நடராச நாட்டியம் ஒலிக்குதப்பா நமனின் நினைவு மறக்குதப்பா !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்



நவராத்திரி நாட்கள் யாவுமே அம்பாள் ஈசனை பூஜிக்கும் சிவராத்திரி நாட்களே என்பது சித்தர்கள் மொழி.
எனவே நவராத்திரி மாலை நேரத்தில் அம்பாள் பூஜைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாமல் பகல் நேரத்தில் சிவ பூஜையையும் அவசியம் செய்தாக வேண்டும். அப்போதுதான் நவராத்திரி பூஜையின் பலன்கள் பூரணமாகும். எம்பெருமானின் நடன தாண்டவம் என்பது எக்காலத்தும் எவ்விடத்தும் மிளிரும் ஓர் இறை அற்புதமே. ஒன்பது நவராத்திரி நாட்களிலும் நடராஜப் பெருமான் சிறப்பான தாண்டவக் கோலத்துடன் நாட்டியமாடி பக்தர்களுக்கு அற்புதமான இறை சக்தியை வர்ஷிக்கிறார். அதிலும் சிறப்பாக பெண்களுக்கு இத்தகைய நவராத்திரி தாண்டவங்களால் பலன்கள் மிகவும் பன்மடங்காக பெருகி அவர்களுக்கு மங்கள சக்திகளை அளிப்பதுடன் எதிர்வரும் பல துன்பங்களிலிருந்து அவர்களைக் கவசமாய்க் காக்கின்றன. எப்படி மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் இயற்றப்படும் பூஜைகளுக்கு பன்மடங்கு பலன்கள் பெருகுகின்றனவோ அதுபோல நவராத்திரி நாட்களில் பகல் நேரத்தில் குறிப்பாக காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையில் நிறைவேற்றப்படும் பூஜைகளின் பலன்கள் பன்மடங்கு விருத்தியாகின்றன. கிரிவலம், அன்னதானத்திற்காக உணவு சமைத்தல், கோலமிடுதல், பூக்கட்டுதல் போன்ற இறை வழிபாடுகளின் பலன்கள் சிறப்பாக விருத்தி அடைகின்றன. நவராத்திரி நாட்களில் எம்பெருமான் ஆடும் தாண்டவம் சாதுர்ய சாக்த நடனம் என்ற நாமத்துடன் சித்தர்களால் புகழப்படுகிறது. இந்த தாண்டவத்தால் பார்வதிதேவிக்கு அபரிமிதமான மங்கள சக்திகள் பெருக அதை நவராத்திரி நாட்களில் காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை பூஜைகள் இயற்றும் பக்தர்களுக்கு சிறப்பாக பெண் அடியார்களுக்கு இந்த தாண்டவ சாக்த சக்திகளை சக்தி பிரசாதமாக அளிக்கிறாள் அன்னை பராசக்தி. இந்த சாதுர்ய சாக்த தாண்டவ சக்திகளை தேவியால் மட்டுமே கிரகிக்க முடியும், அதுவும் நவராத்திரி நாட்களில் மட்டுமே ! மகான்கள் கூட இத்தகைய சாதுர்ய சக்திகளை நேரடியாகப் பெற முடியாது. நவராத்திரி பகல் பூஜைகளின் மூலம் மட்டுமே இந்த சிவ பிரசாதத்தைப் பெற முடியும். நவராத்திரி நாட்களில் சஷ்டி திதியுடன் செவ்வாய் இணையும்போது ஆயிரக் கணக்கான சாக்த பீஜாட்சர சக்திகள் எம்பெருமானின் நடனக் கோலத்தில் பொலிகின்றன. இதில் மூன்றே மூன்று சக்திகளை மட்டும் கலியுக மக்களின் மேன்மைக்காக அம்பாள் சாக்த அனுகிரகமாக அருள்கின்றாள். நவ கௌஸ்துபம், நவ மங்களம், நவ சரவணம் என்ற மூன்று சாக்த நடன சக்திகள் மட்டும் கலியுக மக்களுக்கு தேவியால் அளிக்கப்படுவதால் இறையன்பர்கள் நவராத்திரி நாட்களில் காலை நேரத்தில் தங்களால் இயன்ற நற்காரியங்களை இயற்றி பெறுதற்கரிய இந்த மூன்று சாக்த நடன சக்திகளை பெற்றுப் பயனடையும்படி கேட்டுக் கொள்கிறோம். ஒன்பது நவராத்திரி நாட்களில் இயற்றப்படும் பகல் பூஜையானது மூன்று மாதங்களுக்கு பெண்களுக்குத் தேவையான மங்கள சக்திகளையும் கவச பாதுகாப்பு சக்திகளையும் அளிப்பதுடன் அடுத்து வரும் மார்கழி மாத வழிபாடுகளின் பலன்களையும் பன்மடங்காய்ப் பெருக்குகின்றது.
நவ கௌஸ்துபம், நவ மங்களம், நவ சரவண பீஜாட்சர சாக்த சக்திகள் பொதிந்த தாள இசையை பக்தர்களின் நன்மைக்காக இங்கு அளிக்கிறோம்.





மண்ணில் எழுந்த மாமேரு !
பரந்த இந்த பாரத தேசமெங்கும் எங்கு நோக்கினும் ஈசனின் லீலோ விநோதங்களே மிகுந்திருப்பதால் எத்தனையோ அதிஅற்புத விஷயங்கள் எல்லாம் நமக்குத் தெரியாமல் போய் விடுகின்றன. அத்தகைய உலக அதிசயங்களில் ஒன்றே வானளவ பெருமை உடைய ஆனால் சாதாரண களிமண்ணில் எழுந்த நீங்கள் இங்கு காணும் காவியமாகும். திருச்சி லால்குடி அருகில் உள்ள மயில்ரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் முழுக்க முழுக்க சுட்ட களிமண்ணால் எழுப்பப்பட்ட அதாவது வெறும் செங்கற்களைக் கொண்டு மட்டுமே உருவான விநாயகர் ஆலயம் இதுவாகும். விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே இந்த அதிஅற்புத வாஸ்து சக்திகள் நிரம்பிய கணபதி மூர்த்தியைப் பற்றி அறிந்துள்ளனர்.
எத்தகைய உஷ்ண சக்தியையும் தாங்கக் கூடிய சக்தி களிமண்ணிற்கு மட்டுமே உண்டு. அதனால் இரும்பை உருக்கும் உலைகலன்களிலும், தங்கம், பஞ்சலோகத்தை உருக்கும், வார்க்கும் அச்சுகள் கூட சுத்தமான களிமண்ணினால் செய்யப்படுகின்றன. ஆயிரக் கணக்கான மைல் வேகத்தில் காற்றைக் கிழித்துக் கொண்டு ராக்கெட்டுகள் செல்லும்போது ஏற்படும் அதிகப்படியான உஷ்ணத்திலிருந்து ராக்கெட்டைக் காப்பதும் இந்த களிமண் ஓடுகளே. வேறு எந்த உலோகத்தாலும் இந்த அதீதமான உஷ்ணத்தை தாங்க முடியாது. மண் பாண்டங்களில் வைக்கப்படும் நீர் ஒரு வருட காலத்திற்குக் கூட கெட்டுப்போகாமல் அருந்தும் நிலையில் இருப்பதும், மண் ஜாடிகளில் வைத்த தேன் ஆயிரம் ஆண்டுகள் ஆனால் கூட அதன் குணம் குறையாது இருப்பதையும் நீங்கள் அறிவீர்கள் அல்லவா ? மண்ணிற்கே இத்தகைய அற்புத சிறப்புகள் என்றால் மண்ணால் எழுந்த விநாயக ஆலயத்தின் சிறப்பை வர்ணிக்கவும் இயலுமா ?



ஸ்ரீவராக விநாயக மூர்த்தி, மயில்ரங்கம்
மயில்ரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயக மூர்த்தி யுகங்கள் தோறும் பல்வேறு நாமங்களுடன் விளங்குகிறார். நடப்பு கலியுலகில் இந்த மூர்த்தி ஸ்ரீவராக விநாயகர் என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறார். அடிமுடி காணா அண்ணாமலை வைபவத்துடன் தொடர்புடைய தலமே மயில்ரங்கம் ஆகும். எம்பெருமானின் திருவடிகளைக் காண்பதற்காக விஷ்ணு மூர்த்தி வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து சென்றார் அல்லவா ? அவ்வாறு பூமியைத் தோண்ட ஆரம்பித்த வராக மூர்த்தி எத்தனை முயற்சி செய்தாலும் கடுகளவு பூமியைக் கூட தன்னுடைய கூரிய பற்களால் பெயர்க்க முடியவில்லை. சாதாரண பன்றிகளுக்கே பூமியின் அடியில் முப்பது அடி ஆழத்தில் உள்ள கிழங்கு வகைகள், மூலிகைகள், கற்கள், மணல் பாங்கு, நீரோட்டம், உலோகங்கள் போன்றவற்றைத் தெளிவாக அறியும் சூட்சும சக்திகள் உண்டு. பன்றியின் மூக்கு முக்கோண வடிவாக அமைந்திருப்பதும் இந்த அனுகிரகத்திற்கு ஒரு இயற்கையான காரணமாகும். அப்படியானால் வராக அவதார மூர்த்தியின் சக்தி எத்தனை பிரம்மாண்டமானதாக இருக்க வேண்டும். ஆனால் என்னதான் முயற்சி செய்தாலும் பூமியைப் பெயர்க்க முடியாமல் போனது மட்டுமல்லாமல் பூமிக்கு அடியில் என்ன இருக்கிறது என்ற சூட்சும விஷயமும் தெரியவில்லை பெருமானுக்கு. அப்போது அசரீரி ஒலித்தது, “வராக மூர்த்தியே, எந்த காரியமாக இருந்தாலும் முழு முதற் கடவுளை வணங்கித்தானே ஆரம்பிக்க வேண்டும்,“. அதைக் கேட்ட வராகப் பெருமாள் தன்னுடைய தவறை உணர்ந்து விநாயக மூர்த்தியைத் தொழுதார். அப்போது விஷ்ணு மூர்த்திக்கு காட்சி கொடுத்து அனுகிரகம் அளித்தவரே மயில்ரங்கம் தலத்தில் உறையும் ஸ்ரீவராக விநாயக மூர்த்தி ஆவார். ஸ்ரீவராக விநாயக மூர்த்தியின் திவ்ய தரிசனத்தால் தன்னுடைய பற்களில் அற்புத பலம் பெருகுவதை உணர்ந்த பெருமாள் வேகமாகப் பூண்டியைத் தோண்ட ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல் பூமியைத் தோண்ட தோண்ட பூமியின் அடித்தளத்திலிருந்து ஓர் அற்புத ஜோதி வெளிப்படுவதையும் உணர்ந்தார். அதுவே அண்ணாமலை பூரண ஜோதி என்பதை பின்னரே உணர்ந்து கொண்டார் விஷ்ணு மூர்த்தி. பிரம்மா பெரியவரா, பெருமாள் பெரியவரா என்ற எண்ணத்தில் ஆரம்பித்த போட்டிப் படலத்தை மறந்த வராகப் பெருமாள் தன் கண்ணுக்குத் தெரிந்த ஜோதி தரிசனத்தில் மெய் மறந்தவராய் பூமியைத் தோண்டுவதில் தீவிரமாக ஈடுபடவே அவருக்குக் கிடைத்த ஜோதி பிரகாசமும் பெருகிக் கொண்டே வர அதன் விளைவாய் பரமேஸ்வரனைப் பற்றிய சிந்தனை எழவே விஷ்ணுமூர்த்தி தன்னுடைய அகம்பாவ எண்ணத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு இறைவனிடம் முழு மனதுடன் சரணாகதி அடைந்தார். அதற்குப் பின் நடந்த அண்ணாமலையானின் அற்புதக் கூத்து அனைவரும் அறிந்த ஒன்றுதானே. இவ்வாறு திருஅண்ணாமலையாரின் அருட்பெருஞ்சோதி தனிப் பெருங் கருணை ஜோதி தரிசனத்தைப் பெற்ற விஷ்ணு மூர்த்தி, மயில்ரங்கத்தில் அருள்புரியும் விநாயக மூர்த்தியை முறையாக வழிபட்டு நன்றி செலுத்தினார். அன்று முதல் மயில்ரங்க விநாயகப பெருமான் ஸ்ரீவராக விநாயக மூர்த்தியாகப் புகழ் பெற்றார்.



மயில்ரங்கம் திருத்தலத்தில் அரங்கேறிய மற்றோர் புராண வைபவமும் உண்டு.
முருகன் என்றால் அழகு என்றே தமிழில் பொருள்படும். இவ்வாறு அழகுக்கு அழகான முருகப் பெருமானின் வாகனமான மயிலும் அற்புத அழகுடன் பொலிவதே. பழைய ஏட்டுச் சுவடி ஒன்று அழகுக்கு ஆயிரம் என்றே மயிலை வர்ணிக்கிறது. ஆனாலும் இதனால் எல்லாம் திருப்தி அடையாத மயில் வாகனத்திற்கு தன்னுடைய பெருமானுக்கு அழகு தன்னுடைய வர்ணஜால சிறகுகளால்தான் என்ற அகம்பாவ எண்ணம் சிறிதே தலை தூக்கவே இதையே காரணமாகக் கொண்டு ஒரு திருவிளையாடலை நிகழ்த்தி விட்டான் தமிழக் கடவுள். அகம்பாவம் தோன்றிய மறு விநாடியே தன்னுடைய அழகிய பீலிகைகளை எல்லாம் இழந்து குமரன் அருள்புரியும் கந்த லோகத்திலிருந்து ஒரு சாதாரண கோழி வடிவில் பூமியில் விழுந்தது மயில். தன் தவறை உணர்ந்து முருகனை வேண்டவே, முருகப் பெருமானும், “முழு முதற் கடவுள் முழு முதற் பூதத்தில் எழுந்தருளிய தலத்தில் தவம் இயற்றுவாயாக,“ என்று திருவாய் மலர்ந்து அருளினார். கோழி வடிவில் இருந்த மயிலும் வழியில் கிடைத்த புழு, பூச்சிகைளத் தின்று முழு முதல் பூதத்தில் எழுந்தருளிய முழு முதற் கடவுளைத் தேடிக் கொண்டே இருந்தது. ஒரு விதத்தில் இது மயிலுக்குத் தண்டனை போல் தோன்றினாலும் மறுபுறத்தில் பூமியில் ஆங்காங்கே விரவி பெருகி இருந்த தொற்று நோய் கிருமிகளை அழிக்க முருகப் பெருமானின் திருவிளையாடலே இந்த கோழிப் பிறவி என்பதே உண்மையாகும். பெரும்பாலும் நோய்க் கிருமிகள், பூச்சிகள், கரப்பான் பூச்சி, பூரான் போன்ற எதிர்மறை சக்திகளைப் பெருக்கும், எதிர்மறை சக்திகளை விளைவிக்கும் கிருமிகளையே கோழிகள் தங்கள் உணவாக ஏற்பதால் இவை கர்ம வினையைப் போக்கும் ஜீவன்களாக சிருஷ்டியில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. எனவே இத்தகைய கர்ம நிவாரண ஜீவன்களான கோழி, பசு, நாய், கழுதை போன்ற ஜீவ ராசிகளை மக்கள் தாங்கள் உணவாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று சித்தர்கள் வலியுறுத்துகின்றனர். பூச்சிகளை உண்ணாத பிராய்லர் கோழிகளும் கர்ம வினை போக்கும் ஜீவன்களாக இருப்பதால் அத்தகைய கோழிகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே என்பது சித்தர்கள் கூறும் அறிவுரை. இவ்வாறு பல்லாண்டுகள் பூமியில் அலைந்து திரிந்த மயில் வாகனம் இறுதியில் மயில்ரங்கத்தில் ஸ்ரீவராக விநாயகரைத் தொழுது தன்னுடைய அகம்பாவம் நீங்கிய நிலையில் மீண்டும் முருகப் பெருமானின் வாகனமாக அமையும் பேற்றைப் பெற்றது.
ரங்கம், அரங்கம் என்றால் பிரத்யேகமான, சிறப்பான என்று பொருள். விளையாட்டு அரங்கம் என்றால் விளையாடுவதற்காகவே சிறப்பாக அமைக்கப்பட்ட இடம் என்று பொருள். அதுபோல் மயில்ரங்கம் என்றால் மயில் வாகனம் தன்னுடைய அகம்பாவம் நீங்கி நிரந்தரமாக முருகப் பெருமானின் வாகனமாக அமையும் சிறப்பைப் பெற்ற திருத்தலம் என்று பொருளாகும். இவ்வாறு திருமகள் பெருமாளின் இதயத்தில் நிரந்தர இடத்தைப் பெற்று சிறப்பாகப் பொலியும் திருத்தலமே திருவரங்கம் என்னும் ஸ்ரீரங்கம் ஆகும்.


ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீமயூரநாதர் மயில்ரங்கம்
மயில்ரங்கம் திருத்தலத்தில் அரங்கேறிய மற்றோர் புராண வைபவமும் உண்டு.
இத்தகைய சிறப்பான மயில்ரங்கம் திருத்தலத்தில் இயற்றக் கூடிய ஒரு சிறப்பான வழிபாட்டைப் பற்றி சித்தர்கள் எடுத்துரைக்கிறார்கள். கரதளசுரகல வழிபாடு என்ற ஒரு அற்புத வழிபாடு மயில்ரங்கம் ஸ்ரீவராக விநாயக மூர்த்திக்கு உரியதாகும். கர தளம் என்றால் உள்ளங்கை தாமரை. சுர கலம் என்றால் மண் அகலில் ஊற்றிய பசு நெய். சுரர் என்றால் தேவர், கலம் என்றால் தேவர்கள் உறையும் கலமான பசுவிடமிருந்து பெறப்படும் நெய். எனவே கரதள சுரகல வழிபாடு என்பது மண் அகலில் பசு நெய்யை ஊற்றி அதை விரித்த உள்ளங்கையில் தாங்கியவாறே ஸ்ரீவராக விநாயகரை வலம் வந்து வணங்குவதாகும். நெய் மட்டும் ஊற்றிய அகல் விளக்கை கையில் தாங்கி விநாயகரை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து வணங்கி பின்னர் அந்த தீபத்தை விநாயகருக்கு ஏற்றி வழிபடலாம். ஏற்றிய தீபத்தை கையில் தாங்கி விநாயகரை பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குவதும் ஏற்புடையதே. அவரவர் வயது, நம்பிக்கையைப் பொறுத்து எத்தனை பிரதட்சிணங்கள் வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். ஒவ்வொரு பிரதட்சிணத்திற்கும் ஒரு அகல் தீபத்தை ஏற்றிக் கொள்ளவும். இடது உள்ளங்கை மேல் ஒரு சிறு பருத்தி துணி அல்லது தாமரை இலை அல்லது பூவரசு இலையை வைத்து அதன் மேல் அகல் தாங்கிய வலது கையை வைத்து வலம் வரவும்.
பல திருத்தலங்களிலும் கையில் விளக்கை ஏந்திய பாவை விளக்கை பார்த்திருப்பீர்கள். இவை வெறும் உலோக உருவங்கள் கிடையாது. ஜீவ சக்தி உள்ள தேவதைகளே. பகலில் நடை சார்த்தும்போதும், இரவில் நடை சார்த்திய பின்னரும் இந்த பாவை விளக்குகள் உயிர் பெற்று எழுந்து விடும். அப்போது அவர்கள் கையில் உள்ள விளக்குகளில் தாமாகமவே தேவ ஜோதி தோன்றும். இந்த பாவை தீபத்திற்கு எண்ணெயோ, திரியோ தேவையில்லை. இந்த பாவை ஜோதியானது அந்தந்த திருத்தலங்களில் பக்தர்களால் ஏற்றப்பட்ட அனைத்து ஜோதிகளில் விளைந்த தோஷங்களையும் நிவர்த்தி செய்து அத்தலத்தில் தீபம் ஏற்றியவர்களுக்கு அவரவருக்குத் தகுதியான நல்வரங்களை அளித்து விடும். இந்த தீபத்தின் பெயரே கரதள சுரகல தீபமாகும். இந்த கரதள சுரகல தீபத்தை சாதாரண மக்களும் ஏற்றி வழிபடக் கூடிய ஒரே திருத்தலமே மயில்ரங்கம் திருத்தலமாகும்.
வழிபாட்டிற்குப் பின் இந்த பூவரசு இலைகளில் மசால்வடை தட்டி தானமாக அளிப்பதால் கிட்டும் பலன்கள் அமோகம், ஆச்சச்சரியம் ! தமிழ் விக்ரம ஆண்டு நிகழ்ந்த கார்த்திகை தீப வைபவத்தின்போது இவ்வாறு கரதள சுரகல ஜோதி சக்திகள் நிறைந்த பூவரச இலைகளில் மசால் வடை தயார் செய்து அருணா ஜோதியுடன் சேர்த்து அந்த அனுகிரக சக்திகளை பல்லாயிரம் மடங்காய்ப் பெருக்கி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த அடியார்களுக்கெல்லாம் மகேசன் சேவையாக அர்ப்பணித்த பெருமை சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்களையே சேரும். மயில்ரங்க திருத்தல இறைவனின் திருநாமம் ஸ்ரீமயூரநாதர் என்பதாகும். அன்னையோ ஸ்ரீமங்கள நாயகி. உலகப் புகழ்பெற்ற இந்த மயில்ரங்கம் திருத்தலத்தில் ஏற்றப்படும் ஜோதியின் மற்றோர் சிறப்பு என்னவென்றால் மேற்கூறிய முறையில் ஏற்றப்படும் கரதள சுரகல தீபத்தில் அகலாக அருள்பவள் அகிலாண்டேஸ்வரியான ஸ்ரீமங்கள நாயகி. அதில் ஜோதியாகப் பிரகாசிப்பவரே ஸ்ரீமயூரநாதர் பெருமானாவார். எனவே சக்தியையும் சிவனையுமே ஒருவர் தன் கரதலத்தில் தாங்கும் பேறு கிட்டுமென்றால் இதைவிடச் சிறந்த ஒரு பேற்றை ஒரு சாதாரண கலியுக மனிதன் பெற முடியுமா ?



ஸ்ரீகாசி விஸ்வநாதர், மயில்ரங்கம்
மயில்ரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமயூரநாதர் மிகவும் அபூர்வமான அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடிய வரப்பிரசாத மூர்த்தியாவார். மயில்கள் இனத்தில் இனப்பெருக்கம் என்பது உடலுறவு மூலம் நிகழ்வது கிடையாது. மயூர நேத்ர பரிபாலனம் என்பதாக மயில்கள் ஒன்றையொன்று அன்புடன் பார்த்துக் கொள்ள அதனால் இனப் பெருக்கம் ஏற்படுகிறது. இவ்வாறு கண்களால் பார்த்தே சிருஷ்டியை ஏற்படுத்துவதே மயூர நேத்ர பரிபாலனம் என்பதாகும். நாமறிந்த அணிமா மகிமா போன்ற சித்திகள் மிகவும் அடிப்படையானவையே. சித்திகளோ ஆயிரமாயிரம். இத்தகைய மயூர நேத்ர பரிபாலன சித்தியைப் பெற்ற மகான்கள் இன்றும் நம்மிடையே உண்டு. ஆனால், இத்தகைய மகான்கள் தாங்கள் பெற்றிருக்கும் சித்திகளை எவருக்கும் வெளிக்காட்டாது தங்களை நாடி வரும் நல்லவர்களுக்கு வேண்டியவற்றை கைமாறு கருதாது அருளி சமுதாயத்தில் அமைதிப் பூங்காவை தோற்றுவிக்கிறார்கள். இவ்வாறு மயூர பரிபாலன சித்தியை அளிக்கக் கூடிய அனுகிரக மூர்த்தியே ஸ்ரீமயூரநாதர் ஆவார். இந்த சித்தி உடையவர்கள் தங்கள் பார்வை மூலமாகவே எதனையும் உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதனை எத்தனை மடங்கு வேண்டுமானாலும் விருத்தியும் செய்து விடலாம். உதாரணமாக, இத்தகைய சித்தி பெற்ற ஒரு மகான் ஒரு நெல் மணியை உற்றுப் பார்த்தால் அங்கு ஆயிரம், கோடி நெல் மணிகள் கூட தோன்றி விடும். ஒரு தென்னை மரத்தை ஒரு விநாடி பார்த்தால் அங்கு அரை நொடியில் ஆயிரம் தென்னை மரங்கள் தோப்பாய் முளைத்து விடும். ஆனால் இது மிக மிக கவனமாக கையாள வேண்டிய சித்தியாக இருப்பதால் அரிதிலும் அரிதான சித்தர்கள் மட்டுமே ஸ்ரீமயூரநாதரால் இத்தகைய சித்திகளைப் பெறும் தகுதி உள்ளவர்கள் ஆகிறார்கள். உதாரணமாக, குழந்தையில்லாத ஒரு தம்பதியர்க்கு ஒரு மகான் தன்னுடைய பார்வை தீட்சண்யத்தால் குழந்தையை அளிக்கிறார் என்று வெளிப்படையாகத் தெரிவித்தால் அது சமுதாயத்தில் எத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தி விடும். எனவேதான் கற்பனைக்கெட்டாத வளம் பெற்ற மயூரநாதர் திருத்தலம் எவருமே அறியாத ஒரு சிறு தலமாக மறைந்துள்ளது. மயில்ரங்கம் திருத்தலத்தில் அபூர்வமாக வில்வ மர நிழலில் குடி கொண்டுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதரை வழிபட்டு பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு சம அளவில் எடுத்து வறுத்து அரைத்து பசும் பாலில் கலந்து இறைவனுக்குப் படைத்து தானமாக அளித்தலால் சந்ததிகள் இல்லாத குறைகள் தீரும். செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்ற திருமணத் தடங்கல்களும் எளிதில் நிவர்த்தியாகும்.
சாதாரண மக்கள் மயூர நேத்ர சித்தியைப் பெறுவது இயலாத காரியம் என்றாலும் மயில் வாகனம் உடைய முருகப் பெருமானை சஷ்டி விரதம் இருந்து வழிபடுவதும், சந்தான சக்தியை குருவருளாகப் பெற்றுத் தரும் உத்தம சற்குரு நாதர்களைச் சரணடைவதும், மயில்களுக்கு சோளம், கம்பு உணவளிப்பதும் குழந்தைப் பேற்றை அளிக்கும் அற்புத சாதனங்களாக மலருமே.



ஸ்ரீவிஸ்வ சந்தான வேதமூர்த்தி, மயில்ரங்கம்

இறைவனுக்கு விஸ்வநாதன் என்ற ஒரு நாமமும் உண்டு. அதாவது உலகம் அனைத்திற்கும் அவன் ஒருவனே தலைவன் என்று இதற்குப் பொருள். விநாயகப் பெருமாள் மாங்கனியைப் பெறுவதற்காக தன்னுடைய தாய் தந்தையரையே உலகமாகப் பாவித்து வலம் வந்தார் அல்லவா ? அதனால் விநாயகப் பெருமானைப் பார்த்தவாறு அமர்ந்த நிலையில் உள்ள மயில்ரங்க தட்சிணா மூர்த்தி விஸ்வ சந்தான வேத மூர்த்தி என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறார். மூல மூர்த்தியான ஸ்ரீமயூரநாதருக்கும் ஸ்ரீவராக விநாயக மூர்த்திக்கும் இடையே அமர்ந்து அருள் பாலிக்கிறார் ஸ்ரீவிஸ்வ சந்தான வேத மூர்த்தி. பொதுவாக வலது காலின் மேல் இடது காலை வைத்த நிலையில் முயலகனுடைய கோலம் இருக்கும். இங்கு இடது காலின் மேல் வலது காலை வைத்தவாறு முயலகனின் தோற்றம் அமைந்துள்ளது. இத்தகைய மூர்த்திகளை வழிபடுவதால் கணவன்மார்களுக்கு தங்களுடைய இறுதிக் காலம் வரை மனைவியினுடைய அன்பும் ஆதரவும் இருக்கும். மேலும் தங்கள் குழந்தைகளும் தங்களிடம் ஆதரவாக இருநது கடைசிக் காலம் வரை தங்கள் தேவைகளை மனம் கோணாமல் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் பெற்றோர்கள் இத்தல தட்சிணா மூர்த்தியை வணங்கி வயதான தம்பதிகளுக்கு கைத்தடி தானங்களை அளிப்பதாலும், கை வைத்த மர நாற்காலிகளை தானமாக அளித்தலாலும் நற்பலன் பெறுவார்கள். இளம் பிராயத்தில் வேதம் ஓதுதல், சந்தியா வந்தனம் போன்ற தங்கள் குல வழிபாடுகளை அலட்சியம் செய்தவர்களுக்கு இத்தல தட்சிணா மூர்த்தி உரிய பிராயசித்தங்களை அளிக்கவல்லவர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பச்சாம்பேட்டை வழியாக லால்குடி செல்லும் நகரப் பேருந்துகள் மட்டும் மயில்ரங்கம் வழியாகச் செல்லும்.



ஸ்ரீகொங்கி அம்மன் ஆலயம், மயில்ரங்கம்
கொங்கு என்றால் இளமை என்று பொருள். கொங்கி அம்மன் என்றால் என்றும் மாறாத இளமையை அளிக்கும் அம்மன் என்று பொருளாகும். முருகப் பெருமானை மணம் புரிந்த வள்ளியுடன் தொடர்புடைய தலமே ஸ்ரீகொங்கி அம்மன் ஆலயம் ஆகும். வள்ளியின் அன்புத் தோழியே சொக்கி என்பவள். முருகப் பெருமானை உயிருக்குயிராக காதலித்தவள். காதல் தியாகத்திற்கு எடுத்துக் காட்டாக இன்றும் பூமியில் விளங்கும் உத்தமி தெய்வமே சொக்கி ஆவாள். முருகப் பெருமானை காதலித்த வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்து கொள்ள வள்ளி உலவிய தினை வனத்தில் எழுந்தருளியபோது சொக்கியின் உண்மைக் காதலையும் உணர்ந்த முருகப் பெருமான் சொக்கியையும் திருமணம் புரிந்து கொள்ள தன் எண்ணத்தை தெரிவித்தபோது சொக்கி தன்னுடைய இளவரசியான வள்ளி விரும்பியவரைத் தானும் மணந்து கொள்ளுதல் முறையாகாது என்று உணர்ந்து தன்னுடைய காதலை முருகப் பெருமானின் திருப்பாதங்களில் அர்ப்பணித்து விட்டாள். அதனால் முருகப் பெருமானால் ஸ்ரீகொங்கி அம்மனாக பாராட்டப் பெற்றாள். எனவே காதலின் இலக்கணமே, தியாகத்தின் உயர் சின்னமே கொங்கி அம்மன் ஆவாள். நடப்பு கலியுலகில் பலரும் காதலித்தவனை கைப்பிடிக்க முடியாத நிலையில் தங்கள் காதலை கடைசி வரை வெளிக்காட்டாது மற்ற ஆண்களையும் மணம் புரிய விரும்பாமல் கன்னியாக இறுதிவரை காலத்தை கழித்து விட முடிவு செய்து விடுகிறார்கள். அவர்களே உண்மையில் நித்திய பத்தினிகள் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். அவர்களுடைய காதல் உடல் சம்பந்தம் பெறாததால் தாங்கள் வரித்த வணவன் இறந்து விட்டாலும் அவர்கள் என்றும் பத்தினி என்ற நிலையிலிருந்து இறங்குவது கிடையாது. அவர்கள் என்றும் பத்தினிகளே, பத்தினி தெய்வங்களே. அத்தகைய உயர்ந்த தேவிகளுக்கெல்லாம் உறுதுணையாய் நின்று அவர்களைக் காப்பவளே ஸ்ரீகொங்கி அம்மன் ஆவாள். காதலில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் அல்லாது அபலையான எந்த பெண்ணிற்கும் உதவத் தயாராக இருக்கும் கன்னித் தெய்வமே ஸ்ரீகொங்கி அம்மன் ஆவாள். எங்கிருந்து அழைத்தாலும் உடனே வந்து அருளும் பத்தினித் தெய்வமே ஸ்ரீகொங்கி அம்மன். இதுவரை இந்த பத்தினி தெய்வத்தைப் பற்றி அறியாவிட்டாலும் அறிந்த பின்னராவது இந்த அன்னையைத் தேடி நாடி பயன்பெறுங்கள்.



மாங்கல்ய தாரணம், மாலை மாற்றிக் கொள்ளுதல், மோதிரம் அணிவித்தல் இவ்வாறு திருமண பந்தங்கள் எத்தனையோ சம்பிரதாயங்களாக உருவெடுத்தாலும் எங்கு உண்மையான அன்பு நிலவுகிறதோ அந்த திருமண சம்பந்தத்திற்கு சாட்சியாக நிற்பதே இங்கு நீங்கள் காணும் ஆல வனமாகும். பார்ப்பதற்கு ஒரு சில ஆலமரங்களே இருப்பது போல் தோன்றினாலும் உண்மையில் இந்த வனத்தில் ஆயிரத்தெட்டு குகவள்ளி சாட்சிமூல ஆல மரங்கள் இருப்பதாக சித்தர்கள் உரைக்கின்றனர். குகன் வள்ளி திருமணத்திற்கு சாட்சியாக இருந்த இந்த ஆல வனம் இன்றும் உலகெங்கும் அன்பின் அடிப்படையில் அமையும் எல்லாத் திருமணங்களுக்கும் சாட்சி சொல்லும் என்பதே உண்மை. தகுந்த சாட்சிகள் இல்லாததால் தங்கள் சந்ததிகள் முறையான சொத்துக்களையோ பெற்றோர்களின் அரவணப்பையோ பெற முடியாதபோது எங்கிருந்து அவர்கள் வேண்டினாலும் அவர்களுக்கு உரிய சகாயத்தை செய்யக் கூடியவையும் இந்த குக வள்ளி சாட்சி மரங்களே. ஆலும் சாட்சி சொல்லும் அரசும் சாட்சி சொல்லும் குகன் வேலும் சாட்சி சொல்லும் என்பது சித்தர்கள் வாக்கு. இந்த உண்மையை அடிப்படையாக வைத்து அமைந்ததே, அரசு பத்திரம் பொய்க்கும் ஆனால் அரசு பத்திரம் பொய்க்காது என்ற வழக்கு. அதாவது அரசாங்க அலுவலகத்தில் உள்ள காகிதத்தில் எழுதிய சாட்சி பொய்த்து விடலாம், ஆனால் அரச மரப் பத்திரம் என்ற அரச இலை சாட்சியாக நின்ற திருமண பந்தம் ஒரு நாளும் பொய்க்காது.



ஸ்ரீகொங்கி அம்மன் ஆலயம், மயில்ரங்கம்
எந்த ஆன்மீகப் பாடமாக இருந்தாலும் அது ஏட்டுப் படிப்பாக இல்லாமல் அனுபவமாக மலரும்போதுதானே அதில் சுவையே ஏற்படுகிறது. இவ்வாறு முழு முதற் கடவுள், முழு முதற் பூதம் என்ற ஏட்டு வாக்கியங்களை சிறுவன் வெங்கடராமன் சுய அனுபவமாக உணர்ந்த திருத்தலமே மயில்ரங்கம் ஆலயமாகும். ஒரு முறை கோவணாண்டிப் பெரிவருடன் ஒரு சனிக் கிழமை அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்து விட்டு அன்று இரவு லால்குடி அருகில் உள்ள அரியூர் திருத்தலத்தில் தங்கியிருந்து மறுநாள் பிரம்ம முகூர்த்தத்திலேயே அங்கிருந்து புறப்பட்டு இருவரும் மயில்ரங்கத்திற்கு நடந்தே வந்தார்கள். அப்போது மயில்ரங்கத்திற்கு பஸ் வசதிகள் எதுவும் கிடையாது. எதுவும் சாப்பிடாமல் பத்து மைல்களுக்கு மேல் வேக வேகமாக பெரியவருடன் நடந்து வந்த களைப்பில் சிறுவன் வெங்கடராமன் ஸ்ரீவராக விநாயகரை தரிசனம் செய்தவாறே அந்த ஆலயத்தில் அமர்ந்து விட்டான். அப்போது கோயிலுக்கு மதில் சுவர்களோ, கதவோ கிடையாது. அப்போதுதான் சூரியன் உதயமாகி இருந்தது. லேசான பனியில் ஆதவனின் கிரணங்கள் சிறுவனுக்கு இதமாக இருந்தது. பசியை ஓரளவு மறந்து விட்டிருந்தான். விநாயகர் ஆலயம் நன்றாக கூட்டி பசுஞ் சாணத்தில் மெழுகி சுத்தமாக இருந்தது. ஒரு அழகான கோலமும் அந்த ஆலயத்தை அலங்கரித்திருந்தது. இதையெல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த சிறுவன் அடுத்த பார்த்த அற்புத காட்சியைக் கண்டு பிரமித்து தன்னையும் அறியாமல், “வாத்யாரே, இங்க பாரு, பிள்ளையார் பிள்ளையாரைத் தூக்கிட்டுப் போறாரு.“ என்று பெரிய குரலுடன் வாத்யாரிடம் சொன்னான். பெரியவரோ ஒன்றும் அறியாதவர் போல், “என்னடா உளர்ற ?“ என்று கேட்கவே, சிறுவன் குதூகலம் குறையாமல், “இங்கே பாரு வாத்யாரே, ஒரு பிள்ளையார் இன்னொரு பிள்ளையாரைத் தூக்கிண்டு போறார்,“ என்று மீண்டும் தான் கண்ட அதிசயத்தை வர்ணித்தான். சிறுவன் சுட்டிக் காட்டிய திசையில் அவன் குறிப்பிட்ட இடத்தில் ஒரு சிறு எறும்பு யாரோ முதல் நாள் இட்ட ஒரு அரிசி ரவையைத் தூக்கிக் கொண்டு சென்று கொண்டு இருந்தது. பெரியவர் சிரித்துக் கொண்டு, “எங்கேடா ராஜா, பிள்ளையார். பிள்ளையார் அங்கேதானே சமத்தா ஒக்காந்துண்டு இருக்கார், இங்கே எங்கே வந்தார். இங்க ஒரு எறும்புதானே போய்க்கிட்டு இருக்கு,“ என்றார்.
சிறுவன் மீண்டும் அந்த எறும்பைப் பார்த்து, “இல்ல, வாத்யாரே, இப்போ எறும்பு மாதிரி தெரியுதே, ஆனால் நான் பார்த்தபோது ஒரு பிள்ளையார் இன்னொரு பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு போவதுபோல்தான் தெரிந்தது,“ என்று கூறினான். சிறுவனுக்கு குழப்பம் அதிகரித்தது. தான் ஒரு விநாடிக்கு முன் கண்ட காட்சி எப்படி பொய்யாகப் போனது என்று புரியவில்லை. அப்போதுதான் பெரியவர் சிறுவன் வெங்கடராமனுக்கு இந்த சிருஷ்டி விளக்கத்தை அளித்தார். சித்தர்கள் மட்டுமே அறிந்த அந்த தெய்வீகப் பொக்கிஷத்தை உலக மக்களின் நன்மைக்காக இங்கு அளிக்கிறோம்.
பிரம்மா ஜீவன்களை முதன் முதலில் சிருஷ்டி செய்யும்போது என்ன உருவில் உருவாக்குகிறார். இது பற்றி எவரும் ஆத்ம விசாரம் செய்து பார்ப்பதில்லை. மனிதனை மனிதனாகவும், யானையை யானையாகவும்தானே சிருஷ்டி செய்வார். இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கத் தோன்றும். உண்மையில் பிரம்மா முதலில் ஒரு ஜீவனை சிருஷ்டி செய்யும்போது களிமண்ணால் பிள்ளையார் உருவில்தான் படைக்கிறார் என்பதே சித்தர்கள் கூறும் சிருஷ்டி ரகசியம். அதனால்தான் பிள்ளையாரை முழு முதற் கடவுள் என்றும் மண்ணை முழு முதற் பூதம் என்றும் கூறுகிறோம். இந்த ரகசியத்தை தன் குருவருளால் சிறுவன் வெங்கடராமன் தனது கண்களாலேயே பார்த்து ஆனந்தம் அடைந்த திருத்தலமே மயில்ரங்கமாகும்.
முதலில் களிமண்ணில் உருவான ஜீவனுக்கு தன்னுடைய பிறவியின் கர்ம வினையைப் பொறுத்து மற்ற அவயவங்கள் அமைகின்றன. உதாரணமாக, அது எறும்பு பிறவி என்றால் அதற்கு ஏற்ற ஆறு கால்களும், பறவை என்றால் இறக்கைகளும் பின்னர் தோன்றுகின்றன என்பதே சிருஷடி இரகசியமாகும். எனவே இந்த பூலோகத்தில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளும் வழிபட வேண்டிய ஆதிதிருத்தலம் மயில்ரங்கம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது அல்லவா ? தங்கள் தலை எழுத்தை, விதியை அறிந்து கொள்ள எண்ணுபவர்களும், நாடி ஜோதிடர்களும் அவசியம் வழிபட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீவராக விநாயகர் ஆவார்.
சற்று நேரம் கழித்து ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு கிராமத்தான் அங்கு வந்து சேர்ந்தான். நன்றாக உழைத்து வாழ்ந்தது அவன் உடலைப் பார்த்தால் தெரிந்தது. பரட்டைத் தலை, அழுக்கேறிய உடல், ஒடுங்கிய வயிறு, சாப்பாட்டையே பார்க்காததுபோல் அவனுடைய முகம் சோர்வாக இருந்தது. மிகவும் தளர்ச்சியுடன் சிறுவன் அருகில் அமர்ந்த அவன் பெரியவரைப் பார்த்து ஏதாவது கேட்கலாமா என்று சிந்தனையுடன் அவரைப் பார்த்தான். பெரியவரோ அவனை கண்டு கொள்ளாமல் வேறோ எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தார். சிறிது நேரம் கழித்து ஒரு முடிவுக்கு வந்தவனாய் அவன், “சாமி, சாப்பிட்டு ரெண்டு நாள் ஆச்சி. ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா ?“ என்றான். சிறுவனுக்கு அவன் நிலை மிகவும் பரிதாபமாக இருந்தது. பெரியவர் அவனைப் பார்த்து, “ ... ம், என்ன நைனா பன்றது. நல்லா ஒழச்ச காலத்துல யாருக்கும் நீ சோறு போடல, கைல காசு இருந்தப்ப எச்சில் கைல கூட காக்கா ஓட்டல. இப்ப பசிக்குதுன்னா என்ன பண்ண முடியும். சட்டில இருந்தாதான ஆப்பைல வரும் ...“ வந்தவன் தலையைக் குனிந்து கொண்டான். அனைத்தும் அறிந்தவரல்லவா பெரியவர். அவர் கூறும் சத்திய வார்த்தைகளை எதிர்த்து என்ன சொல்ல இயலும். சிறிது நேர அமைதிக்குப் பின்னர் பெரியவர் தொடர்ந்தார், “சரி சரி, சாமிய நம்பி வந்தவனை சாமி கை உட மாட்டார். நாங்களும் காலேலிருந்து சாப்பிடல. இந்த பொடியனுக்காக நாலு இட்லி வச்சிருக்கேன். அதை வேண்டுமானால் நீ சாப்பிடு,“ என்று சொல்லி சிறுவனிடம் கைசாடை காட்டினார். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெரியவர் காட்டிய இடத்தில் சிறுவன் பார்த்தான். தன் கண்களையே தன்னால் நம்ப முடியவில்லை. எங்கு ஒரு எறும்பைப் பார்த்தானோ, வெறுந் தரையான அந்த இடத்தில் ஒரு பெரிய பொட்டலம் இருந்தது. இதுவரை தான் காணாத பொட்டலம் திடீரென்று அங்கு எப்படி வந்தது என்ற ஆச்சரியத்தை தன் விழிகளில் நிறைத்து பெரியவரைப் பார்த்தான். ஆனால், பெரியவரோ அவன் ஆச்சரியப் பார்வையை தன் குரு பார்வையால் ஒரு புறம் ஒதுக்கி விட்டு, பொட்டலத்தைப் பிரித்துப் பார் என்ற நேத்ர கட்டளையை இட்டார். சிறுவன் பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்தான். அதில் பெரிய பத்து இட்லிகளும் சிறிது கார சட்னியும் இருந்தன. பெரியவர் அந்த இட்லிகளை அங்கு வந்தவனிடம் கொடுக்கும்படி சாடை காட்டினார். யாருக்கு எதைக் கொடுத்தாலும் ஏதாவது இறை துதியையோ குறைந்த பட்சம் காயத்ரீ மந்திரத்தையாவது ஓதியே ஒரு பொருளைக் கொடுக்க வேண்டும் என்று கோவணாண்டி கண்டிப்பாக கூறியிருந்ததால் சிறுவன்
ஓம் பாஸ்கராய வித்மஹே வராக பாத சேவகாய தீமஹி
தந்நோ அருண ப்ரசோதாயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதி அந்த இட்லிகளை அங்கு வந்தவனிடம் அளித்தான்.
சிறுவன் ஓதிய காயத்ரீ மந்திரத்தின் வரலாறு என்ன என்பதை தெரிந்து கொள்வோமா ? பெரியவரும் சிறுவனும் மயில்ரங்கம் திருத்தலத்தை அடைந்தபோது பொழுது புலர்ந்து சற்று நேரம் ஆகி இருந்தது. சூரிய பகவான் தன்னுடைய குளிர்ந்த அருட் கிரணங்களால் ஸ்ரீவராக விநாயகப் பெருமானின் பாதங்களுக்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்த பாஸ்கர பூஜை வைபவத்தை தன் சற்குருவான கோவணாண்டிப் பெரிவருடன் சேர்ந்து கண்டு களித்தான். அதற்கு சற்று நேரத்திற்கு முன்தான் சிறுவனுக்கு வழக்கம்போல் கோப எரிமலை தோன்றி வெடித்திருந்தது. விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்திலே எழுப்பி விட்ட பெரியவர் ஒரு சிங்கிள் சாயா கூட வாங்கித் தராமல் தன்னை இவ்வளவு தூரம் நடையோ நடை என்று நடக்க வைக்கிறாரே என்று உள்ளூர குமுறிக் கொண்டிருந்தான். ஆனால், சூரிய பகவானின் பூஜையில் தன்னை மறந்த சிறுவனுக்கு பெரியவரின் கருண மழையைப் பற்றி இப்போது புரிந்து கொள்ளவே அவன் மௌனமானான். சற்றே காலம் தாமதித்திருந்தாலும் அந்த அற்புத அருண பூஜையை தரிசனம் செய்திருக்க முடியாது அல்லவா ? மேலும் மயில்ரங்கத்தில் சூரிய பகவான் இயற்றும் பாத பூஜையின் விசேஷ அம்சம் என்னவென்றால் பாஸ்கர பூஜை நிகழும் திருத்தலங்களில் எல்லாம் சிவலிங்க மூர்த்திக்கோ அல்லது அம்பாள் மூர்த்திகளுக்கோதான் சூரிய பூஜை நிகழும். ஆனால், மயில்ரங்கம் திருத்தலத்தில் ஸ்ரீவராக விநாயகருக்கு மட்டுமே இந்த பூஜையை சூரிய பகவான் நிறைவேற்றுகிறார். விநாயக மூர்த்தியைப் போல மூலவர் ஸ்ரீமயூர நாதரும் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருந்தாலும் தனயனுக்கு சிறப்பளிப்பதற்காக தந்தை தன் கீர்த்தியை இத்தலத்தில் மறைத்துக் கொண்டு விட்டார். இந்த சூரிய பூஜையின் அனுகிரக சக்தியைப் பெற உதவுவதே சிவகுருமங்கள கந்தவர்வா அளித்த காயத்ரீ மந்திரமாகும்.
அங்கு வந்தவன் இட்லியைப் பெற்ற மறு விநாடியே, வாய்க்கு ஒரு இட்லியாக அனைத்து இட்லிகளையும் தின்று தீர்த்து விட்டான். “எத்தனை நாள் பசியோ ?“ என்று ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன். கடைசி இட்லியை அந்த ஏழை சாப்பிட்டபோது அவனுக்கு விக்கல் ஏற்பட்டு விட்டது. சிறுவன் உடனே எழுந்து அவனுக்கு தண்ணீர் கொண்டு வர நினைத்தான். பெரியவர் சிறுவனின் எண்ணத்தைக் கண்ணிமைக்கும் நேரத்தில் புரிந்து கொண்டதால் அவனை வேண்டாமென்று தன் பார்வையால் தடுத்து நிறுத்தி விட்டார். பெரியவர் அந்த ஏழையைப் பார்த்து, “என்னப்பா, விக்குதா ? அந்தோ அந்த வாய்க்கால்ல போய் தண்ணி குடுச்சுக்கோ,“ என்று அருகில் ஓடிய வாய்க்காலைக் காட்டினார். வந்தவன் வேகமாக விக்கலுடன் அந்த வாய்க்காலை நோக்கிச் சென்று விட்டான். உத்தம குருமார்களின் தரிசனத்தை இத்தனை நிமிடம் நொடிகள்தான் பெற வேண்டும் என்ற கணக்கு உண்டு அல்லவா ? அது முடிந்து விட்டதால் பெரியவரே ஒரு சூழ்நிலையை உருவாக்கி அந்த ஏழையை அங்கிருந்து அனுப்பி விட்டார் என்பதை சிறுவன் தன்னுடைய ஆத்ம விசாரம் மூலம் உணர்ந்து கொண்டான். பெரியவர் தொடர்ந்தார், “டேய் இந்த பத்து இட்லியோட இங்கு வந்தவனோட பூலோக கணக்கு முடிஞ்சிடுச்சு,“. சிறுவன் திடுக்கிட்டு பெரிவரைப் பார்த்தான். பெரியவர் அளித்த விளக்கம் இதோ.
அங்கு வந்த ஏழை ஒரு விவசாயி. நல்ல உழைப்பாளி. நன்றாக உழைத்து நிறைய சம்பாதித்தான். எவருக்கும் ஒரு பைசா கொடுத்தது கிடையாது. தான தர்மம் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் எவருக்கும் மனதால் கூட தீங்கு நினைத்ததோ, எவர் பொருள் மேல் சிறிதளவும் ஆசைப்பட்டதோ கிடையாது. ஒரு முறை இந்த விநாயகர் கோயிலில் அமர்ந்து தான் கொண்டு வந்த இட்லியை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்து எழுந்தபோது அவன் கையிலிருந்து சிறிது இட்லி கீழே சிந்த அதை ஒரு எறும்பு கௌவிக் கொண்டு சென்று விட்டது. பெரியவர் இந்த கணக்கை அறிந்ததால் அங்கு வந்த ஏழையினுடைய பித்ருக்களிடம் பேசி விநாயகர் அருளால் எப்போதோ அவன் அளித்த ஒரு சிறு இட்லி துண்டை பித்ரு பிரசாதமாக மாற்றி ஒருவேளை அந்த ஏழை வயிறார உண்பதற்கு ஏற்பாடு செய்தார். அவ்வளவுதான் அவனுக்கு பித்ருக்கள் அளிக்க வேண்டிய பாக்கி. சிறுவன் தன் கையால் அவனுக்கு குடிநீர் அளிக்க வேண்டிய பாக்கி கிடையாது. அதனால்தான் அதைப் பெரியவர் தடுத்து நிறுத்தி விட்டார். மேலும் வெங்கடராமன் சிறுவன் என்றாலும் அவன் கையால் வாங்கும் தீர்த்தத்துக்கு விலை மதிப்பே கிடையாது என்பது தற்போது நாம் அறிந்துள்ள இரகசியம் அல்லவா ?
எப்போதோ தன்னை அறியாமல் ஒருவன் அளித்த ஒரு சிறு இட்லி துண்டிற்கே பெரியவர் கையால் பத்து இட்லி கிடைக்கிறது என்றால் பெரியவருடனே சதா சர்வ காலமும் சுற்றும் சிறுவனுக்கு பெரியவர் என்னெவெல்லாம் அளிப்பார். இதைச் சிறுவன் நினைத்தானோ இல்லையோ கட்டாயம் இந்த நிகழ்ச்சியை அறியும் அன்பர்கள் மனதில் எழும் கேள்விக்கு விடையளிக்கிறார் சிவகுருமங்கள கந்தர்வா.
பஞ்ச பூதங்களின் வித்தை அறிந்த எவனும் மண்ணைப் பொன்னாக்கலாம். வாசி யோக வித்தையால் வானில் பறக்கலாம். ஆனால் பரோபகார சகாய சித்தி என்று ஒரு சித்தி உண்டு. சித்தர்களின் ஏகபோக உரிமையே இந்த பரோபகார சகாய சித்தியாகும். குண்டலினி யோகத்தில் சஹஸ்ராரத்தில் நின்று பார்க்கும் மகான்களுக்குக் கூட இந்த சித்தி கண்ணுக்குப் புலனாகாது என்பார் இடியாப்ப ஈசன். இந்த பரோபகார சகாய சித்தியை சிறுவன் வெங்கடராமன் குரு பிரசாதமாக பெற்ற தலமே மயில்ரங்கம் திருத்தலமாகும். கோடி கோடி யுகங்கள் தவம் செய்தாலும் ஒருவர் மற்றொருவர் மனதை மாற்ற முடியாது. ஒருவரின் அடிப்படை குணத்தை யாராலும் மாற்ற முடியாது. அதை மாற்ற நாங்கள் முயற்சி செய்வதும் கிடையாது என்பார் சற்குரு வெங்கடராமன் அவர்கள். ஆனால் பிறருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ண விதையை ஒருவர் மனதில் ஊன்றுவதே பரோபகார சகாய சித்தி. இந்த சித்தி கைவரப் பெற்றவரே சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். சற்குருவை தரிசனம் செய்த அனைவரும் தங்கள் வாழ்நாளில் இதை கட்டாயம் உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்கள் தொடர்ந்து சத்சங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிறருக்கு கொடுக்க வேண்டும், கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வாழ்கிறார்கள், வாழ்வார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இதுவே பரோபகார சகாய சித்தி விளைவிக்கும் அற்புதம்.
சிறுவனிடமிருந்து இட்லி பிரசாதம் பெற்ற ஏழையைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்த சிறுவன் மனதில் பல கேள்விகள் முளைத்தன. இப்போது அந்த ஏழை ஏற்ற பிரசாதம் பித்ரு பிரசாதமா, விநாயகப் பெருமான் அளித்த இறை பிரசாதமா இல்லை தன் கோவணாண்டியின் மகிமையால் தோன்றிய குரு பிரசாதமா ? அந்த எண்ணங்களில் மூழ்கிய சிறுவனை பெரியவரின், “ஓம்“ தொனி இழுத்தது. ஆமாம் பெரியவர்தான் யாருக்கோ ஓம் என்று வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். சிறுவன் ஆச்சரியத்துடன் பார்த்தான். பெரியவர் தானே வலிய சென்று யாருக்காவது வணக்கம் தெரிவித்தால் அதில் ஏதாவது தெய்வீக சிறப்பு இருக்கும் என்று தன்னுடைய முந்தைய அனுபவங்களின் மூலம் உணர்ந்து கொண்டிருந்ததால் கவனமாக அந்நிகழ்ச்சியை கவனிக்கலானான் சிறுவன். பெரியவருடன் சிறுவன் மயில்ரங்கம் திருத்தலத்தை அடைந்தபோது அத்திருக்கோயிலை யாரோ சுத்தப்படுத்தி கூட்டிப் பெருக்கி பசுஞ் சாணம் இட்டு மெழுகி மாக்கோலத்தால் அலங்கரித்திருப்பதைக் கண்டான். சுற்றும் முற்றும் பார்த்தபோது சற்று தள்ளி ஒரு மூதாட்டி அந்த திருப்பணியை நிறைவேற்றியதுபோல் தோன்றியது. அங்கு நடந்திருந்த வேலைகளைப் பார்த்தால் எப்படியும் விடியற்காலை மூன்று மணிக்கு ஆரம்பித்திருந்தால்தான் அவ்வளவு திருப்பணிகளையும் சிறப்பாக நிறைவேற்ற முடியும் என்று சிறுவன் கணக்குப் போட்டுப் பார்த்தான். அந்த மூதாட்டி தன் வேலைகளை முடித்து விட்டு கோயிலுக்கு வெளியே சென்று கொண்டிருந்தபோதுதான் பெரியவர் அந்த மூதாட்டிக்கு வணக்கம் தெரிவித்ததை சிறுவன் உணர்ந்தான். மூதாட்டியும் அருகில் வந்து பெரியவருக்கு இரு கரங்களையும் கூப்பி அன்புடன் தன்னுடைய பதில் வணக்கத்தைத் தெரிவித்தாள். பெரியவர் அன்பொழுக அவள் நலம் விசாரித்தார்.
“இந்த சாமி பேரு என்ன, ஆத்தா ?“
“ ... ம் இந்த சாமி பேரு சாமி. அதான் தெரியும்.“
மூதாட்டியின் கள்ளம்கபடமற்ற வார்த்தைகள் சிறுவனைக் கவர்ந்தன.
“சரி போகட்டும். உன் பிள்ளைகள், வீட்டுக்காரர் எல்லாம் எங்கே ?“
“எனக்கு எல்லாம் இந்த சாமிதான். அறுபது வருஷமா இந்த சாமியத்தான் சுத்தி சுத்தி வந்துகிட்டிருக்கேன்.“
“ரொம்ப சந்தோஷம் ... ஆமா ஒனக்கு ஏதாவது குறை இருந்தா சொல்லு. ஏன் பிள்ளையாண்டான் பெரிய பணக்கார பிள்ளை. எது வேணுமானாலும் ஒனக்கு வாங்கித் தர்றேன்.“
சிறுவனைக் காட்டி பெரியவர் இந்த வார்த்தைகளைக் கூறியதும் சிறுவன் தன்னுடைய ஓட்டை பாக்கெட்டை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். சிறுவனுக்கு இப்போது பசி எடுக்க ஆரம்பித்து விட்டதால் சற்று முன் எங்கிருந்தோ இட்லி பார்சல் வந்ததுபோல் தன்னுடைய பாக்கெட்டில் பெரியவர் ஏதாவது தின்பண்டத்தை வரவழைத்திருக்க மாட்டாரா என்ற சிறு நப்பாசை. வழக்கம்போல் அது ஓட்டைப் பாக்கெட்டாக, காலிப் பாக்கெட்டாகவே இருந்தது. சிறுவன் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான்.
மூதாட்டி, “சாமி எனக்கு ஒன்னும் வாணாம். கடைசி வரைக்கும் இந்த சாமிக்காக தேஞ்சா போதும்.“
மூதாட்டியின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் பிரமித்து விட்டான். பெரியவரிடம் வரும் எத்தனையோ போலி ஆசாமிகளின் வெற்றுப் பேச்சைக் கேட்ட சிறுவனுக்கு மூதாட்டியின் வார்த்தைகளில் சத்தியம் மிளிர்வதைக் கண்டு அதிசயித்தான. வெகுநாட்களுக்குப் பின் சத்தியத்தை தரிசனம் செய்த சிறுவன் அந்த சத்தியத்தின் சுவையை உணர்ந்து நிறைந்தான். பசி மறந்து போயிற்று, அது மறைந்து போனதே.
“சரி ஆத்தா, நீ வேணானு சொன்னாலும் பிள்ளையார் பிரசாதத்தை ஒனக்கு கொடுக்கனும்னு எனக்கு மெத்த மேல உத்தரவு வந்திருச்சு. அதை இந்த கிழவன் செய்துதான் தீரனும். மறுக்காம வாங்கிக்க,“ என்று கூறி ஒரு அழகான ஜாங்கிரியை சிறுவனிடம் கொடுத்து அந்த பாட்டியிடம் தரும்படி சைகை காட்டினார் பெரியவர். சிறுவன் ஜாங்கிரியைப் பார்த்தான். ஆரஞ்சு வண்ணத்தில் உதய வெயிலில் ஜொலித்தது. இல்லை அவன் கண்களுக்குத்தான் அப்படித் தோன்றியதோ ? மூதாட்டியின் அருகில் சென்ற சிறுவன் அவளை நன்றாக கவனித்துப் பார்த்தான். தொன்னூறைத் தாண்டிய வயது. சுருக்கம் விழுந்த சருமம். எண்ணெய் பார்க்காத தலை. பஞ்சு போன்ற தலை முடி. நெற்றியில் பிரகாசித்த மூன்று திருநீற்றுக் கீற்றுகள். குழி விழுந்த ஆனால் ஒளி வீசும் கண்கள். முழங்கால் வரை உயர்ந்து நின்ற வெண் பனி போன்ற சேலை. ரவிக்கை அணியாத உடம்பில் சேலையை சுற்றி மூடி இடுப்பில் செருகி இருந்தாள். சிறுவனுக்கு சட்டென காரைக்கால் அம்மையார் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பளிச்சிட்டது. வழக்கம்போல் ஜாங்கிரியைக் கையில் ஏந்தி காயத்ரீ மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தான். துர்கை காயத்ரியை மனதினுள் உச்சரிக்க நினைத்தாலும் அந்த காயத்ரீ வெளிவந்தபோது அது வேறுவிதமாக அமைந்தது கண்டு சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
சிறுவனின் மனதினுள் அவனையும் அறியாமல் ஒலித்த காயத்ரீ மந்திரம் இதுதான்.
ஓம் மகாதேவ்யை ச வித்மஹே குகசக்த்யை ச தீமஹி
தந்நோ கொங்கிதேவ்யை ப்ரசோதயாத்
சிறுவன் தன் மனதினுள் தனக்குப் புரியாத ஒரு காயத்ரீ மந்திரம் எப்படி ஒலித்தது என்று குழப்பத்திலிருந்து மீள்வதற்குள் அடுத்த ஆச்சரியத்தை அவன் எதிர்நோக்கும்படி ஆயிற்று. காயத்ரீ மந்திரத்தை ஓதிக் கொண்டு ஜாங்கிரியைப் பார்த்தபோது அவன் கண்கள் ஆச்சரியத்தால் விரிந்தன. சற்று முன்பு ஒரு பிள்ளையார் இன்னொரு பிள்ளையாரை தோளில் சுமந்து கொண்டு செல்வது போன்ற தரிசனத்தைக் கண்டான் அல்லவா ? இப்போது அதே தோற்றம் கொண்ட பிள்ளையார் மூர்த்திகள் ஆயிரக் கணக்காக அந்த ஜாங்கிரியை வியாபித்திருப்பதைக் கண்டான். அந்த அதிசயத்தில் தன்னையே இழந்த சிறுவனை இவ்வுலகிற்கு அழைத்து வந்தது பெரியவரின் குரல்.
“நைனா, அந்த ஜாங்கிரிய ஏண்டா அப்படி பார்க்கிறே. உட்டா நீயே தின்னுடுவ போலிருக்கே. உனக்கு வேணுன்னா பசிக்கு பரோட்டா வாங்கித் தர்றேன். அந்த ஜாங்கரியை ஆத்தாட்ட குடுத்துடு,“
பெரியவரின் கேலி வார்த்தைகளால் தன்னிலை அடைந்தான் சிறுவன். ஜாங்கிரியை மூதாட்டியின் கைகளில் அளித்தான். அந்த மூதாட்டி அதை மிகவும் மரியாதையுடன் பெற்றுக் கொண்டு இருவருக்கும் வணக்கம் செலுத்தி விட்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
ஆனால் சிறுவனின் மனமோ தான் தரிசனம் செய்த விநாயக மூர்த்திகளின் மீதே இலயித்திருந்தது. வெகு நாட்களாக சிறுவன் தான் பெரியவரிடம் கேட்க நினைத்த ஒரு கேள்விக்கு இப்போது விடை கிடைத்த ஒரு பரமானந்த நிலை அவனை முழுமையாக வியாபித்தது. ஒரு சாதாரண மனிதன் அளிக்கும் பிரசாதத்திற்கும் இறை பிரசாதத்திற்கும் சற்குருவின் பிரசாதத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன ? அந்த வேறுபாடு என்ன என்பதை சிறுவன் அன்றுதான் புரிந்து கொண்டான். நீங்கள் புரிந்து கொண்டீர்களா ?
இடியாப்ப ஈசனிடமிருந்து ஜாங்கிரி பிரசாதத்தை பெற்ற அந்த மூதாட்டி அருகில் உள்ள கொங்கி அம்மன் கோயிலில் உள்ள சப்த கன்னிகளில் ஒருவராக ஐக்கியம் அடைந்து விட்டாள். அந்த சப்த கன்னி யார் என்பதை நீங்களே ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்ளுங்கள். சிறுவன் வெங்கடராமன் மனதில் சுயம்புவாக எழுந்த காயத்ரீ மந்திரத்தின் உட்பொருள் இப்போது விளங்கி விட்டதல்லவா ?
மகான்கள் எது செய்தாலும் அதன் பின்னால் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் அல்லவா ? அதுபோல் இடியாப்ப ஈசன் அந்த மூதாட்டிக்கு ஜாங்கிரியை அளித்ததிலும் ஒரு அற்புத ஆன்மீக விளக்கம் இருக்கத்தான் இருக்கிறது. மயில்ரங்கம் திருத்தலத்தில் ஸ்ரீவிநாயகரை தரிசனம் செய்து பின்னர் ஸ்ரீவிஸ்வ சந்தான வேத மூர்த்தி, ஸ்ரீமுருகப் பெருமான், ஸ்ரீதுர்கை அம்மன், ஸ்ரீநந்தியெம்பெருமான், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீசண்டேஸ்வரர், ஸ்ரீமங்களாம்பிகை, ஸ்ரீமயூரநாதர் என்று ஒன்பது மூர்த்திகளையும் தரிசனம் செய்த பின்னர் அருகிலுள்ள ஸ்ரீகொங்கியம்மனை பத்தாவது இறை மூர்த்தி தரிசனமாகப் பெறுவதே ஜாங்கிரி தரிசனம், இடியாப்ப தரிசனம் என்று சித்தர்களால் அழைக்கப்படுகிறது. இத்தரிசனத்திற்குப் பின் ஜாங்கிரி தானம் வழிபாட்டின் பலன்களை பன்மடங்காகப் பெருக்கும்.

ஈசனை அம்மன் வணங்க அம்மனை நந்தி வணங்க நந்தியை அனைத்து தெய்வங்களும்
வணங்க அதை நாமும் வணங்க பலன் கோடி கோடியே !
திருவாரூர், காஞ்சிபுரம் இவை பிருத்வி பூதத்திற்குரித்தான தலங்கள். அது போல திருவெறும்பூர், திருப்புன்கூர் போன்றவையும் பிருத்வி பூத தலங்களே. இவ்வாறு பிருத்வி பூத சக்திகளை அளிக்கும் தலங்கள் பல இருப்பது போல் தோன்றுகிறது அல்லவா ? ஆனால், இந்த ஒவ்வொரு தலங்களும் பிருத்வி சக்தியின் வெவ்வேறு அம்சங்களுடன் தொடர்பு உடையவையே. இந்த ரகசியங்களை முழுமையாக உணர்ந்தவர்களே சித்தர்கள். பிருத்வி பூதத்திற்கும் காரிய சாதனைக்கும், மனத்தை ஒரு நிலைப்படுத்துவதற்கும், வெற்றியை ஈட்டுவதற்கும், அசுர சக்திகளை அழிப்பதற்கும் சம்பந்தங்கள் இருப்பதால் நற்காரியத்தில் மட்டுமே வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக இந்த காரிய சாதனை அம்சங்களை சித்தர்கள் மறைஞானமாக வைத்துள்ளனர். விஜய தசமி அன்று பராசக்தி சிவகும்பகத்தில் பிருத்வி பூதத்தில் பிராணனை நிலைநிறுத்தி மகிசாசுரனை சம்ஹாரம் செய்கிறாள். ஸ்ரீராமரும் இவ்வாறே சூரிய கலையில் பிருத்வி பூதத்தில் தன்னுடைய சுவாசத்தை நிலைநிறுத்தி ராவணனை சம்ஹாரம் செய்தார். எனவே வெற்றியைத் தரும் பிருத்வி பூத ஞானத்தைப் பெறுதல் அவசியம் என்பது புலனாகின்றது அல்லவா ? வாசி யோகத்தில் நாடி, கலை, பூதம் போன்ற பல ஞான நிலைகள் உண்டு. இதில் வாசி கலையில் பூத அறிவை சிறப்பாக பிருத்வி பூதம் பெற்ற ஞானத்தை அளிப்பதே மயில்ரங்கம் திருத்தலமாகும். பொதுவாக, நந்தி மூர்த்திகள் சுவாசத்திற்கு ஆதாரமான யோக சக்திகளை அளிப்பதால் தசமி திதிகளில் நந்தி மூர்த்திகளின் முன் வாசி யோகம் பயில்வதால் பூத அறிவு மேம்படும்.
இங்கு மற்றோர் சுவையான தத்துவத்தையும் கடவுளருளால் சித்தர்கள் விளக்குகிறார்கள். உஷ்ணம் என்றால் என்ன ? குளிர்ச்சி என்றால் என்ன ? சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதை யாராலும் விளக்க முடியாது என்று புரிய வரும். காரணம், நமக்கு ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு வெப்பம் என்பது அதிக உஷ்ண நிலை. ஆனால் செவ்வாய் கிரகத்தின் சாதாரண உஷ்ண நிலையே 5000 டிகிரியாக இருப்பதால் செவ்வாய் கிரக வாசிகளுக்கு அது குளிர்ச்சியான நிலையாகத் தோன்றும். எனவே வெப்பம், குளிர்ச்சி என்பதைப் பற்றி திட்டவட்டமாகக் கூற முடியாது. ஆனால், சித்தர்கள் கூறும் விளக்கம் என்ன தெரியுமா ? ராம நாமம் குளிர்ந்தால் அது பிருத்வி தத்துவமாகும். பிருத்வி தத்துவத்தில் ஒளி கூடினால் அது சிவ நாமமாகும் என்பதாகும். அதாவது ராம நாமத்தின் சக்திகள் மிகுந்தால் அங்கு பிருத்வி சக்திகள் தோன்றும். பிருத்வி தத்துவத்திற்கு ஒளி கூட்டினால் அதனால் விளைவது சிவநாம சக்தி என்பதே ஆகும். வால்மீகி தவம் இயற்றியபோது அவரைச் சுற்றி மண்புற்றுகள் எழுவதைக் கூட அவர் உணரவில்லை என்று சொல்கிறோம். உண்மையில் ராம நாம சக்தி மிகும்போது அங்கு மண் புற்றுகள் தோன்றும். அந்த மண் புற்றுகள் ஒளி மிகும்போது அவை சிவலிங்கங்களாக உருவாகின்றன. திருவெறும்பூர், திருப்புன்கூர் போன்றவை இவ்வாறு உருவான சிவலிங்கங்களே !! இந்த அற்புதத்தைத்தான் ராமபிரான் சாதித்தார். சூரிய கலையில் பிருத்வி பூதத்தில் ராமர் சுவாசம் நிலை கொண்டபோது ராவணனின் பிராணன் பிருத்வி பூதத்தில் நிலை கொண்டு செயலற்றுப் போய்விட்டது. அதனால்தான் சித்தர்கள் ராம பிரான் இராவணனைக் கொல்லவில்லை அவன் அகம்பாவத்தை மட்டும் நீக்கினார்கள் என்று அனைவரும் புரியும்வகையில் எடுத்துரைக்கிறார்கள். எனவே பிருத்வி சக்திகளின் நிலைக்களனாக அவதாரம் கொண்ட ராமர் ஒருவரைத் தவிர வேறு யாராலும் இராவணனை அழிக்க முடியாது என்று பெரியோர்கள் கூறுவதன் உள்ளர்த்தம் இதுவே ஆகும். நம் பெரியோர்கள், “அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில் மண்ணு,“ என்ற பழமொழியையும் கூறி வந்தார்கள். அதாவது ஒருவன் சிவ நாமத்தைச் சொல்ல வேண்டுமா அல்லது ராம நாமத்தைச் சொல்ல வேண்டுமா என்ற குழப்பம் ஏற்பட்டால் சிறிதளவு புற்று மண்ணை வாயில் போட்டு சுவைத்தால் அப்போது வாயில் உஷ்ணம் தோன்றினால் அவன் சொல்ல வேண்டியது ராம நாமம், புற்று மண் குளிர்ச்சி ஊட்டினால் அவன் சொல்ல வேண்டியது சிவ நாமம் என்பதாகும்.
என்ன ஒரு சிம்பிளோ சிம்பிளான ரெமடி !



ஸ்ரீமருதாந்த நாதேஸ்வரர் ஆலயம், ஆங்கரை, லால்குடி
பரோபகார சகாய சித்தியால் மட்டுமே மற்றவர்கள் உள்ளத்தில் தர்ம சிந்தனையை விதைக்க முடியும் என்பது மட்டுமல்லாமல் இந்த சித்தியால் சாதிக்கக் கூடிய இன்னும் எத்தனையோ அற்புதங்களும் உண்டு. இந்த சித்தியை கைவரப் பெற்றவர்கள் சகார ஜோதியை தங்கள் ஊனக் கண்களாலேயே தரிசிக்க முடியும். சகார ஜோதி என்பது என்ன ?
ஸ்ரீஇடியாப்ப சித்தருடைய தலை சொட்டையாக இருக்கும். அதாவது உச்சந்தலையில் சற்றும் முடி இல்லாது தலையைச் சுற்றிலும் ஒரு வளையமாக வெண்ணிற முடிகள் இருக்கும். அவ்வப்போது அவரே சிறுவனிடம், “தலையில் ஒன்னும் இல்லேடா. அது வெறும் சகாராதான்,“ என்று விளையாட்டாக கூறுவாராம். சிறுவனும் அதைப் பெரிதும் பொருட்படுத்தாமல் அவர் சஹாரா பாலைவனத்தைத்தான் கூறுகிறார் என்று சாதாரணமாக நினைப்பானாம். ஆனால், பெரியவரோடு ஒரு முறை சஹாரா பாலைவனத்திற்கே சென்றபோதுதான் சகாரா என்பது தான் நினைப்பது போல் வெறும் முடி இல்லாத சொட்டைத் தலை என்ற பொருள் கிடையாது. அது இந்தப் பிரபஞ்சத்தையே வலம் வரும் சகாரா ஜோதி என்பதைப் புரிந்து கொண்டானாம். ஆம், சகாரா என்பது தமிழ் வார்த்தையே.
எம்பெருமான் அகிலாண்ட கோடி பிரம்மாண் நாயகன் ஸ்ரீஇடியாப்ப சித்தருக்கு கௌஸ்துப மணி மாலையை தன்னுடைய அன்புப் பரிசாக அவதார மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவ கணங்கள், ரிஷிகள், சித்தர்கள், கோடி கோடி மகான்கள் முன்னிலையில் அளித்து கௌரவித்தார் அல்லவா ? அந்த கௌஸ்துப மணியின் சக்தி சஹஸ்ராரத்தில் ஒளிர்வதையே சகார ஜோதி என்று அழைக்கிறோம். இவ்வாறு சகார ஜோதியை சஹஸ்ராரத்தில் பெற்ற ஒரே உத்தமர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த பிரான் மட்டுமே. ராமர் கிருஷ்ணர் இருவருமே மகாவிஷ்ணுவின் அவதாரமாக இருந்தாலும் அவர்கள் லீலையிலோ என்னென்னவோ விநோதங்கள். அது போல இந்த சகார ஜோதியின் பல பரிமாண அம்சங்களை ஸ்ரீஇடியாப்ப ஈசன் தகுதி வாய்ந்த பல சீடர்களுக்கும் அளித்துள்ளார்கள். ஆனால், அவர்கள் அனைவருமே சித்த குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உங்களுக்கு சொல்லாமலே விளங்கும்.
இந்த சகார ஜோதியின் ஒரு அம்சமாக விளங்குவதே மருதாந்த நாதமாகும். பௌர்ணமி கிரணங்கள், மருதவாண வீணை இசை, மாதவ தென்றல் இந்த மூன்று தெய்வீக சக்திகளின் ஒருமித்த நாதமாக விளங்குவதே மருதாந்த நாதமாகும். மருதவாணர் என்ற சித்த குலத்தைச் சேர்ந்த சித்தர்கள் குறித்த பௌர்ணமி நாட்களில் திருஅண்ணாமலையை வலம் வரும்போது அவர்கள் தங்களிடம் உள்ள மருதவாணம் என்ற வீணையில் மீட்டும் நாதமே மருதவாணமாகும். தென்றல் காற்று என்பது பொதுவாக தெற்கு நோக்கி வீசும் காற்று. இதில் மொத்தம் 88000 வகைகள் உண்டு. இந்த தென்றலில் ஒரு வகையே மாதவ தென்றல் என்பதாகும். வடக்கு நோக்கி பாயும் ஆறுகளுக்கு சிறப்பான தெய்வீக சக்திகள் அமைந்திருப்பது போல தெற்கு நோக்கி வீசும் தென்றல் காற்றிற்கு அற்புத ஆன்மீக சக்திகள் உண்டு. இவ்வாறு பௌர்ணமி இரவில் மருதவாண சித்தர்கள் இசைக்கும் மருத வாண இசையில் கலந்து வீசும் தென்றல் காற்றில் தோன்றுவதே மருதாந்த நாதமாகும். இந்த மருதாந்த நாதத்தை ஈர்க்கும் சக்தி 100 வருடங்களுக்கு மேல் வளர்ந்த மூங்கில்களுக்கும் தலவிருட்சங்களாக அமைந்த மூங்கில்களுக்கும் உண்டு. இங்கு ஒரு தெய்வீக இரகசியததை நாம் அறிந்த கொள்ள வேண்டும். திருக்கோயில்களில் உள்ள ஒரு மரமோ செடியோ ஒன்றிரண்டு வருடங்களோ வயதுடையதாக இருந்தாலும் அது காலம் கடந்த சுயம்பு சக்தியுடன் விளங்குவதாகும். அதன் வயதை மனிதக் கணக்கால் புரிந்து கொள்ள முடியாது. சீர்காழி, திருநின்றியூர், வெள்ளியங்கிரி போன்ற திருத்தலங்களில் உள்ள மூங்கில்களுக்கு இத்தகைய மருதாந்த நாத சக்திகளை ஈர்க்கும் சக்தி உண்டு. பொதுவாக திருஅண்ணாமலைக்கு தெற்கிலுள்ள திருத்தலங்கள் இத்தகைய மருதாந்த நாதத்தை ஈர்க்கும் தன்மை உடையன. சிறப்பாக லால்குடி அருகில் ஆங்கரையில் உள்ள ஸ்ரீமருதாந்த நாதேஸ்வரர் திருத்தலம் இந்த மருதாந்த நாதத்தை ஈர்க்கும் சக்தி பெற்ற தலமாகும். ஆங்கரை என்றால் மூங்கில் புதர் என்று பொருள். ஆங்கரை திருத்தலத்தில் கன்னி மூலையில் முற்காலத்தில் மூங்கில் புதர்கள் பெருகி இருந்தன. இந்த மருதாந்த நாதத்தில் இலயித்தவாறே இத்தல விநாயகர் அருளாட்சி செய்வதால் இவர் ஸ்ரீமருத விநாயகர் என்றே முற்காலத்தில் அழைக்கப்பட்டார்.



மருதாந்த நாதத்திற்கு உள்ள தனிச் சிறப்பு என்ன ? அமைதி, சாந்தம் என்பதை பூர்ணமாக அளிப்பதே மருதாந்த நாதத்தின் தன்னிகரற்ற தனிச் சிறப்பாகும். சுண்ணாம்புக் காலவாயில் அடைக்கப்பட்ட அப்பர் பெருமான் இந்த மருதாந்த நாதத்தில் எழுந்த அமைதியில் இலயித்துதான் இறைவனின் திருவடி நிழல் பெருமையை என்றும் வாழும் சிரஞ்சிவித்துவம் கொண்ட மாசில் வீணை தேவார துதியை இயற்றினார். மருதாந்த வீணை நாதமும், பௌர்ணமி ஒளிக் கிரணங்களும், மாதவ தென்றலும் இணைந்து விளங்குவதே ஈசனின் இணையடி நிழல் என்பது தற்போது புலனாகின்றது அல்லவா ? மாதவன் என்ற பெயருடையவர்கள் இயற்கையாகவே குரு நம்பிக்கை உடையவர்களாக இருப்பதால் அவர்கள் தெற்கு திசையில் அமைந்த வீடுகளில் குடியேறி நற்காரியங்களை நிறைவேற்றுவதாலும் தென் திசைக் கடவளான தட்சிணா மூர்த்தியை இஷ்ட தெய்வமாகக் கொண்டு வழிபடுதலாலும் அற்புத காரிய சித்திகளை வரமாகப் பெறுவார்கள்.
சஹாரா பாலைவனத்தில் பொலியும் சகார ஜோதியின் ஒரு அம்சமாக மருதாந்த ஜோதி அமைவதால் சகார ஜோதி தரிசனமும், மருதாந்த நாத ஜோதி தரிசனமும் எல்லையில்லா சாந்தத்தை அளிக்கிறது. இந்த சாந்த சக்தி வெறும் அமைதியை மட்டும் அளிப்பது கிடையாது. எல்லையில்லா ஆற்றலையும் அளிக்க வல்லதே சகார ஜோதி ஆகும். கழுதையை விட குதிரைக்கு சாந்த சக்தி அதிகம். அதனால்தான் குளத்திற்கு தண்ணீர் குடிக்க குதிரையை அழைத்துச் செல்லும்போது அதன் கண்களை கட்டி விடுவார்கள். காரணம் குளத்து நீரில் தன் நிழலைப் பார்க்கும் குதிரை, “ஆஹா, தண்ணீர் அருந்த வேறு ஒரு குதிரை வந்திருக்கிறதே, முதலில் அது தண்ணீரை குடிக்கட்டும் அதன் பின்னர் நாம் நீர் அருந்துவோம் என்று நினைத்து விட்டு நீர் அருந்தாமல் நின்று கொண்டே இருக்குமாம்,“. இந்த சாந்த சக்தி ஆற்றலாகப் பெருகும்போது அந்த வேகத்திற்கு முன் எதுவும் நிற்க முடியாது. வீரபாண்டிய கட்டைபொம்மனின் உடல் நோயை தீர்ப்பதற்காக ஒரு போர் வீரன் 600 மைல் வேகத்தில் குதிரையில் பயணம் செய்து மதுரைக்கு வந்தானாம். மனித கற்பனைக்கு எட்டாத இந்த ஆற்றலுக்கு அடிப்படையாக இருப்பதே அதன் சாந்த சக்தி. குதிரையை விடவும் சாந்தமும் அமைதியும் உடையது ஒட்டகம். சூரிய கிரணங்கள் மரங்கள் அடர்ந்த வனங்கள் வழியே பிரகாசிக்கும்போது அதன் ஒளி வெள்ளம்போல் பரந்து பரவுவது கிடையாது. பாலைவனத்தில் பிரகாசிக்கும் கிரணங்கள் தங்கு தடையின்றி பிரகாசிப்பதால் அங்கு சூரிய கிரண வெள்ளம் பெருகிப் பாய்வதால் அங்கு சகார சக்திகள் உற்பத்தியாவதால் பாலைவனங்களில் உலவும் ஒட்டகங்கள் இந்த சகார சக்திகளை ஈர்த்து தன்னிகரற்ற சாந்த சக்திகளுடன் பொலிகின்றன. இவ்வாறு பாலைவனத்தில் பொலியும் சகாரா சக்திகளை பெறும் முறையாக நபிகள் வெள்ளை பருத்தி துணியை தலையில் சுற்றி அதில் அரைஞாண் போல் கருப்புக் கயிற்றைச் சுற்றி அற்புத ஆதித்ய வழிபாட்டு முறையை உலகிற்கு அளித்தார். இதற்கு தந்திர யோகத்தில் சனி வான பனி வாலை என்று பெயர். அதனால்தான் பண்டைய பாலைவன வாசிகள் அற்புத நேத்ர சக்திகளுடன் துலங்கி ஜீவசக்திகளின் பெட்டகமாகவே திகழ்ந்தார்கள். பாலைவனத்தில் பொலியும் நேத்ர சக்திகள் உண்மையில் எதிர்காலத்தையும் எளிதில் காட்டக் கூடிய சக்தி பெற்றவையாகும். ராஜா விக்கிரமாதித்தன் அடிக்கடி வானவெளி மார்கமாகவே சகார பாலைவனத்திற்கு வந்து சகார ஜோதி தரிசன சக்திகளை அபரிமிதமாகப் பெற்றதால்தான் அவன் சகாரி என்றே அழைக்கப்பட்டான் என்பது ஒரு சிலரே அறிந்த ஆன்மீக இரகசியமாகும். இந்த சகார சக்தியால் அவன் குருவி, எறும்பு போன்ற ஜீவன்கள் பேசுவதைக் கூட கேட்டு சமுதாயத்திற்கு அற்புத சேவைகள் சாதித்தான். 600 மைல் வேகத்தில் சென்று சகார சாந்த சக்தியின் ஆற்றலை குதிரைகள் நிரூபணம் செய்தது போல் ஒட்டகம் எப்படி தன் சாந்த சக்தியை ஆற்றலாக வெளிப்படுத்துகிறது ? கால் படி ஒட்டகப் பாலை தர்ப்பணத்திற்குப் பின் தானம் அளித்தால் ஆறு தலைமுறைகளைச் சேர்ந்த பித்ருக்கள் நற்கதி அடைவார்களாம். இத்தகைய ஆன்மீக சக்தியை ஒரு சராசரி மனிதன் பெற வேண்டுமானால் அவன் பாலைவனத்தில் 600 வருடங்கள் இறை நாமத்தை ஓதியவாறே அலைந்து திரிய வேண்டியிருக்கும். ஊழ்வினையையும் ஓட்டக் கூடியது ஒட்டகப் பால்.



ஸ்ரீஆம்ரவனேஸ்வரர் திருத்தலம், திருமாந்துறை
மருதாந்த ஜோதி தரிசனத்தை குரு பிரசாதமாக ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசனிடமிருந்து பெற்ற விரல்விட்டு எண்ணக் கூடிய உத்தமர்களுள் நாத முனியும் ஒருவர் ஆவார். நாத முனியினுடைய முழுப் பெயர் மருதாந்த நாத முனி என்பதாகும். நாத முனியின் பேரனே ஆளவந்தார் என்ற பக்தர். இவர் ஒரு முறை கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள ஒரு மகானை காண்பதற்காகச் சென்றிருந்தார். அவருடைய திருமாமம் குருகை காவலன் என்பதாகும். குருகு என்றால் கொக்கு. கொக்கு போல் வெண்மையான தூய உள்ளத்தைக் கொண்டு மக்களுக்கெல்லாம் காவலாக நின்றதால் இது அவருடைய காரணப் பெயராக அமைந்தது. அவர் சதாசர்வ காலமும் பெருமாளின் அடியார்களான சங்கு சக்கரங்களை தியானித்து அதனால் அவர் பெற்ற காப்புச் சக்திகளை தனக்கென சிறிதும் சுயநலமாகப் பயன்படுத்தாது அனைத்தையும் மக்களுக்காக குறிப்பாக இறை நம்பிக்கை கொண்ட அடியார்களுக்கு அளித்து அற்புத மகேசன் சேவையை நிறைவேற்றி வந்தார். ஒரு ஓலைக் குடிசையில் வசித்து வந்த அவர் வீட்டில் ஒரு தட்டியை மட்டும் நிறுத்தி வைத்து அதன் பின்னால் எப்போதும் அமர்ந்து தியானத்தில் இலயித்திருப்பார். குருகை காவலனை தரிசனம் செய்ய வந்த ஆளவந்தார் அவர் தியானத்தில் இருப்பதை அறிந்து தட்டி அருகில் நின்று அவர் தியானம் நிறைவு பெறுவதற்காக காத்திருந்தார். வெகுநேரம் கழித்து தட்டிக்குப் பின்னால் இருந்து, “சொட்டையன் எவனாவது இங்கே வந்திருக்கிறானா ?“ என்று குரல் கேட்டது. நாதமுனி ஸ்ரீஇடியாப்ப சித்தரை குருவாகப் பெற்றிருந்ததால் அவர் பாரம்பரியமே சொட்டைப் பரம்பரை என்று அழைக்கப்பட்டது. மகானின் குரலைக் கேட்ட ஆளவந்தார், “சொட்டைக் குடும்பத்தைச் சேர்ந்த அடியேன்தான் உங்களைக் காண வந்திருக்கிறேன்,“ என்று கூறி அவர் முன் சென்று வணக்கம் செலுத்தினார். பின்னர், “சுவாமி, தட்டிக்குப் பின்னால் நின்ற அடியேன் சொட்டைப் பரம்பரையைச் சேர்ந்தவன் என்று தங்களுக்கு எப்படித் தெரியும் என்பதை தெரிந்து கொள்ளலாமா ?“ என்று மிகவும் வினயத்துடன் கேட்டார். அதற்கு குருகை காவலன், “செல்வங்களை வாரி வழங்கும் பேரெழில் நங்கை லட்சுமி தேவி அருகில் வந்தால் கூட அவளை சற்றும் சட்டை செய்யாத பெருமாள் என் தோள்களை அழுத்தி தட்டிக்கு வெளியே யாராவது தெரிகிறார்களா என்பதற்காக எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். சொட்டைப் பாரம்பரிய அடியார்களைத் தவிர வேறு எவருக்கும் இத்தகைய பெருமாள் பக்தி கிடையாது. அதனால்தான் சொட்டையன் எவனாவது வந்திருக்கிறானா என்று கேட்டேன்,“ என்று பதில் அளித்தாராம்.
ஆமாம், பெருமாள் எதற்காக குருகைக் காவலனின் தோளை அழுத்தி தட்டியை எட்டிப் பார்த்தார். குருகை காவலன் சதா சர்வ காலமும் சங்கு சக்கரங்களையே தியானித்து வந்ததால் அவை குருகை காவலனின் பக்திப் பெருக்கால் அவர் தோள்களின் மேல் விஸ்வ ரூபம் எடுத்துக் கொண்டு பெருமாளையே மறைத்துக் கொண்டு நின்றனவாம். பெருமாள் தம் திருக்கரங்களால் அந்த விஸ்வரூப சக்திகளை அழுத்தி சகஜ நிலைக்கு கொண்டு வந்தால்தான் தட்டிக்குப் பின் இருக்கும் ஆளவந்தாரையே காண இயலும். இங்கு பக்தியில் விஞ்சியவர் யார் ?
தட்டிக்குப் பின் நின்ற ஆளவந்தாரா ?
தட்டியைத் தாண்டிப் போக முடியாமல் பெருமாளை பக்தி வலையில் பிடித்த குருகை காவலரா ?
ஆளவந்தாரின் குருவான மணம் கொண்ட மாதவன் என்று சித்தர்களால் புகழப்பட்ட மணக்கால் நம்பியா ?
இல்லை சொட்டை பரம்பரையின் காவலர் கும்பமுனியா ?
அது அந்த பெருமாளுக்கே வெளிச்சம்.
தெய்வீகத்தில் சாதிக்க முடியாதது என்று எதுவுமே இல்லை என்று நம் சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். வடக்கும் தெற்கும் எங்காவது சந்திக்குமா, சந்திக்காது. ஆனால், தெய்வீகத்தில் அதுவும் நடக்கும். வடக்கு திசையில் பாயும் காயத்ரீ நதியில் விஸ்தார யோகம் பூண்டு பெருமாள் பக்தியை உலகுக்கு உணர்த்திய மணக்கால் நம்பியும் தெற்கு நோக்கி வீசும் மாதவ தென்றல் சக்தியை உலகிற்கு உணர்த்திய நாத முனியும் சொட்டையின் வாரிசுகளே !!
ஓம் ஸ்ரீசர்வஸ்ரீ சாக்த பரபிரம்ம மகரிஷி மகேசாய கௌஸ்துப புருஷாய இடியாப்ப சித்த ஈச மகராஜ் கீ ஜெய் !
திருவேங்கடத்துறை கும்பமுனிப் பரம்பரை சற்குரு நாராயணா சரணம் சரணம் சரணம் !



ஸ்ரீநந்தி மூர்த்தி ஆங்கரை
சிறுவன் வெங்கடராமன் கோவணாண்டிப் பெரியவருடன் எத்தனையோ முறை திருஅண்ணாமலையை வலம் வந்திருக்கிறான். சதுரகிரி மலைக்கு ஒரு சில முறையே யாத்திரை சென்று வந்தான். ஆனால், வெள்ளியங்கிரி மலைக்கோ ஒரே ஒரு முறைதான் பெரியவர் சிறுவனை அழைத்துச் சென்றார். அந்த யாத்திரையில் இருவரும் பாதி மலைவரை ஏறியிருப்பார்கள். நள்ளிரவு நேரம். பொதுவாக இரவு நேரத்தில் பெரியவர் பயணம் செய்வதில்லை என்றாலும் திருஅண்ணாமலை, வெள்ளியங்கிரி போன்றவை இதற்கு விலக்காக அமைந்த தலங்கள். கடுமையான குளிர் கை கால்கள் வெடவெடக்க சிறுவன் பெரியவர் பின்னால் வழக்கம்போல் ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்தான். பல இடங்களில் பாறைகள் வழுக்கி விடுவது போன்ற நிலைமை ஏற்படும்போது பெரியவர் அதை பெரிதாக கண்டு கொள்ளாவிட்டாலும் அவ்வப்போது முக்கியமான இடங்களில் அவன் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தன்னுடனேயே அணைத்துக் கொண்டு அழைத்துக் கொண்டு சென்று விடுவார். அதனால் சில சமயம் சாதாரண பாறைகளை விட வழுக்கும் பாறைகளே பெட்டர் என்று சிறுவன் நினைப்பதும் உண்டு. அப்போது திடீரென சிறுவன் அதுவரை அனுபவித்திராத ஒரு அற்புத மணத்துடன் தென்றல் வீச அதைத் தொடர்ந்து மழையும் பெய்ய ஆரம்பித்து விட்டது. ஆனால், அது என்ன மழை ? சந்தன மழை. வாழ்க்கையில் முதன் முதலாக சந்தன மழையைக் கண்ட சிறுவனின் குதூகலத்திற்கு எல்லையே இல்லை. “வாத்யாரே, என்ன இது, இப்படி ஒரு அற்புதமான சந்தன மழையை நான் பார்த்ததே கிடையாதே. ரொம்ப அதிசயமாக இருக்கிறதே,“ என்றான். பெரியவர் வழக்கம்போல் சிறுவனின் வானளாவிய சந்தோஷத்தை சற்றும் சட்டை செய்யாது, “அது ஒன்னுமில்ல, ராஜா, எவனோ ஒரு மகான் வர்றான் போலருக்கு. அதுனால சாமி அவனுக்கு சந்தன மழையை பெய்ய வச்சு வரவேற்பு கொடுக்கிறாரு, அவ்வளவுதான்,“ என்றார். சிறுவனுக்கு ஆச்சரியம் மேலும் பெருகியது. பொதுவாக, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் மகான்கள் கிரிவலம் வரும்போது வருண பகவானே மகிழ்ந்து அவர்களை வரவேற்க தென்றல் காற்றையும் அமுத மழையையும் அனுப்புவது வழக்கம். இங்கு சுவாமியே சந்தன மழையை பொழிவிக்கிறார் என்றால் அத்தகைய பெருமைக்கு உடைய மகான் யாராக இருப்பார் ? அவராக இருப்பாரா, இவராக இருப்பாரா என்று கோவணாண்டி தனக்கு ஏற்கனவே தெரிவித்த அற்புதமான சித்தர்கள், மகான்களைப் பற்றி எல்லாம் மூளையைப் போட்டு கசக்கி யோசித்துக் கொண்டிருந்தான். அந்த சந்தன மழையில் மற்றோர் அதிசயம் என்னவென்றால் சாதாரணமாக கடுங்குளிராக இருக்கும்போது ஒரு துளி மழை நீர் உடம்பில் பட்டால் போதும் உடம்பு முழுவதும் உடனே விறைத்து விடும். அத்தகைய அனுபவங்களை எல்லாம் சிறுவன் தன்னுடைய அமர்நாத் யாத்திரையின் போது அனுபவித்து இருக்கிறான். ஆனால், இப்போது கடுங்குளிருடன் சேர்ந்து கொண்டு காற்றும் வீசி அத்தோடு மழையும் பெய்யும்போது குளிர் சிறிதும் தெரியவில்லை. மேலும் அந்த சந்தன மழைத் துளிகள் உடம்பின் மேல் படும்போது ஸ்ரீவாத்யார் வார்த்தைகளில் மேகத்தை எடுத்து அதை இதழ்களாகப் பிரித்து உடம்பின் மேல் பொழிந்தால் என்ன ஒரு மென்மை தோன்றுமோ அந்த அளவிற்கு ரோஜா இதழ்கள் போன்ற மென்மை தோன்றியதாம். சிறுவன் நன்றாக கண்களை விரித்து தொலை தூரம் முன்னால், பின்னால், பக்கவாட்டில் எல்லாம் கவனித்துப் பார்த்தான். எங்கும் மனித சஞ்சாரமே இல்லை. பெரியவரையும் சிறுவனையும் தவிர வேறு எவருமே சிறுவனுடைய கண்ணுக்குத் தென்படவில்லை. சில சமயங்களில் யோகிகளும் சித்தர்களும் பறவைகள், மான்கள் போன்ற வடிவிலும் வருவது உண்டு. ஒரு வேளை அப்படி ஏதாவது வித்தியாசமான விலங்குகளோ பறவைகளோ கண்ணில் படுகின்றதா என்றும் கழுத்தை நாலா பக்கங்களிலும் திருப்பி திருப்பி பார்த்தான். ஊஹூம் .. எதுவும் தென்படவில்லை. அவ்வப்போது வாய் பேசாமல் மௌனமாக பெரியவரைப் பார்ப்பான். அவரோ வானத்தைப் பார்த்தபடி ஏதோ கைகளால் சைகை காட்டிப் பேசிக் கொண்டு இருந்தார். பெரியவர் இப்படி கைசாடையால் பேசினால் அது மெத்தை மேல் உள்ளவர்களிடம் ஏதோ முக்கியமான தகவல்களைப் பரிமாறிக் கொண்டு இருக்கிறார் என்று தன்னுடைய முந்தைய அனுபவங்களின் மூலம் தெரிந்து கொண்டு இருந்ததால் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வழியெங்கும் விழியை ஓட்டித் தன் தேடலைத் தொடர்ந்து கொண்டு இருந்தான் சிறுவன். மார்கண்டேயர், அகத்தியர், பிருகு மகரிஷி போன்ற யுகங்கள் கடந்து நிற்கும் அற்புத மகரிஷிகளின் தரிசனங்களை எல்லாம் பெற்றுத் தந்த நம்முடைய கோவணாண்டி ஏன் இப்போது மட்டும் பாராமுகமாக இருக்கிறார் என்று சிறுவனுக்குப் புரியவில்லை.
இருவரும் வெள்ளியங்கிரி ஈசனை தரிசனம் செய்த பின்னர் மலை அடிவாரத்தை அடையும் வரை ஒரு ஈ, எறும்பைக் கூட சிறுவன் காணவில்லை. பெரியவரும் இது பற்றி மூச்சே விடவில்லை. சிறுவன் அதன் பின்னர் பல முறை அந்த வெள்ளியங்கிரி மகானைப் பற்றி கேட்கும்போதெல்லாம் பெரியவர் வேண்டுமென்றே பேச்சை மாற்றி விடுவார். பின்னாளில் சிறுவன் வெங்கடராமன் குருமங்கள கந்தர்வாவாக உயர்ந்தபோதுதான் அவர் தன்னுடைய 48வது வயதில் இந்த இரகசியத்தை உணர்ந்து கொண்டாராம், வெள்ளியங்கிரி மலைக்கு சிறுவனுடன் வந்த இடியாப்ப சித்தனுக்குத்தான் சுவாமி சந்தன மழையை வரவழைத்தான் என்ற இரகசியத்தை. அதுவும் நேரடியாக இடியாப்ப சித்தர் இதை தெரிவிக்கவில்லை. எவர் ஒருவர் கௌஸ்துப மணி மாலை அணிந்திருக்கிறாரோ அவர் வெள்ளியங்கிரி மலைக்கு வரும்போது அவருக்கு ஈசன் சந்தன மழையை அனுப்பி வரவேற்பான் என்பது வெள்ளியங்கிரி மலை மகாத்மியம் !
அப்போதுதான் ஸ்ரீவாத்யாருக்கு மற்றோர் இரகசியமும் புரிந்தது. பெரியவருடன் சிறுவன் வெள்ளியங்கிரிக்கு சென்ற நாள் பூரண அமாவாசை தினம். ஆனால், வெள்ளியங்கிரி மலையெங்கும் பகல் போல் வெளிச்சம் பிரகாசித்தது. ஆனால் அதைப் பற்றி சற்றும் சிறுவன் நினைக்க முடியாத அளவிற்கு பெரியவரின் லீலா விநோதம் அமைந்து விட்டது. கௌஸ்துப மணி இரகசியம் ஸ்ரீவாத்யாருக்கு தெரிய வந்தபோதுதான் வெள்ளியங்கிரியை நிறைத்த ஜோதி இடியாப்ப சித்த ஈசனுடைய சஹஸ்ராரத்திலிருந்து எழுந்த சகாரா ஜோதி என்று உணர்ந்து கொண்டாராம். ஸ்ரீவாத்யார் அருகில் இருந்த அடியார்களிடம், “பாருங்க சார், குருவைப் பற்றிய ஒரு சின்ன விஷயத்தை தெரிந்து கொள்வதற்காக அடியேனுடைய 48வது வயது வரை காத்திருக்க வேண்டி வந்தது. ஏனென்றால் 48 என்பது குரு எண்.“ அப்போது அங்கிருந்த அடியார் ஒருவடைய மனதில், “21, 30 போன்றவையும் குரு எண்தானே ?“ என்ற கேள்வி முளைக்கவே அதையும் சிக்கென பிடித்த ஸ்ரீவாத்யார், “எந்த தெய்வீக விஷயத்தையும் கேட்டவுடன் டக்கென்று எடுத்து கொடுத்து விட்டால். அதற்கு மதிப்பு இருக்காது, சார். எதை எப்போது எங்கு கொடுக்க வேண்டுமோ அதை அப்போது அங்கு கொடுத்தால்தான் எந்த ஒரு விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும் அதற்கு மதிப்பு. தெய்வீகத்தில் பொறுமை என்பது மிக மிக முக்கியம்.“
சற்று நேரம் கழித்து ஒரு அடியார், ”வாத்யாரே, நீங்கள் இவ்வாறு சிவபெருமானையே சற்குருவாகப் பெற்றிருந்தாலும் பின் ஏன் தங்களிடம் கனக குளிகையை அவர் கொடுத்தபோது அதை வேண்டாம் என்று மறுத்து விட்டீர்கள். அது குருவின் வார்த்தையை மீறியது ஆகாதா ?” என்று ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் வெளிவந்த ஒரு அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு கேட்டார். அதற்கு ஸ்ரீவாத்யார் மிகவும் பணிவுடன், ”அடியேனுடைய குருநாதன் நூறு முறை அந்த குளிகையை வச்சுக்கோடா, வச்சுக்கோடா என்று சொன்னாலும் நூறு முறையும் வேண்டாம் வாத்யாரே, வேண்டாம் வாத்யாரே என்று அடியேனை சொல்ல வைத்ததும் அந்த கோவணாண்டிதானே, சார்,“.
குருவின் திருவடி நிழலுக்கு நிகரேது !
புனித திருவடி பெருமைக்கு இணையேது !!



ஸ்ரீமருதாந்த நாதேஸ்வர லிங்க மூர்த்தி மருதாந்த நாத ஜோதியாக தரிசனம் அளிக்கும் அதிசய காட்சி !
எது எதையோ உலக அதிசயம் என்று நாடி ஓடும் மனிதர்கள் இந்த தெய்வீக அதிசயத்தை நாடி பயனடைவார்களாக !!
பௌர்ணமி கிரணங்களால் உருவாகும் மருதாந்த நாத ஜோதியை சித்தர்கள் மட்டுமே காண இயலும் என்றாலும் சாதாரண மனிதர்களுக்கும் அருள் புரிவதுதானே ஈசனின் பெருங்கருணை ? இதற்கு சித்தர்கள் கூறும் வழிபாட்டு முறையை இங்கு அளிக்கிறோம். பௌர்ணமி திதி ஆரம்பமாகும்போது ஆங்கரை ஸ்ரீமருதாந்த நாதேஸ்வர மூர்த்தியின் அனுகிரக சக்தியானது ஒலி வடிவில் இத்தலத்தில் பரிணமிக்கும். பௌர்ணமி திதி உச்சம் பெறும்போது சுமார் ஒரு நாழிகை நேரத்திற்கு இந்த மருதாந்த நாதமானது சபரி மலை மகர ஜோதியைப் போல் ஒளி வடிவம் பெற்று பிரகாசிக்கும். அவ்வாறு குருவருளால் பெற்ற மருதாந்த நாத ஜோதியைத்தான் இங்கு நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். குருவருளால் மட்டுமே பெறக் கூடியதே இத்தகைய ஜோதி தரிசனம் என்றாலும் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் முறையாக நிறைவேற்றி தூப தீப உபசாரங்களுடன் வழிபடுவதால் பௌர்ணமி திதியின் உச்ச நேரத்தில் இயற்றப்படும் தீப ஆராதனையில் இந்த மருதாந்த நாத ஜோதியை தரிசனம் செய்து அனைவரும் பயன் பெறலாம். இத்தல நந்தீஸ்வர மூர்த்தியின் முன் அமர்ந்து பௌர்ணமி திதி நேரம் முழுவதும் சூரிய நாடியில் சூரிய கலையில் சுவாசத்தை நிலை நிறுத்தி தியானம் செய்வதாலும் ஒலி வடிவாய் மிளிரும் மருதாந்த நாதத்தை கேட்டுப் பயன்பெறலாம்.
நந்திக்கு இடது புறம் வடக்கு நோக்கி அமர்ந்து இந்த தியானத்தைப் பயில்தல் நலம்.
மூங்கிலுக்கு மருதாந்த நாதத்தை ஈர்க்கும் சக்தி உள்ளதால் மூங்கில் கூடைகளில் ஆரஞ்சு பழங்களை நிரப்பி இறைவனுக்கு நைவேத்யமாகப் படைத்து தானமளித்தல் நலம். கடுமையான வியாதிகளிலிருந்து நிவாரணம் கிட்டும்.
கண் கோளாறுகள் அகலும்.
ஆற்றின் கரையில் இருப்பதுதானே துறை ? எனவே ஆங்கரை ஈசனை தரிசனம் செய்தபின் அருகிலுள்ள மாந்துறையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஆம்ரவனேஸ்வர பெருமானையும் வழிபடுதல் சிறப்பாகும். கரையும் துறையும் சேர கர்ம வினைகள் பொடியாகும் என்பது ஆன்றோர் வாக்கு.



ஸ்ரீதட்சிணா மூர்த்தி, ஆங்கரை சிவாலயம்
ஆங்கரை திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் தேவியே ஸ்ரீகாஞ்சனி அம்மன் ஆவாள். மீனாட்சி தேவியின் அன்னையே காஞ்சன மாலா. சிவபெருமானின் கழுத்தில் மாலையாக அலங்கரித்தவளே காஞ்சனி மாலா. தேவ லோகத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியதே அபராஞ்சித தங்கமாகும். இந்த அபராஞ்சித தங்கத்திற்கு விலை மதிப்பே கிடையாது. இவ்வாறு அபராஞ்சித தங்கத்தால் ஆனதே மதுரை பொற்றமரைக் குளத்தில் முளைத்த தாமரை. இந்த தாமரையின் ஒரு இதழால் அமெரிக்காவையே வாங்கி விடலாம் என்றால் அபராஞ்சித தங்கத்தை யாரால் மதிப்பிட முடியும் ? அபராஞ்சித தங்கத்திற்கே இத்தனை சிறப்பு என்றால் சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் காஞ்சனி என்ற தங்கத்திற்கு மதிப்பு என்னவோ ? நவநாத சித்தர்களே இந்த இரகசியம் அறிந்தவர்கள். பணத்தின் மதிப்பாக இதைக் கூறுவதை விட காலத்தின் அனுகிரக சக்தியாக நவநாத சித்தர்கள் காஞ்சனி தங்க மதிப்பை தெரிவிக்கிறார்கள். சிவபெருமானின் கழுத்தில் பிரகாசிக்கும் காஞ்சனி மாலையை பூலோக கணக்கில் ஒரே ஒரு விநாடி தரிசனம் செய்யும் ஒருவன் நூறு பிரம்மாவின் ஆயுளைப் பெறுவானாம் !
ஒரு பிரம்மாவின் ஆயுட்காலம் சுமார் 360 லட்சம் கோடி ஆண்டுகள். இத்தனை பெருமை வாய்ந்த காஞ்சனி மாலையே மீனாட்சி தேவியின் தாயாராக இந்த பூமியில் தோன்றியபோது அத்தேவியின் ஒரு அம்சமே இத்தலத்தில் அம்மனாக உருக் கொண்டது. மீனாட்சி தேவி கண்களால் ஆட்சி செய்தவள். அவள் குதிரையில் ஏறி பவனி வந்தால் மன்னாதி மன்னர்களும் நடுநடுங்கி வணங்கி நிற்பார்களாம். அவள் பவனி வந்த குதிரைக்கு வேண்டிய மருதாந்த சாந்த ஆற்றலை இத்தல இறைவனை வேண்டித்தான் மீனாட்சி பெற்றுத் தந்தாள் என்பது சித்தர்கள் கூறும் சுவையான இரகசியம்.
மற்ற தங்கத்திற்கு இல்லாத தனி சிறப்பு காஞ்சனி தங்கத்திற்கு உண்டு. இது கைலாயத்தை ஒத்த பனி போல் தூய வெண்மையுடன் சற்றே பொன்னிறம் கலந்திருக்கும் அதாவது பசும்பாலில் கலந்த மஞ்சள் நிறம் போல. ஆனால் கைலாய பனியை விடவும் குளிர்ச்சியானது. சனி பகவானின் அனுகிரகத்தை உடையது வைரம். அது வெயிலில் இருந்தாலும் குளிர்ச்சியுடனே இருக்கும். காரணம் அதன் அடிப்படை சக்தி சனீஸ்வர சக்திதானே. சனி என்றால் குளிர்ச்சி. அது போல காஞ்சனி தங்கம் எத்தகைய உஷ்ணமான சூழ்நிலையிலும் வெப்பம் அடையாமல் குளிர்ச்சியாகவே இருக்கும். இந்த மஞ்சள் கலந்த வெண்ணிறம் மருதாந்த ஜோதியை ஈர்க்கும் வல்லமை பெற்றதால் ஸ்ரீமருதாந்த நாதேஸ்வர சுவாமியின் சக்தியாக ஸ்ரீகாஞ்சனி அம்மன் எழுந்தருளி உள்ளாள். எனவே இறை மூர்த்திகளின் லீலை அனைத்துமே மக்களின் நன்மைக்காகவே. இதைப் புரிந்து கொண்டால் தெய்வீகத்தை முழுமையாகப் புரிந்து கொண்டதாக அர்த்தம்.
வெள்ளியில் செய்த மாங்கல்யத்திற்கு தங்க முலாம் பூசி சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்தலால் சாதாரண மக்களும் காஞ்சனி சக்தியையும் மருதாந்த ஜோதி சக்தியையும் பெறும் எளிமையான வழிபாடாக அமைகிறது. இதனால் குடும்ப ஒற்றுமை மேம்படும். திருமணத் தடங்கல்கள் விலகும். வியாழக் கிழமைகளிலும் புனர்பூச நட்சத்திர நாட்களிலும் சிறப்பாக புனர்பூச நட்சத்திரம் நான்காம் பாதம் அமையும் நேரங்களில் இத்தகைய மாங்கல்ய தானங்களால் கிட்டும் பலன்கள் அற்புதம்.
வெள்ளிக் கிழமை வளர் பஞ்சமி திதி கூடிய நாளில் இவ்வாறு வெள்ளி மாங்கல்யத்தை பருத்தி நூலில் கோர்த்து அம்மன் பாதத்தில் வைத்து அணிந்து கொள்வதால் கணவனுக்கு வரக் கூடிய எத்தகைய ஆபத்துகளும் அகால மரணமும் விலகும். ஜாதகம் பார்க்காது நிகழ்ந்த திருமணங்களில் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.



திருத்தவத்துறை, லால்குடி
பொதுவாக கால சர்ப்ப தோஷத்தில் பிறந்தவர்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்ற நம்பிக்கை உடையவர்களால் காட்டிக் கொடுக்கப்படுவார்கள் என்பது நியதி. இத்தகையோர் ஆங்கரை சிவத்தல மூர்த்திகளை வழிபடுதலால் உரிய பாதுகாப்பு பெறுவார்கள். இங்கு இறைவனுக்கு ஞாயிற்றுக் கிழமை ராகு கால நேரத்தில் கரும்புச் சாறு அபிஷேகம் இயற்றியும் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடைகள் அணிவித்தும் வழிபடுதல் சிறப்பாகும். இத்தல அம்பிகை கால சர்ப்ப தோஷங்களை நிவர்த்தி செய்யும் சிறப்புடன் விளங்குகிறாள். ஸ்ரீகாஞ்சனி தேவி இறைவனுக்குப் பின்புறம் வாயு மூலையில் எழுந்தருளி உள்ளாள். இத்தகைய அமைப்பு கணவன்மார்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் தகுந்த ஆலோசனைகளை அளித்து அவர்களைக் காக்கும் பெண்களின் தகுதியைக் குறிக்கும். முற்காலத்தில் புகைப்படங்கள் எடுக்கும்போது பெண்கள் கணவனின் பின்னால் அவன் இடது தோளைத் தொட்டவாறு படம் எடுத்து வீட்டில் மாட்டி வைப்பார்கள். இது மனைவியின் பொறுப்பை நினைவுபடுத்துவதாக அமைந்தது. பெண் புத்தி பின் புத்தி என்பார்கள். கணவன் அமர்ந்திருக்க அவன் பின்னால் நிற்கும் மனைவி பின்னால் நடக்கப் போவதை முன் கூட்டியே அறிந்து அவனைக் காப்பாள் என்பது இதன் கருத்து.
ரோமப் பேரரசன் ஜூலியஸ் சீசர் தன் நெருங்கிய நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இரகசிய கூட்டத்திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான். அவனைக் கண்ட மனைவி ராஜாவிற்கு உரிய வாளை அவன் எடுத்துச் செல்லாதது குறித்து கேட்டபோது அந்த ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள்அவனுடைய நண்பர்கள் என்பதால் தான் ஒன்றும் எடுத்துச் செல்லவில்லை என்று தெரிவித்தான். அதற்கு அவனுடைய புத்திசாலி மனைவி என்னதான் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தாலும் தன்னுடன் ஒரு குறுவாளையாவது (ஒரு சாண் நீளமுள்ள கத்தி) எடுத்துச் செல்வதே பாதுகாப்பானது என்று எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் மிகவும் சினம் கொண்டு அவ்வாறு கத்தியுடன் அவன் சென்றால் தன் ஆருயிர் நண்பர்களின் நட்பை அவமதிப்பது போலாகும் என்று கூறி விட்டு சென்று விட்டான். விதி வலியது. ஆலோசனைக் கூட்டம் நடக்கும் இடத்தில் தன் நண்பர்களைக் கண்ட அவன் மனம் கலவரம் அடைந்தது. காரணம் சீசரைத் தவிர அனைவரும் உடைவாளுடன் வந்திருந்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி அனைவரும் சீசர் மேல் பாய்ந்து அவனைத் தாக்கினர். தன்னுடைய அன்பு மனைவி கூறியபடி ஒரு குறுவாள் அவனிடம் இருந்திருந்தால் நூறு பேரைக் கூட சமாளிக்கக் கூடிய மாவீரன். ஆனால், தற்போது ஒன்றும் செய்ய இயலவில்லை. எவருடைய நட்பை உயிரினும் மேலாக மதித்தானோ அவர்களே எதிரிகளாய் மாற தான் மாறா அன்பு பூண்ட அருமை நண்பன் புரூட்டசே அவன் நெஞ்சில் வஞ்சத்தைப் பாய்ச்சிய வரலாறு அனைவரும் அறிந்ததே.



ஊட்டத்தூர்
ஆனால் ஒருவர் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருக்கிறதா கஜ கேசரி யோகம் இருக்கிறதா என்பதை எப்படி சரியாக அறிந்து கொள்வது. கால சர்ப்ப யோகம் ராகு கேதுக்களின் சஞ்சாரத்தைப் பொறுத்தும் கஜகேசரி யோகம் குரு சந்திரனின் சஞ்சாரத்தைப் பொறுத்தும் அமைவது. இவ்வாறு பிறக்கும்போது கிரகங்களின் இருப்பிடத்தை சரியாக கணித்தால்தானே ஜாதகம் வாழ்க்கையின் உண்மைப் படமாக, பாடமாக இருக்கும். இன்றைய உலகில் அருகில் இருக்கும் இருவருடைய எலக்ட்ரானிக் கடியாரங்களே வெவ்வேறு நேரத்தைக் காட்டும்போது எப்படி உண்மையான நேரத்தை நுணுக்கமாக கணிக்க முடியும் ? இவ்வாறு பிறக்கும் நேரத்தை ஜோதிட நுணுக்கங்களுடன் சரியாக கணிக்க இயலாது என்பதை நம் முன்னோர்கள் உணர்ந்து அதற்கு பரிகாரமாக அமைத்ததே கோயில்களின் மேல் விதானங்களில் அமைக்கப்பட்ட ராசி மண்டலங்கள். பெரும்பாலான பக்தர்கள் கோயில்களில் உள்ள இறை மூர்த்திகளின் பெயர்களையே சரிவர தெரிந்து கொள்ள முயற்சி செய்யாதபோது கோயில் விதானத்தை எத்தனை பேர் அண்ணாந்து பார்த்து இந்த ராசி மண்டலங்களை தரிசனம் செய்யப் போகிறார்கள் ? மனிதனின் இந்த குறைபாட்டையும் நன்கு உணர்ந்தவர்களே மகான்களும் சித்தர்களும். அதனால் அவர்கள் கோயில் கொடிக் கம்பத்திற்கு முன் மேல் விதானத்தில் இத்தகைய ராசி மண்டலங்களைப் பதித்து வைத்தார்கள். கோயில் தரிசனத்திற்காக வரும் அனைவரும் நிச்சயம் கொடிக் கம்பத்தைத் தாண்டித்தானே செல்ல வேண்டும்.
மகான்கள் உயிர்கள் மேல் எப்படியெல்லாம் அன்பைப் பொழிகிறார்கள் !
கொடிக் கம்பத்திற்கு முன் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நமஸ்காரம் செய்வதற்கு முன் இந்த ராசி மண்டலத்தின் கீழ் நின்று கொண்டு கண்களால் இந்த ராசி மண்டலம் அனைத்தையும் நன்றாகப் பார்த்து வணங்க வேண்டும். இதனால் கிடைக்கும் பலனை வேறு எங்கும் பெற முடியாது என்பதை நன்றாக நினைவில் கொள்ளவும். இரு பாதங்களை இணைத்து நேராக நின்று கொண்டு ராசி மண்டலத்தை அண்ணாந்து பார்த்து இருகைளையும் கூப்பி வணங்கும்போது ராசி மண்டல தேவதைகளின் அனுகிரக சக்திகள் நமது ஸ்வதிஸ்தான சக்கரத்தை அடைந்து அதை ஊக்குவிக்கின்றன. நமது உடலில் உள்ள சக்கரங்களை உண்மையில் எந்த சக்தியாலும் ஊக்குவிக்க முடியாது. ஆனால், அங்கு நடக்கும் விந்தைகளை மனித மொழியால் வர்ணிக்க இயலாது என்பதால் அந்த வார்த்தையை இங்கு நாம் பிரயோகம் செய்கிறோம். “ஸ்வ” என்றால் தனது என்று பொருள். அதாவது நாம் எங்கிருந்து வந்தோம், எப்படி வந்தோம் என்று நம்மைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் இந்த ஸ்வதிஸ்தான சக்கரம் விழித்தெழுவதால் நாம் தெரிந்து கொள்ளலாம். நாம் பிறந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்புகளை இந்த ராசி மண்டல தேவதைகள் சரியாக கிரகித்து நமக்குத் தேவையான அனுகிரக சக்திகளை அளித்து விடுகின்றன. பலருக்கும் தாங்கள் பிறந்த தேதி, நட்சத்திரம் போன்ற சரியான ஜாதக விவரங்கள் தெரிந்திருப்பதில்லை. அவர்கள் இந்த ராசி மண்டலத்தை தினமும் வழிபடுவதால் தங்கள் பிறப்பைப் பற்றிய உண்மையான விவரங்களை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டும். ராசி மண்டலத்தைப் பார்த்து நம்மை நாமே சுற்றி வரும் ஆத்ம பிரதட்சிணைத்தை வலது புறம் மூன்று முறையும் இடது புறம் மூன்று முறையும் நிறைவேற்றுவதே அனைவரும் நிறைவேற்றக் கூடிய ராசி மண்டல வழிபாடாகும்.
எதற்காக ஆறு பிரதட்சிணம் ?
ராசி மண்டல தேவதைகள், ராசி அதிபதி தேவதைகள், ப்ரத்யதிபதி தேவதைகள் தங்கள் பத்தினிகளுடன் ராசி மண்டலத்தில் எழுந்தருளி இருப்பதால் இவர்களை வணங்குவதற்காக குறைந்தது ஆறு ஆத்ம பிரதட்சணங்களை நிறைவேற்றுகிறோம். ராசி தேவதைகள் வேறு, ராசி மண்டல அதிபதி தேவதை வேறு. உதாரணமாக, மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் பகவானும், திருக்கோயிலினுள் நவகிரகமாக எழுந்தருளி இருக்கும் செவ்வாய் பகவானும் வேறு வேறு. பி.இ. படிதத அனைவரையும் எஞ்சினியர்கள் என்றாலும் சிவில் எஞ்சினியர், மெக்கானிக்கல் எஞ்சினியர், கம்ப்யூட்டர் எஞ்சினியர் என்பவர்கள் வேறு வேறுதானே. இவ்வாறு அதிபதி தேவதைகளும், ப்ரத்யதிபதி தேவதைகளும் வேறு வேறே. இதிலிருந்து இந்த ராசி மண்டல தேவதைகளை வேறு எங்கும் தரிசிக்க இயலாது என்பதை உணர்ந்தால்தான் இங்கு நிறைவேற்றும் பிரதட்சிண வழிபாட்டின் முக்கியத்துவம் புரியவரும்.
அபசவ்வியம், சவ்வியம் என்று இருவிதமான சுழற்சிகள் உண்டு. இதை ஆங்கிலத்தில் clockwise, anti-clockwise movements என்று அழைக்கிறோம். நமது வாழ்க்கை இந்த இரண்டு சுழற்சிகளின் அடிப்படையிலே அமைவதால் இந்த சுழற்சிகளின் அனுகிரகத்தை நாம் பெறுவதற்கும் இந்த ராசி மண்டல தேவதைகளே அருள்புரிவதால் இந்த இருவிதமான பிரதட்சிணங்களால் இவர்களை வழிபடுகிறோம். தண்ணீருக்கு இத்தகைய சக்திகளை ஈர்க்கும் சக்தி அதிகமாக உண்டு. அதனால்தான் நம் பெரியோர்கள் தயிரைப் பயன்படுத்தாது கடைந்த மோரை அருந்தி ஆரோக்கியத்தை வளர்த்தார்கள். தயிரைக் கடையும்போது நீர் ஊற்றி கடைவார்கள். அப்போது மத்தை இருபுறமும் சுழற்றி கடைவதால் அந்த சக்தியை தண்ணீர் மூலமாகப் பெற்ற மோர் அற்புத அபசவ்விய, சவ்விய சக்திகளுடன் திகழும். நாம் மிக்சியில் தயிரைக் கடையும்போது அதில் உள்ள மத்து ஒரு பக்கம் மட்டுமே சுழல்வதால் நமக்கு அரைகுறையான சவ்விய சக்திகளே கிட்டுகின்றன.
மதுரையில் அருள்புரியும் ஸ்ரீஅசாத்ய சாதக சரபேஸ்வர மூர்த்தி இத்தகைய இருசம இயக்க அனுகிரக சக்திகளை அளிக்கும் அறபுத மூர்த்தி ஆவார். கையால் மத்தில் கடைந்த வெண்ணெயை இவருக்குச் சாற்றி வழிபடுவதால் கிட்டும் பலன்களைப் பற்றி இப்போது உங்களுக்கு விவரிக்கத் தேவையில்லை. ஒரு பெயரிலேயே கோடி கோடி சக்திகளைப் படைப்பவர்களே சித்தர்கள். அசாத்ய சாதகர் என்றால் சாதிக்க முடியாததை சாதிப்பவர் என்பதோடு மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்திற்கெல்லாம் அவரே அதிபதி என்ற உண்மையையும் குறிக்கும் பெயராகவும் அது அமைகிறது.
சித்தர் குலம் வாழி !
சித்தர் குலச் செல்வங்கள் வாழி வாழியவே !!



திருவதிகை வீரட்டானம்
ஸ்ரீஅசாத்யசாதக சரபேஸ்வர மூர்த்திக்கு வெண்ணெய்க் காப்பு நிறைவேற்றியவுடன் வெண்ணெய் கடைந்த மோரில் சிறிது ஜீனி அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து தானமாக அளித்தலால் மூலம் போன்ற உஷ்ண நோய்களும், தோல் வியாதிகளும் நிவாரணம் பெறும். இதுவே கடைந்த மோரில் வெண்ணெய் எடுப்பது.
ஒரு முறை ஸ்ரீசத்ய சாய்பாபா சென்று கொண்டிருந்த கார் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. அருகில் பெட்ரோல் பங்க் எதுவும் கண்ணில் தென்படவில்லை. காரில் டிரைவரைத் தவிர வேறு யாரும் இல்லை. அந்நிலையில் பாபா வண்டியில் ஏதாவது தண்ணீர் இருக்கிறதா என்று கேட்கவே டிரைவர் காரில் உள்ள ப்ளாஸ்டிக் பக்கெட்டை எடுத்து அருகில் உள்ள குழாயிலிருந்து சிறிது நீரைப் பிடித்து கொண்டு வந்து பாபாவிடம் அளித்தான். பாபா அந்த நீருக்குள் தன் குரு விரலை சுழற்றி ஏதோ மந்திரங்கள் கூறி காரின் பெட்ரோல் டாங்கில் ஊற்றும்படிக் கூறினார். டிரைவரும் அவ்வாறே செய்யவே, வண்டியும் ஸ்டார்ட் ஆனது, புட்டபர்த்தி வரையில் பச்சைத் தண்ணீரிலேயே ஓடியது படகுக் கார்.
பச்சைத் தண்ணீர் கூட வேண்டாம் பழுத்த நம்பிக்கையே போதும் என்று நிரூபித்தவர் நமது சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள். ஒரு முறை திருஅண்ணாமலை அன்னதான கைங்கர்யத்தை முடித்து சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார் சற்குரு. அப்போது அவர் ஒரு சிகப்பு நிற பியட் கார் வைத்திருந்தார். அதன் பெயர் குட்டி கபாலி. ஸ்ரீவாத்யாரின் இருப்பிடமான மைலாப்பூரில் இருப்பவர் பெரிய கபாலி அல்லவா ? ஸ்ரீவாத்யார் பல்லாவரத்தை நெருங்கியபோது அவருடைய காரில் பெட்ரோல் தீர்ந்து போய் நடுரோட்டில் நின்று விட்டது. அவர் காருக்குப் பின்னால் பத்து பதினைந்து கார்கள் நின்று ஹாரன் ஒலிக்க ஆரம்பித்து விட்டன. ஸ்ரீவாத்யார் கையில் காசு வேறு கிடையாது. பெரும்பாலும் திருஅண்ணாமலை பௌர்ணமி அன்னதானத்திற்காக வரும் ஸ்ரீவாத்யார் திரும்பிச் செல்லும்போது கொண்டு வந்த பணம் முழுவதும் தீர்ந்த நிலையிலோ அல்லது இன்னும் கொடுக்க வேண்டிய பாக்கிகளோடுதான் திரும்புவது வழக்கம். அவர் விளையாட்டாக,“கோவணாண்டியோடு சுற்றும்போதுதான் ஓட்டைப் பாக்கெட் என்று கிடையாது, சார், அடியேன் என்றைக்கும் ஓட்டைப் பாக்கெட்தான்,“ என்று தன் காலிப் பைகளை நெருங்கிய அடியார்களுக்கு காட்டுவது உண்டு.
ஸ்ரீவாத்யார் ஒரு சில நொடிகள் யோசித்தார். பின்னர், இருகைகளையும் தலைக்கு மேல் கூப்பிக் கொண்டு, “கபாலி ! நீதான் காப்பாத்தனும்,“ என்றார். உடனே கார் ஸ்டார்ட் ஆகி விட்டது.
எந்த கபாலி மனசு வைத்தாரோ ?
மைலாப்பூர் வீட்டில் வந்து காரை நிறுத்தும் வரை வழியில் வேறு எங்குமே நிற்கவில்லை. “காரில் இருந்து இறங்கியவுடன் முதலில் அடியேன் தரையில் விழுந்து வணங்கி அடியேனின் மானத்தைக் காப்பாற்றியதற்காக குட்டி கபாலிக்கு நன்றி தெரிவித்தேன்,“ என்றார் ஸ்ரீவாத்யார்.



பெரும்பாலும் கோயில் திருத்தல பிரகாரங்களில் இத்தகைய ராசி மண்டலங்கள் அமைந்துள்ளதால் ஒவ்வொரு முறை பிரகார வலம் வரும்போதும் இந்த ராசி மண்டலத்தை தரிசனம் செய்தல் சிறப்பாகும். நீங்கள் ஒரு முறை பிரகாரத்தை வலம் வருவதற்கு ஆகும் அந்த பத்து, இருபது நிமிடத்தில் கூட அனைத்து கிரகங்களும் இடம் பெயர்ந்து விடும் அல்லவா ? நீங்கள் ஒவ்வொரு பிரகார பிரதட்சிணத்திற்குப் பின் இந்த ராசி மண்டலத்தை வழிபடும்போது கிரகங்களின் அப்போதைய நிலவர கோசார பலன்கள் கிட்டுகின்றன. இதுவும் ராசி மண்டல வழிபாட்டில் நிகழும் அற்புதமாகும். மேலும் இந்த ராசி மண்டலத்தை வழிபட்ட பின்னர் கோயிலுக்குள் சென்று நவகிரக தேவதைகளை வழிபடும்போது கிட்டும் பலன்கள் அபரிமிதமாகப் பெருகின்றன. உதாரணமாக கோயிலுக்கு உள்ளே நவகிரக மூர்த்திகள் அருளும் சக்திகளுள் ஒன்று காரகத்துவ சக்திகளாகும். அதாவது சூரிய பகவானின் காரகத்துவங்களில் ஒன்று கோதுமை. அதனால் நீங்கள் சூரிய பகவானை வழிபடும்போது அந்த காரக சக்தி மட்டுமே உங்களுக்கு கிட்டும். ஆனால், நீங்கள் ராசிமண்டலத்தை வழிபட்ட பின்னர் நவகிரக மூர்த்திகளை வழிபடுவதால் ராசி அதிபதி பலன், பாவாதிபதி பலன், கோசார பலன் இவைகளும் அனுகிரக சக்திகளாக கிட்டும். மேற்கொண்ட உதாரணத்தில் உங்களுக்கு கோதுமை உணவால் கிட்டும் ஆரோக்யம், கோதுமை வியாபாரத்தில் நீங்கள் அடையும் பலன், இந்த வருடம் கோதுமை வியாபாரத்தில் நீங்கள் சந்திக்கும் ஏற்ற இறக்கம் போன்ற அனுகிரக சக்திகளும் கிட்டும். இந்த ராசி மண்டலத்தை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் வழிபடுகிறீர்களோ அந்த அளவிற்கு இந்த ஜோதிட நுணுக்கங்களின் இரகசியங்கள் உங்களுக்கு நாளடைவில் புரியவரும்.



திருவரங்குளம், திருகோகர்ணம், ஆவுடையார்கோயில், திருவதிகை, திருபூவனம் போன்ற எத்தனையோ திருத்தலங்களில் ராசி மண்டலங்கள் நிலவுகின்றன என்றாலும் இதற்குப் பின்னால் விளங்கும் ஆன்மீக இரகசியங்கள் மிகவும் நுணுக்கமானவை. அவற்றில் ஒரே ஒரு அற்புதத்தை இங்கு விவரிக்கிறோம். ஆஸ்ட்ரல் ட்ராவல் என்ற மனவெளிப் பயணத்தின்போது நமது சூட்சும உடல்தான் எல்லா இடங்களும் சென்று வரும். ஆனால், தூல உடலிலிருந்து சூட்சும உடல் பிரிந்தவுடன் அங்கு மனிதன் காணும் காட்சிகள் முற்றிலும் வேறானவை. உன்னத தியான நிலைகளை அடைந்தவர்களே அந்த இரகசியங்களைப் புரிந்து கொள்ள இயலும். இவ்வாறு சூட்சும சரீரத்தில் சஞ்சாரம் செய்யும் ஒரு மனிதன் லண்டனுக்குப் போக வேண்டும் என்றால் அவன் லண்டன் இருக்கும் திசையை எப்படித் தெரிந்து கொள்வது ? இதை உணர்த்துவதே திருக்கோயில்களில் உள்ள ராசி மண்டலங்களாகும். சூட்சும உடலைப் பெற்ற மனிதனுக்கு இந்த ராசி மண்டலத்தின் சூட்சும வரைபடம் தெரிவதால் அதில் உள்ள பிரபஞ்ச இரகசியங்கள் அனைத்தையும் எளிதாகப் பார்க்க முடியும். அதுவே உண்மையான GPS. மேலும் குறுகிய காலத்திற்கே சூட்சும சரீரத்தில் மனிதன் சஞ்சாரம் கொள்ள முடியும் என்பதால் இந்த ராசி மண்டலங்களைப் படிக்க படிக்க எந்த லோகத்திற்கு எந்த ராசி மண்டலத்தின் வழியாகச் செல்ல வேண்டும் என்று தெரிந்து விடும். உத்திரமேருரில் உள்ள ஒருவர் முனிகிரேதியை (ரிஷிகேஷ் அருகில் உள்ள கிராமம்) அடைய வேண்டுமானால் என்னென்ன வாகனங்கள் மூலம் எந்தெந்த நேரத்தில் பயணம் செய்ய வேண்டும் என்பதை சுய அனுபவத்தின் மூலமாகத்தானே உணர முடியும் ?
எனவே ஆன்மீகப் பயணம் என்பது கரை காணா கடல் ! இந்த கரையில் பிரகாசிக்கும் கலங்கரை விளக்கமே சற்குரு !
சற்குருவைப் பெற்றவர்களுக்கு இந்த ராசி மண்டலத்தின் செயல்பாடு முற்றிலும் வேறுவிதமாக இருக்கும். கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நம் முன்னோர்கள் கூறியதன் காரணம் இப்போது புரிகின்றது அல்லவா ? இவ்வாறு ராசி மண்டலங்கள் அமையப் பெறாத கோயில் அருகில் வசிப்பவர்கள் என்ன செய்வது ? இத்தகையோர் மாதம் ஒரு முறையேனும் மாதப் பிறப்பு, வளர்பிறை அஷ்டமி போன்ற நாட்களில் இத்தகைய ராசி மண்டலங்கள் அமைந்த திருத்தலங்களை தரிசனம் செய்து பலன் பெறலாம். மற்ற நாட்களில் சற்குரு, அவதார மூர்த்திகள், மகான்கள் இவர்களின் ஜாதகத்தை தங்கம், வெள்ளி, தாமிர தகடுகளில், தேக்கு மா பலா பலகைளில் வரைந்து பூஜித்தும் பலன் பெறலாம்.
ஸ்ரீசக்கரம் என்பது இந்த பிரபஞ்ச சக்திகளின் வரைபடமாகும்.



ஸ்ரீசக்கரத்தின் இரகசியம் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரிய வாத்யார் ஒருமுறை இதுபற்றி குறிப்பிடும்போது, “ஸ்ரீசக்கரத்தைப் பத்தி தெரிஞ்சவனை விரல் விட்டு எண்ணி விடலாம் ... ம்... அதுக்கு ரெண்டு கை கூட வேணாம்டா .. ஒரு கையே போதும்,“ என்று நம் சிறுவன் வெங்கடராமனிடம் தெரிவித்தாராம். இந்த ஸ்ரீசக்கர வழிபாட்டிற்கு முன்னோடியாக அமைவதே ஆலயங்களில் உள்ள ராசி சக்கர வழிபாடாகும்.

நம் சற்குருவே உபதேசமாக
அருளும் துவாதச நாமாவளி !

திருமணம் போன்ற முக்கியமான வைபவங்களுக்கு துல்லியமாக முகூர்த்த நேரத்தைக் கணிக்க வேண்டி உள்ளது அல்லவா ? அப்படியே துல்லியமாக நேரத்தைக் கணித்தாலும் அந்த ஒரு நிமிட அமுத நேரத்தை எந்த கடியாரத்தைக் கொண்டு சரியாக அறிந்து கொள்ள முடியும் ? இதற்காக துல்லியமாக நேரத்தைக் கணக்கிட மனிதர்களுக்கு உதவும் இரண்டு சாதனங்களே கிரக சஞ்சாரங்களை கண்ணால் பார்த்து அவைகளின் இருப்பிடத்தை உணர்ந்து கொள்வதும், மனித உடலில் சஞ்சரிக்கும் வாசியின் பூதத் தத்துவங்களின் இயக்கங்களை வைத்து நிர்ணியிப்பதும் ஆகும். திருக்கோயில்களில் உள்ள ராசி மண்டலங்களை பார்த்து ஒவ்வொரு ராசிக்கும் விஷ்ணு துவாதச நாமத்தில் ஒன்றையோ, பன்னிரண்டையோ, 144ஐயோ (12 x 12) ஓதி வழிபட்டு வந்தால் நாளடைவில் நவகிரகங்களின் இருப்பிடத்தை கண்களால் பார்த்தே அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறலாம். உண்மைக்கு உறுதுணையாக இருப்பது துவாதச நாமாவளி.
திருமங்கலம் லால்குடி அருகே
பாதம் தீண்டா பவித்திர நாமங்கள் என்று துவாதச நாமாவளிக்கு ஒரு சிறப்பு உண்டு. அதாவது கர்ம பூமியான பூலோகத்தில் பாதங்கள் தீண்டாத தேவர்கள், தேவதைகளுடைய லோகங்களில் உபதேசிக்கப்பட்ட நாமமே துவாதச நாமாவளி. முதன் முதலில் பராசக்தி லோகத்தில் அன்னை கோமதி தபதிக்கு இந்த துவாதசி நாமாவளியை உபதேசித்தாள். அடுத்து ஸ்ரீமந் நாராயண மூர்த்தி வைகுண்டத்தில் தேவர்களுக்கு இந்த பவித்திர நாமங்களை உபதேசித்தார். அப்போது அருகிலிருந்த கோமதி அன்னையிடம், “அம்மா நான் உபதேசித்த துவாதச நாமாவளி சரியாக இருக்கிறதா ?“ என்று கோமதி அன்னையிடம் கேட்டு உறுதி செய்து கொண்டாராம் பெருமாள் மூர்த்தி. அடுத்து சிபிச் சக்கரவர்த்தியால் தேவலோகம், பிரம்ம லோகம், சத்திய லோகம் போன்ற தெய்வீக லோகங்களில் நவரத்ன புஷ்ப விமானத்தில் இருந்தவாறே இந்த துவாதசி நாமாவளி ஓதப் பட்டு இறையருளை நிறைத்தது. அதனால் திருத்தலங்களில் எவருடைய பாதமும் தீண்டாத ராசி மண்டலங்களை இந்த துவாதச நாமாவளியால் வழிபடுவதால் கிட்டும் பலன்கள் அற்புதம்.

ஸ்ரீஸ்ரீமதி அம்மன் லால்குடி
சில அம்மன் மூர்த்திகளுக்கு படி தாண்டா பத்தினிகள் என்ற நாமங்கள் அமைந்திருக்கும். நமது இல்லங்களில் உள்ள நிலைவாசல் படிகள் வெளியிலிருந்து வரும் தீய சக்திகள் வீட்டிற்குள் வராமல் காத்து வீட்டில் பெருகும் நற்சக்தி வெளியில் சென்று விரயமாகாமல் காக்கிறது அல்லவா ? அது போல் இந்த படி தாண்டா பத்தினிகளை எந்த தீய சக்திகளாலும், துர்தேவதைகளாலும் அண்ட முடியாது. மிகவும் சக்தி வாய்ந்த சக்தி மூர்த்திகள். அதே போல் இவர்களை வணங்குபவர்களும் தேவையில்லாத லௌகீகமான பலன்களைப் பெற முடியாது. உயர்ந்த நற்காரிய சித்திகளுக்கு மட்டுமே இவர்களுடைய அனுகிரக சக்திகள் பொழியும். திருமங்லம் ஸ்ரீமங்களாம்பிகை, திருத்தவத்துறை ஸ்ரீ ஸ்ரீமதி அம்மன், திருவையாறு ஸ்ரீதர்மசம்வர்த்தினி போன்ற தேவிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களே. அதனால் இவர்களிடம் எதுவும் பக்தர்கள் வேண்டாமல் இருப்பதே உத்தமம் என்று சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள். இத்தகைய படி தாண்டா, படி தீண்டா பத்தினிகளை பாதம் தீண்டா துவாதச நாமாவளியால் துதித்து கண் தீண்டா தானமான தேனில் ஊறிய அத்திப் பழங்களை நிறைவேற்றுதால் கிட்டும் பலன்கள் வார்த்தைகளில் அடங்காது.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி திருவையாறு
சமீப காலத்தில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியார் இவ்வாறு உண்மைக்கும் பொய்மைக்கும், ஒளிக்கும் இருளுக்கும் உள்ள பேதத்தை அறிந்து இறைஞானம் பெற ஓதியதே துவாதச நாமாவளி ஆகும். அவர் சிதம்பரம் கோயில் கொடிக் கம்பத்தின் கீழ் அமர்ந்து தரையில் விழும் கொடிக் கம்ப நிழலைச் சுற்றிக் கொண்டே வந்து தவம் இயற்றி இறையருள் பெற்ற அனுபூதி அனைவரும் அறிந்ததே.


ஆனால், அவர் ஒரு போதும் தரையில் விழுந்த நிழலைப் பார்த்தது கிடையாது. ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளைப் பார்த்து துவாதச நாமங்களை ஓதி சூரியனை தன் மானுட கண்களால் தரிசித்தவாறு சூரிய ஒளிக்கு எதிராகவே வலம் வந்தார். அதுவே கொடிமர நிழலில் அவர் வலம் வந்ததாக ஆயிற்று என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். தமிழை ஆழ்ந்து அகழ முடியாவிட்டாலும் கொடிக்கவித் துதியின் அட்சரங்களை எண்ணிப் பார்த்தால் கூட இந்த உண்மையை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். மேலும் சூரியனை அவர் கண்களால் பார்த்துக் கொண்டே இருந்ததால்தான் இரவிலும் அவர் கொடிக் கம்பத்தைச் சுற்றி வருவது சாத்தியமாயிற்று.



நந்திக் கலம்பக அருள் தரிசனம், பூவாளூர்
குடை ராட்டினங்களில் விளையாடாத, ராட்டினங்களைப் பிடிக்காத குழந்தைகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு மனித வாழ்வில் சிறப்பாக குழந்தை வாழ்வின் ஒரு அங்கமாகத் திகழ்வதே ராட்டினம் ஆகும். மனவெளிப் பயணத்துடன் நெருங்கிய தொடர்யுடையதே குடை ராட்டினம். நாம் அனைவருமே மூன்று அல்லது ஐந்து வரையில் தினமும் ஆஸ்ட்ரல் ட்ராவல் செய்தவர்கள்தான். அதனால்தான் அந்த குழந்தைப் பருவ சுகமான அனுபவங்கள் இன்றும் நம்மை ராட்டினத்தை நோக்கி ஈர்க்கின்றன. இப்போது ஒரு குடை ராட்டினத்தை கண் முன் கொண்டு வாருங்கள். ராட்டினத்தின் மேல் ஒரு குடை. நீங்கள் ராட்டினத்தில் உள்ள குதிரையில் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள். ராட்டினம் வேகமாக சுற்றுகிறது. உங்கள் மனச் சிறுகுகளை இன்னும் சற்றும் விரித்துக் கொள்ளுங்கள். இந்த ராட்டினம் அப்படியே தரையில் வேகமாக நகர்ந்து ரயிலைப் போல் வேகமாக ஓடுவதாக கற்பனை செய்து பாருங்கள். இதுவே கிட்டத்தட்ட பறக்கும் தட்டின் அமைப்பு, ஓரளவு இதுவே நம்முடைய மனவெளிப் பயணத்தின் மேலோட்டமான விளக்கமும் ஆகும். குடை ராட்டினத்தில் குதிரைகள் வேகமாகப் பறந்தாலும் நடுவில் உள்ள அச்சு சற்றும் அசைவதில்லை. சில ராட்டினங்களில் மேல் உள்ள குடையும் ராட்டினத்துடன் சேர்ந்து சுற்றும், சில இடங்களில் அது அச்சுடன் சேர்ந்து சுற்றுவது கிடையாது. இதை ஒரு முறை நன்றாக மனதில் நிலை நிறுத்திக் கொண்டால் ஆன்மாவைப் பற்றிய விளக்கங்களை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இவ்வாறு பறக்கும் தட்டுகள் பறந்து சென்று கொண்டிருக்கும்போது உள்ளே இருக்கும் பயணிகள் பறக்கும் தட்டுகள் செல்லும் வேகத்திலேயே பயணம் செய்கிறார்களே தவிர அவர்கள் சுழல்வது கிடையாது. இப்போது வேகமாகப் பறந்து கொண்டிருக்கும் பறக்கும் தட்டு திடீரென நிற்பதாக வைத்துக் கொள்ளுங்கள், அப்போது என்னவாகும். பறக்கும் தட்டு நின்று விட அதைச் சுற்றியுள்ள சாஸர் போன்ற அமைப்பு மட்டும் சுழலும். இதனால் உள்ளிருக்கும் பயணிகள் எந்த விதத்திலும் பாதிப்பு அடைவது கிடையாது. இதுவே ஆத்மாவின் நிலை. குடைராட்டினத்தில் உள்ள அச்சை ஆன்மாவாகக் கொண்டால் சுற்றியுள்ள குதிரை மனித உடலாக அமையும். சாஸரையும் பயணிகளையும் இணைக்கும் அமைப்பு உயிராகும். ராட்டினத்தை இயக்கும் மின் சக்தியை உயிருடன் ஒப்பிடலாம். அச்சுடன் சேர்ந்து சுற்றும் குடை எளிதில் பழுதடைந்து விடும், அச்சின் மேல் அமைந்து சுற்றாமல் நிற்கும் குடை எளிதில் பழுதடையாது. இதுவே மகான்கள் நிலை. அவர்கள் குடை ராட்டினத்திலேயே இருந்தாலும் அதன் சுழற்சியால் அவர்கள் பாதிப்படைவதில்லை. இவ்வாறு உயிர் சூட்சும சரீரத்துடன் சேராமல் ஆத்மாவுடன் சேர்ந்து இயங்கும் நிலைக்கு நம்மைத் தயார்படுத்துவதே திருத்தலங்களில் உள்ள ராசி மண்டல வழிபாடாகும். இந்த உயிரும் சூட்சும சரீரமும் பிரிந்து இயங்கும் வித்தையை அனுகிரகமாக பெறக் கூடிய ஒரே இடம் திருத்தலங்களில் பொலியும் ராசி மண்டலம் என்பதை நினைவில் கொள்ளவும்.
எல்லையில்லாதது வானம் அதில் ஒரு துளி நமது பூமி. எல்லையில்லாத இறைவனின் ஒரு துளியே மனிதன். வானுக்கும் பூமிக்கும் இடையே பிரகாசிக்கும் சூரியனைப் போல் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே பிரகாசிக்கும் ஜோதியே நந்தி கலம்பக அருள் ஜோதியாகும். பித்ரு முக்தித் தலமான பூவாளூரில் இத்தகைய தரிசனம் நம்முடைய மூதாதையர்களிடம் நமக்கு உள்ள பிணைப்பை உறுதிப்படுத்தும். பித்ருக்களே இறை தரிசனம் பெற உதவும் பாலமாக இருப்பதால் பூவாளூரில் நந்தி கலம்பக தரிசனம் பெறுவது பொருத்தம்தானே ?
கலம்பகம் என்றால் இணைப்பு. மனிதனை ஈசனுடன் இணைப்பவரே நந்தியெம்பெருமான். இவர் மனிதனுக்கும் இறைவனுக்கும் குறுக்கே நிற்பவர் அல்ல, குறுகிய காலத்தில் இறைவனை அடைய உறுதுணையாக இருப்பவர் !
திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களை பிரதட்சிணமாக வலம் வரும் பக்தர்கள் அப்பிரதட்சிணமாகவும் வலம் வரலாமா என்று அறிய ஆவலாக இருக்கிறார்கள். பொதுவாக, திருஅண்ணாமலை, பழநி போன்ற மலைத்தலைங்களையும், ஆலயப் பிரகாரங்களையும், இறை மூர்த்திகளையும், நவகிரக மூர்த்திகளையும் எத்தனை முறை வேண்டுமானாலும் பிரதட்சிணமாக வலம் வரலாம். திருஅண்ணாமலையை ஒரு லட்சம் முறை பிரதட்சிணமாக கிரிவலம் வந்த பெருந்தகையே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். ஆனால், அப்பிரதட்சிணமாக வலம் வருவதற்கு சில குறித்த நியதிகள் உண்டு. சற்குருவின் ஆணை இருந்தால் மட்டுமே கிரிவலம், கோயில் வலம் போன்றவற்றை அப்பிரதட்சிணமாக அனுஷ்டிக்கலாம். நவகிரகங்களை வலம் வருகையில் ஏழு முறை வலமாகவும், இருமுறை இடமாகவும் பிரதட்சிணம் வருவது ஏற்புடையதே. ஆனால், ஆத்ம வலமாக தன்னைத்தானே சுற்றிக் கொள்வதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. அதாவது கிரிவலம் வரும்போதோ கோயில் பிரகாரங்களில் பிரதட்சிணமாக வலம் வரும்போதோ தன்னைத்தானே எப்படி வேண்டுமானாலும் சுற்றிக் கொள்ளலாம், அது பிரதட்சிணமாகவோ அப்பிரதட்சிணமாகவோ இருக்கலாம். அதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை. காரணம் ஆன்மாவிற்கு இட வலம் கிடையாது, உள் வெளி கிடையாது, மேல் கீழ் கிடையாது.

 

திருத்தல யாத்திரை தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam