அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீஅகத்தியரின் அமர்வு கோலம்

ஸ்ரீஅகஸ்திய பெருமானின் அஷ்டமா சித்தி உபதேச அமர்வுக் கோலம்

அகஸ்தியப் பெருமானே பிரபஞ்சத்திலுள்ள கோடானு கோடி மூலிகைகளுக்குமான சித்தமா அதிபதி ஆவார். அனைத்து மூலிமைகளுமே ஸ்ரீஅகஸ்தியரின் நாமத்தைச் சொன்னால் உளம் பூரித்து நம்மை ஆசிர்வதிக்கும். பிரபஞ்சத்தில் மூலிகைகள் உட்பட அனைத்துத் தாவரங்களையும் படைத்த ஸ்ரீசாகம்பரி தேவியானவள் தாவர சிருஷ்டிக் காலமான, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் ஸ்ரீஅகஸ்தியப் பெருமானுடன் பிரபஞ்சத்தை வலம் வருகின்றாள்.  ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொராண்டிலும் ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் பலவித மந்திர உச்சாடன, சித்த மற்றும் யோக, யாக தவங்களை மேற்கொண்டு ஒவ்வொரு மூலிகைக்கும் உரித்தான சித்திகளை, நோய் நீக்கும் தன்மைகளை, பலவித சித்திகளைத் தரவல்ல இறைக் கூறுகளையும் மேம்படுத்தி அளிக்கின்றார். ஒவ்வொரு மூலிகைக்கும் உரித்தான பலவிதமான சித்திகளை அளிக்கும் முன்னர் ஸ்ரீஅகஸ்தியப் பெருமானே பலவித யோக, யாக, ஆசன, தவ முறைகளை பலருக்கும் உபதேசித்து மூலிகை சித்திகளை ரட்சையாகக் காத்து போஷிக்கச் செய்கின்றார். ஸ்ரீபிரமாதி வருட கார்த்திகைத் தீபச் சிறப்பிதழாக உங்களுடைய கரங்களில் தவழ்கின்ற இந்த ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் அஷ்டமா சித்தி உபதேச அமர்வுக் கோலச் சிறப்பினை நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த சுவாமிகளின் குருவாய் மொழியாகவும், அவர்தம் சிஷ்யப் பெருந்தகையாக விளங்குகின்ற நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் நேரடி குருகுல அருட்குறிப்பாகவும் இங்கு எடுத்து இயம்புவதில் பெருமகிழ்ச்சி கொள்கின்றோம்.

ஸ்ரீஅகத்திய பெருமான் திருவைகாவூர்

2000 கோடிக்கும் மேலான ஸ்ரீஅகத்திய வடிவங்கள்
ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் பெருமையை/மகிமையைப் பற்றி விளக்குகின்ற போது தோன்றுகின்ற பரம ஆனந்தத்திற்கு ஈடான இன்பம் வேறு எதுவும் உண்டோ? எப்போதுமே நிரந்தரமானதாக உள்ளத்திற்கும், மனதிற்கும், உடலுக்கும், குறைவற்ற நிறைவான சந்தோஷத்தைத் தரக் கூடியது அன்றோ குருஅருள் மகிமையைப் பறைசாற்றும் இந்த அற்புதமான பாக்கியம்! ஸ்ரீஅகஸ்தியரைப் பற்றிப் பொதுவாக அறிவீர்கள். ஆனால் அனைத்து கோடி சித்தர்களுக்கும் மூலவரான ஸ்ரீஆதிமூல அகஸ்தியப் பெருமானைப் பற்றியும் உணர்ந்து தெளிதல் வேண்டும் அல்லவா! இரண்டாயிரம் கோடி அகஸ்தியர்களுக்கு மேல் தோன்றி, இப்பிரபஞ்சத்தில் நிறைந்து இதுவரையில் நமக்கு அருள்பாலித்துள்ளமையாக ஸ்ரீஅகஸ்திய கிரந்த நாடிகளே நமக்குப் பறை சாற்றுகின்றன!
ஸ்ரீஆதிமூல அகஸ்தியப் பெருமானாக நிறைந்து விளங்குகின்ற ஸ்ரீஆதி சித்த மூர்த்தி  அகத்தியர்தான் திருக்கயிலாயத்திலும், வைகுண்டத்திலும், எப்போதும் பரப்பிரம்மத்தின் தெய்வீகப் பாசறையில் உறைகின்ற தெய்வீக பாக்கியத்தைப் பெற்றவர். பலவிதமான சித்தி மந்திரங்களை உபதேசிப்பதற்கும், மூலிகைகளுக்கான அருட்சக்திகளை ஒளிர்விப்பதற்கும், பரம்பொருளின் மகிமையை எடுத்துரைப்பதற்கும், மாயைகளுக்கு ஆட்பட்டுத் துன்பங்களில் உழல்கின்ற சாதாரண மனிதர்களைக் கடைத்தேற்றுவதற்கான அருட்பெரும் சித்த வழிபாடுகளை ஊட்டுவிப்பதற்குமாக பலவிதமான ரூபங்களில் ஸ்ரீஅகஸ்தியப் பெருமானே அவருடைய அம்சங்களாகத்தான் எத்தனையோ வடிவுகளில் அந்தந்த யுகங்களில் அவ்வப்போது தோன்றி நமக்கு அருள்பாலித்து வருகின்றார். இதைத்தான் நாம் இரண்டாயிரம் கோடி அகஸ்தியர்களுக்கு மேல் தோன்றி, நிறைந்து அருள் வழங்குகின்றார்கள் என்று குறிப்பிட்டோம்.
இன்று பல ஆலயங்களிலும் நீங்கள் காண்கின்ற ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் திருஉருவங்கள் யாவும் இந்த இரண்டாயிரம் கோடி அகஸ்தியர்களுக்குள் பூரித்தவை தாம்! எவ்வாறு பரபிரம்ம சதாசிவ மூர்த்தி ஸ்ரீமுருகனாகவும், ஸ்ரீவிநாயகராகவும், ஸ்ரீபெருமாளாகவும், ஸ்ரீஅம்பிகையாகவும், ஸ்ரீசந்தோஷி மாதாவாகவும், ஸ்ரீஐயப்பனாகவும் பலவித ரூபங்களில் தோன்றி, நமக்கு அருள்பாலிக்கின்றனரோ, அதே போலத் தான் சிவமூலத்தில் உதித்த ஸ்ரீஆதிமூல அகஸ்தியப் பெருமான் இறைவனின் திருவடிகளிலே ஆண்டவனின் அருளாணைப்படி அன்றும், என்றும், இன்றும் எளிய அடியாராய்ப் பொலிந்து எத்தனையோ கோடி யுகங்களில் பலவிதமான வடிவங்களைத் தாங்கி யோகியாகவும், மஹரிஷியாகவும், சித்தராகவும் என்றும் இலங்கி அவருடைய எண்ணற்ற சிஷ்யகோடி சித்புருஷர்கள் மூலமாகவும், பலவிதமான குருபாரம்பர்யங்களின் மூலமாகவும் ஆசிர்வதித்து நமக்கு அரிய இறைப் பெருவழிமுறைகளைத் தந்து நமக்கு தெய்வீக சித்தப் பெருந்துணையாய்ப் பிராகசிக்கின்றனர்.
பிரமாதியில் ஸ்ரீஅகத்திய தரிசனம்
பிரமாதி வருடத்தில் ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் மகிமை வாய்ந்த மகிவும் முக்கியமான தெய்வீகக் காரியம் யாதோ? ஸ்ரீஅகஸ்தியருடைய தெய்வீகக் காரியங்களைப் பகுப்பதற்கோ, வகுப்பதற்கோ நமக்கு சக்தியும், யோக்யதாம்சங்களும் கிடையாது. ஒவ்வொரு யுகத்திலும் அவருக்குத்தான் எத்தனையோ கோடி “இறைப் பணிகள்” குறிப்பாக, பிரமாதி வருடத்தில்தான் “பலாச பகுள தந்திர யோக” முறையில் அமர்ந்து அஷ்டமா சித்திகளுக்கான மந்திரங்களை உபதேசம் செய்கின்றார். அவருடைய இந்த அரிய அஷ்டமா சித்தி உபதேச அமர்வு யோகக் கோலத்தைத் தான் இந்த அகஸ்திய விஜயத்தில் பிரமாதி வருட தீபச் சிறப்பிதழின் அட்டைப்படத்தில் பொலிவுறக் காண்கின்றீர்கள்!
சித்த பரிபாஷையும், தெய்வீக ரகசியங்களும்
ஸ்ரீஅகஸ்தியருடைய “அஷ்டமா சித்தி உபதேச அமர்வுக் கோல” விளக்கத்தில் பலவிதமான பரிபாஷை வார்த்தைகளைக் காண்கின்றீர்கள் அல்லவா! சித்து ஊர்வலி மந்திர பீஜாட்சரக் கொத்து, கருட நேத்ர கொம்புப் பாறை, வலம் சங்குத்ரி மூலிகை, கலம பந்தனம், லலாட நந்தனம், உச்சாடன பகடு, மல்ல தம்பனம், ஆசனக் கமளி – இவையெல்லாம் சித்தர் பரிபாஷைகளில் காணப்படுகின்ற முக்கியமான வார்த்தைகளாகும். ஏன் இவற்றையெல்லாம் பூடகமாகச் சொல்ல வேண்டும். தெளிவாக அனைவருக்கும் புரியும் வகையிலே விளக்கிடல் ஆகாதா என்ற எண்ணம் அனைவருடைய உள்ளத்திலும் எழலாம். வேதனைக்குரிய விஷயம் ஒன்று என்னவென்றால், கலியுகத்திலே எந்த தெய்வீக ரகசியத்தை வெளியிட்டாலும் சித்திகளைப் பெறுகின்ற எளிய முறைகளைச் சொன்னாலும் அதனைச் சுயநலமாக, தாமே செல்வம் சேர்க்கும் பொருட்டு, பலரும் அதனை மிகவும் தவறான முறைகளிலே கடைபிடிக்கத் தொடங்குகின்றார்கள். எந்த சித்தியினால் பலகோடி மகரிஷிகளும், சித்புருஷர்களும், யோகியர்களும், பல அற்புதமான சமுதாயத் திருப்பணிகளைச் செய்தார்களோ அதே சித்திகளைக் கொண்டு தனக்கும், தன் குடும்பத்தினருக்கும், தன் சந்ததியினருக்கும், தன் வகையினருக்கு மட்டுமே பயன்படும் வகையில், ஏன் பிறருக்குக் கெடுதல் விளைவிக்கின்ற முறையிலே சமுதாயத்திற்கு கேடுகளை ஏற்படுத்துகின்ற முறையிலே பலரும் சித்திகளை தவறாகப் பயன்படுத்துவதால்தான் கலியுகத்தில் இத்தகைய தெய்வீக ரகசியங்கள் எல்லாம் சித்தி சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாம் பரிபாஷைகளாக குருமூலம் பெறவேண்டியதாக மிகவும் பூடகமாகத் தெரிவிக்கப்படுகின்றன.
எனவே, நீங்கள் இதில் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த மந்திரமானாலும் சரி, எந்த பரிபாஷை சித்த வார்த்தையானாலும் சரி எதுவுமே தக்க குருமூலமாகத்தான் அறிந்து தெளிவு பெறுதல் வேண்டும் என்ற வேத வாக்கை ஆழமாகப் பதித்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் சற்குரு மூலமாக பெறப்பட்ட எந்த மந்திரமும், எந்த பொருளுமே சமுதாயத் திருப்பணிக்காகவும், தெய்வீக முன்னேற்றத்திற்காக மட்டும்தான் பயன்படுத்தப்படும் என்ற சத்ய நெறியை ஆணித்தரமான நம்பிக்கையாக வளர்த்துக் கொள்ளுங்கள் . இந்தப் பூடகமான சித்த பரிபாஷை விளக்கங்களும், தெய்வீக ரகசியங்களும் உங்களுக்குப் புரிகின்றதோ அல்லது புரியவில்லையோ அதனைப் பற்றி சற்றும் கவலைப்படாதீர்கள்.
திருஅருணாசலத்தை கிரிவலம் வரும் போது இந்த சித்திகளுக்கான அனுக்கிரகங்களும், தெய்வீகச் சக்திகளும் உங்களுடைய உடல் உள்ளம் மனம் அனைத்துள்ளுமே குருவருளால் பக்குவமாக ஏற்றப்படுகின்றன என்பதை மட்டும் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.. குருவருளால் நமக்கு கிட்ட வேண்டியது கிட்டும் என்ற எண்ணத்தை உங்கள் உள்ளத்தில் வேதவாக்காக ஆழமாகப் பதிய வைப்பதே இந்த விளக்கங்களின் முதல் படியாகும். ஆஹா! இவ்வளவு தெய்வீக ரகசிய விளக்கங்கள் இருக்கின்றனவே, நமக்கு இவையெல்லாம் புரியவில்லையே, தக்க சற்குருவை  நாம் பெற்றிருந்தால் இந்த விளக்கங்களை எளிதில் பெற்று வாழ்க்கையில் முன்னேறி சமுதாயத்திற்குப் பயன்படும்படி பல அற்புதமான திருப்பணிகளை ஆற்றிடலாமே என்ற தெய்வீக ஏக்கத்தை ஏற்படுத்துவதற்காகத் தான் இந்த விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்.
உதாரணமாக, நாம் இங்கு கூறியுள்ள வலம் சங்குத்ரி மூலிகையைக் காண வேண்டுமானால் அதற்குரித்தான காயகல்பசக்தியைப் பெற்றிருத்தல் வேண்டும். காயகல்ப சக்தி என்றால் என்ன? பகலில் நட்சத்திரத்தைக் காண்பதற்கான அரிய கண்ணொளி சக்தி, இருளில் அனைத்தையும் காண்கின்ற அற்புதமான நேத்ர சக்தி, தாவரங்கள், ஆண், பெண், மனிதர்கள், தேவர்கள் என யாரைக் கண்டாலும் அவர்களிடத்திலே உருவ வேறுபாடின்றி ஒளிர்கின்ற தெய்வ பிரதி பிம்பத்தைக் காணுதல், ஆண், பெண், விலங்குகள் என்ற எவ்வித வித்தியாசமும் இன்றி அனைத்திலும் அன்பெனும் ஆத்ம சக்தியைக் கூட்டுதல் என்று இவ்வாறாக காயகல்ப சக்திகளில் பலவாறாக உண்டு. அஞ்சன சக்தி, தைல சக்தி, மூலிகா சக்தி, யோக சக்தி, யந்திர சக்தி, தந்திர சக்தி, எந்திர சக்கர சக்தி போன்ற பலவிதமான வழிபாடுகள் மூலமாக இவற்றைப் பெறுகின்றோம்.
பொதுவாக மூலிகைகளின் மூலமாகப் பெறப்படுகின்ற காயகல்ப சக்திதான் மிகவும் எளிமையானதாகவும், சாசுவதமாகவும், பரிசுத்தமாகவும் விளங்குகின்றது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே வருகின்ற பிரமாதி வருட கார்த்திகைத் தீப உற்சவத்தின் போது கொடியேற்றுகின்ற நாள் முதல் தீபம் ஏற்றுகின்ற நாள் வரை தினந்தோறும் கிரிவலம் வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். ஏனென்றால் நாம் (பிரமாதி ஆண்டு திருஅண்ணாமலை தீபகிரிவல மகாத்மியத்தில்) காண்கின்ற அனைத்து வகையான சித்த சக்திகளையும்,  தெய்வீக அனுகிரகங்களையும் நீங்கள் பெறுவதற்கு கிரிவலம் பெரிதும் உதவுகின்றது. ஸ்ரீஅகஸ்தியருடைய அஷ்டாமா சித்தி அமர்வு கோல தரிசனத்தை மட்டும் அல்லாது கருட நேத்ர கொம்புப் பாறையைக் காண்பதற்கும், வலம் சங்குத்ரி மூலிகையின் தரிசனம் பெறுவதற்கும், சித்து ஊர்வலி மந்திர பீஜாட்சரங்களின் ஒலியைக் கேட்பதற்கும் உரித்தான காயகல்ப சக்தியை நீங்கள் பெற முடியாவிட்டாலும், இத்தகைய சக்திகள் எவ்வகையில் விளங்குகின்றன என்பதை நாம் இங்கு கோடிட்டு காண்பித்தோமல்லவா! எனவே, இந்த பிரமாதி வருட கார்த்திகை தீபப் பெரு உற்சவத்தின் போது நீங்கள் திருஅருணாசலத்தை  கிரிவலம் வருகையில் இத்தகைய சக்திகள் யாவும் பலவகையில் உங்களையும் அறியாமலே உங்கள் தேகத்தில் தக்க முறையில் ஊட்டப்பட்டு விடுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எப்ப வருவாரோ.... ? அப்பூதி குரு யாரோ...?
உங்களுக்கென ஏன், எந்த ஓர் உயிரினத்திற்கும் ஒரு சிறுநெல் தாவரம் முதல், புல், பூண்டு, புழு முதல் மனிதர், தேவர் வரை அனைவருக்கும் சற்குரு உண்டு. ஆனால் எவர் தம்முடைய வாழ்நாளில் தீவிரமான முயற்சிகள் எடுத்து சற்குருவின் அருளைப் பெற் மனதார, உள்ளத்தாலும், உடலாலும் உழைக்கின்றாரோ அவருக்குத்தான் சற்குருவின் தரிசனம் கிட்டும். ஏன், நீங்கள் அற்புதமான மனிதப் பிறவியைப் பெற்றதே சற்குருவை தேடுவதற்காகத் தான் என்ற ஒரே லட்சியத்தை மேற்கொள்ளக் கூடாது? பகுத்தறிவுடன் இறைச் சிந்தனையைக் கூட்டுக! இதற்காக குடும்பத்தை விட்டு விலகி வெளிவந்து துறவு மேற்கொள்ள வேண்டும் என்பது பொருளல்ல. உங்களுடைய குடும்பத்தையே ஒரு ஆன்ம வாகனமாகக் கொண்டு, ஆத்ம சோதனைக் கூடமாகக் கொண்டு, எவ்வாறு ஓர் சற்குரு ஆனவர் நம்முடைய வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் நமக்கு அருள்பாலிக்கக் காத்துக் கிடக்கின்றார் என்ற சத்ய வாக்கிற்கான ஒரு இறை ஆய்வுக் கூடமாகக் கொண்டு வாழ்வதற்குத்தான் உங்களுக்கென ஓர் குடும்ப வாழ்க்கை அமைக்கப்பட்டுள்ளது.
துறவு வாழ்க்கை எளிதன்று. இல்லறமே இறைவனை குரு மூலமாக எளிதில் புலப்படுத்தும். எனவே நீங்கள் வாழ்வது ஒரு சற்குருவைப் பெறுவதற்காகத்தான் இந்த வாழ்வில் இல்லாவிட்டாலும் எப்பிறவியிலாவது உங்களது முயற்சி வெற்றி பெறும்.. ஆனால் உண்மையாகவே நீங்கள் முயன்றீர்களேயானால் இப்பிறவியிலேயே சற்குருவின் அருள் கிட்டும். சற்குருவை நேரே கண்டால் தான் சற்குருவை உணர முடியும் என்பது பொருளல்ல. அவர் உங்கள் கண்களுக்குத் தென்பட்டாலும், தென்படாவிட்டாலும் சற்குருவின் அத்தியாவசியத்தை நீங்கள் உணர்ந்து கொண்டீர்களேயானால், உங்களுக்கென வாய்க்கப்பட்டுள்ள சற்குருவின் ஆசி எப்போதும் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். எனவே இச்சமயத்திற்கு உங்களுக்குப் புரியும் வகையில் திருஅண்ணாமலையாரையே சற்குருவாக ஏற்றுக் கொண்டு கிரிவலம் வாருங்கள். அவரே சற்குருவாக உருவெடுத்து, உங்களுக்கு தரிசனமளித்து கை கொடுப்பார். அஞ்சுதல் வேண்டாம், நம்பிக்கை இழக்க வேண்டாம். நாம் சற்குருவைப் பெறுவதற்கான யோக்யதாம்சங்களைப் பெறவில்லையே என்று வேதனை கொள்ளல் வேண்டாம். கிரிவலம் வாருங்கள். திருஅருணாசலத்தை கிரிவலம் வந்து கொண்டேயிருங்கள். எந்த இடத்தில் எவரை எவ்விடத்தில் அவரவணைக்க வேண்டுமோ, அவ்விடத்தில் உங்களுக்கு சற்குருவின் தரிசனம் கிட்டும். இது நிச்சயம், உறுதி, இதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.

அடிமை கண்ட ஆனந்தம்

 (நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனின் பால பருவ அனுபூதிகள்..)
திருஅண்ணாமலை கிரிவல நுணுக்கங்களைத் தம் சற்குருநாதரின் சித்த குருவேத சூக்த மாமந்திரங்களைப் பெற்ற நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். குருவாய் மொழியின் முத்தாய்ப்பாக “எதுவும் என்னுடையது அல்ல, அனைத்தும் உன்னுடையதே அருளாளா, அருணாசலா!” என்ற தாரக மந்திரத்தை ஓதி ஜபித்து, தியானித்து, உய்த்து, உணர்ந்து, உணர்வித்து வருவதைத் தாம் அவர்தம் குருகுலவாச அனுபூதிகளாக இங்கு இத்தொடரில் காண்கின்றீர்கள்! கலியுக நியதிப்படி, கலியுகத்திற்குரித்தான சற்குருமார்கள் எந்த வடிவிலும் தோன்றி வருகின்ற மகத்தான சித்தர் லோகங்களுள் ஒன்றே குருமங்கள கந்தர்வ லோகம் என்பதை உணர்ந்தாலே போதும், “அடிமை கண்ட ஆனந்தம்” தொடர் புகட்டுகின்ற, தெய்வீகப் பாடங்கள் நன்கு புலனாகும்.
...... எதிரே நின்ற, “பேனா தாத்தா” வைக் கண்டு ஆச்சரியமடைந்தான் சிறுவன், ராயபுரம், வியாசர்பாடி என வடசென்னையையே அலசிவிட்டதாக எண்ணி, “தர்மமிகு சென்னையின்” லட்சக்கணக்கான ஜனங்களில் அந்தப் பேனாவைத் தந்தவரைத் தேடும் படலம்தனைக் கிட்டத்தட்ட அவன் கை விட்டு விட்ட நிலையில் அவர்தாமே தன் எதிரே வந்து நிற்பது கண்டு சிறுவன் அதிசயித்ததில் வியப்பென்னவோ!
சிறுவன் பேனாவைத் தந்த மாத்திரத்தில் அதனைத் தன் சட்டைப் பையில் செருகிக் கொண்டு விரைந்து சென்று விட்டார் அந்தத் தாத்தா! சிறுவனோ அவர் சென்ற திசையை நோக்கி வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். பார்வைதான் எங்கெங்கோ வளைந்து சென்றதே தவிர உள்ளூர அவன் மனதில் ஏகப்பட்ட “Calculations” ஊறிக் கொண்டிருந்தன!
“கண்ணா, உன்னோட பூலோக ஜாமெட்ரீ, கால்குலஸ் கணக்கெல்லாம் எங்ககிட்ட வேல செய்யாதுடா, ஏன்னா ஒரு சுமங்கலிக்கு புருஷனையே தெய்வமா கொண்டாடற பத்தினிப் பொண்ணுக்கு சூரியனையே உதிக்க விடாம செய்யற தெய்வ சக்தி உண்டுன்னா, அங்க எப்படிடா விஞ்ஞானமோ, கணக்கோ வேல செய்யும்”.
பெரியவருடைய இத்தகைய அற்புதமான சித்த மொழிகள் சிறுவனின் செவிகளில் ரீங்காரமிட்டதால் சிறுவனின் உள்ளத்தில் அதன் ஆன்மீகப் பின்னணியே அங்கு வியாபித்திருந்தது! எங்கெங்கோ அலைந்த களைப்பில் சிறுவன் பெருத்த அசதியுடன் ராயபுரம் கோயிலுக்குத் திரும்பினான். பல ஆண்டுகளுக்கு முன் காவியுடை தரித்தவர்கள் என்றாலே பயபக்தியுடன் மக்கள் மதித்துப் போற்றிய காலம்! காவியுடை தரித்தோரும் புனிதமான வாழ்வைக் கொண்ட காலமது! பெரியவர்களை நன்கு மதித்த காலமது!
... அன்று ராயபுரம் கோயிலில் பெரியவரைச் சுற்றி ஒரே கூட்டம், ஏழை எளியோரிடையே மிகவும் பிரசித்தி பெற்றிருந்தார் பெரியவர், “கோவணாண்டிப் பெரியவர்” என்றாலே எல்லோருக்கும் ஒரு பக்தி, மதிப்பு, பயம் எல்லாம்...! எந்தவிதமான குடும்ப, சமுதாய, அரசியல், பொருளாதார பிரச்னைகளானாலும் பெரியவர் அநாயசமாகத் தீர்ப்பது கண்டு சிறுவன் அசந்திருக்கின்றான். எந்தக் கஷ்டானாலும் சரி, பளிச்சென்று தீர்வுகள்! யாரோ இருவர் தட்டு நிறைய பழங்களைக் கொண்டு வந்த போது, “வேண்டாம் நயினா, நீயா ஒழச்சு வாங்கினா வாங்கிக்கிறேன். இந்த மாதிரி ஆபீஸ் காசுல, பப்ளிக் பணத்துல பழம் வாங்கி சாப்பிட்டா கர்ம வினைதாண்டா, வியாதியா வரும்....,” என்று பக்குவமாய் அந்த “லஞ்சாதிபதிகளை” விரட்டினார்.

“ஏண்டாப்பா. உன் மாப்பிள்ளை குடியோ குடின்னு குடிச்சு உன் பொண்னை அடிச்சு உதக்கிறான்னு சொல்ற, என்ன செய்யறது? ஆமா நீ எத்தனை வாட்டி குடிச்சுட்டு உன் சம்சாரத்தை அடிச்சு, உதச்ச, போ... போ..... நீ செஞ்சதுதான் உன் பொண்ணுக்கு திரும்பி வருதுன்னு நெனச்சுக்க! போயி தெனமும் பசுமாட்டுக்கு நல்லா உப்பு போட்டு கஞ்சி தண்ணி வச்சு நாலு புல்லு, வாழப்பழம் தெனமும் கொடுத்துட்டு வா, வர்ற ஆடிக் கிருத்திகைக்குள்ளாற மாப்பிள உன் கால்ல விழுவான், நல்லபடியா போய்ச் சேரு.....”

“.....ம்.. நல்ல வேல கெடக்கணும்னு அம்பாளை வேண்டி என்ன பிரயோஜனம்? உன்னோட அப்பன் ரொம்ப சீப்பா கோயில் கடைய வாடகைக்கு எடுத்து மாசம் அஞ்சு ரூபாய் வாடகையே ஒழுங்காத் தர்றாமே சாமியை ஏமாத்தறானே, பின்ன எப்படிடா உனக்கு வேல கெடைக்கும்? அப்பன் செஞ்சது பையனுக்கு! மொதல்ல உங்கப்பனை இங்க வரச் சொல்லு அவன் வேலயே சரியில்லை, அப்புறம் உன் வேலையப் பத்தி யோசிப்போம்!” 
...அப்பப்பா , என்னே சரமாரியாய் டக் டக்கென்று.. ஒவ்வொருவருடைய பிரச்னைக்கும் தெய்வீகத் தீர்வளித்து விரைவில் இடத்தை விட்டுக் கிளம்புமாறு செய்கின்ற அவருடைய பாணியே அலாதியானதுதான். பாவ மூட்டையாய் வந்து நிற்போர்க்கு அவரைக் கண்டாலே கிலிதான். சிம்ம சொப்பனம்தான்! ஆனால் என்ன செய்வது? பேசும் தெய்வக் கல்லாய்ப் பெரியவர் விளங்குவதினாலேதானே அவர்களுக்கு Solutionம், Salvation-ம், கிடைக்கிறது.

“இப்படித்தாண்டா நீயும் எதிர்காலத்துல கர்ம பரிபாலனம் செஞ்சாகணும், வர்றவன் போறவனுக்கெல்லாம் பாவங் கொல்லி மருந்தா நம்ம இருக்க முடியாதுடா! நாம குருமங்கள கந்தர்வ லோகத்துலேந்து வந்தவங்கடா! நம்ப வேலையே கர்மத்தை பரிபாலனம் செஞ்சு பூஜை, தான, தர்மம், கோயில் திருப்பணி மூலமாக அவங்கவங்க கர்ம மூட்டையைக் கழிக்கறதுதான்! போகப் போக, அதுவும் நீ பெரிய மனுஷனா ஆறப்போ, சமுதாயத்துல புளுகும், அதர்மமும், திருட்டும், கொள்ளையும், அநியாயமும், பெருத்துடும்! இதுக்கு நடுவுல நீ தெய்வீகத்தைப் பரப்பி, சத்சங்கம் கூட்டி அன்னதானம் மாதிரி நெறய நற்காரியம் பண்ண வச்சு பலரோட கர்ம பளுவைக் கொறக்கணும்டா! சும்மா சும்மா mircale பண்றதுக்கு நாம வரலை! அது நமக்கு தேவையும் இல்லை..குரு மேல நம்பிக்கைய வளர்க்கணும், அண்ணாமலை கிரிவலத்தைப் பத்தி நெறய எழுதணும், பேசணும், சொல்லணும், அன்னதானம் நெறய பண்ணனும்! நல்ல ஒழுக்கத்தைச் சொல்லித் தரணும், இதுக்குத் தாண்டா, நம்ப ரெண்டு பேரையும், குருமங்கள கந்தர்வ லோகத்துலேந்து அனுப்பிச்சிருக்காங்க. எல்லாம் நம்ப பெரியவர் அகஸ்திய மஹாபிரவுவோட கருணை ! வர்ற பிரமாதி வருஷம், அவரோட சேர்ந்து .. அண்ணாமலைக்கு வரணும்!... பெரியவர் திடீரென்று கண்ணைச் சிமிட்டினார்!
.... சிறுவன் உஷாரானான்! பெரியவரின் வார்த்தைகளை அழுத்தமாகக் கேட்டுக் கொண்டான். சந்தடி சாக்கில் பேச்சினூடே நைஸாக சில முக்கியமான தெய்வீக ரகசியங்களை நுழைத்து விடுவதை அவன் கண்டிருக்கிறான்! Have you got it?
..... பெரியவர் அண்ணாமலை கிரிவலத்தைப் பற்றி நாத்தழுதழுக்கச் சொல்லும் போதெல்லாம் சிறுவனுக்கு ஒன்றைக் கேட்கத் தோன்றும்! “வாத்யாரே, கேட்டா தப்பா நெனக்கக் கூடாது! நீ இதுவரைக்கும் எத்தனை வாட்டி அண்ணாமலையை கிரிவலம் வந்திருப்ப?” பெரியவரோ சிரித்துக் கொண்டே, சிறுகுழந்தையைப் போல் ஒண்ணு, ரெண்டு, மூடு, நாலகு, ஐது, சே, ஸாத், எய்ட், Nine….  என்று குறும்புத்தனமாய் எண்ணி விரலை மடக்கிக் கொண்டிருந்தார், சிறுவன் ஆவலுடன் அவர் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்! பிறகு திடீரென்று, “ஏண்டா நாங்க அண்ணாமலைல கிரிவலம் போகாத நாள் ஏதாச்சும் உண்டா, சொல்லு பார்க்கலாம், எப்படி சிவபெருமானுக்கு ஆறு காலப் பூஜையோ அந்த மாதிரி எங்களோட நித்ய பூஜைல அண்ணாமலை கிரிவலமும் நிச்சயம் உண்டு! யுக யுகமாய் நாங்க வந்துகிட்டு இருக்கோம், அந்த தெய்வீக ரகசியமெல்லாம் உனக்கெதுக்கு?” என்று சொல்லியவாறே திடீரென்று கலகலவென்று சிரித்த பெரியவர் அதே வேகத்தில் மௌனமானார்.
அந்த மௌனத்தின் (தெய்வீக) வலிமையினால் சிறுவனும் அமைதியுற்றான். அந்த பூஸுர மௌனத்தில் பரிமாறப்பட்டவை தாம் எத்தனையோ கோடி குருவாய் மொழிகள்! குரு-சிஷ்ய சம்பாஷணைகள்! இறைவன், இறைவனின் அடிமை, அந்த அடிமை கண்ட ஆனந்த விள்ளல்களே இப்படியாகப் பல்வேறு முறைகளில் பூத்துக் குலுங்கி ஸ்ரீஅகஸ்திய விஜய நந்தவனப் பூஞ்சோலையாய் இன்று பரிமளிக்கின்றது! 
“ஏண்டாப்பா, ஒரு வழியா அந்த பேனா கர்மத்தைத் தொலைச்சுட்டு வந்தியா?”
தெய்வீகச் சுனையிலிருந்து எழுந்த சிறுவன் சற்றே தலையாட்டினான்., அதே சமயம் கொஞ்சம் பொய்க் கோபத்தையும் வரவழைத்துக் கொண்டான்...
“ஏன் இந்த வேகாத வெயிலில், மண்டை காயும் அளவிற்குத் தன்னை அலைய விட்டார்? After all ஒரு பேனாதானே!” சிறுவன் புலம்பினான்! ......
“ஸ்ட்ரெயிட்டா சப்ஜெக்ட்டுக்கே வந்துடறேண்டா கண்ணு! மூஞ்சிய  தூக்கி வச்சுக்கிட்டு இங்க ஒண்ணு நிக்க வாணாம்!” பெரியவரின் கர்ஜனையில்  சிறுவன் மௌனத்தைப்.. பொ(மொ)ழிந்தான்!
“ஒண்ணு புரிஞ்சுக்கடா, இந்த கிழவன் செய்யற காரியம் ஒவ்வொண்ணுக்கும் ஆயிரமாயிரம் அர்த்தம் இருக்குமில்ல! அண்ணாமலைல விடாம ஒரே நாள்ல ரெண்டு மூணு கிரிவலம் வந்து உடம்புல ஒனக்கு நெறய புண்யம் சேந்துச்சு இல்ல? அவ்வளவு புண்யத்தையும் வச்சுகிட்டு சந்தெல்லாம் சுத்தினியே, அங்கெல்லாம் நெறய ஏழை ஜனங்க இருக்காங்கடா, அடுத்த வேளைக்கு, தண்ணி இல்லாம! அவங்கனால அண்ணாமலை கிரிவலம் எப்படி போக முடியும்னு சொல்லு பார்க்கலாம்! நீ வெத்துக் கால்ல அலையோ அலைன்னு அலஞ்சப்போ, உன்னோட ஒடம்புல இருந்து கிரிவல புண்ய சக்திய எல்லாம், உன்னோட கால் விரல்கள், பாதம், அடிக்கால் மூலமா நாங்க அந்தந்த வீதில, தெருல, ரோட்ல எறக்கிடறோம். அதே பாதைய மிதிச்சு ஏழை ஜனங்க போறப்போ அவங்களுக்கு இந்த கிரிவல புண்ய சக்தி கெடக்கும்டா! ஆனா இந்த புண்ய Transfer  ரகசிய விஷயம் சற்குருக்குத் தாண்டா தெரியும்! இதுக்குன்னு சில ஹோரை, நட்சத்திர, யோக ரகசியம் இருக்குடா! குரு ஹோரையும், பவகரணமும், வ்யதீபாத யோகமும் சேர்ற நேரத்துல தான் இதச் செய்ய முடியும்? இன்னிக்கு சாய்ந்தரம் பாரு, நீ மெதிச்ச இடத்துல எல்லாம் நல்ல மழை பெஞ்சு ஜனங்க சந்தோஷமா இருப்பாங்கடா, இதுதாண்டா அண்ணாமலை கிரிவல புண்ய சக்தியோட மஹிமை! ஏதோ ஒரு பேனா மூலமா ஏழைக்கு உதவ நம்பளை ஒரு கருவியா வெச்சுக்கிட்டு நம்ப ஒடம்பு மூலமா ஆண்டவன் திருவிளையாடல் பண்றானேன்னு நெனச்சு ரொம்ப ரொம்ப சந்தோஷப்படணும்டா.. வேற எதுக்குடா இந்த ஒடம்பு இருக்கு...?”
பெரியவரின் கண்கள் பனித்தன! அந்த குரு உபதேச மழையில் சிறுவன் ஆனந்தமாக நனைந்தான்! நீங்களும் தானே! இதுதானே அடிமை கண்ட ஆனந்தம்.

பிரமாதி வருட கிரிவலம்

பிரமாதி அஷ்ட பிரதாப கிரிவல மகாத்மியம்
திருஅண்ணாமலை கிரிவலம் ஒரு பரிசு! அதை ஏற்றுக் கொள்ளுங்கள்! தானே பலன்கள் தேடி வரும்.  பொதுவாக போட்டியில் கிட்டும் வெற்றிக்குத் தானே பரிசு: பரிசுடன் போட்டியும் முடிந்து விடும்! ஆனால் அருணாசல கிரிவலத்தையே தெய்வம் தந்த பரிசாகக் கொண்டு பரிசை விடச் சிறந்த பலாபலன்களைத் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் பெற்றிடுங்கள்! பிரதமாதி அஷ்ட பிரதாப கிரிவல நாள் – 1 (17.11.1999)
திருஅண்ணாமலை கிரிவலம் எதைத்தான் தந்திடாது? அது தராத பொருளும் உண்டா என்ன? தரமுடியாத பொருளும் உண்டா என்ன? தர முடியாத பொருளும் எதுவும் இல்லை! கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக, ப்ரத்யட்ச ஜோதியாக சாட்சாத் சிவபெருமானே மலையாக எழுந்தருளியிருக்கும் திருமாமலையே திருஅண்ணாமலைத் திருத்தலமாகும். எந்த நியாயமான பிரார்த்தனைக்கும் அவரவர் கர்மவினைப்படி நன்முறையிலே பாக்கியங்களைப் பெற்றுத் தருகின்ற உத்தமமான திருப்பெருமலையே திருஅண்ணாமலை, நமக்கு வேண்டுவன வற்றையெல்லாம் தரக்கூடிய அருட்சுரப்பி வரமலையாகவும், திருஅண்ணாமலை விளங்குகின்றது. ஒரு மனிதனுக்கு நியாயமாக என்ன என்ன தேவையாக இருக்கும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள்!
செல்வம், புகழ், பதவி, உடல் ஆரோக்யம், மனநிம்மதி, அன்பைப் பொழியும் நல்ல மனைவி, நல்ல நண்பர், உடுக்க உடை, இருக்க இடம் – போதுமா, இன்னமும் வேண்டுமா? இவை போதாதா ஒரு நல்ல சுகமான மனித வாழ்வை நடத்துவதற்கு! இவை யாவுமே வேண்டும் போது – நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் – வேண்டும்போது கிடைத்தாலே  அதுவே மிகவும் சுகமான வாழ்வாக அமைகின்றதல்லவா! வேண்டாத போழ்து 70 வயதில் நல்ல பதவி, வீடு கிடைத்து என்ன பயன்? எதுவுமே வேண்டும் போது கிடைத்திடல் வேண்டுமப்பா! இதனையே நல்ல பரிசாக நமக்குத் தருவது திருஅண்ணாமலை கிரிவலமாகும். ஆமாம், இவை மட்டும்தானா நமக்கு திருஅண்ணாமலை கிரிவலம் தருகின்ற  உத்தமமான பரிசு? நம் பிறப்பை ஒட்டிய பெரும் பலன்களிவை ! சூட்சும அருட்பலன்களோ கோடானு கோடி!  உலகில் நாம் ஒன்றே ஒன்றைப் பெற்றுவிட்டால் அனைத்தும் பெற்றதாக ஆகிவிடுகின்றதே, என்ன அது? ஆம் அதுதான் நிரந்தரமான, உண்மையான இறைச் செல்வமாகும். நிம்மதியைத் தரும், எப்போதும் சந்தோஷத்தைத் தரும் செல்வம்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் கலியுகத்தில் வேண்டுவதாக இருக்கின்றது! அது நிரந்தரமாக, நிலையானதாக, நன்முறையில் இருக்க வேண்டுமல்லவா! எவ்வளவு பணக்காரர்கள் இன்று பயத்துடன் வாழ்கின்றார்கள்? முறையான வழியில் வந்த செல்வம்தான், மன நிறைவான நிம்மதியையும், குறைவில்லா சந்தோஷத்தையும், பொங்கும் ஆனந்தத்தையும், பெருகும் சாந்தத்தையும் தரும், முறையற்ற வழியில் செல்வம் வந்தாலோ, மன நிம்மதியே போய்விடும். பணத்திற்காகத்தானே மனிதன் கலியுகத்தில் அலையோ அலை என்று அலைகின்றான்!
உலகத்திலேயே மிகப் பெரிய சுயம்பு சிவலிங்க மூர்த்தியாக விளங்குகின்ற திருஅண்ணாமலை மூர்த்திதான் நமக்கு நிரந்தராமான, உண்மையான, அழிவில்லாத செல்வத்தைத் தரவல்லவர். அருணாசலப் பரிசாக இந்த வகையிலே செல்வம் வந்தால் அனைத்துமே வாழ்க்கையில் வந்த மாதிரித்தானே! சத்திய சுயம்பு மூர்த்தி என்றால் என்ன? எங்கு நோக்கினாலும் சத்தியத்தின் வடிவு தோன்ற வேண்டும். காண முடியுமா? Why not?  அதைத்தான் நீங்கள் இன்றைக்கு கிரிவலம் வருகின்ற போது பல்லாயிரக்கணக்கான மலை வடிவுகளாக, மலைமுகப்புகளாக, மலை முகடுகளாக  பல்வகை அண்ணாமலை தரிசனங்களாகக் காண்கின்றீர்கள். இன்று நீங்கள் கண்டு, வணங்கி, துதித்து, அனுபவிக்கின்ற அனைத்து முகடுகளுமே சத்தியத்தின் வடிவகளாகும். சத்தியத்தைப் பார்த்தால் நிரந்தரமான செல்வத்தைப் பார்த்தது ஆகுமே!
எவ்வாறு கோடானு கோடி யுகங்களாக திருஅண்ணாமலை  “மலை தரிசனங்கள்” யாவுமே நிரந்தரமானதாக, சாசுவதமானதாக, எவராலும் பார்க்கக் கூடிய சத்தியச் செல்வமாக விளங்குகின்றதோ அதே போலத்தான் உண்மையான பக்தியுடன் நீங்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பெறுகின்ற செல்வமும் உங்களோடு எப்பொழுதும் ஒட்டியிருக்கும். சத்தியமானதாகவும் இருக்கும், சத்தியத்தை தரிசனம் செய்தால், சத்தியத்தையே பார்த்துக் கொண்டிருந்தால், சத்தியத்தையே வலம் வந்தால் அது தராத செல்வம் எதுவும் உண்டா என்ன? மேலும் அதுவும் நித்யமானதாகத் தானே இருக்கும். சத்ய முக தரிசனங்களையே பலவிதமான மலை தரிசனங்களாக நீங்கள் பார்த்துக் கொண்டே வருகின்றீர்கள்! அவரே சத்யோஜாத சிவம்! அந்த உண்மையிலிருந்து பிறப்பது தான் அழிவற்ற செல்வம்! எனவே உங்களுக்கு சத்திய தரிசனம் எதைப் பரிசாகத் தருகின்றது தெரியுமா?
செல்வம் வந்தால் முதலில் அது எதில் தங்கும் ? நிரந்தரமான செல்வமானது தங்கியிருக்கக்கூடிய, விருத்தி அடைகின்ற, புனித இருக்கையை (Treasure Base) அது பரிசாகத் தருகின்றது! இன்றைக்குப் பலரும் லட்சக்கணக்கான ரூபாயை வைத்துக் கொண்டு, மன நிம்மதியில்லாமல், எப்போதும் எது, என்ன நடக்குமோ என்று புலம்பிக் கொண்டு இருக்கின்ற போது உங்களுக்கு நல்ல தூக்கத்துடன், நல்ல மனநிம்மதியுடன் நல்ல ஆனந்தத்தைத் தருவதாக, தார்மீகமான செல்வத்தைத் தருவதும் திருஅண்ணாமலை ஒன்றுதான். ஏனென்றால் திருஅண்ணாமலை கிரிவலத்தால் நீங்கள் பெறுகின்ற செல்வம் யாவையும், உண்மையான வழியில், தார்மீக முறையிலே உங்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப பெறப்படுகின்ற செல்வமாக விளங்குகின்றது. ஏதோ திடீரென்று வந்து, போய், மீண்டும் வந்து போவதாக இருப்பது அல்ல இந்தச் செல்வம்! சத்தியச் செல்வம்! ஆம் லிங்க முக தரிசனத்தில் கிடைக்கின்ற பரிசாக வருகின்ற உண்மையான செல்வம்! இந்தச் சத்திய தரிசனத்தின் மூலம் உண்மையான பரிசாக நிரந்தரமான செல்வத்தைப் பெறுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
திருமகள் தரும் புகழ்(ல்) :- 17.11.1999 இரவு வரை நவமி திகழ்கின்றது அல்லவா! பிறகு தசமியும், பூரட்டாதி நட்சத்திரமும் சேர்ந்த உத்தம தினமாவதோடு விஷ்ணுபதி புண்ய காலத்துடன் சேர்ந்து ஜ்வலிக்கின்றது! விஷ்ணுபதி புண்ய காலம் என்றாலே ஸ்ரீவிஷ்ணுவை பதியாக அடைந்துள்ள, ஸ்ரீலெட்சுமியைத் தானே குறிக்கின்றது. ஸ்ரீலட்சுமி தானே நிரந்தரமான, உண்மையான செல்வத்தைத் தரவல்லவள். ஸ்ரீமகாலெட்சுமியே போற்றிய சிவலிங்க மூர்த்திதானே திருஅண்ணாமலை மூர்த்தி! எனவே, இத்திருநாளிலிருந்து உங்களுக்கு நிரந்தரமான நல்ல நிம்மதியான செல்வத்தைப் பெறுவதற்காக கிழக்கு கோபுர வாயிலில் நிலைப்படி மேல் தூணில் அருள் பாலிக்கும் ஸ்ரீலட்சண விநாயகரைத் தரிசித்துக் கொண்டு, ஸ்ரீமகாலெட்சுமியைத் துதித்து கிழக்கு கோபுரத்திலிருந்து உங்கள் கிரிவலத்தைத் துவக்குங்கள்.
செல்வம் என்றால் நாம் அனுபவிக்கக் கூடிய, நம்முடைய வாழ்க்கையிலே நாமே துதிக்கக் கூடிய செல்வமாகத்தானே விளங்க வேண்டும். திடீரென்று செல்வம் வந்து விட்டு நமக்கு ஒரு முடிவு வந்து விட்டால் அல்லது அது நம்மை விட்டுவிட்டால் என்ன செய்வது? அது சத்யமான செல்வம் அல்ல என்று தெளிவதே புத்திசாலித்தனம்! எனவே, எந்த செல்வத்தையும் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான தீர்க்கமான ஆயுளைத் தரவல்லவர்தாம் ஸ்ரீஎமதர்ம ராஜர், இன்று கை நிறைய, பை நிறைய, சம்பங்கிப் பூக்களைச் சுமந்தவாறே, கிழக்கு கோபுரத்திலிருந்து கிரிவலத்தைத் தொடங்கி எமலிங்க தீர்த்தத்தில் நீராடி/நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு, சம்பங்கிப் பூக்களால் ஸ்ரீஎமலிங்க மூர்த்திக்கு அர்ச்சனை செய்து, பிரசாதமாக சம்பங்கிப் பூக்களைப் பெற்று, அதனைச் சுமந்தவாறே நீங்கள் தொடர்ந்து கிரிவலம் வருதல் வேண்டும்.  ஏனென்றால் சம்பங்கிப் பூக்களை இன்று பூலோகத்தில் நாம் பெறுவதற்குக் காரணமே ஸ்ரீமகாலெக்ஷ்மி உறைகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி லோகமாகும் இங்கு தான் பலவிதமான வடிவங்களில், கோலங்களில், ஸ்ரீமகாலெக்ஷ்மி சம்பங்கித் தாண்டவ நடனம் ஆடுகின்றாள்.
இந்த நடன தரிசன பலனே தீர்க ஆயுளையும், சுமங்கலித்துவத்தையும் தருவதாம்! திருமகளின் திருநடனத்தில் தெறிக்கும் முத்துக்களே சம்பங்கிப் பூக்கள்! நாம் நிரந்தரமான செல்வம் என்று சொன்னோம் அல்லவா! நம்முடைய புராண வைபவங்களின் படி ஸ்ரீலெட்சுமி தேவியானவள் ஸ்ரீமகாவிஷ்ணுவைப் பல முறை பிரிய வேண்டிய அனுபூதிகள் இறை லீலைகளாக ஏற்பட்ட போது., தான் என்றுமே சாசுவதமாக, பரப்பிரம்மமாம் ஸ்ரீமன் நாராயணனுடைய மார்பிலே உறைய வேண்டும் என்பதற்காக ஸ்ரீமகாலெட்சுமி தம்முடைய தவத்திற்காகத் தேர்ந்து எடுத்தத் தலங்களுள் ஒன்றே திருஅண்ணாமலையாகும். இங்கு மகத்தான கிரிவலங்கள் எல்லாம் புரிந்து நாம் இங்கு குறிப்பிடுகின்ற சத்திய தரிசனங்களை மலை தரிசனங்களை, லிங்க முக தரிசனங்களாக, சிவபூஜைகளை நிகழ்த்தி ஸ்ரீவிஷ்ணுவின் அருளைப் பரிபூர்ணமாக பெற்று அவருடைய மார்பிலே நிரந்தரமாக நிலை கொள்கின்ற செல்வத்தைப் பெற்றாள் ஸ்ரீலக்ஷ்மி!
பெறற்கரிய இப்பரிசான நிரந்தரமான செல்வத்தை, ஸ்ரீவிஷ்ணுப் பரம்பொருளின் நெஞ்சிலே உறைகின்ற செல்வத்தை ஸ்ரீமகாலெட்சுமி பெறுவதற்காக ஸ்ரீசம்பங்கிப் பூக்களால் சிவலிங்க அர்ச்சனை செய்தமையால் அதைக் குறிக்கும் முகமாகத்தான் தீர்க சுமங்கலித்வம் பெற நீங்கள் இன்று எமலிங்க மூர்த்திக்கு சம்பங்கிப் பூக்களால் அர்ச்சனை செய்து, பிரசாதமாகப் பெற்ற சம்பங்கிப் பூக்களை மஞ்சள் துணியில் கட்டிச் சுமந்து கிரிவல வருதல் வேண்டும் என்பதாம்! நீங்கள் இன்று இந்த கிரிவலத்தை முடிக்க வேண்டிய இடம் எது தெரியுமா? சிவாலயம் அருகே உள்ள ஸ்ரீபூத நாராயணன் பெருமாள் சந்நிதியாகும். இவர்தானே செல்வத்தின் நிரந்தரமான இடமாக என்றும் எப்போதும் எங்கும் விளங்குகின்றார்!
ஸ்ரீபூதநாராயணன் சந்நிதியிலிருந்து மலையை நோக்கி தரிசித்து, விஷ்ணுபதி தரிசனமாக, ஸ்ரீமகாலெட்சுமி தரிசனமாக சத்திய (பூத) நாராயண முக தரிசனமாகப் பெற்று உங்களுடைய பிரார்த்தனையைச் சமர்ப்பித்திடுங்கள். இரண்டு வருடங்களுக்குள் ஆயிரம் முறை கிரிவலம் வருகின்ற பாக்கியத்தைப் பெறுவீர்களேயானால் நிச்சயமாக கிரிவலப் பரிசாக பெருஞ்செல்வம் உங்களைத் தானே தேடிவரும். ஆம் ஆயிரம் முறைதான் இதில் எவ்வித ஐயமும் இல்லை செய்து பாருங்கள், உத்தம செல்வந்தராக விளங்குங்கள். இதுவே, நிரந்தரமான செல்வத்தைப் பெறுவதற்காக ஸ்ரீபிரமாதி ஆண்டில் சித்புருஷர்களால் அருளப்பட்ட நல்வழி முறையாகும். 1000 முறை கிரிவலமா என்று திகைத்திடாதீர்கள்? வாழ்வில் இரண்டாண்டு காலமென்பது எளிய அறவழி முறைதானே!

பஞ்ச கோச தரிசனங்கள்!
இந்த கிரிவலத்தில் நீங்கள் காண வேண்டிய ஐந்து முக்கியமான தரிசனங்கள் உண்டு. மலையை தரிசித்தவாறே, நீங்கள் கிரிவலத்தைச் செய்கின்ற போது பல்லாயிரக்கணக்கான சத்திய லிங்க முக தரிசனங்களைப் பெறுகின்றீர்கள் அல்லவா? இவற்றுள் இன்றைய தினத்தில் அறிந்து உணர வேண்டிய ஐந்து முக்கியமான தரிசனங்களானவை :

1. கிழக்கு கோபுரத்திலிருந்து நீங்கள் பெறுகின்ற “லட்சண திருமுக லிங்க தரிசனமாகும்” அதாவது, கிழக்குக் கோபுர வாயிற்படியில் விநாயகரைத் தொழுத பின்னர், ஸ்ரீவிநாயகரை தரிசித்த காட்சியுடன் கண்களை மூடிக்கொண்டு மலையை நோக்கித் திரும்பி கண்களைத் திறந்தவுடன் மலை தரிசனம் கண்களுக்குள் பொலியுமாறு நின்று தரிசித்திடுக! இவ்வாறு கண்களுக்குள் நிறைந்த விநாயக தரிசனத்திற்குப் பின் உடனே நமக்குக் கிடைக்கின்ற மலைதரிசனமே “லட்சண திருமுக” லிங்க தரிசனமாகும். தூய செல்வத்திற்கு நம்மை சுத்திகரிக்கும் தரிசனமிது!

2. பிறகு கிரிவலப் பாதையில் எமலிங்கத்திலிருந்து கையில் சம்பங்கிப் பூக்களைச் சுமந்தவாறு நீங்கள் காண்கின்ற தரிசனமே “ஔதும்பர” தரிசனமாகும். இந்த தரிசனத்தின் பலனாக நாம் பெறுவது என்னவென்றால் நமக்குக் கிடைக்கின்ற நிரந்தரமான செல்வத்தை நன்முறையிலே பயன்படுத்துவதற்கான தீர்க்கமான ஆயுளைப் பெறுவதாகும்.

3. செங்கம் சாலையிலிருந்து வலது புறம் திரும்பியவுடன் நமக்குக் கிட்டுகின்ற தரிசனமே “பரஞ்ஜோதி திருமுக” தரிசனமாகும். இங்கிருந்து பார்த்தால் பலவிதமான சத்திய லிங்க முக தரிசன சூட்சுமக் காட்சிகளைப் பெறலாம். இப்பகுதியில் தான் யோகியர்களும், சித்புருஷர்களும், மஹரிஷிகளும் இன்றும் அமர்ந்து பரஞ்ஜோதியை வேண்டி சத்திய லிங்கத்தையே செல்வ லிங்க தரிசனமாகப் பெறுகின்ற இடமாகும். பொதுவாக, செல்வ விநாயகரை இஷ்ட தெய்வமாக வைத்து உத்தம பக்தியுடன் வணங்குபவர்கள் இவ்விடத்தில் நிதர்சனமான ஸ்ரீவிநாயக தரிசனத்தைப் பெறுவார்கள் என்பது உறுதி.

4. நான்காவது முக்கிய தரிசனமாக நீங்கள் பெற வேண்டியது ஸ்ரீகுபேர லிங்கத்திலிருந்து மலையைக் காண்கின்ற போது நீங்கள் பெறுகின்ற “வைவஸ்வத லிங்க முக” தரிசனமாகும். ஸ்ரீலட்சுமி தேவியே மானிட வடிவம் கொண்டு அமர்ந்து சிவனை பூஜித்த அற்புதமான இடமாகும். குபேர லிங்க சந்நிதி திகழ்கின்ற தலமாதலின் குபேர சம்பத்தைப் பெறுவதற்கு இறைவனே லிங்கமாக அமர்ந்து அருள்பாலிக்கும் திருத்தலம். அஷ்டமுக திக்கு லிங்க தரிசனங்களில் இது மிகவும் முக்கியானதாகும்.

5. ஐந்தாவது தரிசனமாக விளங்குவது ஸ்ரீபூத நாராயணப் பெருமாள் சந்நிதியிலிருந்து நீங்கள் பெறுகின்ற சத்ய (பூத) நாராயண தரிசனமாகும் இதுதான் பரிபூர்ணமான செல்வமுக லிங்க தரிசனத்திற்கு வழிவகை செய்கின்றது. எத்தனையோ தரிசன அருட்சுரங்கக் கனியை அள்ளித் தரும் திருஅண்ணாமலை கிரிவலம் ஒரு பரிசே! அதனை ஏற்றுக் கொள்ளுங்கள். தானே பலன்கள் தேடி வரும். ஆம் இதுவே சித்தர்களுடைய திருவாக்கியமாகும். நிரந்தரமான செல்வத்தைத் தருகின்ற சித்தர்கள் உருவாக்கிய கருவாக்கியம்! புரிந்து கொண்டீர்களா! தக்க முறையில் கிரிவலத்தை மேற்கொண்டு இதன் பலன்களை நனவாக்கிப் பயன் பெறுங்கள்!

திருஅண்ணாமலை கிரிவலம் ஒரு சாகசப் பயணம்! அதனை ஏற்றுக் கொள்ளுங்கள், ஏற்றுக் கொள்வதே நம்முடைய தலையாய செயல்! பிரமாதி அஷ்ட பிரதாப கிரிவல நாள்  - 2 (18.11.1999)

சித்புருஷர்கள் நன்றாக ஒன்றைச் சொன்னார்கள் திருஅண்ணாமலை திருத்தலத்தைப் பற்றி “அடிக்கொரு லிங்கம்! அடித்துகள் பட்ட இடம், எல்லாம் கோடி, கோடி லிங்கங்கள்” என்று ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஸ்வாமிகள், ஸ்ரீவள்ளலார், ஸ்ரீபாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள், ஸ்ரீபரமாச்சார்யார், ஸ்ரீரமண மஹரிஷி, போன்ற உத்தமப் பெரியோர்கள், சித்தர்கள் எல்லோரும் திருஅண்ணாமலையில் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்ற லிங்கங்களாகவும் நாம் அடியெடுத்து வைக்கின்ற ஒவ்வொரு இடத்திலும் பரவெளியில் காற்று நிலவுகின்ற இடத்தில் லிங்கங்களை அடுக்கி வைத்தாற் போல் ஒன்றன் மேல் ஒன்றாக எங்கு பார்த்தாலும், கோடானு கோடிக்கணக்கான லிங்கங்களாக காற்றுப் பரவெளியிலும், பூமியிலும், நிலத்திலும், நீரிலும், நிறைந்திருப்பதைப் புலப்படுத்தி உள்ளனர்.
அறியாமையால் நமக்குத்தான் இது புரியவில்லை! பார்க்க முடியவில்லை என்று எண்ணுகிறோம்! ஆனால், பெரியோர்கள் சொல்வது என்றுமே சாசுவதமான உண்மைதானே! நாம் கிரிவலம் வருகின்ற போது நம்மையும் அறியாமலே கோடானு கோடி லிங்கங்களை வணங்கி, தழுவிய உரசிய வண்ணம் தாம் நாம் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே தான் அருணை கிரிவலம்தனை சாகச பயணம் என்று சொன்னார்கள். சாகசம் என்றால் இதுவரையிலும் எவராலும் காண, செய்ய முடியாதது, நிறைவேற்ற இயலாதது, நாம் செய்து கொண்டிருப்பது என்பதுதானே பொருள். ஆம், இவ்வாறான கோடானுகோடி லிங்கங்கள் நிறைந்துள்ள புனிதமான இடம் உலகத்தில் ஏன் பிரபஞ்சத்தில் எங்குதான் உள்ளது திருஅண்ணாமலையைத் தவிர! கோடானு கோடி லிங்கங்களின் நடுவே இங்கு கிரிவலப் பயணம் ஒரு சாகசம்தானே!
எனவே, உங்களுடைய சாகசப் பயணத்தைத் ஏற்றுக் கொள்க! நீங்கள் கிரிவலத்தில் மலைமுகடுகளாக சத்திய முகலிங்க தரிசனங்களைப் பெற்றாலும் நீங்கள் நடக்கின்ற இடமெல்லாம் காற்று வெளியிலே, பரவெளியிலே கோடானு கோடி லிங்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்றும் இருக்கின்றன. என்றென்றும் இருக்கும். இவற்றின் தரிசன பலாபலன்களை நாம் எவ்வாறு பெறுவது / உணர்வது? உதாரணமாக நிலத்தடியிலே சுவையான நீர் இருக்கின்றது. அதனைக் கிணறு என்ற ஒன்றை வெட்டி நீரை இறைத்தால் தானே பயன்படுத்தியாக முடியும். அதற்கான ஊற்று வழியையும் நீங்கள் அறிந்தாக வேண்டும். நல்ல ஊற்றை அறிவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு. அதே போல் கோடானு கோடி லிங்கங்கள் நிறைந்திருக்கின்ற திருஅண்ணாமலையை கிரிவலமாக வருகின்ற தெய்வீக சாகசப் பயணத்தை மேற்கொண்டு இதனுடைய பலாபலன்களை நல்ஊற்றாய்ப் பெற வேண்டும் என்றால் அதற்குரிய கிணறு அமைக்கும் நற்காரியமே கிரிவல முயற்சியாகும்.

இந்த சாகசப் பயணத்தின் முக்கியமான பலன்களுள் ஒன்றைக் காண்போமா?

ஒவ்வொரு மனிதனும் தான் வாழ எதை வேண்டுகின்றான்? ஒரு பதவியை, தொழிலை! முதலாளியாக இருந்தாலும் அதுவும் முதன்மைப் பதவிதானே! நம்மால் ஒரு நூற்றுக்கணக்கான பேர்களுக்கு ஜீவிதத்தைத் தர முடிகின்றதே! அதுவே ஒரு முதலாளிப் பதவிதானே! நல்ல பதவியை / பணியை / தொழிலை வேண்டாதோர் யார்? நல்லதோர் மனிதப் பிறவி எடுத்து விட்டோம். இதில் நம் ஜீவிதத்திற்காக நல்ல பதவியை நாம் பெற வேண்டும் அல்லவா! நீங்கள் அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் சரி, வியாபாரியாக இருந்தாலும் சரி, நல்ல பதவி என்பதன் பொருள் வாழ்க்கையை நடத்த மூலாதாரப் பொருளைத் தேடுவது தான்! எனவே, நம் கலியுக வாழ்க்கையில் மிகவும் இன்றிமையாததாக விளங்குவது நமக்குப் பொருளைத் தேடித் தரக் கூடிய நற்பதவியாகும் / பணியுமாகும்.. “அட்டாதி மீன்புல அருணை வலம்தானே, தட்டாமல் துணை வரும் நற்கனிப் பணி வரும்”, என்பது சித்தர் பரிபாஷைப் பாடல். (அட்டாதி மீன் – பூரட்டாதி, உத்திரட்டாதி – விண்மீன் நட்சத்திர நாட்கள்..) வாழ்க்கையில் நல்ல ஜீவிதப் பணியை  பதவியை பெறுதற்கு உரித்தான நாளாக விளங்குவது 18.11.1999 ஏகாதசி அன்று, பூரட்டாதியும், உத்திரட்டாதியும் நிறைந்த சித்த யோக நேரமாகும்..

கண்ணுக்குக் கண்ணானது திருஅண்ணாமலை கிரிவலமே!
கண்ணுக்குக் கண்ணாக விளங்குவதும் இறைவனின் வலது கண்ணாக விளங்குவது தான் சூரிய லிங்க மூர்த்தியின் அருளாகும். திருஅண்ணாமலையில் சூரிய லிங்க வழிபாடானது உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் தேவையான நல்ல பதவியை / தொழிலைப் பெற்றுத் தருகின்றது என்பதை இனியேனும் அறிக! இன்று செம்பருத்தியும், வில்வமும் கலந்த மாலையை உங்கள் கரங்களாலேயே தொடுத்து கிழக்கு கோபுரத்திலிருந்து வானில் சூரிய பகவானை தரிசித்து கிரிவலத்தைத் தொடங்குங்கள், கிரிவலப் பாதையிலுள்ள சூரிய லிங்கத்தைப் பற்றி அறிந்திருப்பீர்கள். சூரிய லிங்க மூர்த்தி, தனித்த சந்நிதி கொண்டு அடி அண்ணாமலைக்கு முன் வரும் கிரிவலப் பாதையில் நன்முறையிலே அருள்பாலிக்கின்றார். ஆனால், பெரும்பாலோர் இந்த கிரிவலப் பாதையில் சூரிய லிங்கத்தை வழிபடாது அறியாமையால் தவற விட்டுவிடுகின்றார்கள். ஒவ்வொரு முறையும் திருஅண்ணாமலையை நீங்கள் கிரிவலம் வருகின்ற போது, கிரிவலப் பகுதி முழுமையுமே நன்கு தெரிந்து கொள்ளுங்கள். எந்தெந்த நந்தி, எந்தெந்த தெய்வ மூர்த்திகள் எங்கு இருக்கின்றார்கள். அஷ்ட திக்கு லிங்க மூர்த்தி, அஷ்ட திக்கு நந்திகள், தீர்த்தப் பகுதிகள் என அனைத்துமே உங்களுக்கு நன்கு மனப்பாடம் ஆகியிருக்க வேண்டும்.
ஏனென்றால் நீங்கள் தினந்தோறும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தாக வேண்டும். என்ன இது நாம் திருநெல்வேலியிலோ, சென்னையிலோ இருந்து கொண்டு வர முடியுமா? தினந்தோறும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வர முடியாவிட்டாலும் உங்களுடைய தினசரி பூஜைகளில் ஒன்றாக, மானசீகமாக அருணையை கிரிவலம் வருகின்ற வழிபாட்டைக் கட்டாயமாக மேற்கொள்ளுங்கள். ஆம், மானசீகமாக திருஅண்ணாமலையை தினந்தோறும் நீங்கள் கிரிவலம் வந்தாக வேண்டும். உங்கள் ஆயுள் முழுவதுமே! இது மிகச் சிறந்த தினசரி பூஜையாகும்! A powerful prayer indeed!
 நீங்கள் மானசீகமாகக் கிரிவலம் வரவேண்டும் என்றால், உங்களுக்குக் கிரிவலப் பகுதி உங்கள் மனதில் நன்றாகப் பதிய வேண்டும் அல்லவா! அதற்காகத்தான் கிரிவலப் பகுதிகளை முழுவதுமே நீங்கள் உங்கள் மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள். மானசீகமாக கிரிவலம் வருகிறேன் என்று சொல்லி தினந்தோறும் 20, 30 முறை அவசர கோலத்தில் மானசீகமாக கிரிவலம் வந்து விட்டு, நான் 1000 முறை வந்து விட்டேன் என்று பெருமை கொள்ளாதீர்கள்! உண்மையில் உங்கள் உடலால் கிரிவலம் செய்தால் எவ்வளவு நேரம் ஆகுமோ, அதே போல் தத்ரூபமாக, மானசீகமாக மனதினுள் கிரிவலம் செய்தால்தான் அது உண்மையானதாக, தெய்வீகமானதாக, பலன்களை அள்ளித் தருவதாகவும் இருக்கும். உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக இங்கு நாம் குறிப்பிடுகின்ற ஆயிரம் முறை கிரிவலமானது உங்களுடைய உடலால் செய்யப்பட வேண்டியது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
மானசீக கிரிவலம் என்பது உங்களுடைய தினசரிப் பூஜைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானதாகும். சூரிய லிங்கப் பகுதியில் சூரிய தீர்த்ததில் நீராடி அல்லது நீரைத் தலையில் தெளித்துக் கொண்டு சூரிய லிங்கத்திற்கு, செம்பருத்தியும், வில்வமும் கலந்து அர்ச்சனை செய்து, சிறிது பிரசாதமாக செம்பருத்தி மற்றும் வில்வ தளங்களைப் பெற்று ஒரு ஆரஞ்சு நிறத் துணியில் கட்டிச் சுமந்து,  கிரிவலத்தைத் தொடர வேண்டும். இம் முறையில் ஆன கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டிய இடம் எது தெரியுமோ? திருஅண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திலுள்ள, சூரியபகவானுடைய சந்நிதியில் தான்! இங்குதான் இந்நாளுக்குரிய கிரிவலம் பரிபூரணம் அடைகின்றது. இவ்வாறாக, 18.11.1999 தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்கள், குறைந்தது 1000 முறையாவது கிரிவலம் செய்தால் வாழ்க்கை முழுவதும் வளம் தரும் நல்ல பதவியைப் பெறுவார்கள். நம்மால் முடியுமா என்று கேட்காதீர்கள்..
எத்தனையோ ஆண்டுகள் வேலையின்றி அலைகையில் நல்ல பதவி வேண்டும் என்றால் எதனையும் செய்துதான் ஆக வேண்டும். இரண்டு ஆண்டுகள் என்பது நம் வாழ்விலே ஒரு பெரிய காலம்தான் அல்லது மிகமிகச் சிறிய காலம்தான். இதனை நீங்கள் எவ்வாறு எடுத்துக் கொள்கின்றீர்களோ, அதைப் பொறுத்து இருக்கிறது இந்த கால அளவுகளும், பலன்களும் கூட! எத்தனையோ பிரச்னைகளுடன், நோய்களுடன், குறைபாடுகளுடன், பழக்க வழக்கங்களுடன் எத்தனையோ ஆண்டுகளை ஓட்டியாகி விட்டது. இரண்டாண்டு காலம் என்பது ஒரு பெரிதல்லவே என்று Positive anglesல் ஆத்ம சிந்தனை செய்து பாருங்கள்!

திருஅண்ணாமலை கிரிவலம் ஒரு விநோதம்! அதனைக் கண்டு அறிவதுதான் குருஅருள்! பிரமாதி அஷ்ட பிரதாப கிரிவல நாள் – 3 (19.11.1999)

ஆம்! திருஅண்ணாமலை கிரிவலம் ஒரு தெய்வீக விநோதமாகத்தான் விளங்குகின்றது. இதனை ஆன்மீக அதிசயம் (Divine Miracle) என்று கூடச் சொல்லலாம். ஏனென்றால் மாதந் தோறும் பௌர்ணமி தினத்தன்று இன்று பல லட்சம் மக்கள் கிரிவலம் வந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றால் இதனுடைய தெய்வீக மகத்துவத்தைச் சொல்லால், பொருளால் வர்ணிக்கவோ, வடிக்கவோ முடியுமா! நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஏதோ கிரிக்கெட் மாட்ச் என்றாலோ, ஒலிம்பிக் விளையாட்டு என்றாலோ எங்கிருந்தோ இலட்சக் கணக்கான மக்கள் குழுமுவதைப் பார்த்திருக்கின்றீர்கள் அல்லது கும்பாபிஷேகம், திருவிழா , தெப்போற்சவம் என்றால் இலட்சக் கணக்கான மக்கள் வருவதுண்டு. ஆனால் இறைப் பரம்பொருளே மலையாக விளங்குகின்ற இந்த அருணாசல மலையைப் புனிதமான பாதங்களால் கிரிவலம் வந்து அல்லது வெறும் காலால் நடந்து வந்து பாதத்திற்கு புனிதத்தைச் சூட்டுகின்ற இந்த கிரிவலத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஐந்து லட்சத்திற்கும் மேலாக மக்கள் வந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றால் இது ஒரு விநோதமும் அதிசயமும், அற்புதமும்தானே!  திருஅண்ணாமலை கிரிவலத்தைக் குருஅருள் இன்றி எளிதில் எவராலும் புரிந்து கொள்ள முடியாது.
அந்த அளவிற்கு மனப் பக்குவத்தை அடைவதற்கு, இறைத் தகுதியை பெறுதற்கு குருவின் திருவடியைச் சரணடைதல் வேண்டும். திருஅண்ணாமலையை ஒரு முறை கிரிவலம் வந்தால் மட்டும் போதாது, ஏன் “ஓம் நமசிவாய” என்று ஒருமுறை சொன்னாலே இறைவன் ஓடோடி வந்து அரவணைப்பானே! அப்படி இருக்கும் போது ஒரு முறை திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்தாலே அனைத்து முக்திப் பெருநிலைகளைத் தரவல்லதல்லவா இந்த கிரிவல மகா சக்தி என்று கேட்கத் தோன்றுகிறதா! ஆம்! உண்மையே! உண்மையான பக்தி என்பது வந்து விட்டால் இந்தக் கேள்வியே எழாது. இத்தனை முறை கிரிவலம் வந்தேனே, எனக்கு ஏன் பக்தியும், முக்தியும்  கிடைக்கவில்லையே என்ற சிறிய, சீரற்ற எண்ணமும் தோன்றாது. யார் ஒருவர் நல்ல பக்தி நிலையைப் பெற்று விட்டார்களோ அவர்கள் ஒரு முறை கிரிவலம் வந்த பின்னர் அமைதியும், சாந்தமும், தெய்வீகப் பேரருளும் நிரம்பியவராக அடக்கமுடன், பணிவன்புடனும், பக்தியுடன் உத்தம தெய்வ பக்திப் பெருநிலையில் திளைப்பார்கள்.
மீண்டும், மீண்டும் கிரிவலம் வந்து பேரானந்தத்தில் திளைக்கத் துடிப்பார்கள்! ஆனால் இவ்வகையிலா சந்தேகப் பிராணியான ஒரு சாதாரண மனிதன் விளங்குகின்றான்? எதை எதையோ சாதாரண ஆசைகளை மனதில் வைத்துக் கொண்டு வருகின்ற மனிதனுக்கு முக்திப் பெருநிலையை எளிதிலா புரிய வைக்க முடியும்? இதற்காகத்தான் தக்க மனப்பக்குவம் தேவை என்று சொல்கின்றோம். இதை அளிப்பவரே சற்குரு. பலமுறை கிரிவலம் வரவர மனம் நன்கு கனிந்து ஆசைகள், சுயநலம்,விருப்பங்கள் இதையெல்லாம் நன்கு உணர்ந்து எது சாசுவதமானதாக , நிரந்தரமாக இருக்கின்றதோ அதைப் பற்றிட வேண்டும் என்ற உண்மையான தெய்வீக எண்ணம் பக்தியாக, கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்து உள்ளத்தில் குடியிருக்கத் தொடங்கும்.

நன்கு வாழ நல்ல நேத்திர சக்தி வேண்டும் அல்லவா? நல்ல கண் பார்வையைப் பெற்று இறையருளுடன் வளமாக வாழ விரும்புவர்களும், கண் நோய்களால் அவதியுறுவோர் நோய் நிவாரணம் பெற்று சுகமுடன் வாழவும், இத்தகைய பேரருளைத் தரவல்லதாக விளங்குகின்ற 19.11.1999 ஏகாதசியும், உத்திரட்டாதி நட்சத்திரமும் கூடிய வெள்ளிக்கிழமை தினத்தில் கிரிவலம் வருதல் வேண்டும். வெள்ளிக் கிழமை என்றால் சுக்கிர பகவானைக் குறிக்கின்றதல்லவா? வாமன அவதார லீலைகளின் போது தம்முடைய கண்ணை இழந்த ஸ்ரீசுக்ராச்சாரியார், அந்த யுகத்திற்கான இதே தினத்தில்தான் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து தன்னுடைய பார்வையை மீண்டும் தருகின்ற தெய்வீக அருளைப் பெற்றார். கண் மருத்துவர்களும், தங்களுடைய கண் மருத்துவத் துறையில் பிரகாசித்திட இன்று கிரிவலம் வருதல் சிறப்புடையதாகும். தேவாரம் பாடிய மூவர்களுள், ஒருவரான ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் பாடிய கீழ்க்கண்ட பாடலை துதித்தவாறே இன்று கிரிவல வருவோர்க்கு நேத்ர சக்தி பெருகும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலம் தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உள்ளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனை கம்பன் எம்மானை காணக் கண் அடியேன் பெற்றவாறே
என்ற சுந்தரருடைய அழகிய கண்ணுகுக் கண்ணான தேவாரப் பாடலை ஓதியவாறு இன்று கிரிவலம் வருவோர்க்கு நன்முறையிலே நேத்திர சக்தி பல்கிப் பெருகி வாழ்வில் சிறந்து விளங்குவர் என்பது சித்தர்களின் வாக்காகும். கண் மருத்துவர்கள் இந்தப் பாடலையே வேத வாக்காகக் கொண்டு இன்று இத்துதியை ஓதியவாறு திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஏழைகளுக்கு நன்முறையிலே இலவச சிகிச்சை செய்வது வருவார்களேயானால் தம்முடைய கண் மருத்துவத் துறையிலே உலகம் புகழும் அளவிற்கு சிறப்புடன் நல்ல கைராசியுடன் விளங்குவர். இன்று கிரிவலம் வருகின்றவர்கள் மனப்பாங்கிலே தாமே பெருத்த நல்ல மாற்றத்தைக் கண்டிடலாம். மிகவும் சக்தி வாய்ந்த கிரிவலப் பெருநாளாக இது விளங்குகின்றது..

திருஅண்ணாமலை கிரிவலம் ஓர் அழகு! அதனை ஆராதிப்பதில் தான் அதன் அருமை புரியும்! பிரமாதி அஷ்ட பிரதாப கிரிவல நாள் 4 (20.11.1999)

 எதெல்லாம் நிரந்தரமான மன அமைதியைத் தருகின்றதோ அதுதான் உண்மையான அழகுப் பொருளாகும். மன அமைதி கிட்டுகின்ற போதுதான் தெளிவு பிறக்கும். தெளிவு பிறந்தால் கீதமும், நாதமும் தானே பொங்கும். இவ்வாறாக, திருஅண்ணாமலையின் அழகான கிரிவலம் உள்ளத்திற்கு உவப்பான இறைப் புத்துணர்ச்சியை நமக்குத் தந்து அற்புத ஆனந்தத்தையும் உள்ளத்தில் தாண்டவம் ஆடச் செய்வதால் இந்த அழகானது, மனதிலும், உடலிலும், உள்ளத்திலும், கண்களிலும் எப்போதுமே நிறைந்து எப்போதும் நமக்குப் பேரானந்தத்தைத் தருவதாகும்.
திருஅண்ணாமலை கிரிவலம் ஓர் அழகு, அதனை ஆராதிப்பதில்தான் அதன் அருமை தெரியும். அழகு என்றால் என்ன? அழகை ஆராதித்தல் என்றால் என்ன? எந்த ஒரு பொருளானது பார்க்கும் போது மன நிம்மதியைத் தருகிறதோ, நினைக்கும் போது மனதிற்குச் சாந்தம் அளிக்கிறதோ அதுவே உண்மையான அழகுப் பொருளாகும். மற்ற அழகெல்லாம் நிரந்தரமல்ல! ஆசாபாசங்கட்கு ஆட்பட்டதாகவே ஏனைய நிரந்தரமற்ற அழகுப் பொருட்கள் விளங்குகின்றன. திருஅண்ணாமலை கிரிவலமே ஒரு தெய்வீக அழகு தான். ஏனெனில் உங்களுக்குத் தங்கு தடையில்லாத, நிரந்தரமான மனநிம்மதியை அளிக்கிறதல்லவா!
அது மட்டுமல்லாது, நம் பிரச்னைகளுக்கு விடிவு தருவதாக ஓர் ஆழந்த நம்பிக்கையுடன் நாம் கிரிவலம் வருகிறோம் அல்லவா! அந்த நம்பிக்கையே இந்த அழகிற்கு மெருகு கூட்டுகிறது. பலாபலன்களை துரிதப்படுத்தி மேம்படுத்துகிறது! திருஅண்ணாமலை கிரிவலம் தருகின்ற மகிழ்ச்சியானது மனக்கண்களில் நின்று உளம் பூரித்திட வேண்டும். மனதினுள் வரவழைக்கும் வண்ணம் நன்கு கவனுத்துடன் கிரிவலத்தின் மலைமுகடுகளைத் தரிசனம் செய்து அந்த அழகின் அமுதினை உள்ளத்தில் பருகுங்கள். நீங்கள் கிரிவலத்தின் போது பார்க்கின்ற மலை முகடுகளாகிய தரிசனங்கள் எல்லாம் தூய நினைவுகளுடன் பெறுகின்ற தெய்வீக தரிசனங்கள் என்பதை மறந்து விடாதீர்கள். வெறும் பாறை, கல், மண், குண்டு, குழிகளல்ல அவை! இந்த தரிசன பலன்கள் தான் உங்களுக்குத் தெளிவான முடிவைத் தரக் கூடியதாகும். எங்கு தெளிவு இருக்கின்றதோ, அங்குதான் தூய்மையான மனமே செயல்படும். இந்தத் தூய்மையான மனமே புனிதமான உள்ளத்திற்கு அடிப்படையாக அமைந்து நிரந்தரமான சாசுவதமாக விளங்குகின்ற தெய்வ அருளை உணர்வதற்கு, தரிசிப்பதற்கும் இறை அழகினை உய்த்து உணர்வதற்கு நல்வழி காட்டும்,
முருகன் என்றால் அழகு என்று பொருள், எனவேதான் அருமுருகு, தருமுருகு, அருணைமுருகு என அண்ணாமலையின் அழகு தரிசனங்களை சித்தர்கள் தம் பரிபாஷையில் விளக்குகின்றார்கள்.. 20.11.1999 அன்று தாமே தொடுத்த வில்வ மாலையைச் சுமந்து, அப்பு நந்திக்குச் சாற்றி வழிபட்டு அங்கிருந்து திருஅண்ணாமலையாரை 12 முறை வீழ்ந்து வணங்கி கிரிவலம் வருவோர்க்கு அழகும், பக்தியும், பண்பாடும், நல்ஒழுக்கமும் நிறைந்த மனைவி, மக்கள் கிட்டுவதுடன் தெய்வ ஆராதனையை அழகுடனும், பக்தியுடனும், ஆராதனை செய்வதற்கான பரிபூர்ணமான அனுகிரஹமும் கிட்டும். இன்றைய அழகான கிரிவலம் கிரிவல சக்தியின் மகிமையை நன்கு உள்ளத்தில் பதியவைக்கும்.

திருஅண்ணாமலை கிரிவலம் ஒரு கடமை, அதை நிறைவேற்றுவதே வாழ்வின் இலட்சியம்! பிரமாதி அஷ்ட பிரதாப கிரிவல நாள் 5 (21.11.1999)

உங்களுடைய வாழ்வின் கடமை என்ன என்று என்றேனும் யோசித்துப் பார்த்தீர்களா? குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவது மட்டும் கடமையாகி விடுமா? அல்லது அதனைத்தான் முறையாகச் செய்துதான் வருகின்றீர்களா? உங்களுடைய வாழ்க்கைக் குறிக்கோள் தான் என்னே? பலரும் தங்களுடைய அலுவலக வாழ்க்கைக்கு ஒரு குறிக்கோளும், இல்லற வாழ்க்கைக்கு மற்றதோர் இலக்கும், தெய்வீக வாழ்க்கைக்கென ஓர் இலட்சியத்தையும் வைத்துக் கொள்வார்கள். உங்களுடைய வாழ்வின் இலட்சியமே திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து பலவிதமான தியான நிலைகளைப் பெறுவதாக இருக்கட்டும்.
ஒவ்வொரு நாளுக்கும் விதவிதமான கிரிவலப் பலன்களை நாம் இங்கு விவரித்துச் சொல்வதன் காரணம் என்னவென்றால் கோடானு கோடி மக்கள் இருக்கின்ற இந்த உலகத்தில் ஒவ்வொருவருடைய விருப்பமும், ஆசையும், மனப்பாங்கும், குணாதிசயமும் ஒவ்வொரு விதமாகத்தானே இருக்கும். சிலருக்கு தியான நிலைகளில் மனம் ஈடுபடும். பலரும் சாதாரண முறையிலே பூஜைகளையும், விரதங்களையும் மேற்கொள்வதில் தான் ஆர்வம் காட்டுவார்கள். மேலும் சிலரோ யாத்திரை, மூர்த்தி, தீர்த்தம் பல ஆலய தரிசனங்கள், தீர்த்த நீராடுதல் போன்றவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இருப்பார்கள். எனவேதான், ஒவ்வொருவருடைய மனக்கிடக்கையைப் பொறுத்து ஆண்டவன் தன்னைப் பல்வேறு ரூபங்களிலும் வடிவமைத்துக் கொண்டு அவரவர்க்கு தகுந்தவாறு எத்தனையோ வழிபாடுகளையும் தந்துள்ளான். அதில் ஒன்று தான் உத்தம தியான நிலைகளில் ஒன்றாகிய “நிர்விகல்ப” சமாதி நிலையாகும்..
 “நிர்விகல்ப” சமாதி நிலை பற்றி நீங்கள் படித்து இருப்பீர்கள். சமாதி நிலை என்றால் வேறு எந்தப் பொருளும் கொள்ளாதீர்கள். உயிர் உள்ள இந்த தேகத்தில் உடலை ஜடப்படுத்தி, மனதை உய்வித்து, உள்ளத்தால் உயர்ந்து, ஜீவ சக்தியுடன் தெய்வீக ஜோதியில் திளைப்பதே நிர்விகல்ப சமாதி நிலையாகும். இதில் எப்போதும் நீங்கள் பேரின்ப ஒளியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இன்று திருஅண்ணாமலையில் கார்த்திகை தீபத்தன்று காண்கின்ற ஜோதியை எப்போதும் நீங்கள் காண்கின்ற நிரந்தர ஜோதியாக உங்கள் உள்ளத்தில் கண்டு தரிசித்து ஆனந்திக்க வேண்டுமென்றால் அதற்கு உதவுவதுதான் “நிர்விகல்ப” சமாதி நிலையாகும்.
கிருதயுகத்தில் அதாவது இராமாயணம், நிகழ்வதற்கு முந்தைய யுகத்திலே பத்ம கர்ப்ப மந்திரம் என்ற அரிய மந்திரத்தை நூறு தேவ ஆண்டுகளாக ஓதி, ஜபித்து, உபாசித்து வருவோர்க்கு “நிர்விகல்ப” சமாதி எளிதில் கூடியது. இதே விதியானது ஸ்ரீராமர் வாழ்ந்த திரேதா யுகத்தில் குமார காமரூப மந்திரமதை எண்பது தேவ ஆண்டுகளுக்கு தவத்துடன் ஜபிக்கப்பட்டால் நிர்விகல்ப சமாதி நிலையைத் தருவதாக அமைந்தது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அருள்பாலித்த துவாபரயுகத்தில் “சசிசேகர” மந்திரத்தை உபாசித்து, ஜபித்து, தியானிப்போர்க்கு, முப்பது தேவ ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டது “நிர்விகல்ப” சமாதியைப் பெறுவதற்காக!
ஆனால் கலியுகத்தில் திருஅண்ணாமலையைப் பதினைந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் கிரிவலம் வந்து “திருஅருணாசல சிவ” என்னும் திருமந்திரத்தை குருவருளுடன் ஜபிப்போர்க்கு, ஓதுவோர்க்கு நிர்விகல்ப சமாதி நிலை கைகூடும் என்பது சித்தர்களுடைய வாக்கு. நம் தாய், தந்தையர்க்கும், மனைவி, மக்களுக்கும், சுற்றத்தினர்க்கும், உறவினர்களுக்கும், நம்மை நம்பி வந்தோர்க்கும், நம்மைச் சார்ந்தோர்க்கும் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றினால் தான் வாழ்க்கைச் சுழல்களிலிருந்து பிறவிப் பின்னல்களிலிருந்து விடுபடலாம். இதற்கு உதவுவது “நிர்விகல்ப” சமாதி நிலையாகும்.
பதினைந்து ஆண்டுகள் கிரிவலம் என்றால் ஏதோ நமக்கு முடியாதது போன்று மேல்எழுந்தவாரியாகத் தோன்றும். ஒரு நீரிழிவு நோயுடனும், இருதய நோயுடன், இன்னும் எத்தனையோ நோய்களுடனும் பதினைந்து வருடம் என்ன, இருபது, முப்பது வருடங்கள் வாழ்கின்ற பொழுது நமக்குப் பிடிக்காத அலுவலகப் பணியில் இருந்து கொண்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிகின்ற போது 15 வருடங்களுக்குக் கிரிவலம் வருவது என்றால் இது ஒரு கடினமான காரியம் அல்லவே! மிகவும் எளிதானது தானே! மேலும் இந்தப் பிறவியில் படுகின்ற துன்பங்கள் போதாது என்று எதிர்வரும் கோடானு கோடி பிறவிகளில் நம் துன்பத்தை ஏற்றுக் எத்தனை பிறவிகளில் தான் நாம் அல்லல் படுவது இதனைப் பார்க்கின்ற பொழுது 15 ஆண்டுகள் கிரிவலம் என்பது மிகச் சொற்பமானது மிக மிக எளிதான பிறவிப் ப(பி)ணியைத் தீர்க்கும் அருமருந்து என்பதை நாம் தீர்க்கமாக உணரலாம். 21.11.1999 அஸ்வினி திரயோதசி கூடிய இந்நாளில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதினால் தியான நிலைகளுக்கான தக்க நல்வழிமுறைகளைப் பெற்றிடலாம்! யோக சக்திகள் பொங்கிடும் நாளிது!

திருஅண்ணாமலையில் கிரிவலம் ஒரு தெய்வீகப் பயணம்! அதனை முடித்து விடுங்கள்!! அல்லல் இன்றி வாழுங்கள்!! பிரமாதி அஷ்ட பிரதாப கிரிவல நாள் 6 (22.11.1999)

உங்களுடைய வாழ்க்கையிலே எத்தரனயோ வேலைகள் நிமித்தமாக நீங்கள் பல பயணங்களை மேற்கொள்கின்றீர்கள். ஆனால் இவை அனைத்துமே “காரியப் பயணங்களாக” உங்களுடைய வாழ்க்கைக் காரியங்களை நிறைவேற்றுவதாகவே அமைந்து விடுகின்றன அல்லவா! இதையெல்லாம் விட உங்கள் வாழ்க்கையிலே ஒரு உண்மையான பயணம் ஒன்று உண்டு. இதுவே பிறப்பு, இறப்புச் சுழல்களிலிருந்து உங்களை விடுவிப்பதற்கான தெய்வீகப் பயணம். இந்த பயணப் பாதைதான் திருஅண்ணாமலை கிரிவலப் பாதை!
முதன் முதலில் நீங்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வர ஆரம்பிக்கின்ற போது சிறிய, சிறிய ஆசைகளையும், விருப்பங்களையும், சுயநல நேர்த்திகளையும் தாங்கிக் கொண்டுதானே பயணம் செய்கின்றீர்கள்! அதிக அளவில் பலரையு சேர்த்துக் கொண்டு அனைவரும் கிரிவல மகிமையை உணரும் வண்ணம் நீங்கள் கிரிவலம் வரவர உங்கள் மனதினிலே ஒரு தெளிவும், பக்குவமும் இறைவனுடைய ஆசீர்வாதமாகச் சுரப்பதை நிச்சயமாக உணர்வீர்கள். அதாவது, சித்தர்களுடைய பரிபாஷைப்படி, “வாயார உண்டோர்கள் வாழ்த்தும்படி கிரிவலம் வருதல் வேண்டும்”. வாயார உண்டோர் என்றால் பசியாற, வாய்நிறைய சுவையுடன் உணவை உண்டவர்கள் என்பது மட்டும் பொருள் அல்ல, எவ்வளவு உண்டாலும் தின்னத் திகட்டாததாக மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற தெய்வீக அருட்சுரப்பைத் தருகின்ற அமுதத்தை “வாயார உண்டவர்களே” வாழ்த்தும்படி கிரிவலம் வருதல் வேண்டும். இவ்வாறு தெய்வீக அமுதத்தை உண்டவர்கள் தாம் சித்புருஷர்கள், மஹரிஷிகள், யோகியர் ஆவார்கள்.
“பிறப்பு, இறப்புச் சுழலை முடிப்பது என்பது அவ்வளவு எளிதானதா?” என்று கேட்டு மலைத்தல் கூடாது. ஏனென்றால் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற பொழுது உங்கள் உள்ளத்திலே எத்தனையோ தெய்வீகப் புத்துணர்ச்சிகள் பிறக்கின்றன. உங்களையும் அறியாமலேயே உங்கள் உடலிலே, உள்ளத்திலே, மனதிலே, பலவித தெய்வீகச் சுடர்த் திவலைகள் ஆக்கம் பெறுகின்றன. அதிலும் குறிப்பாக 22.11.1999 அன்று பரணி நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய திருநாளாக பரண தீப நாளின் மகிமையாக இன்று கிரிவலம் வருவோர்க்கு வாழ்க்கைப் பயணமானது இறை நெறியுடன் விளங்குவதற்கான இறைப் பேரருள் கிட்டுகின்றது. இன்று முதல் கிரிவலம் தொடங்கி குறைந்தது ஆயிரத்து ஐநூறு முறை முறையாக கிரிவலம் செய்து வருவோர்க்கு பிறப்பு, இறப்புச் சுழலிலிருந்து விடுதலை பெறுகின்ற நல்வழிகளை நிச்சயமாக குருவழி மூலமாகப் பெறுவர். இவ்வாறாக ஒவ்வொரு நாளுக்கும் உரித்தான திருஅண்ணாமலை கிரிவல பலன்கள் விதவிதமானதாக இருக்கும். இந்த கிரிவலப் பலன் ரகசியங்களை அறிந்தவர்கள் சித்தர்களே!

இடுக்குப் பிள்ளையார் வழிபாட்டு முறை!
இன்றைக்கு கிரிவலம் வருவோர், குபேர லிங்கத்திற்கு அடுத்து வரும் இடுக்குப் பிள்ளையாரை வணங்கிட வேண்டும். தற்போது இடுக்குப் பிள்ளையார் சந்நிதியில் பலரும் மலையை நோக்கிக் காலை நீட்டிய வண்ணம் பின்புறமாக நுழைந்து முன்புறமாக வருகின்றார்கள். இது தவறான வழிபாட்டு முறையாகும். மலையை நோக்கி இரு கரங்களையும் கூப்பி வணங்கியபின் மலையை நோக்கித் தலை இருக்குமாறு உள் நுழைந்து பின்புறமாக வெளிவருதல் தான் இடுக்குப் பிள்ளையார் வழிபாட்டின் சரியான முறையாகும். ஆனால் உங்களுடைய உடல் பருமனாக இருக்கின்ற போதும் உள்ளே புகுந்து வெளிவர முடியுமோ என்ற அச்சம் ஏற்பட்டாலும், பயந்தாலும் இந்த முயற்சியைக் கைவிட்டு விடலாம். எப்போது அச்சம் தெளிகின்றதோ அப்போது தைரியத்துடன் உள்ளே நுழைந்து வெளிவாருங்கள். அதுவரையில் இடுக்குப் பிள்ளையாரை வெளிப்புறத்திலிருந்தே தரிசிப்பதே போதுமானதாகும்.. எத்தனையோ இயந்திரச் சக்கரப் பொறிகளைக் கொண்டது இந்த இடுக்குப் பிள்ளையார் சந்நதியாகும். ஏன் இந்த இடுக்குப் பிள்ளையார் தரிசனமுறை இன்று விதிக்கப்படுகின்றது என்றால், ஒருமுறை இடுக்குப் பிள்ளையார் பீஜாட்சர யந்திர மண்டபத்தின் உள் நுழைந்து வெளிவரும் போது எத்தனையோ கோடி கர்ப்ப வாசங்களிலிருந்து விடுதலை அதாவது பிறவித் தளையிலிருந்து விடுதலை என்பது பொருளாம்.
பிறப்பு, இறப்புச் சுழலை விடுவிக்கின்ற தெய்வீக இயந்திரச் சக்திகளை உடையதுதான் இடுக்குப் பிள்ளையாராகும். எனவே 22.11.1999 அன்று கிரிவலப் பயணத்தை நன்முறையிலே நிறைவேற்றி நல்ல மன வைராக்கியத்துடன் செயல்படுவீர்களேயானால், பிறப்பு, இறப்பு அற்ற நிலை உங்களுக்குக் கிட்டிட நல்வழியைப் பெறுவீர்கள்! இது உறுதி. பத்து வருடங்களோ, பதினைந்து வருடங்களோ அல்லது இருபது வருடங்களோ, எவ்வளவு வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை. இப்பிறவிக்குள் பிறப்பு, இறப்பு அற்ற ஒரு நல்வழி கிட்டுகின்றது என்றால் அதுவே ஒரு பெரும் பேறுதானே நன்கு ஆத்ம விசாரம் செய்து பாருங்களேன்!

திருஅண்ணாமலை கிரிவலம் ஒரு தெய்வீக சந்தர்ப்பம், அதனைப் பயன்படுத்திக் கொள்வதுதான் சான்றோர் செயல் பிரமாதி அஷ்ட பிரதாப கிரிவல நாள் 7 (23.11.1999)

சித்தர்கள் தம் பிரமாணத்தில் ஒரு தேவ வாக்கியத்தை அடிக்கடி கூறுவார்கள் “நல்ல சந்தர்ப்பங்கள் சிங்காரித்துக் கொண்டு வருவது கிடையாது. ஏனோ, தானோ என்று தான் வரும். அதனைப் பயன்படுத்திக் கொள்வது தான் புத்திசாலித்தனம்”, எனவே, உங்கள் வாழ்க்கையில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற சிங்கார தெய்வீக சந்தர்ப்பங்கள் எதையுமே நழுவ விடாதீர்கள்! கிரிவலத்தைத் தடை செய்கின்ற மாதிரி நிறைய தடங்கல்கள் வரத்தான் செய்யும். அவற்றை வென்றாக வேண்டும்! நீங்கள் நினைப்பது போல், “ஏதோ பஸ்ஸில் ஏறி அமர்ந்தால் திருஅண்ணாமலையில் கொண்டு போய் விட்டு விடுவார்கள். பிறகு கிரிவலம் என்பது எளிமையான செயல்தானே”, என்று சாதாரணமாகவும் எண்ணாதீர்கள். “இந்த நாளில் இந்த நேரத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதற்காக உங்களுடைய பித்ரு தேவ மூர்த்திகள் அனைவருமே அரும்பாடுபட்டு எத்தனையோ ஆண்டுகளாக உழைத்து திருஅண்ணாமலைக்கு நீங்கள் வந்து செல்வதற்கான தெய்வீக பாஸ்போர்ட்டையும், தெய்வீக விசாவையும் பெற்றுத் தருகின்றார்கள்”, என்ற வேத உண்மையை மறந்து விடாதீர்கள்.
எனவே உங்கள் கிரிவலப் பிரயாணம் பித்ரு தேவர்களின் திட்டமேயாகும். ஒரு முறை நீங்கள் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து விட்டீர்கள் என்றால், அது உங்களுடைய முயற்சி மட்டும் அல்ல, உங்களுக்கு எத்தனையோ கோடி பித்ரு தேவர்களும், தேவாதி தேவர்களும் அரும்பாடுபட்டு உழைத்ததின் பரிசே இது என்பதை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள். எனவே, இத்தகைய அரிய சந்தர்ப்பங்களை அவ்வப்போது உங்களுக்கு மூதாதையர்கள் அளித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் இதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மிகவும் அபரிமிதமான தெய்வீக சக்திகளைத் தரவல்லதுதான் திருஅண்ணாமலை கிரிவலம் ஆகும். இது சிலருக்கு கடினமான பயனமாகவும், பலருக்கு எளிமையானதாகவும், இன்னும் எத்தனையோ பேருக்குத் தாமாக அல்லது திடீரென்று வருகின்ற சந்தர்ப்பமாக அமைந்து விடுவது போலத்தான் வெளிப் பார்வைக்குத் தோன்றும்.
எத்தனையோ கோடி கர்மவினைகளையும், தீயவினைகளையும் அழித்து நல்ல நிலையைத் தரவல்லதே திருஅண்ணாமலை கிரிவலத்தின் தெய்வீக சக்தியாதலின், இத்தனாம் தேதி நீங்கள் கிரிவலம் வர வேண்டும் என்பதற்காக உங்கள் பித்ரு மூர்த்திகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரேயே திட்டமிட்டு விடுகின்றார்கள். 23.11.1999 அன்று அமைவதுதான் மிகவும் சக்தி வாய்ந்த பிரமாதி வருட கார்த்திகைத் தீப கிரிவலம் ஆகும். இன்று நீங்கள் திருஅண்ணாமலை யாத்திரைக்குப் புறப்படும் போது கன்றுடன் கூடிய பசுவிடமிருந்து பெற்ற நல்ல பசும்பாலை ஏதேனும் சிவலிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்துவிட்டு அண்ணாமலைப் பயணத்தைத் தொடங்குங்கள். சுவாமிக்குப் பால் அபிஷேகம் செய்யும் போது அது கன்றுடன் உள்ள பசுவிலிருந்து பெறப்பட்ட பசும்பாலாக இருப்பது தான் விசேஷமானதாகவும், முக்கியமானதும் ஆகும்.
கன்று இல்லாத பசுவிலிருந்து அல்லது கன்று மாண்ட பசுவிலிருந்து கிட்டுகின்ற பாலை அபிஷேகத்திற்குப் பயன்படுத்துதல் கூடாது. கன்றில்லாப் பசுவின் பால் பூமாதேவிக்கும் பல புனிதமான விருட்சங்களுக்குமே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பிரமாதி வருடம் உங்கள் வாழ்வில் எத்தனை முறை வரும்! சற்றே சிந்தித்துப் பாருங்கள். பிரமாதி வருட கார்த்திகைத் தீபத்தில் கிரிவலம் வருவதால் கிட்டுகின்ற முக்கியமான பலன்களில் ஒன்றுதான் நல்ல இகபர சுகத்துடன் பெறுகின்ற வாழ்வேயாகும். இகபர சுகம் என்றால் எப்போதும் Luxury வாழ்க்கை, அதாவது ஆடம்பர வாழ்க்கை எப்போதும் ஆனந்தமாகத் திளைப்பது என்பது பொருள் அல்ல. இருக்கின்ற வருமானத்திற்கு ஏற்ப நல்ல முறையிலே சுகமாக, ஆனந்தத்துடன் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து, ஒற்றுமையாக வாழ்தல் என்பது பொருளாகும். எனவே, நல்ல ஒற்றுமையுடன் குடும்பம் விளங்குவதற்கு இன்று மனைவி, குழந்தைகளுடன், உறவினர்களுடன் கிரிவலம் வாருங்கள். இந்நாளே பெறுதற்கரிய திருநாள். எவ்வளவுதான் தம்பதியர்களுக்கிடையே பிரச்னைகள் இருந்தாலும் அனைத்தையும் தீர்வு செய்து நன்முறையிலே ஒற்றுமையான குடும்ப வாழ்வு அமைவதற்கு இன்றைய பிரமாதி வருட கார்த்திகை தீப கிரிவலம் பெரிதும் உதவுகின்றது. குறைந்தது இரண்டு முறையேனும் குடும்பத்தினருடன் இன்று கிரிவலம் வருவது சிறப்புடையதாகும்.
பொதுவாக, பிரமாதி வருடத்திற்கு திருஅண்ணாமலைக்கு வருகை தருகின்ற சங்கபால சித்தர்கள் சிறுதாம்புப் பூ, கண்ணி வடிவப் பூ போன்ற மூலிகைகளின் மேல் படுகின்ற ஜோதி தீபப் புகையைக் கொண்டு அஞ்சனம் தயாரித்து சங்குத்ரி மூலிகைக்குக் காணிக்கையாக்குகின்ற அற்புதமான தீப உற்சவமே இது என்பதை மறந்து விடாதீர்கள். இந்த சங்குத்ரி தெய்வீக மூலிகை தாவரம் திருஅண்ணாமலையில் தோன்றும் வரை அதாவது –கொடியேற்றும் நாள் முதல் தீபம் பரிபூர்ணமாகக் குளிரும் வரை சங்க பால சித்தர்களுடன் கிரிவலம் வரும் தெய்வீக வாய்ப்பைத் தினமும் பெறுவீர்களாக. எந்நாளில் சங்குத்ரி மூலிகை தாவரந் தோன்றுமோ ஸ்ரீஅகஸ்தியரே அறிவார்! இந்த சந்தர்ப்பம் அரிதாக வருவதுதான் என்பதைப் புரிந்து கொண்டு இந்த நன்னாளை நன்முறையில் பயன்படுத்திக் கொள்வதுதான் சான்றோரின் செயலாகும். இன்றைய பிரமாதி வருடம் கிரிவலம் முதல் ஆயிரம் முறையேனும் கிரிவலம் வரவேண்டும் என்ற வைராக்யத்தைக் கொண்டீர்களேயானால் எத்தகைய தெய்வீகச் சந்தர்ப்பங்கள் வந்தாலும் எதையும் விட்டுவிடாது வாழ்வில் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய அருளையும் அருணாசலப் பெருமானே மனமுவந்து அருள்பாலிக்கின்றார்.

திருஅண்ணாமலை கிரிவலம் ஓர் இலக்கு! அதை எட்டிப் பிடிப்பதுதான் மனிதனின் கடமை!! பிரமாதி அஷ்ட பிரதாப கிரிவல நாள் 8 (24.11.1999)

மனிதன் தன்னுடைய வாழ்நாளிலே சிறுவயது முதல் முதிய பருவம் வரை தன்னுடைய பலவிதமான வாழ்க்கைப் பருவங்களிலே எத்தனையோ இலக்குகளை வைத்துக் கொள்கின்றான். சிறுவராக இருக்கும் போது நல்ல மார்க்கு வாங்குவது, சிறுசிறு விளையாட்டுகளில் வெற்றி பெறுவது என்றவாறாக பள்ளிப் பருவம், மாணவப் பருவம், இளமைப் பருவம், திருமணப் பருவம், நடுத்தர வயதுப் பருவம் என ஒவ்வொரு வாழ்க்கை நிலையிலும் அவன் பல இலக்குகளை வைத்துக் கொள்கின்றான். நன்முறையிலே சம்பாதிப்பது, வீடு, வாகனங்கள், சொத்து நிலபுலன்களை வாங்குவது என்று ஒரு இலக்குத் தவறினாலும் கூட மற்றும் பல இலக்குகளை வைத்துக் கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டுகின்றான்.
இவ்வாறு தம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்காகப் பல இலக்குகளை வைத்துக் கொள்வதில் தவறு கிடையாது. ஆனால் ஒவ்வொன்றும் நல்ல குறிக்கோளாக, இலக்காக இருந்தால்தான் வாழ்க்கை செம்மையாக அமையும். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைத்துக் கொண்டு தேவையற்ற குறிக்கோள்களை, இலக்குகளை வைத்துக் கொள்ளக் கூடாது. உங்களுக்கு உங்கள் வாழ்க்கையின் நல்ல இலட்சியம் எது என்று தெரியவில்லையா? கவலைப்பட வேண்டாம் 24.11.1999 அன்று ரோஹிணி நட்சத்திரம் கூடிய புதன்கிழமை இதற்குரிய நல்வழியை காட்டுகின்றது.  எத்தனையோ குறிக்கோள்களுடன் இங்கும் அங்குமாக அலைந்து, எதிலும், எவரிடமும் நம்பிக்கை இல்லாது சந்தேகப் பேர்வழியாய் பலரும் தங்கள் வாழ்க்கையை ஓட்டுகின்றார்கள். நன்றாக அனுபவப்பட்டு ஓரளவு மனம் சீரடையும் போது வயதாகி விடுகிறது. நோயும் வந்து விடுகிறது. எங்கு போய் பிராயசித்தம் தேடுவது? எனவே, உடல், மனம், உள்ளம் சக்தியுடன் சரியாக இருக்கும் போதே உத்தம குருவை அடைதல் வேண்டும். இதுவே உத்தமமான இலக்கு  புனிதமான இலட்சியம்.
இளவயதிலோ, நடுத்தர வயதிலோ, சற்குருவை நாடும் பக்குவம் வராமைக்குக் காரணம் கலியுகத்தில் நல்ல சகவாசம் இல்லாமையும், தீய வழக்கங்களும் ஆகும். சற்குருவைப் பெற்றே தீருவேன் இந்த வாழ்க்கையினுள் என்ற ஒரே பிரார்த்தனையுடன் வேறு எந்த பிரார்த்தனைகளும் இல்லாது இன்று முதல் (24.11.1999) குறைந்தது ஆயிரம் முறையேனும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவோர் சற்குருவை அடையும் நல்வழியைப் பெறுவர். ரோஹிணி நட்சத்திரம் கூடிய நாளில்தான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தமது குருவாம் சந்தீபனிக்குப் பாதபூஜை செய்து அவரை வலம் வந்து வணங்கி குருபாத பூஜை மஹிமையை பலருக்கும் எடுத்துரைத்தார். ஸ்ரீநாராயண பரதேசி சித்தர் உடலை காயகற்பமாக்குவதற்கான சித்தியை தம் குரு உபதேசமாய்ப் பெற்று கிரிவலம் வந்த நாளும் இதுவே! பொதுவாக குருஆசீர்வாதம் கூடுகின்ற திருநாள் இது!

விஷ்ணுபதி பண்ணியகாலம்

விஷ்ணுபதி புண்ய காலம்
நவராத்திரி, பிரதோஷம், மஹா சிவராத்திரி, சூரிய, சந்திர கிரஹண நாட்கள் போன்று பூஜா, விரத, ஹோம, யாக, பலன்கள் பன்மடங்காகப் பெருகுகின்ற நாளே விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். விஷ்ணுபதி புண்ணிய காலத்தில்தான் எத்தனையோ புராண வைபவங்களும், இறை லீலைகளும் நிகழ்ந்து எண்ணற்ற மஹான்களும், சித்புருஷர்களும் பெறுதற்கரிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் தரிசனத்தோடு சாமீப, சாயுஜ்ய, சாரூப மற்றும் பல உத்தம நிலைகளைப் பெற்றுள்ளனர். தெய்வீக அருள் நிரம்பிப் பொங்கும் நிலையில் பிரகாசித்த மஹானுபாவர்கள் பலரும் ஸ்ரீமந் நாராயணனின் வைகுண்ட வாசத்தையே முக்தி நிலையாகப் பெறுகின்ற தினமும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலமாகும். எத்தனையோ வழிபாடுகளை நாம் மறந்து விட்ட நிலையில் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலம் போன்ற மிகவும் அரிதான, அற்புதமான, புனிதமான, தெய்வீக நேரத்தில் செய்யப்படுகின்ற பூஜைகள் தாம் நம்மால் கைவிடப்பட்ட தர்ப்பணம், விரதம், ஹோமம், போன்ற பலவிதமான வழிபாடுகளுக்குமான பிராயசித்தத்தை அருள்கின்றன. பெரும்பாலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாக, மாதப் பிறப்பன்று அமைவதாக, வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே வருகின்ற விஷ்ணுபதி புண்ணிய காலமானது நம் வாழ்வில் பெறுதற்கரிய காலமாகும். ஒவ்வொரு மனிதனும், வருடத்தில் 96 தினங்களில் (ஷ்ண்ணாவதி சிராத்த தினங்கள்) தம் மூதாதையர்க்கு நிச்சயமாகத் தர்ப்பணம் அளித்தாக வேண்டும். கேட்பதற்கே மலைப்பாக இருக்கின்றது அல்லவா?

ஸ்ரீகஜராஜன் மன்னார்குடி

எத்தனையோ கேளிக்கைகளிலும், பொழுதுபோக்குகளிலும், புகை, மது, சீட்டாட்டம், சினிமா, டி.வி, பீச், அரட்டை எனப் பலவிதமான பயனற்ற முறைகளில் நேரத்தை விரயம் செய்யும் மனிதன், ஐந்து/ பத்து நிமிடங்களில் முடிக்கக் கூடிய எளிய தர்ப்பண பூஜைக்கு மதிப்பு தருவதில்லை. இதனால் தான் பித்ருக்களின் சாபத்தினால் பலவிதமான மன உளைச்சல்களுக்கு, நோய்களுக்கும், துன்பங்களுக்கும் கலியுக மனிதன் ஆட்பட்டு அல்லலுறுகின்றான். இவற்றிற்கெல்லாம் தக்கதோர் பிராயசித்தமாகத்தான் இறைவனே மனமுவந்து அளித்த மிகவும் புனிதமான தினங்களுள் ஒன்றாக ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலம் அமைந்துள்ளது. இந்நேரத்தில் செய்யப்படுகின்ற பூஜைகள், ஹோமம், அபிஷேக, ஆராதனைகள், தான, தருமங்கள், பித்ரு தர்ப்பணம் போன்ற அன்னத்திற்கும் பன்மடங்கான பலன்கள் உண்டு என இறைநியதியாக இறைவனே நமக்கென வகுத்து அளித்துள்ளான் எனில் இதனைத் தக்க சற்குரு மூலமாக அறிந்து, உணர்ந்து, தெளிந்து கடைபிடித்தலே நம் வாழ்க்கையின் தலையாய கடமையல்லவா?
திரேதா யுகத்தில் சிறப்புற்று விளங்கிய ஸ்ரீஆயுர் தேவியின் திருவுருவத்தை சித்புருஷர்களின் குருவாய் மொழியாக நமக்கு மீண்டும் அளித்து ஸ்ரீஆயுர் தேவி வழிபாட்டை நமக்கு தெய்வீகப் புத்துணர்ச்சியுடன் மீட்டுத் தந்த நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய்மொழியாக ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலமும், பிரதோஷம், சிவராத்திரி போல மகத்தான முறையிலே சமுதாய பூஜையாக மலர வேண்டும் என்பதற்காகப் பல ஆண்டுகளாக அரும்பாடுபட்டு வருகின்றார்கள். சித்தர்களின் கிரந்தங்களினின்று ஸ்ரீவிஷ்ணுபதியின் மஹாத்மியங்களைத் திரட்டி எடுத்து சாத, மத, இன பேதமின்றி இதன் பலன்கள் அனைவரையும் சென்றடையும் பொருட்டு, குருவருளால் அவ்வப்போது ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் அளிக்கப்பட்டு வருகின்றதல்லவா! எனவே, பக்த கோடிகளும், வைணவப் பெரியோர்களும், திருமால் பக்தர்களும் யாவருமாய் ஒன்று கூடி ஸ்ரீவிஷ்ணுபதி புண்ணிய காலத்தை வைணவத் தலங்கள் அனைத்திலும் பெரும் உற்சவமாகக் கொண்டாடி பிரதோஷம் போல இந்த சமுதாய தெய்வீக பூஜையும், மக்களிடையே பிரசித்தி பெற்று யாவரும் பரமாத்வாம் ஸ்ரீமந் நாராயணனின் பேரருளைப் பெற அருட்பணி ஆற்றிட பணிவன்புடன் கேட்டு கொள்கின்றோம்.

மன்னார்குடி

உறங்காப் புளி ஓர் உத்தம விருட்சம்!
ஸ்ரீமந் நாராயணமூர்த்தியே பூலோக மக்களுக்காக ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாக அவதாரம் பூண்டு, ஸ்ரீராமனாய், மக்களோடு மக்களாய், உலவி வந்த காலமே திரேதாயுகமாகும். 14ஆண்டுகள் ஸ்ரீராமன் வனவாசம் கொண்ட போது, கொஞ்சங் கூடக் கண் துஞ்சாமல் சற்றே இமையைக் கூட மூடாது, ஒரு விநாடியும் உறங்காது தம் அண்ணனைக் கட்டிக் காத்த இளவலே ஸ்ரீலக்ஷ்மணப் பெருமாள் என்பதை நாம் அறிவோம். சிறிய தாயின் மனவிருப்பத்திற்கேற்ப, வனவாசம் புகுதற்காக மரவுரி தரித்து, ஸ்ரீராமன் தயாராகிய பொழுது, ஸ்ரீலக்ஷ்மண மூர்த்தியோ அந்த குறுகிய காலத்திற்குள் தம் சற்குருவின் அருளாசியுடன் ஒரு அரிய ஹோமத்தை நிகழ்த்தினார். என்னவோ அது? ஸ்ரீராமரின் வனவாசம் நன்முறையிலே நிகழ வேண்டுமென்பதற்காக மஹரிஷிகள் ஒருபுறம் பலவித வேள்வி வழிபாடுகளை நிகழ்த்திட, மறுபுறம் ஸ்ரீலக்ஷ்மண மூர்த்தி மேற்கொண்ட ஹோமமே மி(நி)த்ராபகுள ஹோமகுண்ட வழிபாடு ஆகும்.
மிகவும் விசேஷமான ஹோமம்! இதில் ஸ்ரீநித்ராதேவியை ஆவாஹனம் செய்து, ஸ்ரீநித்ரா தேவியைப் ப்ரீதி செய்து அரிய ஆஹுதிகளை அளித்து, “அன்னையே! என் அண்ணனாம் பரப்ரம்மாகிய ஸ்ரீமந்ராமச்சந்திர மூர்த்தியானவர் 14 ஆண்டுகள் வனவாசம் புகுங்காலையில், அவர்தம் இளவலாக, நாள் முழுதும் ஒரு வினாடி கூடக் கண் துஞ்சாது, கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாப்பாக அவர் அருகில் இருக்க வேண்டிய கடமை அடியேனுக்கு உண்டு அல்லவா! இந்நிலையில், நான் தூக்கத்தில் சற்று அயர்ந்தாலோ, அவருக்கு ஏதேனும் பாதகம் ஏற்பட்டாலோ நான் கடமை தவறியவன் ஆவேனன்றோ! வனவாசம் என்பது விலங்கினங்களும், சரபங்களும், பூச்சி பட்டைகளும் கூடிய வாழ்வுமன்றோ! எத்தனையோ கோடி அசுரர்களும் நிறைந்திருக்கின்ற இடமாக விளங்குவது தானே வனங்களும், மலைகளும், காடுகளும்! எனவே நித்ரா தேவியான தாங்கள் எனக்கு 14 ஆண்டுகளுக்கு மட்டும் நித்திரையினின்று சற்றே விலக்கு அளித்து, ஆசீர்வதித்து, வரந்தர வேண்டுகிறேன்”, என லட்சுமண மாமூர்த்தி பிரார்த்தித்தார்.
பலவிதமான ராத்ரி சூக்த மந்திரங்களாலும், பல அரிய யோக பீஜாட்சரங்களாலும், நித்ரா யோக முத்திரை வழிபாடுகளாலும், ஸ்ரீநித்ரா தேவியை பூஜித்து தேவியிடம் நல்வரம் பெற்ற ஸ்ரீலக்ஷ்மண மூர்த்தி தம் அண்ணலுடன் வனவாசம் ஏகி 14 ஆண்டுகளில் ஒரு விநாடி கூடக் கண் துஞ்சாது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியைப் பேணி பாதுகாத்தார், இன்றும் ஸ்ரீவைகுண்ட திருத்தலத்தில் திகழும் உத்தம உறங்காப் பெரும் புளிவிருட்சம் போல்.

மன்னார்குடி திருக்குளம்

பட்டாபிஷேகத்தில் கொட்டாவி!
வனவாசம் முடிந்தது! கிஷ்கிந்தா, சுந்தர காண்டங்களும் முடிந்தன! ஸ்ரீராமரும், சீதாப் பிராட்டியுடன் அயோத்திக்குத் திரும்பி பட்டாபிஷேக வைபவமும் நிகழ இருக்கையில்..... அனைவரும் அரங்கில் வீற்றிருக்க ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் பட்டாபிஷேக முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது! பார்த்தாள் நித்ரா தேவி! 14 ஆண்டுகள் முடிந்தனவே!! இதன் பின்னரும் ஸ்ரீலக்ஷ்மண மூர்த்திக்குத் தேவையான ஆரோக்கியத்தை நித்திரை மூலமாக அளிக்க வேண்டியது தம் கடமையன்றோ! தன் பொறுப்பினின்று சற்றும் பிறழக் கூடாதே! எனவே நித்ராதேவி ஸ்ரீலக்ஷ்மண மூர்த்தியிடம் தம்முடைய அனுகிரஹக் கிரணங்களாக ஆரோக்ய நித்ரா கதிர்களைச் சற்றே செலுத்திடவே அவருக்கு கொட்டாவி புறப்பட்டது! 14 ஆண்டுகளுக்குப் பின்னர், முதன் முதலாக!  ஆம்! 14 ஆண்டுகளுக்குப் பின் சற்றே கண்ணை அயர வைக்கும் நிலையில் கொட்டாவி முட்டிடவே அந்த ஒரு விநாடியிலும் ஒரு சிறிதளவு கால அளவில் கண் அயர்ந்தவரானார் ஸ்ரீலக்ஷ்மண மூர்த்தி! அணுவினும் சிறிய இந்த நேரப் பகுப்பானது, நம்முடைய சொல்லுக்கும், பொருளுக்கும் அப்பாற்பட்டது. இந்த தேவ கணிதத்தை தேவ மூர்த்திகளால் தான் பகுத்து உணர முடியும்!
காலங்கடந்த கோலம்!
அர்ஜுனன் ஒரு நிமிடத்தில் 10,000 அம்புகளுக்கு மேல் செலுத்தவல்லவன் என்றால், அவனுடைய மனோவேகமும், உடல் விவேகமும் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை நம்மால் உணர முடிகின்றதா? நம்ப முடிகின்றதா! இதனை ஏதோ கட்டுக் கதை என்றே இன்று நாம் கூறுவோம். ஆனால் உண்மையில் ஒவ்வொரு அஸ்திரத்திற்கும் உரித்தான மந்திரங்களை உத்தம பக்தியுடன் ஓதும் போது, காலத்தைக் கடக்கின்ற, கனிந்த இறைநிலை நமக்கு உண்டாகிறது என்பதை உணர்த்துவதற்காகத்தான் தேவகணிதம் என்ற இதனை இங்கு குறிப்பிடுகின்றோம்.
பட்டாபிராமன் விட்டலுக்குக் கொட்டாவி சுட்டியதே!

மன்னார்குடி

ஸ்ரீலக்ஷ்மண மூர்த்தி ஆங்கே சற்றே உறக்க நிலை கொண்ட போது அந்த அசதியால் முகம் சற்றே கோணிட, அவர்தம் திருமுகத்தை வெளியிலிருந்து நோக்குங்கால் எவரையோ, எதையோ பரிகாசம் செய்வது போலத்தான் அவருடைய முகபாவம் இருந்தது! இதனைக் கண்ணுற்ற இராமபிரான் கூட அதிர்ச்சியுற்றார் போலிருந்ததே! பரம்பொருளாக இருந்தாலும், சாதாரண மானுட வடிவில் தானே தம்மை அனைத்து விதமான துன்பங்களுக்கும், மாயைகளுக்கும் ஆட்படுத்திக் கொண்டார். “என்ன இது! இளவல் என்னையே பரிகசிக்கின்றானா?” முக்காலமும், ஏன் எக்காலமும் உணர்ந்த வசிஷ்டருமே இலக்குவனின் முகபாவம் கண்டு திடுக்கிட்டு, “என்ன இது, என்னிடம் பரிகாசம் செய்ய என்ன இருக்கிறது?” என்று எண்ணி வியந்தாரா என்ன? அனுமானும், இலக்குவனின் முகத் தோற்றம் கண்டு, “எதற்காக எங்களைப் பரிகசிக்கின்றீர்கள்?” எனக் கேளாமல் கேட்டு நின்றாரோ!
இவ்வாறாக ஒவ்வொருவரும் ஸ்ரீலக்ஷ்மணரின் முகபாவங்கண்டு அவர் தம்மைப் பரிகசிப்பதாக எண்ணி விட்டார்கள். இவையெல்லாம் இறைவனின் லீலைதானே! நித்ராதேவி ஸ்ரீலக்ஷ்மண மூர்த்தியின் பால், தம்முடைய நித்திரைக் கலைகளை பரிபூரணமாகச் செலுத்தும் முன்னரே இந்நிலையெனில், முழு நித்ரா கதிர்களைக் கூட்டியிருந்தால் என்னாவது? அவர் இதன் பின் தொடர்ந்து பல ஆண்டுகள் உறங்கி  நித்திராதேவிக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினார் என்றால் இதன் தெய்வீகத் தாத்பர்யத்தை நாம் எவ்வாறு உணர முடியும்? இறைலீலையில் ஏற்படும் காரண, காரியங்களை எவர்தான் உணரவல்லார் சற்குருவின் குரு அருளின்றி!
இமை கொட்டிய ரகசியம்!
இப்போது நடப்பு நிலைக்கு வருவோம், லட்சுமணன் தம்மைப் பரிகசிப்பதாக ஒவ்வொருவரும் நினைத்து வந்தனர் அல்லவா! திடீரென கண் விழித்தார் லட்சுமணன்! நடந்ததை உணர்ந்து வெட்கி நின்றார்! தன் தவறை உணர்ந்தார், ஏனெனில் நித்திரா தேவிக்குத் தானளித்த வாக்குறுதிக் காலம் முடிவடைந்து விட்டது என்பதை அவரன்றோ உணர்ந்திருக்க இயலும், வேறு யாரறிவார் இந்த கால யோக இரகசியத்தை! ஸ்ரீராமனுக்குப் பட்டாபிஷேகம் ஆகின்ற காலையில் சற்றே தன் நிலையை மறந்தோம்! முக்கியமான பட்டாபிஷேக வேத மந்திரங்கள் ஓதப்படும் போது, அதைக் கண்ணால் கண்டு, காதால் கேட்டு உய்த்துணர வேண்டிய லக்ஷ்மண மூர்த்தியே நித்திரையின்பால் தன்னை ஆட்படுத்திக் கொண்டார் எனில் என்னே உறக்க நிலை மாயை இது! திகைத்தார்! விழித்தார்! புலம்பினார்! ஒவ்வொருவரிடமும் சென்று தன்னுடைய உறக்க நிலை பற்றிய இரகசியத்தை வெளியிட முடியாத இக்கட்டான நிலை! தன் முகபாவத்தால் ஏற்பட்ட நிலைக்குப் பிராயச் சித்தமாக ஒவ்வொருவரிடமும் மானசீகமாகவேனும் மன்னிப்புக் கோரினார்! நடந்ததை ஒருவாறாக யூகித்து உணர்ந்த அனைவருமே இது ஏதோ மாயையின் பாற்பட்டது எனத் தெளிந்தனர். ஆனால் இலக்குவனோ அதோடு விட்டு விடவில்லை, தன்னால் ஏற்பட்ட பங்கத்திற்குப் பிராயச்சித்தம் தேட முனைந்தார். எங்கு தேடுவது? என்ன பிராயசித்தம் செய்வது? வசிஷ்டர்தாமே தம் குலகுரு! அவர்தம் குருவருளாணையை வேண்டி நின்றார்.

மன்னார்குடி திருத்தேர்

“அரவணைப் பின்னல்”
இலக்குவனின் அவதார மஹிமையைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். ஆதிசேஷனாகவும், திரேதாயுகத்தில் இலக்குவனாகவும், துவாபர யுகத்தில் ஸ்ரீபலராமனாகவும் அவதரித்தவரே ஸ்ரீலட்சுமண மூர்த்தி அல்லவா! உறக்கத்தைப் பற்றி சித்புருஷர்களின் பரிபாஷையில் “அரவணைப் பின்னல்” என்று கூறுவார்கள். நித்ரா யோக சர்ப்பம் என்ற பாம்பினால் (அரவம்) அணைக்கப்படுதலாக அதாவது உறக்கத்தை தேகப் பின்னல், அரவணைப் பின்னல் என வர்ணிப்பார்கள் ஆன்மீகத்தில் சித்புருஷர்கள்! உத்தம நிலையில் இருக்கும் யோகத்திற்குக் கூட யோக நித்திரை என்றே பெயர். ஸ்ரீரங்கப் பெருமான் கொண்டிருப்பதும் பரமாத்ம யோக நித்திரையே! ஸ்ரீவாஸ்து மூர்த்தி மேற்கொண்டிருப்பதும் பிருத்வி யோக நித்திரையாம். எனவே நித்திரையைப் பாம்பாக வர்ணிப்பது யோக சாத்திரக் கூறுகளில் ஒன்றாகும்.
குண்டலினி சக்தியினின்று விளைவதுதானே பலவித யோக சாஸ்திரங்களும்! அவற்றுள் ஒன்றே யோக நித்திரையுமாகும்... எனவேதான் குண்டலினி சக்தியை ஒரு பாம்பாக வரைபடம் போட்டுக் காட்டுவார்கள். உண்மையில் நாம் தினமும் உறங்குவது கூட ஒருவித யோகமாகும். ஸ்ரீரமண மஹரிஷி போன்றோர் உறக்கத்தை மரணத்தின் ஒத்திகை என்று வர்ணித்துள்ளார்கள்> ஸ்வப்னம், சுஷுப்தி, துரியம் போன்ற பல யோக நிலைகளைக் கொண்டதே சூட்சும உறக்கமும், உறக்கமற்ற நிலை கூடிய யோகப் பரிமாணமும் ஆகும். ஒவ்வொரு மனிதனுக்கும் உறக்கம் நிச்சயம் தேவைதானே! களைப்பு நீங்க மற்றும் ஆரோக்கியத்திற்கு மட்டுமா உறக்கம்? ஒவ்வொரு மனிதனும் தான் அறிந்தோ, அறியாமலோ, கூட்டுகின்ற வினைகளில் பலவித கர்மவினைக் கழிப்பிற்கும் நித்ரா யோக நிலைகளைப் பூண வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொருவருக்கும் இயற்கை நியதியாகவே தினசரி உறக்க நிலை தேவையானதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அறிக!
இமை கொட்டி உறக்கச் சுமை பூண்ட இலக்குவன் இப்போது என் செய்வார் சொல்லுங்கள் பார்க்கலாம்? தன் குலகுருவான் வசிஷ்டரின் அருளாணைப்படி, உறக்கமாகிய பாம்பு அணையுமிடத்தில் பாம்பணையும் நதிக் கரையில் யோகம் பூண்டு இதற்குப் பிராயசித்தம் தேட வேண்டும் என்பதே அவருக்கு அளிக்கப்பட்ட பிராயசித்தம் ஆகும்! அதுதான் இலக்குவனுக்கும் இடப்பட்ட தெய்வீகத் தீர்வுமாகும். புறப்பட்டார், பாம்பு அணையும் இடத்திற்கு இளைய பெருமாள்! பாம்பணை ஆற்றங்கரையில் தன் தவத்தைத் துவங்கிட! உறக்கத்தால் ஏற்பட்ட பங்கத்திற்குப் பிராயச்சித்தம் தேடிட! இவ்வாறாக இலக்குவன் ஸ்ரீநித்ரா தேவியின் பரிபூரண அனுகிரஹம் பெற்று ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலத்தில் ஏனைய தெய்வமூர்த்திகளின் அனுகிரஹமும் பெற்று, தம்முடைய தவற்றுக்குப் பிராயச்சித்தம் தேடிக் கொண்ட திருத்தலமே மனனார்குடியிலுள்ள பாம்பு அணையும் இடமாகிய பாம்பணை நதி தீரமாகும். இத்திருத்தலத்தில் தான் ஸ்ரீலட்சுமண மூர்த்தி தன் வாழ்நாளில் எப்போதும் தவறு செய்திடாத லட்சுமண மூர்த்திக்கு சிறு நித்திரை பங்கத்தால் ஏற்பட்ட தவறுக்குப் பிராயச்சித்தம் தேடி, அந்த திரேத யுக பிரமாதி ஆண்டில் விஷ்ணுபதி புண்ய காலத்தில் தன் அடுத்த அவதாரமாகிய, ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்கு பலராமனாய் சேவை செய்யும் அவதார பாக்கியம் பெற்றார்! ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியோ, “இலக்குவனாய் கண் துஞ்சாது இந்த ராமாவதாரத்தில் நீ எனக்கு ஆற்றிய தொண்டின் பரிசாக அடுத்த அவதாரத்தில் நானே உனக்கு சேவை செய்ய விரும்புகிறேன்”, என தம் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தினார். எனவே 16.11.1999 அன்று ஸ்ரீவிஷ்ணுபதி கொண்டாட வேண்டிய திருத்தலமே பாம்பணை நதி பொலியும் மன்னார்குடி திருத்தல ஸ்ரீராஜகோபால சுவாமி ஆலயமாம்.
பிரமாதி வருட தட்சிணாயன இரண்டாவது விஷ்ணுபதி புண்ய காலமான 16.11.1999 விசேஷ நாளை புனிதமான பாம்பணை நதி புரளும் திருத்தலமாகிய மன்னார்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீராஜகோபால சுவாமி ஆலயத்தில் கொண்டாடுவது மிகவும் சிறப்புடையதாகும். ஏனைய வைணவத் தலங்களிலும் ஸ்ரீபெருமாள் சந்நதிகளிலும், சமுதாய பூஜையாக இதனைக் கொண்டாடி மகிழும்படி அன்புடன் வேண்டுகிறோம். இன்று பாம்பணை நதிக்கரையில் தர்ப்பணம் இடுதல், பித்ருக்களுக்கு மிகவும் ப்ரீதி அளிக்கக்கூடியதாகும். இன்று பாம்பணை நதிக்கரையில் செய்யப்படும் ஹோமம், பூஜை, நதி வழிபாடு, தான, தர்மங்கள், தர்ப்பணம், அன்னதானம், பசுதானம், மாங்கல்யதானம், வஸ்திர தானம் போன்றவற்றிற்கு ஆயிரமாயிரம் மடங்கு பலன்கள் உண்டு. பலரும் தங்களுடைய குடும்பத்தில், தொழிற்சாலையில், எஸ்டேட்டில் பலரையும் வளர்த்து ஆளாக்கி பணியில் வைக்கின்ற போது அவர்கள் மனம் நோகும்படி நடந்து கொண்டால் கடும் சாபங்கள் ஏற்படும். பணியில் வருத்தினாலும் கடும் வேலைகளை வாங்கினாலும் முறையாக நடத்தாவிட்டாலும், சம்பளம் தராவிட்டாலும் ஏற்படும் பாவ விளைவுகளும் ஏராளமே! பிறர் குழந்தைகளை/பிள்ளைகளை எடுத்து வளர்க்கும் போது காட்டுகின்ற காட்டம், வஞ்சம், பழி போன்றவை விளைவிக்கின்ற தீவினைகளோ சொல்லி மாளாது. இவற்றிற்குரிய பிராயசித்தமக இன்று பாம்பணை நதிக்கரையில், நதியை வழிபட்டு, தம் தவறுகளுக்கு வருந்தி தம்மால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க பரிகாரம் செய்து ஓர் ஏழை விவசாயிக்கு கலப்பையும், நல்ல உழவு மாடுகளையும் தானமாக அளிக்க வேண்டும்.

யமதீப தானம்

விளக்கு தானம் மிகுந்த புண்ய சக்தியைக் கொண்டது. தீபதான புண்ய சக்தியானது வியாதி நிவாரணத்துடன் நல்ல ஆயுள் விருத்தியையும் தரும். பெரும்பாலும் தீபாவளியை ஒட்டியவாறு முதல் நாள் அமைவதே யமதீப தானம் எனும் விசேட தினமாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என உணர்ந்து சமுதாயத்திற்குப் பல அற்புத இறைத் திருப்பணியை தான, தருமங்களாகவும், சரீர சேவையாகவும் ஆற்றிய எத்துணையோ உத்தமர்கள் தம் பூத உடலை உகுக்கையில் அவர்தம் ஆன்மா மோட்ச நிலையைப் பெறும் பொருட்டுப் பல ஆலயங்களிலும், மோட்ச தீபம் ஏற்றுகின்ற நடைமுறை வழக்கம் ஒன்று உண்டு. இறப்பிற்குப் பின் அமைகின்ற நிலைகளில் ஒளிப்பாதை, இருட்டுப்பாதை என மிகவும் முக்கியமான இரு பாதைகள் உள்ளன. இதனையே சுவர்க்கம் (ஒளி உலகம்), நரகம் (இருட்டு உலகம்) என பொதுவாகக் குறிப்பிடுகின்றோம்.
இறப்பிற்குப் பின், இந்த பூத உடலை விடுத்தாலும் ஆன்மாவானது பலவித சூட்சும வடிவைத் தாங்கித்தான் மேல் உலகில் பயணம் செய்யத் துவங்குகிறது. அதனுடைய அடுத்த பிறவி நிர்ணயிக்கப்படும் வரை அது மார்கபந்து ரேகை எனும் அருவக் கோட்டுப் பாதையில் செல்கிறது. இந்த விண்வெளிப் பாதையின் போக்குவரத்துத் தன்மையானது அந்தந்த ஜீவனின் பாவ, புண்ணிய சக்திக்கு ஏற்ப அமைகின்றது. பலவிதமான கொடும் பாவங்களை இழைத்தோர் செல்கின்ற இருட்டுப் பாதையில் அந்த ஜீவனானது நிறைய தண்டனைகளைப் பெற்று அனுபவிக்க வேண்டியிருக்கும். இதனையே நரக வேதனை எனக் கூறுகின்றோம். நல்ல ஆத்மாக்கள் ஒளிமயமான சுகமாகப் பிரயாணம் செய்வர். இதுவே ஒரு ஜீவனின் இறப்பிற்குப் பின் அமைந்துள்ள நிலை பற்றிய பொதுவான விளக்கமாகும். அவரவருடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப இதில் கோடிக்கணக்கான தெய்வீக இரகசியங்கள் உள்ளன. இவற்றின் விளக்கங்களை தக்க சற்குரு மூலம் அறிந்து தெளிந்திடுக!
எமதீப தானம் எனப் பெயர் ஏன் வந்ததோ? பொதுவாக அனைவரும் எண்ணுவது போல எமபகவான் எனில் அஞ்சத்தக்க தெய்வமூர்த்தி அல்லர். எவ்வாறு ஒவ்வொருவரும் தினமும் ஸ்ரீஜேஷ்டா தேவியை வணங்கி ஆக வேண்டுமோ, அதே போல ஸ்ரீஎம பகவானையும் கண்டிப்பாக நிதமும் வணங்கத்தான் வேண்டும். ஏனெனில் மரணமாகிய முடிவு என்பது அனைத்து ஜீவன்கட்கும் உரித்தான ஒன்றுதான். ஆனால் இந்த உடலோடு எந்த ஆன்ம வாழ்வும் முடிந்து விடுவது கிடையாது. மரணம் என்பது இரண்டு பிறவிகளுக்குகிடையிலுள்ள ஒரு க்ஷண நேர இடைவெளியே! எவ்வாறு நாம் முதல் நாள் அணிந்த ஆடையை மறுநாள் களைந்து வேறு ஆடையை உடுத்துகிறோமோ, அதே போல மரணத்தின் போது இந்த உடலை உகுத்து விட்டு அவரவருடைய கர்ம வினைகளின்படி அடுத்த உடலை, பிறவியை ஏற்றுக் கொள்கின்றோம். இந்த உடல் மாற்றம் சூட்சும ரூபத்திலோ, அல்லது வேறு வடிவிலோ நடைபெறும் செயலாகும். ஆனால் வேறு உடலில் ஆவி புகும் வரை ஆத்ம ஜீவ பயணம் தொடரும் அல்லது இடைலோகங்களில் தங்கள் ஏற்படும் இவையெல்லாம் இறப்பு பற்றிய தெய்வீக இரகசியங்களாகும்.

திருப்பைஞ்ஞீலி திருத்தலம்

ஸ்ரீஎம வழிபாடு ஏன்? எதற்காக ஸ்ரீஎம பகவானை வழிபட வேண்டும்? மரண பயம் இல்லாமல் வாழ்வதற்கும், அமைதியான முறையில் மரணத்தை ஏற்கும் மனப்பக்குவத்திற்கும், மரணத்திற்குப் பின் உள்ள வாழ்வில் பல உத்தம நிலையைக் கொள்வதற்கும், துர்மரணம் மற்றும் அபமிருத்யு தோஷங்கள் ஏற்படா வண்ணம் காக்கும் பொருட்டும், இல்லறத்தில் ஏற்படும் மரணச் சம்பங்களால் உடலோ, உள்ளமோ பாதிக்கப்படா வண்ணம் தற்காத்துக் கொள்ளவும். பிறப்பு, இறப்பு பற்றிய இரகசியங்களை அறிவதற்கும் இன்னும் பல உத்தம காரணங்களுக்காகவும் தான் ஸ்ரீஎமபகவானை நாம் ஒவ்வொருவரும் கண்டிப்பாக வழிபட்டாக வேண்டும்.
திருச்சி அருகில் திருப்பைஞ்ஞீலி சிவாலயத்திலும், ஸ்ரீவாஞ்சியத்திலும், இன்னும் சில இடங்களிலும், ஸ்ரீஎமபகவானுக்கென தனி சன்னிதி உண்டு. அனைத்து தெய்வ மூர்த்திகளைப் போன்றே ஸ்ரீஎமபகவானும், தினமும் வழிபடப்பட வேண்டியவரென்பதில் எவ்வித ஐயமுமில்லை! ஆனால் பலகோடி யுகங்களுக்கு முன் சிறந்து விளங்கிய எமவழிபாடானது காலப்போக்கில் சுருங்கி பலவித அனர்த்தங்களினால் மக்களுக்கேற்பட்ட அதிகமான மரண பயத்தால் ஸ்ரீஎமபகவான் வழிபாடே நின்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் திருப்பைஞ்ஞீலி சிவாலயத்தில் எமபகவான் தன் குடும்ப சகிதம் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார் என்பது இத்தலத்தின் சிறப்பைக் குறிக்கின்றது. ஸ்ரீஎமபகவானே தர்ம மூர்த்தி ஆவார். எவ்வாறு நேர்மையாக உண்மையாக, சத்தியமாக நாம் வாழ நினைக்கிறோமோ அதே போல ஒவ்வொரு ஜீவனுடைய பாவ புண்ணிய நிலைக்கேற்ப, அந்தந்த ஜீவனுக்குரிய தண்டனையையோ, பரிசையோ, தகுதியையோ அளிப்பவரே ஸ்ரீஎமபகவான் ஆவார். எனவே, தர்மராஜா எனப் பெயர் கொண்ட ஸ்ரீஎமபகவானை நாம் நாள்தோறும் வழிபட்டால் தானே நாம் நேர்மையானவராக, சத்திய நெறி நிறைந்தவராக, நல்லவராக வாழ இயலும்.
சுமை தீர்ப்பீர், எமநாமம் ஓதி!
எமதீபம் என்பது எமலோகத்தில் மட்டும் காணப்படுகின்ற அற்புத ஒளியைக் குறிப்பதாகும் மரணத்திற்கு ஆட்படுகின்ற அனைத்து ஜீவன்களுமே எமலோகத்தின் வழியாகவே கண்டிப்பாகச் செல்ல வேண்டும். ஆனால் அது இறப்பிற்குப் பின் உடனே நிகழ்கின்றதா, அல்லது சில காலம் கழித்து நடைபெறுகின்றதா என்பது அந்தந்த ஜீவன்களுடைய கர்ம வினைகளின் அம்சங்களைப் பொறுத்து அமைவதாகும். பல உத்தம இறைப்பணிகளைச் செய்த ஒருவர் இறப்பிற்குப் பின் ஒளிமயமான உலகிற்கு செல்ல முதலில் எமஜோதி லோகத்திற்குச் சென்றிட அங்கு அவருடைய உத்தம காரியங்களுக்கான பரிசாக ஸ்ரீஎமபகவானே நேரில் பிரசன்னமாகி வரவேற்று அவரை உபசரித்து ஒளி பொருந்திய தேவ ஊர்தியை அளித்து அங்கிருந்து பல மகரிஷிகளின் துணையுடன் உத்தம லோகங்கட்கான அருள்வழி கூ(கா)ட்டி அனுப்புகின்றார் எனில் எமலோகம் என்பது, ஒளிப்பகுதியை சார்ந்தது என்பது நன்கு விளங்குகின்றதல்லவா!
சூரியபகவானின் பிள்ளையே ஸ்ரீசனீஸ்வர பகவானும், ஸ்ரீஎம பகவானும் ஆவர் என்பது பலரும் அறிந்ததே, தர்ம ஒளிப் பாதையிலிருந்து நாம் சற்றும் பிறழாதிருக்க அனுகிரஹம் செய்பவரே ஸ்ரீஎம தர்மமூர்த்தி ஆவார். ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் கண்டிப்பாகச் செய்ய வேண்டிய சந்தியா வந்தன பூஜையில், எம வழிபாடு எனும் ஒரு பகுதியும் உண்டு.
எமவந்தனம்
ஸ்ரீயமாய நம: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்தகாயச|
வைவஸ்வதாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச||
ஔதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே|
வ்ருகோதராய சித்ராய சித்ர குப்தாய வை நம:|
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி||
என்ற இந்த எம வந்தனத்தை சிறு பிராயம் தொட்டே ஆயுள் முடியும் வரை தினந்தோறும் மூன்று வேளையிலும் ஓதி வழிபட வேண்டும் என்பது நம் மூதாதையர்களால் அளிக்கப்பட்டுள்ள ஸ்ரீஎம மூர்த்தி வழிபாடு என்பதால் நம் வாழ்க்கையில் எமவழிபாடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் நன்கு அறியலாம். தினமும் தெற்கு நோக்கி அஞ்சலி செய்து ஸ்ரீதர்மராஜ மூர்த்தியை வணங்கித் துதிக்க வேண்டிய சுலோகம் இது!
உண்மையில் ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும், யமனின் திருக்கோயிலை நோக்கித்தான் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து கொண்டுள்ளான் என்பதையும் உணர்விக்கும்! ஸ்ரீஎமபகவானின் தரிசனம் கிடைத்தற்கரிய திவ்ய தரிசனமாகும். இம்மந்திரத்தின் பொருள் யாதோ? அனைத்தையும் அடக்கி ஆள்பவராகவும், தர்ம மூர்த்தியாகவும், தீவினையை அழிப்பவராகவும், விவஸ்வானுடைய புத்திரனாகவும், காலத்தின் வடிவாகவும், அனைத்து ஜீவன்கட்கும் நல்லதோர் முடிவை அளிப்பவராகவும், அனைவராலும் பூஜிக்கப்பட்டவராகவும், பலவித பிறப்பு, இறப்பு இரகசியங்களைத் தன்னுள் கொண்டவருமான ஸ்ரீஎமதர்ம மூர்த்திக்கு நம் வந்தனம் உரித்தாகுக என்பதே இம்மந்திரத்தின் பொதுப் பொருளாகும்.
ஐந்து வயது முதலே இம்மந்திரத்தை ஓதி வரவேண்டும் என நம் மூதாதையர்கள் விதித்துள்ளனர் என்றால் எமவழிபாடு என்பது எவ்வளவு முக்கியத்துவம் நிறைந்த நித்திய வழிபாடு என்பதை உணர வேண்டியே மீண்டும் இதனை வலியுறுத்துகிறோம். ஆனால் இவ்வாறு நாம் தினந்தோறும் செய்து வருகின்றோமா என்பது கேள்விக்குரியாகிறது. ஒரு சிறு தலைவலி வந்தாலே மாத்திரைகளை உள்ளே தள்ளி காபியைக் குடித்து, தலையில் துணியைக் கட்டிக் கொண்டு ஆர்ப்பரிக்கும் நாம், மரண பயத்தினின்று எவ்விதம் விடுபட முடியும்? இறப்பு என்பது சாந்தத்துடன் நாம் எதிர்நோக்க வேண்டிய மிக முக்கியமான தருணமாகும். ஆனால் தற்காலத்திலோ, எதற்கெடுத்தாலும், ஆஸ்பத்திரி வாசம்தான்! குறிப்பாக ஹார்ட் அட்டாக் என்றாலே ICU என்று சொல்லி உள்ளே தள்ளி வைத்து விடுவதால், எவரும் அண்டாவண்ணம் இறப்பு ஏற்படுமாயின் என் செய்வது? இதனையும் விதி என்றுதானே சொல்ல வேண்டும்!
“ராமா”, “கிருஷ்ணா”, “கோவிந்தா”. “முருகா”, “பிள்ளையாரப்பா”, “சிவசிவ”, “பரம பிதாவே”, “அல்லாஹு அக்பர்” என்று இறைநாமத்தை ஓதியவாறு சாந்தமாக மரணத்தைத் தழுவுகின்ற தெய்வீக வாய்ப்பு எவ்வளவு பேருக்குக் கிட்டுகின்றது? மரணத்தைப் பற்றி சிந்திப்பது, எண்ணுவது அபசகுனமுமல்ல! என்றேனும் ஒருநாள் அனைவரும் அடைய இருக்கின்ற நிலையைப் பற்றி அறிய வேண்டிய ஆத்ம உணர்வுப் பாடமிது!

ஸ்ரீகண்டநிவர்த்தி சரபேஸ்வரர்

ஒவ்வொரு ஆலயத் தூணிலும் எழுந்தருளி அருள்பாலிக்கின்ற ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி ஒவ்வொருவரும் எத்தனையோ விதங்களில் இடம், பொருள், தத்துவ காரணமாய் பல தெய்வீக சக்திகளைக் கொண்டு விதவிதமான முறைகளில் அருள்பாலிக்கின்றனர். கோடிக்கணக்கான ஆசைகளை நாம் சுமந்திருப்பதால் கோஷ்ட மூர்த்தி, மூல மூர்த்தி, நவகிரஹ மூர்த்தி எனப் பல விதங்களில் பரம்பொருளே வடிவெடுத்து வந்து நம் கர்மவினைகளுக்கேற்ப நமக்கு அருள் கூட்டுகின்றார். ஒவ்வொரு ஆலயத் தூணிலும் சிற்பமாகச் செதுக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அந்தந்த ஆலயத்தில் எத்தனையோ கோலங்களில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி சுயம்பாகவோ, மானுட பிரதிஷ்டையாகவோ எழுந்தருள்வதற்கான அவதார காரண காரியங்கள் நிறைய உண்டு. உக்ரம், சிம்மம், ஆவேசம், வீர சௌந்தர்யம், சிறசபேசம், கர்ப பேதம், ஸெந்தர்ய சாகசம், ம்ருத்யு பிரயோகம், வாலை நந்தனம், யோக பூர்ணம் போன்ற அக்னி லாவண்ய சக்திகளை அவதார நேரத்தில் வெளிப்படுத்தியமையால் ஒவ்வொரு ஆலயத் தூணிலும் அருள்பாலிக்கின்ற ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் தெய்வாம்சங்கள் எண்ணற்ற வகைகளில் விளங்குகின்றன.
காண்பதற்கு அரிய திருஅண்ணாமலை ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர்
திருஅண்ணாமலை சிவாலயத்தில் அருள்பாலிக்கின்ற மூர்த்தியே ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர் ஆவார். பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகவும், கோடானு கோடி சித்தர்களின் சரணாகதி ஆலயமாகவும் விளங்குகின்ற திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அம்பாள் சந்நிதியின் வெளிமண்டபத்தில் நவகிரஹ மூர்த்திகளுக்கு முன் மண்டப ஆலயத் தூணில் கொலு வீற்றிருக்கும் ஸ்ரீசரபேஸ்வரப் பெருமானே அதி அற்புதத் தோற்றத்தில் காட்சி தந்து ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தியாக சித்புருஷர்களால் பெரிதும் போற்றி, துதிக்கப்படுகின்ற காணுதற்கரிய கோலத்தைக் கொண்டுள்ள அற்புத மூர்த்தி! ஒவ்வொரு மனிதனும், ஏன், ஒவ்வொரு உயிரினமும் தன்னுடைய வாழ்க்கையிலே, பிறவிகளிலே ஏற்படுகின்ற, சந்திக்கின்ற, பலவிதமான கண்டங்களுக்கான சாபங்களை நிவர்த்தி செய்து தக்க பரிகாரம் தந்து அருள்பாலிக்கின்ற மிக அற்புதமான சரபேஸ்வர மூர்த்தியாவர்.
திருஅண்ணாமலையில் தோன்றி அருள்கின்ற மூர்த்தி என்றாலே அதற்கென தனித்தன்மையான தெய்வீக சக்தியும், மகிமைகளும், உண்டல்லவா! ஹோரா கிரிவல அதிபதியாகவும், ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தி விளங்குகின்றார். இல்லத்திலும், அலுவலகத்திலும், வியாபாரத்திலும், வெளி இடங்களிலும், வாழ்க்கையின் பல காலகட்டங்களிலும், பிறருடைய கொடுமைகளால் இன்னல்களை அனுபவிக்கின்றோ ஏராளம், ஏராளம். இது மட்டும் அல்லாமல் விதி வினையாக பலவிதமான கண்டங்கள் நெருப்பு கண்டம், நீர் கண்டம், விபத்து கண்டம், நோய் கண்டம் எனப் பலவிதமான கண்டங்களைத் தம் வாழ்வில் சந்திக்கின்றவர்கள் இக்கண்டங்களின் விளைவுகளிலிருந்து மீண்டு நல்வாழ்வைப் பெற இந்த ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தி பெரிதும் அருள்பாலிக்கின்றார். இம்மூர்த்தியின் மிக அற்புதமான தெய்வீக சக்திகளுள் ஒன்று என்னவென்றால் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரரை முறையாக அபிஷேக, ஆராதனைகளுடன் குறித்த ஹோரையில்/நேரத்தில் வழிபடுகின்ற போது கிட்டுகின்ற புண்ணிய சக்தியானது பலவிதமான முறைகளிலே சாபங்களையும், தோஷங்களையும், கண்டங்களையும் நிவர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் ஐஸ்வர்யத்தையும், நல்வரத்தையும், மன அமைதியையும் கூடவே தரவல்லதாகும்.
சரப மூர்த்தி வழிபாடு தருகின்ற தெய்வீக புண்ய சக்திகளுள் ஒன்றுதான் ஸ்ரீபுர சிவகண புண்ய சக்தியாகும்.. இப்புண்ய சக்தியானது தீயோர்களை மாய்க்கின்ற அம்புகளைப் போல் நமக்குக் கொடுமைகளை விளைவிக்கின்ற தீயோர்களின்பால் சென்று தீய சக்திகளை அழிக்கின்ற தெய்வீகக் கருவியாக மாறி கொடுமையையும், பகைமையையும், விரோதத்தையும், குரோதத்தையும், மாய்த்திடுதல் மட்டுமல்லாது அவற்றை அங்கேயே பஸ்பம் செய்து அவை மீண்டும் தோன்றாவண்ணம் தடுத்து நிறுத்துகின்ற அளவிற்கு மிகுந்த ரட்சா சக்தி நிறைந்ததாகவும் பன்மடங்கான பலாதி பலன்களுடன் விளங்குகின்றது.
ஹோரா கிரிவல அதிபதியே ஸ்ரீசரபேஸ்வரர் !
 ஸ்ரீசரபேஸ்வரர் அவதரித்த நேரமே பிரதோஷம் நேரம் என்பதை நாம் யாவரும் அறிவோம் அல்லவா! மேலும் திருஅருணாசல சரபேஸ்வரப் பெருமானுக்கு ஹோரா கிரிவல அதிபதி என்ற காரணப் பெயரும் உண்டு என்பதால் எந்த நாளில் குறிப்பிட்ட ஹோரை நேரத்தில் இவரை வலம் வந்து வணங்கி, துதித்து, கிரிவலத்தைத் தொடங்குவோர்க்கு எவ்வகையான கிரிவலப் பலன்கள், அனுகிரஹங்கள், காரிய சித்திகள், அரிய புண்ய சக்திகள் கிட்டும் என்பதை சித்புருஷர்களின் ஹோரா சாஸ்திர வழிபாட்டு முறைகள் நன்கு விளக்குகின்றன. அதாவது குறித்த ஹோரா நேர வழிபாடு ஸ்ரீசரபேஸ்வரருக்கு மிகவும் ப்ரீதியானதாகும். ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரருடைய மகாத்மியத்தில் ஒன்றாக இச்சரப வழிபாடு பல வாழ்க்கை கண்டங்களிலிருந்தும் நம்மை மீட்பது மட்டுமல்லாது நம்முடைய பாவங்களால் நாமே நமக்கு விளைவித்துக் கொள்கின்ற பலவிதமான தவறுகளை மீண்டும் நம் வாழ்க்கையில் செய்திடாவண்ணம் தடுப்பதற்குரிய இரட்சாபந்தன அனுகிரஹத்தையும் தந்து அருள்பவராக இம்மூர்த்தி விளங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
பிராயசித்தம் ஒரு முறையே!
தற்காலத்தில் பலவிதமான பாவங்களுக்குப் பிராயச்சித்தங்களைத் தேடுவோர், அப்பிராயச்சித்தம் முடிந்தாலும் மீண்டும் அதே தவறுகளைத் தொடர்கின்றார்கள். இதுவரையில் மது அருந்தி, புகை பிடித்து மற்றும் ஒழுக்கமற்ற வாழ்வை வாழ்ந்தோர் வாழ்நாளில் என்றேனும் தம்முடைய தவறுகளுக்கு வருந்தி பிராய சித்தம் பெற்றாக வேண்டும். ஆனால் பிராய சித்த நல்வழிமுறைகளைக் கடைபிடித்துத் திரும்பவும் அதே தீய ஒழுக்கத்தில் இறங்குவதால் என்ன பயன்? எனவே, பிராயசித்த வழிபாட்டு முறைகளை மேற்கொண்ட பின்னர், நேர்த்திகளை நிறைவேற்றியதோடு, தான் இழைத்த தவறுகளை மீண்டும் செய்தலாகாது என்று சத்தியத்தை மேற்கொண்டால் தான் எந்த பிராயசித்தமும் பரிபூரணமான பலன்களைத் தரும். இல்லையேல் பரிகாரமே பல சாபங்களை கூடுதலாகத் தந்து விடும்.
உதாரணமாக வருடத்தில் ஒன்பது மாதங்கள் தன் இஷ்டப்படி பல தீய நெறிகளுடன் வாழ்ந்து விட்டு, ஒரு மண்டலத்திற்கான ஸ்ரீஐயப்ப விரதத்தை மேற்கொண்டு, ஓரளவு உடல் சுத்தத்துடன் வாழ்ந்து விரதம் முடிந்த பின்னர், மீண்டும் புகை பிடித்தல், மது அருந்துதல் தீய நெறிகளுடன் வாழ்வது என்றால் யாருக்கு என்ன பிரயோசனம்? இது ஸ்ரீஐயப்ப விரத நெறிகளுக்கு முற்றும் புறம்பானதாகும். எத்தனையோ பெருந்தவறுகளுக்கான பிராயச் சித்தங்களைப் பெற்றுத் தருவதாக விளங்குகின்ற ஸ்ரீசபரிமலை ஐயப்ப தரிசனத்தைப் பெற்றுவிட்டு மீண்டும் அதே தீய வழிகளில் இறங்குவது என்றால் பரம்பொருளாம், ஸ்ரீஐயப்ப மூர்த்தியையே இழிவு செய்ததாக ஆகின்றதல்லவா! சமுதாயத்தின் ஒவ்வொரு வாழ்க்கைத் துறையிலும் ஏற்படுகின்ற பல்வேறு தரப்பினருடைய இன்னல்களுக்கும் தக்க நிவர்த்தியைத் தந்து அவரவருக்கு அந்தந்தத் துறையில் ஏற்படுகின்ற கண்டங்களையும், சாபங்களையும் வெல்வதாகவும் விளங்குவதே திருஅண்ணாமலை ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர வழிபாடாகும்.. இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போமா!
மருத்துவர்களுக்கே மாமருந்து அளிக்கும் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரப மூர்த்தி! மருத்துவராக வாழ்க்கை அமைகின்ற பாக்யம் ஒரு சிலருக்குத்தானே கிட்டுகின்றது. எவரெல்லாம் தன்னுடைய பூர்வ ஜென்மத்தில் ஸ்ரீகருட உபாசனையை மேற்கொண்டார்களோ, யார் யார் நலிந்த மக்களுக்கு இலவச மருத்துவ உதவி செய்து வளம்பட வாழ்ந்தார்களோ அவர்கள் எல்லாரும்தான் இப்பிறவியிலே மருத்துவர்களாகப் பிறவி கொள்கின்றனர். ஆனால் அனைத்து மருத்துவர்களுமா தம்முடைய பூர்வ ஜென்ம புண்ய சக்தியை உணர்ந்து பிறருடைய சேவைக்காகத் தம்மை அர்ப்பணிக்கின்ற முறையில் தெய்வீக வாழ்க்கை வாழ்கின்றார்கள். அவரவர் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளட்டும்!
எனினும், ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தியின் அனுகிரஹத்தாலும், அஸ்வினி மருத்துவ தேவர்களின் நல்ஆசியாலும், மருத்துவ தேவதைகளுடைய ப்ரீதியாலும்தான் தாம் மருத்துவராக இப்பிறவியில் வாழ்க்கையைத் தரித்து இருக்கின்றோம் என்பதை ஒவ்வொரு மருத்துவரும் உணர்ந்தாக வேண்டும். இவர்கள் தாங்கள் மருத்துவத் துறையிலே சிறந்திடுவதற்கும், எலும்பு, நரம்பியல் நோய்கள், இருதய நோய்கள் என்று ஒவ்வொரு மருத்துவத் துறையிலும் புகழ்பட வாழ்தற்கும், தொட்டால் குணம் அடையும் என்று சொல்லும் அளவிற்கு நல்ல முறையிலே கைராசியைப் பெறுவதற்கும், வழிவகுக்கின்ற தெய்வீக வழிபாட்டுத் தன்மைகளைப் பெற்றிடவும், திருஅண்ணாமலை ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர் பெரிதும் உதவுகின்றார்.
ஏனென்றால் பெரும்பான்மையான கண்டங்களும், சாபங்களும் நோய்களாகத் தானே மாறி, கர்ம வினைகளாக வந்து சேர்கின்றன, நோய் நீக்கும் சமுதாய சேவை எனில் அது அதிமகத்தான இறைப்பணி தானே! ஆனால் பணம் சம்பாதிப்பதுதான் குறியாக இருந்தால் மருத்துவராக வாழ்வதில் யாது பயன்? ஒவ்வொரு மருத்துவரும், சனிக்கிழமையன்று செவ்வாய் ஹோரை நேரத்தில் (காலை 8-9, மாலை 3-4) திருஅண்ணாமலையில் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தியை தரிசித்து தம்முடைய தொழிலில் உள்ள இடர்கள் நிவர்த்தியாவதற்கான சங்கல்பங்களையும் நேர்த்திகளையும் வைத்துக் கொண்டு அரச மரத்தின் வடக்கு வேரால் ஆன லிங்கமூர்த்தியையோ அல்லது ஸ்படிக லிங்கத்தையோ சுமந்து கிரிவலம் வருதல் வேண்டும். தேய்பிறை செவ்வாய்க் கிழமைக்கு நோய் தீர்க்கும் சக்திகள் உண்டு, எனவேதான், சித்த வைத்தியத்தில் தேய்பிறைச் செவ்வாயில் மருந்தினை உட்கொள்ளத் தொடங்குவார்கள்.
சனிக்கிழமை மற்றும் சதய நட்சத்திர நாட்களும் மருத்துவர்களுக்கான ஸ்ரீகண்ட நிவர்த்தி, சரபேஸ்வரர் வழிபாட்டிற்கு ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர் வழிபாட்டிற்கு உரிய நாட்களாக விளங்குகின்றன. எனவே, இந்நாட்களில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை வழிபட்டு கிரிவலம் வந்து தன் வாழ்நாள் முழுவதும் இக்குறித்த நாட்களிலே இத்தகைய கிரிவலத்தை மேற்கொள்தல் என்ற ஒரு மனோ வைராக்கியத்தையும் பூண்டு எங்கிருந்தாலும் சரி, இந்நாட்களில் திருஅண்ணாமலையிலே கிரிவலம் செய்கின்ற மனப்பக்குவத்தைப் பெறுவார்களேயானால், அவர்கள் நிச்சயமாக உலகிலே மிகச் சிறந்த வைத்தியர்களாகப் பிரகாசிப்பதற்கான அனுக்ரஹத்தை ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர் அருள்கின்றார். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் குறைந்தது ஆயிரம் முறையாவது கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையது ஆகும். மலைத்து விடாதீர்கள்! இதுவே உங்களுடைய புனிதமான, உத்தமமான மருத்துவ வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்கட்டும்!
இலவச மருத்துவ சேவை ! இனிய இறை சேவையே!
இது மட்டுமல்லாது மருத்துவராக வாழ்கின்றோர் தன்னுடைய வாழ்நாட்களிலே, குறைந்தது ஒரு கோடி பேருக்காவது இலவச வைத்தியம் செய்திடுவேன் என்ற மன வைராக்கியத்தைக் கொண்டு இவ்வகையிலே பணியாற்றுதல் வேண்டும். தனிப்பட்ட ஒருவர் ஒரு கோடி பேருக்கு இலவச வைத்தியம் செய்திட முடியுமா என்றுதான் மேலெழுந்த வாரியாகக் கேட்கத் தோன்றும். Is it possible? என்று திகைத்திடாதீர்கள்!
சிறந்த மருத்துவராக விளங்குகின்ற ஒருவர் தம்முடைய மருத்துவ நண்பர்கள், ஆலோசகர்கள், குழுவினர்கள் துணையுடன் இந்தியாவில் ஆயிரக்கணக்கான குக்கிராமங்களில் வசிக்கின்ற ஏழைகளுக்கு மாதம் ஒரு முறையோ இரு முறையோ எத்துணை முறை வேண்டுமானாலும் ஒவ்வொரு இலவச மருத்துவ முகாமிலும் குறைந்தது 2000 பேருக்காவது இலவச மருத்துவ உதவி செய்து வந்தால் குறுகிய காலத்திலேயே இதை முடித்திடலாமே! இதைவிட மிகச் சிறந்த தெய்வீகக் கைங்கரியம் எதுவாக இருக்க முடியும்?  எனவேதான், தாம் பிறப்பெடுத்து, மருத்துவராக ஆனது இத்தகைய தெய்வீகக் காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்காகத்தான் என்ற உத்தம இறை எண்ணத்தை ஒவ்வொரு மருத்துவரும் தம்முள் பெற்றாக வேண்டும் என்பதற்காகத்தான் இத்தகைய பெரிய பெரிய மனோ வைராக்யப் பிரார்த்தனைகளைப் பெரியோர்கள் தந்துள்ளன ஏதோ ஒவ்வொரு Surgery –க்கும் ரூ.20,000 – 30,000 என பணத்தை வாங்கிக் கொண்டு, நன்முறையில் வைத்தியத்தைச் செய்தால் மட்டும் போதாது! எனவே அனைத்து மருத்துவர்களும், தம்முடைய பூர்வஜென்ம புண்ணிய சக்தியை நன்கு உணர்ந்து மருத்துவத் துறையிலே பிரகாசிப்பதற்கான ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர் வழிபாட்டு முறைகளை உணர்ந்து மேற்குறித்த நாட்களில் இங்கு கிரிவலம் வந்து தங்களுடைய மருத்துவத் துறையிலே பிரகாசித்து அற்புதமான தெய்வீக வாழ்க்கை நிலையைப் பெறுதல் வேண்டும். இதனை நீங்கள் அறிந்த குடும்ப டாக்டர் மற்றும் ஏனைய மருத்துவர்களும் உணரும்படி செய்திடுக!
ஆசிரியப் பணிக்கு அற்புதமாக அருளும் ஸ்ரீகண்ட சரபேஸ்வர மூர்த்தி!
மிகவும் புனிதமான சமுதாயப் பணிகளில் ஒன்றாக விளங்குவதுதான் ஆசிரியப் பணியாகும். இள வயதிலே குழந்தைகளுக்கு மனதிலே விதைக்கின்ற நல்விதைகள்தாம் நல்ல ஒழுக்கச் சுடராக, தார்மீக பிரஜையாக ஒவ்வொருவரையும் நன்னெறியில் உருவாக்குவதற்கு ஆசிரியப் பணி மூலமாக மகத்தான முறையிலே உதவுகின்றது. இன்னும் சொல்லப் போனால் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலுமே மிகமிகச் சிறந்த புனிதமான துறைகளில் ஒன்றாக விளங்குவது ஆசிரியப் பணி என்று சொன்னால் அது மிகையாகாது! எனினும் ஆசிரியர்கள் யாவரும் தம்முடைய நடுத்தர வாழ்க்கையிலே பலவிதமான துன்பங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது அல்லவா! அதிலும் கலியுகத்தில் தீயொழுக்கப் பிரச்னை விஷக் கிருமிகளாகப் பரவி வருகின்ற வேளையிலே ஆசிரியருடைய பணிதான் உத்தம ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் மலர்ந்திட உதவுகின்றது.
புத்திகாரகராகிய புத பகவானுக்குரிய புதன்கிழமை தோறும் திருஅண்ணாமலையில் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரரை வணங்கி அத்தி மர வேரால் ஆன சிவலிங்கத்தைச் சுமந்து அல்லது கடகந் தாரையில் வார்க்கப்பட்ட தங்கத்தால் ஆன ஸ்வர்ண லிங்க மூர்த்தியைத் தாங்கியவாறு ஆசிரியர்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வருதலால் பலவிதமான இன்னல்களுக்கு நிவர்த்தி கிட்டுவதோடு தங்களுடைய ஆசிரியத் தொழில் மிகச் சிறப்பான முறையிலே பிரகாசித்து சமுதாய மக்களிடையே நல்ல அபிமானத்தோடு பெயரும் புகழையும் பெறுவதோடு, நல்ல சந்ததியினரும் வந்து அமைவர். ஒவ்வொரு ஆசிரியரும் குறைந்தது 500 முறையேனும் திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் என்ற உத்தம வைராக்கியத்தை மேற்கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்லாது குறைந்தது ஒரு லட்சம் பேருக்காவது இலவசக் கல்வியைப் பெற்றுத் தருவதற்கு உதவுதல் வேண்டும். ஒரு லட்சம் பேருக்கு இலவச கல்வி என்றால் மலைத்து விடாதீர்கள். ஏனென்றால் ஒரு திறமையான ஆசிரியரானவர் ஒரே சமயத்தில் ஆயிரம் என்ன 2000, 3000 என எத்தனையோ பேருக்கு நற்கல்வியை இறையருளால் அளித்திட முடியும்! இவ்வகையில் ஒரு லட்சமென்ன, லட்சோப லட்சம் மக்களுக்கு இலவசக் கல்விப் பணி ஆற்றிடலாமே! இதற்கு உதவுபவர்தான் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தியாவார். பொதுவாக, ஆசிரியப்பணியில் வாழ்க்கையில் நடுத்தர வாழ்க்கை (Middle Income Group) நிலைதான் கிட்டினாலும் கூட, எதையும் பொருட்படுத்தாது ஏழ்மையையோ அல்லது மத்திய தர வாழ்க்கையையோ அடக்கத்துடன் தன்னுடைய முன் ஜன்ம விளைவுகளாகப் பணிவுடன் ஏற்று மிகவும் விநயத்துடனும் பொறுமையுடனும் ஸ்ரீசரபேஸ்வர பக்தியுடனும் கூடிய நல்வாழ்க்கையைப் பெறுதற்கு ஸ்ரீகண்ட சரபேஸ்வர மூர்த்தி பெரிதும் உதவுகின்றார்.
வியாபார விருத்திக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தி!
சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்குமே அருள்பாலிக்க வல்லவரே ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தியாவார். ஏனென்றால் சமுதாயத்தின் ஒவ்வொரு துறையிலும் எத்தனையோ இன்னல்களும் பிரச்னைகளும் ஏற்படத்தான் செய்கின்றன. எல்லாவற்றையும் கடந்து அந்தந்தத் துறையிலே பிரகாசிக்கின்றவர்கள் நிறைய உண்டு.. எந்தெந்த வகையிலே எவ்வளவு சம்பாதித்து வாழ வேண்டும் என்பதைவிட, எப்படி நன்முறையிலே சம்பாதித்து வாழ்கின்றோம் என்பதுதான் முக்கியமானதாகும். வியாபாரத் துறை என்பது சமுதாயத்திலே மிகவும் முக்கியமான அங்கத்தைப் பெற்றுள்ளது.
ஏனென்றால் இல்லறம், வெளி வாழ்க்கை என ஒவ்வொருவரும் தங்களுடைய உயிர் ஜீவனத்திற்கும் பொதுவான வாழ்க்கை அம்சங்களுக்கும், பொருட்களை வாங்கி, அவற்றைச் சமைத்து உண்டோ, பயன்படுத்தியோ வாழ வேண்டியது உள்ளது. மேலும் எவ்வாறு ஆடையிலும் உணவிலும் கர்ம வினை சக்திகள் எளிதில் பரவுகின்றனவோ, அதே போல் ஒவ்வொரு பொருளிலுமே மஞ்சள், அரிசி, உப்பு, புளி, மிளகாய், வாகனம், நாற்காலி, கடிகாரம் என எந்தப் பொருளை வாங்கும் போதும் அதன் மூலமாகப் பலவிதமான கர்மவினைப் பரிமாண மாற்றங்கள் ஏற்படுகின்றன. கர்மவினை என்றால் நல்ல வினைகளும் அதிலடங்கும்.
உதாரணமாக ஒரு புது நாற்காலியை வாங்கினால் எந்த மரம் பழைய மரக்கட்டையா, அது எதற்காவேனும் பயன்படுத்தப்பட்டதா, எங்கிருந்து வந்தது போன்ற பல அம்சங்களைப் பொறுத்து அந்த நாற்காலியின் கர்மவினைப் பாங்கு அமையும், இவ்வாறாக நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளிலும் பல கர்மவினைப் படிவுகள் இருக்கும். வியாபாரிகளில் மிகுந்த செல்வந்தர்களாக விளங்குபவர்களும் உண்டு. பணக் கொழிப்பு என்றாலே மாயா சக்தி காரணமாக அவ்விடத்தில் பஞ்சமா பாதங்களும், பாவச் செயல்களும், தீய ஒழுக்க வினைகளும் தான் கூட வாய்ப்பு நிறைய உண்டு என்றாலும், இந்த மாயைகளை எல்லாம் கடந்து நல்ல ஒழுக்கத்துடன் சிறந்து விளங்குவது என்பது ஒரு பெரிய அரிய சாதனைதான். இறையருள் கூடினால் தான் இது முடியும். எனவே, ஒவ்வொரு வியாபாரியும், தன்னுடைய வாழ்க்கை நல்ல தெய்வீகமான முறையில் அமைவதற்குப் பாடுபடுதல் வேண்டும்.
கர்மவினைகள் galore! ஜரூர்!!
வியாபாரத்தில் தார்மீகமான கொள்கைகளைக் கொண்டு இருத்தல் நடைமுறையில் சாத்தியமா என்று கேட்டிடலாம். பொதுவாக நன்முறையில் நடைபெறுகின்ற ஆசிரியப் பணியில் அவ்வளவாக கர்மவினைகள் சேர்வதில்லை. ஆனால் வியாபாரத்திலோ ஒவ்வொரு பொருளும் வாங்கி விற்கப்படும் போது அதிலே ஏற்படுகின்ற கர்மவினைப் பரிமாற்றங்கள் ஏராளம்! ஏராளம்! உதாரணமாக எங்கிருந்தோ நூற்றுக்கணக்கான மூட்டை தானியங்களை வாங்கி விற்கின்ற போது அந்த தானியங்களை எவ்வளவுதான் சுத்தப்படுத்தினாலும் சரி அந்த தானியத்திலுள்ள கல், மண், தும்பு, தூசி போன்ற அனைத்திற்குமே அந்த வியாபாரியே பொறுப்பு ஏற்க வேண்டியுள்ள தார்மீக சூழ் நிலையிலே வியாபாரத் துறையின் ஆன்மீக வடிவு அமைந்துள்ளது. இவற்றிலிருந்து எவ்வாறு மீள்வது?
பணத்தைத் தொடுவதில் பாசமாய் ஒட்டும் வினைகள்!
இதே போன்று லட்சக்கணக்கான பணத்துடன் புரள்கின்ற வியாபாரிகள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு பண நோட்டும் எந்தெந்த முறையிலே வந்தது என்பதை அறியாது அவற்றைக் கையாள வேண்டிய சூழ்நிலை இருக்கின்றதல்லவா? ஆனால் இதை அனைவரும் அறிவது சாத்யமானதா? ஒரு நாளைக்கு எண்ணுகின்ற பணக் கட்டிலே திருடப்பட்ட பணம், பிறரை வஞ்சித்து ஏமாற்றப்பட்ட பணம், அபகரிக்கப்பட்ட பணம் கள்ளப் பணம், தவறான வழிகளில் வந்த பணம், தீய ஒழுக்கங்களில் ஈடுபட்டு சம்பாதித்த பணம், நன்முறையிலே வந்த பணம் என பலவிதமான அதர்ம முறையிலே/ நன்னெறியிலே வந்த பணமும் அவரிடம் வந்து சேர வாய்ப்புண்டு.
இதற்கும் ஒரு வியாபாரிக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையே, அவர் தன்னுடைய பொருளை வாங்கி விற்றதற்கான கிரயமாகத்தானே பணத்தைப் பெறுகிறார் என்று எண்ணத் தோன்றும். ஆனால் தன்னிடம் வருகின்ற பணத்திற்கும் வெளியில் செல்கின்ற பணத்திற்கும் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் எத்தனையோ உண்டு. இதற்காகத் தான் கல்லாப் பெட்டியை அக்காலத்தில் குறித்த மரத்திலே, வடிவிலே, திசையிலே செய்து அதிலே பல எந்திரங்களைப் பொறித்து வைத்திருப்பார்கள். இவையெல்லாம் பணத்தில் ஏற்படுகின்ற கர்மவினைகளிலிருந்து ஒருவரைக் காக்கின்ற முறையிலே அமைக்கப்பட்ட வழிபாட்டு முறைகளாகும். கல்லாப் பெட்டியில் எப்போதும் மல்லிகைப் பூக்கள் நிறைந்திருக்க வேண்டும்.
கல்லாப் பெட்டிக்கு உரிய தெய்வீக வழிபாட்டு முறைகள் எத்தனையோ உண்டு. இதனை முறையாகக் கடைபிடித்தால் தான் தன்னிடம் புழக்கத்திற்கு வரும் பணத்திலுள்ள கர்மவினைகள் அதனைக் கையாள்கின்றவரைத் தாக்காமல் காத்திடலாம். இவ்வாறாக, வியாபாரத் துறையில் எத்தனையோ கண்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றை நிவர்த்தி செய்வதற்கான சித்தர்களின் அருள்வழி முறைகளை ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தி வழிபாடுகளாக நாம் இங்கு அளிக்கின்றோம்.
செவ்வாய்க்கிழமைகளிலும், திருவாதிரை நட்சத்திரத்தன்றும் ஆலமரத்தின் வடக்கு வேரால் ஆன ஸ்ரீலிங்க மூர்த்தியைச் சுமந்து திருஅண்ணாமலையில் கிரிவலத்தை ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியிடம் தொடங்கி, அவரிடமே நிறைவு செய்வதால் பலவிதமான கண்டங்களிலிருந்து எளிதில் விடுபடலாம். ஒவ்வொரு வியாபாரியும் தங்களுடைய வாழ்நாளிலே குறைந்தது ஒரு கோடி பேருக்காவது அன்னதானம் செய்திடுதல் வேண்டும் என்ற நேர்த்தியை வைத்துக் கொள்ளுங்கள். அவ்வவ்ப்போது இயன்ற அளவில் அன்னதானம் செய்து வருதலும் வேண்டும். ஒரு கோடி பேருக்கு என்றால் அதிர்ந்து விடாதீர்கள்! ஏனென்றால் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரரை ஆழ்ந்த நம்பிக்கையுடன் வணங்கி நீங்கள் அவருடைய அனுக்ரஹத்தைப் பெறுகின்ற போது ஒரு கோடி பேரென்ன, எத்தனையோ கோடி பேருக்கு அன்னதானம் அளிக்கின்ற வகையிலே உங்களை ஆளாக்குவது ஸ்ரீசரபேஸ்வரருடைய பொறுப்பாக ஆகின்றதல்லவா! ஒரு கோயிலில் ஒரு படி அரிசி ரவையை, ஜீனியுடன் சேர்த்து எறும்புக்குக்கிட்டால் அது ஆயிரமாயிரம் எறும்புகளின் வயிற்றை நிரப்புமே! அதற்காக வெறும் எறும்புகளுக்கு மட்டுமே உணவிட்டு ஒரு கோடி ஆகுமெனக் கணக்கிட்டு விடாதீர்கள்!
ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தியை முறையாக வழிபட்டு கிரிவலம்தனைக் குறித்த நாட்களில் செய்வீர்களேயானால் அன்னதான சக்தி உங்களிடம் மிகுந்து உங்களையும் அறியாமலேயே பல சத்திரங்களைக் கூட்டிப் பலசத்சங்க பூஜையாக ஆங்காங்கே அன்னதானச் சாலைகள் அமைக்கின்ற வகையிலே உங்களுடைய பொருளாதார உய்வும் முன்னேற்றமும் அமைந்து விடும். எவ்வளவோ நேர்மையாக உண்மையாக இருந்தாலும் கூட வியாபாரத்தில் பலவித கர்மவினைகளைக் கையாள வேண்டிய நிர்பந்தம் ஏற்படத்தான் செய்கின்றது. எனவே நிறைய கண்டங்களும் கர்ம வினைக் குழிகளும் விளங்குவதே வியாபாரத் துறையாகும். இவற்றில் சிக்காது வாழ உதவுவதே கடவுள் அருளாம். எனவே, அனைத்து வியாபாரிகளும் காய்கறிகள், பழங்கள், இரும்பு, மரம், சிமெண்ட், மளிகை, எண்ணெய், தானியங்கள் என பல துறைகளையும் சார்ந்த வியாபாரிகள் திருஅண்ணாமலை ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தியை முறையாக குறித்த ஹோரை நேரத்தில் வணங்கி திருவாதிரை நட்சத்திரத்தில் அபிஷேக ஆராதனையுடன் கிரிவலம் செய்து தக்க பரிகாரத்தைப் பெறுவது மட்டுமல்லாது, வியாபாரத் துறையில் பிரகாசிப்பதற்கான அனைத்து நல்வரங்களையும் அனுக்ரஹங்களையும் பெறுவதற்கு இந்த சரபேஸ்வர வழிபாடு பெரிதும் துணைபுரியும் என்பதை உணர்ந்து தக்க அன்னதானத்துடன் ஸ்ரீசரபேஸ்வர வழிபாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டிட வேண்டும்.
கொடியோரிடமிருந்து மீள.... பதவி, பணம், ஆள்பலம், அசுர புத்தி, கொடூரத் தன்மை காரணமாகப் பலருடைய இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்போர் ஏராளம்! இக்குணங்களுடைய மேலதிகாரிகளும் குடும்பத்தினரும், உறவினர்களும் அமைவது தற்போது சகஜமாகி விட்டது. இத்தகைய அசுரத் தனமான குணங்களை உடையவர்களிடமிருந்து மீண்டு நன்முறையில் வாழ்க்கையைப் பெறுவதற்கு துலா அஞ்சன நேத்ரா தீட்சை சக்தி நிறைந்தவரான ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரரை வணங்கி, உத்திராட நட்சத்திரத்தில் கிரிவலம் வருதல் வேண்டும். பொதுவாக மேற்கண்ட  நீதி, வழக்கு, காவல்துறையில் உள்ளோர் அரச மரத்தின் வடக்கு வேரால் ஆன சிவலிங்க மூர்த்தியைத் தாங்கியும், நீலம் கலந்த தங்க லிங்க மூர்த்தி ஸ்வர்ண மூர்த்தியைத் தாங்கியும், கிரிவலம் வந்து தங்களுடைய நேர்த்திகளை நிறைவேற்ற வேண்டும். இதனைத் தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்து வந்தால் நீதி, காவல் துறையில் ஏற்படுகின்ற பலவிதமான இன்னல்களுக்கும் விடிவு ஏற்பட்டு நன்முறையில் வாழ்க்கை அமையும். 
மந்திர சக்தியில் சிறந்து விளங்கிட..... எத்தனையோ உபதேச மந்திரங்களைப் பெற்று அவற்றை முறையாகக் கடைபிடிக்க முடியாமல் திணறுவோர் பலரும் உண்டு. இல்லற வாழ்க்கை முறையில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக உபதேச மந்திரங்களைச் சரியாகத் தொடராமல் கைவிட்டவர்களும் உண்டு மேலும் ஆலயங்களில் மூர்த்தி வழிபாடுகளை மேற்கொள்வோர் நல்வினயம், ஆசாரம், அனுஷ்டானம் ஆகியவற்றில், சிறந்தவர்களாகவும், நல்லொழுக்கம் உடையவர்களாகவும், பக்தியில் மேம்பட்டவர்களாகவும், உத்தம அடியார்களாக விளங்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதிலும் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர்க்கு வழிபாடு செய்யும் பாக்கியம் பெற்றோர், வேத ஆகம நியதிகளில், பிரகாசிப்பவராகவும், இறை பக்தியில் தலைசிறந்தவர்களாகவும், மக்களுக்கு பக்தியை எடுத்துரைப்பதில் தம்மை அர்ப்பணிப்பவர்களாகவும், சுயநலமின்றி இறைச் சேவையில் மேம்பட்டவராகவும், ஆசார அனுஷ்டானங்களை பெரியோர்கள் சொற்படி கேட்டு, கற்று, உணர்ந்து, முறைப்படி நடப்பவர்களாகவும் விளங்குதல் வேண்டும்.
தெய்வத்தின் அருகில் நின்று பூஜை செய்யும் உத்தம பாக்யம் பெற்றோர்க்கு எத்தகைய பொய்மையும், பஞ்சமாபாதகங்களும், தீயவினைகளும், தீயொழுக்கமும் கூடவே கூடாது. ஏனென்றால் எந்த அளவிற்கு உத்தம பக்தியுடன் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வர மூர்த்தியை வழிபடுகின்றோமோ, ஆராதிக்கின்றோமோ, அந்த அளவிற்கு தேஜஸ், மற்றும் பக்தி நிலையும் கூடிக் கொண்டே செல்கின்றன. நாம் மட்டும் இறைவனை உணர்தல் போதாது. இறைமையைப் பிறருக்கும் உணர்வித்தல் வேண்டும் என்பதற்காகத் தான் இறை மூர்த்திகளை அருகிலிருந்து பூஜை செய்யும் எவருக்கும் கிட்டாத உத்தம பாக்கியத்தைத் தந்து அருளியுள்ளார் என்பதை உணர்தல் வேண்டும்.

அமுத தாரைகள்

1.  ஸ்ரீநாராயண பரதேசி சித்தர் நவின்ற நல்ஹோரை பூஜா விதிகள் 
ஸ்ரீநாராயண பரதேசி என்பார் அதிஅற்புத சித்புருஷர் ஆவார். ஹோரா வழிபாடுகளில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர். எந்த கிரஹ ஹோரையில், எந்த தெய்வ மூர்த்தியை எவ்வகையில் வழிபட வேண்டும். எந்த நாளில், எந்த ஹோரை நேரத்தில் கிரிவலத்தைக் கைக்கொள்ள வேண்டும். எந்த ஹோரையில், குறித்த தெய்வ மூர்த்திகளுக்கான ஹோம வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற ஹோரை பூஜா விதிகளை சிறு வயதிலிருந்தே தம் குருவிடமிருந்து கற்று உணர்ந்து தேர்ந்து இன்றும் கடைபிடித்து வருபவர். இதனால் அவருடைய உடலில் ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும், ரோமத்திலிருந்தும், நகக் கணுக்காலில் இருந்தும், விரல் ரேகைகளிலிருந்தும் தேஜோமயமான ஒளிக் கதிர்கள் இன்றும் வெளிப்பட்ட வண்ணம் உள்ளன. என்றும் வாழும் ஏகாந்த ஜோதியான, நித்ய சித்புருஷராகிய இப்பெருமான் எத்தனையோ உத்தம இறைநிலைகளை அடைந்தாலும் இன்றைக்கும், புனிதமான பரதேசி கோலத்தில் தான் தம்மை வெளிப்படுத்திக் கொள்கின்றார். யாரொருவர் ஒவ்வொரு தினத்திற்கும் உரித்தான ஹோரா நேர தெய்வீக இரகசியத்தை குருவருளால் அறிந்து சரியாக அந்நேரத்தில் எவ்வித சுயநல பிரார்த்தனையுமின்றி சமுதாய இறைப்பணிகளுக்காகத் தம் கிரிவல பலன்களை அர்ப்பணித்து திருஅண்ணாமலையை வலம் வருகின்றாரோ இன்றைக்கும் நரநாராயண தரிசனப் பகுதியில் ஸ்ரீநாராயண பரதேசியின் தரிசனம் அவருக்கு எவ்வுருவிலும், அரூபத்திலும் கூட நிச்சயமாகக் கிட்டும்.

2. திருஅண்ணாமலையில் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர் மஹிமை
உயர்ந்த வருமானம் காரணமாக, வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு பலவிதமான துன்பங்களுக்கு ஆட்பட்டு, தாய்நாடு திரும்பினால் போதும், எப்போது திரும்புவோம் என்று ஏங்கி வேதனையுறுவோர் பலரும் உண்டு. இவர்கள் நன்முறையில் தாய்நாட்டிற்குத் திரும்பிடவும், உழைத்த வருமானத்தைப் பெற்றிடவும் இவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்தோர் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து, உத்திராட நட்சத்திர தினத்தன்று தினசரிப் பிரதோஷ நேரத்தில் (மாலை 4 ½ மணி முதல் 6 மணி வரை) கிரிவலத்துடன் வழிபட்டு வருவார்களேயானால், வெளிநாடு சென்றோர் நன்முறையில் திரும்புவர். ஸ்ரீசரபேஸ்வரர் மூர்த்தி விண்ணில் அவதார அம்சங்களைப் பெற்றவராதலின் கடல் கடந்த பிரபஞ்ச ஜோதி தத்துவம் நிரம்பியவராக விளங்குகின்றார். மேலும், பஞ்ச பூத அக்னித் தலமாக திருஅண்ணாமலை விளங்குவதால் பிரபஞ்சத்திற்கே அனைத்துக் கோடி லோகங்களுக்குமான அக்னியையும், ஒளியையும் தருபவராக விளங்குகின்ற ஸ்ரீஅருணாசலப் பெருமானின் ஜோதி ப்ரவாகத்தில் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரர் பரிணமிப்பதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விதமான துன்பங்களுக்கும் நிவர்த்திகளைத் தரவல்ல பிரதோஷ மூர்த்தியாய் விளங்குகின்றார். ஸ்ரீசரபேஸ்வரர் அவதார நேரமும், பிரதோஷ நேரமே என்பதை உணர்ந்து கொண்டு உத்திராட நட்சத்திர தினத்தில், பிரதோஷ நேரத்தில் ஸ்ரீகண்ட நிவர்த்தி சரபேஸ்வரரை வணங்கி கிரிவலத்தைத் துவங்கி அவர்தம் திருவடிகளில் கிரிவலத்தை நிறைவு செய்தலால் பலவிதமான துன்பங்களுக்கும், குறிப்பாக அயல்நாட்டு வியாபாரம், வெளிநாட்டில் வசித்தல் போன்றவற்றில் ஏற்படும் இடர்களுக்குத் தக்க தீர்வைப் பெற்றிடலாம்.

அய்யர் மலையில் தீபம்

அய்யர் மலையில் திருக்கார்த்திகை தீபம்
மலைத்தலங்களில் கார்த்திகை தீபம் ஏற்ற உதவுவதால் அன்னதானம் போல் இதுவும் தீபஜோதி தரிசன தானமாகிறது. அளப்பரிய புண்ணியத்தைத் தருவதாகுமிது! அக்னிபகவானின் கருணைக் கடாட்சத்தையும் பெற்றுத் தரும்! அய்யர் மலையில் நம் ஆஸ்ரம் சார்பில் இவ்வாண்டும் இறையருளால் தீபம் ஏற்றப்பட்டு அன்னதானமும் நடைபெற உள்ளது.  கடந்த சில ஆண்டுகளாக திருச்சி மாவட்டம் குளித்தலை அருகிலுள்ள அய்யர்மலை கிராமம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் பேராதரவினாலும், அய்யர்மலை ஸ்ரீரத்னகிரீஸ்வர சிவாலய நிர்வாகத்தின் பெரும் ஒத்துழைப்பாலும், நம் திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பாக, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் குருவருள் மேற்பார்வையில் கார்த்திகை தீபப் பெருவிழாவின் போது அய்யர்மலை மலை, உச்சியில் கார்த்திகை தீபம் மூன்று நாட்களுக்கு ஏற்றப்பட்டு சுற்றுப்புறத்திலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் வசிக்கின்ற லட்சக்கணக்கான மக்களுக்கும், கோடிக்கணக்கான உயிரினங்களுக்கும் கார்த்திகை தீப ஒளி தரிசனம் கிட்டுமாறு இறையருளாலும், குருவருளாலும் அற்புத இறைப்பணி நடைபெற்று வருகிறது என்பது யாவரும் அறிந்ததே!
இவ்வாண்டும் கிராம மக்களின் அன்புப் பேராதரவுடனும் அய்யர்மலை சிவாலய நிர்வாகத்தின் நிறைந்த ஒத்துழைப்பாலும் அய்யர்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் பெருவிழாவும் ஐந்து நாட்களுக்கு அன்னதானமும் நம் ஆஸ்ரமத்தின் சார்பாக நடைபெறவுள்ளது என்பதை மிகவும் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கின்றோம். 23.11.1999 அன்று அய்யர்மலையில் கார்த்திகை தீபம் இறையருளால் ஏற்றப்பட்டு 21.11.1999 முதல் 25.11.1999 வரை 5 நாட்களுக்கும் குருவருள் கூடிய திருவருளாலும் அன்னதானமும் நடைபெறும் இந்த அற்புதமான இறைக் கைங்கரியத்தில் பங்கு கொள்ள விரும்புவோர், எண்ணெய், திரி, கற்பூரம், போன்ற தீபத்திற்கான பொருட்களையும், அன்னதானத்திற்கான பொருட்களையும் முன்கூட்டியே தந்து உதவுமாறு வேண்டுகின்றோம். தீபத்திற்கான எண்ணெய், திரி அளிப்போர் பலரும் ஒன்றாகச் சேர்ந்து முழு எண்ணெய் டின்னாக மொத்தமாக வாங்கி மலை உச்சியில் கொண்டு வந்து சேர்க்குமாறு மிகவும் அன்புடன் வேண்டுகின்றோம்.
செங்குத்தான படிகளாக இருப்பதால் பொருட்களைக் கீழிருந்து மலை உச்சிக்கு எடுத்துச் செல்வதற்கே பெரும் கூலிச் செலவு ஆகின்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு அன்னதானம், வஸ்திர தானம், பாதணி தானம், விளக்கு தானம் போன்ற பலவகை தான, தரும சக்திகள் அருளைப் பெற்றுத் தருவனவாக விளங்குகின்றனவோ, இதே போல பல்லாயிரக்கணக்கான மக்களும், ஜீவன்களும் கண்டு பரமானந்தம் அடையும் பொருட்டு கார்த்திகை தீபப் பேரொளியை ஏற்றி ஜாதி, மத, இன, குல, பேதமின்றியும், புழு, பூச்சி முதல் விலங்குகள், மனிதர்கள், தேவர்கள் என யாவருமே ஸ்ரீஅய்யர்மலை சிவஜோதி தரிசனத்தைப் பெரும் வகையில் தீபத்தை ஏற்ற உதவுவது மிகப் பெரும் தீப தானமாக விளங்குகிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய தான, தரும சக்திகளே சாசுவதமானவையாக என்று எங்கும் நிரந்தரமாக நம்மையும் நம் சந்ததியினரையும் பேணிக் காக்கும். எனவே வரும் பிரமாதி வருடக் கார்த்திகை தீபப் பெருநாளில் (23.11.1999) அய்யர்மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கான தங்களுடைய கருணை கூர்ந்த உதவியை முன்னரேயே தந்து அருட்பணி ஆற்றிட வேண்டுகின்றோம். ஒரு வாரத்திற்கான சத்திரம் வாடகைக்கு எடுக்கப்பட்டு தீபம் மற்றும் அன்னதானத்திற்கும் ஏற்றும் திருவைபவத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு, எங்கள் ஆஸ்ரமத்தின் சார்பில் அடியார்கள் ஆத்மார்த்தமாக இறை நாமாக்களை ஓதிய வண்ணம், ஹோமம் மற்றும் பல பூஜைகளின் ஊடே தாமே சமைதது, சித்தர்கள் அருளிய வகையிலே அன்னம் பரிபாலிப்பதையும் அறிந்திட பக்த கோடிகளை வேண்டுகிறோம். பொருளுதவி தர விரும்புவோர் “ஸ்ரீலஸ்ரீலோபா மாதா அகஸ்தியர் சபை அறக்கட்டளை (Sri-la-Sri Lobhamatha Agasthiar Sabha Charitable Trust) என்ற பெயரில் வங்கி / செக் / DD எடுத்து சென்னை முகவரிக்கோ திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கோ அனுப்பிட வேண்டுகிறோம்.
பல அற்புதமான மூலிகை சக்தி நிறைந்த பாறைகளையும் மூலிகா விருட்சங்களையும் கொண்ட அய்யர்மலையில் எந்நேரமும், எப்போதும் கிரிவலம் வந்திடலாம். அய்யர்மலை கிரிவல மஹிமை பற்றி சித்புருஷர்கள் அருளியுள்ளனவற்றை எம் ஆஸ்ரம வெளியீடான அய்யர்மலை கிரிவல மஹிமை எனும் தெய்வீக நூலில் காணலாம்.

திருஅண்ணாமலை தீபம்

பிரமாதி ஆண்டு திருஅண்ணாமலை தீப கிரிவல மகாத்மியம்
ஸ்ரீஅகத்திய மாமுனியால் பொழியப் பெற்றது
நம்முடைய ஆயுளில் ஸ்ரீபிரமாதி வருடம் எத்தனை தடவைதான் வரும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். எனவே, மனித வாழ்விலே கிடைத்தற்கரிய இந்த பிரமாதி வருடத்தில் ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் திருஅண்ணாமலையில் நிகழ்த்துகின்ற அஷ்டமா சித்தி உபதேச அமர்வுக் கோலத்தை மானசீகமாகவோ, சூட்சுமமாகவோ, குருஅருள் பெற்றால் அற்புத வடிவுடையாராகவோ அரூபமாகவோ தெளிவுறக் காண்கின்ற பாக்கியத்தைப் பெற்று விடுங்களேன்! நீங்கள் செய்ய வேண்டிய எளிதான காரியம் என்னவெனில் வரும் பிரமாதி வருடக் கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் போது திருஅண்ணாமலை ஆலயத்தில் நிகழ்கின்ற கொடியேற்ற நாள் முதல் தீபம் முடிகின்ற நாள்வரை ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் அஷ்டமா சித்தி அமர்வு உபதேசக் கோல தரிசனக் கதிர்கள் திருஅண்ணாமலையில் பரிணமித்துக் கொண்டிருக்கும்.
இதன் பிறகு திருஅண்ணாமலையில் வேறுவிதமான யோக முறைகளை ஸ்ரீஅகத்தியப் பெருமான் மேற்கொள்வதால், நாம் நன்கு உணர்ந்து அறிவதற்காக அரும் பெரும் சித்புருஷர்களால் அருளப்பட்டுள்ள இந்த அகஸ்தியரின் அஷ்டமா சித்தி மந்திர உபதேச அமர்வுக் கோலச் சிறப்பினைக் கேட்டு, படித்துத் தெளிவு பெற்று வாழ்க்கையில் நன்முறையில் பயன்படுத்திக் கொள்வோமாக! ஆம்! இந்த பிரமாதி வருடத்தில் ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் திருஅண்ணாமலையிலே அஷ்டமா சித்திக்கான உபதேசக் கோலத்தை மேற்கொள்ளப் போகின்றார் அல்லவா! எங்கு, எப்போது, எவ்விதத்தில் இவையெல்லாம் அறிய வரும் என்பதெல்லாம் தெய்வீக ரகசியங்கள் என்றாலும் எந்த அளவிற்கு இவற்றை அளிக்க வேண்டும் என்று அகஸ்திய கிரந்தங்களே வர்ணிக்கின்றனவோ அந்த அளவிற்கு நம் குருமங்கள கந்தர்வாவின் அருள் துணையோடு உங்களுடைய தெய்வீக மேன்மைக்காக ஜாதி, மத, இன பேதமின்றி யாவரும் அருள் பெறும் வகையில் இந்த தெய்வீக ரகசியங்களைச் சமர்ப்பிக்கின்றோம்.
ஏனிந்த விதவிதமான யோகாசனக் கோலங்கள் ?
மகான்களும், யோகியர்களும், சித்புருஷர்களும், எத்தனையோ விதமான யோகாசன அமர்வுக் கோலங்களை ஏன் மேற்கொள்கின்றார்கள்? இந்த அமர்வுக் கோலங்கள் எல்லாம் பலவிதமான சுவாசக் கலைகளைக் குறிக்கின்றன. சுவாசக் கலைகளை குறிப்பிட்ட விகிதத்தில் பந்தனப்படுத்துகின்ற யோக வித்தையை நாம் அறிந்து கொண்டோமேயானால், பலவிதமான காரிய சித்திகளை எளிதில் பெற்றுவிடலாம். ஆலயங்களில் தீர்த்தமாடுதல், அடிபிரதட்சிணம்  செய்தல், மாவிளக்கு ஏற்றுதல் போன்ற பலவிதமான தெய்வீக வழிபாடுகளை மேற்கொள்கின்றோமல்லவா! இவற்றில் எல்லாம் நாம் அறிந்தோ, அறியாமலோ நம்முடைய சுவாச பந்தனங்கள் அந்தந்தக் காரியங்களுக்கு ஏற்றவாறு அடையப்பெற்று அந்தந்த முறையிலே குறித்த சுவாசங்களை நம்மையும் அறியாமல் மேற்கொள்கின்ற போது தான் காரிய சித்திகள் கிட்டுகிறன. இதுவே நேர்த்திகளின் தெய்வீக இரகசியம்!
ஸ்ரீஅகத்தியர் யோகம் பூணும் முறை
வருகின்ற பிரமாதி வருட கார்த்திகை தீப உற்சவத்தின் போது ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் திருஅண்ணாமலையிலே “கருட நேத்ரக் கொம்புப் பாறை” என்னும் விசேஷமான பகுதியில் வந்தமர்ந்து தவக்கோலம் பூண்கின்றார். திருஅண்ணாமலையில் நிறைந்திருக்கும் கோடிக்கணக்கான இறை ரகசியங்களில் இதுவும் ஒன்று. இப்பாறையின் அருகில் உள்ள சூட்சும ஒளி விருட்சத்தினை ஒட்டியுள்ள வெண் நாவல் மரத்தின் வடக்கு வேர்ப்பகுதியின் வளாகத்தில் ஸ்ரீஅகஸ்தியர் இந்த அமர்வுக் கோலத்தை மேற்கொள்கின்றார். ஏனென்றால் முதன் முதலாக ஏற்படுத்தப்பட்ட பிரபஞ்சத் தாவரங்களுள் ஒன்றாக விளங்குவது தான் “வெண் நாவல்“ மரமாகும். இதனுடைய வடக்கு வேர்ப்பகுதிக்கு மந்திர சித்தியைத் தரவல்ல சக்திகள் மிகுந்து காணப்படுகின்றன. எனவேதான் பலவிதமான “தாவர லிங்கங்கள்” குறிப்பாக வெள்ளெருக்கு வேர் விநாயகர், அரசமர வேர் லிங்கம் போன்றவை வடக்கு திசை வேராக இருந்தால் அவற்றிற்கு தெய்வீக கடாட்சம் நிரம்பியிருக்கும். இங்கு வடக்கு வேரின் மையத்தில் அஷ்டமா சித்தி யோக அமர்வுக் கோலம் கொள்கின்ற ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் வெண்நாவல் மர வேரின் வடக்குப் பகுதியில் தோன்றுகின்ற “வலம் சங்குத்ரி“ எனப்படும் அற்புதமான மூலிகைக்கான “சித்து ஊர்வலிக் கொத்து“ பீஜாட்சர மந்திரங்களை தம்முடைய சிஷ்யர்களுக்கு இவ்விடத்தில் தான் உபதேசம் செய்கின்றார்.
சித்து ஊர்வலி பீஜாட்சரக் கொத்து
“சித்து ஊர்வலி” என்பது சரக் கொன்றைப் புஷ்பங்கள் போல பல அற்புதமான பீஜாட்சர மந்திரத் தொகுப்புகளைக் கொண்டுள்ளதாகும். இதனை அனைத்து இடங்களிலும் உபதேசிக்கவோ, ஓதிடவோ இயலாது. குறிப்பிட்ட யோகாசன அமர்வுக் கோலத்தில் குறித்த மூலிகைகளின் பிரசன்னத்தில் குறிப்பிட்ட விருட்சத்தின் நிழல் பகுதியில் தான் இதனை உபதேசிக்க இயலும். எனவேதான் இவை ஊர்த்வாந்த்ர பீஜாட்சரக் கொத்து மந்திரங்களாக விளங்குகின்றன. இத்தகைய யோகத் தகுதிகளாய்க் கொண்டு விளங்குவதுதான் திருஅண்ணாமலையில் கருட நேத்ரக் கொம்பு பாறையாகும்.
பிரமாதி வருடத்தின் கார்த்திகைத் தீபப் பெரும் உற்சவத்தில் குறித்த நேரத்தில் இங்கு வரும் விஸ்வாட்ச கருடப் பறவை கொம்புப் பாறையில் அமர்கின்ற போது அதனுடைய தெய்வீகமான வெண்கழுத்துப் பகுதியில் சூரியக் கதிர்கள் பட்டு, பிரகாசித்து, அருகிலுள்ள சூட்சும மரத்தின் ராமாயணத்தில் வருகின்ற ஆச்சா மர அம்சங்களைப் போல ஊடுருவிப் பாய்ந்து வெண் நாவல் மரத்தின் வடக்குப் பகுதி வேர்ப்பகுதியில் அக்கிரணங்கள் தொக்கி நிற்கின்ற போது இக்கிரண சக்திகளை “வலம் சங்குத்ரி“ மூலிகையானது தன்னுள் கிரகித்துக் கொள்கின்றது.. இந்த ஒளிக்கதிர்களின் பிரமாணத்தின் ஊடேதான் ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் அஷ்டமா சித்தி அமர்வுக் கோலத்தை ஏற்று மந்திரங்களை உபதேசம் செய்கின்றார்.
சித்தர்களுக்கும் கூட மந்திர உபதேச சித்திகளைப் பெறுதற்கான நியதிகள் உண்டு. அவர்கள் இவற்றை எளிமையாகப் பெற முடியுமெனினும், சாதாரண மனிதர்களைப் போலவே அவர்கள் தம்மை பாவித்துக் கொண்டு அனைத்து விதமான கடுமையான விரத, பூஜா யோக நியதிகளுக்கும் தம்மை ஆட்படுத்திக் கொள்கின்றார்கள். இதனை உபதேசமாகப் பெருகின்ற சித்புருஷர்கள் எத்தகைய யோக நிலைகளைப் பெற்றிருக்க வேண்டும் தெரியுமா? நம்முடைய சுவாசத்தில் பலவிதமான கலைகள் இருந்தாலும், இவற்றில் முக்கியமானவை, சூரிய கலை, சந்திர கலை, சூழ்முனை சுவாச பந்தனங்களாகும். ஒவ்வொரு கலைக்கும், பஞ்சபூதங்களுக்கு ஏற்றவாறு ஐந்து விதமான பூத, சுவாச பந்தனங்கள் உண்டு. அஷ்டமா சித்துக்குரித்தான “சித்து ஊர்வலி பீஜாட்சர” மந்திரக் கொத்துக்களை உபதேசமாகப் பெறுகின்ற போது சூரிய கலையிலே தேயு பூதத்தின் ( அக்னிபூத) சுவாசத்தைப் புகுத்தி அதனை 1:2:2 என்ற பங்குலே உள் இழுத்து ரேசித்து பூரித்து கும்பித்து நடுநிலையில் நிறுத்திடுதல் வேண்டும். இவையெல்லாம் படிப்பதற்கோ, கேட்பதற்கோ சற்றுக் கடினமாக இருந்தாலும், இதனுடைய தாத்பரியம் என்ன வென்றால் இவற்றையெல்லாம் குருமூலமாகக் கற்றால் தான் அஷ்டமா சித்திகளைப் பெறுதல் இயலும் என்பதை உணர்விப்பதேயாகும்..!
குருவின்றி மந்திரம் பலிக்காது!
இதனைப் படித்தவுடனேயே இதனைச் செய்து பார்க்கலாமா என்ற எண்ணம் தான் முதலில் தோன்றும். எந்த மந்திரமுமே அதற்குரித்தான சத்குருவின் அனுகிரகமாக, ஆசியாக மலர்ந்தால்தான் அது சாசுவதமான பலன்களை அளிக்கும். இல்லையெனில் பலவிதமான சித்தி பூதங்களுக்கு ஆட்பட்டு அவசரக் கோலத்தில் சித்திகளுக்குரித்தான சக்திகளையும் உடல் சக்தியையும் இழந்து கஷ்டப்பட நேரிடும். இதுதான் தற்காலத்தில் பெரும்பாலும் பலருக்கும் நிகழ்ந்து வருவதாகும். தானே சுயமாக சில மந்திரங்களை உபதேசம் செய்து கொண்டு வெறும் புத்தக அறிவாக குறித்த எண்ணிக்கையில் ஜபித்து பல பரிபூரணமில்லாத சித்திகளைப் பெற்று அவசர கோலத்தில் அவற்றைத் தவறாகப் பயன்படுத்தி இறுதியில் அனைத்தையும் இழந்து சித்தம் கலங்கி அவமானம் அடைகின்றதைத் தான் இன்று நாம் இந்தக் கலியுகத்தில் காண்கின்றோம்.
சங்க பாலக சித்தர்கள் 
பிரமாதி வருடக் கார்த்திகை தீபக் கொடியேற்று நாள் முதல் தீபம் மலர்ந்து முடியும் வரை இந்த சங்க பாலக சித்தர்கள் திருஅண்ணாமலைத் திருத்தலத்திலே எப்போதும் கிரிவலம் வந்த வண்ணமாகவும், வலம் சங்குத்ரி மூலிகையைக் காப்பவர்களாகவும் திகழ்கின்றார்கள். தீபப் பெரு விழாவின் போது திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற அனைவருக்குமே சங்க பாலக சித்தர்களின் அனுகிரகம் கிட்டப் பெறினும் ஐந்து வயது முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கு இந்த கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் போது இந்த சங்க பாலக சித்தர்களின் அனுகிரஹம் விசேஷமாக வந்து சேர்கின்றது. அஷ்டமா சித்திகளுக்கான மந்திரங்களைப் பெறுவதற்கு முன்னால், குறித்த சில உச்சாடன மந்திரங்களை சித்து ஊர்வலி பீஜாட்சர மந்திரத்திற்கான அடிப்படையாகச் செய்து வருதல் வேண்டும். கமன பந்தனம், லலாட நந்தனம், உச்சாடன பகடு, மல்ல தம்பனம், ஆசன கமளி என்ற பஞ்சபூத சக்திகள் நிறைந்த ஐந்து விதமான சித்தி மந்திரங்களை கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் போது வலம் சங்குத்ரி விருட்சத்தின் அருகே ஓதி குறிப்பிட்ட முறையிலே உச்சாடனமும் செய்து வர வேண்டும். இதற்குரித்தான அணுகு முறைகளை சங்கபாலக சித்தர்களே வரும் தீபப் பெருவிழாவின் போது ஸ்ரீஅகஸ்தியப் பெருமானுடைய  நேத்ர கடாட்சமாகச் செய்து வருகின்றார்கள்!
இவற்றை முறையாகக் கடைபிடித்தால் தான் வலம் சங்குத்ரி மூலிகை ஆங்கே தோன்றும். இந்த மந்திரங்களை நன்கு உரு ஏற்றி தீபதரிசனம் பெற்ற பிறகு தான் ஸ்ரீஅகஸ்தியப் பெருமான். தம்முடைய அஷ்டமா சித்திகளுக்கான உபதேசங்களைப் பரிபூரணம் அடையச் செய்கின்றார். எனவே அஷ்டமா சித்தியைப் பெறுவதற்கு முன், கிளை உபதேச மந்திர உச்சாடனங்களும் நிறைய உண்டு! படிப்பதற்கே இத்தனை கடினமாக இருக்கின்றதே, எதுவும் புரியவில்லையே, ஏன் இத்தனை பரிபாஷைகள்? எத்தனையோ கஷ்டமான அணுகு முறைகளைத் தான் வைத்திருக்கின்றார்களே, இதனால் நமக்கு என்ன பயன் என்று எண்ணம் தோன்றுகின்றதல்லவா? அஷ்டமா சித்திகள் என்றால் தெய்வீகத்திற்குப் பயன்படுவது மட்டுமல்லாது நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படுகின்ற எத்தனையோ பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தரக்கூடியதாகவும், காரிய சித்திகளைப் பெற்றுத் தருவதாகவும் அவை விளங்குகின்றன என்பது நாம் அறியாத தெய்வீக ரகசியமாகும். அஷ்டமா சித்திகளைப் பெற்றால் நம் வாழ்க்கைப் பிரச்னைகளெல்லாம் ஒரு தூசுதான்! ஏனென்றால் பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருளாதார, அரசியல், சமுதாயப் பிரச்னைகளைத் தீர்க்க வல்லவையே அஷ்டமா சித்திகளாம்.
கிரிவலத்தில் கிட்டும் அஷ்டமா சித்தி ஒட்டுப் பலன்கள்
எனவே நம்முடைய மனம் அஷ்டமா சித்திகளைப் பற்றி நாடாவிட்டாலும், அது நமக்கு சாத்யமோ இல்லையோ, நமக்கு வருகின்ற துன்பங்களைக் களைவதற்கான மன உறுதியினையும், குரு பக்தியினையும், தெய்வீக சக்திகளை பெறுவதற்காகவும் இந்த அஷ்டமா சித்தி கிரணங்கள் உதவுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ளவாவது வேண்டும். எனவே, வருகின்ற பிரமாதி வருடத்தில் திருஅண்ணாமலையில் கொடியேற்று நாள் முதல் தீபம் மலர்ந்து முடியும் நாள் வரை கண்டிப்பாக அனைவரும் தினசரி கிரிவலம் செய்து வருதல் தான் மிகவும் முக்கியமானதாகும். இவ்வாறு கார்த்திகை தீப உற்சவத்தின் அனைத்து நாட்களிலும் கிரிவலம் செய்கின்ற போது தான் சங்க பாலக சித்தர்களுடைய எளிய தரிசனமானது குருஅருள் கிட்டியவர்களுக்காகக் காத்து கிடைக்கின்றது. கருட நேத்ர கொம்புப் பாறையிலிருந்து பிரதிபலிக்கின்ற சூரிய சந்திர கதிர்களுடைய தெய்வீக சக்திகளைப் பெற வாய்ப்புள்ளது.
சித்து ஊர்வலி கொத்து பீஜாட்சர மந்திரங்களின் சக்திகள் காற்றில் கலந்து உங்களுடைய உடம்பிலும், உள்ளத்திலும் ஊடுருவி உடலுக்கு அற்புதமான தெய்வீக சக்தியைப் பெற்றுத் தருகின்றன. வெண்நாவல் மரத்திலிருந்து வெளிப்படுகின்ற ஜம்புத்ரய சக்தி உடலில் ஐக்கியமாகி பலவித வாயு, நரம்பு, எலும்பு, தசை சம்பந்தமான வியாதிகளுக்கு நிவாரணத்தைத் தருகின்றது. விஸ்வாட்ச கருடப் பறவை பறந்து வருகின்ற போது அதனுடைய தெய்வீக உடலிலிருந்து தெளிக்கின்ற கருடத் திரிபுவன மந்திர சக்திகள் மூலமாக பலவிதமான நோய்களுக்கு நிவாரணம் கிட்டுகின்றன. இன்னும் எத்தனை எத்தனையோ பலாதிபலன்கள். பல ஆண்டுகளுக்கு முன் வரை மருத்துவர்கள் ஸ்ரீகருட மந்திரங்களையும், ஸ்ரீகருட காயத்ரீ மந்திரத்தையும், அரச மரத்தையும் தினந்தோறும் அடிப்பிரதட்சிணம் செய்து வந்தமையால்தான் அவர்களுக்குப் பல அபூர்வமான நோய் நிவாரண சக்திகள் கிட்டின.
பொதுவாக, வருகின்ற கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் போது இங்கு மருத்துவர்கள் தினந்தோறும் கிரிவலம் வருவார்களேயானால் அவர்களுக்கு விஸ்வாட்ச கருடப் பறவையின் அனுக்கிரஹத்தால் பல நோய் நிவாரண சக்திகளும், உத்தம கைராசியும் கிட்டுகின்றன என்பதே வேதவாக்கு ஆகும். வலம் சங்குத்ரி மூலிகையை தரிசிப்பதற்கான முக்கியமான யோக்யதாம்சமாக நம் உடலானது காயகல்ப சக்தியைப் பெற வேண்டும். நமக்கு இந்த காயகல்ப சக்தி கைவருகின்றதோ இல்லையோ, கிரிவலம் வருகின்ற போது இந்த காயகல்ப சக்தியைப் பெற்றுள்ள சங்க பாலகர்களுடைய தரிசனமும், நிதமும் கிரிவலம் வருகின்றமையால் அவர்களுடைய சித்த மந்திர ஒளிமயமான தேகத்திலிருந்து தெளிக்கின்ற சித்த மந்திர சக்திகள் கிரிவலப் பகுதியிலுள்ள நீர், நிலம், காற்று, மரங்கள், பாறைகள், கற்கள், புல், பூண்டு அனைத்திலுமே நிரவிக் கிடப்பதால் இவை மூலமாக நம் உடலில் சேரக் காத்துக் கிடக்கின்றன அன்றோ!
குறைந்த பட்சம் அவற்றின் ஒரு துளியையாவது நாம் கிரிவலம் மூலமாகப் பெறலாம் அல்லவா? இவ்வாறாக ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் அஷ்டமா சித்தி மந்திர உபதேச அமர்கோலம் கொள்கின்ற போது நிகழ்கின்ற தெய்வீகத் திருவிளையாடல்கள் தான் எத்தனை, எத்தனை, சொற்பொருள் நிலையைக் கடந்ததாக அகத்திய இறையடியாரின் தன்மை விளங்குவதால் தான் இறைவனே அடியார்க்கு அடியாராக இலங்குவதில் பெருமிதம் கொள்கின்றான் போலும்! இவ்விதழில் இயன்ற வரையில் எத்தனையோ தெய்வீக கிரந்த முடிச்சுகளுக்கிடையே ஸ்ரீஅகஸ்திய மஹிமைய , பிரமாதி தீப கிரிவல மகாத்மியத்தை குருவருளால் இங்கு எடுத்து அளித்துள்ளோம். மேலும், பல அரிய விளக்கங்களைத் தக்க சற்குருமார்களிடம் பெற்று வரும் பிரமாதி வருட கார்த்திகை மாதக் கிரிவலத்தை நன்முறையில் நடத்தி அனைத்துப் பலா பலன்களையும் பெற்றிட பேரன்புடன் வேண்டுகின்றோம்.
சாந்தி பர்வத பாடம், அண்ணாமலையே சித்த தேவ மாடம்!
சங்க பாலக சித்தர்கள் கோடிக்கணக்காய் உலவுகின்ற உற்சவமே பிரமாதி வருட திருஅருணாசல கார்த்திகைத் தீபப் பெருவிழாவாகும். சங்கபாலக சித்தர்கள் இவ்வாறு கூட்டம் கூட்டமாக பூலோகத்திற்கு எப்போதோ ஒரு முறைதான் வருகின்றார்கள். உங்கள் வாழ்வில் இந்த பாக்யம் அமைவது ஒரு பெரும் பேறேயாம். சங்க பாலகர்கள் வருகின்ற தெய்வீக தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வது நம் மனித சமுதாயக் கடமையாகும். சிறு பாலகர்களைப் போல வடிவெடுத்து வரும் சங்க பாலக சித்தர்கள் அனைத்துக் கோடி சித்திகளிலும் பரிபூர்ண இறைமையைப் பெற்றவர்கள்.
பிரமாதி வருட திருக்கார்த்திகை உற்சவத்தில் எப்போதும் கிரிவலம் வந்தவாறு வலம் சங்குத்ரி சித்து மூலிகைத் தாவரத்தை பேணிப் பாதுகாப்பவர்களாகவும் சங்க பாலக சித்தர்கள் விளங்குகின்றார்கள். சங்க பாலக சித்தர்கள் உலா வருகின்ற சமயத்தில் நாமும் திருஅருணாசலத்தை கிரிவலம் வருவோமேயானால் அவர்களுடைய தெய்வீக ஒளி பொருந்திய திருஉடலைத் தொட்டு வீசுகின்ற காற்று நம்மீது ஒரு வினாடி பட்டால் கூட போதுமே, எத்தனையோ அளப்பரிய பலன்களை நாம் பெற்றிடலாமே! எவ்வாறு அலுவலகத்திலும், தொழிற்சாலைகளிலும், ஒவ்வொருவருக்கும் ஒரு குறித்த பணியை இட்டு, வகுத்து நிர்வாகத்தை நடத்தி வருகின்றோமோ அதே போன்று ஒவ்வொரு சித்தருக்கும் ஸ்ரீஅகஸ்திய பெருமானின் சித்த லோகத்திலிருந்து தனித்தனி தெய்வீக ஆணைகள் பிறந்தவாறு இருக்கும், சித்தர்கள் பலரும் ஒன்று சேர்ந்தோ, பல குழுக்களாகவோ அமைந்து அன்றும், என்றும், இன்றும் எத்தனையோ கோடி பூலோகங்களிலும், சர்வ லோகங்களிலும் எத்தனையோ தெய்வீகத் திருப்பணிகளைச் செய்தவாறுதான் இருக்கின்றார்கள்.
இவ்வகையில் பிரமாதி வருட திருக்கார்த்திகை உற்சவத்தில் திருஅண்ணாமலைக்குரிய தெய்வீகப் பணித் திரட்டுக்காக சங்க பாலகர்கள் வருகை தர உள்ளார்கள். சிறுவர், சிறுமியர் போல் உருக் கொண்டுள்ள சங்க பாலக சித்தர்கள் சித்து ஊர்வலி மந்திர பீஜாட்சரங்களை எப்போதும் ஜபித்து வருகின்ற உத்தம சித்தர்கள், கமன வந்தனம், லலாட நந்தனம், உச்சாடனப் பகடு, மல்ல தம்பனம், ஆசனக் கமளி போன்ற சித்த மந்திரங்களை உச்சாடனம் செய்தால் தான் வலம் சங்குத்ரி மூலிகையானது செழித்துக் கொண்டிருக்கும். ஆத்ம சக்தியை தெளித்துக் கொண்டிருக்கும்! இத்தகைய மந்திர சக்திகளை குரு மூலமாக உபதேசமாகப் பெற்றவர்கள் தான் தக்க முறையிலே உச்சரித்து, ஜபித்து, தியானித்து, வலம் சங்குத்ரி போன்ற மூலிகைத் தாவரங்களை போஷிக்க முடியும். இக்கலையில் தெய்வீக வல்லமை பெற்றவர்கள் தான் சங்கபாலக சித்தர்கள் ஆவார்.
மை மஹிமை!
ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் சாந்தி பர்வத பாடத் தொகுதியில் காணப்படுகின்ற விளக்கங்களின் படி பிரமாதி வருட திருஅருணாசல திருக்கார்த்திகை உற்சவத்தின் போதுதான் சங்க பாலக சித்தர்கள் சிறுதாம்புப் பூ, கண்ணி வடிவப் பூ என்ற இரு அற்புதமான புஷ்பங்களிலிருந்து காப்பு வடிவ முறையிலே, சாந்தி பர்வத அஞ்சனத்தைத் தயாரிக்கின்றார்கள். இந்த சிறுதாம்புப் பூவும், கண்ணி வடிவப் பூவும் எப்போது மலர்கின்றன தெரியுமா? திருக்கார்த்திகை தீபத்தின் போது எழுகின்ற தீபப் புகையை ஆகர்ஷணம் செய்து அந்த தெய்வீக அக்னியிலிருந்து எழுகின்ற சக்தியைக் கொண்டு தான் இவை மலர்ந்து அஞ்சன வடிவிற்குத் தயாராகின்றது. சாந்தி பர்வத அஞ்சனத்தைச் செய்வது எளிதல்லவே. முதலில் இந்த மூலிகைத் தாவரப் பூக்களுக்கான காப்புக்களைக் கட்டி அஞ்சன மந்திரங்களை ஓதி, அஞ்சனம் எடுத்து ஸ்ரீஅகஸ்தியப் பெருமானின் குருவடிப் பார்வையில் அவற்றைப் பரிபூர்ணம் செய்து, வலம் சங்குத்ரி மூலிகைக்குச் சார்த்தி, அதனுடைய பிரசாதமாக இருக்கின்ற இந்த சாந்திப் பர்வத அஞ்சனத்தை சுமந்து சென்று குளிகையாக்கி சங்க பாலகர்கள் குளிகை மூலிகாமலை என்ற அற்புதமான மலைப் பகுதிக்கு எடுத்துச் செல்கின்றார்கள்.. இது இருக்கும் இடம் எப்போதுமே இறை ரகசியமாகத்தான் வைக்கப்பட்டிருக்கும்..
உளி பெறா குளிகை மலை
தினசரி காசிக்குச் செல்வதற்கான சக்தியை உடைய குளிகையைப் பெற்று தென்காசித் திருக்கோயிலைக் கட்டிய மன்னன் போன்ற உத்தம இறை அடியார்கள் தான் இக்குளிகை மூலிகா மலை இருக்கும் இடத்தை அறிவார்கள். இங்கு குவிந்து கிடக்கின்ற குளிகைகள் யாவும், தெய்வீகத் திருப்பணிக்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர எக்காரணங்கொண்டும் சுயநலத்திற்காகப் பயன்படுத்துதல் கூடாது. எனவே தான் இது இன்றும் தெய்வீக ரகசியமாக விளங்குகின்றது. எனவேதான் இந்த தெய்வீக குளிகை மலையை இன்றைக்கும் பல்லாயிரக்கணக்கான பூதகணங்களும், தேவாதி தேவர்களும், சித்புருஷர்களும் காத்து வருகின்றார்கள். இத்தகைய அரிய தெய்வீக ரகசியங்கள் நிறைந்த மலையை நாம் காணுதற்கரிய கல்ப சக்தி நிறைந்த உடலைப் பெறாவிட்டாலும் ஒன்றை மட்டும் நிச்சயமாக உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அது எதுவோ?
பிரமாதி வருட திருக்கார்த்திகை தீபத்தின் போது சங்க பாலக சித்தர்களால் உருவாக்கப்படுகின்ற தாம்புக் கண்ணிக் குளிகையானது, திருஅண்ணாமலையிலிருந்து குளிகை மூலிகா மலைக்கு எடுத்துச் செல்லப்படுகின்ற போது காற்று, மழை, சூரிய, சந்திர, ஒளிக் கிரணங்கள் போன்ற இயற்கைச் செல்வ கதிர்களே இக்குளிகையினைத் தழுவி அவற்றின் பலாபலன்களை நமக்குப் பெற்றுத் தருகின்றன. எனவே, சாந்தி பர்வத அஞ்சனமானதும் சிறுதாம்புப் பூ, கண்ணி வடிவப் பூ, மூலிகைத் தன்மையுடன் வலம் சங்குத்ரி தெய்வீக மாமூலிகையின் அஷ்டமா சித்திகளைத் தாங்கியவாறு அருள்பாலிக்கின்ற ஒரே திருத்தலம் திருஅருணாசலமேயாகும். இச்சக்திகள் யாவும் பரிபூர்ணமாக நிறைந்து இருக்கும் காலமே பிரமாதி வருட திருக்கார்த்திகை உற்சவமாகும். எனவே வரும் கார்த்திகைத் தீப உற்சவத்தின் போது கொடியேற்றுகின்ற நாள் முதல் தீபம் முடியும் நாள்வரை அனைத்து தினங்களிலுமே திருஅருணாசலத்தை கிரிவலம் வருதல் வேண்டும் என்ற பெரும் வைராக்கியத்தைப் பூண்டு வாழ்க்கையில் பெறுதற்கரிய இந்த தெய்வீகக் காரியத்தை சாதிக்க வேண்டுகின்றோம்.
ககன குளிகா யாத்ரை மார்கம்!
குளிகை மூலிகா மலையின் இருப்பிடமானது தேவாதி தேவ இரகசியமாக விளங்குகின்றது அல்லவா! பிரபஞ்சத்தின் நலன்களுக்காக சித்புருஷர்களும், மஹரிஷிகளும், யோகியர்களும், பலவிதமான அஞ்சனங்களையும் (தெய்வீக மைகள்), குளிகைகளையும் செய்து இந்த குளிகை மூலிகா மலையில் சமர்ப்பணம் செய்கின்றார்கள். இந்த குளிகை மூலிகா மலைக்கு ககன ரூபத்தில் தான் செல்ல முடியும். அதாவது காயகல்ப சக்தி நிறைந்தவர்கள் தான் இங்கு தங்கியிருக்க முடியும். ஏனென்றால் அந்த அளவு கந்தக சக்தி நிறைந்ததாக இக்குளிகை மூலிகா மலை விளங்குகின்றது.
ஏனென்றால் குளிகை மூலிகைகள் நன்முறையில் பதப்பட்டுள்ள நிலையில் இருக்க வேண்டுமென்றால் நாம் Refrigerator-ஐப் பயன்படுத்துவதைப் போல இவைகளுக்கான கந்தகப் பாறை குழிகளை பயன்படுத்திட வேண்டும். பிரமாதி வருட திருக்கார்த்திகை உற்சவத்தின் போது எழுகின்ற, தோன்றுகின்ற வலம் சங்குத்ரி மூலிகைக்கு சாத்தப்படுகின்ற அஞ்சனமானது சிறுதாம்புப் பூ, கண்ணி வடிவப் பூ, என்ற இரு மூலிகைகள் மீதுப்படுகின்ற இத்திருக்கார்த்திகை தீபப் புகையிலிருந்து பதனப்படுத்தி எடுக்கப்பட்டது என்று நாம் அறிகின்றோம் அல்லவா! இந்த நற்காரிய சித்தியை அறிந்தவர்களான சங்க பாலக சித்தர்கள் திருக்கார்த்திகைத் தீபப் பிரகாசமாகப் படிந்த இந்த அஞ்சனத்தை ஸ்ரீஅகஸ்திய பெருமானின் முன்னிலையில் வலம் சங்குத்ரி மூலிகைக்குக் குளிகையாகப் படைத்து அதனைப் பிரசாதமாக எடுத்துக் கொண்டு ககன மார்கமாய் இந்த குளிகை மூலிகா மலையை அடைகின்றனர். அப்போது இறையருளால் நல்மழை பொழிவதும் உண்டு.
உண்ணாமலை,அண்ணாமலை, விண்ணில் மழை!
இன்றைக்கும் திருஅண்ணாமலையில் திடீரென்று ஏற்படுகின்ற மழைப் பொழிவுகள்யாவும் தேவாதி தேவர்கள், மஹரிஷியின் நல்வரவையும், அவர்கள் திருஅண்ணாமலை உச்சியில் செய்கின்ற பூஜையையுமே தெய்வீகமாகக் குறிக்கின்றன. இப்போதும் பார்த்தீர்களேயானால் திருஅண்ணாமலையில் மலை உச்சியைச் சுற்றி பல சமயங்களில் மேகச் சூழல்கள் காணப்படும். கோயில் தீப ஆராதனைக போது காணப்படுகின்ற திரை போல் இது அமைகின்றது. வருண பகவான் தான் திருஅண்ணாமலைக்கு வருகின்ற யோகியர்களின், மஹரிஷிகளின், சித்தர்களின் வருகையைக் கண்டு ஆன்ந்தித்து அவர்களுக்கு நல்வரவேற்பைத் தருவதைப் போல நல்மழைப் பொழிவை ஏற்படுத்துகின்றார். இதுவே திருஅண்ணாமலையாருக்கு, மலை ரூபத்தில் அமர்ந்து நமக்கு அருள்பாலிக்கின்ற ஸ்ரீஅருணாசல பெருமானுக்கு அபிஷேக, ஆராதனையாக விளங்குகின்றது.
இவ்வாறு பொழிகின்ற மழையிலே, தேவாதி தேவர்களும், சித்புருஷர்களும் நல்ல திரவியங்களையும், மூலிகைகளையும், தேவலோகச் சந்தன விழுதுகளையும் பூசி, கலந்து வருவதால் இம்மழைப் பொழிவானது மிகச் சிறந்த அபிஷேக தீர்த்தமாக அண்ணாமலையாருக்கு அமைகின்றது. இவ்வாறாக சங்க பாலக சித்தர்கள் சாந்தி பர்வத அஞ்சனத்தை திருக்கார்த்திகைத் தீபத்தின் போது மை செய்து வலம் சங்குத்ரி மூலிகைக்கு இட்டு மலைக்கு ககன மார்க்கமாக எடுத்து செல்லும் போது ஏற்படுகின்ற மழைப் பொழிவு, காற்று, சூரிய, சந்திர கிரணங்கள் மூலமாக இக்குளிகையின் அற்புத பலன்கள் யாவும் காற்றிலே மிதந்தவாறு இங்கு கிரிவலம் வருகின்ற அடியார்களுடைய தேகத்திலே நன்முறையில் சேர்ந்து பல அற்புத நல்வரங்களைத் தருகின்றது.

பூவாளூர் திருத்தலம்

நலம் தரும் பலம் தரும் வலம்!
பலவிதமான நோய்களுக்கு நிவாரணமாகவும், துன்பச் சூழல்களுக்கு நல்ல விடிவைத் தருவதாகவும் இந்த சாந்திப் பர்வத குளிகா சக்திகள் நல்முறையில் பயன்படுகின்றன .மேலும், பல மந்திரங்களை சித்தி செய்ய விழைவோரும் நன்முறையிலே குளிகைகளைத் தயாரித்து அதனை சமுதாயத்திற்கான இறைப்பணிகளாக மக்களுக்கு அளிக்க விரும்புவோரும் இந்த சாந்திப் பர்வத அஞ்சன குளிகையின் பலாபலன்களைப் பெறுவதற்கு பிரமாதி வருட தீபக் கார்த்திகை நாட்களின் போது திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் வேண்டும். எனவே நம்முடைய வாழ்வில் பெறுதற்கரிய நல்ல தெய்வீக வாய்ப்பாகக் கிட்டுகின்ற அண்ணாமலை தீப பத்து நாட்களிலும் பிரமாதி வருட திருக்கார்த்திகை உற்சவத்தின் போது கிரிவலம் வந்து வாழ்விலே பெறுதற்கரிய அனுகிரஹ சக்திகளைப் பெறுதற்கரிய அனுகிரஹ சக்திகளைப் பெறுவீர்களாக, இது உங்களுடைய வாழ்க்கைக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய சந்ததியினருக்கும் மிகச் சிறந்த தெய்வீகப் பரிசாக விளங்குகின்றது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். இதுதான் நிரந்தரமான சொத்து! இறைவனின் பரிசு!  

திருவையாறு திருத்தலம்

திருஅண்ணாமலையில் அன்னதான மகத்துவம்
ஒவ்வொரு விதமான தான, தர்மமும் ஒவ்வொரு இடத்தில் மிகவும் சிறப்பான சக்திகளைக் கொண்டிருக்கும். புண்ய சக்தி நிறைந்ததாக, இறைப் பேரருளை வாரி வழங்குவதாக, அந்தந்த புவித்தல நியதிக்கேற்ப தான, தர்ம புண்ய சக்தி அமைகின்றது. கயா, திருச்சி அருகே பூவாளூர் (பல்குனி ஆறு உள்ள தமிழ்நாட்டுத் தலம் இதுவே தென்னிந்திய கயா!), கும்பகோணம் போன்றவை பித்ரு தர்ப்பணத்திற்கும் பிதுர் காரிய அன்னதானத்திற்கும், திருக்கழுக்குன்றம், காஞ்சிபுரம் போன்றவை ஹோம வழிபாடுகட்கும், மோகனூர், காளஹஸ்தி, இராமேஸ்வரம் போன்றவை தீப வழிபாடுகட்கும், சிதம்பரம், திருவையாறு போன்றவை (சாம்பிராணி), தூப வழிபாடுகளுக்கும் முக்யத்வம் பெற்றவை. ஆனால் திருஅண்ணாமலைத் திருத்தலமானது பிரபஞ்சத்தின் பஞ்சபூத அக்னி லிங்கத் தலமாக விளங்குவதால் இங்கு செய்யப்படும் தான, தர்மங்கள் அனைத்துமே “அக்னி” பகவானின் சாட்சியாக நிகழ்வதால், மேலும் முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவாதி தேவ மூர்த்திகளும், கோடிக்கணக்கான சித்புருஷர்களும், மஹரிஷிகளும் உலவும் அருட்பெருந்தலமாக இலங்கி அவர்கள் முன்னிலையிலும் நடைபெறுவதாலும் இவற்றிற்கு அளப்பரிய பலாபலன்கள் உண்டு.
கலியுக ஆன்மீக விதியாக, ஆயிரம் பேருக்கு அன்னம் பாலிக்கப்பட்டால் அங்கு ஒரு சித்புருஷர் பிரசன்னமாகி இறையருள் கூட்ட வேண்டும் என்பது இறைப் பெருநியதியாக விளங்குவதால் திருஅண்ணாமலையில் அரும்பெரும் இறைத் தூதுவர்களான மஹானுக்கு, யோகிக்கு, சித்புருஷர்களுக்கும் அன்னம் பாலிக்கின்ற தெய்வீகத் திருவாய்ப்புகள் கிட்ட நிறைய வழி உண்டு. நம் ஆஸ்ரமத்தில் நடக்கின்ற அன்னதான சேவையானது சித்புருஷர்கள் அருள்கின்ற “சாகம்பர்ய சதுரானன” முறையில் அமைகின்றது. அதாவது ஹோம வழிபாடு, தமிழ், தேவ மொழி, வேதபாராயணம், தீபகண்டி பூஜை, நாம சங்கீர்த்தனம் போன்ற பலவிதமான பூஜைகளுக்கிடையே அடியார்களே தம் சரீர சேவையாக உணவைச் சமைப்பதால், ஆத்மார்த்த சேவையாக அது பொலிகின்றது. அரிசி களைதல், காய்கறிகள் நறுக்குதல், பாத்திரங்கள் கழுவுதல், விறகு அடுப்பை ஏற்றிப் பராமரித்தல் என அனைத்துமே ஜாதி, குல, இன, மத பேதமின்றி பல அடியார்களின் இறைப் பெருஞ்சேவையாய்ப் பொலிகின்றது. எனவே அன்னதானம் செய்கின்றோம் என்ற எண்ணத்தை விட குருவருளால் இறைவனுக்கு அன்னதான பூஜை ஆற்றுகின்றோம் என்ற மனப்பாங்கே, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய நேரடிப் பார்வையில் பரிணமிப்பதால் ஆஸ்ரமத்தின் அன்னதான உணவு ஸ்ரீகாயத்ரீ மந்திரம், சிவபுராண மற்றும் வேதபீஜாட்சர சக்தி நிறைந்ததாகப் பரிமளிக்கின்றது. இந்த அன்னப் பிரசாதத்தை ஏற்போருக்கும் ஓரளவு பசி தீர்க்கும் படைப்பாக மட்டுமின்றி பூஜா சக்திகள் நிறைந்ததாக, நோய் நிவாரண சக்தியுடன், மன சாந்தியைத் தரும் தெய்வீகப் பிரசாதமாகவும் விளங்குகின்றது. அனைவராலும் கார்த்திகைத் தீபப் பெருவிழாவில் திருஅண்ணாமலையில் அன்னதானமிட முடியுமா? இதற்காகத்தான் எல்லோரும் இந்த பாக்கியத்தைப் பெற எங்கள் ஆஸ்ரமத்தின் சத்சங்கப் பேரிறைப் பணியாக விளங்கும் இவ்வன்னதான இறைச் சேவைக்குத் தங்களால் இயன்ற பொருளுதவியைத் தந்து இறையருளால் தீபப் பெருவிழாவில் ஏழைகட்கு அன்னம் பாலிப்பதில் நாமும் ஓரளவேனும் பங்கு கொண்டோம் என்ற ஆத்ம திருப்தியை இறையருளால் கொண்டிடலாமன்றோ!

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தி
திருவையாறு

அன்னதானமே ஆத்ம கா(ஞா)னமாம்! தான தர்மமே கர்ம நிவாரணம்!
ஆம்! மகத்தான அன்னதான இறைப் பணியே, நம்முடைய சித்தர்களின் பாரம்பரிய இறைநியதிப்படி எங்கள் ஆஸ்ரமத்தின் வருடாந்திர பிரம்மோற்சவமாக, எங்களுடைய பல்வேறு தெய்வீகத் திருப்பணிகளுள் மிகவும் முக்கியத்வம் பெற்றதாக விளங்குகின்றது. ஏழைகளின் வயிற்றுப் பசியை இயன்ற மட்டும் ஆற்றுதலும், களைத்து வரும் கிரிவல அடியார்களின் பசியையும், களைப்பினையும் நீக்க அன்னதானப் பிரசாதமளித்து அனைவருடைய ஆன்மீகப் பசி ஆற்றுதலும் ஸ்ரீஅகத்திய மாமுனியின் தெய்வீக இலக்கணப் பாடங்களாயிற்றே! எல்லாம் வல்ல திருஅண்ணாமலையாரின் இறையருளால் சிவ குரு மங்கள கந்தர்வ மண்டலத்திலிருந்து தோன்றிய குரு வள்ளல்களாகிய நம் சிவ குரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவருட கடாட்சத்தாலும் அவர்தம் ஆருயிர் சிஷ்ய கோடியாம் குருவள்ளல் பெருமானாகிய நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய நேரடி குருவருட் கட்டளையின் படியும் கடந்த பல வருடங்களாக,
திருக்கார்த்திகை தீப அன்னதானம் : திருஅண்ணாமலை, அய்யர்மலை மற்றும் பல இடங்களிலும் திருக்கார்த்திகைப் பெருவிழா உற்சவத்தின் போது நாள்தோறும் ஆலயப் பகுதிகளிலும், கிரிவலப் பாதையிலும் அண்ணாமலையாரின் அருள் தேடி வருகை தந்திருக்கும் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு அன்னதானமும், அற்புத சரீர விரதமாய் கிரிவலம் வருகின்ற பல்லாயிரக்கணக்கான இறையடியார்கட்கு அன்னப் பிரசாதமும், சித்தர்கள் அருளிய வகையிலே, அருட்சக்தி நிறைந்ததாய் அன்னம் பாலித்தல் (அன்னதானம்)
மாதாந்திர பௌர்ணமி அன்னப் பிரசாதம் – மாதாந்திரப் பௌர்ணமி தோறும் பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் திருத்தலமாய்ப் பொலியும் திருஅண்ணாமலை கிரிவலம் வருகின்ற பல்லாயிரக் கணக்கானோர்க்கு பௌர்ணமி இரவு முழுவதும் இயன்றவரை  எம் சக்திக்கு ஏற்றவாறு அன்னப் பிரசாதம் அளித்தல்.
ஏழைகளுக்கு இலவச மருத்துவ உதவி :- சென்னை மற்றும் திருச்சி கிராமப் புறப் பகுதிகளில் ஜாதி, மத, இன, குல பேதமின்றி ஏழைகட்கான இலவச மருத்துவ முகாம்கள் நடத்தி மருந்து, டானிக்குகள், மாத்திரைகள், லேகியம் போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் இலவசமாக வழங்குதல்.
ஆலய உழவாரத் திருப்பணி :- சாட்சாத் சிவபெருமானே தம் திருப்பாதங்களைத் தம் சிரசில் வைத்து தீட்சை பெறும் பாக்யம் கொண்டவரான ஸ்ரீஅப்பர் சுவாமிகள் வழிவகுத்த உழவாரத் திருப்பணிப் பாங்கினிலே, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தாமே முன்னின்று மாதந்தோறும் ஜாதி, இன, பேதமின்றி பல அடியார்கள் துணையுடன் சித்தர்கள் கூட்டிய வகையிலே நூற்றுக்கணக்கான ஆலயங்களில் உழவாரத் திருப்பணி ஆற்றி வருகின்றார்கள்.
இதர சமுதாய சேவைகள் : சித்தர்கள் அருளிய கர்மவினைகளைத் தீர்க்கும் பாங்காக, இறைவனளித்த பரிசான இந்த பவித்ரமான உடலைக் கொண்டு மிகவும் புனிதமான இறைக் காரியமாக நலிந்த மக்களின் நல்வாழ்விற்கான தெய்வீகத் தொண்டுகளை ஆற்றும் எளியோர்க்கான கல்வி உதவி, திருமணத்திற்கான சேவைகள், மாங்கல்ய தானம், முதியோர்களுக்கான சரீர, மருத்துவ, பொருளாதார உதவிகள், வஸ்திர தானம், பாதணி தானம், காசி, கயா போன்ற திருத்தல யாத்திரை செல்ல ஏழைகளுக்கான நல்வாய்ப்புகள், ஆலயங்களில் அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் எனறவாறாக நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராமன் அவர்கள் சித்தர்கள் அருளிய அறவழி முறைகளாக, தம்முடைய ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திருஅண்ணாமலை வாயிலாக, பல அடியார்களின் சத்சங்கக் கூட்டு இறைப்பணியாக எண்ணற்ற சமுதாய இறைப் பணிகளை ஆற்றி வருகின்றார்கள்.

ஸ்ரீஆட்கொண்ட நாயகர்
திருவையாறு

ஆன்மீக நூல்கள் வெளியீடு :- ஸ்ரீஅகஸ்திய விஜயம் (ஆன்மீக மாத இதழ்) மற்றும் எளிய தர்ப்பண முறைகள், பிரதோஷ மஹிமை, ஸ்ரீஆயுர்தேவி மஹிமை, இறப்பின் ரகசியம் போன்ற பல ஆன்மீக இதழ்கள் / புத்தகங்கள் மூலமாகப் பல அரிய பூஜை, யோக, தீப, ஹோம, கண்டி வழிபாட்டு முறைகளையும் அற்புதமான தெய்வீக மந்திர விளக்கங்களையும் சித்புருஷர்களின் அறவழி முறைகளையும் யாவரும் அறிந்து, உணர்ந்து கொள்ளும்படி விளக்கி எடுத்துரைத்தல் இவ்வாறாக எண்ணற்ற தான, தர்ம சமுதாயப் பணிகளை நலம் தரும் இறைப் பணிச் சேவைகளாக குருவருள் கூடிய திருவருளாய் எம் ஆஸ்ரமம் ஆற்றி வருகின்றது.
கலியுகத்தில் தான, தர்ம மகத்துவம்
கலியுகத்தில் தான தர்மங்களின் பலாபலன்களை, வேத, ஹோம, யோக சக்திகளை நிகர்த்ததாகக் கூறுவது ஏன் தெரியுமா? ஆதிமூலப் பரம்பொருளே நிரவிய கிருதயுகம், ஸ்ரீராமர் மக்களோடு மக்களாய் உலவிய திரேதாயுகம், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தோன்றிய துவாபர யுகம் ஆகிய யுகங்களில் பிரகாசித்த புனிதமான தர்ம நிலைகள் மாறி கலியுகத்தில் தீயொழுக்கம், தீவினைகள், தீய சக்திகள், கூடா ஒழுக்கம் பெருக்கெடுத்து வருகின்ற நிலையில், நம்முடைய தீய கர்ம வினைகளைக் கழிப்பதற்கும், பரவி வரும் எதிர்வினைகளை (Negative Forces), தீவினைகளை பகைமையை எதிர்த்து வென்று சாந்தமான வாழ்க்கையைப் பெறவும், நோய்கள், துன்பங்கள், விபத்துகள், இழப்புகள் இவற்றிலிருந்து மீண்டு அமைதியான வாழ்வைப் பெறவும். எத்தனையோ சந்தியாவந்தன, ஹோம, யோக, யாக வேள்வி, தீப, தர்ப்பண வழிபாடுகளை / பூஜைகளை நம் மூதாதையர்கள் நமக்கு அளித்துள்ள போதிலும் இவற்றையெல்லாம் கிட்டத்தட்ட அனைத்தையும் கைவிட்டமையால் தானே இன்றைய கலியுக துன்பச் சூழல்களில் சமுதாயம் தத்தளிக்கின்றது!
ஆன்மீகப் பெரியோர்களை, சற்குருமார்களை புனிதமாக மதித்துப் போற்றுகின்ற நல்வழக்கமும் கலியுகத்தில் மறைந்து வருகின்றது. இந்நிலையில் சற்குருமார்கள் அருள்கின்ற தான, தர்மங்களைக் கடைபிடிக்கின்றமையால் கிட்டுகின்ற அறவழிப் புண்ய சக்திதான் வேத, மந்திர, யந்திர, ஹோம சக்திகளுக்கு ஈடானவையாகக் கலியுகத்தில் பறைசாற்றப்பட்டு நமக்குப் பெருந்துணை புரிகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வரும் பிரமாதி ஆண்டு கார்த்திகை தீபப் பெருவிழாவின் போது நம் ஆஸ்ரமத்தின் சார்பில் நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவருட் கடாட்சத்துடனும், அவர்தம் அருள்வழித் தோன்றலாய் இன்று நம்மிடையே ஆன்மீகப் பேரொளியாய் நல்வழி காட்டும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய சீரிய நேரடி சேவையிலும் மகத்தான அன்னதான இறைப்பணி நிகழ இருக்கின்றது எல்லாம்வல்ல ஸ்ரீஉண்ணாமுலை சமேத அண்ணாமலையாரின் திருவருளால்!
சித்தர்களின் அருட்பெரும் இறைப் பாசறையாக விளங்கும் திருஅருணாசல புனித பூமியில் தான் தினந்தோறும் எத்தனை கோடி சித்தர்களும், மஹரிஷிகளும், யோகியரும் உலவிப் பேரானந்தம் கொள்கின்றனர். எனவேதான் என்றும் எப்போதும் இங்கு உலாவரும் கோடானு கோடி சித்தர்களின், தேவாதி தேவர்களின் சாட்சிப் பெரு வைபவத்தில் நிகழ்கின்ற பலவகையான தான, தர்மங்களுக்கு குறிப்பாக அன்னதானத்திற்கு, ஆயிரம் மடங்கு பலன்கள் உண்டு. எத்தனையோ பூஜா, யோக, யாக, வேதமந்திர சக்திகளுக்கு ஈடானதாக திருஅண்ணாமலை அன்னதானப் பெருஞ்சேவை இலங்குவதால் ஆஸ்ரமத்தின் அன்னதானப் பணிக்குப் பொருளுதவி புரிய விரும்புவோர் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் சபை அறக்கட்டளை (Sri la Sri Lobha Matha Agasthiar Sabha Charitable Trust)  என்ற பெயரில் cheque /DD எடுத்து அனுப்பி, கலியுகத்தில் அன்னதான சமுதாயப் பணி மகத்தான தெய்வீகப் பணியாகத் திருஅண்ணாமலை திருத்தலத்தில் தழைத்திட உதவுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.
மனிதன் போதுமென்று திருப்பதி கொள்வது அன்னதானத்தில் மட்டுமே! ஒரு மஹானின் வயிற்றுக்கு இடும் நல் உணவு ஏழேழு தலைமுறைகளுக்கும் நல்வழி காட்டும்! ஞானம் சித்திக்க அன்னம் பாலிப்பீர்! அன்னதானமே சாந்தம் கூட்டிடும்!

நித்ய கர்ம நிவாரணம்

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோக, கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை / வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்தல், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்ம வினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.

1.11.1999 – “ஓம் தத் புருஷாய வித்மஹே பட்சி ராஜாய தீமஹி தன்னோ கருட ப்ரசோதயாத்” என்ற ஸ்ரீகருட காயத்ரீ மந்திரத்தை ஓதியவாறு காஞ்சிபுரம் இட்லி செய்து பெருமாள் கோயிலில் தானம் – நன்முறையிலான உத்தியோக மாற்றம் ஏற்படும்.
2.11.1999 – மின்விசிறி இல்லாத பள்ளிக்கூடத்திற்கு மின்விசிறி தானம் – நீண்ட கால மனப் போராட்டங்கள் மாறும்.
3.11.1999 – (மாணவ, மாணவிகள் தரையில் உட்கார்ந்து படிக்கின்ற) வசதியற்ற பள்ளிக்கூடத்திற்கு பெஞ்ச் தானம் – அரசாங்கத்தில் உயர் பதவி கிடைக்க வழியுண்டு.
4.11.1999 – ஆடு, மாடு மேய்க்கின்ற ஏழைச் சிறுவர், சிறுமியர்களுக்கு தலைக்குத் தேய்த்துக் கொள்ள தாராளமாக தேங்காய் எண்ணெய் தானம் – ரயில்வே பணியில் வரும் ஆபத்துகள் குறையும்.
5.11.1999 – கிழிந்த ஆடை, அணிந்திருக்கின்ற வசதியற்ற ஏழைகளுக்கு புதிய ஆடைதானம் – எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரும்.
6.11.1999 – ஏழை நெசவாளர்களுக்கு நெசவு செய்ய நூல் வாங்கித் தருவதால் உறவினர்களுக்குள் இருக்கும் குழப்பங்கள் தீரும்.
7.11.1999 – ஏழை மாணவனுக்கு சைக்கிள் தானம் – வாழைச் சுழலால், வாழைத் தோப்பு வைத்திருப்போர் /வியாபாரிகள் பாதிக்கப்படாமல் மீளலாம்.
8.11.1999 – சுட்ட மண்ணாலான புனிதமான மண் தாலிகளை பஞ்சு நூல் திரியால் கோர்த்து “சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே, சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணீ நமோஸ்துதே” என்ற மந்திரத்தை 1008 முறைக்குக் குறையாமல் ஜபித்து பூஜித்து வேம்பும், அரசமரமும் சேர்ந்து ஒன்றாய் இருக்கின்ற புனிதமான இடங்களில் மரத்திற்கு மஞ்சள் தடவி, மண்தாலிச் சரடைச் சமர்ப்பித்தால் குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
9.11.1999 – ஏழைப் பெண் குழந்தைகளுக்கு உள் ஆடைகளும், காலணிகளும் தானம் – கசந்த இல்லறம் நல்லறமாய் மாறும்.
10.11.1999 – வசதி படைத்தவர்கள் இன்று தம் இல்லத்தில் சுவர்ண தீபம் ஏற்றி 1008 முறைக்குக் குறையாமல் “ஸ்ரீம்” எனும் பீஜ மந்திரத்தை வடக்கு நோக்கி அமர்ந்து ஜபித்து சர்க்கரைப் பொங்கல் தானம் செய்திடில் வருமானம் பெருகும்.
11.11.1999 – சிவ பாத பூஜைக்காக வெள்ளி பாதரட்சை வாங்கி கோயில்களுக்கு தானமாய் அளித்திடில் – அலைந்து அலைந்து படுகின்ற துன்பம் தீரும்.
12.11.1999 – இன்று நல்ல சுத்தமான வெள்ளி மெட்டிகளை சுமங்கலிகளுக்கு தானமாய் அளித்திடில் – குழப்பங்களில் கொந்தளிக்கும் மனம், சாந்தி பெறும்.
13.11.1999 – வங்கியில் வேலை செய்கின்றவர்கள் இன்று ஸ்ரீலட்சுமி சகஸ்ரநாமம் அல்லது ஸ்ரீலட்சுமி போற்றித் துதிகளை (1008 துதிகள்) பத்து முறைக்குக் குறையாமல் ஜபித்து ஏழ்மையில் இருக்கும் சகோதர, சகோதரிகளுக்குத் தங்க மோதிரம் தானமாய் அளித்திடல் – தண்ணீரால் வரும் கண்டம் தவிர்க்கப்படும், நீர் சம்பந்தமான வியாதிகள் தணியும்.
14.11.1999 – பசுக்களைப் பராமரிக்கும் கோ சாலையைத் தூய்மைப்படுத்தி பசுக்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு பூஜித்திடில் வாகனங்களால் வருகின்ற ஆபத்துகள் தீரும்.
15.11.1999 – அச்சுத் தொழில் வேலை செய்கின்றவர்களில் கண்ணாடி அணிந்திருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து கண்ணாடி வாங்கி அளித்திடில் இல்லத்தில் / தொழிற்சாலையில் / அலுவலகங்களில் உள்ள ரகசிய ஆவணங்கள், பத்திரங்கள் திருடு போகாமல் பாதுகாப்படும்.
16.11.1999 – இன்று தக்காளி சாதம் தானம் – தம்பிகளுக்கு வேலையில் வருகின்ற ஆபத்து தீரும்.
17.11.1999 – படிப்பதற்காக ஏழைப் பிள்ளைகளுக்கு மேஜை விளக்கு (Table Lamp) தானம் – கணவன், மனைவியரிடையே உள்ள மனக் குழப்பங்கள் தீரும்.
18.11.1999 – கரண்ட் பில் கட்ட முடியாதபடி நிதிநிலை சரியில்லாத கோயில்களுக்கு மின்சாரக் கட்டணம் கட்டி விளக்கு எரிய வசதி செய்திடில் வீட்டில் சுகப்பிரசவம் ஏற்படும்.
19.11.1999 – பள்ளியில் முதல் மாணவனாகவோ / மாணவியாகவோ வருகின்றவர்க்கு நல்ல பேனா வாங்கி தானமாய் அளித்திடில் – கல்வித் துறையில் உயர்பதவி கிடைக்காமல் இருப்பதற்காக அருகிலேயே இருந்து துரோகம் செய்கின்றவர்களின் கபட தந்திர, காரியங்கள் பலிக்காமல் போய் முறிந்து போகும் – தானம் செய்வோர் நன்முறையில் காப்பாற்றப்படுவர்.
20.11.1999 – தொலைதொடர்பு (Telecommunication) துறையில் மேல் அதிகாரிகளுடன் பகைமை இன்று ஏற்படக் கூடும். முடிந்த மட்டும் பூஜையிலும், கோயில் திருப்பணியிலும் இந்நாளைக் கழிப்பது நலம் தரும்.
21.11.1999 – அஸ்வினி தேவர்கள் பூஜித்த சிவன் கோயிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி தான, தர்மங்கள் செய்திடில் பகைமை காரணமாக விரோதிகளால் தாக்கப்பட இருக்கின்ற திட்டத்தை முறியடித்து விடலாம்.
22.11.1999 – அன்னதான, சக்தி நிறைந்த நாள் – மிகவும் அபூர்வமாக அமையும் நாள். முடிந்த மட்டும் 5000 பேருக்குக் குறையாமல் அன்னதானம் செய்திடில் ஆயுள் கூடும்.
23.11.1999 – ஒளி சக்தி பொங்கும் தினம். இன்று 1000 பேருக்குகாவது துணிமணி தானம், விளக்குகள் அன்னதானம் செய்திடில் எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும் – இயலாதோர் சத்சங்கமாய்க் கூட்டாய்ச் செய்திடுக!
24.11.1999 – இன்று சுமங்கலிகளுக்கு தாலி, மஞ்சள், குங்குமம், கொடுத்து வணங்கி ஏழைகளுக்கு வெண்ணெய், ஆடைதானம் செய்திடில் – நீண்ட நாட்களாக விளக்கம் கிடைக்காத மன உளைச்சலுக்கு நன்முறையில் தீர்வு கிடைக்கும்.
25.11.1999 – ஏழை பிள்ளைகளுக்குப் புத்தகப் பை தானம் – நிதி நிலைமை விருத்தியடையும்.
26.11.1999 – சிவன் கோயிலில் கோரைப் பாய் தானம் – குழந்தைகளுக்கு வரும் ஆபத்துகள் விலகும்.
27.11.1999 – வாத்து மேய்ப்பவர்களுக்கு வயிறார உணவிட்டு ஆடை தானம் – செய்திடில் சேர்த்து வைத்த பணம் வீணாக செலவாகாது நன்முறையில் பெருகும்.
28.11.1999 – ஏழைத் தையல் தொழிலாளர்களுக்கு ஊசி, நூல் தானம் – குடும்பத்தில் பிரிந்து சென்றவர் மீண்டும் திரும்புவர்.
29.11.1999 – மரம் சுமக்கின்ற யானைகளுக்கு வயிறார உணவிட்டு வணங்கிடில் எந்த வியாபாரத்திலும் பெருத்த நஷ்டம் அடையமாட்டார்கள்.. (மக்களுக்குத் தீமை பயக்கும் மது, பீடி போன்ற வியாபாரத்திற்கு இது பொருந்தாது..)
30.11.1999 – பசுவிற்கு, கோதுமைத் தவிடு அளித்தல் – கண் சம்ந்தமான நோய்கள் தணியும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam