அன்பான ஒன்றை நினைத்து அன்பில்லாமல் போக முடியுமா ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கொண்டராங்கி பிரம்மதேவா

பழநி ஒட்டன்சத்திரம் அருகே அமைந்துள்ளதே ஸ்ரீபிரம்மராம்பிகை சமேத மல்லிகார்ச்சுனேஸ்வரர் அருளும் கொண்டராங்கி சிவத்தலம் ஆகும். 2023ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு சோபகிருது வருடப் பிறப்பு தினத்தன்று, அதாவது 14 ஏப்ரல்2023 வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டிய மூர்த்தியே கொண்டராங்கி ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் என்று சித்தர்கள் அறிவிக்கிறார்கள்.

இதுவரை நாம் கேள்விப்பட்டிராத, அறிந்திராத ஒரு தெய்வீக சித்தாந்தத்தை நம் சற்குரு புத்தாண்டு பரிசாக அருள்கின்றார் என்பதே கொண்டராங்கி திருத்தல வழிபாட்டின் முக்கியத்துவங்களில் ஒன்றாகும். “We are perennial waters !” (நாங்கள் என்றும் வற்றாத ஜீவ ஊற்று...) என்று நம் சற்குரு அடிக்கடி பிரயோகம் செய்யும் சொற்றொடரின் மகத்துவம் கொண்டராங்கி திருத்தலத்தில் பிரதிபலிக்கின்றது.

ஐயர்மலை

திருஅண்ணாமலையின் உயரம் மனித கண்ணுக்குப் புலனாகும் வகையில் சுமார் 1500 அடி என்று சொல்வது வழக்கம். உண்மையில் திருஅண்ணாமலையின் உயரம் எல்லையில்லாமல் விரிந்து சென்று கொண்டே இருப்பது. மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் இறைவனின் அடி முடி தேடிய வைபவத்தை இங்கு நினைவு கூர்க. நம் கோவணாண்டி, சிறுவன் வெங்கடராமனை தன்னுடன் அழைத்துக் கொண்டு திருஅண்ணாமலையின் மேலே பல்லாயிரம் மைல்கள் உயரத்திற்கு பறந்து சென்ற ஆன்மீக அனுபவத்தை, தெய்வீக சிவானுபூதியை நாம் அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சியாக இரசித்திருக்கிறோம்.

திருஅண்ணாமலையில் பூமியிலிருந்து சுமார் 6000 மைல்கள் உயரத்தில் அமைந்துள்ளதே கொண்டராங்கி சக்திகள். இந்த கொண்டராங்கி சக்திகளே கைலாயத்தின் உச்சிவழுதி சக்திகள் பூமியில் ஐயர்மலையாக உருவெடுத்ததைப் போல கொண்டராங்கி மலையில் ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் சிவாலயமாக உருவெடுத்து உள்ளன.

இது சம்பந்தமான ஆன்மீக வரலாற்றை அறிந்து கொள்வோமா?
பாண்டவர்களின் வனவாசத்தில் தர்மர், பீமசேனர் முதலிய அனைவருமே தாங்கள் ஏதாவது ஒரு தவத்தை, வழிபாட்டை இயற்றியவாறே இருந்தனர். இந்த வழிபாட்டின் பலன்கள் எல்லாம் மக்கள் சமுதாயத்திற்கே பகவான் கிருஷ்ணரால் அளிக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். பீம சேனன் நரகாசுரனைக் கொன்று மக்களுக்கு தீபாவளி பண்டிகையை பெற்றுத் தந்தது முதல், சிவபெருமானிடமிருந்து பாசுபத அஸ்திரத்தை அர்ச்சுனன் பெற்றது போன்ற பல அரிய சேவைகள் யாவும் பஞ்ச பாண்டவர்களின் வனவாசத்தில்தான் அமைந்தன.

கொண்டராங்கியில் தமிழ்ப் புத்தாண்டு

எப்படி ராமபிரான் தன்னுடைய வனவாசத்தில் ஆயிரக் கணக்கான ரிஷிகளுக்கு அனுகிரகம் அளித்து, பல கொடிய தீய சக்திகளை அரக்க சக்திகளை மாய்த்தாரோ அதே போல பஞ்சபாண்டவர்களின் வனவாசமும் இத்தகைய ஒரு வேள்வியாக அமைந்தது என்பதே நாம் புரிந்து தெளிய வேண்டிய தெய்வீகமாகும்.

பாண்டவர்களின் வனவாசத்தில் ஒரு நாள் பகவான் கிருஷ்ணர் அர்ச்சுனனை தனியாக அழைத்து அவனிடம் கொண்டராங்கி மலையின் மகத்துவத்தை விவரித்தார். கொண்டராங்கி சக்திகளை திருஅண்ணாமலையிலிருந்து ஈர்த்து அந்த சக்திகளை மக்கள் வழிபாட்டிற்காக சிவலிங்க வடிவில் அமைக்கும் சேவையைப் புரியவல்லவன் அர்ஜுனர் ஒருவனே என்று விவரித்து அவன் திறமையையும் எடுத்துக் கூறி தக்க வழிகாட்டுதலை அளித்தார். பகவான் கிருஷ்ணர் கூறிய வண்ணம் தொடர்ந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வர ஆரம்பித்தான் அர்ச்சுனன்.

ஒவ்வொரு முறை கிரிவலம் நிறைவடைந்த பின் பகவான் கூறியபடி தன்னுடைய அஸ்திரத்தில் ஒரு மல்லிகைப் பூவை வைத்து திருஅண்ணாமலை உச்சியை நோக்கி எய்வான். அந்த அஸ்திரம் பல மணி நேரங்கள் கழித்து மீண்டும் தரைக்கு இறங்கி வரும். அப்போது அந்த அஸ்திரத்தில் அர்ச்சுனன் தொடுத்த மல்லிகைப் பூ இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு அந்த அஸ்திரத்தில் மல்லிகைப்பூ இருந்தால் திருஅண்ணாமலையான் அந்த மல்லிகைப்பூவை ஏற்கவில்லை என்று பொருள்.

அர்ச்சுனன் அந்த மல்லிகைப்பூவை இறைப் பிரசாதமாக தன் வலது காதில் அணிந்து கொண்டு தொடர்ந்து திருஅண்ணாமலையாரை கிரிவலம் வர வேண்டும். இவ்வாறு அர்ச்சுனனின் கிரிவலம் கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. இறுதியில் ஒரு நாள் அர்ச்சுனன் இவ்வாறு திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து மலையை நோக்கி மல்லிகைப் பூவை தொடுத்து அஸ்திரத்தை எய்தான். என்ன ஆச்சரியம் ... அந்த அஸ்திரம் புறப்பட்டது முதல் திருஅண்ணாமலையின் உச்சியை நோக்கி செல்லச் செல்ல எத்தனையோ விதவிதமான தெய்வீக காட்சிகள் அர்ச்சுனனுக்கு தெளிவாகத் தெரிய ஆரம்பித்தன. எல்லையில்லா பரவசம் அடைந்தான் அர்ச்சுனன்.

இறுதியில் அந்த அஸ்திரம் மல்லிகைப்பூவை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பித்து விட்டு அஸ்திரம் மட்டும் தனியாக இறங்கிய தெய்வீகக் காட்சியில் தன்னையே மறந்து நின்றான் அர்ச்சுனன். அந்த திவ்ய தரிசனக் காட்சியில், இறைவன் அளித்த பரமானந்தத்திலிருந்து மீண்டும் பூலோகத்திற்கு வர பல மணி நேரம் ஆயிற்றாம்.

தமிழ்ப் புத்தாண்டு

காலச் சக்கரம் சுழன்றது ...
மகாபாரத யுத்தம் ஆரம்பித்து உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. அப்போது அஸ்வத்தாமன் பிரம்மாஸ்திரத்தை வானில் எய்து விட்டான். அதற்கு எதிராக அர்ச்சுனனும் ஒரு பிரம்மாஸ்திரத்தை வானில் எய்து விட்டான். சரியாக அத்தருணத்தில் தேரோட்டியான பகவான், “அர்ச்சுனா, ஒப்பற்ற வீரனான நீ இத்தகைய ஒரு தகாத காரியத்தைச் செய்து விட்டாயே. இரு பிரம்மாஸ்திரங்கள் வானில் சஞ்சரிக்கலாமா? பிரபஞ்சம் என்னாவது?” என்று கேட்கவே, செய்வதறியாது திகைத்தான். இப்போது என்ன செய்வது? இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன்னையும் பிரபஞ்சத்தையும் காத்தருளுமாறு பகவானிடம் சரணடைந்தான். “மா சுச..., வருந்தாதே குந்தி மைந்தா...”, என்று கூறி பகவான் அர்ச்சுனனுக்கு ஆறுதல் அளித்து அர்ச்சுனன் விடுத்த பிரம்மாஸ்திரத்தை மீண்டும் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார் பகவான்.

மீண்டும் திகைத்தான் அர்ச்சுனன். பிரம்மாஸ்திரத்தை எய்வதற்கு மட்டும்தான் அர்ச்சுனனுக்கு தெரியுமே தவிர அதை மீண்டும் பெறும் முறையை அவனுடைய குருநாதர் அவனுக்கு கற்பிக்கவில்லை. எய்த பிரம்மாஸ்திரத்தை மீண்டும் தன்னிலைக்கு கொண்டு வர முடியும் என்ற இரகசியம் தனுர் வேதத்தில் கூட இருப்பது போல் அவனுக்குத் தோன்றவில்லை. அர்ச்சுனனின் இந்தக் குழப்பமான மனோ நிலையை அறியாதவனா மாயக் கிருஷ்ணன். அப்போதுதான் பகவான் திருஅண்ணாமலை கொண்டராங்கி சக்திகளை அர்ச்சுனனுக்கு விளக்கி இவ்வாறு பிரம்மாஸ்திரத்தையும் தன்னிலைக்கு கொண்டு வரும் சக்தி பெற்றவையே கொண்டராங்கி சக்திகள் என்று எடுத்துக் கூறவே மறுவிநாடி அர்ச்சுனன் திருஅண்ணாமலையாரை தியானித்து பிரம்மாஸ்திர தேவதைகளிடம் வேண்டுகோளை சமர்ப்பிக்க மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல வானில் சீறிப் பாய்ந்த பிரம்மாஸ்திரம் அமைதி அடைந்து அர்ச்சுனனின் அம்பாரத் துணியில் வந்து அமர்ந்து கொண்டது.

மகாபாரத யுத்தத்தில் கோடிக் கணக்கான போர் வீரர்கள் மரணம் அடைந்தனர், கோடிக் கணக்கான குடும்பங்கள் தங்கள் ஆதரவை இழந்து தவித்தன என்று நாம் எத்தனையோ துன்பங்களைப் பற்றி கூறினாலும் இந்த யுத்தத்தில் விளைந்த பல அற்புதங்களில் ஒன்றே நாம் கொண்டராங்கி ஈசனை வழிபடும் சந்தர்ப்பத்தை பெற்றோம் என்பதை மறக்கக் கூடாது. சுமார் 6000 மைல்கள் உயரத்தில் திருஅண்ணாமலையில் வியாபித்து இருந்த சிவ சக்திகளை மக்கள் வழிபாட்டிற்காக பெற்றுத் தந்த பெருமை அர்ச்சுனனைத்தானே சாரும். அதனால் இத்தல ஈசனின் இயற்பெயர் ஸ்ரீபிரம்மதேவ ஈசன் என்பதாக இருந்தாலும் அர்ச்சுனனின் தியாகத்தைப் பாராட்டும் விதமாக ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் என்றே இத்தல ஈசன் அழைக்கப்படுகிறார்.

கொண்டராங்கி சக்திகள் என்பவை பிரம்மாஸ்திரத்தையும் தன்னிலைக்கு கொண்டு வரும் சக்தி பெற்றவை என்பதை நாம் இப்போது அறிவோம். ஆனால், இந்த சக்திகளை மனிதர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது? இதை விளக்கவல்லவர் நம் சற்குரு ஒருவரே. வரும் சோபகிருது வருட புத்தாண்டு வழிபாடு இந்த கொண்டராங்கி சக்திகளை மனிதர்கள் பெறும் முறையை விவரிக்கிறது. இதன்படி இந்த சோபகிருது வருட கிரக சஞ்சார படத்தை பச்சரிசி மாவால் ஒரு மாம்பலகையில் அல்லது வாழைஇலையில் வரைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதன் அருகில் அவரவர் தங்கள் முழங்கை நீளம் குறுக்களவாக, விட்டமாக அமையும் ஒரு மூங்கில் சட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் மேல் ஒரு மூங்கில் கூடையை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூங்கில் கூடையைச் சுற்றி அவரவர் கையால் தொடுத்த மல்லிகைப் பூச்சரங்களை கூடை முழுவதும் மறையும் அளவிற்கு நன்றாகச் சுற்ற வேண்டும். இவ்வாறு மூங்கில் கூடை மேல் சுற்றப்பட்ட மல்லிகைப் பூச்சரங்களே கொண்டராங்கி சக்திகளை ஈர்க்கவல்லவை.

குரு கடாட்சமே
கொண்டராங்கி திருமலை

கொண்டராங்கி மலைக்கு நேரில் சென்று இறைவனை தரிசிக்கக் கூடியவர்கள் மேற்கூறிய முறையில் மல்லிகைப் பூக்களைத் தொடுத்து இறைவனுக்கு அர்ப்பணிக்கலாம். பல்வேறு காரணங்களால் கொண்டராங்கி மலைக்கு செல்ல முடியாதவர்கள் அவரவர் இல்லத்திலேயே புத்தாண்டு வழிபாடுகளை மேற்கொள்ளலாம். தேங்காய், வெல்லம், முந்திரிப் பருப்பு அல்லது இதற்கு மேலும் அவரவர் விருப்பம் போல் பொருட்களை சேர்ந்து இனிப்பு பதார்த்தங்களை தயார் செய்து கிரக சஞ்சாரத்தின் கோலத்தின் முன்பும் இந்த ‘கொண்டராங்கி மலையின்’ முன்பும் நைவேத்யமாக படைத்து புத்தாண்டு வழிபாட்டை சிறப்பாக நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு 14 ஏப்ரல் 2023 வெள்ளிக் கிழமை மதியம் 3 மணி அளவில் தோன்றுவதால் இந்த முகூர்த்த நேரத்தில் மேற்கூறிய முறையில் வழிபாடுகளை நிகழ்த்தி பயன்பெறுமாறு அடியார்களை கேட்டுக் கொள்கிறோம். பஞ்சாங்க படன வழிபாட்டை வருடப் பிறப்பு மாலையோ அல்லது புத்தாண்டு உதயத்தின்போதோ வைத்துக் கொள்வது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. நவமி திதி, திருவோண நட்சத்திரம், சாத்திய யோகம், கரசை கரணம், மரண யோகம் போன்ற கால அம்சங்களுடன் தோன்றுவதால் இத்தகைய கிரக சஞ்சார அமைப்பில் தோன்றும் தீய சக்திகளை நசிக்கவும், நற்சக்திகளை பெருக்கவும் மேற்கண்ட வழிபாடு அடியார்களுக்கு உறுதுணையாக அமையும்.

பொதுவாக, ஒரு புத்தாண்டு பிறக்கும் பலனை அதன் நவநாயகர்களை வைத்தே முடிவு செய்வது வழக்கம். அம்முறையில் சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு ராஜா புதன், மந்திரி வெள்ளி, சேனாதிபதி குரு என்றவாறு சுப கிரகங்களின் அருளாட்சியுடன் தொடங்குவது என்பது நாம் பெற்ற பெரும் பேறாகும்.

வைரத்தில் blue jager என்ற ஒரு வகை வைரம் உண்டு. இது தற்போது அரிதாகி விட்டது, சில குடும்பங்களில் இத்தகைய வைரங்கள் இன்றும் பரம்பரை சொத்தாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இத்தகைய வைர ஆபரணங்களை நன்றாக சுத்தம் செய்து முதல் நாள் இரவில் மல்லிகைப்பூ கலந்த நீரில் வைத்திருந்து மறுநாள் இத்தகைய வைர ஆபரணங்களை கொண்டராங்கி மலைக்குச் சூட்டி வழிபடுவது என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே. மல்லிகைப்பூ ஊறிய தீர்த்தத்தை சிறிதளவு பிரசாதமாக அருந்தி மிச்ச தீர்த்தத்தை தென்னை போன்ற பால்விருட்சங்களில் சேர்த்து விடலாம்.

வழிபாட்டிற்குப் பின் இத்தகைய ஆபரணங்களை நாள் முழுவதும் தாங்கள் அணிந்து இறை மூர்த்திகளை வணங்குவதால் கிட்டும் பலன்கள் அற்புதமே.

அஸ்வத்தாமன் தவபீடம்
கொண்டராங்கி திருமலை

புத்தாண்டு தினத்தன்று கொண்டராங்கி மலையை தரிசனம் செய்ய முடியாவிட்டாலும் இந்த சோபகிருது வருட உத்தராயண காலத்திற்குள் அதாவது ஆனி மாத இறுதிக்குள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து தரிசனம் செய்து, கொண்டராங்கி ஈசனை அடிவாரத்தில் இருந்தோ, அல்லது மலையேறிச் சென்றோ தரிசனம் செய்து, மீண்டும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து இவ்வாறு அரிதிலும் அரிய கொண்டராங்கி சக்திகளைப் பெற்றுத் தந்த நம் சற்குருவிற்கும், நம் மூதாதையர்களுக்கும் நன்றி கூறி வழிபடுவதே மனிதக் கடமையாகும். திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது குபேர லிங்கப் பகுதியிலிருந்து திருஅண்ணாமலையை நோக்கி ஆறு முறை சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கி வழிபடுவது சிறப்பு.

மூங்கில் சட்டங்கள், மூங்கில் குச்சிகள் கொண்டு இங்கு விவரித்த முறையில் கொண்டராங்கி சிறுமலையை உருவாக்கி மல்லிகைப் பூச்சரங்களால் சுற்றி வழிபாடுகள் இயற்றியபின் அந்த கொண்டராங்கி மூங்கில் மலையை வைத்து மேலும் பல வழிபாடுகளை மேற்கொள்ளலாம். இந்த கொண்டராங்கி மூங்கில் மலையை விரும்பினால் ஆறு போன்ற நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்து விடலாம். இந்த மலையை வைத்து தொடர்ந்து வழிபாடுகளை இயற்ற விரும்புபவர்கள் இந்த மலையைச் சுற்றி கீழே குறித்த வண்ணம் பலவண்ண காகிதப் பட்டைகளால் அலங்கரித்து அதன் நடுவில் வண்ண விளக்குகள், பல டிசைன் மின்விளக்குகளை ஏற்றி தங்கள் வாசலில் உயரமான இடத்தில் கட்டி வைத்தும் தொடர்ந்து வழிபடலாம்.

கொண்டராங்கி ‘சிறுமலை’ அளவுகள் நமக்கு பிரமிப்பு ஊட்டுபவையே. அவரவர் முழங்கை நீளத்திற்கு குறுக்கு சட்டத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். முழங்கை நீளம் என்பது அவரவர் கைக்கு இரு சாண் நீளம் உடையதே. இந்த சிறுமலையின் உயரம் மூன்று சாண் அளவிற்கு அமைத்துக் கொள்ள வேண்டும். சிறுமலையின் பிரதிபலிப்பும் மூன்று சாண் அளவிற்கு அமையுமே. இவ்வாறு தோற்றமும் பிரதிபலிப்பும் சேர்ந்த ஆறு சாண் உயரமே உலக்கை வடிவில் திகழும் நம் பூமி ஆகும். இவ்வாறு பூமியின் வடிவை உலக்கை என்று எதிர்கால விஞ்ஞானம் உணர்ந்து, புரிந்து கொள்ள வேண்டிய காலம் நிச்சயம் வரும் என்று நம் சற்குரு உரைத்தாலும், அதுவரையில் இந்த உலக உலக்கை வடிவு அளிக்கும் அனுகிரகத்தை இழந்து விட வேண்டுமா என்ன? இத்தகைய ஒரு பேரிழப்பை அடியார்கள் பெறக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எழுந்ததே, நீங்கள் உருவாக்கப் போகும் சிறுமலை கொண்டராங்கியே இதற்கு சான்று ஆகும்.

மூங்கில் சட்டங்களால் உருவான
கொண்டராங்கி சிறுமலை

சாண் அளவு என்றவாறு மனிதனின் கட்டை விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையே அமைவதுதானே பிரம்ம தீர்த்தம் பொலியும் உள்ளங்கை. இந்த உள்ளங்கையில் குருவின் நித்திய தத்துவமாக ஆயுள் ரேகை, இதய ரேகை, புத்தி ரேகை என்ற மூன்று முக்கியமான ரேகைகள் அமைவதும் குருவின் வழிகாட்டுதல் நம் வாழ்க்கையுடன் எந்த அளவிற்கு பின்னிப் பிணைந்துள்ளது என்பதற்கு மற்றுமோர் சான்றாகும்.

பல்வேறு காரணங்களால் எட்டு பட்டைகள் உடைய கொண்டராங்கி மலை இங்கு நம் சற்குருவால் விளக்கப்படுகிறது என்றாலும் அடியார்கள் தங்கள் விருப்பம்போல் ஆறு, எட்டு, பத்து, பன்னிரெண்டு பட்டைகள் உடைய மலைகளைக் கூட உருவாக்கி பலன் பெறலாம். நாம் நினைப்பது போல் மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த பட்டைகள் நடுவே தோன்றுவது சாதாரண வெற்றிடம் அல்ல.

இந்த வெற்றிடத்தில் துலங்கும் நம் கற்பனையை மிஞ்சும் அதீத ஆன்மீக சக்தியைப் பற்றி நம் சற்குரு பலமுறை விவரித்து உள்ளார். நாம் இரு உள்ளங்கைகளைக் குவித்து ஒருவரை வணங்குகிறோம். அவ்வாறு வணங்கும்போது இரு உள்ளங்கைகளின் இடையே தோன்றும் வெற்றிடம் நம் இதயத்தில் உறையும் ஆன்ம சக்தியுடன் தொடர்பு கொண்டு அது நாம் வணங்கும் உயிரின் ஆன்மா சக்திகளுக்கு உரிய மரியாதையை, வணக்கத்தை தெரிவித்து விடுகின்றது. இந்த உள்ளங்கை சக்திகளை மேன்மைப்படுத்தவே, மேலும் மேலும் தூய்மைப்படுத்தவே நாம் ஆசமனம் என்னும் சிறந்த வழிபாட்டை மேற்கொள்கிறோம். ஆசமனத்தின்போது நாம் உள்ளங்கையில் வார்க்கும் ஒரு துளி தீர்த்தமே பிரம்ம தீர்த்தம் எனப்படுகிறது. அதாவது பிரம்ம சக்திகள் நிறைந்த தீர்த்தம், ஒரு ஆன்மா மற்றோர் ஆன்மாவுடன் எளிதாக தொடர்பு கொள்ளும் சக்தி உடைய தீர்த்தம் என்றெல்லாம் புகழப்படுகிறது. இந்த தீர்த்தத்தை மேலும் புனிதப்படுத்தவே உள்ளங்கையில் மூன்று முறை ஊற்றி அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்ற பெருமாள் நாமங்களால் துதிக்கிறோம்.

இவ்வாறு மனித உடலில் தோன்றும் சிறு அளவு உள்ளங்கை தீர்த்தமே மற்றோர் ஆன்மாவுடன் தொடர்பு கொள்ளும் சக்தி பெற்றது என்றால் கொண்டராங்கி மலை அளவு கொண்ட ‘வெற்றிடம்’ பல லட்சம், பல கோடி ஆன்மாக்களுடன் தொடர்பு கொள்ளும் சக்தியை ஏன் பெறாது என்பதே நாம் சிந்தித்து தெளிய வேண்டிய வினா.

கொண்டராங்கி மலையின் சக்திகள் திருஅண்ணாமலையில் 6000 மைல்கள் உயரத்தில் வியாபித்து உள்ளன என்று நாம் குறிப்பிட்டோம். அவரவர் பக்தி நிலையைப் பொறுத்து, சற்குருவின் மேல் உள்ள ஆழ்ந்த நம்பிக்கையைப் பொறுத்து இந்த கொண்டராங்கி சிறுமலையில் உள்ள ‘வெற்றிடம்’ எந்த அளவிற்கு வேண்டுமானாலும் இந்த பிரபஞ்சத்தையே வியாபிக்கும் சக்தி பெறும். இந்த அபூர்வ சக்தியால்தான் நம் சற்குரு போன்ற உத்தமர்கள் ஒரு அணுகுண்டுவின் அழிக்கும் சக்திகளை ஆக்க சக்திகளாக, உயிர் சக்திகளாக, ஜீவ சக்திகளாக மாற்றி இந்த உலகம் முழுவதிற்கும் அர்ப்பணிக்கின்றனர்.

     சித்திரை      சிவப்பு
     வைகாசி      வானநீலம்
     ஆனி      பச்சை
     ஆடி      வெள்ளை
     ஆவணி      ஆரஞ்சு
     புரட்டாசி      சிவப்பு வெண்மை
     கலந்த நிறம்
     ஐப்பசி      கருநீலம்
     கார்த்திகை      மஞ்சள்
     மார்கழி     கிளிப்பச்சை
     தை      ரோஸ்
     மாசி     கரும்பச்சை
     பங்குனி      மஞ்சள்

“ஒரு அணுகுண்டு போட்டு லட்சம் பேரை மாய்ப்பது பிரமாதமில்லை, ஒரு குண்டு போட்டு லட்சம் நெல் மூட்டைகளை விழ வைத்தால் அதுவே சாதனை...,” என்பார் கோவணாண்டி. இது ஏதோ ஒரு உயர்ந்த மனத்தில் தோன்றிய ஒரு நல்ல எண்ணம் என்று நாம் நினைக்கலாம். பொழுதுபோக்கிற்காக, விளையாட்டிற்காக தங்கள் வார்த்தைகளையோ, நேரத்தையோ செலவழிப்பவர்கள் அல்ல மகான்கள். எப்போது ஒரு குண்டு போட்டு லட்சம் நெல் மூட்டைகளை விழ வைப்பதே சாதனை என்று கோவணாண்டி கூறி விட்டாரோ அப்போதே அதை நிறைவேற்றுவதற்கான ஆயத்த ஏற்பாடுகளை தன் ஆருயிர் சீடன் செய்து விடுவான் என்று தெரியும் நம் கோவணாண்டிக்கு.

கள்ளியடி சப்பாத்தி கள்ளி அடி
கொண்டராங்கி திருமலை

இத்தகைய அரும்பெருஞ் சாதனைகளை எல்லாம் தான் திருஅண்ணாமலையில் அன்னதானம் நிகழ்த்தியபோதெல்லாம் எவரும் அறியா வண்ணம் பல்லாயிரக் கணக்கான மக்களின் அரும்பசியை இத்தகைய ‘நெல் மூட்டைகளில்’ விளைந்த அன்னப் பிரசாதம் மூலம் போக்கினார் நம் சற்குரு என்பதை ஒரு சில அடியார்களே அறிவர். இத்தகைய அரிய திருப்பணிகள் இனியும் தொடர மக்களும் இத்தகைய அபூர்வ கொண்டராங்கி சக்திகளை குரு பிரசாதமாக அளிப்பதே ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் வழிபாடு. அவரவர் குருவின் மேல் கொள்ளும் நம்பிக்கையைப் பொறுத்து கொண்டராங்கி மலையாக பாவிக்கும் ஒரு மல்லிகை மலையில் ஒரு மூட்டை என்ன, ஆயிரம் நெல் மூட்டைகள் என்ன, லட்சக் கணக்கான தானிய மூட்டைகளின் தானப் பலன்களை அளிக்கவல்லவரே நம் சற்குரு.

தேவை நம்பிக்கை, குரு நம்பிக்கை ஒன்று மட்டுமே...
மல்லிகைப் பூ மலையை உருவாக்கி புத்தாண்டு தினத்தில் வழிபாடு நிகழ்த்துவதைப் போல மாதப் பிறப்பு நாட்களிலும், அவரவர் பிறந்த நாட்கள், திருமண நாட்கள் போன்ற நாட்களிலும் பூந்தி மலை, தேங்காய் பர்பி மலை, மூன்று பருப்புகள் சேர்ந்த நிலக்கடலை பர்பி மலைகள், ஊத்துக்குளி வெண்ணெய் மலை, உடைத்த முந்திரிப் பருப்பு மலை போன்றவற்றை தயார் செய்து வழிபாடுகள் இயற்றி அவற்றை தானமாக அளித்தலால் கிட்டும் பலன்களை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

இவ்வாறு லட்சக் கணக்கான உயிரினங்களை மாய்க்கும் பிரம்மாஸ்திரத்தின் சக்தியையும் தன்னிலைப்படுத்தி அதை மக்களின் நல்வாழ்விற்காக அளிக்கும் சக்தி கொண்ட நம் சற்குருவின் தியாகச் செயலுக்கு இணையான ஒன்றை இதுவரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கேள்விப்பட்டதுதான் உண்டா? இவ்வாறு அழிக்கும் சக்திகளை, உயிர்களை மாய்க்கும் சக்திகளை புனரமைத்து மக்களின் சீரிய சிறந்த வாழ்விற்கு அர்ப்பணிக்கும் மலையாக கொண்டராங்கி மலை திகழ்வதால் இது கொண்டராங்கி திருமலை என்று சித்தர்களால் புகழப்படுவதில் வியப்பென்ன?

அர்ச்சுனன் சுனை
கொண்டராங்கி திருமலை

நம் சபையில் ஒரு அடியார் இருந்தார். மற்ற அடியார்களைப் போல நம் சற்குருவிடம் அடைக்கலம் கொள்ளும் முன் பல ஆன்மீகப் பெரியோர்கள் கூறிய வழிபாட்டு முறைகளைக் கடைபிடித்து வந்தார். அப்போது ஒரு நாள் சென்னை மெரீனா கடற்கரை அருகில் உள்ள ஒரு தியான மண்டபத்தில் தன்னை விட மூத்த அடியார் ஒருவருடன் சேர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அப்போது தான் நுண்ணிழைப் பயணத்தில் (astral travel) சென்று அருகில் உள்ள மெரீனா கடற்கரை போன்ற இடங்களைப் பார்த்ததாகக் கூறினார். அருகில் இருந்த மூத்த அடியார் இது கேட்டு, தான் ஆஸ்ட்ரல் பயணம் செய்யவில்லை என்றால் தன்னுடைய தகுதியைப் பற்றி பிறர் தவறாக மதிப்பிட்டு விடுவார்களே என்று நினைத்து, தானும் அந்த அடியாரின் அருகிலேயே பறந்ததாகக் கூறினாராம். அடியார் கூறிய இந்த உரைகளை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த நம் சற்குரு பதில் ஒன்றும் அளிக்கவில்லை.

சற்று நேரம் கழித்து அந்த அடியார் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டார். அப்போது நம் சற்குரு புன்னகையுடன் அருகில் இருந்த அடியாரிடம், “ஏனய்யா, அவன் ஆஸ்ட்ரல் பயணத்தில் செல்வதாக இருந்தால் அருகில் இருக்கும் மெரீனா பீச்சைப் பார்க்க செல்ல வேண்டுமா என்ன? ஐந்து நிமிடம் அங்கிருந்து நடந்தால் வருவது மெரீனா பீச்...”, என்றார். சற்குருவின் விளக்கம் அப்போதைக்கு புரியவில்லை என்றாலும் பல்லாண்டுகள் கழித்தே நம் சற்குரு உரையின் அருமை பளிச்சிட்டது.

எப்போது ?

நம் சற்குரு உடலுடனே கோவணாண்டி பெரியவருடன் திருஅண்ணாமலை உச்சியை நோக்கி பல்லாயிரம் மைல்கள் பறந்து சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது !

ஆயிரக் கணக்கான மைல்கள் பறந்து சென்றபோது கிடைத்த கொண்டராங்கி என்ற ஒரே ஒரு சக்தியின் வலிமையைக் கொண்டே லட்சக் கணக்கான பசியால் வாடிய வயிற்றுக்கு உணவளிக்க முடிந்தது என்றால், இன்றும் இந்த நற்பணி தொடர நம் சற்குருவின் பயணம் வழிகாட்டுகிறது என்றால், நம் சற்குரு பெற்ற மற்ற தரிசனங்களின் பலன்கள் எப்படி இருக்கும்? அவற்றின் பலன்கள் சமுதாயத்திற்கு என்னென்ன நற்சக்திகளை எல்லாம் கூட்டும்?

அஸ்வத்தாமனின் அருந்தவம்

மகாபாரதத்தில் துரோணாச்சாரியாரின் அருமைப் புதல்வனே அஸ்வத்தாமன், சிரஞ்சீவி. ஆனால், அவன் துரியோதனனிடம் நட்பு கொண்டிருந்தமையால் பாண்டவர்களை ஒழிப்பதில் மிகவும் தீவிரமாக இருந்தான். பாண்டவர்கள் ஐவரையும் அழிக்கத் திட்டம் தீட்டி, அவர்களுக்குப் பதிலாக அவர்கள் புதல்வர்கள் உபபாண்டவர்கள் ஐவரையும் அவர்கள் உறங்கும்போது கொன்று விட்டான். பிரம்மாஸ்திரத்தை ஏவி உலகையே, குறிப்பாக பாண்டவ குலம் அனைத்தையும் நாசம் செய்ய நினைத்து அது முடியாமல் போகவே இறுதியில் பகவான் கிருஷ்ணரிடம் சரணடைந்தான்.

“கிருஷ்ணா, வேண்டியவர்களுக்கு வேண்டியதை தட்டாமல் நீ அளிப்பாய் என அறிந்து உன்னிடம் ஒன்று யாசகமாகப் பெற வேண்டி வந்துள்ளேன். நான் கேட்பதை நீ தருவாயா?” என்று மிகவும் பவ்யமாகக் கேட்டான். மாயக் கிருஷ்ணனிடமே விளையாட்டா? ஆனால், கிருஷ்ண பகவானோ ஒன்றும் அறியாதவர் போல், “அஸ்வத்தாமா, நீ கேட்டு நான் எதையும் மறுப்பேனா என்ன? உனக்கு வேண்டியதை தாராளமாக கேட்டுப் பெற்றுக் கொள்...”, என்று கூறவே, அஸ்வத்தாமன் தைரியம் அடைந்து, “கிருஷ்ணா ... வந்து ... அதாவது ... என்று கூறி பெருத்த பீடிகையுடன் தயங்கி தயங்கி ... உன்னுடைய சுதர்சன சக்கரத்தை எனக்கு தானமாக அளிக்க வேண்டும்...”, என்று கேட்டான்.

சோபகிருதுவில் சுபமங்கள கீதம்!

பகவான் கிருஷ்ணரோ பலமாக நகைத்து, “என்ன அஸ்வத்தாமா ... இதற்காகவா இவ்வளவு பெரிய பீடிகை ... இதோ நீயே எடுத்துக் கொள்...”, என்று பட்டு பீதாம்பரத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டு பிரகாசித்த சுதர்சன சக்கரத்தை சுட்டிக் காட்டினார். எல்லையில்லா ஆனந்தம் அடைந்தான் அஸ்வத்தாமன். ஒரே பரபரப்புடன் அந்த சுதர்சன சக்கரத்தின் மேல் பாய்ந்து அதைக் கையில் எடுக்க முயன்றான் ... ஆனால், என்ன ஆச்சரியம் ... என்ன முயன்றும், தன் பலம் அனைத்தையும் பிரயோகம் செய்த போதும் சுதர்சன சக்கரத்தை இம்மி அளவு கூட நகர்த்த முடியவில்லை ... உடல் முழுவதும் வியர்வையால் நனைய மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அயர்ந்து நின்றான். அனைத்தும் அறிந்த பகவானோ, “என்ன அஸ்வத்தாமா, மிகவும் சோர்வடைந்து விட்டாயே ... வேண்டுமானால் தக்க ஓய்வெடுத்து விட்டு மீண்டும் முயற்சி செய்யலாமே?” என்று கூறி ஊக்கப்படுத்தினார்.

அஸ்வத்தாமனோ தன்னுடைய இயலாமையையும், வானளாவ உயர்ந்து நின்ற பகவான் கிருஷ்ணரின் பெருமையையும் உணர்ந்து கொண்டு பகவானின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினான். சரியாக அந்நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர் பஞ்சபாண்டவர்கள். உபபாண்டவர்கள் ஐவரையும், பிரம்மாஸ்திரம் எய்து உத்திரையின் கர்ப்பத்தில் இருந்த சிசுவையும் அழிக்க நினைத்த அஸ்வத்தாமனின் மேல் அவர்கள் உருவிய பட்டாக்கத்தியுடன் பாயவே பகவான் கிருஷ்ணர் அவர்களை தடுத்து நிறுத்தி, “ஒருவன் எவ்வளவுதான் கொலைபாதகனாக இருந்தாலும் அவன் தன்னுடைய தவறுக்காக நினைத்து வருந்தினால் அவனை தண்டிப்பது முறையன்று, மேலும் அவன் உங்களுடைய அஸ்திர குருவின் மைந்தனாக இருப்பதாலும், அவன் குலத்தில் உங்களை விட உயர்ந்த நிலையில் நிற்பதாலும் அவனைத் தண்டிக்க நினைப்பது முறையன்று, ஆனால், அதே சமயத்தில் குறைந்த பட்ச தண்டனையை வழங்காமல் எந்த குற்றவாளியையும் வெறுமனே மன்னித்து விட முடியாது, எனவே அவனுடைய சிகையை, குடுமியை கத்தரித்து அவனை விரட்டி விடுங்கள்...”, என்று ஆலோசனை வழங்கவே, பாண்டவர்கள் பகவானின் உரைக்கு மறுப்பு தெரிவிக்காமல் அஸ்வத்தாமனின் சிகையை மட்டும் கத்தரித்து விட்டனர்.

அப்போது பகவான் கிருஷ்ணர், “அஸ்வத்தாமா, என்னிடம் வாள், கதை போன்ற எத்தனையோ ஆயுதங்கள் இருக்க சுதர்சன சக்கரத்தை மட்டும் கேட்டாயே, அது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா?” என்று கேட்டாராம். அஸ்வத்தாமன் சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டு, “கிருஷ்ணா, உன்னிடம் எனக்கு தீரா பகை, இந்த மகாபாரத யுத்தம் அனைத்திற்கும் சூத்ரதாரி நீயே, அதனால் உன்னை எப்படியாவது அழித்து விட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு அலைந்தேன், உன்னை அழிக்கக் கூடிய ஒரே ஆயுதம் சுதர்சன சக்கரம் என்பதையும் நான் அறிவேன், அதனால்தான் எப்படியாவது அதை உன்னிடம் இருந்து பெற்று உன்னை ஒழிக்கலாம் என்று திட்டம் தீட்டினேன், ஆனால், அனைத்தும் அறிந்த நீயோ உன்னை அழிக்க, ஒழிக்க ஒருவன் திட்டம் தீட்டி நயவஞ்சமாக உன்னைக் கொல்ல நினைத்தாலும் அவனுக்கும் உதவ நின்ற உன்னுடைய தியாகம் என்னுடைய அகம்பாவத்தை முற்றிலுமாக அழித்து விட்டது, என்னுடைய அறிவுக் கண்கள் உன்னுடைய பெருந்தன்மையால் இப்போது திறந்து விட்டன, இனி எனக்கு எப்போதும் நல்ல காலம்தான்...,” என்று பேருவகையுடன் கூறி பகவானிடம் இருந்து நன்றியுடன் உத்தரவு பெற்றுக் கொண்டான் அஸ்வத்தாமன்.

பாண்டவர்கள், பகவானின் எல்லையில்லா தியாகம் அறிந்து தங்களை மறந்து நின்றனர்.

அர்ச்சுனன் வியூகம்
கொண்டராங்கி திருமலை

“பகவான் கிருஷ்ணரைப் பற்றி யாருமே புரிந்து கொள்ளவில்லை...ஐயா...”, என்பார் நம் சற்குரு. அஸ்வத்தாமனின் சிகையை கத்தரித்து அவனை அவமானப்படுத்தி அனுப்பிய நிகழ்ச்சியையும் இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். உலகில் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத மகா பாதக செயலை எல்லாம் செய்த ஒரு கொடியவனின் சிகையை மட்டும் கத்தரித்து அனுப்பி விடுவது என்பதில் பாண்டவர்களில் எவருக்குமே உடன்பாடு இல்லைதான். ஆனால், கிருஷ்ண பகவானே தலையிட்டு இந்த தண்டனை மட்டும் போதும் என்று நினைக்கும்போது அவர் செயலை மறுத்துக் கூறும், எதிர்த்து வாதாடும் திறன் யாருக்குத்தான் இருக்கிறது?

இங்குதான் கிருஷ்ண பகவானின் தன்னிகரில்லா தனிப் பெருங்கருணை பிரகாசிக்கிறது என்பார் நம் சற்குரு. அஸ்வத்தாமன் வைத்திருந்த சிகையின் பெயர் தேனுபாலகம் என்பதாகும். பிரபஞ்சத்தில் முதன்மையான சிரஞ்சீவி மட்டுமே இந்த சிகையை வைத்துக் கொள்ளும் உரிமை பெற்றவன். இந்த சிகை கற்பனைக்கு எட்டாத பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. உதாரணமாக, தேனுபாலகம் சிகை உள்ள ஒருவரைச் சுற்றி 12 மைல் தூரத்திற்கு எந்த விஷ ஜந்துவும் அண்டாது. அப்படி ஒரு வேளை அந்த விஷ ஜந்துகள் இருக்கும் இடத்திற்கு தேனுபாலகம் சிகை அணிந்த சிரஞ்சீவி சென்று விட்டால் அந்த விஷ பூச்சிகள் செயலிழந்து அமைதியாக அமர்ந்து விடும்.

இந்த அற்புதமான சிகையை அஸ்வத்தாமன் இழந்து விட்டான் என்பதை அறிந்த தேள், நட்டுவாக்கிளி, பாம்பு, பூரான் போன்ற அனைத்து பூச்சிகளும் அவனை மொய்த்து கடித்து துன்புறுத்த ஆரம்பித்தன. கடித்தால் மரணம் தராத பல விதமான அரிப்புகளை, ஊறல் உணர்வுகளைக் கொடுக்கும் பல பூச்சிகளும் அவனைக் கடிக்க ஆரம்பித்தன என்பதே அவன் அடைந்த எல்லையில்லா வேதனை ஆகும். சாதாரண மனிதனை அத்தகைய விஷ ஜந்துகளில் ஏதாவது ஒன்று கடித்தாலும் அவன் மரணம் அடைந்து விடுவான் என்றாலும் அஸ்வத்தாமன் சிரஞ்சீவி என்ற காரணத்தால் மரணம் அடையாமல் அந்த விஷ ஜந்துகள் அளித்த வேதனை அனைத்தையும் அவன் பொறுத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. எத்தனை நாட்களுக்கு, ஒரு வருடமா ... இல்லை இரண்டு வருடமா ? மூவாயிரம் ஆண்டுகளுக்கு ... சற்றே கற்பனை செய்து பாருங்கள் அஸ்வத்தாமனின் பரிதாபகரமான நிலையை.

ஸ்ரீகணேச மூர்த்தி
கொண்டராங்கி திருமலை

கொண்டராங்கி மலையின் சக்திகள் அவனை எத்தகைய விஷ ஜந்துகளின் தாக்குதலிலிருந்தும் காப்பாற்றும் என்பதை அவன் தெளிவாக உணர்ந்திருந்தாலும் அவன் கொண்டராங்கி திருமலையையே நெருங்க முடியாத அளவிற்கு அவன் செய்த கொடிய வினைகள் அவனைத் தடுத்து நிறுத்தி விட்டன. விஷப் பூச்சிகளின் கொண்டாட்டம் ஒரு புறம் என்றால் வியாதிகளின் கொடுமையோ பூச்சிகள் கொடுத்த வேதனைக்கு சற்றும் சளைக்காத தன்மையுடன் இருந்தன. குட்டரோகம், க்ஷய ரோகம் என பூலோகத்தில் மக்கள் கேள்விப்பட்ட, கேள்விப்படாத அனைத்து ரோகங்களும் அவன் உடலில் நிரந்தரமாகத் தங்கி வேதனை அளிக்க ஆரம்பித்தன.

இவ்வாறு வேதனை, வேதனை ... என்பதாக மூவாயிரம் ஆண்டுகளைக் கழித்தான் அஸ்வத்தாமன். பின்னர் இறைவனின் பெருங்கருணையால் அவன் கொண்டராங்கி மலையை நெருங்க முடிந்தது. கொண்டராங்கி மலையை அடைந்த மறுகணம் எந்த விஷ பூச்சிகளும் அவனை தொந்தரவு செய்யவில்லை, மாறாக ஏற்கனவே கடித்த பூச்சிகளின் வேதனைகள் சிறிது, சிறிதாக குறைய ஆரம்பித்தன. ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் திருத்தலத்திற்கு முன் உள்ள அஸ்வத்தாமன் குகையில் தங்கி மேலும் மூவாயிரம் ஆண்டுகள் தவம் இயற்றத் தொடங்கினான் அஸ்வத்தாமன். இதில் ஆச்சரியம் அளிக்கும் மற்றோர் சம்பவமும் நிகழ்ந்தது.

அஸ்வத்தாமனின் அரிதிலும் அரிய தேனுபாலகம் என்னும் சிகை வளரத் தொடங்கியது. பேரானந்தத்துடன் தேனுபாலகம் சிகையை முடிந்து ஸ்ரீமல்லிகார்ச்சுன ஈசனை நன்றிப் பெருக்குடன் வழிபட ஆரம்பித்தான் அஸ்வத்தாமன். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இவ்வாறு மல்லிகை, கல்கண்டு, தேங்காய் பர்பி போன்ற பல பொருட்களாலும் தன் முழங்கை அளவு குறுக்களவு உள்ள கொண்டராங்கி இனிப்பு மலையை உருவாக்கி இறைவனுக்கு அர்ப்பணித்து வழிபடத் தொடங்கினான். இத்தகைய வழிபாடு மூவாயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

அஸ்வத்தாமனின் வரலாற்றிலிருந்து நாம் அறியும் நீதி என்ன?
மனித வரலாற்றில் அஸ்வத்தாமனை விடக் கொடிய மனம் உள்ள, பழி வாங்கும் துரோகச் செயலை இயற்றிய ஒரு ஜீவனை நாம் பார்த்திருக்கவோ, கேள்விப்பட்டிருக்கவோ முடியாது. ஆனால், அத்தகைய கொடுமையான மனம் உடையவனும் திருந்தி விட்டால் அவன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இறைவனை அடைவான் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

உணர்ச்சியால் உச்ச கட்டம் எய்தி பாண்டவர்களைப் போல் பட்டாக்கத்தியுடன் பாய்ந்து அஸ்வத்தாமனின் தலையைக் கொய்திருந்தால் அதனால் சமுதாயத்திற்கு கிட்டும் பலன்தான் என்ன? சரியான சமயத்தில் பகவான் கிருஷ்ணர் தலை இட்டதால் ஒரு அருமையான சிரஞ்சீவியை, உத்தம வழிபாட்டு முறையை உலகம் பெற்றது. அஸ்வத்தாமன் அளவிற்கு இல்லை என்றாலும் பழி வாங்கும் உணர்ச்சியால் உந்தப்பட்டு கொடுஞ்செயல்களை இழைக்கும் மனிதர்கள் எத்தனை பேர் இந்தப் பூமியில் உலவுகின்றனர். ஏன், நம் சற்குருவின் அடியார்களில் எத்தனையோ பேர் இத்தகைய பழிவாங்கும் எண்ணத்தால் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள்தான் எத்தனை, எத்தனை? அனைவர்க்கும் திருந்தி வாழும் ஒரு இனிய சந்தர்ப்பத்தை நல்குவதே கொண்டராங்கி திருமலை ஆகும்.

கெட்டி மல்லி

கொண்டராங்கி திருமலை ஈசன் ஸ்ரீகெட்டி மல்லிகார்ச்சுனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். கெட்டி மல்லி என்றால் என்ன ? ஆன்மீக உலகில் பக்தர்கள் மூன்று கெட்டியான பொருள்களை பெறுவது அவசியம்.

1. முதலில் பக்தர்களின் விந்து கெட்டிப்பட வேண்டும். உடல் வியாதிகளாலோ, மன வியாதிகளாலோ விந்து நீர்த்துப் போய் விட்டால் அவர்களால் நிச்சயம் இறைவனை அடைய முடியாது என்பதில் எந்த வித சந்தேகமும் வேண்டாம். எத்தனை பிறவிகள் ஆனாலும் தங்கள் விந்து கெட்டிப்படும் ஆன்மீக முயற்சிகளை, பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டுதான் ஆக வேண்டும்.

2. அடுத்து, இறைவனிடம் பக்தன் கொள்ளும் உறவு கெட்டிப்பட வேண்டும். ‘உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கி கடைந்தால்தான்...’, இறைக் காட்சி கிட்டும். இதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அம்மா, நண்பன், காதலன், நம் சற்குருவைப் போல் குருவின் அடிமை என்ற ஏதாவது ஒரு உறவைக் கொண்டு இறைவனை நேசித்தால்தான் உறவு கெட்டிப்படும், இறைவனை நெருங்க முடியும்.

3. மூன்றாவதாக, இறைவனிடம் கொள்ளும் உறவு ‘கெட்டிப்படும்போது’ பக்தனின் உடலிலிருந்து மல்லிகை மணம் வீசும். இந்த மல்லிகை மணத்தில் சுமார் 6000 படித்தரங்கள் உள்ளன. இந்த மல்லிகை மணத்தின் ‘கெட்டித் தன்மை’ (concentration) யின் படித்தரத்தைக் கொண்டுதான் மகான்கள் எந்த அளவிற்கு இறை மார்கத்தில் முன்னேறி உள்ளார்கள் என்ற பக்தியின் திறம் மேலுலகில் நிர்ணயம் ஆகின்றது. என்றாலும் மிக உயர்ந்த நிலையில் உள்ள சித்த பெருமக்கள் இந்த மல்லிகையின் கெட்டித் தன்மை குறித்து விவாதிப்பதே கிடையாது. ஸ்ரீகெட்டி மல்லிகார்ச்சுனேஸ்வரர் என்றால் திருஅண்ணாமலையில் 6000 மைல்கள் உயரத்தில் துலங்கும் எம்பெருமானின் ‘கெட்டி மல்லி’ என்ற மிக மிக அபூர்வமான சக்திகளை மக்களுக்கு அனுகிரகமாக வழங்கும் இறைப் பரம்பொருள் என்று பொருள்.

கெட்டிமல்லி தீர்த்தம்
கொண்டராங்கி திருமலை

பாதாள லிங்கத்தில் தியானம் மேற்கொண்டிருந்த ரமண மகரிஷியின் உடலிலிருந்து வெளிப்பட்ட இந்த மல்லிகை மணத்தை இனங்கண்டு கொண்டதால்தான் சேஷாத்ரி சுவாமிகள் அடியார்களை அனுப்பி ரமண மகரிஷியை பாதாள லிங்கத்திலிருந்து வெளியே கொண்டு வந்து அவருடைய உடல் புண்களை எல்லாம் ஆற்றி மகரிஷியை இவ்வுலகிற்கு மீட்டுத் தந்தார் என்பது நீங்கள் அறிந்ததே.

கொண்டராங்கி திருமலையில் கண்ணுக்குத் தெரிந்த, தெரியாக பல பல தீர்த்தங்கள் இருந்தாலும் கலியுக வழிபாட்டிற்கு உகந்ததாக சித்தர்கள் இரண்டு தீர்த்தங்களை அறிவிக்கிறார்கள். கெட்டிமல்லி தீர்த்தம் என்பது ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலேயே சுவாமிக்கு இடப்புறம் அமைந்துள்ளது. சூரிய ஒளி படா தீர்த்தம். இந்த தீர்த்தத்தை பாதுகாப்பாக பெற்று திருப்பதி லட்டு போன்ற பிரசாதங்களுடன் கலந்து பக்தர்களுக்கு அளிப்பதோ, அல்லது சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தில் மேற்கண்ட தீர்த்தத்தைக் கலந்து தயார் செய்து அதை பக்தர்களுக்கு விநியோகிப்பதும் அற்புத தான முறையே. கெட்டிமல்லி தீர்த்தத்தின் ஒவ்வொரு துளியும் கங்கை தீர்த்தத்தை விடவும் பன்மடங்கு புனித சக்திகளுடன் துலங்குவதால் மிக மிக ஜாக்கிரதையாக இந்த தீர்த்தத்தைப் பயன்படுத்தும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

கொண்டராங்கி மலையின் உச்சிப் பகுதி அர்ச்சுனன் வியூகம் என்று அழைக்கப்படுகிறது. சித்த நிலையில் உள்ள மகான்களால் மட்டுமே இந்த ‘வியூகத்தின்’ தெய்வீக சக்திகளை உணர்ந்து கொள்ள முடியும் என்றாலும், ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் திருஅண்ணாமலையில் 6000 மைல்கள் உயரத்தில் உள்ள கொண்டராங்கி தெய்வீக கிரண சக்திகள் முதலில் இந்த அர்ச்சுனன் வியூகத்தில்தான் பிரதிபலித்து சிறிது சிறிதாக கொண்டராங்கி திருமலை முழுவதும் வியாபிக்கிறது. பௌர்ணமி நாளில் அர்ச்சுனன் வியூகத்தில் அல்லது ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் ஆலயத்திற்கும் அர்ச்சுனன் வியூகத்திற்கும் இடையே உள்ள தவளைகள் நிறைந்த அர்ச்சுன சுனை தீர்த்தக் கரையில் அமர்ந்து தியானிப்பதாலோ, அல்லது ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் ஆலயம் அருகில் அமர்ந்து தியானிப்பதாலோ இந்த கொண்டராங்கி திருமலையின் தெய்வீக சக்திகளை சிறிது சிறிதாக புரிந்து கொள்ள ஏதுவாகும்.

தட்டில் நிறையும் தன சக்திகள்

நம் சற்குரு வெள்ளித் தட்டில் உணவருந்துவதை சிலர் அறிந்திருப்பர். அந்த வெள்ளித் தட்டின் நடுவில் ஒரு தங்கக் காசு பதிக்கப்பட்டிருக்கும். பொதுவாக, வெள்ளிக்கு எந்தவித தோஷமும் கிடையாது என்பதால் குடும்பத்தில் ஒருவர் உபயோகித்த தட்டுகளை, டம்ளர்களை மற்றவர்கள் பயன்படுத்துவதில் எவ்வித தவறும் கிடையாது.

பெரும்பாலான இரசாயண கலப்படங்களால் செறிந்த உணவுகள், இத்தகைய வெள்ளித் தட்டில் உணவருந்துவதால் தங்கள் எதிர்மறை சக்திகளை ஓரளவு இழக்கும் என்பதால் வெள்ளித் தட்டுகளில் உணவருந்துவது மிகவும் சிறப்புடையதாகும்.

கொண்டராங்கி திருமலையில் இத்தகைய வெள்ளித் தட்டுகளை சுவாமிக்கு நைவேத்யமாக அளித்து பின்னர் அவரவர் இல்லங்களில் இந்த வெள்ளித் தட்டுகளை பயன்படுத்துதல் சிறப்பாகும். முதலில் அர்ச்சுனன் வியூகத்தில் இந்த வெள்ளித் தட்டை வைத்து வணங்க வேண்டும். தன சக்திகள் நிறைந்த இத்தகைய வெள்ளித் தட்டுகளை ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் ஆலயத்தில் தட்டு நிறைய ஆப்பிள் பழங்களை வைத்து சுவாமிக்கு நைவேத்யம் காட்டி, இந்த பழங்களை எல்லாம் பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்து விட்டு இந்த வெள்ளித் தட்டை வீட்டிற்கு எடுத்து வந்து பயன்பாட்டிற்கு வைத்து கொள்தல் சிறப்பாகும்.

திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற வைபவங்களில் இத்தகைய வெள்ளி தங்க பிரசாதங்களை அளித்தல் என்பது அளிப்பவருக்கும் பெறுபவருக்கும் கிட்டும் ஒரு சிறந்த பாக்கியமே. இவ்வாறு வெள்ளித் தட்டுகளை அனைவரும் பயன்படுத்த இயலாது என்பதற்காகவே வெள்ளி மாங்கல்யத்தில் தங்க முலாம் பூசி அதை மாங்கல்ய தானமாக தம்பதிகளுக்கு அளித்து விடும் எளிய தான முறையை நம் சற்குரு பல முறை வலியுறுத்தி உள்ளார். எனவே, நம் சற்குருவிற்கு இணை நம் சற்குரு ஒருவரே!

மல்லிகை தூது

அன்னம், புறா, தென்றல் போன்ற பல தூதுக்களை காதலர்கள் அனுப்புவதையும், இறைவனிடம் பக்தர்கள் தூது அனுப்புவதையும் நாம் பண்டைய இலக்கியங்களில் நிறைய இரசித்துள்ளோம். இவ்வாறு தூய அன்பைப் பரிமாற அனுப்ப உதவும் உபகரணங்களில் முதன்மையானதே மல்லிகை ஆகும். தூய அன்பால் நிறைந்த வெண்ணெயால் உருவான சுயம்பு மூர்த்தியான சிக்கல் நவநீத ஈசனின் திருத்தலத்தை அலங்கரிப்பது தலவிருட்சம் மல்லிகைதானே.

இவ்வாறு தம்பதிகளிடையே தூய அன்பு நிலவ வேண்டும், அந்த தூய அன்பின் பிரதிபலிப்பாகவே பக்தி நிறைந்த சந்தானம் உருவாக வேண்டும் என்ற காரணத்திற்காகவே சாந்தி முகூர்த்த வைபவத்தை இன்றும் மக்கள் மல்லிகை பந்தல் நிறைந்த நிழற்கூடத்தில் கொண்டாடி மகிழ்கிறார்கள். எந்த இனிய உறவும் குருவின் அனுகிரகத்தால்தான் பூர்ணம் பெறும் என்பதைக் குறிப்பதற்காக மல்லிகை மலர்களிடையே சில ரோஜா இதழ்களை பரப்பி அலங்கரிப்பதும் உண்டு.

ஸ்ரீநவநீதேஸ்வரர் சிக்கல்

தூய அன்பிற்கு சிறந்த இலக்கணமாக விளங்குவதோடு மட்டுமல்லாது எதிர்மறை சக்திகளை ஈர்த்து பஸ்மம் செய்வதில் மல்லிகை, சம்பங்கி போன்ற வெண்ணிற மலர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இவ்வாறு மலர் மாலைகளை எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏற்காத நம் சற்குரு கூட சில அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க மல்லிகை, முல்லை, சம்பங்கி போன்ற வெண்ணிற மலர் மாலைகள், ஆப்பிள் பழ பூச்செண்டுகளை ஏந்தி காட்சி தருவதும் உண்டு. இக்காரணம் பற்றியே புது மணத் தம்பதிகள் ஆப்பிள் பழ பூச்செண்டுடன் திகழும்படி சிபாரிசு செய்வார். ஸ்ரீபூண்டி மகான், சிங்கம்புணரி ஸ்ரீவாத்யார் ஐயா, காஞ்சி கனிந்த கனி போன்ற உத்தமர்களின் மலர்மாலை தரிசனம் சமுதாயத்தில் நிலவும் பல தீய எண்ணங்களையும், எதிர்மறை சக்திகளையும், பழிவாங்கும் பகைமை உணர்ச்சிகளைக் களையும் சக்தி பெற்றதாகும்.

அடியார்களைப் பொறுத்த வரை காட்சிக்கு அப்பாற்பட்ட இறைவனிடம் விடும் தூதாக மல்லிகை அமைகிறது என்பதால்தான் கொண்டராங்கி திருமலையில் ஈசனுக்கு முதலில் மல்லிகை மலர்களாலான மலையை தாமே உருவாக்கி அர்ப்பணிக்கும்படி நம் சற்குரு வழிகாட்டுகிறார். இந்த மல்லிகையைத் தொடர்ந்து அடுத்தடுத்த பௌர்ணமி தினங்களில் கல்கண்டு மலை, பூந்தி மலை, வெண்ணெய் மலை போன்ற பல்வேறு சுவையான மலைகளை உருவாக்கி அதன் மூலம் அடியார்கள் தங்கள் பக்தியை வெளிப்படுத்தலாம்.

மாறன் மயங்கும் மல்லிகை
சிக்கல்

சமீபத்தில் ஒரு அடியார் இறைவனின் திருவடியை அடைந்து விட்டார். அந்த அடியாரின் மரணத்திலும் தகனத்திலும் சில முரண்பாடுகள் இருந்தன. இது குறித்து நம் சற்குரு அளித்த விளக்கத்தை இங்கு அளிக்கிறோம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு அரசாங்கத்தில் உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி நம் ஆஸ்ரமத்திற்கு சேவைக்காக வந்திருந்தார். அவரிடம் நம் சற்குரு, “சார், பொதுவாக அடியேனின் சீடர்கள் எவரும் திரும்ப பிறவி எடுப்பதில்லை (அதாவது முக்தி அடைந்து விடுவார்கள்!). நீங்கள் மட்டும் இதற்கு விதி விலக்கு. உங்களுடைய மறுபிறவியில் உங்களுக்கு ஆறு வயது நடக்கும்போது அடியேன் உங்களை ஆட்கொள்வேன்,” என்றார்.

இதிலிருந்து நாம் அறியும் விளக்கம் என்ன? நம் சற்குருவின் அடியார்களுக்கு மறுபிறவி கிடையாது, அவர்கள் இப்பிறவி நிறைவில் முக்தி அடைந்து விடுவார்கள்.

ஒரு அடியாரின் பிறவியில் பல இரகசிய முடிச்சுகள் இருந்தாலும் அவை அனைத்தையும் உரிய காலத்தில் உரிய முறையில் சரி செய்யும் சக்தி நம் சற்குருவிற்கு உண்டு. இத்தகைய பிறவி இரகசியங்கள் நிறைந்த ஒரு அடியார் இன்றும் நம் சபையில் இருக்கிறார். அவரின் ஆகாசிக் ரெகார்டிலேயே பல மாறுதல்களை ஏற்படுத்தி அவரை இன்றளவும் காத்து வருகிறார் நம் சற்குரு.

ஒரு அடியாரின் வாழ்க்கையில் எத்தகைய தவறுகள் நடந்தாலும், அவை அனைத்தையும் ஏதாவது ஒரு கால கட்டத்தில் சரிப்படுத்தி அவர் இறுதியில் இறைவனை அடையும்போது அந்த அடியாரை அப்பழுக்கற்ற தூய மல்லிகையாக மாற்றி இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கும் அற்புத திருப்பணியை நிறைவேற்றக் கூடியவரே நம் சற்குரு. இதை நிறைவேற்ற நம் சற்குரு அனுபவிக்கும் மாளாத் துயரங்களை, மீளா வேதனைகளை அருகிலிருந்து உணரும் சந்தர்ப்பம் பெற்ற ஒரு சில அடியார்களே அறிவர். ஆரம்பத்தில் நம் சற்குருவின் வார்த்தைகளில், தான தர்மமே கலியுலகின் உண்மையான கர்ம வினைக் கழிப்பிற்கு உகந்த சாதனம் என்ற உரையில் நம்பிக்கை கொள்ளாத ஒரு மடத்தின் சன்னிதானம் இறுதியில் அந்த மடத்தின் கஜானாவே காலியாகும் அளவிற்கு அன்னதான காரியங்களை நிகழ்த்தி அவர் இறைவனுடன் கலந்த அற்புத வரலாற்றை ஒரு சில அடியார்கள் அறிவர்.

ஒரு அடியாரின் மரணத்தில் எத்தகைய முரண்பாடுகள் தோன்றினாலும்,

ஒரு அடியாரின் தகனத்தில் எத்தகைய முரண்பாடுகள் கொழுந்து விட்டு எரிந்தாலும், அந்த அடியார் நம் சற்குருவை நம்பி தன் வாழ்க்கையை நடத்தி வந்திருந்தால் போதும், அல்லது கடைசி நொடியில் நம் சற்குருவிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு அடைக்கலம் பெற்று விட்டால் கூட போதும் அந்த அடியார் முக்தி என்பதை குரு பிரசாதமாகப் பெறுவார் என்பது உறுதி. பூஜைக்காக வில்வ தளங்களை அளித்தான் ஒரு இளைஞன் என்ற ஒரே காரணத்திற்காக அவனுக்கு முக்தி வழங்கிய கனிந்த கனியின் இனிய செயலை நாம் ஏற்கனவே விளக்கியுள்ளோம். அவ்வாறிருக்க தம் அருமை சீடனுக்கு முக்திப் பரிசை நல்காமல் இருப்பாரா நம் சற்குரு?

நம் சற்குருவைப் பார்க்காத பல அடியார்களுக்கும் நம் சற்குருவின் இந்த உரை எத்தகைய ஆறுதலை அளிக்கும்?! நம் சற்குரு மீண்டும் பிறப்பெடுத்து இப்பூமியில் உலவுவதைக் கண்ணால் காணும் பாக்கியம் பெறும் அளவிற்கு அடியார்கள் உயர்ந்த நிலையை அடைய முடியாது என்றாலும் தன்னை நம்பும் உண்மையான சீடர்களை இனங் கண்டு கொண்டு அவர்களுக்கு முக்திப் பரிசை குரு பிரசாதமாக அளிக்க நம் சற்குரு காத்திருக்கையில் நமக்கு ஏன் வீண் கவலை?

ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர்
கொண்டராங்கி திருமலை

இவ்வருட புத்தாண்டு தினத்தன்றோ அல்லது எந்த சந்தர்ப்பத்திலும் ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வர ஈசனை வழிபடும்போது கெட்டிமல்லி தீர்த்தத்தால் அபிஷேகம் நிறைவேற்றுவது சிறப்பாகும். இந்த தீர்த்தத்தில் ஒரு குட தீர்த்தத்திற்கு இரண்டு மூடி Kachi kalli என்ற மல்லிகை நறுமணத்தையும், ஒரு மூடி Rose SP என்ற நறுமணத்தையும் கலந்து அபிஷேகம் நிறைவேற்றுவது சிறப்பாகும். நம் சற்குரு திருக்கோயில்களில் உழவாரப் பணிகள் நிறைவேற்றும்போதெல்லாம் திருப்பணி நிறைவில் ஒரு குடம் திருக்குள தீர்த்தத்தில் கங்கை, காவிரி போன்ற நதி தீர்த்தங்களை கலந்து, அத்துடன் நறுமணத்தையும் கலந்து இறை மூர்த்திகளுக்கு அபிஷேகம் நிறைவேற்றுவார்.

அபிஷேகத்திற்குப் பின் நறுமணம் கலந்த சாம்பிராணி, சந்தனத்தூள் கொண்டு தூபம் எழுப்பி திருக்கோயில் அனைத்திலும் கெட்டியாக சாம்பிராணிப் புகையால் நிறைப்பார். பல திருத்தலங்களிலும் 1000 வாட்ஸ் மின் பல்புகள் பிரகாசித்தாலும் நம் சற்குரு எழுப்பும் நறுமணப் புகையில் அந்த விளக்குகளின் பிரகாசமே தெரியாது என்றால் அந்த தூபம் எத்தகைய ‘கெட்டியாக’ திகழும் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள்.

எனவே கெட்டி மல்லி ஈசனுக்கும் இவ்வாறு அடர்த்தியான சாம்பிராணி புகை இட்டு வணங்குவது மிகச் சிறப்பாகும். ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் ஆலயம், உச்சியில் அர்ச்சுன வியூகம் போன்ற இடங்களில் நறுமண அபிஷேகத்தையும், இத்துடன் அஸ்வத்தாமன் தவ பீடத்தில் கெட்டியாக சாம்பிராணி புகை போடுதல் மிகச் சிறந்த வழிபாடாகும். நறுமண அபிஷேகம் நமக்கும் ஈசனுக்கும் உள்ள பிணைப்பை மேம்படுத்தும் என்பதும், சாம்பிராணி தூப வழிபாடு இறைவனின் அனுகிரகத்தை, அரிதிலும் அரிதான தூய கொண்டராங்கி சக்திகளை இந்த பிரபஞ்சம் முழுவதும் வர்ஷிக்கும் என்பதே இந்த தலத்தில் பொலியும் தூய சக்திகளின் மகிமையாகும்.

இத்தகைய அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் அஸ்வத்தாமன் தவ பீடத்தில் இயன்ற அளவு நேரம் அமர்ந்து தியானம் இயற்றுதலும், அவரவர் தங்கள் இல்லம் திரும்பியவுடன் தங்கள் இல்லத்திலோ அல்லது திருத்தலங்களிலோ இத்தகைய தியானத்தை தொடர்வதும் சிறப்பாகும். தியானத்திற்கு முன்னும் பின்னும் இங்கு அளித்துள்ள இசையைக் கேட்பதால் சிறந்த மனத் தெளிவைப் பெறுவர். விஷக் கடிகள், உடலில் தோன்றும் ஊறல், நமைச்சல் போன்ற தோல் நோய்களைத் தீர்க்கும் வல்லமை இந்த இசையின் மகத்துவங்களில் ஒன்றாகும்.

காலடியில் அரையடி

ஒவ்வொரு திருத்தல படிக்கட்டுகளுக்கும் ஒரு சிறப்பான மகிமை உண்டு. படியாய்க் கிடந்து நின் பவள வாய் காண்பேனா என்று ஆழ்வார்கள் எல்லாம் தவம் கிடப்பதே திருமலை படிக்கட்டுகள். அதே போல் ஸ்ரீஅகஸ்தியர் உட்பட அனைத்து மகரிஷிகளும், மகான்களும், யோகிகளும் அடுத்தடுத்த தினங்களில் இந்த பிரபஞ்சத்தில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள் பற்றி விவாதிப்பதே ஐயர் மலை திருத்தலமாகும். மாலை நேரத்தில் பக்தர்கள் நடமாட்டம் குறையும்போது இத்தல படிக்கட்டுகளில் ஸ்ரீஅகஸ்தியர் உட்பட பல மகரிஷிகள் தத்தம் சுயம் உருவங்களில் தோன்றி உலக விஷயங்களை விவாதிப்பார்களாம்.

சித்தர்கள் கோலோச்சும்
ஐயர்மலை

உதாரணமாக, ஒரு ரோஜா செடியிலிருந்து ஒரு ரோஜா மலர் தரையில் விழுவதாக வைத்துக் கொண்டால் அந்த மலர் எத்தனை நாட்கள் செடியில் இருக்க வேண்டும், எந்த நேரத்தில் செடியிலிருந்து பிரிந்து தரையில் விழ வேண்டும், அவ்வாறு கீழே விழும்போது அந்த ரோஜா மலர் எத்தனை இதழ்களாகப் பிரிய வேண்டும், பிரிந்த இதல்களில் ஒவ்வொன்றும் எங்கே, செடியிலிருந்து எவ்வளவு தூரம் தள்ளி விழ வேண்டும், அவ்வாறு விழும் இதழ்களில் எத்தனை இதழ்கள் அங்கேயே கிடக்க வேண்டும், எத்தனை இதழ்கள் மனிதர்கள் காலால், விலங்கினங்களால் மிதிபட வேண்டும், எத்தனை இதழ்கள் வாயு பகவானால் மீண்டும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றெல்லாம் கணக்கை நிர்ணயிப்பவர்கள் சித்தர்கள், மகான்களே.

பஞ்ச பூதங்களும் நாம் நினைப்பது போல் சுதந்தரமாகச் செயல்படுவதில்லை. பஞ்சபூத தேவதைகளும் சித்தர்களின் ஆளுகைக்கு உட்பட்டவையே. இதைத்தான் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று நம் முன்னோர்கள் சாதாரணமாகக் குறிப்பிட்டார்கள்.

இவ்வாறு கொண்டராங்கி திருமலைப் படிக்கட்டுகளின் மகிமையையே காலடியில் அரையடி என்று சித்தர்களின் பரிபாஷையாகக் குறிப்பிடுகிறார்கள். கொண்டராங்கி திருமலையின் உயரம் முதலில் ஆறாயிரம் மைல்கள் உடையதாக வானளாவ நின்றது. அக்காலத்தில் கந்தர்வர்கள், தேவர்கள், பாரிகாலம் என்ற வானில் சஞ்சரிக்கும் சக்தி பெற்ற தேவதைகள் மட்டுமே கொண்டராங்கி ஈசனை வழிபட்டு வந்தனர். இந்த தேவதைகள் எல்லாம் தங்கள் வழிபாட்டுப் பலன்களை எல்லாம் சதாஸ்து தேவதைகளிடம் அர்ப்பணிக்க இந்த அனுகிரக சக்திகளை சேஷாத்ரி சுவாமிகள் போன்ற சக்தி பெற்ற மகான்கள் இந்த தேவதைகளின் அருட்கடாட்சம் மூலம் மக்களுக்கு அர்ப்பணித்து வந்தனர்.

அர்ச்சுனன் தன் தவ வலிமையால் கிருஷ்ண பகவானைத் தொடர்ந்து பிரார்த்திக்க கொண்டராங்கி மலையின் உயரம் 6000 மைல்கள் உயரத்திலிருந்து வெகுவாகக் குறைந்து, வெறும் 6000 படிக்கட்டுகள் கொண்ட மலையாக அமைந்தது. பின்னர் அஸ்வத்தாமனின் அருந்தவப் பிரார்த்தனைக்கு மகிழ்ந்து இறைவன் ஸ்ரீமல்லிகார்ச்சுனேஸ்வரர் தற்போது உள்ள 3000 படிக்கட்டுகள் மட்டுமே கொண்ட மலையாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

முள்ளும் மலரும் கொண்டராங்கி

‘அரை மாத்திரையில் அடங்கும் அடி...’, என்று அப்பர் பெருமான் இறைவனின் திருவடி மகிமையை புகழ்ந்து பாடுகிறார். இங்கு ‘அரை’ என்பது கால அளவா, தேச அளவா, அல்லது இரண்டும் கலந்த தெய்வீக அளவா என்பதை அறிய விழைவோர், கொண்டராங்கி திருமலைப் படிக்கட்டுகளில் தொடர்ந்து வழிபாடு இயற்றுவதன் மூலம் மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்பதே கொண்டராங்கி திருமலையின் காலடியில் அரையடி படிக்கட்டுகள் சுட்டிக் காட்டும் மகிமையாகும்.

இவ்வாறு காலடியில் அரையடி நல்கும் சக்திகளை பிராணாயாமம் மூலம் பெறும் முறையையும் கற்பிக்கிறார் நம் சற்குரு. இதன்படி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி ஒரு கெட்டியான போர்வையில் அல்லது துணியில் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளவும். முதலில் வலது மூக்கின் வழியே சிறிது சிறிதாக மூச்சை உள்ளே இழுக்கவும். பெண்களாயின் மூச்சை முதலில் இடது மூக்கின் வழியாக உள்ளே இழுக்கவும். போதுமான அளவு மூச்சுக் காற்றை இழுத்த பின் அந்த மூச்சுக் காற்றில் பாதியை விழுங்கி விடவும், மீதியை வெளியே அனுப்பி விடவும். அடுத்து இடது மூக்கின் வழியாக மூச்சை உள்ளே இழுக்கவும், போதுமான அளவு காற்றை இழுத்த பின், இழுத்த காற்றில் பாதியை விழுங்கி விடவும், மீதி காற்றை வெளியே விட்டு விடவும். இது ஒரு சுற்று பிராணாயாம முறையாகும்.

இவ்வாறு குறைந்தது 51 சுற்றுகள் பிராணாயாமத்தை நிறைவேற்றுதல் சிறப்பாகும். இதனால் பரவெளியில் பதிந்துள்ள கெட்ட எண்ணங்கள், பழி வாங்கும் பகைமை உணர்வுகள் சிறிது சிறிதாக நம்மை அடைவது குறையும். இதன் பின்னரே வெளி எண்ணங்களால் நம் ஒளி வட்டம் (aura) மாசு அடைவதை உணர்ந்து அதை நாம் தூய்மையாக்க முடியும். இதன் அடுத்த கட்டமாக, நம் உள்ளே தோன்றும் தீய எண்ணங்களையும், மாசு படிந்த தீய உணர்வுகளையும் இனம் கண்டு கொண்டு அவற்றைத் தூய்மை செய்ய இயலும்.

இத்தகைய தூய்மையான ஒளி வட்டம் உடையவர்களே நுண்ணிழைப் பயணம் என்ற ஆஸ்ட்ரல் பயணத்திற்கு தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்கு, அவர்கள் சஞ்சாரத்திற்கு எந்த லோகத்திலும் எந்தவித தடங்கல்களும் முளைப்பதில்லை. இத்தகைய தகுதியை வெகுவிரையில் நாம் பெறக் கூடிய ஒரே திருத்தலம் கொண்டராங்கி திருமலை என்பதே இதன் சிறப்பாகும்.

அப்பர் பெருமான் திருவடி தீட்சை
திருநல்லூர்

இந்த நிலைக்கு ஒருவர் உயர்ந்து விட்டால் என்றால் அவர் இறை தரிசனத்தைப் பெறும் தூரம் வெகு தொலைவில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். அவரவர் இல்லங்களில், திருத்தலங்களில் இந்த பிராணாயாம முறையை மேற்கொள்ளலாம் என்றாலும் கொண்டராங்கி மலையின் சிறப்பம்சமாக பல மாதங்கள் கிட்டும் உடல், மன உள்ளத் தூய்மையை ஒரு சில நாட்கள் பயிற்சியிலேயே பெற்று விடலாம் என்பதே. இந்த பிராணாயாம பயிற்சியை அர்ச்சுன வியூகத்தில் நிறைவேற்றி, தங்கள் சொந்த ஊரில் தொடர்வது என்பது அனைத்து அடியார்களும் நிறைவேற்றக் கூடிய ஒரு பிராணாயாம முறையே.

இவ்வாறு 3000 காலடிகள் உயரத்தில் அமையும் அர்ச்சுன வியூகத்தில் அமையும் ஒரு வழிபாட்டின் மூலம் 6000 மைல் உயரத்தில் திருஅண்ணாமலையில் நிலவும் கொண்டராங்கி சக்திகளை மக்களுக்கு ஒரு சாதாரண வழிபாட்டின் மூலம் பெற்றுத் தருபவர் மட்டும் அல்ல நம் சற்குரு. பக்தர்கள் கால் இடரி அதள பாதாளத்தில் விழுந்து விடாமல் தக்க தருணத்தில் கை கொடுத்து நம்மை காப்பாற்றுவதும் சற்குருவின் கருணையே!

எப்படி ?

சமீபத்தில் இறைவனடி சேர்ந்த ஒரு அடியாருக்கு ஒரு மகரிஷியின் பட்டத்தைத் தேர்ந்தெடுத்து அளிப்பதாக சில அடியார்கள் ஒன்று சேர்ந்து இந்த ‘பட்டத்தை’ அளிப்பதற்காக மற்றோர் அடியாரிடம் இந்த நிகழ்ச்சியை நடத்தித் தருமாறு கேட்டுக் கொண்டனர். இது ஒரு சீடரைக் கௌரவிக்கும் நல்ல எண்ணம் என்றாலும் இது சரியான எண்ணமா? இது சம்பந்தமாக நம் சற்குரு அளிக்கும் வழிகாட்டுதலை இங்கு அளிக்கிறோம்.

நம் சற்குரு பூமியில் 51 பிறவிகள் எடுத்துள்ளார். இவ்வாறு 51 மனிதப் பிறவிகள் எடுத்து பூமியில் மனிதனாக வாழ்ந்த காலம், அவை ராமானுஜரைப் போல் பூரண மனித ஆயுளுடன் திகழ்ந்தாலும், 6120 வருடங்களுக்கு மிகைப்படாது. திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசனத்தின் எதிரே அமைந்துள்ள ஜீவ சமாதியே நம் சற்குருவின் 51வது ஜீவ சமாதியாகும். தஞ்சாவூர் பகுதியை ஆண்ட மன்னன் மாறன்பெருந்துறையான், ராஜராஜ சோழன் தாயாரின் மெய்க்காப்பாளனாக அமைந்த பிறவி, கேப்டன் கந்தர்வாவாக இந்திய இராணுவத்தில் பணியாற்றிய காலம் இவை அனைத்தின் இறுதியிலும் ஒவ்வொரு ஜீவ சமாதி உருவாகி பூமியை நிறைத்தது என்பதை நாம் மறுக்க முடியாது.

கொண்டராங்கி குணக்குன்று

நம் சற்குருவைப் போன்ற சித்தர், சித்தராகத் தோன்றி இருந்தாலும், அல்லது 63 நாயன்மார்களைப் போல் மனிதனாகத் தோன்றி இறை தரிசனம் பெறுமளவிற்கு உயர்ந்திருந்தாலும் அவர்கள் ஆயுட்காலம் கோடானு கோடி ஆண்டுகளுக்கு பரவி விரிந்திருக்கும் என்பது திண்ணம். அப்படியானால் இந்த கோடிக் கணக்கான ஆண்டுகளில் நம் சற்குரு எடுத்த சித்த பிறவிகள், மகானாய்த் தோன்றி அருள் பொழிந்த காலம், யோகியாய்த் துலங்கி கர்மத்தைக் களைந்த ஆண்டுகள் எத்தனை எத்தனை என்று எப்படிக் கூற இயலும்?

கொண்டராங்கி காவல்படை

இதுவே நம் சற்குரு வெளியிடும் அரிதிலும் அரிய சித்த இரகசியம். ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலாபுரந்தர வாசுமாமுனி, பட்டாம்பூச்சி சிறகடி சித்தர், கஜதூளி பாத சித்தர் போன்ற எண்ணற்ற அரிய சித்தர்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. காரணம் என்ன? இவை அனைத்தும் நம் சற்குரு முந்தைய பிறவிகளில் பூமியில் எடுத்த அவதாரங்களே ! அப்படியானால், ஒரு சீடருக்கு ஒரு மகரிஷியின் நாமத்தை அளிக்க முயலும்போது, அந்தச் சீடருக்கு நாம் நம் சற்குருவின் நாமத்தை அளிக்க அல்லவா முற்படுகிறோம்?! அதனால், நாம் சற்குருவின் சீடரைப் பற்றியும் அறிந்து கொள்ளவில்லை, சற்குருவைப் பற்றி துளியும் புரிந்து கொள்ளவில்லை என்றுதானே அர்த்தமாகிறது...?

“குரு குருதான், சீடன் சீடன்தான்...”, என்பார் நம் சற்குரு. விவேகானந்தரும், “ஆயிரமாயிரம் விவேகானந்தர்கள் வந்தாலும் எம் சற்குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர் பாத தூளியின் ஒரு கோடியில் ஒரு அணுத் துகளுக்கு நிகராக முடியாது...,” என்று பணிவுடன் கூறுவார். இதுவே உண்மையான சீடனின் மாண்பு.

ஒரு முறை சற்குருவுடன் வடஇந்திய யாத்திரை சென்றபோது கேதார்நாத் திருத்தலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது, அவ்வாறு அடியார்கள் மிகவும் சிரமத்துடன் ஸ்ரீகேதார ஈசனை வணங்கித் திரும்பியவுடன் பலருக்கும் இவ்வளவு சிரமப்பட்டு, உயிரையே பணயம் வைத்து, ஒரு யாத்திரையை அடியார்கள் மேற்கொண்டால் அவர்களுக்கு ஈசன் அளிக்கும் அனுகிரகம் யாதோ என்று நம் சற்குருவைக் கேட்டனர். நம் சற்குருவோ வழக்கமான புன்னகை உதட்டில் தவழ, “உங்களை எல்லாம் பாதுகாப்பாக ஈசன் திரும்ப உங்கள் ஊருக்கு கொண்டு போய்ச் சேர்க்கிறான் அல்லவா, அதுதான் நீங்கள் கேதார்நாத் யாத்திரையில் பெறும் பலன்...”, என்று கூறினார்.

அப்போது பல அடியார்களால் இந்த பதிலில் பொதிந்திருந்த இறை கருணையை, சற்குருவின் வழிகாட்டுதலை புரிந்து கொள்ள முடியவில்லை என்பது உண்மைதான். ஆனால், பல்லாண்டுகள் கழித்து இன்று ஓரளவு தெளிந்த அறிவை குரு அருளால் பெற்ற அடியார்கள் கொண்டராங்கி திருமலைக்கு ஒரு அடியார் சென்று சிரமமில்லாது திரும்பி வருகிறார் என்றால் அது ஈசனின் பெருங்கருணையால்தான், தொடர்ந்து வரும் நம் சற்குருவின் வழிகாட்டுதலால்தான் என்ற பேருண்மையை உணர்ந்து கொள்ள வழிவகுக்கிறது. அதள பாதாளத்தில் சீடன் விழுந்து விடாமல் என்றும் அவனைக் காப்பது சற்குருவின் வலிமை மிகுந்த கரங்களே என்று உணர்த்துவதே கொண்டராங்கி வழிபாடாகும்.

கொண்டராங்கி சிறுமலையில் விளக்கேற்றி தொடர்ந்து இந்த ஒளிப் பிரகாசத்தை தரிசனம் செய்து வணங்கி வந்தால் நம் உள்ளத்தில் ஒளிரும் சற்குருவின் பேரொளியை என்றாவது ஒரு நாள் நாம் தரிசித்து எல்லையில்லா ஆனந்தத்தை அடைய முடியும்.

ஸ்ரீஅஷ்ட பைரவ மூர்த்திகள்
சதுரகிரி

ஒரு முறை ஒரு அடியாரின் திருமணத்திற்காக மதுரை சென்றிருந்தபோது அங்குள்ள சதுரகிரி மலையை தரிசனம் செய்து வருவதற்காக சில அடியார்கள் சேர்ந்த குழு ஒன்று புறப்பட்டது. அவர்கள் புறப்படும்போது மதிய நேரம் கடந்து விட்டதால் அவர்கள் சதுரகிரி மலையில் இறைவனை தரிசனம் செய்து திரும்புவதற்குள் நன்றாக இருட்டி விட்டது. ஒரு சிலர் வைத்திருந்த டார்ச் உதவியால்தான் அவர்கள் அடுத்த காலடியையே வைக்கும் அளவிற்கு அந்த மலைப்பகுதி இருட்டாக இருந்தது.

ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு சில ஓடைகளை அவர்கள் கடக்கும்படியும் ஆகி விட்டது. ஆனால், அவர்கள் புறப்பட்டது முதல் அடிவாரத்தை அடையும் வரை எட்டு பைரவ மூர்த்திகள் நாய் வடிவில் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். அடிவாரம் வந்த பின் அந்த பைரவ மூர்த்திகள் எங்கோ சென்று மறைந்து விட்டனர். இது பற்றி நம் சற்குருவிடம் கேட்டபோது தமக்கே உரிய பாணியில் சிறுநகையுடன், “அவர்கள் வேறு யாரும் அல்ல, பைரவ மூர்த்திகள்தான் உங்களுக்கு வழி காட்டியது... அஷ்ட பைரவ மூர்த்திகளையே தரிசிக்கும் பேறு உங்களுக்குக் கிட்டி விட்டது என்றால் நீங்கள் இப்பிறவியில் இனி சாதிக்க வேண்டியது என்ன? பெற வேண்டிய இறை அனுகிரகம் தான் என்ன?” என்றார்.

இதைக் கேட்ட அடியார்கள் எல்லாம், அதிலும் சதுரகிரிக்குச் சென்ற அடியார்கள், பிரமிப்பின் எல்லைக்கே சென்று விட்டார்கள்.

சற்குரு தொடர்ந்தார், “அதனால் இந்த அடியார்கள் எவரும் இனி சதுரகிரி மலைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை...”, என்றார். அஷ்ட பைரவ மூர்த்திகளை இனங் கண்டு கொண்டு அவர்களைப் புகழ்கிறார் என்றால் நம் சற்குரு சாட்சாத் சிவபெருமானைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?

இதோ என்றோ நடந்த குருவின் அடிமைகள் கண்ட ஆனந்த அற்புதம் கிடையாது. இன்றும் நம் அடியார்கள் கொண்டராங்கி திருமலைக்குச் சென்றபோது அவர்களை வழிநடத்திச் சென்றன மூன்று நாய்கள் என்றால் குருவின் கருணைக்கு எல்லைதான் ஏது, அண்ணாரின் அனுகிரகத்திற்கு ஈடு இணைதான் கூற முடியுமா?

கொண்டராங்கி சிறுமலை

கொண்டராங்கி சிறுமலையை அமைக்கும் விதத்தை இங்குள்ள வீடியோவில் காணலாம். மாதிரிக்காக இங்கு மல்லிகை மலர்ச்சரங்கள் சற்றே இடைவெளி விட்டு அமைத்திருந்தாலும் மலர்ச் சரங்களை எவ்வளவுக்கெவ்வளவு இடைவெளி இன்றி கெட்டியாக அமைக்கிறோமோ அந்த அளவிற்கு சிறுமலையின் உள்ளே அமையும் ‘வெற்றிடம்’ சக்தி உள்ளதாக அமையும். அதேபோல இந்த லிங்கத்தின் பட்டைகளை 8, 12, 16 என்ற விதத்திலும் அமைத்துக் கொள்ளலாம். குரு மங்கள கந்தர்வ அம்சங்களை குறிப்பதாக மல்லிகை, செவ்வந்தி, விருட்சிப்பூ என்ற மூன்று வாசமுள்ள மலர்கள் இங்கு அலங்காரத்திற்காக பயன்பட்டாலும் மல்லிகையுடன் அவரவர் வசதி, வாய்ப்புக்கேற்ற விதத்தில் மற்ற வாசமுள்ள மலர்களைப் பயன்படுத்துவதும் தவறு கிடையாது.

அவரவர் இல்லங்களில் அமைக்கும் சிறுமலையை மட்டும் இவ்வாறு திருஅண்ணாமலையாரின் சித்திரத்தின் கீழ் அமைத்துக் கொள்தல் சிறப்பு. திருத்தலங்களில், கொண்டராங்கி மலைத் தலத்தில் இந்த மலர்க் கூண்டுகளை அமைக்கும்போது அந்த இறை மூர்த்திகளே கொண்டராங்கி சக்திகளை வர்ஷிக்கும் சக்தி பெற்றுள்ளதால் அங்கு இது பற்றி கவலை கொள்ள வேண்டாம்.

ஒரு முறை கும்பகோண மகாமக வைபவத்தின்போது நம் சற்குரு கும்பகோணத்தில் ஒரு வார காலத்திற்கு அன்னதான கைங்கர்யங்களை நிகழ்த்தினார். அன்னதானம் எல்லாம் நிறைவேறிய பின் மகாமக தீர்த்தத்தை நம் சற்குருவே அடியார்கள் தலையில் எல்லாம் ஒரு கமண்டலம் மூலம் வட்ட வடிவில் ஊற்றி அனுகிரகத்தை அள்ளி வழங்கினார். இந்த குரு அனுகிரகம் சாதிக்கும் பல சாதனைகளில் ஒன்றே அடியார்களின் திருவாசி பெருகுவதாகும்.

ஸ்ரீபாலாம்பிகை திருவாசி

திருச்சி அருகே உள்ள திருவாசி திருத்தலத்தைப் பற்றி நாம் அறிவோம். மக்கள் சூட்சும சரீரத்தைச் சுற்றி உள்ள திருவாசியைப் பெருக்குவதே ஒவ்வொரு இறை அடியாரின் கடமை ஆகும். இந்த திருவாசி என்னும் ஒளிவட்டம் எந்த அளவிற்கு பெருகி உள்ளது என்பது அவர்களின் சிற்றறிவிற்கு எட்டாது எனினும் சற்குருவின் மேல் உள்ள ஆழ்ந்த நம்பிக்கையைப் பொறுத்து அவர்கள் நிறைவேற்றும் நற்காரியங்கள் மூலம் மட்டுமே இந்த திருவாசியின் ஒளி வட்டம் பெருகும். இந்த அற்புதத்தை தொட்டுக் காட்டிய வித்தையாக தம் அடியார்கள் அனைவருக்கும் வழங்கியவரே நம் சற்குரு.

சற்குருவைக் காணாத தற்போது உள்ள அடியார்கள் என் செய்வது? அவர்களுக்கும் அருள் புரிவதே கொண்டராங்கி மலையில் நாம் இயற்றும் வழிபாடுகளாகும். கொண்டராங்கி சிறுமலையில் நாம் உச்சியில் சுற்றும் மஞ்சள் நிற செவ்வந்திப் பூக்களே சற்குருவின் அனுகிரகத்தை திருவாசி அனுகிரமாக அடியார்களுக்கு வழங்கும் என்பதே சற்குரு சுட்டிக் காட்டும் ஆன்மீக இரகசியமாகும். இந்த அனுகிரகத்தை அதிக அளவில் பெறுவதற்காகவே கொண்டராங்கி சிறுமலையைச் சுற்றி எவ்வளவுக்கு எவ்வளவு மல்லிகைச் சரங்களை நெருக்கமாகச் சுற்ற முடியுமோ அந்த அளவிற்கு நெருக்கமாகச் சுற்றி உள்ளே அமையும் ‘வெற்றிடத்தின்’ சக்திகளைப் பெருக்குமாறு வலியுறுத்துகிறோம்.

இதில் மற்றோர் அம்சம் என்னவென்றால் விட்டில் பூச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். சற்று காலம் முன் வரை மழை காலத்தில் அதிக அளவில் தோன்றிய விட்டிப் பூச்சிகள் தற்போது பெருமளவு குறைந்து விட்டன. சரி, விட்டது தொல்லை ... என்று பலர் நினைக்கலாம்.

எப்போது?

விட்டில் பூச்சிகளின் சேவையைப் பற்றி நாம் அறியாதபோது ...

விட்டில் பூச்சிகள் ஒரு விளக்கைச் சுற்றி 30 டிகிரி கோண அளவில் சுற்றி வருகின்றன. மேலும் அவை தீபத்தை நெருங்கும் விதமும் குருவிற்கு உரித்தான பொன் விகிதத்தில் (golden ratio) அமையும். இதனால் பெருகும் நற்சக்திகளின் விளைவால் தொற்றுநோய்களின் பாதிப்பு பெருமளவில் குறையும். விட்டில் பூச்சிகளின் நடமாட்டம் தற்போது குறைந்து விட்டதால் தொற்றுநோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளதை நீங்கள் உணர்வீர்கள். அதே போல் கழுகுகள், கருடன்கள் போன்ற பறவைகளும் தங்கள் இரையை நெருங்கும்போது பொன் விகிதத்தில்தான் பறக்கின்றன என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் ஆன்மீக விந்தையாகும்.

கொண்டராங்கி சிறுமலையை வழிபாட்டிற்காக பயன்படுத்திய பின் அந்த கூண்டில் வண்ண வண்ண விளக்குகளை ஏற்றி வைத்து தங்கள் வீட்டின் முன் தொங்க விட வேண்டும் என்று சிபாரிசு செய்வது இவ்வாறு சமுதாயத்தில் தோன்றும் தொற்றுநோய்களின் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் என்பது இப்போது புரிகின்றது அல்லவா?

கொண்டராங்கி குருவர்ஷம்

திருத்தலங்களில் பரிவட்டம் சார்த்துவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பங்குனி உத்திரம், திருவாதிரை, கும்பாபிஷேகம் போன்ற திருவிழாக்களின் போது அந்த உற்சவங்களுக்கு பொருளுதவி அளித்து அல்லது பலவகைகளில் உதவி புரிந்த பெரியோர்களுக்கு, கனவான்களுக்கு திருக்கோயில் சார்பாக அளிக்கப்படும் மரியாதையே பரிவட்டம் சார்த்துதல் என்பதாகும்.

உங்களுக்குத்தான் “கிலி” (பயம்)
போக்க சங்கிலி, எங்களுக்கு என்ன என்று
அர்ச்சுன வியூகத்தில் இளைப்பாறும்
பைரவ மூர்த்தி

குரு வருடமான 1992ம் ஆண்டு நம் சற்குரு திருத்தவத்துறை லால்குடியில் உழவாரப் பணிகள் நிறைவேற்றியபோது சற்குருவிற்கு கோயில் சார்பாக பரிவட்டம் சார்த்தி மரியாதை வழங்கப்பட்டது. அப்போது திரண்ட சக்திகளை எல்லாம் ஸ்ரீஸ்ரீமதி அம்மன் திருத்தலத்தில் பெற்று அதை லட்சுமி கடாட்ச சக்திகளாக இந்த பூவுலகு அனைத்திற்கும் அருளியவரே நம் சற்குரு. அற்புதமான இந்த நிகழ்ச்சியை தரிசிக்கும் வாய்ப்பு பெற்ற பலர் இப்போது இருந்தாலும் அந்த அரிய வாய்ப்பை தவற விட்டவர்களுக்கும் துணைபுரிவதே இந்த சோபகிருது வருடத்தில் நாம் கொண்டராங்கி திருமலையில் நிகழ்த்தும் வழிபாடுகளாகும்.

சோபகிருது ஆண்டில் மேக கந்தர்வர்கள் என்ற அரிய கந்தர்வர்கள் நம் சற்குருவிற்கு குருமங்களகந்தர்வ லோகத்தில் அளிக்கும் இந்த அற்புத மரியாதையை நாம் தரிசிக்கும் தகுதி பெறா விட்டாலும், இந்த சோபகிருது வருடம் முழுவதும் இந்த வழிபாட்டில் திகழும் லட்சுமி கடாட்ச சக்திகளை குறித்த வழிபாடுகளின் மூலம் பெறலாம் என்பதே இந்த சித்த மரியாதையின் பின்னணியில் அமைந்த இரகசியமாகும்.

நம் சற்குருவிற்கு பூலோகத்தில் அமைந்த 51 ஜீவ சமாதிகளையும் நாம் தரிசிப்பது என்பது சற்றும் இயலாத காரியம். இந்த ஜீவ சமாதிகளின் இருப்பிடத்தையே நாம் தெரிந்து கொள்ள முடியாதபோது அவைகளைத் தரிசிப்பது என்ற பேச்சிற்கே இடமில்லை அல்லவா? ஆனாலும் இந்த ஜீவ சமாதிகளில் நாம் வழிபட்ட பலன்களை குருவர்ஷமாக இந்த சோபகிருது வருடத்தில் அளிப்பதே நம் சற்குருவின் பெருங்கருணை மழையாகும்.

இந்த கருணை மழையில் நனைய விரும்புவோர் இந்த சோபகிருது வருடம் முழுவதும் அர்ச்சுன வியூகம் என்னும் மலை உச்சியில் அட்ட நமஸ்காரம் என்ற நமஸ்கார பத்ததியை மூன்று முறை நிகழ்த்தி வழிபடுவதாகும். 3 x 8 = 24 = 6, 51 = 5+1 = 6 என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் எண் கணித சூத்திர இரகசியமாகும். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு, வட மேற்கு, வட கிழக்கு என்ற திசைகளை நோக்கி சாஷ்டாங்கமாகவோ, அல்லது ஸ்வஸ்தி நமஸ்கார பத்ததியிலோ வணங்கி பயன்பெறலாம்.

பல வருடங்களுக்கு முன்னர் கணவன் மனைவி ஒற்றுமையை வளர்க்கும் ஒரு தியான முறையை நம் சற்குரு அளித்திருந்தார். அதை திருமணம் ஆகாதவர்களும், கணவன் அல்லது மனைவியை இழந்தவர்களும் எப்படி பயன்படுத்துவது என்ற ஒரு சில அடியார்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு தர்ப்பாசயன தியான முறை என்பதாக அளித்துள்ளார். இம்முறையை கைக்கொள்ள விரும்பும் திருமணம் ஆகாத அடியார்களும் மற்றவர்களும் கொண்டராங்கி திருமலையில் அர்ச்சுன வியூகத்தை மேற்குறித்த முறையில் தரிசனம் செய்து தங்கள் இல்லங்களில் நம் சற்குரு அருளிய அப்தோர்யாம தியான முத்திரையை தொடர்ந்து பழகி வந்தால் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

இவ்வாறு தம்பதிகள் இருவர் நிறைவேற்றக் கூடிய ஒரு தியான முறையை ஒருவர் மட்டுமே பயன்படுத்தி அருள்பெறும் முறையை நமக்கு அளித்த நம் சற்குரு தன்னுடைய எத்தனை வருட புண்ணிய சக்திகளை தாரை வார்த்து இறைவனுக்கு அளித்தார் என்பது அந்த அண்ணாமலையாருக்கே வெளிச்சம் !

எண்சீர் கெடிலம் நெடிலம்

திருப்பதி திருமலையில் ஸ்ரீவெங்கடாஜலபதி பெருமாள் அருளும் அனுகிரகமே ஏழுமலையான் எண்சீர் நெடில் சக்திகள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அபூர்வமான இந்த சக்தியை திருமலையில் மட்டுமல்லாது கொண்டராங்கி திருமலையிலும் பெற நம் சற்குரு வழிவகுக்கிறார் என்பதாலும் கொண்டராங்கி மலை திருமலை என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறது.

கொண்டராங்கி திருமலையில் அர்ச்சுன வியூகத்தை எட்டு திசைகளிலிருந்து அஷ்ட நமஸ்கார பத்ததி முறையில் வணங்கும்போது பரிமாணங்கள் கடந்த நிலை உண்டாகின்றது. இதை சற்றே விளக்குவோம். ஒரு வட்டமான ரப்பர் டயரை எட்டு வடிவில் வளைத்தால் அதில் இரண்டு பூஜ்யங்கள் உண்டாகின்றன. ஆனால் இந்த இரண்டு பூஜ்யங்கள் வழியாக பார்வையை ஓட்டிக் கொண்டே ஆரம்ப இடத்திற்கு வந்தால் அங்கு ஒரு பூஜ்யம் மட்டும்தானே மிஞ்சும். இந்த இணைப்பே அட்ட நமஸ்கார பத்ததியில் இணையும் நான்கு நமஸ்காரங்கள் ஆகும். நான்கு நமஸ்காரங்கள் இடையே இணையும் நான்கு நமஸ்காரங்கள் இரண்டு பூஜ்யங்களின் இணைப்பாக அமைகின்றது.

சென்னை ஸ்ரீரேணுகாம்பாள்
திருத்தலத்தில் புத்தாண்டு வழிபாடு

திருவதிகை திருத்தலத்தில் பொலியும் கெடிலம் நதி தென் கங்கை என்று அழைக்கப்படுகிறது. வடக்கே பாயும் கங்கை நதி தெற்கே பாயும் இந்த கங்கைக்கு இணையானது என்பது இதன் ஒரு பொருள் ஆயினும் குருவின் அனுகிரகமான, தெற்கு நோக்கி அருளும் தட்சிணா மூர்த்தியின் அருள் பிரவாகம் என்பதையும் இது குறிக்கும் அல்லவா? இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால்தான் எப்படி அஷ்ட நமஸ்கார பத்ததி பூஜ்யம் என்பது நேர்கோடு என்ற சித்த வாக்கியத்தின் பிரவாகமாக அமையும் என்ற சுவையும் தெரிய வரும்.

கொண்டராங்கி திருமலையில் பொலியும் இந்த நெடில் சக்திகளைப் பூரணமாக பெற விரும்பும் அடியார்கள் கொண்டராங்கி திருமலையில் அர்ச்சுன வியூகத்தில் அஷ்ட நமஸ்கார பத்ததியில் வணங்கி வழிபாடுகள் இயற்றிய பின்னர் தங்கள் இல்லங்களில் அல்லது திருத்தலங்களில் விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அதாவது காலையில் 3.30 மணி முதல் 5.30 மணிக்குள் குறைந்தது 8 x 8 = 64 முறைக்குக் குறையாது பிரம்ம காயத்ரீ மந்திரத்தை ஜபித்தல் நலமே. இதற்கு மேலும் காயத்ரி ஜபத்தை தொடர்வதும் ஏற்புடையதே. இதனால் 8 x 8 x 8 ... என்பதாக மந்திரத்தின் பலன்கள் பெருகி அதன் விளைவாக பிறவிகளும் மாயும் என்பதே நம் சற்குரு பரிந்தளிக்கும் அனுகிரகமாகும்.

பெருமாளின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதாரம் தன் தந்தையின் உத்தரவின்படி தன் தாயின் தலையையே பரசு ஆயுதத்தால் துண்டித்த அவதாரமாகத் துலங்கியது என்பதை நாம் அறிவோம். இதன் பின்னணியில் அமைந்த ஆயிரமாயிரம் தெய்வீக மகத்துவங்களை சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஸ்ரீரேணுகா தேவி என்பதாக பாரதம் முழுவதிலும் அன்னை பராசக்தியின் அம்சமாக வழிபடப்படுகிறாள் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும். கொண்ட ராங்கி, அதாவது தான் ஈசனின் மனைவி என்ற கௌரவம் மேலிட, அதுவே அனைவரும் வணங்க வேண்டிய சக்தி அம்சமாக உருவெடுத்த திருமலையே கொண்ட ராங்கி என்பதற்கு எடுத்துக் காட்டாக குரோம்பேட்டை சென்னையில் ஸ்ரீரேணுகா தேவியின் திருத்தலத்தில் இந்த சோபகிருது புத்தாண்டு வழிபாடு வைபவம் நிகழ்ந்ததை பறைசாற்றுகிறது.

நம் சற்குருவால் புனருத்தாரணம் இயற்றப்பட்ட சக்தி திருத்தலமே இது என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு அனுபூதியாகும்.

தொடரும் கொண்டராங்கி குசல தீபம்...

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam