வஜ்ர சிலையே வாராய் அருள் தாராய் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கொண்டராங்கி திருமலை
ஐயர்மலை வஜ்ரசிலா

இந்த சோபகிருது வருடம் பரணி தீபத்தின் போது பொலியும் அபூர்வ சக்திகளே வஜ்ர சிலா சக்திகள். இத்தகைய சக்திகளின் பிரவாகத்தை நம் சற்குரு தொட்டுக் காட்டிய வித்தையாக தம் அடியார்களுக்கு ஐயர்மலை திருத்தலத்தில் பல வருடங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தாலும் சனிக் கிழமையும் பரணி தீபமும் இணையும் சோபகிருது ஆண்டில் மட்டுமே இத்தகைய பேரழகு சக்திகள் பொங்கிப் பொலிவதால் இதை அடியார்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஸ்ரீசுரும்பார்குழலி ஐயர்மலை

வஜ்ர சிலா என்றால் என்ன? ஐயர்மலையில் வைரம் போல் ஜொலிக்கும் பேரழகையே, பெண்களின் பிரகாச சக்திகளையே இவ்வாறு வர்ணிக்கிறார்கள் சித்தர்கள். பரணி தீபமும் சனிக் கிழமையும் இணையும் நாளில் அம்பாள் ஸ்ரீசுரும்பார் குழலியின் திருமேனியில் தோன்றும் சக்திகளே இந்த வஜ்ர சிலா சக்திகள். இன்று நாள் முழுவதும், அதாவது குறைந்தது மூன்று மணி நேரம், கரும்பு சாறு கலந்த தேனால் அம்பாளுக்கு அபிஷேகம் நிறைவேற்றி மாலையில் பரணி தீபத்தை தரிசனம் செய்து பின்னர் ஐயர்மலையை கிரிவலம் வருவதால் வழிபாட்டின் பலன் பூரணம் அடைகிறது.

சமுதாயத்தில் நிராகரிக்கப்பட்ட பெண்கள், உதாரணமாக ஊனமுற்ற பெண்கள், ஊமை, குருடர், செவிடர்கள் போன்றோர், உடல் உறுப்புகளை இயற்கையாகவோ விபத்துக்களாலோ இழந்தோர், மிகவும் ஒல்லியாகவோ, குண்டாகவோ இருக்கும் பெண்கள் போன்ற அனைவருமே மேற்கண்ட வழிபாடுகளால் தக்க துணை அமையப் பெறுவர். பெண்களுக்கே இந்த வஜ்ர சிலா சக்திகள் துரிதமாகப் பலன் நல்கும் என்றாலும் தங்கள் நம்பிக்கையின் ஆழத்தைப் பொறுத்து ஆண்களும் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவர்.

மேற்கூறிய வழிபாட்டின் நிறைவில் சுமங்கலிகளுக்கு கண்ணாடி, வளையல், தேங்காய், பழம், வெற்றிலை, பூச்சரம் போன்ற குறைந்தது ஒன்பது மங்கலப் பொருட்களை குறைந்தது 12 சுமங்கலிகளுக்கு தானமாக அளித்தல் சிறப்பாகும்.

ஐயர்மலையில் 108 வஜ்ர சிலா தரிசனங்கள் உண்டு. ஆனால், இந்த தரிசனங்கள் வஜ்ர யோகம் கூடும் நாட்களில் மட்டுமே கண்களுக்குப் புலனாகும். நம்முடைய சற்குருவோ அல்லது மூதாதையர்களோ இந்த வஜ்ர தரிசனங்களை நோக்கி நாம் வணங்கும் வண்ணம் நமக்கு வழிகாட்டுதலை, அனுகிரகத்தை அளிப்பார்கள். இங்கு அடியார்களின் நன்மைக்காக ஒரே ஒரு தரிசனம் மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.

திருமணம் தடங்கல்களாக உள்ள பெண்கள் மேற்கூறிய நாளில் ஐயல்மலையை கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் குறைந்தது 21 வஜ்ர சிலா தரிசனங்களைப் பெறுதல் வேண்டும். ஆனால், இந்த தரிசனங்களை எப்படி அறிந்து கொள்வது? நம்பிக்கையே மாமருந்தாகும். தங்கள் சற்குருவை, மூதாதையர்களை நம்பி 21 முறை ஐயர் மலை தரிசனங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வருதால் அவரவர் பித்ரு மூர்த்திகளின் ஆசியால் அவர்களின் இந்த நமஸ்காரம் சரியான வஜ்ர சிலா தரிசனத்தில்தான் அமையும். பெண்கள் பஞ்ச அங்க நமஸ்காரம் நிறைவேற்றலாம். ஒரு வேளை ஐயர் மலையை வலம் வந்து இத்தகைய நமஸ்காரங்களை நிறைவேற்றிக் கொண்டு வரும்போது 21 நமஸ்காரங்கள் நிறைவேறும் முன்னேரே கிரிவலம் ஒரு சுற்று முடிந்து விடலாம்.

அதனால் எண்ணிக்கையை சரி செய்வதற்காக மீண்டும் வந்த பாதையில் திரும்பி செல்லாமல், அடுத்த சுற்று கிரிவலத்தை ஆரம்பித்து எண்ணிக்கையை பூர்த்து செய்து கொள்ளவும். இதுவும் நம் பூர்வ ஜன்ம வினைப் பயனாய் அமைவதுதான்.

ஆனா ஆவன்னா!

திருமணமான ஆண்களும் பெண்களும் பஞ்ச கச்ச முறை வேட்டி, இடுப்பில் கட்டிய துண்டு, மடிசார் புடவை சகிதம் கிரிவலம் வந்து மேற்கண்ட முறையில் 21 வஜ்ர சிலா தரிசனங்களைப் பெறுவதால் அவர்கள் உறவுக் குழப்பங்களிலிருந்து விடுதலை பெறுவார்கள். பெரும்பாலும் ஒரு மனிதனுடைய வாழ்வில் ஒரே ஒரு முறை கிட்டும் அரிய சந்தர்ப்பம் இது.

உறவுக் குழப்பம் என்றால் என்ன?
பகவான் ரஜ்னீஷ் கூறிய ஒரு ‘கதை’ இது. ஒரு ஆஸ்ரமத்தில் 80 வயதான ஒரு சன்னியாசி இருந்தார். அப்பழுக்கற்ற பிரம்மசர்ய வாழ்வை நடத்தியவர். ஒரு நாள் அதிக காய்ச்சல் தோன்றி உடம்பு முழுவதும் வலிக்க ஆரம்பித்து விட்டது. நிலைமையை அவரால் சமாளிக்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு இளவயது பெண் சன்னியாசியை அழைத்து தன்னுடைய உடம்பை வலி தீர பிடித்து விடும்படிக் கூறினார்.

அந்தப் பெண் சன்னியாசியும் அவ்வாறே சேவையைத் தொடர்ந்தாள், ஆனால், அது வேறு விதமாக முடிந்து விட்டது.

இரண்டாவது உதாரணம்...
விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடுமையாக உடல் வலிக்க ஆரம்பித்தது. மகன் வயல் வேலைக்குச் சென்று விட்டதால் வீட்டில் இருந்த மருமகளை அழைத்து தலையில், உடலில் தைலம் சிறிது தடவி விடும்படிக் கூறவே, அந்த மருமகளும் மாமனாருக்கு சேவை செய்ய ஆரம்பித்தாள். ஒன்றிரண்டு நாட்களுக்கு நல்ல விதமாக நிறைவேறிய இந்த சேவை, இறுதியில் வேறு விதமாக முடிந்து விட்டது.

இதுவே உறவுக் குழப்பம் என்பது. புனிதமான குரு சிஷ்யை என்ற உறவும், மாமனார் மருமகள் என்ற உயர்ந்த உறவும் கணவன் மனைவி என்ற உறவுக்குத் தாழ்ந்து விட்டது. இலை மறைக் காயாய், வெளியே சொல்ல முடியாத இத்தகைய உறவுக் குழப்பங்களால் பாதிக்கபட்ட குடும்பங்கள் எத்தனை, எத்தனையோ, மறைந்த உயிர்கள் எத்தனையோ?

எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையில் தோன்றவிருக்கும் இத்தகைய குழப்பங்களை ‘பூவிற்குள் பூகம்பம்’ என்று வர்ணிக்கிறார்கள் சித்தர்கள். குறைந்தது 100 விதமான ஆன்மீக விளக்கங்களை அளிக்கக் கூடியதே இந்த சித்த வாக்கியம்.

இத்தகைய தவறுகளுக்கும் பிராயசித்தம் நல்குகிறார் நம் சற்குரு. வாழ்வில் ஒரு முறையே சோபகிருது வருடத்தில் கிட்டும் இந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி அடியார்கள் கேட்டுக் கொள்கிறார்கள். தங்கள் குடும்பத்தில் இத்தகைய குழப்பங்கள் இல்லாவிட்டாலும் இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டும், தங்கள் எதிர்கால பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இத்தகைய வழிபாடுகளை அனைவரும் இயற்றுதல் சிறப்பே.

இந்த பரணி தீப நாளில் வழிபாட்டை, கிரிவலத்தை ஆரம்பித்து தொடர்ந்து தங்கள் பிரச்னை தீரும் வரை வெள்ளி அல்லது சனிக் கிழமைகளில் வழிபாட்டைத் தொடர வேண்டும். வஜ்ர யோக நாளில் தொடர்ந்து ஒரு யுக காலத்திற்கு ஐயர்மலை ஈசனை வலம் வந்து வணங்கி பக்தர்களுக்கு வஜ்ர சக்திகளை அளிக்க ஈசனருள் பெற்ற அன்னையே சென்னை ராயபுரத்தில் துலங்கும் ஸ்ரீவஜ்ரேஸ்வரி அம்மன் ஆவாள். அதனால் மேற்கூறிய வழிபாடுகள் எத்தகைய சூழ்நிலையிலும் மயங்காத வஜ்ரம் போன்ற மன உறுதியை ஆண்களுக்கும் பெண்களுக்கும் அளிக்கும் என்பது உறுதி.

ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி ஐயர்மலை

ஒரு முறை நம் சற்குரு ஆஸ்ரமத்தில் மௌனமாக அமர்ந்திருந்தார். சற்று நேரம் கழித்து நம் சற்குருவின் அன்பு மொழிகள் அங்கு எதிரொலிக்க ஆரம்பித்தன. “சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் கம்ப்யூட்டர் துறையில் இன்னும் அதிக அளவில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும். எங்கோ தொலைவிலுள்ள ஒரு நாட்டிலிருந்து நம் நாட்டில் உள்ள ஒருவருக்கு ஒருவர் ஒரு செய்தி அனுப்புவார். அவர் அந்தச் செய்தி என்னவென்று பார்க்க முயற்சி செய்யும்போது சக்தி வாய்ந்த லேசர் ஒளியை நம் நாட்டவர் மேல் பாய்ச்சி அவரைக் கொன்று விடும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு 50 வருடங்களுக்குப் பின் இப்பூமியில் இருக்கும் நம் அடியார்களை, அடியார்களின் சந்ததிகளைக் காப்பாற்றும் பொறுப்பு அடியேனுக்கு இருக்கிறது அல்லவா? அதனால் அத்தகைய சூழ்நிலையில் நம் அடியார்களை எப்படிக் காப்பது என்பது பற்றித்தான் தற்போது சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்...” என்றார் தாயினும் சாலப் பரிந்து.

நம் சற்குரு அளிக்கும் இத்தகைய பாதுகாப்பு கவசங்களில் ஒன்றே நாம் இங்கு மேலே காணும் வஜ்ர சிலா தரிசனம். உதாரணத்திற்காக அளிக்கப்பட்ட இது போன்ற தரிசனங்கள் எப்படி நம் உயிரைக் காக்கும் என்று நீங்கள் பிரமிக்கலாம். இந்த வஜ்ர சிலா தரிசனங்களின் உயிர் காக்கும் சக்தியை நாம் இங்கு விளக்கப் புகுந்தால் அதை வைத்து மேலும் பல அபாயங்களை விஷமிகள் உருவாக்கிவிடும் வாய்ப்பு உள்ளதால் வஜ்ர சிலா தரிசனங்களின் மகிமையை இதற்கு மேல் தெளிவாக வெளிப்படுத்த நம் சற்குரு தயாராக இல்லை.

நம் சற்குரு மேல் பூரண நம்பிக்கை கொண்டவர்கள் தொடர்ந்து இந்த வஜ்ர சிலா தரிசனங்களைப் பற்றி ஆத்ம விசாரம் செய்து வந்தால் அவர்களாகவே சிறிது சிறிதாக இதன் மகிமையை உணர்ந்து பயன்படுத்திக் கொள்வார்கள். இவ்வாறு கம்ப்யூட்டர் துறையில் உள்ளோர், வஜ்ர சிலா தரிசனங்களை பாதுகாப்பிற்காக பயன்படுத்த விரும்புபவர்கள் வரும் புத்தாண்டு முதலாக ஆரம்பித்து அடுத்து வரும் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஐயர் மலையை கிரிவலம் வந்து தொடர்ந்து ஒன்பது செவ்வாய்க் கிழமைகளில் கிரிவலம் வந்து ஈசனை வழிபடுதல் நலம். இதுவே உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் பெற்றுத் தரக் கூடிய உண்மையான ‘ஆயுள் காப்பீடு’.

பொதுநல சேவையாக இந்த கிரிவலத்தை ஆற்ற விரும்பும் அடியார்கள் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஒன்பது முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்குதல் சிறப்பு.

சாதகனின் தோல்வியே
சற்குருவின் வெற்றி!

சற்குரு தம் சீடனை என்றென்றும் கைவிட மாட்டார் என்பதற்கு மாறாக ‘கை விட்டும் தன் சீடனைக் காப்பாற்றுவார்’ என்பதை நாம் ஏற்கனவே கண்டோம். இது என்றோ நடந்த குரு அனுபூதி அல்ல, இத்தகைய நிகழ்ச்சிகள் இன்றும் தொடரும் இனிய வைபவமே என்பதை விளக்குவதே கீழ்க்கண்ட நிகழ்ச்சியாகும்.

ஒரு முறை நம் சற்குரு அடியார் ஒருவரின் இல்லத்திற்கு வந்திருந்தார். அப்போது அந்த அடியாரின் உறவினர் நம் சற்குருவின் தரிசனத்திற்காக வந்திருந்தார். அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனக்கு வரவேண்டிய மனைவி எப்படி இருப்பாள், அவளிடம் தான் விரும்பும் தகுதிகள் என்ன என்று ஒரு சாதாரண மனிதன் எதிர்பார்க்கும் கேள்வியைக் கூட அவர் நம் சற்குருவிடம் கேட்கவில்லை.

அவருடைய ஒரே குறிக்கோள் தான் எப்படி நிறைய பணம் சம்பாதிப்பது என்பதையே சுற்றி சுற்றி வந்து வெவ்வேறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். நம் சற்குருவோ அந்த சாதகர் எப்படி தன்னுடைய தாய் தந்தைக்கு சேவை செய்வது என்பது பற்றியே பல விதங்களில், பல கோணங்களில் சுமார் இரண்டு மணி நேரம் விளக்கிக் கொண்டிருந்தார்.

சற்குருவின் வெற்றியே வெற்றி!

சற்குருவின் அருகிலிருந்த நம் அடியார்களுக்கோ ஒரே குழப்பம், “என்ன இது, நம் சற்குரு இறைவனைப் பற்றி, இறை வழிபாட்டைப் பற்றி எதுவுமே பேசாமல் தாய் தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய சேவையைப் பற்றி மட்டுமே இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருக்கிறாரே...”, என்று. அந்த சாதகர் விடை பெற்றுப் போன பின், “என்ன சார், அடியேன் இறைவனைப் பற்றி எதுவுமே பேசாமல் தந்தைக்கு மகன் ஆற்ற வேண்டிய சேவையைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேனே என்பதுதான் உங்கள் சந்தேகம்...,” என்று கேட்டார்.

அனைத்தையும் அறிந்த சற்குரு அடியார்கள் எண்ணத்தை அறியாதவரா என்ன? சற்குருவின் கூற்று சரியே என்பதை ஆமோதித்து அடியார்கள் தலையசைத்தனர். சற்குரு தொடர்ந்தார். “வெறுமனே இறைவனைப் பற்றி பேசுவது மட்டும் ஆன்மீகம் ஆகிவிடாது. யார் எதை ஏற்றுக் கொள்வார்கள் என்பதை அறிந்து அதை அவர்களுக்கு அளிப்பதுதான் ஆன்மீகம். இங்கு வந்த சாதகருக்கு கடவுள் மேல் துளி நாட்டம் கூட கிடையாது, அப்படி இருக்கும்போது அவருக்கு கடவுள் பக்தி என்பது உடனே காய்த்து தொங்கி விடுமா என்ன? நிச்சயம், அது நடக்காது.”

“முதலில் இந்த சாதகனுக்கு அம்மா அப்பாதான் தெய்வம், அவர்களுக்கு ஆற்றும் சேவைதான் உண்மையான சேவை என்பதை உணர்த்த வேண்டும். அதற்கு மட்டுமே அடியேன் இரண்டு மணி நேரம் செலவு செய்தேன். இந்த அடிப்படை உண்மையை உணர்வதற்குக் கூட ஒரு சாதகனுக்கு எத்தனை ஆண்டுகள், எத்தனை பிறவிகள் தேவைப்படும் என்று தெரியாது. நீங்கள் எளிதில் இறை பக்தியைப் பெற்று விட்டதால் உங்களுக்கு இறை பக்தியின் அருமை தெரியவில்லை...,” என்றார்.

நம் சற்குரு தம் பூதஉடலை விட்டு மறைந்த சில வருடங்கள் கழித்துதான் சற்குருவின் உரையின் ஆழ்ந்த அர்த்தத்தை அடியார்கள் ஓரளவு உணர முடிந்தது.

எப்படி?

மயிலிறகு அலங்கரிக்கும்
ஸ்ரீகாஞ்சி கனிந்த கனி

சில ஆண்டுகள் கழித்து அந்த சாதகருக்கு திருமணமாகி குழந்தைகள் எல்லாம் பிறந்து விட்டனர். அவருடைய தந்தையும் காலமாகி விட்டார். அவருடைய தாயின் உடல் நிலை மோசமாகி விட்டது, படுத்த படுக்கை ஆகி விட்டார். இந்நிலையில் தன்னுடைய அருமை தாயை ‘நல்ல விதமாக’ வழியனுப்ப நினைத்த அவர் தாய்க்கு விளக்கெண்ணெய் நிறைய தேய்த்து குளிப்பாட்டி விட்டு, அருந்துவதற்கு இளநீரும் அளித்தார். பொதுவாக, நாம் சினிமா நாடகங்களில் பார்க்கும் இத்தகைய ‘சிகிச்சை’ கூட அவர் தாய் விஷயத்தில் பலனளிக்கவில்லை. சில நாட்கள் கழித்து, வேறு ஒரு உறவினர் முன் வந்து அந்த தாயை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்த பின்னரே அங்கே அவர் தன் இறுதி மூச்சை விட்டார்.

“ஒருவரை சீடன் என்று ஏற்றுக் கொண்டு விட்டால் இறுதி வரை நாங்கள் அவரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டுதான் இருப்போம்...” என்ற நம் சற்குருவின் இந்த வார்த்தைகளை நினைக்கும்போது கண்ணீர் விடாத ஒரு சீடன் இருக்க முடியுமா? அந்தச் சாதகர் நினைத்தபடி அவருடைய தாய் ‘இளநீர் சிகிச்சையில்’ இறந்திருந்தால் அவர் பாதாள நரகத்தில் எத்தனை கோடி ஆண்டுகள் வாடி வதங்க வேண்டி இருக்கும் என்பதை நம் சற்குருவைத் தவிர வேறு யாரால் கூற இயலும். இத்தகைய வேதனையை தம் சாதகன் அடையக் கூடாது என்பதற்காகவே பாடுபட்டு அந்த சீடனுக்கு ‘தோல்வியைத் தேடிக்’ கொடுத்தவரே நம் சற்குரு.

என்றென்றும் வாழ்க வளர்க நம் சற்குருவின் புகழ்!

இவ்வாறு தாய், தந்தை, கணவன், மனைவி, மக்கள் போன்ற நெருங்கிய உறவினர்களையும் கொல்லத் துணியும் அளவிற்கு செயல்படுபவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து தக்க பிராயசித்தம் நாடினால் அவர்களுக்கும் உதவத் தயாராக இருப்பதே நம் சற்குருவின் கருணை. கொண்டராங்கி தீப கைங்கர்யத்திற்கு குறைந்தது மூன்று டின் எண்ணெய் அளித்தலால் அவர்களுடைய தவறுகளுக்கு பிராயசித்தம் உரிய நல்லவர்களால் ஏதாவது ஒரு வடிவில் அவர்களுக்கு கிட்டும். நன்றாக மனதில் கொள்ளவும், கடுமையான தவறுகளுக்கு தீப எண்ணெய் தானம் எக்காலத்தும் உரிய பிராயச் சித்தம் ஆக முடியாது. எத்தகைய கொடுமையான தவறுகளுக்கும் பிராயசித்தம் நல்கும் நல்ல உள்ளங்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள மட்டுமே இத்தகைய எண்ணெய் தானம் உதவி செய்யும்.

உதாரணமாக, செவ்வாய்க் கிழமை, காஞ்சி பெரியவரின் ஜன்ம நட்சத்திரமான அனுஷ நட்சத்திரம், கோவர்த்தன பூசை, மூன்றாம் பிறை சந்திர தரிசன நாள், சூர சம்ஹார விரத ஆரம்பம் இவை அனைத்தும் சேரும் நாளில் முருக வாகனமான மயில் வர்ஷித்த ஒரு மயிலிறகையே இங்கு காஞ்சி மகானின் திருஉருவத்தை அலங்கரிப்பதாக அளித்துள்ளோம். இத்தகைய நிமித்தங்கள் சேரும் நாளில் நீங்கள் ஒருவரை மனதில் குருவாக வரித்திருந்தால் அவர் நிச்சயமாக உங்களுக்கு உத்தம சற்குருவாய் அமைந்து உங்கள் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்வார் என்பதே இத்தகைய நிமித்தங்கள் உறுதி செய்யும் ஆன்மீக விளக்கமாகும்.

பெருமாள்தான் சிவன்!

மகாபலி சக்கரவர்த்தி எப்படி திருஅண்ணாமலைக்கு கிரிவலம் வருவார் என்ற கேள்விக்கு இன்னும் இரண்டு பதில்களை அடியார்கள்அளித்துள்ளனர். இந்த பதில்கள் நம் சற்குரு கூறும் சரியான பதில்களாக இல்லை என்றாலும் இந்த பதில்கள் ஆன்மீக கருத்துக்களை உள்ளடக்கியதால் இவற்றை நீங்களும் தெரிந்து கொள்வது தவறு கிடையாது.

1. மகாபலி சக்ரவர்த்தியால் பாதாள லோகத்தை விட்டு வெளி வர முடியாத சூழ்நிலையில் மகாபலி சக்ரவர்த்திக்கு தினமும் பாதாள லோகத்திற்கு வருகை தந்து தரிசனம் தரும் நாராயண பெருமாளை திருஅண்ணாமலையாராக பாவித்து அவரை வலம் வருகிறார்.

2. ஒருமுறை அர்ஜுனன் சிவ பூஜை செய்வதற்கு தயாராக இருந்த நிலையில் கிருஷ்ணரே தன்னை சிவனாக பாவித்து அர்ஜுனனை பூஜை செய்யும்படிக் கூறினார். அர்ஜுனன் இதை நம்ப முடியாமல் அரைகுறை மனதுடன் கிருஷ்ணனுக்கு அர்ச்சனை செய்ய, பின்னர் கிருஷ்ண பரமாத்மாவுடன் திருக்கயிலாயம் சென்ற போது அங்கே தான் கிருஷ்ண பகவானுக்கு அர்ப்பணித்த மலர்கள் சிவபெருமானின் திருவடிகளை அலங்கரிப்பதைக் கண்டு அர்ச்சுனன் பேராச்சரியம் அடைந்தான்.

கருப்பும் சிவப்பும்
மஞ்சளில் மறையுமே!

நம் சற்குருவிடம் ஒரு அடியார் வந்தார். “வாத்யாரே, அடியேன் வீட்டிற்கு ஒரு பூனை அடிக்கடி வந்து வாந்தி எடுத்து விட்டுப் போகிறது. அதனால் வீட்டில் உள்ளவர்களுக்கு ஏகப்பட்ட வேலை வந்து விடுகிறது. இதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை...”, என்று மிகவும் சலித்துப் போன குரலில் பேச ஆரம்பித்தார். அவர் கூறியது அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு வந்த நம் சற்குரு சற்று நேரம் கழித்து, “அந்தப் பூனை ஏன் சார், உங்கள் வீட்டிற்கே வருகிறது, அதற்கு வேறு இடம் கிடைக்கவில்லையா?” என்று ‘அப்பாவித்தனமாகக்’ கேட்டார். இதற்கு அந்த அடியார் என்ன பதில் கூற முடியும்?

நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “நீங்கள் பூனையின் செயல்பாடுகள் பற்றி கூர்ந்து கவனிப்பதில்லை, அது யார் குற்றம்... சரி போகட்டும்... பூனைகள் நட்டுவாக்கிளி, பாம்பு போன்ற விஷ ஜீவன்களையும் கடித்து விழுங்கக் கூடியவை. அவ்வாறு விழுங்கும்போது பூனைகளை மட்டும் இந்த விஷ ஜந்துக்களில் உள்ள விஷம் பாதிப்பதில்லையா என்ன? நிச்சயம் பூனைகளையும் விஷம் பாதிக்கும். இவ்வாறு விஷத்தின் அளவு மீறும்போது அவை இந்த விஷத்தை முறிப்பதற்கான சக்தி வாய்ந்த மூலிகைகளை உட்கொள்ளுகின்றன, அவ்வாறு ஏற்கும் நிவாரண மூலிகைகளை ஓரளவு ஏற்ற பின் அவற்றை வாந்தியாக வெளியே கக்கும்போது வெளி காற்று மண்டலமும் இத்தகைய மூலிகைகளால் சுத்தம் செய்யப்படுகின்றது. உதாரணமாக, உங்கள் மனைவி இந்த வாந்தியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடும்போது அவளையும் அறியாமல் இந்த மூலிகை கலவையில் இருந்து வெளியாகும் சில ஔஷத சக்திகளை தன் மூச்சுக் காற்றின் மூலம் எடுத்துக் கொள்கிறாள், அதனால் அவளுடைய உடலும் மனமும், அவளுடன் உறவு கொள்ளும் உங்கள் மனமும் உடலும் தூய்மை ஆகின்றது...”, என்றாரே பார்க்கலாம். இதன் ஆழ்ந்த பொருளை உணர்ந்த நம் அடியாரின் பார்வைக் கோணம் இப்போது எப்படி மாறி இருக்கும் என்பதை நீங்கள் ஊகித்துக் கொள்ளலாமே.

கருப்பு என்பது சனீஸ்வரருக்கு உரித்தான வண்ணம், சிவப்பு செவ்வாய் பகவானுக்கு உரித்தான வண்ணம். இந்த இரண்டும் சேர்ந்தால் அது அதீத தீய சக்திகளை சமுதாயத்தில் உருவாக்கும் என்பதால்தான் அந்த நிறங்கள் சேர்ந்த ஆடைகளை அணிய வேண்டாம் என்று நம் சற்குரு நம்மை வழிநடத்துகிறார். அத்தகைய எதிர்மறை சக்திகள் வாய்ந்த வண்டுகள் இயற்கையாக பரவெளியில் உலவும்போது குருவிற்கு உரித்தான மஞ்சள் மலர் சக்திகளால் பரவெளியை தூய்மைப்படுத்தி சமுதாயத்தை காக்கிறார் என்பதே குருமார்கள், மனித சமுதாயம் அறியாது வர்ஷிக்கும் பல நல்லெண்ணக் கதிர்களில் ஒன்றாகும்.

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் !

அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பார்கள். நம் உடலுக்கு வெளியில் திருஅண்ணாமலை இருக்கிறது என்றால் நம் உடலுக்குள்ளும் அண்ணாமலை இருக்கத்தானே செய்யும்? அந்த அண்ணாமலையையே ஆத்ம வலமாக வருகிறார் மகாபலி என்று ஒரு அற்புத பதிலை பல அடியார்களும் அளித்துள்ளனர்.

இந்த பதில் சரிதானா? இது பற்றி நம் சற்குரு தெரிவிப்பதென்ன?

இது போன்ற ஒரு கேள்வியை பிரபலமான ஒரு குரு மகா சன்னிதானம் நம் சற்குருவிடம் பல்லாண்டுகளுக்கு முன் கேட்டார். “இறைவன் அனைவர் உள்ளும் இருக்கிறார் என்று சொல்கிறார்களே, அப்படியானால் நாம் ஏன் கோயிலுக்குச் சென்று இறைவனை வணங்க வேண்டும்?”. இதுவே அந்த சன்னிதானத்தின் கேள்வி.

நம் சற்குரு புன்சிரிப்புடன், “அஹம் பிரம்மாஸ்மி”, அதாவது நான்தான் பரபிரம்மம் என்று வேதம் சொல்கிறது. வேதத்தின் கூற்று எப்படி பொய்யாக இருக்க முடியும். ஆனால், வேதத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட உத்தமர்களே இவ்வாறு கூற முடியும். இவ்வாறு நான்தான் பரபிரம்மம் என்று கூறினால் அடியேன் ஒரு உலகத்தையே உண்டாக்க வேண்டும், அதை ஒரு நொடியில் அழிக்கும் சக்தி உள்ளவனாகவும் இருக்க வேண்டும். இது எந்த மனிதனாலும் சாதிக்கக் கூடியது இல்லை, அந்நிலையில் சாதாரண மனிதன் எப்படி இறைவன் என்று தன்னைக் கூறிக் கொள்ள முடியும்?”

இது போல் நம் அடியார் ஒரு கேள்வி கேட்டார். ஒரு மைலுக்கு எத்தனை கிலோ மீட்டர்... என்று? இந்தக் கேள்வியைப் பார்த்தவுடன் நம் மனதில் தோன்றும் எண்ணம், “எந்த ஆரம்பப் பள்ளி வாய்ப்பாட்டிலும் இதன் விளக்கம் கிட்டுமே, இதை ஏன் ஒரு ஆன்மீகத் தளத்தில் கேட்க வேண்டும்?” சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் இதன் உண்மைப் பொருளை நாம் கண்டு கொள்ள இயலும். ஒரு மைலுக்கு 1.6 கிலோ மீட்டர் என்று விளக்கும் ஒரு மனிதனால் ஒரு மைல் அல்லது கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று சரியான சாலை நீளத்தை அளந்து காட்ட முடியுமா? 12 அங்குலம் ஒரு அடி என்று விளக்கும் மனிதன் துல்லியமாக அந்த நீளத்தை தன் கையால் அளந்து காட்ட முடியுமா?

நிச்சயமாக முடியாது! ஏன், இறைவன் இந்த அடிப்படை அறிவைக் கூட வைத்து மனிதனைப் படைக்கவில்லையா என்ன? எல்லா மனிதர்களுக்கும் இந்த அடிப்படை அறிவு அவர்களுக்குள் உறைந்துதான் கிடக்கிறது, ஆனால், அதை வெளிக் கொண்டு வந்து மக்கள் பயன்பாட்டிற்காக புலப்படுத்தும் மார்க்கங்களைக் கூறும் மகான்களை, உத்தம குருமார்களை நாடி அவர்கள் நிழலில் தங்கி அவர்களின் நல்லறிவை மக்கள் பெறாததே காரணம் ஆகும்.

கொண்டராங்கி குசல தீபம் என்று நாம் கூறும் போது அந்த தீபத்தின் உள்ளே அமர்ந்து சுற்றிலும் ஒளி வியாபித்து இருப்பதாக தொடர்ந்து தியானம் செய்து வருவதால் இத்தகைய ‘அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும்...’ என்ற அடிப்படை ஆன்மீக அறிவு சிறிது சிறிதாக விருத்தியாகும்.

கைமாகறல் நாயனார்

சோபகிருது வருட திருக்கார்த்திகை தீபத்தை கொண்டராங்கி திருமலையில் ஏற்றி வழிபடும்படி நம் சற்குருவின் அறிவுரையை சிரமேற்கொண்டு அடியார்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவது நீங்கள் அறிந்ததே. தீபம் ஏற்றுவதற்காக சுமார் 200 கிலோ எடையுள்ள இரும்பு கொப்பரையை 3000 அடி உயரமுள்ள கொண்டராங்கி மலை மேல் ஏற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியமா என்ன? இதற்கான முயற்சிகளை நம் அடியார்கள் மேற்கொண்டாலும் இதில் மறைந்தருளும் குருமார்களின் சேவையைப் பற்றி நாம் அறிந்து கொள்வதும் அவசியமே.

ஸ்ரீஉகந்தான்படி விநாயகர் ஐயர்மலை

‘அங்கிட்டும் இங்கிட்டும் போய்க் கொண்டிரு’ என்ற சாதாரண வார்த்தைகளையே குரு உபதேசப் பரல்களாக ஏற்று அதை ஜபிப்பதிலேயே இலயித்து கரைசேர்ந்த அடியாரே கொண்டராங்கி திருமலையில் கொப்பரையை ஏற்றும் திருப்பணியில் மறைமுகமாக ஈடுபட்டுள்ளார் என்று தெரிவிக்கிறார் நம் சற்குரு. அவருடைய திருநாமமே கைமாகறல் நாயனார் என்பதாகும். நம் சற்குருவால் 1200வது நாயன்மார் சிவனடியாராக அங்கீகரிக்கப்பட்டவரே கைமாகறல் நாயனார் ஆவார்.

மாகறல் என்றால் உடும்பு என்று பொருள். கை மாகறல் என்றால் இந்த நாயனாருடைய கைப்பிடி உடும்பு போல் அவ்வளவு வலிமை உடையதாக இருப்பதால் இவருக்கு இத்தகைய ஒரு காரணப் பெயர் அமைந்தது. ஆம், கும்பாபிஷேகம் போன்ற திருப்பணிகளில் கனமான கர்டர்கள், தூண்கள், பாறைகள் போன்றவற்றை நகர்த்தும்போது அவை சற்றும் இடமாறி விழுந்து யாருடைய உடலுக்கும் உயிருக்கும் ஆபத்து ஏற்படாதபடி தன் வலிமையான ‘உடும்புப் பிடியால்’ காக்கும் அடியாரே கைமாகறல் நாயனார் ஆவார்.

கும்பாபிஷேகம் மட்டும் அல்லாமல் கப்பல்களில், கல் குவாரிகளில் கிரேன்களில் பணிபுரிவோரும் கைமாகறல் நாயனாரை வேண்டி தங்கள் பணிகளை ஆரம்பித்தால் நல்ல பாதுகாப்பு பெறுவார்கள். இவர்கள் செயலால் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடிய அபாயமும் கைமாகறல் நாயனார் பிரார்த்தனையால் தவிர்க்கப்படும். உயரமான கட்டிடங்களில் பணிபுரிவோரும் கைமாகறல் நாயனாரை வேண்டி நல்லருள் பெறலாம்.

ஐயர்மலையில் மேலே ஏறிச் செல்லும்போது பக்தர்கள் தங்கள் உடல் வலிமையை இழந்து மிகவும் சோர்வாக இருப்பது போல் தோன்றினால் அவர்களுக்கு ஊக்கம் அளித்துக் காப்பவரே ஐயர்மலையில் அருளும் ஸ்ரீஉகந்தான்படி விநாயகர் ஆவார். அதுபோல் கொண்டராங்கி திருமலையில் படியேறிச் செல்பவர்களும் தீப எண்ணெயை சுமந்து செல்பவர்களும் கைமாகறல் நாயனார் நாமம் போற்றி, கைமாகறல் நாயனார் நாமம் போற்றி என்று கூறிக் கொண்டே சென்றால் சிறுவர்களும் வயதானவர்களும் எளிதாக மலையேறிச் செல்ல முடியும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சித்த இரகசியம்.

கைமாகறல் நாயனார் அப்பழுக்கற்ற பிரம்மசர்ய விரதம் மேற்கொண்டவர் ஆதலால் பிரம்மச்சர்ய சிறுவர்கள் நல்ல ஒழுக்கத்தையும் வாழ்வில் உயர்நிலை அடையவும் கைமாகறல் நாயனாரின் நாமம் அவர்கள் வாழ்வில் என்றும் துணை நிற்பதாகும்.

கைமாகறல் என்பதற்கு மற்றோர் அர்த்தமும் உண்டு.
கை .. ஒழுக்கமான நடத்தை
மா .. மா என்று அழைக்கப்படும் பசு
கறல் .. தாயிடமிருந்து பாலை அருந்தும் கன்று
அதாவது, கைமாகறல் என்றால் தன்னுடைய தாயான பசுவிடமிருந்து பாலை அருந்தும் கன்றுக் குட்டி என்று பொருள். தாய்ப் பசு தன் கன்றுக்கு பால் ஊட்டுவதற்கு எந்தத் தடையும் விதிப்பதில்லை, மாறாக தன்னுடைய குழந்தையான கன்று பால் அருந்துவதை மிகவும் விரும்புவதே தாய்ப் பசுவின் தன்மை. ஆரம்பத்தில் இறைவனைத் தேடும் பக்தன், பக்தியில் உயர உயர இறைவனே பக்தனின் அன்பிற்காக ‘ஏங்கும்’ நிலை தோன்றி விடுகிறது என்பதை நாம் காஞ்சி கனிகண்ணன் வரலாற்றின் மூலம் அறிந்து கொள்கிறோம். அதுபோல் ஆரம்பத்தில் பாதுகாப்பை அளிக்கும் கைமாகறல் நாயனாரின் மீது தோன்றும் பக்தியானது நாளடைவில் இறைவன் மீது மீளாக் காதலையும் அளிக்கும் என்பதே கொண்டராங்கி குசல தீபத்தின் மகிமையாகும்.

கைமாகறல் தரிசனம் திருஅண்ணாமலை

பாதாளச் சிறையில் அடைபட்டிருக்கும் மகாபலி எப்படி திருஅண்ணாலையை கிரிவலம் வருவார் என்ற நம் சற்குருவின் கேள்விக்கு, “அவர் நம் ஆஸ்ரமத்தில் இருக்கும் பரகாய பிரவேச கோபுரம் வழியாக திருஅண்ணாமலையை கிரிவலம் வருவார்...,” என்று ஒரு அடியார் கூறியுள்ளார். கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிப்பதைப் போன்றது இது.

செவ்வாய் கிரகத்திலிருந்து திருஅண்ணாமலைக்கு கிரிவலம் வரும் ஓருவர் தன்னுடைய இயல்பான உடல் உஷ்ணமான 5000 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்துடன் கிரிவலம் வர முடியாது என்பதால் அவர் பரகாய பிரவேச கோபுரத்தில் தன்னுடைய உடலை கிடத்தி விட்டு பூமிக்கு உரிய மனித வெப்பநிலையான 96 டிகிரியில் கிரிவலம் வருவார். பர காய பிரவேசம் என்றால் வேறொரு உடலுக்குள் புகுதல் என்று பொருள். இதுபோலவேதான் எட்டு பனை மரம் உயரம் உடைய மார்க்கண்டேயர் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதும்.

நம் சற்குருவின் கேள்வியோ திருஅண்ணாமலைக்கு மகாபலி எப்படி வருவார் என்பதே? யோசிக்க, யோசிக்க...

நம் சற்குருவின் சத்சங்கத்தில் வேணுகோபால் என்ற ஒரு அடியார் சேர்ந்து வெகுகாலம் பணி ஆற்றிக் கொண்டிருந்தார். வேணுகோபால் என்பது அவருடைய இயற் பெயர் கிடையாது, வர்ணனையின் சுவைக்காக இங்கு அளிக்கப்பட்ட ஒரு பெயரே. சில வருடங்கள் கழித்து அவர் நம் சற்குருவின் சத்சங்கத்திலிருந்து சிறிது சிறிதாக விலகி விட்டார். இருந்தாலும் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டதால் அவருடைய ‘கவுச்சை’ உணவிற்கு, அதாவது ஆட்டுக்கறி, மீன் போன்ற அசைவ உணவிற்கான பணத்தை நம் சற்குரு அவ்வப்போது அளித்து வந்தார்.

ஆனால், அந்த மூத்த அடியாரோ நம் சற்குருவைப் பற்றி ஊரெங்கும் துர்பிரச்சாரம் செய்து வந்தார். அதைப் பற்றி நம் சற்குரு கண்டு கொள்ளவே இல்லை. ஒரு முறை தந்தை தானத்தில் மதிக்கப்பட வேண்டிய ஒரு அடியார் நம் சற்குருவிடம் வேணுகோபாலின் துர்பிரசாரம் பற்றி கோள் மூட்டினார். சுமார் ஒரு மணி நேரம் அவர் வேணுகோபாலைப் பற்றி எவ்வளவு கூறினாலும் நம் சற்குரு அவை அனைத்தையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாரே தவிர அந்த அடியார் கூறியதற்கு மாறாக ஒரு வார்த்தை கூட கூறவில்லை. அப்போது வேணுகோபாலும் அங்கு வந்து சேர்ந்தார்.

உடனே தனக்கே உரித்தான ஆனந்த சிரிப்புடன், “வாய்யா, வா, இப்போது தானய்யா உன்னைப் பற்றி இவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். குரு பக்தி என்றால் என்னவென்று வேணுகோபாலைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று, நீயும் சரியாக வந்து விட்டாய்...”, என்றாரே பார்க்கலாம்.

இதைக் கேட்ட வேணுகோபாலின் முகமும் அவரைப் பற்றி கோள்மூட்டிக் கொண்டிருந்த அந்த அடியாரின் முகமும் ஒரு லிட்டர் விளக்கெண்ணெய் குடித்ததுபோல் ஆகி விட்டது என்பதைக் கூறவும் வேண்டுமோ?

இத்தோடு நின்று விட்டதா என்ன நம் சற்குருவின் கருணை கடாட்சம். வேணுகோபால் சில மாதங்கள் கழித்து இறைவனடி சேர்ந்தபோது நம் சற்குரு குருவின் பெருமையை விளக்கும் ஒரு ரோஜா மலர் மாலையை வேணுகோபாலுக்கு அணிவித்து தன் இறுதி மரியாதையைத் தெரிவித்தார். நம் சற்குருவின் திருக்கரங்களால் இறுதி மரியாதை கிடைக்கப்பெற்றோரை விரல் விட்டு எண்ணி விடலாம். அவர்களில் ஒருவரே சற்குருவிற்கு எதிராக துர்பிரசாரம் செய்த வேணுகோபாலும் ஆவார்.

வேணுகோபாலே நம் கனவிலும் கருதமுடியாத ஒரு உயர்ந்த நிலையை அடைந்தார் என்றால் ஏதோ பெயரளவிற்கு நம் சற்குருவின் கட்டளைகளை நிறைவேற்றும் நம் அடியார்களுக்குக் கூட எத்தகைய உயர்ந்த நிலைகள் எல்லாம் காத்திருக்கும்?

“கண்ணில் தெரியும் காட்சி எல்லாம்
கமலக் கண்ணா நின் தோற்றம்...” என்று மாதா அமிர்தானந்தா கண்ணனைப் புகழ்ந்து பாடுகிறார். ஆரம்ப காலத்தில் அன்னை தன்னை கிருஷ்ண பகவானைப் போல் அலங்கரித்துக் கொண்டு அனைவருக்கும் காட்சி அளித்து வந்தார். மகான்களின் செயல்களுக்கு ஆயிரம் ஆயிரம் காரணங்கள் இருக்கும் அல்லவா? அதில் ஒன்றே நம்மை பிரமிக்க வைக்கும் அன்னையின் பக்தி மழை ஆகும்.

அன்னை அனைவரையும் கிருஷ்ண பகவானாகப் பாவித்தார், பார்த்தார். ஆனால், மக்கள் அன்னையை கிருஷ்ண பகவானாகவோ அல்லது ஏதோ ஒரு உயர்ந்த அவதாரமாக நினைத்துப் போற்றினார்களா? இதற்கு விடை நீங்கள் அறிந்ததே. ஆனால், என்றாவது ஒரு நாள் இப்பிறவியிலோ அல்லது ஏதாவது ஒரு பிறவியிலோ அன்னையின் தரிசனத்தைப் பெற்ற அனைவருமே அன்னையின் உண்மை சொரூபத்தை உணர்ந்து, இறைவனை தங்கள் உள்ளேயே தரிசனம் செய்யும் உயர்ந்த நிலையைப் பெறுவார்கள் என்பதால் அதற்கு முன்னோடியாகவே அன்னையின் தரிசனம் அமைந்தது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீகப் பொக்கிஷமாகும்.

இந்த ஆன்மீகப் பொக்கிஷத்தை நம்முடைய சற்குருவின் கீழ்க்கண்ட நிகழ்ச்சியில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

ஒரு முறை நம் சற்குருவிடம் ஒரு அடியார் வந்தார். “சுவாமி, உங்கள் தலைக்குப் பின்னால் ஒரு சக்கரம் சுற்றுகிறதே, அது என்ன என்று விளக்க வேண்டுகிறேன்…” என்று மிகவும் பணிவுடன் கேட்டார்.

ஸ்ரீஎமலிங்க மூர்த்தி திருஅண்ணாமலை

நம் சற்குரு, “அப்படியா அம்மா, (தன்னுடன் இருந்த அடியார்களைச் சுட்டிக காட்டி), இந்தப் பசங்க எல்லாம் அடியேனுடனேயே நீண்ட காலம் இருக்கின்றனர். ஆனால், இவர்கள் யாரும் இந்தச் சக்கரத்தைப் பார்த்தது கிடையாது. நீங்கள் இதை இன்று பார்த்து விட்டீர்கள் என்றால் உங்கள் மூதாதையர்கள் அருளால் உங்களுடைய குரு பக்தி எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்…”, என்றார்.

தொடர்ந்து, “ஆமாம், அந்தச் சக்கரம் என்ன வண்ணத்தில் உங்களுக்குத் தெரிகிறது?” என்ற கேட்கவே அந்தப் பெண் அடியாரும், “சுவாமி, அது தூய வெள்ளை நிறத்தில் காட்சி அளிக்கிறது…” என்றார். நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “இதுவே தர்ம சக்கரம் என்பது… கிருஷ்ண பகவான் போன்ற அவதாரங்களின் தலைக்குப் பின்னால் சுழல்வது…”, என்று மேலும் விளக்கம் அளிக்கவே அந்த அடியார் மிகவும் மகிழ்ந்து போனார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

அந்த அடியார் விடை பெற்றுச் சென்றபின் நம் அடியார்கள் தங்கள் முகத்தில் ஒரு கேள்விக் குறியைத் தொக்க வைத்துக் கொண்டிருந்தனர். “இந்தச் சாதாரண அடியார் தரிசனம் செய்த தர்மச் சக்கரத்தை, நாம் ஏன் இவ்வளவு வருடங்கள் நம் சற்குருவுடன் கூடவே இருந்தும் பார்க்க முடியவில்லை…”, என்பதே அவர்கள் முகபாவம் கேட்காமல் கேட்ட கேள்வி.

அனைத்தையும் உணர்ந்த சற்குரு இந்தச் சாதாரண விஷயத்தை அறியாதவரா என்ன? சிரித்துக் கொண்டே, “யோவ், அந்த அம்மா முகத்தைப் பார்த்தீர்கள் அல்லவா? (அந்தப் பெண் அடியார் மிகவும் கெட்டியான ஒரு கண் கண்ணாடியை அணிந்திருந்தார்.) பகலிலேயே பசு மாடு தெரியாது அந்த அம்மாவுக்கு, இரவில் நான் எருமை மாட்டைக் கண்டு பிடித்து விட்டேன் என்று அவர் சொன்னால் அதை எப்படி நாம் ஒத்துக் கொள்வது?” என்று அர்த்தமுள்ள ஒரு கேள்வியைக் கேட்டார். அதன் பிறகே நம் அடியார்கள் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டனர்.

உண்மையிலேயே அந்த அடியார் நம் சற்குருவின் தலைக்குப் பின்னால் சுழன்ற தர்ம சக்கரத்தைப் பார்க்கும் அளவிற்கு தகுதியை அப்போது பெறா விட்டாலும் இந்தப் பிறவியிலோ அல்லது எதிர்வரும் ஏதாவது ஒரு பிறவியிலோ நம் சற்குருவின் தர்மச் சக்கரத்தைத் தரிசிக்கும் அளவிற்கு நிச்சயம் உயர்வார் என்பதே நம் சற்குருவின் கருணை கடாட்சம் ஆகும்.

பவள பஸ்மம்

25.11.2023 சனிக் கிழமை அன்று திருஅண்ணாமலை அட்டலிங்க மூர்த்திகளுக்கு குறிப்பாக எமலிங்க மூர்த்திக்கு பவள பஸ்மம் கலந்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தும்படி நம் சற்குருவின் கட்டளையை மேற்கொண்டு அடியார்கள் ஒன்றுகூடி தாங்களாகவே சற்குரு அளித்த ஒரு மந்திரத்தை ஜபித்து பவள பஸ்மத்தை தயார் செய்து அளித்ததை நாம் அறிவோம். சற்குரு அளித்த மந்திரமோ எழுத்து என்ற அட்சர சக்தியைக் கூட்டாது ஒலி வடிவில் அமைந்ததால், அந்த ஒலி அலைகள் மட்டும் அடியார்கள் அமர்ந்திருந்த கோணங்களில் நிரவ, அந்த கோணங்களில் உருவான ‘மங்களஸ்வரூபிணி’ என்ற செவ்வாய் லோக தேவதையின் சக்தியை மட்டும் அக்னி பிரவாகமாக அந்த தூய பவளங்களின் மேல் குவிக்க அந்த பவளங்கள் பஸ்மமான விந்தையைப் பார்த்து நம் அடியார்களே அதிசயித்து விட்டனர்.

சோழீஸ்வரத்தில் சொக்கப்பனை

உண்மையான அதிசயம் இனிமேல்தான் ஆரம்பமாகிறது. மங்கள ஸ்வரூபிணி தேவதையின் பணி அடியார்கள் கூறிய மந்திர ஒலிகளை ஆறாயிரம் மடங்கு விருத்தி செய்து, அதாவது பவள பஸ்மம் வர்ஷிக்கும் நோய் நிவாரண சக்திகளை ஆறாயிரம் மடங்கு பெருக்கி, பவளங்கள் மேல் குவிப்பதாகும். இந்த 6000 என்பது எங்கோ கேட்டது போல் தோன்றுகிறதா? ஆம், இதுவே திருஅண்ணாமலையில் திகழும் நம் பூமிக்கும் விண்ணில் பிரகாசிக்கும் கொண்டராங்கி மலைக்கும் இடையே உள்ள தூரமாகும். செவ்வாய் கிரகத்தில் உள்ள பிரஜைகளின் உஷ்ணமே 5000 டிகிரி என்றால் மங்களஸ்வரூபிணி வர்ஷிக்கும் உஷ்ணத்தின் அளவு எவ்வளவு அதீதமாக இருக்கும். இத்தகைய ஒரு அதீத உஷ்ணத்தை ஏற்கும் திருஅண்ணாமலை எமலிங்க மூர்த்தி அதை மக்களுக்கு பல்வேறு அனுகிரக சக்திகளாக அளிக்கிறார்.

அவற்றுள் சில...
1. மிக வேகமாக பரவும் தொற்றுநோய்களிலிருந்து. உயிர்க்கொல்லி நோய்களின் கோரப் பிடியிலிருந்து மக்கள் காப்பாற்றப்படுவார்கள்
2. இரசாயன உணவுகளால் உடலில் ஏற்படும் சத்துக் குறைவால் எலும்புகள் பலமிழந்து உடைந்து விடும் நிலையில் இருக்கும்போது பவள பஸ்மம் ஒன்றே அவர்களுக்கு நிரந்தர தீர்வைத் தரும் ஆயுர்வேத மருந்தாகும்
3. பெண்களின் மாத விடாய் கோளாறுகள் அகலும்
4. தம்பதிகள் இடையே அமையும் உஷ்ண மாறுதல்களால் ஏற்படும் தாம்பத்ய பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும்
5. ரச்சுப் பொருத்தம் பாராது நிறைவேறிய திருமணங்களில் ஏற்படும் தோஷங்கள் குறைந்து நல்ல சந்ததிகள் உருவாக இந்த வழிபாடு துணை நிற்கும்.

மனிதக் கற்பனைக்கு எட்டாத இந்த பலன்களை சமுதாயத்திற்கு வர்ஷிக்க நாம் எமலிங்க மூர்த்திக்கு நிறைவேற்றும் அபிஷேகம், தான தர்மங்கள் துணைபுரியும் என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதலின் மகத்துவமாகும்.

சனி பரணி சித்தர் என்ற உத்தமரைப் பற்றி நாம் அறிவோம். சனிக் கிழமையும் பரணி நட்சத்திரமும் இணையும் திருநாட்களில் இந்த சித்தர் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து மக்களுக்கு எல்லாம்
1. மங்காத ஆயுள்
2. மறையாத புகழ்
3. தங்காத நோய் (விரைவில் குணமடையக் கூடிய நோய்)
என்ற மூன்று அனுகிரகங்களையும் இறைவனை நம்பி திருஅண்ணாமலையை கிரிவலம் பக்தர்களுக்கு எல்லாம் அளிக்கிறார். இந்த மகான் அளிக்கும் நோய் நிவாரண சக்திகள், ஆயுள் விருத்தி சக்திகள் திருஅண்ணாமலையில் பரணி நட்சத்திரம் அன்று சனிக் கிழமையுடன் (25.11.2023) இணைவது என்பது கலியுக மக்கள் பெற்ற பெரும்பேறே.

சனிக் கிழமை, பரணி நட்சத்திர இணைப்பில் தோன்றும் மழையில் கிரிவலப் பாதையில், திருத்தலப் பிரகாரங்களில் பொழியும் மழையில் நனைதல் என்பது கிடைத்தற்கரிய பேறே. விருத்தி வர்ஷம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றதே இத்தகைய அமிர்த வர்ஷமாகும். பலரும் தற்காலத்தில் இளமையிலேயே தலை முடி நரைத்தல், உடல் சோர்வு, படபடப்பு, தோல் சுருங்குதல் போன்ற முதுமைக்கால விளைவுகளுக்கு பலியாவதால் அவர்கள் வாழ்வும் விரக்தி மனப்பான்மையுடன் கழிகிறது. இத்தகையோர் மேற்கண்ட வழிபாட்டால் பயன்பெறுவர்.

இவ்வாறு சனிக் கிழமை, பரணி நட்சத்திரம், பரணி தீப நாள் என்ற மூன்றும் இணைந்த மழையைப் பெறுதல் என்பது அனைவருக்குமா கிட்டும் என்று உங்களுக்கு சந்தேகம் தோன்றலாம். இத்தகைய இணைப்பில் விளைந்த மழைத்துளிகளால் உருவாவதே கொண்டராங்கி மலை அடிவாரத்தில் அமைய இருக்கும் விருத்தசீர சுமை தாங்கி ஆகும்.

-->
குசல தீபத் தகுதி

பூலோகத்தில் ஒவ்வொரு திருத்தலத்திலும் மட்டும் அல்லாமல் தேவலோகம், கந்தர்வ லோகம், பிரம்மலோகம், திருக்கைலாயம், வைகுண்டம் என எந்த லோகமாக இருந்தாலும் அந்தந்த லோகத்திற்கு உரித்தான வழிபாட்டு முறைகளையும், அடிப்படைத் தகுதிகளையும் நிர்ணயிப்பவர்கள் சித்தர்களே. இம்முறையில் முதன் முதலில் சித்தர்கள் காட்டிய முறையில் கொண்டராங்கியில் தீபம் ஏற்றிய பெருமை சிரஞ்சீவியான அஸ்வத்தாமனையே சேரும்.

அஸ்வத்தாமன் தரித்த சிகையின் பெயர் தேனுபாலகம் என்பது நீங்கள் அறிந்ததே. தற்போது இத்தகைய சிகையை தரிக்கும் வல்லமையை யாரும் பெறாததால் தற்கால கலியுக நிலையை அனுசரித்து சூரிய பிறை என்ற முறையில், அதாவது முன் சிகையை மட்டும் மழித்து உருவான சிகையை உடைய அனைவரும் கொண்டராங்கி குசல தீபத்தை ஏற்றும் தகுதி பெறுகிறார்கள். அத்தகையோர் யக்ஞோபவீதம் என்னும் பூணூல் அணிந்திருப்பது அவசியமே. சாதி, மதம், இனம் என்ற தகுதிகளை இங்கு கருத்தில் கொள்ள வேண்டாம் என்பதே சித்தர்களின் பரந்த நோக்கு.

தேனுபாலகம், சூரிய பிறை என்ற இரண்டு சிகை அமைப்புகளுக்கும் கொண்டராங்கி திருமலையில் துலங்கும் குசல தீபத்திற்கும் உள்ள தொடர்பை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் அதனால் கிட்டும் ஆன்மீக விளக்கங்கள் எல்லையற்றவை. ஸ்ரீஆயுர்தேவி திருக்கரங்களில் பொலியும் அத்ரி மகரிஷி முதலாகிய ரிஷிகளின் சிகை அமைப்புகளே நம்மை பிரமிக்க வைக்கும் என்றால் குசல தீப சக்திகளை உணர வைக்கும் இந்த சிகைகளின் தாத்பர்யங்களை நாம் என்று உணர்ந்து தெய்வீகத்தில் அடுத்த அடியை எடுத்து வைப்பது?!

கொண்டராங்கி திருமலையில்
26.11.2023 அன்று உண்ணாமுலையம்மன் திருஅண்ணாமலையான் பெருங்கருணையாலும், நம் சற்குருவின் கனிந்த ஆசியாலும் குசல தீபம் ஏற்றப்பட்டது. இந்த தெய்வீக திருப்பணிக்கு பொருளுதவி அளித்த அடியார்கள், உடல் உழைப்பு நல்கிய உத்தமர்கள், உள்ளத்தால் உருவகித்த உயர்ந்தோர் அனைவரின் திருப்பாதங்களையும் எங்கள் தலையில் தாங்குகிறோம் !

கொண்டராங்கி திருமலையில் குசல தீபத்தை நம் அடியார்கள் ஏற்றிய அரிய காட்சியை இங்குள்ள வீடியோவில் கண்டு இரசிக்கலாம். குசல தீபத்தின் பல சிறப்புகளில் ஒன்றே இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் சுக்ர ஜோதி சக்திகளாகும். அஸ்வமேதயாகத்தில் தோன்றும் சக்திகளே இவை. ராஜாக்களுக்கு எல்லாம் ராஜாவே சக்கரவர்த்தி, அத்தகைய சக்கரவர்த்திகளால் மட்டுமே இயற்றவல்லதே அஸ்வமேத யாகம். புனிதமான திருமண சம்பந்தங்களில் தோன்றும் இத்தகைய சுக்ர சக்திகளை திருப்புடைமருதூர் திருத்தலத்தில் பூர்ண சனீஸ்வரருக்கு இயற்றிய அபிஷேக ஆராதனைகளின் போது தரிசனம் செய்து இருப்பீர்கள். இத்தகைய அரிதிலும் அரிய அஸ்வமேதயாக சக்திகளை அடியார்களுக்கு அளிப்பதற்காகவே பத்து அஸ்வமேத யாகங்களை பிரம்ம மூர்த்தி நிறைவேற்றிய தசாஸ்வமேத காட் என்னும் கங்கைப் பகுதியில் நம் அடியார்கள் நாள் முழுவதும் நீராடி பலன் பெறுமாறு நம் சற்குரு வழிகாட்டிய அனுகிரகத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சியால் இப்போதிருக்கும் அடியார்களுக்கு என்ன பலன் என்று நீங்கள் கேட்பது, கேட்டது நம் சற்குருவின் காதுகளை எட்டியது போலும்! சோபகிருது வருட திருக்கார்த்திகை தீபத்தின்போது கொண்டராங்கி திருமலையில் ஏற்றிய குசல தீபத்தின் போது இத்தகைய சுக்ர ஜோதிகள் வானையே வியாபித்து நின்றது என்றால் நம் சற்குருவின் கருணைக்கு எல்லைதான் ஏது?

இதனால் அடியார்களுக்கு கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது என்றாலும் இதன் ஒரு பயனாக நாம் இறைவனின் பிரதிபலிப்பு என்ற உண்மையை உணரும் சந்தர்ப்பம் இதன் மூலம் நமக்குக் கிட்டும். பல நூறு பிறவிகள், ஆயிரம், இலட்சம் பிறவிகளில் இயற்றும் கடும் தவப் பலனாகவே விளையும் இத்தகைய தெய்வீக உணர்வை ஒரு தீப தரிசனத்திலேயே அளிக்கும் மாபெரும் சித்த ஆற்றலைக் கொண்டவரே நம் சற்குரு என்ற இனிய உண்மையை நாம் உணர உதவுவதே கொண்டராங்கி குசல தீபமாகும்.

ஓம் நமசிவாய என்ற அட்சரங்கள் பிரதிபலித்த நிலையில் தோன்றும் இந்த தீப தரிசனத்தை ஆத்ம விசாரத்திற்கு உரிய ஆரம்பப் பாடமாக எடுத்துக் கொண்டு அடியார்கள் தொடர்ந்து முன்னேறி பலன் பெறலாம்.

அனைத்திலும் உயர்ந்த
கொண்டராங்கி குசல தீபம்

திருஅண்ணாமலையில் ஏற்றப்படும் தீபங்கள்
1. முதல் நாள் பரணி தீபம்
2. இரண்டாம் நாள் கார்த்திகை தீபம்
3. மூன்றாம் நாள் விஷ்ணு தீபம்
4. நான்காம் நாள் சரண தீபம்
5. ஐந்தாம் நாள் பூதலிங்க தீபம்
என்று அழைக்கப்படுகின்றன. இதே போல் கொண்டராங்கி திருமலையில் மூன்று நாட்கள் தீபங்கள் ஏற்றி வழிபடும்படி நம் சற்குரு அருளியதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் விளங்கும் தீபங்கள் கீழ்க்கண்ட நாமத்தால் அழைக்கப்படும்.

1. 26.11.2023 கார்த்திகை தீபம் .. கொண்டராங்கி குசல தீபம்
2. 27.11.2023 விஷ்ணு தீபம் .. கொண்டராங்கி அசல தீபம்
3. 28.11.2023 சரண தீபம் .. கொண்டராங்கி ரமண தீபம்

கார்த்திகை நட்சத்திரத்திற்கு அடுத்த நாள் ரோகிணி நட்சத்திர தினத்தன்று பிரகாசிக்கும் தீபமே விஷ்ணு தீபமாகும். ரோகிணி நட்சத்திரம் என்பது நம் சற்குருவின் ஜன்ம நட்சத்திரமாக அமைவதால் ரோகிணியில் நிகழ்த்தும் தெய்வீக வழிபாடுகள் அனைத்துமே சற்குருவின் மேலுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் என்பதில் சற்றும் ஐயமில்லை. அசல என்றால் அசையாத என்பதைக் குறிப்பதால் அசையா குரு நம்பிக்கை விளைய திர ராசியான ரிஷபத்தில் சந்திரன் திகழும்போது மேற்கொள்ளும் அசல தீப வழிபாடுகள் உறுதுணையாக நிற்கும்.

அசல என்றால் அசையாத, மாறாத, மறையாத என்றெல்லாம் பொருளுண்டு. இந்த வார்த்தையின் உன்னதத்தை நம் சற்குருவின் வரலாற்றிலிருந்து அறிந்து கொள்வோமா? நம் சற்குரு திருஅண்ணாமலையானின் திருப்பாதங்களை அடைவதற்கு முந்தைய திர வாரமான சனிக் கிழமை, அசல வாரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி இது. நடக்கவே முடியாமல் தள்ளாடிய நிலையில் இருந்த நம் சற்குரு தன்னுடன் இருக்கும் அடியாரை அழைத்து கையைப் பிடித்துக் கொண்டு நடக்க துணைபுரியுமாறு கேட்டுக் கொண்டார். தன் கையைப் பிடிக்க வந்த அந்த அடியாரின் கைகளை விலக்கி விட்டு, அந்த அடியாரின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டே தள்ளாடி தள்ளாடி நள்ளிரவு வேலையில் முன்னும் பின்னுமாக ஹாலில் நடந்து கொண்டிருந்தார் நம் சற்குரு.

“என்னை நட நட என்று டாக்டர்கள் கூறுகிறார்கள், அடியேன் எப்படி சும்மா நடக்க முடியும். இப்போது ... ... இருக்கிறான், அடியேன் சொல்வது எல்லாவற்றையும் குறித்துக் கொண்டு அதை புத்தகத்தில் எழுதி விடுவான். (இவ்வாறு பிறந்ததே மைசூர் பஜ்ஜி). நீ அடியேனுடைய கையைப் பிடிக்க வருகிறாய். அதனால் எந்த பிரயோசனமும் இல்லை, ஒரு வேளை நீ அதை விட்டு விடலாம். அடியேன் உன் கையைப் பிடித்துக் கொண்டால் அடியேன் உன் கையை விட்டு விடாமல் பிடித்துக் கொண்டு தைரியமாக நடக்கலாமே?” என்றார்.

தன்னுடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு கூறுவதாக அமைந்த இந்த வாக்கியங்கள் நம் சற்குருவிற்கு நம் அடியார்கள் மேலுள்ள கருணையையே சுட்டிக் காட்டுகின்றன. நம் சற்குரு நம் கையை இறுகப் பற்றிக் கொண்டால் நாம் எந்தச் சூழ்நிலையிலும், எந்த ஆபத்துக் காலத்திலும் தைரியமாக நடக்கலாமே? இந்த அனுகிரகத்தை அளிப்பதே கொண்டராங்கி அசல தீபம்.

ரமண என்பது போகத்தைக் குறிக்கும் சொல்லாகும். ரமண என்னும் தமிழ்ச் சொல்லை எழுதும்போது இரமண என்று எழுதுவதே முறை. ஆனால், இந்த வார்த்தையை உச்சரிக்கும்போது அதில் ‘இ’ என்ற எழுத்து மறைந்தே பொலியும். அதனால்தான் போகத்தைக் கடந்து இறைவனை அடையும் பாதையைக் காட்டுவதாக ரமண மகரிஷியின் வழிகாட்டுதல் அமைந்து, திருச்சுழி சிறுவன் வெங்கடராமன் திருஅண்ணாமலை ரமண மகரிஷியாக மலர்ந்தார்.

உலகில் சித்தர்கள் என்றால் ஒன்றும் அனுபவிக்கத் தெரியாத ‘சாமியார்கள்’ என்றே நினைக்கின்றனர். உண்மையில் பெண், பொன், புகழ் என்ற 1008 போகங்களையும் முழுமையாக அனுபவிக்கத் தேவையான உடல் ஆரோக்யம், மனக் கட்டுப்பாடு இவை அனைத்தையும் பூரணமாகப் பெற்ற உத்தமர்களே சித்தர்கள் ஆவர். ஆனால், அவர்கள் சித்தமோ போகங்கள் எதையும் நாடாது சதா சர்வகாலமும் இறைவனின் திருவடிகளிலேயே பதிந்து கிடக்கும். இத்தகைய பக்தி நிலையை அளிக்க வல்லதே ரமண தீபத்தின் மகிமையாகும்.

அன்னை அமிர்தானந்தாவின் வழிகாட்டுதலும் இதை உறுதி செய்யும். “நல்ல நெஞ்சமுடைய பணக்காரர்களிடம் இருக்கும் செல்வமானது மண் விழுந்த அன்னமாகக் கருதப்படுகிறது...”, என்பார் அன்னை. மண் விழுந்த அன்னம் மனிதர்களுக்குப் பயன்படாது என்றாலும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் அவை உணவாக அமையுமே. யானை போன்ற மிருகங்கள் மண் செறிந்த புல்லைத்தான் விரும்பி உண்ணுமே தவிர, சுத்தமாக்கப்பட்ட புல் போன்ற உணவு வகைகளை அவை தீண்டுவதே இல்லை. இதுவே நம் சற்குரு கூறும், “இருந்தும் (அனைத்து செல்வமும் இருந்தாலும்) இல்லாதிரு...” என்ற நிலையாகும்.

கொண்டராங்கி அசல தீபம்

பாதாளச் சிறையில் அடைபட்டிருக்கும் மகாபலிச் சக்கரவர்த்தி எப்படி திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தை ஒட்டி கிரிவலம் வருவார் என்ற கேள்விக்கு ‘உயர்ந்த தீபம்’ என்பதை தன்னுடைய நாமத்தின் ஒரு பகுதியாகக் கொண்ட ஒரு அடியார் ஓரளவு சரியான பதிலைக் கூறியதால் அவர் சார்பாக கொண்டராங்கி குசல தீபத்திற்கு ஒரு டின் தீப எண்ணெய் வழங்கப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது சம்பந்தமாக சற்குருவின் பதில் இதோ.

இறைவன் மிகவும் எளியவன், ஆன்மீகமும் மிகவும் எளிமையானதே, நாம்தான் அதை மிகவும் குழப்பிக் கொள்கிறோம். அது போன்றதுதான் இந்த கேள்வியும். ஆயுள் தண்டனை பெற்ற கைதி அனைவருக்கும் ‘பரோல்’ விடுமுறை என்று அளிப்பார்கள். இந்த விடுமுறையில் அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று தங்கள் மனைவி, மக்கள் போன்ற நெருங்கிய உறவினர்களைப் பார்த்து விட்டு வருவதற்காக அளிக்கப்படுவது இது. சட்டத்தை இயற்றும் அரசாங்கத்திற்கு அதை ரத்து செய்ய, மாற்றி அமைக்க உரிமை இல்லையா என்ன?

இவ்வாறு வருடம் ஒரு முறை ஓணம் பண்டிகை தினத்தன்று தன் நாட்டு மக்களைப் பார்த்து வருவதற்கு பெருமாளிடம் ‘பரோல்’ விடுமுறை கேட்டு அதை அங்கீகரித்தவரே பெருமாள். இதை மாதா அமிர்தானந்தா விளக்குவதாக உள்ள படத்தையே நாம் க்ளூவாக அளித்திருந்தோம்.

மூதாதையர்கள் அவரவர் திவச தினத்தன்று தங்கள் சந்ததிகள் இல்லத்திற்குச் சென்று வரவும், அனைத்து பித்ருக்களுக்கும் மாளய பட்சம் 15 நாட்களிலும் அவரவர் சந்ததிகளின் இல்லங்களுக்கும், பித்ரு முக்தி தலங்களுக்கும், கடலோரப் பகுதிகளுக்கும் சென்று வர ‘பரோல்’ விடுமுறை அளிக்கப்படுவதும் நீங்கள் அறிந்ததே.

பெருமாள் ஒரு அடியால் வானத்தை அளந்து, இரண்டாவது அடியால் பூமியையும் பாதாள லோகத்தையும் அளந்து விட்டு, தன்னுடைய மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று மகாபலியை கேட்டபோது மகாபலி தன் தலைமேல் பெருமாளின் திருவடியை வைக்கலாம் என்று கூறினான் அல்லவா? அப்போது மகாபலி பெருமாளின் ‘அடிமை’ என்றுதானே ஆகி விட்டான். எப்படி ஒருவர் தனக்குச் சொந்தமான நூறு ரூபாய் நோட்டை தன் மேல் பாக்கெட்டிலும் வைக்கலாம், கஜானா பெட்டியிலும் வைக்கலாம் என்பது போல் பெருமாள் மகாபலியை ஒரு நாள் என்ன, அவன் ஆயுள் முழுவதும் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் உலவ விடலாமே?

அடுத்து, சாந்தவெளியில் தவமியற்றிக் கொண்டிருக்கும் ஆஞ்சநேயர் தினமும் திருக்கைலாயத்திற்கும் வைகுண்டத்திற்கும் சென்று பெருமாளை தரிசித்து விட்டு வருபவர்தாமே. சித்தர்களின் நாயகரான ஸ்ரீஅகத்திய பெருமான் இவ்வாறு சிரஞ்சீவிகளுடன் சேர்ந்து திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தை ஒட்டி திருஅண்ணாமலையை வலம் வருமாறு அழைப்பு விடுத்தால் அதை மறுப்பவரா ஆஞ்சநேயப் பெருமான்?

“அவன் என்னுடைய சீடனே அல்ல, அவனை நான் பார்க்க விரும்பவில்லை...”, என்று மகாபலியை நிராகரிக்கும் சுக்ராச்சாரியார் தன்னுடைய சீடனை மன்னிக்க மாட்டாரா, அப்படி மன்னிப்பதாக இருந்தால் எப்போது மன்னிப்பார்? இந்த கேள்வியை வரும் புத்தாண்டு பரிசிற்கு உரியதாக அளிப்பவரே நம் சற்குரு. இதற்கான சரியான பதிலைக் கூறும் முதல் அடியாருக்கு ஒரு புதிய வயலின் காத்திருக்கிறது. ஏன் வயலின் பரிசு என்பதும் ஒரு ஆத்ம விசாரக் கேள்விதான். இந்த கேள்விக்கான பதில் அடங்கிய படமும் கொண்டராங்கி தீபத்தில் மறைந்துள்ளது.

செம்மேனிநாதர்

நம் ஆஸ்ரமத்தில் ஒரு அண்டாவை எடுக்க வேண்டுமென்றால் சற்குரு, “அந்த அண்டாவை எடு...”, என்று கூறியதே இல்லை. “அவரை இப்படி நகர்த்து...”, என்றுதான் கூறுவார். அதாவது நம் சற்குருவைப் பொறுத்தவரை அசையும் அசையாப் பொருள் அனைத்துமே கடவுள்தான். அதனால்தான் அனைத்திற்கும் இந்த “அவர்” என்ற மரியாதை.

அவ்வாறு இருக்கும்போது கோடிக் கணக்கான மக்களின், ஜீவ ராசிகளின் கர்ம வினைகளைத் தீர்ப்பதற்கு உறுதுணையாக நின்ற தீபக் கொப்பரையை செம்மேனிநாதர் என்று பெயரிட்டு அழைப்பது எத்துணை பொருத்தம்? பொதுவாக தீபக் கொப்பரைகள் படியேறிச் செல்லும்போது சில வகைக் கர்மங்களைத் தீர்க்கின்றன. அவை மீண்டும் படி வழியாக இறங்கி வரும்போது வேறு விதமான கர்ம வினைகளைத் தீர்க்கின்றன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் கர்ம இரகசியம்.

கொண்டராங்கி செம்மேனிநாதர்

இதில் மேலும் ஒரு சிறப்பாக கொண்டராங்கி திருமலை சுமார் 3000 படிகளுடன் அமைந்திருப்பதால் இதன் மேல் ஏறி இறங்கும் செம்மேனிநாதர் சுமார் 3000+3000 = 6000 விதமான கர்மவினைகளைத் தீர்க்கும் அற்புதத்தை நிகழ்த்துகிறார். குறைந்தது ஒரு வருட காலத்திற்கு கொண்டராங்கி திருமலையில் ஏறி இறங்கும் பக்தர்களுக்கு எல்லாம் படிகளின் தீட்சை வழியாக இந்த அனுகிரகம் வழங்கப்படும். மலம் மூத்ராதி கர்ம வினைகளைக் கடந்த ராமானுஜர் திருப்பதி மலைமேல் ஏறி தினமும் சிறுநீர் கழிப்பதற்காக கீழே இறங்கி வரும் அற்புதத்தை நினைத்துப் பாருங்கள், மகான்களின் பெருமை ஓரளவு புரிய வரும்.

“ஒரு குண்டு போட்டு லட்சக் கணக்கான மக்களை அழிப்பது சாதனை அல்ல, ஒரு குண்டு போட்டால் லட்சக் கணக்கான நெல் மூட்டைகள் விழ வேண்டும், அதுவே உண்மையான சாதனை,” என்பார் கோவணாண்டி. சமீபத்தில் நடந்த இஸ்ரேல் யுத்தத்தின்போது ஒரே குண்டில் எத்தனையோ மாடிக் கட்டிடங்கள் தரை மட்டமாக அதனால் லட்சக் கணக்கான மக்கள் உயிரிழந்த வேதனையை நாம் அறிவோம்.

குண்டு வெடிப்பிற்கு உரிய தேவதை செவ்வாய் பகவான்.
செய்தித் தொடர்புக்கு உரிய தேவதை செவ்வாய் பகவான்.
தொற்றுநோய்களை உடல் வெப்பத்தின் மூலம் அழிப்பது செவ்வாய் பகவான்.
கார்த்திகை தீபம் போல் அதீத வெப்பத்தால் தீர்க்க முடியாத கர்ம வினைகளை இறையருளுடன் தீர்ப்பது செவ்வாய் பகவான்.

இவ்வாறு நன்மை தீமை என அனைத்தையும் சாதிக்கும் செவ்வாய் பகவானின் மங்கள சக்திகள் என்ற தீப சக்திகளை மட்டும் இணைத்து பல அற்புதங்களைப் புரிந்தவரே நம் சற்குரு. உதாரணத்திற்காக ஒன்றே ஒன்று. சமீபத்தில் உத்தர்காசி பகுதியில் நிலச்சரிவில், இடிபாடுகளுக்கு இடையே மாட்டிக் கொண்ட 41 தொழிலாளர்கள் அனைவரையும் உயிரோடு மீட்க உதவியதே இந்த மங்கள சக்திகள்.

இந்த தொழிலாளிகளை மீட்க உதவிய நிகழ்ச்சியைப் பற்றி சற்றே ஆத்ம விசாரம் செய்தாலும் நீங்கள் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளலாம். 41 என்ற எண்ணிக்கையில் விளங்கிய இவர்கள் மீட்கப் பட்டது ஒரு செவ்வாய்க் கிழமை செவ்வாய் அதிபதியான மிருகசீரிஷம் நட்சத்திரம் கூடும் நாள். நல்ல செய்தி பரிமாற்றம், உணவு, மருத்துவ வசதிகள் அளிக்கப் பயன்பட்டது ஒரு இரும்பு குழாய். 41 என்ற புத எண் செவ்வாய்க்கு நட்பு பாவத்துடன் திகழ்வது. உத்தர் என்றால் வட திசை என்று பொருள்.

கொண்டராங்கி குசல தீபத்தில் கேரளா திருச்சூர் வடக்கு நாதர் கோயிலில் இருந்த பெறப்பட்ட இரண்டு கிலோ நெய்யும், வட திசைக்கு உரிய கேரளா குருவாயூரப்பன் கோயில் பிரசாதமாகப் பெறப்பட்ட இரண்டு கிலோ வெண்ணெயும், செவ்வாய் பகவானுக்குரிய குங்குமப்பூ தைலம் கலந்த இரண்டு லிட்டர் தீப எண்ணெய், இவை அனைத்தும் ஒளியைக் கூட்ட கொண்டராங்கி திருமலைக்கு வடக்கில் இருந்த உத்தர்காசி தொழிலாளிகளை உயிருடன் மீட்கும் தெய்வீக சக்தியை அளித்தது. இதனால் ஆனந்தம் அடைந்த மக்கள் கோடியில் இருப்பார்களோ இல்லையோ, நிச்சயம் லட்சக் கணக்கான மக்கள் இந்த உயிர் மீட்புப் பணியால் ஆறுதல், ஆனந்தம் அடைந்திருப்பார்களே.

இதுவே செவ்வாய் பகவான் குண்டு வெடிப்பிற்காக விளையும் அக்னி சக்திகளை மக்களின் ஆனந்தத்திற்காக மாற்றி அமைக்கும் நம் சற்குருவின் வல்லமை. சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் நிலையில் ஆறு கிலோ தீப எண்ணெய் இத்தகைய விந்தைகளைப் புரிந்தது என்றால் கிட்டத்தட்ட 1200 கிலோ பசு நெய், மூலிகை எண்ணெய், தேங்காய் எண்ணெய் மூலம் என்னென்ன சாதனைகளை எல்லாம் நம் சற்குரு நமக்காக, மக்கள் சமுதாயம் நலமுடன் வாழ நிறைவேற்றி இருப்பார்.

விருத்தி விருத்த சீர மகாமேரு

வரும் 14.12.2023 வியாழக்கிழமை கொண்டராங்கி திருமலை அடிவாரத்தில் விருத்தி விருத்த சீர மகாமேரு நிர்மாணிக்கப்பட உள்ளது. அன்று காலை சுமார் ஒன்பது மணி அளவில் தோன்ற இருக்கும் இந்த சுமைதாங்கியின் சிறப்பு என்ன? சனிக் கிழமையும் பரணி நட்சத்திரமும் பரணி தீபமும் இணையும் முகூர்த்த வேளையில் தோன்றும் மழை அமிர்த மழை என்பது நாம் அறிந்ததே. இந்த புனித மழையில் நனையும் பேறு எத்தனை பேருக்கு கிட்டும் என்பதால் நம் சற்குரு பெரும் கருணை கொண்டு இந்த முகூர்த்தத்தில் தோன்றிய மழைத் துளிகளை சேகரித்து கொண்டராங்கியில் அமைய இருக்கும் விருத்தி விருத்த சீர மகாமேருவிற்கு அபிஷேகிக்க திருவுள்ளம் கொண்டுள்ளார்.

ஜகத்தை ஆளும் ஜகத்குரு!

சந்திர மூன்றாம் பிறை தரிசனம், விருத்தி கரணம், குரு வாரம், குரு ஆட்சி கொள்ளும் மூல நட்சத்திரம் என்ற இந்த இணைப்பில் தோன்றும் மகா மேருவின் பெருமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா? இத்தகைய அற்புத முகூர்த்தத்தில் விருத்தி விருத்த சீர மகாமேருவிற்கு சனி பரணி தீர்த்தத்தால் அபிஷேகம் இயற்றும்போது அந்த அமுத துளிகளை ஒரு தென்னம்பாளையில் பிடித்து அதை பக்தர்களுக்கு விருத்த சீர மகாமேரு கும்பாபிஷேக பிரசாதமாக அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்கள் வலது ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனிகளால் மட்டும் விருத்த சீர மண்ணை எடுத்து ஒரு வில்வ ஓட்டின் மேல் வைத்து இந்த இரண்டையும் ஒரு வெள்ளி டப்பாவிற்குள் வைத்து இந்த வெள்ளி டப்பாவை விருத்தி விருத்த சீர பிரசாதமாக வீட்டிற்கு எடுத்துச் சென்று அவரவர் இல்ல பூஜை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
செம்மேனி சூடு என்ற ஒரு வித அதீதமான சூடு வரும் ஆண்டில் நம்மைத் தாக்கி பல உறுப்புகளையும் செயலிழக்கச் செய்யும் அபாயம் உள்ளதாக நம் சற்குரு எச்சரிக்கை விடுக்கிறார். திருநீற்றுப் பதிகத்தை தினமும் ஒரு முறையாவது ஒதி வருவது நலம். கனவில் விந்து வெளியாதல், தூக்கமின்மை, மலச்சிக்கல், இனந்தெரியாத காய்ச்சல் போன்ற பல உடற் கோளாறுகளும் இந்த செம்மேனி சூட்டால் விளையும் ஒரு சில வேதனைகளே. இவற்றிற்கு எல்லாம் நிவாரணம் அளிப்பதே மேற்கூறிய வழிபாடுகள்.
2024ம் ஆண்டு இறுதியில் வில்வ ஓட்டையும், விருத்தசீர மண்ணையும் ஓடும் ஆற்றில் விட்டு விட்டு அந்த வெள்ளி டப்பாவில் குங்குமம் நிறைத்து மற்ற மங்கலப் பொருட்களுடன் சுமங்கலிகளுக்கு தானம் அளித்து விடவும்.

தென்னங்குருத்துடன் விருத்தி விருத்த சீர மகாமேருவை வழிபடுவது சிறப்பு என்பதால் அடியார்கள் தென்னங்குருத்தை இத்திருத்தலத்திற்கு எடுத்து வந்து அதை விருத்தி விருத்த சீர மகாமேருவிற்கு சமர்ப்பிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம். குருத்து என்பது இள வயதை, இளமையைக் குறிப்பதாகும், விருத்த என்பது முதுமையைக் குறிப்பதாகும், மரத்திலிருந்து தானே விழுந்த தென்னம்பாளை இதைக் குறிப்பதே. மேலும் விருத்த என்றால் வயதான, முதுமையான என்று பொருள், சீர என்றால் க்ஷீர அதாவது இளமையான, பால் மணம் மாறாத என்று பொருள். அற்புத சீடன், அருமை குருநாதர் என்ற இரு ஆன்மீகச் சிகரங்களின் தெய்வீக இணைப்பே விருத்தி விருத்த சீர மகாமேரு என்பதற்கு இன்னும் விளக்கம் வேண்டுமா என்ன?

சாதாரணமாகவே கழுதைகளுக்கு திருமணம் நடக்கும்போது தோன்றும் அமுத மழையை ஒரு தென்னம்பாளையில் பிடித்து அதை பிரசாதமாக அளித்தால் அகால மரணம், மிருத்யு தோஷங்கள் அகலும், சிறந்த சந்தான பாக்கியம் கிட்டும் என்பதை நாம் இராவணன் வழிபாட்டின் மூலமாக அறிகின்றோம். இத்தகைய வழிபாடு சனி பரணி சித்தரால் தோற்றுவிக்கப்படும் விருத்தி வர்ஷம் என்ற அமுத மழையுடன் சேரும்போது அதன் பலன்களை கனவிலும் நாம் கருத இயலாது.

தங்கமும் வெள்ளியும் சேரும்போது அதனால் விளையும் மங்கள சக்திகளை மனித மனத்தால் புரிந்து கொள்ள இயலாது என்பதால் நம் சற்குரு வெள்ளி மாங்கல்யத்திற்கு தங்கப் பூச்சு கொடுத்து அத்தகைய மாங்கல்யங்கள சுமங்கலிகளுக்கு தானமாக அளிக்கும்படி சிபாரிசு செய்கிறார். இங்கு நாம் காணும் காஞ்சி கனிந்த கனியின் தரிசனமே இத்தகைய அனுகிரகங்களை அளிக்கவல்லது என்றால் அம்மகானின் பெருமை எப்படிப்பட்டதாகும்?

விருத்தி விருத்த சீர மகாமேரு வழிபாட்டு முறையாக சித்தர்கள் அருள்வது...
1. ஹெல்மெட் என்ற தலைக் கவசத்தை இந்த மகாமேருவின் மேல் வைத்து அணிந்து கொள்வதும், மற்றவர்களுக்கு தானம் அளிப்பதும் சிறப்பு. இதனால் தலைக்கு வந்த ஆபத்து தலைப்பாகையோடு போகும். வண்டி ஓட்டுபவர்கள்தான் இத்தகைய தானம் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆபத்தான சூழ்நிலைகளில் பணிபுரியும் ஆண்களும் பெண்களும் இத்தகைய தான தர்மங்களை நிறைவேற்றி பயன்பெறலாம்.
2. புதிதாக வீடு வாங்குபவர்கள், ஏற்கனவே வீடு வாங்கியவர்கள் தங்கள் வீட்டுப் பத்திரங்களை இந்த மகாமேருவின் மேல் வைத்து பயன்பெறலாம்.
3. மருந்து, மாத்திரை, டானிக்குகள் போன்றவற்றையும் இந்த மகாமேருவின் மேல் வைத்து அதை தன்வந்த்ரீ பிரசாதமாகப் பெற்று பயன் பெறலாம்.
4. புதிதாக வாங்கும் வாகனத்தின் சாவி, டிரைவிங் லைசன்ஸ் போன்றவற்றையும் இந்த மகாமேருவின் மேல் வைத்து பயன்பெறலாம்.
5. புதிய வீணை, வயலின், மிருதங்கம் போன்றவற்றை இந்த மகாமேருவின் மேல் வைத்து வாசிப்பதால் விரையில் நுண்கலைகளில் திறமை பெற இந்த வழிபாடு உதவும்.
6. படிக்கும் குழந்தைகள் தங்கள் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றையும் இதன் மேல் வைத்து படிப்பில் நம்பிக்கையை, திறமையை வளர்த்துக் கொள்ளலாம்.
7. தம்பதிகள் ஒருவர் கையை மற்றவர் பிடித்துக் கொண்டு குறைந்தது 21 முறை இந்த மகாமேருவை வலம் வருவதால் அவர்கள் விதி எப்படி இருந்தாலும் இறுதி வரை ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாத ஒற்றுமையுடன் வாழ சற்குருமார்களின் அனுகிரகம் அவர்களுக்குத் துணை நிற்கும்.
8. குசா யந்திரம் பதித்த நைவேத்ய பிரசாத தட்டுகள், எவர்சில்வர், வெள்ளி உலோகங்களில் அமைந்த உணவருந்தும் தட்டுகள் இவற்றையும் மகாமேருவின் மேல் வைத்து பிரசாதமாகப் பெற்றுக் கொள்ளலாம். இரசாயன உணவுகளால் ஏற்படும் விளைவுகளை ஓரளவு தடுக்க உதவுவதே இத்தகைய தட்டுக்கள். ஹோட்டல் போன்ற உணவு விடுதிகளில் உணவேற்கும்போது நேராக இந்த தட்டுகளிலேயே உணவு பெற்று உண்பதால் ஒரளவு செயற்கை இரசாயன பவுடர், வண்ணங்கள் போன்ற தீய விளைவுகளிலிருந்து நிவாரணம் பெறலாம். இத்தகைய தட்டுகளில் பழங்கள் நிரப்பி தானம் அளித்தலும் சிறப்பே.

மாத்ருதேசம்

நம் தலை உச்சியில் உள்ள புனித உச்சிப் பகுதி வெற்றிடம் என்றே பலராலும் கருதப்படுகிறது. எப்படி விலை மதிப்பு இல்லாத பூஜ்யத்தை சூன்யம் என்று அழைக்கிறோமோ அது போல் விலை மதிப்பில்லாத புனிதத்திலும் புனிதமான பகுதியே இந்த வெற்றிடம் ஆகும். புனிதமான இந்த வெற்றிடப் பகுதியே நம் சற்குருவால் மாத்ருதேசம் என்ற இனிய பெயரால் அழைக்கப்படுகிறது. சகஸ்ராரம் என்று ஆயிரமாயிரம் தாமரைகளால் அறிவு செழிக்கும் பகுதியே இந்த மாத்ருதேசம் ஆகும். ஆகாசிக் ரெகார்டு பொலியும் பகுதியும் இதுவே ஆகும்.

மனிதனுடைய ஜாதகம் என்பது இந்த ஒரு பிறவியை மட்டும் குறிப்பது. ஆகாசிக் ரெகார்டு என்பது மனிதப் பிறவிக்கு முன்னால் அந்த உயிர் எடுத்த அனைத்து லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான பிறவிகளில் விளைந்த, கூடிய கர்ம வினைகளின் தொகுப்பே ஆகும். இந்த ஆகாசிக் ரெகார்டை படிக்கக் கூடியவர்கள், இதில் மாற்றங்களை ஏற்படுத்த வல்லவர்வள் சித்தர்கள் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே. இறை நாமம் ஜெபித்தல், இறை நாமங்களை பாடுதல் போன்ற இறை காரியங்கள் மட்டுமே சற்குருவின் அருளால் இதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

நம் சபையில் ஒரு அடியார் இருந்தார். ஒரு நாள் அவரைப் பார்த்து நம் சற்குரு, “இவன் கொஞ்சம் லேட்டாக வந்து விட்டான்... முன்னமே வந்திருந்தால் இன்னும் எவ்வளவோ மாற்றங்களை இவன் ஆகாசிக் ரெகார்டில் ஏற்படுத்தி இருக்க முடியும். இந்த பிறவியில் கூட இவனுக்கு ஆண் குழந்தையே இல்லை என்பதை மாற்றி ஆண் குழந்தை பெற வழி செய்துள்ளோம்...”, என்று கூறினார்.

இவ்வாறு கொண்டராங்கி மலைப் பகுதியின் உச்சியே மாத்ருதேசம் என்பதாகும். இந்த உச்சியில் இருந்து பெறப்பட்ட குசல தீபம், அசல தீபம், ரமண தீபம் காட்சிகளே மனிதர்களின் ஆகாசிக் ரெகார்டில் மாற்றங்களை குரு அருளால் ஏற்படுத்த வல்லவை என்பதே இவற்றின் மகிமைகளாகும். இந்த தீபங்களை தரிசிக்கும் பாக்கியத்தை அனைவரும் பெறாவிட்டாலும் இங்குள்ள வீடியோவில் அந்த தீபங்களை தரிசித்து சோபகிருது வருட முடிவிற்குள் எத்தனை தடவை முடியுமோ அத்தனை முறை கொண்டராங்கி திருமலை அர்ச்சுன வியூகத்தில் ஏறி இங்குள்ள தீப மேடையில் அகல் தீபம் ஏற்றி வழிபடுவதால் எத்தனையோ அனுகிரகங்களை பெறுவர் என்பது உறுதி.

மாத்ரு தேசப் பகுதியின் மற்றோர் அம்சமாவது காலத்தையும் நேரத்தையும் இணைக்கும் பாங்கு ஆகும். ஒரு முறை சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர், “கர்ம வினைகளால் பாதிக்கப்படாமல் இருந்த மனித ஆன்மா எப்போது முதலில் கர்மத்தின் பாதிப்புகளுக்கு ஆட்பட்டது?” என்று கேட்டார். அதற்கு சுவாமிகள், “ஏன் எதற்கு எப்போது... என்ற கேள்விகள் அனைத்துமே கால தேசத்திற்கு உட்பட்டவையே. காலம் தேசம் என்ற இரண்டையும் தாண்டிச் சென்றால்தான் இந்த கேள்விக்கு விடையளிக்க இயலும்...”, என்று கூறினார்.

இவ்வாறு காலம் தேசம் என்ற இரண்டு கோட்பாடுகளையும் கடந்து சென்று தியானத்தில் இலயிக்க உதவுவதே மாத்ருதேசம் என்ற உணர்வுப் பகுதியும் ஆகும். உதாரணமாக, 9994805951 என்ற ஒரு பத்து இலக்க செல்போனை அடிக்கடி பயன்படுத்துவதால் எண் சக்திகள் விரயமாகி அதனால் மனித வாழ்க்கையில் சொல்லொணா வேதனைகள் ஏற்படுகின்றன என்பதே சித்தர்களின் அறிவுரை, அறவுரை.

ஆனால், செல்போன்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை மனித குலம் இப்போது கனவிலும் கருத முடியாது என்ற நிலை உருவாகி விட்டதால் இதற்கு ஒரளவு நிவாரணம் அளிப்பதாக அமைவதே எண்ணையும் எழுத்தையும் இணைக்கும் மாத்ருதேச வழிபாட்டு முறை ஆகும். இம்முறையில் மேலே உள்ள செல்போனிலிருந்து நீங்கள் அழைக்கப்பட்டால் அல்லது அந்த எண்ணுக்கு உரியவரை நீங்கள் அழைத்தால், அந்த எண்ணுக்கு உரிய நியூமராலஜி எண்ணையும் அதற்குரிய தேவதையையும் நீங்கள் வழிபட்டால் செல்போனால் விளையும் துன்பங்களிலிருந்து ஓரளவு நிவாரணம் பெறலாம்.

விருத்தி விருத்தசீர மகாமேரு
கொண்டராங்கி திருமலை

மேற்கூறிய உதாரண செல்போனுக்கு உரித்தான நவகிரக தேவதை புதன் (9994805951=5), அதிதேவதை பெருமாள். இந்த இரண்டு மூர்த்திகளுக்கு உரிய காயத்ரீ மந்திரங்களான
1. ஓம் தத் புருஷாய வித்மஹே மகா தேவாய தீமஹி
தந்நோ புத பகவான் பிரசோதயாத்
2. ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி
தந்நோ புண்டரீகாக்ஷாய பிரசோதயாத்
என்று ஒரு முறையேனும் ஓதுதல் நலம். அல்லது அவரவர்கள் அறிந்த புத, பெருமாள் காயத்ரீ மந்திரங்களை ஒதுவதும் ஏற்புடையதே.

அவசரமான உலகில் இதெல்லாம் சாத்தியமா என்ன என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. செல்போனில் அழைப்பு வரும்போது இவ்வாறு உடனடியாக, துரிதமாகச் செயல்படுவது என்பது பலருக்கும் சாத்தியம் இல்லை என்றாலும், செல்போனில் பேசியவுடன் சாவதானமாக அமர்ந்து இந்த காயத்ரீ மந்திரங்களை கூறுவது என்பது அனைவருக்கும் சாத்தியம்தானே.

இதையும் நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் ஒரு நாளின் காரியங்கள் நிறைவேறியவுடன் படுக்கைக்குச் செல்லும் முன் நித்யக் கடமைகளில் ஒன்றாக இதை இணைத்துத்தான் ஆக வேண்டும். இவ்வாறு எண்ணையும் எழுத்தையும் இணைக்கும் மாத்ருதேச வழிபாட்டின் பலன்களை நீங்கள் நிறைவேற்றித்தான் பலன் காண இயலும். வார்த்தைகளை மிஞ்சிய வர்ணஜாலம் இது!

சாதாரணமாக ஒரு வார செல்போன் பேச்சால் குவியும் கர்மங்களைக் களையவே ஒரு வருடம் திருஅண்ணாமலையைக் கிரிவலமாக வர வேண்டும் என்றால் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செல்போனால் மட்டும் சேர்த்துக் கொள்ளும் கர்மங்கள்தான் எத்தனை எத்தனை? இந்த ஒரு வாரக் கர்மாவையும் ஒரே ஒரு கிரிவலத்தில் மாய்க்கக் கூடிய பெருந்தகையே நம் சற்குரு. ஆனால், மேற்கூறிய வழிபாட்டை தங்கள் செல்போன் பேச்சுடன் இணைத்துக் கொள்வோரின் கர்மங்கள் மட்டுமே நம் சற்குருவால் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே சற்குருவைச் சரணடைந்தோர் சாதிப்பதை வேறு எந்த மனிராலும் சாதிக்கவே முடியாது. தேடுங்கள், நாடுங்கள், உத்தம சற்குருவை ! சரண் அடையுங்கள் அவர்தம் திருப்பாதங்களில்!

நீங்கள் பயன்படுத்தும் செல்போன் எண்களுக்குரித்தான தேவதைகளையும் அதிதேவதைகளையும் வழிபடுவதால் கிட்டும் மற்றோர் பலனும் சுவையானதே. எண்களுக்கு உரித்தான தேவதைகளும் அதிதேவதைகளும் திருத்தலங்களில் நூறு கால் மண்டபங்களாக, ஆயிரங்கால் மண்டபங்களாக, அர்த்த மண்டபங்களாக எழுந்தருளி உள்ளன. நாம் திருத்தலங்களில் மூலவரை வணங்கி பிரார்த்தனையை சமர்ப்பிக்கும்போது இந்த பிரார்த்தனைகள் எதுவுமே மூலவரைச் சென்று அடைவதில்லை.

பொதுவாக, இவை எல்லாம் மனித உடல் ஆரோக்யம், குழந்தைகளின் படிப்பு, அவர்கள் வேலை வாய்ப்பு, திருமணம் போன்ற லௌகீக பிரார்த்தனைகளாகவே இருப்பதால் அவை எவையும் துவார பாலகர்களையோ, அர்த்த மண்டபத்தில் உள்ள தேவதைகளையோ தாண்டிச் செல்வதே இல்லை. அர்த்த மண்டபம் என்றால் பொருள் சம்பந்தமான பிரார்த்தனைகளை செவிமடுக்கும் தேவதைகள் உறையும் மண்டபம் என்ற பொருளும் உண்டு. அதனால் நம் தகுதியைப் பொருத்து, அதாவது இதற்கு உரித்தான புண்ணிய சக்தியைப் பொருத்து, இந்த பிரார்த்தனைகள் எல்லாம் இந்த தேவதைகளாலேயே நிறைவேற்றப்படுகின்றன.

நாம் செல்போனுக்கு உரித்தான எண் தேவதைகளையும், அதி தேவதைகளையும் வணங்குவதை பழக்கப்படுத்திக் கொண்டால் சிறிது சிறிதாக அவர்களுடன் நேரடியாக பேசும் சக்தியையும், வல்லமையையும் பெறுவோம். இந்த வழிபாடு கனிய கனிய, லௌகீக பிரார்த்தனைகள் குறைய குறைய, நாம் அர்த்த மண்டபம் தாண்டி மூலத்தானத்தில் உறையும் மூலவருடனே தொடர்பு கொள்ளும் அந்த ஆனந்த நிலையையும் அடைவோம்.

இது ஏதோ கற்பனை என்று எண்ண வேண்டாம். நம் சற்குரு திருஅண்ணாமலையாருடன் நேரே பேசும் அந்த இனிய காட்சியை நேரில் தரிசிக்கும் பாக்யத்தைப் பெற்ற அடியார்கள் இன்றும் நம்மிடையே உண்டு. நம் சற்குரு திருஅண்ணாமலை பரம்பொருளுடன் உரையாடும் அந்த இனிய காட்சியில் எண்ணும் இல்லை, எழுத்தும் இல்லை, வார்த்தைகளும் இல்லை, அனைத்தும் கடந்த துரியாதீத ஆனந்தம் ஒன்று மட்டுமே அங்கு நிரவி, விரவி, பொங்கி நிற்கும் !!

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam