அரன் நாமமே அரண் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்ஸ்ரீவிநாயக மூர்த்தி தம்பிக்கோட்டை

பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள தம்பிக்கோட்டை திருத்தலம் ஸ்ரீராமபிரானால் வழிபடப்பெற்ற புராதன சிவத்தலமாகும். சாதாரண மனிதர்கள் ஒரு சிறிய பூஜையைச் செய்வதற்குக் கூட நேரமில்லை என்று அலுத்துக் கொள்ளும் இந்த பூமண்டலத்திற்கே சக்கரவர்த்தியான ராமபிரானோ தன்னுடைய நித்திய கடமைகளுள் ஒன்றாக பஞ்சாட்சர மந்திரத்தையும் ஜபித்துக் கொண்டிருந்தார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும். மூன்று வேளை சந்தியா வந்தனம், பித்ரு பூஜைகள், குலதெய்வ வழிபாடு, வேதபாராயணம் பெற்றோர்களுக்கு, பெரியோர்களுக்கு பாத சேவை, வாள் பயிற்சி குதிரை சவாரி, மல்யுத்தம் போன்ற பல்வேறு நித்திய கடமைகளுடன் தன்னுடைய பஞ்சாட்சர மந்திர ஜபம் ஓதுவதையும் இடைவிடாது நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஸ்ரீராமபிரான். ஸ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரான் பஞ்சாட்சர மந்திரத்தால் சாதிக்க வேண்டிய விஷயம் என்ன இருக்கிறது ? ஏதும் இல்லைதான். ஆனால், மனிதனாக ஒருவன் இந்த பூமியில் தோன்றிவிட்டால் அவன் நிச்சயமாக, கட்டாயமாக பஞ்சாட்சரத்தை ஜபித்துத்தான் தீரவேண்டும் என்ற நியதியை அனுசரித்தே ஸ்ரீராமபிரானும் பஞ்சாரட்சர ஜபத்தை நியமம் தவறாது நிறைவேற்றி வந்தார். நமசிவாய என்பதும் இறைவனும் ஒன்றே, இறைவனும் நமசிவாய என்பதும் வேறு கிடையாது.
இவ்வாறு ஸ்ரீராமபிரான் ஜபித்து வந்த பஞ்சாட்சர ஜபத்தின் எண்ணிக்கை 96 கோடி ஆனபோது அவர் சீதையைத் தேடி இலங்கைக்கு வரும் வழியில் தம்பிக்கோட்டை திருத்தலத்தில் தங்கி இருந்தார். இந்த அபரிமிதமான ஜபத்தால் ஸ்ரீராமபிரான் பஞ்சாட்சர ஜப சித்தி பெற்றார். அவ்வாறு தான் பெற்ற சித்தியை சக்கரவர்த்தி என்பவர் மற்றவர்கள் நன்மைக்காக அர்ப்பணிப்பதுதானே முறை. எனவே ஸ்ரீராமர் தான் பெற்ற பஞ்சாட்சர ஜப சித்தியின் பலனை ஒரு சிவலிங்கத்திற்கு அர்ப்பணம் செய்து அந்த சிவலிங்கத்திற்கு முறையான பூஜைகள் இயற்றி வழிபட்டு அந்த சிவலிங்கத்தையும் தம்பிக்கோட்டை திருத்தலத்திலேயே சமுதாய மேன்மைக்காக அளித்து விட்டார். ஸ்ரீராம பிரான் தன்னலம் கருதாது ஜபித்த 96 கோடி பஞ்சாட்சர ஜப சக்தியின் ஒருமித்த ஜோதியையே இங்கு நீங்கள் சிவலிங்கமாக தரிசனம் செய்கிறீர்கள்.ஸ்ரீதட்சிணா மூர்த்தி, தம்பிக்கோட்டை
யாரொருவர் 96 கோடி முறை பஞ்சாட்சரத்தை ஜபித்துள்ளார்களோ அவர்கள் இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்யும்போது அந்த பஞ்சாட்சர எழுத்துக்கள் பொன்னெழுத்துக்களாக பிரகாசிக்கும். பஞ்சாட்சர மந்திரத்திற்கும் மட்டுமன்றி எந்த இறை நாமத்திற்கும் இது பொருந்தும். அதே போல காயத்ரீ மந்திரத்தை 96 கோடி முறை ஓதி அதை தங்க அட்சரங்களாக பிரகாசிக்க கண்டவரே ஸ்ரீவிவேகானந்தர் ஆவார். தெய்வீகத்தில் நாம் செய்யும் எந்த பூஜைகளும் ஆராதனைகளும் தான தர்மங்களும் வீணாவதில்லை. மேலும் மேலும் ஏதாவது ஒரு வடிவில் பெருகி பிரகாசித்துக் கொண்டே இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு ஸ்ரீராமபிரான் ஓதி, மக்கள் நலனுக்காக அர்ப்பணித்த பஞ்சாட்சர மந்திர சக்திகள் அனைத்தும் பெருமாளைத் தொடர்ந்து வந்து மேலும் மேலும் பெருகி விஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பாஞ்சஜன்ய சங்காக உருவெடுத்தன. ஆம், ஸ்ரீகிருஷ் பகவான் தன் கையில் ஏந்தியுள்ள சங்கின் நாமம் பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படுவதன் உட்பொருள் இப்போது தெளிவாகின்றது அல்லவா ? பஞ்சாட்சர சக்திகளால் உருவானதே, சைவ பஞ்சாட்சரத்தின் வைணவ வடிவமே பாஞ்சஜன்ய சங்காகும். ஸ்ரீகிருஷ்ண பகவான் தான் அளித்த வாக்குறுதியின்படி மகா பாரதப் போரில் எந்த ஆயுதத்தையும் தம் கையில் ஏந்தாது, வலது கையில் சாட்டையையும் இடது கையில் பாஞ்சஜன்யை சங்கையும் ஏந்தி பாரதப் போரில் பார்த்தசாரதியாய் பவனி வந்தார். ஆனால், கோடிக் கோடி அதிரதர்கள் ஏந்திய கோடிக் கோடி வில் அம்புகளால் சாதிக்க முடியாததை எல்லாம் தன்னுடைய இரு ஆயுதங்களால் சாதித்துக் காட்டினார். எப்படி ? எதை வேண்டுமானாலும் அடக்கலாம். எப்போது ? மனது தன் வசத்தில் அடங்கி இருக்கும்போது. இதுவே ஸ்ரீகிருஷ்ண பகவான் உலகத்தவர்க்கு சாதித்துக் காட்டியது. யுத்த வெறியில் பஞ்ச இந்திரியங்களும் முனைந்து நிற்க, புலன்கள் எல்லாம் போருக்கு ஆயத்தமான குதிரைகள் போல் பாய்ந்து பறக்க தயாராக உள்ள நிலையில் சாட்டையை விசிறி சங்கை ஒலித்து கோடிக் கணக்கான மனிதர்களின் உடலையும் மனதையும் யோகத்தால் ஒருங்கிணைத்த அந்த கிருஷ்ண பகவான் சாதித்ததை இனி எந்த யுகத்திலும் எவராலும் சாதிக்க முடியாது என்பது உண்மை, உண்மையே. அதனால்தான் பகவத் கீதையின் ஒவ்வொரு அத்தியாயமும் புருஷோத்தம யோகம், கர்ம யோகம் என்று யோக நாமத்திலேயே அமைந்துள்ளன. போர்க்களத்தில் யோகத்தைப் புகட்டிய பெருமை அந்த கீதாச்சாரியன் ஒருவனையே சாரும். எனவே கிருஷ்ணர் புகட்டியது கீதை, அது சாதித்தது அரிய யோகம்.தம்பிக்கோட்டை, பட்டுக்கோட்டை
இன்று பரபரப்பான வாழ்க்கை முறையை கைக்கொண்டிருக்கும் கலியுக மனிதன் 96 கோடி பஞ்சாட்சரத்தை ஓத முடியுமா என்பது கேள்விக் குறியே. மனிதனின் இயலாமையை உணர்ந்த சித்தர்கள் இதற்கு ஒரு எளிய மார்கமாக பாஞ்சன்ய தானம் என்ற வழிபாட்டை அளித்துள்ளார்கள். நமசிவாய என்பது இறைவனைக் குறிக்கும் ஐந்து எழுத்துக்கள் கொண்ட வடிவம். ஆனால், அது மட்டும்தான் இறைவனைக் குறிக்கும் என்று நினைப்பது அறியாமை. இறைவனின் தரிசனம் பெற்று சதாசர்வ காலமும் சிவனின் சித்தத்தில் உறையும் பெருமக்கள் இறைவனின் உருவத்தை எந்த ஐந்து எழுத்துக்களாலும் குறிக்கலாம். உதாரணமாக, பிட்சாடனா என்ற ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய என்ற மந்திரத்தை விட ஆயிரம் மடங்கு பலன் உடையது. அதே போல விக்ரவாகி என்ற ஐந்தெழுத்து மந்திரம் பிட்சாடனா என்ற மந்திரத்தை விட ஆயிரம் மடங்கு புண்ணிய சக்தி உடையது. ஆனால், இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரு மந்திரத்திற்கு ஆயிரமாயிரம் மடங்கு பலனைக் கூட்டித் தரவல்லவர் சற்குரு ஒருவரே. அதனால் சற்குருவின் ஆணையின்பேரில் ஒருவர் பிட்சாடனா என்றோ, விக்ரவாகி என்றோ ஜபிக்கும்போதுதான் அந்த மந்திரத்தின் குறிப்பிட்ட மடங்கு புண்ணிய சக்தி மந்திரம் ஓதுபவர்க்கு கிட்டும். ஒருவர் தானாக புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு மந்திரத்தை ஓதினால் அதன் பலன் ஆயிரம் மடங்கு குறையவும் கூடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது மிக மிக முக்கியம். அதாவது தான்தோன்றித் தனமாக ஒருவர் பிட்சாடனா என்ற மந்திரத்தை ஆயிரம் முறை ஓதினால்தான் ஒருமுறை நமசிவாய என்று ஓதிய பலன் கிட்டும் என்ற நிலையும் தோன்றலாம் ! இதுவே சற்குரு அளிக்கும் தான தர்மங்களின் பின்னணியில் அமைந்துள்ள ஆன்மீக இரகசியமாகும். எனவே சற்குரு ஒருவரே அனைத்தையும் ஆக்கவல்லவர் ! சற்குரு ஒருவரே அனைத்தையும் ஆளவல்லவர் !!தம்பிக்கோட்டை
இவ்வாறு சற்குருமார்கள் மக்களின் நல்வாழ்விற்காக அளித்ததே பாஞ்சன்ய தான முறையாகும். தேங்காய், வாழைப்பழம் (குறைந்தது 12), மணமுள்ள பூ (குறைந்தது ஒரு முழம்), வெற்றிலை பாக்கு (9 வெற்றிலை, 4 பாக்கு), டைமண்ட் கல்கண்டு (குறைந்தது 100 கிராம்) என்ற ஐந்து மங்களப் பொருட்களையும் தம்பிக்கோட்டை ஸ்ரீதட்சிணாமூர்த்திக்குப் படைத்து தானமாக அளிப்பதே பாஞ்சன்ய தானமாகும். இதனால் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் விட்டுப் போன பஞ்சாட்சர ஜப சக்தியை ஈடு செய்யும் பூஜையாக அமைந்து நற்பலன்களை வர்ஷிக்கும். அனைவரும் தம்பிக்கோட்டை திருத்தலத்திற்கு செல்ல முடியாது அல்லவா ? அத்தகையோர் தங்கள் ஊரில் உள்ள ஸ்ரீதட்சிணா மூர்த்தியை வழிபட்டு மேற்கூறிய தானப் பொருட்களை திருஞானசம்பந்த மூர்த்தி அருளிய இடர்களையும் பதிகத்தை ஓதி தானமாக அளிப்பதாலும் பஞ்சாட்சர புண்ணிய சக்திகளை எளிதாகப் பெறலாம்.ஒருமுறை கோவணாண்டிப் பெரியவர் சிறுவனை அதிராம்பட்டினம் திருத்தலத்திற்கு அழைத்து வந்த போது தம்பிக்கோட்டை திருத்தலத்தில் மதிய வேளையில் இருவரும் தங்கி இளைப்பாறினர். சிறுவன் மடியில் பெரியவர் தலை வைத்து படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். எப்போது யாத்திரையாக சென்றாலும் பெரியவர் கூறும் இளைப்பாறும் முறை இதுவாகும். தனியாக வெளியூர் செல்பவர்கள் கட்டாயம் பகலில் உறங்கக் கூடாது. இருவராகச் செல்லும்போது நண்பர்கள், உறவினர்கள், கணவன் மனைவி போன்றோர் ஒருவர் மடியில் மற்றொருவர் படுத்து உறங்கி இளைப்பாறலாம். அது தவறு கிடையாது. அவ்வாறு விழித்திருப்பவர்கள் ஏதாவது இறை நாமத்தையோ காயத்ரீ மந்திரத்தையோ ஓதுதல் வேண்டும். அன்று என்னவோ விசித்திரமாக பெரியவர் பெரிய குறட்டை சப்தத்துடன் உறங்கிக் கொண்டிருந்தார். பெரியவருக்கு ரொம்பவும் அசதி போல் இருக்கிறது என்று சிறுவன் நினைத்துக் கொண்டு அவருக்கு ஒரு சிறிது உடல் அசைவோ ஏற்படாதவாறு, சிறு எறும்போ பூச்சியோ அருகில் வந்து விடாதபடி கவனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தான். இந்த பிரபஞ்சத்தையே தனது கோவணத்தில் வைத்துள்ளவர் பெரியவர் என்பதை சிறுவன் உணர்ந்திருந்தாலும் மனித முயற்சியாக அவர் உறங்கும்போது தன்னால் முடிந்த அளவு அவருடைய தூக்கத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையாக இருந்தான்.தம்பிக்கோட்டை
அப்போது எதிரில் சில பள்ளிச் சிறுவர்கள் மதிய உணவிற்காக வேகமாக சென்று கொண்ருந்தனர். அப்போது சிறுவனுக்கு தான் பள்ளிக்கு லீவு போட்டு விட்டு வந்திருந்தது ஞாபகத்திற்கு வந்தது. அன்று கணக்கு பரீட்சை வேறு. பொதுவாக கணக்கு என்றால் சிறுவனுக்கு வேப்பங்காய். அந்த கணக்கு வாத்யாரும் எப்போதும் சிறுவனை, “அறிவு கெட்ட நாயே !” என்று திட்டுவது வழக்கம். மேலும் தனக்கு பதிலாக டூப்ளிக்கட்டாக பள்ளியில் அமர்ந்துள்ள அந்த வெஙகடராமன் எப்படி பரீட்சை எழுதி தனக்கு என்ன மார்க்கை வாங்கித் தருகிறானோ என்று தெரியவில்லையே, என்று மேலும் குழம்பிக் கொண்டிருந்தான்.
“ஒரிஜனலுக்கே கணக்கு போட பவிசு இல்ல. இதுல டூப்ளிக்கட்டுக்கு என்னடா இருக்கும் ?” என்ற கேள்வியுடன் பெரியவர் தூக்கம் கலைந்து எழுந்தார். சிறுவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. குறட்டை விட்டு அல்லவா பெரியவர் தூங்கிக் கொண்டிருந்தார் அவர் எப்படி நம்முடைய சிந்தனையை கப்பென்று பிடித்தார் என்று பெரிய வியப்பினூடே சிறுவன் பெரியவரைப் பார்த்தான். பெரியவர் தொடர்ந்தார், “ஆமாண்டா, எனக்குத்தான் வேறு வழியில்லை. அறிவு கெட்ட நாயை எல்லாம் பக்கத்துல வச்சிக்கிட்டு இருக்கேன். ஆமா, இப்போ எதுத்தாப்பல அண்ணன் தம்பி மாதிரி ரெண்டு பேரு ரயிலு ஓட்டிட்டு போனாங்கல அவனுங்க பேரு உனக்கு தெரியுமா ?” சிறுவன் அதிர்ந்தான். கோயிலுக்கு எதிரில் சென்ற சிறுவர்களில் இரண்டு பேர் ஒருவன் முன்னால் செல்ல மற்றொருவன் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு ரயில் விளையாட்டு விளையாடுவதைப் போல் அவன் பின்னால் சென்றான். பல காட்சிகளின் இடையே இதையும் பார்த்த சிறுவனுக்கு அது ஏதோ ஒரு கனவு காட்சி போல் மின்னலாய்த் தோன்றி மறைய குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்த பெரியவர் எப்படி இதையெல்லாம் கவனித்தார் என்று புரியாமல் தவித்தான். பெரியவர் தொடர்ந்தார், “எங்க கணக்கு அப்புறம் இருக்கட்டும், நைனா. இப்போ அந்த சிறுவர்களின் பெயரை எப்படித் தெரிந்து கொள்ளப் போகிறாய் ? .... ம், எல்லாத்துக்கும் இந்தப் பெரிசுதான் வழிகாட்டனும்,” என்று சிரித்துக் கொண்டே தன்னுடைய கோவணத்திலிருந்து இரண்டு கல்கோனா மிட்டாய்களை எடுத்து வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் கையில் திணித்து, “அந்தச் சிறுவர்களிடம் கொடுத்து விட்டு அவர்கள் பெயரைத் தெரிந்து கொண்டு வா,” என்றார்.சிறுவனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “வெகுதூரம் நடந்து களைத்துப் போயிருக்கும் எனக்குத் தராமல் விளையாண்டு கொண்டிருக்கும் சிறுவர்களுக்கு மிட்டாயை அளிக்கிறாரே,” அதற்குள் சிறுவனுக்கு எங்கே நாம் தாமதித்தால் அந்த சிறுவர்களை வெகுதூரம் இந்த கடும் வெயிலில் அலைந்து அல்லவா கண்டு பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரவே மிட்டாய்களுடன் வேகமாக அவர்கள் சென்ற திசையை ஓரளவு கணித்தவாறே ஓட ஆரம்பித்தான். சற்று தூரத்திலேயே சாலை இரண்டாக பிரியவே சிறுவனுக்கு எப்படிப் போவது என்று தெரியவில்லை. தானறிந்த ஜோதிட விதிகளை மனக் கணக்காக போட்டு கணக்கிட்டு ஒரு பாதையை தேர்ந்தெடுத்து சென்றான். பெரியவர் எப்போதும் எந்த காரியத்தைச் செய்வதாக இருந்தாலும், குழப்பம் ஏற்பட்டாலும் அதை ஒரு தெய்வீக கோட்பாட்டில் இணைத்தே அதற்கு உரிய விடையை கண்டு பிடிக்க வேண்டும் என்று கூறுவார். உதாரணமாக, தெரியாத இரண்டு பாதைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து நீங்கள் செல்ல வேண்டுமானால் நீங்கள் எந்த பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் ? அப்போது அதற்கு ஏதாவது ஒரு தெய்வீக தத்துவத்தை வழிகாட்டியாக மேற்கொள்ள வேண்டும். இதில் உங்களுக்கு உதவக் கூடிய சில கோட்பாடுகள். இரண்டு பாதைகளில் ஒன்றின் ஆரம்பத்தில் ஒரு வேப்பமரம் இருக்கிறது, அடுத்த பாதையின் ஆரம்பத்தில் ஒரு சுடுகாடு தென்படுகிறது. இப்போது நீங்களே எந்த பாதை உகந்தது என்று கூறி விடலாம். அடுத்து ஒரு பாதையில் மரங்கள் காய்ந்து கிடக்கின்றன. மற்றொரு பாதையில் உள்ள செடி கொடிகள் பசுமையாக காட்சி அளிக்கின்றன. இந்நிலையில் பசுமையே உங்களுக்கு வழிகாட்டும் என்று உணர்ந்து கொள்ளலாம். இங்கு உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். உண்மையில் நாம் போக வேண்டிய சாலை சுடுகாட்டின் வழியாகவோ, காய்ந்த மரங்களின் வழியாகவோ இருந்தால் நாம் மேற்கூறியவாறு எடுக்கும் முடிவுகள் சரியான பலனைத் தராது அல்லவா ? உண்மைதான். ஆனால் உங்கள் எண்ணம் நல்ல சகுனங்களையே நாட வேண்டும் என்று இருப்பதால் நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக இருந்தாலும் அதன் அடிப்படை நல்லதாக இருப்பதால் உங்களுக்கு ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயமாக ஒரு சரியான வழிகாட்டியைப் பெறுவீர்கள். இதுவே சற்குரு உணர்த்தும் தெய்வீகம். அவ்வாறு சிறுவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது ஒரு சாலையில் கழுத்தில் மணி அசைய ஒரு பசு சென்று கொண்டிருந்தது. இதை ஒரு தெய்வீக வழகாட்டுதலாக சிறுவன் ஏற்றுக் கொண்டு அந்த சாலை வழியாக வேகமாக ஓடி ஆரம்பித்தான். ஆனால், அந்த சாலையோ போகப் போக கல்லும் முள்ளும் நிறைந்து கரடு முரடாக மாறவே சிறுவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. கையில் வைத்திருந்த மிட்டாய்கள் உடல் உஷ்ணத்தில் கரைந்து விடும் போல் தோன்றவே அவற்றை சட்டையில் வைத்துக் கொண்டு, இறுக்கிப் பிடித்துக் கொண்டு வேகமாக முன்னேறினான். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தான் வெகுதூரம் வந்து விட்டதுபோல் தோன்றியது. ஆனால், அந்தச் சிறுவர்கள் எங்கு சென்று மறைந்தார்கள் என்று புரியவில்லை. மதிய உணவிற்காக வந்த சிறுவர்களின் வீடு அருகில்தானே இருக்க வேண்டும். ஏன் தன்னால் இன்னும் அவர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை, என்று குழப்பத்துடன் சென்ற சிறுவனுக்கு சற்று தூரத்தில் பாலைவனத்தில் தோன்றிய சோலைவனமாய் அவ்விரு சிறுவர்களின் காட்சி கிடைக்கவே சிட்டாகப் பறந்து சென்று அந்த சிறுவர்களிடம் பெரியவர் கொடுத்த மிட்டாங்களை கொடுக்கவே அவர்களும் ஒன்றும் புரியாமல் அந்த மிட்டாய்களை வாங்கிக் கொண்டு அதற்கு நன்றியாக தங்கள் சிரிப்பை மட்டும் வழங்கினர்.
“அப்பாடா, ஒரு வழியாக ஒரு பெரிய பொறுப்பு தீர்ந்தது”, என்று பெரியவரிடம் தன்னிடம் சாகசத்தை கூறலாம் என்ற நினைவுடன் திரும்பி ஒன்றிரண்டு அடிகளே வைத்திருப்பான் சிறுவன். அப்போது பெரியவர் வழக்கமான சிரிப்புடன் அவன் எதிரே நின்று கொண்டு, “எங்க நைனா,பொறுப்பு தீர்ந்தது ? அந்தப் பசங்க பேர் என்னா கேட்டியா ?”
சிறுவன் விழித்தான். சிறுவர்களைத் தேடிப் பிடிக்க வேண்டும் என்ற நினைவிலேயே சிறுவன் இருந்ததால் அவர்களின் பெயரைக் கேட்க மறந்து விட்டான். அதனாலென்ன இப்போது கேட்டு விடுவோம் என்ற சரேலென திரும்பி அந்த சிறுவர்களைப் பார்த்தான். ஆனால், அவர்கள் அங்கு இருந்தால்தானே. கண்ணெதிரே மாயமாய் மறைந்து விட்டார்கள் ! பெரியவர் கடகடவென சிரித்தார். “நைனா, தேவனுங்களே பார்க்க முடியாத பாதம்டா அந்த பெருமாளோட பாதம். அவனையும் அவன் தம்பி லட்சுமணனையும் கண்ணெதிர்க்க பாத்தும் அவனுங்களோட பேசாம உட்டுட்டியே. அப்புறம் ஏன் அந்த கணக்கு வாத்தியான் உன்னை அறிவு கெட்ட நாயே என்று திட்ட மாட்டான்.”
சிறுவனுக்கு பேராச்சரியம், சந்தோஷம். வானளவிய உற்சாகம். “என்ன வாத்யாரே, பெருமாளா இங்கு வந்தது ?”
“ஆமாண்டா, பெரிய பெருமாளும் இளைய பெருமாளும்தாண்டா இங்கு ஒனக்கு தரிசனம் கொடுத்தது.”
சிறுவனின் ஆர்வத்தை மேலும் தூண்டாமல் பெரியவரே சிறுவனுக்கு அனைத்து இரகசியங்களையும் அருகில் இருந்த ஆலமர நிழலில் அமர்ந்தவாறே விளக்கினார்.
ஆலமர் அண்ணல் அருட்தம்பிக்கு புகட்டியதே இங்கு நீங்கள் அறியும் புராணம்.சிறுவன் வெங்கடராமன் படித்த பள்ளியில் சகமாணவன் ஒருவன் அவனுக்கு நெருங்கிய நண்பனாக இருந்தான். சிற்றன்னையிடம் வளர்ந்ததால் சாப்பாடு கூட கிடைக்காமல் பல வேதனைகளை அனுபவித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உதவி செய்வதற்காக சிறுவன் வெங்கடராமன் தன்னுடைய தாய் சமைத்துக் கொடுத்த சுண்டலை சென்னை மெரீனா கடற்கரையில் விற்று அதனால் கிடைத்த வருமானத்தில் தன்னுடைய நண்பன் பரீட்சைக்கு பணம் கட்டவும், ஆடை, புத்தகம் போன்ற அத்தியாவசியமான செலவுகளுக்கும் கொடுத்து உதவினான். எவர் ஒருவர் தன்னலம் சிறிதுமின்றி மற்றவர்களைத் தன் சகோதரனாகவோ, சகோதரியாகவோ நினைத்து அவர்களுக்கு உதவுகிறார்களோ அவர்களைப் பெருமாள் இளைய பெருமாளாகப் பாவித்து அவர்களுடைய பாதங்களை தன் திருக்கரங்களில் தாங்குகின்றான். இரு பெருமாளின் பெருங்கருணை. அந்த பெருங்கருணைக்கு எதை நன்றியாகத் தர முடியும். அதற்காகவே சிறுவன் வெங்கடராமனின் திருப்பாதங்களைத் தன் திருக்கரங்களில் ஏந்திய பெருமாளுக்கு தன்னுடைய நன்றிப் பரிசாக, அன்புக் காணிக்கையாக பெரியவர் சிறுவன் மூலம் இரண்டு கல்கோனா மிட்டாய்களை அளித்தார்.
கண்களில் நீர் வழிய, “ஏண்டா உன்னுடைய பாதத்தை ஏந்தும் பெருமாளின் நன்றியை மறந்தவன் நீ என்ற பெயரை எடுத்து விடக் கூடாது என்பதற்காகத்தாண்டா உன்னை இவ்வளவு தூரம் கூட்டி வந்து அந்த பெருமாளுக்கு நன்றியைத் தெரிவிக்க உன்னை வெயிலில் அலைய வைத்தேன், அது தப்பா ?” என்று கெஞ்சும் குரலில் கேட்ட பெரியவரின் வார்த்தைகளில் இருந்த அன்பு சிறுவனின் நெஞ்சை உருக்கவே அவன் கண்களில் வழிந்தோடிய ஆனந்தக் கண்ணீர் பெரியவரின் திருப்பாதங்களை நனைத்தது. இது அடிமைகளின் ஆனந்தக் கண்ணீர் இல்லை இரு அடிமைகளின் ஆனந்த சாகரம் !!
புயலுக்குப் பின் அமைதி ... இப்போது அமைதிக்குப் பின் தென்றல் வீசியது. பெரியவர் தொடர்ந்தார், “இன்னோரு விஷயத்தையும் நீ தெரிஞ்சுக்கனும்டா. 96 கோடி பஞ்சாட்சர நாமத்தை ஜெபித்த பிற்பாடு ராமர் லட்சுமணனுக்கு குருவாய் அமர்ந்து உபதேசம் செய்தார்னு ஒங்கிட்ட சொன்னேனே ஞாபகம் இருக்கா. அந்த உபதேசம் நடந்தது இந்த ஆலமரத்து நிழலில்தாண்டா. ”
சிறுவனுக்கு உடலெல்லாம் புல்லரித்தது. ஸ்ரீராமபிரான் ஆலமர் அண்ணலாக ஆலமர நிழலில் அமர அவர் திருவடி நிழலில் ஆதிசேஷ அவதாரம் லட்சுமணன் சீடனாய் அமர வேதநாயகனின் வேதமான ஐந்தெழுத்தை உபதேசமாக ராமபிரான் அவனுக்கு அளிக்க அந்த தெய்வீக காட்சியை கண் முன் கொண்டு வந்த சிறுவன் இனம்புரியா பேரின்ப நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டான். அத்தோடு பேரின்பம் முடிவுற்றதா ? இல்லை, அது ஆலமரமாய் விரிந்து பரந்தது. எப்படி ? சிறுவன் கண் முன் தோன்றிய காட்சி மறைய அது வேறொரு ரூபம் கொண்டது. சிறுவன் முன் நின்ற ஆலமரம் திருஅண்ணாமலை உச்சியில் உள்ள கல்லால மரமாக கவினுறக் காட்சி அளிக்க கோவணாண்டியோ செக்கர் வான் ஒளி மிக்க சோதியாய்த் திகழ அவர் திருவடியில் சிறுவன் அடிமுடி காணாத அருணாசல சோதி பிரகாசத்தை தரிசனம் செய்தான். அந்த ஒரு கண நேரத்தில் அவன் கண்டது கனவா நனவா என்று அறிந்து கொள்ள முடியாமல் திக்குமுக்காடிப் போனான்.
கனவோ நனவோ, அந்தக் காட்சி உண்மைதானே ?
தம்பிக்கோட்டை ஸ்ரீதட்சிணாமூர்த்தி எதிரில் அமர்ந்து ஒருமுகப்பட்ட மனதுடன் பஞ்சாட்சரம் அல்லது ராம தாரக மந்திரத்தை ஓதி வந்தால் இடியாப்ப சித்தர், சிறுவன் வெங்கடராமன், ராமபிரான், லட்சுமண சுவாமி குழுமிய அந்த ஆலமர தரிசனம் இன்றும் கனவில் கிட்டும் என்பது உண்மையே.தம்பிக்கோட்டை
தம்பிக்கோட்டை என்று இத்தலம் வழங்கப்படுவதன் காரணம் யாதோ ? ஸ்ரீராமபிரான் 96 கோடி முறை பஞ்சாட்சரம் ஓதி அதன் பலனை சமுதாய நன்மைக்காக இத்தலத்தில் அர்பபணித்தார் அல்லவா ? இவ்வாறு மந்திர பலனை அர்ப்பணித்தபோது இத்தல ஈசன் ஸ்ரீராமபிரானுக்கு பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசமாக அளிக்கும் குரு என்ற ஆச்சாரியார் பதவியையும் அவருக்கு அளித்தார். எனவே குரு, ஆச்சாரியார் என்பது இறைவனால் அளிக்கப்படுவதே. ஒருவர் 100 கோடி நாமத்தை ஓதி விட்டாலும் அவர் தன்னைத் தானே குரு என்றோ ஆச்சாரியார் என்றோ கூறிக் கொள்ள முடியாது. இவ்வாறு குரு ஸ்தானத்தை இறையருளால் பெற்ற ஸ்ரீராமபிரான் பஞ்சாட்சர மந்திரத்தை தன் ஆருயிர் தம்பி லட்சுமணனுக்கு உபதேசமாக அளித்தார். இவ்வாறு அண்ணனையே குருவாக ஏற்ற பாக்கியம் லட்சுமணன் ஒருவருக்குத்தான் உண்டு. அதனால் அவர் இளைய பெருமாள் என்று அனைவராலும் புகழப்படுகிறார். கோட்டை என்றால் பாதுகாப்பு, அரண் என்று பொருள். ஒருவனுக்கு உண்மையான பாதுகாப்பு இறை நம்பிக்கையும் இறைநாமமுமே ஆகும் என்பதை ஸ்ரீராம பிரான் லட்சுமண சுவாமிக்கு உணர்த்தி அருள்புரிந்த தலமும் இதுவே. அதனால் இது தம்பிக்கோட்டை என்று வழங்கப்படுகிறது. சகோதரத்துவத்தை வளர்ப்பது தம்பிக்கோட்டை திருத்தலமாகும். எத்தகைய குடும்பத் தகராறு, நிலபுல சொத்துத் தகராறுகளும், பங்காளிச் சண்டைகளும் சுமுகமாக தீரும் தலமே தம்பிக்கோட்டை.
இன்று உலகம் முழுவதும் பரவி சகோதரத்துவத்தை வளர்க்கும் அந்த மதம் தோன்றிய இடமே தம்பிக்கோட்டையாகும். ஸ்ரீராமபிரான் குருவாக விளங்கி தன்னுடைய இளவலுக்கு மந்திர உபதேசம் செய்தார் அல்லவா ? இவ்விடத்தில்தான் குரு தத்துவத்தைப் போற்றும் ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசனுக்கு ஒரு சகோதரர் அரை டம்ளர் டீயை அன்புடன் அளித்தார். அதற்கு இடியாப்ப ஈசன் அளித்த குரு பிரசாதமே சகோதரத்துவம் என்னும் கோட்பாடு. அதன்படி அவர்கள் மூன்று எழுத்துடைய வருடத்தை இறைவனாக வணங்குகிறார்கள்,
அதன் கூட்டுத் தொகையும் மூன்றே !ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமான் தம்பிக்கோட்டை
தம்பிக்கோட்டை திருத்தலத்தில் இன்றும் ஸ்ரீராமபிரான் அளித்த சிவலிங்கத்தை தரிசனம் செய்யும் பாக்கியத்தை எண்ணற்றோர் பெற்றிருந்தாலும் அதன் மகிமையை உணர்ந்தவர்கள் ஒரு சிலரே. ராமேஸ்வரத்தில் அருள்கூட்டும் ஸ்ரீராமஸ்வாமி ராமபிரானின் திருக்கரங்களால் ராமேஸ்வர கடற்கரை மணலால் நிர்மாணிக்கப்பட்ட சிவலிங்க மூர்த்தி ஆவார். தம்பிக்கோட்டையில் உள்ள சிவலிங்க மூர்த்தியை ஸ்ரீராமபிரான் எங்கிருந்து பெற்றார் ? இது அனைவருக்கும் எழும் கேள்வியே. இந்த கேள்வியை சிறுவன் வெங்கடராமன் தன் குருநாதர் இடியாப்ப சித்த ஈசனிடம் கேட்டபோது கோவணாண்டி அளித்ததே ஆத்ம லிங்கம் என்ற சிவலிங்க இரகசியம். ஆம், தம்பிக்கோட்டையில் இன்று நீங்கள் காணும் சிவலிங்கம் ஸ்ரீராமபிரான் அளித்த ஆத்மலிங்கமே ஆகும். அது ஸ்ரீராமபிரானின் ஆத்ம ஜோதியே !
ஆத்மலிங்கம் என்றால் என்ன ? எப்படி பெண்ணானவள் ஒரு உயிரை தன்னுடைய கர்ப்ப வாசத்தில் பத்து மாதங்கள் சுமந்து வளர்த்து அதை குழந்தையாக உலகிற்கு அளிக்கிறாளோ அது போல உத்தம மகான்கள் தங்களிடம் உள்ள இறை சக்தியை தங்கள் தூல சரீரத்தில் திகழும் பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட ஒரு லிங்கத்தில் எழுந்தருளச் செய்து தங்கள் வாய் மூலம் வெளியே கொண்டு வந்து அதை உலகத்தவர் நன்மைக்காக, சமுதாய மேன்மைக்காக அர்ப்பணிக்கிறார்கள். இவ்வாறு ராம பிரானின் தூல உடல் சக்திகளால உருவாக்கப்பட்டு பஞ்சாட்சர சக்திகளால் உயிரூட்டப் பெற்று உலகத்தவர் நன்மைக்காக பஞ்சாட்சர ஜோதியாக அருளப் பெற்ற ஸ்ரீராம பிரசாதமே தம்பிக்கோட்டை சிவலிங்கமாகும்.
சமீப காலத்தில் ஸ்ரீசத்யசாய்பாபா அவர்கள் ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் இத்தகைய லிங்கோத்பவ வைபவத்தை நிகழ்த்தி பக்தர்களுக்கெல்லாம் அருளை வாரி வழங்கிய குரு கருணை அனைவரும் அறிந்த ஒன்றே. ஒரு லிங்கோத்பவ வைபவத்தை தரிசனம் செய்வது நூறு கும்பாபிஷேகம் தரிசனம் செய்த பலனை நல்க வல்லதாகும். இவ்வாறு லிங்கோத்பவ தரிசனமே மனித கற்பனைக்கு எட்டாத பலனை அளிக்க வல்லது என்றால் அந்த லிங்கோத்பவ வைபவத்தை கூட்டுவிக்கும் அருள்சக்தி உடைய மகான்களின் பெருமையைப் பற்றி எப்படி விவரிக்க முடியும் ? அத்தகைய லிங்கோத்பவ வைபவத்தை நிகழ்த்தி அந்த ஆத்ம லிங்கத்தில் அருணாசல ஈசனின் ஜோதி பிரகாசத்தையும் நிறைத்து எவரும் அறியாமல் இந்த உலக மக்கள் அனைவருக்கும் அருந்தொண்டாற்றிய கருணைக் கடலே சற்குரு ஸ்ரீவெங்கடராமன் ஆவார்கள். ஆம், இதுவரை எவரும் அறியாத இந்த தெய்வீக இரகசியத்தை உங்களுக்கு உணர்த்திய உங்கள் பித்ரு மூர்த்திகளுக்கு அனந்த கோடி நமஸ்காரம்அளித்தாலும் அது அவர்களுக்கு உரிய நன்றிக் கடன் ஆகாது, ஆகாது.அக்னி லிங்கமும் அன்னபூரணி தேவியும், தம்பிக்கோட்டை
மகான்கள் எதற்காக ஆத்ம லிங்கத்தை உலகத்தவர்க்கு அளித்து சேவை புரிகிறார்கள். பொதுவாக, நாம் காணும் லிங்க மூர்த்திகள் கல், மரம், பஞ்சலோகம், அபூர்வமாக நவபாஷாணம் போன்ற மூலிகை மூர்த்திகளில் எழுந்தருளி மக்களுக்கு அனுகிரகத்தை அளிக்கிறார்கள். ஆனால் என்னதான் இந்த விக்ரஹ மூர்த்திகள் தூய்மையுடன் இருந்தாலும் அவை இறைவனின் சக்தியை ஓரளவிற்கு மேல் தங்களுக்குள் ஈர்க்க இயலாது. மனிதனின் தூய்மையான உடல் மட்டுமே இறைவனின் வானளாவிய பெருங்கருணையை முழுமையாக தன்னுடலில் அனுபவிக்கும் தகுதியைப் பெற்றுள்ளது என்பதே மனித உடலுக்கு உள்ள தனிப் பெரும் சிறப்பாகும். இதுவும் இறைவனின் கருணையே. இதையே வள்ளலார் சுவாமிகள் அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை என்று எளிமையாக வர்ணிக்கிறார்கள். இறைவனின் அருட்பெருங் கருணையைத் தாங்கும் தனிப் பெருங் கருணையான கலமாக இருப்பதே மகான்களின் தூய உடலாகும். அதேபோல திருமாலும் நான்முகனும் காண இயலா அருட்பெருஞ்சோதியை தாங்கும் வல்லமை பெற்றதும் மகான்களின் தூய ஆத்ம லிங்கமே ஆகும். இக்காரணம் பற்றியே சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே சற்குரு ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசனின் குரு ஆணையால் ஒரு ஆத்ம லிங்கத்தை லிங்கோத்பவமாக திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசனத்தில் பெற்று அந்த அற்புத ஆத்ம லிங்கத்தில் ஒவ்வொரு வருடமும் திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தில் அருணாசல ஈசனால் அருளப்படும் கார்த்திகை தீப சக்தி கிரணங்களை இந்த ஆத்ம லிங்கத்தில் நிரவி அதை திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் அடியார்களுக்கு அளிக்கப்படும் பிரசாதத்தில் நிரவி, விரவி அற்புத மகேசன் சேவையாக ஆற்றி வந்தார்கள். இவ்வாறு கோடி யுகங்கள் தொடர்ந்து சொன்னாலும் குருவின் மகிமையை எழுத்தில் வடிக்க இயலாது. அடியார்களுக்கு ஒரு டீ, காபி, சுண்டல் பிரசாதமாக அளிக்கப்பட்டால் கூட அதுவும் கூட ஆத்ம லிங்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இறை பிரசாதமே, திருஅண்ணாமலை பிரசாதமே, குரு பிரசாதமே ! இத்தகைய சொல் பொருள் கடந்த மகிமை பெற்ற அந்த ஆத்ம லிங்கத்தை தரிசனம் செய்த அடியார்கள் இன்றும் பலர் நம்மிடையே உண்டு என்பதும் நீங்கள் பெற்ற ஒரு அருணாசல பிரசாதமே.
சமீப காலத்தில் கந்த லோகத்தை அடைந்த ஸ்ரீகிருபானந்த வாரியார் எப்போதும் தன் மார்பில் இத்தகைய ஆத்ம லிங்கத்தை செச்சியில் வைத்து அணிந்திருந்ததை பலரும் நேரில் கண்டிருக்கலாம். ஸ்ரீவாரியார் சுவாமிகள் எந்த இறை விஷயத்தையும் மடை திறந்த வெள்ளமாக கந்த பிரசாதமாகப் பொழிந்ததற்கு காரணம் அவர் கந்த லோகத்திலிருந்து இந்த செச்சி சிவலிங்கத்தின் மூலம் பெற்ற கந்த பிரசாதமே ஆகும் என்பது சித்தர்கள் மட்டும் உணர்ந்த கந்த அனுபூதியாகும்.ஸ்ரீஅமிர்த சாகர ஆஞ்சநேய மூர்த்தி, தம்பிக்கோட்டை
காசியில் இறப்பவர்களின் காதில் சிவபெருமானே ராம நாமத்தை ஓதி அவர்களுக்கு முக்தி நிலையை அளிக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். காசியில் இறப்பவர்களுக்கு மட்டும்தான் எம்பெருமானின் இத்தகைய சிவபிரசாதம் கிடைக்குமா, மற்றவர்கள் இதைப் பெற வழியில்லையா என்று கேட்கத் தோன்றுகின்றஅலலவா ? எம்பெருமான் கருணை வள்ளல். குறித்த சில தலங்களில் வழிபாடுகளை இயற்றுபவர்களுக்கும் இத்தகைய நந்நிலையை இறைன் மனமுவந்து அளிக்கிறான் என்பது உண்மையே. உதாரணமாக, திருவிடைமருதூர், கும்பகோணம், சாயாவனம், தென்காசி, பூவாளூர் போன்று காசிக்கு நிகரான பல திருத்தலங்களை நம் முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அத்தகைய தலங்களில் குறித்த வழிபாடுகளை மேற்கொள்பவர்கள் அவர்கள் எங்கு இறந்தாலும் அவர்கள் காதில் சிவபெருமான் ராம தாரக மந்திரத்தை ஓதி அவர்களுக்கு உயர்ந்த நிலையை அளிக்கிறான். அதே போல காசி விஸ்வநாதர் மூலவராக எழுந்தருளிய தலங்களும், பிரகாரத்தில் காசி விஸ்வநாதர் எழுந்தருளிய தலங்களும், மதுரை போன்று ஸ்ரீஅன்னபூரணி தேவி எழுந்தருளிய தலங்களும் இத்தகைய காசிக்கு நிகரான தலங்களாகவே புகழப்படுகின்றன.
தம்பிக்கோட்டை திருத்தலத்தில் தேயுலிங்க தேவியாக ஸ்ரீஅன்னபூரணி தேவி எழுந்தருளி இருப்பது கிடைத்தற்கரிய பேறாகும். இதனால் திருஅண்ணாலையில் இயற்றப்படும் அன்னதானத்திற்கு ஆயிரம் மடங்கு பலன்கள் வர்ஷிப்பதைப் போல தம்பிக்கோட்டையில் இயற்றப்படும் அன்னதானம், மாங்கல்யதானம் போன்ற நற்காரியங்கள் ஆயிரம் மடங்கு பலன்களைப் பெறுகின்றன என்பது சித்தர்கள் கூறும் சுவையான இரகசியம்.காசியில் மரிப்போர் காதில் சிவனே ராம நாமத்தை ஓதி நற்கதி அளிக்கின்றான் என்றால் குருவின் சேவையில் ஒருவன் தன்னை அர்ப்பணித்தால் அவன் பெறும் நற்கதி யாதோ ? இதை அந்தந்த சற்குருமார்களே அறியவல்லவர்களே என்றாலும் காசிக்கு விஞ்சிய ஒரு பலனை நிச்சயம் அவர்கள் பெறுவார்கள் என்பதில் ஐயமில்லை. இது குறித்த ஒரு நிகழ்ச்சியை இங்கு விவரிக்கிறோம். சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் சிறிது காலம் ஒரு மாடி வீட்டில் குடியிருந்தார்கள். அங்கு வரும் ஒரு நாய்க்கு அவர் அவ்வப்போது சிறிது உணவிடுவது வழக்கம். ஒரு முறை ஸ்ரீவாத்யார் அவர்களைத் தேடி ஒரு நபர் வந்தார். மிகவும் பிரச்னைக்கு உரியவர் அவர். ஸ்ரீவாத்யார் அவரைப் பார்த்தால் பல மணி நேரம் ஸ்ரீவாத்யாருடன் இருந்து ஸ்ரீவாத்யார் அன்று மாலை நிறைவேற்ற வேண்டிய பல நற்காரியங்களுக்கு இடையூறாக அமைந்து விடுவார். ஆனால், அதே சமயம் வீடு தேடி வந்தவரை விரட்டியடிக்கவும் முடியாது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வருவது வரட்டும் எல்லாம் இறைவன் செயல் என்றவாறு அமைதியாக இருந்து விட்டார் சற்குரு. வந்த நபர் ஸ்ரீவாத்யாரைப் பார்க்க மாடிக்கு வர மாடிப் படியில் காலடி எடுத்து வைத்ததுதான் தாமதம், மறுநொடியே மாடிப் படியில் படுத்திருந்த நாய் வேகமாக வந்த ஆசாமியை நோக்கி குரைக்க ஆரம்பித்து விட்டது. அவரும் சற்று பின்வாங்கி மாடிப் படியிலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டு விட்டார். குறுகிய மாடிப் படியாக இருந்ததால் மாடிப் படியை தாண்டி அவரால் மேலே செல்ல முடியவில்லை. நாயும் ஏனோ தானோவென்று குரைக்காமல் தன் உயிரையே கொடுத்து பலமாக குரைத்துக் கொண்டிருந்தது. வந்தவர் சற்று நேரம் யோசித்தார். சரி எவ்வளவு நேரம் இந்த நாய் குரைக்கப் போகிறது. எப்படியும் கொஞ்ச நேரத்தில் இது அசந்தால் அந்த சந்தர்ப்பத்தில் நாம் மேலே சென்று விடுவோம் என்ற எண்ணத்தில் அருகில் இருந்த ஒரு மரத்தருகே நின்று காத்திருக்க ஆரம்பித்தார். ஆயிற்று ... அரை மணி ஒரு மணியாக, ஒரு மணி இரண்டு மணியாக... நான்கு மணி நேரம் வரை இடைவிடாது அந்த நாய் குரைத்துக் கொண்டே இருந்தது. வந்தவரும் கால் கடுக்க நின்று நின்று பார்த்து பொறுமை இழந்தவராய் வேறு வழியின்றி அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டார். அவர் வெகு தொலைவு சென்று மறைந்தவுடன்தான் நாய் குரைப்பதை நிறுத்தியது. இந்தக் காட்சிகள் அனைத்தையும் மாடியின் மேல் நின்று கொண்டு கவனித்த ஸ்ரீவாத்யார் வந்தவர் இனி திரும்பி வர மாட்டார் என்று உறுதியானவுடன் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து அந்த நாயைப் பார்த்தார். ஒரு நொடியும் இடைவிடாது தன் பலம் கொண்ட மட்டும் நான்கு மணிநேரத்திற்குக் குறையாமல் அந்த நாய் குரைத்ததால் தன் பலம் அனைத்தையும் இழந்து அப்படியே சோர்ந்து போய் மயங்கிப் படுத்து விட்டது. ஸ்ரீவாத்யாரைக் காணும்போதெல்லாம் எழுந்து நின்று வாலை ஆட்டும் நாய் அன்று எழுந்து நிற்கக் கூட பலமில்லாமல் சோர்ந்து போய் ஸ்ரீவாத்யாரைப் பார்த்தவாறே படுத்துக் கொண்டு இருந்தது. ஸ்ரீவாத்யார் அதன் அருகில் சென்று அதன் உடலை, முதுகை மெதுவாக வருடிக் கொடுத்தார். அந்த நாயோ ஒரு சொரி நாய். உடலெங்கும் ரணங்கள். சில புண்களில் சீழ் கோர்த்துக் கொண்டு நின்றது. ஆனால், ஸ்ரீவாத்யார் எதையும் பொருட்படுத்தாது தனக்கே உரித்தான அன்பு பிணைப்புடன் அந்த நாய்க்கு ஆறுதல் அளிக்கவே அதன் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு வந்த ஒரு சாதாரண மனிதனின் தவறான எண்ணத்தை அந்த நாய் உணரும் வல்லமை பெற்றது என்றால் சற்குரு ஒருவரின் கருணை அதை எந்த அளவு உருக்கி இருக்கும் !நாட்கள் சென்றன ... அந்த நாய் தன் உடலை உகுத்தது.
சற்குரு ஸ்ரீவெங்கடராமன் தன் அடியார்கள் எப்போதும் இறைவனிடம் ஒரே ஒரு பிரார்த்தனையைத்தான் முன் வைக்க வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்துவார்கள். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டெனில் இறைவா உனை என்றும் மறவாமை வேண்டும், இதுவே சற்குரு சுட்டிக் காட்டும் பிரார்த்தனை. இவ்வாறு மேற்கூறிய நாயும் அந்த பிரார்த்தனையைத்தான் முன் வைத்ததோ என்னவோ அது மிகவும் உயர்ந்த உத்தமமான ஒரு நாய் பிறவியாக பெருங்குடியில் உலவும் அற்புத அனுகிரகத்தைப் பெற்றது. உங்களால் ஜீவன்களின் உடலைச் சுற்றியுள்ள ஆரா என்னும் ஒளி வட்டத்தை காண முடியுமானால் பெருங்குடியில் நாய் என்று மனிதர்களின் கண்களுக்குத் தோன்றும் அந்த ஜீவனின் உன்னத நிலையை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். இதுவும் சற்குருவின் கருணைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
இமயமலைச் சாரலில் கைலாயத்தை அடுத்த அமைதியான பிரதேசத்தில் அமைந்துள்ளதே சாந்தவெளி என்னும் திவ்ய தலம். இது யுகம் யுகமாய் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியின் தவ பீடமாக அமைந்த அற்புத தியான பூமியாகும்.
ஒரு முறை திரிலோக சஞ்சாரியான நாரத மகரிஷி இங்கு விஜயம் செய்தார். ஸ்ரீஆஞ்சநேயரின் அருகில் நின்று கொண்டு மூன்று மணி நேரத்திற்கு குறையாமல் தன்னுடைய தேனினும் இனிய குரலில் நாராயண மகிமையை தம்புரா இசையுடன் சேர்த்து பாடிக் கொண்டிருந்தார். ஆனால், ஆஞ்சநேயரோ அதை சற்றும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. தன்னுடைய ராம தியானத்திலேயே நிலைத்திருந்தார். ஆஞ்சநேயருடைய பக்தி நிஷ்டா பக்தி என்பது. அவர் ராமரைத் தவிர வேறு எவரையும் சிந்திக்க மாட்டார். கோபிகளுடைய பக்தியும் இத்தகையதே. இடையில் பீதாம்பரம் அணிந்து தலைக் கொண்டையில் மயிலிறகைச் சூடிய கண்ணனைத் தான் தங்கள் பிராண நாதனாக ஏற்று வணங்கினார்கள். அவர்கள் மதுராபுரிக்குச் சென்றபோது அவர்களுக்காக கிருஷ்ண பரமாத்மா தலையில் தங்க மகுடத்துடன் ராஜ அலங்காரத்துடன் தரிசனம் அளித்தபோது கோபி ஸ்திரீகள் அனைவரும் யாரோ ஒரு அன்னியன் இங்கு வந்திருக்கிறானே என்று அவனைக் காண மறுத்ததோடு அல்லாமல் மதுராபுரி மன்னனை அன்னியனாக பாவித்து தங்கள் முகத்தை முந்தானையால் மூடிக் கொண்டார்களாம்.
வெகு நேரம் கழித்து ஆஞ்சநேயரின் நிஷ்டா பக்தி மகிமையைப் புரிந்து கொண்ட நாரத மகரிஷி தன்னுடைய நாராயண கீதத்தை நிறுத்தி விட்டு அமைதியாக ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெயராம் என்று ராம நாமத்தை ஒலித்தவுடன் மறுவிநாடியே ஆஞ்சநேயர் கண்களைத் திறந்து எதிரில் நின்று கொண்டிருந்த நாரத மகரிஷியின் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்தார். அதைச் சற்றும் எதிர்பாராத நாரத மகரிஷி ஆஞ்சநேய மூர்த்தியை கட்டி அணைத்து ஆரத் தழுவிக் கொண்டாராம்.
அப்புறம் என்ன ? அங்கே பக்தி வெள்ளத்தில் பக்தர்கள் கரைந்தனர் !
ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்து பலதரப்பட்ட இறை அனுபூதிகளை பகிர்ந்து கொண்டார்களாம். சற்று நேர அமைதிக்குப் பின் நாரதர் தான் வந்த வேலையை நயமாக ஆரம்பித்தார்.
“ ஆஞ்சநேயா, நீயும் எத்தனையோ யுகங்களாக ராம நாமத்தை ஓதிக் கொண்டே இருக்கிறாய். ராம பக்தியில் உனக்கு ஈடு இணை எந்த உலகத்திலும் எவருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு உயர்ந்து உள்ளதே உன்னுடைய ஈடுபாடு.” ஆஞ்சநேயருக்கு நாரதரின் வார்த்தைகள் மகிழ்ச்சியை ஊட்டினாலும் அவருக்கு உள்ளூற ஒரு குழப்பமும் கூடவே தோன்றிடவே, “மகரிஷியே, தங்கள் கலகத்தை வேறு எங்காவது வைத்துக் கொள்ளக் கூடாதா ?” என்று கேட்கவே, நாரதரும், “என்ன ஆஞ்சநேயா, நீயும் என்னை தவறாகப் புரிந்து கொண்டு விட்டாயே. நீ ஒரு சிறந்த ராம பக்தன் அல்லவா ? ராம பக்தனுக்கு மனக் குழப்பம் என்பது நெருங்க முடியாத ஒரு விஷயம் ஆயிற்றே. மேலும் கலகம் ஏற்படுத்துவதற்கு பலரும் ஒன்று சேர வேண்டுமே. இங்கோ நீ மட்டும் தன்னந்தனியாகத்தானே இருக்கிறாய். உனக்கு துணையாக இருப்பது நீ ஓதும் ராம நாமம் மட்டும்தானே ?“
ஆஞ்சநேயர் யோசித்தார். “நான்தான் நாரதரைத் தவறாக நினைத்து விட்டேனா ?” என்று சற்றே மனதிற்குள் சிறிது கலக்கம் அடைந்தார். இது போதாதா நாரதருக்கு. தன்னுடைய கலக வலையை சற்று மேலும் விசாலமாக விரித்தார் நாரதர்.
“எதற்காக உன்னுடைய அபார ராம பக்தியை இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் உன்னுடைய ராம பக்தி எல்லா உலகத்திலும் பிரசித்தி பெற்றது. தேவர்கள், கந்தர்வர்கள், அவதார மூர்த்திகளையே விஞ்சியது உன்னுடைய ராம நாம மகிமை. அப்படி இருக்கும்போது தேவர்களுக்கெல்லாம் அமுதம் அளித்த ஸ்ரீமந் நாராயண மூர்த்தி தேவர்களை விட பன்மடங்கு பக்தியில் உயர்ந்த உன்னை ஏன் ஒரு பொருட்டாக மதித்து உனக்கு அமிர்தம் அளிக்கவில்லை ? ஏன் பெருமாளிடமிருந்து அந்த அமிர்தத்தை பெற மற்றவர்களுக்கெல்லாம் தகுதி இருந்தது என்றால் உன்னுடைய தகுதி எந்த விதத்தில் குறைந்து விட்டது ?”
ஆஞ்சநேயர் இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. வேறு எதைப் பற்றி நாரதர் குறிப்பிட்டிருந்தாலும் நாரதரை அங்கிருந்து வேறு லோகத்திற்கே அனுப்பி இருப்பார். ஆனால், ராம நாமத்தின் மகிமை தேவர்களை விட குறைந்து போய் விட்டதா என்ற அஸ்திரத்தை நாரதர் மிகவும் கவனமாக பிரயோகம் செய்ததால் நாரதர் விரித்த வலையில் முழுவதுமாக விழுந்து விட்டார் ஆஞ்சநேயர்.
“ஆமாம் மகரிஷியே, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே. ராம நாமம் எவ்விதத்திலும் குறைவு உடையது கிடையாது. அப்படியானால் நான் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியிடமிருந்து அமிர்தத்தை பெற்று விட்டால் என்னுடைய தகுதிக்குத் தகுந்த மதிப்பு, அதாவது நான் ஓதும் ராம நாமத்திற்கு மதிப்பு கிட்டி விடுமா ?” என்று ஒரு குழந்தையைப் போல் கேட்டார் ஆஞ்சநேயர்.
“ஆம், அதில் என்ன சந்தேகம் ? நீ நாராயண மூர்த்தியிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று விட்டால் அப்போதுதான் ராம நாமத்தின் மகிமையும் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பூரணமாகத் தெரிய வரும்,” என்று கூறி ஆஞ்சநேய மூர்த்தியிடமிருந்து விடை பெற்று, தான் கலகமூட்ட வேண்டிய அடுத்த லோகத்திற்கு விரைந்தார் நாரத மகரிஷி.திருவகிந்திபுரம்
தினமும் வைகுண்டத்திற்கும் கைலாயத்திற்கும் சென்று ஸ்ரீமந் நாராயண மூர்த்தியையும் எம்பெருமானையும் தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றவர் அல்லவா ஆஞ்சநேயர் ? நாரத மகரிஷியின் தூண்டுதலின் பேரில் நாராயணப் பெருமாளிடமிருந்து அமிர்தப் பெற ஒவ்வொரு முறை எண்ணும்போதும் தன்னுடைய பக்தியின் மேலீட்டால் அதை நிறைவேற்ற முடியாமல் போனது. அனைத்தையும் அறிந்த நாராயண மூர்த்தியோ அது பற்றி ஏதும் அறியாதவர் போல் இருந்து விட்டார். ஆனாலும், நாரதர் விடுவதாக இல்லை. ஒரு முறை ஸ்ரீஆஞ்சநேயர் வைகுண்டத்திற்கு நாராயண மூர்த்தியின் தரிசனத்திற்காக வந்தபோது நாரதரும் அங்கு பிரசன்னமாகி, “பிரபோ, உங்கள் குழந்தை ஆஞ்சநேயனுக்கு நீண்ட நாள் ஒரு ஆசை. ஆனால், அதை வெளியிடுவதற்கு அவன் தயங்குவதால் நானே உங்களுக்கு அதைத் தெரிவித்து விடுகிறேன்,” என்று கூறி நாராயணப் பெருமாளிடமிருந்து அமிர்தம் பெற வேண்டும் என்ற கோரிக்கையைத் தெரிவித்தார். ஸ்ரீமந் நாராயணனும், “ஆஹா, இது ஒரு பெரிய விஷயம் அல்லவே ? இதற்காகவா ஆஞ்சநேயன் இவ்வளவு நாள் காத்திருந்தான். இப்போதே நம் குழந்தையின் ஆவலைப் பூர்த்தி செய்து விடுவோம்,” என்று கூறி மகாலட்சுமியை நோக்கி, “தேவி, நம் குழந்தை ஆஞ்சநேயனுக்கு அமிர்தம் வேண்டுமாம். எப்படியோ அவனுக்கு மட்டும் நாம் தராமல் போய் விட்டோம். நீயாவது எனக்கு ஞாபகப்படுத்தக் கூடாதா ?” என்று தேவியையும் செல்லமாகக் கடிந்து கொண்டார். தேவி அறியாதா நாராயண லீலையா ? லட்சுமி அமைதியே உருவாகி அண்ணலை நோக்கினாள். “அம்மா, நீ சென்று அந்த அமிர்த கலசத்தை எடுத்து வா. அதில் ஏதாவது ஒரு துளி அமிர்தம் இருந்தால் கூட போதும் அதை நம் ஆஞ்சநேயனுக்கு அளித்து விடுவோம்,” என்று கூற தேவியும் அமிர்த கலசத்தை தேடிச் சென்றாள்.காமதேனு, கற்பக விருட்சம், ஸ்யமந்தகமணி, மாணிக்கக் கிரீடங்கள், வைர வாட்கள், சங்க பதும நிதி போன்ற எண்ணற்ற தெய்வீக நிதிகளுக்கிடையே மறைந்து கிடந்த அந்த அமுதக் கலசத்தை தேடி எடுத்து ஸ்ரீமந் நாராயண மூர்த்தியிடம் அளிக்கவே பெருமாளும் கலசத்தில் சிறிது எஞ்சி இருந்த அமிர்தத்தை ஒரு உத்தரணியில் எடுத்து ஆஞ்சநேயருக்கு அளிக்க சித்தமானார். ஆஞ்சநேய மூர்த்தியும் தன்னுடைய இடது உள்ளங்கை மேல் தனது உத்தரீயத்தை வைத்து அதன் மேல் தன்னுடைய வலது உள்ளங்கையை வைத்து பணிவுடன் முழந்தாளிட்டு அமர்ந்து அமிர்த பிரசாதத்தைப் பெற தயாரானார். அப்போது சற்றே நிதானித்தார் பெருமாள். காரணம் புரியாமல் பெருமாளைப் பார்த்தார் ஆஞ்சநேயர். “ஆஞ்சநேயா, இந்த உத்தரணியில் இருக்கும் அமிர்தத்தை நன்றாக உற்றுப் பார்.”
ஆஞ்சநேயர் அந்த உத்தரணி அமிர்தத்தை உற்றுப் பார்க்கவே அது பெருங் கடலாய் விரிந்து பெருகி வைகுண்டத்தையும் தாண்டிய பிரவாகமாய்ப் பெருக்கெடுத்தது. ஆஞ்சநேயர் வியந்தார், “பிரபோ, உங்கள் கையில் உள்ள உத்தரணி அமிர்தம் வைகுண்டத்தையும் தாண்டி பெருக்கெடுத்துச் செல்கிறதே.”
”ஆம், அந்த அமிர்தக் கடலை நன்றாக உற்றுப் பார்.”
ஆஞ்சநேயர் அமிர்த கடலை நன்றாக உற்றுப் பார்த்தார். அங்கே “ஸ்ரீராம் ஜெயராம் ஜெயராம்“ என்ற ராம நாமம் ஒலித்தது. “சுவாமி அமிர்தக் கடலில் அடியேன் பிரபுவின் திவ்ய நாமம் ஒலிக்கிறதே,” என்று பெரும் உற்சாகத்துடன் கூவினார் ஆஞ்சநேயர். “அப்படியா ?!” என்று ஒன்றுமறியாதவரைப் போல் கேட்டார் நாராயண பிரபு. நாராயண லீலை தொடர்ந்தது. .....
அமிர்த கடலை நெருங்க நெருங்க ராம நாம ஒலி சிறிது சிறிதாக மறைந்து அதில் ஆயிரம் லட்சம் என அலைகள் பொங்கி பெருகி ஆரவாரித்தன. ஒவ்வொரு அலையும் பல பனை மர உயர்த்திற்கு உயர்ந்து வீசியது.
“சுவாமி, அமிர்த சாகரத்தில் அற்புத அலைகள் வீசுகின்றனவே,”
“சரி, அந்த அலைகள் கூறும் இரகசியம் என்னவென்று உற்றுக் கேள்,”
ஆஞ்சநேயர் தன் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி அந்த அலைகளின் மேல் எண்ணத்தைக் குவித்து கவனிக்க ஆரம்பித்தார். ஆரவாரமாக வீசிய அலைகளின் ஊடே ஒரு மெல்லிய நாமம் இனிமையாக ஒலிப்பதை அவரால உணர முடிந்தது. மேலும் மேலும் அந்த ஒலியில் தன்னுடைய சக்தியைக் குவித்து நோக்கினார். திடீரென அவர் முகத்தில் லட்சம் மின்னல் வீசியதைப் போன்ற பிரகாசம், அவர் கண்களில் பாற்கடலையும் விஞ்சம் கண்ணீர் தாரைகள் பெருகி வைகுண்டத்தையே மூழ்கடித்தது.
காரணம் என்ன ?
அந்த அமிர்தக் கடல் அலைகளில் ஒலித்த நாமம், ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா, ஆஞ்சநேயா என்பதே ஆகும்.
இவ்வாறு ராம நாமம் என்னும் அமிர்த சாகரத்தில் அலையாக ஒலிப்பது ஆஞ்சநேய பக்தியே என்று உணர்ந்த ஆஞ்சநேய மூர்த்தி ஸ்ரீமந் நாராயண மூர்த்தியை எல்லையில்லா பக்திப் பெருக்குடன் தொழுது நின்ற கோலமே இங்கு நீங்கள் தம்பிக்கோட்டை திருத்தலத்தில் தரிசனம் செய்யும் ஆஞ்சநேய திருக்கோலமாகும்.
ராம நாம சுவையையும் தான் யார் என்று அறியும் ஞானத்தையும் ஒருங்கே அளிப்பதே ஸ்ரீஅமிர்த சாகர ஆஞ்சநேயரின் தரிசனம் !!ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ மூர்த்தி, திருவஹிந்திபுரம்
சிறுவனுக்கு ராம லட்சுமண மூர்த்திகள் ரயில் விளையாட்டு விளையாடும் சகோதரர்களாக காட்சியளித்தனர் என்று குறிப்பிட்டோம் அல்லவா ? மகான்களின் விரல் அசைந்தால் அதில் ஆயிரமாயிரம் காரணம் இருக்கும் என்றால் அவதார மூர்த்திகளின் விளையாட்டு லீலைகளிலும் ஆயிரமாயிரம் தெய்வீக பொக்கிஷங்கள் நிறைந்திருக்கும் அல்லவா ? அது என்ன ? பள்ளிக்கூடம் விட்ட நண்பகல் வேளையில்தானே ராம லட்சுணமர்களின் தரிசனம் கிட்டியது. நண்பகலில் சூரியபகவானின் சக்தி உச்சத்தில் இருக்கும். தம்பிக்கோட்டையில் உள்ள ஸ்ரீசுந்தரேஸ்வர சுவாமி திருத்தலம் ஸ்ரீயாஞ்யவல்கிய மகரிஷியால் வழிபடப் பெற்றது. சூரிய பகவான் வானில் சஞ்சரிக்கும்போது அவருடன் பறந்து கொண்டே அவர் வேதத்திற்கு ஈடு கொடுத்து வேத மந்திரங்களைப் பயின்றவரே ஸ்ரீயாக்ஞவல்கிய மகரிஷி. ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும் சூரிய குலத் தோன்றல்தானே. இவ்வாறு அனைத்து சூரிய சக்திகளையும் ஒன்று திரட்டி ராமன் என்ற பெயருடைய வெங்கடராமன் சிறுவனுக்கு தரிசனம் அளித்தது பொருத்தமோ பொருத்தம்தானே.
அதோடு மட்டுமல்லாமல் நமது பெரிய வாத்யார் இடியாப்ப சித்தரோ எப்போதும் சிறுவன் வெங்கடராமனுக்கு தம்பதி சமேதமான தரிசனப் பலன்களையே பெற்றுத் தருவது வழக்கம். அதற்கு அவர் சொல்லும் காரணம், “நைனா, நான் ஒரு பெரிய fraud. என்னை நம்பாதே. என்னிடம் தயாராகும் நீயும் ஒரு ப்ராடாகத்தானே இருப்பாய். அதனால் பெருமானோ பெருமாளோ தனித்திருக்கும் தரிசனத்தை நீ பெற்றால் உன்னுடைய திருட்டுத்தனம் அவர்களுக்குத் தெரிந்து விட்டால் உனக்கு அனுகிரகத்திற்குப் பதிலாக தண்டனையே கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம். ஆனால் அம்மாவோடு அய்யா இருக்கும்போது அவர்கள் தரிசனத்தை நீ பெற்று விட்டால் உன்னுடைய திருட்டுத்தனத்தை அம்மா மன்னித்து உனக்கு நல்லதையே பெற்றுத் தருவாள்,”.
இடியாப்ப ஈசனின் இந்த உபநிஷத் வாக்கியங்களை ஆழ்ந்து சிந்தித்து அரும்பெரும் பொக்கிஷத்தை அள்ளிக் கொள்ளுங்கள்.ஔஷதங்களின் சங்கமம், திருவகிந்திபுரம்
ஸ்ரீராமர் வனவாசத்தின்போது எந்தக் கோலத்தில் சென்றாரோ அதே கோலத்தில்தான் தம்பிக்கோட்டையிலும் சிறுவன் வெங்கடராமனுக்கு தரிசனம் அளித்தார். அதாவது வனவாசத்தில் ராம பிரான் முன் செல்ல அவரைத் தொடர்ந்து சீதை செல்ல சீதையைத் தொடர்ந்து சீதையின் பாதங்களை தலை குனிந்து நோக்கியவாறே லட்சுமணன் பின் சென்றார். இதே கோலம்தான் பள்ளிச் சிறுவர்களாக ராமபிரான் லட்சுமணனின் தரிசனமும். வனவாசத்தில் சீதையை ராவணன் கவர்ந்து சென்று விட்டதால் சிறுவன் வெங்கடராமனுக்கு தம்பதி சமேதராய் எப்படி காட்சி அளிப்பது ? இதற்காக இடியாப்ப சித்தனும் ராமபிரானுடன் லட்சமணனும் சேர்ந்து ஆடிய கூத்தே ரயில் விளையாட்டு. இப்போது உங்களுக்கு அனைத்தும் புரிந்திருக்குமே ? இருந்தாலும் அதை சற்று விளக்குவோம். முன்னால் சென்ற அண்ணனின் சட்டையை தம்பி இழுத்து பிடித்துக் கொண்டிருக்கிறான். அப்போது அவன் சட்டையில் மதிய பிரகாச சூரிய பகவானால் தோன்றிய நிழலே ராமபிரானை என்றும் தொடரும் சீதை, சாயா தேவியும் சூரியனும் போல. வனவாசத்தில் ராமபிரானின் திருவடிகளை நேரிடையாக காணாமல் மானசீகமாகவே லட்சுமண சுவாமி அவைகளைத் தரிசனம் செய்தார். தம்பிக்கோட்டையிலும் அவ்வாறே சட்டை மறைத்த அண்ணனின் திருவடிகளை அவர் மானசீகமாகவே தரிசனம் செய்து விளையாடினார்.
பெருமாளின் கூத்தே கூத்து !
ஸ்ரீயாக்ஞவல்கிய முனிவரால் வழிபடப் பெற்ற திருத்தலம் ஆதலின் தம்பிக்கோட்டை யஜுர்வேதிகள் அவசியம் வழிபட வேண்டிய திருத்தலமாக சிறப்புப் பெறுகிறது. யக்ஞோபவீதம் அணிதல், நாமகரணம், குழந்தைகளுக்கு அன்னபிரசானம், சீமந்தம் போன்ற வைபவங்களை இத்தலங்களில் சுக்ல யஜுர்வேதிகள் நிறைவேற்றுதலால் அற்புத பலன்களைப் பெறலாம். கோதுமை புட்டு தானம் சிறப்பான பலன்களைத் தரும்.
“அசதோமா சத் கமய ... ” என்ற வேத துதியை ஓதி இத்தலத்தில் தீபங்கள் ஏற்றி வழிபடுதலால் ஜோதியுடன் பேசும் மனோ சக்தியைப் பெறலாம். ஒளி உலக பித்ருக்களுடன் தொடர்பு கொள்ளத் தேவையான மன வளத்தைப் பெற முன்னோடியாக விளங்குவதே இத்தகைய வழிபாடாகும்.ஸ்ரீயாக்ஞவல்கிய மகரிஷி தம்பிக்கோட்டை திருத்தலத்தில் தங்கி வழிபாடுகள் இயற்றியபோது சீதையைத் தேடி வந்த ராமபிரானின் தரிசனம் அவருக்குக் கிடைத்தது. ஸ்ரீராமபிரானுக்கு ஆறதல் அளித்து அவர் சீதையுடன் சேருவதற்கான ஒரு வழிபாட்டையும் பெற்றுத் தந்தார். அதன்படி ஸ்ரீராமர் தம்பிக்கோட்டை திருத்தல ஈசனை முறையாக வழிபட்டு சீதையையும் அடைந்தார் என்பது இருடிகள் ராமாயணம் கூறும் இனிய காவியம். அந்த வழிபாடு என்ன ?
எட்டு முழ அல்லது 10 முழ வேஷ்டி, ஆறு அல்லது ஒன்பது கஜ புடவையை தம்பிக்கோட்டை திருத்தலத்தில் அருகருகே விரித்து அதன் மேல் அங்கப் பிரதட்சணம் நிறைவேற்ற வேண்டும். அங்கப்பிரதட்சிணம் நிறைவுறும் வரை வேஷ்டி புடவையை மாற்றிக் கொண்டே வர வேண்டும். முதலில் கணவனும் பின்னர் மனைவியும் இந்த வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகி தம்பதிகளுக்கிடையே உள்ள எத்தகைய கருத்து வேற்றுமைகளும் மறையும். பிரிந்த தம்பதிகளுள் யாரேனும் ஒருவர் கூட தனித்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வழிபாட்டின் பலனால் இருவரும் இணைந்த பின் இறைவனுக்கு நன்றிக் கடனாக மீண்டும் தம்பதிகள் ஒன்று சேர்ந்து இந்த அங்கபிரதட்சிணத்தை நிறைவேற்றலாம். பருத்தி அல்லது பட்டு ஆடைகளை பயன்படுத்தலாம். பாலியஸ்டர் போன்ற செயற்கை ஆடை ரகங்களை தவிர்க்கவும். அங்கப் பிரதட்சிணத்திற்குப் பின் ரவிக்கை, உள்ளாடைகள், அங்கவஸ்திரம், சட்டை போன்றவற்றை சேர்த்து தம்பிக்கோட்டை திருத்தலத்திலோ அல்லது தங்கள் சொந்த ஊரில் உள்ள திருத்தலங்களிலோ கிரிவலப் பாதைகளிலோ தீர்த்தக் கரையிலோ இந்த ஆடைகளை தானமாக அளித்து விட வேண்டும். வேஷ்டி புடவை இரண்டையும் சேர்த்தே தானமாக அளிக்க வேண்டும். ஆனால், தானம் பெறுபவர் ஆணோ பெண்ணோ யாரோ ஒருவராகவும் இருக்கலாம். திருமணமான, திருமணமாகாத ஆண்களும் பெண்களும் இந்த வழிபாட்டை நிறைவேற்றலாம். கடுமையான காமக் குற்றங்களும் கொடுமையான நோய்களும் நிவர்த்தியாகும்.
ஸ்ரீராமபிரான் இவ்வழிபாட்டை நிறைவேற்றியதால் இது சீதா ராகவ அங்கப் பிரதட்சிணம் என்று வழங்கப்படுகிறது. ஸ்ரீராமபிரான் இந்த வழிபாட்டை தம்பிக்கோட்டை திருத்தலத்தில் நிறைவேற்றியபின் அந்த வேஷ்டி புடவைகளை தானமாக அளித்தபோது இந்திரனே வந்து அதைப் பெற்றுக் கொண்டானாம். கௌதம முனிவரின் சாபத்தால் உடல் முழுவதும் யோனிக் கண்களுடன் திகழ்ந்ததால் இந்திரன் எவர் கண்ணிலும் படாமல் மறைந்து ஒதுங்கி தவம் இயற்றிக் கொண்டிருந்தான். ஸ்ரீராமர் அளித்த ஆடைகளை இந்திரன் தானமாகப் பெற்றபோது ராகவ சுந்தரேச சக்திகளால் இந்திரன் உடலில் உள்ள யோனி விழிகள் மறைந்தன. எனவே எத்தகைய காமக் குற்றங்களுக்கும் பரிகாரம் அளிபபதும் சீதா ராகவ அங்கப் பிரதட்சிண வழிபாடாகும்.

 

திருத்தல யாத்திரை தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam