கருணை கரம் அளிப்பவள் கருணாகர வள்ளி !
கடும் விஷம் முறிப்பவள் கருநாகர வள்ளி !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

காருகுடி கருணாகரவள்ளி

பாம்பு .. என்றால் படையும் நடுங்கும். பெரும் படையுடன் வந்த மாமன்னன் அலெக்சாண்டரும் நடுங்கினான். எப்போது ?
தனது இருபதாவது வயதில் மன்னனாக முடி சூட்டிக் கொண்ட மாவீரன் அலெக்சாண்டர் பத்தே ஆண்டுகளில் உலகம் முழுவதையும் தன்னுடைய ஆளுகை கீழ் கொண்டு வந்த வெற்றி பெருமிதத்தில் இந்தியாவை அடைந்தான். பாரத திருமண்ணில் ஹங் உங் சிங் என்ற உத்தம சித்தர்களை சந்தித்தான். கட்டை விரல் அளவு உயரமே உடைய அவர்களைக் கண்டு அவர்களின் தெய்வீக சக்தியால் ஆகர்ஷிக்கப்பட்ட மாமன்னன் அவர்கள் திருப்பாதங்களில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினான்.
ஹங் உங் சிங் சித்தர்கள் அவனை ஆசீர்வதித்து, “மன்னா, உலகையே வெற்றி கொண்டு விட்டாய். உன்னுடைய வீரம் அபாரமானதுதான். ஆனால், இன்னும் இரண்டே வாரங்களில் உன் உயிரை மாய்க்கப்போகும் காய்ச்சல் நோயை உன்னால் வெற்றி கொள்ள முடியுமா ?“
சித்தர்களின் வார்த்தைகளில் இருந்த உண்மை அலெக்சாண்டரை அதிர்ச்சி அடையச் செய்தது. வியப்பால் விரிந்த கண்களால் அந்த இறைத் தூதுவர்களை உற்று நோக்கினான்.
சித்தர்கள் தொடர்ந்தனர், “ஆம், மன்னா இன்னும் பதினைந்து நாட்களில் உன்னாட்சியின் கீழ் இதுவரை இருந்த இந்த பூமியை விட்டுப் பிரியப் போகிறாய் ”.

ராஜ கிரீட கோபுரம்
காருகுடி

சித்தர்களின் சாம்ராஜ்யத்தில் அமைதி வேந்தன் சற்று நேரம் செங்கோல் ஓச்சினான்.
இப்போது அலெக்சாண்டர் பேச ஆரம்பித்தான், ”உங்கள் திருவாயிலிருந்து வரும் வார்த்தைகள் இறைவனின் ஆணை. விதியின் எதிரொலி. அதை யாராலும் மாற்ற முடியாது என்பதை உணர்கிறேன். மரணத்தைக் கண்டு நான் அஞ்சவில்லை. அது தாங்களும் அறிந்ததே. ஆனால், வாழ்நாள் முழுவதும் சுயநலமாகவே வாழ்ந்து விட்ட நான், உங்கள் தரிசனத்தால் பூரணம் பெற்றுள்ளேன். இறப்பதற்கு முன் ஏதாவது ஒரு சேவையை செய்வதற்கு தாங்கள் எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்க முடியுமா ?”
மன்னனின் வேண்டுகோளை ஏற்ற சித்தர்கள், “நீ உன்னுடைய தாய் நாட்டில்தான் உயிரை விட வேண்டும் என்பது விதி. நீ அங்கே போய் சேர்வதற்குள் இரண்டு வாரம் கழிந்து விடும். ஒன்று செய். நீ இறந்த பின் உன்னுடைய உடலை எடுத்துச் செல்லும் இறுதி ஊர்வலத்தில் உன்னுடைய இரண்டு திறந்த கைகளையும் சவப்பெட்டிக்கு வெளியில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்று நாட்டு மக்கள் அனைவரும் இதை காணுவதற்கு ஏற்பாடு செய். உலகத்தையே வென்ற ஒரு மாமன்னன் வெறுங் கைகளுடன்தான் மயானம் செல்கின்றான் என்பது மக்களுக்கு நீ அளிக்கும் ஒரு நிரந்தரமான பாடமாக இருக்கட்டும். உன் பெயர் உள்ள வரை நீ அளித்த வாழ்க்கையின் நிலையாமை பற்றிய பாடமும் இந்த உலகில் நிலைத்திருக்கும்,” என்று அருளினார்கள் ஹங் உங் சிங் சித்தர்கள்.
அலெக்சாண்டரின் திடீர் மரணத்திற்கு காரணம் என்ன ? அலெக்சாண்டர் தொடர்ந்து போரிட்டதால் எவ்வளவோ போர் வீரர்கள் யுத்தத்தில் இறந்ததால் லட்சணக் கணக்கான பெண்கள் தங்கள் மஞ்சள் குங்குமத்தை இழந்தனர். போர் என்பது மன்னனின் தர்ம நியதிற்கு உட்பட்டு இருந்தாலும் போரில் இழந்த உயிர்களின் நற்கதிக்காக மன்னர்கள் அவ்வப்போது தொடர்ந்து இறந்த வீரர்களின் ஆத்ம சாந்திக்காக பல வேள்விகளையும் தான தர்ம வழிபாடுகளையும் இயற்றி வரவேண்டும். தொடர்ந்த போரினால் அலெக்சாண்டர் இது பற்றி சிந்திக்கவில்லை.
ஆனால், இறந்த ஆவிகள் தங்கள் நிலையை எஞ்சி இருந்த போர் வீரர்கள் மூலமாக மன்னனுக்கு அறிவித்தாலும் அதை எடுத்துக் கொள்ளும் நிலையில் மன்னன் இல்லை. இதுவே பல கலகங்களாகவும் மன்னனின் படையில் ஏற்பட்டது.
இறந்த வீரர்களின் சாபங்களும், எஞ்சி இருந்த போர் வீரர்களின் நிராசையான எண்ணங்களும், அவர்களைக் காணாததால் அவர்கள் குடும்பங்களில் உள்ள தாய், தந்தையர், மனைவி, குழந்தைகளின் ஏக்க எண்ணங்களும் கடுமையான காய்ச்சல் நோயாக மாறி அலெக்சாண்டரின் உயிரைப் பறித்தது என்பதே சித்தர்கள் அளிக்கும் எளிமையான விளக்கம்.
மேலும் அலெக்சாண்டருக்குப்பின் கிரேக்க சாம்ராஜ்யமே அழிந்து மண்ணோடு மண்ணாகிய கதை அனைவரும் அறிந்ததே.
இதுவே எண்ணங்களின் வலிமை பற்றி சித்தர்கள் அளிக்கும் உதாரணம். தன்னால் ஒன்றுமே செய்ய முடியாமல் மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவனும் சித்தர்களைச் சரணடைந்தால் அவர்கள் அவனுக்கு நற்கதி அளித்து இறுதி வரை பேரும் புகழுடன் இருக்க கருணை புரிவார்கள் என்ற சித்தர்களின் கருணை உள்ளத்தையும் அலெக்சாண்டரின் வரலாறு மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இதுபோல் குருமங்கள கந்தர்வா தம் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியையும் விளக்கி உள்ளார்கள். சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஒரு முறை ஒருவரிடம் அன்னதான நன்கொடை வாங்குவதற்காக சென்றிருந்தார்கள். அவரைப் பார்த்தவுடன் இன்னும் பத்தே நிமிடங்களில் அவர் உயிரை பிரியப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டார் குருமங்கள கந்தர்வா.
பத்து நிமிடத்தில் அந்த அடியார் என்ன நற்காரியத்தை செய்து விடுவார் என்று மனம் தளரவில்லை ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். அவரிடம் அவருடைய உடல் நிலை, குழந்தைகளைப் பற்றி ஓரிரு நிமிடங்கள் விசாரித்தார்.
பின்னர், ”அடியேன் ஒரு பாடலைப் பாட வேண்டும் போல் தோன்றுகிறது. பாடட்டுமா ?“ என்று கேட்டு அவர் ஆமோதித்தவுடன், ”மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன் ....”, என்ற சுந்தரர் தேவாரத்தை அமைதியாக பாடினார். அந்த பாடலைக் கொண்டிருந்த அடியார் அமைதியாக சிவ பதவி அடைந்தார்.
இதுவே மகான்களின் திருப்பணி, சிவப்பணி.

ஸ்ரீநஞ்சுண்ட கணபதி
காருகுடி

இவ்வாறு எண்ணங்களுக்கு இவ்வளவு கடுமையான விஷத்தன்மை இருப்பதால் அந்த விஷத்திலிருந்து மனிதர்களைக் காப்பதற்காக இறைவனே பற்பல தெய்வீக அவதாரங்களை மேற்கொண்டு தான் படைத்த உயிர்களைக் காத்து வருகிறான். இவ்வாறு பூலோக மக்களை விஷ சக்திகளிடமிருந்து காக்க இறைவன் மேற்கொண்ட அவதாரமே ஸ்ரீகருணாகர வள்ளி அவதாரமாகும்.
திருச்சி முசிறி தாத்தையங்கார் பேட்டை அருகில் உள்ள காருகுடி திருத்தலத்தில் ஸ்ரீகைலாச நாதர் சமேதராய் எழுந்தருளிய தேவியே ஸ்ரீகருணாகர வள்ளி ஆவாள். இறைவனின் மற்றோர் நாமம் ஸ்ரீஅசல தீபேஸ்வரர் என்பதாகும்.
இப்பிரபஞ்சத்தில் உள்ள விஷ சக்திகள் அனைத்தையும் நாசம் செய்து துன்பச் சுழலில் உழலும் மக்களுக்கு விடிவெள்ளியாய் கிழக்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தோன்றிய விடிவெள்ளியே கருணாகர வள்ளி ஆவாள்.
சித்தர்கள் அளிக்கும் கருணாகர வள்ளி தேவியின் திவ்ய சரிதமோ மிகவும் சுவையானது, சுவைக்க சுவைக்க திகட்டாதது.
சாவா வரமளிக்கும் அமுதத்தைப் பெற தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள் அல்லவா ?
மனிதர்களுடைய கால வரையறையில் ஓரிரு நாட்களே அந்த புராண வைபவம் நிறைவடைந்ததாக நாம் எடுத்துக் கொண்டாலும் உண்மையில் அது காலம் கடந்த தெய்வீக வைபவமாகும்.
காரணம் அந்த பாற்கடல் வைபவத்தில் தேவர்கள், அசுரர்கள், ரிஷிகள், மகான்கள், யோகிகள், தெய்வங்கள், தெய்வ அவதார மூர்த்திகள் என பலதரப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால் அவரவர் நிலையைப் பொறுத்து பல யுகங்களுக்குக் கூட தொடர்புடையதாக அந்த நிகழ்ச்சி அமைகிறது.
The incident is related to so many time frames.
உண்மையில் அதை ஒரு புராண நிகழ்ச்சி என்று சொல்வதை விட அற்புத சிவ லீலை என்ற கண்ணோட்டத்தில் அணுகினால்தான் அனைத்து உண்மைகளையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதே சித்தர்களின் அறவுரை.
பாற்கடலைக் கடைய மேருமலையே மத்தாக அமைந்தது. அதன் உயரமோ ஒரு லட்சம் மைல்கள். அதற்கு கயிறாக அமைந்தது வாசுகி என்ற நாகம். அதன் நீளம் சுமார் 33 கோடி மைல்கள். முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசுகி பாம்பின் தலை பகுதியிலும் அசுரர்கள் அதன் வால் பகுதியிலும் நின்று கொண்டு பாற்கடலை கடைய ஆரம்பித்தனர்.
ஏற்கனவே எண்ணங்களின் நச்சுத் தன்மையைப் பற்றி விளக்கி உள்ளோம். இங்கு தேவர்கள், அசுரர்களின் எண்ணங்கள் கொடிய நஞ்சாகி மாறி பாற்கடலில் கலந்தன.
1. அமுதைப் பெற்று தாங்களே உண்ண வேண்டும் என்ற சுயநலமான எண்ணம்
2. அதை மற்றவர்களுக்குத் தரக் கூடாது என்ற பொறாமை எண்ணம்
3. எந்தக் காரியத்திற்கு முன்னும் இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை மறந்த நிலை. இதுவும் ஒருவித நச்சு எண்ணமே
4. தங்கள் உடல் பலத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற ஆணவ எண்ணம்.
5. தங்கள் சுயநல எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக வாசுகி, மேருமலை, பாற்கடல், கூர்ம மூர்த்தி இவர்களுக்குத் தரும் வேதனை குறித்து சற்றும் கவலைப்படாத அலட்சிய எண்ணங்கள்

மேற்கூறிய முக்கியமான ஐந்து எதிர்மறை எண்ணங்கள் பாற்கடலில் கலந்ததால் அந்த எண்ணங்களை கிரகித்த வாசுகி விஷ ஜ்வாலைகளை தன் வாயிலிருந்து வெளியிட ஆரம்பித்தது. வாசுகி பாம்பின் வாய்ப் பகுதியில் நின்று கொண்டிருந்த தேவர்கள் அந்த தீக்கதிர்களின் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்து விட்டனர்.

ஹங் உங் சிங் சித்தர்களின் அருட்பணி

செய்வதறியாது திகைத்த தேவர்களின் தலைவனான இந்திரன் நாரதரின் அறிவுரையின்படி பூலோகத்தில் உள்ள ஹங் உங் சிங் சித்தர்களைச் சரணடைந்தான். ஹங் உங் சிங் சித்தர்கள் நவநாத லோகத்தை வாசஸ்தலமாக உடையவர்கள். நவநாத சித்த குலத்தைச் சேர்ந்தவர்கள். யாராலும் அவர்களை நெருங்க முடியாது.
இவ்வாறு பாற்கடல் வைபவத்தில் தேவர்கள் மயக்கம் அடைந்து அல்லல்படுவார்கள். அப்போது அவர்களுக்கு தங்கள் வழிகாட்டுதல் தேவைப்படும் என்பதை தங்கள் ஞான திருஷ்டியால் உணர்ந்த சித்தர்கள் பூலோகத்தில் இந்திரனுக்கு அடைக்கலம் அளித்தார்கள். இதுவே சித்தர்களின் கருணை. பிரபஞ்சத்தின் விஷ சக்திகளைப் பற்றிய பூரண ஞானம் உடையவர்கள் ஹங் உங் சிங் சித்தர்கள் மட்டுமே.
ஹங் உங் சிங் சித்தர்களின் அறிவுரையின்படி தேவர்கள் வாசுகியின் வால் பகுதிக்குச் சென்று, அதன் தலைப் பகுதிக்கு அசுரர்களை அனுப்பி விட்டனர். தலைப் பகுதியில் வேலை என்பது தங்கள் திறமைக்கு கிடைத்த பரிசாக எண்ணிய அசுரர்கள் இந்த மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்தனர். பாற்கடல் வைபவம் தொடர்ந்தது.
 தேவர்கள் வாசுகியின் தலைப் பகுதியில் நின்று பாற்கடல் கடைந்த அந்த புராதன வைபவத்தை இன்றும் காருகுடி ராஜகோபுர சிற்பங்களாக காணலாம். தேவர்களுக்கு அடைக்கலம் அளித்த ஹங் உங் சிங் சித்தர்களின் உருவமும் இத்திருத்தல பிரகாரத்தில் தரிசனம் செய்யும் வகையில் உள்ளது பூலோக மக்களுக்கு கிடைத்த அபூர்வ வரப்பிரசாதமாகும்.
இங்கே ஒரு அற்புத தெய்வ அனுகிரகத்தை நீங்கள் இரசிக்கலாம். நட்சத்திரங்களை தலைப்பாகையாக உடையவர் ஏரண்ட மகரிஷி. அப்படியானால் அவருடைய உருவத்தை மனிதர்களால், ஏன் தேவர்கள் கூட, தரிசனம் செய்ய முடியாது அல்லவா ? ஆனால், பெருங்கருணை கொண்ட அவர் கும்பகோணம் அருகில் உள்ள கொட்டையூர் திருத்தலத்தில் சாதாரண மனித உருவத்தில் தரிசனம் அளிக்கிறார்.
அதே போல கட்டை விரல் உயரம் உடைய ஹங் உங் சிங் என்னும் மூன்று சித்தர்களும் பூலோக மக்களும் உய்வு அடைய வேண்டி மூவரும் ஒன்றாய்ச் சேர்ந்து ஓருருவில் மனித வடிவில் திருக்காட்சி நல்கும் தலமே காருகுடி சிவாலயமாகும். நவநாத சித்தர்கள் திருத்தாள் போற்றி, போற்றி.
பாற்கடலைக் கடைய ஆரம்பித்தவுடன் அதிலிருந்து ஆலகால விஷம் தோன்றியது. ஆலகால விஷத்தைப் பற்றி ஓரளவாவது உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஸ்ரீராகு கேது மூர்த்திகள்
காருகுடி

ஆல காலம் என்றால் என்ன ? ஆல என்றால் ஆலமரத்தைப் போல விரிந்து பரந்தது என்று பொருள். ஆலமரத்தில் ஆயிரக் கணக்கான பறவைகளும், லட்சக் கணக்கான எறும்புகளும், ஏராளமான விலங்குகளும், கோடிக் கணக்கான கரையான்களும், ஆயிரக் கணக்கில் பாம்புகளும் அடைக்கலம் பெறுகின்றன. மாமன்னன் அலெக்சாண்டர் தன் படை வீரர்கள் ஏழாயிரம் பேருடன் ஒரே ஆலமரத்தடியின் கீழ் முகாமிட்டுத் தங்கியிருந்தான் என்றால் ஆலமரம் என்பது அரசன் முதல் ஆண்டி வரை அனைவருக்கும் அடைக்கல மாதாவாக இருக்கக் கூடியதுதானே.
ஒரு சாதாரண ஆலமரம் இவ்வளவு விரிந்து பரந்து நின்று அடைக்கலம் அளிக்கும் என்றால் எம்பெருமான் தூல வடிவில் அருள் புரியும் திருஅண்ணாமலை கல்லால மரம் எந்த அளவு விரிந்து பரந்திருக்கும். மேலும் அது மேலிருந்து கீழாக வருவது. அதாவது இறைவனை நோக்கி வளரும் ஒரே மரம். நிழலடியில் இருக்கும் தட்சிணா மூர்த்தியை நோக்கி சதாசர்வ காலமும் வளர்ந்து கொண்டே இருப்பதே கல்லால மரமாகும். கற்பனைக் கெட்டா கல்லாலச் சோலை. இதுவே கீதை நாயகன் சொன்ன ஊர்த்துவ மூல விருட்சம்.
அடுத்து காலம். காவிரி மணைலைக் கூட எண்ணி விடலாம். ஆனால், எம்பெருமான் சிருஷ்டியில் தோன்றிய பிரம்ம மூர்த்திகளை எண்ண முடியாது என்பார்கள் பெரியோர்கள். ஒரு பிரம்மாவின் ஆயுள்காலம் சுமார் 360 லட்சம் கோடி ஆண்டுகள்.
இவ்வாறு ஆலாகவும் காலமாகவும் பரிமாணம் பெற்ற ஆலகால விஷத்தின் கொடிய சக்தி எப்படி இருக்கும் என்பதை சற்றே ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்.
இந்த ஆலகால விஷத்தைத்தான் ஆலால சுந்தர நாயனார் எம்பெருமானிடம் அளிக்க அதை பெருமான் தன் திருக்கண்டத்தில் தாங்கினார். அப்போது நிகழ்ந்த தெய்வீக வைபவங்கள் கோடி கோடி. அவற்றில் இந்த பூலோக மக்களுக்குப் புரியக் கூடிய, அவர்களுக்குப் பயன்தரக் கூடியதாக சித்தர்கள் அருளிய ஞான பொக்கிஷங்களை மட்டுமே இங்கே அளிக்கிறோம்.
ஆலகால விஷம் எம்பெருமானின் வாயிலிருந்து தொண்டையின் கண்டப் பகுதிக்கு இறங்கிய மறுகணம் இறைவனின் அருகிலிருந்த உமை அம்மை சக்தியின் அம்சமான தன் இடது உள்ளங்கையை எம்பெருமானின் தொண்டை மேல் பகுதியில் வைத்தாள். அம்பாளின் இடது கையை எம்பெருமான் தன் வலது கையினால் பற்றினார். அதன் பின்னர் தன் வலது உள்ளங்கையை பெருமானின் வலது கை மேல் வைத்தாள் உமை அம்மை.

இந்த சிவ சக்தி, சிவ சக்தி அர்த்த நாரீஸ்வர இரட்டை ஸ்பரிசத்தால் மனித கற்பனைக்கு எட்டாத பல அற்புத சிவ சக்தி லீலைகள் உருவாயின. மனித கண்ணோட்டத்தில் உருவான இந்த சிவ லீலைகளைப் பற்றி பின்னர் காண்போம். இப்போது இந்த சிவ சக்தி லீலையின் பின்னணியில் அமைந்த சில தெய்வீக லீலா இரகசியங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.
விஷத்திற்கு விஷம்தான் முறிவு என்பார்கள் பெரியோர்கள். எனவே கொடுமையான இந்த சக்தி மிகுந்த ஆலகால விஷத்தை முறியடிக்க அம்பிகை ஐந்து தலைகளை உடைய நாகமாக உருவெடுத்து ஆலகால விஷத்தின் சக்தியை தன்னுள் கண்ணிமைக்கும் நேரத்தில் உறிஞ்சி விட்டாள்.
அம்பாளின் இயற்கையான நிறம் பசுமை அல்லவா ? பசுமை நிறமுடைய உண்ணாமுலைத் தாயின் நிறம் வளர்ச்சியைக் குறிக்கும், மன அமைதியை அளிக்கும். ஆலகால விஷ சக்தியை உறிஞ்சியமையால் அம்பாளின் வண்ணம் கரு நீலமாக மாறிவிட்டது. இந்த தெய்வீக லீலை நிகழ்ந்த தலமே காருகுடி திருத்தலமாகும். அம்பிகையே கருணாகர வள்ளி ஆனாள்.
அம்பிகை தன்னுடைய ஐந்து தலையிலும் உள்ள பற்களையும் இறைவனின் திருக்கண்டத்தில் மேல் பதித்து ஆலகால விஷத்தை உறிஞ்சிய பல் சுவடுகளை இன்றும் காருகுடி இறைவன் திருமேனி மேல் காணலாம்.
இறைவன் திருமேனி மேல் மூன்று முறை சுற்றி, அதாவது இறை திருமேனியை இறுகப் பற்றி விஷத்தை ஈர்த்ததால் இறைவனால் வள்ளி என்று அன்புடன் அழைக்கப்பட்டாள். சிவ லிங்க மூர்த்திகளுக்கு நாகாபரணம் சூடும் வழக்கத்திற்குப் பின்னணியில் அமைந்துள்ள புராண வைபவம் இதுவே ஆகும்.
கருமாரியம்மன் என்னும் நாமத்தில், கருநாகத்துடன், கருமை நிறத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகை மூர்த்திகள் எத்தகைய விஷ சக்தியையும் தன்னுள் ஈர்த்து பக்தர்களுக்கு கருணை புரியும் கற்பக விருட்சமாக அருள்பாலிக்கிறார்கள்.
நாகாபரணம் என்பது சிவ சக்தி ஐக்ய சொரூபமே. இறைவன் இறைவியின் அர்த்தநாரீஸ்வர சொரூபம் என்பதால் இறைவனை நாகாபரணத்துடன் தரிசனம் செய்வதும், சிவலிங்க மூர்த்திகளுக்கு நாகாபரணத்தை அளிப்பதும் கணவன் மனைவியரிடையே உள்ள மனவேறுபாடுகளைக் களைந்து குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் அற்புத வழிபாடாக அமைகிறது. மாமனார், மாமியார், நாத்தனார் போன்ற எத்தகைய உறவுகளால் ஏற்படும் விஷ சக்திகளையும் எளிதில் களையக் கூடியதே நாகாபரண வழிபாடாகும்.
நாகாபரணம் அணிந்த சிவலிங்கத்தின் தரிசனம் காஞ்சீபுரம் ஏகாம்பர நாதர் திருத் தலத்தில் உள்ளதைப் போன்ற தழுவக் குழைந்த தரிசனமாக சித்தர்களால் போற்றப்படுகின்றது.
அம்பிகை ஏன் நாக வடிவில் தோன்றினாள் ? முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும். நாகங்களுக்கு அதிலும் சிறப்பாக கருநாகங்களுக்கு விஷ சக்தியை உறிஞ்சும் தன்மை இயற்கையாக உண்டு. மனித குலத்தை காப்பாற்ற இறைவனால் தோற்றுவிக்கப்பட்டவையே நாகங்களாகும். நாகங்கள் இல்லாவிட்டால் மனிதர்களின் எண்ணங்களால் உருவாகும் விஷ ஜ்வாலைகளால் மனித குலம் என்றே அழிந்து போயிருக்கும் என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
அதனால்தான் கொடுமையான எண்ண தோஷங்களை நாக தோஷங்கள் என்கிறார்கள். நாகங்களைக் கொல்லும் தோஷங்களை விட பிறர் மனை நோக்குதல், கூலி கொடுக்காமல் வேலை வாங்குதல், தண்ணீரை விற்றல், பாலில் தண்ணீர் கலத்தல் போன்றவை கடுமையான நாக தோஷங்களாக கருதப்படுகின்றன.
அம்பிகை இறைவனுக்கு இயற்றிய தன்னலமற்ற சேவையை பாராட்டி ஒரு பரிசு அளித்தார் ஈசன். அது என்ன ?
மக்கள் அளிப்பது சிவலிங்கத்திற்கு நாகாபரணம். ஆனால், இறைவன் கருணாகர வள்ளி தேவிக்கு நாக கிரீடம் என்ற சிவராஜ கிரீடத்தை அளித்தார். எல்லா திருத்தலங்களிலும் மூலவருக்குத்தான் ராஜ கோபுரம் அமைக்கப்படும். காருகுடி திருத்தலத்தில் இறைவனுக்கு ராஜகோபுரம் கிடையாது. எம்பெருமான் அளித்த நாக கிரீடம் என்ற சிவராஜ கிரீடமே ஸ்ரீகருணாகர வள்ளிக்கு இறைவன் அளித்த கிரீடமாக இன்றும் ஜொலிக்கிறது.
ராஜ கிரீடம் என்னும் ராஜ கோபுரத்தின் வழியாக சென்றால் முதலில் அடியார்கள் தரிசனம் செய்வது ஸ்ரீகருணாகர வள்ளியைத்தான். இதுவே எம்பெருமான் வள்ளிக்கு அளித்த சிவ போதம்.
இதில் இன்னும் பல சுவையான ரகசியங்களும் உண்டு. வள்ளி என்றால் காதலி என்று பொருள். காதலி கணவனின் வலப் பக்கத்தில் இருப்பவள். சுப்ரமண்ய சுவாமியின் வலப் பக்கத்தில்தானே வள்ளி எழுந்தருளியிருக்கிறாள். எனவே காதலியாய் வலப் பக்கத்திலிருந்து சுவாமியின் கண்டப் பகுதியைப் பற்றி ஆலகால நஞ்சு சக்திகளை இறைவி ஈர்த்ததால் அவளை ராஜ கிரீடமாக சுவாமியின் வலப்பக்கத்தில் காருகுடி தலத்தில் கருணாகர வள்ளியாக ஏற்றார் சுவாமி.

இது தாசியாகவும் தாரமாகவும் அம்பாள் இறைவனுக்கு சேவை செய்யும் தலமாகிறது. அடிமையாகவும் தர்மபத்தினியாகவும் அம்பாள் இத்தலத்தில் எழுந்தருளி உள்ளதால் கணவன் மனைவியரிடையே ஏற்படும எத்தகைய மன வேறுபாடுகளையும் அகற்றும் சிவ சக்தி ஐக்ய தலமாக காருகுடி விளங்குகிறது.

பல்லுக்கும் முள்ளுக்கும் என்ன சம்பந்தம் ?

பற்களைப் பற்றியும் முட்களைப் பற்றியும் புரிந்து கொண்டால்தான் ஆலகால விஷத்தைப் பற்றிய அறிவு முழுமை அடையும் என்பது சித்தர் கொள்கை.
ரோஜா, இலந்தை, கள்ளி, கற்றாழை, நெருஞ்சி போன்ற பல தாவரங்கள் முள்ளுடன் திகழ்கின்றன. இந்த முட்களைப் பற்றி அணுத் துளியேனும் விஞ்ஞானத்தால் புரிந்து கொள்ள முடியாது.
ரோஜா மலரில் உள்ள மணம் இந்திர லோகத்திலிருந்து வருவது. ரோஜா செடியில் உள்ள முள் வைகுண்ட பெருமாளின் ஸ்ரீநிவாச லோகத்திலிருந்து வருவது. எனவே எந்த விஞ்ஞானியாலும் ஒரு ரோஜா மலரையோ, அதன் முள்ளையோ உருவாக்க முடியாது என்பார் ஸ்ரீவெங்கடராமன் அவர்கள்.
இலந்தை மரத்தில் உள்ள முள் பத்ரி நாராயண லோகத்திலிருந்து வருவது. நெருஞ்சி முள் தன்வந்த்ரீ லோகத்திலிருந்து வருவது. கள்ளி முள் தட்சிணா மூர்த்தி லோகத்திலிருந்தும், கற்றாழை முள் அன்னபூரணி லோகத்திலிருந்தும் வருவது. அதனால்தான் கற்றாழை உள்ளிருக்கும் பகுதியை சோறு என்று அழைக்கிறோம்.

ஸ்ரீகபால பைரவர் காருகுடி

தாவரங்களில் உள்ள முட்கள் நிறைவேற்றும் பலவிதமான பணிகளில் ஒன்றே விஷ சக்தியை சுற்றுப்புறத்திலிருந்து கிரகித்து சுற்றுப்புறத்தை தூய்மை செய்வதும், நற்சக்தியை சுற்றுப்புறத்திற்கு அனுப்பி சுற்றுப்புறத்தை பாதுகாப்பதும் ஆகும்.
உண்மையில் முள்ளும் மலரும் வேறு வேறு கிடையாது. ஆயிரம் மலர்களின் ஒருமித்த ஜீவ சக்தியுடன் ஒரு முள் துலங்குகின்றது. மாற்றிச் சொல்வதானால், ஒரு முள்ளை ஆயிரம் பூக்களாக மாற்றலாம்.
திருப்பதி லட்டில் எப்படி குவாண்டம் தியரி முறையில் ஒரு படி பால் கொள்ளும் பாத்திரத்தில் இரண்டு படி பாலை ஊற்றும் அற்புதம் நடக்கிறது என்று விவரித்துள்ளோமோ அதே போல ஒரு முள்ளில் ஆயிரம் மலர்கள் மலர்கின்றன என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம்.
இரணியன், சிசுபாலன் போன்ற கொடியவர்களுக்கும் எம்பெருமான் கருணை அளிக்கிறார் என்றால் அவர்கள் என்றாவது ஒரு நாள் மலராக மாறுவார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான்.
போர்க்களத்தில் இராவணனை நிராயுதபாணியாய்ப் பார்த்த ராமர் அவனிடம், ”இன்று போய் நாளை வா,“ என்றார். காரணம் ராமர் ராவணனை மலராகப் பார்த்தார், அதனால்தான் ராமரை அவதார புருஷன் என்கிறோம். ராவணனை முள்ளாகப் பார்க்கும் நாம் சாதாரண புருஷனாகவே இருக்கிறோம்.
நெருஞ்சி முள்ளில் படுக்கை செய்து அதன் மேல் படுத்தால் இதய நோய்கள் குணமாகும் என்பது உண்மையே. விஷத்தை ஈர்க்கும் தன்மை உடைய முட்களே இரத்தத்தில் உள்ள விஷத்தை முறியடிக்கும் சக்திகளுடன் திகழ்கின்றன என்பது ஒரு அதிசயமே.
இதே போல விஷத்தைக் கக்கும் நாகப் பாம்பின் பற்கள் விஷயத்தை எடுக்கவும், விஷத்தை முறிக்கவும் பயன்படுகின்றன.
அப்பூதி அடிகளின் பிள்ளை நாகம் தீண்டி இறந்தபோது திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் பதிகம் பாடி இறந்த குழந்தையை உயிருடன் மீட்டுத் தந்தாரல்லவா ? இன்றும் “ஒன்று கொலாம் ....” என்னும் தேவாரப் பாடலைப் பாடி பாம்பு விஷத்திலிருந்து நிவாரணம்பெற்றவர்கள் எவ்வளவோ பேர் உண்டு.
சூட்சுமமாக நாகங்கள் தோன்றி தங்கள் பற்களால் விஷத்தை உறிஞ்சி கடிபட்டவரைக் காக்கின்றன என்பது உண்மையே.

ராகு கேதுவின் அபார தியாகம்

இரண்டாம் கட்டமாக பாற்கடலைக் கடையும்போது அசுரர்கள் வாசுகியின் தலைப் பகுதியின் அருகே நின்றாரகள் அல்லவா ? வாசுகியின் வாயருகில் முதலில் நின்றது ராகு, அடுத்து நின்றது கேது.
பாற்கடலைக் கடைய ஆரம்பித்தவுடன் வாசுகியின் வாயிலிருந்து வெளிவந்த உஷ்ண காற்றை ராகு, கேது இருவராலும் தாங்க முடியவில்லை. அங்கிருந்து ஓடி விடலாமா என்று இருவருக்கும் தோன்றியது. இருந்தாலும் எடுத்த காரியத்தை பாதியில் விடக் கூடாது என்று ஒருமித்த மன வைராத்யத்துடன் இருவரும் கலந்து ஆலோசித்து ஒரு முடிவிற்கு வந்தனர்.
அதன்படி ராகு தன்னுடைய உடலை வெட்டினான், கேது தன்னுடைய தலையை வெட்டினான். அசுரர்கள் தங்கள் உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் வெட்டி விட்டு தனியாக இயங்கும் சக்தி பெற்றவர்கள் அல்லவா ?

எனவே இவ்விரு அசுர அவயவங்களும் ஒன்றாகச் சேர்ந்து காருகுடியில் எழுந்தருளியுள்ள கணபதி மூர்த்தியைச் சரணடைந்தன. பஸ்மாசுரனை சம்ஹாரம் செய்து அந்த அக்னி சூடு தாங்க முடியாமல் கணபதி மூர்த்தி மிகவும் வேதனை அடைந்தார். அந்த வேதனையை தணிப்பதற்காக தேவர்கள் எல்லாம் அருகம்புல் கொண்டு கணபதி மூர்த்தியை அர்ச்சித்து, அருகம்புல் காப்பு அளிக்க அவருடைய உடலில் ஏற்பட்ட உஷ்ணம் தணிந்தது.
இந்த புராண வைபவத்தை உணர்ந்த ராகுவும் கேதுவும் விடியற்காலையில் பனித்துளி தரையில் விழும் முன் அருகம்புல்லை பறித்து பிள்ளையாரின் திருஉதரத்தில் காப்பிட்டும், அர்ச்சித்தும் வழிபட்டனர். இதனால் பெரிதும் மகிழ்ந்த பிள்ளையாரப்பன் அவர்கள் வாசுகியில் உஷ்ண ஜ்வாலைகளால் எந்தவித பாதிப்பும் அடையாமல் காப்பாற்றி அருள்புரிந்தார்.

ஸ்ரீகருப்பண்ண சுவாமியின் தவ பீடம்
பெருமாள் மலை

பாற்கடலைக் கடையும்போது ராகு பகவான் காருகுடி என்ற நாமத்தையும் கேது பகவான் காருகுடி கருநா என்ற நாமத்தையும் ஜபித்துக் கொண்டிருக்கும்படி பிள்ளையார் அருளினார்.
கார்மேகமாய் மலை போல் திரண்ட ஆலகால விஷ சக்தியை அம்பாள் கருநாகமாக தன்னுள் ஈர்த்ததால் இத்தலம் காருகுடி ஆயிற்று. எனவே காருகுடி என்ற பதமே எத்தகைய விஷ சக்திகளையும் ஈர்க்கும் சக்தியைப் பெற்றுள்ளது.
பிள்ளையார் அளித்த காருகுடி என்ற பதம் ராகுபகவானுக்கு உரிய சுயநாம ஜபமாக அமைந்தது. எண் கணித சூத்திரப்படி ராகுவிற்கு உரிய எண் நான்கு.
கேது பகவானுக்கு உரிய சுயநாம ஜப நாமம் காருகுடி கருநா என்பது அவருக்கு உரிய ஏழெழுத்து கொண்ட சுயநாம ஜப நாமமாக அமைந்தது. சுய நாம ஜபம் என்பது மனிதர்களுக்கு மட்டும்தான் என்று கிடையாது.
தேவர்கள், விலங்குகள் ஏன் தாவரங்கள் கூட சுய நாம ஜபத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஈடுபட்டு இருக்கின்றன. உதாரணமாக, ஒவ்வொரு நாள் காலை சூரிய உதயத்திற்கு முன், பின்னான ஒரு நாழிகை நேரமும், நண்பகல், மாலை சூரிய அஸ்தமன சமயம் என இந்த மூன்று வேளைகளிலும் வரும் மொத்தம் ஆறு நாழிகைகளில் துளசி சுயநாமத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறது.
அதனால்தான் அந்த நேரங்களில் பூஜைக்காகக் கூட துளசியைப் பறிக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் விதித்தனர். ஆனால், அந்த சமயத்தில் துளசி மாடம் அருகே அமர்ந்து சுய நாம ஜபம் செய்வதால் எளிதில் மனம் ஒருமைப்படுவதை கண் கூடாகக் காணலாம்.
ராகுவும் கேதுவும் ஒன்றாக இணைந்து அருள் புரியும் அதிசயத்தை காருகுடி திருத்தலத்தில் காணலாம். விஞ்ஞானப்படி ராகுவும் கேதுவும் ஒன்றாக இணையவே முடியாது. காரணம், they are imaginary nodal points 180 degrees apart.
காருகுடி திருத்தலத்தில் கன்னி மூலை கணபதி அருகே அருள் புரியும் ராகு கேது மூர்த்திகளை வணங்கி ராகுவிற்கு வெண்ணெய் காப்பும் கேதுவிற்கு நெய் காப்பும் இட்டு வணங்குவதால் எத்தகைய சூட்டு நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும்.
செவ்வாய் கிழமைகளிலும், ராகு கால நேரங்களிலும் இத்தலத்தை அடிப்பிரதட்சணமாக ஏழு முறை வலம் வந்து வணங்குவதால் எத்தகைய கொடிய நாக தோஷங்களும் தீர்வதற்கான தக்க வழிமுறைகள் உரிய காலத்தில் பெரியோர்களால் அருளப்படும்.
ராகுவும் கேதுவும் தங்கள் அவயவங்களை வெட்டி பாற்கடலைக் கடைவதற்காக தியாகம் புரிந்தார்கள் அல்லவா ? அவர்கள் தியாகத்தை மெச்சிய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து அவர்களுக்கு அமுதத்தை அளித்தார். அமுதம் என்பது சாகா வரம் அளிக்கும் சிரஞ்சீவி சக்தி உடையதுதானே. அப்படியானால் பெருமாள் அளித்த அமுத சக்தியால் ராகுவும் கேதுவும் இழந்த உடலும் தலையும் மீண்டும் தழைக்கும் அல்லவா ?
ஆமாம், உண்மையே. ஆனால், ஜீவன்களின் நல்வாழ்விற்காக அந்த புண்ணிய சக்திகளை அர்ப்பணித்து விட்டு, தலையில்லாமலும் உடல் இல்லாமலுமே தங்கள் எஞ்சிய வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டார்கள் ராகுவும் கேதுவும். அதனால் நவகிரக மூர்த்திகள் யாருக்கும் கிட்டாத உயர்ந்த இடத்தைச் சம்பாதித்துக் கொண்டாரகள் ராகுவும் கேதுவும். இதைத்தான் ராகு கொடுப்பது போல் யார் கொடுப்பார்,கேது ஞான காரகன் போன்ற பட்டங்களை ராகுவும் கேதுவும் பெற்றனர்.
ராகு தசையில் ராகுவின் அனுகிரகத்தைப் பெற்ற விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவில் உலக சாதனையைப் படைத்தது நீங்கள் அறிந்ததே. கேது பகவானின் அனுகிரகம் பெற்ற சேஷாத்ரி சுவாமிகள் சாக்த பிரம்மமாய் என்றும் வாழும் அருணை ஜோதியாய் மலர்ந்தது அனைவரும் அறிந்ததே.

ஆபரேஷன், விபத்து போன்ற காரணங்களால் தங்கள் அங்கத்தின் ஒரு பகுதியை இழந்தவர்கள், மூளையின் சக்தியை இழந்தவர்கள் (coma. dementia) போன்றோர் காருகுடி தலத்தில் ராகு கேது மூர்த்திகளை பிரார்த்தனை செய்து வந்தால் அவர்கள் ராகு கேது மூர்த்திகள் தியாகம் செய்த அமுத சக்தியைப் பெற்று வாழ்க்கையில் மறு மலர்ச்சியை அடைவார்கள்.

என்னே அசுரர்களின் அபார தியாகம்.
உத்தம நட்புக்கு இலக்கணமாய் இருப்பவர்களே ராகுவும் கேதுவும். ஒருவரின் தலையும் மற்றொருவரின் உடலும் சேர்ந்தால் அவர்கள் இருவருமே எத்தகைய உயர் நிலையை அடைவார்கள் என்ற நட்பின் இலக்கணத்தை உலகிற்கு உணர்த்தியதும் ராகு கேது மூர்த்திகளே.
நண்பர்கள் துரோகத்தால் தங்கள் வீடு, சொத்தை இழந்தவர்கள் எத்தனையோ பேர் உண்டு. அவர்கள் காருகுடி தல வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். துரோகம் செய்த நண்பர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து பிராயசித்தம் பெற விரும்பினால் அவர்களுக்கு  நற்கதி அளிப்பதும் காருகுடி திருத்தலமே ஆகும்.
நாக தோஷங்களுக்கும், நாக தோஷங்களால் நின்று போன திருமணங்களுக்கும் நிவர்த்தி அளிக்கும் அற்புத தலமே காருகுடி ஆகும்.
இது சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இங்கு அளிக்கிறோம்.
வங்கிகள் அரசுடைமை ஆவதற்கு முன் தனியார் துறையில் இருந்தபோது நம் குருமங்கள கந்தவர்வா அத்தகைய வங்கி ஒன்றில் குமாஸ்தா வேலைக்காக விண்ணப்பம் செய்திருந்தார்.
அந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்தபோது வங்கியின் மேனேஜிங் டைரக்டர் நம் வாத்யார் அவர்களின் விண்ணப்பத்தைப் பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டு அவரைப் பற்றி விசாரணை செய்தபோது அவர் ஒரு ஆன்மீகவாதி என்பதையும் ஜோதிடத்தில் வல்லவர் என்ற விவரங்களையும் அறிந்து கொண்டார்.
ஆனால், அந்த விவரங்களை அறிந்து கொண்ட MDக்கு ஸ்ரீவாத்யாரை எப்படியாவது மட்டம் தட்டவேண்டும் என்ற குறுக்கு எண்ணம் தோன்றி விட்டது. அதனால் ஸ்ரீவாத்யாருடன் மற்றவர்களையும் சேர்த்து நேர்முகத் தேர்விற்கு அழைத்தார்.
மாமலை மழலை கையில் சிக்குமா ?

அமாவாசை தென்னை மரம்
காருகுடி

நேர்முகத் தேர்விற்கு வந்த ஸ்ரீவாத்யாரிடம், "Tell me, gentleman. will you get this job ?" என்று கேட்டார்.
(கேள்வி - உனக்கு இந்த வேலை கிடைக்குமா என்று சொல்).
கேள்வியின் உள் அர்த்தம் என்ன ? நீதான் ஜோதிடம் தெரிந்தவன் ஆயிற்றே. உனக்கு வேலை கிடைக்குமா என்பதை சொல். ஸ்ரீவாத்யார், எனக்கு வேலை கிடைக்கும் என்று சொன்னால், சர்வ அதிகாரமும் பெற்ற MD உனக்கு வேலை கிடையாது என்று சொல்லி ஸ்ரீவாத்யாரின் ஜோதிடத்தை பொய்யாக்கி விடலாம்.
ஒரு வேளை ஸ்ரீவாத்யார், வேலை கிடைக்காது என்று சொன்னால் கிடைக்காத வேலைக்கு விண்ணப்பம் செய்தால் உனக்கு என்ன ஜோதிட அறிவு இருக்கிறது, என்று கேட்கலாம். எனவே ஸ்ரீவாத்யார் எப்படி பதில் கொடுத்தாலும் அவரை மடக்கி மட்டம் தட்டி விடலாம் என்பது அந்த MDயின் குரோத எண்ணம்.
ஸ்ரீவாத்யார் இதற்கு என்ன பதில் கூறி இருப்பார். சற்று யோசித்துத்தான் பாருங்களேன்.
.. .. ..
அதற்கு ஸ்ரீவாத்யார், "If I get this job. you will lose your job," என்றாராம். அதாவது எனக்கு இந்த வேலை கிடைத்தால் உங்களுடைய வேலை போய்விடும் என்பதுதான் ஸ்ரீவாத்யார் அளித்த பதில்.
இப்போது தான் விடுத்த அம்பு தன் மீதே திரும்பி வருவதைக் கண்ட M.D. தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டார்.
M.D. என்ன செய்திருப்பார் என்பதை யூகிப்பது கடினம் கிடையாது. அவர் ஸ்ரீவாத்யாருக்கு வேலையைத் தரவில்லை. அவரும் ஆறு மாதத்தில் ஒரு விபத்தில் சிக்கி இவ்வுலகை விட்டுப் போய்விட்டார்.

இந்த நிகழ்ச்சியை விவரித்த ஸ்ரீவாத்யார் இதன் பின்னால் உள்ள ஆன்மீக இரகசியங்களை தெளிவுபடுத்தினார்.
“எனக்கு வேலை கிடைத்தால் உனக்கு வேலை போய் விடும்“ என்று ஸ்ரீவாத்யார் கூறிய பதிலைக் கேட்ட M.D. நமக்கு வேலை போனாலும் பரவாயில்லை, ஆன்மீகத்தில் நாட்டம் உடைய ஒரு இளைஞனுக்கு வேலை தருவோம் என்ற தியாக எண்ணத்துடன் அந்த M.D. செயல்பட்டிருந்தால் நிச்சயமாக ஸ்ரீவாத்யார் அவர் உயிரைக் காப்பாற்றி இருப்பார். சித்தர்களால் எதைத்தான் சாதிக்க முடியாது ?
ஸ்ரீவாத்யார் வங்கியில் வேலைக்கு விண்ணப்பம் செய்தது தனக்கு ஒரு பிழைப்பைத் தேடுவதற்காக அல்ல.
ஆறு மாதங்களுக்கு முன்னால் ஒரு ஜோதிடன் அந்த M.D.க்கு ஒரு கடுமையான கண்டம் இருப்பதாக கூறி இருந்தான். அதைப் பற்றி M.D. சட்டை செய்யவில்லை. ஆனால், சென்னைவாசியான M.D.யின்மனைவி காருகுடிக்கு உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக வந்திருந்தபோது காரில் இருந்தபடியே தன்னுடைய கணவனின் உயிரைக் காக்கும்படி கருணாகர வள்ளியை பிரார்த்தித்துக் கொண்டாளாம்.

அந்த பிரார்த்தனைக்காக சித்தர்கள் அளித்ததே மேற்கூறிய சந்தர்ப்பம்.  இதுவே கருணாகர வள்ளியின் கருணை கடாட்சம்.  

ஜெயராமனின் காருகுடி விஜயம்

ராமர் சாதாரண மானிடராக அவதாரம் எடுத்து வந்ததால் அசுரனான இராவணனை சம்ஹாரம் செய்யும் அளவு தேவையான சக்தியை அவர் பெற்றிருக்கவில்லை. பொதுவாகவே எதிர்மறை சக்திகளை எதிர்த்துப் போரிடுவது என்பது மிகவும் கடினமான செயல். அதிலும் ராவணன் போன்ற அசுரனை ஒரு மனிதன் எதிர்ப்பது என்பது நடக்கவே நடக்காத காரியம்.
அதனால்தான் இராவணன் தான் வரம் பெற்ற போது மனிதர்கள் கையால் இறப்பு வரக் கூடாது என்ற நினைவே இல்லாமல் போய்விட்டான்.
ஆனால், எதையும் சாதிக்கவல்லது அல்லவா பரம்பொருள் ?
அதனால் ராம பிரானின் கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே ராமபிரானுக்கு தேவையான தெய்வீக சக்திகளையும் பலத்தையும் அளிக்க பல ரிஷிகளும் முனிவர்களும் அவதாரங்களும் பூலோகத்தில் தவம் இயற்றிக் கொண்டிருந்தனர்.
ராமர் தோன்றுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியவரே ஜமதக்னி முனி ஆவார். மக்கள் அனைவரும் நிரந்தர லட்சுமி கடாட்ச சக்திகளைப் பெற்று வாழ வேண்டும் என்று திருநின்றியூர் திருத்தலத்தில் தவமியற்றினார் ஜமதக்னி முனிவர்.
இவ்வாறு பல லட்சக் கணக்கான ஆண்டுகளின் தவப் பயனை ராமபிரானுக்கு அளிக்க விழைந்தார் ஜமதக்னி முனிவர். அதற்காக அவர் தம் மைந்தன் பரசுராமரையும் இத்திருப்பணியில் இணைத்துக் கொண்டார்.

ஸ்ரீதுர்காதேவி காருகுடி

ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா தேவி. ஒரு நாள் நதியில் நீராடச் சென்ற அவள் வானத்தில் பறந்து கொண்டிருந்த கந்தர்வன் ஒருவனின் உருவம் நதியில் விழ அந்த நிழலைப் பார்த்து அவன் மேல் ஆசை கொண்டதால் அவள் தலையை கொய்து விடும்படி தனது மைந்தன் பரசுராமரைப் பணித்தார் ஜமதக்னி முனி. மனைவி தவறு செய்தால் கணவன் அவளைத் தண்டிக்க வேண்டியதுதானே ? எதற்காக ஜமதக்னி முனிவர் அவர் தனது குமாரன் பரசுராமரை அனுப்புகிறார் ?
பரசுராமருக்கு அம்மாவைக் கொன்ற கொடிய பிரம்ம ஹத்தி தோஷம் அல்லவா ஏற்படும் ?
முனிவர்கள் எதையும் தெரியாமல், அறியாமல் செய்வதில்லை. பரசுராமருக்கு இத்தகைய தோஷம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத்தான் ஜமதக்னிமுனிவர் பரசுராமரை தாயின் தலையைத் துண்டிக்கும்படி ஆணையிட்டார்.
வெற்றி என்பதும் ஒரு வித லட்சுமி கடாட்ச சக்தியே. வெறும் பணம் என்றில்லாமல் எடுத்த காரியத்தை தடங்கல்கள் இன்றி வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் லட்சுமி கடாட்ச சக்திகள் தேவைப்படுகின்றன. எனவே திருநின்றியூர் லட்சுமி கடாட்ச சக்திகளை நிரந்தரமாக நிரவுவதற்காக தவமியற்றிய ஜமதக்னி முனிவர் எதிலும் வெற்றி என்ற லட்சுமி கடாட்ச சக்தியையும் நிரவி ராமபிரானுக்கும் இத்தகைய லட்சுமி கடாட்ச சக்திகளை அளிப்பதற்காக அமைந்ததே ஜமதக்னி முனிவரின் முனிவிளையாடல்.
இதைச் சற்று விளக்குவோம்.
பேரரசர்கள் போரிடும்போது கோடிக் கணக்கான வீரர்களை வைத்து கருட வியூகம்,  கிரவுஞ்ச வியூகம் போன்ற பலவித வியூகங்களை அமைத்து போரிடுவது போர்க்கள மரபு. உதாரணமாக ஒருவர் நாக வியூகத்தில் படையை அமைத்தால் அதை முறியடிக்க எதிரி கருட வியூகத்தில் படையை அமைப்பார்.
இத்தகைய வியூகங்களில் ஒன்று பத்ம வியூகம். இந்த பத்ம வியூகத்தின் உள்ளே மாட்டிக் கொண்டால் எப்படி வெளியே வருவது என்ற இரகசியத்தை அறிந்தவன் கீதாசாரியன் மட்டுமே. இந்த இரகசியத்தை உத்திரையின் கர்ப்பத்தில் இருந்த அபிமன்யுவிற்கு உணர்த்தினார் கிருஷ்ண பகவான்.

ஸ்ரீராமர் காருகுடி

ஆனால், பத்ம வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யுவால் வெளியே வர முடியவில்லை. பத்ம வியூகத்திலிருந்து வெளியே வர முடியவில்லை என்று சொல்வதை விட அபிமன்யு பத்மவியூகத்திலிருந்து வெளியே வர விரும்பவில்லை என்பதே உண்மையான காரணம் ஆகும்.
ஏனென்றால், யார் தன்னுடைய தாயைக் கொன்றவனோ அவனே பத்ம வியூகத்திலிருந்து வெளியே வரலாம் என்பது தனுர்வேத நியதி, யுத்த சாஸ்திர கோட்பாடு. பத்ம வியூகத்திலிருந்து வெளியே வரும் முறை தெரிந்தாலும் சாஸ்திரத்தை மீறக் கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தால்தான் அபிமன்யு தன் உயிர் பிரியும் நிலையிலும் கூட சாஸ்திர கோட்பாடு மீறாது வைகுண்ட பதவியை அடைந்தான்.

எனவே நிரந்தர லட்சுமி கடாட்ச சக்தி என்று எதிலும் வெற்றியைப் பெற வேண்டுமானால் அவன் பத்ம வியூகம் உட்பட எந்த வியூகத்தையும் வென்று வெற்றியைப் பெற வல்லவனாக இருக்க வேண்டும் அல்லவா ?

இதானல் தனது மைந்தன் பரசுராமர் மூலம் ரேணுகா தேவியைக் கொன்று அவர் எந்த வியூகத்தையும் வெல்லும் தனுர் சக்தியைப் பெற்று அந்த சக்தியை ஸ்ரீராமருக்கு தனது தோல்வியின் பரிசாக பரசுராமர் அளிக்கும் ஓர் அற்புத முனிவிளையாடலை நிகழ்த்தியவரே ஜமதக்னி முனிவர் ஆவார்.
இவ்வாறு ஈடு இணையற்ற தியாகச் செயல்களை பிறர் அறியாமல் நிறைவேற்றுபவர்களே முனி புங்கவர்கள். அதற்காக தனது மனைவி, மக்களுக்கு வரும் எவ்வித பழியையும் இறை பிரசாதமாக ஏற்றுக் கொள்வதும் அவர்கள் தியாகத்தை மேலும் புடம் போட்ட தங்கமாய் பிரகாசிக்கச் செய்கிறது.
ஜமதக்னி முனிவரும் பரசுராமரும் வழிபட்ட சிவலிங்க மூர்த்தியை இன்றும் திருநின்றியூர் திருத்தலத்தில் தரிசனம் செய்து பலன் பெறலாம்.
ஸ்ரீஅகஸ்திய விஜயமும் ஸ்ரீராமருக்கு வெற்றி அளிக்கும் திருப்பணியில் சேர்ந்து கொண்டது.
ராவணனை வெல்வதற்காக ராமபிரான் அகத்திய முனிவரின் ஆலோசனையை நாடினார். அகத்திய முனிவரும் ஸ்ரீராமருக்கு ஆதித்ய ஹிருதயத்தை உபதேசித்தார்.
அப்போது அகத்தியர், “ராமா, இராவணனைப் பற்றி எவரும் அறியாத ஒரு முக்கியமான இரகசியத்தை உனக்கு அறிவிக்கிறேன். இதைப் பற்றி நன்றாக ஆலோசனை செய்து பார்,”
”ராவணன் திருஅண்ணாமலையில் பல்லாயிரம் ஆண்டுகள் கிரிவலம் வந்து இறைவனை வேண்டி பத்து தலைகளைப் பெற்றுள்ளான். அந்தப் பத்துத் தலைகளும் ஒரே சமயத்தில் இறைவனை தரிசனம் செய்வதற்காக இராவணன் பெற்ற அருணாசல பிரசாதம். அதனால் அதில் உள்ள சூட்சம இரகசியத்தை நீ புரிந்து கொள்ள வேண்டும். இந்த பத்து தலைகளும் சிரஞ்சீவித்துவ சக்திகளுடன் பொலிபவை. சிரஞ்சீவித்துவம் என்பது காலத்தை கடந்து உயிருடன் வாழ்வதுதானே. அதனால் இந்தப் பத்துத் தலைகளையும் நீ ஒரே சமயத்தில் வீழ்த்தியாக வேண்டும். “

காலம் கடநத கபால பைரவர்

“உன்னுடைய ராம பாணத்தால் ஒவ்வொரு தலையாக கொய்தால் ஒரு தலையைக் கொய்து அடுத்த தலையைக் கொய்யும் நேரத்திற்குள் முதல் தலை முளைத்து விடும். இது தொடர்ந்து கொண்டே இருக்கும். ஆனால், ஒரு முறை எதிரியின் மேல் அனுப்பிய ராம பாணத்தை இரண்டாவது முறையாக அனுப்பினால் அது உன்னுடைய ராம பாணத்திற்கு இழுக்கு. தனுர் சாஸ்திரத்திற்கும் களங்கம் கற்பிக்கும்,“
ராமர் திகைத்தார். ஒரு புறம் அருணாசல பிரசாதத்தின் மகிமையை உணர்ந்து அதை மனம் பாராட்டினாலும் மறுபுறம் எதிரியின் பலம் தான் நினைத்ததை விட பன்மடங்கு பெருகி வருவதைக் கண்டு அவர் தின்புயங்களும் துவண்டன.  
அகத்தியர் ராம பிரானுக்கு ஆறுதல் அளித்து, “கவலைப்படாதே ராமா. இறைவன் எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு வழி வைத்திருக்கிறான். தர்மம் நிச்சயம் வெல்லும்,“ என்றார்.
சற்று நேர ஆழ்ந்த யோசனைக்குப் பின் காருகுடி திருத்தல மகிமைகளை விளக்கி ஸ்ரீராமர் காருகுடியிலுள்ள கபால பைரவரை தரிசித்தால் ராமருடைய ராம பாணம் ஒரே சமயத்தில் ராவணனுடைய பத்து தலைகளையும் கொய்து விடும் என்ற தெய்வீக ரகசியத்தை வெளியிட்டார். கபால பைரவர் அருளும் ஒரே திருத்தலமே காருகுடி ஆகும்.
கபால பைரவரை வழிபட வேண்டிய முறைகளையும் ஸ்ரீராமபிரானுக்கு விளக்கினார் அகத்திய முனி.
இவ்வாறு ஸ்ரீராமர் ஜெயராமர் ஆனதற்கு ஸ்ரீஅகஸ்திய விஜயமும் பெரும் பங்கு வகித்தது என்பதை இதன் மூலம் நாம் உணர்கின்றோம்.

திரிபாத விஜய வழிபாடு

காருகுடிதலத்தில் இயற்ற வேண்டிய திரிபாத விஜய வழிபாடு குறித்து சித்தர்கள் அளிக்கும் விவரங்களை இங்கு அளிக்கின்றோம்.
வளர்பிறை அஷ்டமி, நவமி, தசமி ஆகிய மூன்று திதிகளில் காருகுடி தலத்தில் இயற்றுவதே திரிபாத விஜய வழிபாடாகும்.
வளர்பிறை அஷ்டமி அன்று முதலில் இத்தலத்தில் அருள்புரியும் கன்னி மூல கணபதியையும், ஹங் உங் சிங் சித்தர்களையும் வணங்கிய பின்னர் இத்திருத்தலத்தில் உறையும் ஸ்ரீகபால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு வாழை நார் அல்லது நூலில் கட்டிய முழு முந்திரி பருப்பு மாலை அணிவித்து வழிபட வேண்டும்.
திருத்தலத்தை குறைந்தது எட்டு முறை அடிபிரதட்சிணமாக வலம் வந்து வணங்க வேண்டும்.
அடுத்த நாள் நவமி திதி அன்று இத்திருத்தல தூணில் எழுந்தருளி இருக்கும் ராமருக்கு தங்கள் கையால் அரைத்த சந்தனத்தால் காப்பிட்டு துர்கைக்கு பவள மல்லியால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
அன்று திருத்தலத்தை குறைந்தது ஒன்பது முறை அடிபிரதட்சிணமாக வலம் வந்து வணங்க வேண்டும்.

அடுத்த நாள் தசமி திதி அன்று ஸ்ரீகருணாகர வள்ளி அம்பிகையை ஆயுர்தேவியாக பாவித்து வணங்கி இளநீர் அபிஷேகம் நிறைவேற்றி அம்பிகைக்கு மஞ்சள் நிற பருத்தி ஆடைகளை அணிவித்து எலுமிச்சை சாதம் போன்ற மஞ்சள் நிற உணவுவகைகளைப் படைத்து அன்னதானம் அளித்தலால் எக்காலத்திலும் எடுத்த, நினைத்த எல்லா காரியங்களிலும் வெற்றியைப் பெறலாம் என்பது உறுதி.
திரிபாதம் என்பது நிகழ்ந்த காலம், கடந்த காலம், எதிர் காலம் என்ற மூன்று காலங்களைக் குறிக்கும். திரிபாத விஜய பூஜையானது முக்காலத்தும் எக்காலத்தும் வெற்றியைத் தரும் சக்தியுடன் திகழ்வதால் ஸ்ரீராமர் காருகுடி திருத்தலத்தில் திரிபாத பூஜையை நிகழ்த்தி எதிலும் வெற்றியை சூடும் ஜெயராமர் ஆனார்.
காருகுடி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்களும் ஆண்களும் வழிபடி வேண்டிய திருத்தலமாகும். ஜன்ம நட்சத்திரமான ஆயில்ய நட்சத்திரத்திற்கு கேட்டை, ரேவதி நட்சத்திரங்கள் அனுஜன்ம, திரிஜன்ம நட்சத்திரங்களாக அமைவதால் ஆயில்யம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களும் காருகுடி திருத்தலத்தில் வழிபட்டு அற்புத பலன்களைப் பெறலாம்.

திரிபாத நட்சத்திர பூஜை

புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற மூன்று தினங்களில் தொடர்ந்து காருகுடி திருத்தலத்தில் நிறைவேற்றப்படும் பூஜையே திரிபாத நட்சத்திர விஜய பூஜையாகும்.
இம்முறையில் மேற்கூறிய முறையில் புனர்பூச நட்சத்திர தினத்தன்று ஸ்ரீராமரையும், பூசம் நட்சத்திரத்தன்று துர்கை தேவியையும், கபால பைரவரையும் வழிபட்டு, ஆயில்யம் நட்சத்திரத்தன்று கருணாகர அம்பாளையும் வழிபடுவதால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணத் தடங்கல்கள் அகன்று நன்முறையில் திருமணம் நிறைவேறும்.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளும், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் மேற் கூறிய நட்சத்திர விஜய வழிபாட்டால் சீர்பெறும்.
புனர்பூச நட்சத்திர தினத்தன்று ஒன்பது முறையும், பூச நட்சத்திர தினத்தில் எட்டு முறையும், ஆயில்ய நட்சத்திர தினத்தன்று ஒன்பது முறையும் திருத்தலத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வருதல் நலம்.

காக்கும் கடவுள் கருப்பண்ண சுவாமி

காக்கும் தெய்வமாம் கருப்பண்ண சுவாமிக்கு ஒரு முறை ஒரு ஆசை தோன்றியதாம். அது என்ன ? நாமும் சதா சர்வ காலமும் மக்களை எத்தனையோ ஆபத்துகளிலிருந்து காப்பாற்றிக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை ஒரு சாதாரணமான கிராம தேவதையாகத்தானே மக்கள் நினைக்கிறார்கள். நம்மை ஏன் காக்கும் கடவுள் என்று நினைப்பதில்லை என்ற ஏக்கம் தோன்றியதாம்.
மனைவிக்கு பட்டுப் புடவை மேல் ஆசை ஏற்பட்டால் கணவன் பாடு திண்டாட்டம். ஆனால், தெய்வங்களுக்கு ஆசை ஏற்பட்டால் பூலோக மக்களுக்கு கொண்டாட்டம்தானே ?
எல்லா ஆசைகளையும் ஏக்கங்களையும் நிறைவேற்ற பூலோகத்தில் வழி இருப்பதால் கருப்பண்ண சுவாமி தன்னுடைய பைரவ லோகத்தை விட்டு பூலோகம் வந்தடைந்தார்.ஈ

ஸ்ரீஅசல தீபேஸ்வரர் காருகுடி

ஒரு மனித உருவை எடுத்துக் கொண்டு துறையூர் அருகே உள்ள பெருமாள் மலைக்கு வந்தார். அத்திருத்தலம் அவரைக் கவரவே மலை ஏறி பெருமாளை தரிசிக்க சென்றார். அப்போது மலை மீது செல்ல படிகள் இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு மலை உச்சியை அடைந்தார்.
பெருமாளுக்கு ஆலயமும் அமைக்கப்படாததால் குகை போன்ற ஒரு பகுதியில் பெருமாள் எழுந்தருளி இருந்தார். அந்த குகை வாயிலில் வயதான கரடி ஒன்று குகை வாயிலை மறைத்தபடி படுத்திருந்தது. சுவாமி உள்ளே எப்படி செல்வது என்று யோசித்தார்.
அப்போது கரடி, ”அப்பா, நானும் பெருமாள் தரிசனத்திற்காகத்தான் வந்திருக்கிறேன். படியேறி வந்து களைத்து விட்டேன். என்னை கொஞ்சம் உள்ளே தூக்கிக் கொண்டு போகிறாயா ?“ என்று கேட்டது.
சுவாமியும் வயதான கரடிதானே பரவாயில்லை என்று அதைத் தூக்கி தன் தோள் மேல் வைத்துக் கொள்ளவே மறு விநாடி அக்கரடி தன் இரு கால்களாலும் கருப்பண்ண சுவாமியை இறுகப்பற்றிக் கொண்டது. கரடிப் பிடி எப்படி இருக்கும் என்று அப்போதுதான் முதன் முதலில் உணர்ந்தார் கருப்பண்ண சுவாமி.
எப்படியாவது அந்த கரடியை கீழே தள்ளி விடலாம் என்ற முயற்சியில் கோயிலுக்கு உள்ளே போகாமல் அருகிலிருந்த ஒரு பாறை மேல் அந்தக் கரடியை மோதித் தள்ள முயற்சி செய்தார்.
அப்போது கரடி உருவில் இருந்த கரடி சித்தர் தன்னுடைய சுய உருவத்தை கருப்பண்ண சுவாமிக்கு காட்டினார். அதைக் கண்டவுடன் கருப்பண்ண சுவாமி அதற்கு மிகவும் மரியாதையுடன் வணக்கம் தெரிவிக்கவே கரடியும் கீழே இறங்கி விட்டது. அதாவது, கரடி சித்தர் கீழே இறங்கி விட்டார்.
அதன் பின்னர் கரடி சித்தர் பெருமாள் மலை திருத்தல மகிமைகளை எடுத்துக் கூறினார். “பத்ரி நாராயணன் என்று பெருமாள் அழைக்கப்படுவதன் காரணமே பெருமாள் இலந்தை பழம் என்ற சங்கர நாராயண அம்சமாக திகழ்வதுதான். இலந்தை பழத்தில் உள்ள இனிப்பு தட்சிணா மூர்த்தி குரு அம்சமாக திகழும் சிவ தத்துவத்தையும், புளிப்பு சுவை பெருமாளுக்கு உரியதாய் விஷ்ணு தத்துவத்தையும் குறிக்கும்.”

“நீ பெருமாளைப் போல காக்கும் கடவுள் என்று அழைக்கப்பட வேண்டுமானால் இத்தலத்திலேயே இருந்து இங்கு மலையேறி வரும் பெருமாள் பக்தர்களுக்கு குறிப்பாக வயதானவர்களுக்கு சேவை செய்து வா. இரவில் இங்கிருந்து கருணாகர வள்ளி அம்மனை தரிசனம் செய்து அவளை தியானித்து வா,“ என்று அருளினார்.
பெருமாள் மலையிலிருந்து காருகுடி ராஜகோபுரத்தை தரிசனம் செய்யும் பக்தர்கள் இன்றும் உண்டு.
கரடி சித்தர் அருளியபடி கருப்பண்ண சுவாமியும் பற்பல ஆண்டுகள் பெருமாள் மலையில் மலையேறி வரும் பக்தர்களுக்கு வேண்டிய நீர், வெந்நீர், உணவு இவற்றை அளித்து இரவில் வயதான பக்தர்களுக்கு பாத சேவை செய்து அவர்கள் உறங்கும்போது அவர்களை காட்டு மிருகங்கள் அண்டாதபடி கருணாகர வள்ளி அம்மன் நினைவுடன் பெருமாள் பக்தர்களை காத்து நின்றார்.
கருப்பண்ண சுவாமியின் அற்புத சேவையால் மகிழ்ந்த பெருமாள் அவருக்கு தன் திருப்பாத தரிசனத்தை அளித்து கருப்பண்ண சுவாமியை தன்னுள் ஐக்யப்படுத்திக் கொண்டார்.
இப்போது கருப்பண்ண சுவாமி காக்கும் கடவுள் கருப்பண்ண சுவாமி என்று விஷ்ணு மூர்த்தியாலேயே அங்கீகரிக்கப்பட்டு விட்டார் அல்லவா ? இதுதான் நாம் கடவுளை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால் அவர் நம்மை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார் என்பதன் பொருளாகும்.
பெருமாள் எப்படி கருப்பண்ண சுவாமியை ஏற்றுக் கொண்டார் ? சங்கரநாராயண அம்சமான இலந்தை மரத்தில் கருப்பண்ண சுவாமியை முள்ளாக ஏற்றுக் கொண்டார் பத்ரி நாராயணன்.
கருப்பண்ண சுவாமியின் பக்தி முள்ளாக மலர்ந்ததா இல்லை கனிந்ததா ? இப்போது கருப்பண்ண சுவாமி சிவ அம்சமா இல்லை விஷ்ணு அம்சமா, அது அந்த பெருமாளுக்குத்தான் வெளிச்சம் !
கருப்பண்ண சுவாமி தவம் இயற்றிய இலந்தை மரம் துறையூர் பெருமாள் மலை உச்சியில் இன்றும் பக்தர்கள் வழிபடும் வகையில் செழித்து வளர்ந்துள்ளது. இந்த மரத்திற்கு மஞ்சள் குங்கும பொட்டிட்டு  21 முறை வலம் வந்து வணங்குவதால் அற்புதமான காப்புச் சக்திகளைப் பெறலாம்.
காருகுடி அம்பிகை தியானத்துடன் கருப்பண்ண சுவாமி விளங்கியதால் பெருமாள் மலை கருப்பண்ண சுவாமியை காருகுடி கருப்பண்ண சுவாமி, கருணாகர கருப்பண்ண சுவாமி என்று அழைப்பதும் பொருத்தமே.
அற்புத காப்பு சக்திகளுடன் துலங்கும் காவல் தெய்வமே பெருமாள்மலை கருப்பண்ண சுவாமி ஆவார்.
காக்கும் கடவுளே கருப்பா
காக்கும் பெருமாளே கருப்பா
கடுகி நீ காப்பாய் கருப்பா
என்று கருப்பண்ண சுவாமிக்கு ப்ரீதியான முப்புரி காப்பு துதியை ஓதி இவரை எங்கிருந்து எப்போது அழைத்தாலும் உடனே வந்து காப்பாற்றும் காவல் தெய்வம். குறிப்பாக பெண்களுக்கு கருப்பண்ண சுவாமியின் காவல் சக்தி அவசியம் தேவையாகும்.
கரடி சித்தர் தினமும் தரிசனம் செய்யும் தலங்களுள் பெருமாள் மலையும் ஒன்றாகும்.
“கரடிப் பிடிதான் பிடி,“ என்று கரடிப் பிடியின் சிறப்பைப் பற்றி சித்தர்கள் வர்ணிக்கிறார்கள். கரடியைப் போல் ஒருவன் தன் குருவைப் பிடித்துக் கொண்டால் நிச்சயம் அவன் நற்கதி அடைவான் என்று நம் குருமங்கள கந்தர்வா கூறுவதுண்டு.
ஒரு காலத்தில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்த இந்த பெருமாள் மலைப் பகுதியில் தற்போது கரடிகளின் நடமாட்டம் குறைந்து விட்டது. ஆனால், இங்கு குரங்குகள் ஏராளமாக உள்ளன.
இரும்பு கதவுகளில் கருப்பு வண்ண பெயிண்டுகளை அடித்து வீட்டின் முன் வாசல் கதவுகளாக பயன்படுத்தினால் அது நமக்குத் தேவையில்லாத எதிர்மறை சக்திகளை விலக்கி, தீய சக்திகளை தன்னுள் ஈர்த்து நம்மை காக்கும் ரட்சை போல் அமையும். இங்கு நாம் குறிப்பிடுவது காம்பவுண்ட் போன்ற வெளிப்புறத்தில் அமைக்கப்படும் கதவுகளாகும். ராஜநிலை கதவு கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
குக ரட்சைக் கனி என்று அழைக்கப்படும் பேரீச்சம் பழங்கள் அல்லது வறுத்த வேர்கடலையை குரங்குகளுக்கு உணவாக பெருமாள் மலையில் அளித்தலால் அற்புத காப்புச் சக்தியை எளிதாக பெறலாம். பலரும் ஆள் பலம் அமையாமல் வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. இத்தகைய நிலையில் அவர்களுடைய பொருளுக்கும் சொத்திற்கும் பாதுகாப்பாக அமைவதே மேற்கூறிய தான வழிபாடாகும்.
மேலும் கருப்பண்ண சுவாமியின் ரட்சை துதியை ஓதிக் கொண்டு பயணம் செல்வதால் அவர்கள் பயணமும் பாதுகாப்பாக அமைந்து சக பிரயாணிகளையும் காக்கும்.

தென்னை தரும் தெய்வீகம்

தென்னையை நன்றியுள்ள மரமாக சித்தர்கள் வர்ணிக்கிறார்கள். தற்காலத்தில் பெரும்பாலான மக்களின் மனக் குறை என்னவென்றால் தங்கள் பிள்ளைகள் நன்றி கெட்டத்தனமாக மாறி வயதான காலத்தில் நம்மை பரிதவிக்க விட்டுவிடுகிறார்களே என்பதுதான்.
இந்த குறையை நிறைவு செய்வதாக அமைவதே காருகுடி திருத்தலத்தில் மிகவும் அபூர்வமாக சூரிய சந்திர மூர்த்திகள் இடையே அமைந்திருக்கும் இஷ்ட சந்தான தென்னை மரமாகும்.

இஷ்ட சந்தான தென்னை மரம் என்று சித்தர்கள் இதனை வர்ணிப்பதன் காரணம் என்ன ? பொதுவாக நாம் வேண்டும் குழந்தையை தரும் தெய்வத்தையே கொண்டாடுகிறோம்.

ஸ்ரீலஸ்ரீ ஹங் உங் சிங் சித்தர்கள்

அந்த தெய்வங்களே நமக்கு பிரியமான தெய்வங்களாகி விடுகின்றனர். அது போல நாம் விரும்பியதை நிறைவேற்றும் குழந்தைகள் மீதும், நம் விருப்பத்திற்கேற்றபடி சேவை செய்யும் மக்கள் மீதுதான் நமக்கு அன்பும் பரிவும் இருக்கும் அல்லவா ?
இந்த இஷ்ட சந்தான மரத்திற்கு தாமே அரைத்த சந்தன குங்கும பொட்டிட்டு வலம் வந்து வணங்கினால் நமது குழந்தைகள் நமக்கு பிடித்த வகையில் நடந்து கொள்வார்கள். நமக்குப் பிடித்த குழந்தைகளை உருவாக்கித் தரும் சக்தியை இந்த தென்னை மரம் பெற்றுள்ளதால் இதை இஷ்ட சந்தான தென்னை மரம் என்று சித்தர்கள் புகழ்கிறார்கள்.
இந்த தென்னை மரம் அவ்வளவு அற்புதமான தெய்வீக சக்திகளுடன் துலங்குவதற்கு காரணம் என்ன ?
நஞ்சுண்ட கண்டன் திருத்தொண்டையை கருணாகர வள்ளி பற்றி ஆலகால விஷ சக்திகளை பாம்பு வடிவத்தில் தன் திருமேனியில் ஏற்றாள் என்று விவரித்துள்ளோம் அல்லவா ?
அந்த சிவ சக்தி ஐக்ய ஸ்பரிசத்தில் தோன்றிய பல அற்புதங்களுள் ஒன்றே அமாவாசை சித்தரின் தோற்றமாகும்.
ஆமாம், அமாவாசை என்பது சூரியன் சந்திரனின் சங்கமத்தில் தோன்றுவதுதானே. எனவே சிவ சக்தி சங்கம ஸ்பரிசத்தில் அமாவாசை சித்தர் அவதாரம் பெற்றது பொருத்தம்தானே ?
சூரிய சந்திர மூர்த்திகளின் நடுவே காருகுடியில் தென்னைமரம் தோன்றி இருப்பதால் இது அமாவாசை தென்னை மரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தென்னை மரத்தையே தனக்குரிய நிரந்தர இருப்பிடமாக கொண்டு பூலோகத்தில் உள்ள சகல கோடி ஜீவன்களுக்கும் அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார் அமாவாசை சித்தர் என்பது இதுவரை எவரும் அறியாத தெய்வீக இரகசியமாகும்.
அமாவாசை சித்தர் இந்த தென்னை மரத்தில்தான் நிரந்தரமாக வாசம் செய்வார். எவராவது பக்தி சிரத்தையுடன் அமாவாசை சித்தரை எங்கிருந்தாவது அழைத்தால் அந்த இடங்களில் உள்ள தென்னை மரத்தின் வழியாக இறங்கி அவர்களின் பூஜையையும் பிரசாத உணவையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் காருகுடியில் உள்ள அமாவாசை தென்னை மரத்திற்கு வந்து விடுவார்.
அப்படி இந்த தென்னை மரத்திற்கு என்ன சிறப்பு ? தன் தாயைக் கொன்று. தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று உலகிற்கு உணர்த்தினார் அல்லவா பரசுராமர் ? அவர் தன் தாயைக் கொன்ற தவறுக்காக பரிகாரம் தேடி பல திருத்தலங்களிலும் தவம் இயற்றினார்.
எதற்காக ?
தாயை மதிக்காமல் , தந்தை சொல் மீறி கலியுலகில் தோன்றும் பிள்ளைகள் கோடி கோடியாய் கலியுலகில் இருக்கும் என்பதை உணர்ந்த பரசுராமர் இவ்வாறு தாய்க்காக தவம் இயற்றும் தனயனையும், தந்தை சொல்லை மீறாத தனயனையும் பெற உதவும் ஒரு தெய்வீக மரத்தை பூவுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே.
இவ்வாறு நன்றி மறவாத தன்மை கொண்ட ஒரே மூலிகை தென்னை என்பதால் அந்த தென்னையை அவர் பூலோகத்தில் காருகுடி திருத்தலத்தில் சிவ சக்தி சக்திகள் சங்கமிக்கும் புனித பூமியில், சூரிய சந்திர சக்திகள் ஒருமிக்கும் இடத்தில் தோற்றுவித்தார்.

ஆம், பூலோகத்தில் முதல் தென்னை மரம் தோன்றிய திருத்தலமே காருகுடி ஆகும். இந்த தென்னை மரத்தை முறையாக வேண்டி வழிபட்ட ராமபிரான்தான் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற உத்தம உரையை உலகிற்கு உணர்த்திய தனயனார்.

ஸ்ரீநஞ்சுண்ட கணபதி

பாற்கடலைக் கடைந்தபோது ராகு கேதுவின் தலை உடல் பாகங்கள் காருகுடி கன்னி மூலை கணபதியைச் சரணடைந்து தங்கள் வெப்பத்தை தணித்துக் கொண்டனர் என்று கூறினோம் அல்லவா ?
மோஹினி அவதாரம் கொண்ட பெருமாள் இவர்களின் தியாகத்தை மெச்சி இழந்த உடல் பாகங்களை மீண்டும் அருள்வதற்காக அவர்களுக்கு  அமிர்தம் அளிக்கும் மோஹினி லீலையை நிகழ்த்தினார். ஆனால், ராகு கேது மூர்த்திகள் இழந்த தங்கள் அவயவங்களை மீண்டும் பெற விழையாமல் அவற்றை இதர ஜீவன்களுக்கே அர்ப்பணிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் கன்னி மூலை கணபதியை தொடர்ந்து வலம் வந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர்.
இதற்கிடையே கணபதி மூர்த்தி எம்பெருமான் ஆலகால விஷத்தை உண்ணும் சிவ லீலையில் தானும் தன் அன்னை பார்வதியைப் போல் பங்கேற்க விரும்பினார்.
எனவே பார்வதி தேவி கருணாகர வள்ளியாய் ஐந்து தலைகளுடைய கருநாfமாய் மாறி சிவபெருமானின் திருக்கண்டத்தில் தங்கிய நஞ்சை தன் பற்களால் ஈர்த்து தன்னுள் உறிஞ்சினாள். அப்போது கணபதி மூர்த்தி சக்தி அம்சமான தனது இடது தந்தத்தை உடைத்து அதை எம்பெருமானின் திருக்கண்டத்தில் பதித்து ஆலகால விஷத்தை உண்ணும் அந்த தெய்வீக லீலையில் தன்னுடைய கணேச லீலையையும் நிறைவேற்றி விட்டார்.
ஏற்கனவே மகாபாரதத்தை படைப்பதற்காக தன் வலது தந்தத்தை அர்ப்பணித்த கணபதி மூர்த்தி சக்தி அம்சமான தன் தாயுடன் சேர்ந்து தனது சக்தி அம்சம் நிறைந்த தனது இடது தந்தத்தையும் உடைத்து தியாக கணபதியாய் உருவெடுத்து தாய்க்கு ஏற்ற தனயனானார்.
இந்த அற்புத கணபதி லீலை நிகழ்ந்த திருத்தலமே காருகுடி ஆகும். இங்கு கன்னி மூலையில் எழுந்தருளிய கணபதி மூர்த்தி தன்னுடைய இரு தந்தங்களையும் இழந்த தியாக கணபதியாய் அருள்பாலிக்கிறார்.
அதனால் அன்னை காருகுடி கணபதியை ஸ்ரீநஞ்சுண்ட கணபதி என்று கூறி ஆசீர்வதித்தாள்.
காருகுடி கணபதி மூர்த்தியை வலம் வந்து கொண்டிருந்த ராகு கேது மூர்த்திகள் இத்தகைய ஒரு அற்புத சந்தர்ப்பத்திற்காகத்தானே காத்திருந்தனர். உடனே அவர்கள் இருவரும் நஞ்சுண்ட கணபதி மூர்த்தியை அப்பிரதட்சிணமாக வலம் வர ஆரம்பித்தனர்.
இந்த அப்பிரதட்சிண வலத்தால் நஞ்சுண்ட கணபதி மூர்த்தியின் திருமேனியில் ஆலகால விஷத்தை உறிஞ்சியதால் ஏற்பட்ட தாங்க முடியாத உஷ்ண சக்தியை தாங்கள் ஏற்று கணபதி மூர்த்தியின் அரிய சேவையில் தங்களையும் ஒரு அங்கமாக ஆக்கிக் கொண்டனர்.
அன்று தோன்றியதுதான் ராகு கேது மூர்த்திகளின் அப்பிரதட்சிண வலம். அதனால்தான் நாம் திருக்கோயில்களில் எல்லா நவகிரக மூர்த்திகளையும் வலமாகவும் ராகு கேது மூர்த்திகளை மட்டும் இடமாகவும் சுற்றும் முறையை வைத்துள்ளோம்.
எனவே திருத்தலங்களில் நவகிரக மூர்த்திகளாய் எழுந்தருளி உள்ள ராகு கேது மூர்த்திகளை அப்பிரதட்சிணமாக வலம் வர வேண்டுமானால் முதலில் நவகிரக மூர்த்திகளை முதலில் பிரதட்சிணமாக அதாவது வலமாக சுற்றி வர வேண்டும். பின்னர் இரண்டு முறை இடமாக, அப்பிரதட்சிணமாக சுற்றி வர வேண்டும்.
இதுவே ராகு கேது மூர்த்திகளை வழிபடும் முறையாகும்.
பொதுவாக இறை மூர்த்திகளையோ திருஅண்ணாமலையையோ அப்பிரதட்சிணமாக வலம் வருவது கிடையாது. சற்குருவின் ஆணையில்லாமல் இத்தகைய கிரிவலங்களை மேற்கொள்ள கூடாது. காரணம் அப்பிரதட்சிணமாக வலம் வருகையில் சுவாமி மேல் படிந்துள்ள பல அடியார்களின் தீவினையாக மாறிய பிரார்த்தனை சக்திகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். அவற்றை எல்லோராலும் தாங்க முடியாது.
எனவே இவ்விஷயத்தில் ஆன்மீக அடியார்கள் கவனமாக செயல்படவும். புராண வரலாற்றில் முருகப் பெருமானை அப்பிரதட்சிணமாக வலம் வந்து வணங்கியவன் சூரபத்மன் மட்டுமே.
காருகுடி திருத்தலம் இவ்வாறு அப்பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குவதற்கு உகந்த தலமாகும். ராகு கால நேரத்திலும், குரு ஹோரை நேரத்தில் சுவாசத்தை பிருத்வி பூதத்தில் நிலை நிறுத்தியும் எத்தனை முறை வேண்டுமானாலும் இத்திருத்தலத்தில் அப்பிரதட்சிணமாக வலம் வரலாம்.
இதனால் கிட்டும் பலன்கள் ஏராளம். யோக சித்திகளை எளிதில் கூட்டுவதே இத்தகைய அப்பிரதட்சிண வலங்களாகும்.
ஸ்ரீநஞ்சுண்ட கணபதி மூர்த்தியின் அரிய சேவையில் ராகு பகவான் பங்கேற்றதால் ராகு காலத்தில் அமையும் ஞாயிற்றுக் கிழமை பிரதோஷ வழிபாடானது அதிஅற்புத வழிபாடாக, விஷ சக்திகளை மாய்க்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ஔவையார் இத்திருத்தலத்தில் குரு ஹோரை நேரத்தில் பிருத்வி பூதத்தில் தன்னுடைய சுவாசத்தை நிலைநிறுத்தி நஞ்சுண்ட கணபதி மூர்த்தியை வழிபட்டார். அப்போது ஔவையார் அருளிய துதியே, “சீதக் களபச் செந்தாரை ...” என்ற அற்புத துதியாகும்.
இவ்வாறு குரு ஹோரையில் பிருத்வி பூதம் நிற்கும்போது கிடைக்கும்  கணபதி மூர்த்தி தரிசனமே சீதக் களபமாகும். இந்த அற்புத தரிசனத்தை ஔவையார் பெற்ற தொன்மை வாய்ந்த தலமே காருகுடியாகும்.
ராகு கேது மூர்த்திகளின் அற்புத அப்பிரதட்சிண வழிபாட்டால் மகிழ்ந்த ஸ்ரீநஞ்சுண்ட கணபதி மூர்த்தி ராகு கேது மூர்த்திகளை தன்னுடைய சிரசில் பொலியும் குடையாகவும் தன்னுடைய திருப்பாதங்களில் பாதரட்சையாகவும் ஏற்றுக் கொண்டாராம். அந்த அற்புதம் நிகழ்ந்த தலமும் காருகுடி ஆகும்.
எப்படி ராகு கேதுவும் சேர்ந்தால்தான் நவகிரகம் என்ற ஒன்பது கிரகங்கள் தத்துவம் முழுமையாகிறதோ அதுபோல் குடையுடன் பாதரட்சையுடன் பொலியும் கணபதி மூர்த்தியின் திரு உருவமே முழுமையான கணபதி மூர்த்தி இறை தரிசனமாகும்.
காருகுடி திருத்தலத்தில் ஸ்ரீநஞ்சுண்ட கணபதி மூர்த்தியை தரிசனம் செய்து மேற்கூறிய முறையில் அப்பிரதட்சிணமாக வலம் வந்து குடை, பாதரட்சைகளை தானம் அளித்தலால் எத்தகைய நாக தோஷங்களும் மறையும் என்பதில் ஐயமில்லை.
இக்காரணம் பற்றியே எத்தகைய நாக தோஷங்களை தீர்க்க கூடிய நாக தோஷ நிவர்த்தி தலமாகவும், திருமண தோஷங்களை நீக்கும் அதியற்புத தலமாகவும் காருகுடி புகழ்பெற்று விளங்குகிறது.
திருமணத்திற்குப் பின் காசிக்குச் செல்லும் புது மணத் தம்பதிகள் காசி விஸ்வநாதரை தரிசித்த பின்னர் செருப்பு, மெட்டி, கடுக்கன் போன்ற ஜோடி பொருட்களை தானம் அளித்தலால் திருமண வைபவத்தில் அவர்களின் மேல் படிந்த உறவினர்கள், நண்பர்கள் ஏனையோரின் விஷ எண்ணங்கள், பொறாமை எண்ணங்கள் பஸ்மமாகி  தம்பதிகள் மங்கள வாழ்வை பெறுகிறார்கள். உத்தம சந்தானங்களைப் பெற உறுதுணையாக அமைகிறது இந்த வழிபாடு.
இதுவே உண்மையான ஹனிமூன் என்று சித்தர்கள் அறிவிக்கிறார்கள்.

சூரிய பகவானின் சீரிய பூஜை

காருகுடி திருத்தலத்தில் சூரிய பகவானும் சந்திர பகவானும் அபூர்வமாக ஒருங்கே எழுந்தருளி உள்ளார்கள். இதன் பின்னால் அமைந்த பல தெய்வீக அனுகிரகங்களுள் சூரிய பகவான் நிறைவேற்றிய ஈடில்லா பூஜை முறையும் ஒன்றாகும்.
சந்தியா நேரத்தில் சந்திர ஹோரையில் பாப கிரகங்கள் ராசியின் கடைசி நவாம்சத்தில் உள்ளபோது பிறக்கும் குழந்தைகள் சத்யோரிஷ்ட யோகம் கொண்டவையாக இருக்கும் என்பது வராகமிஹிரரின் சூத்திரமாகும். இங்கு நாம் குறிப்பிடும் சந்திர ஹோரை என்பது ராசி அம்ச ஹோரையாகும்.
சத்யோரிஷ்ட யோகத்தில் பிறந்த குழந்தைகள் ஒரு வருடத்திற்குள் மரணமடையும். இத்தகைய அரிஷ்ட யோகத்திலிருந்து குழந்தைகளைக் காப்பதற்காக சூரிய பகவான் நிறைவேற்றும் பூஜையே சத்திய பாத பூஜை ஆகும்.
இதை எப்படி சூரிய பகவான் நிறைவேற்றுகிறார் ?

ஸ்ரீசூரிய பகவான்
காருகுடி

ஸ்ரீசந்திர பகவான்
காருகுடி

சந்திர பகவான் பூமியை வலம் வரும் முழு சஞ்சார காலமான 27 நாட்களில் 27 நட்சத்திர மண்டலங்களையும் கடந்து விடுகிறார். அவ்வாறு ஒவ்வொரு நட்சத்திர மண்டலத்திற்கும் சந்திர பகவான் வரும்போது அந்தந்த மண்டலத்தைச் சேர்ந்த நட்சத்திர தேவியர் சந்திர பகவானுக்கு பாத பூஜைகள் செய்து ஆராதனை செய்கின்றனர்.
அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திர தேவிக்கும் நான்கு உப தேவி சக்திகள் உண்டு. இவற்றையே நட்சத்திர பாதங்கள் என்று அழைக்கிறோம். சந்திர பகவானுக்கு நட்சத்திர தேவிகள் பாத பூஜை செய்யும்போது இந்த உபதேவிகள் சந்திர பகவானை வலம் வந்து வணங்கிய வண்ணம் இருப்பார்கள்.
இவ்வாறு 27 நட்சத்திர மண்டல லோகங்களிலும் வலம் வந்த சந்திர பகவான் இறுதியாக ரேவதி நட்சத்திர மண்டலத்திற்கு வந்து ரேவதி தேவியின் பாத பூஜையை ஏற்றுக் கொள்ளும்போது 108 நட்சத்திர உப தேவிகள் சந்திர பகவானை வலம் வருவார்கள். நட்சத்திரங்களில் மூத்தவள் ரேவதி என்பதால் மூத்த சுமங்கலி பாத பூஜை செய்யும்போது மற்ற பத்தினிகளும் அவள் பாத பூஜையை தரிசனம் செய்ய வேண்டும் என்பது தார்மீக நியதி அல்லவா ?
இவ்வாறு 108 நட்சத்திர உபதேவிகளின் ஆராதனையை சந்திர பகவான் ஏற்றுக் கொள்ளும்போது சூரிய பகவான் இந்த அனைத்து சுமங்கலி சக்திகளையும் தரிசனம் செய்து அந்த அனுகிரக சக்திகளை சூரிய பகவானுடன் சேர்ந்தே வலம் வரும் வாலகில்ய மகரிஷிகளுக்கு தன்னுடைய குரு காணிக்கையாக அர்ப்பணித்து விடுகிறார். இதைவிடச் சிறந்த ஒரு குரு காணிக்கையை எந்த சீடராவது அளிக்க முடியுமா ?
இவ்வாறு சூரிய பகவான் 108 நட்சத்திர பாத பூஜை சக்திகளை வாலகில்ய முனிவர்களுக்கு அளிக்கும் பூஜையையே சத்திய பாத பூஜை என்கிறோம். சுமங்கலி பூஜையின் விளைவாக கிடைப்பதே சத்தியமான, உண்மையான, நிலையான அனுகிரகம் என்பதால் சித்தர்கள் இதை சத்திய பாத பூஜை என்று அழைக்கிறார்கள்.  
குருவே சத்தியம், சத்தியமே குரு !!
எனவே ரேவதி நட்சத்திரம் முடிந்து அஸ்வினி நட்சத்திரம் ஆரம்பமாகும் முன் உள்ள (12+12 = 24 நிமிடங்கள்) ஒரு நாழிகை சங்கம நேரமானது அற்புத மங்கல, மாங்கல்ய சக்திகளுடன் பொலிவதால் சுமங்கலிகளும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களும், மண வாழ்க்கையில் பல பிரச்னை சந்திப்பவர்களும் இந்த அற்புத சத்திய பாத முகூர்த்த நேரமான 24 நிமிடங்களில் சூரிய பகவானையும் சந்திர பகவானையும் தரிசனம் செய்து சர்க்கரை பொங்கல், பால் கலந்த வெண் பொங்கல் தானம் அளித்தலால் அற்புத பலன்களைப் பெறலாம்.

 

                ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam