சரபம் ஒளி வீசும், இருள் நீக்கும் !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருபுவனம் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள தெய்வ மூர்த்தியே ஸ்ரீகம்பஹரேஸ்வரர் ஆவார். கம்பம் என்றால் பயத்தால் தோன்றும் நடுக்கம். ஹரன் என்றால் களைபவர், நீக்குபவர் என்று பொருள். பயத்தால் தோன்றும் நடுக்கத்தைப் போக்கி வாழ்வில் ஒரு புத்துணர்ச்சியையும் பிடிப்பையும் ஏற்படுத்தும் தெய்வ மூர்த்தியே திருபுவன ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி ஆவார். ஒரு சிலர் தாங்கள் எதற்குமே பயப்படுவதில்லை என்று மார்தட்டிக் கொள்வார்கள். அப்போது அவர்கள் உடலைத் தொட்டுப் பார்த்தாலே அவர்கள் மனம் நடுங்குவது உடலில் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம். பயம் வந்தால் முதலில் அது நடுக்கமாகத்தான் உடலில் தோன்றும். இதைக் களைவதே திருபுவன ஈசனின் அனுகிரகம். சரப பறவை என்பது எட்டுக் கால்களுடன் விளங்கும் பிரம்மாண்டமான பறவை. 2020ம் ஆண்டு என்ற நான்கு எண் கணித சூத்திரத்தில் அமைந்த இந்த வருடத்தில் எட்டுக் கால்களுடன் திகழும் சரப பறவை உருவத்தில் துலங்கும் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை வணங்குவதே சிறப்பாகும் என்ற உண்மை பளிச்சிடுகின்றது அல்லவா ? 2000ம் ஆண்டு நம் சற்குரு இத்தலத்தில் எழுந்தருளி உழவாரப் பணிகள் நிறைவேற்றினார் என்றால் இது இந்த சரப ஆண்டில் மட்டுமல்ல, இந்த நூற்றாண்டிற்கே வணங்கப்பட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீசரபர் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சித்த பொக்கிஷமாகும்.

ஒரு சாதாரண மனிதனும் உணர்ந்து இன்புறக் கூடிய சிறப்பைத் தருவதே இங்குள்ள சரப வேத தூண்களாகும். பசு, முதலை, கருடன் போன்ற விலங்குகள் பறவைகளே வேதம் ஓதுகின்றன என்றால் மனிதர்கள் எந்த அளவிற்கு வேதங்களை பராமரிக்க வேண்டும் ? இன்றைய மனிதனுக்கோ வேதம் என்பதே ஒரு புரியாத புதிராக இருக்கிறது. முறையாக வேதம் ஓதும் சக்தி பெற்றவர்களும் அதை வியாபாரப் பொருளாக மாற்றி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரியதே. இதற்கு ஓரளவு மாற்றாக அமைந்ததே திருபுவனம் திருத்தலத்தில் அமைந்துள்ள இந்த குடமுழுக்குத் தூண்கள் என்று அழைக்கப்படும் சரப வேத தூண்களாகும். ஆம், இந்த தூண்களைக் கழுவி சுத்தம் செய்தாலே எத்தனையோ திருத்தலங்களில் கும்பாபிஷேகம் செய்த பலன்கள் பொழியும் என்றால் இத்தகைய தூண்கள் மகிமையை விளக்கிய நம் சற்குருவிற்கு நாம் எப்படி நன்றி செலுத்த முடியும் ? சற்குருவின் கருணை கடாட்சத்தைப் பெறாமல் திருத்தலங்களில் உள்ள ஒரு தூணில் உள்ள இறை மூர்த்தியைக் கூட தொடக் கூடாது என்றால் இந்த சரப தூண்களை எப்படி தூய்மை செய்து பயன்பெறுவது என்ற சந்தேகம் தோன்றுவது நியாயமே. தற்போது நம் அடியார்கள் எவருமே இந்தத் தூண்களைத் தொட்டு உழவாரப் பணி செய்து பயன்பெற முடியாது என்றாலும் என்றோ நம் சற்குரு நமக்காக அரும்பாடுபட்டு இத்தலத்தில் நிரவிய சரப சக்திகளை நாம் சுலபமாகப் பெற்று விடலாமே. பல யுகங்கள் பஞ்சாக்னி நடுவில் தவம் இயற்றிய இரண்யாட்சனின் தவத்தை மெச்சி அவனுக்கு வரம் அருளிய சிவபெருமானின் அனுகிரக சக்திகளையும் மிஞ்சும் சக்தி உடைய இறை அவதாரம் மூலமே இரண்யாட்சனின் தவறான காரியங்களை ஒரு முடிவு கொண்டு வர முடியும். அதனால் மிகவும் சக்தி வாய்ந்த நரசிம்ம அவதாரத்தை பெருமாள் எடுத்து இரண்யாட்சனை சம்ஹாரம் செய்தார். அந்த அளவிற்கு உக்கிரம் பெற்ற நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்துவது என்றால் அது இறைவன் ஒருவனால் மட்டும் நிகழக் கூடிய காரியம் அல்லவா ? பிரகலாதன் போன்ற பக்தர்களின் பக்தியில் சாந்தம் பெற்றாலும் நரசிம்ம மூர்த்தி எங்கும் பிரகாலாதன் போன்ற உத்தம பக்தர்களையே சந்தித்துக் கொண்டு இருக்க முடியுமா ?

அதற்காக எம்பெருமானே சரப பறவை வடிவில் நரசிம்ம மூர்த்தியையும் மிஞ்சம் அளவில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாக அவதாரம் கொண்ட திருத்தலமே திருபுவனம் திருத்தலமாகும். மனத்தளவில் இந்த இறை லீலைகளைப் புரிந்து கொள்ள பக்தர்கள் முதலில் நாட வேண்டிய தலம் திங்களூர் ஆகும். திங்களூர் திருத்தலத்தில் ஸ்ரீபெரிய நாயகி சமேத ஸ்ரீகைலாச நாதரை தரிசனம் செய்து வழிபடுதலால் ஓரளவு ஸ்ரீசரபேஸ்வரரின் அவதார லீலைகளைப் புரிந்து கொள்ள முடியும். இதற்காகவே நம் சற்குரு திங்களூர் திருத்தலத்திற்கு தம் அடியார்களுடன் எழுந்தருளி வேண்டிய மனோ பலத்தை அளித்தார் என்பதும் ஒரு சித்த இரகசியமே. மகான்கள், யோகிகள் மனம் கடந்து நின்றாலும் மனிதர்கள் மனம் உடையவர்களாய் இருப்பதால் மனம் மூலமாகவே அனைத்து இந்திரியங்களும் இயங்குவதால் மனம் மகிழும்படியான, மனம் புரிந்து கொள்வதற்கு ஏதுவான உணவு வகைகளை ஏற்பதே தெய்வீகத்தில் ஆரம்ப படிக்கட்டில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கம், உடல் சுத்தி விதிமுறைகளாகும். திருபுவன திருத்தலத்தில் நடந்த உழவாரப் பணிகளின் போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பல, அவற்றில் ஒன்றாக அடியார்கள் பலர் இங்குள்ள சரபேஸ்வர தூண்களை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். மந்திரங்கள் ஜபித்து சுத்தமாக தாயரிக்கப்பட்ட எலுமிச்சை பழத் தோல், சீயக்காய் போன்றவற்றைக் கொண்டு இந்தத் தூண்களைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நம் சற்குரு, “இந்தத் தூண்கள் ஒவ்வொன்றுமே நம் பூலோகத்தில் ஒரு திருத்தலத்தைக் குறிப்பது. அந்த திருத்தலத்தில் உள்ள சக்திகளை எல்லாம் கோபுரங்கள் வடிவில் இந்தத் தூண்களில் பதித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள், பெரியோர்கள். அதனால் இங்குள்ள ஏதாவது ஒரு தூணை வலம் வந்து வணங்கினாலே அந்த திருத்தலத்தையே வணங்கிய பலன் நமக்குக் கிட்டும். இங்குள்ள ஒரு தூணை முறையாகத் தூய்மை செய்தால் அந்தத் திருத்தலத்தையே தூய்மை செய்த பலன் அந்த அடியாருக்குக் கிட்டும். இங்குள்ள அடியார்களோ எத்தனையோ தூண்களை தூய்மை செய்து குடமுழுக்குப் புண்ணியத்தை தங்களுக்கும் தங்கள் சந்ததிகளுக்கும் பெருக்கிக் கொள்கிறார்கள். இதனால் விளையும் மலையளவு புண்ணியத்தை எப்படி இவர்கள் நல்ல முறையில் பயன்படுத்துவார்களோ என்று நினைக்கும்போது அடியேனுக்கு அச்சமாக இருக்கிறது. சரி சார், அடியேன் இவ்விஷயத்தில் என்ன செய்ய முடியும்? புண்ணியத்தை வாங்கித் தருவதோடு அடியேனுடைய கடமை முடிந்து விடுகிறது. அதை எப்படி நல்ல முறையில் வைத்துக் கொண்டு எஞ்சிய காலத்தில் பயன்படுத்துவது என்பது உங்கள் கையில்தானே உள்ளது,” என்று கூறினார்.

சந்திர தீர்த்தம் திங்களூர்

இந்த ராகவேந்திர வருடத்தில் இங்குள்ள வீடியோவில் காணும் கருப்பும் வெள்ளையும் கலந்த ராகவேந்திர நாரைகளை தரிசனம் செய்து காய்ச்சின பசும்பால், வறுத்த நிலக்கடலை தானம் அளிப்பது இவ்வருடம் முழுவதும் இயற்றக் கூடிய தானங்களில் ஒன்றாக மலர்கிறது. இதனால் எத்தகைய இடர் வரினும் குரு மேல் உள்ள நம்பிக்கை வலுப்படும். இந்த வருடம் முழுமைக்கும், ஏன் உங்கள் வாழ்க்கை முழுமைக்கும் உள்ள செய்தியே இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது என்றால் அது மிகையல்ல. மனம்தானே மனிதர்களை ஆட்டும், ஆளும் ஆயுதம். இதை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் நீங்கள் சாதிக்க வேண்டியது வேறு என்ன ? திங்களூர் திருத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி இறை மூர்த்திகளைத் தரிசனம் செய்தல், தான தர்மங்களை நிறைவேற்றுதல் சிறப்பாகும். நம் சற்குரு நல்ல வெயிலில் அலைந்து திரிந்து வந்து வியர்வை வழியும்போது சூடாக நீர் அருந்துவார், கன மழையின்போது குளிர்ந்த நீர் அருந்துவார். கேட்பதற்கு இந்தச் செயல்கள் விநோதமாகத் தோன்றினாலும் இதன் பின்னால் உள்ள உடல்கூறு இரகசியங்களைப் பற்றி விளக்குபவையே இவையாகும். நாம் வெயிலில் செல்லும்போது உடல் தேவையான குளிர்ச்சியைப் பெற வெளியில் தோலில் குளிர்ச்சி அதிகமாகிறது, இதைச் சமன்படுத்த உள்உறுப்புகள் வேகமாகச் செயல்படுகின்றன, இதற்கு சூடு நீர் அவசியம். குளிர்ச்சியில் உள்ளுறுப்புகள் மந்தமடைவதால் இதைச் சமன்படுத்த தண்ணீர் அவசியமாகிறது. அதுபோல சந்திர தலமான திங்களூர் திருத்தலத்தில் இறைவழிபாடு இயற்றும்போது இளநீர் அருந்துவதால் உடல் உறுப்புகள் தேவையான குளிர்ச்சியைப் பெற்று இறை விஷயங்களை, மறைப் பொருட்களை, தத்துவங்களை கிரகிக்க ஏதுவாகிறது. இந்த இரகசியங்கள் எல்லாவற்றையும் திங்களூர் திருத்தலத்தில் தெளிவுபடுத்தியவரே நம் சற்குரு ஆவார். அனல் பறக்கும் வெயிலில் கனல் பறக்கும் சித்த தத்துவங்களை ஆலமர நிழலில் குளிர் வீசும் தென்றலாய்ப் பொழிந்தவரே நம் சற்குரு. இந்த தத்துவங்களை எல்லாம் பக்தர்கள் கிரகிக்க அனைவருக்கும் சுவையான இளநீர் வழங்கப்பட்டதன் பின்னணியில் அமைந்த ஆன்மீக விளக்கங்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் திங்களூர்

ஒரு முறை லால்குடி அருகிலுள்ள திருமங்கலம் திருத்தலத்தில் உழவாரப் பணிகள் நிறைவேற்றிய போது அங்குள்ள சிறிய கேணி வடிவில் தோன்றிய ஒரு தீர்த்தத்திலிருந்து நீர் இறைத்து அந்த திருத்தலத்திலுள்ள சன்னதிகளை எல்லாம் நீர் விட்டு அலம்பி உழவாரப் பணி இயற்றினார்கள் நம் அடியார்கள். பல மணி நேரம் ஆகியும் அந்த நீர் ஊற்றில் ஒரு அங்குலம் கூட நீர் வற்றியதாகத் தெரியவில்லை. திருப்பணி நிறைவடைந்த பின்னரும் அந்தக் கிணற்றில் நீர் சற்றும் குறையாதது கண்டு அனைத்து அடியார்களும் அதியசமான இந்த சற்குருவின் செயலைப் புகழ்ந்து கூறினர். ஆனால், சற்குருவோ அனைத்தும் இறைவன் செயல், சாமவேதீஸ்வரரின் கருணை என்று ஒரே வரியில் கூறி விட்டார். இதே நினைப்பில் திருபுவனத்திற்குச் சென்று அங்குள்ள ஒரு பெரிய கிணற்றில் மோட்டார் அமைத்து நீர் இறைக்க ஆரம்பித்தனர் அடியார்கள். ஆனால் என்ன ஆச்சரியம், அரை மணி நேரம் கூட நீர் இறைக்க முடியவில்லை, திடீரென சேறும், சகதியும் அந்நீரில் கலந்து வர அந்தக் கிணற்றில் நீர் இறைக்கும் பணி நிறுத்தப்பட்டு வேறு நீரைத் தேடி அலைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்போது யாருக்கும் இந்த உழவாரத் திருப்பணியின் பின்னணியில் அமைந்த இரகசியம் புரியவில்லை என்றாலும் சற்குரு திருபுவன குடமுழக்குத் தூண்கள் மகிமையைப் பற்றி விளக்கியபோதுதான் ஏன் அந்தக் கிணற்றில் உள்ள நீர் அவ்வளவு விரைவில் வற்றி விட்டது என்ற உண்மை புரிய வந்தது. சில உண்மைகளை உடனுக்குடன் புரிய வைத்து தெய்வீகத்தில் சுவை கூட்டுபவரே நம் சற்குரு. திருபுவனத்தில் உள்ள ஒவ்வொரு தூணும் ஒரு திருத்தலத்தையே குறிக்கும் என்றால் அந்த ஒவ்வொரு தூணையும் அலம்ப ஒரு திருத்தலத்தை அலம்ப தேவையான நீர் செலவாகும் என்பதுதானே உண்மை. இதை நிரூபித்தவரே ஸ்ரீகம்பஹரேஸ்வரர், இல்லை நம் சற்குரு என்று நமக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி திருபுவனம்

ஒவ்வொரு வருடமும் பொங்கலை கொண்டாடி உத்தராயண திருநாளில் சர்க்கரைப் பொங்கலை திகட்டாமல் அனுபவிப்பது போல் எத்தனை தடவை சுவைத்தாலும் திகட்டாத சித்தாமிர்தத்தை மீண்டும் நம் அடியார்களுடன் நாம் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு பொங்கல் திருநாளை நம் சற்குருவுடன் கொண்டாடும் வாய்ப்பை சில அடியார்கள் பெற்றனர். பௌர்ணமி முடிந்து உடனேயே தை மாத சங்க்ரமணம் தோன்றியதால் விரும்பும் அடியார்கள் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலேயே தங்கி குடும்பத்துடன் பொங்கல் திருநாளை கொண்டாடலாம் என்ற தேனினும் இனிய செய்தியை நம் சற்குரு தெரிவிக்க ஆஸ்ரம வாசலிலேயே புதுப் பானை வைத்து மூன்று கரும்புகளை கூம்பாக பொங்கல் பானையைச் சுற்றி வைத்து குரு சாட்சியாக திருஅண்ணாமலை சாட்சியாக காச்யப மகரிஷி வழித் தோன்றல்கள் சாட்சியாக சந்திர பகவானின் அமுத தாரைகள் சாட்சியாக அந்தப் பொங்கல் நன்னாள் இனிதே நிறைவேறியது. ஆம், அந்த தைப் பொங்கல் பொங்கிய போது திருஅண்ணாமலை ஆஸ்ரமப் பித்ரு படிக்கட்டுகளில் நம் சற்குரு குடும்ப சகிதமாக எழுந்தருள இந்த தவமுனிகளின் எதிரே திருஅண்ணாமலை தசமுகம் அருளாட்சி செய்ய, சிவசக்தி ஐக்ய தரிசனத்தின் வலது பக்கம் ஆதவன் எழுந்தருள, இடது பக்கம் முந்தைய இரவில் பொழிந்த பௌர்ணமி நிலா ஒளி வீச நிகழ்ந்த இந்த பொங்கல் திருநாளின் வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா ? சொற் சுவை கடந்த இந்த பொங்கல் திருநாளில் நிரவிய சித்தாமிர்தத்தை நம் சற்குரு தன் அடியார்களுக்கு என்று சிறிதும் வைத்துக் கொள்ளாது அனைத்து சர்க்கரைப் பொங்கலையும் பானையோடு அந்த உத்தராயணப் புண்ணிய தினத்தில் திருஅண்ணாமலையை கிரிவலமாக வந்த அடியார்களுக்கு விநியோகித்தார் என்றால் அந்தச் சிறப்பை எப்படி வர்ணிக்க முடியும் ? நால்வேத சாட்சியாக, நான்மாடக் கூடல் அமிர்தமாக வழங்கப்பட்ட அந்த பிரசாதத்தை பெற்றவர்களுக்கே வர்ணிக்க முடியாத அனுகிரகம் கிட்டும் என்றால் அந்தப் பொங்கலை தயார் செய்த நம் அடியார்களுக்கு கிட்டும் அனுகிரகம் எத்தனை தலை முறைகளைக் காக்கும் என்பதை நாம் நினைத்தால் அது நம்மை பிரமிப்பின் எல்லைக்கே கொண்டு செல்லும் அல்லவா ? இவ்வாறு பொங்கல் மட்டும் அல்ல திருபுவன கோபுரம் தாங்கித் தூண்களைத் தூய்மை செய்யும் பாக்கியம் கிட்டியதும் வானளவ துலங்கிய நம் பித்ருக்களின் கருணையே. இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நாம் குருவுடன் சேர்ந்து நற்பணியில் ஈடுபட முடியவில்லையே என்று பல அடியார்கள் இப்போது நினைத்தாலும் இந்த வரிகளைப் படிக்கும் அவர்களுக்கும் நிச்சயம் குருவருள் துணை நிற்கும் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சித்தப் பொக்கிஷமாகும்.
ஜபாகுசும சங்காசம் காஷ்யபேயம் மஹத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்நம் ப்ராணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய துதியை 12 முறை ஓதி 12 முறை சாஷ்டாங்கமாக பொங்கல் பானை முன் நமஸ்கரித்து அந்த பொங்கலில் ஒரு பகுதியை திருத்தலங்களில் பக்தர்களுக்கு அளித்தலால் நம் சற்குரு அன்று அருளிய நான்மாடக் கூடல் அனுகிரகத்தில் ஒரு பகுதியையாவது இன்றைய அடியார்களும் பெறுவார்கள் என்பது உறுதி.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam