முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மார்கழி மாத சிறப்பு

மார்கழி மாதம் பீடைகளை அகற்ற வல்லது என்பதுடன், மாதங்களுக்கெல்லாம் பீடாதிபதி மாதமும் ஆகும். பீடுடைய மாதமே, வழக்கில் தவறாகப் பீடை மாதம் என ஆகி விட்டது.
மாதங்களில் நான் மார்கழி என ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே மார்கழியின் சிறப்பை எடுத்துரைக்கின்றார். தனுர் ராசியில் மூல நட்சத்திர முதல் பாதத்தில் சூரிய பகவான் பிரவேசிப்பதே மார்கழி மாதப் பிறப்பு எனப்படுகின்றது. அவ்வாறு சூரியப் பிரவேசத்தின் போது சூரியக் கோலமிட்டுப் பூஜிப்பதால்,
தன்னுடைய ஸ்திரமற்ற குடும்ப நிலை பற்றி வருந்தும் இல்லறப் பெண்களுக்கு மாமருந்தாய் நல்வழியைப் பெற்றிட உதவும். குண்டாக இருப்பவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களைத் தணிக்க உதவும்.

லட்சுமி கடாட்ச வில்வம்
சென்னி வாய்க்கால், லால்குடி

மூல நட்சத்திரம் ஆஞ்சநேயருக்கு உரியது என நாமறிவோம்.
சூரிய மூலம், சூரிய மூலை, சூர்ய சூர்யாதி மூலாதி மூலம்
கார்ய மூலம், ககனபல மூலம், கார்யசித்தாதி ஸ்கந்த அனுந்தபதாதி மூலமே
என்பது சூரிய மூர்த்தியின் மூலப் பிரவேச மகத்துவம் பற்றிச் சித்தர்கள் ஓதுவது! இது மூல நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சூரிய மூர்த்தி பிரவேசம் செய்யும் அற்புத சச்திகளைக் குறிக்கின்றது. இதனை ஓதி சூரியப் பிரவேச நேரத்தில் ஜபிப்பது நல்ல மனோவைராக்யத்தைத் தரும்.  
ஆஞ்சநேயர் தொட்டிற் குழந்தையாய் இருந்த போது, விண்ணில் தோன்றிய சூரியக் கோளத்தைச் சிவந்த பழம், சிவந்த பந்து என நினைத்து, விண்ணிற் பறந்து சென்று தம் பிஞ்சு கரங்களால் சூரியனைப் பந்தெனப் பிடித்து விட்டார்.
சூரியக் கோளம் எவ்வளவு பெரிய கோளம், எவ்வளவு உஷ்ணம் வாய்ந்தது, எவ்வளவு பராக்ரமம் கொண்டது! இதனைத் தொட்டிற் குழந்தை பிடிக்கின்றது எனில், என்னே அக்குழந்தையின் தெய்வ மூர்த்தித்வம்!
இந்த இறை லீலை நிகழ்ந்த காலமே, சூரிய மூர்த்தி மூலம் முதல் பாதத்தில் சஞ்சரித்த காலமும் ஷட சீதிப் புண்ய காலமும் ஒன்று சேர்ந்ததாகும்.  
புராணத்தில் ஆஞ்சநேயர் சூரியனை எட்டிப் பிடித்தார் என அனுமந்தப் புராண அனுபூதியாக வரும். ஆனால், சூரிய மூர்த்தியோ இந்த அனுபூதியை, ஆஞ்சநேயரின் ஸ்பரிசமாக, தம்மைத் தொட்டு ஸ்பரிச தீட்சை தந்ததாகவே, எண்ணிக் கொண்டு ஆனந்தித்தார்.
இந்த அனுபூதி நிகழ்ந்த புண்ணிய பூமியாக, இதனை பூமியிலிருந்து பார்க்க வல்ல இடமே கீழ்ச் சூரிய மூலை ஆயிற்று. கும்பகோணம் - கஞ்சனூர் மார்கத்தில் துகிலியில் இருந்து சர்க்கரை ஆலை வழியே திரைலோக்கி மார்கத்தில் கீழ்ச் சூரிய மூலையில் ஸ்ரீசூர்ய கோடீஸ்வரராக, இறைவன் அருள்கின்றார்.   இச்சந்நிதியில்

ஸ்ரீசூரியகோடீஸ்வர மூர்த்தி
கீழ்சூரியமூலை

அமர்ந்து தியானித்தல் (அமர்ந்த நிலைப் பிரார்த்தனை)
நடைப் பிரதட்சிணம் (நடந்த நிலைப் பிரார்த்தனை)
அங்கப் பிரதட்சிணம் (சயனக் கோலப் பிரதட்சிணப் பிரார்த்தனை) செய்தல்
-ஆகிய நான்கையும் பக்தர்கள் நிகழ்த்துதல் மிகவும் விசேஷமானது.
ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திக்கு உகந்த ராம வழிபாடும் ஒன்று உண்டு. அதாவது
ஸ்ரீராமருக்கு பானகம் படைத்து வழிபட்டுப் பின்னர் நெஞ்சில் கை வைத்து இருதயத் துடிப்பை ராமகானமாக, ராமநாதமாக, ராமகீதமாக, ராமசாமமாக, ராமப்பிரசாதமாக நன்கு உணர்ந்து உட்புறக் காது வழியாகக் கேட்டல் வேண்டும்.
ஆம் புறச் செவி போல உட்செவியும் உண்டு. தூங்கும் போது உட்செவி நடைமுறைக்கு வரும். கண்களை மூடிக்கொண்டு இருதயத்தின் வலது, இடது உள்ளங்கையை வைத்து உட்புறச் செவியால் இருதயத் துடிப்பைக் கேட்டிடலாம். இருதயத் துடிப்பு என்று சொல்வதே தவறு. ஆத்ம சாட்சாத்கர ஒலி என்றே சொல்ல வேண்டும். இதற்கு ஆத்மராம நாம ஒலி என்று பெயர். ஏனெனில் ராமாயணப் பருவத்திலிருந்துதாம் மக்களுக்கு இருதயத் துடிப்பொலி கேட்க வல்லதாயிற்று! இதனால் தான் பலரும் ஆத்மராமன் என்ற பெயரைச் சூடி இருப்பார்கள்.
மார்கழி மாதப் பிறப்பு, மூல நட்சத்திர நாட்கள், விஷ்ணுபதி புண்ணிய காலங்களில் ஆத்மராமன் என்ற பெயரை உடையவர்களுக்கு ஆவன உதவிகள் செய்து (உதாரணமாக அவர்களை ஸ்ரீராமர் கோயிலுக்குத் தரிசனத்திற்கு அழைத்துச் செல்தல்) ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீராமர், ஸ்ரீசூரிய மூர்த்திகளை மேற்கண்ட வகையில் வழிபடுதலால், பிறருடைய வலையில், ஆக்கிரமிப்பில், அதிகாரத்தில், பண, பதவி பலத்தில், ஏவல் மந்திரத்தில், பகைமையில் சிக்கி இருப்போர் நன்கு மீள உதவும்.

மரண யோகத்துடன் இணையும்
சுப மங்கள சக்திகள்

ஒரு நாளில் ஒரு பகுதியில் மரண யோகமிருந்து, ஏனையப் பகுதியில் சித்தயோகம், அவிட்ட நட்சத்திரம், வியாழன், பஞ்சமி போன்ற சுபமுகூர்த்த லட்சணங்கள் அமைவதுண்டு. ஒரு நாள் மரண யோகம், கூடா நாளாக இருந்தாலும், அந்தந்த நாளில் உள்ள ஏனைய சுப லட்சண கால அம்சங்கள் அதனதன் பலன்களை அளித்துக் கொண்டுதாம் இருக்கும். எனவே இந்நாட்களில் சுப வைபவம் நிகழாவிடினும், ஏனைய வகை பூஜைகளை, தான தர்மங்களை நிகழ்த்தி, சுபகால அம்சப் பலன்களைப் பெற்றிட வேண்டும்.
இவ்வாறு ஒரே நாளில் பல சுப கால சக்திகள் சேர்கையில், எண்ணற்ற மங்கள சக்திகள் பூமியில், பரவெளியில், நீரில், நிலத்தில், காற்றில், நெருப்பில் தோன்றுகின்றன. மங்கள சக்திகள் முதலில் பஞ்சபூத சாதனங்களாகிய நிலம், நீர்,நெருப்பு, காற்று ஆகாயம் ஆகிய ஐந்திலும்தான் முதலில் நிரவுகின்றன.

ஐந்து கலசங்களுடன் திகழும்
திருநின்றியூர் மாயவரம்

பஞ்சமி திதியில் தோன்றும் மங்கள சக்திகள், நாக பஞ்சமி சக்திகள், சக்தி பஞ்சமி சக்திகள், துவாதசிப் பஞ்சமி சக்திகள், குரு பஞ்சமி சக்திகள் எனப் பலவகைப்படும். இவற்றைப் பெறுவதற்காக, ஐந்து ஆலய விமானக் கலசங்கள் உள்ள ஆலய மூர்த்திகளைத் தரிசித்தலால் பூவரத குண சுபமங்கள சக்திகள் எனும் அபூர்வ மங்கள சக்திகள் பெருகும். இதனால் பெண் பிள்ளைகளுக்கு ஏற்படுகின்ற விரக்தித் தன்மைகள் தணியவும், நல்ல மனோ வைராக்யத்துடன் வாழ்க்கையை எதிர் நோக்கவும் உதவும்.
மேலும் ஐந்து தல விருட்ச தரிசனம், ஐந்து விமான தரிசனம், ஐவகை சிவமூர்த்தித் தரிசனம், ஐவகைப் பெருமாள் தரிசனம் - இவை பூவரத குண பஞ்சமித் திதி சக்திகளைத் தரும்.
இத்தகைய தரிசனத்துடன் தேன் கலந்த பண்டங்களைச் சிறு பிள்ளைகளுக்குத் தானமாக அளித்தல், தம் பிள்ளைகளுக்கு நல்ல மங்கள சக்திகளைப் பெற்றுத் தரும். சற்று வாய்த் துடுக்காக உள்ள பிள்ளைகள் திருந்திடவும் உதவும். மேலும் வாய்த் தகராறால் விளைந்த உறவு முறிவானது மீண்டும் நன்றாகிட வழி பிறக்கும்.
அவிட்டம், பஞ்சமி, சித்த யோகம் மூன்று மங்களக் கால சக்திகள் சேரும் போது விளையும் மங்கள சக்திகளைப் பெற்றிட, மங்களம் என்ற பெயரில் அருளும் மூர்த்திகளுக்கு (மங்களாம்பிகை, மங்களீஸ்வரர், மாங்கல்யேஸ்வரர்) மஞ்சள் காப்பு இட்டுத் தரிசித்தல் வேண்டும். பொதுவாக, இம்மூன்றுமே கூடும் சுப மங்கள காலப் பூஜா பலன்கள் - போட்டி, திருஷ்டி, பொறாமையால் தடைபட்டுள்ள மங்களக் காரியங்கள் நன்கு நிறைவேற உதவிடும்.

சித்தயோகம், வியாழன், அவிட்டம், கூடும் நேரத்தில் குருமங்கள வியாபக சக்திகள் விருத்தி அடைகின்றன. இதற்காக, சித்தயோகம், வியாழன், அவிட்டம், சித்தயோகம் கூடும் நேரத்தில் பசு பூஜை ஆற்றுதல் விசேஷமானதாகும். பசுவிற்கு நீராட்டி, உணவூட்டிப் பூஜித்தலால், கணவன், மனைவிக்கிடையே பரஸ்பர அன்பு விருத்தியாகிட, கோபரிப் பித்ருக்கள் ஆசி அளிப்பர். பெண், பிள்ளை, கணவன், மனைவி ஆகியோர் பல தவிர்க்க முடியாத காரணங்களால் ஒவ்வொரு இடத்தில் வாழ்ந்து, ஒவ்வொரு இடத்தில் படித்து, வேலை பார்த்து, பிரிந்து, இருந்து அவஸ்தைப்படுகின்ற நிலையில் அனைவரும் ஒன்று சேர்ந்திட இதனால் வழி பிறக்கும்.
குரு என்ற வகைப் பெயர்களை உடையவர்களுக்கு (குருமூர்த்தி, குருஸ்வாமி), மஞ்சள் நிற உடை அணிந்தவர்களுக்கும் நல்ல உதவிகளை ஆற்றுதலால், வீண் பழிகளால் வேதனைகளுடன் வாழ்வோர்க்கு மனசாந்தி வரும்படியான நல்ல சந்தர்ப்பங்கள் கை கூடி வரும்.
சுக்ர சக்திகள் சேரட்டும், அசுர குணங்கள் மறையட்டும்

சுக்ர சக்திகள் சேரட்டும்
அசுர குணங்கள் மறையட்டும்

வெள்ளிக் கிழமைக்குச் சுக்ர வாரம் என்று பெயர் உண்டுதானே! செல்வம் கொழிப்பதற்குச் சுக்ர தசை மட்டுமன்றி, பூர்வ ஜன்மப் புண்யம், லக்ஷ்மி கடாட்சம், ஸ்ரீமுகபரப் பித்ருக்களின் ஆசி, ஜாதகப் பூர்வமாக குரு, சுக்ரனின் நல்அம்சங்கள், பூஜா பலன்கள் போன்ற பல அம்சங்கள் நிறையத் தேவையே! இவற்றில், ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான செல்வ அம்சம் விருத்தி ஆகின்றன. செல்வம் சேர்வதிலும், நில புலன்கள், பணம், வியாபார அபிவிருத்தி, பெருத்த லாபம், நகைகள் எனப் பல வகைகள் உண்டு தானே!

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
நன்னிமங்கலம், லால்குடி

செல்வம் வருவதற்கான சுக்ரவாள மார்கம் என்ற ஒன்றும் உண்டு. உதாரணமாக, பக்தி மனமார்கம் என்பதில், நல்ல தெய்வீகத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்கு வேறெதிலும் நாட்டம் செல்லாது அல்லவா! அவர்கள் என்னதான் உலகியல் வாழ்வில் எவ்வளவு ஈடுபட்டாலும், அவர்களுடைய மனசுலோகமானது இறைமார்கத்திலேயே லயித்துச் சென்று கொண்டிருக்கும். இதே போல, சுக்கிரப் பாதையில் மன மார்கம் அமைந்திடில், எவ்வகைகளில் எல்லாம் நல்ல முயற்சிகளுடன் பொருள் சேர்க்க முடியும் என பல வழிகளில் அவர்கள் மனம் இடைவிடாமல் பணி செய்து கொண்டே இருக்கும்.
உதாரணமாக, பல கம்பெனிகளுக்குச் சேர்மனாக உள்ளவர்களுடைய மனமானது - எண்ணெய், போக்குவரத்து, தான்யம், ஷேர்கள், உரம் - எனப் பல துறைகளிலும் கம்பெனிகளை விருத்தி செய்வதிலேயே மனம் லயித்து நிற்கும். இப்படி இருந்தால்தான் ஒன்றில் வரும் இழப்பு மற்றொன்றில் சரியாகும், ஒரு மளிகைக் கடை அல்லது ஜவுளிக் கடை அல்லது நகைக் கடை வைத்திருப்பவர்கள் மேலும் கடைகளை அபிவிருத்தி செய்து தம் மகன், மகள்களுக்குத் தனியாகவும் புதிதாகவும் கடைகள் திறக்க, வைத்துத் தர எப்போதும் வாழ்நாள் முழுதும் முயன்று கொண்டிருப்பார்கள்.
பலரும் அறியாத தெய்வீக ரகசியங்களில் ஒன்று, ஷ, சி மற்றும் சு போன்ற ச வகை அட்சரங்கள் சிலவும் திருமகள் கடாட்சத்தை நன்கு பெற்றுத் தரும் என்பதாகும். திருமகள் கடாட்ச மந்திரங்கள், பீஜாட்சரங்கள், துதிகள் பலவும் இவற்றை நிறையவே தாங்கி இருக்கும். துவாதசி, லட்சுமி, அனுஷம், ஸ்ரீஷா ஈஷா, சுவாதி, சுக்கிரம் போன்றவற்றில் உள்ள சி, ஷ போன்ற பல அட்சர சக்திகள், நல்ல செல்வ சக்திகளைக் கொண்டிருக்கின்றன. இவை சுக்ர வாரமாகிய வெள்ளி, அனுஷம் போன்றவற்றுடன் சேர்கையில், இவற்றின் செல்வ கடாட்ச சக்திகள் மிகவும் மேம்படுகின்றன.
தினமும் சுக்கிர சக்திகளை மேம்படுத்துவதற்கான எளிமையான பூஜைகளை, நற்காரியங்களை ஆற்றி வந்தால் முதலில் தரித்திர வகை தோஷங்கள் தீர வழி பிறக்கும், செல்வம் விருத்தியாவதற்கு நல்வழிகள் கிட்டும்.
லஞ்ச லாவண்யம், அதர்ம முறைகள், லாட்டரி, சூது, பேராசையுடன் ஷேர் பிஸினஸ், வாங்குதல், விற்பனை போன்றவற்றில் கிட்டும் வருமானம், நல்ல செல்வம் என ஆகாது. இவ்வாறு வந்த செல்வம் தோஷங்களுடனேயே வரும். இது செல்வமும் ஆகாது.
இவை பல வகை தோஷங்களுடனேயே வருவதால், கேவலப்படுத்தப்படுதல், நஷ்டப்படுதல், ஏமாற்றப்படுதல், ஏமாறுதல், கூட இருந்தே துரோகம் செய்தல் போன்றவை நிகழும்.
சுக்ர சக்திகள் பெருகும் வெள்ளிக் கிழமை அன்று சில வகை எளிய பூஜைகள் மூலம் இருக்கின்ற பணம், செல்வம் கரையாமலும், புது நஷ்டங்கள் ஏற்படாமலும், கடன்கள் பெருகாமலும் தற்காத்துக் கொள்ள உதவும்.
வெள்ளி தோறும் சுக்ர மூர்த்தி வழிபட்ட ஸ்ரீவெள்ளீஸ்வரர், வெள்ளியங்கிரி மலைநாதர் போன்ற தலங்களில் வெண் பட்டு அல்லது கத்தரிப் பூ நிற வஸ்திரம் சார்த்தி வழிபடுதல், திருமகள் வழிபட்ட தீயத்தூர், திருப்பத்தூர் போன்ற தலங்களில் வழிபடுதல், வில்வ மாலைகளைத் தானே தொடுத்து ஆலயங்களுக்கு அளித்தல், முழுத் தாமரை மலர்களை ஆஹூதி அளித்து ஹோமம் செய்தல், தரித்திர நிவாரண மந்திரம் போன்ற விசேஷமான மநதிரங்களை 108 முறை குடும்பத்துடன் ஓதுதல், அனைவரும், குறிப்பாக வியாபாரத்தினர், திருஷ்டி தோஷ நிவாரண தீபம் ஏற்றி வழிபடுதல், நெய், தேன், நிறைய முழு மந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு கூடிய பாயசம் படைத்துத் தானமளித்தல், கன்றுடன் கூடிய பசுவை நீராட்டி, உணவூட்டிப் பூஜித்தல், யானைகளுக்குப் பூஜை ஆற்றுதல்
போன்ற பல்வகைப் பூஜைகளையும் குடும்பத்துடன், சத்சங்கமாகப் பலருடன் ஒன்று கூடி ஆற்றி வருதல் வேண்டும். செல்வம் சேரும் பாதை சுத்தமாக இருந்தால்தான் பணம் வந்து சேரும். இல்லையெனில் வரும் பணமும் அடைபட்டுப் போகும்.

மேலும் செல்வத்தைத் தடுக்கும் மனதை வியாபித்திருக்கும் தரித்திர நிலைக்குக் காரணமான அசுர குணங்கள் அடங்கிட இவ்வகை பூஜைகள் உதவும். அசுரர்களைத் திருத்தி நல்வாழ்வு தந்திடவே, சுக்கிரர் அசுரர்களுக்குக் குரு ஆனார். கோபம், விரோதம், துரோகம், பகைமை, முறையற்ற காம உணர்வுகள் உள்ள யாவருமே அந்தந்த அசுர குணம் வரும் நேரத்தில் அசுரராகவே ஆகின்றனர். அசுர குணம் வெறுமனே மறையாது. நல்லதை எண்ணி, நல்லதையே செய்தால் தான் அசுர குணம் மறையும்.
அசுர குணங்களுடன் முறையற்ற வகையில் வாழ்பவர்களிடமும் பணம் சேரக் காரணம் பூர்வ ஜன்மப் புண்யமே! பூர்வ ஜன்மப் புண்யம் கரைந்தால், செல்வமும் கரையும்!

பாவம் பெருகுவது எப்படி?

தினமும் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி நன்கு ஆத்ம விசாரம் செய்திட வேண்டும். ஆத்ம விசாரம் என்பது தன்னிடம் உள்ள நல்லது, நல்லது அல்லாதது, திருத்த வல்லது, திருத்த வேண்டியது என்று மனசாட்சிக்கு விரோதமில்லாமல் தன்னை எண்ணிப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், ஒவ்வொருவரும் வாழ்க்கைப் பாதையில் தான் எங்கிருக்கிறோம் என்று தெரிய வரும்.
அன்றன்றைய நிகழ்ச்சிகளை அன்றே மனதில் ஆத்விசாரமாகப் போட்டுப் பார்த்துச் சரி பார்த்துக் கொண்டால், அது பல விதங்களில் ஒருவரைத் திருத்திக் கொள்ள வழி பிறக்கும். இதனால் தரித்திர நிலைகள், கஷ்டங்கள், மனக் கவலைகள் மாறிட உதவும். தினசரி அவரவர் ஆத்ம விசாரமாகத் திருத்திக் கொள்ளாவிடில், வாழ்வில் திருத்தங்கள் பட்டியலே மலையாகப் பெருகிவிடும். இந்த மலைதான், வட்டியும், முதலுமாய்ப் பாவ மலையாகப் பெருத்து விடுகிறது.

ஸ்ரீநந்தீஸ்வரர்
அம்பாள் திருமுன் லால்குடி

பாவம் என்றால் தன்னை வதைத்து கொள்வது, பிறருக்குத் துன்பம் தருவது மட்டுமல்ல, கடவுள் தந்த உடலை, பிறவியை, காலத்தை, ஆயுளை நன்கு பயன்படுத்திக் கொள்ளா விட்டாலும் அதுவும் பாவச் சோரம் என்ற பாவமாக வந்து சேரும்.
பாவம் என்றால் பொய் சொல்வது, அதர்மமாகப் பிற ஜீவன்களைத் துன்புறுத்துவது மட்டும் என்று பலரும் எண்ணுகின்றனர். ஒரு செயலின், எண்ணத்தின், பேச்சின் விளைவுகள், பிறரையோ, பரவெளித் தூய்மையோ பாதித்தால், அதுவும் பாவ வகையே! ஒரு பெண்ணைத் தவறான நோக்குடன் ஒரு சில விநாடிகள் பார்த்தாலே உடனடியாகக் காமக் குற்றம், கபாலத்தில் தோஷக் குழியில் சேர்ந்து பல ஜன்மங்களிலும் திருமண தோஷம் உடல் வியாதிகள் போன்றவையாக வந்து தொக்கி நிற்கும். இதற்காகத்தான் கோபுர தரிசனம் கோடி பாப நாசனம் என்பதாக, சில வகை நிவர்த்திகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதே வகையில் ஒன்றுமே செய்யாமல் சும்மா இருப்பதும் காலத்தை வதைப்பதாகும். காலத்தை வதைத்தலாகிய துன்பமும் பாவகரமானது தானே! பலரும் தனக்குப் பொழுது போகவில்லை என்று சொல்வது மிகவும் வேதனையாக இருக்கின்றது. திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, நாலாயிர திவ்யப் பரபந்தம், திருமந்திரம், திருப்புகழ், அருட்பா இவற்றை மட்டும் எடுத்து வைத்துக் கொண்டால், வாழ்க்கையே போதாதே! எனவே உங்கள் பிள்ளைகளுக்குச் சிறுவயதிலிருந்தே இவற்றில் ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளச் செய்திட்டால், கெட்ட வழக்கங்களுக்கு ஒரு போதும் ஆளாகாது, நற்பண்புகளுடன் விளங்குவர். வீட்டில் தரித்திர நிலையும் ஏற்படாது.

மித்ர சப்தமி

பொதுவாக, சப்தமித் திதிக்கு எதையும் அமைதிப்படுத்தும் சக்தி குணங்கள் உண்டு. இதனால் தான் ஏழு சப்தங்கள் கூடிய சப்த(மி) ஸ்வரக் கச்சேரி, பாடல்களுக்கு மனதை சாந்தப்படுத்தி இறைதரிசனத்தைப் பெற்றுத் தரும் வல்லமை உண்டு.
எனவே ஏழு ராகப் பாடல்களையேனும் அவரவரே பாடி இறைவனை வணங்குதலால், இருதயத்தில் உள்ள சப்தப் பிரகாச நாளஙகள் நன்கு ஆக்கம் பெறும். எனக்குப் பாடத் தெரியாதே என்று எண்ணாதீர்கள். ஏதேனும் ஓரிரண்டு திருப்புகழ்ப் பாடல்களை எடுத்துச் சிறிது படித்தாலே உங்களையும் அறியாமல் சில சந்தங்கள் தாமாகவே அமையும். இவ்வகையில் உங்களுக்கும் தெரியாமலேயே மலையமாருதம், சிந்து பைரவி போன்ற ராகங்களில் பாடி விடுவீர்கள். கற்பகவல்லியின் … போன்ற இன்னிசை இறைப்பாடல்கள் சிலவற்றையாவது அறிந்திருப்பீர்கள் அல்லவா! இவற்றை சப்தமி திதி, சந்தி நேரங்களில் சிவன், பெருமாள் ஆலயங்களில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி நின்று பாடிடுக!

பகைமை மறைவதற்கான கிரண சக்திகள் பூரிக்கும் திருநாளே மித்ர சப்தமி தினமாகும். இத்தகைய நாட்களில் மித்ர சக்திகள் நிறைந்த அதாவது கசப்பு வகை உணவுகள், திரவியங்கள் (மாசிக்காய்), காய்கறிகள் உணவை உண்டு, நாக்கில் உள்ள சப்த சக்திகளை விருத்தி செய்து கொள்க! முதலில் நாக்கில் எவ்வகை சப்த அழுக்கு தோஷங்கள் படிகின்றன என்பதை அறிந்து கொண்டிடுக!
நாக்கில் உலவும் பகைமை தோஷங்களாவன:-
1. கோபப்பட்டு அசிங்கமான வார்த்தைகளைப் பேசுதல்
2. பொய் சொல்லித் தப்பித்தல், பிறரைச் சிக்க விடுதல், செய்த தவறை மறைத்தல்
3. தம் வார்த்தைகளால் பிறரைத் தாக்குதல்
4. பிறருடன் பகைமை கொண்டு மனதுக்குள் மனநாக்கால் வசை பாடுதல்
5. தமக்குத் துரோகம் செய்தவர்களை வாழ்நாள் முழுதும் ஏசுதல். இதனால் அடுத்தடுத்த ஜன்மங்களிலும் தேவையில்லாமல் பகைமை அவர்களிடமே தொடரும்
6. தமக்குப் பிடிக்காத உற்றம், சுற்றம், அரசியல்காரர்களை தினமும் திட்டி ஜன்மப் பகையை வளர்த்துக் கொள்ளுதல் - எவர் மீதான வெறுப்பும் இந்த ஜன்மத்திற்குள் நிவர்த்தியாக வேண்டும்.
7. தேவையில்லாமல் சளசளவென்று பேசி காலம், வாக்சக்தி, உடல் சக்தியை இழத்தல்
- போன்ற ஏழு வகை வாக்குக் குற்றங்களைக் களைய, ஒவ்வொரு வகை ராகமும் உதவுமாதலின், தினமும் ஒரு இறைப் பாடலை முழுமையாகப் பாடுதல் என்ற வைராக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
கடவுளைத் தரிசித்தவர்களின் பாடல்களுக்கு மிகுந்த சக்திகள் உண்டு (திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருமந்திரம், திருப்புகழ், அருட்பா )
8. சப்தமி அதிலும் சிறப்பாக மித்ர சப்தமி அன்று ஏழு வகைப் பசுக்களைத் தரிசித்து பசு தேவதைகளிடம் வாக்குக் குற்றங்களைப் போக்கும் வாக்தேவதைகளின் ஆசிகளைத் தந்திட வேண்டுங்கள். பசு, கன்றுகளுடனான ஸ்ரீகிருஷ்ண தரிசனம் விசேஷமானது.

கல்ப கால சக்திகள்

கல்பம் என்றால் பல்லாயிரம் ஆண்டுகளின் தொகுப்பு ஆகும். பரசுராமக் கல்பம், பர்வத கல்பம், மதங்கக் கல்பம் என்று பல கல்பங்கள் உண்டு. ஒரு பிரளயத்தில் பிரபஞ்சம் நீரில் அமிழ்ந்து, அடுத்த சிருஷ்டி ஏற்படும் வரை உள்ள இடைக் காலமும் பிரளயக் கல்பாதிக் கல்பம் ஆகும். பிரளயத்தில் உடனே உலகங்கள் மறைவதில்லை! மேலும் ஒரே பிரளயமே, பல ஆண்டுகளுக்கு நீடிப்பதும் உண்டு.  
96 வகை ஷண்ணாவதித் தர்ப்பண நாட்களில், கிருத யுகாதி, துவாபர யுகாதி, திரேதா யுகாதி, கலியுகாதி ஆகிய நான்கு யுகத் தோற்ற நாட்களும், தர்ப்பண நாட்களாக அளிக்கப்பட்டுள்ளன. இதற்காக யுகாதி நாட்களை வெறும் தர்ப்பண நாட்கள் மட்டுமே என்று பொருள் கொள்ளாதீர்கள். மேலும், தர்ப்பணம் என்றாலே பித்ருக்களுக்கு அளிப்பது, பித்ரு வகைப் பூஜை என்றே அனைவரும் பொருள் கொள்கின்றார்கள். இதில் நிறைய விளக்கங்கள், வேத ரகசியங்கள் உள்ளன.

தர்ப்பணம் என்றால் திருப்தி செய்வித்தல் என்று பொருள். தேவாதி தெய்வ மூர்த்திகள், சித்தர்கள், மஹரிஷிகள் அனைவர்க்கும் தர்ப்பண அர்க்யம் அளித்திடலாம். தினசரி ஆற்ற வேண்டிய தர்ப்பணங்களில் எமத் தர்ப்பணமும் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.
ஏதேனும் ஒன்றைக் கொடுத்தால் அல்லது செய்தால், மகிழ்ச்சி அடையச் செய்தால்தான் திருப்தி அடைதல் என்பது மனித குலத்திற்கு வந்துள்ள நியதி. ஆனால் பித்ருக்களுக்கு தர்ப்பணம் என்றால் .... பித்ருக்களைப் பொருளாவோ, செல்வத்தாலோ, சொத்துக்களாலோ, செல்வ வளத்தாலோ, ப்ரீதி செய்ய முடியுமா? பதினாறு பேறு வகைகளையும், அஷ்டமா சித்திகளையும் அளிக்க வல்லவர்களான பித்ருக்களை, பின்னர் எவ்வகையில் தான் திருப்தி செய்வது?
எள்ளும், நீரும் வார்த்தாலே போதும், பித்ருக்கள் திருப்தி அடைகின்றார்கள் என்பது வேதப் பூர்வமாக முற்றிலும் உண்மையே. எப்படி?
எள் கலந்த நீரை வலது ஆள்காட்டி விரல், கட்டை விரல்களுக்கிடையே நீரை ஊற்றித் தாம்பாளத்தில் பூமியில் வார்த்தலாகிய தர்ப்பணத்தால், பித்ருக்கள் முதல் வகைத் தர்ப்பணத் திருப்தி நிலையை அடைகின்றார்கள். காரணம், இதில் எழுகின்ற ஆத்ம அனுபவம்தான். இதனை எழுத்தில் வடிக்க முடியாது. அவரவர் செய்து பார்த்தால்தான் அனுபூதியாகப் புலப்படும்.
அதாவது தமக்கு உடலைத் தந்தது தங்களுடைய மூதாதையர்களே, முன்னோர்களின் புண்ய சக்தியே என்பதை ஒவ்வொரு மனிதனுக்கும் உணர்விப்பதும் தர்ப்பணப் பூஜையில் எழும் பலாபல சக்தி ஆகும்.
இந்த நல்லெண்ணம் சிறிது, சிறிதாக விரிந்து விருத்தியாகி, தன்னை மட்டுமல்லாது இப்பூவுலகின் ஒவ்வொரு அணுவும் ஜீவிப்பதும், அசைவதும், அசைவற்று இருப்பதும் ஆண்டனின் ஆணையால்தான் என்பது ஆத்மப் பூர்வமாக உணர்தல் கை கூடும்! தான் ஒவ்வொரு விநாடியும் ஜீவிப்பது இறையருளால் தான் என்று உணரும் உத்தம நிலைக்கு இந்த தர்ப்பணமே வித்திடுகின்றது என்பதால், பித்ருக்கள், தாம் பெறும் தர்ப்பணத்தாலேயே முதல் நிலைத் திருப்தியை அடைந்து விடுகின்றார்கள் என்பது இதன் பொருளாகும்.
பிள்ளையாருக்கும் சதுராவ்ருத்தித் தர்ப்பணம் என்ற விசேஷமான பூஜை ஒன்று உண்டு. ஒரு காணாபத்ய பீஜ மந்திரத்தை நான்கு முறை சொல்லி அர்க்யம் அளிப்பது சதுராவ்ருத்தித் தர்ப்பண முறை ஆகும். பிரம்ம மூர்த்தி, இவ்வாறு விநாயகப் பெருமானுக்குச் சதுராவ்ருத்தித் தர்ப்பணம் அளிக்கும் போதுதான், பிரபஞ்சத்தின் ஒரு பகுதியில் பிரளயமும், மற்றொரு பகுதியில் பிரளய நிறைவும் ஏற்படுவதும் உண்டு.
அனைத்துலகங்களும் மறைவது மகாப் பிரளயம் ஆகும். ஆங்காங்கே சில இடங்களில் பிரளயம் தோன்றி, தனுஷ்கோடி, லெமூரியாக் கண்டம், துவாரகையின் சில பகுதிகள், மகாபலிபுரத்தின் அருகே சில தயசயனப் பகுதிகள், பெர்முடா முக்கோணக் கடல் பகுதி போன்றவை பகுதி, பகுதியாக அமிழ்ந்துள்ளன. இதற்குப் பகுதிப் பிரளயம் என்று பெயர்.
உண்மையில், பிரளயத்தின் போது ஸ்ரீகிருஷ்ண பாதம் ஆல இலைகளில் தென்படும். அதாவது ஸ்ரீகிருஷ்ணர் பிரளய கால பூஜையை நிறைவு செய்து தர வருகின்றார். இதனால்தான் எதைச் செய்தாலும் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் என ஓதி அர்ப்பணிக்கின்ற வழக்கம் நிலவுகின்றது.
எவரெல்லாம் ஆல இலையில் விபூதியைத் தடவி, ஐந்து கை விரல்களையும் பதித்து, இதன் மேல் தர்ப்பணம் அளிக்கின்றார்களோ அவர்களுக்கு பாஸ்கராச்சார்ய பித்ரு தரிசன சக்திகள் கை கூடி வரும். இதனால் தம்மைப் பிறர் கேவலப்படுத்துகின்றார்களே, தாம் கேவலப்படுத்தப்பட்டு விட்டோமே, தமக்கு அவமானம் வந்து விட்டதோ என உள்ளூரப் புலம்புவோர்க்குத் தக்க விமோசனம் கிட்டும்.
மேலும் ஆலமரமே ஆலயத் தல மரமாக உள்ள தலங்களில், மற்றும் ஆலமரத்தடிகளிலும் அடியில் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானது. (உதாரணம் - திருவாலங்காடு எனப் பெயர் கொண்ட இரு தலங்கள், திருஆலம்பொழில்). முதலில் ஆலமரத்தைச் சுற்றி வந்து, அதில் உறையும் விருட்ச தேவதைகளை வணங்கி, அவற்றுடன் உரையாடி, அதில் பித்ருக்கள் வந்து ஆவாஹனமாகிட வேண்டி, மனமுருகிக் கசிந்து பிரார்த்தித்துத் தர்ப்பணம் அளித்திடுக!  

லட்சியமே லட்சியமாய் வாழ்க

பலருக்கும் தங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன என்றே தெரிவதில்லை. பிள்ளை, பெண்களை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்வித்து, நல்வாழ்வை அளிப்பது கடமைகளுள் ஒன்றாக ஆகின்றது. ஏனெனில், சந்ததிகள் மூலமாக நல்ல குடும்பத்தை அமைத்துத் தருதலும், தெய்வீகத்தைப் பேணும் அற்புத இறைச் சமுதாயப் பணிகளில் ஒன்றாகும். மேலும் நல்லவர் ஒருவர், தம் பூஜா, தபோ பலன்களால் 10000 தீய சக்திகளை வென்று சமுதாயத்தைக் காத்திட முடியும் என்பதால், நல்ல சந்ததிகளைத் தெய்வீக வழியில் ஆளாக்குதலும் மிகவும் முக்கியமானதாகும். ஆன்மீகத்தில், நிறைய சந்ததிகளுடன் நல்பக்தியுடன் வாழ்வதையே நெடுங்காலத் தவம் எனப் போற்றுகின்றனர். ஆனால் கடமை என்பதற்காகப் பாச மாயையில் சிக்கலாகாது.
இறை லட்சியத்தை ஒட்டியதுதானே கடமையும். நல்ல சந்ததியை வளர்த்து ஆளாக்குதல் என்பது நற்குணங்கள், நற்பண்புகளுடன், நல்ல தெய்வீக பக்தியையும் பிள்ளைகள், பெண்களுக்கு அளித்தலும் பெற்றோர்களின் கடமையாகும்.
ஆனால், கலியுகத்தில், எப்போது புத்தகப் படிப்பு தலை தூக்கி, காதால் கேட்டு அறிந்து, தெளிந்து உணரும் கற்றலின் கேட்டல் நன்று என்பதான சிரவண வித்யா முறை மறைந்ததோ, அதிலிருந்தே கலியுக மக்களின், பிள்ளைகளின், இளைய சமுதாயத்தின் நல்புத்தி, நினைவுத் திறன், சத்குருமார்களை மதிக்கும் தெய்வீக மாண்பு, புத்திக் கூர்மை மங்கலாயின.
புத்தகப் படிப்பு என்பது ஓரளவு தேவையே! ஆனால் தத்துவார்த்துவமாக, பெரிய பெரிய ஆராய்ச்சி வகை நூல்களைப் படித்துக் கொண்டே இருந்தால், வாழ்க்கை முழுதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டியது தான். என்று புத்தகக் கும்பலில் இருந்து வெளி வருவது?

ஸ்ரீநந்தீஸ்வரர்
திருநறையூர் சித்தீச்சரம்

கலியுகப் பிள்ளைகள் புத்தகப் படிப்பிலிருந்து விடுபட்டு அவ்வப்போது மாமறைகள், நல்ல இறைக் கச்சேரிகள், தெய்வீகப் பேருரைகளைக் கேட்டல் போன்றவற்றில் ஈடுபடுதல்தான் நல்ல புத்தித் திறனைத் தரும்.
இதற்காகத் தான் சிறு வயதிலேயே சுலோகங்கள், இறைத் துதிகளை ஓதி வந்தால் நிறைய மந்திரங்கள், பாடல்கள் சிறு வயதிலேயே மனப்பாடமாகி விடும். பிறகு எங்கு சென்றாலும், மாணவப் பருவத்தில், இளைய பருவத்தில், நடுவயதில் அடிக்கடி இறைத் துதிகளை மனதினுள் ஓதி, ஓதி எப்போதும் மனமானது இறை உணர்வுகளிலேயே மிளிர்ந்திடும்! நினைவாற்றல் திறனையும் நன்கு மேம்படுத்திடவும் இது உதவுமன்றோ.
திங்கட்கிழமை, சந்திர மூர்த்திக்கு உரிய நாளாதலின் இது மனோ சக்திகள் நன்கு விரிவடையும், விருத்தியாகும், பூரிக்கும் நாளுமாகும். ஏற்கனவே பன்முறை உரைத்து வந்துள்ளது போல், வெளிவான் மண்டலத்தில் கிரகங்கள் உள்ளது போல, ஒவ்வொரு மனித உடலிலும் பல கிரக அம்சப் பகுதிகள் உண்டு. உதாரணமாக, வானத்தில் உள்ள சந்திர மண்டலத்திற்கு நம் உடலில் சந்திர கிரக அம்சங்கள் உள்ள இடது கண், இடது நாசித் துளை, உள்ளங்கை, உள்பாதம், சுண்டு விரலுக்குக் கீழுள்ள உள்ளங்கைப் பகுதி, இருதயத்தின் அமுதப் பிரகாசப் பகுதி, உள் தொண்டை, கபாலத்தில் அமிர்தப் பாதை போன்ற இடங்களுக்கும் ஆகர்ஷணப் பிணைப்பு உண்டு. திங்கட் கிழமை அன்று சந்திர மூர்த்திக்கான பூஜைகளை ஆற்றிடில் அந்தந்த அவயப் பகுதிகள் நன்கு வளம் பெறும். இப்பகுதிகளில் உள்ள நோய்கள் குணமாக உதவும். இப்பகுதிகளில் நோய்கள் வாராமலும் தற்காத்துக் கொள்ளலாம்.
எனவே அவரவர் உடலுக்கும் விண்ணுலக கிரகங்களுக்கும் ஒவ்வொரு விநாடி நேரத்திலும் இணைப்புகள் இருந்து கொண்டே இருக்கும். இவற்றை நன்முறையில் அறிந்து, கிரக கிரண ஆகர்ஷண பெற்று விருத்தி செய்யும் முகத்தான், அந்தந்த நாளுக்கான வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
திங்கள் தோறும் தாம் வெண்ணிற ஆடைகளை அணிவது, முத்து, வெள்ளி வகை, வெண்ணிற ஆடைகள் அணிதல், சுவாமிக்கு வெண்ணெய்க் காப்பு, தேங்காய்ப் பால் அபிஷேகம், வெண்ணிற வாசனை மலர், மாலை சார்த்துதல் போன்ற யாவும்,
1. நாட்டில் பெருகி வரும் அசுர சக்திகளிலிருந்து உத்தமர்களைக் காக்க உதவும்.
2. உத்தமர்கள் ஆனந்தமடைந்திடில், இவவானந்தமே நல்வரங்களாக வர்ஷிக்கும். இதனால் குடும்பங்களுக்கு நல்ஆசிகள் கிட்டும்.
3. மனம் அலைபாயாது, ஓரளவு தணிந்தும், நாளடைவில் தூய்மை பெறவும் உதவும்.
4. புறத் தூய்மை, உள்ளத் தூய்மைக்கு வழிவகைகள் கிட்டும்.
5. வெள்ளைத் தாமரைப் பூக்களால் சுவாமிக்குத் தம் கரங்களால் அர்ச்சித்து, சிறிது இதழ்களைத் தேனில் தோய்த்துப் படைத்துத் தானும் பிரசாதமாக உண்டு, பூஜித்தத் தாமரைப் பூக்களை வெள்ளை நிறப் பசு, கன்றுகளுக்கு அளித்தலால், பொய் சொல்லும் பிள்ளை, பெண் திருந்திட, நல்வழிகள் கிட்டப் பெறுவர். மேலும் வெள்ளைப் பூக்களைத் தரும் மரங்களையும் தரிசித்தலும் (உ-ம் - பன்னீர்ப் புஷ்பம்), வெண்மை நிற - சுற்று வகை உணவுப் பண்டங்களைத் (முறுக்கு, தேன்குழல்) தானமாக அளித்தலும், கணவனைப் பற்றிய வெளியில் சொல்ல முடியாத வேதனைகள் தணிய உதவிடும்.
கும்பகோணம் திருவாலங்காடு அருகே உள்ள வெள்ளை வேம்பு மாரியம்மன் தரிசனம், கணவனை, மனைவியைத் திருத்திட உதவும்.

நிறைவோடு நல்தொடர்பும்
தொடரட்டும் ...

பத்தோடு பதினொன்றாக என்று ஒரு வழக்குத் தொடர் உண்டு. இதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. நம் முன்னோர்கள் ஒவ்வொருவரும் ஆறு, எட்டு, பத்து என்று நிறைய குழந்தைகளைப் பெற்று, சந்ததிகளை நன்கு தழைக்க வைத்தனர். தற்காலத்திலோ இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பதையே வெட்கமாகவோ, அவமானம் உடையதாகவோ கருதுவது மிகவும் வேதனைக்குரியது. குழந்தைப் பிறப்புத் தடுப்பை ஆன்மீக ரீதியாக ஏற்பது கிடையாது. உலகில் பெரும்பாலும் அனைத்து மதங்களுமே பிறப்புத் தடுப்பை தர்மம் அற்றதாகவே கருதுகின்றன.
"பத்தோடு பதினொன்று'' என்பது சந்ததி வளர்ச்சியையும் குறிப்பதோடு, நிறைவோடு நற்காரியத் தொடர்வையும் குறிக்கின்றது. பத்து என்பது முடிவைத் தருவதால், நிறைவைத் தருவதாக, அடுத்ததாக நல்நிறைவோடு நல்தொடர்வையும் தருவதாகப் பதினொன்றை வைத்தார்கள். இதனால்தான் எந்த நல்ல காரியத்திற்கேனும், தானமளிக்கையில் பத்து, நூறு அல்லது ஆயிரம் என்றில்லாது பதினொன்று, நூற்றொன்று, ஆயிரத்தொன்று என்று அளிப்பதும் இவ்வகையில் நல்ல காரியங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்ற தொடர் தத்துவத்தைக் குறிப்பதாகும்.
இதனால் தான் பத்தாவது திதியான தசமியும், பதினென்றாவது திதியான ஏகாதசியும் இருக்கின்ற நேரத்தில், அதாவது இவை இரண்டும் இணைகின்ற இரு நாழிகை நேரத்தில், பதினொரு வகைப் புஷ்பங்கள், பழங்கள், தானியங்கள், பண்டங்கள் போன்று பதினொன்றாக வைத்துப் பூஜிப்பதும், தானமளிப்பதும் நற்காரியங்கள், நல்ல வைபவங்கள் இல்லறத்தில் தொடர்ந்து நடந்திட உதவுவதாகும். எனவே, தசமித் திதி முடிவின் நிறைவில் ஒரு நாழிகையிலும், ஏகாதசித் திதி துவங்கும் முதல் நாழிகையிலும், தொடந்து இரண்டு நாழிகைகளுக்குமாகத் தொடர்ந்து,

ஸ்ரீநந்தீஸ்வரர்
அம்பாள் சன்னதி ஊட்டத்தூர்

* ஏகாதச ருத்ரம்
* மற்றும் பத்துப் பாடல்கள் உள்ள (திருநீற்றுப் பதிகம் போன்ற) பதிகங்களோடு பதினொன்றாவதாக தனியன் அல்லது பலஸ்ருதி எனப்படும் பதினொராவது துதியோடு உள்ள பாடல்களை ஓதிப் பூஜிக்க வேண்டும்.
* திருவாசக மணிவாசகர், தேவாரம் மற்றும் தொண்டரடிப் பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி, திருநீற்றுப் பதிகம் போன்ற பத்துப் பாடல்களை, பதினொன்றாவது பலஸ்ருதி பாடல்களையும் ஓதிடுக! இவ்வாறு உங்கள் பிள்ளைகளைச் சிறிய வயதில் இருந்தே குறைந்தது 300, 400 பாடல்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தால், வாழ்க்கையே நன்றாக அமையும் அல்லவா.
* நன்றாக வேதம் ஓதுகின்ற, தமிழ் மறைகளைப் பாடுகின்ற வேத வித்துவான்களை, ஓதுவார்களை தசமி ஏகாதசி திதி சந்தி நேரத்தில் குறைந்தது ஒரு முகூர்த்த காலத்திற்காவது (1 மணி 30 நிமிடம்) தேவாரப் பதிகப் பாடல்களை, ஏகாதச ருத்ர மந்திரங்களை ஓதுவதற்கு ஆலயத்தில், வீட்டில், பொது இடத்தில் ஏற்பாடு செய்து அவர்களுக்குத் தக்க சன்மானம் அளித்திடுங்கள்.
* காக்கை, புறா, கருடன், பசு, எருமை, யானை, கிளி, மயில், அணில் போன்ற பதினோரு வகை தெய்வப் பறவைத் தரிசனங்களைப் பெறுதல் விசேஷமானது.
* முகத்தில் கரி பூசுதல் என்பதாகப் பிறரால் இழிநிலை அடைந்தவர்கள், கேவலப்படுத்தப்பட்டவர்கள் மீண்டு, சமுதாயத்தில் உற்றம், சுற்றத்தில் நன்னிலை பெற இத்தகைய சந்தி பூஜை பலன்கள் உதவும்.
* நவகிரகத்தோடு சனீஸ்வரன், சந்திரன், சூரியன் தனித்து அருள்வதாக, மொத்தம் பதினோரு கிரக மூர்த்திகளைத் தரிசித்தல் விசேஷமானது. சந்ததித் தடுப்பு என்பதாக சந்ததி இல்லாது வாடுவோர் மேற்கண்ட அனைத்தையும் கடைபிடித்தல் நன்று.

லக்குவ நெல்லித் திருநாள்

ஏகாதசி விரதம் பூண முடியவில்லையே என்று பலரும் ஏங்குவர். பதினைந்து நாளைக்கு ஒரு முறை வரும் ஏகாதசி அன்று ஒரு பன்னிரெண்டு மணி நேரமாவது ஒரு சிறிதும் நீர் அருந்தாது விரதம் இருக்க முடியாதா என்ன? அல்லது பால், இளநீர், மோர் மட்டும் அருந்தி விரதம் இருந்துதான் பாருங்களேன்!
ஏகாதசி விரதம் என்ற ஒன்றை ஏன் வைத்தார்கள்? ஆசைகளை, முறையற்ற காமங்களை, விருப்பங்களை அடக்க, நல்ல மனோ வைராக்யத்தை விருத்தி செய்திடவே, ஏகாதசித் திதியன்று வான்வெளியில் மனசுத்திக் கிரணங்கள் பரவெளியில் உருவாகின்றன.
இத்தகைய மனசுத்திக் கிரணங்களை ஈர்த்து உடல், மன, உள்ள நாளங்களில் பதிய வைத்து, நன்கு விருத்தி செய்திட, ஏகாதசி அன்று, திதி சக்திப் பூர்வமாகத் தோன்றும் நற்சந்ததி, நற்காரியத் தொடர்பிற்கான நல்வர சக்திகளைப் பெற்றிடவே ஏகாதசித் திதி விரதம் பெரிதும் உதவுகின்றது. எதையும் கடைபிடித்துப் பார்த்தால்தானே அதனதன் அனுபூதிகள் தெரியலாகும். என்னதான், கேட்டு, படித்து அறிந்தாலும் அதனதனை வாழ்க்கையில் ஒரு முறையேனும் ஏற்றுச் செய்தால்தானே ஆத்மார்த்த அனுபவங்கள் பூரிக்கும்.

பஞ்ச கலச சிவத்தலம்
தில்லைஸ்தானம் திருவையாறு

ஏகாதசி அன்று (நீலகண்டக்) கழுத்துப் பகுதியில் தொண்டைப் பகுதியில் உள்நாக்கில் பூர்வானந்த அமிர்தச் சுரப்பு ஏற்பட்டு உள்ளத்தை இனிப்பாக்குகின்றது. திகட்டாத அமிர்தமய, சாசுவதமான இனிப்பு! நாம் உண்ணும் உணவு உடலை அடையும். ஏகாதசி விரதப் பலனாக எழும் அமிர்தம் உள்ளத்தை அடையும். இது ஏகாதசியில் நிகழ வல்லதாகும். இந்த அமிர்தாமிர்த அமிர்தம் உள்ளத்தில், மனதில் உள்ளூறி 72000 நாளங்களையும் நிரவிடவே விரதம் இருக்கின்றோம். ஏகாதசி விரதத்தில்தான் அதனை உணர இயலும்.
திதி நித்யா பூஜை என்ற மகத்தான சக்திகள் நிறைந்த பூஜை முறைகள் உண்டு. ஒவ்வொரு திதிக்கும் உரித்தான வழிபாட்டு தேவதைகள் உண்டு. ஏகாதசி அன்று, வைகுண்டத்தில் பெருமாளுக்குப் பதினோரு கால பூஜை நிகழ்ந்திட, வைகுண்ட வாசலைத் தரிசிப்பார்கள். நமக்குத்தான், நம் பூமியில்தான், வருடத்திற்கு ஒரு முறை மார்கழி ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகின்றது. விண்ணுலகில் ஒவ்வொரு ஏகாதசியும் வைகுண்ட ஏகாதசியே! ஒவ்வொரு ஏகாதசியும் வைகுண்ட ஏகாதசியாகி, மார்கழி மாதமானது தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரம் ஆவதால், பிரம்ம முகூர்த்த நேர தரிசனமாக மார்கழி மாத ஏகாதசி ஆகின்றது. மார்கழி ஏகாதசி அவர்களுக்கு மஹா வைகுண்ட ஏகாதசியாகும்.
ஒவ்வொரு ஏகாதசியன்றும், சயனக் கோல ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு சயனக் கோல ரங்கநாதரின் தரிசனம் கிடைக்கும். எனவே, ஏகாதசி அன்று, நின்று, கிடந்து, இருந்து, நடந்த ஆகிய நான்கு நிலைப் பெருமாள் தரிசனம் குறிப்பாக, சயனக் கோலப் பெருமாள் மூர்த்திகளின் தரிசனத்தைப் பெறுதல் மிகவும் விசேஷமானது.
பிரதோஷ திதி என்பது திரயோதசி ஆகும். ஆனால் நித்தியப் பிரதோஷம் என்பதாக, தினமும் மாலையே பிரதோஷ நேரம் கொண்டாடுவது நித்தியப் பிரதோஷமாகும். வனத்திலே, ஸ்ரீராமரைக் காத்திடப் பதினாறு ஆண்டுகள் தூங்காமல் கண் விழித்த இளவலே லக்ஷ்மண மூர்த்தி ஆவார். எனவே, நித்திய ஏகாதசியாகப் பதினான்கு ஆண்டுகள் கொண்டவரே லக்குமணர்!
எனவே, ஏகாதசி விரதத்தைத் தொடங்கும் போதும், நிறைவு செய்யும் போதும், லக்ஷ்மணரின் அருளாசிகளை வேண்டிப் பெற்றிடச் சங்கல்பம் கொண்டிட வேண்டும்.
லக்ஷ்மண மூர்த்தியே ஆதிசேஷ மூர்த்தியாகவும், பலராமராகவும் அவதரித்தமையால்,
லக்ஷ்மணாய பலராமாய ஆதிகேசவாய த்ரயத்பல
ராமசுதம் ராமசுதம் ராமசுதம்
என்று 1008 முறை ஓதியாவது ஏகாதசி நாளின் நிறைவைக் கொண்டாடிட வேண்டும்.

க்ருஷ்ண ரேகசுதம் எனும் கறுப்பு வெளிப் பட்டைக் கோடுகளுடன் உள்ள மகத்தான மூலிகைக் கனியான கருநெல்லியை இளவயதில் இருந்தே உண்டு வந்தமையால், லட்சுமண மூர்த்திக்குப் பதினான்கு கண்ணுறங்காத சயனமற்றத் திருக்கோல யோக அனுபூதி கிட்டியது. லக்குவன் ஆராதித்த கருநெல்லிநாதர் என்ற பெயரில் சிவகாசி அருகே திருத்தங்கல்லில் சுயம்புச் சிவலிங்க மூர்த்தியே அருள்கின்றார்.
ஏகாதசி அன்று நெல்லி மர வழிபாடு, நெல்லி கூடிய உணவு தானம் விசேஷமானது. நெல்லிக்காயை ஊறுகாயாக, துவையலாக இட்டு ஓர் ஏழைக் குடும்பத்திற்கு ஒரு வாரமேனும் வரும்படி அளித்திடுக! உணவிலும் நெல்லியைச் சேர்த்துக் கொள்க!
பிள்ளைகள், பெரியோர்களிடமே, பெற்றார்களிடமே சொல்ல முடியாத பல ஏக்கங்கள், வருத்தங்கள், கவலைகளுடன் இருப்பர். அவை தக்க முறையில் வெளி வந்து தீர்வு பெற இத்தகைய விரதம், பூஜைகள், நெல்லி வகை தானம் உதவும்.

மத்ஸ்ய துவாதசி

விஷ்ணு அவதாரங்கள் பத்து மட்டும் அல்ல. எண்ணற்ற பெருமாள் அவதாரங்கள் உண்டு. இதில் பலரும் அறியாதது யாதெனில், தக்க சத்குருவைப் பெறும் மட்டும், ஸ்ரீகுரு எனப்படும் தத்தாத்ரேயரைப் பல துறவிகளும், ஏனையோரும் குருவாக ஏற்கின்றமையால், குரு வாரமாகிய வியாழன் அன்று அமையும் துவாதசியில், அனைத்துப் பெருமாள் மூர்த்திகளும் ஒருங்கிணைந்து சர்வ பராபர தரிசனந் தந்து காட்சி அளிக்கின்றனர். இதனால்தான், வியாழன் அன்று அமையும் பெளர்ணமியில் ஆற்றப் பெறும் சத்யநாராயண பூஜைக்குப் பன்மடங்குப் பூஜா பலன்கள் உண்டு.
இதே போன்று வியாழன் அன்று அமையும் பிரதோஷ நேரம், மகத்தான மங்கள சக்திகளைக் கொண்டதாகும். வியாழப் பிரதோஷத்தில், ஸ்ரீநந்தீஸ்வரர் எனப் பெயர் தாங்கி ஈஸ்வரன் அருளும் ஆலயங்கள், (சென்னை திருவொற்றியூர் ஸ்ரீபடம்பக்கநாதர் ஆலயத்தின் பின்புறம் உள்ள பலரும் அறியாத ஸ்ரீநந்தீஸ்வரர் ஆலயம், சென்னை கூடுவாஞ்சேரி அருகில் உள்ள நந்திவரம்) போன்றவையும், அதிகார நந்தி மூர்த்தியே பிரதோஷ வழிபாட்டில் ரிஷப வடிவிலும், மானுட வடிவிலும் வந்து நேரில் பூஜிக்கின்ற திருத்தலங்கள் ஆகும்.
இதே போன்று, வியாழனன்று கிருத்திகை சேர்ந்து வரும் பிரதோஷத்தன்று, தனித்த விமானம், கலசத்தோடு கூடிய முருகன் சந்நிதி உள்ள சிவத் தலத்தில், பிரதோஷம் நிகழ்த்துவதால்,

கொறுக்கை சிவாலயம்

திருமழபாடி சிவாலயம்

* தலை சம்பந்தமான நோய்கள், கபாலப் பிரச்னைகளுக்கும்,
* தினமும் மன உளச்சல்களுடன் வாழ்வோர்க்கும் தக்க நிவர்த்தி கிட்டும்.
அம்பாளுக்கு முன் நந்தி வாகனம் உள்ள தலங்களில், (விழுப்புரம் அருகே திருநெல்வாயில் துறையாகிய திருவருட்டுறை போன்றவை) வியாழனன்று பிரதோஷ நாளில் பூஜிப்பது உற்றம், சுற்றம் மூலம் ஏற்படும் வீட்டுச் சொத்து, பணம், நிலம் வகையிலான துன்பங்கள் தீர நல்வழி அமையும்.
இரட்டை நந்திகளுடன் கூடிய ஆலயங்களில் (கும்பகோணம் அருகே கொறுக்கை, திருமழபாடி போன்று) பிரதோஷ பூஜையில், ஸ்வயாம்பிகை சமேதராய் நந்தி மூர்த்தி, பிரதோஷ பூஜை நிகழ்த்துகின்றார். வாழ்வில் தக்க ஆண் துணை, ஆள் பலம், ஆண்களின் பாதுகாப்பு இல்லாது வருந்துகின்ற குடும்பங்களில், நல்ல ஸ்திரத் தன்மை ஏற்பட உதவும்.
மத்ஸ்ய துவாதசி தினத்தன்று துவாதசி நேரத்திற்குள் மீன்களுக்கு உணவிடுதல், கிணறுகளில் நல்ல மீன்களைச் சேர்ப்பது நல்ல தானமாகும். எப்போதும் ஊர், ஊராய் அலைகின்ற தொழிலை உடையவர்களுக்குக் குடும்பத்தோடு சேர்ந்து வாழும்படி நல்வாழ்க்கை அமைய இந்த மத்ஸ்ய துவாதசி அறப் பணிப் பலன்கள் உதவிடும்.
இவ்வாறு கிணற்றுக்கு மீன் இடுதல், காலணி, குடை போன்று மிக எளிமையான வகைகளில் தான தர்மங்களை, அதிகச் செலவின்றி நிகழ்த்தி வருவதால் ஏகப்பட்ட கர்ம வினைத் தேக்கங்களை மிக எளிதில் நிவர்த்தி செய்திடலாம். இதற்கு வியாழப் பிரதோஷம் துணை புரிகின்றது.

கரி தோஷங்களுக்கு நிவாரணம்

ஆயுளைப் பாதிக்கக் கூடியவை கரி தோஷங்கள் ஆகும். உதாரணமாக, மயானத்துக்கு அருகே அரை மைலுக்குள் வீடு இருந்தாலும், மயானப் புகை வீட்டில் பட்டாலும் கரி தோஷங்கள் பெருகும். மயானத்தருகே தோட்டம் இருந்தால், கமுகு, வாழை, தேக்கு, நெல்லி போன்ற ஆயுள் விருத்திகரமான மரங்கள் நிறைய இருக்க வேண்டும். இவை சரியாக அமையாவிடில், கரி தோஷங்கள் ஏற்படும்.
மேலும், தவறான வகையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வைத்திருந்தாலும், கரி தோஷங்கள் உண்டாகும். பல ஹோட்டல்களிலும் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களை வீட்டில் பயன்படுத்தினாலும், ஆயுள் பங்க தோஷம் உண்டாகும். இவ்வாறு பெருகும் தோஷங்களுக்குச் சுபமுகூர்த்த கால அம்சங்கள் நிறைந்த நாளில், யானையை வாகனமாக உள்ள தலத்தில் உள்ள ஸ்ரீசனீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, முழுத் தாமரை மலர்களால் சங்குப் பூக்களால் கீரிடம் அமைத்து, அலங்கரித்து வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

ஸ்ரீவிஷ்ணு துர்கை
சென்னி வாய்க்கால், லால்குடி

108 விதமான சுப அம்சங்களை வைத்துத் தான் பரிபூரணமான முகூர்த்த தினம் அமைகின்றது ஆனால், இவ்வகையான 108 சுப முகூர்த்த அம்சங்கள் நிறைந்த நாள் இரண்டு, மூன்று வருடங்களில் ஒரு சிலவே இருக்கும். ஏனையவற்றில், எந்த சுப அம்சம் மங்கி இருக்கின்றதோ, அவை விருத்தியாகிடவும், அவற்றைத் தடுக்கும் தோஷங்களை நீக்குதற்கான சில பரிகாரங்களை வைத்து அளித்துள்ளனர்.
கால தேவதா மூர்த்திகள், ஏன் 108 அம்சங்கள் நிறைந்த சுபமுகூர்த்த நாட்களை நிறையவே மக்களுக்கு அளித்திடவில்லை. நாம் தாம் நல்லது, நல்லதன்று எனப் பாகுபாடு கொள்கின்றோம். அனைத்தும் அவரவர் கர்ம வினை வினைவுகளின்படி நடப்பதெனில்,
நல்லதேது, கெட்டதேது நானிலத்தில் நாடவே
நல்லதொன்று கெட்டதொன்று வினைவிளைவின் பாதமே!
நடப்பதெல்லாம் நாராயணன் செயலே! ஆனால் இந்த உத்தம வாக்கியத்தைக் கலியுகம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை! காரணம், பகுத்தறிவு மங்கிப் போய், மனித குலம் புகை பிடித்தல், மது, கேளிக்கைச் சுகபோகங்களுக்கு ஆட்பட்டு ஓரறிவு, ஈரறிவுகளுடன் வாழத் தலைப்படுகின்றனர்.
உதாரணமாக, ஒருவர் மற்றொருவரைக் கன்னத்தில் அடித்துக் கொண்டே இருப்பதெனில், சிலர் குறுகிய மனத்தோடு, இப்படி அடிப்பதும் இறைவன் செயலா என்ற வகையில் குதர்க்கமாகக் கேட்பார்கள் அல்லது எண்ணுவார்கள். ஆம், ஒருவர் மற்றொருவரை அறைந்தாலும், இதுவும் கர்ம வினையால் நிகழ்வதே! ஆனால் எவ்வளவு நேரம் தான் அவர் மற்றொருவரை அடித்துக் கொண்டே இருப்பார், நாள் முழுதுமா? அடிக்க வேண்டும் என்ற வினை முடியும் வரை அவர் அடிப்பார்! அதற்குப் பிறகு வருவதை அவர் எதிர் கொண்டாக வேண்டும் அல்லவா!
அவ்வாறு அடித்தவரும் இதனால் வரும் வினைகளை எதிர் நோக்கித் தானே வாழ வேண்டும். அடித்தலோடு இந்த உதாரணக் காரணம் முடியவில்லையே. இதற்குப் பின் நடப்பதைத் தொடர்ந்து சென்றா அனைவரும் பார்க்கின்றார்கள். எனவே, உலகில் நிகழ்வதனைத்தும் ஏற்கனவே நிர்ணயக்கப் பட்டவையே.
மேலும் ஓர் உதாரணமாக, ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி பலர் இறந்தால் அது கூட்டுக் கர்ம விதியின்படி ஏற்கனவே நிர்ணயிக்கப் பட்டதாகும். ஆனால், கலியுகத்தில் இதனைப் புரிந்து கொள்ளும் ஆறறிவும் பகுத்தறியும் பரிபக்குவமும் அனைவரிடமும் இல்லாமையால், ஜோதிடப் பூர்வமாக, ஆன்மப் பூர்வமாக இவற்றை முன் கூட்டியே எடுத்துரைத்தால் வழக்கில் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டு விடும்.
எனவே, இத்தகைய விஷயங்களை ஆன்மப் பூர்வமாக விளக்கினாலும், மனித மனம் ஏற்காது. இதற்காகத்தான் தக்க சற்குருவை நாடினால், அவரவர் மனப் பக்குவம் அறிந்து விளக்கங்களை அளிப்பார். ஒருவருக்கு அளிக்கும் விளக்கம், மற்றவர்களுக்கு வேறு விதமாக இருக்கும். இதற்காக விளக்கங்கள் மாறுகின்றன என்பது பொருளல்ல! அவரவர் மனப் பக்குவத்திற்கு ஏற்ப, பூர்வ ஜன்ம கர்ம விளைவுகளுக்கு ஏற்பவே சற்குரு அருளும் விளக்கங்கள் அமைவதால், எந்த ஒரு காரியம் உலகில் நிகழ்வதற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் என்ற மூலத்தை நன்கு அறிதல் வேண்டும்.
உதாரணமாக, ஒருவர் ஒரு ஜவுளிக் கடையில் புடவை வாங்கினால், புடவை உருவான நூலுக்கான பருத்தி விதை, பருத்தி விளைந்த பூமி, பருத்தியை விளைவித்தவர், பருத்தி நூல் தங்கிய இடங்கள், கிடங்கு, நெசவாலை, கடைகள், பருத்தில் நூல் கை மாறிய மனிதர்கள் என ஒரு புடவை வாங்குவதில் இவ்வளவு விஷயங்கள் ஆன்மீக ரீதியாக அடங்கி உள்ளன. இதிலேயே இவ்வகையில், நம்மால் சில நூறு விதமான காரண காரிய அம்சங்கள் இருப்பதை, ஆன்மப் பூர்வமாகச் சுட்டிக் காட்டினால் உணர முடிகிறது தானே!
இதில் சற்றும் இன்னும் ஆழப் போனால், ஒரு புடவை உருவான ஒவ்வொரு பருத்திச் செடி, பூக்கள் அனைத்துடனும், அதை அணிபவர், குடும்பத்தவரோடு கொண்ட பூர்வ ஜன்ம பந்தங்கள் ஆயிரமாயிரம் இருக்கும். பல சமயங்களில் இது ஆயிரமாயிரம் பிறவிகளுக்கும் விரியும்.
ஆனால், இவை அனைத்தையும் நினைத்து ஆத்ம விசாரம் செய்து கொண்டா வாழ முடியும் என்று எண்ணி மனம் மலைக்குதா? அஞ்சல் வேண்டாம் அன்பர்களே!
ஏனெனில் முதலில் ஆரம்ப மூலாதாரமாக, உலகில் நிகழும் காரியம் ஒன்றுக்கும் ஆயிரமாயிரம் காரண காரியங்கள் உண்டு என உணர்தலை, உங்கள் மனதில் ஆழ்ந்து வித்திட்டு வைத்துக் கொள்ளுங்கள்! இதுவே முதலில் நாமறிய வேண்டியது! இதை நன்கு உணரவே எத்தனையோ பிறவிகள் பிடிக்குமே! இதனை இன்றைய நாள் உணர்த்த வல்லதாயிற்றே!

பலவிதமான கரிதோஷங்கள்தாம் நம் உள்ளத்தை, மனதை, அறிவை மறைத்துக் கரியைப் பூசி, இத்தகைய அற்புதமான ரகசியங்களை உணர விடாமல் செய்கின்றன. இவற்றைக் களைய உதவுவதே கரிநாள் ரோஹிணி கூடும் திருநாள். ரோஹிணி நட்சத்திரம் கார்முகில் வண்ணனாகிய, கருமை நிற ஸ்ரீகிருஷ்ணனுக்கு உகந்தது அல்லவா! இவ்வாறு ரோஹிணியும் கரிநாளுடன் கூடி வரும் நாட்களில்
ஸ்ரீகிருஷ்ணனின் அமர்ந்த கோலம், பசு, கன்றுகளுடன், புல்லாங்குழலைக் கையில் (ஊதும் நிலை அல்லாது) தாங்கி இருக்கும் ஸ்ரீகிருஷ்ணனின் தரிசனக் கோலங்களைத் தரிசித்து, சற்று நேரமேனும் ஒற்றைக் காலில் நின்று, ஸ்ரீகிருஷ்ணனை நினைத்து, யோக தியானம் பூண்டு ஸ்ரீகிருஷ்ணனை வழிபடுக! வெண்ணெய் கலந்த திரவியங்களை, பண்டங்களைக் குழந்தைகளுக்கு அளித்திடுக!
எத்தகைய துன்பங்களுக்கு இடையிலும் மனசுக்கு இதமான சந்தோஷம் தருகின்ற திருநாள். கரிதோஷங்கள் சற்று அகன்றாலே உள்ளார்ந்த ஆனந்தம் வெளித் துள்ளி ஓடி வருமே! கரிதோஷ விளைவுகள் தணிந்து நிவர்த்தியாக, கரிசலாங்கண்ணித் தைலத்தால் தினமும் சனீஸ்வரருக்கு ஒரு மண்டலமேனும் (48 நாட்கள்) இடைவிடாது தொடர்ந்து விளக்கேற்றி வருக!

கபால சக்தி நாள்

ஒவ்வொரு தமிழ் மாதப் பெளர்ணமியும், பெரும்பாலும் ஒரு நட்சத்திரத்தை ஒட்டி வரும். மார்கழி மாதத்தின் பெளர்ணமி திருஆதிரையை ஒட்டி வருகையில், ஆருத்ரா அபிஷேக நாளாக முதல் நாளும், ஆருத்ரா தரிசனமாக மறுநாளும் அமையும். ஆருத்ரம் என்பது அக்னி பூர்வமான ருத்ர சக்திகளை ஜீவன்கள் தரிசிக்கும்படியாக இளகித் தருகின்ற தெய்வீகத்வமும் ஆகும். மேலும், ஆருத்ரத்தில்தான் வேத பீஜ கோஷ சக்திகள் ஜீவன்களை வந்தடையும் வண்ணம் நன்கு பரிமளிக்கின்றன. இதில் ஒரு வகையாகத்தான் ஸ்ரீஆர்த்ர கபாலீஸ்வரராக கொடுமுடியில் சிவபெருமான் அருள்கின்றார்.
ஆருத்ர சக்திகள், ஈஸ்வரனுக்கு வலப் புறமாக அமைவது திருமணக் கோலமன்றோ! இவ்வாறு இறைவன் ஆர்த்ர, ருத்ராம்பத சக்திகளோடு, வலப்புற அம்பிகைச் சன்னதியோடு அனைத்துலக, அண்ட சராசர ஜீவன்களுக்காக அருள்கின்ற கோலமே மயிலை ஸ்ரீகபாலீஸ்வர அவதாரமாகும். அதனால்தான் இத்தல வழிபடுதல் சிரசில் தேவசக்திகளின் விருத்தியை மேம்படுத்தும்.
அனைவருக்கும் தொப்புள் போல தலைச் சுழி நிச்சயமாக அமைந்திருக்கும். எவ்வாறு நாபியாகிய, தொப்புளானது அன்னையின் மணி வயிற்றில் அமர்ந்து வளர்ந்ததை நினைவுறுத்துகின்றதோ, இதே போல கபால நாபி எனப்படும் தலைச் சுழியானது தந்தையின் விந்து பிம்பத்தைக் குறிப்பதாகும். இதனால்தான் தலைக்கு எண்ணெயைத் தடவும் போது உள்ளங்கையில் நம் வீட்டுப் பெரியோர்கள் தைலத்தை ஊற்றி, உச்சந் தலையில் வைத்து சூடு பறக்கத் தேய்ப்பார்கள்.

ஸ்ரீரோம மகரிஷி
கூந்தலூர்

தலைச் சுழியிலும் நிறைய ரேகைகள் உண்டு. உள்ளங்கை ரேகைகள் நன்கு படிய தலைச் சுழியில் அழுத்தி ரேக ஸ்பரிசத்துடன் தேய்க்கும்போது, ஒரு விதமான சூடு உண்டாகும். இந்தச் சூடு எழும் கபாலப் பகுதியே ஆர்த்ர கபாலமாகும். சிவபெருமான் பிரம்மனுடைய ஐந்தாவது சிரசின் பிரம்ம கபாலத்தை மறைத்த போது அது ஈஸ்வரனின் உள்ளங்கையில்தான் ஒட்டிக் கொண்டது. எனவே, பிரம்ம கபாலத்திற்கும் உள்ளங்கைக்கும் நெருங்கிய ஆன்மீகப் பிணைப்பு உண்டு என்பது புலனாகின்றது அல்லவா!
திருவாதிரை தினத்தன்று வலது உள்ளங்கையை தலைச் சுழியின் மேல் வைத்து அதில் ஒருவிதமான ஆகர்ஷண ஓட்டமும், மிதமான உஷ்ணமும் தோன்றுவதை நன்கு கவனித்திடுங்கள். கபாலீஸ்வரர், குடுமீஸ்வரர் (குடுமியான்மலை), அபிமுகேஸ்வரர் (கும்பகோணம்), கூந்தலூரில் ஸ்ரீரோம மகரிஷி போன்ற கபால சக்தி நிறைந்த ஆலயங்களில் திருவாதிரை நட்சத்திர தினங்களில் வழிபடுதல் கபால நாளங்களை நன்கு ஆக்கப்படுத்தும். மேலும், எந்த ஆலயத்தில் சுவாமிக்கோ மூல லிங்கத்திற்கோ குவளை, கிரீடம், தலைப் பாகை சார்த்தப்படுகின்றதோ, இத்தகைய ஆலயங்களில் கபாலக் கனி என்று அழைக்கப்படும் தேங்காய்கள், பன்னிரெண்டால் ஆன மாலைகள் சார்த்தி வழிபடுதல் விசேஷமானது. மேலும் எவ்விதப் பிரார்த்தனையும் இன்றி சிதறு காய்களை அவ்வாலயங்களில் உடைத்தலும் கபால சக்திகள் விருத்தி அடைய வழிவகுக்கும்.
ஆருத்ரா தரிசனத் திருநாள்
ஆருத்ரா அபிஷேக தினத்திற்கு அடுத்த நாள் வரும் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று திருஆதிரைக் களி என்பதாக, ஏழு அல்லது ஏழுக்கு மேலான காய்கறிகள் கலந்த கூட்டுடன் இறைவனுக்குப் படைத்தளிக்க வேண்டிய முக்கியமான திருநாள். மோதகத்தின் ஒரு வகையான திருவாதிரைக் களி மிகவும் சுவையுடையது. மோதகக் குடும்பத்தைச் சார்ந்த இனிப்பு வகை ஆதலால், பிள்ளையாரின் ஆசீர்வாதமும் சேர்ந்து வருவதாகும்.
ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரகோச மங்கையில் உள்ள மரகத நடராஜர், எப்போதுமே சந்தனக் காப்பில் திளைப்பார். ஆருத்ரா அபிஷேக நாளில் மட்டும் சந்தனம் களையப் பெறும். வேதாரண்யத்தில், மூலத்தானத்தில் லிங்கத்திற்குப் பின்புறம் உள்ள கல்யாணக் கோல மூர்த்திகளும், சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் சிவலிங்க மூர்த்தியும் சந்தனக் காப்பை அணியும் ஒரு நாள் தவிர, எப்போதும் வருடம் முழுதும் சந்தனக் காப்பில் திளைக்கும் மூர்த்திகள் ஆவர். இதே போன்று லால்குடி அருகே சாத்தமங்கலம் (நன்னிமங்கலம்), செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் இடையே உள்ள திருவடிச்சுரம் மற்றும் திருஈங்கோய்மலை ஆகிய இடங்களிலும் உள்ள மரகத லிங்க மூர்த்திகளுக்கான ஆருத்ரா அபிஷேக, ஆருத்ரா தரிசனங்கள் மிகவும் விசேஷமானவை.
மேலும், திருக்காறாயில், நாகப்பட்டிணம், திருவாரூர் போன்ற ஏழு சப்தவிடத் தலங்களில் உள்ள மரகத லிங்கத் தரிசனத்தோடு ஆருத்ர வழிபாடுகளை மேற்கொள்வது விசேஷமானது. திருஆதிரை நட்சத்திரத் தலமான அதிராம்பட்டினம் ஸ்ரீஅபய வரதீஸ்வரர் ஆலயத்தில் ஆருத்ரா வழிபாடுகளை மேற்கொள்தல், திருஆதிரை நட்சத்திர தேவதா மூர்த்திகளின் நேரடி அனுகிரகத்தைப் பெற்றுத் தருவதாகும்.

ஸ்ரீசண்டேஸ்வர மூர்த்திகள்
சாத்தமங்கலம் சிவாலயம்

ஒவ்வொருவரும் தம் வீட்டில் சிறிய எளிமையான அளிவிலாவது சிறு சிறு இறைத் துதிகளை ஓதி, அபிஷேக ஆராதனைகளை மேற்கொண்டு வர வேண்டும். தினசரி இயலா விட்டாலும் வாரம் ஒரு முறையாவது நன்னீர், தேன், பால், தயிர், சந்தனக் குழம்பு போன்ற 12 வகையான அபிஷேக ஆராதனைகளை, சிறு லிங்க வடிவம், குரு பாதம், சிறு பிள்ளையார் மூர்த்திகளுக்கு உங்கள் குடும்பத்தாரோடு சேர்ந்து செய்தலால், குடும்பத்தில் நல்ல மன அமைதி கிட்டும்.
சிறு அளவில் கைக்குள் அடங்குகின்ற மாக்கல் பிள்ளையாருக்குக் கூட அபிஷேக ஆராதனைகள் செய்வதும் சிறப்பானதே. மாவு லிங்கம், புஷ்ப லிங்கம், அன்ன லிங்கம் என்பதாக அரிசி மாவு, கோதுமை மாவு, பூக்கள், அரிசிச் சாதத்தால் லிங்க வடிவு அமைத்தும் வழிபட்டிடலாம். தரிசன நாளன்று விடியற்காலை, சூரிய உதயத்திற்கு முன்பே பிரம்ம முகூர்த்த காலத்தின் நிறைவுப் பகுதியில் சிவபெருமானை, நடராஜப் பெருமானைத் தரிசிப்பது ஆருத்ரா தரிசனமாகும். ஆலயத்தில் ஆருத்ரா தரிசனத்தைக் கண்ட பின், வீட்டிற்கு வந்து உடனேயே, வீட்டிலும் சிறிய அளவிலாவது அபிஷேக ஆராதனைகளைத் தொடர்ந்திட வேண்டும். ஆனால் வழக்கில் இதைப் பலரும் கடைபிடிப்பது கிடையாது.
ஆருத்ரா தரிசனத்தின் போது கபாலத்தில் தலைச் சுழியில் அபூர்வமான ஆகர்ஷண சக்திகள் எழுகின்றன. இவற்றை விரயம் செய்து விடாமல் உடல் நாளங்களில் ஈர்த்துக் கொள்ளவே ஆலய வழிபாட்டிற்குப் பிறகு, இல்லத்திலும் பூஜையைத் தொடர்வதாகும். உள்ளத்தில் ஆத்ம லிங்கம் ஒளிர்வதால், தினசரி தலைக்கு நீராடுவதையும் கூட ஆத்ம லிங்க அபிஷேகமாக, உத்தமத் தெய்வீக நிலைகளில் போற்றப்படுகின்றது.
அகமர்ஷண மந்திரங்கள் எனப்படுபவை நீராடும்போது ஓதப் பட வேண்டிய மிகவும் முக்கியமான மந்திரங்கள் ஆகும். நீராடும்போது கபால சக்திகள் விருத்தியாகும்படி மந்திரங்களை ஓதுதல் விசேஷமானது. தேங்காய், பூசனிக்காய், பரங்கிக்காய், சுரைக்காய், விளாம்பழம் போன்ற ஓட்டு வகை காய், கனிகளை, உணவுப் பண்டங்களை ஆருத்ரா தரிசன தினத்தன்று சிவலிங்கத்திற்குப் படைத்துத் தானமளித்தலால், தன் சொல் பேச்சைக் கேட்காது எதிர்த்துப் பேசுகிறார்களே என்று தன் பிள்ளை, பெண்ணைப் பற்றிக் கவலைப்படும் தாய்மார்களுக்கு, நல்ல மன அமைதி கிட்ட வழி பிறக்கும்.
 

கர்ப்போட்டத் திருநாள்

கர்ப்பம் என்றால் கருவைத் தாங்குதல் என்ற பொருளில்தான் அறிவோம். கரு என்பது குலப் பாரம்பரியமாக, உதிரத்தில் ஜீவ அணுக்களாகக் செறிந்து வருவது அல்லவா! மனித குலத்துப் பெண்தான் மட்டுமே கர்ப்பம் தாங்குவர் என்பதில்லை. மிருகங்கள், தாவரங்கள் அனைத்துமே கர்ப்பத்தைத் தாங்குகின்றன. ஆனால், கர்ப்பம் தாங்கும் கூடு அமைப்புதான் ஒவ்வொரு ஜீவனுக்கும் மாறுபாடும். ஆனால், பகுத்தறிவை உடையவர் என்பதால் மனிதப் பிறவியில் இல்லற வாழ்வில் சந்ததிகளைத் தழைக்கச் செய்வது மகத்தானது ஆகின்றது அல்லவா.
எனவே, ஒரு பிறவியைக் கொண்டு வரும் கர்ப்பம் தாங்கிய காலமானது மிக மிகப் புனிதமானதாகும். ஓருயிருக்குள் மற்றோர் உயிர் அமைவது தெய்வீக அற்புதம்தானே. இதனை இவ்வாறு புனிதமான முறையில் உணராது ஏதோ திருமணம் ஆயிற்று, குழந்தை பிறந்தது, இதெல்லாம் உலகியலில் நடப்பதுதானே என்று மிகவும் சர்வ சாதாரணமாக எண்ணுகின்றார்கள். ஆனால், ஆயிரமாயிரம் கோடி தெய்வீகக் காரண, காரியங்களுடன்தான் எந்தக் குழந்தையும் பிறக்கிறது.
எனவே குழந்தை பிறப்பு என்பது சாதாரணமான விஷயமல்ல! உண்மையில் பூர்வ ஜன்ம ஆகாஷிக் பத்திரங்களை எடுத்துப் பார்த்தால் யார் யாருக்குக் குழந்தைகளாக வந்திருக்கிறார்கள் என்பது தெரிய வரும். உதாரணமாக பூர்வ ஜன்மங்களில் பெற்றோர்களாக இருந்தவர்களே பிள்ளைகளாக, பேரன்களாக, பக்கத்து வீட்டுக்காரர்களாக வருகின்றார்கள் என அறிய வந்தால் மனம் ஏற்காது என்பதால்தான், இவை யாவும் தெய்வீக ரகசியங்களாக, நன்கு பக்குவப்பட்ட பகுத்தறிவு மூ லம் தக்க சற்குருவின் அருளாகப் பெறப்படுவதாக அமைந்துள்ளது.
கர்ப்போட்டம் என்றால் நிலம் நீர், வானம், ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களிலும் தோன்றுகின்ற ரேகை ஓட்டப் பரிமளம் ஆகும். இந்த ரேகை ஓட்டத்தில், ரேகை எனப்படும் ஒரு தெய்வீக நாளம் மூலமாக நல்சக்திகளை நிரவுவது என்பது பொருளாகும். பூகோளத்தில் பூமி உருண்டையில் நாம் நன்கு படித்துத் தெரிந்து கொள்வதற்காக, செயற்கையாக வரையப் பெறும் தீர்க்க ரேகைகள், அட்ச ரேகைகள் அனைத்தும் கர்ப்போட்ட ரேகையின் பிரதி பிம்பங்களாகும். ஒவ்வொருவருடைய நாபி (தொப்புள்)யிலிருந்தும் இருதயத்தை நோக்கி ஒரு நாளம் செல்லும். இதற்குக் கர்ப்போட்ட ரேகை என்று பெயர். இதே போல் நிலத்திலும் கர்ப்போட்ட ரேகை உண்டு. இதற்காகத்தான் நிலத்தை உழுவதற்கு முன்பு, ஒரு கமண்டலத்தில் பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தைக் கமண்டலத்தில் மூக்கு வழியாக நிலம் முழுதும் ஊற்றி வருவார்கள்.
கமண்டலம் என்றால் துறவிகள் வைத்திருப்பது என்று பயந்து விடாதீர்கள். சிறு குழந்தைகளுக்கு நீர் ஊற்றித் தரும் கெண்டி போன்ற அமைப்பு உடையது. இதனைத் தீர்த்த கண்டி என்றும் சொல்வார்கள். கர்ப்போட்டத் திருநாளில் வெண்கலக் கெண்டியில் புனிதமான நீரை ஊற்றி, வில்வம் துளசி இட்டு புஷ்பங்கள், மஞ்சள், குங்குமம், சந்தனம் சார்த்தி
நீலகண்டேஸ்வராய நமஹ,
தீர்த்த கண்டீஸ்ராய நமஹ
என்று ஓதிப் பூஜித்தல் வேண்டும்.
பூஜித்தல் என்றால், தீர்த்த கண்டியின் மேல் வலது உள்ளங்கையை வைத்து,
கங்கே ச யமுனே ச கோதாவரி சரஸ்வதி
நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதிம் குரு
என்று 1008 முறை ஓதி, வழக்கம் போலான, பிற பூஜைகளை நிறைவு செய்து, தீர்த்தக் கண்டியில் நீளமான மூக்கு வழியாக, சொட்டுச் சொட்டாக வீடு முழுவதும் நீரை ஊற்றி வருதல் வேண்டும். வான்மழை நீருக்கும் கர்ப்பம் உண்டு. இதையே கருமேகம் தாங்குகின்றது. இதற்கு மேகத்துழாய் என்று பெயர். வானத்தில் கருமேகங்கள் திரண்டு வருவது ஜல தீபக் கருவைத் தாங்கி இருப்பதை உணர்த்துவதாகும்.
கர்போட்ட நாளில் கர்பக் கோலமாகிய, குலையுடன் கூடிய வாழை மரங்கள், தேங்காய்கள் நிறைந்த தென்னை, பனை போன்ற கர்ப்போட்ட சக்திகள் நிறைந்த தாவரங்களுக்கு கெண்டித் தீர்த்தத்தை சிறிது, சிறிதாக நீரை ஊற்றுதல் வேண்டும். நீர் வகை மற்றும் ரத்த அழுத்த நோய்கள் தீர உதவும்.
கர்ப்போட்ட நாளில் நிறைய மிருத்திகா பூஜைகளை ஆற்றுதல் வேண்டும். மிருத்திகா என்றால் புனிதமான இடத்தில் உள்ள மண் துகள் ஆகும். இன்று ஆலயத்தில் தகுந்த காணிக்கையைச் செலுத்தி ஆலயத் தீர்த்த மண், ஆலயப் பிரகார மண், ஆலயத் தலமர மண், புண்ணிய நதி தீர்த்த மண், பசுவின் கால் குழம்பு பட்ட திருமண் - இவ்வாறாக பல்வகை புனித மண்ணை அரசு, ஆல், புரசு, தாமரை இலைகளில் வைத்து இதன் மேல்,
ஓம் மிருத்திகாய நமஹ
- என்று எழுதி, வலது கட்டை விரல் மோதிர விரல் இரண்டாலும் குங்குமத்தை எடுத்து ஒரு வெற்றிலையில் வைத்து,
ஓம் மிருத்திகாய நமஹ
- என்று ஓதிப் பூஜித்தல் வேண்டும். பிறகு, இந்த மண்ணை ஒரு அகலில் வைத்து, வீட்டில் பூஜித்திடலாம். கர்ப்போட்ட ஆரம்பத்தில் மேற்கண்ட பூஜையை நிறைவேற்றி கர்ப்போட்டம் முடியும் தறுவாயில் ஆற்றிலோ, கடலிலோ அல்லது வாழை, அரசு, ஆல், வன்னி, புன்னை போன்ற புனித மரத்தடியில் சேர்த்திடல் வேண்டும். கர்ப்போட்ட நாட்களில் உத்தம மகான்களின் ஜீவ சமாதியில் ஆராதனைகளை நிகழ்த்துதல் நலம். இதனால் சந்ததிகளை நன்கு விருத்தி செய்யும் தெய்வீக சக்திகள் நன்கு உருவாகும்.

சங்கடஹர சதுரத்தி

பலரும் பெளர்ணமிக்குப் பிறகு நாலாம் நாள் வரும் சங்கட ஹர சதுர்த்திப் பூஜையின் மகத்துவத்தை நன்கு உணர்வதில்லை! உண்மையில் ஒரு முறை சங்கட ஹர சதுர்த்திப் பூஜையைக் கடைபிடித்தாலே, மகத்தான பலாபலன்களை யாவரும் நன்கு கண்டிடலாம். காரணம் என்ன?
சங்கட ஹர சதுர்த்தியானது துன்பங்களுக்கான காரணங்களை எவ்வகையிலேனும் உணர்த்தி, விநாயகர் அருளால் திருத்தி அமைக்கப்பட்ட பரிகார, பிராயச்சித்தங்களை உணர்வித்துக் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதாகும்.
மனிதப் பிறவியில் தூய்மையுடன் வாழ்வதெனில், ஒவ்வொருவரும் தன் குறை, குற்றங்கள், பிழைகள், பாவ வினைகளை லிஸ்ட் எடுத்து வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாகக் களைய முற்பட வேண்டும். துன்பங்களாகிய சங்கடங்களை நிவர்த்திக்கும் முறைகளில் ஒன்றே துன்பங்களுக்கான காரணங்களை அறிதலும், உணர்தலும் ஆகும். பலருக்கும், தான் இப்பிறவியில் செய்த தவறுகள், பாவ வினைகள் நன்கு தெரியும்.
தன் ஆயுளில் ஆயிரக் கணக்கில் தவறுகளைச் செய்தாகி விட்டதே, லிஸ்ட் போட்டுக் கட்டுப்படியாகுமா? முதலில் மனசாட்சியைத் தினமும் உறுத்தும் பெரிய பாவச் செயலை நிச்சயமாக எவரும் மறந்து வாழ முடியாதுதானே! எவ்விதப் பிராயச் சித்தங்கள், பரிகாரங்கள் இல்லாமல் தன் பாவ வினைகள் அனைத்தும் கரைய வேண்டும் என்று எண்ணுவதும் பேராசையே! அப்படி வெகு விரைவில் பாவத் தீவினைகள் தகர்வதானால், பாவ வினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் கதி எண்ணாவது?
எனவே, எவருக்குத் தீங்குகள் ஏற்பட்டனவோ அவர்களுக்கு முழு நிவாரணம் கிடைத்தல், அவர்களே மனம் கனிந்து மனதார மன்னித்தல் போன்றவை நிகழ்ந்தால்தாம் பாவ வினைகள் முழுதும் கரையலாகும். இல்லாவிடில் பாதிக்கபட்டவர்களுடன் பிறவி பந்தங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதனால்தான் பெறுதற்கரிய இப்பிறவியிலேயே அனைத்தையும் கரைக்க முயற்சித்தல் நன்றுடைத்து. ஏனெனில், வருங்காலத்தில் மனிதப் பிறவி அல்லாது, வேறு பிறவிகள் அமைந்தால், அவற்றின் மூலம் வினைகள் பெரிதும் கரைத்தலுக்கான வாய்ப்புகள் குறைவு படக் கூடும். அடுத்த மனிதப் பிறவி எப்போது வருமோ? மேலும் கோடிக் கணக்கான வகை ஜீவன்களில், மீண்டும் மனிதப் பிறவியே அமையும் என்பதற்கு என்ன அத்தாட்சியை மனிதன் பெற்றிருக்கின்றான்?
ஆகவே, துன்பங்களின் காரண, காரணங்களை ஆன்மப் பூர்வமாக அறிதல் கடினம் எனினும், இதில் சங்கட ஹர சதுர்த்தித் திருநாள் பூஜா பலன்கள் எண்ணற்ற துன்பங்களுக்குத் தக்க காரணங்களை ஓரளவேனும் நன்முறையில் அளித்து, நிவர்த்திகளையும் அளித்துப் பாவச் சுமையையும் தணிக்கின்றன.
சங்கட ஹர சதுர்த்திக்கு இத்தகைய தெய்வீகத் தன்மைகள் அமையக் காரணம் காரண மஹரிஷி, ஜானவி மஹரிஷி போன்ற மஹரிஷிகள் ஜீவன்களின் துன்பச் சுமைகளை நீக்கிட அருந்தவம் புரிந்து, ஸ்ரீவிநாயகப் பெருமானின் தரிசனம் பெற்றுத் தம் தபோ பலன்களை ஸ்ரீகணபதி மூர்த்தியிடமே அர்ப்பணித்தனர். ஸ்ரீவிநாயகரும் காரண மஹரிஷி, ஜானவி மஹரிஷிகளின் தவம் கனிந்த தினமான தேய்பிறைச் சதுர்த்தித் திதி தோறும் அனைத்து விநாயகத் தலங்களிலும், மேற்கண்ட காணாபத்ய மண்டல மாமுனிகளின் அபிஷேக, ஆராதனைகளை உவப்புடன் ஏற்று விசேஷமாக அருள்வதால் அதியற்புத பலாபலன்கள் எளிதில் வந்து சேர்ந்திடும்.
சங்கட ஹர சதுர்த்தி நாளில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?
பாடல் பெற்ற தலங்கள், சுயம்பு மூர்த்தித் தலங்களில் உள்ள விநாயகருக்குப் பதினாறு வகை அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்துதல் மிகவும் விசேஷமானதாகும். மலைத் தேன், காராம் பசும்பால், ஒரே பசுவின் குலத் தோன்றலாக வந்த ஒரு மாட்டுப் பசும்பால், கால் மிதிபடாத, ஆலய நந்தவனத்தில் விளைந்த அருகம்புல்லை, விரதமிருந்து, நகம் படாது சுப ஹோரை நேரத்தில் அரிந்து மாலை கட்டுதல், 12 தள வில்வ மாலை, சந்தனக் கல், சந்தனக் கட்டை கொண்டு கைளால் அரைத்த சந்தனம், எருமைப் பால் தயிரல்லாது, பாக்கெட் பால் தயிரல்லாது பசும் பாலில் உறைந்த தயிர், தாமே குடும்பத்தில் தொடுத்த பூமாலைகள் போன்றவை சங்கட ஹர சதுர்த்திப் பூஜா பலன்களை நன்கு விருத்தி செய்யும்.
விநாயக தரிசனத்தோடு அல்லாது, சங்கட ஹர சதுர்த்தி நாளில் நன்கு விரதமிருந்து அபிஷேக ஆராதனைகளுக்குப் பின் கோமுக நீரைப் பிரசாதமாக அருந்தி, நான்கு விதமான சுவைகள் கூடிய உணவு வகைகள் அன்னதானம், பசு, பட்சி, யானைகளுக்கு உணவளித்த பின் விரதத்தை நிறைவு செய்தல் - இவையும் சங்கட ஹர சதுர்த்திப் பூஜைகளுக்கான நியதிகள் ஆகும்.
வசதி அற்றோர், ஆறு தேங்காய்களைத் துருவி, தேங்காய்ப் பூவில் சர்க்கரை, முந்திரி கலந்து பிள்ளையாருக்குப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்திடலாம்.
ஆயில்ய நட்சத்திரத்தில் சங்கடஹர சதுர்த்தி கூடினால் …
ஆயில்ய நட்சத்திரத்தில் கூடும் சங்கட ஹர சதுர்த்தி நாளானது, நோய் நிவாரண சக்தியைத் தருவதாகும். குறிப்பாக, மாதா பிதா செய்வது மக்கள் தலையில் என்பதாக, முன்னோர்களின் கர்ம வினைகளாலும் வந்து சேர்ந்துள்ள நோய்க் கொடுமைகள், கடுமைகள் தணிய உதவும்.
இதற்காக நமக்கு வந்துள்ள நோயத் துன்பங்களுக்கு எல்லாம் முன்னோர்களே காரணம் என எண்ணலாகாது! ஏனெனில் ஒரு குடும்பத் தலைவரின் ஏழாம் தலைமுறைத் தாத்தா பலத்த கர்ம வினைகளை ஆற்றியவராக இருந்திருப்பின் அந்த ஏழாம் தலைமுறைத் தாத்தா இப்போது அந்தக் குடும்பத் தலைவராகவே பிறந்து வந்திருந்தால். ..... எனவே, நாமளிக்கும் தர்ப்பணமும் நமக்காகவே, நம்முடைய பழைய பிறவிகளுக்காகவே இருக்கும் அல்லவா!

தீய பழக்கங்கள் அகல ...

சுபகரமான வெள்ளியோடு பஞ்சமி திதி சேரும்போது அது தேகத்திற்கு மங்களகரமான, சுபகரமான - பஞ்சபூத சக்திகளாலான தேகத்திற்கு அங்கவள சக்திகளை அளிக்கின்றது. நகத்தைக் கடித்தல், மீசையை முறுக்குதல், காலை ஆட்டுதல், கைகளை ஆட்டிப் பேசுதல், தலையைத் தடவுதல் என ஏதேதோ பழக்க வழக்கங்களுக்குப் பலரும் ஆளாகின்றனர். இத்தகைய தேவையில்லாத உடல் அசைவுகள் பஞ்சபூத சக்திகளை பாதிக்கும். ஒரு முறை வந்த பழக்கம் கடைசி வரை தொடர்ந்து வந்து நடுவில், இதனை விட்டு விடுவதும் மிகவும் கஷ்டமாகி விடுகிறது. இதனால் என்ன கெடுதல், ஏதோ தீங்கில்லாத பழக்கம் இருந்தாலென்ன எனத் தோன்றும்!
இந்த மாதிரி காரணமறியாத அங்க அசைவுப் பழக்கங்கள் தொற்றிக் கொள்வதற்கும், இதனால் தேவையில்லாத வகைகளில் உடல் சக்திகளை இழப்பதற்கும், பல பூர்வ ஜன்மக் காரணங்களும் உண்டு. இவற்றை ஓரளவேனும் அறிந்தால் மிக எளிதில் தீர்வுகளைப் பெறலாம்.
ஆன்மீகத்தில் மட்டுந்தான், உலகத்தில் நிகழும் ஒவ்வொன்றுக்குமான காரண, காரிய விளக்கங்களை அறியலாகும். ஏனெனில், இதன் மூலமாகவே, அவனன்றி ஓரணுவும் அசையாது என்பதாக, ஒவ்வொரு விநாடியும் நாம் ஜீவிப்பது இறைவனுடைய அருட் பெருங் கருணையால்தாம் என்பது புலனாகும். கர்ம வினைகளைக் களைவதற்கும், பிறப்பும், இறப்பும் இல்லாத அற்புதமான உத்தம நிலைகளை அடையவும், இந்த மானுடப் பிறவிதானே தேவையாகின்றது? எனவே இத்தகைய அபூர்வமான மானுட வாழ்க்கையிலா தேவையில்லா உடல் அசைவுகளில், பழக்கங்களில் காலத்தையும், உடல் சக்திகளையும் விரயம் செய்வது?

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர்
நன்னிமங்கலம், லால்குடி

அப்படியானால், சாதாரணமாக முதிய வயதில் இயற்கையாக இறப்பு வருவது பற்றி என் சொல்வது என மனம் கேட்கும்? இதற்கான பதில் அவரவரே தனக்குள்ளேயே நன்கு உணரப் பெறுவர். ஏனெனில், இறக்குந் தறுவாயில் அவரவர் மனதுக்கு நன்றாகவே தெரியும், எவ்வகையில் வாழ்ந்திருக்க வேண்டும், எவ்வகையில் வாழ்ந்தோம் என்று?
அதாவது, இறைருளால் நாம் பெற்ற மானுட வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியிலும் எவ்வாறு வாழ்தல் வேண்டும், ஆனால் எவ்வாறு வாழ்ந்தோம், வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அவரவருடைய மனசாட்சி மன்றத்தில் தினமுமே விசாரணை செய்து பாருங்கள்! இத்தகைய உளப் பூர்வான ஆத்ம விசாரமும் ஒரு வகை ஆத்ம பூஜையின் ஓரங்கமே! அங்கந்யாசம், கரந்யாசம் என்று வருவதான பூஜைக்கு முன்னதான உடல் சுத்திப் பிரயோக முறைகள் போன்று இத்தகைய ஆத்ம விசாரமும் உள்ளத்தை சுத்திகரிக்க உதவும் உள்ளத்தின் அங்க சுத்தி பூஜை வழி முறைகளாகும்.
மேற்கண்ட வகையில் நகம் கடித்தல், மூக்கைத் தடவுதல், அடிக்கடி கண் இமைத்தல் போன்ற பழக்கங்களுக்கு ஆளானவர்கள் என் செய்வது? அங்கப் பிரதட்சிணம், நடைப் பிரதட்சிணம், மேலே கூப்பிய கரங்களுடனான சிரகரசிவப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம், தோப்புக் கரணம் போன்றவற்றில் உடல் அங்கங்கள் பலவும் பங்கு பெறுவதால், இவற்றைத் தினந்தோறும் ஆற்றி வந்தால், தேவையில்லாத பழக்கங்கள் பலவும் தானாகவே விலகும். எந்த அங்கத்தில் இப்பழக்கம் ஏற்பட்டுள்ளதோ, அந்த அங்கத்தால் இறைப் பணிகளை ஆற்றிச் சேர வேண்டிய புண்ணிய சக்திகள் குறைவுபட்டுள்ளன என்பது இதன் பொருளாகும். இத்தகைய அநாவசியமான பழக்கங்கள் தொற்றக் காரணங்களுள் ஒன்றேயேனும் அறிந்தால் இந்த விளக்கம் நன்கு புரியும் அல்லவா!
உதாரணமாக, நகம் கடிக்கும் பழக்கம் ஒருவருக்கு உள்ளதெனில், பூர்வ ஜன்மங்களில் அர்ச்சகராகவோ, முத்திரா விதானகர்த்தாவாகவோ, ஆலயங்களில் கோலங்கள் இடும் வாய்ப்புகள் கிட்டியும் சரியாகப் பயன்படுத்தாமை மற்றும் விரல் நுனிகளால் ஆற்ற வேண்டிய பூஜைகளை முறையாக ஆற்றவில்லை என்பதும் பொருளாகும்.
எனவே இப்பிறவியிலாவது பூத்தொடுத்தல், கோலமிடுதல், அன்னதானத்திற்கான காய்கறிகளை நறுக்கித் தருதல் போன்றவற்றை ஆற்றி வந்தால் எவ்வகைக் கெட்ட பழக்கமும், பயனற்ற உடல் அசைவுகளும் அகலும்.
திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களில் கிரிவலம் மேற்கொள்ளும்போது அங்கங்கள் பலவற்றிலும் தேங்கியுள்ள கர்மக் கழிவுகள் தீர்வு பெறுவதோடு, அங்கப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம், தோப்புக் கரணம் போன்றவற்றில் திரளும் புண்யசக்திகளும் ஒருங்கே திரண்டு கிட்டுகின்றன.  
இத்தகைய அங்க வள நாட்களில். உடலின் 72000 நாளங்களில் பலவும் நன்முறையில் ஆக்கம் பெறுவதால் ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஸ்ரீநடராஜர், நடனக் கோலக் கிருஷ்ணன், காளி போன்ற அசைப்பரல் மூர்த்தி அவதாரங்களைத் தரிசித்து, அங்கங்கள் அனைத்தும் செயல்படும் வகையில் அனைத்து வகைப் பிரதட்சிணங்களையும் ஆற்றி, திருவீதிப் பிரகாரம் முதலாக அனைத்துப் பிரகாரங்களிலும் வலம் வந்து, அங்கவளம் குறைந்த ஊனமுற்றோர், கண் பார்வை இல்லாதோர், ஊமை, செவிடாக உள்ளோர்க்குத் தக்க, இயன்ற உதவிகளை ஆற்றிடுக! இதனால் பிள்ளைகளிடம் தொற்றியுள்ள அநாவசியமான பழக்க, வழக்கங்கள் அகல உதவும். தன் பிள்ளைகளைப் பற்றி மனதில் ஊறி வரும் தாழ்வு மனப்பான்மைகளும் அகல வழிமுறைகள் கிட்டும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam