ஒன்று நீயல்லை அன்றி ஒன்றில்லை !


பிரதோஷ மகிமை

மகாபாரதப் போருக்கு முன் ஒரு காட்சி ....

தருமன் தன் சகோதரர்கள் பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோருடன் அமர்ந்திருக்கிறான். கிருஷ்ணனும் ஏதோ நினைத்தபடியே இங்கும் அங்கும் உலாவிக்கொண்டு இருக்கிறான். “போரில் பாண்டவர்கள் வெற்றி பெற என்ன செய்யலாம்? என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த அவன், இப்பொழுது சகாதேவன் பக்கம் திரும்பி, அவனை மட்டும் தனியே அழைக்கிறான். சோதிட சாத்திரத்தைக் கசடறக்கற்றவன் சகாதேவன். இதை பூரணமாக அறிந்தவன் கிருஷ்ணன். கிருஷ்ணனுடைய அவதார நோக்கத்தையும், அவன் நடத்தப்போகும் நாடகங்களையும் நன்கு அறிந்தவன் சகாதேவன். அழைபிற்கிணங்கி கிருஷ்ணனிடம் வருகிறான். கிருஷ்ணனும் அவனை ஒரு தனியிடத்திற்கு அழைத்துச் செல்கிறான்.

கிருஷ்ணன்: “சகாதேவா! நியாயமான போட்டியில் வெற்றி காண்பதற்குச்
சோதிட ரீதியாக ஒரு வழி சொல்வாயா?

சகாதேவன்: “கண்ணா!! நீ என்ன கேட்கிறாய் என்று எனக்குத் தெரியும். நடக்கப்போகும் பாரதப்போரில் வெற்றி பெற வழி கேட்கிறாய். ‘நியாயமான போட்டி’ என்று புரட்டுகிறாய். எல்லாம் தெரித்தவன் ‘நீ’. அமாவாசை நாளையே மாற்றியவன் ‘நீ’. ஒன்றும் அறியாதவனைப்போல் கேட்டு, என்னை ஏமாற்றுகிறாயே!

கிருஷ்ணன்: அப்படியில்லை, சகாதேவா! என்ன இருந்தாலும் சோதிடக் கலையைக் கசடறக் கற்று, பாரபட்சமின்றி, வணங்கிக் கேட்பவர்களுக்கு வாரித் தருபவன் நீ. அடியேனும் இப்போது உன்னை வணங்கித்தான் கேட்கிறேன். பதில் கிடைக்குமா, கிடைக்காதா?

வலதுகாலை முன்வைத்த
ஸ்ரீகாயத்ரீ நந்தி கரிவலம்வந்தநல்லூர்

சகாதேவன்: (கண்ணை மூடி, தீவிரமாக யோசித்து விட்டு) திருமால் மத்தளம் கொட்டுவான். அந்த நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய். நியாயமான போரில் வெற்றி பெறுவாய்.

கிருஷ்ணன்: என்ன! திருமால் மத்தளம் கொட்டினானா? என்ன உளறுகிறாய்? (குறும்புச் சிரிப்பை உதிர்க்கிறான்.)

சகாதேவன்: கிருஷ்ணா! உத்தம வழிபாட்டிற்குரிய தெய்வம் நீ....... இருந்தாலும், நீயே செய்ய வேண்டிய அதி உத்தம வழிபாடு ஒன்று உண்டு, அந்த வழிபாட்டில் திருமால் தவறாது மத்தளம் கொட்டுவார். அதைத்தான் சொன்னேன்!

கிருஷ்ணன்: சகாதேவா.... ஆர்வத்தைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கிறாயே! அந்த அதிஉத்தம வழிபாடுயாது?

சகாதேவன்: கிருஷ்ணா.... அனைத்தையும் அறிந்தவன் 'நீ'. இருந்தாலும் மக்களுக்காகக் கேட்கிறாய்! சொல்கிறேன், 'பிரதோஷம்' என்று ஒரு அதி உத்தம வழிபாடு உண்டு. அதில் எம்பெருமானாகிய சந்திரசேகரமூர்த்தியும் அம்பிகையும் நந்தி வாகனத்திலமர்ந்து பவனி வருவர், அதையே 'பிரதக்ஷிணம்' என்றும் சொல்வர். பிரதக்ஷிணத்தில் பலவகை உண்டு, அதில் உத்தமமானது 'சோமசூக்த பிரதக்ஷிணம்' என்பது, அந்த சோமசூக்த பிரதக்ஷினத்தில் ஈசன் வாகனத்தில் ஈசான்ய மூலைக்கு வரும்போது மஹா தூப தீப ஆராதனைகள் நடக்கும். அதை குருவருளால் முறையாக தரிசனம் செய்தால் முறையான போட்டியில் தவறாமல் வெற்றி கொள்ளலாம். மேலும் அந்த உத்தம வழிபாட்டின்போதுதான் திருமால் திருக்கைலாயத்தில் ஈசனுடைய நாட்டியத்திற்கு அற்புதமாக மத்தளம் கொட்டுகிறான்...

பிரதோஷ வழிபாட்டு மகிமைகளில் மூழ்கிய நிலையில் கிருஷ்ணன் தன் குரு உத்தம சாந்திபீனியிடம் வருகிறான்..... உத்தம குருவும் தன் சீடனுடைய உள்ளத்தை அறிந்து, அவனுக்கு சிவலீலைத் தத்துவங்களைப் பக்குவமாக உபதேசிக்கிறார். அதிலிருந்து பிறந்தது பிரதோஷ வழிபாட்டின் மகிமையும், பெருமையும்.... மக்கள் உணர்ந்து உய்யவே !

இவ்வாறு அவதார மூர்த்தியாகிய கண்ணனே அலைந்து, திரிந்து பிரதோஷ வழிபாட்டின் மகிமைகளை உணர்ந்தானென்றால்... மக்களாகிய நாம் இன்றுவரை பிரதோஷ வழி பாட்டின் மகிமையை உணர்ந்தோமா? அல்லது, உணர முயற்சித்தோமா? அல்லது உணர்ந்தறிந்த உத்தமர்களைத்தான் நாடினோமா? – இல்லை. இருப்பினும் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பரந்த நோக்கத்துடன் புவியில் உலவி வரும், அகத்திய பீடத்தின் அழகுறச் செய்யும் தன்னிகரில்லா, அங்காள பரமேஸ்வரி அடிமை, ஸ்ரீ-ல-ஸ்ரீ  வேங்கடராம சித்தர் அவர்கள் கிருஷ்ணன், சாந்திபீனியிடம் பெற்ற பிரதோஷ ரகசியங்களை, போகர் அகத்தியரிடம் கற்ற அற்புத பிரதோஷ மகிமைகளை மக்களுக்காக, மக்கள் புரிந்துகொள்ளும் வகையில், எளிமையாக,அருமையாக இங்கு அள்ளி கொடுக்கிறார்கள். மக்களாகிய நாமும் பிரதோஷ வழிபாட்டின் மகிமைகளை உணர்ந்து, பின்பற்றிப் பேரின்பம் அடைவோமாக!!  

ஸ்ரீநித்ய பிரதோஷ நந்தீஸ்வரர்
திருஅண்ணாமலை

உத்தம சிவதத்துவ ரகசியங்களை கசடறக் கற்றுணர்ந்தவர் போகர். அவருடைய குருவோ ‘ஈசர்’ பட்டம் பெற்ற அகத்தியர். இவ்விருவரும் ஆன்மீக தத்துவங்களை விவாதிக்கும் போதுதான், மக்கள் வாழ்வாங்கு வாழ எண்ணற்ற ரகசியங்கள் வெளியாயின. எப்பொழுதுமே... எந்த ஒரு கல்வியையும் குருமூலமாகக் கற்பதுதான் உத்தமம். இதையேதான் அகத்தியரும்,

ஒவ்வொருவர் யார் யாராய் ஏதெடுத்திருந்தாலும்,
அனைத்துப் பொருள்களைத்தான் கடந்திருந்தாலும்
ஏதேது பொருளை நீ சூட்டி இருந்தாலும்
எத்தனை ஆண்டுகள் எத்தவங்கள் செய்திருந்தாலும்,
உத்தம நிலைகள் நீ உருவகித்து தத்துவத்தில்
சகஸ்ராரம் ஏறி நீ பார்த்தாலும்

குரு இல்லையேல் அவ்வித்தை குருட்டு வித்தை பாரேன் என்கிறார்.

அகத்தியர் மேலும் ஒரு படி சென்று “ஈசன் இருப்பதை அறியாமல் இருந்தாலும் இருக்கலாம், ஆனால் ஆசான் இருப்பதை அறியாமலிருக்கக் கூடாது,” என்கிறார்.

மக்களாகிய நாம் காலையில் எழுந்து இரவு படுக்கச் செல்லும் வரை நூறு ரூபாய் அளவு பாவங்கள் செய்கிறோம்! ஆனால் நாம் சேர்க்கும் புண்ணியமோ வெறும் ஐந்து பைசா அளவே! அதுவும் அன்று முழுதும் பல தர்ம காரியங்கள் செய்திருந்தால்! கணக்கு இப்படியே சென்றால் மனிதன் எப்படித் தான் வாழ்வது? இதற்கு ஒரே ஒரு விடைதான் உண்டு. அது 'குரு அருள்' ஒன்றே! எப்படி?

ஒரு குறிப்பிட்ட தர்மத்தை, ஒரு குறிப்பிட்ட இடத்தில் செய்யும்போது அதன் பலன் பன்மடங்காகப் பெருகி நம்மைச் சேருகிறது. அப்படிப்பட்ட அந்த குறிப்பிட்ட விசேஷமான இடத்தை அறிந்தவர் 'குரு' ஒருவரே! உதாரணமாக நாம் 'அன்னதானம்', என்ற தர்மத்தை எடுத்துகொள்வோம். காஞ்சிபுரத்தில் ஒரு படி அளவு அன்னதானம் செய்தாலே வரும் பலன் சென்னையில் ஒரு மூட்டை அளவு அன்னதானம் செய்தால் தான் வரும். திருஅண்ணாமலையில் 1 படி அரிசி அளவு அன்னதானம் முறையாகக் செய்யும்போது பெறும் பலனை சென்னையில் 10 மூட்டை அரிசி அன்னதானம் செய்தால்தான் பெற முடியும். இதை உணர்த்தியவர் குருவே.

ஸ்ரீநெற்றிக்கண் நந்தீஸ்வரர்
மாத்தூர் சிவாலயம் திருக்காட்டுப்பள்ளி

இப்படி நாம் குருவைச் சார்ந்து வாழும்பொழுது ஒரு நாளைக்கு நாம் சேர்க்கும் புண்ணியத்தின் அளவு பெருகி பாவங்கள் குறைகின்றன. ஆகவே, ‘ அனைவருக்கும் குரு தேவை’ என்ற காரணத்தினால்தான் இறைவன் 'ஜகத்குரு'வை நமக்குத் தந்துள்ளான்.

போகர் தன் குருவைக் கேட்கிறார் : உத்தம குருவே, 'கல்வி' என்பது என்ன?


அகத்தியர்: உத்தமனே போகா, கல்வி என்பது வெறும் ஏட்டுப்படிப்பல்ல. வெறும் ஏட்டுப்படிப்பு அஞ்ஞானத்தைத்தான் வளர்க்கும், ‘கல்வி’ என்பது எதற்கென்றால். 'நிலையான மனமுடன் இருபதற்கே' என்று பொருள்படுத்துகிறார்கள், பெரியவர்கள். இதையேதான் Study is to be steady என்றார்கள். நிலையான மனதுடன் இருக்க வேண்டுமென்றால் நற்குணத்தையும், நற்பண்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நற்குணத்தையும், நற்பண்பையும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால், தானம், தருமம், குருபக்தி, சிவ பக்தி போன்ற உத்தம் நெறிகளில் குழந்தைப்பருவத்திலிருந்தே ஈடுபட்டிருக்க வேண்டும், புரிந்ததா!


போகர்: ஐயனே! கேட்பதற்கு ஆனந்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் தாங்கள் கூறிய உத்தம குணங்களையும், பண்புகளையும் நாமே எப்படிப் பயிலுவது?


அகத்தியர்: அன்பனே, போகா! குரு உன்னை நாடி வந்துவிட்டால் அணைத்து நற்குணங்களும், உயர்வுகளும் உன்னை நாடித்தானே வந்துவிடும். இதுதான் இரகசியம்,  புரிந்ததா?

போகர்: சுவாமி! வாழ்க்கையில் உத்தம குணங்களுடன் வாழ வழி சொன்னீர்கள்.. ஆனால் கலியில் தற்சமயம் நிதானமாகவும் திடமாகவும் வேலை செய்வோர்க்கெல்லாம் உயர் பதவி கிடைப்பதில்லை. அதே சமயம் பெரும் பதவியில் இருப்பவர்களெல்லோருமே நிதானமாகவும், திடமாகவும் இருப்பதில்லை; ஏன் குருவே?

அகத்தியர்: போகா, இவையனைத்திற்குமே காரணம் எண்ணங்களே! மனத்தில் உருவாகும் எண்ணங்கள்தான் அனைத்திற்கும் அடிப்படை. அப்படி மனதில் உருவாகும் வேண்டாத எண்ணங்களே பிற்காலத்தில் நோய்களாக மாறி நம்மிடம் வந்து சேர்கின்றன.. அது தெரியுமா?

போகர்: சற்று விளக்கமாகச் சொன்னால் அடியேன் தெளிவடைவேன் குருவே....

நோய்கள் வரும் வழி

அகத்தியர்: உத்தமனே போகா! நீ அனைத்தும் அறிந்தவன். இருந்தாலும் மக்களுக்காக, மக்கள் தெளிவடையக் கேட்கிறாய், கூறுகிறேன், கேள். நான் ஏழையாகப் போனாலும் சரி, ஆனால் என் எதிரி பணக்காரனாகக்கூடாது என்ற எண்ணம் ஒருவனுக்கு பிற்காலத்தில் காச நோயைத் தருகிறது. தன்னை அடக்கும் காலையில் தான் அடங்கி அழிந்து போனாலும் பரவாயில்லை - பின்னை என் எதிரி வாழ்ந்துவிடக்கூடாது' என்னும் எண்ணமே க்ஷயத்தில் வைத்துவிடும் பாரேன், போகா! ‘அடுத்து தன் கணவன் வெளிச்சென்ற பின்னே தான் எண்ணிய வாரெல்லாம் தவறு செய்துவிட்டு கணவன் வந்த பின், தான் 'ஒரு தவறும்' செய்யவில்லை என்று கூறி மழுப்பும் மனைவிக்கு கர்ப சம்பந்தமான நோய் தானே தேடி வருது பார் போகா! இதே எண்ணம் ஆணுக்கு வரும்போது அவனைத் தேடி வரும் நோயே, நரம்புத்தளர்ச்சி நோய் எனறு அறிவாயாக.

அடுத்து... நாம் வாழ்க்கையில் பார்க்காதது எதுவுமே கிடையாது, எல்லாம் எனக்குத் தெரியும் என்ற எண்ணம் கொண்டு ஆணவத்தில் வாழும் மனிதனை மனநோய் (Hysteria) தேடி வருகுது பார், போகா!

அடுத்து... சொத்து பங்கீட்டில் தான் மட்டும் பெரும் பங்கை அடைய வேண்டும் என்ற பேராசை எண்ணம் ஒருவனுக்கு வருமேயானால், அவனுக்குச் சொத்து வருகிறதோ இல்லையோ...ஆனால் ரத்தக்கொதிப்பு (Blood Pressure) நோய் தேடி வரும். அடுத்து, உயர் பதவி அடையும் தகுதி ஒருவனுக்கு இருந்தும், பெரும் பதவியிலிருப்பவர்கள் தனக்கு வேண்டியவனை மட்டும் உயர்த்தி அப்பதவியில் வைத்தால், அவர்களுக்கு வரும் நோயோ... 'ரத்த சோகை' என அறிவாய் போகா. அடுத்து, ஒற்றுமையாய் இருக்கும் நண்பர்களைப் பிரித்து வைக்க நினைப்பவர்க்கு வரும் நோயோ 'அரிப்பு நோய் (allergy) ' என்றறிவாய் மகனே… இப்படி கோடிக்கணக்கில் அடுக்கிக்கொண்டே போகலாம், போகா .. ஆகவே தூய்மையான எண்ணங்களுடன் கடமைகளைச் சரிவர ஆற்றுவதன் மூலம்தான் நாம் உயரமுடியும்' புரிந்ததா?


போகர்: மஹாதேவா! 'கடமை' என்று சொன்னீர்கள் அதன் பொருள் என்ன?

நித்ய பிரதோஷ பாஸ்கரபூஜை
திருத்தலம் கருப்பத்தூர்

அகத்தியர்: கடமை என்றால், காலையில் எழுந்து, பல் தேய்த்து,  குளித்து, கடன்களை முடித்து, சந்தி பூஜை செய்து.உண்டு, அலுவலகம் சென்று, திரும்பி, கேளிக்கைகளில் ஈடுபட்டுப் பின் உறங்கச் செல்வது, என்பதல்ல, மகனே!... பின் 'கடமை என்றால் என்ன? ' என்று கேட்கிறாயா?....

'காலை எழுந்தவுடன் 'ஈசா! எவ்வுயிர்க்கும் துன்பம் நேரக் கூடாது' என வேண்டுவதும் ....

காலையிலிருந்து மாலை வரை உடலாலும், உள்ளத்தாலும் யாருக்கு உதவலாம் என்று ஏங்குவதும்.....

ஆலயங்களை எவ்வாறு தூய்மைப்படுத்தலாம் என்று எண்ணிச் செயல்படுவதும்தான், 'கடமை' எனப்படுவது. மேலும் கூறுகிறேன், கேள்... புவிவாழ் மக்களுக்கு உதவட்டும்

நாம் பேசுவதற்கு முன் நன்றாய் கவனமாகக் கேட்டுவிட்டு யோசித்துப் பேசவேண்டும்.. அடுத்து, 'ஒன்றை எழுதும் முன்னால் நன்றாக யோசிக்கத் தவறக்கூடாது.

அடுத்து, செலவு செய்வதற்கு முன்னால். நீ நன்றாகச் சம்பாதித்தாயா? என்று யோசி

அடுத்து. பிறரை விமர்சிக்கும் முன்னால், 'உன்னை நீ எண்ணிப் பார்'

அன்பனே! நற்சிந்தனை, நற்குணங்களுடன் மேற்கூறிய கடமைகளை ஆற்றுபவர்கள், ஒரு உத்தமவழிபாட்டைப் பற்றித் தெரித்துகொள்ள தகுதி பெறுகிறார்கள். அது என்ன வழிபாடு என்று உனக்குத் தெரியுமா?


போகர்: ஐயனே! ஈசனை எல்லா தினங்களிலும் முறையாக வழிபட வேண்டியது மிக மிக அவசியம்.. என்றாலும், சில குறிப்பிட்ட தினங்களில், அவனை விரதமிருந்து வணங்குவது -விசேடமான அருளைப் பெற்றுத் தருகிறது. உதாரணமாக,’ சிவராத்திரி வழிபாடு (மாத சிவராத்திரி,  நக்ஷத்திர சிவராத்திரி என்று பல உண்டு என்று அறிக.) சிறந்தது, என்றாலும் மஹா சிவராத்திரி வழிபாடு மிகச் சிறந்தது. சஷ்டி வழிபாடு சிறந்ததென்றாலும் கந்த சஷ்டி வழிபாடு மிகச் சிறந்தது. அன்னைக்கு வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி வழிபாடு சிறந்தது என்றாலும், நவராத்திரி வழிபாடு மிகச் சிறந்தது. அதே போல், ஏகாதசி வழிபாடு சிறந்தது, என்றாலும் வைகுண்ட ஏகாதசி வழிபாடு மிகச் சிறந்த வழிபாடாகிறது, .... அடியேன் அறிந்தவைகளைச் சொன்னேன்... தாங்கள்தான் எது உத்தம வழிபாடு என்று கூறுதல் வேண்டும்..


அகத்தியர்: செல்வமே, போகா! பல தெய்வங்களுக்கு உரித்தான வழிபாட்டு முறைகளைக் கூறினாய்.. நன்று. ஆனால் ஒன்று கூறுகிறேன்... எத்தனை, எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவை அனைத்தும் சிவனருளால் வந்தவையே! அனைத்திறகும் மூல காரணம் சிவனே!” என்பது நீ அறியாததா? இதையே அறிவிற் சிறந்தோர்,

மாணிக்க பிரகாச நந்தீஸ்வரர்
ஐயர்மலை

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே கடல்மலை ஆதியுமாய் நிற்கும்
தானே உலகினில் தலைவனுமாமே!

என்றார்கள் அப்படிப்பட்ட சிவனுக்கே... பலவிதப்பட்ட வழிபாடுகள் இருப்பினும், முக்கியமான, உத்தமமான வழிபாடு ஒன்று உண்டு.. எங்கே, கண்டுபிடி பார்க்கலாம்..

போகர்: ஈசனே. சோதிக்காதீர்கள்...

அகத்தியர்:

சிவனே நம்மை ஆண்டுகொண்டான்
சிவத்தை உணர்ந்து ஆட்பட்டோமே
அவனே நம்மைக் காத்திடவே
ஆதியில் ஆலாலம் உண்டானே

இப்பொழுது புரிகிறதா, போகா. அது என்ன வழிபாடு? என்று.

காயத்ரீ ஓதும் கோமாதா
திருஅண்ணாமலை

போகர்: ஈசன் ஆலாலம் உண்டானா... அது என்ன?

அகத்தியர்: ஆம் ஐயனே! மேலும் கூறிகிறேன், கேள்

உள்ளும் வெளியும் உறவாகி
உருவும் அருவும் தானின்று
அள்ளி அழகாய் ஆலாலம் உண்டாலும்
அழியா திருப்பவன் அரனவனே

புரிகிறதா, போகா? இன்னும் கூறுகிறேன் கேள்...

நடன ராஜா எனதப்பா
நமனின் உறவு நமக்கு ஏதப்பா
படமெடுத்தாடும் பாம்பணிந்தோனே
பதறிய தேவர்க்கு பதமளித்தோனே

போகர்: குருநாதா... ஈசன் ஆலாலம் உண்டு, பதறிய தேவர்க்குப் பதமளித்தானா? ஆகா... என்னே அவன் கருணை! அப்படிப்பட்ட தேவர்களுக்கே ஈசன் கருணை காட்டினான்..... ஆனால் இந்த ஏழை போகன் மீதோ,  தந்தைக்கு கருணை பிறக்கவில்லையே... ஸ்வாமி,  இன்னும் அந்த வழிபாடு என்ன? என்று கூற மறுக்கிறீர்களே! இது நியாயமா?

ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்திகள் நயினார்பட்டி

அகத்தியர்: அப்பனே போகா! ஆர்வத்தோடு கேட்பவருக்கே இவ்வழிபாட்டைப் பற்றிக் கூறலாம் என்று சட்டமிருப்பதால்தான் உன் ஆர்வத்தைத் தூண்டினேன்.... கூறுகிறேன், கேள். நீ சிவராத்திரி, ஏகாதசி போன்ற பலவித வழிபாடுகளைப் பற்றிக் கூறினாய் அல்லவா? இவ்வழிபாடுகள் யாவும் விசேஷம்தான் என்றாலும் “பிரதோஷ” வழிபாட்டிற்கு ஈடு இணையான அருளையோ, வரங்களையோ தரும் உத்தம வழிபாடு எங்கும் கிடையாது ஐயனே!

போகர்: ஐயனே! 'பிரதோஷ வழிபாடு' என்று கேட்கும்போதே இனிக்கிறதே.... அப்படியென்றால் அதன் மகிமைதான் என்ன ?

அகத்தியர்: போகனே

உத்தம நிலைகள் பிரதோஷ மகிமைகள் கேட்டிடில் செவி மணக்கும் பாரேன்
சொல்லிடில் வாய் மணக்கும் பாரேன்
நினைத்திடில் இதயம் மணக்கும் பாரேன்
எண்ணிலடங்கா புண்ணியத்தை எப்படி இயம்புவேனோ?

ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்திகள் கொறுக்கை

போகர்: ஆகா, ஆனந்தம் ..

அகத்தியர்: அது மட்டுமில்லை, ஐயனே!

சிந்தைக்கு இனியதாகி செவிக்கும் மதுவாகி
விந்தையான வாய்க்கும் இனியதாகி
எந்தை பிரானாடும் பிரதோஷ விழா
வந்த இருவினை மாற்றுமே...

போகர்: இருவினை மாற்றுமா.... ஐயனே! அப்படியென்றால் பிரதோஷ வழிபாட்டின் மகிமையை அதன் தோற்றத்திலிருந்து தாங்கள் கூறித்தான் தீரவேண்டும்

அகத்தியர்: ஒரு தென்னங்கன்றை நட்டு பிரதோஷ மகிமையைப் பற்றிப்பேச ஆரம்பித்தால், அது நீண்டு வளர்ந்து மரமாகி  இளநீர்க் காய்களை உருவாக்கி அந்த இளநீரால் ஈசனுக்கு அபிஷேகம் செய்யும்போது ஓரளவு முடிக்கலாம்...

போகர்: சிவ சிவா! சுவாமி, பூலோக ஞானிகளுக்கு அவ்வளவு பொறுமை கிடையாது. ஆகவே,  பிரதோஷ வழிபாட்டின் மகிமையை ரத்தினச் சுருக்கமாகச் சொல்லி ரத்தினக்குவியல்களைப் பெறும் பாக்கியத்தை அருளுங்கள். குருதேவா!

பிறவாத்தானம் நந்தி மூர்த்தி
திருப்புனவாசல்

அகத்தியர்: அன்புச்சீடனே, போகா! உலகில் ‘நல்லது’ என்று ஒன்று இருப்பதால்தான் 'கெட்டது' என்று ஒன்று இருப்பது நமக்கு தெரிகிறது. அதேபோல் 'பணக்காரன்’ என்று ஒருவன் இருப்பதால்தான் ‘ஏழை’ என்று ஒருவன் இருப்பது தெரிய வருகிறது. அதுபோல 'தேவர்’ என்ற கூட்டம் இருக்கும்போது 'அசுரர்’ என்ற கூட்டம் இருப்பதில் வியப்பென்ன? அப்படிப்பட்ட அந்த தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு ஆசை வந்துவிட்டது....

போகர்: சிவசிவ... 'ஆசை' கொள்வது துன்பத்தில் வைத்துவிடுமே...?

அகத்தியர்: சீடனே, போகா! முறையான 'ஆசை' கொள்வதில் தவறில்லை. ஆனால் பேராசை, துராசை, நப்பாசை கொள்வதுதான் தவறு, புரிந்ததா?!

போகர்: புரிந்தது ஐயனே, அப்படி தேவர்களும் அசுரர்களும் என்ன ஆசை கொண்டார்கள்?

அகத்தியர்: அன்பனே,

எண்ணியது முடிதல் வேண்டும்
நல்லவே எண்ண வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேணாடும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்
ஈசா, ஏதெனக்கு நன்மையோ அதை நீ செய்தல் வேண்டும்
என்று அவர்கள் எண்ணாமல்,

“நரை, திரை, மூப்பு நீக்கும்
மருந்து ஒன்று பெற்றால் என்றும்
விருந்துண்ணலாம்...”

என்றெண்ணி, என்றும் இளமையுடன் இருக்க ஆசைப்பட்டு “சாவா மூவா மருந்தைப்” பெற விரும்பினர். தேவர்கள அனைவரும் ஒன்று கூடி தங்கள் தலைவனாகிய இந்திரனிடம் வந்து நரை,  திரை, மூபபு நீங்க வழி கேட்க, இந்திரனோ, ‘நம் குருவைக் கேட்போம், என்று சொல்ல, அனைவரும் குருவாகிய பிருகஸ்பதியிடம் வந்தனர். பிருகஸ்பதியும் 'நரை திரை மூப்பு’ ரகஸியம் அறிந்தவர் அகத்தியர் ஒருவரே!  அன்னவரை அணுகிடில் அனைத்தும் தெரியும்’ என்று கூறி என்னிடம் அவர்களை அனுப்பி வைத்தார்

போகர்: தாங்களும், 'நீங்கள் எம் சிவனிடம் செல்லுங்கள், அவனை வேண்டுங்கள். அவனுடைய திருப்பார்வை பட்டால் போதும், நரை, திரை, மூப்பு, மரணம் எதுவும் அணுகாது என்றீர்கள். அப்படித்தானே?

அகத்திர்: அட..... இனம் இனத்தோடு சேர்ந்து விட்டதே! நீ சொன்னதையேதான் நானும் அவர்களிடம் சொன்னேன் .. ஆனால், தேவர்களோ, 'இது பொதுவாக எவருமே சொல்வதுதான்' என்று எண்ணிப் பிரமனிடம் சென்றார்கள்.

பிரம்மாவிற்கே ஆணவமா ?

போகர்: விதியைத் தவிர வேறு எதை நொந்து கொள்வது?
அகத்தியர்: பிரமனோ ‘நாமே படைக்கிறோம்' என்ற ஆணவம் கொண்டு நிற்கிறான்..'

போகர்: பொதுவாக எதிலிருந்து ஆணவம் பிறக்கிறது குருதேவா?

அகத்தியர்: நன்றாகக் கேட்டாய், கூறுகிறேன் கேள். அவரவர் திறமைகள் வெளிப்படும்போது, அதிவிருந்து பிறக்கும் திருப்தியிலிருந்துதான் ஆணவம் பிறக்கிறது

போகர்: அப்படியென்றால் பிரமனுக்கு ஆணவம் எப்படி வந்தது, குருவே?

ஸ்ரீஅகத்திய பெருமான்
திருவைகாவூர் திருத்தலம்

அகத்தியர்: ஈசனுடைய அருளாணையின்படி படைப்புத் தொழிலை அற்புதமாகச் செய்பவன் பிரமன். அவன் 'வட்டுவக்கிளி' என்ற ஆயுதம் கொண்டு ஒரறிவு கொண்ட உயிர்களைப் படைக்கிறான். 'துருவக்கிளி’ என்ற ஆயுதம் கொண்டு ஈரறிவு படைத்த உயிர்களைப் படைக்கிறான். 'பருவக்கோடு' என்ற ஆயுதம் கொண்டு மூன்றறிவு படைத்த உயிர்களைப் படைக்கிறான். 'பாசக்கோடு’ என்ற ஆயுதம் கொண்டு நாலறிவு படைத்த உயிர்களைப் படைக்கிருன். 'வலக்கட்டு’ என்ற ஆயுதம் கொண்டு ஜந்தறிவு படைத்த உயிர்களைப் படைக்கிறான். 'அசு அங்குச வித்தா’ என்னும் ஆயுதம் கொண்டு ஆறறிவு படைத்த மனிதனை உருவாக்குகிறான்... இது மட்டுமா.. 'வேலவடக்கிளை’ என்னும் ஆயுதம் கொண்டு கந்தர்வர்களைப் படைக்கிறான். 'வாலை கூட்டு வித்தை’ என்பதைக் கொண்டு கான கந்தர்வர்களைப் படைக்கிறான். 'சிலக்காகித சுட்டுக்காணி' என்பதைக் கொண்டு சப்தஸ்வர கந்தர்வர்களைப் படைக்கிறான். ‘பாலக்கினி’ என்பதைக் கொண்டு சோதி சொருப கந்தர்வர்களைப் படைக்கிறான். பிரமன் இவைகளைச் செய்தாலும், பெண்களைப் படைக்கும்போது மட்டும் மிக ஜாக்கிரதையாக இருக்கிறான் போகா!
போகர்: ஏன் குருவே?

அகத்தியர்: அறிவிற் சிறந்தோர் பெண்ணினத்தோர் ஆணிலும் பன்மடங்கு உயர்ந்தோரே..’ ஆகவே பெண்களைப் படைப்பதற்கு முன்னால் 'காலைக்குருணிவாணி’ என்னும் தேவதையை வணங்கி ஆசிபெற்றுப்பின் தன் கோலால் அவர்களைப் படைக்கிறான் பிரமன். இப்படி அவன் விதவிதமாய் படைப்பதைப் பார்தோரெல்லாம் 'அற்புதம் அற்புதம்’ என்று சொல்ல, பிரமனும், ‘என்னுடைய ஆற்றலல்லவோ இதற்குக் காரணம்'  என்று நினைக்க, அங்கு பிறந்தது, பிரமனுடைய ஆணவம். இந்த நிலையில், தேவர்கள் பிரமனிடம் வந்து, மாறா இளமைக்கு வழி கேட்க, பிரமனும், 'எம் தந்தை உள்ளான். அவனைக் கேட்போம், வாருங்கள்’ என்று கூறி, அவர்களைப் பெருமாளிடம் அழைத்து வருகிறான். ஆனால் பெருமாளோ, பிரமனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு 'அற்புதப் படைப்பு தன் திறமையே’ என நினைத்து ஆணவம் கொண்டு விட்டான்.... ‘இவன் படைத்ததை ‘நான்' அல்லவோ காக்கின்றேன். ஆகவே நானே பெரியவன்’., என ஆணவம் கொண்டு விடுகிறான்... தேவர்களும் தங்களுடைய ஆசையைச் சொல்ல, பெருமாளும், 'திருப்பாற்கடலைக் கடையுங்கள். அமிர்தம் வரும். அது உங்களை இறவாமல் காத்து இளமையுடன் இருக்கச் செய்யும்’, என்று வழிகாட்ட.... தேவர்களும் விளைவுகளை அறியாது அசுரர்களுடன் சேர்நது கொண்டு திருப்பாற்கடலை நோக்கி ஒடிவருகின்றனர்.....
போகர்:  உத்தமரே, மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டியது அவசியமா?

குற்றாலத்துறை நந்தியல்லால்
நமக்கு உற்றார் ஆருளரோ ?

அகத்தியர்: மரணத்தைக் கண்டு பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது, மகனே.... ஏன் தெரியுமா?

“செத்துப் பார்த்தால் சிவனை அறிவாய்
ஒத்துப் பார்த்தால் ஈசன் ஆசானை அறிவாய்
செத்துப் பார்த்தான் ரமணன், பின்
சித்தாதி சித்தர் வணங்க அண்ணாமலையில் நின்றானே”

ஆகவே இறப்பைப் பற்றி அஞ்சவே வேணடாம். நாம் பால பருவம் அடையும்போது 'குழந்தைப்பருவம்’ இறந்துவிடுகிறது. 'வாலிபப்பருவம்' வரும்போது 'பாலபருவம்’ இறந்துவிடுகிறது. முடிவில் நாமே இறக்கும்போது ஆன்மா வீடுதலை பெறுகிறது. மீண்டும் கதைக்கு வருகிறேன்.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய விரைந்தனர். கடைவதற்கு உபகரணங்கள் வேண்டாமா? கொண்ட மந்திரகிரியை மத்தாக வைத்தார்கள். சந்திரனைத் தறியாக வைத்தார்கள். வாசுகி என்ற கொடிய விஷமுள்ள நாகத்தைக் கயிறாக வைத்தார்கள்! இப்போது தேவர்களும், அசுரர்களும் கடைய முற்படுகிறார்கள்.

அன்று தசமி திதி. முதலில் திருமால். கயிறாகி நிற்கும் வாசுகியின் தலைப் பக்கம் பிடிக்கச் சென்றார். அதைக் கண்ட அசுரர்களோ 'நாங்கள்தான் தலைப்பக்கம் நிற்போம்’ என்று கூறி சுறுசுறுப்புடன் இயங்கித் தலையைப் பிடித்துக் கொண்டனர்.... போகா. பொதுவாகவே தலைப்பக்கம் பிடிப்பது என்பது சாத்திரப்படி தவறு... அதனால்தான் எல்லோருமே 'காலைப்பிடி, காலைப்பிடி' என்கிறார்கள்....காலைப் பிடிப்பது பணிவைக் காட்டுகிறது. அதனால்தான் பணிவென்பதை உணர்ந்தறியாத அசுரரை வால் பக்கம் முதலில் அனுப்பினர். ஆனால் அசுரர்களோ... 'தலைப் பக்கம்தான் நிற்போம்’ என்று கூற... இருவரும் பாற்கடலைக்கடைய ஆரம்பித்தனர்.

ஸ்ரீநவநீத நந்தி மூர்த்தி
பரியா மருதுபட்டி

போகர்: ஆகா... அமிர்தம் வந்ததா, ஐயனே?

அகத்தியர்: பொறுமையுடன் கேளடா, மகனே.....அற்புதமாகப் பாற்கடலைக் கடைந்தாலும், சரியான அடித்தளம் (Foundation) இல்லாத காரணத்தால் மந்திரகிரி இங்குமங்கு மாக அல்லாட... அனைவரும் திகைத்து நிற்க... திருமால் கூர்மமாக (ஆமை) மாறி மலையைத்தாங்க.... மறுபடியும் நிம்மதியுடன் வேகமாகக் கடைகிறார்கள்.. வலி பொறுக்க இயலாத நிலையில் வாசுகி விஷத்தைக் கக்க ஆரம்பிககிறது... குபுகுபுவென விஷம் பல்கிப் பெருகுகிறது..

போகர்: அப்படியாவது அவர்கள் அமிர்தம் உண்டு வாழத்தான் வேண்டுமா.. குருவே?

அகத்தியர்: போகா! பலர் சந்தோஷப்பட வேண்டுமென்றால் ஒரு சிலர் தியாகம் செய்துதான் தீரவேண்டும்....புரிகிறதா? இவர்கள் இப்படியும் அப்படியுமாகக் கடையும்போது ஆழ்கடலில் இருக்கும் கொடிய விடங்கள் வெளிக் கிளம்புகின்றன. மேலிருந்து வாசுகி கக்கிய கொடிய நஞ்சு கீழிருந்து கிளம்பி வந்த கொடிய ஆழ்கடல் நஞ்சுடன் ஒன்று சேர்ந்து ஆலால விடமாய் மாறி, இதைச் சற்றும் எதிர்பார்ககாத தேவர்களையும், அசுரர்களையும் தாக்க முற்பட்டு பயங்கரமாகத் துரத்துகிறது..... அனைத்து தேவர்களும், அசுரர்களும் அனைத்தையும் துறந்த நிலையில் அற்புதமாக ஓடியபடி, அனைத்துயிர்களுக்கும் அடைக்கலம் அளிக்கக்கூடிய ஒரே இடமாகிய கயிலாயம் நோக்கி விரைகிறார்கள்... இந்திரன் தடுக்கி விழுந்தெழுந்தோட பிரம்மன் தொடர..... வெண்ணிற மேனியன் தன் நிறம் மாறித் தானாய் ஓடலுற்றான்.....பார்த்தாயா, போகா ..ஆசையின் கூத்தை? அனைவரும் கயிலாயம் வந்தடைந்து வாயிலில் நடுநடுங்கி நிற்க.... கயிலாயத்தில் சிறு சலசலப்பு! அவ்வளவே! நந்தியெம்பெருமான் நின்று சற்றுத் திரும்பிப் பார்க்கிறார்.. அந்தப் பார்வையே அவர்களுடைய சஞ்சலத்தை அடக்கி, பயத்தைப் போக்கி, அவர்களை நிம்மதிப் பெருமூச்சுவிடச் செய்து விடுகிறது..

போகர்: சுவாமி....... நந்தியினுடைய பார்வைக்கு அவ்வளவு சக்தியா...?

அகத்தியர்: நந்தீசனுடைய பார்வை மகிமையைப் பின்னால் விவரிக்கிறேன்.... மறக்காமல் கேள்... திரும்பிப் பார்த்த நந்தீசர் 'யாது பிரம்மா’ மாலுடன் வந்தாய்...? என்று கேட்க.. பிரமனும் ‘ஈசனைக் காண' என்று சொல்ல... நந்தியும் வெறும் கையுடனா வந்தீர்கள்?’ என்று கேட்க.... பிரமனும் ‘இல்லை, இல்லை. நாங்கள் செய்த மாபெரும் யாகத்தில் முதலில் வெளிவந்த வஸ்துவைக் கொண்டு வந்திருக்கிறோம்” என்று சொல்கிறான்...

போகர்: அப்படியானால் நந்தீசர் ‘ஏன் வெறுங்கையுடன் வந்தீர்கள்’ என்று கேட்டார், குருவே....?

அகத்தியர்: அன்பனே....இறைவனைப் பார்க்கச் செல்லும்போது 'ஹரஹர மகாதேவா! 'என்று கூவியபடி தலை மேல் கை கூப்பிச் செல்ல வேண்டும். கை கூப்பிச் செல்லாமல் கை வீசிச் சென்றால்,அதுதான் 'வெறும் கை' புரிந்ததா?

போகர்: ஆகா... அற்புதம்....பிரம்மாதி தேவர்கள் ஈசனைச் சந்தித்தார்களா, குருவே?

உண்ணவா ? உமிழவா ?

அகத்தியர்: நந்தியினுடைய பார்வை பட்ட நிலையில் அவர்கள் இறைவனை தரிசிக்கும் நிலைக்கு உயர்ந்து.... உட்சென்று ஈசனைத் தரிசிக்க.... தரிசித்த நிலையிலேயே திருமாலுடைய நிறம் சுயநிலைக்கு மாற... ஈசன் புன்முறுவல் பூக்கிறான்....தேவர்களும் ‘ஈசா! எதிலிருந்து எது வந்தாலும் முதலில் அது உன்னையே சாருமல்லவா... ஆகவே நாங்கள் செய்த மாபெரும் யாகத்தில் முதலில் வெளிவந்த வஸ்துவை நீ ஏற்று, எங்களுக்கு அருள் பாலிக்க வேண்டும்’ என்று கூற... அனைத்தையும் அறிந்த ஈசனும், புன்முருவலித்தபடியே, ‘உண்ணவா, உமிழவா?” என்று கேட்க...

விராட நந்தியம் பேரளம்

போகர்: ஆகா.... என்னே.... ஈசன் கருணை!

சொல்லில் அடங்கா சுடர் உருவே
சொல்லில் அடங்குமோ நின் கருணை
சொல்லப் புகுந்தால் சொல்லெல்லாம் ஆகி சொல்லும் சொல்லுற்றதே நின் ஆடல்தானே!

அகத்தியர்: “உண்ணவா, உமிழவா” என்ற அண்ணல் தன்னையும் மறந்த நிலையில் போன்னம்பலத்தன் ‘என்னே’ என்று கேட்டனன். அன்னவன் சொல்லழகே அழகு'

போகர்: ஐயனே... ஈசன் விடத்தை உண்டானா...அல்லது உமிழ்ந்தானா.... என்னே வேதனை...?

அகத்தியர்: அறிஞனே போகா... விடத்தை நந்தியும் சுந்தரரும் எடுத்தவர... ஈசனும் அதைபெற்று விருப்பத்துடன் உட்கொள்ள எத்தனிக்க... அன்னை பராசக்தி சிறிதும் தாமதியாமல் ஈசன் கண்டத்தைப் பற்றி விடத்தை அங்கே தங்கச் செய்கிறாள்... ஏன் தெரியுமா? ஈசன் விடத்தை உட்கொண்டால் உள்ளே இருக்கும் பல கோடி அண்டங்கள் அழிந்துவிடும். வெளியில் உமிழ்ந்தாலும் பல கோடி அண்டங்கள் அழிந்துவிடும் ஆகவேதான் அன்னை, ஈசனை நீலகண்டனாக்கி விடுகிறாள்

போகர்: திருமால் முதற்கொண்டு பிரம்மாதி தேவர்களையே காப்பாற்றியவன் ஈசன் என்றால், 'ஈசனே தெய்வம்' என்று ஆகிவிடுகிறதல்லவா?  அன்று மட்டும் ஈசன் விட முண்ணவில்லையென்றால்...?

குறைகேள் நந்தி மூர்த்தி
கடுவெளி

அகத்தியர்: உண்ணவில்லையென்றால்... ‘மால் எங்கே வேந்தனுயர் வாழ்வெங்கே, இந்திரன் செங்கோல் எங்கே வானோர் குடியெங்கே, கோலம்! செய் அண்டங்கள் எங்கே எந்தைபிரான் கண்டம் அங்கே நீலமுறாக்கால் !

உத்தமனே, போகா! நன்கு அறிந்துகொள். சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவருமில்லை புவனம் கடந்தன்றங்கு பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையானே..'
சிவனுக்கு நிகர், சிவனே...!

போகர்: ஐயனே, ஈசன் விடமுண்டபின் என்னாயிற்று?

அகத்தியர்: விடம் உண்ட ஈசன், தேவர்களைப் பார்த்து, 'மறுபடியும் சென்று கடைவீர்! வருவதைப் பெற்றுக் கொள்வீர்! எனக் கூற பிரம்மாதி தேவர்களும் மகிழ்வுடன் திரும்பிச் சென்று பாற்கடலைக்கடைகிறார்கள்.. அன்று ஏகாதசி திதி கடையும்போது, ஐராவதம், வச்சிரசிரஸ், கௌஸ்துபமணி, இலக்குமி போன்ற அற்புதமான இரகசியங்கள் வெளிவர... அவற்றைத் தேவர்கள் அரவணைத்து ஆனந்திக்க... மறுநாள் காலை, அதாவது துவாதசி திதியில் அதி அற்புதமாக அமிர்தம் வந்துவிடுகிறது ..... அள்ளிப் பருகினர், தேவரும், அசுரரும்... ஈசனை மறந்து ஆடிப்பாடிக் களிக்கின்றனர்.

போகர்: துன்பம் நேரும்போது ஈசனைத் தஞ்சம் புகுவதும், துன்பம் நீங்கி இன்புறும்போது அவனை அடியோடு மறப்பதும் உலகியல்புதானே, குருவே... அதற்கு தேவர்கள் மட்டும் விதிவிலக்கா... என்ன?

அகத்தியர்: இல்லை... மறுநாள் திரயோதசி திதி. அன்று ஈசனை மறந்தது நந்தீசர் அருளால் நினைவுக்கு வர தங்கள் தவற்றை எண்ணி ஈசனிடம் ஓடிவருகின்றனர். ஈசனும், உயர்ந்த, தன் தனிப்பெரும் கருணையினால் அவர்களை மன்னித்து நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று நர்த்தனம் புரிந்தனன் .. திரயோதசி திதியில் ஈசன் நர்த்தனம் புரிந்த அந்த புண்ணிய நேரமே, பிரதோஷ நேரமாகும். இதையே மக்கள், புவியில், பிரதோஷ விழாவாகக் கொண்டாடுகிறார்கள். ஆகவே, போகா, 'பிரதோஷம்' என்றால் பாவங்களை நீக்கும் நேரம் என்று பொருள் கொள்வாயாக...! அதுமட்டுமல்ல..பிரதோஷ விழாவின் நோக்கம், ‘அகந்தையை அழிப்பதே’ என்றும் கொள்வாயாக...

போகர்: ஆம், ஐயனே... பிரம்மாதி தேவர்களுடைய அகந்தை ஈசனருளால் அழிந்ததில் வியப்பென்ன?

அகத்தியர்: மகனே... பிரதோஷ லிழாவில் பிரம்மாதி தேவர்களுடைய அகந்தை மட்டுமா அழிந்தது...? எம்பெருமானாகிய நந்தீசருடைய அகந்தையுமல்லவா அழிக்கப்பட்டது!

போகர்: ஐயனே, என்ன கூறுகிறீர்கள்...? நந்திக்கு அகந்தையா? நம்பமுடியலில்லையே...!

அகத்தியர்: இறை நம்பிக்கை இலலாதவர்களெல்லாம், அகந்தை கொண்டு, ஆணவத்தால் அழிகின்றனர். ஆனால் இறைவனுடைய அருளுக்குப் பாததிரமானவர்கள் அகந்தை கொள்ளும்போதோ, அவர்களுடைய ஆணவம் மட்டும்தான் அழிக்கப்படுகிறது. ஈசன், உலகுக்குப் பாடம் புகட்ட நந்தீசனை கருவியாக்க விருப்பப்பட்டான்.. நந்திக்கு ஆணவம் வந்தது...இதில் வியப்பென்ன போகா?

போகர்:  உண்மைதான் ஐயனே.. நந்தீசருடைய பார்வை மகிமையைப் பற்றித் தாங்கள் சொல்ல வேண்டும்...

நலமருளும் நந்தி பார்வை

அகததியர்: போகா! முன்பு சொன்னேன், 'நந்தியினுடைய பார்வை பட்ட மாத்திரத்திலேயே பிரம்மாதி தேவர்களுடைய பயம் நீங்கியது, மனசஞ்சலம் அடங்கியது' என்று. எப்பொழுதுமே போகா, இறைவனை தரிசிக்கும்போது நமக்கு சலனமற்ற மனது வேண்டும். ஆகவே பிரதோஷ வழிபாட்டில் ஈசன் அன்னையுடன் நந்தியின்மேல் அமர்ந்து பவனி வரும்போது நாம் தரிசிக்க வேண்டிய முதல் தெய்வம் நந்தீசனே. மேலும் போகா.. நந்தியின் பார்வை முதலில் நம்மேல் பட்டால்தான், ஈசன் பார்வை நம் மீது படும் புரிந்ததா...? இப்போது நந்தி பிரம்மாதி தேவர்கள் மீது வீசிய பார்வைகளை விளக்குகிறேன். நந்தீஸ்வரர் முதலில் பிரம்மாதி தேவர்கள் மீது வீசிய பார்வை 'சூரிய குறி’ பார்வையாகும். இந்தப் பார்வையின் அர்த்தம் யாராக இருந்தாலும் ஒரு நாள் தரும தேவதையைச் சந்தித்தே தீரவேண்டும்’ என்பதே. இந்த 'சூரிய குறி' பார்வை தன்மேல் பட்ட உடன்தான், பிரம்மன் ‘தனக்கும் இறப்பு உண்டு’ என்று உணர்ந்தான்... எனவேதான் பிரதோஷ வலத்தில், ஈசன் உமையுடன் நந்தியின் மீதேறி பவனி வரும்பொழுது, சில முக்கிய இடங்களில் நிறுத்தி, தீப ஆராதனைகளைப் பெரியோர் செய்வர்,  அறிந்தாயா போகா... அடுத்து  நந்தி பார்த்த பார்வை 'சந்திர குறி’ பார்வையாகும் இந்தப் பார்வையால்தான் நந்தீச்வரர், திருமால், பிரமன், இவர்களுடைய மனப்பதட்டத்தை அடக்கினார்,

ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்திகள் திருமழபாடி

போகர்: குருநாதா, இந்தப் பார்வையை புவிவாழ் மக்கள் மீது நந்தீசர் எப்போது வீசுகிறார்?

அகத்தியர்: ஐயனே, பிரதோஷ வலத்தில், ஈசன் வடகிழக்கு மூலைக்கு வரும்போது, மக்கள் நந்தியை வணங்க வேண்டும். அப்படி வணங்கி, ஈசனைத் தரிசித்தால், நந்தீசர் அவர்கள் மீது 'சந்திர குறி' பார்வையை வீசுகிறார். அப்பொழுது மக்களுடைய மனப்பதட்டம் அடங்கி, தெளிவையும், அமைதியையும், அவர்கள் பெறுகின்றனர்... புரிந்ததா? சரி... அடுத்த பார்வைக்கு வருகிறேன்... நந்தி. மூன்றாவதாகப் பிரம்மாதி தேவர்களைப் பார்த்த பார்வை 'திக்கு திறள் குறி' எனப்படும். இந்தப் பார்வை தேவர்கள் மீது பட்ட உடனேயே அவர்களுடைய ‘நான்’ என்னும் அகந்தை நீங்கியது, புரிந்ததா...போகா? நந்தி வீசிய நான்காவது பார்வை 'நேத்திரக்குறி’ எனப்படுகிறது. இது பிரதோஷ வலத்தின்போது தென்கிழக்கு மூலையில் நந்தியை தரிசித்தால் நம்மீது படும் பார்வை... இந்தப் பார்வையின் மூலம் 'சிவனைப் பார்க்கப் போகும்பொழுது எப்படிப் போக வேண்டும்?” என்று தேவர்களுக்குத் தெளிவு படுத்தினார், நந்தி.... ஐயனே. போகா... 'மேற்கூறிய நான்கு பார்வைகளின் விசேடத்தால்தான், பிரம்மாதி தேவர்கள் ஈசனைக் காண முடிந்தது’ என்பது நீ அறியாததா...!

போகர்: உத்தம குருவே... பிரதோஷ காலத்தைத் தாங்கள்தான் வரையறுத்துக் கூற வேண்டும்; புவிவாழ் மக்களுக்கு உதவியாக இருக்கும்...

அகத்தியர்: சீடனே, 'பிரதோஷம்' என்றாலே 'பகலின் முடிவு, இரவின் ஆரம்பம்' என்பது பொருள் முறையான பிரதோஷம் என்பது, குரியன் மறைவதற்கு முன் உள்ள 3 3/4 நாழிகை… சூரியன மறைந்த பின் உள்ள ஒன்றே கால் நாழிகை…..இவைகளின் கூட்டே உத்தம பிரதோஷ காலமாகும். அதாவது மாலை 4 ½  மணிக்கு மேல் 6 ½ மனிக்குள் இடைப்பட்ட நேரம், உத்தம பிரதோஷ காலமாகும் 6 ½ மணிக்குமேல் பிரதோஷ வழிபாடு செய்தால்.. .. ஐயனே, அது ‘அசுரப்பிரதோஷம்' எனப்படும், அதனால் வரும் பலன் தீய சக்திகளுக்குப் போய்ச் சேர்கிறது... ஆகவே, மக்கள், உத்தம பிரதோஷ விரதத்தை உணர்ந்து அறிய வேண்டும், புரிந்ததா போகா..!

போகர்: ஐயனே...இதைதான் ‘நேரம் காலம் செய்வதுபோல நாலு மனிதர்கள் செய்யமாட்டார்கள் என்கிறார்களோ பெரியோர்..?

அகத்தியர்: ஆம், போகா! நற்காரியங்களை நல்ல நேரங்களில் முறையாகச் செய்துவிட்டால் அக்காரியங்கள் எக்காலத்திலும் கெட்டுவிடாது பாரேன். முக்கியமாக 'சந்தி' போன்ற நித்ய கர்மாக்களைச் சரியான நேரங்களில் செய்ய வேண்டியது மிகவும் அவசியம் என்பதை உணர்வாயாக.

நந்திக்கும்தான் ஆணவம்

போகர்: சுவாமி மறந்தேவிட்டேன் பார்த்தீர்களா. ‘நந்தியெம்பெருமானுக்கு அகந்தை பிறந்து, ஈசனருளால் அழிந்தது’ என்று முன்பு கூறினீர்களே... நந்தியினுடைய பார்வையே ‘நான்' என்னும் அகந்தையை நீக்கும்’ என்றும் நீங்கள்தான் கூறிவீர்கள்...... அப்படிப்பட்ட நந்திசனுக்கு அகந்தை என்றால், என்னால் நம்பவே முடியவில்லை...! சற்று விளக்க முடியுமா?

அகத்தியர்: அன்பனே. மனிதனுக்கு மாயை உண்டு,என்றால் தேவருக்கும் மாயை உண்டு.. ஏன், தெய்வங்களுக்கே மாயை உண்டு... அளவு, அதாவது வேகம்தான் வேறுபடுகிறது. தேவர்கள் ஈசனிடம் வந்து சரணடைந்தபொழுது எம்பெருமானாகிய ஈசன், நந்தியையும், சுந்தரரையும் அழைத்து 'நீங்கள் இருவரும் சென்று ஆலாலத்தைக் கொணர்க’ என்று பணிக்க, இருவரும செல்கின்றனர். சுந்தரரும் ஈசனருளால் ஆலாலத்தை உருண்டையாக்கி நந்தியிடம் தர... நந்தி ஆலால விடத்தை ஈசனிடம் கொண்டு வந்து தர.. ஈசனும் அதை உண்ண... கண்டம் நீலமாகி, நீலகண்டனாகி விட்டான். இதைக் கண்ட நந்தியோ,  'நாம் ஆலாலத்தைக் கையில் எடுத்து வந்தோம். நம்மை ஆலாலம் ஒன்றும் செய்யவில்லை... ஆனால் ஈசன் உண்டவுடன் கண்டம் நீலமாகிவிடடதே......! என்று விபரிதமாக நினைக்க அந்த நினைப்பின் எதிரொலியாக அவன் இதழில் சிரிப்பு மலர..... சிரித்த நந்தி, சிரித்துக்கொண்டே இருக்கிறான்... ஆம், அவனுக்குச் சித்தம் கலங்கிவிட்டது. ஆலாலம் உன் கையில் அடங்கியிருந்தால், அது ஈசன் கருணை இதை உணராது நீ அகந்தை கொண்டதால் உனக்குக் கிடைத்த பரிசோ சிததப்பிரமை புரிந்ததா?' என்று ஈசனும் மொழிந்திட நந்தி சிரித்துக்கொண்டே இருக்கிறான்.. பார்த்தனள் அன்னை...நந்தி மீது இரக்கம் கொண்டனள்... ஈசனிடம் ‘நாயகா, நம் அருமை மைந்தன்போல் நந்தி இருந்தானே, எம்மையும் சுமந்தான், உம்மையும் சுமந்தானே..... கிடைத்தற்கரிய பெரும் புண்ணியம் பெற்ற நந்தி இந்நிலை ஆகலுறுமோ குருநாதா....’என்கிறாள்..

போகர்: ஐயனே, அன்னை ஈசனை 'குருநாதா' என்று அழைப்பதன் பொருள் என்ன?

அகத்தியர்: “நன்றாய் கேட்டாய், நண்பனே போகா...இந்திரனிடம் அபசாரப்பட்டால், பிரம்மாவிடம் வந்தால், அந்த பாபம் அவர் அருளால் நீங்கிவிடும்... பிரம்மாவிடம் அபசாரப்பட்டாலோ, விஷ்ணுவிடம் வந்தால், அந்த பாபம் அவர் அருளால் நீங்கிவிடும்... விஷ்ணுவிடம் அபசாரப்படக்கூடாது... ஆனால் பட்டுவிட்டால், சிவபெருமானிடம் வந்தால்,அவன் கருணையால் அந்த பாபம் நீங்கிவிடும்... சிவபெருமானிடம் கனவில் கூட அபசாரப்படக்கூடாது அப்படிப் பட்டுவிட்டால் குரு ஒருவரால்தான் அந்த பாபத்தைஅழிக்க முடியும். நந்தியும் ஈசனிடம் அபசாரப்பட்டு விட்டதால்தான், அன்னை, ஈசனை ‘குருநாதா’ என்று அழைத்து விமோசனம் தேடுகிறாள்......புரிகிறதா?

போகர்: நன்றாகப் புரிந்தது, ஐயனே... ஒரே ஒரு சந்தேகம்....குருவிடம் அபசாரப்பட்டுவிட்டால் எங்கு செல்வது?

அகத்தியர்: உத்தமமாய்க் கேட்கும் உத்தமனே போகா.... குருவிடம் அபசாரப்பட்டு விட்டால், அதற்கு எங்குமே விமோசனம் கிடையாது, என்பதை நீ அறியாதவணா? இருக்கட்டும்.. நாம் கதைக்கு வருவோம்... 'குருநாதா' என்று அழைத்த உடன் ஈசனும் மனமிரங்கி 'நீயே அவனுக்கு வழி செய்வாய்' என்று அருள்பாலிக்க.... அம்பிகையும், குதியோ குதியென்று குதித்து அண்டத்தைக் கலக்கிக் கொண்டிருந்த நந்தியை, மூக்கணாங்கயிறு போட்டு அடக்கி இழுத்துக்கொண்டு புவியில் தலைசிறந்து விளங்கும் திருத்தலமாம் சென்னையிலுள்ள கோயம்பேடு' என்னும் பதியில் வந்து நிற்கிறாள்...

போகர்: இறைவா, 'கோயம்பேடு' என்ற பெயர் அத்திருத்தலத்திற்கு எப்படி வந்தது?

அகத்தியர்: நன்றாகக் கேட்டாய், போகா...... சொல்கிறேன், கேள். 'கோ' என்பது பசுவைக் குறிக்கிறது. ‘அயம்' என்பது இரும்பைக் குறிக்கிறது. 'பீடு' என்றால் 'காப்பிடம்' என்று பொருள்படும்.. மூன்றையும் சேர்த்துப்பார்...........கோ+அயம்+பீடு என்பதே கோயம்பேடாக மாறிவிட்டது....பசுக்களை இரும்புக்கவசம் போல் காக்கின்ற இடம் அது............சுருங்கச்சொன்னால் 'கோசம் ரட்சனை' ஒரு காலத்தில் அற்புதமாக நடந்த இடம், என்பது தெளிவாகிறது அல்லவா போகா?

போகர்: மகாதேவா... ‘அன்னையே, அறக்கடவுளுடன் இத்தலத்தில் நின்றாள்' என்றால் இத்தலத்தின் பெருமைதான் என்னே!!

அகத்தியர்: அன்பு மகனே...... இத்தலத்தில் துவாரபாலகர்களாய் நிற்பவர்களே மகாருத்திர அம்சம் பொருந்தியவர்கள் என்று நீ அறிய வேண்டும். இவர்கள் இருவருமே, இத்தலத்தில் கபால மாலைகளை அணிந்திருக்கிறார்கள்... பொதுவாக ஈசன்தான் கபால மாலாயை அணிபவன்...இத்தலத்தில் ஈசனுடைய வாயில் காப்பாளர்களே கபால மாலை அணிந்த மகாருத்திர அம்சங்கள் என்றால், உள்ளிருக்கும் ஈசன் மகிமையை என்னனென்பது...! இது இருக்கட்டும்......... வால்மீகி முனிவர் குசலவர்களுடன் இத்தலத்திற்கு வந்தாரல்லவா?

போகர்: ஐயனே, என்ன சொன்னீர்கள்... இத்தலத்திற்கு வால்மீகியுடன் குசலவர்கள், வந்தார்களா?

அகத்தயர்: ஆம் மகனே, அதைப் பற்றிப் பின்னால் விரிவாகக் கூறத்தான் போகிறேன்... கவலை வேண்டாம்........ அப்படி வால்மீகி இங்கு வந்தபோது, ஈசனுடைய அழகை தரசித்துப் பருக, மூலஸ்தானத்திற்குள் புக முனைந்தார்... ஆனால் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. மனம் நொந்த வால்மீகி ஈசனருளை வேண்டி, ஒற்றைக்காலில் நின்றபடி தவத்தில் மூழ்கினார்... எத்தனை ஆண்டுகள், தெரியுமா போகா! சுமார்......... 100 தேவ ஆண்டுகள்... அவ்வளவே! வால்மீகி முனிவருடைய தவத்தை மெச்சிய ஈசனும், அசரீரியாக 'உள்ளே வருக' என்று பணிக்க.... முனிவரும், மூலஸ்தானத்திற்குள் சென்று ஈசனை ஸ்பரிசித்து ஆனந்தம் கொண்டாராம்!

போகர்: ஐயனே, கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறதே!

அகத்தியர்: அது மட்டுமா, மகனே, இன்னும் ஏராளம் உண்டு. நம் பரம்பரையைச் சேர்ந்த கொடுக்குவால் குடுமி சித்தர்,  திரிபாதஞ்ஞான நம்பூதிரி,  ரிஷி சுமந்தான் சுருசோதன மகரிஷி போன்ற மஹா உத்தமர்கள் சமாதி கொண்ட திருத்தலம் இது, ஐயனே... மேலும், கண்ணப்பர், காளஹஸ்தீச்வர சதாதபசித்தர், குட்டிக்கரண குடுகுடுப்பை சித்தர், போன்ற உத்தமர்கள் தரிசித்த தலம் இது. அது மட்டுமா? தேவர்களுக்கும், ஏன், தெய்வங்களுக்குமே அப்பாற்பட்ட ‘ஆனந்த வெண்சாமர கணபதி' அமர்ந்த உத்தம தலமப்பா கோயம்பேடு...!

போகர்: புரிந்தது, ஐயனே, அன்னை, நந்தியெம்பெருமானை ஏன் இங்கு அழைத்து வந்தனள் என்று.

அகத்தியர்: அறக்கடவுளாகிய நந்திக்கே சித்தப் பிரமை பிடித்து விட்டதால், உலகில் அறம் காக்க, அறத்தைத்தான் ஏற்று, அறம் வளர்த்த நாயகியாய் நின்ற அன்னை தன்னுடைய மேற்பார்வையிலேயே நந்தியை அத்தலத்துப் பெருமானை, குசலவர் வழிபட்ட குசலவபுரீச்வரனை, வலம் வரச் செய்தனள்... வலம்வர, வலம்வர, நந்தியினுடைய சித்தம் சிறிது சிறிதாகத் தெளிவடைந்து, முற்றிலும் குணமடைந்து விடுகிறது... தன் நிலைக்கு வந்த நந்தியும் ஆனந்தத்தில் ஈசனுக்கு பல காலங்கள் பிரதோஷ விழா எடுத்து, பிரதோஷ வலத்தில், ஈசனைத் தன் இரு கொம்புகளுக்கிடையில் வைத்து, விதவிதமாக ஆயிரம் முறைகளில், ஆயிரம் கால் மாற்று நடனமாடித் தன் நன்றியைத் தெரிவித்தனன்...

போகர்: ஐயனே.... நந்திக்கு அகந்தை வந்தது, நமக்கு இலாபம்தானே...!

அகத்தியர்: அது எப்படியடா போகா.... ?

போகர்: ஆம், சுவாமி... நந்திக்கு அகந்தை வந்ததால்தானே, கோயம்பேடு தலத்தின் மகிமை நமக்குத்தெரிய வந்தது. அது மட்டுமா? ஆயிரங்கால் மாற்று பிரதோஷ நடன இரகசியங்கள் வெளி வந்ததற்கும் நந்தியினுடைய அகந்தைதானே மூலகாரணம்..

அகத்தியர்: பலே, பலே...... அப்படியென்றால் அனைவரும் அகந்தை கொள்வது, மிக அவசியம் என்கிறாயா?

போகர்: இல்லை இல்லை.... குருநாதா, சாதாரண மனிதர்களுடைய அகந்தை உலகிற்குப் பயன்படாது. ஆனால் “உத்தமப் பெரியோருடைய அகந்தை, மக்களிடையே ஆன்மீக விழிப்புணர்ச்சியையே உண்டாக்கிவிடுகிறது” என்று சொல்ல வந்தேன்...

அகத்தியர்: சரியாகச் சொன்னாய்...

போகர்: நந்தியம்பெருமான் அகந்தை தீர்ந்து, கோயம்பேட்டில் பிரதோஷ விழா எடுத்து ஆயிரம் கால் மாற்று நடனம் ஆடி மகிழந்தது, அத்தலத்தின் மகிமையை எப்படி உயர்த்தியது?

அகத்தியர்: நன்றாகக் கேட்டாய், போகா.... இதே கேள்வியைத்தான் குசலவர்களும் வால்மீகி முனிவரைக் கேட்கிறார்கள்... முனிவரும் அந்த இரகசியத்தை அறபுதமாகக் கூறுகிறார்... அனைத்து சிவத்தலங்களிலும் முறையாக பிரதோஷ விழா கொண்டாடுவது சிறந்த பலன்களைத் தரும். என்றாலும் நந்தியெம்பெருமான் அகந்தை தீர்த்து ஆயிரம் கால் மாற்று நடனம் ஆடிய கோயம்பேடு திருத்தலத்தில், ஒரு முறை பிரதோஷ விழா கொண்டாடினால் போதும். மற்ற திருத்தலங்களில் பிரதோஷ விழா கொண்டாடுவதைப்போல் ஆயிரம் மடங்குப் பலனைத் தரும்

போகர்: ஐயனே, ஆயிரம் மடங்கு பலனா! ஆஹா.......சென்னைவாழ் மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் ..

எது வாழ்க்கை ?

அகத்தியர்:  மகனே, சென்னையில் வாழ்ந்தால் மட்டும்போதாது, முதலில் 'வாழ்க்கையென்றால் என்ன’ என்று தெளியவேண்டும். நீ ‘திரி வாழ்க்கை' வாழ்ந்தால் கொடுத்து வைத்தவனாகிறாய். அதே நேரத்தில் பஞ்சு வாழ்க்கை வாழ்ந்தால், கெடுத்து வைப்பவனாகிறாய் தெரியுமா உனக்கு?

போகர்: ஐயனே, திரிவாழ்க்கை... பஞ்சு வாழ்க்கை....என்னென்னவோ சொல்கிறீர்களே.....

அகத்தியர்: உத்தமனே போகா, நீ அறியாதது ஒன்றுமில்லை; இருப்பினும் வாழ்க்கை முறைகளை விளக்குகிறேன். மக்களுக்கு அறிவிப்பாயாக, வாழ்க்கை நான்கு வகைப்படும். அவையாவன, 1) பஞ்சு வாழ்க்கை 2) நூல் வாழ்க்கை 3) திரிவாழ்க்கை 4) ஆடை வாழ்க்கை என்று முறையாக வரிசைப்படுத்தப்படும்... முதலில் பஞ்சு வாழ்க்கையைப் பற்றிக் கூறுகிறேன்; மனிதன் தெய்வ நம்பிக்கையற்று போக வாழ்க்கையை நாடும்போது, குறிக்கோளின்றி காற்றடிக்கும் திக்கிலெல்லாம், அல்லாடி, இங்குமங்கும் பறக்கும் பஞ்சுபோல் ஆகிவிடுகிறான்’ ஆக பஞ்சு வாழ்க்கை, பயனற்ற வாழ்க்கை என்று அறிந்தாயா? அடுத்து, நூல் வாழ்க்கை... நூல் என்பது சிறு, சிறு பொட்டலங்களையாவது, கட்ட உதவுகிறது. ஆகவே, பிறர்க்கு சிறுசிறு உதவிகளைச் செய்து வாழ்பவன் நூல் வாழ்க்கை வாழுகிறான்...

போகர்: ஐயனே, அற்புதமாக இருக்கிறதே !

அகத்தியர்: பெரியவர்கள் அனுபவித்து உணர்ந்து சொன்னதாயிற்றே... வேறு எப்படி இருக்கும்? அடுத்து 'திரிவாழ்க்கைக்கு’ வருகிறேன். பல நூல்கள் சேர்ந்து ஒரு திரிஉருவாகிறது... அந்தத் திரி, இருளை அகற்றும் சோதியைத் தாங்குகிறது... ஆகவே, பல நூல்கள் ஒன்று சேர்வதுபோல் பல மெய்யன்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழும் சத்சங்கத்தில் ஊறி வாழும் வாழ்க்கையைத் ‘திரி வாழ்க்கை' என்கிறார்கள் பெரியவர்கள்... இதையேதான் மாணிக்கவாசக பெருமானும் அடியேன் உன்றன் அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்- என்றார், புரிந்ததா போகா? அடுத்து 'ஆடை வாழ்க்கை’க்கு வருகிறேன்... நீ ஆடையாக வாழ்ந்தால் அனைவர் மானத்தையும் காப்பாய்... ஆகவே, நீ அனைவருக்கும் பயன்பட வேண்டுமென்றால் ஆடை வாழ்க்கை வாழவேண்டும் உத்தம காந்தி மகானைப்போல... புரிந்ததா...?

ஸ்ரீஅதிகார நந்தீஸ்வரர்
திருகோகர்ணம் புதுக்கோட்டை

போகர்: ஐயனே, கலியில் வாழ்க்கையைப் பற்றி வாய்கிழியப் பேசும் ஞானிகள், தாங்கள் கூறியவைகளை அறிவார்களா...?

அகத்தியர்: அன்பனே, உத்தம குரு மூலமாக அறிய வேண்டிய இரகசியங்கள் இவை... இருப்பினும்., இதைப் படித்த பின்னாவது, மக்கள் தெளிவடையட்டுமே..!

போகர்: உத்தமரே, குசலவர்கள், கோயம்பேடு தலத்தில் வால்மீகியுடன் தங்கியிருந்து, பிரதோஷ வழிபாடு செய்தார்களா.. ?

அகத்தியர்:  ஆம்; அப்பனே... அதுவும் 12 வருடங்கள் அற்புதமாகச் செய்தனர்...

போகர்:  அடேயப்பா... 12 வருடங்களா...! அவர்கள் பிரதோஷ வழிபாட்டிற்கு இத்தலத்தைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் யாது, குருவே?

அகத்தியர்: பித்ரு சாபங்கள் தீரும் உத்தமத்தலம் இது... போகா.... மேலும் 'இங்கிருக்கும் தெய்வமோ, குழந்தை ஈசுவரன், அவன் நாமமோ குறுங்காளீச்வரன்’ என்று அறிவாய் பாரேன்.. குசலவர்கள் தங்கள் தந்தையாகிய ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியை எதிர்த்து பிராணா அவஸ்தை செய்த சாபத்தைத் தீர்த்துக் கொள்ளத்தான். இத்தலத்திற்கு வந்து தங்கியிருந்து, பிரதோஷ வழிபாட்டைச் செய்தனர்..

போகர்: ஐயனே, இன்னும் சற்று விளக்கமாகக் கூறினால் அடியேன் தெளிவடைவேன்...

அகத்தியர்: விளக்கமாகக் கூறுகிறேன், கேள்...ராமச்சந்திரமூர்த்தி, அச்வமேத யாகம் செய்யத் துணிந்து, அதற்குறித்தான அற்புதமான குதிரையை திக் விஜயத்திற்கு அனுப்புகிறான். யார் அதைத் தடுத்து நிறுத்துகிறார்களோ, அவர்கள் ராமனுடன் போரிட வேண்டும்' என்பது சட்டம்... அப்படி, அந்தக் குதிரை அற்புதமாகத் திக் விஜயம் செய்து கொண்டிருக்கிறது. அதைத்தடுத்து நிறுத்துவோர் யாருமில்லை.

போகர்: ஸ்ரீ ராமனுடைய குதிரையாயிற்றே.

அகத்தியர்: ம் ம் .....தொடர்ந்து கேள்....அந்தக் குதிரை, வால்மீகி முனிவர் தங்கித் தவமியற்றும் ஆசிரமம் அருகில் வருகிறது.... அச்சமயத்தில், இராமனைப் பிரிந்த அன்னை சீதையும் அங்கு தங்கித் தவமியற்றிக் கொண்டிருந்தாள்...நடக்கப் போவதை அறிந்த வால்மீகியும் குசலவர்களிடம் தங்கள் தாயை பத்திரமாகப் பார்ததுககொள்ளச் சொல்லி விட்டு, பூசை செய்ய வெளியே சென்று விடுகின்றார்..... முனிவருடைய உத்திரவை ஏற்ற பாலகர்களும் அன்னைக்கு காவலாக ஆசிரம வாயிலில் நிற்கிறார்கள். அற்புதமான குதிரையைப் பார்த்துவிட்ட லவன் குசனிடம் அதைக் காட்ட குசனும் அதைப் பிடித்துக் கட்டிப் போட்டு விடுகிறான்....

போகர்: என்ன இருந்தாலும், புலிக்குப் பிறந்தது பூனையாகுமா...?

அகத்தியர்: குதிரையைத் தொடர்ந்து படைகளுடன் வந்த சத்ருக்னன், குழந்தைகளுடன் போர் செய்யத் தயாராகிறான்.. போரில் சத்ருக்னன் தோற்றுவிடுகிறான். தொடர்ந்து பரதனும், இலக்குவனும் பெரும் படைகளுடன் வந்து குழந்தைகளுடன் அடுத்தடுத்துப் போரிட்டுத் தோற்றுவிடுகிறார்கள். கடைசியாக, ஸ்ரீராமனே நேரில் வருகிருன்... அவனும் குழந்தைகளுடன் போரிட்டுத் துன்புறுகிறான்... குழந்தைகள் போரிட்ட அற்புதத்தைத்தான், நான் உனக்கு “பூக்கள் தரும் புனிதங்கள்” (பூக்கள் தரும் புனிதங்கள் என்ற புத்தகத்தில் காண்க) பற்றி, உபதேசிக்கும்போது விரிவாகச் சொல்லியிருக்கிறேனே போகா.

போகர்: ஆம் ஸ்வாமி, இப்போது நினைவிற்கு வருகிறது.... ஸ்ரீராமன் சாய்ந்த பின் என்னவாயிற்று?

அகத்தியர்: ...வெளியே சென்றிருந்த வால்மீகி உள்ளே நுழைகிறார்... சப்தத்தைக் கேட்டுவிட்டு சீதையும் வெளியே வருகிறாள்.... ஸ்ரீராமன் சாய்ந்து கிடப்பதைப் பார்த்துவிட்டு அலறுகிறாள் ..... வால்மீகியும், மிருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சொல்லி இராமன் மேல் நீர் தெளிக்க இராமனும் எழுகிறான் ..... தான் இறந்ததற்கான காரணத்தை, இராமன் வால்மீகியிடம் கேட்க, முனிவரும், 'ராமா! நீ மஹா உத்தமன்தான்... ஆனாலும் உன் மக்களால் நீ சாவை சந்திப்பாய் என்பது விதி, அந்த விதி பிரம்ம சாபத்தினால் வந்தது... திரேதாயுக தருமப்படி பெண்களைக் கொல்லக் கூடாது... ஆனால் நீ தாடகையைக் கொன்றாய் .. அந்த யுக தருமப்படி குரங்குகளைக் கொல்லக்கூடாது... ஆனால் நீ வாலியைக் கொன்றாய்... பிரம்ம குலத்தைச் சார்ந்தவன் இராவணன். அவனையும் நீ கொன்றாய், இவை அனைத்தும் சேர்ந்து பிரம்ம சாபமாக மாறியது.. நீயும் சாவைச் சந்தித்தாய்... ஆனால், எவன் நீ பிறக்கும் முன்னமே உன் கதையை வரைந்தானோ அவனால் நீ உயிர்ப்பிக்கப்படுவாய், என்று விதியிருந்ததால், அடியேனால் நீ உயிர்ப்பிக்கப்பட்டாய்' என்று கூற... ஸ்ரீராமனும் குதிரையை அழைத்துக்கொண்டு செல்கிறான்.. நடந்தவை அனைத்தையும் கண்டு வாயடைத்துப் போயிருந்த குசலவர்கள், தங்கள் குருவாகிய வால்மீகியைப் பார்த்து, 'குருவே' தந்தை பெற்ற சாபத்திற்கு எங்களைக் கருவியாகப் பயன்படுத்திக்கொண்டீர்கள்... ஆனால், நாங்கள் எங்கள் தந்தையைக் கொன்ற பாவத்திலிருந்து எப்படித் தப்புவது,. என்று கேட்க, வாலமீகியும் 'நீங்கள சிவத்தொண்டை விடா முயற்சியுடன் செய்து வந்தால் வழி பிறக்கும்’ எனக்கூறி அவர்களை ஒவ்வொரு தலமாக அழைத்து வந்து, முடிவில் கோயம்பேடு தலத்திற்கு வருகிறார்...அங்கு வந்தவுடன் குழந்தைகளைப் பார்த்து, குழந்தைகளே  இந்த இடம் போல பூலோகத்தில் ஓர் சிறந்த இடம் காண்பது மிகவும் அரிது. இங்கு நீங்கள் முறையாகப் பிரதோஷ விழாவைக் கொண்டாடி வழிபட்டால் உங்களுடைய சாபம் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சிவலோகத்திலேயே தங்கி வாழும் ஆசியையும் பெறுவீர்கள். இது உறுதி என்று கூற…குசலவர்களும் சுமார் 12 வருடகாலம் இத்தலத்தில் தங்கியிருந்து அற்புதமாகப் பிரதோஷ வழிபாட்டை சோமசூக்த பிரதக்ஷிணத்துடன் செய்து, சிவலோகத்தில் அழியா இடம் பெற்றனர்...

போகர்: சுவாமி, எந்த இராமாயணத்தில் இந்த நிகழ்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது என்று கூறுவீர்களா?

அகத்தியர்: ஐயனே, இருடிகள் கூறும் இராமாயணத்தில்தான் இதைக் காணமுடியும்... இந்த இராமாயணம் சித்தர்களுக்கே உரித்தானது... ஆகவே சித்தனை நாடு...அத்தனையும் பெற்று அமோகமாக வாழலாம்...

போகர்: சுவாமி, உத்தம பிரதோஷ வழிபாட்டைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன... தாங்கள்தான் தயவு செய்ய வேண்டும்.

பிரதோஷ வகைகள்

அகத்தியர்: அன்பனே, மேலும் கூறுகிறேன், கேள்..... பிரதோஷத்தில் பத்து வகைகள் உண்டு. அவையாவன; நித்யப் பிரதோஷம், நட்சத்திரப்பிரதோஷம், பட்சப்பிரதோஷம், மாதப்பிரதோஷம், பூர்ண பிரதோஷம், திவ்யப்பிரதோஷம், அபயப்பிரதோஷம், தீபப்பிரதோஷம், சப்தப்பிரதோஷம், மஹா பிரதோஷம் எனப்படும். இந்த பத்து பிரதோஷம்களுக்கும் பத்து உப பிரதோஷங்கள் உண்டு. இப்பொழுது ஒவ்வொன்றாக விளக்குகிறேன்

நித்யப்பிரதோஷம்: இது தினம் மாலை நேரத்தில் வருவது. தினமும் மாலை 4 ½  மணி முதல் 6 ½ மணி வரை நித்ய பிரதோஷ காலமாகும். இக்காலத்தில் ஈசனை தரிசனம் செய்வது உத்தமம்.

போகர்: தரிசனம் செய்வது உத்தமம் என்றீர்கள்.... தாங்கள்தான், ஈசனை தரிசிக்கச் செல்லும்போது எப்படிச் செல்ல வேணடும் என்று கூறவேண்டும்.

அகத்தியர்: அன்பனே, போகா... ஈசனைத் தரிசிக்கச் செல்லும்போது வேட்டிதான் கட்டிச் செல்லவேண்டும், குழாய்களை (pant) மாட்டிக் கொண்டு செல்லக்கூடாது.

போகர்: குழாய்களா? அது என்ன குருவே?

அகத்தியர்: ஆம் ஐயனே,

குறுக்கது வெட்டியிருப்பான்
இரு ஓட்டை வைத்திருப்பான்
ஈசனை வணங்கும்போது வாசிகலை தடங்கல் செய்யுமே
தடங்கும்போது கலை மாறினால் உனக்குச் சாபமே

ஆகவே அதை அணிந்து வருவதால், எண்ணங்கள் சிதறும்; மனம் வழிபாட்டில் குவியாது. ஆகவே ஈசனை தரிசிக்கச் செல்லும்போது முறையாகப் பஞ்ச கச்சம் கட்டிச் செல்ல வேண்டும். அதுபோல, நித்யப் பிரதோஷ காலத்தில் ஈசனை தரிசனம் செய்யும்போது ‘வாசி’யை வலது கலைக்கு மாற்ற வேண்டும். அதாவது வாசியை சூரிய கலையில் ஓடச் செய்து ஈசனை காண வேண்டும். அப்படி ஈசனைத் தரிசிக்கும்போதுதான் நித்யப் பிரதோஷம் அனுஷ்டித்ததாக அர்த்தமாகும். இப்படி. நித்யப்பிரதோஷத்தை யார் ஒருவன் 5 வருடங்கள் முறையாகச் செய்கிறானோ அவனுக்கு ‘.முக்தி’ நிச்சயம் என்று அறிவாயாக.

போகர். சற்குருநாதா, வாசிகலை இரகசியங்களை மக்கள் எப்படி அறிந்துகொள்வது?

அகத்தியர்: உத்தம குருவை நாடுவது ஒன்றே, அதற்கு வழி. அனைவரும் முறையாகப் பிராணாயம கலையை அறிவதன் மூலம், வாசி இரகசியத்தை ஓரளவு அறிந்து கொள்ளலாம்.

போகர்: ஐயனே, இதற்குத்தான் யஞ்ஞோபவீதம் முறையாக அணிந்து 'சந்தியாவந்தன’ வழிபாட்டைச் செய்கிறார்களோ?

அகத்தியர்:  ஆம், அப்பனே அனைவரும் சந்தியாவந்தனம் செய்துதான் தீரவேண்டும்.

சுதை நந்தீஸ்வரர்
திருவிடைமருதூர்

சந்தி செய்யாத மூடன் மந்திக்கு சமானம் பாரேன்
இனிப் பிறக்கும் சந்ததிகளெல்லாம் சந்தியிலே நிற்க
மந்தியாய் பிறப்பர் பாரேன்.

போகர்: குருநாதா, நித்யப் பிரதோஷத்தைப் பற்றிக் கூறினீர்கள்; அடுத்து நட்சத்திர பிரதோஷத்தைப் பற்றித் தாங்கள் விளக்க வேண்டும்.

அகதியர்: மக்கள் அனைத்து நலன்களையும் பெற்று வாழ நாம் விரும்புகிறோம். அதன் விளைவுதான் இங்கு பிரதோஷத்துடன் மற்றும் பல விஷயங்களையும் எடுத்துரைக்கிறோம். அடுத்து, நட்சத்திர பிரதோஷ வழிபாடென்பது திரயோதசி திதியில் எந்த நட்சத்திரம் வருகிறதோ அந்த நட்சத்திரத்தில் (நட்சத்திரலிங்க மகிமை புத்தகத்தில் பார்க்கவும்) ஒரு குறிப்பிட்ட உருவமாய் இருக்கின்ற சிவனை வழிபட வேண்டும். இதில், மேலும் 27 முக்கிய ரகசியங்கள் உண்டு.....புரிந்ததா?

போகர்: புரியவில்லையே, சுவாமி....?

அகத்தியர்: கவலை வேண்டாம், ஐயனே .. எம் பரம்பரையோன் நட்சத்திர லிங்க மகிமை என்னும் தலைப்பில் பேசுவான். அப்பொழுது நட்சத்திர பிரதோஷத்தின் மகிமைகளை மக்கள் அறிந்து கொள்வர். சரி, அடுத்து பட்சப் பிரதோஷத்திற்கு வருகிறேன். இது சுக்லபக்ஷம் திரயோதசி திதியில் மாலை நேரத்தில ஈசனை வழிபடுவது. பட்சப்பிரதோஷத்தில் பட்சி லிங்க வழிபாடு செய்வதே உத்தமம். இந்த பட்சி லிங்க வழிபாட்டிற்கு ஏற்ற இடம் 'கபாலீச்சரம்' என்று அறிவாய் மகனே... அன்னை மயிலுறுவாய் ஈசனை வழிபட்ட உத்தமத் தலமல்லவா அது!

அடுத்து வருவது மாதப் பிரதோஷம். தேய்பிறை (கிருஷ்ண பக்ஷம்) திரயோதசி திதியில் மாலையில் எம்பெருமானை சந்திர கலையைக் கூட்டிக் கண்டிடுவாய், போகா... இப்பிரதோஷத்தில் பாணலிங்க வழிபாடு உத்தம அருளைத் தரும், என்று மக்களுக்கு அறிவிப்பாயாக (பாணலிங்கம் சென்னையில் டர்ன்புல்ஸ் சாலையில் உள்ளது.) உத்தம மாதப்பிரதோஷ வழிபாடு சித்தம் கலங்கிய வரைக்கூட சித்தராகவே செய்து விடும் பெருமை படைத்ததாகும்.

அடுத்து பூரணப் பிரதோஷம். திரயோதசி திதியும் சதுர்த்தசி திதியும் பின்னப்படாமல் இருக்கும்போது செய்யும் ஈசன் வழிபாடு, பூரணப்பிரதோஷ வழிபாடாகிறது. அப்படி அந்த பூர்ணப்பிரதோஷ காலத்தில் சுயம்புலிங்க தரிசனம் பூரண பலனைத் தரும், என்று மக்களுக்கு அறிவிப்பாய் போகா....

அடுத்து வருவது; திவ்யப் பிரதோஷம்: இது ஒரே தினத்தன்று இரட்டைத் திதிகள் சேர்ந்து வருவது. அதாவது துவாதசியும் திரயோதசியுமோ, அல்லது திரயோதசியும்,  சதுர்த்தசியுமோ சேர்த்து வருவது. திவ்யப் பிரதோஷத்தில மரகத லிங்க வழிபாடு பூரண பலனைத் தரும் என்று மக்களுக்கு அறிவிப்பாயாக.

அடுத்து சப்த பிரதோஷத்தை விளக்குகிறேன். இது திரயோதசி திதியில் ஒலி நிற நடனங்கள் காட்டி சாகா கலையை விளக்குகிறது... இதை யோக ப்ரதோஷம் என்றும் கூறுவர். இது பெரும்பாலும் யோகிகளுக்கே உரித்தானது. மேலும், இதைக் குரு மூலமாகத்தான் உணர்ந்து அறிந்து கொள்ள வேண்டும். வேறு வழியே கிடையாது.

அடுத்து தீபப் பிரதோஷம்: ஐயனே, 'தீபம்' என்று நினைக்கும் போதே உடலெல்லாம் புல்லரித்துப் பேரின்ப நிலை கிட்டி விடுகிறதே... இந்த தீபப் பிரதோஷத்தை, மக்கள் முறையாக வழிபட்டால், பலனைக் கூறத்தான் முடியுமோ...... திரயோதசி திதியில் உத்தமமாக தீப தானங்கள் செய்து ஈசனுடைய ஆலயங்களை தீபங்களால் அற்புதமாக அலங்கரித்து பஞ்சாட்சர தீப ஆராதனை போன்ற தீப ஆராதனைகளை முறையாகச் செய்து ஈசனை வழிபடுவது மிகவும் உத்தமமப்பா, போகா...... இதையே தீபப் பிரதோஷம் என்பர் பெரியோர்...

போகர்: ஐயனே, அரசே, அருட்பெரும் கடலே.......தீபங்கள் ஏற்றி ஈசனை வழிபடும் முறையை, சற்று மேலும் விளக்க வேண்டும்.

அகத்தியர்: அன்பு மைந்தனே, உனக்கு 'தீப மகிமை' பற்றி சுப மங்கள தீப மகிமை” ( 'சுப மங்கள தீப மகிமை' என்னும் புத்தகத்தில் காண்க) என்னும் தலைப்பில் விரிவாகக் கூறியுள்ளேன். இருந்தாலும் தீப மகிமையைப்பற்றி அன்று கூறாத ஒரு வரலாற்றை இன்று கூறுகிறேன். மக்களுக்குப் பயன்படட்டும்... சத்ய விரதன் என்று ஒரு ராஜ புரோகிதன் இருந்தான் வாழ்வில் சத்தியத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு அவன் வாழ்ந்து வந்ததால் உண்மையில் அவன் சத்ய விரதனே... அவன் உத்தம கங்கைக் கரையில் அமைந்திருந்த, பலவித அற்புத லிங்கங்களுக்கும் அற்புதமாகத் திருப்பணிகள் இயற்றி, தீப தானங்கள் செய்து, ஈசனருளைப் பூரணமாகப் பெற்றிருந்தான். ஈசனருளைப் பூரணமாகப் பெற்றிருந்த சத்யவிரதன் கங்கைக்கரையிலேயே ஈசனுக்கு, அற்புதமாகக் கோவில் கட்டியதில் ஆச்சரியமென்ன, போகா.....! அப்படிக் கட்டிய கோவிலில் தொங்கு விளக்கு தீப .ஆராதனை செய்து, ஈசனை ஆராதித்து அழியாப் பேற்றைப் பெற்றான்...

போகர்: சுவாமி, சத்யவிரதன் ஈசனை ஆராதித்து அழியாப் பேற்றைப் பெற்றதில் வியப்பென்ன...?

அகத்தியர்: ஐயனே, அந்த உத்தமன் கட்டிய கோவிலில்தான், ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சொல்கிறேன் கேள்... ஒரு நாள், அவன் வழக்கம் போல் தீப வழிபாடுகளை முடித்துக்கொண்டு கிளம்பினான்.... கோவில் கதவுகள் மூடப் பட்டு விட்டன. அப்போது, ஈசனுடைய மூலஸ்தானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த விளக்கின் ஒளி சிறிது சிறிதாக மங்கிக் கொண்டே வந்தது, அணையும் நேரமும் வந்துவிட்டது.... அப்போது அந்த விளக்கு தொங்கிக்கொண்டிருந்த கயிற்றிலே, ஒரு பாம்பு சுற்றிக்கொண்டிருந்தது... அதற்குப் பசி வேறு....அப்பொழுது மூலஸ்தானத்தின் ஒரு மூலையிலிருந்து ஒரு எலி வெளிப்பட்டது. அதன் விதி........ பாம்பும் அதைப் பார்த்து விட்டது.

போகர்: இடையில் பேசுவதற்கு மன்னிக்க வேண்டும், சுவாமி. பொதுவாக, எதை நாம் 'விதி' என்கிறோம்?

அகத்தியர்: தெளிவு பெற முடியாத விஷயங்களையும் சம்பவங்களையும் நாம் நம் வாழ்க்கையில் சந்திக்கும்போது அதற்கு ‘விதி’ என்கிறோம். ஆனால் விதியின் மகிமை உனக்குத் தெரியுமா, போகா?  நாம் வேதனைப்படும்போது அந்த வேதனையைத் தாங்கும் சுமைதாங்கியாக நிற்பதே அந்த விதிதான்.... சரி, கதைக்கு வருகிறேன்... எலியைப் பார்த்துவிட்ட பாம்பு, சரேலெனப் பாய்ந்து அதைப் பிடிக்கத் திரும்பியபோது அதனுடைய அடிவால் கீழே இருந்த விளக்கின் திரியைத் தட்ட, அணைந்து போகும் நிலையில் இருந்த விளக்கு சுடர் விட்டு எரியத் தொடங்கிவிட்டது.

போகர்: ஐயனே, பாம்பு, எலியைப் பிடித்துவிட்டதா?

அகத்தியர்: குழந்தையே, போகா, அந்தப் பாம்பு அன்று, எலியைப் பிடித்ததோ இல்லையோ.. ஆனால் அது தன் மறு பிறவியில் அரியணையைப் பிடித்துவிட்டது............... அது தெரியுமா, உனக்கு?

போகர்: ஐயனே, என்ன சொல்கிறீர்கள்...?

ஸ்ரீசுயம்பு நந்தீஸ்வரர்
தின்னகோணம் சிவாலயம்

அகத்தியர்: ஆம், ஐயனே..... பாம்பினுடைய வால் பட்டு, அணைந்து கொண்டிருந்த விளக்கு, உயிர் பெற்றதால், சித்திரகுப்தனும் ‘இந்தப் பாம்பு ஈசனுடைய மூலஸ்தானத்தில் விளக்கேற்றி வைத்தது' என்று கணக்கு எழுதிவிட, அதனால் வந்த பெரும் புண்ணியத்தினால் அந்தப் பாம்பு, மறு பிறவியில் மகத நாட்டு அரசனாகவே பிறந்துவிட்டதடா, போகா?

போகர்: சத்குருநாதா, கலியில் அனைத்து மக்களும் அரசனாகப் பிறக்க ஆசைப்படுகிறார்கள்...முடியுமா?

அகத்தியர்: விளக்குகளே இல்லாத தலங்களுக்குச் சென்று விளக்கேற்றச் சொல். அரச பதவி அணுகி வரும். புரிந்ததா?

போகர்: ஐயனே, தீபப்பிரதோஷம் பற்றி அற்புதமாகக் கூறினர்கள். அடுத்து அபய பிரதோஷம் பற்றி விளக்க வேணடும்

அகத்தியர்: ஐயனே, நீ சப்த ரிஷிகளைப் பார்த்ததுண்டா?

போகர்: “குருநாதா, நட்சத்திரக் கூட்டமாகத் தெரியும் சப்தரிஷி மண்டலத்தைத்தான், தங்களருளால் அறிவேன்

அகத்தியர்: அதைத்தான் சொல்கிறேன்... Y வடிவத்தில் தெரியும் அந்த சப்த ரிஷி மண்டலம் ஜப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில் தெளிவாக வானில் தெரியும். இந்த மாதங்களில் திரயோதசி திதியில் முறையாக பிரதோஷ வழிபாடு செய்து, சப்தரிஷி மண்டலத்தை தரிசித்து வணங்குபவன் அபய பிரதோஷ வழிபாடு செய்தவனாகிறான்.

போகர்: ஐயனே, அபயப்பிரதோஷம் என்ற பெயர் எப்படி இதற்கு வந்தது..?

அகத்தியர்: நன்றாய் கேட்டாய், நண்பனே போகா...தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் பெற்று, ஆடிப்பாடி உண்டு களித்து, ஈசனை மறக்க..... பின் நந்தீசர் அருளால் ஈசன் நினைவு வரப் பெற்று, கயிலாயம் ஒடி அபயக்குரல் கொடுக்க.....ஈசனும் அபயமளித்து அவர்களை அனுப்ப, அவர்களும் சப்தரிஷி மண்டலத்திற்கு வருகிறார்கள்....அங்கு பல காலம் தங்கியிருந்து, சப்தரிஷிகளின் அருளால் ஈசனுடைய ‘அபய’ மகிமையைப் பூரணமாக உணர்ந்து தெளிந்த மனதுடன் திரும்புகிறார்கள்... ரிஷிகளும் தேவர்களுக்காக ஈசனிடம் வேண்டுகிறார்கள்... ஆகவே, போகா.....யாரொருவர் அபயப் பிரதோஷ வழிபாட்டைச் செய்கிறார்களோ, அவர்களுடைய தரம் பார்க்காது ஈசன் அபயமளிக்கிறான்... இப்பொழுது புரிகிறதா, பெயர் எப்படி வந்ததென்று.

போகர்: தந்தையே, கலியில் இயந்திர கதியில் இயங்கிக்கொண்டிருக்கும் மனிதனால், தாங்கள் கூறும் வழிபாடுகளைக் கடைபிடிக்க முடியுமா...?

அகத்தியர்: ஏன் முடியாது? மனமிருந்தால் மார்கம் உண்டு. உலகிலுள்ள உயிரினங்களிலேயே அறிவுள்ளவன் மனிதன்தான்....... சாதாரண துரும்புகளும், தூசுகளும் கூட காற்றில் பறந்து இயங்கிக் கொண்டிருக்கிறதென்றால், மனிதன்  முயற்சியோடு இருக்க வேண்டாமா.......? ஒவ்வொருவரும் முயற்சி செய்துதான் தீரவேண்டும். வழிபாடுகள் செய்யாமல் தான தருமம் செய்யாமல் 'எனக்கு அருளுலகத்தில் இடம் வேண்டும், என்றால் கிடைக்குமா, ஐயனே? ஒன்று தெரிந்து கொள்.......... கடலின் ஆழத்திற்குச் செல்பவனே விலை மதிக்க முடியாத முத்துக்களை எடுக்கிறான். கரையில் அமர்ந்திருப்பவனுக்கு ஒன்றும் கிடைக்காது. ஆகவே, நீ வாழ்வில் உயர்வடைய வேண்டுமென்றால் உத்தம வழிபாடுகளை முறையாகச் செய்துதான் தீரவேண்டும்... இதை மக்களும் உணர்ந்துதான் தீர வேண்டும்... புரிகிறதா?

போகர்: நன்றாகப் புரிகிறது, ஐயனே! ஆனால் கலியில் மனிதன் பகுத்தறிவு பகுத்தறிவு என்று அடித்துக் கொள்கிறானே, உன்மையில் 'பகுத்தறிவு' என்றால் என்ன?

அகத்தியர்: அன்பனே, நம்முடைய பார்வைக்குத் தெரிகின்ற பொருளை நமக்கு உணர்த்துவது, எது தெரியுமா? அதுதான் நம்முடைய பார்வைக்குப் பின்னால் உள்ள பகுத்தறிவு. அப்படியென்றால் பகுத்தறிவென்றால் என்ன?...எங்கும் இறைவன் நிறைந்துள்ளான் என்ற உண்மையைப் பகுத்து அறிவதே பகுத்தறிவாகும். புரிந்ததா, போகா! எடுத்த பிறவியின் நோக்கத்தை, பகுத்தறியாத மனிதனுக்கு மன்னிப்பேது?

போகர்: சுவாமி, யாரை மன்னித்துவிடலாம்... ஆனால் யாரை மன்னிக்க முடியாது...?

அகத்தியர்: நல்ல கேள்வி இது. இதையே தான் கிருஷ்ணன் தன் குரு சாந்திபீனியிடம் கேட்டான் அவர் கூறிய பதிலை உனக்குச் சொல்கிறேன், கேட்பாயாக 'சிந்திக்க மறந்தவனை மன்னித்துவிடலாம். ஆனால் சிந்தனைக்குச் சந்தர்ப்பமளிக்க மறுப்பவனை மன்னிக்கவே முடியாது'...

போகர்: ஐயனே, விளக்கம் தேவை ..

அகத்தியர்: அன்பனே, உண்மையான பைத்தியத்தை மன்னித்துவிடலாம் .. ஆனால் சுயநலத்திற்காகப் பைத்தியம் போல் நடித்து ஏமாற்றுபவனை மன்னிக்கவே முடியாது...சிந்தனைக்குச் சந்தர்ப்பம் அளிக்க மறுப்பதால்தான் நாம் மரணத்தைச் சந்திக்கிறோம்...

போகர்: இதுதான் சந்தர்ப்பம் என்று எப்படித்தெரிந்து கொள்வது. குருவே?

அகத்தியர்: தெரிந்துகொள்வது, மிகக் கடினம்தான். ஏனென்றால் சந்தர்ப்பங்கள் என்றுமே சிங்காரித்துக் கொண்டு வருவதில்லை...

போகர்: அற்புதமாகச் சொன்னீர்கள். ஐயனே...அடுத்து மஹா பிரதோஷ மகத்துவத்தை விளக்க வேண்டுகிறேன்.

அகத்தியர்:  ஈசன் விடமுண்ட நாள் கார்த்திகை மாதம் சனிக்கிழமை என்று சொன்னேன். தேவர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து ஈசனிடம் சரணடைந்தபோது, நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நின்று நாட்டியமாடிய அன்று திரயோதசி திதி. ஆகவே சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வரும்போது நாம் செய்கின்ற பிரதோஷ வழிபாடே மஹா பிரதோஷ வழிபாடு எனப்படுகிறது. ஐயனே ஸ்திர வாரப் பிரதோஷ வழிபாடு உத்தம பலன்களை அளிக்கவல்லது என்பதை நீ அறிய வேணடும். மேலும் மஹா பிரதோஷத்தன்று எமன் வழிபட்ட சுயம்பு லிங்க தரிசனமும், வழிபாடும் செய்வது மிகவும் உத்தமம் என்று நீ மக்களுக்கு அறிவிப்பாயாக...

போகர்: ஐயனே, தென்னாட்டில் எமன் வழிபட்ட லிங்கம் எங்கு இருக்கிறது?

அகத்தியர்: மக்களுடைய மூளைக்கும்தான் சற்று வேலை தருவோமே! அவர்களே எமன் வழிபட்ட தலத்தைத் தேடிக் கண்டுபிடிக்கட்டுமே !  ஐயனே, தெய்வீக இரகசியங்களை சிரமப்பட்டுத் தெரிந்து கொண்டால்தான் அதன் அருமை புரியும், புரிந்ததா?

போகர்: நன்கு புரிந்தது, ஐயனே! முயற்சி திருவினையாக்கும் என்கிறீர்கள்..

(எமன் வழிபட்ட தலம்-சென்னையில 'வேளச்சேரி’ என்ற இடத்திலுள்ள தண்டீஸ்வர  ஆலயம்)

அகத்தியர்: உத்தமனே... மஹாப்பிரதோஷ வழிபாட்டைப் பற்றி மேலும் கூறுகிறேன்..... கேட்பாயாக. மஹாப் பிரதோஷத்தில் 1008 வகைகள் உண்டு. அதில் 108 மக்கள் தெரிந்து கொள்ளலாம்.. அதிலும் 10 வகைகள் மட்டும் மக்கள் தெரிந்துகொண்டு அனுஷ்டித்தால் போதும் தெரிந்ததா? இப்பொழுது அந்த 10 வகைகளையும் விளக்குகிறேன்... கவனமாகக் கேட்டுக்கொள்.

ஏகாட்சர பிரதோஷம்

ஏகாட்சர பிரதோஷம்: வருடத்தில் ஒரே ஒரு முறை மஹா பிரதோஷ தினம் வருவது, ஏகாட்சரப் பிரதோஷம் எனப்படுகிறது. அதாவது வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டும் சனிக்கிழமையும் திரயோதசி திதியும் சேர்ந்து வருவது, ஏகாட்சரப் பிரதோஷம் எனப்படுகிறது. போகனே, இப்படி வருவது மிகவும் அபூர்வம் என்று மக்களுக்கு அறிவிப்பாயாக. மேலும் அட்சரங்களில் சக்தி வாய்ந்தது பீஜாட்சர மந்திரங்கள். அந்த பீஜாட்சர மந்திரங்களில் முதன்மையானது ‘பிரணவம்’- இதை நீ நன்கு அறிவாய். பிரணவ மந்திரத்தின் மகிமைகளை உனக்கு நான் ஓங்கார மகிமை என்னும் தலைப்பில் விரிவாகக் கூறியுள்ளேன். பிரணவத்தை மட்டும் தனியாக ஓதுவதைதான் பெரியோர் அருவ வழிபாடு என்கிறார்கள். ஆகவே அருவ வழிபாடு என்னென்ன பலன்களை தருமோ, அவைகளை ஏகாட்சர பிரதோஷ வழிபாடு தந்து விடுகிறது.

போகர்: மக்களுக்காக சில பலன்களைக் கூறுவீர்களா, ஐயனே?

அகத்தியர்: ஐயனே, சொல்கிறேன், அறிவிப்பாய் மக்களுக்கு... ஏகாட்சர பிரதோஷம் அனுஷ்டித்தால் இரத்த சோகை நோய் நீங்கும். நியாயமான பதவி உயர்வில் உள்ள தடங்கல்கள் நீங்கும்... இது நிச்சயம்.

போகர்: ஐயனே, பொதுவாக பிரதோஷ வழிபாடு தன் நலத்திற்காக, அல்லது பொதுநலத்திற்கா?

ஸ்ரீதசபுஜ ரிஷபாரூடர் தென்கடம்பை

அகத்தியர்: பிரதோஷ வழிபாடு பொதுநலத்திற்காக உண்டானதே. எப்படி என்கிறாயா? ஒரு தளத்தில் பிரதோஷ விழா கொண்டாடுவதால் அத்தலத்தைச் சுற்றியள்ள அனைவருடைய வாழ்வும் சுபிட்சமடைகிறது. ஆகவே, உத்தமப் பிரதோஷம் நாடுவது பொது நலம் என்று நீ உணரவேண்டும். ஆகவே நீ பிரதோஷ வழிபாட்டில் ஈடுபடும்போது உன் நலத்தை மறந்து விடுகிறாய். தன் நலம் மறந்தால் உன் நலம் நாடி தேவாதி தேவர் வருகின்றனர்.

போகர்: அப்படியென்றால் கோயிலைச் சுற்றி இருப்பவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்து ஒரு மனதுடன் செய்ய வேண்டிய வழிபாடு பிரதோஷ வழிபாடு அல்லவா, குருவே?

அகத்தியர்: ஆம் ஐயனே.... ஈசன் கோயில் சுற்றத்தார் பிரதோஷ வழிபாடு செய்ய உற்றதோர் உற்றார்கள் பாரேன்.

போகர்: ஆனால் தற்சமயம், கலியில் கோயிலைச் சுற்றியிருக்கும் மக்கள் (சுற்றத்தார்கள்) கோயிலைப் புறக்கணிப்பது ஏன் குருவே?

அகத்தியர்: ஆகுநாள் தொட்டு ஈசன் படைக்கும் போதே என்னருகே உனக்கு இல்லம் கொடுப்பேன் என்று எழுதியனுப்பினான் ‘சரி' என்று சொல்லிப் பிறந்து நீ இறைவழிபாட்டைச் செய்யாமல் இருக்கிறாயே, விதியைத் தவிர வேறு எதை நோவது..? கோவிலைப் புறக்கணிப்பது உன்னை வேதனையிலும் சோதனையிலும் வைத்துவிடுமடா, போகா... ஆகவேதான் பெரியவர்கள் 'மனிதன் எப்பொழுதும் இன்புற்றிருக்க வேண்டும்’ என்று விரும்பி கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றார்கள் புரிந்ததா?

போகர்: பெரியவர்கள் எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும், அதில் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது. அடுத்து வரும் மஹாபிரதோஷம் எது?

அகத்தியர்: அன்பனே, ஏகாட்சரப் பிரதோஷம் அடுத்து வருவது அர்த்தநாரி பிரதோஷம் என்பது.அன்னை வழிபட்ட அற்புத பிரதோஷம் இதுவென நீ அறிய வேண்டுமடா, போகா...

போகர்: ஐயனே, அன்னை பிரதோஷ வழிபாடு செய்தாளா? எங்கு? எப்படி? அறிய ஆவலாயிருக்கிறேன், குருவே!

அகத்தியர்: ம்...ம்... சொல்கிறேன்... நினைத்தாலே முக்தி தரும் தலம் எது?

போகர்: திருஅண்ணாமலை ஐயனே...

அகத்தியர்: சூரிய சந்திரர்கள் இன்றும் குறுக்கே கடக்காது வலமாகச் சுற்றிச் செல்லும் ஒரே இடம் எது?

போகர்: திருஅண்ணாமலை ஐயனே...

அகத்தியர் : அடிக்கு 1008 லிங்கம், அடித்துகள்கள் பட்ட இடமெல்லாம் ‘கோடி கோடி லிங்கங்களே’ என்று பெயர் பெற்ற தலம் எது மகனே?

போகர்: திருஅண்ணாமலை ஐயனே...

அகத்தியர்: அம்மையே! என்று ஈசனால் அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் தலைகீழாக பூமிக்குமேல் ஓரடியில் இருந்தபடி வலம் வந்த கிரி எது?

போகர்: திருஅண்ணாமலை ஐயனே...

அகத்தியர்: பிரளயத்தின்போது எஞ்சி நிற்பது....?

போகர்: திருஅண்ணாமலை ஐயனே...

அகத்தியர்: “எம்மதமும் சம்மதம்” என்று காட்டும் ஒரே இடம் எது?

போகர்: திருஅண்ணாமலை ஐயனே...

அகத்தியர்: அனைத்துக் கேள்விகளும் முடியும் ஒரே இடம் எது?

போகர்: திருஅண்ணாமலை ஐயனே...

அகத்தியர்: ம்.....அப்படிப்பட்ட உத்தமத்தலமான திருஅண்ணாமலையில் தான் ஐயனே .... பேரொளியாகிய அண்ணாமலையோடு கலக்க உண்ணாமுலைத்தாய் கிரிவலம் வருகிறாள்... ஆகா... அவள் தன் தாமரைப் பாதங்களில் அடி மேல் அடி எடுத்து வைத்து கிரிவலம் வரும் அழகைக் காண கண் கோடி வேண்டுமடா போகா.....அன்னை ஈசனை நினைத்த படியே வலம் வந்தும் ஈசன் மனம் கனியவில்லை. பல தேவாண்டுகள் கழிகிறது... அன்னையும் வலம் வந்துகொண்டே இருக்கிறருள். அப்போது ஈசன், 'அம்மையே நீ ஜந்தாண்டு காலங்கள் அர்த்தநாரிப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால், நீ எண்ணியது நிறைவேறும் என்று அசரீரியாக ஒலிக்க... அன்னையும் மகிழ்ச்சியுற்று, உத்தமமாய் நோன்பிருந்து, அர்த்தநாரி பிரதோஷ வழிபாட்டை அற்புதமாக நடத்தி அருட் பெருஞ்சோதியாகிய ஈசனுடன் இரண்டறக் கலந்தனள்.

போகர்: ஐயனே! அர்த்தநாரிப் பிரதோஷம் என்றால் என்னவென்று இதுவரை தாங்கள் கூறவில்லையே...

அர்த்தநாரிப் பிரதோஷம்

அகத்தியர்: ஐயனே.... ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே மஹாப்பிரதோஷம் வருமேயானால் அதற்கு அர்த்தநாரிப் பிரதோஷம் என்று பெயர்... புரிகிறதா?

போகர்: அதாவது ஒரு வருடத்தில் இரண்டு முறை மட்டுமே சனிக்கிழமையும் திரயோதசி திதியும் சேர்ந்து வருவது அல்லவா குருவே? அர்த்தநாரிப் பிரதோஷ வழிபாட்டால் வரும் பலன் யாது?

அகத்தியர்: ஐயனே, யாரொருவர் 5 வருடங்கள் அர்த்தநாரிப் பிரதோஷ வழிபாடு செய்கிறார்களோ,அவர்கள் முன்பு இழந்த செல்வம் எழுந்து வரும்; பிரிந்த கணவன் மனைவியர் ஒன்று சேர்வர், திருமணத் தடங்கல்கள் நீங்கி திருமணம் கைகூடும்; மனநோய் தீரும், என்று மக்களுக்கு அறிவிப்பாயாக.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்குவளை

போகர்: உத்தமரே, ஒவ்வொருவர் வாழ்ககையிலும் ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது.... ஆனால் ‘வாழ்க்கையில் அனைத்தையும் உடையவர்’ என்று யாரைச் சொல்ல்வது?

அகத்தியர்: உலகத்தில் நிலையானது எது? என்று ஆராயும் புத்தியே 'நற்புத்தி' என்று அழைக்கப்படுகிறது. அப்படி, குரு அருளால் நிலையானதை ஆராய்ச்சி செய்யும் உத்தமன் ஆராய்ச்சியின் முடிவில் தன்னைத் தியாக வாழ்க்கைக்கு அர்ப்பணித்துக் கொள்கிறான்.. அத்தகைய தியாக வாழ்க்கை வாழ்பவனே நற்புத்தி உடையவன். அவனே வாழ்க்கையில் அனைத்தையும் உடையவனாகிறான்.... அவனே ஞானியாக, மஹானாகத் திகழ்கிறான்.... இதைத்தான் வள்ளுவரும் 'அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்கிறார். இப்போது புரிந்ததா, போகா வாழ்க்கையில் அனைத்தையும் உடையவர் யார் என்று?

போகர்: உத்தமரே, ஞானிகளும், சித்தர்களும் அனைத்தும் உடையவர்களாக இருக்கும்போது, ஏன் பிச்சை எடுத்தார்கள்?

அகத்தியர்: இந்தக் கேள்விக்கு விடையளிக்கு முன், நான் உனக்கு ஒரு பட்டம் தரப் போகிறேன் ..

போகர்: பட்டமா... .எனக்கா? என்ன ஐயனே சொல்கிறீர்கள்?

அகத்தியர்: ஆமாம், ஒவ்வொரு ஞானியும் ஒவ்வொரு விதத்தில் தியாகம் செய்தார்கள் என்றால் என் சீடன் போகனோ மக்கள் வாழ்வாங்கு வாழ்வதற்கென்றே கேள்விகளைக் கேட்டுத் தியாகம் செய்கிறான். ஆகவே அவனுக்கு நான் 'கேள்வி ஞானி' என்ற பட்டத்தைச் சூட்டுகிறேன். கேள்வியென்றால் உன்னுடைய கேள்விகளல்லவோ கேள்விகள்!

போகர்: உயரே தூக்கிவிட்டு (பின்) கையை எடுக்கிறீர்களே, இது நியாயமா?

அகத்தியர்: இல்லை அப்பனே. ...... உள்ளதைத்தான் சொல்கிறேன்.... அண்டசராசரத்தில் உள்ள அனைவருக்கும் என்னுடைய பதில்கள் இனிக்கின்றன என்றால் அடியேனுக்கு உன்னுடைய கேள்விகள் மிகவும் இனிக்கின்றதடா போகா....இருக்கட்டும், இப்பொழுது நீ கேட்ட கேள்விக்கு வருகின்றேன். ஞானிகளும், சித்தர்களும் ஏன் பிச்சை எடுத்தார்கள் என்றுதானே கேட்டாய்? அவர்கள் பிச்சை எடுத்தது, ஊனில் ஆவியை ஓம்புவதற்கு அல்ல.... பின், ஏன் தெரியுமா?  மக்களிடம் கொடுக்கும் குணம் குறைந்துவிடக்கூடாது என்று அவர்கள் விரும்பினார்கள், பிச்சை எடுத்தார்கள்... புரிந்ததா?

போகர்: நன்கு புரிந்தது, ஐயனே! ஒரே வருடத்தில் இரண்டு மஹாபிரதோஷங்கள் வந்தால் அதை அர்த்தநாரிப்பிரதோஷம் என்றீர்கள்... ஒரே வருடத்தில் மூன்று மஹாப்பிரதோஷங்கள் வந்தால்...?

அகத்தியர்: அதற்கு ‘திரிகரணப்பிரதோஷம்’ என்று பெயர். இந்த திரிகரணப் பிரதோஷ வழிபாட்டினால் அஷ்ட லட்சுமிகளின் ஆசி பூரணமாக நமக்குக் கிட்டுகிறது என்பதை நீ அறிய வேணடும்...

அனைவருக்கும் லட்சுமி கடாட்சம்

போகர்: அடியேனோ ஏழை.... ஏழை எப்படி அறிவது அஷ்ட இலக்குமிகளின் ஆசியை?

அகத்தியர்: நாம் அனைவருமே ஏழைகளல்லர்... பணக்காரர்கள்தான்... தெரியுமா உனக்கு?

போகர்: அது எப்படி குருவே... ?

அகத்தியர்: நம் ஒவ்வொருவர் உடலிலும்அஷ்ட லக்ஷ்மிகள் வசிக்கும்போது, நாம் எப்படி ஏழைகளாவோம்?

போகர்: நம் உடலில் அஷ்ட லஷ்மிகள் வசிக்கிறார்களா? மக்கள் அறிய ஆவலாக இருக்கிறார்கள் குருவே!

அகத்தியர்: திரிகரணப் பிரதோஷத்தின் மகிமையே அஷ்டலட்சுமிகளின் ஆசியைப் பெற்றுத் தருவதுதான் என்பதால் மனிதனுடைய உடலில் வசிக்கும் அஷ்டலக்ஷ்மிகள் மகிமையைக் கூறுகிறேன். கவனமாகக் கேட்பாயாக. முதலாவதாக, நம் பாதங்களில் வசிப்பவள் “ஆதிலக்ஷ்மி” என்று நீ அறிவாயாக

போகர்: அதனால்தானா குருவே, கிருஷ்ண பரமாத்மா குழந்தையாக இருக்கும்போது கால்கட்டை விரலைச்சூப்பினான்?

அகத்தியர்: சரியாகச் சொன்னாய் போகா... கிருஷ்ண பரமாத்மா ஒன்றைச் செய்கிறான் என்றால்..... சும்மாவா....? அப்படி அவன் கால்கட்டை விரலைச் சூப்புவதன் மூலம் ஆதிலக்ஷ்மிக்கு முத்தம் தருகிறானாம், ஐயனே....

போகர்: ஐயனே! ஆதிலட்சுமி ஒருவனை விட்டு எப்பொழுது விலகுகிறாள்?

அகத்தியர்: பிறர் மீது தெரிந்தோ அல்லது தெரியாமலோ நம் கால் படும்போதும், மது, மங்கை, சூதாட்டம்...இவைகளை நாம் நாடும்போதும் ஆதிலட்சுமி நம்மை விட்டு விலகுகிறாள். பிறர் மீது தெரியாமல் கால் பட்டு விட்டால் சிவ சிவ எனக்கூற இலக்குமி விலகமாட்டாள்.

போகர்: ஐயனே, கலியுகத்தில் திருமணங்கள் நடக்கும் இடங்களில் கூட சூதாட்டம் மலிந்து விட்டதே... !

அகத்தியர்: ஐயனே, இது மிகவும் வருத்தத்திற்குரிய செய்திதான்... திருமணம் நடக்கும் இடங்களில் சூதாடுவதால் மனமக்களுக்கு ‘சில்மிஷ’ புத்தியோடு கூடிய மக்கள் பிறக்கின்றன. ஆகவே திருமண வைபவங்களில், இரு வீட்டாரும் ஒன்று கூடி, சூதாடுவதைத் தடுத்து நிறுத்த வேணடும்

போகர்: சத்குருநாதா, மனிதன் ஆதிலக்ஷ்மியின் ஆசி பெற என்ன செய்ய வேண்டும்?

அகத்தியர்: நம் தாய் தந்தையர்க்கும், குருவுக்கும், பெரியோர்களுக்கும் பாத பூஜை செய்து வணங்குவதன் மூலம், நாம் ஆதிலக்ஷ்மியின் அருளைப் பெறலாம். அடுத்து, காலை நீட்டியபடி புத்தகத்தை வைத்துக்கொணடு படிப்பதாலும், நெல், அரிசி, தானியம் இவைகளைக் கால்களால் மிதிப்பதாலும் பால் கறக்கும்போது, பசுவினுடைய கால்களைக் கட்டிவிட்டுக் கறப்பதாலும் நம்மை விட்டு முக்கியமான ஒரு லட்சுமி விலகுகிறாள். அவள்தான் “கஜலக்ஷ்மி” ....மனிதனுடைய முழங்கால் பகுதியில் அவள் வசிக்கிறாள்...

போகர்: ஐயனே, கஜலக்ஷ்மி நம்மிடமிருந்து விலகாமலிருக்க என்ன வழி?

அகத்தியர்: நான் முதலில் சொன்ன தவறுகளை செய்யாமலிருப்பதாலும், கணவன், குரு, பெரியவர்கள் ஆகியோருடைய முழங்கால்களை, வலி தீர பிடித்து விடுவதாலும் கஜலக்ஷ்மி நம்மை நாடி வருகிறாள்....அடுத்து வருபவள் வீர்யலக்ஷ்மி

போகர்: குருவே, வீர்யலக்ஷ்மி நம் உடலில் எங்கு வசிக்கிறாள்?

அகத்தியர்: ஐயனே, மனிதனுடைய இடுப்புக்குக் கீழ் பகுதியில் அவள் வசிக்கிறாள். குடுமி வைத்தவர்களை என்றுமே கேலி செய்யக்கூடாது. அப்படிச் செய்வதால் மனிதன் 'கானப்புரட்டி’ என்ற சாபத்திற்கு ஆளாகிறான். அச்சாபத்தின் மூலம் ஒருவன் எவ்வளவு முயன்று படித்தாலும், அவன் மண்டையில் படிப்பு ஏறாது... குடுமியைக் கேலி செய்வதாலும், சாதுக்களையும் மகான்களையும் கேலி செய்வதாலும், வீர்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள்.

போகர்: குடுமியில் அப்படி என்ன விசேடம்?

அகத்தியர்: சீடனே, குடுமி மகிமையைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால், அதற்கு முடிவே கிடையாது.. ஆகவே, குடுமி மகிமையைப் பற்றிப் பிறகு பேசுவோம். ஆனால் ஒன்றை மட்டும் நீ தெரிந்து கொள்ள வேண்டுமடா...  குடுமி வைத்துள்ள ஒருவன், சாதாரண மனிதனைவிட 100 மடங்கு அதிகமாக, சீலத்தையும், குணத்தையும், நாணயத்தையும் பெற்றிருக்கிறான். அவன் தவறு செய்தால் பரிகாரம் கிடையாது. சாபம் உண்டு.

போகர்: ஐயனே, அடுத்து வருபவள் விஜயலக்ஷ்மி அல்லவா?

அகத்தியர்: ஆம், ஐயனே! இவள் நம்முடைய இடது தொடையில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக. இடது தொடை எப்பொழுதும் மனைவிக்குதான் சொந்தம். ஆகவே மனைவியை விடுத்து, பிறன்மனை நோக்கினால் நம்மைவிட்டு விஜயலக்ஷ்மி அகன்று விடுகிறாள்.... துரியோதனை விட்டு விஜயலக்ஷ்மி அகன்றதால்தான் அவன் தோல்வியுற்றான்” என்கிறது இருடிகள் பாரதம்.

போகர்: ஐயனே, துரியோதனனை விட்டு விஜயலக்ஷ்மி அகன்றது எதனால்?

அகத்தியர்: பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டதில் அனைத்துச் செல்வங்களையும் இழந்து, அதோடு மட்டுமல்லாது திரௌபதியையும் பணயமாக வைத்து இழந்து, சபையில் வாயடைத்து நிற்கிறார்கள்... உடன் திரௌபதியும் நிற்கிறாள்... அப்பொழுது, துரியோதனன் திரௌபதியைப் பார்த்து ‘அமருவாய் என் மடியிலே’,என்று சொல்லித் தன் இடது தொடையைக் கையால் தட்டினான். பிறன் மனைவியைத் தன் மடியில் அமரத் தட்டியதால் விஜயலக்ஷ்மி அவனை விட்டுச் சென்று விட்டாள்... துரியோதனனும் போரில் தோற்றான்.......புரிந்ததா? அடுத்து வருபவள் ‘சந்தானலக்ஷ்மி’ இவள் மனிதனுடைய வலது துடையில் வசிக்கிறாள்

போகர்: ஐயனே, சந்தானலக்ஷ்மி நம்மை விட்டு எப்போது விலகுகிறாள்?

அகத்தியர்: நண்பனே. இங்குதான் திருமண வைபவத்தின்போது கன்னிகாதானம் செய்ய வேண்டிய முறையை பெரியவர்கள் விளக்குகிறார்கள்... கன்னியை அவளது தகப்பன் தானம் செய்து கொடுக்கும்போது அவளைத்தன் வலது துடையில் மட்டுமே அமர்த்திக்கொள்ள வேண்டும்.... இடது துடையிலோ அல்லது இரு துடைகளின் நடுவிலோ மணமகள் அமரக்கூடாது. ஆகவே, கன்னியை முறை மாற்றி தானம் செய்வதால்தான் சந்தானலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள், புரிந்து கொண்டாயா...?

போகர்: புரிந்து கொண்டேன்,சுவாமி, புவிவாழ் மக்களுக்கு இது மிகவும் பயன்படும் அல்லவா?

அகத்தியர்: அடுத்து வருபவள் 'தான்யலக்ஷ்மி’. இவள் மனிதனுடைய வயிற்றுப் பகுதியில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக.

போகர்: ஐயனே, தான்யலக்ஷ்மி நம்மை விட்டு, எப்போது அகலுகிறாள்?

அகத்தியர்: ஊசிப் போன உணவு, எச்சில் உணவு, கல்லிருக்கும் உணவு இவைகளை ஏழைகளுக்கோ அல்லது கணவன்மார்களுக்கோ பெண்கள் படைத்தால், அவர்களை விட்டுத் தான்யலட்சுமி விலகி விடுகிறாள்... பொதுவாக மற்றவர்கள் வயிற்றில் நாம் அடிக்கும்போது நம்மை விட்டு தான்யலட்சுமி அகன்று விடுகிறாள்.

அஷ்டலட்சுமிகள் விமானம்
கருப்பத்தூர் சிவாலயம்

ஐயனே, அடுத்து, நம் நெஞ்சுப்பகுதியில் வசிப்பவள் 'தைரியலக்ஷ்மி’ என்று நீ அறிய வேண்டும்... நெஞ்சிலே நஞ்சை வைத்து, பொய்யும், புறமும் பேசித் திரிபவரை விட்டு தைரியலட்சுமி அகன்று விடுகிறாள் பாரேன். ஆகவேதான் பெண்கள் மாங்கல்யம் அணிவதும், அணிந்த மாங்கலயம் நெஞ்சிலே தவழ்வதும் கனவனுடைய 'தைரியத்தை’ வளர்க்கும் என்கிறார்கள் பெரியவர்கள்....புரிந்ததா, போகா?

போகர்: புரிந்தது, நாதா!. மாங்கல்ய மகிமையைப் பற்றித்தான் தாங்கள் விரிவாகக் கூறியுள்ளீர்களே! (‘'மாங்கல்ய மகிமை’ என்னும் புத்தகத்தில் காண்க)

அகத்தியர்: ஆம் ஐயனே, அடுத்து வருபவள் ‘வித்யாலக்ஷ்மி’....  இவள் நம் கழுத்துப்பகுதியில் வசிக்கிறாள் என்று நீ அறிவாயாக பொதுவாகவே, அனைவரும் கழுத்தில் ருத்திராக்ஷம் அணிந்துதான் தீரவேண்டும். அப்படி அணியவில்லை என்றால் வித்யாலட்சுமி நம்மை விட்டு விலகுகிறாள்.

போகர்: பெண்களானால் குருவே!

அகத்தியர்: பெண்கள் பஞ்ச பூதங்களின் ஆசி பெற்று வந்த தாலிக் கயிற்றை அணிவதே உத்தமம். அடுத்து வருபவளோ, 'சௌபாக்யலக்ஷ்மி’ என்று நீ அறிவாயாக.

போகர்: எப்பொழுது குருவே, சௌபாக்யலக்ஷ்மி நம்மை விட்டு விலகுகிறாள்?

அகத்தியர்: சொல்கிறேன் கேள்....பெண்கள் தங்கள் புருவங்களைச் சிரைக்கக் கூடாது. சிரைத்தால், கணவனுடைய ஆயுள் நிச்சயம் குறையும். அடுத்து, பெண்கள் (sticker) ஒட்டுப்பொட்டு வைக்கக்கூடாது. மேலும், மஞ்சளால் செய்த குங்குமத்தைத்தான் நெற்றியில் அணிந்து கொள்ள வேண்டும். ஆகவே, மேற்கூறியபடி முகத்தைப் பேணாதவர்களை விட்டு சௌபாக்யலக்ஷ்மி அகன்று விடுகிறாள் என்று உறுதியோடு மக்களுக்கு அறிவிப்பாய் போகா.

போகர்: ஐயனே! பெண்கள் புருவத்தைச் சிரைக்கக் கூடாது என்றீர்கள்... ஆண்கள் சிரைத்தால் ...?

அகத்தியர்: ஆண்கள் சிரைத்தால்.தந்தைக்கு பிண்டம் போடும் நிலையில் தடங்கல் ஏற்படும். இதனால் சாபம் உண்டு என்று நீ அறிதல் வேண்டும்... இவையெல்லாவற்றிற்கும் காரணம் அறியாமையும், அறிந்த பெரியவர்களை நாடாமையுமே

போகர்: ஐயனே. இதைத்தான் 'தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்’ என்றார்களோ பெரியவர்கள்

அகத்தியர்: ஆம், ஐயனே! தவறுகளைத் தாராளமாகச் செய்து நம்முள் இருக்கும் லட்சுமிகளை நாமே விரட்டியடித்தபின் நம்மிடம் செல்வங்கள் எப்படிச் சேரும்? இங்குதான் 'திரிகரண பிரதோஷ வழிபாடு' நமக்கு உத்தமமாக உதவுகிறது. திரிகரண பிரதோஷ வழிபாட்டை (ஒரு வருடத்தில் மூன்றுமுறை மட்டும் சனிக்கிழமையும் திரயோதசி திதியும் சேர்ந்து வருவது) முறையாகச் செய்வதால், ஒருவன் அஷ்ட லக்ஷ்மிகளின் பூரண ஆசியைப் பெறுவதோடு, இழந்த செல்வத்தையும் திரும்பப்பெற்று விடுகிறான்... அப்படி உத்தமமாகத் திரிகரண பாதோஷ வழி பாட்டைச் செய்ததால்தான் பஞ்ச பாண்டவர்களும் தாங்கள் இழந்த செல்வங்களை திரும்பப் பெற்றார்கள்,  அறிந்து கொண்டாயா போகா?

போகர்: ஆம் ஐயனே! ஒரு வருடத்தில் நான்கு மஹா பிரதோஷங்கள் வந்தால், அதைப் பெரியோர் என்ன பெயரிட்டு அழைக்கிறார்கள்?

பிரம்ம சிரஸ் பிரதோஷம்

அகத்தியர்: அன்பனே! ஒரே வருடத்தில் நான்கு முறை மட்டுமே சனிக்கிழமையும் திரயோதசி திதியும் மாலை வேளைகளில் கூடி வருவதைப் பெரியோர் 'பிரம்மசிரஸ்' என்று அழைக்கின்றனர்.

போகர்: பிரமனே அனுஷ்டித்த வழிபாடா இது? ஐயனே! விளக்கமாகக் கூறவேண்டும்.

அகத்தியர்: அப்பனே! பிரமனும் அரியும் தம் பேதமையால் பரமம் யாம் பரமம் என்று அவர்கள் பதைப்பொடுங்க, அரனார் அழலுருவாய் அவர்களுக்கிடையில் ஆதி அந்தமற்று நின்றானல்லவா..? அப்பொழுது ஈசன், 'உங்களிருவரில் யார் எனது அடியையோ அல்லது என் முடியையோ பார்க்கிறீர்களோ, அவர்களே பிரும்மம் என்று அசரீரியாய் ஒலிக்க, திருமால் பன்றி வடிவம் தாங்கி பூமியைக் குடைந்து கொண்டு அடியைத் தேடிச்செல்ல பிரம்மனும் அன்னப்பறவை வடிவம் கொண்டு, முடியைத் தேடிச் சென்றனன்....திரும்பிவந்த பிரம்மனோ, 'முடியைக் கண்டேன்’ என்று பொய் சொல்லி விட்டான். வாழ்க்கையில் மனிதன் செய்யும் மாபெரும் குற்றம், ஒரு தவறை மற்றொரு தவறினால் சரிசெய்ய நினைப்பதுதான்.... முதலில் பிரமன் ‘நானே பிரம்மம்' என்று சொன்னதே தவறு.... அந்தத் தவறை 'முடியைக் கண்டேன்’ என்று பொய் சொல்வதன் மூலம் நிரூபிக்கப் பார்த்தனன்..... ஆகவே, சொல்லொணாத சாபத்திற்குள்ளானான்....அதைத் தீர்த்துக் கொள்ள ஓரிடத்திற்கு வந்தான்....அந்த இடம் எதுவென்று உனக்குத் தெரியுமா போகா?

போகர்: திருஅண்ணமலைக்குத்தான் வந்திருப்பான்...

அகத்தியர்: அட...சரியாகச் சொல்லிவிட்டாயே...!

போகர்: ஐயனே, 'ஆடிப்பாடி அண்ணாமலையைத் தொழ ஓடிப்போகும் வல்வினைகளே'... என்பதை அறியாதவனா, என்ன?

அகத்தியர்: பிரமனும் அண்ணாமலை ஏகி, அடி அண்ணாமலையில் ஈசனுக்கு கோயிலெழுப்பி முறையாக கிரிவலம் வருகிறான்... ஈசனும் மனமிரங்கவில்லை... பிரமனும் மனம் தளரவில்லை... பல தேவாண்டுகள் கழிகின்றன... கால்கள் தேய்ந்தது, துடைகள் தேய்ந்து பின்பு இடுப்பும் தேய்ந்த நிலையிலும் விடா முயற்சியுடன் கிரிவலம் வருகிறான்... ‘இருதயமும் தேய்ந்துவிடும்’ என்ற நிலை வந்துவிட பிரமன் தலைகீழாக நின்று கிரிவலத்தைத் தொடர்கிறான்... இப்பவும் ஈசன் மனமிரங்கவில்லை... தலையிலிருந்து ஒவ்வொரு அங்கமாகத் தேய்ந்து கொண்டே வந்து, முடிவில் பிரமனுடைய இதயம் மட்டும் துள்ளித் துள்ளிக் குதித்துக் கொண்டு கிரிவலம் வருகிறது அப்படி வரும்போது, ஒரிடத்தில் பிரமன், கௌதம முனிவரைக் காண்கின்றான் அவரிடம் தன் துயரக் கதையைக் கூற அவரும் மனமிரங்கி, 'பிரமனே! நீ நான்கு மகாப்பிரதோஷங்கள் மட்டுமே வரும் இவ்வருடத்தில் நீ அந்த நான்கு மஹா பிரதோஷ தினங்களிலும், உத்தம மாலை வேளையில், கிரிவலத்தில், பிரதோஷ லிங்க தரிசனத்தைச் செய்து, பின் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால் ஈசன் மனமிரங்குவான் கவலை வேண்டாம்’ என்று சொல்ல பிரமனும் அந்த நான்கு மஹாப் பிரதோஷங்களையும், கெளதம முனி கூறியதுபோல் முறையாக அனுஷ்டித்து', ‘ஈசா! கருணையுடன் நான் செய்த பாவம் தீர்ப்பாய்’, என்று மனமுருகி வேண்ட, ஈசனும் பிரமனுக்குக் காட்சியளித்தனர்... ஆகவே, பிரமன் ஒரே வருடத்தில் நான்கு முறை மட்டுமே வருகின்ற மஹா பிரதோஷ வழி பாட்டை, உத்தம பிரதோஷ லிங்க தரிசனத்துடன் முறையாகச் செய்து ஈசனை வழிபட்டதால், அவன் செய்த பாவங்கள் தீர்ந்தன... ஆகவே போகா.. யார் ஒருவர் பிரம்மசிரஸ்’ பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்கிறார்களோ, அவர்கள் மேல் சுமத்தப்பட்ட அபாண்ட பழி தீரும் என்று மக்களுக்கு அறிவிப்பாயாக.

போகர்: ஐயனே, திருஅண்ணாமலை கிரிவலத்தில் பிரதோஷ லிங்க தரிசனம், நமக்கு எங்கு கிட்டுகிறது.

அகத்தியர்: ஆகாச நந்தியிடமிருந்து 18 முற அடி எடுத்து, 3 முற அடி வைத்து, அதிலிருந்து கீழ்நோக்கு சூரியகலையில் வாசியை மாற்றி கண்ணைத் தூக்கி கிரியைப் பார்க்கின்ற தரிசனமே ‘பிரதோஷ லிங்க தரிசனம் என்று நீ அறிவாயாக

போகர் ஐயனே, ஏதேதோ சொல்கிறீர்களே... ஒன்றும் புரியவில்லையே...!

அகத்தியர்: உனக்குப் புரியாமலில்லை. மக்கள் தெளிவடைய விரும்பினால் அவர்கள் குருவை நாடிச் செல்லட்டும்....

உத்தம குருவுடன். நீ ஒருமுறை கிரிவலம் வரும்போது அடையும் அருளை நீ தனியாக 1000 முறை வலம் வந்தாலும் அடைய மாட்டாய் அப்பனே!

போகர்: ஆம் ஐயனே! இதைத்தான் பெரியவர்களும்

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉரு சிந்தித்தல்தானே என்றார்கள் போலும்!

அகத்தியர்: சரியாகச் சொன்னாய் அப்பனே! அடுத்து நான் உனக்குச் சொல்லப் போவது, ‘அட்சரப் பிரதோஷம்’ என்பதாகும். ஒரே வருடத்தில் 5 முறை மட்டும் சனிக்கிழமையும், திரயோதசி திதியும் சேர்ந்து வரும் மாலை வேளைகளில் செய்கின்ற உத்தம வழிபாடே அட்சரப் பிரதோஷ வழிபாடு” என்பதாகும். இந்க அட்சரப் பிரதோஷ வழிபாடு மஹா உத்தமமானது ஐயனே!

போகர்: உத்தம குருவே! அட்சரப் பிரதோஷ மகிமையினை விளக்கும் புராணக் கதைகள் ஏதாவது உண்டா...?

அகத்தியர்: ஏன் இல்லை..? ஈசன் பிட்சாடனர் வேடம் பூண்டு வந்ததை நீ அறிவாயல்லவா?

போகர்: .....தாருகாவனத்து ரிஷிகளெல்லாம் அகந்தை கொண்டிருந்ததால் அவர்களுடைய ஆணவத்தை அடக்க ஈசன் பிட்சாடனனாய் வந்தான் என்று நீங்கள் முன்பு அடியேனிடம் சொல்லியுள்ளீர்கள் குருவே!

அகத்தியர்: சரியாகச் சொன்னாய் போகா.... அப்படி அவன் பிட்சாடனனாய் வந்த அழகை என்னென்பது....

தாருகாவனம் திருச்சி

வார் அழகு, வடிவழகு, வீழ்அழகு, விழிஅழகு
தோளழகு, துவப்பழகு, தொப்புள்அழகு, விழிஅழகு
நுதல்அழகு, நுட்புள்அழகு, அல்குல்அழகு, அடக்கழகு
வாழழகு, வடிக்கழகு, சீர்அழகு, சிறக்கழகு
வீரழகு, பாரழகு அத்தனையும் கோடி இரண்டாயிரம்
சேர்த்துப் பின்னையும் கூட்டிவரும் அழகே ஈசன்
கால்தூசி நக அழகே அழகு ..!

இத்தகைய அழகில் மயங்காதார் யார்? மகுடியில் மயங்கும் பாம்புகளைப் போல் ஈசனுடைய பேரழகில் மயங்கி, அனைவரும் (ரிஷிபத்னிகளும்கூட) பின்னே செல்கின்றனர். .இதைக்கண்ட தாருகாவனத்து ரிஷிகள் வேதங்களைக் கற்றிருந்தபோதிலும் ‘யாரோ வந்துவிட்டான் அவன் பின்னால் அனைவரும் ஓடுகின்றனர்.. அன்னவனை அடக்கியே தீருவோம்' எனப் பிதற்றி, ஈசனையே எதிர்த்து நின்று, அவனைக் கொல்ல 62 அடி நீளம் உள்ள புலியை ஏவுகின்றனர்... புலியும் பாய்ந்துவர, ஈசனும் சற்றே திரும்பிப் பார்க்கிறான் பார்த்த மாத்திரத்திலேயே புலியின் தோல், ஈசனுடைய ஆடையாக மாறிவிடுகிறது. அன்று வந்தது ஈசனுக்குப் புலித்தோலாடை!.. இதைப் பார்த்த பின்பும் தாருகாவனத்து ரிஷிகள் தங்கள் தவறை உணராது, அருட்பெருஞ் சோதியாகிய ஈசன மேல் வேள்வி அக்னியை ஏவுகிறார்கள்.....ஆனால் ஈசனோ அதைத் தன் சுண்டுவிரல் நகத்தில் அடக்கிக்கொணடான்...

போகர்: இதைப் பார்த்தாவது அவர்களுக்குப் புத்தி வந்ததா, ஐயனே?

அகத்தியர்: எப்பொழுதுமே, போகா.... தொல்விமேல் தோல்வியுறத்தான் போராடும் வேகம் அதிகரிக்கும் என்பதை அறிவாயா?

போகர்: அப்படியென்றால் மறுபடியும் ஈசன்மேல் அந்த ரிஷிகள் எதை ஏவினார்கள்?

அகத்தியர்: அருட்பெருஞ்சோதியாகிய ஈசன் மேல் சாதாரண வேள்வி அக்னியை ஏவிய அறிவிலிகள், இப்பொழுது பூதகணநாதனாகிய சர்வேச்வரன் மேல் பூதங்களை ஏவுகின்றனர். அதுவும் பயனற்றுப் போகவே, முடிவில் வேதங்களையே ஈசன் மேல் ஏவினார்கள். வேதநாயகனாகிய ஈசன், அவர்கள் வேதங்களையே தன்மேல் ஏவியதைக் கண்டதும், பெரும் கோபமுற்று உக்கிர தாண்டவம் ஆட ஆரம்பிக்க... அண்டங்கள் ஆட ஆரம்பிக்கின்றன... தாருகாவனத்து ரிஷிகள் மடிந்துவிட, அவர்கள் மடிந்த பின்பும் ஈசனுடைய உக்கிரம் தணிந்தபாடில்லை. பார்த்தார் பிரம்மதேவர் அன்னை பராசக்தியிடம் ஒடிவந்து,

அம்பிகையே பராத்பரி சிவ கற்பகத்தருவே,
என் நலம் காக்கும் கற்பகமே! திருஉடை கொண்ட வடிஉடை நாயகி
அடிஉடை கொண்டு எடுத்த காலையில் அம்மையே
உன்னையன்றி என் ஐயன் உக்கிரம் தணிப்பார் யாருளரோ?

----என்று மனமுருகி வேண்ட, அன்னையும் கருணை பூண்டனள்... தாருகாவனத்தில் வந்து ஈசன்முன் நிற்க ஈசனுடைய உக்கிரமும் கிரமமாய் அடங்குகிறது..... உக்கிரம் அடங்கிய நிலையில் அன்னையும் ஈசனைப் பார்த்து 'இனி நீர் அழகாகவும், அருமை யாகவும் தெளிவாகவும், தீர்க்கமாகவும் ஆடவேணடும் என் ஈசனே! என்று வேண்ட... ஈசன் இடப்பக்கம் திரும்புகிறான்...  நாலாயிரம் கோடி பனைமர உயரம் கொண்ட இருபூதங்கள் நான்கு உலக அளவு கொண்ட ஒரு உடுக்கையைத் தூக்கிக்கொண்டு வந்து ஈசன் முன் வைத்துச் செல்ல ஈசன் இப்போது வலப்பக்கம் திரும்புகிறான்... கைலாயத்தில் உடுக்கை வாசிக்கும் கணங்களுக்குத் தலைவனாகிய 'சண்டப் பிரசண்ட மாருபவன புவண்டசீல நீலகண்டருத்ர கணநாதன்’ வந்து உடுக்கையின் முன் நிற்கிறான்...

போகர்: ஐயனே, இவனுடைய உயரம் எவ்வளவோ?

அகத்தியர்: சுமார் ½ அடி உயரம் இருப்பான்...அவ்வளவே!

போகர்: ஐயனே. 4,000 கோடி பனை மர உயரம் என்றீர்களே, இது சாத்தியமா?

அகத்தியர்: அருட்பெருஞ்சோதியாகி ஈசன் நின்ற போது, அவன் உயரம் என்னவென்று உனக்குத் தெரியுமா?

போகர்: மேவி அன்று அண்டங்கடந்து, விரிசுடராய் நின்ற மெய்யனை, எப்படி அளக்க முடியும், ஐயனே?

அகத்தியர்: அப்படி என்றால் அளவிட முடியாத ஈசனுடைய உருவம் முன்னால் 'நாலாயிரம் கோடி பனைமர உயரம்' என்பது அற்பமல்லவா? இப்பொழுது சொல், இந்த உயரம் சாத்தியமா, இல்லையா என்று?

போகர்: ஐயனே, அழகாகச் சொன்னீர்கள். தாங்கள் கூறியதை அனைவரும் ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும்.

அகத்தியர்: ஐயனே, மக்கள் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்துகொள். இயற்கை பொய்த்தாலும், பொய்க்கலாம், ஆனால் அகத்தியன் வாக்கு என்றுமே பொய்க்காது.... இதை உறுதியாக மக்களுக்குத் தெரிவிப்பாயாக... சரி ... கதைக்கு வருகிறேன். உடுக்கையின் முன் நின்ற நீலகண்ட ருத்திரகணநாதன் இப்பொழுது வாசியை உள்ளிழுக்க, உடுக்கை எழுந்து நிற்கிறது. இப்பொழுது அவன் ஈசனை நோக்க....ஈசனும் அவனை நோக்க... அவனுடைய விரல்களில் சக்திகள் பரிணமிக்கின்றன... சக்தியைப் பெற்ற நிலையில் அவன் உடுக்கையியல் 'தில்லானா’ என்ற அற்புதமான தாளக் கோர்வையை வாசிக்க, ஈசனும் அதற்கு ஏற்ப அற்புதமாக நாட்டியமாட... இறந்த தாருகாவனத்து முனிவர்கள் உயிர் பெற்று எழுகிறார்கள்.

போகர்: ஐயனே, 'தில்லானா’ என்ற தாளக் கோர்வைக்கு அப்படியொரு மகிமையா?

அகத்தியர்: ஆம், ஐயனே! ‘தில்' என்பது உயிரைக் குறிக்கும், “ஆனா” என்றால் வருதல் என்று பொருள்படும். ஆகவேதான் இறந்த முனிவர்கள் உயிருடன் திரும்பி வந்தனர், தில்லானாவின் மகிமையால்!

போகர்: ஐயனே ஒரு சிறு சந்தேகம் ஈசன் தாருகா வனத்து ரிஷிகளின் அகந்தையை அடக்க நாட்டியமாடியதற்கும் அட்சர பிரதோஷத்திறகும் என்ன தொடர்பு என்று கூறுவீர்களா?

அகத்தியர்: ஐயனே.! ஈசன் ரிஷிகளை உயிர்ப்பிக்க நாட்டியமாடிய தினம் மகா பிரதோஷ தினம் என்று நீ உணர வேண்டும். அன்று அவன் ஆடிய நாட்டியம்தான் 'அட்சர ஒலிகளின் இரகசியங்களை’ நமக்குத் தந்தது. அதனால் அந்தப் பிரதோஷம் அட்சரப் பிரதோஷம் எனப்பட்டது.. ஆகவே போகா! யாரொருவர், ஒரு வருடத்தில ஜந்து முறை மட்டுமே வரும் மஹாப்பிரதோஷ வழிபாட்டைச் செய்கிறார்களோ, அவர்கள் 'முனிதாண்டவம்’ கண்ட பலனை அடைவதோடு திதி, அமாவாசை, தர்ப்பணங்கள் செய்யத் தவறியதால் பெற்ற சாபங்கள் நீங்கி அவர்தம் மூதாதையர் பித்ருலோகத்தில் இருள் பகுதியிலிருந்து ஒளிப்பகுதிக்குச் செல்ல வழி வகுத்தவர்களாகிறார்கள். மேலும் மக்கள் செய்யும் ஒரு முக்கிய தவறிலிருந்து அவர்களை அட்சரப்பிரதோஷ வழிபாடுதான் காப்பாற்றுகிறது ஐயனே! அது தெரியுமா உனக்கு.?

போகர்: சொல்லுங்கள் ஐயனே! மக்கள் பயனடையட்டும்

அகத்தியர்: பல் துலக்கும்போது ஆள்காட்டி விரலால் துலக்கக்கூடாது. அப்படித் துலக்கினால் பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பிடிக்கும். அத்தகைய பிரம்மஹத்தி தோஷம் கூட அட்சரப் பிரதோஷ வழிபாட்டின் மகிமையால் விலகிவிடுகிறது, தெரிந்ததா?

போகர்: ஐயனே! அன்று தாருகாவனத்து ரிஷிகள் ஈசன் மேல் வேதங்களையே ஏவியது மாபெரும் குற்றம்தானே?

ஸ்கந்தப் பிரதோஷ மகிமை

அகத்தியர்: ஆம், மகனே! அன்று அவர்கள் வேதங்களை தவறாக ஏவியமையால்தான் கலியில் வேதம் ஓதுவோர் குறைந்துவிட்டனர்... ஆனால் ஒவ்வொருவரும் வேதம் ஓதித்தான் தீர வேண்டும். அடுத்து ஒரு வருடத்தில் ஆறு மகாப்பிரதோஷ தினங்கள் வருவதைப் பற்றி கூறிகிறேன். ஒரே வருடத்தில் ஆறுமுறை சனிக்கிழமையும் திரயோதசி திதி கூடி வருவதை ஸ்கந்தப் பிரதோஷம் என்கின்றனர் பெரியோர்....

போகர்: குருவே! முருகப் பெருமானுக்கும், ஸ்கந்தப் பிரதோஷத்திற்கும் தொடர்புண்டோ..?

அகத்தியர்: ஆம், ஐயனே! புருஷோத்தமனாகிய முருகப் பெருமானே வழிபட்ட உத்தமப் பிரதோஷம் இது... ஆறுமுகன் சூரபதுமனைப் போரில் சந்திப்பதற்கு முன் ஈசனருள் வேண்டித் திருஅண்ணாமலையை முறையோடு வலம் வருகிறான். பல காலமாகியும் ஈசனருள் கிட்டவில்லை. முருகனும் மனம் தளராது தசமுக தரிசனத்திலிருந்து நுனிக்கால் நகத்தில் நடந்து வருகின்றான். காயத்ரி தரிசனத்தை அடைந்து ஈசனை மனமுருகி வேண்ட ஈசனும் மகிழ்ந்து காட்சியளித்தனன்...’ஆறுமுகா! நீ செல்லும் பயணத்தில் சூரனின் ஆணவத்தை அழித்து, அவனையே வாகனமாகவும், கொடியாகவும் கொள்வாய்' என்று அருள்பாலித்தான். அப்படி முருகன் வரம் பெற்ற நாளன்று சனிக்கிழமையும், திரயோதசி திதியும் கிருத்திகையுடன் கூடியிருந்ததால் ஸகந்தப் பிரதோஷம் என்று பெயர் பெற்றது

போகர்: குருவே! ஸகந்தப் பிரதோஷம் அனுஷ்டிப்பதால் மக்கள் பெறும் பலன் யாது ?

அகத்தியர்: அன்பனே! ஸ்கந்தப் பிரதோஷத்தை முறையாக அனுஷ்டித்தால், தட்டிப்போன பதவி உயர்வு தேடிவரும். மற்றும், வைத்தியர்கள் இதை அனுஷ்டித்தால் பெரும் புகழ் பெறுவர்! இது உறுதி.

போகர்: அடுத்து ஒரே வருடத்தில் 7 சனிக்கிழமைகளில் திரயோதசி திதி கூடி வருவதைப் பற்றி விளக்கவேண்டும்

அகத்தியர்: அப்பனே, ஒரே வருடத்தில் 7 மஹாப் பிரதோஷ தினங்கள் வந்தால் அதற்கு “சட்ஜபிரபா” என்று பெயர். வசுதேவரும், தேவகியும் கம்சனால் சிறையிலடைக்கப்பட்டு, ஒவ்வொரு குழந்தையாகப் பறிகொடுத்து வந்த நிலையில், ‘எட்டாவது குழந்தையை எப்படி நாம் காப்பாற்றப் போகிறோம்’ என்று நினைத்து அவர்கள வருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.... அப்பொழுது வானில் தோன்றிய அசரீரி ஓரிடத்தில் பிறந்து வளருவான், மாறிடம் போக அவன் தந்தை ஏழு மஹாப் பிரதோஷம் செய்திருந்தால் தூக்கிப் போக வழி பிறக்கும்’ என்று ஒலிக்க, வசுதேவரும் முறையாக ஒரே வருடத்தில் வந்த 7 மஹாப் பிரதோஷங்களையும் சிறையிலிருந்தபடியே அனுஷ்டிக்கிறார்... எட்டாவது குழந்தை கிருஷ்ணனும் பிறந்தான்... வசுதேவரும் குழந்தையை ஒரு கூடையில் வைத்து அதைத் தன் தலைமேல் வைத்துகொண்டு நடக்கிறார்.... யமுனை நதி குறுக்கிடுகிறது... அதில் இறங்கிவிடுகிறார்.... நதியிலோ பயங்கர வெள்ளம்... ஆனால் சட்ஜபிரபாவின் சக்தியினால் வசுதேவருடைய கழுத்தை தாண்டி நீர்மட்டம் உயரவில்லை... ஆனால் யமுனைக்கோ கிருஷ்ணனுடைய பாதங்களை எப்படியாவது தொட்டுவிட வேண்டும் என்ற வேகம்... ஆனால் முடியவில்லை... பார்த்தான் கிருஷ்ணன்... யமுனைமேல் இறக்கம் கொண்டான்... தனது காலை கூடைக்கு வெளியே நீட்டுகிறான்.... யமுனையும் கண் சிமிட்டும் நேரத்தில் பொங்கி எழுந்து காலைத் தொட்டுவிட்டு அடங்குகிறது...

போகர்: ஐயனே, வசுதேவர் சட்ஜபிரபாவை அனுஷ்டித்திருக்காவிட்டால்...?

அகத்தியர்: வசுதேவரால் யமுனையை நிச்சயம் கடந்திருக்க முடியாது... ஆகவே யாரொருவர் சட்ஜபிரபாவை அனுஷ்டிக்கிரார்களோ, அவர்கள் பிறவிக் கடலைக் கடப்பதோடு மட்டுமல்லாமல் கந்தர்வர்களாகவும் மாறுகின்றனர். ஐயனே! அடுத்து ஒரே வருடத்தில் 8 சனிக்கிழமையும் திரயோதசி திதி கூடி வந்தால், அந்த எட்டு மஹாப் பிரதோஷங்களையும் “திக்கு பிரதோஷம்” என்று அழைக்கின்றனர், பெரியோர்.. திரிலோக சஞ்சாரியான நாரதர், தன் சஞ்சாரங்களை முடித்துக் கொண்டு ஸ்ரீமன் நாராயணனிடம் வருகின்றார். நாராயணனும் “நாரதா! கலியுக மக்கள் நலமுடன் இருகிறார்களா?” என்று வினவ, நாரதரும், மஹா பிரபோ! கலியுகத்தில் மக்களுக்கு நல்லது, கேட்டது தெரிந்திருந்தும் அனைவரும் மாயையில்தான் வீழ்கிறார்கள். அதுதான் ஏனென்று புரியவில்லை..?” என்று பதில் சொல்ல, நாராயணனும் ‘அப்படியா, நாரதா, அருகில் தடாகம் ஒன்று இருக்கிறது, அதை பார்த்துவிட்டு, என்னிடம் திரும்பி வா...’ என்று சொல்ல, நாரதரும் சுறுசுறுப்புடன் அத்தடாகத்தை நோக்கி செல்கிறார்... தடாகம் அமைந்திருக்கும் சூழ்நிலையே அவரை மெய் மறக்க பிரமித்த நாரதரும், அதில் சிறிது எடுத்துப் பருக, ‘ஆகா… அமிர்தம் போல் உள்ளதே... இதில் குளித்தால் என்ன?’ என்று நினைத்து அத்தடாகத்தில் மூழ்கி எழுகிறார்...
நாரதராக நீருக்குள் சென்றவர் ராஜ உடையில் வெளி வருகிறார்... தாமே ‘நாரதர்' என்பதை மறந்த நிலையில் சுற்றும் முற்றும் பார்க்கிறார்... தன்னைச் சுற்றி மக்கள் நின்று ஆடிப்பாடுவதைப் பார்த்த நாரதரும் 'பிரஜைகளே! என்னாயிற்று என்று அவர்களைக் கேட்க மக்களும் 'பிரபோ உங்களை எங்கெல்லாம தேடுவது, வாருங்கள் நம் நாட்டிற்குச் செல்வோம் என்று ஒரே குரலில் கூற.. நாரத ராஜாவும் பீடு நடை போட்டு, நாட்டிற்குள் சென்று அரியணையில் அமர்கிறார். சிறிது நாட்களிலேயே, பேரழகியான ஒரு மங்கையை மணம் புரிந்து அவளை அளவு கடந்த அன்போடு அரவணைத்து வாழ்ந்து, பல குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்... இப்படியே மூன்று ஜன்மங்கள் கழிந்து முன்னூறு வருடங்களும் ஆகிய நிலையில் ஒரு நாள் கடும் வெள்ளம் ஏற்பட நாரத ராஜாவின் மனைவியும், குழந்தைகளும் அடித்துச் செல்லப்படுகின்றனர்....
இதைக் கண்ட நாரத ராஜாவும் 'காக்கும் கடவுளே நீ எதற்கு இருக்கிறாய், இவர்களைக் காப்பாற்ற மறுக்கிறாயே!' என்று கூறிக்கொண்டே அவர்களைக் காக்கும் பொருட்டு வெள்ளத்தில் குதிக்க .. மூர்ச்சித்த நிலையில் கரையில் ஒதுங்குகிறார்... மூர்ச்சை தெளிந்து கண் திறந்து பார்க்கிறார்...
எதிரே நாராயணமூர்த்தி நிற்பதைக் கண்டு அவரைச் சரணடைகிறார். 'ஐயனே, போதும் போதும், இந்த மாயவாழ்க்கை என்று ஓலமிட, நாராயணனோ ‘நீ அனுபவித்தது ஒரு நீர்க்குமிழி தோன்றி மறையும் நேரம்தான், இதற்கே இப்படி அலறினால்..? மேலும் நீ காணவேண்டியது நிறைய உள்ளது, நாரதா!’ என்று கூறி மறைய... நாரதரும் இறைவனை நோக்கி மனமுருக வேண்டுகிறார்.. அப்பொழுது வானில் தோன்றிய அசரீரி, ‘நாரதா! நீ முறையோடு திக்குப் பிரதோஷ வழிபாட்டை இயற்றினால் நாராயண நாமத்துடைய மகிமையை உணர்ந்து, அந்த மகிமையினால், எம்மிடம் வந்து சேர்வாய்' என்று ஒலிக்க, நாரதரும் உத்தமமாக திக்குப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்து வைகுண்டம் ஏகினார். ஆகவே போகா... யாரொருவர் திக்குப் பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்கிறார்களோ, அவர்கள் அடுத்த பிறவியில் அரசனாகப் பிறப்பர், அது மட்டுமல்லாது அட்டத் திக்குகளையும் கட்டி ஆளும் சக்தியையும் பெறுவர்...

போகர்: அப்படியென்றால் இது வைணவர்களும் செய்ய வேண்டிய உத்தமப்பிரதோஷ வழிபாடா, ஐயனே?

அகத்தியர்: நாராயணனுடைய நாமத்தின் மகிமையை உண்மையில் உணர வேண்டுமென்றால், வைணவர்களும் பிரதோஷ வழிபாடுகளைச் செய்துதான் தீரவேண்டும். பிரதோஷ வேளையில், ஸ்ரீநாராயண மூர்த்தியே கைலாயம் சென்று ஈசனுடைய நாட்டியத்திற்கு மத்தளம் வாசிக்கும் போது வைணவர்கள் அவ்வேளையில் பிரதோஷ வழிபாட்டைச் செய்ய வேண்டாமா?

போகர்: ஐயனே! ஒரே வருடத்தில் ஒன்பது மஹாப் பிரதோஷ தினங்கள் வருமேயானால், அதன் மகிமையைக் கூற வேண்டுகிறேன்!

அகத்தியர்: போகனே! ஒரே வருடத்தில் ஒன்பது மஹாப்பிரதோஷ தினங்கள் வருவதைப் பெரியோர்கள் ‘நவநாதப் பிரதோஷம்’ என்கிறார்கள். மனிதனை ஆட்டும் நவகிரகங்களும் இப்பிரதோஷ வழிபாட்டைச் செய்து, தங்கள் நிலைகளை உறுதி செய்து கொண்டனராம். ஆகவே யாரொருவர் நவநாதப் பிரதோஷத்தை அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் செய்யும் தொழில் நிரந்தரமாவதோடு நவக்கிரகங்களின் ஆசிகளையும் பெறுகிறார்கள். முடிவாக ஒரே வருடத்தில் 10 மஹாப் பிரதோஷங்கள் வருவதைப் பற்றிச் சுருக்கமாக உனக்குக் கூறிவிடுகிறேன். இதைப் பெரியவர்கள் ‘துத்தப் பிரதோஷம்’ என்கிறார்கள். துத்தப் பிரதோஷத்தை முறையாக அனுஷ்டித்தால், குருடான கண்களப்பா, முறையோடு தெரியும் பாரேன். குஷ்ட நோய் போன்ற தோல் நோய்களும் வந்த வழி செல்லும் என்பதை கலியுக மக்களுக்கு அறிவிப்பாயாக...

போகர்: ஐயனே பத்து வகையான மஹாப்பிரதோஷங்களையும் அற்புதமாக விளக்கினீர்கள்... அடுத்து நீங்கள் கூறப்போவதைக் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்...

அகத்தியர்: சீடனே! நானும் பிரதோஷ மகிமையைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பேன்.. நீயும் கேட்டுக்கொண்டே இருப்பாய்... மக்களும் உடம்பு நோகாமல் படித்துக் கொண்டே இருப்பர்.... கேட்பதும், படிப்பதும் மட்டும் போதாது. ஐயனே! படித்தவைகளையும், கேட்டவைகளையும், அனுபவ பூர்வமாக உணர்ந்து அறிவதே உத்தமம்... புரிந்ததா? உத்தமனே! ஒரு வருடத்தில் 25 பிரதோஷ தினங்கள் வருகின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு... ஒவ்வொரு பெயரிலும் ஒவ்வொரு தத்துவ அர்த்தம் உண்டு... அப்படி 25 பிரதோஷங்களைப் பற்றியும் அடியேன் கூறப் புகுந்தால், அதைக் கேட்க மனிதனுக்கு நேரம் கிடையாது! ஆகவே ஆனி மாதம் வருகின்ற இரு பிரதோஷங்களைப் பற்றி மட்டும் உனக்குக் கூறுகிறேன்... ஆனி மாதம், கிருஷ்ணபக்ஷத்தில் வரும் பிரதோஷத்திற்கு ‘சஞ்சிகை’ என்று பெயர்... விதியின் வேகம் தணிந்து ஈசன் அருளைப் பெற மக்கள் விரும்பினால்.... அனைவரும் ‘சஞ்சிகை’ என்ற பிரதோஷ வழிபாட்டைச் செய்துதான் தீரணும்....

போகர்: ஐயனே, விதியை மாற்ற முடியுமா?

அகத்தியர்: ஏன் முடியாது... யார் யார் ஏதேதெடுத்திருந்தாலும் அத்தனையும் மாற்றலாம்... தன்னையும் மாற்றலாம்... தானாய் இருக்கும் வண்ணமும் மாற்றலாம்.... பெருமான் ஏதேதெடுத்த காலையிலே அத்தனையும் மாற்றலாம்.. ஈசனருளால் எதை வேண்டுமானாலும் மாற்றலாம்... ஈசன் நாமம் சொல்லும் அடியானே, விதியை மாற்றுவான் என்றால் ஈசனுடைய சக்தியை என்னவென்பது?

போகர்: அப்படியென்றால் வசிஷ்டர், விச்வாமித்ரர் போன்ற உத்தமர்கள் அருகிலிருந்தும்... 'என் விதி விட்டபடி நான் போகிறேன்’ என்று இராமாயணத்தில் ராமன் கூறுவதேன்?

அகத்தியர்: ராமன் விரும்பவில்லை அவ்வளவே..

ஸ்ரீசதாசதப சித்தர்
திருக்கண்டியூர்

போகர்: குருவே! சஞ்சிகை என்ற பிரதோஷ விரதத்தை அனுஷ்டித்து, மற்றவர் விதியை மாற்றிய பெரியவர்கள் யாராவது உண்டா?

அகத்தியர்: ஏன் இல்லை? நம் பரம்பரையைச் சேர்ந்த ஒரு உத்தம சித்தர், சஞ்சிகை பிரதோஷ வழிபாட்டை முறையாக அனுஷ்டித்து, சித்தியும் பெற்று விதியையும் மாற்ற வல்லவராக விளங்கினார்.. அவர்தான் சாக்தப் பரப்பிரம்ம காளத்தீச்வர ஸதாதப சித்தர்.

போகர்: ஐயனே, பெரியவர்கள் ஒருவனுடைய விதியை எப்போது மாற்றுகிறார்கள்...?

அகத்தியர்: உன்னில் உள்ளதில் எவ்வளவு ஈசனுக்குக் கொடுத்தாய் உன்னைச் சோந்தவர்களுக்கு எவ்வளவு அள்ளிக் கொடுத்தாய் ஈசன் திருப்பணியில் உன் உடல் தேய்மானம் எவ்வளவு ? இவைகளைக் கணக்கிட்டுத்தான் பெரியவர்கள் உன் விதியை மாற்றுகிறார்கள். ஞானிகளாலும் சித்தர்களாலும் எதை வேண்டுமானாலும் மாற்ற முடியும்... விதியையா மாற்ற முடியாது?

தன்னை அறிந்திடும் தத்துவ ஞானியர்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே

என்பதை நீ அறியாதவனா? ஆகவே விதியின் பிடியில் சிக்கி, கதியின்றி வாடுபவர்கள், 'சஞ்சிகை’ பிரதோஷ வழிபாட்டால் விதியின் கோரப்பிடியிலிருந்து விடுபட்டு பேரின்பம் அடைவார்கள் என்பது நிச்சயம்! அடுத்து, ஆனி மாதத்தில், சுக்ல பட்சத்தில் வருகின்ற பிரதோஷத்தைப் பற்றிக் கூறுகிறேன்.....கேட்பாயாக.... அப்படி வருகின்ற பிரதோஷத்திற்கு ‘தஸாங்குஸம்' என்று பெயர்... 'எம்மை விட்டுச் செல்வமெல்லாம் ஓடி விட்டதே... எம்மிடம் பணம் இல்லையே... நாம் வைத்திருந்த பொருட்களையெல்லாம் இழந்துவிட்டோமே...’ என்று அரற்றுபவர்களெல்லாம் 'தஸாங்குஸ’ பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்தால், இழந்த செல்வங்களைத் திரும்பப் பெறுவதோடு மட்டுமல்லாமல், மறு பிறவியில் மன்னனாயும் பிறப்பர், அறிந்தாயா? போகா! இப்பொழுது நான் உன்னைச் சில கேள்விகள் கேட்கப்போகிறேன்... மனிதர்கள் இறக்கும்போது ஏன் பயப்படுகிறார்கள்?

போகர்: இருக்கும்போது, இறைவனை அண்டி வாழாததால்.

அகத்தியர்: அல்ல... !

போகர்: பாச வலையில் சிக்குண்டதால் பயம் வருகிறதா ஐயனே?

அகத்தியர்: உலகப் பாசங்களை விட்டே போகும்போது பாசத்தினால் பயப்படுகிறார்கள் என்று நீ சொல்வது தவறு... நானே சொல்கிறேன்..... 'நாம் தர்மதேவதையைச் சந்திக்கப் போகிறோம்’  என்று உணர்வதால் மனிதர்கள் இறக்கும்போது பயப்படுகிறார்கள். ஆகவே நீ இறக்கும்போது தைரியமாக இருக்க வேண்டுமென்றால், பாவச்செயல்களைப் புரியாது இருத்தல் வேண்டும்...

போகர்: ஐயனே! பாவம் செய்ய வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை...?

அகத்தியர்: அப்பனே.! நீ சொல்வதுபோல் 'பாவம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் யாருக்கும் முதலில் கிடையாதுதான்... ஆனால் ‘இன்பத்தை அனுபவிக்க வேண்டும்’ என்ற ஆசையால் பாவங்களைச் செய்து விடுகிறான்...

போகர்: ஐயனே, விளக்கம் தேவை...

அகத்தியர்: நாம் ஒன்றை அடைய வேண்டும் என்ற எண்ணத்தால் முயற்சி செய்கிறோம் என்று வைத்துக் கொள்.... பெருமளவில் முயற்சி செய்தும் எண்ணம் ஈடேறவில்லையெனறால் நாம் கோபப்பட்டுவிடுகிறோம்..  கோபத்தின் எதிரொலியாக ‘துரோகம்’ வருகிறது.. துரோகம் வந்த பிறகு நாம் எதற்கும் துணிந்துவிடுகிறோம்... இப்போது அறிந்து கொண்டாயா, போகா... பாவங்கள் சேரும் விதத்தை... ஆகவே 'இறந்த பாவம் இனிப் பிறக்கும் பாவம், மறந்த பாவம், இனி மறக்கும் பாவம், வருத்த பாவம், வருத்தத்திற்குரிய பாவமும், கருத்தபாவம், கருத்தறுத்த பாவமும், மறு நிறைத்த பாவமும், அரைத்த பாவமும், அரைத்துக் கரைத்த பாவமும் போக வேண்டுமென்றால் 'பாசாங்குலி’ என்ற பெயர் பெற்ற பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்ய வேணடும்....'திரயோதசி திதியுடன் திருஆதிரை நட்சத்திரம் கூடிவரும் போது நாம் அனுஷ்டிக்கும் பிரதோஷ வழிபாட்டிற்குத்தான் பாசாங்குலி’ என்று பெயர்.. இது சக்தி வாயந்த ஒரு நட்சத்திரப் பிரதோஷமாகும்.

போகர்: ஐயனே! பாவம் வந்து சேர்கின்ற வழியைக் காட்டினீர்கள்... பாவங்கள் தீரவும் சிறப்பானதொரு வழிபாட்டைத் தந்தீர்கள்..ஆனால் பாவங்கள் செய்யாதிருப்பதற்கு மட்டும் ஒரு வழியும் கூறவில்லையே...?

அகத்தியர்: ஐயனே! உன்னுடைய கேள்விக்கு கீதாச்சாரியனே பதிலளிக்கிறான்...... தருமத்தை ஆசைப்பட்டுச் செய்யக்கூடாது... தருமத்தின் பலனையும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்தல் வேண்டும்... கருமமும் அவ்வாறேதான், இதுதான் பாவங்கள் செய்யாதிருப்பதற்கு வழி....

ஓன்று அரி இரண்டு சிவன்

போகர்: ஐயனே, கண்ணனே ஈசனுக்கு அர்ப்பணம் செய் என்று சொல்வதால் 'அரியும் சிவனும் ஒன்று' என்றாகி விடுகிறதல்லவா?

அகத்தியர்: அதிலென்ன உனக்கு சந்தேகம்....?

வித்தையை வித்தையால் காட்டி
வித்தையை ஒத்தையாய் ஆக்கி,
ஒத்தையை இரட்டையாய் ஆக்கி,
இரட்டையை தொப்பையாய் ஆக்கி,
தொப்பையை மொப்பையாய் ஆக்கி,
மொப்பையில் குடுகுடுப்பை வைத்து,
குடுகுடுப்பையில் அடுகுடுப்பை வைத்து,
அடுகுடுப்பை அடுப்பில் வைத்து மூட்டி
அவ்வடுப்பை ஊதிப் பாரேன்,
தாரை, தம்பட்டை வரும் பாரேன்,
தாரை நீ கொட்டிப் பார்ததிடில்
பம்பையும், பரங்கியும் நிற்கும் பாரேன்,
நாரது நீ எடுத்திடில் உடுக்கைக்கு இரண்டு போக,
ஒன்று அரி, இரண்டு சிவன்....

ஆகவே அரியும் சிவன், இரண்டும் ஒன்றென அறிவாய்...அறிந்திடா மானிடன் அடிமண்டு பாரேன்

போகர்: சற்குருநாதா! தாங்கள் இப்படிப் பரிபாஷையில் பேச ஆரம்பித்துவிட்டால் யாருக்கு என்ன புரியும் ஐயனே.

அகத்தியர்: உனக்காக ஆயிரம் வரிப் பாடலை பத்து வரியாகச் சுருக்கிச் சொன்னால், புரியவில்லை என்கிறாயே....! சரி மக்களுக்காக இப்பாட்டின் சாரத்தை மட்டும் ஒரு சம்பவத்தின் மூலம் விளக்குகிறேன்... கலியில் 'ஞானானந்தகிரி’ என்று பெயர் கொண்ட உத்தமர் ஒருவர் இருந்தார். அவருக்கு உத்தம சீடர் ஒருவர் இருந்தார்... அந்தச் சீடர், ஹரி நாமத்தைப் பரப்ப, பாரதத்திலுள்ள குஜராத் மாநிலத்திற்குச் சென்றிருந்தார்.. அங்கு ஓரிடத்தில் ஹரிநாம மகிமையைப் பற்றி சொற்பொழிவாற்றியபின், கிளம்ப முற்பட்டுக் கொண்டிருந்தபோது, சொற்பொழிவை முழுவதுமாகக் கேட்ட ஒரு அடியார் அவரிடம் ஒடிவந்து நிற்கிறார். அந்த அடியாருக்கோ, தாய்மொழியாகிய குஜராத்தி மட்டுமே தெரியும். வந்து நின்றவர், அவரைப் பார்த்து ‘சுவாமி’ நீங்கள் குஜராத்தியில் செய்த 'ஹரிநாம மகிமை' சொற்பொழிவு மிக அற்புதமாக இருந்தது... உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்' என்று சொல்ல.. உத்தம ஞானானந்த கிரியினுடைய சீடர் திகைத்து போய், 'பெரியவரே' அடியேனுக்கு குஜராத்தி மொழி தெரியாது ஹிந்தியில்தான் அடியேன் உரையாற்றினேன்...” என்று சொல்ல, வந்தவரோ இல்லை... என் காதில் விழுந்ததெல்லாம் குஜராத்தி மொழிச் சொற்களே’ என்று உறுதியாகச் சொல்ல... சீடரும் சொல்வதறியாமல் திகைத்து நின்றுவிட்டார்

போகர்: ஐயனே! இந்த மொழிபெயர்ப்பைச் செய்தவர் யார்?

அகத்தியர்: வேறு யாராக இருக்க முடியும்? அவருடைய குருநாதர், ஞானானந்தகிரிதான்... ஆகவே, உன் மனம் ஒரு பொருளிலேயே ஈடுபட்டிருக்கும் போது, உன் காதில் விழுகின்ற ஒலிகளெல்லாம், உன் மனதிற்கு ஏற்றபடி உருமாறி ஒலிக்கின்றன... அதுபோல, நீ விஷ்ணு பக்தியில் பூரணமாய் நிலைத்திருக்கும் பொழுது, சிவனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தால் கூட, உன் காதில் விஷ்ணுவைப் பற்றிப் பேசுவதாகவே விழும். ஆகவே உத்தம சத்சங்கத் தொடர்பை முறையோக பூண்டு, தத்துவத்தை நீ ஆய்ந்திருந்தால் அனைத்தும் ஒன்றே. அது தான் பிரம்மம் என்று நீ அறியலாம்

போகர்: குருவே! நாங்கள் மனச்சாட்சி சொல்கின்ற வழியில் செல்லும் போது சத்சங்கம் எதற்கு என்று இன்றைய மனிதர்கள் கேட்கிறார்களே?

அகத்தியர்: ஐயனே, மனச்சாட்சியின் மகத்துவத்தைப் பற்றி 'அவதார புருஷனாகிய கிருஷ்ணனே என்ன சொல்கின்றான் தெரியுமா? ‘கலியிலே மனச்சாட்சி நிச்சயமாக ஆசைக்கு அடிமையாகும்’ என்கிறான்...ஆகவே, கலியிலே ஆசைகளுக்கு அடிமைப்பட்டு வாழும் மனிதனுடைய மனச்சாட்சி என்றுமே பொய் சாட்சிதான் சொல்லும்... குரு ஒருவருக்குத்தான் 'எது நல்லது, எது தீயது?' என்று நிர்ணயம் செய்யும் தகுதி உண்டு. ஆகவே குருவினுடைய தீர்ப்பே எதிலும் முடிவான தீர்ப்பு'...என்று மக்கள் உணர்ந்து குருவைச் சார்ந்து, சத்ஸங்க வாழ்க்கை நடத்தித்தான் தீரவேண்டும்... புரிந்ததா, போகா...? மேலும் பொதுவாகவே.... உணர்ச்சியாலும் அறிவாலும்தான் மனிதன் ஆளப்படுகிறான்... அறிவால் ஆளப்படும் மனிதன் துறவறத்தை மேற்கொண்டு, அறிவின் சிகரத்தை அடைகிறான்..ஆனால் உணர்ச்சியால் ஆளப்படும் மனிதனோ இல்லறத்தில் புகுகின்றான்...

இல்வாழ்க்கை 'குரு அருளால்’ முறைப்படுத்தப்படவில்லை என்றால், மனிதனுள் பொறாமை, அசத்தியம் முதலிய விஷசக்திகள் பரவி, அவனை அலைக்கழித்துவிடும்.. துறவற வாழ்க்கை என்பது ஒரு கத்தியின் கூர்முனையில் நடப்பதைப் போன்றது. 'கரணம் தப்பினால் மரணம்’ என்கிற கதை...ஆனால் இல்லற வாழ்க்கையோ, படுக்க வைத்த கத்தியின் மேல் நடப்பதைப் போன்றது... படுக்க வைத்த கத்தியின் மேல் நடக்கும் போதே தடுக்கி விழுந்து தடுமாறிச் செல்லும் மனிதன் கத்தியின் கூர்முனையில் என்று நடப்பது, இதையறிந்துதான் பெரியவர்களும், இல்லறமே நல்லறம்' என்று கூறி விட்டார்கள்... இல்லறம் நல்லறமாவதற்குத்தான் குருவின் அருள் தேவை...ஆகவே அனைவருக்கும் குரு இருந்துதான் தீரவேண்டும்

போகர்: அனைவருக்கும் குரு வாய்ப்பதில்லையே, கலியுகத்தில் குருவா என்று இறை நம்பிக்கை உள்ளவர்களே கேட்கின்றார்களே குருதேவா!

அகத்தியர்: எல்லா யுகங்களிலும் குருவருள் நிரவி நிற்கின்றது. அதைக் கேட்டுப் பெறுபவர் மிகச் சிலரே. குருவை ஒருவன் பெற்றுவிட்டால் அவனுக்கு உலகில் வேறு எதையும் பெறத் தேவையில்லை.. அக்குருவிடம் அவன் பக்தி சிரத்தையுடன் பரிபூரண நம்பிக்கையுடன் தன்னைப் பிணைத்துக் கொள்வானாயின் அவன் நிறை குறைகளை தேவைகளை, குண நலன்களை குருவே கவனித்து கொள்கின்றார்... கலியுலகில் எதை எதையோ இறைவனிடம் வேண்டும் பக்திமான்கள் கூட தனக்கு சற்குரு வாய்க்க வேண்டும் என்று வேண்டுவதில்லை, உண்மையான உள்ளத்துடன் குருவருள் பெற இறைவனிடம் வேண்டிடின் நிச்சயமாக கலியுலகில் கூட, இறைவன் அவனைத் தக்க குருவிடம் சேர்ப்பிக்கிறார் இது நிச்சயம்.. இதை சத்தியமான வாக்காகக் கொண்டு கலியுலகில் மக்கள் இறை வழிபாடு செய்யட்டும்.

போகர்: உத்தமரே, பிரதோஷ வழிபாடே இல்லறத்தை நல்லறமாக்கிவிடாதா..? அதற்கு குரு தேவைதானா....?

அகத்தியர்: ஐயனே, பிரதோஷ வழிபாட்டை முறையாகச் செய்ய வேண்டுமென்றால்?

போகர்: கண்டிப்பாக குரு தேவைத்தான்... குரு அடிமை என்கிற அற்புத வாழக்கை, ஒரு மனிதனுக்கு எங்கு தொடங்குகிறது குருவே?

அகத்தியர்: அற்புதமாய்க் கேள்வி கேட்கும் அன்பனே போகா...! கலியில் அனேகமாக அனைத்து மக்களுடைய வாழ்க்கையும் கேள்வி கேட்கும் வாழ்க்கையாகவே அமைந்து விடுகிறது. ஒரு சிலருடைய வாழ்க்கையோ பதில் கொடுக்கும் வாழ்க்கையாகவே அமைந்து விடுகிறது. ஆனால், பலருடைய வாழ்க்கை கேள்விக் குறியாகவே அமைந்துவிடுகிறது...! கேள்வியும் பதிலும் எங்கு முடிவடைகிறதோ அங்குதான் குரு அடிமை என்ற வாழ்க்கை தொடங்குகிறது...புரிந்ததா...?

போகர்: ஐயனே! குரு இல்லாவிட்டால் பொறாமை, அசத்தியம் போன்ற விஷசக்திகள் மனிதனுள் பரவி, வியாபித்து விடும் என்றீர்கள்... யார் யாருக்கு, எங்கெங்கு விஷம் இருக்கிறது என்பதை அறிய அடியேன் ஆவலாயிருக்கிறேன்....

அகத்தியர்: உத்தமனே! நன்கு அறிந்து கொள்வாயாக. பொறாமைக்காரனுக்கு விஷம் நாக்கிலே உள்ளது. கோபக்காரனுக்கு விஷம் நரம்பிலே உள்ளது. கொலைகாரனுக்கு விஷம் எண்ணத்தில் உள்ளது. துரோகிக்கு விஷம் அறிவில் ஊறுகிறது. ஆனால் நன்றி கொன்றவனுக்கோ அங்கிங்கெனாதபடி உடல் முழுவதும் விஷம் உள்ளது என்று அறிவாயாக.

போகர்: ஐயனே! மனிதன் இத்தகைய விஷங்கள் இல்லாது வாழ்வதற்காகத்தான் ஈசன் விடமுண்டு நடனம் ஆடிய நாளைப் பெரியவாகள் பிரதோஷமாகக் கொண்டாடச் சொன்னார்களோ...? அப்படியென்றால் பிரதோஷ மகிமையைப் பற்றி மேலும் மேலும் சொல்லிக் கொண்டே இருங்கள் ஐயனே!

அகத்தியர்: உத்தமனே.! பிரதோஷ வழிபாட்டில் ஈசன் அம்மையுடன் நந்தியின் மேல் வலம் வரும் ரகசியமே முக்கியமான அங்கம் வகிப்பதால் இப்போது உனக்கு பிரதட்சிண முறைகளையும், விதிகளையும், விளக்குகிறேன்... பிரதட்சிண முறைகள் மொத்தம் 108 உண்டு... அவைகளில் மிக முக்கியமான ஐந்து பிரதட்சிண முறைகளை மட்டும் கூறுகிறேன், கேட்பாயாக... .

திரிதளப் பிரதட்சிணம்: இப்பிரதட்சிணத்தில் சுவாமி சந்திரசேகர மூர்த்தி, உமையவளுடன் நந்திவாகனத்தில் ஆலயத்தின் த்வஜஸ்தம்பத்திலிருந்து புறப்படுகிறார்.. அப்படிப் புறப்பட்டு 3 முறை தொடர் சுற்று வருகிறான்... ஒவ்வொரு சுற்றுக்கும், ஒவ்வொரு விதமான வாத்தியத்தை வாசித்தல் வேண்டும். முதல் சுற்றில் “திருஊடல்” என்ற வாத்தியத்தையும் “பிரிவுத்தாரை” என்ற வாத்தியத்தையும் வாசிக்க வேண்டும்...

போகர்: ஐயனே! முதல் சுற்றில் திருஊடலையும், பிரிவுத் தாரையையும் ஏன் வாசிக்க வேணடும்?

அகத்தியர்: திருஊடல், ஊடல்களைத் தீர்க்கவும் பிரிவுத்தாரை பிரிந்தவர்களைச் சோக்கவும் வாசிக்க வேண்டும்..புரிந்ததா போகா?

போகர்: அப்படியென்றால் அடுத்த இரண்டு சுற்றுகளில், வாசிக்க வேண்டிய வாத்தியங்கள் என்னென்ன, குருவே?

அகத்தியர்: நம் பரம்பரையோன், கீழே இருக்கிறான், அவனை நாடி மக்கள் தெரிந்துகொள்ளட்டும்...

போகர்: சுவாமி! திரிதள வலத்தில், அடியார்கள் ஈசனையும் அன்னையையும் சுமக்கும் நந்தியைச் சுமந்து கொண்டு எப்படி நடக்க வேண்டும்

அகத்தியர்: ஐயனே! நடைகளில் பலவகைகளுண்டு... காளை நடை, கூரை நடை, வார்நடை, வீரிய நடை, பாம்பு நடை, புரிய நடை, வண்டு நடை, நண்டு நடை, எறும்பு நடை, எட்டுக்கால் நடை, கால் கூட்டு நடை, பாம்பு நடை, பறவை நடை, தேள் நடை, சாரை நடை, சர்ப நடை, குடக் கருவிடு நடை என நடை இடை காட்டி நடக்கின்ற விதிகள் உண்டு... ஒவ்வொரு நடையும் ஒவ்வொரு வித பலன்களைத் தரவல்லது, என்பதை நீ அறிய வேண்டும். உதாரணமாக, காளை  நடையில் ஈசன் அடியார் தோள்களில் வரும் போது, அவனைத் தரிசிப்போர்க்கு, நேத்திர ரோகங்கள் தீருகின்றன, குடக்கருவிடு நடையில் ஈசனைத் தரிசிப்போர்க்கு நீர் சம்பந்தமான நோய்கள் தீருகின்றன.. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்...

போகர்: திரிதளப்பிரதக்ஷிணம் செய்வோர் அடையும் பலன், யாது குருவே?

அகத்தியர்: ஐயனே! பலன்கள் பல உண்டு எனினும், முக்கியமாக திரிதளப்பிரதக்ஷிணம் செய்வதால் தவறு செய்யாதவர்களை தண்டித்த பாவம் போகிறது... அடுத்து வருவது..

கர்ப்பஸ்ரீ பிரதட்சிணம்

கர்ப்ப ஸ்ரீ பிரதட்சிணம்: இறைவனைச் சுமந்துகொண்டு அடியார்கள் அடிமேல் அடி வைத்து நடந்து வலம் வருவதே கர்ப்ப பிரதட்சிணம் எனப்படுகிறது, அடியார்கள் அடிமேல் அடிவைத்து நடந்து வலம் வரும்போது அடியார்க்கு முதலாகிய ஈசனும் அம்மையோடு அசைந்து அசைந்து வருவதைப் பார்ப்பதற்கே, காணக் கண்கோடி வேண்டுமடா போகா... யாரொருவர் இப்பிரதட்சிணத்தின் போது ஈசனைத் தாங்கும் பேற்றைப் பெற்றாரோ அவர் மீண்டும் கருவில் வந்து தங்கமாட்டார் என்பது உறுதி ஐயனே!.... அது மட்டுமா உத்தம கர்ப்ப ஸ்ரீ பிரதட்சிணத்தை முறையாய் தரிசிப்பவர்க்குப் 'பிள்ளையில்லாக் குறைதீரும்’ என்பதும் பெரியவர்கள் அனுபவித்து உணர்ந்த உண்மை என்பதை மக்களுக்கு அறிவிப்பாயாக, மேலும் இவ்வலத்தில் வாசிக்க வேண்டிய வாத்தியம் நாதஸ்வரம் மட்டுமே

போகர்: சற்குரு நாதா கலியுகத்தில் ஈசனைச் சுமப்பதற்கு மக்கள் முன் வரத் தயங்குகிறார்களே... இது நியாயமா...?

அகத்தியர்: நீ ஈசனைச் சுமந்தால், ஈசன் உன் பாவங்களைச் சுமக்கிறான்..நீ உன் தோளால் ஈசனைத் தூக்கினால் மாளா இன்பம் பெறுகிறாய்.. ஈசனைத் தூக்கினால் இன்பமடையப் போவது நீ... தூக்கத் தயங்கினால், (உன்) பாவச் சுமையைச் சுமக்கப்போவது நீ...இதில் ஈசனுடைய பங்கென்ன...? கலியுகத்தில் மனிதன் அறியாமையினால் 'செல்வம் நிலையானது..அதுவே இன்பத்தைத் தரவல்லது’ என்று எண்ணுகிறான்.. மேலும் மெய்ஞானக் கல்வியை விடுத்து, வெறும் 'விஞ்ஞானக் கல்வியே நம் வாழ்வை உயர்த்துவது’ என்று அஞ்ஞானத்தினால் எண்ணி விடுகிறான். வெற்றுக் கல்வியும் செல்வமும் இன்பத்தைத் தருவது உண்மையானால் அருள் வாதவூரான் மாணிக்கவாசகப் பெருமான், ஏன்,’...கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும், செல்வமெனும் அல்லலில் பிழைத்தும்...’ என்று சொல்கிறார்! ஆகவே போகா! ‘இறைவனை வணங்கு’ என்று பெரியவர்கள் சொன்னது  'உன்னைக் கட்டுப்படுத்த’ அல்ல மகனே... 'உன்னை ஒழுக்கப்படுத்த' என்று நீ உணரவேண்டும்.. அதுபோல 'ஈசனைத் தூக்கு’ என்று பெரியவர்கள் சொன்னது, ‘உன் தாய்க்கு ஒரு வழி செய்ய’....!

போகர்: ஐயனே! சற்று விளக்கமாக எடுத்துரைக்க வேண்டுகிறேன்

அகத்தியர்: அன்பனே! இறைவனைத் தோளில் சுமந்து ஆனந்திப்பவன், தன் தாயினுடைய முக்திக்கே வழிகோலுகிறான்...

போகர்: மற்றவர் தூக்கட்டும் என்று கைகட்டி நிற்பவன்... குருவே?

அகத்தியர்: மறுபிறவியில் அவன் அலியாகப் பிறப்பான்...ஆகவே, போகா... தரிசனமே பலன் தந்தாலும், ஈசனைச் சுமக்க அனைவரும் முன்வர வேண்டும்...புரிந்ததா?

போகர்: நன்கு புரிந்தது, ஐயனே! தொடர்ந்து பிரதட்சிண முறைகளைத் தாங்கள் விளக்க வேணடும்

அகத்தியர்: பிரதட்சிண  முறையில் அடுத்து வருவது ‘திக்காடிப் பிரதட்சிணம்’ என்பதாகும். இவ்வலத்தில் ஈசனைச் சுமந்தபடி அடியார்கள் முதலில் 5 அடிகள் வைத்து இடப்புறம் திரும்புவர். பிறகு வலப்புறம் திரும்பியபடியே ஐந்தடிகள் எடுத்துவைப்பர்.. இப்படியே ஐந்து, ஜந்தடிகளாக முன்னேறும் போது ஈசனும் இடப்புறம், வலப்புறம் என்று மாறி மாறிச் சென்று அருள்வேண்டி வந்த பக்தருக்குத் தரிசனம் தருகிறான். அதுமட்டுமா! ஈசனுடைய ஒவ்வொரு திக்கு பார்வையும், ஒவ்வொருவித அருளை வாரி வழங்குறது, போகனே!

போகர்: குருநாதா! எந்தெந்த திக்கு பார்வை, என்னென்ன அருளை தருகிறது...?

அகத்தியர்: உண்மையாகக் கேட்கும் உத்தமனே! விபரமாகச் சொல்கிறேன், கேள்... ஈசன் பார்க்கும் “கிழக்குப் பார்வை”, வாத நோய்களைத் தீர்க்கிறது. அவன் பார்க்கும் ‘வடகிழக்கு பார்வை” சூலைநோய் தீர்க்கிறது; தென்னவன் பார்க்கும் தெற்கு பார்வையினால் அகால மரணம் நீங்குவதோடு, வாகன விபத்துகளும் நீங்குகிறது; அன்னவன் பார்க்கும் ‘தென்கிழக்குப்” பார்வையோ, பெண்களுக்குப் பால் பாக்கியத்தைப் பூரணமாக தருகிறது. மேலவன் பார்க்கும் ‘மேற்கு பார்வை’ திருமணத்தைக் கூட்டி வைப்பதோடு, பிரிந்த தம்பதியரையும் சேர்த்து வைக்கும், பெரியோன் பார்க்கும் வடமேற்குப் பார்வையினால் உனக்குப் பொன்னும் பொருளும் சேருது. எல்லாவற்றிற்கும் மேலாக அன்னவன் காட்டும் 'தென் மேற்கு’ பார்வையோ தெய்வீக அருளையே கூட்டுது. ‘வடக்குப் பார்வை வேலை வாய்ப்பும், வழக்கு வெற்றிகளையும் தரும்.

போகர்: இதனால்தான் பெரியவர்கள் ‘அன்னையின் கடைக் கண்களே அனைத்தும் தரவல்லது’ என்றார்களோ?

அகத்தியர்: ஆம் ஐயனே! நாமும் பொறுமையுடன் தெய்வீக நெறியில் நின்று வாழ்ந்தால்.. உத்தமர்கள் உய்த்துணர்ந்தது போல், ஈசனுடைய பார்வை மகிமைகளை நாமும் உய்த்துனரலாம்

போகர்: பிரதட்சிண முறைகளில் அடுத்து வருவது எது?

அகத்தியர்: உத்தமனே! குழவி நடைப் பிரதட்சிணம் எனப்படும் ஒரு உத்தம வலத்தை பற்றி உனக்கு விளக்குகிறேன். இம்முறையில் அடியார்கள் ஈசனை முதுகிலே சுமந்து முன்னேறி நடக்க, ஈசனும் படகு ஆற்றிலே அசைந்து அசைந்து செல்வதுபோல அடியார் முதுகிலே ஆடி ஆடி அசைந்து அசைந்து செல்வான்... அப்படி அவன் செல்வதைப் பார்ப்பதற்கென்றே பிறவி எடுக்க வேண்டுமடா போகா.. இவ்வலத்தின்போது ஈசனை மனங்குளிர தரிசிப்பதால் மூவுலகத்திலும் தொடரும் நாகதோஷம் நீங்க வழிபிறக்கிறது என்று மக்களுக்கு அறிவிப்பாயாக...

போகர்: சுவாமி! கலியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக உள்ளது... அதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்...

அகத்தியர்: ஐயனே! 'தைலப் பிரதட்சிணம்' என்றழைக்கப்படும் உத்தம வலத்தில் ஈசன் பவனி வரும்போது, அவனை நீ தரிசித்திடில் வேலை வாய்ப்புகள் தேடிவந்து உன்னை நாடும்.. இவ்வலத்தில் ஈசனைச் சுமந்தபடி அடியார்கள் ஒருகாலை முன்வைத்து மறுகாலைத் தரையில் உரசியபடியே தொடர்ந்து, மாற்றி மாற்றி நடப்பது..

போகர்: சற்று விளக்கமாகக் கூறவேண்டும் ஐயனே !

அகத்தியர்: வெளிநாட்டு அரசர்கள், நம் நாட்டிற்கு விஜயம் செய்யும்போது வரவேற்பு விழாவில், நம் ராணுவத்தினர், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நடந்து செல்வார்களே (Guard of Honour) அதுபோல ஈசனைச் சுமந்து இப்பிரதட்சிணத்தில் அடியார்கள் நடந்து செல்லவேண்டும்...புரிகிறதா? இதையே 'கால் உராயும் வலம்' எனறும் கூறுவர்.

போகர்: ஐயனே! பலவித பிரதட்சிண முறைகளைப் பற்றித் தாங்கள் கூறினீர்கள்... ஆனால் எல்லா வகையிலும் மிகச் சிறந்த பிரதட்சிண முறை எது குருதேவா?

ஈடு இணையற்ற சோம சூக்த வலம்

அகத்தியர்: அன்புடன் அன்பருக்காகக் கேட்கும் போகனே!.. சொல்லலுற்றோம். 'ஸோம ஸுக்த வலமே’ அனைத்து வகையிலும் மிகச் சிறந்த பிரதட்சிண முறையாகும்.

மாலோடு அயனும் காண மங்காத பிரதோஷத்தில்
மாதேவர்கள் காண சோம சுக்த வலமே
மாமேரு சித்தர்கள் சிந்தித்தளித்ததே..

ஆகவே, சோம சுக்த பிரதட்சிணத்திற்கு ஈடு இணையான வரங்களையோ, ஆசிகளையோ, தரவல்ல பிரதட்சிண முறை எதுவும் கிடையாது என்று மக்களிடம் உறுதியாக அறிவிப்பாய் போகா...

போகர்: ஐயனே! இவ்வுத்தம வலத்தைப்பற்றி மேலும் அறிய ஆவலாக இருக்கிறேன்...

அகத்தியர்: அப்பனே! சோமசுக்த வலத்தில் ஈசன் முதலில் புறப்பட்ட இடத்திலிருந்து பிரதட்சிணமாக நவகிரகமூலைக்கு வந்து அங்கிருந்து புறப்பட்டு அப்பிரதட்சிணமாக த்வஜஸ்தம்ப நந்திக்கு வர, முதலில் நந்திக்கு தீபம் காட்டப்பட்டு, பிறகு அத்தீபத்தை ஈசன் ஏற்றுக் கொள்கிறான். அங்கிருந்து ஈசன் திரும்பவும் பிரதட்சிணமாக வந்து சனீச்வர சன்னதியில் நின்று மஹா தூபதீப ஆராதனைகளை ஏற்றுக்கொண்டு, மீண்டும் புறப்பட்டு அப்பிரதட்சிணமாக இருக்கும் நிலைக்கு வந்து சேர்கிறான். இதேபோல் மூன்று முறை பிரதட்சிணமாகவும், அப்பிரதட்சிணமாகவும் ஈசன் வலம் வரும் இம்முறைக்கே சோமசுக்தப் பிரதட்சிணம் என்று பெயர்.

போகர்: உத்தம குருவே! சோம சுக்த வலத்தில் ஈசன் ஏன், வலமாகவும் இடமாகவும் மாறி மாறி வலம் வருகிறான்?...

அகத்தியர்: சீடனே! தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, ஆலால விடம் தோன்றி அவர்களைத் துரத்தியதல்லவா? அப்போது தேவர்களும் அசுரர்களும் கயிலையங்கிரியை நோக்கி ஓடினார்கள் அல்லவா? அப்பொழுது வலமாகச் சென்று கயிலையங்கிரிக்குள் புகுந்து ஈசனைச் சரணடையலாம் என்று எண்ணி தேவர்களும் அசுரர்களும் வலப்புறமாக வந்த பொழுது, ஆலாலம் அவர்களை இடப்புறமாக வந்து தாக்க, அஞ்சி நடுங்கிய அவர்கள் வந்த வழியே திரும்ப ஆலாலமும் தான் வந்த வழியே திரும்பிவந்து அவர்களைத் தாக்க முற்பட்டது. இவ்வாறு, அன்று தேவர்கள் வலமும் இடமுமாக, ஓடி ஓடி ஈசனைத் தேடியதை, இன்று சோம சுக்த வலத்தின் மூலம் நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

போகர்: ஐயனே! ஆடு மேய்ப்பவன் ஒருவன் ஆட்டைத் தன் தோளிலேயே வைத்துக்கொண்டு. அதைத் தேடியதைப் போல, தங்கள் இருதய கமலத்திலேயே தங்கியிருக்கும் ஈசனை நாடுவதை விட்டு, எங்கோ கயிலையில் இருக்கும் ஈசனை நாடி ஓடியதால் வந்த வினையே தேவர்களுடைய துன்பங்களுக்குக் காரணம் அல்லவா?

அகத்தியர்: சரியாகச் சொன்னாய் போகா! அன்று தேவர்கள் தங்களுள் ஈசனை வைத்துக்கொண்டு இடமும் வலமுமாக ஓடியதைப் போலவே நாமும் சோம சுக்த வலத்தில் ஈசனைத் தூக்கிக் கொண்டு வலமும் இடமுமாக வலம் வருகிறோம், புரிந்ததா ஐயனே?

போகர்:  நன்கு புரிந்தது குருவே? சோம சுக்தப் பிரதட்சிணத்தால் வரும் பலன் யாது ஐயனே?

அகத்தியர்: அன்பனே! பிரதோஷ வழிபாட்டில், உத்தம சோம சுக்த வலத்தில் ஈசனை முறையாகச் சுமந்து ஆனந்திப்பவர்கள் அனைத்துச் செல்வங்களையும் முறையாக அடைவதோடு தங்கள் பாவச் சுமையையும் முறையாகக் குறைத்துக் கொள்கிறார்கள்... அதுமட்டுமா... அச்வமேதயாகம் செய்த பலன் அவர்களைத் தேடி வருகிறது.

போகர் : ஐயனே! ஈசன் அம்மையுடன் நந்தியின் மேலமர்ந்து வரும்போது அவனை எப்படி முறையாக தரிசிப்பது.

அகத்தியர்: சுந்தரனே! போகா! ஈசன் அம்மையுடன் நந்தியின் மீதேறி பவனிவரும் போது, நந்தீசனைத்தான் முதலில் தரிசிக்க வேண்டும். நந்தியை பார்த்துவிட்டுப் பின் அன்னையைக் காணுதல் வேண்டும். அன்னையை கண்ட பின் தான் ஈசனைக் காண வேண்டும். அப்படி நாம் ஈசனை முறையாக தரிசனம் செய்யும் போது அவன் நம்மேல் விதவிதமான பார்வைகளைச் செலுத்துகிறான். அவன் 'நேர் பார்வையால்' பார்க்கும்போது நம்மை பசுபதியாக நோக்குகிறான். கோணப்பார்வையில் (கோணத்தில் திரும்பும் போது நம்மைப் பார்ப்பது) யோக தத்துவங்களைக் காட்டி நம்மை இரட்சிக்கிறான். 'கண்ட பார்வையால்' (தெற்குப் பிராகாரம் திரும்பும் போது நம்மைப் பார்ப்பது) நம்மை பல கண்டங்களிலிருந்து காக்கிறான். இவை மட்டும் இல்லாது 'பின்புற தரிசனம்' மூலமாக அறக்கடவுள் நம்மைத் தண்டிக்காமலிருக்க (தண்டீச்வர தரிசனம்) வகை செய்கிறான். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். ஐயனே!... ஆனால் குரு முலமாக இவைகளைக் கற்றுணர்ந்து அனுபவிப்பதே உத்தமம்.. அதனால்தான் எல்லோருக்கும் குரு தேவையே என்றார்கள் பெரியோர்கள்.

திரைலோக்கி திருத்தலம்

போகர்: உத்தமரே, பொதுவாக பிரதோஷ வழிபாட்டை முதலில் எங்கு தொடங்க வேண்டும்?

அகத்தியர்: சீடனே! பிரதோஷ வழிபாட்டின் நோக்கமென்ன?

போகர்: பிரதோஷ விழாவின் நோக்கம்' அகந்தையை நீக்குவதே' என்று தாங்கள் முதலிலே கூறிவீர்கள் ஐயனே!

அகத்தியர்: அப்படியென்றால் பிரமனுடைய அகந்தையும் திருமாலுடைய அகந்தையும் அழிந்த இடம் எது?

போகர்: திருஅண்ணாமலை, ஐயனே...

அகத்தியர்: அப்படியென்றால் பிரதோஷ வழிபாட்டை நாம் முதலில் எங்கு தொடங்க வேண்டும்?

போகர்: திருஅண்ணாமலையில்தான் தொடங்க வேண்டும் ஐயனே!

அகத்தியர்: சரியாகச் சொன்னாய்.... திருஅண்ணாமலையில் முறையாக கிரிவலம் வந்து, உத்தம பிரதோஷ லிங்க தரிசனம் கண்டு பிரதோஷ வழிபாட்டைத் துவங்குவதே உத்தமம், என்று மக்களுக்கு அறிவிப்பாய் போகா. மேலும் நாம் எத்தலத்தில் பிரதோஷ வழிபாட்டைச் செய்தாலும் முடிவில் எம்பெருமானாகிய நடராஜ மூர்த்தியை தரிசித்த பின்னரே பிரதோஷ வழிபாடு சம்பூர்ணமடைகிறது. இதுவும் மக்கள் அறிய வேண்டிய முக்கியமான இரகசியம் ஆகும்... ஆகவே பிரதோஷ வழிபாட்டை யாரொருவன் மேற்கூறியவாறு முறையாக செய்கிறானோ அவனே 'மைந்தன்' என்று அழைக்கப் படுகிறான்

போகர்: உத்தம குருவே! யாரை நாம் 'பாலன்' என்கிறோம்? யாரை நாம் 'பிள்ளை' என்றழைக்கிறோம்? யாரை நாம் 'மகன்' என்கிறோம்? யாரை நாம் 'மைந்தன்' என்றழைக்கிறோம்?

அகத்தியர்: ஐயனே! அறிவு வளராத பிராயத்தில் இருக்கும் ஒருவனை 'பாலன்' என்றார்கள் பெரியவர்கள்; அதே சமயத்தில் அறிவு முதிர்ந்த நிலையில் இருக்கும் ஒருவனையும் 'பாலன்' என்றே அவர்கள் அழைக்கிறார்கள. அடுத்து தாய் தந்தையுடன் எப்பொழுதும் சச்சரவுகளில் ஈடுபடும் ஒருவனை 'பிள்ளை' என்கிறார்கள் பெரியோர். அடுத்து, தாய் தந்தை தன் குடும்பம் இவர்களே தன், உலகம் என்று வாழும் ஒருவனை 'மகன்' என்று அழைகின்றனர் பெரியோர். எல்லோரிடத்திலும் மரியாதையாக இருந்து, எல்லோருக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்பவனையே 'மைந்தன்' என்றனர் பெரியோர். 'தனக்கென வாழாத மைந்தன்' தன்னை தெய்வத் திருப்பணிக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் போது 'மகானாக' மாறுகிறான். ஆனால் எல்லோரிடமும் சண்டை போட்டு தாய் தந்தையை அவமதித்து நடப்பவனை 'தறுதலை' என்றனர் பெரியோர்.. அதே போல தன்னை வளர்த்து ஆளாக்கிய குருவை, எவன் ஒருவன் ஏமாற்றுகிறானோ, அவனையே 'துரோகி' என்றழைத்தனர் பெரியோர், அறிந்தாயா போகா!... அது சரி, 'பெரியவர்கள்' என்று யாரைச் சொல்கிறோம் என்று உனக்கு தெரியுமா?

போகர்: உத்தமரே உலகத்தில் நிலையானது எது என்று ஆராயும் நற்புத்தி உடையவர்களையே 'பெரியவர்கள்' என்று நாம் அழைக்கிறோம், என்று முன்பே, தாங்கள் எனக்குச் சொல்லியுள்ளீர்கள்.

அகத்தியர்: நீ சொல்வது முற்றிலும் சரியே; இருப்பினும் மனிதனைப் பிடித்து ஆட்டுகின்ற பலவித மதங்களையே அடக்கியாளும் வல்லமை படைத்தவர்களையும் நாம் 'பெரியவர்கள்' என்றே அழைக்கிறோம்.

போகர்: குருவே, யானைக்கு ஒரே ஒரு முறைதான் மதம் பிடிக்கும், ஆனால் மனிதனையோ பலவித மதங்கள் பிடித்து ஆட்டுகின்றன என்கிறீர்கள். அப்படி மனிதனைத் தாக்கும் மதங்களைச் சற்று விளக்குவீர்களா?

அகத்தியர்: மக்களுக்கு உதவும் என்பதால், விளக்கமாகக் கூறுகிறேன்... முதலில் மனிதனைத் தாக்குவது 'குலமதம்' என்று நீ அறிவாயாக...! தான் பிறந்த குலமே உயர்ந்தது என்றெண்ணி வெறி கொள்வதால் வரும் மதம் இது... ஆனால் மனிதனுக்கு 'குலமதம்' கூடாது . ' ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என்று அவன் எப்போது உணருகிறானோ, அன்று அவனைவிட்டு இம்மதம் அகலுகிறது. அடுத்து மனிதனைப் பிடிப்பது 'சுகமதம்' என்பதாகும். இது சேருகின்ற நண்பர் கூட்டத்தினால் ஒருவனுக்கு வருகிறது... ஆகவே, கலியில் இம்மதம் தாக்காதிருக்க மனிதன 'சத்ஸங்கத்தை' நாடுவது ஒன்றே வழி, இதைத் தொடர்ந்து வருவது 'யௌவன மதம்', என்று நீ அறிவாயாக... இம்மதம் இளமையில் அறியாமையினால் மனிதனுக்கு வந்து விடுகிறது. இளமை என்பது ஈசனுக்குத் திருப்பணி செய்வதற்கென்றே ஈசனால் மனிதனுக்கு அளிக்கப்பட்டது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இதைத்தான் பெரியவர்களும் .'இளமையில் கல்' எனறார்கள். இளமையில் உள்ள பலத்தால் நீ ஆணவம் கொண்டால் முதுமையில் நீ அதற்காக வருந்தித் துயருறுவது நிச்சயம். 'யெளவன மதத்தை' விளக்கும் கதையொன்றை உனக்குக் கூறுகிறேன்; கேட்பாயாக...மல்லன் ஒருவன் பெரியவர் ஒருவரிடம் வந்தான்...தானே பெரிய மல்லன் என்றும், தன்னை மிஞ்ச யாராலும் முடியாது என்றும் ஆகவே, 'தானே பெரியவன் என்றும் அப்பெரியவரிடம் கூறித் தோள்களைத் தட்டியபடி குதித்துக் கொண்டிருந்தான்.. பெரியவரும் அவனை சாந்தப்படுத்தி அவனை அமரச்செய்து சிறிது நேரம் அவனுடன் அளவளாவியபின், அவனுக்கு விடைகொடுக்க, அவனும் எழுந்திருக்க முற்பட்டான்.... ஆனால் அவன் கால்கள் இரண்டும் மரத்துப் போயிருந்ததால் அவனாலே எழுந்திருக்க முடியவில்லை.! பெரியவரும், அவனைப் பார்த்து, 'நீ தான், பெரிய மல்லன் ஆயிற்றே! அபார சக்தியைப் பெற்றவனாயிற்றே! ஆனால் இப்பொழுது உன்னால் எழுந்துகூட நிற்க முடியவில்லையே என்று கேட்க மல்லனும் வெட்கி தலைகுனிந்து' அவரைப் பணிகிறான்.. பெரியவரும் 'மல்லனே, அனைத்துள்ளும் சக்தியாக வியாபித்திருப்பவன் சிவனே! ஆகவே, அவனின்றி ஓரணுவும் அசையாது! ஆகவே, உன் இளமையை ஈசன் திருப்பணிக்குப் பயன் படுத்துவாயாக...என்று அறிவுரை கூறி அவனை அனுப்பினார்...

போகர்: இளமை ஈசனுக்காக வந்தது என்கிறீர்கள்...அப்படியென்றால் தன் முதுமையில் மனிதன் செய்ய வேண்டிய திருப்பணி என்ன ஐயனே?

அகத்தியர்: ஐயனே! இளமையில் செய்த திருப்பணிகளை நினைத்து நினைத்து ஆனந்திப்பதே முதுமையில் மனிதன் செய்யும் திருப்பணி என்பதை நீ உணர்வாயாக.

போகர்: குருவே, யௌவன மதத்தைப் பற்றி அழகாகக் கூறினீர்கள்...அடுத்து மனிதனைப் பீடிக்கும் 'மதம்' யாது?

அகத்தியர்: யௌவன மதத்தைத் தொடர்வது, 'வித்யா மதம்' என்று நீ அறிவாயாக... வெறும் ஏட்டுக் கல்வியினால் வருவது இது... முன்பே,. 'கல்வி என்றால் என்ன? ' என்று விளக்கியுள்ளேன். உனக்கு கல்வியைப் பற்றித் தெய்வப் புலவர் என்ன சொல்கிறார், தெரியுமா போகா?...

கற்றதனால் ஆய பயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்

அனைத்தும் பூர்ணமே !

என்று கல்வியின் பயனை எவ்வளவு அழகாகச் சொல்லியுள்ளார் பார்த்தாயா..

போகர்: ஆம். ஐயனே! மாணிக்கவாசகப் பெருமான் கூட 'நூலுணர்வுணரா நுண்ணியோன் காண்க... ' என்று ஒரே வரியில் ஏட்டுப்படிப்பின் நிலையை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் அல்லவா?

அகத்தியர்: கல்வியின் நோக்கம், ஈசனை அறிவதே... இளமையின் நோக்கம் திருப்பணி செய்வதே... என்பதை மனிதன் என்று உணர்கிறானோ, அன்றுதான் அவனை விட்டு வித்யா மதமும், யௌவன மதமும் நீங்கும், என்பதை நீ அறிய வேண்டும். அடுத்து வருவது தனமதம் என்பதாகும். செல்வச் செருக்கினால் மனிதனுக்கு வரும் நோயே தனமதம் என்பது. 'தானமாய்த் தருவதற்கு வந்ததே தனம்' என்று மனிதன் உணர வேண்டும். ஆகவே பூர்வீக புண்ணியத்தால் வந்த தனத்தினால் நீ ஆணவம் கொள்ளாதே... 'செல்வமே, சிவபெருமானே' என்று நீ ஈசனை அன்புடன் வணங்கினால் தனமதம் உன்னை நாடி வராது என்பதை நீ உணர்வாய்.

அடுத்து மனிதனைத் தாக்கும் மதம் 'சௌந்தர்ய மதம்' எனப்படுகிறது பேராபத்தை விளைவிக்கும் இம்மதம், அழகினால் வருவது என்பதை நீ உணரவேண்டும்... இதை விளக்க உனக்கு பாரத புராணத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன்… துரியோதனன் சபையில் அமர்ந்திருக்கிறான். பீஷ்மர் போன்ற உத்தமர்களும், சகுனி போன்ற துர்குணத்தாரும் அவனை சூழ்ந்து அமர்ந்திருக்கின்றனர்...அப்போது துரியோதனனுடைய மனைவி பானுமதி மஹாராணி அவைக்குள் நுழைகிறாள்... அவளை கண்ட துரியோதனன் 'யாரோ வருகிறார்' என்றெண்ணி பயத்தில் எழுந்து நின்று விட்டான் ..

போகர்: ஐயனே! தன் மனைவியையே, துரியோதனனால் தெரிந்து கொள்ள முடியவில்லையா? என்ன விந்தையிது?

அகத்தியர்: ஆம் ஐயனே! அவள் அன்று தன் புருவங்களைச் சிரைத்திருந்ததால், துரியோதனனுடைய கண்களுக்கு 'பூதம்' போலத் தெரிந்தாள்...பூதத்தைக் கண்டு பயந்ததால்தான் துரியோதனன் எழுந்து நின்றுவிட்டான்.... அருகிலிருந்த பீஷ்மரும்,' என்னே விதியின் கொடுமை! புருவத்தைச் சிரைத்தாள், கணவன் ஆயுளைக் குறைத்தாளே' என்று வருத்தப்படுகிறார். ஆகவே, அன்று அவள் புருவத்தைச் சிரைத்ததால்தான் துரியோதனன் போரில் தோல்வியுற்று மரணத்தைத் தழுவினான் என்கிறது இருடிகள் பாரதம்... அது மட்டுமல்லாது புருவத்தைச் சிரைப்பவர்கள் மீது தீய ஆவிகள் சுலபமாக ஏறிக் கொள்ளும்..அவைகளின் தூண்டுதலால் மனிதன் செய்கின்ற காரியங்கள் அனைத்தும் எதிர்மாறாகப் போய்விடும்.. ஆகவே போகா.! இறைவன் அளித்த இயற்கையான அழகிற்கு மனிதன் மெருகூட்ட நினைக்கும் போது பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகி  விடுகிறான் என்பதை நாமனைவரும் உணர வேண்டும்.

போகர்: உத்தமரே! தான் வகிக்கும் பதவியினால் ஒரு மனிதனுக்கு வரும் மதம் எது?

அகத்தியர்: ஐயனே, பதவியினால் வரும் மதம் 'ராஜ்ய மதம்' என்றறிவாயாக... கலியில் இம்மதத்தின் பிடியில் சிக்காத மனிதர்களே கிடையாது எனலாம். நாட்டை ஆளும் அரசர்கள்கூட பதவி மோகம் பிடித்து பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விடுகிறார்கள்

போகர்: சத்குருவே! 'அரசாட்சி' என்றால் என்ன?

அகத்தியர்: அரனை சாட்சியாக வைத்து ஆளுகின்ற ஆட்சியே அரசாட்சி எனப்படுகிறது. ஆகவே கலியில் மனிதன் பதவிகளின் நிலையாமையை உணர்வானேயானால், அவனை ராஜ்யமதம் பீடிப்பதில்லை ..அடுத்து வருவதோ 'தபோ மதம்' என்றறிவாயாக.. தான் செய்த தவப்பயனால் ஒருவனுக்கு வரும் நோயே 'தபோ மதம்' என்று நீ அறியவேண்டும்...

போகர்: ஐயனே! இம்மதம் ஒருவனைத் தாக்காதிருக்க அவன் என்ன செய்யவேண்டும்?

அகத்தியர்: தான் செய்த தவத்தினால் பெற்ற பயனை ஒருவன் ஈசனுக்கே அர்ப்பணித்துவிட வேண்டும். தவப் பயனை ஈசனுக்கு அர்ப்பணிப்பதே உண்மையான தவம் என்று நீ உணர வேண்டும்

போகர்: சரியாகச் சொன்னீர்கள் ஐயனே! ஈசனை உணர வழிவகுக்காத தவங்களை இயற்றி என்ன பயன்?

அகத்தியர்: ஐயனே! இத்தகைய மதங்களை அடக்கியவர்களையே நாம் 'பெரியவர்கள்' என்கிறோம். இப்பொழுது புரிந்ததா போகா 'பெரியவர்கள்' என்றால் யாரென்று...?

போகர்: நன்கு புரிந்தது மகாதேவா... ஆனால் அத்தகைய உத்தமர்களை நாம் வணங்கும்போது, 'என்னை வணங்காதே இறைவனை வணங்கு' என்று ஏன் சொல்கிறார்கள்?

அகத்தியர்: நன்றாகக் கேட்டாய்... அப்பனே; உன் கேள்விக்கு நம் பரம்பரையைச் சேர்ந்த உத்தமர், அஸ்தீக சித்தரே விடையளிக்கிறார்... 'நாமெல்லாம் இறைவனை வணங்கும் போது சிரம்மேல் கரம் குவித்து வணங்குகிறோம். ஈசனோ கரம் குவித்து ஆசி வழங்குகிறான். ஆகவே இறைவன் கரம் குவிக்க, நாம் சிரம்மேல் கரங் குவிக்கிறோம். நாம் கரம் குவித்து ஆசி வழங்க ஆரம்பித்தால் ஞானகர்வம் வந்துவிடும். ஆகவே, பெரியவர்கள், தங்களுக்கு ஞான கர்வம் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தன்னை வணங்குபவர்களை இறைவனை வணங்கச் சொல்கிறார்கள்' என்கிறார் அஸ்தீகர்..புரிந்ததா?

போகர்: ஆஹா' என்ன அருமையான விளக்கம்...ஐயனே! மதங்களை அடக்கிய மகான்களே கொண்டாடிய உத்தமப் பிரதோஷ வழிபாட்டைப் பற்றி மேலும் தாங்கள் கூறுவதைக் கேட்க ஆவலாக இருக்கின்றேன்...

பிரதோஷ மலர்கள்

அகத்தியர்: அன்பனே.! மஹாபிரதோஷ தினங்களில் ஈசனை அலங்கரிக்கும் முறையைப் பற்றி நான், உனக்கு விரிவாகக் கூறுகிறேன். மக்களுக்கு எடுத்துரைப்பாயாக... சித்தரும் ஞானியரும் ஈசனை 'அலங்காரப்பிரியன்' என்கிறார்கள்.. அலங்கார ரகசிய தீபிகா' என்று நான் எழுதியுள்ள கிரந்தத்தில் எப்படியெல்லாம் ஈசனை அலங்கரித்து ஆனந்திக்க வேண்டும் என்று விரிவாகச் சொல்லியுள்ளேன். இருப்பினும், மஹாப்பிரதோஷ தினங்களில் ஈசனை அலங்கரிக்க வேண்டிய முறைகளை பற்றி, மக்களுக்காக இங்கு விவரிக்கிறேன்..
ஏகாட்சரப் பிரதோஷ தினத்தன்று நீலகந்தப்  புஷ்பத்துடன் முல்லை சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும். ஈசனை இவ்வாறு அலங்கரித்து வலம்வரச் செய்யும்போது தரிசிப்போர்க்கு ஆயுள் வளரும்... அடுத்து அர்த்தநாரி பிரதோஷ தினங்களில் நீலகந்தப் புஷ்பத்துடன், சிவப்பு அரளியையும். மல்லிகைப் பூவையும் சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும். இவ்வலங்காரத்தில் ஈசனை தரிசிப்பவர்களுக்கு மனக்கவலைகள் தீர்வதோடு. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்கின்றன.
அடுத்து, திரிகரணப் பிரதோஷ தினங்களில் ஈசனை செந்தாமரைப் பூவினால் அலங்கரித்து வழிபடுவதால் காக்கும் கடவுளாகிய நாராயணனுடைய அருள் பூரணமாய்க் கிட்டும். அடுத்து பிரம்மசிரஸ் பிரதோஷ தினங்களில் நீலகந்த புஷ்பத்துடன் வெண்தாமரை மலர்களைச் சேர்த்து ஈசனை அலங்கரித்தல் அவசியம், அவ்வாறு அலங்கரித்து ஈசனை வணங்குவதால் திருமணத் தடங்கல்கள் நீங்குவதோடு காணாமல் போனவர் திரும்புவர்.
அடுத்து அட்சரப் பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் பிச்சிப்பூ சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும். அவ்வாறு ஈசனை அலங்கரித்து ஈசனை தரிசிப்பதால் செல்வங்கள் சேர்வதோடு இழந்த செல்வமும் திரும்பி வரும். அடுத்து ஸ்கந்தப் பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் சம்பங்கி மலர்களை சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும், அப்படிச் செய்து ஈசனை தரிசிப்பவர்களுக்கு எத்தகைய கொடிய வியாதியும் தீர்ந்துவிடும்.
அடுத்து, சட்ஜப் பிரபா பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் செம்பருத்திப் பூக்களைச் சேர்த்து ஈசனை அலங்கரிக்க வேண்டும். இவ்வாறு அலங்கரித்து ஈசனை தரிசிப்பதால் உண்மையான காதல் உத்தமமாய் திருமணத்தில் முடிகிறது. அடுத்து திக்கு பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் குண்டு மல்லி மலர்களைச் சேர்த்து ஈசனை அலங்கரித்து தரிசிப்பவர்களுக்கு உயர்பதவி வீடு தேடி வருகிறது. அடுத்து நவநாத பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் சாமந்தி மலர்களைச் சோத்து ஈசனை அலங்கரிக்க வேண்டும். அவ்வாறு அலங்கரித்து ஈசனைத் தரிசிப்பதால் பித்ரு சாபங்கள் நீங்கி இறையருள் கூடுகிறது.
அடுத்து முடிவாக துத்தப் பிரதோஷ தினங்களில் நீலகந்த மலர்களுடன் மனோரஞ்சித மலர்களையும் சேர்த்து  ஈசனை அலங்கரிக்க வேண்டும். இவ்வாறு அலங்கரித்து ஈசனைக் காணுவதால் சகல சந்தானங்களும் தப்பாமல் கிட்டும். ஐயனே! பிரதோஷ விழாக்களில் இவ்வாறு பலவிதங்களில் .ஈசனை அலங்கரித்து வலம் வரச் செய்வது உத்தமம் என்றாலும், ஈசனுக்கு மையிட்டு. அலங்கரித்து பார்ப்பதும் உத்தம பலன்களைத் தரவல்லது.

மையிட்டுப் பாருங்களேன்

போகர் : ஐயனே! முதலில் ஈசனுக்கு மலரிட்டுப் பார்க்கச் சொன்னீர்கள், அடுத்து மையிட்டுப் பார்க்கச் சொன்னீர்கள்! ஈசனுக்கு மையிட்டுப் பார்ப்பது என்னென்ன பலன்களைத் தரவல்லது என்பதைத் தாங்கள்தான் கூறவேண்டும்...

அகத்தியர்: அன்பனே! பிரதோஷ விழாவில் ஈசனுடைய நுனி நாடியில் மையிட்டு, அக்காட்சியை காண்பவர்க்கு ஆறாண்டு காலம் போஜனத்திற்கு வழியுண்டு. ஈசனுடைய குழிகன்னத்தில் மையிட்டு அக்காட்சி காண்போர்க்கு இல்லை இனிப் பிறவியே...

ஈசனுடைய புருவத்தில் மைதீட்டி அக்காட்சி கண்டவனுக்கு மனைவியினால் துன்பம் இனி இல்லையே....

போகர்: குருநாதா! பிரதோஷ விழாவில் ஈசனை அலங்கரித்து அடியார்க்கு அருள் பெற்றுத் தரும் 'மை' எப்படிப் பிறக்கிறது?

அகத்தியர்:  ஈசனுக்கு இடப்படும் 'மை' உருவாகும் விதத்தைத்தானே கேட்கிறாய்... சொல்கிறேன் கேள், பொன்னாங்கண்ணி கீரையை எடுத்து, அதைச் சுத்தமாகக் கழுவி, வெட்டிவேருடன் சேர்த்து இடித்துச் சாறெடுக்க வேண்டும். பின் அதை தேங்காய் எண்ணையுடன் சேர்த்து, சிறிது நீர் விட்டு வாணலியில் நன்கு காய்ச்ச வேண்டும். தைலப்பதம் வந்த உடன் அந்தக் கலவையை ஒரு துணியிலிட்டு பிழிந்து எடுக்க, எண்ணெய் போன்ற திரவம் வரும். அத்திரவத்தை ஒர் அகல் விளக்கிலிட்டு, அதில் தாமரைத் திரியிட்டு தீபமேற்ற வேண்டும். திரி எரியும் போது அதில் பசுவெண்ணை தடவப் பட்ட ஒரு சுத்தமான தேங்காய் ஓட்டை தலைகீழாகப் பிடிக்கவேண்டும். இப்பொழுது தேங்காய் ஓட்டில் புகை படிய ஆரம்பிக்கும். தீபம் முழுவதுமாக எரிந்து அணைந்தவுடன், ஓட்டில் படிந்திருக்கும் கரிப்புகையை வழித்து, ஒரு சிறிய சந்தனப் பெட்டியில் சேகரித்து, அதை மலர்களால் அலங்கரித்து 'சிவபஞ்சாட்சரம்' முறையாக ஓதி அதற்கு உருவேற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்படித் தயாரிக்கப்பட்ட மையே ஈசனை அலங்கரிக்கும் தகுதியை பெறுகிறது.

போகர்: உத்தமரே! உத்தமப் பிரதோஷ வழிபாட்டினால் மக்கள் அடையும் இன்பத்திற்கு எல்லையுமுண்டோ?

அகத்தியர்: எல்லையில்லா இன்பத்தையும், அருளையும் தருவதால்தானே பிரதோஷ வழிபாட்டைத் தெய்வங்களே அனுஷ்டித்தனர்.

போகர்: ஐயனே! ஒவ்வொரு கிழமையிலும் நாம் செய்யும் பிரதோஷ வழிபாட்டின் மகிமையைத் தாங்கள் கூற வேண்டும்

அகத்தியர்: அன்பனே! ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் செய்யும் பிரதோஷ வழிபாடு அவர்களுக்கு சுப மங்கலத்தை தருகிறது. திங்கட்கிழமைகளில் மக்கள் செய்யும் பிரதோஷ வழிபாடு அவர்களுடைய மனங்களில் நல்லெண்ணங்களை உருவாக்கும் நல் அருளை தருகிறது. செவ்வாய்கிழமைகளில் மக்கள் பிரதோஷ வழிபாட்டை அனுஷ்டித்தால், அவர்களுடைய இல்லங்களில் இருக்கும் பஞ்சம், பட்டினி அகலும்.  புதன்கிழமைகளில் செய்யும் பிரதோஷ வழிபாட்டினால் தந்தை மகனுக்கு கருமம் செய்யாத நிலை கிட்டும். வியாழக்கிழமைகளில் செய்யும் பிரதோஷ வழிபாட்டினால், ஆண் சந்தான பாக்கியம் கிட்டும். வெள்ளிக்கிழமைகளில் பிரதோஷ விழாவைக் கொண்டாடுவதால் எதிர்ப்புகள் நீங்குகின்றன. சனிக்கிழமைகளில் நாம் அனுஷ்டிக்கும் மகாப் பிரதோஷ வழிபாட்டினால் நாம் அடையும் பலன்களை முன்பே உனக்கு நான் கூறிவிட்டேன். இருப்பினும் ஸ்திரவார பிரதோஷ வழிபாடு, பதவி உயர்வைத் தருவதோடு மாயைகளில் மாட்டிக்கொண்டு அலைக்கழியாத நிலையையும் அருளுகிறது....

போகர்: ஐயனே! பிரதோஷ வழிபாட்டில் ஈசனுக்குச் செய்ய வேண்டிய 'நிவேதன முறைகளை' இப்போழுது தாங்கள் விளக்க வேண்டும்.

நோய் நீக்கும் நிவேதனங்கள்

அகத்தியர்: ஐயனே! சித்திரை மாதத்தில் வருகின்ற பிரதோஷ தினங்களில் 'நீர் மோரும், தயிர் சாதமும் ஈசனுக்கு, நிவேதிக்கப்பட வேண்டும். அப்படி. நிவேதிக்கப்பட்ட நீர் மோரையும், தயிர் சாதத்தையும் கோலாகலமாயிருக்கும் பிள்ளைகளுக்கு தானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்து ஈசனை ஆராதிப்பதால் மூலம், பவுத்திரம், சூடு, எலும்புருக்கி போன்ற நோய்கள் நீங்குகின்றன.

வைகாசி மாதத்தில் வருகின்ற பிரதோஷ விழாக்களின் போது, பாலையும் சர்க்கரைப் பொங்கலையும் ஈசனுக்கு நிவேதித்து, பின் தானம் செய்ய வேண்டும். இல்வாறு செய்து ஆசானை ஆராதிப்பதால், எல்லாவித வயிற்றுக் கோளாறுகளும் நம்மை விட்டு அகன்றுவிடும்.

ஸ்ரீகுதூகல நந்தி மூர்த்தி
திருஅண்ணாமலை

ஆனி மாதப் பிரதோஷ வழிபாட்டில், தேனும் தினைமாவும் ஈசனுக்கே நிவேதிக்கப்பட்டு பின் தானம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்வதால் மலட்டுத்தன்மை நீங்கும்.

ஆடி மாதப் பிரதோஷ வழிபாட்டில் மக்கள் வெண்ணையுடன் சர்க்கரை சேர்த்து அதை ஈசனுக்கு நிவேதித்து பின்பு தானம் செய்ய வேண்டும். இப்படிச் செய்து ஈசனை ஆராதிப்பதால் கொழுப்பினால் வரும் நோய்கள் நீங்கும்.

ஆவணி மாதப் பிரதோஷ வழிபாட்டில் ஈசனுக்குத் தயிர் சாதம் நிவேதிக்கப்பட்டுத் தானம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்து ஈசனை ஆராதிப்பதால் காரியத் தடைகள் நீங்குவதோடு நோயுற்றவர் நோயில் இருந்து மீள்வர்.

புரட்டாசி மாத பிரதோஷ வழிபாட்டில் சர்க்கரைப் பொங்கலும் புளியோதரையும் நிவேதிக்கப்பட்டு தானம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்து ஈசனை ஆராதிப்பதால் அரிப்பு, தடிப்பு, ஊறல், விஷக்கடி போன்ற உபாதைகள் நீங்கும்.

ஐப்பசி மாத பிரதோஷ வழிபாட்டில், உளுந்து வடையும், ஜிலேபியும் ஈசனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்வதால் சீதள நோய் தீரும்.

கார்த்திகை மாத பிரதோஷ வழிபாட்டில் எலுமிச்சை சாதமும், தேங்காய் சாதமும் ஈசனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்யப்பட வேண்டும். இப்படிச் செய்வதால் பெண்களுக்கு கர்ப சம்பந்தமான நோய்கள் தீர்வதுடன், அடிவயிற்றிலிருந்து துடைப்பகுதி வரை உள்ள வியாதிகள் தீரும்.

மார்கழி மாத பிரதோஷ வழிப்பாட்டில் வெண்பொங்கலும் கடலை சுண்டலும் ஈசனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்வதால் மஞ்சட்காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் நீங்குகின்றன.

தை மாத பிரதோஷ வழிபாட்டில், தயிர் ஏட்டில் தேனைச் சேர்த்து ஈசனுக்கு நிவேதிக்க வேண்டும். இப்படி செய்வதால் கபத்தால் வரும் நோய்கள் தீரும்.

மாசி மாத பிரஷோஷ வழிபாட்டில், நெய்யுடன் சர்க்கரை கலந்து ஈசனுக்கு நிவேதிக்கபட்டு, தானம் செய்யப்பட வேண்டும். இப்படிச் செய்து ஈசனை ஆராதிப்பதால் மாந்தம், வயிறு உப்புசம், சிறுநீரகக் கோளாறு போன்ற உபாதைகள் நீங்கும்.

முடிவாக, பங்குனி மாத பிரதோஷ வழிபாட்டில், தேங்காய் சாதமும், தக்காளிச் சாதமும் ஈசனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்து ஈசனை ஆராதிப்பதால், மனக்கிலேசம், பித்தம், பைத்தியம் முதலிய நோய்கள் தீரும். புரிந்ததா போகா...?

நந்திக்கு ஏன் காப்பரிசி ?

போகர்: ஐயனே! நன்கு புரிந்து கொண்டேன். மக்களுக்கு உங்களுடைய அருள்வாக்கு மிகவும் பயன்படும் என்பதில் சந்தேகம் இல்லை. உத்தமரே, பிரதோஷ விழாவில் நந்திக்கு காப்பரிசி நிவேதிக்கப்படுவதேன்? அருகம்புல் மாலை அவருக்கு நாம் சூட்டுவதின் காரணமென்ன?

அகத்தியர்: நந்தியின் அகம்பாவத்தால் அவனுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதல்லவா? அப்பொழுது அன்னை ஈசனருளால் நந்தியின் வியாதியைத் தீர்ப்பதற்காக, அரிசியில் வெல்லம் கலந்து, அவனுக்கு அருமருந்தென ஊட்டினாள். அவனும் சிறிது தெளிவு பெற்றனன். அவன் மேலும் தெளிவடைய வேண்டி கணபதியின் விருப்பப்படி, அன்னை நந்திக்கு அருகம்புல் மாலையைச் சூட்டினாள். நந்தீ்சனுடைய அனுபவம் அனைவருக்கும் பாடமாக அமைய வேண்டி பிரதோஷ வழிபாட்டில், நந்திக்கு காப்பரிசி நிவேதிக்கப்படுகிறது. அருகம்புல் மாலையும் சூட்டப்படுகிறது, புரிந்ததா ஐயனே?

போகர்: உத்தம குருவே! இதுகாறும் தாங்கள் பிரதோஷ வழிபாட்டின் மகிமையை மக்களுக்காக அற்புதமாய் எடுத்துரைத்தீர்கள். உத்தம ரகசியங்களை மக்கள் உணர்ந்து உய்யும் பொருட்டு, எளிமையாக விளக்கிச் சொன்னீர்கள். அதற்காக அடியனும், மக்களும் தாங்களுக்கு நன்றி சொல்ல மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இருப்பினும் ஐயனே! பிரதோஷ மகிமை பற்றிய தங்கள் அருள்வாக்கிற்கு முத்தாய்ப்பாக தாங்கள் மக்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன?

அகத்தியர்: ஐயனே! நீ கேட்ட கேள்விகளின் மகிமையால்தான் என்னுள் புதைந்து கிடக்கும் பிரதோஷ மகிமை இரகசியங்கள் பல வெளிவந்தன என்பதே உண்மை. ஆகவே நானும் உனக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இருப்பினும் முடிப்பதற்கு முன், உன் விருப்பப்படி கலியுக மனிதனொருவன் பிரதோஷ வழிப்பாட்டை அனுஷ்டித்து, அழியாப் பேற்றைப் பெற்ற, ஒரு உத்தம வரலாற்றை மக்களுக்கு உதவும் பொருட்டுக் கூறுகிறேன்.

முரடன் முக்கண்ணனுடன் கலந்தது எப்படி?

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள 'பரம்பூர்' என்ற கிராமத்தில் பகதத்தன் எனும் பெயர் கொண்ட முரடன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அந்த கிராமத்தில் பெரும்பாலான மக்கள் சோளத்தைப் பயிரிட்டு வாழ்ந்து வந்தனர். பகதத்தனும் அந்தச் சோள விவசாயிகளுக்கு உதவியாளனாக வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தான். அவனுக்குப் படிப்பறிவு கிடையாது. அவனுக்கு இயற்கையிலேயே அதிக பலம் இருந்ததால், அனைவரும் அவனை 'மோட்டாபாய்’ என்றழைப்பதே வழக்கமாகிவிட்டது. அவன் தைரியசாலியாகவும் முரடனாகவும் இருந்தபோதிலும், நியாயம் நேர்மை இவைகளைப் புரிந்து கொண்டுதான் சண்டை, சச்சரவுகளில் இறங்குவான். படிப்பறிவற்ற அவனுக்குள் நெடுநாளாக ஒரு ஆசை இருந்து வந்தது. பெரிதாகப் பாடசாலை ஒன்றை நிறுவி அதன் மூலம் எண்ணற்ற மாணவர்களுக்கு தொழில் சார்புடைய கல்வியைப் புகட்ட வேண்டும் என்பதே அவனது நெடுநாளைய ஆசை.
அவன் தன் எண்ணம் ஈடேற ஒரு ஜமீன்தாரிடம் அடியாளாகச் சேர்ந்து திருட்டு. கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபட்டு ஜமீன்தாருக்கு தெரிந்தும், தெரியாமலும் செல்வம் சேர்த்து, பானைகளில் போட்டு மூடி, அருகில் இருந்த காட்டில் புதைத்து வைத்து அவைகளைக் காத்து வந்தான். ஒரு நாள் அவனுடைய மனச்சாட்சி 'உன் ஆசை நிறைவேறுவதற்கு முன் நீ இறந்து விட்டால்...?' என்று கேட்க, பகதத்தனும் அதையே நினைத்து வருந்தியவனாக, 'காமாக்யா' என்னும் உத்தம சிவத்தலத்திற்கு வருகிறான். தன் நெடுநாளைய ஆசையை வாய்விட்டுச் சொல்லி ஈசனை வேண்டுகிறான். ஈசனும் அசரீரியாக 'உன்னுடைய எண்ணம பூர்த்தியடைய எமக்கு நீ பிரதோஷ விழா எடுப்பாயாக' என்று ஒலிக்க, பகதத்தனும் சொல்லொணாத மகிழ்ச்சியடைந்து, தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஈசனுக்கு அங்கே பிரதோஷ விழா எடுக்கத் தொடங்கினான். பிரதோஷ விழாவில் ஈடுபாடு கொண்டவுடன் கொள்ளையடிக்கும் எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வந்து முடிவில் கொள்ளையடிப்பதையே நிறுத்திவிட்டான்.
அப்பொழுது அவனிடம் தேவைக்கதிகமான செல்வமும் பானைகளில் சேர்ந்துவிட்டது. பன்னிரண்டு பிரதோஷங்கள் பூர்த்தியான நிலையில் ஈசனும் அருள்பாலிக்க, பகதத்தனும் ஒரு சிறந்த பண்டிதரைச் சந்தித்து, தன் பாடசாலைத் திட்டம் பற்றித் தெரிவிக்க, அவரும் இவனைப் பார்த்துச் சிரித்து, பத்தாயிரம் பொன் தட்சிணையாகக் கேட்க, அவனும் அதற்கு ஒப்புக்கொண்டு அவரை 'காமாக்யா' தலத்திற்கு அழைத்து வந்து ஈசன் முன்னால் பாடசாலை உருவாக்கித் தருவதாகச் சத்தியம் செய்யச் சொல்லி, அவரிடம் தான் பானைகளில் சேர்த்திருந்த செல்வத்தில் ஒரு சிறு பகுதியைக் கொண்டு வந்து கொட்டுகிறான்... பிரம்மாண்டமான முறையில் பாடசாலையும் உருவாகிறது.... எல்லா இடங்களிலிருந்தும் மாணவர்கள் பாடசாலையில் வந்து குவிகிறார்கள். மாணவர்களுக்குச் கல்வியும், உணவும் இலவசமாகவே வழங்கப்பட்டன... பகதத்தனுடைய நெடுநாளைய ஆசையும் பூர்த்தியானது. அதற்குக் காரணமான பிரதோஷ வழிபாட்டையும் அவன் தொடர்ந்து நடத்தி வருகிறான்.
இந்தப் பாடசாலையில் தயாரான மாணவர்கள் எங்கும் வரவேற்கப்பட்டனர். முப்பது வருடங்கள் உருண்டோடின. பகதத்தனுடைய செல்வம் சிறிது சிறிதாகக் குறைந்து வந்தது. அவனுடைய செல்வத்தைத் தாங்கியிருந்த கடைசிப் பானையும் தோண்டி எடுக்கப்பட்டு, செலவழிக்கப் பட்டுவிட்டது. பணம் வேண்டி, பகதத்தன் காமாக்யா ஈசனிடம் ஒடிவருகிறான். அன்றோ பிரதோஷ தினம்.. ஈசனை வாகனத்தில் கண்ட பகதத்தனும் 'காமாக்யா' என்று வேதனைக் குரல் கொடுத்துச் சாய்கிறான்... ஈசனுடன் இரண்டறக் கலந்தனன்... ஈசனும் அசரீரியாக, கூடியிருந்த மக்களிடம் 'எம் அடியான் நின்ற இடத்தைத் தோண்டுக' என்று ஒலிக்க மக்களும் அவ்விடத்தைத் தோண்ட அங்கு அளவற்ற பொன்னும் பொருளும் கிடைக்க... அத்தனை செல்வங்களும் பாடசாலைக்குச் சேர... பகதத்தன் புகழ்போலவே பாடசாலையும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, மேலும் மேலும் வளர்ந்து பல்லாயிரக்கணக்கான அறிஞர்களை உருவாக்கி இந்நாட்டிற்கு அளித்த பெருமையைப் பெற்றது.... அன்பனே போகா! படிப்பறிவே இல்லாத பகதத்தனால் எப்படி ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்க முடிந்தது தெரியுமா....?

போகர்: ஐயனே.! பிரதோஷ வழிபாட்டின் மகிமைதான் பகதத்தனுடைய கனவைப் பூர்த்தி செய்தது...

அகத்தியர்: சரியாகச் சொன்னாய் போகா... முரடனை முக்கண்ணனுடன் சேர்த்த பிரதோஷ வழிபாட்டின் மகிமையை என்னென்பது...! ஆகவே மக்களனைவரும் என்னுடைய அறிவுரைகளைக் கேட்ட பின்பாவது பிரதோஷ வழிபாட்டின் மகிமைகளை உணர்ந்து, அவ்வழிபாட்டை எல்லா சிவத்தலங்களிலும் கொண்டாட வழி செய்து, பிரதோஷ வழிபாட்டை அனுஷ்டிப்பார்களேயானால் அவர்களுக்கு சர்வ மங்களங்களும் கூடும் என்பதை ஈசனுடைய பேரருட்கருணையினால் உறுதியாக கூறி முடிவிலாத தலைப்பாகிய பிரதோஷ வழிபாட்டின் மகிமையைத் தற்சமயம் ஓரளவோடு முடித்துக் கொள்கிறோம்.

 

வியாழன் அன்று பிரதோஷ பூஜை

குருமூலமாக தெரிந்து கொண்டு செய்ய வேண்டிய அற்புதமான பூஜை....

அதிகாலை எழுந்து குளித்து குரு ஓரையில் சூரிய நமஸ்காரம் (51 முதல் 100 வரை) செய்து சூரிய கவசம், காயத்ரி, துவாதச நாமாவளி முதலியன ஜெபிக்க வேண்டும். பஞ்சாட்சரம் ஜெபித்து திருநீற்று குளியலாவது செய்து சூரிய பூஜை செய்தல் வேண்டும். அன்று முழுவதும் உணவு ஏற்கக்கூடாது. கறந்த பசும்பாலில் மட்டும் குங்குமப்பூ போட்டு காய்ச்சி வீட்டில் சிவலிங்கத்திற்கு/படத்திற்கு நைவேத்தியம் செய்து பின்னர் பருகலாம். பின்னர் பெரியபுராணம் / சிவபுராணம் / திருவிளையாடல் புராணம் பாராயணம் செய்க. மதியம், வெண்கல பாத்திரத்தில் சுத்த அன்னம் நைவேத்தியம் செய்து ஆவி அகல் ஏற்றி , போற்றி திரு அகவல் (திருஅருட்பா / திருவாசகம்) துதி பாட வேண்டும். பிறகு சாதத்துடன் வில்வப்பொடி கலந்து ஆறு உருண்டை, சுக்குப்பொடி கலந்து 3 உருண்டை, பசும்தயிர் கொண்டு 3 உருண்டை உண்ணலாம். தொட்டுக்கொள்ள எதுவும் கூடாது. மீதமுள்ள சாதத்தினை பிசைந்து நாய்க்கு உணவாக இடுக. நாள் முழுவதும் பஞ்சாட்சரம் ஓதிடல் வேண்டும்.

மணமுள்ள உதிரிப்பூக்களை ஒரு பிரம்புக் கூடையில் வைத்து, சுவாமிக்கு பிரதோஷ காலத்தில் அர்ச்சனை செய்க. சம்பங்கி அல்லது மல்லிகை மட்டும் கொண்டு மாலை தொடுத்து சுவாமிக்கு சாத்தலாம். பிரதோஷ மகிமைகளைக் கூறிய வண்ணம் சிவதரிசனம்/திக்கு நமஸ்காரங்கள் செய்தல் வேண்டும். பிரதோஷம் முடிந்த பின்னர் தானங்கள் (முக்கியமாகப் பசுவிற்கு தானம்) செய்ய வேண்டும். இங்ஙனம் முறையாகச் செய்திடில் அறிய பலன்களைப் பெறலாம்.

அவற்றுள் சில:

வயதானவர்களாய் இருப்பின், சாந்தமான இறை நினைவோடு, இறைவழிப்பாதையில் அவர்கள் சென்றடைய பிதுர்கள் அருள்வர். நமக்கு அவசரத்தில் தேவையான எந்த உதவியும், மானம் போகும் அளவிற்கு ஆபத்து இருப்பினும் அந்த ஆபத்து நீங்க உபாயமும் ஈசனருளால் கிட்டும்.

பெண்கள்: தாங்கள் பலமுறை நல்வழிகளை எடுத்துரைத்தும் பிறரைத் திருத்த முடியாமல் இருந்தால், தங்களின் சொல்லுக்கு மதிப்புண்டாகி, சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் திருந்த வாய்ப்புண்டு. சிறுவர், சிறுமிகளுக்கு கம்ப்யூட்டர் (computer) அறிவு வளரும்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam