இறைவனைத் தவிர மற்ற யாவையும் மாயையே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மாயைகளும் மாற்றங்களும்

"என்ன தான் சொன்னாலும் ஏதேது சொன்னாலும்
சொல்லுதான் புரியலையே கண்ணம்மா
மின்னல் போலத்தான் மின்னி மறையுது மகா ஆற்றல்,
அதுவே மாயை அம்மா"

-  கரபாத்திர சித்தர்.

கட்டுக் கடங்காத வாசகமடி,
கட்டியே வைக்க கணவனில்லை
விட்டு விட்டு விழுங்குது மாயை,
விடாமல் உன்னை துரத்துது மாயை

-  உடுக்கை சித்தர்.

சட்டியைத் தூக்கச் செய்யுது பாரு
சாவையே காட்டி மிரட்டுது பாரு
விட்டு விட்டு விழுங்குது மாயை
விரக தாபத்திலே மாயை விளையாடுது பாரு

-  குப்பை சித்தர்.

தொட்டு அணைக்கத் துணைதேடுது ஐயா
தொல்லையிலே உன்னை மூழ்கடிக்குது ஐயா
விட்டு விட்டு விளையாடுது ஐயா மாயை
வினையாகி உன்னைத் தொடருது ஐயா

-  தொழுப்பேட்டு சித்தர்

பேரம்பாகித சித்தர், நிலக்காகித சித்தர், சிலக்காகித சித்தர் போன்ற சித்தர்கள் பலரும் மாயையினைப் பற்றி வியந்து பாடுகின்றார்கள்.

இவ்வாறு சித்தர்களே கண்டு, உணர்ந்து, மரியாதையுடன் போற்றி பாடத் தகுதி பெற்றது மாயை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் ஆத்ம வளர்ச்சிக்கேற்ப அந்தந்த அளவில், உருவில், சக்தியுடன் அவனுக்கு எதிராக செயல்படும் திறன் கொண்டது மாயை. இதனின் பிடியினின்று பூரணமாக விடுதலை பெற்றவர்களே இல்லை எனலாம். கண்ணுக்குத் தெரிந்த மாயை, தெரியாத மாயை, புரிந்த மாயை, புரியாத மாயை, முன்னும் பின்னும் பின்னால் செயல்படும் மாயை, மதிமயக்கும் மாயை, விதி கெடுக்கும் மாயை, ஆளை விழுங்கும் மாயை என அடுக்கிக் கொண்டே போகலாம். அண்ட சராசரத்திலுள்ள அனைத்துப் பொருட்களுமே ஏதோ ஒரு வகையில் மாயைக்கு கட்டுப்பட்டவைகளே அல்லது மாயையின் சக்தியால் செயல்படுபவைகளே. மாயையானது, எந்த நேரத்தில், எந்த உருவில், எந்த நோக்கத்தோடு, எந்த நிலையில், எப்படி, எவ்வித சக்தியுடன் ஒருவரைத் தாக்கும் என்று கூறவே முடியாது.

இதையே அருணகிரி பெருமான்,

"ஒரு வழிபடாது மாயை
இருவினை விடாது நாளும்"

என மிக இரத்தின சுருக்கமாகப் பாடி உள்ளார்.

மாயையானது இன்ன உருவில், இன்ன அளவில், இன்ன குணங்களோடு கூடியது என்பதை எவரும் அருதியிட்டுக் கூற முடியாது. அதைத் தேடுவது எதைப்போல் என்றால், பிறவிக் குருடன்,  கும்மிருட்டுக் குகையில் கன்னங்கரேல் என்ற கருப்பு பூனையைத் தேடுவதை ஒக்கும்.

மாயைக்கே உரித்தான ஏகபோக குணமானது - இது ஒருவனைப் பிடிக்கும் போதும் அவன் உணர மாட்டான், பிடித்து பேயாட்டம் போடும் போதும் சந்தேகிக்க மாட்டான், தன் செயலைச் சாதித்துக் கொண்டு விலகிய பின்னும் தன்னை ஆட்டு வித்தது மாயை என்ற சக்தி தான் என்பதை எள்ளளவும் புரிந்து கொள்ள மாட்டான். பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரண சக்தி கொண்டது மாயை.

இந்த மாயையினை உணர்வது எப்படி, யாரால் உணர முடியும், உணர்ந்து இதனிடமிருந்து தப்புவது எப்படி என்பதைப் பார்ப்போம்.

ஒரு மனிதனானவன் சமய நூல்களைக் கற்பதால் தர்க்க அறிவு வளருகிறது, தத்துவ ஞானம் வருகிறது. தத்துவ அறிவைக் கொண்டு ஆயிரமாயிரம் தலைப்பில் விரிவுரையாற்றலாம். ஆனால் ஆன்மீக உணர்வு அரும்புவதில்லை. சொல், பதம், இலக்கணம், இலக்கியம், இயல், இசை, நாடகம் என பல்வேறு வகையான கலைகளை ஒரு மனிதன் அலசி ஆராய்ந்து பட்டங்கள் பெறலாம். ஆனால் இவற்றால் கடவுளை உணர முடியாது. ஆராய்ச்சி படிப்புகள் உண்மையைக் கோடிட்டு காட்டுமே தவிர, உண்மை அல்லது கடவுளை உணர்ந்து அதனோடு இரண்டறக் கலக்கச் செய்வது என்பது அறவே முடியாது. இதை சுலபமாக விளக்க ஒரு சிறு கதையை ஆன்றோர்கள் கூறி வைத்தனர்.

மிகப்பாடுபட்டு அக்கரையுடன் பேணி வளர்த்த ஒரு திராட்சைத் தோட்டத்தினுள் நால்வர் நுழைந்தனர். திராட்சைப் பழங்கள் கண்களுக்கு பெரும் விருந்தாக நாக்கில் நீர் ஊறும் வண்ணம் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. நுழைந்த நால்வரில் ஒருவர் திராட்சைக் கொடிகள் நட்டுள்ள மண்ணைக் கையில் எடுத்து ஆராய்ச்சி செய்யத் துவங்கினார். மற்றொருவர் திராட்சை கொடிகளின் வளர்ச்சி, இலை, பழங்களின் நிறம் இவைகளைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார். மூன்றாமவர் ஒவ்வொரு கொத்தாக கையில் தொட்டு அவற்றின் எடை, அளவு, பழத்தின் தன்மைகள் இவைகளைப் பற்றி ஆராயத் துவங்கினார். நான்காமவர் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் சட்டை செய்யாமல் நேராக பழங்களைப் பறித்து உண்ணத் துவங்கினார். மேற்கூறிய நால்வரில் பழத்தின் சுவையை உணர்ந்தவர் யார்? அவற்றைப் பற்றி வீண் ஆராய்ச்சிகளில் மனத்தை ஓடவிடாமல், அதை உண்டவரே அதன் சுவையை அறிந்தவர்.

ஆகவே ஆன்மீக நூல்களைக் கொண்டு சொல்லழகையும், பொருளழகையும் ஆராயலாம். ஆனால் உய்த்துணர முடியாது "உண்பவர் சுவையை, பேசுபவர் அறிவாரோ?" என்கிறார் பேரம்பாகித சித்தர். ஆகவே மாயை பற்றி அழகாகப் பேசுவாரும், பொருள் கூறுவாறும், அதனைப் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோரும் அதனைப் பற்றி ஓரளவே அறிய முடியும். அதனை உணர்ந்து உய்த்துணர‌ முடியாது. மாயையை உய்த்து உணர்ந்தவரே அந்த உணர்வை பிறருக்கு ஊட்ட முடியும்.

மாயையைப் பரிபூரணமாக உய்த்து உணர்ந்தவர் ஆசான் ஒருவரே ஆகும், தெய்வ உணர்வை ஊட்ட ஆசான் அல்லது குருவால் மட்டுமே முடியும்.  அனைத்திற்கும் மூல காரணமாகிய குருவால் மட்டுமே அனைத்து செயல்கட்கும் மூல காரணமாகிய மாயையை உய்த்து உணர முடியும்.

ஸ்ரீதிருமூலர் ஜீவசமாதி
திருவாவடுதுறை

மாயை பற்றி அறிய முதல்படி மனத்திற்கு தெளிவு வேண்டும். எப்படி கலங்கிய நீரில் எந்த உருவத்தையும் பார்க்க முடியாதோ அப்படியே கலங்கிய மனதில் எதுவும் பதியாது. குருவின் அருட்பார்வை, குரு பூஜை, குரு சேவை, குரு பக்தி இவை பரிபூரணமாய் இருந்தால் தான் தெளிந்த மனதை அடைய முடியும். மனத்தெளிவு வந்தால் தான் மாயை புரியும்; புரிந்த பின் மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு மனத்தெளிவு உண்டாவதை திருமூலர்,

தெளிவு குருவின் திருமேனி காண்டல்,
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்,
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்,
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே", 

என்கிறார்.

"மாறாத குருபக்தியுடன், இடைவிடாத குருபூஜை செய்து உடல், பொருள், ஆவி, அனைத்தையும் குரு சேவைக்கு உண்மையாக அர்ப்பணிப்பவர்கட்கு குருவின் அருட்பார்வை அல்லது குருவின் ஆசீர்வாதமாகிய ஞானம் பிறக்கும். இந்த ஞானத்தால் அறியும் அறிவே உண்மையான அறிவாகும், மற்றைய அறிவெல்லாம் வெறும் பிதற்றலே" என்கிறார்கள் பெரியோர்கள். குரு அருள் இல்லாமல் பிற பொருட்களாகிய அறிவு, திறமை, படிப்பு இவற்றைக் கொண்டு தெய்வீகத்தை ஓரளவே தெரிந்து கொள்ளலாம். குருவை அடையாத வரையில் ஒரு மனிதன் வாழ்வில் நிகழும் அனைத்து செயல்கள், நிகழ்ச்சிகள், சம்பவங்கள் இவற்றை உண்மையென நம்புவான். ஒரு சற்குருவை அடைந்து விட்டாலோ, அனைத்தும் ஒரு காலகட்டத்தில் மாறுகின்ற அல்லது அழிகின்ற மாயையின் விளையாட்டே என அறிவான்; சித்தம் தெளிவு பெறும்; ஞான மார்க்கத்தின் வாசல்கள் திறந்து விடப்படும். இந்த ஞான வாசலைத் திறக்கும் அரிய மந்திரம், குரு ஒருவருக்கு மட்டுமே தெரியும்.

பத்தாயிரக்கணக்கான ஆண்டுகட்கு முன் இப்பூமியில் "அட்லாண்டியன்" நாகரீகம் என்னும் ஒரு மக்கட் பக்தியினர் வாழ்ந்தனர். அறிவு, மந்திரம், தந்திரம், விஞ்ஞானம், ஞானம் இவற்றின் உச்ச நிலையில் இருந்தனர், இவர்களின் நாகரீகம் இறந்தவரையும் உயிர்ப்பிக்கும் திறன் உடையதாய் இருந்தது. இம்மக்கள் ஏன், படைப்பின் ஒரு பிரிவின் செயல்களையே மாற்ற முற்பட்டனர்.  இந்நாகரீகம் உச்சகட்டத்தில் இருந்தபோது குழந்தைகள் பிறந்தவுடன் அவற்றை அங்குள்ள குருமார்களின் முன் கொண்டு வைப்பர். குருமார்கள் தங்கள் மூன்றாவது கண்ணாகிய ஞானக் கண்ணால் அச்சிசுவின் சரித்திரத்தை ஆதிமுதல் தன் முன் வைக்கப்பட்ட வரையில் உள்ள நிலையை அலசி ஆராய்ந்து, அதன் தலைவிதி என்ன, கர்ம வினைகள் என்ன, இந்த சிசுவானது பூவுலகில் பிறக்கக் காரணம் என்ன, இது எப்படி கர்மவினைகளினின்று தப்பி, மாயையின் பிடிக்குள் அகப்படாமல் மேலும் பிறவிகளை வளர்க்காமல் பிறவியை அறுக்க வழி என்ன என்பதைத் தெளிவாகக் கண்டு, அதற்கேற்ப அதன் வாழ்க்கை நிலைகளை அமைத்துக் கொடுப்பார்கள். மேற்கூறிய குருமார்கள் அனைவரும் மாயையின் செயல், திறன், சக்தி மற்றும் மூலம் இவற்றை பூரணமாக அறிந்து, உணர்ந்து மாயையை வென்றவர்கள். ஆகவே மாயையை வென்றவரே மாற்றத்தை நிகழ்த்த முடியும். சுருங்கக் கூறின் குருவால் மட்டுமே மாயையை நேருக்கு நேர் சந்திக்க முடியும்; அடக்கவும் வெல்லவும் முடியும். பிறருக்கும் அதை எப்படி வெல்வது என்பதை வெற்றிகரமாக சொல்லித் தரவும் முடியும்.

“உற்றார் ஆருளரோ
உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தன் அல்லால்
நமக்கு உற்றார் ஆருளரோ”
ஸ்ரீநந்தீஸ்வரர் திருக்குற்றாலம்

படைப்பையே, நான் மேற்கொள்ள முடியும் என்ற அகந்தையுடன் செயல்பட்டது அட்லாண்டியன் நாகரீகம் - இது மாயை.

அப்படிப்பட்ட நாகரீகத்தையும் இருந்த இடம் தெரியாமல் அழித்து விட்டது மாயை - இது மாற்றம்.

நாகரீகம் அழிந்தாலும் அதன் சக்தி, அறிவு, மற்றும் ஞானம் இவற்றை அழியாமல் பாதுகாத்து, பின்வரும் மக்களுக்கு பயன்பெறக்கூடிய வகையில் மாயையின் சக்தியை அடக்கி ஞானத்தை உலகிற்கு ஊட்டவல்லவர் குரு - இது குருவின் மகிமை.

"இவ்வளவு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட குருவை கலியில் எல்லோரும் அடைய முடியுமா குருதேவா?" எனத் தன் குருதேவர், அகஸ்திய முனிவரைப் பார்த்துக் கேட்கின்றார், உத்தம சீடர் போகர்.

அதற்கு பதிலளிக்கும் அகஸ்திய மாமுனிவர், "பக்குவப்பட்டு உடல் வணக்கத்தால் வந்தது அல்லவே குருபக்தி; கைகால் தேய, முட்டி முழங்கால் தேய உடல், பொருள், ஆவி, உதிரம் தேய கண்ட குரு சொன்னது அத்தனையும் உண்மை என நம்புபவனுக்கே உண்மையான குரு பக்தி வளரும். ஆராய்ச்சியாலோ, அறிந்தோ, தன் சிறு அறிவைக் கொண்டோ ஆசானை அறிவது அறிவிலித் தனம். குரு இல்லாத வித்தை குருட்டு வித்தை. குரு இல்லையேல் நீ துருபிடித்தவன் பாரேன்,” என்கின்றார்.

மனத்தெளிவு வர முதலில் மனக்குழப்பங்கள் அகல வேண்டும். மனதிற்கு எதனால் குழப்பங்கள் உண்டாகின்றன என்று பார்த்தால் மனக் குழப்பத்திற்கு மூலக் காரணம் ஆசை, ஆசைகள் அதிகமாக வளரும் போது, எண்ணிய எண்ணங்கள் நிறைவேறாவிடில் ஏற்படுவது ஏமாற்றம். இந்த ஏமாற்றம் என்னும் நிலையானது வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில், ஒவ்வொரு ரூபத்தில், ஒவ்வொரு விதத்தில், ஒவ்வொரு தன்மையில் வந்துதான் தீரும். இந்த ஏமாற்றத்தின் உச்சகட்டம் வெறுப்பு; வெறுப்பு நிலை மீறினால் கட்டுக் கடங்காத கோபம், கோபாவேசத்தில் மனிதன் உணர்ச்சி வசப்பட்டு தன்னையே இழந்த நிலையில் செய்யக் கூடாத தவற்றை செய்து விடுகின்றான். தன்னையே அழித்துக் கொள்கின்றான். இதையே வள்ளுவப் பெருந்தகை,

ஸ்ரீபத்ரகிரியார் திருவிடைமருதூர்

"தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்",

என்றார்.

ஏமாற்றத்தை அல்லது மாயையின் லீலையை வெற்றி கொள்ள வேண்டுமானால் மிகப் பொறுமையுடன், சகிப்புத் தன்மையோடு எந்த ஒரு நிகழ்ச்சியையும் நிதானமாக அணுக வேண்டும். பொறுமை, சகிப்புத் தன்மை, நிதானம் இந்த மூன்று குணங்களும், ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் ஏற்படும் சவால்கள், பிரச்சனைகள், தொல்லைகள், இடையூறுகள், ஏமாற்றங்கள் இவற்றைக் கண்மூடித்தனமாக அணுகாமல் அவைகளை எந்த கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டுமோ அவ்வாறு பார்க்கச் செய்யும். அவ்வாறு உரித்தான கண்ணோட்டத்தில் பார்க்கும் போது புத்தி பிசகாமல், மனம் குழம்பாமல், தெளிவான அறிவோடு முடிவுகள் எடுக்க மிக உதவியாக இருக்கும். இவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளே மாயையை வெற்றி கொள்ள சிறந்த ஆயுதங்களாகப் பயன்படும். இவ்வகையான அற்புத மனத்தெளிவு குருவருளால் மட்டுமே கிடைக்கப் பெறும்.

இது மட்டுமா? "அண்ட சராசரத்தில் ஒருவன் எவ்வளவு பொன், பொருள், போகம், பட்டம், பதவி, அறிவு, திறமை, வலிமை, செல்வம் இவற்றை பெற்றிருந்தாலும் அனுபவித்திருந்தாலும் குருபார்வை பட்டிடில் அனைத்தும் அவனுக்கு தூசியாகத் தெரியும்", என்கின்றார் பத்திரகிரியார்.

அஞ்ஞானம் அல்லது மாயையால் சூழப்பட்ட மனிதன் தான் வேறு, பிற பொருட்கள், உயிர்கள் வேறு என்ற நோக்கோடு உலகியலை நடத்துகின்றான். ஆனால் ஜீவாத்மாவாகிய மனிதன் பரமாத்மாவாகிய இறைவனின்று அணுவளவும் வேறுபட்டவன் அல்ல. இரண்டும் சகல விதத்திலும் ஒன்றே. இரண்டின் மூலமும் பொருளும் ஒன்றே. மாயையினால் தொடப்படாத பரமாத்மா தன்னிலையை பூரணமாக உணர்ந்துள்ளது. ஆனால் மாயையால் முழுவதும் மூடப்பட்ட மனிதனாகிய ஜீவாத்மா ஒன்றே பலவாகி நிற்கும் மாயையின் சக்தியில் கட்டுண்டு தான்வேறு, மற்றவை வேறு என்னும் அஞ்ஞானத்தில் சிக்கி பல்வேறு துன்பங்களை அடைகிறது. இதை எளிதாக விளக்க வேண்டுமானால், கூஜா, சட்டி, பானை, அடுப்பு, தொட்டி, ஓடு எனத் தனித்தனி உருவங்களும், பெயர்களும், அளவுகளும் கொண்டுள்ளன. ஒரே களிமண்ணால் ஆனவையே அத்தனையும், ஆனால் இவைகளின் ஒன்றோ அல்லது அனைத்தும் உடைந்தாலோ, அல்லது அழிந்தாலோ மிஞ்சுவது களிமண்தானே.

இவ்வாறு அண்டசராசரத்தில் உள்ள அனைத்து உயிர்கள், பொருட்கள், நிலைகள், ரூபங்கள் அனைத்திற்கும் மூலக் காரணமாய் விளங்குவது "ப்ருகிருதி" எனப்படும் பரம்பொருள். காலம் என்னும் கண்ணிற்குப் புலப்படாத மேடையில் நடத்தப்படும் அனைத்து நாடகங்களும் முடிவுற்றபின் அனைத்துக் கதாபாத்திரங்கள் மேடையுட்பட ஐக்கியமாகும் பொருளே இறைவன் அல்லது பரம்பொருள் அல்லது "ப்ருகிருதியாகும்". ஆகவே காலம் எனும் மேடையோ, கதாபாத்திரங்கள் என்னும் ஜீவாத்மாக்களின் நாம ரூபங்களோ நிலையற்றவை. நிலையானது பரம்பொருளே.

சுருங்கக் கூறின்,

எது மாறுபடுகின்றதோ - அது நிலையில்லாதது
எது நிலையில்லாததோ - அது மாயை

மாயை என்ற சொல்லின் பொருளே "சற்று முன் இருந்தது, இப்போது இல்லை", என்பதாகும்.

யை - சற்று முன் இருந்தது
மா - மறைந்து விட்டது

இதையே ரமண மகரிஷி, "நிலையற்ற தன்மையே உலகில் நிலையானது", என்றார். இதை விளக்கும் போது, "மாறும் எப்பொருளும் நிலையற்ற தன்மை கொண்டது. நிலையற்ற தன்மை கொண்ட எதுவும் தேடிப் போய் அடையத் தகுதியற்றது", என்றார்.

நடைமுறை வாழ்க்கையில் உதாரணம் காட்ட வேண்டுமானால் முகம் பார்க்கும் கண்ணாடியில் தெரியும் பிம்பம் அல்லது உருவத்தைக் கூறலாம். கண்ணாடியில் தெரிவது மாயை. ஆனால் வெளியே உள்ள உருவம் நிஜம், கண்ணாடியை எடுத்து விட்டால் அதில் உள்ள பிம்பம் மறையுமே தவிர மூலப்பொருள் அழிவதில்லை. இதே போல் பிம்பமாகிய ஜீவாத்மா நிலையில்லாதது. மூலப் பொருளாகிய பரமாத்மா (பரப்பிரம்மம்) நிலையானது.

முன்னது காலம் என்ற கோட்பாட்டுக்குட்பட்டது; காலத்தால் மாறுவது. பின்னது காலம் கடந்தது; தோற்றம் முடிவற்றது.

மாயையின் நிலை, ஜீவாத்மா, பரமாத்மா இவற்றைப் பற்றி மேலெழுந்தவாரியாக பார்த்த நாம் இப்போது மாயையைப் பற்றி அறியத் தகுதிகள் என்ன என்பதைக் காண்போம்.

மனிதன் மதிக்கப்படும் போது மகாத்மாவாகிறான். மனிதன் மிதிக்கப்படும் போது மிருகமாகின்றான். மகாத்மாவாக போற்றப்படும் போது இன்பமடைகின்றான். மிருகமாக நடத்தப்படும் போது துன்பமடைகின்றான். இவ்வாறு இன்பம் வேறு, துன்பம் வேறு என்ற பாகுபட்ட நிலையில் செயல்படும் மனிதன் மாயையைப் பற்றி அறிய அறவே தகுதியற்றவன். போற்றப்படும் போது மகிழ்வுறாமலும் தூற்றப்படும்போது துன்பமடையாமலும் தன்னிலை மாறாமல் உள்ள மனிதனே, தன்னிலையைத் தடுமாற வைக்கும் "மாயையை" அறிய முதற் தகுதி பெற்றவன்.

மாயையை எப்போதும் ஓடிக் கொண்டேயிருக்கும் (மாறிக் கொண்டேயிருக்கும்) ஆற்று நீருக்கு உவமைப்படுத்தினால், மாயையை வென்ற ஞானியை, என்றும் மாறாத ஆற்றுப் படுக்கைக்கு உவமைப்படுத்தலாம். என்றும் மாறாத ஒன்றினாலேயே என்றும் மாறும் ஒன்றை உணர முடியும், வெல்ல முடியும். எப்போதும் மாற்றங்கட்கு உட்பட்ட இரண்டு பொருட்கள் ஒன்றை மற்றது அறிவது அல்லது வெற்றி கொள்வது என்பது முற்றிலும் நடைபெறமுடியாத நிகழ்ச்சியாகும்.

ஸ்ரீபட்டினத்தடிகள் திருவிடைமருதூர்

உலக விஞ்ஞானிகளில் தலைசிறந்தவர்களில் ஒருவரான ஐன்ஸ்டினின் "Theory of Relativity" அல்லது "சார்புடைத் தத்துவம்" என்னும் கொள்கையின் உட்கருத்தே இதுதான். ஆனால் நம் முன்னோர் ஐன்ஸ்டினுக்கு பல ஆயிரக்கணக்கான வருடங்கட்கு முன்னரே, சிக்கலான கணக்கு வழக்குகளின்றி எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக மாயையையும் மாற்றங்களையும் இரண்டே வரிகளில் விளக்கியுள்ளார்கள் தற்கால விஞ்ஞானிகளோ முற்கால ஞானிகளின் வழிப்படி நடப்பவர்கள், ஓரளவுக்கு.  அண்ட சராசரத்தில் பரம்பொருளைத் தவிர எதுவும் நிரந்தரமற்றது என்பதைப் பட்டினத்தடிகள்,

"ஊரும் சதமல்ல உற்றாரும் சதமல்ல
உற்றுபெற்ற பேரும் சதமல்ல‌
பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும் சதமல்ல‌
இவ்வுலகில் யாரும் சதமல்ல நின்தாள் சதம் கச்சி ஏகம்பனே",

என்று பாடுகின்றார். இதையே வேதம், "பிரம்ம சத்தியம் ஜகத் மித்யா" என்கின்றது. வேதனை அடைந்தவன், துன்பப்படுபவன், அல்லலுற்றவன், ஏமாந்தவன், பொருளை இழந்தவன் ஆகியோர் தமது நிலைகளின் உச்சத்தில் பைத்தியங்களைப் போல் நடந்து கொள்வார்கள்.

இதே போல் சுயநலமே பேரின்பம் என்னும் மூடர்களும் இவ்வாறு நடந்து கொள்வர். இவ்வாறு தன்னிலை, அறிவு, திறமை, படிப்பு, எல்லாவற்றையும் மறக்க வைத்து துக்கத்தில் மனிதனை அமிழ்த்துவது மாயை. யாவும் மாயை என்று உணர்ந்து அவற்றை விட்டு விலகினால் உண்டாகும் இன்பமே மாற்றம்.

துன்பங்கட்கெல்லாம் மூல காரணம் - மாயை. மாயைக்கு மூல காரணம் அறியாமை. இன்பங்கட்கெல்லாம் மூல காரணம் - தன்னிலை மாறாத அறிவு. அறிவு பூரணத்துவம் அடைந்தால் தன்னலம் புரியும். தன்னலம் புரிந்தால் உண்டாவது பிறநலம் (தியாகம்) - அதுவே பேரின்பம்.

"மக்கள் வாழ்க்கையில் என்றுமே சுற்றுப்புற சூழ்நிலைகட்கும், தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கும் வசப்படாமலும், தன்னிலை மாறாமலும் இருக்க வேண்டுமானால், எப்போதும் சிந்திக்க வேண்டியது எது, குருதேவா?", என்று வினயமாக கேட்கின்றார், மக்கள் சார்பில் போகர் தன் குரு அகஸ்திய மாமுனியிடம்,

அகஸ்திய பெருமான்: "ஒரு மனிதனானவன் வாழ்க்கையில் ஒவ்வொரு நேரமும் சிந்திக்க வேண்டியது மரணம், போகா", என்று பதிலுரைக்கின்றார்.

பிறந்த எதுவும் இறந்தே ஆக வேண்டும். தோற்றம் கொண்ட எதுவும் முடியவேண்டும் - இது இயற்கையின் மாறா விதி.

பிறப்பும், இறப்பும் இறைவன் நடத்தும் திருவிளையாடல். உலக நடப்பின்படி இறப்பு என்பது வேதனைக்குரிய ஒரு நிகழ்ச்சியாக கருதப்படுகிறது. இது தான் சரியா, உண்மையா, சத்தியமா? இல்லை, இல்லை, இல்லை, இறப்பு என்பது காலமெல்லாம் பல்வேறு இன்ப துன்பங்கட்கு இடையில் அகப்பட்டு அல்லலுற்ற ஆன்மாவிற்கு இறைவனால் அளிக்கப்பட்ட வரப்பிரசாதமாகிய சுதந்திரமாகும். பன்னெடுங்காலம் பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்டுள்ள உடலினுள் தன் சக்திகள் அனைத்தும் குன்றிய நிலையில் சிறைப்பட்டிருந்த ஆன்மா என்னும் பறவைக்கு இறைவனாகிய கருணைக் கடல் அச்சிறையினின்று விடுதலை அளிக்கும் நிகழ்ச்சியே மரணம். விடுதலை அடைந்த பறவையானது கட்டுக்கடங்கா மகிழ்ச்சியுடன் எப்படி சிறகடித்து வானில் பறந்து செல்லுமோ, அதுபோல் பன்மடங்கு மகிழ்ச்சியினை ஆன்மாவானது மனித உடலான கூட்டைவிட்டு வெளியேறும் போது பெறுகிறது. இதையே சித்தர்கள், "செத்துப் பார்த்தால் தான் தெரியும், மாயையின் மூலம்", என்கிறார்கள்.

இதைக் குறிக்கவே பண்டைய எகிப்தியர்கள் இறந்தவர்களைப் புதைக்கும் போது உடலைவிட்டு ஒரு சிறு பறவை சிறகடித்து வெளியேறுவது போல் இறந்தவர்களின் கல்லறையில் ஓவியம் தீட்டினர்.

உடலைவிட்டுப் பிரிந்து செல்லும் ஆத்மாவின் மகிழ்ச்சியை அறியும் ஒரே ஞானி சத்குருவே ஆவார். எண்ணத் தொடர்பு கொள்ளும் (Telepathy) குருவானவர் விடுதலை அடைந்த ஆன்மாவை மறு உலகிற்கு வழிகாட்டி நடத்திச் செல்லும் போது அது இதுகாறும் அனுபவித்த உலக இன்ப துன்பங்கள், பாச பந்தங்கள், ஆசா பாசங்கள் என்ற சிறையினின்று விடுதலை அடைந்து, அது பெறும் மகிழ்ச்சிக்கு ஈடானது எதுவுமே கிடையாது என்பதைப் பூரணமாக உணர்ந்தவர்.

ஆனால் அஞ்ஞானத்தில் முழுவதுமாக மூழ்கி உள்ள உலக மக்கள் ஒரு குழந்தை, அதுவும் ஆண் மகவாகப் பிறந்தால் அடையும் இன்பத்திற்கு அளவே கிடையாது. ஆனால் பிறந்த குழவிக்கோ பிறப்பானது அது அனுபவிக்கப் போகும் பெருந்துன்பங்களின் ஆரம்பக் காட்சி ஆகும்.

இவ்வாறு தலைகீழாகப் பிறப்பின் போது மகிழ்வடைவதும் இறப்பின் போது வேதனை அடைவதுமே மாயையாகும். இதை விடுத்து அவற்றின் உண்மையான பொருளை உணர்வது மாற்றம் ஆகும். இவ்வாறு பிறப்பு இறப்பில் மாற்றம், மாறுபாடு, வேறுபாடு, கேடு, வித்தியாசம், விருப்பு, வெறுப்பு எதையும் இம்மியும் கொள்ளாதவனே ஞானி எனப்படுவான்.

மரணத்தைப்பற்றி எவரும் தைரியமாக வெளியில் பேசிவிடலாம், மரணம் நெருங்கும் போது, உடல், பொருள், ஆவி மூன்றும் துடிக்கும் வண்ணம் பயப்படாத மனிதர்களே இல்லை எனலாம். இதற்கு மூலகாரணம் ஆத்ம விசாரம் செய்யாததே. உண்மையான ஆத்மவிசாரம் எது எனில் மரணத்தைப் பற்றி விசாரிப்பது தான் ஆகும். இதையே குப்பை சித்தர் பெருமான், "செத்துப் பார்த்தான் ரமணன், சித்தத்தை சிவன்பால் திருப்பினானே" என்கின்றார். மரணக் கோரம் நீங்கியது; ஆத்ம சொரூபம் தெரிந்தது ஸ்ரீரமண பகவானுக்கு, மரணத்தைப்பற்றி மேலும்,

"ஒன்றே குலம் ஒருவனே தேவன்
நன்றே நினைமின் நமனில்லை",

என்றனர் பெரியோர். இது "ஏகேஸ்வர வாதம்" எனப்படும். சதா சர்வ காலமும் மரணத்தைப் பற்றியே நினைத்திருந்தால் அவன் ஏகாந்தியாக மாறுவான். ஆத்ம சொரூப தரிசனத்தைப் பெற்று, மரணமிலாப் பெருவாழ்வை அடைவான்.

"எப்படிப்பட்ட பாவியானாலும் சரி, என்னை (பகவானை)ச் சரணமடைந்து விட்டால் அவன் நாசமடையமாட்டான்," என்று பகவான் கிருஷ்ணன் கூறிய கீதையினை, ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது பொருள் உணர்ந்து படித்தல் வேண்டும். அப்படிப் படித்த ஆன்மாவானது இவ்வுலகை விட்டுப் புறப்படும்போது, உயிர்பிரியும் போது, கீதையினை முழுவதுமாக 18 அத்தியாயங்களையோ அல்லது ஒவ்வொரு அத்தியாயத்திலிருந்தும் ஓரிரு ஸ்லோகங்களையோ உடல் அருகிலிருந்து, கீதையினை உணர்ந்தவர் எவராகினும் படிப்பாராகில் அந்த உயிரானது உடலில் இருந்து புறப்படும் போது எப்படிப்பட்ட நிலைகளைக் கடக்கின்றது என்பதையும், இந்த கீதை சுலோகங்கள் ஒவ்வொன்றும் அதற்கு எப்படியெல்லாம் ஒவ்வொரு நிலையிலும் உறுதுணையாக இருக்கின்றது என்பதையும் கீழே காண்போம்:

முதல் அத்தியாயம்:-

ஹ்ரு ஷீகேசந் ததா வாக்ய-மிதமாஹ மஹீபதே |
ஸேனயோ-ருபயோர்-மத்த்யே ரதம் ஸ்த்தாபய மேS ச்யுத (1 : 21)

யாவதேதாந் நிரிக்ஷேSஹம் யோத்துகா-மானவஸ்த்திதான்:
கைர்-மயா ஸஹ யோத்தவ்ய-மஸ்மின் ரணஸமுத்யமே (1 : 22)

பொருள்:

தேர்த்தட்டில் நின்று கொண்டு, அர்ச்சுனன், "கிருஷ்ணா! இந்த யுத்த ஆரம்பத்தில் எங்ஙனம் நின்று பார்த்தால், யுத்தம் புரிய வந்திருக்கும் துரியோதனனுக்கு உதவி புரிய வந்திருக்கும் அனைவரையும் காண முடியுமோ, அந்த இடத்தில் என்னுடைய தேரைக் கொண்டு போய் நிறுத்து".

உடலின் நிலை:

மரணப்படுக்கையில் கிடத்தப்பட்ட உடலின் கண் அல்லது பார்வையில் இருள் சூழும். இமைகள் மூடிய நிலையில், கண்கள் வெளிச்சத்தைத் தேடி வேகமாகச் சுழல ஆரம்பிக்கும்.

இரண்டாவது அத்தியாயம்:

கார்ப்பண்ய‍‍-தோஷோபஹத-ஸ்வபாவ: ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூடசேதா:  |

யச்ச்ரேயஸ்யாந் ‍- நிச்சிதம் ப்ரூஹி தன்மே சிஷ்யஸ்தேSஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் (2 : 7)

பொருள்:

இரக்கத்தால் இயற்கை குணங்களை இழந்தவனும் கடமையில் புத்தி திகைத்தவனும் ஆகிய நான் (அர்ச்சுனன்) உன்னைக் கேட்கிறேன்; எனக்கு எது சிறந்த நன்மை அளிக்கக் கூடியதாக இருக்குமோ அதை நிச்சயித்துக் கூறு; நான் உன்னுடைய சிஷ்யன்; உன்னைப் பிரபத்தி செய்த-சரண் புகுந்த-எனக்கு கட்டளையிடு.

உடலின் நிலை:

மிகத் துல்லியமான ஒளி கண்களுக்குப் புலப்படும். அதைக் கண்டவுடன் இமைகள் அடித்துக் கொள்ளும்.

மூன்றாவது அத்தியாயம்:

இந்த்ரியாணி மனோபுத்தி-ரஸ்யாதிஷ்ட்டான-முச்யதே |
ஏதைர்-விமோஹயத்-யேஷ ஜ்ஞான-மாவ்ருத்ய தேஹினம் (3 : 40)

பொருள்:

இந்திரியங்கள், மனம், புத்தி என்னும் இவை ஆசைக்கு இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இது இவற்றால் அறிவை மறைத்து உடலில் உறையும் ஜீவனைப் பலவிதமாய் மயக்குகின்றது.

உடலின் நிலை:

உருளும் கண்கள் நிலைத்து நின்று விடும். பார்வையானது உள்ளுக்குள்ளேயே உருள முயற்சிக்கும். அப்போது தொண்டை ஏறியிறங்கி விக்கல் ஏற்படும்.

நான்காவது அத்தியாயம்:

நிராசீர்-யதசித்தாத்மா த்யக்த-ஸர்வ-பரிக்ரஹ: |
சாரீரம் கேவலம் கர்ம குர்வன்-னாப்னோதி கில்பிஷம் (4 : 21)

பொருள்:

ஆசையற்றவனும், உள்ளத்தையும், உடலையும் அடக்கியவனும், உடமைகளையெல்லாம் உதறித் தள்ளியவனும் ஆகியவன்-உடலுக்கு இன்றியமையாத கர்மாவை மட்டும் செய்து-தீமையை அடைவதில்லை.

உடலின் நிலை:

இரண்டு கைகளும் விரல் முனைகளில் தொடங்கி, தோள்பட்டை வரை மெதுவாக உடல் சூட்டை இழந்து சில்லிட்டுப் போக ஆரம்பிக்கும். இப்போது உயிர் (ஆத்மா) உடலைவிட்டு வெளியேற முயற்சிகளைச் செய்யத் துவங்கும். கைகளிரண்டும் சில்லிட்ட நிலையில் உயிர் நாபி வழியாக வெளியேற முயற்சிக்கும். மெய்ப் பொருள் கண்ட ஞானி-கீதையை உணர்ந்து ஓதும் பெரியவர்-குருவானவர் உயிர் வெளியேறா வண்ணம் நாபித் துவாரத்தை மூடிவிடுவார்.

ஐந்தாவது அத்தியாயம்:

நைவ கிஞ்சித் கரோமீதி யுக்தோ மன்யேத தத்வவித் |
பச்யன் ச்ருண்வன் ஸ்ப்ருசன் ஜிக்க்ரன்னச்னன் கச்சன் ஸ்பவன் ச்வஸன் (5 : 8)

ப்ரலபன் விஸ்ருஜன் க்ருஹ்ணன் னுந்மிஷந் நிமிஷ்ன்னபி
இந்த்ரியாணீந்த்ரியாய்த்தேஷு வர்த்தந்த இதி தாரயன் (5: 9)

பொருள்:

கண்டாலும், கேட்டாலும், தொட்டாலும், முகர்ந்தாலும், உண்டாலும், சென்றாலும், தூங்கினாலும், மூச்சுவிட்டாலும் மெய்யறிவுடைய யோகி ஒன்றையும் தான் செய்யவில்லை என்று எண்ண வேண்டும் (5 : 8) பேசினாலும், விட்டாலும், பற்றிக் கொண்டாலும், கண் விழித்தாலும், கண்மூடினாலும் கூட இந்திரியங்கள் இந்திரிய விஷயங்களில் செல்லுகின்றன என்று நிச்சயமுடையவனாய், ஒன்றையும் தான் செய்யவில்லை என்று எண்ண வேண்டும். (5 : 9)

உடலின் நிலை:

நாபி மூடியதால் உயிரானது சற்று கீழிறங்கி ஆண், பெண் இனக்குறி வழியாக வெளியேற பெரு முயற்சி செய்யும். இதனால் இறக்கும் தருவாயில் உள்ள மனிதர் தன் நினைவு இல்லாமல் வயிறு பெரிதாகி சிறுநீர் கழிக்கத் துவங்குவார். இவ்வழியினையும் குருவானவர் அடைத்து உயிர் வெளியேறாமல் காப்பார்.

ஆறாவது அத்தியாயம்:

சனை:  சனை-ருபரமேத புத்த்யா த்ருதி-க்ருஹிதயா |
ஆத்ம-ஸம்ஸ்த்தம் மன:  க்ருத்வாந கிஞ்சிதபி சிந்தயேத் (6 : 25)

பொருள்:

தைரியத்துடன் கூடிய புத்தியினால் மெல்ல மெல்லச் சாந்தியைக் கூட்ட வேண்டும். மனத்தை ஆத்மாவில் நிலைபெற்றதாய் செய்து பின் யாதொன்றையும் நினைக்கக் கூடாது.

உடலின் நிலை:

உயிரானது இன்னும் கீழிறங்கிக் குதத்தின் வழியாக வெளியேற முயற்சிக்கும். இதனால், சிறுநீர் கழிப்பது நின்றுவிடும். வயிறு மேலும் பெருத்து மேல்மூச்சு இரைக்கும். குடல்கள் முறுக்கத் துவங்கும். உடலின் கீழ்ப்பாகம் மட்டும் உருளத் துவங்கும். இவ்வழியும் குருவால் அடைக்கப்படும்.

ஏழாவது அத்தியாயம்:

ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞஞ் ச யே விது: |
ப்ரயாணகாலேSபி ச மாம் தே விதுர்-யுத்த சேதஸ: (7 : 20)

பொருள்:

மேலும், எவர்கள் என்னை அதிபூதம்-அதிதைவம்-அதியஜ்ஞம் எனும் வடிவினனாக அறிந்தவர்களோ, அவர்கள் நிலைத்த மனத்தினராய் மரண காலத்திலுங்கூட என்னை அறிவர்.

உடலின் நிலை:

குத வழியும் மூடப்பட்ட நிலையில் கை-கால் தூக்கிப் போட ஆரம்பிக்கும். கைகளைப் போலவே கால்கள், விரல் நுனியிலிருந்து உடல் சூடானது குறைந்து ஆண்/பெண் குறிவரை சில்லிட ஆரம்பிக்கும்.

எட்டாவது அத்தியாயம்:

ஸர்வத் வாராணி ஸம்யம்ய மனோ ஹ்ருதி நிருத்த்ய ச‌
மூர்த்த்ன்-யாதா-யாத்மான: ப்ராண-மாஸ்த்திதோ யோகதாரணாம்
ஓமித்-யேகாக்ஷரம் ப்ரஹ்ம வ்யாஹரன் மாமனுஸ்மரன்
ய: ப்ரயாதி த்யஜன் தேஹம் ஸ யாதி பரமாங்கதிம் (8 : 12-13)

பொருள்:

எல்லா இந்திரிய வாயில்களையும் அடைத்து, மனத்தையும் இருதயத்தில் நிலைநிறுத்தித் தனது பிராணனைத் தலையின் உச்சியில் வைத்து, யோக தாரணையில் நிலை பெற்றவனாய், ஓம் எனும் பிரம்ம வாசகமாகிய ஓரெழுத்தை உச்சரித்துக் கொண்டு, என்னை முறைப்படி சிந்தித்தவனாய், உடலை விட்டு எவன் செல்லுகின்றானோ அவன் உயர்ந்த கதியை அடைகின்றான்.

உடலின் நிலை:

உயிரானது வெளியேற முயற்சிக்கும் ஒவ்வொரு வழியும் அடைக்கப்பட்ட நிலையில், குதத்தினின்று ஒரே நொடியில் நவ துவாரங்கள் அனைத்து வழியாகவும் வெளியேற முயன்று வெடித்துப் பரவுவதுபோல் விரிவடையும். சில்லிட்ட உடலானது உயிரின் இச்செய்கையால், திடீரென உடலின் உரிய சூட்டை விட அதிகமாக உஷ்ணமாகும்-அடங்கப் போகும் விளக்கின் ஜோதியானது திடீர் பிரகாச‌ம் பெறுவது போல,

ஒன்பதாவது அத்தியாயம்:

கதிர்ப்ப்ர்த்தா ப்ரபு: ஸாக்ஷீ நிவாஸ: சரணம் ஸுஹ்ருத் |
ப்ரபவ: ப்ரளய-ஸ்த்தானம் நிதானம் பீஜ-மவ்யயம் (9 : 18)

பொருள்:

செல் இடமும், போஷித்துக் காப்பவனும், ஆள்பவனும், பார்த்துக் கொண்டிருப்பவனும், வாழுமிடமும், துன்பந் துடைப்பவனும், நண்பனும், பிறப்பிடமும், புகலிடமும், இருப்பிடமும், பொக்கிஷமும், அழியாத வித்தும் நானே.

உடலில் நிலை:

இப்போது குருவானவர் தன் தெய்வ சக்தியால், உயிர் எவ்வகையிலும் வெளியேறா வண்ணம், உடலின் நவ துவாரங்களையும் அடைத்து விடுவார். திடீரென்று சூடான உடல், மறுபடியும் சில்லிட்டு விடும்.

பத்தாவது அத்தியாயம்:

யத்யத் விபூதிமத் ஸத்வம் ஸ்ரீமதூர்ஜித-மேவ வா |
தத்ததேவாவகச்ச த்வம் மம தேஜோம்ச-ஸம்பவம் || 41 ||

பொருள்:

எந்தெந்த வஸ்து என் விபூதியை விளக்குவதாகவோ, லக்ஷ்மி கடாக்ஷம் பொருந்தியதாகவோ, உயர்ந்த சக்தி வாய்ந்ததாகவோ, உளதோ அந்த வஸ்து என்னுடைய சக்தியின் அம்சத்தில் தோன்றியது என்று அறிதல் வேண்டும்.

உடலின் நிலை:

இப்போது பூதவுடல் எவ்விதச் சலனமுமின்றி அமைதியாக அடங்கிவிடும் (ஆடியடங்கும் வாழ்க்கையடா!) இறக்கும் மனிதன் புண்ணியவானாக இருந்தால், அவனுக்குத் தன் பூர்வீகம் முழுவதும், எடுத்த அனைத்துப் பிறவிகளும் மிகத் தெளிவாக ஒன்றன்பின் ஒன்றாகத் தெரிய வரும். ஒரு சில வினாடிகளிலேயே அனைத்தையுமே அறிந்து விடுவான்.

பதினொன்றாவது அத்தியாயம்:

மத்கர்மக்ருன் மத்பரமோ மத்பக்த: ஸங்கவர்ஜித:  |
நிர்வைர: ஸ்ர்வபூதேஷுய: ஸ மாமேதி பாண்டவ (11 : 55)

ந து மாம் சக்யஸே த்ரஷ்டுமனேனைவ ஸ்வசக்ஷுஷா
திவ்யம் ததாமி தே சக்ஷு: பச்யமே யோகமைச்வரம் (11 : 8)

பொருள்:

என் பணி செய்பவனாயும், என்னையே அனைத்திலும் மேலாகக் கருதுபவனாயும், என்னிடம் பக்தி செய்பவனாயும், (வேறு எதிலும்) பற்றற்றவனாயும் எவ்வுயிர்களிடத்தும் வைரமில்லாதவனாயும் உள்ளவன் எவனோ அவன் என்னை அடைகிறான் (11 : 55)

உன்னுடைய இக்கண்களாலேயே என்னைக் காண்பதற்கு உனக்கு இயலாது. உனக்கு திவ்யமான பார்வையைக் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவரத் தன்மையை விளக்கும் யோகத்தைப் பார்  (11 : 8)

உடலின் நிலை:

ஆத்மாவுக்கு அடுத்து அது செல்ல வேண்டிய இடம், செய்ய வேண்டிய காரியங்கள் தெரிய ஆரம்பிக்கும். தனக்கு முன்னே மேலுலகம் சென்ற புண்ணியப் பகுதியிலிருக்கும் பிதுர்கள் வரவேற்பு குழு போல (Stream of fore-fathers) வந்து நிற்பார்கள். தான் இப்பிறவியில் செய்த புண்ணிய, பாவங்கள் அனைத்தையும் உயிரானது தெளிவாக உணரும்.

இப்போது ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வில் மானசீகமாக ஏற்றுக் கொண்ட குருவோ அல்லது உபதேசம் செய்த குருவோ, தமது சுய விசுவ ரூபத்துடன் எங்கும் பிரகாசிக்கும் ஒளிப் பிழம்பாய், அளவிடுதற்கு அரியதாய், அடி, நடு, முடிவினைக் காணுதற்கு இயலாதவராய், அற்புதத் திவ்யப் பேருருவ சொரூபமாய் காட்சி தருவார். அவரவர் புண்ணிய கர்மாக்களுக்கேற்ப குரு விரும்பினால் உபதேசம் செய்வார். ஆத்மாவானது பிறவி முடிவதற்குள் உபதேசம் பெறுவதற்குரிய கடைசி சந்தர்ப்பமாகும். இந்த நிலை வரையில் உயிரானது உடலினின்று வெளிப்படுவதில்லை.

பன்னிரண்டாவது அத்தியாயம்:

தேஷா-மஹம் ஸமுத்தர்த்தா ம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத் |
பவாமி ந சிராத் பார்த்த மய்யாவேசித-சேதஸாம் (12 : 7)

பொருள்:

என்னிடம் நிலைபெற்ற மனமுடையவர்களைச் சாவுடன் கூடிய ஸம்ஸாரக் கடலினின்று சீக்கிரத்தில், அர்ஜுனா! நான் கரையேற்றிக் காப்பவனாக ஆகின்றேன்.

உடலின் நிலை:

உயிருக்கு உடலினின்று நிரந்தரமாக விடுதலை கிட்டுகின்ற நிலையாகும். குருவானவர் காட்ட வேண்டியவை, உணர வைக்க வேண்டியவை இவற்றை முடித்தபின் உடலைவிட்டு உயிர் வெளியேற அனுமதிக்கிறார்.

பதின்மூன்றாவது அத்தியாயம்:

அஸக்தி-ரனபிஷ்வங்க: புத்ர-தார-க்ருஹாதிஷு |
நித்யஞ் ச ஸமசித்தத்வ-மிஷ்டா நிஷ்-டோப பத்திஷு (13 : 9)

பொருள்:

மக்கள் மனையாள் மனை முதலியவற்றில் பற்றின்மை, அபிமானமின்மை, இஷ்டமுள்ளதும் இஷ்டமில்லாததும் வாய்த்த போதும் கூட எக்காலத்தும் ஸமசித்தம்.

உயிரின் நிலை:

உடலைவிட்டு வெளியேறிய உயிரானது, உலக வாசனைகளால் ஈர்க்கப்பட்டுத் தன் உடலைச் சுற்றி உள்ளவர்கள் பேசுகின்றனவற்றையும், எண்ணுகின்றனவற்றையும் எண்ண அலைகள் (TELEPATHY) மூலம் தெளிவாக அறிந்து கொள்கின்றது. இப்போது தான் யார், யார் தன் மீது உண்மையான காதல், அன்பு, பாசம், பந்தம் வைத்துள்ளார்கள் என்பதை நேரடியாக அறியும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

பதிநான்காம் அத்தியாயம்:

குணானே தா-ன தீத்ய த்ரீன் தேஹீ தேஹ-ஸமுத்ப்பவான்
ஜன்ம-ம்ருத்யு-ஜரா-து:க்கைர்-விமுக்தோSம்ருத-மச்னுதே (14 : 20)

பொருள்:

தேகத்தை உண்டாக்கிய மூன்று (ஸத்வம், ராஜஸம், தாமஸம்) குணங்களைக் கடந்து சென்று பிறப்பு, இறப்பு, மூப்பு, துன்பம் இவற்றினின்று விடுபட்ட தேகி (தேகமுடையவன்) சாகாத்தன்மை அடைகின்றான்.

உயிரின் நிலை:

தன் உடலுக்கு நடக்கும் மரியாதைகள், ஈமச்சடங்குகள், பிற நிகழ்ச்சிகளை மூன்றாவது மனிதன் போல எவ்விதச் சலனமும் இல்லாமல் கவனிக்கின்றது.

பதினைந்தாவது அத்தியாயம்:

தத: பதம் தத் பரிமார்க்கிதவ்யம் யஸ்மின் கதா ந நிவர்த்தந்தி பூய:  |
தமேவ சாத்யம் புருஷம் ப்ரபத்யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ (15 : 4)

பொருள்:

"எவனிடமிருந்து, பழமையான இச்சம்ஸாரம் பெருகிற்றோ அந்த ஆதிபுருஷனையே சரணமடைகின்றேன்," என்று நிச்சயித்து, அதன் பிறகு எவ்வழி சென்றோர் மீண்டும் திரும்புவதில்லையோ அவ்வழியே தேடிச் செல்லுதற்குரிதாகும்.

உயிரின் நிலை:

இடுகாடு வரை சென்று உடலை எரித்த பின்போ அல்லது புதைத்த பின்போ அல்லது சில நாட்கள், மாதங்கள், ஏன் வருடங்கள் கழித்தோ, உலகில் தான் வைத்திருந்த பற்றுதல்களுக்கு (bondages & attachments) ஏற்ப இருந்து அலைந்து விட்டு மேலுலகம் செல்லத் தயாராகும். ("இறந்த வீடு மூடுதல்" என்ற ஒரு பழக்கம் இந்துக்களிடையே இருப்பதற்கு இதுவே காரணம்).இந்நிலையில் இந்த ஜென்ம உற்றார் உறவினர் மட்டுமின்றி மனிதப் பிறவி எடுத்த நாள் முதல் உள்ள அனைத்து உறவினரையும் அறிந்து கொள்கிறது. அவர்கள் எந்த லோகங்களில் உள்ளார்கள் என்பதை தன் சக்திக்கேற்ப (spiritual attainment) தெரிந்து கொள்கிறது.

பதினாறாம் அத்தியாயம்:

தைவீஸம்பத் விமோக்ஷாய நிபந்த்தா யாஸுரீ மதா
மா சுச: ஸம்பதந் தைவீ-மபிஜாதோSஸி பாண்டவ (16 : 5)

பொருள்:

தெய்வ ஸம்பத்து முக்திக்கும், அசுர ஸம்பத்து பந்தத்திற்கும் என்று கொள்ளத் தகும். பாண்டவா! வருந்தாதே தெய்வ ஸம்பத்துக்குரியவனாக நீ பிறந்துள்ளாய்.

உயிரின் நிலை:

தன் பிறப்பின் இரகசியம் (விந்து ரகசியம்) சம்பந்தப்பட்ட அனைத்து இரகசியங்களையும் அறிந்து கொள்கிறது. தான் ஏன் பிறந்தோம் என்பதனையும், விந்துவின் புண்ணிய சக்தியால் உயிர்ப் பண்புகள் யாவை (கீதை: 16:1-3) உடற்பண்புகள் (கீதை: 16:4) யாவை என்பதனையும், விந்துவைப் பாதுகாத்து முறையாகப் பயன்படுத்தினால் யோக சக்திகளையும், விந்துமணி சித்தி முதலியவற்றை எப்படி அடையலாம் என்பதையும் அறிந்து கொள்கின்றது.

பதினேழாவது அத்தியாயம்:

ஸத்வானுரூபா ஸர்வஸ்ய ச்ரத்தா பவதி பாரத
ச்ரத்தா-மயோSயம் புருஷோ யோ யச்-ச்ரத்த ஸ ஏவ ஸ: (17 : 3)

பொருள்:

அர்ஜுனா! ஒவ்வொருவருடைய சிரத்தையும் (முயற்சியும்) அவரவர் உள்ளத்திற்குத் தக்கபடி இருக்கும். இந்த ஜீவன் சிரத்தையே (முயற்சியே) வடிவாய்க் கொண்டவன். எவன் எவ்வகைச் சிரத்தை உடையவனோ அவன் அவ்வகையானவனே.

உயிரின் நிலை:

"தன் மீது உண்மையான அன்பு, காதல், பந்தம், பாசம் கொண்ட எல்லா ஆத்மாக்களுமே தன்னைப் போல் அமைதியாக இவ்வுலகை விட்டு மேலுலகம் சென்றடைதல் வேண்டும்" என்று குருவையும் ஆண்டவனையும் மனதாரப் பிரார்த்தனை செய்யும்.

பதினெட்டாம் அத்தியாயம்:

தமேவ சரணங் கச்ச ஸர்வபாவேன பாரத |
தத் ப்ரஸாதாத் பராம் சாந்திம் ஸத்தானம் ப்ராப்ஸ்யஸி சாச்வதம் (18 : 62)

ஸர்வதர்மான்-பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ |
அஹம் த்வா ஸர்வ-பாபேப்ப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச:  (18 : 66)

பொருள்:

பாரதா!  எவ்வகையாலும் அவனையே சரணடைவாய். அவனருளால் ஒப்புயர்வற்ற சாந்தியையும், அழிவில்லாத பதவியையும் அடைவாய். (18 : 62)

எல்லா தருமங்களையும் பற்றற விட்டொழித்து என்னை ஒருவனையே சரண் புகுவாய்; நான் உன்னை எல்லாப் பாவங்களினின்றும் விடுவிப்பேன். வருந்தாதே.

உயிரின் நிலை:

தன் கடமையைச் செய்துவிட்ட நிலையில் இவ்வுலகோடு எவ்விதத் தொடர்பும் இல்லாத நிலையில் மிகவும் அமைதியோடும், மன நிறைவோடும் தன் கர்ம வினைகட்கும்; புண்ணியத்திற்கும் ஏற்ப, செல்ல வேண்டிய லோகத்திற்கு க்ஷண நேரத்தில் சென்று அடையும்.

குறிப்பு:

படிப்பவர், சலனமில்லாமல் மனதினை ஒருமுகப்படுத்தி நம்பிக்கையுடன் கீதையின் ஸ்லோகங்களை முழுவதுமாகவோ, அல்லது மேற்கூறிய வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்லோகங்களையோ தமிழிலோ, சமஸ்கிருதத்திலோ படிக்க வேண்டும். கீதையின் ஸ்லோகங்களைப் படிக்கும் போது மரணப் படுக்கையில் இருப்பவரது ஆன்மா மேற்கூறிய பதினெட்டு நிலைகளில் எந்த நிலையிலிருந்தாலும், படிக்கப்படுகின்ற கீதை ஸ்லோகங்கள் அந்தந்த நிலைகளில் நின்று உதவும் என்பது உறுதி. மேற்கூறிய நிலைகளில் முதற்பகுதியில் ஆன்மா இருக்கும் போது, ஸ்லோகங்கள் படித்து முடிக்கப்பட்டாலும், அந்தந்த ஸ்லோகங்கள் அந்தந்த நிலைகளில் வந்து நின்று காக்கும். இவ்வாறு உயிர் விட்டு சென்ற உடலானது சிரித்த முகத்தோடு முகம், கை கால், உடல் வீங்காமலும் தோல் உலர்ந்து சுருங்காமலும் சாந்தமாக காட்சி அளிக்கும். இவ்வகை மரணத்தையே சாந்த மரணம் என்பர் பெரியோர்.

உடலை விட்டுப் பிரிந்த உயிர் உடனடியாகச் செல்லுமிடம் மூன்று வகைப்படும். 1) இருள் லோகம், 2) மத்திம லோகம் 3) ஒளி லோகம் எனப்படும், இது அவரவர் கர்ம வினைகட்கேற்ப அடையும் பேறு.

இருள் லோக ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ளவே முடியாது. மத்திம லோக ஆன்மாக்களை மிகப் பலமான "மீடியம்" உலகில் இருந்தால் தான் தொடர்பு கொள்ள முடியும். ஆனால் இவர்களின் தொடர்பால் மீடியம் பலம் இழந்து மயக்கமாகி விடுவார்கள். ஒளி உலக மக்கள் தாமே விரும்பினால் ஞானிகள் மூலமாகவோ, குரு மூலமாகவோ, நேரடியாகவோ தான் விரும்பியவரிடம் தொடர்பு கொள்ள முடியும்.

இதற்கு மேலும் பல எண்ணற்ற லோகங்கள் உள்ளன. அங்கு செல்ல, இருக்கத் தகுதி பெற்ற ஆன்மாக்கள் சகல சக்தியும் பெற்றவை. இவைகள் எவ்வகையான சித்தியையும் எந்த உலகிலும் எந்த நேரத்திலும் நிகழ்த்த முடியும். தன் உற்றார் உறவினர்கள் எந்த லோகத்தில் எந்நிலையிலிருந்தாலும் தாம் இருக்கும் இடத்திலிருந்தே உதவ முடியும். ஆனால் எப்படிப்பட்ட ஆன்மாவாக இருப்பினும் கூட ஒரு குறிப்பிட்ட லோகத்தில் அதன் புண்ணியம் கரைந்தபின் ஒரு வினாடி நேரம் கூட அங்கு தங்க இயலாது. ஆண்டவனிடம் சென்றடைந்த, இணைந்து விட்ட ஆன்மாக்களைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்கும் மறுபிறவி உண்டு.

"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு" என்பது போல் அண்ட சராசரத்தில் உள்ள அனைத்தையும் ஆட்டுவிக்கும் ஒரு சக்தியையே பல்வேறு மதத்தினர் பல்வேறாக வழிபடுகின்றனர். "ஆட்டுவித்தால் ஆடுகின்றேன்" என்ற நிலையை "அபேத வாதம்" என்பர் பெரியோர்.

தன்னால் முடியும், நான் சர்வ வல்லமை படைத்தவன், தான் நினைத்தால் எதுவும் நடக்கும் என்ற அகந்தை மாயையாகும்.

அனைத்தும் ஒன்று, அனைத்தையும் ஆட்டுவிப்பதும் ஒன்று என்ற எண்ணம் கொள்வது மாற்றமாகும்.

தம் குருதேவரை நோக்கிக் கேட்கின்றார் போகர், "குருதேவா!  ஒரு மனிதன் தன்னை இந்த பூதவுடலோடு பிணைத்து கொள்ளும்படிச் செய்பவை யாவை?" அதற்கு அகத்திய மாமுனிவர், "போகா! அச்சம், அறியாமை, வேற்றுமை உணர்வு இம்மூன்றுமே ஒரு ஆன்மாவை இந்த உலகோடு பிணைத்துப் பந்தப்படுத்துபவை," என்கின்றார்.

"ஆகவே ஒரு தனி மனிதனானவன், தன் அழகு, படிப்பு, திறமை, செல்வம், செல்வாக்கு, பட்டம், பதவி, அதிகாரம், உயர்வு இவற்றைப் பிறரோடு ஒப்பிட்டுப் பார்த்து இவை தான் வாழ்க்கை என்று முடிவெடுப்பது அற்புதமான மாயை" என்கிறார் அகஸ்தியர். மேற்கூறியவற்றில், ஒன்றோ, பலவோ அடியோடு மாறும்போது அல்லது அழியும் போதுதான் மனிதன் தனக்கு மேல் ஒரு சக்தி உண்டு, அது தன்னை ஆட்டுவிப்பதைப் போல் அண்ட சராசரத்தில் உள்ள அனைத்தையும் ஆட்டுவிப்பதும் அதுதான் என உணரத் தலைப்படுகின்றான்.

ஆகவே அழிவினின்று, மாயையின் திருவிளையாடல்களின்று தப்ப வேண்டுமானால் எது செய்தாலும் பலனை, "ஈஸ்வரார்ப்பணம்" என்றோ "கிருஷ்ணார்ப்பணம்" என்றோ இறைவனிடமே விட்டு விட வேண்டும். இப்பணிவு ஏற்படவே தினமும் கோவிலுக்குச் சென்று இறைவனைத் தியானிக்க வேண்டும். மாயையை வெல்ல மிக மிக சக்தி வாய்ந்த ஆயுதம் தியானமாகும். இதை எல்லோராலும் முறையோடு செய்வது கடினம். இதைச் செய்யும்  முறை, கூடும் முறை முதலியன வர்ம ரகசியங்களில் கூறப்பட்டுள்ளன.

வெறுமனே கண்களை மூடிக் கொண்டு, எதை எதையோ நினைத்துக் கொண்டு எண்ணங்களைச் சிதறவிட்டு செய்யும் எதையும் தியானம் என்று பெரியோர்கள் ஒத்துக் கொள்வதில்லை. முதலில் எந்த கெட்ட பழக்கங்கட்கும் அடிமை ஆகாமல் உடலைப் பேணி பாதுகாக்க வேண்டும். பின் மெதுவான, சீரான இடைவிடாத பயிற்சி மூலம் மனத்தை அடக்கிய பின், எண்ணங்களே அந்த நிலையில் மனத்தை பிரம்மத்தை நோக்கி செலுத்தி அதில் அமிழ்வதே தியானமாகும்.

தியானம் கைகூட வேண்டுமானால், மனிதனுக்கு மிக மிக இன்றியமையாதது, கைகளிலேயே உயர்ந்ததான நம்பிக்கை அதாவது தன்னம்பிக்கை, வெற்றி பெறுவோம் என்ற என்ணம் அவரவர் பிறப்புரிமை, ஆகையால், வெற்றி பெறுவோம் என்ற அசையா தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் தான் எதையும் சாதிக்க முடியும். நம்மால் இதைச் செய்ய முடியுமா, திறமை உண்டா, அறிவு உண்டா என்று எண்ணி மலைப்பது மாயை.

ஈசன் திருஅருளால் உலகில் முடியாதது என்று ஒன்றுமே இல்லை என்ற உணர்வுடன் எந்த சவாலையும் நேருக்கு நேர் சந்திப்பது மாற்றம்.

ஒருவனுக்குத் தன்மேல் நம்பிக்கை வர தன்னை வைத்து, தன்னை எடை போட வேண்டுமே தவிர, தன்னை வைத்துப் பிறரை எடைபோடுவது கூடாது. நாளுக்கு நாள் தான் முன்னாளை விட எவ்வகையில் முன்னேறி உள்ளோம் என்று எடைபோட வேண்டுமே தவிர, அவனை விட, இவனை விட நான் எவ்விதத்தில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எடைபோடுவது தன்னம்பிக்கையை எவ்வகையிலும் வளர்க்காது.  தன்னம்பிக்கை வளர, பணிவு வேண்டும். ஒருவரது உருவம், பொன், பொருள், போகம், பதவி இவற்றைக் கண்டு பணிவது உண்மையான பணிவு அன்று. ஈசன் அருள் பெற்று ஈசன் தொண்டு செய்பவரைக் கண்டவுடன் நம் உடல் தானே வளையும்.  இதுவே உண்மையான பணிவு என்பர் பெரியோர்.

அடுத்தபடியாக ஒரு மனிதனின் உயர்வு தாழ்வுகளில் முதன்மையான பாத்திரம் வகிப்பது அவனது எண்ணங்களே. பகவத் கீதையில் பகவான், "மனிதன் எண்ணங்களால் ஆக்கப்படுகின்றான். எப்படி இருக்க வேண்டும் என்று நம்புகின்றானோ அப்படியே முடிவில் ஆகி விடுகின்றான்." என்கின்றார். இப்படி எண்ணங்களைக் கட்டுப்படுத்தி நைஷ்டிக பிரம்மச்சாரியாக, ஞானியாக, உலகில் போற்றப்பட்டவர். ஞானானந்தகிரி சுவாமிகள், "சர்வஜன சுகினோ பவந்து," என்று பொருள் கொண்டு, உலக நலனிற்காகவே இப்பூவுலகிற்கு வந்த மகான். தியானத்தால் இறைவனை நேருக்கு நேர் கண்டவர். உலகில் உள்ள அனைத்தும் மாயை, இறைவனை அடைவதே மாற்றம் என்ற உயரிய கருத்தை உலகிற்குப் பறைசாற்றவே பூவுலகில் உதித்த ஞானியாவார்.

இவரைப் போலவே எல்லாவற்றையும் துறந்து திருமணமாகியிருந்தும் தாரத்தைத் தாயாக, சக்தியின் அம்சமாக வழிபட்டவர் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்ஸர். மனைவியானவள் தன் கணவனுக்குத் தாரமாக மட்டுமே பயன்படுபவள் என்று எண்ணக் கூடாது. கணவனுக்கு உதவுவதில் நண்பனாக, அறிவுரை கூறுவதில் மந்திரியாக, பணிவிடை செய்வதில் தாதியாக இப்படி பல நிலைகளிலும் நின்று செயல்புரிபவள். மனைவியை போகப் பொருளாக மட்டுமே எண்ணுவது மாயை. பொறுப்புடைய தாரத்தைத் தாயாக எண்ணுவது மாற்றம். ஆகவே இளமையிலேயே ஒருவன் தன் மனைவியைத் தாயாக மதிக்க, சிறிது சிறிதாக பழகிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால்தான் காமம் என்ற மாயையினின்று சீக்கிரமே விடுபட முடியும். மனைவியையோ, பிற பெண்டிரையோ சக்தியின் அம்சமாக நினைத்துப் பலன் பெற முடியும்.

முடிவாக, மாயை என்னும் சர்வ வல்லமையுடைய சக்தியின் ஆட்டுவித்தலினின்று தப்ப வேண்டுமானால் பரிபூரண குருவருள் வேண்டும். குருவிடம் கண்மூடித்தனமான அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். அண்டசராசரமே புரண்டாலும் குரு கைவிடமாட்டார் என்னும் நம்பிக்கையும், தான் என்ற எண்ணம் அறவே அற்ற பெரும் பணிவுமே ஒருவனுக்கு, தன்னை அறிய வைக்கும் ஒரே வழியாகும்.

ஸ்ரீஅகத்தியர் சுவாமிமலை

தன்னை அறியாத வரையில் அனைத்தும் மாயை
தன்னை அறிந்தால் அனைத்தும் மாற்றம்.

அறிவு, அறியப்படும் பொருள், அறிதல் இவை மூன்றும் ஒன்றாகிவிட்டால் மிஞ்சி இருப்பதுதான் "பிரம்மம்" என்னும் மூலப் பொருள். இப்பிரம்மத்தை உணர்ந்தவன் தானே பிரம்மமாகி விடுகின்றான். இதையே, "பிரம்மவித் பிரம்மைவ பவதி" என்றனர். இதையே பிரம்மஞானி அகத்திய முனிவர் மிக சுருக்கமாக, "அமுரிநீர் ரகசியத்தை யார் ஒருவர் குரு மூலமாக அறிகின்றாரோ, அவரே மாயையின் மூலத்தை சத்தியமாய் அறிவான் பாரேன்" என்றார்.

- சிவார்ப்பணமஸ்து -

பல வருடங்களுக்கு முன் சென்னை உயர்நீதி மன்ற பார் கவுன்சிலில் நீதிபதிகளுக்கும் வக்கீல்களுக்கும் அவர்கள் அழைப்பின் பேரில் சென்று அங்கு அவர்களிடையே “Differences and Delusions” என்ற தலைப்பில் நம் சற்குரு உரையாற்றியதின் தமிழாக்கத்தையே மேலே அளித்துள்ளோம். இவ்வுரையில் சற்குரு குறிப்பிட்டுள்ள அமுரிநீர் என்பது பற்றிய விளக்கத்தை ஒரு அடியார் கேட்டுள்ளார். பொதுவாக, அமுரி என்றால் சிறுநீர் என்று அர்த்தம். ஆயுர்வேத வைத்தியத்தில் மனிதர்கள், விலங்குகளின் சிறுநீரை சுத்தம் செய்து மருந்தாக அருந்தி நோய்களைக் குணப்படுத்துவது அமுரி வைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு சிறுநீரில் மனிதனுடைய கர்ம வினைகளும் கழிக்கப்படுவதால் அந்த கர்ம வினைகளைக் களையும் இரகசியம் சற்குருமார்களுக்கே உரித்தானது ஆகையால் நம் சற்குரு ஆயுர்வேதம் குறிப்பிடும் இந்த அமுரிநீர் வைத்தியத்தை ஏற்றுக் கொள்வதில்லை. சித்தர்கள் குறிப்பிடும் அமுரி நீர் என்பது சற்குருவின் அனுகிரகமாக அளிக்கப்படும் தைல தாரை, நீர் ஒழுக்கு போன்ற அனுகிரக சக்தியாகும். குருவின் இந்த முதல் கட்ட அமுரி நீரைப் பெறுவதற்கு உத்தம சீடனானவன் குருவின் கட்டளையை எந்த வித சந்தேகமுமின்றி ஏற்றுக் கொள்வதுடன் அந்தக் கட்டளையை நிறைவேற்ற தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும் என்பதே எளிய முறை அமுரி வைத்தியமாகும்.

நற்பவி என ஓதுவோம் நோய் நிவாரணம் பெறுவோம் !

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam