தனிப் பெருங் கருணை அருட்பெருஞ் சோதி !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பெருங்குடியோன் அகத்தீசன்

தம்பதிகள் அனுஷ்டிக்க வேண்டிய சங்கம நியதிகள் ஏராளமாக உண்டு. 
இந்த தெய்வீக ரகசியங்களின் அருட் திரட்சியாக தெய்வத் திருவருளின் அருங் காட்சியகமாகத் திகழ்வதே திருச்சி சோமரசம்பேட்டை அருகில் உள்ள பெருங்குடி என்னும் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅகத்தீசன் சிவத்தலமாகும். ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதராய் எழுந்தருளியுள்ள சுயம்பு மூர்த்தியே ஸ்ரீஅகத்தீசப் பெருமான் ஆவார். ஆதி அந்தமில்லா அற்புத வரலாறு உடைய பெம்மான்.
சங்க்ரமணம் என்றால் இணைதல் என்று பொருள். சங்கம், கிரமணம் என்ற வார்த்தைகளின் சங்கமம் சங்க்ரமணம்.  அதாவது முறைப்படி இணைதலே, சேர்தலே சங்க்ரமணம். இதனால் விளையும் புண்ணிய சக்திகளும், தெய்வீக சக்திகளுமே சங்க்ரமண சக்திகள் எனப்படுகின்றன.
இவ்வாறு சங்க்ரமண சக்திகளின் இறை மையமாக, அருட்பெருஞ் சோலையாக மலர்ந்து இந்த பிரபஞ்சத்தில் திகழ்வதே பெருங்குடி ஈசனின் தனிப் பெருங்கருணையாகும்.
அவர் கருணையை விளக்கி ஒளி பெறுவோமா ?
எட்ட எட்ட எட்டாதது
கிட்ட கிட்ட கிட்டாதது
நிட்ட நிட்ட நிட்டாதது
அண்ணாக்கு சுவை
சொட்ட சொட்ட சுட்டாதது
என்று அகத்திய கிரந்தங்கள் பெருங்குடி ஈசன் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள கருணையைப் பற்றி வியந்து உரைக்கின்றன.

ஸ்ரீநந்தியெம்பெருமான் பெருங்குடி

51 அட்சரங்கள் கொண்டு சங்க்ரமண ஒளிப் பிழம்பமாக விளங்கும் இந்த துதியானது பெருங்குடி ஈசன் அருளும் மங்கள சக்திகளின் தன்மையை எந்த அளவிற்கு விரித்துப் பார்த்தாலும் புரிந்து கொள்ள முடியாது என்றும் அணுவிற்குள் அணுவாய்ப் புகுந்து பார்த்தாலும் புரியாது என்றும் அதன் சுவையில் கோடியில் ஒரு பகுதியாக, அந்த கோடியில் ஒரு பகுதியாக அத்தனை கோடி முறை பகுத்து அதில் ஒரு துளியை சுவைத்தாலும் அந்தச் சுவையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்று சுவைக்க சுவைக்க உரைக்கின்றன.
எத்தனை கோடி யுகங்கள் தவம் இயற்றினாலும் அகத்தீசன் பெருமையை உணர முடியாது. நாக்கு, உண்ணாக்கு, பிண்ணாக்கு, அண்ணாக்கு என்று இறைவனின் சுவையை உணரும் பல நிலைகளில் அண்ணாக்கு என்ற மிக உயர்ந்த நிலையில் கூட பெருங்குடி ஈசனின் சுவையை உணர முடியாது என்றால் அப்பெருமான் சுவையை சித்தர்கள் அன்றி யாரால் சுவைக்க முடியும்.
சாதாரண மனிதர்கள் உணரக் கூடிய பெருங்குடி ஈசனின் சுவையைப் பற்றி சற்றே விளக்குகிறோம். சிவன் என்றால் மங்களம் என்று பொருள். இவ்வாறு முக்கியமான எட்டு மங்கள சங்க்ரமண சக்திகள் பெருங்குடி ஈசனால் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.
அதாவது,
1. சிவலிங்கத் திருமேனியை வடக்கு பக்கம் சாய்த்து அருளிய சங்க்ரமண மங்கள சக்திகள்
2. பார்வதி அன்னைத் திருமேனியின் மேல் பொலிந்த சங்க்ரமண மங்கள சக்திகள்
3. அகத்திய முனி தென் மண்டலம் விரைந்து வர உதவிய கும்பமுனி சங்க்ரமண மங்கள சக்திகள்
4. லட்சுமி தேவி நரசிம்ம மூர்த்தியுடன் இணைய உதவிய சங்க்ரமண மங்கள சக்திகள்
5. லட்சுமி தேவி எட்டு மங்கள சக்திகளை நிரந்தரமாகப் பெற ஈசுன் அருள் புரிந்த அஷ்ட மங்கள பார்கவ சக்திகள்
6. மகா கணபதிக்கு லட்சுமி சக்திகளை மங்கள சக்திகளாய் அருளிய சங்க்ரமண சக்திகள்
7. வாகன வைபவ சங்க்ரமண மங்கள சக்திகள்
8. வள்ளிக்கு லட்சுமி சக்திகளாய் வர்ஷித்த சங்க்ரமண மங்கள சக்திகள்
போன்ற எட்டு முக்கியமான சங்க்ரமண மங்கள சக்திகளை எவ்வாறு பெருங்குடி ஸ்ரீஅகத்தீசன் இந்த உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் ஏனைய ஜீவன்களுக்கும் வாரி வழங்குகிறான் என்பதை அறிந்து கொள்வதே மனிதப் பிறவியில் நாம் பெறக் கூடிய உயரிய பயனாகும்.

கோணாமல் கோணிய கோணியன்

தினமும் காலையில் எழுந்தவுடன் கிழக்கு திசை நோக்கி குறைந்தது மூன்று அடிகளை எடுத்து வைத்த பின்னரே அன்றைய நாளின் நடவடிக்கைகளை மேற்கொள்வதால் அந்த நாள் முழுவதும் நல்லவிதமாக அமையும் என்று நம் முன்னோர்கள் எடுத்துரைத்து வந்துள்ளார்கள்.

நாம் எந்த அளவிற்கு இயற்கையுடன் ஒத்து நடந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம்முடைய காரியங்கள் வெற்றி பெறும் என்ற அடிப்படை நியதியுடன் அமைவதுதான் காலையில் நாம் மேற்கொள்ளும் முதல் வழிபாடு.
பூமியின் இயக்கம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அமைவதால் நம்முடைய முதல் அடியை காலையில் கிழக்கு நோக்கி வைத்து இயற்கையுடன் இயைந்த இயக்கத்தை நம்முடைய முதல் காரியமாக நிறைவேற்றுகிறோம்.

ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள்
பெருங்குடி

மேலும் எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அது நம் உடல், மனது, உள்ளத்துடன் இணைந்து இருந்தால்தான் அக்காரியம் வெற்றி பெறும், முழுமை அடையும். அதாவது நம் உடலின் இயக்கங்கள் நமது தூல, சூட்சும, காரண சரீரங்களில் மாறி மாறி அமைவதால் குறைந்தது மூன்று அடிகளையாவது கிழக்கு நோக்கி வைத்து நம் முதல் இயக்கத்தை ஆரம்பித்து அந்த இயக்கம் நம் உடல், மனது, உள்ளத்தில் நிரவுவதற்கான ஒரு தெய்வீக முயற்சியே இந்த மூன்று அடிகளாகும்.
இதையே பூமி, பாதாளம், ஆகாயம் என்றும் பூலோகம், புவர் லோகம், சுவர்க  லோகம் என்றும் தூல சூட்சும காரண மண்டல வியாபகமாகவும் நாம் உணர்ந்து தெளிவு பெறுகிறோம்.
அப்போதுதான் வாமன அமவதாரத்தின் பொருளும் அது நம் வாழ்க்கைக்கு எந்த அளவில் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்ற தெய்வீக இரகசியமும் புரியவரும். அந்நிலையில்தான் பக்தி யோகமே அனைத்தையும் தரவல்லது என்ற பேருண்மையும் புலனாகும்.
இங்கு நீங்கள் இன்னோர் நுட்பமான விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் தரையில் மேல் வைத்த மூன்று அடிகள் தூரமானது பூமியின் மேல் ஒரு மிகச் சிறிய கோண அளவை உடையதாக இருக்கும் அல்லவா ? அப்படியானால் அந்த கோணத்தை நாம் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நவ கிரகங்களுக்கும், நட்சத்திர மண்டலங்களுக்கும் விரித்துப் பார்த்தால் அது எந்த அளவிற்கு வியாபகம் உடையவையாக இருக்கும்.
ஆனால், வாமன மூர்த்தியைப் போல் தெய்வ அவதார மூர்த்திகள் அல்லவே நாம் என்ற சந்தேகம் மனதில் தோன்றினாலும், நாம் அவதார மூர்த்திகள் இல்லை என்றாலும் எவ்வளவோ தொலைவில் உள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் நம் வாழ்க்கையில் நிச்சயமாக பாதிப்பை ஏற்படுத்தத்தானே செய்கின்றன ?
இதைப் பற்றி நன்கு ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் எத்தனையோ தெய்வீக இரகசியங்கள் புலப்படும். எதற்காக இதை இவ்வளவு விவரித்து விளக்குகிறோம் என்றால் இதை அடிப்படையாகக் கொண்டதுதான் பெருங்குடி ஈசனின் லிங்கத் திருமேனி சற்று இடப்புறம் சாய்ந்து இருப்பதன் மகத்துவம்.
அந்த சிறு கோண அளவில் ஏற்படும் கோண சங்க்ரமண சக்திகள் கோடி கோடி. அதனால் அனுகிரகம் பெறும் கிரக மண்டலங்களும், நட்சத்திர மண்டலங்களும் கோடி கோடியே.
புண்ணியம் என்றால் என்ன ?
நமக்கு நன்மை தரக் கூடிய ஆக்க சக்தியையே புண்ணியம் என்று கூறுகிறோம். உத்தராயணம், தட்சிணாயனம் என்ற காலங்ளை உத்தராயண புண்ணிய காலம், தட்சிணாயன புண்ணிய காலம் என்று அழைக்கிறோம். அதாவது இந்த காலங்கள் எல்லாம் மிகவும் சக்தி உடையனவாக இருப்பதால் அக்காலங்களில் நிறைவேற்றப்படும் தர்ப்பணம், சிரார்த்தம், தீர்த்த நீராடல், இறை வழிபாடுகளுக்கு அளப்பரிய புண்ணிய சக்திகள் திரள்கின்றன.
உதாரணமாக, ஷண்ணவதி தர்ப்பண நாட்களை எடுத்துக் கொள்வோம். வருடத்திற்கு ஏறக்குறைய 96 நாட்களில் அமையும் சக்தி வாய்ந்த இந்த புண்ணிய காலங்கள் எட்டு விதமான சக்திகளைப் பிரதிபலிக்கின்றன.

1. அமாவாசை நாட்கள்
2. மாளய பட்ச நாட்கள்
3. மன்வாதி நாட்கள்
4. சங்க்ரமண நாட்கள்
5. வைதிருதி யோக நாட்கள்
6. வியதீபாத யோக நாட்கள்
7. யுகாதி நாட்கள்
8. அஷ்டக நாட்கள்
இவற்றில் சங்க்ரமண நாட்கள் என்பவை ஒவ்வொரு ராசியிலும் சூரியன் பிரவேசிக்கும் நாட்களாகும். உதாரணமாக மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாளை மகர சங்கராந்தி தைப் பொங்கல் திருநாள் என்கிறோம்.
சங்க்ரமணம், சங்கராந்தி என்றால் இணைதல் என்று முன்பே கூறினோம். இங்கு எவை இணைகின்றன. மேலோட்டமாகப் பார்த்தால் சூரியனும் ராசியும் இணைகின்றன என்பது போல் தோன்றினாலும் உண்மையில் இந்த இணைப்பிற்குப் பின்னால் இணைபவை சிவ சக்தி அம்சங்களே என்பதே உண்மையாகும்.
எனவே மேற்கூறிய அனைத்து ஷண்ணவதி நாட்களும் சிவ சக்தி அம்சங்களின் சங்க்ரமண இணைப்பே ஆகும்.
உதாரணமாக, அமாவாசை தினத்தை எடுத்துக் கொண்டால் சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இணையும்போது அமாவாசை திதி ஏற்படும் என்பது நாம் அறிந்ததே. ஆனால், அதே சமயத்தில் சூரியனிடமிருந்து சந்திரன் விலகிச் செல்வதற்கான சக்தி அம்சங்களும் திரண்டு விட்டன, அதாவது அடுத்த வளர்பிறை திதியான பிரதமை திதிக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டன என்பதும் உண்மை அல்லவா ? பகல் முடியும்போது சூரியனின் ஆட்சிக் காலம் முடிகிறது என்றாலும் சந்திரனின் ஆட்சிக் காலம் ஆரம்பிக்கிறது என்றாலும் விஷயம் ஒன்றுதானே. எனவே பகலின் முடிவு இரவின் ஆரம்பம்.
இதுவே சங்க்ரமணம் என்பதன் எளிய விளக்கமாகும். பூலோகத்திற்கான இந்த எட்டுவிதமான சங்க்ரமண சக்திகள் உருவாகும் திருத்தலமே பெருங்குடி சிவாலயமாகும். மானிட கணக்கில் இதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால் பெருங்குடி ஈசனின் லிங்கத் திருமேனி வலப்புறம் சாய்ந்துள்ள கோண அளவைக் கணக்கிட்டு அதை எட்டு மடங்கு ஆக்கினால் 360 டிகிரி என்ற முழுமையான கோண அளவு வியாபிக்கும்.
இதுவே கோணாமல் கோணிய கோணியனின் மகிமையாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான் பெருங்குடி

மேற்கூறிய எட்டுவித சங்க்ரமண சக்திகளின் திரட்சியாக பெருங்குடி தலம் அமைந்தாலும் அஷ்டக திதி சக்திகள் சிறப்பாக பல்கிப் பெருகும் திருத்தலமே பெருங்குடி ஆகும் என்பது சித்தர்கள் கூறும் இரகசியமாகும்.
பொதுவாக, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் வரும் தேய்பிறை சப்தமி, அஷ்டமி, நவமி திதி நாட்களில் நிறைவேற்றப்படும் தர்ப்பணம், அன்னதானம், பித்ரு ஹோமம் போன்ற வழிபாடுகளில் புண்ணிய சக்திகள் ஆயிரமாயிரம் மடங்காகப் பெருகுகின்றன. இதுவே அஷ்டகை வழிபாடுகளின் சிறப்பாகும்.
அஷ்டகை வழிபாடு பெருமாளுக்கு உகந்த வழிபாடாகவும் அதிலும் சிறப்பாக கிருஷ்ண பகவானுக்கு மிகவும் உகந்த வழிபாடாகும். தேய்பிறை அஷ்டமி திதி கிருஷ்ண பகவான் பூமியில் தோன்றிய தினமாகும். மனிதர்களைப் போல் அல்லாமல் தெய்வ அவதாரங்கள் தாங்கள் விரும்பிய விதத்தில் பூமியில் தோன்றும் சக்தி உடையவர்கள் ஆதலால்  தான் விரும்பிய வண்ணமே பூமியில் அவதாரம் மேற்கொண்ட கிருஷ்ண பரமாத்மா எதற்காக தேய்பிறை அஷ்டமி திதியில் அவதாரம் நிகழ்த்தினார் ?
சித்தர்கள் மட்டுமே இத்தகைய தெய்வ அவதாரங்களின் தோற்றத்திற்குப் பின்னால் இரகசியங்களை வெளிப்படுத்தும் சக்தி பெற்றவர்கள்.
இந்தப் பூமி ஜீவன்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக இருப்பது சூரியனும் சந்திரனும்தானே. எனவே சூரிய வம்சத்தில் தோன்றிய ராம பிரான் அடுத்து சந்திர சக்திகளையும் பூலோக ஜீவன்கள் பெறும் பொருட்டு சந்திரன் உச்சம் பெறும் ரிஷப ராசியில் ரிஷப லக்னத்தில் ரோஹிணி நட்சத்திரத்தில் அவதாரம் நிகழ்த்தினார்.
சந்திரன் தன் உச்ச சக்தி கலைகளுடன் திகழும்  வளர்பிறை நவமி தினம் முதல் தேய்பிறை அஷ்டமி திதி வரை தொடர்ந்து இறை வழிபாடுகளை பெருங்குடி ஈசன் தலத்தில் நிறைவேற்றியே கிருஷ்ணாவதாரம் கொண்டார் என்பதே சித்தர்கள் தெளிவுபடுத்தும் அற்புத கிருஷ்ணாவதார இரகசியங்களாகும்.
எனவே இந்த பதினைந்து நாட்களே மாளய பட்ச வழிபாடு தினங்களாக பித்ருக்களுக்கு உரிய வழிபாடு திதிகளாக மால் அய நாட்களாக மலர்ந்தன.
பெருங்குடி ஈசனான கோணாமல் கோணிய கோணியனிடமிருந்து கிருஷ்ண பகவான் தன்னுடைய அவதார சக்திகளைப் பெற்றமையால் அவருடைய உருவமானது எட்டு இடங்களில் கோணியவாறு பக்தர்களுக்கு எல்லாம் கிருஷ்ண சக்திகள் என்னும் தேய்பிறை சக்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால், தேய்பிறை சக்திகள் என்பவை வளர்பிறை சக்திகளின் சங்க்ரமண சக்திகள்தானே.
எனவே இவை கோணி இருந்தவனின் சக்திகளா இல்லை கோணி நின்றவனின் சக்திகளா ?

பார்வதி மேல் கோணிய பரந்தாமன்

பர்வத ராஜனின் மகளான பார்வதி தேவி ஒரு அவதாரத்தில் தட்ச பிரஜாபதியின் மகளாக, தாட்சாயணியாக அவதாரம் கொண்டு ஈசனை மணந்தாள் அல்லவா ? பின்னர் தட்சன் தான் நடத்திய யாகத்தில் ஈசனை அழைக்காததால் ஈசன் அங்கு செல்லாமல் இருந்தாலும் இறைவனின் ஆணையை மீறி தாட்சாயணி தட்சனின் யாகத்திற்கு சென்று தன் தந்தையுடன் வாதிட்டு இறுதியில் அந்த யாக குண்டத்திலேயே தன் உடலை மாய்த்துக் கொண்டாள்.
அதன் பின்னர் சிவபெருமான் தாட்சாயணியின் திருஉருவத்தை மீண்டும் உலகிற்கு அளித்து தன்னுடைய உடலின் ஒரு பாகத்தை, சரி பாகத்தை தாட்சாயணிக்கு அளித்து பெண் குலத்திற்கே எம்பெருமான் கௌரவம் அளித்த வரலாறு நீங்கள் அறிந்ததே.

தலமரம் திருவோடு பெருங்குடி

தாட்சாயணி ஈசனின் இட பாகத்தில் உறையும் அனுகிரகத்தைப் பெற்ற புராணத்தைப் படிப்பதற்கு சில நிமிடங்களே ஆகும் என்று மனிதக் கணக்கில் நினைத்தாலும் அதற்காக பார்வதி தவம் இயற்றியது கோடி கோடி யுகங்களாகும், அவள் யாத்திரை செய்த தலங்கள் கோடி கோடி, அவள் தீர்த்தமாடிய புனித நதிகள் கோடி கோடி, அவள் மானிட வடிவில் தரிசனம் செய்து வழிபட்ட ரிஷிகளும் சித்தர்களும் கோடி கோடியே.
இவ்வாறு பார்வதி தேவி வழிபட்டு தன்னுடைய தெய்வீக சக்திகளை பூர்ணமாகப் பெற்ற இடமே திருச்சி சோமரசம்பேட்டை அல்லித்துறை சிவத்தலமாகும். இங்கு இறைவனின் திருநாமம் ஸ்ரீபார்வதீஸ்வரன். இறைவியின் திருநாமமோ ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி.
இத்திருத்தல இறைவன் நாமமே பார்வதி பெற்ற அனுகிரகத்தை தெளிவாக நமக்குப் புரியவைத்து விடும். எனவே இங்கு சிவன்தான் பார்வதி, பார்வதி தேவிதான் சிவன். வெறுமனே பெயரை வைத்து விட்டால் மட்டும் போதுமா ? இறைவனே இறைவியாகவும் அல்லித்துறை சிவத்தலத்தில் எழுந்தருளி உள்ளான் என்பதை ஒவ்வொரு சூரிய கிரகண புனித காலத்திலும் இதை மக்களின் சாமான்ய கண்களுக்குப் புலப்படுத்தி வருகிறான் என்பதே ஈசன் இங்கு புரியும் அற்புத திருவிளையாடலாகும்.
ஆம், ஒவ்வொரு சூரிய கிரகணத்தின்போதும் இறைவனின் லிங்கத் திருமேனியானது பார்வதி தேவியின் வண்ணமான பச்சை நிறத்தை அடைந்து விடும். கிரகண காலம் முடிந்தவுடன் மீண்டும் தன்னுடைய பழைய நிறமான கிருஷ்ண வண்ணத்தை, அதாவது கருமையை அடைந்து விடும்.
உண்மையில் கிருஷ்ண நிறம் என்பது நாம் நினைக்கும் கருப்பு நிறம் கிடையாது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள். கிருஷ்ண பகவானின் திருமேனியை தரிசிக்கும் பாக்கியம் பெற்ற யோகிகளும் சித்தர்களும் அதைப் பொன்னிறம் என வர்ணிக்கிறார்கள். அதை நமக்குப் புரியும் வண்ணம் பீதாம்பர தாரி என்று வர்ணிக்கிறார்கள். பொன்னிற மஞ்சள் ஆடையை அணிந்தவன் என்று ஆழ்வார்கள் பாடுவதன் உள் அர்த்தம் இதுவே.
எப்படி கறுப்பான வைரம் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு நிலையில் ஜொலிக்கிறதோ அது போலவே பரமாத்மாவின் கிருஷ்ண வண்ணமும் நாம் கற்பனை செய்ய முடியாத பொன்னிறமாகும்.
அல்லித்துறை சிவத்தலத்தில் கிரகண காலங்களில் இவ்வாறு லிங்கத் திருமேனியின் வண்ணம் மாற்றம் கொள்வது ஏன் ?
இதற்குப் பின்னால் ஆயிரமாயிரம் தெய்வீக இரகசியங்கள் உண்டு. மனிதர்கள் கணக்கில் சூரிய கிரகணத்தின்போது சந்திரனின் நிழல் சூரிய கிரகத்தின்மேல் விழுகிறது. அதனால் சூரியனின் மேற்புறம் கிரகண காலத்தில் கருமை நிறம் அடைந்து பூமியில் விழும் சூரிய கிரணங்களும் மாறுபாடு அடைகின்றன என்பதே.
இவ்வாறு சூரியனும் சந்திரனும் ஒருவருக்கொருவர் நெருங்கினால் சூரிய சக்திகள் சந்திரனுக்கும் சந்திர சக்திகள் சூரியனுக்கும் பரிமாறப்படும் அல்லவா ? அதனால் சூரியன் சந்திரனாகவும் சந்திரன் சூரியனாகவும் கிரகண காலத்தில் மாறி நிற்பார்கள். இதைத்தான் அல்லித்துறை சிவாலய லிங்கத் திருமேனி தெளிவுபடுத்துகின்றது. சூரிய சக்திகளுடன் திகழும் சிவபெருமான் பார்வதியாகவும், சந்திர சக்திகளுடன் திகழும் பார்வதியானவள் சிவனாகவும் அருளாட்சி செலுத்துவார்கள்.
இந்த அற்புத சிவ சக்தி லீலைகள் அரங்கேறும் திருத்தலமே அல்லித்துறை சிவாலயமாகும்.
இவ்வாறு ஈசனின் இட பாகம் பெற்ற பார்வதி தேவி முதன் முதலில் எம்பெருமானின் இட பாகத்தில் எழுந்தருளியபோது இறைவன் தன்னுடைய  லிங்கத் திருமேனியை சாய்த்து பார்வதி தேவியின் வலது தோளில் சாய்ந்து திருக்காட்சி அளித்தானாம். அந்த தெய்வீக திருக்காட்சியை காணும் பேறு பெற்றவரே அகத்திய மாமுனி ஆவார்.
ஆதி காரண சூட்சும சிவ சக்தி மங்கள திருக்கோலம் என்று சித்தர்களால் புகழப் பெறும் இந்த தெய்வீக தரிசனம் பெற்றவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் என்று இடியாப்ப சித்த ஈசன் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளிடம் அறிவித்தாராம்.
திருக்கயிலாய வாசிகளான யோகிகளுக்குக் கூட இந்த உருஅருவ திருஉருவ தரிசனம் அரிதிலும் அரிது என்றால் இதன் தெய்வீக மகிமைகளை எப்படி வார்த்தைகளால் வர்ணிக்க இயலும்.
இந்த சிவ சக்தி திருமண வைபவத்தை ஒரு முறை படித்தாலோ கேட்டாலோ ஆயிரம் பிறவிகள் மாயமாகும் என்று சித்த கிரந்தங்கள் இந்த மங்கள மகாத்மியத்தை புகழ்ந்து கூறுகின்றன.

தியாகச் செம்மல் திருநீலகண்டர்

சிவ சக்தி ஐக்கியத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றோர் வைபவத்தையும் விவரிக்கிறோம்.
”எம்மைத் தீண்டாதீர் திருநீலகண்டத்தின் மேல் ஆணை” என்று திருநீலகண்டரின் மனைவி எம்பெருமான் மேல் ஆணையிட்டுக் கூறியதால் அன்று முதல் திருநீலகண்டர் எந்தப் பெண்ணையும் மனதால் கூடத் தீண்டாமல் சிவ லோகப் பதவியை அடைந்தார் என்பது நாம் அறிந்ததே.
இதன் பின்னால் அமைந்த தெய்வீக இரகசியங்களை ஒரு சிலரே அறிவர். திருநீலகண்டர் வெறுமனே காமத்தை மட்டும் அடக்கியவராய் திகழ்ந்தார் என்பது கிடையாது. அவர் சதாசர்வ காலமும் சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு இந்த உலக ஜீவன்களை அழிவிலிருந்து காப்பாற்றி உத்தம தியாகராஜனாய் மலர்ந்த அந்த தியாக புராணத்தையே உடலிலும் மனதிலும் உள்ளத்திலும் நிறுத்தி சதாசர்வ காலமும் வழிபட்டு வந்தார் என்பதால்தான் 63 நாயன்மார்களில் முதல் நாயன்மாராக சுந்தர மூர்த்தி நாயனார் அவரை வாழ்த்திப் பாடுகின்றார்.

திருநீலகண்டர் என்பது அவருக்கு தாய் தந்தையர்கள் இட்ட பெயர் கிடையாது. சதாசர்வ காலமும் அவர் எம்பெருமானின் திருநீலகண்டத்தையே தியானித்து வந்ததால் அவர் திருநீலகண்டர் என்ற காரண பெயரைப் பெற்றார்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி பெருங்குடி

நீல வண்ணம் என்பது சுக்ரனுக்கு உரியதுதானே. தான் பெண் சுகத்தை தியாகம் செய்திருந்தாலும் சதாசர்வ காலமும் உலகத்திலுள்ள தம்பதிகள் அனைவரும் களத்திர நாயகனான சுக்கிர பகவானின் அருளால் ஒற்றுமையாக வாழ வேண்டும் என நீலகண்ட தியானத்தில் இந்த தம்பதி ஒற்றுமை என்ற கோரிக்கையையும் இறைவனின் திருப்பாதங்களில் வைத்து தியாகச் செம்மலாய் வாழ்க்கை நடத்தினார்.
எனவே எம்பெருமான் இரண்டுவிதமான அனுகிரகங்களை திருநீலகண்ட நாயனாருக்கு அருளினார். இல்லற சுகத்தை தியாகம் செய்ததால் திருநீலகண்டரையும் அவரது இல்லாளையும் இளமைப் பருவத்தை மீண்டும் பெறுமாறு செய்தார். அடுத்து வரும் அவர்கள் தெய்வீக வாழ்க்கையில் தம்பதிகள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ ஒரு தெய்வீக ஏற்பாட்டையும் அவர்களுக்கு அளித்தார் நீலகண்ட நாயகன்.
திருநீலகண்டர் களிமண்ணால் திருவோடுகள் செய்து அதை சன்னியாசிகளுக்கு அளித்து சேவை செய்து வந்தார் அல்லவா ? எம்பெருமான் அவர்களுக்கு புனர்வாழ்வை அளித்து மறைந்தபோது திருநீலகண்டரிடம் தான் ஏற்கனவே கொடுத்து மறைந்துபோன அந்த திருவோட்டை மீண்டும் அளித்தார். இறைவன் கையில் உள்ளது பிரமனின் ஐந்தாம் சிரம்தானே.
திருநீலகண்டர் அந்த ஐந்தாம் சிரமான இறைவன் அளித்த பிரம்ம கபாலம் என்னும் திருவோட்டைப் பெற்றதால் அவர் எம்பெருமானுக்கு இணையான சிவபதவியைப் பெற்றார். அவர் கையில் ஜொலித்த பிரம்ம கபாலத் திருவோடு இப்போது அதிஅற்புத சுக்ர சக்திகள் நிறைந்த ஈரிதழ் திருவோடு என்னும் திருவோட்டுத் தேங்காய் மூலிகையால் கமழும் திருவோடாக மின்னியது.
ஈசன் அளித்த அந்த திருவோட்டுடன் இந்தியா, இலங்கை, தாய்லாந்து போன்ற பல நாடுகளுக்கும் தம்பதி சமேதராய் திருயாத்திரை சென்று அங்குள்ள திருக்கோயில்களில் எல்லாம் திருவோடு என்னும் மூலிகை மரத்தை நிலைபெறச் செய்தார் திருநீலகண்டர்.
இங்கு உலகெங்கும் காணும் திருவோடு என்னும் மூலிகை மரம் திருநீல கண்ட நாயனாரால் அளிக்கப்பட்டதே.
இறைவன் அருளால் பிரம்மாவின் படைப்புச் சக்தியை வரமாகப் பெற்றதால் திருநீலகண்டர் விதை, கன்று ஏதும் இல்லாமல் ஆயிரக் கணக்கான திருத்தலங்களில் திருவோடு என்னும் மூலிகையை உருவாக்கும் அற்புத திருப்பணியை இறையருளால் நிறைவேற்றி இறுதியில் சிவஜோதியில் கலந்தார்.
திருநீலகண்டர் எம்பெருமானிடம் திருவோட்டு மூலிகையைப் பெற்று அதை முதன் முதலில் இந்த பூமண்டலத்தில் ஊன்றிய தலமே பெருங்குடி சிவத்தலமாகும். தான் சிவஜோதியில் தம்பதி சகிதமாக இரண்டற இணையும் முன் எம்பெருமான் அளித்த திருவோட்டை பெருங்குடி தலவிருட்சமான திருவோட்டு விருட்சத்திடமே அர்ப்பணித்து விட்டு கைலை அடைந்தார் என்பது இதுவரை நீங்கள் அறியாத அற்புத ஆன்மீக இரகசியமாகும்.
திருவோடு என்னும் மூலிகையை சித்தர்கள் நவவியாகரண மூலிகை என்றும் நவஜோதி மூலிகை என்றும் நவசக்தி மூலிகை என்றும் நவகிரக மூலிகை என்றும் குறிப்பிடுகிறார்கள்.
குருவிற்கு மூன்று சுக்ரனுக்கு ஆறு என்று நவகிரகங்களுக்கு உரிய எண்கள் உண்டு. அது போல நவகிரகத்திற்கு உரிய எண்கள் அனைத்தும் திருவோட்டு மூலிகையில் அடக்கம்.
உதாரணமாக, திருவோட்டு மரத்தின் உயரம் 90 அடி (செவ்வாய் சக்தி), இலையின் அகலம் 12 அடி, நீளம் 21 அடி (குரு சக்தி), பூவின் நீளம் 6 அடி (சுக்ர சக்தி), 100 ஆண்டுகள் சூரிய சக்தியைப் பெற்ற பின்னரே பூக்கள் உருவாகும் (சூரிய சக்தி), திருவோட்டின் பருப்பு ஈரிதழ் என்னும் இரண்டு விதமான மூலிகை சக்திகளை உடையது (சந்திர சக்தி).  

பச்சையா பசுமையா
வெள்ளையா வெளுப்பா

இதுவரை அறிந்த புராண வைபவங்களை ஊன்றிக் கவனித்தால் ஒரு இறை உண்மை உங்களுக்கு விளங்கும். இந்தப் பிரபஞ்சத்திற்கு அடிப்படையான சிவசக்தி அம்சங்களே பல்வேறு விதமான பலவித வண்ணங்களிலும் உலவி நம்மைக் காத்து இரட்சிக்கின்றன என்பதே நீங்கள் எளிதில் உணரக் கூடிய தெய்வீக இரகசியமாகும்.
அல்லித்துறை சிவத்தலத்தில் கிரகண காலத்தில் செந்தழல் வண்ணமான ஈசன் உறையும் சிவலிங்கம் பச்சை வண்ணத்தில் காட்சி அளிக்கும் என்று கூறினோம் அல்லவா ? அதுபோல் பால் வெள்ளை நிறத்தில் பொலியும் வெள்ளை வேம்பு மாரியம்மனும் பச்சை வண்ணத்தில் அருள் காட்சி தருவாள் என்பது ஒரு ஆன்மீக விந்தையாகும்.
கும்பகோணம் திருவாவடுதுறை அருகே மஞ்சள் ஆற்றங்கரையில் உள்ள வெள்ளை வேம்பு இலைகள் சூரிய கிரகண காலங்களில் பசுமை நிறங் கொண்டு பிரகாசிக்கும்.

ஈசன் அருளியபடி திருவோட்டுடன் ஒவ்வொரு திருத்தலத்திலும் திருவோட்டு மூலிகை சக்திகளை நிரவி வந்த திருநீலகண்டர் திருவாவடுதுறையில் உள்ள மஞ்சள் ஆற்றங்கரையில் வெள்ளை வேம்பு விருட்சத்தின் அடியில் தங்குகையில் அங்கு ஈசன் அசரீரியாய், ”இங்குள்ள வெள்ளை வேம்பு விருட்சமே நீ இதுவரை உணர்ந்த எம்முடைய ஈச ஜோதியின் சக்திப் பிரவாகமாகும்,” என்று தன்னுடைய சக்தி அம்சத்தையும் திருநீலகண்டருக்கு அனுகிரகமாய்ப் பொலிந்தார்.
எனவேதான் இன்றளவும் வேப்பிலையும் வேப்ப மரமும் அம்மன் சக்தியுடன் பொலியும் சிவ ஜோதி அம்சங்களாகப் புகழப்படுகின்றன.
பார்வதி திருக்கல்யாணம்
பார்வதி தேவிக்கும் எம்பெருமான் ஈசனுக்கும் கயிலையில் திருமணம் நடக்க இருந்தபோது அத்திருமணத்தில் பங்கேற்க இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளும் , மனிதர்கள், விலங்குகள், யோகிகள், கந்தர்வர்கள், பாம்புகள், மீன்கள் என அனைத்து உயிர்களுமே திருக்கைலாய மலையில் கூடி விட்டதால் வட புறம் தாழ்ந்து விட்டது.
பூமியின் சம நிலையை நிலைநாட்டுவதற்காக ஈசன் அகத்திய முனியை பூமியின் தென் பகுதிக்கு செல்லுமாறு பணித்தார் அல்லவா ? பார்வதி பரமேஸ்வரி மூர்த்திகளின் கல்யாணம் எப்போது எந்த யுகத்தில் நடந்தது என்ற கால நிர்ணயத்தை யாராலும் கூற முடியாது. அதனால் அந்த திருமண வைபவத்தின்போது கைலாயத்திற்கும் இன்றைய பாரத நாட்டின் தென் பகுதிக்கும் இடையே உள்ள தூரம் என்ன என்பதும் யாருக்கும் தெரியாது. சித்தர்கள் கணக்கில் மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் சொல்ல வேண்டுமானால், பார்வதி பரமேஸ்வர திருமண வைபவத்தின்போது திருக்கைலாயத்திற்கும் தென்பாரதத்திற்கும் இடையே உள்ள தூரத்தைக் கடக்க அகத்தியருக்கே 300 ஈச ஆண்டுகள் எடுத்துக் கொள்ளுமாம்.

மஞ்சளாறு திருவாவடுதுறை

தேவ ஆண்டைப் போல் கோடி மடங்கு யோகி ஆண்டு. அதைப் போல் கோடி மடங்கு ரிஷி ஆண்டு. அதைப் போல் கோடி மடங்கு சத்ய ஆண்டு. இவ்வாறு சென்று கொண்டே இருந்தால் கடைசியில் வருவது ஈச ஆண்டு. இந்தக் கணக்கு சித்தர்களுக்கு மட்டுமே புரியக் கூடியது என்பதால் அதை பற்றி நாம் மேலே விவரிக்கவில்லை.
இவ்வாறு நெடுங்காலம் பயணம் செய்து அகத்திய பெருமான் தென் பாரதத்திற்கு வருவது என்றால் எளிதில் நடக்கக் கூடியதல்லவே. இது குறித்து அகத்தியர் யாது செய்வதென்று திகைத்து நின்றபோது கைலையின் தென் பகுதியில் ஒரு பிரகாசமான ஒளி வெள்ளத்தைக் கண்டார்.

அப்போது ஈசனின் வாக்கும் அசரீரியாக ஒலித்தது. ”மகனே, அகத்தியா, இந்த ஒளி வெள்ளத்தில் பயணம் செய்து தென் மண்டலம் அடைவாயாக !”. எல்லையில்லா பிரமிப்புடன் அகத்தியர் அந்த ஒளி பிரவாகத்தைத் தீண்டிய மறுகணம் பெருங்குடி சிவாலயத்தில் லிங்கத் திருமேனி முன் நிற்பதை அறிந்தார்.
பேருவகையுடன் பெருங்குடி ஈசனைப் பணிந்து போற்றினார் அகத்தியமுனி. அனைவர் அகத்திலும் எழுந்தருளி உள்ள ஈசனான பெருங்குடி அகத்தீசன், ஈசனை தன் உள்ளத்தில் பதித்துள்ள அகத்தியனை தன் லிங்கத் திருமேனியான உள்ளத்தில் கவர்ந்திழுத்த திருத்தலமே பெருங்குடியாகும்.
அகத்திய மாமுனியை தென் திசைக்கு வரவேற்பதற்காக எம்பெருமான் ஈசனே தன்னுடைய திருமுடியை, நிமிர் புன்சடையை ஒரு இறையடியாருக்காக தாழ்த்தினார் என்றால் இதைவிட எம்பெருமானின் பணிவிற்கு இறை அடியார்களின் மேல் அவருக்கு உள்ள கருணையை எப்படி போற்றுவது ?

சங்கு சக்கர முத்திரை பொறிக்கும்
ஸ்ரீசரபேஸ்வரர் திருஅதிகை

சிவபெருமானின் இந்த ஈச பேரொளி பிரவாகத்தையே அடியார்கள் எல்லாம் பெருமுடி என்று போற்றி வணங்குகிறார்கள். முருகப் பெருமானோ, பிள்ளையார் அப்பனோ கூட, ஏன் பெருமாட்டி பார்வதி கூட இந்த பேரருள் பிரம்மாண்ட சிவஜோதியில் பயணம் செய்தது கிடையாது.
இறையருள் பெற்ற உத்தம சிவனடியார்கள் தாங்கள் திருக்கைலையில் பிரவேசிக்கும் முன் இந்த ஈச ஜோதியை தரிசனம் செய்யும் வாய்ப்பு பெறுகிறார்கள். அணுக்கத் தொண்டர் என்று சிவபெருமானுடன் அன்பினால் நெருக்கம் கொண்ட சுந்தர மூர்த்தி நாயனார் சுவாமிகள், ” தான் எனை முன்படைத்தான் .... ” என்ற தேவாரைப் பதிகத்தை ஓதியபோது இறைவனின் திருமுடியான பெருங்குடியிலிருந்து திருக்கயிலை வரை ஒளிப் பிரவாகமாக வீசியதை தரிசனம் செய்து பெரு மகிழ்ச்சி அடைந்தார்.
இறை அடியார்கள் மேல் எம்பெருமான் காட்டிய அன்பு அவரை நெக்குருகச் செய்யவே, அடியார்க்கு அடியாராக விளங்கிய சிவபெருமானை புகழ்ந்து ”தில்லை வாழ்அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் ... ” என்ற திருத்தொண்டத் தொகை பதிகத்தை பாடி சிவ கருணையில் மூழ்கித் திளைத்தார்.
அடியார்க்கு அடியார் சுந்தரர் என்றுதான் பலரும் நினைத்து வருகிறோம் ஆனால் அடியார்க்கு அடியவர் முழு முதற் பொருள் சிவன் ஒருவனே என்பதை இப்பூவுலகிற்கு அறிவித்த ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் மலரடிகளைப் போற்றி மகிழ்கிறோம்.
திருத்தொண்டர்களின் வரலாற்றை விளக்க வந்த சேக்கிழார் பெருமான் பெருங்குடியில் பொலிந்த பேரொளிப் பிழம்பை தரிசனம் செய்தபோது அந்த ஒளிப் பிழம்பிலிருந்து தோன்றி வீசிய ஒளிக் கிரணங்களே, ”உலகெலாம் உணர்ந்து ,,, ” என்ற வார்த்தைகளாய் திருக்கயிலை மேல் வீசின. இதையே முதல் அடியாகக் கொண்டு அப்பெருமான் பெரிய புராணத்தை உலகிற்கு அளித்து இறைத் தொண்டர்களின் பெருமைக்கு மேலும் ஒளி கூட்டினார்.
அப்பாடலில் வரும், ”அலகிற் சோதியன் ...” என்பதே பெருங்குடியிலிருந்து திருக்கயிலை வரை ஒளி வெள்ளமாய்ப் பிரகாசிக்கும் எல்லையில்லா சிவ ஜோதியாகும். 300 ஈச ஆண்டுகள் பயணம் செய்து அடையக் கூடிய ஒரு சிவத்தலத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் பெருங்குடி சிவ ஜோதி வியாபிக்கும் என்றால் அதன் தெய்வீக மகிமையை எப்படி வர்ணிக்க முடியும் ?
”தான் எனை முன் படைத்தான் ...” என்ற சுந்தரர் தேவாரப் பாடலை ஓதும்போது பெருங்குடி சிவஜோதியில் அகத்திய பெருமான் பயணம் செய்து பெருங்குடி அடைந்து அங்கு அருள் புரியும் ஈசனை வணங்கிப்  போற்றும் அற்புத திருக்காட்சியை கண் முன் கொண்டு வந்தால் அப்போது நிச்சயம் பெருங்குடி ஈசன் தனக்கு முன் அடியாரைப் “படைத்த” திருவருளை உணர்ந்து பேருவகை பெறலாம் என்பது உறுதி.

அல்லியங்கோதையின் அருட்பணி

இரண்யாட்சனை வதம் செய்வதற்காக பெருமாள் எல்லையற்ற கோபக் கனல் உருவுடன் நரசிம்ம மூர்த்தியாய் எழுந்தருளினார் அல்லவா? இவ்வாறு அக்னி சக்திகளுடன் பொலிந்ததால் நரசிம்மமூர்த்தியை லட்சுமி தேவியானவள் பிரிந்து இருக்க வேண்டியதாயிற்று. அதனால் சுவாமியின் அக்னி சக்தியை லட்சுமி தேவியால் தாங்க முடியவில்லை என்று மனித அளவில் நினைக்கக் கூடாது.
குழந்தைகள் ஏதாவது தவறு செய்து விட்டால் அப்போது மிகுந்த கோபத்துடன் அவர்களைத் தண்டிப்பது போல் கணவன்மார்கள் நடிப்பது உண்டு. ஆனால், அந்த நடிப்பு முழுமையாக இருக்க வேண்டும் என்றால் மனைவி அங்கு இருக்கக் கூடாது. அதனால் பெரும்பாலான குடும்பங்களில் இவ்வாறு குழந்தைகளைக் கண்டிக்கும்போது தாய்மார்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவார்கள்.
இது பெரும்பாலான குடும்பங்களில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சி. இது இறை மூர்த்திகளிடமும் சித்தர்களின் சாம்ராஜ்யங்களிலும் கூட நடைபெறும் நிகழ்வுகள்தான்.

அகத்தியர் பெரிய வாத்யாரிடம் (ஸ்ரீஇடியாப்ப ஈசர்) ஒரு முறை இவ்வாறு கூறினாராம், ”நைனா, அடியேன் எப்போதாவது சிவபெருமானை பார்க்க வேண்டும் என்பதற்காக கைலாயம் செல்வதாக இருந்தால் அவர் அம்மாவுடன் இருக்கும் நேரமாகப் பார்த்துதான் செல்வேன். அவர் தனியாக, ஏகாந்தமாக இருக்கும் நேரத்தில் செல்வதில்லை. ”
”காரணம் சுவாமி தனியாக இருக்கும்போது சென்றால் அடியேன் ஏதாவது தப்பு செய்திருப்பேன் அல்லவா ? அது சுவாமிக்குத் தெரிந்து விடுவதால், அடியேனுக்கு சாபம் கொடுத்து விட்டால் என்ன செய்வது ? அதற்காகத்தான் அவர் அம்மாவுடன் இருக்கும் நேரத்தில் செல்வது.”
”அப்போது அடியேன் செய்த தப்பு சுவாமிக்கு தெரிய வந்து அடியேனைச் சபிக்க நினைத்தால் அம்மா பக்கத்தில் இருந்து பேசாமல் இருப்பாளா ? அவள் ஈசனிடம் சுவாமி, அகத்தியன் நம்ம குழந்தை ஏதோ தெரியாமல் செய்து விட்டான், இதற்காக கோபப்பட வேண்டாம். அன்பு வார்த்தை கூறி அனுப்பி விடுங்கள், என்று கூறி நம்மை காப்பாற்றி விடுவாள்.”
ஸ்ரீஅகத்திய பெருமான் நிலையே இப்படி என்றால் அப்புறம் மற்றவர்கள் கதி என்ன ? அதனால்தான் இறை மூர்த்திகள் அசுரர்களை சம்ஹாரம் செய்யும்போது தனியாகவும் பக்தி உடைய அடியார்களுக்கு அனுகிரகம் செய்ய செல்லும்போது தம்பதி சகிதமாகவும் எழுந்தருள்வது.
நமது சற்குரு நாதர் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பார்வதி பரமேஸ்வரன், ராதா கிருஷ்ணன், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், சோமாஸ்கந்தர், மீனாட்சி சுந்தரேசர், லட்சுமி நாராயணர் போன்ற இறைத் தம்பதிகளின் வழிபாட்டை வலியுறுத்துவது இக்காரணம் பற்றியேதான்.
அதுபோல நரசிம்ம மூர்த்தியிடமிருந்து லட்சுமி தேவி பிரிந்து தவம் இயற்றியதற்கு கோடி கோடி காரணங்கள் உண்டு. அவற்றில் பெருங்குடியுடன் தொடர்புடைய சில புராண வைபவங்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.
கணவன் என்பது சூரிய சக்தியையும்ம் மனைவி சந்திர சக்தியையும் குறிக்கும். இறை மூர்த்திகளும் இந்த மானிட வரம்பு நிலைக்கு உட்பட்டு பல காரியங்களை நிறைவேற்றுவது உண்டு.
பெருமாளைப் பிரிந்த லட்சுமி தேவி அந்த காலத்தில் பல அற்புதமான தவ வழிபாடுகளை நிறைவேற்றினாள். அவ்வாறு பெற்ற தெய்வீக புண்ணிய சக்திகளை எல்லாம் மீண்டும் நரசிம்ம மூர்த்திக்கே அர்ப்பணித்து விட்டு லட்சுமி நாராயணப் பெருமாளாய் அனைவருக்கும் திருக்காட்சி நல்கிய இடமே பெருங்குடி சிவத்தலமாகும்.

ஸ்ரீகருடாழ்வார்
பெருமாள் தலம் அல்லித்துறை

அவ்வழிபாடுகளில் ஒன்றே லட்சுமி தேவி அல்லித்துறை சிவாலயத்தில் இயற்றிய வழிபாடுகளாகும். திருஅண்ணாமலை, வடுகூர், காஞ்சிபுரம், திருத்தனி, மதுரை என உத்தம தம்பதிகள் சேர்ந்து வாழ உறுதுணை புரியும் அற்புத திருத்தலங்கள் பல இருந்தாலும் லட்சுமி தேவி அல்லித்துறை சிவாலயத்தை தேர்ந்தெடுப்பதற்கு பல தெய்வீக விளக்கங்கள் உண்டு.
அல்லித்துறை மூல மூர்த்தியின் திருநாமமே பார்வதி ஈஸ்வரன் என்ற சிவசக்தி அம்சங்களுடன் பொலிவதே தலையாய காரணமாகும்.
கிரகண காலத்தில் இத்தல லிங்கத் திருமேனி பச்சை நிறத்துடன் பொலிவது சிவபெருமான் பார்வதி தேவி ஒன்றிய சிவசக்தி ஐக்கியத்தைக் குறிப்பதாகும்.
சங்க காலப் பாடல்களும் திருக்குறள் பாக்களும் காதலனைப் பிரிந்த காதலியின் உடல் பசலை நிறத்தை அடைகிறது என்று குறிக்கிறது. இவ்வாறு பசலை நிறம் என்பது கணவனுடன் இணைந்த காதலியின் மன நிலையைக் குறிப்பதால் அத்தகைய ஈருடல் ஒரு மனம் என்ற நிலையை பூரணமாகப் பெற லட்சுமி தேவி அல்லித்துறையை தேர்ந்தெடுத்ததில் வியப்பென்ன ?
தாமரை மலர் சூரிய சக்திகளுடனும் அல்லி மலர் சந்திர சக்திகளுடனும் பொலிபவை. இரண்டுமே தாமரை என்ற மலர்ப் பிரிவில் அடங்கினாலும் ஆண்களின் விழிகள் சூரிய சக்தியை உடையதால் பெருமாளை செந்தாமரைக் கண்ணன் என்றும் பெண்களின் விழிகள் சந்திர சக்திகளுடன் பொலிவதால் லட்சுமி தேவியை குவளைக் கண் விழியாள் (அல்லியங்கோதை) என்று வர்ணிக்கிறோம்.
லட்சுமி தேவியானவள் பகலில் சூரிய சக்திகள் நிறைந்த தாமரை மலர்களால் அல்லித்துறை ஈசனை அர்ச்சித்து வழிபட்டாள். முன்னிரவில் அல்லி மலர்களால் எம்பெருமானை வாழ்த்தி வழிபட்டாள் தேவி.
நள்ளிரவில் பகலில் மலரும் நீலோத்பல மலர்களால் ஈசனை வழிபட்டு பிரார்த்தித்தாள் லட்சுமி தேவி. இவ்வாறு பகலில் மலரும் அல்லி தற்போது எகிப்து நாட்டில் பிரபலமாகக் காணப்படுகின்றன.
லட்சுமி தேவி வழிபாட்டின் பின்னணியில் உள்ள ஆன்மீக ரகசியங்கள் என்ன ?
நரசிம்ம மூர்த்தி அளப்பரிய உக்ர அக்னி சக்திகளுடன் திகழ்ந்தார். அந்த உக்ர சக்திக்கு வளம் அளிப்பதற்காக தாமரை மலரால் வழிபட்டாள் லட்சுமி தேவி. அது எப்படி என்றால் சூரிய கிரணங்களில் உள்ள வெப்பம் என்று அக்னி சக்தி பலவிதமான கொடிய எண்ணங்களையும், வக்ர புத்தியையும் மாய்க்க வல்லது. வினைகளைத் தீர்க்க வல்லது. இத்தகைய அனுகிரக சக்திகள் தாமரை மலர் வழிபாடுகளால் கிட்டுகிறது.

ஸ்ரீகோகுல கிருஷ்ணன்
திருஅண்ணாமலை

அல்லி மலரால் இறைவனை லட்சுமி தேவி வழிபட்டபோது நரசிம்ம மூர்த்தி கோபம் சாந்தமடைந்து அவர் சாந்த சக்திகளை உலகில் பரப்புகின்றார். கொதிக்கும் மனம் அடங்கும்போது மனம் அமைதி பெறும். சிந்தனை தெளிவாகும். உள்ளம் இறைவன் மேல் சிந்தனையில் ஒருமுகப்படும். இது அல்லி மலர்களால் இறைவனை அர்ச்சிக்கும்போது கிட்டும் அனுகிரகம்.
பகலில் மலரும் அல்லி மலர்களால் அல்லித்துறை ஈசனை லட்சுமி தேவி அர்ச்சித்து வழிபட்டபோது சிவசக்தி ஐக்கியம் என்னும் மங்கள மாங்கல்ய சக்திகள் தோன்றி பிரபஞ்சத்தில் வியாபித்தன.
பகலில் மலரும் அல்லி மலர்கள் நைல் நதி போன்ற சில குறிப்பிட்ட ஆறுகளில் மட்டுமே கிட்டும் என்றாலும் நீலோத்பல அல்லி மலர்களால் ஈசனை அர்ச்சித்தாலும் மேற்கண்ட சிவசக்தி ஐக்கிய சக்திகளை சாதாரண மக்களும் வழிபட்டு பலன் அடைவதற்காக திருஅண்ணாமலை கிருஷ்ண கோகுலம் என்ற தரிசனப் பகுதியில் தவமியற்றி தன்னுடைய தவப் பயனை அளித்த பெருந்தகையே ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள்.
எத்தகைய பிரிவினை சக்திகள் குடும்பத்தை ஆட்டிப் படைத்தாலும் சிவராத்திரி அன்று இரண்டாம் சாமத்தில் அல்லித்துறை சிவாலயத்திலோ அல்லது தேய்பிறை அஷ்டமி திதி அன்று திருஅண்ணாமலை கிரிவலப் பகுதியில் சிவராஜ சிங்க தீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீகிருஷ்ண பகவானின் சன்னதியிலோ அர்ச்சனை ஆராதனைகள் மேற்கொண்டால் தம்பதிகள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள் என்பது உறுதி.
இவ்வாறு அல்லித்துறை ஈசனை பல யுகங்கள் மூவகை தாமரை மலர்களால் வழிபட்ட லட்சுமி தேவியின் பிரார்த்தனைகளால் மகிழ்ந்த ஈசன் தன்னுடைய சரபேஸ்வர அவதாரத்தின்போது இந்த மூவகை தாமரை சக்திகளையே நரசிம்ம மூர்த்திக்கு சங்கு சக்கர சக்திகளாகவும், நாம சக்திகளாகவும் இறைவன் அளித்து அனுகிரகம் செய்தார்.

அல்லித்துறை பெருமாள் தலம்

அந்த அற்புத மூவகை தாமரை திரிபுண்ட்ரம் என்னும் சக்திகளுடன் பொலியும் லட்சுமி நரசிம்ம மூர்த்தியை இன்றும் அல்லித்துறை தலத்தில் தரிசித்து அனுகிரகம் பெறலாம். அல்லித்துறை சிவாலயத்தில் பொலிந்த லட்சுமி நரசிம்ம மூர்த்தி தற்போது தனிக் கோயிலில் எழுந்தருளி உள்ளார் என்பதை பக்தர்கள் அறிந்து வழிபட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மூவகை தாமரை சக்திகள் என்பவை ஒவ்வொரு மனிதனின் உடலிலும் வியாபித்து உள்ளதுதான். இந்த சக்திகளை உபாசனை செய்து நன்னிலை பெறுவதற்காகவே மனிதன் உடலெங்கும் விபூதிப் பட்டைகளை அணிந்து கொள்வதும், நாமங்களை தரித்துக் கொள்வதும்.
விபூதி அணிந்து கொள்ளும்போது உடலின் வல பாகத்தில் இட்டுக் கொள்ளும் விபூதிப் பட்டைகள் சூரிய சக்தியையும், இடப் பாகத்தில் இட்டுக் கொள்ளும் விபூதிப் பட்டைகள் சந்திர சக்தியையும், நெற்றியில் இடும் குங்குமமானது சிவசக்தி ஐக்கிய சக்திகளையும் மேம்படுத்துகின்றன.
இதுவேதான் நாமம் இடும்போதும் நிகழ்கின்றது. நாம் உடலில் இடும் பன்னிரெண்டு நாமங்களுமே இந்த மூவகை சக்திகளுடன் செயல்படுகின்றன என்பது ஓர் அற்புத தெய்வீக இரகசியமாகும்.
நாமத்தில் உள்ள வலது கோடு சூரிய சக்தியையும், இடது கோடு சந்திர சக்தியையும், நடுக்கோடு சிவசக்தி ஐக்கிய சக்தி சக்திகளையும் குறிக்கிறது. மேலும் திருமண் என்னும் நாமத்தில் எலுமிச்சை என்னும் மஞ்சள் நிற குரு சக்திகளும், வெண்காரம் என்ற சந்திர சக்திகளும் சேர்ந்து சிவப்பு என்ற குங்கும வண்ணத்தை, கஜகேசரி சக்திகளை உருவாக்குகின்றன. இதுவே செந்தாமரைக் கண்ணனின் நிறமும் செந்தழல் மேனியனின் உடல் வண்ணமும் அல்லவா ?  
இவ்வாறு நாமத்தை வழிபடும்போது அது வானத்திலிருந்து நோக்கினால் எப்படி காட்சி அளிக்கும் என்று தியானித்து நோக்கினால்தான் நாமத்தின் சூரிய சந்திர சிவசக்தி ஐக்கிய சக்திப் பரிமாணங்கள் கண்ணுக்கும் எண்ணத்திற்கும் புலப்படும். இம்முறையில் அமைக்கப்பட்டதுதான் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம்.

எங்கே பறக்குது வெள்ளை காக்கை ?

சனி பகவான் (சனீஸ்வரன் அல்ல) ஒரு முறை வான மார்கமாக ஐயர்மலையை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஒரு நாட்டு விமானம் மற்றோர் நாட்டின் எல்லைக்குள் செல்லும் முன் தங்களைப் பற்றி விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்பது நாடுகளுக்கு இடையே உள்ள சட்டம். இல்லாவிட்டால் அந்த விமானத்தை அடுத்த நாட்டினர் தாக்கும் அபாயம் இன்றும் உண்டு.
மனிதச் சட்டமே இவ்வாறு இருக்கும்போது எம்பெருமான் ஈசனின் திருத்தலத்தின்மேல் சனி பகவானின் வாகனம் அனுமதியின்றி பறப்பது தவறு அல்லவா ? எனவே சனி பகவானின் காக்கை வாகனம் ஐயர்மலை எல்லைக்கு வந்தபோது அத்தலத்திற்கு உரிய அதிகார நந்தி மூர்த்தி சனி வாகனத்தைப் பறிமுதல் செய்து விட்டார்.
இதைப் பற்றி ஸ்ரீஇடியாப்ப சித்தர் குறிப்பிடும்போது, “சுவாமி மேல பறக்குறதுக்கு எந்த தேவ விமானத்துக்கும் பெர்மிஷன் இல்லடா. அப்டீங்கறப்ப காக்கா மட்டும் எப்படி பறக்கலாம். அதுனால அதிகார நந்தி அத சீஸ் (seize) பண்ணி வச்கிட்டார்,” என்று விளையாட்டாக சிறுவன் வெங்கடராமனிடம் கூறினாராம்.
ஆனால், தண்டிப்பது மனித குணம், மன்னிப்பது கடவுள் குணம் அல்லவா ? எனவே தவறு செய்த சனி மூர்த்தியைத் தண்டிக்காமல் மேலும் பல நன்னிலையை அடைய உரிய தவமுறைகளை மேற்கொள்ளுமாறு ஐயர்மலை அதிகார நந்தி கூறவே தன் குருவான காகபுஜண்ட மகரிஷியை சரணடைந்தார் சனி பகவான்.

ஸ்ரீசனி பகவான் பெருங்குடி

இங்கு ஓரு சுவையான செய்தி. காகம் என்பது மனிதர்கள் நினைப்பது போல கறுப்பு நிறம் உடையது அல்ல. உண்மையில் சிருஷ்டியின் தொடக்கத்தில் இருந்த காக்கைகள் வெள்ளை நிறத்தில்தான் இருந்தன. பிரம்மா காக்கைகளை வெண்ணிற காக்கைகளாகத்தான் படைத்தார். கேஸ்பர் (Casper Angel) என்ற தேவதையின் வெண்ணிறத்தைக் கொண்டவையே காக்கைகள்.
அப்போது காக்கைகள் தேவ லோகங்களுக்குச் செல்லும் வெண்ணிற தேவதைகளாய் இருந்தன. திரேதா யுகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது ஒரு காக்கை பொய் சொல்லி விட்டதால் அந்த இனத்தைச் சேர்ந்த காக்கைகள் மட்டும் கறுப்பு நிறத்தைப் பெற வேண்டியதாகி விட்டது.
எனவே இன்று நாம் பார்க்கும் கறுப்பு காக்கைகள் சாபம் பெற்று தேவலோகம் செல்ல முடியாத காக்கைகள் என்றும் வெள்ளைக் காக்கைகள் தேவலோகம் செல்லக் கூடிய காக்கைகள் என்றும் தெரிந்து கொள்ளலாம். ஆனால், எல்லா புறாக்களும் அவை எந்த வண்ணத்தில் இருந்தாலும் தேவ லோகம் வரை செல்லக் கூடிய தகுதி உடையவை ஆகும்.
அதுபோல காக்கைகளின் குலகுருவான காக்கை வடிவில் உள்ள காகபுஜண்ட மகரிஷி தூய வெள்ளைக் காக்கை வடிவில்தான் அனைவருக்கும் காட்சி அளிப்பார். காகபுஜண்ட மகரிஷியின் உத்தம பத்தினியான நற்பவி தேவியின் நாமத்தைச் சொன்னாலே போதும் வியாதிகள் எல்லாம் பறந்தோடி விடும். அத்தகைய நோய் நிவாரண சக்திகள் பூரித்து விளங்கும் நாமமே நற்பவி என்பதாகும்.
மருத்துவர்கள் வெள்ளைச் சீருடைகளை அணிந்து பணியாற்றும்போது அவர்கள் பெறும் அற்புத நோய் நிவாரண சக்தியின் பின்னணி என்ன என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும் அல்லவா ?
மருத்துவர்களும் மருத்துவத் துறையில் பணியாற்றுபவர்களும் எந்த அளவிற்கு தூய வெண்ணிற பருத்தி ஆடைகளை அணிகிறார்களோ அந்த அளவிற்கு நோய் நிவாரண சக்திகள் அவர்களிடத்தில் பல்கிப் பெருகும் என்பது உண்மை.

வாகன சக்திகள்

மனிதர்களின் வாகனத்திற்கும் இறை மூர்த்திகளின் வாகனங்களுக்கும் எவ்வளவோ வித்தியாசங்கள் உண்டு. மனிதர்களைப் பொறுத்தவரை வாகனம் என்பது அவர்களுக்கு ஒரு வசதி அவ்வளவே. ஆனால், இறை மூர்த்திகளைப் பொறுத்தவரை வாகனம் என்பது அவர்களின் ஒரு அங்கமே.
வாகனத்தை இழத்தல் என்பது உடலின் அங்கமான கை, கால் போன்ற உறுப்புகளையே இழந்த ஊன நிலையைக் குறிப்பதால் வாகனம் இழந்த சனி பகவான், ஊனத்துடன் எங்கு செல்வார், எப்படிச் செல்வார் ?
வாகனத்தை இழந்த சனி பகவான் மனிதனைப் போல் தரையில் தொப்பென்று விழுந்தார். தான் விழுந்த இடத்தை சுற்றும் முற்றும் பார்த்தார். சுற்றி எதுவும் தெரியாத நிலையில் தன் குலகுருவான காகபுஜண்டரை மனமுருகி வேண்டினார்.
காகபுஜண்ட மகரிஷி தரிசனம் அளித்து, “சனி மூர்த்தியே, வருந்தாதே, நீ அடுத்து அடைய வேண்டிய அற்புத இறை நிலைகள் உண்டு. சாதாரண கிரக மூர்த்தியாக இருக்கும் நீ ஈஸ்வர நிலைக்கு உன்னை உயர்த்திக் கொண்டு சனீஸ்வர மூர்த்தியாக விளங்குவதற்காக எம்பெருமானால் அருளப்பட்டதே இந்த நிலையாகும். ”

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் பெருங்குடி

”நீ பூமியில் விழுந்த இடம் எம்பெருமான் ஸ்ரீபெருங்குடி அகத்தீசன் என்ற நாமத்துடன் விளங்கும் திருத்தலமாகும். தியாகத் திருத்தலம். இதை மனதில் தியானித்து இத்தலத்தில் தவம் இயற்றுவாயாக,” என்று வழிகாட்டி மறைந்தார் காகபுஜண்ட மகரிஷி.
தன்னுடைய குருநாதருடைய திருவார்த்தைகளை தியானித்தவராய் தான் நின்ற இடத்தைச் சுற்றி நோக்கினார். ஆனால், அங்கு எந்த இறை மூர்த்தியும் அவர் கண்ணில் படவில்லை. இருப்பினும் தன்னுடைய குருநாதர் கூறிய வார்த்தைகள் அவர் மனதில் எதிரொலித்தன, ”தியாகத் திருத்தலம்”.
சனி பகவான், “தியாகத் திருத்தலம், தியாகத் திருத்தலம்,” என்று தன்னுடைய குருநாதர் கூறிய வார்த்தைகளையே ஒரு உபதேச மந்திரம் எனக் கொண்டு தியானித்து வரலானார்.
யுகங்கள் கடந்தன. சிறிது சிறிதாக சனி பகவானுக்கு பெருங்குடி திருத்தல இறை மூர்த்திகளின் தரிசனங்கள் ஒவ்வொன்றாக கிடைக்க ஆரம்பித்தன. முதலில் அவருக்குக் கிடைத்தது பிள்ளையார் தரிசனமா, இல்லை.
முதலில் சனி பகவானுக்கு கிடைத்தது பல வண்ணங்களில் ஜொலித்த ஒரு நாயின் தரிசனம். சற்றே யோசித்தார் சனி பகவான். இத்தனை யுகங்கள் தியானத்திற்குப் பின் நமக்கு கிடைத்தது ஒரு சாதாரண நாயின் தரிசனம் என்றால் இந்த தலத்தில் ஒரு இறை மூர்த்தியை தரிசிப்பது என்றால் இது உண்மையிலேயே எத்துணை மகத்துவம் பொருந்திய தலமாக இருக்க வேண்டும். இனி நமது வாகனத்தைப் பற்றிய கவலை வேண்டாம். அற்புதமான இந்த இடத்தில் நாம் நிற்பதே நமது குருவின் கருணை. அதுவே நமக்குப் போதும். அந்த குருவின் கருணையைக் காட்டிய இந்த நாய்தான் நம்முடைய குரு என்று நினைத்து சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து அந்த நாயை வணங்கினார்.
ஆனால், அங்கு நடந்தது என்ன ?
சனி பகவான் குருவின் மேல் நன்றிப் பெருக்கால் தொழுது எழுந்தபோது அந்த நாயைக் காணவில்லை. என்ன ஆச்சரியம். அங்கே ஓர் அற்புத ஜோதி விண்ணுக்கும் மண்ணுக்கும் வியாபித்து நின்ற தெய்வீக காட்சியே அவருக்கு கிடைத்தது.
அதை விட ஆச்சரியம் அங்கே ஜோதியாய் நின்ற தேவர் சனி பகவானை குனிந்து வணங்கினார். அவர் தொடர்ந்து சுவாமி, ”கால பைரவரின் லோகத்திலிருந்து வரும் இறை தூதுவனே அடியேன். காலம் கனிந்தால் கறுப்பு கனியும் என்ற செய்தியை தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதே அடியேனுக்கு அளிக்கப்பட்ட கட்டளை,” என்று கூறி சட்டென மறைந்து விட்டார் ஜோதி வடிவில் மின்னலாய்த் தோன்றி மறைந்த தேவ மூர்த்தி.

ஸ்ரீவலஞ்சுழி விநாயகர்
அவளிவநல்லூர்

ஆரம்பத்தில் சனி பகவானுக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் நம்மை நல்வழியில் நடத்தவே இறைவன் நமக்கு இத்தகைய தவ முறைகளை எல்லாம் அளித்து வருகிறான் என்று உணர்ந்து தெளிந்தபோதுதான் அவருக்கு இன்னும் ஒரு இனிய தெய்வீக விஷயம் புரிய வந்தது.
வெறுமனே தியாகம், தியாகம் என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் எம்பெருமானின் தியாகச் செயல் ஒன்றையாவது மனதில் தியானத்திலே நாம் செய்ய வேண்டிய தவம். இதுவே காலத்தில் கனியும் என்று இந்த கால பைரவ தூதன் அறிவித்துள்ளார் என்று தெளிந்து எம்பெருமானின் தியாகச் செயலான ஆலால விஷம் உண்ட தியாக தீரத்தை தியானிக்கத் தொடங்கினார் சனி பகவான்.
யுகங்கள் கடந்தன ... ...
சூரிய பகவானின் மைந்தன்தானே சனி பகவான். எனவே சனிபகவானும் செஞ்சோதி வண்ணத்தில் ஜொலிப்பவர்தான். ஆனால், அவர் எம்பெருமானின் நீலகண்ட தியானித்திலேயே பல யுகங்கள் மூழ்கிப் போனதால் சனி பகவானின் உடல் வண்ணமும் கருமை பெறத் தொடங்கியது.
முற்றிலும் சனி பகவானின் மேனி கருமை நிறம் அடைந்தபோது ஸ்ரீஅகத்தீசன் அவருக்கு ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேதராய் ரிஷப வாகனத்தின் மீது அமர்ந்து திருக்காட்சி நல்கினார்.
ஐயர்மலையில் சனி பகவான் இழந்த காக்கை வாகனம் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியின் பரிசாக சனி பகவானுக்கு அளிக்கப்பட்டது. தன்னுடைய காக்கை வாகனத்தைப் பார்த்த சனிபகவான் பெரும் ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தார்.
காரணம் அவருடைய வாகனம் பொன்னிறத்தில் இருந்ததுதான். அதனால் காக்கை வாகனமும் எல்லையில்லா ஆனந்தம் அடைந்தது. சனி பகவானும் அவருடைய தங்க வாகனமும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீஅகத்தீசனை தொழுது வணங்கிட தேவர்கள் பூமாரி பொழிந்தனர். துந்துபிகள் முழங்கின.
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தேவி திருவாய் மலர்ந்து அருளினாள். ”சனிபகவானே, உன்னுடைய தவம் போற்றுதற்குரிய ஒன்று. நீ உன்னுடைய குருவின் மேல் கொண்ட நிலையான நம்பிக்கையே உனக்கு இந்தப் பொன்னிற வாகனத்தைப் பெற்றுத் தந்தது. இதனால் உன்னை தரிசிப்போர்க்கு நிலையான செல்வம் கிட்டுவதுடன் மன சாந்தியும் அமைதியும் கிட்டும்.”
தேவி தொடந்தாள், ”எந்நிலையும் உரிய தகுதிகள் இல்லாதவருக்கு அளிக்கப்படுவதில்லை. நீ எத்தனை யுகங்கள் இத்தலத்தில் தவம் இயற்றினாயோ அத்தனை காலமும் உன்னுடைய வாகனமும் ஆழ்ந்த தவத்தில்தானே ஆழ்ந்திருந்தது. வரும் யுகங்களில் எத்தனயோ பெண்கள் இல்லற வாழ்வில் அடையப் போகும் வேதனைகளுக்கு உன்னுடைய தரிசனம் நற்கதியை அளிக்கவே உன்னுடைய காக்கை வாகனம் ஐயர்மலையில் சப்தகன்னிமார்கள் தவம் இயற்றும் கன்னிமாடத்தில் தவம் இயற்றியது. இது மணமாகாத பெண்களுக்கும் நலம் பயக்கும் அனுகிரகம் அளிக்கும்,”
சனி பகவான் பெற்ற வாகனம் வஞ்சுளம் என்ற ஒருவித அபூர்வமான தங்க சக்திகள் உடையது. தேவலோகத்தைச் சேர்ந்த அபராஞ்சித தங்கத்தைப் போல வஞ்சுளம் எனப்படும் தங்கம் கால பைரவ லோகத்தில் மட்டுமே காணக் கூடியதாகும். இதன் தரிசனமே எத்தனையோ அரிஷ்டங்களையும், தரித்திர நிலைகளையும் தீர்க்கக் கூடியது என்பதால் விஷ்ணு லோகங்களிலிருந்தும் குபேர லோகங்களிலிருந்தும் தேவர்கள் குழாம் அந்த வாகன தரிசனத்திற்காக வந்திறங்கினர்.
திருநள்ளாறு தலத்தில் சனி பகவான் எழுந்தருளும் காக வாகனம் இத்தகைய வஞ்சுள சக்திகளின் ஒரு அம்சத்தைப் பெற்றுள்ளது.

அஷ்ட மங்கள பார்கவ சக்திகள்

மங்கள சக்திகள் என்றால் என்ன ? ஜீவன்களுக்கு நல்ல சக்தியை அளித்து, காரியத் தடைகளை, தடங்கல்களை நீக்கி ஆயுள், ஆரோக்கியம், செல்வம் அளிக்கும் நற்சக்திகளை மங்கள சக்திகள் என்கிறோம்.
மங்கள சக்திகளில் எளிமையாக நாம் பெறக் கூடியதே வலஞ்சுழி சக்திகளாகும்.
வலஞ்சுழி விநாயகர், நதிகள் வடக்கு புறமாக ஓடுவது, காலையில் எழுந்தவுடன் முதல் காலடி கிழக்கு நோக்கி வைப்பது, வலது காலை முன்னால் வைத்து தோப்புக் கரணம் இடுவது போன்றவை குறிப்பிடக் கூடிய தடங்கல்கள் நிவர்த்தி தரக் கூடியவையாகும்.
அது போல பெருங்குடியில் அருள்புரியும் ஈசன் குபேர திக்கை நோக்கி சற்றே கோணி இருப்பதால் பெருங்குடி திருத்தலத்தில் நாராயண மூர்த்தியுடன் எழுந்தருளியுள்ள லட்சுமி தேவிக்கு எட்டுவிதமான மங்கள சக்திகள் பெருகுகின்றன.
அவையாவன,

ஸ்ரீஅகத்தீசன் பெருங்குடி

1. சாமரம்
2. நிறைகுடம்
3. கண்ணாடி
4. அங்குசம்
5. முரசு
6. விளக்கு
7. கொடி
8. இரட்டை மீன்கள்
இங்கு ஒரு விஷயத்தை இறை அன்பர்கள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். மேற்கூறிய மங்கள சக்திகள் எல்லாம் பெருங்குடி ஈசன் கோணி இருப்பதால்தான் தோன்றியுள்ளன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு ஈசன் வளைந்து இருக்கிறான் என்று நினைத்தால் மேற்கூறிய மங்கள சக்திகளைப் பற்றிய தெளிவான விளக்கங்களை பெற முடியாது.
எனவே பெருங்குடி ஈசன் கோணிய கோணியன் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி  அதன் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேற்கூறிய மங்கள சக்திகள் எப்படி இறைவனின் திருமேனியில் தோன்றி லட்சுமி தேவிக்கு அனுகிரகமாகப் பொலிந்தன என்று அறிவதை விட இந்த மங்கள சக்திகளை நடைமுறை வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தி நன்னிலை அடையலாம் என்று அறிவதே பயனுள்ளதாக இருக்கும் என்பதே சித்தர்களின் அறிவுரை.
சாமரம்
கணவன் அல்லது மனைவியுடைய கை அளவில் ஒரு முழம் அளவுள்ள பத்து பனை விசிறிகளை சுயம்பு லிங்க மூர்த்தி அல்லது வெட்ட வெளியில் நிற்கும் குல தெய்வ மூர்த்தி கோயில்களிலோ தானம்
நிறைகுடம்
சனிக் கிழமைகள், ஞாயிற்றுக் கிழமைகள் அல்லது கத்ரி காலத்தில் (அக்னி நட்சத்திரம்) பித்தளைக் குடத்தில் குடி நீர் தானம்

சித்த குரு வேத சூக்த
மாமந்திர மாமேரு பெருங்குடி

கண்ணாடி
ஒன்றரை அடி அகலமுள்ள கண்ணாடிக்கு முன் மூன்று விதமான பழங்களை வகைக்கு பன்னிரண்டு பழங்களை வைத்து வணங்கி இரண்டு சுமங்கலிகளுக்கு அல்லது வயதான தம்பதிகளுக்கு தானம்.
அங்குசம்
சங்கடஹர சதுர்த்தி அல்லது சதுர்த்தசி அன்று அவரவர் கை அளவில் ஒரு சாண் உடைய வெல்லம் கலந்த பொரி உருண்டை யானைக்கு  தானம்
முரசு
போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் மனைவிமார்களுக்கு இனிய ஓசை எழுப்பும் சுவர்க் கடிகாரம் தானம்
விளக்கு
மனைவிமார்களின் கையால் மூன்று சாண் நீளமுள்ள மூன்று பித்தளை குத்து விளக்குகள் ஏழைக் குடும்பத்திற்கு தானம்.
கொடி
பாக்கு மரத் தட்டில் ஒரு கிலோ முந்திரிப் பருப்பு அரை கிலோ பேரீச்சம் பழம் வைத்து கோயில் கொடிக் கம்பத்தை வலம் வந்து கர்ப்பிணி பெண்களுக்கு தானம்
இரட்டை மீன்கள்
வீட்டில் வண்ண மீன்களை வளர்த்தல். கோயில் திருக்குளங்கள், தீர்த்தங்களில் உள்ள மீன்களுக்கு பிரட், பன் உணவாக இடுதல்
மேற்கூறிய தான தர்ம முறைகளை பெருங்குடி ஈசன் நினைவுடன் நிறைவேற்றி வருவதால் எட்டு விதமான ஐஸ்வர்ய கடாட்சம் பெருகும் என்று சித்தர்கள் தெளிவு படுத்துகிறார்கள்.
அழகு, செல்வம், வித்தை, விவேகம், நற்குணம், தங்கம், நற்பிறப்பு, இளமை போன்ற எட்டு விதமான குபேர சம்பத்துகள் கிட்டுவதுடன் அட்ட தரித்திரங்களும் விலகும் பெருங்குடி ஈசன் அருளால்.

காதலி பெற்ற காணிக்கை

வள்ளி தேவி முருகனின் வலப் புறமும் தெய்வானை தேவி சுவாமியின் இடப் புறமும் இணைந்து அருள் தருவதே பொதுவாக முருகப் பெருமானின் அனுகிரக காட்சி.
பார்வதி தேவி எம்பெருமானின் இடப்புறத்தில் மாதொரு பாகனாக இணைந்தது போல் தானும் முருகப் பெருமானின் இட பாகத்தில் அர்த்த நாரீஸ்வர கோலம் பெற விரும்பினாள். தன்னுடைய விருப்பத்தை முருகப் பெருமானிடமும் தெரிவித்தாள்.
முருகப் பெருமான் புன்னகையுடன், ”தேவி, ஈசன் பெற்ற இந்த அர்த்தநாரீஸ்வர கோலத்தில் நீயும் திகழ வேண்டுமானால் காலவ மகரிஷியின் துணை நாடு,” என்று வழிமுறை காட்டி அருளினார்.
காலவ மகரிஷி பல யுகங்களாய் தெய்வீக தொண்டுகள் சாதித்து வரும் அற்புத மகரிஷி. சென்னை அருகில் உள்ள திருவிடந்தை திருத்தலத்தில் ஸ்ரீவராக மூர்த்தியாய் பெருமாள் லட்சுமி தேவியுடன் நித்ய கல்யாண பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி பெருங்குடி

காலவ மகரிஷி தன்னுடைய 360 புதல்விகளையும் இத்தலப் பெருமாளுக்கு அளிக்க பெருமாள் அந்த தேவிகளை தினமும் ஒருவராக திருமணம் செய்து கொண்டு வருடம் முழுவதும் திருமண கோலத்தில் காட்சி அளித்து அடியார்களுக்கு மங்கள சக்திகளை வாரி வழங்கி வருகிறார்.
வருடத்தில் ஒரு நாள் இந்த 360 தேவிகளையும் ஒரே தேவியாக இணைத்து அந்த தேவியை தன் மடியில் வைத்துக் கொண்டு திருமணக் காட்சி அளிக்கிறார்.
முருகப் பெருமானின் அறிவுரைப்படி வள்ளி காலவ மகரிஷியின் குடிலை அடைந்து மகரிஷியை தொழுதாள். தன்னை வணங்கி நின்ற வள்ளி தேவியை ஆசீர்வதித்து காலவ மகரிஷி அவள் எண்ணத்தை அறிந்தார்.
”தேவியே, உன்னுடைய எண்ணம் இனிதே நிறைவேற வேண்டுமானால் நீ இப்புவியில் ரத்தினகிரியாய் பிரகாசிக்கும் மாணிக்க மலையை கிரிவலம் வந்து ஈசனை வழிபடுவாயாக. என்று ஆறு மயில்கள் ஒன்றாகச் சேர்ந்த காட்சியை நீ காண்பாயோ அன்று உன்னுடைய தவம் பூர்த்தியாகும்,” என்று வள்ளி நிறைவேற்ற வேண்டிய தவமுறையை விளக்கினார் மகரிஷி.
காக்கை கரையாக் கவித்தலம்
பூக்கை அட்டிப் போற்றிட
ஆக்கையால் அரநாரி பெறலாமே
என்று காலவ மகரிஷி அருளிய வண்ணம் ஐயர் மலையை அடைந்து கிரிவலம் வரத் தொடங்கினாள் வள்ளி தேவி.
வள்ளி எவ்வாறு ஐயர்மலையை கிரிவலம் வந்தாள் ?
இறைவனை வணங்கும் நமஸ்கார முறைகளில் மனிதர்கள் நிறைவேற்ற வேண்டிய 108 நமஸ்கார முறைகள் உண்டு. அஷ்டாங்க நமஸ்காரம், அஷ்ட நமஸ்காரம், சாஷ்டாங்க நமஸ்காரம் என பலவிதமான நமஸ்கார முறைகள் உண்டு.
அதுபோல மயில் வாகன நமஸ்கார முறை என்பது முருகப் பெருமானுக்கு உரிய அற்புத நமஸ்கார முறையாகும். இம்முறையில் மலைத் தலங்களிலும், முருகன் திருத்தலங்களிலும், சிறப்பாக திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களிலும் முருகப் பெருமானை வணங்கி வருவதால் திருமணத் தடங்கல்கள் நீங்கும், குடும்ப ஒற்றுமை பெருகும், செவ்வாய் தோஷங்கள், நாக தோஷங்கள் போன்ற தோஷங்கள் விலகும்.

மயில் வாகன நமஸ்காரம்

இந்த நமஸ்காரத்தை நிறைவேற்றும்போது ஆண்கள் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்தும் பெண்கள் பஞ்ச அங்க முறையிலும் நமஸ்காரம் செய்தல் வேண்டும்.
முதலில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஆறு நமஸ்காரம், இரண்டாவதாக தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஆறு நமஸ்காரம், மூன்றாவதாக நிருத்தி திக்கு என்னும் தென்மேற்கு திசையிலிருந்து ஈசான்ய திசையான வடகிழக்கு நோக்கி ஆறு நமஸ்காரம், நான்காவதாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஆறு நமஸ்காரம், ஐந்தாவதாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஆறு நமஸ்காரம், ஆறாவதாக ஈசான்ய திசையிலிருந்து ஆறு நமஸ்காரம்.

ஸ்ரீகஜசம்ஹார மூர்த்தி
பெருங்குடி

இவ்வாறு மொத்தம் 36 நமஸ்காரங்களை நிறைவேற்றுதலே மயில்வாகன நமஸ்காரம் எனப்படும்.
அடிவயிறுப் பிரச்னைகள், சிறுநீரக கோளாறுகள் அகல்வதுடன் நல்ல சந்தான பாக்கியத்திற்கு வழிவகுப்பதே மயில்வாகன நமஸ்காரமாகும்.
இவ்வாறு தொடர்ந்து மயில் வாகன நமஸ்கார முறையில் ஐயர் மலை ஈசனை வழிபட்டு வந்த வள்ளி தேவி பங்குனி உத்திரமும் வெள்ளிக் கிழமையும் இணைந்த மங்கள நாளில் உத்திர உத்தர மேரு என்னும் தரிசனப் பகுதியில் ஆறு மயில்கள் ஒன்றாக இணைந்த நிற்கும் காட்சியைக் கண்டாள். மறு விநாடி அந்த ஆறு மயில்கள் ஒன்றாக இணைய அதன் மேல் தெய்வானை சமேதராக முருகப் பெருமான் காட்சி தர, மும்மூர்த்திகள், இந்திரன், காலவ மகரிஷி, அகத்திய மாமுனி ஆசி வழங்க வள்ளி தேவி முருகப் பெருமானின் இடபாகத்தைப் பெற்றாள்.

காலவ மகரிஷியின் ஆசியால் வள்ளி தெய்வானை அந்த புனிதமான பங்குனி உத்திர திருநாளில் தெய்வானை தேவியுடன் ஒன்றாக இணைந்து முருகப் பெருமானின் இட பாகம் பெறும் பேற்றைப் பெற்றாள். இந்த அற்புத புராண சம்பவம் நிகழ்ந்த திருத்தலமே பெருங்குடி ஸ்ரீஅகத்தீசன் திருத்தலமாகும்.
எனவே பெருங்குடி திருத்தலத்தில் நீங்கள் வள்ளி தேவியுடன் தெய்வானையையும் முருகப் பெருமானின் இடப் புறத்தில் தரிசனம் செய்கின்றீர்கள் என்பதே நீங்கள் இதுவரை அறியாத ஆன்மீக இரகசியமாகும்.
உத்திர நட்சத்திர நாட்களில் சிறப்பாக பங்குனி உத்திர நட்சத்திர நாட்களில் முருகப் பெருமானுக்கும் வள்ளி தெய்வானை தேவிகளுக்கும் ஆறு விதமான பழங்களால் மாலைகள் அணிவித்து பஞ்சாமிர்தத்தில் ஆறாவது அமிர்தமான மலைத் தேனை சேர்த்து அபிஷேகம் ஆராதனைகள் மேற்கொண்டால் கிட்டும் பலன்களோ அமிர்தம், அமிர்தம்.

                ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam