பந்தம் அறுக்கும் பஞ்ச மூர்த்திகளின் பாதசேவை !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பஞ்ச மூர்த்தி புறப்பாடு

பல திருத்தலங்களிலும் பிள்ளையார், முருகன், சக்தி, சிவன் என்றவாறான பல மூர்த்திகளும் பக்தர்களின் வழிபாட்டிற்காக எழுந்தருள்வதுண்டு. கோயில்களில் மட்டுமே இத்தகைய மூர்த்திகளின் தரிசனங்களைப் பெற முடியும் என்றாலும் சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, தைப்பூசம் போன்ற சில குறித்த உற்சவ நாட்களில் இத்தகைய மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குவதுண்டு. இம்முறையில் தை அமாவாசை தினத்தன்று திருத்தவத்துறை என்னும் லால்குடியில் நிகழ்ந்த பஞ்ச மூர்த்தி திருஉலா வலத்தையே இங்கு நீங்கள் தரிசனம் பெறுகிறீர்கள். திருவோணம் அவிட்டம் என்ற இரு நட்சத்திரங்களின் இணைப்பில் குரு வாரமாகிய வியாழக் கிழமை அன்று கூடும் இத்தகைய பஞ்ச மூர்த்திகளின் தரிசனம் குருவருளை அபரிமிதமாகப் பெற்றுத் தருவதுடன் சர ராசியில் நிகழும் இத்தகைய வழிபாடு மக்கள் தற்போது விரும்பும் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் அளிக்க வல்லது என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீவிநாயகப் பெருமான்
லால்குடி

உடல் நலம் குன்றியோர், வயோதிகர், தொற்றுநோயாளிகள், மாதவிலக்காய் இருப்பவர்கள், குருடர்கள் போன்ற அங்கக்குறைபாடு உள்ளவர்களும் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இறை தரிசனம் பெறுவதற்காக அவர்கள் இருப்பிட வாசலிலேயே வந்தருளும் இறைவனின் பெருங்கருணையே இத்தகைய வீதிஉலா திருக்காட்சிகள் ஆகும். இதன் பின்னணியில் அமைந்த தெய்வீக விளக்கங்கள் பிரமிப்பை ஊட்டுபவையாக உள்ளதால் நம் சற்குரு அருளிய சில விளக்கங்களை மட்டும் பஞ்ச சக்திகள் பூரித்துக் குலுங்கும் இந்த 2021 ஆண்டில் அளிக்கின்றோம். உருவங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் இவ்வாறு பிள்ளையார், முருகன், சிவன், சக்தி, சண்டிகேஸ்வரர் என்ற உருவங்களில் எல்லாம் பக்தர்களின் வழிபாட்டிற்காக எழுந்தருள்கிறான். இதன் மூலம் நாம் அறிவது என்ன ? இவ்வாறு ஒரே இறை சக்தி பலவாய் விரிந்து காட்சி அளிப்பதைப் போல மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், சிற்றுயிர்கள் என பலவாய் விரிந்து இருக்கும் இறைவனின் சக்தியையே நாம் எங்கும் காண்பதால் நாம் எந்த அளவிற்கு இந்த இறை உருவங்களுக்கு துன்பம் விளைவிக்காமல் முடிந்த மட்டும் அவை நன்முறையில் பல்கிப் பெருகுவதற்கு வழி வகுக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் இறை சக்தியைப் பெருக்கிக் கொண்டவர்கள் ஆவோம். ஈக்களும் இறைவனின் சொரூபமே என்று ஈக்களை வளர்த்து பெருக்கிக் கொள்ளும்படி நம் முன்னோர்கள் கூறவில்லை. ஈக்கள் மொய்த்த உணவுப் பண்டங்களால் வியாதிகள் பரவுவதைத் தடுப்பதற்காக நம் இல்லங்களை, வசிப்பிடங்களை சுத்தமாக, சுகாதாரத்துடன் வைத்திருப்பதே ஆரோக்கியத்தையும் இறைமையையும் பேணுவதாகும். ஈ மொய்த்த உணவு சுகாதாரமற்றது என்பதால் அத்தகைய சுகாதாரக் கேட்டை உண்டாக்காமல் நாம் கவனமுடன் செயல்பட வேண்டுமே தவிர, ஈக்களை ஒழிப்பதற்காக இரசாயண மருந்துகளைப் பயன்படுத்துதல் நாம் இறைவனைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. பெரும்பாலும் வீதிஉலா இறை வாகனங்கள் வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களால் அமைக்கப்பட்டிருப்பது உண்டு. வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களுக்கு தீய சக்திகளை ஈர்க்கும் வல்லமை உண்டு. மாதவிலக்கான பெண்கள் வீட்டிற்கு வெளியே செல்லக் கூடாது என்று அக்காலத்தில் பெரியோர்கள் கூறுவதற்கு காரணம் இவ்வாறு சில எதிர்மறை சக்திகளுடன் திகழும் பெண்களின் மாசு மற்றவர்களைத் தீண்டக் கூடாது என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எழுந்ததே. அதே சமயம் அவர்கள் இறை தரிசனத்தை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய பஞ்சமூர்த்திகளின் வழிபாடு அமைந்துள்ளது.

ஸ்ரீஸ்ரீமதி அம்மன் உடனுறை
ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் லால்குடி

எத்தகைய தீய சக்திகளால் பாதிக்கப்பட்டோரும் இத்தகைய உலாமூர்த்திகளை தரிசிப்பதால் அதனால் விளையும் தீய சக்திகளை வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்கள் ஈர்க்கும்போது அந்த வாகனங்களில் உள்ள அர்ச்சாக்னி என்ற தேவதைகள் இந்த தீய சக்திகளை ஈர்த்து பஸ்மம் செய்து விடுகின்றன. எப்படி கும்பாபிஷேகம் போன்ற ஆராதனைகளின் போது ஆலய கும்ப கலசங்களில் உள்ள தேவதைகள் தவம் புரிவதற்காக பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்கள் கும்ப கலசத்தை விட்டு வெளியேறிச் செல்கின்றார்களோ, அதே போல இத்தகைய வாகனங்களில் உள்ள அர்ச்சாக்னி தேவதைகளும் வருடத்திற்கு ஒரு முறை வாகனங்களை விட்டு வெளியேறி தவம் இயற்றி மீண்டும் இந்த வாகனங்களில் குடியேறுகிறார்கள் என்பதே சித்தர்கள் உரைக்கும் தெய்வீக இரகசியம். பெரும்பாலும் இத்தகைய சக்தி மாற்றங்கள் ஆலயங்களில் பிரம்மோற்சவத்தை ஒட்டி நிகழ்வதால் பிரம்மோற்சவம் என்பது மிகச் சிறந்த திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இறை சக்திகள் நம் பூலோகத்தில் பஞ்ச பூதங்கள் கூடிய குழந்தை அம்சங்களுடன் பிறக்கும்போது அவர்கள் சீதைப்பிராட்டியைப் போல கர்ப்பவாசத்தை தவிர்த்து பூமியில் தோன்றுவதும், நம் சற்குருவைப் போல் கர்ப்பவாசம் கொண்டு தோன்றுவதும் உண்டு. இத்தகைய ஜன்ம இரகசியங்கள் அவர்கள் ஜன்ம ஜாதகங்களிலேயே இலை மறை காயாய் மறைந்திருப்பதால் இத்தகைய இரகசியங்களை நாம் அறிந்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் ஜாதகங்களை தினமும் வழிபட வேண்டிய கடமை பூலோக ஜீவன்களாய் தோன்றிய நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. பூலோகத்தைப் பொறுத்தவரை மனிதனாகவோ அல்லது வேறு எந்த உயிராகத் தோன்றினாலும் இவ்வாறு தன் ஆயுட்காலம் முடியும் வரை பஞ்ச பூத சக்திகளுடன் துலங்க வேண்டும் என்பதே விதி. இதற்கு எந்த விலக்கும் கிடையாது. அருணகிரி நாதர் தன் நாட்டை ஆண்ட பக்தியுள்ள மன்னனின் உடல் வியாதியைத் தீர்ப்பதற்காக கூடு விட்டு கூடு பாயும் கலையில் ஒரு கிளியின் உடலில் பிரவேசித்து இருள் சூழ்ந்த பல இரகசிய குகைகளுக்குப் பறந்து சென்று ஜீவ குளிகைகளைப் பெற்றுத் திரும்பினார். இதை அறிந்த சம்பந்தாண்டான் என்ற மந்திரவாதி அருணகிரி நாதரின் உடலை தீக்கிரையாக்கி விட்டான். அருணகிரி நாதர் உடல் இல்லாது இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. அந்நிலையில் அருணகிரி நாதப் பெருமானை, பச்சைக்கிளி உருவத்தில் திகழ்ந்த அந்த இறையடியாரை தன் வலக்கரத்தில் ஏந்தி அருளினாள் மதுரை ஸ்ரீமீனாட்சி தேவி என்பதை நீங்கள் அறிவீர்களே. அந்த மதுரை மீனாட்சியின் அருளை வாரி வழங்குவதாகவே இங்கு பொலியும் லால்குடி பெருந்திருப்பிராட்டியின் கோலமும் திகழ்கின்றது. ஒரு புதன்கிழமை அன்றே இத்தகைய இறைஅனுபூதிகள் அரங்கேறியதால் புதன்கிழமைகளில் திருஅண்ணாமலை திருக்கோயிலில் அமைந்துள்ள கிளிக்கோபுரத்தில் கிரிவலத்தை ஆரம்பித்து கிரிவலம் வந்து கிரிவலம் நிறைவில் அருணகிரி நாதரின் ஜீவ சமாதியை தரிசனம் செய்து அந்த கிரிவலப் பலன்களை அர்ப்பணித்தல் என்பது வாழ்வில் கிடைத்தற்கரிய பேறே. இத்தகைய கிரிவலங்களில் பச்சைக்கிளிகள், பஞ்சவர்ணக் கிளிகளின் தரிசனம் கிடைத்தல் இயல்பே.

ஸ்ரீசண்டிகேஸ்வரர்
லால்குடி

ஒரு முறை நம் ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு அடியார் கனிந்தகனி பரமாச்சாரியாரைக் காண சென்றிருந்தார். சுவாமிகள் அவருக்கு தரிசனம் அளித்தபோது பதினெட்டு, பதினெட்டு, பதினெட்டு என்று மூன்று முறை கூறினாராம். அந்த அடியாருக்கு ஏதாவது 18 எண்ணிக்கையில் உள்ள பொருட்களை வாங்கி தானம் அளிக்க வேண்டுமா என்ற சந்தேகம் வந்து விட்டது. நம் சற்குருவிடம் இது குறித்து வினவியபோது நம் சற்குரு வழக்கமான புன்னகையுடன், “அப்படியா சுவாமிகள் சொன்னார் ?” என்று ஒன்றும் அறியாத அப்பாவியாய்க் கேட்டு, “எங்கே மீண்டும் அவர் கூறிதை அப்படியே சொல்லு ...,” அந்த அடியார் தன் வாயினாலேயே அந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லச் செய்தாராம். அப்போதும் அந்த அடியாருக்கு சுவாமிகள் கூறியதன் பொருள் விளங்கவில்லை. சற்று நேரம் கழித்து, “அது ஒண்ணும் இல்லை, சார், பதினெட்டு என்பதை பிரித்தால் பத்து, எட்டு என்று வரும். இதை மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தால் பத்து எட்டு, பற்று எட்டு என்று வரும். அதாவது இப்போது நீ அண்டியிருக்கும் சற்குருவைப் பிடித்துக் கொண்டு இறை பதத்தை எட்டு என்பதையே சுவாமிகள் குறிப்பால் உணர்த்தியுள்ளார்,” என்று பரமாச்சாரியாரின் உயர்ந்த கருத்துக்களை தெளிவு படுத்தினார் நம் சற்குரு. அப்போது அந்த அடியார் கூறிய வார்த்தைகளை யாரும் பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை என்பது என்னவோ உண்மைதான். காரணம் அந்த அளவிற்கு நம் சற்குருவிடம் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் ஆதிசங்கர லோகத்தைச் சேர்ந்தவர் என்றும் தான் பூமிக்கு எழுந்தருளியபோது அந்த அடியாரை இங்கு கொண்டு வர பெரும்பாடுபட வேண்டியிருந்தது என்றும் நம் சற்குருவே கூறினார் என்றால் எந்த அளவிற்கு அவரிடம் தெய்வீகப் பற்றுதல் சிறந்து விளங்கி இருக்க வேண்டும். ஆனால், அத்தகைய பக்தி உடைய ஒரு அடியாரே தன் பக்தியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் ஒரு எதிர்மறை சக்தியின் தூண்டுதலால் நம் சற்குருவை நிராகரித்து ஆஸ்ரமத்தை விட்டு வெளியேறி விட்டார் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும். கலியில் ஒரு சற்குருவைப் பெறுதல் என்பதே பிரம்மபிரயத்தனமாக இருக்க கிடைத்த சற்குருவையும் விடாது அவரைப் பற்றி இறைவனை எட்டுதல் என்னும் அரிய செயலுக்கு வழிகாட்டுவதே பஞ்ச மூர்த்திகள் வழிபாடாகும். குறிப்பாக ஸ்ரீசண்டிகேஸ்வரரை தினமும் வணங்கி, “ஈசா, உனக்கு இறைவனிடம் உள்ள பக்தியில் ஒரு தூசி அளவையாவது என்னிடம் கொடுத்து என்றென்றும் இறைவனடியில் நீங்காது இருக்கும் பாக்கியத்தை, சற்குருவின் நிழலை விட்டு அகலாத பக்தியை அளிப்பாயாக !” என்று தொடர்ந்து வேண்டி நல்லருள் பெறும்படிக் கேட்டுக் கொள்கிறோம். குருவின் திருவடிகளை நீங்காத பக்தியைப் பெறுதல் என்பது கிடைத்தற்கரிய பேறாகும். ஆதிசங்கரர், காஞ்சி பரமாச்சாரியார், நம் சற்குரு என்ற இந்த சற்குரு மாணிக்கங்களின் கனிந்த ஆசியைப் பெற்றும் கூட கிடைத்த சற்குருவைப் பற்றி இருக்க முடியவில்லை, திருவருளை எட்ட முடியவில்லை என்றால் கலியுக வாழ்வில் எதிர்மறை சக்திகளின் பிரபாவம் எந்த அளவிற்கு வலிமை உடையதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்து அடியார்கள் தங்களை ஒவ்வொரு நொடியும் திருத்திக் கொள்ள, குரு நிழலில் இருத்திக் கொள்ள முயல வேண்டும். தாயுமிலி தந்தையிலி தான் தனியனாக இருக்கும் இறைவனையே பற்றுக் கோடாக கொண்டு வாழும் தன்மையை அளிப்பவரே சண்டேச நாயனார் மூர்த்தி ஆவார். சண்டித்தனம் என்பது பிடிவாதம் குணம் பெருகி, பெருகி அதுவே முரட்டுத் தனமாக உருவெடுக்கும் நிலையாகும். இவ்வாறு இறைவனை விட்டு நீங்காத “முரட்டுத்தனத்தை” உடையவரே சண்டேச நாயனார். பகவான் ரஜனீஷ் அவர்களிடம் யாராவது கேள்வி கேட்டால் அவர் முதலில் தன் உள்ளங்கைகளை சற்று நேரம் உற்று நோக்கி விட்டு பின்னர் பதில் அளிப்பார். இது சம்பந்தமான பல விளக்கங்கள் இருந்தாலும் ஒருவர் கேட்கும் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாக அமைவதே பகவானின் செயல். பின்னர் அந்த அடியார் கேட்ட கேள்விக்கு உரிய பதிலை தற்போதைய கால சூழ்நிலைக்கு உரியதாக மாற்றித் தருவதாக அமைவதே ரஜனீஷ் போன்ற மகான்களின் உன்னத சேவையாகும். இத்தகைய சேவைகளை மக்கள் நலன் கருதி ஆற்றி வருபவர்களே அந்தந்த தலத்தில் எழுந்தருளிய பஞ்ச மூர்த்திகள் ஆவர். இந்த அனுகிரகங்களை அள்ளி வழங்குவதற்காகவும் பஞ்ச மூர்த்திகளின் புறப்பாடு திருத்தலங்களில் அமைகின்றது.

மற்றுள்ள மகர காண்டம்

லால்குடி திருத்தலத்தில் மற்ற எந்த திருத்தலத்திலும் காண முடியாத வகையில் கன்னி மூலை கணபதி அடியார்கள் பிரதட்சிணம் வரும் வகையில் எழுந்தருளி உள்ளார். ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் சுவாமி சந்நிதியில் எழுந்தருளிய இந்த கணபதி மூர்த்தியை வணங்கியே இத்தலத்தில் உழவாரத் திருப்பணியை நிறைவேற்றினார் நம் சற்குரு என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய திருப்பணி இரகசியமாகும். அது மட்டுமல்லாமல் அன்று பிரதோஷ தினமாக அமைந்ததால் பிரதோஷ நாயனாரை தன் அடியார்களுடன் சுமந்து ஆலயத்தை வலம் வந்து பலவிதமான நாட்டியங்களுடன் சுவாமிக்கு சேவை சாதித்தார் நம் சற்குரு. இந்த சேவைகளில் ஒன்றாக விளங்கியதே மகர காண்ட தாண்டவமும் அதன் பலனால் அடியார்கள் பெற்ற அனுகிரகமுமாகும். மகர காண்ட அனுகிரகம் என்றால் என்ன ? சற்றே ஆழ்ந்து சிந்தித்தாலும் லால்குடி திருத்தலத்தின் இறை சக்திகளை யாவுமே சுவாமி சன்னதியில் எழுந்தருளியுள்ள கன்னி மூலை கணபதி மூர்த்தியிடம் அடைக்கலம் கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ளலாம். இத்தகைய அனுகிரக சக்திகளையே நாம் மகர காண்ட தாண்டவ சக்தி என்று அழைக்கிறோம்.

ஸ்ரீகன்னிமூலை கணபதி
சுவாமி சன்னதி லால்குடி

ஸ்ரீகன்னிமூலை கணபதி
அம்மன் சன்னதி லால்குடி

இத்தல நடராஜப் பெருமானும் வலம் வரும் வகையில் அமைந்து கன்னி மூலை கணபதிக்கு எதிரே எழுந்தருளி இருப்பதால் தன் மூத்த மகனின் பாதபூஜையை தினமும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எழுந்தருளி இருப்பதும் இம்மூர்த்தியின் தனிச் சிறப்பாகும். எத்தகைய திருமண தோஷங்களையும், திருமணங்கள் நிறைவேறத் தடையாக உள்ள தோஷங்களையும், திருமணத்திற்குப் பின் நிகழக் கூடிய சந்தான தோஷங்களையும் களையக் கூடியதே கன்னி மூலை கணபதி வழிபாடாகும். இத்தகைய மகத்துவங்களால் மகர காண்ட சக்திகள் லால்குடி திருத்தலத்தில் பூத்துக் குலுங்குகின்றன என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் தெய்வீக இரகசியமாகும்.
மற்றுள்ள மகர காண்டம்
கற்றிலேன் கவையான கணேசா
என்ற ஸ்ரீஅகத்திய நாடித் துதியை ஓதியவாறே ஸ்ரீநடராஜப் பெருமானையும் கன்னிமூலை கணபதி மூர்த்தியையும் வலம் வந்து வணங்குதலால் இரத்தப் புற்று நோய் (blood cancer, leukaemia) உட்பட குறைந்தது 24 விதமான இரத்த சம்பந்தமான நோய்கள் குணமாகும் என்பதே மேற்கண்ட வழிபாட்டின் மகிமையாகும். இதை மகர காண்ட பிரதட்சிணம் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். அதாவது கொடிமரத்திலிருந்து ஆரம்பித்து உள்ளே ஸ்ரீஆதிரை கணபதியை வணங்கி உத்தரவு பெற்று பின்னர் ஸ்ரீநடராஜப் பெருமானை வணங்கி பிரதட்சிணமாக ஆலயத்தை வலம் வந்து வணங்கி, கன்னிமூலை கணபதியை வணங்கி மீண்டும் கொடி மரத்தை அடைதல் ஒரு மகர காண்ட பிரதட்சிணமாகும். ‘கவையான கணேசா’ என்ற சொற்றொடர் ஆதிரை கணபதி, கன்னி மூலை கணபதி என்ற இரு கணேச மூர்த்திகளையும், சுவாமி சன்னதியிலும் அம்பாள் சன்னதியிலும் எழுந்தருளியுள்ள இரு கன்னி மூலை கணபதி மூர்த்திகளையும் குறிக்கும் என்பது மேலோட்டமான பொருளே. 12, 24, 36 என்றவாறு 12ன் மடங்காக மகர காண்ட பிரதட்சிணங்களை நிறைவேற்றுதல் சிறப்பாகும். மகர ராசி என்பது செவ்வாய் பகவான் உச்சமாகும் மகர ராசியைக் குறிக்கும், செவ்வாய் பகவான் இரத்தத்திற்கு உரிய மூர்த்தி என்பதும் நாம் அறிந்த ஜோதிட கோட்பாடுகள் ஆகும். தங்கள் ஜாதகங்களில் செவ்வாய் தோஷம் அமைந்துள்ள அடியார்கள் இத்தகைய பிரதட்சிணங்களால் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். எந்த நாளிலும் இத்தகைய மகர காண்ட பிரதட்சிணங்களை மேற்கொள்ளலாம் என்றாலும் செவ்வாய், சனிக் கிழமைகளிலும் உத்திரம் நட்சத்திர நாட்களிலும் இத்தகைய பிரதட்சிணங்களை இயற்றி மங்கள மாங்கல்ய திரவியங்களை குறைந்தது 12 சுமங்கலிகளுக்கு அளித்தல் சிறப்பாகும்.

ஸ்ரீநடராஜ பெருமான்
லால்குடி

பொதுவாக, நடராஜ மூர்த்திகள் தங்கள் இடது காலை தூக்கி நடனம் புரிவதாகவே பல திருத்தலங்களிலும் காட்சி அளித்தாலும் மதுரை திருத்தலத்தில் மட்டும் அந்நாட்டு மன்னனின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து சுவாமி தன்னுடைய இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நடனம் புரிந்த சந்தியா நாட்டிய திருக்கோலம் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதற்கு பின்னணியாக அமைந்த ஆன்மீக விஷயங்கள் நம்மை பிரமிக்க வைப்பதாகும். சுவாமி திருநடனம் புரிந்த தலம் மதுரை வெள்ளியம்பல திருத்தலமாகும். வெள்ளி என்பது சுக்ர சக்திகளைப் பூண்டது. எண் ஆறிற்கு உரியது. தங்கம் என்பது பிரஹஸ்பதி குரு சக்தியைக் குறிப்பது, மூன்றிற்கு உரியது. இந்த கோட்பாடுகளை எல்லாம் உள்ளடக்கியதே வெள்ளித் தட்டில் நடுவே தங்க நாணயத்தைப் பதித்து அந்தத் தட்டை நாம் உணவேற்க வைத்துக் கொள்வதாகும். அதனால் நமக்கும் இந்த சமூகத்திற்கும் உருவாகும் நற்பலன்கள் பலப்பல. நம் சற்குருநாதர் இத்தகைய வெள்ளித் தட்டையே தான் உணவேற்க பயன்படுத்தி வந்தார் என்பதே இதன் மகிமையைக் குறிப்பதாகும். இவ்வாறு 3, 6 என்ற எண்கள் ஒன்றிற்கு ஒன்று குசாவாக அமைந்தாலும் ஜோதிட ரீதியாக இந்த கிரகங்கள் ஒன்றாய் சங்கமிக்கும்போது குறிப்பாக களத்திர தானம் என்னும் லக்னத்திலிருந்து ஏழாமிடத்திலோ அல்லது ராசியிலிருந்து ஏழாமிடத்திலோ நிகழும் இத்தகைய கிரக சங்கமங்களால் பலவித களத்திர தோஷங்கள் அமையும் என்பது உண்மையே. உதாரணமாக, அத்தகைய ஜாதக அமைப்புகள் உள்ள ஒரு அடியார் தன் திருமணத்திற்காக ஒரு ஜோதிடரிடம் நாள் குறித்து கேட்டபோது அந்த ஜோதிடர் பிப்ரவரி 3ம் தேதியை குறித்துக் கொடுத்தார். அடிப்படை ஜோதிட அறிவே இல்லாத அந்த அடியாரும் அந்த நாளில் திருமணத்தை நிகழ்த்தினார். அன்றைய தினமோ மரண யோகம் நிரவும் நாளாகும். அப்படியானால் அந்த அடியாரின் திருமண வாழ்வு எத்தகைய சோகம் நிறைந்ததாக மாறி இருக்க வேண்டும். திருமணத்திற்குப் பின் அந்த அடியார் நம் சற்குருவை சந்திக்கும் பாக்யம் பெற்றதால் அவருடைய தலை எழுத்தே சிறப்பாக மாற்றி அமைக்கப்பட்டது என்பதை சொல்லவும் வேண்டுமோ ? இவ்வாறு எத்தகைய ஜோதிட அறிவைப் பெறாத அடியார்கள் இருந்தாலும் அவர்களும் இவ்வாறு தங்கம் நாணயம் பதித்த வெள்ளித் தட்டுகளை தானமாக அளித்தலால் பலவிதமான களத்திர தோஷங்களிலிருந்து நிவாரணம் பெறுவார்கள். செவ்வாய் தோஷம், நாக தோஷம் என்பவை பலருடைய ஜாதகங்களிலும் பிரதிபலிக்கும் தோஷமாக இருந்தாலும் இதைப் பற்றி தெளிவாக எடுத்துரைப்பவர்கள் அரிதாகையால் இத்தகைய தோஷம் உடையவர்கள் அல்லது இத்தகைய தோஷங்கள் தங்கள் ஜாதகங்களில் இருப்பதாக நினைத்துக் கொள்வோரும் வெள்ளித் தட்டு தானத்தால் சிறப்படைவார்கள்.

ஸ்ரீசப்த ரிஷிகள்
லால்குடி

பலருக்கும் இத்தகைய தானங்கள் எட்டாக் கனியாக இருந்தாலும் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி மாங்கல்யத்தை தானம் அளிப்பது அனைவராலும் எளிதில் நிறைவேற்றக் கூடிய தான முறைதானே. இந்த மாங்கல்ய தானத்தை மங்கலப் பொருட்களுடன் சேர்த்து தானம் அளித்தலால் செவ்வாய் தோஷம், நாக தோஷம், மற்றும் நாம் அறியாத பலவித களத்திர தான, ஏழாமிட தோஷங்களுக்கு நிவர்த்தி பெறலாம். இத்தகைய தங்க முலாம் பூசிய வெள்ளி மாங்கல்யங்களை தானம் அளிக்கும்போது அவை வெள்ளி மாங்கல்யங்களே என்பதை தானம் வாங்குபவர்களிடம் தெளிவாகத் தெரிவிக்க வேண்டியது தானம் அளிக்கும் அடியார்களின் கடமையாகும். பல வடிவங்களில் இருக்கும் நூற்றுக் கணக்கான மண் பாண்டங்களில் இருக்கும் நீரில் சூரியனின் பிரதிபலிப்பைப் பார்த்தால் அந்த மண் பாண்டங்களில் உள்ள நீர் எந்த அளவிற்குத் தெளிவாக, ஆடாமல் அசையாமல் இருக்கும் என்பதைப் பொறுத்தும், மண் பாண்டங்களின் அளவைப் பொறுத்தும் சூரியனின் பிரகாசம் அமையும் அல்லவா ? மேலும், பிரதிபலிக்கப்பட்ட ஒரு மூர்த்தியின் வலது கால் இடது காலாகவும், இடது கால் வலது காலாகவும் தெரிவது இயற்கைதானே ? இந்த கண்ணோட்டத்துடன் லால்குடி நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்து வந்தால்தான் நம்முள்ளத்தில் பிரதிபலிக்கும் உண்மையான நடராஜப் பெருமானின் சுய ரூபத்தைத் தெளிவாகக் காண முடியும். இதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதே நடராஜப் பெருமானின் பின்புறத்தில் கால் மாற்றி ஆடுவதாக, அதாவது வலது காலைத் தூக்கி ஆடுவதாக அமைந்துள்ள சிற்பம். ஒருவரின் ஜாதகத்தில் ஏழாம் இடம் என்பது களத்திர தானமாக அமையும். அந்த களத்திர தானத்திலிருந்து ஏழாம் இடம் அவருடைய லக்னமாக அமையும் என்றும் கூறலாமே. இதையே woman is the complementary sex, wife is the complementary of husband என்றும் பலவிதமாக கூறுகிறோம். இதைத் தெளிவுபடுத்துவதே லால்குடி திருத்தலத்தில் அமைந்துள்ள கால்மாறி ஆடும் நடராஜப் பெருமானின் திருக்கோலம். ஸ்ரீநடராஜப் பெருமான், ஸ்ரீஆதிரை கணபதி, ஸ்ரீகன்னி மூலை கணபதி இவர்கள் நடுவில் ஏழு முனிவர்களான சப்தரிஷிகள் எழுந்தருளி இருப்பது எத்தகைய பொருத்தமான திருக்கோலம்.

கால் மாறிய விளமர்

திருமணம் என்ற மானிட பந்தத்தை உருவாக்கும் தெய்வீக நிகழ்ச்சியில் அக்னி வளர்த்து ஹோமம் நிகழ்த்துதல் என்பதும் அக்னி சாட்சியாக திருமணம் புரிதல் என்பதும் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இத்தகைய அரிய ஹோம நிகழ்ச்சிகளிலும் மானிடத் தவறுகள் நிறையவே உருவாகும் சந்தர்ப்பங்கள் மிகுந்து வருவதால் சித்தர்கள் கோயில்களிலேயே அதிலும் சிறப்பாக பாடல் பெற்ற தலங்களிலேயே இறை மூர்த்திகளின் சன்னிதிகளில் மாங்கல்ய தாரண நிகழ்ச்சியை நிறைவேற்றும்படி சிபாரிசு செய்கிறார்கள். இத்தகைய திருமணங்களில் சூட்சுமமாக, மனிதக் கண்களுக்குப் புலப்படாத வடிவில், வகையில் ஸ்ரீபதஞ்சலி, ஸ்ரீவியாக்ரபாதர் போன்ற மகரிஷிகள் எழுந்தருளி அந்த தம்பதிகளை வாழ்த்துகிறார்கள் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் உண்மையாகும். இந்த மகரிஷிகளே சிறப்பாக வழிபட்ட ஒரு திருத்தலம் என்றால் அது எத்தகைய சிறப்புடையதாக இருக்கும். திருவாரூர் அருகில் உள்ள விளமர் திருத்தலமே இத்தகைய சிறப்புகளுடன் பொலியும் திருத்தலமாகும்.

அக்னி தீர்த்தம் விளமர்

ஆகாத பெண்டாட்டி கால் பட்டால் குற்றம் என்ற ஒரு பழமொழி நீங்கள் அறிந்ததே. கால் என்பது இங்கு காற்றைக் குறிக்கும். மனைவியைப் பிடிக்கவில்லை என்றால் அவள் காற்று பட்டாலே, அருகில் வந்தாலே கணவனுக்குப் பிடிக்காது என்பது இந்த பழமொழியின் மேலோட்டமான பொருள். திருமணத்தின்போது ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ரஜ்ஜுப் பொருத்தம் என்ற முக்கியமான பொருத்தத்தைப் பார்ப்பார்கள். கணவன் மனைவி அன்யோன்யம், சந்ததி விருத்தி என்ற இரு முக்கிய அம்சங்களைக் குறித்து தெரிவிப்பதே ரஜ்ஜுப் பொருத்தமாகும். கணவன் மனைவி இருவரின் இரத்த சம்பந்தம் எந்த அளவிற்கு அக்னி சக்தியால் சீரமைக்கப்படும் அல்லது மாறி அமையக் கூடும் என்பதையே ரஜ்ஜு பொருத்தம் தெரிவிக்கிறது. சரியான முறையில் திருமணப் பொருத்தம் பார்க்காது திருமணங்களை நிகழ்த்துவதாலும், காதல் திருமணங்கள் போன்ற பல்வேறு காரணங்களாலும் ரஜ்ஜுப் பொருத்தம் முறையாக அமையாது கணவன் மனைவி அன்யோன்யம் குறைதல், சந்ததி விருத்தி ஆகாது போதல் போன்ற பலவித துன்பங்கள் மனித வாழ்வில் மிகுந்து வருகின்றன. இத்தகைய துன்பங்களுக்கு பிராயசித்தத்தை அளிக்கக் கூடியதே விளமர் திருத்தலத்தில் நிறைவேற்றக் கூடிய வழிபாடுகளாகும். இத்தல இறைவனின் திருநாமம் ஸ்ரீபதஞ்சலி மனோகரர் என்பதாகும். பதஞ்சலி மனம் உவந்து வழிபட்ட மூர்த்தி என்பது ஒரு பொருள். தனக்கு இறையருளால் வாய்த்த கணவனே தன் மனதிற்கு உவந்த மணாளன் என்று மனைவி நினைத்தால் அப்போது இல்லறம் நல்லறமாக மாறும் என்பதும் இத்தல இறைவழிபாடு உணர்த்தும் மறைபொருளாகும். எத்தகைய அக்னி குற்றங்களும் தீர்வு பெறும் தலமே விளமர் என்பதே இத்தலத்தின் சிறப்பாகும். அக்னி பிரதானமாகப் பயன்படும் ஹோட்டல் உரிமையாளர்களும், உருக்கு தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரிகளும் தொழிலாளர்களும், பாய்லர் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களும் உரிமையாளார்களும், பொற்கொல்லர்களும், தங்கம் வெள்ளி போன்ற உருக்கும் தொழிலில் ஈடுபட்டு உள்ளோரும் அவசியம் மாதத்திற்கு ஒரு முறையாவது வணங்கி அருள் பெற வேண்டிய மூர்த்தியே விளமர் ஸ்ரீபதஞ்சலி மனோகரர் ஆவார்.

ஸ்ரீபதஞ்சலி மனோகரர் விளமர்

கணவன் மனைவி உறங்கும்போது கணவன் இடது பக்கம் ஒருக்கணித்தும் மனைவி வலது பக்கம் ஒருக்கணித்தும் அருகருகே படுத்துறங்க வேண்டும் என்பது உறக்க விதிகளில் ஒன்று. மூச்சுக் காற்று என்பது மனிதனின் பிறப்பில் தொடங்கி இறப்பில் மறைவதால் மூச்சுக் காற்றிற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. இந்த ஆயுள் சக்தியை மாற்றக் கூடியதே விளமர் திருத்தலம் என்பதை “கால் மாறிய” என்ற இரண்டே வார்த்தைகளில் இரத்தினச் சுருக்கமாக விளக்கியவரே நம் சற்குரு ஆவார். பொதுவாக, கணவன் மனைவியை விட மூத்திருப்பதால் கணவன் விடும் மூச்சின் “வயது” மனைவியின் மூச்சுக் காற்றை விட அதிகமாக இருப்பதால் இந்த “முற்றிய” மூச்சுக் காற்றை சுவாசிக்கும் மனைவியின் ஆயுள் குறைவது இயற்கையே என்றாலும் இதை சீர்செய்யும் அனுகிரகத்தை அளிப்பதே ஒவ்வொரு திருமண வைபவத்திலும் எழுந்தருளும் ஸ்ரீஆதிசேஷனின் அரிய திருப்பணி என்பது இப்போது ஓரளவு புலனாகின்றது அல்லவா ? வெறுமனே மூச்சுக் காற்றின் அளவை நீட்டித்து ஆயுளை பெருக்குவது மட்டும் ஆதிசேஷனின் திருப்பணி அன்று இந்த “கால்” முறையாக தம்பதிகளுக்கு இடையே நிலவ அருள் புரிவதும் “கால்” இல்லாத பாம்பு வடிவில் வலம் வரும் ஸ்ரீஆதிசேஷனின் அரும் பணியாகும். இதை மக்கள் உணர்ந்து கொண்டால் விளமர் திருத்தலத்திலேயே குடியேறி விடுவார்கள் என்பதும் இத்தலத்தின் மகிமையாகும். விளம் என்பது மரகத வகைகளில் ஒன்றாகும். எத்தகைய அக்னி சக்திகளையும் ஈர்க்கும் வல்லமை பெற்றதாகும். இந்த விளம் சக்தியில் கோடி கோடியில் ஒரு அம்ச சக்தியைப் பெற்றதே எத்தகைய பித்த சூட்டையும் தணிக்க வல்ல விளாம் பழமாகும். இந்த விளம் என்ற அக்னி சக்தியே முறையான சந்தான பாக்கியத்தை உருவாக்குவதற்கு அவசியமான அக்னி சக்தியாக பெண்களின் இரத்தத்தில் திகழும் மாதவிடாய் சக்தியாகும். இது செவ்வாய் பகவானுடன் தொடர்புடையது. இந்த இரத்தத் தொடர்பே செவ்வாய் தோஷமாக உருவெடுப்பது. இவ்வாறு ஒன்றுக்கொன்று தொடர்புடைய தெய்வீக சக்திகளை ஓரளவு புரிந்து கொண்டு நல்வாழ்வு பெற மக்களுக்கு வழிகாட்டுவதே விளமர் திருத்தலத்தில் பக்தர்கள் நிறைவேற்றும் வழிபாடாகும். விளமர் திருத்தலத்தில் பொலியும் அக்னி தீர்த்தத்தில் நீராடி அக்னி சக்திகள் நிறைந்த ராஜ்மா பருப்பு கலந்த சுண்டல், பேரீச்சம் பழம், அக்ரூட் பருப்பு கலந்த காய்ச்சிய பசும்பால் தானம் போன்றவை எத்தகைய திருமண தோஷங்களையும் சந்தான விருத்தி தோஷங்களையும் களையக் கூடிய வழிபாடுகளாகும்.

ஸ்ரீவிளம் பைரவர் விளமர்

108 செம்பருத்தி அல்லது செந்தாமரை மலர்களால் ஸ்ரீபதஞ்சலி மனோகருக்கு மாலையிட்டு ஆராதனை செய்தல் அளப்பரிய அக்னி சக்திகளை வர்ஷிக்கும் அற்புத வழிபாடுகளில் ஒன்றாகும். செவ்வாழை பழங்களை துண்டு துண்டாக அரிந்து தேனில் ஊறவைத்து அவற்றை இறைவனுக்கு நிவேதனம் செய்து பின்னர் பக்தர்களுக்கு விநியோகம் செய்வதும் இத்தலத்தில் நிறைவேற்றக் கூடிய அக்னி வழிபாடுகளில் ஒன்றாகும். நம் சற்குரு தன்னுடைய பல சொற்பொழிவுகளிலும் இறைவனைத் தான் பார்ப்பது மட்டும் அல்ல, அவனை பிறருக்குக் காட்டவும் முடியும் என்று ‘கர்ஜிப்பார்.’ இது பற்றி ஒரு முறை ஒரு அடியார் தனக்கு அவ்வாறு இறைவனைக் காட்ட முடியுமா என்று வினவியபோது அந்த அடியார் கேள்வியை முடிக்கும் முன், “ஏன் சார், உங்க அம்மா அப்பா என்பவர்கள் இறைவனைத் தவிர வேறு யார் ? நீங்கள் அவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது யாருடைய தவறு ?” என்று திருப்பிக் கேட்டார்கள். இவ்வாறு இறைவனையே காட்டவல்ல சற்குரு இந்த விளம் சக்தியையா காட்ட முடியாது ? திருமணத்திற்கு முன் உள்ள வாசி கலைதானே திருமணத்திற்குப் பின்னர் தம்பதி சகிதம் உறங்கும்போது மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டால் விளமர் திருத்தலத்தில் விளங்கும் ஸ்ரீகால பைரவர் சன்னதியில் துலங்கும் விளம் சக்தியின் மகிமையைப் பற்றி விரைவாகப் புரிந்து கொள்ள முடியும். இங்கு நீறு பூத்ததுபோல், சாம்பல் படிந்தது போல் நீங்கள் தரிசனம் செய்யும் சக்தியே விளம் சக்தி என்பதாகும். விளமர் திருத்தலம் முழுவதும் வியாபித்துள்ள இந்த விளம் சக்தியை அடியார்கள் தரிசனத்திற்காக அளித்த நம் சற்குருவின் மகிமையை என்னவென்று கூற முடியும் ? இங்குள்ள ஸ்ரீகாலபைரவரின் படத்தை தினமும் தரிசனம் செய்தவாறே விளமர் திருத்தலத்திற்குரிய திருஞான சம்பந்தப் பெருமானின் மூன்றாம் திருமுறைப் பாடலான
மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம்
ஒத்தக நகமணி மிளிர்வதொர் அரவினர் ஒளிகிளர்
அத்தக வடிதொழ அருள்பெறு கண்ணொடும் உமையவள்
வித்தகர் உறைவது விரிபொழில் வளநகர் விளமரே
என்ற பாடலை குறைந்தது 12 முறை தம்பதியர் ஒருங்கே அமர்ந்து பாடிய பின் உறங்கச் செல்லுதலால் உறக்கத்தில் அவர்களுடைய வாசிகலை எப்படி மாறினாலும் அவர்கள் இடையே அமைய வேண்டிய வாசி சக்திகள் முறையாக அமைய இந்த பாடலில் அமைந்துள்ள விளம் சக்திகள் துணை புரியும் என்பதே சம்பந்தப் பெருமான் அடியார்களுக்கு அளிக்கும் அருளாசி ஆகும். விளமர் திருத்தலத்தில் ஸ்ரீவிளம் பைரவப் பெருமான் தட்சிணா மூர்த்தியாய் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளார். இத்தகைய குரு சொரூபத்தின் திருவிளையாடலை இங்கு நினைவு கூர்கிறோம். சுமார் 30 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. அப்போது சற்குரு அடியார்களுடனே உணவருந்துவது, உறங்குவது என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீமதுரபாஷிணி அம்மன் விளமர்

ஒரு முறை அவ்வாறு நாற்காலி மேஜை போட்டு அடியார்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தபோது உணவு பதார்த்தங்கள் பரிமாறிய சில நிமிடங்கள் கழித்து நம் சற்குரு தன்னுடைய வலது துடையை அருகிலிருந்த ஒரு அடியாரின் இடது துடை மேல் வைத்திருந்து இருவரும் உணவு அருந்தி முடிக்கும் வரை எடுக்கவே இல்லை. அந்த அடியாருக்கு சற்குருவின் இந்த செய்கை எவ்வளவு ஆத்ம விசாரம் செய்தாலும் புரியவில்லை. சற்குரு ஏதோ ஒரு அனுகிரகத்தை அளிக்கிறார் என்பதை மட்டுமே அத்தருணத்தில் அந்த அடியாரால் புரிந்து கொள்ள முடிந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்த பின்னரே சற்குருவின் செய்கையின் பின்னணியில் அமைந்த குரு அனுகிரகம் ஓரளவு, ஓரளவே புரிந்தது எனலாம். அது என்ன ? மனிதர்களுடைய உடலில் அனைத்து லட்சுமி மூர்த்திகளுமே வசிக்கிறார்கள். இதில் இடது தொடையில் வசிப்பவள் விஜய லட்சுமி, வலது தொடையில் வசிப்பவள் சந்தான லட்சுமி. தன்னுடைய மகளை மருமகனுக்கு தாரை வார்த்து அளிக்கும்போது மகளை தன் வலது தொடையில் அமர்த்தி தன் மருமகனுக்கு சந்தானச் செல்வமாய் அளிக்க வேண்டும். இடது தொடையில் வசிப்பவள் விஜய லட்சுமி. மனைவி அமர வேண்டிய இடம். இந்த இடது தொடையைத் தட்டி துரோபதையை அங்கு அமரும்படி அழைத்த போது துரியோதனின் இடது துடையில் இருந்த விஜய லட்சுமி சினம் மிகுந்து அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

வெற்றியை அளிப்பவள்தானே விஜய லட்சுமி ? விஜய லட்சுமி வெளியேறி விட்டதால் பீமன் கதையால் அடிபட்டு துரியோதனன் உயிரிழந்தான் என்பது மகாபாரதம் நமக்குப் புகட்டும் பாடம். மேற்கூறிய அடியார் சற்குருவிடம் வருவதற்கு முன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்ததால் விஜய லட்சுமி அந்த அடியாரை விட்டு விலகி விட்டாள் என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். இதை அறிந்த நம் சற்குரு தன்னுடைய ஒரு அடியார் விஜய சக்திகள் இல்லாமல் இருப்பதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா என்ன ? தாயினும் சாலப் பரிந்து சந்தான சக்திகள் உடைய தன்னுடைய வலது துடையை அந்த அடியாரின் இடது தொடை மேல் பதித்து விஜய லட்சுமி தேவியின் அனுகிரகங்களை அருளினார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சற்குருவின் திருவிளையாடல்களில் ஒன்றாகும். இது என்றோ மலர்ந்த ஒரு அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சி அல்ல. ஒரு முறை திருவாசி திருத்தலத்தில் நம் ஆஸ்ரம அடியார்கள் உழவாரத் திருப்பணி நிகழ்த்திக் கொண்டிருந்தபோது அம்பாள் சன்னிதியில் இருந்த ஒரு அதிக வெளிச்சம் தரக் கூடிய ஒரு மின்விளக்கை உடைத்து விட்டார்கள். வெளிச்சம் தரும் விளக்கை உடைத்தல் என்பது அபசகுனமாக கருதப்படுவதால் நம் சற்குருவிடம் இத்தகைய தவறுக்கான விளக்கத்தைக் கேட்டபோது நம் சற்குரு அப்போதுதான் இத்தகைய விளம் சக்திகளின் மகிமையை எடுத்துக் கூறி இவ்வாறு மேற்குப் பார்த்த அம்பாள் சன்னதிகளில் விளம் சக்திகள் பரிணமிக்கும் என்றும் அத்தகைய விளம் சக்திகளை பூர்ணமாகப் பெறும் பொருட்டே அங்கிருந்த மின்விளக்கு அடியார் ஒருவரின் கவனக் குறைவால் அகற்றப்பட்டது என்ற விளக்கத்தை அளித்தார்கள். அதற்காக அஜாக்கிரதையாக நம் அடியார்கள் இருக்கலாம் என்ற கருத்து கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உழவார அடியார்களை எச்சரித்தார்கள்.

ஸ்ரீமாற்றுரைவாதீஸ்வரர் ஸ்ரீநடராஜப் பெருமான் ஸ்ரீபாலாம்பிகை திருவாசி சிவாலயம்

நம் சற்குருவை நேரில் பார்க்காத அடியார்கள் இந்த விளம் சக்தி, விஜய லட்சுமி, சந்தான லட்சுமி அனுகிரகத்தைப் பெற முடியாதே என்ற ஏக்கம் வரலாம் அல்லவா? இத்தகைய ஏக்கத்தை நிவர்த்தி செய்து அடியார்களுக்கு இந்த முக்கூட்டு அனுகிரக சக்தியை அளிக்கவல்லதே விளமர் திருத்தலத்தில் ஸ்ரீகாலபைரவ மூர்த்திக்கு முந்திரிப்பருப்பு மாலை அணிவித்து அதன் சில பருப்புகளை அடியார்களுக்கு தானமாக அளித்தலாகும். அம்பாள் மேற்கு நோக்கி அருளும் திருவாசி, திருஆனைகோவில் போன்ற திருத்தலங்களிலும் அம்பாள், அம்பாளுக்கு எதிரே எழுந்தருளிய கணேச மூர்த்திகள், திருவாசியில் அம்பாள் சன்னதியில் எழுந்தருளிய பெண்டாட்டி ஆட்டி போன்ற தெய்வ மூர்த்திகளுக்கு முந்திரிப் பருப்பு மாலை வழிபாடு நிகழ்த்துவதும் சிறப்பே. திருவாசியில் எழுந்தருளிய ஸ்ரீநடராஜப் பெருமானின் விக்ரஹம் சாட்சாத் சிவபெருமான் தன் திருக்கரங்களால் அமைக்கப்பட்ட சிறப்புடையதால் இந்த நடராஜ மூர்த்தியை தரிசனம் செய்வதே வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பேறாகும்.

ஸ்ரீசூரிய பகவான் ஸ்ரீபதஞ்சலி
ஸ்ரீவியாக்ரபாதர் விளமர்

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

திருவாசியில் ஒரு மரம் உள்ளது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இந்த மரத்தில் காலையில் ஏகப்பட்ட மலர்கள் பூத்துக் குலுங்கும். மாலையில் அனைத்து மலர்களும் உதிர்ந்து விழுந்து விடும். என்று இந்த அனுகிரகம் பக்தர்களுக்கு அளிக்கப்படும் என்பது இத்தலத்தில் பிரம்ம இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. அந்த மலர்களை இறைவனுக்கு சூட்டி வழிபடுவதால் அடியார்களுக்கு கிடைக்கும் அனுகிரக சக்திகளை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. நம் சற்குரு போன்ற சித்தர்கள் எந்த இறை அனுகிரகத்தையும் நம் பூலோக வாசிகள் பெறாமல் விட்டு வைப்பது இல்லையே. அதனால் இமயமலைச் சாரலில் மலரும் ஒரு பூ இத்தகைய விளம் சக்திகளை அளிக்கக் கூடியது என்ற இரகசியத்தை அறிந்து அந்த மலரில் தயாரிக்கப்படும் வாசனை திரவியத்தால் (scent, perfume) திருவாசி ஈசனுக்கும் மற்ற தெய்வ மூர்த்திகளுக்கும் அபிஷேகித்து உழவாரத் திருப்பணி நிறைவேற்றினார் என்றால் நம் சற்குருவின் பெருமையைப் பற்றி எப்படி எடுத்துரைக்க முடியும் ? பெரும்பாலான திருத்தலங்களில் ஸ்ரீநடராஜப் பெருமான் தன் திருவடி நிழலில் முயலகன் என்ற அசுரனை வைத்திருக்கும்போது திருவாசி திருத்தலத்தில் மட்டும் திருவிளம் என்ற நாகத்தை காலபைரவ சக்தியாக ஏற்றிருப்பதும் விளம் சக்திகளை வர்ஷிக்கும் திருவாசி ஈசனின் பெருமைக்கு சான்றாகும். திருவாசி விளமர் திருத்தலங்களில் காலபைரவ மூர்த்திகள் தெற்கு நோக்கி குரு அம்சத்துடன் திகழ்வதற்கான காரணங்களில் விளம் சக்திகளும் ஒன்றாகும். விளமர் திருத்தலத்தில் ஸ்ரீகாலபைரவர் தனிச் சன்னதி கொண்டு அருள்வதால் இத்தகைய விளம் சக்திகளைப் பூரணமாகப் பெற (concentraed form) ஏதுவாகிறது என்பதும் ஒரு காலபைரவ அனுகிரகமாகும். விளம் என்ற அபூர்வ சக்திகளை பல வருடங்களுக்கு முன்பே நமக்கு அருளி அனுகிரகம் அளித்தவரே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார். இங்குள்ள புகைப்படத்தில் பரமஹம்சரின் இடது கரத்தில் திகழும் முத்திரையே இத்தகைய விளம் அனுகிரகத்தை அளிக்கவல்லதாகும். இந்த விள அனுகிரகத்தை பக்தர்கள் புரிந்து கொள்வது கடினம் என்றாலும் தங்களுடைய முக பாவமும் இத்தகைய அனுகிரகத்தை பிரதிபலிக்க வல்லதாக அமைத்துக் கொள்வதே மகான்களின் பெருங்கருணையாகும். ஸ்ரீபரமஹம்சரின் முகத்தில் திகழும் பற்கள் தெரியும்படியான புன்னகைத் தோற்றமும் நம் சற்குருவின் வதனத்தில் திகழும் புன்னகைத் தோற்றமும் இத்தகைய அனுகிரகத்திற்கு சான்றாகத் திகழ்கின்றன. “உண்மையில் நாங்கள் சிரிப்பதே கிடையாது. மகான்கள் சிரிப்பது போல் ஒரு தோற்றத்தைத் தருவார்கள், அவ்வளவே,” என்பார் நம் சற்குரு. இதை விளக்கப் புகுந்தால் அது பெரிய காண்டமாக பெருகி விடும் என்பதால் இந்த அனுகிரகத்தை அடியார்களின் ஆத்ம விசாரத்திற்கு அளித்து விடுகிறோம். ஸ்ரீவிவேகானந்தர் தன் வலது காலை முன் வைத்த குசா கோலத்தில் திகழ்கிறார். அவருடைய குருநாதரோ தன் இடது காலை முன் வைத்து சக்தி சொரூபியாகத் திகழ்கிறார் என்பதை நீங்கள் ஆத்மவிசாரத்திற்கு உரிய ஆரம்பப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம்.

திருப்பள்ளி முக்கூடல்

திருவாரூர் கேக்கரை (ராமகே ரோடு) வழியாகச் சென்று அடையக் கூடியதே திருப்பள்ளி முக்கூடல் சிவத்தலமாகும். மக்கள் வழக்கில் குருவி ராமேஸ்வரம் என்றழைக்கப்படுகிறது. கங்கை என்னும் புனித நதி உலகம் முழுவதும் பிரசித்தமாக இருக்க, கங்கையை விட பல மடங்கு புனிதத்துடன் துலங்கும் இந்த ஷோடச கங்காவை மிகவும் சிரமப்பட்டு தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளதே மனிதர்களின் இப்போதைய இறை நம்பிக்கையைப் பறைசாற்றுவதாகும். எப்படி சிவபெருமானாலேயே உருவாக்கப்பட்ட நடராஜ மூர்த்தி உள்ள திருவாசி திருத்தலத்தில் ஈசன் எழுந்தருளி உள்ளாரோ அதே போல் சிவபெருமானின் விரிசடையிலிருந்து உருவான ருத்ர கங்கையே இத்தலத்தில் தீர்த்தமாக அமைந்துள்ளது. ஸ்ரீஅகஸ்திய முனிவர் ராமபிரானுக்கு ஆதித்ய ஹ்ருதயம் மந்திரம் உபதேசிக்கும் முன், “ராமா, இந்த ஆதித்ய ஹ்ருதய மந்திரம் என்பது எவ்வளவு வலிமை உடைய எதிரியையும் வெல்லக் கூடியது. ஆதித்யனின் இதயத்தில் குடியிருக்கும் ஈசனை மகிழ்விப்பது. இந்த மந்திரத்தை உபதேசமாகப் பெறுபவர்களுக்கு உடல் சுத்தியும் மன சுத்தியும் தேவை. அதனால் நீ முதலில் உன் உடலைத் தூய்மை செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஷோடச கங்கா என்று எம்பெருமானால் உருவாக்கப்பட்ட புனித தீர்த்தத்தில் நீராடுவதால் மட்டுமே அத்தகைய உடல் தூய்மையைப் பெற முடியும். ஆனால், ஒரு முகூர்த்த நேரத்திற்குள் அந்தப் புனித தீர்த்தத்தை உன்னால் இந்த மானிடப் பிறவியில் சென்றடைய முடியாதே. அதற்கு நீ என்ன செய்யப் போகிறாய் ?” என்று ஏதும் அறியாதவர்போல் கேட்டார்.

ஸ்ரீதிரிநேத்ர சுவாமி
பள்ளி முக்கூடல்

ஸ்ரீராமர் கலங்கினார். அவர் நெற்றியில் குழப்ப ரேகைகள் தென்பட்டன. ஒரு நொடியில் இந்த அண்டம் முழுவதும் உள்ள அனைத்துத் தீர்த்தங்களையும் சென்றடையக் கூடிய பெருமாள் மூர்த்தியோ மானிட உடல் என்ற சட்டைக்குள் அகப்பட்டுக் கொண்டு தடுமாறியதால், மனிதர்களுக்கு என்றும் வழிகாட்டும் சித்தர்கள் பாரம்பரியத்தில் உதித்த ஸ்ரீஅகத்திய பிரான், “கலங்காதே, ராமா...,” என்று கூறி தன்னுடைய தீர்த்த செம்பை எடுத்து அதன் வாயை மூடி ஏதோ மந்திரம் சொல்ல அந்த செம்பில் நீர் நிரம்பியது. இல்லை தீர்த்தம் பெருகியதா ? ஸ்ரீஅகத்திய பிரான் அதிலிருந்து ஒரு உத்தரிணி தீர்த்தத்தை ராமபிரானின் உள்ளங்கையில் வார்க்க அதை இறை நினைவுடன் அருந்தினார் ராமபிரான். பின்னர் ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்திர உபதேசம் பெற்று ராவணனை வதம் செய்து சீதையை மீட்ட வரலாறு நீங்கள் அறிந்ததே. ஸ்ரீஅகத்திய பிரானோ ராமபிரானுக்கு தன் செம்பிலிருந்து தீர்த்தத்தை அளித்த பின்னர் எஞ்சிய தீர்த்தத்தை மீண்டும் திருப்பள்ளி முக்கூடல் தீர்த்தத்தில் சேர்த்தார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். இதைத்தான் குருவை மிஞ்சிய சிஷ்யன் என்று வழக்கில் கூறுவது. அதாவது ஜடாயுவுக்கு முக்தி அளித்த ராமபிரானுக்கு முன்னரே முக்கூடல் தீர்த்தத்தை அருந்திய பெருமை உடையவரே ஜடாயு ஆவார். இக்காரணம் பற்றியே இத்தீர்த்தம் குறு ராமேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. குறு முனி அகத்திய பிரான், ராமர், ஈஸ்வரன் என்ற முப்பெரும் சிவப்பர ஜோதி சக்தியால் உருவானதே பள்ளி முக்கூடல் தீர்த்தமாகும். அதனால்தான் செய்த வினை, செய்து கொண்டிருக்கின்ற வினை, இனி செய்யப்போகும் வினை என்ற மூன்று வினைகளுக்குமே பரிகாரம் சுட்டக் கூடிய ஒரே திருத்தலமாக பள்ளி முக்கூடல் அமைகின்றது. “யார் ஒருவர் கங்கை தீர்த்தத்தை ஒரு துளி அருந்தி உள்ளாரோ அல்லது ஒரு முறை சிவ பூஜையை செய்திருக்கிறாரோ அல்லது ஒரு முறையாவது கீதையை படித்துள்ளாரோ அவருக்கு முக்தி நிச்சயம்,” என்று ஆணித்தரமாக உரைப்பவர் ஸ்ரீஆதிசங்கரர். அவ்வாறு இருக்கும்போது சிவ சக்திகள், சிவ அவதார சக்திகள், சிவ குரு சக்திகள் இவை அனைத்தும் ஒருங்கே பொலியும் தீர்த்தத்தின் மகிமையை எப்படித்தான் வர்ணிக்க முடியும் ? வெறுமனே ஒரு தோராயமாகக் கணக்கிட்டாலே இத்தீர்த்தத்தில் முக்கூடல் தீர்த்த சக்திகளும், ஷோடச கங்கா சக்திகளும், ஏழு கடல் தீர்த்த சக்திகளும் நிரவியுள்ளன. பொதுவாகவே, தீர்த்தத்தில் நீராடுமுன் சப்த ரிஷிகளையும், தீர்த்த தேவதைகளையும், பித்ரு தேவதைகளையும் பிரார்த்தித்து அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே தீர்த்தத்தை கையில் எடுத்து முதலில் முகத்தை அலம்பிக் கொண்டு, கண்களில் ஒற்றிக் கொண்டு, தலையில் தெளித்துக் கொண்டு, இவ்வாறு மனித உடலை ஓரளவு தூய்மை செய்து கொண்ட பின்னரே தீர்த்தத்தில் இறங்கி கால் மற்ற உடல் பாகங்களை தூய்மை செய்து கொள்ள வேண்டும் என்பது சித்தர்கள் சுட்டிக் காட்டும் தீர்த்த நீராடல் விதி. அதே போல் கடல்களில் சில குறிப்பிட்ட தினங்களில் மட்டுமே நீராட வேண்டும் என்ற விதி உண்டு. அவ்வாறு அந்தக் குறித்த நாட்களில் நீராடும் போதும் முதலில் ஸ்ரீஅகஸ்தியாய நமஹ என்று கடற்கரை மணலில் எழுதி அந்த எழுத்துக்களை கடல் நீர் தொட்டுச் சென்ற பின் கடலில் இறங்கி நீராட வேண்டும் என்பது கடல் தீர்த்த வழிபாடு விதி. இதுவரையில் இந்த நீராடல் விதிகளை அறியாமல் இருந்தாலும் இனியாவது எந்த புனித தீர்த்தத்தில் நீராடும் முன்னர் ஸ்ரீஅகத்திய பிரானை தியானித்து நீராடுதலே சிறப்பாகும்.

ஸ்ரீஅஞ்சனாட்சி அம்மன்
பள்ளி முக்கூடல்

இந்த உலகில் உள்ள தீர்த்தங்கள் மட்டும் அல்ல நாம் அறியாத பல தேவலோக தீர்த்தங்களும் அகத்திய பிரானின் திருஉதரமாகிய வயிற்றில் பள்ளி கொண்டிருப்பதால், நிலை பெற்றிருப்பதால் நாம் அகத்திய பிரானை வணங்கினால் அனைத்து தீர்த்தங்களையும் வணங்கிய பலனைப் பெறுவோம் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் மனத் தெளிவு. இத்தகைய மகிமை பொருந்திய அகத்திய தீர்த்தம் அமைந்த திருஅண்ணாமலையை வலம் வந்து அங்கு தங்களால் முடிந்த சிறு அன்னதானத்தை நிறைவேற்றினால் அதன் மதிப்பு எத்தனை பெருமை வாய்ந்ததாக இருக்கும் என்று உணர்த்துவதும் முக்கூடல் தீர்த்தத்தின் சிறப்பாகும். இத்தல இறைவனின் திருநாமம் ஸ்ரீதிரிநேத்ர சுவாமி என்பதாகும். திரி நேத்ரம் என்றால் மூன்று கண் அல்லது மூன்றாம் கண் என்று பொருள். காலம் தேசம் என்ற எல்லையைக் கடந்து நிற்பதே மூன்றாம் கண் சக்தி. இந்த திரிநேத்ர சக்தி முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் மட்டுமே உடையது என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். மூன்றாம் நேத்ர சக்தி, ஏழு சக்கரங்கள், குண்டலினி சக்தி என்பவை எல்லாம் அனைத்து மனிதனுக்கும் சொந்தமான இறை சக்தியே. அனைத்து மனிதர்களும் இத்தகைய சக்திகளுடன்தான் பிறப்பெடுக்கிறார்கள். மகான்கள் என்பவர்கள் இந்த சக்திகளை எல்லாம் சிறிதளவு கூட சுயநலத்திற்காக பயன்படுத்தாது மற்றவர்களின் நன்மைக்காக பிரயோகம் செய்யும்போது அவர்கள் உத்தமர்களாக உயர்கிறார்கள், அவ்வளவே. இந்த அற்புதங்களை எல்லாம் உணரும் ஆரம்ப கட்ட பயிற்சிக் கூடமாக அமைவதே பள்ளி முக்கூடல் திருத்தலமாகும். இங்குள்ள தீர்த்தத்தில் விளங்கும் நீர் அனைத்துமே ஒரு துளி கூட மற்றொரு துளிக்கு நிகரானது அல்ல, எந்த நீரும் அழுக்கடைந்தோ மாசு பெற்றோ விளங்குவது கிடையாது, ஒவ்வொரு துளி தீர்த்தத்திற்கும் பிரத்யேகமான பலன்கள் உண்டு. எப்படி ஏதாவது ஒரு சித்தியைப் பெற்ற பின்னர் அந்த சித்தியை தனக்காக பயன்படுத்தாது தன்னுடைய உயிருக்கே ஆபத்து வந்த போதும் அந்த சித்தியை துஷ்பிரயோகம் செய்யாமல் இருந்தால் அவருக்கு மற்றோர் சித்தி இறை அனுகிரகமாக வழங்கப்படுகிறதோ அதே போல்தான் இங்குள்ள தீர்த்தமும். இந்த தீர்த்தத்தின் ஒரு துளியை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினால் அடுத்த துளியை நல்ல விதமாக பயன்படுத்தும் வசதியும் வாய்ப்பும் தேடி வரும். 108 யுகங்கள் தவம் இயற்றிய சூரபத்மன் முன் சிவபெருமான் ஒரு துளி நீராய் காட்சி அளித்தார், ஸ்ரீஅகத்திய பிரான் ஏழு கடல் தீர்த்தத்தையும் ஒரு துளி நீராக தன் உள்ளங்கையில் வைத்து அருந்தினார் என்ற மறை வாக்கியங்கள் நீர், தீர்த்தத்தின் மகிமையைப் பறை சாற்றுபவையே. இந்த மறை வார்த்தைகளை ஆரம்ப கட்ட பயிற்சிக்கு உரியவையாக எடுத்துக் கொண்டு முன்னேறுவதும் சாலச் சிறந்ததே. என்னதான் ஆரோக்கியமான உடல் நம் தாய் தந்தையரால் அளிக்கப்பட்டாலும் திருத்தல வழிபாடுகள், நல்ல பழக்க வழக்கங்கள், ஆரோக்கியமான உணவு, முறையான விளையாட்டுகள் போன்றவற்றால் உடலை ஆரோக்கியமாகப் பேணுகிறோமோ அதே போல உடலுக்கு முக்கிய உறுப்பாகத் திகழும் கண் பார்வையை நன்முறையில் பேண உதவி புரிவதே அஞ்சனம் என்னும் கண் மை ஆகும். சுத்தமான பசு வெண்ணெய் தடவிய கொட்டாங்கச்சியில் கரிசலாங்கண்ணி தேங்காய் எண்ணெய் கலந்த தீபத்தின் புகை படருமாறு வைத்திருந்து கிட்டிய கண் மையே உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகும். இவ்வாறு பெண்கள் தங்கள் கண்களுக்கு மை இட்டுக் கொள்வதால் கண்கள் குளிர்ச்சி அடைந்து முகவும் வசீகரமாகத் திகழ்வதுடன் மூன்றாம் நேத்ரம் என்ற வருமுன் காக்கும் இறை சக்தியைப் பெற இத்தகைய வழிபாடுகள் துணை புரியும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
பள்ளி முக்கூடல்

இந்த அரிய கண் மையை வெள்ளிக் கிழமைகளிலோ அல்லது நவராத்திரி தினங்களிலோ இத்தலத்தில் மற்ற மங்கலப் பொருட்களுடன் சேர்த்து சுமங்கலிகளுக்கும் சிறுமிகளுக்கும் தானம் அளித்தல் சிறப்பாகும். இத்தலத்தில் மட்டுமே அடியார்கள் பெறக் கூடிய ஒரு அனுகிரகம் உண்டு. ஆண்கள் இறைவனிடம் வேண்டும்போது, “இறைவா, இந்தப் பிறவி மட்டுமல்லாது இனி வரும் பிறவிகளிலும் இந்த மனைவியே எனக்கு மனைவியாக வாய்க்க வேண்டும்,” என்று வேண்டும்படி பெரியோர்கள் கூறுவார்கள். ஆழ்ந்த கருத்துள்ள பிரார்த்தனை இது. பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்பு உண்டேல் உனை என்றும் மறவாமை வேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையை மட்டுமே இறைவனிடம் முன் வைக்க வேண்டும் என்பதே நம் சற்குரு சுட்டிக் காட்டும் பாடம். ஆனால், இந்த சிறந்த பிரார்த்தனையை மனப் பூர்வமாக இறைவனிடம் முன் வைக்க முடியாதவர்களே இவ்வாறு தற்போதுள்ள மனைவியையே அடுத்தடுத்த பிறவிகளிலும் தந்தருள இறைவனிடம் வேண்டுவதாகும். தற்போதைய கலியுலகில் மற்ற பெண்களையோ ஆண்களையோ மனதால் தீண்டாமல் எவராலும் இருக்க முடிவதில்லை. இந்த ஏக்க எண்ணமானது மனதில் வேரூன்றி கிளை விட்டு அடுத்தடுத்த பிறவிகளுக்கு வழிகோலும், இவ்வாறு பல பெண்களை மணக்க வேண்டிய சூழ்நிலைகள் நம் ஏக்கத்தால் உருவாவதால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவே இவ்வாறு தற்போதையே மனைவியையே மீண்டும் வரிக்கிறோம். இவ்வாறு அடுத்த பிறவியில் நம்முடைய பூர்வ ஜன்ம தாரமே மனைவியாக வரும்போது நமக்கு நிச்சயமாக உடல் இச்சை பெருகாது, ஸ்ரீராமகிருஷ்ணர் சுட்டிக் காட்டுவதுபோல் ஓரிரு குழந்தைகள் பிறந்த உடனேயே கணவன் மனைவி அப்பா மகள், தாய் மகள் என்ற உறவைக் கொண்டவர்கள் ஆகி விடுவர். இந்நிலையில் இறை பக்தி என்பது உள்ளங்கை நெல்லிக் கனிதானே. திரிநேத்ர சுவாமி, அஞ்சனாட்சி அம்மன் என்ற தெய்வீக இணைப்பு இந்த உலகில் நாம் எங்குமே பெற முடியாத அரிய இணைப்பாக இருப்பதால் பக்தர்கள் இந்த அரிய அனுகிரகத்தைப் பயன்படுத்தி ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல, திருவள்ளுவர் பெருந்தகையைப் போல, நம் சற்குருவைப் போல உத்தமராய் மலர வேண்டுகிறோம். இந்த உத்தம தீர்த்தத்தை பயன்படுத்தும் சிறந்த முறையாக சித்தர்கள் உபதேசிப்பதாவது, முதலில் ஒரு மண்டல காலத்திற்கு அதாவது 48 நாட்களுக்கு தொடர்ந்தோ அல்லது விட்டு விட்டோ அவரவர் சூழ்நிலையைப் பொறுத்து இந்த தீர்த்தத்தில் நீராட வேண்டும். நீராடுதல் என்றால் ஒரு நாளைக்கு ஒரு முறை முடிந்த மட்டும் பிரம்ம முகூர்த்தத்தில் நீராடுவது நலமே. வெளியூரில் வசிப்பவர்களும், பெண்களும் இவ்வாறு தொடர்ந்து நீராட முடியாமல் போவதால் அவர்களின் மொத்த நீராடல் எண்ணிக்கை 48 அதாவது ஒரு நாளைக்கு ஒரு முறை நீராடல் என்ற கணக்கு நிறைவேறியவுடன்தான் அடுத்த பூஜையான தர்ப்பணத்தை ஆரம்பிக்க வேண்டும். கங்கையின் புனிதத்தையே தாங்க ஒரு மனிதனால் முடியாது என்றால் கங்கையை விட 16 மடங்கு புனிதமான தீர்த்த சக்திகளை உடலும் மனமும் ஏற்றுக் கொள்தல் என்பது அவ்வளவு எளிதல்லவே. இதனுடன் ஏழு கடல் தீர்த்த சக்திகளும் ஸ்ரீஅகத்திய முனிவரால் அளிக்கப்பட்டுள்ளன அல்லவா ? அடுத்த ஒரு மண்டல காலத்தில் இத்திருக்குள தீர்த்தத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும், அதற்கு அடுத்து ஒரு மண்டல காலத்திற்கு இந்த திருக்குள தீர்த்தம் கலந்த பிரசாதத்தை குறைந்தது ஆயிரம் பேருக்கு அன்னதானமாக அளிக்க வேண்டும். இந்த தர்ப்பண வழிபாடுகளையும் இதே முறையில் 48 நாட்கள் நிறைவேற்றிய பின்னரே அடுத்த வழிபாடான அன்னதான கைங்கர்யத்தை மேற்கொள்ள வேண்டும்.

பள்ளி முக்கூடல்

வெளியூரில் வாசம், மாதவிலக்கு போன்ற பல்வேறு காரணங்களால் பலரும் ஒரு மண்டல காலம் என்ற 48 நாட்களுக்குள் 48 முறை நீராடல், தர்ப்பணம், அன்னதானம் போன்ற நற்காரியங்களை மேற்கொள்ள முடியாதே, அப்போது மண்டலம் என்ற கணக்கு மாறி விடுமே என்று சிலர் நினைக்கலாம். ஒரு சமயம் மாதா அமிர்தானந்தாவிடம் ஒரு அடியார், “அம்மா, ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பிரார்த்தனை செய்ய வேண்டும் ?” என்று கேட்டபோது அம்மா, “உங்கள் கணக்கில் ஒரு நாள் என்பது 24 மணி நேரமாக இருப்பதால் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள், அடுத்த அரை மணி நேரம் உங்கள் பிரார்த்தனை நிறைவேறுவதற்காக இறைவனை தாயாகவோ, தந்தையாகவோ, ஆசானாகவோ வரித்து அழுது புலம்புங்கள்,” என்றார். இது என்ன, உங்க கணக்கு, எங்க கணக்கு ? இதுவே மகான்கள் தெரிவிக்கும் காலக் கோட்பாடு. இது பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொள்கிறோம். பெரும்பாலான பக்தர்கள் அன்னையை தரிசனம் செய்யும்போத அவர்கள் காதில், “அம்மா பிள்ளை செல்ல பிள்ளை,” என்ற துவாதச மந்திரம் ஒன்றை உபதேசமாக அளிப்பார்கள். இவ்வாறு அன்னை அளிப்பது ஒரு சற்குரு அளிக்கும் மந்திர உபதேசம் என்று புரிந்து கொண்டவர்களையே விரல் விட்டு எண்ணி விடலாம் என்றால் அந்த மந்திரத்தை ஓதி இறை தரிசனத்தைப் பெறும் அடியார்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆனால், அது பற்றி மகான்கள் கவலைப்படுவதே இல்லை. “மந்திரம் அளிப்பதோடு எங்கள் பணி முடிந்து விடுகிறது. நாங்கள் போடும் விதையை (குரு உபதேச மந்திரத்தை) உங்கள் மனதில் தெளிப்பதில்லை, உங்கள் உள்ளத்தில் ஆழ விதைத்து விடுகிறோம். அதனால் அது இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நிச்சயம் முளைக்கும்,” என்பார் நம் சற்குரு. இவ்வாறு அன்னை அமிர்தானந்தா மந்திரத்தை ஒரு குழந்தைப் பேற்றை அளிப்பது போன்ற அக்கரையுடன் ஒரு தாயைப் போல், ஆனால் தாயினும் சாலப் பரிந்துதான் ஊட்டுகிறார்கள்.

ஸ்ரீகஜலட்சுமி பள்ளி முக்கூடல்

அந்த மந்திரக் குழந்தையைப் பெறுபவரின் நிலையைப் பொறுத்து ஒரு வருடமோ, ஒரு பிறவியோ ஏன் நூறு பிறவியோ கூட அந்த மந்திரம் சித்தி ஆவதற்கு ஆகலாம். மந்திரம் சித்தி ஆனவுடன் மந்திர ஒலி, மந்திர சொரூபம் மறைந்து உபதேச மந்திரத்தின் சக்தி சைதன்ய நிலையில், உணர்வு பூர்வமாய் மந்திரம் பெற்றவரின் உள்ளத்தில் பதிந்து விடுகிறது. இதுவே அம்மாவின் காலக் கணக்கு. அம்மாவுக்கு ஓரிரு நொடிகள் எடுத்துக் கொள்ளும் மந்திர உபதேசத்தை சித்தி செய்ய அதைப் பெற்ற அடியார்களுக்கு எத்தனை வருடங்கள் ஆகுமோ ? அதை இறைவனை அறிவார். மகான்கள் என்பவர்கள் காலம் தேசம் கடந்த நிலையில் இருப்பவர்கள். பூலோகம் என்பதோ காலம் தேசம் என்ற வரையறைக்கு உட்பட்டது. இந்த வரையறைக்குள் இருப்பவர்கள் 24 மணி நேரம் ஒரு நாள் என்ற காலத்தை ஒட்டியே தங்களுடைய காரியங்களை நிறைவேற்ற வேண்டும் என்பது விதி. ஆனால், ஒருவர் சற்குருவைப் பெற்று விட்டால் சற்குரு இந்த பூலோக காலக் கணக்கை ஒவ்வொரு அடியாருக்கும் ஒவ்வொரு விதத்தில் மாற்றி அருள்வார் என்பதே குருநாதர்களின் திருவிளையாடல். அது மட்டுமல்ல, ஒரு அடியாரே சில சமயம் சில திருத்தலங்களில் ஒரு மணி நேரத்தை பல மணி நேரமாக அனுபவிப்பார், பல மணி நேர வேதனைகளை சில நிமிட வேதனைகளாகக் குறைத்து அனுபவிப்பதும் உண்டு. இறைவன்தான் திருவிளையாடல் புரிபவன் என்று கிடையாது, சற்குருமார்களும் திருவிளையாடலில் மன்னர்களே. இந்த மூன்று மண்டல பூஜைகளை முறையாக இயற்றி வந்தால் அப்போது கனியும் சித்திகள் மூலம் அடுத்தடுத்து அந்த அடியார் இயற்ற வேண்டிய தெய்வீகத் திருப்பணிகளை தாமாகவே தெரிந்து கொள்வார் என்பதே முக்கூடல் தீர்த்தம் சுட்டிக் காட்டும் மகிமையாகும். தற்காலத்தில் பலரும் சபரிமலைக்கு ஒரே வருடத்தில் 18 முறை பஸ், வேனில் யாத்திரை செய்து விட்டு தான் குருசாமி ஆகி விட்டாதாக நினைத்துக் கொள்கிறார்கள். இது சம்பந்தமாக நம் சற்குரு ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார்கள். ஒருவர் 48 நாட்கள் நம் சற்குரு கூறிய முறையில் விரதமிருந்து பெரிய பாதை வழியாக நடந்து சென்று, 18 படிகளை மிதித்து வணங்கி, மகர ஜோதியில் ஸ்ரீஐயப்ப தரிசனம் பெறுவதையே ஒரு முறை ஐயப்ப தரிசனம் பெற்றதாக எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு 18 முறை, 18 ஆண்டுகள், 18 மகர ஜோதி தரிசனம் பெற்றவர்களே குருசாமி என்னும் தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இதே விதிமுறை முக்கூடல் தீர்த்த வழிபாடுகளுக்கும் பொருந்தும். இவ்வாறு எந்த அடியாராவது முக்கூடல் தீர்த்தத்தில் நீராடி இறையருளைப் பெற்றுள்ளார்களா என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. உத்தம சிவ அடியாரான பெருமாள் மூர்த்தியே இவ்வாறு முக்கூடல் தீர்த்தத்தில் நீராடி லட்சுமி தேவியை என்றும் நிரந்தரமாக தன் உள்ளத்தில் மகாலட்சுமியாக பதித்துக் கொண்டார் என்பதே முக்கூடல் வரலாறு சுட்டிக் காட்டும் தீர்த்த மகிமையாகும். அது மட்டுமல்லாமல் நின்ற நிலை, கிடந்த நிலை, அமர்ந்த நிலை என்ற மூன்று நிலைகளிலும் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கும் அனுகிரகத்தையும் அளித்தவரே முக்கூடல் முக்கண் ஈசர் ஆவார். இத்தகைய ஒப்பற்ற ஸ்ரீ சக்திகள் மிகுந்த திருத்தலமே கும்பகோணம் அருகிலுள்ள ஸ்ரீபுரந்தான் திருத்தலமாகும்.

திருமகள் உறையும் ஸ்ரீபுரந்தான்

கும்பகோணம் அல்லது அரியலூர் வழியாக சென்றடையக் கூடிய ஸ்ரீபுரந்தான் திருத்தலம் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். பெருமாள் நின்ற கோலம், கிடந்த கோலம் அமர்ந்த கோலம் என்றவாறாக அருளாட்சி செய்வதுடன் இத்தகைய மூன்று மூர்த்திகளுமே சுதை ரூபத்தில் எழுந்தருளி உள்ளதே இத்தகைய திருத்தலத்தின் தொன்மையைப் பறை சாற்றுவதாகும். பெருமாள் தசாவதார கோலத்தில் எழுந்தருளி இவ்வுலகைக் காத்து வருகிறார் என்று நாம் சாதாரணமாக நினைத்தாலும் இத்தகைய அவதாரங்களின் பெருமையைக் கூற யுகங்கள் போதாது என்பதே இந்த அவதாரங்களின் பெருமை ஆகும். நின்ற கோலம், கிடந்த கோலம், அமர்ந்த கோலம் என்ற இந்த மூன்று கோலங்களை மட்டுமே விளக்கும் ஸ்ரீபுரந்தான் திருத்தல மகிமையைப் பற்றி கூறுவதானால் மனிதனின் மூன்று அடிப்படை கிருத்தியங்களை விளக்குவதாகவே இந்த கோலங்கள் அமைந்துள்ளன. மனிதனின் அடிப்படை தோற்றம் மீன், இது தான் இட்ட முட்டைகளைப் பார்த்தே அவைகளைப் பொறித்து குஞ்சுகள் ஆக்கி விடுகிறது.

ஸ்ரீரெங்கநாதப் பெருமாள்
ஸ்ரீபரந்தான்

ஸ்ரீவரதராஜப் பெருமாள்
ஸ்ரீபுரந்தான்

ஆமையோ தான் கடலில் எங்கே அமர்ந்து கொண்டு தன் முட்டைகளை தொடர்ந்து நினைக்கும் தியான சக்திகளின் மூலமே அவற்றை ஆமைக் குஞ்சுகள் ஆக்கி விடுகிறது. அவ்வாறு பொரிக்கப்பட்ட ஆமைக் குஞ்சுகள் மீண்டும் கடலை அடைந்தவுடன் தன் குஞ்சுகளை அடையாளம் கண்டு கொண்டு அவற்றைத் தன்னுடன் சேர்த்து வைத்துக் கொள்கிறது. கோழியோ தன்னுடைய முட்டைகளின் மீது அமர்ந்து கொண்டு தன்னுடைய உடல் சூட்டை அந்த முட்டைகளுக்கு அளித்து குஞ்சாக பொரிக்கிறது. இந்த மூன்று அடிப்படை உயிர் சக்திகளை அனுகிரகமாக அளிக்கவல்லதே உலகைக் காக்கும் பெருமாளின் நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோல தரிசனத் தத்துவங்கள் ஆகும். இந்த தரிசனங்களை எப்படி நம்முடைய நலனுக்காக பயன்படுத்தலாம் என்பதையே இந்த மூன்று கோலங்களின் வழிபாட்டு முறையாக சித்தர்கள் அளிக்கின்றனர். குங்குமப்பூ தைலத்தை பஞ்சினால் அல்லது பருத்தி துணியால் இந்த மூர்த்திகளுக்கு காப்பிட்டு, செந்தாமரை, சம்பங்கி, செவ்வந்தி போன்ற மாலைகளால் அலங்கரித்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் படைத்தலே இத்தகைய மூர்த்திகளுக்கு நிறைவேற்றும் வழிபாடாகும். இத்தலத்தில் நிறைய வௌவால்கள் நடமாட்டம் உள்ளதால் வழிபாட்டிற்கு முன் அடர்த்தியாக சாம்பிராணி தூபம் இடுதல் சிறப்பாகும். வாரம் ஒரு முறை தூபம் இடுதல் என்ற வழிபாடே நிரந்தர லட்சுமி கடாட்சத்தை நல்கும் சக்தி பெற்றது என்றால் மற்ற வழிபாடுகளின் பெருமையைப் பற்றிக் கூற வேண்டுமா என்ன ?

ஸ்ரீபுரந்தான் கைலாயப்பாதை

இன்றைக்கு அழகின் பெயரிலோ, செல்வத்தின் பெயரிலோ, அதிகார மமதையிலோ கொழிக்கும் அனைவருமே ஏதோ ஒரு பிறவியில் ஸ்ரீபுரந்தான் பெருமாள் மூர்த்திக்கு சேவை சாதித்தவர்களே என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பார் நம் சற்குரு. ஆனால், இத்தகைய செல்வம் எதுவுமே வேண்டாம் என்று ஒரு புறம் தள்ளியவர்களை தன் புறம் அணைத்து இரட்சிப்பவரே ஸ்ரீபுரந்தான் பெருமாள் மூர்த்தி ஆவார். ஸ்ரீபுரந்தான் திருத்தலத்தில் வழிபாடுகளை இயற்றும்போது குறைந்தது ஐந்து அடியார்கள் திருத்தலத்தில் ஓரிடத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்து அப்பர் சுவாமிகள் அருளிய வேற்றாகி விண்ணாகி என்ற திருவாசகப் பாடலை ஒருமுகமாக ஓதுதல் சிறப்பு. ஸ்ரீபுரந்தான் பெருமாள் திருத்தலத்தின் விமானம் சுவாமியின் நின்ற கோலத்துடன் முடிவடைவது இல்லை. எப்படி திருஅண்ணாமலையின் உயரம் வெறுமனே 1500 அடி என்ற கணக்கு கிடையாது, மனித ஊனக் கண்களுக்கு மட்டுமே அப்படி ஒரு காட்சி தெரிகிறது என்று சித்தர்கள் உறுதிப்படுத்துகிறார்களோ அதே போல ஸ்ரீபுரந்தான் திருமால் தலமும் நாம் காணும் பெருமாளின் நின்ற கோலத்தையும் கடந்த பெருவெளியைச் சுட்டிக் காட்டுவதாகும். குறைந்தது ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் இட்டு இத்தலத்தில் வழிபாடுகளை இயற்ற வேண்டும். இதனால் இந்த வழிபாட்டில் கலந்து கொள்ளும் அனைவருமே கைலாயப் பாதை தரிசனத்தைப் பெறுவார்கள் என்பதே இங்கு நிறைவேற்றும் பத்மாசன மகிமையாகும். குங்குமப்பூ, தாமரை, பத்மாசனம் என்ற மூன்று தெய்வீக சக்திகளின் மகத்துவத்தை உணரக் கூடிய திருத்தலமும் ஸ்ரீபுரந்தான் ஆகும். ஸ்ரீமூர்க்கரிஷி என்னும் மகான் பள்ளி முக்கூடல் திருத்தலத்தை தரிசித்து அருள் பெற்ற உத்தமர். அந்த உத்தமர் அளித்த பொக்கிஷங்களையே குருவாய் மொழிகளாக இங்கு நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். இந்த சித்த பொக்கிஷங்களைத் தொடர்ந்து சென்றால் குரு அருளால் பெருமாள் உறையும் வைகுண்ட தரிசனத்தையும் அதை அடுத்து கைலாய தரிசனத்தையுமே அடியார்கள் பெறலாம் என்பதே வேற்றாகி விண்ணாகிய இறைவன் மகிமை, பெருமை. அப்பர் பெருமான் திருவையாறு அப்பன் குட்டையில் எழுந்து திருவையாறு திருத்தலத்தில் கைலாய தரிசனம் பெற்றதை இங்கு நினைவு கூர்க. தெய்வீகம் தெளிவாகும்.

ஸ்ரீபுரந்தான் பெருமாள் ஆலயம்

ஸ்ரீபுரந்தான் திருத்தலத்தில் திகழும் கைலாய பாதையை, வைகுண்ட வாசலைப் பற்றி மேலும் விவரிக்க முடியுமா என்று ஒரு அடியார் கேட்டுள்ளார். தெய்வீக உலகில் அனைத்தும் சாத்தியமே. நம் சற்குரு திருஅண்ணாமலையைப் பற்றி விவரிக்கும்போது, “ஒளி வீசும் நூலில் கோர்த்த முத்து மாலையைப் போன்றது அது,” என்பார். அது என்பது பால் குறிக்காத சொல் அன்று, ஆண் பால் பெண் பால் என்ற பால் கடந்த குறிச்சொல் என்பதே திருஅண்ணாமலை குறிக்கும் சுவை. நம் பூலோகத்தில் கோயில்கள், திருத்தலங்கள் என்று அமையாத அந்த புராதன காலத்திலேயே முனிவர்கள், ரிஷிகள் போன்ற மகான்கள் இறைவனை, திருஅண்ணாமலையை இவ்வாறுதான் தரிசனம் செய்து மகிழ்ந்தார்கள் என்பதே யுகங்கள் கடந்த சுவையாக யுகங்கள் கடந்து ‘நிற்கும்’ நம் சற்குரு அறிவிப்பது. இன்று நாம் பல அடியார்களை சுத்த முத்து ஆபரணங்களை அவை எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் வாங்கி ஏழைச் சிறுமிகளுக்கு தானமாக அளிக்கும்படிக் கூறுவது இத்தகைய உயர்ந்த சுவையை அனைவரும் அனுபவிக்க உதவி புரிவதற்காகவே. இதுவே என்றும் நிலைத்து நிற்கும் சித்த சுவை, நம் சற்குரு சுட்டிக் காட்டும் முத்துச் சுவை. இவ்வாறு சுத்த முத்து ஆபரணங்களை தானமாக அளிக்க முடியாவிட்டாலும் அப்பர் சுவாமிகளின் திருத்தாண்டக துதியை சூரிய அஸ்தமனத்தின்போது ஸ்ரீபுரந்தான் திருத்தலத்தில் கோபுரத்தை நோக்கி அமர்ந்து ஓதி வருவதால் சிறிது, சிறிதாக இந்த கைலாயப் பாதையின் தரிசனம், வைகுண்ட வாசல் தரிசனம் கிட்டும் என்பதில் ஐயமில்லை. இந்த கைலாயப் பாதை தரிசனத்தை தன்னுடைய ஆக்ஞா சக்கர ஒளிப் பிரவாகமாக இன்றும் அளித்து வருபவர்தான் ஸ்ரீமூர்க்க மகரிஷி. ஸ்ரீமூர்க்க மகரிஷியின் கைலாயப் பாதை தரிசனத்தையே இந்த புகைப்படத்தில் நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். இதைத் தொடர்ந்து சென்று வழிபாடுகளை இயற்றினாலும் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் உறையும் ஸ்ரீவைகுண்டத்தை தரிசனம் செய்து கைலாயத்தை அடையலாம் என்பதும் ஒரு வழிபாட்டு முறையே. உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம், ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் உறையும் வைகுண்டம் ஒன்று, ஸ்ரீரெங்கநாதர் உறையும் வைகுண்டம் மற்றொன்றா ? உங்கள் சூரிய விரலில் உறையும் சூரிய பகவான் வேறு, உங்கள் ஜன்ம ஜாதகத்தில் உறையும் சூரிய பகவான் வேறு, எண் ஒன்றிற்கு உரித்தான சூரிய பகவான் வேறு, கோதுமை தானியத்தில் உறையும் சூரிய பகவான் வேறு, ஞாயிற்றுக் கிழமை அதிபதியாக தோன்றும் சூரிய பகவான் வேறு என்று சூரிய சக்திகளே இத்தகைய பிரம்மாண்ட சக்திகளாக உருக்கொள்ளும்போது நாராயணப் பெருமான் தன் பக்தர்களுக்காக வெவ்வேறு வைகுண்ட வாசல்களை உருவாக்குவதில் தவறில்லையே, அனைத்தும் பக்தர்களின் நலனுக்காகவே என்பதே பெருமாள் தரிசனம் அளிக்கும் திவ்யாமிர்தம். இன்றும் சில கிராமங்களில் அம்மன் மூர்த்திகளை சிலை மூர்த்தியாக வழிபடாமல் அவர்களை குடத்தில் உள்ள தீர்த்தத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டு அந்த தீர்த்தத்தை ஓடும் நீரில் கலந்து விடுகிறார்கள். சுக்கு, துளசி, வெட்டிவேர், கடுக்காய், ஏலக்காய் போன்ற 12 மூலிகைப் பொருட்களை இந்த தீர்த்தத்தில் சேர்ப்பதுண்டு. நம் சற்குரு அளித்த ஸ்ரீஆயுர்தேவி பூஜையின் போது நாம் கலசத்தில் சேர்க்கும் கலச தீர்த்தமும் இத்தகைய ஆவாஹன சக்தியைத் தோற்றுவிக்க ஏதுவாக அமைகிறது. விநாயக சதுர்த்தி விழாவின்போது நாம் பிள்ளையார் மூர்த்திகளை அவரவர் இல்லத்தில் வைத்திருந்து வழிபட்டு ஆற்றில் விசர்ஜனம் செய்து மக்களின் பூஜை சக்திகள் சமூகத்தில் நிரவும்படியாக அமைப்பதைப் போன்றதுதான் இத்தகைய அம்மன் வழிபாடும். இத்தகைய தீர்த்த சக்திகளின் பாதையே இவ்வாறு வைகுண்ட வாசல்களாக, திருக்கைலாயப் பாதையாக அமைந்து மக்களுக்கு வழிகாட்டுகின்றன என்பதும் ஸ்ரீபுரந்தான் வழிபாடு அளிக்கும் விளக்கமாகும்.

பங்குனி உத்திர பாதசேவை

நம் சற்குரு கோவணாண்டியை விட்டுப் பிரிந்த பின்னர் பல திருத்தலங்களுக்கும் சென்று இறை மூர்த்திகளை வழிபட்டுக் கொண்டிருந்தாலும் அந்த மூர்த்திகள் உறையும் திருத்தலங்களை சுத்தம் செய்ய வேண்டும் என்ற அவா இருந்து கொண்டே இருந்தது. ஆனால், ஓட்டைப் பாக்கெட்டை வைத்துக் கொண்டு எந்தக் கோயிலில்தான் திருப்பணி நிறைவேற்ற முடியும். நம் சற்குரு கல்லூரி பயின்ற காலத்திலேயே அவரைச் சுற்றி பல சிறுவர்களும் அண்ணா, அண்ணா என்று அழைத்தவாறே பல திருத்தலங்களுக்கும் நம் சற்குருவுடன் செல்வது வழக்கம். அவ்வாறு சில கோயில்களில் உழவாரத் திருப்பணி நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் நம் சற்குரு சென்னையில் ஒரு ஆலயத்தில் உள்ள ஒரு நந்தீஸ்வர மூர்த்திக்கு சில செம்பு நீர் விட்டு அலம்பினால் போதும், அன்று மாலையே அடுத்த நாள் அவர் உழவாரத் திருப்பணி நிறைவேற்றுதற்கான பணம் எப்படியும் கிடைத்து விடும். அந்தப் பணத்தைக் கொண்டு அவரை நம்பியிருக்கும் “தம்பிகளை” அழைத்துக் கொண்டு அவர்களுக்கு பஸ் செலவு செய்து அந்த திருத்தலத்தில் உழவாரப் பணி நிறைவேற்றி விடுவார்.

ஸ்ரீநரசிம்மர்
ஸ்ரீபுரந்தான் பெருமாள் ஆலயம்

நம் சற்குரு கோவணாண்டியுடன் பல திருத்தலங்களுக்கு யாத்திரை சென்று கொண்டிருந்தபோது ஸ்ரீபுரந்தான் திருத்தலத்திற்கும் ஒரு ஞாயிற்றுக் கிழமையும் உத்திர நட்சத்திரமும் இணையும் நாளில் இருவரும் வந்திருந்து அங்குள்ள பெருமாள் மூர்த்திகளுக்கு சேவை சாதித்தனர் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சித்த சுவை. ஆயிரம் பனை மரங்களில் ஒன்றுதான் ஆண் மரமாக இருக்கும். இந்த ஆண் பனை விசிறியைக் கொண்டு சிறுவன் வெங்கடராமனை ஸ்ரீபுரந்தான் இறை மூர்த்திகளுக்கு விசிறி விடுமாறு கூறினார். அதன் பின்னர் ஒரு பழைய பாட்டிலில் இருந்த திரவத்தைக் கொடுத்து ஒரு பால் போன்ற வெள்ளைத் துணியில் அந்த திரவத்தை சிறிது சிறிதாக நனைத்து ஸ்ரீபுரந்தான் பெருமாள் மூர்த்திகளுக்கு காப்பு போடும்படிக் கூறினார். அந்த சிறிய பாட்டிலைத் திறந்த நம் சிறுவன் திகைத்து விட்டான். காரணம் அப்படி ஒரு நறுமணத்தை அவன் வாழ்க்கையில் அனுபவித்ததே இல்லை. “அது ஒண்ணும் இல்லேடா, இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமை. அத்தோட உத்திர நட்சத்திரமும் கூடுது, இந்த அருமையான முகூர்த்தத்துல சுவாமிக்கு குங்குமப்பூ தைலம் போட்டு பெருமாளுக்கு அபிஷேகம் பண்ணினேனு வச்சுக்க, அதனால கிடைக்கிற புண்ணியத்தை கணக்கிடவே முடியாது. சுவாமி சுதை மூர்த்தியா இருக்கறதுனாலே பெருமாளுக்கு அபிஷேகம் பண்ணாமே அப்படியே இந்த வெள்ளத் துணியிலே ஒத்தி ஒத்தி எடுத்தாலே போதுமே.. சுவாமி ஷோக்கா ஆயிருவாரு...உத்தரம் அப்படீன்னா வடக்குனு அர்த்தம், நம்ம பெருமாளோ வடக்கு திசைல காலை நீட்டிக்கிட்டு படுத்துக்கிட்டு இருக்கார் இல்ல, இத மாதிரி கிடைக்கறது எவ்வளவு அபூர்வம். குபேரனுக்கு எப்படி இந்த வடக்கு திசை கெடச்சுதுன்னு இப்ப ஒனக்கு தெரிஞ்சிருக்குமே ...” என்று சிறுவனை நோக்கி கண் சிமிட்டினார் கோவணாண்டி.

பத்து கோடி பக்தர்களுக்குமேல் அன்னதான கைங்கர்யத்தை நம் சற்குரு நிறைவேற்றினார் என்பது நீங்கள் அறிந்ததே. இத்தகைய ஒரு பிரம்மாண்ட அன்னதானம் நிறைவேற்றுவது என்றால் அதை நிறைவேற்ற எத்தகைய பொருள் செலவு செய்ய வேண்டும். இத்தகைய அரிய சேவைக்கு குபேர நிதியாய் நின்று கைகொடுத்து உதவியது ஸ்ரீபுரந்தான் பெருமாள் திருப்பாத சேவையே என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும் அல்லவா ? இத்தகைய ஒரு முகூர்த்தம் வரும் 28.3.2021 ஞாயிற்றுக் கிழமை அமைவதால் அடியார்கள் இந்த அபூர்வ கிரக சஞ்சார அனுகிரகத்தை பயன்படுத்தி அருள் பெறும்படிக் கேட்டுக் கொள்கிறோம். பங்குனி உத்திரத்துடன் கூடிய பௌர்ணமி திகழ்வதோடு மட்டுமல்லாமல் அமிர்த யோகமும் சித்த யோகமும் இணையும் நாளாகவும் அமைந்து இத்துடன் காமதகனப் பண்டிகையும் கூடுவது என்பது கிடைத்தற்கரிய எத்தகைய அரிய பேறு. ஆண் பனையை அறிந்து அதனால் செய்த விசிறியால் ஸ்ரீபுரந்தான் பெருமாளுக்கு சேவை சாதிக்க நம்மால் இயலாது என்றாலும் பஞ்சகச்சம் திருமண் தரித்து ஏதோ ஒரு பனை ஓலை விசிறியைக் கொண்டு பெருமாள் மூர்த்திக்கு சேவை சாதிப்பது என்பது நம்மால் நிறைவேற்றக் கூடிய ஒரு சேவையாக இருப்பதால் வரும் 28.3.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று அமையும் பங்குனி உத்திர திருவிழாவின் போது இவ்வாறு பஞ்சகச்சம் திருமண் அணிந்து சுவாமிக்கு பனை ஓலை விசிறி கொண்டு குறைந்தது ஒரு நாழிகையேனும் சேவை செய்து அதன் பின்னர் குங்குமப்பூ தைலத்தால் அபிஷேகம் இயற்றுவது என்பது கிடைத்தற்கரிய குபேர சம்பத்தே.

ஸ்ரீவரதராஜ பெருமாள்
ஸ்ரீபுரந்தான் பெருமாள் ஆலயம்

ஒரு முறை நம் ஆஸ்ரம அன்னதான திருப்பணியின்போது கியூ வரிசையில் கும்பலைக் கட்டுப்படுத்த முயன்ற ஒரு அடியாருக்கு கையில் நடுவிரலில் உள்ள சவ்வு கிழிந்து வேதனை ஏற்பட்டது. என்ன முயன்றும் அதற்கு சரியான வைத்தியம் செய்ய இயலவில்லை. விஷயம் அறிந்த நம் சற்குரு குங்குமாதி தைலத்தை காயம்பட்ட இடத்தில் தொடர்ந்து தடவிக் கொண்டு வரச் சொன்னார். யாரும் அறிந்திராத விஷயம் இது. காயத்திற்கு குங்குமாதி தைலத்தை பூசலாம் என்ற செய்தி மட்டும் ஆச்சரியம் அல்ல, தொடர்ந்து நம் சற்குரு அளித்த செய்தியும் ஆச்சரியம் அளிக்கக் கூடியதே. குங்குமப் பூவின் நிறம் மட்டும் சிகப்பு அல்ல, அது இரத்தக் குறைவைப் போக்குவதோடு இரத்தத்தில் பரவும் கிருமிகளையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டதாகும். எனவே ஸ்ரீபுரந்தான் பெருமாள் மூர்த்திகளுக்கு குங்குமாதி தைலம் காப்பிட்டு வணங்குவதால் செல்வப் பெருக்கு என்னும் லட்சுமி கடாட்சம் மட்டும் பெருகுவதல்ல், தொற்று நோய்கள் தடுக்கப்படும், இரத்தக் காயங்கள் குணமாகும், இரத்த சோகை சீர்பெறும். உத்தரம் என்பது வடக்கு திசையைக் குறிப்பது மட்டுமல்ல, உத்தரம் என்பது தலைக்கு மேல் அமைந்த விதானத்தில் பாதுகாப்பாய் அமைவது என்ற பொருளும் உண்டு அல்லவா ? எனவே இவ்வாறு உத்தராயண காலத்தில் நாம் உத்திர திசை நோக்கி பாதங்கள் நீட்டியிருக்கும் ரெங்கநாதருக்கு பாத சேவை செய்வது எத்தகைய ஆபத்தையும் தடுக்கும் வல்லமை உடையதாகும். இது எதிர்கால பாதுகாப்பைக் குறிக்கும், இங்கு காலம் என்ற கணக்கே இல்லை. ஒரு முறை நம் சற்குரு அமைதியாக எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவர் அமைதியாக இருந்ததால் சீடர்களும் எதுவும் பேசாமல் அவர் முக அழகை இரசித்தவாறே அமர்ந்திருந்தனர். சற்று நேரம் கழித்து அடியார்களை உற்று நோக்கிய நம் சற்குரு, “என்னடா இது, இவன் பாட்டுக்கு எங்கேயோ பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கிறானே என்று நீங்கள் நினைக்கலாம். எப்போது அடியேனை சற்குருவாக ஏற்றுக் கொண்டுள்ளீர்களோ அப்போதே உங்களையும் உங்கள் சந்ததியினரையும் காப்பாற்றும் கடமை அடியேனுக்கு வந்து விடுகிறது. சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் எங்கோ உலகின் ஒரு மூலையிலிருந்து உங்கள் வீட்டில் கம்யூட்டரைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவரை லேசர் கதிர்கள் மூலம் கொல்லும் எதிர்மறை சக்திகள் தோன்றி விடும். அத்தகைய கொடுமையிலிருந்து உங்கள் சந்ததிகளைக் காக்க அடியேன் இப்போதே அதற்கான ஆயத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது,” என்று தன்னுடைய அமைதிக் கடலுக்கான காரணத்தை விளக்கினார்கள். நம் சற்குருவைக் காணாதவர்களும், அறியாதவர்களும் இத்தகைய எதிர்கால பாதுகாப்பை அவர்களுக்கும், அவர்கள் சந்ததியினருக்கும் அளிப்பதே இத்தகைய குங்குமத் தைல வழிபாடாகும். வரும் பங்குனி உத்திர தினத்தன்று செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் குரு பகவானுக்கு ஐந்தில் எழுந்தருளி இருப்பது இத்தகைய பாதுகாப்பு அம்சங்களைச் சுட்டுவதாகும். ரிஷப ராசிக்குரிய சுக்கிர பகவான் மீனத்தில் உச்சம் பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

தங்க மங்கை கங்கை செங்கை

வரும் 28.3.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று தோன்றும் கிரக சஞ்சார அமைப்பை சித்தர்கள் தங்க மங்கை கங்கை செங்கை என்று அழைக்கின்றார்கள். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே அமையக் கூடிய கிரக சஞ்சார அமைப்பாகும் இது. 2021 வருடம் திருமணத்திற்கான சிறந்த ஆண்டாக விளங்குவதோடு அல்லாமல் ஏற்கனவே திருமண உறவில் இணைந்திருப்பவர்களும் தங்கள் உறவை திருப்தி அடையும்படி செய்து கொள்ளவும், மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், நீண்ட ஆயுளுடன் இந்த திருமண பந்தம் நிகழவும் இவ்வருடம் மேற்கொள்ளும் வழிபாடுகள் துணையாக நிற்கும். இத்தகைய வழிபாடுகளில் ஒன்றே வரும் 28.3.2021 அன்று ஸ்ரீபுரந்தான் பெருமாள் தலத்தில் நிகழ்த்தும் பூஜை முறைகளாகும்.

ஸ்ரீதண்டாயுதபாணி
ஸ்ரீபுரந்தான் சிவாலயம்

யோக அமைப்புகளில் பாரிஜாத யோகம் என்ற ஒரு அற்புத யோகம் உண்டு. அந்த பாரிஜாத யோகத்துடன் மீன ராசியில் கூடும் பௌர்ணமி யோகமும் இணைவது என்பது எத்தனையோ ஆயிரம் ஆண்களுக்கு ஒரு முறையே சம்பவிக்கக் கூடிய கிரக சஞ்சார முகூர்த்தமாகும். மீன ராசிக்குரிய குரு பகவான் மகரத்தில் ராஜ யோகம் கொண்டு திகழ மகர ராசியில் உச்சம் பெறும் செவ்வாய் பகவான் ரிஷப ராசியில் திகழ ரிஷப ராசிக்குரிய சுக்ர பகவான் மீன ராசியில் உச்சம் பெற்று விளங்குகிறது. மீன ராசியை பௌர்ணமி சந்திரன் ஏழாம் பார்வையாக பார்ப்பது இத்தகைய தங்க மங்கை சங்கை செங்கை என்ற கிரக சஞ்சார அமைப்பை உறுதி செய்கிறது. அடியார்கள் ஆத்ம விசாரம் செய்து பார்த்தால் இந்த துவாதச அட்சரங்கள் எப்படி இந்த கிரக சஞ்சார பலன்களை அருள்வதாக அமைகின்றன என்ற இரகசியம் தெளிவாகும். பெற்றோர்களுக்கு தங்கமான மங்கை சந்தானம் ஒருத்தி தன் கணவன் அல்லது அன்பு உயிர்கள் வளமாக வாழ வேண்டும் என்று தன் செல்வம் கொழிக்கும் கையால் உணவை வாரி வாரி வழங்குவதைப் போன்றது இந்த கிரக சஞ்சாரம் என்பது சித்தர்கள் அளிக்கும் ஒரு சுவையான, சுருக்கமான விளக்கம். த ங் க ம கை செ என்ற ஆறு அட்சரங்கள் 12 அட்சர சக்தியை உருவாக்கும் குசா சக்தியுடன் பொலிவதால் திருமண பந்தத்தில் பொலியும் எத்தகைய இடர்களையும் களையும் சக்தி ஆயுதமாக இந்த கிரக சஞ்சாரம் அமையும் என்பதில் சந்தேகமில்லை. மூன்று சக்திகளுக்கு நடுவே இருக்கும் சக்தி குசாவாகத் திகழும் என்ற விதியின்படி செவ்வாய் கிரகம் இந்த பாரிஜாத யோகத்தில் நடுநாயமாகத் திகழ்வதால் குங்குமப்பூ தைல அபிஷேகம் பெருமாள் மூர்த்திகளுக்கு எத்தகைய சிறந்த சேவையாக அமையும் என்பது புலனாகின்றது அல்லவா ? இந்த தங்க மங்கை கிரக சஞ்சாரத்தில் மீன ராசியில் சூரியனும் சுக்கிரனும் இணைகின்றார்கள். இதை பற்றி நம் சற்குரு அளித்த ஒரு சுவையை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். சுக்கிரனும் சூரியனும் ஒன்றுக்கொன்று பகை அம்சத்துடன் விளங்குபவையே. இந்த இரு கிரகங்களும் குரு பகவானுக்குரித்தான மீன ராசியில் இணைகின்றன. ஆண் தேள் பெண் தேள் இரண்டும் சங்கமித்தபின் பெண் தேள் ஆண் தேளைக் கொட்டி கொன்றுவிடும். சங்கத்திற்குப் பின் தான் இறந்து விடுவோம் என்பது ஆண் தேளுக்கு தெரியாதா என்ன ? நிச்சயமாகத் தெரியும். ஆனால், தேள்கள் சமுதாயம் குறித்த அளவு பெருகினால்தான் எத்தனையோ மனித உயிரை அழிக்கும் விஷ சக்திகளைத் தன்னுள் ஏற்று சமுதாயத்தை காக்க முடியும் என்பதற்காக இறைவனால் உருவாக்கப்பட்டவையே தேள்கள் பட்டாளம் ஆகும். இவ்வாறு தெரிந்தே தன்னுயிரை தியாகம் புரியும் தேள்கள் நிச்சயமாக அடுத்த பிறவிகளில் தேள் பிறவியை அடையாது நன்னிலை அடையும் என்பதே சிருஷ்டி இரகசியம். இவ்வாறு தனக்கு நன்னிலை கிட்டுமா கிட்டாதா என்ற எதிர்ப்பார்ப்பு சிறிதும் இன்றி திகழ்பவர்களே மகான்கள் ஆவர். தன்னுடைய சீடன் தன் பேச்சைக் கேட்காமல் ஆணவத்தால் வாமன அவதாரத்திற்கு நிலத்தை தானமாக அளிக்கும் செயலில் இறங்குவான் என்று அறிந்தாலும் தன் உயிரையும் பணயம் வைத்து வாமன மூர்த்தியின் கெண்டியின் வாயை வண்டு வடிவில் மாறி அடைத்து விட்டார் அல்லவா சுக்ராச்சாரியார். வாமன மூர்த்தி ஒரு தர்பையால் கெண்டியைக் குத்த தன் சீடனைக் காப்பாற்றும் முயற்சியில் தன் கண்ணையும் இழந்து வருந்தினார் சுக்ராச்சாரியார் என்பது நீங்கள் அறிந்ததே. திடீரென ஒரே பிறவியில் முகிழ்த்து விடுவதல்ல சற்குருமார்களின் இத்தகைய தியாக மனப்பான்மை, அதே சமயம் இத்தகைய தன்னலம் கருதா அரும்பணிக்கு நம்மை தயார் செய்ய வேண்டியது நம் சற்குருவின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நம்முடைய கடமை அல்லவா ? இந்த அரிய சேவைக்கு நம்மை உயர்த்திக் கொள்ள வழிவகுப்பதே இந்த தங்க மங்கை கிரக சஞ்சாரம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ஸ்ரீபுரந்தான் சிவாலயம்

ஒரு முறை செஞ்சி மலையில் தம் உடலைக் கிடத்தி விட்டு பரகாய பிரவேசமாய் நம் கோவணாண்டி சென்று விட்டார் அல்லவா ? அத்தகைய நாட்களில் இரவில் எப்போதும் நம் கோவணாண்டி மேல்தான் சிறுவன் படுத்துக் கொண்டு தனக்குத் தெரிந்த மந்திரங்களை எல்லாம் தூக்கம் வந்து கண்களில் நிறையும் வரை சொல்லிக் கொண்டிருப்பான். அவ்வாறு ஒரு முறை பெரியவர் மீது படுத்திருக்கும்போது யதேச்சையாக அவனுடைய கைகள் பக்கத்தில் இருந்த ஒரு பொருள் மீது படவே அது என்னவென்று அறிந்து கொள்வதற்காக மேலும் மேலும் அதைத் தடவி பார்த்தான். கும்மிருட்டு சூழ்ந்த குகையாக அவனிருந்த இடம் இருந்ததால் எவ்வளவு முயற்சித்தும் அது என்ன என்பதையே அவனால் அறிய முடியவில்லை. ஒரு வழவழப்பான வளைந்த கம்பம்போல் அந்த பொருள் தெரிந்தது அவ்வளவே. பல முறை தடவி, தடவிப் பார்த்தும் என்னவென்று அறிய முடியாததால் சிறுவன் சலித்துப் போய் அப்படியே உறங்கி விட்டான். காலையில் கண் விழித்துப் பார்த்தால் குகை வாயிலில் ஒரு பெரிய நட்டுவாக்கிளி தன்னுடைய கொடுக்கை உயர்த்திக் கொண்டு சுதந்திர தினத்திற்கு கொடி பிடிப்பது போல் நின்று கொண்டிருந்தது. அந்த நட்டுவாக்கிளியை அந்த கோலத்தில் பார்த்த சிறுவன் திடுக்கிட்டு ஆங் என்று கூவிக் கொண்டே மீண்டும் பெரியவர் உடலின்மேல் படுத்துக் கொண்டு அவரை இறுக அணைத்துக் கொண்டான். அப்போதுதான் சிறுவனுக்குப் புரிந்தது தான் இரவு முழுவதும் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தது ஒரு நட்டுவாக்கிளியின் கொடுக்கு என்பது ! அவ்வளவு பெரிய நட்டுவாக்கிளியை அவன் வேறு எங்கும் எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் கூட பார்க்க முடியவில்லை என்பதே அந்த நட்டுவாக்கிளியின் “சைஸ்”. சிறுவனின் மனம் எப்படி இருக்கும் ? பின்னர் கோவணாண்டியிடம் இது பற்றி பல நாட்கள் கழித்து கேட்டபோது,
“ஏண்டா, இதுக்குப் போய் பயந்தா எப்படி ? நீ எத்தனை தடவை அந்த நட்டுவாக்கிளி கொடுக்கை தடவிக் கொடுத்தே ?”
“பத்துப் பதினைந்து தடவை இருக்கும், வாத்யாரே,”
“ஏண்டா, அடிமண்டு, இன்னுமா உனக்குப் புரியலை. பத்துப் பதினஞ்சு தடவை அந்த ஜீவனைத் தொட்டுப் பார்த்தும் அது சமத்தா உன்னை ஒண்ணும் பண்ணாமே பேசாமல் அமைதியா இருந்துச்சுன்னா நீ என்ன புரிஞ்சுக்கணும், அவனன்றி ஓர் அணுவும் அசையாது, அந்த அணுவும் குருவருள் இன்றி, குரு சொல்லாம வேலை செய்யாது, தெரியுதா ? Flag hoisting மாதிரி தன்னுடைய கொடுக்கை தூக்கி வைத்துக் கொண்டு, கொட்டுவதற்குத் தயாராக இருக்கும் அந்த ஜீவன் தன் கொடுக்கை use பண்ணியிருந்தா என்ன ஆயிருக்கும் ?”
என்ன அற்புத கோவண கீதை. இந்த அனுபவத்திலிருந்து நம் சற்குரு அளித்ததே, “நம்பினோர்க்கு நட்டுவாக்கிளியும் நானிலத்துப் பூவே,” என்ற ஆசானின் அனுபவ மொழியாகும். இப்போது நீங்களே சொல்லுங்கள் நம் சற்குரு அன்று தொட்டுப் பார்த்து அனுபவித்தது தேள் கொடுக்கா இல்லை நானிலத்துப்பூ என்ற வானத் தாரகையா ? இந்த கோவண கீதை என்றோ நம் கோவணாண்டியால் அருளப்பட்டது மட்டும் அல்ல, இன்றும் அதை நீங்கள் செவி மடுக்க, வாழ்வில் பயன்படுத்த உதவி புரிவதே தங்க மங்கை கிரக சஞ்சாரம்.

“நானிலத்துப்பூ”
அவிநாசி சிவாலயம்

தேள்கள் என்று மட்டும் கிடையாது இறைவன் சிருஷ்டியில் சின்னஞ்சிறு உயிரினங்களும் இயற்றும் சேவை நம்மை பிரமிக்க வைப்பதே. ஒரு முறை ஒரு அடியார் நம் சற்குருவிடம்,
“வாத்யாரே, கொசுவை ஏன் படைத்தார் கடவுள் என்பதே தெரியவில்லையே. நேற்று மாலை அம்பாளை ஆனந்தமாக தரிசனம் செய்து கொண்டிருந்தபோது ஒரு கொசு பாடாய்ப்படுத்தி தரிசனமே சரியாகப் பெற முடியாமல் செய்து விட்டது ...”,
ஒரு பெரிய சாதனை செய்து விட்டதைப் போல் நம் சற்குருவிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அனைத்தையும் தனக்கே உரிய அமைதியுடன் கேட்டு விட்டு,
“சரி, சார், அந்தக் கொசு உங்களை எங்கே கடித்தது ?”
“ஊம் ... கையில் கடித்தது ...”
“கையில் சரி, அது வலது கையா, இடது கையா, எந்த விரல் ...”
“இங்கேதான் வாத்யாரே,” என்று தன் இடது ஆள்காட்டி விரலைக் காண்பித்தார்.
“அப்போ மணி என்ன தெரியுமா ?”
“அர்த்த சாம பூஜை வாத்யாரே, அதனாலே எட்டு மணிக்கு மேலே இருக்கும் ...”
“இப்போ சொல்லுங்க சார், ஒரு கொசு வியாழக் கிழமை எட்டு மணி சுமாருக்கு உங்கள் இடது குரு விரலில் வெளிப்பக்கம் நீங்கள் அம்பாள் தரிசனம் பெறும்போது கடிக்கிறது என்றால் உங்களுக்கு அம்பாளின் குரு அனுகிரகத்தை சக்தி சாரமாய் அளிக்கிறது என்று பொருள். நீங்கள் பேசாமல் இருந்திருந்தால் அந்த அனுகிரகம் உங்கள் உடலில், இரத்த ஓட்டத்தில் கலந்து பல ஆண்டுகள் உங்களுக்குச் சாதகப் பலன்களை அளித்திருக்கும். (ஆனால், அந்த அடியார் கோபப்பட்டு அந்தக் கொசுவை நசுக்கி விட்டார் என்பது பின்னர் தெரிய வந்தது). இப்போது சொல்லுங்கள் உங்கள் இருவரில் யார் புத்திசாலி ?”
அந்த அடியார் என்ன சொல்லி இருப்பார் என்பது அனைவரும் யூகிக்கக் கூடியதுதானே ? ஸ்ரீபுரந்தான் திருத்தலத்தில் திகழும் வௌவால்களை இந்த கண்ணோட்டத்தில் உங்களால் பார்க்க முடிந்தால் நீங்கள் பெறக் கூடிய கடவுள் தரிசனம் என்ற அனுபூதி வெகு தூரத்தில் இல்லை.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam