வரம் வாங்குவதற்குத் தவம் செய்ய வேண்டும் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பூரு பூஜ்யம்

நமது அன்றாட வாழ்க்கையில் தினந்தோறும் தேதியை ஏதாவது ஒரு சூழ்நிலையில் எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. அவ்வாறு தேதியை எழுதும்போது இதில் பலவிதமான தனித்தன்மையை ஒவ்வொருவரும் வெளிப்படுத்துகின்றனர்.

பெரும்பாலும் ஜனவரி மாதம் 12ந் தேதி 2012ம் வருடம் என்பதை 12.1.12 என்று எழுதுபவர்கள் ஏராளம். சித்தர்கள் இதுபற்றிக் குறிப்பிடும்போது தேதியை முழுவதுமாக எழுதுவதால் எண் சக்திகளும், கால சக்திகளும் பூர்ணமாகக் கிட்டுகின்றன என்று வலியுறுத்துகின்றனர். எனவே மேற்கூறிய தேதியை ஜனவரி 12, 2012 என்றோ அல்லது 12.1.2012 என்றோ எழுதலாம்.

ஆனால், தொலைதொடர்பு சாதனங்கள் பெருகி விட்ட இன்றைய சூழ்நிலையில் அயல்நாட்டுக் கலாசாரமும் விரைவில் பெருகி விட்டது. அதனால் நாம் பயன்படுத்தும் முறை எல்லா நாடுகளுக்கும் ஒத்து வரக் கூடியதாகவும் இருக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால் தேவையற்ற குழப்பங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

உதாரணமாக, சில நாடுகளில் தேதியைக் குறிப்பிடும்போது முதலில் மாதத்தையும் இரண்டாவதாக தேதியையும் குறிப்பிடுவது வழக்கம். அத்தகைய சூழ்நிலைகளில் சுருக்கமாக 12.1.2012 என்று எழுதினால் ஒருவர் அதை ஜனவரி மாதம் 12ந் தேதி என்றோ அல்லது டிசம்பர் மாதம் முதல் தேதி என்றோ நினைத்துக் கொள்ளலாம் அல்லவா?

இத்தகைய குழப்பங்களை தவிர்க்கவே முடிந்த மட்டும் மாதத்தை முழுவதுமாக எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்தல் நலம். இதனால் எண் சக்திகளும் அந்தந்த மாதத்திற்கு உரிய கால சக்திகளும் உங்கள் காரியத்தில் பல்கிப் பெருகும்.

பூரு பூஜ்ய சக்திகள்

தேவையற்ற பூஜ்யமே பூரு பூஜ்யம் எனப்படும். உதாரணமாக, ஜனவரி முதல் தேதியை 01.01.2012 என்று எழுதும்போது அதில் மாதத்தில் உள்ள பூஜ்யமும் தேதியில் உள்ள பூஜ்யமும் பூரு பூஜ்யம் எனப்படும். இங்கு பூஜ்யம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேதியில் எந்தவித மாற்றமும் ஏற்படாது அல்லவா? இவ்வாறு தேவையில்லாமல் பயன்படுத்தப்படும் பூஜ்யங்கள் பூரு பூஜ்யங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மேலோட்டமாக பார்க்கும்போது இது ஒரு பெரிய தவறுபோல் தோன்றாது. சற்றே ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் இதன் மகத்துவம் புரியவரும். நமது உடம்பில் எங்காவது தேவையில்லாமல் சதை இருந்தால் அது பார்ப்பதற்கு எவ்வளவு அகோரமாக இருக்கும். காது, கண், கை, கால், வயிறு இவற்றில் எங்காவது தேவையில்லாத சதை ஒட்டிக் கொண்டிருந்தால் அது நமக்கு பார்ப்பதற்கு லட்சணமாக இருக்குமா?

பெயரில் விளையும் தோஷங்களைக்
களையும் ஸ்ரீநாமபுரீஸ்வரர், ஆலங்குடி

மனிர்கள், விலங்குகள், தாவரங்கள் என இறைவன் படைப்பில் எங்குமே தேவையில்லாத குணத்தை, பொருளைக் காண முடியாது. இறைவனின் படைப்பு பூரணமானது. இதுவே நமக்கு இறைவனின் படைப்பு இரகசியம் உணர்த்தும் பாடமாகும். எங்கும் பூரணம், எதிலும் பூரணம். பூரணம், பூரணம், பூரணம்.

நீங்கள் உபயோகப்படுத்தும் வங்கி கணக்குகள், செல்போன்கள், user id, password போன்றவற்றில் எங்காவது ஒரு பூஜ்யத்தை சேர்த்துப் பயன்படுத்தினால் விளைவு என்ன ஆகும் என்பது நீங்கள் அறிந்ததே. சாதாரண மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட துறைகளே பூஜ்யத்தை ஏற்காது என்றால் காலம், பருவம், எண்கள் என்ற இறை சக்திகள் எப்படி தேவையில்லாத பூஜ்யத்தை ஏற்றுக் கொள்ளும் என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

இதனால் ஏற்படும் விளைவுகளை நமது வாழ்வில் நடக்கும் ஒரு அன்றாட நிகழ்ச்சியின் மூலம் தெளிவுபடுத்துகிறோம்.

கணவன், மனைவி, மாமியார் என மூவர் உள்ள ஒரு நடுத்தர குடும்பம். இரவு மணி எட்டு. மருமகள் அன்று சமையல் வேலைகளை எல்லாம் முடித்து விட்டு தொலைக் காட்சியில் ஏதோ நாடகம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். மாமியார் உடல் நலம் குன்றிய நிலையில் இருப்பவர். சட்டென எழுந்து எங்கும் செல்ல முடியாத நிலை.

இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்.

”ஏம்மா, ஜானகி சமையல் முடிந்து விட்டதா?”

”ஊம், ஊம்”

”அடுப்பைக் குளிர வைத்து விட்டாயா? கேஸ் சிலிண்டரை நிறுத்தி விட்டாயா?”

மருமகள் டீவியிலிருந்து கண்ணை எடுக்காமல் ”எல்லாம் எனக்குத் தெரியும்”.

மாமியார் பேசாமல் இருந்து விடுகிறார். மனிதினுள், ”இந்தப் பெண் சமையலை முடித்து விட்டாள். நாலைக் காலையில்தான் இனி அடுப்பு பற்ற வைப்பாள். சிலிண்டரை நிறுத்தி விட்டாளா என்று தெரியவில்லை. கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாள். இரவில் எலி கிலி டியூபை கடித்து விட்டால் கேஸ் லீக்காகி சிக்கல் ஏற்பட்டு விடுமே. என்ன செய்வது?” என்று குழப்பத்துடன் படுத்துக் கொள்கிறார்.

இருந்தாலும் இன்னும் ஒரு முறை கேட்டுப் பார்ப்போம், என்று முடிவு செய்து, ”ஏம்மா குழந்தை சிலிண்டரை சாந்தம் செய்து விட்டாயா?” என்று கேட்கிறார்.

மருமகள், ”அத்தை, சும்மா தொண தொண என்று பேசாதீர்கள், நான்தான் சொன்னேனே, பார்த்துக் கொள்கிறேன் என்று, ஒங்க வேலையைப் பாருங்க,”

மாமியார் வேறு வழியின்றி கண்ணை மூடி படுத்துக் கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால், சில நிமிடங்களில் அக்கம் பக்கத்து வீடுகளில் கேஸ் வெடித்து அதனால் ஏற்பட்ட துன்பங்கள், ஆம்புலன்ஸ் சத்தம், ஆஸ்பத்திரி ஆரவாரம் போன்ற நிகழ்ச்சிகள் கண் முன் நிழலாடவே திடுக்கிட்டு எழுந்து கொள்கிறார்.

மீண்டும் தயங்கி தயங்கி, ”ஜானகி, அடுப்பை…” சொல்ல வந்ததை சொல்லி முடிப்பதற்குள் மருமகள் குறுக்கிட்டு, ”தினோம் ஒங்களோட ஒரே ரோதனையா போய்டுச்சு, டீவிலே ஒரு ப்ரோகிராம் ஒழுங்கா பார்த்தா ஒங்களுக்கு ஏன் இப்படி பத்திக்கிட்டு வர்ரது, சே, கொஞ்சம் கூட நிம்மதியே இல்லாத வாழ்க்கை,” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போது அவளுடைய கணவன் வந்து விடுகிறார்.

”இந்த பாருங்க ஒன்னு உங்க அம்மா இந்த வீட்டில் இருக்கனும் இல்ல நான் இருக்கனும். என்னை அவங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்னை எங்க அம்மா வீட்டில் கொண்டு விட்டு விடுங்கள். கேஸை நூறு தடவை ஆப் செய்யச் சொல்லி உயிரெடுக்கிறார்கள்,”.

கணவன் ஏற்கனவே அலுவலகத்தில் ஏகப்பட்ட பிடுங்கலில் மாட்டிக் கொண்டு வீட்டிலாவது நிம்மதி கிடைக்குமா என்று எதிர்பார்த்து ஏக்கத்துடன் வருகிறான். வீட்டு நிலைமையைப் பார்த்தவுடன் அவனுடைய ஏமாற்றம் கோபமாய் அவன் அம்மாவிடம் பாய்கிறது.

விளைவு அன்று இரவு யாரும் உணவு உண்ணவில்லை. கோபம் போர்க்களமாக உருவெடுத்து விடுகிறது.

இத்தகைய துன்பமயமான நிகழ்ச்சியின் பின்னணியில் விளைந்தது என்ன? அதுவே பூரு பூஜ்ய சக்தி. அதாவது, கேஸை நிறுத்தி விட்டாயா என்ற கேள்விக்கு நிறுத்தி விட்டேன் என்று இரண்டே வார்த்தைகளில் ஒரு பதிலைச் சொல்லி இருந்தால் போதும். அந்த வீட்டில் நிம்மதி நிலவி இருக்கும். ஆனால், தேவையான அந்த பதிலைத் தவிர தேவையற்ற பல வார்த்தைகளைக் கூறியதால் குடும்பத்தில் உள்ள மூவருமே மனக் கசப்புடன் பொழுதைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது அல்லவா?

இவ்வாறு மாமியார் மருமகள் என்று உறவு நிலை மட்டும் அல்லாது சமுதாயத்தில் அனைத்து மக்களிடையே இத்தகைய பூரு பூஜ்ய சக்திகள் நிரவி துன்பத்தை ஏற்படுத்துகின்றன என்பது உண்மையே.

மேலும் பூரு பூஜ்ய சக்திகளுக்கும் எதிர்மறை சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குறித்த சந்தர்ப்பங்களில் பூரு பூஜ்ய சக்திகளே எதிர்மறை சக்திகளாகவும் செயல்பட்டு துன்பத்தை விளைவிப்பது உண்டு.

பலரும் சமையல் செய்யும்போது கேஸ் அடுப்பை சிம்மில் குறைத்து வைத்து விட்டு மற்றவர்களிடம் பேசுவது, டீவி பார்ப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டு விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அடுப்பில் உள்ள சமையால் முடிய நெடு நேரம் ஆகும். அதுவரை வேறு யாதாவது காரியத்தைச் செய்து விடலாமே என்று எண்ணுகின்றனர்.

ஆனால், இதனால் விளையும் துன்பங்கள் ஏராளம். பல சமயங்களில் தாங்கள் அடுப்பில் வைத்த பாலையோ மற்ற பதார்த்தங்களையோ மறந்து விடுவது உண்டு. இதனால் அந்தப் பதார்த்தங்கள் பொங்கி வழிந்து அடுப்பை அணைத்து விடும் வாய்ப்புகள் உண்டு. அப்போது கேஸ் நேடுநேரம் வெளியே வந்து விடுவதால் கவனக் குறைவால் சமையலறைக்கு வந்து மீண்டும் அடுப்பு பற்ற வைத்தால் அது அபாயத்தை விளைவித்து விடும் அல்லவா?

எனவே எக்காரணத்தை முன்னிட்டும் கேஸ் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டாம் என்று சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். அப்படி அடுப்பைக் குறைத்து வைக்க வேண்டிய பதார்த்தமாக இருந்தால் அடுப்பு அருகிலேயே இருந்து சமையலை முடித்து விட்டு அடுப்பையும் சிலிண்டரையும் மறக்காமல் குளிர வைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

மக்கள் பெரும்பாலும் ஒரு சில நிமிடங்களைத் தவிர பூரு பூஜ்ய நினைவுகளில்தான் உழன்று கொண்டிருக்கின்றனர். இதுவே கர்ம வினைகளாக பெருகி பிறவிகளைப் பெருக்குகிறது.

சினிமா, நாடகம், பணம், கேளிக்கை போன்ற கற்பனைகளில் காலத்தைக் கடத்துவது பூரு பூஜ்ய நிலையாகும்.

இவ்வாறு கர்ம வினைகள் பெருகும்போது மனிதப் பிறவிகளும் அதிகரிப்பதால் அதனால் ஏற்படும் பூமி பாரத்தைக் குறைக்க இறைவன் கிருஷ்ண பகவான் போன்ற அவதாரங்களை எடுத்து அத்தகைய கர்ம வினை விளைவுகளைக் குறைக்க வேண்டியதாகிறது.

எனவே ஆரம்பத்திலேயே இத்தகைய பூரு பூஜ்ய சக்திகள் பெருகா வண்ணம் காத்துக் கொள்தல் மனிதக் கடமைகளுள் அத்தியாவசியமான கடமையாகும்.

வார்த்தைகளைக் கையாளும் முறை

நாம் கூறும் வார்த்தைகளில் தெளிவில்லாத போதும் இத்தகைய பூரு பூஜ்ய சக்திகள் பெருகும். உதாரணமாக, சங்கரன் என்று ஒருவரிடம் பணம் கொடுக்கச் சொல்லி ஒருவரை ஒரு இடத்திற்கு அனுப்பும்போது அங்கு சங்கரன் என்ற பெயரில் இரண்டு மூன்று பேர் இருப்பது சகஜம். அத்தகைய சூழ்நிலையில் குறித்த சங்கரனை விடுத்து வேறு சங்கரனிடம் அந்தப் பணம் போய்ச் சேர்ந்து விட்டால் அதனால் குழப்பம்தானே ஏற்படும்.

எனவே எப்போதும் நமது வார்த்தைகளில் தெளிவு கூட்டுவது அவசியம். நமது குரு மங்கள கந்தவர்வா திரு வெங்கடராமன் அவர்கள் தொடர்ந்து  தமது அடியார்களுக்கு இந்தப் பாடத்தை போதித்துக் கொண்டே இருந்தார்கள். அவர் ஒரு தடவை கூட பாலாஜியைக் கூப்பிடு, சங்கனை அழைத்து வா, என்று கூறியதே கிடையாது.

ஒவ்வொரு முறையும், ”முசிறி சங்கரனை அழைத்து வா, வேளச்சேரி பாலாஜியிடம் இதைக் கொடு, ராலீஸ் விஜயகுமாரை போனில் கூப்பிடு,” என்று ஊர், தொழில், கம்பெனி என்ற ஏதாவது ஒரு அடைமொழியைப் பெயருடன் சேர்த்துதான் அழைப்பார். இதனால் அவருடைய வார்த்தைகளில் என்றுமே குழப்பம் ஏற்பட்டது கிடையாது.

அதே போல ஹோட்டலுக்குச் சென்று உணவருந்தும்போது, ”இரண்டு இட்லி,” என்று வாயால் கூறுவதோடு மட்டும் அல்லாமல் இரண்டு கை விரல்களையும் காட்டி சிற்றுண்டி ஆர்டர் செய்வார்கள். இதுவும் காரியங்களில் தெளிவை ஏற்படுத்தும் மற்றோர் முறை.

எந்த விஷயத்தையும் வார்த்தைகளில் தெளிவுபடுத்துவதை விட செயல் மூலம் காட்டும்போது அதன் விளைவு சிறப்பாக இருக்கும் அல்லவா? இதை தொட்டுக் காட்டிய வித்தையாக நமது வெங்கடராம சுவாமிகள் நிகழ்த்திய ஒரு சுவையான அனுபவம்.

1993ம் வருடம். ஆஸ்ரமம் கட்டும் வேலை துரிதமாக நடந்து கொண்டிருந்தது. சுவாமிகள் அன்னதானத்தையே தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டிருந்ததால் ஆஸ்ரமத்தில் சமையல் அறையை முதலில் கட்டி அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை நிறைவேற்றினார்கள். உண்மையில் ஆஸ்ரமத்தில் அப்போது பெரிய இடம் என்று சொன்னால் அது சமையல் அறைதான். வசதிகள் நிறைந்து இருந்ததும் அங்குதான்.

அடியார்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிகள் ஏதும் அப்போது ஏற்படுத்தவில்லை. மல ஜலம் போன்ற வசதிகளுக்காக சுவாமிகள் உள்பட அனைவரும் திறந்த வெளியைத்தான் பயன்படுத்தி வந்தனர்.

ஒரு நாள் காலை. சுவாமிகளுடன் இரண்டு மூன்று பேர்கள் ஆஸ்ரமத்திற்கு எதிரே உள்ள திறந்த வெளியில் காலைக் கடன்களுக்காகச் சென்றிருந்தனர். சுவாமிகளுக்குத் தேவையான தண்ணீரை ஒரு அடியார் தூரத்திலிருந்து ஒரு உடைந்த வாளியில் கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு வந்து கொடுத்தார். ஆனால், ஏற்கனவே சுவாமிகளுக்குத் தேவையான தண்ணீரை மற்ற அடியார்கள் கொண்டு வந்து வைத்திருந்தனர் என்ற விவரம் அந்த அடியாருக்குத் தெரியாது.

எனவே அவர்கள் அந்த அடியாரிடம்,” நீ ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு தண்ணீரைக் கொண்டு வந்தாய். இங்குதான் தேவையான தண்ணீர் இருக்கிறதே,” என்று கூறவே அந்த அடியார் முகம் வாடி விட்டது.

அதை அருகில் இருந்து கவனித்த சுவாமிகள் அந்த அடியாரிடம்,”சார், நீங்கள் கொண்டு வந்த தண்ணீரை மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டாம். அதற்கு தேவை இருக்கிறது. நான் பயன்படுத்திக் கொள்கிறேன். நீங்கள் அந்த வாளி நீரை இங்கேயே வைத்து விட்டு உங்களுக்கு வேறு ஏதாவது பணி இருந்தால் அதைப் போய்க் கவனியுங்கள்,” என்று அவரிடம் அன்புடன் சொன்னார்.

இப்போது அந்த அடியார் முகம் சந்தோஷம் பொங்க ஆரம்பித்தது. தான் கொண்டு வந்த நீர் வீணாகவில்லை. அதை சுவாமிகளே பயன்படுத்திக் கொள்வார், என்று நினைத்து மிகவும் ஆனந்தமடைந்தார். பின்னர் சுவாமிகளிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்று விட்டார்.

நன்மையை விதைப்போம் நல்லதைச் செய்வோம்

அவர் தூரத்தில் சென்று மறையும் வரை அவரைப் பார்த்துக் கொண்டிருந்த சுவாமிகள் பின்னர் தன்னுடன் வந்திருந்த அடியார்களிடம், ”நீங்கள் எப்போது சார் மனிதனுடைய மனதைப் படிக்கக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். அடியேனுக்கு தண்ணீர் இப்போது தேவையில்லாதான். என்னுடைய தேவை பூர்த்தியாகி விட்டது. ஆனால், அந்த மனுஷன் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த ஓட்டை வாளியில் தண்ணீர் இறைத்து கொண்டு வருகிறான். அவனுடைய மனத்தைப் பார்த்தீர்களா? இந்த ஒரு வாளி நீரை எங்கு வேண்டுமானாலும் சம்பாதித்து விடலாம். ஆனால், ஒரு நல்ல மனதைச் சம்பாதிக்க முடியுமா? அதை யோசித்துப் பாருங்கள்,” என்று கூறி அருகிலிருந்த ஒரு அடியாரிடம், ”இந்த நீரை எங்காவது ஊற்றி விட்டு வாளியை ஆஸ்ரமத்திற்கு எடுத்து வா,” என்று சொல்லி விட்டு ஆஸ்ரமத்தை நோக்கிச் சென்று விட்டார் சுவாமிகள்.

அந்த அடியாரும் அந்த நீரை எங்கு ஊற்றலாம் என்று சுற்றிலும் பார்த்தார். வெகு தூரத்தில் ஒன்றிரண்டு மரங்கள் தென்பட்டன. எனவே அவ்வளவு தூரம் எப்படிச் செல்வது என்று யோசித்து விட்டு வாளியில் இருந்த நீரை அருகில் இருந்த ஒரு முள் செடியின் மேல் ஊற்றி விட்டு வெறும் வாளியுடன் ஆஸ்ரமத்திற்குத் திரும்பினார்.

ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர்
ஆஸ்ரமம், திருஅண்ணாமலை

ஆஸ்ரம வாசலிலியே சுவாமிகள் மற்ற அடியார்களுடன் காத்திருந்தார், ”வாங்க சார், தண்ணீரை என்ன செய்தீர்கள்?” என்று கேட்க அந்த அடியாரும், ”வாத்யாரே பக்கத்தில் ஒன்றும் மரம் தென்படவில்லை. அதனால் வாளியில் இருந்த நீரை ஒரு முள் செடிக்கு ஊற்றி விட்டு வந்து விட்டேன்,” என்றார்.

வாத்யார், ”என்ன சார், நீங்கள் இப்படிச் செய்யலாமா? (தன்னைச் சுட்டிக் காட்டி) இந்த நாய் கால் கழுவுவதற்காக அந்த அடியார் வெகு தூரத்திலிருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டு வந்து கொடுத்தார். நீங்களோ அதை ஒரு நல்ல மரத்திற்கு ஊற்றாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு எதிர்மறை சக்திகளை வளர்க்கும் நச்சு மரத்திற்கு ஊற்றி விட்டு வந்து விட்டீர்களே,” என்றார்.

முள் செடி தீய சக்திகளை வளர்க்கும் இயல்புடையது என்பதை பின்னர் சுவாமிகள் விவரித்தார்.

அந்த அடியார் மனம் வருந்தி, ”மன்னித்து விடுங்கள், தெரியாமல் செய்து விட்டேன்,” என்று கூறவே சுவாமிகள், ’’தவறு, தண்டனை, மன்னிப்பு என்ற வார்த்தைகளைக் கூறுவதால் எந்த பயனும் இல்லை. இந்த நிகழ்ச்சியிலிருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள் என்பதுதான் முக்கியம். நாம் எந்த காரியத்தைச் செய்தாலும் அதனால் ஒரு சிறிய அளவு நன்மையாவது மற்றவர்களுக்கு விளைய வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும்,” என்று  அற்புத வாழ்க்கைப்பாட விளக்கத்தை அளித்தார்கள்.

இங்கு அந்த அடியார் கொண்டு வந்த நீரை வேண்டாம் என்று கூறியதும் அந்த நீரை வேப்பமரம், ஆலமரம் போன்ற நல்ல பால் விருட்சங்களுக்கு அளிக்காததும், ஒரு அடியார் அன்புடன் சிரமப்பட்டு கொண்டு வந்த நீரை நச்சு மரத்திற்கு வார்த்ததும் பூரு பூஜ்ய சக்திகளாகும் என்று பூரு பூஜ்யத்தைப் பற்றிய மேலும் பல உண்மைகளை அப்போது விளக்கிக் கூறினார்கள் நமது சுவாமிகள்.  

இறைவனும் அவன் நாமமும் என்று கூறுகிறோம். இது மனிதனுக்கும் பொருந்தும். ஒரு மனிதனின் அட்சர பிரதிபலிப்பே அவனுடைய திருநாமம் என்னும் பெயராகும். எனவே அக்காலத்தில் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதை ஒரு விழாவாக தெய்வீக நிகழ்ச்சியாக நிகழ்த்தினார்கள்.

தற்காலத்தில் குழந்தைகளுக்குப் பெயர்களை நாகரீகமாக அமைப்பதில் கவனம் செலுத்தும் அளவிற்கு நட்சத்திர நாமம், பீஜாட்சர சக்திகள், எண் கணித சூத்திரங்கள் இவற்றில் கவனம் செலுத்துவதில்லை. இதனால் பூரு பூஜ்ய சக்திகள் பெயர்களில் பதிந்து பலவிதமான துன்பங்களை ஏற்படுத்தும் என்பது உண்மை.

ஒருமுறை கஜேந்திரன் என்ற நாமம் உடைய ஒரு அடியார் சுவாமிகளைக் காண வந்தார். அவருடைய தகப்பனார் பெயர் சுப்ரமணியன். தான் எடுக்கும் பல காரியங்கள் தோல்வியைத் தருவதாகவும் தன்னுடைய வியாபாரத்தில் பல லட்சங்கள் நஷ்டம் அடைந்ததாகவும் கூறினார். முடிந்தால் தன்னுடைய பெயரை மாற்றித் தரும்படியும் கேட்டுக் கொண்டார்.

சுவாமிகள் அவர் கூறிய அனைத்து விஷங்களையும் கவனமாகக் கேட்டு விட்டு, ”உங்களுடைய பெற்றோர் உங்களுக்கு அன்புடன் வைத்த பெயரை மாற்றுவதற்கு யாரும் உரிமை கிடையாது. மேலும் உங்கள் மூதாதையர்களின் கருணையால் உங்கள் பெயர் எண் கணித சூத்திரப்படி சரியாகவே அமைந்துள்ளது. நீங்கள்தான் அதை மாற்றி தேவையில்லாத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள்,” என்றார்.

உண்மையில் பெற்றோர்கள் அவருக்கு S. GAJENDRAN என்று நாமம் சூட்டியிருந்தனர். மூன்றாந் தேதியில் பிறந்த அவருக்கு எண் கணித சூத்திரப்படி இந்த பெயர் பொருந்தி வரக் கூடியதே. ஆனால், கஜேந்திரன் தன்னுடைய பெயரை எந்த வித காரணமும் இன்றி SP. GAJENDRAN என்று மாற்றிக் கொண்டு விட்டார்.

P என்ற ஆங்கில எழுத்திற்கு அதிபதி சனி பகவான். தேவையில்லாமல் எதற்காக அவர் சனி பகவானின் அட்சரத்தை தன்னுடைய பெயருடன் சேர்த்துக் கொண்டார் என்பதையும் அவரால் சொல்ல முடியவில்லை. இந்நிலையில் அவருமடய பெயரை அவர்கள் பெற்றோர்கள் விரும்பிய வண்ணமே S. GAJENDRAN என மாற்றி அமைத்து நல்வழி காட்டினார் நமது சுவாமிகள்.

இவ்வாறு தேவையில்லாமல் பெயருடன் அட்சரங்களை சேர்த்துக் கொள்வதும், கையெழுத்தில் தேவையில்லாத குறிகளை சேர்த்துக் கொள்வதும் பூரு பூஜ்ய சக்திகளைப் பெருக்கி துன்பங்களை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

உலகின் பெரும்பகுதியை தன்னுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்த அஞ்சா நெஞ்சன் நெப்போலியன் தன்னுடைய பெயருடன் ”E” என்ற எழுத்தைச் சேர்த்து NAPOLEON BONAPARTE என்று மாற்றிக் கொண்டதால் அடுத்து வந்த வாட்டர்லூ யுத்தத்தில் தோல்வியைச் சந்தித்தான் என்பது சரித்திரம் நமக்குப் புகட்டும் பாடமாகும்.

தியானம் எளிய விளக்கம்

அவரவர் ஆன்மீக நிலையைப் பொறுத்து பக்தி, கடவுள், தியானம் என்ற சொற்களுக்குப் பொருள் பல படித்தரங்களில் இருக்கும். இந்த விளக்கங்களை அளிக்கக் கூடியவர் சற்குரு ஒருவரே. அவர் மட்டுமே அடியார்களின் பக்குவ நிலையை அறிந்து அதற்கேற்றபடி ஒவ்வொருவருக்கும் உரித்தான அற்புத விளக்கங்களை கூறி நெறிப்படுத்துவார்.

திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தின் போது நிறைவேற்றப்படும் அன்னதானத்தின் போது நூற்றுக் கணக்கான அடியார்கள் ஆஸ்ரமத்தில் பல நாட்கள் தங்கி சேவை புரிவதால் அப்போது அற்புதமான ஆன்மீகப் பயிற்சி அடியார்களுக்கு சேவையின் ஊடே அளிக்கப்படும்.

ஸ்ரீவெங்கடராம சித்தரிடம் அஜய் என்ற ஒரு அடியார் இருந்தார். மெலிந்த தேகமும் குறைந்த எடையும் உள்ள குள்ள உருவம். சற்குரு நாதரான வாத்யாரும் அந்த அஜய்யும் சேர்ந்து ஒரு வருட கார்த்திகை தீப அன்னதான கைங்கர்யத்தின் போது அன்னதானத்திற்குத் தேவையான அரிசியை அளந்து ஐந்து ஐந்து படியாக அன்னக்கூடையில் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

75 கிலோ எடையுள்ள சுமார் 300 அரிசி மூட்டைகள் ஒரு அறையில் மலைபோல் அடுக்கப்பட்டிருக்கும். தினமும் அந்த மூட்டைகளை ஒரு வடிவத்தில் அடுக்கி அதிலிருந்து அன்றைய தேவைக்கான அரிசியை அளந்து எடுத்து விட்டு மீதமுள்ள அரிசி மூட்டைகளை அடுத்த நாளைக்குத் தேவையான வேறொரு வடிவத்தில் அடுக்கி வைக்க வேண்டும்.

இதுவே ஸ்ரீவாத்யார் அவர்களும் அஜய்யும் செய்து வந்த பணி. திருஅண்ணாமலையை ஒவ்வொரு கோணத்திலிருந்து பார்த்தால் ஒவ்வொரு வடிவத்தில் காட்சி அளிக்கும் என்பது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு ஒவ்வொரு கோணத்தில் கிட்டும் காட்சிக்கும் பல்லாயிரக் கணக்கான அனுகிரக சக்திகளை திருஅண்ணாமலை ஈசன் மலையைத் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இந்த தரிசனப் பலன்களை ஈர்த்து அந்த அரிசி மூட்டைகளில் பொதிந்திருந்த அரிசி மணிகளில் நிரவி அன்னதானத்திற்காக அளித்து வந்தார் நமது சுவாமிகள். இது சித்தர்கள் மட்டுமே நிறைவேற்றக் கூடிய அற்புத ஆன்மீகத் திருப்பணி.

வாத்யார் அரிசி அளந்து முடிந்தவுடன் மூட்டைகளை அவர் கூறும் வடிவத்தில் அடுக்குவது என்பது மிகவும் சிரமமான, உடல் வலிவைச் சோதிக்கக் கூடிய காரியம். ஏனென்றால், மூட்டையின் எடை 75 கிலோ. அதை கையாண்ட அடியாரின் எடையோ 40 கிலோ. எனவே 40 கிலோ எடையுள்ள மனிதன் 75 கிலோ எடையுள்ள மூட்டையை ஐந்து, ஆறு அடிக்குக் குறையாமல் தனியாக தூக்கி வைப்பது என்பது எத்தகைய கடினமான காரியமாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இத்தகைய கடினமான பணியை எதற்காக நமது சற்குரு நாதர் ஒரு அடியாருக்கு வழங்குகிறார் ? எந்த அளவுக்கு ஒருவர் உடல் உழைப்பில் குரு காட்டும் வழியில் ஈடுபடுகிறாரோ அந்தஅளவுக்கு அவருக்கு மற்ற உலகியல் விஷயங்களைப் பற்றி எண்ண நேரமிருக்காது.

கவனம் முழுவதும் அன்னதானம் போன்ற தெய்வீகப் பணியில் ஈடுபடும்போது அதுவே தியானமாக மலர்கின்றது என்பதே சற்குருநாதர் அடியார்களுக்குப் புகட்டிய பாடமாகும்.

ஒரு நாள் மதியம் உணவு நேரம். அடுத்த நாள் அன்னதானத்திற்குத் தேவையான அரிசியை அன்னக்கூடைகளில் போட்டு வைத்து விட்டு மீதமுள்ள அரிசி மூட்டைகளை அன்றைய தினத்திற்கு உரித்தான அண்ணாமலை முகடு தரிசன வடிவில் அமைக்க வேண்டும் அதனால் வாத்யார், ”அஜய், சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வந்து விடு. வேலையைத் தொடர்வோம்,” என்று சொல்லி அஜய்யை அனுப்பி விட்டார்

அஜய்யும் உணவருந்தி விட்டு விரைவில் வந்து விட்டார். வாத்யார் சொல்லிய முறையில் அஜய் ஒவ்வொரு மூட்டையாக அடுக்க ஆரம்பித்தார். சாப்பிட்டவுடன் வேலை செய்வது என்பது அதுவும் உடல் உழைப்பு என்பது எவருக்குமே சிரமமான காரியம்தானே. மூட்டைகளைத் தூக்கி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குவது என்பது சாமான்யமான காரியமா?

அஜய்க்கு உடலில் வியர்வை ஆறாக ஓடியது. மூச்சுத் திணறியது. தன்னுடைய முழு உடல் பலத்தை பிரயோகம் செய்தாலும் மூட்டையோ ஒரு இஞ்ச் கூட நகர்வதாக இல்லை. இருந்தாலும் மேலும் மேலும் உயிரைக் கொடுத்து போராடி ஒவ்வொரு மூட்டையையும் ஒன்றின் மேல் ஒன்றாக வாத்யார் சுட்டிக் காட்டிய முறையில் அடுக்கிக் கொண்டிருந்தார்.

அப்போது பதிதாக அந்த வருடம் கார்த்திகை தீப அன்னதானப் பணியில் பங்கேற்ற ஒரு அடியார் வாத்யாரிடம் வந்து, ”சுவாமி, தியானம் என்றால் என்ன?” என்று கேட்டார்.

வாத்யார் அஜய்யை சுட்டிக் காட்டி, ”இவர் ஒரு சொகுசான அரசாங்க வேலையில் இருப்பவர். இவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. நிறைய நண்பர்களும் உண்டு. லீவு எடுத்துக் கொண்டு வந்து தற்போது திருப்பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு உள்ளார். இப்போது இவருக்கு அலுவலகத்தைப் பற்றி நினைவு கிடையாது, மனைவி மக்களைப் பற்றிய சிந்தனை கிடையாது, நண்பர்களைப் பற்றி நினைப்பதே கிடையாது. இவருடைய ஒரே எண்ணம் கீழே கிடக்கும் மூட்டையை எப்படி மேலே ஏற்றுவது என்பதுதான். அதற்காக வியர்வை சொட்டச் சொட்ட பாடுபட்டு அந்த திருப்பணியை நிறைவேற்றுகிறார்.

இதுவே தியானம். ஒரு நல்ல காரியத்தில், மற்றவர்களுக்காக உன்னுடைய உடலும் மனமும் உள்ளமும் முழுக்க முழுக்க ஈடுபடும் நிலைதான் தியானம்..”

”எந்த அளவுக்கு உங்களை இந்த அன்னதான திருப்பணியில் ஈடுபடுத்திக் கொள்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களுக்கு தியான நிலை சித்திக்கும்.”
பல
வருடம் பல மொழிகளில் தியானத்தைப் பற்றி படித்த அஜய்க்கு ஏட்டுச் சுரைக்காயாக இருந்த தியானம் என்ற வார்த்தையின் அர்த்தம் அன்றுதான் உண்மையில் புரிய ஆரம்பித்தது.

அந்த புதிய அடியார் வாத்யாருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து சென்றார். அதன் பின்னர் வாத்யார் அஜய்யிடம், ”இப்போது தியானம் என்றால் என்னவென்று புரிகிறதா?”

அஜய் மௌனமாக வாத்யாரின் வார்த்தைகளை ஆமோதித்தார்.

வாத்யார் தொடர்ந்து, ”உனக்குப் புரிந்து விட்டது. ஆனால், அந்த புதிய அடியாருக்கு அடியேன் கூறிய வார்த்தைகள் புரிய பல வருடங்கள் ஆகும். காரணம் அவர் இன்னும் ஏட்டுச் சுரைக்காயை நம்பி காலத்தைக் கடத்தி வருகிறார். இரண்டாவதாக அவர் பூரு பூஜ்ய சக்திகளின் ஆதிக்கத்தில் உள்ளார்,” என்று கூறி தன்னுடைய மோவாய்க் கட்டையைத் தடவிக் காண்பித்தார்.

அதாவது புதிதாக வந்த அடியார் தாடி வளர்த்திருந்தார். யாருமே தேவையில்லாமல் தெய்வீக நேர்த்திகளைத் தவிர்த்து தாடி வளர்க்கக் கூடாது என்பது சித்தர்களின் அறிவுரை, அவ்வாறு தேவையில்லாமல் முகத்தில் இருக்கும் முடி பூரு பூஜ்ய சக்திகளைத் தோற்றுவிக்கும் என்பது ஒரு அடிப்படை ஆன்மீக உண்மை. அதனால் ஆன்மீகத்தில் உள்ள நுணுக்கமான விஷயங்களைக் கிரகிக்க முடியாது.

அதே சமயத்தில் தலையில் சிகை வளர்த்து தீட்சை என்னும் குடுமி வைப்பது ஆன்மீகத்தில் உன்னத முன்னேற்றத்தைத் தரும். குறித்த நாட்களில் முகத்தில், அக்குள்களில் வளரும் முடியை நீக்குவதால் எதிர்மறை சக்திகளிலிருந்து பக்தர்கள் தங்களைக் காத்துக் கொள்ள முடியும். மேலும், ஆன்மீக உண்மைகள் மிகவும் ஆழ்ந்த மன சக்தியுடன் அறியப்பட வேண்டி உள்ளதால் தீட்சை, கடுக்கன் போன்ற இறைச் சாதனங்களே அடியார்களுக்குத் தேவையான மனத் தெளிவையும் ஆழ்ந்து சிந்திக்கும் மனத் திறனையும் அளிக்கும்.

ஆனால், பலரும் இத்தகைய இறைச் சாதனங்களைப் பெறாததால் வாத்யார் அவர்களை இறைப் பணியில் ஈடுபடுத்தி மிகுந்த உடல் உழைப்யுடன் திருப்பணிகளை இயற்ற வைத்து அதனால் கிடைக்கும் மனத் தெளிவுடன் இருக்கும்போது மிகவும் கடினமான ஆன்மீகப் பாடங்களை போதிக்கிறார்கள்.

பல வருடங்கள் வெறும் புத்தகப் படிப்பால் பெற முடியாத அற்புத ஆன்மீகப் பொக்கிஷங்களை எல்லாம் ஒரே வாரத்தில் வாத்யார் அவர்கள் அளித்த பயிற்சியில் அஜய் கற்றுக் கொண்டார். அதனால் வாத்யாரும் அதன் பின்னர் யாராவது தியானத்தைப் பற்றிக் கேட்டால் அஜய்யிடம் கேளுங்கள். அவன் உங்களுக்குத் தேவையான விளக்கங்களைத் தருவான் என்று சிபாரிசு செய்யும் அளவிற்கு அஜய் தியானத்தைப் பற்றிய நுணுக்கங்களை அறிந்து கொண்டார். இவை அனைத்தும் நடந்தது ஒரு வார கால குருகுல வாசத்தில்தான்.

இவ்வாறு தேவையி,ல்லாத இடத்தில் முடியை வளர்ப்பதும் தேவையான இடத்தில் முடியை வளர்க்காததாலும் இன்றைய சமுதாயத்தில் பூரு பூஜ்ய சக்திகள் பெருகி பல துன்பங்கள் பெருகுகின்றன.

நமது இறை மூர்த்திகள் அனைவருமே இத்தகைய கோலத்தில்தான் காட்சி அளிப்பார்கள். அவர்களுக்குத் தாடி இருக்காது, ஆனால், நீண்டு வளர்ந்த தலை முடியும், ஜடா முடியும் இருக்கும். இறை மூர்த்திகள் இவ்வாறு மௌனமாகப் புகட்டும் பாடத்தைப் படித்தால் போதும் நமக்கு எல்லாம் கிட்டி விடும்.

இன்றைய நாகரீக உலகில் நீண்ட கேசத்தை வளர்த்து தீட்சை வைப்பது நடை முறைக்கு சாத்தியமில்லை என்று நினைப்பவர்கள் குறைந்த பட்சம் தங்களுடைய 48வது வயதிலாவது நீண்ட கேசம் வளர்த்து குடுமி என்னும் தீட்சை வைத்துக் கொள்வதால் ஆன்மீக எண்ணங்கள் பெருக வழி பிறக்கும்.

தீட்சை வைத்திருப்பவர் தன்னைச் சுற்றி 12 மைல் தூரத்தில் உள்ள நற்கிரண சக்திகளைக் கிரகிக்க முடியும். வேத சக்திகளையும் நல்ல எண்ணங்களையும் கிரகிக்கும் வல்லமை உடையதே முறையாகப் பராமரிக்கப்பட்ட தீட்சையின் தெய்வீகத் தன்மையாகும்.

அதுமட்டுமல்லாமல் தீட்சை வைத்திருப்பவர் எளிதாக தன்னைச் சுற்றிலும் மன அமைதியை ஏற்படுத்த முடியும். அவர் நற்காரியங்களை நிறைவேற்றி வந்தால் அவரைச் சுற்றி 12 அடிக்கு ஒரு அமைதி உண்டாக்கும் வாயு மண்டலமே உருவாகும் என்பது சித்தர்கள் கூறும் செய்தியாகும்.

தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு தீட்சை வைத்து இறைப் பணிகளை ஆற்றி வருபவர்கள் நடமாடும் தெய்வமாக ஆகி விடுவர் என்பதும் உண்மையே.  

விழிப்பு நிலையே தியானம்

பெரும்பாலும் தியானம் என்றால் வெளி உலக நினைவின்றி இருப்பதே என்று பலரும் தவறான கண்ணேட்டத்துடன்தான் இருக்கிறார்கள். உண்மையில் கண், காது, மூக்கு, கை, கால் என்ற அனைத்து உறுப்புகளும் மனமும் உள்ளமும் அனைத்தும் பூரண விழிப்பு நிலையில் இருப்பதே தியானம் என்று தியானத்திற்குப் புது விளக்கத்தை அளித்தவரே நமது சுவாமிகள்.

அன்னதானத்திற்காக அரிசி அளந்து போடும்போது இந்த அனுபவ பாடத்தை வாத்யாரிடமிருந்து கற்றுக் கொண்டார் அஜய். அரிசி மூட்டையை அவிழ்த்து ஒரு பெரிய அலுமினிய அண்டாவில் கொட்டி அதிலிருந்து ஐந்து ஐந்து படிகளாக மரப் படியால் அளந்து அன்னக் கூடையில் போடுவது வழக்கம்.

மூட்டையை அவிழ்த்துக் கொட்டுவது அஜய்யின் வேலை. அப்போது சில அரிசி மணிகள் தரையில் விழுந்து விடாமல் இருக்க சுற்றிலும் சாக்குப் பைகளைப் போட்டு வைத்திருப்பார்கள். அதையும் தாண்டி சில அரிசி மணிகள் தரையில் விழுந்து விடுவதுண்டு.

அண்டாவில் உள்ள அரிசி மணிகளை அளந்து அன்னக் கூடையில் போடுவதை வாத்யார் தன்னுடைய பணியாக ஏற்றுக் கொண்டிருந்தார். அவர் 300 அரிசி மூட்டைகளையும் ஒரு அரிசி மணி கூட தரையில் விழாது அவ்வளவு கவனமாக அரிசியை அளந்து போட்டார் என்பது நம்ப முடியாத அதிசய உண்மை.

அத்துணை விழிப்பு உணர்வுடன் செயல்பட்டார் நமது சுவாமிகள். அது மட்டுமல்லாமல் தன்னுடன் இருந்த அடியாரையும் விழிப்பு நிலையிலேயே நிலைக்கச் செய்தார். அடிக்கடி அஜய்யிடம் எத்தனை மூட்டைகள் அளக்கப்பட்டு உள்ளன, எத்தனை அரிசி மூட்டைகள் பாக்கி உள்ளன, எத்தனை அன்னக் கூடைகளில் அரிசி நிரப்பப்பட்டுள்ளன, இன்னும் எத்தனை அன்னக் கூடைகள் காலியாக உள்ளன என்ற விவரங்களை கேட்டுக் கொண்டே இருப்பார்.

ஒவ்வொரு கூடையிலும் ஐந்து ஐந்து படிகளாக எண்ணிப் போடும்போது

ஓம் வல்லப கணபதி போற்றி
ஓம் அங்காள பரமேஸ்வரி போற்றி
ஓம் அண்ணாமலையானுக்கு அரோஹரா
ஓம் உண்ணாமுலைத்தாய்க்கு அரோஹரா
ஓம் குருவே சரணம்

என்று எண்களைக் கூறாது இறை நாமங்களைச் சொல்லியே படிகளை எண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதனால் அன்னதானம் இறை சக்தியால் தூய்மை அடைந்து அதைப் பெறுபவரின் மனக் குறைகளை, வியாதிகளை, துன்பங்களை நீக்கியது என்பதை கண் கூடாகப் பலரும் கண்டனர்.

பெரும்பாலான சமயங்களில் எண்ணிக்கையை வாய் விட்டுக் கூறாமல் தான் அளப்பது எத்தனையாவது படி என்பதை அஜய்யிடம் கேட்பார். இதனால் அருகிலிருந்த அஜய் குறைந்தது மூன்று, நான்கு விஷயங்களை எப்போதும் மனதினுள் தொடர்ந்து நினைவுபடுத்தி அதனால் மூளையை விழிப்பு நிலையிலேயே இருக்கும் பயிற்சியைப் பெற்று வந்தார்.

எனவே குருகுல வாசம் என்பது தூங்கிப் பொழுதைக் கழிக்கும் மயக்க நிலை அல்ல, ஒவ்வொரு விநாடியும் விழிப்புடன் இருந்து நற்காரியங்களை நிறைவேற்றும் துடிப்பு நிலையாகும் என்பதை வலியுறுத்தி வந்தார்கள் நமது சுவாமிகள்.

ரமண மகரிஷியும் அரிசி விஷயத்தில் மிகவும் கவனமாக இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஒரு முறை ரமணாஸ்ரமத்தில் தரையில் சிந்திக் கிடந்த அரிசி மணிகளை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து ஒரு பேப்பரில் போட்டுக் கொண்டிருந்தார் ரமண மகரிஷி. அதைப் பார்த்த ஒரு அடியார், ”சுவாமி, நமது ஆஸ்ரமத்தில்தான் நூற்றுக் கணக்கான அரிசி மூட்டைகள் இருக்கிறதே. தாங்கள் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு தரையில் குனிந்து அரிசிகளைப் பொறுக்கிக் கொண்டு இருக்கிறீர்கள் ?,” என்று கேட்டபோது அதற்கு ரமணர், ”இவற்றை நீங்கள் அரிசியாகப் பார்க்கிறீர்கள். ஆனால், இவை எனக்கு அண்ணாமலையாராகத் தோற்றமளிக்கின்றன. ஒவ்வொரு அரிசி மணியும் இறைக் கருணையின் வெளிப்பாடே. எனவே ஒரு அரிசி மணியை நீங்கள் அலட்சியம் செய்தால் கூட அது இறைவனை அலட்சியப் படுத்தியதாகும்.”

”மேலும், இந்த அரிசி மணிகளை நாம் உணவுக்காகப் பயன்படுத்த முடியாவிட்டாலும் இவற்றைப் பாதுகாத்து வைத்து பறவைகளுக்கு இட்டால் அவை சந்தோஷத்துடன் அவற்றை உண்ணுமே. தயவு செய்து எவரும் கவனக் குறைவால் இந்த அரிசி மணிகளை மிதித்து அவற்றை பயனற்றவையாய்ச் செய்து விடாதீர்கள், ” என்று அன்புடன் அங்கிருந்த அடியார்களைக் கேட்டுக் கொண்டார்.

குறுந்தாடியில் குவியும் கர்ம வினைகள்

சிலர் அழகுக்காக சிறிதளவு குறுந்தாடி வளர்ப்பதுண்டு. இதுவும் பூரு பூஜ்ய சக்திகளைத் தோற்றுவிக்கும் என்பதால் நமது குருநாதர் இதன் தீய விளைவுகளைப் பற்றி அடிக்கடி எச்சரிப்பதுண்டு. இது பற்றிய ஒரு சுவையான சம்பவத்தை இங்கு காண்போம்.

1995ம் வருடம். நிரஞ்சன் என்ற ஒரு அடியார் ஆஸ்ரமத்தில் இருந்தார். மிகவும் சுறுசுறுப்பானவர். சிவந்த மேனி. ஒரு நடிகரைப் போன்ற எடுப்பான முகவெட்டு. அதனால் அவருடைய நண்பர்களின் ஆலோசனையின் படி குறுந்தாடி வளர்த்திருந்தார்.

அந்த வருட கார்த்திகை தீப அன்னதான கைங்கர்யத்தில் மிகவும் சுறுசுறுப்பாக பணி ஆற்றிக் கொண்டிருந்தார். பத்துப் பதினைந்து படி சாதம் உள்ள அலுமினிய அண்டா பாத்திரங்களை ஒரு ட்ராலியில் வைத்து தள்ளி வரும் பணியை மேற்கொண்டிருந்தார்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பாத்திரத்தில் ஒரு சிறிய பகுதி பெயர்ந்து அவருடைய இடது காலைக் கிழித்து விட்டது. அதனால் ஏகப்பட்ட இரத்தப் பெருக்கு ஏற்பட்டது. உடனே அவரை காரில் ஏற்றி அருகிலிருந்த ஒரு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் தொடர்ந்து பணியில் ஈடுபட முடியாது என்பதால் அவர் தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று விட்டார்.

கிட்டத்தட்ட ஒரு அடி நீளத்திற்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. ஒரு மாத காலத்திற்குப் பின் காயம் பூரண குணம் பெற்று அவர் தன்னுடைய அலுவல்களை முன்போல் கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து நமது குருநாதர் கூறியதாவது.

இந்த ஆஸ்ரமம் உங்கள் கர்ம வினைகளைக் குறைத்து உங்களை நல்வழி நடத்தவே உள்ளது. இங்கு வரும் அடியார்கள் அனைவரும் பல கர்மங்களைச் சேர்த்துக் கொண்டுதான் வருகிறீர்கள். நாங்கள் முடிந்த மட்டும் அந்த கர்ம வினைகளின் விளைவுகளைக் குறைத்து உங்களைக் காப்பாற்றுகிறோம்.

உதாரணமாக, நிரஞ்சன் என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியாது. அவர் சுயதொழிலில் ஈடுபட்டு குறுகிய காலத்தில் நிறைய பணத்தைச் சேர்த்துக் கொண்டார். சம்பாதிப்பது தவறில்லை. ஆனால், பணம் எப்படி வருகிறது என்பது மிகவும் முக்கியம்.

அவர் தன்னுடைய காரியத்தை நிறைவேற்றுவதற்காக பல அரசாங்க அலுவலகங்களில் உயர்ந்த அயல் நாட்டு மது வகைகளை லஞ்சமாகக் கொடுத்து வந்தார். இதனால் வெகு விரைவில் அவருடைய ஆர்டர்கள் ஏற்கப்பட்டு அவருடைய வருமானமும் பெருகியது.

மதுவை லஞ்சமாகக் கொடுத்து காரியம் சாதித்ததால் கர்ம வினைகள் பெருகி அவருடைய காலையே இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், நிரஞ்சனுடைய மூதாதையர்கள் பித்ரு லோகத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். நிரஞ்சனும் தன்னுடைய பூர்வ ஜன்மங்களிலும் இப்பிறவியிலும் பல நல்ல காரியங்களை நிறைவேற்றி உள்ளார்.

நிரஞ்சன் தன்னுடைய காலை இழந்து விடாமல் காப்பாற்றும்படி அவருடைய பித்ரு மூதாதையர்கள் அடியேனிடம் வேண்டிக் கொண்டதால் அடியேனும் இறைவனிடன் வேண்டி நிரஞ்சன் ஒரு சிறு காயத்தை மட்டும் அனுபவிக்கும்படிச் செய்து அவர் தன்னுடைய காலை இழக்காமல் அந்தச் சம்பவத்தை நிறைவேற்றினோம் என்று குருவின் கர்ம பரிபாலன இரகசியத்தை வெளியிட்டார்கள்.

திருச்சி கூத்தைப்பார் திருத்தலத்தில்
அருள்புரியும் காலாணி சித்தர்

எனவே உடல் நோய்களும் மன வேதனைகளும் கடன் தொல்லைகளுமே கலியுகத்தில் கர்மத்தை தீர்ப்பதற்காக மனிதர்களுக்கு இறைவனால் அளிக்கப்படுகின்றன என்பதை உணர்ந்தால் மனம் அமைதி பெறும்.

நமது குருநாதருக்கு இடது காலில் ஒரு சிறு புண் ஏற்பட்டு பல மாதங்கள் ஆறவே இல்லை. மருத்துவர்கள் எவ்வளவோ மருந்து, ஊசி என்று முயற்சி செய்தாலும் சிறிதளவு முன்னேற்றமும் ஏற்படாமல் இருந்தது. இது பற்றி கேட்டபோது வாத்யார், ”நாங்கள் எப்போதும் ஒரே விஷயத்தைத்தான் திரும்ப திரும்ப கூறுகிறோம். நமது முன் வினைகளே நமக்கு வியாதிகளாக வருகின்றன என்பதே உண்மை. எனவே அடியேனுடைய முன் வினைதான் இன்று இந்த புண்ணாக வந்து வேதனையைத் தருகிறது,” என்றார்.

அப்போது ஒரு அடியார், ”சுவாமி, எங்களைப் போன்ற சாதாரண மனிதர்களுக்கு முன் வினையால் வியாதிகள் வரும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். ஆனால், தங்களைப் போல் ஆன்மீகத்தில் மிக உன்னத நிலையில் இருப்பவர்களுக்கும் முன் வினை விளைவுகள் உண்டு,” என்தை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை,” என்று கூறவே, குருநாதர் புன்சிரிப்புடன், ’‘உங்கள் கூற்றில் ஓரளவு உண்மை உள்ளது. ஆனால், இதன் பின்னணியில் உள்ள விஷயத்தை இப்போது கூறுகிறேன்,” என்று தொடர்ந்தார்.

தனது எதிரில் உள்ள நோட்டீஸ் போர்டைச் சுட்டிக் காட்டி,”நமது ஆஸ்ரமத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியில் விவரங்களைப் பற்றிய விவரங்களைப் பேப்பர்களில் எழுதி இந்த தகவல் பலகையில் குண்டூசி மூலம் குத்தி வைக்கிறோம். ஆனால், சில சமயம் அந்த பேப்பர்களை வைக்கும்போதும் எடுக்கும்போதும் சில குண்டூசிகள் அடியார்களின் கவனக் குறைவால் கீழே விழுந்து விடுகின்றன.

குண்டூசி என்பது ஒரு சிறிய விஷயம்தானே என்று பல அடியார்கள் அதை அலட்சியம் செய்து கீழே விழுந்த குண்டூசிகளைத் தேடுவதற்கு எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளாமல் புதிய குண்டூசிகளை எடுத்துக் கொள்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் பணி நிறைவில் ஆஸ்ரமத்தைக் கூட்டும்போது மற்ற குப்பைகளுடன் இந்தக் குண்டூசிகளையும் சேர்த்து அள்ளி வெளியே நமது அடியார்கள் கொட்டி விடுகிறார்கள். இவ்வாறு வெளியே கொட்டிய குப்பைகளின் மேல் ஒரு ஆடு வந்து படுத்துக் கொண்டது. அப்போது அதனுடைய முதுகில் அரிப்பு ஏற்படவே தரையில் புரண்டு, புரண்டு படுத்து தன்னுடைய அரிப்பைப் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்தது.

அதனால், குப்பையில் இருந்த சில குண்டூசிகள் அதனுடைய முதுகில் குத்தி அதற்கு புண்ணை ஏற்படுத்தி விட்டன. அதனால், அந்த ஆடு ஆறு வாரம் வேதனையுடன் நடமாடியது. இப்போது நமது ஆஸ்ரம குண்டூசியால் அந்த ஆட்டுக்கு விளைந்த வேதனையை யார் ஏற்றுக் கொள்வது?

என்று கேட்டு அடியார்களைப் பார்த்தார். அடியார்கள் அமைதியாயினர். எவரும் இந்தச் சிக்கலான கேள்விக்கு பதில் கூற முன்வரவில்லை.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் வாத்யார் தொடர்ந்தார், ”ஆஸ்ரம நிர்வாகி என்ற முறையில் அடியேன்தான் அந்த ஆட்டின் வேதனையை ஏற்றுக் கொள்ள வேண்டும். அடியேன் எந்த அடியாரின் தலையிலும் இந்த வேதனையைச் சுமத்த முடியாது,

மற்றவர்களின் வேதனையை அடியேன் ஏற்றுக் கொண்டால் எம்பெருமான் அருணாசல மூர்த்தி ஒரு சிறு வேதனையுடன் அந்த கர்ம வினையைத் தீர்த்து விடுவான்,” என்று கர்ம வினையின் பாங்கை விவரித்தார்.

இவ்வாறு ஆன்மீக முன்னேற்றம் என்பது எந்த அளவுக்கு ஒருவர் மற்றவர்களின் வேதனைகளைத் தீர்ப்பதற்கு முன்வருகிறார் என்பதே.

இவ்வாறு குண்டூசி, பிளேடு, ஆணி போன்ற பொருட்களை கவனக் குறைவால் தரையில் போடுவதும் பூரு பூஜ்ய கர்ம வினைக்கு வித்திடும் என்று விவரித்தார் சுவாமிகள்.

காலாணி, ஆணிக்கால், யானைக்கால் போன்ற வியாதிகளுக்கு பூர்வ ஜன்ம கர்மங்கள் பல காரணமாக இருந்தாலும் பூரு பூஜ்ய கர்மங்களே இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே இவ்வாறு ஆணிக்கால் வியாதிகளால் துன்புறுவோர் திருச்சி கூத்தைப்பார் திருத்தலத்தில் அருள்புரியும் காலாணி சித்தரை வணங்கி ஏழைக் குழந்தைகளுக்கு காலணிகள் தானம் அளிப்பதால் நலம் அடைவர்.

கீழ்க்காணும் முனிஸ்வரத் துதியை ஓதித் தானம் அளிப்பதால் தேவையற்ற பூரு பூஜ்ய விளைவுகளிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஏதுவாகும்.

தாடிக் கொண்டையுடனே தளர்விலா தெய்வ வடிவுற்று
ஓடிப் போன பொருளெல்லாம் கூடியே வரவழைத்து
வாடிய பயிரையும் வளரச் செய்யும் முனீஸ்வரனே போற்றி

பாலில் பூரு பூஜ்யம்

இறை மூர்த்திகளுக்கு பசுவின் கறந்த பாலை சூடு ஆறும் முன் அபிஷேகம் செய்வதால் கிட்டும் பலன்கள் ஏராளம். திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாளே இறைவனுக்கு இயற்றிய பால் அபிஷேகம் மூலம்தானே தன்னுடைய சக்ராயுதத்தைப் பெற்றார்.

இத்தகைய சிறப்பான பலன் தரும் பசுவின் பால் அபிஷேகத்தை பாடல் பெற்ற பழமையான சிவத்தலம் ஒன்றில் நிறைவேற்ற திருவுள்ளம் கொண்டார் நமது குருநாதர்.

திருச்சியில் மிகவும் தொன்மை வாய்ந்த பாடல் பெற்ற சிவத் தலம் ஒன்று உண்டு. அத்தலத்தின் அருகில் நமது ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு அடியார் சொந்த வீடு, வயல் போன்ற வசதிகளுடன் வசித்து வருகிறார். ஆனால், அவரிடம் பொருளாதார வசதிக் குறைவு. எனவே ஒரு மாட்டை அவரிடம் வாங்கிக் கொடுத்து விட்டால் அவர் அதைப் பராமரித்து தினமும் கறந்த பாலை இறைவன் அபிஷேகத்திற்கு அளித்து விடுவார் என்ற எண்ணினார் வாத்யார்.

அடியார் அஜய்யை அழைத்து, ”ஒரு நல்ல நாட்டு மாட்டை வாங்கி நமது திருச்சி அடியாரிடம் கொடுத்து விடு. ஆகும் பணத்தை அடியேன் தந்து விடுகிறேன். ரொம்ப வேண்டாம் ஒரு ஆயிரம் ரூபாயில் பார்,” என்றார்.

அஜய் நகரத்தில் வசிப்பவர். ஆடு மாடுகளைப் பற்றி விவரம் அறியாதவர். எனவே தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் அக்கம் பக்கத்து கிராமங்களில் நல்ல பசு மாடு வாங்குவதைப் பற்றி விசாரித்தார்.

அப்போது அவர்கள் மாட்டின் விலை ஆயிரம் ரூபாய் என்பதைக் கேட்டு சிரிக்க ஆரம்பித்தனர். ஆயிரம் ரூபாய்க்கு நாட்டு மாடுதான் கிடைக்கும் சார். அது அரைப்படி கூடக் கறக்காது.

நல்ல ஜெர்சி மாடா பார்த்து வாங்கிக் கொண்டால் அது குறைந்தது ஐந்து முதல் ஏழு லிட்டர் பால் வரை ஒரே நேரத்தில் கறக்கும், என்றனர்.

அஜய்க்கு அவர்கள் கூறியது நியாயமாகத் தோன்றியது. சுவாமிக்கு அரை லிட்டர் பால் அபிஷேகம் செய்வதை விட ஐந்து லிட்டர் பால் அபிஷேகம் செய்தால் பலன் அதிகம் தானே என்ற மனிதக் கணக்கை போட ஆரம்பித்தார். அதுவே சரி எனத் தோன்ற கிராமத்தார்கள் கூறிய படி ஒரு நல்ல ஜெர்சி மாட்டை ஏழாயிரம் ரூபாய்க்கு வாங்கி அந்த சிவத்தல அடியாரிடம் கொடுத்து விட்டார். ‘

ஸ்ரீவாத்யார் கூறியபடி தினமும் அந்த மாட்டுப் பால் இறைவன் அபிஷேகத்திற்காக அளிக்கப்பட்டது. சில மாதங்கள் கழித்து ஸ்ரீவாத்யாரைப் பார்த்து சிவத்தலத்தில் பால் அபிஷேகம் நிறைவேற்றப்பட்ட விஷயத்தை வாத்யாரிடம் தெரிவித்தார் அஜய்.

வாத்யார், ”எவ்வளவு பணம் ஆச்சுப்பா. அடியேன் தந்து விடுகிறேன்.,” என்றார். அஜய் மிகவும் சந்தோஷமாக, ”வாத்யாரே, நீங்கள் சொன்னபடி ஆயிரம் ரூபாய்க்கு மாடு விசாரித்தேன். ஆனால், அது அரை லிட்டர் பால்தான் கரக்கும் என்றார்கள். பின்னர் விசாரித்துப் பார்த்ததில் ஜெர்சி பசுக்கள் நிறைய பால் கறக்கும் என்று சொன்னதால் ஐந்து லிட்டர் கரக்கும் நல்ல ஜெர்சி மாட்டை வாங்கிக் கொடுத்து விட்டேன். இப்போது சுவாமிக்கு ஒரு வேளைக்கு குறைந்தது ஐந்து லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறுகிறது,” என்றார்.

வாத்யார் முகம் சுருங்கியது. அதைப் பார்த்த அஜய் தான் செய்த காரியத்தில் ஏதோ தவறு நேர்ந்து விட்டது என்பதை உணர்ந்தார். ஆனால், அது என்னவென்பது தெரியவில்லை. வாத்யாரும் ஏதும் சொல்லவில்லை. சில நிமிடங்கள் மௌனமாக இருந்து விட்டு, ”ம்… நீ உன்னுடைய லெவலில் யோசித்து ஒரு காரியத்தைச் செய்து விட்டாய்,” என்று மட்டும் கூறினார்.

ஸ்ரீவாத்யார் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் புரிய அஜய்க்கு பத்து வருடங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டன. உங்களுக்குப் புரிகிறதா?

மனிதன் எந்த அளவுக்கு இயற்கையுடன் ஒன்றி வாழ்கிறானோ அந்த அளவுக்கு அவனுடைய செயல்களில் தெய்வீகம் நிறைந்திருக்கும். 50. 60 வயது நிரம்பிய பெரியோர்களைக் காணலாம். 200, 300 வயது நிரம்பிய மனிதர்களைக் காண முடியாது. ஆனால், நூறு வருடங்களுக்கு மேல் வளர்ந்து செழித்துள்ள ஆல், அரசு போன்ற மரங்களைக் காண முடியும்.

அத்தகைய மரங்களை வணங்கி ஆராதிப்பதால் அத்தனை வயதுள்ள மனிதர்களை வணங்கிய ஆசீர்வாத சக்திகளைப் பெற முடியும். அவ்வாறு பெறும் அனுகிரக சக்திகளை ஒரு ப்ளாஸ்டிக் மரம் உங்களுக்குத் தர முடியுமா? காரணம் அதில் எந்த வித ஜீவ சக்திகளும் இல்லாததே.

எனவே ஜீவ சக்தியும் இறை சக்தியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இயற்கையுடன் நமது வாழ்க்கைமுறை சேர்ந்து, பொருந்தி வரும்போதுதான் அதில் ஜீவ சக்திகள் பொங்கிப் பெருகுகின்றன.

இம்முறையில் நாட்டு மாடு என்பது நமது நாட்டில் இயற்கையாக உருவானது. அருகம்புல், தவிடு போன்ற அதன் உணவும் இயற்கையானது. அது வளரும் சூழ்நிலையும் வயல் வெளி, புல்வெளி என அற்புதமான இறைச் சூழலாகும். சில இடங்களில் கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தங்களையும் அவைகள் அருந்தி வளரும். அத்தகைய மாடுகளின் இனப் பெருக்கமும் இயற்கையில் அமையும். எனவே ஒரு நாட்டு மாட்டின் பாலில் விளையும் ஜீவ சக்திகளை, ஜீவ சத்தை ஜெர்சி போன்ற செயற்கை இனப் பெருக்கத்தால் உருவான மாட்டால் தரவே முடியாது.

அயல் நாட்டு மாட்டுப் பாலை எத்தனை ஆயிரம் லிட்டரை லிங்கத் திருமேனியின் மேல் ஊற்றினாலும் ஒரு நாட்டு மாட்டுப் பாலின் அனுகிரக சக்தியை அது ஒரு போதும் தராது.

பத்து வருடங்களுக்குப் பின் இந்த ஆன்மீக இரகசியங்களை அஜய் உணர்ந்து கொண்டபோதுதான் வாத்யார் ஏன் நாட்டு மாட்டை வாங்கச் சொன்னார் என்பது புரிய வந்தது. அப்போதுதான் அரை லிட்டர் பால் கரக்கும் மாட்டை வாங்குவது பைத்தியக்காரத்தனமா, ஐந்து லிட்டர் பால் தரும் மாட்டை வாங்குவது புத்திசாலித்தனமா என்பதை உணர்ந்தார் அஜய்.

தான் செய்தது ஒரு முட்டாள் தனமான, பயனில்லாத காரியம் என்பதை உணர்ந்து மனம் நொந்தார் அஜய். ஆனால், இத்தகைய ஒரு பயனில்லாத காரியத்தைச் செய்து விட்டு தனது சற்குரு நாதர் முன் நின்றபோதும் அதைச் சற்றும் பொருட்படுத்தாது அந்த பொறுப்பில்லாத அடியாரையும் அரவணைத்ததுதான் குருவின் கருணை.

குருட்டு நம்பிக்கையுடன் குருவின் ஆணையை நிறைவேற்றுவது என்பது மிகவும் கடினமே என்பது இந்நிகழ்ச்சியின் மூலம் நாம் கற்றுக் கொள்ளும் பாடமாகும். அப்படி ஒரு வேளை குருவின் வார்த்தைகளின் நம்பிக்கை வந்து விட்டால் அதை விட அரிதான பொக்கிஷம் வேறொன்றும் இப்புவியில் இல்லை. இல்லவே இல்லை.

பூரு பூஜ்ய எண்ணங்கள்

இறைவனைக் காண முடியாமல் மனிதன் தவிப்பதற்கு அவனுடைய மலங்களே காரணமாகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது நான், எனது என்ற தேவையற்ற எண்ணங்கள்தான் மனிதன் இறைவனை நெருங்க விடாமல் செய்து விடுகின்றன. தெளிந்த நீரில் நிலவைக் காணலாம், ஆனால் அதே நீரில் ஒரே ஒரு அலை தோன்றி விட்டால் கூட நிலா மறைந்து போகிறதல்லவா?

அது போல்தான் மனித மனமும். தேவையற்ற ஒரே ஒரு எண்ணம் இருந்தால் கூட அது இறைவனை மனித மனத்திலிருந்து மறைத்து விடும்.  இதுவே பூரு பூஜ்ய எண்ணமாகும்.

உணவு, காற்று, நீர் போன்ற பொருட்கள் மூலம் மனித உடலில் புகும் எண்ணங்களை மலம், சிறுநீர், வியர்வை வழியாக வெளியே அனுப்பினால்தான் மனம் தூய்மை பெறும். இறை வழிபாடுகள் அனைத்துமே இந்த உண்மையை அடிப்படையாக வைத்துத்தான் வகுக்கப்பட்டுள்ளன.

எந்த அளவுக்கு மலக் குடல் சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு உடலில் உள்ள பூரு பூஜ்ய எண்ணங்களின் அளவும் குறைவாக இருக்கும். இவ்வாறு மலக் குடலை சுத்திகரித்து எண்ண அலைகளைக் குறைக்க சித்தர்கள் அருளிய சில எளிய பழக்கங்களை கீழே அளித்துள்ளோம்.

  1. காலையில் எழுந்து பல் துலக்கியவுடன் காய்ச்சி ஆறிய நீரை அரை லிட்டர் அளவுக்குக் குறையாமல் அருந்துதல்.

  2. ஒரு நாளைக்குக் குறைந்தது ஐந்து லிட்டர் சுத்தமான நீரை அருந்துதல்.

  3. தினமும் உணவில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்தல்

  4. வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளித்தல்

  5. அவரவர் உடல், வயதைப் பொறுத்து தினமும் 32, 64, 108 குசா தோப்புக் கரணங்களைப் போடுதல்

  6. வாரம் ஒரு முறை இரவில் படுக்கும் முன் சிறிதளவு விளக்கெண்ணெய் அருந்துதல்.

  7. தினமும் மூன்று முறை பல் துலக்குதல்

மேற்கூறிய நற்பழக்கங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் நாளடைவில் மலக் குடல் சுத்தம் அடைந்து சிறிது சிறிதாக பூரு பூஜ்ய எண்ணங்களின் ஆதிக்கம் குறையும்.

பெரும்பாலான மகான்கள் இறக்கும்போது வயிற்றுப் போக்கு நோயால் இறக்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திப்பார்களாம். காரணம், வயிற்றுப் போக்கு நோய் ஏற்பட்டால் மலக் குடலில் சிறிதளவு மலமும் தங்காது. மேலும் தூக்கம், அசதி, மறதி போன்ற எந்த மூளைச் சோர்வும் ஏற்படாமல் முழு இறை நினைவுடன் உயிரை விட முடியும்.

இவ்வாறு மலத்தால் விளையும் பூரு பூஜ்ய எண்ணங்களைக் களைய சித்தர்கள் வகுத்த பூஜையே கழிவறை பூஜையாகும். அதாவது, ஒவ்வொரு முறை கழிவறையைப் பயன்படுத்தும் முன்னும் பயன்படுத்திய பின்னும் கழிவறைக்கு நமஸ்காரம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து கழிவறை பூஜைகளை நிறைவேற்றி வந்தால் மீண்டும் மல மூத்திரம் செறியும் மனித உடலைப் பெறாத தெய்வீக நிலையை இறைவன் அளிக்க முன் வருவார்.

இன்று ஆன்மீகச் சிகரமாய் உயர்ந்து சித்தர் குலத் திலகமாய்ப் பிரகாசிக்கும் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு அவருடைய குருநாதர் இடியாப்ப சித்த ஈச பிரான் அளித்த முதல் திருப்பணி கழிவறையைச் சுத்தம் செய்வதுதான் என்பது நீங்கள் அறிந்ததே.

உலகம் போற்றும் மகாத்மா காந்தி அண்ணலும் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் கழிவறைகளைச் சுத்தம் செய்து தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்திக் கொண்ட வரலாறு அனைவரும் அறிவர்.

பார் போற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் தன்னுடைய தலை முடியால் தாழ்ந்த குலத்தவரின் கழிவறைகளைச் சுத்தம் செய்துதானே ஆணவ மலத்தைக் கலைந்தார்.

எனவே மற்றவர்களின் கழிவறைகளைத் தூய்மை செய்யும் அளவிற்கு நமது மனம் பக்குவப்படாதிருந்தாலும் நமது கழிவறைகளை வணங்கும் அளவிற்காவது நம்மை அவசியம் தயார்ப்படுத்திக் கொள்வதே ஆன்மீக முன்னேற்றத்தை அளிக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஒரு முறை கஜேந்திரன் என்ற தேவலோகத்து யானை திருமகளைப் பூஜிப்பதற்காக ஒரு தாமரை தடாகத்தில் இறங்கியது. அப்போது ஒரு அரக்கன் முதலை வடிவில் தோன்றி யானையின் காலைக் கவ்விக் கொள்ளவே யானை அரக்கனின் பிடியிலிருந்து விடுவிக்க எவ்வளவோ போராடியும் அதிலிருந்து விடுபட முடியவில்லை.

ஆயிரம் ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் பெருமாள் மூர்த்தி அங்கு தோன்றி தன்னுடைய சக்ராயுதத்தால் அந்த முதலையின் தலையை வெட்டி கஜேந்திரனை விடுவித்தார். கஜேந்திரன் மோட்சம் பெற்ற இந்நிகழ்ச்சி நீங்கள் அனைவரும் அறிந்ததே.

திருச்சி லால்குடி அருகே உள்ள நத்தம் திருத்தலத்தில்தான் மேற்கூறிய கஜேந்திர மோட்ச சம்பவம் பல யுகங்களுக்கு முன் நிகழ்ந்தது.

கஜேந்திரன் மோட்சம் பெற்ற
நத்தம் திருத்தலம்

இறை அடியார் ஒருவருக்கு ஆபத்து என்று வந்து விட்டால் உடனே ஓடி வருவதுதானே இறைவனின் கருணை. அப்படி இருக்கும்போது கஜேந்திரனின் ஒரு ஆயிரம் ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்தானே பெருமாள் அங்கு வந்தார். இது ஏன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம் அல்லவா?

வெறுமனே யானையைக் காப்பாற்றுவது என்று இருந்தால் இறைவன் உடனே அங்கு எழுந்தருளி இருப்பார் என்பதே உண்மை. ஆனால், இங்கு கஜேந்திரனைப் பற்றி இருந்த முதலையிலிருந்து விடுதலை தருவது ஒரு பெரிய விஷயம் அல்ல. யானையின் உடல் என்பது ஒரு தற்காலிக தளை. ஆனால், கஜேந்திரனின் ஆன்மாவைப் பற்றி இருந்த மலத்திலிருந்து அவனை விடுவிக்க வேண்டும் என்று பெருமாள் திருவுள்ளம் கொண்டதால், அவனைப் பற்றி இருந்த ஒரே ஒரு பூரு பூஜ்ய எண்ணம் மறைவதற்காகக் காத்திருந்தார் பெருமாள்.

அது என்ன? நான் யானைகளின் தலைவன் என்ற ஒரே ஒரு பூரு பூஜ்ய எண்ணம் மட்டும் கஜேந்திரனிடம் எஞ்சி இருந்தது. அது மறைவதற்காக ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்தார் பரந்தாமன். இதுவே சித்த கிரந்தங்கள் புகட்டும் உண்மை.

இது பற்றி இடியாப்ப சித்த பிரான் குறிப்பிடும்போது, ”கஜேந்திரன் கொளத்துக்குள்ள கால வச்சவொடனே பெருமாள் வந்து அங்க குந்திக்கினார்டா. சரி அவன் கால் மாட்டிக் கிச்சே. நான்தான் தலைவன் அப்டீங்கற பூரு பூஜ்ய எண்ணம் போய்ட்டா சக்கரத்த வுட்டுடலாம்னு பாத்தா அவன் அந்த எண்ணத்த வுடற மாதிரி தெரியல. இவன் எப்ப அந்த எண்ணத்த வுடறது, அப்பால எப்ப சக்கரத்த வுடறதுன்னு வெய்ட் பண்ணி பண்ணி பெருமாளே டயர்டா பூட்டாருடா,” என்று கஜேந்திர மோட்சத்தைப் பற்றி வேடிக்கையாகக் குறிப்பிட்டாராம்.

நரசிம்ம மூர்த்தி பிரகலாதன் எந்தத் தூணில் தன்னை அழைத்தாலும் அதிலிருந்து வெளிப்படுவதற்காக எல்லாத் தூண்களிலும் வியாபித்து நின்றாராம். இதுவே இறை மூர்த்திகளின் கருணை.

ஒரே ஒரு பூரு பூஜ்ய எண்ணத்தைக் களைய தேவ லோகத்து கஜேந்திரனுக்கு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன என்றால் ஆயிரமாயிரம் பூரு பூஜ்ய எண்ணங்களுடன் உழலும் பூலோக மனிதர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

அத்தகையோரையும் கரையேற்ற கருணை உள்ளத்துடன் காத்திருப்பவர்களே சற்குருமார்கள். குருவின் கருணை மட்டுமே எத்தகைய பூரு பூஜ்ய எண்ணங்களையும் களைந்து இறைவனைக் காட்டக் கூடியது.

இதைத்தான் கண் மூடி வந்தவர் மண் மூடிப் போகார் என்று பெரியோர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

பூஜ்ய ஹர தீர்த்தம்

இந்த ஆணவ எண்ணத்திற்கு அடிப்படையாக அமைவதும் பூரு பூஜ்ய துர்சக்திகளே. ஸ்ரீபூஜ்ய கணபதி அருளும் செங்கோட்டை அருகே உள்ள திருமலை முருகன் திருத்தலமும் திருச்சி லால்குடி அருகே உள்ள நத்தம் திருத்தலமும் ஆணவ எண்ணத்தால் விளையும் வேதனைகளிலிருந்து விடுதலை அளிக்கும் திருத்தலங்களாகும்.

மேலும், மது, மாது, போதை போன்ற கலியுக தீய பழக்கங்களுக்கு வித்திடுவதும் பூரு பூஜ்ய சக்திகளாகும். மேற்கூறிய தலங்களில் தீர்த்த பூஜைகளை மேற்கொண்டு பழரசம், குளிர்பானங்களை தானமாக அளித்தலால் தவறான பழக்க வழக்கங்களுக்கு தங்கள் குழந்தைகள் பலியாகாமல் பெற்றோர்கள் அவர்களை நன்னெறிப்படுத்த வழி கிட்டும்.

ஒரு மண் பாத்திரத்தில் அல்லது மூங்கில் குவளையில் காய்ச்சி ஆறிய நீரை ஊற்றி அதில்

1, வெட்டிவேர்
2. ஏலக்காய்
3. அருகம்புல்
4. சிறுகுறிஞ்சான் வேர்
5. அரச மரப் பட்டை
6. ஆல மரப் பட்டை
7, வன்னி மரப் பட்டை

என்ற ஏழு மூலிகைகளைப் போட்டு இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் அந்த தீர்த்தம் முன் அமர்ந்து

ஓம் தத் புருஷாய வித்மஹே பூரு பூஜ்ய ஹராய தீமஹி
தந்நோ ஆதிமூல தேவ ப்ரசோதயாத்

என்ற காயத்ரீ மந்திரத்தை 108 தடவை ஓதி அந்த தீர்த்தத்தை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் எத்தகைய தீய பழக்கங்களிலிருந்தும் விடுதலை கிட்டும். இவ்வாறு மூலிகை சக்திகள் செறிந்த தீர்த்தமே பூஜ்ய ஹர தீர்த்தம் எனப்படும். மிகவும் சக்தி வாய்ந்தது.

மலக் குடல், ஆசனவாய் இவற்றில் ஏற்படும் நோய்களுக்கு நிவாரணம் தரக் கூடியது இத்தீர்த்தமாகும்.

ஆத்ம வலம்

பூரு பூஜ்ய விளைவுகளால் ஏற்படும் துன்பங்களைக் களைவது ஒரு புறம் இருக்க, பூரு பூஜ்ய எண்ணங்களே வராமல் நம்மைக் காத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம் அல்லவா? வரும் முன் காக்கும் முயற்சியாக சித்தர்கள் அருள்வதே ஆத்ம வலம் என்னும் அற்புத வழிபாடாகும்.

”உன்னுள் இறைப்பது இறைவன் அந்த இறைவனுக்குச் சேவை செய்யவே விரும்புகிறேன்,” என்று ஸ்ரீவாத்யார் கூறுவார்கள். நம்முள் இருக்கும் இறைவனை வலம் வந்து வணங்குவதே ஆத்ம வலம் என்னும் வழிபாடாகும். மனித உடலில் இருக்கும் ஆத்மா என்ற இறைவனை, இறைவனாய் இருக்கும் ஆத்மாவை வலம் வந்து வணங்குவதே பூரு பூஜ்ய சக்திகள் மனிதனை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளும் சிறப்பான வழிபாடாகும்.

இது மனதளவில் செய்யப்படும் மானசீக வழிபாடு. அவரவர் மனோ பலத்தைப் பொறுத்து இதை சக்தி வாய்ந்த வழிபாடாக மாற்றிக் கொள்ள முடியும்.

வழிபாட்டின் ஆரம்ப நிலையில் நமது ஆத்மாவை ஒரு இருண்ட அறையில் தனியாக ஒளி வீசும் ஒரு அகல் விளக்கு தீபத்துடன் ஒப்பிட்டு அதை வலம் வருவதாக மனதினுள் தொடர்ந்து நினைத்து வழிபடுவதே ஆத்ம வலமாகும்.

விரும்பினால் மானசீக வலத்துடன் கீழ்க் காணும் காயத்ரீ மந்திரத்தை வாய் விட்டோ, மனதிற்குள்ளோ ஓதி வரலாம்.

ஓம் தத் புருஷாய வித்மஹே ஆத்ம ஜோதி ப்ரகாசாய தீமஹி
தந்நோ ஆத்ம ஜோதி ப்ரசோதயாத்.

வழிபாடு தீவிரம் அடையும்போது அவரவர் ஆத்மாவை தரிசனம் செய்யும் சக்தி இயற்கையாகவே வந்து சேரும். அப்போது வழிபாட்டின் முறையும் மாறுபாடு அடைவது இயற்கை.

திருஅண்ணாமலை, ஐயர் மலை, பழநி மலை போன்ற மலைத் தலங்களில் கிரிவலம் வருபவர்கள் மனதினுள் ஆத்ம வலம் செய்தவாறே மலை வலத்தையும் மேற்கொள்வதால் அவர்கள் கிரிவலத்தின் பலன் பன்மடங்காய்ப் பல்கிப் பெருகும். பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவதைப் போல மன வலமும் உடல் வலமும் இணையும்போது அதனால் விளையும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

தங்கள் ஆத்மாவை ஜோதியாக தரிசனம் செய்து ஆத்ம வலம் வரும்போது அந்த ஜோதியில் தங்கள் மனைவி மக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் என தாங்கள் விரும்பும் அனைவரின் ஆத்ம ஜோதியையும் தங்கள் ஆத்ம ஜோதியுடன் இணைத்துக் கொள்ளலாம்.

ஆத்ம வலத்துடன் காயத்ரீ மந்திரத்தை ஓத விரும்பினால் அதையும் இணைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, ஒருவருடைய மனைவி கமலாவையும், மகன் சுகுமாரையும் தன்னுடைய ஆத்ம ஜோதியில் காயத்ரீ மந்திரத்தின் மூலம் இணைத்துக் கொள்ள விரும்பினால், அவர்

ஓம் தத் புருஷாய வித்மஹே ஆத்ம ஜோதி ப்ரகாசாய தீமஹி
தந்நோ கமலா ஜோதி ப்ரசோதயாத்

ஓம் தத் புருஷாய வித்மஹே ஆத்ம ஜோதி ப்ரகாசாய தீமஹி
தந்நோ சுகுமார ஜோதி ப்ரசோதயாத்

என்று ஓதி ஆத்ம வலம் வரலாம். இவ்வாறு தங்கள் நண்பர்கள் உறவினர்களின் பெயர்களுக்குரித்தான காயத்ரீ மந்திரத்தை ஓதி ஆத்ம வலம் வருவதும் அற்புதமான பலன்களை சித்திக்கும்.

நோயால் வாடுபவர்களுக்கும், தீய பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கும் மேற்கூறிய ஆத்ம வல வழிபாடு அற்புத பலன்களை அளிக்கும். குறைந்தது ஒரு மணி நேரமாவது காயத்ரீ மந்திரம் ஓதி அவர்களுக்காக வலம் வர வேண்டியது அவசியம்.

1996ம் ஆண்டு ஸ்ரீவாத்யார் அவர்கள் இந்த ஆத்ம வல வழிபாட்டைப் பற்றிக் குறிப்பிடும்போது அன்றைய தேதியில் அவர்கள் 1,75,000 அடியார்களின் ஆத்ம ஜோதியை தன்னுடைய ஆத்ம ஜோதியுடன் இணைத்து தினமும் வலம் வரும் இரகசியத்தை வெளியிட்டார்கள்.

இந்த வழிபாட்டை நிறைவேற்ற ஸ்ரீவாத்யார் அவர்களுக்கு தினமும் ஒன்பது மணி நேரம் எடுத்துக் கொள்ளுமாம். பூலோக காலக் கணக்கில் தினமும் இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கும் வழிபாடு அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பூரணம் அடையும்.

ஒவ்வொருவரின் ஜோதியாக தன்னுடன் இணைப்பதற்கு மூன்று மணி நேரமும் அவ்வாறு இணைந்த ஜோதிகளை வலம் வருவதற்கு ஆறு மணி நேரமும் தினமும் தேவைப்படும் என்று தெரிவித்தார் சுவாமிகள்.

மேலும் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 20,000 புதிய அடியார்களின் ஆத்ம ஜோதியைத் தன்னுடன் இணைத்துக் கொள்வதாகவும் அடியார்களிடம் கூறினார்கள். அப்படியானால் இன்றைய கணக்கில் ஸ்ரீவாத்யாருடன் இணைந்த அடியார்களின் ஜோதி எத்தனை என்பதை எம்பெருமான் அருணாசல ஈசன் மட்டுமே அறிவார்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam