பிளவை சீர்செய்யும் பிலவ வருடம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

குருமங்கள புதுவருடம்

ஆங்கில புதுவருடக் கொண்டாட்டம் சமீபத்தில் தோன்றியது என்றாலும் மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப் பிணைந்து அது வந்துள்ளது என்பதால் நாம் அனைவரும் புது வருடப் பிறப்பைக் கொண்டாடி வருகின்றோம். இருப்பினும் நம் மண்ணின் பெருமை என்பதான தமிழ் வருடப் பிறப்பையும் நாம் விட்டு விடலாகாது, மறந்து விடக் கூடாது என்பதையும் அனைவரும் அறிவோம். நாம் அனைவரும் தாய் மொழியிலேயே கல்வி கற்பது என்பது மட்டும் அல்லாது நம் குழந்தைகளையும் தாய் மொழியில் பயிற்றுவிப்பதே அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் தரும் என்பதில் சற்றும் ஐயமில்லை. அறிந்தும் அலட்சியமாக இருப்பது என்பது என்னவோ இந்த விஷயத்தில் பெருகி வருவதால் மக்கள் இது சம்பந்தமாக நன்கு ஆத்ம விசாரம் செய்து பயனடையும்படிக் கேட்டுக் கொள்கிறோம். இந்தக் கூற்றை பெரும்பாலான அறிவு ஜீவிகளும் ஒத்துக் கொள்கிறார்கள் என்றாலும் அவர்கள் வாழ்க்கையிலேயே இந்த காலம் கடந்த கண்ணாடியே அவர்களுக்கு வந்து வாய்க்கிறது என்பதால் மாதா அமிர்தானந்தா கூறுவதுபோல் நாமும் அந்தத் தவற்றைச் செய்யாதிருக்க இறைவனை வேண்டுகிறோம்.

தமிழ் புது வருடம் மகர லக்னத்தில் குரு ஹோரை நேரத்தில் தோன்றுவதால் எத்தகைய கருத்து வேற்றுமைகளும் குரு அருளால் சீர் பெறும் வருடம் இந்த தமிழ் வருடம் என்பதில் ஐயமில்லை. குருமங்கள கந்தர்வ லோகத்திலிருந்து எழுந்தருளி நம் உலகம் உய்ய தோன்றியவர்தானே நம் சற்குரு வெங்கடராமன் அவர்கள். பிலவ தமிழ் புதுவருடத்தில் இந்த அவதார அம்சங்கள் பூத்துக் குலுங்குவதே புது வருடப் பிறப்பின் மகத்தான மகத்துவமாகும். 13.4.2021 செவ்வாய்க் கிழமை இரவு 2.15 மணி அளவில் சூரிய பகவான் மேஷ ராசியில் எழுந்தருளி புது வருடப் பிறப்பை உணர்த்துவதால் அந்த லக்ன நேரம் குரு ஹோரையாகவும், செவ்வாய்க் கிழமையில் புதுவருடம் தோன்றுவதால் அது மங்கள வார அம்சங்களைக் கொண்டதாகவும், மேஷ ராசியில் சுக்ர பகவான் எழுந்தருளி இருப்பதால் அது கந்தர்வ அம்சங்களைக் குறிப்பதாகவும் இவ்வாறு புதுவருடப் பிறப்பு குரு மங்கள கந்தர்வ புது வருடமாகப் பொலிகிறது என்றால் நம்மை விடக் கொடுத்து வைத்தவர்கள் யார் ? எந்த அளவிற்கு இந்த குரு மங்கள கந்தர்வ அம்சங்களை இந்தப் புது வருடத்தில் நம் வாழ்க்கையில் இணைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் உறவுப் பகைகள், அலுவலகப் பகைகள், உற்றம் சுற்றத்தில் உள்ள பகைகள் அனைத்தும் வெல்லப்படும் அல்லது மறையும். இந்த தமிழ் வருடப் பிறப்பில் சுக்ர பகவானின் ஆதிக்கம் பெரும் சிறப்பு வாய்ந்ததாகும். பொதுவாக, சுக்ர பகவான் சூரிய பகவானுடன் பகை அம்சங்களுடன் துலங்குகிறார் என்பது ஜோதிட நியதியாக இருந்தாலும் உச்சம் பெற்ற சூரிய பகவானுடன் இணையும் சுக்ர அம்சங்களின் பலன் வேறானவையே. மேலும் ரிஷய ராசிக்கு உரிய சுக்ர பகவான் மேஷத்தில் எழுந்தருள அந்த ராசிக்கு உரிய செவ்வாய் பகவான் மிதுனத்தில் எழுந்தருள மிதுன ராசிக்குரிய பத பகவான் மீனத்தில் எழுந்தருளி சூரிய பகவானுக்கு ஆதித்ய யோகம் பூண்டு அணி சேர்ப்பதால் இது சுக்ர பகவானுக்கும் சாதக பலன்களை அளிக்கிறது. இதை சாம்ர சாமேய தத்துவம் என்று அழைப்பதுண்டு. அபூர்வமான இந்த சாம்ர சாமேய தத்துவ அம்சங்களை ஈர்க்கும் முகமாக சித்தர்கள் அருள்வதே இடுக்குப் புள்ளி கோலமாகும். பிலவ வருடப் பலனாக,

இடுக்குப் புள்ளி கோலங்கள்

இடுக்கில் புள்ளி
இடுப்பில் பிள்ளை
என்று சித்தர்கள் இரத்தினச் சுருக்கமாக அளித்துள்ளனர். பதினாறு அட்சரங்களுடன் துலங்கும் இந்த ஸ்ரீஅகத்திய நாடிப் பலன்களை அறிய வட்டமலையில் உள்ள 16 தூண்கள் வழிபாடு துணை புரியும் என்பதும் சித்தர்களின் பரிந்துரையாகும். இந்த அகத்திய நாடியை விவரிக்க முடியுமா என்று நம் சற்குருவிடம் கேட்டபோது, “ஓ, தாராளமாக விவரிக்கலாம். தெய்வீகத்தில் எதுவுமே முடியாதது என்று கிடையாது, நீ அப்படியே இங்கே உட்கார்ந்து இருக்க வேண்டும், அடியேனும் இங்கேயே அமர்ந்து ஒரு வருடம் சொன்னால் போதும் ...” என்று கூறினார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது ? நாடிகளின் பொருளை வார்த்தைகளில் தெரிந்து கொள்வதை விட அவரவர் தங்களால் இயன்ற வழிபாடுகளை மேற்கொள்வதும் ஒவ்வொரு வழிபாட்டை நிறைவேற்றிய பின்னும் அந்த வழிபாடுகள் குறித்து குறைந்தது ஒரு மணி நேரமாவது ஆத்ம விசாரம் மேற்கொள்வதும் நாம் ஆன்மீகத்தில் தொடர்ந்து முன்னேற வழி வகுக்கும். நம் சற்குரு தொடர்ந்து, “இருந்தாலும் நீ கேட்டு விட்டதால் உனக்கு ஒரு லிங்க் கொடுக்கிறேன். ஒரு ஊசி எவ்வளவுதான் அழகாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும் அதில் உள்ள காது உடைந்து விட்டால் அதனால் எந்த பிரயோசனமும் இல்லை, காது இருந்தால்தான் அது ஊசி, இதை ஆதாரமாக வைத்து உன்னுடைய ஆத்ம விசாரத்தை மேற்கொள் ...”, என்றார். பொதுவாக, ஒருவருடைய ஜாதகத்தில் மூன்றாம் இடம் காதைக் குறிக்கும். இந்த வருட கிரக சஞ்சாரத்தில் எழுந்தருளி உள்ள திர கும்ப ராசியிலிருந்து சூரிய பகவான் எழுந்தருளி உள்ள மேஷ ராசி என்பது காதைக் குறிக்கும் மூன்றாம் இடம்தானே ? ஊசி காதிற்கும் மனித காதிற்கும் முடிச்சு போடுவது போல் தோன்றும் இந்த முடிச்சை ‘அவிழ்த்தால்’ புது வருடப் பலன் பளிச் பளிச்.

ஸ்ரீஆஞ்சநேயர் கொப்புகொண்டமலை
ஏத்தாப்பூர்

இந்த புது வருடப் பலனை ஒரு வழிபாட்டின் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம். மாயவரம் அருகிலுள்ள திருவெண்காடு திருத்தலம் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்த போது தலம் முழுவதுமே சிவலிங்கங்களாக காட்சி அளித்தனவாம். உள்ள சென்று எப்படி இறைவனை வணங்கித் தொழுவது என்று புரியாமல் இறைவனை நோக்கி அழுதாராம் சம்பந்தர். குழந்தை அழுதால் தாய் மனம் பொறுக்குமா ? அம்பாள் தோன்றி சம்பந்தரைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு இறைச் சன்னதியில் சேர்த்து சுவாமி தரிசனம் பெற்றுத் தந்தாளாம். சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் என்ற மூன்று தீர்த்தங்கள் அபூர்வமாக அமைந்த இந்த கோயிலில் நீராடி இறைவனை வேண்டினால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது இன்றும் நாம் கண்டு களிக்கும் ஓர் ஆனந்தமே.

இந்த ஆனந்தத்தில் பங்கேற்றவர் வெகு நாட்கள் குழந்தை இல்லாமல் ஏங்கிய ஒரு வங்கி அதிகாரி என்பதும் உங்களை ஊக்குவிக்கும் ஒரு செய்தியே. காது உள்ள ஊசி என்ற ஆத்ம விசாரத்திற்கு அடுத்த கட்டத்தில் வருவதே இந்த திருவெண்காடு அம்பாள் அடியாரை இடுப்பில் சுமந்த கோலமாகும். ஆத்ம விசாரம் என்பது அனைவராலும் நிறைவேற்றக் கூடிய ஒரு இறை பூஜையாக அமையாததால் அனைவரும் சிறப்பாக பெண்கள் அனுசரிக்கக் கூடிய வழிபாடே கோலமாகும். இந்த வருடப் பிறப்பு மகரம் என்ற இரட்டைப் படை ராசியில் தோன்றுவதால் ஒற்றைப் படை, இரட்டைப் படை என்ற இரண்டு அம்சங்களையும் குறிக்கும் இடுக்குப் புள்ளிக் கோலங்களை இந்த வருடம் முழுவதும் ஆலயங்களில், இல்லங்களில், அலுவலகங்களில் வரைவது சிறப்பாகும். இங்கு அளித்துள்ள ஐந்து புள்ளி கோலம் முதற்கொண்டு அவரவர் வசதி வாய்ப்பைப் பொறுத்து எத்தனை வகையான, எத்தனை புள்ளிகள் உடைய கோலங்களை வேண்டுமானாலும் வரைந்து இறையருள் பெறலாம். இந்த கோலத்தில் வைக்கப்படும் புள்ளிகள் அனைத்தும் இடுக்குப் புள்ளிகளாக இருக்க வேண்டும் என்பதே சித்தர்கள் சிபாரிசு செய்யும் ஒரே விதியாகும். இங்கு அளித்துள்ள கோலங்கள் மாதிரிக்காக மட்டும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த கோலங்கள் ஏதாப்பூர் அருகிலுள்ள கொப்புகொண்ட பெருமாள் மலையில் இடப்பட்டாலும் அடியார்கள் தங்கள் வசதிக்கேற்ப எத்தலத்தில், இல்லத்தில், கிரிவலப் பாதைகளில் வேண்டுமானாலும் இட்டுப் பலன் பெறலாம். திருத்தலங்களில் கிரிவலப் பாதைகளில், மகான்களின் ஜீவசமாதிகளில் இடப்படும் இத்தகைய கோலங்கள் அவரவர் இல்லங்களில் மட்டுமின்றி சமுதாயத்தில் கணவன் மனைவி இடையே, முதலாளிகள் ஊழியர்கள் இடையே, கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் இடையே அன்பையும் அரவணைப்பையும் தோற்றுவிக்கும் என்பதை நடைமுறையிலேயே காண முடியும். கோலங்கள் என்பவை நாம் நினைப்பதுபோல் மக்களின் சமீபத்திய கண்டு பிடிப்பு கிடையாது. புராதன காலத்திலேயே ரிஷி பத்தினிகள் தங்கள் குடிசை வாசலில் பசுஞ் சாணத்தால் மெழுகி அதன் மேல் கல் உரலில் இடித்த பச்சரிசி மாவு கொண்டு கோலம் இடுவதை தங்கள் நித்திய பணியாக நிறைவேற்றி வந்தனர். கோலம் என்பது ஆடை அணிந்தோ, ஆடை இல்லாமலோ, ஏழையாகவோ பணக்காரனாகவோ, அன்புடையவனாகவோ, இரக்கமற்றவனாகவோ இவ்வாறு பல நிலைகளில் இருக்கும் மனிதப் பண்புகளையும் குறிப்பதுதானே. இவ்வாறு நீராடலுக்காகச் சென்ற ஸ்ரீகௌதம மகரிஷி அங்கு நதி உறங்குவதைக் கண்டு நீராடாமல் திரும்பி விட்டார் என்பதை நாம் அறிவோம். அப்போது குடிசையின் உள்ளே இருந்த மனைவியின் நிலையை வாசலில் முதல் நாள் இடப்பட்ட கோலமும் உறுதி செய்தது என்பதே சித்தர்கள் கூட்டும் தெளிவு.

இரட்டைப் பனை கொப்பு கொண்ட
மலை ஏத்தாப்பூர்

குறித்த தினங்களில் இவ்வாறு இடுக்குப் புள்ளி கோலங்களை இட்டு இல்லத்தில் மட்டும் அல்ல சமுதாயத்திலுமே தம்பதி ஒற்றுமையைத் தோற்றுவித்த உத்தம பத்தினியா மனம் தடுமாறுவாள் என்பதும் நாம் ஆத்ம விசாரம் செய்து புரிந்து கொள்ள வேண்டிய மூன்றாவது பொருளாகும். தற்போது திகழும் கொப்பு கொண்ட பெருமாள் மலையில் திகழும் தம்பதி பனை மரங்களை வலம் வந்து இந்த மரங்களை வழிபடும் முறையை முதன் முதலில் பூலோகத்தில் உணர்த்தியவளே அகலிகை தேவி ஆவாள் என்பதே இந்த வழிபாட்டின் சிறப்பாகும். எத்தனையோ தலைமுறைகளைக் கண்ட இந்த பனை மரங்களுக்கு மஞ்சள் குங்குமம் பூசி குறைந்தது 21 முறை தம்பதிகள் அடிப் பிரதட்சணமாக வலம் வந்து வணங்குவதால் நல்லருள் பெறுவர். ஒவ்வொரு பிரதட்சிண நிறைவிலும் இங்கிருந்தவாறே கொப்பு கொண்ட பெருமாள் மலையை சாஷ்டாங்கமாக வணங்குதல் சிறப்பே. அகலிகை இந்தப் பனைமரங்களை வழிபட்ட காலத்தில் பெருமாள் ஆலயமே இங்கு தோன்றாவிட்டாலும் சாட்சாத் மகா விஷ்ணுவே சங்கு சக்கரதாரியாய் இந்த மலை உச்சியில் அகலிகைக்கு காட்சி அளித்தார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். இன்றும் அகலிகையின் மன உறுதியைப் பறைசாற்றும் வண்ணம் இந்த இரட்டைப் பனையின் கீழ் பாறாங்கற்களைக் காணலாம். கொப்பு கொண்ட மலை என்று ஏத்தாப்பூர் திருத்தலத்திலுள்ள பெருமாள் மலை அழைக்கப்படுகிறது. கொப்பு என்பது அக்னியில் ஒரு வகையே. அகல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரி என்ற பஞ்ச கன்னிகைகளும் இந்த கொப்பு ஜோதியை இயற்கையிலேயே பெற்றிருந்தனர். பெருமாள் மூர்த்தி, முருகப் பெருமான் போன்ற அவதார மூர்த்திகளும் இந்த கொப்பு ஜோதியை அடியார்களுக்கு பிரசாதமாக அளிப்பது உண்டு. தேனிமலையில் உள்ள பாறைகள் இத்தகைய கொப்பு சக்திகளுடன் திகழ்கின்றன என்பதையும் நீங்கள் உணர்வீர்கள். எத்தகைய கொடிய நோய் நொடிகளைத் தீர்ப்பதுடன் தம்பதிகளிடையே ஒற்றுமையை வளர்ப்பதும் இந்த கொப்பு ஜோதியின் மகிமைகளில் சிலவாகும். தொடர்ந்து இந்த கொப்பு கொண்ட மலையில் ஏறி மலை உச்சியில் அருளாட்சி செய்யும் ஸ்ரீகொப்பு கொண்ட பெருமாள் மூர்த்தியை தரிசனம் செய்து வருவதும் கொப்பு அக்னி சக்தியை எளிதில் பெறும் முறையாகும். 2000 படிகளுக்கு மேல் இருக்கும் இந்த மலையில் ஏறி தரிசனம் செய்வது குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் சாத்தியாம் ஆகுமா என்று நாம் நினைத்து யோசித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு இளைஞன் மூன்றாவது முறையாக இந்த உயரமான மலையில் ஏறி இறங்கும் அதிசயத்தைக் கண்டோம் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆரம்பத்தில் நம்மால் இயலாது என்று நாம் நினைத்து ஒரு நற்காரியத்தை நிறைவேற்றாமல் பின் வாங்கினாலும் நமது பித்ரு மூர்த்திகள் அந்த நற்காரியத்தில் நம்மை ஊக்குவிப்பார்கள் என்பதை பித்ருக்கள் நாயகனான பெருமாள் உறையும் இத்தலத்தில் நாம் கண் கூடாகக் கண்டு இன்புற்றோம். எப்படி ஐயர்மலையில் ஸ்ரீஊக்கந்தரும் விநாயகர் (தற்போது பக்தர்களால் உகந்தான்படி விநாயகர் என்றும் அழைக்கப்படுகிறார்) உயரமான மலையில் ஏற வயதானவர்களுக்கும், உடல் பலவீனமானவர்களுக்கும் சக்தி, ஊக்கம் அளித்து அவர்களை இறை வழியில் முன்னேறிச் செல்ல உதவுகிறாரோ அதே போல இங்கு கொப்பு கொண்ட பெருமாள் மலையில் இடையே உள்ள முருகப் பெருமானும் பக்தர்களுக்கு ஊக்கம் அளித்து பெருமாளை தரிசனம் செய்ய ஊக்கம் அளிக்கிறார். கடுமையான வெயில் நேரத்திலும் இங்கு நீங்கள் காணும் பைரவ வாகனமான நாய் அடியார்களுடன் ஏறி வந்து அவர்கள் இளைப்பாறும் இடங்களில் எல்லாம் தங்கி இறுதியில் அவர்களுக்கு வீரபாகு மூர்த்தியாய் தரிசனம் அளித்த தெய்வீக திருவிளையாடலையும் இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

ஸ்ரீவீரமுருகன் கொப்புகொண்டமலை
ஏத்தாப்பூர்

கொப்பு கொண்ட மலையில் பெருமாள் மூர்த்தியின் தரிசனம் பெற துணை புரிபவர் மட்டுமல்ல இத்தல ஸ்ரீவீரமுருகன். முருகப் பெருமான் சூரபத்மனை எதிர்த்துப் போர் புரிந்தபோது கலிபந்தனன் என்ற அசுரனிடம் சிக்கி மாட்டிக் கொண்ட வீரபாகு தன்னை அந்த அசுரனிடமிருந்து மீட்குமாறு முருகப் பெருமானை வேண்டினார். வீரபாகுவின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து தன்னைக் காப்பாற்றிய முருகப் பெருமானுக்கு வீரபாகு நன்றி செலுத்திய தலமே கொப்பு கொண்ட மலை திருத்தலமாகும். இன்றும் முருகப் பெருமானை தரிசனம் செய்ய விழையும் பக்தர்களுக்கு நாய் வடிவில் வழித் துணையாய் வந்து காக்கின்றார் என்பதன் தெய்வீக சாட்சியாக விளங்குவதே இங்கு நீங்கள் காணும் புகைப்படக் காட்சியாகும். கொப்பு அக்னி என்ற அற்புத அக்னியை பக்தர்களுக்கு பிரசாதமாக அளிப்பவரே இத்தல ஸ்ரீவீரமுருகன் ஆவார்.

சிறுவயதில் முறையற்ற காமக் கேளிக்கைகள் போன்ற தவறுகளால் தங்கள் வீரிய சக்தியை இழந்தோர் ஸ்ரீவீரமுருகனை வேண்டி ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் இங்கு படியேறி வந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து இங்குள்ள வீரபாகுவின் அம்சமான நாய்களுக்கு பொறை, பிஸ்கட் போன்ற உணவுகளை தானம் அளித்து வருதலால் நற்பலன் பெறுவார்கள் என்பது உறுதி. ஆனால், இந்த பிராயசித்த முறை முறையான திருமண வாழ்வை மேற்கொள்வோருக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். கரணம் தப்பினால் மரணம் என்பது எங்கு செல்லுபடியாகிறதோ இல்லையோ இவ்விஷயத்தில் மாறாத் துன்பத்தை அளிக்கும் என்பதையும் மக்கள் நினைவில் கொள்ளுமாறு சித்தர்கள் எச்சரிக்கிறார்கள். கடுமையான நோய்கள், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், திருமணம் ஆகாமை, முதுமையால் ஆதரவற்ற நிலை என்ற எத்தகைய கலியுகத் துன்பங்களால் வாடுவோரும் கொப்பு கொண்ட மலையில் எழுந்தருளிய ஸ்ரீவீரமுருகனை வழிபட்டு தங்கள் துன்பங்கள் தீர விடிவு, விடியல் காணலாம். படியாய்க் கிடந்து நின் பவள வாய் காண்பேனா என்று கதறிக் கண்ணீர் விட்டவர்கள் ஆழவார் பெருமக்கள் மட்டுமல்ல, இறைவனின் மகிமையை பெருமையை ஒரு சிறிதும் உணர்ந்தாலும் அடுத்து அவர்கள் இறை பக்தர்களின் திருவடிகளைத் தாங்குவதையே பெரும்பாக்கியமாக கிடைத்தற்கரிய பேறாகக் கருதுகிறார்கள். இம்முறையில் 14 மனு மூர்த்திகளுமே கொப்பு கொண்ட பெருமாள் மலையில் படியாய்க் கிடந்து பவளவாய் காண்பதையே இங்கு நாம் கண்டு களிக்கிறோம். 14 என்ற எண்களின் கூட்டுத் தொதை இந்த 2021 வருடத்திற்குரிய எண் கணித சூத்திரத்தில் அமைவதால் எவ்வருடத்தையும் விட இவ்வருடம் கொப்பு கொண்ட பெருமாள் மலையின் மனுநாதம் என்ற 14 படிகளும் பெரும் சிறப்பைப் பெறுகின்றன. அமாவாசை, போதாயன அமாவாசையின் இரு தினங்கள், ஷன்னவதி தர்ப்பண நாட்கள், சனிக் கிழமை நாட்களில் ஏத்தாப்பூர் திருத்தலத்தில் பொலியும் வசிஷ்ட நதியில் நீராடித் தர்ப்பணம் அளித்து பின்னர் கொப்பு கொண்ட பெருமாளின் தரிசனம் பெறுதல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே. உத்தம மனு, தாமச மனு, வைவஸ்த மனு என்பதாக பதினான்கு மனுக்களுமே கொப்பு கொண்ட பெருமாள் மலை ஆலயத்தில் வாசல் படிகளாக அமர்ந்துள்ளனர் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் உண்மையாகும். திருப்பதி படிக்கட்டுகள், சபரி மலையின் 18 படிக்கட்டுகள் போல் இந்த மனுநாத 14 படிக்கட்டுகளுமே சொற் பொருள் கடந்த வேத சக்திகளை அளிக்கவல்லவையே. பாசுமதி அரிசி மாவால் இந்த 14 படிக்கட்டுகளிலும் கோலமிட்டு மேற்கூறிய நாட்களில் வழிபடுதல் சிறப்பாகும்.

உத்தம மனு நீதி பக்தர்கள் கோடி கோடியே. பிரம்மா என்பவர்களே காவிரி மணலிலும் பலவாக பெருகி விரிந்து கிடப்பதைப் போல் உத்தம மனுக்களும் தாங்கள் ஒரு மனுவாய் இறையருளால் பதவி ஏற்கும் முன் ஸ்ரீகொப்புகொண்டபெருமாள் மூர்த்தியை தரிசனம் செய்தே இந்த தகுதிக்கு தங்களை உரியவர்களாய் ஆக்கிக் கொள்கிறார்கள் என்பதே இந்த பெருமாள் மூர்த்தியின் சிறப்பாகும். சுக்ராச்சாரியார் தன் ஆருயிர் சீடனான மகாபலியை வாமன மூர்த்தியிடமிருந்து காப்பதற்காக வண்டு வடிவில் தோன்றி வாமனரின் கமண்டலத்தை அடைத்து விட்டார். அதை அறிந்த வாமன மூர்த்தி தன் கையிலிருந்த தர்பையால் சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குத்தவே கண் பார்வை இழந்த சுக்ராச்சாரியார் திருஅண்ணாமலை உள்ளிட்ட பல திருத்தலங்களை வலம் வந்து தன் கண் பார்வையைப் பெற்றார் என்பதை உங்களில் ஒரு சிலர் அறிந்திருக்கலாம். “ஊனை ஊனே உண்ணும் ...” என்ற தத்துவத்தின் அடிப்படையில் தர்பையால் கண் பார்வை இழந்த சுக்ராச்சாரியார் இந்த திருத்தலத்தில் தர்பை வழிபாட்டின் மூலமே தன் கண் பார்வையை மீண்டும் பெற்றார் என்பதே நீங்களே இந்நேரம் உணர்ந்திருப்பீர்கள் அல்லவா ? அது மட்டுமல்லாமல் துலா ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் பத்தாம் நாள் என்பது ஐப்பசி மாத பத்தாம் தேதிதானே. இந்தத் தேதியில்தானே சூரியன் நீச்ச அம்சங்களுடன் பிரகாசிக்கிறார். இதே தேதியில்தான் ஏத்தாப்பூர் ஸ்ரீசாம்ப மூர்த்தி ஈசனுக்கும் சூரிய பூஜை நிகழ்கிறது. இந்த வரலாற்று, புராதன நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றாகக் கோர்த்து மாலையாக்கி அதை இறைவனுக்குச் சூட்டினால் அதை விடச் சிறந்த ஒரு பக்தி மாலை வேறு எதுவும் உண்டா என்ன ?

ஸ்ரீகொப்புகொண்டமலை பெருமாள்
ஆலயம் ஏத்தாப்பூர்

ஒருவர் ஜனன ஜாதகத்தில் லக்னத்திலிருந்து சந்திர லக்னத்திலிருந்து பத்தாம் இடம் ஆளுமை, புகழ், கீர்த்தி, பதவி இவற்றைக் குறிப்பது. ஸ்ரீராமரைப் போல் பத்தாம் இடம் பலம் பெற்றவர்கள் எவருமே இல்லை என்றாலும் மனிதர்கள் ஓரளவு பத்தாம் இடம் பலமாக அமைய அருள் புரிபவரே ஏத்தாப்பூர் ஸ்ரீசாம்ப பரமேஸ்வர மூர்த்தியாவார். இத்தகைய பலன்களை மக்களுக்கு அருள்வதற்காகவே, இறைப் பிரசாதமாக அள்ளி வழங்குவதற்காகவே சூரிய பகவான் இத்தலத்தில் துலா மாதமான ஐப்பசியில் பத்தாம் தேதியில் சூரிய பூஜை நிகழ்த்துகிறார். சூரிய பகவானுடன் சனீஸ்வர பகவான், சப்த ரிஷிகள், அவதார மூர்த்திகள், நவகிரக மூர்த்திகள் போன்ற எண்ணற்ற தெய்வீக மூர்த்திகள் பங்கேற்கும் அற்புத திருவிழாவே ஏத்தாப்பூர் திருத்தலத்தில் நிகழும் சூரிய பூஜை நிகழ்ச்சியாகும். ஐப்பசி மாதம் 10 முதல் 16 தேதிகளிலும், மாசி மாதம் 1 முதல் 7 தேதிகளிலும் சூரிய பூஜை இறைவனுக்கு நிகழ்கிறது என்பது ஒரு தோராயக் கணக்காகும். அவரவர் நம்பிக்கை குரு வழிகாட்டுதல், அவதாரக் கிருத்தியங்கள் போன்ற எண்ணற்ற பின்னணிகள் இந்த கால நேர அம்சங்களை மாற்றி அமைக்கக் கூடும் என்பதையும் பக்தர்கள் புரிந்து கொள்தல் நலமாகும். சூரிய பகவானின் அற்புத தன்னலமற்ற சேவையால் மகிழ்ந்த அதிகார நந்தி மூர்த்தியே சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து ஒரு யுக காலம் முழுவதும் இத்தலத்தில் உள்ள சூரிய பகவானுக்கு வாகனமாக அமையும் பேறு பெற்றார் என்றால் தியாகத்தில் உயர்ந்தவர் சூரிய பகவானா அதிகார நந்தி மூர்த்தியா ? அதை அந்த சாம்ப மூர்த்தியே அறிவார். பதவிச் செருக்கால், அதிகார மமதையால் பல தவறுகளைச் செய்வோர் தாங்கள் தவறு செய்யும் காலத்தில் அந்தத் தவற்றின் விளைவுகளை அறிய முடியாது என்பது இயற்கையே என்றாலும் காலம் கடந்த பின்னராவது தங்கள் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொள்ள அருள்புரிவதே நந்தி வாகனத்துடன் ஏத்தாப்பூர் திருத்தலத்தில் அருள்புரியும் சூரிய பகவானின் மகிமையாகும். வருடத்தில் இரண்டு முறை ஏழு நாட்களுக்கு நிறைவேறும் இந்த சூரிய பூஜையில் ஏழு வண்ண தேவதைகளும் பங்கேற்கின்றனர், அதாவது ஏழு வண்ணக் குதிரைகளும் தங்கள் சக்திகளை அருள்கின்றனர் என்பதும் இதன் பின்னணியில் அமைந்த இரகசியமாகும். துலா மாதமான ஐப்பசி மாதத்திற்கு உரிய நீதி தேவதையின் ஆடை வெண்மை நிறம் உடையது. மாசி மாதத்திற்கு சனி பகவான் ஆட்சி பெற்றவர் ஆகிறார். இந்த அடிப்படை ஜோதிட விஷயங்களைக் கருத்தில் கொண்டு ஐப்பசி மாத சூரிய பூஜையில் ஆரஞ்சு, வெண்மை, சிவப்பு, பச்சை, மஞ்சள், ஊதா, நீலம் என்ற ஏழு வெளிர் வண்ண (light shade) ஆடைகளையும், மாசி மாத சூரிய பூஜையில் ஏழு கருவண்ண ஆடைகளையும் (dark shade) ஸ்ரீசாம்ப மூர்த்தி, ஸ்ரீமனோன்மணி தேவி, ஸ்ரீசகஸ்ரலிங்கம், ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி ஆகிய ஐந்து மூர்த்திகளுக்கும் வரிசைக் கிரகமாக அணிவித்து பூஜித்தல் சிறப்பாகும். உணவுப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றில் இவ்வருடம் கலப்படம் அதிகம் நடைபெறும் வாய்ப்புகள் இருப்பதாக சித்தர்கள் தெரிவிப்பதால் இத்தகைய சீர்கேடுகளிலிருந்து காத்துக் கொள்ளும் ஒரே இரட்சையே இந்த வார வண்ண ஆடை வழிபாடாகும். இந்த வார வண்ணங்களில் அமைந்த உணவுப் பொருட்களை தானம் அளிப்பதும் பூச்சி மருந்து, இரசாயன உரம் போன்ற கொடுமைகளிலிருந்து மக்கள் விடுபட்டு ஆரோக்கியத்துடன் திகழ ஓரளவு வழிபிறக்கும். இதில் ‘ஓரளவு’ என்ற வார்த்தையை சற்றே விவரிப்போம்.

ஸ்ரீசூரிய பகவான்
ஏத்தாப்பூர் சிவாலயம்

ஒரு முறை நம் ஆஸ்ரமத்தில் அடியார்கள் சேவை செய்வதைப் பற்றி வினா எழுந்தபோது நம் சற்குரு, “சார், நீங்கள் இங்கு மூன்று வேளைக்குக் குறையாமல் உணவு ஏற்கிறீர்கள், மூன்று வேளைக்குக் குறையாமல் காபி, பால், தேநீர், சிற்றுண்டி போன்ற உணவு வகைகளை ஏற்கிறீர்கள். இந்த சுவையான, ஆரோக்கியமான உபசாரம் வேறு எங்கும் நீங்கள் கனவிலும் பெற முடியாத ஒரு பாக்கியம் ஆகும். இவ்வளவு கொடுமையான கால கட்டத்திலும் நீங்கள் ஏற்கும் உணவில் உங்களுக்கு 75 சதவீதம் புண்ணிய சக்தி கிடைக்கிறது என்றால் இந்த அபரிமிதமான புண்ணிய சக்தியை நீங்கள் வேறு எங்காவது பெற முடியுமா ?” என்று கேட்டார். அப்போது அங்கிருந்த ஒரு அடியார் தயங்கிக் கொண்டே, “வாத்யாரே, 75 சதவீதம் புண்ணிய சக்தி என்கிறீர்களே, ஏன் நூறு சதவீதம் புண்ணிய சக்தி இத்தகைய உத்தமமான ஆஸ்ரமத்தில் கூட அகத்தியரின் திருவருளால் கிடைக்காதா ?” என்று கேட்டார். நம் சற்குரு அந்த அடியாரை சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு, “சார், நீங்கள் நினைப்பதுபோல் 75 சதவீத புண்ணிய சக்தி என்பது இந்த யுகத்தில் கிட்டும் ஒரு சாதாரணமான சாதனை அல்ல. ஒரு கத்திரிக்காயை எடுத்துக் கொண்டால் அது விளைவதற்கு தேவையான நிலம் எப்படி வந்தது, அங்கு பாயும் நீரின் தன்மை என்ன, யார் அந்த நீர் பாய்ச்சும் பணியை மேற்கொள்கிறார்கள், அவர்களின் பழக்க வழக்கம் என்ன, அந்த நிலத்தில் போடப்படும் உரங்கள், பூச்சி மருந்துகளின் தன்மை என்ன, அந்தப் பூச்சி மருந்துகள், உரம் எப்படி கடனாக அரசாங்கத்திலிருந்த அல்லது தனி நபர்களிடமிருந்து பெறப்பட்டனவா, அந்த தனி நபர்களின் உத்தேசம் என்ன இது போன்ற ஆயிரக் கணக்கான, இலட்சக் கணக்கான அம்சங்கள் தூய்மையாக இருந்தால்தான், அதாவது தன்னலம் கருதாத தகைமையுடன் இருந்தால்தான் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு முழுமையான புண்ணிய சக்தியை ஒரு உணவுப் பதார்த்தத்திலிருந்து பெற முடியும். அது மட்டுமல்லாமல் அந்தப் பொருள் அறுவடையாகி நீங்கள் உணவாக அதைப் பெறுவதற்குள் எத்தனை ஆயிரம் ஆயிரம் கைகளை அந்த உணவுப் பொருள் கடந்து வந்திருக்கும், அந்த உணவுப் பொருட்களைத் தீண்டியவர்களின் எண்ணத்தின் பிரதிபலிப்பும் அந்த உணவில் கலந்துதானே இருக்கும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு பார்த்தால் புண்ணியம் என்பதே மைனஸ் கணக்கில் அல்லவா சென்று விடும். ஆனால், இவ்வளவு கொடுமையான ஒரு உணவுப் பொருளை அண்ணாமலையானுக்கு நைவேத்யமாகப் படைக்கும் அந்த ஓரிரு விநாடிகளுக்குள் அதைப் பிரசாதமாக மாற்றி உங்களுக்கு இறைவன் வழங்குகிறான் என்றால் அவன் கருணைதான் என்னே ? இதை ஒரே ஒரு துளி நீங்கள் உணர்ந்தால் போதும், நீங்கள் அனைவரும் இங்கேயே நிரந்தரமாகத் தங்கி விடுவீர்கள் ...”, என்று சிரித்துக் கொண்டே தன் பதிலை பூரணம் செய்தார் நம் சற்குரு.

சூரிய பூஜை எனும் குடும்ப பூஜை

முற்காலத்தில் இறைவனுக்கு நிகழ்த்தப்படும் பூஜை என்பது ஒரு குடும்ப பூஜையாகவே நிகழ்ந்தது. ஆனால், தற்காலத்தில் வேலை, அலுவல், கூட்டுக் குடும்ப அமைப்பின் மறைவு போன்ற பற்பல காரணங்களால் பூஜை என்பது ஒரு வீட்டுத் தலைவரின் தனிப்பட்ட பொறுப்பாக அமைந்து விட்டது. ஒரு வீட்டுத் தலைவரின் இறை வழிபாடே அந்தக் குடும்பம் முழுவதையும் காக்கும் சக்தி பெற்றது என்றாலும் தற்போது பெருகி வரும் தீய ஒழுக்கங்கள், வாகன அதிகரிப்பு, இரவுப் பயணங்கள், உணவில் கலப்படம் போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே இறை பூஜையில் பங்கேற்றால்தான் முழுமையான பாதுகாப்பை அந்தக் குடும்பம் பெற முடியும். இதை அறியாதவர்களா நம் முன்னோர்கள் ? கலியுகத்தின் இந்த அவல நிலையை கணக்கில் கொண்டே எத்தனையோ கோடி யுகங்கள் முன்பே ஸ்ரீசாம்ப மூர்த்திக்கு நிறைவேறும் சூரிய பூஜையில் அவர்தம் மைந்தனும் கலந்து கொள்வதாய் அமைந்து இத்தகைய குடும்ப பூஜைகளில் இறை மூர்த்திகளே, இறை அவதாரங்களே பங்கேற்று நல்வழி காட்டி வருகின்றனர். இதுவும் ஏத்தாப்பூர் திருத்தலத்தில் நிகழும் சூரிய பூஜையின் மகத்துவமாகும்.

ஸ்ரீசகஸ்ரலிங்கம்
ஏத்தாப்பூர் சிவாலயம்

இந்த உலகத் தோற்றத்திற்கு ஆதாரமான விஷயங்களை மட்டும் அல்லாது ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள பிணைப்பையும் இணைப்பதே ஏத்தாப்பூர் சிவாலயமாகும். இந்தப் பூமி உலக்கை வடிவில் சுழல்வது என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் கருத்து. இந்த உண்மையை உணர வழிவகுப்பதே ஏத்தாப்பூர் சிவாலய அமைப்பாகும். நிருதி மூலையில் அமைந்த சகஸ்ர லிங்கம், நிருதி விநாயகர், தூய ஈசான்ய மூலையில் விளங்கும் சூரிய பகவான், சனீஸ்வர மூர்த்தி இவர்கள் இடையே நடுநாயகாக வீற்றிருக்கும் ஸ்ரீசாம்ப மூர்த்தி, இறைவனுக்கு சேவை செய்யும் முகமாய் தெற்கு நோக்கிய தேவியாய் அமைந்து அருள்புரியும் ஸ்ரீமனோன்மணி அம்பிகை என்ற அமைப்பைப் பார்த்தால் உலக்கை அமைப்பான உலக அமைப்பு பளிச்சென உங்களுக்குப் புரியும். நவகிரகங்களில் நாயகர் சூரிய பகவான். அவர் நீசம் கொள்ளும் துலா ராசியில் உச்சம் கொள்கிறார் அவர் மைந்தன் சனீஸ்வர பகவான். அவர் ஆட்சி வீடான கும்ப ராசியிலும் உச்சம் கொள்ளும் துலா ராசியிலும் சூரியன் எழுந்தருளும் காலத்தில்தானே சூரிய பூஜை நிகழ்கிறது. இதுவே ‘குடும்ப பூஜை’ என்ற நிரந்தரத் தத்துவம். இவ்வாறு உலகம், இறைவன், நவகிரக மூர்த்திகள் என்ற தத்துவங்களை மந்திர பூர்வமாக தர்பை என்ற உபாயம் மூலம் இந்த தத்துவத்தை அடிப்படையாக உடைய மூன்று குழந்தைகள் மூலம் இணைக்கும் தெய்வீகத்தையே நீங்கள் இங்கு அளித்துள்ள வீடியோவில் காண்கிறீர்கள் என்பதே மிகப் பெரிய தத்துவத்தையும் மிக எளிமையாக அர்ப்பணிக்கும் சித்தர்களின் கோட்பாடாகும். இந்த சிருஷ்டி தத்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ளதே
கன்னி மூலையில் காரண ஈசன்
ஈசான்யத்தில் எழுவதோ அவன் பதம்
நன்னி நீ நலமுடன் தொழுதால்
எண்ணில் வினைகள் விண்ணில் கழியுமே
என்ற நாடிப் பாடலாகும். இந்த நாடிப் பாடலை தொடர்ந்து ஓதி ஆத்ம விசாரம் செய்து வருவதன் மூலமும், ஏத்தாப்பூர் திருத்தலத்தில் தொடர்ந்து வழிபாடுகள் இயற்றி வருவதாலும், தர்பை உபாயம் கொண்டு காயத்ரீ மந்திரங்களையோ அல்லது சுயநாம ஜபத்தின் மூலமோ தன்னுள் இருக்கும் இறை சக்தியை வழிபட்டு வருவதாலும் சிருஷ்டி இரகசியங்களை அறிந்து அதை சமுதாய நலனுக்காக அர்ப்பணிக்கலாம் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும். ஏத்தா என்றால் எவரும் தூண்டாத, ஏற்றாத சுயம்பு தத்துவம் என்று பொருள். இந்த உலகத் தோற்றம் அனைத்திற்கும் காரணமாய் ஈசன் இருக்கும் தத்துவத்தையே சுயம்புலிங்க மூர்த்தியாய், காரண ஈசனாய், என்றும் இயங்கும் கிரக தத்துவமாய், எப்போதும் ஒளி விடும் சூரிய சக்தி தத்துவாய் விளக்குவதே ஏத்தாப்பூர் திருத்தலமும் அதில் நிறைவேறும் சூரிய பூஜையும் ஆகும்.

ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி
ஏத்தாப்பூர் சிவாலயம்

மனிதர்கள் நடக்கும்போது அவர்கள் நிழல் தரையில் விழுவதைக் காணலாம். ஸ்ரீவள்ளலார் சுவாமிகள் போன்ற உத்தமர்கள் நடக்கும்போது அவர்கள் நிழல் தரையில் விழாது. மனிதர்களின் கர்ம வினையே நிழலாக அவர்களைத் தொடர்வதால் சாதாரண மனிதர்களுக்கு நிழல் உருவம் ஏற்படுகிறது. நம் சற்குரு போன்ற உத்தமர்களோ மற்றவர்களின் கர்ம வினைகளை ஏற்றே இந்த பூமியில் உலா வருவதால் அவ்வாறு கர்ம வினை பெற்ற நிழல் உருவங்களே மகான்களின் ‘நிழல் போன்ற’ தோற்றங்களை உருவாக்குகின்றன. ஏத்தாப்பூர் திருத்தலத்தில் எதிரில் உள்ள ஆலமரத்தில் கருங்குருவிகளின் நடமாட்டத்தை அதிகம் காணலாம். இறை நம்பிக்கை உள்ள மனிதர்களின் கர்ம வினைகளை எல்லாம் சனீஸ்வர பகவான் ஏற்று இந்த கருங்குருவிகள் மூலம் தினமும் காலையில் உதிக்கும் சூரிய பகவானிடம் அர்ப்பணிக்க சூரிய பகவான் இந்த கர்ம வினைகளை தன் கதிர்கள் மூலம் இறைவனிடம் அர்ப்பணிக்க அவரவர் தகுதியைப் பொறுத்து, இறைவழிபாடுகளின் தன்மையைப் பொறுத்து இறைவன் இந்த கர்ம வினைகளைக் கழித்து அருள்புரிகிறார் என்பதே ஏத்தாப்பூர் திருத்தலத்தில் பொலியும் ஆலமரத்தின் தன்மையும் சனீஸ்வர பகவானின் அனுகிரகமும் ஆகும். உதாரணமாக, இங்குள்ள புகைப்படத்தில் நிழலே இல்லாத படிக்கட்டுகளில் நிழலைத் தோற்றுவிக்கும் அனுகிரகமே சனீஸ்வர மூர்த்தியின் தனித்த அனுகிரகங்களில் ஒன்றாகும். இதை உணர்ந்தால் ஏதாப்பூர் திருத்தலத்தை விட்டு உங்கள் நிழலும் அகலாது. சிவாலயம் திறந்திருக்கும் நேரத்தில் மட்டுமே சனீஸ்வர பகவானையோ மற்ற மூர்த்திகளையோ வழிபட முடியும் என்றாலும் ஆலயத்தின் எதிரே துலங்கும் இந்த கருங்குருவி ஆலமரத்தையும் அருகிலுள்ள வசிஷ்ட நதியையும் இரவு பகல் எந்நேரமும் வழிபட்டு பயன் பெறலாம் என்பதே சாம்ப மூர்த்தியின் சௌம்ய அனுகிரகமாகும். சௌம்ய என்பதற்கு பலவிதமான பொருட்கள் உண்டு. மென்மையான என்பதும் சௌம்யம் என்னும் சொல்லைக் குறிப்பதால் சூரியனும் சந்திரனும் இணையும்போது ஏற்படும் நவகிரக சக்திகளை சௌம்ய சக்திகள் என்று அழைக்கிறோம். சௌம்ய நாராயண பெருமாள் என்று பெருமாள் மூர்த்தியை அழைக்கும்போது சுவாமி இத்தகைய அர்த்தநாரீஸ்வர சக்திகளை அனுகிரகமாக அளிக்கிறார் என்பதே பொருள். நாகப்பட்டினம் அருகிலுள்ள திருக்கண்ணபுரம் திருத்தலத்தில் அருள்புரியும் இத்தகைய சௌம்ய சக்திகளை அளிக்கும் ஸ்ரீசௌரி ராஜனாக பெருமாள் அருள்புரிகிறார். மூன்றாம் பிறை நட்சத்திர நாட்களில் இங்குள்ள திருக்குளத்தில் நீராடுவதால் இத்தகைய சௌம்ய சக்தி இரகசியங்களை அறிந்து கொள்ள பெருமாள் அனுகிரகம் கிட்டும் என்பது சித்தர்களின் பரிந்துரை. இப்புதுவருடம் தோன்றும் மேஷ ராசியின் பத்தாம் ராசியான கும்ப ராசியில் குரு பகவான் வீற்றிருப்பது இத்தகைய சௌம்ய சக்திகளை பெறும் வழிபாட்டிற்கு உரியதாக அமைகிறது. பத்து பலமானால் ராஜயோகம் என்பது ஜோதிட விதி. இந்த பத்தாம் இடத்தில் சனி பகவான் வீற்றிருந்து பதினோன்றாம் இடத்தில் சனி பகவானுக்கு உரிய கும்ப ராசியில் குரு பகவான் நிலை கொண்டிருப்பது என்றால் அதனால் கிட்டும் ‘ராஜயோக சம்பத்துகளை’ அறுவடை செய்யவே பக்தர்கள் அனைவரும் இந்த பிலவ வருடம் தோன்றும் 14.4.2021 புதன் கிழமை அன்று ஏத்தாப்பூர் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றி சௌம்ய அனுகிரகங்களை பெறும்படி கேட்டுக் கொள்கிறோம். சூரிய பூஜைக்குரிய சிறப்பான தலமாக ஏத்தாப்பூர் திருத்தலம் திகழ்வதால் சூரிய ஒளியில் திகழும் 49 வண்ணங்கள் உடைய புது வஸ்திரங்களை இங்குள்ள இறை மூர்த்திகளுக்கு அணிவித்தல் சிறப்பாகும். ஒவ்வொரு வண்ணத்திலும் ஏழு வண்ணங்கள் (light and dark shades) பொலியுமாறு ஆடைகளை அணிவித்தல் மனித முயற்சியில் விளையக் கூடிய வண்ணக் கோலமாகும்.

கருங்குருவி சாளரம்
ஏத்தாப்பூர் சிவாலயம்

வசிஷ்ட நதி
ஏத்தாப்பூர் சிவாலயம்

சௌம்ய சக்திகள் என்பவை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத தெய்வீக நிலையாகும். இதை உதாரணங்களால் மட்டுமே ஓரளவு இங்கு விளக்குகிறோம். உணர்வு பரிபூரணமாக பொலியும்போது வெளிப்படையாக எந்த மாற்றமும் தோற்றமும் இல்லாமல் இருப்பதே சௌம்ய நிலையாகும். மாமன்னன் ஒருவன் இருந்தான். உலகம் மாயை என்று தோன்றியதால் அதை வெறுத்து காட்டில் தவமியற்றப் புகுந்தான். ஒரு நாள் ஆற்றில் வழிபாடுகள் இயற்றிக் கொண்டிருந்தபோது ஏந்திய அவர் கைகளில் புலிக்குப் பயந்த மான் ஒன்று குட்டியை ஈந்து விட்டு இறந்து விட்டது. அந்த மான் குட்டியை வளர்ப்பதிலேய தன் எஞ்சிய வாழ்நாளைக் கழித்த அந்த அரச மகான் மறுபிறவியில் தான் எதிலும் கருத்தைச் செலுத்தாத உத்தம ரிஷியாக மலர்ந்தார். அவர் ஜடபரதர் என்று பிற்காலத்தில் மக்களால் புகழப்பட்டார். மலஜலம் கழிக்கக் கூட தன் இடத்தை விட்டு நகராமல், அன்ன ஆகாரத்தைப் பெறக் கூட எந்த வித முயற்சியும் செய்யாத இந்நிலையே ஜடம் போன்ற வெளித் தோற்றத்தையும் உள் மனதில் பரத கலையைச் சாதுர்யமாக இடைவிடாது பயிலும் நிலையையும் ஒருங்கிணைத்த நிலையில் திகழ்ந்தவரே ஜடபரதர். ஜட நிலைக்கு மற்றோர் உதாரணம். ஒரு இளம் பெண் பருவக் கோளாறு என்ற ஆற்றில் விழுந்து திருமணத்திற்கு முன் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். சமுதாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு புத்த துறவியைக் காட்டி இவர்தான் என்னுடைய குழந்தைக்கு தகப்பன் என்று கூறி முறையிடவே அந்த துறவியும் எந்தவித மறுப்பும் கூறாமல் அந்த பச்சிளம் குழந்தையை ஏற்றுக் கொண்டு அதைப் பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தார். காலம் கடந்து புயலுக்குப் பின் அமைதி தோன்றிய பின் அதே இளம் பெண் தன்னுடைய காதலனை உலகிற்கு அடையாளம் காட்டி அந்த குழந்தையைத் தன்னிடமே ஒப்படைக்குமாறு கேட்க எவ்வித ஆட்சேபனையும் இன்றி அந்தத் துறவியும் மறு கணமே அந்தக் குழந்தையைப் பெற்றோர்களிடம் அளித்து விட்டார். இவ்வாறு எந்த நிலையிலும் மனத்தில் எவ்வித சஞ்சலமும் சலனமும் இன்றி அவரவர் கடமையை நிறைவேற்றுவதே சௌம்ய நிலையாகும். இந்த உத்தம நிலையை அனுகிரகமாக அளிக்கவல்ல மூர்த்தியே ஏத்தாப்பூர் ஸ்ரீசாம்ப பரமேஸ்வர சிவ மூர்த்தியாவார். ஸ்ரீகௌதம ரிஷியின் பத்தினியான அகலிகை சாப விமோசனம் பெற உதவிய தலம் ஏத்தாப்பூர் என்பது நீங்கள் அறிந்ததே. தவறு என்பது ஒருவர் பொறுப்பல்ல. அகலிகை நிலை தடுமாற நாம் காரணம் காட்டும் விதியும் இந்திரனால் ஏற்பட்டதே. இராவணன் இறைவனின் அழகைக் காண பத்து கண்களைப் பிரசாதமாகக் கேட்டதுபோல் இந்திரனும் இறைவனின் தேஜோமய அழகைத் தரிசிக்க ஆயிரமாயிரம் கண்களைக் கேட்டான். இது அவனுடைய தகுதிக்கு மிஞ்சிய அனுகிரகம் என்பதை இறைவன் உணர்த்தியும் தன்னுடைய வேண்டுகோளில், வரத்தில் பிடிவாதமாக இருந்ததால் இறைவனும் இந்திரனுக்கு ஆயிரம் கண்களை அளித்து விட்டார். அது தகுதிக்கு மிஞ்சிய வரமாக அமைந்ததால் இந்திரன் பெற்ற ஆயிரம் கண்கள் ஆயிரம் யோனிக் கண்களாக மாறி இந்திரனின் உடலெங்கும் நிறைந்தன.

ஸ்ரீகன்னிமூலை கணபதி
ஏத்தாப்பூர் சிவாலயம்

அகலிகை சாப விமோசனம் பெற்ற அதே ஏத்தாப்பூர் திருத்தலத்திலேயே இந்திரனும் தன் உடலில் பெற்ற யோனிக் கண்கள் மறையும்படியான அனுகிரகத்தையும் ஸ்ரீசகஸ்ரலிங்கம் பொலியும் இத்தலத்தில் பெற்றான் என்பதே சித்தர்கள் அருளும் தெளிவு. நிருதி மூலை என்பது அறிவு, கணக்கு போன்ற மூளை சம்பந்தமான அறிவை மட்டும் விருத்தி செய்வது அன்று, இந்த நிருதி மூலையில் அருள்புரியும் கணபதி இவ்வாறு தகுதிக்கு மீறிய ஆசைகளையும் களையும் அற்புத மூர்த்தியாவார். ஏன் நிருதி மூலை, கன்னி மூலை என்று அழைக்கப்படுகிறது என்பதன் காரணமும் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே. வலது காலை முன் வைத்து ஸ்ரீகன்னி மூலை கணபதிக்கு குசா தோப்புக் கரணம் இடுவதும், இடது காலை முன் வைத்து ஸ்ரீசகஸ்ரலிங்க மூர்த்தியின் முன் குசா தோப்புக் கரணம் இடுவதாலும் கிட்டும் பலன்கள் எண்ணிலடங்கா, கணக்கிலும் அடங்கா. எண்ணில் வினைகளை விண்ணில் கரைக்கும் அனுகிரகத்தைப் பக்தர்கள் பெற உறுதுணையாக நிற்பதும் ஏத்தாப்பூர் நிருதி மூலையில் மேற்கொள்ளும் வழிபாடு என்பது அகத்திய நாடி அளிக்கும் அருட்சுவையே. தொலைக் காட்சி, சினிமா, செல்போன் போன்ற உபகரணங்களால் கண்ணில் காணும் காட்சிகளின் பிரவாகத்தை ஸ்ரீஆதிசங்கரர் போன்ற உத்தமர்களால் கூட களைய முடியாது என்பது உண்மையே. அதிகபட்சம் இறையருளால் இந்த எண்ணங்கள் உண்டாக்கும் தீய விளைவுகளிலிருந்து, கொடிய தாக்குதல்களிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம் அவ்வளவே. இவ்வாறு மணிக் கணக்கில் தொலைக்காட்சி (டீவி), செல்போனில் நேரத்தை செலவு செய்பவர்கள் ஏத்தாப்பூர் நிருதி மூலையில் குசா தோப்புக்கரணம் இட்டு வருவதால் மெதுவே மெதுவே இந்தத் தீய பழக்கத்திலிருந்து விடுபடலாம். இத்தகைய தவறான செய்கைகளில் தங்கள் குழந்தைகள் ஈடுபடுவதைக் கண்டு மனம் வாடும் பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளுக்கு அறிவுரை கூறி திருத்துவதைவிட தாங்கள் ஏத்தாப்பூர் திருத்தலத்தில் நிருதி மூலையில் வழிபாடுகள் இயற்றுவதே அவர்களுக்குத் தேடித் தரும் உண்மையான, நிரந்தரமான செல்வம் ஆகும். இந்த அரிய மனக் கண்ணோட்டத்தை அளிக்க வல்லதும் ஏத்தாப்பூர் திருத்தல வழிபாடாகும். ஏத்தாப்பூர் திருத்தலத்தில் பொலியும் தீர்த்தம் வசிஷ்ட நதி என்று அழைக்கப்படுகிறது. இதன் பண்டைய பெயர் சோனா நதி என்பதாகும். சூரிய கிரணங்கள் ஸ்ரீசாம்ப பரமேஸ்வரரை தரிசனம் செய்ய, செய்ய அவை கிருஷ்ண ஆடகம் என்ற தெய்வீக தங்க சக்தியை பெற்றதால் இங்குள்ள நதி இந்தப் பெயரைப் பெற்றது. ஸ்ரீவசிஷ்ட மகரிஷியிடமிருந்த காமதேனு என்ற தெய்வீகப் பசுவை அஷ்ட வசுக்கள் திருடிக் கொண்டு சென்று விட்டதால் அவர்களை எதிர்த்து வசிஷ்ட மகரிஷியின் புதல்வர்கள் போரிட்டும் அவர்கள் அந்த போரில் தங்கள் உயிரை இழந்தார்களே தவிர அந்தப் பசுவை மீட்க முடியவில்லை. பின்னர் வசிஷ்ட மகரிஷியே நேரில் சென்று அந்த தெய்வீகப் பசுவை மீட்டு வந்தார். எனினும் காமதேனுவால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. தான் திருடப்பட்டது தன்னுடைய தவறு இல்லை என்றாலும் தான் கள்வர்கள் ஆதிக்கத்தில் இருந்ததற்குப் பிராயச்சித்தம் ஸ்ரீவசிஷ்ட முனியிடம் வேண்டியபோது ஸ்ரீவசிஷ்டரும் காமதேனுவின் திருட்டிற்கு அதன் உரிமையாளர் என்ற முறையில் தான் அல்லவோ பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி காமதேனுவுடன் ஏத்தாப்பூர் திருத்தலம் வந்தடைந்து சோனா நதியில் நீராடி ஸ்ரீசாம்ப மூர்த்தியைத் தொழுது பின்னர் கொப்பு கொண்ட மலையில் துலங்கும் 14 மனுநாதம் படிகளையும் முழங்காலில் ஏறிச் சென்று பெருமாள் தரிசனம் பெற்றார். அதனால் காமதேனுவின் மேல் சுமத்தப்பட்ட களங்கம் தெய்வீக ரீதியாக களையப் பெற்றது.

காமதேனுவின் கவின் நடை

இது என்றோ நிகழ்ந்த ஒரு தெய்வீக நிகழ்ச்சி அல்ல. இன்றும் ஒவ்வொரு மனுவும் தாங்கள் பதவி ஏற்கும் முன் இந்த மனுநாதப் படிகளில் முழந்தாளிட்டு ஏறி பெருமாளை தரிசனம் செய்தே தங்கள் சிம்மாசனத்தில் அமர்கின்றனர் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். காமதேனு, மனு மூர்த்திகளின் வழிகாட்டுதலைப் பின்பற்றி மனிதனாகத் தோன்றிய ராமபிரானும் சீதா தேவி சமேதராய் இத்திருத்தலத்திற்கு எழுந்தருளி இந்த மனுநாதப் படிக்கட்டுகளில் முழந்தாளிட்டு ஏறி பெருமாளைத் தரிசனம் செய்தார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் ராமாமிர்த சுவையாகும். அன்று முதல் காமதேனு என்ற தெய்வீக பசுவும் கும்ப ராசியில் குரு பகவான் திகழும் ஒரு வருட காலத்திற்கு (தற்போது 5.4.2021 முதல் ஒரு வருட காலம்) சில குறிப்பிட்ட நாட்களில் இந்த மனுநாதப் படிகளில் சூட்சுமமாக மண்டியிட்டு ஏறியே பெருமாளை தரிசனம் செய்கிறது.

ஸ்ரீலட்சுமி கோபாலசாமி பெருமாள்
ஏத்தாப்பூர்

ஸ்ரீராமர், ஸ்ரீசீதா தேவி, ஸ்ரீவசிஷ்டர், காமதேனு, மனு மூர்த்திகள் தங்கள் முழங்காலில் ஏறிச் சென்ற இந்தப் படிகளை தீண்டுவதற்கே நாம் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்தப் படிகளில் முழங்காலிட்டு செல்வதென்றால் அதன் பலன்களை வர்ணிக்கத்தான் இயலுமா ? கும்ப ராசியில் குரு பகவான் திகழும் காலத்தில் இவ்வாறு பெருமாளைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு பால்வரம் என்ற அற்புத வரங்கள் பெருமாள் மூர்த்தியால் அளிக்கப்படுகின்றன. இதன் பலன் என்ன என்பதை வர்ணிப்பதை விட பக்தர்கள் அவரவர் சொந்த அனுபவத்தால் தெரிந்து கொள்வதே நலமாகும். சீதா தேவி பகைவனின் பாசறையில் இருந்தாள் என்ற காரணத்திற்காக அவளை அக்னி குண்டத்தில் பிரவேசிக்கும்படி ராமபிரான் கூறினார் என்றால் அது தான் சக்கரவர்த்தியாக அகில உலக மக்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டிய கடமையை நிறைவேற்றும் பொருட்டே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும் அன்னை அடைந்த மன வேதனை அன்னைக்கே தெரியும். அத்தகைய மன வேதனையை அடையும் பெண்களையும், இவ்வாறு பழி சுமத்தப்படும் அனைவரையுமே காக்க சீதா தேவி அன்று தீயில் இறங்கினாள் என்பதும் அன்னையின் தியாகத்தின் பின்னணியில் அமைந்த வரலாறு ஆகும். இன்றும் செய்யாத தவறுக்கு, சம்பந்தமில்லாத களங்கத்திற்கு ஆளானோர் வசிஷ்ட நதியில் நீராடி இந்த மனுநாதப் படிகளில் ஏறி பெருமாளைத் தரிசனம் செய்தால் நல்லருள் பெறுவர். பலரும் தழும்புகள், தீக்காயங்கள், குறித்த வடிவுகளில் அமையாத உடல் அங்கங்களால் வருந்துகின்றனர். இத்தகையோர் இந்த மனுநாதப் படிகளை முழந்தாளிட்டு ஏறி இறைவனை தரிசித்தலால் மன அமைதியும் ஊக்கமும் பெற்று நல்ல எதிர்காலத்தைப் பெறுவர். அவரவர் வேதனைகளை மாய்ப்பதாகவே அவர்கள் தரிசனம் மேற்கொள்ளும் நாளும் அமையும் என்றாலும் பொதுவான பலன்களை வேண்டி இத்தலத்தில் வழிபாடுகள் இயற்றுவோர்களுக்கு சனி, ஞாயிறு கிழமைகள் நலம் பயக்கும். தீவிபத்துகளால் காயங்கள், தழும்புகள் அடைந்தோர், தங்கள் வசீகரத்தை இழந்தோர் பசு வெண்ணெயில் சர்க்கரை சேர்த்து ஏத்தாப்பூர் திருத்தலத்தில் தானமாக அளித்தல், கொப்பு கொண்ட மலையில் குரங்குப் படைகளுக்கு பால் இனிப்புகளை அளித்தல் நலம். தழும்பால் தடை பட்ட திருமணங்கள் நன்முறையில் நிறைவேறும். அறுவை சிகிச்சையால் தங்கள் உடல் அழகை இழந்தோரும் இத்தகைய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். சோனா நதி என்ற பெயர் தற்போது மறைந்து விட்டாலும் இந்நதியில் மிளிரும் சோனா சக்திகள் என்றும் மறைவதில்லையே. சூரியனை நேரே காணக் கூடாது என்ற விதி இருந்தாலும் இந்த சோனா நதியில் பிரதிபலிக்கும் சூரியக் கதிர்களை மாலை நேரத்தில் தரிசிப்பதால் நல்ல கண் பார்வையும் ஆரோக்கியமும் பெருகும் என்பது உண்மை. உத்தியோகத்தில் ஏற்படும் குழப்பங்கள், தாங்கள் வகிக்கும் பதவியில் தொடர்ந்து இருப்போமா போன்ற உத்தியோகக் குழப்பங்கள் இந்த சோனா நதியை அமைதியாக ஒரு நாழிகை நேரம் குறையாது பார்த்துக் கொண்டே இருந்தால் போதும் அவை மாயமாய் மறையும் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் அற்புத வழிகாட்டுதல். வசிஷ்டர் தன்னுடைய நூறு புதல்வர்களை இழந்து வாடியபோது இந்த சோனா நதியின் அழகை தரிசனம் செய்தவாறே ஒரு மண்டல காலம் இங்கு தவமியற்றி மன அமைதி பெற்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மன அமைதிக்கு மாமருந்து சோனா நதி.

திடசஞ்சார முகூர்த்தம்

அபூர்வமாக சனீஸ்வர பகவான் வலது காலை முன் வைத்த கோலத்தில் ஏத்தாப்பூர் திருத்தலத்தில் அருள்புரிகிறார். பலரும் சனீஸ்வரர் வறுமை, பகைமை, பீதியைத் தருபவர் என்றே எண்ணுகின்றனர். அவரின் உண்மையான சக்திகளை உணர்ந்து மக்களுக்குப் பயன்படும் விதத்தில் அளிக்கக் கூடியவர்களே சித்தர்கள். சனீஸ்வர பகவான் அளிக்கும் மன அமைதியையோ, உடல் ஓய்வையோ வேறு எந்த நவகிரக மூர்த்தியுமே அளிக்க முடியாது என்பார் நம் சற்குரு. சிறப்பாக நற்காரியங்களில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கும், மக்கள் சேவையையே மகேசன் சேவையாக எண்ணி செயல்படும் மகான்களுக்கும் கட்டாயம் சனீஸ்வர பகவானின் அனுகிரகம் சிறப்பாக அமைந்திருக்கும். நம் சற்குருவின் ஜனன ஜாதகத்தை எடுத்துக் கொண்டோமேயானால் அதில் லக்னம், நவாம்சம், திரிதாம்சம், துவிதசாம்சம் என அனைத்து அம்சங்களிலும் சனீஸ்வர பகவான் லக்னத்துடன் தொடர்பு உடையவராகத் திகழ்வார்.

திடசஞ்சார முகூர்த்த நேரம் என்ற ஒரு அற்புத நல்ல நேரம் உண்டு. சனிக் கிழமைகளில் காலை 6.30 மணி முதல் 7.30 வரை திகழும் ஒரு மணி நேர முகூர்த்த நேரமே இத்தகைய நாமத்துடன் அழைக்கப்படுகிறது. சனி ஹோரை பாதியாகவும், குரு ஹோரை பாதியாகவும் பூரிக்கும் இந்த முகூர்த்தம் சூரிய உதய நேரத்தைப் பொறுத்து மாறுபடும் என்பதை நினைவில் கொள்க. நெடுநேரம் கார், வாகனங்கள் ஓடுதல் போன்ற பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சில நிமிடங்கள் ஆழ்ந்து உறங்கினால் கூட போதும் அவர்கள் தொடர்ந்து காரியங்கள் நிகழ்த்துவதற்குத் தேவையான உடல், மன சக்தியைப் பெற்று விடுவார்கள். இத்தகைய உடல், மன அமைதியை உறக்கத்தின் மூலம் அளிக்கக் கூடியதே திடசஞ்சார முகூர்த்த வழிபாட்டின் தன்மையாகும். சனிக் கிழமைகளில் காலை இத்தகைய திடசஞ்சார முகூர்த்தத்தில் சிவப்பு வண்ண ஆடைகளை ஏத்தாப்பூர் சனீஸ்வர பகவானுக்கு சார்த்தி எட்டு, எட்டு செவ்வாழைப் பழங்களை இரண்டு மாலையாகக் கட்டி சனீஸ்வர பகவானுக்கு அணிவித்து அதில் ஒரு மாலையை சனீஸ்வர பகவானின் பிரசாதமாகப் பெற்று பக்தர்களுக்கு தானமளித்தல் இத்தகைய திடசஞ்சார முகூர்த்த அனுகிரக சக்திகளை எளிதில் பெறும் முறையாகும். உடல் வியாதி, மன உளைச்சல் போன்ற காரணங்களால் போதுமான உறக்கம் இல்லாதவர்களுக்கும், வேலையில்லாத் திண்டாட்டம், குடும்பத் தலைவர்களை இழத்தல் போன்ற காரணங்களால் வறுமையில் உழல்வோர்களுக்கும் நல்வழி காட்டக் கூடிய உத்தம வழிபாடு இது.

ஸ்ரீகாளி அம்மன்
ஏத்தாப்பூர்

அபூர்வமாக தன்னுடைய இடது காலை முன்வைத்த திருக்கோலத்துடன் திகழும் கோயம்பேடு திருத்தல ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாளைப் போல ஏத்தாப்பூர் திருத்தலத்தில் சனீஸ்வர பகவான் வலது காலை முன் வைத்த கோலத்துடன் திகழ்வதே இத்தகைய திடசஞ்சார முகூர்த்த சக்திகளை அருளும் இரகசிய கோலமாகும் என்பதே சித்தர்கள் அருளும் தரிசன மகிமை. கால நேரத்தை ஒட்டி இவ்வாறு சனிக் கிழமைகளில் அமையும் இத்தகைய முகூர்த்தத்தைப் போலவே கொப்பு கொண்ட பெருமாள் மலையை தரிசனம் செய்யும்போது கருட வாகன மூர்த்திகள் அடியார்களின் தலைக்கு மேல் வட்டமிட்டு இத்தகைய அபூர்வ புண்ணிய சக்திகளை நிரவுவதும் உண்டு. அத்தகைய அபூர்வ கருட பகவான் திருக்கோலத்தையே இங்குள்ள வீடியோவில் தரிசனம் செய்கிறீர்கள். இத்தகைய திடசஞ்சார முகூர்த்த நேரத்தில் திருஅண்ணாமலையை வலம் வந்து சிவப்பு நிற வஸ்திரங்களை, சிவப்பு நிற மாதுளை முத்துக்களை தானமளிப்பதும் ஏற்புடையதே. குறிப்பாக எத்தகைய வறுமை நிலையையும் களையக் கூடியதே இத்தகைய வழிபாடாகும். சனீஸ்வர பகவானுக்குரிய காயத்ரீ மந்திரமாக
ஓம் பங்கு பாதாய வித்மஹே
சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்
என்று குறிப்பிடுவது வழக்கம். ஆனால், நம் சற்குருவோ, “பங்கு பாதம் என்று சனீஸ்வரரின் உடைந்த காலை குறிப்பிடுவதால் அவர் உண்மையில் மெதுவாக செல்பவர் என்று அர்த்தம் கிடையாது. மக்களுக்குத் தேவையான மன அமைதியையும், நல்ல உறக்கத்தையும் அளிப்பவரே சனீஸ்வர பகவான். எனவே சிவபெருமான் சனி பகவானுக்கு ஈஸ்வர பட்டம் அளித்தபோது
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனீஸ்வர ப்ரசோதயாத்
என்று கௌரவித்துதான் ஈஸ்வர பட்டத்தை அளித்தார்,” என்று சிவபெருமான் சனி பகவானுக்கு ஈஸ்வர பட்டம் அளித்த நிகழ்ச்சியை நம் சற்குரு அடியார்களுக்கு விளக்கியபோது அந்த அற்புத காட்சியை உடனிருந்து பார்த்த இரசித்தவர்கள் நிச்சயம் நம் சற்குரு அந்த அற்புத காட்சியை கண் முன் கொண்டு வந்து இரசித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உணர முடியும். சனீஸ்வர பகவான் தான் ஈஸ்வர பட்டம் பெற்றதும் சாதாரண மனிதர்களைப் போல அந்தப் பட்டத்தை சுருட்டி கையில், பையில், பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொள்வாரா என்ன ? தான் நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றே ஒரே கிரகம் என்ற அனுகிரகத்தை இந்த பிரபஞ்சம் முழுவதும் வழங்க மாட்டாரா என்ன ? அவ்வாறு தான் நவநாயகர்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் என்பதை உணர்த்தும் முகமாக ஏத்தாப்பூர் திருத்தலத்தில் தான் பெற்ற ஈஸ்வர பட்டத்தின் அனுகிரகங்களை எல்லாம் நவநாயகர்களின் தலைவனான சூரிய பகவானுக்கு கருங்குருவி காட்சியாக அர்ப்பணிக்க அதை சூரிய பகவான் தன்னுடைய பாஸ்கர பூஜையின் மூலம் ஸ்ரீசாம்ப பரமேஸ்வர அனுகிரகமாக இந்த பிரபஞ்சம் அனைத்திற்கும் அளித்தார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் அனுபூதியாகும்.

ஸ்ரீஅகோரவீரபத்திரர்
ஏத்தாப்பூர்

இதை உணர்த்தும் முகமாக, மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சூரிய பகவான் நந்தி மூர்த்தியுடன் எழுந்தருளியிருக்க வலது காலை முன் வைத்த கோலத்தில் சனீஸ்வர பகவான் ஏத்தாப்பூர் திருத்தலத்தில் அருகருகே எழுந்தருளி உள்ளனர் என்பதும் நம்மை பிரமிப்பில் ஆழ்த்தும் சுவையாகும். வேறெங்கும் காண முடியாத அதிசயமாக ஸ்ரீஅகோரவீரபத்திர சுவாமி பக்தர்கள் எளிதில் வழிபடும் வண்ணம் தூணில் எழுந்தருளி உள்ளார். இது குறித்து சித்தர்கள் அருளும் வரலாறு சுவையானதே. திரௌபதியின் ஆடையை துச்சாதனன் துகில் உரிந்தபோது அவன் களைப்படையும் அளவிற்கு ஸ்ரீகிருஷ்ண பகவான் தொடர்ந்து ஆடைகளை அளித்து துரோபதைக்கு அருளினார் என்பது நீங்கள் அறிந்ததே. ஆனால், இத்தகைய ஆடையை அனுகிரகமாக அளிப்பதற்கு பூர்ண அவதாரமான கிருஷ்ண பகவானே திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அந்த கிரிவல பலன்களையே தொடர்ந்து வர்ஷித்த ஆடைகளாக துரோபதைக்கு அருளினார் என்பதே சித்தர்கள் உரைக்கும் அடிமை கண்ட ஆனந்தச் சுவையாகும். இறைவனைத் தவிர வேறு எவருக்கும் எத்தகைய அதிசயச் செயலையும் நிறைவேற்றும் உரிமை கிடையாது. இறைவன் ஒருவனே எதையும் உருவாக்க வல்லவன், அழிக்கவும் வல்லவன். சில சமங்களில் மற்றவர்கள் ஏதாவது ஒரு பொருளை ஆக்குவதாகவோ அழிப்பதாகவோ உங்களுக்குத் தோன்றினால் அது வெறும் மாயை மட்டுமே, அதன் உண்மையான செயல்பாடு இறைவனிடமிருந்து ஏதாவது ஒரு முறையில் பெறப்பட்டதாகவே இருக்கும் என்பதே சித்தர்களின் தெளிவுரை. இவ்வகையில் இரண்யாட்சன் பிரஹலாதனின் கூப்பிட்ட குரலுக்கு இரண்யனின் அரண்மனையில் இருந்த எந்தத் தூணிலிருந்தும் வெளிப்படும் அற்புதத்தை நிறைவேற்றுவதற்காக எல்லாத் தூண்களிலும் ‘நரசிம்ம அவதார’ கர்ப்பம் தாங்கி இருந்தார். இவ்வாறு தூணில் கர்ப்பம் தாங்கும் அதிசயத்தை நிறைவேற்றுதற்காக பல யுகங்கள் விஷ்ணு மூர்த்தியே வலம் வந்து வணங்கிய ஸ்ரீஅகோரவீரபத்திர மூர்த்தியே நீங்கள் ஏத்தாப்பூர் சிவாலயத் தூணில் எழுந்தருளி இருக்கும் “தாயுமான ஈசன்” என்றால் இவர் மகிமைதான் என்னே, என்னே. எனவே கர்ப்பம் தாங்கிய பெண்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் மலைத் தலைங்களை ஏறிச் சென்று வழிபட முடியாவிட்டாலும் அவர்கள் தூணில் எழுந்தருளி உள்ள ஏத்தாப்பூர் ஸ்ரீஅகோர வீரபத்திர சுவாமியை வலம் வந்து வணங்கி வழிபடுதலால் எத்தகைய சிரமுமின்றி நல்ல சந்தானங்களை ஈன்றெடுப்பர் என்று சித்தர்கள் உறுதியளிக்கின்றனர். யானை, பசு, புறா போன்ற தாய் சேய் அமைந்த புடவைகளை ஸ்ரீமனோன்மணி தேவிக்கும் மற்ற இறை மூர்த்திகளுக்கும் குறிப்பாக ஸ்ரீஅகோரவீரபத்திர சுவாமிக்கும் அணிவித்து நன்றி தெரிவித்தல் சிறப்பாகும். கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் சுகப் பிரசவம் நிறைவேறிய பின்னர் ஸ்ரீமனோன்மணி தேவிக்கு வஸ்திரம் அளித்து நன்றி செலுத்துதல் ஏனோ என்பது உங்களுக்குத் தோன்றும் இயற்கையான சந்தேகமே. பெருமாள் எடுத்த அவதாரங்கள் தசாவதாரங்கள் என்ற பத்து அவதாரங்கள் ஒரு கணக்கிற்காக கூறப்படுவதே. உண்மையில் பெருமாளின் அவதாரங்கள் மனிதக் கணக்கிற்கு அப்பாற்பட்டு விளங்குவதே என்பதே சித்தர்களின் ‘கணக்கு’ ஆகும். இத்தகைய அவதாரங்களிலும் மிகவும் அழகான் அவதாரம் என்று ஒன்றைச் சொல்ல வேண்டும் என்றால் அது நிச்சயம் நரசிம்ம அவதாரம்தான் என்பதே சித்தர்களின் பதில். இத்தகைய அழகிய அவதாரத்தை தங்கள் குழந்தையாகப் பெற்றெடுப்பதற்காகவே ஸ்ரீமனோன்மணி தேவிக்கு நன்றி செலுத்துகிறோம் என்பதே இந்த வழிபாட்டின் பின்னணியில் அமைந்த சித்த இரகசியமாகும்.

சாம்ப சௌம்ய சாமேய

ஏத்தாப்பூர் திருத்தலத்தில் இறைவன் ஸ்ரீசாம்பமூர்த்தி என்ற திருநாமத்துடனும் இறைவி ஸ்ரீமனோன்மணியாகவும் அருள்பாலிக்கிறார்கள். இந்த இரு நாமங்களின் மகிமையைத் தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தாலே போதும், ஆன்மீகத்தில் ஒரு மனிதன் அடைய வேண்டியது அனைத்தையுமே அடைந்தவன் ஆகி விடுவான் என்பதே இந்த திருநாமங்களின் மகிமையாகும். பசுஞ்சாணத்தை நெருப்பில் போட்டு சாம்பலாக்கி விட்டால் அதை விட உயர்ந்த நிலையை அது அடைய முடியாது, அதை மிஞ்சிய பக்குவ நிலை என்பது சாம்பலுக்கு கிடையாது, கிடைக்காது.

ஸ்ரீசாம்பமூர்த்தி ஏத்தாப்பூர்

ஒரு முறை அரசரைப் பல்லக்கில் சுமந்து வந்த காவல்காரர்கள் சாலையோரத்தில் அமர்ந்திருந்த ஜடபரதரை யார் என்று அறியாமல் அவரையும் பல்லக்கு சுமப்பதற்காக அழைத்தனர். பல்லக்கு சுமப்பவர்களில் ஒருவன் தடுமாறி விழுந்து விட்டதால் வேறு ஒருவரும் இல்லாத நிலையில் அவர்கள் மாற்று ஆளை ஏற்பாடு செய்ய வேண்டியதாயிற்று. எதையும் இறை சித்தமாக ஏற்றுக் கொள்ளும் வழக்கமுடைய ஜடபரதர் மறுப்பு ஏதும் கூறாமுல் மறுநொடி அவர்களுடன் சேர்ந்து கொண்டு அரசரைப் பல்லக்கில் ஏற்றி சுமந்து செல்லத் தொடங்கினார். ஆன்மீக வேட்கை கொண்ட அந்த அரசன் பக்கத்து ஊரில் ஒரு மகான் வந்திருப்பதாக அறிந்து அவரிடம் தன்னுடைய ஆன்மீக சந்தேகங்களை தீர்த்துக் கொள்வதற்காக பல்லக்கில் சென்று கொண்டிருந்தான். வழியில் சில எறும்புகள் சாரை சாரையாய் செல்வதைக் கண்ட ஜடபரதர் அவைகளை மிதித்து விடாமல் இருப்பதற்காக அவை செல்லும் பாதையை தாண்டி தாண்டி சென்றார். இவ்வாறு ஒரு பல்லக்கு சுமப்பவன் தாண்டி தாண்டி சென்றதால் பல்லக்கில் குலுக்கல் ஏற்பட்டு அதனால் அரசன் மிகவும் கோபமடைந்து பல்லக்கு சுமக்கும் ஜடபரதர் ஒழுங்காகத் தன் வேலையைச் செய்யா விட்டால் அரசன் கீழே வந்து அந்த பல்லக்கு சுமப்பவனை கசை அடிகள் மூலம் தண்டிப்பதாகக் கூறவே அதைக் கேட்ட ஜடபரதர் நகைப்புடன், “ஏற்கனவே இதை (இந்த உடம்பை) அடித்து, துவைத்துத்தான் வைத்திருக்கிறேன், நீ என்ன புதிதாக இதை துவைத்து வதைக்கப் போகிறாய்...”, என்று கேட்கவே இந்த வார்த்தைகளைக் கேட்ட அரசன் பிரமிப்படைந்து இந்த பல்லக்கு சுமப்பவன் சாதாரண ஆள் இல்லை என்பதை புரிந்து கொண்டு பல்லக்கிலிருந்து கீழே குதித்து ஜடபரதரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி பிரம்ம ஞானத்தையே உபதேசமாகப் பெற்றான் என்பது நாமறிந்த ஜடபரத மகாத்மியம். பார்க்கும் கண்களுக்கு எந்த செயலையும் செய்யாத ஒரு சோம்பேறி போல் தோன்றினாலும் இத்தகைய பிரம்ம ஞானம் பூர்ணமாகப் பிரகாசிக்கும் நிலையே சாம்ப பரமேஸ்வரர் அளிக்கும் ஞான நிலையாகும். நடைமுறையில் இந்த பூலோகத்தில் எத்தனை பேர் இத்தகைய உயர்ந்த ஜடபரத நிலையைப் பெற்றவர்கள் ? இறைவன் அனைவருக்கும் அருள் சுரக்கும் கருணை மூர்த்தி அல்லவா ? அதனால் மனோன்மணி தேவி என்ற தெய்வ மூர்த்தியை சக்தி அம்சமாக ஏற்று இந்த ஜட பரத நிலைக்கு உயர்த்த மனத்தளவில் முயற்சி செய்யும்படித் தூண்டுகிறார் என்றால் இறை மூர்த்திகளின் கருணையை எப்படித்தான் நாம் பாராட்ட முடியும் ? சித்தர், யோகிகள் போன்ற மகான்களுக்கு மனம் என்பதே கிடையாது என்பது உண்மையே. ஆனால், மனிதன் என்பவன் மனம் உடையவனே. மனம் உடைய மனிதன் மனம் வியாபகம் கொள்ளாத மனித உடலைக் கற்பனை செய்து பார்க்கவே முடியாது என்பதால் மனம் உடையவர்களைப் போல் மகான்கள் இவ்வுலகில் தோன்றி மனம் உடைய மனிதர்கள் சிறிது சிறிதாக தங்கள் மனம் தரும் குழப்பத்திலிருந்து விடுதலை பெற்று இறுதியில் மனத்தைக் கடந்த மகாதேவனின் அருளைப் பெறும் முறைகளையும் உபதேசிக்கிறார்கள். இவ்வகையில் தோன்றிய தெய்வ மூர்த்தியே ஏத்தாப்பூர் அன்னை ஸ்ரீமனோன்மணி தேவி ஆவாள்.

ஸ்ரீமனோன்மணி அம்பிகை ஏத்தாப்பூர்

எத்தகைய மனக் குழப்பங்களுடன் வாழ்வோரும் ஏத்தாப்பூர் ஸ்ரீசாம்பமூர்த்தி ஆலயத்தை வலம் வந்து வணங்குதலால் அன்னையின் அருளைப் பெற்று மனக் குழப்பங்களிலிருந்து மீளலாம் என்பதே நம் சற்குரு அளிக்கும் கலியுக அனுகிரகமாகும். தற்போது பரவலாக பயமுறுத்தும் பலவித தொற்று வியாதிகளுக்கு மாமருந்தாக மந்திரமாவது நீறு என்னும் பதிகத்தை திருத்தலங்களிலோ அல்லது அவரவர் இல்லங்களிலோ ஓதி நிவாரணம் பெறும்படி நம் சற்குரு வலியுறுத்தியும் பலரும் இந்த தொற்றுவியாதிகளிலிருந்து விடுபடுவதற்கு புதிதாக எந்த ஊசியைப் போட்டுக் கொள்ளலாம், எந்த ஆயுர்வேத அல்லது ஆங்கில மருந்துகளை ஏற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து கேள்விகள் எழுப்பிய வண்ணமாகவே உள்ளனர். இதிலிருந்து என்ன தெரிகிறது ? நாம் என்னதான் கடவுள், வியாதி, கர்ம வினை என்று படித்தாலும் அவரவர் இயற்றிய நடப்பு ஜன்ம அல்லது முந்தைய கர்ம வினைகளே அவர்கள் முன் வந்து அவர்களைப் பயமுறுத்துகிறது என்பது பொருள். இந்த கர்ம வினைகள் அனைத்தும் மனம் என்ற உபகரணத்தையே தங்கள் ‘பயமுறுத்தல்களுக்கு’ பயன்படுத்தி வருவதால் ஸ்ரீமனோன்மணி அன்னையை தொடர்ந்து வலம் வந்து வணங்குவதே இத்தகைய துன்பங்களுக்கு கலியுக மக்கள் பெறக் கூடிய ஒரே பரிகாரமாகும். குருவிடமிருந்து மூன்றாம் இடத்திலும், லக்னத்திலிருந்து நான்காம் இடத்திலும் மனதிற்கு உரிய சந்திர பகவான் பிரகாசிக்கும் இந்த பிலவ ஆண்டிலாவது அன்னையை தரிசனம் செய்து, உரிய முறையில் வழிபட்டு திடமான, தெளிவான மன நிலையை, மன திடத்தை, மனத் தெளிவைப் பெறும்படி பக்தர்களைக் கேட்டுக் கொள்கிறோம். பிருத்வி முதலான பஞ்ச பூதங்களும் வழிபட்டு நற்பேறு பெற்ற தலமாதலால் பஞ்ச பூதங்களும் வழிபட்ட லிங்க மூர்த்திகளுக்கு வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதல் சிறப்பான பலன்களை நல்கும். பஞ்ச பூத லிங்கங்களுக்கும் இறைவன் சாம்ப மூர்த்தியைப் போல் சிவப்பு நிற பட்டு தலைப் பாகையை சார்த்தி வழிபடுதல் சிறப்பாகும். பிலவ வருடப் பிறப்பன்று அங்காரக பகவான் மிதுன ராசியில் அமர்ந்து செங்காமாக்ய என்ற யோக நிலையில் திகழ்வதால் சிவப்பு நிற தலைப்பாகை அற்புத பலன்களை நல்குவதாக அமைகிறது. வசதி உள்ளவர்கள் நல்ல பவள மாலைகளை பிருத்வி லிங்க மூர்த்திக்கு அல்லது அக்னி லிங்க மூர்த்திக்கு அணிவித்து அதை அங்காரக மூர்த்தி பிரசாதமாக ஏற்று இவ்வருடம் முழுவதும் அணிந்து வருவதால் இளம் பெண்கள் காமுகர்களிடமிருந்து வரும் ஆபத்துக்களிலிருந்து மீள்வார்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு இந்த வழிபாடு மிகவும் அவசியமானதாகும். விலையுயர்ந்த இத்தகைய பவள மாலைகளை வாங்க முடியாவிட்டாலும் அக்னி, பிருத்வி லிங்க மூர்த்திகளுக்கு செம்பருத்தி மலர் மாலைகளைச் சார்த்தி வழிபடுவதும் இத்தகைய பலன்களை வர்ஷிக்கக் கூடியதே.

பஞ்சமூர்த்திகள் வழிபாடு

சப்தரிஷிகள் மனித உருவத்திலும், நட்சத்திர வடிவங்களிலும், லிங்க வடிவங்களிலும் இந்த பிரபஞ்சத்தில் எழுந்தருளி உள்ளனர் அல்லவா ? மனித வடிவ ரிஷி உருவங்களை திருத்தவத்துறை லால்குடியிலும் லிங்க வடிவ ரிஷி உருவங்களை திருநாவலூர் திருத்தலத்திலும் வழிபடலாம். இந்த உருவங்கள் எல்லாம் ஒளி வடிவில் வானில் பிரகாசிக்கின்றனர் என்றாலும் இவர்களின் உண்மையான ஒளி வடிவ தரிசனத்தைப் பெறுதல் என்பது பஞ்ச பூத தத்துவங்களைக் கடந்த உத்தமர்களுக்கே சாத்தியம் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம். இத்தகைய அனுகிரகத்தை அளிக்கக் கூடியதே பவானி திருத்தலத்தில் தோன்றிய பஞ்ச பூதங்களின் லிங்க வடிவமாகும். திருத்தலங்களில் எல்லாம் சிவ லிங்க மூர்த்திகள், அம்பிகை வடிவங்கள், பிள்ளையார் மூர்த்திகள் போன்றோர் இருந்தாலும் நாம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும், மங்கள சாசனம் செய்த திருத்தலங்களையும் தேடிப் பிடித்து தரிசனம் செய்கிறோமே.

ஸ்ரீபஞ்சலிங்க மூர்த்திகள் பவானி

வருடத்திற்கு ஒரு முறை தோன்றும் பிள்ளையார் சதுர்த்தி அன்று கணபதி மூர்த்தியை வழிபட்டு அந்த வழிபாட்டுப் பலன்களை சமுதாயத்திற்கு அர்ப்பணிப்பதற்காக அவரை கடலில், ஆறுகளில், நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்து விடுகிறோம். பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை கோயில் கும்பாபிஷேகத் திருப்பணிகள் மேற்கொண்டு திருத்தலங்களில் உள்ள பிள்ளையார் மூர்த்திகளின் சக்தியைப் புதுப்பிக்கிறோம். பிள்ளையார்பட்டி, உச்சிப் பிள்ளையார் போன்ற சுயம்பு மூர்த்திகளோ எந்தவித கும்பாபிஷேகமும் நிறைவேற்றாமல் இருந்தாலும் என்றும் தெய்வீக அனுகிரகம் அள்ளி வழங்கும் அருள் கடாட்ச மூரத்திகளாய்த் துலங்குகின்றனர். இதே முறையில்தான் பஞ்ச பூதங்கள் வழிபட்ட லிங்க மூர்த்திகளும், பஞ்சபூத வடிவில் எழுந்தருளிய லிங்க மூர்த்திகளும், பஞ்சபூத சக்திகள் நிறைந்த லிங்க மூர்த்திகளும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளனர். இத்தகைய தெய்வீக சக்திகளை அடையாளம் காட்டக் கூடியவர்களே சித்தப் பெருமக்கள் ஆவர். இவ்வாறு மந்திர ஒலி சக்தி நிறைந்த பஞ்சபூத லிங்க மூர்த்திகளே முதன் முதலில் பவானி முக்கூடலில் எழுந்தருளி இவ்வுலகில் மந்திர ஒலி சக்திகள் பெருக, பெருகி நிரவ அருள் புரியும் மூர்த்திகளாய்த் துலங்குகின்றனர். பவானி திருத்தலம் பவானி முக்கூடல் என்றே அழைக்கப்படுகிறது. காவிரி நதி, பவானி நதி, நணா சக்திகள் கூடும் திருத்தலம் என்பது மேலோட்டமான பொருளே. சற்குருவின் பூரண அனுகிரகத்தால் மட்டுமே இந்த மூன்று சக்திகளையும் பற்றி ஒரு அணு அளவாவது புரிந்து கொள்ள முடியும், புரிந்து இன்புற முடியும், அறிந்து அதன் பலன்களை மற்றவர்களுக்கும் அள்ளி வழங்க முடியும்.

தேவர்கள் அமிர்தம் பெறுவதற்காக பாற்கடலைக் கடைய நினைத்தபோது அவர்களுக்கு உதவுவதற்காக திருமால் கூர்மம் என்னும் ஆமை வடிவில் பாற்கடலின் அடியில் பிரவேசித்து ஒரு இடத்தைத் தேர்ந்தெடுக்க நினைத்தார். அப்போது சற்று தூரத்தில், “நைனா, அங்கே காலை வைத்து நின்றால் உள்ளே போய்விடுவாய் ...,” என்ற குரல் கேட்கவே பிரமிப்பின் உச்சக்கட்டத்தை அடைந்த பெருமாள் மூர்த்தி குரல் வந்த திசையை நோக்கி புருவத்தை உயர்த்திப் பார்த்தார். அங்கு ஒன்றும் தென்படவில்லை. சற்று நேரம் கூர்ந்து கவனித்த பின்னரே தன்னைப் போல ஒரு ஆமை அங்க நிலைகொண்டிருப்பதைக் கண்ட பெருமாள் விரைந்து சென்று அந்த ஆமை வடிவ ரிஷிக்கு வணக்கம் தெரிவித்து அவரைப் பற்றி விசாரித்தார். பாற்கடல் தோன்றுவதற்கு முன்னரே எத்தனையோ யுகங்களுக்கு முன் தோன்றியவர். பாற் கடல் அளிக்கும் அமுதம் இன்றி சிரஞ்சீவியாய்த் திகழ்ந்தவர். ஒரு யுகத்தில் பெருமாள் அமிர்தம் கடையும் திருவிளையாடலில் தேவர்களுக்கு உதவும் பொருட்டு அங்கு வருவார் போன்ற விஷயங்களைத் தன் தீர்க்க தரிசனத்தால் அறிந்து கொண்டு அப்போது திருமால் நிலைகொள்ள வேண்டிய நான்கு பாத நணா பீடங்களை குறித்து வைத்திருந்தார். நணா பீடங்கள் என்பவை தற்போதைய யுகத்தில் ஹெலிபேட் போன்றவையாகும். நணா என்ற மெல்லின அட்சரங்கள் வல்லின பெருமாள் பாதங்களைத் தாங்கும் பேறு பெற்ற தலமே திருநணா என்று அழைக்கப்படும் பவானி திருத்தலமாகும்.

உண்மையில் நணா சக்திகள் என்பவை அனிச்ச மலரினும் கோடி கோடி மடங்கு மென்மையானவையே. காரணம் இத்தகைய மென்மையான பாதங்களே தேவர்கள் பாற்கடலைக் கடைய மத்தாகப் பயன்படுத்திய லட்சம் மைல்கள் விஸ்தீரணமுள்ள மேரு மலையைத் தாங்க முடியும். மிகவும் மென்மை வாய்ந்த இந்த நணா சக்திகளைப் பற்றி ஓரளவு இங்கு விளக்குகிறோம். நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் அனைத்துமே யோகம்தான். நிற்பது, நடப்பது, உண்பது, உறங்குவது, கண் சிமிட்டுவது என்று அடியார்கள் நிகழ்த்தும் ஒவ்வொரு காரியமுமே யோகத்தின் வகையைச் சார்ந்ததாகும். காரணம் இந்த ஆஸ்ரமத்தை உலக நன்மைக்காக இயக்குவது சித்தர்குலத் திலகமான நம் சற்குரு அல்லவா ? ஆனால், அனைத்தும் யோகம் என்பதற்காக தூங்கியே பொழுதைக் கழித்து விட வேண்டாம், வீண் அரட்டைகளிலும், வெட்டிப் பேச்சுக்களிலும் பொழுதைக் கழித்து விடாதீர்கள் என்பதே நம் சற்குருவின் வேண்டுகோள். அதுபோல் நாம் பவானி முக்கூடல் திருத்தலம் பற்றிய விவரங்களைத் தொகுக்கச் சென்றபோது இந்த திருத்தலத்தில் திகழ்ந்த ஒரு பக்தரின் தூக்கமே வழிகாட்டி உதவியது என்பதே நணா சக்திகள் பற்றி புரிந்து கொள்ள உதவும் உதாரணங்கள் ஆகும். இந்த உதாரணங்களை மீண்டும் மீண்டும் படித்து அவை சுட்டும் தெய்வீக நுணுக்கங்களை அறிந்து கொண்டால்தான் நணா திருத்தல மேன்மையைப் பற்றி புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீமீனாட்சி திருமணம் பவானி

நணா சக்திகள் என்பவை பவானி ஆற்றையும் காவிரி நதியையும் இணைக்கும் தூய சக்திகள் மட்டுமல்ல ஒவ்வொரு தம்பதியர் மத்தியிலும் நிலவும் உத்தம அக்னி சக்தியே நணா சக்தி ஆகும். அதனால்தான் இது திருநணா என்று அழைக்கப்படுகிறது. இலந்தைப் பழம் என்பது புளிப்பும் இனிப்பும் சேர்ந்த சுவையை உடையது அல்லவா ? உண்மையில் இது புளிப்பும் அல்ல இனிப்பும் அல்ல, நணா என்ற சுவையை உடைய ஒரே கனி இலந்தை என்பதால் இந்தச் சுவையை பூலோக மக்கள் உணரும் பொருட்டு பராசர முனிவரால் இத்தலத்தில் நிரவப்பட்டது. குடும்பத்தில் எத்தகைய மன வேற்றுமை, கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் அதனால் சந்ததி விருத்தியின்மை போன்ற துன்பங்களால் அக்குடும்பங்கள் வாடினாலும் நணா ரொட்டி என்பதான இலந்தை வடையை தம்பதிகள் இத்தலத்தில் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் அளிப்பதால் நலம் பெறுவர். முற்காலத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து கல் உரலில் இலந்தைப் பழத்தை இட்டு இடித்து இள வெயிலில் காய வைத்து பெண்களுக்கு பிரசவ மருந்தாய் அளிக்கும் வழக்கம் இருந்து வந்தது. ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த இந்த வழிபாட்டை தற்காலத்திலும் திருமணமாகாத பெண்களும், சுமங்கலிகளும் நிகழ்த்தி அந்த இலந்தை வடைகளை திருத்தலங்களிலோ அல்லது சிறப்பாக பவானி திருத்தலத்திலோ உணவுடன் சேர்த்து அளித்தால் அற்புத பலன் பெறுவார்கள். மதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் நிறைவேறியபோது திருமணத்திற்குப் பின் ஒரு லட்சம் இலந்தை வடைகள் இவ்வாறு தயாரித்து அளிக்கப்பட்டன என்பதை இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் காட்சி உறுதி செய்யும். பெண்களின் மார்பகங்கள், தொப்புள், அடிவயிறு என்ற இந்த மறை களஞ்சிய வியாதிகளைத் தீர்க்கும் மாமருந்தே இலந்தை வடை என்பதே அகத்திய வாகடம் கூறும் அருள்மொழி. வாகடம் என்றால் வாக் அடம், மறை வாக்கியத்தில் மறைந்த மாமொழி என்று பொருள். நம் சற்குரு போன்ற உத்தமர்களே இந்த வாகடத்தை உண்மையாக உணரவல்லவர்கள், உலகத்தவர் நன்மைக்காக அர்ப்பணிக்கக் கூடியவர்கள். உலகத்தின் தோற்றம் ஓங்கார நாதத்தை அடிப்படையாக உடையாது, ஓங்கார நாதமே ஒளி வடிவாய், ஒளிப் பிழம்பாய் பரிணமிப்பது. சந்தான பாக்கியம் என்று மனித குலம் பெறும் குழந்தைச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலையாய செல்வமாகக் கருதப்படுவதன் மகத்துவத்தை உணர்விப்பதே பவானி திருத்தலத்தில் பொலியும் திருநணா சக்திகள் ஆகும். இத்தகைய திருநணா சக்திகளை நிர்வகிக்கும் பொருட்டே பவானி திருத்தலத்தில் பஞ்ச சக்தி மூர்த்திகள் லிங்க வடிவாய்த் தோன்றியுள்ளனர் என்று கூறுவதும் மிகையாகாது.

ஸ்ரீசனீஸ்வர பகவான் பவானி

என்றும் எங்கும் பெருகும் வேத சக்திகளை வேதவியாசர் நான்கு வேதங்களாய்த் தொகுத்தளித்ததுபோல் பவானி முக்கூடல் சக்திகளை தர்ப்பணம், காயத்ரீ ஜபம், அன்னதானம் என்ற மூன்று சக்திகளாய்த் தொகுத்து அளித்துள்ளனர் நம் மூதாதையர்கள். பராசர மகரிஷி, குபேர பகவான், விஸ்வாமித்திர மகரிஷிகள் போன்றோர் இத்தலத்திற்கு எழுந்தருளி இத்தகைய மூவண்ண சக்திகளை யுகங்கள் தோறும் மாற்றி திருத்தி மக்கள் நலனுக்காக, சமுதாய மேம்பாட்டிற்காக அளித்து வருகின்றனர். இம்முறையில் பஞ்சபூத லிங்கங்கள் நிலவும் ஏத்தாப்பூர் போன்ற திருத்தலங்களிலும், திருஆனைக்கா போன்ற பஞ்சபூத மூர்த்திகள் நிலவும் தலங்களிலும், பவானி, அன்பில், திரிவேணி சங்கமம் போன்ற முக்கூடல் தீர்த்த சக்திகள் விளங்கும் தலங்களிலும், சப்த ரிஷிகள் துலங்கும் தலங்களிலும் வழிபாடுகள் இயற்றி நிறைந்த அளவில் அன்னதானம் அளித்து வழிபடுதல் நலமாகும். தற்போது கால சர்ப்ப யோகம் என்ற கண்ட நேரத்தில் உலகம் முழுவதும் தடுமாறுவதால் இத்தகைய அன்னதான வழிபாடுகளுமே தீப வழிபாடுகளுமே மக்கள் ஒவ்வொரு நொடியும் சந்திக்கும் மனக் குழப்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்கும் மாமருந்தாகும். பவானி திருத்தலத்தைப் பற்றிய வீடியோவில் பக்தர்கள் தரிசனத்திற்காக எழுந்தருளிய பித்ரு மூர்த்திகள் வசு, ருத்ர, ஆதித்ய லோகத்தை இருப்பிடமாக உடைய மூதாதையர்களே என்று தெரிவித்திருந்தோம். சாதாரண காக்கைகள் போல் தோன்றும் இந்த பித்ரு மூர்த்திகளை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்று ஒரு அடியார் கேட்டுள்ளார். பொதுவாக, கயா, பவானி, பத்ரிநாத், திருவிடைமருதூர், கும்பகோணம் சக்கரப் படித்துறை போன்ற தலங்களில் ஷன்னவதி தர்ப்பணம் அளித்து வந்தால் இத்தகைய பித்ரு மூர்த்திகள் தங்கள் வருகையைத் தெரிவிப்பர். நம் கண்களுக்குத்தான் இவர்கள் காக்கைகளே தவிர உண்மையில் இவர்கள் அனைவரும் ஒளி பொருந்திய தேவதைகளே. இவர்களில் ஒரே ஒரு தேவதையின் அருளைப் பெற்று விட்டால் கூட போதும், நாம் தெய்வீகத்தில் அனைத்தையுமே சாதித்து விடலாம் என்பார் நம் சற்குரு. இங்கு குறிப்பிட்ட தலங்கள் அனைத்தும் வெறும் பித்ரு தலங்கள் மட்டும் அல்ல, இவை பித்ரு முக்தி தலங்களும் ஆகும், அதாவது இத்தலங்கள் பித்ருக்களுக்கே முக்தி, மோட்ச நிலையை அளிக்கக் கூடிய தலங்கள் என்றால் அவற்றின் மகத்துவம் எப்படி இருக்கும் ? எனவேதான் உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் இத்தலத்திற்கு வருகை தரும் வசு ருத்ர ஆதித்ய பித்ரு மூர்த்திகள். தக்கார் தகைவிலர் என்பது அவர்தம் எச்சத்தால் அறியப்படும் என்பார் வள்ளுவப் பெருந்தகை. எச்சம் என்பது அவரவர் சந்ததியைக் குறிக்கும். சற்குருவை நம்பும் ஒருவரை சரியான ‘எச்சம்’ ஆக்குவதே நம் சற்குருவின் தலையாயப் பணியுமாகும். ஒருமுறை நம் சற்குருவின் வழிகாட்டுதலின்படி கும்பகோணம் சர்க்கரைப் படித்துறையில் அமாவாசை தினத்தன்று அன்னதானம் நிறைவேற்றினார் ‘அ’ என்ற அட்சரத்தில் தொடங்கும் பெயரை உடைய ஒரு அடியார். அப்போது அருகிலிருந்த பள்ளி மாணவர்களில் சிலரும் அங்கு வழங்கப்பட்ட தயிர் பிரசாதத்தை வரிசையில் நின்று வாங்கத் தொடங்கினர். அப்போது அங்கு பிரசாதம் பெற்ற ஒரு மாணவனின் பெயரைக் கேட்ட அந்த அடியார் அதிர்ந்து போனார். காரணம் அந்த மாணவனின் பெயர் ‘ப’ என்ற எழுத்தில் தொடர்வதாகும். ப்+அ என்பது ப என்றால் இதுதான் சரியான ‘எச்சம்’ அல்லவா ?

ஸ்ரீகாயத்ரீ லிங்க மூரத்தி
பவானி முக்கூடல்

தன்னிடம் இருக்கும் உடல் பலம், பண பலம் இவற்றை நிரந்தரமாகக் கருதி ஒருவரைக் கன்னத்தில் அறைந்து விட்டால் அது ஒரு எச்சமாக மாறி அறைந்தவரை எத்தனை பிறவிகள் ஆனாலும் தொடர்ந்து வந்து துன்புறுத்தும். சற்குருவைப் பெற்றோர்கள் இவ்வாறு தங்கள் எச்சங்களை எல்லாம் ஒன்று சேர்த்து அவற்றை இந்த மனிதப் பிறவியிலேயே கழித்து விடலாம் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் செய்தியாகும். இந்த எச்சங்களை கழிக்க வல்ல பித்ரு தர்ப்பண தலங்களில், பித்ரு முக்தித் தலங்களில் ஒன்றே பவானி முக்கூடல் என்பதை நாம் மறந்து விடலாகாது. எங்கும் ராஜ கோபுரத்தை நோக்கியவாறே மூலவர் வீற்றிருக்க பவானி முக்கூடல் திருத்தலத்தில் மட்டும் காவிரி முக்கூடலை மூல மூர்த்தி மட்டும் அல்லாது ஸ்ரீவேதநாயகி, ஸ்ரீலட்சுமி நரசிம்மர் போன்ற தெய்வ மூர்த்திகளுமே நோக்கிய வண்ணம் எழுந்தருளி இருப்பதிலிருந்தே இத்தலத்தில் நிறைவேற்றப்படும் தர்ப்பணம், அன்னதானம், காயத்ரீ ஜபம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளலாம். இத்தகைய சிறப்புகள் பெருகி, பொங்கிப் பொழிவதால்தான் அகத்திய கிரந்தங்கள், “எச்சம் மிச்சமின்றிக் கழியும் முக்கூடல்”, என்று பவானி மட்டும் அல்லாது திரிவேணி சங்கமம், அன்பில், நத்தம் போன்ற முக்கூடல் திருத்தலங்களில் நிகழ்த்தப்படும் அன்னதானம், தர்ப்பணம் போன்ற காரியங்களைச் சிறப்பிக்கின்றன.

அன்பில் போன்று தற்போது இத்தகைய முக்கூடல் சக்திகள் காலவர்த்தமான சூழ்நிலைகளால் மறைந்து தோன்றினாலும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாட்களில் அன்னதானம் போன்ற வைபவங்களை நிகழ்த்தி இச்சக்திகளை புனருத்தாரணம் செய்யலாம் என்பதே நம் சற்குருவின் அருளுரை. பவானி திருத்தலத்தில் பொலியும் நணா சக்திகள் தம்பதிகள் இடையே பொலியும் இடையனல் என்னும் சக்திகளை நிர்வகிக்கக் கூடியவையே. ரேடியோ, தொலைக்காட்சியின் மூலம் நிகழ்ச்சிகளை பார்க்கும்போது குறித்த அலைவரிசையில் நிறமாலை அமையாதபோது நாம் சரியாக நிகழ்ச்சிகளைக் காண முடியாததுபோல எந்த அளவிற்கு இந்த இடையனல் சக்திகள் தம்பதிகளிடையே ஒருமித்து வலிமை அடைகிறதோ அந்த அளவிற்கு குடும்ப ஒற்றுமை பெருகுவதுடன் சந்தானங்களும் ஒழுக்கத்துடன் நன்னெறியுடன் திகழ்வர். திருவிடைமருதூர் போன்ற பித்ரு தலங்களில் குடும்ப ஒற்றுமைக்காக, சந்தான பாக்கியத்திற்காக தர்ப்பணங்கள் நிகழ்த்தும்போது நம் மூதாதையர்களே நம்முடைய சந்தானங்களாக வந்து வாய்ப்பர் என்று கூறுவதன் பின்னணி இதுவேயாகும். மேலும் இத்தகைய இடையனல் சக்திகள் கணவன் மனைவியருக்கிடையே ஐந்து வயதிற்குள் வித்தியாசம் இருந்தால்தான் வீறுகொண்டு எழும் என்பதும் பெரியோர்கள் சுட்டிக் காட்டும் இரகசியமாகும். வரன்கள் பார்க்கும்போது ஜாதகங்களில் திகழும் நாக தோஷங்கள் இத்தகைய இடையனல் சக்தி வேறுபாடுகளை ஓரளவே தெரிவிக்கும் என்பதால் நம் சற்குரு போன்ற பெரியோர்கள் இத்தகைய நணா சக்திகள் பெருகும் திருச்செங்கோடு போன்ற தலங்களில் வழிபாடுகள் இயற்றி நற்பலன் பெறுமாறு வலியுறுத்துகிறார்கள்.

செங்காமாக்யா தீர்த்தம்
திருச்செங்கோடு

தம்பதிகளிடையே திகழும் எத்தகைய உடல்கூறு பிரச்னைகளையும், உடல் சூடு, அனல் பேத வித்தியாசங்களையும், நாடி பேதங்களால் தோன்றும் சந்ததியின்மை போன்ற துன்பங்களையும், கணவனை விட மூத்த மனைவி அமைவதால் ஏற்படும் அறிவு பேதங்களையும் களைவதே செங்காமாக்யா என்ற இத்தரிசனம் ஆகும். திருச்செங்கோடு மலையின் அடிவாரத்திலிருந்து மலை உச்சிவரையில் அமைந்த பல்வேறு தரிசனங்களுக்கும் சிகரம் வைத்தாற்போல் அமைவதே செங்காமாக்யா தரிசனம் ஆகும். நம் கோவணாண்டிப் பெரியவர் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள காமாக்யா திருத்தலத்திற்கு சிறுவன் வெங்கடராமனை அழைத்துச் சென்றபோது காமாக்யா திருத்தல மகிமைகளைப் பற்றியும் திருச்செங்கோடு திருத்தல மகிமையைப் பற்றியும் அங்கு அர்த்தநாரீஸ்வரராக விளங்கும் இறைமூர்த்திகளின் மகிமையைப் பற்றியும், சிறப்பாக செங்காமாக்யா தரிசன விவரங்கள் குறித்த இரகசியங்களையும் தெரிவித்தார். அப்போது சிறுவனாக இருந்த நம் சற்குருவிற்கு நம் கோவணாண்டி அளித்த தாம்பத்ய இரகசியங்கள் புரியவில்லை என்றாலும் காலப்போக்கில் தன்னை அண்டி வந்த ஆயிரமாயிரம் அடியார்களின் குடும்ப பிரச்னைகளை தீர்த்து வைக்க செங்காமாக்யா தரிசன இரகசியங்களே உறுதுணையாக நின்றன என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சித்த மகாத்மியமாகும்.

குறிப்பாக செவ்வாய் தோஷங்கள், நாக தோஷங்கள் போன்ற இரத்த சம்பந்தப்பட்ட தோஷங்கள் அனைத்துமே திருச்செங்கோடு திருத்தலத்தில் தீரும் என்பதே செங்காமாக்யா தத்துவமாகும். இந்த தத்துவங்களை நாம் அறிந்து உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு இன்றைய கலியுலகில் மிக மிகக் குறைவே என்றாலும் அபூர்வமாக வலம் வரக் கூடிய வகையில் அமைந்த ஸ்ரீசகஸ்ரலிங்க ஈஸ்வரனையும் ஸ்ரீசிவகாமி சமேத நடராஜப் பெருமானையும் தொடர்ந்து வலம் வந்து வணங்குதலால் தம்பதிகள் இடையிலான எத்தகைய பிரச்னைகளுக்கும் நிச்சயம் தீர்வு காணலாம் என்பதே சித்தர்கள் உவந்து அளிக்கும் உத்தரவாதம் ஆகும். பவானி என்னும் சொல்லுக்கு திருச்செங்கோடு திருத்தலத்தின் புராதனப் பெயரான செங்குன்றூர் என்பதும், செங்காமாக்யா என்பதும் குசாவாக அமைவது யதேச்சையான தொடர்பு கிடையாது, இது நிரந்தர தெய்வீகத் தொடர்பே. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் திருச்செங்கோடு திருத்தலத்தில் நம் ஆஸ்ரமம் சார்பில் ஹோமம் நிகழ்த்தியபோது இத்தகைய செங்காமாக்ய சக்திகளை நிலைநிறுத்தும் அற்புத மூலிகைகள் ஆஹூதியாக அளிக்கப்பட்டன. அந்த ஆஹூதிகளின் நணா சக்திகள் இன்றும் இத்திருத்தலத்தில் நிலைபெற்று எத்தனையோ பக்தர்களுக்கு, அவர்களின் சந்ததிகளுக்கு நல்லருள் புரிகின்றன என்பதே நம் சற்குருவின் கருணை மகாத்மியங்களில் ஒன்றாகும்.

ஸ்ரீசகஸ்ரலிங்கேஸ்வரர்
திருச்செங்கோடு

ஸ்ரீநடராஜப் பெருமான்
திருச்செங்கோடு

சற்குரு நிலைநிறுத்திய அந்த நணா சக்திகளை இன்றும் பூரணமாகப் பெற விழைவோர், மற்றவர்களுக்கும் அளித்து சமுதாயப் பணி ஆற்ற விரும்புவோர் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, மாதுளை என்று மூன்று கனிகளையும் பிழிந்து இதில் சர்க்கரையோ, ஐஸ் போன்ற பொருட்களையோ கலக்காமல் எந்த பித்ரு தலத்திலும் தானம் அளிக்கலாம், பலன் பெறலாம். திருச்செங்கோடு திருத்தலத்தில் விளங்கும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர மூர்த்தியும், ஸ்ரீசெங்கோட்டு வேலவரும் வெள்ளை நவபாஷாணத்தால் ஆன உளிபடா மூர்த்திகள். இத்தகைய உளிபடா மூர்த்திகளை பூலோகத்தில் எங்கும் காண இயலாது என்பதே இந்த மூர்த்தங்களின் சிறப்புத் தன்மை ஆகும். இந்த மூர்த்திகளுடைய தொன்மையை விளக்குவதும் நம்மால் இயலாத ஒன்றே. நாம் வாழும் இந்தப் பூமியைத் தாங்குவதே ஆதிசேஷனின் இயக்கமாகும். ஆதிசேஷப் பெருமானே இந்த உளிபடா மூர்த்திகளைத் தாங்கும் பேறு பெற்றுள்ளார் என்றால் திருச்செங்கோடு தலத்தின் தொன்மையை எப்படி விளக்க முடியும் ? இந்த ஆதிசேஷ சக்திகளைக் குறிப்பதாகவே, பாம்பின் பல்வேறு உருவங்களைக் கொண்ட விக்ரஹங்கள், புடை சிற்பங்கள் இத்திருத்தலத்தில் விளங்குவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும். காமம் என்றால் ஆசை, செங்காமம் என்றால் முதிர்ந்த ஆசை, இறைவன் மேல் மட்டுமே பரிணமிக்கும் செங்கோட ஆசை, இந்த முதிர்ந்த செங்கோட சக்திகள் பரிணமிக்கும் தலமே திருச்செங்கோடு ஆகும். செங்காமாக்யா, செங்கோட சக்திகள் இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கும் வெவ்வேறு பதங்களே. நிழலம் நிஜமும் போல, நிஜமின்றி நிழலில்லையே. தனக்கு அனுகிரகம் அளித்த செங்கோட ஈசனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆதிசேஷ பகவான் தினமும் திருச்செங்கோடு தலத்தின் மேல் பறந்து சென்று தன் நிழல் சக்திகளை இங்குள்ள செங்காமாக்யா பொய்கையில் பதிக்கின்றார். 300 வருடங்கள் யாரையும் தீண்டாமல் வாழும் நாகமே ஒரு நாக தேவதையாக மாறி பக்தர்களின் குறை தீர்க்க வல்லதென்றால் பெருமாளுக்கு குடை பிடிக்கும் ஆதிசேஷ பகவானே தினமும் தன் நிழலைப் பதிக்கும் தீர்த்தம் என்றால் அதன் நாக சக்தி எப்படி இருக்கும் ?

ஸ்ரீமார்க்கண்டேயர் குகை
திருச்செங்கோடு

அதனால் திருச்செங்கோடு மலை நாகமலை, நாககிரி என்றெல்லாம் புகழப்படுவதில் வியப்பில்லையே. அது மட்டுமா ? பெருமாளின் வாகனமான கருட பகவானும் தினமும் வானில் பறந்து சென்று தன்னுடைய நிழல் ஔஷத சக்திகளை இந்த செங்காமாக்யா தீர்த்தத்தில் பதித்துச் செல்கிறார் என்றால் இந்த தீர்த்தத்தால் குணமாகாத வியாதி என்று ஒன்று இருக்க முடியுமா ? நாகப் பாம்பைத் தொட்டுப் பார்த்தால் அதன் உடல் குளிர்ந்து இருப்பதை நாம் காணலாம். அதேபோல் திருச்செங்கோடு திருத்தல பாறைகளில் நாம் வெறுங்காலுடன் எவ்வளவு நேரம் நடந்தாலும், சுற்றினாலும் நம்முடல் சற்றும் சூடு ஏறாமல் இருக்கும் என்பதே நாம் உணர்ந்து அனுபவிக்கக் கூடிய அதிசயமாகும். உடம்பில் சூடு ஏறாமல் குளிர்ச்சியாக இருப்பதே இளமை இரகசியம். இந்த இளமை இரகசியத்தை அனைவரும் உணர்ந்து பலன் பெறவே ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி இங்குள்ள குகை ஒன்றில் நீண்ட நாள் தவமியற்றி அதன் தபோ பலன்களை எல்லாம் செங்காமாக்யா தீர்த்தத்தில் அளித்தார் என்பதும் செங்காமாக்ய தீர்த்தம் அமிர்த ஔஷதமாக விளங்குவதன் காரணமாகும். இது குறித்து மார்க்கண்டேய குகையில் கிடைத்த ஒரு அற்புத தரிசனத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். ஒரு எறும்பு தன்னை விட எட்டு மடங்கு எடையுள்ள ஒரு பொருளை தூக்கி வரும் பலமுடையதால் கிட்டத்தட்ட தன்னைவிட 12 மடங்கு உயரமுடைய ஒரு பெரிய எறும்பின் சடலத்தை அநாயசமாக சுமந்து வந்தது. ஆனால், அந்த குகை வாயிலில் கிடந்த ஒரு கம்பியைத் தாண்டி அந்த எறும்பால் செல்ல இயலவில்லை. காரணம் அது சுமந்து வந்த சடலத்தை படுக்கை வசத்தில் எடுத்துச் செல்லாமல் செங்குத்து நிலையில் (vertical position) எடுத்துச் செல்ல முயன்றதால் தான் எவ்வளவு முயன்றும் அந்த கம்பியின் இடுக்கைத் தாண்டிச் செல்ல இயலவில்லை. அந்த சடலத்தை அங்கேயே போட்டு விட்டு இரண்டு மூன்று முறை அந்த சடலத்தைச் சுற்றி சுற்றி வந்த பின்னர் அந்த கம்பி இடுக்கில் இரண்டு மூன்று முறை நுழைந்து பார்த்து தனியாக சிரமமின்றி தான் நுழையக் கூடிய ஒரு பாதையில் ஏன் சடலத்துடன் செல்ல முடியவில்லை என்று அரை நொடி யோசித்த பின்னர் அந்த எறும்பிற்கு தான் செய்த தவறு புரிய வந்தது.

உடனே அந்த சடலத்தை படுக்கைவசத்தில் சற்றும் சிரமமின்றி அந்தக் குறுகிய இடுக்குப் பாதை வழியே எடுத்துச் சென்று விட்டது. இதுவே மூதாதையர்கள் அளிக்கும் வழிகாட்டுதல். ஒரு சிற்றுயிருக்கே இத்தகைய வழிகாட்டுதல் கிடைக்கிறது என்றால் ஆறறிவு பெற்ற மனிதனுக்கு மார்க்கண்டேய குகை தரிசனம் எத்தகைய வழிகாட்டுதலை தரக் காத்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். உடல், மன ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் நெடு நேரம் தியானம் போன்ற ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடுவோர் மார்க்கண்டேய குகை மட்டுமல்லாமல் இங்குள்ள பாறைகளில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து இறை நாமங்களை ஓதி வருவதால் உடல் சூட்டினால் அவதிப்படாமல் எந்த வித மருந்தும் இன்றியே நல்ல நிவாரணம் பெறுவர். ஸ்ரீபிருங்கி மகரிஷியின் நிஷ்டா பக்தியைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். சிவனைத் தவிர வேறு எந்த தெய்வத்தையும், தெய்வ சக்தியையும் நாடாத அற்புத மகான். திருக்கயிலாயம் செல்லும்போது அருகிலிருக்கும் பார்வதி அன்னையைக் கூட சட்டை செய்யாது சிவனை மட்டுமே தொழுது வணங்கிச் செல்வதைக் கண்ட பார்வதி தேவி மிகவும் சினமுற்று அடுத்த முறை பிருங்கி மகரிஷி தரிசனத்திற்காக கயிலை ஏகியபோது அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் சிவனும் பார்வதியும் எழுந்தருளவே பிருங்கி மகரிஷி திகைத்து தன்னுடைய நிஷ்டா பக்தியைக் கைவிட முடியாமல் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தை துளைத்துச் சென்று சிவனை மட்டும் வணங்கிச் சென்றார் என்று கூறுவர்.

பிருங்கி பர்வதம்
திருச்செங்கோடு

மகரிஷியின் இந்த அற்புத வழிபாட்டை புரிந்து கொள்ள முடியாததால்தான் மகரிஷி இவ்வாறு “துளைத்து” சென்றார் என்று கூறுகிறோம். “தோளா முத்தச் சுடரே” என்றுதானே மணிவாசகப் பெருமான் இறைவனைப் புகழ்ந்து பாடுகிறார். அவ்வாறிருக்க உத்தம பக்தியில் உன்னதம் அடைந்த பிருங்கி மகரிஷி இறைவனின் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தை துளைத்துச் செல்வாரா என்ன ? ஒருவேளை அவ்வாறு துளைத்துச் செல்வதாகக் கொண்டாலும் அது சிவனின் உருவத்தையோ, சக்தியின் உருவத்தையோ அல்லது இவ்விரு மூர்த்திகளின் இணைந்த கோலத்தையோ துளைத்துச் செல்வதாகத்தானே அமையும் ? எதற்கும் இறுதி பதில் என்பது சித்தர்கள் அளிப்பதுதானே ? நாம் இந்த கேள்வியை நம் சற்குருவிடம் சமர்ப்பித்தபோது தமக்கே உரிய புன்னகையுடன், “என்ன சார், பிருங்கி மகரிஷி லெவலில் இருப்பவர்கள் சுவாமியைத் துளைத்துச் செல்வார்களா ? ஏன் இந்த சாதாரண விஷயத்தை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பார்க்கவில்லை. இறைமூர்த்திகள் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தை மேற்கொண்டதும் அதைக் கண்டு திகைத்து வியந்து நின்றார் பிருங்கி மகரிஷி. முதலில் தான் இறைக் கோலத்தைத் துளைத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணமே அவருக்குத் தோன்றவில்லை. ‘இவ்வாறு அம்மையுடன் அப்பனாக எழுந்தருளும் இறைக் கோலத்தை தரிசனம் செய்வதற்கு தான் என்ன அப்படி ஒரு தவத்தை செய்து விட்டோம் ?’ என்ற எண்ணமே மகரிஷியின் வினயத்திற்கு காரணமான பக்தியாகும். இருந்தாலும் தன்னுடைய சிவ நிஷ்டா பக்தியைக் கைவிடத் தயாராக இல்லாத பிருங்கி மகரிஷி திருச்செங்கோட்டில் திகழும் தற்போது பிருங்கி பர்வதம் என்று அழைக்கப்படும் பாறைப் பகுதியில் அமர்ந்து தவத்தில் ஆழலானார். யுகங்கள் கடந்தன. பக்தன் ஒருவனின் பக்தியில் உலகம் மூழ்கினால் அதைக் களைய வேண்டியது எம்பெருமானின் பொறுப்பல்லவா ? இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து உலகைக் காக்க, உமையவள், மகரிஷியின் நிஷ்டா பக்திக்கு களங்கம் ஏற்படாமல் இருக்க உலக சிருஷ்டிக்கு முந்தைய ஆதித் தோற்றமான பிரணவ ஒலித் தோற்றத்தில் நிலை கொண்டான் எம்பெருமான். எப்படி ஒரே அறையில் மெழுகுவர்த்தியின் தீபம், அகல் விளக்கின் தீபம், மின்சார பல்பின் தீபம் இவை ஒன்றுக்கொன்று முரண்படாமல் ஒளி வீசுகின்றனவோ, எப்படி மிருதங்கம், நாதஸ்வரம், ஆலயமணி ஓசைகள் ஒன்றுக்கொன்று இணைந்து ஒலிக்கின்றனவோ அதுபோல் எம்பெருமானின் சிவக் கோலமும், சக்தி அம்சமும் தனித் தனியாக ஒலி ரூபத்தில் தோன்றவே அந்த ஒலிப் பிழம்பில் ஒலி ரூபமாக வண்டு வடிவில் வலம் வந்து சிவபெருமானை வணங்கினார் பிருங்கி மகரிஷி,” என்று பிருங்கி நாத தரிசனத்தை நமக்கு விளக்கினார் சற்குரு. இந்த அற்புத திருவிளையாடல் நிகழ்ந்த திருத்தலமே திருச்செங்கோடு. அந்த அற்புத பர்வதமே இங்கு நீங்கள் தரிசனம் செய்யும் பிருங்கி தவப்பீடமாகும். பல யுகங்கள் ஸ்ரீபிருங்கி முனிவர் தவமியற்றிய இந்த பிருங்கி தவப் பீடத்தில் நாம் சில மணி நேரங்களையாவது இறை நினைவில் கழித்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே. தியானத்தில் அமரும் பக்தர்கள் முதலில் ஒலி ரூபத்தில் மனதை நிலை நிறுத்த முடியாது என்பதால் ஆரம்ப நிலையில் பக்தர்கள் இங்குள்ள திருச்செங்கோடு கோபுரத்தை தரிசித்தவாறே தங்கள் தியானத்தை ஆரம்பித்து சிறிது சிறிதாக எண்ண சக்தியை தங்கள் இதயத்தில் எழும் ஒலியிலும், அதை அடுத்து பிரணவ ஒலியிலும் இலயிப்பதே இத்தகைய பிருங்கி தியானத்தை பக்தர்கள் மேற்கொள்ளும் வழிமுறையாகும்.

மனம் ஈர்க்கும் மந்தாரை

திருச்செங்கோடு திருத்தலத்தில் இறைவன் அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் இருமனம் ஒன்றாய்க் கலந்த கோலத்தில் திகழ்வது பக்தர்கள் இத்தகைய மன ஒருமைப்பாட்டுடன் திகழ வேண்டும் என்பதற்காகத்தானே ? இத்தகைய இருமனம் இணைந்த கோலத்தில் திகழ்வதே மந்தாரை மலராகும். கொக்கு மந்தாரையை தலவிருட்சமாக உடைய காளையார்கோவிலும், அந்தி மந்தாரையை தலவிருட்சமாக உடைய திலதைப்பதி திருத்தலமும் இத்தகைய சிறப்புகளைப் பெற்ற தலமாக விளங்குகின்றன. மந்தாரை மலர்களின் தம்பதிகளை இணைக்கும் “பால” சக்தியை அனுகிரகமாக பெற விரும்பும் தம்பதியர் திருச்செங்கோடு திருத்தலத்தில் எங்கு வேண்டுமானாலும் இவ்வாறு இரண்டு மந்தாரை இலைகளின் மேல் இரண்டு தேங்காய் எண்ணெய் தீபங்களை ஏற்றி வைத்து நலம் பெறலாம் என்பதே சித்தர்களின் பரிந்துரை.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு தலத்தில் மட்டும் அல்லது பவானி போன்ற முக்கூடல் தலங்களிலும், உய்யக்கொண்டான்மலை, லால்குடி திருத்தவத்துறை போன்ற அர்த்தநாரீஸ்வரர் கோஷ்ட மூர்த்தியாகத் துலங்கும் தலங்களிலும் இத்தகைய வழிபாடுகளை இயற்றி பயன்பெறலாம். அர்த்தநாரீஸ்வரர் முன் தீபங்களை ஏற்றும்போது தீபங்கள் இறை மூர்த்திகளை நோக்கும் வண்ணமும் மந்தாரை இலைகளின் நுனி பக்தர்களை நோக்கும் வண்ணமும் அமைத்தல் சிறப்பாகும். சந்திரபகவான் மட்டுமே நவகிரக மூர்த்திகளில் காலசர்ப்ப யோகத்தில் விடுபட்ட மூர்த்தியாகத் துலங்குவதால் இத்தகைய பிளவுபட்ட இரு கூறுகளுடன் துலங்கும் மந்தாரை இலைகளின் மேல் தீபங்களை ஏற்றி வைத்தல் என்பது பிளவு பட்ட இதயங்களை இணைக்கும் மலர் சக்தியாக விளங்குகிறது, எத்தனை தீபங்கள் இணைந்தாலும் அது ஒரே தீபமாகப் பிரகாசிப்பது போல் இந்த மந்தாரை இலைகள் உறவுகளை, மனங்களை இணைக்கும் பாலமாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. இந்த தீபங்கள் குளிர்ந்த பின் இந்த இலைகளை எடுத்து உறங்கும் முன் கண்களின் மேல் வைத்து கட்டி வருவதால் கண்களில் தோன்றும் சுருக்கங்கள் மறையும், கண்களில் தோன்றும் செந்நிறம் மறைந்து கண் குளிர்ச்சி பெறும். இரவுப் பணிகள் தவிர்க்க வேண்டிய ஒன்று என்றாலும் வேறு வழியின்றி இத்தகைய பணிகளில் ஈடுபடுவதால் தோன்றும் அதீத உடல் சூடு இத்தகைய வழிபாட்டால் தணியும். இளஞ் சூடு உடைய சுத்தமான விளக்கெண்ணெயை இந்த மந்தாரை இலைகளின் மேல் தடவி கண்களின் மேல் வைத்துக் கட்டிக் கொள்வதும் ஏற்புடையதே. அதிக கண்ணெரிச்சல், உறக்கம் வராமல் அவதிப்படுதல் போன்ற சூட்டு வியாதிகளையும் இது நிவர்த்தி செய்யும். பொதுவாக, இந்த வருடம் எங்கு தீபம் ஏற்றினாலும் தீபங்களின் கீழ் மன இணைப்பைக் குறிக்கும் மந்தாரை இலைகளை வைத்து ஏற்றுதலால் குடும்பப் பகை, அலுவலகப் பகை, வியாபாரப் பகை, அரசியல் பகை போன்ற அனைத்து விதமான பகைகளும் மறையும் என்பதே மந்தாரை வழிபாட்டில் மலரும் ஒற்றுமை ஆகும். இத்தகைய மந்தாரை இலைகளை கொதிக்கும் நீரில் இட்டு குடி நீராக அருந்துவதும் ஏற்புடையதே, இதனால் மலச்சிக்கல், வயிற்றில் பூச்சி, குடல் புழுக்கள் போன்ற நோய்களும் குணமாகும்.

பல குழந்தைகளும் தங்கள் மறைவு பாகங்களை சொரிந்து கொண்டு இருப்பதைக் காணலாம். குடல் புழுக்களால் ஏற்படுவதே இத்தகைய துன்பங்கள். பொது இடங்களில் இத்தகைய நடத்தை உடைய குழந்தைகளைத் திட்டி, அடித்து துன்புறுத்துவதைத் தவிர்த்து அக்குழந்தைகளுக்கு மந்தாரை இலைத் தீர்த்தங்களை தொடர்ந்து அளித்து வருதலால் விரைவில் நற்பலனைக் காணலாம். காளையார் கோவில் திருத்தல தலவிருட்சமான கொக்கு மந்தாரை சிறப்பாக கண் நோய்களுக்கு நிவாரணம் அளிப்பது மட்டுமன்றி அதீதமான உடல் சக்தியையும் அளிக்கவல்லதே. இங்கு புகழ்பெற்று விளங்கிய மருது சகோதரர்கள் பதினாறு அடி வேங்கைப் புலியை அதன் வாலைப் பிடித்து சுற்றி தரையில் அடிக்கும் அளவிற்கு வல்லமை பெற்றிருந்தனர். இதன் மூல பலம் இத்தலத்தில் விளங்கிய கொக்கு மந்தாரையை இறைவனுக்கு அர்ப்பணித்து வந்ததே காரணம் என்றால் மந்தாரை மலர்களின் மகிமையை வர்ணிக்கத்தான் இயலுமா ?

ஸ்ரீஉச்சிப்பிள்ளையார் கோவில்
திருச்செங்கோடு

பிருங்கி முனிவர் திருச்செங்கோடு திருத்தலத்தில் தியானம் இயற்றி இறைவனின் ஓங்கார தரிசனத்தைப் பெற்றார் என்று கூறினோம் அல்லவா ? இத்தகைய ஓங்கார தரிசனத்தைப் பெறும் அளவிற்கு புண்ணிய சக்தியையும் தியாகசீலத்தையும் பிருங்கி முனிவர் ஒருவரே பெற்றிருந்தார் என்றாலும் அனைவரையும் இத்தகைய உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் உயர்ந்த எண்ணம் கொண்டவரே நம் சற்குரு ஆவார். நம் சற்குரு ஒவ்வொரு அடியாரையும் தரிசிக்கும்போது ஓம் என்று சொல்லித்தான் வரவேற்பார், வணக்கம் செலுத்துவார். ஓங்காரம் என்ற பிரணவ ஒலி நாம் கேட்கும் ஒலி கிடையாது என்பது மகான்கள் அறிந்ததே. அதனால்தான் ஓங்கார பிரவணத்திற்கு எழுத்துக்களைக் கொடுக்காமல் ஒரு குறியைக் கொடுத்தார்கள். வார்த்தை, தோற்றம், காலம், தேசம் இவற்றைக் கடந்து, இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு விளங்குவதே ஓங்கார நாதம். உண்மையில் இதை நாதம் என்று கூட குறிக்க முடியாததுதான். நாத விந்து கலாதீதா என்றுதானே முருகப் பெருமானை அருணகிரிநாதர் விளிக்கின்றார். ஆனாலும், என்றாவது ஒரு நாள், ஏதாவது ஒரு பிறவியில் இந்த ஓங்கார நாதத்தை கேட்கும் அளவிற்கு அந்த ஓங்கார நாதமாய் ஒலிக்கும் இறைவனைத் தரிசிக்கும் உயர்ந்த, உன்னத நிலையை நம் அடியார்களும் நிச்சயம் அடைவார்கள் என்ற திடநம்பிக்கையில்தான் நம் சற்குரு தம் சீடர்கள் ஒவ்வொருவரையும் இத்தகைய ஓங்கார வணக்கத்துடன் வரவேற்கிறார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் பேருண்மையாகும். நம் சற்குருவை நேரில் காணும் பாக்கியம் பெறாதவர்களும் திருச்செங்கோடு நாககிரியில் பிருங்கி பர்வதம், மார்க்கண்டேய குகை, செங்காமாக்யா தீர்த்தம் என்று ஓங்கார சக்திகள் பொங்கி வழியும் தரிசனப் பகுதிகளில் தொடர்ந்து தியானம் புரிந்து பலன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். எடுத்த எடுப்பில் ஓங்கார ஒலியைக் கேட்டுவிட முடியும் என்று நினைத்து விட வேண்டாம். முதலில் இந்திரியக் கட்டுப்பாடும் அதைத் தொடர்ந்து சர்வத்ர சமதர்சனம் என்று அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் மனோபாவமும், தான் என்ற எண்ணம் ஒரு சிறிதும் தோன்றாத நிலையும் இத்தகைய ஓங்கார தரிசனத்திற்கு, இறைவனின் ஒலி தரிசனத்திற்கு முன்னோடிகளே. ஆனால், இத்தகைய கட்டுப்பாடுகளைக் குறித்து அடியார்கள் சற்றும் கலங்க வேண்டாம். இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்த குணாதிசயங்களை எல்லாம் வளர்த்துக் கொள்ள அருள்பவர் நம் சற்குரு மட்டும் அல்ல இத்தலத்தில் அருள்புரியும் மார்க்கண்டேயர், பிருங்கி மகரிஷி அனைத்திற்கும் மேலோக நம்மை ஒவ்வொரு நொடியும் வழிநடத்தும் நம் பித்ருக்களின் கனிந்த ஆசிகள் என்றும் நமக்கு துணையாக வரும் என்பதை உணர்த்துவதும் நாம் இத்தலத்தில் மேற்கொள்ளும் வழிபாடுகள் ஆகும்.

ஸ்ரீகாலபைரவர்
திருச்செங்கோடு

பெரும்பாலான பக்தர்கள் தங்கள் கையில் பணம் இல்லாததால் தங்களால் அன்னதானம், ஆபரண தானம், நிலதானம் போன்ற விலையுயர்ந்த தானங்களை நிறைவேற்றி சிறந்த பலன்களைப் பெற முடியவில்லை என்று எண்ணுகிறார்கள். உண்மையில் ஓங்கார தியானத்தைவிட, ஓங்கார தானத்தை விட உயர்ந்த தானம் எதுவுமே கிடையாது எனலாம். நாம் கூறும் ஓங்காரம் என்பது உண்மையான ஓங்காரம் கிடையாது என்றாலும் நமக்குத் தெரிந்த இந்த ஓங்கார நாதத்துடன் நாம் காணும் ஒவ்வொரு பொருளையும் அது உயிருள்ள பொருளாக இருந்தாலும் சரி அல்லது வாகனம், விளக்கு, பாறை, தூண்கள் போன்ற உயிரற்ற பொருட்களாக இருந்தாலும் சரி அவைகளை உயிருள்ள ஜீவ சக்திகளாகவே மதித்து அவர்களுக்கு ஓங்கார வணக்கம் அளித்து வந்தால் நாளடைவில் நிச்சயம் நாமும் ஓங்கார தரிசனத்தைப் பெறுவோம் என்று உறுதி அளிப்பவரே நம் சற்குரு ஆவார். நம்புங்கள், நலம் பெறுங்கள். சிவம் என்றால் இறைவன், சவம் என்றால் நீங்கள் அறிந்ததே. சி என்ற எழுத்தில் மேலுள்ள எழுச்சியைக் குறிக்கும் வளைவு இல்லாதபோது அது உணர்ச்சிகள் இல்லாத சவம் ஆகிவிடுகிறது அல்லவா ? அதனால்தான் அரிசி என்ற மூன்றெழுத்து பெருமாளையும், சிவனையும் குறிக்கும் சக்தி ஆகிவிடுகிறது. இந்த சி என்ற எழுச்சி சக்தி தோன்றிய இடமே பிருங்கி பர்வதம் ஆகும். பிருங்கி என்ற சொல்லில் முதல் எழுத்து இத்தகைய எழுச்சி சக்திகளுடன் துலங்குவதால் இத்தகைய எழுச்சி சக்திகளுடன் துலங்கும் பில்வம் என்ற வில்வம் சிவ அர்ச்சனைக்கு உகந்த அற்புத மூலிகையாக இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எந்த திருத்தலத்தில் அன்னதானம் நிறைவேற்றினாலும் அதில் ஏக வில்வம் என்ற ஒரே ஒரு வில்வ பத்ர பிரசாதத்தையாவது சேர்த்து தானமளிக்க வேண்டும் என்ற நியதி தோன்றிய இடமே திருச்செங்கோடு தலத்தில் துலங்கும் பிருங்கி பர்வதம் ஆகும். இவ்வருடம் முழுவதும் இந்த நியதியை ஒட்டி எந்த திருத்தலத்தில் அன்னதானம் வழங்கினாலும் ஒரு வில்வ இலையை பிரசாதத்துடன் சேர்ந்து வழங்குவதால் இறைவனின் குஞ்சித பாத சக்திகளை அன்னதானம் பெறும் அனைவருக்குமே வழங்கிய பெருமை உடையோர் ஆவோம். ஆம், நடராஜப் பெருமானின் ஆனந்த தாண்டவத்தை சதா சர்வ காலமும் தரிசிக்கும் பேறு பெற்ற பதஞ்சலி முனிவர் பக்தர்களுக்கு அருளும் வரங்களுள் இதுவும் ஒன்றாகும். யாரெல்லாம் பிலவ வருடத்தில் அன்னதானம் வழங்கும்போது ஒரு பில்வ பத்ரத்தையாவது அதில் சேர்த்து வழங்குகிறார்களோ அவர்கள் அனைத்து அன்னதான பிரசாதங்களிலும் இறைவனின் குஞ்சித பாத சக்திகளை வழங்கிய அருளைப் பெறுவார்கள் என்றால் ..... ? சில வைணவப் பெரியோர்கள் அரிசி என்று கூறினால் அதில் சி என்று சிவபெருமானைக் குறிக்கும் எழுத்து அமைவதால் அரிசி என்று கூறுவதைத் தவிர்த்து திருக்கிண்ணமுது என்று கூறுவார்கள். ஆனால், சிவ பெருமானின் குஞ்சிதபாத எழுச்சி சக்தியைக் குறிக்கும் தி, கி என்ற இரண்டு எழுத்துக்கள் அதில் அமைந்துள்ளன என்ற பெருமாள் வித்தையை அவர்கள் அறியார் ?! சர்க்கரைப் பொங்கலில் தேன் சேர்த்து பிரசாதமாக பௌர்ணமி தினங்களில் அடியார்களுக்கு அளிக்கும்போது அதுவே உண்மையான திரு கிண்ண அமுத பிரசாதமாகும். இத்தகைய திரு கிண்ண அமுது பிரசாதத்தை பச்சை மலை தேன் கலந்து திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த அடியார்களுக்கு ஒரு வருடம் முழுவதும் பௌர்ணமி திங்களில் அளித்தவரே நம் சற்குரு என்பதை அறிந்தோர் ஒரு சிலரே. இதுவே பச்சை மாமலை போல் மேனி என்று பெருமாளைப் புகழும் பக்தியின் குஞ்சிதபாத எழுச்சி ! இன்றும் இத்தகைய பச்சை மலைத் தேனை சர்க்கரைப் பொங்கலில் சேர்த்து பௌர்ணமி தினங்களில் அளித்தலால் பக்தர்கள் இத்தகைய குஞ்சிதபாத எழுச்சி சக்திகளைப் பெறும் பூஜை முறையாக அமையும். பச்சை மாமலை போல் மேனி வண்ணன் சுவையோடு பச்சை வில்வ சுவையும், குஞ்சிதபாத எழுச்சி சக்திகளும், பச்சை மலைத் தேன் சக்தியும் கலந்தால் அதன் சுவைதான் என்னே என்னே !

பாவம் தீர்க்கும் பானகம்

உலகில் எவ்வளவோ இடங்கள் இருக்க ஏன் பச்சை மலைத் தேனை சர்க்கரைப் பொங்கலில் கலந்து அடியார்களுக்குப் பிரசாதமாக அளிக்க வேண்டும் என்று உங்களுக்குக் கேள்வி எழுவது இயற்கையே. பச்சை மலையில் ஒருவித தேனீக்கள் உள்ளன. செம்மேனிநாதம் என்ற திருநாமம் உடைய இந்த தேனீக்களின் ரீங்கார நாதமே ஓங்காரத்திலிருந்து மக்களுக்குப் பயன்படும் அமிர்த சக்திகளை பிரித்தெடுக்கும் ஆற்றல் உடையவை. அது மட்டுமல்லாமல் தங்கள் உயிருக்கே ஆபத்து வந்தாலும் எப்படியாவது ஆபத்துக்களை சமாளித்துக் கொண்டு தாங்கள் சேகரித்த தேனை தங்கள் கூடுகளில் கொண்டு சேர்த்து விடும் அதீத வல்லமை பெற்றவையே இந்த செம்மேனி தேனீக்கள் ஆகும். திருஅண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப அன்னதானம் நிறைவேற்றியபோது இந்த செம்மேனிநாத வண்டுகளின் தலைவனுக்குரிய நாமத்தையே ஒரு குழுவிற்கு நம் சற்குரு அளித்து கௌரவித்தார் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தேன் சுவையே.

திருச்செங்கோடு

உலகில் நாம் யாரைக் கேட்டாலும், “நான் ஒரு பாவமும் அறியேன், எனக்கு ஏன் இத்தகைய துன்பங்கள் மலை போல் குவிகின்றன என்றே தெரியவில்லை,” என்று கூறுவார்கள். அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று கிடையாது. அவரவர் செய்யும் பாவத்தின் தன்மை அவர்களுக்கே தெரிவதில்லை என்பதே பாவம் என்ற தீய காரியத்தின் விளைவுகள். பாவங்களைப் பட்டியல் இடுவது மகான்களின் வேலை இல்லை என்பதால் நம் சற்குரு இவற்றைப் பற்றி பெரிதாக கூறுவதில்லை. அதே சமயம் நம் சற்குரு அளிக்கும் ஒவ்வொரு பூஜையிலும் அடியார்கள் செய்யும் பாவங்களின் விளைவுகளைக் குறைப்பதாகவே அவை அமையும், பின்னரே அவை பக்தர்களுக்குத் தேவையான புண்ணிய சக்தியை அளிக்கும் என்பதே சற்குருமார்களின் கர்ம பரிபாலன இரகசியங்களாகும். இம்முறையில் பிலவ வருடத்தில் அளிக்கும் பானக தானமானது முழுக்க முழுக்க அடியார்களின் பாவச் சுமைகளைக் குறைப்பதாகவே அமையும் என்பதே இத்தகைய தானங்களின் தன்மையாகும். திருச்செங்கோடு ஸ்ரீஉச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் உள்ள செங்காமாக்ய தீர்த்தத்தை கொதிக்க வைத்து அதில் துளசி, வெட்டிவேர், கடுக்காய், ஏலக்காய், சுக்கு போன்ற பஞ்ச திரவியங்களை சேர்த்து ஒன்பது அடியார்களுக்கு குறையாமல் ஸ்ரீஆயுர்தேவி வழிபாடுகள் இயற்றி அவ்வாறு பெற்ற தீர்த்த பிரசாதத்தை பச்சை மலை தேன், கற்கண்டு, வெல்லம், எலுமிச்சை சாறு இவற்றுடன் பானகத்தில் கலந்து எந்த நாளும், எந்த திருத்தலத்திலும் இந்த பிலவ வருடத்தில் தானம் அளிப்பதால் அடியார்கள் இயற்றிய அனைத்து பாவங்களும் இறையருளால் விலகும். இத்தகைய அபூர்வ பாவ வினைகள் தீர்க்கும் பானகத்தை இவ்வருடம் முழுவதும் அடியார்கள் இயற்றி தாங்கள் பல பிறவிகளில் இயற்றிய பாவச் சுமைகளை தணித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். உடல் ரீதியான கர்ம வினைகளுக்கு இவை நேரடியான தீர்வை அளிக்காது என்றாலும் அந்த கர்ம வினைகளை தீர்த்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை நிச்சயமாக இந்த தான தர்மங்கள் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக வரும் கத்ரி எனப்படும் அக்னி நட்சத்திர நாட்களில் அளிக்கப்படும் இத்தகைய பானக தானங்கள் எத்தகைய தொற்றுநோய்களையும் தீர்க்கும் வல்லமை உடையவையாக விளங்கும். நீர் மோர், ஆரஞ்சு பழரசங்கள் போன்ற பானங்களையும் இத்தகைய தானத்துடன் சேர்த்து வழங்குவதும் ஏற்புடையதே. மற்ற எந்த பழரசத்திற்கும் இல்லாத மதிப்பு பானகத்திற்கு எப்படி வந்தது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகின்றது அல்லவா ? கோபத்தின் உச்சக்கட்டத்தில் நின்ற நரசிம்ம பெருமாளின் கோபம் தணிக்க பிரகலாத சிறுவனால் படைக்கப்பட்டதே பானகம் என்பதாகும். இந்த நிகழ்ச்சி நடந்த பவானி இலந்தை மர நிழலில் இத்தகைய பானக தானத்தை ஆரம்பித்தல் சிறப்பாகும். ஆந்திர மாநிலத்தில் உள்ள பானக நரசிம்மருக்கு எவ்வளவு பானகத்தை அளித்தாலும் அதில் பாதி பானகத்தை நரசிம்ம பிரசாதமாக குறிப்பாக பிரகலாதன் போன்ற பக்தர்களுக்காக அளித்து விடுவதே இன்றும் பக்தர்கள் தரிசிக்கக் கூடிய நரசிம்ம மகாத்மியமாகும். இதைக் குறிப்பதாக பவானியிலோ அல்லது நரசிம்மர் எழுந்தருளிய மற்ற பெருமாள் தலங்களிலோ நரசிம்மருக்கு படைத்த பானகத்தை பிரசாதமாக முதலில் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் அளிப்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பாக்கியமாகும். திருச்செங்கோடு திருத்தலத்தில் ஸ்ரீமல்லிகார்ஜுனருக்கு படைத்த பானகத்தை பக்தர்களுக்கு அளிப்பதும் சிறப்புடையதே.

ஸ்ரீபாலதாண்டாயுதபாணி
ஈங்கோய்மலை

ஸ்ரீஅகத்திய பிரான் தேனீ என்ற ஈ வடிவில் வலம் வந்து திருஈங்கோய்மலையில் இறைவனை வழிபட்டதால் அது திரு ஈ கோ மலை ஆயிற்று என்பது நீங்கள் அறிந்ததே. தேனீக்கள் இத்தகைய சிறப்புடையது என்றால் செம்மேனிநாத வண்டுகள் என்னும் தேனீக்கள் எத்தகைய சிறப்புடையதாக இருக்கும் ? மணிவாசகப் பெருமான் வளைந்தது வில்லு ... என்று இறைவனைப் புகழ்ந்து பாடிய பதிகம் 32 தேவாரப் பதிகங்களுள் ஒன்றாக வைத்துப் பாடும்படி ஸ்ரீஅகத்திய திரட்டாக மலர்ந்துள்ளது என்ற பெருமை பெறக் காரணமும் இதுவே ஆகும். இந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் உந்தீபற என்ற பஞ்சாட்சரம் இடம் பெறுவதே இந்தப் பதிகத்தின் பெருமையாக சித்தர்கள் உரைக்கின்றனர். உந்தீபற என்ற வார்த்தையில் வளரும் தீ என்ற அக்னி சக்தி பொதுவான வைஷ்வாநர அக்னி சக்தியைக் குறிப்பதாகக் கொண்டாலும் செம்மேனிநாத வண்டுகளைப் பொறுத்தவரை இந்த அக்னி சக்திகளே இவ்வாறு ஓங்காரத்திலிருந்து ரீங்கார சக்தியை ஈர்க்கும் அக்னி சக்திகள் என்று அருள்கிறார் நம் சற்குரு. மலரில்தான் தேன் உற்பத்தியாகிறது என்றாலும் அந்தத் தேனை யாரும் உண்பதில்லை.

காரணம் தேனீக்களால் உறிஞ்சி செரிக்கப்பட்ட தேனிற்குத்தான் அதீத ஆரோக்கிய சக்தி, தெய்வீக சக்தி உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்கு காரணம் தேனீக்கள் மலரிலிருந்து தேனை எடுத்தவுடன் அதை உடனே தங்கள் கூடுகளில் சேர்த்து விடுவது கிடையாது. நாம் ஏற்கனவே கூறியது போல் தங்களுடைய ரீங்கார சக்தியால் ஓங்காரத்திலிருந்து இறை சக்தியை ஈர்த்து அதை தேன் துளியில் சேமித்து வைக்கின்றன. இந்த அரும்பணியை ஆற்றுவதற்கு ஒவ்வொரு தேனீயும் குறைந்தது 30 கிமீ தூரமாவது பறந்து செல்ல வேண்டும் என்பதே தேனீக்களின் அயராது உழைக்கும் பணியின் மகத்துவமாகும். இவ்வாறு தங்கள் உந்தியில், உதரம் என்னும் வயிற்றுப் பகுதியில் தேன் பல மணி நேரம் தங்கி சுழல்வதால் அதில் செம்மேனிநாத சக்திகள் பல்கிப் பெருருகின்றன. வயிற்றின் நடுப் பகுதி என்பது நடு மையம், மைய மையம், ஆரண மையம் என்று மூன்று விதமான குசா சக்திகளுடன் துலங்குவதால் இத்தகைய தேனிற்கு இணையான குசா சக்தி உள்ள ஒரு அமிர்தத்தை மூவுலகிலும் பெற முடியாது என்பதால் இத்தகைய தேனை அடியார்களுக்கு இறைப் பிரசாதமாக நம் தேன் குருநாதர் வழங்கினார் என்றால் அவர்தம் மகிமைதான் என்னே ? எடுத்ததெற்கெல்லாம் கோபம் அடையும் முன் கோபக்காரர்களால் தங்கள் கோபத்தால் பதவி, பணம், நண்பர்கள், உறவுகள் என அனைத்தையும் இழந்தாலும் தங்கள் கோபத்தை விட முடியாமல் தவிக்கிறார்கள். இதற்கான பூர்வ ஜன்ம காரணங்கள் பல இருந்தாலும் மேற்கூறிய முறையில் பானகம் தயாரித்து நரசிம்மருக்குப் படைத்து திருத்தலங்களில் தானம் அளித்தலால் அவர்கள் நற்பலன் பெறுவார்கள். தானம் அளிக்கும் சமயத்தில் வளைந்தது வில்லு தேவாரப் பதிகத்தை வாய்விட்டு ஓதுதல் நலமே. எந்நிலையில் உள்ளவர்களும் இறைவன் மேல் மாறாக் காதலைப் பெற உதவும் ‘உந்தீ’ பதிகம் இதுவே.

அங்கதன் உடைவாள் ஏந்த...

ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தைப் பற்றி விவரிக்கையில் அங்கதன் உடைவாள் ஏந்த என்று கூறி பல தெய்வீக அற்புதங்களை வர்ணிக்கிறார் கம்பநாடர். ஏன் அங்கதனின் உடைவாளுக்கு இத்தகைய முக்கியத்துவம் ? என்னதான் ராமபிரான் விஷ்ணுவின் தெய்வீக அவதாரமாகத் திகழ்ந்தாலும் ராமபிரானின் திவ்ய மனித உருவத்தைக் காண பஞ்சபூத தத்துவங்கள்தானே உதவி புரிந்தன. இத்தகைய பஞ்சபூதங்களும் ஸ்ரீரெங்கநாதப் பெருமானை ஒரு யுகத்தில் ஒரு நொடியில் ஒன்றாக தரிசனம் செய்து பேருவகை எய்தின என்பதை நம் சற்குருவின் வர்ணனையாக உணர்ந்தோர் ஒரு சிலரே. இந்த பஞ்சபூத சக்திகளை உலகத்தவர் நன்மைக்காக அளிக்க திருவுள்ளம் கொண்டவரே ஸ்ரீராமபிரான். வாலி சுக்ரீவன் இடையே நடந்த யுத்தத்தில் ராமர் மறைந்து நின்று வாலியை வதம் செய்ததை அறிந்த வாலி முதலில் வருத்தம் அடைந்தாலும் பின்னர் ராமபிரானின் விளக்கத்தை அறிந்து பெரிதும் மகிழ்ந்தான்.

அப்போது தன் ஒரே புதல்வனான அங்கதனை ராமபிரானிடம் ஒப்படைத்து இனி ராமபிரான்தான் அங்கதனின் தந்தை என்பதை உறுதிசெய்து சுவர்க்க லோகம் அடைந்தான். ராம பிரான் வாலிக்கு அளித்த வாக்குறுதியின்படி அங்கதனை தன் மெய்க்காப்பாளனாக ஏற்றுக் கொண்டார் என்பதற்கு அடையாளமாக தன் உடைவாளை அங்கதனுக்கு அளித்து சுவர்க்கம் ஏகிய வாலிக்கு மன அமைதியையும் அங்கு கூடியிருந்த அனைவருக்கும் வரப் போகும் ராம ராஜ்யத்தின் பெருமையையும் உணர்த்தினார். ராமபிரான் அகில உலக சக்கரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து கொண்டபோது அங்கதன் உடைவாளை ஏந்தி அந்தத் திருநிகழ்ச்சியின் பங்கேற்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த அங்கதன் சுக்ரீவனுடன் ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு எழுந்தருளி பஞ்சபூதங்கள் பெருமாளை தரிசனம் செய்த அதே முகூர்த்த வேளையில் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளையும் தரிசனம் செய்து அந்த தரிசனப் பலன்கள் அனைத்தையும் ஸ்ரீராமபிரான் பிரசாதமாக, ஸ்ரீரெங்கநாதப் பெருமான் தரிசனப் பலனாக அனைவருக்கும் அளித்தான் என்பதே இன்று நாம் ஸ்ரீரங்கம் கருடாழ்வார் சன்னிதியில் அருகே விளங்கும் சுக்ரீவன் அங்கதனின் திருக்கோலக் காட்சியின் விளக்கமாகும். வேறு எங்கும் காண முடியாத அதிசயமாக கருடாழ்வார் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அமர்ந்த கோலத்தில் அருள்புரிவதால் பக்தர்கள் கருடாழ்வார் சன்னதியில் குறைந்தது ஒரு மணி நேரமாவது பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து தமக்குத் தெரிந்த நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை ஓதுதல் அல்லது பச்சை மாமலைபோல் மேனி என்று ஆரம்பிக்கும் பாடலையாவது ஓதுதல் இந்த பிலவ வருடத்தில் கிடைத்தற்கரிய பேறே. சிறப்பாக ஸ்ரீவேதாந்த தேசிகர் அருளிச் செய்த பாதுகா சஹஸ்ர சுலோகங்களை ஓதுதல் இவ்வருடம் இயற்றக் கூடிய அற்புத வழிபாடாக மலர்கிறது.

பெண் போகம், தங்கம், வைரம் என்பவை எல்லாம் பஞ்சபூதங்களின் அனுகிரகம்தானே ? அதனால் பஞ்சபூதங்கள் வழிபட்ட இந்த சரியான முகூர்த்தத்தில் நாமும் ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை வழிபட்டால் அனைத்துச் செல்வங்களையும் எளிதில் அடையலாம். ஆனால், தற்காலத்தில் எவருமே இத்தகைய பஞ்சபூத செல்வங்களை முறையாகப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதால் பெரியோர்கள் இந்த முகூர்த்தத்தை இரகசியமாக வைத்துள்ளார்கள். இருப்பினும், திருமணம், சந்தான பிராப்தி, வறுமை நீங்குதல் போன்ற காரணத்திற்காக முறையாக பிரார்த்தனைகளை இறைவன் முன் வைப்பவர்கள் அதற்கேற்ற உரிய நேரத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள அவரவர் பித்ரு மூர்த்திகள் அருள்புரிவதால் நித்ய சூரிகள் தினமும் நீராடும் அம்மாமண்டபத்தில் நீராடி ஸ்ரீகருடாழ்வாரை வழிபட அனைத்து நலன்களையும் பெறுவார்கள் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதல் ஆகும்.

சந்திர தீர்த்தமும் தலவிருட்சமும்
ஸ்ரீரங்கம்

திருத்தலங்களில், ஜீவசமாதிகளில் காமத்தைத் தூண்டும் ஆபாசப் படங்களை எடுத்து மக்களுக்குப் பரப்பியவர்கள் ஏராளம். இத்தகைய தவறுகள் புரிந்தவர்களும் தங்கள் தவறுக்கு மனதார வருந்தி ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் கருடாழ்வார் முன் அமர்ந்து வழிபடுதலால் சித்தர்கள் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டும் இத்தகைய தவறுகளுக்கும் பிராயசித்தங்களை அளிக்கின்றனர். இத்தகைய பிராயசித்தத்தை பெறக் கூடிய வருடம் இந்தத் தமிழ் வருடமே ஆகும், இந்த பிராயசித்தத்தை அளிக்கக் கூடிய ஒரே திருத்தலம் ஸ்ரீரங்கம் என்பதையும் நினைவில் கொள்ளவும். ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை ஒரு ரூபாய் கொடுத்து தரிசனம் செய்வதற்குக் கூட மறுத்து வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க நம் அடியார்களுடன் சேர்ந்து பஞ்சபூத நாதரை தரிசனம் செய்தவரே நம் சற்குரு. அப்போது நம் சற்குரு அடியார்களுக்காக உவந்தளித்த அனுகிரகங்களுள் இதுவும் ஒன்று. இதை நம் சற்குரு வழக்கம்போல் நேரிடையாக உரைக்காவிட்டாலும், “நம் சபையில் ஒருத்தன் இருக்கிறான். அவன் தன் பெண்டாட்டி குளித்து விட்டு வந்தால் கூட ஓரக் கண்ணால் பார்க்கும் வழக்கம் உள்ளவன். அதுவும் முறையற்ற காமம்தான், அத்தகைய காமத்தையும் களையக் கூடியதே ரெங்கநாதர் தரிசனம் ...,” என்று நம் கற்பணைக்கு எட்டாத காமத் தவறுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டியவரே நம் சற்குரு. சாதாரண மனிதக் கண்ணோட்டத்தைத் தாண்டி செயல்படக் கூடிய இந்தக் காம விளைவுகள் உங்களுக்குப் புரிந்து விட்டால் நீங்கள் ‘கில்லாடிதான்’. காமத்தையும் காட்சியையும் ஒன்றாய்க் கொள்பவன் மனிதன், காமத்தையும் காட்சியையும் தனித் தனியாகப் பிரிக்கக் கூடியவன் மகான். முற்கூறிய விஷயத்திற்கு உதாரணம் தேவையில்லை, பின்னர் கூறிய விளக்கத்திற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள் பராசரர் மச்சகந்தி ஆவர். மிகவும் அபூர்வமாக ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் ஸ்ரீகோதண்ட ராமர் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி இவர்கள் சன்னதி இடையே சந்திர தீர்த்தம் திகழ்கின்றது. ஸ்ரீகோதண்ட ராமருக்கு அல்லி மலர் மாலைகளை அணிவித்து அந்த மலர்களை பிரசாதமாகப் பெற்று ஒரு பனை விசிறிக்கு இரண்டு அல்லி மலர்கள் என்ற கணக்கில் பக்தர்களுக்கு தானம் அளித்தல் இவ்வருடம் நிறைவேற்றக் கூடிய சிறப்பான தான தர்ம வழிபாடாகும்.

நாயன்மார் மூர்த்திகள்
ஏத்தாப்பூர் சிவாலயம்

ஸ்ரீபுரந்தான், வடகுரங்காடுதுறை, அன்பில் போன்ற தலங்களில் இறை மூர்த்திகளுக்கு பனை ஓலை விசிறி கொண்டு சேவை சாதித்து அந்த விசிறிகளுடன் மேற்கூறிய வகையில் இரண்டு அல்லி மலர்களை தானப் பிரசாதமாக அளித்தலும் சிறப்புடையதே. இது அற்புத நோய் நிவர்த்தி வழிபாடாகும். பிறந்த நாள், வளைகாப்பு, சீமந்தம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்களின் நிறைவில் இத்தகைய தானத்தை நிறைவேற்றுதல் சிறப்புடையதாகும். ஸ்ரீரங்கம் ஸ்ரீகோதண்ட ராமர் சன்னதியில் தோன்றிய இந்த தான தர்ம வழிபாடு அத்தலத்திலேயே பலராலும் மறக்கப்பட்டு விட்டது என்பது வேதனைக்குரிய விஷயமாக இருந்தாலும் இத்தகைய தான தர்மத்திற்கு புத்துயிர் அளிக்க வேண்டிய வருடமாக இந்த பிலவ வருடம் அமைவதால் அடியார்கள் நிறைந்த அளவில் இந்த ஆயுள் வளர்க்கும் தானத்தை தொடர்ந்து நிறைவேற்றி நோய் நிவர்த்தி சக்திகளை சமுதாயத்தில் நிலைநிறுத்தும்படிக் கேட்டுக் கொள்கிறோம். முற்காலத்தில் விசிறி, ஊஞ்சல், குழந்தைகளின் குதிரை பொம்மை போன்ற எதையுமே இறை சேவைக்குப் பயன்படுத்தாமல் மக்கள் நேரிடையாக எடுத்துக் கொள்வது கிடையாது. இதுவே அவர்கள் மருந்துகளையோ, மருத்துவர்களையோ நாடாமல் இருந்ததன் ஆரோக்கிய இரகசியம். நம் சற்குரு ஒருமுறை விநாயக சதுர்த்தியை ஒட்டிய ஒரு திங்கட் கிழமை அன்று களிமண் பிள்ளையாரை காவிரி அம்மா மண்டபத்தில் புருஷசூக்தம் ஓதி விசர்ஜனம் செய்த அற்புதத்தை விளக்கி இருந்தோம். இந்த குரு திருவிளையாடலை மீண்டும் மீண்டும் படிப்பதால் ஏற்படக் கூடிய ஆன்மீக அனுபவங்கள் பிரமிப்பை நல்குவதால் இதை அனைவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அடியார்களிடம் விண்ணப்பம் விடுத்திருந்தோம். இதன் இரகசிய மகாத்மியத்தை அடியார்கள் தற்போது உணர்ந்திருக்கக் கூடும். ஒவ்வொரு விநாயக சதுர்த்தி தினத்தன்றும் காவிரியில் நீராடி ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை நித்திய சூரிகளைப் போல் தரிசனம் செய்திருந்தால் இந்நேரம் கண்ண பிரான் யசோதைக்கு அளித்த அந்த விஸ்வரூப காட்சியை தரிசனம் அடியார்கள் பெற்றிருக்கலாம். இதுவே பிள்ளையார் விசர்ஜனத்தில் மறைந்த விஸ்வரூப தரிசன இரகசியம். எத்தனை அடியார்கள் இந்த விஸ்வரூப தரிசனக் காட்சியைப் பெற்றார்கள் என்பதை அவரவரே உணர்வர். நம் சற்குரு அடிக்கடி கூறுவது போல், “சரி போனது போகட்டும், இனி வரும் சந்தர்ப்பங்களையாவது நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம் ...,” என்ற வாக்கிற்கிணங்க பஞ்சபூத இறைமுர்த்திகளும் பெற்ற இறை தரிசனத்தை அடியார்களும் பெறக் கூடிய வருடமாக இந்த 2021 வருடம் அமைவதால் ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அம்மாமண்டபத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி நித்ய சூரிகளைப் போல் நடந்தே சென்று ஸ்ரீரெங்கநாதப் பெருமாளை தரிசனம் செய்வதும் இத்தகைய விஸ்வரூப தரிசனத்தைப் பெறும் முறையாக சித்தர்கள் உரைக்கும் இரகசியமாகும்.

ஸ்ரீவேதாந்த தேசிகர்
காஞ்சிபுரம்

ஒரு முறை தை மாத உத்தராயண பிறப்பைக் கொண்டாடும் அரிய வாய்ப்பை நம் சற்குரு அடியார்களுக்கு அளித்தார். அப்போது நம் திருஅண்ணாமலை ஆஸ்ரம வாசலிலேயே அடியார்கள் மூன்று கரும்பை வைத்து அதன் நடுவே ஒரு புதுப் பானையில் சர்க்கரைப் பொங்கலை தயாரிக்கும்படிக் கூறினார்கள். இரவு நெடு நேரம் கழித்து வைத்த பொங்கல் பொங்கும்போது சந்திரன் மறைந்து சூரியன் உதயமாகும் நேரம் வந்து உத்தராயணப் புண்ணிய கால உதயமாகும் நேரத்தில்தான் எத்தனை யுகங்கள் ஆனாலும் எவரும் பெற முடியாத ஓர் அற்புதம் நிகழ்ந்தது. குண திசை என்னும் கிழக்கு திசையில் சூரிய பகவான் உதயமானார், குட திசை என்னும் மேற்கு திசையில் பூரண சந்திரன் ஒளி வீசினார், வட திசையில் என்றும் விளங்கும் உன்னத சுயம்பு ஜோதியான திருஅண்ணாமலையார் எழுந்தருள தென் திசையில் குருமங்கள கந்தர்வா தனக்கே உரிய தெய்வீகப் புன்னகையுடன் அங்கு தோன்ற இந்த தெய்வீக காட்சிக்கு அணி சேர்க்கும் முகமாக ஸ்ரீபள்ளி கொண்ட ரெங்கநாதப் பெருமான் ஆஸ்ரம உச்சியில் எழுந்தருளி தன் அனுகிரக கிரணங்களை அள்ளி வீச இந்த இனிய மகத்துவம் வாய்ந்த உத்தம முகூர்த்த வேளையில் திருஉண்ணாமுலை சமேத திருஅண்ணாமலையாருக்கு பொங்கல் பிரசாதம் அடியார்களால் நைவேத்யமாக அளிக்கப்பட்டது, படைக்கப்பட்டது என்றால் இதை விட உயர்ந்த, சிறந்த ஒரு தெய்வீக பாக்கியத்தை எவராவது எந்த யுகத்திலாவது பெற முடியுமா ? நம் ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீரெங்கநாதர் நம் சற்குருவின் மூதாதையர்களால் சுமார் 300 ஆண்டுகளுக்கு மேல் பூஜிக்கப்பட்டவர் என்பது மட்டுமல்ல தான் நித்திய அண்ணாமலையார் தரிசனத்திற்காக பெருமாள் நம் ஆஸ்ரமத்தில் எழுந்தருளியபோது சூரிய பகவானே குண திசையில் தோன்றி பெருமாளின் பாதக் கமலங்களை தன் பொற்கிரணங்களால் அபிஷேகித்து, அரவணைத்ததை தரிசனம் செய்த பாக்கியம் பெற்ற அடியார்கள் இன்றும் நம்மிடையே உண்டு. சந்திர பகவான் ஒருவரே காலசர்ப்ப யோகத்திலிருந்து மீண்டு பக்தர்களுக்கு அருளும் நவகிரக மூர்த்தியாக இவ்வருடம் துலங்குவதால் சந்திர தீர்த்தம் துலங்கும் ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவேதாந்த தேசிகரால் அருளப்பெற்ற ஸ்ரீபாதுகா சகஸ்ரத்தை பாராயணம் செய்தல் என்பது எத்தகைய அரிய பேறு. அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இந்த பாதுகா துதியை இவ்வருடம் முழுவதும் ஸ்ரீரங்கத்திலோ, ஆழ்வார் அவரித்த காஞ்சிபுரம் திருத்தலத்திலோ ஓதுதல் சிறப்பே.

ஸ்ரீநரசிம்மர் திருக்கோஷ்டியூர்

இத்தகைய ‘பாதுகா துதி’ நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு முறை திருக்கோஷ்டியூர் திருத்தலத்திற்கு நம் சற்குரு எழுந்தருளினார். அப்போது அங்கிருந்த அடியார்கள் ஒரு யானை நம் சற்குருவிற்கு மாலையை அணிவிக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், மாலையைத் தன் துதிக்கையில் வைத்துக் கொண்ட யானையோ அந்த மாலையை நம் சற்குருவிற்கு அணிவிக்கவில்லை. மற்றவர்கள் அந்த மாலையை வாங்கி நம் சற்குருவிற்கு அணிவிக்கவும் இயலாத சூழ்நிலை. யானைப் பாகனுக்கோ கோபம் வந்து விட்டாது. இயற்கைதானே ? அந்த யானையை தன் கையில் வைத்திருந்த மூங்கில் குச்சியால் வேகமாக அடித்தும் அந்த அடிகளை எல்லாம் யானை வாங்கிக் கொண்டதே தவிர, மாலையை நம் சற்குருவிற்கு அணிவிக்க கடைசி வரையில் மறுத்து விட்டது. நம் சற்குருவும், “வேண்டாம் விட்டு விடுங்கள், சார், அந்த ஜீவனை வற்புறுத்தாதீர்கள் ...”, என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து விட்டார். இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் யானையே நம் சற்குருவிற்கு மாலை அணிவிக்க தயாராக இல்லையே, அப்படியானால் ...,” என்று அவரவர் தங்களுக்குத் தெரிந்த கற்பனைகளை வளர்த்துக் கொள்ளலாம். இது சம்பந்தமாக நம் சற்குருவும் வேறு எதுவும் தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியை அடுத்து நடந்த நிகழ்ச்சிகளே சற்குருவின் தியாகத்தை பறைசாற்றுவதே அமைந்தன. நம் சற்குரு திருக்கோஷ்டியூரில் இறை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் அருகிலுள்ள சிங்கம்புனரி வாத்யார் ஐயா ஜீவ சமாதிக்குச் சென்று அங்கு சில மணி நேரம் காத்திருந்து அதன் பின்னரே சித்தரின் ஜீவ சமாதி தரிசனம் பெற்று அங்கு ஜீவ சமாதியில் இறை கீர்த்தனைகளை நம் அடியார்கள் புடை சூழ நிகழ்த்தினார். முத்துவடுக நாதப் பிரானின் ஜீவ சமாதியில் கிடைத்த ஆத்ம விசார முத்துக்களை கோர்த்து மாலையாக்கினால் நாம் ஒரு சுவையான முத்து ஆரத்தைப் பெறுவோம். சிங்கம்புனரி வாத்யார் ஐயா வாழ்ந்த காலத்தில் பல மாந்திரீகர்கள் பொதுமக்களைப் பயமுறுத்தி அவர்களிடம் பணம் பிடுங்கிக் கொண்டிருந்தனர். இதை அறிந்த ஸ்ரீவாத்யார் ஐயா அந்த மாந்திரீகர்களை வரவழைத்து அவர்கள் அனைவரும் தனக்கு இட்ட மாலைகளை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டார். அந்த மாந்த்ரீகர்களின் துர்மந்திர சக்திகளையே அவர்கள் அணிவித்த மாலைகள் மூலம் ஏற்று அந்த ஊர் மக்களையும், பசு, கன்றுகள் கூட்டத்தையும் காப்பாற்றவே சித்த பிரான் இத்தகைய ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார் என்பதை அறிந்த மந்திரவாதிகள் தங்கள் மந்திர வேலைகள் பலிக்காததால் அந்த ஊரை விட்டே காலி செய்தனர். ஆனாலும், அவர்கள் விட்டுச் சென்ற மந்திர, தந்திர சக்திகள் சில கொஞ்சம், கொஞ்சமாக பெருகிக் கொண்டுதான் இருந்தன. இதை அறிந்த நம் சற்குரு திருக்கோஷ்டியூர் சென்று அந்தப் பகுதியில் உள்ள மந்திர, தந்திர, எதிர்மறை சக்திகளை எல்லாம் ஈர்த்து அந்தப் பகுதி முழுவதையும் தூய்மையாக்கினார்.

ஸ்ரீவாத்யார் ஐயா ஜீவசமாதி
சிங்கம்புனரி

இந்த அற்புத இறை பணிக்கு துணை புரிவதாகவே செயல்பட்ட யானை தன்னிடம் இருந்த மாலையில் திகழ்ந்த தீய மந்திர சக்திகளை தானே தன்னுடைய சுழு முனை சுவாசத்தால் சீர் செய்து விட்டது. எஞ்சிய தீய சக்திகளை நம் சற்குரு திருக்கோஷ்டியூர் திருத்தலத்தை கொதிக்கும் வெயிலில் காலில் செருப்பின்றி வலம் வந்து சீர் செய்தார் என்பதை நம் சற்குருவுடன் திருத்தலத்தை வலம் வந்த அடியார்கள் அறிவர். இது என்றோ நடந்த சற்குருவின் ‘சுத்திகரிப்பு’ பணியாகத் திகழ்ந்தாலும் இன்றும் இத்தகைய நற்காரியத்தில் அடியார்கள் பங்கு பெறும் விதமாக அமைந்துள்ளதே பிலவ வருடம் ஆகும். யானை மாலையை எடுத்துச் செல்வதாக உருவம் அமைந்த வஸ்திரங்களையோ, அன்னப்பறவை நடனமிடும் உருவம் அமைந்த வஸ்திரங்களையோ இந்த வருடம் இறை மூர்த்திகளுக்கு அணிவித்தல் சிறப்பாகும். மகர லக்னத்தில் உதயமாகும் பிலவ வருடத்திற்கு உரிய சனி பகவானின் நிறம் கருப்புதானே. அந்த நிறத்தில் திகழ்வதுதானே யானை. நாம் நிறைவேறும் காரியத்தில் ஏதாவது ஒரு தெய்வீக இணைப்பு இருந்தாலும் அது தெய்வீகத்தில் பல சிறப்புகளை அளிக்கும் என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதலாகும். மேலும் மேஷ ராசியில் சூரிய பகவான் பிரவேசம் கொள்வதைத்தான் தமிழ் வருடப் பிறப்பாகக் கொண்டாடுகிறோம். அந்த மேஷ ராசியில் துலங்கும் சந்திர பகவானுக்குரிய வெண்ணிறத்தில் திகழ்வதுதானே அன்னப்பறவை. இது மனிதர்கள் செயல்பாடுகளில் தெய்வீகத்தை இணைக்கும் ஒரு சிறு முயற்சியாகும். இதே இணைப்பை மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்க உதவி செய்வதும் திருக்கோஷ்டியூர் திருத்தலமாகும். கோஷ்டி என்றால் குழு, அணி, குட்டையில் சேர்ந்த மட்டை என்றெல்லாம் பொருள் உண்டு. சிவா, பிரம்மா, விஷ்ணு என்பது ஒரு அணி, சுக்ராச்சாரியார் பிரஹஸ்பதி என்பது ஒரு குருநாதர்கள் அணி, ஸ்ரீவாத்யார் ஐயா, நம் வாத்யார் சேர்ந்தது ஒரு குருமார் அணி, நம்பியாண்டான் நம்பி, ராமானுஜர் இவர்கள் வழிநடத்தியது ஒரு அணி என்ற அணிகள் எல்லாம் நாம் புரிந்து கொள்ளக் கூடிய அணிகளே. அதே சமயம் நரசிம்மர், பிரகலாதன், இரண்யாட்சன் இவர்கள் இணைவதும் அத்வைதம் என்ற அணியில்தான் என்று உலகிற்கு உணர்த்துவதே திருக்கோஷ்டியூர் மகத்துவம், மகாத்மியமாகும். எனவே ஓம் நமோநாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரம் எட்டு திசைகளையும் அத்வைதம் என்ற ஒரு இறைப் புள்ளியில் இணைக்கும் தத்துவமே.

சிவபெருமானைப் பூஜிக்கும்
பெருமாள் ஏத்தாப்பூர்

ஏத்தாப்பூர் ஸ்ரீகோபால்சாமி பெருமாள் தலத்தில் பெருமான் சிவபெருமானைப் பூஜிக்கும் இனிய காட்சியைக் காணலாம். பொதுவாக, இறை மூர்த்திகள், அவதாரங்கள் நான்கு, எட்டு கரங்களுடன் திகழ்வது தாங்கள் மனித குலத்தை விட உயர்ந்த சக்தியை அளிக்கக் கூடியவர்கள், அருளக் கூடியவர்கள் என்பதைக் குறிப்பதற்காக இருந்தாலும் பெரும்பாலான மூர்த்திகள் தங்கள் கரங்களில் ரிஷிகள், மகான்கள், அடியார்கள் இவர்களின் பிரார்த்தனைகளை ஏற்றும் அவர்களை ஆயுதங்களாக, மிருக வடிவங்களாகத் தாங்குவது உண்டு. இவ்வாறு இரண்யாட்சனை சம்ஹாரம் செய்வதற்கும், இரண்யனின் ஒரு துளி இரத்தமும் கீழே விழுந்து மற்றவர்களை பாதிக்காமல் இருப்பதற்காகவும் பத்து கரங்களுடன் துலங்கும் நரசிம்ம அவதாரம் தோன்றிய தலமே ஏத்தாப்பூர் ஆகும். பத்து கரங்களுடன் துலங்கும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் இன்றும் பக்தர்கள் தரிசித்து மகிழலாம். திருஅண்ணாமலையில் விளங்கும் தசமுக தரிசனப் பகுதியில் இராவணன் பல யுகங்கள் தவமியற்றி பத்து தலைகளைப் பெற்றான் என்பது மட்டும் கிடையாது. நரசிம்ம மூர்த்திகள் போன்ற அவதாரங்களே இந்த தரிசனப் பகுதியில் தவமியற்றி பத்து கரங்களை, பத்து விதமான சக்திகளைப் பெற்றனர் என்றால் இந்த சக்திகளை எல்லாம் எந்த வித தவமுமே இயற்றாத தன் அடியார்களுக்கும் தாரை வார்த்து நம் சற்குருநாதர் அளிக்கவல்லவர் என்றால் அவர்தம் பெருமைதான் என்னே ? நரசிம்ம மூர்த்தியுடன் சேர்ந்து தசவாயுக்களும் தவமியற்றி தாங்கள் இறை சிந்தனையுடன் உயிர் துறக்கும் உத்தமர்களுக்கு உதவ தவம் புரிந்ததால் இது தசாவதார தசயுக்தி தசவாயு தரிசனம் என்றும் சித்தர்களால் அழைக்கப்படுகிறது. இத்தகைய அற்புத தரிசனம் எதிரே நம் ஆஸ்ரமத்தை அமைத்து அதில் கோடிக் கணக்கான கிரிவல பக்தர்களுக்கு அன்னதான கைங்கர்யம் இயற்றி மகிழ்ந்தார் நம் சற்குரு என்றால் அவர்தம் கருணையை விளக்கத்தான் முடியுமா ? பல பட்டங்கள் பெற்றிருந்தும், தகுதிகள் பல கூடியிருந்தும் தன்னுடைய மகளுக்கு 32 வயது ஆகியும் திருமணமாகவில்லை என்று மனம் வருந்துகிறார் ஒரு பக்தர். இவ்வாறு 23, 32, 41 என்று ஐந்தின் எண்ணிக்கையில் உள்ளவர்கள் தாங்கள் எந்தவிதமான பிரச்னையால் வாடினாலும் அவர்கள் ஏதாவது ஒரு வளர்பிறையில் பத்து முறைக்குக் குறையாமல் திருஅண்ணாமலையை வலம் வந்து தசமுக தரிசனம் பெற்று வணங்குதலால் தங்கள் வேதனை நீங்க உபாயம் காண்பர் என்பது இவ்வருடப் பிறப்பு அருளாசியாக சித்தர்கள் அளிக்கும் தசாம்ருதம் ஆகும். 10 என்பது 5 என்ற எண்ணின் குசாவாக அமைவதால் பிரச்னைகள் தொடங்கிய ஆண்டு ஐந்தின் மடங்காக இருந்தாலும் இந்த உபாயம் கை கொடுக்கும் என்பதும் சித்தர்களின் அருளாசியாகும். உதாரணமாக 2012ம் ஆண்டு விபத்தில் மாட்டிக் கொண்டு ஞாபக சக்தியை இழந்தவர், ஐந்தாம் தேதி நகை, சொத்துக்களை இழந்தவர், ஐந்தாம் குழந்தையாகப் பிறந்து பல பொறுப்புகளால் தடுமாறுபவர்கள் போன்றோர் மேற்கூறிய வழிபாடுகளால் நற்பலன் பெறுவார்கள். தசமுக தரிசனப் பகுதியில் தங்கள் தகுதிக்கு ஏற்ற தான தர்மங்களை இயற்றுதல் கிரிவலப் பலன்களை விருத்தி செய்யும். இன்று குழந்தைகள் பால்பவுடர் விற்பனையில் பிரபலமாகத் திகழும் ஒரு பிரமுகர் இந்த தசாவதாரப் பகுதியில் பத்து கறவை மாடுகளைக் கன்றுடன் தானம் அளித்தார் என்பதே தசமுகத் தரிசனப் பகுதியில் நிறைவேற்றும் தான தர்ம மகாத்மியமாகும். பத்து சுமங்கலிகளுக்கு தம்பதி சகிதம் பாத பூஜை நிறைவேற்றி உரிய தான தர்மங்களை அளித்து கௌரவித்தலும் இந்த தரிசனப் பகுதியில் கூடும் அற்புத தசாம்ருத சக்தியாகும்.

சிவசக்தி ஐக்ய சக்கரம்

இந்த ஆண்டு கணவன் மனைவி ஒற்றுமையுடன் திகழ, சமுதாயத்தில் பரஸ்பர ஒற்றுமை ஓங்க, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை பெருக இடுக்குப் புள்ளி கோலத்தை இடுமாறு சற்குருமார்களின் அருளுரையை அளித்திருந்தோம். பல அடியார்களும் கோலம் என்பது பெண்களால் வரையப்படுவதால் ஆண்கள் பங்கேற்கும் முறையில் ஒரு பூஜையை அளிக்க முடியுமா என்று கேட்டுக் கொண்டதன் பேரில் ராகவேந்திர வருடம் அளிக்கப்பட்ட ஸ்வஸ்தி சக்கரத்தை மீண்டும் இங்கு அளிக்கிறோம். இந்த சக்கரத்தில் அமைந்த சிவ மந்திரங்களும் சூலக் குறிகளும் இணைந்து சிவ சக்தி ஐக்யம் என்ற அடிப்படை ஒற்றுமையைத் தோற்றுவிக்கும் என்பதே இதன் பின்னணியில் அமைந்த ஒரு இரகசியம் ஆகும்.
ஞானானந்த மயம் தேவம்
நிர்மலம் ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே
என்றவாறு ஹயக்ரீவ மந்திரத்தை நான்கு கூறுகளாக பிரித்து ஒவ்வொரு சிவ என்ற மந்திரத்திற்கும் அந்த மனக் காட்சியை, மந்திர ஒலியை இணைத்து ஓதுவதால் இது குடும்பத்தில், சமுதாயத்தில் ஒற்றுமையையும் சாந்தியையும் நிலவச் செய்யும் என்பதில் ஐயமில்லை. ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை, ஓம் குருவே சரணம் போன்ற மந்திரங்களையும் இந்த துதியுடன் இணைத்து அவரவர் விருப்பத்திற்கு இந்த ஐக்ய துதியை மாற்றி ஓதுவதும் ஏற்புடையதே. சிறப்பாக திருஅண்ணாமலை அபயமண்டபத்திலிருந்து பஞ்சமுக தரிசனப் பகுதி வரை பக்தர்கள் ஒன்று கூடி வாய்விட்டு இந்த மந்திரத்தை ஓதுதல் சிறப்பாகும். வெள்ளிக் கிழமைகளிலும், பஞ்சமி திதிகளிலும், ஐந்தாம் தேதிகளிலும், திருவாதிரை தினங்களிலும் இந்த வழிபாடுகளை இயற்றுதல் நலம். சமுதாய பிரார்த்தனையாக இதை நிறைவேற்றுபவர்கள் எந்நாளிலும் திருஅண்ணாமலை கிரிவலம் முழுவதுமே இத்துதியை ஓதுதல் சிறப்பே. ஆண் பெண், சிவ சக்தி, ஒளி இருள், உருவம் நிழல் போன்ற பல தத்துவங்களை ஒருங்கிணைக்கும் இந்த சிவ சக்தி ஐக்ய சக்கரத்தைக் கண் முன் கொண்டு வந்து வழிபாடுகளைத் தொடர்ந்து இயற்றி வந்தால் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் அருளும் இருமைகளைக் கடந்த ஞானத்தை அடைய வழிகோலும் என்பதில் ஐயமில்லை. இந்த ஞானத்தை அருளக் கூடியதே இந்த பஞ்சாட்சர பிலவ ஆண்டு.

சித்தர்களால் அருளப் பெற்ற 51 காயத்ரீ முத்திரைகளில் லேக்யா முத்திரை என்ற சூரிய முத்திரை தினமும் சூரிய பகவான் பவனி வரும் குதிரைகளால் இணைக்கப்பட்ட முத்திரையாக நம் சற்குருவால் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முத்திரையை பயிற்சி செய்யும்போது
ஓம் அருணாய நமஹ
ஓம் சரணாய நமஹ
ஓம் கருணாரச சிந்தவே நமஹ
ஓம் அசமான பலாய நமஹ
ஓம் ஆர்த்தரட்சகாய நமஹ
ஓம் ஆதித்யாய நமஹ
ஓம் ஆதிபுதாய நமஹ
என்று சூரிய பகவான் பவனி வரும் ஏழு குதிரைகளின் நாமங்களைக் கூறி சௌரமண்டல மத்யஸ்தம் சாம்பவம் சம்சார பேஸஜம் நீலக்ரீவம் விரூபாக்ஷம் நமாமி சிவம் அவ்யயம்
என்ற மந்திரத்தை 19 முறை ஓதி அந்த குதிரைகளையும் சூரிய பகவானையும் வணங்க வேண்டும் என்பது முத்திரை விதி. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது சூரியனின் கதிர்கள் பல கோடிக் கணக்கில் இருந்தாலும் இந்த கதிர்களில் ஏழே ஏழு கதிர்களின் சக்தியை மட்டுமே நம் பூலோகம் கிரகிக்கிறது. இதையே அருணன் முதலான குதிரைகளின் சக்திகள் குறிக்கின்றன. இந்த ஏழு கதிர்களின் சக்தியையே நம்மால் முழுமையால் கிரகிக்க இயலாத அளவிற்கு நம்முடைய பூஜை முறைகள் நிலவுகின்றன என்பதே சித்தர்களின் அறவுரை. அவ்வாறு ஒரு மனிதனால் கிரகிக்க முடியாத அனுகிரக சக்திகளே ஓரளவிற்கு, கவனிக்க ஓரளவிற்கே வெப்ப சக்தியாக, உஷ்ண கதிர்களாக மனிதர்கள் சூரியனின் ஒளியை கிரகித்து அது தகிப்பதாகக் கூறுகிறார்கள்.

இவ்வாறு சூரியனின் முழு சக்திகயையும் அனுகிரகமாக அளிக்கவல்லதே சித்தர்கள் அளித்த மேற்கூறிய காயத்ரி முத்திரை தியானமாகும். பொதுவாக, நடுப்பகல் என்னும் உச்சிப் பொழுதில் தன் நிழல் தன்னில் தங்கும் வேளையில் மனிதர்கள் வெயிலில் உலவுவதால் அவர்கள் ஆரோக்யம் பெருமளவில் பாதிக்கப்படும் என்று முன்னோர்கள் எச்சரிப்பதுண்டு. இதை சரி செய்யவே மக்கள் உச்சிக்காலத்தில் கோயில்களில், திருத்தலங்களில், ஜீவ சமாதிகளில், கிரிவலப் பாதைகளில் வழிபாடுகளை இயற்றி தங்களையும் தங்களை அண்டி இருப்போரையும், நம்பி இருப்போரையும் காக்கும் பணியை குடும்பப் பொறுப்பாக, சமுதாயக் கடமையாக வைத்தார்கள் நம் முன்னோர்கள். இந்த 2021 பஞ்சாட்சர ஆண்டில் எந்த அளவிற்கு இந்த சூரிய முத்திரையுடன் திருத்தலங்களை வலம் வருகிறோமோ அந்த அளவிற்கு சூரிய சக்திகள் அனுகிரக சக்திளாக பல்கிப் பெருகும். லேக்யா காயத்ரீ முத்திரையை ஏத்தாப்பூர் ஸ்ரீசாம்ப பரமேஸ்வர சிவாலயத்தில் எந்த அளவிற்கு நிறைவேற்றுகிறோமோ அந்த அளவிற்கு அதன் பலன்கள் பன்மடங்காய்ப் பெருகும் என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கக் கூடிய இரகசியம்தானே.

திருஷ்டி கண்டி மாளிகை
திருஅண்ணாமலை

ஒரு முறை நம் சற்குரு திருச்சி நகருக்கு வருகை தந்திருந்தார். அவரை ஒரு இளைஞர் குழு வரவேற்று அருமையான உபசாரங்கள் செய்து மகிழ்ந்தது. திருச்சி அடியார்களும் அந்த குழுவில் இருந்த ஒரு இளைஞரை அடுத்து திருஅண்ணாமலை தீபத்தின் போது நிகழ்ந்த அன்னதான கைங்கர்யத்தில் பங்கெடுத்துக் கொள்ள அனுமதித்தனர். அந்த அடியார் திருஅண்ணாமலை சேவைக்காக வந்து நம் ஆஸ்ரமத்தை அடைந்தபோது நம் சற்குருவோ அவரை ஏறிட்டும் பார்க்காது அவருக்கு அன்னதானக் கைங்கர்யத்தில் பங்கெடுத்துக் கொள்ள அனுமதிக்காமல் அவரைத் திரும்பிப் போகச் சொல்லி விட்டார். அவர் எவ்வளவோ கண்ணீர் சிந்தி போராடியும் பலனில்லை. இந்த சம்பவம் நிகழ்ந்த பல ஆண்டுகளுக்குப் பின்னரே அந்த அடியார் அன்னதானக் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருந்தால் பூர்வ ஜன்ம வினைப்பயனால் அவர் காமத் தவறு ஒன்றில் ஈடுபட்டு அவப் பெயருடன் ஆஸ்ரமத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கும் என்பதை அடியார்கள் உணர முடிந்தது. சற்குரு தன்னுடைய தியாகத்தால் தான் ஒரு கல் நெஞ்சக்காரன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டு அந்த அடியாரை அவச் சொல்லிலிருந்து காப்பாற்றினார் என்று தெரிய வந்தது. அந்த மூன்றெழுத்து அடியாருக்கு இந்த உண்மை தெரிந்திருக்க நியாயமில்லை என்றாலும் இந்த உண்மையை அறிந்த நாமாவது இனி துன்பம் அளிக்கும் எந்தச் சூழ்நிலை நம் வாழ்வில் ஏற்பட்டாலும் அது சற்குருவால் அளிக்கப்பட்ட ஒரு இனிய பரிசே என்ற மன நிலையை வளர்த்துக் கொள்ள முடிந்தால் நம்மால் தெய்வீகத்தில் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. அத்தகைய சாதனை ஆண்டே இந்த பிலவ என்ற மூன்று எழுத்தில் அமைந்த பஞ்சாட்சர ஆண்டு (2+0+2+1=5) ஆகும். காரணம் RVV என்ற குருவிற்கு உரிய மூன்று எழுத்துக்கள் (RVV = 2+6+6=5) பஞ்சாட்சர சக்திகளுடன் துலங்கும் ஆண்டு இதுவாக அமைவதாகும். நம் சற்குருவால் அமைக்கப்பட்ட இந்த திருஷ்டி கண்டி மாளிகை குறித்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் நாம் சந்திக்கும் அனைத்துமே குரு பிரசாதமாக திகழும் என்பதே இந்த “மாளிகை” அளிக்கும் குரு கடாட்ச சக்திகளாகும்.


எய்தவன் இருக்க
அம்பை நோவானேன்?!
கொரோனாவை எய்தது
கூத்தன் !

ஓம் சாம்ப பரமேஸ்வராய வித்மஹே
சௌம்ய தேவாய தீமஹி
தந்நோ கடும்பாடு சித்த பிரசோதயாத்
எந்த அளவிற்கு இந்த கடும்பாடு சித்த மந்திரத்தை தொடர்ந்து ஓதி வருகிறோமோ அந்த அளவிற்கு தொற்று நோய்களிலிருந்து விடுதலை பெறுவோம் என்பது உறுதி. தேவை நம்பிக்கை, நம்பிக்கையே.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam