ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்
அத்தி வரதர் ஆனந்த வரதரே |
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாளின் வரலாறு நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு மகா காவியமாகும். எந்த அளவிற்கு பெருமாளின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு நமது சற்குருவின் பெருமையையும் நாம் புரிந்து கொண்டோம் என்பதே இந்த மகா காவியத்தின் சிறப்பு அம்சமாகும். 40 வருடங்களுக்கு முன்பு நம் சற்குரு சில அடியார்களுடன் காஞ்சி ஸ்ரீஅத்தி வரதராஜ பெருமாளை தரிசனம் செய்த பெருமையை திருச்சுழி திருத்தல மகிமையாக அளித்திருந்தோம். ஸ்ரீஅத்தி வரதராஜ பெருமாளின் அனுகிரக சக்திகளை தற்போது உள்ள அடியார்களும் பெறும் பொருட்டு சற்குரு தெரிவித்த மேலும் சில சுவையான செய்திகளை இங்கு தெரிவிக்கிறோம். இன்று (1.7.2019) முதல் 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனம் தருவதற்காக காஞ்சிபுரம் ஸ்ரீவரதபெருமாள் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அத்தி மரத்தாலான பெருமாள் மூர்த்தியைப் பற்றி சித்தர்கள் ஏராளமான கிரந்தங்களில் பாடியுள்ளனர். அவை அனைத்தையும் கலியுக மக்கள் தங்கள் குறுகிய அறிவால் கிரகிப்பது கடினம் என்பதால் நம் சற்குரு தற்கால மக்களுக்கு தேவையான பெருமாளின் அனுகிரக சக்திகளைப் பற்றி மட்டும் எடுத்துரைத்துள்ளார்கள்.
ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயம்
காஞ்சிபுரம்
கலியுகம் தோன்றுவதற்கு முன்னால் பிரம்ம மூர்த்தி ஸ்ரீவரதராஜ பெருமாளை வேண்டி பக்தர்களுக்குத் தேவையான வரங்களை பெருமாளின் அனுகிரகமாக அளித்து வந்தார். ஆனால் நாளடைவில் பக்தர்கள் பெருமாளை நேரிடையாக தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கவே பிரம்மா தன்னுடைய தபோ பலனால் அத்தி மரம் ஒன்றில் ஸ்ரீபெருமாளை எழுந்தருளச் செய்து அதை பூஜித்து வந்தார். அக்கால மக்களும் ஸ்ரீபெருமாளை தரிசனம் செய்து தங்கள் பிரார்த்தனைகளை முன் வைத்து அவை நிறைவேறுவது கண்டு பரமானந்தம் கொண்டனர். நாட்கள் செல்லச் செல்ல இந்த பிரார்த்தனைகளும் வேண்டுகோள்களும் சுயநல பிரார்த்தனைகளாக மாறியதால் இதுவரை பெருமாளுக்கு குளிர் தென்றலாக வீசிய பிரார்த்தனைகளின் தன்மை மாறி அவை கடும் உஷ்ணமாக மாறி பெருமாளை தகிக்க ஆரம்பித்தன. நாம் அனைவரும் பெருமாளின் குழந்தைகள் அல்லவா ? தந்தை தன் குழந்தைகள் மீது கோபம் கொள்ளலாகுமோ ? ஆனால் குழந்தைகளின் பிரார்த்தனைகளோ அளவு கடந்த வெப்ப சக்தியாக மாறித் தந்தையைத் தாக்கியபோது வேறு வழியின்றி பெருமாள் தன்னை அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் மூழ்கி பக்தர்களின், அடியார்களின் பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டார். உண்மையில் அத்தி மரம் என்று சொன்னாலும் அந்த அத்தி மரமாக மாறி அமைந்தவர்கள் நித்ய சூரிகள் என்ற பெருமாள் பக்தர்களே. ஸ்ரீபெருமாளின் பாதுகாவலர்களாக பெருமாளுடன் வந்த 8000 கோடி தேவதைகளும் இந்த அனந்தசரஸ் தீர்த்தக் கரையில் அமர்ந்து விட்டனர். எனவே அனந்தசரஸ் தீர்த்தத்தில் கை, கால் என ஒரு மனிதனின் அல்லது எந்த ஜீவ ராசிகளின் உடல் அங்கங்கள் தீண்டினாலும் அந்த ஜீவ ராசிகள் அறிந்தோ அறியாமலோ ஏதோ ஒரு பிறவியில் பெருமாளுக்கு சேவை செய்து பெருமாள் பக்தர்களாக திகழ்ந்திருக்க வேண்டும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. இந்த அனந்தசரஸ் தீர்த்தத்தில் பெருமாள் யுகம் யுகமாக பள்ளி கொண்டிருப்பதால் கங்கையை விடவும் புனிதம் உடையதாக இந்த தீர்த்தம் கருதப்படுகிறது. எனவே ஏதோ ஒரு பிறவியில் பெருமாளுக்கு சேவை செய்தவர்களே இத்திருக்குள தீர்த்தத்தையே தரிசனம் செய்ய இயலும் என்பதையும் அத்தகைய பக்தர்களே இத்திருக்குள தீர்த்தத்தால் பிரசாதம் படைத்து பெருமாள் பக்தர்களுக்கு அளிக்க முடியும் என்பது உண்மை. ஸ்ரீஅத்தி வரதர் எழுந்தருளியுள்ள 48 நாட்களிலும் அனந்தசரஸ் தீர்த்தம் கலந்த பிரசாதம் தயார் செய்து பக்தர்களுக்கு அளிப்பது என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய ஒரு சந்தர்ப்பம் என்பதை நினைவில் கொள்ளவும். இது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு மட்டும் அல்லாமல் உலகில் உள்ள மக்கள்குலம் அனைத்திற்கும் உகந்த அன்னதானத் திருப்பணியாக அமைந்துள்ளதால் உலகின் எப்பகுதியில் உள்ள பக்தர்களும் அவர்கள் குடியிருக்கும் பகுதியிலேயே இந்த அன்னதானத்தை நிகழ்த்தி அனைத்து உயிரினங்களுக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாளின் அனுகிரகத்தை பெற்றுத் தர முடியும். பொதுவாக, அரைத்த சந்தனம் என்பது மூன்று மணி நேரத்திற்கே அதன் புனிதத் தன்மையை இழக்காமல் பவித்திரமாக இருக்கும் என்றாலும் சிவனின் சித்தத்தில் என்றும் உறையும் சித்தர்கள் இந்த கால அளவை தங்கள் தபோ சக்தியால் மாற்றி 12 மணி நேரம், இரண்டு நாட்கள், சில விசேஷமான சந்தர்ப்பங்களில் மூன்று நாட்களுக்குக் கூட சந்தனத்தின் புனிதத் தன்மை மறையாமல் காப்பற்ற முடியும் என்பதைப் போல காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் திருக்குளம் அனந்தசரஸில் பெரும் பெருமாள் பிரசாதமான தீர்த்தத்தை இவ்வருடம் மாளய பட்சம் அன்னதானத்திற்குப் பயன்படுத்தலாம் என்ற சிறப்புச் சலுகையையும் அளித்துள்ளனர்.
அமிர்தசரஸ் புஷ்கரணி காஞ்சிபுரம்
ஸ்ரீஅத்தி வரதர் அமிர்தசரஸ் புஷ்கரணியில் மறைந்து அருளும் தத்துவம் பற்றி சித்தர்கள் உரையாடலின் மூலம் அறிந்து கொள்வோமா ?
ஸ்ரீபோகர் : ஆதியில் வந்த வரதர் பாதியில் மறைந்தது ஏனோ, குருதேவா ?
ஸ்ரீஅகஸ்தியர் : மீதி கொண்டவர் மிச்சமின்றி வாழ அது என்றறிவாயே, போகா.
ஒப்பற்ற இரு சித்தர்களின் இந்த உரையாடலை விளக்க யுகங்கள் போதாது என்றாலும் இதன் சுவையை ஓரளவு அறிய முற்படுவோம். நாம் அறிந்த சிருஷ்டி என்பது புல் பூண்டு தாவரங்கள் என்ற உயிர்களின் தோற்றத்திற்குப் பின் அமைந்த மனிதர்களின் தோற்றமாகும். இவ்வாறு மனிதர்களுக்கு அருள்புரிவதற்காகவே காஞ்சிபுரம் திருத்தலத்தில் எழுந்தருளிய ஸ்ரீவரதராஜ பெருமாள் அமிர்தசரஸ் திருக்குளத்தில் மறைந்து அருள்புரியும் இரகசியத்தை அறிவுறுத்துமாறு தன் சற்குருவைப் பணிந்து கேட்கிறார். ஸ்ரீபோகர் பிரான் பெருமாளின் இந்தத் திருவிளையாடலை நன்கு புரிந்தவர்தான் என்றாலும் எதையும் தன் சற்குரு மூலம் அறியும்போது அதன் சுவையே தனி அல்லவா ? இங்கு பாதி என்பது அமிர்தசரஸ் திருக்குளத்தைக் குறிப்பதாகும். மனிதனின் பலவிதமான குறைபாடுகளை தர்ப்பணம், அர்க்யம், அன்னதானம், நீர்மோர், பழரசம் போன்ற நீர் வகையில் அமைந்த வழிபாடுகள், தான தர்மம் மூலமே கழித்து விட முடியும் என்பது ஒரு மேலோட்டமான பொருளாக அமைந்ததால் நீர் சூழ்ந்த அமிர்தசரஸ் புஷ்கரணி பாதி என்று அழைக்கப்பட்டது. பூமியில் பிறப்பு என்பது கர்ம பாக்கி என்ற ஒன்று இருந்தால் மட்டுமே அமையும் என்பதால் சித்தர்கள், மகான்கள் கூட பிறர் கர்மங்களை ஓரளவு சுமந்தே பூமியில் பிறப்பெடுக்கின்றனர். சாதாரண மக்களுக்கு தாங்கள் கழிக்க வேண்டிய மிச்ச கர்மமாக அது அமைகின்றது. பித்ருக்களின் நாயகராக விளங்கும் பெருமாளோ எல்லா உயிரினங்களும் சிறிதளவும் கர்ம பாக்கியின்றி வாழ்ந்து நன்னிலை அடைய அமிர்தசரஸ் திருக்குளத்தில் மறைந்து சதா சர்வ காலமும் மக்களின் நல்வாழ்விற்காகவே தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார்.
காஞ்சி அமிர்தசரஸ் திருக்குளத்தில் தன்னுடைய 24 தலைமுறையைச் சேர்ந்த மூதாதையர்களுக்கும் ஒருவன் தர்ப்பணம் அளித்து வருவானேயானால் அவன் நிச்சயமாக நன்னிலை அடைவான் என்பதை இத்திருக்குளத்து 24 படிக்கட்டுகள் குறிப்பால் உணர்த்துகின்றன. ஸ்ரீஅத்தி வரதர் எழுந்தருளிய காலத்தில் இத்தகைய தர்ப்பணத்திற்கு சாத்தியமில்லை என்றாலும் இத்திருக்குளத்து நீர் கலந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு வரதராஜ பிரசாதமாக அளித்து வந்தால் நிச்சயம் அத்தகைய பண்பாளருடைய 24 தலைமுறைகளும் நன்னிலை அடைவதுடன் அந்த பக்தரும் செழித்து வாழ்வார் என்பதில் ஐயமில்லை. 40 வருடங்கள் இத்திருக்குளத்தில் பெருமாள் மறைந்து அருள்புரிவதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. ஒரு மனிதனுடைய பூரண ஆயுள் என்பது 120 வருடங்கள். இதை மூன்றால் வகுத்தால் கிடைப்பதே 40. இறைவன் ஒவ்வொரு மனிதனும் தன் குறையைத் தெரிந்து கொண்டு அதை நிவர்த்தி செய்வதற்காக மூன்று சந்தர்ப்பங்களை அளிக்கின்றான். சற்குருமார்கள் குறிப்பாக நமது சற்குரு இந்த மூன்று எண்ணிக்கையை பல அடியார்களின் குறைதீர்க்கும் பரம ஔஷதமாகவே கைக்கொண்டார்கள். நற்குணமின்றி தறிகெட்டு திரிந்த ஒரு மாணவனைத் திருத்துவதற்காக ஒரு பித்ரு மண்டல அடியார் நம் சற்குருவைத் தொடர்பு கொண்டபோது நம் சற்குரு, “அடியேன், ராயபுரம் அங்காளி அம்மன் கோயிலுக்குச் செல்வேன். அப்போது நீ அனுப்பும் மாணவன் வந்து அடியேனைப் பார்த்து திருந்தும் மார்கம் கேட்டால் அதை கொடுப்பதற்கு அடியேனுடைய குருநாதர் எப்போதும் தயாராக உள்ளார்,” என்று கூறினார். ஆனால், இந்தத் தகவலை நேரிடையாக பெறும் அளவிற்கு அந்த மாணவன் தயாராகவில்லை என்றாலும் தன்னுடைய புண்ணிய சக்தியை ஏராளமாக செலவு செய்து எப்படியோ அந்த மாணவனை அங்காளி கோயிலுக்கு அழைத்து வந்து விட்டார் அந்த பித்ரு தேவர். முதல் முறை சற்று தொலையில் இருந்து நம் சற்குருவைப் பார்த்த அந்த மாணவன் இவர் யாரோ என்ற நினைத்துச் சென்று விட்டான். மறுபடியும் அடுத்த வாரம் மீண்டும் பலமாக பிரயத்னம் செய்து அந்த மாணவனை அங்காளி கோயிலுக்கு வரச் செய்தார் அந்த பித்ரு தேவர். இந்த முறை அந்த மாணவன் இவர் என்னதான் செய்கிறார் என்று பார்ப்போமே என்று அருகில் வந்து பார்க்க நினைத்தபோது சகநண்பன் அழைக்கவே அவனுடன் சென்று விட்டான். மூன்றாம் முறையாக பலமான போராட்டத்திற்குப் பின் எப்படியோ அந்த மாணவன் தனியாக அங்காளி கோயிலுக்கு வரும்படி செய்து விட்டார் அந்த பித்ரு தேவர். இந்த முறை அவன் சற்குரு அருகே வந்து ஏதாவது பேசலாம் என்று நினைத்த அதே சமயம் எங்கிருந்தோ வந்த அவனுடைய நண்பன் (?!), வாடா அவசர வேலை இருக்கிறது, உன்னை எங்கெல்லாம் தேடுவது என்று அங்கலாய்த்துக் கொண்டு அவனை அழைத்துக் கொண்டு சென்று விட்டான். அவ்வளவுதான். சற்குரு தானளித்த மூன்று சந்தர்ப்பத்திற்கு மேல் மேற்கொண்டு சந்தர்ப்பம் அளிக்க முன்வரவில்லை. அந்த மாணவனின் வாழ்க்கை பின்னர் எப்படியெல்லாம் சீரழிந்தது என்பது வேறு கதை. இதே காரணம் ஒட்டியே அடியார்களின் குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு பெயர் வழங்கும்போதெல்லாம் நம் சற்குரு மூன்றே பெயர்கள்தான் வழங்குவார்.
ஸ்ரீசக்கரத்தாழ்வார்
ஸ்ரீவரதர் ஆலயம் காஞ்சிபுரம்
ஸ்ரீசக்கரத்தாழ்வார்
ஸ்ரீவரதர் ஆலயம் காஞ்சிபுரம்
ஸ்ரீஅத்தி வரதர் மகாத்மியத்தை ஒட்டி அனைத்து விதமான அன்னதானங்களை ஆராதனைகளை நிறைவேற்றலாம் என்றாலும் இவ்வருடம் குரு ஆண்டாக அமைவதால் குருவிற்கு பிடித்தமான மஞ்சள் நிற சாமந்தி (செவ்வந்தி) மலரால் அமையும் அர்ச்சனை சிறப்பே. மஞ்சள் நிற அரளி பூக்கள் போன்ற அனைத்து மணமுள்ள மலர்களையும் ஸ்ரீவரதராஜ பெருமாளுக்குச் சூட்டி மகிழலாம். எலுமிச்சை சாதம், மஞ்சள் நிற ரசகுல்லா, லட்டு, கேசரி போன்ற இனிப்புகளை தானமாக அளித்தல் சிறப்பாகும். 40 வருடங்கள் அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டு மக்களுக்காக தவம் இயற்றி வரும் ஸ்ரீவரதரை இனிப்பு சர்க்கரை சாகரத்தில் பள்ளி கொள்ளும் ரசகுல்லா தானம் அளித்து வரவேற்பது என்பது கிடைத்தற்கரிய பேறே. இந்த தான தர்மங்களில் எல்லாம் அமிர்தசரஸ் தீர்த்தத்தை சேர்த்துக் கொள்ளுதல் அரிதிலும் அரிய வாய்ப்பே. மூர்த்தி தீர்த்தம் தலம் என்பதை தரிசிக்கும் முறையாக சித்தர்கள் அருள்வது என்ன ? முதலில் சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்து, ஸ்ரீஅத்தி வரதர் பல யுகங்களாக பள்ளி கொண்டு தவமியற்றும் அமிர்தசரஸ் தீர்த்தத்தை சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்து தரிசனம் செய்து அடுத்ததாக ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனம் பெறுதலே ஸ்ரீஅத்தி வரதரின் வழிபாட்டு முறையாக சித்தர்கள் சிபாரிசு செய்கின்றனர். இப்போது உள்ள ஜனநெருக்கடியில் இவை அனைத்தும் சாத்தியமாகுமா என்று எண்ணுவோர் பலருண்டு. மனமிருந்தால் சித்தர்களின் அனுகிரகம் என்றும் கனியும் என்பது உண்மையே. சற்குரு அவர்கள் 1979ம் ஆண்டு ஸ்ரீஅத்தி வரதரை தரிசனம் செய்தபோது இம்முறையைத்தான் பின் பற்றினார்கள் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். 3 x 8 = 24 என்பதை உறுதி செய்வதாகவே அமிர்தசரஸ் திருக்குள படிக்கட்டுகள் அமைந்துள்ளன என்பது ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனத்தின் பின்னணியில் அமைந்துள்ள ஒரு சித்த இரகசியம் என்றாலும் மற்ற இரகசியங்கள் பெருமாளின் தரிசனத்தை தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்வதாலும் அன்னதான கைங்கர்யங்களை மேற்கொள்வதாலும் மட்டுமே அறிந்து புரிந்து பயன்பெற முடியும் என்பதே உண்மை. சற்குரு தனது 32வது வயதில் ஸ்ரீஅத்தி வரதரை தரிசனம் செய்து அதன் பலன்களை எல்லாம் உலகத்தவர்க்கு அர்ப்பணித்த இரகசியம் (வரதர் x 8) என்ற கோட்பாட்டில் புலனாகின்றது அல்லவா ? ஸ்ரீஅத்தி வரதரை தரிசனம் செய்யும் முன்னர் கிருஷ்ண பகவானின் திருக்கரங்களில் சக்கரத்தாழ்வாராகச் சுழன்ற நம் சற்குருவின் தரிசனமும் அனுமதியும் பெறுதல் முறைதானே ?
சீவரம் தரும் ஸ்ரீவரம் |
காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் மூர்த்தி மக்களின் நன்மைக்காக அமிர்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டார். இது மக்களின் நன்மைக்காக என்றாலும் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எதையும் கண்ணால் கண்டால்தான் அது மனதிற்கு ஆறுதல் தரும் என்ற காரணத்தால் பக்தர்கள் யாவரும் பெருமாளின் தரிசனம் காணாது மாளாத் துயரில் ஆழ்ந்தனர். இதை உணர்ந்த பெருமாள் பக்தர்களின் கனவில் தோன்றி பழைய சீவரம் திருத்தலத்தில் அருளும் பெருமாள் மூர்த்தியை காஞ்சிபுரம் திருத்தலத்தில் நிர்மாணித்து வழிபட்டு வருமாறு பணித்தார். இன்று பழைய சீவரம் என்று மக்களால் கொண்டாடப்படும் திருத்தலம் உண்மையில் பக்தர்களுக்கெல்லாம் ஸ்ரீ வரமாக, திருமாலின் திருமார்பில் நிரந்தரமாகக் குடி கொண்ட திருமகளின் திருவருள் கடாட்சத்தைப் பெற்றுத் தருகின்றது. திருமகள் பெருமாளின் நெஞ்சில் குடிகொண்டதால்தான் ஸ்ரீஅத்தி வரதர் திருமகளின் உருவத்தை வெளியில் பக்தர்களின் தரிசனத்திற்காக அளிக்காது திருமகளின் லட்சுமி கடாட்ச சக்திகளை மட்டுமே தன்னை தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அளிக்கின்றார் என்றால் வரதருக்கு இணை வரதரேதான். வரதர் என்றால் நிரந்தர லட்சுமி கடாட்ச சக்திகளை அனுகிரகமாக அளிப்பவர் என்று பொருள்.
பழைய சீவரம் காஞ்சிபுரம்
திருமகள் அருளும் லட்சுமி கடாட்ச சக்திகளை பூர்ணமாகப் பெற விழைவோர் திருமகள் ஒவ்வொரு வருடமும் குறித்த தேதியில் தன்னுடைய லட்சுமி கடாட்ச சக்திகளை புனருத்தாரணம் செய்து கொள்வதற்காக பழைய சீவரத்தில் பெருமாளை தரிசனம் செய்து வருகிறாள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த இரகசிய முகூர்த்த நேரத்தை பக்தர்கள் உணர முடியாது என்றாலும் எந்த அளவிற்கு தங்கள் தரிசன பலனை மற்றவர்களின் நன்மைக்காக அர்ப்பணிக்கின்றார்களோ அந்த அளவிற்கு லட்சுமி கடாட்ச சக்திகள் அவர்கள் வழிபாட்டில் பல்கிப் பெருகும் என்பது நிச்சயம். வளர்பிறை துவாதசி திதியில் பழைய சீவரம் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றி நெல்லிக்காய் ஊறுகாய் கலந்த தயிர் சாதத்தை பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் அளித்தல் சிறப்பாகும். ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் இங்கு அருள்புரியும் திருமகள் கடாட்சத்தைப் பெற்றே கனகதாரா தோத்திரத்தை பிரபஞ்சத்திற்கு அளித்தார். பலரும், “காசு, பணம், புகழ் என்பதுதானே லட்சுமி கடாட்சம். நான் அதற்கு அப்பாற்பட்ட பக்தியில் திளைக்கிறேன்,” என்றெல்லாம் கூறுவதுண்டு. உண்மையான பக்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரோ, “நான் ஒவ்வொரு வேளை உணவு ஏற்கும்போது கூட பெருமாளின் அனுகிரகத்தால்தான், லட்சுமி தேவியின் திருமகள் கடாட்சத்தால்தான் இந்த உணவை நான் உண்ண முடிகின்றது என்ற உண்மையை நினைத்து பெருமாளுக்கும் லட்சுமி தேவிக்கும் நன்றி கூறுவேன்,” என்பாராம். இதுவே உண்மையான லட்சுமி கடாட்சம். மனிதர்கள் ஒவ்வொரு நொடியும் உயிர் வாழ்வதே பெருமாளின் அனுகிரகமாக கிடைக்கும் லட்சுமி கடாட்ச சக்திகளால்தான் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த உறுதிப்பாட்டை அளிப்பதே ஸ்ரீஅத்தி வரதர் தரிசனம் ஆகும். சோதி, விளக்கு, சுடர் என்று அக்னிகளில் பலவகை உண்டு. இதில் பலாச சுடர் அக்னி என்ற சுடர் சக்தியாகத் திகழ்வதே காஞ்சி திருத்தலத்தில் அருளும் ஸ்ரீசக்கரத்தாழ்வார் அருளும் அனுகிரக சக்தியாகும். இந்தச் சுடர் மூன்று அக்னி ஜ்வாலைகளாகப் பிரிந்து அருளும் தன்மை சாதாரண பக்தர்களும் உணரக் கூடிய குருவருள் தத்துவத்துடன் பொலிவதே. அக்னிகளில் சுடர் என்பதே இறைவனின் அனுகிரகத்தை பரிபூரணமாக அருளும் தன்மை உடையது என்பதை, “தோளா முத்தச் சுடரே,” என்ற மணியான வார்த்தைகள் புலப்படுத்தும்.
பட்ட மரமும் பலாச மரமாகுமே
லட்சுமி கரம் பட்டால் ...
பலாச பூக்கள் என்பதை ஆங்கிலத்தில் forest fire என்று அழைப்பார்கள். தூரத்தில் இருந்து பார்த்தால் அக்னி பிழம்பாக பலாச பூக்கள் தோற்றமளிப்பதாக பொதுவாக கூறினாலும் பலாச பூக்கள் தன்னலம் சிறிதுமின்றி மற்றவர்களின் கர்ம வினைகளைக் களையும் தூதுவர்களாக அமைவதால் அவை இத்தகைய சிறப்புப் பெயருடன் பொலிகின்றன என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். ஒரு முறை துரியோதனன் பஞ்சபாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து எரித்து விடுவதற்காக திட்டம் தீட்டினான். பஞ்சபாண்டவர்கள் அந்த மாளிகைக்குச் செல்வதற்காகப் புறப்பட்டு விட்டார்கள். ஒற்றர்கள் மூலம் இந்த செய்தியை அறிந்தார் விதுரர். ஆனால், பஞ்சபாண்டவர்களை எச்சரிக்க அவருக்கு அவகாசம் கிட்டவில்லை. இது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து கொண்டே வந்த விதுரர் தர்மராஜரை வழியில் சந்தித்தார். விதுரரைப் பார்த்த தர்மராஜர் அவரை வணங்கி தாங்கள் மேற்கொள்ளும் பயணம் பற்றி விதுரரிடம் தெரிவித்து தன் சிற்றப்பாவான அவர் ஆசியை வேண்டினான். விதுரரும், “நல்ல காரியம் சென்று வாருங்கள். இக்காலத்தில் வனமெங்கும் பலாச பூக்கள் பூத்து நிறைந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்,” என்று கூறி பஞ்சபாண்டவர்களுக்கு விடையளித்தார். ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து பேசியவர் விதுரர். எனவே தன்னுடைய சிற்றப்பா தேவையில்லாமல் பலாச பூக்களைப் பற்றிக் குறிப்பிட மாட்டார் என்பதை உணர்ந்த தர்மராஜர் அது பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தார். முடிவில் தீயினால் தம்முடைய சகோதரர்களுக்கும் தாய்க்கும் ஏதோ ஆபத்து நிகழ இருக்கிறது என்பதை அவர் உணர்ந்து கொண்டு தான் அரக்கு மாளிகையில் தங்கியிருந்த காலத்தில் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு தன் சகோதரர்களையும் அருமைத் தாய் குந்தியையும் காப்பாற்றிய வரலாறு தாங்கள் அறிந்ததே. இத்தகைய அரிய பலாச சோதியுடன் திகழும் ஸ்ரீகாஞ்சி சக்கரத்தாழ்வரை தரிசனம் செய்து பின்னர் ஸ்ரீவரதராஜ பெருமாளை தரிசனம் செய்து பசு வெண்ணெய்யில் சர்க்கரை கலந்து ஏழைக் குழந்தைகளுக்கு அளித்தலால் இவ்வருடம் நிகழக் கூடிய அக்னியால் விளையும் ஆபத்துக்களிலிருந்து பக்தர்கள் காப்பாற்றப்படுவார்கள். சிறப்பாக அழுக்காறு என்னும் பொறாமைத் தீயால் விளையும் அக்னிக் குற்றங்கள் வெகுவாக இவ்வருடம் சமுதாயத்தைப் பாதிக்கும். இந்த கொடிய விளைவுகளிலிருந்து முதலில் பக்தர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளவும், மற்றவர்களிடம் விளையும் இந்த தீயிலிருந்து தங்கள் குடும்ப அங்கத்தினர்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் மேற்கூறிய வழிபாடு உறுதுணையாக நிற்கும.
திருநல்லம் திருத்தலம்
திருநல்லம் போன்ற திருத்தலங்களில் அமைந்த பலாச மரங்களுக்கு தங்கள் கையால் அரைத்த மஞ்சளைப் பூசி சுத்தமான குங்குமப் பொட்டிட்டு (குறைந்தது 18) குறைந்தது 18 முறை அம்மரங்களை வலம் வந்து வணங்குதலால் பெண்களும் ஆண்களும் தீ விபத்துக்களால் பாதிக்கப்பட மாட்டார்கள். தீ விபத்தில் காயம் அடைந்தோர் மேற்கூறிய வழிபாடுகளை நிறைவேற்றுதலால் தீப்புண் காயங்கள் தங்களுக்கு தாழ்வு மனப்பான்மையை உண்டாக்காமல் காப்பாற்றப்படுவார்கள். திருமணப் பொருத்தங்களின்போது யோனிப் பொருத்தம் சரியாகப் பார்க்காமல் இல்லற வாழ்வில் பல துன்பங்களைச் சந்திப்போரும் தொடர்ந்து நிறைவேற்றும் இத்தகைய வழிபாட்டால் பயனடைவார்கள். குறி சம்பந்தமான பிரச்னைகளிலிருந்தும் குறியை அடிப்படையாக உடைய கணக்குப் பாடங்களில் சிறந்த தேர்ச்சியை அளிப்பதும் இந்த உன்னத வழிபாடாகும். திருஅண்ணாமலை கார்த்திகை தீப அன்னதானத்தின்போது பிரிஞ்சி, தக்காளி சாதம், பொங்கல் போன்ற பலதரப்பட்ட உணவு வகைகளுடன் லட்டு, மைசூர் பாகு, பாதுஷா, மைதா கேக், ஜாங்கிரி, ஜிலேபி போன்ற பல இனிப்பு வகைகளும் கிரிவலம் வரும் அடியார்களுக்கு வழங்கப்படும். இந்த இனிப்புகளை முன்னரே அடியார்களே தயாரித்து விடுவார்கள். அவ்வாறு தயாரிக்கும்போது ஒவ்வொரு வகையிலும் சிலவற்றைத் தயாரித்து அதை ஸ்ரீரெங்கநாதருக்கும் மற்ற தெய்வ மூர்த்திகளுக்கும் நைவேத்யமாக அளித்த பின் அந்த இனிப்பு வகைகளின் தரம் குறித்து அடியார்கள் தெரிந்து கொள்வதற்காக அவற்றை சற்குருவிடம் சமர்ப்பணம் செய்வார்கள். சற்குருவோ அந்த இனிப்பு வகைகளைப் பார்த்து பெரும்பாலும், “நன்றாக இருக்கிறது, ராஜா, மற்ற இனிப்புகளையும் இதே போல் தயார் செய்யுங்கள், எல்லாம் கடவுள் கருணை,” என்று மிகவும் அன்புடன் தன்னுடைய ஒப்புதலை தெரிவிப்பார்களே தவிர அதில் ஒரு இனிப்பையும் தொட்டுப் பார்த்தது கூட கிடையாது. இவ்வாறு அனைத்தையும் மற்றவர்களுக்காக அளிப்பதே பலாச சுவை. அந்தப் பலாச சுவையை பரிபூரணமாக அளித்தவர் நம் சற்குரு.
நடன கோலமா நளின கோலமா ? |
உலகளந்த பெருமாளாய் இந்த உலகில் எழுந்தருளிய வாமன அவதாரத்தை ஒட்டி எழுந்த வைபவங்கள் பல உண்டு. காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் பெருமாளின் இந்த மூன்று எழுந்தருளிய கோலங்களையும் தரிசனம் செய்ய அடியார்கள் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும் ? சிற்ப வடிவில் நின்ற கோலத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாளின் தரிசனத்தை பக்தர்கள் பெற முடியும். பள்ளி கொண்ட பெருமாள் மூர்த்தியாக அனந்தசரஸ் தீர்த்தத்தில் ஸ்ரீவரதபெருமாள் மூர்த்தியாக 40 வருடங்களுக்கு ஒரு முறையே தரிசனம் தரும் மூர்த்தியாக அமைந்துள்ளார். ஸ்ரீஅத்தி வரதர் 24 நாட்களுக்கோ அல்லது குறைந்த காலத்திலோ சயனக் கோலத்திலும் அடியார்களுக்குக் காட்சி நல்குகிறார். காஞ்சி திருத்தலத்தில் சயனக் கோலத்தில் எழுந்தருளும் பெருமாள் மூர்த்திக்கும் நின்ற கோலத்தில் எழுந்தருளிய பெருமாள் மூர்த்திக்கும் சப்த ஸ்வர தேவதைகள் சதா சர்வ காலமும் கீர்த்தனைகளைப் பாடி தங்கள் இன்னிசையால் மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. இந்த இசையைக் கேட்கும் பழைய சீவரம் பெருமாள் மூர்த்தியும் அங்கிருந்து நடந்தே வந்து இந்த இசையைக் கேட்பதால் அவர் நடந்த கோல பெருமாள் மூர்த்தியாக, ஆக மூன்று நிலைகளில் அருள்புரியும் அற்புத பெருமாள் தலமாக காஞ்சிபுரம் அமைவதே அரிதிலும் அரிய நடன கோல நளின கோல பெருமாள் மூர்த்திகளின் சங்கமமாகத் திகழ்கின்றது.
இசைத் தூண்கள்
காஞ்சி வரதர் திருத்தலம்
சப்த ஸ்வர தேவதைகளின் ஆதிக்கம் திகழ்வதால் பழைய சீவரம் திருத்தலத்தின் ராஜ கோபுரமும் இந்த சப்த ஸ்வர தேவதைகள் எழுந்தருளும் வண்ணமாக ஏழு கலசங்களுடன் திகழ்கின்றது. காஞ்சி பெருமாள் தலத்தில் இசைக் கச்சேரிகளை ஏற்பாடு செய்வதால் சப்த ஸ்வர தேவதைகளின் ஆசியையும் மூன்று நிலைகளில் உள்ள பெருமாள் மூர்த்திகளின் அனுகிரகத்தையும் ஒருங்கே பெறலாம். குறிப்பாக ஆனந்தபைரவி ராகத்தில் அமைந்த இறை கீர்த்தனைகளை இசைத்தல் பெருமாளுக்கு ப்ரீதி அளிக்கும். “பலுகே பங்காரமாய ...” என்ற பக்தராமதாசர் பாடி அனுபவித்த கீர்த்தனைப் பாடலை பக்தியுடன் ஆனந்தபைரவியில் இசைத்தால் நடந்து வரும் ஸ்ரீவரதராஜர் ஓடி வருவாராம். இவ்வாறு பக்திக்கு, உண்மையான பக்திக்கு மயங்கும் பெருமாளை இத்தலத்தில் தரிசனம் செய்து பயன் பெற்றோர் ஏராளம், ஏராளம். பக்த ராமதாசர் சிறையில் வாடியபோது அவர் துயர் துடைக்க லட்சுமி தேவி முன் வந்து பெருமாள் மூர்த்தியிடம் ராமதாஸரை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டாளாம். பெருமாள் மூர்த்தி நகைத்து, “தாயே, என்னிடம் இந்த வில்லைத் தவிர வேறு செல்வம் எதுவும் இல்லையே. அதுவும் (வில்லும்) துருப் பிடித்து விட்டது. இதற்கு எவன் பணம் தருவான்,” என்று ஒரு பொய் நாடகத்தை நடித்துக் காட்டினாராம். லட்சுமி தேவியும் வேறு வழியின்றி தன் கடாட்ச சக்திகளை தங்க நாணயங்களாக பெருமாளிடம் கொடுத்து அனுப்பினாளாம். பெருமாள் ராமதாசரை சிறையிட்ட சக்கரவர்த்தியைப் பார்த்தபோது ராமதாசரின் கீர்த்தனைப் பாடலால் பெருமாளின் கையிலிருந்த பையில் மேலும் தங்க நாணயங்கள் பெருகி பெருமாள் மூர்த்தியே அதைச் சுமக்க முடியாத அளவிற்கு எடை கூடி விட்டதால் அதைச் சுமந்து வரும்படி தன்னுடன் வந்த இளைய பெருமாளான லட்சுமண சுவாமியைக் கேட்டுக் கொண்டாராம். இவ்வாறு நிகழ்ச்சி தொடர்கிறது என்பது ஒரு புறம் இருக்க, ஆனந்த பைரவி ராகத்தில் பாடினால் அந்த கீர்த்தனைகளின் மகிமையால் பெருமாள் மூர்த்தியே சுமக்க முடியாத செல்வப் பெருக்கை அது அளிக்கும் என்பதே பக்தர்கள் அறிந்து கொள்ள வேண்டிய சுவையான செய்தி. பலுகே பங்காரமாய என்றால் பெருமாளின் வார்த்தைகளே தங்கத்தை வர்ஷிக்கும் என்று பொருள். பெருமாளின் வார்த்தைகளே சுவர்ணத்தை மழையாகப் பொழியும் என்றால் அத்தி வரதரின் தரிசனம் என்னென்ன மாயைகளை எல்லாம் செய்யும். அதை அந்த அத்தி வரதரே அறிவார். இப்போது சொல்லுங்கள் பெருமாள் தங்கமா, லட்சுமி தங்கமா, பெருமாளின் வார்த்தைகள் தங்கமா இல்லை பக்தனின் பக்திதான் தங்கமா ?
அத்தி ராஜனின் ஆனந்த பவனி |
ஸ்ரீவரதராஜ பெருமாள் காஞ்சிபுரத்தில் அத்தி என்னும் குன்றில் ஏறி அனைவருக்கும் அருள்வழங்குகிறார் என்பது நீங்கள் அறிந்ததே. அத்தி என்பது யானையையும் குறிக்கும் அத்தி மரத்தையும் குறிக்கும். அத்தி, அரசு, ஆல் என்பவை ஒரே இனத்தைச் சேர்ந்தவையாக இருப்பதால் ஊர்த்வ மூலம் என்று சிருஷ்டி ரகசியத்தை ஆல மரத்தின் மூலம் பகவானே பகவத் கீதையில் விளக்குகின்றார். காஞ்சிபுரத்தில் அத்தியை வாகனமாகப் புனைந்து அரச மரத் தென்றலில் அறிதுயில் யோகத்தில் பள்ளி கொண்ட ஸ்ரீவரதராஜ பெருமாளின் திருத்தலத்தில் ஆல மர சக்திகளும் வேரூன்றி இருக்கும் அல்லவா ? நிச்சயமாக உங்கள் ஊஹம் சரியே. அத்தி வரதர் ஆல மர நிழலாய் அனைவருக்கும் அருள் வழங்கும் தன்மையை நேரில் அனுபவித்தே புரிந்து கொள்ள முடியும். எத்தகைய கடுமையான கோடையிலும் குளிர்ச்சியை ஊட்டும் ஆல மர நிழலின் அருமையையும், அதை பக்தர்களுக்காக வர்ஷிக்கும் அத்தி வரதரின் பெருமையையும் அனுபவிக்க உறுதுணையாக நிற்பதே காஞ்சியில் நாம் பெறும் அத்தி வரதரின் ஆனந்த தரிசனம்.
நாம் காணும் உலகம் வேறு, யானைகள், பறவைகள், எறும்புகள், தாவரங்கள் காணும் உலகம் வேறு, இறைவனின் தரிசனமோ சொல் பொருள் கடந்தது. இவ்வாறு ஒவ்வொரு ஜீவ ராசியும் இவ்வுலகத்தைக் காணும் கோணத்தை பிரதிபலிப்பதாகவே காஞ்சி வரதர் திருத்தலத்தில் அமைந்துள்ள வெவ்வேறு சாளரங்கள் தெளிவுபடுத்துகின்றன. மிருகங்களின் பறவைகளின் மொழியைக் கற்றுக் கொள்ளும் முன்னால் விக்ரமாதித்த ராஜா இவ்வாறு ஒவ்வொரு ஜீவ ராசியும் இந்த உலகத்தைக் காணும் வண்ணத்தில் தானும் இவ்வுலகைக் கண்டு இந்த பிரபஞ்சம் பற்றிய இரகசிய அறிவைப் பெருக்கிக் கொண்டான். இவ்வாறு மற்ற ஜீவ ராசிகளின் குறை தீர்க்க எண்ணும் அடியார்கள் இந்தச் சாளரங்களை தரிசனம் செய்து அவற்றின் மூலம் பெருமாள் கோபுரத்தை தரிசனம் செய்து வந்தால் ஒரு புதுக் கோணத்தில் ஜீவன்களின் துன்பங்களைப் பார்த்து அவைகளுக்கு, அவர்களுக்கு தன்னால் இயன்ற சேவையைச் செய்ய முடியும். சுழுமுனை சுவாசத்தில் மட்டுமே இத்தகைய யோகம் கைகூடுவதால் சுழுமுனை சுவாசத்தில் எப்போதும் திகழும் யானைகள் இந்த யோகத்தில் வல்லமை படைத்தவையாகத் திகழ்கின்றன. அத்தி வரதரின் தரிசனம் சிறப்பாக அமையும் இந்நாட்களில் யானைகளுக்கு அவை விரும்பும் கவளச் சோறு, கரும்பு, வாழைப் பழம், தென்னங்குருத்து போன்ற அனைத்து வகை இனிப்புப் பண்டங்களையும் பணியாரங்களையும் அளித்தல் இவ்வருடம் பக்தர்கள் விசேஷமாகப் பெறும் சந்தர்ப்பமாகும். இந்த சந்தர்ப்பத்தை பக்தர்கள் நழுவ விடாது எந்த திருத்தலத்தில் உள்ள யானைகளுக்கு வேண்டுமானாலும் அவை விரும்பும் உணவை வயிறார அளிப்பதால் அத்தி வரதரின் ஆனந்த தரிசன சக்திகளை இருந்த இடத்திலிருந்தே பெற சித்தர்கள் வழிவகுக்கிறார்கள். இந்த பவனி ரகசியத்தை அத்தி பெருமாளின் திருஉலா இரகசியமாக சித்தர்கள் உரைக்கிறார்கள்.
“மரங்களில் நான் அஸ்வதம்”
காஞ்சி வரதர் திருத்தலம்
“புருஷன் இல்லாமல் அத்தி மரத்தை வலம் வருவதால் மட்டும் பிள்ளையைப் பெற முடியுமா ?” என்று சிலர் விதண்டாவதமாக கூறுவதுண்டு. சித்தர்களோ எதையும் இறைவன் சாதிப்பான் என்பதற்கு உதாரணமாக காஞ்சியில் திகழும் அரச மரத்தை சுட்டிக் காண்பிக்கிறார்கள். அரசு என்றால் மனிதர்களின் உயர்ந்தவனான அரச குலத்தைச் சேர்ந்தவன் என்று பொருள். சாதாரண மனிதர்கள் என்னதான் உயர்ந்த செயல்களைச் செய்தாலும் அவர்கள் அரசாளும் தகுதியைப் பெறுவதில்லை என்பதை மகாபாரதத்தில் விதுரரின் வரலாறு மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். மன்னர்களுக்கெல்லாம் மாமன்னராகத் திகழ்ந்த ராமகிருஷ்ண பரமஹம்சரின் தாய் தந்தையர் இந்த காஞ்சி அரசமரத்தை ஒரு பிறவியில் வலம் வந்து வணங்கியே புருஷ சம்பந்தம் இன்றி இறைவன் திருவருளால் மட்டுமே குழந்தைப் பேற்றை அடைந்தனர். ராமகிருஷ்ணரின் இயற்பெயரான கதாதரன் என்பதே கயையில் எழுந்தருளிய பெருமாளின் நாமம்தானே. இவ்வாறு தங்கள் சந்ததி ராஜ வம்சத்தைப் போல் செழித்து வளர வேண்டும் என்ற நியாயமான விருப்பம் உடைய தம்பதியர் இந்த ராஜவிருட்சத்தை பத்தின் மடங்காக (10, 20, 1000 ...) வலம் வந்து வணங்குவதால், சிறப்பாக சூரிய ஹோரை நேரத்தில் இத்தகைய வழிபாடுகளை இயற்றுவதால் நற்பலன் பெறுவார்கள். தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானமாக அளித்தலும் சிறப்பே. ஒளி படர் அரசு என்ற திருநாமத்துடன் திகழும் அரச மரம் இது ஒன்றே என்பதால் மற்ற எந்த திருத்தலத்தில் உள்ள அரச மரங்களை வலம் வருவதாலும், எத்தனை முறை அம்மரங்களை வலம் வருவதாலும் ஒளி படர் அரசு அளிக்கும் தெய்வீக ராஜ சக்திகளை அந்த மரங்கள் அளிக்க முடியாது என்பது உண்மையே. ராஜ வம்சமாக தங்கள் சந்ததி தழைப்பது மட்டும் அல்லாமல் அது இத்தல விருட்சம் போல் பல பல தலைமுறைகளுக்கும் விரிந்து வேரூன்றி பரவும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சிறப்பாகும். எனவேதான் அத்தி வரதன் ஆனந்த ராஜன் என்று சித்தர்களால் போற்றப்படுகிறார். காஞ்சி அரச மரத்தை வலம் வரும்போது உதிர்ந்த பல இலைகளை நாம் அறிந்தோ அறியாமலோ மிதித்து விடும் சந்தர்ப்பம் உள்ளதால் அத்தகைய இலைகளைக் கையில் எடுத்து, “வேல் முருகா மால் மருகா வடிவேல் அழகா சரணம் சரணம் சரணம்,” என்று ஓதி அரச மரத்தடியில் மற்றவர்கள் கால் படாமல் அந்த இலைகளைச் சமர்ப்பித்து விட வேண்டும். அனைவரும் இவ்விருட்சத்தை வலம் வந்து வணங்கினால் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ஆகி விடுவார்களே என்ற எண்ணம் உங்களுக்கு வரலாம் அல்லவா ? அந்த மன்னர்களின் காலடி பட்டு மிதிபடும் அரச இலைகள் ராஜ புண்ணியத்தில் ஒரு பகுதியை மாற்றி விடும் என்பதே சித்தர்கள் உரைக்கும் இரகசியம். இந்த அஸ்வத்த சமர்ப்பணம் பெருகி வரும் உஷ்ணத்தால் தோன்றும் வியாதிகளுக்கு ஓர் நிவாரணம் என்பதும் உண்மையே. “காஞ்சி அஸ்வத விருட்சத்தை மட்டும் பக்தர்கள் முறையாக பயன்படுத்தினால் டாக்டர்கள் எல்லோரும் (வேலை இல்லாமல்) காலாட்டிக் கொண்டு அமர்ந்திருப்பார்கள்,” என்று விளையாட்டாகக் கூறுவார் நம் சற்குரு. காக்கை வலிப்பு, குதிரை வலிப்பு போன்ற வலிப்பு நோய்களுக்கும், மிகுந்த சப்தத்துடன் குறட்டை விட்டு உறங்குபவர்களும் இத்தல விருட்சத்தை முறையாக வலம் வந்து வணங்குவதால் நற்பலன் பெறுவார்கள். ‘‘வலிப்பு நோய்கள் வானில் மறையுமே,” என்று காஞ்சி அரச மர சிறப்பைப் புகழ்ந்து பாடுகிறார் ஸ்ரீகூரத்தாழ்வார்.
ஸ்ரீஹயக்ரீவ பெருமாள்
காஞ்சி வரதர் திருத்தலம்
தம்பதிகள் கூறாய்ப் பிரியாமல் கூடி வாழ அருள்வதே ஸ்ரீகூரத்தாழ்வார் வழிபாடாகும். வியாதிகளின் தன்மையை கூறு கூறாக ஆராயும் (systemic and systematic analysis) தகுதி படைத்தவரே ஸ்ரீகூரத்தாழ்வார். காஞ்சி பெருமாள் தல விருட்சத்திற்கு மட்டுமல்லாமல் எல்லா திருத்தல விருட்சங்களுக்கும் இத்தகைய வழிபாடு பொருந்தும். “கூரன் கூற்றிற்கு கூவிளநாதனும் செவி சாய்ப்பானே,” என்று ஸ்ரீகூரத்தாழ்வார் பெருமை பற்றிக் குறிப்பிடுவார் ஸ்ரீஅகத்திய பிரான். ஆழ்ந்த பல தத்துவக் கருத்துக்கள் அடங்கியது இந்தக் குரு உரை. மேலோட்டமாக கூவிளநாதன் என்றால் கூவிளம் என்ற வில்வத்தில் உறையும் லட்சுமி தேவிக்கு நாயகனான பெருமாள் மூர்த்தி ஸ்ரீகூரத்தாழ்வார் முக்தி பெற்ற நாளில் மாங்கல்யங்களை தானமாக அளிப்பதால் குடும்ப ஒற்றுமை பெருகும் என்பதும் கணவன் அல்லது மனைவி வேறுபாட்டால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்பதும் பொருள். இந்த சித்த உரையை ஒட்டி நம் ஆஸ்ரமம் சார்பில் ஸ்ரீரங்கம் ஸ்ரீகூரத்தாழ்வார் சன்னதியில் மாங்கல்ய தானம் இயற்றி பல குடும்பங்களின் ஒற்றுமைக்கு வழிவகுத்த சற்குரு நாதரின் வழிகாட்டுதல் பற்றி ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இத்தல விருட்சத்தை வலம் வரும்போது ஸ்ரீகூரத்தாழ்வார் இயற்றிய ஸ்ரீஸ்தவம் துதிகளை உரத்த குரலில் ஓதிக் கொண்டே வலம் வருதல் சிறப்பாகும். அறியாதோர் நாராயணா நாராயணா நாராயணா என்று ஓதிக் கொண்டும் வலம் வரலாம். ஒரு சாரார் கூரத்தாழ்வான் என்று கூறுவதே சரி என்றும் வலியுறுத்துவது உண்டு. எத்தகைய விவாதத்திற்கும் சித்தர்களின் உரையே இறுதி முடிவு என்பதால் அதை அறிந்து கொள்ள நம் சற்குருவை நாடினோம்.
நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “நீ சகஸ்ரநாமம் ஓதிக் கொண்டு பெருமாளை வலம் வருகின்றாயா அல்லது அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டு பெருமாளைச் சுற்றி வருகின்றாயா என்பது முக்கியமல்ல, நீ உன்னுடைய மனைவியை நினைத்துக் கொண்டு வலம் வருகின்றாயா அல்லது பிறர் உடைமையை நினைத்துக் கொண்டு சுற்றி வருகின்றாயா என்பதே முக்கியம்,” என்று கூறினார். மற்றவர் மனைவி என்று கூறாமல் அயலார் உடைமை என்று உதாரணத்திற்குக் கூட பிறர் மனைவியைப் பற்றிய எண்ணத்தை வராமல் தடுப்பதே சற்குருவின் அழகு, பேரழகு. எனவே ஆழ்வார்களைப் பற்றிய விவாதம் என்பது மட்டுமல்லாமல் இறைவன், இறை அடியார்களைப் பற்றிய எந்த குழப்பத்திற்கும் சற்குருவின் இந்த பதில் விடையாக அமையும் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டியது. இவ்வாறு பிறர் உடைமைகளையே அனுபவித்த மனது திடீரென ஒரே நாளில் மாறி விடுமா என்ன ? நிச்சயமாக மாறாது. ஆனால் காஞ்சி வரதர் திருத்தலத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடும் அதைத் தொடர்ந்து நாம் நிறைவேற்றும் அன்னதானம் போன்ற இறைப் பணிகளும் நிச்சயம் நம் வாழ்வில் ஒரு நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மையே. காரணம் இதில் நம்முடைய பங்கு என்பது ஏதோ ஓரளவில் இருந்தாலும் நமக்காக 40 வருடங்கள் அமிர்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கி நம் நல்வாழ்விற்காக கடுந்தவம் இயற்றிய அத்தி வரதரின் முயற்சி பலிக்காமல் போகுமா என்ன ? இந்த ஆண்டு குரு ஆண்டாக அமைவதால் 12 ஆழ்வார்களின் பாசுரங்களை ஓதுதல் குரு பக்தியை வளர்க்கும் உன்னத வழிபாடாக மலரும் என்றாலும் காஞ்சியில் தோன்றிய ஸ்ரீகூரத்தாழ்வாரின் வழிபாடு இங்கு சிறப்பு பெறுவது மேலும் சிறப்புதானே ? தன் குருநாதருக்காகவே தன் இரு கண்களை இழந்த ஆழ்வார் பெம்மான் தன் குருநாதரின் உத்தரவின் பேரிலேயே அக்கண்களை இத்தலத்தில் மீண்டும் பெற்றார் என்பதே சிறப்பாகும். அத்தி வரதரையும் ஆனந்த ராஜனையும் இரு கண்களாக போற்றி வழிபட்டவரே ஸ்ரீகூரத்தாழ்வார். எனவே ஸ்ரீகூரத்தாழ்வாரின் பதிகங்களை ஓதி இத்தல மரத்தை வலம் வருதலால் வற்றாத செல்வம் மட்டுமல்ல சிறந்த கண் பார்வை என்ற செல்வத்தையும் அவை நல்கும். இழந்த பார்வையையும் மீட்டுத் தரும் சக்தி பெற்றவையே கூரன் பதிகங்கள். சித்தர்கள் எவ்வளவு வலியுறுத்தினாலும் மாயை என்ற மோகத்தில் ஆழ்ந்து பலரும் காவியை அணிந்து அதன் புனிதத்திற்கு மாசு கற்பித்த தங்கள் தவறான செய்கைக்கு வருந்தி மீண்டும் காவி அணிவதில்லை என்று வைராக்யம் பூண்டு இத்தல விருட்சத்தை வலம் வருதலால் தன் குருநாதர் அளித்த வரத்தால் அத்தகைய கடுமையான தவறுகளுக்கும் பிராயசித்தம் நல்கும் வள்ளலாகத் திகழ்பவரே ஸ்ரீகூரத்தாழ்வார் மகாபிரபு.
எங்கும் குசா எதிலும் குசா |
மூர்த்தி தீர்த்தம் தலம் முறையாக தரிசிப்போர்க்கு சற்குருவும் வாய்க்கும் பராபரமே என்ற தாயுமானவர் வாக்கிற்கு இணங்க மூர்த்தி தீர்த்தம் தலம் இம்மூன்றுமே குசா சக்திகளுடன் பொலிவதே காஞ்சி வரதர் திருத்தல மகிமையாகும். அமிர்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கி தற்போது பக்தர்களுக்கு ஆனந்த பரவசத்தை ஊட்டும் அத்தி வரதர் ஒன்பது அடி உயரத்தில் அருள் வழங்குபவர். ஒன்பதின் குசா ஒன்பதே. அமிர்தசரஸ் தீர்த்தத்தின் படிக்கட்டுகள் மொத்தம் 24. அவை மூன்றின் குசாவான ஆறுதானே. நான்கு பக்கமும் உள்ள படிக்கட்டுகளின் எண்ணிக்கை 96. அவையும் மூன்றின் குசா சக்திகளைப் பிரதிபலிப்பவையே. பெருமாளை தரிசிக்க செல்லும் படிக்கட்டுகளும் 24 என்ற குசா எண் கொண்டு பொலிபவையே. ராஜகோபுரத்தின் உயரமோ 96 அடி என்ற குசா எழுச்சி. காஞ்சி திருத்தலம் மூன்று எழுத்துக்களில் பொலிந்து காஞ்சிபுரம் என்ற ஆறு எழுத்துக்களுடன் பொலியும் குசா திருத்தலமாக ஒளி வீசுகிறது. கூரத்தாழ்வார் முக்தி பெற்றதும் குசா எண்ணான 123 வயதில்தான் என்பதும் இத்தலத்திற்கு அணி சேர்க்கும் சிறப்பாகும். ஸ்ரீராமானுஜர் வைகுண்ட பதவி பெற்றபோது அவருடைய வயது 120. அவருடைய அருமைச் சீடர் ஸ்ரீகூரத்தாழ்வாரோ 123 வயதில் வைகுண்ட பிராப்தி அடைந்து தன்னுடைய குருநாதருக்காகக் காத்திருந்தார். இவ்வாறு சற்குருவின் முக்தி வயதிற்கு தகுந்த குசா எண் சக்தியைப் பெற்று வைகுண்ட பதவியைப் பெற்றவரே ஸ்ரீகூரத்தாழ்வார் என்றால் இந்த குசா பிராப்திக்கு சான்றாக இருப்பது அத்தி வரதர் திருத்தலம் அல்லவா ? ஞானம், ஆனந்தம், தெய்வ குணம், நிர்மலம், ஸ்படிகம் போன்ற சிந்தனை, அனைத்து வித்தைகளுக்கும் ஆதாரம் போன்ற ஆறு அபூர்வ குணங்களை உடையவராகவே, அவற்றை அருள்வதாகவே ஸ்ரீஹயக்ரீவர் என்னும் ஆறெழுத்து மூர்த்தி அருள்கின்றார் என்பதையே, ஞானானந்த மயம் தேவம் நிர்மலம் ஸ்படிகா க்ருதிம் ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே என்ற ஹயக்ரீவர் தோத்திரம் உரைக்கின்றது. இவ்வாறு எங்கு தொட்டாலும் குசா சக்திகள் பொலிவதே காஞ்சி வரதர் திருத்தலமாகும். இவ்வாறு மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற மூன்றுமே குசா சக்திகளுடன் பொலிவது என்றால் நாம் எந்த அளவிற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த குரு ஆண்டில் தரிசிக்க வேண்டிய தலம் அதன் குசா சக்திகளுடன் பொலியும் அத்தி வரத தலத்தை விடச் சிறந்த தலம் ஏதேனும் ஒன்று இருக்க முடியுமா என்ன ?
ஸ்ரீகாஞ்சி வரதர் திருத்தலம்
Nascent oxygen என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். மிகவும் சக்தி வாய்ந்த பிராணவாயு இது. இறை சக்தியின் தூசியின் தூசியான பிராண வாயுவே தோன்றியவுடன் அதீத சக்தியுடன் விளங்குகிறது. அதே போல பிறந்த குழந்தை மிகுந்த சக்தியுடன் விளங்குகிறது. அதன் சக்தி, உடல் பலம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது என்பதே உண்மை. பத்து மாத கர்ப்ப வாசத்தில் தோன்றும் குழந்தையே அதீத சக்தியுடன திகழ்கின்றது என்றால் 40 வருடம் அமிர்தசரஸ் தீர்த்தத்தில் மூழ்கி தவம் இயற்றிய அத்தி வரதர் வெளிவரும்போது எத்தகைய தெய்வீக சக்திகளை வெளிப்படுத்துவார். இந்த அதீத சக்திகளை சாதாரண மனிதர்களால் தாங்க முடியாது என்பதால் நவநாத சித்தர்கள், நித்திய சூரிகள், மகான்கள், யோகிகள் போன்றோர் ஸ்ரீஅத்தி வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து பெருமாளின் தெய்வீக சக்திகளை தாங்கள் ஏற்று அதை மற்றவர்களுக்கு விநியோகம் செய்யும் திருப்பணியை ஆற்றுகிறார்கள். இது போன்று 1979ம் வருடம் ஸ்ரீஅத்தி வரதராஜ பெருமாளைத் தரிசனம் செய்து பெருமாளின் அனுகிரக சக்திகளை இந்த பிரபஞ்சம் எங்கும் வர்ஷித்த நம் சற்குருவின் மகாத்மியம் பற்றி திருச்சுழி மகிமையில் தெளிவுபடுத்தி இருந்தோம் அல்லவா ? அது போல் இந்த அத்தி வரதர் மகாத்மியத்திலும் ஸ்ரீஅத்தி வரதர் எழுந்தருளிய பவ மார்த்தாண்ட முகூர்த்த நேரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையே இந்த வெப் தளத்தில் நீங்கள் தரிசனம் செய்கின்றீர்கள் என்பதே சற்குரு நமக்கு அருளிய கருணை கடாட்சம். மார்த்தாண்டம் என்றால் சூரியன். பவ மார்த்தாண்டம் என்றால் சூரிய பகவானின் உதய நேரம் என்று பொருள். ஆனால் இங்கு நாம் கூறும் பவ மார்த்தாண்ட சக்திகள் ஸ்ரீஅத்தி வரதராஜ பெருமாளை நவநாத சித்தர்களும் நித்திய சூரிகளும் தரிசனம் செய்து அதை மக்கள் ஏற்கும் நிலையில் அளிக்கும் முகூர்த்த நேரமாகும். உண்மையில் சூரியன் நகர்வதில்லை, பூமியே சூரியனை சுற்றி வருகிறது என்று கூறுகிறோம். இந்த விஞ்ஞானக் கூற்றும் ஓரளவு உண்மையே தவிர அது முழுமையான சம்பவத்தை உணர்த்த முடியாது. சூரியன் சுழல்கின்றது, நகர்கின்றது என்பதே மெய் ஞான விளக்கமாகும். சூரியன் சுழல்கின்றது என்றால் சூரிய நாராயணப் பெருமாளான ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனப் பாங்கு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். இவ்வாறு சுழலும் அத்தி வரதரின் தரிசனத்தை அப்படியே அளித்தால் அதன் பலாபலன்களை இந்த மனித குலம் நம்புமா, பயன் பெறுமா ? அதனால் ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனத்தை மக்கள், சாதாரண பக்தர்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் அளிக்கும் நேரமே பவ மார்த்தாண்டம் என்ற புனிதத்திலும் புனிதமான சித்தர்கள் கூட்டுவிக்கும் அமிர்த நேரமாகும்.
பவமார்த்தாண்ட சக்திகளை வர்ஷிக்கும்
மாதா அமிர்தானந்த மயி
இந்த அமிர்த நேரத்தில் இறைவனைத் தவிர, நற்காரியங்களைத் தவிர, புனிதமான எண்ணங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் நினைக்க முடியாது என்பதால்தான் தன்னுடன் தரிசனத்திற்காக 1979ம் ஆண்டில் வந்திருந்த அடியார்களிடம், “நீங்கள் எதை வேண்டுமானாலும் அத்தி வரதரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள்,” என்று கூறினார் நம் சற்குரு என்பதை நாம் நினைவு கூற வேண்டும். சற்குருவின் தூல உடல் மறைந்து விட்டதால் ஸ்ரீஅத்தி வரதர் அளிக்கும் பவமார்த்தாண்ட சக்திகளை தற்போதுள்ள அடியார்கள் பெற முடியுமா என்ற சந்தேகம் பலருக்கும் தோன்றுவது இயற்கையே. ஆனால் நம்பினோர்க்கு நடராஜன் என்பது உண்மையே என்று நம் சற்குருவை நம்பி வாழ்வோர்க்கு நிச்சயம் பவமார்த்தாண்ட சக்திகள் ஏதோ ஒரு வடிவில், அவர்களே எதிர்பாராத மார்கத்தில் வந்தடையும் என்பதே சற்குருவின் கருணை மகாத்மியம். அன்னை இங்குள்ள புகைப்படத்தில் கைகளை அமைத்திருக்கும் கோலமே பவமார்த்தாண்ட சக்திகளை இந்த பிரபஞ்சத்திற்கு தாரை வார்க்கும் தசக்ரந்தி ஞான முத்திரையாகும். பொதுவாக 100 வருட ஹட யோகப் பயிற்சியில் சிறந்து விளங்குபவர்களே இத்தகைய முத்திரையில் திளைக்க முடியும் என்பதே சித்தர்கள் அளிக்கும் விளக்கமாகும். அமெரிக்கா என்ற பூலோகத்தின் ஒரு மூலையில் இருந்து பூலோகத்தின் மறு மூலையான இந்தியாவில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீஅத்தி வரதர் அருளும் பவ மார்த்தாண்ட சக்திகளை ஒரே நொடியில் கிரகித்து பிரபஞ்சத்திற்கு அர்ப்பணிக்கின்றார்கள் என்றால் கொடுத்து வைத்தது இந்திய மண்ணா இல்லை அமெரிக்க மண்ணா, சிந்தியுங்கள் சிந்தியுங்கள். மாதா பவமார்த்தாண்ட சக்திகளை வர்ஷிப்பது என்பது உயர்ந்த சித்த நிலையில் மட்டுமே கிரகிக்கக் கூடிய இரகசியம் என்றாலும் அவர் பவ மார்த்தாண்ட சக்திகளையே கையாளுகிறார் என்பதை மாதாவைச் சுற்றி (அருகிலுள்ள குழந்தை உட்பட) சூரிய பகவானுக்கு உரிய ஆரஞ்சு வண்ண சக்திகள் பிரதிபலிப்பதை சாதாரண மனிதக் கண்களும் உணர்ந்து கொள்ளலாமே ? மாணிக்கங்களில் அருவி மாணிக்கம், கடல் மாணிக்கம், பாறை மாணிக்கம் என்று பல வகை உண்டு. காஞ்சி ஸ்ரீஅத்தி வரதர் ஆலயத்தில் நாம் தரிசிப்பதோ ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாள். விலை கொடுத்துப் பெற முடியாத ஒரே மாணிக்கம் இவரே. பல வகையான மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட கடுக்கன்களை எல்லாம் அடியார்களுக்கு வழங்கி இறை பக்தியை வளர்த்தவரே நம் சற்குரு என்பதைப் பலர் உணர்ந்திருக்கலாம். இந்த மாணிக்கம் அனைத்தின் பயன் ஒன்றேதான். அது இறைவன் என்ற மாணிக்கத்தின் அருமை பெருமையை உணர்ந்து கொள்வதுதான். ஸ்ரீகரிய மாணிக்கத்தின் சுவையை அறிந்த பக்தன் வேறு மாணிக்கத்தின் சுவையை நாடுவானா என்ன ?
ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாள்
காஞ்சி வரதர் திருத்தலம்
எத்தகைய கொடிய கண் திருஷ்டி வினைகளையும் களையக் கூடியதே காஞ்சி பெருமாள் தரிசனமாகும். குறைந்தது ஒன்பது பசு நெய் தீபங்கள் ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாள் ஆலயத்தில் ஏற்றி அந்த தீபங்களில் ஏதாவது ஒன்றைப் பார்த்த வண்ணம் குறைந்தது ஒரு மணி நேரம் அமர்ந்து மனதிற்குள் “ஓம் நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்,” என்று விஷ்ணு காயத்ரீ மந்திரத்தை மனதிற்குள் ஓதி வந்தால் எத்தகைய கண் திருஷ்டி தோஷங்களும், பிறர் பொறாமையால் விளையும் வஸ்திரங்கள் தீப்பிடித்தல், குழந்தைகள் காரணமில்லாமல் அழுதல், அடம் பிடித்தல், பொருட்கள் காணாமல் போகுதல், கீழே விழுந்து உடைதல், கை கால் வலி போன்ற திருஷ்டி தோஷங்கள் அகலும். மாலைக் கண், பார்வை குறைதல், பொருட்கள் இரண்டாகத் தெரிதல் போன்ற எத்தகைய கண் கோளாறுகளையும் நிவர்த்தி செய்யும் வழிபாடு இது. கண் மருத்துவர்களும் இத்தகைய வழிபாடுகளால் பயனடைவர். கண் மருத்துவர்கள் கண்ணாடி அணியக் கூடாது என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். விதி வசத்தால் மருத்துவர்களே இத்தகைய குறைபாடுகளுடன் விளங்கினால் அதை நிவர்த்தி செய்யும் ஒரே பெருமாள் இவரே. ஆதவன் அருளும் திசையான கிழக்கு நோக்கி இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டியது அவசியம் என்பதை நினைவில் கொள்ளவும். அற்புத சந்தான பாக்கியத்தை அருளும் தெய்வமும் இவரே. மாணிக்கம் போன்ற குழந்தையைப் பெற அருள்பவரே ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாள். இது ஏதோ பெயருக்காகச் சொல்லும் உவமை அன்று என்பதை நிரூபிப்பதே ஸ்ரீகூரத்தாழ்வார் வரலாறு ஆகும். கூரம் என்ற சொல் ஸ்ரீகூரத்தாழ்வார் பிறந்த ஊரைக் குறிப்பிடுவது மட்டுமல்லாமல் பாகற்காய் என்பதையும் அது குறிக்கும். சனிக் கிழமைகளில் பாகற்காய் கலந்த உணவினை ஸ்ரீகூரத்தாழ்வார் தியானத்துடன் தானமாக அளிப்பதால் வயிற்றுப் பூச்சிகளால் கை கால்களை முறுக்கிக் கொண்டு அழும் குழந்தைகள் நலம் அடைவர். திடீரென்று குடும்பத்தில் எழும் பூசல்களைச் சமன்படுத்தி குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்துவதும் இந்தத் தான முறையாகும். மேலும் கூரம் என்னும் சொல் பொறாமையையும் குறிப்பதால் பொறாமையால் பிறருக்குத் தீங்கிழைக்க எண்ணும் தவறான எண்ணங்களும் இத்தகைய தான தர்மங்களால் நாளடைவில் மறையும். ஸ்ரீகூரத்தாழ்வாரின் பெற்றோர்கள் தினமும் கூரத்திலிருந்து ஆறு மைல்கள் நடந்து வந்து ஸ்ரீகரிய மாணிக்கப் பெருமாளையும் அரச மரத்தையும் சேர்த்து தினமும் விடியற் காலையில் வலம் வந்து வணங்கியே கூரத்தாழ்வார் என்ற மாணிக்கத்தைப் பெற்றெடுத்தார்கள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் மாணிக்க இரகசியம். ஏன் இதை மாணிக்க இரகசியம் என்று வர்ணிக்கிறோம். ஒரு மனிதன் 123 வருடங்கள் வாழ்வது என்பது ஒரு சாதனை அல்ல என்றாலும் ஸ்ரீகூரத்தாழ்வார் போல் இறை நினைவுடன் 1, 2, 3 என்பதாக வரிசைக் கிரமமான ஆயுளைப் பெறுதல் என்பதே அதிசயத்திலும் அதிசயமான பெருமாள் அதிசயமாகும்.
இறைவனுடன் இணையும் இனிய வைபவம் |
ஸ்ரீஅத்தி வரதராஜ பெருமாள் காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே எழுந்தருளி காட்சி நல்குகிறார் என்றாலும் அனைவருமே வைகுண்ட பிராப்தியை அடையக் கூடிய இனிய வைபவமாக இதை விரும்பும் பக்தர்கள் மாற்றிக் கொள்ளலாம் என்பது உண்மையே. ஆனால் அந்த அளவிற்கு பக்தியுடன் அடியார்கள் திகழவில்லை ஆயினும் இறைவனுடன் இணையும் அந்த இனிய வைபவம் எப்படியிருக்கும் என்பதை தான் காஞ்சியில் பக்தர்களுக்காக எழுந்தருளியிருக்கும் நாட்களில் பக்தர்கள் நிறைவேற்றும் வழிபாடுகள் மூலம் தெளிவுபடுத்தும் நாயகரே ஸ்ரீஅத்தி வரத பெருமாள் மூர்த்தியாவார். இத்தகைய வழிபாடுகள் ஆயிரமாயிரம் இருந்தாலும் அனைவரும் நிறைவேற்றக் கூடிய முறையில் உள்ளதே சித்தர்கள் அறிவிக்கும் சூடிக் கொடுத்தவள் சூடிக் கொடுக்கும் இனிய வழிபாடாகும். ஆம், சூடிக் கொடுத்த நாச்சியார் அருளிய நாச்சியார் திருவாய்மொழிப் பதிகங்களை 7.7.2019 ஞாயிற்றுக் கிழமை முதல் தொடங்கி இத்தலத்தில் பொலியும் குசா சக்திகளுக்கு இணையான 42 நாட்களுக்கு (3x14=42) ஓதி வருவதால் ஸ்ரீஅத்தி வரதரின் ஆனந்த அனுகிரக சக்திகளைப் பெறலாம் என்பதே சித்தர்களின் உறுதிப்பாடு.
ஸ்ரீவரதராஜ பெருமாள்
காஞ்சி வரதர் திருத்தலம்
இத்தகைய வழிபாடுகளை இயற்றி பெருமாளின் நெஞ்சில் நிறைந்தவள்தான் நாச்சியார் அம்மன் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனம் பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும் இந்த வழிபாடு உறுதுணையாக நிற்கும். ஏற்கனவே ஸ்ரீஅத்தி வரதரை தரிசனம் செய்தவர்கள் இந்த தோத்திரங்களை ஓதுவதன் மூலம் மற்றவர்களுக்கும் ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனத்தைப் பெற இந்த தோத்திரப் பாராயணம் உறுதுணையாக நிற்கும். பெருமாளின் தரிசனத்தைப் பெறாதவர்களுக்கும் தொடர்ந்த இந்த வழிபாட்டால் பெருமாளைத் தரிசனம் செய்யும் பாக்கியமும் கை கூடும் என்பது உண்மையே. தவிர்க்க முடியாத காரணங்களால் பெருமாளின் தரிசனத்தைப் பெற முடியாவிட்டாலும் இந்த வழிபாட்டால் அவர்கள் பெருமாளின் அனுகிரகத்தை ஏதோ ஒரு வடிவில் பெறுவார்கள் என்பது நிச்சயம். காரணம் அந்த அளவிற்கு ஆண்டாளின் பக்தி உயர்ந்தது, ஆழமானது. ஆண்டாளின் திருவாய் மொழியாக அமைந்த பாசுரங்கள் அனைத்துமே தான் பெருமாளின் பக்தியைப் பெறுதல் என்பதை விட மற்றவர்கள் பெருமாளின் திருவடி அனுகிரகத்தைப் பெற வேண்டும் என்ற ஆண்டாளின் ஏக்கமே தொக்கி நின்றது என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சிறப்பாகும். இவ்வாறு கருடாழ்வார் பெருமாளைத் தோளில் சுமக்கும் தரிசனம் மக்களுக்கு குபேர சக்திகளைப் பெற்றுத் தரும். மேற்கூறிய நாச்சியார் திருமொழிகளில் முடிந்தவற்றை இந்தப் பெருமாளின் முன் ஓதுவதால் பக்தர்கள் அனைவரும் குபேர சக்திகளைப் பெற ஏதுவாகும். சிறப்பாக இந்த குரு வருடத்தில் இத்தகைய வழிபாடு அற்புத பலன்களை வர்ஷிக்கும். குழந்தைகளை தங்கள் தோளில் சுமந்து அத்தி வரதரின் தரிசனம் பெறுவதும் வாழ்வில் ஒரு முறையே கிட்டும் சந்தர்ப்பம் என்பதால் பக்தர்கள் இந்த குபேர தரிசனத்தை நன்முறையில் பெற்று பயன்படுத்தும்படிக் கேட்டுக் கொள்கிறோம். 12 வயது வரை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கடமைப்பட்டுள்ளதால் அந்த வயது வரை உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் தங்கள் உடல் நிலை ஆரோக்யத்தைக் கருத்தில் கொண்டு தங்கள் குழந்தைகளை சில வினாடிகளாவது தோளில் சுமந்து அத்தி வரதரின் தரிசனம் பெறுதல் நலமே. அத்தி வரதரின் தரிசனத்தின்போது அடியார்கள் விரும்பும் எந்த இறைத் துதியையும் ஓதுவது ஏற்புடையது என்றாலும் சித்தர்கள் அருள்வது, “ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம்,” என்பதாகும். பெண்கள் தங்கள் மாங்கல்யத்தின் மேல் கரங்களைப் பதித்து அத்தி வரதரின் தரிசனம் பெறுதல் கிடைத்தற்கரிய பெருமாள் பிரசாதமாகும் என்பதை நினைவில் கொள்ளவும். இது பெருமாளை மட்டும் அல்லாமல் பெருமாளின் நெஞ்சில் குடியிருக்கும் லட்சுமி தேவிக்கும் உரித்த சிறந்த வழிபாடாக அமைவதால் எந்த இறை தரிசனத்தின்போதும் அடியார்கள் இதை நிறைவேற்றுவது சிறப்பே. “மாயையில் மறையாதது மாங்கல்யம் ஒன்றே,” என்பார் நம் சற்குரு. அத்தி வரதரின் ஆனந்த தரிசனத்தின்போது பக்தர்கள் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ள வேண்டியது இந்த வேத வாக்கியத்தின் பொருளுமாகும். பல்லக்கின் பெருமை சுமப்பவர்களுக்கே என்பது போல குழந்தையைச் சுமக்கும் தந்தை கொடுத்து வைத்தவரா, குழந்தை கொடுத்து வைத்ததா என்பதை அறியவே முடியாது. சிவபாத இருதயர் திருஞானசம்பந்தரை தோளில் சுமந்து கொண்டு பல திருத்தலங்களுக்கும் யாத்திரையாகச் சென்றபோது சம்பந்தரோ தான் எம்பெருமாளின் திருவடி நிழலில் திளைப்பதாகத்தான் கருதினாராம். இந்த பாக்கியத்தை அனைவருக்கும் அளிக்கும் மனித முயற்சியே மேற்கண்ட குபேர வழிபாடு. பெருமாளின் திருவடிகளைத் தன் கரங்களில் ஏந்தும் கருடாழ்வாரின் தரிசனம் பக்தர்களின் விதியையும் மாற்றும் திருவடி தரிசனமாகும். குழந்தைகளைத் தோளில் சுமக்கும்போது சில வினாடிகளாவது குழந்தைகளின் திருவடிகளை பெருமாளின் திருவடிகளாக பாவித்து ஏந்துதலால் அது பாவனை அன்று திருமாலின் இணையடியே என்ற பெருமையைத் தருவதே எம்பெருமான் அத்தி வரதரின் தரிசனம். பல குழந்தை பாக்கியங்களை உடையவர்கள் என்ன செய்வது என்ற சந்தேகம் சிலருக்குத் தோன்றலாம். போதுமான அவகாசம் இல்லாதபோது குழந்தைகளில் இளையவரை அவர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தோளில் சுமந்து அத்தி வரதரின் தரிசனத்தைப் பெறலாம். இதன் மூலம் குடும்ப அங்கத்தினர்கள் அனைவருமே பெருமாள் பிரசாதத்தைப் பெற்றவர் ஆவர். திருவாய்மொழியாக நாச்சியார் அளித்த 143 பாடல்களுக்கும் குழந்தையைத் தோளில் சுமக்கும் வைபவத்திற்கும் பெருமாள் மூர்த்திக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. அந்த சம்பந்தம் என்ன என்பதும் அத்தி வரதர் தரிசனத்தில் பொலியும் மகாத்மியமே.
ஸ்ரீவாயுபுத்ரன்
காஞ்சி வரதர் திருத்தலம்
இறைவனின் திருவடிகளை தரிசனம் செய்தல், பகவானின் திருவடிகளைத் தீண்டுதல், பெருமாளின் திருவடிகளைத் தாங்குதல் என்று இறை தரிசனத்தில் எத்தனையோ படித்தரங்கள் உண்டு. இவ்வாறு பெருமான் திருவடிகளைத் தாங்கும் பாக்கியத்தை பக்தியில் சிறந்த அனுமான் கூட பெற முடியாததால் கருடாழ்வாரே பக்தியில் உயர்ந்தவர் என்று அஞ்சனா புத்திரனே கருட பக்தியைப் பாராட்டுவராம். அத்தகைய உயர்ந்த ஞான நிலையில் நிற்கும் ஆஞ்சநேயர் அசோக வனத்தில் குழந்தையைப் போல் தாய் சீதாபிராட்டியை தரிசிக்கும் கோலத்தைக் கண்டு மெய்சிலிர்க்காத பக்தர்களே இல்லை எனலாம். இந்தத் தூணை சனிக் கிழமைகளிலும் மூல நட்சத்திர நாட்களிலும் ஆஞ்சநேயருக்கு உகந்த ஒன்பதின் மடங்கில் வலம் வந்து வணங்கி பசு வெண்ணெய் சர்க்கரை கலந்து குழந்தைகளுக்கு அளித்தலால் ஆஞ்சநேயரைப் போல் பக்தியும் பராக்கிரமும் உள்ள சந்தானைங்களைப் பெறலாம் என்பது உறுதி. பெண்களின் மன உறுதியைப் பாதிக்கும் பல சம்பவங்கள் வீட்டிலும் அவர்கள் பணி செய்யும் அலுவலகங்களிலும் ஏற்படுவது உண்டு. என்னதான் மன உறுதியுடன் இருந்தாலும் இந்தச் சூழ்நிலைகளில் இருந்து தப்புவது கடினமே. இதை உணர்ந்தே நம் பெரியோர்கள் பெண்களின் மன உறுதியை வலுப்படுத்த குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக ஆஞ்சநேய வழிபாடுகளை காப்பாக அமைத்தார்கள். பெண்கள் எந்த அளவிற்கு இந்த ஆஞ்சநேய மூர்த்தியை கொண்டாடுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் சோகம் என்பதையே அறியாத நல்வாழ்வைப் பெறுவர். அசோகம் என்றால் சோகம் இல்லாத வாழ்க்கை. இந்த வாழ்வை அளிப்பதே ஆஞ்சநேய வழிபாடு, சிறப்பாக அத்தி வரதர் திருத்தலத்தில் அமைந்த அசோக வன ஆஞ்சநேய மூர்த்தி வழிபாடு. குழந்தை பாக்கியம் இல்லாத பலரும் தங்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையுமோ என்ற பயத்துடனே வாழ்வர். அத்தகையோருக்கும் நம்பிக்கையையும் தைரியத்தையும் வளர்ப்பதே இந்த ஆஞ்சநேய மூர்த்தி வழிபாடு. ஆனால் தொடர்ந்த வழிபாடு அவசியமே. பறந்து வரும் ஆஞ்சநேயர், நின்ற நிலை ஆஞ்சநேய மூர்த்தி, கை தொழுத கோலத்தில் திகழும் ஆஞ்சநேயர் என ஆஞ்சநேய மூர்த்திகளின் கோலங்கள் எத்தனை எத்தனையோ. இங்கு நாம் காணும் ஆஞ்சநேய மூர்த்தி கொடி ஆஞ்சநேய மூர்த்தி அல்லது குடை ஆஞ்சநேய மூர்த்தி என்று சித்தர்களால் வழங்கப்படுகிறார். மற்றவர்களை ஆபத்துகளிலிருந்து காத்து ரட்சிப்பதாலும், அவர்கள் விரும்பும் எல்லா அனுகிரகங்களை அருள்வதாலும் ஆஞ்சநேய மூர்த்தி இத்தகைய சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளார். காஞ்சி திருத்தலம் மட்டுமல்லாது தாங்கள் வசிக்கும் எத்திருத்தலத்திலும் இந்த ஆஞ்சநேய மூர்த்தியின் அருளைப் பெற விரும்பும் அடியார்கள் கொடை ஆரஞ்சு, கமலா ஆரஞ்சு அல்லது loose-jacket orange என்று வழங்கப்படும் ஆரஞ்சுப் பழ ரசத்தை சர்க்கரை, ஐஸ் சேர்க்காமல் வரத ஆஞ்சநேயர் தியானத்துடன் அடியார்களுக்கும் குழந்தைகளுக்கும் அளித்தல் சிறப்பு. ஏன் இந்த குறிப்பிட்ட ஆரஞ்சு பழ தானம் வலியுறுத்துப்படுகின்றது என்றால் கோடைத் தென்றல் என்ற குறிப்பிட்ட வாயு சக்திகளின் அனுகிரகமாக தோற்றம் கொண்டவரே ஆஞ்சநேய மூர்த்தி என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். வாயுபுத்ரன் என்ற ஆறு எழுத்துக்களும் இந்த கோடைத் தென்றலைக் குறிப்பதே. இந்த ஆரஞ்சுகள் loose-jacket ஆரஞ்சுகள் அல்ல என்ற உண்மையை இத்தகைய தானத்தை தொடர்ந்து நிறைவேற்றும் பெண்களே அறிவர். பெண்களின் தோல் வசீகரத்தை மேன்மைப்படுத்துவதும் இத்தகைய தானங்களின் தன்மையாகும். குறிப்பாக அளவுக்கு அதிகமான முகப்பருக்களால் துன்பமடையும் பெண்கள் இத்தகைய தானங்களால் பயனடைவர் என்றாலும் அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்ற நற்பழக்கத்தை வாரம் இரு முறை கட்டாயம் நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்பதும் முக்கியம். எந்த அளவிற்கு கொடை ஆரஞ்சு ரசம் தானமாக வழங்கப்படுகிறதோ அந்த அளவிற்கு கோடை வெப்பம் நம்மைத் தாக்காது. கோடையைக் குளிர்விப்பதே கொடை ஆரஞ்சுகள் உள்ளிருக்கும் குளிரூட்டும் தென்றல் சக்தி. எதையும் அனுபவித்தால்தானே பலன் தெரியும் ? இதற்காக சற்குரு ஒரு ரெப்ரிஜிரேட்டரையே புதிதாக வாங்கி சூரியன் உதய நேரத்தில் தோன்றும் ஆரஞ்சு வண்ணத்திற்கு இணையான ஆரஞ்சு ரச தானம் அளித்து அடியார்களுக்கு அருள்புரிந்த வித்தையை ஒரு சில அடியார்களே அறிவர். Nascent oxygen மட்டும் சக்தி உடையது அன்று என்று nascent orange juice தரும் அனுகிரகத்தையும் நிரூபித்துக் காட்டியவரே நம் சற்குரு.
கோலங்கள் காட்டும் கோலங்கள் |
ஸ்ரீஅத்தி வரதராஜ பெருமாள் அமிர்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் எழுந்தருளி உள்ளார். அவர் 40 வருடங்களுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சி அளிக்கும்போது இந்த சயனக் கோலத்தில் தன்னுடைய தரிசனத்தைத் தொடர்ந்து பின்னர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். அதன் பின்னர் மீண்டும் சயனகோலத்தில் திருக்குளத்தில் மூழ்கி அறிதுயில் யோகம் கொள்கிறார் என்பது பலரும் அறிந்ததே. ஆனால், இந்தக் கோலங்கள் சுட்டும் கோல இரகசியங்களை முழுமையாக அறிந்தவர்கள் சித்தர்களே. ஒவ்வொரு 40 ஆண்டு கால சயனக் கோலத்திற்குப் பின் அத்தி வரதர் அருளும் சயனக் கோலம், நின்ற கோலத்தின் நாமங்கள் மாறுவதும் இயற்கையே. இவ்வருடம் ஸ்ரீஅத்தி வரதர் எழுந்தருளிய பள்ளி கொண்ட கோலத்தை சித்தர்கள் ஸ்ரீநந்த கோப வரதர் என்ற திருநாமத்தால் வர்ணிக்கிறார்கள். ஒன்பது அட்சரங்களுடன் திகழும் பெருமாளின் இந்தத் திருநாமம் வரதரின் ஒன்பது அடி கோலத்திற்கு உரித்தானதாகின்றது என்பது மேலோட்டமான ஒரு பதிலே.
ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் தரங்கம்பாடி
ஸ்ரீஅத்தி வரதரின் நாம மகாத்மியத்தைப் பற்றி தெரிந்து கொள்வதானால் மற்ற இறை மூர்த்திகளின் நாம ஸ்மரணையைப் போல எந்த அளவிற்கு இறைவனின் நாமங்களைப் பாடி மகிழ்கின்றோமோ அந்த அளவிற்கு அந்த நாமங்கள் அளிக்கும் பக்தி ரசத்தை நாம் பருகலாம், காரணம் ரச ரூபாய என்றுதானே இறைவனை வர்ணிக்கிறோம். ஒரு முறை ஒரு அடியார் சற்குருவிடம், “வாத்யாரே, பல வருடங்களாக அடியேன் லலிதா சகஸ்ரநாமத்தை ஓதிக் கொண்டு வருகிறேன். ஆனால், இதுவரை அடியேன் அம்பாளின் தரிசனத்தை கனவிலும் பெற்றதில்லை. என்னுடைய தம்பியோ ஓரிரு வருடங்களாகத்தான் சாமி கும்பிட ஆரம்பித்திருக்கிறான். அவனோ அம்பாளை புருவ மத்தியில் தியானத்தில் தரிசித்ததாகக் கூறுகிறானே ... ”, என்று அந்த அடியார் தன்னுடைய கேள்வியை முடிக்கும் முன்னரே சற்குரு சட்டென்று, “அவன் (உங்கள் தம்பி) புளுகுகிறான், சார். உண்மையில் அம்பாள் உங்கள் தம்பிக்கு தரிசனம்கொடுத்திருந்தால் உடனே அவள் அவனுக்கு ஏதாவது திருப்பணியை அளித்திருப்பாள். அவள் அளித்த திருப்பணி என்னவென்று உங்களுக்கு உங்கள் தம்பி ஏதாவது கூறினானா ?” என்ற ஒரு பொருள் பொதிந்த கேள்வியைக் கேட்டார். அடியார் இல்லை என்பதை உறுதி செய்யும் வண்ணம் தலையை ஆட்டினார். இதுவே கடவுள் தரிசனம் பற்றி இறையடியார்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியம். ஒருவர் இறை தரிசனம் பெற்ற மறுகணமே அவர்களுக்கு இறைவன் ஒரு பொறுப்பை அவர்கள் “தலையில் கட்டி” விடுவார். இவ்வாறு இறை தரிசனம் பெற்ற அடியார்களின் கூட்டமே மகிழத் தென்றலாக, அமிர்தசரஸ் திருக்குள அலைகளாக, அத்தி வரதர் மஞ்சமாக, பெருமாளை அலங்கரிக்கும் மலர்களாக அலங்கரிக்கின்றன. பெருமாளின் திருஉருவத்தை தரிசனம் செய்யும் அளவிற்கு பக்தர்கள் தூய்மையான மனதை பெறவில்லை என்றாலும் இந்த வீசு தென்றல் அளிக்கும் அனுகிரக சக்திகளை அனைத்து அடியார்களும் பெறலாமே. சற்குருவின் தாத்தாவான ஸ்ரீகேசவ சந்திரசேனர் ஒலி பெருக்கி இல்லாமல் பன்னிரெண்டு மணி நேரம் ஆயிரம் பக்தர்களுக்குக் குறையாமல் கேட்கும் வண்ணம் இறைவனைப் பற்றி உரை நிகழ்த்த வல்லவர். தற்காலத்தில் அத்தகைய சக்தி பெற்றோர் அருகி விட்டனர் என்றாலும் ஒலி பெருக்கி மூலம் பக்தர்களின் குரல்களை லட்சக் கணக்கான மக்கள் கேட்கும் வசதி பெருகி விட்டதல்லவா ? அதுபோல் ஸ்ரீநந்த கோப வரதர் அளிக்கும் அனுகிரக சக்திகளை நேரடியாக கேட்கும் சக்தியை அடியார்கள் பெறாவிட்டாலும் இறைவன் அளித்த ஒலி பெருக்கியான கடல் அலைகள் மூலம் பெருமாளின் அனுகிரக சக்திகளைப் பெறலாம். இதற்கு உதவுவதே தரங்கம்பாடியில் கடல் அலைகள் கூறும் அத்தி வரத பெருமாள் மகாத்மியமாகும்.
ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் அருளும் தரங்கம்பாடியில் இறைவனை தரிசனம் செய்து இத்திருத்தலத்தில் எத்தனை மணி நேரம் அமர்ந்து கேட்டாலும் கேட்கக் கேட்க திகட்டாத அத்தி வரத பெருமாளின் அனுகிரக லீலைகளை அவை ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும்.
ஓம் தத் புருஷாய வித்மஹே மகா தேவாய தீமஹி
தந்நோ நந்த கோப வரத ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ கிழக்கு முகமாகப் பார்த்து கடல் அலைகளை தரிசித்த வண்ணம் ஓதுவதால் மனமும் உடலும் தூய்மை அடைந்து அத்தி வரதரின் அனுகிரக சக்திகளை எளிதில் பெற வழிவகுக்கும். தரங்கம் என்றால் அலைகள். அலைகள் பாடுவதற்கு இறைவனின் மகிமை குறித்தோ, இறை அடியார்களின் சீலம் குறித்தோ, இறை லீலைகள் குறித்தோ பாடுவதைத் தவிர வேறு குறிக்கோள் எதுவும் இருக்க முடியுமா ? இவ்வாறு தான் என்ற அகங்காரம் மறைந்த அலைகள் மட்டுமல்ல மரம், விலங்குகள், தீர்த்தங்கள் என்ற அனைத்தும் பாடுவது இறைவனின் புகழ் என்ற ஒன்றைப் பற்றி மட்டுமே. தரங்கம்பாடி திருத்தலத்தில் வீசும் காற்று வேறு எங்கும் பெற முடியாத ஓசோன் நிறைந்த தூய்மையான காற்று என்பது மனிதர்கள் அறிந்த இரகசியம். ஆனால் சித்தர்கள் கூறுவதோ ஓசோன் என்ற தூய்மை தரும் சக்தி திருஅண்ணாமலையிலிருந்து மார்கழி மாதத்தில் மட்டுமே வீசுகிறது, இந்த மனத் தூய்மை உடல் தூய்மை தரும் சுத்தமான காற்றை அந்தந்த திருத்தலத்தில் உறையும் தேவதைகள் தொடர்ந்து பெருக்கி அந்த சக்திகளை நிலைநிறுத்துவதால் இத்திருத்தலங்களை வழிபடும் பக்தர்கள் இத்தகு நோய் நிவாரண காப்பு சக்திகளை அனுகிரகமாகப் பெறுகிறார்கள் என்பதே.
காஞ்சி அத்தி வரதர் திருத்தல திருக்குளத்தில் பொலியும் அலைகளும் பெருமாளின் அனுகிரக சக்திகளை பொலிந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அலைகள் தோன்றுவதற்கு பெருமாளின் சயனக் கோலமே காரணம் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். இப்போது அப்பர் பெருமானின், “மாசில் வீணையும் ... ”, பாடலைப் பாடி பாருங்கள். அது புது அர்த்தத்தில் இறை சக்திகளைப் பொழியும். இது அத்தி வரதர் எழுந்தருளிய குரு ஆண்டாக அமைவதால் முதுகில் மூன்று கோடுகள் அமைந்த குரு சக்திகளைப் பெற்ற மூன்று அணில்களின் தரிசனத்தை பெறுதல் கிடைத்தற்கரிய பாக்கியமாகும். மூன்று அத்தி மரங்கள், அணில்கள், பிள்ளையார் மூர்த்திகளின் தரிசனம் பெறுதல் என்பது கிடைத்தற்கரிய பாக்கியமே. மயிலாடுதுறை மூவலூரில் எழுந்தருளிய மூன்று பிள்ளையார் மூர்த்திகளின் தரிசனமோ இவ்வருடம் கிடைத்தற்கரிய பொக்கிஷமே. மனிதர்களுக்குப் புரியும் வகையில் சொல்வதானால் அலை என்பது ஒரு ஏற்றம் ஒரு இறக்கத்துடன் அமைவதே. இவ்வாறு அத்தி வரதர் பக்தர்களின் தரிசனத்திற்காக 40 வருடங்களுக்கு ஒரு முறை வெளியே வரும்போது அமிர்தசரஸ் திருக்குளத்திலீருந்து தீர்த்தம் முழுவதையும் பொற்றாமரைக் குளத்திற்கு மாற்றி விடுகிறார்கள். இதன் பின்னால் அமைந்த தெய்வீக லீலைகள் அனைத்தையும் பக்தர்கள் புரிந்து கொள்ள முடியாது என்றாலும் சுவையான சில விளக்கங்களை மட்டும் இங்கு அளிக்கிறோம்.
மதுரை பொற்றாமரைக் குளத்தில் உள்ள ஒரே ஒரு தாமரை மலரால் இந்தியாவையே விலைக்கு வாங்கி விடலாம் என்பார் நம் சற்குரு. அதுவே பொற்றாமைரைக் குளத் தாமரையின் தெய்வீக மதிப்பு. அதே மதிப்புடையதுதானே காஞ்சி பெருமாள் திருத்தல பொற்றாமரைக் குளத்தில் உள்ள தாமரையின் மகிமையும். ஆனால் இந்த பொற்றாமரைக் குளத்தில் தாமரை பூத்திருப்பதை யாரும் பார்த்ததில்லை அல்லவா ? அப்படியானால் இந்த பொற்றாமரை என்பது நம் மனித சக்தியால் உணரக் கூடிய ஒரு தாமரை அல்ல என்பதையே நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமிர்தசரஸ் திருக்குளத்தில் அத்தி வரதர் பள்ளி கொண்டிருக்கும்போது பெருமாளுக்கு பாத சேவை புரிந்த வண்ணம் அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியானவள் தன்னுடைய லட்சுமி கடாட்ச சக்திகளை பொற்றாமரைக் குளத்திற்கு தாரை வார்த்து அளிக்கிறாள். இவ்வாறு நாராயண சக்திகளும் பார்கவ சக்திகளும் இணையும்போது உண்டாகும் சங்கம சக்திகளே அத்தி வரதர் பக்தர்களின் தரிசனத்திற்காக எழுந்தருளும் ஒரு மண்டல காலத்திற்கு இத்திருத்தல பொற்றாமரைக் குளத்தில் நிலவுகின்றன என்றால் இத்திருக்குளத்தை தரிசனம் செய்வதற்கு என்ன தவம் செய்திருக்க வேண்டும் பக்தர்கள் ? இந்த தரிசனமே பக்தர்களின் ஈடு இணையில்லா தவத்தின் பலனாகக் கிட்டும் என்றால் இந்த பொற்றாமரைக் குளத்து தீர்த்தத்தை கலந்து இறை அடியார்களுக்கு பிரசாதமாக அளிப்பதால் கிட்டும் சிவ சக்தி ஐக்ய பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா ?
ஸ்ரீஅகத்திய பெருமான் தில்லையாடி
வருடத்திற்கு ஆறு முறை மட்டுமே ஸ்ரீநடராஜ பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்துகிறார்கள். இம்முறையில் இந்த விகாரி வருட ஆனி மாதத்தில் நிகழும் ஸ்ரீநடராஜப் பெருமான் அபிஷேகம் நிகழும் உத்திர நட்சத்திரம் ஞாயிறு திங்கள் ஆகிய இரு தினங்களிலும் நிரவி வருவது என்பது கிடைத்தற்கரிய பாக்கியமே. அத்தி வரதரின் அனுகிரக சக்திகளை சாதாரண பக்தர்கள் பெற முடியாது என்பதால் பல திருத்தலங்களில் எழுந்தருளி உள்ள நடராஜ மூர்த்திகள் இவ்வாறு அத்தி வரதர் அருளும் அனுகிரக சக்திகளை ஈர்த்து அதை பக்தர்களுக்கும் அடியார்களுக்கும் இறை தரிசனப் பலன்களாக அளிக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமை அக்னி சக்திகளுடனும் திங்கள் கிழமை இந்த அக்னி சக்திகளுடன் லயமாகும் குளிர் சந்திர சக்திகளுடனும் நிலவுவது என்பது கிடைத்தற்கரிய எத்தகைய பேறு ? உத்தரம் என்றால் பதில் என்ற அர்த்தமும், கட்டிடத்திற்கு பாதுகாப்பையும் நிழலையும் அளிக்கும் சக்தி என்றெல்லாம் பொருள் உண்டு. காஞ்சி அத்தி வரதர் தரிசனம் அளிக்கும் காலத்தில் பொற்றாமரைக் குளத்து தீர்த்தத்தைப் பெற்று அந்த தீர்த்தம் கலந்த பிரசாதத்தை அடியார்களுக்கு அன்னதானமாக அளிப்பதால ஸ்ரீசிவகாமி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் அளிக்கும் குடும்ப ஒற்றுமை சக்திகளையும் சிவ சக்தி ஐக்ய அனுகிரக சக்திகளையும் ஒருங்கே பெறலாம். ஒரு முறை ஸ்ரீபோகர் பணிந்து ஸ்ரீஅகத்திய பெருமானை, “அரங்கம் பாடும் தரங்கம் குறுக்கே செல்லும் உபாயம் உண்டோ, குருதேவா ?” என்று தெய்வீகத்தில் ஏதாவது குறுக்கு வழி உண்டா என்று தன் குருநாதரைக் கேட்கின்றார். ஏன் இவ்வாறு ஸ்ரீபோகர் பெருமான் குறுக்கு வழியைக் கேட்கிறார். காரணம் தரங்கம் பாடும் இரகசியங்கள் புரிந்து கொள்ள சாதாரண இறை அடியார்களுக்கு 700 தெய்வீக பிறவிகள் அமைய வேண்டும் என்பது சித்தர்களின் கணக்கு. மக்கள் மேல் உள்ள பேரன்பால் இவ்வளவு நீண்ட நெடுங்காலம் பக்தர்கள் மனம் இறை பக்தியில் நிலைக்க முடியாது என்பதால் அதற்கு ஏதாவது சுருக்கு வழி (அனைவருக்கும் புரியும் வண்ணம் குறுக்கு வழி) உண்டா என்று தன் குருநாதனைப் பணிகின்றார். தன் அன்புச் சீடன் இத்தகைய கருணை மிகு கேள்வி கணையைத் தொடுப்பான் என்று அறியாதவரா சற்குரு. எனவே சீடன் கேட்பதற்கு முன்னரே 700 சதுர்யுகங்கள் கடற்கரை மணலில் கொதிக்கும் வெயிலில் தவம் இயற்றி மக்களுக்கு இந்த சுறுக்கு வழியைப் பெற்றுத் தந்தவரே ஸ்ரீஅகத்திய பிரான். இவ்வாறு மக்களுக்கு அலைகளின் குறுக்கே செல்லும் அதாவது அலைகள் சொல்லும் இரகசியங்களை அறியும் மார்கத்தை எளிமைப்படுத்தி உரைத்த ஸ்ரீஅகத்தியரின் திருஉருவத்தையே நாம் தில்லையாடி திருத்தலத்தில் தரிசிக்கிறோம்.
ஸ்ரீபெரிய நாயகி அம்மன் தில்லையாடி
தில்லையாடி என்றால் தில்லையில் கூத்து நிகழ்த்திய எம்பெருமானின் நடனம் பொலியும் இடம் என்ற ஒரே ஒரு பொருள் மட்டும் இத்தலத்திற்கு கிடையாது. தில்லை ஆடி அதாவது இறைவனின் பிரதிபலிப்பாக சித்தர்களும் மகான்களும் அவதார மூர்த்திகளான மகா விஷ்ணு, பிரம்மா இவ்வாறு எண்ணற்றோரும் இறை தரிசனத்தைப் பெற்ற இடம் என்பதும் ஒரு பொருள். பெண் என்பவள் ஆணின் பிரதிபலிப்பே. இதை உணர்த்துவதும் தில்லையாடி திருத்தல தரிசன மகிமையாகும். ஆயிரமாயிரம் பொருள் கொண்ட இந்த வார்த்தைகளின் அர்த்தம் உணர்ந்தவர்களே தில்லையாடி இறைவனின் தன்மையை உணர்ந்தவர்கள், தில்லை நாயகனையே உணர்ந்தவர்கள் ஆவர். இந்தப் பேருண்மையை சாதாரண மக்களும் உணர்ந்து கொள்ள வழிவகுப்பதே அத்தி வரதர் தரிசன நாட்களில் அடியார்கள் நிகழ்த்தும் பொற்றாமரைக் குள தீர்த்தம் கலந்த அன்னதான மகிமை. மனிதர்களின், அனைத்து உயிர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தரும் ஒரே திருத்தலம் தில்லையாடியே. இனி வரும் காலத்தில் சூரிய வெப்பம் மிகும் என்பதை தீர்க தரிசனத்தால் உணர்ந்து அதற்கு பரிகாரமாக தாமே கொப்புளங்களை, தோல் வியாதிகளை உடலில் தாங்கி ஸ்ரீஅகத்திய பெருமான் உயிர்களைக் காத்த காக்கின்ற தலம். இத்தலத்தில் சர்க்கரை கலந்த எலுமிச்சை பழ சர தானம் மிகவும் சிறப்பானதாகும். திருவிளையாடல் புராணத்தில் செம்படவனின் மகளாகத் தோன்றிய பார்வதியை மணம் புரிய சிவபெருமான் அதிபயங்கர மீனைப் பிடிக்கும் வீரனாகத் தோன்றினார். அந்தக் கடலையே கலக்கியது பெருமாள் என்ற மச்ச அவதாரம். அது பக்திக்கு மட்டும்தானே கட்டுப்படும். வேறு எந்த வலையையும் வீசி அந்த மீனைப் பிடிக்க முடியாதே. இதை உணர்ந்த பெருமான் பக்தியில் சிறந்த குகனை வலையாக வீசி பெருமாள் என்ற மீனைப் பிடித்தார் என்பது சித்தர்களே உணர்ந்த இரகசியம். அவ்வாறு பெருமான் பிடித்த மீன் என்னவாயிற்று என்பதை யாராவது யோசித்தார்களா, சித்தர்களைத் தவிர. பெருமாளின் மச்ச அவதாரம் என்பது எப்போதோ ஒரு யுகத்தில் தோன்றிய நிகழ்ச்சி கிடையாது. அது பக்தர்களின் நன்மைக்காக யுகங்கள் தோறும் தோன்றும் இனிய நிகழ்ச்சியே என்பது திருவிளையாடல் புராணம் மூலம் தெளிவாகின்றது அல்லவா ? இக்காரணம் குறித்தே பக்தர்கள் தங்கள் வீட்டில் மீன்களை வளர்த்து அதை உற்று நோக்கி தியானித்து வந்தால் நாளடைவில் இது எத்தகைய மனக் குழப்பங்களையும் அகற்றுவதோடு அல்லாமல் அடுத்த உயர்நிலை தியானத்திற்கு இட்டுச் செல்லும் என்பதாக சித்தர்களின் வழிகாட்டுதல் அமைந்துள்ளது. உதாரணமாக 25 வயதுடைய ஒரு இளம்பெண் பல லட்சக் கணக்தில் சம்பளம் பெறும் உயர்ந்த பதவியில் கம்யூட்டர் துறையில் பணி புரிந்தாள். திருமணமாகாத அவளுக்கு திடீரென புத்தி சுவாதீனம் குறையவே அதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டன. எவ்வளவோ செலவு செய்தும் அவள் வியாதிக்கு குணத்தைக் காண முடியவில்லை அவள் பெற்றோர்கள். எல்லாக் குழப்பத்திற்கும் இறுதி தெளிவு என்பது சித்தர்கள் அளிப்பதுதானே. விஷயம் அறிந்த நம் சற்குரு அந்தப் பெண் வேலையை விட்டு விட்டு வண்ண வண்ண மீன்களைத் தொட்டியில் வளர்த்து அவற்றை தொடர்ந்து பார்த்து வரும்படிக் கூறினார். வேறு எந்த வழிபாடும் தேவையில்லை என்று கூறிவிட்டார். ஆறு மாதங்கள் கழிந்தன. அந்தப் பெண்ணும் சற்குரு கூறிய முறையில் அந்த வண்ண மீன்களைத் தொடர்ந்து பார்த்து வந்தாள். விளைவு ? நீங்கள் அறிந்ததே. ஆம், ஆறே மாத காலத்தில் அந்தப் பெண் பூரண குணமடைந்து தற்போது கணவன் இரு குழந்தைகளுடன் சௌக்யமாக இருக்கிறாள் என்பதே பெருமாளின் மச்சாவதார வழிபாடு உணர்த்தும் உண்மையாகும். இவ்வாறு தில்லையாடி திருத்தலத்தில் உறையும் பெருமாளை வணங்கி மச்ச வழிபாடுகளை நிறைவேற்றி வந்தால் ஆரம்பத்தில் மலரும் த்வைத வழிபாடு இறுதியில் அத்வைத வழிபாடாக மலரும் என்ற வழியைக் கூறுவதே தில்லையாடி திருத்தலமாகும். அலை, மீன், ஆடி, திருமணம், தில்லையாடி என்ற அனைத்துமே த்வைதமாகத் தோன்றி அத்வைதமாக பூர்ணம் பெற வழிகாட்டுபவையே. இப்போது சொல்லுங்கள் பொற்றாமரைக் குளத்தில் குதித்து விளையாடுபவை லட்சுமியை மார்பில் சுமந்த பெருமாள் மூர்த்திகளா இல்லை இறையருளைப் பிரகாசிக்கும் தில்லையாடிகளா ?
ஆடி காட்டும் அற்புத தியானம் |
தியானங்களில் பல முறை உண்டு. இதில் வள்ளலார் சுவாமிகள் சுட்டிக் காட்டுவதே ஆடி தியானம் என்ற கண்ணாடியில் ஒருவருடைய உருவத்தைப் பார்த்து தியானம் செய்யும் முறையாகும். கண்ணாடியில் ஒருவரின் உருவத்தைப் பார்க்கும் போது அப்படியே பார்ப்பவரின் உருவம் பிரதிபலிப்பது போல் தோன்றினாலும் வலக்கை இடக்கையாக இருப்பது போலவும் இடக் கண் வலக் கண்ணாக இருப்பது போலவும் ஒரு தோற்றம் தென்படுகின்றது அல்லவா ? ஒளியின் பிரதிபலிப்பால் இத்தகைய மாறுபாடான தோற்றங்கள் ஏற்படுகின்றன என்று மேலோட்டமாக நாம் கூறினாலும் இதன் பின்னால் அமைந்த தத்துவ விளக்கங்கள் பலப்பல. உதாரணமாக அத்தி வரதரின் பிரதிபலிப்பே காஞ்சி வரதபெருமாள் என்று கூறுகிறோம். அப்படியானால் அத்தி வரதருக்கே உண்மையான பெருமாள் அனுகிரக சக்தி உண்டு என்பது போன்ற அபத்தங்கள் ஏற்படும் அல்லவா ? இந்த இரு மூர்த்திகளில் சாஸ்வதமான மூர்த்தி யார் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா ? இருவருமே சாஸ்வதமான இறை சக்திகள் என்றால் சில நிமிடங்களிலேயே தரிசனம் தரும் காஞ்சி வரதராஜபெருமாள் அத்தி வரதர் என்ற நாமத்துடன் எழுந்தருளும்போது இன்று அத்தி வரதரைப் பார்க்க முடியுமா முடியாதா என்ற கேள்வியை பக்தர்கள் கேட்கும் அளவிற்கு பெருமாளின் தரிசனம் அரிதாக மாறுவது ஏனோ ?
ஸ்ரீமகா விஷ்ணு தில்லையாடி
உத்தராயண புண்ணிய காலமான ஆனி மாதம் நிறைவடைந்து தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி பிறக்கும் வேளையில் அத்தி வரதரின் தரிசனமும் மலர்வது என்பது நமக்குக் கிடைத்த எத்தகைய பேறு ? 17.7.2019 புதன் கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் இத்தகைய புண்ணிய காலம் நிகழ்வதால் ஆடி தியானம் என்னும் கண்ணாடி தியானத்தில் உன்னத நிலை பெற விரும்புவோர் பலரும் இத்தகைய புனிதமான புண்ணிய காலத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தட்சிணாயன புண்ணிய காலத்தில் ஸ்ரீஅத்தி வரதர் தரிசனம் பெறுதல் என்பது கிடைத்தற்கரிய பேறே. சாதாரணமாகவே அத்தி வரதரின் தரிசனத்தைப் பெறுதல் என்பது அரிதாக இருக்க குறித்த நாளில் வேளையில் பெருமாளின் தரிசனம் பெற முடியுமா என்பது அனைவரின் மனதில் முளைக்கும் கேள்வியே ? உண்மையில் பல வருடங்கள் ஆடி தியானத்தை மேற்கொண்டு வருவோருக்கும் தில்லையாடி திருத்தலத்தில் பெருமாளை வழிபட்டு வருவோர்க்கும் இந்த சந்தர்ப்பம் இறையருளால் நிச்சயம் சித்திக்கும் என்பதே சித்தர்கள் அளிக்கும் உத்திரவாதம். பகலும் இரவும் சந்திக்கும் வேளையில் உண்மையும் இன்மையும் இணையும் நேரத்தில் குசா சக்திகள் பெருகும் நாளில் சத்தியத்தை புலப்படுத்தும் சத்தியநாராயணின் தரிசனத்தைப் பெறுதல் என்பது எத்தகைய உத்தமமான வரப்பிரசாதம். இவ்வாறு நம்பினோர்க்கு நடராஜன் சிவனே, தில்லைநாதனே என்பதை உணர்த்தும் ஒரு நிகழ்ச்சி. பல வருடங்களுக்கு முன் ஒரு அடியார் தில்லையாடி ஈசனை தரிசிக்கச் சென்றார். சுற்றுப் பிரகாரங்களை வலம் வந்த பின்னர் அம்பாளையும் தரிசனம் செய்து பிரகாரத்தை வலம் வந்தபோது அந்த பிரகாரத்தில் ஒரு பித்தளை அண்டாவில் பாதி நீர் நிறைந்து இருந்தது. அதில் ஏதோ அசைவதாகத் தோன்றவே அந்த அடியார் அந்த அண்டாவை உற்றுப் பார்த்தார். அந்தி மயங்கிய வேளையாக இருந்ததால் ஏதோ ஓர் உயிர் அசைகிறது என்பது மட்டும் தெரியவே அந்த அண்டாவை சாய்த்து அதில் இருந்த நீரைக் கீழே கொட்டினால் அந்த ஜீவன் உயிர் பிழைக்குமே என்று நினைத்து அண்டாவை சாய்த்தார். அப்போது அண்டாவிலிருந்து ஓர் அணில் வெளியே வந்து விழுந்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய வண்ணம் சற்றும் அசைவில்லாமல் அப்படியே சிறிது நேரம் கிடந்தது, பின்னர் மெதுவாக நகர ஆரம்பித்தது, சற்று நேரம் கழித்து ஓட ஆரம்பித்து எங்கோ சென்று மறைந்து விட்டது. அதன் பின்னர்தான் சார்ந்தாரைக் காப்பவர் ஈசன் என்ற வாசகத்தின் பொருளை உண்மையாகவே அன்று அந்த அடியார் உணர்ந்தார். இவ்வாறு சார்ந்தாருக்கு உயிர் நல்குவது மட்டும் ஈசன் அல்ல அடியாருக்கு அத்தி வரதரின் தரிசனத்தை அளிப்பவனும் அவனே என நம்பியவர்களே அவன் மகிமையை உணர்வர். சந்திர பகவானின் ஆட்சி வீடான கடக ராசியில் சூரியன் எழுந்தருளும் காலத்தையே ஆடி மாதப் பிறப்பு என்கிறோம். சந்திர ஒளி என்பது சூரியப் பிரகாசத்தின் பிரதிபலிப்பு என்றுதானே உரைக்கப்படுகின்றது. எனவே தட்சிணாயனம் ஆடியில் மலர்வது எத்தகைய பொருத்தமுடைய செயல். ஒரு காலத்தில் தாமரை வனமாகக் காட்சியளித்த தில்லையாடி திருக்குளம் தற்போது நீர் வறண்டிருப்பது காலத்தின் கோலமே. அமாவாசை, அயனத் தோற்ற நாட்களில் இத்தல திருக்குளத்தில் 12 தாமரை மலர்கள் மேல் தர்பை சட்டம் அமைத்து தர்ப்பணம் அளித்தலால் அதிகப்படியான உஷ்ணத்தால் வாடும் உறவினர்களும் நண்பர்களும் நற்பலன் பெறுவர். முழு நெல்லிக்காய் ஊறுகாய் கலந்த தயிர் சாத அன்னதானம் சிறப்பு.
வானமுட்டிப் பெருமாளின் வானளாவிய கருணை |
மயிலாடுதுறை அருகே கோழிக்குத்தியில் அருள்புரியும் ஸ்ரீவானமுட்டிப் பெருமாள் 30 அடி உயரமுள்ள ஒரே அத்தி மரத்தால் ஆனவர். பொதுவாக இவ்வளவு உயர பெருமாளாக நெடிதுயர்ந்து இருப்பதால் இவர் வானமுட்டிப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால் உண்மையில் வெறும் 30 அடி உயரம் என்பது ஒரு சாதாரண வீட்டைக் கூட முட்ட முடியாது என்பதால் வானம் முட்டி என்பது பெருமாளின் கருணையைக் குறிக்கின்றது என்பதே சித்தர்கள் கூறும் விளக்கமாகும். பெருமாளின் கருணையைப் பற்றி மக்கள் ஓரளவு புரிந்து கொள்ள நமக்கு வழிகாட்டியாக இருப்பதே வாமன அவதாரம் ஆகும். மூன்றே அடி உயரமுள்ள வாமனர் பலிச் சக்கரவர்த்தியிடன் தன்னுடைய காலால் மூன்றடி நிலம் கேட்டபோது பெருமாளின் மகிமை தெரியாமல் இந்தச் சிறுவன் என்ன பெரிதாய் கேட்டு விடப் போகிறான் என்று ஏளனமாக நினைத்து வாமனர் கேட்ட நிலத்தை தானமாக அளிக்க பலிச் சக்கரவர்த்தி ஒப்புக் கொண்டான். ஆனால் குருநாதர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்தாவது தங்களுடைய சீடர்களைக் காப்பார்கள் என்ற பாரம்பரிய சிறப்பால் வண்டாக மாறி தன்னுடைய சீடனைக் காக்கத் துணிந்தார் சுக்ராச்சாரியார்.
ஸ்ரீசார்ந்தாரைக் காத்த ஈசன்
தில்லையாடி
குரு ஆணையை மீறி பலிச் சக்கரவர்த்தி தானம் அளிக்க முனைந்த போது வாமனர் விஸ்வரூபம் எடுத்து இந்த பூமியை ஓர் அடியாகவும் வானத்தை ஓர் அடியாகவும் அளந்தார் என்பது நாம் அறிந்ததே. ஆனால் வாமனரின் இந்த தீர செயலுக்குப் பின் வர்ஷித்த பெருமாள் கருணையை உணர்ந்தவர்கள் சித்தர்கள், அவதார மூர்த்திகள், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்களே. அதனால்தான் அவர் வாமனரைப் பற்றிக் கூறும்போது, “பெருமாள் இந்த உலகை தன்னுடைய திருவடிகளால் அளந்தபோது இந்த பூமி, ஆகாசம், உயிரினங்கள் என்ற அனைத்துமே தூய்மை அடைந்தன,” என்பார். எனவே பெருமாள் இந்த பூமியையும் வானத்தையும் அளந்தது தன்னுடைய வீரத்தை, திறமையைக் காட்ட அன்று இந்த பூவுலகையும் வானத்தையும் அதில் வாழும் உயிரினங்களையும் காத்து இரட்சிப்பதற்கே என்பது புரிகின்றது அல்லவா ? மூன்று அடி உயரமுள்ள வாமனர் விஸ்வரூபம் எடுத்து இந்த உலகைக் காக்க வல்லவர் என்றால் முப்பதடி உயரமுடைய வானமுட்டிப் பெருமாள் நமக்கு கருணை புரியத் தயங்குவாரா என்ன ? பெருமாள் கருணைக்கு மற்றோர் உதாரணமாகத் திகழ்வதே தேவர்மலை ஸ்ரீநரசிம்ம மூர்த்தி ஆவார். பதினைந்து வருடங்களுக்கு முன்னால் சற்குருவே ஒரு அடியாரை அனுப்பி தேவர்மலை ஸ்ரீநரசிம்மரை போட்டா எடுத்து வரும்படிக் கூறினார். பொதுவாக, சற்குரு இவ்வாறு மூலவரின் புகைப்படங்களை எடுக்க விரும்புவதில்லை என்றாலும் ஏதோ ஒரு காரணத்திற்காகவே இந்த படத்தை எடுக்க சற்குரு விரும்புகிறார் என்று நினைத்து அந்த அடியார் தேவர்மலைக்கு சென்றார். புதிதாக வாங்கிய ஒரு ப்ளாஷ், பாட்டரிகள் சகிதம் தேவர்மலையை அடைந்தது அடியார் குழு. அப்போது பொறுப்பில் இருந்த ஒரு சிறுவனான அர்ச்சகரும், “நீங்கள் தாராளமாக சுவாமியை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதுவரை எவரும் சுவாமியை படம் எடுத்துப் பார்த்ததில்லை. காரணம் அவர்கள் ப்ளாஷ் வேலை செய்யாது. நேற்றுக் கூட ஒருவர் ..... பத்திரிகையிலிருந்து வந்து படம் எடுக்க முயன்றார். ஆனால் ப்ளாஷ் வேலை செய்யவில்லை,” என்று கூறினான். அடியாருக்கோ ஒரே ஆச்சரியம். யோசித்துக் கொண்டே சரி நம்முடைய ப்ளாஷ் கதையைப் பார்ப்போம் என்று அதைப் பார்த்தால் என்ன ஆச்சரியம். ப்ளாஷ் வேலை செய்யவில்லை. புது மெட்ஸ் ப்ளாஷ், புது பாட்டரிகள். சுவாமியின் லீலை புரிந்தது, சற்குருவின் லீலை ஓரளவு புரிந்தது. சுவாமியை தரிசனம் மட்டும் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார் அடியார். சரியாக ஒரு கிமீ சென்றவுடன் பார்த்தால் ப்ளாஷ் அருமையாக வேலை செய்தது. ஆனால், உடன் வந்த அடியார்கள் வற்புறுத்தினாலும் சுவாமியின் சக்தியை சோதிக்க விரும்பாமல் தன்னுடைய யாத்திரையைத் தொடர்ந்தார் அந்த அடியார். சில நாட்கள் கழித்து சற்குருவைச் சந்தித்து நடந்தவற்றைக் கூறியபோது சற்குரு சிரித்துக் கொண்டே, “அடியேன், நரசிம்ம சுவாமியைப் பற்றித் தெரிந்து கொள்வது பெரிய சுவை கிடையாது. நீங்களும் சுவாமியின் சக்தியை உங்களுடைய சொந்த அனுபவத்தின் மூலம் தெரிந்து கொள்வதே நிலைத்து நிற்கும் என்பதற்கே இந்த இறை ஏற்பாடு,” என்று தன்னுடைய செயலுக்கான காரணத்தை விளக்கினார். அத்துடன் சற்குருவின் திருப்பணி முடிந்து விட்டது என்று நாம் நினைப்பது இயற்கையே. ஆனால், இந்த சம்பவத்திற்குப் பின்தான் சற்குருவின் வானளாவிய கருணை வெள்ளம் பாய்ந்தது என்பதை விளக்குவதே நரசிம்மர் வரலாறு. ஆம், பல வருடங்கள் கழித்து அத்தி வரதர் பக்தர்களின் தரிசனத்திற்காக மலரும் போதுதான் தேவர்மலை நரசிம்மரின் திருஉருவமும் புகைப்படத்தில் பதிய அதைப் பக்தர்கள் தரிசனத்திற்காக இங்கு அளித்துள்ளோம். இது தேவர்மலை நரசிம்ம சுவாமிக்கு மட்டுமே பொருந்தும் வரலாறு என்பது கிடையாது. இவ்வுலகில் நாம் காணும் ஒவ்வொரு இறை தரிசனத்திற்கும் தேவர்மலை நரசிம்மரின் வரலாறு, அத்தி மலை பெருமாளின் தரிசனம், வானமுட்டிப் பெருமாளின் காட்சி பொருந்தும் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய பெருமாள் கருணா மகாத்மியமாகும்.
சௌந்தர்ய லஹரி சுலோகத்தை திருக்கயிலாயத்திலிருந்து பெற்று வந்தார் ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் என்பது நாம் அறிந்ததே. ஸ்ரீஆதிசங்கரர் பெற்று வந்ததோ ஆயிரம் சுலோகங்கள். ஆனால் பூலோக மக்களோ கிட்டத்தட்ட 100 சுலோகங்கள் மட்டுமே அறிவர். காரணம் வழியில் அதிகார நந்தி, தேவர்கள், தேவ கணங்கள் போன்ற பலரும் இந்த சௌந்தர்ய லஹரியிலிருந்து பல சுலோகங்களை “பிடுங்கி” கொண்டதால் மிஞ்சிய சுலோகங்களோடு பூமிக்கு திரும்பினார் ஆதிசங்கரர் என்று விளையாட்டாகக் கூறுவார் நம் சற்குரு. அவர் விளையாட்டாகத் தெரிவிக்கும் இந்த தெய்வீக அனுகிரகங்களுக்குப் பின்னணியாக அமைந்த சித்தர்கள், மகான்களின் உழைப்பு நாம் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் ஓரளவு புரிய வரும். உதாரணமாக ஸ்ரீஆயுர்தேவி வழிபாட்டை பூமிக்கு கொண்டு வருவதற்காக சற்குரு பதினைந்து வருடங்கள் ”மெத்தை மேல் போராட வேண்டி வந்தது”, என்று உரைப்பார். இதே போல தேவர்மலை ஸ்ரீநரசிம்ம பெருமானை புகைப்படத்தில் பதியச் செய்து பக்தர்களுக்கெல்லாம் வழங்க நம் சற்குரு மேற்கொண்ட முயற்சியை சற்குருவே அறிவார். எது எதையோ பகுத்தறிவு என்கிறோம். இந்த நவீன உலகில் புகைப்படத்தில் எழுந்தருள விரும்பாத பெருமாள் சக்திகளை தொடர்ந்து பிரார்த்தனை செய்து தன்னுடைய அன்பின் வற்புறுத்தலால் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு அடியாரும் தேவர்மலை பெருமாளின் திருஉருவத்தைக் கண்டு தரிசனம் செய்ய வழிவகுத்த சித்தர்களின் கருணையை உணர்வதே உண்மையான பகுத்தறிவாகும். என்ன இருந்தாலும் உக்ரம் உக்ரமே என்ற வாக்கியப்படி தேவர்மலை ஸ்ரீநரசிம்மரின் உக்ர வேகத்திலிருந்து பக்தர்களைக் காப்பதற்காக மூன்றாம் பிறை தரிசன கருணை இங்கு பின்னணியாக அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மூன்றாம் பிறை தரிசனம் பெற்று ஸ்ரீயோக நரசிம்மரை தரிசனம் செய்வதால் கிட்டும் பலன்கள் அமோகம்.
காட்சி மட்டுமல்ல சாட்சியும் அவனே
தில்லையாடி
பெருமாளின் கருணைக்கு மற்றோர் சான்றாகத் திகழ்வதே தரணி கூபம் என்ற அரிய தெய்வீக சக்தி. அத்தி வரதர் லட்சம் பக்தர்களுக்குக் குறையாமல் தினமும் தரிசனம் அளித்து வந்தாலும் வியாதியஸ்தர்களும், கர்ப்பிணிகளும், வயோதிகர்களும் அத்தி வரதரின் தரிசனத்தைப் பெற முடியாதல்லவா ? கருணைக் கடவுள் பெருமாள் இதை அறியாதவரா ? அத்தி வரதர் எழுந்தருளிய ஒரு மண்டல காலத்திற்கு இப்புவியில் திகழும் சக்திகளில் ஒன்றே தரணி கூபம் என்பதாகும். எந்த இறைத்தலமாக இருந்தாலும் அங்கு வர்ஷிக்கும் மழைத் துளிகள் இந்த தரணி கூப சக்திகளைப் பெற்றிருக்கும் என்பதே அத்தி வரதர் அளிக்கும் அனுகிரக சக்தியாகும். இந்த சக்தியை திருத்தலங்களில் எவர் வேண்டுமானாலும் பெறலாம் என்றாலும் இந்த அனுகிரக சக்திகள் 24 மணி நேர காலத்திற்கு மட்டுமே மனித உடலில் தங்கும் என்பதால் இந்த கால அளவை நீட்டித்து மற்றவர்களுக்கும் அனுகிரகத்தை வழங்க எண்ணுவோர்கள் இவ்வாறு திருத்தலங்களில் தரணி கூப சக்திகளை மழை ரூபமாகப் பெற்ற 24 மணி நேரத்திற்குள் அன்னதானம், வஸ்திர தானம், பொன் தானம் போன்றவற்றை நிகழ்த்துவதால் ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனப் பலாபலன்கள் மற்றவர்களும் பெற ஒரு கருவியாக இருப்பதால் இந்த அரிய தரணி கூப சக்திகளை பக்தர்கள் தங்கள் உடலில் நீண்ட காலம் தேக்கி வைத்துக் கொள்ளலாம். ஆயுள் விருத்தியை அளிப்பதுடன் அரிய லட்சுமி கடாட்ச சக்திகளையும் அள்ளித் தருவதே இந்த தரணி கூப சக்திகளாகும். அத்தி வரதர் அருளும் தரணி கூப அனுகிரக சக்திகளை சாதாரண மக்களும் பெற்று இனிது வாழ அருள்புரியும் மூர்த்தியே தில்லையாடி மகாவிஷ்ணு ஆவார். இவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடைய மூர்த்திகளின் அனுகிரகங்களை நாமறிய அருள் வழங்கும் அண்ணலே நம் சற்குரு என்பது தற்போது புலனாகின்றது அல்லவா ? பல வருடங்களுக்கு முன் தண்ணீர் தட்டுப்பாடு என்ற ஒன்றை மக்கள் கனவிலும் கருதாத சமயத்தில் திடீரென நம் சற்குரு ஆலயங்களில் நிறைவேற்றிய உழவாரப் பணியை நிறுத்திவிட்டார். பலரும் இது பற்றிக் கேட்டபோது, “தற்போது நாம் திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு ஆஸ்ரம வளாகத்தில் அன்னதானம் அளிக்கிறோம். இதற்கு நம் அடியார்களே உடல் சிரமம் பாராது சேவை செய்கின்றனர். ஆனால், அவர்களுக்கும் வயதாகிக் கொண்டே போகிறது, ஓய்வு தேவை என்பதால் சம்பளம் கொடுத்து ஆட்களை நியமித்து அவர்கள் மூலம் அன்னதானம் வழங்க அடியேன் ஏற்பாடு செய்கின்றேன். இதற்காக சமையல்காரர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபடும் அடியார்கள் திருக்கோயில்களில் உழவாரப் பணி ஆற்றிய பலனைப் பெறுவார்கள்,” என்று கூறினார். உழவாரத்திற்கும் சமையல்காரர்களுக்கும் முடிச்சுப் போடும் நம் சற்குருவின் மகிமை தெரிந்தால்தான் தரணி கூபம் என்ற சக்திக்கும் அத்தி வரதருக்கும் ஆடி தியானத்திற்கும் உள்ள தொடர்பு புரிய வரும்.
முடம் முடம் அல்ல |
கை, கால்கள் முடமாகி நகர முடியாது தன் வேலையைத் தானே செய்ய முடியாமல் இருக்கும் சுதந்தரமற்ற ஒரு நிலையே முடவர்கள் நிலையாகும். இத்தகைய கொடுமையான நிலைக்கு பலரும் தள்ளப்படுவர் என்பதை தம் தீர்க தரிசனத்தால் உணர்ந்த அத்தி வரதர் முடவர்களுக்கு அருள்வதற்காகவே தன்னுடைய இடது கால் தீயில் கருகிப் போகும் முட நிலையை ஏற்றுக் கொண்டார். உடல் நிலையில் மன பீதியில் முடங்கிக் கிடக்கும் அனைவரும் அத்தி வரதரின் தரிசனம் பெறுதலால் அவர்கள் இயலாமை நீங்கி அவர்களும் சமுதாயத்தில் நன்மதிப்பை பெறுவர் என்பது உறுதி. குருடர்கள், செவிடர்கள், ஊமைகள் என பிறவிலேயே ஊனம் உள்ளவர்களும் ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனத்தால் நற்பலன் பெறுவார்கள். இத்தகையோர் முன்னேற்பாடாக தில்லையாடியில் தனித்தருளும் ஸ்ரீசனீஸ்வர பகவானை தரிசனம் செய்து எள் கலந்த முறுக்கு, சீடை, நாவல் பழம். கருப்பு ஆடைகள், கைத்தடி, சக்கர நாற்காலிகள் போன்றவற்றை தானமாக அளித்தலால் ஸ்ரீஅத்தி வரதரின் அருளைப் பெறுவார்கள்.
ஸ்ரீசனீஸ்வர பகவான் தில்லையாடி
ஸ்ரீஅத்தி வரதர் இடது காலில் இத்தகைய முடவ நிலையை ஏற்று அருள்புரிவதால் பெண்களுக்கு பெருமாளின் தரிசனம் பல அற்புதங்களை அனுகிரகமாக அருள்கின்றது. திருமணம் ஆகாத முடமான பெண்களும் திருமணமாகி பல இல்லற, சமுதாயக் கொடுமைகளை அனுபவித்து வரும் பெண்களும் பெருமாள் தரிசனத்தால் நற்பலன் பெறுவார்கள். அபூர்வமாக இத்தலத்தில் ஸ்ரீசனீஸ்வர பகவான் கிழக்கு நோக்கி அருள்வதால் முடம் நீங்கியவர்கள் தங்கள் புதுவாழ்வில் மலர்ச்சியைப் பெறுவார்கள். நோய் மட்டும் அல்லாது விபத்து, வெட்டுக் காயங்கள் போன்ற காரணங்களால் தங்கள் உடலுறுப்புகளை இழந்தவர்களும் இந்த பகவானை வேண்டி நற்பலன் பெறலாம். திருக்கடவூர் திருத்தலத்திற்கு குடமுழக்கு ஏற்பாடு செய்தபோது அக்குறிப்பிட்ட நாளில் இறைவன் அத்திருத்தலத்திற்கு எழுந்தருளாததை கண்ட அரண்மனை வேதியர்கள் செய்தியறிந்து தில்லையாடிக்கு வந்தபோது அங்கு இளங்கார முனிவர் இயற்றிய கும்பாபிஷேகத்திற்காக இறைவன் எழுந்தருளிய செய்தி அறிந்து மன்னனிடம் தெரிவிக்கவே மன்னன் இளங்கார முனிவரின் கை கால்களை வெட்டும்படி உத்தரவிட்டான். அவ்வாறு முனிவரின் கை கால்களை வெட்டியபோது அந்தக் காயங்களை இறைவனே ஏற்று முனிவரைக் காத்தான். விஷயமறிந்த மன்னன் இறைவனின் திருவடிகளைச் சரணடைந்தான் என்பது இத்திருத்தல புராண வரலாறு. எனவே சார்ந்தாரை, தன்னை நம்பியவர்களை காப்பவன் ஈசன் என்ற உண்மைக்கு இன்றும் சான்றாய், சாட்சியாய் நிற்பதே தில்லையாடி திருத்தலம். வெட்டுக் காயங்களால், வியாதிகளால் உறுப்புகளை இழந்தோர் தில்லையாடி காட்சி கொடுத்த நாதரையும், சனி பகவானையும் வேண்டி மூன்று இலைகள் கூடிய வில்வ இலைகளால் அர்ச்சித்து சிறப்பாக அத்தி வரதரின் தரிசனம் பெறுபவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி, பெருமகிழ்ச்சி பெறுவார்கள். பசும்பொன், பெண்ணாடகம், சுந்தர காஞ்சனம், ஸ்வர்ணகமலம், அபராஞ்சிதம் என்று தங்கத்தில் பல வகை உண்டு. இவற்றில் திருத்தலங்களில் நிகழும் திருமணங்களின்போது மூலவரின் சன்னதியில் 12 அடிக்குள் பொலிவதே மங்கள ஆடகம் என்ற சுவர்ண சக்திகள். இது சாதாரண கண்களுக்குப் புலப்படுவது கிடையாது. இந்த மங்கள ஆடக சக்திகளைப் பெற வேண்டுமானால் குறைந்தது 12 வேதியர்கள் 12 மணி நேரத்திற்குக் குறையாமல் தெளிவாக ஸ்வர பிழையின்றி வேதத்தை ஓத வேண்டும். இது தற்கால நடைமுறைக்கு சற்றும் சாத்தியப்படாததால் சற்குருமார்கள் இறை சன்னதிகளில் மாங்கல்ய தாரண சுப நிகழ்ச்சியை நடத்துமாறு வற்புறுத்துகிறார்கள். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களால் மங்கள ஆடக சக்தியைப் பெற முடியாத தம்பதியர் ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனம் பெறுவதால் பெருமாளின் அனுகிரகமாக இத்தகைய மங்கள ஆடக சக்திகள் வர்ஷிக்கப்படுகின்றன. ஊனக் கண்களால் இத்தகைய மங்கள சக்திகளை தரிசிக்க முடியாது என்றாலும் இந்தத் தெய்வீக தம்பதிகளிடையே தோன்றும் ஒருவித கவர்ச்சியே, பிரகாசமே இந்த மங்கள சக்திகளை உறுதி செய்யும் கிரணங்களாக அமைகின்றன. இந்த வசீகரமே உத்தம சந்ததிகளை உருவாக்கும் ஆடிகள் என்றால் மிகையாகாது.
அத்தி வரதரின் ஆனந்த யோகம் |
சாதாரண மனிதர்கள் உறங்கும்போது அவர்கள் மேல் ஒரு நல்ல பாம்பே ஊர்ந்து சென்றாலும் அதை உணர மாட்டார்கள். மகான்கள், அவதார மூர்த்திகளோ உறங்குவது போல் சயனம் கொண்டிருந்தாலும் அவர்கள் பிரபஞ்சம் அனைத்தையும் உணர்ந்த நிலையில் அனைத்துப் பொருட்களின் உள்ளும் வெளியும் உணர்ந்தவர்களாய் நிலைகொள்வார்கள். இதையே அறிதுயில் யோகம் என்று மேலோட்டமாக உரைக்கிறோம். பொதுவாக பெருமாள் மூர்த்திகள் இத்தகைய அறிதுயில் யோகத்தில் சயனம் கொண்டு பக்தர்களுக்கு அனுகிரக சக்திகளை வாரி வழங்குவார்கள். இத்தகைய அறிதுயில் யோக சக்திகள் விநாடிக்கு விநாடி மாறி அமைகின்றன என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நேற்று கால்கடுக்க நின்று வாங்கிய வாகனம் இன்று பழையது ஆகி விட்டது போல் தோன்றுகின்றது அல்லவா ? மனிதனின் இந்த தேவைகளுக்கு எல்லாம் ஆதாரமாக இருக்கும் தெய்வ மூர்த்திகளும் தங்களுடைய சயனக் கோல அனுகிரக சக்திகளை சதா மாற்றிக் கொண்டிருப்பதில் வியப்பென்ன ? இவ்வாறு பக்தர்களின் தரிசனத்திற்காக தற்போது எழுந்தருளிய காஞ்சி ஸ்ரீஅத்தி வரதர் குணமங்கள வல்லபாயம் என்ற சயனக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் வழங்குவதாக சித்த கிரந்தங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீஅனந்தசயன பெருமாள் நாச்சியார்கோவில்
ஆயம் என்றால் தாய், தோழி, வாய்ப்பு, வருமானம், ஆதாரம், பாதுகாப்பு என்றெல்லாம் பொருள் உண்டு. வல்லபாயம் என்றால் இத்தனை சக்திகளையும் அனுகிரகமாக அருளக் கூடிய தெய்வம் என்று பொருள். குணமங்களம் என்றால் மேற்கூறிய அனுகிரகங்கள் எல்லாவற்றிலும் நல்ல சக்திகளையே அளிக்கும் மங்களத் தன்மை. இப்போது இவை அனைத்தையும் ஒன்றாய்க் கூட்டிப் பார்த்தால் அது ஒரு தூசியின் தூசி அளவு அத்தி வரதரின் ஆனந்த கோல சக்திகளின் விளக்கமாக அமையும். வரதராஜனின் இந்த யோகம் அமைவதோ அனந்த நாகத்தின் மேல். அனந்தம் என்றால் எல்லையில்லாதது, எப்போதும் ஆனந்தத்தை அளிப்பது, எல்லையில்லா துன்பத்திலிருந்து அடியார்களைக் காத்து விடுதலை அளிப்பது, பிறப்பு இறப்பு என்ற சக்கரத்திலிருந்து முக்தி நல்குவது, எல்லையில்லா அமைதியைப் பொழிவது என்றெல்லாம் பெருகிக் கொண்டே செல்லும் பொருளை வர்ஷிக்கும். அனந்த சயனமும் பெருமாளின் அனுகிரகம் தானே. இவ்வாறு அத்தி வரதரின் சயனக் கோல பெருமைகளை விவரித்துக் கொண்டே செல்லலாம் என்றாலும் இந்த அருமை பெருமைகளை எல்லாம் மற்றவர்களுக்கும் அன்னதானம் மூலம் பகிர்ந்தளிப்பதுதானே உத்தம பெருமாள் பக்தனின் சீரிய பணி. குணம் என்றால் பெருகுதல், பெருக்குதல் என்று பொருள். இவ்வாறு நொடிக்கு நொடி பெருகும் பெருமாளின் மங்கள சக்திகளை மற்றவர்களுக்குப் பெருக்கி அளிப்பதுதானே அடியார்களின் பணியாக இருக்க முடியும். இத்தகைய யோக சக்திகளை நன்முறையில் பெருக்கி உரியவர்களுக்கு அர்ப்பணித்தல் என்பது குருவருளால் மட்டுமே சாத்தியம் என்பதால் இந்த சக்திகளை குருமங்கள வல்லபாயம் என்றும் அழைப்பதுண்டு. ஆயிரமாயிரம் ஆண்டுகள் சென்றாலும் இத்தகைய குருமங்கள ஆண்டில் மட்டுமே (2019 = 3+9. 9=3x3) இத்தகைய குருமங்கள சக்திகள் பொலியும் என்பதை நினைவில் கொள்ளவும். ஸ்ரீஆயுர்தேவியின் மகிமை பற்றி ஒரு சிலரே அறிவர். இதை பூலோகத்தில் அனைவரும் அறியும் பொருட்டு பன்னெடுங்காலம் தீவிர பிரார்த்தனைகள் செய்து பூமி வாழ் மக்களுக்கு ஆயுர்தேவி வழிபாட்டை அறிவித்தார் நம் சற்குரு என்பதை ஏற்கனவே எடுத்துரைத்துள்ளோம். இத்தனை அரும்பாடு பட்டு அன்னையின் வழிபாட்டை பூமிக்குக் கொண்டு வந்தாலும் ஆயுர்தேவி படத்திற்கோ, வழிபாட்டிற்கோ எந்த உரிமையையும் வாங்க மறுத்துவிட்டார் நம் சற்குரு. அது பற்றிக் கேட்டபோது, “இறைவன் கருணை வெள்ளம், அவன் அடியேனிடம் அம்மா மகிமையைப் பற்றி கூறுவதற்கு ஒரு பைசா கூட வாங்கிக் கொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது அடியேன் எப்படி ராயல்டி பற்றி எல்லாம் நினைத்துப் பார்க்க முடியும்?” என்று தெளிவாக மறுத்து விட்டார்.
தலைமுறைகளைக் காக்கும்
பெருமாள் அனுகிரகம்
ஸ்ரீஆயுர்தேவியின் படம் வந்த சில தினங்களில் எல்லாம் அவற்றைக் காப்பி அடித்து பல பிரபல ஆஸ்ரமங்களும் ஸ்ரீஆயுர்தேவியின் படம், புத்தகங்களை வெளியிட ஆரம்பித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த ஆஸ்ரமத்தைச் சேர்ந்த சில அடியார்கள் நமது ஆஸ்ரமத்தில் ஆயுர்தேவி படத்தைக் காப்பி அடித்து போட்டு விட்டோம் என்று குறை கூறிச் சென்றதுதான். இது பற்றி நம் சற்குருவிடம் குறிப்பிட்டபோது சற்குரு வழக்கம்போல் சிரித்துக் கொண்டே, “சார், யார் யாரைக் காப்பி அடித்தது என்று உங்களுக்கே தெரியும். ஒரு வேளை அப்படி காப்பி அடித்திருந்தாலும் யார் நெஞ்சையோ .....யோ நாம் காப்பி அடிக்கவில்லை. அம்மாவின் புகழை யார் வேண்டுமானாலும் காப்பி அடிக்கலாம், உலகம் முழுவதும் அதை பரப்பலாம் தவறு கிடையாது,“ என்று சற்குருவுக்கே உரித்தான பாணியில் கலகலப்பை ஊட்டி காப்பி அடித்தல் என்றால் என்ன என்பது பற்றி தெளிவுபடுத்தினார் நம் சற்குரு. தவிர்க்க முடியாத காரணங்களால் ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனத்தை நேரில் பெற முடியாதவர்கள்
யா தேவி சர்வ பூதேஷூ
ஸ்ரீகுணமங்கள வல்லபாய ரூபேண சம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
என்று கூறி தியானித்தலால், அன்னதானம் அளித்தலால் பெருமாளின் விசேஷமான அட்சய சக்திகளைப் பெறலாம். ஒரே ஒரு முறை ஸ்ரீஅத்தி வரத பெருமாளின் தரிசனம் பெற்றாலே தரிசனம் செய்பவரின் முந்தைய 40 ஆண்டுகள், பிந்தைய 40 ஆண்டுகளைச் சேர்ந்த 12 தலைமுறை பித்ருக்களும் குணமங்கள வல்லபாயம் என்ற சக்திகளைப் பெறுவார்கள் என்றால் பெருமாளின் வானளாவிய கருணையை விளக்க முடியுமா இறையடியார்களுக்கு பொற்றாமரைக் குள தீர்த்தம் கலந்த பிரசாதத்தால் பெருகும் குணமங்கள வல்லபாய சக்திகளை வார்த்தைகளால் விவரிக்கத்தான் முடியுமா ? இங்கு அடியார்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். எப்படி ஒரு சில நொடிகளே பக்தர்கள் பெறும் தரிசனம் பல தலைமுறைகளைச் சென்றடைகின்றது ? பல தலைமுறைகளாக அத்தி வரத பெருமாளை இராப் பகலாக வழிபட்டு வந்த நம் முன்னோர்களின் மகிமையால்தான் ஒரு சில நொடிகளாவது நாம் அத்தி வரதரின் தரிசனத்தைப் பெறுகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. இவ்வாறு நமக்காக அல்லும் பகலும் பிரார்த்தனை செய்த நம் மூதாதையர்களுக்கு அத்தி வரதரின் தரிசனப் பலனில் ஒரு பகுதி சென்று சேர்வதுதானே தர்மம். இவ்வாறு நம் மூதாதையர்கள் நமக்காக இறைவனிடம் தொடர்ந்து வேண்டி வருவதை நாம் அவ்வப்போது நினைவு கூற உறுதுணையாக நிற்பதும் பெருமாள் தரிசனப் பலன்களில் ஒன்றாகும். தங்கள் தாய் தந்தையரின் பெயரையே, உருவத்தையே அறியாத பலருண்டு. இவர்கள் எப்படி தங்கள் கோத்திரத்தின் பெயரையோ, கோத்ராதிபகளின் பெயரையோ அறிந்திருக்க முடியும். குறைந்தது 12 தலை முறைகளைச் சேர்ந்த தங்கள் மூதாதையர்களின் பெயர்களைக் கூறி தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்பதே விதி. கோத்திர ரிஷியையோ, பிரவர ரிஷியையோ அறியாத நிலையில் மூதாதையர்களைப் பற்றி எப்படி நினைக்க முடியும். இவ்வாறு தத்தம் மூதாதையர்களின் பெயர்கள், குலதெய்வம், கோத்ர ரிஷிகள் போன்ற தாம் அறியாத விஷயங்களை அறிய விரும்புவோர் காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் உள்ள கற்சங்கிலிகள் முன் அமர்ந்து தியானித்து வருதலால் நல்லோர் மூலம் இத்தகைய விவரங்களைப் பெற வாய்ப்புண்டு. நம் சற்குரு மணிக் கணக்தில் இந்த நூற்றுக் கால் மண்டபத்தில் உள்ள தெய்வ மூர்த்திகளுக்கெல்லாம் அபிஷேகம் இயற்றியபோது அவர்களிடம் முன் வைத்த பிரார்த்தனைகளில் இதுவும் அடங்கும். ஒரு கல் வளையத்திற்குள் மற்றோர் கல்வளையத்தைப் பொருத்தி சிற்பிகள் செய்த சாதனை கலைக் கூடம் அல்ல இது, பெருமாளின் அனுகிரகத்தை பக்தர்களுக்கு அளிக்கும் அடியார்களின் சிறு முயற்சியே இது. தியாகத்தில் பூத்துக் குலுங்கும் யோக மலர்கள் இவை.
மலையெனக் குவிந்த கர்மங்கள் |
பார்வையற்றோர், ஊமைகள், பைத்தியம் பிடித்த பெண்கள், அபலைப் பெண்கள், நிராதரவான விதவைகள், வியாதியஸ்தர்கள், சிறுமிகள் போன்ற பலரும் காமக் குற்றங்களுக்கு பலியாவது அனைவரும் அறிந்ததே. திரை மறைவில் இத்தகைய தவறுகள் அரங்கேறினாலும் அவற்றிற்குப் பொறுப்பு என்பது இவைகளுக்கு எல்லாம் சாட்சியான அரங்கநாதன்தானே. 40 வருடங்களுக்கு ஒரு முறையே அருளும் அத்தி வரதர் தரிசனம் எத்தகைய கொடுமையான தவறுகளுக்கும் பிராயசித்தம் அளிப்பதாக அமைகின்றது. ஆனால் அத்தி வரதரின் தரிசனம் பெறுவோர்கள் தாங்கள் இனி இத்தகைய தவறுகளைப் புரிவதிலை என்று மனதார விரும்பினால் மட்டுமே தவறுகளுக்கான பிராயசித்த வழிமுறைகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. எனவே அத்தி வரதரை தரிசனம் செய்த பின்னர் அன்னதானம், வஸ்திர தானம், மாங்கல்ய தானம், ஆபரணங்கள் தானம், நிலபுலன்கள் தானம் போன்ற எல்லாவகை தானங்களையும் நிறைவேற்றி பிராயசித்தம் பெறலாம். பொதுவாக இத்தகைய பிராயசித்தங்களைப் பெற எத்தனை பிறவிகள் தேவைப்படும் என்று கூற முடியாது. ஆனால் அத்தி வரதப் பெருமாளின் கருணையால் மனம் திருந்திய அனைவருக்கும் தான தர்ம வழிபாடுகள் அவரவர்க்குரிய கர்ம வினையைக் கழியும் வழிமுறைகளைக் காட்டுகின்றன. மலையெனக் குவிந்த கர்ம வினைகளும் பனியென மறையும் மாயத்தை ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனம் மூலம் மட்டுமே பெற முடியும்.
மலைபோல் கர்மங்களும்
பனிபோல் மறையுமே
ஒரு முறை உயர் மட்டத்திலுள்ள ஒரு அரசு அதிகாரி சற்குருவைக் காண வந்தார். அவர் வருவதற்கு சில நொடிகளுக்கு முன் ஸ்ரீஇடியாப்ப ஈசர் சற்குருவின் காதுகளில், “டேய், ஒரு பெரிய கர்ம மூட்டை வருதுடா, ஜாக்கிரதையா கவனி,” என்று கூறி விட்டு மறைந்து விட்டார். சற்குருவோ மிகவும் மரியாதையுடன் வந்தவரை வரவேற்று எதிரில் உள்ள சோபாவில் அமரும்படி கூறினார். அந்த அதிகாரியோ பெரிய தொப்பையுடன் இருந்ததால் ஒருவாறு சமாளித்து சோபாவில் அமர்ந்தார். தான் மிகவும் நல்லவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். சற்குருவின் கண் முன்னர் அந்த அதிகாரி செய்த 120 கொலைகள் தெளிவாகத் தெரிந்தன. தன் மகள் வயதே உடைய பெண்களிடம் அவர் புரிந்த காமக் குற்றங்களும் பளிச்சிட்டன. அனைத்தையும் அறிந்த சற்குருவோ, “உங்களைப் பார்த்தாலே எவ்வளவு நல்லவர் என்பது தெரிகிறதே,” என்று கூறவே வந்திருந்தவர் துணிந்து தன்னுடைய வரவிற்கான காரணத்தைத் தெரிவித்தார். அவருக்கு பதவி உயர்வு வேண்டும். ஆனால் அது முறையாக கிடைப்பதற்கு நீண்ட காலம் ஆகும். குறுக்கு வழியில் சென்று ஒரு பெரிய புள்ளியைக் கவனித்தால் உடனே பதவி உயர்வு கிடைத்து விடும். அதற்காக சற்குருவின் உதவியை அவர் நாடினார். சற்குரு சம்மதிக்கவே அருகிலேயே எங்கோ காத்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை தன்னுடைய மனைவி என்று சற்குருவிடம் அறிமுகப்படுத்தினார். அந்த பெண்ணிடம் விசாரித்தபோது, “சார், இந்த துரைக்காக பலரையும் திருப்திபடுத்தி எவ்வளவோ பதவி உயர்வு வாங்கிக் கொடுத்துள்ளேன். மேலும் இத்தகைய தவறுகளைத் தொடர முடியாது,” என்று கெஞ்சும் குரலில் கூறினாள். சற்குருவோ, “இந்த ஒரு முறை மட்டும், சார், விரும்பும் வண்ணம் நடந்து கொள், நல்லது நடக்கும்,” என்று அந்தப் பெண்ணிடம் கூறினார். நாட்கள் சென்றன. அந்த நபருக்கு பதவி உயர்வும் கிடைத்து விட்டது. அதற்காக நன்றி கூறுவதற்கு நம் சற்குருவைக் காண வந்தார். வழக்கம்போல் அவர் வருவதற்கு முன் ஸ்ரீஇடியாப்ப ஈசர் சற்குருவிடம், “போதும் அந்த கர்ம மூட்டையோட டீலிங், நீ மறஞ்சுடு,” என்றார். குருநாதரின் உத்தரவு கிட்டவே நம் சற்குரு அந்த அதிகாரியின் கண்களிலிருந்து மறைந்து விட்டார். நம் சற்குரு ஒரு மணி நேரம் விவரித்ததை இங்கு சுவையைக் குறைத்து சில வரிகளில் எழுத வேண்டியுள்ளது. இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியம் என்னவென்றால் 1979ம் ஆண்டு ஸ்ரீஅத்தி வரதர் அடியார்கள் தரிசனத்திற்காக எழுந்தருளிய போது மேற்கூறிய அதிகாரியும் காஞ்சிபுரத்தில் அத்தி வரதரின் தரிசன விழாவிற்கான ஏற்பாடுகளை மூன்று நாட்கள் நிறைவேற்றினார் என்பதே ஆகும். இந்த மூன்று நாள் திருப்பணிக்கே நம் சற்குரு அந்த “கர்ம மூட்டையில்” பாக்கியிருந்த கொலைகளையும் காம சரசங்களையும் சரி செய்ய வேண்டி வந்தது என்றால் ஸ்ரீஅத்தி வரதரை மனமார தரிசனம் செய்யும் அடியார்களுக்கு சற்குருவின் கர்ம பரிபாலனம் எந்த அளவிற்கு சிறப்புடையதாக இருக்கும் ?
விகாரி களையும் விகாரம் |
விகாரி, விகாரம் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனம் இந்த விகாரி தமிழ் வருடத்தில் அமைவதால் நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் ஆகிவிட்டோம். விகாரம் என்பதற்கு உருவம், மாற்றம் என்றெல்லாம் பொருள் உண்டு. எந்த பொருளுக்கும் நிரந்தரத்தை அருளி அது மறையாமல் காப்பதே அம்ருதம் என்னும் இறைசக்தி. இதை அருள்பவளே அன்னை. ஆனால் அன்னை என்பவள் தானளிக்கும் பால் என்னும் ஷீர சக்தியால் மட்டும் இதை அளித்துவிட முடியாது என்பதால் தாய்மார்கள் எப்போதும் பஞ்சாட்சரத்தை ஜெபித்த வண்ணம் இருக்கும்படி அக்கால பெரியோர்கள் வற்புறுத்துவார்கள். நமசிவாய என்ற பஞ்சாட்சரமே உண்மையான, நிரந்தரமான அமிர்த சக்தி. மாணிக்க வாசகரும் இந்த உண்மையை உணர்ந்தே நமசிவாய வாழ்க என்று திருவாசகத்தை ஆரம்பித்து அடியார்களுக்கு அமிர்த சக்திகளை ஊட்டும் ஒரு சிறு முயற்சியில் ஈடுபட்டார். அந்தப் பெருந்தகையின் சிறு முயற்சி பெரும்பலன்களை அளிக்க வேண்டும் என்று விரும்புவோர் சிவபுராணத்தை வாய் விட்டு ஓதிக் கொண்டே திருஅண்ணாமலையை கிரிவலம் வருதலால் அமிர்த சக்திகளை தாங்கள் பெறுவதோடு மட்டுமல்லாமல் இந்த அமிர்தமய ஸ்வர வார்த்தைகளைக் கேட்கும் பாக்கியம் பெற்றோர் அனைவரும் அமிர்த கலை சக்திகளைப் பெறுவார்கள்.
ஸ்ரீகிருஷ்ண லீலைகள் காஞ்சிபுரம்
முதலில் இந்த அமிர்த சக்திகளைப் பெற்றால்தான் ஸ்ரீஉண்ணாமுலைத்தாய் அருளும் அபீதகுஜம் என்னும் உண்ணாமலே இறைவனின் அமிர்த சக்திகளைப் பெறும் வழிமுறைகளைப் பெற முடியும். ஒரு லட்சம் முறை திருஅண்ணாமலையை வலம் வந்த ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் இத்தகைய அபீதகுஜம் என்னும் அமிர்தசக்திகளையே தன்னுடைய தரிசன பலன் சக்திகளாக திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அளித்து அருள்புரிந்தார் என்பது சித்தர்கள் கூறும் இரகசியம் ஆகும். சுவாமிகளின் ஜாதகத்தில் லக்னாதிபதியான குரு ஐந்தில் அமைவதும், சுக்ரன் மூன்றில் நிலைகொள்வதும், அமிர்த சக்தியை அளிக்கும் சந்திர பகவான் பத்தில் எழுந்தருளி இருப்பதும் இத்தகைய அபீதகுஜ சக்திகளை அருளும் தன்மையாகும். ஆனால் இத்தகைய அமிர்த சக்திகள் குடிகொள்ளும் நிலையத்தைப் பற்றி தவறான எண்ணங்கள் எழுவதை தற்கால சூழ்நிலைகளில் தவிர்க்க முடியாது என்பதால் ஸ்ரீஅத்தி வரதர் தரிசனத்தில் இத்தகைய விகார எண்ணங்களைக் களையும் சுகீர்த்தி என்ற சக்திகளை அருள்கின்றார். இதன் பலனால் மாயத் தோற்றங்களால் எழும் காம, மோக எண்ணங்களிலிருந்து பக்தர்கள் காக்கப்படுவார்கள். படத்தில் அளித்துள்ள சுகீர்த்தி சக்கரத்தின் கீழே ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் பத்மாசன கோலத்தில் அமர்ந்து கிருஷ்ண பகவானின் லீலைகளை தரிசித்து வருதலால் அவரவர் ஜன்ம நட்சத்திரத்தின் வழிபாடாக இந்த சுகீர்த்தி சக்கர வழிபாட்டுப் பலன்கள் அமைந்து பக்தர்கள் பெண்களைப் பார்க்கும் கண்ணோட்டத்தில் சிறந்த மாற்றங்கள் நிகழும். இத்தகைய மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைவதே ஸ்ரீஅத்தி வரதர் அருளும் சுகீர்த்தி சக்திகளாகும். விகாரி என்ற குரு சக்திகள் மிளிரும் 2019ம் ஆண்டில் அத்தி வரதரின் தரிசனம் மலர்வது மட்டுமல்லாமல் சற்குரு தன் தூல உடலை மறைத்து திருஅண்ணாமலை ஜோதியாய் அருள்கடாட்சம் வீசுவதும் இந்த 12ம் குரு ஆண்டில்தான் என்பதும் நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய குரு மகாத்மியமே.
ஜோதி ஜோதி ஜோதி
சுகீர்த்தி ஜோதி சுபிட்சமாய் சுபமாய் வாழ
சுடர்மிகும் சுபமங்கள ஜோதி
என்று அவரவர் வீடுகளில் ஐந்து முக தீபங்களை ஏற்றி மேற்கண்ட ஜோதி துதியை ஓதி வந்தால் பெண்களைப் பார்க்கும் பார்வையில் ஒரு மாற்றத்தைக் காணலாம். ஆரம்பத்தில் பெண்களைக் காணும்போது தோன்றும் மாயையை மறைந்து தங்கள் உடலைச் சூழ்ந்துள்ள ஒளி வட்டத்தையும் காணும் அளவிற்கு இந்த ஜோதி வழிபாடு பரிமாணம் கொள்ளும். இதற்கு ஆரம்பம் ஸ்ரீஅத்தி வரதரின் ஆனந்த தரிசனமே.
இவ்வாறு அனைவர் உள்ளங்களில் எழும் அனைத்து விதமான விகார எண்ணங்களையும் களையும் கருணா மூர்த்தியே ஸ்ரீஅத்தி வரத விகாரி ஆவார். ஒருவர் தான் ஆண் என்றோ பெண் என்றோ நினைப்பதும் ஆழ்நிலை தியானத்தில் தோன்றும் ஒரு விகாரமே. இந்த விகார எண்ணத்தைக் களைவதற்காகவே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் நிர்விகல்ப சமாதியில் நிலைக்கும் முன்னர் நிர்வாணமாக அமர்ந்து பூநூலை கூடக் கழற்றி வைத்தார் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த உச்ச நிலை தியானத்திற்கு பக்தர்களைத் தயார் செய்வதும் அத்தி வரதர் மாண்பே. ஒரு பக்தருக்கு நிர்விகல்ப சமாதி நிலையைக் கூட்டவே தோத்தாபுரி நர்மதா நதிக்கரையில் 40 ஆண்டு காலம் கடுமையான தவமியற்ற வேண்டி வந்தது என்றால் லட்சோபலட்சம் பக்தர்களுக்கு இத்தகைய சமாதி நிலையை அனுகிரகமாக அளிக்க சித்தமாக இருக்கும் அத்தி வரதர் அமிர்தசரர் திருக்குளத்தில் ஆற்றிய தவம் எத்தகைய கடுமையாக இருக்கும் ?
சாமச்யுத இசை மண்டபம் |
ஒரு நூறு பேர் ஒரு இடத்தில் கூடினால் அங்கு எவ்வளவு குப்பை சேரும் என்பது நாம் அறிந்ததே. அவ்வாறு இருக்க லட்சக் கணக்கில் பக்தர்கள் கூடும் திருவிழாக்களில் குப்பை கூளங்கள் சேர்வது என்பது தவிர்க்க முடியாததே. இதை அறியாதவர்களா நம் முன்னோர்கள். இத்தகைய குப்பை கூளங்களையும், தேவையில்லாத வார்த்தைகளையும், ஏக்கப் பார்வைகளையும் களையும் மன்றமாகத் திகழ்வதே ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் அமைந்துள்ள சாமச்யுத இசை மண்டபம் ஆகும். மதுரை, சிதம்பரம், திருஅண்ணாமலை, ஸ்ரீரங்கம் போன்று லட்சக் கணக்கான பத்கர்ள் கூடும் இடங்களில் இத்தகைய இசை மண்டபங்கள் அமைந்திருக்கும். முற்காலத்தில் திருவிழா சமயங்களில் இத்தகைய இசை மண்டபங்களில் இறை கீர்த்தனைகளை இசையுடன் பாடுதல், நாட்டிய நடன நிகழ்ச்சிகளை நிறைவேற்றுதல் போன்ற நற்காரியங்களை நிறைவேற்றி வந்தார்கள். பொழுது போக்கிற்காக இத்தகைய இசை நிகழ்ச்சிகளை நம் முன்னோர்கள் நிகழ்த்தி வந்தார்கள் என்று அறியாமையால் பலரும் நினைப்பதுண்டு. லட்சக் கணக்கான மக்கள் கூடும் திருத்தலங்களில் குவியும் குப்பைகளை, குப்பையான எண்ணங்களைக் களையவே இத்தகைய ஏற்பாடு என்பதே நாமறிந்து கொள்ள வேண்டிய சுவையான விஷயமாகும்.
சாமச்யுத இசை மண்டபம்
காஞ்சிபுரம்
உதாரணமாக திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் லட்சக் கணக்கான மக்களுக்கு அன்னதானமாக பிரசாதம் வழங்கப்படும். அந்த பிரசாத வைபவத்தின் போது பயன்படுத்தப்படும் இலைகள் காய்ந்தவுடன் தீ வைத்து கொளுத்தி சுற்றுப்புறத்தை அடியார்கள் தூய்மை செய்வார்கள். அச்சமயங்களில் சில பிரசாத இலைகள் மட்டும் ஒன்று சேர்ந்து சிறு சிறு சுழல்களாக மாறி சுற்றிச் சுற்றி மேலே எழுந்து வானில் மறைந்து விடும். அந்த பிரசாத இலைகள் மீண்டும் பூமிக்கு வராது. காரணம் அவை மகான்கள், யோகிகள், சித்தர்களின் தூய கரம் பட்டவையே. இத்தகைய காட்சிகளைக் கண்டு ரசித்த அடியார்கள் ஏராளம். அது போல் அத்தி வரதரை தரிசனம் செய்யும் பூமியிலுள்ள பக்தர்கள் என்றல்லாமல் மற்ற லோகங்களிலிருந்தும் எண்ணற்றோர் வருகை தருவர். அவர்கள் தங்கள் ஒளி உடம்பை மறைத்துக் கொண்டு சாதாரண மனிதர்கள் வடிவிலேயே வரதரின் தரிசனத்திற்காக வருவதுண்டு. அவர்கள் பயன்படுத்திய தண்ணீர் புட்டிகள், இலைகள், காகிதப் பைகள் போன்றவை அவர்கள் தரிசனத்திற்குப் பின் இவ்வாறு காற்று போன்ற சாதனங்களால் வானில் மறைந்து விடும். அவ்வாறு வானில் மறையும்போது யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதாக தகுதியுள்ள பல அடியார்களின் “குப்பைகளையும்” சேகரித்துக் கொண்டு சென்று விடுவர். இத்திருப்பணிகளை நிறைவேற்றும் கந்தர்வர்களையே நாம் சாமச்யுத கந்தவர்கள் என்று அழைக்கிறோம். சாமச்யுத இசை மண்டபங்களில் குறிப்பாக காஞ்சி அத்தி வரதர் திருத்தலத்தில் ஒரு மண்டல காலத்திற்கு அத்தி வரதர் தரிசனத்திற்குப் பின்னும் இத்தகைய சாமச்யுத சக்திகள் நிறைந்திருக்கும். சமூக நலம் பேணும் பக்தர்களும், இறையடியாகளும் இசைக் கருவிகளை வாசித்தல், நாலாயிர திவ்ய பிரபந்த கீர்த்தனைகளை ஓதுதல், தேவார திருவாசக பதிகங்களை ஓதுதல் போன்ற இசை நிகழ்ச்சிகளை இந்த மண்டபத்தில் நிறைவேற்றுதலால் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள குப்பைகள் அகலும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஒரு முறை ஒன்பது வயது சிறுமி ஒருத்திக்கு இதயத்தில் பல பிரச்னைகள் தோன்றின. அரசு மருத்துவ மனையில் விசாரித்தபோது அவளுடைய இதயம் பலவீனம் அடைந்துள்ளது என்றும், அறுவைச் சிகிச்சை மூலம் மட்டுமே அந்தக் குறைபாட்டை நீக்க முடியும் என்றும், அத்தகைய வசதிகள் அப்போது அந்த அரசு மருத்து மனையில் இல்லை என்பதையும் தெரிவித்தார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் தங்கள் குருநாதர் சத்யசாய் பாபாவை பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு எதையும் அறியாதவர்களாய் இருந்தனர் அந்த பெற்றோர்கள். நாட்கள் சென்றன. திடீரென ஒரு நாள் விடியற்காலை யாரோ கதவைத் தட்டும் சப்தம் கேட்கவே கதவைத் திறந்து பார்த்தார்கள். வாசலில் படகு போன்ற கார் நின்றது. அதிலிருந்து இறங்கிய வெள்ளை வெளேரென்ற சீருடையில் இரு பணியாட்கள் வீட்டு வாசலில் நின்றனர். அவர்களைப் பார்த்தாலே அயல்நாட்டவர் என்று தெரிந்தது. தட்டுத் தடுமாறி அவர்கள் சம்பாஷணையிலிருந்து அவர்களை சத்யசாய் பாபா அனுப்பியதாகவும் அவர்கள் குழந்தையைக் காப்பாற்ற அவர் திருவுள்ளம் கொண்டதாகவும் அறிந்து கொண்டனர். பாபா என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அவர்கள் புத்துணர்வு பெற்று அக்குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் நேராக அந்தக் குழந்தையுடன் விமான நிலையத்திற்குச் செல்ல ஒரு பிரத்யேக விமானத்தில் அச்சிறுமி அமெரிக்கா புறப்பட்டாள். அமெரிக்காவை அடைந்த விமானத்திலிருந்து அக்குழந்தை மீண்டும் வேறு படகு காரில் பயணம் செய்து மருத்து மனையை அடைந்தது. தயார் நிலையில் இருந்த மருத்துவர்கள் அவளுக்கு வேண்டிய அறுவை சிகிச்சையை துரிதமாக நிறைவேற்றினர். ஒரு வாரம் கழித்து மீண்டும் இதே முறையில் பயணம் தொடர அந்தச் சிறுமி பூர்ண குணம் அடைந்து தாயகம் திரும்பினாள்.
இரட்டை தாழ்ப்பாளா
இரட்டை அனுகிரகமா ?
கேட்பதற்கு சினிமா கதைபோல் தோன்றும் இந்த நிகழ்ச்சியை பாஸ்போர்ட், விசா என்ற எதுவும் இல்லாமலே நிறைவேற்றிய கருணை பகவான் சாய்பாபாவையே சேரும். இத்தகைய புனர் வாழ்வு பெற்ற அந்தச் சிறுமி தற்போது குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்தாலும் சாய்பாபாவின் கருணையை கண்ணீருடன் நினைவு கூற மாட்டாளா, அத்தி வரதரின் சாமச்யுத மண்டபத்தில் பிரபந்த கீர்த்தனைகளை இசைக்க மாட்டாளா ? சாமச்யுத மண்டபத்தில் இசைக்கும் கச்சேரிகளைப் பற்றி ஒரு புராணம் எழுதலாம் என்றாலும் இங்கு சுவையான சில விளக்கங்களை மட்டும் அளிக்கிறோம். ஒலியை ஒலியால் சமன்செய்ய முடியாது என்றாலும் ஒலி அலைகளை ஒலி அலைகளால் சமன் செய்யும் வித்தையே சாமச்யுத மண்டபத்தில் நிகழ்வதாகும். ஒட்டக்கூத்தன் கச்சேரிக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற பழமொழி ஒன்று உண்டு. TCP IP என்ற நவீன protocol தத்துவம் போல் செயல்படுவதே இங்கு இசைக்கப்படும் கீர்த்தனைகளின் தன்மையாகும். ஒவ்வொரு ஸ்வர குழுமத்திற்கும் ஒரு தலையும் வாலும் உண்டு. இந்த தலையும் வாலும் ஒன்றாய்ச் சேர்ந்து காஞ்சிபுர எல்லையில் உள்ள அனைத்து சப்த அலைகளையும் சமன் செய்து விடும் என்பதே நாம் ஓரளவிற்கு புரிந்து கொள்ளக் கூடிய தாழ்ப்பாள் இரகசியமாகும். தலை வால் என்பதையே இந்த இரட்டைத் தாழ்ப்பாள் இரகசியங்கள் குறிக்கின்றன. இந்த தலை வால் தத்துவங்களை அமைத்துக் கொடுப்பதும், அவைகளை தேவையான முறையில் இணைத்து அருள்புரிவதும் சாமச்யுத கந்தர்வர்களின் அரும்பணி, அருட்பணிகளில் ஒன்றாகும். ஒட்டக்கூத்தன் என்பது இந்த சாமச்யுத கந்தர்வர்களின் தலைவனின் திருநாமமாகும். ஒட்டக் கூத்தன் என்றால் தலையையும் வாலையும் ஒட்டும், ஒன்றாய்ச் சேர்க்கும் இரகசியம் அறிந்தவன் என்பது பொருள். கந்தர்வ லோகம், கந்தர்வர்கள் என நம் பகுத்தறிவுக்கு எட்டாத நிலையில் இருக்கும் கந்தர்வர்களின் ஒரு பகுதியான சாமச்யுத கந்தர்வர்களைப் பற்றி அறிந்து கொள்வது மனித நிலையில் சாத்தியம் இல்லை என்றாலும் காஞ்சிபுரம் போன்ற திருத்தலங்களில் விளங்கும் இசை மண்டபங்களில் இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்துவதாலும், பிரபந்த பாடல்களை ஓதுவதாலும் அத்திருத்தலங்களில் குவியும் குப்பையை அகற்றும் திருப்பணியை நிறைவேற்றியவர்கள் ஆவோம் என்பதை அறிந்தால் போதுமே. பல திருத்தலங்களிலும் நம் சற்குருவுடன் திருப்பணி இயற்றும் பாக்கியம் பெற்ற அடியார்களே இந்த சாமச்யுத பிரவாக ஒலி அனுகிரகத்தால் அத்தி வரதரை 1979ம் ஆண்டு தரிசனம் செய்தார்கள் என்ற உண்மை தற்போது அடியார்களுக்குப் புரிந்திருக்கும். பாஸ்போர்ட், விசா இல்லாமலே இதய நோயைக் குணமாக்கும் அனுகிரகம் இத்தகைய திருப்பணிகளின் பலனாக விளைவதே என்பதே நாம் அறிய வேண்டிய சுவை. லப் டப் என்ற இதய ஒலியும் இத்தகைய இரட்டைத் தாழ்ப்பாள் தத்துவத்தில் அமைவதால் இந்த இசையைத் தொடர்ந்து கேட்கும் மருத்துவர்களும், இந்த விஷ்ணு இசையை இலவச மருத்துவ முகாம்களிலும், இலவச மருத்துவ சேவையிலும் தொடர்ந்து கேட்கும் மருத்துவர்கள் சாமச்யுத கந்தர்வர்களின் அனுகிரகத்தை எளிதாகப் பெறுவார்கள். பொதுவாக மரணத்திற்குப் பின் ஆவி உடல் பிரயாணமானது இரைச்சல் மிகுந்தோ அல்லது அச்சம் தரும் அமைதியுடனோ நிகழ்வதுண்டு. இந்த லப் டப் என்ற ஒலி பிரவாகத்தை கேட்டு வந்த மருத்துவர்களின் ஆவி பிரயாணமானது இதமான முறையில் நிகழும் என்பதும் ஒரு சிறப்பாகும்.
பதினாறு தரும் பெருவாழ்வு |
மனித வாழ்வை தசா புக்தி அந்தரம் என்று காலப் பாகுபாட்டில் பிரிப்பதுபோல் ஸ்ரீஅத்தி வரதர் அருளும் ஒரு மண்டல கால அளவையும் ஆதி நிலை, இடைநிலை, பூரண நிலை என்று பிரித்து பெருமாளின் அனுகிரக சக்திகளை தெளிவுபடுத்துகிறார்கள் சித்தர்கள். அத்தி வரதர் எழுந்தருளும் ஒரு மண்டல காலத்திற்கு பெருமாளின் சக்திகளில் கற்பனைக்கு எட்டாத மாற்றம் நிகழ்வது இயற்கையே என்றாலும் மனிதர்களுக்குப் புரியும் வண்ணம் சில சக்தி மாற்றங்கள் பற்றி விவரிப்பதே சித்தர்கள் காட்டும் சுவையாகும். இதில் பெருமாளின் இடைநிலை அனுகிரகம் நிலவும் 16 நாட்களும் வாரத்தின் இடைநிலையான புதன் கிழமை அன்று தட்சிணாயன புண்ணிய நாளில் ஆரம்பமாவது அத்தி வரதரின் வரமே. ஆடி மாதம் என்பது சந்திரனின் ஆட்சி மாதமாகவும் அமைவதால் இந்த 16 நாட்களும் இதயத்திற்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளித்து இதய நோய்களை அகற்றுகின்றன. இதயத்தைச் சுற்றி அமைந்துள்ள 16 நாளங்களும் ஒவ்வொரு நாளும் ஒரு நாளமாக வலுப் பெறுகின்றன, சீரடைகின்றன. என்று எந்த நாளம் வலுப் பெறும் என்பது சித்தர்களே அறிந்த இரகசியம் என்றாலும் இந்த 16 நாட்களிலும் அத்தி வரதரின் தரிசனம் பெறுதலால் அனைத்து நாளங்களும் வலுப்பெற்று இதயம் முற்றிலும் நன்முறையில் இயங்க ஏதுவாகும். மனிதர்களின் கூட்டம் பெருகி உள்ள இந்த நாட்களில் 16 நாட்கள் தொடர்ந்து பெருமாளை தரிசனம் பெறுதல் சாத்தியமா என்று நீங்கள் எண்ணுவது இயற்கையே. 16 நாட்களும் கால் கடுக்க நின்று பெருமாளின் தரிசனத்தைப் பெற முடியவில்லை ஆயினும் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதாக காஞ்சிபுரத்தின் ஏதோ மூலையில் நின்று கொண்டோ சௌகரியமாக அமர்ந்து கொண்டோ ஸ்ரீவரதராஜ பெருமாளின் கோபுர கலசங்களில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து தரிசனம் செய்து வந்தாலே நீங்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ததாக உங்கள் இதயம் சொல்லும். பின் வேறென்ன வேண்டும் ? ஆடி மாதப் பிறப்பைத் தொடர்ந்து 16 நாட்களிலும் கீழ்க் கண்ட பலன்களை தரிசன அனுகிரகமாக அளிக்கிறார் ஸ்ரீஅத்தி வரதர். ஆனால் இதில் எந்த பலன்களை என்று வர்ஷிப்பார் என்பது பெருமாள் மட்டுமே அறிந்த இரகசியமாகும்.
என்றும் 16
1. துதிவாணி
2. வீரம்
3. விஜயம்
4. சந்தானம்
5. துணிவு
6. தனம்
7. மதி
8. தானம்
9. சௌபாக்கியம்
10. போகம்
11. அறிவு
12. அழகு
13. புதிதாக பெருமை
14. அறம்
15. குலம்
16. நோய் அகல பூண் வயது
பல வருடங்களுக்கு முன்பே பக்தர்கள் இத்தகைய செல்வங்களை எல்லாம் பெற்று வாழ 16 யாக குண்டங்கள் அமைத்து அருள் வளர்த்தார் நம் சற்குரு என்ற இரகசியம் உணர்ந்தோர் ஒரு சிலரே. மாங்காய் ஊறுகாயுடன் தயிர் சாதம் குறைந்தது 16 பொட்டலங்கள இந்த இடைநிலை 16 நாட்களிலும் அன்னதானமாக அளித்து வந்தால் இதய நோய்கள் அகல்வதுடன் மேற்கண்ட 16 விதமான அனுகிரகங்களையும் பெறலாமே. உதாரணமாக துதிவாணி என்றால் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனின் அனுகிரகமாகக் கிடைத்த பிரசாதமே என்று உணர்வதே, உணர்த்துவதே துதிவாணி ஆகும். வாணி என்றால் சரஸ்வதியின் நாமம்தானே. சரஸ்வதி தேவியின் கடாட்சம் இருந்தால் மட்டுமே ஒருவர் வாயைத் திறந்து எந்த மொழியில் எந்த வார்த்தையையும் கூற முடியும் என்பதே துதிவாணி உணர்த்தும் உண்மையாகும். இந்த 16 நாட்களிலும் ஸ்ரீமார்கண்டேய மகரிஷி எழுந்தருளி பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அத்தி வரதரின் தரிசனப் பலன்களாக நல்குகிறார். 16 என்ற வயதிற்கு மற்ற எந்த வயதிற்கும் இல்லாத ஒரு விசேஷ தன்மை, தனித் தன்மை உண்டு என்பதால்தான் ஸ்ரீமார்கண்டேய மகரிஷியை என்றும் 16 என்று போற்றுகிறோம். ஆங்கிலத்தில் கூட thirteen ஆதியாக nineteen இறுதியாக உள்ள டீன் வயதில் sixteen என்பதே நடுநாயகமாக இடைநிலை வயதாக விளங்குவது என்பதே அதன் சிறப்பாகும். பூண் என்றால் ஆபரணம். நோய் நெருங்காத உடல் வளமையே உண்மையான ஆரோக்யம், ஆபரணம். எந்த பக்தன் இந்த 16 வயதை முறையாக இறை நினைவுடன் கழிக்கிறானோ அவன் மார்கண்டேயரைப் போல் சிறப்படைவான் என்ற அனுகிரகமும் மேற்கூறிய 16 அனுகிரகங்களில் ஒன்றாகும். தான் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் பார்வையோ பருந்துபோல் தன்னுடைய காரியத்தில் பதிந்திருப்பதையே ஸ்ரீமார்கண்டேயரைச் சுற்றித் துதிக்கும் கருடனின் பார்வை குறிக்கின்றது. இத்தகைய கழுகு பார்வையே 16 வயதில் கிடைக்கும் ஒரு தெய்வீக அனுகிரகமாகும்.
மார்கண்டேய வைராக்யம் |
Sweet sixteen என்பது வாழ்வதற்கு இனிமையான வயது என்பது மட்டுமல்ல அந்த இனிமையான வாழ்வு அர்த்தம் கற்பிக்கும் வயதாக அமைய வேண்டுமானால் அந்த அனுகிரகத்தை அளிக்கக் கூடியவர் சற்குரு ஒருவரே என்ற இனிப்பிற்கு உரிய குருவின் அனுகிரகத்தை அளிப்பதும் இனிய பதினாறே. இத்தகைய இனிய பதினாறைத் தவற விட்டவர்கள் என்ன செய்வது என்ற கேள்வி எழுவது இயற்கையே. அனைத்துக் குழப்பங்களுக்கும் தெளிவு அளிப்பவர்கள் சித்தர்களே. இரண்டாவது 16 என்ற 32 வயதில் ஸ்ரீஅகத்தியர் அருளிய தேவாரத் திரட்டுப் பதிகங்களை ஓத ஆரம்பித்தலும், அவ்வாறு இறை கீர்த்தனைகளை ஓதிப் பெற்ற பலன்கள் தன்னையும் தன் குடும்பத்தையும் சென்றடைய குடுமி வளர்த்து, சிகை பராமரிக்க வேண்டிய வயதே 48 ஆகும். அடுத்த 16 வயது நிறைவில் இவ்வாறு பெருக்கிய ஆன்ம சக்தியை சமூகத்தின் நன்மைக்காக பகிர்ந்தளிக்க வேண்டியது பக்தர்களின் கடமையாகும். அடுத்த 16 என்ற சதாபிஷேக வயதிலோ பக்தனே கடவுளாக மாறி விடுவான் என்ற இனிய எதிர்பார்ப்பே சித்தர்களின் கொள்கையாகும். நமசிவாய வாழ்க என்ற பூரணமான ஐந்தாவது எதிர்பார்ப்பே மணிவாசகரின் கொள்கையும் ஆகும். இரண்டாம் பதினாறில் இணையடி சேர்ந்தவரே மணிவாசகர்.
இரண்டாம் 16ல் இணையடி
சேர்ந்த ஸ்ரீமணிவாசகப் பெம்மான்
கழுகுகளின் ஆயுள் 40 வருடங்கள் என்ற குறிக்கப்படுகிறது. 40 வயதில் கழுகுகளின் கண் பார்வை குறைவதால் அது இறையைத் தேட முடியாததால் மரணமடைகின்றது என்பது பொதுவான வழக்கு. உண்மையில் இருக்கும் வரை தன் குறிக்கோளைப் பசுமையாக வைத்துக் காக்க வேண்டும். அது முடியாதபோது தன் உயிரை இழப்பதே மேல் என்ற எண்ணம் உடைய கழுகுகளே அவை. சில கழுகுகளோ தங்கள் வயதை நீடித்து 70 வயது வரை வாழ்ந்து தங்கள் குறிக்கோளை நிறைவேற்றுகின்றன என்பதும் உண்மையே. அத்தகைய கழுகுகள் நாற்பது வயது அடைந்த பின் தங்கள் அலகுகளை தாங்களே உடைத்துக் கொண்டு அது வளர்வதற்காக காத்திருக்கின்றன. தியாகத்தின் பரிசாக அலகுகள் மட்டும் வளர்வதில்லை. கழுகுகள் இழந்த கூரிய கண் பார்வையும் திரும்ப இறையருளால் திருப்பி அளிக்கப்படுகின்றன. இத்தகைய புதுப்பிக்கப்பட்ட அனுகிரகமே ஸ்ரீஅத்தி வரதரால் அளிக்கப்படுகின்றது என்பது இப்போது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும். இதுவரை எப்படி தங்கள் வாழ்க்கை அமைந்திருந்தாலும் இனி தங்கள் வாழ்வு இறைவனை நோக்கி அமையும் இறைப் பணியாக அமைந்தால் கட்டாயம் அத்தி வரதரின் அருள் சுரக்கும் என்பதை சொல்லாமல் சொல்பவரே 40 வருடங்களுக்கு ஒரு முறை அமிர்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளும் அத்தி வரதர். 16 வயது நிறைந்த பின் மார்கண்டேயரின் உயிரைக் கவர்ந்து செல்ல எமபகவான் வந்து அக்குழந்தை மேல் பாசக் கயிற்றை வீசிய போது தன் உயிருக்குப் பயந்து இறைவனைக் கட்டித் தழுவவில்லை மார்கண்டேயர். தான் தனது என்று அறியாத, தனக்குவமை இல்லாத இறைவனைப் பிரிந்து வாழ மனமின்றியே மார்கண்டேயர் இறைவனுடன் ஒன்றியிருந்தார். இவ்வாறு இறைவனைப் பிரியாத மன நிலையையே மார்கண்டேய வைராக்யம் என்கிறோம். இத்தகைய உயர்ந்த வைராக்ய சித்தத்தை அளிக்கக் கூடியதே அத்தி வரதர் தரிசனமாகும். ஸ்ரீஆதிசங்கரரும் இத்தகைய உயர்ந்த எண்ணத்தில் பிரகாசித்ததால்தான் அவர் இரண்டாவது 16ல் இறையடி சுகம் பெற்றார். குரு தத்துவமே உலகில் உயர்ந்தது என்ற உண்மையை நிலைநாட்டிய நம் சற்குரு நாதரும் தன்னுடைய இரண்டாவது 16 வயதிலேயே ஸ்ரீஅத்தி வரதரை தரிசனம் செய்து பெருமாளின் தரிசனப் பலன்கள் அனைத்தையும் உலகத்தவர்க்கு அர்ப்பணித்தார் என்ற சுவையை ஏற்கனவே தெரிவித்துள்ளோம். காரைக்கால் அம்மையார், மாணிக்க வாசகர், ஆதிசேஷன், பதஞ்சலி போன்ற அடியார்களுடன் நடராஜ பெருமான் எழுந்தருளிய திருத்தலங்களில் அத்தி வரதர் எழுந்தருளிய இடைநிலை காலத்தில் அடர்த்தியாக சாம்பிராணி தூபம் இட்டு வருதலால் இந்தப் பூண் வயது புனிதம் என்ற அனுகிரகத்தை எல்லா தம்பதியரும் பெற்று வாழ துணை புரிந்தோர் ஆவோம். திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தன்னுடைய 16ம் வயதில் ஒன்பது வயதே நிரம்பிய தோத்திர பூர்ணாம்பிகையின் கரம் பிடித்து சீர்காழியில் வேள்வித் தீயில் மறைந்ததும் பக்தர்களுக்கு அளித்த பூண் வயது தியாக அனுகிரகமே.
பூண் வயது பூண்ட புனிதர் |
சீதைக்கும் ராமருக்கும் இடையே 108 திருமணப் பொருத்தங்கள் இருந்தன. தற்காலத்திலோ பத்துப் பொருத்தங்களே திருமணத்தின்போது பார்க்கும் பழக்கம் வந்து விட்டது. அந்தப் பத்துப் பொருத்தங்களிலும் யோனிப் பொருத்தம் ரஜ்ஜூப் பொருத்தம் என்ற இரண்டு பொருத்தங்கள் இருந்தாலே போதும் திருமணத்தை நடத்தி விடலாம் என்பதாகவே நம் சற்குருவின் வழிகாட்டுதல் அமைந்துள்ளது. காரணம் அக்காலத்தில் முறையான விரத அனுஷ்டானம், சந்தான பிராப்தி, விருந்தினர் உபசரிப்பு, தர்ம சேவை போன்ற பல நற்காரியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. தற்போது காமம் என்ற ஒன்றே பிரதானமாகக் கருதப்படுவதால் மேற்கூறிய இரண்டு பொருத்தங்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. ராம பிரானின் தோள் கண்டார் தோளே கண்டார் என்று கூறுவார்கள். அதாவது ராம பிரானின் ஏதாவது ஒர் அம்சத்தை ஆராய ஆரம்பித்தால் அதிலேயே மனம் லயித்து விடுவதால் மற்றொன்றைப் பற்றி மனம் நினைக்காது என்பார்கள். அந்த அளவிற்கு சிறப்புடையதே ராம காவியம். இம்முறையில் ராமரும் சீதையும் அத்தி வரதரை தரிசனம் செய்தபோது ராமபிரானுக்கு வயது 25, சீதையின் வயதோ 18. இருவருக்கும் உள்ள வித்தியாசம் 7 வருடங்கள். இருவர் வயதையும் சேர்க்க வருவதோ 7. இதையே பூண் வயது அனுகிரகம் என்று கூறுவார்கள்.
ஸ்ரீசீதா ராமர் வாலிகண்டபுரம்
ராம பிரானும் சீதையும் அயோத்தியிலிருந்து காற்றினும் கடுகிச் செல்லும் ஏழு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய இரதத்தில் பவனி வந்து அத்தி வரதரின் தரிசனம் பெற்றார்கள். அதனால்தான் அத்தி வரதர் என்ற திருநாமமும் ஏழெழுத்தில் பொலிகின்றதோ ? நம் சற்குரு அயோத்திக்கு யாத்திரை சென்றபோது இவ்வாறு வெள்ளைக் குதிரை பூட்டிய குதிரை வண்டியில் சவாரி செய்தார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. சீதா ராம பட்டாபிஷேகத்திற்கு முன்னரே ராம பிரான் இத்தகைய யாத்திரையை மேற்கொண்டார். ரிஷிகள், யோகிகள், மகான்கள், வானரங்கள், அசுரர்கள், தேவர்கள், நதிகள், காடுகள், மலைகள், மரங்கள், தாவரங்கள் என தான் சந்திக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் அத்தி வரதரின் பிரசாத அனுகிரகத்தை அளிப்பதற்காகவே ராமபிரான் தம்பதி சகிதம் இத்தகைய யாத்திரையை மேற்கொண்டார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம் ஆகும். தற்காலத்தில் இத்தகைய பூண் வயது தம்பதியர் அத்தி வரதர் தரிசனத்தைப் பெறுதல் அரிதிலும் அரிது என்றாலும் எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்ற ஏழு வகை சாதங்களை அன்னதானமாக அளித்தலால் இந்த பூண் வயது அனுகிரகத்தை மற்றவர்களும் பெற சித்தர்கள் கருணை புரிகின்றனர் என்பதே இனிப்பான செய்தியாகும். சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது சீதையைத் தேடுவதற்காக ராம பிரான் சுக்ரீவனின் உதவியை நாடினார். ராமரின் பராக்கிரமத்தை சோதிக்கும் பொருட்டு ஏழு ஆச்சா மரங்களை அம்பால் துளைக்க முடியுமா என்று கேட்டபோது ராமர் தன்னுடைய ராம பாணத்தால் அந்த ஏழு ஆச்சா மரங்களையும் துளைத்த செய்தி அனைவரும் அறிந்ததே. ஏழு மரங்களை துளையிடுமாறு சுக்ரீவன் வினவியதற்கு வாலி தன்னுடைய உயிரை ஏழு ஆச்சா மரங்களில் ஒளித்து வைத்திருந்ததால் வலிமையுடைய ஏழு ஆச்சாமரங்களை அம்பால் துளைக்கும் வீரனே வாலியை எதிர்க்க முடியும் என்பதால்தான் ராமருக்கு அந்தச் சோதனையை அளித்தான் சுக்ரீவன். சுக்ரீவனின் வேண்டுகோளை ஏற்று ராம பிரான் ஏழு ஆச்சா மரங்களை துளைக்க அவருக்கு உதவியது அத்தி வரதரின் பூண் வயது அனுகிரகமே என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். நிகழும் விகாரி வருடம் முழுவதுமே இத்தகைய பூண் வயது பூண்ட தம்பதியருக்கு பாத பூஜை செய்து உரிய மாங்கல்ய பொருட்களை தானமாக அளித்து வணங்குவதால் கிட்டும் தெய்வீக சக்திகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இத்தகைய தம்பதியர் சாட்சாத் சீதா ராமராகவே திகழ்வதால் இந்த உத்தம தம்பதிகளை எவ்வளவு வயதானவர்களும் வணங்கி இறையருள் பெறலாம்.
பார்த்திபன் கருணை பார்கவி கடாட்சம் |
பொதுவாக லட்சுமி கடாட்சம் என்றே கூறுவதுண்டு, பெருமாள் கடாட்சம் என்று அழைப்பது கிடையாது. கணவனுக்குக் கட்டுப்பட்டவள் மனைவி என்பது உண்மையாயினும் தாயினும் சாலப் பரிந்து ஊட்டுவதே லட்சுமி தேவியின் பெருங் கருணையாக இருப்பதால் லட்சுமி கடாட்சம் என்றும் பெருமாளின் அனுகிரகத்தை கருணை என்றும் அழைப்பதுண்டு. பக்தர்கள் அனைவரும் லட்சுமி கடாட்சம் பெறும் தகுதி உடையவர்களாயினும் அவர்கள் பூமியில் மனிதர்களாய்ப் பிறந்து விட்டாலோ அவர்களைக் கவர்வது பொன், போகம் என்று அமைந்து விடுவதால் இதை அறிந்த மகாலட்சுமி சுக்கிரனின் மகளாகப் பிறந்து பார்கவி என்னும் திருநாமத்துடன் வளர்ந்து பார்கவி என்னும் லட்சுமி கடாட்ச சக்திகளை அருளும் திருத்தலமே திருநாவலூர் ஆகும். பொதுவாக பக்தர்கள் இத்தகைய சுக போகங்களையே விரும்புவதால் அத்தி வரதரும் லட்சுமி கடாட்ச சக்திகளை குறித்த சில பக்தர்களுக்கும், செல்வத்தை விரும்பும் அனைவருக்கும் பார்கவ கடாட்சத்தையும் அளித்து அருள் புரிகிறார் என்பதே அத்தி வரதர் தரிசன மகாத்மியம் பற்றி சித்தர்கள் உரைக்கும் இரகசியமாகும். ஆனால் சற்குருவைப் பெற்றவர்கள் எத்தகைய கருணையைப் பெறுவார்கள் என்பதை அந்தந்த சற்குருவே முடிவு செய்வார்கள். இதை கணக்கிட உதவுவதே பூண் வயது இரகசியங்கள்.
ஸ்ரீபார்கவ லிங்கம் திருநாவலூர்
நமது சற்குருவிற்கு திருமணம் நிகழ்ந்த போது அவருடைய வயது 25, சற்குருவின் துணைவியார் வயது 14. இரண்டையும் கூட்ட வருவதோ 39, இவ்வருடத்திற்கு உகந்த எண் சூத்திரம். குடும்ப ஒற்றுமையைப் பற்றிக் கூறும்போது, “பிறக்கும்போதே வாயில் வைரக் கெண்டியுடன் பிறந்தவள்,” என்று தன் துணைவியாரைப் பற்றி சிறப்பித்துக் கூறுவார் நம் சற்குரு. Born with a silver spoon என்பது பழமொழி. வெள்ளிக் கண்டியே செல்வத்தைக் குறிக்கும் என்றால் வைரக் கண்டி பற்றி கேட்கவா வேண்டும். ஆனால் அந்த அளவு செல்வம் படைத்த சீமாட்டியை மணந்த சற்குருவோ அவளை வரட்டி தட்ட வைத்ததே குடும்ப அன்யோன்யத்திற்காக பாடுபட்ட சற்குருவின் பெருமையை புலப்படுத்தும். இது ஏதோ மனைவிக்கு இழைத்த கொடுமைபோல் மேலோட்டமாகத் தோன்றினாலும் சற்றே ஆழ்ந்து இதன் பின்னணியை நோக்கினால் பெருமாள் கருணையை நாம் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு சற்குருவின் பிரியநாயகி தயாரித்த வரட்டிகளை வைத்து சற்குரு என்ன செய்தார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வீக இரகசியம். அந்த பசு விரட்டிகளில் எல்லாம் தன்னுடைய ஐந்து கைவிரல்களையும் பதித்தார் சற்குருவின் தர்மபத்தினி. அவ்வாறு கை விரல்களை பதிக்கும்போது ஐந்தெழுத்து மந்திர சக்திகள் அந்த விரட்டிகளில் பதிந்தது ஒரு புறம் இருக்க சற்குருவின் தர்மபத்தினியின் உள்ளங்கையில் இருந்த பார்கவ ரேகை சக்திகள் அந்த விரட்டிகளில் எல்லாம் பதிந்தன. இந்த விரட்டிகளின் மேல் வேப்பங் குச்சிகளை எரித்து உண்டான அக்னியை எழுப்பி அதில் சாம்பிராணி தூபம் இட்டால் அத்திருத்தலங்களில் எல்லாம் இறைவனைத் தரிசிக்க வரும் அடியார்களுக்கு எல்லாம் பார்கவி கடாட்சம் என்னும் இலட்சுமி கடாட்சம் பெருகும். என்னே சற்குருவின் அறப்பணி ?! இன்றும் இத்தகைய பார்கவி சக்திகளை அளிக்க திருவுள்ளம் கொண்ட அடியார்கள் பசு வராட்டியில் தங்கள் மனைவிமார்கள் மூலம் உள்ளங்கை ரேகைகளை பதியச் செய்து வராட்டி தயாரித்து அதில் அக்னியை எழுப்பி சாம்பிராணி தூபம் எந்த திருத்தலத்தில் இட்டு வந்தாலும் அத்திருத்தலத்தில் பார்கவி சக்திகள் நிறையும், இல்லங்களில் செல்வம் கொழிக்கும் என்பதே நம் சற்குரு அடியார்களுக்கு அளிக்கும் கருணை வெள்ளமாகும். இத்தகைய வராட்டிகளை தயாரிக்கும் அடியார்கள் பார்கவ ரேகைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய அவசியம் கூட கிடையாது என்பதே சற்குரு அளிக்கும் தெளிவுரை. இவ்வாறு சற்குருவின் துணைவியார் பெற்ற பார்கவ சக்திகளை சற்குருவின் ஜாதகமே உறுதிப்படுத்தும். சற்குருவின் களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தை அவரது துணைவியாரின் லக்னமாகக் கொண்டால் ஐந்தாம் இடம் சுக்ரன் ஆட்சி கொள்ளும் ரிஷப ராசியாகின்றது. ஐந்தாம் அதிபதி ஆட்சி பெற்ற நான்காம் அதிபதியுடன் எழுந்தருள இந்த சங்கம கோலத்தை பத்தாமிடத்தில் எழுந்தருளியுள்ள பிரகஸ்பதியின் நேர்பார்வை பார்கவ சக்திகளை பூரணம் அடையச் செய்கின்றது. இந்தக் குரு மங்கள கந்தவர்வ யோகம் இதுவரை எவரும் கேள்விப்பட்டிராத ஓர் அற்புத அதிசயமே.
ஒரு முறை விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்களிடம் Theory of relativity என்பதைப் பற்றி எளிமையாக எல்லோருக்கும் புரியும்படிக் கூற முடியுமா என்று கேட்டபோது அவர், “உங்களை ஒரு எரியும் அடுப்பின் மேல் அமர வைத்தால் ஐந்து வினாடிகள் ஐந்து நிமிடங்கள் போல் தோன்றும், நீங்கள் ஒரு அழகான பெண் முன்னால் அமர்ந்திருந்தால் ஐந்து நிமிடங்கள் ஐந்து விநாடிகளாய்க் கழியும், இதுவே Theory of relativity,” என்றாராம். நம் சற்குரு ஐன்ஸ்டீன் ஒரு சித்தர் என்பார். அழகுக்கு அதிபதியான சுக்ர பகவானையும் அனலுக்கு அதிபதியான செவ்வாய் பகவானையும் துலா ராசியிலிருந்து சமமாகப் பார்க்கும் ஜாதக அமைப்பைக் கொண்ட நம் சற்குரு சித்தர்களுக்கு எல்லாம் சித்தரே என்பதை உறுதி செய்கின்றது அல்லவா ?
முத்தங்கி சேவை |
ஸ்ரீஅத்தி வரதர் முத்தங்கி சேவையில் திருவோண நட்சத்திர நாளில் பிரகாசித்தது நாம் அனைவரும் அறிந்ததே. முத்துக்கு உகந்த சந்திர சக்திகள் பொலியும் திருவோண நட்சத்திர தினத்தன்று சந்திர சக்திகள் பொலியும் திருப்பதி திருத்தலத்திலிருந்து முத்தங்கி சேவையை ஸ்ரீஅத்தி வரதர் ஏற்றுக் கொள்கிறார் என்றால் பெருமாளின் ஒவ்வொரு விரல் அசைவிற்குப் பின்னும் உள்ள அனுகிரகம் எத்தனை எத்னையோ ? சிவபெருமானைப் போல் தினமும் அபிஷேகம் ஏற்பது பெருமாளின் வழக்கம் இல்லை என்றாலும் பெருமாள் அலங்காரப் பிரியராக இருப்பதால் தினமும் ஒரு அலங்காரத்தில் ஸ்ரீஅத்தி வரதர் மற்றும் அனைத்துப் பெருமாள் மூர்த்திகளும் பிரகாசிக்கின்றனர். இந்த அலங்காரம் அனைத்துமே பக்தர்களின் நன்மைக்காகவே. குறிப்பாக பெண்கள் சமுதாயத்திற்கு பாதுகாப்பை அளிப்பது இத்தகைய பெருமாள் சேவைகளே. அவசர நிமித்தம் பல காரியங்களுக்காக நாம் வெளியே செல்லும்போது நம்முடைய விலையுயர்ந்த ஆபரணங்களை வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்து செல்வது வழக்கம் என்றாலும் உண்மையான பாதுகாப்பு என்பது இறைவனே. இவ்வாறு ஒவ்வொரு நாளும் பெருமாளை வணங்கி குறித்த தான தர்மங்களை நிறைவேற்றி வருவதால் பெண்களுக்கு மட்டுமல்லாது குடும்ப அங்கத்தினர்களுக்கும் சொத்து, நகைகள் போன்ற உடைமைகளுக்கும் பாதுகாப்பு கிட்டும் என்பது உண்மையே.
கிழமை | ஆபரணம் | அன்னதானம் | நவரத்தினம் |
ஞாயிறு | பட்டாடை | சர்க்கரைப் பொங்கல் | மாணிக்கம் |
திங்கள் | முத்தங்கி | தயிர் சாதம் | முத்து |
செவ்வாய் | பல வண்ண ஆடை | தக்காளி சாதம் | பவளம் |
புதன் | மார்பு பதக்கம் | புளியோதரை | மரகதம் |
வியாழன் | பிளந்தகுறி வேட்டி | முந்திரி கலந்த எலுமிச்சை சாதம் | கனக புஷ்பராகம் |
வெள்ளி | தர்பை அலங்காரம் | சர்க்கரை கலந்த வெண்ணெய் | நீலக்கல் |
சனி | வைரக்கிரீடம் | காய்கறி அடை | வைரம் |
மேலே குறிப்பிடப்படாத எத்தனையோ விலையுயர்ந்த வைர வகைகள் பதிந்த ஆபரணங்களும் உண்டு. இவை எந்த கிழமைக்கு உரிய அனுகிரகமாக அமையும் என்ற குழப்பத்தில் உழல்வோர் புதன், சனிக் கிழமைகளுக்கு உரித்தான தான தர்மங்களை நிறைவேற்றி பெருமாள் மூர்த்திகளை வழிபட்டு வருதலால் அந்த ஆபரணங்களில் ஏற்படும் தோஷங்கள் மறையும். ரோகிணி, புனர்பூசம், திருவோண நட்சத்திர நாட்களிலும் மேற்கூறிய வழிபாடுகளை நிறைவேற்றி பலன் பெறலாம். நாம் ஒரு வைர அட்டிகையை அணிந்து யாரும் இல்லாமல் கண்ணாடி முன் அமர்நது அழகு பார்த்தாலும் கூட பலரின் எண்ண அலைகள் அந்த நகையில் வியாபிக்கும் என்பதால் முடிந்தபோதெல்லாம் மேற்கூறிய தானதர்மங்களை நிறைவேற்றி பெருமாளை வழிபட வேண்டியது அவசியம். லட்சத்தில் ஒருவரே எனக்கு வைரம் வேண்டாம் வைரம் போன்ற நெஞ்சுறுதியே வேண்டும் என்று கூறுவதுண்டு. அவர்களும் பெருமாளை மேற்கூறிய முறையில் உரிய தான தர்மங்களுடன் வழிபடுவதால் வைரம் போன்ற நெஞ்சுறுதியைப் பெறுவர் என்பது உறுதி. காரணம் இந்த வழிபாட்டைக் கூறியவர் வைரம் போன்ற நெஞ்சுறுதி கொண்ட நம் குருநாதர்தான்.
ஒளிக்கும் இருளுக்கும்
ஒன்றே இடம்
லக்னத்தில் உச்சம் கொள்ளும் குரு பகவானும் துலா ராசியில் உச்சம் கொள்ளும் சனி பகவானும் பரிவர்த்தனை அம்சங்களுடன் துலங்க லக்னாதிபதி சந்திர பகவான் 11ல் எழுந்தருளி உச்சம் பெற்றிருப்பது இத்தகைய அரிய நெஞ்சுறுதியைக் குறிக்கும். ஆண்கள் ஜாதகத்தில் நான்காமிடம் நெஞ்சுறுதியைக் குறிப்பது என்பது நீங்கள் அறிந்ததே. ஒரு முறை சார்புக் கோட்பாடு (theory of relativity) என்பதை இன்னும் எளிமைப்படுத்த முடியுமா என்று அடியார்கள் கேட்டபோது சற்குரு தமக்கே உரிய புன்சிரிப்புடன், “ஒளி” என்றார். எளிமையிலும் எளிமையாக சார்புக் கோட்பாட்டை விளக்குவதே இந்த ஒரே வார்த்தையில் உயிர் பெறும் கோட்பாடு. ஒளி என்ற பெயர்ச் சொல் வினைச் சொல்லாக மாறுவதே சார்புக் கோட்பாடாகும். மாணிக்கவாசகரின் ஒளி வார்த்தைகளில் இதுவே, “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் காண்க”, என்பதாக ஒலிக்கின்றது. இந்தக் கோட்பாட்டை மேலும் விளக்குவதே உமாபதி சிவாச்சாரியார் பாடிய கொடிக்கவி துதியாகும். உமா பதி என்ற இரு வார்த்தைகளே பதி என்ற இருள் தத்துவத்தைச் சார்ந்த ஒளி தத்துவமாகும். அதாவது கண்ணுக்குப் புலப்படாததை, புலனுக்கு எட்டாததை புலன்கள் அறியச் செய்வதே ஒளி. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் கொடிக்கவி துதி, சிவபுராணம், திருப்பாவை, திருவெம்பாவை பதிகங்களை ஓதியவாறே திருஅண்ணாமலையை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிரிவலம் வருதலால் இந்த ஒளி இருள் பற்றிய தத்துவங்களைப் புரிந்து கொள்ள இந்த வழிபாடு துணை நிற்கும். சிவ சக்தி ஐக்ய தரிசனம் அமைந்துள்ள நம் ஆஸ்ரமம் எதிரில் இத்தகைய கிரிவலத்தை ஆரம்பித்து அங்கேயே கிரிவலத்தை நிறைவு செய்தல் சிறப்பே. மார்கழி மாத பிரம்ம முகூர்த்த நேரத்தில் இத்தகைய கிரிவலத்தை ஆரம்பித்தல் என்ற பின்னணியில் எத்தனை தெய்வீக சிறப்பம்சங்கள் பதிந்துள்ளன என்பது ஓரளவிற்கு இப்போது புரிகின்றது அல்லவா ? அனைத்திற்கும் மூலமான சூரிய பகவான் மூல நட்சத்திரத்தில் பிரகாசிக்கும் நாளே மார்கழி மாதப் பிறப்பாகும். சார்புக் கோட்பாடு என்பது காலம் தூரம் இடையே உள்ள தொடர்பை விளக்குகிறது. முத்தங்கி சேவை இவ்விரண்டும் இணையும் விளக்கத்தை அளிக்கின்றது. நம் சற்குரு ஒரே வார்த்தையில் குறிப்பிட்ட ஒளி என்பதை பக்தர்களுக்கு அனுகிரகமாக அளிப்பதற்காக ஸ்ரீஅத்தி வரதர் அமிர்தசரஸ் திருக்குளத்தில் சயனக்கோலத்தில் மூழ்கி 40 ஆண்டுகள் தவம் இயற்றுகின்றார் என்றால் கருணையில் உயர்ந்தவர் அடியாரா, அவதாரமா ?
தங்கப் பல்லி தரிசனம் |
காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் தலத்தில் வேறெங்கும் காண இயலா தங்கப்பல்லி வெள்ளிப்பல்லி தரிசனம் கிட்டுகின்றது. இதன் பின்னணியில் ஆயிரம் விளக்கங்கள் இருந்தாலும் சற்குரு கூறுவதோ தேவகுரு பிரகஸ்பதியும் அசுர குரு சுக்ராச்சாரியாருமே இவ்வடிவில் காட்சி அளிக்கிறார்கள் என்பதே. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சதா கருத்து வேறுபாடு இருந்ததால் அவர்களை இணைக்கும் முகமாக இவ்விரு குருமார்களும் பல திருத்தலங்களில் மறைந்து தவமியற்றினர். தற்போது மனிதர்களிலேயே அசுர குணங்களும் தேவ குணங்களும் மறைந்து உள்ளன என்பது யுக கோட்பாடாகும். எனவே தம்மிடம் மறைந்துள்ள தீய குணங்களை அழிக்க முயல்வதும் மற்றவர்களிடம் உள்ள தங்கமான குணங்களை பாராட்டுவதுமே நாம் செய்ய வேண்டியது. இந்த நற்குணத்தை வளர்ப்பதே காஞ்சி பல்லிகளின் தரிசனமாகும்.
வரதர் ரங்கர் சற்குரு
இவ்வாறு அனைவரைப் பற்றியும் நல்ல வார்த்தைகளையே பேசி வந்தவர் ஸ்ரீரமண மகரிஷி. ஒவ்வொரு நாள் காலையில் நடக்கும் சத்சங்கத்தின்போது ஏதாவது முக்கியமான விஷயங்களைப் பற்றி விவாதிப்பது வழக்கம். ஒரு நாள் அந்த வட்டாரத்தையே கலக்கி வந்த ஒரு பிரபல முரடன் இயற்கை எய்திவிட்டான். சொல்வதற்கு கடுகளவு கூட அவனிடம் நல்ல குணமில்லை. இந்நிலையில் ஸ்ரீரமண மகரிஷி அவனைப் பற்றி என்ன நல்ல செய்தி கூறப் போகிறார் என்பதை அறிய ஆவலுடன் அனைவரும் அவர் முகத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். செய்தி அறிந்த பகவான், “யார்....., ஒருவன் வெள்ளே வெளேரென்று தும்பைப் பூ போல் வேட்டியும் சட்டையும் அணிந்திருப்பானே, அவனா மறைந்து விட்டான் ?” என்று கேட்டாராம். இதுவே தங்கப்பல்லி. தற்போது நம் ஆஸ்ரமத்தில் இருக்கும் ஸ்ரீரெங்கநாதர் ஆரம்பத்தில் நம் சற்குருவின் இல்லத்தில் சற்குருவின் மூதாதையர்களால் சுமார் 900 வருடங்கள் பூஜிக்கப்பட்டு, பின்னர் சென்னையில் சபை வீடு என்னும் அடியார்கள் கூடும் சத்சங்க மண்டபத்தில் எழுந்தருளி அதன் பிறகே திருஅண்ணாமலையாரை தரிசித்தவாறே ஆஸ்ரம உச்சியில் அமர்ந்து விட்டார். சென்னையிலிருந்து திருஅண்ணமலை ஆஸ்ரமத்திற்கு ஸ்ரீரெங்கநாதரை ஒரு வேனில் எடுத்து வந்தார்கள் அடியார்கள். அவருடன் கார்த்திகை தீப அன்னதானத்திற்காக மளிகை சாமான்களும், பாத்திரம் போன்ற மற்ற உபகரணங்களும் வந்திறங்கின. எல்லாம் பத்திரமாக வந்த சேர்ந்த பின் ஸ்ரீரெங்கநாதரை ஜாக்கிரதையாக வேனிலிருந்து இறக்கி ஆஸ்ரமத்தில் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டார்கள் அடியார்கள். இது பற்றிய தகவல் சற்குருவிற்கு, “வாத்யாரே, ரெங்கநாதர் பத்திரமாக வந்து விட்டார், மளிகை சாமான்களும் வந்து விட்டன,” என்று தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட சற்குரு பெரிதாக சிரித்து, “சார், அவரையா பத்திரமா கொண்டு வந்து சேர்த்தீங்க, அவர்தானே வண்டியில் பயணம் செய்த எல்லா அடியாரையும் மளிகை சாமானையும் பத்திரமாய் கொண்டு வந்து சேர்த்தது,” என்றார். இதுவே சற்குரு தொட்டுக் காட்டிய வித்தை. ஆமாம், அத்தி வரதருக்கும் ரெங்கநாதர் வருகைக்கும் என்ன சம்பந்தம் ? இதை உணர்ந்தால் நீங்கள் சற்குருவின் மகிமையை ஓரளவு உணர்ந்தவர்கள் ஆவீர்கள் என்பதே அந்த சம்பந்தம்.
சீதா ராமர் திருமணத்தின்போது ஜாதகப் பொருத்தம் பார்க்கையில் ஸ்ரீராமபிரான் ஜாதகத்திற்கும் சீதா தேவியின் ஜாதகத்திற்கும் 108 பொருத்தங்கள் இருந்தனவாம். பொதுவாக திருமணத்திற்காக ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது பத்து பொருத்தங்கள் பார்ப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள். உண்மையில் ஆயுள் பாவம் முதற்கொண்டு அனைத்து 12 பாவங்களையும் பொருத்திப் பார்ப்பதுதான் உண்மையான ஜாதகப் பொருத்தமாகும். ஒவ்வொரு ராசிக்கும் ஒன்பது நவாம்சங்கள் உண்டு. இவ்வாறு 12 ராசிகளில் அமையும் 108 நவாம்ச பரல்களுமே சீதா ராமர் ஜாதகத்தில் நன்கு பொருந்தி இருந்தன என்பதே சுவையான விஷயமாகும். ஆனால், தற்காலத்தில் அவரவர் ஜாதகத்திலேயே ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்படுவதால் அவரவர் பிறப்பே விடுவிக்க முடியாத இரகசியமாகப் போய்விடுகின்றது. அவ்வாறு பிறவி இரகசியம் தெரிந்தாலும் அது சுவை உள்ளதாக இருப்பது கிடையாது. உதாரணமாக, புதிதாக பதவி ஏற்ற ஒரு மாவட்ட கலெக்டர் காஞ்சிபுரம் போடா சுவாமிகளை தரிசனம் செய்ய வந்திருந்தார். ஏகப்பட்ட பழங்கள், இனிப்புகள், பூ மாலைகளை ஒரு பெரிய தட்டில் ஸ்ரீபோடா சுவாமிகளின் முன் வைத்து அவரை வணங்கி எழுந்தபோது, “போடா தேவடியா பயலே,” என்று ஸ்ரீபோடா சித்தர் கூறினார். அந்தப் புது கலெக்டருக்கு எப்படி இருக்கும் ? வியர்த்து விறு விறுத்து செய்வதறியாது கல்லாய்ச் சமைந்து நின்ற அந்த கலெக்டரைப் பார்த்தார் அருகிலிருந்த கோவணாண்டி, “என்னா கலெக்டர் துரை, சாமி என்னா சொன்னாரு இப்படி பேஸ் அடிச்சு நின்னுட்ட ?” என்று ஒன்றுமறியாதவர் போல அவரை விசாரித்தாராம். அந்த கலெக்டரும் நடந்தது அனைத்தையும் தெளிவாக விளக்கினாராம். கோவணாண்டி மௌனமாக அவர் விளக்கத்தை கேட்டு விட்டு, “ஆமா, உங்க அம்மாவைப் பத்திச் சொல்லு, சாமி எது சொன்னாலும் சரியாத்தான் சொல்லுவாரு ?” என்று அவர் அம்மாவைப் பற்றி விசாரித்தாராம்.
அந்த கலெக்டரும் நெளிந்து கொண்டே அவருடைய அம்மா பொட்டுக் கட்டிய குடும்பத்தில் தோன்றியவர் என்று ஒத்துக் கொண்டார். இப்போது கோவணாண்டி சிரித்துக் கொண்டே, “சரி, சரி, இப்போ சாமி ஒன்ன கூப்பிட்டது தவறு கிடையாது அல்லவா ? ஆனா, சாமி எவ்வளவு நல்லது ஒனக்கு செய்திருக்கார் பாரு. நீ இப்போ கலக்டர் துரை ஆயிட்டே. ஒன்ன எவனும் தவறா திட்ட மாட்டான். ஆனா அவனவன் மனசுக்குள்ள ஒன்னப்பத்தி தவறா நெனச்சு திட்டுவானில்ல. அப்படி ஒரு உத்தமன திட்டக் கூடாது என்பதற்குத்தான் போடா சித்தரே ஒன்ன ஒரே ஒரு முறை திட்டுற மாதிரி நடிச்சு உன் விதியை மாத்தி விட்டார். இனிமே ஒன்ன ஒரு பயலும், ஒன் பிறப்பத் தவறா நெனக்க மாட்டான். இப்போ போய் சாமியை நமஸ்காரம் பண்ணிப் பாரு,” என்று ஆறுதலும் தைரியமும் அளித்தாராம் கோவணாண்டி. பெரியவரின் ஆறுதலான வார்த்தைகளில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்ட அந்தக் கலெக்டர் இப்போது கோவணாண்டிப் பெரியவருக்கும் போடா சித்தருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரத்தை தெரிவித்தாராம். பனி மலையாய்க் குளிர்ந்த போடா சித்தர் இப்போது கருணையின் இமயமாய் நின்றாராம் அந்த கலெக்டர் கண் முன். இதுவே சித்தர்களின் அரும்பணி. போடா சித்தர், கோவணாண்டி, நம் சற்குரு என்ற உலகம் போற்றும் மூன்று உத்தம சற்குருமார்களின் தரிசனத்தை ஒரே இடத்தில் பெற்ற அந்த கலெக்டர் உத்தமர்தானே. இந்த உத்தம அனுகிரகத்தை அளித்தது காஞ்சி திருமண்தானே. இவ்வாறு தங்களுடைய கடந்த காலம் எப்படி இருந்தாலும், தங்கள் கடந்த கால வாழ்வைப் பற்றி திருப்தி கொள்ளாதவர்களும், தங்களுடைய எதிர்கால வாழ்வு சிறந்த தெய்வீக வாழ்வாகவே இருக்க வேண்டும் என்று திடமாய் நினைப்பவர்கள் ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனத்தை வரும் 10.8.2019 சனிக் கிழமை அன்று பெற்று இறை அடியார்களுக்கு 15, 30, 45 என்று பதினைந்தின் மடங்காக தேங்காய் சாதப் பொட்டலங்களைத் தானமாக அளித்தலால் நற்பலன் பெறுவார்கள்.
அன்னையின் அனல் தீண்டல் |
சீதாப் பிராட்டி அக்னிப் பிரவேசம் செய்ததையே சித்தர்கள் இவ்வாறு அழகுபட அன்னையின் அனல் தீண்டல் என சித்தர்களுக்கே உரித்தான அழகுத் தமிழில் கொஞ்சுகிறார்கள். சீதாப் பிராட்டியின் அக்னி பிரவேசம் குறித்து ஸ்ரீபோகர் மட்டுமே 4000 காண்டங்களாக அருளியுள்ளார் என்றால் அப்பிராட்டியின் அக்னிப் பிரவேசம் எத்தகைய சிறப்புடையதாக இருக்கும். பொதுவாக அக்னியின் பிரகாசத்திலிருந்து அனல், கனல், சூடு என்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன. இதில் அக்னி பகவான் சீதா பிராட்டியை ஓரளவு நெருங்கி செல்லக் கூடியதே அனல் என்ற நெருப்பு சக்தியாகும். கனல் தனல் என்ற நெருப்பு சக்திகளை எல்லாம் அக்னி பகவான் தாங்க முடியாத நிலை ஏற்பட்டபோதுதான் சீதா பிராட்டி அக்னி குண்டத்திலிருந்து வெளிவந்தாள் என்பதே சித்தர்கள் உரைக்கும் அக்னி பிரவேச இரகசியமாகும். இவ்வாறு ஸ்ரீஆயுர்தேவியின் சக்தியை பூலோகத்திற்கு கொண்டு வருவதற்கே பல ஆண்டுகள் பிரார்த்தனைகள் செய்த நம் சற்குரு ஸ்ரீதேவர்மலை நரசிம்மருக்காகவும், ஸ்ரீஅத்தி வரதருக்காகவும், ஸ்ரீசீதாபிராட்டியின் அக்னி பிரேவச இரகசியங்களுக்காகவும் எத்தனை வருடங்கள் அரும்பாடு பட்டிருப்பார் என்று உணர்வதே அவருடைய சீடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாம் உணர வேண்டிய உண்மையாகும். இதுவரை எங்கும் வெளிவராத ஸ்ரீசீதா பிராட்டியின் ஜனன ஜாதக அம்சங்களை பக்தர்களின் நல்வாழ்விற்காக இங்கு சற்குரு அர்ப்பணிக்கிறார்.
ஸ்ரீராம பிரான் ஸ்ரீசீதா பிராட்டி என்ற தெய்வ மூர்த்திகளின் ஜாதகங்களைப் பற்றி விமர்சனம் செய்யவோ விவாதிக்கவோ மனிதர்களுக்கு உரிமை இல்லை என்றாலும் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் என்றவாறாக இறைவனின் புகழைப் பாடுவதற்கு மனிதனுக்கு உரிமை உண்டு அல்லவா ? அதுவும் அவனருளாலேதானே அவன்தாள் வணங்கவும் முடியும். இம்முறையில் தற்காலத்தில் மிகவும் அத்தியாவசியமான ஒரு பொருள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய கற்புநிலை என்பதால் அதை மக்களிடையே நிலைநிறுத்த ஸ்ரீராமபிரானும் சீதா தேவியும் எத்தகைய அரும்பாடு பட்டார்கள் என்பதே அந்த தெய்வ அவதாரங்களின் ஜாதகங்கள் மூலமாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய பாடமாகும். ஆண்கள் ஜாதகம், பெண்கள் ஜாதகம் இரண்டும் ஒன்றே எனினும் பெண்கள் ஜாதகத்தில் கற்பு என்ற நான்காம் இடம் தனிச் சிறப்பு வாய்ந்ததாக அமைகிறது. ஸ்ரீசீதா பிராட்டியின் ஜாதகத்தில் இந்த நான்காம் இடம் அமைந்த சிறப்பைப் பற்றி கூறிக் கொண்டே இருக்கலாம் என்றாலும் நட்சத்திரப் பொருத்தம் என்பதைப் பற்றிய ஒரு சிறு விளக்கத்தை அளிக்கிறோம். ஸ்ரீராம பிரானின் பிறந்த நட்சத்திரம் புனர்பூசமாக இருக்க சீதையின் ஜனன நட்சத்திரம் புனர்பூசத்திற்கு அடுத்த நட்சத்திரமான பூசமாகும். புனர்பூசம் என்றால் பூசம் நட்சத்திரத்தில் பிறந்த தர்மபத்னியுடன் திருமணம் என்ற உறவில் இணைதல் என்று பொருள். இவ்வாறு இணைந்த இனிய தம்பதிகளை என்றாவது எங்காவது காணத்தான் முடியுமா ? பூசம் என்ற மூன்றெழுத்திற்கு புனர்பூசம் என்ற ஆறெழுத்து பொலியும் அழகே குசா அழகுதானே. அது மட்டுமல்ல, அகல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரி ததா பஞ்சகன்யா ஸ்மரேன் நித்யம் மகா பாதக நாசனம் என்ற பஞ்ச கன்னிகைளின் சுலோகத்திலும் நடுநாயமாக சீதை விளங்கி குசா சக்திகளைப் பொலியும் அழகே அழகு. இந்த அங்க லாவண்ய லட்சணங்களை கண்களில் நிறைத்துக் கொண்டவர்களுக்கு வேறு எதுவுமே பூலோகத்தில் அழகாகத் தோன்றாது என்பது உண்மையே. தொலைவிலிருந்தே ஸ்ரீசீதா பிராட்டியின் அங்க லட்சணங்களை கண்களில் நிறைத்துக் கொண்ட ஸ்ரீதியாகராஜ சுவாமிகளால் பல மாதங்களுக்கு உறங்கவே முடியவில்லையாம். அன்னையின் அருள் சக்திகளை அமிர்தவர்ஷிணி ராகத்தில் நிறைத்து கானம் இசைத்த பின்தான் சுவாமிகள் உறக்கம் என்பதையே உணர்ந்தாராம். நீங்கள் இங்கு காணும் ஜோடி குருகுகள் மட்டுமல்ல பக்தியுடன் இன்றும் திருவையாற்றில் ஸ்ரீதியாக பிரம்மத்தின் ஜீவ சமாதியைத் தரிசிப்போர் அனைவரும் அமிர்தவர்ஷினியில் நனையலாம் என்பது திண்ணம்.
ஸ்ரீராமதாரகம் ஒலிக்கும் தியாகராஜர்
திருவையாறு
இப்போது தெரிகிறதா வெறுமனே அமிர்தவர்ஷினி ராகத்தில் பாடினால் மட்டும், கீர்த்தனைகளை இசைத்தால் மட்டுமே மழை வந்து விடாது. அன்னையின் அருள் அந்தக் கீர்த்தனையில் அமிர்தமாய்ப் பொழிய வேண்டும் என்பதே முக்கியம். ஸ்ரீசீதையின் ஜாதகத்தில் நான்காமிடம் என்ற கற்பு ஸ்தானமே அனைத்து ஸ்தானங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. உச்சம் பெற்ற சூரியனிடமிருந்து நான்காவதாகத் திகழ்ந்து திக்பலத்துடன் ஆட்சி பெற்ற சந்திரனால் அலங்கரிக்கப்பட்டு ராஜ யோகம் பெற்ற செவ்வாய் என்னும் அக்னிக்குரித்தான பகவான் அதில் திகழ, ராஜ யோகம் பெற்ற குரு பகவானாலும் ஆட்சி பெற்ற சனீஸ்வர பகவானாலும் அந்த கேந்திரம் பார்க்கப்படுகின்றது என்றால் இந்த சிறப்பை வார்த்தைகளால் வர்ணிக்க முடியுமா ? லக்னத்திற்கு 12ல் துலங்கும் கேது புதன் சங்கமம் கற்பு நிலைக்கு ஒன்பதில் திகழ்வதால் பக்தர்கள் இது குறித்து தீவிரமாக ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும். ஸ்ரீராமரும் ஸ்ரீசீதாப் பிராட்டியும் மனிதர்களாகவே தோன்றினாலும் மனித சமுதாய திருமணத்திற்கு உரித்தான பத்து பொருத்தங்களும் சித்தமாய்ப் பொருந்தியதோடு மட்டுமல்லாமல் நவாம்ச பரல்கள் 108ம் பொருத்தமுடன் அமைந்துள்ளன என்றால் மானிடர்களுக்கு வேறென்ன செல்வம் வேண்டும் ? திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பது உண்மையே. இந்த உண்மைக்கு சான்றாய் இருப்பதே ஸ்ரீராமபிரான் ஸ்ரீசீதாப் பிராட்டி இவர்கள் ஜாதகங்கள் இடையே அமைந்திருக்கும் விவாகப் பொருத்தங்கள். தங்கள் திருமண வாழ்வில் துன்பத்தையும் சோகத்தையும் சந்திப்பவர்கள் இந்த கூற்றை மறுப்பதற்கு சந்தர்ப்பங்கள் ஏராளமாய் உண்டு அல்லவா ? அத்தகையோர் இங்கு அளிக்கப்பட்டுள்ள அரிதிலும் அரிதான மானிட தம்பதிகளாகிய ஸ்ரீசீதாராமர் ஜாதகங்களை தங்கம், வெள்ளி, சந்தனம், தேக்கு, பூவரசு, மாம்பலகை இவற்றில் பதித்து நுனி முறியாத அட்சதை சுத்தமான குங்குமத்தால் அர்ச்சித்து வருதலால் கிட்டும் பலன்கள் ஏராளம், ஏராளம். ஸ்ரீசீதை ஜாதகத்திற்கும் அத்தி வரதருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. அமிர்த புஷ்கரணியில் மறைந்து 40 வருடங்கள் தவமியற்றிய ஸ்ரீஅத்தி வரதர் அருளும் அனுகிரகங்களுள் ஸ்ரீசீதாராம ஜாதக தரிசனமும் ஒன்று என்பதே வரதரின் வரப் பாங்காகும். அன்னையின் கற்புக் கனலை எவராலும் தீண்ட முடியாது. பல கோடி மக்களின் கற்பு என்னும் அக்னியில் தோன்றிய மாசுப் படிவுகளை அக்னி பகவானே ஏற்று தான் அன்னையின் திருவுடலை தீண்டியதன் மூலம் தூய்மை பெற்றார் என்பதே சீதையின் அக்னிப் பிரவேசம் உணர்த்தும் உண்மையாகும். இவ்வாறு அக்னி பகவானின் அருளைப் பெறும் மார்க்கத்தை அறியாதவர்களுக்கு அருள் வழங்கி தன்னுடைய அனுகிரகம் என்னும் பக்திக் கனல் மூலம் கோடிக் கணக்கான பக்தர்களின் கற்பைக் காத்து இரட்சிக்கும் அண்ணலே காஞ்சி அத்தி வரதர் ஆவார். மேலே கொடுத்துள்ள தலைப்பைப் படித்து ஆத்ம விசாரம் செய்வதால் மட்டுமே 18 விதமான அக்னிக் குற்றங்கள் களையப்படும் என்றால் அத்தி வரதரின் அனுகிரக மகிமைதான் என்னே. எந்த நாளிலும் எந்த நேரத்திலும் அம்மை அப்பரின் ஜாதகக் கட்டங்களை வழிபடலாம் பயன்பெறலாம் என்றாலும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், புனர்பூசம், பூசம், உத்திர நட்சத்திர நாட்களிலும், சஷ்டி திதிகளிலும் மங்கள துதிகள், லலிதா சகஸ்ரநாமம் என்ற துதிகளால் வழிபட்டு குங்குமப்பூ கலந்த பாசந்தி அல்லது பால் சொரியும் எந்த இனிப்புகளை தானமாக அளித்தலும் ஏற்புடையதே. இதனால் மேற்கூறிய 16 விதமான செல்வங்களையும் அனுகிரகமாக பெறலாம் என்பதில் ஐயமில்லை. உண்மையில் இந்த வழிபாட்டால் மனிதர்கள் பெற முடியாத அனுகிரகம் எதுவுமே இல்லை என்றே கூறலாம்.
ஸ்ரீவியாக்ரபாதர் பெரும்புலியூர்
ஸ்ரீபெரியநாயகி அம்மன் பெரும்புலியூர்
தனது தள்ளாத வயதில் திருக்கயிலை நாதனை தரிசனம் செய்ய விரும்பினார் திருநாவுக்கரசு சுவாமிகள். கயிலைக்கு செல்ல முயன்றபோது அப்பெருமானுடைய கை கால்கள் தேய்ந்து இதயம் வரை உடலும் தேய்ந்து விட்டது. அந்நிலையில் அப்பரை ஆட்கொள்ள நினைத்த எம்பெருமான் வேடன் வடிவில் தோன்றி அங்குள்ள தீர்த்தத்தில் மூழ்கி எழுமாறு கூற அப்பர் பிரான் அவ்வண்ணமே அந்தக் குளத்தில் மூழ்கி திருவையாற்றில் உள்ள ஒரு குட்டையில் எழுந்தார். எழுந்து அருகில் உள்ள திருஐயாறப்பன் திருக்கோயிலை அடைந்தபோது அங்குள்ள யானை, சேவல், குயில், அன்றில், மயில், அன்னம், பன்றி, மான், நாரை, கிளி, பசு போன்ற எல்லா விலங்குகளும் பறவைகளுமே சிவனும் பார்வதியுமாகத் தோற்றம் கொண்டன. அப்பர் பெற்ற தரிசனம் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். ஆனால், திருமழிசை பிரான் பெற்ற இத்தகைய தரிசனம் பற்றி சித்தர்களே அறிவர். அப்பர் பெருமான் பெற்ற தரிசனம் ஏதோ பறவைகளையும் விலங்குகளையும் பற்றிக் குறிப்பிடுவது போல் மேலோட்டமாகத் தோன்றினாலும் மனிதர்கள் ஜாதகத்தில் உள்ள 11 பிராணிகளின் சேர்க்கை பற்றிய இரகசியங்களையே இவை உரைக்கின்றன. இந்த மாதர்ப் பிறைக் கண்ணி யானை ... என்ற பதிகத்தை பக்தர்கள் தொடர்ந்து இசைத்து வந்தால் மனிதர்களாகிய தாங்கள் எந்த முறையில் தாம்பத்ய உறவில் ஈடுபட வேண்டும் என்ற இரகசியம் நாளடைவில் தெரிய வரும் என்பதே குடும்ப ஒற்றுமை பற்றி சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம் ஆகும். திருமழிசை ஆழ்வார் திருவையாறு திருத்தலத்திற்கு வந்து காவிரி ஆற்றில் நித்ய அனுஷ்டாங்களை நிறைவேற்றிக் கொண்டு இருந்தபோதுதான் அவர் அப்பர் பெருமான் பெற்ற கயிலாயக் காட்சியையும் பெற்றார். மேலே கண்ட குருகுகள் இசைத்த வேதமே அப்பிரானுக்கு இந்த தெய்வீக சிந்தனையைத் தூண்டியது எனலாம். குருகு என்றால் பறவை, தாமரை என்றெல்லாம் பொருள் உண்டு. எனவே குருகுகள் தாமரைக் கண்ணன் நினைவை ஆழ்வாருக்கு ஊட்டியதில் வியப்பொன்றுமில்லைதான். திருமழிசை ஆழ்வார் இவ்வாறு செந்தாமரைக் கண்ணன் தரிசன நினைவில் மூழ்கி அருகிலுள்ள பெரும்புலியூர் ஸ்ரீசுந்தரராஜ பெருமானைத் தரிசனம் செய்வதற்காக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பெருமாள் கோயிலில் வேதம் ஓதிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இவ்வாறு இறை நினைவில் மூழ்கியவரின் தரிசனக் காட்சியில் மூழ்கி தாங்கள் ஓதிய வேதத்தையே மறந்து திருமழிசை ஆழ்வாரின் இதயத்தில் பிரகாசித்த செந்தாமரைக் கண்ணனின் திருக்காட்சியில் மூழ்கினர். ஆழ்வார் அவ்வூர் எல்லையைத் தாண்டியபோதே ஆழ்வாரின் காட்சியும் ஆண்டவனின் காட்சியும் ஒரு சேர மறையவே வேதியர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஆழ்வாரின் பாதங்களைச் சரணடைந்தனர். நடந்ததை உணர்ந்த பெருமானும் அருகிலுள்ள நெற்பயிரில் இருந்த ஒரே ஒரு நெல்லைக் கிள்ளி தன் உள்ளங்கையில் வைத்து அவர்களுக்குத் தரிசனம் அளிக்க உடலும் உள்ளமும் நெல்லும் உமியும் போல் சேர்ந்தால் வேதம் ஒரு வித்தை அல்லவே என்பதை உணர்ந்தனர் அனைவரும். நெல்லையும் உமியையும் இணைக்கும் பசையே குடும்பத்தில் விளையும் அன்பு என்ற அன்யோன்யமாகும். இறை சக்தியால் அன்றி, வரதர் அனுகிரகத்தால் அன்றி வேறு எந்த சக்தியாலும் இந்தப் பசையை உருவாக்க முடியாது. சுட்டிக் காட்டுவது மட்டுமல்ல தொட்டுக் காட்டுவதும் சற்குருவின் இறைப்பணியே என்ற வாக்கிற்கிணங்க தம்பதிகளிடையே மட்டுமன்றி குரு சீடன், ஆண்டான் அடிமை, சகோதர சகோதரிகள், அரசன் குடிமக்கள் என்ற அனைவர் இடையேயும் இருக்க வேண்டிய இந்த அன்புப் பசையை உருவாக்க அரும்பாடுபட்ட பெருந்தகையே ஸ்ரீதிருமழிசை ஆழ்வார் என்பதை காஞ்சிபுரத்தில் அவர் தன் அருமைச் சீடன் கணிகண்ணனோடு புரிந்த சேவையை அறிந்தோர் புரிந்து கொள்ளலாம்.
நிற்பதெல்லாம் நெடுமால் |
காசி யாத்திரை மேற்கொள்வோர்கள் முதலில் ராமேஸ்வரம் சென்று அங்கு தனுஷ்கோடியில் மண் எடுத்து வந்து பூஜித்து அதை அலாகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் சேர்த்து, பின்னர் அங்கிருந்து மண் எடுத்து வந்து அதை தனுஷ்கோடி தீர்த்தத்தில் சேர்க்க வேண்டும் என்பது நியதி. இந்த நியதியை காசி யாத்திரை செல்லும்போது நம் சற்குரு நிறைவேற்றினார் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். அதே போல் ஸ்ரீஅத்தி வரதரை தரிசனம் செய்வதற்கு முன் தரிசனம் செய்ய வேண்டிய மூர்த்திகளைப் பற்றி ஏற்கனவே விவரித்துள்ளோம். அது போல ஸ்ரீஅத்தி வரதரின் சயனக்கோலத்தை தரிசனம் செய்த பக்தர்கள் ஸ்ரீஅத்தி வரதரின் நின்ற கோலத்தையும் தரிசனம் செய்து அதன் பின்னர் காஞ்சி திருவெஃகாவில் ஸ்ரீரெங்கநாதரையும் தரிசனம் செய்தலே வரத வரத்தை முழுமையாகப் பெறும் தரிசன முறை எனச் சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.
ஸ்ரீஅத்தி வரதர் காஞ்சிபுரம்
அத்தி வரதரின் சயனக் கோலமே அரிதாய் இருக்க நின்ற கோல தரிசனமும் பெறுவது என்பது இயலுமா என்று பலரும் நினைக்கலாம் அல்லவா ? ஆனால், இந்த நின்ற கோல தரிசனத்தையும் திருவெஃகா பெருமாள் தரிசனத்தையும் அத்தி வரதரை தரிசனம் செய்த ஒரு மண்டல காலத்திற்குள் நிறைவேற்றினால் போதும் என்பதே சித்தர்கள் அளிக்கும் கால வரையறை. நிற்பதெல்லாம் நெடுமால் என்ற உண்மையை உணர்ந்த உத்தம பக்தர்களில் ஒருவரே திருமழிசை ஆழ்வார் ஆவார். சிறப்பாக காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருத்தலத்தில் உள்ள எந்த ஒரு தூணையும் 108 முறை சுற்றி வணங்குதலால் வரதரின் நின்ற கோலத்தை தரிசனம் செய்தவர்கள் ஆவோம். விஷ்ணு அஷ்டோத்திரமோ, லட்சுமி அஷ்டோத்திரமோ அல்லது விஷ்ணு சகஸ்ரநாமமோ ஓதிக் கொண்டே இத்தகைய வலங்களை நிறைவேற்றுவது சிறப்புடையதாகும். இதன் பின்னர் ஸ்ரீபெருமாள் வலது பக்கம் தலை வைத்து சயனம் கொள்ளும் திருவெஃகாவில் பெருமாளின் தரிசனம் செய்வதால் அத்தி வரத தரிசனம் பூர்ணமடைகின்றது. நாம் ஒருவருக்கு ஒரு பொருளைக் கொடுக்கும்போது அவர் பின்னால் நின்று கொடுப்பது முறையாகாது. உதாரணமாக, ராமதாசருக்கு அருள்புரிய நினைத்த பெருமாள் மூர்த்திக்கு லட்சுமி தங்க நாணயங்களை அளித்தாள் என்பது நீங்கள் அறிந்ததே. இந்த தங்க நாணயங்களை லட்சுமி தேவி பெருமாளுக்கு அளிக்கும்போது சுவாமியின் முன்னே நின்று அபராஞ்சித தங்கக் காசுகள் அளித்த கோலத்தையே திருவெஃகாவில் நாம் தரிசிக்கிறோம். இவ்வாறு திருமகள் ஸ்ரீவரதராஜ பெருமாள் தலத்தில் அளித்த லட்சுமி கடாட்ச சக்திகள் திருவெஃகா தரிசனத்தில்தான் பூர்ணமடைகின்றன என்பதே சித்தர்கள் அறிவிக்கும் இரகசியமாகும். திருமழிசை பிரான் அருளிய திருச்சந்த விருத்த துதிகளை காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் திருத்தலத்தில் தூண்களை பிரதட்சணம் செய்தபடி ஓதி வருவதோ, அவரவர் இல்லங்களில் ஓதுவதோ அல்லது திருஅண்ணாமலையில் சிவசக்தி ஐக்ய தரிசனம் முன் அமர்ந்து ஓதுவதோ சிறப்புடையதே. லட்சுமி கடாட்ச சக்திகளை அளிப்பதுடன் குடும்ப ஒற்றுமைக்கும் சமுதாய ஒற்றுமைக்கும் வழிவகுப்பதே இந்த விருத்தத் துதிகள். பெருமாளின் விழியழகில் மெய்ம்மறந்தே திருமழிசை ஆழ்வார் இத்தகைய திருச்சந்த விருத்த துதிகளை ஓதினால் என்றால் பெருமாளின் விழி அழகா இல்லை ஆழ்வாரின் சொல் அழகா ? முத்தான இந்த மூன்று வழிபாடுகளை அடியார்கள் நிறைவேற்றினால்தான் காஞ்சிபுரத்திற்கு ஏன் பிரளயமுத்து என்ற பெயரும் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அத்தி வரதரே பிரளய முத்து என்னும் அனுகிரகத்தை அளிக்க அமிர்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கி கடுந்தவம் இயற்ற வேண்டியுள்ளது என்றால் சாதாரண மக்கள் இத்தகைய பக்தியைப் பெற எத்தனை யுகங்கள் நீரில் மூழ்கி தவம் புரிய வேண்டும் ? திருஅண்ணாமலை அன்னதானத்திற்கு வேண்டிய பணத்தைப் பெரும்பாலும் கடனாகவே பெறுவார் நம் சற்குரு. பின்னர் சிறிது சிறிதாக அந்தக் கடன் தொகைய திருப்பித் தந்து விடுவார். ஒரு முறை ஒருவரிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாயை கடனாகப் பெற்றார் நம் சற்குரு. ஆனால் அந்தப் பணத்தை ஒரு அடியார் மூலமாகப் பெற்றதால் அந்த அடியாருக்கும் சற்குருவிற்கும் உள்ள தகவல் தொடர்பில் சில குழப்பங்கள் ஏற்படவே சற்குரு திருப்பி அளித்த ஐந்து லட்சம் ரூபாய் கடன் கொடுத்தவர்களிடம் போய்ச் சேரவில்லை என்பது தெரிந்தது. இருவரும் இது பற்றி உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு அடியார் புதிதாக திருமணமான தன் மனைவியை ஆஸ்ரம சேவைக்கு அழைத்து வரலாமா என்பது பற்றி சற்குருவின் ஆலோசனையைக் கேட்க அவரை அணுகினார். சாதாரண ஒரு மனிதனுக்கு எப்படி இருக்கும் ? ஆனால் சற்குருவோ அமைதியாக, “சார், அந்தக் குழந்தை (அடியாரின் மனைவி) ஏதோ சில குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித் தருகிறது என்று நீங்கள் கூறினீர்கள். நீங்கள் ஆஸ்ரம சேவைக்கு உங்கள் மனைவியை அழைத்து வந்து விட்டால் அந்த சேவை தடைப்படும் அல்லவா ? அதனால் உங்கள் மனைவியை இங்கு அழைத்து வரவேண்டாம்,” என்ற ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லி அனுப்பி விட்டார். பின்னர் அருகிலிருந்த ஒரு அடியாரிடம், “அடியேன் இங்கு ஐந்து லட்ச ரூபாய் பணப் பிரச்னையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன். இவன் இங்கு வருவதே தெண்டம், ஒரு சேவையும் செய்வதில்லை, இந்த லட்சணத்தில் இவன் மனைவி வேறு வந்து என்ன சாதித்து விடப் போகிறாள் ? ஆனாலும் அவர்கள் மனம் கோணாமல் ஆறுதல் வார்த்தைகளை அளிக்க வேண்டும் என்பதையே அவர்கள் அடியேனிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள்,” என்றார். இதுவே கடலின் மேல் மட்டத்தில் பிரளயமே தோன்றினாலும் கடலுக்கடியில் துயில் கொள்ளும் முத்து அந்தப் பிரளயத்தால் பாதிக்கப்படாது நல்ல முத்தை உருவாக்கும் பணியிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும். இந்த பிரளய முத்தே இறை மார்க்கத்தில் முன்னேற நினைக்கும் அனைவரும் பெற வேண்டிய அற்புத முத்து.
ஆரூடம் கூறும் அமிர்தம் |
ஆரூடம் என்றால் தன்னைச் சுற்றியுள்ள பொருட்களைக் கண்டு கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதே ஆகும். தானாக ஒரு கேள்வியை நினைத்துக் கொண்டு அதற்கு பதில் தெரிந்து கொள்வது ஆருடம் ஆகாது. ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வரும் நித்திய கர்ம நிவாரணி அனைத்துமே இத்தகைய ஆரூடங்களை அடிப்படையாகக் கொண்டவையே. பிரச்ன ஆரூடம் என்றும் கூறலாம். ஆனால் இந்த ஆரூடம் சொல்வது மிகவும் எளிது, எந்த ஜோதிட ஞானமும் தேவையில்லை என்றாலும் வேண்டுதல் வேண்டாமை என்ற பண்பும் குருவின் மேல் ஆழ்ந்த நம்பிக்கையுமே இந்த ஆருடம் பலிப்பதற்கான அத்தியாவசியமான தேவைகள். உதாரணமாக ஒரு முறை ஒரு சற்குருவிடம் ஒரு பெண்மணி வியாபார நிமித்தமாக கடல் பிரயாணம் மேற்கொண்ட தன்னுடைய கணவனைக் காணவில்லை என்றும் அவன் திரும்பி வருவானா மாட்டானா என்றும் சற்குருவிடம் கேட்டாள். அப்போது சற்குருவின் மனைவி கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அந்த வாளி மேலே வந்தவுடன் கயிறு அறுந்துபோகவே நீர் நிறைந்த வாளி கிணற்றுக்குள் விழுந்து விட்டது, அந்த சப்தம் குருவிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்த சீடர்களுக்கும் ஆரூடம் கேட்க வந்த பெண்ணிற்கும் தெளிவாகக் கேட்டது.
திருஈங்கோய் மலை
இப்போது அந்தப் பெண்ணின் கேள்விக்கு ஆரூடம் கூறும் பதில் என்ன என்பதை தன்னுடைய அனைத்து சீடர்களிடமும் கேட்டார் சற்குரு. ஒரே ஒரு சீடனைத் தவிர அனைத்து சீடர்களும் நீர் நிறைந்த வாளி கயிறு அறுந்து கிணற்றுக்குள் விழுந்து விட்டதால் வியாபார நிமித்தம் கடல் பிரயாணம் மேற்கொண்ட அந்தப் பெண்ணின் கணவன் திரும்பி வரமாட்டான் என்பதே. ஆனால் ஒரே ஒரு சீடன் மட்டும் நீர் நிறைந்த வாளி மீண்டும் தன் சுய தலமான கிணற்றை அடைந்து விட்டதால் அவளுடைய கணவன் நிச்சயமாக தன்னுடைய பிறந்தகத்தை அடைவான் என்று கூறினான். சற்குருவும் சீடனின் இந்தக் கருத்தை ஆமோதித்தார். அவ்வாறே சில மாதங்கள் கழித்து அந்தப் பெண்ணின் கணவன் நல்லபடியாக திரும்ப ஊர் வந்து சேர்ந்தான். அறுகால் என்பதற்கும் ஆறுகால் என்று கூறுவதற்கும் என்ன வித்தியாசம் ? ஆறு கால் என்பது ஆறு கால்களை உடைய எல்லா உயிரினங்களையும் குறிக்கும், அறுகால் என்பது ஆறு கால்களை உடைய பூச்சிகளின் உயர்ந்த இனமான தேனீயைக் குறிக்கும். இந்த தேனீ வடிவத்தில்தான் ஸ்ரீஅகத்திய பிரான் திருஈங்கோய்மலையை தினமும் வலம் வந்து ஈசனை வணங்குகிறார். ஆரூடத்தில் சிறந்து விளங்க நினைக்கும் அனைவரும் திருஈங்கோய் மலை ஈசனை தரிசித்து ஸ்ரீஅகத்திய பிரானின் திருவருளைப் பெறுதல் நலம். ஸ்ரீஅகத்திய பிரானே நம் சற்குருவாக எழுந்தருளி நிறைவேற்றிய திருவிளையாடல் ஒன்றைக் காண்போமா ? ஒருமுறை ஸ்ரீஅகஸ்திய விஜயம் விநியோகம் செய்யும் ஒரு அடியார் நீண்ட நாள் குழந்தை பாக்கியம் இல்லாத தன்னுடைய நண்பர் சந்தான பாக்கியத்தைப் பெறுவாரா என்று நம் சற்குருவிடம் கேட்டபோது அவர், “சார், அதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாமே ?” என்றார். அப்போது சற்குருவின் அருகில் உள்ள ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. அந்தக் குழந்தையின் அழுகுரல் மறுமுனையில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த அடியாருக்கு நிச்சயம் கேட்கும் என்பதால் சற்குரு அந்த அடியார்க்கு குழந்தை பாக்கியம் உண்டு என்பதை உறுதி செய்தார். சற்குரு மேலும் தொடர்ந்து, “அந்த அடியார் குமரனையே குழந்தையாகப் பெறுவார்,” என்று அந்த அடியார் ஒரு ஆண் குழந்தையைப் பாக்கியமாகப் பெறுவார் என்றார்.
ஸ்ரீஅகத்திய பிரான் அவளிவநல்லூர்
சற்குருவின் அருகில் அழுது கொண்டிருந்ததோ பெண் குழந்தை. ஆரூடப்படி அந்த அடியார் பெண் குழந்தையை அல்லவா பெற வேண்டும் ? இங்குதான் சற்குருவின் லீலை தொடங்குகிறது. அந்த அடியார் சற்குருவுடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் தொலைபேசியில் அருகில் உள்ள முருகப் பெருமானின் திருத்தலத்திலிருந்து ஆலய மணி ஓசை ஒலித்ததே சற்குரு ஆண் குழந்தை என்ற முடிவுக்கு வரக் காரணமாய் அமைந்தது. அருகில் உள்ள பெண் குழந்தையை நினைக்காமல் தொலைவில் உள்ள முருகப் பெருமானை இணைத்ததே சற்குருவின் ஆரூட அருள். சற்குருவின் வழிகாட்டுதல் வாய்க்கப் பெறாமல் தன்னலமற்ற சேவையில் ஆரூடம் சொல்பவர்களுக்கு அத்தி வரதரின் தரிசனப் பலன் இத்தகைய ஆரூட ஞானத்தை விருத்தி செய்யும் என்பது உண்மையே. ஸ்ரீஅகத்தியர் அருளிய அறுகால் ஆரூடம் என்னும் கிரந்தத்தில் இத்தகைய ஆரூட விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக ஜாதகமில்லாத ஒரு பெண்மணி தான் ஒரு ஆணை மணப்பதற்கு விருப்பத்துடன் இருப்பதாக தெரிவிக்கும்போது அந்த ஆண் எதை அடிப்படையாகக் கொண்டு அந்த வரனை ஏற்றுக் கொள்வது ? இத்தகைய குழப்பமான சந்தர்ப்பங்களில் உதவுவதே பிரச்ன ஆரூடமாகும்.
ஒரு முறை இவ்வாறு ஒரு கேள்வியை நம் சற்குருவிடம் கேட்டபோது, “நீங்கள் தாராளமாக அந்தப் பெண்ணை மணந்து கொள்ளலாம்,” என்று அனுமதி கொடுத்தார். காரணம் நம் சற்குருவின் வலது தொடையில் இருந்த ஈ ஒன்று தன் இரு இறக்கைகளால் தன் பின்னங்கால்களைத் தழுவிக் கொண்டிருந்தது. இத்தகைய செய்கை எதிர்கொள்ளும் காரியத்தில் வெற்றியைத் தரும் என்று உறுதிப்படுத்துவதால் சற்குரு அந்தப் பெண்ணை மணப்பதற்கு தடையேதும் இல்லை என்றார். சற்குரு கூறுவதை ஏற்றுக் கொண்டு அந்தப் பெண் மணமகளாக வந்தால் பணிவுடன், குடும்பத்திற்கு ஏற்ற குத்து விளக்காய்த் திகழ்வாள் என்பதே இந்த அறுகால் ஆரூடம் உரைக்கும் உண்மையாகும். இங்கு சற்குருவின் வலது தொடையில் அமர்ந்த ஈ, அது பார்க்கும் திசை போன்ற குணப்பாடுகள் சகுன சாஸ்திரத்தில் அமைபவையாகும். சகுன சாஸ்திரத்திற்கும் ஆரூடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அடியார்கள் உணர்ந்து கொள்ளவே இந்த உதாரணம் இங்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை திருஅண்ணாமலை கார்த்திகை தீப அன்னதானத்திற்கான மளிகை சாமான்கள் வரவு, அரிசி இறக்குதல், அடுப்பு பூஜை, அன்னதான விநியோகம் போன்ற அனைத்து காரியங்களும் கர்ம நிவாரணம் அளிக்கும் செவ்வாய் ஹோரை நேரத்திலேயே நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட உதாரணங்களிலிருந்து அடியார்கள் அறிந்து கொள்வது என்ன ? தாங்கள் நிறைவேற்றும் காரியங்களில் ஏற்படும் வெற்றி தோல்விகள் ஹோரை நேரத்தைக் கொண்டும், தங்கள் காரியங்களில் ஏற்படும் தடைகளை சகுன சாஸ்திரத்தின் மூலமும், பிறர் கேட்கும் கேள்விகளுக்கு பிரச்ன ஜோதிடம் மூலமாகவும் விடை கூற வேண்டும் என்பதே அடியார்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஜோதிட இரகசியங்களாகும்.
உயிர் காக்கும் ஒளி விடங்கர் |
“ஒரு அணுகுண்டு போட்டு லட்சம் பேரை கொல்வது சாதனை அல்ல, ஒரு அணுகுண்டு போட்டு லட்சம் அரிசி மூட்டைகளை விழச் செய்தால் அதுவே சாதனை,” என்பார் கோவணாண்டி பெரியவர். லட்சக் கணக்கில் மனித சமுதாயத்தை பாழ்படுத்தும் அணுகுண்டுகளின் “சாதனை” பற்றி நாம் நன்கறிவோம். ஆனால் லட்சக் கணக்கில் அரிசி மூட்டைகள் விளையும் சாதனை பற்றி நாம் கேள்விப்பட்டது கிடையாது அல்லவா ? அத்தகைய சாதனைகளில் ஒன்றே ஸ்ரீஅத்தி வரதரின் தரிசன பலனாகும். ஒரு சாதாரண அணுகுண்டில் பிரியும் சக்திகள் லட்சக் கணக்கான உயிர்களை மாய்க்கும் என்றும் கூடிப் பிரியும் சக்திகள் இது போன்ற ஆயிரக் கணக்கான மடங்கில் உயிர்களை அழிக்கும் என்பதே சாதாரண அணுகுண்டு விளக்கமாகும். இவ்வாறு இறைவனின் சிவ சக்தி சங்கம இரகசியங்களைப் பகுத்து எல்லா உயிர்களுக்கும் பொதுவாக மனித சமுதாயத்திற்கு நன்மையை மட்டுமே பகிர்ந்தளிக்க திருவுள்ளம் கொண்ட நம் சற்குரு சிவ சக்தி ஐக்ய தரிசனம் எதிரே நம் ஆஸ்ரமத்தை நிறுவிய இரகசியம் இப்போது ஓரளவு புரிகின்றது அல்லவா ? இந்த இரகசியத்தின் அடிப்படையில் அமைந்ததே அமிர்த புஷ்கரணியில் பள்ளி கொண்ட ஸ்ரீஅத்தி வரதரின் திருக்கோலமுமாகும்.
ஸ்ரீஆஞ்சநேயர் திருகுரக்குகா
சிவ சக்தி ஐக்யத்தின் ஒரு துளியாக துலங்குவதே இந்த ஒளி விடங்க இரகசியங்களாகும். ஒளி விடங்க இரகசியத்தைப் பூர்ணமாக உணர்ந்தவர்களே சிவசக்தி ஐக்ய தரிசன மகிமையைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும். இதற்கு உறுதுணையாக அமைவதே முறையான இல்வாழ்க்கை. இதில் “முறையான” என்பதே மிக முக்கியமான இல்வாழ்க்கை தத்துவமாகும். இந்த “முறையான” தத்துவ விளக்கத்தை உலகிற்கு எல்லாம், பக்தர்களுக்கு எல்லாம் ஒரு பாடமாக தனது சொந்த இல்வாழ்க்கை மூலம் அமைத்துக் கொடுத்தவரே நம் சற்குரு. விடங்கம் என்றால் பாதை, குறுகிய பாதை என்று பொருள். ஒரு விஷக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் கிருமியைப் பற்றி நாம் ஆராய்வதாக இருந்தால் ஒன்று அந்த கிருமியைக் காணும் அளவிற்கு நம் பார்வையைச் சுறுக்க வேண்டும் அல்லது அந்த கிருமி நம் சாதாரண பார்வைக்கு தெரியும் அளவிற்கு கிருமியைப் பெரிதாக்க வேண்டும். மைக்ராஸ்கோப் உதவியால் நாம் கிருமிகளை பெரிதாக்கிப் பார்த்து அதன் தன்மைகளை உணர்ந்து கொள்கிறோம். ஆனால் சித்தர்கள், மகான்களோ கிருமி அளவிற்கு தங்கள் பார்வைக் கண்ணோட்டத்தை சுறுக்கி அந்த கிருமியின் நடைமுறைகளைத் தெரிந்து கொள்கிறார்கள். இதுவே ஓரளவிற்கு மேலோட்டமாக நாம் உணரக் கூடிய சித்தர்களின் பணியாகும். அது போல் கோயில் தீர்த்தத்தின் தன்மையை உள்ளது உள்ளவாறு உணர வல்லவர்கள் சித்தர்களே. கங்கையின் தீர்த்தத்தை ஒரே ஒரு டம்ளர் எடுப்பதற்காக தங்கள் ஆயுள் காலம் முழுவதும் பறக்கும் தட்டுகளில் பிரயாணம் செய்து வந்து தீர்த்தம் பெற்று அந்த தீர்த்தத்தில் ஒரு பகுதியை தங்கள் பறக்கும் தட்டு பறப்பதற்கு தேவையான சக்தியாகவும் மிச்சம் பாதியை தங்கள் இருப்பிட கிரகத்தில் உள்ள ஜீவராசிகளின் தீராத வியாதிகளை எல்லாம் தீர்க்கும் அருமருந்தாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தோம். இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். ஏன் இவ்வாறு 600, 700 வருடங்கள் பறந்து வருபவர்கள் நிறைய தீர்த்தம் எடுத்துச் செல்லலாமே ? ஒரு டம்ளர் தீர்த்தத்திற்கு மேல் கங்கை நீரை சுமந்து சென்றால் அந்த பறக்கும் தட்டே வேலை செய்யாது, செயலற்று பூமியிலேயே தங்கி விடும். கங்கை என்பது சாதாரண நீர் அல்லவே, எம்பெருமானின் திருஜடாமுடியைத் தீண்டிய புனிதத்திலும் புனிதமான சிவ பிரசாதம் அல்லவா அது ?
ஸ்ரீபைரவர் தேவர்மலை
பலரும் சிவாலயங்களில் தேய்பிறை அஷ்டமி அன்று நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி பைரவரை வழிபடுகிறார்கள். ஒரு சிலரோ தங்கள் ஆர்வக் கோளாறால் சுவாமிக்கே அந்த தீபத்தைச் சுற்றிச் சுற்றிக் காண்பிப்பதும் உண்டு. பைரவருக்கு ஏற்றப்படும் இத்தகைய தீபங்களை உயிர் காக்கும் ஒளி விடங்கர்கள் என்று அழைப்பதுண்டு. இறந்த பின் ஒருவருடைய ஆவிப் பிரயாணமானது இருண்ட குகை போன்ற பாதை வழியாக செல்வது உண்டு. பூமி வாழ்க்கையின் போது இவ்வாறு பைரவருக்கு நல்லெண்ணெய் தீபங்களை ஏற்றி வழிபட்டவர்கள் செல்லும் பாதையானது ஒளியுடையதாக இருக்கும். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்பதாக தாங்கள் செல்லும் இருண்ட குகையில் விளக்கேற்ற முடியாது என்பதற்காகத்தான் தாங்கள் உயிரோடு இருக்கும்போதே பைரவருக்கு விளக்கேற்றி நாம் பின்னாளில் செல்லக் கூடிய பாதையை ஒளியுள்ள பாதையாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு உறுதுணையாக இந்த பைரவ வழிபாட்டை அமைத்தார்கள் நம் பெரியோர்கள். அறியாமையால் நம் சுற்றத்தார் எண்ணற்றோர் இத்தகைய வழிபாடுகளை இயற்றாவிட்டாலும் நம் வாழ்நாளில் இவ்வாறு எத்தனை பைரவ தீபங்களை ஏற்றி வருகிறோமோ அவை எல்லாம் நம் சுற்றத்தார் செல்லும் மரணப் பாதையை ஒளி வீசச் செய்யும். ஒரு அரை டம்ளர் கங்கை நீரை வியாதிகளைத் தீர்க்கும் பரம ஔஷதமாக மாற்ற ஒருவர் பறக்கும் தட்டில் 600 வருடங்கள் பயணம் செய்ய வேண்டியுள்ளது என்றால் அமிர்தசரஸ் திருக்குளத்தில் மூழ்கி இத்தகைய ஒளி விடங்க சக்திகளை அனுகிரகமாக அளிக்கும் அத்தி வரதரின் தவத்தையோ, இறைவனின் தியாகத்தையோ வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் முடியுமா ? அத்தி மரத்தில் பொலியும் வரதாக்னி என்ற ஐந்தெழுத்து பஞ்சாட்சர சக்தியால் மட்டுமே இவ்வாறு அமிர்தசரஸ் தீர்த்தத்தை புனர் வாழ்வு அளிக்கும் அனுகிரக சக்தியாக மாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்க. இந்த ஒப்பற்ற சாதனையை நிறைவேற்றக் கூடிய தெய்வ மூர்த்தி ஸ்ரீஅத்தி வரதர் ஒருவரே, ஆம் அத்தி வரதர் ஒருவர்தான். வரதாக்னியின் சுடரே இவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றால் அது யுகம் யுகமாக நிலைகொள்ளும் அமிர்தசரஸ், பொற்றாமரைக்குளம் தீர்த்தங்கள் இணைந்தால் தோன்றும் சிவ ஐக்ய தீர்த்த மகிமையை விளக்கத்தான் முடியுமா, இந்த தீர்த்தத்தால் விளையும் பிரசாதம் தீர்க்கும் வியாதிகள்தான் எத்தனை எத்தனை, மாயமாகும் பிரச்னைகள்தான் எத்தனை எத்தனை ? ஒளி விடங்கர் என்ற தத்துவத்தை உணர்ந்து அதை மற்றவர்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்தவரே பகவான் ரஜனீஷ். அந்தத் தத்துவம் சுட்டிக் காட்டும் சுவையில் தங்களை மறந்து, மறைந்தோரே மற்ற மனிதர்கள்.
ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி |
ஒரு முறை வடிவங்கள் மனதில் தோற்றுவிக்கும் விகாரங்களை சம்ஹாரம் செய்யும் முருகப் பெருமானின் பெயரை உடைய அடியார் ஒருவர், ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி எந்த முத்திரையை கைக்கொண்டு சமாதியில் ஆழ்ந்தார் என்பதை அறிந்து கொள்ள விழைந்தார். சற்குருவோ, “உலகையே ஆட்டிப் படைக்கும் யோனி முத்திரையை கைக்கொண்டுதான் அவர் சமாதியில் ஆழ்ந்தார்,” என்று ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தியின் பெருமையைக் குறிப்பிட்டார். இந்த உலக இன்பங்களைத் துறந்து, அறிவை மயக்கும் காமத்திற்கு அதிபதியான சுக்ரனுக்கு உகந்த பரணி நட்சத்திரம் அன்று சமாதியில் லயித்தவரே ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தியாவார். உண்மையில் உடைமைகளையும், சொத்துக்களையும் எரிக்கும் தீயை விட வலிமை கொண்டதாக அனைத்தையும் எரிக்கும் சக்தி உடையதே காமத் தீ என்பதால் பெரும்பாலான தீயணைப்பு நிலையங்களில் இம்மூர்த்தியின் வழிபாட்டு நிலையங்கள் அமைந்துள்ளன போலும். ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி அமர்ந்திருக்கும் கோலம் கோமுக ஆசனம் என்பதாகும். கோமுக ஆசனத்தில் அமர்ந்து யோனி முத்திரையைப் பயில்வதால் ஆண்களுக்கு வரும் விந்துப்பை சம்பந்தமான (testicular enlargement) போன்ற நோய்களும், prostate enlargement போன்ற நோய்களும் குணமாகும்.
கோமுக ஆசனத்தில் அமர முடியாதவர்கள் பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சுகாசனத்தில் அமர்ந்தும் இந்த முத்திரையைப் பயின்று வரலாம். கர்ப்பப்பை கோளாறுகள், மாதவிடாய்த் துன்பங்கள், அடிவயிறு பிரச்னைகள் (hernia etc) போன்றவற்றால் துன்பமடையும் பெண்களும் இத்தகைய வழிபாட்டால் பயன்பெறுவர்.
யா தேவி சர்வ பூதேஷூ
யோனிபீட ரூபேண சமஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
என்ற மந்திரத்தை ஓதுதல் நலம். சுகப் பிரசவத்திற்கு வழிகோலும் அற்புத மந்திரம்.
யோனி முத்திரை
ஒரு முறை ஒரு அடியார் தன்னுடைய மனைவியை மருத்துவ மனையில் பிரசவத்திற்காக சேர்த்திருந்தபோது மருத்துவர்கள் சுகப் பிரசவம் என்பது கேள்விக் குறியே என்று கூறியபோது அந்த அடியார் நம் சற்குருவை நம்பி மேற்கூறிய மந்திரத்தை ஓத தாயும் சேயும் நலம் அடைந்தனர். அந்த ஆண் குழந்தையும் சுறுசுறுப்பாக இப்போது பள்ளிப் படிப்பைத் தொடர்கிறது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும். கோயில்களில் உள்ள நீர்த்தாரைகளான கோமுகங்களை சுத்தம் செய்து சுத்தமான மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்து வழிபடுதலும் நன்மை பயப்பதே. இல்லறமே நல்லறம் என்பதை உறுதி செய்யும் வண்ணம் ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி இல்லறத்தில் இருந்து கொண்டே மேற்கூறிய வழிபாடுகளை முறையாக இயற்றி இறுதியில் இறைவனுடன் ஒன்றும் இனிய அனுபவத்தையும் பெற்றார்.
ஸ்ரீதிரிபுர சம்ஹார மூர்த்தி திருஅதிகை
காஞ்சியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஅத்தி வரதரும் இத்தகைய சம்ஹார மூர்த்திதான். சத்ரு என்றால் எதிரி. சத்ரு சம்ஹார மூர்த்தி என்றால் எதிரிகளை வீழ்த்துபவர் என்று பொருள். அஜாத சத்ரு என்றால் வெல்ல முடியாத எதிரி என்று பொருள். இவ்வாறு வெல்ல முடியாத எதிரியான ராவணனையும் வென்று வெற்றிக் கொடி நாட்டியவர்தானே ஸ்ரீராமபிரான். பெருமாளின் அவதாரமான ராம அவதாரத்தை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தால் இந்த உண்மை பளிச்சென விளங்கும். ராமர் ஜாதகத்தில் அவர் இதயம் என்பது நான்காம் வீடுதானே. இந்த நான்காம் வீடாகிய துலா ராசியில் சனீஸ்வரன் உச்சமாக எழுந்தருளி உள்ளார். இது சுக்ர பகவான் ஆட்சி கொள்ளும் வீடு. இந்த வீட்டைப் பார்ப்பவரோ புத யோக பலம் பெற்ற ஸ்ரீஆதித்ய பகவான். துலா ராசிக்கு உரிய சுக்ர பகவானோ மீன ராசியில் உச்சம் பெற்றுள்ளார். இந்த ஜாதக அம்சங்கள் குறிக்கும் சிறப்பென்ன ? பொதுவாக, மனிதர்கள் தங்கள் இதய ராணியான மனைவியையே நெஞ்சத்தில் குடியேற்றி வைப்பார்கள். ஆனால் ஸ்ரீராமபகவானோ குடி மக்களின் நலனைக் குறிக்கும் சனி பகவானை இதயத்தில் வைத்துள்ளார். இவ்வாறு தன் குடிமக்களை ஆட்சி செலுத்துவதில் தர்மமும், நியாயமும் பெருகி இருக்கும் என்பதையே உச்சம் பெற்ற சூரிய பகவானின் ஏழாமிட பார்வை உரைக்கின்றது. இத்தகைய பெருமை வாய்ந்த ஒரு ராம ராஜ்யம் இனி எக்காலத்தும் உருவாகாது என்பதையே இத்தகைய சக்தி மிகுந்த ராம ஜாதகம் உரைக்கின்றது. ஸ்ரீசம்ஹார மூர்த்தி ஸ்ரீவரதரின் வரமாக எழுந்தருளி உள்ளார் என்பதற்கு மற்றோர் உதாரணம் இவர் மகிழ மரத்தடியில் எழுந்தருளி இருப்பதாகும். விஷ்ணுவிற்கு வகுளாபரணன் என்ற நாமமும் உண்டல்லவா ? வகுளம் என்றால் மகிழம், ஒலி என்றெல்லாம் பொருளுண்டு. அதனால்தான் சஹஸ்ரநாமங்களில் விஷ்ணு சகஸ்ரநாமம் சிறப்புடையதாகவும் விஷ்ணு சகஸ்ரநாமத்திற்கு இணையான சிறப்புடையதாக ராம நாமமும் பொலிகின்றது.
திருப்பூந்துருத்தி
ஒருமுறை ஸ்ரீதிருஞான சம்பந்தர் பல்லக்கில் ஏறி கண்டியூரிலிருந்து திருப்பூந்துருத்திக்கு வருகை தந்தார். திருப்பூந்துருத்தியை அடைந்தபோது அப்பர் பெருமானின் புனிதமான உழவாரப் படை தீண்டிய இந்தப் பிரகாரத்தை அடியேன் தீண்ட மாட்டேன் என்று கூறி விட்டு சிவனை தரிசிப்பதற்கு முன்னால் அப்பர் பெருமானையே தரிசிக்க வேண்டி, “அப்பர் எங்குற்றார்?” என்று கேட்க திருஞானசம்ப மூர்த்தி நாயனாரின் பல்லக்கை சுமந்து வந்த திருநாவுக்கரசு சம்பந்த மூர்த்தி நாயனார் பெருமான் முன் வந்து அடியேன் இங்குற்றேன் என்ற கூற இரு சைவ சிகரங்களும் ஒருவரையொருவர் வாரி அணைத்த காட்சியை மெய் மறந்து இரசித்தவர்கள் ஏராளம்.
சிவனடியார் ஒருவனுக்கு உற்றார், உறவினன் என்று சொல்லக் கூடியது சிவன், அவன் அடியார் மாத்திரமே என்று அப்பர் பெருமானும் தன் உயர்ந்த வரிகளால்,
உற்றார் ஆருளரோ உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் ஆருளரோ
என்று உறுதி செய்தார் அல்லவா ? அந்த அற்புத தேவார வரிகளுக்கு சான்றாய் அமைந்ததே இந்த இறை அடியார்களின் சந்திப்பாகும். இதை உறுதி செய்வதாகவே எம்பெருமானும் நந்தியை விலகச் செய்து அந்த உத்தம அடியார்களுக்கு திருக்காட்சி நல்கியதை இன்றும் நாம் தரிசிக்கலாம். சத்ரு சம்ஹார மூர்த்தி தம்பதிகளின் இயற்பெயரோ கனகசபாபதி சொர்ணம் என்பதாகும். இந்தத் தங்கத் தம்பதிகளை இந்தத் தங்க ஆண்டில் நினைவு கூர்வது பொருத்தம்தானே. சம்ஹாரம் என்றாலே சண்முகனுக்கு உரியதுதானே. அதனால் சத்ரு சம்ஹார மூர்த்தி முருகப் பெருமானின் திருஉருவப் படத்தை வைத்து நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழிபடுவார். “அன்னவன் இயற்றும் பூசையில் அவரவர் வழிபடும் தெய்வமே அவரவராய் நின்றதுவே,” என்று சம்ஹார மூர்த்தியின் வழிபாட்டைச் சிறப்பிக்கிறது அகத்திய கிரந்தம். அதாவது சம்ஹார மூர்த்தி பழநி முருகப் பெருமானின் திருவுருவத்தை வைத்து வழிபட்டாலும் பார்ப்பவர்களுக்கெல்லாம் அவரவர் இஷ்ட தெய்வமான சமயபுரம் மாரியம்மன், மதுரை வீரன், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் என்றே தோன்றுவதுண்டு. இதற்காகவே சுவாமி இயற்றும் வழிபாட்டில் பங்கு கொண்டோர் ஏராளம். இதுவே பரணி தரணி ஆளும் இரகசியம்.
காரைக்கால் திருத்தலம்
ஸ்ரீசத்ரு சம்ஹார மூர்த்தி தன் துணைவியாருடன் சேர்ந்து ஏழைகளுக்கு ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அன்னதானம் அளித்து வருவது வழக்கம். ஒருமுறை இவ்வாறு அன்னதானத்திற்கு தயாரித்த பிரசாதத்தில் உப்பு ஏகமாகக் கூடி விட்டது. ஆனால் தன் துணைவியார் தயாரித்த பிரசாதத்தில் உப்பு கூடி விட்டது என்று வெளிப்படையாகக் கூறினால் தன்னுடைய மனைவியைக் கடிந்து கொள்வதாக அர்த்தமாகும் அல்லவா. இதையும் சுவையாகக் கையாண்டார் மூர்த்தி. தன் துணைவியாரின் உள்ளங்கையை நக்கிப் பார்த்து விட்டு ஆஹா உன்னுடைய உள்ளங்கையே இவ்வளவு கரிக்கிறதே, அப்படியானால் அந்த தயிர் சாதத்தில் எவ்வளவு உப்பு இருக்கும் என்று ஒன்றுமறியாதவர் போல் கேட்டாராம். இதுவே கணவன் ஒருவன் தன் குடும்பத்தில் செயல்படும் விதம் என்று சுட்டிக் காட்டியவரே சத்ரு சம்ஹார மூர்த்தி. மேலோட்டமாகப் பார்த்தால் அன்னதானத்தின் சுவை கூட்டுவதாக இந்நிகழ்ச்சி தோன்றினாலும் தன்னுடைய மனைவியின் கர்ப்பப்பையில் இருந்த கோளாறையே இவ்வாறு தன்னுடைய நாக்கால் நக்குவதன் மூலம் சீர்செய்தார் ஸ்ரீசம்ஹார மூர்த்தி என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். இவ்வாறு பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கோளாறுகளை நீக்கவும், ஆண்களுக்கு தோன்றும் prostate gland பிரச்னைகளைக் களையவுமே இவ்வாறு உள்ளங்கையில் விளக்கெண்ணயை ஊற்றி அதை நாக்கால் நக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவதன் பின்னால் எத்தகைய இரகசியங்கள் பொதிந்துள்ளன ? விளக்கெண்ணெய் வித்தை அளிக்கும் ஆமணக்கு தலவிருட்சமாகப் பொலியும் தலமே கும்பகோணம் அருகிலுள்ள கொட்டையூர் திருத்தலமாகும். இறைவன் பெயர் ஸ்ரீகோடீஸ்வர மூர்த்தி. பணம், பதவி என எதை வேண்டினாலும் கோடி கோடியாக அருளும் மூர்த்தி. இத்தலத்தில் சற்குருவுடன் திருப்பணி இயற்றும் வாய்ப்பு கிட்டியபோது சற்குரு, “நீங்கள் எதை வேண்டினாலும் அதை கோடி கோடியாக அருளும் மூர்த்திதான் இவர். ஆனால் பணம், பெண் என எதை வேண்டினாலும் அவற்றால் பிரச்னைகளே பெருகும் என்பதை உணர்ந்தவர்களே நீங்கள். அதே சமயம் எதையும் வேண்டாமல் இருக்கவும் முடியாது என்பதே மனத்தின் தன்மை. எனவே அனைவரும் இறைவா, பிறவாமையைக் கொடு, பிறவாமையைக் கொடு என்றே வேண்டி திருப்பணியை மேற்கொள்ளுங்கள்,” என்றார். இதுவே 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே தரிசனம் அளிக்கும் அத்தி வரதரிடம் அடியார்கள் வேண்டிக் கொள்ள வேண்டிய வரமாகும். கழுதைகள் என்று நாம் கேவலமாக நினைக்கும் உயிரினங்கள் செல்வ விருத்தியை அளிக்கவல்ல அற்புத தேவதைகளே என்பதை உணர்ந்தால் நாம் அவைகளைப் பார்க்கும் கண்ணோட்டமே மாறி விடும்.
சித்தர்கள் கழுதைகளை வெள்ளி மூக்கு சிங்கங்கள் என்ற புனைபெயரால் அழைக்கின்றனர். நாமும் கழுதைகளை இந்த அற்புத நாமத்தால் அழைத்தல் சிறப்பே என்பதை விட இந்த யோக ஜீவன்களைப் பராமரிப்பதே நாம் அவைகளுக்குச் செய்யும் தொண்டும் முறையான செல்வ வளர்ச்சிக்கு வித்திடும் தான தர்மமுமாகும். பச்சை பட்டாணி, கேரட், நூல்கோல் போன்ற உணவு வகைகளை பரணி, வெள்ளிக் கிழமை அல்லது இவை இரண்டும் இணைந்து வரும் நாட்களில் இந்த வெள்ளி மூக்குச் சிங்கங்களுக்கு அன்னதானம் அளித்தல் கிடைத்தற்கரிய பேறே. இவ்வாறு பரணி நட்சத்திர நாளில் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் குபேர பகவானின் அருள் கடாட்ச சக்திகளையே நீங்கள் இங்குள்ள வீடியோ படத்தில் பெறுகிறீர்கள். பெருமாளின் தரிசனமே சிறப்பு என்றாலும் அத்தி மரத்தில் எழுந்தருளிய பகவானின் கருணை கடாட்சத்தை நாம் வர்ணித்துக் கொண்டே செல்லலாம் என்பதையே அத்தி வரதரின் பெருமை பறைசாற்றுகிறது. குழந்தைப் பேறு இல்லாதவர்கள் அத்தி மரத்தை விடியற்காலையில் வலம் வந்து வணங்குதலால் குழந்தைப் பேற்றை பெறுவார்கள் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, அது இன்றும் பலித்து வரும் வழிபாடே.
கோமாதா குலமாதாவே திருஅண்ணாமலை
திருஅண்ணாமலை அக்னி தீர்த்தக் குளக்கரையில் அமைந்துள்ள அரச மரத்தை மாதுரி என்ற இளம்பெண் வலம் வந்து அருள்பெற்றதை ஏற்கனவே விளக்கியுள்ளோம். இன்றும் திருமணம் நிறைவேறாமல் தவிப்போரும் திருமணமாகி குழந்தைப் பேறு இல்லாதவர்களும் இந்த அத்தி மரத்தை வலம் வந்து சுத்தமான மஞ்சள் குங்குமம் இட்டு வழிபடுதலால் திருமணத் தடங்கல்கள் விலகி முறையான குழந்தை பாக்கியம் கிட்டும் என்பதும் உண்மையே. இது என்றோ ஒரு நாள் நிகழ்ந்த வரலாறு கிடையாது, இன்றும் தொடரும் இனிய வைபவமே என்பதை உறுதி செய்வதே இங்கு நீங்கள் காணும் புகைப்படமாகும். மாதுரி வழிபட்ட மரத்தின் எதிரே தன் காலை நீட்டிக் கொண்டு இடது காலை மடக்கி வைத்து காயத்ரீ மந்திரம் ஜபிக்கும் காமதேனுவின் புகைப்படமே இது. கிடைத்தற்காரிய காயத்ரீ பொக்கிஷம், மாங்கல்ய ரட்சை, சந்தான வாய்ப்பு. தற்காலத்தில் தவறான கருத்துக்களை மனதில் பதித்துக் கொண்டு தங்கள் இளமை குறைந்து விடும் என்று தாங்கள் பெற்ற குழந்தைகளுக்கு பல தாய்மார்களும் பால்புகட்டாமல் விட்டு விடுகிறார்கள். இதனால் விளையும் கர்மங்களோ ஏராளம். கர்ம வினைகளைக் கூறி மக்களைப் பயமுறுத்துவது நமது கொள்கை அல்ல என்பதால் இனி பக்தர்கள் இத்தகைய தவறுகளை தொடராமல் இருக்க இவ்வாறு கன்று ஈன்ற பசுக்களுக்கு அருகம்புல், வெல்லம், கோதுமை தவிடு போன்ற உணவு வகைகளை திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலோ அல்லது பசுமாடு காப்பகங்களிலோ அளித்து வருதலால் தாங்கள் இதுவரை செய்த தவற்றிற்கு இவை பிராயசித்தமாக அமையும். இவ்வாறு அமிர்த சக்திகள் பெருகும் பரணி, வெள்ளிக் கிழமை நாட்களில் பசுக்களுக்கு உணவிடுதல் பலருக்கும் முடியாமல் போனாலும் இடையர் குலத்தில் தோன்றிய கிருஷ்ண பகவானின் அருளால் அத்தி வரதரின் தரிசனம் பெற்ற ஒரு மண்டல காலத்திற்குள் குறைந்தது 21 பசு மாடுகளுக்கு கீரை, வெல்லம் போன்ற உணவு வகைகளை அளித்தலால் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோய், மார்பகம் போதுமான வளர்ச்சி அடையாமை போன்ற குறைபாடுகள் சீரடையும் என்று சித்தர்கள் உறுதியளிக்கிறார்கள். தொடர்ந்த வழிபாடு அவசியம் என்பதை நினைவில் கொள்க. இவ்வாறு கன்று ஈனும் பசுவை தரிசனம் செய்து வலம் வந்து வணங்கி ஸ்ரீகௌதம மகரிஷி பெற்ற அனுகிரகத்தைப் போல் காயத்ரீ ஜபிக்கும் இத்தகைய பசுக்களை வலம் வந்து வணங்குதல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட பலன்களை அளிக்கக் கூடியதே இத்தகைய வழிபாடுகளாகும்.
உன்னதம் உத்யோகம் உன்னதமே |
உத்யோகம் என்பதற்கு சம்பளம் பெற்றுத் தரும் ஒரு தொழில், வேலை என்றே பலரும் அறிவோம். தன் கடமையை உணர்ந்து செயலாற்ற ஆயத்தமாக இருத்தல் என்ற பொருளும் உண்டு. உத்யோகம் புருஷ லட்சணம் என்பது இந்த கடமையைக் குறிப்பதாகும். ஒரே மாதிரியான மூன்று பொருட்களை வரிசையாக வைத்தால் நடுவில் உள்ள பொருள் குசா சக்தியைப் பெற்றிருக்கும் என்பது விதி. அது போல குசா தீபத்தில் வரிசையாக எரியும் மூன்று தீபங்களில் நடுவில் உள்ள தீபம் குசா தீபம் என்றழைக்கப்படுவதால் அதன் கிரணங்கள் நல்ல சக்தியையே, நல்ல பலன்களையே வர்ஷிக்கும். அப்படியானால் குசா தீபத்தைத் தவிர மற்ற இரண்டு தீபங்களுக்கும் பலன் இல்லை என்றல்லவா தோன்றும். ஆனால் அந்த இரண்டு தீபங்கள் ஒளிர்வதாலே நடுவில் உள்ள தீபம் குசா சக்தியைப் பெற முடிகிறது. இதுவே இறை சிருஷ்டியின் இரகசியம். இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால்தான் சீர்காழி, உத்திரமேரூர், இளவனார் சூரக்கோட்டை என்ற திருத்தலங்களில் மூன்று இறைமூர்த்திகள் எழுந்தருளி குசா சக்தியை வர்ஷிக்கும் அற்புதம் புரியவரும்.
ஸ்ரீஆயத்த நந்தி மூர்த்தி ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
இளவனார் சூரக்கோட்டை
இத்தலத்தில் இளவனார் என்ற சூரன் ஒருவன் இருந்தான். பட்டாக்கத்தி ஏந்திய ஒரு லட்சம் வீரர்களை சம்ஹாரம் செய்யக் கூடியவனே வீரன். இத்தயை ஒரு லட்சம் வீரர்களை வாள் ஏந்திய கையை இறக்காமல் மாய்ப்பவனே சூரன் ஆவான். இவ்வாறு பத்மாசுரன் என்ற அரக்கனை சம்ஹாரம் செய்து தன்னை நம்பிய பக்தர்களைக் காத்து அருள் புரிந்தார் ஸ்ரீமகா கணபதி என்பது நீங்கள் அறிந்ததே. இது என்றோ நிகழ்ந்த கதை அல்ல, இன்றும் இத்தகைய வீர தீரச் செயல்கள் தொடர்கின்றன என்பதற்கு எடுத்துக் காட்டாக விளங்குவதே இளவனார் சூரனின் வரலாறு ஆகும். துப்பாக்கி ஏந்திய ஆயிரக் கணக்கான ஆங்கில வீரர்கள் தன்னைச் சூழ்ந்து கொள்ள அவர்கள் அனைவரையும் தனி ஒருவனாய் வாள் என்ற ஒரே ஆயுதத்தைக் கையில் ஏந்தி அவர்களை வெட்டி வீழ்த்தியவனே இளவனார் சூரன். அவன் வழிபட்டு இத்தகைய காணுதற்கரிய வீரத்தைப் பிரசாதமாக பெற்ற திருத்தலமே இளவனார் சூரக்கோட்டை என்ற விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருத்தலமாகும். வீரம் கொப்பளிக்கும் இந்த மண்ணிற்கு சான்றாய் விளங்குவதே இத்தலத்தில் அருள்புரியும் உத்யோக நந்தி மூர்த்திகள் ஆவர். பொதுவாக இறைவனை நோக்கி அருளும் நந்தி மூர்த்திகளைப் போல் அல்லாமல் இறைவனுக்குத் திரும்பி பக்தர்களை தரிசித்தவாறு எழுந்தருளிய மூர்த்திகளை இவ்வாறு உத்யோக நந்தி மூர்த்திகள் என்று அழைப்பதுண்டு. எம்பெருமான் முப்புரங்களை எரிக்க ஆயத்தமானபோது இத்தகைய நந்தி மூர்த்திகள் ஆதியில் தோற்றம் கொண்டனர். கொல்லிமலையிலும் இத்தகைய அபூர்வ நந்தி மூர்த்திகளின் தரிசனம் கிட்டும். இறைவன் எந்நேரமும் தங்கள் மீது ஏறி போர் தொடுக்க ஆயத்தமாக இருப்பதே இத்தகைய நந்தி மூர்த்திகளின் சக்தியாகும். போதிய தகுதிகள் இருந்தும் வேலை வாய்ப்பு கிட்டாத படித்த பட்டதாரிகள் இத்தகைய உத்யோக நந்தி மூர்த்திகளை தரிசனம் செய்து அவித்த வேர்க்கடலைகளை ஆடுகளுக்கு தானமாக அளித்தலால் இந்த உத்யோக மூர்த்திகளின் அனுகிரகத்தை எளிதில் பெறுவார்கள். ஸ்ரீபிருகன்நாயகி அம்பாளை விடுத்து சுவாமி கருவறை, பிரகாரம், கொடி மரம் என்ற மூன்று இடங்களிலுமே உள்ள நந்தி மூர்த்திகள் இத்தகைய உத்யோக பாங்குடன் எழுந்தருள்தல் என்பது அரிதிலும் அரிய அனுகிரகமே.
ஒன்றை சிவனுக்குச் சூட்டு ... |
ஒன்றை சிவனுக்குச் சூட்டு அது கொன்றையாக இருக்கட்டும் என்று கொன்றை மலரை சிறப்பித்துப் பாடுகிறது ஸ்ரீஅகத்திய கிரந்தம். மலர் வழிபாடு என்று மேலோட்டமாக எடுத்துக் கொண்டால் அது கொன்றை மலர் சிவனுக்குச் சிறப்பு வாய்ந்தது என்று கூறினாலும் இந்த கிரந்த நாடி சுட்டிக் காட்டும் பொருள் எத்தனை எத்தனையோ. அனைவரும் அறிந்த, பல பக்தர்களும் கையாண்டு வரும் மலர் வழிபாட்டில் மட்டும் 18 தத்துவார்த்த விளக்கங்கள் உண்டு. இந்த தத்துவார்த்த விளக்கங்களின் வெளிப்பாடே கீதை என்றால் மிகையாகாது. கீதைக்கு ரத்ன கிரீடமாகத் திகழும் ஸ்ரீஆதிசங்கரரின் உரையை உணர்ந்து கொண்டாலே இந்த தத்துவங்களின் உண்மையை உணர முடியும். அதனால்தான் நம் சற்குருவும் கீதை என்பது நாம் ஆரம்பத்தில் படிக்க வேண்டிய பாடமாக இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல இது நம் உடல் இரத்தத்தில் தோய்ந்து உணர வேண்டிய வாழ்க்கைத் தத்துவமே ஆகும் என்பார். பல ஆஸ்ரமங்களிலும் உணவேற்கும் முன் கீதை பாராயணம் வைத்திருப்பது இக்காரணம் பற்றியே. உணவு உடலுக்குத் தேவை என்றால் உள்ளத்திற்குத் தேவை கீதை உணர்த்தும் பாடமே என்பதை மெதுவே மெதுவே அடியார்கள் உணர்ந்து கொள்ளவே.
இளவனார் சூரக்கோட்டை
நம் சற்குரு மணமுள்ள மலர்களையே இறைவனுக்குச் சூட்ட வேண்டும் என்பார். மாதா அரவிந்த அன்னையோ காகிதப் பூவையும் வழிபாட்டிற்குப் பயன்படுத்தலாம் என்பதாக உபதேசிக்கிறார். குருமார்களின் போதனைகளே நம்மைக் குழப்புவதாகத் தோன்றும். உண்மை மாறாது, தத்துவம் குழப்பாது, நம்மை நாமே குழப்பிக் கொள்கிறோம் என்பதே உண்மை. உடலுக்கு ஒரு தலை, சீடனுக்கு ஒரு சற்குரு என்று கொண்டால் அங்கு குழப்பத்திற்கு வேலையே இல்லை. கொன்றையை மலராக பார்க்கும்போது அது சிவனுக்கு உரியதாகிறது. அது வெற்றியின் சின்னமாக மாறும்போது அதை அரசர்களும் அணிந்து கொள்கிறார்கள். மனிதர்கள் தங்களுக்குக் கிடைக்கும் வெற்றியை மனமார அர்ப்பணிக்கும்போது அதுவே இறைவனுக்கு அளிக்கும் தத்துவ கொன்றையாகிறது. இந்த தத்துவ கொன்றையே அவிந்த மாதா சுட்டிக்காட்டுவதாகும். இந்த தத்துவ கொன்றையே இளவனார் சூரக்கோட்டையில் தல விருட்சமாக அலங்கரிப்பதாகும். இந்த தத்துவ கொன்றையின் வெளிப்பாடாக எழுந்தருளிய தெய்வமே ஸ்ரீஅத்தி வரதர் ஆவார். 40 வருடங்களுக்கு ஒரு முறை எழுந்தருளும் ஸ்ரீஅத்தி வரதர் தன்னுடைய தரிசனத்தின்போது இத்தகைய 18 தத்துவ விளக்கங்களையும் அனுகிரகமாக அளித்து விடுகின்றார் என்பதே உண்மை. ஆனால் இந்த தத்துவ விளக்கங்களை புரிந்து கொண்டு வாழ்வாங்கு வாழ பக்தர்களுக்கு எத்தனை பிறவிகள் எடுத்துக் கொள்ளுமோ அதை இறைவனே அறிவார். ரோஜாப் பூக்களை பிரம்ம முகூர்த்த நேரத்தில் பறித்து இறைவனுக்கு சூட்டுவதால் கிட்டும் பலன்கள் ஏராளம். இதற்காகவே புலிக்கால் முனிவர் மரமேறி மலர்களைப் பறிக்கவும், இருளில் மலர்களைப் பார்க்கவும் புலி பிறவியை வேண்டிப் பெற்றார். பிரம்ம முகூர்த்த நேரத்தில் மட்டும் வெண்பனி என்ற கிருஷ்ண லோகத்திலிருந்து வந்த தெய்வீக ஒளி திருஅருணாசாலத்தை பூஜிக்க அதன் அனுகிரக சக்திகள் பூமியில் உள்ள எல்லா ரோஜா மலர்களுக்கும் பரிமாறப்படுகின்றன. இந்த வெண்பனி சக்தி அனுகிரகத்தை மக்கள் பெறுவதற்காகவே பிரம்ம முகூர்த்த நேரத்தில் ரோஜா மலர்களைப் பறித்து இறைவனுக்குக் சூட்ட வேண்டும் என்று விதித்துள்ளார்கள். இதனால் பக்தர்களின் உள்ளம் பனியைப் போல் தூய்மை அடைந்து இறை மூர்த்திகளின் சூட்சும தரிசனதைப் பெற முடியும். இத்தகைய அனுகிரகத்தை அரவிந்தமாதாவை சற்குருவாகப் பெற்றவர்களும் காகிதப் பூக்களை அன்னைக்கு அளித்தலால் பெற முடியும் என்றால் இது மலரின் தன்மை அளிக்கும் அனுகிரகத்தை விட சற்குருவின் தியாகமே இங்கு பிரகாசிக்கிறது என்பதே அடியார்கள் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை. எனவே அரவிந்தமாதாவை சற்குருவாகப் பெறாத ஒருவர் காகிதப் பூவை இறைவனுக்குச் சூட்டினால் அது நிச்சயமாகத் தவறுதான் என்பதைப் புரிந்து கொள்ளவே இத்தனை விளக்கங்கள். முதலில் மனிதர்கள் தேட வேண்டியது கடவுளை அல்ல, இறைவனை அல்ல, குருவையே சற்குருவையே.
ஸ்ரீதன்னிகரில்லாத் தலைவன்
இளவனார் சூரக்கோட்டை
இங்கு அடியார்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். விஷ்ணு லோகம் என்று இருக்கும்போது கிருஷ்ண லோகம் என்று உண்டா. ஆம், நிச்சயமாக கிருஷ்ண லோகங்களும் பலராமர் லோகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. தன்னலம் கருதாத ஒரு நாயகி மக்களுக்கு சேவை ஆற்றி வந்தாள். அவள் சேவையில் மகிழ்ந்த இறைவன் அந்த நாயகிக்காக ஒரு தனி லோகத்தையே உருவாக்கி வைத்திருந்தாராம். ஆனால் தன் பணியின் இறுதி கட்டத்தில் மத மாற்றம் என்ற சற்றே தன்னலம் கலந்த திருப்பணியில் அம்மாது மூழ்கியபோது இறைவன் அந்த லோகத்தை மறைத்து விட்டாராம். ஒரு சாதாரண மருத்துவ சேவைக்கே ஒரு லோகத்தை உருவாக்கும் இறைவன் கிருஷ்ண பகவானுக்காக ஒரு உலகத்தையே உருவாக்க மாட்டானா என்ன ? இதுவே அடியார்கள் உணர்ந்து கொள்ள வேண்டிய பாடமாகும். எந்த இறைவனை வணங்கினாலும் எந்த தேவதையை உபாசித்தாலும் அவர்கள் நிச்சயமாக ஒரு புண்ணிய லோகத்தை அடைவர். எப்போது ? அவர்கள் பணி தன்னலம் சிறிதும் கலப்படம் இன்றி இருக்கும்போது. சற்குருவுடன் நெருங்கிப் பணி ஆற்றியவர்களுக்கு, ஒருவர் சாராயத்தில் குளித்திருந்தாலும் போதையில் மூழ்கியே காலத்தை கழித்திருந்தாலும் பின்னர் திருந்தி நல்வாழ்வு வாழ்ந்து இறைவனைப் பற்றியே சுவாசித்து அவருடைய ஒவ்வொரு மூச்சும் இறைமயமாகத் திகழ்ந்ததால் அவர் இன்று ஒரு புண்ணிய லோகத்தில் வாழ்கிறார் என்ற உண்மை தெரிந்திருக்கும். இதுவே தன்னலம் கருதாப் பணிக்கு இறைவன் அளிக்கும் தனிப் பரிசு. ஞானக் கனியைப் பெற பிள்ளையாரும் முருகனும் போட்டியிட இறுதியில் பிள்ளையாரப்பனே தந்தை தாயை சுற்றி வலம் வந்து வணங்கி வெற்றி பெற்ற வரலாறு நீங்கள் அறிந்ததே. இதன் பின்னணியில் நிகழ்ந்த இறை லீலைகள் ஏராளம். கோபித்துக் கொண்டு சென்ற முருகனுக்கு ஆறுதல் அளித்த அன்னையும் பிதாவும் முருகப் பெருமானின் அவதாரச் சிறப்புக்களை எல்லாம் சுட்டிக் காட்டினர். எம்பெருமானின் நெற்றிக் கண் ஜோதியில் தோன்றிய ஒரே தெய்வம் முருகப் பெருமானே. மூன்று என்ற குரு சக்தியைக் குறிக்கும் மூன்றாம் நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தையே தன் வளர்ப்பு தாயாகக் கொண்டவன். அந்த ஆறு கிருத்திகை நட்சத்திர தேவியரின் நடு நாயகமாக விளங்கி அம்மை அப்பரின் இடையே பொலியும் சோமாஸ்கந்தர் என்ற அனுகிரகத்தையும் பெற்றான் முருகன். இந்த சோமஸ்கந்த அனுகிரக சோதியாக இவ்வாறு ஏழு கோபுர கலசங்கள் நடுவில் பெற்ற சோமாஸ்கந்த தரிசனத்தையும் இந்தப் படத்தில் நீங்கள் தரிசிக்கலாம். இத்தகைய பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி வழக்கமாக பிள்ளையார் எழுந்தருளும் திருக்கோயில் வலது பக்கத்தையும் முருகப் பெருமானுக்கு இளவனார் சூரக்கோட்டையில் அருளி முருகனைச் சாந்தப்படுத்தினர். எனவே குழந்தைகளான இளவல்களுக்கு இங்கு விளையாத வீரம் வேறு எங்குமே விளையாது என்பதே இத்திருத்தலத்தின் மகிமையாகும். ஸ்ரீஅர்த்தநாரீஸ்வர மூர்த்திக்கும் ஸ்ரீபிரஹந்நாயகிக்கும் இடையே ஸ்ரீமுருகப் பெருமான் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி உள்ளதால் அநாதையாகப் பிறந்ததாலோ அல்லது வேறு பல காரணங்களாலோ தாய், தந்தை இவர்களின் அரவணைப்பைப் பெறாதவர்கள் இத்தல முருகப் பெருமானை வணங்கி அருள் பெறுதலால் மனதில் எழும் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவார்கள். இந்த மனக் கொந்தளிப்புகளை உணர்ந்தவர்களே உணர முடியும். ஆறுதல் தரும் அற்புத வழிபாடு இத்தலத்தில் இளவல் அளிக்கும் இனிய அனுகிரகம். மனக் கொந்தளிப்புகள் அடங்கும் திசையே வருண பகவானுக்கு உகந்த, சனீஸ்வரன் எழுந்தருளிய மேற்கு திசை. இக்காரணம் பற்றியே சனீஸ்வர பகவானும் இத்தலத்தில் மேற்கு நோக்கி தனித்த்து எழுந்தருளி உள்ளார்.
ஸ்ரீசுக்ரபீட சனி பகவான்
இளவனார் சூரக்கோட்டை
சுக்ர பீட முத்திரை
எம்பெருமானின் முக்கண் ஜோதியில் ஒரு பரலாகத் தோன்றியதே அத்தி மரத்தில் பொலியும் வரதாக்னி என்பதாகும். இந்த வரதாக்னி சக்தியைப் பற்றி புரிந்து கொள்ள சாதாரண மனிதர்களுக்கு குறைந்தது ஒரு லட்சம் பிறவிகள் எடுத்துக் கொள்ளும் என்பதால் ஸ்ரீஅத்தி வரதர் போன்ற இறை மூர்த்திகளும் ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வரன் போன்ற மூர்த்திகளும் தங்கள் தபோ பலனின் ஒரு பகுதியாக இந்த வரதாக்னியின் தன்மையைப் புரிந்து கொள்ளும் அனுகிரகமாக அளிக்கின்றனர். இம்முறையில் இளவனார் சூரக் கோட்டையில் மேற்கு நோக்கி அமைந்த இந்த சுக்ர பீடம் அத்தி வரதரின் அனுகிரக சக்தியான வரதக்னி பற்றிய அறிவை விருத்தி செய்வதாக அமைந்துள்ளது. அனைவரும் வரதாக்னி குறித்த அறிவை விருத்தி செய்து கொள்வது இயலாத காரியம் என்றாலும் குறைந்த பட்சம் சம்சார ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை என்ற அனுகிரக சக்தி அனைவரும் விரும்பும் ஒன்றுதானே. இந்த அனுகிரகத்தை அளிப்பதும் இளவனார் சூரக்கோட்டையில் அமைந்துள்ள இந்த சுக்ர பீடமாகும். மேற்கு நோக்கி இந்த சுக்ர பீடத்திலிருந்து வரும் தென்றல் நம் பின்னந் தலையில் வீசுவதாக அமர்ந்து கொண்டு குறைந்தது ஒன்றரை மணி நேரம் தியானித்தல் நன்று. இந்த சுக்ர பீடத்தை நோக்கியவாறு கிழக்கு நோக்கி அமர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தியானித்தலும் நன்மையே. பக்தர்கள் தியானத்தில் முன்னேற முன்னேற அக்னி சக்திகளைப் பற்றிய அறிவு விருத்தியாகும். இவ்வாறு பெருகிய அக்னி சக்தியால் விளையும் பலன்கள் அவரவர் தனிப்பட்ட முறையில் உணர்ந்து இன்புறக் கூடியதே. தொடர்ந்து இத்தலத்தில் மேற்கண்ட சுக்ர வழிபாட்டை நிறைவேற்ற முடியாதவர்கள் படத்தில் காட்டிய சுக்ர பீட நமஸ்கார முத்திரையை தினமும் ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் பயின்று வருதலாலும் அக்னி சக்தி அம்சங்களை அறிந்து கொள்ளலாம். ஆனால் இவர்கள் இளவனார் சூரக்கோட்டையில் எழுந்தருளி உள்ள சனீஸ்வர பகவானையும் இங்குள்ள சுக்ர பீடத்தையும் ஒரு முறையாவது தரிசித்தல் அவசியமே. தீபத்திற்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி ஆலயத்தில் குறைந்தது ஆறு சுக்ர தீபங்களை ஏற்றி வழிபடுதல் அவசியம். அவரவர் இல்லங்களில் குறைந்தது இரு தீபங்கள் பொலியும் சுக்ர தீபங்களை ஏற்றலாம். காமம் என்ற அக்னி சக்தியை தெய்வீகமாக மாற்ற விரும்புவோரும் சன்னியாசிகளும் பிரம்மசாரிகளும் இத்தகைய தியானத்தால் நற்பலன் பெறுவார்கள்.
ஸ்ரீசித்தி கணபதி இளவனார் சூரக்கோட்டை
காமத்தைத் தூண்டும் நரம்புகளைச் சமன்படுத்துவது இந்த முத்திரையின் அனுகிரகப் பாங்கும் இங்கு பொலியும் சுக்ரத் தென்றலுமாகும். என்னே நம் முன்னோர்களின் அறிவுத் திறன். திருஅண்ணாமலை, பழநி, பர்வதமலை போன்ற மலைத் தலங்களை கிரிவலமாக வரும்போதும், ஆலய தரிசனங்களின் போதும் ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்து இந்த முத்திரையைப் பயின்று சுக்ர பீடத்தின் வழியே இத்தகைய தரிசனங்களைப் பெறுதலால் தரிசனப் பலன்கள் பன்மடங்காகப் பெருகும். கோவணாண்டிப் பெரியவருடன் சிறுவன் வெங்கடராமன் தரிசனம் செய்த திருத்தலங்களுள் இளவனார் சூரக்கோட்டையும் ஒன்று. பெரியவருடன் சிறுவன் இத்தலத்திற்கு வருகை தந்தபோதுதான் மேற்கண்ட சுக்ர பீட இரகசியங்களை பெரியவர் சொல்ல அறிந்து கொண்டான் சிறுவன். அப்போது பெரியவரைச் சுற்றி ஒரு கூட்டமே கூடி விட்டது. அப்போது கூட்டத்திலிருந்த ஒரு வயதானவரைப் பார்த்து பெரியவர், “என்னப்பா பதினெட்டு செஞ்சுரி ஆச்சா ...”, என்று விசாரித்தார். அந்த ஆசாமியும் நெளிந்து கொண்டே, “ஆமாம் சாமி, இப்போதுதான் இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமே வந்தது. ஆனால் என்ன செய்வதென்றுதான் புரியவில்லை. உங்களைப் பார்த்தால் கடவுளையே நேரில் பார்த்ததுபோல் தோன்றுகிறது. நீங்கள்தான் இதற்கு வழி சொல்ல வேண்டும் ...,” என்றான். பெரியவர் வழக்கம்போல், “இந்தக் கிழவனைச் சாமி என்றெல்லாம் சொல்லாதே. நீ எங்கும் போக வேண்டாம். இங்கே இருக்கிறதே சுக்ரபீடம் இதன் மகிமையையும் முருகப் பெருமான் மகிமையையும் இங்கே தனியா நிக்கிறாரே சனீஸ்வரன் அவரப் பத்தியும் சொல்லிக் கொண்டே வா, அது போதும்,” என்றார். ஆம், அங்கு வந்த ஆசாமி ஒரு பிறவியில் இந்தச் சிவாலயத்தை வலம் வந்து வணங்கிக் கொண்டே இருந்தான். அப்போது இந்தச் சுக்ரபீடத்தையும் சனி பகவானையும் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தான். அவனுக்கு அப்பிறவியில் குழந்தை பாக்கியம் ஏதும் கிட்டவில்லை. ஆனால் இத்திருத்தல மகிமையால் அவன் அடுத்த பிறவியில் பதினெட்டு குழந்தைகளைப் பெற்று அவர்கள் அனைவரும் நன்னிலை அடைந்து தங்கள் தாய் தந்தையரை அன்புடன் பராமரித்து வந்தனர். பூர்வ ஜன்மத் தொடர்பால், இந்த சனீஸ்வர மூர்த்தியின் அருளால் கோவணாண்டியை சந்தித்து மேற்கூறிய வகையில் அனுகிரகம் பெற்றான். அந்தப் பெரியவரே தற்போது சுக்ரபீட ஜயன் என்ற திருநாமத்துடன் இந்த சுக்ர பீட முத்திரையை அலங்கரிக்கிறார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். குழந்தை பாக்கியம் இல்லாதோரும் அதிகமான குழந்தைகளைப் பெற்று அல்லல்படுவோரும் மேற்கூறிய வழிபாட்டால் நற்பலன் பெறுவார்கள். இளவனார் சூரக்கோட்டையில் நிகழ்ந்த இந்த நிகழ்ச்சிக்கும் அத்தி வரதருக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா ? இந்த சம்சாரி 18 குழந்தைகளைப் பெற்றவன், அத்தி வரதரின் உயரமோ 9 அடி. முதல் படியில் விளங்கும் இந்தத் தொடர்பைப் பிடித்துக் கொண்டு 18 படிகள் கடந்து சென்றால் உங்களுக்குக் கிட்டுவது ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனம் மட்டுமல்ல, பகவானின் இறை தரிசனமும் ஆகும்.
அத்யாத்ம இராமாயணம் |
அத்யாத்ம இராமாயணம், ராமசரிதமானஸ், கம்ப ராமாயணம் என்று ராமாயணங்களில் எத்தனையோ உண்டு. இவை அனைத்துமே இறைவனுக்கு உயிர்கள் மேல் உள்ள கருணையைப் பற்றியும் இறைவனின் அந்தப் பெருங்கருணையை உயிர்கள் எப்படி வழிபாட்டின் மூலம் பெற முடியும் என்பதையும் தெரிவிக்கின்றன. பொதுவாக இந்த ராமாயணங்களில் உள்ள சில கருத்துக்களை சித்தர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. ஒரு சில ராமாயணங்களில் இராவணன் ராமபிரானின் பக்தன், அவரை அடைவதற்கு துவேச பக்தி என்று இறைவனை வெறுத்து இறைவனடி சேர முயன்றான் என்பதாக சித்தரிக்கின்றன. சித்தர்கள் இந்த துவேச பக்தியை ஏற்றுக் கொள்வதே இல்லை. நீ இறைவனடி சேருகின்றாயோ இல்லையோ என்பது முக்கியமல்ல. உயிரோடு இருக்கும் காலம் முழுவதும் இறைவனைப் புகழ்ந்து, இறைவனுக்கு முடிந்த கடமைகளைச் செய்வதே, இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை மதித்து வாழ்வதே உன்னுடைய கடமையாகும் என்பதே சித்தர்களின் கொள்கை. இரண்டாவதாக, கல்லாய்க் கிடந்த அகலிகை மேல் ராமபிரானின் பாதங்கள் பட்டு அவள் சாமவிமோசம் அடைந்தாள் என்று சில ராமாயணங்களில் வருவதுண்டு. இதையும் சித்தர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பூமியில் கிடந்த ஒரு மண் துகள் ராம பிரானின் கட்டை விரல் பட்டு கல்லாய்க் கிடந்த அகலிகை மேல் தெளிக்கவே அகலிகை சாப விமோசனம் பெற்றாள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். எக்காரணத்தைக் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும் ஒரு மனிதனின் கால் ஒரு பெண்ணின் உடலைத் தொடக் கூடாது என்பதே சித்தர்களின் உபதேசம்.
இறை மூர்த்திகளின் கருணையைப் பற்றிக் கூறும்போது சத்ய சாய்பாபா high level conspiracy, அதாவது உயர்மட்ட சதித் திட்டம் என்று விளையாட்டாகக் குறிப்பிடுவார். ராமர் பாத அணிகள் அணிந்திருந்தால் அகலிகை மேல் அவர் பாதம் படாது அல்லவா ? அதனால் பரதன் ராமரின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டான் என்பார் சாய்பாபா. ஆனால், ராமர் காலணிகளை பரதர் பெற்ற காலமும் அகலிகை சாப விமோசனம் பெற்றதும் வேறு வேறு காலத்தில் நடந்தவை அல்லவா ? காலம் தேசம் என்ற கோட்பாடுகளைக் கடந்ததே ராமாயணம் என்பதே சாய்பாபாவின் உபதேசத்திலிருந்து நாம் அறியும் உண்மை. ராமாயண கருத்துக்கள் எல்லாம் மனிதர்களுக்கு மட்டும் அல்ல, அவை ஒரறிவு ஜீவன்கள் முதல் ஆறறிவு ஜீவன்கள் வரை மட்டும் அல்லாமல் அனைத்து உயிர்களையும் கரையேற்ற வல்லவையே. இந்த உண்மையை அடியார்களுக்கு உணர்த்தவே ஒருமுறை திருஅண்ணாமலை கார்த்திகை தீப அன்னதானத்தின்போது அத்யாத்மராம பாராயணத்தை ஒரு இறை அடியார் மூலம் நம் ஆஸ்ரமத்தின் நிகழ்த்தினார் நம் சற்குரு. அந்த அடியார் பாராயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே அன்னதானத்திற்கான அரிசி முழுவதும் அளந்து அன்னக்கூடைகளில் போடப்பட்டு அந்த அன்னக் கூடைகள் எல்லாம் இராமாயணம் பிரவசனம் நடக்கும் இடத்தில் நிரப்பப்படும். தொடர்ந்து ஒரு வாரம் நிகழ்ந்த இந்த ராமாயண பாராயணத்திற்குப் பின்னரே சற்குரு தன்னுடைய செயலுக்கான காரணங்கள் சிலவற்றை விளக்கினார்கள்.
ஸ்ரீசக்கரம் ஒரேகான்
இராமாயணம் படித்த அடியாரோ ஹிந்தியில் அத்யாத்ம இராமாயணத்தைப் படித்தார். ஆனால் அடியார்கள் ஒரு சிலரைத் தவிர பலருக்கும் இந்தி தெரியாது. இந்தி தெரிந்த ஒரு சிலரும் இராமாயணத்தைக் கேட்க முடியாத அளவிற்கு அன்னதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். பல வெளிச்சமான விளக்குகள் நடுவே அந்த அடியார் ராமாயணம் ஓத அது வீடியோ காமரா மூலம் ரெகார்டும் செய்யப்பட்டது. அதனால் அந்த அடியாருக்கு தன்னுடைய பிரவசனம் எதிர்காலத்தில் மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஒலி பரப்பப்படும் என்ற எண்ணத்தை ஊட்டியதால் அவரும் உற்சாகமாக தன்னுடைய பணியைத் தொடர்ந்தார். கேட்பார்கள் யாருமே இல்லையே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அந்த பிரவசனம் முழுவதையுமே அன்னதானத்தில் போடப்பட்ட அரிசி மணிகள் இழுத்துக் கொண்டு அதை பிரசாதமாக கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அளித்தன என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியம். இவ்வாறு ஓரறிவு உடைய ஜீவன்கள் என்று நாம் நினைக்கும் அரிசி மணிகளே உய்வடைய நம் சற்குரு இத்தகைய ஏற்பாடுகள் எல்லாம் நிறைவேற்றினார் என்றால் ஆறறிவு உடைய அடியார்கள் நற்கதி அடைய அவர் மேற்கொண்ட ஏற்பாடு எவ்வளவு சுவை உடையதாக இருக்கும் என்பதே நாம் ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ள வேண்டிய சித்த சுவையாகும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கூற்றை மெய்பிப்பதாகவே சமீபத்தில் பகவான் ரஜனீஷ் அமெரிக்காவில் ஒரேகான் என்னுமிடத்தில் தமது ஆஸ்ரமத்தை நிறுவி இந்த உண்மையை உலகிற்கு உணர்த்தினார் என்பது நீங்கள் அறிந்ததே. ஒரேகான் என்பது அப்படியே இந்தியாவிற்கு நேராக இருக்கும் ஒரு பகுதியே. இந்தியாவில் துலங்கும் தெய்வீகம் இந்தப் பகுதியிலும் பரவியுள்ளதை உணர்ந்தவர் ஆதலால் ஒரேகான் ஊரில் தன்னுடைய ஆஸ்ரமத்தை நிறுவினார் என்பதும் இங்குள்ள ஏரியில் ஸ்ரீசக்கரம் மற்ற கிரகவாசிகளால் வரையப்பட்ட அதியசமும் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் நிகழ்ச்சிகளே. இங்கு உங்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு ஆத்ம விசார கேள்வி. ஒரேகான் ஏரியில் நீர் வற்றியதால் அங்கு ஸ்ரீசக்கரம் தோன்றியதா இல்லை ஸ்ரீசக்கரம் தோன்றுவதற்காக ஏரியில் நீர் வற்றியதா ? இந்த ஸ்ரீசக்கரத்தின் நீளமோ 13 மைல்கள், அதாவது அத்தி வரதர் தோன்றும் கால வரையறைக்கான 4 என்பதைக் குறிப்பது. அப்படியானால் ஸ்ரீசக்கரத்திற்கும் ஸ்ரீஅத்தி வரதருக்கும் உள்ள தெய்வீக தொடர்பை அறிய நீங்கள் 9 படிகளே (அத்தி வரதப் பெருமானின் உயரம், ஸ்ரீசக்கர முக்கோணங்கள்) கடந்தால் போதுமானது. ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனம் பெற்ற பக்தர்கள் எந்த அளவிற்கு மற்ற உயிர்களின் மேன்மைக்காக பிரபந்த தேவார பாடல்களை ஓதி அன்னதான கைங்கர்யங்களில் ஈடுபடுகிறார்களோ அந்த அளவிற்கு உயிர்களும் உயரும் அடியார்களும் நலம் அடைவர். கீழ்க்கண்ட 18 ரிஷிகளைப் பிரார்த்தித்து பசு நெய் தீபங்களை நீர் நிலைகளில் விடுதலால் தொடர்ந்து வரும் நீர்ப் பஞ்சங்கள் மறையவும் உடலில் தோன்றும் உடல் வீக்கம் போன்ற நீர் சம்பந்தமான வியாதிகள் நீங்கவும் வழிபிறக்கும். தொடர்ந்த வழிபாடு ஆத்மவிசாரத்தில் எதிர்கொள்ளும் இடர்களைக் களையவும் உதவும்.
1. ஓம் ஸ்ரீஅஷ்ட வக்ராய நமஹ | 7. ஓம் ஸ்ரீஆருநாராயணாய நமஹ | 13. ஓம் ஸ்ரீஅசலாய நமஹ |
2. ஓம் ஸ்ரீஅணிருத்ராய நமஹ | 8. ஓம் ஸ்ரீஅணிகல்பாய நமஹ | 14. ஓம் ஸ்ரீஆர்ப்பரிதராய நமஹ |
3.ஓம் ஸ்ரீஅசலாமுகீஸ்வராய நமஹ | 9. ஓம் ஸ்ரீஆசிதராய நமஹ | 15. ஓம் ஸ்ரீஆணிக்காய நமஹ |
4. ஓம் ஓம் ஸ்ரீஅம்பலதேசிகாய நமஹ | 10. ஓம் ஸ்ரீஅவுணரட்சகாய நமஹ | 16. ஓம் ஸ்ரீஆங்கிரசாய நமஹ |
5. ஓம் ஸ்ரீஅருநந்தி கூபாய நமஹ | 11. ஓம் ஸ்ரீஆடிண்யாய நமஹ | 17. ஓம் ஸ்ரீஅடலாய நமஹ |
6. ஓம் ஸ்ரீஅறவாண சித்தாய நமஹ | 12. ஓம் ஸ்ரீஅர்க்யாய நமஹ | 18. ஓம் ஸ்ரீஆரண்யாய நமஹ |
உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களால் வருந்துவோரும் மேற்கண்ட வழிபாடுகளால் நற்பலன் பெறுவர். வாழை இலைகளையோ பூவரச இலைகளையோ தீபங்களை மிதக்க விட பயன்படுத்துவதும் ஏற்புடையதே. சேம இலைகளைத் தவிர்க்கவும். 12 x 12 = 144, 1+4+4=9, எனவே 144 என்ற எண் குரு மங்கள எண் என்று புகழ்ந்துரைக்கப்படும். இதனால் என்ன பயன் ? அரிதிலும் அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, மானிடராய்ப் பிறக்கினும் கடவுளைக் காண வேண்டும் என்ற எண்ணத்தை வளர்ப்பது அதனினும் அரிது. இத்தகைய எண்ணத்துடன் குருவைத் தேடி அவரைச் சரணடைந்த பின் குருவின் மனைவியையோ, செல்வங்களையோ காமக் கண் கொண்டு பார்த்தல் என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத தவறாகும். ஆனால், என்னதான் தடுத்தாலும் பெருகுவது அல்லவா காமம். இந்த காமத்திற்கு பிராயசித்தம் நல்குவதற்காகவே ஸ்ரீஅத்தி வரதர் வரும் திங்கட் கிழமை 5.8.2019 அன்று காமத்தைக் களையும் பலவிதமான சக்திகளை வர்ஷிக்கிறார். அவைகளை விவரித்தால் இந்த ஆண்டே கழிந்து விடும் என்பதால் அன்று ஸ்ரீஅத்தி வரதரை தரிசனம் செய்து குறைந்தது 144 பொட்டலங்களை அன்னதானமாக அளித்தலால் விளையும் பலன்கள் அமோகம். அத்தி வரதரின் தரிசனம் பெற முடியாதவர்கள் ஏதாவது ஒரு திருத்தல பிரகாரத்தை 144 முறை வலம் வந்து வணங்குவதும் ஏற்புடையது. திருஅண்ணாமலையை கிரிவலமாக வருவதை இன்று ஆரம்பித்து தொடர்ந்து ஒரு வருட காலத்திற்குள் குரு மங்கள எண்ணிற்கு சமமான பிரதட்சிணங்களை நிறைவேற்றுதல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். காமத் தவறுகள் புரிந்தோர் மட்டும் இன்றும் பிராயசித்தம் பெறுவது கிடையாது பல சற்குருமார்களும் தங்கள் சீடர்களைக் காக்க இத்தகைய கிரிவலங்களை மேறகொள்கிறார்கள் என்பதே சித்தர்கள் உரைக்கும் இரகசியமாகும். கிருஷ்ண பகவான், சுக்ராச்சாரியார் போன்றோரும் இத்தகைய குரு மகா சன்னிதானங்களில் அடங்குவர். இத்தகைய வழிபாடுகளின் போது குரு மங்கள பிரசாதமான எலுமிச்சை சாதத்துடன் தக்காளி ஊறுகாய், தொக்கு கலந்து தானம் அளிப்பது சிறப்பே. கோயில் மூர்த்திகளுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் நிறைவேற்றுவதும் சிறப்புடையது. நம் ஆஸ்ரமம், மாதா அமிர்தானந்தமயி ஆஸ்ரமம், ஏசுநாதரின் பிறப்பு, கிருஷ்ண பகவானின் பால லீலைகள், இங்கு நீங்கள் காணும் தெய்வீக விளக்கங்கள் அனைத்தும் பிறந்தது மாட்டுக் கொட்டகையில்தானே.
நின்ற கோலம் நிமல கோலமே |
அத்தி வரதர் 1.8.2019 வியாழக் கிழமை அன்று நின்ற கோலத்தில் எழுந்தருளினார். உண்மையில் நின்ற கோலத்தை நன்கு ஆராய்ந்தால் இதில் கிடந்த கோலம், நடந்த கோலம், நின்ற கோலம் என்ற மூன்று கோலங்களுமே அடங்கியுள்ளன என்பது புரிய வரும். இந்த அரிய நின்ற கோலமானது குரு ஆண்டில் குரு வாரத்தில் குரு சக்திகள், குசா சக்திகள் பொலியும் நாளில் (1+8+2+0+1+9=3) அமைந்தது அரிதிலும் அரிதே. அத்தி வரதரின் இந்த குரு சக்திகளை முழுமையாகப் பெற விரும்பும் பக்தர்கள் ஒரு மண்டலத்திற்குள் இவ்வாறு மூன்று இறை சக்திகள் பெருகும் திருத்தலங்களை தரிசனம் செய்து குறைந்தது 300 பேருக்கு அன்னதானம் செய்தல் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும். சீர்காழி, இளவனார் சூரக்கோட்டை, உத்திரமேரூர் போன்ற திருத்தலங்கள் இறைவன் மூன்று கோலங்களில் அருளும் திருத்தலங்களாகும். இறைவனின் உருவம், அருஉருவம் என்னும் லிங்க வடிவம், அருவ வடிவம் என்பவை சிவபெருமானின் மூன்று கோலங்களாகத் திகழ, பெருமாளின் நின்ற கோலம், கிடந்த கோலம், நடந்த கோலங்கள் இறைவனின் மூன்று கோலங்களாகத் திகழ்கின்றன. ஐந்தடி உயரமுடைய மனிதனின் நிழல் உதய நேரத்தில் 9 அடியாகவும், மாலையில் ஏழு அடியாகவும் தோன்றுகின்றது. அதே போல என்றும் மாறா இறைவன் தன்னைப் பல கோலங்களில் புனைந்து கொண்டு ஜீவ ராசிகளின் எண்ணத்திற்கு ஏற்றவாறு கருணைபுரிகின்றான். நேற்று தேவதையாகத் தோன்றிய மனைவி இன்று அடங்காப் பிடாரியாகத் தோன்றுகிறாள். இவ்வாறு மனிதனின் மன மாற்றமே இறைவனின் கோலங்கள் மாறுவதற்கான காரணமும் ஆகும். மனிதனின் மனம் மாறா விட்டால் இறைவனின் கோலமும் மாறாது. இவ்வாறு தான் பெற்ற இன்பத்தைப் பிறருக்கு பகிர்ந்தளிக்கவே குறைந்தது 300 பேருக்கு அன்னதானம் இயற்ற வேண்டும் என்ற பெரியோர்கள் கூறினார்கள்.
ஒரு நாய்க்கு பிஸ்கட் அளித்தால் கூட அப்போது உதிரும் ரொட்டி துணுக்குகளை எத்தனையோ எறும்புகள் உண்டு 300 என்ற கணக்கை சரி செய்து விடும் அல்லவா ? ஆனால் இவை எல்லாம் அற தேவதைகளின் அறப் பணி. அதைப் பற்றி நாம் கவலை கொள்ளாமல் அவரவர் சக்திக்கு ஏற்றபடி 300, 3000 பேருக்கு அன்னதானத்தை இயற்றி கிடைத்தற்கரிய அத்தி வரதரின் அனுகிரகத்தைப் பெருக்கிக் கொள்ளுங்கள். ஸ்ரீஅத்தி வரதர் குணமங்கள வல்லபாயம் என்ற கிடந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்தார் என்றால் அவர் நின்ற கோலத்திற்கும் ஒரு நாமம் நிச்சயம் இருக்கும் அல்லவா ? ஆம், ஸ்ரீஅத்தி வரதரின் நின்ற கோலத்தை சித்தர்கள் விசித்திர கர்ணபர்வம் என்ற திருநாமத்தால் வர்ணிக்கிறார்கள். பெருமாளின் இந்த கோலம் பற்றி சுருக்கமாக விளக்குவதென்றால் பகவான் கிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தத்தில் பாஞ்சஜன்யம் என்ற சங்கை எடுத்து ஒலி எழுப்பினார் என்பதை நாம் அறிவோம். பொதுவாக, பகவான் ஊதினார் என்று கூறாமல் ஒலி எழுப்பினார் என்று பெரியோர்கள் கூறுவர். காரணம் ஊதுதல் என்றால் காற்று அலைகளை சங்கிற்குள் தங்கள் வாயைக் குவித்து அனுப்புதல் என்று பொருள். ஒலியை எழுப்புதல் என்றால் அவரவர் கர்ம வினையைத் தீர்க்கும் சப்தத்தை ஏற்படுத்துதல் என்று பொருள். ஒவ்வொருவரின் கர்ம வினை ஒவ்வொரு விதமாக அல்லவா இருக்கும் ? ஆம், ஒரே சங்கொலியில் யுத்தத்தில் பங்கு பெற்ற கோடி கோடி ஜீவன்களின் கர்ம வினைகளைக் களைய திருவுள்ளம் கொண்டார் என்றால் அது கிருஷ்ண பகவானைத் தவிர வேறு யாரால் இயலும் ? இதுவே ஸ்ரீஅத்தி வரதரின் தரிசனப் பாங்கும், கர்ம வினையைத் தீர்க்கும் பாங்குமாகும். இவ்வாறு ஸ்ரீவரதப் பெருமானை தரிசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான சங்கொலி எழும், காதில் விழும் என்பதே உண்மை. ஆனால் அத்தி வரதரின் சங்கொலியை கேட்கும் அளவிற்கு நம்முடைய காதுகள் கடுக்கன்களை அணிந்து புனிதம் பெற்றுள்ளனவா என்பதே நீங்கள் உங்களை கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. வேத ஒலிகளையே அவை தரிசிக்கின்றனவா ? சரி போகட்டும், குறைந்த பட்சம் உங்கள் இதயத்தில் எழும் ஓசையையாவது உங்கள் காதுகள் தினமும் கேட்கின்றனவா ? இதயத்தில் எழும் லப் டப் நாதமும் கிருஷ்ணாமிர்தமே. வைகுண்டம் என்பது ஏதோ வானத்தில் எங்கோ இருப்பதே என்று பக்தர்கள் நினைப்பது இயல்பே. உண்மையில் அவரவர் இதயத்தில் உறையும் வைகுண்டத்தில் எழுந்தருளவே பெருமாள் விரும்புகிறார். எனவே பிரபந்த பாடல்களை ஓதும் பக்தர்கள் ஒரு பதிகத்தை பாடியவுடன்
வைகுண்ட ஆத்மராமா போற்றி |
வைகுண்ட ஆத்மராமா போற்றி |
வைகுண்ட ஆத்மராமா போற்றி |
என்று ஓதி தங்கள் மார்பு மீது கை வைத்து நிறைவு செய்தலால் விரைவில் அவரவர் இதய கோயிலில் குடிகொண்டுள்ள பெருமாளைத் தரிசிக்க முடியும் என்பது உண்மையே. பலரும் தங்கள் வயதான காலத்தில் இறைவனை நினைத்து வழிபட்டால் போதுமானது என்று நினைக்கிறார்கள். ஆனால், ஆழ்வார்களோ மனிதன் பிறந்த நாள் முதலே இறைவனை நினைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். திருமழிசை ஆழ்வார் அருளிய முதல் பாடலே இந்த கருத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தான் குழந்தையாக இருக்கும்போதே எட்டு அடி வைத்து நடந்து இந்த உலகம் அனைத்தும் தன் திருவாய்க்குள் அடக்கம் என்பதை தன் தாய் யசோதைக்கு நிரூபித்தார் அல்லவா ? இது பகவான் தன் தாய்க்கு அருளிய உபதேசம் மட்டுமல்ல. மனிதர்களாகிய அனைவருமே எட்டு மாதத்தில் எட்டு அடி எடுத்து வைத்து நடக்கும்போது அந்த எட்டு அடிகளும் இறைவனை நோக்கியே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தவர்களே ஆழ்வார் பெருமக்கள். இதை உணர்த்துவதாகவே தன்னுடைய முதல் பாடலிலேயே திருமழிசை ஆழ்வார் பூ புனல் தீ கால் மீ என்ற பஞ்சபூதங்களின் கூட்டாக எழுந்த மனிதனின் உடல் நடந்து எட்டு அடி வைக்கும்போது அது இறைவனை நோக்கியே இருக்க வேண்டும் என்பதை இவ்வாறு பஞ்ச பூதங்களை குறிக்கும் எழுத்துக்கள் எட்டு எழுத்துக்களின் தொகுதியாக அமைந்ததே ஒரு சிறப்பல்லவா ? பிரானின் இந்த முதல் பாடலே இத்தகைய சிறப்புடன் பொலிகின்றது என்றால் மற்ற பதிகப் பாடல்களின் மகத்துவத்தை விளக்க வேண்டுமா என்ன ?
பூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய் |
தீநிலாய மூன்றுமாய்ச் சிறந்தகா லிரண்டுமாய் |
மீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய் |
நீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே ? |
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற ஏகாட்சர சித்தாந்தத்தில் பொலிவதே இந்தத் துதியாகும். பெருமாளின் கிடந்த கோலம், நின்ற கோலம் என்ற பல கோலங்களைப் பக்தர்கள் தரிசனம் செய்திருக்கலாம். ஆனால், கிடந்த கோலத்திலும் நின்ற கோலத்திலும் தரிசனம் நல்கும் ஒரு மூர்த்தி ஸ்ரீஅத்தி வரதர் மட்டுமே. பொதுவாக, தியானம் என்னும் அனுகிரகத்தை அளிப்பது பள்ளி கொண்ட கோலம், யோகம் என்ற அனுகிரகத்தை அளிப்பது நின்ற கோலம். சாதாரண மனிதர்கள் எவருமே இந்த தியானம், யோகம் என்ற பதங்களின் பொருட்களை உணர்ந்தவர்கள் அல்லர்.
ஸ்ரீகோடீஸ்வரர் கொட்டையூர்
ஸ்ரீபந்தாடுநாயகி கொட்டையூர்
ஒருவர் தியானத்தில் மூழ்கலாம் ஆனால் தியானிக்க முடியாது, ஒருவர் யோகத்தில் ஆழலாம் ஆனால் யோகிக்க முடியாது. இதைத்தான் ரிஷிகேஷ் சிவானந்தாவும் கூறுவார். “யாராவது நான் இன்ன தேதியில், நேரத்தில் இறை தரிசனம் பெற்றேன் என்று சொன்னால் கட்டாயம் அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம். காரணம் நேரம் தூரம் என்ற தத்துவங்களைக் கடந்தது தியானமும் யோகமும். தியானம், யோகம் என்பவை நீங்கள் முயற்சி செய்து சாதிக்கும் ஒரு சாதனை அல்ல. அது இறைவன் உங்களுக்குப் போடும் பிச்சையே. இறைவன் உங்கள் தகுதியைப் பார்ப்பது கிடையாது, அதனால் அவன் எப்போது பிச்சை போடுவான் என்பது யாருக்குமே தெரியாது.” நனவு, கனவு, தூக்கம் என்ற நிலைகளைக் கடந்து துரியம் என்ற நிலையை அடைவதே தியானம் ஆகும். காலையில் யோக நிலையில் மீள்வதையே திருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரும் நினத்தெழுவார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே என்கிறார். எழுந்து நினைப்பவன் மனிதன், நினைத்து எழுபவன் பக்தன். துரியம் என்பது இறை தரிசனத்தின் ஆரம்பமே. இதை அடுத்த பல நிலைகளும் உண்டு என்பதையே மணிவாசகப் பெருமானும் துரியமும் இறந்த சுடரே போற்றி என்கிறார். சமீபத்தில் தியானம் மூலம் துரிய நிலையை அடைந்தவர் ரமண மகரிஷி. யோகத்தின் மூலம் துரிய நிலையை அடைந்தவர் யோகி ராம்சூரத் குமார் ஆவார். ஒருமுறை புத்தரிடம் ஒரு அடியார், ”சுவாமி, நீங்கள் கடவுள் தரிசனத்தால் என்ன சாதித்தீர்கள் ?” என்று கேட்டாராம். அதற்கு புத்தர் சிரித்துக் கொண்டே, “ஒன்றும் சாதித்ததாகத் தெரியவில்லை. இவ்வளவு நாள் ஒழுங்காகத் தூங்கிக் கொண்டிருந்தேன். இப்போது அந்தத் தூக்கம் போய் விட்டது,” என்றாராம். துரிய நிலையை அடைந்தவர்கள் சாதாரண மனித நிலைக்குத் திரும்புவது கிடையாது. பெருமாள்தான் பஞ்சபூதங்களிலும் நிற்கின்றான், நிறைந்துள்ளான், நிரவியுள்ளான், விரவியுள்ளான், பரவியுள்ளான் என்பதை “நீநிலாய” என்று ஒரே வார்த்தையில் வரதரைப் பாடிய ஆழ்வாரின் பெருமைதான் என்னே ? இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் என்று சிவபெருமானைப் பாடும் மணிவாசகரைப் போல பஞ்சபூதங்களை இமைப் பொழுதும் நீங்காத பெருமானின் திருத்தாள்களை நீங்காமல் நாம் இருந்தால் எவ்வளவு சுவையாக இருக்கும் என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்துகிறார் திருமழிசை ஆழ்வார். நீ நிலாய என்று பிரித்தால் இறைவனும் இறைவனின் செயலும் என்பதாக அது பிரியும் அல்லவா ? அந்தப் பிரிவினை கூட தான் கொண்ட அத்வைத கருத்துக்கு முரண்பாடாக இருக்கும் என்பதால் இறைவனையும் அவன் செயலையும் ஒன்றாக இணைத்துப் பாடிய திருமழிசை ஆழ்வார் திருவடிகள் சரணம் சரணம் சரணம். பலரும் தாங்கள் இறைவனை மிகவும் நேசிப்பதாக கற்பனை செய்து கொள்கின்றனர். ஆனால் சித்தர்களோ திருமழிசை ஆழ்வார் போன்ற மகான்களோ, “நீ என்னை நேசிக்கும் அளவிற்கு நான் தூசி தூசி தூசி அளவு கூட நின்னை நேசிப்பது இல்லையே, இறைவா,” என்று இறைஞ்சுகின்றனர், அஞ்சுகின்றனர். இந்த தூசி அளவு அன்பையாவது மனிதர்களாகிய நாம் இறைவன்பால் பெற வழிகாட்டுவதே ஸ்ரீஅத்தி வரதரின் ஆனந்த வழிபாடாகும்.
ஓம் குருவே சரணம்