முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

வேதம் ஓதும் வித்தகம்

புராணங்களைப் படிக்கும் போது மனதுக்கு ஒரு நிம்மதி கிடைப்பதை அனைவரும் அறிவர். இதற்குக் காரணம், தெய்வீக அனுபூதிகளைப் புராணங்கள் உள்ளடக்கி இருப்பதோடு, கடவுள் தரிசனங்களைப் பெற்ற வியாச மஹரிஷி, வால்மீகி மஹரிஷி போன்ற இறைத் தூதுவர்கள் பகுத்தளித்த புராண வைபவங்கள் என்பதால், கடவுள் தரிசன சக்திகளைப் புராண வாசகங்களும், புராணக் கதைச் சத்துக்களும் பூண்டிருப்பதும் ஆகும்.

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர்
கீழப்பூங்குடி

இதற்காகத்தான் வியாச மகரிஷியும், வால்மீகி மகரிஷியும், சுக பிரம்ம மாமுனியும் சிறப்பான தெய்வீகப் புராணங்களைப் பல யுகங்களுக்கும் பயன்படுவதாகத் தொகுத்து அளித்துள்ளனர். ஆனால், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற புராணங்களைப் படிக்கும் போது, இவற்றை நமக்கு மிகவும் கடினமாக உழைத்துப் பெற்றுத் தந்த வியாச மகரிஷியையும் வால்மீகி மாமுனியையும் பலரும் ஒரு சிறிதும் நினைப்பது கிடையாது. இவ்வாறு வாழ்க்கையில் சந்ததிகள், வீடு, நிலம் போன்ற பலவற்றையும் நாமடைய காரணமாக உள்ள மஹரிஷிகளையும், பித்ருக்களையும் நன்றியுடன் நினையாமல் விட்டமைக்குத் தக்கப் பரிகாரம் பெற்றிடவும்,
அவர்கள் பெற்ற கடவுள் தரிசன சக்தி அனுகிரகங்களையும் பெறும் வழிமுறைகளையும் அடைந்திடவும் வியாஜ பூஜை நாள் உதவும்.

ஸ்ரீவால்மீகி முனிவர் திருப்பத்தூர்

படிப்பறிவே சிறிதும் இல்லாத ஒரு வேடர் கூட, தக்க நல்வழிகள் மூலம் உத்தம மகரிஷியாய் ஆகுதல் இயலும் என்பதையே இறைவன், வால்மீகி மகரிஷியின் சரிதம் மூலமாக நமக்கு உணர்த்துகின்றார்.
ராமாயண மஹாகாவியத்தை நமக்களித்தவரே வால்மீகி மாமுனி எனப் பலரும் அறிந்திடினும், ராமாயணம் நிகழ்கையில் உறைந்து, ராமாயணப் பாத்திரங்களை அருகிருந்து கண்டு, ராமாயணத்தைப் படைக்கும் இறைப் பேரருளையே அரும்பெரும் பாக்யமாகப் பெற்றவர் வால்மீகி மாமுனி எனப் பலரும் அறியார்.
 வியாச பூஜை அன்று மஹாபாரதத்தில் குறைந்து 12 அத்யாயங்களையாவது படிக்க வேண்டும். இதுவும் வியாச மஹரிஷிக்கு நன்றி கூறும் பூஜை மார்கமே! வியாசப் பூஜையில் பச்சரிசி சாதத்தில் பசு நெய் ஊற்றி ஸ்ரீவேதபுரீஸ்வரருக்கு (மானசீகமாகவேனும்) அர்ப்பணம் செய்து சித்ரான்னமாக (தேங்காய் சாதம், புளிச் சோறு, எலுமிச்சை அன்னம், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம்) ஆக்கி அன்னதானம் செய்வது சிறப்புடையது.
இந்நாளில் நான்கு வேதங்களிலிருந்தும், தமிழ் நான்மறைகளிலிருந்தும் ஒரு சில மந்திரங்களையாவது ஓதிடல் வேண்டும். பொதுவாக, திருப்புகழில் சாம வேத சக்திகள் நிறைந்துள்ளமையாலும், காரைக்கால் அம்மையாருடைய தேவாரப் பாடல்களில் அதர்வண சக்திகள் நிறைந்துள்ளமையாலும், இவற்றை, தினமும், சிராவண நட்சத்திர நாளிலும் ஓதுதல் சிறப்புடையது.

ஸ்ரீமிளகாய் சித்தர் ஜீவாலயம்
கீழப்பூங்குடி

வியாச மகரிஷியின் திருஉருவத்தைச் திருச்சி கீழரண் சாலையில் உள்ள ஸ்ரீநன்றுடையான் விநாயகரின் திருக் கோயிலில் கண்டு, தரிசித்து, வியாச மகரிஷியின் முன் சத்சங்கமாகப் பலரும் சேர்ந்து, நான்கு வேதங்களையும், தமிழ் மறைத் துதிகளையும் ஓதி, வியாசப் பூஜையைச் சிறப்பாகக் கொண்டாடிடுக.
துவாபர யுகத்தில் மங்கத் துவங்கிய வேத பாராயணங்கள், கலியுகத்திலும் கிட்டத்தட்ட முற்றிலுமாக மறைந்து, அன்னதான தர்ம சக்திகளாக நிரவுவதால், கலியுகத்தில் அன்னதானத்தையே வேத கானமாக, வேதபூரணமாக உரைக்கின்றனர். எனவே அன்னதானக் கைங்கர்யங்களில் பங்கு பெறுவது மிகவும் விசேஷமானது.
வியாசப் பெளர்ணமி நாளில் மகரிஷிகள், சித்தர்களுடைய ஜீவ சமாதிகளில் சந்தனக் காப்பு இடுவது விசேஷமானது.  
வியாசப் பூஜை நாளில், உத்திராட நட்சத்திர மண்டலத்திலிருந்து சகஸ்ர ஸ்ரீவேத தனக் கதிர்கள் பரிமளிக்கின்றன. உத்திராட நட்சத்திரத் தலமான கீழப்பூங்குடி தலத்தில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வேத பாராயணம் செய்து, ஸ்ரீமிளகாய்ச் சித்தர் ஜீவாலயத்தில் வழிபடுவது விசேஷமானது. மாதன சக்திகளைப் பூமியடி நீரோட்ட சக்திகள் மூலமாக ஆரா வேததனம் என்ற தன ரேகைச் சக்திகளாக ஆக்க வல்ல தலமே கீழப் பூங்குடி ஆகும்.
செம்பருத்திப் பூவில் உள்ள ரேகைகள் ஆராதன வேததன ரேகைகள் என்பதால் உத்திராட நட்சத்திர நாளில், இத்தலத்தில் செம்பருத்தி மாலை சார்த்தி வழிபடுதலால் பணமுடையும் வறுமையும் நீங்கி, வாழ்வில் நல்வகை முறைகளில் வளம் பெற உதவும்.

குடும்ப பாரம் தணிய ...

சில வகை நட்சத்திரத் சித்தாந்தங்களில், திருவோண நட்சத்திரத்தையே அபிஜித் நட்சத்திரமாகவும் கொள்வர்.
சில வகை ஜோதிட ஆரம்பப் பாடங்களும், அபிஜித் நட்சத்திரப் பகுதியில் இருந்துதான் துவங்கும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், வருடப் பிறப்பு என்பது தற்போது நிலவுவது போல, சித்திரை மாதத்தில் தொடங்குவதாக அல்லாது, கார்த்திகையில் இருந்து தொடங்குவதாகவும், சில பகுதிகளில் திருவோண நட்சத்திரத்தில் துவங்குவதாகவும் அமைந்திருந்தது. திருவோண நாள் விரதமானது, குடும்ப வாழ்விற்கு மிகுந்த சிறப்புகளைத் தருவதாகும்.
கணவனும், மனைவியும் திருவோண நட்சத்திர நாளில் ஒரு சேர விரதமிருந்து, 12 முறை விஷ்ணு சஹஸ்ரநாமம் அல்லது 1008 போற்றித் துதிகளை ஓதி, மாலையில் பெருமாள் ஆலயத் தரிசனத்துடனும், சூரிய உதயத்திற்குப் பின் விண்ணில் திருவோண நட்சத்திரம் இருக்குமிடம் அறிந்து, திருவோண நட்சத்திரத் தரிசனத்துடனும் விரதத்தை நிறைவு செய்தலால், நல்ல மன நிறைவு கிட்டுவதுடன், தம்பதியர்களிடையே பிரிக்க முடியாத நல்ஒற்றுமை உண்டாகவும் நல்வழிகளைத் தந்திடும். திருவோண நட்சத்திரத்தின் துவக்கம் முதல் முடிவு வரை விரதம் இருப்பது, இன்னமும் மேன்மையான பலன்களைத் தருவதாகும்.

திருப்பாற்கடல்

பெற்றோர்கள், பிள்ளைகளிடையே நல்ல சுமுகமான உறவு நிலவிடவும் திருவோண நாள் விரதம் மிகவும் உதவும்.  
கணவனுடைய வருவாய்க்குள்ளேயே சிக்கனமாக குடித்தனம் நிகழ்த்த வேண்டிய நிலையில் உள்ள இல்லறப் பெண்மணிகளுக்கு உள்ள பணக் கஷ்டத்தைச் சிறிது சிறிதாகப் பித்ருக்களின் ஆசிகளுடன் நீக்கிடவும் நல்வழி தர வல்லதும், திருவோண நட்சத்திர விரதமாகும். காலையில் சூரிய உதயத்திற்கு முன்னரேயே எழுந்து நீராடி, விளக்கேற்றி, குறைந்தது மூன்று மணி நேரமாவது விளக்கொளி நிரவும் வண்ணம், வேண்டிய அளவு பசு நெய், திரியை எடுத்து வைத்து விளக்கைக் கவனித்துக் குறைந்தது மூன்று மணி நேரமாவது பிரகாசிக்கச் செய்ய வேண்டும்.
காலையில் ஆதித்ய ஹிருதய மந்திரத் துதிகளையும் திருவோண நட்சத்திர விரத நேரம் முழுதும் விஷ்ணு சஹஸ்ர நாமம், திருமாலின் 1008 போற்றித் திருநாமங்கள் போன்றவற்றையும் ஓதிப் பூஜித்து சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட வேண்டும். தேவையாயின், அவரவர் உடல் ஆரோக்யத்தைப் பொறுத்து சிறிது பால் மட்டும் அருந்தி, விரத நேரம் முழுதும் மனதினுள் எப்போதுமாய், ஓம் நமோ நாராயணாய நம: என்ற அஷ்டாட்சர மந்திரத்தை நாள் முழுதும் ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். நிர்ஜல விரதமாக, சிறு துளிகள் கூட நீரருந்தாது விரதம் இருப்பது விசேஷமான பலன்களைத் தரும்.
காலையில் பூஜித்த பிறகு, பகல் 11 மணிக்கு மீண்டும் விளக்கேற்றி, அபிஜித் முகூர்த்த நேரமாகிய 12 மணியையும் சேர்த்துக் குறைந்தது மூன்று மணி நேரம் விளக்கைப் பிரகாசிக்கச் செய்து, மீண்டும் நாராயண மந்திரத்தை ஜபித்து, விஷ்ணு சஹஸ்ர நாமம், திருமாலின் 1008 போற்றித் திருநாமங்கள் போன்றவற்றையும் ஓதிப் பெருமாளைப் பூஜித்து, புளியோதரை, திண்டு தோசை படைத்து ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம், திருமாலின் 1008 போற்றித் திருநாமங்கள், திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள், நிகமானந்த தேசிகர் இயற்றிய துதிகள் போன்றவற்றையும் ஓதி வழிபடுக! தேவையாயின் சிறிது இளநீர் அருந்தவும்.

திருப்பாற்கடல்

மாலை ஐந்து மணிக்கு மீண்டும் விளக்கேற்றித் தொடர்ந்து மூன்று மணி நேரம் விளக்கு ஜோதியைப் பிரகாசிக்கச் செய்து, பெருமாளுடைய அஷ்டாட்சர மந்திரத்தை ஜபித்து, ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர நாமம், திருமாலின் 1008 போற்றித் திருநாமங்கள், திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள், நிகமானந்த தேசிகர் இயற்றிய துதிகள் போன்றவற்றையும் ஓதி, பால் பாயசம் படைத்து வணங்கிடுக!
மாலையில், பெருமாள் ஆலயத் தரிசனத்தில் சிறிது துளசித் தீர்த்தம் பெற்று அருந்திய பின், விரதத்தை நன்கு நிறைவு செய்திடலாம். தம்பதியர் இருவரும் சேர்ந்து திருவோண நட்சத்திர நேரம் முழுதும் விரதமிருப்பது விசேஷமானது.
திருவோண நட்சத்திர நாளில் திருவோண நட்சத்திரத் தலமான சென்னை - காவேரிப் பாக்கம் - வேலூர் மார்கத்தில், காவேரிப்பாக்கத்தில் இறங்கி, இங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திருப்பாற்கடல் ஊரில் அருளும் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் (ஆவுடை மேல் அபூர்வமாக நின்று காட்சி அளிக்கும் கோலத்தில் அருளும் திருமால் மூர்த்தி) தரிசனம் விசேஷமானது. இங்குள்ள இரண்டு சிவாலய வழிபாடுகளும் இதில் இணைதல் விரதத்திற்கு மேன்மை தரும். இங்குள்ள சிவாலயத்தில் அருளும் ஸ்ரீவளையாம்பிகைக்கு வளையல்கள் சார்த்தி வழிபட்டிட, தம் புதல்வியரின் திருமண வாழ்வு நன்கு அமைய உதவும்.
பொதுவாக, இல்லறப் பெண்மணிகள் திருவோண நட்சத்திர விரதமிருந்து, இல்லத்திலும், பெருமாள் ஆலயத்திலும் அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி வழிபட்டு வருதலால், பெரிய குடும்பச் சுமைகளால் வருந்தும் இல்லறப் பெண்மணிகளுக்கு நல்ல தீர்வுகள் கிட்டிட உதவும்.

நல்லுறக்கம் வேண்டுமா ?

பொதுவாக, இரவு நேரப் பணிகளில் ஈடுபட வேண்டி இருப்போர் அசூன்ய சயன விரதம் என்னும் விரதத்தைக் கட்டாயமாகக் கடைபிடித்தாக வேண்டும்.
பழங் காலத்தில் நைட் ட்யூட்டி என்ற இரவுப் பணியே இல்லாமல் இருந்தது. காரணம், நதி, கடல், தாவரம், விலங்கு அனைத்துமே இரவில் அமைதி கொள்வதால், இரவு நேரத்தை சில குறிப்பிட்ட புனித யாத்திரைகள், கிரகங்களின் வான சஞ்சாரங்களை அறிதல், நட்சத்திர தரிசனம் போன்ற பல நற்காரியங்களுக்கு மட்டுமே கொண்டனர். மாத சிவராத்திரி மற்றும் நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற பல அரிய இரவு நேரப் பண்டிகைகளும் இரவு நேரப் பூஜைகளின் பலா பலன்களை அளித்தன. ராத்திரி சூக்தம் எனும் அரிய மந்திரங்களை ஓதிய பின்னரே உறங்குவர்.
மேலும், உறக்கம் என்பது வெறும் உடல் ஓய்விற்கானது மட்டும் அல்ல. இதனை யோகப் பூர்வமாகக் கையாண்டால், மனிதனால் பல விண்வெளி லோகங்களுக்கும் சென்று தன்னை ஆன்ம சக்திப் பூர்வமாக நன்கு ஆக்கப்படுத்திக் கொள்ள முடியும். சூன்ய சயனம், அசூன்ய சயனம், யோக சயனம், போக சயனம், சஞ்சார சயனம், பரலோக யாத்ரா சயனம் என்று உறக்கத்தில் 36 விதமான (யோக சயன) நிலைகள் உண்டு.

ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர்

தூக்க மருந்து மாத்திரைகள் உண்டு தூங்குதல், மது போன்ற போதைப் பொருட்களை அருந்தித் தூங்குதல், உடலே தளர்ச்சியுற்றுச் சாயும் அளவிற்குக் கண் விழித்து வேலை பார்த்துக் களைப்படைதல், ரயில் மற்றும் பஸ் பயணத்தில் பலவிதமான ஆட்டங்களுடன் அசந்து தூங்குதல், கண்ட கண்ட இடங்களில் பார்க் ஆபீஸ், ரயில்வே ஸ்டேஷனில் தூங்குதல் இவை எல்லாம் உண்மையான தூக்கம் ஆகாது. இவ்வாறு தூங்குபவர்கள் தங்களையும் அறியாமல் தூக்கத்தில் பல சூன்யக் கழிவு நச்சு சக்திகளைத் தங்களுக்குள் ஏற்றிக் கொள்கிறார்கள்.

ஊத்துக்கோட்டை சுரட்டப்பள்ளி

பிரயாணத்தில் பல உடல், வாகன ஆட்டங்களுடன் தூங்குகையில், குறைந்தது 50 முதல் 100 தடவை வரை மூளை ஓய்வடைந்து மீண்டும் நினைவுக்கு வந்து இவ்வகையில் மாறி மாறிப் பன்முறை பாதிப்புகளுக்கு ஆளாவதால், கபாலத்தில் அதிக உஷ்ணம் ஏறி விடும். கபால நாளச் சுரப்புகள் மிகுந்து விடும். எனவே, இரவுப் பயணமோ, பகலில் பஸ், ரயில் பயணத்தில் உறங்குவதையோ கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும்.
உறக்கம் என்பது ஒரு வகையான போகமே. ஆனால், உண்டி போல உறக்கமும் உடல் அறிவு வளர்ச்சிக்குத் தேவையானதே! கடுமையான உழைப்பு, இரவு நேரப் பணி, வேறு வகை சுக, போகங்கள் காரணமாக உறக்கத்தை இழப்போரின் மனமும், உடலும் பிற போகங்களை நாடிச் செல்ல ஆரம்பித்து விடும். இவ்வகையில்தான் இரவுப் பணி புரிபவர்கள் தற்காலத்தில் புகை பிடித்தல், மது, புகையிலை, பாக்கு போன்ற பல தீய வழக்கங்களுக்கு அடிமையாகி விடுகின்றார்கள். இவற்றுக்கெல்லாம் நன்முறையில் தீர்வுகளை தரத்தான் அசூன்ய சயனம் போன்ற விரத முறைகள் அளிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய அசூன்ய சயன விரத நாளில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து முதலில் பிரம்ம பூஜை, பிறகு விஷ்ணு பூஜை, சூரியோதய நேரத்தில் சிவ பூஜைகளை ஆற்றி, ஸ்ரீரங்கநாதாஷ்டகம் மற்றும் ஸ்ரீரங்கநாதர் துதிகளை ஓதி, இல்லத்திலும், சயனக் கோல மூர்த்தி ஆலயங்களில் தரிசித்தல் வேண்டும். பகலில் உறங்காது, இரவிலும் ராத்திரி சூக்தம் போன்ற இரவு நேரத் துதிகளை ஓதி, ஸ்ரீரெங்கநாதர், சுரட்டப்பள்ளி பள்ளி கொண்ட ஈஸ்வரன், மாசாணி அம்மன், ஆலிலைக் கிருஷ்ணன் போன்ற சயனக் கோல மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் ஆற்றி புது வஸ்திரங்களைச் சார்த்தி வழிபட்டு ஏழைகள் நன்கு உறங்குவதற்கான பாய், படுக்கை, தலையணைகளைப் புதிதாக வாங்கித் தானமாக அளித்தல் வேண்டும்.

திருமாலை திருப்பண் !

அசூன்ய சயன விரதத்தை நிறைவு செய்வதற்கு உரியத் தலங்கள், கரூரில் அபய ரெங்கநாதர் ஆலயம் , திருத்தங்கல் ரெங்கநாத மூர்த்தி திருக்கோயில், திருச்சி மண்ணச்சநல்லுர் அருகே உள்ள அழகிய மணவாளம் ஊரில் உள்ள பழமையான ஸ்ரீரெங்கநாதர் கோயில் போன்றவையாம்.
இந்த விரதத்திற்கான நியதிகள் இன்னமும் உண்டு. உறக்கம் இன்றி அவஸ்தைப் படுபவர்களுக்கும், இரவு நேரத்தில் அதர்மமான, தீய காரியங்களில் ஈடுபட்டோருக்கும் தேவையான பிராயச்சித்த வழிமுறைகளை அருள வல்ல விரதமாகும்.

புத்தித் தடுமாற்றம் ஏன் ?

வானத்தில் நிகழும் கோள்களின் அசைவுகள் பற்றிய விளக்கங்களில் பலவும், பூமியில் இருந்து மனிதன் பெறுகின்ற கிரகக் காட்சிகளை, கோணங்களைப் பொறுத்து அமைகின்றது. ஆனால் தற்போது 3D, 4D என்று சொல்வது போல, நாம் பார்க்கும் திசையில் மட்டுமல்லாது கோளின் மறு புறங்களிலும் நிகழ்வதைக் காண வல்ல யோகப் பூர்வமான முறைகளும் உண்டு. உத்தமமான யோக வகைகளில், பீதாம்பர ஜால சித்திகளிலும் பூமிக்கு, கோள்களுக்கு மறு புறம் நிகழ்கின்ற கிரகச் சலனங்களையும், எதிர்ப் புறத்திலிருந்து காண வல்ல அபூர்வமான நேத்திர சக்திகள் பூரிக்கின்றன.
பொதுவாக, புத தசா, புக்தி நற்சக்திகள் நன்கு நிறைந்தவர்களும், ஆயுள் காரகராகிய சனி மூர்த்தி நன்கு ஸ்திரமாக இருப்பதைக் கொண்டவர்களும், பீதாம்பர யோகத்தில் வல்லவர்களாக இருப்பர். ஆனால் தற்போதையக் கலியுகத்தில், பீதாம்பர யோக சித்திகள் நிறைந்தவர்கள் பெரிதும் மறைந்து விட்டனர்.  இதனால்தான் தற்போது உலகில் இருக்கின்ற ஒரு சில பீதாம்பர ஜால யோகசித்சக்தி உடையவர்களும் தங்களை வெளிக் காட்டிக் கொள்வதில்லை!

ஸ்ரீஞானாம்பாள் திருச்சேறை

புத கிரகம் வக்கிரத்தில் இருக்கும்போது, அவரவர் ஜாதகப் பூர்வமாகவும், கோசாரப் பூர்வமாகவும் உள்ள புத கிரக அமைப்பைக் கொண்டு, பலருக்கும் புத்தியில் பலத்த மாற்றங்கள் ஏற்படும். நல்ல ஒழுக்கம் உடையோர்க்கும் சபலங்கள் நிறையவே ஏற்படும். ஜோதிட, சாத்திர ரீதியாக, வக்கிரமென்பது ஒரு கிரகம் தன் பாதையிலிருந்து பின்னோக்கிச் செல்வதைக் குறிப்பதாகும். விஞ்ஞானப் பூர்வமாக, எந்தக் கிரகமும் பின்னோக்கிச் செல்லா என உரைத்தாலும், பூமியின் ஓரிடத்திலிருந்து குறித்த கிரகத்தைப் பார்க்கும்போது பின்னோக்கிச் சென்றமையால் வந்தச் சலனம் என்று தோன்றும். ஆனால், ஆன்மீக ரீதியாக, வக்கிர கிரகச் சலனங்கள் நிகழ்வது உண்மையே!
நவகிரகங்களில் ராகு, கேது கிரகங்கள் மட்டுமே, வக்கிர கதியில் அதாவது அப்பிரதட்சிணமாகச் சுற்றுகின்றன. எனவே, வக்கிர கதிக்கும் வரும் எந்த கிரகமும் ராகு, கேது ஆகர்ஷண சக்திகளால் சற்று மாற்றங்களைக் கொள்ளும். நவகிரகங்களும் உள்ள நம் உடலிலும் இவை நிகழும். இதனால், பல விளைவுகள் ஏற்படும்.
புதனுடைய வக்கிர கதி இருக்கும்போது புத்தி தடுமாற்றம், அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுதல், தாம் எடுத்த முடிவுகளுக்குள்ளேயே மீண்டும் குழம்பிக் குழம்பி, தீர்வுகள் பெற இயலாது தவித்தல், பிறருடைய பேச்சால், ஆலோசனகளால் மாறுதல், பிறரால் ஏமாற்றப்படுதல் போன்றவை ஏற்படும்.
ஒரு கிரகத்தின் வக்கிர கதியில் நல்ல மாற்றங்களே நிகழாதா? நிச்சயமாக நற்காரியங்களும் நிகழும். ஆனால், புதனுடைய அல்லது புதனுக்கு அமையும் பார்வைகளைப் பொறுத்து, இந்நிலைகளில் விளைவுகள் ஏற்படும்.  
புத கிரகம் வக்ர கதிக்குத் தயாராகும் நாளில் புத மூர்த்திக்குப் பச்சை வண்ணப் பட்டு வஸ்திர ஆடையைச் சார்த்தி, தர்பைகளால் ஆன கிரீடத்தைச் சார்த்தியும் சாம்பிராணித் தூபம் இட்டும் வழிபடுதல் வேண்டும். வாழ்க்கையில், மனிதனுக்கு காலாட்டுதல், நகம் கடித்தல் என ஏதேனும் ஒரு பழக்கம் தொற்றிக் கொண்டால், இவை எல்லாம் வக்கிர குணப் பழக்கங்கள் ஆகும்.
பொடி போடுதல், புகையிலை எனத் தீய வழக்கங்களும் ஒட்டிக் கொண்டால், இவற்றுக்கு நிவாரணம் காண, சந்தன நறுமணப் பொடியை சாம்பிராணி தூபத்தில் இட்டவாறு, புதனுடைய வக்கிர கதி காலத்தில், புத ஹோரை நேரத்தில், சாம்பிராணி தூபக் காப்புடனான அருணாசல கிரிவலம் மற்றும் புத மூர்த்தி வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
புத கிரகத்தின் வக்கிர கதியில் வழிபட வேண்டியத் தலங்கள் உண்டு. ஞான மூர்த்தி, ஞானாம்பிகை போன்ற ஞான சக்தித் தலங்களும் இதில் அடங்கும். புத கிரகத்தில் இருந்து அவதரித்த ஞானேஸ்வரரின் ஜீவசமாதி வழிபாடும் விசேஷமானதே! உங்கள் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வீட்டிலும், ஆலயங்களிலும் நிறைய சாம்பிராணி தூபம் இட்டு வழிபடுங்கள்.
அடிக்கடி ஆலயங்களில் சாம்பிராணி தூபம் இட்டு வழிபட்டு வருவதால் பிள்ளைகளைத் தொற்றிக் கொண்டிருக்கும் சிறு சிறு துர்பழக்கங்கள் அகல உதவும். புத ஹோரை நேரத்தில் பயத்தம் பருப்புச் சுண்டல் படைத்து, புத மூர்த்தியை வழிபட்டு, முதலில் சுண்டலைப் பறவைகளுக்கும், பிறகு அன்னதானமாகவும் அளித்து வருதலால் படித்ததை நினைவில் கொள்ள பிள்ளைகளுக்கு உதவும், சிறு சிறு துர்சபலங்களுக்கு ஆளாதலைப் போக்கும்.
எத்தகைய தீய பழக்கங்களில் இருந்தும் விடுபட புத கிரக வக்ரகதிக் கால பூஜைகள் உதவும். புதனின் வக்ர கதி காலத்தில், வாழ்வில் தீய வழக்கங்கள் ஒட்டிக் கொள்வதற்கும், நல்ல முடிவுகளைப் பல காரியங்களிலும் எடுக்க முடியாமல் போவதற்கும் மூல முதற் காரணமே புத்தித் தடுமாற்றம் ஆகும். இது ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள, புத கிரகத்தின் வக்கிர கதி காலத்தில் சாம்பிராணி தூபம் இட்டுக் கிரிவலம் வருதல், தினமும் வீட்டிலும், ஆலயத்திலும் சாம்பிராணி தூபம் இட்டு வழிபட்டு, தினமும் பசுக்களுக்குப் பச்சைக் கீரைகளையும். புல் தழைகளையும், தான்ய நீரையும் அளித்து வருதல் வேண்டும்.

சௌபாக்யம் பெறுக

மரண பயத்தை அகற்றி, தீர்க தரிசனம் தந்து, ஆயுள் பலத்தையும் விருத்தி செய்து தரும் நட்சத்திர சக்திகள் சதயத்திற்கு உண்டு. சதயச் சக்கரம் என்பது 24 புள்ளிகளை வைத்து, வடக்கில் ஆரம்பித்து, எட்டுத் திக்கு வாசல்களை வைத்துத் தெற்கில் முடிப்பதாகும். இதனைச் சதபிஷகச் சக்கரம் என அழைப்பர். அனைத்து நட்சத்திர மூர்த்திகளும் சங்கட ஹர சதுர்த்தி நாளில் ஷோடச கணபதி மூர்த்திகளை வழிபடுகின்றனர்.

திருநாவலூர்

ஒவ்வொரு சங்கட ஹர சதுர்த்தியிலும் வழிபட வேண்டிய விசேஷமான கணபதி மூர்த்திகள் உண்டு. எம மூர்த்தியும், சதய நட்சத்திர நாளில் வரும் சங்கடஹர சதுர்த்தித் திருநாளில், தசமுக கணபதியை (பத்து முகங்கள் கூடிய விநாயகரை) வழிபடுகின்றார். சில தலங்களில் ஹேரம்ப கணபதி மூர்த்தி வழிபாடும் சதய சங்கடஹர சதுர்த்தி நாளில் முக்கியத்துவம் பெறுகின்றது.
தெய்வீகத்தைப் பற்றிய சிந்தனையே இல்லாது, ஏனோ தானோ எனக் கடவுளைக் கடனே என வழிபட்டு, கஞ்சத்தனமாக இருந்து எப்போதும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கின்ற கணவன் நல்வழி பெறவும்,
இறைவனைத் தினமும் முறையாக வழிபடாது, எப்போதும் வெளியூர் பயணம், ஆபீஸ் பணி, வியாபாரம் என அலைந்து திரியும் கணவனைப் பற்றி வேதனை அடையும் தாய்மார்கள், கணவனைத் திருத்தி நல்வாழ்வு பெற, சக்கர விநாயகரை வழிபட்டு வர வேண்டும்.
சதயம் கூடும் சங்கடஹர சதுர்த்தி நாளில், நாவல் மரத்தடியில் எழுந்தருளி இருக்கும் விநாயகரை வழிபடுவதால்,
தேவையற்ற வகையில் மனதில் எழுந்துகொண்டிருக்கும் மரண பீதிகள், நோய் வலி பயம், எங்கே நோய்க் கடுமையால் அங்கம் செயலற்று விடுமோ என்று உள்ளூரத் தோன்றிக் கொண்டிருக்கும் மன பீதிகள் அகலவும் உதவும்.
ஜம்பு பழம் எனப்படும் பெரிய வகை நாவல் பழங்களால் மாலை கட்டி, 108 நாவல் கனி மணிகள் நிறைந்த மாலையை விநாயகருக்குச் சார்த்திக் கண் குளிர தரிசித்து வழிபடுதலால், நாவல் மாலையணிந்த கோலக் கணபதியைப் பலரும் கண்டு தரிசிக்க இறைச் சிறு கருவியாகச் இறைப் பணியாற்றிப் பயன்படுவதால்,
நோய்களைப் பற்றியே சுற்றிச் சுற்றி வருகின்ற மனமானது, மரண பீதிகளிலிருந்து விடுபட்டு, நல்ல தீர்வுகளையும் செளபாக்யத்தையும் அடைய நாவல் கனி மணிமாலை வழிபாடு நன்கு உதவும்.
நாவல் மரம் தல விருட்சமாக உள்ள தலங்களில் அருளும் விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகளை ஆற்றி வழிபடுவதால், தேவையற்ற வகையில் மனதை ஆக்ரமித்துக் கொண்டு, வாழ்க்கையில் முன்னேற விடாது தடுக்கும் தாழ்வு மனப்பான்மை எண்ணங்கள் அகல மிகவும் துணை புரியும்.

எட்டுத் திக்கில் கிட்டி வரும் ஏற்றம்

செவ்வாய்க் கிழமை அன்று வாஸ்து நாள் அமைவதும், இதில் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான சுப்பிரமண்ய சுவாமிக்கு உரித்தான சஷ்டித் திதியில் வாஸ்து நாள் இணைந்து வருவதும் மிகவும் விசேஷமானது.  
அஷ்ட திக்குகளுக்குமான எட்டுத் திக்கு வாஸ்து பூஜைகளைக் குறிப்பதே தமிழ் வருடத்தின் எட்டு வாஸ்து தின அம்சங்களாகும். இந்த எட்டுத் தினங்களில், எந்த வாஸ்து தினத்தில், எவ்வாறு பூஜைகளை நிகழ்த்த வேண்டும் என்ற வகையில் சித்தர்கள் அளிக்கும் பூஜை நியதி முறைகளும் உண்டு. வாஸ்து யோகம் என்பதில் செவ்வாயன்றும், வாஸ்துநாளிலும் எட்டுத் திக்குகளிலும் 108 முறை சாஷ்டாங்கமாக வீழ்ந்து தண்டனிட்டு வணங்கும் முறையும் அடங்கும்.

ஸ்ரீஹேரம்ப கணபதி மூர்த்தி
திருவில்லிபுத்தூர்

செவ்வாய் கிரக ஆட்சியில், செவ்வாய்க் கிழமையானது சஷ்டித் திதியோடு சேர்ந்து வரும் வாஸ்து நாளில், வாஸ்து நேரமான 90 நிமிடங்களில், வாஸ்து மூர்த்தியின் ஐந்து வகையான நிலைகளுக்கான ஐந்து வகைப் பூஜைகளை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்பதற்கான விளக்கங்களை நிறைய அளித்து வந்துள்ளோம். சஷ்டித் திதியில், வாஸ்து பூஜைகளை நிகழ்த்துவதற்கு முன் உண்ணா நோன்பு இருந்து, பூஜை செய்வதால்,
* வர இருக்கின்ற வீடு நன்கு அமைவதுடன்,
* இருக்கும் வீடு ஸ்திரமாக நிலைத்து நிற்கவும்,
* சந்ததிகளும் நன்கு வீடு வாசல்களுடன் நன்கு செளபாக்கியமாக இருக்கவும்,
* பூர்வ ஜென்மங்களில் முறையாக வாஸ்து மூர்த்தியை பூஜிக்காமையால், இப்பிறவியில் சொந்த வீடு அமையும் பேறு பெறாதவர்களும், நன்முறையில் வீடு ஆஸ்தியைப் பெறவும், வாஸ்து பூஜா சக்திகளே நன்கு பண்பட்டு வரும். எனவே, சொந்த வீட்டிலிருப்போரும், வாஸ்து நேரத்தில் 90 நிமிடங்களாவது நன்கு வாஸ்து பகவானைப் பூஜித்திடல் வேண்டும்.
நம் ஸ்ரீஅகஸ்திய விஜயம் தமிழ் இதழில், சித்தர்களினால் அளிக்கப் பெற்ற முறையில், ஸ்ரீவாஸ்து மூர்த்தி படம் விசேஷமாக வரைந்து, உலகெங்கும் அனைத்து மக்களும் பூஜிப்பதற்காக அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவீர்கள். விஸ்வதேவ இலக்கணச் சூத்திரப்படி, வாஸ்தவ்ய, வாஸ்துப்ய, வாஸ்தாம்பரம் எனும் எட்டு அட்சரச் சில்ப விஸ்வகர்ம கற்ப சித்தாந்தப் பூர்வமாக அங்காரக லோகச் சித்தர்களால் அளிக்கப்பட்டதாகும்.
தாம்பரம் என்பது புனிதமான மண்ணிற் பதியும் வாஸ்து மூர்த்தியின் திருவடிச் சின்னமாகும். இதனால்தான் அந்தந்த ராசிக்கான வாஸ்து பூஜையில் மிருத்திகா பூஜை என்பதாக, குறித்த வகை மண்ணைக் கொண்டு ஆற்றும் பூஜை அளிக்கப்படுகிறது.  மேலும் தெய்வ மூர்த்திகளின் திருவடிகளும் தாமிரத் தகட்டில் பதிக்கப் பெற்று வழிபடப்படுகிறது.
வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமையிலும், ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் படத்திற்கு எட்டுத் திக்குகளிலும், (அவரவர் தம் கரங்களால்) அரைத்த சந்தனத்தில் பச்சைக் கற்பூரம், ஜவ்வாது, புனுகு, கோரோஜனை, கஸ்தூரி மஞ்சள் போன்ற எட்டு மூலிகா, தேவ திரவியங்களைச் சேர்த்துச் சார்த்தி வைத்து,
எட்டு விதமான நறுமணப் பூக்களால், 108 / 1008 முறை வாஸ்து மந்திரங்களை ஓதி அர்ச்சித்து வழிபடுவது மிக மிக எளிமையான வழிபாடு ஆகும். இதற்கு எவ்வளவு நேரம் ஆகப் போகிறது? சற்றே சிந்தித்துப் பாருங்கள்!

வாஸ்து நேரமான 90 நிமிடங்களிலும் விளக்கைப் பிரகாசிக்கச் செய்து பூஜிப்பதே விசேஷமானதாகும். ஜாதகத்தில் 12 இராசி சக்கரம் இருப்பது போல, எட்டு திசைச் சக்கர ராசிப் பூர்வமான வாஸ்து இராசிச் சக்கரமும் உண்டு. இதற்கான விளக்கங்களைத் தக்க சற்குரு மூலம் அறிந்து கொள்ளவும்.
இந்நாளில் எட்டுப் பலிபீடம் உள்ள ஆலயங்களில், எட்டுக் கோபுரம்/ விமானம் / கலசம் உள்ள ஆலயங்களிலும்,
பூமிநாதர், பூமீஸ்வரர், பூலோகநாதர், பூமாதேவி அருளும் ஆலயங்களிலும்,
எட்டுத் திக்கு வாசல்களிலும், பலிபீடங்களிலும் கோலங்கள் வரைந்து, எட்டுத் திக்குகளிலும் நின்று விண்வெளி, பூமிவெளி, கீழ்பூமி ஆகிய மூன்றையும் நோக்கி எட்டு முறை கைகளை தலைமேல் உயர்த்தி கும்பிட்டு,
"சம்போ சிவவரத வாஸ்து நமஸ்கார அங்காரக பூஜாபத பாத சமர்ப்பயாமி' என்று ஓதி வழிபடுதல் நன்று. அல்லது இதனை எட்டுத் திக்குகளிலும் எட்டு முறை ஓதி சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்காரம் செய்து வழிபடுக!

* இந்நாளில் முதலில் தனக்கு சொந்த வீடு / வாடகை வீடு அளித்த மூதாதைய சக்திகளுக்கு நன்றி கூறியும்,
வீடு / வாசலில்லாத ஏழையருக்கும் வாஸ்து சக்திகள் பரிமாணம் பெறும் வகையில் அவர்களுக்கும் வாஸ்து சக்திகள் சென்றடையும் வண்ணம் சங்கல்பம் செய்து, பூமிக்குக் கீழ் விளையும் பொருட்களால் / காய்கறிகளாலான உணவை தானம் செய்தல் வேண்டும்.

32 விதமான தான, தர்மங்களை ஒரு பிறவியில் இயலாவிடினும், பல பிறவிகளிலும் ஆற்றியவர்களுக ்கே முக்திக்கான நல்வழிகள் காட்டப் பெறும். ஸ்ரீகாமாட்சி அம்பாளும் 32 விதமான அறங்களையும் சிவதவமாகக் காஞ்சியில் ஆற்றியதை அறிவீரன்றோ!
32 விதமான அறச் செயல்களில், வீடில்லா ஏழைகளுக்கு நிலமும், வீடும் அளிப்பதும் ஒன்றென அறிக! ஏழைகளுக்கு வீடு, நில தானம் அளிக்க இயலாவிடில் வாடகைக்குக் குடி இருக்கும் நல்ல ஏழைக் குடும்பத்தின் மாத வாடகையையாவது நீங்கள் ஏற்று உதவுவதும் ஒரு வகைத் தானமே! வாஸ்து சக்திகளைத் தர வல்ல நல்ல தான வகையே!
வாஸ்து சக்தி நாளான செவ்வாய் தோறும் பூமாதேவியைப் பூஜித்திட, ஆலயங்களுக்கு வெட்டி வேர்த் தைலம் அளித்துப் பூஜித்திட, வீட்டைச் சுற்றி உள்ள பகைமை, பொறாமை, குரோதங்கள் சிறிது, சிறிதாகத் தீர உதவும்.

முறிந்த உறவுகள் பூக்கும்

திதி தேவதைகள் யாவும், பூவுலக ஜீவன்களின் நல்வாழ்விற்காக ஆற்ற வேண்டிய கோடி கோடியான தேவ பூஜைகள், சேவைகள், நற்காரியங்கள் நிறையவே உண்டு. இவற்றை ஒவ்வொரு திதியிலும் திதி நித்யா தேவதைகள் ஆற்றி வருவதால், இதற்காகவே மனித குலமும் ஆற்ற வேண்டிய திதி நித்யாப் பூஜைகளும் உண்டு. திதி நித்யா பூஜைகளில் கிட்டும் சபரீச சக்திகள் நல்ல வாக்சக்தியைப் பெற்றுத் தரும்.
தேய்பிறைச் சப்தமித் திதி என்பது சப்த கிரணங்களைப் பண்படுத்தித் தருகின்ற நாளாகும். சப்தமின்றி மனித வாழ்வு கிடையாது அல்லவா! பிறந்த குழந்தை அழுவது முதல் இறுதி வரை, மனிதன் தன் வாழ்வில் எழுப்புகின்ற சப்தங்கள்தான் எத்தனை எத்தனை?
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எழுப்பிய / பேசிய பயனுள்ள சப்தங்கள், வார்த்தைகள் எவ்வளவு, எவ்வளவு பயனற்ற வார்த்தைகளுக்குப் பரிகாரங்களை நாட வேண்டும் போன்றவற்றை உணர்த்த வல்லதும் சப்தமித் திதி நாளின் மகத்துவம் ஆகும்.

ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

மேலும், இயந்திரங்கள் பெருத்து வரும் கலியுலகில், வேதமோதுதல், மர அசைவுகள், பட்சிகளின் சப்தங்கள், ஆறு, மலையருவிச் சப்தம் போன்ற இயற்கையான சப்தங்களை விட, செயற்கை சப்தங்களின் ஊடேதான் மனித வாழ்க்கை நிறையவே நிகழ்கிறது. இதனை இவ்வகையில் சத்தியப் பூர்வமாக ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான், எத்தகைய வெளி சப்தங்கள் காற்றை, வானை, மனிதர்களின் காதுகளைத் தினந்தோறும் ஒவ்வொரு நிமிடமும் அடைக்கின்றன என்பது தெரிய வரும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒளி, ஒலி, உணவு, காற்று, நீர், மண், ஆகாசம் போன்ற முப்பத்து (மூன்று பத்துகள்) வாழ்க்கைக்கான லெளகீகமான மூலசாதன நெறிகள் தேவையாக உள்ளன. முப்பத்தில் முகிழ்க்கும் முத்துயிர் என்பது நல்ஆத்ம வாசகம். திருமந்திரத்தில் இதற்கான விளக்கங்கள் நிறைய உண்டு. இந்த முப்பத்து ஆத்மப் பரல்களின் ஒலியானது, சப்தமாக, ஒரு மனிதனின் பிறந்த நேரம் முதல், வாழ்வின் இறுதி வரை, மனிதனுள் கூடவே இருந்து வருகிறது.
கலியுகத்தில் வெறுமனே பேசிப் பேசியே, உடல் சக்தியையும், காலத்தையும் கழிப்போர் நிறைய உண்டே! எவ்வகையில் எல்லாம் மனிதனுக்குக் காலை முதல் இரவு வரை வாழ்க்கையை நடத்தத் தினமும் பேச்சு துணை புரிகின்றது என்பதை நன்கு ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் புலனாகும். சற்றே அவ்வப்போது, மெளனமாக இருந்தும் பயின்று வந்தால், தனக்குத் தானே மெய்யாக, மெய்யில் (உடலில்) உணர்ந்து பார்த்து வந்தால்தான், வாய்ப் பேச்சை, எவ்வகையில் ஆன்மீகமாகப் பயன்படுத்திட வேண்டும் என்பதையும் தெளிவாக அறிய முடியும்.
மெளனத்திற்கு அற்புதமான தேவ ஆற்றல்கள் உண்டு என நாமறிவோம். ஸ்ரீஅகஸ்திய விஜயம் போன்ற தெய்வீக இதழ்களில் பொலியும் தெய்வீக அனுபூதிகளைத் தினமும் பலருக்கும் உரைத்து உணர்த்திப் பணி ஆற்றுவதையே ஓர் அற்புத இறைச் சேவையாக ஆற்றி வந்தால், பஞ்சப் புலன்களில் ஒன்றையேனும் உருப்படியாக தெய்வீக வழிமுறைகளில் ஆற்றியுள்ளோம் என்ற மனத் திருப்தி உண்டாகும். இதுவே ஆத்மத் திருப்தியாகவும் மலரும்.
சப்தமித் திதி தோறும், பூவுலகில் வானில், விண்ணில், பூமியில், நீரில், நெருப்பில் பதிந்துள்ள சப்த ஒலிச் சரங்கள் நன்கு சுத்திகரிக்கப்பட்டு, ஒலித்துவ தேவ சக்திகள் நிரவப் பெறுகின்றன. ஒவ்வொருவரும் பேசும் பேச்சும் வானிலும், காற்றிலும், அந்தந்த வாக்கியங்களின் தன்மைகளைப் பொறுத்துப் பல விளைவுகளை ஏற்படுத்தும்.

தீய சொற்களை, அவலமான, ஆபாசமான, கேவலமான சொற்களை ஒருவர் பேசுகையில், அவை பஞ்ச பூத சாதனங்களில் வானெங்கும், காற்று முழுதும் படிந்து மாசுபடுத்தி விடும். இதனால்தான், ஜீவன்களை மேற்கண்ட தீய சப்த வினைகளில் இருந்து காக்க, சப்தமித் திதி தோறும், சப்த மண்டலக் கிரக தேவதா மூர்த்திகளும், சப்த கன்னி, சப்த மாதர் மண்டல தேவதைகளும், சூரிய மூர்த்தி, சந்திர மூர்த்தி தம் கிரகக் கிரணங்களாலும், நட்சத்திர தேவதா மூர்த்திகளும் தம் ஒளிச் சுடர்களாலும் மேற்கண்ட வகையில் மாசுபடும் ஒலிக் கிரணங்களைச் சுத்திகரிக்கின்றனர்.
ஒவ்வொரு மனிதனும், தினமுமே பொய், அசத்யம், அதர்மம், தகாதவை, தீயன பேசி தம் வாக்சக்திகளை மிகவும் பாதித்துக் கொள்கின்றான். தம் வாக்குக் குற்றங்களுக்கு, அவரவரே பொறுப்பேற்று, தத்தம் வாக்கு வினைகளுக்குப் பரிகாரம் தேடுதல் வேண்டும். இதற்கு சப்தமித் திதி நாளில் ஆற்றும் பூஜை உதவும்.
மேலும், இசைக் கலைஞர்களுக்கு உரித்தான வழிபாட்டுத் தினமும் சப்தமித் திதி நாளாகும். சப்தமித் திதி தோறும், நிறைய இசைக் கருவிகளை இசைத்துப் பூமியில் சப்தப் பூரணமாக நற்கதிர்களை நிரவிட வேண்டும். இவைதாம் மாசுபட்டுள்ள சப்தக் கிரணங்களை சுத்திகரிக்க மிகவும் உதவும். இசைக் கலைஞர்கள் யாவருமே சப்தமித் திதியைப் பெரும் பண்டிகையாக, நன்கு விரதமிருந்து கொண்டாடிட வேண்டும்.
உண்மையில், சப்தமி நாட்களில் நல்வார்த்தைகள் தவிர, வேறு வார்த்தைகள் பேசல் கூடாது என்ற சங்கல்பத்தை ஏற்றுச் செயல்படுத்திடுவதும் வாக்சக்திப் விரதமே, பூஜையே ஆகும்.
சப்தமித் திதியன்று ஏழின் வகைகளில் - ஏழு பூக்களால் அர்ச்சனை, ஏழு கோபுர, ஏழு விமான தரிசனம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் சப்தமித் திதி நாளில், தாம் இதுகாறும் பழித்துப் பேசியது, கோபமான இழிசொற்களைப் பேசியது, தகாத வகையில், அவலமாகப் பேசியது போன்றவற்றிற்குப் பரிகாரப் பூஜைகளை ஆற்றிட வேண்டும்.
ஒருவர் பேசிய துர்வார்த்தைகள் யாவும் வானில் காத்துக் கிடந்து அவரவரைப் பலவிதங்களில் வதைக்கும் என்பதை இனியேனும் உணர்தல் வேண்டும். அவரவர் பேசிய ஒவ்வொரு தகாத வார்த்தைக்கும் பரிகாரம் தேடினாலன்றி, எவரும் வாக்குக் குற்றங்களில் இருந்து தப்பிக்க இயலாது.
ஆகையால், சப்தமித் திதி தோறும் ஏழை இசைக் கலைஞர்களுக்குத் தக்க சன்மானம் அளித்து, அவர்களைக் கொண்டு ஆலயங்களில் இசைக் கச்சேரிகளைச் செய்தலும், சப்தமித் திதியில் அருணாசலக் கிரிவலம் ஆற்றுதலும், வாய் தவறிப் பேசியதால் முறிந்த தம்பதியர் உறவுகள், உறவுப் பிரிவுகள், வியாபார முறிவுகளுக்குத் தக்கத் தீர்வுகளைத் தந்து நன்னிலை பெற உதவும்.

கோசாரம் காட்டும் பூஜைகள்

சில நாட்களில், பஞ்சாங்கங்களில் எந்த விரதமும், பண்டிகையும் போடாமல் விடப்பட்டிருக்கும். இதற்காக, அந்நாளில் எந்த விரதமும் அமையவில்லை என்பது பொருளல்ல, காலங்காலமாக வந்த கால ஜோதிடக் குறிப்புகளில், இவ்வாறு பல நாட்களுக்கான விசேஷமான நாட் குறிப்புகள் விடுபட்டுள்ளன. மேலும், இத்தகைய நாட்களில் கோசார ரீதியான பலன்கள் நன்கு விருத்தியாகிப் பூரிக்கும் என்பதும் நற்பொருளாகும். எனவே, இத்தகைய நாட்களில் கோள்களின் அமைப்பை அறிந்து, அதற்கேற்றபடி வழிபட வேண்டும்.
ஜோதிடத்தில் கால அம்சங்களைக் கணிப்பவர்கள், ஜாதக பலன்களைக் கணிப்பவர்கள் என இரு பிரிவு உண்டு. காலத்தைக் கணித்துத் தருபவர்கள்தாம் பஞ்சாங்கக் கணிதர்கள், ஜாதக பலன்களைக் கணிப்பவர்கள் ஜோதிடர்கள் ஆவர்.
விரதம் பண்டிகைகள் மட்டுமல்லாது, அந்தந்த நாளின் கிரகங்கங்களின், நட்சத்திரங்களின் சேர்க்கைகளுக்கு ஏற்பவும் ஆற்ற வேண்டிய வழிபாடுகளை உரைப்பதற்கென்றே பஞ்சாங்க படனம் என்ற ஒரு தர்ம ஸ்தாபனத்தை, அக்காலத்தில் மன்னர்கள் ஒவ்வொரு முக்கியமான தலங்களிலும் நிறுவி, பாமரர்களும், படித்தவர்களும் அந்தந்த நாளுக்கான விசேஷமான வழிபாடுகளைத் தக்க சத்குரு மூலம் அறிந்து பயன்படுமாறு அரும்பெரும் திருப்பணியை ஆற்றினர்.
தற்காலத்திலும், முற்காலத்திலும் விரத, பண்டிகைகள் எந்நாளில் அமைகின்றன என்பதற்கான கால நிர்ணய விளக்கங்களை, மக்கள் ஓரளவு பஞ்சாங்கங்கள் மூலம் மக்கள் அறிந்தாலும்,
அந்தந்த நாளின் கிரக சஞ்சாரங்களை அறிய ஜோதிடர்களின் துணை தேவை ஆகின்றது அல்லவா! ஆனால், அந்தந்த நாளின் கிரக அமைவுகளுக்கான வழிபாடுகளை நித்யக் கர்ம நிவாரண விளக்கங்களை மகத்துவங்களை தினசரி கிரகச் சலனத் தாத்பர்யங்களை அறிய -சத்குருவின் அருட் பரிபாலனம் தேவையானதாகும். தன் அடியாரின் வாக்கைக் காப்பாற்ற, அபிராமி அம்பிகையே, அமாவாசைத் திதியையே பெளர்ணமியாக ஆக்கிச் சிறப்பித்த புனிதமான பாரத பூமியன்றோ, நம் நாடு! எனவே, காலத்தை முன்னும், பின்னுமாய்க் கடந்து செல்ல வல்ல ஞானச் சுடர்களே சத்குருமார்கள் ஆவர்.
செவ்வாய் கிரகத்துடன் சந்திர கிரகம் இணையும் அஷ்டமிச் சந்திர நாளில் கஷ்ட நிவர்த்திக்காக, இஷ்டப் பூர்த்தத் தலங்களிலும்,

சகஸ்ரலிங்கம் திட்டை

* தஞ்சாவூர் அருகே கருந்தட்டாங்குடிச் சிவாலயம்,
* தென்குடிதிட்டை ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் ஆலயம்
- போன்றவற்றிலும், வசிஷ்டரின் தாரித்ர்யஹரணத் தோத்திரத் துதிகளை, 8, 16, 24, 32 என்ற எட்டின் மடங்குகளில் ஓதி வழிபடுவதால் கலியுகத்தில் மனித சமுதாயத்தை வாட்டும் எட்டு விதமான தரித்திர நிலைகள் ஓய, நற்பரிகார வழிகள் கிட்டும்.
அஷ்டமித் திதி, 15 திதிகளில் மத்தியாக வருவதால், சூரிய, சந்திர கிரகங்களுக்கும் இடையே உள்ள ஆகர்ஷண சக்திகள் சமன நிலையை அதாவது, சமஸ்த கடஸ்தாபனம் எனும் நிலையை அடைகின்றன. பொதுவாக, களிமண்ணைப் பானையாகச் செய்கையில், எட்டாம் நாள்தான் காய வைத்து எடுப்பர். சுவாமி சிலையையும் சுத்திகரிக்கையில், ஒரு கடமாகிய பானையில் / செம்பில் சிலாசக்திகளை கடஸ்தாபனம் செய்வதும் உண்டு. எனவே, அஷ்டமியில் கடகலச சக்திகள் மிகுகின்றன என அறிக! எட்டுத் திக்கு சக்திகள் அஷ்டமியில் மிகுவதால்தான், நாட்டியம், போர் வகைக் காரியங்கள், மந்திர தாரணங்கள், சாஸ்திர வகை தாரணங்களுக்கு அஷ்டமித் திதியே ஏற்றதாக அமைகிறது.
காணமற் போனவற்றைத் தேடப் பயன்படும் கோடாங்கி, வெற்றிலை மை போன்ற சகுன சாஸ்திரங்களில் திறம் பெற, அஷ்டமித் திதிப் பூஜைகள் மிகவும் உதவும். நெடுங்காலமாகக் காணாமற் போனவரைப் பற்றிக் கண்டறிய அஷ்டமித் திதி நாளில், எட்டுத் திக்குகளிலும் கலசங்களை வைத்துப் பூஜித்து, எண்கண், எட்டுக்குடி போன்ற எட்டு சக்தித் தலங்களில், எட்டுத் திக்குகளிலும்,
அன்னதானம், வஸ்திர தானம், பானை (பாத்திரங்கள்) தானம், ஆபரண தானம், தான்ய தானம், பழ தானம், நீர் மோர் / பழரச தானம், காலணிகள் தானம் போன்ற எட்டு வகைத் தானங்களை ஆற்றி வர வேண்டும்.
பானையில் சாதம் வடித்து சுவாமிக்குப் படைத்து, முதலில் பசு, காக்கை, பட்சிகள், எறும்பு, காளை, ஆடுகள், எருமை, அணில் போன்ற எட்டு வகை உயிரினங்களுக்குக் கூடுதலான புல், தழை, தான்யங்களுடன் அளித்து, சிறிதளவேனும் அன்னதானம் அளித்துப் பின் உண்டிடுக.
பொதுவாக அஷ்டமியில் உண்ணும் பானைச் சோறு நல்ல மூளை பலத்தைத் தரும். காஸ் சிலிண்டரில் சமைத்தாலும் பக்குவமாய்ப் பானையில் சமைத்து உண்ணல் நன்று. பானை உணவு பிருத்வி சக்திகள் நிறைந்ததாகும்.

அக்னி சாபங்களைத் தவிர்த்திடுங்கள்

மனிதனுக்குள்ளும் இயற்கையான வெப்பம் உண்டு அல்லவா! இது மாறினால் ஆரோக்யக் குறைவு ஆகிறது. இந்த வெப்பம் கர்ம வினைப் பரிபாலனத்தால் வருவதாகும். அக்னிப் பூர்வமாகவே, தாய் ஜீவனின் உஷ்ணம் மூலமாகவே முட்டை வகை ஜந்துக்கள் பிறக்கின்றன.
தற்காலத்தில் பணக் கஷ்டங்கள், ஏழ்மை, வறுமை போன்றவை வரக் காரணம், பூர்வ ஜன்மங்களில் பிறரை வதைத்துத் துன்புறுத்தி, ஏமாற்றிப் பொருளைப் பறித்து அதர்மமமான முறைகளில் அனுபவித்தமையே ஆகும். பலரையும் ஏமாற்றி, வதைத்துத் துன்புறுத்தி, பிறருக்கு உரிமையானதை பலாத்காரமாக வன்முறையால் பிடுங்கி அனுபவிப்பதால் வரும் கர்ம வினைகள் யாவும், அவரவர் எவரை ஏமாற்றினார்களோ, அவர்களுக்கான நிவாரணங்களைத் தக்க முறையில் அளிக்கும் வரையில், எண்ணற்ற வகைகளில் பிறவிகள் பெருகிக் கொண்டே இருக்கும்.

ஸ்ரீஸ்வேத விநாயகர் பூவாளூர்

அறிந்தோ, அறியாமலோ வல்வினைகளைச் செய்து சேர்ந்துள்ள இத்தகைய பெரும் மலை போலான துன்பச் சுமைகளைக் கரைக்கவே, விளக்குப் பூஜைகள் போன்றவை பெரிதும் உதவுகின்றன. இறைவனை வழிபடுகையில் ஏற்றும் விளக்கில் உண்டாகும் ஜோதி, வெப்பம் யாவும குடும்பத்தாரின் உள்ளும், புறமும், வீட்டிலும், சுற்றுப் புறங்களிலும், பரவெளியிலும், வானிலும், மண்ணிலும் உள்ள தீவினைகளை பஸ்மம் செய்ய வல்லவை.
எனவே ஒவ்வொரு இல்லத்திலும் காலை, பகல், மாலையில் மூன்று வேளைகளிலும் குறைந்தது மூன்று மணி நேரமாவது விளக்கு ஜோதி நன்கு பிரகாசிக்குமாறு அருகிருந்து பசு நெய், திரி வைத்துப் போஷித்து வழிபட வேண்டும். மூன்று மணி நேரத்திற்கு மேலாக விளக்கு ஜோதியைப் பிரகாசிக்கச் செய்தும், அல்லது பாதுகாப்பாக ஒரு தூய கண்ணாடிப் பெட்டகத்திற்குள் அல்லது தூய பாத்திரத்திற்குள் வைத்தும் விளக்கு ஜோதியைப் பேணிட வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திலும் தினமும் மூன்று வேளைகளிலும் பசு நெய் தீபமேற்றி, குறைந்தது ஐந்து முறை ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத் துதிகள், இரண்டு முறை செளந்தர்ய லஹரித் துதிகளைக் கண்டிப்பாக ஓதி வருதல்தான் குடும்பத்தைக் கட்டிக் காக்கும். இவற்றைப் படித்து ஓதி வழிபடத் தெரிந்தவர்கள், இவற்றைப் படிக்க அறியாத பாமரர்களுக்கும் சேர்த்துச் சங்கல்பித்துப் படித்து வர வேண்டிய கடமைக்கு ஆளாகின்றார்கள். பூர்வ ஜன்மப் புண்ய வசத்தால் பிறருக்குக் கிட்டாத அறிவு, வசதிகள், வாய்ப்புகள் வாய்த்திருக்கும் போது, இவற்றைப் பெறாதவர்களையும் மனதில் கொண்டு அவரவர் ஆற்ற வேண்டிய சமுதாயக் கடமையாக,
தனக்கு, தன் குடும்பத்துக்கு, தன்னைச் சார்ந்த உறவினர்களுக்கு, தன் நாட்டு மக்கள் சமுதாயத்துக்கு, அனைத்துலக ஜீவன்களுக்கு என ஐந்து வகையினரின் நலத்திற்காகவும், (இவை சேர்ந்து வருவதுதானே சமுதாய சாந்தம்)
அகஸ்தியர், அகஸ்தியர் பத்தினியாம் லோபாமாதா மூலம் நமக்கு வந்த ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத் துதிகளைக் கண்டிப்பாக ஓத வேண்டிய கடமை உண்டு.
இவற்றை ஓத முடியாதவர்கள், விநாயகர் அகவல், சிவ புராணம், அபிராமி அந்தாதி, அங்காளி அந்தாதி, இவற்றுடன், கந்தரனுபூதி, ஆழ்வார்கள் அருளிய திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள், தேவாரம், திருவாசகம், திருமந்திரம், அருட்பா - ஆகியவற்றில் மொத்தமாகக் குறைந்தது, 50 பாக்களைத் தினமும் ஓதி வர வேண்டும்.
மனிதனின் உள்ளும், புறமும் உள்ளதும் அக்னியே ஆகும். ஜூரம் என்பது பூர்வ ஜன்ம வினைகள், நடப்பு வினை விளைவுகளோடு, தீவினை சக்திகள் உள்ளே புகுந்துள்ளதால் ஏற்படும் அதிக உஷ்ணத்தைக் குறிப்பதாகும். அதாவது, ஜுரம் வந்தால், குடும்பத்தில் பூஜா பலன்கள் குறைந்து வருவதைக் குறிப்பதாகும். இதற்காக ஜுரம் வராவிடில் பூஜா பலன்கள் நிறைந்துள்ளன என எண்ணக் கூடாது.
கலியுகத்தில் அகில உலகத்தில் மொத்தமே 12 உத்தமர்கள்தாம் உண்மையாக, தெய்வீகக் கடமைப் பூர்வமாகப் பூஜைகளை ஆற்றுகின்றார்கள் என அறிக! இவர்கள் தம்மை வெளிக்காட்டிக் கொள்ளாது அடக்கமாக, பணிவுடன், பக்தியுடன் பூஜிக்கின்றனர். ஆனால் இவர்களுக்கு வரும் சோதனைகளோ சொல்லி மாளாது. எண்ணற்ற சோதனைகளுக்கு ஊடேயும் இவர்கள் சற்றும் மனந் தளராது ஆன்மப் பணி ஆற்றி வருகின்றனர். இவர்கள் தங்களுக்காக, சுயநலமாக, ஒரு நிமிடம் கூடப் பூஜிப்பது கிடையாது.
எந்தப் பொருளுக்கும் உள்ளும் புறமும் வெப்பம் உள்ளதாகும். வெப்பத்தின் வகைகள் நிறையவே உண்டு என நாமறிவோம். உலகத்தில் நூற்றுக்கு நூறு இயந்திரங்கள், வாகனங்கள் தம் செயல்பாடுகளில் சூடாகி, உலகப் பரவெளிக்குக் கூடுதல் வெப்பத்தையே உருவாக்குகின்றன. இவற்றை நிவர்த்தி செய்ய மனித சமுதாயம் எதனையும் செய்வது கிடையாது. இதற்குப் பரிகாரமாகவே ஆலயங்களில் ஆறு வேளை அபிஷேகங்கள் நிகழ்த்தப் பெறுகின்றன். எனவே, நம் ஆலய பூஜைகள் அகில உலக ஜீவன்களின் மேன்மைக்காகவே!

திருஆமாத்தூர்

சனாதன தர்ம நாடாக உலகம் முழுதும் ஒரே ஆட்சிக் குடையாக நம் பாரதம் பண்டைய யுகத்திற் பொலிந்தமையால், உலக மக்கள் யாவரும் பாரத உற்றச் சுற்றே! நல்ல செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என அருணாசலத்தை வலம் வந்து வேண்டுவோர் தம் வேண்டுகோளுக்கு ஏற்ப, போக பூமிகளில், அமெரிக்காவில், மேலை நாடுகளில் பிறந்து பூர்வ ஜன்ம ஞாபகம் சற்றே தோன்றுகையில், மேல்நாட்டு யாத்திரீகர்களாக மீண்டும் திருஅண்ணாமலைக்கு வருகின்றனர் என்பது பூர்வ ஜன்மப் பூர்வ விளைவுகளாகவே எழுவதாகும். எனவே, இறைவனை நிர்ணயித்தளிக்கும் காரண, காரியங்களின்றி இப்பூவுலகில் எதுவும் நிகழ்வதில்லை!
இவ்வுலகில் அக்னியாகிய வெப்பம்தான் பிரதான சக்திப் பொருளாக இருக்கிறது. பல்வகை உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கும் இயந்திரங்கள் கூட, வெப்பத்தையும் கூடவே உண்டாக்குகின்றனவே! குளிர்ந்த நீரை ஏற்றும் நீர்ப் பம்புகள் கூட வெப்பத்தை உருவாக்குகின்றன அல்லவா. இவற்றைச் சமனாக்கும் வகையில் எந்தப் பொருளாவது குளிர்ச்சியைத் தன் இயக்கத்தில் கொண்டுள்ளதா என்று ஆத்ம விசாரத்தில் கண்டு உள்ளீர்களா ?
அமர்நாத் பனி லிங்கம் எப்போதும் சீதளச் சிவ இயக்கம் பூண்டிருக்கும் சுயம்பு லிங்கங்களுள் ஒன்றாகும். ஆறு மாதம் மட்டுமே வழிபாட்டிற்குத் திறக்கப்பட்டு, ஏனைய ஆறு மாதங்களில் பனி மூடியிருக்கும் கேதார்நாத், பத்ரிநாத் லிங்க மூர்த்திகளும் தெய்வப் பூர்வமான சீதளத் தன்மைகளை உலகிற்கு அளிப்பவை. இத்தலங்களுக்கு அனைவரும் சென்று வழிபட இயலாதாகையால், இவற்றை நமக்குப் பெற்றுத் தரவே, அம்பிகையும் சீதளநாயகியாக (குளிர்ந்த நாயகி - சென்னை அருகே திருமழிசை) அருள்கின்றாள். சூரபதுமனை வென்று பூவுலகை முருவேள் காத்த காலை, முருகப் பெருமான் தமக்கும், தம் பரிவாரத்துக்கும் ஏற்பட்ட வெம்மையை (இவை சூரபதுமனின் தீவினைச் செயல்களால் வந்தவை) சீதளாம்பிகையைப் பூஜித்தே நிவாரணம் தேடிக் கொண்டார்.  

ஸ்ரீஸ்வேத விநாயகர்
திருச்செங்கோடு

சந்திரக் காந்தக் கல் என்ற அற்புதமான தவசிமடைக் கல் ஒன்று உண்டு, சித்தர்களும், மஹரிஷிகளும் பல கோடி யுகங்களாக அமர்ந்து தவம் புரியும் பூமிகளில் கிளைக்கும் தெய்வ சக்திக் கல் இது. இதில், வெம்மையில் குளிர்ந்த தன்மையும், குளிர்ந்த வெப்ப நிலையில் வெம்மையையும் தருவதாகும். மேலும், சந்திர காந்தக் கல் இயற்கையாகவே பஞ்ச பூதாக்னி சக்திகளையும் கொண்டதாகும். ஜெயதி கணபதி என்ற கணபதி மூர்த்தி, இமாலயத்தில் பலரும் அறியாத குகையில் சந்திர காந்தக் கல் வடிவில் அருள்கின்றார்.

சென்னை - தாம்பரம் அருகே முடிச்சூர் சிவாலயத்தில் உள்ள மூர்த்திகள் சந்திர காந்தக் கல்லால் ஆனவையாகும். தஞ்சாவூர் அருகே திட்டை கிராமச் சிவாலய மூலத்தான விமான கோபுரத்தில் சந்திர காந்தக் கல் உள்ளது. சந்திர காந்தக் கல்லில் இருந்து, அக்னி நட்சத்திரங்களான பரணியும், கார்த்திகையும் பிணையும் பரக்கிருத்யம் எனும் அமிர்த பிந்து வேளையில், அபூர்வமான சீதளாக்னிக் கதிர்கள் பரிணமிக்கின்றன. இவை எத்தகைய கொந்தளிப்பான மனதுக்கும் தெய்வீகமான இதம் தருவதாகும். திங்கட் கிழமை தோறும், பரணியும், கிருத்திகையும் சேர்ந்து வரும் நாளிலும், இத்தகைய சந்திர காந்தத் தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். இது குடும்பத்தில் சாந்த சக்திகளைத் தரும்.
சில வகைச் சீதளாக்னிப் புஷ்பங்களும் உண்டு. இவற்றில் உத்தம யோக சித்திகளைப் பெற்றவரே அன்றும், இன்றும், என்றுமாய் கூப்பிட்ட குரலுக்கு வந்துதவும் அன்னை அரவிந்த மாதா ஆவார். மனித குலம் மட்டுமன்றி, உலக ஜீவன்கள் எல்லாம் அன்னை எனப் போற்றி வரும் அன்னை அரவிந்த மாதா புஷ்பங்களில் ஒளிரும் சீதளாக்னிக் கதிர்களை ஆகர்ஷணம் செய்து, ஜீவன்களுக்கு ஆத்ம இதம் அளித்து வரும் யோகி! இன்றும் வானில் கோடானு கோடி பக்தர்களை அழைத்துச் யோகாத்ம சத்சங்கப் பூர்வமாகக் காருண்ய சாந்தம் அளித்து வருபவர்.  .
சந்திர காந்தக் கல்லில் வளரும் பூச்செடிகள் உண்டு. இவை பூமியடியில் புதைந்திருக்கும். பூப் பகுதிகள் மட்டும் வெளி வரும். வெண்மையும் சற்றே நீலமும் கலந்தவையே சந்திர காந்த சக்திப் புஷ்பங்களாகும். சிவபாரிஜாதம், வெண் மல்லி, சம்பங்கி, கதம்பம், வெண்தாமரை, வெள்ளை ரோஜா போன்றவற்றில் சிலவும் நீலம் கலந்த வெண்மை பூரித்துச் சிறக்கும். இவை சந்திர காந்த சக்திப் பூக்களாகும்.
சங்குப் புஷ்பத்திலும் வெண்மையும் நீலமும் பூரித்து வரும் சங்குப் புஷ்பங்கள் சந்திர காந்த சக்திகள் நிறைந்தவையாகும். இன்று வெண்மை நிறத்தில் பொலியும் விநாயகரை (ஸ்வேத விநாயகர்) மனமுருக உருகி வணங்கி, வெண்மை, நீலம் பரியும் பூக்களால் அர்ச்சிப்பது விசேஷமானதாகும். வெண்மை நிறத்தில் உள்ள விநாயக, லிங்க, சந்திர, பெருமாள் மூர்த்திகளுக்குக் கருநீல நிறப் புஷ்பம் வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால், தன்னைப் பிறர் ஏமாற்றிய, அவமானப்படுத்திய சம்பவங்களை எண்ணி எண்ணி வாழ்க்கையில் வேதனைகளை அடைவோர் மீள வழி பிறக்கும்.

ஞாயிறில் மலரும் இனிப்பு சக்திகள்

ஆத்ம விசாரத்திற்கு சூரிய சக்திகள் நிறைந்த ஞாயிற்றுக் கிழமையில் அமையும் சூரிய பூஜைகள் நன்கு துணை புரியும்.  
சூரிய மூர்த்தி, உதய நேரத்தில் சிவந்த நிறத்துடன் இருப்பார். பிறகு, மஞ்சள் நிறம் கனியலாகும். ஞானச் சூரிய அம்சங்களுடன், கதிரவ மூர்த்தியானவர் சிவபூஜை ஆற்றும் கோலத்தில் உள்ள இந்தச் சிவந்த நிறப் பாங்கின் போது தரிசித்து, ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம் துதிகளை ஓதி வழிபடுதலில் கிட்டும் பலாபலன்களை வாக்காலோ, உரையாலோ விண்டுரைக்க இயலாது.

ஜீவசக்திக்கு சூரிய கிரகம் மூல காரணமாக இருப்பதால், மனித வாழ்வின் எந்தப் பருவத்திலும், எவ்வளவு வயதானாலும், உடல் ஆரோக்யத்துடனும் சுறுசுறுப்புடன் திகழ, சூரிய சக்திகள் நிச்சயமாகத் தேவை. மேலும், கோடானு கோடி ஜீவன்கள் பொலியும் இப்பூவுலகில் நிகழும் ஒவ்வொரு செயலுக்கும் சாட்சியாகக் சூரிய, சந்திர மூர்த்திகள் அமைந்துள்ளனர். எனவே, உங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடச் செயலுக்கும், எண்ணத்திற்கும் சூரிய, சந்திர மூர்த்திகள் சாட்சியாக நிற்கின்றனர் என்பதை முதலில் மனதில் நன்கு நிலை நிறுத்திக் கொள்ளவும்.
ஆலயத்தில் துவாரபாலக அம்சங்கள், இறை அடியார்கள் யாவரும், அவரவர் தம்மைத் தாமே எடை பார்த்துக் கொண்டு திருத்தும் முகத்தான் ஏற்பட்டுள்ளன. இதன்படியே, அர்த்த மண்டபத்திற்கு முன், சில ஆலயங்களில் இறைவனை நோக்கியவாறு சூரிய சந்திர மூர்த்திகள் இரு புறமும் அமைந்தருள்வர்.

ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் லால்குடி

உங்களை எடை போட்டுக் கொண்டு, உங்கள் பிரார்த்தனைகளை எடை போட்டுக் கொண்டு, புனிதமற்றவற்றைக் கழற்றி விட்டு, புனிதமான இறைமண்டபத்திற்கு உள்ளே செல்க, எனத் தெளிவுறுத்துவதும் துவாரபாலக அருட் பரிபாலனமாகும்.
எனவே, உங்களை நீங்களே எடை போட்டுப் பார்த்துக் கொள்ள உதவும் நித்திய ஆத்ம விசார மண்டபத்தில், உங்களுடைய இரு புறமும் சூரிய, சந்திர மூர்த்திகள் எப்போதும் மேலே உறைந்து கவனிக்கின்றனர். ஆகையால், நீங்கள் வாழ்வில் எந்தத் தவறையும், தவறான எண்ணங்களையும் மறைக்க முடியாது, மறைக்கவும் கூடாது.
ஒவ்வொருவரும் தம் வாழ்வின் இறுதிக்குள் நம்பகமான எவரிடமேனும் அனைத்தையும் உரைத்தாக வேண்டும், தம்மால் பாதிப்புகளை அடைந்தோருக்குத் தக்க நிவாரணங்களையும் அளித்தாக வேண்டும். இல்லாவிடில் அந்த ரகசியங்களில் சம்பந்தப்பட்டோர் பிறவி தோறும் வந்து வருத்துவர். ஆனால், சொல்லொணா வாழ்க்கை ரகசியங்களை வெளியே புலப்படுத்தினால், பலரும் பாதிப்படைந்து, வாழ்வே சூறாவளி ஆகி விடும் எனில் என் செய்வது?
எவரிடமும் தம் வாழ்வின் ரகசியங்களை உரைக்க இயலாவிடில், இதற்கெனவே, சத்தியப் பாறைகள், சத்தியப் படிக்கட்டுகள், வட்டக் கல்பாறை என்று சில சத்யாம்சங்கள் கூடிய அமைப்புகள் சில ஆலயங்களில் உண்டு (திருஆமாத்தூர், திருச்செங்கோடு). இவற்றில் நின்று, இவற்றைத் தொட்டுச் சத்தியம் செய்து,
தன் தவறுகளுக்கு வருந்தி, திருந்தி வாழச் சங்கல்பித்து, மீண்டும் அத்தகைய குற்றங்களையோ, புதுப் பாவ வினைகளையோ செய்யேன், எனச் சத்தியப் பிரமாணம் செய்து திருந்தி வாழ உதவுவதும் சூரிய வழிபாடே! திருந்தியும் வாழ்ந்து காட்ட வேண்டும்.
தற்காலத்தில், பெற்ற பிள்ளைகள் தனிக் குடித்தனம் சென்றிட, புதல்விகளோ தத்தம் கணவனுடன் குடித்தனம் சென்றிட, வயதான காலத்தில் ஆதரிப்பார் யாரும் இன்றி, முதிய வயதிலான பெற்றோர்கள் தவிக்கின்றார்கள். அல்லது புதல்வன், புதல்வி மருமகளை நம்பி இவர்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டி உள்ளது.
மாதாந்திரப் பென்ஷன் வருமானம் என்ற ஒன்று இல்லை எனில், பல முதியவர்களின் பாடு, பல குடும்பங்களில் திண்டாட்டமாகிப் போய்விடும். முதியவரைப் பாதுகாக்கும் பண்பாடு அகன்று, பென்ஷன் என்பதுதான் பல முதியோர்களுக்கும் பல குடும்பங்களில் மதிப்பைப் பெற்றுத் தருகின்றதான அவல நிலை பாரத நாட்டிலேயே நிலவுவது மிகவும் வருத்தம் தருவதாகும்.
முதியவர்களைப் போற்றிக் கருத்துடன் போஷிக்கும் மனப்பான்மை பிள்ளைகளுக்கு இல்லாமைக்குக் காரணம், பெற்றோர்களே! பெற்றோர்கள் தம் பெற்றோரை முறையாகப் பேணுதலைக் கண்டால், சிறு வயதிலிருந்தே இது பிள்ளைகளின் மனதில் ஆழப் பதியும் அன்றோ! தினமும், தாய், தந்தையைப் பாதம் தொட்டுக் காலையில் வணங்கிப் பின்னரே ஏனைய பணிகள் என நிலவிய, நிரவிய உத்தமப் பாரதக் கலாசாரப் பண்பை, மாண்பை கைவிட்டமையால்தான், இன்றைய மனித சமுதாயம் இதற்கான தண்டனைகளை அனுபவித்து வருகிறது.
இன்றைய நடுத்தர வயதினரே நாளைய முதியவர்கள். எனவே, முதிய பருவம் தட்டுத் தடங்கல்கள் இன்றி, மனச் சுமையின்றிச் சாந்தமாக இறைமுறையிலேயே துலங்கிட தற்போதைய இளவயதினரும், நடுத்தர வயதினரும் தினமும் சூரிய பூஜைகளைக் கண்டிப்பாக ஆற்றித்தான் வர வேண்டும்.

ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

40 வயதிலிருந்தே நடுத்தர வயதினருக்கு உணவுக் கட்டுப்பாடு மிகவும் தேவை. அதாவது, குறிப்பாக, கலியுகத்தில் சர்க்கரை நோயே பூதாகாரமாகப் பெருகி வருவதால், 40 வயதிலிருந்தே இனிப்புகளைக் குறைத்துக் கொண்டே வர வேண்டும். தினமும் ஆலயத்தைப் பன்முறை வலம் வருவது, தினமும் பத்மாசனம் இட்டுத் தியானித்தல், தன்னுள் உறையும் ஆத்மத்தைத் தாங்கும் தன் உடலுக்கு உரிய தனது பெயரையே சுயநாம ஜபமாகத் தினமும் 1008 முறை ஜபித்தல், 108 முறை தோப்புக் கரணம் இடுதல், தினமும் தன்னைத் தானே 24 / 36 முறை முறை வலம் வந்து (ஆத்மப் பிரதட்சிணமாக) வணங்குதல், தக்கவர் மூலம் கற்று ஆற்றும் சிரசாசனம்
இவற்றால் ப்ளட் பிரஷர், சர்க்கரை, சிறுநீரக, நுரையீரல் வியாதிகள் வாராது அறவே தடுத்து விடலாம், நன்கும் தற்காத்தும் கொள்ளலாம். இவற்றின் விளைவுகளையும் பெருமளவில் தடுக்கலாம். இவை யாவும் சூரிய சக்தி வழிபாடுகளேயாம்.
சூரிய சக்திகளும் சர்க்கரை நோய்க்கு மாமருந்து எனப் பலரும் அறியார். சூரிய தன்வந்த்ரப் பீலி என்ற தேவ மூலிகை ஒன்று உண்டு. சிறு குறிஞ்சான் குடும்ப வகை மூலிகையான இது, மூன்றாம் பிறைச் சந்திர ஒளியில் மட்டுமே மலரும், தென்படும். மூன்றாம் பிறைச் சந்திர அமுத கிரணங்களைப் பருகியே விருத்தி ஆவதால், இம்மூலிகையானது மதுமேக நோயான சர்க்கரை நோய்க்கு அதியற்புத நிவாரணி ஆகும்.
தினமும், சூரிய சக்திகள் நிறைந்த வேப்பிலைக் கொழுந்தைப் பல வருடங்களாக இள வயதில் இருந்தே உட்கொண்டு வந்தால், சர்க்கரை வியாதியே அண்டாது. தினமும் வேப்பங் குச்சியால் பல தேய்த்து வந்தால் உண்டாகும் அதீதமான மருத்துவ சக்திகள் நிறைந்த உமிழ் நீர்ச் சுரப்பால், சர்க்கரை நோய், வயிற்று நோய்கள் அண்டாது தற்காத்துக் கொள்ளலாம்.
எல்லாவற்றையும் விட, இளம் வயதில் வேலைக்குப் போவதில் இருந்தே, தினமுமே இனிப்புகளைத் தானமாக அளித்து வந்தால், சர்க்கரை வியாதியே அண்டாது தடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை வியாதி வாராது தற்காத்துக் கொள்ளவும், இதன் விளைவுகளைத் தடுக்கவும், இனிப்புத் தானங்களில் திரளும் பாஸ்கரச் சந்திர அமிர்த கிரணங்கள் பெரிதும் உதவும். இதனால்தான் தற்போதைய இனிப்புகள் யாவும் சூரிய சக்திகள் நிறைந்த சூரியகாந்தி எண்ணெயில் தயாராகின்றன.
பொதுவாக, சர்க்கரை வியாதி காரணமாகத் தனக்குப் பிடித்தமான - போளி, லட்டு போன்று - எந்த இனிப்பு வகைகளை உண்ண முடியவில்லையோ, அவற்றை அடிக்கடி ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால், நல்ல வைத்தியப் பூர்வமான குணங்களைக் காணலாம். இனிப்பு வகை தானங்களுக்கு ஞாயிறும், திங்களும் மிகவும் ஏற்றவையாம்.
சூரிய மூர்த்தி அமிர்த சக்திகள் நிறைந்த பூசத்தில் உறையும் நாட்களில் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரில் அருளும் கடவுளைத் தரிசித்திடுக.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam