாவது ஸ்ரீ என்ற சக்தியால் இணையப் பெற்று பிரகாசிக்கின்றன. மூல மூர்த்தியின் பெயர் ஸ்ரீதளிநாதர். தலத்தின் பெயர் ஸ்ரீதளி, திருக்குளத்தின் பெயர் ஸ்ரீதளி தீர்த்தம். அது மட்டுமல்லாமல் இத்தலத்தின் தேவாரப் பெயர் திருப்புத்தூர் என்பதாகும். லட்சுமி தேவி பதியின் பெருமை விளக்கி இத்தலத்தில் புகழ் பெற்றதால் இவ்வூர் திருப்பத்தூர் அதாவது திரு பதி ஊர் என்று வழங்கப்படுகிறது. இதுவும் இறைவனின் கருணைதானே.ஸ்ரீநடராஜ மூர்த்தி, திருப்பத்தூர்
எம்பெருமானின் ஒவ்வொரு நாட்டிய கோலத்திற்கும் கோடிக் கணக்கான அனுகிரக சக்திகளும் அற்புத தெய்வீக இரகசியங்களும் உண்டு. இம்முறையில் திருப்பத்தூர் திருத்தலத்தில் எம்பெருமான் அருளிய நாட்டியக் கோலமே கௌரி தாண்டவ கோலமாகும்.
ஷீரடி சாய்பாபாவிடம் நாம் மிகவும் வேதம் படித்து விட்டோம், பக்தியில் உன்னத நிலையை அடைந்து விட்டோம் என்ற கர்வத்துடன் பலரும் வருவதுண்டு. அவர்களிடம் பாபா கேட்கும் கேள்வியே, “சோளி கே பீசே க்யா ஹை ?“ என்பதாகும். சாதாரண மக்கள் இதற்கு அளிக்கும் தமிழாக்கம், ரவிக்கைக்குப் பின் என்ன இருக்கிறது ? இதன் ஆன்மீக தத்துவத்தைப் புரியாததால் பலரும் அவரிமிருந்து விலகிப் போய் விடுவதுண்டு. மகான்களின் வேலையே தகுதி உள்ளவர்களை மட்டுமே தன்னிடம் வைத்துக் கொள்வதுதானே. ஆனால், எவர் ஒருவர் பாபா கேட்ட கேள்வி அற்புத ஆன்மீக தத்துவங்கள் உடையதாகத்தான் இருக்கும் என்று நம்பி அவரை முழு நம்பிக்கையுடன் சரணடைகின்றார்களோ அவர்களுக்கு பாபா அளித்த குரு பிரசாதமே ஈசனின் இந்த கௌரி தாண்டவ கோலமாகும்.
காசிக்குச் செல்லும் அனைவரும் காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி தேவியையும் தரிசித்து விட்டு அங்குள்ள சோளி அம்மனை தரிசிக்காமல் வந்து விடுகிறார்கள். சோளி அம்மன் அவசியம் வழிபட வேண்டிய தேவி ஆவாள். கௌரி, கௌடி என்பதே சோளி என்று அழைக்கப்படுகிறது. திருப்பத்துர் ஈசனின் கௌரி தாண்டவ கோலமே சக்தி வடிவாக காசி திருத்தலத்தில் சோளி அம்மனாக, கௌடி அம்மனாக எழுந்தருளி உள்ளாள் என்பது சித்தர்கள் கூறும் இரகசியமாகும். இந்த கௌரி தாண்டவ ரகசியத்தை உணர்ந்தவர்களே கௌரிக்குப் பின்னால் எம்பெருமானின் நாட்டியக் கோலம் அமைந்துள்ளது, எனவே அனைத்திற்கும் பின்னால், அனைத்து சக்திகளுக்கும் பின்னால், பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் பின்னால், ஆதாரமாக அமைவது எம்பெருமானின் கௌரி தாண்டவ நாட்டியக் கோலமே என்ற இரகசியத்தை உணரவல்லவர்கள் ஆவார்கள். இதுவே பாபாவின் ஆத்ம விசார வினாவிற்கு நாம் பெறும் பதிலாகும்.
பூலோகம் என்பதே மண்தானே. அதனால் அனைத்திற்கும் ஆதாரமான கௌரி தாண்டவ கோலம் சுதையில் அமைந்துள்ளது சிறப்பே. சுதை மூர்த்திகளுக்கு உள்ள பல அற்புத சிறப்புகளில் ஒன்று அவர்கள் delayed time machines or capacitors என்ற தத்துவத்தில் செயல்படுவதாகும். அதாவது நடராஜ மூர்த்தியின் நாட்டியக் கோலம் விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டே இருக்கிறது அல்லவா ? அப்படி இருக்கும்போது இன்று அவர் ஆடும நாட்டியம் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு உரியது என்றால் இந்த நடராஜ மூர்த்தங்கள் அந்த நடனக்கோல இரகசியங்களை சேர்த்து வைத்துக் கொள்ளும். அடுத்து கேட்டை, மூலம் போன்ற ஏதாவது ஒரு நட்சத்திர நாளில் அஸ்வினி நட்சத்திரத்தைச் சேர்ந்த ஒரு அடியார் நடராஜ பெருமானை தரிசிக்கும்போது அவருக்கு அஸ்வினி நட்சத்திரத்திற்கான அனுகிரக சக்திகள் அளிக்கப்படும்ம். என்னே எம்பெருமான் கருணை ? இந்த அருட்சக்திகளை மக்களுக்கு வழங்குவதில் வியாக்ரபாதர், பதஞ்சலி, அகத்தியர் போன்ற மாமுனிகள் இடைவிடாது ஊன் உறக்கம் இன்றி சேவை புரிந்து பூலோக ஜீவன்களை காத்து, காப்பாற்றி வருகின்றனர்.
வாழ்க சித்தர் குலம் !!
இதே போல கிராம தேவதைகளும், முனீஸ்வரர், கருப்பண்ண சுவாமி போன்ற காவல் தெய்வங்களும் சுதை வடிவில் எழுந்தருளி இருப்பதற்கு இத்தகைய அனுகிரக சக்திகளும் ஒரு காரணமே. எந்த வித ஜோதிட ஞானமும் இல்லாதவர்களும் பயனடையும் வகையில் எழுந்தருளி இருப்பவர்களே சுதை வடிவ தெய்வ மூர்த்திகள். வெயில்தான் இவர்களுக்கு வேத பாராயணம், மழை இவர்களுக்கு அபிஷேக ஆராதனை, இடியும் மின்னலும் இவர்களுக்கு நைவேத்யம்.ஸ்ரீஅமிர்தகடேச நந்தி மூர்த்தி, திருப்பத்தூர்
மதுரை மீனாட்சி கல்யாணத்திற்காக அரசர்கள், மகான்கள், யோகிகள், மனிதர்கள், விலங்குகள் என அனைவருமே தங்கள் பரிசுப் பொருட்களை அனுப்பினார்கள். அது மட்டுமல்லாது பெருமாள் மூர்த்திகளும், சிவ மூர்த்திகளும் பல அற்புத தெய்வீக பரிசுப் பொருட்களை அனுப்பினார்கள் என்பது சித்தர்கள் அறிவிக்கும் சுவையான இரகசியமாகும். காஞ்சி வரதராஜப் பெருமாள் மகிழம்பூ மாலைகளையும், அனுவாவி மலை முருகப் பெருமான் செண்பக மலர் மாலைகளையும், திருப்பத்தூர் ஸ்ரீதளிநாதர் கொன்றை மலர் மாலைகளையும் மீனாட்சி கல்யாணத்திற்கு அனுப்பி வைத்தார்களாம். அவ்வாறு திருப்பத்தூர் சிவ பெருமானிடமிருந்து பெற்ற சரக் கொன்றை பிரசாத மாலைகளை இத்தல நந்தி மூர்த்தி வெள்ளியங்கிரியிலிருந்து பெற்ற மூங்கில் குடலைகளில் வைத்து தோளில் சுமந்து சென்று சோமசுந்தரப் பெருமானிடம் அளித்தாராம். திருப்பத்தூரிலிருந்து மதுரை செல்லும் வரை எங்குமே தரையில் அந்த மலர்க் கூடைகளை வைத்து விடாமல் முழு மனதுடன் பஞ்சாட்சரத்தை ஓதியவாறே சென்ற நந்தீசனின் பக்திப் பெருக்கால் பெரிதும் மகிழ்ந்த சோமசுந்தர ஈசன் ஸ்ரீதளிநாதர் அளித்த சரக் கொன்றை மலர் ஒன்றில் இருந்த தேனை வழித்து நந்தி எம்பெருமான் நாக்கில் தடவி அவரை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தாராம். பஞ்சாட்சர சுவை பெரிதா இல்லை எம்பெருமான் அளித்த சிவ பிரசாத கொன்றை தேன் சுவை பெரிதா என்று தெரிந்து கொள்ள முடியாமல், சுவைத்தும் முடியாமல் தத்தளித்துப் போனாராம் திருப்பத்தூர் நந்தீஸ்வர மூர்த்தி. அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இன்றும் தன் நாக்கை நக்கிப் பார்த்துக் கொண்டிருக்கும் நந்தி மூர்த்தியைத்தான் இங்கு நீங்கள் தரிசிக்கிறீர்கள்.
யாவர்க்கும் தேவர்க்கும் மூவர்க்கும், ஏன் அம்பிகை பிள்ளையாரப்பன், முருகப் பெருமானுக்குக் கூட கிடைக்காத அமிர்தத்தை சோமசுந்தர ஈசன் திருக்கரங்களாலேயே பெற்ற நந்தியின் பெருமையை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ? அதனால் திருப்பத்தூர் நந்தி மூர்த்தி ஸ்ரீஅமிர்தகடேச நந்தி மூர்த்தி என்று புகழப்படுகிறார்.
லாரி, சரக்கு வாகனங்கள் ஓட்டுநர்கள், உரிமையாளர்கள், ஏற்றுமதி இறுக்குமதி துறையில் உள்ளவர்கள் ஸ்ரீஅமிர்தகடேச நந்தியை வழிபட்டு அற்புத பலன்களைப் பெறலாம். சுத்தமான தேன் அபிஷேகம், மஞ்சள் நிற பருத்தி ஆடைகள், மஞ்சள் நிற மலர் மாலைகள் இவருக்குப் ப்ரீதியானவை. 60, 70, 80 வயது நிறைவை கொண்டாடும் தம்பதிகள் இந்த நந்தி மூர்த்தியை வணங்கி அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுதலால் அற்புத பலன் பெறுவார்கள். அகால மரணங்களை, விபத்துக்களை தடுக்கும் ஆபத் பாந்தவ நந்தி மூர்த்தி இவரே !!ஸ்ரீமுருகப் பெருமான் திருப்பத்தூர்
ஆன்மீக சாதனைகளைத் தொடங்கும் எவரும் எடுத்த எடுப்பிலேயே சமாதியில் ஆழ்ந்து விடுவது கிடையாது. பல நூறு பிறவிகளில் செய்யும் தபோ பலன்களின் பலனாக ஏதோ ஒரு பிறவியில் சமாதி என்ற உயர்ந்த ஆன்மீக நிலை கிட்டுகிறது. அந்த நிலையை அடையும் முன் பல உருவ வழிபாடுகளையும் இஷ்ட தெய்வ வழிபாடுகளையும் மேற்கொண்டுதான் தீரவேண்டும். அவ்வாறு முருகப் பெருமானை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபடும் ஒரு பக்தன் சமாதி நிலையை அடையும்போது அங்கு ஒரு வித நறுமணம் கமழும். அதையே கோட்டம் என்று கூறுகின்றோம். இவ்வாறு பல்வேறு சமாதி நிலைகளில் தோன்றும் பக்தி நிலைகளும் பல படித்தரங்களில் இருப்பதால் பல விதமான கோட்ட சக்திகள் ஏற்படுகின்றன. இத்தகைய சக்தி பரிணமிக்கும் தலங்களையே குமர கோட்டம், கந்த கோட்டம், செங்கோட்டம் என்று அழைக்கின்றோம். பொதுவாக, கோட்டம் என்றால் இறைவன் குடியிருக்கும் கோயில் என்று பொருள். திருத்தலங்களில் மூலவரின் சக்தியை தட்சிணா மூர்த்தி, நர்த்தன கணபதி, பிட்சாடனர் போன்ற இறை மூர்த்திகள் பக்தர்கள் அதைப் பெறும் வகையில் எளிமையாக்கித் தருவதால் அவர்கள் கோஷ்ட மூர்த்தி, கோட்ட மூர்த்திகள் என்று அழைக்கப்படுகிறார்கள். மூலவரின் பக்தி நறுமணத்தைப் பரப்புபவர்களே கோட்ட மூர்த்திகள்.


ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை
இவ்வாறு ரமண மகரிஷி பாதாள லிங்கத்தில் சமாதி நிலை கொண்டபோது அவர் உடலில் தோன்றிய அருணகோட்டம் என்ற நறுமண சக்தியை கிரகித்துத்தான் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ரமண மகரிஷியின் சமாதி நிலையைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தார். அதுபோல திருப்பத்தூர் முருக திருத்தலத்தில் வீர கோட்டம் என்ற நறுமண குமர சக்திகள் நிரவியுள்ளன. சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக முருகப் பெருமான் அவனுடன் போரிட்டபோது அனைத்து ஆயுதங்களையும் இழந்த சூரபத்மன் இனி தான் அழிவது நிச்சயம் என்பதை உணர்ந்து முருகப் பெருமானிடமிருந்து தப்பிக்க ஒரு மாயையை ஏற்படுத்தி அதனுள் புகுந்து மறைந்து விட்டான். என்ன முயற்சி செய்தும் முருகப் பெருமானால் சூரபத்மன் ஏற்படுத்திய மாயை விலக்கி அவனைத் தேடிக் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போது வீரபாகுவை அழைத்து ஸ்ரீதளி நாதரை அணுகி மாயையை விலக்கும் வழி முறையை கேட்டறிந்து வருமாறு அனுப்பினார். ஸ்ரீதளிநாதர் அளித்த கொன்றை பிரசாதத்தை முருகப் பெருமான் வாங்கி தன் கண்களில் ஒற்றிக் கொண்டு தன்னுடைய அழகான கொண்டையில் செருகிக் கொண்டார். அதன் மகிமையால் அவர் சூரபத்மன் இருக்கும் இடத்தை எளிதில் அறிந்து கொண்டு அவனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காத்தார். அன்று முதல் திருப்பத்தூர் குமரன் குடி கொண்ட கோட்டம் வீர கோட்டம் என்று பெயர் பெற்றது. வாழை நார் கொண்டு தங்கள் கையால் தொடுத்த குண்டு மல்லிகை மலர் மாலைகளை இத்தல முருகனுக்கும் வள்ளி தெய்வானை மூர்த்திகளுக்கும் அளித்து வணங்குதலால் மாயையால் வரும் எத்தகைய வேதனைகளிலிருந்தும் மீண்டு நன்னிலை பெறலாம். சிறப்பாக அழகான மனைவியை மணந்த கணவன் தகுதி இல்லாத பெண்கள் பின்னால் சுற்றும் மாயையிலிருந்து அவர்களை விடுவிப்பது வீர கோட்ட வழிபாடாகும். குண்டு மல்லிகைப் பூ வழிபாடு கருப்பண்ண சுவாமி, முனீஸ்வரர் போன்ற காவல் தெய்வங்களுக்கும் மிகவும் ப்ரீதியானதாகும். தலையில் மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு சென்றால் பேய்கள் பின்தொடரும் என்று பலரும் அச்சுறுத்துவதுண்டு. உண்மையில் காவல்தெய்வங்களுக்கும், எல்லை தெய்வங்களுக்கும், குல தெய்வங்களுக்கும் சூட்டப் பட்ட குண்டு மல்லிகைப் பூ பிரசாதத்தை பெண்கள் தலையில் வைத்துக் கொண்டு சென்றால் சுடுகாட்டு சுடலைப் பேய்கள் கூட வணங்கி வழி விடுமாம்.நட்சத்திர தேவியர்கள், சப்த கன்னிமார்கள், திருப்பத்தூர்
27 நட்சத்திர தேவியரும் சப்த கன்னியருடன் எழுந்தருளிய அபூர்வமான தலமே திருப்பத்தூர் சிவாலயமாகும். பிறந்த குழந்தைக்கு பெயர் வைக்கும்போது குழந்தைகள் பிறந்த நட்சத்திர பாதங்களுக்கு உரிய எழுத்துக்களை ஆரம்பாகக் கொண்டே பெயர் வைக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னால் அற்புத தெய்வீக இரகசியங்கள் உண்டு. இந்த பூமி வாழ் உயிர்களின் ஜீவாதாரத்திற்கு அடிப்படையாக இருப்பதே சூரிய ஒளி. இந்த சூரிய ஒளி நேரிடையாக பூலோகத்தை அடைவது கிடையாது. பல பரிமாணங்களுக்குப் பின் சூரிய கதிர்கள் பூமியை அடையும்போது அவை சந்திரனின் அமுதக் கிரணங்களால் சுத்திகரிக்கப்படுகின்றன. எல்லா கிரகங்களையும் விட பூமிக்கு மிக அருகில் சந்திரன் இருப்பதால் அதனுடைய சக்தியே அனைத்து கிரகங்கள், கோள்களுடைய சக்தியைக் காட்டிலும் பலமுள்ளதாக அமைந்து விடுகிறது. இந்நிலையில் ஒரு தினத்தின் நட்சத்திரம் என்பது அன்றைய தினம் சந்திர பகவான் எந்த நட்சத்திர மண்டலத்திற்கு நேரே நிலை கொண்டுள்ளார் என்பதைத்தானே குறிக்கிறது. இவ்வாறு சந்திர ஒளியே அனைத்திலும் பலமுடையதாக அமைவதால் நட்சத்திர பாத எழுத்துக்களில் மிளிரும் சந்திர ஒளிக்கு ஏற்ற ஒலி சக்திகளால் அமையும் நாம சக்தியை நாம் குழந்தைகளுக்குச் சூட்டுகிறோம். ஆனால், இந்த ஒலி ஒளி மாற்றத்தை நிறைவேற்றும் தகுதி உடையவர்கள் சித்தர்கள், உயர் நிலையில் உள்ள மகான்கள் மட்டுமே. இவ்வாறு முதன் முதலில் நாம எழுத்துக்களை சந்திர ஒளியிலிருந்து பெற்று அவற்றை நான்கு பாதங்களுக்கான ஒலிகளாக மாற்றி இந்த பிரபஞ்சத்திற்கு அளித்தவரே நவநாத சித்தர்களில் ஒருவரான ஸ்ரீதிரிநாமகண்ட மகரிஷி ஆவார். இந்த ஒளி ஒலி கிரணங்களை ஒவ்வொரு யுகத்திற்கும் வேண்டியவாறு மாற்றி அமைக்கும் திருப்பணியை மேற்கொண்டுள்ள மகரிஷியே பராசர முனிவர் ஆவார். இவ்வாறு ஒவ்வொரு யுகத்திலும் ஒளி ஒலி கூட்டிய அட்சர சக்திகளை தினந்தோறும் தோன்றும் குழந்தைகளின் ஜீவதார நிலைகளுக்கு ஏற்ப நிரவித் தரும் உன்னத பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் திருக்கயிலாய பொதிய முனிப்பரம்பரை சித்தர் பெருமான் ஸ்ரீஅகத்திய மாமுனி. அகத்திய பெருமான் தினமும் ஆலங்குடியில் எழுந்தருளிய ஸ்ரீநாமபுரீஸ்வரரை பிரார்த்தித்து அன்றைய தினத்திற்கான நாம சக்திகளையும், ஒலி ஒளி கிரண நட்சத்திர பாத சக்திகளையும் இப்பூவுலகில் நிரவி அருந்தொண்டாற்றி வருகிறார். சாதாரணமாக ஒரு குழந்தையின் பெயர் என்பதன் பின்னணியில் அமைந்துள்ள ஆன்மீக விந்தைகளும் ரகசியங்களும் எத்தனை எத்தனை பார்த்தீர்களா ? தாங்கள் பிறந்த நட்சத்திர பாதத்திற்கு ஏற்றபடி பெயர் அமையாதவர்கள் திருப்பத்தூர் திருத்தலத்தில் தட்சிணா மூர்த்திக்கு எதிரில் எழுந்தருளி உள்ள நட்சத்திர தேவியர்களை சப்த கன்னியர்கள் கணபதி மூர்த்திகளுடன் ஆராதனை செய்து வழிபடுதலால் இனி வரும் தங்கள் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள்ள இவ்வழிபாடு பெருந் துணை புரியும். ஆலங்குடி ஸ்ரீநாமபுரீஸ்வரர் வழிபாடும் நாம மகிமைக்கு பெருமை சேர்ப்பதே ஆகும்.நவகிரக மூர்த்திகள், திருப்பத்தூர்
அரிதாக இத்தல நவகிரக மூர்த்திகள் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கின்றனர். இத்தகைய நவகிரக மூர்த்திகளுக்கு ஒரு அற்புத வழிபாட்டை சித்தர்கள் அருளியுள்ளனர். அமர்ந்த நிலை நவகிரக மூர்த்திகள் அளிக்கும் அனுகிரகங்களும் நிரந்தரமாக இருப்பதால் அதை நாம் முறையாகப் பெறுவதற்கு இந்த வழிபாடு பெரிதும் துணை புரியும். ஒரு நுனி வாழை இலையில் கோதுமை அல்வா, கேசரி, இட்லி, புளியோதரை வைத்து அத்துடன் கார சட்னி, தேங்காய் சட்னி, கொத்துமல்லி சட்னி சேர்த்து இவ்வாறு எத்தனை பேருக்கு தானம் அளிக்க முடியுமோ அத்தனை பேருக்கு தானம் அளித்தலால் கிட்டும் பலாபலன்கள் அதியற்புதம். பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி போன்ற மங்கள நிறைவு நாட்களில் மேற்கூறிய வகையில் தானம் அளித்தல் சிறப்பாகும். அருசுவை உண்டி பெருவினைப் போக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.ஸ்ரீவில்லேந்திய வேலவர், திருப்பத்தூர்
பராசக்தி மகிஷாசுரனை வதம் செய்வதற்காக நவராத்திரி ஒன்பது தினங்களும் ஊசி மேல் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டாள் அல்லவா ? அப்போது மகிஷாசுரனால் ஏவப்பட்ட கோடிக் கணக்கான அசுரர்களும் அசுர சக்திகளும் பராசக்தியின் தவத்திற்கு ஊறு விளைவித்தன. தன்னுடைய தவ நிலையில் பங்கம் ஏற்படக் கூடாது என்பதற்காக தேவி முருகப் பெருமானை வேண்ட முருகப் பெருமான் உடனே அங்கே பிரசன்னமாகி ஒன்பது நாட்களும் மயில் வாகனத்தின்மேல் அமர்ந்து பறந்தவாறே தன் அன்னையின் யோக தவம் நன்முறையில் நிறைவேற அற்புத பணி ஆற்றினார். அப்போது வேல், வில் போன்ற பற்பல ஆயுதங்களை பிரயோகித்தார் முருகப் பெருமான். அதனால் “சேனாதிபதி” அதாவது ஆயுதங்களின் அதிபதி, சேனைகளின் அதிபதி என்ற பட்டத்தை பராசக்தியிடமிருந்து பெற்றார் முருகப் பெருமான். மேலும், “ஓம் தத்புருஷாய வித்மஹே வள்ளி தேவ சேனா சமேதாய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்,“ என்ற கவச மந்திரத்தையும் தன் தாயிடமிருந்து சக்தி அனுகிரகமாக பெற்றார் முருகப் பெருமான். எனவே எத்தகைய சக்தியுள்ள, பலம் பொருந்திய எதிரிகளால் தாக்கப்பட்டாலும் மேற்கூறிய காயத்ரீ மந்திரத்தை ஓதுவதால் எதிரிகள் பலமிழப்பர். வெற்றி நம்மைத் தேடி வரும். நவராத்திரி நாட்களில் வரும் செவ்வாய்க் கிழமை அன்று ஆறு வயது நிறைந்த ஆறு பெண் குழந்தைகளுக்கு ஆடை வளையல் உட்பட மங்களப் பொருட்களை தானமாக அளித்தலால் குறைந்தது 600 பெண் குழந்தைகளுக்கு தானம் அளித்த பலனைத் தருவதாக அன்னை பராசக்தியே குமரனுக்கு வாக்கு அளித்துள்ளாள். இதை நன்முறையில் பக்தர்கள் பயன்படுத்தி மங்கள வாழ்வைப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.ஸ்ரீசிவகாமி அம்மன், திருப்பத்தூர்
வீடு கட்டும்போது சிலர் ராஜ நிலைக்கு எதிரே ஒரு வாயிலையும் அருகில் கார் போன்ற வாகனங்கள் செல்வதற்காக ஒரு வாயிலையும் ஆக இரண்டு வாயிற் கதவுகளை அமைக்கிறார்கள். அப்போது பெரும்பாலும் ராஜ நிலைக்கு எதிரில் உள்ள வாயில் சிறியதாகவும், அடுத்துள்ள வாகனத்திற்கான வாயில் பெரியதாகவும் இருக்குமாறு அமைப்பது வழக்கம். இதனால் பல வாஸ்து தோஷங்கள் ஏற்பட்டு வீட்டின் சொந்தக்காரருக்கு உடல் வியாதிகள், மனக் குழப்பங்கள் போன்றவை அதிகரிக்கும் வாய்ப்பு பெருகுகிறது. இத்தகைய வாஸ்து தோஷங்களால் துன்புறுவோர் இறைவனை இறைவியை தரிசனம் செய்ய தனித் தனியாக இரண்டு வாயில்கள் உள்ள திருப்பத்தூர் போன்ற தலங்களில் சுவாமி சன்னதிக்கு எதிரே உள்ள வாயிலிலும் அம்பாள் சன்னதிக்கு எதிரே உள்ள வாயிலிலும் குழையுடன் திகழும் வாழை மரங்களை கட்டி வழிபடுதலால் மேற்கூறிய வாஸ்து தோஷங்களுக்கு ஓரளவு நிவாரணம் கிட்டும். இந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக கட்டிய வாசற்படிகளை இடித்து மாற்றுதல் சரியான அணுகு முறை ஆகாது என்பதை நினைவில் கொள்ளவும்.நோய் போன்ற காரணங்களாலோ பயத்தின் காரணமாகவோ இரவில் தூக்கம் வராமல் துன்பம் அடைபவர்கள் ஏராளம். இத்தகையோர் அர்த்தசாமத்தில் சிவாலயங்களில் பள்ளி அறை பூஜைகளில் பங்கேற்று சுவாமிக்கு பல்லக்கு தூக்குதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வர நற்பலன் பெறுவார்கள். தண்ணீர் கலக்காத சுத்தமான பசும்பாலைக் காய்ச்சி அதில் குங்குமப் பூ, டைமண்ட் கல்கண்டு சேர்த்து நைவேத்தியத்திற்கு அளிப்பதால் சந்ததி இல்லாத குறைகளும் தீரும். பள்ளியறை பூஜையின்போது நாதஸ்வர கலைஞர்களைக் கொண்டு நீலாம்பரி ராக பாடல்களை இசைக்கச் செய்வதால் குழந்தைகள் ஒழுக்கத்துடன் வாழ்வர். அந்த அளவிற்கு வசதியில்லாதவர்கள் மணிவாசகப் பெருமான் அருளிய, ”சீரார் பவளங்கால் ...” என்று தொடங்கும் பதிகத்தை வாய்விட்டு உரக்கப் பாடுவதாலும் அற்புத பலன்களைப் பெறுவார்கள். கெட்ட கனவுகள் துன்புறுத்தாது காக்கும் எளிய பூஜை இது.ஸ்ரீஅஷ்டோத்திர பத்ம லட்சுமி தேவி, திருப்பத்தூர்
“ என்னிடம் காசு இல்லை, காசு இருந்தால் லட்சம் பேருக்கு அன்னதானம் செய்யும் மனசு இருக்கிறது,“ என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறோம். இவ்வாறு உண்மையிலேயே கையில் பணம் இல்லாமல் ஆனால் நற்காரியம் செய்யும் மனம் உடையவர்களுக்கு அருள் புரியும் தன தேவியே இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் லட்சுமி கடாட்ச மூர்த்தி ஆவாள். திருப்பத்தூர் சிவாலயத்தில் நடராஜர் சன்னதி அருகே தூணில் அருள் புரியும் அமுத சுரபி இவள். இந்த அமுதசுரபியின் இரகசியம் உணர்ந்தோரை விரல் விட்டு எண்ணி விடலாம். வெள்ளிக் கிழமைகளில் இந்த தேவியை வணங்கி லட்சுமி அஷ்டோத்திர துதிகளில் ஒன்றை ஓதி ஒரு முறை வலம் வந்து, மீண்டும் ஒரு துதியை ஓதி தேவியை வலம் வந்து வணங்கி, இவ்வாறு 108 துதிகளை ஓதி 108 முறை வலம் வந்து 108 முறை சாஷ்டாங்கமாக வடக்கு நோக்கி தரையில் விழுந்து வணங்கினால் எத்தகைய கடுமையான, கொடுமையான அட்ட தரித்திர நிலையும் மாறி செல்வம் கொழிக்கும். ஆனால், அதன் பின்னர் தான தர்மத்திற்கே தான் பெற்ற செல்வத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். மேற்கூறிய லட்சுமி அஷ்டோத்திரத்திற்குப் பதிலாக ஓம் அஸ்வினி தர்ம தேவா போற்றி, ஓம் அஸ்வினி அர்த்தநாரீஸ்வரா போற்றி, ஓம் அஸ்வினி தட்சிணா மூர்த்தியே போற்றி, ஓம் அஸ்வினி பிட்சாடனா போற்றி என்று 27 நட்சத்திரங்களுக்கும் பாத துதியை ஓதி வந்தால் கணவன் மனைவி, சகோதரி, சகோதரர்கள், பெற்றோர்கள் பிள்ளைகள் இடையே உள்ள வேற்றுமை மறைந்து உறவுகள் சுமுகமாகும். எதிரிகளும் நட்பு பாராட்டுவார்கள்.

 

திருத்தல யாத்திரை தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam