பாரு பாரு நல்லா பாரு.

10. வாழ்க்கை ஓர் சவால்

எந்தக் காரியத்திலும் ஓரளவாவது எதிர்ப்பு இருந்தால்தான் சுவை இருக்கும். ஓட்டப் பந்தயத்தில் கூட நமக்கு முன்னால் ஒருவன் ஓடினால்தான் நம்முடைய திறமையைக் காட்டி அவனை முந்துவதற்கு முயற்சி செய்வோம். ’சவால்’ என்பது ஒரு எதிர்வினைத் தாக்கம் அல்ல, உண்மையில் அது நற்காரியங்களைத் துõண்டும் நல்ல சக்தியே. இந்திர லோகத்தில் வசிஷ்டருக்கும் விசுவாமித்திர முனிவருக்கும் இடையே ஏற்பட்ட சவாலே ஹரிச்சந்திர மகாராஜாவின் உண்மையே பேசும் உத்தம குணத்தை உலகம் புரிந்து கொள்வதற்கு உதவும் நல்ல சக்தியாக அமைந்தது. கலியுகத்தில் நற்காரியங்களை நிறைவேற்றுவதில் நமக்கு சவாலாக இருப்பவை பணக் கஷ்டமும், நோய்களுமே. எவ்வளவுதான் கடவுள் நம்பிக்கை இருந்தாலும் ஒரு தலைவலி என்று வந்து விட்டால் நாம் அன்றாடம் நிறைவேற்றும் எல்லா பூஜைகளையும், பிரார்த்தனைகளையும் மறந்து விடுகிறோம்.

பணக் கஷ்டத்தை காரணம் காட்டி நாம் இப்பிறவியில் கழிக்க வேண்டிய அன்னதானம், ஆடை தானம், ஸ்வர்ண தானம், நில தானம் போன்ற பல தானங்களை செய்ய முயற்சி எடுக்காமலேயே விட்டு விடுகிறோம். நாம் அனுபவிக்கும் துன்பங்களைக் காட்டிலும் பன்மடங்கு துன்பங்களை அனுபவித்தவர்களே நாயன்மார்களும், மகான்களும். ஹரிச்சந்திர மகாராஜாவின் சரிதமும் எத்தகைய சவாலையும் இறை அருளால், சற்குருவின் கருணையால் வெல்லலாம் என்பதையே நிரூபணம் செய்கின்றன. தன்னம்பிக்கையே எத்தகைய சவாலையும் ஏற்று நிறைவேற்றும் ஆன்ம சக்தியை நமக்குத் தரும். இறை நாமத்தை ஓதி வருவது போல உங்கள் பெயரையே நீங்கள் தினமும் ஜெபித்து வந்தால் எந்தச் சவாலையும் நிறைவேற்றும் தன்னம்பிக்கை உங்களுக்குள் வளரும்.

11. வாழ்க்கை ஓர் சாகசம்

எவரெஸ்ட் உச்சியில் ஏறுவது, மலை உச்சியில் இருந்து குதிப்பது, நெருப்பைத் தாண்டுவது, கண் மூடித் தனமான வேகத்தில் வாகனங்களை ஓட்டுவது இவை எல்லாம் சாகசமா? நாம் திரைப் படங்களில் இவைகளையே சாகசம் என்று பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய செயல்களால் யாருக்கு என்ன பயன்? உயிர்கள் வாழ, ஜீவ ராசிகள் பிழைக்க, தாவரங்கள் செழிக்க கொடிய ஆலகால விஷத்தை அருந்திய ஈசன் செய்ததுதான் என்றும் நிலைத்திருக்கும் ஒரு சாகசச் செயல். இறைவனுக்காக, இறை அடியார்களுக்காக, மக்களின் துயர் துடைக்க தன் சுகத்தைத் தியாகம் செய்யும் ஒரு செயலே சாகசம் ஆகும்.

வாழ்க்கை ஓர் சாகசம்.
துணிந்து நிறைவேற்றுவோம்

இறைவனின் வேதனையை நீக்க ஊணுக்கு ஊண் ஈந்த கண்ணப்ப நாயனார் செய்தது சாகசம். தீய சக்திகளை, அசுர மாயைகளை அழிக்க தன் முதுகெலும்பையே இந்திரனுக்கு ஆயுதமாக அளித்த ததீசி முனிவரின் செயல் ஒரு சாகசச் செய்கையாகும். தற்காலத்தில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து வேதம் ஓதுவித்தல், கல்வி அளித்தல், அன்னதானம், மாங்கல்ய தானம் போன்ற தானங்களை நிறைவேற்றுதல், நம் முன்னோர்கள் போற்றி வளர்த்த தீட்சை (சிகை வளர்த்தல்), கடுக்கன், யக்ஞோபவீதம் (பூணூல்) போன்ற இறைச் சின்னங்களை அணிந்து ஹோமம், வேள்வி, வேத பாராயணம் போன்ற நற்காரியங்களை ஆற்ற ஊக்குவித்தலும் சாகசச் செயல்களாக மலர்ந்து சமுதாயத்தில் அமைதியை நிலை நாட்டும் என்பதும் உண்மையே. நாம் தற்போது பயந்து நடுங்கும் எய்ட்ஸ் என்னும் கொடிய பால்வினை நோயை விடக் கடுமையான நோய்கள் எதிர்காலத்தில் வர இருக்கின்றன என்று சித்த கிரந்தங்கள் உரைக்கின்றன.. ஒருவன் ரோட்டில் துப்பும் எச்சிலை மிதித்தாலே தொற்று நோய்கள் நம்மைத் தாக்கும் அபாயமும், நோயுள்ள ஒருவனைப் பார்த்தாலே கண்கள் மூலம் வியாதிகள் பரவும் அபாயமும் எதிர் காலத்தில் நிறைய வர இருக்கின்றன. இத்தகைய கொடிய நோய்கள் உலவும் காலத்தில் உடல் ஆரோக்யத்துடன் வாழ்ந்து நல்ல காரியங்களை நிறைவேற்ற இப்போதிருந்தே அடுத்து சந்ததியினரைக் காக்க உதவி செய்வதே தீட்சை, கடுக்கன், காயத்ரீ ஜபம், கோயில் திருப்பணிகள், அன்னதானம், மாங்கல்ய தானம் போன்ற அறங்கள் ஆகும்.

12. வாழ்க்கை ஓர் சோகம்

ஒரு பொருளை இழப்பதால் ஏற்படும் மன நிலையைச் சோகம் என்கிறோம். நடு நிலைமை கொண்டு பார்த்தால் உலகத்தில் சோகம் என்ற ஒன்று இல்லை என்றே கூறலாம். விட்டில் பூச்சியைப் பல்லி உணவாக விழுங்கும்போது விட்டில் பூச்சிக்குத் தன் குழந்தையை இழப்பதால் சோகம் ஏற்படும் என்பது உண்மையே. ஆனால், அந்தப் பூச்சியை உணவாக ஏற்ற பல்லியின் தாய் தன் குழந்தைப் பல்லி வயிறு நிறைய சாப்பிட்டது குறித்து மகிழ்ச்சி அடையும் அல்லவா? இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் அப்பாற்பட்ட நிலையில்தான் கடவுளும், மகான்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் சோகமும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை.மனிதனைப் பொறுத்த வரை சோகமும் ஒரு நன்மையே.

பலருடைய வாழ்க்கையில் சோகமே பல நல்ல பாடங்களைக் கற்றுத் தருகிறது. செல்வந்தனாக இருக்கும் ஒருவன் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் இழக்கும்போது அனைவரும் அவனைப் பிரிந்து செல்வதைப் பார்த்து சோகம்கொள்கிறான். உண்மையில் அந்நிலையில்தான் யார் அவனுக்கு உதவ முன் வருகிறார்கள், அவனுடைய உண்மையான நண்பர்கள், உறவினர்கள் யார் என்பதை அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. மனித வாழ்வில் சோகம் தரும் படிப்பினையை வேறு எந்த நிலையாலும் பெற முடியாது. ராமகிருஷ்ணர் மனித உடலில் இருந்தவரை சாரதா தேவி ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாகவே உலகிற்குத் தோற்றமளித்தார். அவர் மறைவிற்குப் பின்னர்தான் சாரதா தேவியின் ஆன்மீக உயர்வை மக்கள் உணரத் தொடங்கினர். எனவே, மனித வாழ்க்கையில் ஒன்றை இழந்துதான், ஒன்றைப் பெற முடியும் என்பதும் இறைநியதியே.

13. வாழ்க்கை ஓர் துன்பம்

’மனித மாண்பு அவன் மனத்தளவே’ என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப மனித மனத்தைப் பண்படுத்தும் அளவிற்கு அவன் மகானாக உயர்கின்றான். மேடு பள்ளங்களைச் சரிப்படுத்தி, கல், கூளம் நீக்கி நிலத்தைப் பண்படுத்துவது போல மனத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி மனத்தைப் பண்படுத்தும்போது ஏற்படும் உணர்வையே துன்பம் என்கிறோம். நமக்கு வரும் துன்பங்களுக்கு காரணம் நம்முடைய பூர்வ ஜன்ம வினைகளே என்பதைச் சந்தேகமின்றி உணர்ந்தால்தான் எந்தத் துன்பத்தையும் ஏற்று அனுபவிக்கும் மனப் பக்குவம் ஏற்படும். இன்பத்தை அனுபவிக்கத் துடிக்கும் கலியுக மனித மனம் துன்பம் வரும்போது துவண்டு போவதால்தான் கடவுள் நம்பிக்கை விரைவில் தளர்ந்து போய் விடுகிறது. ’நான் போகாத கோயில் இல்லை, சொல்லாத மந்திரமில்லை, செய்யாத பூஜைகள் இல்லை, அப்படி இருந்தும் எனக்கு ஏன் இத்தனை துன்பங்கள் வருகின்றன?’ என்று பலரும் கேட்பதற்குக் காரணமே கடவுள் இன்பத்தை மட்டுமே வாரி வழங்கும் கற்பக விருட்சம் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதால்தான்.

துன்பத்தின் மகிமையை உணர்ந்தவர்கள்தான் குந்தி கிருஷ்ண பகவானிடம் வேண்டியது போல, ’இறைவா, எனக்குத் துன்பத்தையே கொடு. அப்போதுதான் உன்னையே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்’ என்ற பிரார்த்தனையுடன் வாழ்க்கையை நடத்தி வருவார்கள். பல தீ ய காரியங்களைச் செய்து சுகமாக வாழ்வதை விட, தன்னால் முடிந்த நற்காரியங்களைச் செய்து எத்தகைய துன்பம் வந்தாலும் அதை இறை நினைவுடன் ஏற்று வாழ்வதே உண்மையான வாழ்க்கை என்று வாழ்க்கைத் தத்துவத்தை வலியுறுத்தி வருபவர்களே நமது தெய்வ பாரத நாட்டில் தோன்றிய மகான்களும் பெரியோர்களும்.

14. வாழ்க்கை ஓர் கடமை

பலரும் கடமை என்றால் காலையில் எழுந்து பல் துலக்கி, காபி அருந்தி, பேப்பர் படித்து விட்டு, நெற்றியில் திருநீற்றைப் பூசிக் கொண்டு,அலுவலகம் சென்று வந்து, மாலையில் தொலைக் காட்சியைப் பார்த்து விட்டு, இரவில் உறங்கி எழுந்தால் அன்றைய கடமை நிறைவேற்றி விட்டதாக நினைக்கிறார்கள்.இதுவே கலியுக மனிதனின் அவல நிலை. யாராவது கேட்டால், ’செய்யும் தொழிலே தெய்வம். என்னுடைய அலுவலகக் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறேன். அது போதும்’ என்று சொல்லி விடுகிறார்கள். உண்மையில் மனிதனுடைய கடமை என்ன என்பதை நமது முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். மனிதனுக்கு ஐந்து விதமான நித்திய கடமைகள் உண்டு.

வாழ்க்கை ஓர் கடமை. செய்து முடிப்போம்

தன்னைப் பெற்றெடுத்த தாய் தந்தையர்களைப் பேணுதல் மனிதனின் முதல் கடமை. அவர்களுக்குத் தேவையான உணவு, உடை, மருத்துவ வசதி போன்ற வசதிகளை தனது சக்திக்கு முடிந்த வகையில் நிறைவேற்ற வேண்டும். முதியோர் இல்லங்களில் பெற்றோர்களை தங்க வைக்கும் கொடிய வினைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்புடையது அல்ல. அடுத்து மனிதன் தான் உயிர் வாழ உணவு, நீர், காற்று, நெருப்பு என பஞ்ச பூத சக்திகளைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறான். இந்த சக்திகளை புதுப்பிப்பதற்கு அவன் எந்த வித முயற்சிகளையும் எடுப்பதில்லை. உரிய சந்தியா காலத்தில் வழிபாடுகளைச் செய்து, காயத்ரீ ஜபித்து, அக்னி ஹோத்ரம் போன்ற பஞ்ச பூதங்களை நிலைப்படுத்தும் வழிபாடுகளை ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் நிறைவேற்றியே ஆக வேண்டும்.இதில் யாருக்குமே விலக்கு கிடையாது.

மூன்றாவதாக ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு ரிஷியின் வழி வந்தவர்களே. நாம் ஆன்மீகத்தில் மேலும் மேலும் முன்னேறி இறுதியில் முக்தி என்னும் தெய்வீக நிலையை அடைய அல்லலும் பகலும் இறைவனிடம் பிரார்த்திக்கும் ரிஷிகளுக்கு தினமும் அர்க்ய வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும். மூர்த்தி, தீர்த்தம், தலம் முறையாகத் தரிசனம் செய்து நற்கதி அடைய முயற்சி செய்வதே நமது கோத்ராதிபதிகளுக்கு நாம் செய்யும் நன்றிக் கடனாகும். நாம் இன்று பெற்றிருக்கும் கல்வி, நிலம், வாகன வசதி, வீடு, செல்வம், நல்ல மனைவி, குழந்தைகள் என அனைத்துமே நமது மூதாதையர்களின் ஆசியால் வந்தவையே. இத்தனை வசதிகளைக் கொடுத்த நம் மூதாதையர்களுக்கு அமாவாசை, மாளய பட்ச தர்ப்பணம் போன்ற பித்ரு பூஜை வழிபாடுகளை முறையாக இயற்றி இயன்ற அளவு அன்னதானம் செய்து வருதல் வேண்டும்.

மனிதனாய்ப் பிறந்த நாம் அல்லல்படும் மற்ற மனிதர்களின் துயர் தீர்க்கவும் அவர்கள் நலம் பேண அல்லும் பகலும் உழைப்பதும் மனிதக் கடமைகளில் ஒன்றாகும். அன்னதானம், ஆடை தானம், கல்வி தானம், பயனுள்ள அறிவுரை தானம் போன்ற ஏதாவது ஒரு தானத்தை முடிந்த அளவில் தினமும் நிறைவேற்றுவதும் மனிதனுக்கு அத்தியாவசியமான கடமையாகும். மனிதன் மற்ற உயிர்களைப் பேண மறந்தாலும், மற்ற உயிர்கள் எல்லாம் மனிதன் நலமாய் வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். உலகில் உள்ள விஷ சக்திகளை ஈர்த்து பஸ்மம் செய்யும் பாம்புகள் இல்லா விட்டால், மனித குலம் என்றோ அழிந்து போயிருக்கும். பூமியில் உருவாகும் விஷ வண்டுகளைக் கோழி, புறா, மைனா போன்ற பறவை இனங்கள் உணவாக ஏற்காமல் போனால் வண்டுகளே விஷ வண்டுகளே மனித இனத்தை அழித்து விடும். நமக்காக பாடுபடும் மற்ற உயிர்களுக்கு நாம், உணவு, நீர், உறைவிடம், மருத்துவ வசதி தந்து அவற்றைக் காப்பது மனித இனத்தின் தலையாய கடமை அல்லவா?

15. வாழ்க்கை ஓர் பாடல்

தாயின் இதயத் துடிப்பைக் கேட்டு வளரும் குழந்தை, வளர்ந்ததும் தாளத்திலும், இசையிலும் மனதைப் பறி கொடுப்பது இயற்கையே. நல்ல இசை நம் மனதிற்கு அமைதியைக் கொடுப்பதோடு நம் அறிவையும் வளர்க்கும் என்பதில் ஐயமில்லை. இசையே கடவுளிடம் சேர்க்கும் பாலமாக அமைவதால் எல்லா மகான்களும், சற்குருமார்களும் இறை கீர்த்தனைகளையும், தெய்வப் பாடல்களையும் பாடி இறைவனை மகிழ்வித்தனர். இசையால் எதையும் பெறலாம் என்பதை கைலாய நாதனிடம் சாமகானம் பொழிந்து வரங்கள் பல பெற்ற இராவணனின் வரலாறு நமக்கு உணர்த்துகிறது அல்லவா? தினமும் ஏதாவது ஒரு தெய்வப் பாடலைப் பாடி மனித வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.

இசையில் சிறந்தது சாம கானப் பாடல்கள். திருச்சி லால்குடி திருமங்கல சிவாலயத்தில் அருள்புரியும் ஸ்ரீசாமவேதீஸ்வரரை வாழ்வில் ஒரு முறையாவது தரிசனம் செய்து சாம கானப் பாடல்களை ஓதி இறைவனை மகிழ்விக்க வேண்டும். தினமும் ஒரு சாம வேதப் பாடலையாவது பாட வேண்டும். சாம வேதம் அறியாதோர் ’மந்திரமாவது நீறு...’ என்று தொடங்கும் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் திருநீற்றுப் பதிகத்தை தினமும் பாடி வருதல் நலம். அனைத்து சுகங்களையும் பெற்று வாழ்வதே மனித வாழ்க்கை. ஒரு மனிதன் அனுபவிக்கக் கூடிய செல்வங்கள் அனைத்தையும் இப்பிறவியிலேயே பெற்று அனுபவிக்க வழி செய்பவையே அகத்திய தேவாரப் பாடல்கள். 32 பதிகங்கள் கொண்ட இந்த எளிய அகத்திய தேவாரத் திரட்டுப் பாடல்களை ஒரு மனிதன் தொடர்ந்து பாடி வந்தாலே அவன் இம்மையிலும் மறுமையிலும் எல்லா நலன்களும் பெற்று வாழ்வான் என்பது உறுதி.

16. வாழ்க்கை ஓர் பயணம்

பஸ் பயணம், ரயில் பயணம் போல மனித வாழ்க்கைப் பயணமும் நிறைவு அடையும் இடம் உண்டு. இது ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு விதமாக இருக்கும். பயணம் நிறைவு அடையும் இடம் வேறாக இருந்தாலும் பயணம் செய்யும் முறைகளை அனைவருக்கும் ஒன்றாகவே நமது பெரியோர்கள் கற்றுத் தந்துள்ளனர். அனைவரையும் நம்முடைய தெய்வீகப் பயணத்தில் கூட்டிச் செல்லுதலே மனிதப் பயணத்தின் ஒருமைப் பாடாகும். தக்க சற்குருவைப் பெற்றவர்களுக்கு, சற்குருநாதரே இந்தப் பயண முறைகளை ஏற்படுத்தித் தந்து விடுவார்.

வாழ்க்கை ஓர் பயணம்.
நிறைவு செய்வோம்

உதாரணமாக, ஒரு இறை அடியார் ஒரு கோயிலில் உழவாரத் திருப்பணி செய்வதாக இருந்தால், அவர் உடம்பில் அவர் வம்சாவழியில் உள்ள பல்லாயிரக் கணக்கான மூதாதையர்களை வாசம் செய்ய வைத்து அவர்கள் எந்தெந்தத் திருப்பணிகளைச் செய்ய ஏங்கினார்களோ, எந்தெந்தக் கோயில் யாத்திரைகளுக்குச் செல்ல சங்கல்பம் எடுத்து அதை நிறைவேற்றாமல் சென்றார்களோ, எந்தக் கோயில்களில் எல்லாம் முடி காணிக்கை, காவடிப் பிரார்த்தனை போன்றவைகளைச் செய்யாமல் விட்டு விட்டார்களோ அவை அனைத்தையும் அந்த இறை அடியார் மூலமாக நிறைவேற்றி விடுவார். சற்குரு அமையப் பெறாதோர் முடிந்த மட்டும் புனிதத் தலங்களுக்கு தனியாக யாத்திரை செல்வதைத் தவிர்த்து உடல் ஊனமுற்றோர், வறியவர், மொழி அறியாதோர், முதியோர் என பல தரப்பினரையும் தன்னுடன், தன் குடும்ப அன்பர்களுடன் அழைத்துச் செல்வதால் அதன் மூலம் வாழ்க்கைப் பயணமும் நன்முறையில் நிறைவு பெறும். சமீப கால வரலாற்றில் சிறப்பிடம் பெற்றது ஏசுபிரான் சிலுவையைச் சுமந்து கல்வாரி மலையில் மேற்கொண்ட யாத்திரையாகும். ஒரு சாதாரண மரச் சிலுவையைச் சுமக்க ஏசுபிரான் ஏன் அவ்வளவு சிரமப்பட்டார் என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? வெறும் சிலுவையை மட்டும் ஏசுநாதர் கல்வாரி மலையில் சுமந்து செல்லவில்லை. இந்த உலக மக்கள் அனைவரும் தேவையில்லாத எத்தனையோ விஷங்களை எல்லாம் மனதில் சுமந்து கொண்டு அல்லல்படுகின்றனர். தேவையில்லாத எத்தனையோ நடிகை, நடிகர்களின் உருவங்களைச் சுமந்தும், கட்டுக் கட்டாய்ப் பணத்தையும், மலைமலையாய் தங்க நகைகளை மனதில் சுமந்தும், விதவிதமான பங்களாக்கள், வாகனங்களை மனதில் சுமந்தும் மக்கள் சுமக்கும் மனச் சுமைகள் அனைத்தையும் தன் மரச் சிலுவையில் சுமந்தவரே ஏசுபிரான்.

17. வாழ்க்கை ஓர் புதிர்

குழந்தைகளை எல்லோரும் விரும்புவதற்குக் காரணம் என்ன?
குழந்தை மற்றவர்களைப் பார்க்கும் பார்வையில் எந்த விகற்பமும் கிடையாது. தன் மனிதில் உள்ளதை ஒளிவு, மறைவு இல்லாமல் வெளிப்படையாகப் பேசிவிடும். இந்த ’உள்ளொன்று வைத்துப் புறமொன்று கூறாத நிலையை’ நாம் அனைவரிடமும் எதிர் பார்க்கிறோம். மனம் திறந்துபேசும் மனிதர்களுடன் பழகும்போது நமக்கு சந்தோஷம் ஏற்படுகிறது. கபடதாரிகளைச் சந்தித்தால் மனம் வேதனை கொள்கிறது. இக்காலத்தில் மனம் திறந்து பேசினால் எங்கே நம்மை ஏமாற்றி விடுவார்களோ என்ற பயம் அதிகரித்துள்ளதால் அதைக் காரணம் காட்டி பலரும் மனம் திறந்து பேசுவதில்லை. மனிதர்கள் மற்றவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தால் அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. மனம் விட்டுப் பேசி, உதட்டளவில் அன்றி உள்ளத்தோடு உறவாடி புதிர் இல்லாத் திறந்த புத்தகமாக ஒருவர் வாழ்க்கை. அமையும்போதுதான் மற்றவர்கள் அவர்காள் வார்த்தைகளால் வசப்படுத்தப்படுகிறார்கள். மகான்களின் நிலை இதுவே.

வாழ்க்கை ஓர் புதிர்.
தினமும் அதை விடுவிப்போம்.

இதனால்தான் திருமணம் ஆன தம்பதிகள் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும் என்பதை நல்ல தாம்பத்ய வாழ்க்கைக்கு உரிய பாடமாக சித்தர்கள் வைத்துள்ளார்கள். கணவன் மனைவியர் திருமணமான ஐந்து வருடங்களுக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆணோ பெண்ணோ அதிக பட்ச உரிமையைப் பரிமாறிக் கொள்ளும் உறவே திருமணம் என்பது. இந்த உறவிலேயே மனம் விட்டுப் பழகாமல் ஒருவர் மற்றவருக்குப் புதிராக விளங்கினால் மற்றவர்களிடம் எப்படி மனம் திறந்து உறவாட முடியும்? ஒவ்வொருவரும் தங்கள் தாய், தந்தையர், கணவன், மனைவி, நண்பர்கள், உறவினர்கள் இவர்களுடன் குறைந்தது ஒரு மணி நேரமாவது மனம் திறந்து பேசி அன்பைப் பரிமாறிக் கொண்டால்தான் மனித வாழ்க்கை மணம் வீசும் பூங்காவாக மலரும்.

18. வாழ்க்கை ஓர் போராட்டம்

18. வாழ்க்கை ஓர் போராட்டம். போராடி வெற்றி கொள்வோம்.
இரண்டு வகையான போராட்டத்தை ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கிறது. மனதினுள் எழும் போராட்டமும், நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலை, மனிதர்கள் தரும் துன்பத்தைச் சமாளிக்கும் போராட்டமும் ஒவ்வொரு மனிதனும் அன்றாடம் எதிர் கொள்ள வேண்டிய பிரச்னைகளே. ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால் மகாபாரத காவியம் முழுவதுமே நம்முடைய மனப் போராட்டத்தைப் பற்றியே விளக்கி உள்ளது எனத் தெளியலாம். நம் மனதினுள் உருவெடுக்கும் உள் போராட்டத்தின் பிரதிபலிப்பே நமக்கு வெளியில் நாம் சந்திக்கும் போராட்டம் என்று சொல்வதே சரியாகும். ஏற்றுக் கொள்வதற்கு இது மிகவும் கடினமாக இருந்தாலும், உண்மை நிலை இதுவே. கண், காது, உடல் என உணர்வு உறுப்புகள் வழி செல்லும் மனதை அறிவுத் திறன் கொண்டு செலுத்தும் முறையையே மகாபாரதம் விளக்குகின்றது. கீதையின் உட்பொருள் இதுவே.

மனம் தூய்மை அடையும் போது நமக்கு வெளியில் உள்ள உலகமும் சுத்தமானதாக, அன்பு றிநைந்ததாக காட்சி அளிக்கிறது. தொடர்ந்து வரும் இந்த உள் வெளிப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்யும் மார்கமாக கீதா உபதேசம் அமைந்துள்ளது. ’எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு மனத்தை இறைவனிடத்தில் வைத்தால் நீ நலம் அடைவாய்’, என்பதே மனதை வெற்றி கொள்ளும் எளிய மார்கமாக ஸ்ரீகிருஷ்ண பகவான் அருளியுள்ளார்.. இதன் விளக்கமாய் அமைவதே, ’எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதே அருளாளா, அருணாசலா’, என்ற சித்த வேத சூக்த மாமந்திரமும்.

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam