கனிந்த காட்சிகள் கண்களுக்கு சுகம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீவீணாதர தட்சிணா மூர்த்தி, துடையூர், திருச்சி அருகே. வாத நோய்களால் வாடுவோர் கம்பி வாத்யம் வாசிக்கும் கலைஞர்களைக் கொண்டு இத்தலத்தில் இறை கீர்த்தனைகளைப் பாட வைத்தால் தங்கள் நோயிலிருந்து விடுதலை பெறுவார்கள். உயர் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

 

 

இறைவனுக்கு அடுத்த படியாக இறைசக்திகளுடன் பொலிபவையே கடல், வானம், மலைகள், ஆறுகள் போன்ற இயற்கைக் காட்சிகள்.
இங்கு நீங்கள் காண்பது அமிர்தபுரியில் மாதா அமிர்மானந்த மயி அன்னை ஆஸ்ரமத்தின் எதிரே உள்ள அமிர்த சாகரம். தியானத்திற்கு துணை புரியும் அற்புத இறை மையம்.

 

ராமநாதபுரம் திருவாடானையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீயோகாம்பாள் சமேத ஸ்ரீகைலாசநாதர் திருக்கோயில். அத்திருக்கோயில் எதிரே உள்ளதே நீங்கள் இங்கே காணும் திருக்குளம். தாமரைகள் பூத்துக் குலுங்கும் அற்புத நீர்ப்பொய்கை

 

கட்டிவயல் திருத்தல ஈசன் ஸ்ரீகைலாச நாதர். ஆழ்கிணறு அமைப்போர், JCB. Bulldozer போன்ற கனரக வாகனங்களைப் பயன்படுத்துவோர் அவசியம் வழிபட வேண்டிய அனுகிரக மூர்த்தி. குங்குமப் பூ கலந்த பால் அபிஷேகம், பாயச தானம் சிறப்புடையது.

 

கட்டிவயல் சிவத்தல அம்பாள் ஸ்ரீயோகாம்பாள். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் தோல் நோய்களிலிருந்து விடுதலை அளிக்கும் தெய்வம். வேப்பிலை மஞ்சளை சமஅளவில் எடுத்து அரைத்து உடலில் பூசிக் கொண்டு வெள்ளிக் கிழமைகளில் அம்மனை நண்பகலில் தரிசித்து வந்தால் பிரசவ சமயத்தில் ஏற்படும் நீர்க் கோளாறுகள் அகலும்

 

ஆன்மீகத்தில் LKG முதல் PhD வரை உயர்ந்த அனைவரும் வழிபட வேண்டிய திருத்தலமே கட்டிவயல் ஆகும். உருவ வழிபாடும் அருவ வழிபாடும் ஒருங்கிணைந்து மிளிரும் அற்புத தலம். கட்டி உருவ வழிபாட்டையும், வயல் அருவ வழிபாட்டையும் விளக்கும்.

 

கட்டி வயல் செஞ்சடைக் கருப்பர். சுவாமியின் செந்நிற ஜடா முடியிலிருந்து தோன்றிய சக்தி வாய்ந்த காவல் தெய்வம். அந்தி வேளையில் இவருக்கு அணிவிக்கப்படும் அத்திப் பழ மாலை குழந்தைகளுக்கு வரும் நோய்த் துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கும்.

 

புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் திருத்தல தலவிருட்சம் புன்னை மரம். காஞ்சீபுரம், வைத்தீஸ்வரன் கோவில் போன்று இத்தல விருட்சங்களும் யுகங்களைக் கடந்து பிரளயத்திற்கும் சாட்சியாய் நிற்பவை. இத்தல விருட்சங்களின் தரிசனமே நான்கு வேதங்கள் ஓதிய பலனை அளிக்க வல்லது. தங்கள் கையால் அரைத்த மஞ்சளைப் பூதி தல விருட்சங்களை வழிபடுவதால் கணவன் மனைவியரிடையே, உறவு முறைகளில், அலுவலகங்களில் உள்ள எத்தகைய பகைமை உணர்வும் மறையும்.

 

பஞ்ச பிள்ளையார் மூரத்திகள், திருப்புனவாசல். சூன்ய திதி, கூடா நாட்கள், சந்திராஷ்டமம் போன்ற தோஷமுள்ள நாட்களில் திருமணம் புரிந்து கொண்டவர்கள் இத்தல பிள்ளையார் மூர்த்திகளை வணங்கி ஒன்பது கஜ நூல் புடைவைகளையும் ரவிக்கைகளையும் சுமங்கலிகளுக்குத் தானம் அளித்து வந்தால் கணவன் மனைவி பிரிந்து வாழும் சூழ்நிலை ஏற்படாது

 

திருப்புனவாசல் நந்தீஸ்வர மூர்த்தி. இப்பூவுலகில் தோன்றிய முதல் நந்தீஸ்வர மூர்த்தி இவரே. சனிக் கிழமைகளில் இவரை வழிபட்டு முந்திரி, மிளகு சேர்ந்த வெண் பொங்கல் தானமாக அளித்தலால் வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதி போன்ற துன்பங்கள் விலகும்.

 

கட்டிவயல், திருவாடானை. பொதுவாக சூரிய சந்திர மூர்த்திகள் தனிச் சன்னதி கொண்டு அருளும் திருத்தலங்கள் மந்திர சித்திக்கு உறுதுணையாக நிற்கும் தலங்களாகும். இச்சன்னதிகளின் எதிரே பத்மாசனத்தில் அமர்ந்து மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் மந்திர ஜபம் செய்து வந்தால் மந்திரங்கள் எளிதில் சித்தியாகும். ஆனால், அவ்வாறு சித்தி செய்யப்பெற்ற மந்திர பலன்களை பொது நலத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது இறைநியதியாகும்

 

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில். பத்திரங்கள், ஒப்பந்கங்களில் கையெழுத்திடும்போது சரியான ஹோரையில் அதை நிறைவேற்றாவிட்டால் அதனால் எதிர்காலததில் பல துன்பங்களைச் சந்திக்க நேரிடும். இத்தகைய பிரச்னைகளால் துன்புறுவோர் தங்களுடைய சந்திராஷ்டம நாட்களில் அல்லது திங்கட்கிழமைகளில் 100 உளுந்த வடைகளுக்குக் குறையாமல் காளையார் கோவிலில் தானம் அளித்து வழிபடுவதால் நலம் பெறுவர்

 

சிவகங்கை மாவட்டம், கட்டிகுளம் அக்னி கருப்புசாமி. அஷ்டமி திதிகளில் கருப்பண்ண சுவாமி மூர்த்திகளுக்கு கரும்புச் சாறு அஷேகம் நிறைவேற்றி மணமுள்ள சம்பங்கி மாலைகளை அணிவித்து வழிபட்டு வந்தால் காணாமல் போன உறவினர்கள், பொருட்கள், சொத்து பற்றிய தகவல்கள் தெரிய வரும்

 

மிகவும் அபூர்வமான பராய் மரத்தை தலமரமாக உடைய திருத்தலமே இங்கு நீங்கள் காணும் திருப்பராய்த்துறை திருத்தலமாகும். எத்தகைய கடுமையான புற்று நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கக் கூடிய அற்புத திருத்தலம். இங்குள்ள தல விருட்சமான பராய் மரத்திற்கு தங்கள் கையால் அரைத்த மஞ்சளை பூசி வலம் வந்து வணங்குதல் நலம். தோல் வியாதிகளும் குணமாகும். ரவையுடன் சர்க்கரை சேர்த்து எறும்புகளுக்கு இடுதல் நலம். ஆனால், இம்மரத்தில் உள்ள இலைகளைப் பறித்து சுயநலமாக பயன்படுத்தினால் பெரும் சாபங்கள் விளையும் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

விஷ்ணு பாதம், திருச்சி அருகே மலையடிப்பட்டி திருத்தலம். அடிமுடி காணா அழற்பிழம்பாய் நின்ற சிவபெருமானின் திருஉருவத்தை தன் கண்ணில் நிறைத்துக் கொண்டு கண் நிறைந்த பெருமாளாய் விஷ்ணு மூர்த்தி அருள்புரியும் தலம். பித்ருக்களுக்கு முக்தி அளிக்கக் கூடிய திருத்தலம்.

 

வராஹ சக்திகள் நிறைந்த அற்புத தலம் மணமேல்குடி பொன்னகரம் பெருமாள் தலம் ஆகும். படிப்பு முடிந்தவுடன் வேலையில் அமர்ந்து கை நிறைய சம்பாதிக்கும் கனவுகள் உடையோர் ஏராளம். அத்தகைய கனவுகள் நிறைவேறாதபோது அவர்கள் தற்கொலை என்ற தவறான முடிவிற்கு வந்து விடுகிறார்கள். ஆனால், வாழ்க்கையில் எத்தகைய சோதனைகளையும் எதிர்கொண்டு நன்னிலையை அடைய விரும்புவோர்கள் இந்த நாக தேவதையை 21 முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்கி தேங்காய்ப்பூ கலந்த புட்டு தானமாக அளித்தலால் நலம் பெறுவர்.

 

சில விவசாயிகளின் பயிர்களில் திடீரென்று பூச்சிகள் தோன்றி அதனால் விளைச்சல் பெருமளவில் பாதிக்கப்படும். இவ்வாறு விவசாயத்திலும் விவசாயம் சம்பந்தப்பட்ட தொழிலிலும் நஷ்டம் ஏற்படாமல் காக்கும் அனுகிரக மூர்த்தியே திருச்சி லால்குடி அருகே அருள் புரியும் சாத்தமங்கலம் ஈசன் ஆவார். சனிக் கிழமைதோறும் இத்தல மரகத லிங்க மூர்த்தியை வணங்கி நிலக்கடைலை கலந்த புளியோதரையை தானமாக வழங்கி வந்தால் பயிர்கள் பூச்சிக்கடியிலிருந்து தப்பிக்கும்.

 

அனைத்து விதமான பூமி தோஷங்களையும் களையும் அற்புத செவலூர் திருத்தலம். வீடுகள் கட்டும்போது சதுரம், நீள்சதுரம் போன்ற சரியான வடிவத்தில் அமைந்து கிழக்கு, தெற்கு போன்ற போன்ற அடிப்படை திசைகளை நோக்கி நிலைவாசல் அமையுமாறு இருத்தல் அவசியம். ஆனால், இத்தகைய வாஸ்து நியதிகள் அமையப் பெறாத வீடுகளில் வசிப்போர் செவலூர் இறை மூர்த்தியை வணங்கி வியாழக் கிழமைகளில் எலுமிச்சை சாதம் தானமாக அளித்து வருதலால் நலம் பெறுவர்

 

வீடு கட்டும்போது முதலில் கிணற்றை வெட்டி அதிலிருந்து பெறப்படும் நீரிலிருந்து வீடு கட்டுவதே முறை. ஆனால், தற்போது ஆழ்குழாய்கள் அமைத்து நீரைப் பெறும் வழக்கம் பொதுவான நியதியாக அமைந்து விட்டது. இத்தகைய வாழ்க்கை மாற்றங்களால் மக்களுக்கு ஏற்படும் வாஸ்து தோஷ குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வல்லவரே திருச்சி உய்யக் கொண்டான்மலை பெருமானாவார். திங்கட் கிழமைகளில் தயிர் சாதம், நாரத்தை ஊறுகாய் தனமாய் அளித்து வருதலால் மேற்கூறிய தோஷங்களிலிருந்து நிவாரணம் கிட்டும். தண்ணீர் பற்றாக் குறை அகலும்.

 

திருச்சி உய்யக் கொண்டான் மலை குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெற உதவும் திருத்தலமாகும். புதன் கிழமைகளில் இத்தல ஈசனுக்கு சாக்லேட் மாலை அணிந்து அந்த சாக்லேட்டுகளை குழந்தைகளுக்கு தானமாக அளித்து வந்தால் பள்ளிப் படிப்பில் மாணவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

 

வில்லூண்டி தீர்த்தம், தங்கச்சி மடம், ராமேஸ்வரம். கடல் முழுவதும் உள்ள தண்ணீர் உப்பாக இருந்தாலும் அதில் வாழும் மீன்கள் உடலில் உப்பு சேர்வதில்லை. இறைவனின் இந்த லீலைக்கு சாட்சியாக நிற்பதே வில்லூண்டி தீர்த்தமாகும். கடல்களால் சூழப்பட்ட இத்தீர்த்தத்தில் உப்பு சுவை என்பது கிடையாது. இத்தீர்த்தத்திலிருந்து உரிய காணிக்கையை செலுத்தி பெற்ற நீரை தங்கள் ஊரில் உள்ள காசி விஸ்வநாதர், கைலாச நாதர் போன்ற இறை மூர்த்திகளுக்கு அபிஷேகத்திற்காக அளித்தால் தற்காலிக வேலை வாய்ய்புகள் நிரந்தரமாகும்.

 

வெள்ளியங்கிரி ஆதவ அம்பலம். இறைவனுக்கு பிரசாதம் படைத்து, அதை அவர் மனித உருவில் வந்து ஏற்க வேண்டும். அவ்வாறு இறைவனின் திருக்கரம் பட்ட பிரசாதத்தின் எஞ்சிய பகுதியை ஏற்கும் பக்தரே வெள்ளியங்கிரி யாத்திரைக்கான முதல் தகுதியைப் பெறுகிறார். இந்த முதல் தகுதியைப் பெற்றவர்கள் தங்கள் முதுகில் உள்ள மச்சங்களை கண்ணாடி இன்றி பார்க்க முடியும்.

 

திருவையாறு அருகே கடுவெளித் திருத்தலம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய நட்சத்திர மண்டலத்தை ஒரு முறையாவது தரிசனம் செய்தாக வேண்டும். இதற்குத் தேவையான வழிகாட்டுதலைப் பெற்றுத் தரும் தருத்தலமே கடுவெளியாகும். வறுமையில் வாடும் இசைக் கலைஞர்களுக்கு தக்க சன்மானம் அளித்து அவர்கள் மூலம் இத்தலத்தில் சங்கீத கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்தல் ஒரு அற்புத நட்சத்திர வழிபாடாகும்.

 

திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் தெப்பக் குளம். காஞ்சியில் அருள்புரியும் வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்க பெருமாள் நாச்சியார் அம்மனின் வேண்டுகோளை ஏற்று விருந்து ஏற்ற தலமே நாச்சியார் திருத்தலமாகும். இங்குள்ள வசந்த மண்டபம் மணமாகாத கன்னிப் பெண்களுக்கு ஒரு அற்புத வரப்பிரசாதமாகும். தங்களுக்கு வரப்போகும் கணவன்மார்கள் எத்தகைய தீய பழக்கங்களுக்கும் ஆட்படாத உத்தமராய்த் திகழு வேண்டும் என்று விரும்பும் பெண்கள் இத்தல வசந்த மண்டபத்தில் வெள்ளிக் கிழமைகளில் பச்சரிசி மாவால் கோலமிட்டு அலங்கரித்து வந்தால் நல்ல திருமண வாழ்க்கை அமையப் பெறுவார்கள்.

 

த்விபுஜங்க தூண்கள், நாச்சியார் கோவில் திருச்சி. நற்காரியங்கள் சமூக காரியங்கள் செய்வர்களும் பற்பல இன்னங்களைச் சந்திக்க வேண்டி வருகிறதல்லவா ? சமூக சேவையில் ஈடுபட்டவர்கள், மனித குல மேம்பாட்டிற்காக பாடுபடுபவர்கள், பிறர் நலம் விரும்பிகள் தங்கள் சேவையில் பழி ஏதும் ஏற்படாமல் தங்களைக் காததுக் கொள்ள விரும்பினால் அவர்கள் இங்குள்ள ஆஞ்சநேய மூர்த்தியை வணங்கி கை முறுக்கு தானமாக வழங்கி வருதல் நலம்.

 

ஸ்ரீமாங்கல்ய மகரிஷி, இடையாற்று மங்கலம், லால்குடி. மக்களின் திருமண தோஷங்களை நீக்குவதற்காக பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கடுமையாக தவம் இயற்றி இடையாற்று மங்கல ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் திருத்தலததிலேயே ஜீவ சமாதி கொண்டு அருள் சுரக்கும் அற்புத மகரிஷி. மணமுள்ள மலர் மாலைகளை இம்மகரிஷிககு அணிவித்து சர்க்கரை பொங்கல் தானமாக அளித்தலால் கடுமையான தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

 

ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி, ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் திருத்தலம், இடையாற்று மங்கலம, லால்குடி. குழந்தைகளுக்கு வரும் கக்குவான், சீதபேதி போன்ற வயிற்று நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கும் தர்ம பாலன மூர்த்தி. பசு வெண்ணெய் காப்பு இவருக்கு பிரியமான ஒன்று.

 

கொள்ளிடம் ஐயன் வாய்க்கால் என்ற இரு அற்புதமான தீர்த்தங்களுக்கு இடையே இடையாற்று மங்கலத்தில் எழுந்தருளி மக்களுக்கு முக்தி என்ற வீடு பேற்றை எளிதில் அருளக் கூடிய வரப் பிரசாத மூர்த்தி ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஸ்ரீமாங்கல்யேஸ்வரர். திருமணம் என்பது இறைவனுக்காகவே ஆற்றுப்படுத்த, நெறிப்படுத்த அருளும் மூர்த்தி.

 

ஸ்ரீமங்களாம்பிகை என்ற அற்புத மங்கள நாமத்துடன் இடையாற்று மங்கலத்தில் எழுந்தருளியுள்ள அன்னை. மங்கள வாழ்வளிக்கும் மாசிலா மூர்த்தி. பெண்களுக்கு வரும் துன்பங்களை முன் கூட்டியே சூட்சுமமாக தெரிவிக்கும் தாய்.

 

ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ய சுவாமி. இடையாற்று மங்கலம், லால்குடி. செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்ற பலவித தோஷங்களையும் களையும் மூர்த்தி. தேனில் ஊறிய அத்திப் பழ தானம் சிறப்பு.

 

ஸ்ரீதட்சிணாமூர்த்தி, இடையாற்றுமங்கலம், லால்குடி. மகாவில்வ இலைகளால் மாலை கட்டி இவருக்கு அணிவித்து துவாதசி வளர்பிறை திதிகளில் ஆராதித்து வந்தால் கம்ப்யூட்டர் துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவர்.

 

ஸ்ரீமங்களாம்பிகை சமேத மயூரநாதர் திருததலம், மயில்ரங்கம், லால்குடி. உடல்கூறு பிரச்னைகளால் தம்பதியர் இடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகளைக் களையும் மூர்த்தி. செம்பால் அபிஷேகம் சுவாமிக்கு உகந்தது.

 

ஸ்ரீ கணபதி மூர்த்தி, திருமணமேடு, லால்குடி. திருமணமானபின் தம்பதிகள் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களுள் ஸ்ரீதர்மவர்த்தினி உடனுறை பஞ்சநதீஸ்வரர் திருத்தலமான திருமணமேடும் ஒன்றாகும். உத்தம குழந்தைகளைப் பெற விரும்பும் பெற்றோர்கள் வழிபட வேண்டிய தலம்.

 

ஸ்ரீலோபாமாதா சமேத அகஸ்திய மகரிஷி, திருமணமேடு திருத்தலம், லால்குடி அருகே. குடும்ப ஒற்றுமையை வளர்ககும் திருத்தலம். ஒன்பது கஜ புடவை தானம் சிறப்பு.

 

ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி, திருமணமேடு, லால்குடி. முழுத் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு போன்ற மாங்கல்ய பொருட்களை தானம் அளித்தலால் குடும்பத்தில் தாண்டவமாடும் வறுமை குறையும். வியாழக் கிழமைகளில் இத்தலத்தில் அத்தகைய தானங்கள் சிறப்பு.

 

ஸ்ரீகஜலட்சுமி தேவி, திருமணமேடு, லால்குடி. சனிக் கிழமைகளில் நீல வண்ண நூல் புடவைகளை இத்தலத்தில் தானமாக அளித்து வந்தால் வயதானவர்கள் இரவில் உறக்கம் இன்றித் தவிக்கும் வேதனை குறையும்.

 

ஸ்ரீபைரவ மூர்த்தி, திருமணமேடு, லால்குடி. வீட்டை பூட்டி விட்டு வெளியூர்களுக்கு செல்லும்போது தங்களுடைய பொருட்கள் பாதுகாப்பாக இருக்குமோ என்ற பயத்துடனேயே பயணம் செய்ய வேண்டியிருக்கும். தனக்குத் தெரிந்தவர்களிடம் தங்கள் வீட்டுப் பொருட்களைக் கொடுத்து அவர்களை நம்பி இருப்படைவிட தங்கள் அருகில் உள்ள பைரவ மூர்த்திகளிடம் பிரார்த்தனை செய்து கொண்டு அவருக்கு முழு முந்திரி பருப்பு மாலைகளை அணிவித்து வெளியூர் பயணத்தை மேற்கொண்டால் நிச்சயமாக பைரவ பாதுகாப்பு நமக்கு கிடைக்கும். அதுவே உண்மையான பாதுகாப்பு ஆகும்.திருத்தல யாத்திரை தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam