முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தான்தோன்றித் தனம் மறைய

உண்மையில், அவரவருடைய மூதாதையர்களுடைய ஆசிகள், அவரவருடைய உடலில் அமையும் செவ்வாய்க் கிரக அம்சப் பகுதிகள் மூலமாகத்தான் உடலில் வந்து சேரும். எனவே, இன்று முதல், ஒவ்வொருவரும் தங்கள் உடலில் எந்தெந்த அங்கங்களில் எந்தெந்த கிரகப் பகுதிகள் அமைந்துள்ளன என்பதை முதலில் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் ஒரே வகையில் குறித்த இடங்களில் தானே நவகிரக அம்சப் பகுதிகள் அமையும் என எண்ணிடலாம். ஆனால் கிரக சக்திப் பலன்கள் அவரவருடைய தசா, புக்தி, அந்தரங்களுக்கு ஏற்பவே வந்தமையும்.

திருநெல்லிக்கா

குரு விரலாகிய ஆள்காட்டி விரலுக்குக் கீழ் உள்ள மேடைப் பகுதி செவ்வாய்க் கிரக அம்சத்தைக் கொண்டதாகும். காதுக் குழாயும், தொண்டைக் குழாயும் இணையும் பகுதி செவ்வாய்க் கிரக அம்சத்துடன் விளங்குவதாம். இதே போல ஒன்பது வகையான, மிகவும் முக்கியமான செவ்வாய்க் கிரக அம்சங்கள் மனித உடலில் உண்டு. இவற்றில் எல்லாம் செவ்வாய்க் கிரகம் வக்ர நிவர்த்தி அடையும் போது, சில மாற்றங்களை நன்கு காண முடியும்.

பிறந்த நாளின் ராசிக் கட்ட ரீதியாக, செவ்வாய்க் கிரகம் இருக்கும் இடத்தையும், வக்ர நிவர்த்தி பெற்ற நாளில் செவ்வாய் இருக்கும் இடத்தையும் ஒரு சிவப்பு நிறக் கோடால் உங்களுடைய ஜாதகக் கட்டத்தில் இணைத்து, இந்தக் கோடு எவ்வாறு அமைகிறது என்பதை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்தக் கோட்டின் மேல் ஓம் மங்களேஸ்வராய நம: என்று 108 முறை தர்பையால் எழுதி, இந்தத் தர்பையை, செவ்வாய் மூர்த்தி தனித்து எழுந்தருளும் ஆலயத்தில் உள்ள தீர்த்தங்களிலோ, ஆலயத்தின் அருகில் உள்ள நதி, கடல் தீர்த்தத்திலோ சேர்த்திடுதல் வேண்டும்.
இவ்வாறு செவ்வாய்க் கிரகத்தின் வக்ர நிவர்த்தி பெறும் நாள், ஹோரையைப் பொறுத்து வழிபாட்டு முறைகளும் மாறுபடும். உதாரணமாக, வெள்ளிக் கிழமை அன்று புத ஹோயில் செவ்வாய் கிரகம் வக்ர நிவர்த்தி பெற்றால் வராஹ மூர்த்தி அருளும் தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். வக்ர புத்தியுடன் தான் தோன்றித்தனமாகச் செயல்படும் கணவன், மனைவி, பிள்ளையின் துர்க்குணம் மாற உதவும்.
இவ்வாறு ஒவ்வொரு கிரக வக்ர விஜயம், நிவர்த்தி நாட்களில் ஆற்ற வேண்டிய வழிபாடுகளை தக்க சற்குரு மூலம் அறிந்து பயன்பெறுங்கள்.

முக்தி அளிக்கும் முத்துக்கள்

ஒரு மனிதன், முக்தி நிலைகளை அளிக்க வல்ல தியான, யோக, விரத, பூஜா, ஆலய தரிசன, தீர்த்த நீரோட்ட பூஜைகளைத் தினந்தோறும் முழுமையாகக் கடைபிடிக்க இயலா விட்டாலும், பிற ஜீவன்களுக்கு நன்மைகளை அளிக்க வல்ல விரத, பூஜைகளை நன்கு கடைபிடிக்கலாம் அல்லவா! இவ்வாறுதான் அருள் சுரக்கும். பிறருக்கு அளித்து மகிழ்வதே அருள். அதாவது இறையருள் கிட்ட வேண்டுமானால், பிறருடைய நலன்களுக்காக, தான தர்மம் போன்ற அருட்பணிகளை ஆற்றுதல் வேண்டும். இதற்காகவே ஸர்வ மோட்சதா ஏகாதசி என்ற விசேஷமான விரதம் வந்தமைகின்றது.
சத்யநாத மகரிஷி இந்த அரிய விரதத்தைக் கடைபிடித்து, இதன் பலாபலன்களை ஏகாதசி விரதம் இருப்போருக்கு என மஹாச் சிறப்புடன் அளிக்கின்றார்.  
சத்யநாத மாமுனி கடைபிடித்த ஏகாதசி விரதம் என்பதால் சத்ய நாராயணப் பெருமாள் ஆலயத்திலும் பால் பாயச தானத்துடன் பூஜித்தல் மிகவும் சிறப்பானது.

சாக்கோட்டை சிவத்தலம்

சர்வ மோட்சதா ஏகாதசி நாளில் பொய் பேசாமல் இருப்பது மட்டுமல்லாது, தம்மால் இதுவரையில் வாழ்வில் சொன்ன பெரிய பொய்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி சத்யநாத மஹரிஷியிடம் பரிகாரங்களை மன்றாடிக் கோருதல் வேண்டும். வாழ்க்கையில் உரைத்த பல பொய்களை வெளிப்படையாகச் சிலரிடம் சொல்லும் போது பெரும் பிரச்னைகள் ஆகிவிடும் அல்லவா! எனவே, பிறரிடம் சொல்ல முடியாத அளவிற்குத் தேவையில்லாத வகையில் பெரிய பொய்ச் சொல்லி வாழ்ந்தவர்கள், இந்த ஏகாதசி நாளில் மனசாட்சிப் பூர்வமாகத் தன்னை எடை போட்டுக் கொள்ள வேண்டும்.
சத்திய முத்து என்பதாக முத்து, ரத்தினத்தில் பல வகைகள் உண்டு. இந்தியாவில் 51 விதமான முத்துக்கள் உண்டு. உலகில் 64 விதமான முத்துக்கள் உள்ளன. முத்தங்கி சேவை தரிசனம் விசேஷமான சத்ய சக்திகளை அளிக்கும். குழந்தைகள் பொய் சொல்லாது உண்மையுடன் வாழ உதவும்.
மளிகைச் சாமான்கள் வாங்கும் போது முத்து நகைகள் அணிந்து வாங்குவது மிகவும் விசேஷமானது. முத்துவிற்குப் பசிப் பிணி வராது காத்துத் தரும் ஐஸ்வர்ய சக்திகள் உண்டு. தட்டை முத்து, குழி முத்து, சங்கு முத்து, வட்ட முத்து என்று நான்கு வகை முத்துகள் உண்டு. இவற்றின் பலாபலன்களை அருகருகே உள்ள வில்வம், வேம்பு, அரசு, மாமரங்கள் தர வல்லவையாகும்.
இந்நாளில் முத்தம்மாள், முத்துமாரியம்மன், முத்துக் குமாரசாமி மூர்த்தி போன்ற முத்து வகை மூர்த்தித் தரிசனம் மிகவும் விசேஷமானது.  தரையில் கால் படாது, ஒரு பலகையில் அமர்ந்து, குறைந்தது 108 முத்துக்களைக் கோர்த்து ஸ்ரீராமருக்குச் சார்த்துவது விசேஷமானதாகும். தன் பொய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் கோபத்தால் வம்சத்திற்கு ஏற்பட்டுள்ள சாபங்கள் ஓரளவேனும் தணியவும், அவர்களுக்குத் தக்கப் பரிகாரங்கள் ஆற்றவும் வாய்ப்புகள் தேடி வரும். விட்டு விடாதீர்கள்!
சத்யசீலராக வாழ்ந்த அமர்ந்த கோல ஸ்ரீமன் ராமச்சந்திர மூர்த்தியை ஸ்ரீராமஜெயம் என 1008 முறை ஓதி, வணங்குதலும் விசேஷமானதாகும்.

மீன்கள் பூணும் விரதம்

நல்ல நினைவாற்றலைத் தர வல்ல நாட்களில், துவாதசித் திதியும் ஒன்றாகும். துவாதசி நாளில், நாம சக்திகள் நன்கு வளம் பெறுகின்றன. இதனால் தாம், சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, துவாதசித் திதி நாளில் அகண்டகார நாமம் பாராயணம் செய்வது மிகவும் மேன்மை தருகிறது. "ராம், ராம்', "கிருஷ்ண, கிருஷ்ண', "சிவ சிவ' என்று இறை நாமங்களை ஓதியவாறு , துவாதசித் திதிப் பூஜைகளை நிகழ்த்துவது நன்று.

ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி
வட்டமலை

மத்ஸ்ய துவாதசி என்பது மச்சாவதராத் தோன்றல் சக்திகள் வைகுண்டத்தில் பரிணமித்த நாளாகும். இதில் பலரும் ஆன்மீக ரீதியாக அறியாத ரகசியம் யாதெனில், பல விரதங்களைக் கலியுக மனிதன் கை விட்டு விட்ட நிலையில், மீன்களும், ஏனைய பிராணிகளும், தாவரங்களும், மனிதனை விட மிகச் சிறப்பான முறையில் ஏகாதசி விரதங்களை நன்கு கடைபிடிக்கின்றன. இதில் மீன்கள் மிகவும் சிறப்பாகக் கடைபிடிப்பதே துவாதசித் திதி விரதமாகும்.
துவாதசி நாளில் மீன்கள் விரதம் பூணுகையில், மீன்களின் தலைமைப் பீடங்களாகிய உத்தமத் தவத்துறை மீன்கள் துவாதசி விரதத்தைக் கடைபிடித்து, பிராண சக்திகளை நீர் நிலைகளில் நன்கு நிலை நிறுத்துகின்றன. இதனால்தாம் துவாதசித் திதிக் காலத்தில், நீரில் மீன்கள் இறை நாமங்களை ஓதியவாறு, பிராணாயாம யோக நிலை பூண்டு, சலனமற்று இருப்பதைக் காணலாம்.

துவாதசி அன்று குறைந்தது ஒரு மணி நேரமாவது பிராணாயாமம் பூண்டு, சுவாச நாளங்களைச் சுத்திகரித்துக் கொண்ட பின், பூஜை, ஆலய தரிசனங்களை மேற்கொண்டால் நல்ல சிறப்பானப் பலன்களைக் கண்டிடலாம்.
துவாதசி தினங்களில் மீன்களுக்குப் பொரி இட்டு, மச்சாவதாரப் பெருமாளுக்கு உரிய துதிகளை ஓதி, மீன்களின் இனம் சிறப்புடன் விருத்தியாக வேண்டிடுக!
தவசிமடை, (திருத்) தவத்துறை போன்ற தவசக்திகள் நிறைந்த தலங்களில் நீராடி, மீன்கள் கடிப்பதாக எண்ணும் நிலையில், மீன்களின் ஸ்பரிசத்தைப் பெறுதல் சிறப்புடையதாகும். 1008 மீன்களுக்கு ஒரு மீன் யோகமீனாம்பதி தவ குணத்தைப் பெற்றிருக்கும். மீன்களின் இனத்தில், மீன்கள் கடிப்பது போலான ஸ்பரிச தீட்சைதான் பிரதானமானதாகும்.
தன் வறட்டுப் பிடிவாத குணத்தால், சரியாகத் தன் கடமைகளைச் செய்யாது, உதாசீனத்தால் இழந்து விட்ட, பெற்றோர்களின், உத்தமர்களின் ஆசிகளை ஓரளவேனும் மீண்டும் பெற, துவாதசித் திதிப் பூஜா, விரத பலன்கள் நன்கு உதவும்.

சதுர்த்த பலமும் சத்திய பலமும்

சதுர்த்த பலம் என்பது யானையளவு வலிமையைக் குறிப்பதாகும். ஆனால், ஒரு எறும்புக்கு உள்ள வலிமை யானைக்குக் கூட கிடையாது என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியம். ஒவ்வொரு எறும்பும் தன் எடையை விடப் பல மடங்குக் கூடுதலாக உள்ள ஒரு பொருளைத் தூக்க வல்ல மனோ வலிமையைக் கொண்டதாகும். எறும்புக்கு மனோ திடமும் அதிகம் உள்ளது என நாம் அறிவோம். இத்தகைய அமானுஷ்ய சக்திகளைத்தாம் சதுர்த்த பலம் என்று உரைக்கின்றார்கள்.
இத்தகையச் சதுர்த்த பல சக்திகளைப் பெற்றுத் தர வல்ல திருவெறும்பூர், திருக்கழுக்குன்றம் போன்ற தலங்களும் உண்டு. இத்தலங்களில் எறும்புகளுக்குச் சர்க்கரை கலந்த தான்ய ரவைகளை இட்டு வந்திடில் பணக் கஷ்டம் தீர உதவும்.

ஸ்ரீமச்சமூர்த்தி நாச்சியார்கோவில்

சதுர்த்த பலம் சில நாட்களில் நன்கு பூரிக்கும். இந்நாட்களில் பூமியின் ஆகர்ஷண சக்தியில் கூட சில மாறுதல்கள் ஏற்படுவது உண்டு. வளர்பிறைச் சதுர்த்தசித் திதி தோறும், பூலோகத்தின் பொருட்களின் எடையில் சில சூட்சுமமான மாறுதல்கள் ஏற்படும்.  
யானையின் பலமும் ஒரு வகை சதுர்த்த பலமாகும். ஆனால், யானைக்கென பகுத்தளித்துள்ள குணங்களில் ஒன்றே, தன்னுடைய உடல் வலிமையை தவறாகப் பயன்படுத்திக் கொள்ளாத தர்ம குணமாகும். இது சதுர்த்த பலத்தால் அமைகின்ற சத்தியமான வேத வாக்காகும்.

ஸ்ரீவிநாயகப் பெருமான்
லால்குடி

எப்போதும் சுழுமுனை சுவாசத்தைப் பூண்டு வாழும் யானை நீண்ட துதிக்கை வழியாக சுவாசிக்கும். யானைக்குக் கூட மதம் பிடித்து த்வம்ஸம் செய்கிறதே என்று எண்ணிடலாம். யானைக்கு மதம் பிடிப்பதை, சித்தர்கள் யானைக்குரிய நோயாக ஏற்பது கிடையாது. சமுதாயத்தில் நிகழ்கின்ற அக்கிரமங்களைப் பார்த்தே, யானைகள் சினம் கொண்டிட, யானைக்கு மத நீர் பிடித்து விடுகிறது. எனவே, யானைக்கு மதம் பிடித்தல் என்பது சமுதாயக் குற்றங்களின் பெருக்கத்தைக் குறிப்பதாகும்.
பாயலம் என்ற வகை சக்திகள் எனப்படுபவை சதுர்த்தசி திதியில் மலரும். இதன் உதவியால், ஒருவர் தன்னால் இயலாதது என்ற எதனையும் செய்து காட்ட வல்ல உயர்ந்த தேவகுணத் தன்மைகளைப் பெற்றுத் தருவதாகும்.
பொதுவாக, அந்தந்த நாளுக்கான வண்ண நிற ஆடை அணிதல், அந்தந்த நாளில் உணவில் சேர்க்க வேண்டிய எண்ணெய் வகை போன்ற வகையிலான பாயலம் வகை நியதிகளை அறிந்து கடைபிடித்து வருதல் வேண்டும்.
சதுர்த்தசித் திதியில் சதுர்த்த பல சக்திகளைப் பெறுகின்ற குறித்த அங்கங்கள் வளம் பெறுவது உண்டு. சதுர்த்தசி அன்று நான்கு வேதங்களிலும், ஒரு சில மந்திரங்களையாவது ஓதிடுக! நால்வேத சக்திகளையுயம் கொண்ட தமிழ் மறைகளையும் ஓதுதல் நன்று. மருத்துவர்கள், ஒரு சின்னக் கிண்ணத்தில் காந்தம் வைக்கப் பெற்ற புனிதமான தீர்த்தத்தை வைத்துச் சுழுமுனை சுவாசத்தை அவ்வப்போது மேற்கொண்டு வந்தால், சதுர்த்த பல சக்திக் குணாதிசயங்களைப் பெறுவர். இது நல்ல கைராசியையும் தரும்.
சதுர்த்தசி கூடும் புதன் கிழமை நாளில், நான்கு வகை கணபதி மூர்த்தங்கள் அருளும் ஆலயத்தில் வழிபடுதல் விசேஷமானதாகும். திருத்தவத்துறையான லால்குடி திருத்தலத்தில் குறைந்தது 33 பிள்ளையார் மூர்த்திகளை அடியார்களை தரிசித்து அருள்பெலாம் என்பதே நம் சற்குரு உழவாரப் பணிகள் இயற்றிய இத்திருத்தலத்தின் மகிமையாகும்.

தத்தாத்ரேய பாடம்

தத்தாத்ரேயர் ஜயந்தி அன்று தத்தாத்ரேய மூர்த்திக்கு மிகவும் பிரியமான பட்சிராஜப் பரிபாலன பூஜையை ஆற்றுதல் வேண்டும். கழுதை, குதிரை, யானை, ஆடு என்ற வகையில் சகல பிராணிகளுக்கும் , தேவையான உணவு, நீர் மற்றும் தாவரங்களுக்கான நீர், உரத்தை அளித்திடுக.
பலரும் தத்தாத்ரேயரின் மகத்துவத்தை அறியாமல் இருக்கின்றார்கள். உலகில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைப் பாதையும் சற்குருவை நோக்கியே அமைந்திருக்கிறது. தக்க சற்குரு அமையும் வரையில் ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் பலவிதமான பாடங்களைப் பெறுகின்றார்கள்.

ஒவ்வொரு பாடமும் தத்தாத்ரேய மகத்துவத்தைக் கொண்டுள்ளன. காய்கறி கடை முதல் கசாப்பு கடை உட்பட வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் இருந்து ஒவ்வொன்றிலும் ஏராளமான பாடங்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் கிட்டுகின்றன. தம் வாழ்வில் நிகழும் இவற்றை எல்லாம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டு வருட முடிவில் இவற்றை புரட்டிப் பார்த்திட வேண்டும்.
தத்தாத்ரேயர் அபூர்வமாகவே சில ஆலயங்களில் எழுந்தருளி உள்ளார்கள்.
ஸ்ரீகிருஷ்ணர் சைதன்ய மூர்த்தியாகக் காட்சி தரும் தரிசனம், பல மாமுனிகளும் ஸ்ரீகிருஷ்ணனைச் சூழ்ந்து ஆசி தரும் தரிசனம் போன்றவை தத்தாத்ரேயரின் அனுகிரகத்தைத் தருவதாகும். சிவாலயத்தில் உள்ள பெருமாள் தரிசனமும் (உதாரணம் திருஅண்ணாமலை, திருமால்பேறு), பெருமாள் ஆலயத்தில் உள்ள சிவதரிசனமும் (உதாரணம் திருகோஷ்டியூர்) தத்தாத்ரேயரின் தரிசன அனுகிரகத்தைப் பெற்றுத் தருவதாகும்.

விடியற்காலை பூஜைகள்

நீங்கள் மார்கழி மாத விடியற்காலையில் ஓதுகின்ற பிரக்ருதி வரப் பாக்கள் கூட்டும் பிராண சக்தி வளமே த்ரிபுடைப் பிராண சுதம் என்பதான முத்துரி வாயுப் பூப்பு (OZONE) எனக் குறிப்பிடுகின்றார்கள். அறிவுத் திறமை, நல்வள ஆரோக்யம், சுகப் பரிபூரணம் ஆகிய முப்பூக்கதிர்கள் சேர்ந்ததே OZONE  ஆகும்.
இறையருளானது பல வகைகளிலும், குறிப்பாக, வலிய பிராண சக்திக் கிரணங்களாக எப்போதும் நட்சத்திர மண்டலங்கள், கிரகங்களில் இருந்து பொழிந்து கொண்டே இருக்கின்றது. பூமியிலிருந்து குறித்த தொலைவில் மட்டுமே பிராணவாயு நிலவுவதாக விஞ்ஞானம் உரைக்கிறது அல்லவா! ஆனால், மெஞ்ஞான விஞ்ஞானத்திலோ இதற்கான காரண விளக்கங்களே மிகவும் உண்மையானவை, அற்புதமானவை!

ஸ்ரீமிருகண்ட மகரிஷி வழிபட்ட
மாந்துறை சிவத்தலம் லால்குடி

பிரபஞ்சம் முழுவதற்குமான பிராண சக்திகளை நிலை நிறுத்தித் தரும் காலமே மார்கழி மாதமாகும். மார்கழி மாதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா மிக எளிதில் நேரில் வந்து அருள்கின்றார்.
எனவே, இம்மாதம் முழுதும் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் ப்ரீதியான புல்லாங்குழல் கீதத்தை, இசைப் பாக்களை விடியற்காலையில் சிவாலயங்களில், பெருமாள் ஆலயங்களில் ஓதியும், வாசிக்கச் செய்தும், ஏழை வித்வான்களுக்குத் தக்க சன்மானங்களை அளிக்கச் செய்தும் அருட் திருப்பணிகளை ஆற்றி வர வேண்டும்.

ஸ்ரீமகாவிஷ்ணு சாக்கோட்டை

ஆலயங்களில், இல்லங்களில் மார்கழியில் மட்டும்தான் என்றல்லாது, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பா போன்ற பிராணசக்தித் துதிகளை வருடம் முழுதும் ஓதும் வகையில் தக்க முயற்சிகளை மேற்கொள்வது குடும்பத்தில் ஆண், பெண் இரு வகைச் சந்ததிகளுமே நன்கு தழைக்க உதவும்.
மார்கழி மாத பிரம்ம முகூர்த்த நீராடலும், பூஜைகளும், பிராணசக்தி வாயு அனுக்கிரக சக்திகளை நிரவி வான்வெளியில் நன்கு வளம் தருபவையாகும். விடியற்காலையில் நீராட இயலாதவர்கள் என் செய்வது? காலையில் 3 / 4 மணிக்கு எழுந்து கை, கால்களை நன்கு கழுவி சுத்தம் செய்து, (முதல் நாள் நன்கு தோய்த்து உலர வைக்கப் பெற்ற ஆடைகளை அணிந்து), நெற்றிக்குத் திருமண் / கோபிச் சந்தனம் இட்டு, தர்ப்பைப் பாயில் அமர்ந்து, மேற்கண்ட பிராணசக்தி பாக்களை ஓதி வழிபடுதல் வேண்டும்.
மார்கழியில் காலையில் நன்கு ஆவி பறக்க உணவு சமைத்து, உணவை, சூரிய உதய நேரத்தில் இருந்து ஒரு நாழிகை நேரத்திற்குள் தானமாக அளித்தலால் பாமரர்களுக்கும் பிரம்ம முகூர்த்த நேரப் பூஜாப் பலன்களை அளிக்க வல்லதாகும் மார்கழி பஜனையில் நாதஸ்வரம், புல்லாங்குழல், மிருதங்கம், தவில் போன்ற காற்று இசைக்கருவி வாசித்து வருவது மிகவும் நன்று.
பிரதமைத் திதியில் மிருக சீரிஷ நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளானது காயத்ரீ நதி தோன்றிய நாளைக் குறிப்பதாகும். மார்கண்டேய மஹரிஷியின் தந்தையான மிருகண்ட மஹரிஷி தினமும் பூவுலகிற்கு வந்து ஸ்ரீகாயத்ரீ நதியில் நீராடி தம் தபோ பலன்களை அர்ப்பணித்து மிருக குணங்களோடு தகாத முறையில் வாழ்வோரைத் திருத்தவும், இவர்களிடம் சிக்கி வாடுவோரை மீட்டு ரட்சிப்பதற்கான பூஜா பலன்களை அளிக்கின்றார். மிருகங்களுக்கு மிருக குணங்கள் இருந்தாக வேண்டும். அவை சாதுவாக இருந்தால் தம் வாழ்க்கையை நடத்த முடியாது.

முதுகு வலிக்கு நிவாரணம்

சனிக் கிழமை ஆயுட் சக்தி நாள். இரும்பு, சனி கிரகத்திற்கு உரிய உலோகம் அல்லவா ! இரும்பு என்பதற்கு, வெளியில் இருந்து உபயோகப்படுவது என்ற அர்த்தமும் உண்டு. உறுதியான மனம் படைத்தவர்களை, இரும்பு மனிதன் என்றும் சொல்வதுண்டு.
என்னதான் இரும்பு கடினமாக இருந்தாலும், நீர் பட்டால் துருப் பிடித்துவிடும் அல்லவா ! இந்தத் துருப் பிடித்தலுக்கு ரசாயனப் பூர்வமாக நிறையக் காரணங்களை எடுத்துரைத்தாலும், ஆன்மீகத்தில் இதனை, அதாவது, துருப் பிடித்தலை மாரக தோஷ வினைப் பண்பு என்கின்றார்கள். எந்த ஒரு மனிதனுக்கும் மாரக தோஷக் காலத்தில் தான் மரணம் நிகழும். ஆனால், மாரக தோஷக் காலத்தை ஓரளவே கணிக்க முடியும்.
உண்மையாகவே, துல்லியமாக ஒருவருடைய மாரக தோஷக் காலத்தை, அதாவது இறப்பு நேரத்தைக் கணிக்க வல்லவர்கள், பிறப்பு, இறப்பு ரகசியங்களை உணர்த்துதல் கூடாது என்ற நியதி காரணமாக எதனையும் பட்டவர்த்தனமாக, வெளிப்படையாக உணர்த்திட மாட்டார்கள். இவை சூட்சுமமாகவே, தாமாகவே, மாரக தோஷத்தை அறிவதற்கே, கையில் இரும்பு வளையத்தை அணிந்து, அதன் நிறம் மாறுபடுவதை உன்னித்துக் கவனிக்கும் இயற்கை வைத்ய முறையும் உண்டு.
தற்காலத்தில் எலும்பு முறிவு சிகிச்சை, இருதய சிகிச்சை போன்றவற்றில் இரும்பாலான ஆணி, பட்டை, கம்பிகளை உடலினுள் வைத்துத் தைத்து, அறுவை சிகிச்சை செய்கின்றார்கள். பிறகு இதனை வெளியே எடுப்பதில்லை. உலகில், வெளியே இருக்க வேண்டிய இரும்பு, மருத்துவ சிகிச்சை ரீதியாக உள்ளே புகுந்து விட்டால் இத்தகையோர் சனீஸ்வர பூஜைகளைக் கண்டிப்பாக ஏற்று, ஆயுள் முழுதும் வழிபடுதல் வேண்டும்.

சக்கராயுதம் பெற்ற பெருமாள்
திருமால்பேறு

இவ்வாறு, மருத்துவ சிகிச்சை மூலமாக, உடலினுள் இரும்புப் பிளேடு புகுவதை, மாரகத் தட்டு என்று ஆன்மீகத்தில் உரைக்கின்றார்கள். இவர்கள், சனீஸ்வர மூர்த்திகளுக்கு வெள்ளி போன்ற உலோகக் கவசங்களை சுயம்புத் தலங்களிலும், சனீஸ்வரத் தலங்களிலும் அளித்து வழிபட்டு வருதல் வேண்டும்.
இருதயத்திலோ, கையிலோ, காலிலோ அறுவை சிகிச்சை மூலமாக, உடலினுள் இரும்புப் பட்டை, ஆணி, வால்வ் பொருத்தப்பட்டவர்கள், சனீஸ்வர மூர்த்திகளுக்கு கரங்கள், பாதங்கள், மார்புப் பகுதிக் கவசங்களையாவது செய்து காணிக்கையாக அளிக்க வேண்டும்.
உலகில் மரம் போன்று மிகவும் அதிகமாக மனிதனால் பயன்படுத்தப் பெறுவது இரும்பு ஆகும். சாப்பிடும் தட்டும், நீரருந்தும் டம்ளரும்  எவர்சில்வரால், இரும்பால் அமைகிறது. இவையெல்லாம் சனீஸ்வர சக்திப் பொருட்களாகும்.
எனவே, இரும்புத் தம்ளரையோ, தட்டையோ, நன்முறையில் அவற்றில் உள்ள துரு தோஷங்களை அகற்றியே பயன்படுத்த வேண்டும். துருப் பிடிக்கும் குணத்தால்தான் பூஜைகளில் எவர்சில்வர் சாதனங்களைப் பயன்படுத்துவது கிடையாது. சில வகை வண்ணங்களைப் பயன்படுத்தி இத்தகையத் தோஷத் தன்மைகளைத் தணிக்கலாம்.
ஓம் ஸ்ரீசனீஸ்வர உலோகலோக பத்மாஸ்ரயே நம
இரும்புத் துறைப் பாத ஈச சனீஸ்வரா போற்றி
என்று எட்டு முறை ஓதிய பின்னரே எவர்சில்வர் சாதனங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
சனிக்கிழமை தோறும் அப்பர் சுவாமிகளின் திருஅங்கமாலைத் துதிகளையும், ஆயுஷ்ய சூக்த மந்திரங்களையும்,
த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம்
உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
என்ற மிருத்யுஞ்ஜய மந்திரத் துதிகளையும் 108 முறை ஓதி வருதலால் தேவையில்லாத மரண பயம் தீரும். ஆயுள் சக்தி மேம்பட உதவும்.
90 வயதைக் கடந்த பெரியோர்களுக்குச் சனிக் கிழமை தோறும் சரீர சேவை ஆற்றுதல் விசேஷமானது. அவர்கள் ஏழையாக இருப்பின் ஈஸிசேர், சிறுபடுக்கை போன்று அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றித் தருவதும் சனீஸ்வர ப்ரீதி முறைகளில் ஒன்றாகும்.
சனிக்கிழமை தோறும் ஓர் எவர்சில்வர் தம்ளர் நிறைய பசும்பாலைத் தம்ளருடன் தானமாக அளித்து வந்திடில் முதுகு வலித் துன்பங்களால் அவதியுறுவோர் நலம் பெறலாம்.

பெண் குழந்தைகளுக்கு தீர்காயுள்

ஆயுள் தீர்க சக்தி, மங்கள சக்தி, காரிய சித்சக்தி, ஆரோக்ய சக்தி, நற்குண சக்தி ஆகிய ஐந்து தன்மைகளும், உலகெங்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் தினசரி வாழ்க்கைக்கு, அதாவது லெளகீகமான வாழ்க்கைக்கு மிகவும் தேவையானவையாகும். இவற்றை எவ்வாறு பெறுவது?
மக்கள் இவற்றைத் தினந்தோறுமே பல்வகைகளிலும் நன்கு பெறும் முகத்தான், தினமுமே வாரம், நட்சத்திரம், தேதி, யோகம், கரணம் போன்ற காலசக்திகள் இவற்றுள் பலவற்றையும் தாங்கி வருகின்றன. இவற்றில் தினமுமே மேற்கண்ட ஐந்து சக்திகளும் நிரவி இருக்கும் காலநியதிகளையே பஞ்சாங்கக் காலக் கணிதமாகக் காண்கின்றோம். இவற்றைக் காலசக்கரத்தில் இருந்து முறையாகப் பெறுவதற்காகவே, பல்வகைப் பூஜைகளும், யோக, தியான, தான, தர்ம வகைகளும், வழிபாடுகளும் அமைந்துள்ளன.
சனீஸ்வரருக்கு உரிய இரும்பு உலோகமானது, உங்கள் வாழ்க்கையில், இல்லத்தில், அலுவலகத்தில் எவ்வகையில் எல்லாம் இரும்பு பயனாகிறது என ஆயவும். இரும்பிற்கு எதிரிணித் தீய சக்திகளையும் ஈர்க்கும் இயல்பு உண்டு என்பதால், வண்ணம், பாலீஷ், மரத்தின் மீது வைத்தல் போன்றவற்றால் இத்தீயத் தன்மைகளைப் பெரிதும் குறைத்திட முயல்தல் வேண்டும். இயன்ற வரை மரம், பித்தளை, தங்கம், வெள்ளி, ஈயம், செம்பு போன்ற உலோகச் சாதனங்களையே பயன்படுத்தவும்.

ஸ்ரீகருப்பண்ணசுவாமி தவபீடம்
பெருமாள்மலை துறையூர்

கிராமப் புறங்களில் வண்டிகளின் சக்கர இருசிற்கு இயற்கையான கிரீஸாக வைக்கோலை நெருப்பில் எரித்துக் கரியாக்கி எண்ணெயில் சேர்த்து வண்டியின் இருசின் இரும்புக் குழாய்க்குள் பூசுவார்கள். இவ்வாறு பூசுகையில், இருசப்ப நாயனா! இருட்கழி தீரப்பா! என்று சனீஸ்வரரை வேண்டுவதுண்டு. போகிப் பொங்கல் அன்று நெருப்பில் பழையனவற்றை எரித்துக் கரியாக்குகையிலும்,
"பழசைத் தீயில் இட்டோமே
பண்டுப் புதுவளம் தருவாயே!''
என்று வேண்டிப் பாடுவார்கள். இதனால்தான் இருசப்பன், அமாவாசை என்று சனீஸ்வர அனுகிரகப் பெயர்களைச் சூடுவதும் உண்டு. இவ்வகைப் பெயர்களை உடையவர்கள், சனீஸ்வரரை மிகவும் அதிகமாக வழிபட்டு வருவதுடன், தினமுமே காக்கைகளுக்குத் தாமே தம் கரங்களாலேயே உணவிட்டு வர வேண்டும்.
இருசப்பன், கருப்பையா, கருப்பண்ணன், கருத்தமுத்து, கருப்புசாமி, கருப்பன் போன்ற பெயர்களை உடையவர்கள் கரிநாள் மற்றும் சனிக்கிழமை, சனி கிரக நட்சத்திர நாட்களில், கருப்பு, கரு நீல வண்ண உடைகளை அணிந்து,
கருந் திராட்சை, நாவல், ராஜ்மா தான்யம், கருவேப்பிலை, கருநீல பீட்ரூட், கருநீல முட்டைக் கோஸ், எள் போன்ற சனீஸ்வர சக்திப் பொருட்களைக் கொண்டு, சனீஸ்வரத் துதிகளை ஓதியவாறு, தாமே சமைத்து, முதலில், காக்கைகளுக்கு இட்டுப் பிறகு,
ஊனமுற்றவர்களுக்கும், கருப்பு நிற ஆடை அணிந்தவர்களுக்கும் முதலில் அன்னமிட்டுப் பிறகு ஏனையோர்க்கு அன்னதானமளித்து,
கருந்திராட்சை, நாவல் போன்றவற்றையும் தானமளித்துப் பிறகே தாம் உணவேற்றல் என்ற சனீஸ்வர விரதத்தைச் செய்து வந்தால், பிள்ளைகள், பெண்கள் நல்ல தீர்காயுளுடன், சிறப்பான மணவாழ்வைப் பெற உதவும்.

ஐந்தும் சுத்தம் பெறட்டும்

புதன் கிழமை மன, புத்தி சுத்திகரிப்பு நாளாகத் துலங்குகிறது. வாரந்தோறும் கார், ஸ்கூட்டரைச் சுத்திகரிப்பது போல, புதன் கிழமை நாளானது உள்ளத்தின், மனத்தின் சுத்திகரிப்பு நாளாக விளங்குகின்றது. இது வித்யா விருத்தி நாளாகவும், தேவாதி தேவ மூர்த்திகளே வித்யை சக்தியின் மூலமாக விளங்கும் சர்வேஸ்வரனையே வணங்கும் வித்யைப் பிரகாச நாளாகவும் துலங்குகின்றது.

வித்யைக் கதிர்கள் பூரிக்கும் நாளாகவும் புதன் கிழமை அமைகின்றது. புத்தி நல்லவிதமாகச் செயல்படும் நாளாகவும் இருக்கின்றது. உண்மையில், புதன் தோறும் வெளியில் சாப்பிடுவதில்லை, காபி, டீ குடிப்பதில்லை என்று சங்கல்பம் எடுத்து நிறைவேற்றி வந்தால் புத்தியில் நல்ல மாற்றங்களைக் காணலாம். ஹோட்டல் உணவு உடலுக்கு உகந்தது அல்ல என்று மருத்துவப் பூர்வமாகவும் உரைக்கின்றார்கள் அல்லவா. புத்தி, அறிவு, உள்ளத்தின் பிரகாசத்தையும் ஹோட்டல் உணவு, வெளி உணவு பாதிக்கின்றது. கலியுக மனிதனின் வாழ்வு தினசரி உணவையே நம்பி இருக்கிறது. எனவே, உணவு சுத்தமாக இருந்தால்தான் உடல், மனம், உள்ளம், புத்தி, அறிவு இந்த ஐந்தும் சுத்தமாக இருக்கும். இதற்காகத்தான் புதன் கிழமையாவது
* ஆலயப் பிரசாதங்களை உண்டும்,
* தானே சமைத்து உண்டும்,
* அன்புடன் உணவளிப்பவர்களிடம் உண்டும்,
* தனக்கு நன்கு அறிமுகமானவர்களின் இல்லங்களில் உண்டும்
புதன் கிழமையன்று ஏற்கும் உணவையாவது சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் உணவே, கலியுக மனிதனின் உள்ளத்தை, மனதை, புத்தியை, உடலை அறிவை ஆள்கின்றது.
தற்போது லட்சக் கணக்கில் பெருகி வரும் செல்போன்கள் வானில், பரவெளியில் மைக்ரோ கதிர்கள் பரவிப் பலரையும் குறிப்பாக, வலப்புறம் காதில் வைத்துப் பேசுகையில் மூளை உறைக் கதிர்கள் பாதிப்பு அடைகின்றன. புதன் கிழமையேனும் செல்போனில் பேசுவதில்லை அல்லது குறைந்த அளவில் பேசுவது, வேறு வகையிலான, அவ்வளவாக பாதிப்பில்லாத போன்களை மட்டும் பயன்படுத்துவது என்று பல உறுதிகளை எடுத்துக் கொண்டு, புதன் தோறும் புத்தி சுத்திகரிப்பை நிகழ்த்திடுக!
செல்போனால் ஏற்படும் நோய்கள், வருங்காலத்தில் நிறையப் பெருகும் என்பதால் புதன் கிழமையன்றும், சப்தமித் திதி நாளிலும் ஆற்றும் பூஜைகளே இதன் பாதிப்புகளை ஓரளவு தணிக்க உதவும். குறைந்தது ஐந்து மணி நேரம் விளக்குகளை ஏற்றி வைத்தல், சாம்பிராணி தூபம், ஊதுபர்த்திகளைத் தினந்தோறும் ஆலயத்திலும், இல்லத்திலும் நிறைய ஏற்றி வைத்து வழிபடுதல் மூலம் நீங்கள் வசிக்கும் வீதி, மாநிலம், நாட்டிற்கு மட்டுமல்லாது உலகப் பரவெளியையே சுத்திகரிக்க உதவிடுக!
எனவே, நீங்கள் வீட்டில் ஏற்றும் விளக்கை ஏற்றும் போது உங்களுக்காக ஒன்று, பிற ஜீவன்களுக்காக ஒன்று என இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடுக! வசதி இல்லாதவர்கள், ஒரே விளக்கில் இரண்டு திரிகளைத் தமக்காகவும், மூன்றாவதைப் பிற ஜீவன்களுக்காகவும் ஏற்றிடுக! புதன் கிழமையாவது அனைவரும் குறைந்தது இரண்டு விளக்குகளை ஏற்றி வழிபடுதல் வேண்டும்.
பஞ்ச பூத விளக்குப் பூஜையை நிகழ்த்திட, புதன் கிழமை மிகவும் ஏற்றதாகும். உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஆகிய ஐந்தும் பஞ்ச பூதங்களால் ஆனவை ஆதலின், இவற்றைப் பஞ்ச பூத சக்திகளால் சுத்திகரிப்பதற்காக, ஆலயத்திலும், இல்லத்திலும் புதன் கிழமை தோறும் ஐந்து விளக்குகளை ஏற்றிப் பூஜித்தல் சிறப்புடையதாகும்.
புதன் கிழமை தோறும் உடல், உள்ளம், புத்தி, மனம், அறிவு ஐந்தையும் சுத்திகரிக்க உதவிடுவதாக, கைகளால் அரைத்துக் காய வைத்த சந்தனத் தூள், அத்தர், புனுகு, ஜவ்வாது, புனுகு ஆகிய ஐந்தையும் கலந்த திரவியப் பொடியைச் சாம்பிராணி தூபத்தில் அவ்வப்போது நறுமணம் நிறைய இட்டு ஆலயத்திலும், இல்லத்திலும் இட்டு வருவதால், மனக் குழப்பங்கள் தணிந்து எத்தகையத் துன்பங்களின் ஊடேயும் மனம் சிறிது, சிறிதாக அமைதி பெறுவதை நன்கு காணலாம்.

வசை பெறும் வாழ்வு இசை பெற

சூரிய மூலம், சந்திர மூலம் என்ற இரண்டு முக்கியமான ஜீவச் சுழிகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. தலைச் சுழியும் இவ்வகைத்ததே! தந்தை வகை, தாய் வகைகளில் இருந்து திரண்டு வரும் மூல ரத்தக் கூறுகளைத் தாங்கி வருபவைதாம், சூரிய மூலம், சந்திர மூலம் ஆகும்.
இரண்டில் ஒன்று, இரண்டும் ஒன்று, இரண்டாய் ஒன்று, இரண்டால் ஒன்று, இரண்டின் ஒன்று ஆகிய ஐந்து பஞ்ச பூதத் தத்துவங்களைக் கொண்டுதான் ஒவ்வொரு மனிதனும் பிறக்கின்றான். இவற்றில் நான்குதாம் இரண்டு கை விரல்களும், இரண்டு பாத விரல் அமைப்புகளாகவும், ஐந்தாவது உடல் உள்ளும் உறைகின்றன. ஆண்கள், தம் வலது கையின் ஐந்து விரல்களையும் மார்பில் வைத்து விரல்களைச் சுற்றி ரேகைக்கோடுகள் வரைந்து, பிறகு இடது கை விரல்களையும் மார்பில் வைத்து கோடுகளை வரைந்து, இவ்விரண்டு வகை ரேகைகளையும் சேர்த்து வைத்து அமையும் சக்கரமே அவரவருடைய ஆத்மச் சக்கரம் ஆகும். பெண்களுக்கான ஆத்மச் சக்கரம் அவரவருடைய இடது கை ரேகைகளைப் பொறுத்தமையும்.
சூரிய மூலம் என்பது, சூரிய கிரகம் மூல நட்சத்திர மண்டலத்தில் உறையும் போது அடையப் பெறும் திருஷ்ண சக்திகளாகும். சந்திர மூலம் என்பது சந்திர கிரகம், மூல நட்சத்திர மண்டலத்தில் உறைகையில் உருவாகும் அம்ருத வர்ஷ்ண சக்திகளாகும். எனவே, மூல நட்சத்திரமானது, ஏழு நிலைப் பிறப்பு அம்சங்களில் தலையாய பங்கு வகிக்கின்றது. ஏழு நிலைப் பிறப்பு என்பது பூவுலகில் ஒரு பிறப்பு எடுப்பதற்கு ஏழு வகையான மூலங்கள் தேவையானவை என்பதைக் குறிப்பதாகும்.



மப்பேடு திருத்தலம்

மப்பேடு என்பது கை விரல் பதிவை பரிபாஷை ரீதியாகக் குறிப்பதாகும். மப்பும் மந்தாரமுமாக என்று வான்மழை நீர் அம்சங்களைக் குறிக்கின்றோம் அல்லவா! மப்பு என்பதற்கு மண் கறை, மண்ணில் படியும் கை விரல் கறை என்றும், ஏடு என்றால் தளம், காகிதம், ஓலை என்றும் பொருளாகின்றது அல்லவா! சென்னை- தக்கோலம் மார்கத்தில் உள்ள மப்பேடு சிவத் தலம் ஜீவன்களின் இருதய ஏட்டுச் சுழித் தலமாகும். இதனால்தாம் இங்கு தினமுமே நெஞ்சார அனுமாரப்பர் இங்கு பலி பீடத்தில் சூக்கும ரீதியாகப் பூஜிக்கின்றார். பலி பீடமும் இருதயக் கமலப் பீடமாகத் தோற்றமளிக்கிறது.
ஆண்கள் தினமும் தம் வலது உள்ளங்கையை மார்பில் வைத்து இருதயக் கமலத் தாமரையைத் தியானித்திட, கை விரல்கள் இருதய ஏட்டில் படிகையில், மப்பேடு ஆகிறது. இதனால்தான் ஆஞ்சநேயர் தினமும் வழிபடுகின்ற மப்பேடு திருத்தலத்தில் உள்ள மஹா நவவியாகரண பலி பீடம் ஆத்ம தாமரை வடிவில் அமைந்துள்ளது.
சூரிய, சந்திர கிரகங்கள் மூல நட்சத்திர மண்டலத்தில் உறைகையில், மப்பேடு போன்ற தலத்திலும், கொடிக் கம்பம், பலிபீடம் சிறப்பாக உள்ள பிற தலங்களிலும் வழிபடுதல் நன்று. பொதுவாக, கொடிக்கம்பம் என்பது மனித சரீரத்தைக் குறிப்பதாகும். இறைவன் குடியிருக்கும் ஆலயத்தில், மனிதப் பாதங்களை மேலே வைத்துச் சிரசாசனம் பூணுவதைப் போலமைவதே கொடிக் கம்பமாகும். உண்மையில், மனிதன் தலைகீழாக ஆசனம் பயில்வது போன்ற அமைப்பே கொடிக் கம்ப அமைப்பாகும் ! இறைவன் குடியிருக்கும் ஆலயத்தில் தம் பாதங்கள் படியலாகாது என்பதால்தான் காரைக்கால் அம்மையார் சிரசாசனம் பூணுவதைப் போல், ஆலயங்களில் தலைகீழாக நடந்து வந்து வழிபட்டார் அல்லவா!

சூரியன் மூல நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் நாட்களில் காரைக்கால் அம்மையாரின் பதிகங்களை ஓதி வழிபடுதலும், இயன்றால் இல்லத்தில் சிறிது நேரம் சிரசாசனத்தில் இருந்தவாறு தியானித்தலும், மப்பேடுத் தல வழிபாடும், உமாபதி சிவாச்சாரியாரின் கொடி மரத் துதிகளை ஓதி கொடி மரத்தை வழிபடுதலும், பீர்க்கங்காய், புடலை, முருங்கை போன்ற நீள்வகைக் காய்கறி உணவு வகைகளைத் தானமாக அளித்தலும், பிறருடைய வஞ்சனையால், சூழ்ச்சியால், பகைமையால் தினமுமே வதை படுவோரின் தினசரி வாழ்வு நன்னிலை பெற உதவும்.

நீக்ரோக்களின் கரி பூஜை

சனி நாளில் கரி நாள் வந்தமைவது மஹா வரபலக் கரிநாள் ஆகிறது.  
கரி தோஷங்கள் சேர்ந்துள்ளன என்பதை எவ்வாறு அறியலாம்? கண்ணில் கருவளையம், பல்லில், ஈறில் கருப்புக் கறை சேர்தல், நாக்கில் கருப்பு வடு, உடலில் கருப்பு வடுக்கள் தோன்றுதல் போன்றவற்றின் மூலம் கரி தோஷங்கள் சேர்ந்திருப்பதை நன்கு அறியலாம். சொத்தைப் பல் கூட, பலத்த கரி தோஷங்கள் குடும்பத்தைச் சூழ்வதைக் குறிப்பதாகும்.
இவ்வாறாக ஒவ்வொருவரும் தினமுமே கழிக்க வேண்டிய கரி வகைத் தோஷங்கள் நிறையவே உள்ளன. தினந்தோறும், குறைந்தது மூன்று முறையேனும் வரும் சனி ஹோரை நேரத்தில், அடுப்புக் கரி வைத்து நெருப்புத் தணலை உருவாக்கிச் சாம்பிராணி தூபம் ஏற்றி வழிபட்டு வருதல் வேண்டும்.

ஸ்ரீஅக்னீஸ்வரர்
திருக்காட்டுப்பள்ளி

பெரு மதிப்பிற்குரிய நீக்ரோ இன மக்களின் நிறம், கிருஷ்ண வண்ணம் ஆகும். நீக்ரோ மக்கள் இயற்கையிலேயே ஸ்ரீகிருஷ்ண வாக்படுத்வ சக்திகளுடன், இசை லயம் கொண்டவர்கள். அவர்களுக்கான நிறத்தைக் கருப்பு வண்ணம் என்பதை விட, கிருஷ்ண வண்ணம் என்று உரைத்தலே சரியானதாகும். ஸ்ரீகிருஷ்ணன் பச்சை, கருமை, கருநீலம் ஆகிய மூன்று வண்ணங்களில் தோன்றுவார். உண்மையில், நீக்ரோ மக்கள் தங்களையும் அறியாமல் பல வகைகளில் கருவண்ண சக்திகளை உடைய சனீஸ்வரப் பூஜைகளை ஆற்றித் தாம் வருகின்றார்கள்.
வெஸ்ட் இண்டீஸ், ஆப்பிரிக்கா, பனாமா போன்ற இடங்களில் வாழும் நீக்ரோ மக்களின் இறைவழிபாடு முறைகள் பலவும் சனீஸ்வர வழிபாட்டை ஒத்தனவேயாகும். இதனால்தான் இவற்றைக் கிருஷ்ண பூமி என்றும் ஆன்மீகத்தில் உரைக்கின்றார்கள்.
சனிக்கிழமையில் சேர்ந்து வரும் கரிநாளில், கருப்பு வண்ண உடைகளை அணிந்து ஸ்ரீகிருஷ்ணரையும், ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியை நிறையவே வழிபடுதல் வேண்டும்.
கழிவுக் கழிநாள் என்று சித்தர்கள் கரிநாளைக் குறிக்கிறார்கள். அதாவது, கழிக்க வேண்டியதைக் கழிய வைக்கும் நாள் என்பது பொருள். உலகில், இயல்பாக நெருப்பில் இடப்படும் எதுவும் பஸ்மமாகிக் கருப்பு நிறமாகி விடுகிறது அல்லவா. எந்த நெருப்பும், இயற்கையிலேயே, பரவெளியில், விண்ணில் மிதக்கும் விஷசக்தி எண்ணங்களை பஸ்மமாக்கிச் சுத்திகரித்து தருகிறது. எனவே, கரிநாளுக்கும், அக்னி சக்திகளுக்கும் நிறையப் பிணைப்புகள் உள்ளன.
கரிநாள் தோறும் ஸ்ரீஅக்னீஸ்வரர் என்ற பெயரில் இறைவன் அருளும் தலங்களில் அருளும் சனீஸ்வரரைப் பூஜிப்பது மிகவும் விசேஷமானதாகும்.

போதி தரும் போதம்

போதி மரம் என்பது யோக சக்திகள் நிறைந்த அரச மர வகையாகும். பிப்லாத மகரிஷி எப்போதும் அரச மரத்தடியில் தான் தியானமும், தவமும் புரிகின்றார். சுவாதியம் போதி என்பது சுவாதி நட்சத்திர மண்டலத்தில் சந்திர கிரஹமோ, குரு கிரஹமோ சஞ்சரிக்கையில் ஆற்றும் அரச மரத்தடி வழிபாடு, தியானம், யோக வாசத்தில் விளையும் அபரிமிதமான பலாபல சக்திகளாகும்.
லெளகீக ரீதியாக மனம் என்பது இரு தட்டுக்களை உடையதாகப் பொலிகிறது. நல்லது, நல்லது அல்லாதது என்ற இரண்டையும் கொண்டே எந்த மனித காரியமும் பலாபலன்களை அளிக்கும். ஒவ்வொரு விநாடியும் புற்றீசல் போலத் தோன்றிக் கொண்டே இருக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்குமே நல்லது, நல்லது அல்லாதது என்ற வகைப்பாடு உண்டு.


மூலவர் வடக்கு நோக்கி எழுந்தருளிய
கடம்பர்கோயில்

இச்சா சக்தி, கிரியா சக்தி என்பது போல், மனிதனுடைய ஜீவ சக்தி இரண்டின் தேவ அம்சங்களாகவே துலங்குகிறது. இதனைத்தான் கணவன், மனைவி இருவரும் கூடிய இல்லறம் உணர்த்துகின்றது. மேலும், மனித உடலில் இரு கைகள், கால்கள், காதுகள், இரு நாசிகள், இரு கண்கள் எனவாக இருமையின் ஒருமைக் குணாதிசயங்களும் நன்கு உணர்த்தப் பெறுகின்றன.
இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம், என்ற அற்புதமான வாக்கியமானது, தற்காலத்தில் சவால் விடும் வாக்கியமாக கருதப்படுகிறது. கருத்து இதுவல்ல. இரண்டில் ஒன்று பார்ப்பது, என்றால் தைரியம், துணிச்சல், நல்ல வைராக்யம், மனோதைரியம் இவற்றோடு நற்காரியங்களை,  "முடியுமா, முடியாதா?'' என்ற இருநிலைத் தடுமாற்றம் அல்லாது மன ஒருமிப்போடு முடித்தல் என்பது பொருளாகும்.
தேவ கண வாத்சல்ய வாக்கியத்தில் குறித்தபடி இரண்டில் ஒன்று என்பது இரட்டை வாக்சக்திகள் ஆக்கம் பெறுவதைக் குறிப்பதாகும். குரு பார்வை நன்கு துலங்கும் போதுதான் நன்மைகள் கூடும். ஜோதிடப் பாடத்திலும் அனைத்து கிரகங்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு என்றும், குரு, செவ்வாய், சனி கிரகங்களுக்கு விசேஷமான பார்வைகள் உண்டு என்று உரைப்பதையும் நாம் அறிவோம். இதில் எட்டாமிடப் பார்வை மிகுந்த முக்கியத்வம் பெறுகிறது.
சுவாதியில் குரு அல்லது சந்திரன் நிலவும் நாட்களில் அரசமரத்தடி விநாயகர், ஸ்ரீகிருஷ்ணர், லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளை செய்தலும், வடக்கு நோக்கி அருளும் மூல மூர்த்திச் சிவலிங்கம் அமைந்திருக்க, மூலவருக்குப் பின்புறம் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் இருக்குமிடத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி அமைந்தருளும் தலங்களில் வழிபடுதலும் சிறப்புடையதாகும். மேலும் அரசு சமித்தினை, ரட்சா சக்தியாக எப்போதும் வைத்திருத்தல் விசேஷமானதாகும்.

மாசுகள் பலவகை

சாலையில் செல்கையில், எவரேனும் நல்ல ஆடைகளை உடுத்திச் செல்வது கண்டு, பிறர் மீது சற்றே பொறாமை கொள்தல் போன்று, கரிமாசு படிதலிலும் கிரீஸ் போன்று சேர்ந்து எளிதில் களையும்படியான மேற்கரி தோஷங்கள் படிதலும் உண்டு. பிறருடைய முன்னேற்றம் பாதிக்கும் வகையில் கோள் மூட்டுதல், குறைந்த மதிப்பெண்களைப் போடுதல், பிரமோஷனைத் தடுத்தல் போன்ற குரூரமான செயல்களைச் செய்வதான சில வகைக் கரி தோஷங்கள் தீப்புண் போன்ற ஆழ்ந்த வடுவாய் ஆவதும் உண்டு. இது பிறவி பிறவியாய்த் தொடரும். இதே போலவே மனதில் எழும் முறையற்ற எண்ணங்களுக்கு ஏற்ப கரி மாசும் அமைகிறது.
கரி மாசு, கரிந்த மாசு, கரித்த மாசு - என மூன்று வகைக் கரி தோஷங்கள் உண்டு. அவ்வப்போது பலருக்கும் தீய எண்ணங்கள் வந்து சேர்வது கரி மாசு ஆகும். ஆலயம் மற்றும் இல்லத்தில், அருணாசல கிரிவலத்தில் சாம்பிராணி தூபத்தை அடிக்கடி இட்டு வந்தால் இது அகலும்.

இதிலும் ஒரே வகையான தவறான எண்ணமே மீண்டும், மீண்டும் வந்து அலைக்கழித்தலும், தகாத எண்ணங்கள் அடிக்கடி வருவதும் கரிந்த மாசு ஆகி விடும். அதாவது, தீய எண்ணங்கள், பெருங் குற்றமானவை, பாவகரமானவை எனத் தெரிந்தும் திரும்பத் திரும்ப வருதல் கரிந்த மாசு ஆகும். இவற்றை உடனடியாகத் தீர்க்க இயலாது. இதற்கான நிவாரண வழிகளைப் பெற, சனிக் கிழமையிலும், கரி நாட்களிலும், சனி கிரக நட்சத்திர நாட்களிலும், சனிப் பிரதோஷ நாளிலும் சாம்பிராணி தூபம் இட்டவாறு அருணாசலத்தில் கிரிவலம் வருதலும், சனீஸ்வரர் தனித்து சன்னதி கொண்டு அருளும் தலத்தில் 26 விளக்குகளை ஏற்றி வழிபட்டு வருதலும் வேண்டும்.
பிறரை மன நோகப் பேசுதல், வசைபாடுதல், பிறர் வாழ்க்கை கெடும்படி நடந்து கொள்தல் கரித்த மாசு ஆகும். இதற்குப் பரிகாரமே கிடையாது. இவ்வாறு துன்புறுத்தப்பட்டவர்கள் தாமாகவே எப்பிறவியிலேனும் மன்னிப்புத் தந்தாலன்றி, இத்தகையக் கரித்த மாசை அவ்வளவு சுலபமாக அகற்ற இயலாது. எனினும், திங்கட் கிழமையில் வந்தமையும் கரிநாளில் சோமசூக்தப் பிரதட்சிண முறையில் மாலையில் ஸ்ரீசோமேஸ்வரர், ஸ்ரீசோமசுந்தரர், ஸ்ரீசோமநாதர், ஸ்ரீசந்த்ரசேகரர், ஸ்ரீசந்த்ர மெளளீஸ்வரர் போன்ற சந்த்ர நாம சக்தித் தலங்களில் சனீஸ்வர வழிபாட்டை ஆற்றி, கருந் திராட்சை, கரும்புச் சாற்றைத் தானமாக அளித்து வர, மேற்கண்ட வகையில் அமையும் கரிதோஷங்களையும் நிவர்த்திக்க வழி தரும் பூஜா பலன்களைத் தந்திடுவதாகும்.

பிள்ளைகளின் கோபம் தணிய

எந்த அக்னியில் பலவும் எரிந்து, கரித்தாக மீந்தல் (சாம்பல்) ஏற்படுகின்றதோ, அதே அக்னிதான் பலவிதமான மன மாசுகளை அகற்றிச் சித்சுத்தி சக்திகளையும் தருகிறது. சித்சுத்தி நாளாக, மங்கள சக்திகளால் துர்வினைகளை அகற்றிட உதவும் மங்கள வாரமாகிய செவ்வாய்க் கிழமை மிகச் சிறந்த அக்னி சக்தி நாளாகும். அக்னி சக்திகளுடன் பரிமளிக்கும் ஸ்ரீமஹா துர்க்கைக்கான ராகு கால வழிபாடு, இந்நாளில்தானே மிகவும் சிறப்படைகிறது.

ஸ்ரீதுங்கஸ்தனாம்பிகை
கஞ்சனாகரம்

பசி என்பதையும் அக்னியின் ஒரு வகையாகவே உத்தமமான ஆன்மீக நெறிகளில் குறிக்கின்றார்கள். குண்டோதரனுக்கு (அம்பிகை) அன்னமிட்ட வைபவம் அமையும் திருவிளையாடல் புராணத்தில், குண்டோதரனுக்கு வரும் வடவாக்னி என்பதும் ஒரு வகைத் தீராப் பசிதாமே! மக்கள் செய்வது மன்னன் தலையில் என்பதாக, மக்கள் செய்யும் தவறுகள் சமுதாயக் குற்ற வினைகளாக ஆகி, மன்னர்கள் மற்றும் கலியுகத்தில் ஆட்சியாளர்களையே சென்றடையும். எனவே, ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், நிறையத் தொழிலாளர்களைக் கொண்ட தொழில் துறைத் தலைமையாளர்கள் ஏகாதசி தோறும் ஆஞ்சநேயர் அமர்ந்த கோலத்தில் அருளும் ஆலயங்களில் அன்னதானத்துடன் வழிபட்டு வருதல் வேண்டும். ஏகாதசித் திதியில் தாம் உண்ணா நோன்பிருந்து, பிறர் பசி ஆற்றும் சேவையாக, அன்னதானம்தனை ஆற்றுதல் நன்றே!

கிளியுடன் துர்கை
கூரூர்

செவ்வாய்க் கிழமையன்று அமைந்து வரும் ஏகாதசித் திதியில், அக்னி தேவதா மூர்த்திகள் விசேஷமான அக்னி சக்திகளைப் பூவுலகில் தோற்றுவிக்கின்றனர். இவை விளக்கு ஜோதி, ஹோமம், சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற தெய்வ ஆராதனைகள் மூலமாக வெளி வரும். எனவே, இந்நாளில் விளக்கு ஜோதி, ஹோமம், சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற மங்களகரமான அக்னி வழிபாடுகள் நன்கு ஆக்கம் பெறுதல் மூலம் குடும்பத்தில் நெருங்கிய பந்தங்களில் ஏற்பட்டுள்ள பகைமை அகல உதவும்.
செவ்வாய் கிழமை, சுவாதி நட்சத்திரம் போன்ற பலவிதமான கூடுதல் அக்னி சக்திகளுடன் கூடி வரும் ஏகாதசித் திதியானது, கிளிபட்சி பட்ச வாகட சக்திகளைக் கொண்டதாகும். அதாவது ஏகாதசி கூடி வரும் செவ்வாயன்று, கிளிகளின் தரிசனமும், கிளிக்கு உணவிடுதலும், கூண்டில் அடைபட்டு வாடும் பறவைகளை விடுவித்தலும், கைகளில் கிளியைத் தாங்கி அருளும் அம்பிகையின் தரிசனமும் மிகவும் சிறப்பான பலன்களைத் தருகின்றன.
உலவாக் கிளி என்ற ஒரு வகைக் கிளி உண்டு. ஒரு லட்சம் கிளிகளுள் ஒரு கிளி உலவாக் கிளியாகத் தோன்றுகிறது. இது எப்போதும் விரதம் பூண்ட நிலையில் இருக்கும். அதாவது, நித்திய ஏகாதசி விரதம் பூண்டிருக்கும். எப்போதும் உண்ணா விரதம் பூண்டு, பசித்த நிலையில் இருப்பதால், இதற்கு அக்னி சக்திகள் மிகவும் அதிகம். இதனால். இதனுடைய பசித்த உடலும் சற்றுச் சூடாகவே இருக்கும். இந்தக் கிளியைக் கண்டால் சகல பட்சிகளும் சற்றுத் தள்ளியே பறக்கும். காரணம், பயமல்ல! ஆனால் அக்னிக் கோளமாக விளங்கும் இந்தக் கிளியின் மங்களாக்னி சக்திகளின் மஹிமையால் மதிப்பு, மரியாதை காரணமாகவே, இதனருகே செல்லவே பிற பட்சிகள் தயங்கும்.
நித்திய ஏகாதசியிலேயே பெரும்பாலும் உண்ணா விரத நிலையில் இருக்கும் இந்தக் கிளி ஒவ்வொரு நாளும் விதவிதமாக ஓரிரண்டு கனியைப் புசித்தே தன் விரதத்தைப் பூர்த்தி செய்து கொள்ளும். குறித்த நாளில் குறித்த கனி வகை கிட்டா விட்டால் அன்று முழுதும் பசியுடனேதான் இருக்கும்.
இவ்வாறாக, விரதத்துடன் உலவும் உலவாக் கிளி ஒரு போதும் குரல் எழுப்பாது. சற்றே கத்தினும் அது உலகிற்கு வரும் பலவிதமான துன்பங்களைக் குறிப்பதாகி விடும். இதனுடைய மூன்று விதமான குரல் பாவனைகள் உலகிற்கு வர இருக்கும் வற்கடப் பஞ்சத்தைக் குறித்து விடும். ஆதலால், இந்தக் கிளி உண்ணும் கனி வகையை அறிந்து, அந்தந்த நாளில் இதன் முன் அந்தக் கனிகளை பிற பட்சிகள் வைத்திடும். திருஅண்ணாமலையில் இவ்வகைக் கிளிகள் சில இன்றும் நித்திய கிரிவலம் வருகின்றன.
ஏகாதசி நாளில் இந்த உலவாக் கிளியானது தம் ஏகாதசி விரத நற்பலன்களை உலகிற்கென அளிக்கின்றன. எனவே அக்னி சக்தி கூடி வரும் ஏகாதசி நாட்களில் பல்வகை கனிகளை (குறைந்தது 36) இல்லத்திலும், ஆலயத்திலும் வைத்தும், மாலையாகவும் கட்டியும் வழிபடுக. உண்மையாகவே ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபடுவோருக்கு இந்தக் கிளியே தரிசனம் தந்து அருள் தரும். பொதுவாக, இவ்வகைக் கனிமாலை வழிபாடு குழந்தைகளுக்கு நல்ல மன ஆரோக்கியத்தைத் தருவதாகும். எப்போதும் மன உளைச்சலுடனும், வள்வள் என்று கோபத்திலும் இருக்கும் பிள்ளைகள் நல்அமைதி பெற, கிளியைத் தாங்கி அருளும் (மயிலாடுதுறை அருகே) கஞ்சநாகரம் சிவாலயத்தில் ஸ்ரீதுங்கஸ்தனாம்பிகைக்கும், நன்னிலம் அருகே கூரூர் துர்கை, ஆஞ்சநேயருக்குக் கனிமாலைகள் சார்த்தி வழிபடுக.

விருத்தியாகும் வித்யா சக்திகள்

பிரதோஷ வழிபாட்டை சங்கல்ப சத்திய பலாபல விரதமாகச் சித்தர்கள் உரைக்கின்றனர். தொடர்ந்து, 21, 36, 48 பிரதோஷ நாட்களில் இடைவிடாது விரதம் புரிந்து, சுயம்புச் சிவமூர்த்தித் தலங்களைத் தரிசித்து, 21, 36, 48 பேருக்கு உடையளிப்பது, உணவு பொட்டலங்களை அளிப்பது என்ற சங்கல்பம் பூண்டு, விரதம், பூஜை, தான, தர்மம் ஆகிய மூன்றையும் இணைத்துப் பிரதோஷம் போன்று பிற வழிபாடுகளையும் ஆற்றிடில், இதில் பிற ஜீவன்களின் நலன்களும் பெரிதும் பேணப் பெறுவதால், இதன் பலாபலன்கள் நன்கு விருத்தியாகி உடனேயே பலனளிப்பதை வாழ்வில் நன்கு உணர்ந்திடலாம்.
குறிப்பாக, பிள்ளைகள், புதல்விகள் பற்றிய பெருங் கவலைகளுக்கு ஆட்பட்டவர்கள், இவ்வாறாகத் தொடர்ந்து இடைவிடாது 12, 21, 30 பிரதோஷ நாட்களில் சுயம்புத் தலங்களில் தரிசனமும், இயன்ற தான, தர்மமும் செய்து வந்திடில், நல்ல துரிதமான வகையில் பலன்களைக் கண்ணாரக் காணலாம். மேற்கண்ட வகையிலானப் பெருங் கவலைகளுக்குக் காரணமே, பித்ருக்களின் ஆசிகளை சரிவரப் பெறாமையால்தான் என்பதைப் பலரும் அறிந்து கொள்வதில்லை.

ஸ்ரீகைலாசநாதர் சிவாலயம் காரைக்கால்

தேய்பிறைப் பிரதோஷ பூஜா பலன்கள், பித்ரு சாபங்களைப் பெரிதும் தணித்துத் தருகின்றன. ஏன், எவ்வாறு? தேய்பிறைப் பிரதோஷ தினத்தை, அடுத்து மாத சிவராத்திரியும், இதனையடுத்து அமாவாசையுமாக ஆகிய மூன்று விரத, பூஜைத் தினங்களாகத் தொடர்ந்து வருவதால், இந்த மூன்று நாட்களிலும் த்ரயம்பக திரிதண்டப் பூஜையை ஆற்றும் வகையில், பித்ருக்களாகிய உத்தம தேவநிலையில் உறையும் மூதாதையர்கள் பூவுலகிற்கு வந்து பூஜிப்பதால், இந்த மூன்று நாட்களிலும் அருணாசலத்தைக் கிரிவலம் வருதலும், தான, தர்மம், விரதம், பூஜைகளுடன் இணைந்து ஆற்றுதலும் அபரிமிதமான வகையில் பலன்களைத் தருவதாகும்.
வெறுமனே பலாபலன்களைப் பெறுதற்காகப் பூஜிப்பதை விட, சிறிது சிறிதாகத் தான, தர்மங்களையும் சேர்த்து செய்வதே நன்று. நீங்கள் இல்லத்தில் இறைவனுக்குப் படைப்பதற்காகப் பிரசாதம் செய்கையில், வெளியில் சிறிது அன்னதானம் செய்வதற்காகச் சற்றுக் கூடுதலாகவே செய்திடுக! உங்களுக்காகப் புத்தாடைகள் வாங்குகையில், கூடுதலாக ஒரு துண்டு, பனியனையாவது ஆடை தானம் செய்வதற்காக வாங்கிடுக! புதுக் காலணி வாங்கும் முன் ஒரு ஹவாய்ச் சப்பல் வகைக் காலணியையாவது தானத்திற்காக வாங்கிடுக! அல்லது அவ்வளவாக வசதி இல்லாதோர், நல்ல நிலைமையில் உள்ள ஆடை, காலணிகளையாவது தானம் செய்து வரல் வேண்டும்.
தனக்காகச் சுயநலமாகப் பூஜித்துப் பெறும் புண்ய சக்திப் பரிபாலனத்தில் புண்ணியமானது, வெகு விரைவாகக் கரையும் வண்ணம் சாத்தியக் கூறுகள் ஏற்படலாம்! ஆனால் இவற்றில் தான, தர்மப் புண்யம் சேர்கையில் பூஜா பலன்கள் நன்கு ஸ்திரப்படுவதானால், இத்தகைய வகைப் புண்ணியம், அவ்வளவு எளிதில் விரயமாகாது.
சுயநலமாகப் பூஜிக்கையில் கிட்டும் புண்ணியம் பெருகுகையில், சிறிய சிறிய சோதனைகள் ஏற்படுகையில் விரக்தி, ஏமாற்றம், பகைமை ஏற்பட்டுப் புண்ணியம் விரைவில் கரையும். இதனால் தவறுகள் செய்தும் காப்பாற்றப்படுகிறோம் என்ற உணர்வும் சேர்ந்து வந்து தவறுகளை மென்மேலும் கூடுதலாகச் செய்ய முற்படுவார்கள். கஷ்டப்பட்டுப் பெற்றப் புண்ணியத்தையும் இதனால் வெகு விரைவில் இழந்து விடுவீர்கள். எனவே, வீட்டுப் பூஜைகளோடு தினமும் சுயம்புத் தலங்களில் ஆலய வழிபாடும் செய்து வருதல் வேண்டும். தினமும் ஆலயத்தில் சிறிது குப்பையை எடுத்துச் சுத்திகரிப்பதும் மகத்தான சமுதாய சேவையே! ஆலயப் பூஜைகள் பொதுச் சமுதாய வளத்திற்காகத் தாமே!
சுயநலம் தணிந்து செய்யும் பூஜையே சிறப்புடையது ஆதலின், பலரும் ஒன்று சேர்ந்து சத்சங்கப் பூஜையாகவே எதனையும் நிகழ்த்துதல் விசேஷமானது. இதில் தான, தர்மமும் சேர்ந்து பலருக்கும் புண்ய பலன்கள் சென்றடைவதாலும், இதன் மூலம் சுயநலம் தணிவதாலும், சத்தசங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து செய்யும் பூஜைகளே சிறப்பான புண்ணியத்தைப் பெற்றுத் தரும்.

சிறுவர்களுக்கு ஞாபக சக்தி

மூலப்பண் பரணர் என்று ஆஞ்சநேயருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு. மூல நட்சத்திரத்திற்கு உரியவர்தாமே அனுமாரப்பர். நவவியாகரண பண்டிதராகப் போற்றப் பெறும் அனுமார், வேதம், வியாகரணம் போன்ற ஒன்பது வகைத் துறைகளிலும், நவரசத் தத்துவங்களிலும் மேன்மை பெற்றவராவார். சுயம்பாகவே, குழந்தைப் பருவத்திலேயே ஸ்ரீசூரிய மூர்த்தியின் அக்னிக் கோளத்தைத் தீண்டியமையால், அனைத்து வித்யா சக்திகளும் இயற்கையாகவே கை வரப் பெற்றவரே ஆஞ்சநேயர் ஆவார்.
மாருதிராயராகிய அனுமார், அமாவாசைத் திதி தோறும் சூரிய, சந்திர கிரகங்கள் இணைந்திருக்கும் கிரஹ பாச மண்டபத்தில் யோக பாவனையில் அமர்ந்து யோக நிலையிலேயே வீணையில் கானம் பொழிகின்றார். அமாவாசையை ஒரு திதி என்றே நாம் அறிந்தாலும், சூரிய, சந்திர கிரகங்கள் இணையும் பகுதியையும் அமாவாசைத் திடலாக, ஆன்மவாசத் திடலாக (த்ராட்சா தளம்) என்று ஆன்மீகத்தில் உரைக்கிறார்கள். எவ்விதமான தோஷமும் அண்டாத திதியே அமாவாசையும், எவ்விதமான தோஷமும் தீண்டா பிருத்வி நிலப் பகுதியே ஆன்மவாசத் திடல் (த்ராட்சா தளம்) ஆகும்.
ஆந்திர மாநிலத்தில் திராட்சாராமம் என்ற அற்புதமான வழிபாட்டுத் தலம் உண்டு. அமாவாஸ்ய ஆதலம் என்று இதற்குப் பெயர். உண்மையில் அமாவாசைத் திடலாகிய, ஆன்மவாச தளமானது, சூரிய, சந்திர கிரஹங்களில் கதிர்ப் பரிபாலனப் பரிமாணத்தாலும் ஏற்படுவதாகும். சூரிய மண்டலத்தில் சூரியோதய நேரத்தில் ஆரஞ்சுப் பிழம்பு ஏற்படுவதைப் பார்த்துள்ளீர்கள் அல்லவா. ஆரஞ்சுப் பிழம்பு, மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முன் உள்ள காலை உதய நேரம் மிகவும் சக்தி வாய்ந்த காலை நேரமாகும். ஸ்ரீராமருக்கென, அகஸ்திய மகரிஷி போதித்த ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை, சூரிய கிரகத்தின் ஆரஞ்சு பிழம்பு தெரியும் நேரத்தில் ஓதுதல் மிகவும் விசேஷமானதாகும். இதனால் கண் பார்வை நன்கு பிரகாசமாகும். நினைவாற்றல் மிகும். படிப்பு நன்கு ஏற்று வரும். ஜோதிடர்களுக்குத் தீர்கத் தரிசன சக்தி கிட்டும்.

ஸ்ரீராமரை வழிபடும் ஆஞ்சநேயர்
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவாலயம்

ஸ்ரீஅகஸ்திய பிரானிடம் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உபதேசமாகப் பெற்ற ஸ்ரீராமர், ஒரு அமாவாசைத் திதியில் ஸ்ரீராமர் திருவாக்கினால் விடியற்காலையில் இம்மந்திரத்தை உரைத்துக் கேட்கப் பெற்றார். எனவே, அமாவாசை நாளில் காலையில் சூரிய மண்டலத்தின் ஆரஞ்சுப் பிழம்பு தரிசனத்தைப் பெற்று, ஆதித்ய ஹ்ருதயத் தோத்திரங்களை ஓதி, ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாளைத் தரிசித்த பிறகு, காபி, டீ கூட அருந்தாமல் தர்ப்பணம் அளிப்பது சாலச் சிறந்ததாகும். இயன்ற வரையில், அமாவாசை நாளில் வெறும் வயிற்றோடு பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளித்திடுக. இதுவே சிறப்பானது.
மூலம் நட்சத்திர நாளில் அனுமார் மூர்த்திகளைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும்.
ஒன்றாம் பாதப்புடி ஆஞ்சநேயா போற்றி
இரண்டாம் பாதப்புடி ஆஞ்சநேயா போற்றி
மூன்றாம் பாதப்புடி ஆஞ்சநேயா போற்றி
நான்காம் பாதப்புடி ஆஞ்சநேயா போற்றி
ஐந்தாம் பாதப்புடி ஆஞ்சநேயா போற்றி
ஆறாம் பாதப்புடி ஆஞ்சநேயா போற்றி
ஏழாம் பாதப்புடி ஆஞ்சநேயா போற்றி
எட்டாம் பாதப்புடி ஆஞ்சநேயா போற்றி
ஒன்பதாம் பாதப்புடி ஆஞ்சநேயா போற்றி
என்று ஒன்பது முறை ஓதி மாருதிராயரைத் துதித்து, நின்ற நிலை, அமர்ந்த நிலை, யோக நிலை, வாலைத் தூக்கிய நிலை, வாலில் மணி கட்டிய நிலை, கைகூப்பி வணங்கிய நிலை என்ற வகையில் ஒன்பது வகை அனுமார் மூர்த்திகளைத் தரிசித்திடுக! அனுமாருக்கு உரித்தான விசேஷமான தோப்புக் கரண முறைகள் உண்டு. தக்க சத்குருவை, யோகசக்திகள் நிறைந்த ஆஞ்சநேய உபாசகரை நாடி அறியவும். மேற்கண்ட ஒன்பது தோப்புக் கரணத் துதிகளை ஓதி, அனுமார் கரணம் இட்டு அனுமாரை வணங்கி வர, இது மன சுத்திக்கு மிகவும் உதவும். பிள்ளைகளுக்கு ரட்சா சக்திகள் உண்டாகும். கெட்ட வழக்கங்கள் அண்டாது தற்காத்துக் கொள்ள முடியும்.
அனுமார் சாலிஸா என்ற அற்புதமான மந்திரத் துதிகளை, பாதங்களை நன்கு உயர்த்தி நின்ற நிலையில் ஓதுவது மாருதி மருத யோகநிலை ஆகும். பிறருடைய வன்சொற்களால் பாதிக்கப்பட்டவர்களும், அவமானப்பட்டவர்களும் தக்க நிவாரணம் பெற இந்த வழிபாடு பெரிதும் உதவும். சிறுவர், சிறுமியரின் ஞாபக மறதியையும் போக்கிடும்.

மன சரீரத்திற்கும் சுத்தி

உடலைப் பலவகைளிலும் மனிதன் அழுக்காக்கிக் கொள்வதைப் போல் மனதையும் மனிதன் தினமும் அழுக்காக்கிக் கொள்கிறான். இதனால் மனச் சரீரம் அதாவது மன உடல் என உரைக்கப்படுகிறது. பலவிதமான சுத்தி முறைகள் மனித உடலுக்கும், மனதுக்கும் நிறையவே தினமுமே தேவைப்படுகின்றன. உடலைச் சுத்திகரிக்க, கை, கால்கள், தலைமுடி, முதுகு என்று ஒவ்வொன்றாக நீர் விட்டு, சோப்பு, சீயக்காய் வைத்துச் சுத்திகரிக்க வேண்டும் அல்லவா! இதே போலவே, ஒவ்வொருவர் மனதிலும் நிறைய அங்கங்கள் உண்டு. ஆனால் நாம் எல்லோரும் மனம் என்பதை ஒரே ஒரு வஸ்துவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

சலசாரல் கோமுகம் திருநல்லூர்

சந்தோஷம், ஆரவாரம், வருத்தம், மகிழ்ச்சி, சோகம், ஆனந்தம் என மனோ ரசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனப் பகுதியில் இருந்தும் எழுகின்றது. ஆனால், மனம் முழுதும் நன்கு வியாபித்து இருப்பதால், மனிதனால் மனதை நன்கு அறிந்து கொள்ள முடியாமலேயே போய் விடுகிறது. பொதுவாக, நிறைய நற்காரியங்களைச் செய்து வந்தால்தான் மனம் தூய்மை அடையும். பூஜைகள், துதிகள் போன்றவை, மனதை ஓரளவு நன்கு ஒழுங்குபடுத்த உதவும். மனச் சுத்திகரிப்பு என்பது தனித்துவம் வாய்ந்ததாகும்.
அங்க சுத்திக்கு நீர் என்ற திரவம் உதவுவது போல, மன சுத்திக்கு உதவும் ஆன்ம சாதனங்களும் நிறையவே உண்டு. மனதில் என்ன நிகழ்கிறது என்பதை அவரவரே நன்கு அறிந்து கொள்ள முடியாதபடி, நிறைய எண்ணங்களின் ஊடேதான் மனிதன் வாழ்ந்து வருகிறான். மன சரீரத்தை சுத்திகரிக்கவே புஷ்ய சுத்தம் என்ற வகையான சில பிரதான பிரதமைத் திதிகள் வந்தமையும்.
பிரதமைத் திதி நாளில் தீர்த்த நீராடலை மேற்கொள்தல் மிகவும் நன்று. இந்நாளில் ஆலயங்களில், தக்க அனுமதியுடன், ஒரு சிறு சன்னிதியையாவது சுத்தி செய்து தர வேண்டும். பொதுவாக, நவகிரகம், துர்க்கை சன்னிதிகளில் எளிதில் எண்ணெய்ப் பிசுக்கு அடையும். இதனை நன்கு சுத்திகரித்திட, சுவாமி மேல் சீயக்காய், சோப்பு படாது, சீயக்காய், சோப்பு இட்டு, நீரால் அலம்பி நன்கு சுத்தம் செய்து தர வேண்டும்.
மேலும், கோமுகம் எனப்படும் மூல ஸ்தான அபிஷேக நீர்த் தாரையானது, பல ஆலயங்களில் நாற்றத்துடன் துலங்கும். இந்த நாற்றம் சமுதாயத்தில் விரவிக் கிடக்கும் கர்ம வினைப் பெருக்கத்தைக் குறிப்பதாகும். சனி, பிரதமை நாட்களில் ஆலயங்களில் கோமுகச் சுத்தி செய்து தருவதால், மனசுத்திக்கு மிகவும் உதவும், சமுதாயம் சீரடையவும் துணை புரியும்.
ஆலய சுத்திக்கு சத்சங்கப் பூர்வமாக ஆவன செய்திடுக. வீட்டில் கூட, பூஜை அறையை நன்கு சுத்திகரிக்க வேண்டும். இவ்வாறாக, பிரதமைத் திதியானது மனத் தூய்மைக்குப் பெரிதும் உதவுவதாகும். சரீரத்தால் ஆலயத்தைத் தூய்மை செய்ய விழைவது போல, மன சரீரத்தையும் அவ்வப்போது தூய்மையாக்கிட ஆலய உழவாரத் திருப்பணி மிகவும் எளிமையான வழிமுறையாகும். சித்தர்கள் ஆலய உழவாரத் திருப்பணி, உத்தம முக்தி நிலையையே அளிக்க வல்லதாக உரைக்கின்றார்கள்.
எனவே, மனோன்மணி என்ற பெயருடன் இறைவி அருளும் கோயிலில், பிரதமைத் திதி தோறுமாய் ஆலயச் சுத்திகரிப்பைச் சத்சங்கப் பூர்வமாகப் பலருடன் சேர்ந்து நிகழ்த்திடுக. அடிக்கடி சினம் பூண்டு பிறரை நோகடிக்கும் வண்ணம் உள்ள கெட்ட குணம் அகல, இப்பூஜா பலன்கள் உதவும்.

சரப்பலி தன்பலி

“சரப்பலி என்றும் மாறாது, தன் பலி என்றும் மறையாது,” என்று ஒரு சொற்றொடர் உண்டு. வாழ்க்கையின் ஒவ்வொரு சம்பவத்திற்குப் பின் இதை நினைக்கும்போதும், படிக்கும்போதும் புதுப்புது அர்த்தத்துடன் தோன்றுவது இந்த சொற்றொடரின் மகிமையாகும். தான் செய்த தவறுகள் எத்தனை பிறவிகள் ஆனாலும் தொடர்ந்து வந்து துன்புறுத்தும் என்பது இந்த சொற்றொடர் கூறும் உண்மையாகும். இதை உணர்ந்த நம் பெரியோர்கள் தொடர்ந்து வரும் துன்பத்திலிருந்து மனித சமுதாயத்தைக் காக்க வழிவகுத்துக் கொடுத்ததே திருநெல்லிக்கா தலத்தில் இயற்றும் வழிபாடு.

தலவிருட்சம் நெல்லி திருநெல்லிக்கா

ஏதோ ஒரு பிறவியில் மொக்குமாவு என்னும் கல்லை அரைத்து பொடியாக்கி கோலமிட்டதால் ஒரு மூதாட்டிக்கு உண்பதற்கு கூட உணவில்லாத தரித்திர நிலை வந்து சூழ்ந்தது. அதைக் கண்டு மனமிரங்கிய ஸ்ரீஆதிசங்கரர் கனகதாரா தோத்திரம் பாடி திருமகளை வேண்ட தங்க நெல்லிக்காய் மழையையே கொண்டு வந்த அரிய செய்தி நீங்கள் அறிந்ததே. இவ்வாறு திருநெல்லிக்கா திருத்தலத்தில் உள்ள சூரிய தீர்த்தம் என்ற அரிய தெப்பக்குளத்தில் நீராடி அரிசி மாக்கோலத்தை கோவிலில் இட்டு வந்தால் எத்தகைய வறுமை நிலையில் உள்ளவர்களும் செல்வ விருத்தியைக் காண்பர். பல பிறவிகளில் செய்த தவறுகள் சங்கிலிபோல் தொடர்ந்து வந்து துன்புறுத்தும்போது அத்தகைய தவறுகளிலிருந்து மீளும் உபாயத்தை அளிப்பதே இத்தலத்தில் மேற்கொள்ளும் வழிபாடாகும். எத்தகைய கொடிய பாரம்பரிய தவறுகளுக்கும் பிராயசித்தம் தரக் கூடியதே திருநெல்லிக்கா திருத்தலமாகும்.

ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
கஞ்சனூர்

தொடர்ந்து இத்தலத்தில் வழிபாடு நிறைவேற்ற முடியாதவர்கள் முதலில் மூன்று வெள்ளிக் கிழமைகள் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றி பின்னர் தங்கள் ஊரில் இவ்வாறு பச்சரிரி மாவால் கோலம் இடுதலை நிறைவேற்றி அடியார்களுக்கு நெல்லிக்காய் ஊறுகாய் கலந்த தயிர் சாதம் அன்னதானமாக அளித்து வந்தால் நற்பலன் பெறுவார்கள். வெள்ளிக் கிழமைகள், அனுஷ நட்சத்திர தினங்கள் இத்தகைய வழிபாடுகளுக்கு உகந்தவை. திருத்தலங்களில் அமைந்துள்ள தெப்பக்குளங்களில் நீராடும்போதோ உடைகளை துவைக்கும்போதோ சோப்புக்களை உபயோகிப்பதோ, சோப்பு பவுடர் போன்ற அமிலங்கள் கலந்த இரசாயணங்களை உபயோகிப்பதோ இக்குளங்களில் வாழும் மீன்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் சொல்லொணா துன்பங்களை விளைவிக்கும் என்பதைப் பலரும் அறிவதில்லை. மீன்கள் மட்டும் அல்லாது நம் கண்ணுக்குத் தெரியாத பல உயிரினங்களும் பல கோயில் திருக்குளத்தில் வாழ்கின்றன. சிதம்பரம், காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்கள் பலவற்றில் உயர்ந்த நிலையில் உள்ள தேவர்களே மீன்களாக உருவெடுத்து உலா வருகின்றனர். வறுமை, உடல் உள்ளக் கோளாறுகள் போன்ற பல துன்பங்களை நிவர்த்தி செய்து எத்தகைய மன உளைச்சல்களையும் போக்கவல்லவையே கோயில் மீன்களுக்கு உணவிடுதல் என்ற எளிமையான பலரும் இயற்றக் கூடிய வழிபாடுகளாகும். இவ்வாறு வறுமையை நீக்கி செல்வ விருத்தியை அளிக்கும் குபேரச் செல்வங்களுக்கு விஷத்தை சோப்பு என்ற வடிவில் அளிக்கலாமா ? சற்றே சிந்திப்பீர். காரணம் கண்டு பிடிக்க முடியாத பல வியாதிகளில் ஒற்றைத் தலைவலியும் ஒன்றாகும். இத்தகைய கடுமையான வலியால் துன்புறுவோர் செவ்வாய்க் கிழமைகளில் சூரிய தீர்த்தத்தில் நீராடி குண்டு மஞ்சள் சுத்தமான குங்குமம், கண்ணாடி வளையல்கள் போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்கு தானமாக அளித்து வருதலால் நற்பலன் பெறுவார்கள். பொதுவாக, ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்கள் (5, 14, 23 போன்ற தேதிகளும் இதில் அடங்கும்) ஆன்மீகத்தில் மிகவும் நாட்டம் உடையவர்களாகவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தொடர்ந்து திருநெல்லிக்கா திருத்தலத்தில் வழிபட்டு வருதலால் இத்தகைய பிடிவாத குணமானது இறைவன் மேல் நிரந்தர நாட்டத்தைக் கொடுக்கும் என்பதும் உண்மையே.

இத்தகைய அன்பர்களுக்கு உதவும் முகமாகவே இங்குள்ள ராஜகோபுரம் நான்கு கலசங்களுடன் தற்போது திகழ்கிறது. இறைவனின் கோபுரம் இவ்வாறு நான்கு கலசங்களுடன் பொலிவதற்கும் ஒரு காரணம் உண்டு எனினும் ஆன்மீக அன்பர்கள் இதைச் சீரமைக்கும் திருப்பணியை நிறைவேற்றுதல் நலம், குறிப்பாக ஐந்து எண்ணில் பிறந்தவர்கள், அல்லது ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களை தங்கள் குடும்ப அங்கத்தினர்களாக கொண்டவர்களும் இத்தகைய திருப்பணியை ஏற்று நிறைவேற்றுதல் நலமே.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam