தானத்தில் சிறந்தது நிதானம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

கோவணாண்டிப் பெரியவரிடம் சிறுவன் பெற்ற குருகுலவாச அனுபூதிகள் ஏராளம், ஏராளம்! ஒரே நாளிலேயே முப்பது, நாற்பது என இறைஅனுபூதிகளைக் குருகுல வாசத்தில் அள்ளித் தந்த பெரியவர் இவை பல்லாயிரக் கணக்கானோரையும் சென்றடைய வேண்டும் என்று அருட் பூர்வமாகச் சங்கல்பித்தமையால் தானே, உங்கள் கைகளிலும், மனதிலும் இவ்வினிய குருகுல வாச அனுபூதிகள், “ஸ்ரீஅகஸ்திய விஜய” விருந்தில், அமிர்தமாய்ப் பரிணமிக்கின்றன. வெள்ளியங்கிரியில் சிறுவனுக்குப் பழைய சம்பவங்கள் மலரலாயின.!

நடையப்ப நடராஜ சிவம்!

ஒரு நாள்...

அங்காளி கோயிலுக்குள் தினசரிச் சுற்றுக்களை முடித்துக் களைப்புடன் வெளி வந்த சிறுவனை அப்படியே அழைத்துக் கொண்டு, வெகு வேகமாக எங்கோ நடக்கலானார் பெரியவர்.

இனிய இணைப்பு கீதம்!

நடுவில் ஆங்காங்கே... ரிக்ஷாக்களிலும், பஸ்களிலும், ஏறி, இறங்கியதைச் சிறுவன் உணர்ந்தானே தவிர, எங்கு போகிறோம் என அவனுக்கே தெரியவில்லை! காரணம், கோயிலில் வெகுநேரம் அடிப்பிரதட்சிணம் வந்து தொடர்ந்து மூன்று மணி நேரம், நடந்து வந்த களைப்பில், சிறுவன் ரிக்ஷாவில், பஸ்களில் சீட்டில் சாய்ந்து நன்கு உறங்கி விட்டமையால், அவனுக்கு ஒன்றுமே புரியாது போயிற்று!

“பஸ் பிரயாணத்தில் தூங்கக் கூடாது, பிற பயணிகளுக்காகவும் சேர்த்து ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிக்க வேண்டும்!” என்ற பெரியவரின் கட்டளையை அன்று அவனால் கடைபிடிக்க இயலவில்லை! அவன் மிகவும் களைப்பாக இருந்தமையால், பெரியவரும், அவனை அரவணைத்துக் கொண்டே ஆங்காங்கே அலைந்தார்.

ராயபுரம் அங்காளி ஆலயத்தில் புறப்பட்டது தான் சிறுவனுக்குத் தெரியும். அதன் பிறகு அங்கங்கே கண்களைத் திறந்து பார்த்தானே தவிர, எந்த இடமும் அவனுக்குப் புரிபடவில்லை!

பெரியவருடன் திருவொற்றியூர் ஆலயத்திற்கு அடிக்கடி நடந்தே சென்று பழகிய சிறுவனுக்கு...

அவருடன் திருஅண்ணாமலைக்குச் சென்னையிலிருந்து நடந்தே சென்று ஆனந்தம் அடைந்த சிறுவனுக்கு...

நடை என்பது மிக மிகப் பிரியமானதாகவும் ஆயிற்று! ஏனென்றால், பாத யாத்திரையாக அவருடன் கூட நடந்தால்தானே, பெரியவரிடம் இருந்து செவிக்கும், வயிற்றுக்கும் நிறைய விருந்து கிடைக்கும்!

எங்கெங்கேயோ சுற்றிய பெரியவர், ஓரிடத்தில் சிறுவனை பஸ்ஸிலிருந்து இறக்கி விட்டு, “எலேய் போதும்டா தூங்கினது! பின்னாலேயே வேகமா வா!” என்று கூறியவாறே, மிக விரைவாகவே நடக்கலானார்.

குணம் நல்கும்
கூத்தைப் பாரும்! வலிவலம்

நாடி, தேடி, பாடி, ஆடி, ஓடிக் கூடுவதே குருபாடகம்!

குதிரை நடையாய்ப் பறந்த பெரியவரை ... நடையில் பிடிப்பது கடினமானதாகையால் சிறுவன் தூக்கக் கலக்கத்தில் அவர் பின்னாலேயே ஓடி, ஓடித் தொடரலானான்.

அது மெட்ராஸ்தானா? வேறு ஊரா? சிறுவனுக்கு எதுவுமே புரிபடவில்லை! இவ்வளவு தூரம் நடந்ததுக்கு, “இன்னொரு பஸ்ஸில் ஏறுவார், பஸ்ஸின் போர்டில் ஊர்ப் பெயரைப் படிக்கலாம்!” என்றே சிறுவன் முதலில் நினைத்தான்.

ஊஹூம், பெரியவரோ எதற்கும் அசைவதாக இல்லை. ஏதேதோ பஸ் நிறுத்தங்களைத் தாண்டிய அவர், ஏதோ வழி தெரியாதவர் போலவே வெகு தூரம் நடந்தார்.

“ஒருவேளை ரயிலில் ஏறிச் செல்லப் போகிறாரோ!”

ரயில் பிரயாணம் என்றாலே அவனுக்குக் கொள்ளைப் பிரியமாயிற்றே!

“எதைப் பற்றியும் கவலைப் படாமல் கோவணாண்டியாகவே உலகம் சுற்றும் இவரை எந்தக் கணக்கில் வைப்பது?”

அவரெங்கே , நானங்கே...!

இடையில் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன் வந்திட....

அதனருகில் இருந்த வீதியில் விரைவாகத் திரும்பி, அங்கிருந்த பெரிய ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார் பெரியவர். அவர் “விக்கெட் கேட்டில்” குறுக்கே நுழைந்தமையால், ஆஸ்பத்திரி போர்டைக் கூட அவனால் படிக்க முடியவில்லை! மேலும், வேண்டுமென்றே அவர் ஆஸ்பத்திரியின் பின்புறக் கேட்டில் நுழைந்து விட்டதால் அவனுக்கு எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை!

ஆனால் அந்த ஏரியாவிற்கு மிகவும் பரிச்சயமானவர் போல, பெரியவர் கிடுகிடுவென்று மூன்று மாடிகளைக் கடந்து, வளைந்து, வளைந்து சென்றார்.

எங்கு நடந்தாலும் குப்.. குப்பென்று ஒரே ஆஸ்பத்திரி வாசனை!

அங்கா? இங்கா? எங்கோ அவர்?

திடீரென்று ஏதோ ஒரு அறைக்கு முன் நின்றார் பெரியவர்.

“ஐயருக்கு ஒடம்பு சௌக்யமாயிடுச்சா?”

எதிரில் வந்த நர்ஸ் உதட்டைப் பிதுக்கினாள்.

“அப்படீன்னா...?” பெரியவர் அவசர அவசரமாகக் கேட்டிட...

நர்ஸ் வானில் கைகளை உயர்த்திக் காட்டினாள்.

“ஏம்மா நல்லா வாயைத் தொறந்துதான் சொல்லேன்! ஐயருக்கு என்னவாச்சுன்னு!”

நர்ஸின் கண்கள் கலங்கின..!

சிறுவனுக்குப் பெரியவர் மேல் கோபம் கோபமாக வந்தது.

“என்ன இது, உதட்டைப் பிதுக்குதல், கைகளை உயரக் காட்டுதல், கண் கலங்குதல் இவற்றை வைத்துக் கொண்டு அந்த ஐயருக்கு என்ன ஆச்சுன்னு தெரிந்து கொள்ள முடியாதா என்ன? ஏன் இப்படி ஒண்ணும் தெரியாதவர் போல், அதுவும் இங்கு வந்து இவர் வேஷம் போடுகிறார்!”

அப்போது அங்கு வந்த ஒரு டாக்டரிடமும் பெரியவர் இதனையே கேட்டார்.

அந்த இளவயது டாக்டரின் கண்கள் பனித்தன..

“நல்ல மனுஷன், என்ன பண்றது? விதி!”

அவரும் வானில் உயரே கைகளைக் காட்டினார்.

“பெரிய டாக்டர் வராரு.. பெரிய டாக்டர் வராரு!..” – என்று கிசுகிசுத்த குரலில் பலரும் சொல்லியவாறே ஒதுங்கி நின்றிட, அந்த ஆஸ்பத்திரி வராந்தாவே திடீரென்று அமைதி ஆகி விட்டது.

பெரியவரோ எதற்கும், எவருக்கும் பயப்படுவது போல் தெரியவில்லை. ஆங்கே மிகவும் தளர்ச்சியோடு வந்து கொண்டிருந்த பெரிய டாக்டரைக் குறுக்கே வழிமறித்து, அந்த அறையைக் காட்டி,

“அந்த ஐயருக்கு என்னாச்சு?” என்று கைகள், விரல்களையும் ஆட்டி ஆட்டிக் கேட்டிட,

பெரிய டாக்டரோ திகைத்துப் போய் நின்றார். அவருடைய கண்களில் நீர் திரண்டது. பதிலேதும் பேசாமல் டக்கென்று வந்த வழியே திரும்பிப் போய் விட்டார்!

சிறுவன் திகைத்தான்!

பெரியவர் திபுதிபு வென்று அந்த அறைக்குள் நுழைந்தார்.  உள்ளே...

பழுத்த முதியவர் ஒருவர் கட்டிலில் தலைதொய்ந்து கிடந்தார். கண்கள் மேலே செருகியது போலான நிலை...

என்னாச்சு இவருக்கு?

பெரியவர் அவரைப் பார்த்துச் சிரித்தார்.

சிறுவன் இப்போது பெரியவரை வெகு விநோதமாகப் பார்த்தான்!

“என்னாச்சு இன்னிக்கு இவருக்கு? இவரைப் பாத்தா எனக்கே பயம் வந்துடும் போல இருக்கே!”

பெரியவர் நல்ல உரத்த குரலில் ஆஸ்பத்திரியே அதிரும் வண்ணம் பேச ஆரம்பித்தார்.

“வெங்கட சுப்ரமண்யம்னு பேருடா... ஊர்ல என்ன பேரோ தெரியாது! நாங்க இவரை வெங்கட சுப்ரமண்யம்னுதான் கூப்பிடுவோம்! பெரிய ஜோஸ்யரு! ஜோஸ்யத்துல அத்தனை விஷயமும் அத்துப்படி! உத்தமமான மனுஷன்! கலியுகத்துல இவரை மாதிரி இப்போதைக்கு ஒண்ணு இரண்டு பேருதான் இருக்காங்க..

ஆரியபட்டர், வராஹமிகிரர் எல்லோருமே, இவரைப் பார்த்தாலேயே, வானத்துலேந்து நமஸ்காரம் பண்ணுவாங்க!”

பெரியவருடைய கண்கள் கலங்கின..

“எதற்கும் அசையாதவரா இன்று கலங்குகிறார்?”

“கண்ணீர் இல்லையடா கண்ணு! இவரோட சத்தியக் கிணத்துல அன்புதாண்டா நீரோட்டமாப் பொங்குது?”

“இவர் ஒண்ணு சொன்னார்னா அது நிச்சயமா நடக்கும், நடந்தே ஆகணும்! மழை பெய்யும்னா இவர் சொன்னா அன்னிக்கு மழை பெய்தாகணும்! இல்லாட்டி வருண மூர்த்திக்கே சாபம் வந்துடும்! அந்த அளவுக்குப் புனிதமும், வாக்கு சுத்தியும் நெறஞ்சவரு! நடமாடும் சத்திய கீர்த்தி! அவரோட வார்த்தையில ஒரு அட்சரமும் பிசகாது. சொல்றது சத்தியமாவே நடக்கும்! காசு, பணத்துக்கு ஆசைப் படாத மனுஷன்! ஏழைகளுக்கு நெறய உதவி செஞ்சவரு!”

“இவரு பூலோகத்தை விட்டுப் புறப்படற நேரம் வந்துடுச்சுன்னு, எம தூதுவர்களே இங்கேயே நேரேயே வந்துட்டாங்க! ஆனா, என்ன அதிசயம் அந்த எம லோகத்துல! இப்ப அங்கே என்ன நடக்குதுன்னு உனக்குத் தெரியுமா?”

பெரியவர் சற்றே நிறுத்தினார். மேலே வானத்தை நோக்கித் தலையை உயர்த்திப் பார்த்தார்.

“இதோ பாருடா!”

உள்ளங்கையில் ஒளித் திரை! அதில் தெள்ளியதாய் தேவலோகங்கள்தாம்!

பெரியவர் தன் வலது உள்ளங் கையைத் திறந்து காட்டிட...

ஆம், பெரியவரின் PALM TVயில், அதாவது அவருடைய உள்ளங்கையில்.... பல ஆண்டுகளுக்கு முன்னரேயே,

..... கம்ப்யூட்டர்கள் வருவதற்கு முன்னேயே, பெரியவரால் சிறுவனுக்கு மிகவும் தீர்கத் தரிசனமாக அவருடைய உள்ளங்கையிலேயே பல லோகக் காட்சிகளும் வீடியோ போல நன்கு தெரியும்..

அதில் காணும் நிகழ்ச்சிகள் யாவும் சிறுவனுக்கு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தன.

ஆம் தற்போது, பெரியவரின் உள்ளங்கை PALM TVயில்.., படுக்கையில் கிடந்த முதியவர்தான், ஏதோ ஒரு லோகத்தில் (எம லோகமோ!) தங்கத்தாலானது போலான சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் காட்சி தெளிவாகத் தெரியலானது!

ஜடாமுடி தரித்த மகரிஷிகள் அவரைச் சுற்றிலும் நிற்க...

இதைவிட என்ன அற்புதம் என்றால்... கோவணாண்டிப் பெரியவரும், மஹரிஷிகளோடு மஹரிஷிகளாய் அங்கும் கோவணதாரியாய் நின்று கொண்டிருந்தது தான்..!!

எம தர்ம ராஜா அரியணையில் வீற்றிருக்க...

பெரியவர் டக்கென்று கையை மூடிக் கொண்டார்...

“இவ்வளவு தாண்டா நீ பார்க்கலாம்!”

சிறுவன் பெரியவரை ஆழமாகப் பார்த்தான். அவனுக்குப் பேச்சு, மூச்சே வரவில்லை!

உள்ளங்கையில் பார்த்த எமலோகக் காட்சிகள், அவன் மனதை நன்கு உலுக்கி இருந்தன.!

உயிர் மீட்பு (பனி)ப் படலமா?

பால் வடியும் முகத்துடன் கிடக்கும் இந்த ஜோஸ்யக்கார முதியவரா..?!

சிறுவன் தத்தளித்தான்! பெரியவர் வெகுவேகமாக அந்தக் கட்டிலின் அருகில் சென்றார். அதன் பிறகு சிறுவனால் அங்கு என்ன நடந்தது என்று யூகிக்கவே முடியவில்லை.

காரணம், அவ்விடத்தில் திடீரென்று ஒரே பனிமயம் பூண்டு இருந்ததுதான்!

சிறுவனால் தற்போது ஒன்றும் பேச முடியவில்லை, சற்றும் நகரவும் முடியவில்லை! சுற்றிலும் அந்த அறை முழுதும் எங்கும் பனி போன்று வெண்மைச் செம்மை நிறைந்திருந்தது! எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை!

சில நிமிடங்களில் அந்தப் பனி மண்டலத்திலிருந்து வெளி வந்த பெரியவர்,

“வாடா, நம்ப வேலை முடிஞ்சது! புறப்படலாம் வா!”

சிறுவனை இழுத்துக் கொண்டு வெகுவேகமாகப் பெரியவர் வெளியே வந்தார்.

“கலியுகத்துல, எம லோகத்துக்கு மனுஷ உடம்போட போன உத்தமர்டா இவரு!”

பெரியவர் ஏதேதோ சொல்லிக் கொண்டே முன் செல்ல...

சிறுவன் தன்னையே மறந்தான்!

மீண்டு (உ)வந்தாரையா!

மாடிப் படியில் கடைசியாக இறங்கும் முன்... அங்கிருந்தவாறே முதியவர் படுத்திருந்த அறையை நோக்கி நோட்டம் விட்டான் சிறுவன்!

“ஆ!” சிறுவன் தன்னையும் அறியாமல் கூக்குரலிட்டான்.

பெரியவர் கலகலவென்று சிரித்தார்!

ஆம், சிறுவனுக்குத் தூக்கி வாரிப் போடும் வகையில்...

....ஆம், அந்த ஜோஸ்யக்கார உத்தம முதியவர்தான் கட்டிலை விட்டுக் கீழே இறங்கி மெதுவாக வெளியே நடந்து வந்து கொண்டிருந்தார்.

பெரியவர் சற்றும் திரும்பிப் பார்க்காமலேயே மீண்டும் கலகலவென்று சிரித்தார்!

“சரி! சரி! திரும்பிப் பார்க்காம என் பின்னாலேயே வந்து சேர்!”

ஆனால் ஆவல் பெருகியதன் காரணமாக மேலும் மேலும் அவன் திரும்பிப் பார்க்க முயலவே...

பெரியவர் சிறுவனைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஆஸ்பத்திரி வாசைலை விட்டு வெளியே வெகு வேகமாக வந்து விட்டார்!

பெரியவர் இப்போது மிகவும் அமைதியாகப் பேசலானார்...

“நீயும் இந்த மாதிரி உத்தமர்களை வாழ்க்கையிலே நெறய தரிசனம் பண்ணி ஆகணும்டா! இந்த மாதிரி, இந்த பூலோகத்து மனுஷங்களுக்குத் தெரியாம எவ்வளவோ தெய்வீகமான சம்பவங்கள் ஒவ்வொரு விநாடியும் தெனமுமே பூமியில நடந்துக்கிட்டுத்தான் இருக்கு! ஆனா சற்குருவை மதிச்சு நடந்தாத்தானே இதெல்லாம் தெரிய வரும்! இல்லாட்டிப் பத்தோட பதினொன்னுன்னு யாருக்கும் பிரயோஜனமில்லாம வாழ்ந்துகிட்டுப் போக வேண்டியதுதான்!”

தமிழ்ப் புத்தாண்டு

புத்தாண்டு பூர்ணக் கும்ப பூஜை

13.4.2005 புதன்கிழமை அன்று நள்ளிரவு 12.10 மணிக்குச் சூரிய மூர்த்தி மேஷ ராசியில் அஸ்வினி நட்சத்திர முதல் பாதச் சஞ்சரிப்புடன் பிரவேசிக்க, பார்த்திபத் தமிழ்ப் புத்தாண்டு தொடங்குகின்றது.

13.4.2005 அன்று நள்ளிரவுக்கு முன்னேயே, மேஷ ராசியில் சூரிய மூர்த்தியைப் பூர்ண கும்பத்துடன் வரவேற்க, பூஜைக்கான ஆயத்தங்களை ஆற்றிடுக!

ராசிக் கோலச் சக்கரம் வரைந்திடுக!

28 புள்ளிகளில் சூரியக் கோலமிட்டு, இயன்றால் அன்றைய கிரக சஞ்சாரங்களை உணர்த்தும் ராசிச் சக்கரப் படம் வரைந்து, ராசிச் சக்கரக் கோலத்தில் அனைத்துக் கோள்களையும், நவதானியம், அந்தந்த கிரஹ வண்ணம், அந்தந்த ராசிக் கற்கள் மூலம் நிலை நிறுத்திப் பூஜிக்க வேண்டும்.

சூரிய மூர்த்தியின் தேரைச் சுற்றி சகல வேத மந்திரங்களையும் ஓதியவாறு கட்டை விரல் அளவே உள்ள வாலகில்ய மகரிஷிகள் எப்போதுமே வலம் வருவதால், கட்டைவிரல் அளவில் அல்லது அதற்குச் சிறிய வடிவில் உள்ள கிஸ்முஸ் திராட்சை, கருந்திராட்சை, பன்னீர் திராட்சை, நாவல் பழம், பெரப்பம் பழம், அரநெல்லி, முழு முந்திரி போன்ற தெய்வீகக் கனிகளை, திரவியங்களை ராசிச் சக்கரத்தைச் சுற்றி அலங்காரமாக வைத்து,

பார்த்திப தமிழ் புத்தாண்டு

சூரியப் பிரவேச நேரத்தில், தமிழ் மற்றும் தேவமொழி மாமறைத் துதிகளை ஓதியவாறு, தேவபூர்ண கும்ப பூஜை ஆற்றிடுக!

மேஷப் பிரவேசச் சூரிய மூர்த்தியை பூரண கும்பம் வைத்து வரவேற்று வணங்குதல் சிறப்புடையது. ஒரு பித்தளை, தாமிரச் செம்புக் குடத்திற்கு நூல் சுற்றி, குடத்தின் உள்ளே,

“கண்டீஸ்வர சிவபாதத் தீர்த்த மாஸ்ரயம்
சிந்தூர சிவநேச சிவபாத மஹாலிங்கம்”

“நீலகண்டச் சிவநாதச் சிவத் தீர்த்தமானதுவாம்’
சிவமுதமாய்ச் செறிந்தோங்கும் சிவபவனச் சீரமுதே!”

என ஓதியவாறு, குடத்தின் (கலசத்தின்) கழுத்து (கண்டம்) வரை புனிதத் தீர்த்தங்கள் சேர்ந்த நன்னீர் ஊற்றி, ஏலக்காய், குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய் பொடி இட்டு, மாவிலைகளை வைத்து, கலசத்தை ஒரு பலகையின் மேல், ராசிக் கோலத்தில் மேஷ ராசிக் கட்டத்தில் வைத்து, வணங்கிப் பூஜித்து,

தீர்த்தத்தைப் பிரசாதமாக மாவிலையில் அருந்தி, பிறகு வீடு முழுதும் தீர்த்தத்தைத் தெளித்திட வேண்டும்.

புத வரி வாரப் பரிப்புலக் காலம்
பஞ்சமி தத்துவப் பரிசுதவேளை
மிருகச் சீரிய தாரகமதி
சோபன சுமதவப் பாலவ கரணம்
பார்த்திபச் சந்தம் பருப் பொருளாகி
பந்தளச் சித்தம் பரிசிவபாதம்
எந்தாயுறை மதி மறைமா தவமாய்
ஆதித் தியனாய் மேஷத் துறையில்
மேதினி வருக மேதா ஒளியாய்!

என்று 108 முறை ஓதி வழிபடுக. (அறிந்தோர் மேதா சூக்த மந்திரங்களையும், ஜாதி, மத, குல, பேதமின்றி, அனைத்துப் பூவுலக ஜீவன்களின் நலன்களுக்காகவும் ஓதுக!) மேற்கண்ட வகையில் ராசி சக்கரக் கோலம் அமைதல் மிகவும் விசேஷமானது.

ஸ்ரீமேதா தட்சிணா மூர்த்தி
திருக்குவளை

குலவிளக்குப் பூஜை

கும்ப பூஜை, கோல பூஜை, குலவிளக்குப் பூஜையாகக் குடும்பத்துடன் கூட்டாக ஓதி வழிபடுதல் வேண்டும். புத்தாண்டில் ஏற்றப்படும் விளக்கிற்குக் குலவிளக்கு என்று பெயர். எனவே குலதெய்வத்தைப் பிரார்த்தித்துக் குலவிளக்கை ஏற்றவும். ஒன்பது ராசிகளிலும் அகல் விளக்குகளை ஏற்றிடுக!

தமிழ்ப் புத்தாண்டு என்பது, தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு மட்டுமே எனப் பலரும் எண்ணுகின்றனர். அகிலாண்ட மொழிகள் அனைத்திற்கும் முதன்மையானதாக, மூத்ததாக, முந்தியதான தெய்வத் திருத்தமிழில் இருந்தே ஏனைய மொழி சொற்களின் சப்தங்கள் பலவும் பிறந்தன. எனவே தமிழே அருட்தாய்மைப் பண்புடையதாகும். தமிழ்ப் புத்தாண்டு, அனைத்து மொழிகளுக்கும் சேய்த்துறை வள சக்திகளை ஆன்ம சக்தியுடன் அருள்வதாகும்.

இனிமையான அறுபது தமிழ் ஆண்டுப் பெயர்களும் தீந்தமிழ்ச் சுவை கொண்டதோடன்றி, இந்த அறுபதிலும் உலக ஜீவநல வாழ்விற்கான அனைத்து பீஜாட்சரங்களும் அடங்கி உள்ளன.

எழுத்து வடிவ சக்திகள்!

ஒவ்வொரு தமிழ் ஆண்டுப் பெயரிலும் அந்த ஆண்டின் ஜீவ கர்ம பரிபாலன அம்சங்களுக்கான பீஜாட்சரங்கள் நன்கு நிறைந்து பொலிகின்றன. இதற்காகத்தான் நம் பண்டையத் தமிழ் மூதாதையர்கள் ஆண்டுகளுக்கு 1947, 1956 என்ற வடிவுகள் அல்லாது, எழுத்து வடிவில் பிரபவ, விபவ என அட்சர சக்திகளாய், திருவெழுத்துப் புலங்களாய் அளித்தனர்.

1947, 1956 எண் வடிவ ஆண்டு முறை நமக்கு எளிதானதாக நன்கு புரியும்படி அமைவது போல் தற்காலத்தில் தோன்றினாலும், இதில் உலகெங்கும் எண் சக்திகள் நிறையவே விரயமாகின்றன என்பது பலரும் அறியாத எண் சக்தி ஆன்ம விளக்கங்களாகும்.

இம்முறையில் நிறைய எண்களின் சக்திகள் முடிவிலாது விரயமாவதாலும், 03.03.01, 03.03.93 என்றவாறாக ஆண்டு எண்களைச் சுருக்கி, நடுவே பிரித்து, எண் சக்திகளை மடக்கியும், குறுக்கியும், தணித்தும் எண் சக்திகளைப் பின்னமாக்குவதாலும், இதில் நிறைய எண் சக்திகள் சேதமாகின்றன.

எனவே இதனால்தாம் ஒவ்வொரு ஆண்டிலும் உலகெங்கும் எண் தேவதைகளின் சாபங்களே பெருகி வருகின்றன. இவற்றுக்கு ஓரளவு நிவாரணம் தரவே தென்னாடுடைய சிவனுக்குரிய தமிழ் பூமி, அகிலத்தின் லிங்கப் பூமித்தலம் என்பதால், தமிழ்ப் புத்தாண்டு தோறும் சக்தி வாய்ந்த அட்சய, அட்சரப் பூஜைகள் 108, 1008 போற்றிகளாக, லட்சார்ச்சனைகளாக எண் சக்தி நிறைவிற்காக நிகழ்த்தப் பெறுகின்றன.

பார்த்திப ஆண்டில் பலவிதமான தெய்வீக சக்திகளும் அக்னி வடிவில் பூவுலகெங்கும் நிறைகின்றன. மகத்தான அக்னி சக்தித் திதியான முருகனுக்கு உரிய சஷ்டித் திதியில் பார்த்திப ஆண்டு துலங்குகிறது. ஆதிஉலகம் அக்னிக் கடவுள் மூர்த்த சக்தியால் ஆனதாதலின், அக்னிக் குண்டம் எனப்படும் வயிற்றில் நீர் மட்டும் சிறிது அருந்தி, நல்ல விதமான சங்கல்பத்துடன் உண்ணா நோன்பிருந்து வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

அன்பு சக்திகள் தீப ஜோதி வடிவமாகப் பொலியும் பார்த்திபத் தமிழ்ப் புத்தாண்டு

சித்தர்கள் கலியுகத்திற்கென அன்பின் விளக்கமாக அளிக்கும் சித்தவேத சூக்த மாமந்திரமான, “தன்னை மறந்தால் சுயநலம் மறையும், சுயநலம் மறைந்தால் பெரும் பேரின்பம்!” என்ற மாமறை வாக்கியப்படி, மாபெரும் இறைசக்தியாகிய அன்பை, ஜோதி ரூபமாக உலக ஜீவன்களிடையே பரிணமிக்க வைக்கின்ற தெய்வீக சாதனங்கள் நிறைந்து வரும் வருடமே பார்த்திப ஆண்டாகும்.

இப்பூவுலகில் அன்பைப் பரிணமித்து, பரிபூரணமாகப் பொழிய வைக்கும் விசேஷமான அன்பு லிங்க மூர்த்திகள் இன்றும் உண்டு. பரிசுத்தமான அன்பைப் பெறுவதற்காக வழிபட வேண்டிய இறைவனே அன்பு லிங்க மூர்த்தி. தக்க சத்குருவை நாடி இதற்கான விளக்கங்களை அறியவும்.

அன்பு லிங்கத்திற்கான பூஜைகளை ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஆற்றத் துவங்க வேண்டிய ஆண்டு இது! மகத்தான பூஜைப் பலன்களை, ஆன்ம சக்திகள் நிறைந்த பறவைகளின் தரிசனங்கள் மூலமாகவும் தரவல்ல ஆண்டு! ஆம், மதன மதனிப் புறா, அண்டங் காக்கை, வந்திய மைனா, பஞ்சவர்ணக் கிளி போன்ற – பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள பித்ரு மண்டலங்களுக்குச் சென்று வரவல்ல – பட்சிகளைப் பூஜித்துப் போஷிக்க வேண்டிய ஆண்டு.

ஒவ்வொருவர் வீட்டிலும் மதன மதனிப் புறா தேவதைகள் கண்டிப்பாக வந்து அமர்ந்து நிச்சயமாக அருள வேண்டிய ஆண்டும் இதுவேயாம்.

இல்லத்தில் இயற்கைப் பொருட்கள் இழையட்டும்!

மூங்கில், தர்பை, மர உரல், பல்லாங்குழி, மர ஆப்பக் கூடு, மரத்திலான தம்ளர் மற்றும் மத்து, கூடை போன்ற இயற்கைப் பொருட்களை இப்போதிருந்தே சேமித்து, வீட்டில் பயன்படுத்தி வாருங்கள்! ஏனெனில் பிளாஸ்டிக், LPG காஸ் போன்ற செயற்கை ரசாயனப் பொருட்களே பெரும்பான்மையாகக் கலியுக இல்லத்தை ஆக்ரமிப்பதால், பித்ரு மூர்த்திகள் நல்தேவதைகள், நற்சக்திகள் நிரவித் தங்கி உறைந்து நிலைக்க வேண்டிய இயற்கை பொருட்களே வீட்டில் இல்லாமல் போவதால், பல அரிய தேவ ஆன்ம சக்திகளைத் தற்கால மக்கள் இழந்து வருகின்றார்கள்.

பாரதத் தலைமுறைகளில் தழைக்கும் தகைமை

வருகின்ற தலைமுறையாவது இயற்கைப் பொருட்களுடன் நன்கு இழைந்தால்தான், வருங்காலச் சமுதாயம் நன்கு பண்படும். மேற்கண்ட பொருட்கள் யாவும் அன்பு சக்திகளை ஈர்த்துப் பன்மடங்காக்க வல்லவை! முதியவர்களும், பேரன், பேத்திகளும் பல்லாங்குழி ஆடுகையில், முதிய, இளம் பருவ, பால பருவத் தலைமுறைகளிடையே நல்ல பண்பாட்டுப் பிணைப்பு இழைகின்றதல்லவா! இதுவே அன்பாக (பாசமாக அல்ல) நாளடைவில் மலரும். ஆனால் பாச மாயையில் சிக்கலாகாது. இத்தகைய தலைமுறையைத் தாண்டிய இயற்கையோடு இழைந்த பண்புச் சுடராழியைக் கலியுகத்தில் சிறிது, சிறிதாக நாம் இழந்து வருகின்றோமே!

இத்தகைய தலைமுறை கடந்த நற்பண்பாட்டுக் கலாச்சாரப் பிணைப்பு இல்லையேல், தலைமுறை இடைவெளி (Generation gap) பெரிதாகி, ஒரே குடும்பத்திலேயே பட்டும் படாமலும், ஏனோ தானோவென்று வாழும் நிலையும் ஏற்பட்டு விடும்.

விரிந்து வரும் பெரிய தலைமுறை இடைவெளி என்பது சமுதாயத்தைப் பீடிக்கும் பெரு நோய். இது அகில உலகில் பாரதத்திற்கென விசேஷமாகப் பொலியும் தெய்வீகப் பண்பாட்டையே, இல்லற தர்மத்தையே சீர் குலைப்பதாகும். இந்த அவலமான இடைவெளியால் தான் மேலைநாட்டுக் கலாச்சாரமே பண்பற்றதாயும் அநாகரீகமானதாய் முற்றி வருகின்றது. எதிர்காலத்தில், பண்டையக் காலம் போல, பாரதமே உலக நாடுகளின் ஆன்மீகத் தலைமறையாய்ப் பிரகாசிப்பதற்கு இத்தகைய தொன்மையான பாரதக் கலாச்சாரப் பண்புகளே மிகவும் துணை புரியும்.

வன்முறை, பயங்கரவாதம், போர், பகைமை, குரோதம், விரோதம் போன்ற அனைத்து வகைத் தீய சக்திகளையும் தீர்க்கவல்லதே அன்பு லிங்கப் பூஜைப் பலன்களாகும்.

அன்பின் வடிவே ருத்ராட்ச ஜோதி

சென்னை அருகே உள்ள கூவம் சிவத்தலச் சுயம்பு மூர்த்தி, பல சர்வ பூர்வப் பிரளய கால அனுபவங்களையும், நல்அனுபூதிகளாக உணர்த்தி, உத்தம நிலைகளை அளிக்கும் காலங் கடந்த கனிந்தச் சுயம்பு அக்னி மூர்த்தி ஆவார்.

தன் பூர்வ ஜன்ம நிலைகளை அறிந்து, திருந்தி வாழ விழைவோர், இங்கு கூவம் ஆலயத்தில் பிரதோஷ நேரத்தில், சுவாமியைத் தூக்கி அருள் பவனி வரும் வைபவத்தில் ஆழ்ந்த பக்தியுடன் பங்கேற்று, இங்கு அபூர்வமான வடிவில் தரிசனம் தரும் ஸ்ரீகால பைரவருக்கு, புனுகு, ஜவ்வாது, கோரோஜனை, கஸ்தூரி, ஜாதிக்காய் ஆகிய பஞ்ச விஸ்வாதார சிவச்சாரம் கலந்த விபூதிக் காப்பு இட்டுப் பூஜித்தல் வேண்டும். பிரதோஷம் தோறும் இங்கு முழு முந்திரிப் பருப்புப் பாயசம் படைத்துத் தானமளித்து வந்தால், குடும்பத்தை வருத்தும் பூர்வ ஜன்ம வினைகள் மாய, தம் தபோ பலத்தால் துணை புரிகின்றனர் இத்தலத்தில் முக்தி அடைந்த ருத்திர பூஷணச் சித்தர்!

திரிபுரங்களை எரித்த திவ்யமான கோலத்தில் ஈஸ்வர தரிசனம்தனை இவர் இங்கு பெற்றதுடன், சர்வேஸ்வரனே அவருக்கு ருத்திராட்ச விருட்ச வடிவை அளித்தருளிய தலமும் இதுவேயாம். பொதுவாக, மலைத் தலத்தில் மட்டுமே வளரும் ருத்ராட்ச மரங்கள், இங்கு ஒரு யுகத்தில், மிகவும் அபூர்வமாகத் தாமாகவே விளைந்தன.

ஸ்ரீசகஸ்ரலிங்கம் திருநெல்வேலி

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களை ஒரு சேர, ஓரிடத்தில் கண்டுத் தரிசிக்கையில், ஆங்கே ருத்ர கங்கணப் பிரகாசக் கிரணங்கள் தோன்றி அருள்கின்றன. மனப்பகையை அகற்ற வல்ல சகஸ்ர ருத்ராட்சத் தரிசனமிது! அன்பைப் பிரகாசிக்கச் செய்யும் அரிய ருத்ரக் கோணங்களைக் கொண்டதே ருத்ராட்சமாகும். இதன் காரணமாகவே, பார்த்திப ஆண்டில், வில்வ நீரில் ருத்ராட்சங்களை எட்டு மணி நேரம் வைத்து, ருத்ராட்சத் தீர்த்தம் மட்டுமே அருந்தி, திருவாதிரை, திருவோண நாட்களில் மௌன விரதமிருந்து, 108/1008 லிங்க வடிவுகள் ஒரே லிங்கத்தினுள் பொதிவதான சஹஸ்ர லிங்கத்தை வழிபடுதலால், குடும்ப கௌரவம் காப்பாற்றப்படவும், பிறரால் பலவகையில் இழிபடுத்தப்பட்டோர் நன்னிலை பெறவும் வழி பிறக்கும்.

வல்வினைகளைத் தணிக்கும் அன்பான மருத்துவ சக்தித் தலங்கள்!

அன்பை எவ்வாறு அறிவது? ஒருவருக்கு மனப்பூர்வமாக உதவுவது அன்பாகிடுமா? அல்லது தான, தர்மம் செய்தல் அன்பை வளர்க்குமா? இல்லறத்தில், பாசத்தின் ஊடே அன்பு பரிமளிக்குமா?

இல்லறமே அன்பை விளைவிக்கும் நிலமாகும். இல்லறமே தர்ம சாலை, அன்பான மருத்துவச் சாலை! குடும்பம் என்பது அன்பை இல்லற தீபமாக ஏற்றிக் காட்டும் விளக்காகும். அன்பே இனிய மருத்துவ குணங்களையும் பூண்டு, பகைமை நோய்களைத் தீர்க்கும். பிறருக்கு உதவுதல் என்பது கடமை, புண்ணியச் செயல், லட்சியம் என்றும் பல வழிகளில் அமைவதுண்டு.

இதில், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது ஆற்றப் பெறும் நற்காரியங்களில், உன்னதமானத் தியாகமானது, திரியாகத் தோய்வதால், இவ்வகை நற்காரியங்களில் அன்புப் பரிமாற்றங்கள் நிறையவே பரிணமித்துத் தோன்றும்.

தினமும் அறிந்தவருக்கே, அதாவது ஒருவருக்கே அன்னமளித்தல் கூடப் பாசத்தையும், பந்தத்தையுமே வளர்க்கும். எனவே, அன்னதானத்தில் பேதங்காணல் நன்றன்று. தியாகம் முகிழ்க்கும் தான, தர்ம சக்திகளில்தான் அன்பு நன்கு விருத்தி ஆகும். எதையுமே ஜோதி சாட்சியாக, அதாவது இறைவனுக்குப் படைத்துத் தானமளிப்பது மிகவும் விசேஷமானதாகும்.

பார்த்திப ஆண்டில், பல ஆலயங்களிலும் நாள் முழுதும் எப்போதும் தீபம் பிரகாசிக்கும்படி, தூண்டா மணி விளக்குகளை அளித்து, தினசரியும், விளக்கு ஏற்றிடவும். எண்ணெய், திரி மற்றும் உபப் பொருட்களையும் தானமாக அளித்தலால், அன்புக் கிரணங்கள் பூவுலகில் நிரவிட மிகவும் உதவிடும்.

விளக்குப் பூஜைக்கு விசேஷமான ஆண்டு!

பார்த்திப ஆண்டில் அன்புக் கிரணங்கள் தீபக் கிரணங்களாகவே பெரிதும் தோன்றுவதால், ஆலயங்களிலும், இல்லங்களிலும் இவ்வாண்டில்,

எவ்வளவு விளக்குகளை எவ்வளவு நேரம் ஏற்ற முடியுமோ, அந்த அளவிற்கு நெடு நேரம் ஏற்றி வழிபட்டு வருதல், மகத்தான சமுதாய இறைப் பணி ஆவதுடன், அவரவரிடம் பிரகாசிக்கும் ஆத்ம ஜோதியிலும், பார்த்திப லிங்க ஜோதிக் கிரணங்கள் ஊறுவதை நன்கு உணர வைப்பதாகும்.

எனவே யாரும் பார்த்திப ஆண்டு நிறைவதற்குள் குறைந்தது 1008, 10008, 100008 தீபங்களை ஏற்றுவதாகச் சங்கல்பம் செய்து கொண்டிடுக! ஜாதி, மத, இன பேதமின்றிச் சத்சங்கப் பூர்வமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, தினமும் குறைந்தது 108 விளக்குகளை ஏற்றுவதையே முக்கியமான சங்கல்பப் பூஜையாக ஆற்றிடுங்கள். நாட்டில் நிலவும் வன்முறை, பயங்கரவாதத் தீவினை சக்திகள் தணிய உங்களாலான மகத்தான தொண்டாக அமைந்து இது மிகவும் உதவும்.

இதற்கு மூலாதாரமாக, பார்த்திப வருடப் பிறப்பன்று தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, அகல், சுதை, எலுமிச்சை தீபம், பஞ்சலோகம், குத்து விளக்கு, காமாட்சி விளக்கு, சர விளக்கு, தூண்டா மணி விளக்கு என்று குறைந்தது 12, 24, 36, 108, 1008 என்ற வகையிலான விளக்குகளில்,

பசு நெய், கரிசலாங்கண்ணி, மருதாணி, நெல்லிக்காய், நீலிப்பிருங்காதி, செம்பருத்தி, பொன்னாங்கண்ணி வகைத் தைலங்கள், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் எனப் பல்வகைத் தைலங்களாலும்,

எள் திரி, எருக்குத் திரி, தாமரைத் தண்டுத் திரி, வாழைத் தண்டுத் திரி, அரசுத் திரி, தக்ளியில் கைகளால் நூற்றப் பெற்ற திரி – என அத்தனை வகைத் திரிகளாலும் விளக்கேற்றி பார்த்திப தீப ஜோதிக் கிரணங்கள் பூவுலகில் நிறைவதற்கு ஆதாரக் கருவியாக நின்று செயல்படுவீர்களாக!

எதிரிணித் தீய சக்திகளை, தீப சக்திகளால் வென்றிடுக!

ஒரு புறத்தில் அன்புக் கிரணங்கள் பரிணமிக்கும் ஆன்ம சாதனங்கள் பார்த்திப ஆண்டில் நிறையவே பரிணமித்தாலும், மறுபுறம் அன்பை முறிக்கும் எதிரிணிகளும் (negative forces) இவ்வாண்டில் பெருக்கெடுக்கின்றன என்றும் அறிக!

இவ்வாண்டில் “அன்பு செலுத்துகிறேன், அன்பு செலுத்துகிறேன்!” என்று வாயால் கூறிக் கூறியே ஏமாற்றுபவர்கள் அதிகமாவர். உற்றம், சுற்றம், நட்பியலில் இந்த ஏமாற்றங்கள் அதிகமாகவே இருக்கும். இந்த உதட்டளவு வாக்கியத்திற்கு அடிமையாகி எவரிடமும் ஏமாந்து விடாதீர்கள்.

அன்பிற்காகவோ, பாசத்திற்காகவோ ஏங்கி, ஏங்கி – இல்லாததற்காக, வராததற்காக, கிட்டாததற்காக மனம் – வருந்தும் நிலைகள் இவ்வாண்டில் வருவது சாத்தியமாதலின், மிகவும் கவனமாக இருக்கவும். இவற்றால், இருக்கின்ற மன நிம்மதியையும் இழந்து விடாதீர்கள். இந்நிலை ஏற்படாது தற்காத்துக் கொள்ள, உத்தமதானபுரம் மாளாபுரம் மும்மூர்த்தி விநாயகருக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறைச் சதுர்த்தித் திதிகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுக!

ஸ்ரீமும்மூர்த்தி விநாயகர் உத்தமதானபுரம்

அன்பிற்காக ஏங்குவதில் தவறு கிடையாது. ஆனால், அன்பு என்பது ஒரு திசைப் போக்குவரத்து அல்ல. நீங்கள் எந்த அளவிற்குப் பிறரிடம் அன்பைச் செலுத்துகின்றீர்களோ, இதைப் பொறுத்துத்தான் தூய அன்புப் பரிமாற்றமும் நிகழும். இறைவன் ஒருவனே அனைத்து ஜீவன்களிடமும் அன்பையே அருளம்சமாக, சாசுவதமாக நிரவுகின்றவன்.

இன்று, பூவுலகில் அன்பு அம்சம் கிஞ்சித்தும் இல்லாத நாடுகள் பலவும் உள்ளன என அறிவதற்கே மிகவும் வேதனையாக உள்ளது. புனிதமான, தியாகமய அன்பு உள்ளம் கொண்டோரும், விரல் விட்டு எண்ணும் அளவிற்கு மிக மிகச் சிறிய அளவிலேதான் இந்த பூமியில் உள்ளனர்.

இப்பேருலகில் அன்பு குறையக் குறைய, இவ்வன்பு சக்திகளை மீண்டும் புதுப்பித்து ஆன்ம சக்திகளாக உலகிற்கு மீண்டும் அளித்திடவே, அன்பு லிங்க வழிபாடு எழுந்துள்ளது. இறைவன் இதற்கெனத் தன்னைச் சுயம்புவாக அன்பு நிறை அர்ச்சா மூர்த்திகளாக, அதாவது தானே தோன்றிய சுயம்பு மூர்த்திகளாகச் சில தலங்களில் எழுந்தருளி இருப்பினும், இவற்றை முறையாக வழிபடாமையால்தாம், இயற்கைச் சீற்றங்கள் நிகழ்வது கலியுகத்தில் பெருத்து வருகின்றன.

பண்பு+அறம் சுத்தித் தலமே பம்பர சுத்தி சிவத்தலம்!

நற்பண்புகளையும், அறசக்திகளையும் நன்கு சுத்திகரிக்க வல்ல புனிதமான பூமியே பம்பரம் சுத்தி கிராமச் சிவத்தலப் புண்ணிய பூமி எனில் இதன் மஹிமைதான் என்னே!

பம்பரம்சுத்தி சிவாலயம்

வானியல் கிரகங்களை பகுத்துத் தருகையில், புரிந்த கோளங்கள், புரிபடாக் கோளங்கள், பூர்வக் கோளங்கள், புலத்தியக் கோளங்கள், பம்பரக் கோளங்கள் என்ற ஐந்நிலை பஞ்சாட்சர பரிபுவன லிங்க வடிவுகளை நமக்கு அளித்துள்ளார்கள். இதில் ஒரு வகை ஆகர்ஷண பரிபுவன லிங்க வகையே திருச்சி லால்குடி அருகே உள்ள பம்பரம் சுத்தி கிராமச் சிவலிங்கமாகும்.

இங்குள்ள பழமையான, சிறிய சிவாலயத்தில் பிரதோஷ நாளில் 108 தீபங்களை ஏற்றி, எண்ணெய், திரிகளுடன் காமாட்சி விளக்குகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வழிபட்டு வர, பித்ருக்களின் ஆசிகள் கை கூடி வந்து, பழமையான சொத்துக்களில் உள்ள வில்லங்கங்கள், தாவாக்கள் தீர உதவும்.

உள்ளத்தைச் சுத்திகரிக்கும் அன்புச் செல்வங்களான பண்பும், அறமுமே சுத்திகரிக்கப்பட்ட தலமாகிய பம்பரம் சுத்திச் சிவபூமியில் ஸ்படிக நீரோட்டங்கள் நிலவுவதுடன், கங்காமிர்த நீரோட்டச் சக்திகளும் பூரிப்பதால் இங்குள்ள காசி விஸ்வநாதர் மகத்தான சக்திகளுடன் அருள்கின்றார். காசிக்குச் செல்லும் முன் வழிபட வேண்டிய தலங்களுள் இதுவும் ஒன்றாகும். ஒரு யுகத்தில் அறச்சாலைகள் பொலிந்து, நாள் முழுதும் அன்னதானம் நிகழ்ந்த தலம். “பம்பரச் சுத்தியில் பண்படுதல்” என்பது யோக நிலைகளில் அடைகின்ற முன்னேற்றப் படிகளைக் குறிப்பதாகும்.

மனம், உடலில் உள்ள அசுத்தங்களை அகற்றித் தேன் போல் தூய்மைப் படுத்தித் தரும் தன்மையாலும் இது பம்பர சுத்தி என்று ஆகி உள்ளது. இங்கிருந்து வானில் சில அபூர்வமான நட்சத்திரத் தரிசனங்கள் கிட்டுகின்றன. இதில் ஒரு வகை நட்சத்திரமே பம்பாள நட்சத்திரம் ஆகும். சந்திர தரிசன சக்தித் தலங்களுள் இதுவும் ஒன்றாகும்.

விண்ணில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள், கோளங்கள் இருந்தாலும், இவை நமக்குப் புரிபடா விட்டாலும், மானுடக் கண்களுக்குத் தெரியாதாயினும், நாம் இருக்கின்ற கோளத்தின் வடிவையே பார்க்க முடியா விட்டாலும், அனைத்தும் ஞான சக்தியால் அறிவுப் பூர்வமாக உணர வல்லவையே! ஆனால், பகலில், விழிப்பு நிலையில் புலப்படாத பலவும் உறக்க நிலையில் பல கும்பரக் கோளங்களாக நம் அறிவுக்குப் புலனாகின்றன. இதுவும் பம்பர சுத்தியின் யோகப் புலங்களில் ஒன்றாகும்.

அதாவது கனவில் நாம் வாழும் லோகங்கள், எல்லாம் பகல் நேரத்தில் நம்மால் காண முடியாத நட்சத்திர மற்றும் கோள மண்டலங்கள் ஆகும். பம்பரம் சுத்தியில் ஆன்மீக ரீதியாக நிலவும் வான்யோக சக்திகள் காரணமாக, வருங்காலத்தில் வானியல் ஆராய்ச்சிக் கேந்திரங்கள் இங்கு அமையும்.

பார்த்திப ஆண்டில், கோள்களாகிய கிரகங்களிலும், நட்சத்திரங்களிலும் வான் மண்டலங்களிலும் பல புதுக் கண்டுபிடிப்புகள் ஏற்படும். இவை விஞ்ஞானத்திற்குத்தான் புதியனவே தவிர, சித்தர்களுடைய மெய்ஞ்ஞானத்தில் இவற்றைப் பற்றிய நிறைய விளக்கங்கள் உள்ளன. பூலோக மக்கள், தங்கள் கனவு வாழ்க்கையில் இவற்றில் பலவற்றையும் கண்டுள்ளனர். இவற்றை விரித்தால் பெரிய புராணங்கள் ஆகி விடும் என்பதாலும், இவற்றை உறுதிப் பூர்வமாக நம்புவோர் ஒரு சில மனிதர்களே என்பதாலும், ஆழ்ந்த நம்பிக்கை உடையவர்கட்கு மட்டுமே இவை உணர்த்தப் பெறும்.

கிரக வடிவை வரைந்து பார்ப்பதும் கிரக பூஜையே!

மேலும் இத்தகைய தெய்வீக ரகசியங்கள் தெரிந்தால், அவற்றை “நான்தான் கண்டு பிடித்தேன், என் பெயரில் அந்த கிரகம் அமைய வேண்டும்!” என்று உரிமை கொண்டாடிப் பலரும் சுயநலமாகப் பெரும் புகழும், பணமும் பொருளும் சேர்க்க முயல்வர் என்பதாலும், இவை தக்க சற்குரு மூலமாகவே உணரப் பெறுவதாக உள்ளன.

பார்த்திப ஆண்டிலிருந்து, தினமும் கிரகங்களின் அமைப்பை ஒரு நோட்டுப் புத்தகத்தில் வரைந்து அவற்றை நன்கு கவனித்துத் தியானித்து, கோளறு பதிகம், நவகிரகத் தோத்திரங்களை ஓதி வாருங்கள். வானியலில் உள்ள மாற்றங்களுக்கு ஏற்ப நீங்கள் வரைந்து பூஜித்த கோள் வரைபடங்களிலும் சில தருணங்களில் தாமாகவே மாற்றங்கள் ஏற்படுவதான ஆனந்தமான அதிசய அனுபூதிகளும் இதனால் கிட்டும். இவ்வாறு பிற கோள்களில் நிலவும் நற்சக்திகளை, இல்லத்திற்கு, பூவுலகிற்குக் கொணர்தலும் அன்புக் கிரணங்களை நிலைப்படுத்தும்.

இதனால்தான், பார்த்திப ஆண்டில் கண்ணாடிக் கோள ரீதியான தியான முறை (Meditation through crystal globe) மிகவும் சிறப்புடையதாகச் சித்தர்களால் அளிக்கப்படுகின்றது.

செயற்கை ரசாயன உணவு வேண்டாம்!

பார்த்திப வருடத்தில், செயற்கை ரசாயனங்கள் மனித உணவுத் துறையில் பலத்த விளைவுகளை ஏற்படுத்தி விடும். எனவே, “fast food” வகையிலான செயற்கை வண்ணப் பவுடர்கள், செயற்கை மசாலாப் பொருட்கள் போன்ற கெடுதல் தரும் ரசாயனங்கள் கலந்த உணவு வகைகளைக் கண்டிப்பாகத் தவிர்த்தாக வேண்டும். இயன்ற வரையில் வீட்டிலேயே எதையும் செய்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

பெண் பிள்ளைகள் மட்டுமல்லாது ஆண் பிள்ளைகளும் ஓரளவேனும் சமையல் செய்வதற்கு, இந்த ஆண்டு முதல் இப்போதிருந்தே பெற்றோர்கள் கற்றுத் தந்திட வேண்டும். இது வாழ்வில் இறுதி வரை நன்கு ஆன்மப் பூர்வமாக உதவி வரும். சுக்ர சக்திகளில் நாம்பூரம் எனும் தன்மைகள் இவ்வாண்டில் அமைவதால், சமையல் கலையில் பண்டைய முறைகள் (இலுப்பச் சட்டி, அம்மிக் கல்) மீண்டும் நடைமுறைக்கு வரும். எனவே மாதம் ஒரு முறையேனும் விறகு அடுப்பில் சமைத்துப் படைத்து, அன்னதானம் அளித்தலால் பலத்த குறைகளுடன் இறந்த முன்னோர்களின் சில வகையான அபிலாட்சைகள் நிறைவேறி, அவர்களுடைய சாயைச் சரீரம் அடுத்த நிலைகளை அடைவதால், சந்ததிகளின் இல்லற வாழ்வில் முடங்கிக் கிடக்கும் பல காரியங்கள் தேக்கத்தில் இருந்து விடுபடும்.

பெண்களுக்கான துவார சக்தி வழிபாடு!

பிண தோஷத் தீட்டு, மாதவிலக்குத் தோஷத் தீட்டுக்களினால் பலவிதமான நோய்கள் இவ்வாண்டில் ஏற்படக் கூடும். இதற்குத் தற்காப்பு வழிபாடுகளும் உண்டு. ஆலயங்களில் துவார பாலகர்கள் போல், அம்பாள் சன்னதிக்கு முன் மண்டபத்தில் இருபுறமும் அருளும் துவார சக்திகளுக்கு வஸ்திரம் சார்த்தி வழிபட்டு வருதல் வேண்டும். துவார சக்திகள் வேறு, துவார பாலகிகள் வேறு.

தக்க வயதில் பெண்கள் பூப்படையாது இருத்தல், பெண்களுக்கு ஏற்படும் உதிரப் பெருக்கு நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள் நீங்கிட, அம்பாளுக்குக் காவலாக இருக்கும் துவார சக்திகளுக்குச் செவ்வாய்க் கிழமை தோறும் சிகப்பு நிற வஸ்திரங்களைச் சார்த்தி வழிபட்டு வருதல் வேண்டும். துவார சக்தி வழிபாடு, சப்த கன்னியர் வழிபாடு, சப்த மாதர் வழிபாடு பெண்களுக்கு மிகவும் முக்கியமானவை.

ஆலயத்தில் அனைத்து மூர்த்திகளுக்கும் வஸ்திரம் சார்த்தி வருகையில், துவார சக்திகள், துவார பாலகர்களை, துவார பாலகிகளை விட்டு விடுகின்றனர். இது தவறானது, இதனால்தான் பிரார்த்தனைத் தேக்கங்கள் ஏற்படுகின்றன.

குடும்பக் கூட்டுக் கர்ம நியதி செயல்படும் ஆண்டு!

பார்த்திப ஆண்டில் குடும்ப  வாழ்க்கையில் கூட்டுக் கர்ம நியதி பலமாகச் செயல்படும். கடந்த ஆண்டில், சமுதாயக் கூட்டுக் கர்மா நியதியாக, கூட்டம் கூட்டமாக ஜீவன்கள் மடியலாகும் என்ற விதி நியதியை ஏப்ரல் 2004 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் விளக்கி உள்ளோம்.

பார்த்திப ஆண்டில் அவரவர் குடும்பத்தில் கூட்டுக் கர்ம விதிகள் செயல்பட இருப்பதால், குடும்பத்தில் (பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், பிள்ளைகள், பெண்கள், பேரன்கள், பேத்திகள்) ஒருவர் தவறு செய்தாலும், அந்தத் தவற்றின் கர்ம வினை விளைவுகள், குடும்பத்தில் அனைவரையும் பாதிக்கும். அதாவது ஒரு குடும்பத்தில் ஒருவர் எவ்வளவுதான் நல்லவராக தெய்வ பக்தியுடன் வாழ்ந்தாலும், அவருடைய சககுடும்ப உறுப்பினர்கள் எத்தகைய கெடுதலான காரியங்கள், பாவச் செயல்களைச் செய்தாலும், அதன் ஒரு பங்கு அவரையும், அனைவரையும் வந்தடையும்.

இதிலிருந்து ஓரளவு தற்காத்துக் கொண்டு மீள வேண்டும் எனில் பார்த்திப ஜோதிக் கிரணங்கள் எப்போதும் இல்லத்திலும், கோயில்களிலும் பொலியுமாறு தினந்தோறும் நிறைய விளக்குகளை நெடுநேரம் பாதுகாப்புடன் ஏற்றி வைத்து வழிபட வேண்டும். குறிப்பாக ஒரு மணி நேரம் இரண்டரை மணி நேரம் வரை அக்னியுடன் இருக்கும் ஊதுபத்திகளில் தொடராக்னி சக்தியானது,

“ஒன்றில் உறையும் ஓராக்னி பதம்,
ஒன்றில் ஒளிரும் ஒன்றாகியதாம்!”

என்ற நியதிக்கேற்ப, குடும்பத்தில் சச்சரவுகள் நீங்கி மனஒற்றுமை பொலிய மிகவும் உதவும்.

மேலும் இல்லத்தில் “மதனமதனி” தேவதைப் புறாக்களை வைத்திருப்பதும் ரட்சா சக்திகளைத் தரும். பெற்றோர்களை அவமதித்து முதியோர் இல்லங்களில் சேர்க்கும் கொடுமை இவ்வாண்டில் துரதிருஷ்ட வசமாகப் பெருகும். இதைத் தடுத்திடவும், வயதானவர்கள் மனதுக்குள்ளோ, வெளிப்படையாகவோ இடும் சாபங்களின் வன்மை பற்றாதிருக்கவும், செவ்வாய்க் கிழமை மட்டுமே ராகு கால துர்க்கை பூஜை என்றல்லாது, வாரத்தின் ஏனைய ஆறு கிழமைகளிலும் வரும் ராகு காலத்திலும், இல்லத்திலும், கோயிலிலும் விளக்குகளை ஏற்றி, ராகு கால பூஜைகளை நிகழ்த்துவது நல்லது.

பார்த்திப தமிழ்ப் புத்தாண்டு விளக்கங்கள்!

சித்தர்கள் அளிக்கின்ற கர்ம பரிபாலன நிதி நியமப்படி இந்த “பார்த்திப” தமிழ்ப் புத்தாண்டிற்கான சில சித்தாமிர்த சத்குரு வாக்கிய விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் வெறும் ஜோதிடக் கணிப்புகளாக எண்ணி விடாதீர்கள். நவகிரக மூர்த்திகளின் அருளாட்சியின் கீழ் வரும் பூலோகக் கர்ம பரிபாலன விதி முறைகளுக்கு ஏற்ப, சித்தர்கள் ஆதிபத்ர கிரந்த வாக்யங்களின் படி, சத்குருவின் அருள்மொழிகளாக, இவை அளிக்கப் பெறுகின்றன என்பதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்!

13.4.2005 புதன் இரவு 12.10 மணிக்கு சூரிய மூர்த்தி மேஷ ராசியில் பிரவேசிக்கின்ற நிலையில் உதிக்கின்ற பார்த்திப ஆண்டு, அன்புப் பரிமாற்றங்களுக்கு மிகவும் ஏற்ற ஆண்டு ஆகும்.

அன்பு லிங்கம்

அன்பைப் பொழியும் அன்பு லிங்கம்

அன்பு, பரிவு, பாசம், காருண்யம், கருணை இவை எல்லாம் ஒன்றல்ல., வெவ்வேறானவை! இவை அனைத்தையும் பரிபூரணமான, பரிசுத்தமான அன்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டி,  எது, எது எந்த அளவில் வாழ்க்கையில் நிரவிட வேண்டும் என்பதை உணர்விப்பதே பார்த்திப ஆண்டின் அறநெறிக் கால விளக்கங்களுள் ஒன்றாகும்.

“பார்த்திப தீபம்” என்பது அன்பு சக்திகள் நிறைந்த அருணாசல ஜோதி வகையாகும். பரிபூரணமான அன்பை அருணாசலத்தில் தாம் ஜோதி வடிவில் தரிசித்திடலாம். இதுவே அன்பு லிங்கமாய் ஒரு சில தலங்களில் இன்றும் அருள்கின்றது.

பிரேம லிங்கம், காருண்ய லிங்கம், கருணாகர லிங்கம், பரிசுத்த லிங்கம் போன்ற பல அன்பு ஜோதிப் பரல்களைத் தாங்கிய முகடுகள் ஒன்று சேர்ந்து நாம் பெறுவதே அருணாசல அன்பு முக தரிசனமாகும். இதுவே பார்த்திப தீபமும் ஆக ஒளிர் விடுகின்றது. கார்த்திகை மாத மகா தீபப் பெருவிழாவில் ஏற்றப்படும் அருணாசல ஜோதியானது. அருணாசல கிரிவலப் பாதையில் ஒவ்வொரு கோணத்திலிருந்தும் ஒவ்வொரு விதமாகத் தோன்றும். இதில் எவ்விடத்தில் பார்த்திப ஜோதி தோன்றுகின்றதோ அதுவே அன்புலிங்கத் தரிசனமாகும்.

இறைவடிவே அன்பு வடிவம்

இறைவனே அன்பின் முழு வடிவமாகும். மேலும் அன்பு என்பது பக்தியின் உத்தம, உச்ச நிலையும் ஆகும். பெறுபவர், பெற்றவரிடம் ஆத்மார்த்தமாக அளிப்பது பக்தி! இறை அடியார், கடவுளிடம் அளிக்கின்ற தூய பக்தியே இறைவனிடமிருந்து அன்புப் பரிசாகத் திரும்ப வருகின்றது. இது ஆழ்ந்த நம்பிக்கையில்தான் உருவாவதாகும். உண்மையில் மக்கள் இறைவனிடம் எதை எதையோ வேண்டினாலும், அதில் இறுதியில் அன்பை வேண்டியே உள்ளம் தொக்கி நிற்கும் என்பதே உண்மையாகும்.

பிரளயம் என்பது அன்பின் அடைக்கலக் கூடம், அனைவரும் எண்ணவது போல பிரளயத்தில் ஜீவன்கள் அழிவதில்லை! மாறாக அனைத்து ஜீவ அணுக்களும் ஒரு கும்பத்தில் இணையும் வழித்துறையே பிரளயகால வகுப்பு. அன்பு ஜோதியானது கும்ப வடிவத்தில் ஒளிர்வதாகும். இதனால்தான் அன்புச் சித்தரான அகஸ்தியரும் “கும்பமுனி” ஆகின்றார்.

பிறர் மனதைக் கெடுப்போர்க்குப் பேய்ப் பிறவியே!

ஆனால் அன்பு என்பது love என்பதாக ஆங்கில வார்த்தையில் வெறும் காதல் என்பதாகத் தவறாக அர்த்தம் கொள்ளப்படுகின்றது. தற்காலத் திரைப்படங்களில் காதல் என்பதைக் கொச்சைப்படுத்தி வருவது மிகவும் வேதனை தருவதாகும். கற்பு நெறி என்பது ஆண், பெண் இருபாலார்க்கும் உலகெங்கும் உரித்தான அறப் பண்பு ஆகும். அன்பின் அம்சங்களுள் தூய்மையான கற்பும் அடங்கும்.

ஆபாசமான, வன்முறைகள் நிறைந்த திரைப்படங்கள் மூலம் மக்களின் மனதைக் கெடுப்பவர்களுக்கு, கற்பு நியதிகளை அவலப்படுத்துவோர்க்கு பேய், பிசாசுப் பிறவிகளே ஏற்படும். இவற்றிலிருந்து மீளவே முடியாது. சந்ததிகளும் வெகுவாகப் பாதிக்கப்படும்.

“Love” எனும் ஆங்கில வார்த்தைக்கு இப்போதைய கலியுலகில் பலவிதமான அனர்த்தங்களே கற்பிக்கப்படுகின்றன. நாயன்மார்கள், ஆழ்வார்களைப் போல தூய அன்பைச் சொரிபவர்கள் கலியுகத்தில் மிக மிகக் குறைவு என்பதால், உண்மையான அன்புப் பரிமாற்றத்தை இந்த பூமியில் ஒரு சில இடங்களில் கூடக் காண இயலாமல் போய் விடுகின்றது.

பாசம் பலத்த மாயையே, அன்பே சாசுவதமானது!

பலரும் பாசம், பரிவு என்பதையே அன்பு என எண்ணிக் குழப்பிக் கொள்கின்றார்கள். இதில் ஏமாந்து விடுவதும் உண்டு. அன்பு என்பது சாசுவதமானது, இறுதி வரை மாறாதது, பவித்ரமானது, புனிதமானது, தெய்வீக சக்திகள் நிறைந்தது, பக்திப் பூர்வமானது. பாசம் என்பது மனம், உடலோடு நின்று விடும். காலப் போக்கில் மாறுபாடுகளை அடையும், இது பார்த்திப ஆண்டில் தீபஜோதி வடிவில் நன்கு மலரும்.

மக நட்சத்திரம்

தர்மராஜ நட்சத்திர லிங்கம் எனவும், புண்ய சுத்தி லிங்கம் என்றும் போற்றப் பெறும் மக நட்சத்திர லிங்கம் மன சுத்தி, வரமார்கப் புண்ய சக்தி, தீர்த்தப் புல சக்தி போன்ற தசாம்ருத சக்திகளைக் கொண்டதாகும். உலக ஜீவன்களின் பாவக் கறைகளைப் போக்கும் புனித நதி தேவதா மூர்த்திகளும் மக நட்சத்திர நாளில் நீராடி மென்மேலும் பவித்ர சக்திகளைப் பெறுகின்றனர் எனில் என்னே இதன் மஹிமை!

ஒரு மனிதன் தினமும் நன்கு ஜீவித்திட இத்தகைய பத்து விதமான தசாம்ருத ஆரோக்ய பூஷண சக்திகள் மிகவும் தேவையானதாகும். இவற்றில் எந்த அமிர்தாரோக்ய சக்தி அந்தந்த நாளில் குறைகின்றதோ, அதுவே கண் நோய், தலைவலி, மன உளைச்சல், உடல் வலி, பகைமை, காரியத் தடங்கல் என்று பலவிதமான துன்பங்களாக ஏற்படும்.

எப்போதும் மனவாகனப் பயணமா?

தர்ம ராஜாவாகிய எமமூர்த்தி பல அவதாரிகைகளைப் பூண்டு இருக்கின்றமையால், அவருக்கென நிறைய இறையவதாரப் பணிகள் உண்டு. தர்ம ராஜாவாக அவர் பொலிகையில், அவர் பாரபட்சமின்றி ஜீவன்களுக்கான ஜீவித தர்ம பரிபாலனத்தை ஆற்றுகின்றார். எம தர்மர் உயிரைப் பறிப்பவர் அல்லர். இறப்பு என்பது இரண்டு ஜீவிதங்களுக்கு இடையே உள்ள இடைவெளியே! அதாவது மரணம் என்பது ஜீவ சக்தியை மற்றோர் இடத்திற்கு, சரீரத்திற்கு மாற்றுவதாகும். இதற்கான ஜீவித தர்ம பரிபாலன, கர்ம விப்ர பரித்துறையைச் செவ்வனே ஆற்றுபவரே எம மூர்த்தி! அஷ்டதிக்கு பாலகர்களுள் ஒருவராகவும் எமதர்மர் அவதார சக்திகளைப் பொழிகின்றார். சதய நட்சத்திர நாள் என்பது எம மூர்த்தியின் உயிர்ப் பரிபாலன தேவ அம்சங்களைப் பூண்டதாகும்.

தர்ம மண்டலத்தில் எம மூர்த்தியின் பரிபாலனம் நிகழ்கின்றது. இதனுள் மானுட வடிவில் செல்தல் இயலாது. தர்மசக்திகள் தாம் கலியுகத்தில் எளிமையான முறையில் கர்மக் கழிப்பிற்கு உதவுவதாகும். தர்ம காரியங்களைச் செய்பவர்களும் ஒருபுறம் நல்லவர்களாகவும், மறுபுறம் கெட்டவர்களாகவும் நடந்து கொள்வது உண்டு. எத்தகைய காரியங்களும் நிகழக் காரணமான மனித மனமானது, நல்லது, தீயது என்ற வகையிலும், எப்போதும் எண்ணிக் கொண்டும்தான் இருக்கும். காரணம் மன ஒழுக்கத்தைக் கலியுக மானுடச் சமுதாயம் முறையாகப் பேணுவதில்லை!

அன்புடன் எண்கள்

எண்களோடு அன்புடன் பழகுங்கள் – சென்ற இதழ் தொடர்ச்சி!

“நாளைய எண்ணை இன்றே, இன்னே எண்ணுங்கள்!” – சித்தர்களின் குருவேத சூக்த மந்திரம்

கலியுகத்தில் விஞ்ஞான முன்னேற்றங்களின் நடுவேதான் மனிதனின் வாழ்க்கை மண்டலம் பின்னிப் பிணைந்து கிடக்கின்றது. இதிலும் கம்ப்யூடரானது. ரேஷன் கார்டு முதல் வங்கிக் கணக்கு, ரயில் டிக்கெட் பதிவு எனப் பல துறைகளிலும் புகுந்து, மின்சாரம் போல “கம்ப்யூட்டர் ஒரு அரை மணி நேரம் பழுது” என்றால், மனிதனின் தினசரி வாழ்க்கையே ஸ்தம்பித்து விடுகின்றது.

தீயதில் மங்கும் மனிதப் பகுத்தறிவு!

ஆறறிவுடையதாகக் கருதப்படும் மனிதன், ஏற்கனவே சோம்பேறித்தனம், உழைக்காது சுகபோகம் காணும் மனப்பான்மையுடனும், மது, புகை, போதை மருந்துகள், கேளிக்கைகள் போன்ற பல தீய வழக்கங்களிலும், அகங்காரம், ஆணவம், பதவி வெறியிலும் தன் பகுத்தறிவை அடகு வைத்து விட்டு, அரைகுறை அறிவு நிலைகளில் வாழ்பவனாகியக் கலியுக மனிதன், இயந்திரத்தை நம்பித் தன் இயக்கத்தை ஆக்கிக் கொண்டு வருவதால், மனித அறிவுத் திறன் முழுமையாக உபயோகம் ஆகாது மென்மேலும் மழுங்கி வருகின்றது. இந்நிலையில் முடுக்கி விடப்பட்ட தினசரி ஸ்ரீகாயத்ரீ மந்திர வழிபாடே மனித சமுதாய அறிவுப் பிரகாசத்தைத் தூண்டித் தரும் மாமருந்தாகும்.

உதாரணத்திற்கு, முன்பு 2235, 8418 என்று எளிமையாக இருந்த வங்கிக் கணக்கு எண்கள், தற்போது 10, 12 இலக்கங்களுடன் மிகப் பெரிய எண்ணாகப்  (உதாரணம் 380001245601) பாமரருக்கும் புரியாமல் ஆகி வருவது, எண்ணின் சக்திகளை கலியுகத்தில் முறையாகப் பயன்படுத்தாமல் விரயம் செய்வதைக் குறிப்பதுடன், இதனால் எண் தேவதைகளின் சாபங்களுக்கும் உள்ளாகின்றோம் என்ற உண்மையையே இவ்வுலகம் அறியலாகின்றது. விஞ்ஞான வகை முன்னேற்றங்கள், பக்க விளைவுகளுக்கு ஆட்படாதவரை ஓரளவு ஏற்புடையவையே!

பிற லோகப் பிரம்மாண்ட விஞ்ஞான முன்னேற்றம்

பிளாஸ்டிக் போல் அல்லாது இயற்கையை ஒட்டிய மாசற்ற விஞ்ஞான முன்னேற்றமே ஏற்புடையது. வானியலில் நாம் வசிக்கும் பூமி தவிர எண்ணற்ற பூமிகள் உண்டு. உதாரணமாக, “வரவாரி பூமி” என்ற பூமி லோகத்தில் வசிப்போர், நம்மை விடப் பல்லாயிரம் ஆண்டுகள் விஞ்ஞானத்தில் முன்னேறி உள்ளனர். அவர்கள் பயன்படாது எனத் தூக்கி எறிந்த பலவற்றையுமே தாம் இன்றும் நாம் பென்டிலம், கேடியம் எனும் உலோகம் எனப் பெரிதாகக் கொண்டாடுகின்றோம்.

பிற லோகங்களில் இருந்து தீய சக்திகள் (negative forces) தினமுமே பூவுலகிற்கு வந்து மக்களோடு மக்களாய்க் கலந்து கலிநாசத்தை உருவாக்குவதால், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உறக்க நிலையிலும், எப்போதுமே ஆன்மீக சாதனங்களை அணிந்து, ஆத்மீகப் பூர்வமாகவே இத்தகைய எதிரிணித் தீய சக்திகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இவற்றைச் சாதாரண மனித வாழ்வு மூலம் வெல்வது மிகவும் கடினம்.

எண் சக்திகளை முடக்காதீர்!

ஆங்கில வருட முறை என்பதான, 2000, 2001 என்பதில் எண்களுக்கு உச்ச வரம்பு இல்லாது இருப்பதும், எண் சக்திகளை விரயமாக்கியும் அவற்றை முடக்கி வைப்பதையுமே குறிக்கிறது. காரணம், நம்முடைய பண்டையத் தமிழ் ஆண்டு முறைப்படி, ஆண்டுகளை எண்ணாகக் குறிக்காது, பிரபவ, விபவ என்ற வகையில் எழுத்தாக அமைவதே சிறப்புடையதாகும் எனப் பகுத்துத் தந்துள்ளனர். எனினும் 1947, 1956 என எண் வகை ஆண்டுக் குறிப்பு முறைக்கு கலியுக மனிதச் சமுதாயம் பழகி விட்டதாலும், இது இப்போது உலகளாவிய நிலையில் சட்டப்படியும் நடைமுறைக்கு வந்து விட்டதாலும், இதனை ஒட்டிய வகையில் எண் சக்திகளை எவ்வாறு பெறுவது என்பதையே நாம் இனி அறிந்து கொள்ள வேண்டும். இவற்றுக்கான தீர்கமான வழிமுறைகளைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தீர்க தரிசனமாக எழுதாக் கிளவி அட்சரப் பாங்காய், தக்க சத்குரு மூலமாக அறிவதாய்ப் பாரத நாட்டில் சித்தர்கள் வைத்துள்ளனர். பாரதமே இப்பேருலகின் ஆன்மீக மையம்.

எவ்வாறு நடப்பு எண் விதிகளில், பண்டைய நடைமுறைகளையும் புகுத்தி, தெய்வீக சக்திகளைப் பெறுவது? உதாரணமாக, இன்றைய தேதியில் நிலமோ, வீடோ பதிவு செய்யப்பட்டால், 24.2.2005 என்பதோடு, தாரண வருடம் மாசி மாதம், மூன்றாம் தேதி என்பதையும் சேர்த்து எழுதுதல், எண் மற்றும் அட்சர சக்திகளையும் இதில் நன்கு சேர்த்துத் தரும் வழிமுறையாகும்.

எண் சக்திகள் பொலியும் பத்திரமான (நிலப்) பத்திரம்!

ஒரு நிலம் அல்லது வீட்டுப் பத்திரம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரமாக வைத்திருக்கப்பட வேண்டிய பொருள் என்பதால்தான், பத்திரத்தில் இடப்படும் பிள்ளையார் சுழி மற்றும் தெய்வ நாம சக்திகள், எழுதுவதற்கு முன் பத்திரங்களை வைத்து பூஜிப்பதால் அதில் நிறையும் சக்திகள், கையெழுத்து இடுகின்ற சுப நேர சக்திகள், நல்ல நாளைக் குறித்து அமைப்பதால் இதில் வந்து செறியும் எண் மற்றும் அட்சர (எழுத்து சக்திகள்), இயற்கையான மையில் பதிந்து வரும் வண்ண சக்தி, கையெழுத்து இடுபவர் நல்ல மன நிலையுடன், இறை நாமங்களை ஓதி ஆன்ம சக்திகளுடன் கையெழுத்து இடுதல், எந்த வகை மேஜை, காகிதத்தின் மேல் எந்தத் திசையில் பத்திரங்களை வைத்தும், எந்தத் திசையை நோக்கியும் கையெழுத்திடுதல் – போன்ற பல அம்சங்களையும் கருத்தில் கொண்டுதான், எந்தப் பத்திரத்தின் நிலையான வாஸ்து சக்தியும் அமைகின்றது.

இவை எல்லாம் எண்களின் வடிவுகளுக்கு நல்ல ஆத்ம சக்திகளை அளிப்பதுடன், ஏற்கனவே ஒவ்வொரு எண்ணிலும் பொதிந்துள்ள ஆன்ம சக்திகளையும் நன்கு பயன்படுத்தும் முறையும் ஆகின்றது. எனவே கலியுக மனிதன் தன் வாழ்வில், மனித சமுதாயத்தில், எண்களோடு தெய்வீகப் பாங்குடன், அன்புடன் பழகும் முறைகளைக் கடைபிடித்திட வேண்டும்.

தினசரி வாழ்வில் எண்களோடு போராடாதீர்கள்!

கலியுக மனிதன், நீண்ட நெடு நவீன வங்கிக் கணக்கு எண் போன்று, நாளுக்கு நாள் எண்களோடு கொள்ளும் போராட்டங்களே அதிகமாகி வருவதால், மனித சமுதாயத்திற்குக் கிட்ட வேண்டிய, எண் அமிர்த சக்திகள், எண் வேத சக்திகள், எண் ஜப சக்திகள், எண் தப சக்திகள், எண் யோக சக்திகள், எண் மந்திர சக்திகள் போன்ற பலவற்றையும் இழந்து வருகின்றான்.

நல்ல நேரம் பார்த்தல் என்றாலே, எண் சக்திகளையும் சுபகரமாகக் திரட்டிப் பெறுதல் எனப் பொருளாகும். எண்களுடன் போராட்டம் என்றால், நினைத்த நாளில், நினைத்த எதையும் மனம் போன போக்கில் செய்தல் என்பதாகக் காலத்துடன் போராடுவதாகும். நாம் வாழ்வில் தினமும் காணும் தேதி, கிழமை, நட்சத்திரம், திதி யாவும் எண்ணில் பிறந்து வருபவைதாமே! எனவே ஏனோ தானோ என வாழ்ந்து எண்களுடன் போராடாதீர்கள்! இதனால்தான் தினமும் பஞ்சாங்கத்தைப் பார்த்துப் படித்தலும் எண்ணப்ப யோகமுறையாக எண்யோக சக்திகளை உடல், மனதுக்கு அளிப்பதாகும். எண்ணிக்கைக்கும் உதவும் மனிதனின் 5 விரல்களும் எண் சம்பந்தமான நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தையும் (பஞ்சாங்கம்) குறிப்பவைதாமே!

“எண்ணப்ப யோகம்”

ஒவ்வொரு எண்ணிலும், மனிதனுடைய நல்வாழ்விற்குத் தேவையான மூன்று வகையான முக்கியமான சக்திகள் உண்டு. இயற்கையிலேயே எண்ணில் பதிந்திருக்கும் தேவ சக்திகள், எண்களைப் பூஜித்து அமர்த்துவதால் பெறும் கூடுதல் தேவ சக்திகள், எண்களின் சக்திகளை விருத்தியாக்கும் நல்வழிகளைக் கடைபிடிப்பதன் மூலமும், மேன்மேலும் எண் சக்திகளைப் பெறுதல் இவற்றை மனிதன் அடைவதற்கு, எண்களோடு அன்புடன் நிதமும் பழகுதல் வேண்டும். அதாவது, எவ்வாறு தேவ மொழி மற்றும் தமிழ் மறைத் துதிகள், தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், திருப்புகழ், அருட்பா போன்றவற்றை ஓதுகையில், உடலில் 72,000 நாளங்களிலும் அட்சர சக்திகள் (எழுத்து) சேர்ந்து அருள் தருகின்றனவோ,

இதே போல, உடல் நாளங்களில், நாடிகளில், கபாலச் சக்திகளில் எண் சக்திகளை நிறைந்து நிரவிட வேண்டும். இதற்கு உதவுவதே “எண்களுடன் எழிலோடு அன்புடன் பழகும் யோக” முறையாகும். இதற்கு முதல் படியாக அமைவதே “எண்ணப்ப யோகம்” (numerical yogistics) என்ற வகுப்பு முறை ஆகும்.

திருப்புகழ் மற்றும் பாம்பன் சுவாமிகளின் துதிகளில் அமையும் பல்வகை “வகுப்புத் துதி முறைகள்”  பலவும், எண் சக்திகளைப் பல கோடி மடங்குகளாக விருத்தி செய்து தர வல்லவை ஆகும்.

மப்பேடு

எண்ணப்ப யோக மூர்த்தியே அனுமாரப்பர்!

“எண்ணப்ப யோக வகுப்புப் பாடம்” என ஒரு நோட்டுப் புத்தகத்தைத் தயார் செய்து வைத்துக் கொண்டு, தினமும் இதில் எண்யோக முறையைப் பயின்று வாருங்கள். இதில் நீங்கள் தினமும் வாழ்வில் பயன்படுத்தும் பலதுறை வகை எண்களோடு, தேவமொழி, தமிழ் மாமறைகளுள் எண்சக்தி யோக நெறிகள் துலங்கும் அப்பர் சுவாமிகளின் “ஒன்று கொலாம் ..” எனத் தொடங்கும் துதி, யோகப் பத்துச் சக்திகள் நிறைந்த பத்துப் பாடல்கள் கூடிய “திருநீற்றுப் பதிகம், திருநெடுங்களப் பதிகம்” போன்ற எண்யோக சக்தி மாமறைப் பாடல்கள்

போன்றவற்றை ஒவ்வொரு எண்ணின் கீழும் எழுதி தினமும் ஓதி, ஓதி உட்புனல் சக்திகளைப் பெற்றிடுக! ஒரு நாளில் முடிவதல்ல இந்த எண்யோக வகுப்பு! வாழ்வின் முழுதிலும் பரிபூரணித்து வருவது! எண்ணப்ப யோக சித்சக்திகளைப் பயிலும் முறை (yogic notes) இதன் மூலம் வாழ்வில் இணைந்து சிறிதி சிறிதாகப் புலனாகும்.

எண்யோக வளநாதர் ஆஞ்சநேயப் பெருமாள்

எண் சக்திகள் நிறைந்ததே மூல நட்சத்திரம், எனவேதான் மூல நட்சத்திரத்திற்கு உரிய ஆஞ்சநேயரும் “நவவியாகரணப் பண்டிதர்” ஆனார். ஒன்பது வகை (நவ) வியாகரணங்களுள் எண்சக்தி யோக அம்சங்களும் வகுப்புச் சூத்திரங்களாய் அடங்கும். ஸ்ரீஆஞ்சநேயர் தினமும் வந்து வழிபடும் சென்னை அருகே உள்ள மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் சிவாலயத்தின் பலிபீடம் அபூர்வமான எண்சக்திகளின் கருப்பொருள் மண்டபமும் ஆகும். எண்யோகத்தில் சிறந்து விளங்கிட, ஜோதிடக் கலைத் துறையினர் தம் துறையில் ஆன்ம சக்திகளைப் பெற்று உத்தமச் சமுதாயப் பணிகளை ஆற்றிட, சனிக் கிழமை மற்றும் மூல நட்சத்திர நாளில், இங்கு மப்பேடு ஆலயத்தில் நவவியாகரணப் பலிபீடத்திற்கு 64 வகை அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி, சகல வகை இசைக் கருவிகளை இசைத்திடச் செய்து எண்யோக சக்திகளைப் பரவெளியில் நிரவிட வழிவகை ஆற்றுதல் வேண்டும்.

அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனப்படும் போற்றித் துதிகளும் எண்யோக சக்திகளை அளிப்பவையே! இந்த “எண்ணப்ப யோக வகுப்புத் திரட்டு” நோட்டுப் புத்தகத்தில், நீங்கள் தினமும் எண்களுடன் பழக வேண்டிய துறைகள், எங்கெல்லாம் எண்கள் பயனாகின்றனவோ, அந்த எண்களின் வரிசை, (உதாரணமாக தொலைபேசி எண்கள், வங்கிக் கணக்கு எண்கள், வாகன எண்கள், அலுவலகப் பணி வரை, Pan card எண்கள், ATM எண், ரயில் டிக்கெட் எண்கள், பஸ் எண், பஸ் டிக்கெட் எண்கள் என்று பல, வகைகளிலும் நீங்கள் பயன்படுத்துகின்ற எண்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

“நாளைய எண்ணை இன்றே, இன்னே எண்ணுங்கள்!”

இவ்வாறு இந்த எண்களோடு உங்களுடைய தினசரி வாழ்க்கையின் பல காரியங்களும் அமைகின்றன என்பதை மறுக்க முடியாது அல்லவா! இதனையே சித்தர்களும் கலியுக எண் வாக்கிய அருள் மொழியாக, “நாளைய எண்ணை இன்றே, இன்னே எண்ணுங்கள்!” என்று சித்தவேத சூக்த மாமந்திர அருள்மொழியாக உரைக்கின்றார்கள். இதில் உள்ள வெளிப்படையான அர்த்தம் மிக மிகச் சாதாரணமானது போலானாலும், இதில் எண்ணற்ற வேறு பல ஆன்மீக அர்த்தங்களும் நன்கு செறிந்திருக்கின்றன. இதனைக் காலையில் தினமும் ஓதி ஸ்ரீநாமகிரித் தாயாரையும், ஸ்ரீஆஞ்சநேயரையும் வணங்கி வாருங்கள், உங்கள் வாழ்வில் மலர்கின்ற எண்களோடு நீங்கள் அன்புடன் பழகுதற்கு இது உதவும்.

ஸ்ரீஅங்கவள நாயகி
கோனேரிராஜபுரம்

அங்கமெல்லாம் எண்மொழியாதல்!

எண்களுடன் அன்புடன் நிறைதல் எனில் இதற்கு என்ன பொருள்?

கண்களால் பார்க்கப்படுவது மட்டும் எண்கள் கிடையாது. எண்ணானது அங்க நாடிகளில் வளம் பெறுதல் வேண்டும். இதனால்தான் ஈஸ்வரியும், சில தலங்களில் அங்கவள நாயகி எனப் பெயர் பூண்டு அருள்கின்றாள்.

எண் சக்திகளை அங்கங்களில் நிறைத்தலும் எண்களுடன் அன்புடன் துலங்க உதவும். உதாரணமாக, நம் தினசரி வாழ்வில், தொலைபேசி என்றால் வலது நுனி விரலால் (குரு விரல்) எண்களைச் சுழற்றித்தான் ஒரு காரியம் தொடங்குகின்றது அல்லது நடக்கின்றது. இதே போல வியாபாரத்திலும், அலுவலகத்திலும் பேனாவாலோ, கால்குலேட்டரிலோ எண்களை இயக்க வலது கை அதிலும் சில வலக் கை விரல்கள்தாம் பயன்படுகின்றன. இனியேனும் சிறிது, சிறிதாக இடக்கை விரல்களையும் பயன்படுத்துதல் வேண்டும்.

நீங்கள் சிறு வயதில் கூட்டல் கற்றுக் கொள்ளும்போது எண்களைக் கூட்ட கழிக்க விரல்களை மடித்துத்தாமே பழகிக் கொண்டிருக்கின்றீர்கள். எனவே, உங்கள் அவயங்களோடு இணைந்தவையே எண்ணின் சக்திகளாகும். இத்தகைய சக்தி வாய்ந்த எண்களோடு நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு போதும் போராடக் கூடாது.

எண்ணோடு இயைதல் இல்லையா, இதுவே பெரும் போராட்டம்!

எண்களுடன் போராட்டம்! இது எப்படி அமையும்? உங்களுடைய சிலவிதமான தவறுகளால் ஏற்படும், எண்கள் சம்பந்தமான காரியங்களில் தேவையில்லாத எரிச்சல்கள், கோப விளைவுகளே எண்களோடு போராடுவதாகும். ஜாதக ரீதியாக அமையும் எண்களைப் பயன்படுத்தாது, தனக்குத் தோன்றிய வகையில் எல்லாம் எண்களைத் தவறாகப் பயன்படுத்துவதும் எண்ணோடு கொள்ளும் போராட்டமே!

மேலும் உதாரணமாக, வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாது இருத்தல், வர வேன்டிய பண வரவுக் காசோலை பணமின்றித் திரும்பி வருதல், தான் கொடுத்த காசோலை பணம் இல்லாததால் திரும்ப அனுப்பப் பெறுதல், தவறான எண் தொடர்பு (wrong numbers), தவறான கூட்டல், கழித்தல் கணக்கு வகைகள், மனிதன் தன்னையே நம்பாது கால்குலேட்டர் போன்ற எந்திரங்களை நம்பி வாழ்தல் போன்றவை யாவும் எண்ணுடன் மனிதன் தேவை இல்லாமல் நிகழ்த்தும் போராட்டங்கள் ஆகும்.

செல்போனும் எண்ணோடு போராடுவதே!

குறிப்பாக, தற்காலத்தில் செல்போன்கள் வந்த பிறகு எண்களுடன் மனிதர்கள் நிகழ்த்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன. எண்ணின் யோக சக்திகளை உணராது, தேவையில்லாமல் நீளமான எண்களைப் பயன்படுத்துவதும், எண்களின் மகத்துவத்தை அறியாமல் செல்போனில் எண்களை வைத்துக் கொண்டு பொழுது போக்கிற்காகப் பேசி எண் சக்திகளை அவமதிப்பதும் நிறையவே கலியுகத்தில் இந்தச் செல்மய உலகில் நடந்து வருகின்றன.

நம் திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்திய ஆஸ்ரமத்தின் வெளியீடான “ஓங்கார மகிமை” எனும் பழமையான எண் சக்திகளின் மகிமைகளை விளக்குகின்ற நூலில், எண்களை வாழ்வில் பயன்படுத்தும் முறை பற்றிய நிறைய விளக்கங்களைக் காணலாம். எண்களே எண்ணங்களுக்கும் காரணம் ஆவதும் உண்டு. சித்தத்தைச் சிவன்பால் செலுத்தினால் எண்ணில் பொதிந்துள்ள ஆத்ம சக்திகள் நன்கு புலனாகும்.

கோடிக்கோடி என்று எழுத வல்லமையால் எண்களும் வடிவுப் பூர்வமாக “எல்லையற்றது” என எண்ணூவோர், எண் சக்திகளும் எல்லையற்றவை என ஏன் உணர்வதில்லையோ!

தேதியோடு தெளியும் யோகத் தென்றல்கள்!

தற்போது பலரும் பிறந்த தேதிக்கு, மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். பிறந்த தேதியுடன், மாதம், வருடம் ஆகிய மூன்றையும் சேர்த்து வைத்தே பலாபலன்களைக் காணுதல் வேண்டும். மனிதனுடைய பரிபூரண ஆயுளில் ஓர் எண்ணுடன் பழகிட ஒன்பது ஆண்டுகள். இவ்வாறு ஒன்று முதல் ஒன்பது எண்களுடன் அன்புடன் வாழ்க்கையில் நிரவிட 90 ஆண்டுகள் பிடிக்கும்தானே! M.Sc, M..B.A, B.E., போன்ற கல்வித் துறை யோக்யதாம்சங்கள் அந்தந்தப் பிறவியோடு முடிந்து, அடுத்த பிறவி என்றால் மீண்டும் எல்.கே.ஜி, யு.கே.ஜியிலிருந்து தொடங்கிட வேண்டும் அல்லவா!

ஆனால், எண்களோடு பழகுதலில் ஒரு ஜென்மத்தில் ஒரு எண்ணுடன் ஒன்பது ஆண்டு அன்புப் பிணைப்பாக, ஆயுளுக்குள் எத்தனை எண்களுடன் அன்புடன் பழகினார்களோ அந்த அனுபூதிகளும், எண் சக்திகளும் வரும் பிறவிகளிலும் தொடரும் என்பதே ஆன்மீகத்தின் சிறப்பம்சமாகும்.

தமிழ் ஆண்டுப் பெயரில் தவழும் எண் தவசக்திகள்!

பொதுவாக, தமிழ் ஆண்டு ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை எண் அம்சங்களைத் தாங்கி வருவதாகும். எனவே எந்த ஆண்டையுமே, 1947, 1956 என எண் வடிவோடு, தாரண, பார்த்திப என எழுத்து வடிவாகவும் உரைத்தலே அந்தந்த ஆண்டிற் பொலியும் எண் சக்திகளை அளிக்க வல்ல சிறப்புடையதாகும்.

அந்தந்தத் தமிழ் ஆண்டில் அதனதற்குரிய எண் சக்திகள் அந்த ஆண்டில் பரிணமிக்கும் என்பதே எண் நியதிகளின் திருவர இலக்கணமாகும். ஒரு மனிதனின் பரிபூரண ஆயுள் 120 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதராக வாழ்ந்து உத்தம மகரிஷி நிலையை அடைந்து நல்வழி காட்டிய வைணவப் பெருமகரிஷியாகிய ஸ்ரீராமானுஜர் 120 ஆண்டுகள் பூவுடலில் துய்த்து அன்றும் இன்றும், என்றுமாய் இறையருளைப் பெற்றுத் தரும் உத்தம வைணவச் சித்தராய் அருளமுது ஊட்டுகின்றார்.

மானுட வாழ்வில் 60 ஆண்டுகள் கூடிய மூன்று புரிகள் உண்டு. ஒவ்வொரு 60 ஆண்டும் முதற் புரி, இடைப் புரி, கடைப் புரி எனப்படும்., இதில் த்ரைலிங்க சுவாமிகள், ஞானானந்த சுவாமிகள் போன்றோர் காலத்தைக் கடந்த கடைப் புரி யோகிகள் ஆவர்.

சுவாமிமலை

முப்புரிக் கால வாழ்க்கை

இதனால்தாம் 60 ஆண்டுகள் நிறைவை சஷ்டி அப்த பூர்த்தியாகக் கொண்டாடுகின்றார்கள். இடைப் புரியில் 60, 70, 80, 90, 110, 120 என்பதாக ஒவ்வொரு 10 ஆண்டுகளும் பல்வகை நிறைவு சக்திகளைக் குறிக்கின்றன.

முதல் புரியில் 60 ஆண்டுகளிலும் ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் ஒரு சுழற்சி ஏற்படும். ஒவ்வொன்றையும் ஒவ்வொரு வாழ்க்கைப் படியாகக் குறிப்பதால்தான் பிறந்த நாள் என்பது இறைவனை நோக்கி ஒருபடி முன்னேறுதல் என்ற பொருளில்தான் சுவாமிமலை ஆலயத்தில் 60 படிகள் அமைந்துள்ளன. சில ஆலயங்களில் உத்தராயணப் படிகள், தட்சிணாயனப் படிகள் என அந்தந்த அயனத்தில் சுவாமியைத் தரிசிக்கின்ற படிக்கட்டு நிலைகள் மாற்றப்படும். இவை யாவும் மனித வாழ்வின் பல அயனப் படிகளைக் குறிப்பதாகும்.

மனித வாழ்க்கை என்பது குறிப்பாகக் கலியுகத்தில் எண்களோடு தவம் செய்து, யோகித்து, தியானித்துப் பூரிக்கின்ற வாழ்க்கை முறை ஆகும். ஒவ்வொரு எண்ணுக்கும் தலைமை தேவதா மூர்த்தி, உபமூர்த்தி, தேவதைகள் உண்டு. இவற்றைத்தாம் ஆலயங்களில்  100 கால் மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், அர்த்த மண்டபம் என்பதாக மண்டபத் தூண்களாக நிலை நிறுத்தி வைத்துள்ளார்கள். இவ்வெண்ணின் சக்திகள் உடலில் நன்கு நிரவிடவும் ஆலயத் தூண்களை வலம் வருதல் சிறப்புடையது.

மேலும், எண்களின் சக்தியை ஜீவன்களுக்கு உணர்த்திடத்தான் பல ஆலயங்களிலும் சித்தர்கள் தூண்களில் ஜீவசமாதி பூண்டுள்ளார்கள்.

எளிய முறையில் எண் சக்திகளை கலியுகத்தில் பெற்றிட நிறைய வழி முறைகள் உண்டு. இல்லத்திலோ, அலுவலகத்திலோ இரண்டு கைகளையும் சமமாகப் பயன்படுத்தி வருதலால், உடலில் எண் சக்திகள் நன்கு விருத்தியாகும். இரண்டு கண்கள், இரு நாசி துவாரங்கள், இரண்டு காதுகள் எனப் பல வழிமுறைகளில் சமமாகப் பயன்படுவது போல இரு கால்கள், கைகளையும் சமமாகப் பயன்படுத்துவதின் மூலம் எண் சக்திகளை உடல் நாளங்களில் நிரவிடலாம். ஏனெனில், கை விரல் கணுக்கள், உள்ளங்கை ரேகைகள், மணிக் கட்டுக் கங்கண்கள், உள் நுனி விரல் கணுக்கள் போன்ற பலவும் எண் சக்திகளைக் கொண்டவை. கை ரேகைகளில் உள்ள வளையங்களின் எண்ணிக்கைகளைக் கொண்டு பூர்வ ஜன்மம், நடப்பு விதி நிர்ணயங்கள், வருங்கால வாழ்க்கையை அறியும் கைரேகை சாஸ்திர விதி முறைகளும் உண்டு.

வல, இடச் சமயோகம்

வாழ்க்கையில் நாம் பல செயல்களையும் வலது கையால் மட்டுமே செய்து வருகின்றோம். எதையும் வலது கையால் எடுத்துக் கொடுத்தல், வலது கையால் விளக்கு ஏற்றுதல் போன்ற மதிப்பிற்குரிய, மரியாதைக்குரிய காரியங்கள் வலது கையால்தான் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றம் கிடையாது. ஆனால், டெலிபோனை டயல் செய்யும்போது இடது கையாலும் டயல் செய்தல், பொருட்களை எடுத்து வைக்கும்போது சற்றே இடது கரத்தையும் பயன்படுத்துதல் என்றவாறாக நடைமுறை மரியாதை, மதிப்பு நியதிகளுக்கு பங்கமின்றி, இடது கையையும், வலது கைக்கு நிகராகப் பயன்படுத்திக் கொள்வதைப் பழக்கப்படுத்தி வருதல் வேண்டும்.

தலை வாருதல், எடை தூக்குதல், இடது கையால் பிடித்துக் கொண்டு ஏறுதல், இடது கையால் கதவைத் திறந்து கொண்டு உள் செல்தல் போன்றவற்றிலும் இரண்டு கைகளையும் சமமாகப் பயன்படுத்துவதன் மூலம் இடது கையிலும் நிரவியுள்ள எண் சக்தி நாளங்களை நன்கு விருத்தி செய்து கொள்ளலாம். வலது கையால் எழுதும் பழக்கமுள்ளவர்கள் கூட, இடது கையால் தினமும் “ஸ்ரீராம ஜெயம், ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாயா” என 108 முறை, 1008 முறை எழுதிப் பழகிட வேண்டும். ஒவ்வொரு நாளிலுமே ஒவ்வொரு நேரத்திலும் விதவிதமான எண்களின் சக்தி நன்கு பெருக்கெடுக்கும்.

உதாரணமாக, காலையில் சூரிய உதயம் 6.11 மணி என்றால் 6+1+1 = 8 என்ற எண் அமைந்து, இதிலிருந்து குறைந்தது ஒரு நாழிகைக்கு எண் எட்டு நல்ல சக்திகளைப் பெற்றிருக்கும். இந்நேரத்தில் சூரிய சக்திகளால் ஆக வேண்டிய காரியங்களை (படித்தல், பூஜைகள், தர்ப்பணம், அலுவலக வேலை, தந்தைக்கு உடல் சேவை போன்றவற்றில், எட்டின் மடங்காய் வரும்படி திரவியங்களை வைத்துப் பூஜித்திட வேண்டும்.

சிந்தூரப் பொட்டு சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம் சிந்தூரப் பொட்டுச் சித்தர் கிரிவலம் வரும் மாத சிவராத்திரி மஹிமை

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள், அறிந்திட உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

பௌர்ணமி கிரிவலம் போன்று, அமாவாசைக்கு முந்திய தினமான சதுர்த்தசித் திதியாகிய – மாத சிவராத்திரி நாளில், அருணாசலமாம் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவதன் மகத்துவத்தையும், மஹா சிவராத்திரி அருணாசல கிரிவலத்தில் விளையும் அதியற்புதப் பலாபல விளக்கங்களையும் இதுகாறும் பல இதழ்களில் அளித்து வந்துள்ளோம்.

நடப்பு 2005, ஏப்ரல் மாதம், தாரண வருடம், பங்குனி மாத சிவராத்திரி நாளில், சிந்தூரப் பொட்டுச் சித்தர் பெருமான் கிரிவலம் வருகின்ற மகாத்மியத்தை ஈண்டு காண்போமாக!

தினமும் சூரிய மூர்த்தியின் தேரைச் சுற்றியுமாய் நின்று சகல வேத மந்திரங்களையும் ஓதி, சூரியக் கிரணங்களுக்கு வேத சக்திகளை ஊட்டும் “கட்டை விரல்” அளவே உள்ள “வாலகில்ய” மஹரிஷிகளைப் போல், உருவத்தில் சிறிதாக விளங்கும் “கட்டை விரற் கழல்” பஞ்சுமிட்டாய்ச் சித்தர் போன்ற சித்தர்களின் வரிசையில் அமைந்து சிறப்பைக் கூட்டுபவரே சிந்தூரப் பொட்டுச் சித்தர் ஆவார்.

எந்த மனிதனும் தக்க சத்குருவின் அருளுடன், உத்தம தெய்வ நிலைகளை அடைந்திடலாம். எந்த மனிதனும் இவ்வகையில் சித்தராகலாம். மகரிஷி ஆகலாம் என்பதை உணர்விக்கும் அனுபூதிச் சித்திரங்களே, 63 நாயன்மார்களின் சரிதங்களும், மகா பக்த விஜய அனுபூதிப் பூரணச் சம்பவங்களும் ஆகும்.

அன்பின் வடிவமே சித்தர்கள்!

ஆதிமூலச் சித்தர்கள் யாவருமே சிவபெருமானிடமிருந்தே நேரிடையாகத் தோன்றியவர்கள் ஆவர். இவர்களில் பலரும் மென்மேலும் அருட்தோன்றலாக, மனித சமுதாயத்தில் சாதாரண மனிதராக, இறை ஆணையாகத் தோன்றியும், எளிய சமுதாயத்தினரைப் போல் வாழ்வில் இன்ப துன்பங்களை அனுபவித்து, இவற்றின் ஊடே உத்தம தெய்வீக நிலைகளைத் துய்த்துப் பலருக்கும் இறையருள் வளத்தை ஊட்டி உணர்த்துகின்ற கடமையையும் இறையாணையாக ஆற்றுகின்றனர். அதாவது கர்ம வினைவுகளின்றிப் பரிசுத்தமாய், தூய அன்பின் வடிவாய் மானுட வடிவில் தோன்றுபவர்களே சித்தர்கள் ஆவர்.

வடிவில் வடிவின்மை!

கட்டை விரல் வடிவில் ஏன் இவ்வகைச் சித்தர்கள் வித்யாசமாகத் தோன்ற வேண்டும்? அவர்கள் வித்யாசமாகத் தோன்றுகின்றார்கள் எனக் கூறுவதே தவறு! ஏனெனில் சித்தர்கள் எந்த வடிவையும் பூண வல்லவர்கள். அவர்கள் ஒரு வடிவை எடுப்பதற்குக் கோடிக் கோடிக் காரணங்கள் உண்டு. மனித வடிவும் பல கற்பங்களில் மாறுகின்றன. ஒரு பனை மரம் உயரத்திற்குச் சராசரி மனித உயரம் இருந்த காலமும் உண்டு. எந்தச் சித்தர் எந்தக் கற்பக் காலத்தில் தோன்றினாரோ அதற்கேற்ற வடிவில் பூவுலகிற்கு வருகின்றனர். மேலும் மனித உடலில் ஆத்மசக்தி அவரவர் கட்டை விரல் அளவில் ஆத்ம ஸ்தம்பமாகத் துலங்குகின்றது என்ற தத்துவார்த்தமும் உண்டு.

இவ்வகையில், சிந்தூரப் பொட்டுச் சித்தர் எனும் உத்தமச் சித்புருஷர், கலியுகத்தில் நூறாண்டுகளுக்கு முன்னான காலத்தில் ஒரு சாதாரண விவசாயியாய்த் தோன்றி, மக்கள் சமுதாயத்திற்குத் திறம்பட அருள்வழி காட்டி வாழ்ந்து, பரிபூரண இறைமையில் துய்த்து, உள்ளம், மனம் உடலால் தெய்வீக நிலைகளில் ஐக்யமடைந்து, அருள் வழி காட்டியவர் ஆவார்.

தினமுமே சிந்தூரக் காப்பிட்டவர்!

தினமும் செய்யாறு தீர்த்தத்தில் நீராடி, சுக்கான் கல், சிந்தூரப் பொடி, குளவிக் கல் கொண்டு சிந்தூரப் பொடியை இடித்து, ஒரு சிறு கூடையில் வைத்துச் சுமந்து நடந்து வந்து, அருணாசலத்தைக் கிரிவலம் வந்து, ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அருளும் சிந்தூர கணபதிக்குத் திருமேனிக் காப்பிட்டு வழிபட்டு வந்த உத்தமச் சித்தர்பிரானே சிந்தூரப் பொட்டுச் சித்தர் எனக் காரணப் பெயர் பூண்டார்.

சித்தமே சித்தரிடம் சிவமயமே!

இச்சித்தர் பிரான் தம் புனிதமான கரங்களால் அரைத்த சிந்தூரத்துடன், திருஅண்ணாமலையில் தினமும் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து, ஆலயத்தில் சிந்தூர கணபதியின் நெற்றிக்கும், திருமேனிக்கும் சிந்தூரக் காப்பு இட்டு வழிபடும் கைங்கர்யத்தை மிகுந்த பக்தி சிரத்தையுடன் பல்லாண்டுகளாக ஆற்றி வந்த சிந்தூரப் பொட்டுச் சித்தரிடம் எண்ணற்ற சித்திகள் தாமாகவே சுயம்புவாய் நிறைந்தன.

“சிந்தூரத்தை அரைத்துச் சுவாமிக்கு இடுதல் என்பது ஒரு பெரிய கைங்கர்யமா என்ன?” என்று பலரும் எண்ணிடலாம். இந்த எளிய நற்காரியத்தை ஆழ்ந்த பக்தியுடன் ஆற்றி வந்தாலே, சித்தராகக் கூடிய உத்தம நிலைகளைப் பெற்றிட முடியும் என்பதே இறைவன் இச்சித்தர் மூலமாக அகிலத்திற்கு அளிக்கின்ற நற்பாடமாகும். இத்தகைய வினாக்கள் கலியுகத்தில் எழும் என்பதால்தான், சிந்தூரப் பொட்டுச் சித்தர் போன்ற சித்தர்களைச் சாதாரண மானுட வடிவில் தோன்ற வைத்து, வளர்த்து, உத்தம தெய்வீக நிலைகளைத் தந்து, இறைவனே ஆட்கொண்டு அருள்வழி காட்டுகின்றான்.

(இறைவனே) ஆட்டுவித்தால் ஆடுபவர்களே அன்புச் சித்தர்கள்!

சிந்தூரப் பொட்டுச் சித்தர் தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யாற்றில் விடியற் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடும் தருணத்தில் இருந்து, திருஅண்ணாமலைக்கு நடந்து வந்து கிரிவலம் புரிந்து, சிந்தூர கணபதிக்குக் காப்பு இட்டு வழிபட்டுத் திரும்பும் வரையிலான தெய்வீகக் கைங்கர்யத்தில் நிகழ்ந்த அற்புதமான பக்தி நிலை அனுபூதிகளைப் பற்றி எத்தனை ஆயிரம் புராணங்கள் எழுதினாலும் போதவே போதாது. அந்த அளவிற்குப் பரிபூரண பக்தி, அன்பு, மனோ வைராக்கியத்துடன் இவர் இறைவனுக்கு அருட்தொண்டாற்றி வருகையில், ஆயிரக்கணக்கான துயரங்களைக் களையும் மாமருந்துப் புனலாயும் விளங்கினார். இவரால் தம் வாழ்வில் மறுமலர்ச்சி பெற்றோர் பல்லாயிரம் உண்டு.

மேலும் இச்சித்தரே அறியா வண்ணம், இச்சித்தர் மூலம் அண்ணாமலையார் எத்தனையோ இறைத் திருவிளையாடல்களை சுயம்புவாகப் புனைந்து பக்த கோடிகளுக்குத் துணை புரிந்தருளினார். சித்தர்கள் சித்திகளைச் செய்வது கிடையாது. ஆனால் கோடானு கோடிச் சித்திகள் யாவும் தாமே சுயம்புவாய் அவர்களிடம் திருவிளையாடற் கொள்ளும்.

பலத்த திருமணத் தோஷங்கள் காரணமாகத் திருமணமே கை கூடாது என்று வேதனையுடன் பாரதத்தின் பல பகுதிகளிலும், வேறு சில நிலப் பகுதிகளிலும் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் கன்னிப் பெண்களுடைய பெற்றோர்களின் கனவில் இறைவனே தோன்றியும், அசரீரியாகவும், “பிள்ளையாரால் நெற்றிக்குச் சிந்தூரப் பொட்டு இடப் பெற்று பாக்கியம் அடைந்த உத்தமர் அருணாசலத்தில் பன்னெடுங்காலமாகக் கிரிவலம் வருகின்றார். அவருடைய தபோபல சக்திகள் உனக்கு நல்ல திருமண வாழ்வை அளிக்கும். நீ அவரை நாடி, அவருடைய திருக்கரத்தால் நெற்றிக்குச் சிந்தூரப் பொட்டு இடப் பெறுவாயாக! இதனால் உனக்கு உடனே திருமணம் நடைபெறும்! இவ்வகையில் உத்தமத் திருமண வாழ்க்கையை அடைவாயாக!” என்ற அருள்வாக்கு வந்திடவே, ஆயிரக் கணக்கானோர் அருணாசலப் புனிதப் பூமிக்கு வந்து சேர்ந்தனர்.

திருமணம், இல்லற வாழ்வின் அறமண்டபமே!

ஆனால் சிந்தூரப் பொட்டுச் சித்தரோ “தனக்குக் கணபதி மூர்த்தியே முன் தோன்றி நெற்றியில் சிந்தூரப் பொட்டை இட்டு ஆசீர்வதிக்க வேண்டும்!” என்றே ஒரே  ஒரு பிரார்த்தனையுடன் பன்னெடுங் காலமாக சிந்தூரப் பணியை ஆற்றி வந்தார். பலரும் “பிள்ளையாருக்குச் சிந்தூரக் காப்பிடும் உத்தமர் இவரே!” என்று அறிந்தாலும், இவருக்கு “விநாயக மூர்த்தியே சிந்தூரப் பொட்டு இட்டாரா?” என அறியாததினாலும், இவருடைய நெற்றியில் சிந்தூரப் பொட்டு இல்லாமையாலும், இவரும் எவருக்கும் சிந்தூரப் பொட்டை நெற்றியில் இட்டு ஆசிர்வதிப்பதாக எவரும் அறியாததாலும்,

-அவர்களும் தனக்கு கனவில் வந்த உத்தமர் வேறு எவரோ உள்ளார் எனத் தேடி அருணாசலக் கிரிவலப் பாதையில் தினமுமே எந்நேரமும் கிரிவலம் வரலாயினர்.

பலரும் கனவில் இறைவன் உரைத்த சித்தர்பிரான் இவராகத்தான் இருக்கும் என்று எண்ணியும், அவர்களால் இவரைக் கண்டு தரிசிக்கவே முடியவில்லை! எவ்வகையிலேனும் இத்தகைய உத்தமச் சித்தரைத் தரிசித்து அவருடைய திருக்கரங்களால் நெற்றியில் சிந்தூரப் பொட்டை இடப் பெறுதல் வேண்டும் என்று எண்ணி, ஏங்கி உளமாறக் கதறிக் கதறி அழுது அருணாசலத்தைக் கிரிவலம் வந்தவர்களும் நிறையவே உண்டு.

இதே காலத்தில், இத்தகைய அருட்கனவு நாட்டின் பல பகுதிகளிலும், பிற நாடுகளிலும் பலருக்கும் ஏற்பட்டமையால் அருணாசலப் புண்ணிய பூமியில் கிரிவலம் வருவோரின் எண்ணிக்கையும் பல்லாயிரமாக ஆயிற்று, இதனால் பாரத நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மேற்கண்ட கனவு அனுபூதியைப் பெற்ற பலரும் அருணாசலப் புண்ணிய பூமியில் ஒன்று சேர்ந்து சத்சங்கமாக ஆகினர். இதனால் ஒரு நாளின் அறுபது நாழிகையிலும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து கிரிவலம் வரும் அருள் பூமியாகத் திருஅண்ணாமலை நூறு ஆண்டுகளுக்கு முன் பொலிந்தது, இத்திருவருள் நிலை மீண்டும் அருணாசலப் புனித பூமியில் சித்தி பெற வேண்டும் என்பதே நம்முடைய அவா!

சித்தர்களைக் காண உதவும் “குங்கும வர்ஷிணி யாகம்”

இவ்வகையில் அருணாசலப் புண்ணிய பூமியில் கூடிய ஆயிரக்கணக்கானோர் யாவரும்  உத்தமச் சித்தர்களின் தரிசனத்தைப் பெற்றுத் தரவல்ல ஓர் அற்புதமான “குங்கும வர்ஷிணி யாகம்” என்ற அபூர்வமான வேள்வியை நடத்திட விழைந்தனர். இதனை பக்தியுடன் எங்கு நடத்தினாலும் ஆங்கே ஒரே ஒரு சித்தராவது, மாமுனியாவது நிச்சயமாகத் தோன்றியாக வேண்டும் என்ற இறைநியதி உண்டு.

“குங்கும வர்ஷிணி ஹோமம்” பல நாட்களுக்கு நிகழ்ந்தது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஜாதி, மத பேதமின்றி பலரும் பங்கு கொண்டனர். வேள்வியின் நிறைவில், இறை நியதியால் சிந்தூரப் பொட்டுச் சித்தரே ஆங்கே வந்து சேர்ந்தார். அன்று மாத சிவராத்திரித் திருநாளாகவும் மலர்ந்தது.

சிவப்பிள்ளை(யார்) இட்ட சிந்தூரப் பொட்டு

வழக்கம் போல் சிந்தூர கணபதிக்குச் சிந்தூரக் காப்பிட்டு நெடுஞ்சாண் கிடையாக வணங்கி எழுந்த போது, ஆங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. அவ்விடத்தில் சிந்தூரப் பிள்ளையாரப்பனே நேரில் தோன்றி, “குங்கும வர்ஷிணி யாகத்தைக்” காண வந்த ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில், பாக்யம் உள்ளோர் தரிசிக்கும் வண்ணம், சித்தருடைய நெற்றியில் தன் வலது திருக்கரத்தால் சிந்தூரப் பொட்டு இட்டு ஆசீர்வதித்தார்.

“யாம் இட்டதை நீயும் அருட்பிரசாதமாக இட்டு, மக்களின் திருமண தோஷங்களும், திருமண வாழ்வில் கர்ம வினைகளால் வரும் இன்னல்களும் தீர்ந்திடக் கலியுகத்தின் ஓரற்புதத் தெய்வீகச் சாதனமாய்ச் செயல்படுவாயாக!” என்று சிந்தூர கணபதி முன் மொழிந்த தெய்வத்தின் குரலைப் பலரும் – விநாயகர் தரிசன பாக்யம் கிட்டாதோரும் – நன்றாகவே காதாரக் கேட்டனர்.

தாரண ஆண்டில் காட்சி தரும் சித்தர்!

இவ்வாறாக அன்றும், இன்றும், என்றுமாய் எத்தனையோ மாத சிவராத்திரிகளில் சிந்தூரப் பொட்டுச் சித்தர் அருணாசலத்தில் கிரிவலம் வந்திட்டாலும், பூலோக ஜீவன்களின் கண்களுக்குப் புலனாகித் தரிசிக்கும் வகையில், இச்சித்தர் பிரான் அருணாசலத்தைக் கிரிவலம் வரும் திருநாளே, ஒவ்வொரு தாரண ஆண்டின் பங்குனி மாதச் சிவராத்திரி நாளாகும்.

சகல விதமானத் திருமண தோஷங்களையும் தம்முடைய சிந்தூரப் பொட்டுக் கிரணங்கள் மூலம் நிவர்த்திக்க வல்லவர். இந்த வைபவம் அண்ணாமலையாரின் அருளமுதத் திருவிளையாடலாக நிகழ்ந்த விசேஷமான தினத்தில் இருந்து, பல்லாயிரக் கணக்கானோர் வருடம் முழுதும் இவரை அருணாசல கிரிவலத்தில் தரிசித்துத் தமக்குத் திருமணம் நடைபெறாக் குறையைக் தெரிவித்திட, உடனே அவர்தம் விரல்களால் அவர்களுடைய நெற்றியில் சிந்தூரப் பொட்டை இட்டு விட, அடுத்த வளர்பிறைச் சுபமுகூர்த்தத்திலேயே அவர்களுக்கு உடனடியாகத் திருமணம் கை கூடிடும் அற்புதங்கள் நிகழ்ந்தன.

சிந்தூரத்தில் பந்தல் முகூர்த்தம்!

ஜாதக ரீதியாகப் பலத்த செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், குருகிரக பார்வை நன்கு நிலை பெறாதோரும் மற்றும் பல காரணங்களாலும் திருமணம் நடைபெறாது தவிப்போர் அருணாசலத்தில் கிரிவலம் வந்து இச்சித்தர் பிரான் நெற்றிக்கு இட்ட சிந்தூரப் பொட்டின் மகிமையால் உடனடியாகத் திருமண வாழ்வைப் பெற்றனர். இத்தகைய திருமண தோஷ நிவர்த்தியும் சித்தர்கள் மூலம் துரிதமாக நிகழ்வதற்குக் காரணம், சித்தர்கள் எப்போதும் தம் சித்தத்தைச் சிவன்பால் வைத்திருப்பதாலும், தூய அன்பின் சிகரமாய்த் திகழ்ந்து, கர்ம வினைகளால் தீண்ட இயலாத யோகாக்னிப் பெட்டகமாய்ப் பொலிவதாலும் ஆகும்.

சிந்தூரப் பொட்டுச் சித்தரின் அருளாசியால் 40 வயதைக் கடந்த ஆண்கள், பெண்களுக்கும் கூட, அவரவர் வயதிற்கு ஏற்ப நல்ல வரன்கள் அமைந்து நல்ல திருமண பாக்யமும் கை கூடியது. வாழ்வில் திருமணத்தைப் பற்றியே எண்ணிப் பார்க்க முடியாத நிலையில் இருந்தவர்கள் கூட, அருணாசல கிரிவலத்தில் இவரைத் தரிசித்துத் தம் குறைகளைக் கூறிட, அவர் இட்ட சிந்தூரப் பொட்டின் மகத்துவத்தால், நல்ல திருமண வாழ்க்கையும் கிட்டியதும் பெரும் அதிசய சம்பவங்களாக நிகழ்ந்து அமைந்தன.

இதனால் ஒருபுறம் திருமண பாக்யம் வேண்டி ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் வந்திட, மறுபுறம் சித்தர்பிரானின் ஆசியால் நெற்றியில் சிந்தூரம் இடப் பெற்றுத் திருமணம் நடைபெற்ற தம்பதியரும் ஆயிரக்கணக்கானோர் கிரிவலம் வந்திட...,

திருஅண்ணாமலையில் மாத சிவராத்திரி கிரிவலம் தற்போதைய பௌர்ணமிக் கிரிவலம் போல அக்காலத்தில் இன்றைக்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நன்கு பொலிந்து பிரகாசித்தது.

முக்தி வேண்டும் ஐயனே!

இந்நிலையில்.. ஒரு நாள்... ஒரு பழுத்த சுமங்கலி “தனக்கு முக்தி நிலை கிட்ட வேண்டும்!” என்று வேண்டிச் சித்தரை நாடி வந்தாள். பொதுவாகத் திருமண பாக்யம் கேட்டே அருணாசல கிரிவலம் வந்து தன்னை நாடுவோர் இருக்க, ஒரு வயதான மாது தன் கணவனுடன் வருவதைக் கண்டு சித்தர் ஆச்சரியமடைந்தார்.

சித்தர்கள் அளப்பரிய தம் தெய்வீகத் தன்மைகளை ஒரு போதும் வெளிக்காட்ட மாட்டார்கள். மிகவும் சாதாரண மனிதர் போலவே நடந்து கொள்வர். வந்த பெண்மணியோ தனக்கு முக்தி நிலை வேண்டும் என்று கேட்டிடவே, அவர் வியந்தார்.

“அம்மணி! தங்களுக்கு முக்தி நிலை அளிக்கின்ற அளவிற்கு அடியேன் எந்தவிதமான தெய்வீக நிலையையும் அடையவில்லை! அடியேன் மிகவும் சாதாரணமானவன்! அண்ணாமலையாரைப் பரிபூரணமாக நம்பித் தொடர்ந்து கிரிவலம் வாருங்கள்! அருணாசல சிவனே அனைத்தையும் அருள்வார்!” என்று மிகவும் பணிவுடன், பௌவ்யமாகத் தெரிவித்தார்.

ஆனால், அச்சுமங்கலிப் பிராட்டியோ இதே கோரிக்கையை வைத்துப் பல நாட்களில் அருணாசல கிரிவலம் வந்து, சித்தரைத் தரிசிக்கும் போதெல்லாம் முக்திக்கான நல்வழிகளைக் காட்டுமாறு கேட்டு வந்தாள்.

இவ்வாறு 12 ஆண்டுகள் இடைவிடாது, ஒவ்வொரு மாதச் சிவராத்திரி நாளிலும் கிரிவலம் வந்து, மீண்டும், மீண்டும் சித்தரைத் தரிசித்து தனக்கு முக்தி வழி அளிக்க வேண்டும் எனக் கேட்டிட இவரும் அதே விடையையே அளித்து வந்தார்.

சிந்தூர கணபதி முன் சிந்தூரச் சித்தர்!

இந்நிலையில் வயதான நிலையிலும் உடல் தளர்ந்தாலும், மனந் தளராது கிரிவலம் வந்த அந்த வயதான சுமங்கலிக்குத் தக்க வழி காட்ட வேண்டி, ஒரு நாள் சித்தரே சிந்தூர விநாயகரின் முன்னிலையில் அமர்ந்து ஆழ்ந்த தியான நிலை கொண்டார்.

பக்தரைத் தடுத்தாட் கொள்ள, தற்போது சிந்தூர கணபதியே சித்தரைப் போல மானுட வடிவம் தாங்கி, அருணாசலத்தைக் கிரிவலம் வந்தார். இடையில் கிரிவலப் பாட்டையில் அவரைத் தரிசித்த அப்பழுத்த சுமங்கலிக்கு முக்திக்கான நல்வழிகளை உபதேசித்து அருளினார். இதனை அந்த வயதான சுமங்கலிப் பிராட்டியே நேரில் வந்து உரைத்த பின்னரே சித்தர் நடந்ததை அறிந்தார்.

சித்தர்கள் (சிவன்) போக்கில் செல்லட்டும்!

ஆனால் இந்த அனுபூதி நிகழ்ந்த நாளில் இருந்து, இதற்கிடையே, கலியின் கோலமோ என்னவோ, முன்னர் போல அனைவராலும் சித்தர்பிரானை எளிதில் தரிசிக்க இயலாததாயிற்று. பாக்யம் உள்ளோரே அவரைக் கிரிவலத்தில் தரிசிக்க முடிந்தது, மற்றவர்களால் அவரை எங்கும் காணவே முடியவில்லை!

சிவயோக ஞானியாம் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் காலத்திற்குச் சற்று முந்தைய காலத்தைக் கொண்ட பல நூறு ஆண்டுகள் வாழ்ந்த இத்தகைய அண்ணாமலை பூமிச் சித்தர்கள் பற்றிப் பலரும் அறியாது உள்ளனர். இத்தகைய சித்தர்கள் மாதா மாதம் திருஅண்ணாமலையை இன்றும், என்றுமாய்க் கிரிவலம் வந்திட்டாலும், கட்டை விரல் அளவே உள்ள வாலகில்ய மகரிஷிகளைப் போன்ற உருவத்தைக் கொண்டவர்கள் ஆதலால், இத்தகைய உத்தமர்களைத் தரிசித்தல் மிகவும் கடினமே! அப்படிக் கண்டாலும் தயவு செய்து அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டு விடுங்கள்! அவர்களிடம் எதையும் கேட்டுத் தொந்தரவு செய்தல் வேண்டாம்., எதையுமே கேட்டுத்தான் அவர்கள் அருளவேண்டும் என்பதில்லை!

1905ஆம் ஆண்டு வாக்கில் இச்சித்தர் பிரானுடைய அருணாசல கிரிவல யோகக் கடை நிலைப் பருவம் அமைகின்றது. இறுதிக் காலத்தில் பல்லாண்டுகள் அவர் வெளிவரவில்லை! மாத சிவராத்திரி நாளில் மட்டும் பாக்யம் உள்ளோர்க்கு தொலை தூரத்தில் தென்படுவார், அருகில் சென்றால் காண இயலாது போய் விடும்! ஆறு தலைமுறைகளுக்கு முந்தைய காலத்தவர். அருணாசல கிரிவல தரிசனம் ஒன்றிலேயே ஒரு மாத சிவராத்திரி நாளில் சித்தியானார்.

வரும் பங்குனி மாதச் சிவராத்திரி நாளில் சிந்தூரப் பொட்டுச் சித்தரே அருணாசலத்தை மானுட வடிவில் கிரிவலம் வருவதால் ஆண்களும், பெண்களும் நெற்றிக்குச் சிந்தூரப் பொட்டு இட்டு இந்நாளில் கிரிவலம் வருவதும், நாட்டை, சிந்து, சிந்து பைரவி ராகங்களில் இறைப் பாடல்களைப் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் வருதலும்,

பிறருக்கும் சிந்தூர தானம் அளித்து பக்திப் பூர்வத்துடன் சத்குருவின் திருவருளை வேண்டியும் அருணாசலக் கிரிவலம் வருதலாலும் பல்வகைத் திருமண தோஷங்களுக்கும் நிவர்த்தி பெற்றிடலாம். பாக்யம் உள்ளோர்க்கு, கட்டை விரல் அளவுள்ள இச்சித்தர் பிரானின் தரிசனமும் கிட்டும். ஆனால் இவரைத் தரிசித்தாலும் இவருக்கு எவ்வித இடையூறுமின்றி அவர்போக்கில் விடும் அருட்பாங்கு செறிந்தால்தான் சித்தர்களின் தரிசனம் கைகூடும்.

திருமணமாகியும் பலத்த மன வேறுபாடுகளுடன் வாழும் தம்பதியர் நல்ல தெளிந்த தீர்வுகளைப் பெற்றுச் சாந்தம் நிறைந்த மண வாழ்வைப் பெற்றிடவும் உதவும் கிரிவலம் இது!

இன்று பொன்னாலாகிய மாங்கல்யத்தை ஏழைகளுக்குத் தானம் அளிப்பதும் சிறப்புடையது. வறுமை, நடுத்தரக் குடும்பம் காரணமாகவோ, பணக் கஷ்டத்தாலோ, நகைகளை, சொத்துப் பத்திரங்களை அடகு வைத்துள்ளோரும், தம் மாங்கல்யத்தை அடகு வைக்கும் நிலைக்கு ஆளானோரும், இன்று அருணாசலக் கிரிவலம் வந்து, வெளிச் சொல்ல இயலாத் துன்பங்களுக்குத் தக்க தீர்வுகளைப் பெற்றிடலாம்.

தம் கஷ்டங்களின் ஊடேயும் பிறருக்குச் சிறிய அளவிலாவது மாங்கல்ய தானம் அளித்தும் உதவுவதால், அவரவர் குடும்ப வாழ்வில் உள்ள மன வேறுபாடுகள், சச்சரவுகள், உறவாளிகளின் பகைமை தீரவும் இந்நாளின் கிரிவலப் பலாபலன்கள் மிகவும் உதவும்.,

மூன்று தலைமுறைகளுக்கு மேல் உள்ளவர்களை (பாட்டனார், முப்பாட்டனார்) நினைவு கொள்ளும் வண்ணம் அவர்களுடைய புகைப் படங்கள், அவர்கள் பூஜித்த மூர்த்திகள், பூஜைப் பொருட்கள், பயன்படுத்திய பொருட்கள், அனைவருடைய நினைவுகளுடன் இன்று கிரிவலம் வருதலால், பித்ரு சாபங்கள் கழிய உதவும். மூதாதையர்களே முன்னின்று நன்கு ஆசிர்வதிப்பதையும், அவர்களும் நன்னிலை பெறுவதையும், உணர வைக்கும் அற்புதக் கிரிவலம்! இன்று குறைந்தது 16, 24 கனிவகைகளைத் தானமாக அளித்தல் விசேஷமானது.

எண்ண அலைகள்

மனப் பேரலை, ஆழிப் பேரலை, ஊழிப் பேரலை !

இறைவன் நமக்கென அளித்துள்ள ஆறறிவு நிறைந்த பகுத்தறிவுக் கூடத்தால் பிறப்பு, இறப்பு, விதி, வருங்காலம், பூர்வ ஜன்மம் போன்று எண்ணற்ற தெய்வீக ரகசியங்களை நாம் நன்கு அறிந்து கொள்ள முடியும். ஆனால் பெறுதற்கரிய மனிதப் பிறப்பில் மட்டுமே இது சாத்தியமானதாகும்.

எனினும், ஆறறிவைப் பெற்றிருந்தாலும் மனிதனோ, தாவரங்கள், மிருங்கங்கள், பறவைகள் போல ஒன்றரை அறிவு, இரண்டே முக்கால் அறிவு என காமம், மோகம், போதை, புகை, மது, பேராசை போன்றவற்றிற்கு அடிமைப்பட்டுத் தன்மானத்தை இழந்து அரை குறை அறிவுடன் வாழ்வதால்தான், மேற்கண்ட தெய்வீக ரகசியங்களைத் தானே புலப்படுத்திக் கொள்ள முடிந்தாலும், தன்னால், தன்னையே அறிய இயலாததாகக் கலியுக மனிதன் ஆக்கிக் கொண்டு விடுகின்றான்.

“நடப்பதெல்லாம் நாராயணன் செயல்!” என்பது, இந்தப் பிரபஞ்சமானது, ஒவ்வொரு விநாடியும் இறை அருளால் இயங்கிக் கொண்டிருக்கின்றது என்பதை உணர்த்துவதாகும். உறக்க நேரம் போக, மற்றக் காலத்தில் மனமானது ஆழிப் பேரலைப் போல்தானே ஒவ்வொரு விநாடியும் புரண்டும், மனிதனைப் புரட்டிக் கொண்டும்தானே இருக்கின்றது.

உறக்கத்திலுமா மனிதன் அடங்கிக் கிடக்கின்றான்? அவன் உறக்க நிலையில் பிற சரீரங்களில், பிற லோகங்களில் அல்லவா வாழ்கின்றான்! கனவிலும் ஆழிப் பேரலை, ஊழிப் பேரலைகள் ஏற்படுவதுண்டு. இவற்றை வெறும் கனவுக் காட்சிகள் என ஒதுக்கிட முடியாது.

கனவுலக அவஸ்தைகளும், இன்ப, துன்பங்களும் இச்சரீரத்திற்கான அனுபவங்களே! இதனோடு கொசுக் கடிகளும் சேர்ந்து வந்தல்லவா வாட்டுகின்றது! ஒவ்வொரு கொசுக் கடிக்குமே பூர்வ வினைக் காரணங்கள் நிறைய உண்டு. உண்மையில் நோய்கள் கர்ம வினைகளின் அழுத்தத்தால், விளைவுகளாக வருகின்றன எனும் போது, சில வகை நோய்கள் வரக் காரணமாக இருக்கும் கொசுக்கள், மனித ஜீவ கர்ம பரிபாலனத்திலும் அங்கம் வகிக்கின்றன தாமே!

எண்ணமே குருதிப் பாங்கு

கொசு உடலில் கடித்தாலும் முதலில் மனம்தான் இதனால் வேதனைப்படுகின்றது. மனம் என்பது ஒரு கடல் போன்றது, எல்லையில்லாதது!

“எண்ணத்தைப் பெய்து பார்த்தால்
எழு கடல் சிறுகுளமாகும்!
எண்ணத்தை நெய்து பார்த்தால்
எழும் உடை புவிக் காகாது!”

என்ற சித்த மொழி வாக்கியப்படி மனம் ஒரு பேராயப் பெருங்கடலே! எண்ணங்களை வடிவாக அமைத்தால், உலகத்தைப் போர்த்தும் ஆடையை விடப் பெரிதாக இருக்கும். எண்ணங்களை நிரவிப் பார்த்தால், ஏழு கடல் கொள்ளளவை விட அதிகமாக இருக்கும்.

இதனால் தான் உலகச் சமுதாயத்தில் உள்ள மக்களின் ஒட்டு மொத்த எண்ண அலைகளின் பிரதிபலிப்பே கடல் அலைகளின் வடிவங்களும், ஓசைகளும் ஆகும் என்பது சித்தர்களுடைய அலை மற்றும் எண்ண இலக்கண விளக்கங்களுள் ஒன்றாகும். மனிதன் வாழ்வதற்காக இறைவன் படைத்துத் தந்துள்ள ஆயிரமாயிரம் பொருட்களை எல்லாம் மனிதன், எவ்வகையில் எல்லாம் மாசு படுத்தி, பாழ்படுத்தி வருகின்றான் என்பது அனைவரும் அறிந்ததே. எண்ணங்களைப் பொறுத்துத்தான், ஒவ்வொரு மனிதனின் இரத்தத்தின் தன்மைகளும் அமையும். இது நாள் தோறும் மாறிக் கொண்டே இருக்கும். இதனைத்தான் தற்கால மருத்துவ ரத்தப் பரிசோதனைகள் புலப்படுத்துகின்றன. ஒரு நாள் ஆய்வில் தெரிவது மறுநாள் மாறுகின்றது. இதற்குக் காரணம் எண்ண மாற்றங்களே, எண்ண ஓட்டங்களே!

எண்ணங்கள் தீயவையானால், இரத்தமும் அந்த அளவிற்குத் தீமை உடையதாய் ஆகின்றது. இதனால் மல, மூத்திராதிகளுமே பலத்த தீய சக்திகளுக்கு ஆளாகின்றன. சிறுநீர், மல கழிப்புகளும், தினசரிக் கர்ம வினைக் கழிவுகளையே குறிக்கின்றன.

கடலும் மன சுத்திகரிப்புச் சாதனமே!

எனவே, எண்ணுவதெல்லாம் உதிரத்தின் தன்மைகள் எண்ன அம்சங்களை அவரவருக்கே கண்ணாடி போல வெளிப்படுத்துவதுதான் கடல் அலைகளாகும். இதனால்தான் கடல் அலைகளுக்கு “ஆடியம்பலம்” என்றும் பெயர். அக்காலத்தில் குற்றம் சுமத்தப்பட்டவர்களைக் கடலலைகள் முன் நிற்க வைத்து, எண்ண ஓட்ட அழுத்தத்தை அறிந்து குற்றவியலை அறிவர். கடலலை முன் மனசாட்சி சற்றும் நிற்காது! ஒரே அலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வடிவில் காட்சி தரும்.

மனம் சுத்திகரிப்பு அடையக் கடல் அலைகளும் உதவுகின்றன. அனைத்து விதமான கழிவு நீர்களையும் தன்னுள் வாங்கும் கடல், அனைத்தையும் தன்னுள் பொலியும் “நமகாதீய சக்திகளால்” சுத்திகரிக்கின்றது அல்லவா! கழிவு நீரைச் சுத்திகரிப்பது கடலுக்கு எளிதானதே! ஆனால், பல வருடங்களாக பேராசை, பகைமை, விரோதம், குரோதம், பொறாமை, முறையற்ற காமம், தீய எண்ணங்கள் போன்ற பலவும் மனிதனுடைய மன உலகத்தின் அடியில் பாறைகளாய் இறுகிக் கிடக்கின்றனவே, இதனைச் சுத்திகரிப்பதுதான் கடலுக்கும் கடினமாகிறது!

மனதினுள் ஆழப் புதைந்திருக்கும் எண்ணப் பாறைகள், பாசக் கறைகள் பிளந்து கரைந்து மேலே வந்தால்தானே மனம் சுத்தியாகும். இதனால்தான் தியானத்தில் என்னதான் ஒருமித்துக் கூடி அமர்ந்தாலும், விதவிதமான விபரீதமான, வேடிக்கையான, தீயவை பயக்கும் எண்ணங்கள் விடாமல் தோன்றிக் கொண்டே இருக்கும். கிணற்றில் தூர் வாருவது போல, இவை எல்லாம் வெளிவந்தால்தான் மனத் தூய்மை ஏற்படும். இவ்வாறு பொங்கி வரும் துர் எண்ணங்கள், பரவெளியையும் மாசு படுத்துவதால்தான், தியானத்தின் முன்னும் பின்னும் மந்திரங்களை ஓதி வருதல் வேண்டும்.

மனிதச் சமுதாய வாழ்விற்காக, கிராம, நகர, நில அமைப்புகள் செயற்கையாக ஏற்படுத்தப் படுகையில், மரங்களை வெட்டுதல், குளம், ஏரியை மூடுதல் எனப் பல இயற்கைச் சக்திகள், சாதனங்கள் சேதமுறுகின்றன. இவற்றை எவ்வாறு ஈடு செய்வது? இப்பூவுலகைப் புனிதப்படுத்துவதற்காக, சுயம்பாகத் தோன்றும் மூர்த்தங்களோடு, இறைவன் இயற்கையாகப் படைத்துள்ள – சீர்காழி, காசி, ராமேஸ்வரம், சிவபுரம் போன்ற – தலங்கள், திரவியங்கள், பொருட்கள், ஆறுகள், மலை எனப் பல வகைகளில் பொங்கும் இயற்கைச் சக்திகள்தாம், மனிதனால் சேதமுற்ற இயற்கை அம்சங்களையும், பூமியையும் தூய்மை செய்து வருகின்றன.

வீட்டில் விளக்கேற்றுதல், சாம்பிராணி தூபம், ஹோமம் வளர்த்தல், மானசீக பூஜை போன்றவையும் மிகச் சிறந்த உலகத் தூய்மைப் பூஜைச் சாதனங்களாகும்.

குடும்பக் காரியங்கள் சமுதாயத்தையும் தழுவும்!

எனவே, குடும்பத்திலும் ஆற்றுகின்ற சிறு சிறு அறப் பணிகள், பூஜைகள், தானதர்மங்களும் சமுதாயச் சாந்தத்திற்கு வழிவகுக்கும் என்பது புலனாகின்றது அல்லவா! இதே போலத்தான், ஒவ்வொருவரும், தானும், தத்தம் குடும்பத்தினரும் செய்கின்ற அதர்மக் காரியங்கள், அக்கிரமங்கள், அதிகார நிர்பந்தங்கள், ஆணவச் செயல்கள், அகங்கார அட்டூழியங்கள், பொய்மை, ஏமாற்றுதல், தீயவற்றை எண்ணுதல், தீயதைச் செய்தல், புகை பிடித்துப் பரவெளியை நஞ்சாக்குதல், மது அருந்தித் தன்னைக் கெடுத்துக் கொண்டு, பிறருக்கும் பீதி தருதல் என்றவாறான செயல்களும், சமுதாயத்தின் சாந்தத்தைக் கெடுக்கின்றன என்பதும் உண்மையே!

இதனால்தான் இயற்கைச் சீற்றங்கள் சமுதாயத்தையே ஒட்டு மொத்தமாகத் தாக்குகின்றன. இயற்கைச் சீற்றங்களில் ஏற்படும் நஷ்டங்கள், உயிர் இழப்புகள் பலவற்றிற்கும் எத்தனையோ காரணங்கள் உண்டு. இவற்றை எடுத்துச் சொன்னாலும் கலியுக மனித மனம் ஏற்காது.

ஒருவருக்கு ஏற்படும் சிறு தலைவலி, காய்ச்சல், வயிற்றுப் போக்கு முதல் புற்று நோய், காச நோய், தீ விபத்து, விபத்தில் மரணம் அடைதல், இயற்கைச் சீற்றங்களில் உயிர் இழப்பு போன்ற ஒவ்வொன்றிற்கும் நிறையக் காரணங்கள் உண்டு. இவற்றை எல்லாம் தானே அறிந்து, உணர்ந்து, தெளிந்து புலனாக்கிக் கொள்ள வேண்டியதையும் பகுத்தறிவில் புலரும் ஆன்ம ஞானமாகவே இறைவன் வைத்துள்ளான்.

பிரளயமோ பிரளயம்!

பிரளயம் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். நீர்ப் பெருக்கானது 50 அடி, 100 அடி, 200 அடியாக எழுந்து வந்து நிலப் பகுதிகளை மறைத்தல் பிரளயம் ஆகும். இதிலும் ஒவ்வொரு சதுர்யுக இறுதியிலும் வரும் மஹாப் பிரளயத்தில் பூமி முழுவதுமாகவே ஒரு சில இறைத் தலங்களைத் தவிர பரிபூரணமாக நீரில் அழுந்தி விடும்.

கல்பப் பிரளயம் என்பதில் பூவுலகின் சில பகுதிகள் மட்டும் நீரில் அமிழ்தல் ஆகும். பகுளப் பிரளயத்திலும், தீவினைகள் பெருக்கெடுத்துள்ள ஒரு சிறு பகுதி மட்டும் நீரில் அமிழ்ந்து விடும்.

லெமூரியாக் கண்டத்தில் பூசத்ருவப் ப்ரளயமும், தனுஷ்கோடியில் பிரசன்னப் பிரளயமும் ஏற்பட்டன. ஆனால், பிரளயம் என்றால் பெரும் நீர்ப் பிரவாகம் என்று மட்டுமே பலரும் அறிவர். எறும்புகள் நீரில் அமிழ்வது அவைகளுக்கு ஒரு பிரளய சம்பவமே ஆகும். பல ஆண்டுகளுக்கு முன் புயலில் தனுஷ்கோடி நீரில் அமிழ்ந்தபோது, அதில் சிக்கி உயிரிழந்தவர்கள் பலருக்கும் “ஏதோ பிரளயம் வந்துவிட்டது. நாம் அனைவரும் பிரளயத்தில் அமிழ்ந்து விட்டோம்!” என்று எண்ணி இருப்பர் அன்றோ! இத்தகைய சிந்தனைக்கு மனவாரிப் பிரளயம் என்று பெயர்.

கடலுக்குக் கடல், கடல் சாத்திர நியதிகளின்படி இந்தப் பருவத்தில் இவ்வளவு உயரத்திற்குத்தான் அலைகள் எழும்ப வேண்டும் என்ற நியதிகள் உண்டு. அதைவிட அலைகள் உயரமாக வந்தால், அதற்கு ஆதுலப் பிரளயம் என்று பெயர். எனவே, இத்தகைய சில வகை ஆதுலப் பிரளய அலைகளும், இயற்கையின் சீற்றங்களே ஆகும்.

தனி மனித தீவினைகள் சமுதாயத்தைத் தாக்கும்

கடல், காற்று, ஆறு, பூமி போன்றவை மூலமாக அதர்ம சக்திகளின் பெருக்கைப் பூவுலக ஜீவன்களுக்கு உணர்த்தும் வண்ணம் சில சமயங்களில் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும். இவற்றால் ஆறு, கடல், குளம் அருகில் உள்ளவர்கள்தான் மட்டுமே பெருமளவில் பாதிக்கப்படுகின்றார்கள் என்று ஒரு போதும் எண்ணாதீர்கள். இவற்றிற்கான உண்மையான பூர்வ ஜன்மக் காரணங்களை எடுத்துரைத்தாலும் கலியுக மனித மனம் ஒரு போதும் ஏற்காது.

இவ்வாறு இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், கடமையும், இறைச் சேவை மனப்பான்மையும் ஏனைய ஜனங்களுக்கு உண்டு. “யாருக்கோ பாதிப்பு வந்து விட்டது. இதனால் நமக்கென்ன வந்தது?” என்ற எண்ணம் அவரவருக்குள் ஏற்படுகின்றதா இல்லையா என்பதை அவரவரே மன சாட்சி பூர்வமாக நினைத்துத் தன் மனிதாபிமான அளவை நிலையை அறிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக, கடல் மூலமாக ஏற்படும் இயற்கைச் சீற்றங்களுக்கு முதன்மையான காரணங்களுள் ஒன்றே ஸ்ரீமச்சேந்திரர், ஸ்ரீமத்ஸ்யப் பெருமாள், ஸ்ரீமீனாட்சி அம்மன் போன்ற தெய்வ வழிபாடுகளை முறையாக நிகழ்த்தாமையும் ஆகும்.

விசர்ஜன வகை பூஜைகள் எனப்படும் பிள்ளையார் சதுர்த்தி பூஜை, சரஸ்வதி விசர்ஜன பூஜை, தர்ப்பண எள் பூஜை போன்றவை முறையாக நிகழாமையும் இதற்குக் காரணமே!

உலகில் நிகழும் அனைத்துத் துன்பங்களுக்கும் காரணமாக, பூர்வ ஜன்ம வினைகளையும், வழிபாடுகள் குறைந்து வருவதையுமே காரணமாகச் சொன்னால் அவை தக்க காரணங்கள் ஆகி விடுமா என்றுதான் மனதில் கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கும். ஆனால் இதன் மூலத்தை ஆத்ம விசாரம் செய்து வந்தால் அனைத்தும் தாமே புலனாகும்.

அமாவாசையிலிருந்து பிறக்கும் வளர்பிறையில், தினந்தோறுமாக 14 திதிகளிலும் “உப்பாந்தவ உற்சவம்” என்ற வகையில் கடற்கரைக்கு சுவாமி படங்களை வைத்துத் தேரோட்டி வருதல் சமுத்திர தேவதைகளுக்குப் பிரீதி அளிப்பதாகும். கடலில் நிகழும் தீர்த்தவாரி உற்சவம் பல ஆலயங்களில் நின்று போவதால், கடல் தேவதைகளுக்குக் கிட்ட வேண்டிய பூஜா பலன்கள் கிடைக்காமல் போவதாலும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும். இதில் பாதிக்கப்பட்டோரைக் காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. இதற்குப் பணவசதிதான் தேவை என்பதில்லை!

பார்த்திப ஆண்டு

வருட பரிபாலன பாவன விளக்கங்கள்!

இவை எல்லாம் ஜோதிடப் புத்தாண்டுக் கணிப்புகள் என எண்ணாதீர்கள். சித்தர்களின் கர்ம பரிபாலன முறைப்படியே இவை அளிக்கப்படுகின்றன. மேலும் தற்காப்பிற்கும், ரட்சா சக்திகளைப் பெறுவதற்குமான மார்கங்கள் இவை!

பார்த்திப ஆண்டில், பத்திரப் பதிவுத் துறையில் நிகழும் காரியங்களில் பலத்த கஷ்டங்கள் ஏற்படும். இத்துறையில் பலரும் ஏமாற்றப்படுகின்ற சூழ்நிலைகளும் ஏற்படுமாதலின் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த நிலப் பத்திரமானாலும், புதுக்கோட்டை – குழிபிறை – செவலூர் – பொன்னமராவதி மார்கத்தில் உள்ள செவலூர் ஸ்ரீபூமீஸ்வரரிடம் வைத்துப் பூஜித்து, பூமி தோஷங்களுக்கு நிவர்த்திகளைப் பெற்றிடவும்.

இவ்வாண்டில், செவ்வாய் மற்றும் சுக்ராம்யத் திருவிளிப்பு அம்சங்கள் சற்றே பலவீனமாக இருப்பதால், எவ்வளவு நற்பெயர் எடுத்த கம்பெனியாக இருந்தாலும், தனியார் துறையில் மக்கள் பணத்தை முதலீடாக வைப்பதை முற்றிலும் தவிர்த்தல் வேண்டும். அரசுத் துறை என்பது ஜோதிடரீதியாக, சனி கிரகப் பசுபத பதாம்சங்களைக் குறிப்பதால், அரசுத் துறை முதலீடுகளே (அரசுத்துறை வங்கிகள், LIC போன்ற நிறுவனங்கள்) நன்று.

இவ்வாண்டிற்கான சுக்கிர தனபால சக்திகளைக் கணித்து நோக்குகையில், நீச சக்திகள் பலம் எடுப்பதால், பண முதலீடுகளில்  மிகவும் கவனமாகச் செயல்படுதல் வேண்டும். பண முதலீட்டுத் துறைகளில் திடீர் மாற்றங்கள் அவ்வப்போது பலவும் ஏற்பட்டுக் குழப்பங்கள் உண்டாகும்.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

வட்டித் தொழில் துறையில் நீச அம்சங்கள் தென்படுவதால், வட்டிக்கு ஆசைப்பட்டு எந்த அவசரமான தொகை முதலீட்டுக்கான முடிவையும் எடுத்தல் கூடாது. வராத வட்டித் தொகைக்காக ஏங்கி உடல் நோய்கள், மன நோய்கள் பெருகலாகும்.

பதவி, பணம், பொருள், சொத்துக் காரணமாகச் சொத்துப் பரிமாற்றங்கள், பத்திர மாற்றங்களால் ஏமாறாமல் இருக்க வழி தேடிக் கொள்ள வேண்டும். இதற்காக ஆலயக் கொடி மரங்களை அவ்வப்போது புதுப்பிக்கும் அறப் பணிகளை ஏற்றுச் செய்து வரவேண்டும்.

எதிரிணித் தீய அம்சமே கம்ப்யூட்டர் வைரஸ்

கம்ப்யூடர் துறையைக் கலக்கும் வைரஸ் என்பது எதிரிணித் தீய சக்தியாகும் (negative force), சனி மற்றும் செவ்வாய் கிரக அம்சங்கள் மின் அக்னித் துறைகளைக் குறிக்கின்றன. இதன்படி, வங்கித் துறைகளிலும், நவீன மயமாக்கப்பட்ட அலுவலகக் கணிப் பொறித் துறைகளிலும் அதிபயங்கர வைரஸ் ஊடுருவலால் பலத்த பாதிப்புகள் இவ்வாண்டில் ஏற்பட்டு, வங்கித் துறையே ஸ்தம்பிக்கும் அளவிற்குக் கால நஷ்ட, பொருள் விரய நிலைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

திருச்சி திருவெறும்பூர் ஸ்ரீஎறும்பீஸ்வரர் ஆலய வழிபாடும், நாமக்கல் நாமகிரித் தாயார் வழிபாடும் கம்ப்யூட்டர், கணிதத் துறைகளில் ஏற்படும் நஷ்டங்களில் இருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ள உதவும்.

பொதுவாக கம்ப்யூட்டர், செல்போன் இரண்டிலுமே, இவ்வாண்டில் பிற கோள் மண்டலங்களில் இருந்து எதிரிணி (negative forces) அரக்க சக்திகள்  வந்து புகுந்து அக்கிரமங்களை, அதர்மச் செயல்களைப் புரியும். திருவையாறு அருகே கடுவெளியில் அருளும் ஸ்ரீஆகாசபுரீஸ்வரரை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு வர வான்துறை வாஸ்து சக்திகள் நன்கு பரிமளிக்கும் பாக்யம் கிட்டும்.

ஆருயிர் காக்கும் 64 ஆன்ம சாதனங்கள்

மது, முறையற்ற காமம், பேராசை, போதை, புகையால் கலியுக மனித மனம் பலவீனப் படுவதாலும், இவ்வாறு பல வகைகளில் பலவீனமான மனத்தில் அரக்க சக்திகள் எளிதில் நுழைவதாலும், பார்த்திப ஆண்டில் எப்போதும் மன விழிப்புடன் இருந்திட வேண்டும். இதற்காகவே உடலில் ரட்சா சக்திகளை நிரவிட நிறைய ஆன்மீகச் சின்னங்களை அணிந்து இருத்தல் வேண்டும்.

ஒரு குடும்பத்தில் பலரும் பல்வேறு வகையில் நெற்றிச் சின்னம் தரித்தல், ருத்ராட்சம், மெட்டி, வளையல், குங்குமம், கடுக்கன், பூணூல், ஸ்திர கங்கண், காசிக் கயிறு, இடுப்புக் கயிறு, மருதாணி, மோதிரம், காஞ்சனாதி ஸ்படிகம் – போன்ற 64 விதமான ஆன்மீகச் சாதனங்களைக் குடும்பத்தில் பலருமாகப் பிரித்துக் கொண்டு அணிந்து கொண்டு வந்தால் அனைவரிடமும் தற்காப்பு சக்தி நிறைந்து குடும்பத்தைப் பல கோணங்களிலும் காக்கும்.

திருவெறும்பூர்

சுவாமியை வணங்கு, ஆசாமியை அல்ல!

பார்த்திப ஆண்டிலாவது, உத்தமத் தெய்வீக நிலைகளில் இருப்போரைத் தவிர, மனிதனை மனிதனே வணங்கும் தன்மை மறைதல் வேண்டும். உத்தமப் பெரியோர்களுக்கு ஆன்மீக ரீதியாக மதிப்பளித்தல் வேறு! கடவுளே வணங்குதற்குரிய ஒரே மூலப் பொருள் என உணர்க! இலக்கிய வளர்ச்சி என்ற பெயரில் நரத் துதியும், தனி மனிதனைப் புகழ்தலும், பிற்பாடு அதே மனிதனை இதழ்தலும், கலியில் மிகவும் சகஜமாக, இறைவனளித்த பகுத்தறிவுக்குப் புறம்பாக நிகழும். எந்தப் புகழ்ச்சியிலும் ஈடுபடாது, எப்புகழ்ச்சிக்கும் அடிமையாகாது வாழ்தல் வேண்டும். இதற்கு உதவுகின்ற வழிபாடே வாழை, கல்வாழை, பனை, தென்னை தல மரங்களாக உள்ள ஆலயத் தலப் பூஜைகளாகும்.

பார்த்திப ஆண்டிலாவது, பசு, கன்றை நெடுந்தொலைவில் பிரித்து வைக்காதீர்கள். குறைந்த பட்சம், அவை ஒன்றுக்கொன்று நன்கு மனதாரப் பார்க்கும் வண்ணமாவது சற்று அருகருகே அவை இருக்குமாறு வைக்க வேண்டும்.

பார்த்திப ஆண்டில் பைரவ சாபங்கள் பெருகும். நாய்களை வீட்டில் நெடு நேரம் கட்டி வைத்து அடிமையாக்கி விடக்கூடாது. நாயை வீட்டில், காரில் வைத்து விட்டு வெளியில், வெளியூருக்குச் செல்தல் கூடாது. இது நாட்டிற்கும் நல்லதல்ல. தினமும் தெரு நாய்களுக்கு உணவிட்டுக் குடும்பத்தைச் சூழும் பைரவ தோஷங்களை அகற்றிடுக! பைரவ சாபத்தைத் தணித்திடுக!

காலையில் கனிந்த செய்திகளையே காண்க!

இவ்வாண்டில் அரசியலில் நிறைய குழப்பங்கள் ஏற்படும். ஓரளவு உலக அனுபவ அறிவிற்காகத் தினசரிச் செய்தித் தாள்களைப் படிப்பதில் தவறில்லை! ஆனால் காலை 5-7 மணிக் காலத்திலும், மாலை 5-7 மணி சந்தியா வேளைக் காலத்திலும் அற்புதமான ஆன்மீக ரீதியாகக் குளுமை நிறைந்த, நற்சக்திகள் பரிணமிக்கும் (divinely positive forces, absolute divine energies) பொழுதில் செய்தித் தாளின் முதல் பக்கத்திலேயே கொலை, கொள்ளை, பயங்கரவாதம், வன்முறை எனச் செய்திகளைப் படித்து மனதை அழுக்காக்கிக் கொண்டால், இறைவனளித்துள்ள அமிர்தமயமான காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளாத மனித அறிவை என்னென்பது?

எனவே இவ்வாண்டு முதலாவது, காலையில் முதலில் இறைத் துதிகளைச் சிறிது ஓதி, புராணங்களை ஒரு பக்கமேனும் படித்து, இறைவழி நூல்களைச் சிறிதேனும் படித்து, நல்ல காட்சிகளைக் கண்டு, கண் நாளங்களுக்கு ஆன்ம சக்திகளை ஊட்டிய பின்னரே, வெறும் அரசியலைப் பின்னிப் பிணைந்து வரும் தினசரித் தாளைப் படிப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டு, சங்கல்பம் எடுத்துக் கொண்டு செயல்படுக!

இதனைக் கண்ணாயிரயோக மார்கமாகப் பலருக்கும் எடுத்துரையுங்கள். இதனைத் துண்டுப் பிரசுரமாகவும் வெளியிட்டு சமுதாயத்திற்கு அறவழி காட்டலாம் அன்றோ!

இவ்வாண்டில் அளவுக்கு மீறி ஆடைகளை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது. 100 புடவைகளுக்கு மேல் வீட்டில் வைத்திருக்கும் அலுவலகத்தில் பணி புரியும் பெண்களும் உண்டு. புது ஆடைகளையும், மூன்றாண்டுகளுக்கு மேல் உள்ள நல்ல நிலையில் உள்ள ஆடைகளையும் அனுஷ நட்சத்திரந்தோறும் ஜாதி, மத பேதமின்றி ஏழைக் குடும்பப் பெண்களுக்குத் தானமாக அளித்து வருதலால், ஊதாரியாக உள்ள கணவன், பிள்ளைகள் திருந்த வழி பிறக்கும்.

ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர் நல்லாடை

ஆடைகளினால் சிலவகை ஆபத்துக்கள் வரும் ஆண்டு இது. ஆடைகளைத் தானமாக அளிப்பதே ஆடைகளால் வரும் ஆபத்துக்களைத் தணிக்கும். மயிலாடுதுறை அருகே நல்லாடை கிராமச் சிவாலயத்தில், பட்டு வஸ்திரங்களைப் பூர்ண ஆஹூதியாக அளித்து, ஹோம பூஜைகளை ஆற்றுதலால் துணித் துறை வியாபாரிகள் நன்கு பலனடைவர். ஆடை வகை தோஷங்கள் அகல உதவும்.

ஐந்து வயதிலிருந்து இருபது வயது வரை உள்ள பெண் பிள்ளைகளை மிகவும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். செவ்வாய் தோறும்  ஸ்ரீவிஷ்ணு துர்க்கையையும், ஞாயிறு தோறும் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி, ஸ்ரீமுத்து மாரியம்மன் போன்ற மூர்த்திகளுக்கு இளநீர், கரும்புச் சாறு அபிஷேகம் செய்து வருதலால், மாணவிப் பருவப் பெண் பிள்ளைகளின் மன பீதிகள் அகல உதவும்.

இவ்வாண்டில் சில துறைகளில் அளவுக்கு அதிகமான உற்பத்தியால் நிறைய பாதிப்புகள் ஏற்படும். ஆகாய விபத்துகள் நிறைய ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. பெண்கள் கூட்டாக மடிகின்ற கூட்டுக் கர்ம வினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.

தரக் குறைவான பொருட்கள் சந்தைக்கு நிறைய வரும். மக்களுக்குக் கார்களின் மீது மோகம் மிகவும் அதிகமாகும்.

பார்த்திப ஆண்டில் ஓத வேண்டிய அருமந்திரம்

கடந்த ஆண்டிற்காக அளிக்கப்பட்ட சித்தர்களின் வருடகுண மஹா மந்திரமான “ஓம் ஔவும் கிரிஜாத்மஜாய நம:” என்பதை ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாக, சற்குருமார்களின் வழியாக, உலகத்தின் அனைத்து நாடுகளின் மேன்மைக்கும், ஜீவ நலன்களுக்குமாக எடுத்து அளிக்கப் பெற்றாலும், கடுமையான தவம், யோகம், தியானம், வழிபாடு பூஜைகளின் திரட்சியாக பெறப்பட்ட இவ்வரிய மந்திரமானது பூவுலகில் வேண்டுமளவு ஜபிக்கப்படவில்லை என்பதே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதாகும்.

சமுதாய நலன், குடும்ப நலன் என்பதற்காகச் சித்தர்களையும், மகரிஷிகளையும், சற்குருமார்களையும், வேண்டி, வேண்டி அருந்தவப் பயனாய் வேண்டி, வேண்டிப் பெற்ற அரிய மந்திரத்தை முறையாகப் பயன்படுத்தாவிடில், இது உலக சமுதாயத்தின் பொறுப்பின்மை ஆகி விடுகின்றது அல்லவா.!

இருந்த போதிலும், காருண்ய மூர்த்தியாக விளங்குகின்ற இறைவன் இன்னமும் ஆதிமூலச் சித்தர்களின் குருவருளால், தக்க சற்குருமார்கள் மூலமாக, மீண்டும் மீண்டும் அரிய மந்திரங்களை மக்களின் நலன்களுக்காக அளித்துக் கொண்டுதாம் இருக்கின்றார்கள்.

எனவே, இனியேனும் தினமுமே அந்தந்த ஆண்டிற்கான தலைமை மந்திரத்தைக் காலையில், மதியத்தில், மாலையில் குறைந்தது 108 முறை ஓதி வருதல் என்ற கைங்கர்யத்தையே உத்தம இறைச் சமுதாயப் பணியாக அனைவரும் ஆற்றி வருதல் வேண்டும்.

பொதுவாக, பார்த்திப ஆண்டு முழுதும் ஓத வேண்டிய மந்திரமும் உண்டு.

தமிழில் ஓத வேண்டிய மந்திரம்

கடலமுதே! திகட்டாதக் கற்பகக் கனியே!
உடலுயிரே! உயிர்க்குள் உணர்வே! உணர்வுள் ஒளியே!
அருட்சோதியாய் நின்ற அருமருந்தே! அண்ணாமலையே!
பெருங்கருணை மாணிக்கமே!

பஞ்சமம் ப்ரம்மண புரோக்தம்
ஷட்சார்ங்கீ ரோம ஜன்ம நடனம்
பாச வசனம் முகுந்தாதி மாதம்
மகவஸ்யாஷ்டமம் சாபமோசனம் பரமேஸ்வரம் க்ரீஜா நவாம்
மோதமாஹம் கும்ப சம்பவ தர்சனம்
சரணம் சரணம் ப்ரபத்யே!

தர்ப்பைப் பாயில் அமர்ந்தவாறு, கையில் பவித்ரம் (தர்பை மோதிரம்) அணிந்து தினமும் 1008 முறை ஓதி இதன் பலாபலன்களை ஜோதி பூஜையில் வல்லவனாகிய பார்த்தனாம் அர்ஜுனனிடம் அளிப்பனயாவும் பார்த்தனுடைய சாரதியாம் பார்த்தசாரதியாம் ஸ்ரீகிருஷ்ணனைச் சென்றடையும். ஒவ்வொருவர் உடலிலும் உள்ள பாண்டவ சக்திகள், கௌரவ சக்திகளை உணர்விப்பதே மஹாபாரதக் காவியமாகும். உள்ளில் ஒளிர்வது ஒப்பற்றக் காவியமாகிறது.

கூகூர் ஸ்ரீகுஹேஸ்வரர்

குஹன், சிவ மூர்த்திக்குச் சித்திரை மாதச் சதய நட்சத்திர நாளில் ஆற்றிய சந்தனக் காப்புப் பூஜைத் தலம்! பகைமையால் பிரிந்த உறவு, நட்பு மீண்டும் மலர உதவும் சிவத் தலம்! பெற்றோர்கள் – பிள்ளைகள், ஆசிரியர்கள் – பிள்ளைகள் இடையே கனிந்த அன்பைத் தோற்றுவிக்க வல்ல தலம்! சித்திரைச் சதய நாளில் சந்தனம் அரைத்துத் தந்து, குஹேஸ்வரரின் அருளையும், குஹனின் ஆசிகளைப் பெறுவீர்களாக!

சித்திரை மாதச் சதய நட்சத்திரச் சந்தனக் காப்புத் திருத்தலம்

ஒரு யுகத்தின் சித்திரை மாதத்தின் சதய நட்சத்திர தினத்தில்தாம், தர்ம சக்திகள் நிறைந்த தர்ம நந்திச் சந்தன வகை மரமானது இறைவனாலேயே தோற்றுவிக்கப் பெற்றது, கடவுளின் திருமேனியில் இருந்து நேரடியாகத் தோன்றியமையால்தான் சந்தனம் அரைக்க, அரைக்க நறுமண வளத்தை அளித்துக் கொண்டே இருப்பதாகும். அனைத்துக் குடும்பங்களிலும் தினமும் சந்தனம் அரைக்கப் பெற்று தினமும் ஒரு அரை மணி நேரமாவது சந்தன நறுமணச் சூழல் இல்லத்தில் தெய்வீகமாக நிரவுதல், பித்ருக்களின் வரவை நன்கு பரிணமிக்கச் செய்யும்.

ஸ்ரீகுஹேஸ்வரர் கூகூர்

இயற்கை நறுமணத் திரவியங்களான பால், தேன், ஜவ்வாது, கஸ்தூரி, குங்குமப் பூ, மஞ்சள், கோரோசனை, புனுகு போன்று திருக்கயிலாயத்திலும், திருக்கைலாய நந்தவனத்திலும், இறைவனுடைய திருமேனியிலும், எப்போதும் குறைவின்றி நிறைவுடன் துலங்கும் பரிபூரண தெய்வீகத் திரவியங்களுள் ஒன்றே சந்தனமாகும்.

யாவருக்குமாய் வேத சக்திகளாம்!

“கூ” என்பது ஓர் அற்புதமான அதர்வண வேத பீஜாட்சர அட்சரம் ஆகும். யுகக் காலப் போக்கில், பல பூமிகளிலும் (பூமி ஒன்றல்ல) வேத மந்திரங்கள் பலவும் முறையாக ஓதப் பெறாமையால் மறைந்து விடும் என்பதாலும், இவ்வாறு மறைய இருக்கின்ற வேத மந்திரங்களின் சக்திகளால் கிட்டும் பயன்களை மக்கள், குறிப்பாகக் கலியுக ஜீவன்கள் பெரிதும் இழந்து விடுவார்கள் என்பதாலும்,

எளிமையான முறைகளில் வேத மந்திர சக்திகளை, ஓரளவேனும் யாவரும் பெறுதல் வேண்டும் என்பதற்காகவும், பைலர், ஜைமினி, வைசம்பாயனர் போன்ற சதுர்வேதிகளும் (நான்கு மாமறைகளைக் கசடறக் கற்றவர்கள்), அவர்களுடைய தோன்றல்களும், இறைவனுடைய திருவருளால் வேத சக்திகளைச் சந்தனம், கஸ்தூரி, வில்வம், துளசி, நறுமணப் புஷ்பம் போன்றவற்றின் நறுமணத்தில் புனைந்து தந்துள்ளார்கள்.

இவ்வகையில், நால்வேத வேத சக்திகளைப் பூர்வ ஜன்மப் பூர்வமாகப் பெற்ற உத்தமர்களுள் ஒருவரே, ராமாயணத்தில் நாம் சிறிது காலமே சந்திக்கும் குஹன் பாத்திரம் ஆகும். நாமறியாத வகையில், ஜாம்பவான் போன்று, ராமாயண அனுபூதிகள் மட்டும் அல்லாது, வேறு பல புராணங்களிலும் குஹன் அனுபூதிகள் நிறையவே உண்டு.

ஹரிஹர அனுபூதிகளைப் பெற்றவராய், சிவ, விஷ்ணு பூஜைகளில் சிறந்த உத்தமரே குஹப் பெம்மான்! குஹனுடைய தெய்வீகமான தேவ அனுபூதிகளைப் பற்றிச் சித்தர்களுடைய இருடிகள் ராமாயணத்தில் தான் நன்கு விளக்கமாகக் காண முடியும். மிகச் சிறந்த சிவ பக்தர், திருமால் நெறியில் திளைத்தவர், தர்மச் சீலம் நன்கு செறியக் குறுநில மன்னராய் ஆட்சி நடத்தியவர். அனைத்து விதமானப் புண்ணிய நதித் தேவதா மூர்த்திகளையும் வழிபட்டு உத்தம சித்திகளைப் பெற்றவர்.

ஸ்ரீகல்யாண சுந்தரி அம்மன் கூகூர்

அவதார சக்திகள் பூண்ட குஹனார்!

குஹப் பெம்மான் எளிமையாய் இறை பக்தியுடன் திளைத்தவர். முக்தி நிலைகளை மிக மிக எளிமையான முறையில் யாவருக்கும் ஓதி, உரைத்து, உணர்விக்க வல்லார். பரசுராமர், ஸ்ரீராமன் போன்ற அவதார மூர்த்திகளுக்கு, நேரடியாகவே திருவடிப் பூஜைகளைச் செய்யும் பாக்யங்களைப் பெற்றவர்.

“குஹனொடு ஐவரானோம்!” என்று ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாலேயே போற்றப் பெற்று, அவதார மூர்த்தியின் அரவணைப்பிற்கு ஆட்பட்டவர். ஸ்ரீபரசுராமர், ஸ்ரீராமர் போன்ற அவதார மூர்த்திகளால் திருமேனி தழுவி அரவணைக்கப் பெற்ற பாக்யம் கொண்டவர்.

“குஹனோடு ஐவரானோம்!” என்பதற்கான மிகவும் முக்கியமான பொருள் யாதெனில், ஸ்ரீராமரின் ஏனைய இளவல்கள் யாவரும் அவதார சக்திகளைப் பூண்டு தோன்றியவர்கள் ஆதலின், “ஐவரானோம்” என்கையில், குஹனும் அவதார சக்திகளைப் பெற்றவர் எனப் புலனாகின்றது அல்லவா! ஸ்ரீராமரைப் போலச் சாதாரண மனிதராய், ஜனகர் போல நிஷ்காம்ய மாமுனி மன்னராய்த் துலங்கிப் பிரகாசித்தவர்.

கங்கைக் கரையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியால் அரவணைத்துத் தழுவப் பெற்றவரெனில், ஆதிசேஷனாகவும், பிற்பாடு பலராமராகவும் வந்த ஸ்ரீலட்சுமண மூர்த்தி போன்று, குஹனும் அவதார மூர்த்தி அம்சங்களை நன்கு பூண்டு வந்தவர் என்பது நன்கு புலனாகின்றது அல்லவா! இதனை உறுதிப் படுத்தும் வகையில்தான் குஹனே, குஹேஸ்வரராக ஈஸ்வரப் பட்டம் பெற்ற வைபவம் நிகழ்ந்த திருத்தலமே லால்குடி அருகே கொள்ளிடக் கரையில் உள்ள கூகூர் ஸ்ரீகுஹேஸ்வரர் திருத்தலம் ஆகும்.

மேலும், வாமனவதார மூர்த்தியாக ஸ்ரீமன் நாராயணமூர்த்தி தோன்றிய போது, உலகளந்தப் பெருமாளாக, ஏகபாதச் சிவபாத மூர்த்தி போன்று, ஒற்றைக் காலில் நின்று தரிசனம் தந்தாரன்றோ! ஏகபாதப் பெருமாள் மூர்த்திக்குத் திருவடிப் பூஜை ஆற்றும் தெய்வீக சக்திகளைப் பெற்றவர்தாம், குஹனாக ராமாயணத்தில் ஸ்ரீராமருக்கு திருவடிப் பூஜைகளை ஆற்றினார்.

ஒரு தெய்வ அவதார மூர்த்திக்கு மூன்று விதமான திருவடிப் பூஜைகளை மற்றொரு அவதார மூர்த்தியாலும், உத்தமப் பரிபூரண பக்தியில் திளைப்பவர்களாலும்தாம் ஆற்ற முடியும்.

ஸ்ரீராமருக்கு ஆற்றிய மூன்று நிலைத் திருவடிப் பூஜைகள்!

பாற்கடலினுள் மத்தாக நிலை கொண்ட கூர்மவதாரப் பெருமாள் மூர்த்திக்குத் திருமகள் ஆற்றும் பாத பூஜை போல, கங்கைப் புனித நீரடியில் தீர்த்த ஸ்பரிச ஸ்ரீராமபாத பூஜை, கங்கை நதிக் கரையில், திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு ஆற்றுவது போலான ஸ்ரீராமபாதங்கள் நிலத்திற் படிய ஆற்றும் நிலவடித் திருவடிப் பூஜை

ஸ்ரீகணேச மூர்த்தி கூகூர்

மூன்றாவதாக, படகில் அமர்ந்த நிலையில், நிலத்தில் பாதங்கள் படாது, பாதங்களை உயர (வானில்) வைத்திருக்கும் நிலையிலான வானவடித் திருவடிப் பூஜை

-ஆகிய மூன்று வகையிலான திருவடிப் பூஜைகளைச் ஸ்ரீராமப் பெருமாளுக்கு ஆற்றும் பாக்யத்தைப் பெற்றமையால், குஹனே, தம் சிவா, விஷ்ணு பக்தி மிகுதியால் குஹேஸ்வரர் ஆகும் தெய்வீக பாக்யத்தைச் சுயம் பாவனத்திலேயே பெற்றவர் ஆனார்.

குஹப் பெம்மான், ஸ்ரீராமருக்கு ஆற்றிய மூன்று நிலைத் திருவடிப் பூஜைகள் பெறுதற்கரிய பாக்கியமாகும்.. எனவே, குஹனை படகோட்டுபவராக, நிஷாதலக் குறுநில மன்னராகவே ஒரு சிறு வைபவத்தில் நாம் ராமாயணத்தில் கண்டாலும், சித்தர்களுடைய இருடிகள் ராமாயணத்தில் தாம் இது போன்ற பல்லாயிரக்கணக்கான ராமாயண அனுபூதிகளை நாம் காண இயலும்.

ஐந்தாம் அவதாரிக சகோதரன்

குஹன் தம் புனிதக் கரங்களால் கங்கைத் தீர்த்தங்கொண்டு, இங்கு காவிரிக் கரையில் ஊற்றி அரைத்த சந்தனத்தினால் ஆனத் திருக்காப்பை ஸ்ரீராமருடைய திருவடிகளில் இட்டதன் அருட்பலனாக, கொள்ளிடக் கரையில், காவிரிக் கரையில் சிவபூஜை ஆற்றும் அரிய பலன்களையும், மேலும் பல புராண அனுபூதிகளையும் பெற்றார்.

பரதன், லட்சுமணன், சத்ருக்னன் ஆகிய மூவருமே தெய்வாவதார சக்திகளைப் பூண்டு ஸ்ரீராமரின் இளவலாய்த் தோன்றியவர்களே! இவர்களோடு ஸ்ரீராமரின் உடன் பிறவாச் சகோதரராக ஸ்ரீராமராலேயே பூமிக்கு உணர்விக்கப் பெற்ற குஹன், அதியற்புதத் தெய்வாவதார அம்சங்களைப் பூண்டு பின்னர் ஈஸ்வரப் பட்டம் பெற்று அன்றும், இன்றுமாய் குஹப் பெம்மானாய் எளியோருக்கு, குறிப்பாக மீனவர்களுக்கு, படகுத் துறைப் பாமரர்களுக்கும், கடற்கரை, நதிக் கரையில் வாழ்வோர்க்கும், மலை மக்களுக்கும் துணையாய் நின்று அருள்கின்றார்.

அக்காலத்தில் குஹனுக்கும் பல ஆலயங்களிலும் சன்னதிகள் இருந்தன. குஹனுடைய விசேஷமான தெய்வீக அம்சம் யாதெனில், ஷண்பகத் தாமரை எனும் ஒரு வகைத் தாமரைப் புஷ்பத்தால் அர்ச்சிப்பதும், ஷண்பகத் தாமரைப் புஷ்ப அர்ச்சனையால் ப்ரீதி ஆவதும் ஆகும். எவரையும் வெற்றி கொள்ளும் வண்ணம் நல்வரங்களைத் தரவல்லதே ஷண்பகத் தாமரைப் பூ வழிபாடாகும்.

ஸ்ரீதுர்காதேவி கூகூர்

குஹனுக்குப் பல புராணப் பாத்திரங்கள்!

ஸ்ரீராமரின் இளவல், ஆதிசேஷனாகவும், லக்குவனாகவும், பலராமப் பெருமாளாகவும் பொலிந்தது போல, பல்வேறு யுகப் புராணங்களிலும் குஹப் பெருமான், இறை அவதாரங்களின் திருமேனிப் பீதாம்பரமாகவும், ஸ்படிக மாலையாகவும் பொலிந்தார். ராமாயணம் மட்டுமன்றி, ஏனைய புராணங்களின், கல்பங்களின், யுகங்களின் இறைலீலைகள் பலவற்றிலும் குஹனின் பங்கு நிறையவே உண்டு.

எவ்வாறு சபரி மூதாட்டி ஸ்ரீராமரின் வருகைக்காகப் பல்லாயிரம் ஆண்டுகள், கல்பங்கள் காத்திருந்தாளோ, இதே போல ராம அவதார சக்தியின் பராக்ரமத்தை அண்டசராசரத்திற்கும் உணர்விக்கும் வகையில் குஹன் பன்னெடுங்காலம் பரிணமித்தார்.

திருவிளையாடற் புராணத்தில், பெருமாள், பிரம்மாண்டமான மீன் வடிவத்தில் வந்திட, சிவபெருமான் அதியற்புத மீனவராகத் தோன்றினாரன்றோ! இவ்வாறு சிவத்திரு கரங்கள் பட்ட வலையாகி, பெருமாளையும் அரவணைத்தவராய், இவ்வகையில் சிவபெருமானின் திருக்கரங்களை ஸ்பரிசித்தவராயும் துலங்கியவரே குஹன் ஆவார். ஆம், சிவா-விஷ்ணு அவதார அருள் கனிந்த வலை ஆனவரே குஹன்!

ஆமாம், திருவிளையாடற் புராணமாகக் கலியுகத்தில் நிகழ்ந்தது. ராமாயணமோ திரேதா யுகத்தில் நிகழ்ந்தது. பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த இறை லீலைகளிலும் குஹன் பரிணமித்து ஈஸ்வரப் பட்டம் பெற்ற தலமே – குஹேஸ்வரராக – குஹனுக்கு ஈஸ்வரப் பட்டம் அளித்த இறைவன் அருளும் கூகூர் ஆகும்.

கூகார வேதமாத் தலம்!

“கூகூவென” அதர்வண வேத மந்திரங்களும், மந்திர சக்திகளும் பரிணமிக்கும் அதியற்புத தலமே கூகூர் ஆகும். அதர்வண வேத சக்திகளைப் பெற்றவையே குயில்கள் ஆகும். கூகூர் குயில்கள் பலவும் முக்தியடைந்த தலம். “ஆஹா ஊஹு” என்று தமிழில் வேடிக்கையாகப் பயன்படுத்துகின்ற சொற்றொடரானது, உண்மையில் அதர்வண வேத மந்திரத்தில் சிற்ப்புப் பெற்ற “ஆஹா ஊஹு” என்ற பெயர்களை உடைய கந்தர்வர்களைக் குறிக்கின்றது. இதனை ஸ்ரீலலிதா சகஸ்ரநாம வாக்கியத்திலும் காணலாம்.

கூகூரில் பண்டையக் காலத்தில் அதர்வண வேதப் பண்டிதர்கள் தழைத்து, ஜாதி, மத, குல பேதமின்றி அதர்வண மந்திர சக்திகளைப் போஷித்த தலமிது! நாளடைவில் அதர்வண வேத மந்திரங்களைத் தவறாக, சுயநலமாகப் பயன்படுத்துவோர் பெருகியமையால், கால நியதியாகவே அதர்வண வேதமும் வழக்கில் இருந்து மறையலாயிற்று.

அதர்வண வேத வித்துக்கள் இத்தலத்தில் பல கல்பங்களிலும் பொலிந்தமையால், அதர்வண வேத மந்திரங்களில் எழும் சந்தேகங்களுக்கு விடை காண, உலகின் பல பகுதிகளில் இருந்து பற்பல வேத பண்டிதர்களும் இங்கு குழுமிய தலம். அதாவது லட்சக் கணக்கில் வேதசதஸ்கள் (வேதாகம விளக்க மகாநாடுகள்) நிகழ்ந்த தலம்!

ஸ்ரீநந்தீஸ்வரர் கூகூர்

திருப்புகழிலும், தேவார மறைகளிலும், திவ்யப் பிரபந்தங்களிலும், திருவாசகத்திலும், திருமந்திரத்திலும், அருட்பாவிலும், ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதியிலும் பல அதர்வண வேதசக்தி நிறைந்த தமிழ்ப் பாக்கள் நிறைந்துள்ளன. தக்க பெரியோர்களை நாடி அவற்றை அறிந்து இங்கு ஓதி வருதலால் சமுதாயத்தில் பெருகி வரும் வன்முறை, பயங்கரவாதத் தீய சக்திகளை எளிதில் தணித்து, சமுதாயத்தில் சாந்தம் நிரவுமாறு ஆன்மப் பூர்வமாக உதவிடும்.

கூகாரம் நிறைந்த பாக்கள் மற்றும் இறைவனைத் தரிசித்த நிலையிலேயே ஓதப் பெற்ற பழந் தமிழ் மாமறை மந்திரங்களும் அதர்வண வேத மந்திர சக்திகள் நிறைந்தவையாகும். அருணாசலக் கவிராயருடைய பல துதிகளும், மல்லாரி, குந்தளவராளி, யதுகுலகாம்போதி, சிம்மேந்திர மத்யமம், தர்பாரி கானடா போன்ற ராகப் பாடல்களும் இயற்கையிலேயே அதர்வண சக்திகளைப் பூண்டவை! இவற்றை இவ்வாலயத்தில் வாய்ப்பாட்டாகவும், இன்னிசைக் கருவிகள் மூலமாகவும் இசைத்தலாலும், அதர்வண வேத மந்திரங்களையும் ஓதி வருதலாலும், பூமியின் பரவெளியில் அதர்வண வேத மந்திர சக்திகளை நிரவிட உதவி, உலக ஜீவ சமுதாயத்தில் சாந்த சக்திகளைப் பொழிந்தருளும்.

பெருமாளின் பீதாம்பரமே குஹன்

பிறிதொரு புராண வைபவத்தில், பெருமாள் மூர்த்தியின் பட்டுப் பீதாம்பரமாகப் பொலிந்த குஹன்தான், ராமாயணத்தில் கங்கை நதிக் கரையில் குஹனைச் சந்தித்த போது கட்டித் தழுவி அவரணைத்தார். மூன்று நிலைகளிலும் நிலைகளிலும் ஸ்ரீராமர் குஹனைத் தழுவி அவருடைய குஹனின் தேவ சக்திகளைச் சூக்குமமாக அனைவருக்கும் உணர்வித்தார். மேலும் பெருமாளுடைய நின்று, இருந்து, கிடந்து, நடந்த நிலைகளில் மூன்று வகை நிலைப் பாத பூஜைகளை ஸ்ரீராமருக்கு ஆற்றியமையாலும், குஹனானவர் ஈஸ்வரப் பட்டம் பெறுதற்குரிய தெய்வாவதார சக்திகள் நிறைந்தவர் என்பது புலனாகின்றது.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி கூகூர்

இம்மூன்று நிலை தெய்வீக அன்புத் தழுவல்களும் குஹனுக்கு மும்மூர்த்திகளின் அனுகிரகங்களை உடனடியாக வர்ஷித்தது, அஷ்ட திக்குப் பாலகர்களும், சூரிய, சந்திர கிரஹாதிபதிகளும் ஆங்கே தோன்றினர். குஹன் தம் கரத்தால் கங்கைக் கரையில் ஸ்ரீராமரின் திருப்பாதங்களில் சந்தனம் பூசி, திருப்பாதப் பூஜைகளை ஆற்றிய போது, ஸ்ரீராமரும் உடனே குஹனைக் கட்டித் தழுவிட, ஸ்ரீராமரின் பட்டுப் பீதாம்பரம் ஆற்றில் நழுவியது. உடனே குஹனே அதை எடுத்துத் தர விழைந்த போது, ஸ்ரீராமனும், “அடியேனுடைய சத்தியப் பிரமாணப் பீதாம்பர வடிவே இந்த குஹச் செல்வமாக இருக்கையில், இன்னொன்று எதற்கு?” எனச் சூக்குமமாக உரைத்தார்.

மூன்று நிலைகளில் குஹப் பெம்மானை ஸ்ரீராமர் ஆலிங்கனம் செய்த போது, பெருமாளின் திருமார்பில் செறிந்த சந்தனம், குஹனின் நெற்றியில் வந்தமைந்தது. இவ்வாறு குஹன், ஸ்ரீராம மூர்த்திக்குத் திருவடிகளுக்குச் சந்தனாபிஷேகம் செய்த திருநாளே சதய நட்சத்திரத் தினமாகும். எனவே குஹனுக்கு சர்வேஸ்வரனே குஹேஸ்வரராகப் பிறிதொரு யுகத்தில் இங்கு கூகூர் தலத்தில் ஈஸ்வரப் பட்டம் அளித்திட்டத் தினமும் சித்திரை மாதச் சதய நட்சத்திர நாளாக அமைந்தது.

சித்திரைச் சதயச் சந்தனச் சிவபூமியே கூகூர்

எனவே சித்திரை மாதச் சதய நட்சத்திர நாளில், இங்கு ஸ்ரீகுஹேஸ்வரருக்குச் சந்தனக் காப்பு இட்டு வழிபடுவது மகத்தான நல்வரங்களைத் தருவதாகும்.

பெற்றோர்கள் – பிள்ளைகள், ஆசிரியர்கள் – பிள்ளைகள் இடையே நல்லுறவைப் பேண உதவும் தலம். திருமணமாகாது அல்லது மனைவியை இழந்து, வயதாகி விட்டமையால், விரக்தியுடன் வாழ்வோர் நல்ல மனஉறுதி, நல்ல மனவைராக்யம் பெற்றுக் குடும்பத்தைக் கட்டிக் காத்திட உதவும் தலம்.

பிரிந்த உறவு, சுற்றம், நட்பை மீண்டும் மலரச் செய்ய உதவிடும் தலம்! “வயதான பின் பிள்ளைகள் எங்கே தவிக்க விட்டு விடுவார்களோ?” – என அஞ்சி, அஞ்சி வாழ்வோருக்கு, நல்ல தீர்வுகளைத் தரும் தலம்.

ஆண் சந்ததி அல்லாது பெண் குழந்தைகளை மட்டும் கொண்டிருப்போர், இங்கு அடிக்கடி சந்தனக் காப்பு இட்டு வழிபட்டு வர, நற்றுணையுடன் கூடிய நல்ல வருங்காலத்தைப் பெற உதவும் தலம். அதர்வண சக்திகளை யாவரும் பெற உதவும் தலம்.

ஸ்ரீபைரவேஸ்வரர் சோழபுரம்

வரும் சித்திரைச் சதய நாளில் கூகூரில், குஹேஸ்வரருக்கு சந்தனம் அரைத்து அளித்துச் சந்தனக் காப்பிட விழைவோர், தம் குடும்பத்தாருடன் சேர்ந்து அரைத்த சந்தனத்தைக் கீழ்க்கண்ட இடங்களில் 2.5.2005 மாலை 6 மணிக்குள் அளித்திட்டால், அவை மறுநாள் கூகூரில் சமர்பிக்கப் பெறும். சந்தனப் பிரசாதமும் அனுப்பப் பெறும்.

சந்தனக் கல், சந்தனக் கட்டை இல்லாதோரும் சந்தனம் அரைத்துத் தந்திட உதவும் வகையில் 3.5.2005 அன்று சந்தனக் கல், சந்தனக் கட்டை, கங்கை, காவிரி போன்ற புண்ணியத் தீர்த்தங்களுடனும், ஜவ்வாது, கோரோஜனை, புனுகு போன்ற சந்தனாதித் திரவியங்களுடன் கூகூருக்கு வந்திருந்து சந்தனக் காப்பு வைபவத்தில் பங்கு பெற்று, ஸ்ரீகுஹேஸ்வரரின் அருளுக்குப் பாத்திரமாகும்படி வேண்டுகிறோம். இவ்வரிய அருட்பணியில் உற்றம், சுற்றம், நட்பு, ஏழை, எளியோர் யாவரையும் ஈடுபடுத்திப் பங்கேற்றிட வேண்டுகின்றோம்.

சந்தனம் அரைக்கும் போது ஓத வேண்டிய மந்திரங்கள்

ஸ்ரீபுத பகவானின் புதல்வர் ஸ்ரீபுரூரவஸு அனைத்துக் கோயில்களிலும் சந்தனம் அரைத்து இறைவனுக்குச் சார்த்திட ஓதிய மாமந்திரம்!

ஸ்ரீமுருகப் பெருமான் கூகூர்

“சந்தன கந்த தேவா அனுக்ரஹ யக்ஷயக்ஷணி
தேவஸ்ய சேவார்த்தம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி”

“சிவாய பவாய பவாத்மஜாய
சந்தன விருக்ஷாத்மா நாத்புத கந்தாய
சித்ரூப சிதானந்த சின்மயாய
சந்தோஷ ரூபாய
புதபுத்ர ஸேவார்த்தம் நமோ நமஹ”

கூகூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. இங்கு நாம் காண்பது, திருச்சி அருகே லால்குடியிலிருந்து 4 கி.மீ தொலைவில், கொள்ளிடக் கரையில் உள்ளதே பழமையான சுயம்பு லிங்கத் தலமான கூகூர் ஆகும். திருச்சி சத்திரப் பேருந்து நிலைத்திலிருந்து நேரடி பஸ் போக்குவரத்து உள்ளது – தடம் எண் 4.

ஏப்ரல் 2005 பௌர்ணமி நாள்: 23.4.2005 சனிக்கிழமை மாலை 4.27 மணி முதல் 24.4.2005 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.36 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது., கிரிவல நாள் : 23.4.2005 சனிக்கிழமை இரவு.!

7.4.2005 வியாழக்கிழமை விடியற்காலை 5.31 மணி முதல் இதே நாள் நள்ளிரவுக்குப் பின் 3.34 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பங்குனி மாதச் சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள்: 7.4.2005 வியாழக்கிழமை இரவு!

அமுத தாரைகள்

தன் குடும்ப வாழ்க்கையில் “இவ்வளவு சோதனைகள் வந்து வந்து மாய்க்கின்றனவே, இறைவா! யாது செய்வேன்! ஆண்டவா! நல்வழிகாட்டு!” என வேதனையுடன் உள்ளூரக் கதறி வாழ்வோர், இதற்கான பூர்வ ஜன்மக் காரணங்களை ஓரளவேனும் உணர்விக்கப் பெற்று, இவை தீரத் தக்கப் பரிகாரங்களைக் கால பூஜை ரீதியாகப் பெறவும், தேய்பிறை அஷ்டமித் திதி தோறும், கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டு, கடுந்துன்பங்களுக்குக் காரணமான தோஷங்களுக்கு முதலில் தீர்வு பெறுதல் வேண்டும்.

கலியில் தூய்மையான அன்பு மறைந்து வருவதால்தான் வன்முறைத் தீய சக்திகள் பெருகுகின்றன. ருத்ராட்சங்களையே சிவ வடிவாக வைத்துத் திங்கள் தோறும், அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்தி, ஆலயங்களுக்கு ருத்ராட்சப் பந்தல்களை தானமாக அளித்து வருவதும் நாட்டில் புனிதமான அன்புக் கிரணங்களை நிரவி, நாட்டிற்குச் சுபிட்சமும், சாந்தமும் அளிக்கும் நல்வழி முறையாகும்.

பேராவூரணி அருகே மருங்கப் பள்ளம் ஸ்ரீமருந்தீஸ்வரர், திருத்துறைப் பூண்டி ஸ்ரீபவ ஔஷதீஸ்வரர், ஸ்ரீவைத்யநாத சுவாமி என்ற பெயரில் அருளும் தலங்களான – கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சென்னை – திருவான்மியூர் ஸ்ரீமருந்தீஸ்வரர் – இவ்வாறான மருத்துவ சக்தித் தலங்களில் அறப்பணிகளை ஆற்றுவது, கடுமையான நோய்ப் பிணிகளால் வாடும் குடும்பங்களில், பாரம்பரியமாக நோய் வரக் காரணமான வல்வினைகள் தணிய மிகவும் உதவும்.

ஒன்று முதல் 10 வரையிலான ஆதார மூல எண்கள் யாவுமே தச பூஷண யோக சக்தி எண்களாகும். மனித உடலில் நிறைந்திருக்கும் ஒவ்வொரு உடல் அங்கமும் ஒவ்வொரு எண்ணோடு அன்புடன் பழகுதற்குக் குறைந்தது ஒன்பது வருடங்கள் ஆகும். இதுவே எண்ணுடன் அன்பு கொள்தல் ஆகும். எண்கள் ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று ஆன்மீக ரீதியாகத் தொடர்பு உடையவை.

அக்காலத்தில் வாகனங்களே இல்லாமையால், மனிதர்கள் வெகு வேகமாக வெகு தூரம் காலாற நடக்கும் வலிமையையும், நன்கு ஓடும் உடல் வன்மையையும் உறுதியாக இறுதி வரை பெற்றிருந்தார்கள். செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ராஜா தேசிங்கு மகாராஜாவும், பூமியின் அடியில் ஒரு சுரங்கப் பாதையை அமைத்து, தினமும் தன்னுடைய பஞ்ச கல்யாணிக் குதிரையில் பூமியடிப் பாதையில் காற்றிலும் கடுகிச் சென்று ஸ்ரீஅருணாசலேஸ்வரரைத் தரிசித்து திரும்பி வந்த ராஜ பொற்காலமும் உண்டு என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியமாகும்.

தொடரும் ஆனந்தம்...

ராம நவமி நாயகன்...
சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியே ராம பிரான் மனித உருவில் பூமியில் அவதரித்த திருநாளாகும். இதை அனுசரித்தே நம் சற்குரு கும்பகோணம் அருகிலுள்ள புள்ளபூதங்குடியில் 1993ம் வருடம் ராமபிரானின் ஜன்ம நட்சத்திரமான புனர்பூசம் கூடும் ராமநவமி உற்சவத்தை நிகழ்த்தினார் என்பதை நாம் அறிவோம். இதே முறையில் ராமேஸ்வரம் அருகிலுள்ள திருப்புல்லாணி திருத்தலத்தில் வரும் 26.4.2023 புதன் கிழமை அன்று புனர்பூச நட்சத்திரம் திரிதினமாக விளங்கும் சுபமுகூர்த்த நாளில் ராமபிரான் ஜன்ம தினத்தை கொண்டாடுவது என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே.

ஸ்ரீராமபிரான் திருப்புல்லாணி

ஸ்கந்த பலா க்ஷீர பலா பரசுராம சுபம் சுபம் சுபம்
நித்ய பலா மதுர பலா மங்கள பலா ஓம் ஓம் ஓம்
என்ற இந்த திரிசக்தி அமிர்த தாரணம் கூடிய மந்திரத்தை ஓதி சந்தனம் அரைத்து சயனக் கோல ராமபிரானுக்கு அளித்தல் மிகச் சிறப்பாகும். மேற்கண்ட திரிதின நன்னாளில் மூன்று விதமான அமிர்த சக்திகள் பூமியில் உருவாகின்றன. அதையே நித்ய பலா, மதுர பலா, மங்கள பலா என்னும் மானிடர்கள் ஏற்கும் வகையில் மதுர சக்திகளாக அவரவர் அரைக்கும் சந்தனத்தில் ஆவாஹனம் செய்து அதை ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு அளிக்கும் பாக்யத்தை அளிக்கிறார் நம் சற்குரு என்பதே இந்த சந்தனம் அரைத்தல் என்ற சாதாரண திருப்பணியில் நம் சற்குரு அளிக்கும் பிரம்மாண்டமான சித்த அனுகிரகம்.

ராம பிரானின் அவதார நாளாகிய இன்று ஒன்பது படி சீரகச் சம்பா பச்சரிசியில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து ஒரு ஜாதிக்காயில் பாதி, அதில் பாதி, அதிலும் பாதி என்பதாக, அதாவது ஒரு ஜாதிக்காயில் அரைக்கால் பாகம் (one eighth) என்ற அளவிற்கு மட்டுமே ஜாதிக்காயை பொடி செய்து சர்க்கரைப் பொங்கலுடன் சேர்த்து தானம் அளித்தல் சிறப்பாகும். எஞ்சிய ஜாதிக்காயை பொடி செய்து ராமபிரானுக்கு அரைக்கும் சந்தனத்துடன் சேர்த்து அத்துடன் Himajal நறுமணம் சேர்த்து சந்தனக் காப்பு நிகழ்த்தலாம். ஆணி உறக்கம் என்ற அற்புத சயனத்தை, உறக்கத்தை அளிக்கக் கூடியதே திருப்புல்லாணி. பூவுலகில் பக்தர்கள் வேறு எங்குமே பெற முடியாத இந்த ‘ஆழ்நிலை உறக்கத்தை’ அளிக்கக் கூடிய சக்தி வாய்ந்த திருத்தலம் திருப்புல்லாணி என்பதே இத்திருத்தலத்தின் சிறப்புகளில் ஒன்றாகும்.

ஆணி என்றால் “மிக உயர்ந்த” என்று பொருள். ஆணி என்பது நிரந்தரத் தன்மையையும் குறிக்கும். “ஆணி அடித்தது போல் உட்கார்ந்திருக்கிறான் பார்...” என்பது நாம் அடிக்கடி கூறும் சொல் வழக்கு. ஆணி முத்து, ஆணி தங்கம் என்றெல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆணிப் புல் என்பது தர்ப்பையில் ஒரு வகை. நடராஜப் பெருமானின் கூத்தை ஆணிப் பொன்னம்பலத்தே அற்புதக் காட்சியடி... என்றுதானே சித்தர்கள் வர்ணிக்கிறார்கள். இறைவனின் திருக்கூத்தை விட ஒரு அற்புதக் காட்சியை நாம் காண முடியுமா?

ராம பிரான் திருப்புல்லாணி திருத்தலத்தில் இவ்வாறு ஆணிப்புல்லில் சயனித்து காட்சி அளிப்பதன் பின்னணியில் ஆயிரமாயிரம் அனுகிரக சக்திகள் விளங்குகின்றன. பக்தர்களுக்கு என்றும் அழியாச் செல்வத்தை ஆரம்பத்தில் அளித்து, நல்ல உறக்கத்தை அளித்து, நாளடைவில் மன அமைதி என்பதே ‘ஆணிப் புல்’ என்று பக்தர்களுக்கு உணர்த்துவதே சக்கரவர்த்தி திருமகனின் சயனக் கோலம்.

மூன்று விதமான கல்யாண சக்திகள், அதாவது மங்கள சக்திகள் ஒருங்கிணைந்த திருத்தலமே திருப்புல்லாணி. கல்யாணி அம்பாள், கல்யாண விமானம், ராமபிரான் சயனித்த தர்ப்பாசனம் என்ற மூன்று கல்யாண சக்திகளைப் பக்தர்கள் தரிசிக்கக் கூடிய திருத்தலமே திருப்புல்லாணி. எத்தகைய திருமண தோஷங்களையும், புத்திர சந்தான தோஷங்களையும் நிவர்த்தி செய்யக் கூடிய திருத்தலம்.

காளஹஸ்தி திருத்தலத்தில் கண்ணப்ப நாயனார் இறைவனுக்காக சில பறவைகளைக் கொன்று அவற்றின் மாமிசத்தைப் படைத்தார் அல்லவா? பக்தியுடன் ஒரு பக்தரால் இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டதால் அந்தப் பறவை இனங்கள் அனைத்துமே உயர்நிலையை அடைந்து பூமியில் இருந்து மறைந்து விட்டன. அதே போல் ராமபிரான் சயனக் கோலம் கொண்ட ஆணிப்புல்லும் பூமியிலிருந்தே மறைந்து உயர்நிலையை அடைந்து விட்டது. இந்தப் புல்லின் மூன்று அனுகிரக சக்திகளை மட்டும் நம் சற்குரு போன்ற உத்தம மகான்கள் இன்றளவும் மற்ற தர்பைப் புற்களில் ஆவாஹனம் செய்து அதை அடியார்களுக்கு அளிக்கின்றனர் என்பதும் ஒரு சித்த இரகசியமாகும்.

சில ஆண்டுகளுக்கு முன் நம் அடியார்கள் பெற்ற இத்தகைய தர்ப்பை பாய் தற்போது நம் ஆஸ்ரமத்தில் கிடைக்காவிட்டாலும் இந்த அனுகிரகத்தைப் பெறும் முகமாக தர்ப்பைப் பாயை மற்ற வியாபாரத் தலங்களிலிருந்து பெற்று அதை திருப்புல்லாணி திருத்தலத்தில் ராமபிரானுக்குப் படைத்து, ஸ்ரீராமநவமி பிரசாதமாக ஏற்று தங்கள் இல்லங்களில் வைத்து தியானம் செய்வதாலும், உறங்குவதாலும் அற்புத பலன்களைப் பெறுவார்கள்.

திருப்புல்லாணி

திருஅண்ணாமலையில் சிவசக்தி ஐக்ய சொரூப தரிசனத்தின் எதிரே அமைந்துள்ள நம் சற்குருவின் ஜீவ சமாதியே பூலோகத்தில் அமைந்த 51வது ஜீவ சமாதியாகும். நம் சற்குருவின் ஒவ்வொரு பூலோக அவதாரமுமே இதுவரை கலியுகம் கண்டிராத ஒரு அற்புத சித்த ஆவாஹனம் என்றால் அது மிகையாகாது. உதாரணமாக, ஆன்மீகத்தில் உச்சக்கட்டத்தில் கொடி கட்டிப் பறந்த ஒரு அவதாரத்தின் முழுமையான வாழ்க்கை வரலாற்றையே ஒரே ஒரு ஆசனத்தில் நிரவி அதை மக்களுக்கு, தன் பக்தர்களுக்கு அளிக்கவல்லவர் நம் சற்குரு என்றால் அவர்தம் மகிமையைப் பற்றி வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா?

ஏற்கனவே நம் சற்குரு அளித்த தியான முறைதான் என்றாலும் அதை தர்ப்பாசயன தியான முறை என்பதாக இங்கு பக்தர்களுக்கு அளிக்கிறோம். இதுவரை இந்த தியானமுறையைப் பற்றி, இதன் மகத்துவத்தைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருப்பதால் அனைவருக்குமே கலங்கரை விளக்கமாய் இந்த தியான முறை அமையும். இதன்படி திருமணமான தம்பதிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் எதிர் எதிரே, ஒருவர் விழித்திரையில் மற்றவர் உருவம் அமையும் அளவிற்கு நெருங்கி தர்ப்பைப் பாயில் அமர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பினால் கணவன் மனைவியின் பெயரையோ, மனைவி கணவனின் பெயரையோ மௌனமாக ஓதிக் கொண்டிருக்கலாம்.

மிக மிக எளிமையான இந்த தியானமுறையை நடைமுறைப்படுத்தி பயன்பெற்றவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் கூட இல்லை என்பதே எவ்வளவு உயர்ந்த ஆன்மீக பொக்கிஷமாக இருந்தாலும் அதை அசட்டை செய்யும் நம்முடைய மெத்தனமான போக்கை உணர்த்துவதாகும். இதை இனியாவது சரி செய்து கொள்ள முயற்சி செய்தால்தான் இனிவரும் காலங்கள் நலமாய் அமையும்.

ஆரம்பத்தில் அரை மணி நேரப் பயிற்சியாகத் தொடங்கி அவரவர் வசதி வாய்ப்பைப் பொறுத்து எவ்வளவு நேரமானாலும் இந்த தியான முறையை நீட்டித்துக் கொள்ளலாம். மனித உறவுகளுள் மிக நெருக்கமானது கணவன் மனைவி என்ற உறவே. இந்த நெருக்கமான உறவும் கர்ம வினையின் விளைவாக ஏற்படுவதே என்பதை உணர்த்துவதே இந்த தியான முறையாகும். இதை மிஞ்சிய தியான முறை நம் பூலோகத்தில் கிடையாது என்று ஆணித்தரமாக உரைப்பவரே நம் சற்குரு.

இத்தகைய நெருக்கமான உறவைப் பெறாதவர்கள் என் செய்வது? இதற்கும் விடையளிக்கிறார் நம் சற்குரு.

சீதையை இலங்கையிலிருந்து மீட்டபின் ராமபிரான் சீதாப்பிராட்டியுடன் யாத்திரையாகச் சென்ற பல திருத்தலங்களுள் திருப்புல்லாணியும் ஒன்று. ராவணனின் புஷ்ப விமானத்தில் சீதையுடன் வந்திறங்கிய திருக்காட்சியை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம். என்னதான் ராமச்சந்திர மூர்த்தி அகில உலகத்தையே ஆண்ட சக்கரவர்த்தியாக இருந்தாலும் ராமரின் புஷ்ப விமானம் திருப்புல்லாணி கோபுரத்தின் மேல் பறக்காது அந்த திருத்தலத்தை சுற்றி வந்து வணங்கிய காட்சியைத்தான் நாம் இங்கு தரிசனம் செய்கின்றோம்.

இங்கு ஒரு சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம். இலங்கையில் பல சுவைகளைத் தரக் கூடிய ஒரு அம்மி இருந்தது. அதை அயோத்திக்கு எடுத்துச் சென்று அதில் ராமபிரானுக்கு விதவிதமான சுவைகளை அளிக்கும் துவையல்களை அரைத்துத் தரலாமே என்று சீதை நினைத்தபோது, “அது மாற்றானின் சொத்து, அதுவும் ராமபிரானின் பரம எதிரியான ராவணனின் சொத்து...”, என்று கூறி அனுமார் அதை தடுத்து நிறுத்தியதை நாம் அறிவோம். அவ்வாறிருக்க ராவணனின் புஷ்ப விமானத்தில் ராமர் எப்படி பயணம் செய்யலாம் என்ற சந்தேகம் வரலாம் அல்லவா?

இதுவே ஒரு ராஜாவானவர் தன் சுயநல காரியத்திற்காக ஒருவரின் உடமையைப் பயன்படுத்துவதற்கும், உலக நலனுக்காக ஒருவரின் உடமையைப் பயன்படுத்துவதற்கும் உள்ள வித்தியாசம். எனவே பரதன் அக்னி பிரவேசம் செய்து உயிர் விடத் துணிந்தபோது அவனை மீட்பதற்கும், கருடன் போன்ற பறவைகளின் நல்வாழ்விற்காகவும், இன்னும் பல தெய்வீக காரணங்களுக்காகவும் புஷ்ப விமானத்தில் காலடி வைத்தார் ராமபிரான் என்பதே நாம் உணர்ந்து தெளிய வேண்டிய தெய்வீக இரகசியம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam