ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
முக்தி தரும் முப்புரி நூல் |
உலகைப் படைத்த இறைவன் அதிலுள்ள உயிர்கள் தன்னை அறியும் பொருட்டு பல்வேறு உபாயங்களையும் படைத்துள்ளான். தோற்றமும் முடிவும் இல்லாத இறைவனைப் போலவே வேதமும் ஆதியும் அந்தமும் இல்லாதது, என்றும் உள்ளது. இறைவனை உணர்தல் என்பது அனைவருக்கும் சாத்தியமில்லை, எனவே இறைவனின் ஒலி ரூபமாக இருக்கும் வேதங்களை ஒரு மனிதன் ஓதுவதால் அவன் இறைவனுடன் தொடர்பு கொண்டவன் ஆகின்றான்.
இக்காரணம் பற்றியே நமது பெரியோர்கள் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்று தினமும் வேதம் ஓதி இறைவனுடன் ஒன்றி இருக்கும் உன்னத வாழ்க்கை முறையைப் போதித்து வந்தனர். அத்தகைய உத்தமமான வேதத்தை ஓதுவதற்காக பெரியவர்கள் வகுத்த நெறிமுறைகளுள் ஒன்றே முப்புரி என்னும் பூணூலை அணிந்து கொள்ளும் தெய்வீக நெறியாகும்.
பூணூல் என்பது என்ன?
சுத்தமான பஞ்சைக் கொண்டு தக்களியால் நூர்க்கப்பட்ட மூன்று நூல் தொகுதியாலான ஒரு பாதுகாப்பு வளையமே பூணூல் என்னும் இறைச் சாதனமாகும். மூன்று புரிகளுடன் கூடி இருப்பதால் முப்புரி நூல் என்றும், மனிதர்கள் அவசியம் பூண வேண்டிய (பூணு) நூல் என்பதால் பூணூல் எனவும், உபவீதமாக இடது தோளில் அணிந்து வேதம் ஓதுதல் என்று யக்ஞத்தைச் செய்ய உறுதுணையாய் இருப்பதால் யக்ஞோபவீதம் எனவும் வழங்கப்படும்.
பூணூல் யாருக்கு? |
மனிதர்களாய்ப் பிறந்த அனைவரும் ஏழாவது வயதில் பூணூலை அவசியம் அணிந்து கொள்ள வேண்டும். இதில் சாதி, மதம், இனம் என்ற பேதமில்லை. சூரியன், சந்திரன், மழை, வெய்யில், நதி இவை எல்லாம் சாதி, மத இன பாகுபடின்றி தங்கள் சக்தியைத் தருவதைப் போல இறைவனின் வேத சக்தியைப் பெற்று ஆரோக்கியமாகவும், அமைதியாகவும் வாழ்ந்து மற்றவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ள ஒரு இறைக் கருவியாக வாழ உறுதுணையாய் இருப்பதே பூணூல். எனவே, நோயற்ற நீண்ட வாழ்வைப் பெற்று தனக்கும் மற்றவர்க்கும் நன்மை செய்ய மனம் உடையவர்கள் அனைவரும் அணிந்து கொள்ள வேண்டிய தெய்வீக சாதனமே பூணூல் ஆகும்.
பூணூல் அணியாமல் வேதம் ஓத முடியாதா, இறை வழிபாடுகளை நிறைவேற்ற முடியாதா என்றெல்லாம் பலரும் விவாதம் செய்வதுண்டு. ஒருவருடைய மகன் அமெரிக்காவில் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவர் இந்தியாவிலிருந்து என்னதான் சப்தம் போட்டு கத்தினாலும் அவர் பையன் காதில் அவர் வார்த்தைக் கேட்குமா? இதற்கு என்ன எளிய வழி? தொலைபேசியில் அவருடைய பையனுக்கு அளிக்கப்பட்டுள்ள எண்களை சுழற்றி அவனை அழைத்தால் சில நொடிகளில் அவனுடைய பேசி மகிழலாம் அல்லவா?
இதே முறையில் நீங்கள் இறைவனுடன் எளிதில் தொடர்பு கொள்வதற்காக பெரியோர்களும், மகான்களும் ஏற்படுத்தித் தந்த மெய்ஞான சாதனமே பூணூல் அணிந்து காயத்ரீ ஓதும் வழிபாட்டு முறையாகும். இவ்வளவு எளிய வழிபாட்டு முறையை ஏற்றுக் கொள்ள மறுப்பது புத்திசாலித்தனம் ஆகுமா என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
பூணூல் அணியும் பருவம் |
பெரும்பாலும் ஏழு வயதில் பூணூலை அணிந்து கொள்தலே சிறப்பாகும் என்று பெரியோர்கள் வலியுறுத்துகின்றனர். காமம் புகும் முன், காயத்ரீ புக வேண்டும் என்பது சித்தர்கள் கொள்கை. அதாவது, ஏழு வயதிலிருந்து மனித மனத்தை காம எண்ணங்கள் தாக்க ஆரம்பிக்கின்றன. மனதில் காம எண்ணங்கள் புகுந்தால் ஆரோக்கியம் குறைய ஆரம்பிக்கும். உதாரணமாக, மனித மூளையில் உள்ள பீனியல் சுரப்பி ஏதாவது தொற்று நோய்கள் வரும்போதெல்லாம் அந்த நோயை நீக்குவதற்குத் தேவையான எதிர்ப்பு சக்திகைளை உடலில் உருவாக்கி விடுகிறது.
உயர்கல்விக்கு உறுதுணை புரியும்
ஸ்ரீநாமபுரீஸ்வரர், ஆலங்குடி
ஏழு வயது வரை எவ்வளவு கொடுமையான, புதுப்புது நோய்க் கிருமிகள் மனிதனைத் தாக்கினாலும் அத்தனை கிருமிகளுக்கும் தேவையான எதிர்ப்பு சக்தியை உருவாக்கி விடும் சக்தியை உடையதே பீனியல் சுரப்பி. ஏழு வயதிற்குப் பின்னும் இத்தகைய வியாதிகள் தோன்றினால் அதற்கேற்ற எதிர்ப்பு சக்தியை உடலில் இந்த சுரப்பி செலுத்தி விடும். ஆனால், காம எண்ணங்கள் மனதில் புகுமானால் இந்த பீனியல் சுரப்பி மெல்ல மெல்ல தன்னுடைய சக்தியை இழக்கத் தொடங்கும். எனவே, ஏழு வயதிற்குப் பின் ஏதாவது ஒரு புது விதமான நோய்க் கிருமி உடலில் புகுந்தால் அதை எதிர்க்கத் தேவையான நுண்ணுயிர் சக்திகளை இந்த பீனியல் சுரப்பியால் தயாரிக்க முடியாது.
அதனால்தான் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான மக்கள் புதுப் புது தொற்று நோய்களால் உயிரிழக்கும் கொடுமையான சம்பவத்தைப் பற்றி கேள்விப்படுகிறோம்.
ஏழு வயதில் ஒருவர் பூணூல் அணிந்து கொண்டு காயத்ரீ ஜபித்து வந்தால் காம எண்ணங்கள் உடலில், மனதில் புகுந்தாலும் அதனால் பீனியல் சுரப்பி எளிதில் பழுதடையாது. காம எண்ணங்களின் தவறான வேகத்தை மட்டுப்படுத்தி பீனியில் சுரப்பியையும் மற்ற உடல் உள் சுரப்பிகளையும் பழுதடையாமல் காக்க வல்லதே காயத்ரீ மந்திரமாகும்.
மேலும், ஒரு மனிதன் பிறக்கும்போது இருக்கும் மூளைச் செல்களின் எண்ணிக்கை அவன் உயிர் விடும் வரை மாறாமல் இருக்கும். விஷம், ஒவ்வாத மருந்துகள், தவறான பழக்க வழக்கங்கள் இவற்றால் மூளைச் செல்களின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் குறையும் சந்தர்ப்பங்கள் அதிகரிப்பதுண்டு. ஆனால், எவர் ஒருவர் பூணூல் அணிந்து காயத்ரீ ஜப வழிபாட்டை முறையாக இயற்றுகிறாரோ அவருக்கு தொடர்ந்து மூளைச் செல்கள் வளரும் என்பது அதிசயமான உண்மை. இதுவே நமது முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்க்கை ரகசியமாகும்.
இவ்வாறு ஏழு வயதில் பூணூல் அணியும் வைபவத்தை ஒரு சிறப்பான தெய்வீக நிகழ்ச்சியாக அக்காலத்தில் நிறைவேற்றி வந்தார்கள். காலம் செல்லச் செல்ல இது ஒரு ஆடம்பர சடங்காக மாறி விட்டது வருந்தத் தக்க விஷயமாகும். இதனால் ஏழு வயது என்ற வயது வரம்பிற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்து எப்போது ஆடம்பரமாக இந்த பூணூல் வைபவத்தைக் கொண்டாட கையில் பணம் சேர்கிறதோ அப்போது வைத்துக் கொள்ளலாம் என்ற தவறான நடைமுறைப் பழக்கம் வழக்கில் தோன்ற ஆரம்பித்து விட்டது.
இனியாவது மக்கள் தவறான ஆடம்பரத்திற்கு இடந்தராது வயதிற்கு முக்கியத்துவம் அளிக்கும்படிக் கேட்டுக் கொள்கிறோம். இதுவே தனி மனித ஆரோக்கிய வாழ்விற்கும் சமுதாய மேம்பாட்டிற்கும் உறுதுணையாக நிற்கும் கோட்பாடாக மலரும்.
தவிர்க்க முடியாத சில சந்தர்ப்பங்களில் ஏழு வயதாகியும் பூணூல் அணியும் வைபவத்தை நிறைவேற்ற முடியாமல் போவதுண்டு. அத்தகைய நிலை ஏற்பட்டால் அவர்கள் காலம் தாழ்த்தாமல் எப்போது வேண்டுமானாலும் பூணூல் அணிந்து கொள்ளலாம். தெய்வீகத்திற்கு எப்போதும் வயதாவதில்லை, கால தாமதம் என்பது தெய்வீகத்தில் கிடையாது என்று நமது வெங்கடராம சுவாமிகள் அடிக்கடி கூறுவதுண்டு. It is never too late to know God.
ஒரு முறை வெங்கடராம சுவாமிகள் நோயுற்றிருந்த ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவரைப் பார்த்தவுடன் அவர் இன்னும் அரை மணி நேரம் மட்டுமே உயிருடன் இருப்பார் என்பதை தனது ஞான சக்தியால் உணர்ந்து கொண்டார். அரை மணி நேரத்தில் அவருக்கு என்ன தெய்வீக முன்னேற்றத்தைக் கொடுத்து விட முடியும் என்று அவர் அசட்டையாக இருந்து விடவில்லை. மாறாக அந்த நோயாளியிடம் அவர் நோயைப் பற்றி விசாரித்து அவருடைய உறவினர்களைப் பற்றி சில நிமிடங்கள் விசாரித்து அவரிடம் ஒரு இயல்பான அமைதியை வரவழைத்தார்.
பின்னர், “மற்றுப் பற்றெனெக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன் …” என்ற சுந்தர மூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல்களை அமைதியாக, உரத்த குரலில் பாடினார். அந்த நோயாளியும் மிகவும் சந்தோஷத்துடனும், மன அமைதியுடனும் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ்வாறு இறை நினைவுடன் இருக்கும்போதே அமைதியாக அவரை விட்டு உயிர் பிரிந்தது. இவ்வாறு அரை மணி நேரத்தில் என்ன செய்து விட முடியும் என்று நினைக்காமல் அந்தக் குறுகிய கால அவகாசத்திலும் ஒரு மனிதனுக்கு இறை சிந்தனையையும், மன அமைதியையும் தந்து வழிகாட்டியவரே வெங்கடராம சுவாமிகள்.
அதே போல பரீட்சித்து மகாராஜா சிரிங்க ரிஷியின் சாபத்தால் ஏழு நாளில் இறக்கப் போவதை அறிந்து அந்த கடைசி ஏழு நாட்களிலும் பாகவத வருணனைகளை சுக பிரம்ம ரிஷி மூலம் கேட்டு, உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார்.
எனவே பூணூலின் மகிமையை உணர்ந்து பின்னராவது கால தாமதம் செய்யாமல் பூணூல் அணிந்து வேதம் ஓதி அனைத்து நலன்களையும் பெற்று வாழ வேண்டுகிறோம்.
ஏழு வயதில் பூணூல் அணிந்து கொள்பவர்கள் தை மாதம் முதல் ஆனி வரையிலான உத்தராயண புண்ணிய காலத்தில்தான் பூணூல் அணியும் வைபவத்தைக் கொண்டாட வேண்டும். பலரும் இந்தக் கால நியதியைத் தற்போது கடைபிடிப்பதில்லை. இதனால் பலத்த தோஷங்கள் விளையும் என்பதை நினைவில் கொள்ளவும்.
உரிய காலத்தில் பூணூல் அணிய முடியாதவர்களும், பூணூல் மகிமையைப் பற்றி உணராதவர்களும் இறைவனை அடைய வழிகாட்டுவதற்காக சற்குருமார்கள் எப்போதும் காத்திருக்கின்றனர். அவ்வாறு சற்குருவின் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள், சற்குரு அருளும் காலத்தில் பூணூலை அணிந்து கொள்ளலாம். காலத்தைக் கடந்த தெய்வீக நிலையில் சற்குருமார்கள் திகழ்வதால் அவர்களுக்கு எந்தக் கால பந்தமும் கிடையாது என்பது உண்மையே.
இவ்வாறு 30, 40, 50 வயதில்கூட பூணூல் மகத்துவத்தைப் பற்றிக் கேள்வியுற்று பூணூல் அணிந்து இறை வழிபாட்டில் நிலை கொள்ளும் ஆர்வத்துடன் நமது வெங்கடராம சுவாமிகளை பலரும் அணுகி அவர் அருளை வேண்டி நின்றனர். அத்தகையோருக்கெல்லாம் சாதி, மத, இன பேதமின்றி அவர்களுக்குப் பூணூல் அணிவித்து இறை நெறியில் அவர்களைத் திளைக்கச் செய்தார். சில சமயம் 70, 80 ஆண்டுகள் பூர்த்தியான வயதான பெரியவர்கள் கூட நமது சுவாமிகளை அணுகி பூணூல் அணிந்து காயத்ரீ மந்திர உபதேசமும் பெற்று வந்தனர். எனவே பூணூலை அணிய எந்த வயது வரம்பும், கால வரம்பும் இல்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
இதுவரை பூணூல் அணியாதவர்கள் இனியாவது தெய்வீகத்தில் நிலை கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மேம்பட்டால் அவர்கள் எமது ஆஸ்ரமத்தை அணுகி பூணூல் அணிந்து நலம் பெறலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு எமது ஆஸ்ரமத்தை அணுகி விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு, வசதி, அவகாசம் இல்லாதவர்களும் பூணூலின் மகிமைகளை உணர்ந்த பின்னராவது திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து திருஅண்ணாமலையாரை குருவாக ஏற்றுக் கொண்டு கிரிவலப் பாதையில் எங்கு வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு தாங்களாகவே பூணூல் அணிந்து கொள்ளலாம்.
இது சாஸ்திரத்திற்கும், வேதத்திற்கும், தெய்வீகத்திற்கும் ஏற்புடையதே. இதில் எந்தவிதமான ஐயப்பாடும் கொள்ள வேண்டாம்.
திருஅண்ணாமலையைச் சுற்றிலும் 30 மைல் தூரத்தில் வசிக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் திருஅண்ணாமலையாரே ஞான குருவாக அருளாட்சி செலுத்துவதால் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் பூணூல் அணிவதால் அவர்களுக்கு திருஅண்ணாமலையாரே சற்குருநாதராய் அமைந்து அவர்களுடைய கர்ம பரிபாலனத்தை ஏற்றுக் கொள்கிறார். சிறப்பாக இரட்டைப் பிள்ளையார் கோயில், காமக்காடு தரிசனப் பகுதி, உண்ணாமுலை தரிசனப் பகுதி, கௌதமேஸ்வரர் ஆலயம், சூரிய லிங்கம், சிவசக்தி ஐக்ய தரிசனப் பகுதி, ஸ்ரீபூத நாராயண சன்னதிகளில் பூணூல் அணியும் வைபவத்தை நிறைவேற்றுதல் நலம்.
சில வருடங்களுக்கு முன் நமது குரு மங்கள கந்தர்வா வெங்கடராம சுவாமிகள் தம்முடைய சற்குருநார் இடியாப்ப சித்த சுவாமிகளிடம் குருகுல வாசம் பயின்றபோது நடந்த ஒரு நிகழ்ச்சி.
சென்னை ராயபுரம் அங்களாம்மன் கோயிலில் வழக்கம்போல் கோவணாண்டிப் பெரியவரின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டே அவர் கூறும் தெய்வீக விஷயங்களை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தான் அரை டிராயர் சிறுவனான வெங்கடராமன்.
திடீரென வாசலில் பத்துப் பதினைந்து பேர் கூட்டமாக திமு திமுவென்று வந்தனர். ஏகப்பட்ட கூச்சலுடன் அவர்கள் பேசிக் கொண்டு வந்தனர். அனைவருமே உரத்த குரலில் பேசிக் கொண்டிருந்ததால் அவர்கள் பேசும் எந்த விஷயமும் தெளிவாகப் புரியவில்லை. பேசிக் கொண்டே கோவணாண்டிப் பெரியவர் அமர்ந்திருக்கும் தூண் பக்கத்தில் வந்து விட்டனர். அவர்கள் அனைவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக ஆடைகள் அணிந்திருந்தனர். இடையில் லுங்கி கட்டி அதன் மேல் தோல் பெல்ட்டு, உள்ளே அணிந்திருந்த பெரிய காக்கி டிராயர் வெளியே தெரியும் அளவிற்கு லுங்கியை மடித்துக் கட்டியிருந்தனர்.
பல வாரங்களாக எண்ணெயையோ, சீப்பையோ பார்க்காத தலை. காவியேறிய பற்கள். சிவந்த கண்கள். நல்ல வாட்டசாட்டமான உடம்பு. அவர்களில் ஒருவன் மட்டும் மற்றவர்களிடமிருந்து தனியாகத் தெரிந்தான். எல்லோரும் கையில்லாத பனியன் அணிந்திருந்தனர். அவன் மட்டும் மெல்லிய மஸ்லின் ஜிப்பா அணிந்திருந்தான்., கழுத்தில் மொத்தமாக ஒரு கறுப்புக் கயிறு கழுத்தை ஒட்டி அணிந்திருந்தான். முகத்திலும், கைகளிலும் கோரமான வெட்டுத் தழும்புகள். அந்தக் குழுவிற்குத் தலைவன் போல் அவனுடைய தோரணை இருந்தது.
வந்தவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர். பின்னர் பெரியவரையும் சிறுவனையும் விநோதமாகப் பார்த்தனர். அவர்களைக் கண்ட எவரும் நிச்சயமாக ஒதுங்கி அவர்களுக்கு வழி விட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள். அத்தகைய ஒரு கூட்டத்தைக் கண்டு ஒன்றுமே அறியாதர்போல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த இந்தப் பெரியவர் யாராக இருக்கும் என்று அவர்கள் யோசனையுடன் நின்று கொண்டிருந்தனர்.
என்ன கேட்கலாம் என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் பெரியவரின் இனிமையான குரல் கணீரென ஒலித்தது.
“என்ன, காத்தவராயா சௌக்கியமா?” என்று அவர்களுடைய தலைவன்போல் தோன்றியவனிடம் பெரியவர் கேட்டார்.
ஒரேயடியாக அதிர்ந்து போனான் அவன். அவனுடைய முழுப் பெயர் காத்தவராயன். ஆனால், விவரம் தெரிந்த நாள் முதல் யாருமே அவனை இவ்வாறு முழுப் பெயரைச் சொல்லி அழைத்ததில்லை. அவனுடைய அப்பா அவன் பிறந்த மறு வருடமே இறந்து விட்டார். அவனுடைய அம்மாவும் தம்பி, தம்பி என்று செல்லமாக அழைப்பாள். பள்ளிக் கூடப் பக்கமே செல்லாததால் அவனைப் பெயர் சொல்லி யாருமே அழைத்ததில்லை. எல்லோரும் அவனை கஞ்சா காத்தான் என்றுதான் சொல்லுவார்கள். கஞ்சா குடிக்கும் பழக்கம் அவனிடம் இருந்ததால் கஞ்சா காத்தான் என்று அழைக்கப்பட்டவன். அந்த வட்டாரத்திலேயே மிகவும் பிரபலமான கேடி.
தன்னுடைய முழுப் பெயரையும் சொல்லி அவனுடைய ஆயுளில் இப்படி ஒருவருமே அவனை அன்புடன் அழைத்தது கிடையாது. முதன் முதலில் அந்த அன்பின் தாக்கத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்குள் அடுத்த அன்பு அலை பெரியவரிடம் இருந்து வந்தது.
“என்ன, காத்தவராயா, நல்ல சரக்கு கிடைக்குமான்னு பார்க்க வந்தியா?“
ஒரேயடியாக அதிசயத்துப் போனான் காத்தவராயன். உண்மையில் பெரியவரிடம் கஞ்சா கிடைக்குமா என்று பரீட்சை செய்து பார்க்கத்தான் அங்காளி கோயிலுக்கு அவன் வந்திருந்தான்.
சில நாட்களுக்கு முன்புதான் பெரியவரைப் பற்றி அவன் கேள்விப் பட்டிருந்தான். அங்காளி கோயிலில் ஒரு கோவணாண்டிப் பெரியவர் இருக்கிறார். அவர் தன்னுடைய கோவணத்திலிருந்து பணம், சாக்லேட், பிஸ்கட் என்று எதை வேண்டுமானாலும் எடுத்து பள்ளிக் கூடம் செல்லும் குழந்தைகளுக்குத் தருகிறார். எந்தவிதமான பிரச்னைகளை அவரிடம் சொன்னாலும் அதற்கு உரிய வழிமுறைகளைச் சொல்கிறார் என்றெல்லாம் பெரியவரைப் பற்றிக் கேள்விப்பட்டான்.
அவன் கேள்விப்பட்ட செய்திகள் உண்மையா என்று நேரில் தெரிந்து கொள்ளவே அங்காளி கோயிலுக்கு வந்தான். அப்படி ஒரு வேளை அவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் நல்ல தரம் வாய்ந்த கஞ்சாவைச் சுவைத்துப் பார்க்க வேண்டும் என்ற தன்னுடைய நெடுநாளைய ஆசையை அவர8ல் நிறைவேற்ற முடியுமா என்பதையும் அவரிடம் கேட்போம் என்ற சிறுபிள்ளைத்தனமான ஒரு உந்துதலால் அங்கு வந்து சேர்ந்தான்.
சிறுவன் நடந்த நிகழ்ச்சிகளைக் கண்டு ஒருவாறு அவன்தான் கஞ்சா காத்தான் என்று அறிந்ததும் அவனுடைய சர்வ அங்கமும் ஆடிப் போய் விட்டது. கஞ்சா காத்தான் என்றால் அழுத பிள்ளை வாய் மூடும் என்னும் அளவிற்கு பிரசித்தமான கேடி அவன். வெட்டுக் குத்து தவிர வேறு எதுவுமே அவனுக்குத் தெரியாது. எங்கு தகராறு, கொலை, கொள்ளை நடந்தாலும் அதில் காத்தானின் பங்கு நிச்சயமாக இருக்கும். இதை எல்லாம் கேள்விப்பட்டிருந்த சிறுவன் உடல் வெடவெடவென்று நடுங்கியது.
“ஏன் பெரியவர் இப்படி வம்பை விலை கொடுத்து வாங்குகிறார். இவ்வளவு பெரிய ரௌடியிடம் ஏதாவது தெரியாமல் பேசி விட்டால் அவன் கோபித்துக் கொள்வானே, என்ன செய்வது? அவன் இடுப்பில் பெரிய பிச்சுவா கத்தி வேறு வைத்திருக்கிறானே. அவன் ஒருத்தன் இல்லாமல், அவன் கூட்டத்தைச் சேர்ந்த எல்லாருமே இடுப்பில் பிச்சுவா கத்தி வைத்திருக்கிறார்களே? இப்போது என்ன செய்வது. அவசர ஹோம் வோர்க் இருக்கிறது என்று சொல்லி விட்டு இங்கிருந்து ஓடி விட்டால் என்ன?” என்றெல்லாம் சிறுவனின் மனம் பேச ஆரம்பித்தது.
மறுபுறம், “ஆஹா, அது ரொம்ப தப்பாச்சே. நாமே பெரியவரை விட்டு ஓடிப் போய்விட்டால் வேறு யார் அவரைக் காப்பாற்றுவார். வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்”, என்று ஒரு அசட்டுத் தைரியத்தை வலுக்கட்டாய வரவழைத்துக் கொண்டு மனதிற்குள் வேகமாக
“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்…”
என்னும் மந்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தான். எத்தகைய ஆபத்து வந்தாலும் காக்க கூடிய மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் அது.
ஆனால், சிறுவனின் இப்படிப்பட்ட மன ஓட்டம் எதையுமே பெரியவர் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. சுவாரஸ்யமாக காத்தவராயனுடன் பேசத் தொடங்கினார்.
“என்ன, நைனா, ஒரேயடியா அசந்துட்டியே?” என்று மீண்டும் பெரியரின் குரல் கேட்கவே காத்தவராயன் தன்னிலை அடைந்தான். என்ன என்னவோ பேச வேண்டும் என்று நினைத்த அந்த ரௌடியால் எதுவுமே பேச முடியாமல் வாயடைத்து நின்றான். வார்த்தைகள் வெளியே வர மறுத்தன. வாய் குழறியது.
“அது பெரியவரே, வந்து, … எனக்கு நல்ல சரக்கா வேணும். உன்னால தர முடியுமா? எவ்வளவு காசு வேணும்னாலும் தர்றேன்.”
“நீ என்ன எனக்கு காசு தர்றது. நல்ல சரக்குதானே வேணும். அதப்பத்தி நீ கவலைப்படாதே,” என்று சொல்லிவிட்டு தன்னுடைய கோவணத்திலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து காத்தவராயன் கூட வந்திருந்த ஒருவனிடம் ஏதோ ஒரு இடத்தைச் சொல்லி அனுப்பினார்.
அவன் ஒரு மணி நேரம் கழித்து ஒரு கஞ்சா பொட்டலத்துடன் வந்தான். பெரியவர் அதைக் காத்தவராயனிடம் கொடுத்து, “இந்தா நீ கேட்ட நல்ல சரக்கு. இஷ்டத்துக்கு ஊது,” என்று சொன்னார். காத்தவராயன் அதில் ஒரு பங்கை தனக்கு வைத்துக் கொண்டு மற்றவர்களிடம் பாக்கியைக் கொடுத்தான். அனைவரும் கஞ்சாவைப் புகைத்தனர். ஆனால், ஒரே இழுப்பில் மயங்கி விழுந்து விட்டனர். காத்தவராயன் மட்டும் புகைக்கவில்லை. தலைவனும் தன்னிலை இழந்தால் அது அவமானம் அல்லவா?”
பெரியவர் அவனைக் கிண்டலாகப் பார்த்தார்.
“என்னப்பா, ஏதோ சரக்கு அது இதுன்னு சொன்னே. இப்போ முழிக்கற. என்ன பயந்துட்டியா?” என்று அவனைச் சீண்டவே, அவனுக்கு அவமானமாகப் போய்விட்டது. வேறு வழியில்லாமல் அவனும் கஞ்சாவைப் புகைக்க ஆரம்பித்தான் ஆனால், ஒரே இழுப்பில் அவனும் மற்றவர்களைப் போல் மயங்கித் தரையில் விழுந்து விட்டான்.
சிறுவன் இந்தக் காட்சிகளை எல்லாம் கண் கொட்டாது பார்த்துக் கொண்டு இருந்தான். பள்ளிப் பருவத்தில் இருந்ததால் இந்த கஞ்சா சமாசாரம் எதுவுமே அவனுக்குப் புரியவில்லை. இருந்தாலும் ஏதோ சினிமா படம் பார்ப்பதுபோல் அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு விஷயம் மட்டும் அவனக்குப் புரியவில்லை.
பெரிய பெரிய ரவுடிகள் எல்லாம் பெரியவரைப் பார்த்தவுடன் எப்படி பெட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறார்கள். அங்காள கோயில் வாசல் வரைக்கும் மிகவும் ஆர்ப்பாட்டத்துடன் வரும் எவ்வளவோ பேர் பெரியவரைப் பார்த்த அடுத்த விநாடியே பேச்சு மூச்சின்றி பிரமித்து, கை கட்டி வாய் பொத்தி நிற்கும் காட்சி மிகவும் அதிசயமாக இருக்கும். அப்படிப்பட்ட அதிசயங்களில்தான் இதுவும் ஒன்று, அதை நினைத்து வியந்து கொண்டிருந்தான் சிறுவன்.
மாலை கடந்து இரவு நேரம் வந்தது. கோயில் பூசாரி மணி அடித்து இரவு பூஜையை நிறைவேற்றினார். அக்கம் பக்கத்திலிருந்து பலரும் கோயில் தரிசனத்திற்கு வந்தனர். அவ்வளவு சப்தத்திலும் அந்த ரவுடிகள் எழுந்திருக்கவில்லை. கோயிலுக்கு வந்த பக்தர்களும் அவர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. இது எப்படி சாத்தியம் என்பது அப்போது சிறுவனுக்குப் புரியவில்லை.
சில வருடங்களுக்குப் பின் பெரியவர் சிறுவனைத் திருப்பதி மலைக்கு அழைத்துச் சென்று ஒரு சஞ்சீவி தீர்த்தத்தைக் காட்டினார். (திருப்பதி யாத்திரை விளக்கங்களை எமது ஆஸ்ரம வெளியீடான “அள்ளித் தந்த அனந்த சயனா” என்னும் நூலில் காணலாம்). மீண்டும் அந்த தீர்த்தத்தைக் காண சிறுவன் முயன்றபோது அதை ஒரு கூழாங் கல்லால் மறைத்து விட்டார். அது பற்றிய விளக்கத்தை சிறுவன் கேட்டபோது, “ஒரு நீர்வீழ்ச்சி என்ன, நாங்கள் நினைத்தால் இந்தப் பிரபஞ்சத்தையே ஒரு கூழாங்கல்லால் மறைத்து விட முடியும்,” என்றார். அப்போதுதான் சித்தர்களின் வல்லமையைப் பற்றி சிறுவன் ஓரளவு உணர்ந்து கொண்டான்.
சித்தர்கள் நினைத்தால் இருப்பதை இல்லாதது போலவும், இல்லாததை இருப்பதுபோலவும் காட்ட முடியும், மாற்ற முடியும். எதையும் சாதிக்க வல்லவர்களே சித்தர்களே. ஆனால், அவர்கள் எது செய்தாலும் மற்றவர்கள் நன்மைக்காகவே, சுயநலத்திற்காக தங்கள் சுண்டு விரலைக் கூட அசைப்பதில்லை,
ஒரு கோயில் பிரகாரத்தில் பத்து பதினைந்து ரவுடிகள் கஞ்சா அடித்து விட்டு மயங்கிக் கிடக்கிறார்கள். அதற்குக் காரணம் ஒரு சித்தர் என்று யாராவது சொன்னால் சாதாரண மனிதர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? எனவேதான் சித்தன் போக்கு, சிவன் போக்கு, அவர்களுடைய செயலை யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்கிறார்கள். ஆழ்ந்த நம்பிக்கை மூலமே சித்தர்களை ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும்.
இரவு முழுவதும் அந்த ரவுடிகள் அங்கேயே மயங்கிக் கிடந்தார்கள். காலையில் ஒவ்வொருவராக எழுந்து வந்தனர். காத்தவராயனும் அசடு வழியும் முகத்துடன் பெரியவரிடம் வந்தான். தன்னுடைய இயலாமையை அவனுடைய வாடிய முகம் சொல்லாமல் சொல்லியது.
இருந்தாலும் பெரியவரிடம் இன்னும் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஆவல் கொண்டான்.
“பெரியவரே, இப்படி ஒரு சரக்கை என்னுடைய வாழ்நாளில் பார்த்ததே கிடையாது. ஆனாலும், எனக்கு இன்னொரு ஒரு ஆசையையும் நீ நிறைவேற்றி விட்டால் எல்லோரும் சொல்கிற மாதிரி உன்னை ஒரு பெரிய சித்தன் என்று ஒத்துக் கொள்கிறேன்,” என்றான்.
பெரியவர் உரத்த குரலில் சிரித்தார். “ஏன் தம்பி, உனக்கு கஞ்சா வாங்கிக் குடுத்து சித்தர் பட்டம் வாங்கணுமா, என்ன?” என்று கண் சிமிட்டிக் கொண்டு கேட்டார்.
அவர் தம்பி என்று அழைத்தபோது அந்த வார்த்தையில் இருந்த கனிவைக் கண்டு காத்தவராயன் சொக்கிப் போய் விட்டான். “தம்பி” என்பது அவன் அம்மா அழைக்கும் வார்த்தை அல்லவா?
வாணலியில் இட்ட வெண்ணெயாய் குழைந்தது அவன் மனம்.
சிறிது நேரம் அமைதி நிலவியது.
“சரி, சரி, குழந்த ஏதோ ஆசைப் படற. என்ன ஆசைன்னு விவரமா சொல்லு,” என்று ஒன்றும் தெரியாதவர் போல் மீண்டும் கேட்டார்.
காத்தவராயன், “அது ஒன்னும் இல்ல பெரியவரே, நீ கொடுத்த சரக்குல நம்ப பசங்கள் எல்லாம் மயங்கிப் போய்ட்டானுவ. இந்த மாதிரி போதை வராத சரக்கு ஒங்கிட்ட இருந்தா சொல்லு. உன் காலடியிலேய ஒக்காந்துடறேன்,” என்றான்.
பெரியவர் அவன் சொல்வதன் உள் அர்த்தத்தை உணர்ந்து கொண்டார். அதாவது, கஞ்சா அடித்தால் போதை வர வேண்டும், ஆனால், தன்னிலை இழக்கக் கூடாது, இதுவே காத்தவராயன் பெரியவரிடம் எதிர்பார்த்தது. கருணைக் கடல் அல்லவா சித்தர்கள்.
பெரியவர், “ஆ, இது என்ன பிரமாதம். இந்தா புடி,” என்று சொல்லிக் கொண்டே தன்னுடைய கோவணத்திலிருந்து ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்தார்.
காத்தவராயன் விரிந்த கண்களுடன் அந்தப் பொட்டலத்தைப் பார்த்தான்.
“இவர் கோவணம் என்ன கட்டபொம்மன் கஜானாவா? எதைக் கேட்டாலும் எடுத்து எடுத்துத் தருகிறாரே?” அவனுக்கு அளவில்லாத ஆச்சரியம்.
சிறுவனுக்கோ இது பழகிப் போன ஆச்சரியமாக இருந்தாலும், ஏதோ வேண்டத் தகாத ஒரு பொருளை நமது வாத்யார் கோவணத்திலிருந்து எடுக்கிறாரே என்று மிகவும் வருத்தத்துடன் அவரை நோக்கினான்.
“ஏண்டா, நீ விமுக்தி ஸ்வீட் வேணும்னு அலையறப்போ, இவன் கஞ்சா வேணும்னு அலைஞ்சா என்னடா தப்பு”, என்று பெரியவர் கேட்பது போல் தோன்றவே தன்னுடைய பார்வையைச் சட்டென்று வேறு பக்கம் திரும்பிக் கொண்டான். தனக்குத் தானே சமாதானமும் சொல்லிக் கொண்டான் சிறுவன். “நமக்கு நம்ப அம்மா எல்லாம் தருகிறார்கள். அப்படி இருந்தும் பெரியவர் வாங்கித் தரும் பரோட்டா, கோலி குண்டு மிட்டாய், ஸ்வீட் என நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகிறேனே. அப்படி இருக்கும்போது இந்த ரவுடி தனக்கு வேணும் என்று நினைப்பதை வேறு யாரிடம் கேட்க முடியும், அதைத் தருபவரிடம்தானே கேட்க முடியும்?” என்று ஒரு ஆத்ம விசார கேள்வியைக் கேட்டு அதற்கு உரிய சரியான பதிலையும் தெரிந்து கொண்ட திருப்தியில் அமைதியானான்.
கஞ்சா பொட்டலத்தைப் பெற்ற காத்தவராயனும் அவனுடைய தோழர்களும் அடுத்த நிமிடமே அதைப் புகைக்க ஆரம்பித்தனர். ஒரே இழுப்பில் அனைவருக்கும் போதை தலைக்கேறியது. ஆனால், என்ன ஆச்சரியம் யாரும் தன்னிலை இழக்கவில்லை. அளவில்லா போதையிலும் சுற்றிலும் நடக்கும் விஷயங்கள் தெளிவாகத் தெரிந்தன.
ஒரு நிமிடம் இந்நிலை நீடித்தது. அவ்வளவுதான். அடுத்த நிமிடமே பெரியவர் காலில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தான் காத்தவராயன்.
“சாமீ…. என்ன மன்னிச்சுடு… இவ்வளோ பெரிய பாவி. என்னையும் ஒரு மனுஷனா மதிச்சு என்னவெல்லாம் தந்தியே. உங்கிட்ட போய், ..”
அவன் குரல் தழுதழுத்தது….
“…. உங்கிட்ட போய் கஞ்சா கேட்டேனே, ” என்று கதறிக் கதறி அழுதான். பெரியவரின் பாதங்களைக் கண்ணீரால் கழுவினான். தரையில் முட்டிக் கொண்டு அழுதான்.
சிறுவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இப்படி ஒரு நிகழ்ச்சியை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காத்தவராயன் வார்த்தைகளில் இருந்த பக்தியையும் அன்பையும் அவன் இதுவரை எந்த பக்தரிடமும் கண்டதில்லை.
சிறுவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. பெரியவரைக் காண அவனிடம் சக்தியில்லை.
அவன் மனம் குறுகுறுத்தது. “நூற்றுக் கணக்கில் விமுக்தி ஸ்வீட் பெரியவரிடம் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன். அவர் வாங்கித் தந்த பரோட்டாவிற்கும் கோலிக் குண்டு மிட்டாய்க்கும் கணக்கே கிடையாதே. ஆனால், ஒரு நாள் கூட இப்படி பக்தியுடன் அழுதது கிடையாது. பக்தியால் எனக்கு ஒரு சொட்டு கண்ணீர் கூட இதுவரை வந்தது கிடையாதே. ஆனால், என்ன அதிசயம். பெரியவர் கையால் வாங்கிய ஒரே ஒரு கஞ்சா பொட்டலம் இந்த ரவுடியை இப்படி மாற்றி விட்டதே. அப்படியானால் இவன்தானே உண்மையான பக்தன். ஆனால், உதவாக்கரை என்று விரட்டி அனுப்ப வேண்டிய என்னையும் இவ்வளவு நாள் தன்னிடம் அடைக்கலம் கொடுத்து வைத்திருக்கும் இந்தப் பெரியவருக்கு நாம் எப்படி நன்றிக் கடனைச் செலுத்த முடியும்?” என்று முதன் முறையாக பக்திப் பெருக்கால் கண்ணீர் விட ஆரம்பித்தான் சிறுவன்.
அப்போதுதான் அவனுக்கு இன்னொரு உண்மையும் புலப்பட ஆரம்பித்தது. பெரியவர் ஒருமுறை ராதை கண்ணனிடம், “கண்ணா, எல்லோரும் உன்னிடம் பக்தி வைத்திருக்கிறார்கள், ஆனால், எனக்கு மட்டும்தான் உன்னிடம் கொஞ்சம் கூட பக்தியே இல்லை,” என்று புலம்பினாள் என்று கூறினார். சிறுவனால் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை, “எப்படி பக்தியே இல்லாத ராதையுடன் கண்ணன் அவ்வளவு நேசம் பாராட்டுவான்.”
இப்போது அதற்கான விளக்கம் கிடைத்து விட்டது. “குரு பக்தி கொஞ்சம் கூட இல்லாத என்னையே பெரியவர் தன்னிடம் வைத்திருக்கும்போது கண்ணன் ஏன் ராதையை நேசிக்க மாட்டான்,” ஆனால், இங்கு ராதையின் கூற்று, “கிருஷ்ணனின் பேரன்பிற்கு முன்னால் என்னுடைய பக்தி எவ்விதத்திலும் ஒப்புமை கூற முடியாத அளவிற்கு சுருங்கி விட்டது,” என்பதாகும். “அத்தகைய ஒரு ஒப்புமை கூற முடியாத பெரியவரின் அன்பை சிறுவன் அறிவதற்காகத்தான் அங்காளி காத்தவராயனை பெரியவரிடம் அனுப்பி இருக்கிறாள் போலிருக்கிறது,” என்று நினைத்து பெரியவரின் அன்பு வெள்ளத்தில் நீந்த ஆரம்பித்தான் சிறுவன்.
போதையால் சிவந்த காத்தவராயனின் கண்கள் இப்போது பக்திப் பெருக்கால் சிவந்து விட்டன. இதுவே சித்தர்களின் லீலை. எவரும் அறியாமல் ஆற்றும் அற்புதம்.
வெகுநேர அழுகைக்குப் பின்னர் காத்தவராயன் அமைதி அடைந்தான். பெரியவர் அவன் தலையை கோதி விட்டு, “எத்தனை நாள் உனக்காக காத்திருந்தேன். இன்றுதான் அங்காளி கருணை காட்டினாள்,” என்றார். ஆம், அதுவே உண்மை. சற்குருதான் பக்தனை அழைத்து ஆட்கொள்ள முடியும். பக்தன் குருநாதரை இவர்தான் தன்னுடைய குரு என்று அடையாளம் காண முடியாதல்லவா?
“சுவாமி, நான் இனி செய்ய வேண்டும் என்று கட்டளை இடுங்கள்,” என்று கை கூப்பி பெரியவரைக் கேட்டான் காத்தவராயன்.
பெரியவரும், “நீ பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். உன்னுடைய உடையை மட்டும் மாற்றிக் கொண்டால் போதும். இன்றிலிருந்து லுங்கி கட்டுவதை நீ விட்டு விட வேண்டும். தூய வெண்ணிற வேஷ்டியும், தூய வெள்ளை சட்டையையும்தான் எப்போதும் அணிந்து கொள்ள வேண்டும். சனீஸ்வர மூர்த்தியால் பீடிக்கப்பட்ட நளன் தன்னுடைய நாடு, நகரம், அரண்மனை, சுகபோகம் அனைத்தையும் இழந்து காட்டில் தன் மனைவியுடன் திரிந்தபோது தன்னுடைய ஒரே ஒரு கோவணத்தையும் இழந்து விட்டான். வேறு வழியின்றி தன்னுடைய மனைவியின் புடவையைப் பாதியாகக் கிழித்து இடுப்பில் கட்டிக் கொண்டான். அதுதான் பின்னாளில் லுங்கியாகத் திரிந்து விட்டது. எனவே அப்படி ஒரு கஷ்டமான சூழ்நிலையில் உன்னைக் காண நான் விரும்பவில்லை. எப்போதும் தூய வெண்ணிற ஆடையிலேயே நீ பிரகாசிக்க வேண்டும்,” என்று அன்பொழுக கூறினார்.
பெரியவர் சொன்ன வண்ணமே காத்தவராயன் அன்றிலிருந்து தூய வெள்ளை எட்டு முழ வேஷ்டியையும் வெண்ணிற சட்டையையும் அணிய ஆரம்பித்தான். அவனைப் பார்த்து அவனுடைய தோழர்களும் அவ்வாறே வெண்ணிற உடை உடுத்த ஆரம்பித்தனர். நாட்கள் செல்லச் செல்ல காத்தவராயன் தன்னுடைய அடிதடி தொழிலை விடுத்து நேர்மையான வழியில் சம்பாதிக்க ஆரம்பித்தான். ஆனால், ஏற்கனவே அவனுக்கு எதிரியாய் இருந்தவர்கள் இப்போது அவன் முற்றிலும் மாறி விட்டதால் இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவனைத் துன்புறுத்த ஆரம்பித்தனர்.
முன்பு போல் அவர்களுடன் சண்டையிட அவன் மனம் இடந்தரவில்லை. அதற்கு என்ன செய்வது என்று பெரியவரிடம் யோசனை கேட்டான். அப்போது அவனுக்கு பெரியவர், “ஓம் ஹிரண்ய கர்ப்பாய நமஹ” என்ற மந்திரத்தை தினந்தோறும் ஆயிரம் முறைக்குக் குறையாமல் ஜபிக்கும்படிக் கூறினார்.
ஹிரண்ய கர்ப்பாய மந்திர மகிமை |
இந்த பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் சக்திகளுள் ஒன்றே ஹிரண்ய கர்ப்பம் என்பது. பொதுவாக, ஹிரண்ய கர்ப்பம் என்பது சிவனைத் துதிக்கும் போற்றித் துதியாக இருந்தாலும் சூரிய பகவான், பெருமாள் என அனைத்து மூர்த்திகளையும் இந்த மந்திரத்தால் அழைக்கலாம். மிகவும் சக்தி வாய்ந்த ம்ருத்யுஞ்சய துதியாகவும், நோய் நீக்கும் வல்லமையையும் உடையது இம்மந்திரம். கலியுக நோய்களுக்கு ஒரு சஞ்சீவி மருந்தாகவும் இம்மந்திரம் சித்தர்களால் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இதில் மிகவும் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் ஹிரண்ய கர்ப்ப மந்திரத்தை ஓதி மற்றவர்களுக்கு நன்மைத்தான் செய்ய வேண்டும். அசுர சக்திகளை உள்ளடக்கிய மந்திரமாக இருப்பதால் மற்றவர்களுக்கு ஏதாவது துன்பம் தருவதற்காக இந்த மந்திர சக்திகளை பிரயோகம் செய்தால் அவ்வாறு தவறாக பிரயோகம் செய்தவர்களிடமே பத்து மடங்கு வேகத்துடன் சுவற்றில் அடித்த பந்து போல் திரும்பி வரும் என்பதை அறிந்து செயல்படவும்.
பெரியவர் சொல்லித் தந்த முறையில் ஹிரண்ய கர்ப்ப மந்திரத்தை காத்தவராயன் தொடர்ந்து ஓதி வந்தான். அதனால் நாளடைவில் எதிரிகளின் தொல்லை குறைந்து, அக்கம் பக்கத்தில் அவன் நல்லவன் என்று பெயர் எடுக்கத் தொடங்கி விட்டான்.
ஆறு மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் மாலை தன்னுடைய தோழர்களுடன் பெரியவரைக் காண வந்தான். இப்போதெல்லாம் வெறுங் கையுடன் அவன் அங்காளி கோயிலுக்கு வருவதில்லை. குறைந்தது மூன்று டஜன் பழங்கள், ஸ்வீட், வெற்றிலை, பாக்கு, பூ மாலைகள் இவற்றுடன்தான் அவன் பெரியவரைச் சந்திப்பது வழக்கம். அந்த அளவுக்கு அவனுக்கு பெரியவர் மேல் இருந்த மரியாதை நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது.
வழக்கமான தன்னுடைய ஓங்கார நமஸ்காரத்துடன் அவனையும் அவன் தோழர்களையும் வரவேற்று தன்னருகில் அமர்த்திக் கொண்டார். அவனுடைய நலன்களை விசாரித்தார். சிறிது நேரம் கழித்து, காத்தவராயன், “நீங்கள் சொல்லிக் கொடுத்த காரியங்களை நானும் எனது நண்பர்களும் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். அதனால் திருடன், கொள்ளைக்காரன் என்ற பெயர் எல்லாம் மறைந்து போய் மக்கள் எங்களுக்கும் நல்ல மரியாதையும், மதிப்பும் தருகின்றனர். பயந்து ஓடிய குழந்தைகள் எல்லாம் எங்களைப் பார்த்து மாமா, மாமா என்று அழைத்து பழகுகின்றன. நாங்கள் இதுவரை அனுபவிக்காத புதுமையான சந்தோஷமாக இருக்கிறது,” என்றான்
பெரியவரும் ஆர்வமுடன் அவன் பேச்சைக் கொண்டிருந்தார். அவன் தொடர்ந்து, “என் மனதில் இப்போது புதிதாய் ஒரு ஆசை முளைத்திருக்கிறது,” என்று தயங்கிக் கொண்டே சொன்னான்.
பெரியவர், “எதுக்குப்பா தயக்கம். இங்கே அங்காளி கிட்ட எந்த தயக்கமும் வேணாம். நீ கேட்க நினைத்ததை தயங்காமல் கேள்,” என்று அவனை ஊக்கப்படுத்தினார்.
காத்தவராயன் தயக்கத்துடன், “சொன்னா கோபித்துக்கொள்ளக் கூடாது,” என்று ஒரு பீடிகையைப் போட்டு விட்டு, “உன்னை முதல் முதல் பார்த்ததிலிருந்து நானும் உன்னைப் போல் சாமியா ஆகனும்னு ஆசையா இருக்கு,” என்று ஒரு வழியாக தான் சொல்ல வந்ததைச் சொல்லி விட்ட திருப்தியில் அவருடைய பதிலுக்காகக் காத்திருந்தான்.
சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம். ஆறு மாதங்களுக்கு முன்னால் இருந்த காத்தவராயனுடைய தோற்றத்தையும், அவன் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்து அனுபவித்த சிறுவனுக்கு இப்போதைய அவனுடைய தோற்றமும் வினயமும் மிகவும் அதிசயமாக இருந்தது. “இதுவும் கோவணாண்டியின் பல லீலைகளில் ஒன்று போல் இருக்கிறது,” என்று உள்ளூர நினைத்து அங்கு நடந்த நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தான்.
பெரியவர் அண்டம் அதிர சிரித்தார். “யாரு நைனா சாமி, இந்த நாய் சாமியா?” என்று தன் நெஞ்சில் கையை வைத்துக் கேட்டார்.
சிறுவன் ஒரு கணம் மிரண்டு விட்டான். இப்படி ஒரு தன்னடக்கத்தை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. “அண்டங்களை ஆட்டிப் படைக்கும் வல்லமை உடைய இந்த உலக மகா சித்தர் தன்னை ஒரு நாய் என்று சொல்கிறாரே? அப்படியானால் நம்மை எல்லாம் என்ன சொல்வது?”
பெரியவர் தொடர்ந்தார், “காத்தவராயா, உனக்கு முன்னாடி இருக்காளே அங்காளி அவதான் சாமி. மத்த எல்லாமே ஆசாமிதான். ஏதோ அவ போட்ட பிச்சையிலேதான் இந்த கோவணாண்டி கிழவன் பொழப்பு நடத்திக் கிட்டு இருக்கேன். நீ ஏதாவது சொல்லி அங்காளிக்கு கோபத்தை உண்டு பண்ணி விடாதே, அங்காளியோட கோடிக் கணக்கான அடிமைகளில் இந்தக் கிழவனும் ஒருவன். அவ்வளவுதான்.” என்று சொல்லி ஒரு புன்சிரிப்பை உதிர்த்தார்.
“ஆனா, நீ என்ன மாதிரி அங்காளி அடிமை ஆகுனும்னு நெனச்சா அது நல்ல எண்ணம். அது ரொம்ப ஈஸி,” என்று கூறி அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தார்.
காத்தவராயன் பதிலேதும் சொல்லாமல் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்புபோல் பெரியவரின் முகத்தைக் கண் கொட்டாது பார்த்துக் கொண்டிருந்தான்.
பெரியவர் தொடர்ந்து, “நீ ஒன்று செய். நாளை விடியற்காலை மூன்று மணிக்கு இங்கு வந்து விடு. உன்னுடைய கூட்டாளிகள் விரும்பினால் அவர்களும் உன்னுடன் வரட்டும். உனக்கு எது தேவையோ அதை உனக்கு அங்காளி கொடுத்து விடுவாள்,” என்று சொல்லி காத்தவராயனை அனுப்பி வைத்தார்.
முள்ளும் மலர்ந்ததே ! |
மறுநாள் காலை சரியாக மூன்று மணிக்கு காத்தவராயனும் அவனுடைய தோழர்களும் குளித்து, உடல் முழுவதும் விபூதி பட்டைகள் அணிந்து கொண்டு, தூய வெள்ளை ஆடைகளுடன் அங்காளி கோயிலுக்கு வந்து விட்டனர்.
விடியற்காலை திரும்பவும் அங்காளி கோயிலுக்கு வர வேண்டும் என்பதால் சிறுவன் வீட்டிற்குப் போகாமல் பெரியவருடன் கோயிலிலேயே தங்கி விட்டான். இரவு முழுவதும் சிறுவன் தூங்கவே இல்லை. அவன் என்ன என்னவோ கற்பனை செய்து கொண்டிருந்தான்.
“எப்படி பெரியவர் காத்தவராயனை அங்காளியின் அடிமை ஆக்குவார்? நம்மிடம் இதுவரை இப்படி ஒரு விஷயத்தைச் சொல்லாமல் மறைத்து விட்டாரே. இருந்தாலும் பெரியவருக்கு இப்போதெல்லாம் நம்மை விட மற்றவர்கள் மேல்தான் கரிசனம் அதிகம்,” என்று மனதிற்குள் அங்காலாய்த்துக் கொண்டே இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான்.
பெரியவர் காத்தவராயனை அருகில் அழைத்தார். தன்னுடைய கோவணத்திலிருந்து புத்தம் புதிய பூணூல் ஒன்றை எடுத்தார். ஒன்பது புரிகளுடன் விளங்கிய அப்பூணூலை அங்காளியிடம் மானசீகமாக அர்ப்பணித்து விட்டு காத்தவராயனின் கைகளில் கொடுத்தார். பெரியவர் வடக்கு நோக்கி அமர்ந்து கொண்டிருந்தார். காத்தவரயனை கிழக்கு நோக்கி அமர வைத்து பூணூலின் மூன்று பிரம்ம முடிச்சுகளும் காத்தவராயனின் வலது உள்ளங்கையில் உள்ள இதய ரேகை, புத்தி ரேகை, ஆயுள் ரேகைகளைத் தொடுமாறு வைத்துக் கொண்டு உள்ளங்கை வானத்தைப் பார்க்குமாறும், இடது உள்ளங்கை பூமியைப் பார்த்தபடியும் வைத்துக் கொள்ளச் சொல்லி,
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதேஹே
யத் சகஜம் புரஸ்தாத்
ஆயுஷ்யம் அக்ர்யம் ப்ரதிமுஞ்ச ஸுப்ரம்
யக்ஞோபவீதம் பலமஸ்து தேஜஹ
என்ற மந்திரத்தை ஓதினார். சிறுவனும் பெரியவருடன் சேர்ந்து மந்திரத்தை ஓதினான்.
அப்போதுதான் சிறுவனுக்கு அன்று ஆவணி அவிட்டம் என்ற விஷயம் சட்டென ஞாபகம் வந்தது. ஒவ்வொரு ஆவணி அவிட்டம் அன்றும் தன்னுடைய தந்தை மூலமாகத்தான் பூணூல் மாற்றும் வைபவத்தைக் கொண்டாடும் வழக்கம். ஆனால், ஏதோ ஞாபக மறதியால் பெரியவருடன் அங்காளி கோயிலிலியே சிறுவன் தங்கி விட்டான். வீட்டில் நமது தந்தை நம்மை எதிர்பார்ப்பார், நான் இல்லாவிட்டால் என்னை புட்பால் ஆடி விடுவாரே., என்ன செய்வது? என்று புதிதாக வந்த குழப்பத்தை எண்ணி தவித்தான்.,
பெரியவர் கூறிய வண்ணம் பிரம்ம முடிச்சுகள் நெஞ்சுக் குழியில் தவழும் வண்ணம் பூணூலை காத்தவராயன் தன் மார்பில் அணிந்து கொண்டான். அதன் பின்னர் பெரியவர், ஹரி ஓம் நமோ நாராயணாய நமஹ என்று 12 முறை சொல்லி காத்தவராயனை வடக்கு திக்கை நோக்கி 12 முறை சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நமஸ்காரம் செய்யும்படிக் கூறினார்.
இதற்கான விளக்கங்களை பின்னர் பெரியவரே சிறுவனிடம் கூறினார். ஒவ்வொருவரும் பூணூல் அணிந்த பின் தன்னுடைய குருவிற்கும் பெரியோர்களுக்கும் அபிவந்தனம் என்ற வழிபாட்டைச் செய்வது அவசியம். அப்போது அவர்கள் தன்னுடைய குலம், கோத்திர, பிரவர ரிஷிகளை நினைவு கூர்ந்து, தான் சார்ந்துள்ள வேதம், சாகை, சூத்ரம் இவற்றையும் சொல்லி நமஸ்காரம் செய்வது முறை. ஆனால், தற்காலத்தில் பலருக்கும் இத்தகைய அபிவந்தன வழிபாட்டு முறை என்னவென்றே தெரியாமல் மறைந்து விட்டது. பலரும் தங்களுடைய கோத்திர, பிரவர ரிஷிகள், வேதம், சாகை, சூத்ரம் போன்ற விஷயங்களை அறியாமல் இருப்பதால் அத்தகையோர் இவ்வாறு வடக்கு திக்கை நோக்கி 12 முறை நமஸ்காரம் செய்தால் அவர்களுக்கு குல கோத்திர ரிஷிகளின் அனுகிரகம் கிடைக்க இறைவன் வழிகாட்டுவார்.
பெரியவர் சிறுவனிடம், “எதிர்காலத்தில் நீ பெரிய ஆஸ்ரமம் கட்டி ஆயிரக் கணக்கான அடியார்களுக்கு பூணூல் அணிவித்து அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் இருப்பாய். அப்போது உன்னிடம் வரும் அடியார்கள் எந்த குலம், கோத்திரம் என்ற விவரம் தெரியாமல் இருந்தால் நீ எந்த வித தயக்கமும் காட்டாது, அனைவருக்கும் சாதி, மத, இன பேதம் கொள்ளாமல் பூணூல் அணிவித்து காயத்ரீ மந்திர உபதேசமும் செய்து நல்வழி காட்ட வேண்டும்,” என்றார்.
அடிக்கடி பெரியவர் இவ்வாறு சிறுவன் கட்டப்போகும் ஆஸ்ரமத்தைப் பற்றிக் கூறுவதுண்டு. ஆனால், சித்தர்களின் வாக்கு, எம்பெருமானின் வாக்கு அல்லவா? கோவணாண்டிப் பெரியவரின் அருள் வாக்கு மெய்யாகும். காலமும் வந்தது. ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தை நிறுவி ஆயிரக் கணக்கான இறை அடியார்களுக்கு ஒவ்வொரு ஆவணி அவிட்டத் திருநாள் அன்றும் பிரம்ம முகூர்த்தத்தில் தன் கையாலேயே பூணூlல் அணிவித்து காயத்ரீ மந்திர உபதேசமும், மிகவும் சக்தி வாய்ந்த காமோ கார்ஷீத் மன்யுர கார்ஷீத் மந்திர உபதேசத்தையும் அருளி அருந் தொண்டாற்றினார் வெங்கடராம சுவாமிகள்.
அவரவர் தங்கள் குல வழக்கப்படி ஆவணி அவிட்ட வைபத்தை வைத்துக் கொண்டாலும் ஆவணி மாதத்தில் வரும் அவிட்ட நட்சத்திர பிரம்ம முகூர்த்தமே பூணூல் அணியும் வைபவத்திற்கு உகந்தது என்பது சித்தர்களின் சித்தாந்தம்.
சாஷ்டாங்க நமஸ்காரத்திற்குப் பிறகு காத்தவராயனுடைய தோழர்கள் அனைவருக்கும் பெரியவரே தன் கையால் பூணூல் அணிவித்தார். இறுதியாக சிறுவனுக்கும் பெரியவர் தன் கோவணத்திலிருந்து பூணூலை எடுத்து அணிவித்தார். சிறுவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. காரணம் பெரியவருடன் பல வருடங்களாக குருகுல வாசத்தில் இருந்தாலும் ஆவணி அவிட்ட தினத்தன்று தன்னுடைய தந்தை மூலமாகவே பூணூல் பெற்று அணிந்து வந்த சிறுவனுக்கு முதன் முதலாக அந்த ஆவணி அவிட்ட தினத்தன்று பெரியவரிடம் இருந்தே தனக்கு யக்ஞோபவீத தாரணம் ஆனது குறித்து அவன் மட்டில்லா ஆனந்தம் அடைந்ததில் வியப்பென்ன?
ஆனால், அதுதான் அவன் பெரியவரிடம் இருந்த பெற்ற முதலும் கடைசியுமான முப்புரி என்பதை அவன் அப்போது உணர வில்லை. அதுதான் இறை மாயையோ, அங்காளி மாயையோ இல்லை கோவணாண்டி மாயையோ? யார் அறிவார்?
அனைவரும் பூணூல் அணிந்த பின் அனைவரையும் வரிசையாக அமர வைத்து பெரியவர் காயத்ரீ மந்திரத்தை உபதேசம் செய்தார்.
ஓம்
பூர் புவ சுவஹ
தத் சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந ப்ரசோதயாத்
இவ்வாறு ஒவ்வொரு வார்த்தையாக பெரியவர் சொல்லச் சொல்ல காத்தவராயனும் அவனுடைய தோழர்களும் பெரியவருடன் சேர்ந்து சொல்லப் பழகிக் கொண்டனர்.
பெரியவர் காயத்ரீ மந்திரம் சொல்லும் அழகையும் அதில் இழைந்த இனிமையையும் கண்டு சிறுவன் தன்னை மறந்தான். கேட்க, கேட்கத் தெவிட்டாத தேவாமிர்தமாக பெரியவர் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. மும்முறை காயத்ரீ மந்திரத்தை ஓதினார் பெரியவர்.
பெரியவர் தொடர்ந்து, “ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து கொண்டு அது கோயிலோ அல்லது வீட்டில் பூஜை அறையாகவோ இருக்கலாம், ஒரு மணி நேரத்திற்குக் குறையாமல் தினமும் இப்போது இங்கு பழகிய மந்திரத்தை வாய் விட்டு சொல்லிப் பழகுங்கள். நாட்கள் செல்லச் செல்ல உங்கள் முகத்தில் ஒரு தேஜஸ் தோன்றும், குரல் வளம் பெறும், தெய்வீகக் களை உங்களிடம் தோன்றும். நீங்கள் அமரும் இடத்தைச் சுற்றி ஒரு ஜோதி வட்டம் பிரகாசிக்கும். நீங்கள் எந்த அளவிற்கு இந்த காயத்ரீ மந்திரத்தை பக்தி சிரத்தையுடன் நாள் தவறாது ஓதி வருகிறீர்களோ அந்த அளவிற்கு அந்த ஜோதி வட்டம் விரிவடையும். அப்போது அந்த காயத்ரீ ஜோதி வட்டத்திற்குள் யாரெல்லாம் அமர்கிறார்களோ அவர்கள் மனம் உடன் அமைதி பெறும். அவர்கள் தங்கள் கவலையை மறந்து ஒரு புதிய உற்சாகத்தைப் பெறுவார்கள். கிட்டத்தட்ட ஓராண்டு பயிற்சியில் இந்த மாற்றத்தை உங்களால் உருவாக்க முடியும்,” என்று அவர்களுக்கு காயத்ரீ ஜப மகிமையை விவரித்தார்.
காத்தவராயனும் அவன் தோழர்களும் பெரியவரிடம் இருந்து விடை பெற்றனர். பல வருடங்கள் தேடிக் கிடைக்காத ஒரு பொக்கிஷத்தைப் பெற்ற குதூகல சந்தோஷத்தில் காத்தவராயன் திளைத்தான். அவன் கால்கள் தரையில் பாவவில்லை. அத்தகைய ஒரு ஆனந்த பரவசத்தில் பெரியவரிடம் இருந்து விடை பெற்றான். பெரியவரின் கட்டளையை சிரமேற்கொண்டு தொடர்ந்து காயத்ரீ ஜபித்து வந்தான். அவன் தோழர்களும் அவனைப் பின்பற்றி வழிபாடுகளை மேற்கொண்டனர்.
நாட்கள் செல்லச் செல்ல அவன் முகத்தில் தேஜஸ் பெருகியது. அவன் தோழர்கள் அனைவரும் அவனுடன் சேர்ந்து தங்கள் தவறான தொழிலை விட்டு விட்டு நேர்மையான வழியில் நடக்க ஆரம்பித்தனர். அதனால் மக்களின் நன்மதிப்பையும் மரியாதையையும் பெற்றனர். பல நல்லவர்களின் நட்பும் மலர்ந்தது.
அவ்வப்போது பெரியவரை வந்து தரிசனம் செய்து வந்தான். பெரியவர் என்ற வார்த்தை மறைந்து வாத்யாரே என்று அழைக்கும் அன்யோன்ய குரு சிஷ்ய உறவையும் வளர்த்துக் கொண்டான். ஒரு முறை பெரியவரைப் பார்த்தபோது, “வாத்யாரே, நீங்கள் சொன்னபடி பூணூல் அணிந்து காயத்ரீ மந்திரத்தை ஜபித்துக் கொண்டு இருக்கிறேன். ஆனால் என்னுடைய மனைவிக்கு இதில் உடன்பாடு இல்லை. அவள் பூணூல் அணிவது நமது ஜாதி வழக்கம் கிடையாது. நமது சொந்தக்காரர்கள் எல்லோரும் என்னைக் கேலி செய்கிறார்கள், அதனால் நீங்கள் பூணூலை கழட்டி விடுங்கள், என்று சொல்லி வற்புறுத்துகிறாள். ஆனால், எனக்கு என் குருநாதரின் வார்த்தைதான் முக்கியம் என்று சொல்லி, பூணூலைப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்,” என்றான்.
பெரியவர் ஒரு புன்சிரிப்புடன் அவன் சொல்வதைக் கேட்டு, “ஆஹா, இது ஒரு சாதாரண விஷயம்தானே. இதற்காக தன்னுடைய அம்மா அப்பாவை விட்டு விட்டு உன்னையே கதி என்று நம்பி வந்திருக்கும் உன்னுடைய மனைவியிடம் பிரச்னை ஏற்படுத்திக் கொள்ளலாமா? எப்போதோ இதை என்னிடம் சொல்லி இருக்கலாமே. எளிதில் இந்த பிரச்னையைத் தீர்த்து விடலாமே. சரி இப்போது ஒன்றும் பிரச்னை இல்லை. நீ இனிமேல் பூணூல் அணிய வேண்டாம்,” என்றார்.
காத்தவராயன் திடுக்கிட்டான். “என்ன காரியம் செய்து விட்டோம், எதையோ சொல்லப் போய் பெரியவரின் கோபத்திற்கு ஆளாகி விட்டோமே,” என்று மனம் நொந்தவனாய் பெரியவரைப் பார்த்தான்.
பெரியவர் பயப்படாதே, “வீட்டில்தான் பூணூல் அணிய வேண்டாம் என்று சொன்னேன். அடியேனைப் பார்க்க வரும்போது, கோயில் குளம் என்று செல்லும்போது பூணூலை அணிந்து கொள்ளலாமே. அதனால் தவறு கிடையாது. தெய்வீகத்தில் எல்லா பிரச்னைக்கும் தீர்வு இருக்கிறது. நீ கவலைப்படாதே. நீ இனி எல்லைப் பூணூலைப் போட்டுக் கொள் பிரச்னை தீரும்,” என்றார்.
எல்லைப் பூணூல் விளக்கம் |
“எல்லைப் பூணூல்” என்பது சித்தர்களின் பரிபாஷைச் சொல். பூணூல் என்பது சாதி, மத, இன பேதமின்றி அனைவரும் அணிந்து கொள்ள வேண்டிய தெய்வீக அணிகலன். இராமாயண காலத்தில் குரங்கு இனத்தைச் சேர்ந்த வாலி பூணூல் அணிந்து காயத்ரீ ஜபித்து சந்தியா வந்தன வழிபாடுகள் செய்தது நாம் அறிந்ததே. அவன் காலையில் ஒரு கடற்கரையில் சந்தியா வந்தன வழிபாடுகளை நிறைவேற்றுவான், நண்பகலில் பல்லாயிரக் கணக்கான மைல்கள் பறந்து சென்று மற்றோர் கடலில் சந்தியா வந்தன வழிபாடுகளை ஆற்றுவான். அந்தி மயங்கும் வேளையில் வேறோர் கடலோரத்தில் சந்தி வழிபாடுகளை நிறைவு செய்து அற்புத ஆற்றல்களை எல்லாம் பெற்றான்.
அதனால் எல்லையில்லா பராகிரம சக்திகளையும் பெற்றிருந்தான். பத்துத் தலை ராவணனைத் தன்னுடைய வாலில் ஒரு விட்டில் பூச்சியைப் போல் கட்டிக் கொண்டு வந்து தன்னுடைய குழந்தை அங்கதனுக்கு விளையாடும் தொட்டிலில் கட்டிய அதி வீர பராக்கிரம சாலியே வாலி. அவனுடைய காலம் தவறாத சந்தியா வந்தன வழிபாடுகளே அவனுக்கு இத்தகைய அற்புதமான ஆற்றல்களை நல்கியது.
ஒரு குரங்கு பூணூல் அணிந்து, காயத்ரீ ஜபித்து சந்தியா வந்தன வழிபாடுகளை நேரம் தவறாது நிறைவேற்றுகிறது என்றால் மனிதர்கள் எந்த அளவிற்கு இதில் ஆர்வமாக ஈடுபட வேண்டும்.
இருப்பினும் சூழ்நிலைகளின் காரணத்தால் சிலர் இவ்வாறு பூணூல் அணிவதால் பிரச்னைகளைச் சந்திக்க நேரிட்டால் அவர்கள் பிரச்னை இல்லாத நேரத்தில், இடத்தில் மட்டும் பூணூலை அணிந்து கொண்டு மற்ற நேரத்தில் கழற்றி பத்திரமாக வைத்துக் கொண்டு மீண்டும் தேவைப்படும்போது அணிந்து கொள்ளலாம். உதாரணமாக, கல்லூரி செல்லும் மாணவன் ஒரு தான் கல்லூரிக்குச் செல்லும்போது அங்குள்ள மாணவர்கள் தான் பூணூல் அணிந்திருப்பதைக் கண்டு கிண்டல் செய்வார்கள் என்று தோன்றினால், வீட்டில் மட்டும் பூணூலை அணிந்து கொண்டு கல்லூரி செல்லும்போது அதைக் கழற்றி வீட்டில் வைத்து விட்டு செல்லலாம். மாலை கல்லூரி முடிந்து திரும்பி வந்ததும் கை கால்களை அலம்பி சுத்தம் செய்து கொண்டு மீண்டும் பூணூல் அணிந்து காயத்ரீ ஜபம் ஓதி வழிபடலாம்.
இதுவே எல்லைப் பூணூல் தத்துவமாகும். கலியுக மக்களைக் கரையேற்றுவதற்காக சித்தர்கள் எந்த அளவிற்கு இறங்கி வந்து நமக்கு வழிகாட்டக் காத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?
தொடர்ந்து பெரியவரின் கட்டளைகளை தவறாது காத்தவராயன் நிறைவேற்றி வந்ததால் மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றான். அதனால் அவனுடைய அரசியல் செல்வாக்கும் பெருகியது. பல உயர்ந்த பதவிகள் அவனைத் தேடி வந்தன.
அதற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகள் நாம் எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு அப்பாற்பட்டதால் காத்தவராயனைக் குறித்த மற்ற விஷயங்கள் இங்கு விளக்கப்படவில்லை.
பெரியவர் தன்னுடைய கடமை நிறைவேறியதால் காத்தவராயனிடமிருந்து தன்னைக் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக் கொண்டார்.
எனவே, பூணூலை எந்த அளவிற்கு மதித்துப் போற்றுகிறோமோ அந்த அளவிற்கு அது நமக்கு அனைத்து நலன்களையும் அளிக்கும். ஆனால், பலரும் பூணூலை அணிந்து விட்டால் தங்களுடைய எல்லா பிரச்னைகளும் தீர்ந்து விடும் என்று தவறாக எண்ணுகின்றனர். பூணூல் என்பது ஒரு இறைச் சாதனம். அதை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு அதனால் கிட்டும் பலனும் மாறுபடும் என்பதை தெளிவாக உணர்ந்து கொள்ளவும்.
வேதம் ஓதி, சந்தியா வந்தன வழிபாடுகளை மேற்கொள்வதற்காகத்தான் பூணூலை அணிந்து கொள்கிறோம் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. பூணூல் என்பது இறை மார்கத்தில் நாம் முன்னேற உதவும் ஒரு தகுதியே தவிர அதுவும் அனைத்துமாக ஆகி விடாது. செப்புப் பாத்திரத்தை துலக்க துலக்க அதில் மெருகேறுவது போல பூணூல் அணிந்து வழிபாடுகளை தீவிரமாக நிறைவேற்றும் அளவிற்கு இக பர வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம்.
அவரவர் குல வழக்கப்படி சந்தியா வந்தன வழிபாடுகளைக் கட்டாயம் நிறைவேற்றியாக வேண்டும். இதில் எவருக்குமே விலக்கு கிடையாது. அனைத்து குலத்தினருக்கும், அனைத்து சூத்ரத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உள்ள பொதுவான நியதி என்னவென்றால் உரிய நேரத்தில் அதாவது காலை நட்சத்திரங்கள் வானில் பிரகாசிக்கும்போதும், மதியம் உச்சி வேளையிலும், மாலை சூரியன் மறையும் முன்னும் சந்தி வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும்.
சிலரும் நேரம் காலம் பார்க்காது தங்களுக்குத் தோன்றும் நேரத்தில் சந்தி வழிபாடுகளை தற்காலத்தில் மேற்கொள்கின்றனர். காலம் தாழ்த்தி அளிக்கும் காயத்ரீ மந்திர அர்க்யங்கள் அசுர சக்திகளைத் தோற்றுவிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் தோஷங்களே பெருகும் என்பது உறுதி. மேலும், அலுவலகம், பள்ளி, வெளியூர் பயணம் போன்றவற்றைக் காரணம் காட்டி நண்பகல் சந்தியா வந்தன வழிபாட்டை காலையிலேயே சேர்த்து நிறைவேற்றி விடுகின்றனர். இதுவும் தவறான அணுகு முறையே. இதற்கு எந்தவித சாஸ்திர அங்கீகாரமும் கிடையாது.
இன்னும் சிலர் காலம் தாழ்த்தி சந்தியா வந்தன வழிபாட்டை நிறைவேற்றி விட்டு அதற்கு பிராயசித்தம் அர்க்யம் சமாதானம் அளிக்கும் என்று தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அதுவும் முறையான வழிபாடு ஆகாது. பிராய சித்தம் என்பது ஒருவர் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய அர்க்ய வழிபாடாகும். அந்த ஒரு முறையையும் நமது முன்னோர்கள் பயன்படுத்தும் நிலையை உருவாக்கியது கிடையாது என்பதே அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த பாடம்.
நடமாடும் தெய்வமாக சமீப காலம் வரை நம்மை வழி நடத்திய காஞ்சிப் பெரியவர் தம்முடைய 96வது வயதிலும் கடுமையான காய்ச்சல் நடுவே சந்தியா வந்தன வழிபாடுகளை நிறைவேற்றி சந்தி வழிபாட்டு மகிமையை உலகிற்கு உணர்த்திய உத்தமர். நூறு வயதிற்கு மேல் மனித உடல் தாங்கி வாழ்ந்த அப்பெருந்தகை பற்பல அலுவல்களைக் கவனிக்க வேண்டிய அரும்பெரும் பொறுப்பேற்றிருந்த நிலையிலும் கூட ஒரு முறையேனும் இவ்வாறு பிராயசித்த அர்க்யத்தை நாடியது கிடையாது. அதனால்தான் சித்தர்கள் எல்லாம் அவரை கனிந்த கனி என்று பாராட்டும் தெய்வீகத் தகுதியை அடைந்தார்கள்.
சாஸ்திர ரீதியான சந்தியா வந்தன வழிபாட்டு முறைகளை அறியாதவர்கள் சித்தர்கள் அருளிய கர தரிசனம், குசா தோப்புக் கரணம், சுயநாம ஜபம், தீப வழிபாடு, கோபுர தரிசனம், தினம் ஒரு நற்காரியம் (அன்னதானம்), கோயில் திருப்பணி, தேவ மொழி, தமிழ் மொழி வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம் போன்றவற்றை நிறைவேற்றி வந்தால் அதுவே சந்தியா வந்தனத்திற்கு இணையான பலனைத் தரும் என்பது உண்மையே.
ஓம் குருவே சரணம்